- Biblica® Open Indian Tamil Contemporary Version
செப்பனியா
செப்பனியா
செப்பனியா
செப்.
செப்பனியா
யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை
“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும்,
நான் வாரிக்கொண்டு போவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்;
நான் ஆகாயத்துப் பறவைகளையும்,
கடலின் மீன்களையும்
வாரிக்கொண்டு போவேன்.”
“நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது,
கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும்
அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்;
நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின்
மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன்.
விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும்
அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன்.
நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக,
வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன்.
யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு,
மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன்.
யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும்,
யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும்,
அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன்.
ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள்.
ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.
யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார்.
அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
யெகோவாவினுடைய பலியின் நாளில்,
நான் பிரபுக்களையும்,
இளவரசர்களையும்,
பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப்
பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன்.
அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி,
அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன்.
அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை
வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள்.
யெகோவா அறிவிக்கிறதாவது:
அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள
மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும்.
அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும்.
எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே;
அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள்.
வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள்.
அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன்.
யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி,
ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன்.
அவர்கள் திராட்சை மதுவின்
மண்டியைப்போல் இருக்கிறார்கள்.
அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும்,
வீடுகள் உடைத்து அழிக்கப்படும்.
அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள்,
அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள்,
திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள்.
அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள்.
யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது;
அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது.
கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும்.
இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள்.
அந்த நாள் கடுங்கோபத்தின் நாள்,
துன்பமும் வேதனையும் நிறைந்த நாள்,
தொல்லையும் அழிவுமான நாள்,
அது இருளும் அந்தகாரமுமான நாள்.
மப்பும் மந்தாரமுமான நாள்.
அரணான நகரங்களுக்கு எதிராகவும்,
மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும்
எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால்,
நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்;
அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள்.
அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும்.
அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும்.
யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே,
அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ
அவர்களைக் காப்பாற்றமாட்டாது.
அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால்,
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும்
திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.
யூதாவும் எருசலேமும் தேசங்களுடன் நியாயந்தீர்க்கப்பட்டன
யூதா மனந்திரும்ப அழைத்தல்
யூதாவே, வெட்கங்கெட்ட தேசமே,
ஒன்றுசேருங்கள், ஒன்றாய் சேருங்கள்,
நியமிக்கப்பட்ட காலம் வருமுன்பும்,
அந்த நாள் பதரைப்போல் வாரிக்கொள்ளப்படும் முன்பும்,
யெகோவாவின் பயங்கர கோபம்
உங்கள்மேல் இறங்கும் முன்பும்,
யெகோவாவின் கடுங்கோபத்தின் நாள்
வரும் முன்பும் ஒன்றுசேருங்கள்.
நாட்டில் தாழ்மையுள்ளோரே,
யெகோவாவின் கட்டளைகளைச் செய்கிறவர்களே,
நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் தேடுங்கள்.
நியாயத்தைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
அப்பொழுது ஒருவேளை யெகோவாவின் கோபத்தின் நாளிலே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
பெலிஸ்தியாவுக்கு எதிரானது
காசா கைவிடப்படும்,
அஸ்கலோன் பாழாக விடப்படும்.
அஸ்தோத் நண்பகலில் வெறுமையாக்கப்படும்,
எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும்.
கடற்கரை அருகே வாழும் கிரேத்திய மக்களே,
உங்களுக்கு ஐயோ கேடு;
பெலிஸ்தியரின் நாடாகிய கானானே,
யெகோவாவின் வார்த்தை உனக்கு எதிராக இருக்கிறது.
“நான் உன்னை அழிப்பேன்,
ஒருவரும் அங்கு தப்பியிருக்கமாட்டார்கள்.”
கிரேத்தியர் வாழும் கடற்கரை நாடு,
இடையர்களுக்கும் செம்மறியாடுகளின்
தொழுவங்களுக்கும் உரிய இடமாகும்.
அது யூதா குடும்பத்தில் மீதியாயிருப்பவர்களுக்கு உரியதாகும்.
அங்கு அவர்கள் மேய்ச்சலைக் கண்டுகொள்வார்கள்.
அவர்கள் மாலை வேளைகளில்,
அஸ்கலோனிலுள்ள வீடுகளில் படுத்திருப்பார்கள்.
அவர்களின் இறைவனாகிய யெகோவா,
அவர்களில் கரிசனையாயிருப்பார்;
அவர்கள் இழந்த செல்வங்களை அவர்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்.
மோவாபியருக்கும், அம்மோனியருக்கும் எதிரானது
மோவாபியரின் இழிவுகளையும்,
அம்மோனியரின் நிந்தனைகளையும் நான் கேட்டேன்.
அவர்கள் என் மக்களை இழிவாய் பேசி,
அவர்களின் நாட்டிற்கெதிராக பயமுறுத்தல்களை ஏற்படுத்தினார்கள்.
ஆகவே, இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது,
நான் வாழ்வது நிச்சயம்போலவே,
மோவாப் நாடு சோதோமைப் போலவும்,
அம்மோனியரின் நாடு கொமோராவைப் போலாவதும் நிச்சயம்.
அவை என்றென்றும் களைகள் வளரும் இடமாகவும்,
உப்புப் பள்ளங்களாகவும், பாழிடமாகவும் காணப்படும்.
என் மக்களில் மீதியாயிருப்போர் அவர்களைக் கொள்ளையடிப்பார்கள்.
என் நாட்டில் தப்பியவர்கள் அவர்கள் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொள்வார்கள்.
சேனைகளின் யெகோவாவின் மக்களை இகழ்ந்து,
கேலி செய்த அவர்களின் அகந்தைக்குப் பதிலாக,
அவர்களுக்குக் கிடைப்பது இதுவே.
யெகோவா நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது,
அவர் அவர்களுக்கு ஒரு பெரும் பயங்கரமாய் இருப்பார்.
அப்பொழுது பூமியெங்குமுள்ள நாடுகளும் யெகோவாவை ஆராதிப்பார்கள்.
ஒவ்வொருவரும் தன்தன் சொந்த நாட்டிலிருந்து அவரை வழிபடுவார்கள்.
கூஷ்
எத்தியோப்பியரே,
நீங்களும் என் வாளுக்கு இரையாவீர்கள்.
அசீரியாவுக்கு எதிரானது
அவர் தன் கையை வடக்கிற்கு எதிராக நீட்டி,
அசீரியாவை அழிப்பார்,
நினிவேயை அவர் முற்றிலும் பாழாக்கி,
பாலைவனத்திற்கு ஒப்பான பாழ்நிலமாக்குவார்.
அங்கே ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் படுத்திருக்கும்.
எல்லா விதமான விலங்குகளும் அங்கே படுத்திருக்கும்.
பாலைவன ஆந்தையும், கீச்சிடும் ஆந்தையும்
அதன் தூண்களில் தங்கியிருக்கும்.
அவற்றின் சத்தம் ஜன்னல்களின் வழியாக எதிரொலிக்கும்.
வாசல்களில் இடிபாடுகள் குவிந்து கிடக்கும்.
கேதுரு மரத்தினாலான உத்திரங்கள் வெளியே தெரியும்.
“நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.”
என தனக்குள் சொல்லிக்கொண்டு,
பாதுகாப்புடன் கவலையின்றி வாழ்ந்த நினிவே நகரம் இதுவோ.
இது எவ்வளவாய்ப் பாழடைந்து,
காட்டு மிருகங்களுக்குப் தங்குமிடமாயிற்று!
அதைக் கடந்துசெல்கிறவர்கள்,
கைகளைத் தட்டி,
கேலி செய்வார்கள்.
எருசலேமின் எதிர்காலம்
கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும்,
அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு.
அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள்,
அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
அவள் யெகோவாவை நம்புவதில்லை,
அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை.
அவளுடைய அதிகாரிகள்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள்.
அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள்.
காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள்.
அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்;
அவர்கள் துரோகிகள்.
அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி,
சட்டத்தை மீறுகிறார்கள்.
இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்;
அவர் அநியாயம் செய்வதில்லை;
அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார்.
அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார்,
ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்;
அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள்.
எருசலேம் மனந்திரும்பாமல் உள்ளது
நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்;
அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன.
நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி,
அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன்.
அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன;
ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை.
எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து,
“நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு,
என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன்.
அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை.
என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன்.
ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும்,
இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள்.
ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும்
நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார்.
நான் எல்லா நாடுகளையும்
அரசுகளையும் ஒன்றுகூட்டி,
என் கடுங்கோபத்தை
அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.
அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால்
முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
இஸ்ரயேலின் சிதறியதாக மறுசீரமைப்பு
நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன்.
அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு,
தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள்.
எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான,
சிதறுண்ட என் மக்கள்,
எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற
அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன்.
அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும்
நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள்.
இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள்
அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள்.
எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற,
சாந்தகுணமுள்ளோரையும்,
தாழ்மையுள்ளோரையும்
உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன்.
இஸ்ரயேலில் மீந்திருப்போர்
அநியாயம் செய்யமாட்டார்கள்;
அவர்கள் பொய் பேசமாட்டார்கள்;
அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை.
அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள்.
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள்.
சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே,
பலமாய்ச் சத்தமிடு;
எருசலேம் மகளே,
உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார்,
அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார்.
இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்;
நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய்.
அந்த நாளில்
அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது,
“சீயோனே, பயப்படாதே;
உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே.
உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார்.
அவர் உன்னை இரட்சிக்க வல்லவர்.
உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார்.
அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்.
அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.”
“நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை,
நான் உங்களைவிட்டு நீக்குவேன்.
அவை உங்களுக்குப் பாரமாயும் நிந்தையாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன்.
முடமானவர்களைத் தப்புவித்துச்
சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.
அவர்கள் வெட்கத்திற்குள்ளான
நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும்,
மேன்மையையும் கொடுப்பேன்.
அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்;
அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவருவேன்.
உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும்
நாடுகடத்தப்பட்டு வந்த மக்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும்,
மேன்மையையும் கொடுப்பேன்
என யெகோவா சொல்கிறார்.”