- Biblica® Open Indian Tamil Contemporary Version
தீத்து
பவுல் தீத்துவுக்கு எழுதின கடிதம்
தீத்து
தீத்.
பவுல் தீத்துவுக்கு எழுதின கடிதம்
பவுலாகிய நான் இறைவனின் ஊழியனாகவும், இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறேன். நான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய விசுவாசத்திற்காகவும், இறை பக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவிற்காகவுமே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். இப்பொழுது அவரால் நியமிக்கப்பட்ட காலத்தில், தம்முடைய வார்த்தையை வெளியரங்கமாக்கினார். நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாய் இது வெளியரங்கமாக்கப்பட்டது.
பவுலாகிய நான் நமது பொதுவான விசுவாசத்தில் என் உண்மையுள்ள மகனான தீத்துவுக்கு எழுதுகிறதாவது:
பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிரேத்தா தீவில் தீத்துவின் பணி
கிரேத்தா தீவில் முடிவுபெறாதிருக்கிற வேலைகளை, ஒழுங்குபடுத்தி முடிப்பதற்காகவே நான் உன்னை அங்கு விட்டுவந்தேன். நான் உனக்குக் கூறியதுபோல, எல்லாப் பட்டணங்களிலும் நீ சபைத்தலைவர்களை நியமி. ஒரு சபைத்தலைவன் குற்றம் காணப்படாதவனாகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும். அவனுடைய பிள்ளைகளும் முரட்டுகுணமுடையவர்கள் என்றோ, கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படுகிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் விசுவாசிகளாய் இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு திருச்சபைக்குப் பொறுப்பாயிருக்கும் ஊழியன், இறைவனின் வேலை அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாக இருக்கவேண்டும். அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது. அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது. அவன் மற்றவர்களை உபசரிக்கிறவனாகவும், நன்மையை நேசிக்கிறவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், நீதிமானாகவும் இருக்கவேண்டும். அவன் பரிசுத்தமுள்ளவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும் இருக்கவேண்டும். தனக்குப் போதித்துக் கொடுக்கப்பட்ட நம்பத்தக்க இந்தச் செய்தியை அவன் உறுதியாய் நம்பியிருக்கவேண்டும். அப்பொழுதே அவன் ஆரோக்கியமான போதனையினால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். அதற்கு முரண்பாடாய் இருக்கிறவர்களையும் எதிர்த்துச் சரியானதை எடுத்துச்சொல்வான்.
நன்மை செய்யத் தவறியவர்களை கண்டித்தல்
ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய வாய்களை அடக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக்கூடாத காரியங்களை போதித்து, முழுக் குடும்பங்களையும் பாழாக்குகிறார்கள். இழிவான விதத்தில் தாங்கள் ஆதாயம் பெறவே, இப்படிச் செய்கிறார்கள். அவர்களைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசியே அவர்களைக்குறித்து, “கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் கொடிய மிருகங்கள். சோம்பேறிகளான உணவுப்பிரியர்” என்று கூறியிருக்கிறான். இந்த சாட்சி உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாய் கடிந்துகொள். அப்பொழுதுதான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருந்து, யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களின் கட்டளைகளுக்கும் செவிகொடாதிருப்பார்கள். தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய புத்தியும் மனசாட்சியும் சீர்கெட்டிருக்கின்றன. அவர்கள் தாங்கள் இறைவனை அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலேயே, இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.
போதிக்கப்பட வேண்டியவை
ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு.
அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்; அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள்.
அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து. நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும். மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது.
அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ, அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள்.
ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது. அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. நம்முடைய மகத்துவமான இறைவனும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து, மகிமையுடன் வெளிப்படும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்கு நாம் காத்திருக்கும்படி வாழ அந்த கிருபை கற்றுத்தருகிறது. எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
இவையே நீ போதிக்கவேண்டிய காரியங்கள்; எல்லா அதிகாரத்துடனும் கண்டித்து, உற்சாகப்படுத்து. யாரும் உன்னை அவமதிக்க இடங்கொடாதே.
நன்மைசெய்ய ஆலோசனைகள்
ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும், ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து.
ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம். ஆனாலும் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் அன்பும் வெளிப்பட்டபோது, அவர் நம்மை இரட்சித்தது, நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அல்ல, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் இரட்சித்தார். மறுபிறப்பின் கழுவப்படுதலின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுவாழ்வின் மூலமாகவுமே அவர் நம்மை இரட்சித்தார். இறைவன் அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நம்மேல் அளவில்லாமல் ஊற்றினார். இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன.
ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே. பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள்.
கடைசி வாழ்த்து
அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன். சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை.
நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது.
என்னுடன் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
விசுவாசத்திற்குள்ளாக நம்மில் அன்பாய் இருக்கிறவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல்.
கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.