- Biblica® Open Indian Tamil Contemporary Version நெகேமியா நெகேமியாவின் புத்தகம் நெகேமியா நெகே. நெகேமியாவின் புத்தகம் நெகேமியாவின் மன்றாட்டு அகலியாவின் மகன் நெகேமியாவின் வார்த்தைகள்: அர்தசஷ்டா1:1 அர்தசஷ்டா அல்லது பெர்சியாவின் பேரரசர். அரசாண்ட இருபதாம் வருடம், கிஸ்லேயு1:1 இது பாபிலோனிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் சக. 7:1 இது நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதி வரையிலான காலம். மாதத்தில் நான் சூசான் அரண்மனையில் இருந்தேன். அப்பொழுது எனது சகோதரருள் ஒருவனான ஆனானி யூதாவிலிருந்து வேறுசில மனிதருடன் வந்தான்; நான் அவர்களிடம், நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருக்கும் யூதரைப் பற்றியும், எருசலேமைப் பற்றியும் விசாரித்தேன். அவர்கள் என்னிடம், “நாடுகடத்தப்பட்டு மாகாணங்களுக்குத் திரும்பிவந்திருப்பவர்கள் மிகுந்த கஷ்டத்துடனும், அவமானத்துடனும் வாழ்கிறார்கள். எருசலேமின் மதிலும் உடைக்கப்பட்டிருக்கிறது; அதன் வாசல் கதவுகளும் எரிக்கப்பட்டுள்ளன” என்றார்கள். இவற்றைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுதேன். சிலநாட்கள் நான் பரலோகத்தின் இறைவனுக்கு முன்பாகத் துக்கப்பட்டு உபவாசித்து மன்றாடினேன். பின்பு நான், “யெகோவாவே, பரலோகத்தின் இறைவனே, மகத்துவமுள்ளவரும் பயபக்திக்குரிய இறைவனே, உம்மில் அன்பாய் இருந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே, உமது அடியவர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக நான் உமக்கு முன்பாக இரவும் பகலும் மன்றாடுகிறேன். நானும் என் முற்பிதாக்களின் குடும்பமுமான இஸ்ரயேலராகிய நாங்கள் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகிற உமது அடியவனான என் மன்றாட்டைக் கேட்க, உமது செவி கேட்டும், உமது கண்கள் திறந்தும் இருப்பதாக. உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் கொடியவர்களாய் நடந்தோம். நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை. “நீர் உமது அடியவனான மோசேக்குக் கொடுத்த வார்த்தைகளை நினைவில்கொள்ளும். நீர் மோசேயிடம், ‘நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால் பிற நாட்டு மக்களுக்குள்ளே நான் உங்களைச் சிதறடிப்பேன். ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பிவந்து என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் மக்களில் நாடு கடத்தப்பட்டவர்கள் அடிவானத்தின் தொலைதூரத்தில் இருந்தாலும்கூட, நான் அங்கிருந்தும் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கூட்டிச்சேர்த்து என்னுடைய பெயருக்கென இருப்பிடமாக நான் தெரிந்துகொண்ட இவ்விடத்திற்குக் கொண்டுவருவேன்’ என்றீரே. “அவர்கள் உம்முடைய அடியவர்களும் உமது மக்களும், உமது மிகுந்த வல்லமையினாலும் பலத்த கரத்தினாலும் நீர் மீட்டுக்கொண்டவர்களும் ஆவர். யெகோவாவே, உமது அடியவனின் ஜெபத்தையும், உமது பெயரில் பயபக்தியாய் இருப்பதில் மகிழ்ச்சியடையும் உமது அடியார்களின் மன்றாட்டையும் செவிகொடுத்துக் கேளும்; இந்த மனிதனின் முன் எனக்கு தயவு கிடைக்கப்பண்ணி இன்று எனக்கு வெற்றியைத் தாரும்” என்று மன்றாடினேன். அந்நாட்களில் நான் அரசனுக்கு திராட்சை இரசம் பரிமாறுகிறவனாயிருந்தேன். அர்தசஷ்டா நெகேமியாவை எருசலேமுக்கு அனுப்புதல் அர்தசஷ்டா அரசனின் ஆட்சியின் இருபதாம் வருடம் நிசான்2:1 இந்த நிசான் மாதம் மார்ச் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை உள்ளது. மாதத்தில் அரசனுக்குத் திராட்சை இரசம் கொண்டுவரப்பட்டபோது, நான் அந்த திராட்சை இரசத்தை எடுத்து அரசனுக்குக் கொடுத்தேன். முன்னொருபோதும் நான் அவர்முன் துக்கமாயிருந்ததில்லை. எனவே அரசன் என்னிடம், “நீ வியாதி இல்லாமல் இருக்கும்போது ஏன் உனது முகம் துக்கமாய் காணப்படுகிறது? இது மனதின் துக்கமே தவிர வேறு எதுவும் இல்லை” என்றான். அப்பொழுது நான் பயமடைந்து, அரசனிடம், “அரசர் என்றைக்கும் வாழ்வாராக! எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் அழிக்கப்பட்டனவாய் கிடக்கும்போது, எனது முகம் துக்கமுடையதாய் காணப்படாதோ?” என்று கேட்டேன். அதற்கு அரசன், “அப்படியானால், உனக்கு வேண்டியது என்ன?” என்று கேட்டான். அப்பொழுது நான் பரலோகத்தின் இறைவனை நோக்கி மன்றாடினேன், பின் நான் அரசனைப் பார்த்து, “அரசர் விரும்பினால், உமது அடியவனுக்கு உமது கண்களில் தயவு கிடைக்குமானால், எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவிலுள்ள அந்த நகரத்தைத் திரும்பவும் கட்டுவதற்கு அரசர் என்னை அனுப்பவேண்டும்” என்று பதிலளித்தேன். அந்த நேரத்தில் அரசனின் பக்கத்தில் அரசியும் அமர்ந்திருந்தாள்; அப்போது அரசன் என்னிடம், “உனது பிரயாணம் எவ்வளவு காலம் எடுக்கும்? எப்போது திரும்புவாய்?” என்று கேட்டான். என்னை அனுப்புவதற்கு அரசனுக்கு விருப்பமிருந்ததினால் நான் இவ்வளவு காலமாகுமென்று ஒரு நேரத்தைக் குறித்தேன். மேலும் நான் அரசனிடம், “அரசர் விரும்பினால் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள யூதாவுக்கு நான் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி ஆளுநர்களுக்குக் கடிதங்கள் தாரும். அதைவிட ஆலயத்தின் அருகேயுள்ள கோட்டையின் வாசல் கதவுகளுக்கு மரச்சட்டங்கள் செய்வதற்கும், நகர மதிலுக்கும், நான் வசிக்கப்போகும் வீட்டுக்கும் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி அரசனுடைய காடுகளைப் பராமரிப்பவனான ஆசாபுக்கும் ஒரு கடிதம் தாரும்” என்று கேட்டேன். இறைவனின் கிருபையுள்ள கரம் என்மேல் இருந்ததினால், நான் கேட்டபடியே அரசன் என் வேண்டுகோளை எனக்குக் கொடுத்தான். அப்படியே நான் ஐபிராத்து நதியின் மறுபுறமாய் உள்ள மாகாணங்களுக்குப் போனபோது, அங்கிருந்த ஆளுநர்களிடம் அரசனின் கடிதங்களைக் கொடுத்தேன். அரசன் இராணுவ அதிகாரிகளையும், குதிரைப் படைகளையும் எனது பாதுகாப்புக்காக என்னுடன் அனுப்பியிருந்தான். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும்2:10 சமாரியா மாகாணத்தின் ஆட்சியாளர்., அம்மோனிய அதிகாரியான தொபியாவும் இதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரயேலரின் நலனை மேம்படுத்துவதற்காக ஒருவன் முன்வந்ததைக் குறித்து மிகவும் கலக்கமடைந்தார்கள். நெகேமியா எருசலேம் மதில்களைப் பார்வையிடுதல் எருசலேமுக்கு நான் போய், அங்கு மூன்று நாட்கள் தங்கினேன். அதன்பின்பு ஒருசில மனிதர்களுடன் இரவுவேளையில் மதிலைப் பார்வையிட நான் சென்றேன். ஆனால் என் இறைவன் எருசலேமுக்காகச் செய்யும்படி எனது இருதயத்தில் தூண்டிய எதையும் நான் எவருக்கும் சொல்லவில்லை. நான் ஏறிச்சென்ற மிருகத்தைத் தவிர வேறு எந்த ஒரு மிருகமும் அங்கு இருக்கவில்லை. அன்றிரவே அங்கிருந்து பள்ளத்தாக்கு வாசல் வழியே வெளியே போய் வலுசர்ப்பத்தின் துரவையும், குப்பைமேட்டு வாசலையும் நோக்கிப் போய், உடைந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், நெருப்பால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல் கதவுகளையும் பார்வையிட்டேன். அதன்பின் ஊற்று வாசலையும், அரசனின் குளத்தையும் நோக்கிப் போனேன்; ஆனால் நான் ஏறிச்சென்ற மிருகம் அதன் வழியாகச் செல்வதற்கு இடம் போதாமலிருந்தது. அதனால் நகரை இரவில் சுற்றி, பள்ளத்தாக்கு வழியாக மேலே வந்து, மேலும் மதிலைப் பார்வையிட்டேன். கடைசியாக பள்ளத்தாக்கு வாசல் வழியாய் திரும்பவும் உள்ளே வந்தேன். நான் எங்கே போயிருந்தேன் என்றோ, என்ன செய்துகொண்டிருந்தேன் என்றோ அதிகாரிகளுக்குத் தெரியாதிருந்தது; ஏனெனில் நான் யூதா மக்களுக்கோ, ஆசாரியருக்கோ, உயர்குடி மக்களுக்கோ, மற்ற எந்த அதிகாரிகளுக்கோ அல்லது வேலைசெய்யப்போகிற வேறு எவருக்குமோ ஒன்றுமே கூறவில்லை. பின்பு நான் அவர்களிடம், “நாங்கள் படும் கஷ்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களே, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது; அதன் வாசல் கதவுகளும் நெருப்பினால் எரிக்கப்பட்டுள்ளன. வாருங்கள், எருசலேமின் மதிலைத் திரும்பவும் கட்டுவோம். அப்பொழுது நாம் இனிமேலும் அவமானத்துடன் இருக்கமாட்டோம்” என்று கூறினேன். அத்துடன் நான் அவர்களுக்கு இறைவனின் கிருபையின்கரம் என்மேல் இருக்கிறதையும், அரசன் எனக்குச் சொன்னதைப்பற்றியும் கூறினேன். உடனே அவர்கள், “நாங்கள் மதிலைத் திரும்பவும் கட்டத் தொடங்குவோம்” எனப் பதிலளித்து, இந்த நல்ல வேலையைச் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய அலுவலகனான தொபியாவும், அரபியனான கேஷேமும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, எங்களை அவமதித்து, கேலி செய்தார்கள். அவர்கள், “நீங்கள் செய்யும் செயல் என்ன? அரசனுக்கு விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறீர்களோ?” என்று கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடம், “பரலோகத்தின் இறைவன் எங்களுக்கு வெற்றி கொடுப்பார். அவருடைய அடியாராகிய நாங்கள் இதைத் திருப்பிக் கட்டத் தொடங்குவோம். ஆனால் உங்களுக்கோவெனில் எருசலேமில் பங்கோ, உரிமை கோரிக்கையோ, சரித்திரப் பூர்வமான உரிமையோ இல்லை” என்று கூறினேன். எருசலேமின் மதிலைத் திரும்பக்கட்டுதல் பிரதான ஆசாரியன் எலியாசீபும், அவனுடைய உடன் ஆசாரியரும் மதிலில் வேலைசெய்வதற்காகப் போய் செம்மறியாட்டு வாசலைத் திரும்பவும் கட்டினார்கள். அவர்கள் அதை அர்ப்பணம் செய்து, அதன் கதவுகளை அதற்குரிய இடத்தில் அமைத்தார்கள். அவர்கள் மதிலை நூறுபேரின் கோபுரம்வரை கட்டி, அதை அர்ப்பணம் செய்தார்கள்; தொடர்ந்து அனானயேலின் கோபுரம்வரையிலும் கட்டினார்கள். அதை அண்டியுள்ள பகுதியை எரிகோவின் மனிதர் கட்டினார்கள். அதை அடுத்துள்ள பகுதியை இம்ரியின் மகன் சக்கூர் கட்டினான். மீன்வாசல் அசெனாவின் மகன்களால் திரும்பக் கட்டப்பட்டது. மரத்தாலான உத்திரங்களைப் போட்டு, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும், அந்தந்த இடங்களில் வைத்தார்கள். அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத் அதற்கடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக மெஷேசாபேலின் மகனான பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்தான்; அவனுக்கு அடுத்தாக பானாவின் மகன் சாதோக் பழுதுபார்த்தான். அடுத்துள்ள பகுதி தெக்கோவா மனிதர்களால் பழுதுபார்க்கப்பட்டது; ஆனால் அவர்களுடைய உயர்குடி மக்கள் அவர்களுடைய மேற்பார்வையாளர்களின்கீழ் வேலைசெய்ய தோள்கொடுத்து3:5 அவர்கள் பணியில் பங்கெடுக்கவில்லை. உதவவில்லை. பழைய வாசல், பாசெயாவின் மகன் யோய்தாவினாலும், பேசோதியாவின் மகன் மெசுல்லாமினாலும் திருத்தியமைக்கப்பட்டது. அவர்கள் அதன் மரத்தாலான உத்திரங்களை அமைத்து, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். அத்துடன் அவர்களுக்கு அடுத்ததாக கிபியோன், மிஸ்பா ஊர்களின் மனிதர்களால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. இவர்களுடன் கிபியோனைச் சேர்ந்த மெலெத்தியாவும், மெரொனோத்தியனான யாதோனும் இருந்தார்கள். இவ்விடங்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் ஆளுநரின்கீழ் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகும். அடுத்துள்ள பகுதியை பொற்கொல்லர்களில் ஒருவனான அர்காயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தான்; அவனைத் தொடர்ந்து நறுமண தைலம் செய்பவர்களுள் ஒருவனான அனனியா திருத்த வேலைகளைச் செய்தான்; இவர்கள் எருசலேமின் அகலமான மதில்வரைக்கும் எருசலேமைப் புதுபித்தார்கள். அடுத்ததாக எருசலேம் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த ஊரின் மகனான ரெப்பாயா திருத்த வேலைகளைச் செய்தான். அருமாப்பின் மகன் யெதாயா தன் வீட்டுக்கு முன்னுள்ள அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்ததாக ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தான். இன்னொரு பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கியாவும், பாகாத் மோவாபின் மகன் அசூபும் பழுது பார்த்தனர். எருசலேம் மாவட்டத்தின் மற்ற பாதிப் பகுதியின் ஆளுநனான அலோகேசின் மகன் சல்லூம், தனது மகள்களின் உதவியுடன் அடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான். ஆனூனினாலும், சனோவாகின் குடிகளினாலும் பள்ளத்தாக்கு வாசல் பழுதுபார்க்கப்பட்டது. அவர்கள் அதைத் திரும்பவும் கட்டி, கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடங்களிலே வைத்தார்கள். அத்துடன் குப்பைமேட்டு வாசல்வரை ஆயிரம் அடி சுவரைத் திருத்தி அமைத்தார்கள். ரேகாபின் மகனும், பெத்கேரேமின் மாவட்டத்தின் ஆளுநனுமான மல்கியா குப்பைமேட்டு வாசலைத் திருத்திக் கட்டினான். அவன் அதைத் திரும்பவும் கட்டி, அதற்குரிய கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அந்தந்த இடங்களில் அமைத்தான். கொல்கோசேயின் மகனும், மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநனுமான சல்லூம் ஊற்று வாசலைத் திருத்திக் கட்டினான். அவன் அதைத் திரும்பக் கட்டி, கூரையை அமைத்து, அதற்குரிய கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அந்தந்த இடத்தில் அமைத்தான். அத்துடன் அவன் தாவீதின் நகரத்திலிருந்து செல்லுகிற படிக்கட்டுவரை, அரசனின் தோட்டத்தின் அருகேயுள்ள சீலோவாம் குளத்தின் மதிலையும் திருத்தி அமைத்தான். அவனுக்கு அப்பால் அஸ்பூக்கின் மகனும், பெத்சூர் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனுமான நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரேயுள்ள வெட்டப்பட்ட குளமும், மாவீரர் மண்டபமும் இருக்கிற இடம்வரையிலும் மதிலின் திருத்த வேலையைச் செய்தான். அவனுக்கு அடுத்ததாக பானியின் மகன் ரேகூமின் தலைமையின்கீழ் லேவியரால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அவனுக்கு அருகே கேயிலா மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனான அசபியா தன் மாவட்டத்தின் திருத்த வேலைகளை செய்தான். அவனுக்கு அடுத்ததாக அவர்களுடைய நாட்டு மக்களான மற்ற சகோதரரால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. கேயிலா மாவட்டத்தின் மறுபகுதிக்கு ஆளுநனான எனாதாதின் மகன் பவ்வாயின்3:18 அதிகமான எபிரெய மொழி கையெழுத்துப் பிரதிகளில் பவ்வாயின் எனவும்; எபிரெய வேதத்தின் கிரேக்க பிரதிகளில் பின்னூய் எனவும் உள்ளது (வசனம் 24) தலைமையின்கீழ் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அவனுக்கு அடுத்ததாக மிஸ்பாவின் ஆளுநனான யெசுவாவின் மகன் ஏஸெர், மேட்டை எதிர்நோக்கியுள்ள இடத்திலிருந்து மதிலின் மூலையிலுள்ள ஆயுத களஞ்சியம்வரைக்கும் இன்னொரு பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக அந்த மூலையிலிருந்து பிரதான ஆசாரியன் எலியாசீபின் வீட்டு வாசல்வரையுள்ள மற்றுமொரு பகுதியை சபாயின் மகனான பாரூக் ஆர்வத்துடன் பழுதுபார்த்தான். அவனுக்குப்பின் அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத், எலியாசீபின் வீட்டு வாசலிலிருந்து வீட்டின் முடிவு வரையுள்ள இன்னொரு பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்தாக திருத்த வேலைகள் சுற்றுப்புறங்களிலுள்ள ஆசாரியர்களினால் செய்யப்பட்டன. அவர்களுக்கு அடுத்தாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீடுகளின் எதிரேயுள்ள பகுதிகளில் திருத்த வேலைகளைச் செய்தார்கள். அவர்களுக்கு அடுத்ததாக, அனனியாவின் மகனாகிய மாசெயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே திருத்த வேலைகளைச் செய்தான். அவனுக்கு அடுத்தாக எனாதாதின் மகன் பின்னூய் அசரியாவின் வீட்டிலிருந்து மதிலின் வளைவும் மூலையும் உள்ள இடம்வரைக்கும் உள்ள இன்னொரு பகுதியைத் திருத்திக் கட்டினான். ஊசாயின் மகன் பாலால் வளைவிற்கு எதிரேயும், காவலரின் முற்றத்திற்கு அருகேயுள்ள உயர்ந்திருக்கும் அரண்மனையிலிருந்து வெளிப்புறமாயிருக்கிற கோபுரத்திற்கு எதிரேயும் உள்ள திருத்த வேலையைச் செய்தான். அவனுக்கு பின்பு பாரோஷின் மகன் பெதாயாவும், ஓபேல் குன்றில் வாழ்ந்த ஆலய பணியாட்களும் அதற்குப்பின் கிழக்கு நோக்கியிருக்கிற தண்ணீர் வாசலின் எதிரேயுள்ள இடம்வரை உயர்ந்துள்ள கோபுரம்வரை திருத்த வேலைகளைச் செய்தார்கள். அவர்களை அடுத்து, தெக்கோவாவின் மனிதர் வெளிநோக்கி உயர்ந்துள்ள பெரிய கோபுரத்திலிருந்து ஓபேல் மதில்வரை மற்றுமொரு பகுதியைத் திருத்திக் கட்டினார்கள். குதிரை வாசலுக்கு முதற்கொண்டு ஆசாரியர்கள் ஒவ்வொருவரும் தன்தன் வீட்டுக்கு முன்பாக திருத்த வேலைகளைச் செய்தனர். அவர்களுக்கு அடுத்து இம்மேரின் மகன் சாதோக் தன் வீட்டின் எதிரே திருத்த வேலைகளைச் செய்தான். அவனுக்கு அடுத்து கிழக்கு வாசலின் காவலனும், செக்கனியாவின் மகனுமான செமாயா திருத்த வேலைகளைச் செய்தான். அவனுக்கு அடுத்ததாக செலேமியாவின் மகன் அனனியாவும், சாலாப்பின் ஆறாவது மகனான ஆனூனும் இன்னொரு பகுதியைத் திருத்திக் கட்டினார்கள். அவர்களுக்கு அடுத்ததாக பெரகியாவின் மகன் மெசுல்லாம் தனது இருப்பிடத்தின் எதிரே திருத்திக் கட்டினான். அவனுக்கு அடுத்து பொற்கொல்லரில் ஒருவனான மல்கியா, ஆய்வு வாசலுக்கு எதிரேயுள்ள ஆலய பணியாட்கள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் வரைக்கும் மூலைக்கு மேலுள்ள அறையின் பகுதியையும் திருத்திக் கட்டினான். மூலையிலுள்ள மேல்மண்டபத்துக்கும் செம்மறியாட்டு வாசலுக்கும் இடையிலுள்ள பகுதியை பொற்கொல்லரும் வர்த்தகரும் திருத்திக் கட்டினார்கள். திருத்திக் கட்டுதலுக்கு எதிர்ப்பு நாங்கள் திரும்பவும் மதிலைக் கட்டத் தொடங்கியதை சன்பல்லாத் கேள்விப்பட்டபோது, கோபங்கொண்டு, கடும் சீற்றமடைந்தான். அவன் யூதரை அவமதித்து, தன்னுடைய கூட்டாளிகளுக்கும் சமாரிய இராணுவத்திற்கும் முன்பாக, “பலவீனமான இந்த யூதர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் மதிலைத் திரும்பவும் கட்டுவார்களோ? அவர்கள் பலிகளைச் செலுத்துவார்களோ? ஒரே நாளில் முடித்து விடுவார்களோ? இடிபாட்டுக் குவியல்களில் கருகிப்போன கற்களைத் திரும்பவும் உயிர்ப்பிப்பார்களோ?” என்றான். சன்பல்லாத்தின் அருகே நின்ற அம்மோனியனான தொபியா, “அவர்கள் என்ன கட்டுகிறார்கள்? அதற்கு மேலாக ஒரு நரி ஏறினாலும்கூட அவர்களின் கல்மதில் உடைந்துவிடும்” என்று கூறினான். எங்கள் இறைவனே, எங்களுக்குச் செவிகொடும்; ஏனெனில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். அவர்களின் ஏளனங்களை அவர்கள் தலைமீதே திருப்பிவிடும். அவர்களை சிறைப்பிடிக்கும் ஒரு நாட்டுக்குக் கொள்ளைப்பொருளாக ஒப்புக்கொடும். அவர்களுடைய குற்றத்தை மூடாதிரும்; உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றி விடாதிரும்; ஏனெனில் கட்டுபவர்களை முகத்துக்கு முன்பாகவே மனவேதனை உண்டாகும்படி செய்தார்களே. மக்கள் முழு இருதயத்துடன் வேலைசெய்தபடியால் நாங்கள் மதிலை அதன் பாதி உயரத்திற்குக் கட்டி முடித்தோம். ஆனால் எருசலேம் மதிலின் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், அதன் பிளவுகள் திருத்தப்படுகின்றன என்றும் சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர் ஆகியோர் கேள்விப்பட்டபோது கோபம் கொண்டார்கள். எருசலேமுக்கு விரோதமாக வந்து சண்டையிடவும், அதற்கு எதிராகக் கலகம் உண்டுபண்ணவும் அவர்கள் ஒன்றுகூடி சதி செய்தார்கள். ஆனால் நாங்களோ எங்கள் இறைவனிடம் ஜெபம்பண்ணி, இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரவும் பகலும் ஒரு காவலை ஏற்படுத்தினோம். இதற்கிடையில் யூதாவின் மக்களோ, “வேலையாட்களின் பெலன் குறைந்திருக்கிறது, இடிபாட்டுக் குவியலோ அதிகமாயிருக்கிறது; அதனால் மதிலைக் கட்ட எங்களால் முடியாது” என்றார்கள். அதேவேளையில் எங்கள் பகைவர்கள், “அவர்கள் எங்கள் திட்டத்தை அறியவோ, எங்களைக் காணவோ முன்பதாக நாங்கள் அவர்களுக்குள்ளே இருந்து அவர்களைக் கொன்று அந்த வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார்கள். அந்த வார்த்தைகளை எங்கள் பகைவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் கேள்விப்பட்டு, எங்களிடம் வந்து, “நீங்கள் எங்கு திரும்பினாலும் அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று கிட்டத்தட்ட பத்து தடவைகள் சொன்னார்கள். அதனால் நான்: மதிலின் பின்னே மிகத் தாழ்வான இடங்களில் திறந்தவெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள்கள், ஈட்டிகள், வில்லுகள் ஆகியவற்றுடன் காவல் செய்யும்படி நிறுத்தி வைத்தேன். அப்பொழுது ஏற்பட்டிருந்த சூழ்நிலையைக் கண்ட நான் எழுந்து நின்று, உயர்குடி மனிதர்களிடமும், அதிகாரிகளிடமும், மீதியாயிருந்த மக்களிடமும், “அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். மகத்துவமுள்ளவரும், பயபக்திக்குரியவருமாயிருக்கிற யெகோவாவை நினைத்து, உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவிகள் ஆகியோருக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் போராடுங்கள்” என்றேன். எங்கள் பகைவர்களின் திட்டம் எங்களுக்குத் தெரியவந்ததென்றும், இறைவன் அதை முறியடித்துவிட்டார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள்; நாங்களோ யாவரும் மீண்டும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம். அன்றிலிருந்து எனது வேலைக்காரர்களில் பாதிப்பேர் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், மற்ற பாதிப்பேர் காவல் செய்யும்படி ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள், கவசம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகளோ யூதா நாட்டு மக்களுக்குப் பின்னாக நின்று மேற்பார்வையிட்டனர். கட்டடப் பொருட்களைத் தூக்குபவர்கள் ஒரு கையால் வேலைசெய்தார்கள். ஆனால் மற்றக் கையில் ஆயுதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்களில் ஒவ்வொருவனும் தான் வேலை செய்கையில் தனது இடுப்பில் வாளை சொருகியிருந்தான். தேவையானபோது எச்சரிக்கை செய்வதற்கு, எக்காளம் ஊதுகிறவர்கள் என்னோடு நின்றார்கள். அப்பொழுது நான் உயர்குடி மக்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற மக்களிடமும், “எங்கள் வேலை பெரிதும் விசாலமானதாய் இருக்கிறது, நாங்களும் சுவர் நெடுகிலும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் பிரிந்திருக்கிறோம். நீங்கள் எங்கே எக்காள சத்தத்தைக் கேட்டாலும், அங்கே எங்களுடன் வந்துசேருங்கள். நம்முடைய இறைவன் நமக்காக யுத்தம் செய்வார்” என்று கூறினேன். அதன்படி அதிகாலை வெளிச்சத்திலிருந்து நட்சத்திரங்கள் வானில் தோன்றும்வரை எங்களில் பாதிப்பேர் ஈட்டியைப் பிடித்தவர்களாக நிற்க, நாங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தோம். மேலும் நான் மக்களிடம், “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உதவியாளனும் எருசலேமுக்குள்ளேயே இரவைக் கழிக்கும்படி செய்யுங்கள்; அப்பொழுது அவர்கள் இரவில் காவலர்களாகவும், பகலில் வேலையாட்களாகவும் நமக்கு வேலை செய்யலாம்” என்றேன். அப்படியே நானோ, என்னுடன் இருந்த சகோதரரோ, எனது மனிதரோ, எனது காவலரோ எங்கள் உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவனும் தண்ணீருக்கு போனபோதும்கூட, எங்கள் வலதுகையில் ஆயுதம் தாங்கியபடியே இருந்தோம். நெகேமியா ஏழைகளுக்கு உதவுதல் அப்பொழுது அநேகரும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் யூத சகோதரருக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பினார்கள். சிலர், “நாங்களும், எங்கள் மகன்களும், மகள்களும் அநேகராயிருக்கிறோம், நாங்கள் சாப்பிட்டு உயிருடன் வாழ்வதற்குத் தானியம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்கள். மற்றவர்களோ, “பஞ்சத்தில் தானியம் பெறுவதற்காக எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானமாக வைத்திருக்கிறோம்” என்றார்கள். வேறுசிலர், “எங்கள் வயல்களுக்கும், திராட்சைத் தோட்டங்களுக்குமான அரச வரியை செலுத்துவதற்குப் போதிய பணத்தை நாங்கள் கடனாகவே பெற்றோம். நாங்கள் எங்கள் நாட்டவரைப் போலவே ஒரே சதையும், இரத்தமும் உடையவர்களாயிருக்கிறோம்; அவர்களுடைய மகன்களைப்போலவே எங்கள் மகன்களும் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும் எங்கள் மகன்களையும், மகள்களையும் அடிமைகளாக்க வேண்டியுள்ளோம். எங்கள் மகள்களில் சிலர் அடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; எங்கள் வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்களின் கைவசமானபடியால், அவர்களை மீட்க எங்களால் முடியாதிருக்கிறோம்” என்றார்கள். இவர்களுடைய கூக்குரலையும், குற்றச்சாட்டுகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபமடைந்தேன். நான் இவற்றை எனக்குள் சிறிது யோசித்துப் பார்த்தபின், உயர்குடி மனிதர், அதிகாரிகள் ஆகியோர்களையும் குற்றப்படுத்தினேன். “உங்கள் சொந்த நாட்டவரிடமிருந்தே நீங்கள் வட்டியை வற்புறுத்தி வாங்குகிறீர்கள்” என்று சொன்னேன். அப்படியே நான் அவர்களுக்கெதிராக ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு பெரிய கூட்டத்தை ஒன்றுகூடிவரச் செய்தேன். நான் அவர்களிடம், “அந்நிய தேசத்தாருக்கு விற்கப்பட்டிருந்த நமது சகோதரரான யூத மக்களை எங்களால் முடிந்த அளவுக்கு விடுவித்திருக்கிறோம். அப்படியிருக்க இப்பொழுது திரும்பவும் நீங்கள் அவர்களை விற்கிறீர்கள்; அதனால் நாங்கள் அவர்களைத் திரும்பவும் வாங்க வேண்டியிருக்கிறது!” என்று கூறியபோது அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். எனவே நான் தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் செய்வது சரியானது அல்ல. நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்காதபடி, நீங்கள் நமது இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமல்லவா? நானும் என் சகோதரர்களும், என் மனிதரும்கூட இந்த மக்களுக்குப் பணத்தையும், தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வற்புறுத்தி வட்டி வாங்குவதை நிறுத்திவிடுங்கள்! நீங்கள் அவர்களிடம் அவர்களுடைய வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும் உடனே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; அத்துடன் நீங்கள் கொடுத்த பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் நூற்றில் ஒரு பங்காக வாங்கும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னேன். அப்பொழுது அவர்கள், “நாங்கள் அவற்றைத் திருப்பிக் கொடுப்போம், அவர்களிடமிருந்து எதையும் நாங்கள் வற்புறுத்தி வாங்கவும் மாட்டோம். நீர் சொல்வதன்படியே செய்வோம்” என்றார்கள். உடனே நான் ஆசாரியர்களை அழைப்பித்து உயர்குடி மனிதரும், அதிகாரிகளும் தாங்கள் வாக்களித்தபடி செய்யவேண்டுமென்று சொல்லி, ஆணையிடும்படி செய்தேன். மேலும் நான் எனது ஆடையின் மடிப்புகளை உதறி, அவர்களிடம், “இப்போது செய்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பவனின் வீட்டையும், உடைமைகளையும் இறைவன் இவ்விதமாகவே உதறிப்போடுவாராக. அப்படிப்பட்ட மனிதன் உதறிப்போடப்பட்டு வெறுமையாக்கப்படுவானாக!” என்றேன். அதைக்கேட்ட மக்கள் கூட்டமும், “ஆமென்” என்று கூறி யெகோவாவைத் துதித்தார்கள். மக்கள் தாங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்தார்கள். மேலும் அர்தசஷ்டா அரசனின் இருபதாம் வருட ஆட்சியில் யூதா நாட்டிற்கு நான் ஆளுநனாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, அர்தசஷ்டாவின் முப்பத்தி இரண்டாம் வருடம்வரை பன்னிரண்டு வருடங்களுக்கு நானோ, என் சகோதரர்களோ ஆளுநர்களுக்கான உணவைச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தி, அவர்களிடமிருந்து நாற்பது சேக்கல் வெள்ளிப் பணத்தையும், அத்துடன் உணவையும், திராட்சை இரசத்தையும் வாங்கிவந்தார்கள். அவர்களுடைய உதவியாளர்களும்கூட அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் நானோ இறைவனுக்குப் பயந்ததினால் அவ்விதம் நடக்கவில்லை. நான் இந்த மதில் வேலைக்கு என்னை அர்ப்பணித்திருந்தேன். எனது வேலைக்காரர்கள் எல்லோரும் அந்த வேலைக்காக அங்கு கூடியிருந்தார்கள்; நாங்கள் எந்த நிலத்தையும் எங்களுக்குச் சொந்தமாக்கவில்லை. மேலும் நூற்றைம்பது யூதர்களும், அதிகாரிகளும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். அத்துடன் சுற்றுப்புற நாடுகளிலிருந்து எங்களிடம் வந்தவர்களும் சாப்பிட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மாடும், ஆறு சிறந்த செம்மறியாடுகளும், சில பறவைகளும் சமைக்கப்பட்டன. பத்து நாட்களுக்கு ஒருமுறை பெருமளவிலான பலரக திராட்சை இரசமும் கொண்டுவரப்பட்டன. இவ்வாறான செலவுகள் ஏற்பட்டபோதும், ஏற்கெனவே மக்கள் மிகுந்த கஷ்டம் அனுபவித்துக் கொண்டிருந்தபடியால், ஆளுநனுக்கு வரவேண்டிய உணவை நான் மக்களிடமிருந்து வற்புறுத்திக் கேட்கவில்லை. “என் இறைவனே, இந்த மக்களுக்காக நான் செய்த எல்லாவற்றையும் நினைத்து, எனக்கு நன்மை செய்யும்” என்றேன். தொடர்ந்து கட்டட வேலைக்கு எதிர்ப்பு நான் மதிலைத் திரும்பவும் கட்டினேன் என்றும், அதில் ஒரு இடைவெளியும் எஞ்சியிருக்கவில்லை என்றும் சன்பல்லாத், தொபியா, அரபியனான கேஷேம் ஆகியோருக்கும், எங்கள் மற்ற பகைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் அந்த வேளையில் இன்னும் வாசலின் கதவுகளை நான் பொருத்தவில்லை. சன்பல்லாத்தும், கேஷேமும், “வாரும், ஓனோ நிலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றில் சந்திப்போம்” என்று எனக்குச் செய்தி அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் எனக்குத் தீமை செய்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் ஆட்களை அனுப்பி, “நான் ஒரு பெரிய வேலைத்திட்டத்தை செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால் நான் வரமுடியாது. நான் அந்த வேலையைவிட்டு உங்களிடம் வருவதால், என் வேலை ஏன் தடையாக வேண்டும்” என்று சொல்லி அனுப்பினேன். இதேவிதமாக நான்கு முறைகள் அவர்கள் செய்தி அனுப்பினார்கள். நானும் ஒவ்வொரு தடவையும் அதே பதிலை மீண்டும் கொடுத்தனுப்பினேன். சன்பல்லாத்து ஐந்தாம் முறையும் அதே செய்தியுடன் தன் வேலைக்காரனை என்னிடம் அனுப்பினான். அவனுடைய கையில் முத்திரையிடப்படாத கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில், “நீயும் யூதர்களும் கலகம் உண்டாக்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனாலேயே நீங்கள் மதிலைக் கட்டுகிறீர்கள் என்ற செய்தி மற்ற மக்களுள் பரவுகிறது. கேசேமும் அவ்வாறே சொல்கிறான். மேலும் இந்த அறிக்கைகளின்படி நீர் அவர்களுக்கு அரசனாகப் போகிறீர். உம்மைக் குறித்து இதை பிரசித்தப்படுத்தும்படி, எருசலேமின் இறைவாக்கு உரைப்போரையும் நியமித்திருக்கிறீர். ‘யூதாவில் ஒரு அரசன் இருக்கிறார்!’ என்ற செய்தி அரசனுக்கு அறிவிக்கப்படும். ஆகையால் நீர் வாரும், நாம் ஒன்றுகூடி ஆலோசிப்போம்” என்று எழுதியிருந்தது. அதற்கு நான், “நீர் சொல்வதன்படி ஒன்றும் நடக்கவில்லை; இது உம்முடைய வெறும் கற்பனையே” என்று பதில் சொல்லி அனுப்பினேன். அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்த நினைத்திருந்தார்கள். எங்களுடைய கைகள் வேலைசெய்ய முடியாதபடி சோர்ந்து போய்விடும், ஒருநாளும் இவ்வேலை முற்றுப் பெறமாட்டாது என்று நினைத்தார்கள். ஆனாலும் நானோ, “என் கைகளைப் பலப்படுத்தும்” என்று மன்றாடினேன். மெகதாபெயேலின் மகனான தெலாயாவின் மகனும், தன்னுடைய வீட்டில் அடைக்கப்பட்டவனுமான செமாயாவின் வீட்டுக்கு நான் ஒரு நாள் போனேன். அவன் என்னிடம், “ஆலயத்தினுள்ளே இறைவனுடைய வீட்டில் சந்திப்போம். ஆலயத்தின் கதவுகளை மூடுவோம். ஏனெனில் உம்மைக் கொல்ல மனிதர் வருகிறார்கள். உம்மைக் கொல்வதற்காக அவர்கள் இரவில் வருகிறார்கள்” என்றான். நான் அதற்குப் பதிலாக, “என்னைப்போன்ற ஒரு மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்ற ஒருவன் தன் உயிரைக் காப்பாற்ற ஆலயத்திற்குள் போகவேண்டுமோ? நான் போகமாட்டேன்” என்றேன். மேலும் இறைவன் இவனை அனுப்பவில்லையெனவும், தொபியாவும், சன்பல்லாத்தும் அவனை கூலிக்காக அமர்த்தியபடியாலேயே அவன் எனக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் கூறினான் எனவும் நான் உணர்ந்தேன். நான் இதைச் செய்வதனால் பாவம் செய்யும்படியும், அதனால் அவர்கள் எனக்கு ஒரு கெட்டபெயரை உண்டாக்கி, என்னை அவமானப்படுத்தி, என்னைப் பயமுறுத்துவதற்காகவுமே அவன் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தான். “இறைவனே, தொபியாவும், சன்பல்லாத்தும் எனக்குச் செய்தவற்றிற்காக அவர்களை நினைவில்கொள்ளும். அத்துடன் பெண் இறைவாக்கினரான நொவதியாவையும், என்னைப் பயமுறுத்த முயற்சித்த மற்ற இறைவாக்கினர்களையும் நினைவில்கொள்ளும்.” எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, ஐம்பத்திரண்டு நாட்களில் மதில் கட்டப்பட்டு முடிந்தது. மதில் கட்டிமுடிக்கப்படல் இதைப்பற்றி எங்கள் பகைவர்கள் அனைவரும் கேள்விப்பட்டார்கள். எங்கள் இறைவனின் உதவியினாலேயே இந்த வேலைசெய்து முடிக்கப்பட்டது என எங்களைச் சுற்றியிருந்த யூதரல்லாதவர்களும் உணர்ந்ததினால் பயமடைந்து தங்கள் சுயநம்பிக்கையை இழந்தார்கள். மேலும் இந்த நாட்களில் யூதாவின் உயர்குடி மக்களிடமிருந்து தொபியாவுக்குப் பல கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. தொபியாவிடமிருந்தும், அவர்களுக்குப் பதில்கள் போய்க் கொண்டிருந்தன. தொபியா ஆராகின் மகன் செகனியாவுக்கு மருமகனாக இருந்ததாலும், தொபியாவின் மகன் யோகனான், பெரகியாவின் மகன் மெசுல்லாமின் மகளைத் திருமணம் செய்திருந்ததினாலும் யூதாவிலுள்ள அநேகர் அவனுடைய ஆணைக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். அவர்கள் என்முன் தொபியாவின் நற்செயல்களைப்பற்றி எனக்கு அறிவித்ததுடன் நான் சொல்பவற்றையும் அவனுக்கு போய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தொபியாவும் பயமுறுத்தும் கடிதங்களை எனக்கு அனுப்பினான். மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள். எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான். நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன். திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல் இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை. அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே: பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும் செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்: பாரோஷின் சந்ததி 2,172 பேர், செபத்தியாவின் சந்ததி 372 பேர், ஆராகின் சந்ததி 652 பேர், யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர், ஏலாமின் சந்ததி 1,254 பேர், சத்தூவின் சந்ததி 845 பேர், சக்காயின் சந்ததி 760 பேர், பின்னூயியின் சந்ததி 648 பேர், பெபாயின் சந்ததி 628 பேர், அஸ்காதின் சந்ததி 2,322 பேர், அதோனிகாமின் சந்ததி 667 பேர், பிக்வாயின் சந்ததி 2,067 பேர், ஆதீனின் சந்ததி 655 பேர், எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர், ஆசூமின் சந்ததி 328 பேர், பேஸாயின் சந்ததி 324 பேர், ஆரீப்பின் சந்ததி 112 பேர், கிபியோனின் சந்ததி 95 பேர். பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர், ஆனதோத்தின் மனிதர் 128 பேர், பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர், கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர், ராமா, கேபாவின் மனிதர் 621 பேர், மிக்மாஸின் மனிதர் 122 பேர், பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர், மற்ற நேபோவின் மனிதர் 52 பேர், மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர், ஆரீமின் மனிதர் 320 பேர், எரிகோவின் மனிதர் 345 பேர், லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர், செனாகாவின் மனிதர் 3,930 பேர். ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர், இம்மேரின் சந்ததி 1,052 பேர், பஸ்கூரின் சந்ததி 1,247 பேர், ஆரீமின் சந்ததி 1,017 பேர். லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர். பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர். வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர். ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத், கேரோசு, சீயா, பாதோன், லெபானா, அகாபா, சல்மாயி, ஆனான், கித்தேல், காகார், ரயாயா, ரேசீன், நெக்கோதா, காசாம், ஊசா, பாசெயா, பேசாய், மெயூனீம், நெபுசீம், பக்பூக், அகுபா, அர்கூர், பஸ்லுத், மெகிதா, அர்ஷா, பர்கோஸ், சிசெரா, தேமா, நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள். சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா, யாலா, தர்கோன், கித்தேல், செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள். ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர். பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை. அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர். ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான். இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன்7:65 யாத். 28:30. எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான். எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர். 7:68 சில மூலப்பிரதிகளில் இந்த வசனம் இல்லை, எஸ்றா 2:66.மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன. குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும்7:70 அதாவது, சுமார் 8.4 கிலோகிராம் தங்கம், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும்7:71 அதாவது, சுமார் 170 கிலோகிராம் தங்கம், 2,200 மினா வெள்ளியையும்7:71 அதாவது, சுமார் 1,200 கிலோகிராம் வெள்ளி கொடுத்தார்கள். மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா7:72 அதாவது, சுமார் 1,100 கிலோகிராம் வெள்ளி வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள். ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். எஸ்றா சட்டத்தைப் படிக்கிறார் ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது, எல்லா மக்களும் தண்ணீர் வாசலின் முன்னேயுள்ள சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். யெகோவா இஸ்ரயேலருக்கென கட்டளையிட்டிருந்த மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி சட்ட ஆசிரியர் எஸ்றாவிடம் கூறினார்கள். எனவே ஏழாம் மாதம் முதலாம் நாளில், ஆண்களும் பெண்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய எல்லோரும் கூடியிருந்த சபைக்குமுன் மோசேயின் சட்ட புத்தகத்தை ஆசாரியன் எஸ்றா கொண்டுவந்தான். எஸ்றா தண்ணீர் வாசலின் முன்னால் இருந்த சதுக்கத்தைப் பார்த்தபடி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளங்கிக்கொள்ள ஆற்றலுள்ளவர்களுக்கு, அதிகாலையிலிருந்து நண்பகல்வரை மோசேயின் சட்டப் புத்தகத்தைச் சத்தமாக வாசித்தான்; எல்லா மக்களும் அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள். எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். அவன் அவர்களைவிட உயரத்தில் நின்றபடியால், எல்லா மக்களுக்கும் அவனைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் புத்தகத்தைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்றா மேன்மையுள்ள இறைவனாகிய யெகோவாவைத் துதித்தான்; மக்கள் யாவரும் தங்கள் கைகளை உயர்த்தி, “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பின்பு அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து யெகோவாவை வழிபட்டார்கள். மக்கள் அங்கு நின்றுகொண்டிருக்கையில், லேவியர்களான யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கெலித்தா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர் அவர்களுக்கு சட்டத்திலிருந்து அறிவுறுத்தினார்கள். அவர்கள் இறைவனுடைய சட்டப் புத்தகத்தை வாசித்து அதில் உள்ளவற்றை மக்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக தெளிவுபடுத்தினார்கள். அதனால் எல்லா மக்களும் அதை விளங்கிக்கொண்டனர். எல்லா மனிதரும் இறைவனுடைய சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதார்கள். அதனால் ஆளுநரான நெகேமியாவும், ஆசாரியனும், சட்ட ஆசிரியருமான எஸ்றாவும், மக்களுக்குக் போதித்துக்கொண்டிருந்த லேவியர்களும் எல்லா மக்களிடமும், “இந்த நாள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஆகவே நீங்கள் துக்கப்படவோ, அழவோ வேண்டாம்” என்றார்கள். நெகேமியா அவர்களிடம், “நீங்கள் சிறந்த உணவைச் சாப்பிட்டு, இனிய இரசத்தைக் குடித்து மகிழ்ந்திருங்கள். தங்களுக்கென்று ஒன்றும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், அவற்றில் கொஞ்சத்தை அனுப்புங்கள். ஏனென்றால் இந்த நாள் நம்முடைய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். நீங்கள் துக்கப்படவேண்டாம், யெகோவா கொடுக்கும் மகிழ்ச்சியே உங்கள் பெலன்” என்றான். அப்படியே லேவியரும், “அமைதியாயிருங்கள், இந்நாள் பரிசுத்தமானது. துக்கமாயிருக்க வேண்டாம்” என்று சொல்லி எல்லா மக்களையும் ஆறுதல்படுத்தினார்கள். அதன்பின்பு எல்லா மக்களும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகளை நன்கு விளங்கிக்கொண்டபடியினால், தாங்கள் சாப்பிட்டுக் குடிப்பதற்கும், தேவைப்பட்டவர்களுக்கு உணவுப் பங்குகளை அனுப்புவதற்கும், சந்தோஷத்துடன் கொண்டாடுவதற்கும் போனார்கள். அதே மாதத்தின் இரண்டாம் நாளில் எல்லா குடும்பங்களிலுமுள்ள தலைவர்களும் ஆசாரியருடனும், லேவியருடனும் ஒன்றுசேர்ந்து சட்டத்தின் வார்த்தைகளைக் கவனமாய் கேட்கும்படி, சட்ட ஆசிரியர் எஸ்றாவைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். ஏழாம் மாதத்தின் பண்டிகையைக் கொண்டாடும்போது, இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களிலேயே வாழவேண்டும் என்று மோசேயைக் கொண்டு யெகோவா கட்டளையிட்டிருந்ததாக சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்8:14 லேவி. 23:33-36; உபா. 16:13-15. அத்துடன் எழுதியிருக்கிறபடி மக்கள் மலைநாட்டிற்குப் போய் ஒலிவமரம், காட்டொலிவமரம், மிருதுச்செடி, பேரீட்சைமரம், அத்திமரம் ஆகியவற்றின் மரக்கொப்புகளை எடுக்கவேண்டும் எனவும், அவற்றினால் கூடாரங்களை அமைக்கும்படி எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் எனவும் அறிந்துகொண்டார்கள். மக்கள் வெளியே போய், மரக்கொப்புகளைக் கொண்டுவந்து அவற்றினால் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்; அவர்கள் வீட்டுக் கூரைகளின்மேலும், வீட்டு முற்றங்களிலும், இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், தண்ணீர்வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும், எப்பிராயீம் வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள். நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த மக்கள் கூட்டம் முழுவதும் கூடாரங்களைக் கட்டி அங்கே வாழ்ந்தார்கள். நூனின் மகன் யோசுவாவின் நாட்களிலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதமாகப் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இப்போதோ அவர்களுடைய மகிழ்ச்சி மிக அதிகமாயிருந்தது. முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை ஒவ்வொரு நாளும் இறைவனின் சட்டப் புத்தகத்திலிருந்து எஸ்றா வாசித்தான். ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். எட்டாம் நாளில் சட்ட ஒழுங்குவிதியின்படி எல்லோரும் சபைகூடினார்கள். இஸ்ரயேலர் பாவங்களை அறிக்கையிடல் இஸ்ரயேல் மக்கள் அதே மாதமாகிய ஏழாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், உபவாசித்துத் துக்கவுடை உடுத்தித் தங்கள் தலைகளில் புழுதியைப் போட்டுக்கொண்டு, ஒன்றுகூடி வந்தார்கள். இஸ்ரயேலரின் சந்ததிகள் அந்நியரிலிருந்தும், தங்களை வேறுபிரித்துக் கொண்டார்கள். அவர்கள் எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முற்பிதாக்களின் கொடுமையையும் அறிக்கை செய்தார்கள். அவர்கள் தாங்கள் நின்ற இடங்களிலேயே நின்றபடி, ஒரு நாளில் கால்பங்கு நேரத்திற்கு தங்கள் இறைவனாகிய யெகோவாவின் சட்டப் புத்தகத்திலிருந்து வாசித்தார்கள். இன்னுமொரு கால்பங்கு நேரத்திற்குத் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுத் தங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபட்டார்கள். படிக்கட்டுகளில் யெசுவா, பானி, கத்மியேல், செபனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி ஆகிய லேவியர்கள் நின்று தங்கள் இறைவனாகிய யெகோவாவை நோக்கிப் பலத்த சத்தமாய் வழிபட்டார்கள். அதன்பின் லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் மக்களைப் பார்த்து, “நீங்கள் எழுந்து நின்று, நித்தியத்திலிருந்து நித்தியம்வரை இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் துதியுங்கள்” என்றார்கள். அப்பொழுது அவர்கள் எழுந்து நின்று சொன்னதாவது: “மகிமையுள்ள உமது பெயர் துதிக்கப்படுவதாக; அது எல்லா ஆசீர்வாதத்திற்கும், துதிக்கும் மேலாய் உயர்த்தப்படுவதாக. நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானங்களுக்கு மேலான வானங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும், பூமியையும், அதில் உள்ளவற்றையும், கடல்களையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். அவை யாவற்றுக்கும் நீரே உயிரையும் கொடுத்திருக்கிறீர். வானத்தின் சேனை யாவும் உம்மை வழிபடுகின்றன. “ஆபிராமைத் தெரிந்தெடுத்து, கல்தேயரின் தேசமாகிய ஊர் பட்டணத்திலிருந்து அவனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஆபிரகாம் என்ற பெயரைக் கொடுத்த இறைவனாகிய யெகோவா நீரே. அவனின் இருதயம் உமக்கு உண்மையாய் இருந்ததை நீர் கண்டீர். அதனால் கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோருடைய நாட்டை அவனுடைய சந்ததிகளுக்குக் கொடுப்பதாக அவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தீர். நீர் நீதியுள்ள இறைவனாயிருப்பதால் சொன்ன வாக்கை நிறைவேற்றினீர். “எங்கள் முற்பிதாக்கள் எகிப்தில் பட்ட வேதனையை நீர் பார்த்தீர்; செங்கடலில் அவர்கள் இட்ட கூக்குரலையும் கேட்டீர். பார்வோனும், அவனுடைய அதிகாரிகளும், அவனுடைய நாட்டின் எல்லா மக்களும் எங்கள் முற்பிதாக்களை மிக ஆணவத்துடன் நடத்தியதை நீர் அறிந்தீர். அவர்களுக்கெதிராக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, நீர் உமக்கே பெயரை உண்டாக்கினீர்; அது இன்றுவரைக்கும் நிலைத்திருக்கிறது. நீர் அவர்களின் முன் கடலைப் பிரித்தீர். எனவே அவர்கள் உலர்ந்த தரையில் நடந்துபோனார்கள். ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களை வெள்ளத்தினுள் ஒரு கல்லைப் போடுவதுபோல எறிந்து விட்டீர். பகலில் அவர்களை மேகத்தூணினாலும், இரவில் அவர்கள் போகவேண்டிய வழியில் வெளிச்சம் கொடுப்பதற்காக நெருப்புத்தூணினாலும் வழிநடத்தினீர். “நீர் சீனாய் மலையின்மேல் வந்து இறங்கினீர், நீர் வானத்திலிருந்து அவர்களுடன் பேசினீர். அவர்களுக்கு நீதியும் நியாயமுமான ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், நலமான விதிமுறைகளையும், கட்டளைகளையும் கொடுத்தீர். நீர் உமது பரிசுத்த ஓய்வுநாளையும், அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது அடியவனான மோசே மூலம் கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்களின் பசியைத் தீர்க்க வானத்திலிருந்து அப்பத்தைக் கொடுத்தீர், அவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு கற்பாறையிலிருந்து தண்ணீரையும் வரச்செய்தீர். மேலும் அவர்களுக்குக் கொடுப்பதாக நீர் உமது உயர்த்திய கரத்தினால் வாக்குப்பண்ணிய நாட்டிற்குப்போய், அதை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவர்களுக்குச் சொன்னீர். “ஆனால் எங்கள் முற்பிதாக்களான அவர்கள், அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்களாய் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் உமக்குச் செவிகொடுக்க மறுத்து, நீர் அவர்கள் நடுவில் நடப்பித்த அற்புதங்களையும் நினைவிற்கொள்ளத் தவறினார்கள். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாகி, கலகம்பண்ணி, தங்கள் அடிமைத்தன வாழ்விற்குத் திரும்பிப்போகும்படி ஒரு தலைவனையும் நியமித்தார்கள். ஆனாலும் நீர் மன்னிக்கிறவரும், கிருபையுள்ளவரும், கருணையுள்ளவரும், கோபிப்பதற்குத் தாமதிப்பவரும், நேர்மையான அன்பில் நிறைந்தவருமான இறைவனாயிருக்கிறீர். அதனால் அவர்களை நீர் கைவிடவில்லை. அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியின் உருவச்சிலையை வார்ப்பித்து, ‘எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த தெய்வம் இதுதான்’ என்று கூறி பயங்கரமான இறை நிந்தையைச் செய்தபோதுங்கூட நீர் அவர்களைக் கைவிடவில்லை. “உமது மிகுந்த கருணையினால் நீர் எங்கள் முற்பிதாக்களைப் பாலைவனத்தில் கைவிடவில்லை. பகலில் அவர்களை வழிநடத்திவந்த மேகத்தூணும் அவர்களுக்குப் பாதை காட்டாமல் விடவில்லை; இரவில் நெருப்புத்தூணும் அவர்கள் போகவேண்டிய பாதைக்கு வெளிச்சம் கொடுக்காமல் விடவில்லை. அவர்களை அறிவுறுத்தும்படி உமது நல்ல ஆவியானவரையும் கொடுத்தீர். அவர்களின் வாயிலிருந்து உமது மன்னாவையும் விலக்கவில்லை, தாகத்துக்குத் தண்ணீரையும் கொடுத்தீர். நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்தீர்; அவர்களுக்கு ஒன்றும் குறைவாய் இருக்கவில்லை. அவர்களின் உடைகள் பழைமையாகவுமில்லை, கால்கள் வீங்கவுமில்லை. “எங்கள் முற்பிதாக்களுக்கு அரசாட்சிகளையும், நாடுகளையும் கொடுத்து, மிகத் தூரமான எல்லைகளையும் பங்காக நியமித்தீர். அப்பொழுது அவர்கள் எஸ்போனின் அரசனான சீகோனின் நாட்டையும், பாசானின் அரசனான ஓகு என்பவனின் நாட்டையும் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள். அவர்களுடைய மகன்களை ஆகாயத்து நட்சத்திரங்களைப்போல் பெருகவும் செய்தீர். அத்துடன் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி நீர் சொன்ன நாட்டிற்கு அவர்களைக் கொண்டுவந்தீர். அவர்களுடைய பிள்ளைகள் அவ்வாறே போய், அந்த நாட்டை உரிமையாக்கிக்கொண்டார்கள். மேலும் அந்நாட்டில் வாழ்ந்த கானானியரை இவர்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினீர். உமது மக்கள் தாம் விரும்பியதைக் கானானியருக்குச் செய்யும்படியாக, கானானியரையும், அந்த நாட்டின் அரசரையும், அங்கு வாழ்ந்த மக்களையும் அவர்கள் கையிலே கொடுத்தீர். அப்பொழுது அவர்கள் அரண்களால் பாதுகாக்கப்பட்ட நகரங்களையும், செழிப்பான நாட்டையும் கைப்பற்றினார்கள். எல்லா விதமான நல்ல பொருட்களையும் உள்ளடக்கிய வீடுகள், தோண்டப்பட்ட கிணறுகள், திராட்சைத் தோட்டங்கள், ஒலிவத்தோப்புகள், பெருந்தொகையான பழமரங்கள் ஆகியவற்றையும் அவர்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள். இதனால் அவர்கள் திருப்தியாய்ச் சாப்பிட்டு, கொழுத்து, உமது மகத்தான நன்மையில் மகிழ்ந்தார்கள். “ஆயினும், எங்கள் முற்பிதாக்கள் உமக்குக் கீழ்ப்படியாமல் உமக்கு எதிராகக் கலகம் உண்டாக்கினார்கள்; உமது சட்டத்தையும் புறம்பே தள்ளிவிட்டார்கள். உம்மிடத்திற்கு மறுபடியும் திரும்பிவரும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினரையும் கொன்றுபோட்டார்கள்; பயங்கரமான அக்கிரமங்களைச் செய்வதில் அவர்கள் ஈடுபட்டார்கள். இதனால் அவர்களை ஒடுக்குகிறப் பகைவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தீர். ஆயினும் அவர்கள் ஒடுக்கப்பட்டபோது, உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள். நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது மிகுந்த இரக்கத்தினால் அவர்களுக்கு மீட்பர்களைக் கொடுத்தீர். அவர்கள் உம்முடைய மக்களைத் தங்கள் பகைவர்களின் கைகளிலிருந்து தப்புவித்தார்கள். “ஆனாலும் எங்கள் முற்பிதாக்களுக்கு அமைதியுண்டானபோது, திரும்பவும் உமது பார்வையில் தீமையையே செய்தார்கள். அப்பொழுது அவர்களை அவர்களின் பகைவர்களின் கைகளிலேயே விட்டீர், பகைவர்கள் அவர்களை ஆளுகை செய்தார்கள். அவர்கள் திரும்பவும் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் பரலோகத்திலிருந்து அவர்களுக்குச் செவிகொடுத்து, உம்முடைய பெரிதான இரக்கத்தின்படி திரும்பதிரும்ப விடுவித்தீர். “உமது சட்டத்தின்படி நடக்கத் திரும்பும்படி எச்சரித்தீர்; ஆனால் அவர்களோ, மிகவும் இறுமாப்பாய் நடந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். உமது விதிமுறைகளுக்கு ஒருவன் கீழ்ப்படிந்தால், அவன் வாழ்வைப் பெறுவான் என்பதை அறிந்தும், அவர்களோ உமது விதிமுறைகளுக்கு எதிராய் பாவம் செய்தார்கள். பிடிவாதமாய் அவர்கள் தங்கள் முதுகை உமக்குத் திருப்பி அடங்காதவர்களாய் உமக்குச் செவிசாய்க்காமல் போனார்கள். அவ்வாறிருந்தும் நீர் அநேக வருடங்களாக அவர்களுடன் பொறுமையாயிருந்தீர். உமது இறைவாக்கினரைக்கொண்டு உமது ஆவியானவரினால் அவர்களை எச்சரித்தீர். ஆயினும், அவர்கள் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை; ஆகையினால் அயலவர்களான மக்கள் கூட்டங்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர். நீர் உமது பெரிதான இரக்கத்தின் நிமித்தம் மீண்டும் அவர்களை முற்றுமாய் அழிக்கவோ, கைவிடவோ இல்லை; ஏனெனில் நீர் கிருபையும், இரக்கமுமுள்ள இறைவனாயிருக்கிறீர். “ஆகையினால் இப்பொழுதும் எங்கள் இறைவனே, வல்லமைமிக்கவரும், மகத்துவமும், பிரமிக்கத்தக்கவருமான இறைவனே, உமது அன்பின் உடன்படிக்கைகளைக் காக்கிறவரே, அசீரியா அரசனின் நாட்களிலிருந்து இன்றுவரை எங்கள்மேலும், எங்கள் அரசர்கள்மேலும், எங்கள் தலைவர்கள்மேலும், ஆசாரியர்கள்மேலும், இறைவாக்கினர்மேலும், எங்கள் முற்பிதாக்கள்மேலும், மற்றும் உமது எல்லா மக்கள்மேலும் வந்த இந்தத் துன்பங்களை உமது பார்வையில் அற்பமாய் எண்ணாமலிரும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவராய் இருந்தீர், நீர் உண்மையாக நடந்துகொண்டீர்; நாங்களோ தீமை செய்தோம். எங்கள் அரசர்களும், தலைவர்களும், ஆசாரியரும், முற்பிதாக்களும் உமது சட்டத்தைப் பின்பற்றவில்லை. நீர் அவர்களுக்குக் கொடுத்த எச்சரிக்கைகளையும் கட்டளைகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நீர் அவர்களுக்குக் கொடுத்த விசாலமும் செழிப்புமான நாட்டில், மிகுதியான நன்மைகளை அனுபவித்து, தங்கள் அரசில் இருந்தபோதுங்கூட அவர்கள் உமக்குப் பணிவிடை செய்யவில்லை; தங்கள் தீமையான வழிகளைவிட்டு விலகவுமில்லை. “ஆனால் பாரும், நீர் இந்த நாட்டை அதன் நல்ல பழங்களையும், அதன் நல்ல உற்பத்திப் பொருட்களையும் சாப்பிடும்படி எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தீர்; நீர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டில் நாங்கள் இன்று அடிமைகளாயிருக்கிறோம். எங்கள் பாவங்களின் காரணமாக, எங்கள் நிறைவான விளைச்சல், நீர் எங்கள்மேல் வைத்த அரசர்களுக்குப் போகிறது. அவர்கள் தாம் விரும்பியபடி எங்கள் உடல்கள்மேலும், எங்கள் மந்தைகள்மேலும் ஆளுகைசெய்கிறார்கள். இதனால் நாங்கள் பெரிய துன்பத்தில் இருக்கிறோம். மக்கள் செய்த ஒப்பந்தம் “இவை எல்லாவற்றின் நிமித்தமாகவும் ஒரு உறுதியான ஒப்பந்தம் செய்து அதை நாங்கள் எழுதி வைக்கிறோம். எங்கள் தலைவர்களும், லேவியரும், ஆசாரியரும் அதில் தங்கள் முத்திரைகளைப் பதித்திருக்கிறார்கள்.” முத்திரையிட்டவர்கள் யாரெனில்: அகலியாவின் மகனாகிய ஆளுநன் நெகேமியா. சிதேக்கியா, செராயா, அசரியா, எரேமியா, பஸ்கூர், அமரியா, மல்கியா, அத்தூஸ், செபனியா, மல்லூக், ஆரீம், மெரெமோத், ஒபதியா, தானியேல், கிநேதோன், பாரூக், மெசுல்லாம், அபியா, மியாமின், மாசியா, பில்காய், செமாயா என்கிற இவர்கள் ஆசாரியர்கள். அடுத்தது லேவியர்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல், அவர்களுடன் இணைந்தவர்கள்: செபனியா, ஒதியா, கெலித்தா, பெலாயா, ஆனான், மீகா, ரெகோப், அசபியா, சக்கூர், செரெபியா, செபனியா, ஒதியா, பானி, பெனினு என்பவர்கள் ஆவர். மக்களின் தலைவர்கள்: பாரோஷ், பாகாத் மோவாப், ஏலாம், சத்தூ, பானி, புன்னி, அஸ்காத், பெபாய், அதோனியா, பிக்வாய், ஆதீன், ஆதேர், எசேக்கியா, அசூர், ஒதியா, ஆசூம், பேஸாய், ஆரீப் ஆனதோத், நெபாய், மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், மெஷெசாபேல், சாதோக், யதுவா, பெலத்தியா, ஆனான், அனாயா, ஓசெயா, அனனியா, அசூபு, அலோகேஸ், பில்கா, சோபேக், ரேகூம், அசப்னா, மாசெயா, அகியா, கானான், ஆனான், மல்லூக், ஆரீம், பானா ஆகியோர். “இவர்களைவிட, ஒப்பந்தத்திற்கு உடன்பட்ட மீதியாயிருந்த மக்கள்: ஆசாரியர், லேவியர், வாசற்காவலர், பாடகர்கள், ஆலய பணியாட்கள், இறைவனுடைய சட்டத்தின்படி மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபிரித்துக் கொண்டவர்கள் எல்லோரும், அவர்களுடைய மனைவிகள், விளங்கிக்கொள்ளத்தக்க வயதுடைய அவர்களுடைய எல்லா மகன்கள், மகள்கள் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும், தங்களுடைய சகோதரரான உயர்குடி மக்களுடன் சேர்ந்து, இறைவனுடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுக்கப்பட்ட இறைவனின் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன் எங்கள் ஆண்டவராகிய யெகோவாவினுடைய எல்லாக் கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், ஒழுங்குவிதிகளுக்கும் கவனமாய்க் கீழ்ப்படிவதற்கு சாபத்தினாலும், ஆணையினாலும் தங்களை உடன்படுத்திக்கொள்கிறார்கள். “நாங்கள் எல்லோரும், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கவோ, எங்கள் மகன்களுக்கு அவர்கள் மகள்களை எடுக்கவோமாட்டோம் எனவும் வாக்குறுதி செய்கிறோம். “அயலிலுள்ள மக்கள் கூட்டங்கள் ஓய்வுநாளில் தங்கள் வியாபாரப் பொருட்களையோ, அல்லது தங்கள் தானியங்களையோ விற்பதற்காகக் கொண்டுவந்தால், அவர்களிடமிருந்து அதை நாங்கள் ஓய்வுநாளிலோ, எந்த பரிசுத்த நாளிலோ வாங்கமாட்டோம். அதைவிட ஏழு வருடங்களுக்கு ஒருமுறை எங்கள் நிலத்தை பண்படுத்தாமல் விட்டுவிடுவதுடன், கொடுத்த கடன்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடுவோம் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். “அத்துடன் ஒவ்வொரு வருடமும் எங்கள் இறைவனின் ஆலயத்தின் பணிக்கென, மூன்றில் ஒரு சேக்கல் பணத்தைக்10:32 அதாவது, சுமார் 4 கிராம் வெள்ளி கொடுப்பதற்கான கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அப்பணத்தை இறைசமுகத்தில் வைக்கப்படும் அப்பங்களுக்கும், ஒழுங்கான தானிய காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், ஓய்வுநாளுக்கும், அமாவாசை பண்டிகைகளுக்கும், நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்குமான காணிக்கைகளுக்கும், பரிசுத்த காணிக்கைகளுக்கும், இஸ்ரயேலருக்கான பாவநிவாரண காணிக்கைகளுக்கும் இறைவனின் ஆலய எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துவதற்குமாகக் கொடுப்போம். “ஆசாரியர்கள், லேவியர்கள், மக்கள் ஆகிய நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில், எப்பொழுது எங்கள் குடும்பங்கள் விறகைக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குச் சீட்டுப்போட்டோம். இந்த விறகை மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தில் எரிப்பதற்குக் கொடுப்போம். “அதைவிட எங்கள் விளைச்சலின் முதற்பலனையும், எல்லா மரங்களது முதற்பழங்களையும் வருடாவருடம் யெகோவாவினுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். “மேலும், மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி, எங்கள் இறைவனின் ஆலயத்தில் பணிசெய்யும் ஆசாரியர்களிடம், எங்கள் முதற்பேறான மகன்களையும், வளர்ப்பு மிருகங்கள், மாட்டு மந்தை ஆட்டு மந்தைகளின் தலையீற்றுகளையும் கொண்டுவருவோம். “அத்துடன் எங்கள் இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்திற்கு நாங்கள் அரைத்தமாவின் முதற்பங்கையும், எங்கள் முதல் தானிய காணிக்கைகளையும், எல்லா மரங்களின் பழங்கள், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பங்கையும் ஆசாரியர்களிடம் கொண்டுவருவோம். நாங்கள் வேலைசெய்யும் பட்டணங்களில் லேவியரே பத்திலொரு பங்கைச் சேர்க்கிறவர்களாகையால், எங்களுடைய விளைச்சலின் பத்திலொரு பங்கை நாங்கள் லேவியரிடம் கொண்டுவருவோம். லேவியர் தசமபாகத்தை வாங்கும்போது, ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியன் ஒருவர் லேவியருடன் இருக்கட்டும்; லேவியர் அதிலே பத்திலொரு பங்கை இறைவனுடைய ஆலயத்தில் இருக்கும் கருவூலத்திற்குக் கொண்டுவரட்டும். லேவியர்கள் உட்பட இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் காணிக்கைகளாகிய தானியங்களையும், புதுத் திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் களஞ்சிய அறைகளுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த அறைகள் பரிசுத்த இடத்தின் பொருட்கள் வைக்கப்படுகிறதும், பணிசெய்யும் ஆசாரியர்கள், வாசற்காவலர், பாடகர் தங்குகிறதுமான அறைகள். “எனவே நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தை அலட்சியம் செய்யமாட்டோம்” என்றார்கள். எருசலேமின் புது குடியிருப்பாளர் இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். மிகுதியான மக்களில் பத்துப் பேருக்கு ஒருவரை பரிசுத்த நகரமாகிய எருசலேமில் போய் குடியிருக்கப்பண்ண சீட்டுப்போட்டார்கள். மிகுதியான ஒன்பதுபேரும் தங்கள் பட்டணங்களில் தங்கி இருந்தனர். எருசலேமில் போய்த் தங்குவதற்கு முன்வந்தவர்களை எல்லா மக்களும் வாழ்த்தினார்கள். எருசலேமில் குடியமர்ந்த மாகாணத் தலைவர்களின் பெயர்கள்: ஆயினும் இஸ்ரயேலரிலும், ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், ஆலய பணியாட்களிலும், சாலொமோனின் வேலையாட்களின் வழித்தோன்றல்களிலும் உள்ள பலர் யூதாவிலுள்ள பல்வேறுபட்ட பட்டணங்களிலுள்ள தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் யூதாவையும், பென்யமீனையும் சேர்ந்த மற்ற மக்களில் சிலர் எருசலேமில் வாழ்ந்தார்கள். எருசலேமில் குடியமர்ந்த யூதாவின் வழிவந்த தலைவர்கள் யாரெனில், அத்தாயா உசியாவின் மகன், உசியா சகரியாவின் மகன், சகரியா அமரியாவின் மகன், அமரியா செபதியாவின் மகன், செபதியா மகலாலெயேலின் மகன், மகலாலேல் பேரேஸின் சந்ததிகளுள் ஒருவன். அடுத்து மாசெயா பாரூக்கின் மகன், பாரூக் கொல்லோசேயின் மகன், கொல்லோசே அசாயாவின் மகன், அசாயா அதாயாவின் மகன், அதாயா யோயாரிபின் மகன், யோயாரிபு சகரியாவின் மகன், சகரியா சீலோனின் வழித்தோன்றலில் ஒருவன். எருசலேமில் வாழ்ந்த பேரேஸின் சந்ததிகள் யாவரும் மொத்தமாக நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாயிருந்தனர். பென்யமீன் வழித்தோன்றலில் வந்த தலைவர்கள்: சல்லு மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் யோயேதின் மகன், யோயேது பெதாயாவின் மகன், பெதாயா கோலாயாவின் மகன், கோலாயா மாசெயாவின் மகன், மாசெயா இதியேலின் மகன், இதியேல் எஷாயாவின் மகன், அவனைப் பின்பற்றியவர்களான கப்பாய், சல்லாய் என்போருடன் மொத்தம் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர். சிக்ரியின் மகனான யோயேல் அவர்களின் தலைமை அதிகாரியாய் இருந்தான். அசெனுவாவின் மகன் யூதா பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்திற்குப் பொறுப்பாயிருந்தான். ஆசாரியர்களை சேர்ந்தவர்கள்: யெதாயா யோயாரிபின் மகன், யாகின், இறைவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனான செராயா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக்கு மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன். ஆலய வேலையைச் செய்ய இவர்களது உடன்வேலையாட்களுடன் எல்லாமாக எண்ணூற்று இருபத்திரண்டுபேர் இருந்தனர். அதாயா இவன் எரோகாமின் மகன், எரோகாம் பெலலியாவின் மகன், பெல்லியா அம்சியின் மகன், அம்சி சகரியாவின் மகன், சகரியா பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். குடும்பத் தலைவர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக இருநூற்று நாற்பத்திரண்டுபேர் இருந்தார்கள்; அமாசாய் அசரெயேலின் மகன், அசரெயேல் அகசாயின் மகன், அகசாய் மெசில்லேமோத்தின் மகன், மெசில்லேமோத் இம்மேரின் மகன். வலிய மனிதர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக நூற்று இருபத்தெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களுடைய தலைமை அதிகாரியாக அகெதோலிமின் மகன் சப்தியேல் இருந்தான். லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூபு அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் அசபியாவின் மகன், அசபியா புன்னியின் மகன். இறைவனுடைய ஆலயத்தின் வெளிப்புற வேலைகளுக்கு லேவியர்களுக்குத் தலைவர்களான சபெதாயும், யோசபாத்தும் பொறுப்பாயிருந்தார்கள். மத்தனியா இவன் மீகாவின் மகன், மீகா சப்தியின் மகன், சப்தி ஆசாபின் மகன். இவன் துதி செலுத்துதலையும், மன்றாட்டையும் நடத்துவதற்குப் பொறுப்பாயிருந்தான். பக்பூக்கியா தனது உடன்வேலையாட்களுள் இரண்டாவது பொறுப்பாளனாயிருந்தான்; அப்தா இவன் சம்மூவாவின் மகன், சம்மூவா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன். பரிசுத்த நகரத்தில் இருந்த மொத்த லேவியர்கள் இருநூற்று எண்பத்து நான்குபேர். வாசல் காவலர் யாரெனில்: வாசல்களில் காவல்காத்த அக்கூப், தல்மோன் ஆகியோருடன் அவர்கள் கூட்டாளிகளும் மொத்தம் நூற்று எழுபத்திரண்டுபேர். மீதியான இஸ்ரயேலர் ஆசாரியருடனும், லேவியருடனும் தங்களுடைய முற்பிதாக்களின் சொத்துரிமை இடங்களில் யூதாவிலுள்ள எல்லா நகரங்களிலும் வாழ்ந்தார்கள். ஆலய பணியாட்கள் ஓபேல் குன்றில் வாழ்ந்தார்கள். சீகாவும் கிஸ்பாவும் இவர்களுக்குப் பொறுப்பாயிருந்தார்கள். எருசலேமிலிருந்த லேவியருக்கு மேற்பார்வையாளனாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகன், பானி அசபியாவின் மகன், அசபியா மதனியாவின் மகன், மத்தனியா மீகாவின் மகன். ஊசி ஆசாபின் சந்ததிகளில் ஒருவன், ஆசாபின் சந்ததிகளே இறைவனுடைய ஆலய ஆராதனைக்குப் பொறுப்பான பாடகர்களாக இருந்தார்கள். இந்த பாடகர்கள் அரசனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்பட்டிருந்து, தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தினார்கள். யூதாவின் மகன் சேராவின் வழித்தோன்றலான மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா, மக்களுடன் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களுக்கும் பொறுப்பான அரசனுடைய பிரதிநிதியாய் இருந்தான். கிராமங்களையும், அதனுடைய வயல்களையும் பொறுத்தமட்டில், யூதா மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும், தீபோனிலும், அதன் குடியிருப்புகளிலும், எகாப்செயேலிலும் அதைச் சேர்ந்த கிராமங்களிலும் வாழ்ந்தார்கள். அத்துடன் யெசுவா, மொலாதா, பெத்பெலேத், ஆத்சார்சூவால், பெயெர்செபா, அதன் குடியிருப்புகள், சிக்லாக், மேகோனா, அதன் குடியிருப்புகள், என்ரிம்மோன், சோரா, யர்மூத், சனோவா, அதுல்லாம், அவற்றின் கிராமங்கள், லாகீசு, அதன் வயல்கள், அசேக்கா அதன் குடியிருப்புகள் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். ஆகவே இவர்கள் பெயெர்செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசங்களில் வாழ்ந்தார்கள். கேபாவைச் சேர்ந்த பென்யமீனியரின் சந்ததிகள் மிக்மாஸ், ஆயா, பெத்தேலும், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் வாழ்ந்தார்கள். அத்துடன் ஆனதோத், நோப், அனனியா ஆத்சோர், ராமா, கித்தாயிம், ஆதித், செபோயிம், நெபலாத், லோத், ஓனோ ஆகிய இடங்களிலும், கைவினைஞரின் பள்ளத்தாக்கிலும் வாழ்ந்தார்கள். யூதாவைச் சேர்ந்த லேவியர்களில் சில பிரிவினர் பென்யமீனில் குடியிருந்தார்கள். ஆசாரியரும், லேவியர்களும் செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா, அமரியா, மல்லூக், அத்தூஸ், செக்கனியா, ரேகூம், மெரெமோத், இத்தோ, கிநேதோன், அபியா, மியாமின், மாதியா, பில்கா, செமாயா, யோயாரிப், யெதாயா, சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள். யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான். அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள். யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா, யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா. யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா, எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான், மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு, ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய், இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய், பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி, சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர், இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே. பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள். எலியாசீப்பின் மகனான யோகனானின் காலம் வரையும் உள்ள லேவியர்களின் சந்ததிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள். அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள். மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் ஆகியோர் வாசல் காவலர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாசலிலுள்ள களஞ்சிய அறைகளைக் காவல் செய்தனர். இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள். எருசலேமின் மதில் அர்ப்பணிக்கப்படல் எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள். எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும், பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள். லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள். பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன். ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள். அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள். அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன். சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான். அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள். இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய், எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம். நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம். அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள். இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர். தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள். ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள். ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள். நெகேமியாவின் சீர்திருத்தங்கள் அதே நாளில் மக்கள் கேட்கும்படியாக மோசேயின் புத்தகம் சத்தமாக வாசிக்கப்பட்டது; அதில், எந்த ஒரு அம்மோனியரும் மோவாபியரும் இறைவனுடைய சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்படக் கூடாது என்று எழுதியிருக்கக் காணப்பட்டது. ஏனென்றால் அந்த தேசத்தார் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை உணவும் தண்ணீரும் கொண்டுவந்து சந்திக்கவில்லை; ஆனால் அவர்களைச் சபிப்பதற்குப் பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள். எனினும், எங்கள் இறைவன் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார். மக்கள் இந்த மோசேயின் சட்டத்தைக் கேட்டபோது, அந்நிய மக்களையெல்லாம் இஸ்ரயேலைவிட்டு வெளியேற்றினார்கள். இதற்கு முன்பு ஆசாரியன் எலியாசீப் எங்கள் இறைவனின் ஆலய களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தான். இவன் தொபியாவின் நெருங்கிய உறவினரான இவன், இது முற்காலத்தில் தானிய காணிக்கைகள், நறுமண தூபம், ஆலய பாத்திரங்கள், அத்துடன் லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காப்போருக்கும் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்ட தானியம், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பாகத்தையும், ஆசாரியருக்குரிய காணிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய அறையை தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் எருசலேமில் இருக்கவில்லை. ஏனெனில் அர்தசஷ்டா அரசனின் ஆட்சியில் முப்பத்தி இரண்டாம் வருடம் நான் பாபிலோனுக்குத் திரும்பிவிட்டேன். சிறிது காலத்தின்பின் நான் அரசனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, திரும்பி எருசலேமுக்கு வந்தேன். இறைவனுடைய ஆலயத்தின் முற்றத்திலுள்ள ஒரு அறையை எலியாசீப் தொபியாவுக்குக் கொடுத்து செய்திருந்த தீமையான செயலை நான் கண்டுபிடித்தேன். நான் மிகவும் கோபமடைந்து தொபியாவின் வீட்டுப் பொருட்களையெல்லாம் வெளியே எறிந்தேன். அத்துடன் நான் அந்த அறைகளை தூய்மைப்படுத்தும்படி உத்தரவிட்டேன்; இறைவனுடைய ஆலயப் பாத்திரங்களையும், தானிய காணிக்கைகளையும், நறுமண தூபங்களையும் திரும்பவும் அறைக்குள்ளே கொண்டுவந்தேன். அதோடு லேவியருக்குரிய பங்குகள் அவர்களுக்குக் கொடுக்கப்படாதிருந்ததையும் அறிந்தேன்; இதனால், ஆலய பணிக்குப் பொறுப்பாயிருந்த எல்லா லேவியரும், பாடகர்களும் தங்கள் வயல்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அறிந்துகொண்டேன். நான் அதிகாரிகளைக் கடிந்துகொண்டு, “இறைவனுடைய ஆலயம் இவ்வாறு உதாசீனப்படுத்தப்பட்டது ஏன்?” என்று அவர்களைக் கேட்டேன். அப்பொழுது நான் அவர்களைத் திரும்பவும் ஒன்றாய் அழைத்து, அவர்களுக்குரியதான கடமைகளில் அவர்களை அமர்த்தினேன். இதனால் திரும்பவும் யூதர்கள் யாவரும் ஆலயக் களஞ்சிய அறைக்குத் தங்கள் தானியங்கள், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டுவந்தார்கள். ஆசாரியனான செலேமியாவையும், வேதபாரகனான சாதோக்கையும், பெதாயா எனப் பெயரிடப்பட்டிருந்த லேவியனையும் களஞ்சிய அறைக்குப் பொறுப்பாக வைத்து, இவர்களுக்கு உதவியாளனாக ஆனானை நியமித்தேன். இவன் மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன். ஏனெனில் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரருடைய தேவைகளைப் பங்கிடுவதற்குப் பொறுப்பாயிருந்தார்கள். என் இறைவனே, நான் என் இறைவனுடைய ஆலயத்துக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உண்மையாய்ச் செய்த எல்லாவற்றையும் நீக்கிப் போடாமல், இதற்காக என்னை நினைத்தருளும். அந்நாட்களில் யூதா மனிதர் ஒரு ஓய்வுநாளில் திராட்சை ஆலைகளை மிதித்துக் கொண்டிருப்பதையும், தானியங்களையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப்பழங்கள், வேறு பல உற்பத்திப் பொருட்களையும் தங்கள் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு வருவதையும் கண்டேன். அவர்கள் ஓய்வுநாளில் இவற்றையெல்லாம் எருசலேமுக்குள் கொண்டுவருவதையும் கண்டேன். இவற்றை நான் கண்டபோது அந்த நாளில் உணவுப் பொருட்களை அவர்கள் விற்கக்கூடாதென எச்சரித்தேன். எருசலேமில் வாழ்ந்த தீரு நாட்டு மனிதர் சிலர், மீனையும் வேறுசில வியாபாரப் பொருட்களையும் கொண்டுவந்து யூதாவின் மக்களுக்கு ஓய்வுநாளில் எருசலேமில் விற்றார்கள். அப்பொழுது நான் யூதாவிலிருந்த உயர்குடி மனிதரை நோக்கி, “ஓய்வுநாளைத் தூய்மைக்கேடாக்கும்படி நீங்கள் செய்யும் இந்தச் செயல் என்ன? உங்கள் முற்பிதாக்கள் இவ்விதமான செயலைச் செய்ததினால் அல்லவோ இன்று எங்கள்மேலும், எங்கள் நகரத்தின்மேலும் இந்தப் பேரழிவுகளை எங்கள் இறைவன் கொண்டுவந்தார். இப்பொழுது ஓய்வுநாளைத் தூய்மைக்கேடாக்குவதால் இஸ்ரயேலுக்கு எதிராய் கோபத்தை மூட்டுகிறீர்கள்” என்று கடிந்துகொண்டேன். ஓய்வுநாள் தொடங்குவதற்கு முன்னே, வாசலின்மேல் நிழல்படும்போது, எருசலேமிலுள்ள கதவுகள் பூட்டப்பட்டு, ஓய்வுநாள் முடியும்வரை திறக்கப்படக் கூடாதென நான் உத்தரவு கொடுத்தேன். அத்துடன் ஓய்வுநாளில் எந்தவித வியாபாரத்துக்கான பொருளையும் உள்ளே கொண்டுபோக முடியாதபடி வாசல்களில் என்னுடைய மனிதர்களை நிறுத்தினேன். அப்படியிருந்தும் ஓரிரு தடவைகள் வர்த்தகர்களும், சில்லறை வியாபாரிகளும், எருசலேமுக்கு வெளியே வந்து இரவைக் கழித்தார்கள். அப்போது நான் அவர்களை எச்சரித்து, “இங்கு வெளியே மதிலின் இரவில் தங்குகிறீர்கள்? இவ்விதமாக இன்னுமொருமுறை செய்தால் நான் உங்களை தண்டிப்பேன்13:21 தண்டிப்பேன் அல்லது கைது செய்வேன்” என்று கூறினேன். அந்த நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் அந்தப் பக்கமே வரவில்லை. அத்துடன் ஓய்வுநாளின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களை முதலில் சுத்தம்பண்ணிய பின்பே, வாசலைக் காவல்காக்க வரவேண்டுமென லேவியருக்கு நான் கட்டளையிட்டேன். இதற்காகவும் என் இறைவனே, என்னை நினைவில்கொண்டு உமது பெரிதான அன்புக்குத் தக்கதாக எனக்கு இரக்கம் காட்டும். அந்நாட்களில் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய மக்கள்கூட்டத்திலுள்ள பெண்களைத் திருமணம் செய்த யூதா மனிதரை நான் கண்டேன். அதனால் அவர்கள் பிள்ளைகளின் பாதிப்பேர் அஸ்தோத்தின் மொழியையோ அல்லது அந்த மக்களின் வேறொரு மொழியைத்தவிர யூதமொழியைப் பேச அவர்களுக்குத் தெரியவில்லை. இதனால் நான் அவர்களைக் கடிந்துகொண்டு சாபத்தை அவர்கள்மேல் வருவித்தேன். அவர்களில் ஒரு சிலரை அடித்து, அவர்கள் தலைமயிரையும் பிடுங்கினேன். நான் அவர்களை இறைவனுடைய பெயரில் ஆணையிடும்படி செய்து, “நீங்கள் அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்றும், உங்களுக்கோ உங்களுடைய மகன்களுக்கோ அவர்களுடைய மகள்களை திருமணத்திற்கென எடுக்கக்கூடாது என்றும், இப்படியான திருமணங்களினால் அல்லவா இஸ்ரயேல் அரசன் சாலொமோன் பாவம் செய்தான்? அநேக நாடுகளுள் அவனைப்போல ஒரு அரசனும் இருந்ததில்லை. அவனுடைய இறைவன் அவனில் அன்புவைத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அவனை அரசனாக்கினார். அப்படியிருந்தும் அந்நிய நாட்டுப் பெண்களால் அவன் பாவத்துக்கு இழுபட்டான். நீங்கள் அந்நியப் பெண்களைத் திருமணம் செய்வதனால், எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாகி இந்தப் பயங்கரமான கொடுமையைச் செய்வதைப்போல் இப்பொழுது நாங்களும் செய்யவேண்டுமோ?” என்றேன். தலைமை ஆசாரியனான எலியாசீப்பின் மகன் யோயதாவின் மகன்களில் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்தின் மருமகனாயிருந்தான். இதனால் அவனை என்னிடத்திலிருந்து வெளியே துரத்திவிட்டேன். என் இறைவனே, இவர்களை நினைத்துக்கொள்ளும், ஏனெனில் இவர்கள் ஆசாரியப் பணியையும், ஆசாரியருக்கும், லேவியருக்கும் நீர் கொடுத்த உடன்படிக்கைகளையும் கறைப்படுத்திவிட்டார்கள். இதனால் அந்நியமான எல்லாவற்றிலிருந்தும் ஆசாரியர்களையும், லேவியர்களையும் அவரவர் தன்தன் கடமைகளைச் செய்யும்படி சுத்திகரித்தேன், அவர்கள் கடமைகளை ஒதுக்கிக் கொடுத்தேன். அத்துடன் குறிப்பிட்ட வேளையில் காணிக்கை விறகுகளையும், முதற்பலன்களையும் கொடுக்கவும், நான் ஏற்பாடு பண்ணினேன். என் இறைவனே, என்னைத் தயவுடன் நினைத்துக்கொள்ளும்.