- Biblica® Open Indian Tamil Contemporary Version
மீகா
மீகா
மீகா
மீகா
மீகா
யூதாவின் அரசர்களான யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர்களின் ஆட்சிக்காலத்தில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே. சமாரியாவையும், எருசலேமையும் குறித்து அவன் கண்ட தரிசனம்:
மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்,
பூமியே, அதில் உள்ளவர்களே, செவிகொடுங்கள்,
ஆண்டவராகிய யெகோவா உங்களுக்கு எதிராய் சாட்சி கூறப்போகிறார்,
யெகோவா பரலோகத்திலுள்ள தமது பரிசுத்த ஆலயத்திலிருந்து பேசப்போகிறார்.
சமாரியா, எருசலேமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு,
நோக்கிப்பாருங்கள்; யெகோவா தமது உறைவிடத்திலிருந்து வருகிறார்.
அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களில் உலாவுகிறார்.
நெருப்பின் முன் மெழுகு போலவும்,
மலைச்சரிவில் பாய்ந்தோடும் தண்ணீர் போலவும்
மலைகள் அவருக்குக் கீழ் உருகுகின்றன.
பள்ளத்தாக்குகள் பிளக்கின்றன.
யாக்கோபின் மீறுதல்களினாலும்,
இஸ்ரயேல் வீட்டாரின் பாவங்களினாலுமே இவை எல்லாம் நடக்கின்றன.
யாக்கோபின் மீறுதல் என்ன?
சமாரியா அல்லவா?
யூதாவின் வழிபாட்டு மேடை எது?
எருசலேம் அல்லவா?
“எனவே யெகோவா சொல்கிறதாவது:
நான் சமாரியாவை ஒரு இடிபாட்டுக் குவியலாக்குவேன்.
திராட்சைத் தோட்ட நிலமாக அதை மாற்றுவேன்.
அவற்றின் கற்களை பள்ளத்தாக்கில் கொட்டி, அஸ்திபாரங்களை வெறுமையாக்குவேன்.
சமாரியாவின் விக்கிரகங்கள் யாவும்
துண்டுகளாய் நொறுக்கப்படும்;
அவள் ஆலயத்திற்குக் கொடுத்த அன்பளிப்புகள் எல்லாம்
நெருப்பில் சுட்டெரிக்கப்படும்;
அவளுடைய உருவச்சிலைகள் அனைத்தையும் அழிப்பேன்.
அவள் தன் அன்பளிப்புகளை கோயில் வேசிகளின் கூலியிலிருந்து பெற்றபடியால்,
பகைவர்கள் அவற்றைத் திரும்பவும் வேசிகளின் கூலியாகவே பயன்படுத்துவார்கள்.”
மீகாவின் அழுகையும் புலம்பலும்
சமாரியாவின் அழிவின் நிமித்தம் நான் அழுது புலம்புவேன்;
வெறுங்காலோடும் நிர்வாணத்துடனும் நடந்து திரிவேன்.
நரியைப்போல் ஊளையிட்டு,
ஆந்தையைப்போல் அலறுவேன்.
ஏனெனில் சமாரியாவின் புண் குணமாக்க முடியாதது;
அது யூதாவரை வந்துள்ளது.
என் மக்கள் வாழும்
எருசலேம் வரையுங்கூட அது வந்துள்ளது.
அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்;
கொஞ்சமும் அழவே வேண்டாம்.
பெத் அப்பிராவிலே
புழுதியில் புரளுங்கள்.
சாப்பீரில் வாழ்கிறவர்களே, நிர்வாணத்துடனும் வெட்கத்துடனும் கடந்துபோங்கள்.
சாயனானில் வாழ்கிறவர்கள்
வெளியே வரமாட்டார்கள்.
பெத் ஏசேல் துக்கங்கொண்டாடுகிறது.
அதற்குரிய பாதுகாப்பு
உன்னிடமிருந்து எடுபட்டுப் போயிற்று.
மாரோத்தில் வாழ்கிறவர்கள் வேதனையில் துடித்து,
விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், யெகோவாவிடமிருந்து பேராபத்து வந்திருக்கிறது.
அது எருசலேமின் வாசலுக்கும் வந்திருக்கிறது.
லாகீசில் வாழ்கிறவர்களே,
குதிரைகளை தேரில் பூட்டுங்கள்!
நீங்களே சீயோன் மகளுடைய பாவத்தின் ஆரம்பம்.
ஏனெனில் இஸ்ரயேலின் மீறுதல்கள் உங்களிடத்திலேயும் காணப்பட்டன.
ஆதலால் யூதாவின் மக்களே,
நீங்கள் மோர்ஷேத் காத்துக்கு பிரியாவிடை சொல்லி அனுப்பிவிடுவீர்கள்.
அக்சீப் பட்டணம்
இஸ்ரயேலின் அரசர்களுக்கு ஏமாற்றமாகும்.
மரேஷாவில் வாழ்கிறவர்களே,
உங்களுக்கெதிராக வெற்றி வீரனொருவனை யெகோவா கொண்டுவருவார்.
இஸ்ரயேலின் மேன்மையான தலைவர்கள்
அதுல்லாம் குகையில் ஒளிந்துகொள்வார்கள்.
நீங்கள் மகிழ்ச்சிகொள்கிற பிள்ளைகளுக்காகத் துக்கங்கொண்டாடி,
உங்கள் தலையை மொட்டையடியுங்கள்;
அவர்கள் உங்களைவிட்டு நாடு கடத்தப்படப் போவதால்,
கழுகின் தலையைப்போல் உங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ளுங்கள்.
மனிதனின் திட்டம்
தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து,
அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ கேடு,
அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால்
விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.
வயல்களை ஆசைப்பட்டு,
அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள்.
வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள்.
ஆகையால் யெகோவா சொல்கிறதாவது:
“இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன்,
அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது.
இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது.
ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும்.
அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்;
அவர்கள் உங்கள்மீது புலம்பல் பாடுவார்கள்.
இந்த விதமாய் நீங்கள் பாடுவதுபோல் பாடி கேலி செய்வார்கள்:
‘நாம் முற்றிலும் பாழானோம்;
நமது மக்களின் உடைமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
யெகோவா நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்!
நம் வயல்வெளிகளையோ அவர் நமது எதிரிகளுக்குக் கொடுக்கிறார்’ ”
என்று புலம்புவார்கள்.
ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து
யெகோவாவின் சபையில் உள்ளவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
அதைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களில் ஒருவனும் இருக்கமாட்டான்.
பொய் தீர்க்கதரிசிகள்
மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்,
இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்.
அவமானம் எங்கள்மேல் வரமாட்டாது” என்று எனக்குச் சொல்கிறீர்கள்.
மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே,
“யெகோவாவின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ?
அவர் இப்படியானவற்றைச் செய்கிறவரோ?”
“நீதியான வழியில் நடக்கிறவனுக்கு
என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ?
என்று அவர் சொல்கிறார் அல்லவா” என்றும் சொல்கிறீர்கள்.
அதற்கு யெகோவா சொல்கிறதாவது,
அண்மைக்காலமாக நீங்கள் என் மக்களுக்கெதிராக
ஒரு பகைவனைப் போல் எழும்பியிருக்கிறீர்கள்.
நீங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறவர்களைப்போல் நடந்து,
கவலையின்றி போகிறவனிடமிருந்து,
விலையுயர்ந்த அங்கியை உரிந்து எடுக்கிறீர்கள்.
என் மக்களுள் இருக்கும் பெண்களை,
அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள்.
அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும்,
என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்துப் போடுகிறீர்கள்.
எழுந்து போய்விடுங்கள்,
இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல,
ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு
திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது.
என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து,
“உங்களுக்கு அதிக திராட்சை இரசமும், மதுபானமும் கிடைக்கும்
என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்”
என்பானாயின்
அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி.
மீட்பிற்கான வாக்குத்தத்தம்
யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும்
நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன்,
இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன்.
நான் தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும்,
மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் அவர்களை ஒன்றாய் கொண்டுவருவேன்.
அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.
அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்;
அவர்கள் சிறையிருப்பின் வாசலை உடைத்து வெளியேறுவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களுக்கு முன்பாகக் கடந்துபோவான்;
யெகோவாவே அவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்வார்.
தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுதல்
அப்பொழுது நான் சொன்னதாவது:
“யாக்கோபின் தலைவர்களே;
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள்.
நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா,
ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள்.
என் மக்களின் தோலையும்,
அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள்.
என் மக்களின் சதையைச் சாப்பிட்டு,
அவர்களின் தோலையெல்லாம் உரித்து,
எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள்.
சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும்,
பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.”
ஆனாலும், நாட்கள் வருகின்றன.
அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள்.
ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார்.
அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக
அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.
யெகோவா சொல்வது இதுவே:
எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற
“பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது,
ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால்,
‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள்.
அப்படிக் கொடுக்காவிட்டால்,
அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள்.
ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும்,
குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மேல் வரும்.
பொய்த் தீர்க்கதரிசிகளுக்குச் சூரியன் மறைந்து,
பகலும் அவர்களுக்கு இருண்டுபோகும்.
தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள்.
குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள்.
இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால்,
அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும்,
இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி,
யெகோவாவின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
அவர் என்னை நீதியினாலும்,
பெலத்தினாலும் நிறைத்திருக்கிறார்.
ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே,
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே,
நீதியை உதாசீனம்பண்ணி,
நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள்.
இரத்தம் சிந்துதலினால் சீயோனையும்,
கொடுமையினால் எருசலேமையும் கட்டுகிறவர்களே கேளுங்கள்.
உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள்.
உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள்.
உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள்.
ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ?
பேராபத்து நமக்கு உண்டாகாது”
என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே,
உங்கள் செயல்களின் நிமித்தம்,
சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும்,
ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்.
யெகோவாவின் மலை புதுப்பிக்கப்படுதல்
கடைசி நாட்களிலே,
யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை,
எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்;
எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்,
எல்லா மக்கள் கூட்டமும் அதை நாடி ஓடி வருவார்கள்.
அநேக நாடுகள் வந்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம்,
யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம்.
நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு
அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள்.
சீயோனிலிருந்து அவரது சட்டமும்,
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
அநேக மக்கள் கூட்டங்களிடையே அவர் நியாயம் விசாரித்து,
எங்கும் பரந்து தூரமாயுள்ள வலிமைமிக்க
நாடுகளின் வழக்குகளை அவர் தீர்த்துவைப்பார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்,
தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள்.
அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை,
போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
ஒவ்வொருவனும் தன் சொந்த திராட்சைக்கொடியின் கீழேயும்,
தன் சொந்த அத்திமரத்தின் கீழேயும் சுகமாய் இருப்பான்.
ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள்.
ஏனெனில் சேனைகளின் யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.
எல்லா மக்கள் கூட்டங்களும்
தங்கள் தெய்வங்களின் பெயரில் நடந்தாலும்,
நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே
என்றென்றும் நடப்போம் என்று சொல்வார்கள்.
யெகோவாவின் திட்டம்
யெகோவா அறிவிக்கிறதாவது:
“அந்த நாளில் நான் முடவர்களை ஒன்றுசேர்ப்பேன்,
நாடுகடத்தப்பட்டோரையும்,
என்னால் துன்பத்திற்கு உட்பட்டோரையும் கூட்டிச்சேர்ப்பேன்.”
நான் எஞ்சியிருக்கும் முடவர்களையும்,
துரத்தப்பட்டவர்களையும் ஒரு வலிமைமிக்க நாடாக்குவேன்.
அந்த நாளிலிருந்து என்றென்றைக்குமாக,
யெகோவாவாகிய நானே சீயோன் மலையிலிருந்து அவர்களை அரசாளுவேன்.
எருசலேமே, மந்தையின் காவற்கோபுரமே,
சீயோன் மகளின் கோட்டையே, உனக்கோவென்றால்:
முந்தைய ஆட்சியுரிமை உனக்கே திரும்பக் கொடுக்கப்படும்;
அரசுரிமை உன் மகளுக்கே வரும்.
இப்பொழுது நீ ஏன் சத்தமிட்டு அழுகிறாய்?
பிரசவிக்கும் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகிறாய்?
உனக்கு அரசன் இல்லையோ?
உன் ஆலோசகனும் அழிந்து போனானோ?
சீயோன் மகளே,
பிரசவிக்கும் பெண்ணைப்போல் துடித்து வேதனைப்படு.
ஏனெனில் நீ நகரத்தைவிட்டு
விரைவில் வெளியே போகவேண்டும்.
திறந்தவெளியில் முகாமிடவேண்டும்.
நீ பாபிலோனுக்குப் போவாய்.
ஆனால் அங்கிருந்து நீ தப்புவிக்கப்படுவாய்.
உன் பகைவர்களின் கைகளினின்றும் யெகோவாவாகிய நானே உன்னை மீட்டுக்கொள்வேன்.
ஆனால், இப்பொழுது அநேக நாடுகள்
உனக்கெதிராய் கூடியிருக்கிறார்கள்.
அவர்கள், “சீயோன் மாசுபடட்டும்,
நம் கண்கள் அதைக்கண்டு கேலிசெய்து மகிழட்டும்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் அவர்களோ, யெகோவாவின் சிந்தனைகளை அறியாதிருக்கிறார்கள்.
அவரது திட்டத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அவர் அவர்களைக் கதிர்க்கட்டுகளைப்போல் ஒன்றுசேர்த்து
சூடடிக்கும் களத்திற்கு அடிக்கக்கொண்டு வருவார்.
யெகோவா சொல்கிறதாவது: “சீயோன் மகளே, எழுந்து போரடி.
நான் உனக்கு இரும்பு கொம்புகளைக் கொடுப்பேன்.
நான் உனக்கு வெண்கல குளம்புகளைக் கொடுப்பேன்.
அவற்றால் நீ அநேக மக்கள் நாடுகளை மிதித்துத் துண்டுகளாக நொறுக்குவாய்.
அவர்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த ஆதாயத்தையும்,
அவர்களின் செல்வத்தையும் பூமி முழுவதற்கும் யெகோவாவாகிய எனக்கே ஒப்படைப்பாய்.”
வாக்களிக்கப்பட்ட ஆளுநர்
இராணுவவீரர்களின் நகரமே, உன் இராணுவவீரர்களைக் கூட்டிச்சேர்;
ஏனெனில் நமக்கு எதிராக முற்றுகையிடப் பட்டிருக்கிறது.
அவர்கள் இஸ்ரயேலின் ஆளுநரை,
கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்.
“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லகேமே,
நீ யூதாவின் வம்சங்களில் சிறிதாயிருப்பினும்
இஸ்ரயேலின்மேல் என் சார்பாக ஆளுநராக வரப்போகிறவர்,
உன்னிலிருந்து தோன்றுவார்.
அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான
முந்திய காலத்தினுடையது.”
பிரசவ வேதனைப்படுபவள் பிள்ளை பெற்றெடுக்கும் வரைக்கும்
யெகோவா தம் மக்களை கைவிடுவார்.
அதன்பின் அவருடைய சகோதரரில் மீதியாயிருப்பவர்கள்
இஸ்ரயேலருடன் சேரும்படி திரும்பி வருவார்கள்.
அந்த ஆளுநர் வரும்போது,
அவர் யெகோவாவின் வல்லமையுடனும்,
தமது இறைவனாகிய யெகோவாவின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார்.
அப்பொழுது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள்.
அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.
அவரே அவர்களுடைய சமாதானமாயிருப்பார்.
நமது நாட்டின்மேல் அசீரியன் படையெடுத்து,
நமது அரண்மனைகளை மிதிக்கும்போது,
நாங்கள் அவனுக்கு எதிராக ஏழு மேய்ப்பர்களையும்,
எட்டு தலைவர்களையும் எழுப்புவோம்.
அவர்கள் அசீரிய நாட்டை வாளினால் ஆளுகை செய்வார்கள்.
நிம்ரோத் நாட்டை, உருவிய வாளினால் ஆளுகை செய்வார்கள்.
அசீரியன் எங்கள் நாட்டின்மேல் படையெடுத்து,
எங்கள் எல்லைகளில் அணிவகுத்து வரும்போது,
அவர் எங்களை விடுவிப்பார்.
அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்,
மக்கள் கூட்டங்களிடையே யெகோவாவிடமிருந்து வரும் பனியைப்போல் இருப்பார்கள்,
அவர்கள் மனிதனுக்காகக் காத்திராமலும்,
மனுக்குலத்துக்காகத் தாமதியாமலும்
புல்லின்மேல் பெய்யும்
மழையைப்போல் இருப்பார்கள்.
எனவே, யாக்கோபில் மீதியானோர்,
நாடுகளின் மத்தியில் திரளான மக்களின் நடுவிலே இருப்பார்கள்.
அவர்கள் காட்டு மிருகங்களின் நடுவில் இருக்கும் சிங்கம் போலவும்,
செம்மறியாட்டு மந்தைகளுக்கிடையில் புகுந்து கிழித்துச் சிதைக்கிற,
சிங்கக் குட்டியைப்போலவும் இருப்பார்கள்.
ஒருவனாலும் அந்நாடுகளைக் காப்பாற்ற முடியாதிருக்கும்.
அவர்களுடைய கை அவர்கள் பகைவர்களுக்கு மேலாக வெற்றியுடன் உயர்த்தப்படும்.
அவர்களுடைய எதிரிகள் எல்லோருமே அழிக்கப்படுவார்கள்.
யெகோவா இஸ்ரயேலுக்கு அறிவிக்கிறதாவது:
“அந்த நாளில் உன் மத்தியிலிருந்து போர்க் குதிரைகளை அழிப்பேன்.
உன் தேர்ப் படைகளை அழித்தொழிப்பேன்.
உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும்,
உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன்.
உன் மாயவித்தையை அழிப்பேன்.
மந்திரம் செய்யும் ஆற்றல் இனி உன் மத்தியில் காணப்படமாட்டாது.
நான் உனது செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும்,
புனித கற்களையும் உன் மத்தியிலிருந்து அழிப்பேன்.
நீ இனிமேலும் உன் கைகளின் வேலையான விக்கிரகங்களை
விழுந்து வணங்கமாட்டாய்.
உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி,
உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன்.
அத்துடன் எனக்குக் கீழ்ப்படியாத எல்லா மக்களையும் கோபத்தோடும்,
கடுஞ்சினத்தோடும் பழிவாங்குவேன்.”
இஸ்ரயேலின்மீது யெகோவாவின் குற்றச்சாட்டு
யெகோவா சொல்கிறதைக் கேளுங்கள்:
“எழுந்து, மலைகள் முன் உங்கள் வழக்கை வாதாடுங்கள்;
குன்றுகள் எல்லாம் நீங்கள் சொல்லப்போவதைக் கேட்கட்டும்.
“மலைகளே, யெகோவாவின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்;
பூமியின் நிலையான அஸ்திபாரங்களே, செவிகொடுங்கள்.
தம் மக்களுக்கெதிரான வழக்கொன்று யெகோவாவுக்கு உண்டு.
இஸ்ரயேலுக்கு எதிராக அவர் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருகிறார்.
“யெகோவா சொல்கிறதாவது: என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
நான் எவ்விதம் உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தினேன்? எனக்குப் பதில் சொல்லுங்கள்.
எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன்.
அடிமைத்தன நாட்டிலிருந்து மீட்டு வந்தேன்.
உங்களை வழிநடத்த மோசேயுடன்,
ஆரோனையும் மிரியாமையும் அனுப்பினேன்.
என் மக்களே,
மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும்,
பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான்
என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
யெகோவா உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி,
சித்தீமிலிருந்து கில்காலுக்குப் போன உங்கள் பயணத்தை நினைத்துப் பாருங்கள்.”
இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது:
“யெகோவாவிடம் நாங்கள் எதைக் கொண்டுவருவோம்.
மேன்மையான இறைவனுக்கு முன்பாக எதனுடன் தலைகுனிந்து வழிபடுவோம்?
அவர் முன்பாக ஒரு வயதுக் கன்றுக்குட்டிகளைத் தகன காணிக்கையாகக் கொண்டுவருவோமா?
ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களிலும்,
பதினாயிரக் கணக்கான எண்ணெய் ஆறுகளிலும் யெகோவா விருப்பமாயிருப்பாரோ?
என் மீறுதலுக்காக என் முதற்பேறான பிள்ளையைக் காணிக்கையாகச் செலுத்தட்டுமா?
என் ஆத்துமாவின் பாவங்களுக்காக என் கர்ப்பக்கனியை நான் கொடுக்கட்டுமா?”
மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே;
யெகோவா உன்னிடம் எதைக் கேட்கிறார்?
நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து,
உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படி தானே கேட்கிறார்.
இஸ்ரயேலின் குற்றமும் நியாயத்தீர்ப்பும்
கேளுங்கள், யெகோவா எருசலேம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறார்.
அவருடைய பெயருக்குப் பயந்து நடப்பதே ஞானம்.
“வரப்போகும் தண்டனையின் கோலையும், அதை நியமித்தவரையும் கவனத்திற்கொள்ளுங்கள்.
கொடுமையானவர்களின் வீடே,
நீங்கள் நல்லதல்லாத வழியில் சம்பாதித்த சொத்துக்களையும்,
நீங்கள் பயன்படுத்துகிறதான மற்றவர்களை ஏமாற்றும் அளவையையும்
நான் இன்னும் மறக்கவேண்டுமோ?
போலித் தராசையும், போலிப் படிக்கற்கள் இருக்கும்
பையையும் வைத்திருக்கிறவனையும்
நான் குற்றமற்றவனெனத் தீர்க்கவேண்டுமோ?
உன் செல்வந்தர்கள் வன்முறையாளர்கள்.
உன் மக்கள் பொய்யர்கள்.
அவர்களுடைய நாவுகள் வஞ்சகத்தையே பேசுகின்றன.
அதனாலேதான் நான் உன்னை அழிக்கத் தொடங்கிவிட்டேன்.
உன் பாவங்களுக்காக உன்னைப் பாழாக்கத் தொடங்கிவிட்டேன்.
நீ சாப்பிடுவாய்; ஆனால் திருப்தியடையமாட்டாய்.
உன் வயிறோ இன்னும் வெறுமையாகவே இருக்கும்.
நீ சேர்த்து வைப்பாய்; ஆனால் சேமிக்கமாட்டாய்.
ஏனெனில் உன் சேமிப்புகளை எல்லாம் நான் வாளுக்கு ஒப்புக்கொடுப்பேன்.
நீ விதைப்பாய்; ஆனால் அறுவடை செய்யமாட்டாய்.
நீ ஒலிவ விதைகளைப் பிழிந்தெடுப்பாய்; ஆனால் எண்ணெயையோ பூசிக்கொள்ளமாட்டாய்.
திராட்சைப் பழங்களையும் நீ பிழிவாய்; ஆனால் இரசத்தையோ நீ குடிக்கமாட்டாய்.
உம்ரி அரசனின் நியமங்களையும்
ஆகாப் வீட்டாரின் கேடான நடைமுறைகளையும் கைக்கொண்டு,
அவர்களின் தீமையான சம்பிரதாய முறைகளையே நீ பின்பற்றினாய்.
ஆதலால் நான் உன்னை அழிவுக்கும்,
உன் மக்களை ஏளனத்துக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
பிறநாடுகளின் ஏளனத்தை நீ சுமப்பாய்.”
இஸ்ரயேலின் அவலநிலை குறித்து மீகாவின் கவலை
என் அவலநிலைதான் என்ன?
கோடைகால அறுப்புக்குப்பின் திராட்சைத் தோட்டத்தில்
விடப்பட்ட பழங்களைச் சேகரிப்பவன் போலானேன்;
சாப்பிடுவதற்கான ஒரு திராட்சைக் குலையும் இல்லை.
நான் சாப்பிட ஆசைப்படும்,
முதலில் பழுத்த அத்திப்பழமும் இல்லை.
நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள்.
நீதிமான் ஒருவனும் இல்லை.
எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான்.
அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை.
ஆளுநர் அன்பளிப்புகளை வற்புறுத்திக் கேட்கிறான்.
நீதிபதிகள் இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் தாம் விரும்புவதையே கட்டளையிடுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்து சதி செய்கிறார்கள்.
அவர்களில் சிறந்தவன் எனப்படுபவன் முட்செடி போன்றவன்.
நீதிமான் முள்வேலியைவிட மிகவும் கூர்மையானவன்.
இறைவன் உங்களைச் சந்திக்கும் நாள்,
உங்கள் இறைவாக்கினர் எச்சரித்த அந்த நாள் வந்துவிட்டது.
இதுவே அவர்களின் குழப்பத்தின் காலம்.
அயலவனை நம்பாதே;
சிநேகிதனையும் நம்பவேண்டாம்.
உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிற மனைவியோடும்
உன் வார்த்தைகளைக்குறித்து கவனமாயிரு.
ஏனெனில், மகன் தகப்பனை அவமதிக்கிறான்;
மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகிறாள்;
மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள்;
மனிதனுடைய பகைவர்கள் அவன் வீட்டார்தானே.
நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன்.
என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.
இஸ்ரயேல் உயரும்
எருசலேம் மக்கள் சொல்கிறதாவது:
எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே;
நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம்.
நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார்.
நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால்,
அவரின் கோபத்தைச் சுமப்போம்.
அவர் எங்களுக்காக வாதாடி,
எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார்.
அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார்.
நாங்கள் அவரது நீதியைக் காண்போம்.
அப்பொழுது எங்கள் பகைவன் இதைக்கண்டு
வெட்கத்திற்குள்ளாவான்.
“உங்கள் யெகோவாவாகிய இறைவன் எங்கே?”
என்று எங்களிடம் கேட்டவளின்
வீழ்ச்சியை எங்கள் கண்கள் காணும்.
அப்பொழுது அவள் வீதிகளிலுள்ள
சேற்றைப்போல் காலின்கீழ் மிதிக்கப்படுவாள்.
எருசலேம் மக்களே! உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள் வருகிறது,
உங்கள் எல்லையை விரிவுபடுத்தும் நாளும் வருகிறது.
அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும்
உங்கள் மக்கள் உங்களிடம் வருவார்கள்.
எகிப்து முதல், ஐபிராத்து நதிவரையுள்ள தேசங்களிலிருந்தும்,
ஒரு கடல் முதல் மறுகடல் வரையுள்ள நாடுகளிலிருந்தும்,
ஒரு மலை முதல், மறு மலைவரையுள்ள இடங்களிலிருந்தும்
உங்கள் மக்கள் அனைவரும் உங்களிடம் கூடிவருவார்கள்.
ஆயினும் பூமியின் மற்ற பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின்
தீய செயல்களின் நிமித்தம் பாழாய்ப்போம்.
மன்றாட்டும் துதியும்
யெகோவாவே, ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே
வாழ்கிறவர்களான உமது மக்களை,
உமது உரிமைச்சொத்தான மந்தையை,
உமது கோலினால் மேய்த்துக்கொள்ளும்.
இவர்கள் முந்தைய நாட்களைப்போல் பாசானிலும்,
கீலேயாத்திலும் மேயட்டும்.
“நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப்போல,
நான் உங்களுக்கு என் அதிசயங்களைக் காண்பிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
பிறநாடுகள் யாவும் அதைக்கண்டு வெட்கமடைவார்கள்.
அவர்கள் தங்கள் ஆற்றல்களை
இழந்து தங்கள் வாயைக் கைகளால் பொத்திக்கொள்வார்கள்.
அவர்களுடைய காதுகள் செவிடாய்ப்போகும்.
அவர்கள் பாம்மைப்போலவும்,
நிலத்தின் ஊரும் உயிரினங்களைப்போலவும் புழுதியை நக்குவார்கள்.
அவர்கள் தங்கள் குகைகளை விட்டு நடுக்கத்துடன் வெளியேறுவார்கள்.
எங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் அவர்கள் பயத்துடன் திரும்பி வருவார்கள்.
அப்போது அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.
உமக்கு நிகரான இறைவன் யார்?
உமது சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு,
அவர்களுடைய மீறுதல்களையும் மன்னிக்கிற உமக்கு நிகரானவர் யார்?
நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பவரல்ல.
ஆனால் இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கிறீர்.
நீர் மறுபடியும் எங்கள்மேல் கருணை காட்டுவீர்.
நீர் எங்கள் பாவங்களை காலின்கீழ் மிதித்து,
எங்கள் எல்லா அக்கிரமங்களையும் கடலின் ஆழங்களிலே எறிந்து விடுவீர்.
முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு
ஆணையிட்டு வாக்குக்கொடுத்தபடியே,
நீர் யாக்கோபுக்கும் உண்மையுள்ளவராயிருப்பீர்,
ஆபிரகாமுக்கு அன்பைக் காட்டுவீர்.