- Biblica® Open Indian Tamil Contemporary Version பிலிப்பியர் பவுல் பிலிப்பியருக்கு எழுதின கடிதம் பிலிப்பியர் பிலி. பவுல் பிலிப்பியருக்கு எழுதின கடிதம் கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான பவுலும், தீமோத்தேயுவும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், அவர்களோடுகூட திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ஜெபமும் நன்றி செலுத்துதலும் நான் உங்களை நினைக்கும் போதெல்லாம், என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம், எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன். ஏனெனில் நான் அங்கே வந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை, நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். உங்கள் எல்லோரையும்பற்றி, இவ்வாறு நான் நினைப்பது சரியானதே. ஏனெனில் எப்பொழுதும் என் இருதயத்தில் நீங்கள் இடங்கொண்டிருக்கிறீர்கள்; நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்தியின் சார்பாகப் பேசி, அதை உறுதிசெய்கிற போதும், நீங்களும் எல்லோரும் இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிற கிருபையில், என்னுடன் பங்குடையவர்களாய் இருக்கிறீர்கள். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த உருக்கமான அன்போடு, உங்களெல்லோரையும் நான் காண விரும்புகிறேன் என்பதற்கு, இறைவனே சாட்சியாயிருக்கிறார். என் மன்றாடல் இதுவே: உங்கள் அன்பு மென்மேலும் அறிவாற்றலிலும், ஆழமான நுண்ணறிவிலும் பெருகி வளரவேண்டும். அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் நீதியின் கனிகளில், நிறைவுள்ளவர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள். அது இறைவனுக்கு மகிமையையும், துதியையும் ஏற்படுத்தும். சிறையில் பவுல் பிரியமானவர்களே, எனக்கு நடந்தவைகள் உண்மையிலே நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் நான் கிறிஸ்துவுக்காகவே சிறையில் விலங்கிடப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் எல்லோருக்கும், மற்றவர்களுக்கும்கூட நன்கு தெளிவாகியிருக்கிறது. நான் விலங்கிடப்பட்டிருப்பதால், கர்த்தரில் இருக்கிற சகோதரர்களில் அநேகர், பயமின்றியும் தைரியத்துடனும் நற்செய்தியைப் பேசுவதற்கு உற்சாகம் கொண்டிருக்கிறார்கள். சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள். இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மற்றவர்களோ உண்மை மனதுடன் அல்லாமல், தன்னல நோக்கத்துடனேயே கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள். நான் விலங்கிடப்பட்டிருக்கையில், எனக்கு இன்னும் கஷ்டத்தை உண்டாக்கலாம் என்ற எண்ணத்துடனே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஆனால் நோக்கம் எதுவாயிருந்தால் என்ன? தவறான நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ, எல்லா வழிகளிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதே முக்கியம். இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆம், நான் இனிமேலும் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன். நான் எவ்வகையிலும் வெட்கப்படக்கூடாது என்பதும், வாழ்வதாலோ இறப்பதாலோ, இப்பொழுதுபோலவே எப்பொழுதும் கிறிஸ்து என் உடலில் மேன்மைப்படுவதற்கு போதிய அளவு தைரியம் இருக்கவேண்டும் என்பதும், எனது ஆவலும் எதிர்பார்ப்புமாகும். ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே. இந்த உடலில் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தால், அது கிறிஸ்துவுக்குள் பலனுள்ள வேலையாகும். இப்படியிருந்தும் நான் எதைத் தெரிந்துகொள்வேன்? அது எனக்குத் தெரியாது. இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; ஆனால் நான் இந்த உடலில் இருப்பது, அதையும்விட உங்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன். எனவே நான் மீண்டும் உங்களிடம் வருவதானால், என் நிமித்தம் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி உங்களில் நிரம்பிவழியும். நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை என்னதான் நடந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவிதத்தில் நீங்கள் நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் வந்து உங்களைப் பார்க்கக்கூடியதாய் இருந்தாலும், வரமுடியாதிருந்து உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி ஒரே மனதுடன் ஒன்றாக நிலைத்து நிற்கிறீர்கள் என்றும், உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். ஏனெனில் கிறிஸ்துவுக்காக அவரில் விசுவாசமாய் இருப்பதற்காக மட்டுமல்ல, அவருக்காகத் துன்பப்படுவதற்காகவும் உங்களுக்கு ஒரு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எனக்கு ஏற்பட்ட, போராட்டத்தைக் கண்டீர்கள். அதே போராட்டம் உங்களுக்கும் ஏற்படுகிறது. அது எனக்கு இன்னும் உண்டு என்பதையும் இப்பொழுது கேள்விப்படுகிறீர்கள். கிறிஸ்துவின் தாழ்மை எனவே கிறிஸ்துவோடு இணைந்திருப்பதனால், உங்களுக்கு ஏதாவது உற்சாகம் இருந்தால், அவருடைய அன்பில் ஏதாவது ஆறுதலோ, ஆவியானவரோடு ஏதாவது ஐக்கியமோ, ஏதாவது தயவோ, கருணையோ உங்களுக்கு இருக்குமானால், ஒரே மனதுடனும், ஒரே அன்புடனும், இருதயத்திலும் நோக்கத்திலும் ஒற்றுமையாயிருந்து, எனது மகிழ்ச்சியை முழுமையாக்குங்கள். சுயநலத்திற்காகவும் வீண்பெருமைக்காகவும் ஒன்றும் செய்யவேண்டாம். மாறாக, தாழ்மையான மனதுடன் மற்றவர்களை உங்களைவிடச் சிறந்தவர்களாக எண்ணுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் சொந்த நலன்களில் மட்டும் அக்கறைகொள்ளாமல், மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறைகொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையே உங்களுக்கும் இருக்கவேண்டும்: அவர் தன் முழுத்தன்மையிலும் இறைவனாயிருந்தும், இறைவனுடன் சமமாயிருக்கும் சிறப்புரிமையை விடாது பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனால் அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமைத் தன்மையை ஏற்றுக்கொண்டு, மனிதனின் சாயலுடையவரானார். தோற்றத்தில் ஒரு மனிதனைப்போல் காணப்பட்டு, அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, சாகும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதாவது சிலுவையின்மேல் சாகுமளவுக்கு முற்றுமாகக் கீழ்ப்படிந்தார். அதனாலே இறைவன் அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட உன்னதமான பெயரை அவருக்குக் கொடுத்தார். அதனால் இயேசுவின் பெயருக்கு ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். பரலோகத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் உள்ளவர்களின் எல்லா முழங்கால்களும் முடங்கும். பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி, ஒவ்வொரு நாவும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கையிடும். முறுமுறுப்பில்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள் ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிகிறது போலவே, நான் இருக்கும்போது மட்டுல்ல, நான் இப்போது இல்லாதிருக்கையிலும் அதிகமாகக் கீழ்ப்படிந்திருங்கள். தொடர்ந்து உங்கள் இரட்சிப்பை பயத்துடனும், நடுக்கத்துடனும் செயல்படுத்துங்கள். ஏனெனில், இறைவனே தனது நல்ல நோக்கத்திற்கு ஏற்றபடி, நீங்கள் செயலாற்றுவதற்கான விருப்பங்களையும், ஆற்றலையும் கொடுத்து உங்களுக்குள் செயலாற்றுகிறார். முறுமுறுப்பில்லாமலும், வாதாடாமலும் எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் குற்றமற்றவர்களும், தூய்மையானவர்களுமான “பிழையேதுமில்லாத இறைவனுடைய பிள்ளைகளாய், நெறிகெட்ட சீர்கேடான இந்தத் தலைமுறையினரிடையே இருப்பீர்கள்.”2:15 உபா. 32:5 அவர்களிடையே, நீங்கள் வான மண்டலங்களிலுள்ள நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பீர்கள். நீங்கள் வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்து கொண்டவர்களாயிருந்தால் நான் ஓடிய ஓட்டமும், எனது உழைப்பும் வீணாகவில்லை என்று நான் கிறிஸ்து திரும்பிவரும் நாளில் பெருமையடைவேன். ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். தீமோத்தேயுவும் எப்பாப்பிராத்துவும் அன்றியும் தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவில் நான் எதிர்பார்க்கிறேன். அப்பொழுது அவன்மூலம் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உற்சாகமடைவேன். அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை. ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு இங்கே என்ன நடக்கும் என்று நான் அறிந்தவுடனே, அவனை உங்களிடம் அனுப்பலாம் என எதிர்பார்க்கிறேன். நானும் உங்களிடம் விரைவில் வருவேன் என்று கர்த்தரில் மனவுறுதியாயிருக்கிறேன். ஆனால் இப்பொழுது என்னுடைய தேவைகளில் எனக்கு உதவிசெய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன். அவன் என் சகோதரனும் உடன் ஊழியனும், என் உடனொத்த போர் வீரனுமாயிருக்கிறான். அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாயிருக்கிறான். தான் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதினால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான். அவன் நோயினால் சாகும் தருவாயில் இருந்தது உண்மையே. ஆனால் இறைவன் அவன்மேல் இரக்கம் கொண்டார். அவனில் மட்டும் அல்ல, துக்கத்தின்மேல் துக்கம் எனக்கும் வராமல் அவர் என்மேலும் இரக்கம் கொண்டார். ஆகையால், நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். அப்பொழுது என் கவலை குறையும். எனவே, அவனைக் கர்த்தரில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக்கொள்ளுங்கள். இவனைப் போன்றவர்களுக்கு அதிக மதிப்புக்கொடுங்கள். ஏனெனில் உங்களால் எனக்கு செய்யமுடியாத உதவியை, அவன் எனக்குச் செய்யும்படி, தனது உயிரையும் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு, கிறிஸ்துவின் ஊழியத்திற்காக சாகவும் தயங்கவில்லை. மாம்ச இயல்பில் மனவுறுதி வேண்டாம் கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். மாம்சத்தில் மனவுறுதி வைக்காமல் இறைவனின் ஆவியானவரின் துணையுடன் வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே, உண்மையான விருத்தசேதனமுள்ளவர்கள். மாம்சத்தின்மேல் மனவுறுதிகொள்வதற்கு என்னிடமும் தன்மைகள் உண்டு. யாராவது மனுஷிக விஷயத்தில் மனவுறுதி வைக்கும் தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எண்ணினால், என்னிடம் அது அதிகமாய் இருக்கிறது: ஏனெனில் நான் பிறந்து எட்டாம் நாளிலேயே விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். எபிரெயரில் பிறந்த எபிரெயன்; மோசேயின் சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன். பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன். ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன். அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன். நான் அவரோடு, இணைந்திருக்கவே விரும்புகிறேன். மோசேயின் சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதி இறைவனிலிருந்து விசுவாசத்தினால் வருகிறதாயிருக்கிறது. நான் கிறிஸ்துவை அறியவும், அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறியவும் விரும்புகிறேன். அத்துடன் அவருடைய மரணத்தில் அவரைப் போலாகி, அவருடைய துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஐக்கியத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும். இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன். பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன். நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார். பவுலின் முன்மாதிரியை பின்பற்றுதல் எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம். பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன். பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை. ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தமது வல்லமையான ஆற்றலைக் கொடுக்கும்படியே நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை மகிமையுள்ள உடலைப்போல் மாற்றுவார். ஒற்றுமையாக நிலைத்திருக்க அழைப்பு ஆகையால் நான் அன்பாயிருக்கிற எனக்கு பிரியமானவர்களே, என் நண்பர்களே, அப்படியே நீங்களும் கர்த்தரில் உறுதியாய் நிற்கவேண்டும். நீங்களே நான் காண விரும்புகிற என் மகிழ்ச்சியும், என் கிரீடமுமானவர்கள். கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி, எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், என் உண்மையுள்ள உடன் கூட்டாளியே, உன்னிடமும் கேட்கிறேன். இந்தப் பெண்களுக்கு உதவிசெய். இவர்கள் கிலெமெந்தோடும், மற்ற எனது உடன் ஊழியரோடும் சேர்ந்து, என்னுடன் நற்செய்திக்காக போராடினார்கள். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. கடைசி புத்திமதிகள் எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். கர்த்தர் விரைவில் வருகிறார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும். இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானது எவையோ, மதிப்பானது எவையோ, சரியானது எவையோ, தூய்மையானது எவையோ, அன்பானது எவையோ, அத்துடன் பாராட்டுதலுக்குத் தகுந்தது எவையோ, மேன்மையும் புகழ்ச்சியுமானது எவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார். நன்கொடைகளுக்கு நன்றி இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் தேவையுள்ளவனாக இருப்பதனால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே. மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். நான் உங்கள் நன்கொடையைப் பெறுவதை நாடவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் நற்பலன்கள் அதிகரிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும். என் இறைவன் கிறிஸ்து இயேசுவில் உள்ள தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் நிறைவாக்குவார். நமது இறைவனும் பிதாவுமாய் இருக்கிறவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். இறுதி வாழ்த்துதல் கிறிஸ்து இயேசுவில் இருக்கிற எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னுடன் இருக்கிற சகோதர சகோதரிகள், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். எல்லாப் பரிசுத்தவான்களும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். விசேஷமாக ரோமப் பேரரசன் சீசரின் அரண்மனையைச் சேர்ந்த பரிசுத்தவான்களும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.