- Biblica® Open Indian Tamil Contemporary Version மத்தேயு மத்தேயு எழுதின நற்செய்தி மத்தேயு மத். மத்தேயு எழுதின நற்செய்தி இயேசுவின் வம்சவரலாறு இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு; இவர் ஆபிரகாமின் வம்சத்தானாகிய தாவீதின் வம்சத்தினராவார். ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கு யாக்கோபின் தகப்பன், யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன், யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன், ஆராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன், சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத் ஈசாயின் தகப்பன், ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள். சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன், அபியா ஆசாவுக்குத் தகப்பன், ஆசா யோசபாத்தின் தகப்பன், யோசபாத் யோராமுக்குத் தகப்பன், யோராம் உசியாவின் தகப்பன், உசியா யோதாமின் தகப்பன், யோதாம் ஆகாஸின் தகப்பன், ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன், எசேக்கியா மனாசேயின் தகப்பன், மனாசே ஆமோனின் தகப்பன், ஆமோன் யோசியாவின் தகப்பன், யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான், சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன், செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன், ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன், சாதோக் ஆகீமிற்குத் தகப்பன், ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன், எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன், யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து1:16 கிரேக்க மொழியில் கிறிஸ்து என்பதற்கும் எபிரெய மொழியில் மேசியா என்பதற்கும் அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும். எனப்படுகிற இயேசு பிறந்தார். இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது. அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான். யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள். அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’1:21 இயேசு என்பதன் பொருள் இரட்சிக்கிறவர் அல்லது இரட்சகர் எனப்படும். என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான். கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன: “ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.”1:23 ஏசா. 7:14 இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே. யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான். ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான். அறிஞர்கள் வருகை யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபின், ஏரோது அரசனாக இருந்தபொழுது, கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார்? நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” என்றார்கள். ஏரோது அரசன் இதைக் கேட்டபோது, அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “கிறிஸ்து எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான். அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில்” என்றார்கள், “ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே: “ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல; ஏனெனில், உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார். அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்,’2:6 மீகா 5:2,4 என பதிலளித்தார்கள். அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான். ஏரோது அவர்களிடம், “நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரை வழிபடும்படி, உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். அரசன் கூறியதைக் கேட்டபின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம்வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை அதன் தாயாகிய மரியாளுடன் இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரை வழிபட்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றைப் பிள்ளைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதற்குப் பின்பு ஏரோதிடம் திரும்பிச் செல்லக்கூடாது என அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், தங்கள் நாட்டிற்கு வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார்கள். எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல் அறிஞர்கள் திரும்பிச் சென்றபின் கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குத் தப்பிப்போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு, ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காக வகைதேடுகிறான்” என்று சொன்னான். உடனே யோசேப்பு எழுந்திருந்து, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் எகிப்திற்குப் புறப்பட்டுச் சென்றான்; அவன் ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலம், “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்”2:15 ஓசி. 11:1 என்று கூறியிருந்தது நிறைவேறியது. ஏரோது தான் அறிஞர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபொழுது, கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் தான் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்தான். அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா மூலமாகக் கூறப்பட்டது நிறைவேறியது: “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது, அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததினால், ஆறுதல் பெற மறுக்கிறாள்.”2:18 எரே. 31:15 நாசரேத்திற்குத் திரும்புதல் ஏரோது இறந்தபின், கர்த்தருடைய தூதன் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு, குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; குழந்தையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான். எனவே அவன் குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்றான். ஆனால் அர்கெலாயு தனது தகப்பனான ஏரோதுவின் இடத்தில், யூதேயாவில் ஆட்சி செய்வதை யோசேப்பு கேள்விப்பட்டபோது, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது யோசேப்பு கனவிலே எச்சரிக்கப்பட்டபடியால் அப்பகுதியைவிட்டு கலிலேயா மாவட்டத்திற்குப் போனான். அங்கு நாசரேத் எனப்படும் ஊருக்குச் சென்று அங்கே குடியிருந்தான். எனவே, “இயேசு நசரேயன் என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினர்மூலம் சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது. யோவான் ஸ்நானகன் அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான். “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்’ என்று பாலைவனத்தில் ஒரு குரல் கூப்பிடுகிறது,”3:3 ஏசா. 40:3 என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே. யோவானின் உடைகள் ஒட்டக முடியினால், செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள். அப்பொழுது, அநேக பரிசேயரும் சதுசேயரும்3:7 பரிசேயரும் சதுசேயரும் என்பவர்கள் யூத மதத்தின் இரு பிரிவினர்கள். திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்? நீங்கள் மனந்திரும்பியிருந்தால், அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார்’ என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம். இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது, நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். “நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன்3:11 தகுதியற்றவன் அல்லது அடிமையானவன் என்பதாகும்.. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார். அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான். இயேசுவின் திருமுழுக்கு அப்பொழுது இயேசு, கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார். ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வருகிறீரா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான். அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது” எனப் பதிலளித்தார். அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி, அவர்மேல் அமர்வதைக் கண்டார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் மகன், நான் இவரில் அன்பாயிருக்கிறேன்; இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது. இயேசு சோதிக்கப்படுதல் அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார். இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார். சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது”4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார். பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான். அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்4:6 சங். 91:11,12 என்று எழுதியிருக்கிறதே,’ ” என்றான். அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே”4:7 உபா. 6:16 எனப் பதிலளித்தார். மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.” இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது4:10 உபா. 6:13 என்று சொன்னார். அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள். இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தல் யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்: “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே, இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,”4:16 ஏசா. 9:1,2 என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். இயேசு முதல் சீடர்களை அழைத்தல் இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார். உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசு நோயாளிகளைக் குணமாக்குதல் இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார். இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார். கலிலேயா, தெக்கப்போலி4:25 அதாவது, பத்துப் பட்டணங்கள் எனப்படும் எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். மலைப்பிரசங்கம் இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள், இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். ஆசீர்வதிக்கப்பட்டோர் அவர் சொன்னதாவது: “ஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்கு உரியது. துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள். சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிறைவு பெறுவார்கள். இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனைக் காண்பார்கள். சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள். நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே. “என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். மகிழ்ந்து களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். ஏனெனில், இதைப்போலவே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். உப்பும் ஒளியும் “நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாது, வெளியே வீசப்பட்டு மனிதரால் மிதிக்கப்படும். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்காது. மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே. அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். அதைப் போலவே, உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கட்டும், அப்பொழுது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள். மோசேயின் சட்டம் நிறைவேறுதல் “நான் மோசேயின் சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்கவேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல நிறைவேற்றவே வந்தேன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும், மோசேயின் சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச்சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறிய புள்ளியோ அழிந்துபோகாது. இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்கு போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளை தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் போதிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான். நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்களுடைய நீதியானது, பரிசேயர் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களின் நீதியைவிட மேலானதாய் இருக்கவேண்டும், இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். கொலை செய்யாதே “கொலை செய்யாதே, கொலை செய்கிறவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான்5:21 யாத். 20:13 என்று வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். “அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள். “உங்களது பகைவர் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது. வழியிலேயே அவர்களோடு விரைவாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், அவர்கள் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக்கூடும், நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் தள்ளப்படலாம். உங்களிடத்திலிருக்கும், கடைசி காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்லுகிறேன். விபசாரம் செய்யாதே “ ‘விபசாரம் செய்யாதே’5:27 யாத். 20:14 எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே, அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான். உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. விவாகரத்து “தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும்5:31 உபா. 24:1 என்று சொல்லப்பட்டிருக்கிறது.’ ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான். ஆணையிடுவது “மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள்5:33 எண். 30:2 என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’ ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம்: பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை; பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம். உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ, கருமையாக்கவோ முடியாதே. ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது. பழிவாங்குதல் “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்5:38 யாத். 21:24; லேவி. 24:20; உபா. 19:21 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவர்களுக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள். யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள். உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம். பகைவரிடத்தில் அன்பு காட்டுதல் “உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள்5:43 லேவி. 19:18 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.5:44 சில பிரதிகளில், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றும் இருக்கிறது. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்மேலும், நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்மேலும், அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார். உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி வசூலிப்பவரும்கூட அப்படிச் செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன? இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையா? உங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள். ஏழைகளுக்குக் கொடுத்தல் “நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது. “ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். மன்றாடல் “நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார். நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார். “ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: “ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்கு6:13 சோதனைக்கு என்ற கிரேக்க வார்த்தை பரீட்சைக்கு என்றும் பொருள்படும். உட்படப்பண்ணாமல், எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’6:13 சில மொழிபெயர்ப்பில் இப்பகுதி இல்லை. ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார். ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார். உபவாசம் “நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். பரலோகத்தில் செல்வங்கள் “நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள். ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள். ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும். “கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும். ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்! “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது. கவலை வேண்டாம் “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா? ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா? கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்6:27 நேரத்தைக் கூட்டமுடியும் அல்லது ஒரு முழத்தைக் கூட்டமுடியும் என்பதாகும்.? “உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்? எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும். நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும். தீர்ப்பு அளித்தல் “தீர்ப்புச் செய்யாதிருங்கள், நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். “நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும். “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவை முத்துக்களை மிதித்துவிட்டு, திரும்பி உங்களையும் பீறிப்போடும். கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது. “அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்? அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்! ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும். இடுக்கமான வாசலும் அகன்ற வாசலும் “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள். ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள். மரமும் அதன் கனியும் “பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள். அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை. நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும். இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உண்மையான மற்றும் கள்ள சீடர்கள் “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று, சொல்லுகிற எல்லோரும், பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே அதின் உள்ளே செல்வார்கள். அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள். அப்பொழுது நான் அவர்களிடம், ‘அக்கிரம செய்கைக்காரர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன். இருவகை வீடுகள் “எனவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும், கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான். மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; அப்படி இருந்தும், வீடு விழவில்லை. ஏனெனில் அதன் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருந்தது. ஆனால், எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவன் போலிருப்பான். மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.” இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார். குஷ்ட வியாதியுள்ளவன் சுகமடைதல் இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார், அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து, அவர்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான்.” இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு. “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்று சொன்னார். உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்”8:4 லேவி. 14:1-32 என்றார். நூற்றுக்குத் தலைவனின் விசுவாசம் இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன்8:5 நூறு போர்ச்சேவகர்களுக்கு தலைவன் உதவிகேட்டு அவரிடம் வந்து, “ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான். இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.” நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான். ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை. நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார். அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான். இயேசு அநேகரைக் குணப்படுத்துதல் இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார். இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள். மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார். “அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்”8:17 ஏசா. 53:4 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும். என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது. இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலை தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி, கட்டளையிட்டார். அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்றார். இயேசு புயலை அமைதிப்படுத்துதல் அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள். அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று. அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள். பிசாசு பிடித்த இருவர் குணமடைதல் இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய8:28 கதரேனருடைய என்பது சில கையெழுத்துப் பிரதிகளில் கெர்கெசெனர் என்றும் பிற கையெழுத்துப் பிரதிகளில் கெராசேனர் என்றுமுள்ளது. நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது. பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன. இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய், பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து. அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். இயேசு முடக்குவாதக்காரனைச் சுகப்படுத்துதல் இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார். அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார். இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லி, பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள். மத்தேயு அழைக்கப்படுதல் இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான். பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள். இதைப் பரிசேயர் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார். மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’9:13 ஓசி. 6:6 என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார். உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். “ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும். மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார். இறந்த மகளும் வியாதியான பெண்ணும் இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான். இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார். இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள். மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள். இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது. இயேசு பார்வையற்றோரையும் ஊமையனையும் குணமாக்குதல் இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். “ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார். உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார். ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். வேலையாட்கள் குறைவு இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார். அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். இயேசு பன்னிரண்டு சீடர்களை அனுப்புதல் இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின்10:2 அப்போஸ்தலர்களின் என்பது திருத்தூதர்கள் எனப்படுவார்கள் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்; பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,10:3 ததேயு என்னும் மறுபேருள்ள லெபேயு அல்லது யூதா எனப்படும். கானானியனாகிய சீமோன்10:4 சீமோன் அல்லது செலோத்தே என்றழைக்கப்பட்ட சீமோன் எனப்படும், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே. இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம். இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள். நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள். “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்; பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள். அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள். அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும். யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா10:15 இப்பட்டணங்களைப் பற்றி அறிய ஆதி. 19 பார்க்கவும் பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும். “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள். மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள். என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள். அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார். “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள். என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்! “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன். “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்; ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’10:36 மீகா 7:6 “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இயேசுவும் யோவான் ஸ்நானகனும் இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார். யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான். அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’11:10 மல். 3:1 என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது. “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான். யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது. வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்: “ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன். “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள். மானிடமகனோ11:19 மானிடமகனோ என்பது இயேசு தமக்கு பயன்படுத்திய தனிப்பெயர் விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார். மனந்திரும்பாத பட்டணங்கள் சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும். கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை11:23 மரித்தவரின் இடம் கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார். களைப்புற்றோருக்கு ஆறுதல் அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது. ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது. “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள். “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன். எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.” ஓய்வுநாளின் ஆண்டவர் அக்காலத்தில் ஓய்வுநாளில், இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால், அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் இயேசுவிடம், “இதோ, உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “தாவீதும், அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது. மேலும், ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையா? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆனால், ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்12:7 ஓசி. 6:6’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள். ஏனெனில், மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார். அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள். இறைவன் தெரிந்துகொண்ட ஊழியர் இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார். அவர், தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார். இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்தது: “இவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார்; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார். இவர் வாக்குவாதம் செய்யமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள். நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை, அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார். இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.”12:21 ஏசா. 42:1-4 இயேசுவும் பெயல்செபூலும் அப்பொழுது சிலர், பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், ஊமையுமாய் இருந்தான். இயேசு அவனை குணமாக்கினார்; அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது. மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ?” என்றார்கள். ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான்” என்றார்கள். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது. சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? எனவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் நானோ, பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது. “மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல், எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும்? அவனைக் கட்டிப்போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும். “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது. மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அவர்களுக்கு அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது. இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது. “ஒரு நல்ல மரத்தை நடுங்கள், அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும். ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால், அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரம், அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது. விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான். தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.” யோனாவின் அடையாளம் அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும். நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான். இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார். விதைப்பவனைப் பற்றிய உவமை அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின்13:1 கடலின் கிரேக்க மொழியில் கலிலேயாக் கடல் ஏரி என்றும் சொல்லப்படுகிறது. அருகே உட்கார்ந்திருந்தார். அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும் வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன. ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “ ‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’ ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “ ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள். ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’13:15 ஏசா. 6:9,10 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும். உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை. “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.” களைகளைப் பற்றிய உவமை இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது. எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன. “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள். “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும். அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’ ” கடுகு விதையின் உவமை இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது. அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார். இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ13:33 மூன்றுபடி மாவு மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார். இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை. இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”13:35 சங். 78:2 களைகளைப் பற்றிய உவமையின் விளக்கம் அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே. வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள். அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள். இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். மறைந்திருக்கும் புதையல் “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான். வலையின் உவமை “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள். இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள். “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார். கனம்பெறாத இறைவாக்கினர் இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார். அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள். அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு13:55 யோசேப்பு எனப்பட்ட யோசே, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா? இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி, அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார். அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. யோவான் ஸ்நானகனின் சிரச்சேதம் அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய14:1 இந்த ஏரோது மகா ஏரோதின் மகனாகிய அந்திபாஸ் நான்கில் ஒரு பகுதியை ஆட்சிசெய்தான். ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். ஏரோது தனது வேலைக்காரர்களிடம், “அவன் யோவான் ஸ்நானகனே; அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான்! அதனாலேயே, அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது” என்று சொன்னான். தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே, ஏரோது யோவானைக் கைதுசெய்து, அவனைக் கட்டி, சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம்: “அவளை நீ வைத்திருப்பது சட்டத்திற்கு மாறானது” என்று சொல்லியிருந்தான். ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான். ஆனால் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் அவனை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள். ஏரோதின் பிறந்தநாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனால் தனது ஆணையின் நிமித்தமும், தனது விருந்தினர்களின் நிமித்தமும், அவன் அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி உத்தரவிட்டான். அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது. அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறுமியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோனாள். அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள். இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது, யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் நோயுள்ளவர்களைக் குணமாக்கினார். மாலை வேளையானபோது, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இது சற்று தூரமான ஒரு இடம். ஏற்கெனவே நேரமாகிவிட்டது. மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள். அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். “இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள். “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். இயேசு தண்ணீர்மேல் நடந்தது பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார். அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்” என்றார். அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “வா” என்றார். அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார். “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று. படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்!” என்றார்கள். அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டபோது, சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். அவர்களோ, தங்களில் நோயாளிகளை எல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள். சுத்தமும் அசுத்தமும் பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’15:4 யாத். 20:12; உபா. 5:16 என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’15:4 யாத். 21:17; லேவி. 20:9 என்றும், இறைவன் சொன்னாரே. ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள். வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்;15:9 ஏசா. 29:13 அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே’ ” என்றார். பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்து சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக்கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்றார்கள். அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும். அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடனுக்கு வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார். அப்பொழுது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளாதவர்களாய் இருக்கிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார். “வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய் உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா? ஆனால் வாயிலிருந்து வெளியே வருகிறவைகள் இருதயத்திலிருந்து வந்து மனிதரை அசுத்தப்படுத்தும். ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, விபசாரம், முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச்சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன. இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கை கழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார். கானானியப் பெண்ணின் விசுவாசம் இயேசு அவ்விடம் விட்டு தீரு, சீதோன் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள். ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார். அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள். இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள். அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள். இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளித்தல் இயேசு அவ்விடம் விட்டு, கலிலேயா கடலருகே வந்தார். அங்கே அவர் ஒரு மலைப்பகுதிக்கு ஏறிச்சென்று உட்கார்ந்தார். மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் முடவரையும், பார்வையற்றோரையும், அங்கவீனரையும், ஊமையரையும், அவர்களுடன் மற்ற அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; இயேசு அவர்களை குணமாக்கினார். ஊமையர் பேசுவதையும், அங்கவீனர் சுகமடைவதையும், முடவர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள். இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களைப் பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார். அவரது சீடர்கள் அவரிடம், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுக்கத் தேவையான உணவை சற்று தூரமான இந்த இடத்திலே எங்கிருந்து பெறமுடியும்?” என்று கேட்டார்கள். “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள். இயேசு மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத்தவிர பெண்களும், பிள்ளைகளுங்கூட இருந்தார்கள். இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார். யூதத்தலைவர்கள் அடையாளம் கேட்டல் பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து,16:1 மூல மொழியில் பரலோகம் மற்றும் வானம் இவ்விரண்டிற்கும் ஒரே வார்த்தையாகும். வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள். இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள். காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே. இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். பரிசேயர் சதுசேயரின் புளிப்புச்சத்து அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளிப்புச்சத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். “இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள். நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்? அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்? இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார். அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள். பேதுருவின் அறிக்கை இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான். அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால்16:17 மூல மொழியில் மாம்சமும் இரத்தமும் என்றுள்ளது. வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு16:18 பேதுரு என்ற கிரேக்க வார்த்தைக்கு பாறை என்று அர்த்தம்., இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார். அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார். இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல் அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன். “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார். இயேசு மறுரூபமாகுதல் ஆறு நாட்களுக்குப்பின், இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தன்னுடன் தனியாய்க் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார். அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக மாறின. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவர்களுக்குமுன் தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான். பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது. சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார். அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார். சீடர்கள் அவரிடம், “அப்படியானால், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் முதலில் எலியா வரவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?” எனக் கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டான். அவர்கள் அவனை இன்னாரென அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள். அதைப் போலவே, மானிடமகன் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகிறார்” என்று சொன்னார். அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள். பிசாசு பிடித்தவன் குணமாக்கப்படுதல் மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான். நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான். “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார். இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் அதற்குக் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.17:21 சில கையெழுத்துப் பிரதிகளில் மாற். 9:29 க்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருக்கும். இயேசு தமது மரணத்தை இரண்டாம்முறை அறிவித்தல் அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள். ஆலய வரி இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை17:24 ஒரு திராக்மா என்பது ஒரு நாள் கூலிக்குச் சமமான கிரேக்க வெள்ளி நாணயம். வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள். “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார். “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே? ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’17:27 இந்த ஒரு வெள்ளிக்காசு பிற்காலத்தில் நான்கு திராக்மாவுக்கு சமமாகக் கருதப்பட்டது. வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார். பரலோக அரசில் யார் பெரியவன் அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார். “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான். பாவம் செய்யப்பண்ணுதல் “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ! உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. வழிதப்பிய ஆட்டைப்பற்றிய உவமைக் கதை “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.18:11 சில கையெழுத்துப் பிரதிகளில் லூக். 19:10 இல் இருக்கிற வார்த்தைகள் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ? நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல. பாவம் செய்யும் சகோதரர்கள் “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய். ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.18:16 உபா. 19:15 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து. “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும். ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார். இரக்கமற்ற வேலையாள் அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான். இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார். “பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது. அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள்18:24 பத்து கோடி பொற்காசுகள் என்பது மூல பாஷையில் பத்தாயிரம் தாலந்து. கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான். “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான். வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான். “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான். “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான். “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள். “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான். “நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார். விவாகரத்து இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார். மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார். சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’19:4 ஆதி. 1:27 என்பதை நீங்கள் வாசித்ததில்லையா” இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்19:5 ஆதி. 2:24. எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார். சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார். சிறுபிள்ளைகளும் இயேசுவும் அதற்குப் பின்பு சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று, அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ, அவர்களைக் கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள். இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது” என்றார். அவர் பிள்ளைகள்மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். செல்வந்தனான வாலிபன் அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். “நல்லது என்ன என்பதைப்பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே இருக்கிறார். நீ வாழ்விற்குள் செல்லவேண்டுமானால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார். “எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். இயேசு அதற்குப் பதிலாக, “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட,19:19 யாத். 20:12-16; உபா. 5:16-20 உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிடம் அன்பாய் இரு என்பவைகளே” என்றார்.19:19 லேவி. 19:18 அதற்கு அந்த வாலிபன், “இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன், இன்னும் எனக்கு என்ன குறைபாடு?” என்றான். இயேசு அதற்கு பதிலாக, “நீ குறைபாடற்றவனாய் இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிப்போனான். ஏனெனில் அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தான். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது. மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்” என்றார். இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார். பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிடமகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள். என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர் கடைசியாகவும், கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாயும் இருப்பார்கள்” என்றார். திராட்சைத் தோட்ட வேலையாட்கள் “பரலோக அரசு நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் தனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்கென அதிகாலையிலே புறப்பட்டுபோய், கூலியாட்களை கூலிக்கு அமர்த்தியவனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசைக்20:2 தெனாரியம் என்பது கூலியாளின் ஒரு நாள் சம்பளம். கொடுப்பதற்கு உடன்பட்டு, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான். “விடிந்த பின்பு கிட்டத்தட்ட காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறுசிலர் சந்தைகூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். அப்படியே அவர்களும் சென்றார்கள். “அவன் மீண்டும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் மூன்றுமணிக்கும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்புபோலவே செய்தான். கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதுமாக ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான். “அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள். “அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்யுங்கள்’ என்றான். “மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களைக் கூப்பிட்டு, அவர்களுடைய நாள் கூலியைக் கொடு. கடைசியில் வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுக்குக் கூலி கொடு’ என்றான். “மாலை ஐந்து மணிக்குப்பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழு நாளுக்குரிய வெள்ளிக்காசைப் பெற்றார்கள். எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளிக்காசையே நாள் கூலியாகப் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒருமணி நேரம் மட்டுமே வேலைசெய்தார்கள், நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; நீர் அவர்களையும் எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள். “நிலத்தின் சொந்தக்காரன் அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு வெள்ளிக்காசுக்கு வேலைசெய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா? உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்ததுபோலவே நான் கொடுக்க விரும்புகிறேன். எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கிறேன் என்பதால் நீ எரிச்சல் அடையலாமா?’ என்றான். “அப்படியே கடைசியாக இருக்கும் பலர் முதலாவதாகவும், முதலாவதாக இருக்கும் பலர் கடைசியாகவும் இருப்பார்கள்” என்றார். இயேசு தமது மரணத்தை மூன்றாம்முறை முன்னறிவித்தல் இயேசு எருசலேமை நோக்கிப் போகையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்குச் சொன்னதாவது: “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள். என்னை ஏளனம் செய்து சவுக்கால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும் நான் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பேன்!” ஒரு தாயின் வேண்டுகோள் அப்பொழுது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய் தனது மகன்களைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வந்தாள். அவள் முழங்காற்படியிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள். “நீ விரும்புவது என்ன?” என்று அவர் அவளிடம் கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்கவேண்டும்” என்றாள். இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கப்போகும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் யாருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார். இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள். இயேசு அவர்களை ஒன்றாகக் கிட்ட அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும். முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும். மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும் பொருட்டாக என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார். பார்வையற்றோர் இருவர் பார்வை பெறுதல் இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அந்த வீதியின் அருகே பார்வையற்றோர் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டார்கள். மக்கள் கூட்டமோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படிச் சொன்னார்கள். ஆனால் பார்வையற்றோர், “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று இன்னும் அதிகமாய்ச் சத்தமிட்டார்கள். இயேசு நின்று அவர்களைக் கூப்பிட்டார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெறவிரும்புகிறோம்” என்றார்கள். இயேசு அவர்கள்மேல் மனதுருகி, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, அவர்களும் இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள். இயேசு எருசலேமுக்கு அரசராக வருகிறார் அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே ஊருக்கு வந்தபோது, இயேசு இரண்டு சீடர்களை அனுப்பிச் சொன்னதாவது: “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை கர்த்தருக்கு தேவை’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பிவிடுவான்” என்றார். இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது: “சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார், தாழ்மையுள்ள அவர் கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் அமர்ந்து வருகிறார்.”21:5 சக. 9:9 சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு அறிவுறுத்தியபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்தார்கள். அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டதும், இயேசு அதன்மேல் ஏறி உட்கார்ந்தார். திரளான மக்கள் கூட்டம் வழியில் தங்களுடைய மேலுடைகளை வீதியில் விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். அவருக்கு முன்னும், பின்னுமாகச் சென்ற மக்கள் கூட்டம்: “தாவீதின் மகனுக்கு ஓசன்னா21:9 சங். 118:25,26!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள். இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் கூட்டம் அதற்குப் பதிலாக, “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” என்றார்கள். ஆலயத்தில் இயேசு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களுமாகிய எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயம் மாற்றுவோரின் மேஜைகளையும், புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது21:13 ஏசா. 56:7. ஆனால் நீங்கள், அதைக் கள்வரின் குகையாக்குகிறீர்கள்”21:13 எரே. 7:11 என்றார். பார்வையற்றோரும் முடவரும் ஆலயத்தில் இயேசுவிடம் வந்தார்கள். அவர் அவர்களை குணமாக்கினார். அவர் செய்த இந்த புதுமையான காரியங்களையும், சிறுபிள்ளைகள் ஆலய முற்றத்திற்குள் நின்று, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆர்ப்பரிப்பதையும், தலைமை ஆசாரியரும் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “இந்தப் பிள்ளைகள் சொல்வது கேட்கிறதா?” என்றார்கள். இயேசு அதற்கு பதிலாக, “ஆம், “ ‘சிறுபிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின் உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்,’21:16 சங். 8:2 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும். என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவு தங்கினார். பட்டுப்போன அத்திமரம் மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார். வீதி அருகே ஒரு அத்திமரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்பொழுது இயேசு, “நீ இனி ஒருபோதும் கனி கொடாதிருப்பாயாக!” என்று அதனிடம் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப்போயிற்று. சீடர்கள் இதைக்கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்திமரம் எப்படிப் பட்டுப்போயிற்று?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்திமரத்துக்குச் செய்யப்பட்டதுபோல உங்களாலும் செய்யமுடியும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொன்னால், அதுவும் அப்படியே நடக்கும். நீங்கள் விசுவாசித்தால், மன்றாட்டில் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார். இயேசுவின் அதிகாரத்தைக் குறித்த கேள்வி இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தலைமை ஆசாரியர்களும் யூதரின் தலைவர்களும் அவரிடத்தில் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக் கொண்டு, நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார். “யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார். அவர்கள் இதைக்குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார். மனிதரிடமிருந்து என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.” எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். பின்பு இயேசு அவர்களிடம், “அப்படியானால், இந்தக் காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார். இரண்டு மகன்களின் உவமை “பின்பு இயேசு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்’ என்றான். “அதற்கு அவன், ‘நான் போகமாட்டேன்’ என்றான், ஆனால் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு வேலைசெய்யப்போனான். “பின்பு அந்தத் தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகிறேன் என்றான்.’ ஆனால் அவன் போகவில்லை. “இவ்விருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தான்?” என்று கேட்டார். “மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் செல்வார்கள். ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள். அதைக்கண்ட பின்பும், நீங்கள் மனந்திரும்பி அவனை விசுவாசிக்கவில்லை. குத்தகைக்காரன் உவமை “மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலத்தின் உரிமையாளன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும் ஒரு காவல் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான். அறுவடைக்காலம் வந்தபோது, அவன் தனது வேலைக்காரர்களிடம் தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி குத்தகைக்காரரிடம் அனுப்பினான். “குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலைசெய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள். பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பினவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, அவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள். அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான். “ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளன். வாருங்கள், இவனைக் கொலைசெய்து, இவனுடைய உரிமைச்சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள். “ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளன் வரும்போது, அந்த குத்தகைக்காரரை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களை கொடுமையாக அழித்துப் போட்டு திராட்சைத் தோட்டத்தையும் அறுவடைக்காலத்தில் விளைச்சலில் தனக்குரிய பங்கைத் தனக்குக் கொடுக்கக்கூடிய, வேறு குத்தகைக்காரருக்குக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள். இயேசு அவர்களிடம், “ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’ என்ற நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?21:42 சங். 118:22,23 “ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்படும். அது அதற்கேற்ற கனிகொடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார். தலைமை ஆசாரியர்களும், பரிசேயரும் இயேசுவின் உவமையைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகிறார் என்று அறிந்துகொண்டார்கள். எனவே, அவர்கள் அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஆனால் மக்கள் அவரை ஒரு இறைவாக்கினர் என்று எண்ணியிருந்தபடியால், அவர்கள் அந்த மக்கள் கூட்டத்திற்குப் பயந்தார்கள். திருமண விருந்து பற்றிய உவமை மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது: “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள். “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து22:4 எருதுகளும் கொழுத்தக் காளைகளும். உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான். “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான். மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான். “பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள். இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான். எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது. “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான். அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான். “அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான். “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.” வரி செலுத்துவதைப்பற்றிய கேள்வி பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள். பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள். ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள். உயிர்த்தெழுதலில் திருமணம் அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள். “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் இறந்தவனுடைய மனைவியைத் திருமணம் செய்து, இறந்தவனுக்காகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்துபோனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்கு விட்டுப்போனான். அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள். கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள். இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’22:32 யாத். 3:6 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார். மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள். மிகப்பெரிய கட்டளை இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான். இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.22:37 உபா. 6:5 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.22:39 லேவி. 19:18 முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார். கிறிஸ்து யாருடைய மகன்? பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது, “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’  என்று சொல்லியிருக்கிறாரே.22:44 சங். 110:1 தாவீது அவரைக் ‘கர்த்தர்,’ என்று அழைத்தான். அப்படியிருக்க கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்று கேட்டார். அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை. யூத மார்க்கத் தலைவர்களும் இயேசுவும் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது: “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்யவேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை. அவர்கள் பாரமான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்கள்மேல் வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்குத் தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கிறார்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயர்களும் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் தொங்கல்களை நீளமாக்குகிறார்கள்; அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும், மக்கள் தங்களை ‘போதகர்’ என்று அழைப்பதையும் விரும்புகிறார்கள். “நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கிறீர்கள். பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே. உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணிசெய்கிறவராய் இருக்கவேண்டும். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மோசேயின் சட்ட ஆசிரியர்கள், பரிசேயர்களுக்கு ஐயோ “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் பரலோக அரசின் கதவுகளை மனிதரின் முகத்திலடித்தாற்போல் மூடிவிடுகிறீர்கள். நீங்களும் அதற்குள் செல்வதில்லை. செல்ல விரும்புகிறவர்களையும் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள். மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ, நீங்கள் விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள். ஆனால் மக்கள் காணவேண்டும் என்பதற்காக நீண்டநேரம் மன்றாடுகிறீர்கள். இதனால் நீங்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள்.23:14 சில கையெழுத்துப் பிரதிகளில் மாற். 12:40 மற்றும் லூக். 20:47 க்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். “குருடான வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ! ‘யாராவது ஆலயத்தின்பேரில் சத்தியம் பண்ணினால், அது பரவாயில்லை என்கிறீர்கள்; ஆனால் யாராவது ஆலயத்திலுள்ள தங்கத்தின்மேல் சத்தியம் பண்ணினால், அதைச் செலுத்தியே தீரவேண்டும்’ என்கிறீர்கள். குருடான முட்டாள்களே! தங்கமா, தங்கத்தைப் புனிதமாக்கும் ஆலயமா, எது பெரியது? மேலும் நீங்கள், ‘யாராவது பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்தால், அது பரவாயில்லை; ஆனால் யாராவது பலிபீடத்தின் மேலுள்ள காணிக்கையின் பேரில் சத்தியம் பண்ணினால், அவர்கள் அதைச் செலுத்தியே ஆகவேண்டும்’ என்கிறீர்கள். குருட்டு மனிதரே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது? எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர்கள் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன்மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கிறார்கள். ஆலயத்தின்பேரில் சத்தியம் செய்பவர்கள் ஆலயத்தைக் கொண்டு மட்டுமல்ல, ஆலயத்தில் குடிகொண்டிருப்பவரைக் கொண்டே சத்தியம் செய்கிறார்கள். வானத்தின் பேரில் சத்தியம் செய்கிறவர்கள் இறைவனின் அரியணையைக் கொண்டும், அதில் அமர்ந்திருக்கும் அவரைக் கொண்டும் சத்தியம் செய்கிறார்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, வெந்தயம், சீரகம் ஆகிய வாசனைச் பொருட்களிலிருந்து பத்திலொன்றை காணிக்கையாகக் கொடுக்கிறீர்கள். ஆனால் மோசேயின் சட்டத்தின் மிக முக்கிய காரியங்களான நீதி, இரக்கம், உண்மைத்தனம் ஆகியவற்றை உதாசீனம் செய்துவிட்டீர்கள். உண்மையாய் இவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றையும் கைவிடாதிருக்க வேண்டும். குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, உணவு பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ, நீங்கள் உங்கள் கொள்ளையினாலும் சுய ஆசைகளினாலும் நிரம்பியிருக்கிறீர்கள். குருடான பரிசேயரே! முதலில் உணவு பாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது அவற்றின் வெளிப்புறமும் சுத்தமாயிருக்கும். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கிறீர்கள், அவை வெளியே அழகாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உட்புறமோ இறந்தவர்களின் எலும்புகளினாலும், அசுத்தமான எல்லாவற்றினாலும் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ! நீங்கள் இறைவாக்கினர்களுக்காக, கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் நினைவுச் சின்னங்களை அலங்கரிக்கிறீர்கள். ‘எங்கள் முற்பிதாக்களின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், இறைவாக்கினரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு, நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாய் இருந்திருக்கமாட்டோம்’ என்றும் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலைசெய்தவர்களின் தலைமுறையினர் என்பதற்கு நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள். ஆகவே, நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் தொடங்கிய பாவத்தைச் செய்து முடியுங்கள். “பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? ஆகவே நான் இறைவாக்கினரையும், ஞானமுள்ளவர்களையும், ஆசிரியர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்வீர்கள்; மற்றவர்களை உங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடித்து, பட்டணங்கள்தோறும் துரத்திச்சென்று துன்பப்படுத்துவீர்கள். அப்படியே பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்கள் எல்லோரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வரும்; நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி, ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நீங்கள் கொலைசெய்த, பரக்கியாவின் மகன் சகரியாவின் இரத்தம் வரைக்கும், எல்லாம் உங்கள்மேல் வரும். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவை எல்லாம் இந்தத் தலைமுறையினர்மேல் வந்தே தீரும். “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே. இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார்.23:39 சங். 118:26 கடைசிக்கால அடையாளங்கள் இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்குள்ள ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார். இயேசு ஒலிவமலையின்மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடத்தில் வந்து, “எப்பொழுது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் ஏமாற்றாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில் ‘நானே கிறிஸ்து,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வருவார்கள். அவர்கள் பலரை ஏமாற்றுவார்கள். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு. நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசிற்கு விரோதமாய் அரசு எழும்பும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே. “அப்பொழுது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் நிமித்தம் நீங்கள் எல்லா ஜனங்களாலும் வெறுக்கப்படுவீர்கள். அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். ஒருவரையொருவர் அவர்கள் காட்டிக்கொடுக்கிறவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். அநேக பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள். அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். ஆனால் முடிவுவரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். இறை அரசின் இந்த நற்செய்தி முழு உலகமும் அறியும்படி எல்லா ஜனங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். அதற்குப் பின்பே முடிவுவரும். “எனவே இறைவாக்கினன் தானியேல் மூலம் சொல்லப்பட்ட, ‘பாழாக்குகிற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்கிறதை நீங்கள் காணும்பொழுது,24:15 தானி. 9:27; 11:31; 12:11 வாசிக்கிற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் கூரைமேல் இருக்கிற எவனும், வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகாதிருக்கட்டும். வயலில் இருக்கும் யாரும், தனது மேலுடையை எடுத்துக்கொள்ளும்படி திரும்பிப் போகாதிருக்கட்டும். அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நீங்கள் ஓடிப்போவது குளிர்க்காலத்தில் அல்லது ஓய்வுநாளில் நேரிடாதபடி ஜெபம் பண்ணுங்கள். ஏனெனில், உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டிருக்காத பெரும் துன்பம் அக்காலத்தில் ஏற்படும். அதற்குப் பின்பு ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது. “அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவரும் தப்பமாட்டார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தம், அந்த நாட்கள் குறைக்கப்படும். அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம். ஏனெனில் பொய் கிறிஸ்துக்களும் பொய் தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள். முடியுமானால், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன். “ஆகவே யாராவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைவனத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள்ளறையில் இருக்கிறார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள். ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மானிடமகனாகிய என்னுடைய வருகையும் இருக்கும். எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும். “அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’24:29 ஏசா. 13:10; 34:4 “அவ்வேளையில், மானிடமகனாகிய நான் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் புலம்புவார்கள். மானிடமகனாகிய நான் அதிகாரத்துடனும், மிக்க மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள்மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள்.24:30 தானி. 7:13-14. நான் என் தூதர்களை சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்பி, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்து சேர்த்துக்கொள்வேன். “இப்பொழுது அத்திமரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. முடிவு நாள் “அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார். நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது வருகையின் நாட்களிலும் இருக்கும். ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும்வரைக்கும் மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போகும்வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப்போலவே, மானிடமகனாகிய எனது வருகையின் போதும் இருக்கும். இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். இரண்டு பெண்கள் திரிகைக் கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். “ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே. நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து தன் வீட்டைத் திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில், மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன். “அப்படியானால் உண்மையும் ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைக் கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த வேலைக்காரன். தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவன் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான். ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தனது உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, வேஷக்காரருக்குரிய இடத்தில் தள்ளிவிடுவான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.” பத்துக் கன்னிகைகளின் உவமை “அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள். மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள். “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது. “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள். புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள். “அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள். “புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது. “பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள். “ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார். “எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார். பொற்காசுகளின் உவமை “மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும். ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும்25:15 ஒரு பொற்காசு என்பது மூல மொழியில் உவமை முழுவதிலும் தாலந்து என்றுள்ளது; ஒரு தாலந்து என்பது சுமார் 34 கிலோகிராம். கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான். அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான். ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான். “நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான். ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான். “பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன். எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான். “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான். “அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள். ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான். செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் “மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன். எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன். நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன். “அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்; நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார். “அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள். “அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன். “பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’ ” என்று சொல்வேன். ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை; நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார். “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். “அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன். “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம் இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது: “நீங்கள் அறிந்திருக்கிறபடி, பஸ்கா என்ற பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. அப்பொழுது மானிடமகனாகிய நான் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள். அவர்கள் ஏதாவது தந்திரமான முறையில் இயேசுவைக் கைதுசெய்து, கொலைசெய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஆனாலும் பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம் என்று சொல்லிக்கொண்டார்கள். சீமோன் வீட்டில் இயேசு இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அவரிடத்தில் வந்தாள். அவர் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். சீடர்கள் இதைக் கண்டபோது ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்செலவு? இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இயேசு இதை அறிந்து அவர்களிடம், “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தக் காரியத்தை எனக்கு செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்,26:11 உபா. 15:11 ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். இவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, என் அடக்கத்திற்கு ஆயத்தமாகவே இதைச் செய்தாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய நினைவாகச் சொல்லப்படும்” என்றார். இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் உடன்படுதல் பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய், “நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அவ்வேளையிலிருந்து யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். சீடர்களுடன் பஸ்கா என்ற விருந்து புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கிறதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவைக் கொண்டாடப் போகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றார். இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவன்பின் ஒருவனாக அவரிடம், “ஆண்டவரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னோடுகூட கை போட்டவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அப்பொழுது இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக நீர் என்னைக் குறிக்கவில்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீயே அதை சொல்லிவிட்டாயே!” என்று பதிலளித்தார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதை வாங்கிச் சாப்பிடுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரைக்கும், இந்த திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள். பேதுரு மறுதலிக்கப் போவதை இயேசு முன்னறிவித்தல் அப்பொழுது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், “ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன். அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’26:31 சக. 13:7 என்று எழுதியிருக்கிறது. “ஆனால் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்” என்றான். இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார். ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் சாகவேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள். கெத்செமனேயில் இயேசு பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்குபோய் மன்றாடும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார். இயேசு பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றார். பின்பு அவர் மிகவும் துயரமுற்றுக் கலங்கத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “என் ஆத்துமா மரணத்திற்கேதுவான துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார். இயேசு சற்றுத் தூரமாய்ப் போய்த் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது” என்று மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்தபோது, அவர்கள் நித்திரையாயிருப்பதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “ஒருமணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார். “விழித்திருந்து மன்றாடுங்கள், அப்பொழுது நீங்கள் சோதனைக்குள் விழமாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார். இயேசு இரண்டாவது முறையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது” என்று மன்றாடினார். இயேசு திரும்பவும் வந்தபோது சீடர்கள் மீண்டும் நித்திரையாயிருப்பதை அவர் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன. எனவே இயேசு அவர்களைவிட்டு விலகிப்போய், திரும்பவும் மூன்றாவது முறையாக அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் திரும்பிவந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? இதோ பாருங்கள், வேளை வந்துவிட்டது. மானிடமகனாகிய நான் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். எழுந்திருங்கள், நாம் போவோம்! என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ வருகிறான்!” என்றார். இயேசு கைதுசெய்யப்படுதல் இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு பெருங்கூட்டம் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது. இவர்கள் தலைமை ஆசாரியர்களாலும் யூதரின் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்தான்: “நான் முத்தமிடுகிறவனே, அந்த மனிதர்; அவரைக் கைதுசெய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான். இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்!” என்றார். அப்பொழுது அவனுடன் வந்தவர்கள் முன்னேவந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள். அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதை வெட்டினான். இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள். என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான தூதர் சேனையை அனுப்புவார் அல்லவா? ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். அவ்வேளையில் இயேசு அந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும், வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்பொழுது நீங்கள் என்னைக் கைதுசெய்யவில்லை. ஆனால் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவையெல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்கள் எல்லோரும் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். நீதிமன்றத்தில் இயேசு இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைப் பிரதான ஆசாரியன் காய்பாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மோசேயின் சட்ட ஆசிரியர்களும் யூதரின் தலைவர்களும் கூடியிருந்தார்கள். பேதுரு சிறிது தூரத்தில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், பிரதான ஆசாரியனுடைய முற்றம் வரைக்கும் போனான். அவன் உள்ளேப் போய் நடக்கப்போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான். தலைமை ஆசாரியர்களும், ஆலோசனைச் சங்கத்தில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிரான சாட்சியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பொய் சாட்சிகள் முன்வந்தார்கள். அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நின்று இயேசுவிடம், “பதில் சொல்லமாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கிற சாட்சி என்ன?” கேட்டான். ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். பிரதான ஆசாரியன் அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கிறேன்: நீ இறைவனின் மகனான கிறிஸ்து என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கிறபடிதான்; ஆனால் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்: இதுமுதல் மானிடமகனாகிய நான் வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்”26:64 சங். 110:1; தானி. 7:13. என்றார். அப்பொழுது பிரதான ஆசாரியன் தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகிறான்! இனியும் நமக்குச் சாட்சிகள் வேண்டுமோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் இப்பொழுது கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள். பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, “கிறிஸ்துவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள். பேதுரு இயேசுவை மறுதலித்தல் பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள். அதற்கு அவன், “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அவரை மறுதலித்தான். பின்பு பேதுரு வெளியே முற்ற வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரி அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள். அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள். அப்பொழுது பேதுரு, “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது. “சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவுகூர்ந்தான். அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான். யூதாஸின் தற்கொலை மறுநாள் அதிகாலையில் தலைமை ஆசாரியர்களும் ஜனத்தின் தலைவர்களும், இயேசுவை மரண தண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். இயேசுவை கட்டிக் கொண்டுபோய், ஆளுநர் பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டபோது மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுத்த முப்பது வெள்ளிக்காசை தலைமை ஆசாரியரிடமும் யூதரின் தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். அவன் அவர்களிடம், “குற்றமற்ற இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கு என்ன? அது உன் பாடு” என்றார்கள். எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போனான். அவன் போய், தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொண்டு செத்தான். தலைமை ஆசாரியர் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப்பழியுள்ள பணம். ஆகையால் இதைக் காணிக்கையில் சேர்ப்பது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள். எனவே அவர்கள் அந்தப் பணத்தைக்கொண்டு, குயவனின் வயலை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள். அந்நிலத்தை அந்நியரை அடக்கம் செய்யும் இடமாக ஒதுக்கிவைத்தார்கள். அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்தநிலம்” என்று அழைக்கப்படுகிறது. இதனால் இறைவாக்கினன் எரேமியாவினால் கூறப்பட்டது நிறைவேறியது: “அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எடுத்தார்கள். அதுவே இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலை. கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்.”27:10 சக. 11:12,13; எரே. 19:1-13; 32:6-9. பிலாத்துவுக்கு முன் இயேசு இயேசுவைக் கொண்டுவந்து ஆளுநர் முன்னால் நிறுத்தினார்கள். ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார். ஆனால் தலைமை ஆசாரியர்களாலும் மற்றும் யூதரின் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்ட போது அவர் பதில் ஒன்றும் கொடுக்கவில்லை. அப்பொழுது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான். ஆனால் இயேசு ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுமொழியாக எந்த ஒரு பதிலும் சொல்லாதது ஆளுநனை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. பண்டிகை நாளில் மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநனின் வழக்கமாயிருந்தது. அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி இருந்தான். எனவே காலையில் ஆளுநனின் வீட்டிற்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்யவேண்டும்: பரபாஸையா அல்லது கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டான். ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது பிலாத்துவுக்குத் தெரியும். பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்த குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில் அவர் நிமித்தம் நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள். ஆனால் தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யும்படியும், இயேசுவைக் கொலை செய்யும்படியும் கேட்பதற்காக, மக்களைத் தூண்டிவிட்டார்கள். “இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?” என ஆளுநன் கேட்டான். “பரபாஸை” என அவர்கள் பதிலளித்தார்கள். “அப்படியானால், கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள். “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள். தனது முயற்சியால் பயன் இல்லை என்றும், ஒரு புரட்சி எழும்புவதையும் பிலாத்து கண்டான்; எனவே அவன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மக்களுக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப்பழிக்கு நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான். அதற்கு எல்லா மக்களும், “அவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமரட்டும்” என்றார்கள். அப்பொழுது பரபாஸை அவர்களுக்காக பிலாத்து விடுதலையாக்கி, இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல் அதற்குப் பின்பு ஆளுநனின் படைவீரர்கள், இயேசுவைத் தங்கள் தலைமையகத்துக்குக் கொண்டுபோய், அவரைச் சுற்றி எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள். அங்கே அவர்கள் இயேசுவின் உடைகளைக் கழற்றி, கருஞ்சிவப்பு மேலுடையை அவருக்கு உடுத்தினார்கள். அவர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து, அதை இயேசுவின் தலையின்மேல் வைத்தார்கள். அவர்கள் அவரது வலதுகையில் ஒரு தடியைக் கொடுத்து, அவர் முன்னால் முழங்காற்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள். அவர்மேல் துப்பி, தடியை எடுத்து அவரைத் தலையில் திரும்பத்திரும்ப அடித்தார்கள். அவர்கள் இயேசுவை ஏளனம் செய்தபின், அந்த உடையைக் கழற்றிவிட்டு அவரது உடையை உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படிக்குக் கொண்டுபோனார்கள். இயேசுவை சிலுவையில் அறைதல் அவர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும். அங்கே அவர்கள் இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதை ருசி பார்த்தபின் குடிக்க மறுத்தார். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபின், அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். “அவர்கள் எனது உடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, எனது உடைகளுக்காக சீட்டுப்போட்டார்கள்” என்று இறைவாக்கினனால் கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. பின்பு அவர்கள் அங்கே உட்கார்ந்து, இயேசுவைக் காவல் காத்தார்கள். அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: இவர் இயேசு, யூதரின் அரசன். அவருடன் இரண்டு கள்வர்கள், ஒருவன் வலதுபக்கத்திலும் மற்றொருவன் இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறையப்பட்டிருந்தார்கள். அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, அவரைப் பழித்துரைத்தார்கள். அவர்கள், “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாட்களில் கட்டுவேன் என்று சொன்னவனே, உன்னை நீயே விடுவித்துக்கொள்! நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்று பழித்துரைத்தார்கள். அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், தலைவர்களும், அவரை ஏளனம் செய்தார்கள். மேலும் அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இவன் இஸ்ரயேலுக்கு அரசன்! இவன் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்பொழுது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம். இவன் இறைவனைச் சார்ந்து இருக்கிறான். ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனுக்கு விருப்பமானால், இப்பொழுது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள். அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். இயேசுவின் மரணம் நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. பிற்பகல் மூன்றுமணியளவில், இயேசு பலத்த சத்தமிட்டு, “ஏலீ, ஏலீ27:46 சில கையெழுத்துப் பிரதிகளில் ஏலாய், ஏலாய் என்றுள்ளது., லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கூப்பிட்டார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதே அதன் அர்த்தமாகும்.27:46 சங். 22:1 அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு தவறாக விளங்கிக்கொண்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்!” என்றார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். மற்றவர்களோ, “அவனைவிட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகிறானா பார்ப்போம்” என்றார்கள். இயேசு மீண்டும் பலத்த சத்தமிட்டுக் கூப்பிட்ட பின்பு, தமது ஆவியை விட்டார். அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன; கல்லறைகளும் நொறுங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிருடன் எழுந்திருந்தன. அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு உயிருடன் எழுந்தபின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள். இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்குத் தலைவனும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள். பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள். இயேசுவை அடக்கம் செய்தல் மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான். யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி, அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான். அப்பொழுது மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள். கல்லறைக்கு காவல் மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள். அவர்கள் அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்குபின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிருக்கிறது. ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அவனது சீடர்கள் ஒருவேளை வந்து அந்த உடலைத் திருடிச் சென்றுவிட்டு, இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்துவிட்டான் என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்தின ஏமாற்று வேலையைவிட பிந்தினது மோசமானதாயிருக்கும்” என்றார்கள். அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் கூட்டிக்கொண்டுபோய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான். எனவே அவர்கள் போய், கல்லறை வாசற்கல்லின்மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள். இயேசு உயிர்த்தெழுதல் ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கும்படி சென்றார்கள். அப்பொழுது திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லைப் புரட்டித் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்திருந்தான்: இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடைகள் உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. காவல் செய்த அந்தக் காவலாளர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கிச் செத்தவர்கள் போலானார்கள். அப்பொழுது இறைத்தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். “நீங்கள் விரைவாகப் போய், அவருடைய சீடர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார், உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்.’ இதோ நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றும் சொன்னான். எனவே, அந்தப் பெண்கள் பயமடைந்தவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் கல்லறையைவிட்டு விரைந்து, நடந்ததை சீடர்களிடம் சொல்லும்படி ஓடினார்கள். ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடமாய் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப்பிடித்து, அவரை வழிபட்டார்கள். இயேசு அவர்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார். காவலாளரின் அறிக்கை அந்தப் பெண்கள் வழியில் போய்க்கொண்டிருக்கையில், அந்தக் காவலாளர்களில் சிலர் பட்டணத்திற்குள் போய், தலைமை ஆசாரியர்களிடம் நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். தலைமை ஆசாரியர் யூதரின் தலைவர்களைச் சந்தித்து, திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்தப் படை வீரர்களுக்கு ஒரு பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து, “நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டார்கள்’ என்று சொல்லுங்கள். இந்தச் செய்தி ஆளுநனுக்கு எட்டினால், நாங்கள் அவனைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சனை ஏற்படாதபடி பார்த்துக் கொள்வோம்” என்றார்கள். எனவே படைவீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதையே சொன்னார்கள். இந்தக் கதை இந்நாள்வரை யூதர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்டிருக்கிறது. முக்கிய பொறுப்பை ஒப்படைத்தல் அப்பொழுது பதினொரு சீடர்களும் கலிலேயாவுக்குச் சென்றார்கள். அவர்கள் தாங்கள் போக வேண்டுமென்று இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த மலைக்குச் சென்றார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவரை வழிபட்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். பின்பு இயேசு அவர்களிடம் வந்து, “வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே நீங்கள் புறப்பட்டுப்போய் எல்லா நாட்டின் மக்களையும் எனக்குச் சீடராக்குங்கள். பிதா, மகன், பரிசுத்த ஆவியானவருடைய பெயரில் அவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குப் போதித்து, அவர்களைச் சீடராக்குங்கள். இந்த உலகம் முடியும்வரை, நான் எப்பொழுதும் நிச்சயமாகவே உங்களுடனேகூட இருக்கிறேன்!” என்றார்.