- Biblica® Open Indian Tamil Contemporary Version
வெளிப்படுத்தல்
வெளிப்படுத்தப்பட்ட தரிசனம்
வெளிப்படுத்தல்
வெளி.
வெளிப்படுத்தப்பட்ட தரிசனம்
முன்னுரை
இது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிக்கிறதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது இறைத்தூதனை தமது ஊழியனான யோவானிடம் அனுப்பி இதை அவனுக்கு தெரியப்படுத்தினார். இது இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் சாட்சியாக யோவான் தான் கண்ட எல்லாவற்றையும் அறிவித்தான். இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதினால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கிறவர்களும் இதைக் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி நடக்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஏழு திருச்சபைகளை வாழ்த்துவதும் இறைவனைப் புகழ்வதும்
யோவானாகிய நான்,
ஆசியாவிலுள்ள1:4 அதாவது, அக்காலத்து ரோம அரசின் மாகாணத்தை சேர்ந்ததும், நவீன மேற்கு துருக்கியைச் சேர்ந்த சில பட்டணங்கள் உட்பட்டது ஆசியா மாகாணம் ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது:
இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர்.
அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென்.
“இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்”1:7 [தானி. 7:13]
மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும்,
அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”;
பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.”1:7 [சக. 12:10]
அது அப்படியே ஆகட்டும்! ஆமென்.
“நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்,” என்று, “இருக்கிறவரும்1:8 அல்பாவும் ஒமேகாவும் என்பது கிரேக்க மொழியின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள்., இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய” இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
யோவானுக்கு உண்டான தரிசனம்
உங்கள் சகோதரனான யோவானாகிய நான், கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், அரசிலும், துன்பத்தைப் பொறுமையோடு சகிப்பதிலும், உங்கள் பங்காளியாயிருக்கிறேன். இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறதாலும், இயேசுவுக்கு சாட்சியாயிருப்பதாலும், நான் நாடுகடத்தப்பட்டு, பத்மு தீவில் இருந்தேன். கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன். அது என்னிடம்: “நீ காண்கிறதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி: அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.
நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன். அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார்.1:13 [தானி. 7:13] அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார். அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன். நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன்.
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது. நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.”
எபேசு திருச்சபைக்கு
“எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்துகிறவரும், ஏழு தங்க குத்துவிளக்குகளின் நடுவே நடப்பவருமாகிய நான் சொல்லும் வார்த்தைகள் என்னவென்றால்:
நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன், உனது கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை உன்னால் சகிக்க முடியாதிருக்கிறாய். அப்போஸ்தலர் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர் என்பதை நீ கண்டு கொண்டாய் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன். நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பாடுகளை அனுபவித்தாய். நீ சலித்துப்போகவே இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய். நீ எப்பேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். நீ மனந்திரும்பு. நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடத்தில் வந்து, உன்னுடைய விளக்குத்தாங்கியை அதன் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன். ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரியது ஒன்று உண்டு: நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் ஜீவ மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன். இந்த மரம் இறைவனுடைய சொர்க்கத்தில் இருக்கிறது.
சிமிர்னா திருச்சபைக்கு
“சிமிர்னா பட்டணத்திலிருக்கிற திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
தொடக்கமும் முடிவுமாயிருக்கிற, இறந்து மீண்டும் உயிர்பெற்றவருடைய வார்த்தைகள் என்னவென்றால்:
உன்னுடைய துன்பங்களையும், வறுமையையும் நான் அறிந்திருக்கிறேன் ஆனால், நீ செல்வந்தனாய் இருக்கிறாய்! தாங்கள் யூதரல்லாதவராயிருந்தும் யூதரென்று சொல்லிக்கொள்கிறவர்கள் உனக்கு விரோதமாய் அவதூறு பேசுவதையும் நான் அறிவேன். ஆனால், அவர்கள் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள். உனக்கு வரப்போகிற துன்பத்தைக் குறித்து பயப்படாதே. உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சாத்தான் சிறையில் போடுவான். நீங்கள் பத்து நாட்கள் துன்பத்தை அனுபவிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரிக்கும்வரை உண்மையுள்ளவனாய் இரு. அப்போது நான் உனக்கு ஜீவகிரீடத்தைக் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
பெர்கமு திருச்சபைக்கு
“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது:
இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே:
நீ வாழுகின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன். அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுடைய பட்டணத்தில், தான் கொல்லப்பட்ட நாட்களிலும், விசுவாசத்தைக் கைவிடவில்லை. அங்குதான் சாத்தான் குடியிருக்கிறான். ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள். அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கிறவர்கள் சிலரும் உன் நடுவே இருக்கிறார்கள். ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு புதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன். அந்தக் கல்லைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மாத்திரமே அந்தப் பெயரை அறிவார்கள்.
தியத்தீரா திருச்சபைக்கு
“தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் கண்கள் இருக்கிறவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போல் பாதங்கள் இருக்கிற இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவையே:
உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களைத் தவறாய் வழிநடத்தி, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து, விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைச் சாப்பிடும்படியும் செய்து தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிற யேசபேல் என்ற அந்தப் பெண்ணை நீ அனுமதிக்கிறாய். அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை. ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன். நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கிறவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக, நான் உங்களுக்குப் பதில் செய்கிறவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள். உங்கள்மேல் இதைத்தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்தமாட்டேன்.’ வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன். ‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’2:27 [சங். 2:9] என்ற வாக்குத்தத்தத்தின்படி, நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.
சர்தையிலுள்ள திருச்சபைக்கு
“சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறவருடைய வார்த்தைகள் இவையே.
உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ உயிருடன் இருக்கிறாய் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்துவிட்டாய். விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை. ஆகையால், நீ பெற்றுக் கொண்டவைகளையும், கேட்டவைகளையும் நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் திருடனைப்போல் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியமாட்டாய். ஆனால், தங்களுடைய உடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர், சர்தை பட்டணத்தில் இன்னும் உன்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியுடையவர்களானபடியால் வெள்ளை உடை அணிந்தவர்களாய் என்னுடனே நடப்பார்கள். வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளை உடைகள் அணிவிக்கப்படும். ஜீவப் புத்தகத்திலிருந்து ஒருபோதும் நான் அவர்களுடைய பெயரை அழித்துப்போடமாட்டேன். என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும், அவர்களுடைய பெயரை அறிக்கையிடுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
பிலதெல்பியா திருச்சபைக்கு
“பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை வைத்திருக்கிறவரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாகியவர் சொல்லுகிற வார்த்தைகள் இவையே.
நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். இதோ பார், நான் உனக்கு முன்பாக திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன். யாராலும் அதை மூடமுடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ என்னுடைய வார்த்தையைக் காத்துக்கொண்டாய். நீ என்னுடைய பெயரை மறுதலிக்கவுமில்லை. தாங்கள் யூதர்கள் அல்லாதிருந்தும், தங்களை யூதர்கள் என்று பொய்யாய் கூறிக்கொள்ளும் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள் உன்னுடைய கால்களில் வந்து விழச்செய்து, நான் உன்னை நேசித்தேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன். பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படி, முழு உலகத்தின்மேலும் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து நானும் உன்னைக் காத்துக்கொள்வேன். நான் சீக்கிரமாய் வருகிறேன். அப்பொழுது, யாரும் உனக்குரிய கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடத்தில் உள்ள வார்த்தையைப் பற்றிப் பிடித்துக்கொள். வெற்றி பெறுகிறவர்களை என்னுடைய இறைவனின் ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன். அவர்கள் இனி ஒருபோதும் அதைவிட்டு நீங்கிப்போகமாட்டார்கள். நான் அவர்கள்மேல் என்னுடைய இறைவனின் பெயரையும், என்னுடைய இறைவனின் நகரத்தின் பெயரையும் எழுதுவேன். இறைவனிடத்திலிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே இறங்கி வருகிற புதிய எருசலேம் என்னும் எனது இறைவனுடைய நகரத்தின் பெயரையும், என் புதிய பெயரையும், அவர்கள்மேல் நான் எழுதுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.
லவோதிக்கேயா திருச்சபைக்கு
“லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது:
வாக்குமாறாதவரும், சத்திய சாட்சியும். இறைவனின் படைப்பை ஆளுகை செய்கிறவரும், ஆமென்3:14 ஆமென் என்றால் உண்மையுள்ளவர் என்று அர்த்தம் என்பவரின் வார்த்தைகள் இவைகளே.
நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன். நீயோ, ‘நான் செல்வந்தன்; நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று சொல்கிறாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், உடையற்றவன் என்ற நிலையை உணராதவனாய் இருக்கிறாய். நீ என்னிடத்திலிருந்து நெருப்பில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை விலைகொடுத்து வாங்கிக்கொள். அப்பொழுது நீ செல்வந்தனாவாய்; அணிந்துகொள்வதற்கு வெள்ளை உடைகளையும் வாங்கிக்கொள், அப்பொழுது உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை நீ மறைத்துக்கொள்வாய். நீ பார்க்கும்படி உன் கண்களுக்குப் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள், இதுவே, நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை. நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு. இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து, அவருடன் சாப்பிடுவேன், அவரும் என்னுடன் சாப்பிடுவார். நான் வெற்றி பெற்று, என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பது போல, வெற்றி பெறுகிறவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.”
பரலோகத்தில் அரியணை
இதற்குப்பின் நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப்போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன், “இங்கே, மேலே வா. இதற்குப்பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்றது. உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். அதில் அமர்ந்திருப்பவருடைய தோற்றம் படிகக்கல்லைப்போலும், மாணிக்கக்கல்லைப்போலும் இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதத்தைப்போல் ஒரு வானவில் பிரகாசித்தது. அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்து நான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின்மேல், இருபத்து நான்கு சபைத்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெள்ளை உடைகளை உடுத்தியிருந்தார்கள். அவர்கள் தங்கள் தலைகளிலே தங்க கிரீடங்களை அணிந்திருந்தார்கள். அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக, ஏழு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. இவைகளே, இறைவனுடைய ஏழு ஆவிகள். அத்துடன், அரியணைக்கு முன்பாகக் பளிங்கைப்போல் தெளிவாய் இருந்த கண்ணாடிக்கடல் ஒன்று இருந்தது.
நடுவிலே அரியணையைச் சுற்றி, நான்கு உயிரினங்கள் இருந்தன. அவைகள் முன்னும் பின்னும் கண்களால் மூடப்பட்டிருந்தன. முதலாவது, சிங்கத்தைப்போல் காணப்பட்டது. இரண்டாவது, எருதைப்போல் காணப்பட்டது. மூன்றாவது, மனிதனைப் போன்ற முகம் உடையதாய் இருந்தது. நான்காவது, பறக்கின்ற கழுகைப்போலவும் அந்த உயிரினங்கள் இருந்தன. இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும், ஆறாறு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு உயிரினங்களின் எல்லா இடங்களும், கண்களால் மூடப்பட்டிருந்தன. அவைகளின் சிறகுகளின் கீழேயும்கூட, கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவைகள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தன:
“ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர்
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’4:8 [ஏசா. 6:3]
இவரே இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவருமானவர்.”
அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கிறவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் அரியணைக்கு முன் தங்கள் கிரீடங்களை வைத்துவிட்டு:
“எங்கள் இறைவனாகிய கர்த்தாவே,
மகிமையையும் கனத்தையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே.
ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர்.
உம்முடைய சித்தத்தினாலேயே, அவைகள் எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன”
என்று பாடினார்கள்.
ஆட்டுக்குட்டியானவர்
பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச்சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு வல்லமையுள்ள தூதன், “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச்சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் சொல்லிக்கொள்வதை நான் கண்டேன். ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ அல்லது பூமியின்கீழோ அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ ஒருவராலும் இயலவில்லை. அந்தப் புத்தகச்சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லையே என்று நான் மிகவும் அழுதேன். அப்பொழுது அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ பார், யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமாய் இருக்கிறவர், வெற்றி பெற்றிருக்கிறார். அவர் புத்தகச்சுருளையும், அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு ஜெயம் பெற்றவராய் இருக்கிறார்” என்றான்.
பின்பு நான், கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன்; அவர் இப்பொழுது நான்கு உயிரினங்களாலும் அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களாலும் சூழப்பட்டு, அரியணையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அந்த ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்த ஏழு கண்களும் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள். ஆட்டுக்குட்டியானவர் வந்து, அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டார். அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள். அந்தச் சபைத்தலைவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள்:
“நீர் அந்தப் புத்தகத்தை எடுக்கவும்,
அதன் முத்திரைகளைத் திறக்கவும் தகுதியுள்ளவர்.
ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர்.
உம்முடைய இரத்தத்தினாலே மனிதர்களை ஒவ்வொரு பின்னணியிலிருந்தும்,
ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும்,
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இறைவனுக்கென்று விலைகொடுத்து வாங்கிக்கொண்டீர்.
நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி,
ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்;
அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.”
பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அநேக இறைத்தூதர்களின் குரலைக் கேட்டேன்; இறைத்தூதர்களோ, எண்ணிக்கையில் ஆயிரம் ஆயிரமாகவும், பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தார்கள். அவர்கள் அந்த அரியணையையும், அந்த உயிரினங்களையும், அந்த சபைத்தலைவர்களையும் சுற்றி நின்றார்கள். அவர்கள் உரத்த குரலில்:
“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும்,
செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், கனத்தையும்,
மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!”
என்று பாடினார்கள்.
பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்:
“அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும்,
ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும்
என்றென்றைக்கும் உண்டாவதாக!”
அந்த நான்கு உயிரினங்களும், “ஆமென்” என்று சொல்ல அந்த சபைத்தலைவர்களும் பணிவுடன் விழுந்து வணங்கினார்கள்.
முத்திரைகள்
நான் பார்த்துக்கொண்டிருக்கையில் ஆட்டுக்குட்டியானவர், அந்த ஏழு முத்திரைகளில் முதலாவது முத்திரையைத் திறந்தார். அப்பொழுது அந்த நான்கு உயிர்களில் ஒன்று, “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அதன் குரலோ இடி முழக்கத்தைப்போல் இருந்தது. அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை நின்றதை நான் பார்த்தேன்! அதில் ஏறி இருந்தவன் ஒரு வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் வெற்றி வீரனாக வெற்றி பெறுகிறதற்காகவே புறப்பட்டுச் சென்றான்.
ஆட்டுக்குட்டியானவர், இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அப்பொழுது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறம் உடையதாயிருந்தது. அதில் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கிவிடவும், மனிதர்கள் தங்களில் ஒருவரையொருவர் கொன்றுபோடும்படி செய்யவும், வல்லமை கொடுக்கப்பட்டது. அவனுக்கு ஒரு பெரிய வாள் கொடுக்கப்பட்டது.
ஆட்டுக்குட்டியானவர், மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக, ஒரு கருப்புக்குதிரை நின்றது. அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே, தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு குரல் போன்ற சத்தம், “ஒரு நாள் கூலிக்கு கோதுமை ஒரு கிலோகிராம்; வாற்கோதுமை மூன்று கிலோகிராம்; எண்ணெயையும், திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே!” என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்தே வந்ததுபோல் எனக்குக் காணப்பட்டது.
ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, பலிபீடத்தின் கீழே இறைவனுடைய வார்த்தைக்காகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததற்காகவும், கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைக் கண்டேன். அவர்கள் உரத்த குரலில், “ஆண்டவராகிய கர்த்தாவே, பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரே, நீர் பூமியில் குடியிருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது எப்போது? எங்களுடைய இரத்தப்பழிக்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும்?” என்று கூக்குரலிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெள்ளை உடை கொடுக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் இன்னும் சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களைப்போல் கொல்லப்பட இருக்கும், அவர்களுடைய எல்லா உடன் ஊழியர்களும், சகோதரர்களும் கொல்லப்படும் வரைக்கும், அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்பொழுது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கருப்புக் கம்பளியைப்போல் கருத்துப்போனது. சந்திரன் முழுவதும் இரத்த சிவப்பு நிறமாய் மாறியது. வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன. ஒரு புத்தக சுருள் சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும், அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன.
அப்பொழுது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், சேனாதிபதிகளும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், ஒவ்வொரு அடிமையும், ஒவ்வொரு சுதந்திரக் குடிமகனும், குகைகளிலும், மலைகளிலுள்ள கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள். அரியணையில் அமர்ந்திருக்கிறவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும், எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!6:16 [ஓசி. 10:8] அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது; யாரால் தாங்கமுடியும்?” என்று சொன்னார்கள்.
முத்திரையிடப்பட்ட 1,44,000 பேர்கள்
பின்பு நான்கு இறைத்தூதர்கள் பூமியின் நான்கு மூலைகளிலும் நிற்க கண்டேன். அவர்கள் நிலத்தையும், கடலையும், மரங்களையும் சேதப்படுத்தாமலும் பூமியின் நான்கு வகை காற்றை வீசாமலிருக்கவும் செய்தார்கள். வேறொரு இறைத்தூதன், கிழக்கிலிருந்து வருவதை நான் கண்டேன். அவன் ஜீவனுள்ள இறைவனுடைய முத்திரையை வைத்துக்கொண்டிருந்தான். அவன் நிலத்தையும், கடலையும் சேதப்படுத்துவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்த, நான்கு தூதர்களையும் உரத்த குரலில் கூப்பிட்டு: “நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளின்மேல், நாங்கள் முத்திரையிடும் வரைக்கும், நிலத்தையோ கடலையோ மரங்களையோ அழிக்கவேண்டாம்” என்றான். அப்பொழுது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்: இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, 1,44,000 பேர்.
யூதா கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
ரூபன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
காத் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
ஆசேர் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
நப்தலி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
மனாசே கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
சிமியோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
லேவி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
இசக்கார் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
செபுலோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
யோசேப்பு கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,
பென்யமீன் கோத்திரத்திலிருந்து, 12,000 பேரும் முத்திரையிடப்பட்டார்கள்.
வெள்ளை அங்கி உடுத்தியவர்கள்
இதற்குப் பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே எனக்கு முன்பாக, ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டம் நின்றது. அவர்களை எண்ணிக் கணக்கிட, யாராலும் முடியாதிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும், பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும் வந்த அவர்கள், அரியணைக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை அங்கி உடுத்திக்கொண்டு, தங்களுடைய கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டும் நின்றார்கள். அவர்கள் உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னதாவது:
“இரட்சிப்பின் மகிமை அரியணையில் அமர்ந்திருக்கும்
எங்கள் இறைவனுக்கும்,
ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது.”
அப்பொழுது அரியணையைச் சுற்றியும், சபைத்தலைவர்களைச் சுற்றியும், நான்கு உயிரினங்களைச் சுற்றியும், நின்றுகொண்டிருந்த எல்லா இறைத்தூதர்களும், அரியணைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சொன்னதாவது:
“ஆமென்!
துதியும், மகிமையும்,
ஞானமும், நன்றியும், கனமும்,
வல்லமையும், பெலமும்
எங்கள் இறைவனுக்கே என்றென்றைக்கும் உண்டாவதாக.
ஆமென்!”
அப்பொழுது, அந்த சபைத்தலைவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெள்ளை உடை உடுத்தியிருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அப்பொழுது அந்த மூப்பன் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள்.” அதனாலேயே,
“இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து,
அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள்;
அரியணையில் அமர்ந்திருக்கிற அவர்,
அவர்களுடன் குடியிருந்து, பாதுகாப்பாய் இருப்பார்.
அவர்கள் இனியொருபோதும், பசியாயிருக்கமாட்டார்கள்;
இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவுமாட்டார்கள்.
வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ,
அவர்களைத் தாக்காது.7:16 [ஏசா. 49:10]
ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே
அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார்;
‘அவர் அவர்களை வாழ்வுதரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’7:17 [ஏசா. 49:10]
‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து
கண்ணீர் எல்லாவற்றையும் துடைத்துவிடுவார் என்றான்.’ ”7:17 [ஏசா. 25:8]
ஏழாவது முத்திரையும் தூபக்கிண்ணமும்
ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
இன்னொரு இறைத்தூதன் வந்து, பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் ஒரு தங்க தூபக்கிண்ணத்தை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கப் பலிபீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடனும் சேர்த்து தூபங்காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது. அந்தத் தூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாட்டுகளுடன் கலந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது. பின்பு அந்தத் தூதன் தூபக்கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பினான். அவன் அந்த நெருப்பைப் பூமியின்மேல் வீசி எறிந்தான். அப்பொழுது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.
எக்காளங்கள்
பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைத்தூதர்களும், அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.
முதலாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது கல்மழையும், இரத்தம் கலந்திருந்த நெருப்பும் வந்தன. அது பூமியின்மேல் வீசியெறியப்பட்டது. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்துபோயிற்று, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்துபோயின, பச்சையான புல் எல்லாமே எரிந்துபோயிற்று.
இரண்டாவது இறைத்தூதன், தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது பிரமாண்டமான மலைபோல ஒன்று, தீப்பற்றி எரிகிறதாய் கடலில் எறியப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது. கடலிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்துபோயின; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்துபோயின.
மூன்றாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப்போல் எரிந்து வானத்திலிருந்து விழுந்தது. அது ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும்; தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால், மனிதர்களில் பலர் இறந்தார்கள்.
நான்காவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்படைந்தது. சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கும் இருளடைந்தன. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போயின.
பின்பு நான் பார்த்தபொழுது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு, உரத்த சத்தமிடக்கேட்டேன்: “ஐயோ! ஐயோ! பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு, மற்ற மூன்று இறைத்தூதர்களினாலும் ஊதப்படப்போகிற எக்காள சத்தங்களினால், ஐயோ, கேடு வரப்போகிறதே!” என்றது.
ஐந்தாவது இறைத்தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய திறவுகோல் அதனிடம் கொடுக்கப்பட்டது. அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது அதிலிருந்து மிகப்பெரிய சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் புகை எழும்பியது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழும்பிய புகையினால், சூரியனும், வானமும் இருளடைந்தன. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு, பூமியின்மேல் வந்தன. அவைகளுக்கு பூமியிலுள்ள தேள்களுக்குரிய வல்லமையைப் போன்ற, ஒரு வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியிலுள்ள புல்லையோ, செடியையோ, மரத்தையோ சேதப்படுத்த வேண்டாமென்று, அவைகளுக்குச் சொல்லப்பட்டது. தங்களுடைய நெற்றிகளில் இறைவனுடைய முத்திரையைப் பெற்றிராத மனிதர்களை மாத்திரமே சேதப்படுத்தும்படி, அவைகளுக்குச் சொல்லப்பட்டது. அந்த மனிதர்களைக் கொல்வதற்கான வல்லமை அவற்றிற்குக் கொடுக்கப்படவில்லை. அவர்களை ஐந்து மாதங்களுக்கு சித்திரவதை செய்வதற்கு மாத்திரம், அவைகளுக்கு வல்லமை அளிக்கப்பட்டது. அவர்கள் அனுபவித்த அந்த வேதனை, ஒரு தேள் கொட்டும்போது அனுபவிக்கும் வேதனையைப்போல் இருந்தது. அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் காணமாட்டார்கள். அவர்கள் சாவதற்கு விரும்புவார்கள், ஆனால் சாவோ அவர்களைவிட்டு ஓடிப்போகும்.
அந்த வெட்டுக்கிளிகள் யுத்தத்திற்காக ஆயத்தமாக்கப்பட்ட குதிரைகளைப்போல் காணப்பட்டன. அவை தங்களுடைய தலைகளிலே, தங்க கிரீடங்களைப் போன்ற எதையோ அணிந்திருந்தன. அவைகளுடைய முகங்கள் மனித முகங்களைப்போல் காணப்பட்டன. அவைகளின் தலைமுடி பெண்களின் தலைமுடியைப்போல் இருந்தது. அவைகளின் பற்கள் சிங்கத்தின் பற்களைப்போல் இருந்தன. இரும்பு மார்புக் கவசங்களைப் போன்ற மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன. அவைகளின் சிறகுகளின் இரைச்சல், அநேகம் குதிரைகளும், தேர்களும் யுத்தத்திற்கு விரைந்து செல்லும்போது, ஏற்படும் இரைச்சலைப்போல் இருந்தது. தேள்களுக்கு இருப்பதுபோல் அவைகளுக்கும் வால்களும், கொடுக்குகளும் இருந்தன. அவைகளின் வால்களிலே மனிதர்களை ஐந்து மாதங்களுக்கு துன்புறுத்தக்கூடிய வல்லமை இருந்தது. பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன்9:11 அப்பொல்லியோன் அல்லது அபெத்தோன் இவ்விரண்டு வார்த்தைகளின் பொருள் அழிக்கிறவன் என்பதாகும் என்றும் சொல்லப்பட்டது.
முதலாவது பயங்கரம் கடந்துபோயிற்று; இன்னும் இரண்டு பயங்கரங்கள் வரவிருந்தன.
ஆறாவது இறைத்தூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்பொழுது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் கொம்புகளிலிருந்து வந்த, ஒரு குரலைக் கேட்டேன். அது எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது தூதனிடம், “ஐபிராத்து என்ற பெரிய நதியருகே கட்டி வைக்கப்பட்டிருக்கிற, நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு” என்று சொன்னது. அப்பொழுது மனிதரில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படி, அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். அவர்கள் இந்த வேளைக்கென்றும், இந்த நாளுக்கென்றும், இந்த மாதத்திற்கென்றும், இந்த ஆண்டுக்கென்றும், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருபது கோடியாயிருந்த குதிரைவீரர்களின் படையை வழிநடத்தினார்கள். அவைகளின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்.
நான் என்னுடைய தரிசனத்தில் குதிரைவீரர்களையும் குதிரைகளையும் இவ்வாறு கண்டேன்: அவர்களுடைய மார்புக்கவசங்கள் நெருப்பு நிறமாகவும், கருநீலமாகவும், கந்தகத்தைப் போன்ற மஞ்சள் நிறமாகவும் இருந்தன. அந்தக் குதிரைகளின் தலைகளோ, சிங்கங்களின் தலைகளைப்போல் காணப்பட்டன. அவைகளின் வாய்களிலிருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளிவந்தன. அவைகளின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளினாலும், மனிதரில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள். அந்தக் குதிரைகளின் வல்லமை, அவைகளின் வாய்களிலும், அவைகளின் வால்களிலும் இருந்தது. அவைகளின் வால்களோ பாம்புகளைப்போல் இருந்தன, அவைகள் தங்கள் தலைகளால் காயத்தை ஏற்படுத்தின.
இந்த வாதைகளினால் கொல்லப்படாமல் மீதியாயிருந்தவர்களோ, தங்கள் செயல்களைவிட்டு இன்னும் மனந்திரும்பாமலேயே இருந்தார்கள்: அவர்கள் பிசாசுகளையும், தங்கம், வெள்ளி, வெண்கலம், கற்கள், மரத்தால் செய்யப்பட்ட மற்றும் பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ முடியாதவைகளை வணங்குவதையும் நிறுத்தவில்லை. அவர்கள் தங்களுடைய கொலைகளையோ, மந்திர வித்தைகளையோ, பாலியல் முறைகேடுகளையோ, களவுகளையோ, மற்ற எவைகளையும் விட்டு மனந்திரும்பவில்லை.
இறைத்தூதனும் சிறிய புத்தகச்சுருளும்
பின்பு இன்னொரு வல்லமையுள்ள இறைத்தூதன் பரலோகத்திலிருந்து கீழே வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக, ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன. அவன் ஒரு திறந்த சிறிய புத்தகச்சுருளைத் தனது கையில் வைத்துக்கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வலதுகாலைக் கடலிலும், தன்னுடைய இடதுகாலைத் தரையிலும் ஊன்றி நின்று, சிங்கத்தின் கர்ஜிப்பைப்போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்டபோது, ஏழு இடிமுழக்கங்கள் மறுமொழியாகச் சத்தமிட்டுப் பேசின. அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபொழுது, நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன்; ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை முத்திரையிடு, அதை எழுதவேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.
பின்பு கடலின்மேலும், தரையின்மேலும் நிற்கிறவனாக நான் கண்ட அந்தத் தூதன், தன்னுடைய வலதுகையை, பரலோகத்தை நோக்கி உயர்த்தினான். அவன் என்றென்றும் வாழ்கிறவரைக்கொண்டு, ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக்கொண்டு, ஆணையிட்டுச் சொன்னதாவது, “இனிமேல் காலதாமதம் இருக்காது! ஏழாவது தூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப்போகிற நாட்களிலே, இறைவனுடைய இரகசியம் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவைகள் நிறைவேறும்” என்றான்.
பின்பு பரலோகத்திலிருந்து நான் கேட்ட அந்தக் குரல், இன்னொருமுறை என்னுடனே பேசியது: “போ, கடலின்மேலும், தரையின்மேலும் நின்றுகொண்டிருக்கின்ற, அந்த இறைத்தூதனுடைய கையில் திறக்கப்பட்டு இருக்கின்ற அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொள்” என்றது.
எனவே, நான் அந்த இறைத்தூதனிடம் போய், அந்தச் சிறிய புத்தகச்சுருளை எனக்குத் தரும்படி, அவனிடம் கேட்டேன். அவன் என்னிடம், “நீ இதை எடுத்து சாப்பிடு. இது உன் வயிற்றில் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் உன் வாய்க்கு, இது தேனைப்போல் இனிமையாயிருக்கும்”10:9 [எசே. 3:3] என்றான். நான் அந்தத் தூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச்சுருளை எடுத்து, அதைச் சாப்பிட்டேன். அது என் வாய்க்கு, தேனைப்போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் சாப்பிட்டு முடித்தபோதோ, அது என்னுடைய வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது, “நீ பல மக்களைக் குறித்தும், பல நாட்டினரைக் குறித்தும், மொழியினரைக் குறித்தும், அரசர்களைக் குறித்தும் மீண்டும் இறைவாக்கு உரைக்கவேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
இரண்டு சாட்சிகள்
அப்பொழுது அளவுகோலைப் போன்ற ஒரு பிரம்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பின்பு எனக்குச் சொல்லப்பட்டதாவது: “போ, இறைவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும் அளவிடு. அங்கே ஆராதனை செய்கிறவர்களையும் கணக்கெடுத்துக்கொள். ஆனால், வெளிமுற்றத்தை விட்டுவிடு; அதை அளக்காதே. ஏனெனில், அது யூதரல்லாத மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் 42 மாதங்களுக்கு பரிசுத்த நகரத்தை மிதிப்பார்கள். நான் என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும், வல்லமை கொடுப்பேன். அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொண்டு, 1,260 நாட்களுக்கு இறைவாக்கு உரைப்பார்கள். பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.11:4 [சக. 4:3],[11],[14] யாராவது அவர்களுக்குத் தீங்குசெய்ய முயன்றால், அவர்களுடைய வாய்களிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அவர்களுடைய பகைவர்களை அழித்துப்போடும். அவர்களுக்குத் தீங்குசெய்ய விரும்புகின்றவர்கள் இவ்விதமாகவே சாகவேண்டும். இவர்கள் தாங்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப் போடுவதற்கு, வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள்; அவர்கள் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம், எல்லா விதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகிற மிருகம், அவர்களைத் தாக்கும். அது அவர்களை மேற்கொண்டு, அவர்களைக் கொன்றுவிடும். அப்பொழுது அந்த சாட்சிகளுடைய உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் அடையாளமாக சோதோம் என்றும், எகிப்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான், அவர்களுடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார். மூன்றரை நாட்களுக்கு எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் அவர்களுடைய உடல்களை உற்றுப்பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய, அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். பூமியில் குடியிருக்கிறவர்கள், அவர்களை ஏளனம் செய்து மகிழுவார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள். ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும், பூமியில் வாழுகிறவர்களை துன்புறுத்தி, வேதனைப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் மூன்றரை நாட்ளுக்குப்பின், இறைவனிடமிருந்து உயிர்மூச்சு11:11 [எசே. 37:5],[14] அவர்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்தசத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்கள் ஒரு மேகத்திலே, பரலோகத்தை நோக்கி மேலே போனார்கள்; அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, இது நடந்தது.
அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது; அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில், ஏழாயிரம்பேர் கொல்லப்பட்டார்கள்; அதற்குத் தப்பியவர்களோ, பயந்தவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.
இரண்டாவது பயங்கரமும் கடந்துபோயிற்று; மூன்றாவது வேதனையோ சீக்கிரமாய் வருகிறது.
ஏழாவது எக்காளம்
ஏழாவது தூதன் தனது எக்காளத்தை ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் உரத்த சத்தமான குரல்கள் சொன்னதாவது:
“உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும்,
அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகிவிட்டது.
அவரே என்றென்றுமாக அதை ஆளுகை செய்வார்.”
அப்பொழுது இறைவனுக்கு முன்பாக, தங்களுடைய அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சொன்னதாவது:
“இருக்கிறவரும் இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே,
உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக்கொண்டு
ஆளுகை செய்யத் தொடங்கிவிட்டீர்.
ஜனங்கள் கோபங்கொண்டார்கள்,
உம்முடைய கோபமும் வந்துவிட்டது.
இறந்தவர்களை நியாயந்தீர்க்கும் வேளை வந்துவிட்டது,
உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும்,
உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கிற சிறியோர் பெரியோர் யாவருக்கும்,
வெகுமதி கொடுக்கும் வேளையும் வந்துவிட்டது.
பூமியை அழிக்கிறவர்களை, அழிக்கும் வேளையும் வந்துவிட்டது.”
பின்பு பரலோகத்திலுள்ள, இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய கல்மழையும் ஏற்பட்டன.
பெண்ணும் இராட்சதப் பாம்பும்
பரலோகத்தில் ஒரு பெரிய அதிசயமான அடையாளம் தோன்றியது: சூரியனை உடையாக உடுத்திக்கொண்டிருந்த, ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின்கீழே சந்திரன் இருந்தது, அவளது தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுடைய ஒரு கிரீடம் இருந்தது. அவள் கர்ப்பவதியாயிருந்தாள்; அவள் பிள்ளைபெறும் தருவாயில் இருந்தபடியினால், வேதனையில் கதறினாள். அப்பொழுது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது, மிகப்பெரிதான சிவப்பு நிறமுடைய ஒரு இராட்சதப் பாம்பு காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும், பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின்மேலும், ஏழு கிரீடங்கள் இருந்தன. அதனுடைய வால், வானத்திலிருந்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின்மேல் வீசியெறிந்தது. அந்த இராட்சதப் பாம்பு பிரசவிக்கும் தருவாயிலிருந்த, அந்தப் பெண்ணுக்கு முன்பாக நின்றது. அவள் குழந்தையைப் பெற்ற உடனேயே, அந்தக் குழந்தையை விழுங்கும்படியாகவே, அது அவள்முன் நின்றது. அவள் பெற்றெடுத்த ஆண் பிள்ளையே, “எல்லா மக்களையும் இரும்புச் செங்கோலைக் கொண்டு ஆளுகை செய்வார்.”12:5 [சங். 2:9] அவளுடைய பிள்ளை, மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் பறித்துக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணோ பாலைவனத்திற்கு தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்கு 1,260 நாட்களுக்குப் பராமரிக்கப்பட்டாள்.
பரலோகத்தில் யுத்தம் நடந்தது. மிகாயேலும், அவனுடைய தூதர்களும் அந்த இராட்சதப் பாம்புக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். அந்த இராட்சதப் பாம்பும், அதனுடைய தூதர்களும், அவர்களை எதிர்த்து யுத்தம் செய்தன. ஆனால், அந்த இராட்சதப் பாம்பு தோல்வியுற்றது. அதனாலே பரலோகத்தில் அவை தங்களுக்குரிய இடத்தை இழந்து போயின. அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட ஆதியிலே இருந்த பாம்பு. முழு உலகத்தையும் ஏமாற்றுகிறவன் இவனே. அவனும், அவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.
அப்பொழுது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு சொல்வதை நான் கேட்டேன்:
“இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது இறைவனுடைய அரசும் வந்துவிட்டன.
அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டது.
ஏனெனில் நம்முடைய சகோதரர்களைக் குற்றம் சாட்டுகிறவன்
கீழே வீசித் தள்ளப்பட்டான்.
இவனே நம்முடைய இறைவனுக்கு முன்பாக,
இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டுகிறவன்.
ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய
இரத்தத்தினாலும், தங்களுடைய சாட்சியின் வார்த்தையினாலும்
அவனை மேற்கொண்டார்கள்.
அவர்கள் தங்களுடைய உயிர்களை நேசிக்கவில்லை.
அதனால் மரணத்துக்கும் அஞ்சவில்லை.
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் குடியிருக்கிறவர்களே!
நீங்கள் சந்தோஷப்படுங்கள்.
பூமியே, கடலே ஐயோ கேடு,
ஏனெனில் பிசாசு கீழே உங்களிடம் வந்திருக்கிறான்!
அவன் தன்னுடைய நாட்கள் கொஞ்சம் என்பதை அறிந்ததினால்,
கடுங்கோபம் கொண்டிருக்கிறான்.”
அந்த இராட்சதப் பாம்பு, தான் பூமியின்மேல் எறியப்பட்டதைக் கண்டபோது, அது அந்த ஆண்குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச்சென்றது. அந்தப் பெண்ணுக்கு, ஒரு பெரிய கழுகினுடைய இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் அவள், பாலைவனத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்கு பறந்து போகக்கூடியதாயிருந்தது. அங்கே அவள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும், அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல் பராமரிக்கப்படுவாள். அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணை வெள்ளப்பெருக்கால் வாரிக்கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து நதிபோன்று தண்ணீரைக் கக்கியது. ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது. அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணின்மேல் கடுங்கோபங்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கிற மீதியான அவளது பிள்ளைகளுக்கு எதிராக யுத்தம் செய்யும்படி போனது.
கடலில் இருந்து வெளியேறும் மிருகம்
அந்த இராட்சதப் பாம்பு கடற்கரையில் காத்து நின்றது. ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியேறுவதை நான் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகள் மேலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதனுடைய ஒவ்வொரு தலையின்மேலும், இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. நான் கண்ட அந்த மிருகம், ஒரு சிறுத்தையைப்போல் காணப்பட்டது. ஆனால் அதன் கால்களோ, கரடிகளின் கால்கள் போலவும், அதன் வாய், சிங்கத்தின் வாயைப் போலவும் காணப்பட்டது. அந்த இராட்சதப் பாம்பு தனது வல்லமையையும், தனது அரியணையையும், தனது பெரிதான அதிகாரத்தையும், அந்த மிருகத்திற்குக் கொடுத்தது. அந்த மிருகத்தினுடைய தலைகளில் ஒன்றில், மரணத்துக்குரிய ஒரு காயம் ஏற்பட்டிருந்ததுபோல் காணப்பட்டது. ஆனால், அந்தக் காயம் குணமடைந்திருந்தது. முழு உலகமும் வியப்படைந்து, அந்த மிருகத்தைப் பின்பற்றியது. அந்த இராட்சதப் பாம்பு மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் அந்த இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கி, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து, யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று கேட்டார்கள்.
அந்த மிருகத்திற்கு பெருமை பேச்சுகளையும், இறைவனை அவமதித்து பேசவும், ஒரு வாய் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரெண்டு மாதங்களுக்கு, எதையும் செய்வதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது. பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம்செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கும், அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், மக்கள்மேலும், மொழியினர்மேலும், நாட்டினர்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான ஜீவப் புத்தகத்தில், பெயர் எழுதப்படாமல் இருந்த எல்லோருமே, அந்த மிருகத்தை வணங்குவார்கள்.
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். ஏனெனில்,
“யாராவது சிறைப்பட்டுப்போக குறிக்கப்பட்டிருந்தால்,
அவர்கள் சிறைப்பட்டே போவார்கள்.
யாராவது வாளினால் கொல்லப்பட13:10 சில கையெழுத்துப் பிரதிகளில் கொல்லப்பட என்பது கொல்லுகிறவன் என்றுள்ளது குறிக்கப்பட்டிருந்தால்,
அவர்கள் வாளினால் கொல்லப்படுவார்கள்.”13:10 [எரே. 15:2]
ஆகவே பரிசுத்தவான்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மனந்தளராமல் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொறுமையையும், விசுவாசத்தையும் அப்பொழுது காட்டவேண்டும்.
பூமியிலிருந்து வெளியேவரும் மிருகம்
பின்பு பூமியிலிருந்து, இரண்டாவது மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப்போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப்போலவே பேசியது. அவ்வாறு இது அந்த முதலாவது மிருகத்தின் சார்பாக, அதனுடைய முழு அதிகாரத்தையுமே தான் பிரயோகித்தது. இது பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அந்த முதல் மிருகத்தை வணங்கும்படி செய்தது. அந்த முதலாவது மிருகமே, சாவை விளைவிக்கக்கூடிய காயமடைந்து, குணமடைந்திருந்த மிருகமாகும். இந்த இரண்டாவது மிருகம், பெரிய அற்புத அடையாளங்களைச் செய்தது. எல்லா மனிதரும் காணும்படியாக, இது வானத்திலிருந்து பூமியின்மேல் நெருப்பு வரும்படியும் செய்தது. முதலாவது மிருகத்தின் சார்பாக, அடையாளங்களைச் செய்துகாட்டும் வல்லமை இரண்டாவது மிருகத்திற்கு கொடுக்கப்பட்டதனால், அது பூமியின் மக்களை ஏமாற்றியது. வாளினால் காயமடைந்து, இன்னும் உயிருடன் இருக்கிற, அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ணுவதற்காக, அதற்கு ஒரு உருவச்சிலையைச் செய்யும்படி, இரண்டாவது மிருகம் அவர்களுக்கு உத்தரவிட்டது. முதலாவது மிருகத்தினுடைய உருவச்சிலைக்கு உயிர்கொடுக்கும் வல்லமை இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த உருவச்சிலை, பேசும் ஆற்றலுடையதாய் இருந்தது. அந்த உருவச்சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் அது கொலை செய்யும்படி அனுமதி வழங்கியது. அத்துடன், இந்த இரண்டாவது மிருகம் சிறியவர், பெரியவர், செல்வந்தர், ஏழைகள், குடியுரிமை பெற்றோர், அடிமைகள் எல்லோரையுமே தங்களுடைய வலதுகையிலோ, அல்லது தங்களுடைய நெற்றியிலோ, ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம்.
இதை விளங்கிக்கொள்ள ஞானம் தேவை. யாராவது அறிவு ஆற்றல் உடையவனாய் இருந்தால், அவன் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் பார்க்கட்டும். ஏனெனில், அது மனிதனுக்குரிய எண்தான்; அந்த எண் 666 ஆகும்.
சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவர்
பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே ஆட்டுக்குட்டியானவர், சீயோன் மலையின்மேல் எனக்கு முன்பாய் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 1,44,000 பேர் நின்றார்கள். அவர்களுடைய நெற்றிகளிலே ஆட்டுக்குட்டியானவரின் பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன. அப்பொழுது பரலோகத்திலிருந்து, நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகிற வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி, வீணை வாசிக்கிறவர்கள் தங்கள் வீணைகளை வாசிப்பதால் எழும்பிய நாதம்போல் இருந்தது. அந்தப் பெருங்கூட்டம் அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், சபைத்தலைவர்களுக்கு முன்பாகவும், ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர, வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இவர்கள் தங்களைப் பெண்களால் கறைப்படுத்தாமல், தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அங்கெல்லாம் இவர்கள் அவரையே பின்பற்றுகிறார்கள். இவர்கள் மனிதரிடையே இருந்து வாங்கப்பட்டு, இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்கனியாய் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்களுடைய வாய்களில் ஒரு பொய்யும் காணப்படவில்லை; இவர்கள் குற்றம் எதுவுமே காணப்படாதவர்கள்.
மூன்று இறைத்தூதர்
பின்பு, இன்னொரு இறைத்தூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், பின்னணியினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது. அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில், அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.
இரண்டாவது இறைத்தூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’14:8 [ஏசா. 21:9] அவள் எல்லா நாட்டு மக்களையும் தனது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவைக் குடிக்கப்பண்ணினாள்” என்றான்.
மூன்றாவது இறைத்தூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும், மிருகத்தின் உருவச்சிலையையும் வணங்கி, அதனுடைய அடையாளத்தைத் தனது நெற்றியிலோ அல்லது கையிலோ பெற்றுக்கொண்டால், அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த இறைத்தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான். அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.” ஆகவே, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், தங்கள் துன்புறுத்தல்களைப் பொறுமையோடு சகிப்பதற்கு, இது உற்சாகமூட்டட்டும்.
அப்பொழுது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இதுமுதல், கர்த்தரில் விசுவாசிகளாகவே மரிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெழுது” என்று அது சொன்னது.
அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய உழைப்பிலிருந்தும், சோதனையிலிருந்தும் இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.
பூமியின் அறுவடை
பின்பு நான் பார்த்தபொழுது, எனக்கு முன்பாக ஒரு வெள்ளை மேகத்தைக் கண்டேன். அந்த மேகத்தின்மேல் மானிடமகனைப் போல், ஒருவர் அமர்ந்திருந்தார்.14:14 [தானி. 7:13] அவருடைய தலையின்மேல் ஒரு தங்கக்கிரீடமும், கையிலே ஒரு கூரிய அரிவாளும் இருந்தன. அப்பொழுது, இன்னொரு இறைத்தூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து, மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரை உரத்த குரலில் கூப்பிட்டு, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில், பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான். எனவே மேகங்களின்மேல் உட்கார்ந்திருந்தவர், தனது அரிவாளை பூமியின்மேல் நீட்டி அறுவடை செய்தார். அப்பொழுது பூமியின் விளைவு அறுவடை செய்யப்பட்டது.
பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து, இன்னொரு இறைத்தூதன் வெளியே வந்தான். அவனும் ஒரு கூரிய அரிவாளை வைத்திருந்தான். வேறொரு இறைத்தூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கிறவன். அவன் கூரிய அரிவாளை வைத்திருந்த தூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூரிய அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சை கொடியிலிருந்து திராட்சை பழக்குலைகளை அறுத்து சேர்த்துக்கொள்; ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்து ஆயத்தமாகிவிட்டன” என்றான். அப்பொழுது அந்த இறைத்தூதன், தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான்; அவை நகரத்திற்கு வெளியே, திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையின் வெளியே, இரத்தம் ஒரு நதியாய் ஓடியது; அது குதிரைகளின் கடிவாளத்தின் உயரம் வரைக்கும் எழும்பிப் பெருகி, 300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்தது.
ஏழு வாதைகளுடன் ஏழு தூதர்கள்
நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு தூதர்கள் ஏழு வாதைகளுடன் நின்றார்கள்; இவை கடைசி வாதைகள்; ஏனெனில், இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும். நான் கண்ணாடிக்கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் நெருப்பு கலந்திருந்தது. அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதனுடைய உருவச்சிலையையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் மேற்கொண்டு வெற்றிகொண்டவர்கள், நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீணைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்:
“எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமது செயல்கள் பெரிதானவை.
அவை வியக்கத்தகுந்தவை.
எல்லா யுகங்களுக்கும் அரசனாயிருக்கிறவரே,
உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்?
யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்?
ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர்.
எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக
ஆராதனை செய்வார்கள்,
ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
இதற்குப் பின்பு, நான் நோக்கிப் பார்த்தபொழுது, பரலோகத்திலுள்ள ஆலயம் திறந்திருந்தது. இதுவே சாட்சியின் இறைசமுகக் கூடாரம். ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடன் ஏழு இறைத்தூதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை உடுத்தியிருந்தார்கள்; தங்கள் மார்புகளைச் சுற்றி, தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள். அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. அந்த ஆலயம் இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழும்பிய புகையினால் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைத்தூதர்களுடைய ஏழு வாதைகளும் நிறைவேறி முடியும்வரைக்கும், ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் செல்ல முடியவில்லை.
இறைவனின் கோபத்தின் ஏழு கிண்ணங்கள்
பின்பு நான், ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரலைக் கேட்டேன். அது அந்த ஏழு இறைத்தூதர்களிடம், “போங்கள், இறைவனுடைய கோபத்தின் ஏழு கிண்ணங்களையும் பூமியின்மேல் ஊற்றுங்கள்” என்று சொன்னது.
முதலாவது இறைத்தூதன் போய், தனது கிண்ணத்திலுள்ளதைத் தரையின்மேல் ஊற்றினான். அப்பொழுது மிருகத்தின் அடையாளம் உள்ளவர்கள்மேலும், அதன் உருவச்சிலையை வணங்கியவர்கள்மேலும், வேதனை உண்டாக்கும் கொடிய புண்கள் ஏற்பட்டன.
இரண்டாவது இறைத்தூதன், தனது கிண்ணத்திலுள்ளதைக் கடலின்மேல் ஊற்றினான். அது இறந்துபோன மனிதனுடைய இரத்தத்தைப்போல் மாறியது. அப்பொழுது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் செத்துப்போயின.
மூன்றாவது இறைத்தூதன், தனது கிண்ணத்திலுள்ளதை ஆறுகளின்மேலும், நீரூற்றுகளின்மேலும் ஊற்றினான்; அவை இரத்தமாகின. பின்பு தண்ணீர்களுக்குப் பொறுப்பாயிருந்த இறைத்தூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன்:
“இருக்கிறவரும் இருந்தவருமான பரிசுத்தரே,
இந்த நியாயத்தீர்ப்புகளில் நீர் நியாயமானவராய் இருந்திருக்கிறீர்;
ஏனெனில், நீர் நியாயந்தீர்க்க நீதியுள்ளவராய் இருக்கிறீர்;
இவர்கள் உமது பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும்,
இறைவாக்கினரின் இரத்தத்தையும் சிந்தினார்கள்;
எனவே, நீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தது
அவர்களுக்கு ஏற்ற தண்டனையே”
என்றான்.
அப்பொழுது பலிபீடத்திலிருந்து:
“ஆம், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே,
உமது நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவை”
என்று பதில் வருவதைக் கேட்டேன்.
நான்காவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை சூரியனின்மேல் ஊற்றினான். அப்பொழுது சூரியனுக்கு மனிதரை நெருப்பினால் சுட்டெரிக்கும் வல்லமை கொடுக்கப்பட்டது. அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் பொசுங்கினார்கள். அப்பொழுது இந்த வாதைகளின்மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை அவர்கள் சபித்தார்களேதவிர, அவர்கள் மனந்திரும்பவும் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தவும் மறுத்தார்கள்.
ஐந்தாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை மிருகத்தின்மேலும், அதன் அரியணையின்மேலும் ஊற்றினான். அப்பொழுது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர்களின் நாவுகளைக் கடித்துக்கொண்டார்கள். அவர்கள் தங்களுடைய வேதனைகளினாலும், அவர்களின் புண்களினாலும் பரலோகத்தின் இறைவனை சபித்தார்களேதவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள்.
ஆறாவது இறைத்தூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, ஐபிராத்து எனப்பட்ட பெரிய ஆற்றின்மேல் ஊற்றினான். அப்பொழுது கிழக்கிலிருந்து வரும் அரசருக்கு வழியை ஏற்படுத்தும்படி அந்த ஆற்றின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அதற்குப் பின்பு நான், மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை தவளைகளைப்போல் காணப்பட்டன; அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் பொய் தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் வெளியே வந்தன. அவை அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டும் பிசாசுகளின் ஆவிகள்; அவை உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களிடம் புறப்பட்டுச்சென்றன. எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த மகாநாளில், அவருக்கு எதிராக நடக்கப்போகும் யுத்தத்திற்காக, அவர்களை ஒன்றுசேர்க்கும்படியே அவை சென்றன.
கர்த்தர் சொன்னதாவது, “இதோ, நான் திருடனைப்போல் வருகிறேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது உடைகளை ஆயத்தமாய் வைத்திருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்பொழுது அவன் நிர்வாணமாய் வெளியேப்போய், பகிரங்கமாய் வெட்கத்திற்குட்படமாட்டான்.”
பின்பு அந்த அற்புத அடையாளங்களைச் செய்யும் ஆவிகள், அரசர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு, எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தன.
ஏழாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்பொழுது ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரல், “செய்தாயிற்று!” என்று அரியணையிலிருந்து கூறியது. அப்பொழுது மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கங்களும், பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் உண்டான நாளிலிருந்து, அதுபோன்ற பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவ்வளவு பலமாய் அந்தப் பூமியதிர்ச்சி இருந்தது. மகா நகரமான பாபிலோன், மூன்று பகுதிகளாகப் பிளந்தன. உலக நாடுகளின் நகரங்கள் இடிந்து விழுந்தன. மகா பாபிலோனை இறைவன் மறந்துவிட, இவ்வாறு அவர் தமது கடுங்கோபத்தின் கிண்ணத்திலே, தனது கோபத்தின் திராட்சை மதுவை நிரப்பி அவளுக்குக் கொடுத்தார். தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று. வானத்திலிருந்து பெரும் கல்மழை மனிதர்மேல் விழுந்தது. அதன் கல் ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அப்பொழுது மனிதர், அந்தக் கல்மழையின் வாதையினிமித்தம் இறைவனைச் சபித்தார்கள்; ஏனெனில், அந்த வாதை மிகவும் கொடியதாக இருந்தது.
மாபெரும் வேசி
ஏழு கிண்ணங்களை வைத்திருந்த அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “நீ வா, அநேக நீர்நிலைகளின்மேல் உட்கார்ந்திருக்கிற மாபெரும் வேசிக்குக் கிடைக்கப்போகும் தண்டனையை நான் உனக்குக் காண்பிப்பேன். அவளுடன் பூமியின் அரசர்கள் எல்லாம் விபசாரம் செய்தார்கள்; பூமியில் குடியிருக்கிறவர்கள் அவளுடைய விபசாரத்தின் திராட்சை மதுவினால் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.
பின்பு தூதன் என்னை ஆவியானவரில் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், பாலைவனத்திற்குக் கொண்டுசென்றான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பான மிருகத்தின்மேல் உட்கார்ந்திருப்பதை நான் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. அந்தப் பெண் ஊதாநிற உடையையும், சிவப்புநிற உடையையும் உடுத்தியிருந்தாள். தங்கத்தினாலும், மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், அவளுடைய விபசாரத்தின் அசிங்கங்களினாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தனது கையில் வைத்திருந்தாள். அவளுடைய நெற்றியிலே எழுதப்பட்டிருந்த பெயர் ஒரு இரகசியமாயிருந்தது:
மாபெரும் பாபிலோன்,
வேசிகளுக்கும்
பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய்.
அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்ததை நான் கண்டேன். அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தமே.
நான் அவளைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். அப்பொழுது அந்தத் இறைத்தூதன் என்னிடம்: “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவள் ஏறியிருக்கிற ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை நான் உனக்கு விளக்கிச்சொல்லுவேன். நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும்.
“இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளாம். அவை ஏழு அரசர்களாம்; அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்; ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு, சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும். முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான்.
“நீ கண்ட பத்துக் கொம்புகள் இன்னும் அரசைப் பெற்றுக்கொள்ளாத பத்து அரசர்கள்; ஆனால் அவர்கள் ஒருமணி நேரத்திற்கு அந்த மிருகத்துடனே அரசர்களாக அதிகாரம் பெறுவார்கள். அவர்கள் ஒரே நோக்குடையவர்களாயிருந்து. அவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுப்பார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராக யுத்தம் செய்வார்கள். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் அரசர்களுக்கு அரசருமாய் இருக்கிறபடியால் வெற்றிகொள்வார். அவரோடுகூட இருக்கிறவர்கள் இறைவனால் அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டு, உண்மையுள்ளவர்களுமாய் இருப்பவர்களும் வெற்றிகொள்வார்கள்” என்றான்.
மறுபடியும் அந்தத் இறைத்தூதன் என்னிடம், “அந்த வேசிப்பெண் உட்கார்ந்திருந்த இடத்தில், நீ கண்ட அந்த நீர்த்திரள் மக்கள் கூட்டங்களையும், மக்கள் திரளையும், நாட்டினரையும், மொழியினரையும் குறிக்கின்றன. நீ கண்ட மிருகமும் அந்த பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுக்கின்றன. அவை அவளை அழித்து, அவளை நிர்வாணமாக்கும்; அவை அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும். ஏனெனில், இறைவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக, இந்த எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் கொடுத்தார். அதனாலேயே, அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்திற்குத் தங்களது ஆட்சிசெய்யும் வல்லமையைக் கொடுக்க உடன்பட்டார்கள். இறைவனுடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும் அவர்களுடைய உடன்பாடு நீடிக்கும். நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள்மேல் ஆட்சி செலுத்துகிற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.
பாபிலோனின் வீழ்ச்சி
இதற்குப் பின்பு, பரலோகத்திலிருந்து இன்னொரு தூதன் வருவதை நான் கண்டேன். அவன் மிகுந்த அதிகாரம் உடையவனாயிருந்தான். அவனுடைய மாட்சிமையினால், பூமி பிரகாசம் பெற்றது. அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது:
“ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’18:2 [ஏசா. 21:9]
அவள் பிசாசுகளுக்கு உறைவிடமானாள்.
எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள்.
அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும்,
வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள்.
ஏனெனில் எல்லா நாடுகளும்,
அவளது விபசாரத்தின் ஆவேசமூட்டும் மதுவினால் வெறிகொண்டார்கள்.
பூமியின் அரசர் அவளுடன் விபசாரம் செய்தார்கள்.
பூமியின் வர்த்தகர் அவளுடைய வளமான வாழ்க்கையினால் அவளுடன் செல்வந்தர் ஆனார்கள்.”
பாபிலோனின் தீர்ப்புக்கு தப்பிக்க எச்சரிக்கை
பின்பு இன்னுமொரு குரல் பரலோகத்திலிருந்து சொன்னதை நான் கேட்டேன்:
“ ‘என்னுடைய மக்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்,’18:4 [எரே. 51:45]
அப்பொழுது நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்குகொள்ளாது இருப்பீர்கள்.
அவளுடைய வாதைகளும் உங்களுக்கு வராமலிருக்கும்;
அவளுடைய பாவங்கள் வானத்தைத் தொடும் உயரத்திற்குக் குவிந்துவிட்டன.
இறைவன் அவளுடைய குற்றங்களைத் தன் நினைவில் கொண்டுவந்துள்ளார் என்றது.
அவள் கொடுத்ததுபோலவே, அவளுக்குத் திருப்பிக்கொடுங்கள்;
அவள் செய்ததற்குப் பதிலாய் இரண்டு மடங்காய் அவளுக்குச் செய்யுங்கள்.
அவளுடைய சொந்த கிண்ணத்திலிருந்தே அவளுக்கு அதை இரண்டு மடங்கு கலந்துகொடுங்கள்.
அவள் தன்னைத்தானே மேன்மைப்படுத்தி சொகுசாக வாழ்ந்தாள்.
அதற்குப் பதிலாய் அவளுக்கு வேதனையையும் துக்கத்தையும் கொடுங்கள்.
அவள் தன் இருதயத்தில், ‘நான் அரசியைப்போல் அமர்ந்திருக்கிறேன்.
நான் ஒரு விதவை அல்ல;18:7 [ஏசா. 47:7],[8]
நான் ஒருபோதும் புலம்பமாட்டேன்’
என்று பெருமிதமாய் கூறிக்கொள்கிறாள்.
ஆகையால் ஒரே நாளிலே, அவளுக்குரிய வாதைகள் அவள்மேல் வரும்:
மரணமும், புலம்பலும், பஞ்சமும் வரும்.
அவள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவாள்.
ஏனெனில், அவளை நியாயந்தீர்க்கிற இறைவனாகிய கர்த்தர் வல்லமையானவர்.
பாபிலோனின் வீழ்ச்சி
“அவளுடனே விபசாரம் செய்து, அவளுடைய சுகசெல்வத்திலே பங்குகொண்ட பூமியின் அரசர்கள், அவள் சுட்டெரிக்கப்படுவதின் புகையைக் காணும்போது, அவளுக்காக அழுது புலம்புவார்கள். அவளுடைய வேதனையைக் கண்டு, அவர்கள் பயந்து, மிகவும் தூரத்தில் நின்று:
“ ‘ஐயோ மகா நகரமே, ஐயோ கேடு!
பாபிலோனே, வல்லமையான நகரமே!
ஒருமணி நேரத்தில் உனக்கு அழிவு வந்துவிட்டதே!’
என்று கதறி அழுவார்கள்.
“பூமியின் வியாபாரிகளும் அவளுக்காக அழுது புலம்புவார்கள். ஏனெனில், அவர்களுடைய பொருட்களை வாங்குவதற்கு, இனி யாரும் இல்லை. அவள் அவர்களிடம் வாங்கிய பொருட்களில் தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள்; முத்துக்கள்; மென்மையான நார்ப்பட்டு, ஊதா நிறத்துணி, பட்டுத்துணி, சிவப்புத்துணி; பலவித நறுமண மரங்கள், தந்தத்தாலும், விலையுயர்ந்த மரத்தாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், சலவைக் கல்லினாலும் செய்யப்பட்ட எல்லாவிதப் பொருட்களும் அடங்கும்; இன்னும் இலவங்கப்பட்டை, வாசனைப் பொருட்கள், நறுமணத்தூள், வெள்ளைப்போளம், சாம்பிராணி, திராட்சைரசம், ஒலிவ எண்ணெய், சிறந்த மாவு மற்றும் கோதுமை; ஆடுமாடுகள் மற்றும் செம்மறியாடுகள்; குதிரைகள், வண்டிகள், அடிமைகள் ஆகியவையும் அடங்கும். ஆம், அவர்கள் அவற்றுடன் மனிதருடைய உயிர்களையும் விற்றார்கள்.
“அவர்கள், ‘பாபிலோனே, நீ ஆசைப்பட்ட சுகபோக கனிகளும் உன்னைவிட்டுப் போயிற்று. உனது செல்வங்களும் மகிமையும் மறைந்துவிட்டன. அவை இனியொருபோதும் திரும்பி வராது’ என்று சொல்வார்கள். இந்தப் பொருட்களை விற்று, அதனால் அவளிடமிருந்து செல்வத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், அவளுடைய வேதனையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நிற்பார்கள். அவர்கள் அழுது புலம்பி:
“ ‘ஐயோ கேடு, ஐயோ மகா நகரமே,
மென்பட்டையும், ஊதா நிறத்துணியையும், சிவப்பு நிறத்துணியையும் உடுத்தியிருந்தவளே,
தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் மினுக்கம் பெற்றிருந்தவளே,
ஒருமணி நேரத்திலே இப்பேர்ப்பட்ட பெரும் செல்வம் பாழாய்ப் போயிற்றே!’ ”
என்று கதறுவார்கள்.
“எல்லாக் கப்பல் தலைவர்களும், கடலில் பயணம் செய்கிறவர்களும், மாலுமிகளும், கடலில் தொழில் செய்கிறவர்களும் தூரத்தில் நிற்பார்கள். அவள் சுட்டெரிக்கப்படுகிறதினால் எழும்பும் புகையை அவர்கள் காணும்போது, ‘இந்த மகா நகரத்தைப்போல், எப்பொழுதேனும் ஒரு நகரம் இருந்ததோ?’ என்று கதறுவார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியைப் போட்டுக்கொண்டு:
“ ‘ஐயோ கேடு! ஐயோ மகா நகரமே,
கப்பல் உரிமையாளர்கள் எல்லாம்
அவளுடைய செல்வத்தினால்தானே செல்வந்தரானார்களே!
ஒருமணி நேரத்தில் அவள் இவ்விதமாய் பாழாய்ப்போனாளே!’
என்று அழுது புலம்புவார்கள்.
“பரலோகமே, அவளைக்குறித்து மகிழ்ச்சியடைவாயாக!
பரிசுத்தவான்களே, அப்போஸ்தலரே,
இறைவாக்கினரே, நீங்களும் மகிழ்ச்சியடைவீர்களாக!
அவள் உங்களுக்குச் செய்தவற்றிற்காக,
இறைவன் அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்திருக்கிறார்.”
பாபிலோனின் தண்டனை
அப்பொழுது ஒரு வல்லமையுள்ள இறைத்தூதன், ஒரு பாறாங்கல்லை எடுத்துக் கடலில் எறிந்தான். அது ஒரு பெரிய ஆலைக்கல்லின் அளவுடையதாய் இருந்தது. அவன் சொன்னதாவது:
“பாபிலோன் மாபெரும் நகரமே!
நீ இப்படிப்பட்ட ஆவேசத்துடன் வீசி எறியப்படுவாய்.
நீ இனியொருபோதும் காணப்படமாட்டாய்.
வீணை மீட்டுகிறவர்களின் இசையும், இசைக்கலைஞர்,
புல்லாங்குழல் ஊதுகிறவர்கள், எக்காளம் ஊதுகிறவர்கள் ஆகியோரின்
இசையும் இனியொருபோதும் உன்னிடத்தில் ஒலிக்காது.
எந்தத் தொழிலைச் செய்யும் தொழிலாளியும்,
இனியொருபோதும் உன்னிடத்தில் காணப்படமாட்டான்.
ஆலைக்கல் ஆட்டுவதால் ஏற்படும் சத்தமும்,
இனியொருபோதும் உன்னிடத்தில் கேட்காது.
விளக்கு வெளிச்சமும்
இனியொருபோதும் உன்னிடத்தில் வீசாது.
மணமகனின் குரலும் மணமகளின் குரலும்
இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்கமாட்டாது.
உன்னுடைய வியாபாரிகள் உலகத்தில் பெரிய மனிதராய் இருந்தார்கள்.
உன்னுடைய மந்திரச் சொற்களினால் எல்லா நாட்டினரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.
இறைவாக்கினரின் இரத்தமும் பரிசுத்தவான்களின் இரத்தமும்
உன்னிலே சிந்தப்பட்டது.
பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக்கறையும்
உன்னில் காணப்பட்டது.”
அல்லேலூயா!
இதற்குப் பின்பு, நான் பரலோகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போல் இருந்தது:
“அல்லேலூயா!
இரட்சிப்பும், மகிமையும், வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உரியவை.
ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை.
தனது விபசாரத்தினால் பூமியைச் சீர்கெடுத்த அந்தப் பெரிய வேசிக்கு,
இறைவன் தண்டனைத்தீர்ப்பு வழங்கிவிட்டார்.
தனது ஊழியரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக, அவர் அவளைப் பழிவாங்கினார்.”
மேலும் அவர்கள் சத்தமிட்டு:
“அல்லேலூயா!
அவள் எரிக்கப்படுவதால் எழும்பும் புகை என்றென்றுமாய் மேல்நோக்கி எழும்புகிறது”
என்றார்கள்.
அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் நான்கு உயிரினங்களும் கீழே விழுந்து, அரியணையில் அமர்ந்திருந்த இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு,
“ஆமென் அல்லேலூயா!”
என்றார்கள்.
அப்பொழுது அரியணையில் இருந்த ஒரு குரல்:
“இறைவனுடைய எல்லா ஊழியரே,
அவருக்குப் பயப்படுகிறவர்களே,
சிறியோர், பெரியோர் யாவருமாய் நீங்கள் நம்முடைய இறைவனைத் துதியுங்கள்!”
என்றது.
பின்பு நான், ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரியதொரு மக்கள் கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், இடிமுழக்கத்தின் பெரும் ஓசையைப்போலவும் இருந்தது. அது சத்தமிட்டுக் கூறினதாவது:
“அல்லேலூயா!
எல்லாம் வல்ல இறைவனாகிய நமது கர்த்தர் ஆளுகை செய்கிறார்.
நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம்;
அவருக்கே மகிமையைச் செலுத்துவோம்.
ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது.
அவருக்குரிய மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள்.
அவள் உடுத்திக்கொள்ளும்படி, துலக்கமானதும்,
தூய்மையானதுமான மென்பட்டு அவளுக்குக் கொடுக்கப்பட்டது.”
பரிசுத்தவான்களின் நீதி செயல்களையே மென்பட்டு குறிக்கின்றது.
அப்பொழுது அந்த இறைத்தூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். அவன் மேலும், “இது இறைவனுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
இதைக் கேட்டதும், நான் இறைத்தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவன் என்னிடம், “நீ இப்படிச் செய்யாதே! நானும் உன்னோடும் உனது சகோதரரோடும் இயேசுவுக்கு நற்சாட்சியாய் விளங்குகிற உடன் ஊழியனே. ஆகையால், இறைவனையே ஆராதனைசெய். ஏனெனில் இயேசுவின் சாட்சியே இறைவாக்கின் ஆவியாக இருக்கிறது” என்றான்.
வெள்ளைக்குதிரையின்மேல் அமர்ந்திருக்கிறவர்
பின்பு நான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டேன். எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை இருந்தது. அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் நீதியுடன் நியாயந்தீர்த்து, யுத்தம் செய்கிறார். அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன. அவருடைய தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரைத்தவிர வேறு யாராலும் அறியமுடியாத ஒரு பெயர் அவர்மேல் எழுதப்பட்டிருந்தது. அவர் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு ஆடையை உடுத்தியிருந்தார். அவருடைய பெயர், “இறைவனுடைய வார்த்தை” என்பதே. பரலோகத்தின் சேனைகள் அவருக்குப் பின்னால் சென்றன; அவர்கள் வெள்ளைக்குதிரைகளில் ஏறிச்சென்றார்கள். அவர்கள் வெண்மையும் தூய்மையுமான மென்பட்டை உடுத்தியிருந்தார்கள். அவருடைய வாயிலிருந்து மக்களை வெட்டி வீழ்த்துவதற்கென, ஒரு கூரியவாள் வெளியே வருகிறது. “அவர் அவர்களை ஒரு இரும்புச் செங்கோலினால் ஆளுகை செய்வார்.”19:15 [சங். 2:9] அவர் எல்லாம் வல்ல இறைவனின் கோபம் என்னும் திராட்சை ஆலையை மிதிக்கிறார். அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் இப்படியாக பெயர் எழுதப்பட்டிருந்தது:
அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர்.
அப்பொழுது சூரியனிலே ஒரு இறைத்தூதன் நிற்கிறதை நான் கண்டேன். அவன் உரத்த குரலில் நடுவானத்தில் பறக்கின்ற பறவைகளையெல்லாம் பார்த்து, “வாருங்கள், இறைவனின் மகா விருந்திற்கு ஒன்றுகூடுங்கள். அப்பொழுது நீங்கள் அரசர்களின் சதையையும், சேனைத்தலைவர்கள், வலிமையான மனிதர், குதிரைகள், குதிரைவீரர் ஆகியோருடைய சதையையும் சாப்பிடுவீர்கள். சுதந்திரக் குடிமக்கள், அடிமைகள், பெரியவர், சிறியவர் ஆகிய எல்லா மக்களுடைய சதையையும் சாப்பிடுவீர்கள்” என்றான்.
பின்பு நான், அந்த மிருகத்தையும், பூமியின் அரசர்களையும், அவர்களின் இராணுவங்களையும் கண்டேன். அவர்கள் குதிரையில் ஏறியிருந்தவரையும், அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படி, ஒன்றுகூடி நின்றார்கள். ஆனால், அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக, அற்புத அடையாளங்களைச் செய்த, பொய் தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான். இந்த அற்புத அடையாளங்களினாலேயே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அவனுடைய உருவச்சிலையை வணங்கியவர்களை, இவன் ஏமாற்றியிருந்தான். அவர்கள் இருவரும் உயிருடன் கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலில் எறியப்பட்டார்கள். மிகுதியான அவர்களுடைய படை குதிரையில் ஏறியிருந்தவருடைய வாயிலிருந்து வெளியேவந்த வாளினால் கொல்லப்பட்டது. எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையைத் தின்று திருப்தியடைந்தன.
ஆயிரம் வருட ஆட்சி
பின்பு பரலோகத்திலிருந்து, ஒரு தூதன் இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் பாதாளத்தின் திறவுகோலையும் கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான். அவன் அந்த பூர்வகாலத்துப் பாம்பாகிய இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான். இந்த இராட்சதப் பாம்பே பிசாசு என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரைக்கும், அவன் இனியும் மக்களை ஏமாற்றாதபடிக்கு, அந்தத் இறைத்தூதன் சாத்தானை அந்தப் பாதாளக்குழியிலே தள்ளி, அவனை அதில் வைத்துப் பூட்டி, அதன்மேல் முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்தபின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுவிக்கப்பட வேண்டும்.
நான் நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த, அரியணைகளைக் கண்டேன். பின்பு நான், இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும், தலைவெட்டுண்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த மிருகத்தையோ, அவனுடைய உருவச்சிலையையோ வணங்கவில்லை. அவனுடைய அடையாளத்தைத் தங்கள் நெற்றியிலோ, அல்லது தங்கள் கைகளிலோ அவர்கள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அவர்கள் உயிர்பெற்றவர்களாய் எழும்பி, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்தார்கள். இறந்துபோன மற்றவர்கள், அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்வரை, உயிர்பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல். முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். இரண்டாம் மரணத்திற்கு, அவர்கள்மேல் வல்லமை இல்லை. அவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய ஆசாரியராயிருந்து, கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்வார்கள்.
சாத்தானின் தோல்வி
அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது, சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான். அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற, மக்களை ஏமாற்றும்படி போய், அவர்களையும், கோகு, மாகோகு என்பவர்களையும் யுத்தத்திற்காகக் கூட்டிச் சேர்ப்பான். அவர்கள் எண்ணிக்கையில் கடற்கரை மணலைப்போல் இருப்பதை நான் கண்டேன். அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து, அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், இறைவன் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு வந்து, அவர்களைச் சுட்டெரித்துப்போட்டது. அவர்களை ஏமாற்றிய பிசாசு, கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலிலே தள்ளி எறியப்பட்டான். அந்த நெருப்புக் கடலிலேதான் அந்த மிருகமும் அந்தப் பொய் தீர்க்கதரிசியும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே இரவும் பகலுமாக என்றென்றும் வேதனை அனுபவிப்பார்கள்.
இறுதி நியாயத்தீர்ப்பு
பின்பு நான், பெரிய வெண்மையான அரியணையொன்றைக் கண்டேன். அதில் அமர்ந்திருக்கிறவரையும் நான் கண்டேன். பூமியும் வானமும் அவர் முன்னிலையிலிருந்து விலகி ஓடின. அவற்றிற்கு இடம் ஒன்றும் இருக்கவில்லை. பின்பு நான், இறந்தவர்களைக் கண்டேன். அவர்கள் பெரியோரும், சிறியோருமாய் அந்த அரியணைக்கு முன்பாக நின்றார்கள். புத்தகங்கள் திறக்கப்பட்டன. இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. இது ஜீவப் புத்தகம். அந்த புத்தகங்களிலே எழுதப்பட்டிருந்தபடி, அவர்கள் செய்தவைகளுக்காக ஏற்ற நியாயத்தீர்ப்பு இறந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடலில் இறந்தவர்களை கடல் ஒப்புக்கொடுத்தது. மரணமும், பாதாளமும் அவைகளுக்குள் கிடந்தவர்களை ஒப்புக்கொடுத்தன. ஒவ்வொருவனுக்கும், அவன் செய்ததற்கு ஏற்றதாகவே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம். ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.
புதிய எருசலேம்
பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும் ஒரு புதிய பூமியையும் கண்டேன்”21:1 [ஏசா. 65:17] ஏனெனில், முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இருக்கவில்லை. அப்பொழுது நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைக் கண்டேன். அது இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்தது; அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட, ஒரு மணமகளைப்போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. அப்பொழுது நான், அரியணையில் இருந்து வருகின்ற, ஒரு பெரும் குரல் இவ்வாறு சொல்வதைக் கேட்டேன்: “இறைவன் தங்குகின்ற இடம், இப்பொழுது மனிதருடன் இருக்கின்றது. அவர் மனிதருடனேயே குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து, அவர்களுடைய இறைவனாயிருப்பார். ‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது’21:4 [ஏசா. 25:8] புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், பழைய முறைமைகள் எல்லாம் இல்லாமற்போயிற்று” என்றது.
அரியணையில் அமர்ந்திருந்தவர், “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்றார். மேலும் அவர், “இதை எழுதிவை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் சத்தியமுமாய் இருக்கின்றன” என்று சொன்னார்.
பின்பு அவர், என்னிடம் சொன்னதாவது: “அது செய்தாயிற்று. நானே அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன். நானே தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். தாகமாய் இருக்கிறவனுக்கு, வாழ்வுதரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாய் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுகிறவர்கள், இவற்றையெல்லாம் உரிமையாக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள். ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.”
புதிய எருசலேமும் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியும்
அப்பொழுது ஏழு கிண்ணங்களில் ஏழு கடைசி வாதைகளை நிறைத்து வைத்திருந்த, ஏழு இறைத்தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான். அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான். அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது. அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த நகரத்தின் கிழக்குப் பக்கத்தில் மூன்றும், வடக்குப் பக்கத்தில் மூன்றும், தெற்குப் பக்கத்தில் மூன்றும், மேற்குப் பக்கத்தில் மூன்றுமாக, வாசல்கள் இருந்தன. அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
என்னுடன் பேசிய தூதன், அந்த நகரத்தையும், அதன் வாசல்களையும், அதன் மதில்களையும் அளப்பதற்கென தங்கத்திலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான். அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் சம அளவாயிருந்தன. அவன் அந்த அளவுகோலினால் அந்த நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோமீட்டர் நீளமாய் இருந்தது. அதன் அகலமும் அதன் உயரமும்கூட அதே அளவாகவே இருந்தன. அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். அந்த மதிலின் உயரம் சுமார் 65 மீட்டர் அளவாய் இருந்தது. மனிதர் பயன்படுத்தும் அளவுகோலையே, அந்த இறைத்தூதனும் பயன்படுத்தினான். அந்த மதில் படிகைக் கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் சுத்த தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கம் கண்ணாடியைப்போல் தூய்மையாய் இருந்தது. அந்த நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாவது அஸ்திபாரக்கல் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல், ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரெண்டாவது சுகந்திக்கல் ஆகியவைகளாயிருந்தன. பன்னிரண்டு வாசல்களும், பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒரு முத்தைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவுள்ள கண்ணாடியைப் போன்ற சுத்தத்தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம். சூரியனும் சந்திரனும் அந்த நகரத்தில் ஒளிகொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளியைக் கொடுக்கிறது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்காய் இருக்கிறார். மக்கள் அந்த வெளிச்சத்தினாலே நடப்பார்கள். பூமியின் அரசர் தங்கள் மகிமையை அதற்குள் கொண்டுவருவார்கள். அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை. மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும். அசுத்தமான எதுவும் ஒருபோதும் அதற்குள் செல்லமாட்டாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கிறவனோ ஏமாற்றுகிறவனோ அதற்குள் செல்லமாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில், தங்கள் பெயர்கள் எழுதப்பட்டவர்களாய் இருக்கிறவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.
வாழ்வுதரும் ஆறு
பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை. இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள். அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும். இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள்.
யோவானும் இறைவனின் தூதனும்
அந்தத் இறைத்தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், சீக்கிரமாய் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிக்கும்படி, தமது தூதனை அனுப்பினார்” என்றான்.
“இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான்.
பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.”
அழைப்பும் எச்சரிக்கையும்
“இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன். நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன்.
“தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள். நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள்.
“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.”
ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும்.
இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார். இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார்.
இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார்.
ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்.
கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.