- Biblica® Open Indian Tamil Contemporary Version சகரியா சகரியா சகரியா சக. சகரியா மனந்திரும்புதலுக்கு அழைப்பு தரியு அரசனின் ஆட்சியில், இரண்டாம் வருடத்தின் எட்டாம் மாதத்தில், இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்தச் சகரியா இத்தோவின் மகனான பெரகியாவின் மகன். “யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் கடுங்கோபம் கொண்டிருந்தார். ஆதலால் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே; ‘என்னிடம் திரும்புங்கள்,’ அப்பொழுது நானும் உங்களிடத்தில் திரும்புவேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கவேண்டாம். முந்தைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என யெகோவா அறிவிக்கிறார். இப்பொழுது உங்கள் முற்பிதாக்கள் எங்கே? இறைவாக்கினர் எங்கே? அவர்கள் இறந்துபோனார்களே. ஆனால் என் அடியவர்களான இறைவாக்கினருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளின்படியும், என் ஒழுங்குவிதிகளின்படியுமே உங்கள் முற்பிதாக்களுக்கு நடந்தது. “அதன்பின் அவர்கள் மனந்திரும்பி, ‘சேனைகளின் யெகோவா எங்கள் வழிகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு எங்களுக்குச் செய்திருக்கிறார். தாம் தீர்மானித்தபடி நீதியாகவே நமக்குச் செய்தார் என்றார்கள்.’ ” நறுமண மரங்களுக்கிடையில் மனிதன் தரியு அரசன் ஆட்சி செய்த இரண்டாம் வருடத்தின் சேபாத் என்னும் பதினோராம் மாதம் இருபத்து நான்காம் தேதி, இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்த சகரியா இத்தோவின் மகனான பெரெகியாவின் மகன். நான் இரவிலே ஒரு தரிசனம் கண்டேன்; எனக்கு முன்னால் ஒரு மனிதர் சிவப்புக் குதிரைமீது சவாரி செய்துகொண்டிருந்தார். அவர் பள்ளத்தாக்கில் உள்ள நறுமண மரங்களுக்கு இடையில் நின்றார். அவருக்குப் பின் சிவப்பு நிறமும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. அவற்றின்மேலும் சவாரி செய்வோர் இருந்தனர். அப்பொழுது நான், “ஐயா, இவைகள் என்ன?” என்று கேட்டேன். என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம், “இவைகள் என்ன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” எனப் பதிலளித்தான். அப்பொழுது நறுமண மரங்களின் இடையில் நின்றவர், “இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்து வரும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவர்கள்” என எனக்கு விளக்கினார். அவர்கள் நறுமண மரங்கள் மத்தியில் நின்ற யெகோவாவின் தூதனிடம் போய், “நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம். முழு உலகமும் சமாதானமாயும், அமைதியாயும் இருப்பதைக் கண்டோம்” என்றார்கள். அப்பொழுது யெகோவாவின் தூதன், “சேனைகளின் யெகோவாவே, எருசலேமின்மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எவ்வளவு காலம் இரங்காதிருப்பீர்? எழுபது ஆண்டுகளாய் நீர் அவற்றின்மேல் கோபமாயிருந்தீரே” எனக் கேட்டான். அதற்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், யெகோவா அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார். அதன்பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவி: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் எருசலேமிலும், சீயோனிலும் வைத்த அதிக அன்பினால் வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஆனால் பாதுகாப்புடன் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கும், பிற மக்கள்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் எனது மக்கள்மேல் சிறிதளவு மட்டுமே கோபமாயிருந்தேன். அப்போது, பிற நாடுகளோ அவர்கள்மேல் பேராபத்தை அதிகரித்து எனது மக்களை அழிக்கப் பார்த்தார்கள்.’ “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இரக்கத்தோடு எருசலேமுக்குத் திரும்புவேன்; அங்கே எனது ஆலயம் மறுபடியும் கட்டப்படும். எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படும்’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘என் நகரங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; யெகோவா மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்றான்.’ ” நான்கு கொம்புகளும் நான்கு கைவினைஞரும் அதன்பின்பு நான் பார்த்தபோது அங்கே எனக்கு முன்னால் நான்கு கொம்புகள் இருந்தன. நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “யூதாவையும், இஸ்ரயேலையும், எருசலேமையும் சிதறடித்த வல்லமையான நாடுகள் இவைகளே” என்று பதிலளித்தான். அதன்பின் யெகோவா எனக்கு கைவினைஞர் நால்வரைக் காண்பித்தார். “இவர்கள் என்ன செய்ய வருகிறார்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர், “யூதாவில், ஒருவனும் தன் தலையைத் தூக்காதவாறு, யூதாவைச் சிதறடித்த பிற மக்களான இந்த கொம்புகளை வெட்டி முறிக்கவும், அவர்களைப் பயமுறுத்தவுமே இந்தக் கைவினைஞர் வருகின்றார்கள். பிறநாடுகள் யூதா நாட்டு மக்களைச் சிதறடிப்பதற்காக, தங்கள் வல்லமையைப் பயன்படுத்த வந்தார்கள் என்றார்.” அளவுநூல் பிடிக்கும் மனிதன் அதன்பின் நான் பார்த்தபோது, தன் கையில் அளவுநூலைப் பிடித்திருக்கும் ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். “நீ எங்கே போகிறாய்?” என நான் கேட்டேன். அதற்கு அவன், “எருசலேமின் நீளமும், அகலமும் என்ன என்று அறிவதற்காக அதை அளப்பதற்குப் போகிறேன் எனப் பதிலளித்தான்.” என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னைவிட்டுப் போனான். அப்பொழுது அவனைச் சந்திக்க வேறொரு தூதன் வந்தான். வந்தவன் அவனிடம், “நீ ஓடிப்போய் அந்த இளைஞனிடம் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் மதில்களற்ற பட்டணமாயிருக்கும். ஏனெனில், அங்கு மக்களும் அவர்களின் ஆடுமாடுகளும் திரளாகப் பலுகி நகரத்திற்கு வெளியேயும் இருப்பார்கள். நானே அதைச் சுற்றி அக்கினி சுவராயிருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என யெகோவா அறிவிக்கிறார்” என்றான். “வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “இப்பொழுது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பி வா” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூரு; இதோ, நான் வருகிறேன். உன் மத்தியில் வாழ நான் வருகிறேன்” என யெகோவா அறிவிக்கிறார். “அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய். யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவை தம் உரிமைப் பங்காக்கி, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.” தலைமை ஆசாரியனுக்கான தூய உடைகள் அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார். அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான். தூதன் அவனுக்கு முன்பாக நிற்கிறவர்களிடம், “இவனுடைய அழுக்கு உடைகளைக் களைந்து விடுங்கள்” என்றார். அவர் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றிவிட்டேன். விலை உயர்ந்த உடைகளை நான் உனக்கு உடுத்துவிப்பேன் என்றார்.” அப்பொழுது நான், “அவனுடைய தலையில் சுத்தமான தலைப்பாகையையும் வைத்தால் நல்லது என்றேன்.” எனவே அவர்கள் யெகோவாவின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை அவனுடைய தலைமீது வைத்து, உடைகளை உடுத்தினார்கள். அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்: “சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன். “ ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன். யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “ ‘அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் அயலானை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து உட்கார்ந்து உங்கள் சமாதானத்திலும் செழிப்பிலும் பங்குகொள்ளும்படி அழைப்பீர்கள்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.” தங்க குத்துவிளக்கும் இரு ஒலிவமரங்களும் என்னோடு பேசிய தூதன் மறுபடியும் திரும்பிவந்து, நித்திரையிலிருக்கிறவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பினான். அவன் என்னிடம், “நீ காண்பது என்ன?” என்று கேட்டான். அதற்கு நான், “முழுவதும் தங்கத்தினாலான குத்துவிளக்கினைக் காண்கிறேன், அதன் உச்சியில் ஒரு கிண்ணமும், ஏழு அகல் விளக்குகளும், அந்த விளக்குகளுக்கான ஏழு குழாய்களும் இருக்கின்றன என்றேன். மேலும் அதன் அருகில் இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. ஒன்று கிண்ணத்தின் வலதுபக்கத்திலும், மற்றொன்று அதன் இடது பக்கத்திலும் இருக்கின்றன என்றேன்.” என்னுடன் பேசிய தூதனிடம் நான், “ஐயா, இவை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “இவைகள் என்ன என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான். நான், “தெரியாது ஐயா” என்றேன். எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: உன் வலிமையினாலும் அல்ல; உன் வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “மாபெரும் மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலின் முன்பாக நீ சமனான தரையாவாய். அவன்முன் ஒன்றும் தடையாயிருக்காது. அதன்பின், ‘இறைவன் ஆசீர்வதிப்பாராக! இறைவன் ஆசீர்வதிப்பாராக!’ என்ற மக்களின் ஆர்ப்பரிப்புடன் செருபாபேல் ஆலயத்தின் தலைக்கல்லைக் கொண்டுவந்து கட்டிடத்தை முடிப்பான் என்றான்.” அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டியும் முடிக்கும். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.” அப்பொழுது நான் அந்தத் தூதனிடம், “குத்துவிளக்கின் வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கும் ஒலிவமரங்கள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டேன். திரும்பவும் நான் அவனிடம், “தங்க நிறமான எண்ணெயை வடியவிடும் தங்கக் குழாய்கள் இரண்டினுடைய அருகில் காணப்படும் ஒலிவமரக் கிளைகள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்றும் கேட்டேன். அதற்கு அவன், “இவைகள் என்ன என்று உனக்குத் தெரியாதா?” என்றான். நான், “தெரியாது, ஐயா!” என்றேன். எனவே அவன், “இவர்கள் இருவரும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவருக்கு ஊழியம் செய்யும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்றான்.” பறக்கும் புத்தகச்சுருள் மீண்டும் நான் பார்த்தபோது, அங்கே பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் கண்டேன். அந்தத் தூதன் என்னிடம், “நீ என்ன காண்கிறாய்?” என்று கேட்டான். நான், “பறக்கும் புத்தகச்சுருள் ஒன்றைக் காண்கிறேன், அது முப்பது அடி நீளமும், பதினைந்து அடி அகலமுமாயிருக்கிறது என்றேன்.” அப்பொழுது அவன் என்னிடம், “நாடெங்கும் பரவுகிற சாபமே அது; அதன் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, திருடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான். மறுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, பொய் ஆணையிடுகிற ஒவ்வொருவனும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவான். சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் இந்த சாபத்தை வெளியே அனுப்புவேன், அப்பொழுது அது திருடன் வீட்டிலும், என் பெயரில் பொய் ஆணையிடுகிறவன் வீட்டிலும் நுழையும். அது அவன் வீட்டில் தங்கியிருந்து, அந்த வீட்டை அழிக்கும். அதன் மரவேலைப்பாடுகளும் கற்களுங்கூட முற்றிலும் அழிந்துவிடும் என்றான்.’ ” கூடைக்குள் பெண் பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னிடம் வந்து, “அங்கே தோன்றுவது என்ன என்று நீ நோக்கிப்பார் என்றான்.” “அது என்ன?” என்று நான் அந்தத் தூதனைக் கேட்டேன். அதற்கு அவன், “அது அளக்கும் ஒரு கூடை” என்றான். மேலும் அவன், “நாடெங்கும் உள்ள மக்களின் அக்கிரமமே5:6 அக்கிரமமே அல்லது கண்ணோக்கம் இது” என்றும் சொன்னான். அதற்குப் பின்பு அதன் ஈயமூடி திறக்கப்பட்டது. அந்த கூடைக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது அவன், “இவளே அந்த அக்கிரமம்” எனக்கூறி, அவளைத் திரும்பவும் கூடைக்குள் தள்ளி, அதன் வாயை ஈயமூடியால் அடைத்தான். அதன்பின் நான் மேலே பார்த்தேன். அங்கே எனக்குமுன் இரண்டு பெண்கள் தங்கள் சிறகுகளை விரித்துக் காற்றுடன் வருவதைக் கண்டேன். நாரையின் சிறகுகளைப்போன்ற சிறகுகள் அவர்களுக்கு இருந்தன; அவர்கள் அந்த கூடையை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் உயரத் தூக்கினார்கள். “கூடையை எங்கே அவர்கள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம் நான் கேட்டேன். அதற்கு அவன், “சிநெயார்5:11 சிநெயார் அல்லது பாபிலோனியர் நாட்டில் அதற்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்கள். அது கட்டப்பட்டதும், கூடை அதற்குரிய இடத்தில் வைக்கப்படும் என்றான்.” நான்கு தேர்கள் திரும்பவும் நான் பார்த்தபோது, இரண்டு வெண்கல மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் வெளியே வரக்கண்டேன். முதலாம் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும், மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் புள்ளிகளுடைய குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. அவைகளெல்லாம் வலிமை நிறைந்தனவாய் இருந்தன. அப்பொழுது நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இவை என்ன ஐயா?” எனக் கேட்டேன். அதற்கு அந்தத் தூதன் என்னிடம், “இவை சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவரின் முன்னின்று புறப்படுகிற வானத்தின் நான்கு காற்றுகளாகும். கருப்புக் குதிரைகள் பூட்டப்பட்டது வட தேசத்தை நோக்கியும், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டது மேற்கு நோக்கியும், புள்ளிகளுடைய குதிரைகள் பூட்டப்பட்டது தெற்கு நோக்கியும் போகின்றன.” வலிமைவாய்ந்த குதிரைகள் வெளியே வந்து, அவை பூமியை சுற்றிப்போகத் துடித்துக் கொண்டிருந்தன. அப்போது அவன், “பூமி முழுவதையும் சுற்றிப் போங்கள்!” என்றான். உடனே அவை பூமி முழுவதையும் சுற்றிப்போனது. அப்போது அவர் என்னைக் கூப்பிட்டு, “பார்! வட தேசத்தை நோக்கிப் போகின்றவை வடநாட்டில் என் ஆவிக்கு அமைதியைக் கொடுத்திருக்கின்றன என்றான்.” யோசுவாவுக்கு மகுடம் திரும்பவும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “நாடுகடத்தப்பட்டு, பாபிலோனிலிருந்து திரும்பி வந்த எல்தாய், தொபியா, யெதாயா ஆகியோரிடமிருந்து வெள்ளியையும் தங்கத்தையும் பெற்றுக்கொள். அன்றைக்கே புறப்பட்டு செப்பனியாவின் மகன் யோசியாவின் வீட்டிற்குப் போ. அங்கே வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து ஒரு மகுடம் செய்து அதை யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனின் தலையில் வை. சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தான் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார். யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மேல் அமர்ந்திருந்து அரசனாக ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தம் அரியணையில் ஒரு ஆசாரியனாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’ அந்த மகுடம் ஏலேம், தொபியா, யெதாயா ஆகியோருக்கும், செப்பனியாவின் மகன் யோசியா எனப்பட்ட ஏனுக்கும் நினைவுச் சின்னமாகக் கொடுக்கப்படும். அதை யெகோவாவின் ஆலயத்தில் வைத்திருக்கவேண்டும். வெகுதொலைவில் இருப்பவர்கள் வந்து, யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்பொழுது என்னை சேனைகளின் யெகோவாவே உங்களிடம் அனுப்பினார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதுமாய் கீழ்ப்படிவீர்களானால் இது நிறைவேறும் என்றார்.” நீதியும் இரக்கமும் தரியு அரசன் ஆட்சி செய்த நான்காம் வருடம் கிஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதம் நான்காம் நாள், யெகோவாவின் வார்த்தை சகரியாவுக்கு வந்தது. பெத்தேல் நகரத்து மக்கள் சரெத்செர், ரெகெம்மெலெக் என்பவர்களைத் தங்கள் மனிதர்களோடு, யெகோவாவிடம் மன்றாடும்படி அனுப்பினார்கள். அவர்கள் வந்து சேனைகளின் யெகோவாவின் ஆலய ஆசாரியர்களிடமும், இறைவாக்கினரிடமும், “பல வருடமாக நாம் கடைப்பிடித்து வந்ததுபோல, ஐந்தாம் மாதத்தில் அழுது புலம்பி உபவாசம் இருக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அப்பொழுது எல்லாம் வல்ல யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “நீ இந்த நாட்டின் மக்கள் எல்லோரையும், ஆசாரியர்களையும் கேட்கவேண்டியதாவது: கடந்த எழுபது வருடமாக ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் உபவாசமிருந்து துக்கங்கொண்டாடியபோது, உண்மையாக எனக்காகவா உபவாசமிருந்தீர்கள்? நீங்கள் சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் உங்களுக்காக அல்லவா விருந்து கொண்டாடினீர்கள்? முந்திய இறைவாக்கினரைக்கொண்டு யெகோவா இதைப்பற்றி உங்களுக்கு அறிவிக்கவில்லையா? எருசலேமும் அதன் சுற்றுப்புற பட்டணங்களும் அமைதியாயும் செழிப்பாயும் இருந்தபோதும், தெற்குப் பிரதேசங்களிலும், மேற்கே மலையடிவாரங்களிலும் குடியிருப்புகள் சமாதானமாய் இருந்தபோதும் அவர் இவற்றை அறிவிக்கவில்லையா?” யெகோவாவின் வார்த்தை திரும்பவும் சகரியாவுக்கு வந்தது: “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீதியைச் சரியாக வழங்குங்கள். ஒருவரிலொருவர் இரக்கம் காண்பித்து கருணை உள்ளவர்களாய் இருங்கள். விதவையையோ, தகப்பன் இல்லாத பிள்ளையையோ, பிறநாட்டினனையோ, ஏழையையோ ஒடுக்கவேண்டாம். உங்கள் உள்ளத்தில் ஒருவனுக்கெதிராக ஒருவன் தீய திட்டங்களைச் செய்யக்கூடாது.’ “ஆனால் அவர்கள் நான் சொன்னவற்றைக் கவனிக்க மறுத்தார்கள்; பிடிவாதமாக மறுபக்கம் திரும்பி தங்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் இருதயங்களை வைரத்தைப்போல் கடினமாக்கினார்கள். முந்தைய இறைவாக்கினர்மூலம் சேனைகளின் யெகோவா தம் ஆவியானவரால் கொடுத்த சட்டத்தையோ, வார்த்தைகளையோ கேட்க மறுத்தார்கள். ஆதலால் சேனைகளின் யெகோவா கடுங்கோபங்கொண்டுள்ளார். “ ‘நான் கூப்பிட்டபோது அவர்கள் கேட்கவில்லை. அதேபோல் அவர்கள் என்னைக் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன்,’ என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘அவர்களை நாடுகளுக்குள்ளே ஒரு சுழல்காற்றினால் நான் சிதறடித்தேன்; அங்கே அவர்கள் அந்நியராயிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு போக்குவரத்து இல்லாமல் பாழாய்ப் போயிற்று. இவ்வாறே அவர்கள் அந்தச் செழிப்பான நாட்டைப் பாழாக்கினார்கள்.’ ” எருசலேமுக்கு ஆசீர்வாதம் சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சீயோனில் உள்ள அன்பில் நான் வைராக்கியமாய் இருக்கிறேன்; அவளைக் குறித்த அன்பு வைராக்கியத்தினால் அவளுடைய பகைவருடன் கடுங்கோபமாயிருக்கிறேன்.” யெகோவா சொல்வது இதுவே: “நான் சீயோனுக்குத் திரும்பிவந்து எருசலேமில் குடிகொள்வேன். அப்பொழுது எருசலேம், சத்தியத்தின் நகரம் என்றும், சேனைகளின் யெகோவாவின் மலை, பரிசுத்த மலை என்றும் அழைக்கப்படும்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மறுபடியும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதுள்ள ஆண்களும், பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுடைய முதிர்வயதின் காரணமாக அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஊன்றுகோல் இருக்கும். நகர வீதிகள், விளையாடுகிற சிறுவர்களாலும், சிறுமிகளாலும் நிறைந்திருக்கும்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் இந்த மக்களில் மீதியாய் இருப்பவர்களுக்கு இவையெல்லாம் புதுமையாய்த் தோன்றும். எனினும் இவை என் பார்வையில் புதுமையானவை அல்ல” என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நிச்சயமாகவே நான் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளிலிருந்து என் மக்களை மீட்பேன். நான் மறுபடியும் அவர்களை எருசலேமில் குடியிருப்பதற்கு அழைத்து வருவேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு உண்மையும் நீதியுமுள்ள இறைவனாய் இருப்பேன்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “சேனைகளின் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்ட நாட்களில் இருந்த இறைவாக்கினர்களான ஆகாய், சகரியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்பொழுது நினைவுகூருங்கள். ‘ஆலயம் கட்டப்படும்படிக்கு உங்கள் கைகள் பெலனடையட்டும்’ என்று சொன்னார்கள். அந்த நாட்களுக்கு முன்னர் மனிதனுக்கோ, சுமை சுமக்கும் மிருகத்திற்கோ கூலி கொடுக்கப்படவில்லை. ஒருவனாலும் தன் எதிரியின் நிமித்தம், பாதுகாப்பாகத் தன் தொழிலுக்குச் செல்லவும் முடியாதிருந்தது. ஏனெனில், ஒவ்வொருவனையும் அவன் அயலவனுக்கு எதிராக, நானே திருப்பிவிட்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ நான் இந்த மக்களில் மீதியாயிருப்போரை, முந்தைய நாட்களில் நடத்தியதுபோல நடத்தப் போவதில்லை” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “இனி விதை நன்கு வளரும், திராட்சைக்கொடி தன் பலனைக் கொடுக்கும், நிலம் நல்ல விளைச்சலைக் கொடுக்கும்; வானங்கள் பனியைப் பெய்யும், மீதியாயிருக்கும் மக்களுக்கு நான் இவைகளையெல்லாம் சொத்துரிமையாகக் கொடுப்பேன். யூதாவே, இஸ்ரயேலே, நீங்கள் நாடுகளுக்கிடையில் சாபத்துக்குரியவர்களாய் இருந்தீர்கள். ஆனால் நான் உங்களை மீட்பேன், இப்பொழுதோ நீங்கள் ஒரு ஆசீர்வாதமாயிருப்பீர்கள். பயப்படவேண்டாம், உங்கள் கைகளைப் பெலப்படுத்தி ஆலய கட்டிடவேலையில் ஈடுபடுங்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “கடந்த வருடங்களில் உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கோபமூட்டிய போது உங்கள்மேலும் தீங்கு வருவிக்கத் தீர்மானித்து, இரக்கம் காட்டாதிருந்தேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “அதேபோல நான் இப்பொழுது யூதாவுக்கும், எருசலேமுக்கும் திரும்பவும் நன்மை செய்வது எனத் தீர்மானித்துள்ளேன். நீங்கள் பயப்படவேண்டாம். நான் அதை நிச்சயம் செய்வேன். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியவை இவைகளே: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மையையே பேசுங்கள்; நீதிமன்றங்களில் உண்மையாயும், நீதியாயும் தீர்ப்பு வழங்குங்கள். உங்கள் அயலவனுக்கு எதிராகத் சதித்திட்டம் வகுக்க வேண்டாம். பொய் சத்தியம் செய்ய பிரியப்பட வேண்டாம். இவையனைத்தையும் நான் வெறுக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். சேனைகளின் யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில் நீங்கள் செய்யும் உபவாசங்கள், யூதாவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிற கொண்டாட்டங்களாகவும், மகிழ்ச்சி தரும் பண்டிகைகளாகவும் மாறும். ஆதலால் உண்மையையும், சமாதானத்தையும் விரும்புங்கள்.” மேலும் சேனைகளின் யெகோவா சொல்வதாவது: “பல மக்கள் கூட்டங்களும், பல நகரக் குடிகளும் இன்னும் வருவார்கள். அப்பொழுது ஒரு நகரத்தின் குடிகள் இன்னொரு நகரத்திற்குப் போய், ‘சேனைகளின் யெகோவாவைத் தேடவும், யெகோவாவின் தயவுக்காக அவரை மன்றாடவும், நாங்கள் போகிறோம். நீங்களும் வாருங்கள். உடனே போவோம்’ என்று சொல்வார்கள். எனவே அநேக மக்கள் கூட்டங்களும், வலிமைவாய்ந்த நாடுகளும் சேனைகளின் யெகோவாவின் சமுகத்தைத் தேடவும், அவரிடம் தயவை நாடி மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் பல மொழிகளைப் பேசுவோரிலும் பல மக்களிலுமிருந்து பத்து மனிதர்கள் ஒரு யூதனின் உடையின் தொங்கலைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, ‘இறைவன் உம்மோடிருக்கிறார் எனக் கேள்விப்பட்டோம்; அதனால் நாங்களும், உம்முடனே எருசலேமுக்கு வருகிறோம், என்று சொல்வார்கள்.’ ” இஸ்ரயேலின் பகைவருக்கு நியாயத்தீர்ப்பு ஒரு இறைவாக்கு: யெகோவாவின் வார்த்தை ஹதெராக் நாட்டுக்கு விரோதமாய் இருக்கிறது. அவரது தண்டனை தமஸ்கு நகரத்தின்மேல் வரும். ஏனெனில் எல்லா மக்களினுடைய, இஸ்ரயேல் வம்சம் முழுவதினுடைய கண்கள் யெகோவாவையே நோக்கிக் கொண்டிருக்கின்றன. தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும், தீரு, சீதோன் பட்டணங்கள் திறமைமிக்கதாய் இருந்தபோதும், அவற்றின்மேலும் அவரது தண்டனை வரும். தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள். ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார். கடலில் அவளுக்குள்ள வலிமையை அழித்துப்போடுவார். அவள் நெருப்புக்கு இரையாக்கப்படுவாள். அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்; காசா பட்டணமும் வேதனையால் துடிக்கும். எக்ரோன் பட்டணத்தின் எதிர்பார்ப்பும் அற்றுப்போகும். காசா தன் அரசனை இழப்பாள். அஸ்கலோன் பாழாய்ப்போகும். வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள். நான் பெலிஸ்தியரின் அகந்தையை இல்லாமல் ஒழிப்பேன். இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும் அருவருப்பான உணவை அவர்களின் பற்களின் இடையிலிருந்தும் நீக்குவேன்; மீதியான பெலிஸ்தியரோ நம் இறைவனுக்கு உரியவராவார்கள். அவர்கள் யூதாவின் தலைவர்களாவார்கள். எக்ரோன் எபூசியரைப்போல் ஆகும். எனவே பெலிஸ்திய நாடு இஸ்ரயேலில் ஒரு பங்காகும். ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து, என் ஆலயத்தைப் பாதுகாப்பேன்; நான் என் மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதால், ஒடுக்குவோர் யாரும் திரும்பவும் ஒருபோதும் என் மக்களை மேற்கொள்ளமாட்டார்கள். சீயோன் அரசனின் வருகை சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு. எருசலேம் மகளே, நீ ஆர்ப்பரி. இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவராய் இரட்சிப்புடன் வருகிறார், தாழ்மையுள்ள அவர், கழுதையின்மேலும், கழுதைக் குட்டியான மறியின்மேலும் ஏறி வருகிறார். எப்பிராயீமிலிருந்து தேர்களையும், எருசலேமிலிருந்து போர்க் குதிரைகளையும் அகற்றிவிடுவேன். யுத்த வில்லும் முறிக்கப்படும். உன் அரசர் நாடுகளுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் தொடங்கி, மறுகடல் வரையும், ஐபிராத்து நதிதொடங்கி, பூமியின் எல்லைகள் வரைக்கும் பரந்திருக்கும். சீயோனே உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையின் இரத்தத்தின் நிமித்தம், தண்ணீரில்லாத குழியில் அடைபட்டுள்ள உன் கைதிகளை விடுதலை செய்வேன். நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள். நீங்கள் இழந்தவற்றை இரண்டு மடங்காகத் திரும்பவும் தருவேன் என நான் இப்பொழுதும் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து, எப்பிராயீமை அதன் அம்பாக வைப்பேன்; சீயோனே, உன் மகன்களை நான் எழுப்புவேன். கிரேக்க நாடே, அவர்களை உன் மகன்களுக்கு விரோதமாய் அனுப்புவேன். என் மக்களைப் போர்வீரனின் வாளைப்போல் ஆக்குவேன். யெகோவா காட்சி கொடுப்பார் அப்பொழுது யெகோவா தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்; அவரது அம்பு மின்னலைப்போல் விரையும். ஆண்டவராகிய யெகோவா எக்காளத் தொனியை எழுப்புவார். அவர் தென்திசைச் சுழல் காற்றில் கெம்பீரமாய் வருவார். சேனைகளின் யெகோவா தன் மக்களின் கேடகமாய் நின்று பாதுகாப்பார். அவர்கள் தமது பகைவர்களை அழித்து, கவண் கற்களால் தாக்கி வெற்றி பெறுவார்கள். அப்பொழுது அவர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டவர்களைப்போல் ஆரவாரிப்பார்கள். பலிபீடத்தின் மூலைகளில் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கிண்ணத்தைப்போல் அவர்கள் நிரம்பியிருப்பார்கள். தமது மக்களின் மந்தையைப்போல, அந்த நாளில், அவர்களுடைய இறைவனாகிய யெகோவா அவர்களைப் பாதுகாப்பார். கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப்போல, அவரது நாட்டில் அவர்கள் மின்னுவார்கள். அவர்கள் எவ்வளவு கவர்ச்சியும் அழகுமாய் இருப்பார்கள்! தானியமும், புதிய திராட்சை இரசமும் வாலிபரையும் இளம்பெண்களையும் ஊக்கமாய் வளர்க்கும். யெகோவா யூதாவை ஆதரிப்பார் யூதா மக்களே, யெகோவாவிடம் வசந்தகாலத்தில் மழைக்காக மன்றாடுங்கள்; யெகோவாவே மழைமேகங்களை உண்டாக்குகிறவர். அவர் மனிதர்களுக்கு மழையைப் பொழியச்செய்து, அனைவருக்காகவும் வயலின் பயிர்களை விளையச் செய்கிறவர். விக்கிரகங்கள் வஞ்சனை பேசுகின்றன. குறிசொல்கிறவர்கள் பொய்யான காட்சிகளைக் காண்கிறார்கள். உண்மையற்ற கனவுகளைக் கூறுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஆறுதலும் பயனற்றது. ஆகவே மக்கள் செம்மறியாடுகளைப்போல் வழிதப்பி, மேய்ப்பன் இல்லாதபடியால் ஒடுக்கப்படுகிறார்கள். “மேய்ப்பர்கள்மேல் என் கோபம் பற்றியெரிகிறது, தலைவர்களை நான் தண்டிப்பேன்; சேனைகளின் யெகோவா, யூதா குடும்பத்தாராகிய தமது மந்தையைப் பராமரிப்பார், அவர்களை யுத்த களத்தின் கம்பீரமான குதிரையைப் போலாக்குவார். மூலைக்கல்லும் கூடாரத்திற்கான முளையும், யுத்த வில்லும், யூதாவிலிருந்தே தோன்றும். யூதாவிலிருந்தே எல்லா ஆளுநர்களும் தோன்றுவார்கள். யுத்தத்தில் வீதிகளின் சேற்றில் எதிரியை மிதிக்கும் வலிமையான மனிதர்போல், அவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பார்கள். யெகோவா அவர்களோடிருப்பதால் அவர்கள் போரிட்டு, குதிரைவீரரையும் முறியடிப்பார்கள். “நான் யூதா குடும்பத்தாரைப் பெலப்படுத்துவேன். யோசேப்பு குடும்பத்தாரைக் காப்பாற்றுவேன். நான் அவர்கள்மேல் இரக்கங்கொண்டபடியால், நான் அவர்களை முந்திய நிலைக்குக் கொண்டுவருவேன். அவர்கள் என்னால் புறக்கணிக்கப்படாதவர்கள்போல் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே. நான் அவர்களின் வேண்டுதலுக்கு விடையளிப்பேன். எப்பிராயீமியர் வலிமைமிக்க மனிதரைப் போலாவார்கள். திராட்சை இரசம் குடித்தவர்களைப்போல் அவர்கள் உள்ளத்தில் மகிழ்வார்கள். அவர்களுடைய பிள்ளைகள் அதைக்கண்டு களிகூருவார்கள்; அவர்களின் உள்ளம் யெகோவாவிடம் மகிழும். நான் சைகை காட்டி அவர்களை ஒன்றுகூட்டுவேன். நிச்சயமாய் நான் அவர்களை மீட்பேன். அவர்கள் முன்போல் எண்ணற்றவர்களாய் இருப்பார்கள். மக்கள் கூட்டங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தூரதேசங்களிலும் இன்னும் அவர்கள் என்னை நினைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் தப்பிப் பிழைப்பார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்களை நான் எகிப்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்து, அசீரியாவிலிருந்த அவர்களை ஒன்றுகூட்டி, கீலேயாத், லெபனோன் நாடுகளுக்குக் கொண்டுவருவேன். அவர்களுக்கு அங்கே போதுமான இடம் இருக்காது. தொல்லை என்னும் கடலைக் கடந்து செல்வார்கள்; ஏனெனில் கொந்தளிக்கும் கடல் அமைதியாக்கப்படும். நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் அகந்தை தாழ்த்தப்படும். எகிப்தின் செங்கோலும் அதைவிட்டு எடுபடும். நான் அவர்களை யெகோவாவிடம் பெலப்படுத்துவேன்” அவருடைய பெயரில் அவர்கள் நடப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். லெபனோனே, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கும்படி உன் கதவுகளைத் திற. தேவதாரு மரங்களே, புலம்பி அழுங்கள். கேதுரு மரங்கள் வீழ்ந்தன; சிறந்த மரங்கள் அழிக்கப்பட்டன. பாசானின் கர்வாலி மரங்களே, புலம்பியழுங்கள். ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது. மேய்ப்பரின் புலம்பலைக் கேளுங்கள். அவர்களின் செழிப்பான பசும்புல் தரை அழிக்கப்பட்டது; சிங்கங்களின் கர்ச்சனையைக் கேளுங்கள். யோர்தானின் அடர்ந்த புதர் அழிந்திருக்கிறது. இரண்டு மேய்ப்பர்கள் என் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “வெட்டுவதற்குக் குறிக்கப்பட்டிருக்கும் மந்தையை மேய்ப்பாயாக. அவைகளை வாங்குகிறவர்களோ அவைகளைக் கொலைசெய்கிறார்கள். ஆனால் அவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள்கிறார்கள். அவைகளை விற்கிறவர்களோ, ‘யெகோவாவுக்குத் துதி; நான் செல்வந்தன்’ என்று சொல்கிறார்கள். அவைகளின் சொந்த மேய்ப்பர்களோ, அவைகளைக் காத்துக்கொள்ளவில்லையே. அதுபோல இந்நாட்டு மக்கள்மேல் இனி ஒருபோதும் நான் இரக்கங்காட்டமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் ஒவ்வொருவனையும், அவன் அயலானின் கைகளிலும் அரசனின் கைகளிலும், நான் ஒப்படைப்பேன். அவர்கள் நாட்டை ஒடுக்குவார்கள். நான் அவர்களின் கைகளிலிருந்து இவர்களைத் தப்புவிக்க மாட்டேன்.” எனவே வெட்டப்படுவதற்கென குறிக்கப்பட்ட மந்தையை நான் மேய்த்தேன். முக்கியமாக மந்தையில் ஒடுக்கப்பட்டதை நான் பராமரித்தேன். அப்பொழுது மேய்ப்பனின் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிக்கு தயவு என்றும், மற்றொன்றிற்கு ஐக்கியம் என்றும் பெயரிட்டேன். நான் மந்தைகளை அவற்றால் மேய்த்தேன். ஒரே மாதத்தில் மூன்று பயனற்ற மேய்ப்பர்களை அகற்றினேன். ஆனால் அந்த மந்தையும் என்னை அருவருத்தது. நானும் அவற்றைக்குறித்து சலிப்படைந்தேன். நான் அவர்களிடம், “நான் உங்கள் மேய்ப்பனாயிருக்க மாட்டேன். சாகிறது சாகட்டும், அழிகிறது அழியட்டும். மீதியாயிருப்பவை ஒன்றின் மாமிசத்தை மற்றொன்று தின்னட்டும் என்றேன்.” அப்பொழுது நான் தயவு என்கிற என் கோலை எடுத்து முறித்துப் போட்டேன், அதனால் இறைவன் எல்லா நாடுகளுடனும் செய்துகொண்ட உடன்படிக்கையை இல்லாமல் செய்துவிட்டார் என்பது தெரிந்தது. அந்த நாளிலே அது தள்ளுபடியாயிற்று, எனவே என்னைக் கவனித்துக் கொண்டிருந்த மந்தையில் பாதிக்கப்பட்டவர்கள், இது யெகோவாவின் வார்த்தை என்பதை அறிந்துகொண்டார்கள். அப்பொழுது நான் அவர்களிடம், “அது நல்லது என நீங்கள் கருதினால் எனது கூலியைக் கொடுங்கள்; இல்லையெனில், வைத்திருங்கள் என்றேன்.” அப்பொழுது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசைக் கொடுத்தார்கள். அதன்பின் யெகோவா என்னிடம், “அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு” இதுவே எனக்கென அவர்கள் மதிப்பிட்ட மேன்மையான விலை! என்று சொன்னார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து யெகோவாவின் ஆலயத்திலிருந்த குயவனிடத்தில் எறிந்துவிட்டேன். பின்பு நான் ஐக்கியம் என்னும் எனது இரண்டாவது கோலையும் முறித்துப் போட்டேன். அப்படியே யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும் குலைத்துவிட்டேன். அதன்பின் யெகோவா எனக்குக் கூறியது இதுவே, “மறுபடியும் நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுக்குரிய கருவிகளை எடுத்துக்கொள். ஏனெனில் இதோ பார்! நான் இந்த நாட்டின்மேல் ஒரு மேய்ப்பனை எழும்பப் பண்ணுவேன். அவன் காணாமல் போவதைக் கவனிக்கவோ, குட்டிகளைத் தேடவோ, காயமுற்றதைக் குணமாக்கவோ, நலமானவற்றிற்கு உணவளித்துப் பராமரிக்கவோமாட்டான். ஆனால் கொழுத்த ஆடுகளின் குளம்புகளைக் கிழித்து அதன் இறைச்சியைத் தின்பான். “மந்தையைக் கைவிடுகிற பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ கேடு, அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும். அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும். அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!” எருசலேமின் பகைவர்கள் அழிக்கப்படுதல் இஸ்ரயேலைக் குறித்துக் கிடைத்த யெகோவாவின் வார்த்தை இதுவே. வானங்களை விரிக்கிறவரும், பூமியின் அஸ்திபாரத்தைப் போடுகிறவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் உருவாக்குகிறவருமாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “நான் எருசலேமை, ஒரு பாத்திரமாக்குவேன்; அது எருசலேமையும் யூதாவையும் முற்றுகையிடப் பண்ணுகிற தன்னைச் சுற்றிலுமுள்ள மக்கள் கூட்டங்களைத் தள்ளாடி விழப்பண்ணும். அந்நாளில் பூமியிலுள்ள நாடுகள் யாவும், அதற்கெதிராக ஒன்றுகூடும்போது, நான் எருசலேமை எல்லா நாடுகளுக்கும் அசைக்க முடியாத கற்பாறையாக்குவேன். அதை அசைக்க முயலும் நாடுகள் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொள்வார்கள். அந்த நாளில் குதிரைகளையெல்லாம் திகிலடையவும், அவற்றில் ஏறிவரும் வீரர்களையெல்லாம் புத்தி பேதலிக்கவும் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “யூதா வீட்டார்மேல் நான் கண்ணோக்கமாய் இருப்பேன். ஆனால் நாடுகளின் குதிரைகளையோ குருடாக்குவேன். அப்பொழுது யூதாவின் தலைவர்கள், ‘எருசலேம் மக்கள் வலிமை வாய்ந்தவர்கள், ஏனெனில் சேனைகளின் யெகோவாவே அவர்களின் இறைவனாயிருக்கிறார்’ என தங்கள் உள்ளங்களில் சொல்லிக்கொள்வார்கள். “அந்த நாளில் யூதாவின் தலைவர்களை விறகுகளின் குவியலுக்குள் வைக்கப்பட்ட தீச்சட்டியைப்போலவும், கதிர்க்கட்டுக்குள் வைக்கப்பட்ட எரியும் தீப்பந்தத்தைப் போலவும் ஆக்குவேன். அப்பொழுது அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டங்களை வலது புறமும், இடது புறமுமாக எரித்துப் போடுவார்கள். ஆனால் எருசலேமின் குடிகளோ, தங்கள் சொந்த இடங்களிலேயே சேதமின்றி இருப்பார்கள். “யெகோவா முதலாவதாக யூதாவின் குடிகளைப் பாதுகாப்பார். இதனால் தாவீது வீட்டாரின் மேன்மையும், எருசலேம் குடிகளின் மேன்மையும், யூதாவின் மேன்மையைவிட பெரியதாக இருக்காது. அந்நாளிலே யெகோவா எருசலேமில் வாழும் மக்களைப் பாதுகாப்பார்; அப்பொழுது அவர்களில் பெலன் மிகக்குறைந்தவனும் தாவீது அரசனைப்போல் இருப்பான். தாவீதின் குடும்பத்தினர் இறைவனைப்போல, அதாவது அவர்கள் முன்செல்லும் யெகோவாவின் தூதனைப்போல் இருப்பார்கள். அந்த நாளிலே எருசலேமை தாக்குகிற எல்லா நாடுகளையும் அழிப்பதற்கு நான் புறப்படுவேன். குத்தப்பட்டவனுக்குப் புலம்பல் “நான் தாவீதின் குடும்பத்துக்கும், எருசலேமில் வசிப்பவர்களுக்கும் தயவின் உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தியவரான என்னை நோக்கிப் பார்ப்பார்கள். ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் தலைப்பிள்ளை இறந்துபோனதால் மனங்கசந்து துயரப்படுவதைப்போலவும், அவர்கள் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள். அந்த நாளில் எருசலேமில் எழும்பும் புலம்பல் பெரிதாயிருக்கும். அது மெகிதோ சமவெளியிலுள்ள அதாத்ரிம்மோன் பட்டணத்தில் ஏற்பட்ட புலம்பலைப்போல இருக்கும். நாடு துக்கங்கொண்டாடும், ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாக புலம்பும், அவர்களுடைய மனைவிமாரும் புறம்பாயிருந்து புலம்புவார்கள். தாவீதின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், நாத்தானின் குடும்பத்தின் வம்சமும் அவர்கள் மனைவிமாரும், லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், சீமேயின் வம்சமும் அவர்களின் மனைவியரும், மீதமுள்ள எல்லா வம்சங்களும் அவர்களின் மனைவியரும் புலம்புவார்கள். பாவத்திலிருந்து சுத்திகரிப்பு “அந்த நாளிலே தாவீதின் குடும்பத்தினருக்காகவும் எருசலேமின், குடிமக்களுக்காகவும் ஊற்றொன்று திறக்கப்படும். அது அவர்களைப் பாவத்திலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் கழுவி சுத்திகரிக்கும். “அந்த நாளில், நான் நாட்டிலிருந்து விக்கிரங்களின் பெயரை அகற்றிவிடுவேன், அவை இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை” என சேனைகளின் யெகோவா கூறுகிறார். “பொய் தீர்க்கதரிசிகளையும், அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து நீக்குவேன். இனி ஒருவன் பொய் தீர்க்கதரிசனம் சொல்வானாகில், அவனைப் பெற்ற தாய் தகப்பன் அவனிடம், ‘நீ யெகோவாவின் பெயரில் பொய் சொன்னாய். ஆதலால் நீ சாகவேண்டும்’ என அவனுக்குச் சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொல்லும்போதோ, அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கத்தியால் குத்துவார்கள். “அந்த நாளில் பொய் தீர்க்கதரிசி ஒவ்வொருவனும், தன்னுடைய தரிசனங்களைக்குறித்து வெட்கமடைவான், அதனால் அவன் மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இறைவாக்கு உரைப்போருக்குரிய ஆட்டு மயிர் உடையை உடுத்தமாட்டான். அவனோ, ‘நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, நான் ஒரு விவசாயி; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.’ ஒருவன் அவனிடம், ‘உன் உடலில் இந்தக் காயங்கள் எப்படி உண்டாயின?’ எனக் கேட்டால், அதற்கு அவன், ‘என் நண்பர்களின் வீட்டிலே நான் பட்ட காயங்கள்’ என்பான். மந்தை சிதறடிக்கப்படுதல் “வாளே, என் மேய்ப்பனுக்கு எதிராக விழித்தெழு, எனக்கு நெருங்கிய மனிதனுக்கு எதிராய் விழித்தெழு!” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “மேய்ப்பனை அடி; செம்மறியாடுகளும் சிதறடிக்கப்படும். நானோ அதின் குட்டிகளுக்கு எதிராக என் கையைத் திருப்புவேன். நாடு முழுவதிலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெட்டுண்டு அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். எனினும், “மூன்றில் ஒரு பங்கு மீதியாய் அதில் விடப்படும். இந்த மூன்றில் ஒரு பங்கையும் நான் நெருப்புக்குள் கொண்டுவருவேன், வெள்ளியைப்போல் அவர்களைச் சுத்தமாக்கி, தங்கத்தைப்போல் அவர்களைச் சோதிப்பேன். அவர்கள் என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். நான், ‘இவர்கள் என் மக்கள்,’ என்பேன். அவர்களும், ‘யெகோவாவே எங்கள் இறைவன்’ என்பார்கள்.” யெகோவாவின் வருகையும் ஆட்சியும் எருசலேமே, யெகோவாவின் நாள் ஒன்று வருகிறது, அப்பொழுது உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையிட்டு, பொருட்களை உங்கள் முன்னிலையிலேயே பங்கிட்டுக் கொள்வார்கள். யெகோவாவே எருசலேமுக்கு எதிராகப் போரிடும்படி எல்லா நாடுகளையும் ஒன்றுதிரட்டுவார்; அந்த நகரம் கைப்பற்றப்படும், வீடுகள் கொள்ளையிடப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். நகர மக்களில் அரைப்பகுதியினர் நாடுகடத்தப்படுவார்கள், ஆனால் மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அப்பொழுது யெகோவா வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப்போல் அந்த நாடுகளுக்கு விரோதமாக சண்டையிடுவார். அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும். நீங்களோ என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியாவின் நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப்போல ஓடிப்போவீர்கள். அப்பொழுது என் இறைவனாகிய யெகோவா வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள். அந்த நாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இராது. அந்த நாள் பகலுமின்றி, இரவுமின்றி ஒரு நிகரற்ற நாளாயிருக்கும். அது யெகோவாவினால் அறியப்பட்ட ஒரு நாள். ஆனால் மாலைப் பொழுதிலும் வெளிச்சம் திரும்பிவரும். அந்த நாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாயும். அதன் அரைப்பங்கு கிழக்கே சவக்கடலுக்கும், அரைப்பங்கு மேற்கே மத்திய தரைக்கடலுக்கும் ஓடும். குளிர் காலத்திலும், கோடைகாலத்திலும் இவ்வாறே இருக்கும். யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும். கேபா முதல் எருசலேமுக்குத் தெற்கேயுள்ள ரிம்மோன்வரை இருக்கும் நிலமெல்லாம் அரபா சமபூமியைப் போலாகும். எருசலேமோ, பென்யமீன் வாசல் தொடங்கி முதலாம் வாசல் வழியாக, மேலும் மூலைவாசல் வரையிலும், அனானயேல் கோபுரத்திலிருந்து, அரசனின் திராட்சை ஆலைவரையிலும் உயர்த்தப்பட்டு, தன் இடத்தில் நிலைநிற்கும். எருசலேம் குடியேற்றப்படும்; எருசலேம் இனி ஒருபோதும் அழிக்கப்படமாட்டாது. அது பாதுகாப்பாயிருக்கும். எருசலேமுக்கு எதிராகப் போரிட்ட மக்கள் கூட்டங்கள் அனைவரையும் யெகோவா தாக்குவார். யெகோவாவினால் கொள்ளைநோய் கொண்டுவரப்படும்: அவர்கள் காலூன்றி நிற்கையிலேயே அவர்களின் உடலிலிருந்து தசை அழுகிப்போகும். அவர்கள் கண்கள் அதினதின் குழியிலேயே அழுகிப்போகும். அவர்கள் நாவுகளும் அவர்களின் வாய்க்குள்ளேயே அழுகிவிடும். அந்த நாளில் மனிதர் யெகோவாவிடமிருந்து வரும் பெரும் திகிலினால் சூழப்படுவார்கள். ஒவ்வொருவனும் மற்றொருவனின் கையைப் பற்றிப்பிடிப்பான்; அவர்கள் ஒருவரையொருவர் தாக்குவார்கள். யூதாவும் எருசலேமில் சண்டையிடும். சுற்றுப்புறங்களிலுள்ள நாடுகளின் செல்வங்களான தங்கமும், வெள்ளியும், உடைகளும் பெருந்திரளாய்ச் சேர்க்கப்படும். அதேபோன்ற ஒரு கொள்ளைநோய் அவர்களின் முகாம்களிலுள்ள குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் அங்குள்ள மிருகங்கள் எல்லாவற்றையும் தாக்கும். ஆனால் அப்பொழுது எருசலேமைத் தாக்கிய, எல்லா நாடுகளிலும் சிலர் தப்பிப் பிழைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும், வருடந்தோறும் சேனைகளின் யெகோவாவாகிய அரசரை வழிபடவும், கூடாரப்பண்டிகையைக் கொண்டாடவும் எருசலேமுக்குப் போவார்கள். பூமியிலுள்ள மக்கள் கூட்டங்களில் யாராவது சேனைகளின் யெகோவாவாகிய அரசரை ஆராதிக்க எருசலேமுக்குப் போகாதிருந்தால், அவர்களுடைய இடங்களில் மழை பெய்யாது. எகிப்து நாட்டு மக்களும் போய் அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத நாடுகளையும் யெகோவா அதே கொள்ளைநோயால் வாதிப்பார். இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனை. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் இதுவே. அந்த நாளில் குதிரைகளின் மணிகளில், “யெகோவாவுக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஆலயத்திலுள்ள சமையல் பானைகளும், பலிபீடத்திற்கு முன்பாக உள்ள தூய்மையான கிண்ணங்களைப்போல் இருக்கும். அப்பொழுது எருசலேமிலும், யூதாவிலும் உள்ள ஒவ்வொரு பானையும், சேனைகளின் கர்த்தருக்கு என்று தூய்மையாக்கப்பட்டதாக இருக்கும்; அங்கு பலியிட வருகிற யாவரும் அப்பானைகளில் சிலவற்றை எடுத்து அவைகளில் சமைப்பார்கள்; அந்த நாளில் சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தில், இனி ஒருபோதும் கானானியன் இருப்பதில்லை.