- Biblica® Open Indian Tamil Contemporary Version
ரூத்
ரூத்தின் சரித்திரம்
ரூத்
ரூத்
ரூத்தின் சரித்திரம்
நகோமி கணவனையும், மகன்களையும் இழப்பது
இஸ்ரயேல் நாட்டில் நீதிபதிகள் ஆளுகை செய்த காலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த ஒரு மனிதன் தன் மனைவியுடனும், தன் இரண்டு மகன்களுடனும் கொஞ்சக்காலம் மோவாப் நாட்டில் வாழ்வதற்காக அங்கு போனான். அந்த மனிதனின் பெயர் எலிமெலேக்கு. அவன் மனைவி பெயர் நகோமி. அவனுடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பதாகும். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த எப்பிராத்தியராவர். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மோவாபிலே குடியேறினார்கள்.
அங்கே நகோமியின் கணவன், எலிமெலேக் இறந்தான், அப்பொழுது நகோமி தன் இரண்டு மகன்களுடனும் தனித்து விடப்பட்டாள். நகோமியின் மகன்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். ஒருவன் ஒர்பாள் என்பவளையும், மற்றவன் ரூத் என்பவளையும் திருமணம் செய்தனர். அங்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வாழ்ந்தனர். அதன்பின் மக்லோன், கிலியோன் ஆகிய இருவரும் இறந்துபோனார்கள். இப்படியாக நகோமி தன் கணவனையும் தன் மகன்கள் இருவரையும் இழந்து தனியாக விடப்பட்டாள்.
நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்குத் திரும்புதல்
யெகோவா தம் மக்களுக்கு உணவளித்து உதவி செய்கிறார் என்பதை நகோமி மோவாப் நாட்டில் இருக்கும்போது கேள்விப்பட்டாள். அப்பொழுது அவள் தன் இரு மருமகள்களுடன் அங்கிருந்து தனது நாட்டிற்குத் திரும்பிச்செல்வதற்கு ஆயத்தம் செய்தாள். அவள் தன் மருமகள்களான ஒர்பாள், ரூத் என்பவர்களுடன் தான் வசித்த நாட்டைவிட்டு புறப்பட்டு, யூதா நாட்டை நோக்கிப் போகும்படி புறப்பட்டாள்.
அப்பொழுது நகோமி தன் இரு மருமகள்களிடமும், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள். இறந்துபோன உங்கள் கணவர்களுக்கும், எனக்கும் நீங்கள் இரக்கம் காட்டியதுபோல் யெகோவா உங்களுக்கும் இரக்கம் காட்டுவாராக. யெகோவா உங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு கணவனைத் தந்து அவர்கள் வீட்டிலே நீங்கள் ஆறுதலாய் வாழ்ந்திருக்க உதவுவாராக” என்று சொல்லி.
நகோமி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளிடம், “நாங்கள் உங்களுடனேயே, உங்களுடைய மக்களிடத்திற்கே வருவோம்” என்று சொன்னார்கள்.
நகோமியோ அவர்களிடம், “என் மகள்களே. நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; நீங்கள் ஏன் என்னுடனே வரவேண்டும்? நான் இனிமேலும் மகன்களைப் பெறுவேனோ? அவர்கள் உங்களுக்கு கணவர்களாக முடியுமோ? என் மகள்களே; உங்கள் வீட்டிற்கு திரும்பிப்போங்கள். எனக்கு வயது போய்விட்டதனால் இன்னொருவனைக் கணவனாக அடையவும் முடியாது. இனியும் எனக்குப் பிள்ளைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையிருந்து, இன்றிரவு நான் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றாலும், நீங்கள் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்வரை காத்திருப்பீர்களோ? அவர்களுக்காகத் திருமணம் செய்யாது தனித்திருப்பீர்களோ? வேண்டாம் என் மகள்களே. உங்களைவிட எனது துக்கம் அதிகமாயிருக்கிறது. ஏனெனில் யெகோவாவின் கை எனக்கெதிராக நீட்டப்பட்டுள்ளது!” என்றாள்.
இதைக் கேட்டு அவர்கள் திரும்பவும் அழுதார்கள். ஒர்பாளோ தன் மாமியை முத்தமிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுத் திரும்பிச்சென்றாள், ஆனால் ரூத்தோ அவளைப் பற்றிப் பிடித்துக்கொண்டாள்.
அப்பொழுது நகோமி அவளிடம், “பார், உன் சகோதரி தன் மக்களிடத்திற்கும், தன் தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப் போகிறாள். நீயும் அவளுடன் திரும்பிப்போ” என்றாள்.
ஆனால் ரூத் அவளிடம், “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார். நீங்கள் சாகும் இடத்தில் நானும் சாவேன், அங்கேயே நான் அடக்கம் செய்யப்படுவேன். மரணத்தைத் தவிர வேறேதாவது உங்களையும், என்னையும் பிரித்தால் யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்றாள். ரூத் தன்னுடன் வருவதற்கு மனவுறுதியாயிருப்பதைக் கண்ட நகோமி, அதற்குப் பின்னும் அவளை வற்புறுத்தவில்லை.
எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம்வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, அவர்களைக்குறித்து பட்டணத்து மக்கள் எல்லோரும் பரபரப்படைந்தார்கள். பெண்களோ வியப்புற்று, “இவள் நகோமியாயிருக்குமோ?” என்று சொல்லிக்கொண்டார்கள்.
அப்பொழுது அவள் அவர்களிடம், “நீங்கள் என்னை நகோமி, என்று அழைக்கவேண்டாம். என்னை மாரா என்றழையுங்கள். ஏனெனில் எல்லாம் வல்லவர் என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் யெகோவாவோ என்னை வெறுமையாகவே திருப்பிக் கொண்டுவந்துள்ளார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்கவேண்டும்? யெகோவா என்னைத் துன்புறுத்தினார். எல்லாம் வல்லவர் என்மேல் அவலத்தைக் கொண்டுவந்தார்” என்றாள்.
இவ்வாறு நகோமி தன் மருமகளான மோவாபிய பெண் ரூத்துடன் மோவாபிலிருந்து பெத்லெகேமுக்குத் திரும்பிவந்தாள். அப்பொழுது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.
ரூத் போவாஸ் சந்திப்பு
நகோமிக்கு அவளுடைய கணவனின் மனிதரில் ஒரு உறவினன் இருந்தான். எலிமெலேக்கின் வம்சத்தைச் சேர்ந்த செல்வந்தனான அந்த மனிதனின் பெயர் போவாஸ்.
மோவாபிய பெண்ணான ரூத் நகோமியிடம், “நான் வயல்வெளிக்குப் போய் யாருடைய கண்களிலாவது எனக்குத் தயவு கிடைத்தால், அவர்களைப் பின்சென்று வயலில் விடப்படும் கதிர்களை பொறுக்கிச் சேர்த்து வரவிடுங்கள்” என்று கேட்டாள்.
அதற்கு நகோமி, “என் மகளே, போய்வா” என விடையளித்தாள். எனவே ரூத் அங்கிருந்துபோய் வயலில் அறுவடை செய்கிறவர்களின் பின்னேசென்று சிந்துகிற கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தாள். அவள் கதிர் பொறுக்கிக்கொண்டிருந்த வயல், எலிமெலேக்கின் வம்சத்தானான போவாஸுக்குச் சொந்தமானது.
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்துசேர்ந்தான். அவன் அறுவடை செய்கிறவர்களிடம், “யெகோவா உங்களோடிருப்பாராக!” என வாழ்த்தினான்.
அவர்களும், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக” என வாழ்த்தினார்கள்.
பின் போவாஸ் அறுவடை செய்கிறவர்களைக் கண்காணிப்பவனிடம், “அந்த இளம்பெண் யாரைச் சேர்ந்தவள்?” என கேட்டான்.
அந்த கண்காணி போவஸிடம், “இவள் நகோமியுடன் மோவாப் நாட்டிலிருந்து வந்த மோவாபியப் பெண்; அவள் என்னிடம், ‘அறுவடை செய்கிறவர்களின் பின்னால் அரிக்கட்டுகளில் இருந்து சிந்துகிற கதிர்களைப் பொறுக்க தயவுசெய்து அனுமதியும்’ என்று கேட்டுக்கொண்டாள். காலை தொடங்கி இப்பொழுதுவரை வயலில் தொடர்ந்து வேலைசெய்தாள்; இப்பொழுதுதான் சிறிது நேரம் இளைப்பாற குடிசைக்குள் வந்தாள்” என்றான்.
அப்பொழுது போவாஸ் ரூத்திடம், “என் மகளே, எனக்குச் செவிகொடு. கதிர் பொறுக்குவதற்கு நீ வேறு வயலுக்குப் போகவேண்டாம். என் பணிப்பெண்களுடன் இங்கேயே இரு. மனிதர் அறுவடை செய்கிற வயலை நீ கவனித்து, பணிப்பெண்களுடனே பின்தொடர்ந்து நீயும் போ; உன்னை யாரும் தொடக்கூடாது என்று என் வேலைக்காரருக்குச் சொல்லியிருக்கிறேன். உனக்குத் தாகம் உண்டானால் என் வேலைக்காரர் நிரப்பியிருக்கும் குடங்களிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடி” என்றான்.
அதைக்கேட்ட அவள் பணிந்து விழுந்து வணங்கி, “நான் அந்நிய நாட்டவளாயிருந்தும் எனக்கு இவ்வளவு தயவு காட்டுகிறீர்களே!” என்று வியப்புடன் சொன்னாள்.
அதற்கு போவாஸ், “உன் கணவன் இறந்தபின் நீ உன் மாமியார் நகோமிக்குச் செய்ததெல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். உன் தாய் தகப்பனையும், நீ பிறந்த உன் நாட்டையும் விட்டு, முன் பின் அறியாத மக்கள் மத்தியில் வசிக்க வந்ததையும் நான் கேள்விப்பட்டேன். நீ செய்த எல்லாவற்றிற்கும் ஏற்ற பலனை யெகோவா உனக்குக் கொடுப்பாராக. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் சிறகுகளில் அடைக்கலம் புகும்படி வந்த உனக்கு, அவரிடமிருந்து நிறைவான வெகுமதி கிடைப்பதாக” என்றான்.
அப்பொழுது அவள், “ஐயா! உங்களுடைய கண்களில் தொடர்ந்து எனக்குத் தயை கிடைக்கவேண்டும். நான் உங்களுடைய பணிப்பெண்களுக்குக்கூட சமனானவள் அல்ல. அப்படியிருந்தும் நீங்கள் எனக்கு கருணைகாட்டி, உங்கள் அடியாளாகிய என்னுடன் தயவாய்ப் பேசினீர்களே!” என்றாள்.
சாப்பாட்டு வேளையில் போவாஸ் அவளிடம், “நீ இங்கே வா! இந்த அப்பத்தில் எடுத்துச் சாப்பிடு. இந்தத் திராட்சைப் பழச்சாறில் அப்பத்தைத் தொட்டுக்கொள்” என்றான்.
அறுவடை செய்கிறவர்களுடன் உட்கார்ந்தபோது, அவன் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் திருப்தியாக சாப்பிட்டபின் அதில் கொஞ்சம் அவளிடத்தில் மீதியிருந்தது. அவள் மறுபடியும் கதிர் பொறுக்க எழுந்தபோது, போவாஸ் தன் பணியாட்களிடம், “அவள் அரிக்கட்டுகளுக்கிடையில் பொறுக்கினாலும் அவளைத் தடுக்கவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படி கட்டுகளிலிலிருந்து சில கதிர்களை வேண்டுமென்றே சிந்தவிடுங்கள்; அவளை அதட்டாதிருங்கள்” என்று அவர்களுக்கு உத்தரவிட்டான்.
இவ்வாறு மாலைவரை வயலில் ரூத் கதிர் பொறுக்கினாள். அவள் பொறுக்கிய கதிர்களைத் தட்டி அடித்துச் சேர்த்தபோது ஏறக்குறைய ஒரு எப்பா2:17 அதாவது, சுமார் 13 கிலோகிராம் வாற்கோதுமை இருந்தது. ரூத் அதை எடுத்துக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பிப்போனதும் அவள் சேர்த்த தானியம் அதிகமாயிருப்பதை அவளுடைய மாமியார் கண்டாள். அத்துடன் ரூத் தான் திருப்தியாகச் சாப்பிட்டு, மீந்திருந்ததில் கொண்டுவந்ததைத் தன் மாமியிடம் கொடுத்தாள்.
அதைக்கண்ட ரூத்தின் மாமியார் அவளிடம், “எங்கே நீ இன்று கதிர் பொறுக்கினாய்? எங்கே வேலைசெய்தாய்? உன்னில் அக்கறைகாட்டிய அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்படுவானாக” என்றாள்.
அப்பொழுது ரூத் தன் மாமியாரிடம், தான் யாருடைய வயலில் வேலைசெய்தேன் என்பதைப் பற்றிச் சொன்னாள். “இன்று நான் வேலைசெய்த வயலின் உரிமையாளனின் பெயர் போவாஸ்” என்றும் சொன்னாள்.
நகோமி, “யெகோவா அவனை ஆசீர்வதிப்பாராக!” என்று சொல்லி தன் மருமகளிடம், “அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தயைகாட்டுவதை இன்னும் நிறுத்தவில்லை” என்றாள். மேலும் நகோமி, “அந்த மனிதன் எங்கள் நெருங்கிய உறவினன்; அவன் நம்மை மீட்கும் உரிமையுள்ள உறவினரில் ஒருவன்” என்றாள்.
அதற்கு மோவாபிய பெண்ணான ரூத், “அவர் என்னிடம், என்னுடைய வேலையாட்கள் தானியங்களை அறுவடை செய்து முடிக்கும்வரை நீ அவர்களுடன் தங்கியிரு எனவும் சொல்லியிருக்கிறார்” என கூறினாள்.
நகோமி தன் மருமகளான ரூத்திடம், “என் மகளே, நீ அவருடைய பணிப்பெண்களுடன் போவது உனக்கு நல்லது. ஏனெனில் வேறொருவருடைய வயல்களில் உனக்குத் தீங்கு நேரிடலாம்” என்றாள்.
எனவே ரூத், வாற்கோதுமை அறுவடை காலமும், கோதுமை அறுவடை காலமும் முடியும்வரை போவாஸின் பணிப்பெண்களுடனேயே தங்கினாள். அவள் தன் மாமியாருடனேயே வசித்தாள்.
சூடடிக்கும் களத்தில் ரூத்தும், போவாஸும்
ஒரு நாள் ரூத்தின் மாமியாராகிய நகோமி அவளிடம், “என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு ஒரு வாழ்க்கையைத் தேட வேண்டுமல்லவா? போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான். எனவே நீ குளித்து வாசனைத் தைலம் பூசி, உன்னிடத்திலுள்ள சிறந்த உடையை உடுத்திக்கொள். பின் நீ அந்த களத்திற்குப்போ. ஆனால் அவன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரை நீ அங்கிருப்பது அவனுக்குத் தெரியாதிருக்கட்டும். அவன் படுத்திருக்கிறபோது அவன் படுக்கும் இடத்தைக் கவனித்துக்கொள். அவன் படுத்தபின் நீ போய் போர்வையை விலக்கி அவன் கால்மாட்டில் படுத்துக்கொள்; பின்பு நீ என்ன செய்யவேண்டும் என்று அவனே உனக்குச் சொல்வான்” என்றாள்.
அதற்கு ரூத், “நீங்கள் எனக்குச் சொல்கிறபடி எல்லாம் நான் செய்வேன்” என்று சொன்னாள். அவ்வாறே அவள் சூடடிக்கும் களத்திற்குப் போய் தன் மாமியார் செய்யும்படி சொன்ன எல்லாவற்றையும் செய்தாள்.
போவாஸ் சாப்பிட்டு, குடித்து மிக மகிழ்ச்சியாயிருந்தான். அவன், தானியம் குவிந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் போய்ப்படுத்தான். அப்பொழுது ரூத் மெதுவாக அவனருகே போய் போர்வையை விலக்கி கால்மாட்டில் படுத்துக்கொண்டாள். நள்ளிரவில் ஏதோ ஒன்று அவனைத் திடுக்குறச் செய்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது, ஒரு பெண் தன் கால்மாட்டில் படுத்திருப்பதைக் கண்டான்.
உடனே அவன், “நீ யார்?” எனக் கேட்டான்.
“நான் உங்கள் அடியாளாகிய ரூத்; நீங்களே என்னை மீட்கும் உரிமையுடைய உறவினன்; ஆகையால் உங்கள் போர்வையின் தொங்கலை என்மேல் விரியுங்கள்”3:9 விரியுங்கள் என்பதன் பொருள் என்னை மணந்துகொள்ளுங்கள் என்று அர்த்தம். என்றாள்.
அதற்கு அவன், “என் மகளே! உன்னை யெகோவா ஆசீர்வதிப்பாராக. நீ முன்பு காட்டிய தயவைவிட இப்போது காட்டும் தயவு மிகமேலானது. நீ பணக்கார வாலிபனையோ, ஏழை வாலிபனையோ நாடிப்போகவில்லை. இப்பொழுதும் என் மகளே நீ பயப்படவேண்டாம். நீ கேட்பதெல்லாவற்றையும் நான் செய்வேன். நீ ஒரு உயர்ந்த குணாதிசயமுடையவள் என்பதை பட்டணத்திலுள்ள என் மக்களெல்லாரும் அறிவார்கள். நான் உனது நெருங்கிய உறவினன் என்பது உண்மைதான். ஆனாலும், என்னைவிட அதிக மீட்கும் உரிமையுடைய உறவினன் ஒருவன் இருக்கிறான். இன்றிரவு நீ இங்கே தங்கியிரு. காலையில் அவன் உன்னை மீட்க விரும்பினால் நல்லது. அவன் உன்னை மீட்கட்டும். அவன் விரும்பாவிட்டால் யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் உன்னை மீட்பேன் என்பதும் நிச்சயம். ஆகவே காலைவரை நீ இங்கே படுத்திரு” என்றான்.
காலைவரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். ஆனால் ஒருவரையொருவர் கண்டுகொள்ளத்தக்க வெளிச்சம் வரும்முன் அவள் படுக்கையை விட்டெழுந்தாள். ஏனெனில் போவாஸ், “சூடடிக்கும் களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்” என்று சொல்லியிருந்தான்.
மீண்டும் அவன் அவளிடம், “நீ உன் போர்வையைக் கொண்டுவந்து விரித்துப் பிடி” என்றான். அவள் அப்படியே விரித்துப்பிடிக்க அவன் அதில் ஆறுபடி3:15 அதாவது, சுமார் 4 கிலோகிராம் வாற்கோதுமையை அளந்து அவளிடம் கொடுத்தான்; பின்பு அவன்3:15 பல எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் அவள் என்றுள்ளது. பட்டணத்திற்குத் திரும்பிப்போனான்.
ரூத் தன் மாமியார் நகோமியிடம் வந்தபோது, அவள் மாமியார், “என் மகளே, நீ போனகாரியம் என்னவாயிற்று” என்று கேட்டாள்.
அப்பொழுது அவள், போவாஸ் தனக்கு செய்ததெல்லாவற்றையும் சொன்னாள். அவள் தொடர்ந்து, “நீ உன் மாமியாரிடம் வெறுங்கையுடன் போகவேண்டாம் என்று சொல்லி, அவர் எனக்கு இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் தந்தார்” என்றாள்.
அப்பொழுது நகோமி, “என் மகளே! இது என்னவாக முடியும் என்று அறியும்வரை காத்திரு. அந்த மனிதன் இன்று இந்த விஷயம் நிறைவேறும்வரை ஓய்ந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள்.
போவாஸ் ரூத் திருமணம்
இதற்கிடையில் போவாஸ், பட்டண வாசலுக்குச் சென்று அங்கே உட்கார்ந்தான். அப்பொழுது போவாஸ் முன்பு குறிப்பிட்ட அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன் அவ்வழியே வந்தான். போவாஸ் அவனிடம், “என் நண்பனே இங்கே வந்து உட்காரு” என்றான். அவனும் அங்குபோய் உட்கார்ந்தான்.
போவாஸ் பட்டணத்து முதியவர்களில் பத்துபேரை கூட்டிக்கொண்டுவந்து, “இங்கே உட்காருங்கள்” என்றான். அவர்களும் உட்கார்ந்தார்கள். அப்பொழுது போவாஸ் மீட்கும் உரிமையுடைய அந்த உறவினனிடம், “எலிமெலேக் என்னும் நம் சகோதரனுக்குச் சொந்தமான நிலத்துண்டை, மோவாபிலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள். இதை நான் உன் கவனத்திற்குக் கொண்டுவருவது நல்லது என நினைத்தேன். எனவே இங்கு அமர்ந்திருப்பவர்களின் முன்னிலையிலும், என் மக்களின் முதியவர்களின் முன்னிலையிலும் நீ அதை வாங்க வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். நீ அதை மீட்டுக்கொள்ள விரும்பினால் மீட்டுக்கொள். உனக்கு விருப்பமில்லையென்றால் நான் அறியும்படி எனக்குச் சொல். இதை மீட்கும் உரிமை உன்னைத்தவிர வேறொருவனுக்கும் இல்லை; உனக்கடுத்ததாக எனக்கே உரிமையுண்டு. நான் அதை மீட்பேன்” என்றான்.
அதற்கு அவன், “நான் அவ்வயலை மீட்டுக்கொள்கிறேன்” என்றான்.
அப்பொழுது போவாஸ், “நீ நகோமியிடமிருந்து அந்த நிலத்தை வாங்கும் அந்த நாளிலே, இறந்துபோனவனின் மனைவி ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு இறந்த உன் உறவினன் பெயரையும், அவனுடைய உடைமையையும் பராமரிக்க வேண்டும்” என்றான்.
அதற்கு அந்த மீட்கும் உரிமையுடைய உறவினன், “அப்படியாயின் அந்நிலத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியாது. அப்படி மீட்டுக்கொண்டால், நான் என் சொந்த உடைமையை இழக்க நேரிடலாம். நீயே அதை வாங்கி மீட்டுக்கொள். என்னால் அதை மீட்கமுடியாது” என்றான்.
இஸ்ரயேலில் முற்காலத்திலிருந்து வரும் வழக்கப்படி, மீட்கிறதிலும், சொத்துரிமையை மாற்றுகிறதிலும் அதை உறுதிப்படுத்துவதற்கு அடையாளமாக ஒருவன் தன் செருப்பைக் கழற்றி மற்றவனுக்குக் கொடுப்பான். இதுவே இஸ்ரயேலில் சொத்து மாற்றங்களைச் சட்டபூர்வமாக்கும் முறைமையாயிருந்தது.
எனவே மீட்கும் உரிமையுடைய உறவினன் போவாஸிடம், “நீயே அதை வாங்கிக்கொள்” என்று சொல்லி தன் செருப்பைக் கழற்றிப் போட்டான்.
அப்பொழுது போவாஸ் அங்கிருந்த பெரியோரையும், மக்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னதாவது, “இன்று நான் எலிமெலேக்கிற்கும் அவன் பிள்ளைகளான கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்கும் உரிய உடைமைகள் யாவற்றையும் நகோமியிடமிருந்து வாங்கிவிட்டேன் என்பதற்கு, நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான். “மக்லோனின் மனைவியாயிருந்த ரூத் என்னும் மோவாபிய பெண்ணையும் நான் என் மனைவியாக, எனக்கு உரிமையாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு இறந்தவனுடைய பெயரை அவனுடைய சொத்துடன் அழியாமல் பராமரிப்பேன். இவ்விதமாக அவனுடைய பெயர் குடும்பத்தின் மத்தியிலிருந்தோ, அல்லது பட்டணத்தின் பதிவேடுகளிலிருந்தோ அழிந்துபோகாதிருக்கும். இதற்கு இன்று நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்றான்.
அப்பொழுது முதியவர்களும், பட்டண வாயிலிலிருந்த மற்றெல்லோரும் அவனிடம் சொன்னதாவது: “ஆம்! நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். உன் வீட்டிற்கு மனைவியாக வரப்போகிற இப்பெண்ணை யெகோவா, இஸ்ரயேலின் வீட்டைக் கட்டியெழுப்பிய ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும்4:11 இஸ்ரயேலின் அனைத்து கோத்திரங்களின் முற்பிதாக்களும் அவர்களிடமிருந்து பிறந்தவர்கள். ஆக்குவாராக! எப்பிராத்தில் செல்வந்தனாயிருந்து, பெத்லெகேமிலே பெயர் பெற்றிருப்பாயாக. இந்த இளம்பெண் வழியாக யெகோவா உனக்குக் கொடுக்கவிருக்கும் சந்ததியினரால் உன் குடும்பம் தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பேரேஸின்4:12 பேரேஸின் குடும்பத்தைச் சேர்ந்த போவாஸ். குடும்பத்தைப்போல் இருப்பதாக!” என வாழ்த்தினார்கள்.
நகோமி ஒரு மகனைப் பெற்றாள்
அப்படியே போவாஸ் ரூத்தை ஏற்றுக்கொண்டான். அவள் அவனுடைய மனைவியானாள். அவர்கள் கணவன் மனைவியாகக்கூடி வாழ்ந்தபோது, யெகோவா அவளைக் கர்ப்பம் தரிக்கும்படி செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது அவ்வூர்ப் பெண்கள் நகோமியிடம், “யெகோவாவுக்குப் புகழ் உண்டாவதாக, அவர் இன்று உனக்கு ஒரு மீட்டுக்கொள்ளும் உரிமையாளனைத் தராமல் விடவில்லை. அதனால் இந்தப் பிள்ளை இஸ்ரயேல் எங்கும் பெயர் பெற்று விளங்குவானாக. அவன் உன் வாழ்க்கையைப் புதுப்பித்து, உன் முதிர்வயதில் உன்னை ஆதரிப்பான். உன்மேல் அன்பாயிருக்கிறவளும், ஏழு மகன்களைப் பார்க்கிலும் உனக்கு மிக அருமையானவளுமான உனது மருமகள் அவனைப் பெற்றாளே!” என்றார்கள்.
நகோமி அக்குழந்தையைத் தன் மடியிலே வைத்துப் பராமரித்து வளர்த்தாள். அங்கு வாழ்ந்த பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான்” என்று சொல்லி அவனுக்கு, “ஓபேத்” என்று பெயரிட்டார்கள். அவனே தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன்.
தாவீதின் பரம்பரை
பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே:
பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன்,
எஸ்ரோன் ராமின் தகப்பன்,
ராம் அம்மினதாபின் தகப்பன்,
அம்மினதாப் நகசோனின் தகப்பன்,
நகசோன் சல்மோனின் தகப்பன்,
சல்மோன் போவாஸின் தகப்பன்,
போவாஸ் ஓபேதின் தகப்பன்,
ஓபேத் ஈசாயின் தகப்பன்,
ஈசாய் தாவீதின் தகப்பன்.