- Biblica® Open Indian Tamil Contemporary Version யோனா யோனா யோனா யோனா யோனா யோனா யெகோவாவைவிட்டு ஓடுதல் அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.” ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான். அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று. கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான். அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.” அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள். அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான். அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள். கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள். “என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான். ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள். அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது. இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள். யோனாவின் மன்றாட்டு ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான். யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான். அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன. ‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன். என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர். “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது. “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள். ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான். யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது. யோனா நினிவேக்குச் செல்லுதல் அதன்பின் இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை யோனாவுக்கு வந்தது: “நீ பெரிய நகரமான நினிவேக்குப் போய், நான் உனக்குக் கொடுக்கும் செய்தியை அங்கே அறிவி” என்றார். யோனா யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து நினிவேக்குப் போனான். நினிவே ஒரு மாபெரும் நகராயிருந்தது; அதைச் சுற்றி நடக்க மூன்று நாட்கள் எடுக்கும். முதலாம் நாள் யோனா பட்டணத்துக்குள்ளே நடக்கத்தொடங்கி, “நினிவே இன்னும் நாற்பது நாட்களில் கவிழ்க்கப்படும்” என அறிவித்தான். நினிவேயின் மக்களோ இறைவனின் செய்தியை விசுவாசித்தார்கள். அவர்கள் எல்லோரும் உபவாச நாளை அறிவித்து சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லோரும் துக்கவுடை உடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் அரசனுக்கு எட்டியவுடனே, அவன் தன் அரியணையைவிட்டு எழுந்து, தன் அரச உடையைக் களைந்து, துக்கவுடை உடுத்தி புழுதியில் உட்கார்ந்தான். அதன்பின் அரசன் நினிவேயில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தான். “அரசனும், அவருடைய உயர்குடி மக்களும் பிறப்பித்த ஆணையாவது: “மனிதர் யாவரும், அத்துடன் மிருகமோ, மாட்டு மந்தையோ, ஆட்டு மந்தையோ எவையும் ஒன்றையும் சுவைத்துப் பார்க்கக்கூடாது. சாப்பிடவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் மிருகங்களும் துக்கவுடைகளினால் மூடப்படவேண்டும். ஒவ்வொருவரும் அவசரமாய் இறைவனைக் கூப்பிடட்டும். அவர்கள் தங்களுடைய தீமையான வழிகளையும் வன்முறையையும் விட்டுத் திரும்பட்டும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை, நாம் அழிந்துபோகாதபடி இறைவன் மனமிரங்கி, கருணைகொண்டு, தம்முடைய கடுங்கோபத்தை விட்டு திரும்பக்கூடும்.” இறைவன் அவர்கள் செய்தவற்றையும், எப்படி அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகினார்கள் என்பதையும் கண்டார். அப்பொழுது அவர் கருணைகொண்டு, அவர்கள்மேல் கொண்டுவரப் பயமுறுத்திய அந்த அழிவை, அவர்கள்மேல் கொண்டுவரவில்லை. யெகோவாவின் இரக்கமும் யோனாவின் கோபமும் ஆனால் யோனாவோ அதிருப்தியடைந்து கோபங்கொண்டான். அவன் யெகோவாவிடம், “யெகோவாவே இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன். கோபிக்கத் தாமதிப்பவர், அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனமிரங்குகிற இறைவன் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுதும், யெகோவாவே, என் உயிரை எடுத்துவிடும், நான் வாழ்வதைவிட சாவது மேலானது. ஏனெனில் நான் நினிவேயின் அழிவைக்குறித்து இறைவாக்குரைத்திருக்கிறேன்” என மன்றாடினான். ஆனால் யெகோவா அவனிடம், “நீ கோபமடைவது சரியானதோ?” எனக் கேட்டார். யோனா வெளியே போய் பட்டணத்தின் கிழக்கே ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் தனக்கென ஒரு குடிசையைப் போட்டு, அதன் நிழலில் அமர்ந்து அந்தப் பட்டணத்திற்குச் சம்பவிக்கப் போகிறதைப் பார்ப்பதற்காக அங்கு காத்திருந்தான். அப்பொழுது யெகோவாவாகிய இறைவன், யோனாவுக்கு மேலாக ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கப்பண்ணி, அதை வளரச்செய்தார். அது யோனாவுக்கு மேலாக வளர்ந்து, படர்ந்து அவனுக்கு நிழல் கொடுத்து, அவனுடைய கஷ்டத்தை நீக்கியது. யோனா அந்த ஆமணக்குச்செடியைக் குறித்து மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் மறுநாள் அதிகாலையில் இறைவன் ஒரு புழுவை அனுப்பினார், அது அந்த ஆமணக்குச்செடி முழுவதையும் அரித்ததினால் அது வாடிப்போயிற்று. சூரியன் உதித்து மேலே எழும்பியபோதோ, இறைவன் கடுஞ்சூடான கொண்டற்காற்றை அனுப்பினார், உச்சிவெயில் யோனாவின் தலையைச் சுட்டதினால், அவன் மிகவும் சோர்வுற்றுத் தளர்ந்துபோனான். “வாழ்வதைவிட எனக்கு சாவதே மேல்” எனக் கூறினான். ஆனால் இறைவன் யோனாவிடம், “இந்த ஆமணக்குச்செடிக்கு ஏற்பட்டதைப் பற்றி நீ கோபமடைவது சரியானதோ?” என்றார். அதற்கு அவன், “ஆம், சாகுமளவுக்கு எனக்குக் கோபம் உண்டு” என்றான். அதற்கு யெகோவா, “நீ அந்த ஆமணக்குச்செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் தானாகவே முளைத்து, ஒரே இரவில் அது செத்துப்போயிற்று. அதைக்குறித்து நீ கவலைப்படுகிறாயே. ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசங்கூட தெரியாத, இலட்சத்து இருபதாயிரம்பேருக்கும் அதிகமான மக்கள் நினிவேயில் இருக்கிறார்கள். ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் அங்கு இருக்கின்றன. அந்த பெரிய பட்டணத்தைக் குறித்து நான் அக்கறைகொள்ள வேண்டாமோ?” என்று கேட்டார்.