- Biblica® Open Indian Tamil Contemporary Version
லேவியராகமம்
லேவியராகமம்
லேவியராகமம்
லேவி.
லேவியராகமம்
தகன காணிக்கை
யெகோவா சபைக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனுடன் பேசினார். “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘உங்களில் யாராவது யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை உங்கள் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
“ ‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும். அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும். அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும். ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
“ ‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும். அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும். காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
“ ‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும். ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும். அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும். அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
தானியக் காணிக்கை
“ ‘யாராவது ஒருவன் யெகோவாவுக்கு ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவரும்போது, அவனுடைய காணிக்கை சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அவன் அதன்மேல் எண்ணெய் ஊற்றி அதன்மேல் நறுமணத்தூளைப் போடவேண்டும். அந்தக் காணிக்கையை ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியர் நறுமணத்தூளுடன் சேர்த்து, சிறந்த மாவையும் எண்ணெயையும், ஒரு கைப்பிடியளவு எடுக்கவேண்டும். இதை ஒரு ஞாபகார்த்தப் பங்காக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொந்தமானது; யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு.
“ ‘நீங்கள் அடுப்பில் சுடப்பட்ட ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவந்தால், அது சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து சுடப்பட்ட அடை அப்பமாகவோ அல்லது புளிப்பில்லாமல் எண்ணெய் தடவி சுடப்பட்ட அதிரசமாகவோ இருக்கவேண்டும். நீ கொடுக்கும் தானியக் காணிக்கை தட்டையான இரும்பு வலைத்தட்டியில் சுடப்படுவதானால் அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து, சிறந்த மாவினால் செய்யப்படவேண்டும். அதை நொறுக்கி அதன்மேல் எண்ணெய் ஊற்று. இது ஒரு தானியக் காணிக்கை. உனது தானியக் காணிக்கை, தட்டையான சட்டியில் சமைக்கப்பட்டதானால், அது சிறந்த மாவினாலும், எண்ணெயினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பொருட்களினால் செய்யப்பட்ட தானியக் காணிக்கையை யெகோவாவிடத்தில் கொண்டுவாருங்கள்; அதை நீங்கள் ஆசாரியரிடம் கொடுக்கவேண்டும். அவன் அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுபோவான். ஆசாரியன் தானியக் காணிக்கையிலிருந்து ஞாபகார்த்தப் பங்கை தனியாக எடுத்து அதைப் பலிபீடத்தின்மேல் எரிப்பான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமானது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு.
“ ‘யெகோவாவிடத்தில் நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு தானியக் காணிக்கையும் புளிப்பில்லாமல் செய்யப்படவேண்டும். ஏனெனில் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையில், புளிப்பூட்டும் பதார்த்தத்தையோ தேனையோ எரிக்கக்கூடாது. நீ அவற்றை உன் முதற்பலனின் காணிக்கையாக யெகோவாவிடம் கொண்டுவரலாம். ஆனால் அவை பலிபீடத்தின்மேல் மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்தப்படக்கூடாது. உங்கள் தானியக் காணிக்கைகளையெல்லாம் உப்பினால் சாரமாக்குங்கள். உங்கள் இறைவனின் உடன்படிக்கையின் நித்தியத்தைக் காண்பிக்க உப்பை உங்கள் தானியக் காணிக்கைகளிலிருந்து விலக்கவேண்டாம். உங்களுடைய எல்லா காணிக்கைகளோடும் உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
“ ‘முதற்பலன்களின் தானியக் காணிக்கையை யெகோவாவிடம் கொண்டுவருவதானால், நெருப்பில் வாட்டப்பட்டு கசக்கப்பட்ட புதிய தானிய கதிர்களைச் செலுத்தவேண்டும். அதன்மேல் எண்ணெயையும், நறுமணத்தூளையும் போடுங்கள். இது ஒரு தானியக் காணிக்கை. ஆசாரியர் அதை நறுமணத்தூளுடன் சேர்த்து, கசக்கப்பட்ட தானியத்திலும், எண்ணெயிலும் ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரிப்பான்.
சமாதான காணிக்கை
“ ‘யாராவது ஒருவனுடைய காணிக்கை சமாதான காணிக்கையாக3:1 சமாதான காணிக்கை மற்றும் ஐக்கிய காணிக்கை இரண்டும் ஒன்றே. இருந்து, அவன் மாட்டு மந்தையிலிருந்து காளையையோ அல்லது பசுவையோ செலுத்துவதானால், அவன் யெகோவாவுக்கு முன்பாக குறைபாடற்ற ஒரு மிருகத்தை ஒப்படைக்கவேண்டும். அந்த பலி மிருகத்தின் தலையின்மேல் அவன் தன் கையை வைத்து, சபைக்கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். சமாதான காணிக்கையிலிருந்து நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியன: உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பு முழுவதும், அவற்றை இணைக்கிற கொழுப்பு, விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். ஆரோனின் மகன்கள் இவற்றைப் பலிபீடத்தில் எரிகிற விறகின் மேலேயுள்ள தகன காணிக்கையின்மேல் வைத்து எரிப்பார்கள். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
“ ‘அவன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு மிருகத்தை சமாதான பலியாக யெகோவாவுக்குச் செலுத்துவானாகில், அவன் குறைபாடற்ற ஒரு ஆணையோ, பெண்ணையோ செலுத்தவேண்டும். அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைச் செலுத்துவதானால், அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து செலுத்தவேண்டும். அவன் தன் காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைத்து, சபைக்கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். சமாதான காணிக்கையிலிருந்து நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியன: அதன் கொழுப்பும், முதுகெலும்புக்கு அருகே வெட்டியெடுக்கப்பட்ட கொழுப்பான வால் முழுவதும், உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் அல்லது இணைத்திருக்கும் கொழுப்பு முழுவதும், விலாவுக்குக் கீழ்ப்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும். ஆசாரியன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் உணவாகவும், யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகவும் எரிப்பான்.
“ ‘அவனுடைய காணிக்கை ஒரு வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும். அவன் அதனுடைய தலைமேல் தன் கையை வைத்து, சபைக் கூடாரத்திற்கு முன்பாக அதை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள். அவன் தான் செலுத்தும் காணிக்கையிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தவேண்டிய காணிக்கையாவன: உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் அல்லது இணைத்திருக்கும் கொழுப்பு முழுவதும், விலாவுக்குக் கீழ்ப்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவைகளைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமேயாகும். ஆசாரியன் இவைகள் எல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் உணவாக எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே உரியது.
“ ‘கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது. நீங்கள் வாழும் இடமெல்லாம் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கும்’ என்றார்.”
பாவநிவாரண காணிக்கை
மேலும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், ‘யாராவது தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளால் தடைசெய்யப்பட்ட எதையேனும் செய்தால், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாவன:
“ ‘அபிஷேகம் பண்ணப்பட்ட தலைமை ஆசாரியன் மக்கள்மேல் குற்றம் சுமரும்படி பாவஞ்செய்தால், அவன் தான் செய்த பாவத்திற்கான பாவநிவாரண காணிக்கையாக, குறைபாடற்ற ஒரு இளங்காளையை யெகோவாவிடம் கொண்டுவர வேண்டும். அவன் அந்தக் காளையைச் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவன் அதன் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவா முன்பாக அதை வெட்டிக் கொல்லவேண்டும். பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன், பலியிடப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும். அவன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த இடத்தில் இருக்கும் திரைச்சீலைக்கு முன்பாக, யெகோவாவின் முன்னிலையில் அதில் கொஞ்சத்தை ஏழுமுறை தெளிக்கவேண்டும். பின்பு சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் நறுமண தூபபீடத்தின் கொம்புகளின்மேல், ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைப் பூசவேண்டும். காளையின் மீதமுள்ள இரத்தத்தை, சபைக்கூடார வாசலில் இருக்கும் தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும். அவன் பாவநிவாரண காணிக்கைக்கான காளையிலிருந்து கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும்: உள்ளுறுப்புகளை மூடியிருக்கிற அல்லது அவற்றை இணைத்திருக்கிற கொழுப்பையும், விலாவுக்குக் கீழ்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் அகற்றவேண்டும். சமாதான காணிக்கையாகச் செலுத்தப்பட்ட மாட்டிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, இதிலிருந்தும் அகற்றப்படவேண்டும். பின்பு ஆசாரியன் அவற்றைத் தகன பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனாலும் அக்காளையின் தோலையும், இறைச்சி முழுவதையும், தலையையும், கால்களையும், உள்ளுறுப்புகளையும், குடலையும், அதாவது, காளையின் மீதமுள்ள பாகங்கள் யாவற்றையும் அவன் முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்படுகிற சாம்பல் கொட்டுகிற இடத்திற்கு கொண்டுவந்து, சாம்பல் குவியலின்மேல், விறகினால் எரிக்கப்பட்ட நெருப்பில்போட்டு எரிக்கவேண்டும்.
“ ‘இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரும் தவறுதலாகப் பாவஞ்செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாகிலும் செய்யக்கூடும். அப்படிச் செய்திருந்தால் அந்தச் செயலைக்குறித்து அச்சமுதாயத்தினர் அறியாதிருந்தாலும், அவர்கள் குற்றவாளிகளே. தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் அறியவரும்போது, சபையார் ஒரு இளங்காளையைப் பாவநிவாரண காணிக்கையாக சபைக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும். சபையின் தலைவர்கள் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையின்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும். பின்பு அந்தக் காளை யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும். பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும். ஆசாரியன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, திரைச்சீலைக்கு எதிரே யெகோவாவின் முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும். அவன் அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளில் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை அவன் சபைக்கூடார வாசலில் உள்ள தகன பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும். அவன் அதிலிருந்து எல்லா கொழுப்பையும் அகற்றி, அதைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். தனது பாவநிவாரண காணிக்கைக்கான காளைக்குச் செய்ததுபோலவே, இந்தக் காளைக்கும் செய்யவேண்டும். இவ்விதமாய், ஆசாரியர் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். பின்பு காளையின் மீதமுள்ள பாகங்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், அங்கே ஆசாரியனின் பாவநிவாரணப் பலியைச் சுட்டெரித்ததுபோல் இதையும் எரிக்கவேண்டும். இதுவே சமுதாயத்தினருக்கான பாவநிவாரண காணிக்கை.
“ ‘ஒரு தலைவன் தவறுதலாகப் பாவஞ்செய்து, தன் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி. அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை தன் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவின் தலையில் தன் கையை வைத்து, யெகோவா முன்னிலையில் தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். இது ஒரு பாவநிவாரண காணிக்கை. பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை, அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும். சமாதான காணிக்கையின் கொழுப்பை எரித்ததுபோலவே, கொழுப்பு முழுவதையும் அவன் பீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அந்த மனிதனின் பாவத்திற்கான பாவநிவிர்த்தியைச் செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
“ ‘சமுதாய அங்கத்தினரில் ஒருவன் தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி. அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் தான் செய்த பாவத்திற்கான தன் காணிக்கையாக குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டு பெண்குட்டியைக் கொண்டுவர வேண்டும். அவன் தன் கையைப் பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் தலைமேல் வைத்து, தகன காணிக்கைக்கான இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். பின்பு ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும். சமாதான காணிக்கையின் கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, அதன் கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்கவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
“ ‘அவன் பாவநிவாரண காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவருவானேயாகில், அவன் குறைபாடற்ற பெண்ணாட்டுக்குட்டியையே கொண்டுவர வேண்டும். அவன் அதன் தலைமேல் தன் கையை வைத்து, தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் பாவநிவாரண காணிக்கையாக அதை வெட்டிக் கொல்லவேண்டும். பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, தகன பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அதைப் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும். சமாதான பலியின் செம்மறியாட்டுக் குட்டியிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, கொழுப்பு முழுவதையும் அவன் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் வைத்து எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அவன் செய்த பாவத்திற்காக, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
“ ‘ஒருவன் தான் கண்டிருந்த அல்லது அறிந்திருந்த ஏதாவது ஒன்றைப்பற்றி சாட்சி சொல்லும்படியாக பிறப்பிக்கப்பட்ட பகிரங்கக் கட்டளையைக் கேள்விப்பட்டிருந்தும், அவன் அதைப் சொல்லத்தவறி பாவம்செய்தால், அவன் அதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
“ ‘அசுத்தமான காட்டு மிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகிறவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமாகி, குற்றவாளியாகிறான். அல்லது எந்த அசுத்தத்தினாலாவது தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான். ஒருவன் கவலையீனமாய், வாயில் வந்தபடி முன்யோசனையின்றி, நன்மையான அல்லது தீமையான எதையாவது செய்வதாக சத்தியம் செய்திருந்தால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான். யாராவது ஒருவன் இவ்விதமான ஒன்றில் குற்றமுள்ளவனாகும்போது, தான் எவ்வகையில் பாவம் செய்தான் என்பதை அவன் அறிக்கை செய்யவேண்டும். அவன், தான் செய்த பாவத்திற்குத் தண்டனையாக மந்தையிலிருந்து செம்மறியாட்டு பெண்குட்டியையோ அல்லது வெள்ளாட்டு பெண்குட்டியையோ பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அவனுக்காக அவனுடைய பாவத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“ ‘அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுக்க இயலாதவனாயிருந்தால், அவன் இரண்டு புறாக்களையோ அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ தன் பாவத்திற்கான தண்டனையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். அவன் அவைகளை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் முதலாவது, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதன் கழுத்திலிருந்து தலையைத் திருகவேண்டும். அதை முழுமையாக துண்டித்துப்போடக் கூடாது. பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் தெளிக்கவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை. விதிக்கப்பட்ட விதிமுறைப்படியே, ஆசாரியன் மற்றப் பறவையைத் தகன காணிக்கையாகச் செலுத்தி, அவன் செய்த பாவத்திற்காக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
“ ‘ஆனாலும், இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது கொண்டுவர அவன் இயலாதவனானால், அவன் தன் பாவத்திற்கான காணிக்கையாக, எப்பா5:11 அதாவது, எப்பா என்பது சுமார் 1.6 கிலோகிராம் மாவு அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அது பாவநிவாரண காணிக்கையாக இருப்பதால், அந்த மாவின்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது. அவன் அதை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அந்த மாவிலிருந்து கைப்பிடி அளவுள்ள மாவை ஞாபகார்த்தப் பங்காக எடுத்து, நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் அதை எரிக்கவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை. இவ்விதமாய் ஆசாரியன் அவன் செய்த இந்தப் பாவங்களில் எதற்கானாலும் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவனும் மன்னிக்கப்படுவான். மீதமுள்ள காணிக்கை தானியக் காணிக்கையைப்போலவே ஆசாரியனுக்கு உரியதாகும்.’ ”
குற்றநிவாரண காணிக்கை
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் தவறிழைத்து தெரியாமல் பாவம் செய்கிறபோது, அவன் அதற்கான தண்டனையாக ஆட்டு மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், பரிசுத்த இடத்தின், ‘சேக்கல்’ நிறையின்படி வெள்ளியில் சரியான மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இது ஒரு குற்றநிவாரண காணிக்கை5:15 அதாவது, திருப்பிச் செலுத்தும் காணிக்கை. பரிசுத்தமானவைகளின் காரியத்தில் அவன் செய்த தவறுக்கு அவன் ஈடுசெய்ய வேண்டும். அவன் அதன் மதிப்புடன், ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அதையெல்லாம் ஆசாரியனிடம் செலுத்தவேண்டும். குற்றநிவாரண காணிக்கையான அந்த செம்மறியாட்டுக் கடாவை, ஆசாரியன் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
“ஒருவன் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் அதை அறியாதிருந்தாலும்கூட, அவன் குற்றவாளியாகிறான். அவன் அதற்குக் கணக்குக் கொடுக்கவேண்டும். அவன் குற்றநிவாரண காணிக்கையாக, ஆட்டு மந்தையிலுள்ள ஒரு செம்மறியாட்டுக் கடாவை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், தகுந்த மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தவறுதலாக செய்த பிழைக்காக, ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான். இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார்.
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “யாராவது ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளையோ அல்லது அவனுடைய கவனிப்பில் விடப்பட்ட பொருளையோ வஞ்சிப்பதினாலாவது, திருடுவதினாலாவது, அவனை ஏமாற்றுவதினாலாவது தன் அயலானுக்கு எதிராகப் பாவஞ்செய்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாயிருக்கக்கூடும். அல்லது அவன் தொலைந்த பொருட்களைக் கண்டெடுத்தும் அதைக் குறித்துப் பொய் சொல்வதினாலாவது, பொய்யாய் சத்தியம் செய்வதினாலாவது, மக்கள் செய்யக்கூடிய இப்படியான எந்த ஒரு பாவத்தையும் அவன் செய்வதினால் யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருக்கக்கூடும். இவ்வாறு அவன் பாவங்களைச் செய்து குற்றவாளியாகிறான். அவன் தான் திருடியதையோ அல்லது பலவந்தமாய் எடுத்துக்கொண்டதையோ அல்லது தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டதையோ அல்லது தான் கண்டெடுத்த தொலைந்த பொருளையோ அல்லது அவன் பொய்யாய் சத்தியம் செய்துகொண்ட எதையுமோ அவன் கட்டாயமாக திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும், அதனுடன் சேர்த்துத் தன் குற்றநிவாரண பலியைச் செலுத்தும் நாளில், அதன் சொந்தக்காரனுக்கு அது முழுவதையும் ஒப்படைக்கவேண்டும். தனக்கான தண்டனையாக தன் குற்றநிவாரண காணிக்கையை ஆசாரியனிடத்தில், அதாவது யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தச் செம்மறியாட்டுக் கடா உரிய மதிப்பு உடையதாகவும் குறைபாடு அற்றதாகவும் இருக்கவேண்டும். இவ்விதம் ஆசாரியன் யெகோவாவுக்கு முன்பாக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது எவைகளைச் செய்து அவன் குற்றவாளியானானோ அவைகளினின்று அவன் மன்னிக்கப்படுவான்.”
தகன காணிக்கை
மீண்டும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் இந்தக் கட்டளையைக் கொடு. ‘தகன காணிக்கைக்குரிய ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கை இரவு முழுவதும் மறுநாள் காலைவரை பலிபீடத்தின் அடுப்பின்மேல் இருக்கவேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். ஆசாரியன் மென்பட்டு உள் உடைகளைத் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும்படி உடுத்தி, அதன் மேலாக தன் மென்பட்டு உடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். அதன்பின் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பினால் எரிந்துபோன தகன காணிக்கையின் சாம்பலை அகற்றி, பலிபீடத்தின் பக்கத்தில் அதை வைக்கவேண்டும். அதன்பின் ஆசாரியன் அந்த உடைகளைக் கழற்றி, மற்ற உடைகளை உடுத்திக்கொண்டு, சாம்பலை எடுத்து முகாமுக்கு வெளியே, சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்பட்ட இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது, ஆசாரியன் ஒவ்வொரு காலையிலும் இன்னும் விறகுகளைப் போட்டு, தகன காணிக்கையை நெருப்பின்மேல் ஒழுங்குபடுத்தி, அதன்மேல் சமாதான காணிக்கையின் கொழுப்பைப் போட்டு எரிக்கவேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது.
தானியக் காணிக்கை
“ ‘தானியக் காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே: ஆரோனின் மகன்கள் யெகோவாவிடம் பலிபீடத்துக்கு முன்பாக அதைக் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் தானியக் காணிக்கையிலுள்ள நறுமணத்தூளுடன் சேர்த்து, ஒரு கைப்பிடி சிறந்த மாவையும் எண்ணெயையும் எடுக்கவேண்டும். அந்த ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். அதன் மீதியானதை ஆரோனும் அவன் மகன்களும் சாப்பிடவேண்டும். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலே, புளிப்பில்லாததாகச் சாப்பிடவேண்டும். அவர்கள் அதைச் சபைக்கூடார முற்றத்தில் சாப்பிடவேண்டும்; ஆனால் அது புளிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படக் கூடாது. எனக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில், அவர்களுடைய பங்காக நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன். பாவநிவாரண காணிக்கையைப் போலவும், குற்றநிவாரண காணிக்கையைப் போலவும் இதுவும் மகா பரிசுத்தமானது. அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் சாப்பிடலாம். தலைமுறைதோறும் நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற காணிக்கைகளில், இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்’ ” என்றார்.
யெகோவா தொடர்ந்து மோசேயிடம் சொன்னதாவது, “ஆரோனும் அவன் மகன்களும் தாங்கள் அபிஷேகம் பண்ணப்படுகிற நாளிலே யெகோவாவுக்குக் கொண்டுவரவேண்டிய காணிக்கை இதுவே: ஒரு எப்பா அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை6:20 அதாவது, சுமார் 1.6 கிலோகிராம் மாவு தானியக் காணிக்கையாக காலையில் அரைப்பங்கையும், மாலையில் அரைப்பங்கையும் கொண்டுவர வேண்டும். அதை எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு வலைத்தட்டியில் தயாரிக்க வேண்டும். நன்றாகப் பிசைந்து தயாரித்த அதைத் துண்டுகளாக நொறுக்கி, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தானியக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். ஆரோனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனாக வரப்போகும் அவனுடைய மகனே அதைத் தயாரிக்க வேண்டும். இது யெகோவாவினுடைய நிரந்தரமான பங்கு. அது முழுவதும் எரிக்கப்படவேண்டும். ஆசாரியனின் எல்லா தானியக் காணிக்கையும், முழுவதுமாய் எரிக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.”
பாவநிவாரண காணிக்கை
யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொல்லவேண்டியதாவது: பாவநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: தகன காணிக்கைக்கான மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே பாவநிவாரண காணிக்கைக்கான மிருகமும் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும். இது மகா பரிசுத்தமானது. அதைச் செலுத்தும் ஆசாரியன் அதைச் சாப்பிடவேண்டும். அதை சபைக்கூடார முற்றத்தில் உள்ள ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும். காணிக்கை இறைச்சியைத் தொடுகிற எதுவும் பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஏதேனும் உடையில் தெறித்திருந்தால், அதை நீங்கள் பரிசுத்த இடத்திலே கழுவவேண்டும். அது சமைக்கப்பட்ட மண்சட்டி உடைக்கப்பட வேண்டும். ஆனால் அது வெண்கலப் பானையில் சமைக்கப்பட்டால், அந்தப் பானையை நன்கு தேய்த்து தண்ணீரால் அலசவேண்டும். ஆசாரியர்களின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். அது மகா பரிசுத்தமானது. ஆனால் எந்தவொரு பாவநிவாரண காணிக்கையின் இரத்தமும், பரிசுத்த இடத்தில் பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்காக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவரப்பட்டால், அக்காணிக்கையைச் சாப்பிடக்கூடாது; அது எரிக்கப்படவேண்டும்.
குற்றநிவாரண காணிக்கை
“ ‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது. தகன காணிக்கை மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரண காணிக்கைக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்படவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கப்படவேண்டும். அதன் கொழுப்பு முழுவதும் காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்பான வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அகற்றப்பட வேண்டிய ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை. ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
“ ‘பாவநிவாரண காணிக்கையும், குற்றநிவாரண காணிக்கையும் ஒரே விதிமுறைப்படியே செய்யப்படவேண்டும். அவற்றைக் கொண்டு பாவநிவிர்த்தி செய்யும் ஆசாரியனுக்கே அவை சொந்தமாகும். யாருக்காகிலும் தகன காணிக்கையைச் செலுத்தும் ஆசாரியன் அதன் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம். அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத்தட்டியில் சுடப்பட்டதுமான தானியக் காணிக்கைகள் எல்லாம், அவற்றைச் செலுத்தும் ஆசாரியருக்கே உரியன. எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும்.
சமாதான காணிக்கை
“ ‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே:
“ ‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும். நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது. நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.
“ ‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம். ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும். சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான்.
“ ‘சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக எண்ணப்படும் எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அது எரிக்கப்படவேண்டும். மற்ற இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சம்பிரதாய முறைப்படி சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம். ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’ ”
கொழுப்பு, இரத்தம் சாப்பிடத்தடை
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிடவேண்டாம். செத்துக் கிடக்கக் காணப்பட்ட ஒரு மிருகத்தின் கொழுப்பையோ அல்லது காட்டு மிருகங்களால் கிழித்துப்போடப்பட்ட மிருகத்தின் கொழுப்பையோ வேறு ஏதாவது தேவைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அதைச் சாப்பிடக்கூடாது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும், தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பறவையின் இரத்தத்தையோ, மிருகத்தின் இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது. யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
ஆசாரியர்களின் பங்கு
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருக்கு சொல்லவேண்டியதாவது: யெகோவாவுக்குச் சமாதான காணிக்கை கொண்டுவரும் எவனும் அதன் ஒரு பங்கைத் தனது பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையைத் தன் சொந்தக் கைகளினாலேயே கொண்டுவர வேண்டும். அதன் நெஞ்சுப்பகுதியுடன் அதன் கொழுப்பையும் கொண்டுவந்து, நெஞ்சுப்பகுதியை யெகோவாவுக்குமுன் அசைவாட்டும் காணிக்கையாக, அசைவாட்டவேண்டும். ஆசாரியன் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனால் நெஞ்சுப்பகுதியோ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உரியது. நீங்கள் சமாதான காணிக்கை மிருகத்தின் வலது தொடையை ஆசாரியனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டும். சமாதான காணிக்கை மிருகத்தின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்தும் ஆரோனின் மகன், மிருகத்தின் வலது தொடையை தனது பங்காக எடுக்கவேண்டும். இஸ்ரயேலரின் சமாதான காணிக்கையிலிருந்து அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் அவைகளை இஸ்ரயேலரிடமிருந்து ஆசாரியன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் நிரந்தரமான பங்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையின் இப்பங்கு, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் ஆசாரியர்களாக யெகோவாவுக்குப் பணிசெய்ய ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளிலேயே, இப்பங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த நாளிலே, “தலைமுறைதோறும் இஸ்ரயேலர் தங்களுடைய ஒழுங்கான பங்காக இதை ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும்” என யெகோவா கட்டளையிட்டிருந்தார்.
தகன காணிக்கை, தானியக் காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை, அர்ப்பணிப்பு காணிக்கை, சமாதான காணிக்கை ஆகியவற்றிற்கான ஒழுங்குமுறைகள் இவையே. இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொண்டுவர வேண்டுமென, யெகோவா சீனாய் பாலைவனத்தில் கட்டளையிட்ட நாளிலே, அவர் சீனாய் மலையில் இந்த ஒழுங்குமுறைகளை மோசேக்குக் கொடுத்தார்.
ஆரோனும் மகன்களும் அர்ப்பணிக்கப்படுதல்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ ஆரோனையும் அவன் மகன்களையும் அவர்களுடைய உடைகளுடனும், அபிஷேக எண்ணெயுடனும் கொண்டுவா. அத்துடன் பாவநிவாரண காணிக்கைக்கான காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையையும் கொண்டுவா. முழு சபையையும் சபைக்கூடார வாசலில் கூடிவரச்செய்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். சபையாரும் சபைக்கூடார வாசலில் ஒன்றுகூடினார்கள்.
மோசே சபையைப் பார்த்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்டது இதுவே” என்றான். பின்பு மோசே ஆரோனையும் அவன் மகன்களையும் சபைக்கு முன்பாக அழைத்துவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவினான். அவன் ஆரோனுக்கு உள்ளுடையை உடுத்தி, இடுப்பில் இடைப்பட்டியைக் கட்டி, மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் போட்டான். திறமையாக, அழகாகப் பின்னப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டினான். இவ்வாறாக, அது அவன்மேல் கட்டப்பட்டது. பின்பு மார்பு அணியை அவனுக்குப் போட்டு, அந்த மார்பு அணியிலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்தான். பின்பு அவன் தலைப்பாகையை ஆரோனின் தலையில் வைத்து, அதன் முன்பக்கத்தில் பரிசுத்த மகுடமான தங்கப்பட்டியை வைத்தான். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் செய்தான்.
பின்பு மோசே, அபிஷேக எண்ணெயை எடுத்து இறைசமுகக் கூடாரத்தையும், அதனுள் இருந்த எல்லாவற்றையும் அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அந்த எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும், அதிலுள்ள பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் காலையும் அர்ப்பணிக்கும்படி அபிஷேகித்தான். பின்பு ஆரோனின் தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றி, அவனை அர்ப்பணம் செய்வதற்காக அபிஷேகித்தான். மோசே ஆரோனின் மகன்களை முன்னால் கொண்டுவந்து, உள்ளுடையை உடுத்தி, இடைப்பட்டியைக் கட்டி, குல்லாக்களையும் அணிவித்தான். இவற்றை மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக, ஒரு காளையை அவன் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தார்கள். மோசே அந்தக் காளையை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். இவ்விதமாக பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்தான். மேலும் மோசே, உள்ளுறுப்புகளைச் சுற்றியிருந்த கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியிருந்த கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதில் இருந்த கொழுப்பையும் எடுத்து அவற்றைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். ஆனால் மோசே வெட்டப்பட்ட காளையை தோலுடனும், அதன் இறைச்சியுடனும், அதன் குடல்களுடனும் முகாமுக்கு வெளியே எரித்தான். இவற்றை யெகோவா கட்டளையிட்டபடியே செய்தான்.
அதன்பின், தகன காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அந்தக்கடா கொல்லப்பட்டது, மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். மோசே அந்தக்கடாவை துண்டங்களாக வெட்டி தலையையும், துண்டங்களையும் கொழுப்பையும் எரித்தான். அவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரினால் கழுவி, முழு கடாவையும் பலிபீடத்தின்மேல் தகன காணிக்கையாக எரித்தான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் எரிக்கப்படும் ஒரு காணிக்கையாக இருந்தது. இவற்றை மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
பின்பு மோசே அர்ப்பணிப்புக்கான மற்ற செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள். மோசே அந்த செம்மறியாட்டுக் கடாவை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசினான். ஆரோனுடைய மகன்களையும் மோசே முன்பாக அழைத்துவந்து, இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து அவர்களின் வலது காது மடல்களிலும், வலதுகை பெருவிரல்களிலும், வலதுகால் பெருவிரல்களிலும் பூசினான். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். மோசே கொழுப்பையும், கொழுத்த வாலையும், உள்ளுறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது தொடையையும் எடுத்தான். பின்பு அவன் யெகோவா முன்வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து, ஒரு அடை அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துச் சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்து, அக்கொழுப்புகளின்மேலும், வலது தொடையின்மேலும் வைத்தான். அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்களின் கைகளிலும் கொடுத்து யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். மோசே அவைகளை அவர்களின் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தில் இருந்த காணிக்கையின்மேல் அதை அர்ப்பணிப்பு காணிக்கையாக எரித்தான். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையாக இருந்தது. அர்ப்பணிப்பு காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவில், மோசே தன் பங்கான நெஞ்சுப்பகுதியை எடுத்து, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். இவற்றை யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
பின்பு மோசே, அபிஷேக எண்ணெயில் கொஞ்சமும், பலிபீடத்திலிருந்து சிறிது இரத்தத்தையும் எடுத்து, ஆரோனின்மேலும், அவன் உடையின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளித்தான். இவ்வாறு ஆரோனையும், அவனுடைய உடைகளையும், அவன் மகன்களையும், அவர்களுடைய உடைகளையும் அர்ப்பணம் செய்தான்.
பின்பு மோசே, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொன்னதாவது, “ஆரோனும், அவன் மகன்களும் சாப்பிடவேண்டும் என நான் கட்டளையிட்டபடி நீங்கள் இறைச்சியைச் சபைக்கூடார வாசலில் சமைத்து, அங்கே அர்ப்பணிப்பு காணிக்கை கூடையிலுள்ள அப்பத்துடன் சாப்பிடவேண்டும். மீதமுள்ள இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிடவேண்டும். உங்கள் அர்ப்பணிப்பு நாட்கள் முடியும்வரை ஏழுநாட்களுக்கு சபைக்கூடார வாசலைவிட்டுப் போகாதீர்கள். ஏனென்றால், உங்கள் நியமனம் ஏழு நாட்கள்வரை நீடிக்கும். இன்று செய்யப்பட்டிருப்பது உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி யெகோவாவினால் கட்டளையிடப்பட்டதாகும். நீங்கள் இந்த ஏழுநாட்களும் இரவும் பகலும் சபைக்கூடார வாசலில் தங்கியிருந்து, யெகோவா கேட்டுக்கொள்கிறபடி செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சாகமாட்டீர்கள். ஏனெனில், இதுதான் எனக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.”
இப்படியாக யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்ட அனைத்தையும் ஆரோனும் அவன் மகன்களும் செய்தார்கள்.
ஆசாரியர்கள் ஊழியம் ஆரம்பித்தல்
மோசே எட்டாம் நாளில்9:1 7 நாள் ஒழுங்குமுறை விழாவுக்குப் பிறகு எட்டாவது நாளில். ஆரோனையும் அவன் மகன்களையும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களையும் அழைத்தான். அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா. பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும். சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான்.
அவர்கள் மோசே கட்டளையிட்ட பொருட்களை சபைக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் அனைவரும் நெருங்கிவந்து, யெகோவா முன்னிலையில் நின்றார்கள். அப்பொழுது மோசே, “யெகோவாவின் மகிமை உங்களுக்குத் தோன்றும்படி, நீங்கள் செய்யவேண்டுமென யெகோவா கட்டளையிட்டது இதுவே” என்றான்.
மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.
அப்படியே ஆரோன் பலிபீடத்திற்கு வந்து, தனது பாவநிவாரண காணிக்கையாக கன்றுக்குட்டியை வெட்டிக்கொன்றான். ஆரோனுடைய மகன்கள் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆரோன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளில் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் பலிபீடத்தில் அவன் எரித்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இது செய்யப்பட்டது. இறைச்சியையும், தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
அதன்பின் தகன காணிக்கை மிருகத்தை அவன் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதை பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். அவன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் கழுவி அவற்றைப் பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கையின்மேல் வைத்து எரித்தான்.
பின்பு ஆரோன், மக்களுக்கான காணிக்கையைக் கொண்டுவந்தான். அவன் மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையான வெள்ளாட்டை எடுத்து, அதை வெட்டிக்கொன்று, முன்பு பலியிட்ட மிருகத்தைப்போலவே பாவநிவாரண காணிக்கையாக அதைச் செலுத்தினான்.
அவன் தகனகாணிக்கையைக் கொண்டுவந்து, விதிக்கப்பட்டிருந்த முறைப்படியே அதைச் செலுத்தினான். அத்துடன் அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவந்து, அதில் ஒரு கைநிறைய எடுத்து, காலையில் செலுத்திய தகன காணிக்கையுடன் அதையும் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
பின்பு அவன் மக்களுக்கான சமாதான காணிக்கையாக, மாட்டையும், செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். ஆரோனின் மகன்கள் மாட்டினுடைய, செம்மறியாட்டுக் கடாவினுடைய கொழுப்பான பாகங்களை, அதாவது கொழுத்த வால், கொழுப்புப்படை, சிறுநீரகங்கள், ஈரலை மூடியுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்து, மிருகங்களின் நெஞ்சுப்பகுதியில் வைத்தார்கள். பின்பு ஆரோன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரித்தான். நெஞ்சுப்பகுதிகளையும், வலது தொடையையும் ஆரோன், மோசே கட்டளையிட்டபடி யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
அதன்பின் ஆரோன் மக்களை நோக்கி தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான். பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும், சமாதான காணிக்கையையும் பலியிட்டு முடித்துக் கீழே இறங்கினான்.
அதன்பின் மோசேயும் ஆரோனும் சபைக் கூடாரத்திற்குள்ளே போனார்கள். அவர்கள் வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தபொழுது, யெகோவாவினுடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன் தோன்றியது. யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள்.
நாதாப், அபியூ மரணம்
ஆரோனின் மகன்களான நாதாபும், அபியூவும் தங்கள் தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, நறுமணத்தூளை அதில் போட்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு முரண்பாடாக, அங்கீகரிக்கப்படாத நெருப்பை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள். உடனே யெகோவாவின் முன்னிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து அவர்களை எரித்துப்போட்டது. அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் செத்தார்கள். அப்பொழுது மோசே ஆரோனிடம் சொன்னது:
“ ‘என்னை நெருங்கி வருகிறவர்களிடையே
நான் என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன்.
எல்லா மக்களின் பார்வையிலும்
நான் மகிமைப்படுவேன்’ என்று யெகோவா சொன்னபோது அவர் குறிப்பிட்டது இதுவே.”
ஆரோனோ ஒன்றும் பேசாமல் இருந்தான்.
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களான மீசயேலையும், எல்சாபானையும் அழைத்து, “இங்கே வாருங்கள்; உங்கள் சகோதரர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே பரிசுத்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள்” என்றான். மோசே உத்தரவிட்டபடியே அவர்கள் வந்து, இறந்தவர்களை அவர்களின் அங்கிகளுடன் தூக்கி, முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.
மோசே ஆரோனிடமும், அவனுடைய மகன்களான எலெயாசார், இத்தாமார் என்பவர்களிடமும், “நீங்கள் துக்கம் அநுசரிப்பதற்காக உங்கள் தலைமயிரைக் குலையவிடவும், உடைகளைக் கிழித்துக்கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். யெகோவா முழு சமுதாயத்தின்மேலும் கோபங்கொள்வார். ஆனால் உங்கள் உறவினரான இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரும், யெகோவா நெருப்பினால் அழித்தவர்களுக்காக துக்கம் அநுசரிக்கலாம். நீங்கள் சபைக்கூடார வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். அப்படிப் புறப்பட்டால் யெகோவாவினுடைய அபிஷேக எண்ணெய் உங்கள்மேல் இருப்பதால் நீங்கள் சாவீர்கள்” என்றான். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.
யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது: “நீயும் உன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்பொழுது, திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவேண்டாம். குடித்தால் நீங்கள் சாவீர்கள். தலைமுறைதோறும் இது ஒரு நிரந்தரமான நியமம். நீ பரிசுத்தமானதற்கும், சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் இடையிலும் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். அத்துடன் யெகோவா மோசேயின் மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கிற விதிமுறைகள் எல்லாவற்றையும் நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டும்” என்றார்.
அப்பொழுது மோசே, ஆரோனிடமும் அவனுடைய தப்பியிருந்த மகன்களான எலெயாசாரிடமும், இத்தாமாரிடமும் சொன்னதாவது: “யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கையிலிருந்து மீதியாய் விடப்பட்ட தானியக் காணிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பலிபீடத்திற்கு அருகே புளிப்பில்லாமல் தயாரித்துச் சாப்பிடுங்கள். ஏனெனில், அது மகா பரிசுத்தமானது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படுகிற காணிக்கைகளில் இது உனக்கும் உன் மகன்களுக்கும் உரிய பங்காக இருப்பதால், அதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடுங்கள். இப்படியாக நான் கட்டளை பெற்றிருக்கிறேன். ஆனாலும் அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், படைக்கப்பட்ட தொடையையும் நீயும் உன் மகன்களும், மகள்களும் சாப்பிடலாம். அவற்றை சம்பிரதாய முறைப்படி சுத்தமானது என எண்ணப்பட்ட இடத்திலேயே சாப்பிடலாம். இஸ்ரயேலரின் சமாதான காணிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட உங்கள் பங்காக அவை உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படைக்கப்பட்ட தொடையும், அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியும் நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளின் கொழுப்பான பாகங்களுடன், அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும்படி கொண்டுவர வேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இது உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நிரந்தர பங்காயிருக்கும்” என்றான்.
பிறகு பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாட்டுக் கடாவைப்பற்றி மோசே தேடிப்பார்த்தபோது, அது ஏற்கெனவே எரிக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அப்பொழுது அவன் ஆரோனின் மற்ற மகன்களான எலெயாசார்மேலும், இத்தாமார்மேலும் கோபங்கொண்டான். ஆகவே மோசே அவர்களிடம், “நீங்கள் ஏன் பாவநிவாரண காணிக்கையை பரிசுத்த இடத்தில் சாப்பிடவில்லை? அது மகா பரிசுத்தமானது. யெகோவா முன்னிலையில் இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காக பாவநிவர்த்தி செய்வதின்மூலம் அவர்களுடைய குற்றத்தை நீக்கும்படி அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டதே. அதன் இரத்தம் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுவரப்படாதபடியால், உங்களுக்கு நான் கட்டளையிட்டபடி நீங்கள் அந்த வெள்ளாட்டைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட்டிருக்க வேண்டுமே” என்றான்.
அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்றுதானே அவர்கள் பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் யெகோவா முன்னிலையில் பலியிட்டார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட வேதனையான நிகழ்வுகள் எனக்கு நேரிட்டிருக்கிறதே. இன்று நான் பாவநிவாரண காணிக்கையைச் சாப்பிட்டிருந்தால் யெகோவா மகிழ்ச்சியடைந்திருப்பாரோ?” என்று கேட்டான். அந்தப் பதில் மோசேக்குத் திருப்தியைக் கொடுத்தது.
சுத்தமான, அசுத்தமான உணவு
மீண்டும் யெகோவா மோசேயுடனும் ஆரோனுடனும் பேசி, “நீங்கள் இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பூமியில் வாழும் எல்லா மிருகங்களுக்குள்ளும் நீங்கள் சாப்பிடக் கூடியவைகள் இவையே: முழுவதும் விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
“ ‘சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் விரிந்த குளம்பு உடையதாய் மட்டும் இருக்கின்றன, அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. ஒட்டகம் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும் அதற்கு விரிந்த குளம்பு இல்லாதபடியால், அது சம்பிரதாய முறைப்படி உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. அதேபோல், குழிமுயலானது இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. முயல் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. பன்றி, விரிந்த குளம்புடையதாயிருந்தாலும், இரையை அசைப்போடுகிறதில்லை; ஆதலால் அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் பிணங்களைத் தொடவும் கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
“ ‘கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம். கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களுக்குள்ளே துடுப்புகளும், செதில்களும் இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்கவேண்டும். நீங்கள் அவற்றை அருவருக்கவேண்டும் என்பதால், அவைகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் செத்த உடல்களை நீங்கள் அருவருத்து ஒதுக்க வேண்டும். நீரில் வாழ்கின்ற துடுப்புகளும், செதில்களும் இல்லாதவையெல்லாம் உங்களுக்கு அருவருப்பாய் இருக்கவேண்டும்.
“ ‘பறவைகளில் நீங்கள் அருவருக்கவேண்டியதும், அருவருப்பாய் இருப்பதால் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டியதும் இவையே: கழுகு, கருடன், கடலூராஞ்சி, செம்பருந்து எல்லாவித வல்லூறுகள், எல்லாவித அண்டங்காக்கைகள், கொம்பு ஆந்தை, அலறும் ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள், சின்ன ஆந்தை, நீர்க்காகம், பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, மீன்கொத்தும் பெரிய பறவை, கொக்கு, எல்லாவித நாரைகள், புழுக்கொத்தி, வவ்வால் என்பனவாகும்.
“ ‘பறக்கும் பூச்சி வகைகளில் நான்கு கால்களால் நடக்கின்ற யாவும் உங்களுக்கு அருவருப்பானவை. ஆனாலும், நீங்கள் சாப்பிடக்கூடிய நான்கு கால்களால் நடக்கும் சிறகுகளை உடைய சில உயிரினங்களாவன: தரையில் தத்திப்பாயக்கூடிய இணைக்கப்பட்ட கால்களையுடையவை. இவைகளில் நீங்கள், எல்லா வகையான வெட்டுக்கிளிகளையும், பச்சை வெட்டுக்கிளிகளையும், சில்வண்டுகளையும், விட்டில்களையும் சாப்பிடலாம். ஆனால் நான்கு கால்களையும், சிறகுகளையும் உடைய மற்ற எல்லா பூச்சிகளையும் நீங்கள் அருவருக்கவேண்டும்.
“ ‘இவற்றால் உங்களை நீங்கள் அசுத்தமாக்கிக்கொள்வீர்கள். அவற்றின் செத்த உடல்களைத் தொடுகிற எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவற்றின் செத்த உடலை எடுக்கிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான்.
“ ‘விரிந்த குளம்பு இல்லாததும், இரையை அசைப்போடுகிறதுமான மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். அவற்றின் பிணங்களைத் தொடுகிற எவனும் அசுத்தமாயிருப்பான். நான்கு கால்களால் நடக்கும் எல்லா மிருகங்களுக்குள்ளும் பாதங்களை ஊன்றி நடக்கின்ற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்க வேண்டும்; அவற்றின் பிணங்களைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவற்றின் பிணங்களைத் தூக்குகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவை உங்களுக்கு அசுத்தமானவை.
“ ‘தரையில் ஊரும்பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள்: மரநாய், எலி, எல்லா வகையான ஓணான், மரப்பல்லி, உடும்பு, பல்லி, அரணை, பச்சோந்தி என்பனவாகும். ஊரும்பிராணிகளில் இவையெல்லாம் உங்களுக்கு அசுத்தமானவை. இவற்றிலும் செத்ததைத் தொடுகிறவன் சூரியன் மறையும்வரை அசுத்தமாயிருப்பான். அவைகளில் ஒன்று செத்து மரப்பாத்திரத்திலோ, உடையிலோ, தோலிலோ, சாக்குப்பையிலோ, பயன்படுத்தும் எந்தப் பாத்திரத்திலாவது விழுந்தால், அவை அசுத்தமாயிருக்கும். அதை தண்ணீரில் போடுங்கள். அவை மாலைவரை அசுத்தமாயிருக்கும். பின்பு அவை சுத்தமாகும். அவைகளில் ஒன்று மண்பானைக்குள் விழுமானால், அதிலுள்ள அனைத்தும் அசுத்தமாகும். எனவே அந்தப் பானையை உடைக்கவேண்டும். அந்தப் பானையிலிருந்து தண்ணீர் எந்த உணவிலாவது பட்டுவிட்டால், அது அசுத்தமாயிருக்கும். அதிலிருந்து குடிக்கும் எந்தவித பானமும் அசுத்தமாயிருக்கும். செத்தவைகளில் ஒன்று எதில் விழுந்தாலும், அது அசுத்தமாயிருக்கும். அடுப்பிலோ அல்லது சட்டியிலோ விழுந்தால், அவை உடைக்கப்பட வேண்டும். அவை அசுத்தமானவை. அவற்றை நீங்கள் அசுத்தமாக எண்ணவேண்டும். ஆனாலும் செத்ததில் ஒன்று நீரூற்றிலோ, தண்ணீர் சேமிக்கும் தொட்டியிலோ விழுந்தால், அவை அசுத்தமாகாது. அதற்குள் செத்துக்கிடப்பதைத் தொடுகிறவன் அசுத்தமாய் இருக்கிறான். அது விதைக்க வைத்திருக்கும் எந்தத் தானியத்தின்மேல் விழுந்தாலும் சுத்தமாகவே இருக்கும். ஆகிலும் தானியம் நீரில் நனைக்கப்பட்டிருக்கும் போது, அது தானியத்தின்மேல் விழுந்தால், அந்தத் தானியம் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
“ ‘ஆகிலும், நீங்கள் சாப்பிடும்படி அனுமதிக்கப்பட்ட ஒரு மிருகம் இறந்தால், அந்தப் பிணத்தைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாய் இருப்பான். அந்தப் பிணத்தில் எதையாவது சாப்பிடுகிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். அந்தப் பிணத்தைத் தூக்குகிற எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘தரையில் ஊரும்பிராணிகள் எல்லாம் அருவருப்பானவை. அவற்றைச் சாப்பிடக்கூடாது. தரையில் ஊரும் எந்தப் பிராணியும் அவை வயிற்றினால் ஊர்ந்தாலும் சரி, நான்கு கால்களாலோ அநேகம் கால்களாலோ நகர்ந்தாலும் சரி, அவை அருவருப்பானவையே. அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. இந்த ஊரும்பிராணிகளில் எதினாலாவது நீங்கள் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவற்றினாலாவது அவற்றின் மூலமாவது உங்களை அசுத்தமாக்கிக்கொள்ள வேண்டாம். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகையால் நீங்கள் உங்களை அர்ப்பணம் செய்து பரிசுத்தராயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர். நீங்கள் தரையில் ஊர்ந்து திரியும் எந்தவித பிராணியாலும் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்கள் இறைவனாயிருக்கும்படி உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த யெகோவா நானே. ஆகையால் நீங்கள் பரிசுத்தமாயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர்.
“ ‘மிருகங்கள், பறவைகள், நீரில் நீந்தும் உயிரினங்கள், தரையில் ஊரும்பிராணிகள் அனைத்தையும் பற்றிய ஒழுங்குவிதிகள் இவையே. அசுத்தமானதற்கும், சுத்தமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவும், சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும், சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காட்டவுமே இந்த ஒழுங்குவிதிகள் கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.”
பேறுகாலத்தின் பின் சுத்திகரிப்பு
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு பெண் கர்ப்பவதியாகி ஒரு ஆண்குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களில் அசுத்தமாயிருப்பதுபோல், அவள் சம்பிரதாய முறைப்படி ஏழுநாட்களுக்கு அசுத்தமாய் இருப்பாள். எட்டாம் நாளிலோ, அந்த ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை அவள் முப்பத்துமூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை அவள் பரிசுத்தமான எந்தப் பொருளையும் தொடவும், பரிசுத்த இடத்திற்குப் போகவும் கூடாது. அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், மாதவிடாய் நாட்களின்போது அசுத்தமாயிருப்பதுபோல் இரண்டு வாரங்களுக்கு அசுத்தமாயிருப்பாள். அதன்பின் இரத்தப்போக்கிலிருந்து சுத்திகரிக்கப்படும்வரை, அறுபத்தாறு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.
“ ‘அவளுடைய மகனுக்கான அல்லது மகளுக்கான சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தவுடன், சபைக்கூடார வாசலில் இருக்கும் ஆசாரியனிடம் அவள் ஒரு வயதுடைய ஒரு செம்மறியாட்டுக் கடாக்குட்டியைத் தகன காணிக்கையாகவும், ஒரு புறாக்குஞ்சை அல்லது ஒரு மாடப்புறாவை பாவநிவாரண காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்ய, அவற்றை யெகோவா முன்னிலையில் பலியாகச் செலுத்தவேண்டும். அப்பொழுது அவள் சம்பிரதாய முறைப்படி தன் இரத்தப்போக்கிலிருந்து சுத்தமாயிருப்பாள்.
“ ‘ஆண் குழந்தையையோ, பெண் குழந்தையையோ பெறுகிற பெண்ணைப் பற்றிய விதிமுறைகளாவன: ஒரு செம்மறியாட்டுக் குட்டியைச் செலுத்த வசதியற்றவளானால், இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைக் கொண்டுவரலாம். அவற்றில் ஒன்றைத் தகன காணிக்கையாகவும், இன்னொன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாக ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவள் சுத்தமாவாள்.’ ”
தோல்வியாதிகளுக்கான விதிமுறை
மோசேயிடமும் ஆரோனிடமும் யெகோவா கூறியதாவது: “ஒருவனுக்கு உடம்பில் வீக்கமோ, கொப்பளமோ அல்லது தோலில் வெண்புள்ளிகளோ இருந்து, அது தொற்றும் தோல்வியாதியானால், அவன் ஆசாரியனான ஆரோனிடம் அல்லது ஆசாரியராய் இருக்கும் அவனுடைய மகன்களில் ஒருவனிடம் அழைத்துச்செல்லப்பட வேண்டும். ஆசாரியன் அவனுடைய தோலில் உள்ள புண்ணைச் சோதித்துப் பார்க்கவேண்டும். புண்ணிலுள்ள உரோமம் வெண்மையாக மாறி, அந்தப்புண் தோலின் கீழ் ஆழமாகக் காணப்படுமானால், அது தொற்றும் தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனைப் பரிசோதிக்கிறபோது, அவனை சம்பிரதாயப்படி அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும். ஆனால் தோலிலுள்ள புண் வெண்மையாக இருந்து, தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும், அதில் இருக்கும் உரோமம் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் நோயுள்ளவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைத் திரும்பவும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்தப்புண் மாறாமலும், தோலில் பரவாமலும் இருக்கக் கண்டால், இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமையிலேயே வைக்கவேண்டும். திரும்பவும் ஏழாம்நாளில் ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது புண் ஆறி, தோலில் பரவாமல் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு சிரங்கு மட்டுமே. அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான். ஆனாலும், அவன் ஆசாரியனிடம் தன்னைக் காண்பித்து சுத்தமானவன் என தீர்க்கப்பட்டபின், அச்சிரங்கு தோலில் பரவுமானால், அவன் திரும்பவும் ஆசாரியனுக்கு முன்பாக வரவேண்டும். ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த சிரங்கு தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது ஒரு தொற்று வியாதியாகும்.
“எவனுக்காவது தொற்றும் தோல்வியாதி இருக்குமானால், அவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்பட வேண்டும். ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் தோலில் வெண்மையான வீக்கம் காணப்பட்டு, அது உரோமத்தையும் வெண்மையாக்கி, அந்த வீக்கத்தில் வெடிப்பு ஏற்பட்டு சதை காணப்பட்டால், அது நாள்பட்ட ஒரு தோல்வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என தீர்க்கவேண்டும். ஆசாரியன் அவனைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், அவன் ஏற்கெனவே அசுத்தமானவன்.
“ஆனால் ஆசாரியன் பார்க்கக்கூடிய அளவு அந்த வியாதி நோயுற்றவனின் தலைமுதல் கால்வரை, தோல் முழுவதும் பரவியிருக்குமானால், ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோய் அவனுடைய உடல் முழுவதும் பரவியிருந்தால், அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட வேண்டும். அவன் உடல் முழுவதும் வெண்மையாக மாறியிருந்தால் அவன் சுத்தமாவான். எப்பொழுதாவது அவனுடைய தோல் வெடித்துச் சதை காணப்பட்டால் அவன் அசுத்தமானவனாய் இருப்பான். ஆசாரியன் சதை தெரிவதைக் காணும்போது, அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். சதை தெரிவது அசுத்தமாகும்; அவனுக்கு இருப்பது தொற்று வியாதியாகும். அந்த தெரியும் சதை மாறி வெண்மையாகினால், அவன் ஆசாரியனிடம் போகவேண்டும். ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப்புண் வெண்மையாக மாறியிருந்தால், நோயுற்றவன் சுத்தமானவன் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
“ஒரு மனிதனின் தோலில் கட்டி உண்டாகி, அது குணமடையும்போது, அந்தக் கட்டி இருந்த இடத்தில் வெண்மையான வீக்கமோ அல்லது சிவப்பும் வெண்மையுமான புள்ளியோ தோன்றினால், அவன் தன்னை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும். ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகவும், அதிலுள்ள உரோமம் வெண்மையாகவும் மாறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அந்த மனிதனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். இதுவும் கட்டி இருந்த இடத்தில் தோன்றிய தொற்றும் தோல்வியாதியாகும். ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அதில் வெண்மையான உரோமம் இல்லாமலும், தோலைவிட ஆழமில்லாமலும், புண் ஆறியுமிருந்தால், அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். அது தோலில் பரவுகிறதாய் இருந்தால் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும். ஆனால் புள்ளி மாறாமலும் பரவாமலும் இருந்தால், அது கொப்பளத்திலிருந்து உண்டான தழும்பு மாத்திரமே. ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
“ஒருவனது தோல் வெந்து, வெந்ததினால் வெடித்தசதையில் வெண்சிவப்பான அல்லது வெண்மையான புள்ளி தோன்றினால், ஆசாரியன் அந்தப் புள்ளியைப் பரிசோதிக்க வேண்டும். அதிலுள்ள உரோமம் வெண்மையாகி, அந்தப்புண் தோலைவிட ஆழமாகக் காணப்பட்டால், அதுவும் வெந்துபோனதிலிருந்து தோன்றிய தொற்று வியாதியாகும். எனவே ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதி ஆகும். ஆனால் ஆசாரியன் அதைப் பரிசோதித்துப் பார்த்து, அந்தப் புள்ளியில் வெண்மையான உரோமம் இல்லாமலும், அது தோலைவிட ஆழமில்லாமலிருந்து, புண் ஆறியிருக்கக் காணப்பட்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். ஏழாம்நாளில் ஆசாரியன் அவனை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அந்த வியாதி தோலில் பரவியிருக்குமானால், ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அது தொற்றும் தோல்வியாதியாகும். ஆனாலும் அந்தப் புள்ளி மாறாமலும், தோலில் படராமலும் புண் ஆறியிருந்தால், அது வெந்துபோனதினால் உண்டான ஒரு வீக்கமாகும். ஆசாரியன் அவனைச் சுத்தமானவன் என்று அறிவிக்கவேண்டும். ஏனெனில், அது வெந்துபோனதினால் உண்டான தழும்பு மாத்திரமே.
“ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தலையில் அல்லது நாடியில் புண் ஏற்பட்டால், ஆசாரியன் அந்தப் புண்ணைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலைவிட ஆழமாகக் காணப்பட்டு, அதிலுள்ள உரோமம் மஞ்சள் நிறமாகவும், மெல்லியதாகவும் இருந்தால், அவர்களை அசுத்தமானவர் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அது ஒரு சொறி. தலையிலும், நாடியிலும் உண்டாகிய ஒரு தொற்று வியாதி. ஆனாலும் ஆசாரியன் இந்த விதமான புண்ணை சோதிக்கும்போது, அது தோலைவிட ஆழமில்லாமலும், கருப்பு உரோமம் அவ்விடத்தில் இல்லாமலும் இருந்தால், ஆசாரியன் அந்த நோயுற்றவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும். ஏழாம் நாளிலே ஆசாரியன் திரும்பவும் அந்தப் புண்ணைப் பார்வையிட வேண்டும். அந்த சொறி தோலில் பரவாமலும், மஞ்சள் நிறமான உரோமம் காணப்படாமலும், தோலைவிட ஆழமாகக் காணப்படாமலும் இருந்தால், அவன் சொறியுள்ள பகுதி தவிர மற்றப்பகுதிகளை எல்லாம் சிரைத்துக்கொள்ள வேண்டும். பின் ஆசாரியன் பரிசோதனைக்காக இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமைப்படுத்த வேண்டும். ஏழாம் நாளிலே ஆசாரியன் அந்த சொறியைப் பரிசோதிக்க வேண்டும். அது தோலில் பரவாமலும், தோலைவிட ஆழமில்லாமலும் காணப்பட்டால், ஆசாரியன் அவனை சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அவன் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் சுத்தமாயிருப்பான். ஆனாலும் அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட்ட பின்னும் சொறி தோலில் பரவினால், ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தால், ஆசாரியன் மஞ்சள் நிற உரோமத்தைத் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. அந்த ஆள் அசுத்தமானவனே. ஆனாலும் ஆசாரியன் பார்க்கும்போது, அவனுடைய எண்ணப்படி சொறி மாற்றமடையாமல் அவ்விடத்தில் கருப்பு உரோமம் வளர்ந்திருந்தால், அந்த சொறி குணமாயிற்று. அவன் சுத்தமாய் இருக்கிறான். அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
“ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய தோலில் வெண்மையான புள்ளிகள் இருக்கிறபோது, ஆசாரியன் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அப்புள்ளிகளின் நிறம், மங்கிய வெள்ளையாய் இருந்தால் அது தோலில் உண்டான ஒரு தீங்கற்ற ஒரு சிரங்கு வியாதியாகும். அவன் சுத்தமாய் இருக்கிறான்.
“ஒரு மனிதன் தலைமயிரை இழந்து மொட்டையாய் இருக்கும்போது அவன் சுத்தமானவன். அவனுடைய உச்சந்தலையின் முன் பகுதியிலிருந்து மயிர் உதிர்ந்தால், அவனுக்கு இருப்பது மொட்டையான முன்னந்தலை. அவன் சுத்தமானவன். ஆனால் அவனுடைய மொட்டைத்தலையில் அல்லது நெற்றியில் வெண்சிவப்பான புண் இருந்தால், அது அவனுடைய தலையில் அல்லது நெற்றியில் உண்டான தொற்று வியாதியாகும். ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது அவனுடைய தலையிலோ நெற்றியிலோ உள்ள வீங்கிய புண், ஒரு தொற்றும் தோல்வியாதிபோல் வெண்சிவப்பு நிறமாக இருந்தால், அவன் நோயுற்று அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய புண்ணின் நிமித்தம் ஆசாரியன் அவனை அசுத்தமானவன் என அறிவிக்கவேண்டும்.
“அப்படிப்பட்ட தொற்று வியாதியுடைய ஆள், கிழிந்த உடைகளை உடுத்தவேண்டும். அவன் தன் தலைமயிரைக் குழப்பி, தன் முகத்தின் கீழ்ப்பகுதியை மூடிக்கொண்டு, ‘அசுத்தம், அசுத்தம்’ என சத்தமிடவேண்டும். அந்தத் தொற்று வியாதி அவனுக்கு இருக்குமட்டும் அவன் அசுத்தமானவனாய் இருப்பான். அவன் தனிமையாய் வாழவேண்டும். முகாமுக்கு வெளியே வசிக்கவேண்டும்.
பூஞ்சணத்தைப் பற்றிய விதிமுறை
“ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது, மென்பட்டினாலோ கம்பளியினாலோ நெய்யப்பட்ட உடையாவது, தோலாவது, தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருளாவது கறைப்பட்டிருந்தால், அந்த உடையிலோ, தோலிலோ, நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலினால் செய்யப்பட்ட பொருளிலோ, உள்ள கறை பச்சையாகவோ, சிவப்பாகவோ இருந்தால் அது பரவும் பூஞ்சணமாகும். அதை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும். ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் அதைப் பரிசோதிக்க வேண்டும். உடையிலோ, நெய்யப்பட்ட துணியிலோ, தோலினால் செய்யப்பட்ட பொருட்களிலோ, தோலிலோ அவை எதற்கு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் பூஞ்சணம் படர்ந்திருந்தால், அது அழிவை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அப்பொருள் அசுத்தமானது. எனவே ஆசாரியன் கறைப்பட்ட உடையையோ, கம்பளியினால் அல்லது மென்பட்டினால் நெய்யப்பட்டதையோ அல்லது பின்னப்பட்ட உடையையோ, தோல் பொருட்களோ அவைகளை எரிக்கவேண்டும். ஏனெனில், அந்த பூஞ்சணம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே அப்பொருள்கள் எரிக்கப்படவேண்டும்.
“ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, உடையிலோ அல்லது நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலிலோ பூஞ்சணம் படராதிருந்தால், கறைபட்ட அப்பொருள் கழுவப்படும்படி ஆசாரியன் உத்தரவு கொடுக்கவேண்டும். அதன்பின் இன்னும் ஏழுநாட்களுக்கு அவன் அதைப் புறம்பாக்கி வைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பொருள் கழுவப்பட்ட பின், ஆசாரியன் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த பூஞ்சணம் படராதிருந்தாலும், அதனுடைய தோற்றத்தில் மாற்றமடையாதிருந்தால் அது அசுத்தமானதே. அந்த பூஞ்சணம் எந்த ஒரு பக்கத்தைப் பாதித்திருந்தாலும், அது நெருப்பினால் எரிக்கப்படவேண்டும். ஆசாரியன் அதைப் பரிசோதிக்கும்போது, அப்பொருள் கழுவப்பட்ட பின்பு பூஞ்சணம் மங்கியிருந்தால், அது காணப்பட்ட அந்த இடத்தை தோல் பொருளிலிருந்தோ, உடையிலிருந்தோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியிலிருந்தோ அவன் அதை கிழித்தெடுக்க வேண்டும். ஆனால் அந்தப் பூஞ்சணம் உடையிலோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட பொருளிலோ, அல்லது தோல் பொருளிலோ திரும்பவும் தோன்றினால், அது படருகின்றது. எனவே பூஞ்சணம் பிடித்த எதுவும் நெருப்பினால் எரிக்கப்படவேண்டும். உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ, தோல் பொருளோ கழுவப்பட்டுப் பூஞ்சணம் நீக்கப்பட்டதாயிருந்தால், அது திரும்பவும் கழுவப்பட வேண்டும். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.”
கம்பளியினால் அல்லது மென்பட்டினாலான உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ அல்லது ஏதாவது ஒரு தோல் பொருளோ பூஞ்சணத்தினால் கறைப்பிடித்திருந்தால், அவை சுத்தமோ, அசுத்தமோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் இவைகளே என்றார்.
தோல்வியாதி சுத்திகரிப்பு
யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது: “நோயுற்ற ஒருவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்படும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்திகரிக்கப்படும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவையே: ஆசாரியன் முகாமுக்கு வெளியே சென்று அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோயாளி தனது தொற்றும் தோல்வியாதியிலிருந்து குணமடைந்திருந்தால், ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக இரண்டு சுத்தமான உயிருள்ள பறவைகளையும், சில கேதுருமரத்தின் கட்டைகளையும், சிவப்புநூல் கற்றைகளையும், ஈசோப்புக் குழையையும் கொண்டுவரும்படி உத்தரவிடவேண்டும். பின்பு ஒரு மண்பானையிலுள்ள நல்ல தண்ணீரின் மேலாக அந்த பறவைகளில் ஒன்று கொல்லப்படும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும். அவன் கேதுருமரக்கட்டை, சிவப்புநூல் கற்றை, ஈசோப்புக்குழை ஆகியவற்றுடன் உயிரோடிருக்கும் மற்றப் பறவையையும் எடுத்து, நல்ல தண்ணீரின் மேலாகக் கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தில் அதைத் தோய்க்க வேண்டும். ஆசாரியன், தொற்று வியாதியிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவன்மேல், ஏழுமுறை இரத்தத்தைத் தெளித்து, அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அதன்பின் அந்த உயிருள்ள பறவையைத் திறந்த வெளியிலே விட்டுவிட வேண்டும்.
“சுத்தமாக்கப்பட வேண்டியவன் தன் உடைகளைக் கழுவி, தலைமயிர் முழுவதையும் சிரைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருப்பான். இதன்பின் அவன் தனது முகாமுக்கு வரலாம். ஆனாலும் ஏழுநாட்களுக்கு அவன் தன் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கவேண்டும். அவன் ஏழாம்நாளில் தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும். தலை, தாடி, புருவம் ஆகியவற்றிலுள்ள உரோமங்களையும், மற்ற இடங்களிலுள்ள உரோமங்களையும் சிரைக்கவேண்டும். தன் உடைகளைத் தண்ணீரில் கழுவி, முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
“எட்டாம் நாளிலே அவன் குறைபாடற்ற இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுடைய குறைபாடற்ற ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையும், ஒரு எப்பா14:10 அதாவது, எப்பா என்பது சுமார் 5 கிலோகிராம் அளவையில் பத்தில் மூன்று பங்கு சிறந்த மாவை எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அத்துடன் தானியக் காணிக்கையாக ஒரு ஆழாக்கு14:10 அதாவது, ஆழாக்கு என்பது சுமார் 335 கிராம் ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும். அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கும் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனையும், அவனுடைய காணிக்கைகளையும் சபைக்கூடார வாசலில் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.
“பின்பு ஆசாரியன் இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒன்றை ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். பாவநிவாரண காணிக்கை மிருகமும், தகன காணிக்கை மிருகமும் கொல்லப்பட்ட பரிசுத்த இடத்திலேயே, ஆசாரியன் அந்தச் செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக் கொல்லவேண்டும். பாவநிவாரண காணிக்கையைப்போலவே குற்றநிவாரண காணிக்கையும் ஆசாரியனுக்கே உரியது. அது மிகவும் பரிசுத்தமானது. ஆசாரியன் குற்றநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுடைய வலது காதின் மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயில் இருந்து கொஞ்சத்தை எடுத்து தன் இடது உள்ளங்கையில் ஊற்றி, தன் வலது ஆள்காட்டி விரலை, இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் தோய்த்து, யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும். ஆசாரியன் தன் உள்ளங்கையில் மீதமுள்ள எண்ணெயை, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், அவனுடைய வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும், ஏற்கெனவே பூசப்பட்டிருக்கும் குற்றநிவாரண காணிக்கை இரத்தத்தின் மேலாக பூசவேண்டும். ஆசாரியன் தனது உள்ளங்கையிலுள்ள மீதமுள்ள எண்ணெயை சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் தலையில் தடவி, அவனுக்காக யெகோவாவுக்குமுன், பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“பின்பு ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையைப் பலியிட்டு தன் அசுத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அதன்பின் ஆசாரியன் தகன காணிக்கை மிருகத்தை வெட்டிக் கொல்லவேண்டும். ஆசாரியன் அதைத் தானியக் காணிக்கையுடன் பலிபீடத்தின்மேல் செலுத்தி, அவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
“ஆனாலும், அவன் ஏழையாய் இருந்து இவற்றை அவன் செலுத்த முடியாதவனானால், தனக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்கு அசைவாட்டப்படும்படி குற்றநிவாரண காணிக்கையாக ஒரு ஆண் செம்மறியாட்டுக் குட்டியையாவது எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் ஒரு எப்பா அளவையில் பத்தில் ஒரு பங்கு சிறந்த மாவை எண்ணெய் கலந்து பிசைந்து அதைத் தானியக் காணிக்கையாகவும், ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும். அத்துடன் அவன் தன்னால் செலுத்தக்கூடிய இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் செலுத்துவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
“எட்டாம் நாளிலே அவன் அவைகளை தனது சுத்திகரிப்புக்காக யெகோவா முன்னிலையில், சபைக் கூடாரவாசலுக்கு ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண செம்மறியாட்டுக் குட்டியையும் காணிக்கையாக எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். ஆசாரியன், குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் அதைப் பூசவேண்டும். அத்துடன் ஆசாரியன், தன் இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி, தன் வலதுகை ஆள்காட்டி விரலால் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் சிறிதளவை யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும். ஆசாரியன் தன் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் உடலில் குற்றநிவாரண காணிக்கை இரத்தம் பூசப்பட்ட இடங்களிலெல்லாம் அதாவது, வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும். மேலும், யெகோவாவுக்கு முன்பாக சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, ஆசாரியன் தன் உள்ளங்கையில் இருக்கும் மீதமுள்ள எண்ணெயை அவனுடைய தலையில் பூசவேண்டும். பின்பு ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனால் செலுத்தக்கூடிய புறாக்களையோ அல்லது மாடப்புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும். அவன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தானியக் காணிக்கையுடன் தகன காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாய் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக யெகோவா முன்னிலையில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.”
தொற்றும் தோல்வியாதியை உடையவனாயிருந்து, தன் சுத்திகரிப்புக்கான வழக்கமான காணிக்கைகளைச் செலுத்தமுடியாமல் போகும் ஒருவனுக்குரிய விதிமுறைகள் இவையே என்றார்.
பூஞ்சணத்திலிருந்து சுத்திகரிப்பு
யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னதாவது: “நான் உங்களுக்கு உரிமையாய்க் கொடுக்கிற கானான் நாட்டிற்குள் நீங்கள் போகும்போது, அங்கே நான், படரும் பூஞ்சணத்தை ஒரு வீட்டில் வரச்செய்தால், அந்த வீட்டிற்குச் சொந்தக்காரன் ஆசாரியனிடம் சென்று, ‘என் வீட்டிலே பூஞ்சணம்போல் காணப்படுகிற ஒன்றைக் கண்டேன்’ என்று அறிவிக்கவேண்டும். ஆசாரியன் பூஞ்சணத்தை பரிசோதிக்க உள்ளேபோகும் முன் அந்த வீடு வெறுமையாக்கப்பட உத்தரவிடவேண்டும். அப்பொழுது அவ்வீட்டிலுள்ள பொருட்கள் அசுத்தம் என அறிவிக்கப்படமாட்டாது. அதன்பின் ஆசாரியன் உள்ளே போய், அந்த வீட்டைப் பரிசோதனையிட வேண்டும். அவன் சுவர்களிலுள்ள பூஞ்சணத்தைப் பரிசோதிக்க வேண்டும். அங்கு சுவரின் மேற்பரப்பைவிட ஆழமான பச்சைநிற அல்லது சிவப்புநிற குழிகள் காணப்பட்டால், உடனே ஆசாரியன் வீட்டின் வாசலைவிட்டு வெளியே போய், அந்த வீட்டை ஏழுநாட்களுக்குப் பூட்டிவைக்கவேண்டும். ஏழாம்நாளில் அந்த வீட்டைச் சோதனையிடும்படி ஆசாரியன் திரும்பிப் போகவேண்டும். அந்த பூஞ்சணம் சுவர்களில் படர்ந்திருந்தால், கறைப்படிந்த கற்களைப் பெயர்த்தெடுத்து, பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே எறியும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும். வீட்டின் உட்புறச் சுவர்கள் முழுவதையும் சுரண்டி எடுத்து, சுரண்டி எடுத்ததை பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொட்டிவிடவேண்டும். அதன்பின் அவர்கள் பெயர்த்தெடுத்த கற்களுக்குப் பதிலாக வேறே கற்களை வைத்து, வீட்டைப் புதிய சாந்தைக்கொண்டு பூசவேண்டும்.
“கற்கள் பெயர்க்கப்பட்டு, வீடு சுரண்டப்பட்டு, பூசப்பட்ட பின்பும் வீட்டில் பூஞ்சணங்கள் திரும்பவும் தோன்றுமானால், ஆசாரியன் அங்குபோய் அவ்வீட்டைப் பரிசோதனையிட வேண்டும். அந்த பூஞ்சணம் வீட்டிலே படர்ந்திருந்தால், அது அழிவு ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அந்த வீடு அசுத்தமானது. எனவே அது இடிக்கப்பட்டு, அதன் கற்கள், மரங்கள், சாந்துப் பூச்சுகள் யாவும் அகற்றப்பட்டு பட்டணத்திற்கு வெளியே ஒரு அசுத்தமான இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
“அந்த வீடு பூட்டிவைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அதற்குள் செல்லும் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அதேபோல் அவ்வீட்டினுள் நித்திரை செய்கிற அல்லது சாப்பிடுகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும்.
“வீடு பூசப்பட்டபின், ஆசாரியன் திரும்பவும் அதைப் பரிசோதிக்க வருகிறபோது, அங்கே பூஞ்சணங்கள் படராதிருந்தால், அந்த வீட்டைச் சுத்தமானது என்று அவன் அறிவிக்கவேண்டும். ஏனெனில், பூஞ்சணம் போய்விட்டது. அதன்பின் வீட்டைச் சுத்திகரிப்பதற்கு ஆசாரியன் இரண்டு பறவைகளையும், ஒருசில கேதுரு விறகுகளையும், சிவப்புநூல் கற்றையையும், ஈசோப்புக் குழையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த பறவைகளில் ஒன்றை மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின் மேலாகக் கொல்லவேண்டும். பின்பு கேதுரு விறகையும், ஈசோப்புக் குழையையும், சிவப்புநூல் கற்றையையும், உயிரோடிருக்கும் பறவையையும் எடுத்து, கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்திலும், சுத்தமான தண்ணீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும். இவ்விதமாய், கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தினாலும், சுத்தமான தண்ணீரினாலும், உயிரோடிருக்கும் பறவையினாலும், கேதுரு விறகினாலும், ஈசோப்புக் குழையினாலும், சிவப்புநூல் கற்றையாலும் அவ்வீட்டைச் சுத்திகரிக்கவேண்டும். பின்பு அவன் உயிரோடிருக்கும் பறவையை பட்டணத்திற்கு வெளியேயுள்ள பரந்த வெளியில் பறக்கவிடவேண்டும். இவ்விதமாய் அவன் அந்த வீட்டிற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அது சுத்தமாகும்.”
எந்த விதமான தொற்றும் தோல்வியாதிக்கும் உரிய விதிமுறைகள் இவையே: சொறி, உடையிலுள்ள அல்லது வீட்டிலுள்ள பூஞ்சணம், வீக்கம், கொப்பளம், வெண்புள்ளி ஆகியவை சுத்தமானதோ, அசுத்தமானதோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகளும் இவையே.
தோல்வியாதி, பூஞ்சணம் ஆகியவற்றிற்குரிய ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.
அசுத்தத்தை உண்டாக்கும் உடற்கசிவு
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி, “நீங்கள் இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘தன் உடலிலிருந்து ஒருவனுக்கு கசிவு ஏற்பட்டால் அது அசுத்தமானது. அக்கசிவு அவன் உடலிலிருந்து தொடர்ந்து வடிந்தாலும், தடைப்பட்டாலும், அது அவனை அசுத்தப்படுத்தும். அவனுடைய உடற்கசிவு அசுத்தத்தை உண்டாக்கும் விதமாவது:
“ ‘அவன் படுக்கின்ற எந்தக் கட்டிலும், அவன் உட்காருகிற எந்த இடமும் அசுத்தமாகும். யாராவது ஒருவன் அந்தக் கட்டிலைத் தொட்டால் அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். கசிவு உள்ள அந்த மனிதன் உட்கார்ந்த இடத்தில் யாராவது உட்கார்ந்தால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘கசிவுள்ளவனைத் தொடுகிறவனும் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘கசிவுள்ள அந்த மனிதன் சுத்தமுள்ள ஒருவன்மேல் துப்பினால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும். அவன் உட்கார்ந்த எந்தப் பொருளையும் தொடுகிறவன், மாலைவரை அசுத்தமாயிருப்பான். அப்படிப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘கசிவு உள்ளவன், தன் கைகளைக் கழுவாமல் வேறொருவனைத் தொட்டால், தொடப்பட்டவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“ ‘அவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொடுவானானால், அப்பாத்திரம் உடைக்கப்பட வேண்டும். மரப்பாத்திரங்களை எல்லாம் தண்ணீரால் அலசவேண்டும்.
“ ‘அந்தக் கசிவு அவனைவிட்டு நீங்கும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்தமாவதற்கு ஏழுநாள் பொறுத்து, ஏழாம்நாள் தன் உடைகளைக் கழுவி சுத்தமான தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். எட்டாம் நாளிலே, இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை அவன் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவற்றை சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொடுக்கவேண்டும். ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் யெகோவா முன்னிலையில் அந்தக் கசிவின் நிமித்தம் அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“ ‘ஒருவனிலிருந்து விந்து வெளியேறினால், அவன் தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவி முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். விந்துபட்ட எந்த உடையும், தோல் பொருளும் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். அது மாலைவரை அசுத்தமாயிருக்கும். ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு விந்து வெளிப்பட்டால், அவர்கள் இருவரும் தண்ணீரில் முழுகவேண்டும். அவர்கள் மாலைவரை அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
“ ‘ஒழுங்கான இரத்தப்போக்கு உள்ள பெண் மாதவிடாய் காலத்தில் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவளாய் இருப்பாள். அவளைத் தொடுகிற எவனும், மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
“ ‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும். யாராவது அவளின் படுக்கையைத் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவள் உட்காரும் எதையாவது யாராவது ஒருவன் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
“ ‘அந்நாட்களில் ஒருவன் அவளுடன் உறவுகொள்வதினால், அவளுடைய மாதவிடாய் அவனில் படும்போது அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவன் பயன்படுத்தும் எந்தப் படுக்கையும் அசுத்தமாயிருக்கும்.
“ ‘ஒரு பெண்ணுக்கு உடலின் இரத்தப்போக்கு மாதவிடாயைவிட வழக்கத்திற்கு மாறாக வந்தால் அல்லது மாதவிடாய் காலம் நீடித்தால், அவள் அந்த மாதவிடாய் காலத்தில் இருந்ததுபோல், இரத்தப்போக்கு இருக்கும்வரைக்கும் அசுத்தமாயிருப்பாள். அவள் இந்த நாட்களில் படுக்கின்ற கட்டிலும், அவள் உட்காரும் எதுவும், முன்பு மாதவிடாய் நாட்களில் அசுத்தமுள்ளதாய் இருந்ததுபோல, இப்பொழுதும் அசுத்தமுள்ளதாய் இருக்கும். யாராவது ஒருவன் அவைகளைத் தொட்டால், அவன் அசுத்தமுள்ளவனாவான். அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாவான்.
“ ‘அவள் தன் மாதவிடாயிலிருந்து சுத்திகரிக்கப்படும்போது, அவள் ஏழு நாட்களை எண்ணவேண்டும். அதன்பின் சம்பிரதாய முறைப்படி அவள் சுத்தமாவாள். எட்டாம் நாள் அவள் இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அதில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவளுடைய இரத்தப்போக்கின் அசுத்தத்திற்காக யெகோவா முன்பாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“ ‘நீ இஸ்ரயேலரை அவர்களை அசுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருக்கும் என் வசிப்பிடத்தை அசுத்தப்படுத்துவதால், இஸ்ரயேலர் தங்கள் அசுத்தத்தில் சாகாதபடி, இப்படிச் செய்யவேண்டும்.’ ”
ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும், மாதவிடாய் உள்ள பெண்ணுக்கும், உடல் கசிவுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிற பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.
பாவநிவிர்த்தி செய்யும் நாள்
ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது16:1 யெகோவாவுக்கு தூய்மையற்ற நெருப்பைக் கொடுத்தபோது கொல்லப்பட்டார்கள் இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன்.
“ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகவேண்டிய விதம் இதுவே: பாவநிவாரண காணிக்கையாக ஒரு இளங்காளையோடும், தகன காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக்கடாவோடும் அவன் வரவேண்டும். அப்பொழுது அவன் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும் மென்பட்டு உடையையும், பரிசுத்த மென்பட்டு உள் அங்கியையும் உடுத்திக்கொள்ளவேண்டும். மென்பட்டுக் கச்சையை இடையில் கட்டி, மென்பட்டு தலைப்பாகையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவையே பரிசுத்த உடைகள். எனவே அவன் இவற்றை உடுத்திக்கொள்ளும் முன், தன்னைச் சுத்தப்படுத்துவதற்காக தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமிருந்து பாவநிவாரண காணிக்கைக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும், தகன காணிக்கைக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும்.
“ஆரோன் தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைச் செலுத்தவேண்டும். பின்பு அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் நிறுத்தவேண்டும். ஆரோன் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களின் மேலும் சீட்டுப்போட்டு ஒன்றை யெகோவாவுக்காகவும், இன்னொன்றைப் பாவச்சுமை ஆடாகவும் வேறுபிரிக்க வேண்டும். யெகோவாவுக்காக சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொண்டுவந்து பாவநிவாரண காணிக்கையாகப் பலியிடவேண்டும். சீட்டின் மூலம் பாவச்சுமை ஆடாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளாட்டை, யெகோவா முன்னிலையில் உயிரோடே நிறுத்தவேண்டும். அது பாவநிவிர்த்தி செய்வதற்காக பாலைவனத்தில் தப்பிப்போக விடப்படவேண்டிய ஆடு.
“பின்பு ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய சொந்த பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைக் கொண்டுவர வேண்டும். அவன் தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். அவன் யெகோவா முன்னிலையில் இருக்கும் பலிபீடத்திலிருந்து நெருப்புத்தணல் நிறைந்த ஒரு தூபகிண்ணத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு கைநிறைய நன்றாக அரைக்கப்பட்ட நறுமணத்தூளையும் எடுத்துக்கொண்டு திரைக்குப் பின்னால் வரவேண்டும். அவன் அந்த நறுமணத்தூளை யெகோவாவுக்கு முன்பாக நெருப்பில் போடவேண்டும். அந்த நறுமணப்புகை சாட்சிப்பெட்டியின் மேலிருக்கும் கிருபாசனத்தை மூடும். அப்பொழுது அவன் சாகமாட்டான். அவன் தனது விரலினால் அக்காளையின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, கிருபாசனத்தின் முன்பக்கத்தில் தெளிக்கவேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு எடுத்து கிருபாசனத்தின் முன்னால் ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கவேண்டும்.
“பின்பு மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையாக வெள்ளாட்டுக் கடாவைக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை திரைக்குப் பின்னால் எடுத்துச்சென்று, காளையின் இரத்தத்தைக்கொண்டு செய்ததுபோல, இதைக்கொண்டும் செய்யவேண்டும். அதாவது அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மேலும், அதன் முன்பக்கத்திலும் தெளிக்கவேண்டும். இவ்வாறாக அவன் மகா பரிசுத்த இடத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இஸ்ரயேலரின் பாவம் எதுவாயினும், அவர்களுடைய அசுத்தத்திற்காகவும், கலகத்திற்காகவும் இவ்வாறு செய்யவேண்டும். அவர்களுடைய அசுத்தத்தின் மத்தியில் அவர்களிடையே இருக்கும் சபைக் கூடாரத்திற்காகவும், இவ்விதமாகவே செய்யவேண்டும். ஆரோன் பாவநிவிர்த்தி செய்யும்படி, மகா பரிசுத்த இடத்திற்குள் போகிற நேரந்தொடங்கி, அவன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரை, சபைக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
“பின்பு அவன் வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக உள்ள பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் காளையின் இரத்தத்தில் கொஞ்சமும், வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சமும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா கொம்புகளின்மேலும் பூசவேண்டும். அவன் இஸ்ரயேலரின் அசுத்தத்திலிருந்து பலிபீடத்தைச் சுத்திகரித்து, அதை அர்ப்பணம் செய்யும்படி அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை தன் விரல்களினால் அதன்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
“ஆரோன் மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து முடித்தபின், அவன் அந்த உயிருள்ள ஆட்டை முன்பாக கொண்டுவர வேண்டும். ஆரோன் தன் இரண்டு கைகளையும் அந்த உயிருள்ள ஆட்டின் தலையின்மேல் வைத்து, இஸ்ரயேலரின் எல்லா பாவங்களான எல்லா கொடுமையையும், கலகத்தையும் அந்த ஆட்டின் மேலாக அறிக்கையிட்டு, அவற்றை அந்த ஆட்டின் தலையின்மேல் சுமத்தவேண்டும். அவன் அந்த வெள்ளாட்டைப் பாலைவனத்திற்கு அனுப்பிவிடும்படி அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவனின் பொறுப்பில் அதைக்கொடுத்து அனுப்பிவிடவேண்டும். அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா பாவங்களையும் தன்மேல் சுமந்துகொண்டு, தனிமையான ஒரு இடத்திற்குப் போகும். அந்த மனிதன் அதை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும்.
“பின்பு ஆரோன் சபைக் கூடாரத்திற்குப் போய், தான் மகா பரிசுத்த இடத்திற்குப் போகுமுன் உடுத்திக்கொண்ட மென்பட்டு உடைகளைக் களைந்து, அவற்றை அங்கே வைத்துவிடவேண்டும். அவன் ஒரு தூய்மையான இடத்திலே முழுகி, மீண்டும் தனது உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின் அவன் வெளியே வந்து, தனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தனக்கான தகன காணிக்கையையும், மக்களுக்கான தகன காணிக்கையையும் செலுத்தவேண்டும். பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
“பாவச்சுமை ஆடான வெள்ளாட்டைப் பாலைவனத்தில் போகவிடும் மனிதன், தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம். பாவநிவாரண காணிக்கையாக வெட்டப்பட்டதும், இரத்தம் பாவநிவிர்த்தி செய்யும்படி மகா பரிசுத்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டதுமான, காளையினுடைய, வெள்ளாட்டினுடைய மீதமுள்ள பாகங்கள் முகாமுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும். அவற்றின் தோல்களையும், இறைச்சியையும், குடல்களையும் எரிக்கவேண்டும். இவைகளை எரிக்கிறவன் தன் உடைகளைக் கழுவி, தானும் தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
“இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது. ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள். இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு, மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.
இரத்தத்தை சாப்பிடத்தடை
யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடமும் அவன் மகன்களிடமும், இஸ்ரயேலரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கட்டளையிட்டது இதுவே: இஸ்ரயேலன் எவனும் பலி செலுத்துவதற்காக, முகாமுக்குள் அல்லது முகாமுக்கு வெளியே ஒரு மாட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டையோ வெட்டிக் கொன்றால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் அந்த மிருகங்களை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தும்படி, யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு முன்பாக சபைக் கூடாரவாசலுக்கு கொண்டுவந்து வெட்டவில்லை. அதனால் அவன் இரத்தம் சிந்திய குற்றவாளியாக எண்ணப்படுவான். அவன் இரத்தம் சிந்தியிருக்கிறான். அவன் தன் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும். இதனால் இஸ்ரயேலர் தாம் இப்பொழுது திறந்தவெளிகளில் செலுத்தும் பலிகளை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவர்கள் அவற்றை ஆசாரியனிடம், அதாவது யெகோவாவிடம், சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவந்து, சமாதான காணிக்கையாகப் பலியிடவேண்டும். ஆசாரியன், சபைக்கூடார வாசலில் இருக்கும் யெகோவாவின் பலிபீடத்தில் இரத்தத்தைத் தெளித்து, கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்கவேண்டும். அவர்கள் எந்த ஆட்டின் உருவமுடைய விக்கிரங்களைப்17:7 விக்கிரங்களை அல்லது பேய்கள் பின்பற்றி வேசித்தனம் பண்ணுகிறார்களோ17:7 யெகோவாவை வணங்க பொருத்தனை செய்தபிறகு வேறொரு கடவுளை வணங்குகிறவர் அல்லது அதற்கு பலி செலுத்துபவர் விபசாரம் செய்கிறவரைப் போன்றவர். [யாத். 20:4-6]; [34:15-16]., அவைகளுக்கு இனிமேலும் அவர்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கும், அவர்களுடைய தலைமுறைகளுக்கும் ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.’
“மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘எந்த ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனோ, ஒரு தகன காணிக்கையையாவது பலியையாவது செலுத்தும்போது, அதை யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக, சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
“ ‘எந்த ஒரு இஸ்ரயேலனாவது அல்லது அவர்களுக்குள் வாழும் ஒரு பிறநாட்டினனாவது, எந்த இரத்தத்தையாகிலும் சாப்பிடுவானாகில், இரத்தத்தைச் சாப்பிட்டவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவனை அவனுடைய மக்களிலிருந்து அகற்றிவிடுவேன். ஏனெனில் ஒரு உயிரினத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. பலிபீடத்தின்மேல் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். ஒருவனது வாழ்வுக்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே. ஆகவே நான் இஸ்ரயேலரிடம், “உங்களில் ஒருவனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது, உங்கள் மத்தியில் தங்கும் பிறநாட்டினனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது” என்று சொல்லியிருக்கிறேன்.
“ ‘சாப்பிடக்கூடிய மிருகத்தையோ, பறவையையோ வேட்டையாடுகிற எந்த இஸ்ரயேலனாவது அல்லது உங்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனாவது அதன் இரத்தத்தை வெளியே வடியவிட்டு அதை மண்ணால் மூடிவிடவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே. ஆகவேதான் நான் இஸ்ரயேலரிடம், “நீங்கள் எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே; அதைச் சாப்பிடுகிற எவனும் அகற்றப்படவேண்டும் என்றேன்.”
“ ‘தன் நாட்டினனோ அல்லது பிறநாட்டினனோ, இறந்துகிடக்கக் காணப்பட்டதை அல்லது காட்டு மிருகங்களால் கிழிக்கப்பட்டுச் செத்ததை ஒருவன் சாப்பிட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் சம்பிரதாய முறைப்படி மாலைவரை அசுத்தமானவன். அதன்பின் அவன் சுத்தமாவான். ஆனால் அவன் உடைகளைக் கழுவி முழுகாவிட்டால், அந்தக் குற்றத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்’ ” என்றார்.
தகாத பாலுறவுகள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. நீங்கள் முன்பு வாழ்ந்துவந்த எகிப்தில், உள்ளவர்கள் செய்ததுபோல் நீங்களும் செய்யவேண்டாம். நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டில் உள்ளவர்கள் செய்கிறதுபோலவும் செய்யவேண்டாம். அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றவும் வேண்டாம். நீங்களோ என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, என் கட்டளைகளைப் பின்பற்றக் கவனமாயிருங்கள். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகவே நீங்கள் என்னுடைய கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றிற்குக் கீழ்ப்படிகிறவன் எவனும் அவற்றால் வாழ்வு பெறுவான். நானே யெகோவா.
“ ‘பாலுறவுகொள்ளும்படி யாரும் நெருங்கிய உறவினரை அணுகக்கூடாது. நானே யெகோவா.
“ ‘நீ உன் தாயுடன் பாலுறவுகொண்டு, உன் தகப்பனை கனவீனப்படுத்தாதே. அவள் உன் தாய். அவளுடன் பாலுறவு கொள்ளாதே.
“ ‘நீ உன் தகப்பனின் மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் தகப்பனைக் கனவீனப்படுத்தும்.
“ ‘நீ உன் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. உன் தகப்பனின் மகளோடு அல்லது உன் தாயின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அவள் உன் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பிறந்திருந்தாலும் சரி, அவளுடன் பாலுறவு கொள்ளாதே.
“ ‘உன் மகனுடைய மகளோடு, உன் மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அதுவும் உன்னைக் கனவீனப்படுத்தும்.
“ ‘உன் தகப்பனுக்குப் பிறந்த, உன் தகப்பனின் மனைவியின் மகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவளும் உனக்குச் சகோதரிதான்.
“ ‘உன் தகப்பனுடைய சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் தகப்பனுடைய நெருங்கிய உறவினள்.
“ ‘உன் தாயின் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே; ஏனெனில் அவள் உன் தாயினுடைய நெருங்கிய உறவினள்.
“ ‘உன் தகப்பனுடைய சகோதரனின் மனைவியுடன் பாலுறவு கொள்வதற்காக, அவளை நெருங்குவதினால் அவனைக் கனவீனப்படுத்தாதே. அவள் உன்னுடைய சிறியதாய்.
“ ‘உன் மருமகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் மகனின் மனைவி; அவளுடனும் பாலுறவு கொள்ளாதே.
“ ‘உன் சகோதரனுடைய மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் சகோதரனைக் கனவீனப்படுத்தும்.
“ ‘தாயும் மகளுமான இருவருடனும் பாலுறவு கொள்ளாதே. அவளுடைய மகனின் மகளோடு, மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. இவர்களும் அவளுக்கு நெருங்கிய உறவுள்ளவர்கள். இது ஒரு கொடுமையான செயல்.
“ ‘உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்குப் போட்டியாக, அவள் சகோதரியை உனக்கு மனைவியாக்கி அவளுடன் பாலுறவு கொள்ளலாகாது.
“ ‘ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் அசுத்தமாய் இருக்கும்போது, பாலுறவுகொள்ளும்படி அவளை நெருங்காதே.
“ ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
“ ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா.
“ ‘நீங்கள் ஒரு பெண்ணோடு பாலுறவு கொள்வதுபோல், ஆணோடு பாலுறவுகொள்ள வேண்டாம். அது அருவருப்பானது.
“ ‘எந்தவொரு மிருகத்தோடும் நீங்கள் பாலுறவுகொண்டு அதினாலே உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் மிருகத்தோடு பாலுறவுகொள்ளும்படி, தன்னை ஒப்புவிக்கக் கூடாது. அது இயல்பிற்கு முரணான பாலுறவாகும்.
“ ‘இவ்வாறான தீயசெயல்களினால் உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகும் நாட்டினர் இவ்விதமாகவே அசுத்தமாகினார்கள். இவ்விதமாய் நாடும் அசுத்தப்பட்டது. எனவே அதன் பாவத்திற்காக நான் அதைத் தண்டித்தேன். நாடும் அதன் குடிகளை வாந்திபண்ணியது. ஆனால் நீங்களோ எனது சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். தன் நாட்டினனானாலும், உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனானாலும், யாரும் இந்த அருவருப்பான ஒன்றையும் செய்யக்கூடாது. ஏனெனில், உங்களுக்கு முன்னே இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தார்கள். நாடும் அசுத்தமடைந்தது. நாட்டை நீங்கள் அசுத்தப்படுத்தினால், உங்களுக்கு முன்னே அங்கே வாழ்ந்த நாட்டினரை அது வாந்திபண்ணியதுபோல, உங்களையும் அது வாந்திபண்ணிவிடும்.
“ ‘யாராவது இந்த அருவருப்பான செயல்களில் எதையாவது செய்தால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். ஆகவே நீங்கள் என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் வரும் முன்பு அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அருவருப்பான வழக்கங்களில் எதையாவது பின்பற்றி, அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.
பலவகை நீதிச்சட்டங்கள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உங்கள் இறைவனாகிய யெகோவாவான நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
“ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் விக்கிரகங்களிடம் திரும்பவேண்டாம். வார்க்கப்படும் உலோகத்தினால் உங்களுக்காக தெய்வங்களைச் செய்யவும் வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான காணிக்கையைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அது பலியிடப்படுகிற நாளிலும், அதற்கு அடுத்த நாளிலுமே அதைச் சாப்பிடவேண்டும். மூன்றாம் நாள்வரை மீதமிருக்கும் எதையும் எரித்துவிடவேண்டும். மூன்றாம் நாளில் அதில் எதையும் சாப்பிட்டால் அது அசுத்தமானது. அக்காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதைச் சாப்பிடுகிற எவனும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைத் தூய்மைக்கேடாக்கினபடியால், அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
“ ‘நீங்கள் உங்கள் வயலின் விளைச்சலை அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் இருக்கும் கதிர்களை முற்றிலுமாக அறுவடை செய்யாமலும், சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘களவு செய்யவேண்டாம்.
“ ‘பொய் சொல்லவேண்டாம்.
“ ‘ஒருவரையொருவர் ஏமாற்றவேண்டாம்.
“ ‘என் பெயரைக்கொண்டு பொய்யாய் ஆணையிடுவதினால் உங்கள் இறைவனின் பெயருக்கு இழிவு உண்டாக்க வேண்டாம். நானே யெகோவா.
“ ‘நீங்கள் உங்கள் அயலானை மோசடி செய்து, அவனைக் கொள்ளையிடாதீர்கள்.
“ ‘கூலிக்காரனுடைய கூலியை அடுத்தநாள்வரை கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம்.
“ ‘செவிடனை சபிக்காமலும், குருடனின் வழியில் தடையேதும் போடாமலும் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே யெகோவா.
“ ‘நீதியைப் புரட்டவேண்டாம்; ஏழையை ஒடுக்கவேண்டாம். செல்வந்தர்களுக்குச் சலுகைகாட்ட வேண்டாம். ஆனால் உங்கள் அயலானுக்கு நியாயமாகத் தீர்ப்பு வழங்குங்கள்.
“ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள்.
“ ‘உங்கள் அயலானின் உயிருக்கு19:16 அயலானின் உயிருக்கு அல்லது அயலானின் இரத்தப்பழிக்கு காரணமாகாதே ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா.
“ ‘உங்கள் இருதயத்தில் உங்கள் சகோதரனை வெறுக்க வேண்டாம். உங்கள் அயலானின் குற்றத்தில் நீங்களும் பங்குகொள்ளாதபடி அவனை வெளிப்படையாகக் கடிந்துகொள்ளுங்கள்.
“ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.
“ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
“ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம்.
“ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம்.
“ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம்.
“ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை. ஆனாலும் அவன் தான் செய்த குற்றத்திற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவை குற்றநிவாரண காணிக்கையாக யெகோவா முன்னிலையில் சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
“ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக19:23 தடை செய்யப்பட்டவைகளாக அல்லது சடங்குபடி அசுத்தமானது எபிரெய மொழியில் விருத்தசேதனம் செய்யப்படாதது எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது. நான்காம் வருடத்தில் அதன் பழங்கள் எல்லாம் பரிசுத்தமாய் இருக்கும். அவை யெகோவாவுக்குத் துதியின் காணிக்கையாகும். ஆனால் ஐந்தாம் வருடத்தில் உண்டாகும் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். இவ்வாறாக உங்கள் அறுவடை பெருகும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘எந்த இறைச்சியையும் அதன் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம்.
“ ‘குறி கேட்கவோ, சகுனம் பார்க்கவோ வேண்டாம்.
“ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள்.19:27 இந்த நடைமுறைகள் இஸ்ரயேலரைச் சுற்றியுள்ள பிற மக்களின் சமயங்களில் பொதுவானவை.
“ ‘இறந்தவர்களுக்காக உங்கள் உடல்களைக் கீறி காயப்படுத்தவேண்டாம். உங்கள் உடல்களில் பச்சை குத்தவும் வேண்டாம். நான் யெகோவா.
“ ‘நீங்கள் உங்கள் மகளை வேசியாக்குவதினால், அவளை இழிவுபடுத்தாதீர்கள். மீறினால், நாடு வேசித்தனத்திற்குத் திரும்பி, கொடுமையினால் நிறையும்.
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
“ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘வயதானவர்களின் முன் எழுந்து நில்லுங்கள். முதியோருக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் இறைவனிடத்தில் பயபக்தியாயிருங்கள். நானே யெகோவா.
“ ‘ஒரு பிறநாட்டினன் உங்கள் நாட்டில் உங்களுடன் தங்கியிருந்தால், அவனை ஒடுக்காதீர்கள். உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீளம், நிறை, கொள்ளளவு ஆகியவற்றை அளக்கும்போது, நீதியற்ற அளவுகளைப் பயன்படுத்த வேண்டாம். சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார்.
பாவத்திற்கான தண்டனை
யெகோவா மோசேயிடம், “மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேலில் வாழும் பிறநாட்டினனாவது, தங்கள் பிள்ளைகளை மோளேக்கு20:2 மோளேக்கு அல்லது பிற நாட்டு தெய்வம். தெய்வத்திற்குக் கொடுத்தால், அவன் கொல்லப்படவேண்டும். மக்கள் சமுதாயம் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாக்கி, அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றுவேன். ஏனெனில், தன் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்ததினால் அவன் என் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தி, என் பரிசுத்த பெயரையும் இழிவுபடுத்தினான். அவன் தன் பிள்ளைகளில் ஒன்றை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுக்கிறபோது மக்கள் சமுதாயம் அவனைக் கொலைசெய்யத் தவறி, தங்கள் கண்களை மூடிக்கொண்டால், நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாகவும், அவன் குடும்பத்திற்கு விரோதமாகவும் திருப்புவேன். நான் அவனையும், எனக்கெதிராக மோளேக்கு தெய்வத்திடம் வேசித்தனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்த, அவனைப் பின்பற்றுகிற யாவரையும் அவர்களுடைய மக்களிலிருந்து அகற்றுவேன்.
“ ‘ஜோதிடம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்பற்றி, எனக்கெதிராக வேசித்தனம் செய்ய தன்னை ஒப்புக்கொடுக்கிறவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்புவேன். நான் அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றிவிடுவேன்.
“ ‘நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொண்டு பரிசுத்தராயிருங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே உங்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா.
“ ‘யாராவது தன் தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும். அவன் தன் தகப்பனையோ, தன் தாயையோ சபித்துவிட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையிலேயே இருக்கும்.
“ ‘ஒருவன் தன் அயலானாகிய ஒருவனுடைய மனைவியோடே விபசாரம் பண்ணினால், அவனும் விபசாரியுமான, அந்த இருவருமே கொல்லப்படவேண்டும்.
“ ‘ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொண்டால், அவன் தன் தகப்பனைக் கனவீனப்படுத்திவிட்டான். எனவே அந்த மனிதனும், அந்தப் பெண்ணும் கொலைசெய்யப்பட வேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
“ ‘ஒருவன் தன் மருமகளோடு உறவுகொண்டால், இருவரும் கொல்லப்படவேண்டும். அவர்கள் செய்திருப்பது இயல்புக்கு முரணான பாலுறவு. அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலையிலேயே இருக்கும்.
“ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதுபோல், ஒரு ஆணுடன் உறவுகொண்டால், அவர்கள் அருவருப்பானதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
“ ‘ஒருவன் ஒரு பெண்ணையும், அவளுடைய தாயையும் திருமணம் செய்தால் அது கொடுமை. அவனும், அவர்களும் நெருப்பில் எரிக்கப்படவேண்டும். அப்பொழுது உங்களுக்குள் கொடுமை இராது.
“ ‘ஒருவன் ஒரு மிருகத்தோடு பாலுறவு கொண்டால், அவன் கொல்லப்படவேண்டும். அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்லவேண்டும்.
“ ‘ஒரு பெண் ஒரு மிருகத்துடன் பாலுறவுகொள்ளும்படி அதை நெருங்கினால், அவளையும், அந்த மிருகத்தையும் கொன்றுவிடுங்கள். அவர்கள் கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
“ ‘ஒருவன் தன் தகப்பனின் மகளான அல்லது தாயின் மகளான தன் சகோதரியை திருமணம் செய்து, அவர்கள் பாலுறவு கொண்டால் அது அவமானம். அவர்கள் தங்கள் மக்களின் பார்வையிலிருந்து அகற்றப்படவேண்டும். அவன் தன் சகோதரியை அவமானப்படுத்திவிட்டான். அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி.
“ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் அவளுடன் பாலுறவு கொண்டால், அவன் அவளுடைய இரத்தப்போக்கை வெளிப்படுத்தினான். அவளும் அதை நிர்வாணமாக்கினாள். அவர்கள் இருவருமே தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
“ ‘ஒருவன் தன் தாயின் சகோதரியுடனோ, தன் தகப்பனுடைய சகோதரியுடனோ பாலுறவு கொள்ளக்கூடாது. ஏனெனில், அது அவனுடைய நெருங்கிய உறவினனைக் கனவீனப்படுத்தும். அவர்கள் இருவருமே அக்குற்றத்திற்குப் பொறுப்பாளிகள்.
“ ‘ஒருவன் தன் சிறிய தாயுடன் உறவுகொண்டால், அவன் தன் சிறிய தகப்பனைக் கனவீனப்படுத்தினான். அக்குற்றத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள். அவர்கள் பிள்ளைப்பேறு அற்றவர்களாய்ச் சாவார்கள்.
“ ‘ஒரு மனிதன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம் செய்தால், அது ஒரு அசுத்தமான செயல். அவன் தன் சகோதரனை கனவீனப்படுத்திவிட்டான். எனவே அவர்கள் இருவரும் பிள்ளைப்பேறு இல்லாதிருப்பார்கள்.
“ ‘என் கட்டளைகளையும், சட்டங்களையும் கடைப்பிடித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அப்பொழுது, நீங்கள் வாழும்படி நான் உங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நாடு, உங்களை வாந்திபண்ணாது. நான் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடப் போகிற நாட்டினருடைய பழக்கவழக்கங்களின்படி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் இந்தச் செயல்களைச் செய்ததினால், நான் அவர்களை அருவருத்து வெறுத்துவிட்டேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். “பாலும் தேனும் ஓடும்20:24 தேனும் ஓடும் அல்லது செழிப்பான நாடு. அந்நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பேன்” என்று உங்களுக்குச் சொன்னேன். மற்ற நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்திருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
“ ‘ஆகையால் நீங்கள் சுத்தமான மிருகங்களுக்கும், அசுத்தமான மிருகங்களுக்கும் இடையிலும், சுத்தமான பறவைகளுக்கும், அசுத்தமான பறவைகளுக்கும் இடையிலும் வித்தியாசம் ஏற்படுத்துங்கள். உங்களுக்கு அசுத்தமென்று நான் விலக்கி வைத்த மிருகத்தினாலாவது, பறவையினாலாவது அல்லது தரையில் ஊரும் எதினாலாவது உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில், யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும்படி, நான் நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.
“ ‘அஞ்சனம் பார்க்கிற அல்லது குறிசொல்லுகிற ஒரு ஆணோ, பெண்ணோ உங்களுக்குள் இருந்தால், அவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும். நீங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்’ ” என்றார்.
ஆசாரியருக்கான சட்டங்கள்
யெகோவா மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆசாரியனானவன் தன் மக்களில் சாகும் யாருக்காகவும் சம்பிரதாயப்படி தன்னை அசுத்தமாக்கிக்கொள்ளக் கூடாது. நெருங்கிய உறவினரான தன் தகப்பன், தாய், தன் மகன், மகள், தன் சகோதரன் ஆகியோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்தலாம். அல்லது கணவன் இல்லாத காரணத்தால் தன்னில் தங்கி வாழ்கின்ற, திருமணமாகாத தனது சகோதரிக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ளலாம். திருமணத்தின்மூலம் தனக்கு உறவினரானோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
“ ‘ஆசாரியர்கள் தங்கள் தலைகளை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடிகளின் ஓரத்தைக் கத்தரிக்கவோ, தங்கள் உடல்களைக் கீறிக்கொள்ளவோ கூடாது.21:5 [லேவி. 19:27-28] அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். தங்களுடைய இறைவனின் பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனின் உணவை நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறபடியால், அவர்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
“ ‘அவர்கள் வேசித்தனத்தால் கறைப்பட்ட பெண்களையோ அல்லது தங்கள் கணவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர்களையோ திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் ஆசாரியர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமானவர்கள். ஆசாரியர்கள் உங்கள் இறைவனின் உணவைப் பலியாகச் செலுத்துகிறபடியால், அவர்களைப் பரிசுத்தமானவர்களாக மதியுங்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறபடியால், அவர்களையும் பரிசுத்தமானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.
“ ‘ஒரு ஆசாரியனின் மகள் வேசியாகி அதினால் தன்னைக் கறைப்படுத்தினால், அவள் தன் தகப்பனை அவமானப்படுத்துகிறாள். அவள் நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.
“ ‘தன் சகோதரர்கள் மத்தியில் தன் தலையின்மேல் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டவனும், ஆசாரியனுக்கான உடைகளை அணிவதற்கு நியமிக்கப்பட்டவனுமான தலைமை ஆசாரியன் தன் தலைமயிரைக் குலைக்கவோ, தன் உடைகளைக் கிழிக்கவோ கூடாது. அவன் ஒரு இறந்த உடல் கிடக்கும் இடத்திற்குப் போகக்கூடாது. அவனுடைய தகப்பனோ, தாயோ இறந்தாலும் அவன் தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது. அவன் தன் இறைவனின் பரிசுத்த இடத்தைவிட்டுப் புறப்படவோ, அதைத் தூய்மைக்கேடாக்கவோ கூடாது. ஏனெனில் அவன் தன் இறைவனின் அபிஷேக எண்ணெயால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறான். நானே யெகோவா.
“ ‘தலைமை ஆசாரியன் திருமணம் செய்யும் பெண், ஒரு கன்னிகையாகவே இருக்கவேண்டும். அவன் ஒரு விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ, வேசித்தனத்தினால் கறைப்பட்ட ஒரு பெண்ணையோ திருமணம் செய்யக்கூடாது. தன் சொந்த மக்கள் மத்தியில் உள்ள கன்னிகையை மட்டுமே திருமணம் செய்யவேண்டும். இவ்வாறாக அவன் தன் மக்கள் மத்தியில் தன் சந்ததிகளை மாசுப்படுத்தாமல் இருக்கவேண்டும். அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே’ ” என்றார்.
யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் அங்கவீனம் உள்ள எவனும் தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படிக்கு அருகில் வரக்கூடாது. எத்தகைய அங்கவீனமுள்ளவனும் சமீபத்தில் வரக்கூடாது. குருடன், முடவன், உருவம் சிதைந்தவன், உருவக் குறைபாடுள்ளவன், கை அல்லது கால் முடமானவன், கூன்முதுகன், வளர்ச்சி குன்றியவன், கண்ணில் குறைபாடுள்ளவன், சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளவன், விதைகள் சேதப்பட்டவன் ஆகிய எவனுமே அவ்வாறு வரக்கூடாது. ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளில் ஊனமுடைய யாராவது, நெருப்பினால் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்த சமீபத்தில் வரக்கூடாது. அவன் ஊனமுள்ளவனாகையால், தன் இறைவனின் உணவைச் செலுத்தும்படி சமீபமாய் வரக்கூடாது. அவன் தன் இறைவனின் மகா பரிசுத்தமான உணவையும், மற்ற பரிசுத்தமான உணவையும் சாப்பிடலாம். ஆனாலும் அவன் தன் அங்கவீனத்தினிமித்தம் திரைக்குச் சமீபமாய்ப் போகவோ, பலிபீடத்தை அணுகவோ கூடாது. இவ்வாறாக என் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கக் கூடாது. ஆசாரியர்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா நானே’ ” என்றார்.
மோசே இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் அனைவருக்கும் சொன்னான்.
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் எனக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைகளை மதித்து நடக்கும்படிச் சொல். இவ்விதமாய் அவர்கள் என் பரிசுத்த பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்காமல் இருப்பார்கள். நானே யெகோவா.
“நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் எவனும், சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருந்தும், இஸ்ரயேலர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைக்குச் சமீபமாய் வருவானாகில், அவன் என் சமுகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். நானே யெகோவா.
“ ‘ஆரோனின் சந்ததிகளில் யாராவது, தொற்றும் தோல்வியாதி உள்ளவனாகவோ, உடல் கசிவு உள்ளவனாகவோ இருந்தால், அவன் சுத்திகரிக்கப்படும்வரை பரிசுத்த காணிக்கைகளை சாப்பிடக்கூடாது. சடலத்தால் கறைபட்ட ஏதாவதொன்றைத் தொடுவதினாலும், விந்து கசிவுள்ள ஒருவனைத் தொடுவதினாலும் அவன் அசுத்தமாயிருப்பான். அவன் தன்னை அசுத்தப்படுத்தக்கூடிய ஊரும்பிராணி ஒன்றைத் தொடுவதினாலும், எவ்வித அசுத்தத்தினாலும் தன்னை அசுத்தப்படுத்துகிற எவனையாவது தொடுவதினாலும் அசுத்தமாயிருப்பான். இப்படிப்பட்ட எதையும் தொடுபவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவன் தான் தண்ணீரில் முழுகினாலொழிய பரிசுத்த காணிக்கை எதையும் சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும்போது அவன் சுத்தமாவான். அதன்பின் அவன் பரிசுத்த காணிக்கைகளைச் சாப்பிடலாம். ஏனெனில், அவை அவனுடைய உணவாகும். செத்ததாகக் கண்டெடுக்கப்பட்ட எதையாவது அல்லது காட்டு மிருகங்களினால் கொல்லப்பட்ட எதையாவது சாப்பிடுவதினால் அவன் அசுத்தமாகக் கூடாது. நானே யெகோவா.
“ ‘ஆசாரியர்கள் என் நியமங்களை அவமதித்து குற்றவாளிகளாகி சாகாதபடிக்கு, அவர்கள் அவற்றைக் கைக்கொள்ளவேண்டும். அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே.
“ ‘ஆசாரியனின் குடும்பத்துக்குப் புறம்பான ஒருவனோ அல்லது ஆசாரியனின் விருந்தாளியோ அல்லது கூலியாளோ பரிசுத்த காணிக்கையைச் சாப்பிடக்கூடாது. ஆனால் ஆசாரியன் ஒரு அடிமையைப் பணம் கொடுத்து வாங்கினாலோ அல்லது ஒரு அடிமை அவன் வீட்டில் பிறந்தாலோ, அந்த அடிமை ஆசாரியனின் உணவைச் சாப்பிடலாம். ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை திருமணம் செய்தால், அவளும் பரிசுத்த கொடைகளில் எதையும் சாப்பிடக்கூடாது. ஆனால், ஒரு ஆசாரியனின் மகள் விதவையாக இருந்தாலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளாய் இருந்தாலோ, அவள் பிள்ளைகள் அற்றவளாய், தான் இளமையில் இருந்ததுபோலவே தன் தகப்பன் வீட்டில் வசிக்கும்படி திரும்பிவந்திருந்தால், அவள் தன் தகப்பனின் உணவைச் சாப்பிடலாம். அங்கீகரிக்கப்படாத யாராவது அதில் எதையும் சாப்பிடக்கூடாது.
“ ‘யாரேனும் ஒருவன் தவறுதலாக பரிசுத்தமான காணிக்கையைச் சாப்பிட்டால், அக்காணிக்கைக்காக அவன் ஆசாரியனுக்குப் பதிலீடு செய்வதுடன், அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இஸ்ரயேலர் யெகோவாவுக்குச் செலுத்தும் பரிசுத்த காணிக்கைகளை ஆசாரியர்கள் தூய்மைக்கேடாக்கக் கூடாது. அப்பரிசுத்த காணிக்கைகளை அங்கீகரிக்கப்படாதவர்கள் சாப்பிட அனுமதிப்பதின் மூலம், அவர்கள்மேல் தண்டனைக்குரிய குற்றத்தை சுமத்தாமல் இருக்கவேண்டும். நானே யெகோவா, அவர்களைப் பரிசுத்தமாக்குகிறவர்’ ” என்றார்.
ஏற்கத்தகாத பலிகள்
யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனோடும், அவன் மகன்களோடும், இஸ்ரயேலர் அனைவரோடும் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலனோ, இஸ்ரயேலில் வசிக்கும் பிறநாட்டினனோ, யாராவது தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும்படியாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ யெகோவாவுக்கு ஒரு தகனகாணிக்கையைக் கொடையாகக் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவருவதானால், அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும். குறைபாடுள்ள எதையும் கொண்டுவர வேண்டாம். ஏனெனில் அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவன் ஒரு விசேஷ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கைக்காகவோ தன் மாட்டு மந்தையில் இருந்தாவது, ஆட்டு மந்தையில் இருந்தாவது யெகோவாவுக்கு ஒரு சமாதான காணிக்கையைக் கொண்டுவந்தால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும்படி, குறைபாடற்றதாகவும், பழுதற்றதாகவும் இருக்கவேண்டும். குருடானதையோ, காயமடைந்ததையோ, முடமானதையோ அல்லது தோலில் மருவுள்ளதையோ, சொறி அல்லது சீழ்வடியும் புண்ணுள்ளதையோ யெகோவாவுக்குச் செலுத்தவேண்டாம். இவைகளில் எதையும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையாக, பலிபீடத்தின்மேல் வைக்கவேண்டாம். ஆனாலும் வளர்ச்சி குன்றிய அல்லது உருவம் சிதைவுற்ற ஒரு மாட்டையோ, செம்மறியாட்டையோ நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையாகச் செலுத்தலாம்; ஆனால் அவை நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விதைகள் காயப்பட்ட, நசுக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட எந்தவொரு மிருகத்தையும், நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. உங்கள் சொந்த நாட்டில் இதைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட மிருகங்களை நீங்கள் அந்நிய நாட்டினரின் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உங்கள் இறைவனின் உணவாகச் செலுத்தவும் வேண்டாம். உங்கள் சார்பில் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.22:25 பலிசெலுத்த தகுதியற்றவைகள் ஏனெனில் அவைகளின் எஜமான்கள் அவைகளை விரையடித்துள்ளனர். ஏனெனில், அவை உருவம் சிதைந்தவைகளாயும், குறைபாடுள்ளவைகளாயும் இருக்கின்றன.’ ”
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டு குட்டியோ அல்லது வெள்ளாட்டு குட்டியோ பிறக்கும்போது அது தன் தாயுடன் ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கவேண்டும். எட்டாம் நாளிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்படும். பசுவை அதன் கன்றுடனும், ஆட்டை அதன் குட்டியுடனும் ஒரே நாளில் வெட்டிக் கொல்லவேண்டாம்.”
“நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக் காணிக்கை ஒன்றைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள். அந்த நாளிலேயே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும். காலைவரை ஒன்றையும் விட்டுவைக்கவேண்டாம். நானே யெகோவா.
“என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா. என் பரிசுத்த பெயரை அசுத்தமாக்க வேண்டாம். இஸ்ரயேலரால் நான் பரிசுத்தர் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே. உங்கள் இறைவனாயிருக்கும்படி நானே உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நானே யெகோவா” என்றார்.
நியமிக்கப்பட்ட பண்டிகைகள்
யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
ஓய்வுநாள்
“ ‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும்.
பஸ்காவும் புளிப்பில்லாத அப்பமும்
“ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும். அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும். முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.
முதற்பலன்கள்
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம் பேசி, அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் போய், அதன் விளைச்சலை அறுவடை செய்யும்போது, உங்கள் அறுவடையின் முதலாவது தானியக் கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டவேண்டும். ஓய்வுநாளுக்கு அடுத்தநாள் ஆசாரியன் அதை அசைவாட்டவேண்டும். அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் அந்நாளிலே ஒரு வயதுடைய குறைபாடற்ற செம்மறியாட்டுக் குட்டியை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும். அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின்23:13 அதாவது, ஹின் என்பது சுமார் ஒரு லிட்டர் அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும். நீங்கள் உங்கள் இறைவனுக்கு முதற்பலனில் இக்காணிக்கையைக் கொண்டுவரும் அந்த நாள்வரை, அதிலிருந்து எந்தவொரு அப்பத்தையோ, வறுத்த தானியத்தையோ, பச்சைத் தானியத்தையோ சாப்பிடக்கூடாது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
வாரங்களின் பண்டிகை
“ ‘நீங்கள் அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டைக் கொண்டுவந்த நாளான ஓய்வுநாளுக்கு அடுத்த நாளிலிருந்து, முழுமையாக ஏழு வாரங்களை எண்ணுங்கள். ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா23:17 அதாவது, ஏறத்தாழ 3.2 கிலோகிராம் அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள். இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள். ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும். அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும்.
“ ‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
எக்காளப் பண்டிகை
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஏழாம் மாதத்தின் முதலாம் நாள் உங்களுக்கு ஒரு ஓய்வுநாளாயிருக்க வேண்டும். அந்த நாள் எக்காளம் முழங்கி, நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பரிசுத்த சபைக்கூடுதலாக இருக்கவேண்டும். அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார்.
பாவநிவிர்த்தியின் நாள்
யெகோவா மோசேயிடம், “ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பாவநிவிர்த்தி செய்யும் நாளாகும். அந்த நாளில் பரிசுத்த சபையைக் கூட்டி உபவாசித்து, உங்களை ஒடுக்கி, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவாருங்கள். அந்த நாளிலே எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். ஏனெனில், அதுவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவிர்த்தி நாள். அந்த நாளில் உபவாசித்து தன்னை ஒடுக்காத எவனும் தன் மக்களில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனையும், அவனுடைய மக்கள் மத்தியிலிருந்து நான் அழித்துப்போடுவேன். நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும். இந்நாள் உங்களுக்கான ஓய்வுநாள். அதில் உபவாசித்து உங்களையே நீங்கள் ஒடுக்கவேண்டும். மாதத்தின் ஒன்பதாம்நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை நீங்கள் உங்கள் ஓய்வுநாளை அனுசரிக்கவேண்டும்” என்றார்.
கூடாரப்பண்டிகை
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும். முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது.
“ ‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும். இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும்.
“ ‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும். முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள். ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள். நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும். இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
இவ்வாறு மோசே, யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகளை இஸ்ரயேலருக்கு அறிவித்தான்.
எண்ணெயும் அப்பமும்
யெகோவா மோசேயிடம், “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. சபைக் கூடாரத்திலே, சாட்சிப்பெட்டியின் திரைக்கு வெளியே, இந்த விளக்குகளை ஆரோன் யெகோவா முன்னிலையில் மாலைவேளை தொடங்கி விடியும்வரை தொடர்ந்து எரியும்படிச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் ஒரு நிரந்தர நியமமாக இருக்கவேண்டும். சுத்தத் தங்கத்தினாலான குத்துவிளக்கின் மேலுள்ள விளக்குகள் யெகோவா முன்னிலையில் தொடர்ந்து எரியும்படி அவன் பார்த்துக்கொள்ளவேண்டும்.
“சிறந்த மாவை எடுத்து, ஒவ்வொரு அப்பத்திற்கும் பத்தில் இரண்டு எப்பா அளவு மாவைப் பயன்படுத்தி, பன்னிரண்டு அப்பங்களைச் சுடவேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் ஆறு அப்பங்களாக, யெகோவா முன்னிலையில் காணப்படும் சுத்தத் தங்கத்தினாலான மேஜையின்மேல் இரண்டு வரிசைகளில் அவற்றை வைக்கவேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் அப்பத்திற்கான ஞாபகார்த்தப் பங்காகவும், நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாகவும் இருக்கும்படி, கொஞ்சம் சுத்தமான நறுமணத்தூளையும் போடவேண்டும். ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இஸ்ரயேலர் சார்பான, நிரந்தர உடன்படிக்கையாக இந்த அப்பம் யெகோவாவுக்கு முன்பாக நித்தமும் வைக்கப்பட வேண்டும். இது ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் உரியது. அவர்கள் இதை ஒரு பரிசுத்த இடத்தில் சாப்பிடவேண்டும். ஏனெனில், இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் அவர்களுடைய நிரந்தரமான உரிமையில் மகா பரிசுத்தமான பங்கு.”
நிந்தனைக்குத் தண்டனை
ஒரு எகிப்திய மனிதனுக்கும், இஸ்ரயேல் பெண்ணுக்கும் மகனான ஒரு மனிதன் இஸ்ரயேல் மக்களுக்குள் போனான். அவனுக்கும் ஒரு இஸ்ரயேலனுக்கும் இடையில் முகாமுக்குள் சண்டை மூண்டது. அந்த நேரத்தில் இஸ்ரயேல் பெண்ணின் மகனான அவன், யெகோவாவின் பெயரை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். எனவே அவர்கள் அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாய் தாண் கோத்திரத்து திப்ரியின் மகளான செலோமித். அவனைப்பற்றி யெகோவாவின் விருப்பம் தெளிவாகும் வரை, அவனை அவர்கள் காவலில் வைத்தார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது: “நீ நிந்தித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவன் நிந்தித்ததைக் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும். பின்பு சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான். யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன் பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன் கொல்லப்படவேண்டும்” என்றார்.
“ ‘யாராவது ஒருவன் ஒரு மனித உயிரைக் கொலை செய்தால், அவன் கொல்லப்படவேண்டும். யாராவது ஒருவன் இன்னொருவனுடைய மிருகத்தைக் கொன்றால், அவன் உயிருக்குப்பதில், உயிராகப் பதிலீடு செய்யவேண்டும். யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும். முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும். மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும். உங்களிடம் தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்கவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
மோசே இஸ்ரயேலருடன் பேசினான். அவர்கள் இறைவனை நிந்தனை செய்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்விதமாய் மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
ஓய்வு வருடம்
யெகோவா சீனாய் மலையில் மோசேயுடன் பேசினார், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்த நாடும் யெகோவாவுக்காக ஓய்வை கடைபிடிக்க வேண்டும். ஆறு வருடங்கள் உங்கள் வயல்களை விதைத்து, ஆறு வருடங்கள் திராட்சைத் தோட்டத்தின் கொடிகளின் கிளைகளைத்தரித்து சுத்தம்செய்து, அவற்றின் பலனை அறுவடை செய்யுங்கள். ஆனால் ஏழாம் வருடத்தில், நிலம் ஓய்வு பெறவேண்டும். அது யெகோவாவுக்கான ஓய்வு. அந்த வருடத்தில் நீங்கள் வயலை விதைக்கவும், திராட்சைத்தோட்டத்து கிளைகளைத் தரிக்கவும் வேண்டாம். தானாய் முளைத்து விளையும் பயிரை, அறுவடை செய்யவும் வேண்டாம். பராமரிக்கப்படாத திராட்சைக் கொடியிலிருந்து பழங்களைப் பறிக்கவும் வேண்டாம். நிலத்திற்கு ஓய்வு வருடம் இருக்கவேண்டும். நாட்டின் ஓய்வு வருடத்தில் விளைகிறது உனக்கு உணவாகும். அது உனக்கும், உன் வேலைக்காரனுக்கும், வேலைக்காரிக்கும், கூலியாளுக்கும், உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளனுக்கும் உணவாகும், உன் வீட்டு மிருகங்களுக்கும், வயல்களிலுள்ள மிருகங்களுக்கும் அது உணவாயிருக்கும். நிலத்தின் விளைச்சல் எதையும் சாப்பிடலாம்.
யூபிலி வருடம்
“ ‘ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். ஏழுமுறை ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்கள் வரும்வரை ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். பின்பு ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, நாடெங்கிலும் எக்காளம் ஊதுங்கள். பாவநிவிர்த்தி நாளிலே, எக்காளத்தை நாடெங்கும் ஊதுங்கள். ஐம்பதாம் வருடத்தை அர்ப்பணம் செய்து, நாட்டு மக்கள் அனைவருக்கும், விடுதலையைப் பிரசித்தப்படுத்துங்கள். அது உங்களுக்கான யூபிலி வருடமாயிருக்கும். உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் குடும்பச் சொத்து உரிமைக்கும், தன்தன் கோத்திரத்திற்கும் திரும்பிச் செல்லவேண்டும். ஐம்பதாம் வருடம் உங்களுக்கு ஒரு யூபிலி வருடம். நீங்கள் விதைக்கவோ, தானாய் விளைந்த தானியத்தையாகிலும் திராட்சைப் பழங்களையாகிலும் அறுவடை செய்யவோ வேண்டாம். ஏனெனில் அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த வருடம் வயல்களில் தானாய் விளைந்தவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.
“ ‘இந்த யூபிலி வருடத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முற்பிதாக்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.
“ ‘நீங்கள் உங்கள் நாட்டவனுக்கு ஒரு நிலத்தை விற்றாலோ அல்லது அவனிடமிருந்து வாங்கினாலோ ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் நாட்டினரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, சென்ற யூபிலி வருடத்திலிருந்து கழிந்த வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாங்கவேண்டும். அவன் உங்களுக்கு விற்கும்போது விளைச்சலை அறுவடை செய்யவேண்டிய வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை விற்கவேண்டும். அறுவடை வருடங்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் விலையையும் அதிகரிக்கவேண்டும். வருடங்கள் குறைவாக இருந்தால் விலையையும் குறைக்கவேண்டும். ஏனெனில், அவன் உங்களுக்கு உண்மையாக விற்பது அறுவடையின் எண்ணிக்கையின் மதிப்பையே. ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் என்னுடைய விதிமுறைகளைப் பின்பற்றி, என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள். அப்பொழுது நாடு தன் பலனைக் கொடுக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் பாதுகாப்புடன் வாழ்வீர்கள். நீங்கள் ஏழாம் வருடத்தில் விதையாமலும், அறுவடை செய்யாமலும் இருந்து, எதைச் சாப்பிடுவோம் என்று கேட்பீர்களானால், ஆறாம் வருடத்தில் நான் உங்களுக்கு அதிக விளைச்சலுள்ள ஆசீர்வாதத்தை அனுப்புவேன். அவ்வருடத்தில் மூன்று வருடங்களுக்கு போதுமான பலனை அந்நிலம் தரும். நீங்கள் எட்டாம் வருடத்தில் விதைக்கும் காலத்தில் பழைய விளைச்சலிலிருந்து சாப்பிடுவீர்கள். ஒன்பதாம் வருடத்தில் அறுவடை செய்யும்வரை நீங்கள் அதில் தொடர்ந்து சாப்பிடுவீர்கள்.
“ ‘நிலம் நிரந்தரமாய் விற்கப்படக்கூடாது. நிலம் என்னுடையது. நீங்களோ, பிறநாட்டினரும் குத்தகைக்காரருமாக இருக்கிறீர்கள். நீங்கள் சொத்துரிமையாகக் கொண்டிருக்கும் நாடெங்கும் அந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்.
“ ‘உன் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி தன் சொத்து நிலத்தில் கொஞ்சத்தை விற்றால், அவனுடைய நெருங்கிய உறவினன் முன்வந்து, தன் நாட்டினன் விற்றுப்போட்டதை மீட்டுக்கொள்ள வேண்டும். ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால், அவன் விற்றதிலிருந்து கழிந்த வருடங்களுக்கான மதிப்பை நிர்ணயித்து, தான் ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து அதைக் கழித்து, மிகுதியை தன்னிடம் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் சொத்து நிலத்திற்குத் திரும்பிப்போகலாம். ஆனால் தான் விற்றதைத் திருப்பிவாங்க வசதி இல்லாதுபோனால், யூபிலி வருடம் மட்டும் அது வாங்கியவனுக்கு உரிமையாயிருக்கும். ஆனால், யூபிலி வருடத்தில் அது விற்றவனுக்குத் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்.
“ ‘ஒருவன் மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள ஒரு வீட்டை விற்றால், அதை விற்றபின் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் அதை மீட்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தக் காலத்திற்குள் அவன் அதை மீட்கலாம். ஒரு வருடம் நிறைவடையுமுன் அவன் அதைத் திருப்பி மீட்காவிட்டால், மதில் சூழ்ந்த பட்டணத்தில் இருக்கும் அவ்வீடு வாங்கியவனுக்கும், அவன் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர உரிமையாகும். அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் மதில் சூழப்படாத கிராமப் பகுதிகளிலுள்ள வீடுகள், நாட்டின் நிலங்களைப்போல் கருதப்படும். அவை மீட்கப்படலாம். யூபிலி வருடத்தில் அவை திருப்பி கொடுக்கப்படவேண்டும்.
“ ‘ஆனால் லேவியர்களோ, லேவியருடைய நகரங்களிலிருக்கிற தங்களுடைய வீடுகளை மீட்க எப்பொழுதும் உரிமையுடையவர்களாய் இருக்கிறார்கள். அவை அவர்களுடைய உரிமைச்சொத்துக்கள். எனவே லேவியருடைய சொத்து மீட்கக்கூடியது. அதாவது அவர்களுக்குரிய எந்தப் பட்டணத்திலாவது ஒரு வீடு விற்கப்பட்டால், அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இஸ்ரயேலர் மத்தியில் லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் மட்டுமே அவர்களுடைய சொத்தாகும். ஆனால் அவர்களுடைய பட்டணங்களுக்குரிய மேய்ச்சல் நிலமோ, விற்கப்படக்கூடாது. ஏனெனில், அவை அவர்களின் நிரந்தர சொத்துரிமை.
“ ‘உங்கள் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி, தன்னைத்தானே பராமரிக்க இயலாத வேளையில், ஒரு பிறநாட்டினனுக்கோ, தற்காலிக குடியிருப்பாளனுக்கோ உதவுவதுபோல் நீங்கள் அவனுக்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு உங்கள் மத்தியில் அவன் தொடர்ந்து வாழலாம். அவனிடம் எவ்வித வட்டியையும் வாங்கவேண்டாம். ஆனால் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். இப்படியாக உங்கள் நாட்டினன் உங்கள் மத்தியில் தொடர்ந்து வாழலாம். நீங்கள் அவனுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. இலாபத்திற்கு அவனுக்கு உணவும் விற்கக்கூடாது. உங்களுக்குக் கானான் நாட்டைக் கொடுக்கவும், உங்கள் இறைவனாயிருக்கவும் உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
“ ‘உங்கள் நாட்டவரில் ஒருவன் உங்களுக்குள் ஏழையாகி தன்னை விற்றால், அவனை அடிமையாக வேலைசெய்ய வைக்கவேண்டாம். அவன் ஒரு கூலிக்காரனைப் போலவும், உங்களிடம் வந்த தற்காலிக குடியிருப்பாளனைப் போலவும் நடத்தப்படவேண்டும். யூபிலி வருடம்வரை அவன் உங்களுக்குப் பணிசெய்ய வேண்டும். அதன்பின் அவனும் அவன் பிள்ளைகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவன் தன் சொந்தக் கோத்திரத்திற்கும் முற்பிதாக்களின் சொத்து நிலத்திற்கும் திரும்பிப் போகவேண்டும். எகிப்து நாட்டிலிருந்து நான் வெளியே கொண்டுவந்த இஸ்ரயேலர் என் பணியாட்களாய் இருப்பதால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது. அவர்களை நீங்கள் கொடூரமாய் ஆளுகை செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள்.
“ ‘உங்களைச் சுற்றியிருக்கிற நாடுகளிடமிருந்தே உங்களுக்கு ஆண் அடிமைகளும், பெண் அடிமைகளும் வரவேண்டும். அவர்களிடமிருந்தே நீங்கள் அடிமைகளை வாங்கலாம். உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களில் சிலரை அடிமைகளாக வாங்கலாம். உங்கள் நாட்டில் பிறந்த அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களையும் வாங்கலாம். அவர்கள் உங்கள் சொத்துக்களாவார்கள். நீங்கள் அவர்களை உங்கள் பிள்ளைகளுக்கு உரிமைச்சொத்தாக எழுதிக்கொடுத்து, அவர்களை ஆயுட்கால அடிமைகளாக்கலாம். ஆனால் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேலரைக் கொடூரமாய் ஆளுகை செய்யக்கூடாது.
“ ‘உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ அல்லது தற்காலிக குடியிருப்பாளனோ செல்வந்தனாயிருக்கையில் உங்கள் நாட்டவரில் ஒருவன் ஏழையாகி, அந்த பிறநாட்டினனுக்கோ அல்லது பிற நாட்டு வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினருக்கோ தன்னை விற்றால், தன்னை விற்றுவிட்ட பின்பும் தன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுடையவனாய் இருக்கிறான். அவனுடைய உறவினருக்குள் ஒருவன் அவனை மீட்கலாம்: அவனுடைய சிறிய தகப்பனோ அல்லது சிறிய தகப்பனுடைய மகனோ அல்லது அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த இரத்த உறவினனோ அவனை மீட்டுக்கொள்ளலாம். அல்லது அவன் செழிப்படையும்போது தன்னைத்தானே மீட்டுக்கொள்ளவும் முடியும். அவனும், அவனை வாங்கியவனும் அவன் தன்னை விற்ற வருடத்திலிருந்து யூபிலி வருடம் வரையுள்ள காலத்தைக் கணக்கிடவேண்டும். ஒரு கூலியாளுக்குச் செலுத்தப்படுகின்ற கூலி அளவை அடிப்படையாகக்கொண்டு அவனுக்குரிய விடுதலைக்கான விலை அமையவேண்டும். இன்னும் அநேக வருடங்கள் இருக்குமானால், தனக்காகச் செலுத்தப்பட்ட விலைமதிப்பின் ஒரு பெரிய பங்கை அவன் தன்னுடைய மீட்புக்காகச் செலுத்தவேண்டும். யூபிலி வருடத்திற்கு இன்னும் சில வருடங்கள் மட்டுமே இருக்குமானால், அவன் அதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப தன் மீட்புக்கான பணத்தைக் கொடுக்கலாம். அவன் வருடத்திற்கு வருடம் கூலிக்கு அமர்த்தப்பட்டவன்போல் நடத்தப்படவேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாய் நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.
“ ‘இவ்விதமாக, எந்த வழிகளிலாவது அவன் மீட்கப்படாவிட்டாலும், அவனும் அவனுடைய பிள்ளைகளும், யூபிலி வருடத்தில் விடுதலையாக்கப்பட வேண்டும். ஏனெனில், இஸ்ரயேலர் என் பணியாட்களாக எனக்கு சொந்தமாயிருக்கிறார்கள். அவர்கள் நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த பணியாட்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
கீழ்ப்படிதலுக்கான வெகுமதி
“ ‘நீங்கள் விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். உருவச்சிலையையோ, உங்களுக்காக புனிதக் கல்லையோ அமைக்கவேண்டாம். உங்கள் நாட்டில் தலைகுனிந்து வணங்குவதற்காக ஒரு செதுக்கப்பட்ட கல்லை வைக்கக்கூடாது. நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
“ ‘நீங்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றி, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருந்தால், மழையை அதன் பருவகாலத்தில் அனுப்புவேன். பூமி தனது விளைச்சலையும், வயல்களின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும். உங்கள் சூடுமிதிக்கும் காலம், திராட்சைப்பழம் பறிக்குங்காலம்வரை நீடிக்கும். திராட்சைப்பழம் பறிக்குங்காலம், நடுகைக்காலம்வரை நீடிக்கும். ஆகையால் நீங்கள் விரும்பிய எல்லா உணவையும் சாப்பிட்டு உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
“ ‘நாட்டில் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் பயமில்லாமல் படுத்திருப்பீர்கள். உங்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நாட்டிலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்திவிடுவேன். உங்கள் நாட்டை வாள் கடந்துவராது. நீங்கள் உங்கள் பகைவர்களைப் பின்தொடர்ந்து துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன்பாக வாளால் வெட்டுண்டு விழுவார்கள். உங்களில் ஐந்துபேர், நூறுபேரைத் துரத்துவீர்கள். நூறுபேர், பத்தாயிரம்பேரைத் துரத்துவீர்கள். இவ்விதம் உங்கள் பகைவர்கள் வாளினால் உங்கள்முன் விழுவார்கள்.
“ ‘நான் உங்களைத் தயவுடன் பார்த்து, உங்களை வளம்பெறச்செய்து பலுகிப் பெருகப்பண்ணுவேன். நான் உங்களோடு பண்ணின உடன்படிக்கையைக் காத்துக்கொள்வேன். நீங்கள் இன்னும் கடந்த வருட விளைச்சலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே புதிய விளைச்சலுக்கு இடம் ஒதுக்கும்படியாக பழையதை அகற்றவேண்டியதாயிருக்கும். நான் என் வசிப்பிடத்தை உங்கள் மத்தியில் வைப்பேன். உங்களைப் புறக்கணிக்கமாட்டேன். நான் உங்கள் மத்தியில் நடந்து, உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்களும் என் மக்களாயிருப்பீர்கள். இனிமேலும் நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உங்கள் நுகத்தின் தடிகளை முறித்து உங்களைத் தலைநிமிர்ந்து நடக்கும்படிச் செய்தேன்.
கீழ்ப்படியாமைக்கான தண்டனை
“ ‘ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்த எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ளாமலும், என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் சட்டங்களை வெறுத்து, என் கட்டளைகள் எல்லாவற்றையும் செய்யத்தவறி, என் உடன்படிக்கையை மீறுவீர்களானால், அப்பொழுது நான் உங்களுக்குச் செய்வதாவது: உங்கள்மேல் திடீர் பயங்கரத்தையும் அழிக்கும் வியாதிகளையும் கொண்டுவருவேன். உங்கள் கண் பார்வையை அற்றுப்போகச்செய்து, உங்கள் உயிரைக் குடிக்கும் காய்ச்சலையும் கொண்டுவருவேன். நீங்கள் தானியத்தை வீணாகவே விதைப்பீர்கள். ஏனெனில், உங்கள் பகைவர்களே அதைச் சாப்பிடுவார்கள். நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். உங்களை வெறுக்கிறவர்கள் உங்களை ஆளுவார்கள். ஒருவரும் உங்களைத் துரத்தாமலே நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
“ ‘இவைகளெல்லாம் நடந்த பின்பும் நீங்கள் எனக்குச் செவிகொடாமற்போனால், நான் உங்களை உங்கள் பாவத்தின் நிமித்தம் ஏழுமடங்கு அதிகமாகத் தண்டிப்பேன். உங்கள் பிடிவாதமான பெருமையை உடைப்பேன். உங்கள் மேலிருக்கும் வானத்தை இரும்பைப்போலவும், கீழிருக்கும் நிலத்தை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் வீணாகப் போகும். ஏனெனில், உங்கள் மண், விளைச்சலைக் கொடுக்காது. உங்கள் நாட்டின் மரங்கள் பழங்களைக் கொடுக்காது.
“ ‘நீங்கள் என்னுடன் பகைமை பாராட்டி, தொடர்ந்து எனக்குச் செவிகொடுக்க மறுத்தால், உங்கள் பாவத்திற்குத்தக்கதாக உங்கள் வாதைகளை ஏழுமடங்காக அதிகரிப்பேன். காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன். அவை உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து கொள்ளையிட்டு, உங்கள் மந்தைகளை அழிக்கும். அவை உங்கள் எண்ணிக்கையை வெகுவாய்க் குறைக்கும். அப்பொழுது உங்கள் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும்.
“ ‘இப்படியிருக்க, நீங்கள் என் கண்டிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், நானும் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக உங்களை ஏழுமடங்காகத் துன்புறுத்துவேன். என்னுடைய உடன்படிக்கையை நீங்கள் மீறினதினால் உங்களைப் பழிவாங்குவதற்காக வாளை உங்கள்மேல் வரப்பண்ணுவேன். நீங்கள் உங்கள் பட்டணத்திற்குள் பின்வாங்கும்போது உங்களுக்குள் கொள்ளைநோயை அனுப்புவேன். நீங்கள் உங்கள் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவை அகற்றிப்போடுவேன். அப்பொழுது பத்துப் பெண்கள் உங்களுக்கான அப்பத்தை ஒரே அடுப்பிலேயே சுடக்கூடியதாய் இருக்கும். அவர்கள் அப்பத்தை நிறைப்படி பங்கிட்டுக் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிடுவீர்கள். ஆனால் திருப்தியடையமாட்டீர்கள்.
“ ‘இது இப்படியிருந்தும், நீங்கள் இன்னும் எனக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால், அப்பொழுது நானும் என் கோபத்தில் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக ஏழுமடங்கு நானே உங்களைத் தண்டிப்பேன். நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள். உங்கள் மேடைகளை நான் அழித்து, உங்கள் தூபபீடங்களை இடித்து, உங்கள் இறந்த உடல்களை அச்சிலைகளின் உயிரற்ற உருவங்களின்மேல் வைப்பேன். உங்களை நான் அருவருப்பேன். உங்கள் பட்டணங்களை இடிபாடுகளாக்குவேன். உங்கள் பரிசுத்த இடங்களைப் பாழாக்கிப்போடுவேன். உங்கள் காணிக்கைகளின் மகிழ்ச்சியூட்டும் நறுமணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் நாட்டை பாழாக்கிப்போடுவேன். அப்பொழுது அங்கு வாழும் உங்கள் பகைவர்கள் திகைப்படைவார்கள். நாடுகளுக்குள் உங்களை சிதறப்பண்ணி, என் வாளை உருவி உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவேன். உங்கள் நாடு பாழாக்கப்படும். பட்டணங்களும் இடிபாடுகளாய்க் கிடக்கும். நீங்கள் உங்கள் பகைவருடைய நாட்டில் இருக்கையில், நாடு பாழாய்க்கிடக்கும். காலமெல்லாம் அது தன் ஓய்வு வருடங்களை அனுபவிக்கும். அப்பொழுது நாடு ஓய்ந்திருந்து, தனது ஓய்வுநாட்களைக் கொண்டாடும். நாடு பாழாய்க்கிடக்கும் காலமெல்லாம் முன்பு நீங்கள் அதில் வாழ்ந்தபோது, நாடு பெற்றுக்கொள்ளாத ஓய்வு அது இப்பொழுது பெற்றுக்கொள்ளும்.
“ ‘உங்களில் மீதமிருப்போரைக் குறித்தோவெனில், அவர்களுடைய பகைவர்களின் நாடுகளில், அவர்களுடைய இருதயங்களைப் பயம் நிறைந்ததாக்குவேன். அப்பொழுது காற்றினால் அடிக்கப்படும் ஒரு இலையின் சத்தங்கூட அவர்களைப் பயந்தோடப்பண்ணும். அவர்கள் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்கள்போல் ஓடுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதபோதும் அவர்கள் விழுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்களைப்போல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். இப்படியாக உங்களுக்கு உங்கள் பகைவர்களை எதிர்த்துநிற்க முடியாதிருக்கும். நீங்கள் நாடுகளுக்குள் அழிந்துபோவீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கும். உங்களில் மீதமுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்காகவும், தங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காகவும் தங்கள் பகைவர்களின் நாட்டில் உருக்குலைந்து போவார்கள்.
“ ‘எனவே அவர்கள் அவர்களுடைய பாவத்தையும், தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அவர்களின் எனக்கெதிரான துரோகங்களையும், என்னுடனிருந்த பகைமையையும் அறிக்கையிடுவார்கள், கடைசியாக நான் என் கோபத்தினால் அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளுக்குக் கொண்டுவரும்போது, அவர்களின் விருத்தசேதனம் செய்யப்படாத இருதயங்கள் தாழ்த்தப்பட்டு, அவர்களின் பாவங்களுக்கு அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். அப்பொழுது நான் யாக்கோபுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், நினைவுகூருவேன். நாட்டையும் நான் நினைவுகூருவேன். நாடு அவர்களால் கைவிடப்பட்டு, அவர்கள் யாரும் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்போது அது தன் ஓய்வை கொண்டாடும். ஆனால் அவர்கள் என்னுடைய சட்டங்களைப் புறக்கணித்து, என் கட்டளைகளை வெறுத்தால், தங்கள் பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். இப்படியெல்லாமிருந்தும், தங்கள் பகைவர்களின் நாட்டில் அவர்கள் வாழும்போது, அவர்களுடனான என் உடன்படிக்கையை அவர்கள் உடைத்தாலும், நான் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கவோ, அவர்களை முற்றிலும் அழிக்கும்படி வெறுக்கவோமாட்டேன். ஏனெனில், அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே. நான் அவர்களுக்கு இறைவனாயிருக்கும்படி, நாடுகளுக்கு முன்பாக எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த அவர்களின் முன்னோர்களோடு, நான் பண்ணின உடன்படிக்கையை, அவர்களுக்காக நினைவுகூருவேன். நானே யெகோவா’ என்றார்.”
சீனாய் மலையில் யெகோவா தமக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் மோசேயின் மூலம் ஏற்படுத்திய விதிமுறைகளும், சட்டங்களும், ஒழுங்குவிதிகளும் இவையே.
யெகோவாவுக்குரியது மீட்கப்படுதல்
மீண்டும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒருவன் ஆட்களுக்குரிய சரியான மதிப்பைச் செலுத்துவதின்மூலம், அவர்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதற்காக, ஒரு விசேஷ நேர்த்திக்கடனை செய்தால், கொடுக்கவேண்டிய மதிப்பாவது: இருபது வயதிற்கும் அறுபது வயதிற்கும் இடைப்பட்ட, ஆணுக்குரிய மதிப்பு பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும். அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும். ஐந்து வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப்பட்ட ஒரு நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு இருபது சேக்கலும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கலும் ஆகும். ஒரு மாதத்திற்கும், ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட ஆண் பிள்ளைக்குரிய மதிப்பு ஐந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண் பிள்ளைக்குரிய மதிப்பு மூன்று சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும். அறுபது வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு பதினைந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும். நேர்த்திக்கடனை செய்கிறவன் குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தமுடியாத அளவு ஏழையாயிருந்தால், அவன் அந்த நபரை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். நேர்த்திக்கடனைச் செய்கிற மனிதனின் தகுதிக்கேற்ப அவனுடைய மதிப்பை ஆசாரியன் நிர்ணயிப்பான்.
“ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது. அவன் அதை மாற்றி எடுக்கக்கூடாது. கெட்டவைக்காக நல்லதையோ, நல்லவைக்காக கெட்டதையோ பதிலீடு செய்யக்கூடாது. ஒரு மிருகத்திற்காக வேறொரு மிருகத்தை பதிலீடு செய்தால், அதுவும் பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமாகின்றன. ஆனாலும், யெகோவாவுக்குக் காணிக்கையாக நேர்த்திக்கடன் செய்யப்பட்ட மிருகம் ஏற்றுக்கொள்ளத் தகாததானால், சம்பிரதாயப்படி அசுத்தமான அது, அவனால் ஆசாரியன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படவேண்டும். ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும். அதன் உரிமையாளன் அந்த மிருகத்தை மீட்டுக்கொள்ள விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
“ ‘ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணித்தால், அது நல்லதோ, கெட்டதோ என அதன் தரத்தை ஆசாரியன் மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும். தன் வீட்டை அர்ப்பணிக்கிற மனிதன் அதை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வீடு திரும்பவும் அவனுக்குரியதாகும்.
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால், அதற்குத் தேவையான விதைத் தானியத்தின் அளவுக்கேற்றபடி அதன் மதிப்பைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு ஓமர்27:16 அதாவது, ஒரு ஓமர் என்பது சுமார் 135 கிலோகிராம் அளவு வாற்கோதுமை விதைக்கு ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசுகள்27:16 அதாவது, சுமார் 600 கிராம் வெள்ளி என மதிக்கப்பட வேண்டும். அவன் தனது வயலை யூபிலி வருடத்தில் அர்ப்பணிப்பதானால், தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அப்படியே இருக்கும். ஆனால் அவன் தன் வயலை யூபிலி வருடத்திற்குப்பின் அர்ப்பணிப்பதானால், அடுத்த யூபிலி வருடம்வரை மீதமுள்ள வருடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசாரியன் அதன் மதிப்பைத் தீர்மானிக்கப்பட்ட மதிப்பிலிருந்து குறைக்கவேண்டும். அந்த வயலை அர்ப்பணிக்கிறவன் அதை மீட்க விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வயல் திரும்பவும் அவனுக்குரியதாகும். ஆனாலும் அவன் அந்த வயலை மீட்டுக்கொள்ளாவிட்டால் அல்லது வேறொருவனுக்கு விற்றால், அந்த வயலை ஒருபோதும் மீட்கமுடியாது. யூபிலி, வருடத்தில் அந்த வயல் திருப்பிக் கொடுக்கப்படும்பொழுது, யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வயலைப்போல அது பரிசுத்தமாகும். அது ஆசாரியர்களின் சொத்தாகும்.
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் பங்கு அல்லாத வயலை வாங்கி, அதை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால், ஆசாரியன் அதன் மதிப்பை யூபிலி வருடம் வரைக்கும் தீர்மானிப்பான். அந்த மனிதன் அந்த நாளிலே அதன் மதிப்பை யெகோவாவுக்கு பரிசுத்தமானதாகச் செலுத்தவேண்டும். அந்த வயல் யாருக்குச் சொந்தமாய் இருந்து, யாரிடத்தில் வாங்கப்பட்டதோ அது யூபிலி வருடத்தில் அவனுக்கே திரும்பவும் சேரும். எல்லா மதிப்பும் பரிசுத்த இடத்தின் சேக்கலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
“ ‘தலையீற்று ஏற்கெனவே யெகோவாவுக்கு சொந்தமாய் இருக்கிறது. ஆகையால் ஒருவனும் ஒரு மிருகத்தின் தலையீற்றை அர்ப்பணிக்கக் கூடாது. அது மாடானாலும் சரி, செம்மறியாடானாலும் சரி, அது யெகோவாவுக்கே உரியது. அது அசுத்த மிருகங்களில் ஒன்றானால், அதற்காக மதிப்பிடப்பட்ட மதிப்பையும், அதன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்து, அவன் அதைத் திரும்ப வாங்கலாம். அவன் மீட்காவிட்டால் அதற்காக தீர்மானித்த மதிப்புக்கு அது விற்கப்படவேண்டும்.
“ ‘மனிதனானாலும், மிருகமானாலும், குடும்ப நிலமானாலும் ஒரு மனிதனுக்கு உரிமையாயிருப்பது அர்ப்பணிக்கப்பட்டால், அது விற்கப்படவோ, மீட்கப்படவோ கூடாது. அவை ஒவ்வொன்றும் யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.
“ ‘அழிவுக்காக நியமிக்கப்பட்ட எவனும் மீட்கப்படக்கூடாது. அவன் கொல்லப்படவேண்டும்.
“ ‘மண்ணின் தானியமும், மரங்களின் பழங்களுமான நிலத்தின் எல்லா பலனிலும் பத்தில் ஒரு பங்கு யெகோவாவுக்குச் சொந்தமானது. இது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. யாராவது தனது பத்தில் ஒரு பங்கை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக்கொடுத்தே அதை மீட்கவேண்டும். மேய்ப்பனின் கோலின்கீழ் கடந்துபோகிற ஒவ்வொரு பத்தாவது மிருகமும், மாட்டு மந்தையிலிருந்தும், ஆட்டு மந்தையிலிருந்தும் எடுக்கப்படும் முழுமையான பத்தில் ஒரு பங்காக யெகோவாவுக்கு பரிசுத்தமாகும். அவன் கெட்டதிலிருந்து நல்லதைத் தெரிந்தெடுக்கவோ அல்லது பதிலீடு எதையும் செய்யவோ கூடாது. அப்படி அவன் பதிலீடு செய்தால், அந்த மிருகமும், பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமானதாகும். அவற்றை மீட்கமுடியாது’ ” என்றார்.
யெகோவா இஸ்ரயேலருக்காக, சீனாய் மலையில் மோசேக்குக் கொடுத்த கட்டளைகள் இவையே.