- Biblica® Open Indian Tamil Contemporary Version
யோசுவா
யோசுவா
யோசுவா
யோசு.
யோசுவா
யோசுவாவின் பணி
யெகோவாவின் ஊழியன் மோசே இறந்தபின், மோசேயின் உதவியாளனான நூனின் மகனாகிய யோசுவாவிடம் யெகோவா கூறியதாவது: “என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துவிட்டான். நீயும் இந்த மக்களும் எழுந்து, நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்க இருக்கும் நாட்டிற்குள் போகும்படி, இப்பொழுதே யோர்தான் நதியைக் கடக்க ஆயத்தமாகுங்கள். மோசேக்கு நான் வாக்களித்தபடியே நீங்கள் காலடிவைக்கும் இடத்தையெல்லாம், நான் உங்களுக்குக் கொடுப்பேன். பாலைவனத்திலிருந்து, லெபனோன் வரைக்கும், யூப்ரட்டீஸ் நதியிலிருந்து, பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியருடைய நாடு முழுவதும் மேற்கேயுள்ள மத்தியத் தரைக்கடல் வரைக்கும் உங்களுக்குரிய பிரதேசத்தின் நிலப்பகுதி பரந்திருக்கும். உன் வாழ்நாளெல்லாம் உன்னை எதிர்த்து வெற்றிபெற எவனாலும் முடியாதிருக்கும். நான் மோசேயுடன் இருந்ததுபோல, உன்னுடனும் இருப்பேன்; நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலகவுமாட்டேன்; உன்னைக் கைவிடவுமாட்டேன். நீ பலங்கொண்டு தைரியமாய் இரு; ஏனெனில் நான் இந்த மக்களின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்ட நாட்டை அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி, நீ அவர்களை வழிநடத்துவாய்.
“பலங்கொண்டு மிகத்தைரியமாயிரு. என் ஊழியன் மோசே உனக்கு அளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கவனமாயிரு; அவற்றைவிட்டு வலதுபுறமோ இடதுபுறமோ நீ விலகாதே; அப்பொழுது நீ செல்லுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய். இந்த சட்டத்தின் புத்தகத்தை1:8 இதன் உபயோகத்தை பொதுவழிபாட்டிலும் பிரகடனம் செய்வதிலும் முக்கியத்துவப்படுத்துதல். உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.”
எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, “நீங்கள் முகாமின் நடுவே சென்று மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவெனில், ‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; ஏனெனில் இன்றிலிருந்து மூன்றுநாட்களுக்குள்ளே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற நாட்டிற்குப்போய், அதை உங்கள் உரிமையாக்கிக்கொள்ள யோர்தான் நதியைக் கடப்பீர்கள்’ ” என்றான்.
மேலும் யோசுவா ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கூறியதாவது: “யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுகூருங்கள். ‘யெகோவாவாகிய உங்கள் இறைவன் இந்த நாட்டை உங்களுக்கு வழங்கி, உங்களுக்கு இளைப்பாறுதல் கொடுத்தாரே.’ மோசே உங்களுக்குக் கொடுத்த யோர்தானின் கிழக்கேயுள்ள நிலப்பகுதியில் உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், ஆடுமாடுகளும் தங்கியிருக்கலாம். ஆனால் உங்களிலுள்ள யுத்தம் செய்யும் மனிதர் முழு ஆயுதங்களையும் தரித்தவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்னே யோர்தானைக் கடந்து செல்லவேண்டும். இவ்வாறு நீங்கள் உங்கள் சகோதரருக்கு உதவிசெய்ய வேண்டும். யெகோவா உங்களுக்கு இளைப்பாறுதல் அளித்ததுபோல, அவர்களுக்கும் இளைப்பாறுதல் அளிக்கும்வரையும் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நிலப்பகுதியை அவர்களும் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்வரையும் நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். அதன்பின் நீங்கள் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்குக் கிழக்கே சூரியன் உதிக்கும் திசையில் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் அங்கே குடியிருக்கலாம்” என்றான்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம் கூறியதாவது, “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம். நீர் அனுப்பும் இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வோம். மோசேக்கு நாங்கள் முழுவதும் கீழ்ப்படிந்ததுபோல, உமக்கும் கீழ்ப்படிவோம். உமது இறைவனாகிய யெகோவா மோசேயுடன் இருந்ததுபோலவே, உம்மோடும் இருப்பாராக. உமது வார்த்தைக்கு எதிராகக் கலகம்செய்து, நீர் கட்டளையிட்டுச் சொல்கிற எந்த வார்த்தைக்காவது கீழ்ப்படியாதிருப்பவன் எவனும் கொல்லப்படுவான். நீர் பலங்கொண்டு தைரியமாய் மட்டும் இரும்!” என்றார்கள்.
ஒற்றர்களும் ராகாபும்
அப்பொழுது நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு ஒற்றர்களை இரகசியமாக அனுப்பினான். அவன் அவர்களிடம், “நீங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போங்கள். முக்கியமாக எரிகோ நகரைப் பாருங்கள்” என்று கூறினான். எனவே அவர்கள் எரிகோ நகருக்குச் சென்று ராகாப் என்னும் வேசியின் வீட்டில் தங்கினார்கள்.
அவ்வேளையில், “நாட்டை உளவுபார்க்க இஸ்ரயேலரில் சிலர் இன்றிரவு இங்கே வந்தார்கள்” என்ற செய்தி எரிகோ அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே எரிகோ அரசன் ராகாப்புக்கு, “உன்னிடம் வந்து, உன் வீட்டில் தங்கியிருக்கிற மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் இந்த நாடு முழுவதையும் உளவுபார்க்க வந்துள்ளார்கள்” என்று செய்தி அனுப்பினான்.
ஆனால் அந்தப் பெண்ணோ அந்த இரு மனிதரையும் கூட்டிக்கொண்டுபோய் மறைத்துவைத்தாள். அவள், “ஆம், அந்த ஆட்கள் என்னிடம் வந்தார்கள்; ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தவர்களென்று எனக்குத் தெரியாது. நகர வாசல்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டாகும் வேளையில் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டார்கள். எந்த வழியாகப் போனார்களோ எனக்குத் தெரியாது. இப்பொழுதே விரைவாய்ப் பின்தொடர்ந்து போனால், ஒருவேளை நீங்கள் அவர்களைப் பிடிக்கக்கூடும்” என்று கூறினாள். ஆனால் அவள் அவ்விரு ஒற்றர்களையும் வீட்டின் கூரையில் ஏற்றி, அங்கே போட்டிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்திருந்தாள். உடனே அந்த மனிதர் யோர்தான் நதியின் துறைகளுக்குச் செல்லும் வீதி வழியே ஒற்றர்களைத் தேடிக்கொண்டு சென்றார்கள். தேடிச்சென்றவர்கள் வெளியே சென்றதும் நகரின் வாசல்கதவு மூடப்பட்டது.
ஒற்றர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன், ராகாப் தன் வீட்டின் கூரைமேல் போய், அவர்களிடம் சொன்னதாவது: “இந்த நாட்டை யெகோவா உங்களுக்குக் கொடுத்துவிட்டார் என்று எனக்குத் தெரியும்; நாங்கள் அனைவரும் உங்களுக்கு பயப்படுகிறோம், எனவே இங்குள்ள அனைவரும் உங்கள்முன் நடுங்குகிறார்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யெகோவா உங்களுக்காக எவ்வாறு செங்கடலை வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டோம்; அத்துடன் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்த எமோரியர்களை நீங்கள் முழுவதும் அழித்தபோது அவர்களின் இரு அரசர்களான, சீகோனுக்கும், ஓகுக்கும் நீங்கள் செய்தவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் உங்கள் நிமித்தம் நாங்கள் அனைவரும் தைரியத்தை இழந்து, உள்ளம் சோர்ந்துபோனோம்; ஏனெனில் இறைவனாகிய உங்கள் யெகோவாவே மேலே வானத்திற்கும் கீழே பூமிக்கும் இறைவனாயிருக்கிறார்.
“எனவே இப்பொழுது நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதற்காக நீங்களும் என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவீர்களென யெகோவாவின்மேல் ஆணையிட்டு, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுங்கள். என் தாய் தகப்பனையும், சகோதர சகோதரிகளையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் நீங்கள் மரணத்தினின்று காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு வாக்குறுதி கொடுங்கள்” என்றாள்.
அதற்கு அந்த ஒற்றர்கள், “எங்கள் உயிர்களை உங்கள் உயிர்களுக்குப் பணையமாக வைக்கிறோம்! நாங்கள் செய்வதை நீ சொல்லாதிருந்தால், யெகோவா இந்த நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உன்னை தயவுடன் நடத்தி உண்மையாய் இருப்போம்” என அவளுக்கு உறுதியளித்தார்கள்.
ராகாப் வாழ்ந்த வீடு நகர மதிலின் ஒரு பகுதியிலிருந்தது, எனவே அவள் அவர்களை ஒரு கயிற்றினால் தன் வீட்டு ஜன்னல் வழியாக நகரத்திற்கு வெளியே இறக்கிவிட்டாள். கீழே இறக்கிவிடுமுன் அவள் அவர்களிடம், “உங்களைத் தேடுபவர்கள் உங்களைக் கண்டுபிடிக்காதபடி மலைகளுக்குப் போங்கள். அவர்கள் திரும்பி வரும்வரை மூன்று நாட்களுக்கு நீங்கள் மறைந்திருங்கள்; பின்பு உங்கள் வழியே போங்கள்” என்று கூறியிருந்தாள்.
அந்த மனிதர் அவளிடம், “எங்களை நீ ஆணையிடப்பண்ணிய இந்த வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்படுவதாயின், நாங்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது, நீ எங்களைக் கீழே இறக்கிய ஜன்னலில் இந்த சிவப்புக்கயிறு கட்டப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் உன் தாய் தகப்பனையும், சகோதரர்களையும் அவர்களோடு உன் குடும்பத்தாரையும் கூட்டிவந்து, உன் வீட்டினுள் வைத்திருக்கவேண்டும். எவராவது உன் வீட்டைவிட்டு வெளியேறி, வீதிக்கு வந்தால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலைமேல் இருக்கும். நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகள் அல்ல. ஆனால் உன்னுடன் வீட்டில் இருக்கும் எவராயினும் தாக்கப்பட்டால் அவர்களுடைய இரத்தப்பழி எங்கள்மேல் இருக்கும். ஆயினும் நாங்கள் செய்வதை நீ எவரிடமாவது சொன்னால், நீ எங்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்கமாட்டோம்” எனக் கூறினார்கள்.
அதற்கு அவள், “நான் ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்” எனப் பதிலளித்தாள்.
அப்படியே அவள் அவர்களை அனுப்பிவைக்க, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவளும் சிவப்புக்கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தாள்.
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மலைகளுக்குப் போய் மூன்று நாட்கள் அங்கே தங்கினார்கள். அவர்களைத் தேடுகிறவர்கள் பாதைகளிலெல்லாம் தேடி அவர்களைக் காணாமல் திரும்பிப் போகும்வரை அங்கே இருந்தார்கள். அதன்பின்பு அவ்விரு மனிதர்களும் திரும்பினார்கள். அவர்கள் குன்றிலிருந்து இறங்கி யோர்தான் நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். அவர்கள் யோசுவாவிடம், “யெகோவா நிச்சயமாக இந்த நாடு முழுவதையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அந்த மக்கள் எல்லோரும் பயத்தினால் சோர்ந்து போயிருக்கிறார்கள்” என்றார்கள்.
யோர்தான் நதியைக் கடந்துபோகுதல்
அதிகாலையில் யோசுவாவும், இஸ்ரயேலரும் சித்தீமிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தனர். அதைக் கடக்குமுன் அவர்கள் அங்கே முகாமிட்டார்கள். மூன்றுநாட்களின்பின் அதிகாரிகள் முகாமெங்கும் போய் மக்களிடம் உத்தரவிட்டு, “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியையும், லேவியர்களான ஆசாரியர்கள் அதைச் சுமந்து செல்வதையும் கண்டவுடன், நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு அதைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும். அப்பொழுது நீங்கள் எவ்வழியால் போகவேண்டும் என அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் முன்னொருபோதும் அவ்வழியாகப் போனதில்லை. உடன்படிக்கைப் பெட்டிக்கும் உங்களுக்கும் இடையில், ஏறக்குறைய இரண்டாயிரம் அடி3:4 அதாவது, சுமார் 1 கிலோமீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அதனருகே நீங்கள் போகவேண்டாம்” என்று சொன்னார்கள்.
பின்னர் யோசுவா, “நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்தி அர்ப்பணியுங்கள். ஏனெனில் நாளைக்கு யெகோவா உங்கள் மத்தியில் வியக்கத்தக்க செயல்களைச் செய்வார்” என்று மக்களுக்குச் சொன்னான்.
அதன்பின் யோசுவா ஆசாரியர்களிடம், “நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு மக்களுக்கு முன்னே கடந்துசெல்லுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு மக்களின் முன்னே சென்றார்கள்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இன்று நான் உன்னை இஸ்ரயேலரின் எல்லாருடைய பார்வையிலும் மேன்மைப்படுத்தத் தொடங்குவேன். இதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோலவே, உன்னுடனும் இருக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் நீ, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களிடம், ‘நீங்கள் யோர்தான் நதிக்கரை ஓரத்தை அடைந்தவுடன் நதிக்குள்போய் நில்லுங்கள்’ எனச் சொல்” என்றார்.
அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரிடம், “இங்கே வந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர்வாழும் இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை இவ்விதமாகவே நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர் நிச்சயமாகக் கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் உங்களுக்கு முன்பாக நாட்டைவிட்டு நிச்சயம் துரத்திவிடுவார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இதோ பாருங்கள். பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிறவரின் உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்பாக யோர்தானுக்குச் செல்லும். இப்பொழுது நீங்கள் இஸ்ரயேல் கோத்திரங்களிலிருந்து, கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுங்கள். பூமி முழுவதற்கும் கர்த்தராய் இருக்கிற யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் யோர்தான் நதியில் தம் பாதங்களை வைத்ததும், கீழ்நோக்கிப்பாயும் தண்ணீர், ஓடாமல் குவிந்துநிற்கும்” என்று சொன்னான்.
அப்படியே மக்கள் யோர்தானைக் கடப்பதற்காக முகாமைவிட்டு புறப்பட்டபோது, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் அவர்களுக்கு முன்பாகச் சென்றார்கள். வழக்கம்போல் அறுவடை காலத்தில், யோர்தான் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தானை அடைந்து அவர்கள் பாதங்கள் தண்ணீரில் பட்டதும், மேல் இருந்து பாய்ந்துவந்த நீர் ஓடாமல் நின்றது. அது வெகுதொலைவில், சரேத்தான் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஆதாம் என்னும் பட்டணத்தில் குவிந்துநின்றது. அதேவேளையில் கீழ்நோக்கி ஓடும் நீர் சவக்கடலுக்குள் வழிந்தோடிப்போயிற்று. இவ்வாறு இஸ்ரயேலர் எரிகோவுக்கு நேரே யோர்தானைக் கடந்து சென்றார்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தான் நடுவில் வறண்ட நிலத்தில் உறுதியாய்த் தரித்து நின்றனர். இவ்வாறு இஸ்ரயேலர் அனைவரும் வறண்டநிலத்தின் வழியாக நதியைக் கடந்து முடிக்கும்வரை, ஆசாரியர்கள் அங்கேயே நின்றார்கள்.
முழு இஸ்ரயேல் நாடும் யோர்தானைக் கடந்ததும் யெகோவா யோசுவாவிடம், “மக்களிலிருந்து கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்துகொள். நீ அவர்களிடம் யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்கள் நின்ற அதே இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து, அவற்றை உங்களுடன் சுமந்துகொண்டுபோய், நீங்கள் இன்றிரவு தங்கும் இடத்தில் வையுங்கள் என்று சொல்” என்றார்.
எனவே யோசுவா இஸ்ரயேலரிலிருந்து கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகத் தெரிந்துகொண்டு பன்னிரண்டு பேரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் யோர்தானின் நடுவே போங்கள். இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு வரவேண்டும். இந்தக் கற்கள் ஒரு அடையாளமாக உங்கள் மத்தியில் இருக்கும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ எனக் கேட்கும்போது, நீங்கள் அவர்களிடம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைப்பெட்டி யோர்தானைக் கடந்தபோது, யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டதன் நினைவுச்சின்னமாக இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றென்றைக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றான்.
யோசுவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா யோசுவாவிற்குச் சொன்னபடியே, இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பன்னிரண்டு கற்களை யோர்தான் நடுவிலிருந்து எடுத்தார்கள். அவற்றைச் சுமந்துகொண்டுபோய் முகாமிட்டிருந்த இடத்திலே வைத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த ஆசாரியர்கள் நின்ற இடமான யோர்தானின் நடுப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா ஒன்றாய் குவித்து நிறுத்திவைத்தான். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன.
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் யோர்தானின் நடுவில் நின்றுகொண்டிருந்தார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே, யெகோவாவினால் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் மக்கள் செய்து முடிக்கும்வரை அப்படியே நின்றார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யாவும் செய்யப்பட்டன. மக்கள் எல்லோரும் விரைவாக நதியைக் கடந்துபோனார்கள். இவ்வாறு அவர்கள் எல்லோரும் நதியைக் கடந்து சென்றவுடன், மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியுடன் மறுகரைக்கு வந்தனர். இஸ்ரயேலருக்கு முன்னே ரூபன், காத், மனாசே கோத்திரத்தின் அரைப் பகுதியினரான எல்லா மனிதரும் ஆயுதம் தரித்தவர்களாகக் கடந்து சென்றார்கள். இவ்வாறே மோசே இவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தான். அன்று யுத்த ஆயுதம் தரித்த ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர், யெகோவா முன்பாக யுத்தம் செய்வதற்காக எரிகோவின் சமவெளிக்குக் கடந்துசென்றனர்.
அந்நாளில் யெகோவா இஸ்ரயேலர் எல்லோருடைய பார்வையிலும் யோசுவாவை மேன்மைப்படுத்தினார்; மக்கள் மோசேயைக் கனம்பண்ணியதுபோல யோசுவாவையும் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் கனம்பண்ணினார்கள்.
யெகோவா யோசுவாவிடம், “உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களை யோர்தான் நதியைவிட்டு வெளியே வரும்படி கட்டளையிடு” என்றார்.
அவ்வாறே யோசுவா ஆசாரியர்களை யோர்தானை விட்டு வெளியே வாருங்கள் எனக் கட்டளையிட்டான்.
ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, ஆற்றிலிருந்து கரையேறி வெளியே வந்தார்கள். அவர்களுடைய பாதம் வறண்ட நிலத்தை மிதித்தவுடன் யோர்தானின் தண்ணீர் தங்களிடத்திற்குத் திரும்பி முன்போலவே பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
முதலாம் மாதம் பத்தாம் தேதியில் மக்கள் யோர்தானிலிருந்து, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில் முகாமிட்டார்கள். அவர்கள் யோர்தான் நதியிலிருந்து எடுத்துவந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலில் நிறுத்திவைத்தான். அவ்வேளையில் அவன் இஸ்ரயேல் மக்களிடம் கூறியதாவது, “எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் தங்கள் தந்தையரிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ என கேட்கும்போது, அவர்களிடம், ‘யோர்தானை இஸ்ரயேலர் வறண்டநிலத்தின் வழியாக கடந்தார்கள்.’ யோர்தான் நதியை நீங்கள் கடந்து முடிக்கும்வரை உங்கள் இறைவனாகிய யெகோவா அந்நதியின் தண்ணீரை வற்றச்செய்தார். நாங்கள் கடந்து முடியும்வரை செங்கடலை எங்களுக்கு முன்பாக வற்றச்செய்ததுபோலவே, யோர்தான் நதியையும் வற்றப்பண்ணினார். பூமியின் மக்கள் யாவரும் யெகோவாவினுடைய கரம் வல்லமையானது என அறியவும் எப்பொழுதும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பயந்துநடக்கவுமே அவர் இதைச் செய்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.
யோர்தானுக்கு மேற்கிலிருந்த எமோரிய அரசர்கள் எல்லோரும், கடற்கரையோரத்தில் குடியிருந்த கானானிய அரசர்கள் அனைவரும் இஸ்ரயேலர் யோர்தானைக் கடக்கும்வரை, யெகோவா அவர்கள்முன் அதை எவ்வாறு வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் மனச்சோர்வடைந்ததால் தொடர்ந்து இஸ்ரயேலரை எதிர்த்து நிற்கத் தைரியம் அற்றவர்களானார்கள்.
கில்காலில் விருத்தசேதனம்
அவ்வேளையில் யெகோவா யோசுவாவிடம், “கற்களினால் கூர்மையான கத்திகளைச் செய்து இஸ்ரயேலரைத் திரும்பவும் விருத்தசேதனம் செய்” என்றார். அப்பொழுது யோசுவா கற்களினால் கூர்மையான கத்திகளைச் செய்து கிபியத்கார் ஆர்லோத்து5:3 கிபியத்கார் ஆர்லோத்து என்பதன் பொருள் விருத்தசேதனத்தின் மலை என்று அர்த்தம். என்னும் இடத்தில் இஸ்ரயேலரை விருத்தசேதனம் செய்தான்.
அவன் இப்படிச் செய்ததற்கான காரணம்: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யுத்தம் செய்யும் வயதையடைந்த எல்லா ஆண்களும் வழியிலே பாலைவனத்தில் இறந்துவிட்டார்கள். எகிப்திலிருந்து வெளிவந்த ஆண்கள் எல்லோரும் விருத்தசேதனம் பெற்றிருந்தார்கள். ஆனால் எகிப்திலிருந்து பயணம் செய்தபோது பாலைவனத்தில் பிறந்தவர்கள் விருத்தசேதனம் பெறாதிருந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமையினால், வனாந்திரத்தில் நாற்பதுவருடம் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் எகிப்தைவிட்டு வெளியேறியபோது யுத்தம் செய்யும் வயதையடைந்தவர்கள் இறக்கும்வரை இப்படி அலைந்து திரிந்தார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தருவதாக அவர்கள் தந்தையருக்கு மனப்பூர்வமாய் வாக்களித்திருந்த பாலும் தேனும் வழிந்தோடும்5:6 செழிப்பான [யாத். 3:8]. நாட்டை அவர்கள் காணவேமாட்டார்கள் என யெகோவா ஆணையிட்டிருந்தார். எனவே யெகோவா அவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய மகன்களை எழுப்பினார். இவர்களே யோசுவாவினால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் வழியில் விருத்தசேதனம் செய்யப்படாததினால் இன்னும் விருத்தசேதனம் பெறப்படாதவர்களாய் இருந்தார்கள். இஸ்ரயேலரின் முழு நாடும் விருத்தசேதனம் பெற்றபின், அவர்கள் குணமடையும்வரை அவ்விடத்திலேயே முகாமில் தங்கியிருந்தார்கள்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “உங்களுக்கு இருந்த எகிப்தின் நிந்தையை இன்றே நீக்கிவிட்டேன்” என்றார். எனவே அந்த இடம் இன்றுவரை கில்கால்5:9 கில்கால் என்பது எபிரெயத்தில் நீக்குதல் என்று அர்த்தம். என அழைக்கப்படுகிறது.
இஸ்ரயேல் மக்கள் மாதத்தின் பதினான்காம் நாள் மாலையில், எரிகோவின் சமவெளியிலுள்ள கில்காலில் முகாமிட்டிருந்தபொழுது, பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். பஸ்காவுக்கு அடுத்தநாளான அந்த நாளிலே அவர்கள் அந்த நாட்டின் விளைச்சலில் சிலவற்றை உண்டார்கள். அவர்கள் புளிப்பில்லாத அப்பத்தையும், வறுத்த தானியத்தையும் சாப்பிட்டார்கள். அவர்கள் கானான்நாட்டின் உணவைச் சாப்பிட்ட மறுநாளே மன்னா நின்றுவிட்டது. அதன்பின் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா கிடைக்கவேயில்லை. ஆனால் அந்த வருடத்தில் அவர்கள் கானான்நாட்டின் விளைச்சலைச் சாப்பிட்டார்கள்.
யெகோவாவின் படைத்தளபதி
மேலும் யோசுவா எரிகோ பட்டணத்தைச் சமீபித்தபோது, தன் கையிலே உருவிய வாளுடன் நிற்கும் ஒரு மனிதனைக் கண்டான். யோசுவா அவனருகே சென்று, “நீ எங்களைச் சேர்ந்தவனா அல்லது எங்கள் பகைவரைச் சேர்ந்தவனா?” என்று கேட்டான்.
அதற்கு அந்த மனிதன், “நான் எவரையுமே சேர்ந்தவனல்ல. ஆனால் யெகோவாவின் படைத்தளபதியாக இப்பொழுது வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தான். யோசுவா, பயபக்தியாய் முகங்குப்புற தரையில் விழுந்து பணிந்து, “என் ஆண்டவர் உமது அடியவனுக்கு சொல்லும்செய்தி என்னவோ?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவாவின் படைத்தளபதி, “உன் பாதணிகளைக் கழற்றிவிடு! நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்றான். யோசுவா அவ்வாறே செய்தான்.
எரிகோ பட்டணம் இஸ்ரயேலர்கள் நிமித்தம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் ஒருவரும் பட்டணத்தைவிட்டு வெளியே போகவுமில்லை; உள்ளே வரவுமில்லை.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “இதோ, எரிகோ பட்டணத்தை அதன் அரசனோடும், போர்வீரர்களோடும் உன்னிடம் கையளித்துவிட்டேன். நீ ஆயுதம் தரித்த மனிதர்களோடு அணிவகுத்துப் பட்டணத்தைச்சுற்றி வா. இவ்வாறு ஆறுநாட்கள் செய். உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஏழு ஆசாரியர்கள் செம்மறியாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை எடுத்துக்கொண்டு செல்லும்படிசெய். ஏழாம்நாளோ நீங்கள் பட்டணத்தைச்சுற்றி ஏழுமுறை அணிவகுத்துச் செல்லுங்கள். அவ்வேளையில் ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்லட்டும். ஆசாரியர்கள் எக்காளங்களில் நீண்டதொனி எழுப்புவதைக் கேட்டவுடன் எல்லா மக்களையும் உரத்த சத்தம் எழுப்பச்சொல். அப்பொழுது பட்டணத்தின் சுற்றுமதில் இடிந்துவிழும். இஸ்ரயேல் மக்கள் பட்டணத்தினுள் செல்லட்டும். ஒவ்வொரு மனிதனும் தான்நின்ற இடத்திலிருந்து நேராக உள்ளே செல்லட்டும்” என்று கூறினார்.
அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, “யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்” எனச் சொன்னான். பின்பு மக்களிடம் அவன், “இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்” என உத்தரவிட்டான்.
யோசுவா மக்களிடம் பேசி முடிந்ததும், ஏழு எக்காளங்களைக் கொண்டுசென்ற ஏழு ஆசாரியர்கள், யெகோவாவுக்குமுன் எக்காளங்களை ஊதிக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களின் பின்னே யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி சென்றது. எக்காளம் ஊதுகின்ற ஆசாரியர்களின் முன் ஆயுதம் தாங்கிய காவலர் அணிவகுத்துச் சென்றனர். பின்னணியில் உள்ள காவலர் பெட்டிக்கு பின்னே சென்றனர். அவ்வேளையிலெல்லாம் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. யோசுவா மக்களிடம், “நான் உங்களைச் சத்தமிடச் சொல்லும் நாள்வரை நீங்கள் போர்முழக்கமோ, கூக்குரலோ எழுப்பவேண்டாம். ஒரு வார்த்தையும் பேசவும்வேண்டாம். நான் கட்டளையிட்டதும் கூக்குரல் எழுப்புங்கள்” என சொல்லியிருந்தான். யெகோவாவின் பெட்டியை ஒருமுறை பட்டணத்தைச் சுற்றிவரச் செய்தான். அதன்பின் மக்கள் முகாமிற்குத் திரும்பிவந்து அவ்விரவைக் கழித்தார்கள்.
யோசுவா மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தான். ஆசாரியர்கள் திரும்பவும் யெகோவாவின் பெட்டியைத் தூக்கினார்கள். ஏழு எக்காளங்களுடன் சென்ற ஏழு ஆசாரியரும் யெகோவாவின் பெட்டிக்கு முன்னே எக்காளங்களை ஊதிக்கொண்டு அணிவகுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கியவர்கள் அவர்களுக்கு முன்னே சென்றனர். பின்னணிக்காவலர் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றனர். அவ்வேளையில் எக்காளங்கள் தொனித்துக்கொண்டேயிருந்தன. இவ்வாறாக இரண்டாம் நாளும் அவர்கள் பட்டணத்தைச்சுற்றி ஒருமுறை அணிவகுத்துச் சென்றபின் முகாமுக்குத் திரும்பினார்கள். இவ்வாறு ஆறுநாட்கள் செய்தார்கள்.
ஏழாம்நாள் பொழுது விடியும் வேளையில், அவர்கள் எழுந்து முன்போலவே பட்டணத்தைச் சுற்றிவந்தனர். ஆனால் அன்றுமட்டும் அவர்கள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றினார்கள். இப்படியாக ஏழாம்முறை சுற்றிவருகையில் ஆசாரியர்கள் எக்காளத் தொனியை எழுப்பும்போது யோசுவா மக்களிடம், “ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்! ஏனெனில் இந்தப் பட்டணத்தை யெகோவா உங்களுக்குத் தந்துவிட்டார். ஆனாலும் இப்பட்டணமும் அதிலுள்ள யாவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியவையாகும். நீங்கள் ராகாப் என்னும் வேசியையும், அவளுடன் வீட்டிலிருப்பவர்களையும் மாத்திரம் தப்பவிட்டு விடுங்கள். ஏனெனில் நாம் அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். ஆனாலும் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்ட எதையும் நீங்கள் தொடாதிருங்கள். அப்படி எதையாவது எடுப்பதினால் உங்கள்மீது அழிவைக் கொண்டுவராதீர்கள். இல்லையெனில் இஸ்ரயேலின் முகாமை அழிவுக்குட்படுத்தி அதன்மேல் துன்பத்தைக்கொண்டுவருவீர்கள். எல்லா வெள்ளியும், தங்கமும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களும் யெகோவாவுக்கென ஒதுக்கப்பட்டவை. அவை யெகோவாவின் களஞ்சியத்தில் சேர்க்கப்படவேண்டும்” எனக் கட்டளையிட்டான்.
எக்காளங்கள் தொனித்தபோது மக்கள் சத்தமிட்டனர், எக்காளத் தொனியுடன் மக்கள் பெரும் சத்தமிடும்போது, பட்டணத்தின் சுற்றுமதில்கள் இடிந்து விழுந்தன. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்கு நேராக உள்ளே ஏறி பட்டணத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் எரிகோ பட்டணத்தை யெகோவாவுக்கென அழிக்கப்படுவதற்காக ஒப்புக்கொடுத்தார்கள். அப்பட்டணத்தில் வாழ்ந்த உயிருள்ள அனைத்தையும் வாளால் வெட்டி அழித்தார்கள். ஆண்கள், பெண்கள், பெரியோர், சிறியோர் மற்றும் கால்நடைகள், செம்மறியாடுகள், கழுதைகள் உட்பட யாவும் அழிக்கப்பட்டன.
அந்த நாட்டை வேவுபார்த்த அந்த இருவரிடமும் யோசுவா, “நீங்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டுக்குள் போய் நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அவளையும், அவளுக்குரியவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே ஒற்றர்களான அந்த வாலிபர்கள் ராகாபின் வீட்டினுள் சென்று, அவளையும் அவளது தாய் தகப்பனையும், சகோதரரையும் அவளுக்குரிய அனைவரையும் வெளியே கொண்டுவந்தார்கள். அவளது முழு குடும்பத்தாரையும் அவர்கள் வெளியே கொண்டுவந்து இஸ்ரயேலரின் முகாமுக்கு வெளியே ஒரு இடத்தில் தங்கவைத்தார்கள்.
பின்னர் இஸ்ரயேலர்கள் பட்டணம் முழுவதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எரித்துப்போட்டார்கள். ஆனாலும் வெள்ளியையும், தங்கத்தையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பொருட்களையும் எடுத்து யெகோவாவின் வீட்டிலுள்ள களஞ்சியத்தில் வைத்தார்கள். யோசுவா வேசி ராகாபுடன் அவளது குடும்பத்தையும், அவளுக்குரிய அனைவரையும் தப்பவிட்டான். ஏனெனில் யோசுவா எரிகோவுக்கு அனுப்பிய ஒற்றர்களை அவள் ஒளித்துவைத்திருந்தாள். அவள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்கின்றாள்.
அவ்வேளையில் யோசுவா ஆணையிட்டுச் சொன்னதாவது: “இந்த எரிகோ பட்டணத்தை மீண்டும் கட்டுவதற்குப் பொறுப்பெடுப்பவன் யெகோவாவுக்கு முன்பாக சாபத்திற்குள்ளாவான்.
“அவன் தன் முதற்பேறான மகனை இழந்தே,
அதன் அஸ்திபாரத்தை இடுவான்.
தன் கடைசி மகனை இழந்தே,
அதன் வாசலை அமைப்பான்.”
யெகோவா யோசுவாவுடன் இருந்தார்; அவன் புகழ் நாடு முழுவதும் பரவிற்று.
ஆகானின் பாவம்
ஆயினும் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் இஸ்ரயேலர் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். கர்மீயின் மகனாகிய ஆகான் அவைகளில் சிலவற்றை எடுத்ததன் மூலம் யெகோவாவின் கட்டளை மீறப்பட்டது. கர்மீ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகனாகிய சிம்ரியின் மகன். அதனால் இஸ்ரயேலருக்கு எதிராய் யெகோவாவின் கோபம் மூண்டது.
அப்பொழுது யோசுவா சில மனிதரை அப்பிரதேசத்தை உளவுபாருங்கள் என்று எரிகோவிலிருந்து ஆயிபட்டணத்திற்கு அனுப்பினான். ஆயி, பட்டணம் பெத்தேலுக்குக் கிழக்கே பெத் ஆவெனுக்கு அருகேயுள்ளது. அப்படியே அவர்கள் போய் ஆயிபட்டணத்தை உளவுபார்த்தார்கள்.
அவர்கள் யோசுவாவிடம் திரும்பிவந்து, “ஆயிபட்டணத்தில் ஒருசில மனிதர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் எல்லா மக்களும் அதற்கெதிராகப் போகவேண்டிய அவசியமில்லை. எல்லா மக்களையும் கஷ்டப்படுத்தாமல் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மனிதரை அதைக் கைப்பற்றுவதற்காக அனுப்பும்” என்றார்கள். அப்படியே ஏறக்குறைய மூவாயிரம்பேர் போனார்கள்; ஆனால் ஆயிபட்டணத்தின் மனிதர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆயிபட்டணத்தார், சுமார் முப்பத்தாறுபேரைக் கொன்றுபோட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலரை ஆயி பட்டண வாசலிலிருந்து கல் குவாரிகள்வரை7:5 குவாரிகள்வரை என்பது எபிரெயத்தில் செபாரீம் என்றுள்ளது. துரத்தி, மலைச்சரிவுகளில் அவர்களைத் தாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலரின் இருதயங்கள் சோர்வுற்று தண்ணீரைப்போலாயிற்று.
அப்பொழுது யோசுவா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து, அன்று மாலைவரை அங்கேயே கிடந்தான். அவ்வாறே இஸ்ரயேல் சபைத்தலைவர்களும் செய்து தங்கள் தலைகள்மேல் புழுதியைக் கொட்டிக்கொண்டு கிடந்தார்கள். அப்பொழுது யோசுவா, “ஆண்டவராகிய யெகோவாவே, இந்த மக்களை ஏன் யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கு கொண்டுவந்தீர்? எங்களை எமோரியர் கையில் ஒப்புக்கொடுத்து அழிப்பதற்காகவோ? நாங்கள் யோர்தானின் மறுகரையில் குடியிருப்பதில் திருப்தியடைந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே! யெகோவாவே, இப்பொழுது இஸ்ரயேலர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே! நான் இதற்கு என்ன சொல்வேன்? கானானியரும் அந்த நாட்டின் மற்ற மக்களும் இதைக் கேள்விப்படுவார்கள். அவர்கள் எங்களைச் சுற்றிவளைத்துப் பூமியிலிருந்து எங்கள் பெயரை முழுவதும் அழித்துவிடுவார்களே. அப்பொழுது உம்முடைய மகத்தான பெயருக்காக நீர் என்ன செய்வீர்?” என்றான்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “எழுந்திரு; முகங்குப்புற விழுந்துகிடந்து என்ன செய்கிறாய்? இஸ்ரயேலர் பாவம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கைக்கொள்வதற்காக நான் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் களவுசெய்தும், பொய்சொல்லியும் இருக்கிறார்கள். அவற்றைத் தங்கள் சொந்த உடைமைகளோடு சேர்த்துக்கொண்டார்கள். அதனால்தான் இஸ்ரயேலர்கள் தங்களுடைய பகைவர்கள் முன்னால் எதிர்த்துநிற்க முடியாமல், அவர்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் அழிவுக்குத் தாங்களே இடங்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் அழிவுக்கு நியமிக்கப்பட்ட எல்லாவற்றையும் அழித்தாலொழிய நான் இனிமேல் உங்களோடு இருக்கமாட்டேன்.
“போ, எல்லா மக்களையும் பரிசுத்தப்படுத்தி. நீ அவர்களிடம், ‘நாளைய தினத்திற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: இஸ்ரயேலின் யெகோவாவுக்கென்று ஒதுக்கப்பட்டவை இன்னும் உங்கள் மத்தியில் இருக்கின்றன. அதை நீங்கள் அகற்றும்வரை உங்கள் பகைவரை எதிர்த்துநிற்க உங்களால் முடியாது.
“ ‘நாளைக்கு காலையில், நீங்கள் ஒவ்வொருவரும் கோத்திரம் கோத்திரமாக யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். அப்பொழுது யெகோவா குறிப்பிடும் கோத்திரத்தார் வம்சம் வம்சமாக முன்னே வரட்டும். அதில் யெகோவா குறிப்பிடும் வம்சம் குடும்பம் குடும்பமாக முன்னே வரவேண்டும். பின்னர் யெகோவா குறிப்பிடும் குடும்பத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக அவர் முன்னே வரவேண்டும். அவர்களில் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களுடன் பிடிக்கப்படுபவன் அவனுக்குரிய எல்லாவற்றுடனும் நெருப்பினால் எரிக்கப்படுவான். ஏனெனில் அவன் யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரயேலில் மிக அவமானத்திற்குரிய செயலைச் செய்துள்ளான்’ என்று சொல்” என்றார்.
அவ்வாறே அதிகாலையில் யோசுவா இஸ்ரயேல் மக்களைக் கோத்திரம் கோத்திரமாக யெகோவா முன்பாக வரச்செய்தான். அப்பொழுது யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. பின் யூதாவின் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னே வந்தபோது, யெகோவா சேராகியரின் வம்சத்தைத் தெரிந்தெடுத்தார். யோசுவா சேராகியரின் வம்சத்தைக் குடும்பமாக முன்னே வரச்செய்தபோது, சிம்ரியின் குடும்பம் குறிக்கப்பட்டது. யோசுவா சிம்ரியின் குடும்பத்தில் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே முன் வரச்செய்தபோது, கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். கர்மீ சிம்ரியின் மகன். சிம்ரி யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகன்.
அப்பொழுது யோசுவா ஆகானிடம், “என் மகனே, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமைசெலுத்தி அவரைத் துதி, நீ செய்த காரியத்தை ஒளிக்காமல் எனக்கு சொல்” என்றான்.
ஆகான் யோசுவாவிற்கு மறுமொழியாக, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான் பாவம் செய்தது உண்மையே. நான் செய்தது இதுவே: கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு அழகான பாபிலோனிய அங்கியையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கப்பாளத்தையும் கண்டேன். அவற்றின்மேல் நான் பேராசைகொண்டு அவற்றை எடுத்துக்கொண்டேன். அவை என்னுடைய கூடார நிலத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி அடியில் இருக்கிறது” என்றான்.
யோசுவா ஏவலாளர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்துக்கு ஓடி அங்கு பார்த்தபோது, அவை அங்கே கூடாரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி அடியில் இருந்தது. அவர்கள் கூடாரத்திற்குள் இருந்து அந்த பொருட்களை எடுத்து யோசுவாவிடத்திலும், எல்லா இஸ்ரயேலர்களிடத்திலும் கொண்டுவந்து, அவைகளை யெகோவாவின் முன்பாகப் பரப்பிவைத்தார்கள்.
அப்பொழுது யோசுவாவும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் சேராகின் மகனாகிய ஆகானை ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அவன் எடுத்திருந்த வெள்ளியும், மேலங்கியும், தங்கப்பாளமும் அவனுடன் எடுத்துச்செல்லப்பட்டன. அவனுடைய மகன்களையும், மகள்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், செம்மறியாடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். யோசுவா ஆகானிடம், “நீ எங்கள்மேல் ஏன் இத்தகைய துன்பத்தைக் கொண்டுவந்தாய்? யெகோவா இன்று உன்மேல் துன்பத்தைக் கொண்டுவருவார்” என்றான்.
இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்து கொன்றார்கள். அதன்பின் அவர்களை உடமைகள் எல்லாவற்றுடனும் சேர்த்து எரித்தார்கள். அவர்கள் ஆகான்மேல் ஒரு கற்குவியலை எழுப்பினார்கள். அது இன்றும் அங்கு இருக்கின்றது. அதன்பின் யெகோவா தன் கோபத்தை தணித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஆகோர் பள்ளத்தாக்கு7:26 ஆகோர் என்பதன் பொருள் இடரின் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். என்று அழைக்கப்படுகிறது.
ஆயி பட்டணம் அழிக்கப்படுதல்
அதன்பின் யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாதே; மனந்தளர்ந்து விடாதே. முழு இராணுவத்துடனும் சென்று ஆயிபட்டணத்தைத் தாக்கு. ஆயி அரசனையும், அவன் மக்களையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் நான் உன் கைகளில் கொடுத்துவிட்டேன். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்யுங்கள். ஆனால் சூறையாடி கைப்பற்றும் பொருட்களையும், ஆடுமாடுகளையும் நீங்கள் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்தின் பின்புறத்தில் பதுங்கியிருந்து தாக்குவதற்கென எல்லா ஆயத்தமும் செய்” என்றார்.
அவ்வாறே யோசுவா முழு இராணுவத்துடனும் ஆயிபட்டணத்தைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். யோசுவா தங்களுடைய வீரருள் மிகச்சிறந்த முப்பதாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து அன்று இரவில் அனுப்பினான். அவன் அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நகருக்குப் பின்னே பதுங்கியிருந்து பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அங்கிருந்து அதிக தூரம் போகவேண்டாம். நீங்கள் எல்லோரும் விழிப்புடன் இருங்கள். நானும் என்னுடன் இருக்கும் அனைவரும் பட்டணத்தை நோக்கி முன்னேறுவோம். எம்மை எதிர்த்து ஆயி மனிதர் முன்போலவே வெளியே வருகிறபோது, நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவோம். இஸ்ரயேலர் முன்போலவே நமக்குப் பயந்து ஓடுகிறார்களென நினைத்து நம்மைப் பின்தொடருவார்கள். நாங்களோ அவர்களை இவ்விதமாய் ஏமாற்றி பட்டணத்திற்கு வெளியே கொண்டுவருவோம். எனவே நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறபோது, நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார். நீங்கள் பட்டணத்தை கைப்பற்றியவுடன், அதற்கு நெருப்பு வையுங்கள். யெகோவாவின் கட்டளைப்படியே செய்யுங்கள். கவனமாய்ச் செய்யுங்கள். இதுவே எனது உத்தரவு” என்றான்.
யோசுவா அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்று ஆயிபட்டணத்திற்கு மேற்கே, ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையில் பதுங்கியிருந்தார்கள். யோசுவாவோ முகாமில் மக்களுடன் அன்று இரவைக் கழித்தான்.
மறுநாள் அதிகாலையில் யோசுவா தனது மனிதர்களை ஒன்றுகூட்டினான். அவனும் இஸ்ரயேலரின் தலைவர்களும் அவர்களுக்கு முன்னே அணிவகுத்து, ஆயிபட்டணத்தை நோக்கிச்சென்றனர். அவனோடிருந்த இராணுவவீரர் அனைவரும் அணிவகுத்துச்சென்று, பட்டணத்தை அணுகி, அதற்கு எதிரே வந்து சேர்ந்தார்கள். ஆயிக்கு வடக்கே அவர்கள் முகாமிட்டார்கள். ஆயிக்கும் அவர்களின் முகாமுக்குமிடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. யோசுவா ஐயாயிரம் இராணுவவீரரை ஆயிபட்டணத்திற்கு மேற்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில், மறைந்திருந்து தாக்குவதற்கென அனுப்பி வைத்திருந்தான். எல்லா இராணுவவீரரையும் தங்கள் நிலைகளில் ஆயத்தமாய் இருக்கச்செய்தான். ஆகவே முகாமில் இருந்தவர்கள் நகருக்கு வடக்கேயும், மறைந்திருந்து தாக்கும் படையினர் நகருக்கு மேற்கேயும் இருந்தனர். அன்றிரவு யோசுவா பள்ளத்தாக்குக்குப் போனான்.
ஆயி அரசன், இதைக் கண்டவுடன் நகரிலுள்ள எல்லா ஆண்களுடனும் அதிகாலையில் இஸ்ரயேலரைப் போரில் எதிர்கொள்ள விரைந்து வந்தான். அவன் இஸ்ரயேலரை அரபாவுக்கு எதிராக உள்ள இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் தனக்கு எதிராக இஸ்ரயேலர்கள் பட்டணத்திற்குப் பின்னால் தாக்குவதற்கு மறைந்திருப்பதை அவன் அறியாதிருந்தான். யோசுவாவும் எல்லா இஸ்ரயேலரும் அவர்கள் தங்களைத் துரத்த இடங்கொடுத்துப் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆயிபட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் அவர்களைத் துரத்துவதற்கு அழைக்கப்படவே அவர்கள் எல்லோரும் யோசுவாவை பின்தொடர்ந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் பட்டணத்திலிருந்து வெளியேற ஏமாற்றப்பட்டார்கள். ஆயிபட்டணத்திலோ அல்லது பெத்தேலிலோ இஸ்ரயேலரைத் துரத்தாமலிருந்த மனிதன் ஒருவனும் இல்லை. அவர்கள் ஆயிபட்டணத்தைக் காவலின்றி விட்டுவிட்டு, எல்லோரும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்தார்கள்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ கையில் வைத்திருக்கும் ஈட்டியை ஆயிபட்டணத்தை நோக்கி நீட்டிப்பிடி. ஏனெனில் உன்னுடைய கையில் அப்பட்டணத்தை ஒப்படைப்பேன்” என்றார். அப்படியே யோசுவா ஈட்டியை ஆயி நகரை நோக்கி நீட்டிப்பிடித்தான். அவன் இவ்வாறு செய்த உடனே பட்டணத்தின் பின்னே மறைந்திருந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டெழுந்து பட்டணத்தை நோக்கி விரைந்து முன்னேறினார்கள். அவர்கள் பட்டணத்தினுள் புகுந்து அதைக் கைப்பற்றி உடனே அதைத் தீயிட்டார்கள்.
ஆயியின் மனிதர் திரும்பிப் பார்த்தபொழுது, பட்டணம் எரிந்து புகை ஆகாயத்தை நோக்கி எழும்புவதைக் கண்டார்கள். அவர்களுக்கு எத்திசையிலும் ஓடித்தப்ப வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏனெனில் பாலைவனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த இஸ்ரயேலர் தங்களைத் துரத்தியவர்களுக்கு எதிராகத் திரும்பி தாக்கத் தொடங்கினார்கள். யோசுவாவும் இஸ்ரயேலர் அனைவரும் மறைந்திருந்த வீரர் ஆயிபட்டணத்தைக் கைப்பற்றியதையும், பட்டணத்திலிருந்து புகை எழும்புவதையும் கண்டபோது, அவர்கள் திரும்பி ஆயி பட்டண மனிதர்களைத் தாக்கினார்கள். மறைந்திருந்த இஸ்ரயேல் மனிதரும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து ஆயியின் மனிதரைத் தாக்கினார்கள். அவர்கள் இஸ்ரயேலரால் இரு பக்கங்களிலும் தாக்கப்பட்டு நடுவிலே சிக்கிக்கொண்டார்கள். இஸ்ரயேலர் எதிரிகளான படைவீரர் ஒருவரையும் தப்பவிடாமல் வெட்டிக் கொன்றுபோட்டார்கள். ஆனால் அவர்கள் ஆயியின் அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
வறண்ட நிலத்திலும் வெளி நிலங்களிலும் தங்களைத் துரத்திவந்த எல்லா ஆயி பட்டண வீரரையும் இஸ்ரயேல் மக்கள் வாளால் வெட்டிக்கொன்றனர். அதன்பின் அவர்கள் ஆயிபட்டணத்திற்குச் சென்று தப்பியிருந்த மக்கள் அனைவரையும் கொன்றனர். அன்று ஆண்களும் பெண்களுமாக ஆயிபட்டணத்தின் மக்கள் பன்னிரெண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆயிபட்டணத்தில் வாழ்ந்த எல்லோரும் அழிக்கப்படும்வரை யோசுவா ஈட்டியை நீட்டிப்பிடித்த கையை மடக்கவில்லை. யெகோவா யோசுவாவிடம் அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் அப்பட்டணத்திலிருந்த ஆடுமாடுகளையும், கொள்ளையிட்ட பொருட்களையும் தங்களுக்கென எடுத்துக்கொண்டார்கள்.
எனவே யோசுவா ஆயிபட்டணத்தை எரித்து, அதனை நிரந்தரமான இடிபாட்டுக் குவியலாக்கினான். அது இந்நாள்வரை பாழிடமாகவே இருக்கிறது. அத்துடன் யோசுவா ஆயி அரசனை ஒரு மரத்திலே தொங்கவிட்டான். மாலைநேரம்வரை அவன் அப்படியே விடப்பட்டான். சூரியன் மறையும் வேளையில் அவன் உடலை மரத்திலிருந்து இறக்கி அதைப் பட்டணத்தின் நுழைவுவாசலில் எறியும்படி உத்தரவிட்டான். அவர்கள் அவ்வுடலின்மேல் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள். இந்நாள்வரை அது அங்கே இருக்கிறது.
உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
அதன்பின், யோசுவா ஏபால் மலையில் இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யெகோவாவின் ஊழியனாகிய மோசே மூலமாய் இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கட்டளையிட்ட, மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே அதைக் கட்டினான். இரும்பு ஆயுதம் பயன்படுத்தாமலும் ஒருபோதும் வெட்டப்படாத முழுக்கற்களைக்கொண்டும் அப்பலிபீடம் கட்டப்பட்டது. அதன்மீது அவர்கள் யெகோவாவுக்கு தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். மோசே எழுதிவைத்திருந்த சட்டங்களை இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் யோசுவா கற்களில் பொறித்தான். அந்நியரும் இஸ்ரயேலில் பிறந்தவர்களுமான எல்லா இஸ்ரயேலரும், அவர்கள் சபைத்தலைவர்களும், அதிகாரிகளும், நீதிபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு இருபுறத்திலும் நின்றார்கள். அவர்கள் அதைச் சுமந்த லேவியரான ஆசாரியர்களைப் பார்த்தவாறு நின்றார்கள். மக்களில் பாதிபேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் மற்ற பாதிபேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள். அவர்கள் யெகோவாவின் அடியவனாகிய மோசே இஸ்ரயேல் மக்களை ஆசீர்வதிக்கும்படி, முன்பு அறிவுறுத்தல் கொடுத்தபோது கட்டளையிட்டபடியே நின்றார்கள்.
அதன்பின், யோசுவா சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லா வார்த்தைகளையும், எல்லா ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும், ஒரு வார்த்தையையாகிலும் யோசுவா வாசிக்காமல் விடவில்லை. அவன் பெண்கள், சிறுபிள்ளைகள், அவர்களில் வாழ்ந்த அந்நியர் உட்பட கூடியிருந்த எல்லா இஸ்ரயேலருக்கும் இவையெல்லாவற்றையும் வாசித்தான்.
கிபியோனியர்களின் தந்திரம்
யோர்தானுக்கு மேற்கேயிருந்த அரசர்கள் இச்செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இவர்கள் மலைநாட்டின் மேற்கேயுள்ள மலையடிவாரத்திலும், மத்திய தரைக்கடல் கரையோரம் முழுவதிலும் லெபனோன் வரையும் வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய நாடுகளின் அரசர்கள். இந்த அரசர்கள் ஒன்றுசேர்ந்து யோசுவாவுக்கும், இஸ்ரயேலருக்கும் எதிராகப் போர் தொடுப்பதற்கென வந்தார்கள்.
ஆயினும் எரிகோ, ஆயிபட்டணங்களுக்கு யோசுவா செய்தவற்றைக் கிபியோனின் மக்கள் கேள்விப்பட்டபோது, கிபியோன் மக்கள் பிரதிநிதிகள்போல தந்திரமாக சென்றார்கள். அவர்கள் கந்தையான சாக்கு மூட்டைகளையும் கிழிந்து தைக்கப்பட்ட பழைய தோல் திராட்சைக் குடுவைகளையும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, தேய்ந்ததும், தைக்கப்பட்டதுமான பழைய காலணிகளையும், பழைய உடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்த பூசணம் பிடித்திருந்த அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர். இவ்வாறான கோலத்துடன் இக்குழுவினர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் சென்றனர். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும் சென்று, “நாங்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வருகிறோம். எனவே எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்” என்றனர்.
அதற்கு இஸ்ரயேல் மனிதர் அந்த ஏவியரிடம், “ஒருவேளை நீங்கள் எங்களுக்கு அருகில் வாழ்பவர்களாய் இருக்கக்கூடும். அப்படியானால் நாங்கள் உங்களோடு எப்படி உடன்படிக்கை செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் அடிமைகள்” என்றனர்.
ஆனாலும் யோசுவா அவர்களிடம், “நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் புகழின் நிமித்தம், உங்கள் அடியவர்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறோம். ஏனெனில், அவர் எகிப்திலே செய்த செயல்கள் எல்லாவற்றைப்பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டோம். மேலும், அவர் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள அஸ்தரோத்தில் ஆட்சி செய்த எமோரியரின் இரண்டு அரசர்களான, எஸ்போனின் அரசனாகிய சீகோனுக்கும், பாசானின் அரசனாகிய ஓகுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள். உங்களிடம் வருவதற்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, இந்த அப்பங்களைச் சுடச்சுடக் கட்டிக்கொண்டு வந்தோம். இப்பொழுதோ இவைகள் எவ்வளவாய்க் காய்ந்து பூசணம் பிடித்திருக்கின்றன என்று நீங்களே பாருங்கள். இந்தத் திராட்சை தோற்குடுவைகள் நாங்கள் நிரப்பியபோது புதிதாய் இருந்தன. ஆனால் இப்பொழுது எவ்வளவாக கிழிந்துவிட்டன என்று பாருங்கள். மிக நீண்ட பிரயாணத்தினால், எங்கள் உடைகளும் பாதணிகளும் பழசாய்ப்போய்விட்டன” என்றார்கள்.
இஸ்ரயேலர், அவர்களுடைய உணவுப்பொருளில் கொஞ்சம் எடுத்து ருசிபார்த்தார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை. அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர்.
இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள். எனவே மூன்றாம் நாள் இஸ்ரயேலர் புறப்பட்டு ஏவியரின் பட்டணங்களான கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யாரீம் என்னும் பட்டணங்களை அடைந்தார்கள். ஆயினும் மக்கள் சமுதாயத் தலைவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், இஸ்ரயேலர் அந்நகரங்களைத் தாக்கவில்லை.
இதனால் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். ஆனால் தலைவர்கள் எல்லோரும் அதற்கு மறுமொழியாக: “நாங்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் ஆணையிட்டுவிட்டோம். எனவே நாம் அவர்களை இப்பொழுது தொடமுடியாது. மாறாக நாம் அவர்களுக்கு இப்படிச் செய்வோம். நாங்கள் அவர்களுக்கு அளித்த ஆணைப்படி வாக்குறுதியை மீறுவதனால் நம்மேல் இறைவனின் கோபம் ஏற்படாதபடிக்கு, அவர்களை நாம் வாழ உயிரோடு விட்டுவிடுவோம். அவர்கள் வாழட்டும்; அவர்கள் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினருக்கும் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருக்கட்டும்” என்றனர். இவ்வாறு தலைவர்களால் அவர்களுக்குக் கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட்டது.
பின் யோசுவா கிபியோனியரை தன்னிடம் வரச்செய்து அவர்களிடம், “நீங்கள் எங்களுக்கு அருகில் குடியிருந்துகொண்டு, வெகுதொலைவிலிருந்து வந்தவர்களெனக் கூறி ஏன் எங்களை ஏமாற்றினீர்கள்? இப்பொழுது நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். இனிமேல் என் இறைவனின் ஆலயத்திற்கு நீங்கள் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருப்பீர்கள்; இவ்வேலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் நீங்கமாட்டீர்கள்” என்றான்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா முழு நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், அங்குள்ள குடிகளை உங்களுக்கு முன்பாக அழிக்கவும், மோசேக்கு எவ்வாறு கட்டளையிட்டார் என்பதை, உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே உங்கள் நிமித்தம் எங்கள் உயிருக்குப் பயந்தே இப்படிச் செய்தோம். இப்பொழுது நாங்கள் உமது கையிலேயே இருக்கிறோம். எது உமக்கு நல்லதாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யும்” என்றார்கள்.
இவ்விதமாய் யோசுவா இஸ்ரயேலரிடமிருந்து கிபியோனியர்களைக் காப்பாற்றினான். இஸ்ரயேலர் அவர்களை அழிக்கவில்லை. அவன் அன்றே கிபியோனியரை, இஸ்ரயேலின் மக்கள் சமுதாயத்திற்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் அமைக்கப்படும் பலிபீடத்திற்கும் விறகு வெட்டுபவர்களாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் நியமித்தான். இன்றுவரை அவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள்.
சூரியன் தரித்து நிற்றல்
யோசுவா ஆயி நகரத்தைக் கைப்பற்றி அதை முழுவதும் அழித்துப்போட்டான் என, எருசலேமின் அரசன் அதோனி-சேதேக் இப்பொழுது கேள்விப்பட்டான். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் செய்தான் என்றும், அத்துடன் கிபியோன் மக்களும் இஸ்ரயேலருடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களருகே வாழ்கிறார்களென்றும் கேள்விப்பட்டான். இதனால் அவனும் அவனுடைய குடிமக்களும் மிகவும் கலக்கமடைந்தார்கள். ஏனெனில் கிபியோன் நகரமும், அரசர்கள் வாழும் பட்டணங்களில் ஒன்றைப்போல ஒரு பிரதான முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. அது ஆயிபட்டணத்தைவிட பெரிதாகவும் இருந்தது. மனிதர் எல்லோரும் திறமையான வீரர்களாய் இருந்தனர். எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்: “நான் கிபியோன் நகரைத் தாக்குவதற்கு நீங்கள் வந்து எனக்கு உதவுங்கள். ஏனெனில் கிபியோனியர் யோசுவாவோடும் இஸ்ரயேலரோடும் சமாதான ஒப்பந்தம் செய்துள்ளார்கள்” என வேண்டுகோள் விடுத்தான்.
அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள்.
கிபியோனியர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பி: “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிடாதேயும். உடனடியாக வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் மலைநாட்டிலுள்ள எமோரிய அரசர்கள் அனைவரும் எங்களுக்கெதிராகப் போர் செய்ய ஒன்றுகூடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
எனவே யோசுவா தனது மிகச்சிறந்த படைவீரர்கள் உட்பட, மற்ற முழு படையுடனும் கில்காலிலிருந்து அணிவகுத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நான் அவர்களை உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். அவர்களில் ஒருவனாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடியாது” என்றார்.
கில்காலிலிருந்து யோசுவா இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, எமோரியர்கள் எதிர்பாராத வேளையில் அவர்களைத் தாக்கினான். யெகோவா எமோரியப் படையினரை இஸ்ரயேலருக்கு முன்பாகக் கலக்கமடையச் செய்தார். இஸ்ரயேலர் கிபியோனிலே அவர்களைத் தோற்கடித்து பெரும் வெற்றியீட்டினார்கள். இஸ்ரயேலர் பெத் ஓரோனுக்குப் போகும் வழியெங்கும் அவர்களைத் துரத்திச்சென்று அசேக்கா, மக்கெதா ஆகிய ஊர்கள் வரையிலும் வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாகப் பெத் ஓரோனிலிருந்து இறங்கும் வழியில் அசேக்காவரை ஓடுகையில், யெகோவா ஆகாயத்திலிருந்து பெரிய கல்மழையை அவர்கள்மேல் பொழிந்தார். இதனால் இஸ்ரயேலரின் வாளால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட, பெரிய கல்மழையினால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகராயிருந்தார்கள்.
யெகோவா எமோரியரை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்த அன்று, யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கையில் கூறியதாவது:
“சூரியனே, கிபியோனுக்கு மேலாக தரித்து நில்;
சந்திரனே ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலாகத் தரித்து நில்.”
அப்படியே இஸ்ரயேலர் தங்கள் பகைவர்களைப் பழிவாங்கும்வரை
சூரியனும் நின்றது,
சந்திரனும் நின்றது.
இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சூரியன் நடுவானத்தில் தரித்து நின்றதால், ஒரு முழுநாள்வரை அது மறையத் தாமதித்தது. யெகோவா ஒரு மனிதனுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்த இந்த நாளைப்போன்ற ஒரு நாள், இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை, பின்பும் இருக்கவில்லை. நிச்சயமாக யெகோவா இஸ்ரயேல் மக்களுக்காகப் போர்புரிந்தார்.
அதன்பின் யோசுவா இஸ்ரயேலருடன் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பிச்சென்றான்.
ஐந்து எமோரிய அரசர் கொலை
இப்போர் நடந்தவேளையில் ஐந்து எமோரிய அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டார்கள். இந்த ஐந்து அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஒளித்திருக்கிறார்கள் என்ற செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே யோசுவா இஸ்ரயேலரிடம், “அந்தக் குகைவாசலைப் பெரும் பாறைக் கற்களை உருட்டி மூடிவிடுங்கள். அங்கு சிலரைக் காவலுக்கு நிறுத்துங்கள். நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான்.
இவ்வாறே யோசுவாவும், இஸ்ரயேலர்களும் அவர்களை ஒருவரும் மீந்திராதபடி முழுவதும் அழித்தார்கள். ஆனாலும் தப்பிச்சென்ற ஒரு சிலரோ அரண்சூழ்ந்த தங்கள் பட்டணங்களுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். அதன்பின் இஸ்ரயேல் படை முழுவதும் எத்தீங்குமில்லாமல் மக்கெதா நகரினுள் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தார்கள். இஸ்ரயேலுக்கு எதிராக ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசத் துணியவில்லை.
அப்பொழுது யோசுவா, “அரசர் மறைந்திருக்கும் குகைவாசலைத் திறந்து, அந்த ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே எருசலேம், எப்ரோன், யர்மூத்துர், லாகீசு, எக்லோன் பட்டணங்களின் ஐந்து அரசர்களையும் அந்த குகையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்ததும், யோசுவா இஸ்ரயேல் மனிதர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து, தன்னோடு வந்திருந்த படைத்தளபதிகளிடம், “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்துகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள் முன்னேவந்து தங்கள் பாதங்களை அரசர்களின் கழுத்தின்மேல் வைத்தார்கள்.
யோசுவா தன் படைத்தளபதிகளிடம், “பயப்படாதீர்கள்; மனந்தளராதீர்கள். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். நீங்கள் போரிடவிருக்கும் உங்கள் எதிரிகளுக்கு யெகோவா இவ்விதமே செய்வார்” என்றான். இப்படிக் கூறி யோசுவா அந்த அரசர்களை வெட்டிக்கொன்று அவர்களுடைய உடல்களை ஐந்து மரங்களிலே தொங்கவிட்டான். அவ்வுடல்கள் மாலைவரை தொங்கிக்கொண்டிருந்தன.
சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் யோசுவா உத்தரவிட்டபடி, இஸ்ரயேலர் அவ்வுடல்களை இறக்கி முன்பு அரசர்கள் ஒளித்திருந்த குகைக்குள்ளே அவற்றை வீசினார்கள். குகை வாசலை பெரிய கற்களினால் மூடினார்கள். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன.
தெற்குப் பட்டணங்கள் வெற்றிகொள்ளப்படுதல்
அதே நாளில் யோசுவா மக்கெதா நகரைக் கைப்பற்றினான். அந்நகரில் இருந்தோரையும் அதன் அரசனையும் வாளுக்கு இரையாக்கி, அங்கிருந்த அனைவரையும் முழுவதும் அழித்தான். ஒருவரையேனும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே மக்கெதா அரசனுக்கும் செய்தான்.
பின் யோசுவாவும், அவனோடு இருந்த எல்லா இஸ்ரயேலர்களும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். யெகோவா அப்பட்டணத்தையும், அதன் அரசனையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பட்டணத்திலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அவன் ஒருவரையும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே லிப்னா அரசனுக்கும் செய்தான்.
பின் யோசுவா அவனோடிருந்த இஸ்ரயேல் அனைவரோடும் லிப்னா பட்டணத்திலிருந்து லாகீசு நகருக்குச்சென்றான். யோசுவா தன் படைகளை அதற்கு எதிராக நிலைநிறுத்தி அதைத் தாக்கினான். யெகோவா லாகீசு நகரை இஸ்ரயேலரிடம் ஒப்புக்கொடுத்தார். யோசுவா இரண்டாம் நாளிலே நகரத்தைக் கைப்பற்றினான். லிப்னா நகருக்குச் செய்ததுபோலவே, அப்பட்டணத்தையும் அதிலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அதேவேளையில் கேசேர் நகரின் அரசனாகிய ஒராம், லாகீசு நகரத்தாருக்கு உதவிசெய்ய படையோடு வந்திருந்தான். ஆனாலும் யோசுவா அவனையும் அவனுடைய படையையும் ஒருவரும் தப்பிப் போகாதிருக்கும் வரைக்கும் தோற்கடித்தான்.
பின் யோசுவாவும் அவனோடிருந்த இஸ்ரயேலர் அனைவரும் லாகீசு நகரிலிருந்து எக்லோன் நகருக்குச் சென்றார்கள். அந்நகருக்கெதிராக நிலைகொண்டு அதைத் தாக்கினார்கள். அந்த நாளில் அவர்கள் எக்லோனைக் கைப்பற்றி, லாகீசு நகருக்குச் செய்தவாறே இந்நகரத்தை வாளுக்கு இரையாக்கி, எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள்.
அதன் பின்னர் இஸ்ரயேலர் அனைவரோடும் யோசுவா எக்லோன் நகரிலிருந்து எப்ரோன் நகரையடைந்து அதனைத் தாக்கினான். இஸ்ரயேலர் அந்நகரைக் கைப்பற்றி அதை வாளுக்கு இரையாக்கினார்கள். அதன் அரசனையும், அதன் கிராமங்களையும், அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள். ஒருவனையாகிலும் உயிரோடு தப்பவிடவில்லை. எக்லோன் நகரைப்போலவே இந்நகரையும் அதன் மக்களையும் முழுவதும் அழித்தார்கள்.
பின்னர் யோசுவாவும் அவனோடிருந்த எல்லா இஸ்ரயேலர்களும் திரும்பிச்சென்று தெபீர் நகரைத் தாக்கினார்கள். அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள்.
இவ்விதமாய் யோசுவா மலைநாட்டையும், நெகேப் என்ற தெற்கு நாட்டையும், மலையடிவாரப் பகுதியையும் கிழக்கே மலைச்சரிவுப் பகுதிகள் அனைத்தையும் அதன் அரசர்களையும் தனது ஆட்சிக்குட்படுத்தினான். ஒருவரையும் தப்பவிடாமல் கொன்றொழித்தான். இவ்வாறு இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படி சுவாசமுள்ள அனைவரையும் முழுவதும் அழித்துவிட்டான். யோசுவா காதேஸ் பர்னேயா நாடு தொடங்கி காசாவரைக்கும், கோசேனின் முழுபிரதேசம் தொடங்கி கிபியோன் வரையுமுள்ள நாடு முழுதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினான். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா இஸ்ரயேலருக்காக யுத்தம் புரிந்ததினால், இந்த எல்லா அரசர்களையும் அவர்களுடைய நாடுகளையும் ஒரே படையெடுப்பில் யோசுவா வெற்றிகொண்டான்.
இதன்பின்னர் யோசுவா இஸ்ரயேலர் அனைவரோடும் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பினான்.
வடக்கு அரசரை வெற்றிகொள்ளுதல்
ஆத்சோர் அரசன் யாபீன் இந்த வெற்றிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அருகிலுள்ள பட்டணங்களின் அரசர்களுக்கு ஒரு அவசரசெய்தி அனுப்பினான். அவர்கள்: மாதோனின் அரசன் யோபாப், சிம்ரோனின் அரசன், அக்சாபின் அரசன், மலைகளிலும், கின்னரோத்திற்குத் தெற்கேயுள்ள அரபாவிலும், மேற்கே மலையடிவாரங்களிலும், மேற்கேயுள்ள நாபோத் தோரிலும் ஆட்சி செய்த வடதிசை அரசர்கள் ஆகியோரே; அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான். அவர்கள் தங்கள் எல்லாப் படைகளோடும், குதிரைகளோடும், இரதங்களோடும் புறப்பட்டுவந்து ஒன்றுகூடினர். இந்த பெரும்படை கடற்கரை மணலைப்போல எண்ணிக்கையில் அதிகமாயிருந்தது. இந்த அரசர்களெல்லோரும் இஸ்ரயேலருக்கு எதிராகப் போர் செய்ய ஒன்றுகூடி, மேரோம் என்னும் நீரூற்றருகே முகாமிட்டார்கள்.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நாளை இந்நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் கொல்லப்பட்டவர்களாக இஸ்ரயேலரிடம் ஒப்படைப்பேன். நீ அவர்களுடைய குதிரைகளின் பின்கால் நரம்புகளை வெட்டி, அவர்களுடைய இரதங்களையும் எரித்துவிடவேண்டும்” என்றார்.
யோசுவாவும் அவனுடைய படையினர் அனைவரும், மேரோம் நீரூற்றருகே எதிரிகளை திடீரெனத் தாக்கினார்கள். யெகோவா எதிரிகளை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்தார். இஸ்ரயேலர் அவர்களை முறியடித்து பெரிய சீதோன், மிஸ்ரபோத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்கள். அவர்களில் ஒருவரையும் தப்பவிடவில்லை. யெகோவா கட்டளையிட்டபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தான்: அவன் குதிரைகளின் பின்கால் தசை நரம்புகளை வெட்டி அவற்றை முடமாக்கி இரதங்களையும் எரித்தான்.
அவ்வேளை யோசுவா திரும்பிவந்து, ஆத்சோர் நாட்டைக் கைப்பற்றி அதன் அரசனை வாளுக்கு இரையாக்கினான். ஆத்சோர் இந்த அரசுகளுக்கெல்லாம் தலைமைப் பட்டணமாய் இருந்தது. அங்குள்ள ஒவ்வொருவரும் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் சுவாசமுள்ள ஒன்றையும் தப்பவிடாமல், அவர்கள் எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். யோசுவா முழு ஆத்சோரையுமே எரித்துப்போட்டான்.
யோசுவா அந்த அரசர்கள் வாழும் எல்லாப் பட்டணங்களையும் கைப்பற்றி, அவற்றின் அரசர்களை வாளுக்கு இரையாக்கினான். யெகோவாவின் அடியானாகிய மோசே கட்டளையிட்டபடி அவற்றையெல்லாம் யோசுவா முழுவதும் அழித்தான். ஆனாலும் இஸ்ரயேலர் யோசுவா எரித்துப்போட்ட ஆத்சோர் பட்டணத்தைத்தவிர, மேடுகளின்மேல் கட்டப்பட்ட எந்தப்பட்டணத்தையும் எரிக்கவில்லை. இந்த நகரங்களிலிருந்து கொள்ளைப்பொருட்களையும் மிருகங்களையும் இஸ்ரயேலர் தங்களுக்கெனக் கொண்டுசென்றார்கள். ஆனால் சுவாசமுள்ள ஒருவரையும் தப்பவிடாமல் அம்மக்கள் எல்லோரும் முற்றுமாக அழியும்வரை, அவர்களைத் தங்கள் வாள்களுக்கு இரையாக்கினார்கள். யெகோவா தமது அடியவனாகிய மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான். யோசுவாவும் அதைச் செய்தான்.
மோசேக்கு யெகோவா அளித்த கட்டளைகள் ஒன்றையேனும், யோசுவா நிறைவேற்றாமல் விடவில்லை. இப்படியாக யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான். அவையாவன; மலைநாடு, நெகேப் முழுவதும், கோசேனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி, மேற்கு மலையடிவாரங்கள், அரபாவும் இஸ்ரயேலின் மலைகளும், அதன் அடிவாரங்களுமாகும், இவை சேயீர் நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலையிலிருந்து, எர்மோன் மலைக்குக் கீழே இருக்கும் லெபனோன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாகால்காத்வரை பரந்திருந்தது. யோசுவா இப்பிரதேசங்களை ஆண்ட அரசர்கள் அனைவரையும் சிறைப்பிடித்து, அவர்களை வெட்டிக்கொன்றான். யோசுவா நீண்டகாலமாக அந்த அரசர்களுக்கெதிராகப் போர்தொடுத்திருந்தான். கிபியோனில் வாழ்ந்த ஏவியரைத்தவிர, வேறெந்த நாட்டினரும் இஸ்ரயேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. இஸ்ரயேலர் அப்பட்டணங்களையெல்லாம் போர்புரிந்தே கைப்பற்றினார்கள். யெகோவாவே இஸ்ரயேலருடன் போர்புரியும்படி அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை இரக்கமின்றி அழிக்கும்படிக்கே இப்படிச் செய்தார்.
அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான். இஸ்ரயேலர் வாழ்ந்த நாட்டின் எல்லைக்குள் ஒரு ஏனாக்கியருமே தப்பியிருக்கவில்லை. ஆயினும் காசா, காத், அஸ்தோத் ஆகிய பகுதிகளில் மட்டும் சிலர் வசித்தனர்.
இவ்வாறாக யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றி, இஸ்ரயேலருக்கு அவர்கள் கோத்திரப் பிரிவுகளின்படி அவற்றைச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான். அதன்பின் நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவியது.
முறியடிக்கப்பட்ட அரசர்களின் பெயர்ப் பட்டியல்
இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்ட நாட்டின் அரசர்கள் இவர்களே: யோர்தானுக்குக் கிழக்கே, அர்னோன் கணவாய் தொடங்கி, அரபாவின் கிழக்குப்பகுதி உட்பட எர்மோன் மலைவரையுள்ள அரசர்களுடைய நிலப்பகுதியை இஸ்ரயேலர் கைப்பற்றினர்.
எமோரிய அரசன் சீகோன் எஸ்போனில் ஆட்சிசெய்தான்.
அவனுடைய ஆட்சி அர்னோன் கணவாயின் ஓரத்தில் உள்ள அரோயேர் தொடங்கி, அர்னோன் கணவாயின் நடுப்பகுதி வழியாக யாப்போக் ஆறுவரை இருந்தது. யாப்போக் ஆறு அம்மோனியரின் எல்லையாயிருந்தது. இது கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.
அதோடு கிழக்கு அரபாவையும் இவனே ஆட்சிசெய்தான். அந்த நாடு கலிலேயாக்கடலிலிருந்து உப்புக்கடல்வரை போய் பெத்யெசிமோத் பட்டணம் வரையும் இருந்தது. பின்பு அது தெற்கே பிஸ்கா மலைச்சரிவுகளையும் உள்ளடக்கியதாயிருந்தது.
பாசானின் அரசனாகிய ஓகு ஆட்சி செய்த பகுதியையும் இஸ்ரயேலர் கைப்பற்றினர். அவன் அஸ்தரோத், எத்ரே ஆகிய நிலப்பகுதி எல்லைகளை ஆட்சி செய்த ரெப்பாயீமியரைச் சேர்ந்த கடைசி அரசர்களில் ஒருவன்.
அவன் எர்மோன் மலைநாடு, சல்கா பிரதேசம், மற்றும் பாசான் நாடு முழுவதையும் ஆட்சிசெய்தான். கேசூரியர், மாகாத்தியர் ஆகியோரின் பிரதேசங்களை எல்லையாகக்கொண்ட இடங்களையும் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியதாயிருந்தது. தெற்கே எஸ்போனின் அரசனாகிய சீகோனின் எல்லைவரை இருந்தது. சீகோன் எஸ்போனின் அரசனாயிருந்தான்.
யெகோவாவின் அடியானாகிய மோசேயும் இஸ்ரயேலரும் இவ்விரு அரசர்களையும் வெற்றிகொண்டிருந்தார்கள். அத்துடன் யெகோவாவின் அடியானாகிய மோசே, கைப்பற்றப்பட்ட அவர்களுடைய நாட்டை இஸ்ரயேலரின் கோத்திரத்தாராகிய ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோருக்குச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான்.
யோர்தானுக்கு மேற்கேயுள்ள பகுதியில் யோசுவாவும் இஸ்ரயேலரும் வெற்றிகொண்ட நாட்டின் அரசர்களான இவர்கள் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காத் முதல் சேயீரை நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலைவரையுள்ள பகுதியில் ஆட்சிசெய்தார்கள். இவர்களது நாடுகளை யோசுவா கைப்பற்றி, இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்கு ஏற்ப அவற்றைப் பிரித்து சொத்துரிமை நாடாக ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் கொடுத்தான். அப்பகுதிகள் நடுவிலுள்ள மலை நாடுகள், மேற்கு மலையடிவாரப்பகுதிகள், அரபா, மலைச்சரிவுகள், யூதாவின் வறண்ட நிலம், நெகேவ் வனாந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அவை முன்னர் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களது நாடுகளாயிருந்தன.
இவர்களே யோசுவா வெற்றிகொண்ட அரசர்கள்:
எரிகோவின் அரசன் ஒருவன்,
பெத்தேலுக்கு அருகேயிருந்த ஆயியின் அரசன் ஒருவன்,
எருசலேமின் அரசன் ஒருவன்,
எப்ரோனின் அரசன் ஒருவன்,
யர்மூத்தின் அரசன் ஒருவன்,
லாகீசின் அரசன் ஒருவன்,
எக்லோனின் அரசன் ஒருவன்,
கேசேரின் அரசன் ஒருவன்,
தெபீரின் அரசன் ஒருவன்,
கெதேரின் அரசன் ஒருவன்,
ஓர்மாவின் அரசன் ஒருவன்,
ஆராதின் அரசன் ஒருவன்,
லிப்னாவின் அரசன் ஒருவன்,
அதுல்லாமின் அரசன் ஒருவன்,
மக்கெதாவின் அரசன் ஒருவன்,
பெத்தேலின் அரசன் ஒருவன்,
தப்புவாவின் அரசன் ஒருவன்,
எப்பேரின் அரசன் ஒருவன்
ஆப்பெக்கின் அரசன் ஒருவன்,
லசரோனின் அரசன் ஒருவன்,
மாதோனின் அரசன் ஒருவன்,
ஆத்சோரின் அரசன் ஒருவன்,
சிம்ரோன் மோரோனின் அரசன் ஒருவன்,
அக்சாபின் அரசன் ஒருவன்,
தானாகின் அரசன் ஒருவன்,
மெகிதோவின் அரசன் ஒருவன்,
கேதேசின் அரசன் ஒருவன்,
கர்மேலிலுள்ள யொக்னியாமின் அரசன் ஒருவன்,
நாபோத்தோரிலுள்ள தோரின் அரசன் ஒருவன்,
கில்காலில் உள்ள கோயிமின் அரசன் ஒருவன்,
திர்சாவின் அரசன் ஒருவன்.
இவ்வாறாக, மொத்தம் முப்பத்தொரு அரசர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
கைப்பற்றப்படவேண்டிய நாடு
யோசுவா வயதுசென்று முதிர்வயதானபோது, யெகோவா அவனிடம், “நீ வயதுசென்றவனாயிருக்கிறாய், இன்னும் கைப்பற்றப்படவேண்டிய நிலப்பரப்புகளோ அதிகமாயிருக்கின்றன.
“மீதியாயிருக்கின்ற நிலப்பகுதிகளாவன:
“பெலிஸ்தியரினதும் கேசூரியரினதும் முழுபகுதிகளும், எகிப்தின் கிழக்கே உள்ள சீகோர் ஆற்றிலிருந்து வடக்கே எக்ரோன் பிரதேசம் வரையுள்ளவையாகும். இவை முழுவதும் கானானியருடையதாகக் கருதப்பட்டன. இப்பகுதியிலிருந்த நகரங்களான காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகியவற்றில் ஐந்து பெலிஸ்திய சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்தார்கள்.
அதற்குத் தெற்கில் ஆவியர் வாழ்ந்தார்கள்.
மிகுதியாயிருந்த கானானியரின் தேசம்முழுவதும் சீதோனியருக்குச் சொந்தமான ஆரா பிரதேசத்திலிருந்து ஆப்பெக் வரையும் இருந்தது. அதற்குள் எமோரியரின் பிரதேசமும் அடங்கும்.
அத்துடன் கிபலியரின் பகுதியும்,
கிழக்கேயிருந்த லெபனோனின் பகுதி அனைத்தும் உள்ளடங்கியிருந்தது. இப்பகுதி எர்மோன் மலைக்குக் கீழேயுள்ள பாகால்காத்திலிருந்து ஆமாத்துக்குப் போகும் இடம்வரையிலும் உள்ளது.
“லெபனோனில் இருந்து மிஸ்ரபோத்மாயீம் வரையிலுள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் சீதோனியர் அனைவரையும், நான், நானே இஸ்ரயேலுக்கு முன்பாகத் துரத்துவேன். நான் உனக்கு அறிவுறுத்தியபடி அதை இஸ்ரயேலுக்குச் சொத்துரிமை நிலமாகப் பங்கிடத்தவறாதே. அப்பகுதியை மற்ற ஒன்பது கோத்திரத்திற்கும் மனாசேயின் அரைக்கோத்திரத்திற்கும் உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடு.”
யோர்தானுக்குக் கிழக்கின் பிரிவு
மனாசே கோத்திரத்தின் மற்ற அரைப்பகுதியினரும், ரூபன், காத் கோத்திரத்தாரும் யோர்தானுக்குக் கிழக்கே தங்கள் சொத்துரிமையைப் பெற்றார்கள். இதை நியமித்த யெகோவாவின் அடியவனாகிய மோசே பிரித்துக்கொடுத்த விதமாகவே அவற்றைப் பெற்றிருந்தார்கள்.
அது அர்னோன் ஆற்றங்கரையின் ஓரத்திலுள்ள அரோயேரிலிருந்தும், நதியின் நடுவிலுள்ள பட்டணத்திலிருந்தும் தீபோன் வரையுள்ள மேதேபாவின் சமபூமி முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன் எஸ்போன் சீகோன் என்னும் எமோரிய அரசனின் ஆட்சிக்குக்கீழ் இருந்த பட்டணங்கள் எல்லாம், அம்மோனியரின் எல்லைவரை பரந்திருந்தன.
இது கீலேயாத்தையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதும், சல்கா வரையுள்ள பாசான் முழுவதையும் உட்பட்டிருந்தது. ஆகவே ரெப்பாயீமியரில் கடைசியாகத் தப்பித்துக்கொண்ட ஒருவனும் அஸ்தரோத், எத்ரே பட்டணங்களில் அரசாண்டவனுமான ஓகுவின் அரசு பாசானில் இப்பகுதியை உள்ளடக்கியிருந்தது. மோசே இந்த இரு அரசர்களான சீகோனையும் ஓகுவையும் தோற்கடித்து, அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருந்தான். ஆயினும் இஸ்ரயேலர் கேசூரியரையும், மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை. அவர்கள் இந்நாள்வரை இஸ்ரயேலர் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் மோசே லேவி கோத்திரத்திற்கு சொத்துரிமை கொடுக்கவில்லை. இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா அவர்களுக்கு13:14 அவர்களுக்கு அல்லது மோசேக்கு. வாக்குப்பண்ணியபடி, யெகோவாவுக்கு தகனபலியாக கொடுக்கப்பட்டவையே அவர்களின் சொத்துரிமையாயிருந்தது.
ரூபன் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக மோசே கொடுத்திருந்தவை இவையே:
அர்னோன் கணவாயின் ஓரத்திலுள்ள அரோயேர் பட்டணத்திலிருந்து, அக்கணவாயின் நடுவிலுள்ள பட்டணத்தை உள்ளடக்கி மேதேபாவுக்கு அப்பாலுள்ள மேட்டுநிலச் சமதரை முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனையும் அதன் பட்டணங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தன. அந்தப் பட்டணங்கள் தீபோன், பாமோத் பாகால், பெத்பாகால் மெயோன், யாகாசா, கெதெமோத், மேபாகாத், கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கில் உள்ள உயர்ந்த குன்றிலிருந்து செரேத்சகார், அத்துடன் பெத்பெயோர், பிஸ்கா மலைச்சரிவுகள், பெத்யெசிமோத், சமபூமியிருந்த எல்லா நகரங்களையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போனில் முன்பு ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனின் ஆட்சியிலிருந்த பிரதேசங்கள் அனைத்தையும், அப்பிரதேசம் உள்ளடக்கியிருந்தது. அந்நாட்டில் வாழ்ந்த சீகோனையும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருந்த மீதியானின் தலைவர்களான ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் மோசே தோற்கடித்திருந்தான். இவர்கள் அங்கு வாழ்ந்த சீகோன் அரசனுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார்கள். போரில் கொலையுண்டவர்களுடன் பேயோரின் மகன் குறிசொல்லும் வழக்கமுடைய பிலேயாமையும் இஸ்ரயேலர் வாளுக்கு இரையாக்கினார்கள்.
ரூபனியரின் மேற்கு எல்லையாக யோர்தான் நதிக்கரை அமைந்திருந்தது. மேற்குறிப்பிட்ட இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ரூபனியருக்கு வம்சம் வம்சமாகச் சொத்துரிமையான நிலமாகக் கொடுக்கப்பட்டிருந்தன.
காத் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக மோசே பங்கிட்டுக்கொடுத்த பிரதேசங்களாவன:
யாசேரின் பிரதேசம், கீலேயாத்தின் நகரங்கள் அனைத்தும், ரப்பாவுக்கு அருகே அரோயேர் வரையிலுள்ள அம்மோனியரின் பிரதேசத்தில் பாதி. அத்துடன் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பாவும், பெத்தோனீம் வரையுள்ள பகுதியும், மகனாயீம் தொடங்கி தெபீரின் சுற்றுப்பிரதேசம் வரையுள்ள பகுதியும் அடங்கியிருந்தன. பள்ளத்தாக்கிலிருந்த பெத் ஆராம், பெத் நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகிய நகரங்கள் எஸ்போனின் அரசனாயிருந்த சீகோனின் பிரதேசத்தின் மிகுதியான பகுதிகள். இது யோர்தான் நதியின் கிழக்குக் கரைப்பகுதியில் வடக்கே, கலிலேயாக் கடலின் முடிவுவரையிருந்த பிரதேசம்.
மேற்கூறிய நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே காத்தியருக்கு வம்சம் வம்சமாக சொத்துரிமையான நிலமாக இருந்தன.
மனாசே கோத்திரத்தின் அரைப் பகுதியினருக்கு, அதாவது மனாசேயின் வழித்தோன்றலின் பாதிக் குடும்பத்தினருக்கு வம்சம் வம்சமாக மோசே பங்கிட்டுக்கொடுத்திருந்த சொத்துரிமை நிலமாவது:
மகனாயீம் நகர் தொடங்கி பாசான் நாடு உட்பட பாசானின் அரசனாகிய ஓகின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரதேசம் முழுவதும், அதாவது பாசான் பிரதேசத்தில் யாவீரின் குடியிருப்புகளெல்லாம், அறுபது பட்டணங்கள், மற்றும் கீலேயாத் பிரதேசத்தின் பாதி, அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் இதில் அடங்கின. இவ்விரு நகரங்களும் பாசானின் அரசன் ஓகின் பட்டணங்கள்.
இப்பிரதேசம் மனாசேயின் மகனாகிய மாகீர் என்பவனது சந்ததியினருக்கு கொடுக்கப்பட்டது. அதாவது மாகீரின் மகன்களின் அரைவாசியினருக்கு அவை வம்சம் வம்சமாகப் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
எரிகோ நகருக்குக் கிழக்கேயுள்ள யோர்தான் நதிக்கு அப்பால் மோவாப்பின் சமவெளியில் இருக்கும்போது மோசே கொடுத்த சொத்துரிமை நிலம் இவையே. ஆயினும் லேவி கோத்திரத்தாருக்கு மோசே ஒரு சொத்துரிமையையும் கொடுக்கவில்லை. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா வாக்களித்தபடி அவரே அவர்களுடைய சொத்துரிமை.
யோர்தானின் மேற்கேயுள்ள நாட்டைப் பங்கிடுதல்
கானான் நாட்டில் இஸ்ரயேலர் சொத்துரிமையாகப் பெற்றுக்கொண்ட பகுதிகள் இவைகளே, ஆசாரியனான எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரயேல் வம்சத்தாரின் தலைவர்களும் அந்நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்கள். மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே சொத்துரிமை நிலம் ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சீட்டுப்போட்டு பகிர்ந்துகொடுக்கப்பட்டது. மோசே மற்ற இரண்டரை கோத்திரங்களுக்கும் யோர்தானுக்குக் கிழக்கே நிலத்தைச் சொத்துரிமையாகப் பங்கிட்டுக்கொடுத்திருந்தான். ஆனால் லேவியருக்கோ மற்றவர்களுக்கு மத்தியில் சொத்துரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் யோசேப்பின் மகன்களான மனாசே, எப்பிராயீம் ஆகியோர் இரு கோத்திரங்களாக இருந்தனர். லேவியர்களோ நிலத்தில் பங்கொன்றும் பெறவில்லை. அவர்கள் வசிப்பதற்கு நகரங்களும், அவர்களுடைய மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன. இவ்விதம் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் நிலத்தைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
எபிரோன் காலேபுக்குக் கொடுக்கப்படுதல்
யூதா மனிதர் கில்காலில் இருக்கும் யோசுவாவிடம் வந்தார்கள். அப்பொழுது கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் யோசுவாவிடம், “காதேஸ் பர்னேயாவில் யெகோவா என்னையும் உம்மையும் குறித்து இறைவனின் மனிதனாகிய மோசேயிடம் கூறியதை நீர் நன்கு அறிவீர். காதேஸ் பர்னேயாவிலிருந்து யெகோவாவின் அடியானாகிய மோசே, கானான் நாட்டைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பியபோது, எனக்கு நாற்பது வயதாய் இருந்தது. என் மனதில் சரியெனத் தென்பட்டதின்படி மோசேயிடம் ஒரு அறிக்கை கொண்டுவந்தேன். ஆனால் என்னுடன் வந்த என் சகோதரர்கள் இஸ்ரயேலரின் உள்ளங்களை பயத்தினால் கலங்கப்பண்ணினார்கள். நானோ என் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றினேன். அப்படியே, ‘நீ உன் இறைவனாகிய யெகோவாவை மனப்பூர்வமாய்ப் பின்பற்றியபடியால், நீ காலடி வைத்த இடம் முழுவதும் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றுமுள்ள சொத்துரிமை நிலமாக இருக்கும்’14:9 [உபா. 1:36] என்று மோசே அந்நாளில் வாக்குறுதி அளித்தான்.
“யெகோவா இவற்றை மோசேக்கு வாக்களித்ததிலிருந்து இன்றுவரை நாற்பத்தைந்து ஆண்டுகள் என்னை உயிருடன் வைத்திருக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். இப்பொழுது எனக்கு எண்பத்தைந்து வயது. அன்று மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் நான் பெலனுடையவனாய் இருக்கிறேன். அன்று இருந்ததுபோலவே இன்றும் போருக்குப் போகத்தக்க வல்லமையுடையவனாயும் இருக்கிறேன். எனவே யெகோவா அந்த நாளில் எனக்குக் கொடுப்பதாக வாக்களித்த அந்த மலைநாட்டை இப்பொழுது எனக்குத் தாரும். ஏனாக்கியர் அங்கே வசிக்கிறார்களென்றும், அவர்களுடைய பட்டணங்கள் பெரிய அரண்களுடைய பட்டணங்களென்றும் நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். யெகோவா சொன்னபடியே அவருடைய உதவியுடன் நான் அவர்களைத் துரத்திவிடுவேன்” என்றான்.
எனவே யோசுவா எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, அவனுக்கு எப்ரோன் பிரதேசத்தைச் சொத்துரிமையாகக் கொடுத்தான். கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவை முழுமனதுடன் பின்பற்றியதால், அன்றிலிருந்து இன்றுவரை எப்ரோன் பிரதேசம் அவனுக்குச் சொந்தமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது.
போர் ஓய்ந்திருந்ததினால் தேசம் அமைதியாய் இருந்தது.
யூதாவுக்குப் பங்கு
வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது.
அதன் தென் எல்லை உப்புக்கடலில்15:2 உப்புக்கடலில் அல்லது சவக்கடல் என்று பொருள். தென் மூலையிலுள்ள முனையிலிருந்து, அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது. பின்பு அஸ்மோன் பக்கமாகச்சென்று, எகிப்தின் நதியுடன் இணைந்து மத்திய தரைக்கடலில் முடிந்தது. இதுவே யூதா கோத்திரத்தாரின் தென் எல்லை.
யோர்தான் நதியின் ஆரம்பம் வரை உள்ள உப்புக்கடல் அதன் கிழக்கு எல்லையாகும்.
வட எல்லை யோர்தான் முகத்துவாரத்திலுள்ள கடலின் முனையிலிருந்து ஆரம்பமாகி, அங்கிருந்து பெத் ஓக்லாவுக்குச் சென்று பின் பெத் அரபாவின் வடக்காகக் கடந்து ரூபனின் மகனாகிய போகனின் கல் இருந்த இடம்வரை சென்றது. அந்த எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குச் சென்றது. வடக்கே திரும்பி கணவாய்க்குத் தெற்கிலுள்ள அதும்மீமின் மேட்டுக்கு எதிரேயுள்ள கில்காலுக்குச் சென்றது. அங்கிருந்து எல்லையானது என்சேமேசின் நீரூற்றுகளுக்குச் சென்று என்ரொகேல் நீரூற்றுவரை வந்தது. பின் எல்லையானது பென் இன்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் பட்டணத்தின் தென்மலைச்சரிவை அதாவது எருசலேமை அடைந்தது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்கிற்கு மேற்கே மலையின் உச்சிக்கு ஏறியது. இந்த மலை ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடக்குமுனையில் இருந்தது. அந்த மலையுச்சியிலிருந்து எல்லையானது, நெப்தோ நீரூற்றை நோக்கிச்சென்று, பின்னர் எப்ரோன் மலையிலுள்ள நகரங்களின் வழியாகச் சென்று அங்கிருந்த கீரியாத்யாரீமாகிய பாலாவை நோக்கிசென்றது. பாலாவிலிருந்து எல்லையானது, மேற்கே வளைந்து சேயீர் மலையை நோக்கித் திரும்பி யெயாரீம் மலையில் வடக்குசரிவு அதாவது கெசலோக் ஒரமாகத் தொடர்ந்துசென்றது. அங்கிருந்து பெத்ஷிமேஷைக் கடந்து திம்னாவரை சென்றது. அது எக்ரோனின் வடக்கு மலைச்சரிவை நோக்கிச்சென்று, சிக்ரோனை நோக்கி திரும்பிச்சென்று, பாலா மலையைக்கடந்து யாப்னியேலை அடைந்தது. அதன் எல்லை மத்திய தரைக்கடலில் முடிந்தது.
தேசத்தின் மேற்கு எல்லை, மத்திய தரைக்கடலின் கரையோரமாகும்.
மேலே கூறப்பட்டவை யூதாவின் கோத்திரத்திற்கு அதன் வம்சங்களுக்கேற்ப வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளாகும்.
யோசுவாவிற்கு யெகோவா கட்டளையிட்டபடியே அவன் யூதா தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகனாகிய காலேப்புக்கு கொடுத்தான். அது கீரியாத் அர்பா அதாவது எப்ரோன் பிரதேசம் ஆகும். அர்பா என்பவன் ஏனாக்கின் முற்பிதா. காலேப் மூன்று ஏனாக்கியரின் மகன்களை எப்ரோனிலிருந்து துரத்திவிட்டான். அவர்கள் ஏனாக்கின் வழித்தோன்றல்களான சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள். அங்கிருந்து அவன் தெபீரில் வசித்தவர்களுக்கெதிராக படையெடுத்துச்சென்றான். தெபீர் என்பது முன்பு கீரியாத் செபேர் எனப்பட்டது. காலேப், “கீரியாத் செபேர் நகரைத் தாக்கிக் கைப்பற்றும் வீரனுக்கு, என் மகள் அக்சாளைத் திருமணம் செய்துவைப்பேன்” என்று சொல்லியிருந்தான். காலேபின் சகோதரனான கேனாசின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
ஒரு நாள் அவள் ஒத்னியேலுடன் வந்தபோது, அவளைத் தன் தகப்பனிடம் இன்னும் ஒரு வயல் நிலத்தைக் கேட்கும்படி அவளைத் தூண்டினான். அப்படியே அவள் கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “எனக்கு இன்னும் ஒரு உதவிசெய்ய வேண்டும். நீங்கள் எனக்கு, ‘நெகேவ்’ என்னும் வறண்டபகுதியில் நிலத்தை கொடுத்திருப்பதால் நீரூற்றுள்ள நிலத்தையும் கொடுங்கள்” என்றாள். அப்படியே காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான்.
யூதா கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக வழங்கப்பட்ட சொத்துரிமையாவது:
நெகேவின் தென்பகுதியில், ஏதோம் எல்லையை நோக்கி யூதா கோத்திரத்திற்குத் தென்முனையிலிருந்த நகரங்களாவன:
கப்சேயேல், ஏதேர், யாகூர், கீனா, திமோனா, ஆதாதா, கேதேஸ், ஆத்சோர், இத்னான், சீப், தெலெம், பெயாலோத், ஆத்சோர் அதாத்தா, கீரியோத் எஸ்ரோன் அதாவது ஆத்சோர், ஆமாம், சேமா, மொலாதா; ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத், ஆத்சார்சூவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா, பாலா, ஈயிம், ஆத்சேம், எல்தோலாத், கெசீல், ஓர்மா, சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா, லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
மேற்கு மலையடிவாரங்களில்
எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, சாராயீம், அதித்தாயீம், கெதேரா அல்லது கெதெரோத்தாயீம் ஆகிய பதினான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
சேனான், அதாஷா, மிக்தால்காத், திலியான், மிஸ்பே, யோக்தெயேல், லாகீசு, போஸ்காத், எக்லோன், காபோன், லகமாஸ், கித்லீஷ், கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா ஆகிய பதினாறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
லிப்னா, ஏத்தேர், ஆஷான், இப்தா, அஸ்னா, நெத்சீப், கேகிலா, அக்சீப், மரேஷா ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும். எக்ரோனின் மேற்கே அஸ்தோத்தின் சுற்றுப்புறமும் அவற்றோடும் அவற்றின் கிராமங்களும். அஸ்தோத் பட்டணமும் அதன் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும், காசா நகரும், அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், அதன் கிராமங்களும் ஆகும். இப்பிரதேசங்கள் எகிப்தின் ஆறுவரையும் மத்திய தரைக்கடற்கரை வரையும் பரந்திருந்தன.
மலைநாட்டில் இருந்தவைகளான:
சாமீர், யாத்தீர், சோக்கோ, தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத் சன்னா, ஆனாப், எஸ்தெமொ, ஆனிம், கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
அராப், ரூமா, எஷான், யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
மாகோன், கர்மேல், சீப், யுத்தா, யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா, காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
அல்கூல், பெத்சூர், கேதோர், மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
பாலைவனத்தில் இருந்த நகரங்களாவன:
பெத் அரபா, மித்தீன், செக்காக்கா, நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி ஆகிய நகரங்களும் அவற்றின் கிராமங்களும் உட்பட ஆறு ஆகும்.
ஆனாலும் எருசலேம் பட்டணத்தில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்ற யூதாவினால் முடியவில்லை. எனவே அவர்கள் யூதா மக்களுடன் இன்றுவரை எருசலேமில் வாழ்ந்து வருகிறார்கள்.
மனாசே, எப்பிராயீமின் பங்கு
யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது. பெத்தேல் என்னும் லூஸில் இருந்து அதரோத்திலுள்ள அர்கியின் பிரதேசத்தைக் கடந்து, பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.
இவ்வாறு யோசேப்பின் மகன்களான மனாசேயும், எப்பிராயீமும் தங்கள் சொத்துரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.
எப்பிராயீம் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாகக் கொடுக்கப்பட்ட பிரதேசமாவது:
அவர்களுடைய சொத்துரிமை நிலத்தின் எல்லை, கிழக்கே அதரோத் அதாரில் ஆரம்பித்து, மேல் பெத் ஓரோன் வழியாக, அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது. பின் யநோகாவிலிருந்து கீழ்நோக்கிச்சென்று, அதரோத்தையும் நாராவையும் கடந்து எரிகோவை நெருங்கி யோர்தான் நதியில் முடிந்தது. தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.
இதைவிட மனாசேயின் கோத்திரத்தாருக்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலத்தில் எப்பிராயீமியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களும் இதற்குள் அடங்கியிருந்தன.
ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது.
யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசே கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலப்பங்கு இதுவே. இது மனாசேயின் மூத்த மகன் மாகீருக்கே கொடுக்கப்பட்டது. மாகீர் என்பவன் கீலேயாத் மக்களின் முற்பிதா. மாகீர் மக்கள் சிறந்த போர் வீரராயிருந்தபடியால் கீலேயாத், பாசான் ஆகிய பிரதேசங்கள் அவர்களுக்குக் கிடைத்தன. இந்த நிலப்பங்கு மனாசேயின் மீதியாயிருந்த மக்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், சீகேம், எப்பேர், செமிதா ஆகியோரின் வம்சங்களுக்குச் சொத்துரிமையாகக் கிடைத்தது. இவர்களே வம்சங்களின்படி யோசேப்பின் மகனாகிய மனாசேயின் மற்ற ஆண் மக்கள்.
செலொப்பியாத்திற்கு மகன்கள் இல்லை, மகள்களே இருந்தனர், இவன் கீலேயாத்தின் மகனாகிய எப்பேரின் மகன், கீலேயாத் மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன், செலொப்பியாத்தின் மகள்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பனவாகும். அவர்கள் ஆசாரியனான எலெயாசாரிடமும், நூனின் மகனாகிய யோசுவாவிடமும், மற்றும் தலைவர்களிடமும் சென்று, “எங்கள் சகோதரர்கள் இடையே எங்களுக்கும் சொத்துரிமையாக நிலம் கொடுக்கப்படவேண்டும் என்று யெகோவா மோசேயிடம் கட்டளையிட்டார்” என்று கூறினார்கள். எனவே யோசுவா யெகோவாவின் கட்டளைப்படி அவர்களுக்கும், அவர்களின் தகப்பனின் சகோதரர்களுடன் சொத்துரிமை நிலத்தை வழங்கினான். எனவே யோர்தானின் கிழக்கே கீலேயாத், பாசான் என்னும் இடங்களுடன் இன்னும் பத்து நிலத்துண்டுகளை மனாசேயின் சந்ததியினர் பெற்றனர். ஏனெனில் மனாசேயின் மகள்கள், அவனுடைய மகன்களோடு சொத்துரிமைப் பங்கைப் பெற்றனர். கீலேயாத் நாடு மனாசேயின் வழித்தோன்றல்களின் மிகுதியானோருக்கு சொத்துரிமையாயிற்று.
மனாசேயினருக்குரிய நிலப்பரப்பு ஆசேரிலிருந்து சீகேமின் கிழக்கே உள்ள மிக்மேத்தா வரையும் பரந்திருந்தது. எல்லையானது அங்கிருந்து தெற்கு நோக்கி என் தப்புவாவின் நீரூற்றண்டை மக்கள் குடியிருந்த மலைகளையும் உள்ளடக்கிச்சென்றது. தப்புவாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமானது. ஆனால் மனாசேயின் எல்லையில் இருந்த தபுவாவின் நகரோ எப்பிராயீம் கோத்திரத்திற்குச் சொந்தமானது. அங்கிருந்து எல்லை தென்திசையாகப் போய் கானா கணவாயை அடைந்தது. எப்பிராயீமுக்குச் சொந்தமான பட்டணங்களும் மனாசேக்குச் சொந்தமான பட்டணங்களும் அருகேயிருந்தன. ஆனால் மனாசேக்குச் சொந்தமான நிலத்தின் எல்லை கணவாயின் வடக்கேபோய் மத்திய தரைக்கடலில் முடிவுற்றது. தென்புறத்தில் உள்ள நிலம் எப்பிராயீமுக்கும் வடபுறத்தில் உள்ள நிலம் மனாசேயிக்கும் சொந்தமானது. மனாசேயின் பிரதேசம் மத்திய தரைக்கடல்வரை இருந்தது. வடக்கே ஆசேரும் கிழக்கே இசக்காரும் அதன் எல்லைகளாய் இருந்தன.
இசக்கார், ஆசேரின் நிலப்பகுதிக்குள் பெத்ஷியான், இப்லேயாம் என்னும் இடங்களும், தோர், எந்தோர், தானாக், மெகிதோ பட்டணங்களின் மக்களும், அத்துடன் சுற்றுப்புறக் குடிருப்புகளும் மனாசேக்குச் சொந்தமானவை. மூன்றாவது பட்டணம் நாபோத் என அழைக்கப்பட்டது.
ஆயினும் மனாசேயின் சந்ததியினர் இந்த நகரங்களில் குடியேற முடியவில்லை. ஏனெனில் அங்கு வசித்த கானானியர் அவ்விடத்தில் தொடர்ந்து வசிக்க உறுதிபூண்டிருந்ததால், அவர்களால் இவர்களைத் துரத்த முடியவில்லை. ஆனாலும் இஸ்ரயேலர் வலிமையில் பெருகியபோது கானானியரை நாட்டைவிட்டு முற்றிலும் விரட்டாமல் அவர்களை வற்புறுத்தி கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்கள்.
யோசேப்பின் மக்கள் யோசுவாவிடம், “நீர் எங்களுக்குச் சொத்துரிமையான நிலத்தில் ஒரே ஒரு பங்கை மட்டும் சொத்துரிமையாக ஏன் தந்தீர்? யெகோவா எங்களை நிறைவாக ஆசீர்வதித்ததினால், நாங்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையாயிருக்கிறோம்” என்றார்கள்.
அதற்கு யோசுவா, “உங்கள் மக்களின் எண்ணிக்கை அதிகமெனின் எப்பிராயீமுக்கு அளிக்கப்பட்ட மலைநாடு உங்களுக்கு போதாததாய் இருப்பின், பெரிசியரும், ரெப்பாயீமியரும் வாழும் நாட்டில் உள்ள காடுகளை அழித்து, உங்களுக்குத் தேவையான நிலத்தை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றான்.
அதற்கு யோசேப்பின் மக்கள், “மலைநாடு எங்களுக்குப் போதாது. சமவெளியிலும், பெத்ஷியானிலும், அதின் குடியேற்றப் பகுதிகளிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் வாழும் கானானியர் எல்லோரிடமும் இரும்பு இரதங்கள் உண்டு” என்றனர்.
யோசுவா யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீம், மனாசே கோத்திரத்தாரிடம், “நீங்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்களாயும், அதிக வல்லமையுடையவர்களாயும் இருக்கிறீர்கள். உங்களுக்கு நிலத்தில் ஒரு பங்கு மாத்திரம் அல்ல. காடடர்ந்த மலைநாடுகளும் உங்களுடையதே. நீங்கள் காடுகளை அழித்து அதன் தூரமான எல்லைவரை உங்களுடையதாக்குங்கள். கானானியர் இரும்பு இரதங்களை உடைய வலிமை வாய்ந்தவர்களாய் இருப்பினும், அவர்களை விரட்டிவிட உங்களால் முடியும்” என்றான்.
மீதமுள்ள தேசத்தின் பங்கீடு
பின் இஸ்ரயேல் மக்கள் சீலோ என்னும் இடத்தில் ஒன்றுகூடி அங்கே சபைக் கூடாரத்தை அமைத்தார்கள். அந்த நாடு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, ஆனால் இஸ்ரயேலில் இன்னும் ஏழு கோத்திரங்கள் தங்கள் சொத்துரிமையைப் பெறாமல் இருந்தன.
எனவே யோசுவா இஸ்ரயேலரிடம் கூறியதாவது: “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்துள்ள நாட்டை, உங்கள் கைவசமாக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாமதிப்பீர்கள்? ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்றுபேரை நியமியுங்கள். நான் அவர்களை நாட்டைச் சுற்றிப்பார்த்து மதிப்பீடு செய்ய அனுப்புவேன். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்படவேண்டிய சொத்துரிமை அளவுப்படி அதை விவரமாய் எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பி வரவேண்டும். நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாகப் பிரிக்கவேண்டும். யூதா கோத்திரம் தென்பகுதியிலும், யோசேப்பின் குடும்பம் வடபகுதியிலும் தொடர்ந்து குடியிருக்கட்டும். நாட்டின் ஏழு பிரிவுகளின் விவரங்களையும் எழுதியபின் என்னிடம் கொண்டுவாருங்கள். நான் நமது இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போட்டு, உங்கள் பங்கைக் குறிப்பிடுவேன். லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.”
நாட்டை அளந்து பார்த்துப் பங்கிட அவர்கள் புறப்பட்டபோது யோசுவா அவர்களிடம், “நாட்டைச் சுற்றிப்பார்த்து அதன் விவரத்தை எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பிவாருங்கள். நான் சீலோவிலே யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்காக சீட்டுப்போடுவேன்” என்று அறிவுறுத்தினான். உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான்.
பென்யமீனின் பங்கு
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதலாவது சீட்டு விழுந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பின் பங்கு யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு இடையில் இருந்தது.
அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தான் நதியில் ஆரம்பித்து, எரிகோவின் வடமலைச் சாரலைக் கடந்து, மேற்கே உள்ள மலைநாட்டிற்குச் சென்று, பெத் ஆவென் பாலைவனத்தை வந்து சேர்ந்தது. அங்கிருந்து பெத்தேல் என்னும் லூஸின் தெற்கு மலைச்சரிவைக் கடந்து, பின்னர் கீழ் பெத் ஓரோனின் தெற்கே மலையில் அமைந்துள்ள அதரோத் ஆதாருக்குச் சென்றது.
அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை.
தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது. மேலும் இவ்வெல்லை ரெப்பா பள்ளத்தாக்கின் வடக்கே உள்ள, பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலையடிவாரத்தை அடைந்தது. அங்கிருந்து கின்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் நகர் அமைந்த மலைச்சாரலின் தென்புற வழியேசென்று, என்ரொகேலை அடைந்தது. அங்கிருந்து எல்லையானது வடக்கே வளைந்து, என்சேமேசுக்குத் திரும்பி அதும்மீம் ஏற்றத்தின் எதிரே உள்ள கெலிலோத்தை அடைந்து, “போகனின் கல்” என்னும் இடத்திற்குச்சென்றது. போகன் ரூபனின் மகன். அது தொடர்ந்து பெத் அரபாவின் வடக்கு மலைச்சரிவுக்குச்சென்று, கீழே அரபாவை நோக்கிச்சென்றது. பின்னர் பெத் ஓக்லாவின் வடக்கே மலைச்சரிவிலே சென்று, சவக்கடலின் வளைகுடாக்கடலில் முடிவடைந்தது. உப்புக்கடல் தெற்கே யோர்தான் நதியின் முகத்துவாரத்தில் இருந்தது. இது பென்யமீனின் தெற்கு எல்லை.
அவர்களுடைய கிழக்கு எல்லையாக யோர்தான் நதி அமைந்தது.
இவைகளே பென்யமீன் குடும்பங்களுக்குரிய சொத்துரிமையாய் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லை.
வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களாவன:
எரிகோ, பெத் ஓக்லா, எமேக் கேசீஸ், பெத் அரபா, செமராயீம், பெத்தேல், ஆவீம், பாரா, ஒப்ரா கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
கிபியோன், ராமா, பேரோத், மிஸ்பா, கெபிரா, மோத்சா, ரெக்கேம், இர்பெயேல், தாராலா, சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.
சிமியோனின் பங்கு
இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது. அப்பட்டணங்களாவன:
பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா, ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம், எல்தோலாத், பெத்தூல், ஓர்மா, சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா, பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.
மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும், அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது.
வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே. யூதாவுக்கு அளிக்கப்பட்ட பங்கு அவர்களுக்கு தேவையானதைவிட அதிகமாயிருந்தது. ஆதலால் சிமியோனின் சொத்துரிமை யூதாவின் பங்கில் இருந்து கொடுக்கப்பட்டது. எனவே யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளேயே சிமியோனியருக்கு சொத்துரிமைப் பங்கு அளிக்கப்பட்டது.
செபுலோனின் பங்கு
மூன்றாவது சீட்டு வம்சம் வம்சமாக செபுலோன் கோத்திரத்திற்கு விழுந்தது:
அவர்களுடைய சொத்துரிமையின் எல்லை சாரீத் வரை சென்றது. மேற்கே செல்கையில் அது மாராலா என்னும் இடத்திற்குச் சென்று பின் தாபெஷெத்தை தொட்டுச்சென்று யொக்கினேயாமுக்கு அருகே உள்ள கணவாய்வரை நீண்டிருந்தது. இந்த எல்லை சாரீத் பட்டணத்திலிருந்து கிழக்குப்பக்கமாகத் திரும்பி, சூரியன் உதிக்கும் திசை நோக்கி கிஸ்லோத் தாபோரின் நிலப்பரப்புக்குச் சென்றது. அங்கிருந்து தாபேராத்துக்கும் யப்பியா வரைக்கும் மேலே ஏறிச் சென்றது. தொடர்ந்து கிழக்கே காத் ஏபேர், ஏத் காத்சீன் வரை சென்று பின் ரிம்மோன் வழியாக நேயாவுக்குத் திரும்பியது. அவ்விடத்தின் எல்லை வடக்கே அன்னதோனுக்குச் சென்று இப்தாயேலின் பள்ளத்தாக்கிலே முடிவடைந்தது.
காத்தா, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் ஆகிய பன்னிரண்டு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இதனுள் அடங்கியிருந்தன.
இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களுமே செபுலோனுக்கு வம்சம் வம்சமாகக் கிடைத்த சொத்துரிமை.
இசக்காரின் பங்கு
நான்காவது சீட்டு வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுடைய நிலப்பரப்பில்
யெஸ்ரயேல், கெசுலோத், சூனேம், அபிராயீம், சீயோன், அனாகராத், ராபித், கிசோயோன், அபெத்ஸ், ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத் பாஸ்செஸ் ஆகிய பட்டணங்கள் உள்ளடங்கியிருந்தன.
அந்த எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேஷ் பட்டணங்களைத் தொட்டுச்சென்று யோர்தான் நதியில் முடிந்தது.
அங்கே பதினாறு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இப்பட்டணங்களும் இவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
ஆசேரின் பங்கு
ஐந்தாம் சீட்டு, வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுடைய நிலப்பரப்பு,
எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், அலம்மேலெக், ஆமாத், மிஷால், ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. மேற்கு எல்லையானது கர்மேலையும், சீகோர் லிப்னாத்தையும் தொட்டு, பின்பு எல்லை கிழக்கே பெத் தாகோனை நோக்கித் திரும்பி செபுலோன், இப்தாயேல் பள்ளத்தாக்கைத் தொட்டுச்சென்று வடக்கே பெத் எமேக் நெகியேல் வரை சென்றது. இந்த எல்லையில் இடப்புறமாய் காபூல் இருந்தது. அதோடு இது அப்தோன், ரேகோப், அம்மோன், கானா மற்றும் பெரிய சீதோன்வரை சென்றது. தொடர்ந்து இந்த எல்லை ராமாவை நோக்கி, பின் திரும்பி அரணிடப்பட்ட நகரான தீருவுக்குச் சென்றது. அங்கிருந்து ஒசாவை நோக்கித் திரும்பி அக்சீப், உம்மா, ஆப்பெக், ரேகோப் ஆகிய பிரதேசத்தில் உள்ள கடலில் முடிவுற்றது.
அங்கே இருபத்திரெண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை.
நப்தலியின் பங்கு
ஆறாவது சீட்டு வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்கு விழுந்தது.
அவர்களின் எல்லை ஏலேப்பிலும், சானானிமின் பெரிய மரத்தடியிலுமிருந்து ஆதமி நெகேப், யாப்னியேலைக் கடந்து லக்கூமை அடைந்து, யோர்தானில் முடிவடைந்தது. எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது.
அங்கிருந்த அரணிடப்பட்ட பட்டணங்களாவன: சித்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், ஆதமா, ராமா, ஆத்சோர், கேதேஸ், எத்ரேயி, என் ஆத்சோர் ஈரோன், மிக்தாலேல், ஒரேம், பெத் ஆனாத், பெத்ஷிமேஷ் ஆகியன.
அங்கே பத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
தாண் கோத்திரத்தாரின் பங்கு
ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை:
சோரா, எஸ்தாவோல், இர்ஷெமேஸ், சாலாபீன், ஆயலோன், இத்லா, ஏலோன், திம்னா, எக்ரோன், எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன், மேயார்கோன், ராக்கோன் யோப்பாவுக்கு எதிரே உள்ள பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
ஆனால் தாண் கோத்திரத்தாருக்கோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பைத் தமக்குரியதாக்கிக்கொள்வது கடினமாயிருந்தது. எனவே லெஷேம் என்னும் இடத்திற்குச் சென்று அதைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் குடிகளை தம் வாளுக்கு இரையாக்கி, அதில் தாங்கள் குடியேறினார்கள். அவர்கள் லெஷேமில் குடியேறி தங்கள் முற்பிதாவின் பெயரின்படி அதற்குத் தாண் என்று பெயரிட்டார்கள்.
இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
யோசுவாவின் பங்கு
இவ்வாறு நிலம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சொத்துரிமையாக வழங்கப்பட்டபின், இஸ்ரயேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவுக்குத் தங்கள் மத்தியில் சொத்துரிமையைக் யெகோவாவின் கட்டளைப்படி கொடுத்தார்கள். அவன் கேட்ட திம்னாத் சேராக் என்ற பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். இது எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. யோசுவா அவ்விடத்தில் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறினான்.
இவ்வாறு இந்த நிலப்பரப்புகளை ஆசாரியனான எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீட்டுப்போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் சீலோவின் சபைக்கூடார வாசலில் இவ்வாறு நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்கள் நாட்டைப் பங்கிட்டு முடித்தார்கள்.
அடைக்கலப் பட்டணங்கள்
பின்பு யெகோவா யோசுவாவிடம் கூறியதாவது: “நான் மோசேயின் மூலமாக உனக்குச் சொன்னபடியே அடைக்கலப் பட்டணங்களை நியமித்துக்கொள்ளும்படி இஸ்ரயேலருக்குச் சொல். ஒருவன் தற்செயலாகவோ, தவறுதலாகவோ ஒரு கொலையைச் செய்திருந்தால், செய்தவன் தன்னை இரத்தப்பழிவாங்க வருபவனிடமிருந்து தப்பி, அங்கே ஓடிப்போய் பாதுகாப்புப் பெறலாம். அவன் ஒரு அடைக்கலப் பட்டணத்திற்குத் தப்பி ஓடிப்போனால் அவன் பட்டண நுழைவாசலில் நின்று, தன் வழக்கை பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் சொல்லவேண்டும். அப்பொழுது அவர்கள் அவனைத் தங்கள் பட்டணத்துக்குள் அழைத்துச்சென்று, அவர்கள் மத்தியில் வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கொடுக்கவேண்டும். இரத்தப்பழி வாங்குபவன் துரத்திக்கொண்டு அங்கே வந்தால், வந்தவனிடம் குற்றம் சாட்டப்பட்டவனைப் பட்டணத்து மக்கள் ஒப்படைக்கக்கூடாது. ஏனெனில் அவன் தன் அயலானுக்குத் தவறுதலாகவும், முன்திட்டமிடாமலும், வெறுப்பின்றியும் இச்செயலைச் செய்திருக்கிறான். மக்கள் சமுதாயத்திற்கு முன்னே அவன் நியாயம் விசாரிக்கப்படும்வரை அக்காலத்தில் தலைமை ஆசாரியனாய்ப் பணிபுரிபவன் இறக்கும்வரை அவன் அப்பட்டணத்தில் தங்கவேண்டும். அதன்பின் அவன் விட்டுவந்த தன் பட்டணத்தில் உள்ள தன் சொந்த வீட்டிற்குத் திரும்பிச்செல்லலாம்.”
எனவே நப்தலி மலைநாட்டைச் சேர்ந்த கலிலேயாவிலுள்ள கேதேஸ் பட்டணத்தையும், எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள சீகேம் பட்டணத்தையும், யூதா மலைநாட்டிலுள்ள கீரியாத் அர்பா அதாவது எப்ரோன், பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள். யோர்தான் நதிக்குக் கிழக்கே ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமான சமபூமியில் இருந்த காடுகளிலுள்ள பேசேர் பட்டணத்தையும், காத் கோத்திரத்தாருக்குரிய கீலேயாத் பிரதேசத்தில் உள்ள ராமோத் பட்டணத்தையும், மனாசேயின் கோத்திரத்தாருக்குரிய பாசான் நாட்டில் கோலான் பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள். ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்களின் மத்தியில் வாழ்கின்ற அந்நியனோ தற்செயலாக ஒருவனைக் கொன்றிருந்தால், நியமிக்கப்பட்ட இந்த பட்டணங்களுக்கு ஓடிச்செல்லலாம். அவன் மக்கள் சமுதாயத்தின்முன் நியாய விசாரணைக்குக் கொண்டுவரப்படுமுன் இரத்தப்பழிவாங்க வருபவனால் கொல்லப்படக்கூடாது.
லேவியரின் பட்டணங்கள்
அதன்பின் லேவி கோத்திரத்தின் குடும்பத் தலைவர்கள், ஆசாரியன் எலெயாசாரையும், நூனின் மகனாகிய யோசுவாவையும், மற்றும் இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களையும் கானான் தேசத்தில் உள்ள சீலோ நகரில் சந்தித்தார்கள். அவர்கள், “யெகோவா மோசே மூலமாக நாங்கள் வசிப்பதற்குப் பட்டணங்களையும் எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் கொடுக்கவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்” என்று அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள்.
எனவே யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர், லேவியர்களுக்குத் தமது சொத்துரிமையில் இருந்து, பின்வரும் பட்டணங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள்.
முதலாவது சீட்டு வம்சம் வம்சமாக கோகாத்தியருக்கு விழுந்தது. ஆசாரியன் ஆரோனின் வழித்தோன்றிய லேவியருக்கு யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
கோகாத்தின் மற்ற வம்சங்களுக்கு, எப்பிராயீம், தாண், மனாசேயின் அரைக்கோத்திரம் ஆகிய வம்சங்களுக்கும் நியமித்த பகுதியிலிருந்து பத்துப் பட்டணங்கள் வழங்கப்பட்டன.
கெர்சோனின் வழித்தோன்றலுக்கு இசக்கார், ஆசேர், நப்தலி கோத்திரங்களிலும், பாசானில் தங்கிய மனாசேயின் அரைக் கோத்திரத்திலும் உள்ள வம்சங்களின் பங்கில் இருந்து பதின்மூன்று பட்டணங்கள் வழங்கப்பட்டன.
மெராரி சந்ததிகள் வம்சம் வம்சமாக ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களிலிருந்து பன்னிரண்டு பட்டணங்களைப் பெற்றார்கள்.
யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேல் மக்கள் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.
யூதா, சிமியோன் கோத்திரங்களின் பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட பெயர்களின்படி பட்டணங்களாவன: ஆரோனின் வழித்தோன்றல்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் இப்பட்டணங்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவர்கள் லேவி கோத்திரத்தில் கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்விதமாக இஸ்ரயேலர் யூதாவின் மலைநாட்டிலுள்ள எப்ரோனையும் அதாவது கீரியாத் அர்பா அதைச் சுற்றியிருந்த மேய்ச்சல் நிலத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். அர்பா என்பவன் ஏனாக்கியரின் முற்பிதா. ஆனால் அந்நகரைச் சுற்றியிருந்த வெளிநிலங்களையும், கிராமங்களையுமோ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்கள். இவ்வாறு ஆசாரியனான ஆரோனின் சந்ததிகளுக்கு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த எப்ரோனைக் கொடுத்தார்கள். லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா, ஓலோன், தெபீர், ஆயின், யுத்தா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களையும் அத்துடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தார்கள். யூதா, சிமியோன் கோத்திரத்திலிருந்து எல்லாமாக ஒன்பது பட்டணங்கள் வழங்கப்பட்டன.
பென்யமீன் கோத்திரத்தின் பங்கிலிருந்து
கிபியோன், கேபா, ஆனதோத், அல்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் கொடுத்தான்.
ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியருக்கு மொத்தம் பதின்மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
லேவியரான கோகாத்தின் வம்சத்தைச் சேர்ந்த பிறருக்கு எப்பிராயீம் கோத்திரத்தின் பங்கிலிருந்து பட்டணங்கள் வழங்கப்பட்டன.
எப்பிராயீம் மலைநாட்டில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு
அடைக்கலப் பட்டணமாயிருந்த சீகேம், கேசேர், கிப்சாயீம், பெத் ஓரோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
அதோடு தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து
எல்தெக்கே, கிபெத்தோன், ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நான்கு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து
தானா, காத்ரிம்மோன் ஆகிய இரு பட்டணங்களுடன் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றார்கள்.
மேற்கூறிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கோகாத்தியரின் வம்சங்களில் எஞ்சியோருக்கு வழங்கப்பட்டன.
லேவி கோத்திரத்தின் கெர்சோன் வம்சத்தினருக்கு
மனாசேயின் அரைக் கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான
கோலானும், பெயெஷ்தெராவுமான இரு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
இசக்கார் கோத்திரத்தின் பங்கிலிருந்து
கிசோயோன் தாபேராத், யர்மூத், என்கன்னீம் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
ஆசேர் கோத்திரத்தின் பங்கிலிருந்து
மிஷாயால், அப்தோன், எல்காத், ரேகோப் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
நப்தலி கோத்திரத்திலிருந்து
கலிலேய பிரதேசத்தில் உள்ள கொலைக்குற்றம் சாட்டப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கேதேஷ், அமோத்தோர், கர்தான் ஆகிய மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
கெர்சோனிய வம்சங்களுக்கு மேய்ச்சல் நிலங்களோடு வழங்கப்பட்ட பட்டணங்கள் எல்லாம் பதின்மூன்றாக இருந்தன.
மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச்
செபுலோன் கோத்திரத்திலிருந்து
யொக்னீம், கர்தா, திம்னா, நகலால் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
ரூபனின் கோத்திரத்திலிருந்து
பேசேர், யாகாசா, கெதெமோத், மேபாகாத் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
காத் கோத்திரத்திலிருந்து
கீலேயாத்திலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான ராமோத், மகனாயீம் எஸ்போன், யாசேர் ஆகிய நான்கு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
இஸ்ரயேலரிடம் இருந்த நிலப்பரப்பில், மேய்ச்சல் நிலத்தோடு லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை எல்லாமாக நாற்பத்தெட்டாக இருந்தது. வழங்கப்பட்ட பட்டணங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. எல்லாப் பட்டணங்களும் அவ்வாறே அமைந்திருந்தன.
இவ்விதமாய் யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த எல்லா நிலங்களையும் இஸ்ரயேலருக்கு வழங்கினார். அவர்கள் அந்த நிலத்தை உரிமையாக்கி அங்கே குடியேறினார்கள். யெகோவா இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர்களுக்கு நாற்புறமும் அமைதியைக் கொடுத்தார். அவர்களின் எதிரிகளில் ஒருவராயினும் அவர்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. ஏனெனில் எதிரிகள் அனைவரையும் யெகோவா அவர்களுடைய கையில் ஒப்படைத்தார். இஸ்ரயேலருக்கு யெகோவா வழங்கிய நல்வாக்குத்தத்தங்களில் ஒன்றாயினும் தவறிப்போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டன.
கிழக்குக் கோத்திரங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்புதல்
அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து, அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள். இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள். ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.
அதன்பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பினான், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள். மனாசேயின் அரைக் கோத்திரத்திற்கு மோசே பாசானில் நிலத்தைக் கொடுத்திருந்தான். மற்ற அரைக் கோத்திரத்திற்கு யோசுவா யோர்தான் நதியின் மேற்பகுதியில் அவர்களின் சகோதரர்களுடனே நிலம் கொடுத்தான். பின் யோசுவா அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை ஆசீர்வதித்து, “உங்கள் பெருகிய செல்வத்துடன் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகையான மந்தை, வெள்ளி, தங்கம், வெண்கலம், இரும்பு, ஏராளமான உடைகள் ஆகிய கொள்ளைப்பொருட்களை உங்கள் சகோதரர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுங்கள்” என்றான்.
எனவே ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோர் கானான் தேசத்தில் உள்ள சீலோ என்னும் இடத்தில் மற்ற இஸ்ரயேலரை விட்டுப்பிரிந்து தங்கள் சொந்த நாடான கீலேயாத்திற்குப் போனார்கள். இது யெகோவாவின் கட்டளைப்படி மோசேயினால் அவர்களுக்குச் சொத்துரிமையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோர் கானான் தேசத்திலே யோர்தான் நதிக்கு அருகேயுள்ள கெலிலோத்துக்கு வந்தபோது, யோர்தானுக்கு அருகே மிகப்பெரிய தோற்றமுடைய பலிபீடம் ஒன்றைக் கட்டினார்கள். இஸ்ரயேலருக்குரிய பகுதியில் யோர்தானுக்கு அருகேயுள்ள கானானின் எல்லையில் உள்ள கெலிலோத்தில் அவர்கள் பலிபீடத்தை எழுப்பினதை மற்ற இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர். அப்பொழுது இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவர்களுக்கெதிராக யுத்தம் புரிவதற்காக சீலோவிலே ஒன்றுதிரண்டது.
எனவே இஸ்ரயேலர் ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசை ரூபன், காத், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம் கீலேயாத்திற்கு அனுப்பினார்கள். அவனுடன் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவனாக இன்னும் பத்துத் தலைவர்களையும் அனுப்பினார்கள். அவர்கள் ஒவ்வொருவனும் இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுள் ஒரு குடும்பத் தலைவனாக இருந்தான்.
அவர்கள் கீலேயாத்திற்குப்போய் ரூபனியர், காத்தியர் மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம், “யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதும் சொல்கிறது என்னவென்றால்: ‘நீங்கள் எப்படி இஸ்ரயேலரின் இறைவனுக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்? இப்பொழுது நீங்கள் எப்படி யெகோவாவைவிட்டு வழிவிலகி அவருக்கு எதிராகக் கலகம்பண்ணி உங்களுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டலாம்? பேயோரின் மலையில் செய்த பாவம் எங்களுக்குப் போதாதோ?22:17 [எண். 25:1-9]; [சங். 106:28] அதனால் யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதின் மேலும் கொள்ளைநோய் வந்தபோதும்கூட, இன்றுவரை அப்பாவத்திலிருந்து நம்மை நாம் சுத்திகரித்துக் கொள்ளவில்லையே! இப்பொழுது நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிபோகிறீர்களா?
“ ‘இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தால், நாளை அவர் முழு இஸ்ரயேல் சமுதாயத்தின்மேலும் கோபம்கொள்வார் அல்லவா. உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம். முன்னர் சேராவின் மகனாகிய ஆகான் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் நம்பிக்கைத் துரோகமாக நடந்தபோது, இறைவனின் கோபம் இஸ்ரயேல் சமுதாயம் முழுவதன் மேலும் வரவில்லையோ?22:20 [யோசு. 7:1-26] அவனுடைய பாவத்திற்காக அவன் மட்டும் சாகவில்லையே’ ” என்றார்கள்.
இதற்கு மறுமொழியாக ரூபன், காத், மனாசேயின் அரைப்பங்கு கோத்திரத்தார் அனைவரும், அங்கு வந்த இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுக்கு கூறியதாவது: “வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, அவர் அறிவார். அதை இஸ்ரயேலரும் அறிந்துகொள்ளட்டும்! யெகோவாவுக்கு எதிரான கலகமாய், அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமையாய் இது இருந்தால் இன்று எங்களைத் தப்பவிடவேண்டாம். யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்காகவும், தகன காணிக்கைகளையோ, தானியக் காணிக்கைகளையோ, அல்லது சமாதான காணிக்கைகளையோ பலியிடுவதற்காகவும் நாங்கள் எங்கள் சொந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தால், யெகோவா தாமே எங்களிடம் கணக்குக் கேட்கட்டும்.
“இல்லை! உங்கள் சந்ததிகள், எங்கள் சந்ததிகளிடம் ஒரு நாளைக்கு, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ரூபனியரே! காத்தியரே! உங்களுக்கும் எங்களுக்கும் இடையே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார்; யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை’ என்று சொல்வார்கள் என்ற பயத்தினால் இதைச் செய்தோம். இவ்வாறு எங்களுடைய சந்ததிகள் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை நிறுத்திவிட உங்கள் சந்ததிகள் காரணமாயிருப்பார்கள்.
“அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல; மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.
“மேலும் நாங்கள், ‘அவர்கள் எப்பொழுதாவது எங்களிடமோ, அல்லது எங்கள் சந்ததிகளிடமோ இப்படிச் சொன்னால், நாங்கள் எங்கள் தந்தையர் கட்டிய யெகோவாவின் பலிபீடத்தின் மாதிரி அமைப்பைப் பாருங்கள்! இது தகன காணிக்கைகளுக்காகவோ அல்லது மற்ற பலிகளுக்காகவோ அல்ல; ஆனால் இது எங்களுக்கும், உங்களுக்கும் ஒரு சாட்சியாகவே கட்டப்பட்டிருக்கிறது என்று பதிலளிப்போம்’ என்று சொல்லி இதைக் கட்டினோம்.
“எங்கள் இறைவனாகிய யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தின் முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வதும் அவரைவிட்டு விலகுவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக. இதில் தகன காணிக்கைகளையும், தானியக் காணிக்கைகளையும், மற்றப் பலிகளையும் செலுத்துவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக என்போம்” என்றார்கள்.
அப்பொழுது ஆசாரியன் பினெகாசும், சமுதாயத் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களும் ரூபனியர், காத்தியர், மனாசேயினர் ஆகியோர் கூறியதைக் கேட்டதும், மனதில் திருப்தியடைந்தார்கள். அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
எலெயாசாரின் மகன் ஆசாரியன் பினெகாசும் தலைவர்களும் ரூபனியரையும், காத்தியரையும் சந்தித்துவிட்டு கீலேயாத்திலிருந்து கானானுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலரிடம் நடந்தவற்றை விவரித்துக் கூறினார்கள். அவர்கள் கூறியதைக் கேட்டு இஸ்ரயேலர் சந்தோஷப்பட்டு இறைவனுக்குத் துதி செலுத்தினார்கள். ரூபனியரும், காத்தியரும் வாழ்ந்த நாட்டிற்கு விரோதமாகப் படையெடுத்து, அதை அழிப்பதைப்பற்றி பின் ஒருபோதும் அவர்கள் பேசியதில்லை.
அப்பொழுது ரூபனியரும், காத்தியரும் அந்த பலிபீடத்திற்கு, “யெகோவாவே இறைவன் என்பதற்கு நமக்கு ஒரு சாட்சி” என்று பெயரிட்டார்கள்.
யோசுவாவின் இறுதி அறிவுரை
யெகோவா இஸ்ரயேலரைச் சுற்றியிருந்த அவர்களுடைய பகைவரிடமிருந்து அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்த நீண்டகாலத்திற்குபின், யோசுவா வயதுசென்று முதியவனாய் இருந்தான். அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரின் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் அழைத்து கூறியதாவது: “நான் வயதுசென்று முதியவனாகிவிட்டேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் நிமித்தம் இந்த நாடுகளுக்குச் செய்த எல்லாவற்றையும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் புரிந்தவர். வெற்றியடையாமல் மீதியாயிருக்கும் நாடுகளின் நாட்டை நான் உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எப்படி, சொத்துரிமையாகப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேற்கே மத்திய தரைக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் இடையே நான் வெற்றிகொண்ட நாடுகளின் நாட்டைப் பிரித்துக் கொடுத்ததுபோலவே, இதையும் நான் கொடுத்திருக்கிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள் வழியிலிருந்து துரத்திவிடுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அவர்களை துரத்தி, உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
“மிகவும் பலங்கொண்டிருங்கள்; இடப்புறமோ வலப்புறமோ சாயாமல், மோசேயினால் சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். உங்கள் மத்தியில் மீதியாயிருக்கும் இந்த பிற நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உறவுகொள்ளாதிருங்கள். அவர்களின் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடவோ, ஆணையிடவோ வேண்டாம். நீங்கள் அவற்றுக்குச் சேவை செய்யவோ, வணங்கவோ கூடாது. இன்றுவரை நீங்கள் செய்ததுபோலவே உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள்.
“இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான். ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள்.
“ஆனால் நீங்கள் வழிவிலகி, உங்கள் மத்தியில் வசிக்கும் பிற நாடுகளுக்குள் தப்பியவர்களுடன், நட்புகொண்டு, அவர்களுடன் கலப்புத்திருமணம் செய்யவோ, அவர்களுடன் உறவுகொள்ளவோ வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள்.
“இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான்.
உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல்
பின்பு யோசுவா இஸ்ரயேல் கோத்திரத்தார் எல்லாரையும் சீகேமில் கூடிவரச் செய்தான். அவர்களில் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோரை அவன் முன்னே வரும்படி அழைத்தான். அவர்கள் இறைவனுக்கு முன்பாக நின்றார்கள்.
அப்பொழுது யோசுவா மக்கள் அனைவருக்கும் கூறியதாவது, “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: முற்காலத்தில் உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் யூப்ரட்டீஸ் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் பிற தெய்வங்களை வணங்கினார்கள். ஆனால் நான் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமை யூப்ரட்டீஸ் நதியின் அப்பாலுள்ள நாட்டிலிருந்து தெரிந்தெடுத்து, கானான்நாடெங்கும் வழிநடத்தி, அவனுக்குப் பல வழித்தோன்றல்களைக் கொடுத்தேன். அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன், ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன். சேயீர் என்னும் மலைநாட்டை நான் ஏசாவுக்குக் கொடுத்தேன். ஆனால் யாக்கோபும் அவன் மகன்களும் எகிப்திற்குப் போனார்கள்.
“ ‘அதன்பின் நான் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, அங்கே நான் செய்த செயல்களினால் எகிப்தியரைத் துன்புறுத்தி உங்களை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தேன். அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர்கள் கடலண்டைக்கு வந்தார்கள். எகிப்தியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இரதங்களோடும், குதிரைகளோடும் செங்கடல்வரை துரத்தி வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
“ ‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள். அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான். ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன்.
“ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை24:12 திகில் [யாத். 23:28]. அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை. இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’
“இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.
அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார். அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.
அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார். அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான்.
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “இல்லை! நாங்கள் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்றார்கள்.
அதற்கு யோசுவா, “நீங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்வதைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்” என்றான்.
அதற்கு மக்களும், “ஆம், நாங்களே சாட்சிகள்,” என்றார்கள்.
“அப்படியானால், இப்பொழுதே உங்கள் மத்தியிலுள்ள அந்நிய தெய்வங்களை எறிந்துவிட்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் உள்ளங்களை ஒப்புக்கொடுங்கள்” என்று யோசுவா சொன்னான்.
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்து அவருக்குக் கீழ்படிவோம்” என்றார்கள்.
அந்நாளில் யோசுவா சீகேமிலே மக்களுக்காக ஒரு உடன்படிக்கையைச் செய்து அவர்களுக்குச் சட்டங்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தினான். இவற்றை யோசுவா இறைவனின் சட்ட புத்தகத்தில் எழுதிவைத்தான். பின்பு யெகோவாவின் பரிசுத்த இடத்திற்கு அருகேயுள்ள கருவாலி மரத்தின்கீழ் ஒரு பெரிய கல்லை நிறுத்தினான்.
அப்பொழுது அவன் எல்லா மக்களிடமும் கூறியதாவது: “இதோ பாருங்கள்; இந்தக் கல் நமக்கெதிரான சாட்சியாயிருக்கும். யெகோவா நமக்கு கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் இறைவனுக்கு உண்மையாயிராவிட்டால், இக்கல்லே உங்களுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும்” என்றான்.
அதன்பின் யோசுவா இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் சொத்துரிமை இடங்களுக்குப் போவதற்கு அனுப்பிவைத்தான்.
யோசுவாவின் மரணமும் அடக்கமும்
இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான். அவர்கள் காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் யோசுவாவுக்கு உரிமைச்சொத்தாகக் கிடைத்த, திம்னாத் சேராக் என்னும் இடத்தில் அவனை அடக்கம் செய்தார்கள்.
யோசுவாவின் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலர்கள் யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். அவனுக்குப்பின் யெகோவா இஸ்ரயேலருக்குச் செய்த அனைத்தையும் அனுபவத்தில் கண்ட சபைத்தலைவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும்கூட இஸ்ரயேலர் யெகோவாவுக்கே பணிசெய்தார்கள்.
எகிப்தில் இருந்து இஸ்ரயேலர் கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த நிலத்துண்டை ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுகளுக்கு யாக்கோபு வாங்கியிருந்தான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். இந்த நிலத்துண்டு யோசேப்பின் சந்ததிகளின் உரிமைச் சொத்தாகும்.
ஆரோனின் மகனாகிய எலெயாசார் இறந்தபோது, கிபியா என்னும் இடத்தில் அவன் அடக்கம் செய்யப்பட்டான். எப்பிராயீமின் மலைநாட்டில் இருக்கும் இந்த நிலம் பினெகாசின் மகனுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.