- Biblica® Open Indian Tamil Contemporary Version நீதிமொழி நீதிமொழிகள் நீதிமொழி நீதி. நீதிமொழிகள் நோக்கமும் பொருளடக்கமும் இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம். இவைகளால் நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றைச் செய்ய, அறிவுரையும் விவேகமும் உள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. இவைகள் அறிவற்றவர்களுக்கு விவேகத்தையும், வாலிபர்களுக்கு அறிவையும் அறிவுடைமையையும் கொடுக்கின்றன. ஞானமுள்ளவர்கள் இவைகளைக் கேட்டு, தங்கள் அறிவைக் கூட்டிக்கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவர்கள், இவைகளினால் வழிநடத்துதலைப் பெறட்டும். இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கான புத்திமதிகள் பாவிகளின் அழைப்பிதலைக் குறித்த எச்சரிக்கை என் மகனே, உன் தகப்பனின் அறிவுரைகளைக் கேள்; உன் தாயின் போதனைகளை விட்டுவிடாதே. அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும். என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுக்க முயன்றால், அவர்களுடன் இழுப்புண்டு போகாதே. அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா; குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம், அப்பாவியான மனிதரை வழிமறித்துப் பறிப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் அவர்களை உயிருடன் விழுங்குவோம், மரணக் குழிக்குள் போகிறவர்களைப்போல் முழுமையாய் விழுங்குவோம்; பலவித விலைமதிப்புள்ள பொருட்களையும் எடுத்து, நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்; எங்களுடன் பங்காளியாயிரு; நாம் கொள்ளையிட்டதைப் பகிர்ந்துகொள்வோம்” என்று சொல்லுவார்களானால், என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே. ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன, இரத்தஞ்சிந்த வேகமாய் செல்கின்றன. பறவைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றைப் பிடிக்க வலை விரிப்பது பயனற்றதல்லவா. ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கே காத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காகவே பதுங்கியிருக்கிறார்களே, தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகிற அனைவரின் முடிவும் இதுவே; அதின் பலன் அதைப் பெறுகிறவர்களின் உயிரை எடுத்துவிடும். ஞானத்தைப் புறக்கணிக்காதிருக்க எச்சரிக்கை ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது, பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது; அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது, பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது. “அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்? நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். ஆனால், நான் கூப்பிட்டபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து, எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும், நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு, எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும் உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன், பேரழிவு உங்களை மேற்கொள்கையில் ஏளனம் செய்வேன்; பேரழிவு உங்கள்மேல் புயலைப்போல் வரும்போதும், பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும், துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன். “அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள், நான் பதில் கொடுக்கமாட்டேன்; அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடையமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து, யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள். அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல், எனது கடிந்துகொள்ளுதலை புறக்கணித்தபடியால், அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள், அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள். அறிவீனர்களின் அசட்டுத்தனம் அவர்களைக் கொல்லும், மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்; ஆனால் எனக்குச் செவிகொடுப்பவர் யாரும் பாதுகாப்பாக வாழ்வார்கள், அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.” ஞானத்தினால் வரும் நன்மைகள் என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி, நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை. உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி, சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால், அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய். ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன. அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து, அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார். அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய். ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, இருளான வழியில் நடக்கிறார்கள்; அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, அவர்களுடைய வழிகளோ தவறானவை. ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும். தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள். அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது. அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை. இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக, நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக. ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள். ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள், துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள். ஞானம் நல்வாழ்வை அளிக்கிறது என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள். அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும். அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய். உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது. அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல. அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன. அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை. அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்; அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின. என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள். அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும். அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; உன் கால்களும் இடறாது. நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும். திடீரென வரும் பேராபத்திற்கும் கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம். யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார். நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே. உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே. ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே. வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே. ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார். கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும். பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார். ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள். ஞானமே மேலானது பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள். நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன். அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய். ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு. நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும். ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள். நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும். அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.” என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும். நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன். நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய். அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு. கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே. அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல். ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள். அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள். நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள். என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு. அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்; அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும். வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு. உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து. உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும். நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள். விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள். அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும். ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்; ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள். அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள். ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம். அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம். இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்; வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும். உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள். அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே! நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே. நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள். நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு. உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ? அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக. அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக. என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்? மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார். கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன. அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள். மூடத்தனத்தைக் குறித்து எச்சரிக்கை என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால், நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய். என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால், நீ உன்னை விடுவித்துக்கொள்ள நீ போய் உன்னைத் தாழ்த்தி, உன் அயலான் களைப்படையும் வரை வேண்டிக்கொள். அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே. வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு. சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு! அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை. அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது. சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்? கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும். வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான். அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான். அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்; அவன் எப்பொழுதும் பிரிவினையைத் தூண்டிவிடுகிறான். அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான். யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு, இல்லை, ஏழு காரியங்கள் அவருக்கு அருவருப்பானது: கர்வமுள்ள கண்கள், பொய்பேசும் நாவு, குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தும் கைகள், கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம், தீமைசெய்ய விரையும் கால்கள், பொய்ச்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே பிரிவினையைத் தூண்டிவிடும் நபர். விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே. அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள். நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்; நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும். ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, இந்த போதனை ஒரு வெளிச்சம், நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் வாழ்வுக்கு வழி. இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும். நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே. ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள். ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ? அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ? அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான். ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை. ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்; அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும். ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது. ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான். அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்; எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான். விபசாரியைக் குறித்த எச்சரிக்கை என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள், என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள். என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள். அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி, இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும், மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல். அவை உன்னை விபசாரியிடமிருந்தும், மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும். நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று திரை வழியேப் பார்த்தேன். அப்பொழுது அறிவில்லாத இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற ஒரு வாலிபனைக் கண்டேன். அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று, அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான். அது பொழுதுபட்டு மாலைமங்கி இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது. அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய், தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்; அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை. அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள், மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள். அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமில்லாத முகத்துடனே அவனிடம்: “நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி, இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன். அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்; நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன். நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன். நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும், இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன். வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்! எனது கணவன் வீட்டில் இல்லை; அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான். அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள். இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள். உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் வலையில் விழப்போகும் மானைப்போலவும் தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான். ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்; அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள். அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்; அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம். அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை; அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது. ஞானத்தின் அழைப்பு ஞானம் அழைக்கிறதில்லையோ? புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ? அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது. அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது: “மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன். அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள். கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும். உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது. என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை. பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை. வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு. ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல. “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது. தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு. என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள். என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள். என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன. என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது. நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன். என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன். “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்; நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன். சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை. மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே நான் பிறந்திருந்தேன். அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன். அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன். அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன். கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன். அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து, எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன். அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். “ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; எனது வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனது அறிவுறுத்தலைக் கேட்டு ஞானமுள்ளவர்களாயிருங்கள்; அதை அலட்சியம் செய்யவேண்டாம். நாள்தோறும் என் வாசலில் காவல் செய்து, என் கதவருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என்னைத் தேடிக் கண்டடைகிறவர்கள் வாழ்வைக் கண்டடைவார்கள்; யெகோவாவிடமிருந்து தயவையும் பெறுவார்கள். ஆனால் என்னைத் தேடிக் கண்டடையாதவர்கள் தங்களுக்கே தீமை செய்கிறார்கள்; என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தையே விரும்புகிறார்கள்.” ஞானம் மற்றும் முட்டாள்தனத்தின் அழைப்பு ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது. ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது. தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது, “அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது, “வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள். நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; மெய்யறிவின் வழியில் நடங்கள்.” ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்; கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள். ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்; ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள். ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்; நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல். ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும், உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும். நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்; நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய். மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது; அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள். அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள், பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில் நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு, “அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள், “திருட்டுத்தண்ணீர் இனிமையானது; இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!” ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். சாலொமோனின் நீதிமொழிகள் சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்; ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான். நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது, ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது. யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை, ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார். சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும், ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும். கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்; ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன். நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்; ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும். நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்; ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும். இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான். நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள், ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள். தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்; அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான். நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும். பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது; அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது. பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே. ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது. பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு. நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு, ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள். நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்; ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான். பகையை மறைப்பவன் பொய்யன்; அவதூறு பரப்புகிறவன் மூடன். அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது; ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன். நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி, ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது. நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்; ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள். யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது; அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார். தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது; ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது. கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்; நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும். சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்; ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள். பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ, சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான். யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும். நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம். யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம், ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு. நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள். நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும். நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்; ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும். கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம். அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும். உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது. நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும். குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்; ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும். நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்; ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள். கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்; அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும். நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள். இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்; ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள். நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும். நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்; ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும். மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் தங்கள் நாவை அடக்குகிறார்கள். புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்; ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள். ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது, ஆனால் அநேக ஆலோசகர்களால் வெற்றி நிச்சயமாகும். இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்; ஆனால் உறுதியளிப்பதில் கைகளை உதறித் தள்ளுகிறவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்; ஆனால் உழைக்கும் மனிதர்களோ செல்வத்தை மட்டுமே சேர்ப்பார்கள். இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்; ஆனால் கொடூரமானவர்கள் தங்களுக்குக் கேட்டை வருவித்துக் கொள்கிறார்கள். கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்; ஆனால் நீதியை விதைப்பவர்கள் உண்மையான பலனை அறுவடை செய்வார்கள். உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்; ஆனால் தீமையைப் பின்பற்றுபவர்கள் மரணத்தைக் காண்பார்கள். யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்; ஆனால் குற்றமற்ற வழியில் நடப்போரில் அவர் மகிழ்ச்சியடைகிறார். இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள், ஆனால் நீதிமான்கள் விடுவிக்கப்படுவார்கள். புத்தியில்லாத பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள தங்க மூக்குத்தியைப் போன்றது. நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும், ஆனால் கொடியவர்கள் நியாயத்தீர்ப்பை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்; இன்னொருவர் தேவைக்கதிகமாய் வைத்துக்கொண்டும் வறுமை அடைகிறார். தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்; மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்; ஆனால் அவற்றை விற்க மனதுடையவர்களை மக்கள் ஆசீர்வதிப்பார்கள். நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்; தீமையைத் தேடுகிறவர்களுக்கோ தீமையே வரும். தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள், ஆனால் நீதிமான்கள் பசுந்தளிரைப்போல் செழிப்பார்கள். தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்; மூடர்களோ ஞானிக்கு வேலைக்காரர்களாய் இருப்பார்கள். நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்கள் ஞானமுள்ளவர்கள். நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால், இறை பக்தியற்றவர்களும் பாவிகளும் தங்களுக்குரிய தண்டனையைப் பெறுவது எவ்வளவு நிச்சயம்! அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள். நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார். தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது. நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள். நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை, ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை. கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன, ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும். கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள், ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும். ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார். உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட, வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல். நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை. தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள். தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும். தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள். ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும், அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார். மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள். மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள். முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும். உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும். தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு, ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு. நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது, ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள். பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார். விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்; ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும். சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும். கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும். நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும். சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள். நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; அப்பாதையில் மரணம் இல்லை. ஞானமுள்ள மகன் தன் தகப்பனின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறான்; ஆனால் ஏளனக்காரர்களோ கண்டிப்புக்கு செவிகொடுப்பதில்லை. மனிதர் தன் வாயின் வார்த்தையினால் நன்மைகளை அனுபவிக்கிறார்கள், ஆனால் உண்மையற்றவர்கள் வன்முறைகளையே விரும்புகிறார்கள். தங்கள் நாவைக் காத்துக்கொள்பவர்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள், ஆனால் முன்யோசனையின்றி பேசுபவர்கள் அழிவுக்குள்ளாகிறார்கள். சோம்பேறிகள் ஆசைப்பட்டும் ஒன்றும் பெறாமலிருக்கிறார்கள்; ஆனால் சுறுசுறுப்புள்ளவர்களின் ஆசைகளோ முற்றிலும் நிறைவேறுகின்றன. நீதிமான்கள் பொய்யானவற்றை வெறுக்கிறார்கள், ஆனால் கொடியவர்கள் வெட்கத்தையும் அவமானத்தையும் கொண்டுவருகிறார்கள். உத்தமமானவர்களை நீதி காத்துக்கொள்ளும்; ஆனால் கொடுமையோ பாவிகளை வீழ்த்திப்போடும். சிலர் ஒன்றுமில்லாமல் பணக்காரர்களைப் போல பாசாங்கு செய்வார்கள்; வேறுசிலர் அதிக செல்வமிருந்தும் ஏழையைப்போல் பாசாங்கு செய்வார்கள். பயமுறுத்தப்படும்போது பணக்காரர் தம் செல்வத்தைத் தந்து அவருடைய வாழ்வை மீட்கலாம், ஆனால் ஏழையோ பயமுறுத்தல் எதையுமே கேள்விப்படுவதில்லை. நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது, ஆனால் கொடியவர்களின் விளக்கோ அணைக்கப்படும். அகந்தை வாக்குவாதங்களை பிறப்பிக்கிறது, ஆனால் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவர்களிடத்தில் ஞானம் காணப்படும். தவறான வழியில் சம்பாதித்த பணம் அழிந்துபோகும், ஆனால் சிறிது சிறிதாக உழைத்துச் சேகரிக்கிறவர்கள் அதை அதிகரிக்கச் செய்வார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறத் தாமதிக்கும்போது, அது இருதயத்தைச் சோர்வுறப்பண்ணும்; ஆனால் நிறைவேறிய வாஞ்சையோ ஒரு வாழ்வுதரும் மரம்போலிருக்கும். அறிவுரையை ஏளனம் செய்பவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறுவார்கள்; ஆனால் கட்டளைகளை மதிக்கிறவர்களோ பலனைப் பெறுவார்கள். ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. நல்லறிவுள்ளவர்கள் தயவைப் பெறுவார்கள், ஆனால் உண்மையற்றவர்களின் வழி கேடு விளைவிக்கும். விவேகிகள் அறிவுடன் நடந்துகொள்கிறார்கள்; ஆனால் மூடர்களோ தங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். கொடிய தூதுவன் தொல்லையில் விழுகிறான், ஆனால் நம்பகமான தூதுவனோ சுகத்தைக் கொண்டுவருகிறான். அறிவுரையை அலட்சியம் செய்பவர்கள் வறுமையையும் வெட்கத்தையும் அடைகிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்கிறவர்கள் புகழப்படுவார்கள். வாஞ்சை நிறைவேறுவது உள்ளத்திற்கு இனிது, ஆனால் தீமையைவிட்டு விலகுவதையோ மூடர் வெறுக்கிறார்கள். ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்; ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள். பேரழிவு பாவிகளைப் பின்தொடர்கிறது, ஆனால் நன்மை நீதிமான்களின் வெகுமதி. ஒரு நல்ல மனிதர் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பரம்பரை சொத்துக்களை விட்டுச்செல்கிறார்; ஆனால் பாவிகளின் செல்வமோ, நீதிமான்களுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒரு ஏழையின் தரிசு நிலம் உணவை விளைவிக்கலாம், ஆனால் அநீதி அதை அழித்திடும். பிரம்பைக் கையாளாதவர்கள் தன் பிள்ளைகளை வெறுக்கிறார்கள்; ஆனால் தன் பிள்ளைகள்மீது அன்பாயிருக்கிறவர்களோ அவர்களை நற்கட்டுப்பாட்டில் நடத்துவார்கள். நீதிமான்கள் தங்கள் உள்ளம் திருப்தியாகுமட்டும் சாப்பிடுவார்கள்; ஆனால் கொடியவர்களின் வயிறோ பசியாயிருக்கும். ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டுகிறாள்; ஆனால் அறிவில்லாதவளோ தன் கைகளினாலேயே அதை இடித்துப்போடுகிறாள். நேர்மையான வழியில் செல்கிறவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறார்கள், அவரை அசட்டை பண்ணுகிறவர்கள் தங்கள் வழிகளில் மாறுபாடுள்ளவர்கள். மூடரின் பெருமையான பேச்சு அவர்களுடைய முதுகுக்கே பிரம்படி; ஆனால் ஞானிகளின் உதடுகளோ அவர்களைப் பாதுகாக்கும். எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; ஆனால் எருதின் பலத்தினால் மிகுந்த அறுவடை உண்டு. மெய்ச்சாட்சிக்காரர் பொய்ப் பேசமாட்டார்கள், ஆனால் பொய்சாட்சிக்காரர் மூச்சுக்கு மூச்சு பொய்ப் பேசுவார்கள். ஏளனம் செய்பவர்கள் ஞானத்தைத் தேடியும் அதைக் கண்டுபிடிப்பதில்லை, ஆனால் பகுத்தறிவு உள்ளவர்களுக்கோ புத்தி இலகுவாக வருகிறது. மூடரின் வழியைவிட்டு விலகியிரு, ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய். தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது. ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. கொடியவர்களின் வீடு அழிக்கப்படும், ஆனால் நீதிமான்களின் கூடாரமோ செழித்தோங்கும். மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; மகிழ்ச்சியும்கூட துயரத்தில் முடிவடையலாம். பின்வாங்கிப் போகிற இருதயமுள்ளவர்கள் தங்கள் வழிகளுக்கான தண்டனையை முழுமையாக அனுபவிப்பார்கள்; நல்லவர்கள் தங்களுடைய வழிகளுக்கான வெகுமதியைப் பெறுவார்கள். அறிவில்லாதவர்கள் எதையும் நம்புகிறார்கள்; ஆனால் விவேகமுள்ளவர்கள் தங்கள் நடைகளைக் குறித்துக் கவனமாயிருப்பார்கள். ஞானமுள்ளவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, தீமைக்கு விலகி நடக்கிறார்கள்; ஆனால் மூடர்கள் மோசமான மனநிலையிலிருந்தும் பாதுகாப்பாய் உணர்கிறார்கள். முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான். அறிவற்றவர்கள் மூடத்தனத்தை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் விவேகிகளுக்கு அறிவு மகுடமாயிருக்கிறது. தீயவர்கள் நல்லவர்கள் முன்னும், கொடியவர்கள் நீதிமான்களின் வாசல்களிலும் விழுந்து பணிவார்கள். ஏழைகள் தங்கள் அயலவர்களாலும் வெறுக்கப்படுகிறார்கள்; ஆனால் செல்வந்தர்களுக்கோ அநேக சிநேகிதர்கள் உண்டு. தன் அயலாரை அலட்சியம் செய்வது பாவம்; ஏழைகளுக்கு இரங்குகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தீமைக்காக சதிசெய்கிறவர்கள் வழிதப்பிப் போவார்கள் அல்லவா? ஆனால் நன்மையைத் திட்டமிடுபவர்கள் அன்பையும் உண்மையையும் கண்டுகொள்கிறார்கள். கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும். ஞானிகளின் செல்வமே அவர்களுக்கு மகுடம், ஆனால் மூடர்களின் மடமை மூடத்தனத்தையே பிறப்பிக்கிறது. மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு உறுதியான நம்பிக்கையுண்டு; அது அவர்களுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலம். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே வாழ்வின் ஊற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது. அதிக மக்கட்தொகை அரசனின் மகிமை, ஆனால் குடிமக்கள் குறைய இளவரசன் அழிந்துவிடுவான். பொறுமையுள்ளவர் மிகுந்த புரிந்துகொள்ளுதல் உள்ளவர்; ஆனால் முற்கோபக்காரர்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். மன அமைதி உடலுக்கு சுகத்தைக் கொடுக்கிறது; ஆனால் பொறாமை எலும்புகளில் புற்றுநோய் போன்றது. ஏழைகளை ஒடுக்குகிறவர்கள் அவர்களைப் படைத்தவரை அவமதிக்கிறார்கள்; ஆனால் ஏழைகளுக்குத் தயவு பண்ணுகிறவர்கள் இறைவனைக் கனம்பண்ணுகிறார்கள். பேரழிவு வரும்போது கொடியவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்; ஆனால் நீதிமான்களோ மரணத்திலும் இறைவனில் புகலிடம் தேடுகிறார்கள். பகுத்தறிகிறவர்களின் இருதயத்திலே ஞானம் தங்கியிருக்கிறது; மூடர்களிடம் அதற்கு வாய்ப்பில்லை. நீதி ஒரு நாட்டையே உயர்த்தும், ஆனால் பாவம் எந்த மக்களுக்கும் அவமானம். ஞானமுள்ள பணியாளனால் அரசன் மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் வெட்கத்திற்குரிய பணியாளன் அரசனின் கடுங்கோபத்திற்கே உள்ளாகிறான். சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது. ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும். யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும். மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள். நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும். ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை. யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும். யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார். வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள். பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்! கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள். மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும். பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து. அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது. பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது. முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள். சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது. ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான். புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள். ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும். தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது! வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும். பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார். கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை. பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள். நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது. யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார். மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது. வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள். அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, கனத்திற்கு முன்பு தாழ்மை. இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார். மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார். உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்; பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார். இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்; அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம். அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும். ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார். அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது. மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார். அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது. நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது. அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது. நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள். அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது, ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள். அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது; அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது. தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும் வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது! நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள். அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது. பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது. அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்; இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும். விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது, ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது. ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும். கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும். மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும். தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும். இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும். வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள். வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி, தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள். கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள். நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது. பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன். சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா. சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட, சமாதானத்துடன் அமைதியாய் சாப்பிடும் காய்ந்த அப்பத்துண்டே சிறந்தது. விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான், பின்பு அந்த வேலைக்காரன் குடும்பத்தில் ஒருவனைப்போல் சகோதரருடைய உரிமைச் சொத்திலும் பங்குபெறுவான். வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா. கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்; பொய்ப் பேசுபவர்கள் அவதூறைப் பேசும் நாவைக் கவனித்துக் கேட்கிறார்கள். ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்; பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் தண்டனைக்குத் தப்புவதில்லை. பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்; பிள்ளைகளுக்குப் பெருமை அவர்களின் பெற்றோர்களே. சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது; அப்படியானால் பொய்பேசும் உதடுகள் ஆளுநருக்கு எவ்வளவு கேவலமானது! இலஞ்சத்தைக் கொடுப்பவனுக்கு அது வசியம் போலிருக்கிறது; அவன் செல்லும் இடமெல்லாம் வெற்றி என நினைக்கிறான். குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்; ஆனால் குற்றத்தை மீண்டும் நினைப்பூட்டுகிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள். மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட பகுத்தறிகிறவர்களை வார்த்தையினால் கண்டிப்பதே பயனளிக்கும். தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்; அழிவின் தூதனால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது. ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது. வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு. குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது. கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது. மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும், தன்னைப் பெற்றவளுக்குக் கசப்பும் இருக்கும். குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல, உத்தமமான அதிகாரிகளை தண்டிப்பதும் நல்லதல்ல. அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள். அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்; தன் நாவை அடக்கினால் புத்திமான்களாகவும் தோன்றுவார்கள். நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள். மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள். கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும். வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை. கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல. மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும். மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன். யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள். பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள். வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது. கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும். மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்? பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும். அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள். சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும். அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன. அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம். வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள். மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள். நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு. வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும், குற்றமற்றவராய் நடக்கிற ஏழையே சிறந்தவர். அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல; அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்! ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது. செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்; ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள். பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்; அன்பளிப்பு கொடுப்பவருக்கு அனைவரும் நண்பர்கள். ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள், அவர்களுடைய சிநேகிதர்கள் எவ்வளவு அதிகமாய் அவர்களைப் புறக்கணிப்பார்கள்! ஏழைகளோ அவர்களிடம் கெஞ்சினாலும், அவர்களுடைய நண்பர்கள் போய்விடுகிறார்கள். ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள், புரிந்துகொள்ளுதலைக் காப்பவர்கள் நன்மையடைவார்கள். பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல; ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது! ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது; குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை. அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; ஆனால் அவனுடைய தயவோ புல்லின்மேலுள்ள பனியைப்போலிருக்கும். மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு; வாக்குவாதம் செய்யும் மனைவி, ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள். வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள். சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள். ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள், அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார். உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து; இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய். முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்; அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும். ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; முடிவில் நீ ஞானமுள்ளவராவாய். மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது. எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்; அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள். ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்; பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள். தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து, தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள். என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால், அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய். சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது. ஏளனம் செய்வோருக்கு தண்டனையும், மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது. திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல. அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள். சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர். சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை. மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள். அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்? நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான். “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்? பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார். சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல். பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள். மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும். நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள். புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு. ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும். ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது. “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார். போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல. மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும். ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான். மனிதருடைய ஆவி20:27 மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள் யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது. அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது. வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை. அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும். அரசனுடைய இருதயம் யெகோவாவின் கரத்தில் நீரோடைகளைப் போலிருக்கின்றது; அவர் அதைத் தாம் விரும்பியவர்களிடம் நடத்துகிறார். மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும், ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார். பலி செலுத்துவதைப் பார்க்கிலும், நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம். கொடியவர்களின் உழாத நிலம் என்பது, அவர்களின் பாவத்தை உண்டாக்கும் அகந்தையான பார்வையும் பெருமையான இருதயமுமே. அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம், அதுபோலவே கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் இலாபத்தைக் கொடுப்பதும் நிச்சயம். பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம், பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும். கொடியவர்கள் நியாயஞ்செய்ய மறுப்பதால், அவர்களின் வன்முறை அவர்களையே வாரிச்செல்லும். குற்றவாளிகளின் வழி கோணலானது, ஆனால் குற்றமற்றவர்களின் நடத்தையோ நேர்மையானது. சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்; தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள். ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்; ஞானமுள்ளவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து, கொடியவர்களை தண்டிக்கிறார். ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது. இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்; அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும். நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் தீயவர்களுக்கு பயமுண்டாக்கும். விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள், முடிவில் இறந்தவர்களின் கூட்டத்தில் சேருவார்கள். சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்; திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை. கொடியவர்கள் நீதிமான்களையும், துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள். சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது. சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்; மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள். நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள். ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி, அவர்கள் நம்பியிருக்கும் கோட்டையையும் இடித்துப் போடுவார்கள். தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள் பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர், அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள். சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால், அவர்களின் ஆசையினால் அவர்கள் அழிவார்கள். அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது; அது தீயநோக்கத்துடன் செலுத்தப்படுமானால், அது இன்னும் எவ்வளவு அதிக அருவருப்பாயிருக்கும்! பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்; ஆனால் கவனமாய்க் கேட்பவர்கள் வெற்றிகரமாக சாட்சியளிப்பார். கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள். யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை. போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது. அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது. பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை. விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது. கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள். பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள். பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள், கடன்வாங்கினவர்கள் கடன் கொடுத்தவருக்கு அடிமை. அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும். தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஏனெனில் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும். தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும் அரசனைத் தங்கள் நண்பனாக்கிக் கொள்வார்கள். யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார். “வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான். விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள். பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது, ஆனால் கண்டித்துத் திருத்துவதால் அதை அகற்றலாம். தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறவர்களும் ஏழையாகிறார்கள். ஞானிகளின் முப்பது பழமொழிகள் பழமொழி 1 ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை. ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள். உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன். அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா? அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம். பழமொழி 2 ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். பழமொழி 3 கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே. ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம். பழமொழி 4 பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே. ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும். பழமொழி 5 உன் முற்பிதாக்கள் நாட்டிய பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே. பழமொழி 6 தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா? அவர்கள் அரசர்களுக்குமுன் பணிசெய்வார்கள்; அவர்கள் பிரபலமற்றவர்களுக்கு முன்பாக பணிசெய்வதில்லை. பழமொழி 7 ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது, உனக்குமுன் இருப்பவற்றை23:1 உனக்குமுன் இருப்பவற்றை அல்லது இருப்பவர்களை நன்றாகக் கவனித்துப்பார். நீ உணவுப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; அது உன்னை ஏமாற்றக்கூடும். பழமொழி 8 நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே; உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே. கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும், அவை இறக்கைகள் முளைத்து, கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும். பழமொழி 9 கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் எவ்வளவு செலவு செய்கிறார்களென்று சிந்திக்கிறார்கள். “சாப்பிடுங்கள், குடியுங்கள்” என்று அவர்கள் உனக்குச் சொல்வார்கள்; ஆனால் அவர்கள் அதை மனதாரச் சொல்லவில்லை. நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும், நீ அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளும் வீணாய்ப் போகும். பழமொழி 10 நீ மூடர்களுடன் பேசாதே, ஏனெனில் அவர்கள் உன் ஞானமான வார்த்தைகளை ஏளனம் செய்வார்கள். பழமொழி 11 பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே; தந்தையற்றவர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார். பழமொழி 12 நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு. பழமொழி 13 பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள். நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. பழமொழி 14 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்; உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது, என் உள்ளம் மகிழும். பழமொழி 15 நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு. அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது. பழமொழி 16 என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு, உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்: திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும், மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே. ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும். பழமொழி 17 உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள். நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான். உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக! பழமொழி 18 என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும். ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு. அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்; மனிதர்களுக்குள் உண்மையற்றவர்களைப் பெருகப்பண்ணுகிறாள். பழமொழி 19 யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்? யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்? திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே. மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே! முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும். அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும். நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய். “அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! அவர்கள் என்னைத் தாக்கினார்கள், நான் அதை உணரவில்லை! இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய். பழமொழி 20 கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே. ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும். பழமொழி 21 ஞானத்தால் வீடு கட்டப்பட்டு புரிந்துகொள்ளுதலினால் அது நிலைநாட்டப்படுகிறது; அறிவினால் அதின் அறைகள், அபூர்வமான அழகிய பொருட்களால் நிரப்பப்படுகின்றன. பழமொழி 22 ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன், அறிவுள்ளவன் தன் பெலத்தை பெருக்குகிறான். போர் செய்ய வழிநடத்துதல் தேவை, வெற்றிபெற அநேக ஆலோசகர்கள் தேவை. பழமொழி 23 ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது; பட்டண வாசலில் கூடும் சபையில் சொல்வதற்கு அவனுக்கு ஒன்றும் இல்லை. பழமொழி 24 தீமையான சூழ்ச்சி செய்பவன் சதிகாரன் என அழைக்கப்படுவான். மூடரின் திட்டங்கள் பாவமாகும், ஏளனம் செய்பவர்களை மனிதர் வெறுக்கிறார்கள். பழமொழி 25 துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால், உன் பெலன் எவ்வளவு குறைவானது. மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி; கொல்லப்பட களத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறவர்களைக் காப்பாற்று. “எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற இறைவன் அதைக் காணமாட்டாரோ? உங்கள் வாழ்வைக் காக்கிறவர் அதை அறியாமலிருப்பாரோ? ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்வதற்குத் தக்கதாய் அவர் பதில்செய்யாமல் விடுவாரோ? பழமொழி 26 என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் நீ சுவைப்பதற்கு இனிமையாயிருக்கும். அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்: அதை நீ தெரிந்துகொண்டால் உனக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, உன் எதிர்பார்ப்பு வீண்போகாது. பழமொழி 27 நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே; அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்காதே. ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்; ஆனால் கொடியவர்களோ பேராபத்தினால் வீழ்த்தப்படுவார்கள். பழமொழி 28 உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே; அவன் தடுமாறும்போது, உன் இருதயத்தில் சந்தோஷமடையாதே. நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு அவன்மேலிருக்கும் தன் கோபத்தை விலக்கி உன்மேல் மனவருத்தமடைவார். பழமொழி 29 தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே, கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை; கொடியவர்களின் விளக்கோ அணைந்துபோகும். பழமொழி 30 என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, கலகக்காரர்களுடன் நீ சேராதே. ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்? ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்: நியாயத்தீர்ப்பில் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல: குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள், நாடுகள் அனைத்தும் அவனை வெறுப்பார்கள். ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும், அவர்கள்மேல் மிகுந்த ஆசீர்வாதம் பெருகும். நேர்மையான பதில் உதடுகளில் கொடுக்கும் முத்தத்தைப் போலிருக்கும். உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி, உன் வயல்வெளிகளை ஆயத்தப்படுத்து; அதின்பின், உனது வீட்டைக் கட்டு. காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே; பொய்களை சொல்ல உன் உதடுகளை நீ பயன்படுத்தலாமா? “அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ, “அவன் செய்ததற்குத் தக்கதாக நானும் அவனைத் தண்டிப்பேன்” என்றோ நீ ஒருபோதும் சொல்லாதே. நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்; புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டத்தையும் கடந்து சென்றேன்; அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; தரையெங்கும் களைகள் நிறைந்திருந்தன, தோட்டத்தின் கற்சுவரும் இடிந்து கிடந்தது. நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்; அப்பொழுது நான் கண்டதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்: கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும். மேலும் சாலொமோனின் நீதிமொழிகள் யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்: காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை; ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை. வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல், அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது. வெள்ளியிலிருந்து மாசை அகற்று, அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்; அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று; அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும். அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே; அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட, “நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது. நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல, அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே; முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்? அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது, நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே; அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான், உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது. ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது. ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது. நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்; அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான். தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன், மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான். பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம், சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும். நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு; அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய். நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள். தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான். துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும். இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும், காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும். உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு. அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார். வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும். சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி, களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும். கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான், சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான். தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல, தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல. தன்னடக்கம் இல்லாத மனிதன் மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான். கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது. சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது. குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது. மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய். மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும். மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும். மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான். நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள். தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம். “வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான். ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள். விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான். வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான். தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே, தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும். தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது. தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான். அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது. அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும். ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும். பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும். நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே. உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும். கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும். கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது. மறைவான அன்பைவிட, வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது. நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை. திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்; பசியால் வாடுபவனுக்கோ கசப்பாயிருப்பதும் சுவையாயிருக்கும். தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே, வீட்டைவிட்டு அலைகிற மனிதரும் இருக்கிறார்கள். வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல, ஒருவருடைய நண்பரின் அருமை இதயப்பூர்வமான ஆலோசனையிலிருந்து வெளிப்படுகிறது. நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே, உனக்குப் பேராபத்து வரும்போது உன் குடும்பத்தாரின் வீட்டிற்கு உதவி தேடிப்போகதே; தொலைவில் இருக்கும் உன் குடும்பத்தாரைவிட, அருகில் இருக்கும் அயலாரே மேல். என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து; அப்பொழுது என்னை மதிக்காதவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியும். விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள், வேறுநாட்டுப் பெண்ணுக்காக அதைச் செய்தால் அடைமானமாகவே அதை வைத்துக்கொள். ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால், அது சாபமாகவே எண்ணப்படும். சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்; அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும், கையினால் எண்ணெயைப் பிடிக்க முயல்வதுபோலவும் இருக்கும். இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான். அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்; தன் எஜமானின் நலன்களைப் பாதுகாப்பவன் மேன்மை பெறுவான். தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும். பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது; அவ்வாறே மனிதனுடைய கண்களும் திருப்தியடைவதில்லை. வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்; ஆனால் மனிதர்களோ அவர்களுக்கு வரும் புகழினால் சோதிக்கப்படுகிறார்கள். தானியத்தை உலக்கையினால் இடிப்பதுபோல, மூடரை உரலில் போட்டு இடித்தாலும், மூடத்தனத்தை அவர்களிடமிருந்து உன்னால் அகற்றமுடியாது. உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள், உன் மாட்டு மந்தைகளையும் கவனமாய்ப் பராமரி; ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை, கிரீடமும் எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைப்பதில்லை. காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது, குன்றுகளிலிருந்து புல் சேகரிக்கப்படுகின்றது; ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும், வெள்ளாடுகள் ஒரு வயல் வாங்கப் பணத்தைக் கொடுக்கும். உனக்கும் உன் குடும்பத்திற்கும் போதுமான வெள்ளாட்டுப்பால் உன்னிடம் நிறைவாய் இருக்கும், அது பணிப்பெண்களின் பிழைப்பிற்கும் போதுமானதாய் இருக்கும். கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்; ஆனால் விவேகமும் அறிவும் உள்ள ஆட்சியாளர் ஒழுங்கை நிலைநிறுத்துகிறார். ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர், விளைச்சல் அனைத்தையும் அழிக்கும் பெருமழையைப் போலிருக்கிறான். சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்; ஆனால் அதைக் கைக்கொள்கிறவர்கள் அவர்களை எதிர்க்கிறார்கள். தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்கள் அதை முற்றுமாய் விளங்கிக்கொள்கிறார்கள். நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட, குற்றமற்ற வழியில் நடக்கும் ஏழைகளே சிறந்தவர்கள். விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான். வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள், ஏழைகளுக்கு இரங்கும் மற்றவர்களுக்காக அதைச் சேர்க்கிறார்கள். சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும். நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள், தாங்கள் வைத்த கண்ணிக்குள் தாங்களே அகப்படுவார்கள்; ஆனால் குற்றமற்றவர்கள் நன்மையைச் சுதந்தரிப்பார்கள். பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்; ஆனால் மெய்யறிவுள்ள ஏழைகளோ, அவர்கள் யார் என்பதை சரியாக அறிந்துகொள்கிறார்கள். நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; ஆனால் கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான், ஆனால் அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் இரக்கம் பெறுவார்கள். எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஆனால் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவர்களோ ஆபத்தில் விழுகிறார்கள். ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போலவும் பாயும் கரடியைப்போலவும் இருக்கிறான். ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை, ஆனால் அநியாய வழியில் சம்பாதிக்கும் ஆதாயத்தை வெறுக்கிறவர்கள் நீடிய வாழ்வை அனுபவிப்பார்கள். கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, அவனை கல்லறைக்கு இழுக்கும்; யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம். குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், ஆனால் தவறான வழியில் நடப்பவர்கள் திடீரென விழுந்துபோவார்கள். தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை வீணடிப்பவர்களோ, அதிக வறுமையில் வாடுவார்கள். உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல, ஆனாலும் சிலர் ஒரு சிறு அப்பத்துண்டிற்காகவும் அநியாயம் செய்வார்கள். பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள். தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள். தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, “அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள் அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள். தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை, ஆனால் ஏழைகளின் தேவைகளை கவனிக்காதவர்கள் அநேக சாபங்களைப் பெறுவார்கள். கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அழியும்போது நீதிமான்கள் பெருகுவார்கள். அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள். நீதிமான்கள் பெருகும்போது, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்; கொடியவர்கள் ஆளும்போதோ, மக்கள் வேதனைக் குரல் எழுப்புவார்கள். ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்; ஆனால் விபசாரிகளுடன் கூட்டாளியாய் இருப்பவன் தன்னுடைய செல்வத்தைச் சீரழிக்கிறான். அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்; ஆனால் இலஞ்சத்தின்மேல் பேராசை கொண்டவர்கள் நாட்டை அழிக்கிறார்கள். தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள். தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள். நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை. ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் கோபத்தை விலக்குகிறார்கள். ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது. இரத்தவெறியர் உத்தமமானவர்களை வெறுக்கிறார்கள்; நீதிமான்களைக் கொல்லும்படி தேடுகிறார்கள். மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள். ஒரு ஆளுநர் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவருடைய ஊழியர்கள் எல்லோரும் கொடியவராவார்கள். ஏழைக்கும் அவரை ஒடுக்கிறவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு: யெகோவாவே அந்த இருவரின் கண்களுக்கும் பார்வையைக் கொடுத்திருக்கிறார். அரசன் ஏழைகளுக்கு நியாயத்துடன் தீர்ப்பளித்தால், அவனுடைய சிங்காசனம் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் தன் விருப்பப்படி வளரவிடப்படுகிற பிள்ளையோ, தன் தாய்க்கு அவமானத்தைக் கொண்டுவரும். கொடியவர்கள் பெருகும்போது பாவமும் பெருகும், ஆனால் நீதிமான்கள் அவர்களுடைய வீழ்ச்சியைக் காண்பார்கள். உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள். இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது; அவர்கள் அதை விளங்கிக்கொண்டாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள். பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம். ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால், இறுதியில் அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாவார்கள். கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள். ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும், ஆனால் மனத்தாழ்மை கனத்தைக் கொண்டுவரும். திருடர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்கள் தங்களுக்கே பகைவராய் இருக்கிறார்கள்; அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டதினால் சாட்சி சொல்லத் துணியமாட்டார்கள். மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடமிருந்தே மனிதர் நியாயத்தைப் பெறுகிறார்கள். நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்; கொடியவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். ஆகூரின் வார்த்தைகள் யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது: “இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன், ஆனால் நான் வெற்றிபெற முடியும். நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவில்லை, பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை. மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்? வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்? பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்? அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். “இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர். அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார். “யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும். மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம், ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும். இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு ‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்; அல்லது நான் ஏழையாகி, திருடி என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும். “வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய். “தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு; தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு; எப்பொழுதும் கண்களில் பெருமையும் ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு; கூர்மையான வாள் போன்ற பற்களையும் தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு; அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும், மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள். “இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர். “ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, ‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு: பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. “தன் தந்தையை ஏளனம் செய்து, தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும், கழுகுகள் அவற்றைத் தின்னும். “எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை: ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும், நடுக்கடலிலே கப்பலின் வழியும், இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை. “ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு, ‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள். “மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை: அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும், யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே. “பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது. “வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை, கம்பீரத் தோற்றமுடைய நான்காவதும் உண்டு: மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை; கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே. “நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால், அல்லது தீமைசெய்ய திட்டமிட்டிருந்தால், உன் கையினால் உன் வாயை மூடிக்கொள்! பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும், மூக்கைக் கசக்குவதினால் இரத்தம் வருவதுபோலவும், கோபத்தை மூட்டுவதும் சண்டையை ஏற்படுத்தும்.” அரசன் லேமுயேலின் வார்த்தைகள் அரசன் லேமுயேலின் வார்த்தைகள்: இது அவனுடைய தாயினால் அவனுக்குப் போதிக்கப்பட்ட இறைவாக்கு. என் மகனே! என் கர்ப்பத்தின் மகனே! நேர்த்திக்கடன் மூலம் நான் பெற்ற மகனே! கேள், நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே, அரசர்களை அழிப்பவர்களிடம் சேராதே. லேமுயேலே, திராட்சைமது அருந்துவது அரசர்களுக்கு உகந்ததல்ல, அது அரசர்களுக்குத் தகுந்ததல்ல, ஆளுநர்கள் மதுபானத்தை விரும்புவது நல்லதல்ல. அரசர்கள் குடிப்பதினால் சட்டத்தை மறந்து போவார்கள் ஒடுக்கப்பட்டவர்களின் சட்ட உரிமைகளை வழங்க மறுப்பார்கள். அழிந்து போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடு, வேதனையிலுள்ளவர்களுக்கு திராட்சை மதுவைக் கொடு! அவர்கள் குடித்துத் தங்கள் வறுமையை மறக்கட்டும், தங்கள் துயரத்தை ஒருபோதும் நினையாதிருக்கட்டும். தங்களுக்காகப் பேச முடியாதவர்களுக்காகப் பேசு, ஆதரவற்றோர்களின் உரிமைகளுக்காகப் பேசு. அவர்களுக்காகப் பேசி, நியாயமாகத் தீர்ப்பு வழங்கு; ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களின் உரிமைகளைக் காப்பாற்று. முடிவுரை: நற்குணமுடைய மனைவி நற்குணமுடைய மனைவியை யாரால் கண்டடைய முடியும்? அவள் மதிப்போ பவளக்கற்களைவிட மிகவும் உயர்ந்தது. அவளின் கணவன் அவளில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறான்; அவனுக்கு செல்வாக்கு குறையாது. அவள் தன் வாழ்நாட்கள் முழுவதும் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே கொண்டுவருகிறாள். அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள். அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள். அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள். அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள். மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள். தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்; அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை31:18 இரவுவரைக் கடினமாக உழைக்கிறாள் என்று அர்த்தம்.. அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள். அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள். அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள். அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள். அவளுடைய கணவன் பட்டண வாசலில், குடிமக்களின் தலைவர்களோடு உட்கார்ந்திருக்கையில் மதிக்கப்படுகிறான். அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள், அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள். அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள். அவள் ஞானமாய்ப் பேசுகிறாள், அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன. அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்; அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை. அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்; அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்: “அநேகம் பெண்கள் சிறப்பான செயல்களைச் செய்கிறார்கள், ஆனால் நீயோ அவர்கள் எல்லோரிலும் உயர்வானவள்.” கவர்ச்சித் தோற்றம் வஞ்சகமானது, அழகும் அழிந்துபோகும்; ஆனால் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்ணே புகழப்படத்தக்கவள். அவளுடைய கைகளின் பலனுக்காக அவளைப் பாராட்டுங்கள், அவளுடைய செயல்கள் பட்டண வாசலில் அவளுக்குப் புகழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.