- Biblica® Open Indian Tamil Contemporary Version
நாகூம்
நாகூம்
நாகூம்
நாகூ.
நாகூம்
நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.
நினிவேக்கு எதிரான யெகோவாவின் கோபம்
யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்;
யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும்,
கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார்.
யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து,
தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்;
யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்;
அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது.
மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.
அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்;
ஆறுகள் அனைத்தையும் வற்றிப்போகச்செய்கிறார்.
பாசானும், கர்மேலும் வறண்டுபோகின்றன.
லெபனோனின் பூக்கள் வாடுகின்றன.
அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்;
குன்றுகள் உருகிப்போகும்.
அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும்.
உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள்.
அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்?
அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்?
அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது;
அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
யெகோவா நல்லவர்,
அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர்.
அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.
ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால்
நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;
அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.
அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும்
அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்;
துன்பம் இரண்டாம் முறையும் வராது.
அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு,
தங்கள் திராட்சை இரசத்தினால் வெறிகொண்டிருப்பார்கள்.
அவர்கள் உலர்ந்துபோன பயிரின் அடித்தாள்கள் போல் சுட்டெரிக்கப்படுவார்கள்.
நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து,
கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன்,
உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.
யெகோவா சொல்வது இதுவே:
அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன.
“அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள்.
யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும்,
இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.
நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன்.
உன் விலங்குகளையும் உடைப்பேன்.”
நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார்.
“உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள்.
உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன்.
நீ வெறுப்புக்குரியவனானபடியால்,
நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து,
நற்செய்தி கொண்டு வருகிறவனுடைய கால்கள்,
உன் மலைகள்மேல் வருகின்றன.
உன் பண்டிகைகளைக் கொண்டாடு.
உன் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று.
கொடுமையானவர்கள் இனி உன்மேல் படையெடுத்து வருவதில்லை;
அவர்கள் முழுவதும் அழிக்கப்படுவார்கள்.
நினிவேயின் வீழ்ச்சி
நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்;
கோட்டையைக் காவல் செய்,
வீதியை கண்காணி,
உன்னைத் திடப்படுத்திக்கொள்,
உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு.
அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி,
அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும்,
யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை,
யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார்.
நினிவேயைத் தாக்குகிற
இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன.
போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள்.
தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது.
தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன.
தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி,
கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன.
அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன,
அவை மின்னலைப்போல் பறக்கின்றன.
நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான்.
இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள்.
அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள்.
பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான்,
ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.
இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது
பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது.
பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து,
புறாக்களைப்போல் புலம்புகிறார்கள்.
நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது.
அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது.
“நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள்.
ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள்,
தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்;
அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக்
குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள்.
நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது!
உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன,
எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன.
அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான்.
ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே?
அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே?
சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே?
சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று.
தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று.
தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும்,
இரையினால் தன் குகையையும் நிரப்பியது.
நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்”
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
“புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன்,
உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும்.
பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன்.
உங்கள் தூதுவர்களின் குரல்கள்
இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”
நினிவேக்கு ஐயோ கேடு
இரத்தம் சிந்தின பட்டணமே,
உனக்கு ஐயோ கேடு,
நீ பொய்யினாலும் கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறாய்.
ஒருபோதும் உன்னிடம் கொலை இல்லாமல் போவதில்லை.
சவுக்கு அடியின் ஒசையும்,
உருளைகளின் சத்தமும்,
குதிரைகளின் பாய்ச்சலும்,
தேர்களின் அதிர்வும் கேட்கிறதே,
தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும்,
மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன,
அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள்.
பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன.
இறந்த உடல்களோ எண்ணற்றவை.
மக்கள் பிரேதங்கள்மேல்
இடறி விழுகிறார்கள்.
இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும்,
கட்டுக்கடங்காத காமத்தினாலும் உண்டாயிற்று.
அவள் வசீகரமுள்ளவளும், மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவளுமாயிருக்கிறாள்.
அவள் நாடுகளைத் தன் வேசித்தனத்தினாலும்,
மக்கள் கூட்டங்களைத் தன் மந்திரங்களினாலும் அடிமைப்படுத்தியிருக்கிறாள்.
இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்:
“நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து,
உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்;
நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும்,
எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன்.
அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன்.
உன்னை அவமதிப்பாய் நடத்தி,
உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன்.
உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி,
‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது;
அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள்.
உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”
நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும்,
நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும்,
நினிவேயே நீ சிறந்தவளோ?
நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும்,
தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன.
அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன.
பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன.
ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு,
நாடுகடத்தப்பட்டாள்.
அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும்,
அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன.
அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு
அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய்.
நீ ஒரு ஒளிவிடத்திற்குப் போவாய்.
பகைவரிடமிருந்து தப்ப புகலிடம் தேடுவாய்.
உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த
பழங்களுடைய அத்திமரங்களைப் போலிருக்கும்.
அவை உலுக்கப்பட்டபோது அவற்றின் பழங்கள்
அவற்றைத் தின்கிறவனின் வாயிலே விழும்.
உன் இராணுவ வீரர்களைப் பார்!
அவர்கள் பெண்களைப் போலிருக்கிறார்கள்.
உன் நாட்டின் வாசல்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக
விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கின்றன;
வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்தது.
முற்றுகைக் காலத்துக்கென
தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்,
உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்;
களிமண்ணில் வேலைசெய்து சாந்தைக் குழைத்து
செங்கல் சுவரைப் பழுது பாருங்கள்.
ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்;
வாள் உங்களை வெட்டி வீழ்த்தும்.
அது உங்களை வெட்டுக்கிளிகளைப்போல் தின்னும்.
பச்சைக்கிளிகளைப்போல் பெருகுங்கள்,
வெட்டுக்கிளிகளைப்போல் பெருகுங்கள்!
உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்,
ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல்
நாட்டை வெறுமையாக்கி விட்டு,
பறந்து போய்விடுகிறார்கள்.
உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.
உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள்.
சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன.
ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.
அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள்.
உனது உயர்குடி மக்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள்.
உனது மக்கள் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை.
உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது;
உனது காயம் மரணத்திற்கு ஏதுவானது.
உன்னைக் குறித்த செய்தியைக் கேட்கிறவர்கள் எல்லோரும்,
உன் வீழ்ச்சியைப் பார்த்து கைத்தட்டுகிறார்கள்.
ஏனெனில் உன் முடிவற்ற
கொடுமையை அறியாதவன் யார்?