- Biblica® Open Indian Tamil Contemporary Version
லூக்கா
லூக்கா எழுதின நற்செய்தி
லூக்கா
லூக்.
லூக்கா எழுதின நற்செய்தி
முகவுரை
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின்1:1 நிகழ்வுகளின் அல்லது நிச்சயமாக விசுவாசித்த விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள். துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள். நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன். இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
யோவானின் பிறப்பின் முன்னறிவிப்பு
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள். அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள். ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான். ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான். தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும். அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள். அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள். அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல்
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை, ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள். ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான்.
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்; அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது! என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன். உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
மரியாளின் பாடல்
அப்பொழுது மரியாள் சொன்னதாவது:
“என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
ஏனெனில், அவர் தமது
அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார்.
இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும்
என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்;
பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு,
தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்;
தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார்.
ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார்.
ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும்
அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை
அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்”
என்று பாடினாள்.
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
யோவான் ஸ்நானகனின் பிறப்பு
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
சகரியாவின் பாடல்
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக,
அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து,
நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார்.
நம்முடைய பகைவரிடமிருந்தும்,
நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும்
நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து,
நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து,
நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக
என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்;
நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம்
அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய்,
இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
இருளில் வாழ்கிறவர்களுக்கும்
மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும்,
பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம்
நம்மைச் சந்தித்திருக்கிறது.”
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
இயேசுவின் பிறப்பு
அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவன் ஆளுநனாய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும். எனவே, ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக, தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றார்கள்.
அப்பொழுது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லகேமுக்குப் போனான். அவன் தாவீதின் குடும்பத்தையும் வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான். அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள். அவர்கள் அங்கிருக்கையில், அவளுக்குப் பிரசவநேரம் வந்தது; அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண்குழந்தையைப் பெற்றாள். பிள்ளையை அவள் துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள்; ஏனெனில் சத்திரத்தில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
அன்றிரவு அருகேயிருந்த வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்படவேண்டாம், எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் பட்டணத்திலே ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே கர்த்தராகிய கிறிஸ்து. துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை தொழுவத்தில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான்.
அப்பொழுது திடீரென பரலோக சேனையின் ஒரு பெருங்கூட்டம் அந்தத் தூதனுடன் காட்சியளித்து,
“உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும்,
பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்”
என்று இறைவனைத் துதித்தார்கள்.
அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போனபின்பு, மேய்ப்பர் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கிற இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
விரைவாய்ப் புறப்பட்டு மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள். மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து யோசித்தாள். தங்களுக்கு சொல்லப்பட்டபடியே நடந்திருந்தபடியால், மேய்ப்பர்கள் கண்டு கேட்ட எல்லாவற்றையும் குறித்து இறைவனைத் துதித்து, மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்படவேண்டிய எட்டாம் நாளிலே, அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது; அது தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்பே, இறைவனின் தூதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்.
இயேசுவை ஆலயத்திற்குக் கொண்டுவருதல்
மோசேயின் சட்டத்தின்படி அவர்களுக்குரிய சுத்திகரிப்பின் காலம் முடிவடைந்ததும், யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். ஒவ்வொரு முதற்பேறான ஆண் குழந்தையும் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்த்தருடைய சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே2:23 [யாத். 13:2],[12] இதைச் செய்தார்கள். கர்த்தருடைய சட்டத்தில் சொல்லப்பட்டபடியே,2:24 [லேவி. 12:8] ஒரு ஜோடிப் புறாக்களையாவது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது அவர்கள் பலியாகச் செலுத்தும்படியே அங்கு சென்றார்கள்.
அப்பொழுது எருசலேமில் சிமியோன் என அழைக்கப்பட்ட ஒருவன் இருந்தான்; அவன் நீதிமானும் இறை பக்தி உள்ளவனுமாயிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவன்மேல் இருந்தார்; அவன் இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருந்தான். கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணுமுன் அவன் இறந்து போகமாட்டான் என்று பரிசுத்த ஆவியானவரால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது:
“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே,
உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும்.
ஏனெனில் எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன;
இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும்
நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்:
இது யூதரல்லாதவருக்கு வெளிப்படுத்துதலைக் கொடுக்கும் ஒரு ஒளி,
உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை”
என்றான்.
குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள். அப்பொழுது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும் பலர் எழுந்திருப்பதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றான்.
ஆலயத்தில் அன்னாள் எனப்பட்ட ஒரு இறைவாக்கினள் இருந்தாள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள். இவள் மிகவும் வயது சென்றவள்; தனது திருமணத்திற்குப்பின் ஏழு வருடங்களே தனது கணவனுடன் வாழ்ந்திருந்தாள். அதற்குப் பின்பு எண்பத்து நான்கு வயது வரைக்கும் அவள் விதவையாகவே இருந்தாள். அவள் ஒருபோதும் ஆலயத்தைவிட்டு விலகாமல், இரவும் பகலும் உபவாசத்துடனும் மன்றாட்டுடனும் வழிபட்டுக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் அவள் அங்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, எருசலேமின் மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடனும் அந்தக் குழந்தையைக் குறித்துப் பேசினாள்.
கர்த்தருடைய சட்டத்தின்படி செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் வசிக்கும் தங்கள் சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அந்தப் பிள்ளை வளர்ந்து, வலிமைபெற்று, ஞானம் நிறைந்தவராய் இருந்தார்; இறைவனின் கிருபையும் அவர்மேல் இருந்தது.
ஆலயத்தில் சிறுவன் இயேசு
இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவதற்கு, எருசலேமுக்குப் போவார்கள். இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குச் சென்றார்கள். பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால், பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள். தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குபின், அவர் ஆலய முற்றத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள். அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் பரிதவிப்போடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள்.
அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது தந்தையின் வீட்டில் இருக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அவர்களோ, இயேசு தங்களுக்குச் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள். இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் இறைவனுடைய கிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.
யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தம் செய்வது
ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநனாக இருந்தான். அக்காலத்தில் ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அவனது சகோதரன் பிலிப்பு இத்துரேயா, திராகொனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாய் இருந்தான். அக்காலத்தில் அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராய் இருந்தார்கள். அப்பொழுது பாலைவனத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது. அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதுபோல் இது நடந்தது:
“பாலைவனத்தில் கூப்பிடுகிற ஒருவனின் குரல் கேட்கிறது,
‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்காக பாதைகளை நேராக்குங்கள்.
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்,
ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்.
கோணலான வீதிகள் நேராகும்,
கரடுமுரடான வழிகள் சீராகும்.
மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”3:6 [ஏசா. 40:3-5]
யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெறும்படி வந்த மக்களுக்குச் சொன்னதாவது, “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்? நீங்கள் மனந்திரும்பியிருந்தால் அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பனாக இருக்கிறார்,’ என்று உங்களுக்குள்ளே சொல்லவேண்டாம். ஏனெனில், இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது; நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்” என்றான்.
அப்பொழுது கூடியிருந்த மக்கள் அவனிடம், “அப்படியானால், நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
யோவான் அதற்குப் பதிலாக, “இரண்டு உடைகளை வைத்திருப்பவன் உடைகள் இல்லாதவனுடன் பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை வைத்திருக்கிறவனும் அவ்வாறே செய்யட்டும்” என்றான்.
வரி வசூலிக்கிறவர்களும் திருமுழுக்குப் பெறும்படி வந்து, அவனிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
யோவான் அவர்களிடம், “வசூலிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்குமேல், எதையும் வசூலிக்கவேண்டாம்” என்றான்.
அப்பொழுது சில படைவீரர்கள் அவனிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
அவன் அவர்களிடம், “மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தவேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்துடன் திருப்தியாய் இருங்கள்” என்றான்.
மக்கள் கிறிஸ்துவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்ததால், “யோவான்தான் கிறிஸ்துவாயிருப்பாரோ?” என்று தங்கள் இருதயங்களில் யோசித்துக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுள்ள ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார். அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான். யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்தி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.
ஆனால் சிற்றரசன் ஏரோது தனது சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை திருமணம் செய்திருந்ததினாலும், வேறு பல தீய காரியங்களைச் செய்ததினாலும் யோவான் அவனைக் கண்டித்தான். இதனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்து, தான் செய்த தீய செயல்களுடன் இதையும் கூட்டிக் கொண்டான்.
இயேசுவின் திருமுழுக்கும் வம்ச வரலாறும்
இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவும் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் அவர்மேல் இறங்கினார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நீர் என்னுடைய அன்பு மகன், நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.
இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார்.
யோசேப்பு ஏலியின் மகன், ஏலி மாத்தாத்தின் மகன்,
மாத்தாத் லேவியின் மகன், லேவி மெல்கியின் மகன்,
மெல்கி யன்னாவின் மகன், யன்னா யோசேப்பின் மகன்,
யோசேப்பு மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா ஆமோசின் மகன்,
ஆமோஸ் நாகூமின் மகன், நாகூம் எஸ்லியின் மகன்,
எஸ்லி நங்காயின் மகன், நங்காய் மாகாத்தின் மகன்,
மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன்,
சேமேய் யோசேக்கின்3:26 யோசேக்கின் அல்லது யோசேப்பின் மகன், யோசேக்கு யோதாவின்3:26 யோதாவின் அல்லது யூதாவின் மகன்,
யோதா யோவன்னானின் மகன், யோவன்னான் ரேசாவின் மகன்,
ரேசா செருபாபேலின் மகன், செருபாபேல் சலாத்தியேலின் மகன்,
சலாத்தியேல் நேரியின் மகன், நேரி மெல்கியின் மகன்,
மெல்கி அத்தியின் மகன், அத்தி கோசாமின் மகன்,
கோசாம் எல்மோதாமின் மகன், எல்மோதாம் ஏரின் மகன்,
ஏர் யோசேயின் மகன், யோசே எலியேசரின் மகன்,
எலியேசர் யோரீமின் மகன், யோரீம் மாத்தாத்தின் மகன்,
மாத்தாத் லேவியின் மகன், லேவி சிமியோனின் மகன்,
சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன்,
யோசேப்பு யோனாமின் மகன், யோனாம் எலியாக்கீமின் மகன்,
எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மென்னாவின் மகன்,
மென்னா மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன்,
நாத்தான் தாவீதின் மகன், தாவீது ஈசாயின் மகன்,
ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாஸின் மகன்,
போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,
நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன்,
ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன்,
பாரேஸ் யூதாவின் மகன், யூதா யாக்கோபின் மகன்,
யாக்கோபு ஈசாக்கின் மகன், ஈசாக்கு ஆபிரகாமின் மகன்,
ஆபிரகாம் தேராவின் மகன், தேரா நாகோரின் மகன்,
நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன்,
ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன்,
ஏபேர் சாலாவின் மகன், சாலா காயினானின் மகன்,
காயினான் அர்ப்பகசாத்தின் மகன், அர்ப்பகசாத் சேமின் மகன்,
சேம் நோவாவின் மகன், நோவா லாமேக்கின் மகன்,
லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன்,
ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன்,
மகலாலெயேல் கேனானின் மகன், கேனான் ஏனோஸின் மகன்,
ஏனோஸ் சேத்தின் மகன், சேத் ஆதாமின் மகன்,
ஆதாம் இறைவனின் மகன்.
இயேசுவின் சோதனை
இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார். அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை; அந்த நாட்கள் முடிந்தவுடன் அவர் பசியாயிருந்தார்.
சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் பிழைப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறதே”4:4 [உபா. 8:3] எனப் பதிலளித்தார்.
சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான். பிறகு சாத்தான் அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும் மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன்; ஏனெனில் அது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நான் விரும்பினால் அதை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும். நீர் என்னை வணங்கினால், இவையெல்லாம் உம்முடையவையாகும்” என்றான்.
அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ என்று எழுதியிருக்கிறதே”4:8 [உபா. 6:13] என்று பதிலளித்தார்.
பின்பு சாத்தான், அவரை எருசலேமுக்குக் கொண்டுசென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி சொன்னதாவது, “நீர் இறைவனுடைய மகனானால் இங்கிருந்து கீழே குதியும். ஏனெனில்,
“ ‘உம்மைக் காக்கும்படிக்கு,
இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்;
உமது கால்கள் கல்லில் மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்
என்றும் எழுதியிருக்கிறதே.’ ”4:11 [சங். 91:11],[12]
அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே”4:12 [உபா. 6:16] என்றார்.
இவ்விதமாக சாத்தான் சோதனைகள் எல்லாவற்றையும் முடித்தபின்பு, ஏற்ற காலம் வரும்வரை இயேசுவைவிட்டுப் போய்விட்டான்.
இயேசு நாசரேத்தில் புறக்கணிக்கப்படுதல்
இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது. இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி அவர் ஜெப ஆலயத்திற்குப்போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார். அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் விரித்து, இவ்வாறு எழுதியிருந்த இடத்தைக் கண்டு வாசித்தார்:
“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்,
ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,
அவர் என்னை அபிஷேகம் பண்ணினார்.
அவர் என்னை சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை அறிவிக்கவும்,
குருடருக்கு பார்வையை அளிக்கவும்,
ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.”4:19 [ஏசா. 61:1],[2] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்); [ஏசா. 58:6]
பின்பு இயேசு அந்தப் புத்தகச்சுருளைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிற்று” என்றார்.
எல்லோரும் அவரைக்குறித்து நன்றாகப் பேசினார்கள்; அவருடைய உதடுகளிலிருந்து வந்த கிருபையுள்ள வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘வைத்தியனே, உன்னையே சுகப்படுத்திக்கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாகவே நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை உனது சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்’ ” என்றும் சொல்வீர்கள்.
ஆனால், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நான் நிச்சயமாகச் சொல்கிறேன், எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே அநேக விதவைகள் இருந்தார்கள். ஆனால், இஸ்ரயேலில் உள்ள விதவைகளில் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத் ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டான். இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலில் பல குஷ்டவியாதி உடையவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவனும் அதிலிருந்து சுகப்படுத்தப்படவில்லை. சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே சுகப்படுத்தப்பட்டான்” என்றார்.
இதைக் கேட்டபோது ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும் கடுங்கோபமடைந்தார்கள். அவர்கள் எழுந்து, பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தினார்கள். அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடும்படி, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள். அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
இயேசு தீய ஆவியைத் துரத்துதல்
பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாயிருந்தது.
ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, “நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது அந்த தீய ஆவி அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனை விழத்தள்ளி விட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் வெளியேறியது.
எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை என்ன வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் வெளியேறுகின்றன!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
இயேசு அநேகரை சுகப்படுத்துதல்
இயேசு ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமியார் கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்; எனவே சிலர் அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் சுகமடைந்து எழுந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
சூரியன் மறையும்போது மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதியுடையவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் தமது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். அத்துடன் பலரில் இருந்த பிசாசுகளும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு, அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பிசாசுகள் அவரே கிறிஸ்து என்று அறிந்திருந்தபடியால், அவர் அவைகளைப் பேசுவதற்கு இடங்கொடாமல் அதட்டினார்.
அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போனார். மக்களோ அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாமல் தங்களுடன் இருக்கும்படி முயற்சிசெய்தார்கள். ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்ற பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார். பிறகு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
இயேசு முதல் சீடனை அழைத்தல்
ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே5:1 அதாவது, கலிலேயாக் கடல் நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள். அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின. அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான். அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள். சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள்.
அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார். எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
குஷ்டவியாதி உள்ள ஒருவன்
இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று.
அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார்.
ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.
இயேசு முடக்குவாதக்காரனை சுகப்படுத்துதல்
ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது. அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள்.
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது? ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான். எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.
லேவியின் அழைப்பு
இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி5:27 லேவி என்ற பெயர் மத்தேயு என்றும் அழைக்கப்படும் என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.
உபவாசத்தைப் பற்றிய கேள்வி
சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது. யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும். யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”
ஓய்வுநாளின் ஆண்டவர்
ஒரு ஓய்வுநாளிலே இயேசு தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், அவருடைய சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் நிமிட்டி அவற்றைச் சாப்பிடத் தொடங்கினார்கள். பரிசேயர்கள் சிலர், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது, அவன் என்ன செய்தான் என்பதைப்பற்றி, நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா? அவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தான்; மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார். மேலும் இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, சுருங்கிய கையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளிலே மோசேயின் சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது: நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா? என்று எனக்குச் சொல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்” என்றார்.
இயேசு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலுமாக குணமடைந்தது. ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் கடுங்கோபமடைந்து, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
அந்நாட்களிலே இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்; அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபித்தார். காலை நேரம் வந்தபோது, அவர் தமது சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களை அப்போஸ்தலர்6:13 அப்போஸ்தலர் என்றால் அனுப்பப்பட்டவர்கள் என்று பொருள். என அழைத்தார். அவர்கள் யாரெனில்:
பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா,
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்தொலொமேயு,
மத்தேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
செலோத்தே6:15 செலோத்தே என்றால் வைராக்கியமுள்ளவன் எனப்பட்டவன். என அழைக்கப்பட்ட சீமோன்,
யாக்கோபின் சகோதரனாகிய யூதா,
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ஆசீர்வாதங்களும் கேடுகளும்
இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப்போய், சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். அசுத்த ஆவிகளினால் துன்பப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சிசெய்தார்கள்.
மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது:
“ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.
இப்பொழுது பசியாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிறவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் நீங்கள் சிரிப்பீர்கள்.
மானிடமகனாகிய என் நிமித்தம் மனிதர் உங்களை வெறுக்கும்போதும்,
அவர்கள் உங்களைப் புறக்கணிக்கும்போதும்,
உங்களை இகழும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளிவிடும்போதும்,
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
“அந்நாளிலே சந்தோஷப்பட்டு, துள்ளி மகிழுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். அவர்களுடைய முன்னோர்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள்.
“ஆனால் செல்வந்தர்களாய் இருக்கிற உங்களுக்கு ஐயோ.
ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ.
நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள்.
இப்பொழுது சிரித்து மகிழ்கிறவர்களே உங்களுக்கு ஐயோ,
ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.
எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது உங்களுக்கு ஐயோ,
ஏனெனில் அவர்களுடைய முன்னோரும் பொய் தீர்க்கதரிசிகளை
அப்படித்தான் புகழ்ந்தார்கள்.
பகைவரில் அன்பு
“எனக்குச் செவிகொடுக்கிறவர்களுக்கு நான் சொல்கிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலுடையை எடுத்துக்கொண்டால், உங்களது ஆடையை எடுப்பதற்கு அவனைத் தடுக்காதேயுங்கள். உங்களிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள், உங்களுக்கு உரியதை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பி வற்புறுத்திக் கேட்காதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
“உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளுங்கூட அவர்களுக்கு அன்பு காட்டுகிறவர்களுக்கு அன்பு காட்டுகிறார்கள். உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக பெற்றுக்கொள்ளும்படி, பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கிறார்களே. ஆனால் நீங்கள் உங்கள் பகைவரில் அன்பாயிருங்கள், அவர்களுக்கு நன்மை செய்யுங்கள், திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன்கொடுங்கள். அப்பொழுது உங்கள் வெகுமதி பெரிதாயிருக்கும், நீங்கள் மகா உன்னதமான இறைவனுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில் அவர் நன்றிகெட்டவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராயிருக்கிறாரே. உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
நியாயத்தீர்ப்பு வழங்குதல்
“மற்றவர்கள்மேல் நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெறமாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். மன்னியுங்கள், அப்பொழுது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக சரியான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியிலே கொட்டப்படும். நீங்கள் எந்த அளவை பயன்படுத்துகிறீர்களோ, அதனாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார்.
மேலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தன் ஆசிரியரைப்போல் இருப்பான்.
“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்? உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்? வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; பிறகு உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கமுடியும்.
மரமும் அதன் பழமும்
“நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மரமும் அதன் கனியினாலேயே இனம் தெரியப்படுகிறது. முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப்பழங்களையோ அல்லது திராட்சைப் பழங்களையோ பறிக்கிறதில்லை. நல்ல மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான்; தீய மனிதன் தன் இருதயத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான். ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்.
ஞானியும் மூடனும்
“நான் சொல்கிறதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிறவன், எதற்கு ஒப்பானவன் என்று நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். அவன் கற்பாறையிலே ஆழமாய்த் தோண்டி, அதில் அஸ்திபாரமிட்டு வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது. ஆனால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்ததால் அதை அசைக்கமுடியவில்லை. ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாதவனோ, அஸ்திபாரமின்றி நிலத்திலே வீட்டைக் கட்டியவனைப்போல் இருக்கிறான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதிய உடனே அது இடிந்து விழுந்து, முற்றுமாய் ஒழிந்தது.”
நூற்றுக்குத் தலைவனின் விசுவாசம்
கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களுடன் சென்றார்.
அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான்.
இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.
விதவையின் மகன்
இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள். அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள். கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார்.
பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார். இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது.
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்
யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான்.
அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார். எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
“ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன்,
அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’7:27 [மல். 3:1]
நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார்.
வரி வசூலிப்போர் உட்பட, எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று அங்கீகரித்தார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் திருமுழுக்கு பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.
பின்னும் கர்த்தர் சொன்னது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போல் இருக்கிறார்கள்? அவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் கூப்பிட்டு,
“ ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
நாங்கள் ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் அழவில்லை,’
என்று சொல்கிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள். மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். நீங்களோ, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
பாவியான பெண் இயேசுவுக்கு பரிமளதைலம் பூசுதல்
பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள். இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள்.
இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
அவன், “போதகரே சொல்லும்” என்றான்.
அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும்7:41 தெனாரி ஒரு நாளுக்குரிய சம்பளம் [மத். 20:2]. மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார்.
அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான்.
இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.
பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கிறாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள். நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை, ஆனால் இந்தப் பெண் நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள். எனவே நான் உனக்குச் சொல்கிறேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவள் என்னிடத்தில் அதிகமாக அன்பு கூர்ந்தாளே. ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார்.
அதற்குப் பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கின்ற இவன் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ” என்றார்.
விதைக்கிறவனின் உவமை
அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள். தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களுங்கூட அவருடனே சென்றார்கள். மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அவளிலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன. ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள்.
பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; அவை மிதிபட்டன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின. வேறுசில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிப்போட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன. அவை முளைத்து நூறுமடங்கு விளைச்சலைக் கொடுத்தன.”
இயேசு இதைச் சொல்லி முடித்தபின்பு, சத்தமாய்க் கூப்பிட்டு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள்,
“ ‘கண்டும் காணாதவர்களாகவும்;
கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’8:10 [ஏசா. 6:9]
“இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை. பாதை ஓரத்தில் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்கும் சிலரைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி சாத்தான் வந்து, அவ்வார்த்தையை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். கற்பாறையின்மேல் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது, சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டாலும், வேரில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; சோதிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகிறார்கள். ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ உண்மையும் நன்மையுமுள்ள இருதயம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு, பலன் கொடுக்கிறார்கள்.
தண்டின்மேல் வைக்கப்பட்ட விளக்கு
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. அதை உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி ஒரு விளக்குத்தண்டின் மேலேயே வைப்பார்கள். எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. ஆகையால், நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாய் இருங்கள். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”
இயேசுவின் தாயும் சகோதரர்களும்
ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்க்கும்படி வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை. அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
அதற்கு இயேசு, “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
இயேசு புயலை அடக்குதல்
ஒரு நாள் இயேசு தம்முடைய சீடர்களிடம், “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள், ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள். அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது புயல்காற்று ஏரியின்மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரிய ஆபத்துக்கு உள்ளானார்கள்.
அப்போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்றார்கள்.
அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்துகொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று. அப்பொழுது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும், வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.
பிசாசு பிடித்தவன் சுகமடைதல்
அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய8:26 சில கையெழுத்துப் பிரதிகளில் கதரேனருடைய என்றும்; வசனம் 37 மற்ற கையெழுத்துப் பிரதிகளில் கெரசேனர் என்றுமுள்ளது. நாட்டிற்குப் படகில் சென்றார்கள். இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பிசாசு பிடித்த ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நீண்டகாலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடம், “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னைத் துன்புறுத்தவேண்டாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பலமுறை அது அவனைப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். அந்த தீய ஆவியினால் அவன் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார்.
அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன. தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன.
அங்கிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு, இயேசு அனுமதிக்கவேண்டும் என்று, அவரைக் கெஞ்சிக்கேட்டன. அப்படியே அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். பிசாசுகள், அவனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிகளுக்குள்ளே புகுந்தன. அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கீழே பாய்ந்து, ஏரியில் விழுந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப்போய் பட்டணத்தில் உள்ளவர்களுக்கும், நாட்டுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள். என்ன நடந்தது என அறியும்படி, மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், உடை உடுத்தி மனத்தெளிவடைந்தவனாய், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள். சம்பவித்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார்.
பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு அவனிடம், “நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், இறைவன் உனக்கு செய்ததையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அப்படியே அவன் புறப்பட்டுப், பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதைக் குறித்துச் சொன்னான்.
இறந்த சிறுமியும் நோயுற்ற பெண்ணும்
இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர். அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான். ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தருவாயில் இருந்தாள்.
இயேசு வழியே அவனுடன் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் அவளை எவராலும் குணமாக்க முடியவில்லை. அவள் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது.
அப்பொழுது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
அனைவரும் மறுத்தனர். அப்போது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான்.
ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார்.
அப்பொழுது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக்கொண்டுவந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவள் எல்லா மக்களுக்கு முன்பாகவும், தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் உடனே குணமடைந்ததையும் அறிவித்தாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது. சமாதானத்தோடே போ” என்றார்.
இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றான்.
இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு. அவள் பிழைப்பாள்” என்றார்.
அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருடன், அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில், அங்கிருந்த மக்களெல்லாரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள். இவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார். அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார். அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
இயேசு பன்னிரண்டு பேர்களை அனுப்புதல்
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார். இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம். நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள். அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள்.
சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான். வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல்
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார். ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்.
அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள். அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள்.
ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
பேதுருவின் அறிக்கை
ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.
இயேசு தமது மரணத்தைக் குறித்து அறிவித்தல்
இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார். பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார்.
பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்.
“இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார்.
இயேசு மறுரூபமடைதல்
இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார். அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள். அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான்.
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள். அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.
தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணமாக்குதல்
மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான்.
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார்.
அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள்.
இயேசு தமது மரணத்தைக் குறித்து இரண்டாம்முறை முன் அறிவித்தல்
இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள்.
சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது. இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார்.
அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார்.
சமாரியர்கள் எதிர்ப்பு
இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார். அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை. அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள்.
இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலை
அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான்.
அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.
இயேசு சீடர்களை அனுப்புதல்
இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை10:1 சில கையெழுத்துப் பிரதிகளில் எழுபதுபேர் என்றுள்ளது (வசனம் 17). நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார். இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம்.
“நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள். சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும். நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம்.
“நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள். அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம், ‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
“கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும்,10:13 இவைகள் கலிலேயா ஏரியை சுற்றியுள்ள பட்டணங்கள் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும். கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய்.
“உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார்.
அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
இயேசு அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப்போல் விழுகிறதை, நான் கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும், நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. ஆனால், தீய ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.
அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
“என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை இன்னாரென்று அறியான். மகனைத் தவிர வேறொருவனும் பிதா யாரென்றும் அறியான். யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்” என்றார்.
பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப்பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”
நல்ல சமாரியன் உவமை
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’10:27 [உபா. 6:5]; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’10:27 [லேவி. 19:18]” எனப் பதிலளித்தான்.
அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார்.
ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான். ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான். அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான். மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.”
இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான்.
அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.
மார்த்தாள், மரியாள்
பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.
அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய். ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
மன்றாட்டைக் குறித்து இயேசுவின் போதனை
ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடருக்கு மன்றாடப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கு மன்றாடப் போதியும்” என்றான்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்படியாக மன்றாடுங்கள்,
“ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே,
உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக.
உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக.
எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்.
நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிக்கிறோமே.
எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல். எங்களைத் தீமையிலிருந்து விடுவியும்,’ ”
என்றார்.
அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு. பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால், அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
“உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்? அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!”
இயேசுவும் பெயெல்செபூலும்
ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும். சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
“ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான்.
“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.”
இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
யோனாவின் அடையாளம்
மக்கள் இன்னும் அதிகமாய்க் கூடிவந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்ததுபோல, இந்தத் தலைமுறையினருக்கு மானிடமகனாகிய நானும் அடையாளமாய் இருப்பேன். நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும்கூட இந்தத் தலைமுறை மக்களோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள்மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார்.
உடலின் விளக்கு
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைந்திருக்கும்படி ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள். உன்னுடைய கண் உன் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண்கள் நல்லதாய் இருக்கும்போது, உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் அவை கெட்டதாய் இருந்தால், உன் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும். ஆகவே, உனக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருள் அடையாதபடி பார்த்துக்கொள். உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருந்து, அதன் ஒரு பகுதியும் இருள் அடையாதிருக்குமானால், விளக்கின் வெளிச்சம் உங்களில் பிரகாசிப்பது போல், உனது முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.
மதத்தலைவர்கள் கண்டிக்கப்படுதல்
இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார். சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான்.
அப்பொழுது கர்த்தர் அவனிடம் சொன்னதாவது, “பரிசேயரே, நீங்களோ போஜனபாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசைகளினாலும், கொடுமைகளினாலும் நிறைந்திருக்கிறது. மூடர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? பாத்திரத்தின் உள்ளே இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் சுத்தமாயிருக்கும்.
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது.
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், சந்தைகூடும் இடங்களில் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறீர்கள்.
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் அடையாளச்சின்னம் இல்லாமலே, மூடப்பட்ட சவக்குழிகளைப் போல் இருக்கிறீர்கள். அதனால், மனிதர்கள் அது என்ன என்பதை அறியாமல், அதன்மேல் நடந்து போகிறார்கள்.”
மோசேயின் சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்லுகிறபோது, எங்களையும் அவமானப்படுத்துகிறீர்” என்றான்.
அதற்கு இயேசு, “மோசேயின் சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனெனில், மக்களால் சுமக்க முடியாத சமயச்சடங்குகளை நீங்கள் அவர்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கொலைசெய்தவர்கள், உங்கள் முற்பிதாக்களே. உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கிறீர்கள்; அவர்களோ, இறைவாக்கினரைக் கொன்றார்கள். நீங்களோ, அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி சொன்னதாவது, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலரையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலைசெய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார். ஆகையால், உலகம் தொடங்கியதிலிருந்து இறைவாக்கினர் அனைவருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும். ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும்.
“மோசேயின் சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ, அறிவிற்குரிய சாவியை மக்களிடமிருந்து நீங்கள் எடுத்துப்போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.
இயேசு அங்கிருந்து புறப்படும்போது பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரைக் கடுமையாக எதிர்க்கவும், பல கேள்விகளைக் கேட்டுத் தாக்கவும் தொடங்கினார்கள். அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எச்சரிப்புகளும் புத்திமதிகளும்
அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள். மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
“நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள். ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
மூடனான பணக்காரனின் கதை
கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
“பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து. பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
“அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
கவலைப்பட வேண்டாம்
பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது. ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது. காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே! கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்? இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
“காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார். விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள். ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார். உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை. ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
விழிப்பாயிருங்கள்
“பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள். திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும். எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான். அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது. இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே. நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான். தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான். ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால், அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
“வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
சமாதானத்தை அல்ல பிரிவினையே
“பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன். இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள். தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
காலங்களைப்பற்றிய விளக்கம்
மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது. தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது. வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்? நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும். உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
மனம் மாறாவிட்டால் அழிவு
அப்பொழுது அங்கிருந்தவர்களில் சிலர் இயேசுவிடம், கலிலேயர் சிலரைப் பிலாத்து கொலைசெய்து, அவர்களுடைய இரத்தத்தை அவர்கள் செலுத்திய பலிகளுடனே கலந்துவிட்ட செயலைப் பற்றிச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “அந்த கலிலேயருக்கு இவை நேர்ந்ததால், அவர்கள் மற்றெல்லா கலிலேயரைப் பார்க்கிலும் மோசமான பாவிகளாய் இருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்தே போவீர்கள். சீலோவாமில் இருந்த கோபுரம் விழுந்தபோது, அதில் பதினெட்டுப்பேர் அகப்பட்டு இறந்தார்களே. எருசலேமில் வாழ்கிற மற்றெல்லோரையும்விட, அவர்கள் அதிக குற்றவாளிகள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை! நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனமாறாவிட்டால் நீங்கள் எல்லோரும்கூட அழிந்துபோவீர்கள்” என்றார்.
அதற்குப் பின்பு இயேசு அவர்களுக்கு இந்த உவமையையும் சொன்னார்: “ஒரு மனிதன் தனது திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டு வைத்திருந்தான். அவன் அதிலே பழத்தைத் தேடிப் போனபோது, அதில் பழம் எதுவும் காணப்படவில்லை. எனவே அவன், அந்தத் திராட்சைத் தோட்டக்காரனிடம், ‘நான் இந்த அத்திமரத்தில் பழங்களைத் தேடி மூன்று வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பழம் எதையுமே நான் காணவில்லை. இந்த மரத்தை வெட்டிப்போடு. ஏன் இந்த மரம் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான்.
“அதற்கு தோட்டக்காரன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதைவிட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் நீர் அதை வெட்டிப்போடும்’ என்றான்.”
கூனியான பெண் சுகமடைதல்
ஒரு ஓய்வுநாளிலே, இயேசு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அங்கே பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஒரு தீய ஆவியினால் பிடிக்கப்பட்டு, கூனியான ஒரு பெண் இருந்தாள். அவள் முற்றுமாய் நிமிரமுடியாத அளவுக்குக் கூனிப்போய் இருந்தாள். இயேசு அவளைக் கண்டபோது, அவளை முன்னே வரும்படி கூப்பிட்டு, “மகளே, உன் பலவீனத்திலிருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய்” என்றார். பின்பு அவர், அவள்மேல் தன் கையை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று இறைவனைத் துதித்தாள்.
ஓய்வுநாளில் இயேசு குணமாக்கியபடியால், அங்கிருந்த ஜெப ஆலயத் தலைவன் கடும் கோபமடைந்து அங்கிருந்த மக்களிடம், “வேலைசெய்வதற்கு ஆறுநாட்கள் இருக்கிறதே. அந்த நாட்களிலே வந்து குணமடையுங்கள். ஓய்வுநாளில் அப்படிச் செய்யவேண்டாம்” என்றான்.
அதற்குக் கர்த்தர் அவனிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளிலே, அவனவன் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்து, தண்ணீர் குடிப்பதற்குக் கொண்டு போவதில்லையா? ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை சாத்தான் பதினெட்டு வருடங்களாய் நீண்ட காலத்திற்குக் கட்டி வைத்திருக்கிறானே. எனவே அவள் ஓய்வுநாளிலே அவளுடைய கட்டிலிருந்து விடுதலை பெறக் கூடாதோ?” என்றார்.
இயேசு இதைச் சொன்னபோது, அவருடைய எதிரிகள் எல்லோரும் வெட்கமடைந்தார்கள். ஆனால் மக்களோ, அவர் செய்த அதிசயமான காரியங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கடுகு விதை
பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப்போல் இருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? இறைவனுடைய அரசு ஒருவன் தனது தோட்டத்தில் நட்ட ஒரு கடுகுவிதையைப் போன்றது. அது வளர்ந்து ஒரு மரமாகியது. ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கின” என்றார்.
மேலும் அவர், “இறைவனுடைய அரசை நான் எதற்கு ஒப்பிடுவேன்? ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ13:21 மூன்றுபடி மாவு மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.
இடுக்கமான வாசல்
பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே உள்ள பட்டணங்களிலும், கிராமங்களிலும் உபதேசித்துக்கொண்டே சென்றார். அப்பொழுது ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களோ?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு இப்படியாக பதிலளித்தார்: “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும். வீட்டுச் சொந்தக்காரன் எழுந்து கதவை மூடியபின், நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டி, ‘ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்’ என்று கெஞ்சுவீர்கள்.
“ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது’ என்று சொல்வார்.
“அப்பொழுது நீங்கள் அவரைப் பார்த்து, ‘நாங்கள் உம்முடன் சாப்பிட்டுக் குடித்தோமே. நீர் எங்களுடைய வீதிகளில் போதித்தீரே’ என்பீர்கள்.
“ஆனால் உங்களிடம் அவர், ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. தீமை செய்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போங்கள்,’ என்று சொல்லுவார்.
“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, எல்லா இறைவாக்கினரும் இறைவனுடைய அரசில் இருப்பதையும், நீங்கள் புறக்கணிக்கப்படுவதையும் காணும்போது, அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் மக்கள் வந்து, இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள். உண்மையாகவே, இப்பொழுது கடைசியாய் இருப்பவர்கள் முதலாவதாகவும். முதலாவதாய் இருப்பவர்கள் கடைசியாய் இருப்பார்கள்” என்றார்.
எருசலேமுக்கான இயேசுவின் அனுதாபம்
அவ்வேளையில், சில பரிசேயர் இயேசுவிடம் வந்து அவரிடம், “நீர் இந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போய்விடும். ஏரோது உம்மைக் கொலைசெய்ய இருக்கிறான்” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள், இன்றும் நாளையும் பிசாசுகளைத் துரத்தி, நான் மக்களைச் சுகப்படுத்துவேன். மூன்றாவது நாளிலே, நான் எனது பணியின் நோக்கத்தை செய்து முடிப்பேன். ஆனால் இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும், என் பணியைத் தொடர்வேன். ஏனெனில், நிச்சயமாகவே இறைவாக்கினன் எவனும் எருசலேமுக்கு வெளியே சாகமுடியாது.
“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களை கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே. இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’13:35 [சங். 118:26] என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார்.
பரிசேயனின் வீட்டில் இயேசு
ஒரு ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, சாப்பிடுவதற்கு இயேசு போயிருந்தார். எல்லோரும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான். இயேசு பரிசேயரையும் மோசேயின் சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது மோசேயின் சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார். அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே, இயேசு அவன் கையை பிடித்து குணமாக்கி அனுப்பிவிட்டார்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், உடனே நீங்கள் அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிடமாட்டீர்களா?” என்று கேட்டார். அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்: “யாராவது உங்களை திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை, இவருக்குக் கொடு’ என்று உனக்குச் சொல்லக்கூடும். அப்பொழுது நீ வெட்கமடைந்தவனாய், கடைசி இடத்திற்கு போய் உட்கார நேரிடும். ஆகவே, உங்களை யாராவது அழைக்கும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவன் உன்னிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீ மதிப்பைப் பெறுவாய். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார்.
பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மத்தியான உணவையோ, இரவு உணவையோ கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்கவேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய், அவர்கள் உனக்குப் பதில் உதவி செய்துவிடுவார்கள். எனவே, நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக; அப்பொழுது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால், அதற்கான பதில் உதவி எதையும் உனக்குச் செய்யமுடியாது. ஆனால், நீ நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அதற்கான பதில் உதவியைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.
பெரிய விருந்தின் உவமை
இதைக் கேட்டபோது, இயேசுவோடு பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் சாப்பிடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான்.
இயேசு அதற்கு மறுமொழியாக சொன்னதாவது: “ஒருவன் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, பல விருந்தினர்களை அழைத்திருந்தான். விருந்துக்கான வேளை வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி தனது வேலைக்காரனை அனுப்பினான்.
“ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்பொழுதுதான் நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
“வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
“மற்றவனோ, ‘நான் இப்பொழுதுதான் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என்னால் வரமுடியாது’ என்றான்.
“அந்த வேலைக்காரன் திரும்பிவந்து, தனது எஜமானுக்கு நடந்தவற்றைச் சொன்னான். அப்பொழுது, அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப்போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சந்துகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் கூட்டிக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.
“அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால், இன்னும் இடம் இருக்கிறது’ என்றான்.
“அப்பொழுது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப்போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும். நான் உனக்குச் சொல்கிறேன், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் எனது விருந்தை சுவைக்கமாட்டான்’ என்றான்.”
சீடனாவதற்கான விலைக்கிரயம்
மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “யாராவது என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தன் உயிரையும் வெறுக்காவிட்டால், அவர்கள் என் சீடராய் இருக்கமுடியாது. யாராவது தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றாவிட்டால் எனக்குச் சீடராயிருக்க முடியாது.
“உங்களில் யாராவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவர்கள் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பார்களோ? அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள். ‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும், அதைக் கட்டிமுடிக்க அவனால் முடியவில்லை’ என்பார்கள்.
“அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ? அவனால் அப்படி நிற்கமுடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவன் பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான். அவ்விதமாகவே, உங்களில் யாராவது தம்மிடமுள்ள எல்லாவற்றையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடராக இருக்கமுடியாது.
“உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும்.
“கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
காணாமல் போன ஆடு
இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா? அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான். அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமல் போன நாணயம்
“ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ? அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா? அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமல் போன மகனின் உவமை
இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான்.
“சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான். அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை.
“அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான். எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான்.
“அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
“மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.
“ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது. எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான். அதற்கு அவன், ‘உம் சகோதரன் வந்திருக்கிறார். அவர் சுகபெலத்துடன் தம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிக சிறப்பான விருந்தை ஆயத்தபடுத்தியிருக்கிறார்’ என்றான்.
“அப்பொழுது அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக்கேட்டான். அவனோ தன் தந்தையிடம், ‘இதோ, இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்துகொண்டு வருகிறேன், நான் ஒருபோதும் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் கொண்டாடும்படி, நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைகூட கொடுக்கவில்லை. ஆனால் வேசிகளோடு உங்கள் சொத்தை வீணடித்த இந்த உங்கள் மகன் வீட்டிற்கு வந்த உடனே, இவனுக்காக நீங்கள் மிக சிறப்பான15:30 கொழுத்த கன்றுடன் விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்றான்.
“அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”
தந்திரமுள்ள நிர்வாகி
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
“அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
“தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
“அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர்16:6 மூல மொழியிலே 100 பாத், ஒரு பாத் என்பது 30 லிட்டருக்கு சமமாகும். எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான்.
“அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான்.
“ ‘ஆயிரம் மூட்டை கோதுமை’16:7 ஏறக்குறைய 30 டன்கள் என்று அவன் பதிலளித்தான்.
“அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான். எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்? இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள். இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
கூடுதல் போதனைகள்
“மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள். வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
செல்வந்தனும் லாசருவும்
“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே16:22 ஆபிரகாமின் மடி அல்லது பரலோகம் என்று இன்னொரு பொருளாகும் அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான். அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.
“அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும். ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.
“அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
“அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”
பாவம், விசுவாசம், கடமை
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ. இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும். எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்.
“உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு. அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா? மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா? கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா? எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர்
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்”17:14 [லேவி. 14:2-32] என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான். அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார். பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
இறைவனின் அரசின் வருகை
ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை. ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது”17:21 அல்லது உங்களில் இருக்கிறது என்றார்.
பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள். ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன். ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
“நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே,17:26 [ஆதி. 7] ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும். மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும். நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
“லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
“மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும். அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது. லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.”17:36 சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு [மத். 24:40] ஆம் வசனத்திற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார்.
அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள்.
இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.
விடாமுயற்சியுள்ள விதவையின் உவமை
அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
“கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட, இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார்.
பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்! அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார்.
பரிசேயனும் வரி வசூலிப்பவனும்
தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல. நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
“ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான்.
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
சிறுபிள்ளைகளும் இயேசுவும்
குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள். இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
பணக்காரனான ஆளுநர்
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே. ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே”18:20 [யாத். 20:12-16]; [உபா. 5:16-20] என்றார்.
அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான். இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார்.
அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான்.
அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
குருடன் பார்வையடைதல்
இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள்.
உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான்.
முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான்.
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார்.
அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான்.
இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார். உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.
வரி வசூலிக்கும் சகேயு
இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார்.
இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.
இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான்.
அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார்.
பத்து நாணயங்களின் உவமை
அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு சீக்கிரமாகவே வரப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்: “எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான். புறப்படும்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பத்து பொற்காசுகளைக்19:13 மூல மொழியில் மூன்றுமாதச் சம்பளம் ஒரு மினா. கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.
“ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இவன் எங்கள்மேல் அரசனாவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
“ஆனால், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தான். பின்பு அவன், தான் சம்பளத்தைக் கொடுத்த வேலையாட்கள் இன்னும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறியும்படி, அவர்களை அழைத்தான்.
“முதலாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் பத்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், நல்ல வேலைக்காரனே, நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான்.
“இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான்.
“பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன். நீர் கடினமான மனிதர். ஆனபடியால், நான் பயந்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான்.
“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கிறேன்; நான் ஒரு கடினமான மனிதன், வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவன் என்றும் உனக்குத் தெரியும் அல்லவா? அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வட்டிக்கடையில் போடவில்லை? நான் திரும்பி வரும்போது அந்தப் பணத்தை வட்டியோடு வாங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்திருக்குமே’ என்றான்.
“பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள்.
“அவன் அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். நான் தங்கள்மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களான அவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை என் கண் முன்பாகவே கொன்றுபோடுங்கள்’ என்றான்.”
எருசலேமில் இயேசு
இவைகளை இயேசு சொன்னபின்பு, அவர் தொடர்ந்து எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.
சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள்.
ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”
“பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”19:38 [சங். 118:26];
மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார்.
அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, “உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதபடி அது இப்பொழுதும், உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. உங்கள் பகைவர் பட்டணத்தைச்சுற்றி அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கும் நாட்கள் உங்கள்மேல் வரும். அவர்கள் உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கிற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிப்பார்கள். அவர்களோ, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி கட்டடங்களை இடித்துப் போடுவார்கள். ஏனெனில், இறைவன் உங்களிடம் வரும் காலத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை” என்றார்.
ஆலயத்தில் இயேசு
பின்பு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். இயேசு அவர்களிடம், “எனது வீடு ஒரு ஜெபவீடாயிருக்கும் என்று எழுதியிருக்கிறதே;19:46 [ஏசா. 56:7] ஆனால், நீங்கள் அதைக் கள்வரின் குகையாக்கியிருக்கிறீர்கள்”19:46 [எரே. 7:11] என்றார்.
அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், மக்கள் தலைவர்களும், அவரைக் கொலைசெய்வதற்கு முயற்சிசெய்தார்கள். இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றி கேள்வி
ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தபோது தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், யூதரின் தலைவர்களும், அவரிடம் ஒன்றாக வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கிறீர். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?
அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார். ‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”
எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
அதற்கு இயேசு, அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
விவசாயிகளின் உவமை
இயேசு தொடர்ந்து மக்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டான். அறுவடைக் காலத்தின்போது, திராட்சைத் தோட்டத்திலிருந்து குத்தகைக்காரர் தனக்குக் கொடுக்கவேண்டிய பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை அனுப்பினான். ஆனால் அந்தக் குத்தகைக்காரரோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள். தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையுங்கூட அவர்கள் அடித்து, அவனை அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாவது முறையும் வேலைக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.
“அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கிற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.
“ஆனால் குத்தகைக்காரர் மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு உரியவன், இவனைக் கொலைசெய்வோம்; அப்பொழுது, இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.
“அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்? அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார்.
மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.
அப்பொழுது இயேசு, “அவர்களை உற்றுநோக்கி, அப்படியானால், எழுதியிருக்கிறதன் பொருள் என்ன?
“ ‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.’20:17 [சங். 118:22]
அந்தக் கல்லின்மேல் விழுகிற ஒவ்வொருவனும், துண்டுதுண்டாக நொறுங்கிப் போவான். இந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அவனை நசுக்கிப்போடும்” என்றார்.
மோசேயின் சட்ட ஆசிரியரும், தலைமை ஆசாரியர்களும், உடனே அவரைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.
ரோம பேரரசனுக்கு வரி
இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். ஒற்றர்களோ, நீதிமான்களைப்போல் நடித்தார்கள். அவர்கள் இயேசுவை, அவர் சொல்லும் வார்த்தையினால் குற்றம் சாட்டி, அதன்படி அவரை ஆளுநரின் வல்லமைக்கும், அதிகாரத்திற்கும் ஒப்படைக்க நினைத்தார்கள். எனவே, அந்த ஒற்றர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகிறீர் என்றும், போதிக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பட்சபாதம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை சத்தியதின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். என்றும் அறிவோம். ரோம பேரரசன் சீசருக்கு நாங்கள் வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம், “ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். இந்த வெள்ளிக்காசிலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார்.
அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.
இயேசு அவர்களிடம், அப்படியானால் “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
மக்களுக்கு முன்பாக இயேசு சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவரைக் குற்றப்படுத்த முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமானார்கள்.
உயிர்த்தெழுதலும் திருமணமும்
இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாகத் தன் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று, மோசே எங்களுக்கு எழுதி வைத்திருக்கிறார். ஏழு சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான். இரண்டாவது சகோதரனும், பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்துபோனார்கள். அப்படியே, ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கிறார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். ஆனால் வரப்போகும் வாழ்விலும், இறந்தோரின் உயிர்த்தெழுதலிலும் இடம்பெறத் தகுதியுள்ளவர்களாய் எண்ணப்படுகிறவர்களோ, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை. அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில், அவர்கள் இறைவனின் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள். இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும் முட்புதரைப்பற்றிய சம்பவத்திலே குறிப்பிட்டுச் சொல்கிறார். ஏனெனில், மோசே கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கிறார்.20:37 [யாத். 3:6] அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிர் உள்ளவர்களின் இறைவனே. ஏனெனில், அவரைப் பொறுத்தமட்டில், எல்லோரும் உயிருள்ளவர்களே” என்றார்.
மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள். அதற்குப் பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
கிறிஸ்து யாருடைய மகன்
இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி? சங்கீதப் புத்தகத்தில் தாவீது தானே:
“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது:
“நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும்.” ’20:43 [சங். 110:1]
தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார்.
எச்சரிக்கைகள்
மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
விதவையின் காணிக்கை
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, பணக்காரர் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார். ஒரு ஏழை விதவை, இரண்டு சிறிய செப்பு நாணயங்களை அதிலே போடுகிறதையும் அவர் கண்டார். அப்பொழுது அவர், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை, மற்ற எல்லோரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டிருக்கிறாள். இவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கைளைக் கொடுத்தார்கள்; இவளோ, தனது ஏழ்மையிலிருந்து, தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.
கடைசிக் காலத்தின் அடையாளங்கள்
இயேசுவினுடைய சீடர்களில் சிலர், “ஆலயம் அழகான கற்களாலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளினாலும் எவ்வளவாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்கள் இங்கே காண்கிற இவையெல்லாம், ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி இடிக்கப்படும் நாட்கள் வரும்; அவை ஒவ்வொன்றும் கீழே தள்ளிவிடப்படும்” என்றார்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, எப்பொழுது இவை நிகழும்? நிகழப்போகிறது என்பதற்கான அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.
இயேசு அதற்குப் பதிலாக, “நீங்கள் ஏமாறாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில், அநேகர் நான்தான் அவர், காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்றவேண்டாம். நீங்கள் யுத்தங்களையும், கலவரங்களையும் கேள்விப்படும்போது, பயப்படவேண்டாம். முதலில் இவை நிகழவே வேண்டும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார்.
பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும். பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும்.
“இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும். நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். ஆனால், உங்கள் சார்பாக எப்படிப் பேசலாம் என்று முன்னதாகக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். என் நிமித்தம் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்துபோகாது. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
“எருசலேம் படை வீரரால் முற்றுகையிடப்படுவதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள். அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தில் இருக்கிறவர்கள் வெளியே புறப்பட்டு போகட்டும். நாட்டு மக்கள் பட்டணத்திற்குள் போகாமல் இருக்கட்டும். ஏனெனில், எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப்போகும் தண்டனையின் காலம் இதுவே. அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நாட்டிலே கொடிய துன்பமும் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும். அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். எல்லா மக்களின் நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள். யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரை, எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.
“சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும், கலக்கத்திற்கும் உட்படுவார்கள். வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படுவதனால், மனிதர் உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனம் சோர்ந்துபோவார்கள். அவ்வேளையில் மானிடமகனாகிய நான் வல்லமையுடனும், மிகுந்த மகிமையுடனும், மேகத்தில் வருவதை மனிதர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தி எழுந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது.”
இயேசு சீடர்களுக்கு மேலும் இந்த உவமையைச் சொன்னார்: “அத்திமரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் நோக்கிப்பாருங்கள். அவை துளிர்விடும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று, நீங்களே பார்த்து அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, இறைவனுடைய அரசு சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.
“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. வானமும், பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
“ஊதாரித்தனத்தினாலும், மதுபான வெறியினாலும், வாழ்க்கைக்குரிய கவலைகளினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடைந்து போகாதடி நீங்கள் கவனமாய் இருங்கள். அப்பொழுது அந்த நாள், ஒரு கண்ணியைப்போல எதிர்பாராத விதத்தில், உங்கள்மேல் வரும். பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும். எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள். நடக்கப்போகின்ற எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக மன்றாடுங்கள். மானிடமகனாகிய எனக்கு முன்பாக, உங்களுக்கு நிற்கக்கூடிய வல்லமை இருக்கவும் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு, இரவு நேரத்தை ஒலிவமலை எனப்பட்ட மலையிலே தங்கிவந்தார். எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து, அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவரிடம் ஆலயத்திற்கு வந்தார்கள்.
இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தல்
பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கி இருந்தது. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், இயேசுவைக் கொலைசெய்வதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் மக்களுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான, ஸ்காரியோத்து என அழைக்கப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். யூதாஸ் தலைமை ஆசாரியர்களிடமும், ஆலயத்தின் காவல் அதிகாரிகளிடமும் போய், தான் இயேசுவை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று, அவர்களுடன் கலந்து பேசினான். அவர்கள் மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள். யூதாசும் அதற்குச் சம்மதித்து, மக்கள் கூடியிராத வேளையில், அவர்களிடம் இயேசுவைப் பிடித்துக் கொடுப்பதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.
கடைசி திருவிருந்து
அப்பொழுது பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடப்படும் நாளான புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், பஸ்காவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தை செய்யவேண்டும் என நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து போங்கள். வீட்டின் சொந்தக்காரனிடம், ‘எனது சீடர்களுடன் நான் பஸ்காவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கிறது என்று, போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள். அவன் உங்களுக்கு வசதி உள்ள ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.
அவர்கள் புறப்பட்டுப்போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பந்தியில் உட்கார்ந்தார்கள். இயேசு அவர்களிடம், “நான் வேதனை அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்காவைச் சாப்பிடுவதற்கு ஆவலுடன் வாஞ்சையாய் இருக்கிறேன். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிடமாட்டேன்” என்றார்.
பாத்திரத்தை எடுத்த பின்பு, அவர் நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசு வரும்வரைக்கும் திராட்சைப்பழ இரசத்தை இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார்.
பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.
அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், உங்களுக்காக ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. ஆனாலும், என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனின் கையோ, சாப்பாட்டுப் பந்தியிலே என் கையுடனேயே இருக்கிறது. நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மானிடமகனாகிய நான் போகவேண்டும். ஆனால் என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ!” என்றார். அவர்களோ, தங்களுக்குள்ளே “இதைச் செய்கிறவன் யாராயிருக்கும்?” என்று, தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.
மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது. அப்பொழுது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள், தாங்கள் கொடைவள்ளல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்கிறவன், சிறியவனைப்போல் இருக்கவேண்டும். ஆளுகை செய்கிறவனோ, பணிவிடை செய்கிறவனைப்போல் இருக்கவேண்டும். பந்தியில் உட்கார்ந்திருப்பவனா, அல்லது அதில் பணிசெய்கிறவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணிசெய்கிறவனைப்போல் இருக்கிறேன். நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள். என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன். இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, பந்தியில் சாப்பிட்டுக் குடிப்பீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள்.
“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார்.
அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான்.
இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.
பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது”22:37 [ஏசா. 53:12] என்றார்.
அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள்.
அதற்கு அவர், “அதுபோதும்” என்றார்.
ஒலிவமலையில் இயேசுவின் மன்றாட்டு
வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்” என்றார். இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான்.22:43 வசனங்கள் 43-44 சில மொழிபெயர்ப்பில் இல்லை. அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது.
இயேசு மன்றாட்டிலிருந்து எழுந்து, தமது சீடர்களிடம் மீண்டும் சென்றார். அப்பொழுது சீடர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதை அவர் கண்டார். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு கைது செய்யப்படல்
இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார்.
இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது.
ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார்.
அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார்.
பேதுரு இயேசுவை மறுதலித்தல்
அவர்கள் இயேசுவைப் பிடித்து, பிரதான ஆசாரியன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். பேதுரு சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். அந்த வீட்டு முற்றத்தின் நடுவில் சிலர் நெருப்புமூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்திருந்தான். பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பு வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப்பார்த்து, “இவன் இயேசுவோடு இருந்தான்” என்றாள்.
ஆனால் பேதுருவோ, “பெண்ணே, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான்.
சிறிது நேரத்திற்குப் பின்பு, வேறொருவன் பேதுருவைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான்.
அதற்குப் பேதுரு, “இல்லையப்பா, நான் அல்ல” என்றான்.
ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான்.
அதற்குப் பேதுரு, “மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று கர்த்தர் சொன்ன வார்த்தை, பேதுருவுக்கு ஞாபகம் வந்தது. அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.
காவலாளிகள் இயேசுவை பரிகாசம் செய்தல்
இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள், அவரை ஏளனம் செய்யவும், அடிக்கவும் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவினுடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று, ஞானதிருஷ்டியினால் சொல்” என்று வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.
பிலாத்து மற்றும் ஏரோதுக்கு முன் இயேசு
பொழுது விடிந்தபோது, யூதரின் தலைவர்களின் குழுவும், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றாய் கூடிவந்தார்கள். இயேசு அவர்களுக்கு முன்பாக ஆலோசனைச் சங்கத்திற்குக்கொண்டு வரப்பட்டார். அவர்கள் இயேசுவிடம், “நீ கிறிஸ்துதான் என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
இயேசு அதற்குப் பதிலாக, நான் உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அதை விசுவாசிக்கமாட்டீர்கள். நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்லமாட்டீர்கள். ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் மானிடமகனாகிய நான் அமர்ந்திருப்பேன் என்றார்.
அப்பொழுது அவர்கள் எல்லோரும் இயேசுவிடம், “அப்படியானால், நீ இறைவனின் மகனோ?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் பதிலாக, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லுகிறீர்களே” என்றார்.
அப்பொழுது அவர்கள், “இனியும் நமக்குச் சாட்சி தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள்.
இதற்கு பின்பு கூடியிருந்த முழுக்கூட்டமும் எழுந்து, இயேசுவைப் பிலாத்துவிடம் கொண்டுசென்றார்கள். அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்க்கிறான். தன்னைக் கிறிஸ்து எனப்பட்ட அரசன் என்றும் சொல்லிக்கொள்கிறான்” என்று, அவர்மேல் குற்றம் சாட்டினார்கள்.
எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.
பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான்.
ஆனால் அவர்களோ, “இவன் தனது போதனையினாலே, யூதேயா முழுவதிலுமுள்ள மக்களைக் கலகப்படுத்துகிறான். இவன் கலிலேயா தொடங்கி, இங்கு வரை வந்துவிட்டான்” என்றார்கள்.
அதைக்கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்றான். இயேசு ஏரோதுவின் அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் இயேசுவை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவ்வேளையில், ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான்.
ஏரோது இயேசுவைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்டகாலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டிருந்ததினால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான். அவன் இயேசுவிடம் அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும் அங்கே நின்று ஆவேசத்தோடு குற்றம் சாட்டினார்கள். அப்பொழுது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரைக் கேலி செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு அலங்காரமான ஒரு மேலுடையை உடுத்தி, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள்.
பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூப்பிட்டு, அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே அவனை விசாரித்தேன். ஆனால், அவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஏரோதுவும் குற்றம் காணவில்லை. ஏனெனில், நீங்கள் காண்கிறபடி ஏரோது இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரண தண்டனை பெற்றுக்கொள்ளத்தக்க குற்றம் எதையும் இவன் செய்யவில்லை. எனவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான். பண்டிகையின்போது, வழக்கத்தின்படி யாராவது ஒருவனை மக்களுக்கு விடுதலைசெய்ய வேண்டியிருந்தது.23:17 சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு [மத். 27:15] மற்றும் [மாற். 15:6] –ற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.23:17 சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு [மத். 24:40] ஆம் வசனத்திற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.
பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய விரும்பி, அவர்களிடம் மீண்டும் பேசினான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேற்கொண்டது. பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான். எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான்.
இயேசு சிலுவையில் அறையப்படுல்
அவர்கள் இயேசுவைக் கூட்டிக் கொண்டுபோகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் வந்துகொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மேல் வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்துபோகும்படி செய்தார்கள். அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். இயேசு அவர்களைத் திரும்பிப்பார்த்து, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழவேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். ஏனெனில், ‘மலடியாய் இருக்கிற பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; குழந்தையைப் பிரசவிக்காதவர்களும், குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
“ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’23:30 [ஓசி. 10:8]
என்றும் சொல்வார்கள்.
ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இவர்கள் இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்யமாட்டார்கள்?” என்றார்.
குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள்.
படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது.
இவர் யூதருடைய அரசன்.
அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான்.
ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே. நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். இவரோ, எந்த தவறும் செய்யவில்லை” என்றான்.
பின்பு அவன் இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார்.
இயேசுவின் மரணம்
அப்பொழுது பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது. சூரியன் இருளடைந்தது. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்”23:46 [சங். 31:5] என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொல்லி, அவருடைய கடைசி மூச்சைவிட்டார்.
நூற்றுக்குத் தலைவன் நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக, கூடியிருந்த மக்கள் எல்லோரும் நடந்ததைக் கண்டபோது, அவர்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்கள். ஆனால் இயேசுவை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும், தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்
நீதிமன்றத்தின் அங்கத்தினராயிருந்த, யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானாயிருந்தான். அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை. அவன் யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்தவன். அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான். பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறையில், இதுவரை எவருடைய உடலுமே வைக்கப்படவில்லை. அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னேசென்று கல்லறையையும், அதில் எப்படி இயேசுவினுடைய உடல் கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள். பின்பு அவர்கள் வீட்டுக்குப்போய், நறுமணப் பொருட்களையும், நறுமணத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால் கட்டளையின்படியே, ஓய்வுநாளில் அவர்கள் ஓய்ந்திருந்தார்கள்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள். அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல், அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள். அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள். அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள். மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள். அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது. ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
எம்மாவூ கிராமத்தின் வழியில் இயேசு
இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம்24:13 ஏறக்குறைய ஏழு மைல் இருந்தது. அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள். அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்; ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள். அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக:
“நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார். தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்; நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன. அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?” என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார். அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
இயேசு சீடர்களுக்குக் காட்சியளித்தல்
சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது? என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார். அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை24:42 சில மொழிபெயர்ப்பில் தேன் அல்லது தேன் கூட்டுத் துண்டு என்று உள்ளது. அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார். இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும். இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள். என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
இயேசு பரலோகத்திற்குச் செல்லுதல்
இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.