- Biblica® Open Indian Tamil Contemporary Version மல்கியா மல்கியா மல்கியா மல். மல்கியா இது ஒரு இறைவாக்கு, மல்கியாவின் மூலம் இஸ்ரயேலுக்குக் கிடைத்த யெகோவாவின் வார்த்தை. இறைவனின் அன்பை இஸ்ரயேல் சந்தேகித்தல் “இஸ்ரயேலரே, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என யெகோவா சொல்கிறார். “ஆனால், ‘எங்களில் எப்படி நீர் அன்பு செலுத்தினீர்?’ என நீங்கள் கேட்கிறீர்கள். “ஏசா யாக்கோபின் சகோதரன் அல்லவா?” அப்படியிருந்தும், “யாக்கோபை நான் நேசித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன், அவனுடைய மலையைப் பாழடையச் செய்து அவனுடைய சொத்துரிமையை பாலைவன நரிகளுக்குக் கொடுத்தேன்” என்று யெகோவா சொல்கிறார். “நாங்கள் நொறுக்கப்பட்டோம், ஆயினும் திரும்பிவந்து பாழடைந்தவற்றைக் கட்டியெழுப்புவோம்” என ஏதோமியர் சொல்லலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்கள் கட்டியெழுப்பலாம், ஆனால் நான் அதை இடித்து அழிப்பேன். அவர்கள் கொடுமையின் நாடு என்றும், எப்பொழுதும் யெகோவாவின் கோபத்திற்கு உள்ளான மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். உங்கள் சொந்தக் கண்களினால் இதைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள், ‘யெகோவாவே மிகவும் பெரியவர், இஸ்ரயேலின் எல்லைகளைக் கடந்தும் யெகோவாவே பெரியவர்’ என்று சொல்வீர்கள். கறைபட்ட பலிகள் “ஒரு மகன் தன் தகப்பனையும், ஒரு வேலைக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறான். நான் ஒரு தகப்பனாயிருந்தால், எனக்குரிய கனம் எங்கே? நான் ஒரு எஜமானாயிருந்தால், எனக்குரிய மரியாதை எங்கே?” என சேனைகளின் யெகோவா உங்களிடம் கேட்கிறார். ஆசாரியர்களே, நீங்கள் அல்லவா என்னுடைய பெயரை அவமதிக்கிறீர்கள். ஆனால், “உம்முடைய பெயரை எப்படி அவமதித்தோம்?” எனக் கேட்கிறீர்கள். என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள். நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகிறீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது உங்களை அவன் ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் யெகோவா கேட்கிறார். “அப்படியிருந்தும் இப்போது உங்களில் கிருபையாய் இருக்கும்படி, இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறீர்கள். உங்கள் கைகளில் இப்படியான காணிக்கைகளை அவரிடம் கொண்டுவந்தால், ஏன் அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்?” என சேனைகளின் யெகோவா கேட்கிறார். “என் பலிபீடத்தில் பயனற்ற நெருப்பை மூட்டாதபடி, உங்களில் ஒருவனாகிலும் ஆலயக் கதவை அடைக்கமாட்டானோ, உங்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் கைகளிலிருந்து நான் எந்த ஒரு காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். நாடுகளுக்குள்ளே என் பெயர் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து, அது மறையும் திசை வரையும், மேன்மையுள்ளதாய் விளங்கும். அதனால் எல்லா இடத்திலேயும் என் பெயருக்கு தூபமும், தூய்மையான காணிக்கையும் செலுத்தப்படும். ஏனெனில் நாடுகளிடையே, என் பெயர் மேன்மையுள்ளதாயிருக்கும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். “ஆனால் நீங்கள் யெகோவாவின் பரிசுத்த பெயரைக் கறைப்படுத்துகிறீர்கள், ‘யெகோவாவினுடைய மேஜையையும் அப்பத்தையும் குறித்தோ, அவை கறைபட்டால் பரவாயில்லை’ என்று சொல்லி அதைத் தூய்மைக் கேடாக்குகிறீர்கள். ‘இது எவ்வளவு தொல்லையாயிருக்கிறது!’ என்று காணிக்கை ஒப்புக்கொடுப்பதை இழிவாக பேசுகிறீர்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “காயப்பட்டதையும், ஊனமானதையும், நோயுற்றதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்தும்போது, அதை உங்கள் கைகளிலிருந்து நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ?” என யெகோவா கேட்கிறார். “தன் மந்தையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடா இருக்கும்போது, யெகோவாவுக்கு அதை நேர்ந்தபின், குறைபாடுள்ள ஒரு மிருகத்தைப் பலியிட்டால், அவன் ஏமாற்றுக்காரன், சபிக்கப்பட்டவன்; ஏனெனில் நான் ஒரு பேரரசர், என் பெயர் நாடுகளுக்குள்ளே பயத்திற்குரியதாய் இருக்கவேண்டும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஆசாரியருக்கு எச்சரிக்கை “ஆசாரியர்களே, இப்போதும் இந்த எச்சரிக்கை உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். “உங்கள் நிமித்தம் உங்கள் வழித்தோன்றல்களை நான் கடிந்துகொள்வேன்; நீங்கள் பண்டிகைக் காலங்களில் பலியிட்ட மிருகங்களின் கழிவுகளை உங்கள் முகங்களில் வீசுவேன். நீங்களும் அதனுடன் எறியப்படக் கொண்டுபோகப்படுவீர்கள். ஆசாரியர்களே நான் உங்களுக்கு ஒரு எச்சரிப்பை அனுப்புகிறேன். லேவியின் சந்ததியுடன் நான் செய்துகொண்ட உடன்படிக்கை மேலும் தொடரும்படி, இந்த எச்சரிக்கையை நான் அனுப்பினேன் என்பதை அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நான் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கை வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கும் உடன்படிக்கை; அவற்றை நான் அவனுக்குக் கொடுத்தேன்; இதனால் நான் அவனிடம் பயபக்தியை எதிர்ப்பார்த்தேன். அவனும் என்னிடம் பயபக்தியாயிருந்து என் பெயரைக் குறித்த பயம் உடையவனாயிருந்தான். அவன் வாயில் உண்மையான அறிவுறுத்தல் இருந்தது. அவனுடைய உதடுகளில் பொய்யானதொன்றும் காணப்படவில்லை. அவன் என்னோடு சமாதானத்துடனும், நீதியுடனும் நடந்தான். அவன் அநேகரைப் பாவத்திலிருந்து திருப்பினான். “ஆசாரியனின் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய வாயிலிருந்து மனிதர் அறிவுறுத்தலை நாடிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவனே சேனைகளின் யெகோவாவின் தூதுவனாயிருக்கிறான். ஆனால் நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை உங்கள் போதனைகளால் இடறிவிழப்பண்ணினீர்கள்; நான் லேவியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் என்னுடைய வழிகளைப் பின்பற்றாது, என் சட்டத்தின் விஷயங்களில் பாகுபாடு காட்டியதால், நான் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அவமானப்படுத்தி, இழிவுக்குள்ளாகும்படி செய்திருக்கிறேன்.” உண்மையற்ற யூதா யூதா மக்களே! நம் எல்லோருக்கும் ஒரே தகப்பன் அல்லவா இருக்கிறார்? நம் எல்லோரையும் ஒரே இறைவன்தானே படைத்தார். அப்படியிருக்க நாம் ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்களாயிருந்து, நம் தந்தையர்களுடன் இறைவன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஏன் தூய்மைக்கேடாக்க வேண்டும்? யூதா நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. இஸ்ரயேலிலும், எருசலேமிலும் அருவருக்கத்தக்க செயல் செய்யப்பட்டிருக்கிறது: யூதா மனிதர் அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிற பெண்களைத் திருமணம் செய்ததினால், யெகோவா விரும்பும் பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்தியிருக்கிறார்கள். இதைச் செய்கிற மனிதனை குறித்தோ, அவன் யாராயிருந்தாலும் அவனை யெகோவா யாக்கோபின் கூடாரங்களில் வாழாதபடி முழுவதும் அகற்றிவிடட்டும்; அவன் சேனைகளின் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்துகிறவனாய் இருந்தாலும், அவனை அகற்றிவிடட்டும். நீங்கள் இன்னொன்றைச் செய்கிறீர்கள்: யெகோவாவின் பலிபீடத்தை கண்ணீரினால் நிரப்புகிறீர்கள். யெகோவா உங்கள் காணிக்கைகளைக் கண்ணோக்கிப் பாராமல் இருப்பதாலும், அவற்றை உங்கள் கைகளிலிருந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளாததினாலும் அழுது புலம்புகிறீர்கள். நீங்களோ, “இது ஏன்?” என்றும் கேட்கிறீர்கள். ஏனென்றால் நீயோ உனது திருமண உடன்படிக்கையின் மனைவி உன் துணையாயிருந்தும், அவளுக்குத் துரோகம் செய்திருக்கிறாய்; இதனால் உனது வாலிப காலத்து மனைவிக்கும் உனக்கும் இடையே உடன்படிக்கையின் சாட்சியாய் இருந்த யெகோவா விளக்கம் கேட்கிறார். உங்கள் இருவரையும் யெகோவா ஒருவராய் இணைக்கவில்லையா? நீங்கள் உடலிலும் ஆவியிலும் அவருடையவர்களே. ஏன் ஒருவராய் இணைத்தார்? அவர் தனக்கு இறை பக்தியுள்ள சந்ததியை பெறுவதற்காகவே இவ்வாறு செய்தார். எனவே நீங்கள் உங்கள் ஆவியிலே உங்களைக் காத்துக்கொண்டு, உங்கள் வாலிப வயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாதீர்கள். நான் விவாகரத்தை வெறுக்கிறேன் என இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார். ஒரு மனிதன் உடையினால் தன்னை மூடி மறைப்பதுபோல், வன்முறையை மூடி மறைப்பதை நான் வெறுக்கிறேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். எனவே நீங்கள் உங்களை ஆவியில் காத்துக்கொண்டு, நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருங்கள். நியாயத்தீர்ப்பு நாள் உங்கள் வார்த்தையினாலே யெகோவாவை சோர்வடையச் செய்தீர்கள். “எப்படி அவரை சோர்வடைய வைத்தோம்?” எனக் கேட்கிறீர்கள். தீமையானவற்றைச் செய்கிற எல்லோரையும் பார்த்து, யெகோவாவின் பார்வையில் நல்லவர்கள் என்றும், அவர்களிலே அவர் மகிழ்ச்சிகொள்கிறார் என்றும் சொல்கிறீர்கள். “நீதியை வழங்கும் இறைவன் எங்கே?” என்று கேட்கும்போதுமே அவ்வாறு செய்கிறீர்கள். “பாருங்கள், நான் என் தூதுவனை அனுப்புவேன், அவன் எனக்கு முன்பாக எனக்கு ஒரு வழியை ஆயத்தம் செய்வான்; நீங்கள் தேடுகிற யெகோவா தம்முடைய ஆலயத்திற்கு திடீரென வருவார்; நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின், தூதுவனானவர் வருவார்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஆனால் அவர் வரும் நாளைச் சகிக்க யாரால் முடியும்? அவர் தோன்றுகையில் அவர்முன் யாரால் நிற்கமுடியும்? ஏனெனில் அவர் கொல்லனின் நெருப்பைப்போல் இருப்பார், துணிதுவைப்போரின் சலவைக்கட்டியைப்போலவும் இருப்பார். அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிக்கிற கொல்லனைப்போல் உட்கார்ந்து, லேவியின் மக்களைச் சுத்தமாக்குவார்; அவர் தங்கத்தைப்போலவும், வெள்ளியைப்போலவும் அவர்களைச் சுத்திகரிப்பார். அப்பொழுது யெகோவாவுக்கு நீதியுடன் தங்கள் காணிக்கையை கொண்டுவரும் மனிதர்கள் இருப்பார்கள். எனவே சென்ற நாட்களிலும், முந்திய வருடங்களிலும் நடந்ததுபோல, யூதாவின் காணிக்கைகளும் எருசலேமின் காணிக்கைகளும் யெகோவாவுக்கு பிரியமானவைகளாயிருக்கும். “அப்பொழுது நியாயந்தீர்க்கும்படி நான் உங்கள் மத்தியில் வருவேன். சூனியக்காரருக்கும், விபசாரிகளுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும் எதிராக சாட்சி சொல்வேன், எனக்குப் பயப்படாமல் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காது ஏமாற்றுகிறவர்களுக்கும், விதவைகளையும் தந்தையற்றவர்களையும் ஒடுக்குகிறவர்களுக்கும், அயல்நாட்டினரை நீதியாக நடத்தத் தவறுகிறவர்களுக்கும் எதிராக நான் விரைந்துவந்து சாட்சி சொல்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். இறைவனிடமிருந்து களவாடல் “யெகோவாவாகிய நான் மாறாதவர். எனவேதான் யாக்கோபின் சந்ததியாகிய நீங்கள் அழிக்கப்படாதிருக்கிறீர்கள். உங்கள் முற்பிதாக்களின் காலத்திலிருந்து நீங்கள் என் விதிமுறைகளைவிட்டு விலகி, அவற்றைக் கைக்கொள்ளாமல் இருந்தீர்கள். இப்பொழுதோ என்னிடத்திற்குத் திரும்புங்கள், நானும் உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்களோ, ‘நாங்கள் எவ்விதம் திரும்பவேண்டும்?’ என கேட்கிறீர்கள்? “ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். “ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள். “பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள். நீங்கள் சாபத்துக்கு உட்பட்டவர்கள்; என்னிடமிருந்து கொள்ளையடிப்பதால் உங்கள் முழு தேசமும் சபிக்கப்பட்டதாகும். என் ஆலயத்தில் உணவு இருக்கும்படி, உங்கள் பத்தில் ஒரு பாகம் முழுவதையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியமாட்டேனோ என்று பாருங்கள். உங்கள் பயிர்களைப் பூச்சி புழுக்கள் தின்று விடாமலும், உங்கள் தோட்டங்களிலுள்ள திராட்சைக் கொடிகளிலிருந்து காய்கள் உதிராமலும் காத்துக்கொள்வேன்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “அப்பொழுது எல்லா நாடுகளும், உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அழைப்பார்கள். ஏனெனில் உங்கள் நாடு ஒரு மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்கும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். இஸ்ரயேலர் யெகோவாவுக்கு எதிராகப் பேசுதல் “அத்துடன் நீங்கள் எனக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்” என யெகோவா சொல்கிறார். “ஆயினும் நீங்கள், ‘நாங்கள் உமக்கு எதிராக என்ன சொல்லியிருக்கிறோம்?’ எனக் கேட்கிறீர்கள். “நீங்களோ, ‘இறைவனுக்குப் பணிசெய்வது வீணானது. அவருடைய கட்டளைகளை நிறைவேற்றி, சேனைகளின் யெகோவாவின் முன்பாக துக்கங்கொண்டாடுகிறவர்களாய் திரிந்து என்ன பயன் அடைந்தோம்? என்று சொல்கிறீர்கள். அத்துடன் நீங்கள், அகந்தையுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தீமை செய்கிறவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்றும், இறைவனை எதிர்க்கிறவர்கள்கூட தண்டனை பெறாமல் தப்பிக்கிறார்கள்’ என்றும் சொல்கிறீர்கள்.” உண்மையுள்ள ஆதாரங்கள் அதன்பின் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதை யெகோவா செவிகொடுத்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையும், அவரது பெயரை கனம்பண்ணியவர்களையும் குறித்து, அவர் சமுகத்தில் ஒரு ஞாபகப் புத்தகச்சுருள் எழுதப்பட்டது. “எனக்கு அருமையான சொத்தை நான் சேர்க்கும் நாளில், அவர்கள் எனக்கொரு தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஒருவன் தனக்குப் பணிசெய்யும் தன் சொந்த மகனை மனமிரங்கி காப்பாற்றுவது போல, நானும் அவர்களைக் காப்பாற்றுவேன். அப்பொழுது நீங்கள் நீதியானவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும், இறைவனுக்குப் பணி செய்கிறவர்களுக்கும் பணி செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மறுபடியும் காண்பீர்கள். யெகோவாவின் நாள் “நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது; அது சூளையைப்போல் எரியும். அப்பொழுது ஆணவம் கொண்ட எல்லோரும் தீமைசெய்கிற ஒவ்வொருவரும், பயிரின் அடித்தாழைப்போல் ஆவார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; வேரோ கிளையோ அவர்களுக்காக மிஞ்சுவதில்லை என சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஆனால் என் பெயரில் பயபக்தியுடன் வாழ்கிற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதிப்பார். அவரின் ஒளிக்கதிரில் சுகம் கொடுக்கும் தன்மை இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு வெளியே போகும் கன்றுகளைப்போல, துள்ளிக் குதிப்பீர்கள். நீங்கள் கொடியவர்களை மிதிப்பீர்கள்; நான் இவற்றைச் செய்யும் அந்த நாளில், அவர்கள் உங்கள் காலடிகளின் கீழே சாம்பலாவார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “என் அடியவன் மோசே, கொடுத்த சட்டத்தை நினைவுகூருங்கள். இஸ்ரயேலர் எல்லாருக்காகவும் நான் என் அடியவன் மோசேக்கு ஓரேப் மலையில் கொடுத்த விதிமுறைகளையும், சட்டங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். “இதோ பாருங்கள், யெகோவாவின் பெரிதும் திகிலூட்டுகிறதுமான நாள் வருகிறது. அது வருவதற்கு முன்பாக நான் இறைவாக்கினன் எலியாவை அனுப்புவேன். அவன் பெற்றோரின் இருதயங்களைப் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்கள் பெற்றோரிடமும் திருப்புவான்; இல்லாவிடில் நான் வந்து நாட்டைச் சாபத்தால் தண்டிப்பேன்.”