- Biblica® Open Indian Tamil Contemporary Version
யோபு
யோபுவின் சரித்திரம்
யோபு
யோபு
யோபுவின் சரித்திரம்
அறிமுகம்
ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்றொரு மனிதன் வாழ்ந்தான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்தான். அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் செம்மறியாடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஜோடி ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும் இருந்தன, அநேகம் வேலைக்காரர்களும் இருந்தார்கள். கிழக்குப் பகுதியில் இருந்த மக்கள் எல்லோரிலும் யோபு மிக முக்கியமான மனிதனாய் இருந்தான்.
அவனுடைய மகன்கள் ஒவ்வொருவரும், தன்தன் வீட்டில் முறையே விருந்து கொடுப்பது வழக்கம். அத்துடன் தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் விருந்துக்கு அழைப்பார்கள். ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்தவுடன் யோபு, “என் பிள்ளைகள் ஒருவேளை தங்கள் இருதயங்களில் பாவம் செய்து, இறைவனைத் தூஷித்திருக்கலாம்” என நினைத்து அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவான். அதிகாலையில் ஒவ்வொருவருக்காகவும் தகனபலிகளையும் செலுத்துவான். இவ்வாறு செய்வது யோபுவின் வழக்கமான நடைமுறையாய் இருந்தது.
ஒரு நாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார்.
சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.
அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எனது அடியவன் யோபுவைக் கவனித்தாயா? அவனைப்போல் பூமியில் ஒருவனும் இல்லை. அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடக்கிறவனுமாய் இருக்கிறான்” என்றார்.
சாத்தான் யெகோவாவுக்குப் பதிலாக, “யோபு வீணாகவா இறைவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உள்ள எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? நீர் அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்திருக்கிறீர்; அதினால் அவனுடைய ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் நாட்டில் பெருகியிருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது நீர் உமது கரத்தை நீட்டி அவன் வைத்திருக்கும் எல்லாவற்றையும் அடியும். அப்பொழுது நிச்சயமாக அவன் உமது முகத்துக்கு நேராகவே உம்மைச் சபிப்பான்” என்றான்.
அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இதோ, அவனிடத்தில் இருப்பதெல்லாம் உன் கையிலிருக்கின்றன; ஆனால் அவனை மட்டும் தொடாதே” என்றார்.
உடனே சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று வெளியேறினான்.
ஒரு நாள் யோபுவின் மகன்களும், மகள்களும், தங்கள் மூத்த சகோதரனுடைய வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தூதுவன் யோபுவிடம் வந்து, “உமது எருதுகள் உழுது கொண்டிருந்தன; அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வேளையில் சபேயர் வந்து தாக்கி அவற்றைக் கொண்டுபோய்விட்டார்கள்; அத்துடன் உமது பணியாட்களையும் வாளால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.
அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னொரு தூதுவன் வந்து, “ஆகாயத்தில் இருந்து இறைவனின் அக்கினி விழுந்து உமது செம்மறியாடுகளையும் பணியாட்களையும் எரித்துப்போட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேறொரு தூதுவன் வந்து, “கல்தேயர் மூன்று கூட்டமாக வந்து, உமது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வேலையாட்களையும் வாள் முனையில் வீழ்த்தினர், நான் ஒருவன் மட்டுமே தப்பி இதை உம்மிடம் சொல்லவந்தேன்” என்றான்.
அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னுமொரு தூதுவன் வந்து, “உமது மகள்களும், மகன்களும் அவர்களுடைய மூத்த சகோதரன் வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென வனாந்திரத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி, வீட்டின் நான்கு மூலைகளையும் மோதியடித்தது. வீடு அவர்கள்மேல் விழுந்ததால் அவர்கள் இறந்துபோனார்கள். நான் மட்டும் தப்பி இதை உமக்குச் சொல்லவந்தேன்” என்றான்.
அப்பொழுது யோபு எழுந்து, துக்கத்தில் தன் மேலாடையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கி சொன்னதாவது:
“என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்;
நிர்வாணியாகவே திரும்புவேன்.
யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்;
யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக.”
இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.
இன்னொருநாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான். அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?”
எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.
பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார்.
சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான். ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான்.
அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார்.
எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான். யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள்.
அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான்.
இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை.
யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள். அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள். அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
யோபு பேசுதல்
அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான், யோபு சொன்னதாவது:
“நான் பிறந்த நாளும்,
‘ஒரு ஆண் குழந்தை உற்பத்தியானது!’ என்று சொல்லப்பட்ட இரவும் அழியட்டும்.
அந்த நாள் இருளடையட்டும்;
உன்னதத்தின் இறைவன் அதைக் கவனத்தில் கொள்ளாதிருக்கட்டும்;
அதில் ஒளி பிரகாசியாதிருக்கட்டும்.
அந்த நாளை இருளும்,
நிழலும் ஒருமுறை பற்றிக்கொள்ளட்டும்;
மேகம் அதின்மேல் மூடிக்கொள்ளட்டும்;
மந்தாரம் அதின் வெளிச்சத்தை மூழ்கடிக்கட்டும்.
அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக;
வருடத்தின் நாட்களில் அது சேர்க்கப்படாத நாளாகவும்,
மாதங்களிலும் குறிக்கப்படாமலும் போவதாக.
அந்த இரவு பாழாவதாக;
அதில் மகிழ்ச்சியின் சத்தம் எதுவும் கேளாதிருக்கட்டும்.
நாட்களைச் சபிக்கிறவர்களும், லிவியாதான் என்னும் பெரிய பாம்பை,
எழுப்புகிறவர்களும் அதைச் சபிக்கட்டும்.
அந்த நாளின் விடியற்கால நட்சத்திரங்கள் இருளடையட்டும்;
பகல் வெளிச்சத்திற்காக அது வீணாய்க் காத்திருக்கட்டும்;
அது அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைக் காணாதிருக்கட்டும்.
ஏனெனில், அந்த நாள் என் கண்களில் இருந்து கஷ்டத்தை மறைக்காமலும்,
என் தாயின் கருப்பையை அடைக்காமலும் போயிற்றே.
“பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை?
நான் கருப்பையில் இருந்து வெளியே வரும்போதே ஏன் சாகவில்லை?
என்னை ஏற்றுக்கொள்ள மடியும்,
எனக்குப் பால் கொடுக்க மார்பகங்களும் ஏன் இருந்தன?
அவ்வாறு இல்லாதிருந்தால்,
நான் அமைதியாய், இளைப்பாறுவேனே!
இப்பொழுது பாழாய்க்கிடக்கும் இடங்களில் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிய
பூமியின் அரசர்களோடும், ஆலோசகர்களோடும்,
பொன்னை உடையவர்களும்,
தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பினவர்களுமான ஆளுநர்களோடும் நான் இளைப்பாறுவேனே.
அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும்,
பகல் வெளிச்சத்தைக் காணாத பாலகனைப் போலவும் நான் ஏன் தரையில் புதைக்கப்படவில்லை?
கொடியவர்கள் அங்கே கலகத்திலிருந்து ஓய்ந்திருப்பார்கள்;
சோர்வுற்றோர் அங்கே இளைப்பாறுவார்கள்.
கைதிகள்கூட அங்கே சுகம் அனுபவிப்பார்கள்;
அடிமைகளை நடத்துபவர்களின் சத்தத்தை இனி அவர்கள் கேட்பதில்லை.
அங்கே சிறியவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள்;
அத்துடன் அடிமையும் தனது தலைவனிடமிருந்நு விடுதலையாகிறான்.
“அவலத்தில் மூழ்கியிருப்பவனுக்கு வெளிச்சம் எதற்கு,
உள்ளத்தில் கசப்பு உள்ளவனுக்கு வாழ்வு எதற்கு?
மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும்,
அடையாதவர்களுக்கு வாழ்வு ஏன்?
அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது,
மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருப்பார்களா?
இறைவனால் நெருக்கப்பட்டு,
அவன் போகும் பாதை மறைக்கப்பட்ட,
மனிதனுக்கு வாழ்வு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது?
பெருமூச்சே எனது உணவு;
என் கதறுதல் தண்ணீராய்ப் புரண்டோடுகிறது.
நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது;
நான் எதற்கு அஞ்சினேனோ, அது எனக்கு நிகழ்ந்தது.
எனக்கு சமாதானமோ, அமைதியோ,
இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”
எலிப்பாஸ் பேசுதல்
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால்,
நீ பொறுமையாய் இருப்பாயோ?
ஆனால் யாரால்தான் பேசாதிருக்க முடியும்?
நீ அநேகருக்கு புத்தி சொல்லி,
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய்.
தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன;
தள்ளாடிய முழங்கால்களை நீ உறுதிபடுத்தியிருக்கிறாய்.
இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்;
அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய்.
உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும்,
குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ?
குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ?
நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ?
என இப்பொழுது யோசித்துப்பார்.
தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள்,
அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து,
அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம்,
ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன.
சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும்,
சிங்கக் குட்டிகளோ சிதறிப்போகும்.
“இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது,
அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது.
மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது,
இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில்,
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது,
என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன.
அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு
முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது.
ஆவி நின்றது,
அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.
ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது,
அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்:
‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ?
தன்னைப் படைத்தவரைவிட அதிக தூய்மையாய் இருப்பானோ?
இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார்,
அவர் தன் தூதர்களிலும் குறைகண்டிருக்கிறார்.
அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு,
களிமண் வீட்டில் வாழ்பவர்களும்,
பூச்சிபோல் நசுக்கப்படுகிறவர்களுமாகிய மனிதரின் குறையை அவர் காணாமலிருப்பாரோ?
அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும்,
கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள்.
அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு,
அவை ஞானமில்லாமல் சாவதில்லையா?’
“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்?
பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?
கோபம் மூடனைக் கொல்லும்,
பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.
மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன்,
ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்,
வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.
பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை
முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்;
பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.
ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை;
தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல,
மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
“ஆனாலும் நான், இறைவனைத் தேடி,
அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
அவர் ஆராய முடியாத அதிசயங்களையும்,
கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே;
நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி,
துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி,
அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்,
தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்;
இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.
இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து,
வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு,
அநீதி தன் வாயை மூடும்.
“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.
அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்;
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்;
அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
பஞ்சத்தில் சாவிலிருந்தும்
யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.
தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்;
பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.
அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்;
நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய்,
காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்;
உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய்.
உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.
ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல்,
உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம்.
நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”
யோபு பதிலளித்தல்
யோபு மறுமொழியாக சொன்னது:
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு
நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்!
அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்;
ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே.
எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன,
என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது;
இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.
தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ?
தீனி இருக்கும்போது எருது கதறுமோ?
சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ?
முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ?
இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது;
நான் அதைத் தொட மறுக்கிறேன்.
“நான் வேண்டிக்கொள்வதையும்,
நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும்.
இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும்,
தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்!
இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்;
எனது முடிவில்லாத வேதனையிலும்
பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை.
“நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது?
நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன?
ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ?
எனது சதை வெண்கலமோ?
எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ?
வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.
“எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய
பயத்தைக் கைவிட்ட போதிலும்,
அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.
ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும்
பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள்.
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும்.
ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி,
வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன.
வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி;
பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன.
தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும்
தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்;
அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள்.
இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்;
என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ,
உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ,
என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ,
கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா?
“எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்;
நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள்.
நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன!
ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன?
நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ?
மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ?
அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்;
உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.
“ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள்.
உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா?
போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்;
பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.
என் உதடுகளில் அநீதி உண்டோ?
என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ?
“பூமியில் வாழ்வது மனிதனுக்கு போராட்டந்தானே?
அவனுடைய நாட்கள் கூலிக்காரனின் நாட்களைப் போன்றதல்லவா?
ஒரு வேலையாள் மாலை நிழலுக்கு ஏங்குவது போலவும்,
கூலியாள் தன் கூலிக்காக காத்திருப்பது போலவும்,
பயனற்ற மாதங்களும்,
துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன.
நான் படுக்கும்போது, ‘எழும்ப எவ்வளவு நேரமாகும்?’ என எண்ணுகிறேன்;
இரவு நீண்டுகொண்டே போகிறது, நானோ விடியும்வரை புரண்டு கொண்டிருக்கிறேன்.
என் உடல் புழுக்களினாலும் புண்களின் பொருக்குகளினாலும் மூடப்பட்டிருக்கிறது,
எனது தோல் வெடித்துச் சீழ்வடிகிறது.
“நெய்கிறவர்களின் நாடாவைவிட என் நாட்கள் வேகமாய் போகின்றன;
அவை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமலேயே முடிவடைகின்றன.
என் இறைவனே, என் வாழ்வு ஒரு சுவாசம்தான் என்பதை நினைவுகூரும்;
என் கண்கள் இனி ஒருபோதும் சந்தோஷத்தைக் காண்பதில்லை.
இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை;
நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன்.
மேகம் கலைந்து போவதுபோல்,
பாதாளத்திற்குப் போகிறவனும் திரும்பி வருகிறதில்லை.
அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை.
“ஆதலால் நான் இனி அமைதியாய் இருக்கமாட்டேன்;
எனது ஆவியின் வேதனையினால் நான் பேசுவேன்,
எனது ஆத்தும கசப்பினால் நான் முறையிடுவேன்.
நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா?
அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா?
என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
என் படுக்கையில் எனக்கு அமைதி கிடைக்கும் என்றும் நான் நினைத்தாலும்,
நீர் கனவுகளால் என்னைப் பயமுறுத்தி,
தரிசனங்களால் என்னைத் திகிலடையச் செய்கிறீர்.
இவ்வாறாக நான் என் உடலில் வேதனைப்படுவதைப் பார்க்கிலும்,
குரல்வளை நெரிக்கப்பட்டு சாவதை விரும்புகிறேன்.
நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்;
என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை,
என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை.
“நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும்,
அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும்,
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
ஒவ்வொரு வினாடியும் அவனைச் சோதித்தறிவதற்கும் அவன் யார்?
நீர் உமது பார்வையை என்னைவிட்டு ஒருபோதும் அகற்றமாட்டீரோ?
ஒரு நொடிப்பொழுதேனும் என்னைத் தனிமையில் விடமாட்டீரோ?
மானிடரைக் காப்பவரே,
நான் பாவம் செய்திருந்தால், உமக்கெதிராய் நான் செய்தது என்ன?
நீர் என்னை உமது இலக்காக வைத்திருப்பது ஏன்?
நான் உமக்குச் சுமையாகிவிட்டேனா?
நீர் ஏன் என் குற்றங்களை அகற்றவில்லை?
என் பாவங்களை ஏன் மன்னிக்கவில்லை?
இப்பொழுதே நான் இறந்து தூசியில் போடப்படுவேன்.
நீர் என்னைத் தேடும்போது, நான் இருக்கமாட்டேன்.”
பில்தாத் பேசுதல்
அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
“நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்?
உன் வார்த்தைகள் சீற்றமாய் வீசும் காற்றைப்போல் இருக்கின்றன.
இறைவன் நீதியைப் புரட்டுவாரோ?
எல்லாம் வல்லவர் நியாயத்தைப் புரட்டுவாரோ?
உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது,
அவர்களின் பாவத்தின் தண்டனைக்கு அவர்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
நீ இறைவனை நோக்கிப்பார்த்து,
எல்லாம் வல்லவரிடம் மன்றாடுவாயானால்,
நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால்,
இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து,
உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார்.
உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும்,
உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும்.
“முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து,
அவர்கள் முற்பிதாக்கள் கற்றுக்கொண்டதைக் கேட்டுப்பார்.
நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்;
பூமியில் நமது நாட்கள் நிழலாய்த்தான் இருக்கின்றன.
அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா?
அவர்கள் தாங்கள் விளங்கிக்கொண்டதிலிருந்து உனக்கு விளக்கமளிக்கமாட்டார்களா?
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?
தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும்,
மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன.
இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்;
இறைவனை மறுதலிப்போரின் நம்பிக்கையும் அப்படியே அழிந்துபோகும்.
அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை;
அவன் சிலந்தி வலைகளிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்;
அவன் அதைப் பிடித்துத் தொங்கினாலும் அது அவனைத் தாங்காது.
அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்;
அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து,
தன் வேர்களினால்
கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது.
அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது
அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும்.
அதின் உயிர் வாடிப்போகிறது,
அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன.
“இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்;
தீமை செய்பவர்களின் கைகளைப் பலப்படுத்தவும் மாட்டார்.
அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும்,
உன் உதடுகளை மகிழ்ச்சியின் சத்தத்தினாலும் நிரப்புவார்.
உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்,
கொடியவர்களின் கூடாரங்கள் இல்லாதொழிந்து போகும்.”
யோபு பேசுதல்
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன்.
மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால்,
அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர்.
அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்;
அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின்,
இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்;
நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
அவர் தனிமையாகவே வானங்களை விரித்து,
கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும்,
தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும்
அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது;
அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்?
‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை;
ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும்
அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்?
அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது;
எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும்,
என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
அவர் என்னைப் புயலினால் தாக்குவார்;
காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
அவர் என்னைத் திரும்பவும்
மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர்.
நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்;
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
“நான் குற்றமற்றவன்,
என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை;
என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன்,
‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது,
அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
நாடு கொடியவர்களின் கையில் விழும்போது,
அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார்.
அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன;
அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும்,
தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’
என்று சொன்னாலும்,
நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்;
நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க,
ஏன் வீணாய் போராட வேண்டும்?
நான் என்னை பனிநீரினால் கழுவினாலும்,
என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர்.
அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும்
அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும்,
எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற
ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே;
அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்,
ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.
“நான் என் வாழ்வை வெறுக்கிறேன்;
அதினால் எனது குற்றச்சாட்டைத் தாராளமாகச் சொல்வேன்,
எனது ஆத்துமக் கசப்பைப் பேசுவேன்.
நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும்,
எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன்.
கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு,
உமது கைகளினால் நீர் படைத்த
என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ?
உமக்கு மானிடக் கண்கள் உண்டோ?
நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ?
உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும்,
உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ?
அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்?
எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்?
நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும்,
உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும்.
“உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன.
இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ?
களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும்.
இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ?
நீர் என்னைப் பால்போல வார்த்து
வெண்ணெய்க் கட்டிபோல உறையச் செய்தீரல்லவோ?
தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி,
எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ?
நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர்,
உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர்.
“ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே,
இது உமது மனதில் இருந்தது என்பதை நான் அறிவேன்.
நான் பாவம்செய்தால், நீர் என்னைக் கவனித்து,
என் குற்றங்களைத் தண்டிக்காமல் விடமாட்டீர் என நான் அறிந்திருக்கிறேன்.
நான் குற்றவாளியாய் இருந்தால் எனக்கு ஐயோ கேடு!
நான் குற்றமற்றவனாய் இருந்தாலும் என்னால் தலைதூக்க முடியாது.
ஏனெனில், நான் அவமானத்தால் நிறைந்து,
வேதனையில் அமிழ்ந்து போயிருக்கிறேன்.
நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து,
திகிலூட்டும் வல்லமையைக் காண்பிக்கிறீர்.
நீர் எனக்கெதிராக புதிய சாட்சிகளைக் கொண்டுவந்து,
என்மேலுள்ள உமது கோபத்தை அதிகரிக்கிறீர்,
அலைமேல் அலையாக உமது படைகள் எனக்கு விரோதமாய் வருகின்றன.
“அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்?
யாரும் என்னைப் பார்க்குமுன் நான் இறந்திருக்கலாமே.
நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்;
கருவறையிலிருந்து கல்லறைக்கே போயிருக்கலாம்!
என் வாழ்நாட்கள் முடிகிறது,
நான் மகிழ்ந்திருக்கும்படி சில மணித்துளிகள் நீர் விலகியிரும்.
பின்னர், மந்தாரமும் மரண இருளும் சூழ்ந்த,
போனால் திரும்பி வரமுடியாத நாட்டிற்குப் போவேன்.
மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை,
ஒளியும் இருளாய்த் தோன்றும்.”
சோப்பார்
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது:
“இந்த வார்த்தைகளுக்கு யாராவது பதில்சொல்ல வேண்டாமா?
அதிகப் பேச்சினால் ஒருவன் நீதிமானாக முடியுமா?
உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ?
நீ கேலி செய்யும்போது யாரும் உன்னைக் கண்டிக்கமாட்டார்களோ?
நீ இறைவனிடம், ‘என்னுடைய நம்பிக்கைகள் மாசற்றவை;
நான் உமது பார்வையில் தூய்மையானவன்’ என்று சொல்கிறாய்.
இறைவன் உன்னோடு பேசினால் நலமாயிருக்கும்,
அவர் உனக்கு விரோதமாக,
ஞானத்தின் மறைபொருட்களை உனக்கு வெளிப்படுத்தினால் நல்லது;
ஏனெனில் மெய்ஞானம் இருபக்கங்களைக் கொண்டது.
இறைவன் உனது பாவங்களில் சிலவற்றைக்கூட மறந்துவிட்டார் என்பதை அறிந்துகொள்.
“இறைவனின் மறைபொருட்களின் ஆழத்தை உன்னால் அறியமுடியுமோ?
எல்லாம் வல்லவரின் எல்லைகளை ஆராய உன்னால் முடியுமோ?
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்?
அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்?
அவைகளின் அளவு பூமியைவிட நீளமானவை;
கடலைவிட அகலமானவை.
“அவரே வந்து உன்னைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்தைக் கூட்டினால்,
யாரால் அவரை எதிர்த்து நிற்கமுடியும்?
ஏமாற்றுகிற மனிதரை நிச்சயமாய் அவர் அறிவார்;
தீமையைக் காணும்போது அவர் கவனியாமல் இருப்பாரோ?
ஒரு காட்டுக் கழுதைக்குட்டி எப்படி மனிதனாகப் பிறக்க முடியாதோ,
அப்படியே பகுத்தறிவில்லாத ஒருவனும் ஞானமுள்ளவனாகமாட்டான்.
“அப்படியிருந்தும் உன் உள்ளத்தில் அவரிடம்
பயபக்தியாயிருந்து உன் கைகளை அவரிடத்திற்கு நீட்டி,
உன் கையிலுள்ள பாவத்தை விலக்கிவிட்டு,
உன் வீட்டில் தீமை குடிகொள்ளாமல் தடைசெய்தால்,
நீ உன் முகத்தை வெட்கமின்றி உயர்த்தி,
பயமின்றி உறுதியாய் நிற்பாய்.
நீ உன் தொல்லையை மறந்துவிடுவாய்,
கடந்துபோன தண்ணீரைப்போல அது உன் ஞாபகத்தில் இருக்கும்.
அப்பொழுது வாழ்க்கை நண்பகலைவிட வெளிச்சமாயிருக்கும்,
இருள் காலையைப்போல மாறும்.
நம்பிக்கை இருப்பதினால் உறுதிகொள்வீர்,
சுற்றிலும் பார்த்து, பாதுகாப்பாக இளைப்பாறுவாய்.
யாரும் உன்னைப் பயமுறுத்தாமல் நீ படுத்திருப்பாய்;
அநேகர் உன் தயவை தேடிவருவார்கள்.
ஆனால் கொடியவர்களின் கண்கள் மங்கிப்போகும்,
அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள்;
அவர்களின் நம்பிக்கை மரணமே.”
யோபு
பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை.
ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு;
நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல;
இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்;
நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும்,
என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்;
அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன;
தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும்,
இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும்,
ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.
அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
யெகோவாவின் கரமே இதைச் செய்தது
என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும்,
எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
நாவு உணவை ருசிப்பதுபோல,
காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
முதியோரிடத்தில் ஞானம் இருக்கும்.
வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன;
ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
அவர் இடித்தால் கட்டமுடியாது;
அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது;
அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
பெலமும் வெற்றியும் அவருக்குரியன;
ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்;
நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து,
அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
அவர் ஆசாரியர்களை நீக்கி,
நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்;
முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி
பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்;
இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்;
மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்;
பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்;
வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.
“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது,
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்;
நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல.
ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும்,
இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன்.
எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்;
நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.
நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால்,
அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்;
என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ?
அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?
அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ?
இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ?
அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ?
மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும்,
அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார்.
அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ?
அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ?
உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்;
உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
“பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்;
அதின்பின் எனக்கு வருவது வரட்டும்.
ஏன் நான் என்னையே இடரில் மாட்டி,
உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்;
ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன்.
இது என் விடுதலைக்குக் காரணமாகும்,
இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான்.
நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்;
நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
எனது வழக்கு ஆயத்தம்,
நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும்.
எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்?
அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும்,
அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்:
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்,
உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன்,
அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும்.
அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்?
என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ?
பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்;
என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர்.
நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர்,
அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும்,
பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.
“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான்,
அவையும் கஷ்டம் நிறைந்தவையே.
அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்;
அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.
அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ?
அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ?
அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்?
யாராலுமே முடியாது!
மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன;
அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர்,
அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.
ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே.
அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு:
அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்;
அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.
அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி,
அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு
ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும்.
மனிதனோ இறந்தபின்,
தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான்.
கடல் தண்ணீர் வற்றி,
வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும்
மனிதன் படுத்துக்கிடக்கிறான்,
அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை;
தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து,
உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து,
நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து,
அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே!
ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ?
ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம்
நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன்.
அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்,
நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர்.
நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்;
என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர்.
எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்;
நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.
“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும்,
பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும்,
தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும்,
வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும்
மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர்.
நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்;
நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர்.
அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்;
அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.
ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான்,
அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”
எலிப்பாஸ் பேசுதல்
பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
“ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி,
கொண்டல் காற்றினால் தன் வயிற்றை நிரப்புவானோ?
பயனற்ற வார்த்தைகளினாலும்,
மதிப்பற்றப் பேச்சுக்களினாலும் அவன் வாதாடுவானோ?
ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்;
இறைவனுக்கு முன்பாக தியானத்தையும் தடைசெய்கிறாய்.
உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது;
தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய்.
என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது;
உன் உதடுகளே உனக்கு விரோதமாய்ச் சாட்சி கூறுகிறது.
“மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ?
மலைகளுக்கு முன்பே நீ உருவாக்கப்பட்டாயோ?
நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ?
ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ?
நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்?
நாங்கள் பெற்றிராத எந்த நுண்ணறிவை நீ பெற்றிருக்கிறாய்?
தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்;
அவர்கள் உன் தகப்பனைவிட வயதானவர்கள்.
இறைவனது ஆறுதல்களும்,
அவர் தயவாக உன்னிடம் பேசிய வார்த்தைகளும் உனக்குப் போதாதோ?
நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்?
உன் கண்களில் ஏன் அனல் தெறிக்கிறது?
இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு
இவ்வாறான வார்த்தைகளை நீ பேசுவானேன்?
“தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்?
பெண்ணிடத்தில் பிறந்தவன் நேர்மையுள்ளவனாயிருப்பது எப்படி?
இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை;
வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால்,
தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும்,
இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?
“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்;
நான் கண்டதைச் சொல்லவிடு.
ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று,
ஒன்றையும் மறைக்காமல் அறிவித்ததைச் சொல்வேன்.
அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது,
அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது:
கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்;
துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன;
எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள்.
அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்;
வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான்.
அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்;
இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான்.
வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து,
யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன.
ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி,
எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான்.
அவன் தடித்த வலிமையான கேடயத்துடன்,
பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது,
அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
அவன் பாழடைந்த பட்டணங்களிலும்,
கற்குவியலாக நொறுங்கி
ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான்.
அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது,
அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.
அவன் இருளுக்குத் தப்புவதில்லை;
அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும்,
இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும்.
வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்;
அவன் பிரதிபலனைப் பெறமாட்டான்.
அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்;
அவனுடைய கிளைகளும் பசுமையாக இருக்காது.
அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும்,
பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.
இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்;
இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்.
அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள்,
அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.”
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்;
நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்!
காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா?
உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன?
நீங்கள் என் நிலையில் இருந்தால்,
என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்;
நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி,
உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும்.
ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன்,
என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
“நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது;
பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை.
இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்;
என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர்.
நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது;
என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.
இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து,
என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்;
என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார்.
மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்;
ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்து
எனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள்.
இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து,
கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார்.
நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்;
அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார்.
அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்;
அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.
இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி
எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார்.
திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி,
ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
“நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்;
என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன்.
என் முகம் அழுகையால் சிவந்து,
என் கண்கள் இருளடைந்தது;
இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை;
என் ஜெபம் தூய்மையானது.
“பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே16:18 மூடி மறைக்காதே அல்லது எனக்கு செய்த தவறுகளை மறைக்காதே.;
என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்!
இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது;
எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது,
எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர்.
ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல,
அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.
“நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு,
இன்னும் சில வருடங்களே இருக்கின்றன.
என் மூச்சு நின்றுபோகிறது,
என் வாழ்நாட்கள் முடிகின்றன,
கல்லறை எனக்குக் காத்திருக்கிறது.
கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்;
அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது.
“இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும்.
வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்?
விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர்.
ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால்,
அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.
“இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்;
என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர்.
துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின;
என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று.
நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்;
குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள்.
ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்;
சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.
“நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்!
நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை.
என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன.
என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின.
இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்;
வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள்.
நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால்,
நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால்,
நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும்,
புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால்,
என் நம்பிக்கை எங்கே?
யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா?
என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ?
அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?”
பில்தாத் பேசுதல்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது:
“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்?
நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம்.
உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு
மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்?
உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே,
உனக்காக பூமி கைவிடப்படுமோ?
பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?
“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது;
அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது.
அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது;
அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.
அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது;
அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,
அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது;
கண்ணி18:9 கண்ணி அல்லது கொள்ளையர்கள் அவனை மேற்கொள்வார்கள். அவனை இறுக்கிப் பிடிக்கிறது.
சுருக்கு அவனுக்காகத் தரையிலும்,
பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி,
அவன் கால்களை அலையவைக்கும்.
பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது;
பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.
வியாதி அவன் தோலைத் தின்கிறது;
சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது.
அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு,
பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான்.
அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்;
அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும்.
கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன;
மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன.
அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது;
மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது.
அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்;
உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான்.
அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை,
அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை.
அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்;
அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர்.
தீயவனின் குடியிருப்பு இத்தகையதே;
இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி,
வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்;
வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசுகிறீர்கள்.
நான் வழி தவறியது உண்மையானால்,
என் தவறு என்னை மட்டுமே சாரும்.
நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி,
நான் சிறுமையாக்கப்பட்டதை எனக்கு விரோதமாக உபயோகித்தாலும்,
இறைவனே எனக்குத் தவறிழைத்து,
என்னைச் சுற்றி வலை வீசியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
“இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை;
நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை.
நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து,
என் பாதைகளை இருளாக்கினார்.
அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி,
மகுடத்தை என் தலையிலிருந்து எடுத்துப்போட்டார்.
அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்;
அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார்.
அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது;
என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார்.
அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து,
அவர்கள் எனக்கு விரோதமாய் வழியை உண்டாக்கி,
என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிடுகிறார்கள்.
“அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்;
எனக்கு அறிமுகமானவர்களும் முழுவதுமாக என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்;
என் சிநேகிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்;
அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள்.
நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும்,
அவன் எனக்குப் பதிலளிப்பதில்லை.
என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது;
நான் என் சொந்தக் குடும்பத்தினருக்கும்19:17 குடும்பத்தினருக்கும் அல்லது என் பிள்ளைகளுக்கும்., வெறுப்பானேன்.
சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்;
நான் பேச எழும்போது அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்;
நான் நேசித்தவர்களும் எனக்கெதிரானார்கள்.
நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்;
நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
“என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்;
இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது.
இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்?
என்னை வேதனைப்படுத்தியது போதாதோ?
“ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு,
ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால்,
அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால்,
அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
என் தோல் அழிந்துபோன பின்னும்,
நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.
நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்;
வேறொருவன் அல்ல, நானே காண்பேன்.
என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!
“ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால்,
நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால்,
நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்;
ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும்.
அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
சோப்பார் பேசுதல்
அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால்,
என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.
என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்;
என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து,
எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:
கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம்,
இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.
இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும்,
அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,
அவன் உரம் போல அழிந்தே போவான்;
அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.
ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்;
இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.
அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது;
அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.
அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்;
அவனுடைய20:10 அவனுடைய பிள்ளைகளின் கைகள். கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.
அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை,
அவனுடன் தூசியில் கிடக்கும்.
“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும்,
அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.
அதை விட்டுவிட மனமில்லாமல்
தன் வாயில் வைத்திருக்கிறான்.
ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி,
அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.
அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்;
இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.
அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்;
விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.
தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும்,
நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.
அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்;
அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.
அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்;
தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.
“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை;
ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.
அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை;
அவனுடைய செழிப்பும் நிலைக்காது.
அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்;
அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.
அவன் வயிறு நிரம்பும்போது,
இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி,
அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.
அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும்,
வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.
அவன் அதைத் தன் முதுகிலிருந்தும்,
அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான்.
பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;
அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும்.
அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து,
அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.
வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்;
பூமி அவனுக்கெதிராக எழும்பும்.
அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்;
இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.
கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே;
இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”
யோபு பேசுதல்
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
“என்னுடைய வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்;
இது நீங்கள் எனக்குக் கொடுக்கும் ஆறுதலாயிருக்கட்டும்.
நான் பேசும்வரை பொறுத்திருங்கள்,
நான் பேசினபின்பு நீங்கள் என்னைக் கேலி செய்யலாம்.
“நான் முறையிடுவது மனிதனிடமோ?
நான் ஏன் பொறுமையற்றவனாய் இருக்கக்கூடாது?
என்னைப் பார்த்து வியப்படையுங்கள்;
கையினால் உங்கள் வாயைப் பொத்திக்கொள்ளுங்கள்.
நான் இவற்றை நினைக்கும்போது பயப்படுகிறேன்;
என் உடல் நடுங்குகிறது.
கொடியவர்கள் முதுமையடைந்தும்,
வலியோராய் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன்?
அவர்களோடே அவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு முன்பாகவே,
அவர்கள் சந்ததி அவர்கள் கண்முன்னே நிலைத்திருப்பதைக் காண்கிறார்கள்.
அவர்களுடைய வீடுகள் பயமின்றிப் பாதுகாப்பாய் இருக்கின்றன;
இறைவனின் தண்டனைக்கோல் அவர்கள்மேல் இல்லை.
அவர்களுடைய காளைகள் இனப்பெருக்கத்தில் தவறுவதில்லை;
பசுக்கள் சினையழியாமல் கன்றுகளை ஈனும்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளை மந்தையைப்போல் வெளியே அனுப்புகிறார்கள்;
அவர்களுடைய சிறுபிள்ளைகள் குதித்து ஆடுகிறார்கள்.
அவர்கள் தம்புரா, யாழ் ஆகியவற்றின் இசைக்கேற்ப பாடுகிறார்கள்;
புல்லாங்குழல் இசையில் அவர்கள் களிப்படைகிறார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு
கல்லறைக்கும் சமாதானத்தோடே21:13 சமாதானத்தோடே அல்லது நொடிப்பொழுதில் செல்கிறார்கள்.
இருந்தும் அவர்கள் இறைவனிடம், ‘எங்களை விட்டுவிடும்!
உமது வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை.
எல்லாம் வல்லவருக்கு நாம் பணிசெய்ய அவர் யார்?
அவருக்கு ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன?’ என்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய செல்வம் அவர்கள் கைகளில் இல்லை;
நான் கொடியவர்களின் ஆலோசனையிலிருந்து விலகி நிற்கிறேன்.
“எத்தனை முறை கொடியவர்களுடைய விளக்கு அணைக்கப்படுகிறது?
எத்தனை முறை பொல்லாப்பு அவர்கள்மேல் வருகிறது?
இறைவன் தமது கோபத்தில் அவர்களுக்கு தண்டனையை ஒதுக்கி வைத்திருக்கிறார்.
அவர்கள் காற்றுக்குமுன் வைக்கோலைப்போலவும்,
புயலுக்கு முன்னே பதரைப்போலவும் அள்ளிக்கொண்டு போகப்படுகிறார்கள்.
‘இறைவன் அவர்களுக்குரிய தண்டனைகளை
அவர்கள் பிள்ளைகளுக்கு சேர்த்துவைக்கிறார்’ என்று சொல்லப்படுகிறதே;
அவர் அவர்களையே தண்டித்து உணர்த்துவார்.
அவர்களின் அழிவை அவர்களின் கண்கள் காணும்,
எல்லாம் வல்லவரின் கடுங்கோபத்தை அனுபவிப்பார்கள்.
ஏனெனில், அவர்களுடைய மாதங்களின் எண்ணிக்கை குறையும்போது,
அவர்கள் விட்டுச்செல்லும் குடும்பத்தைப்பற்றி அவர்களுக்கு அக்கறை என்ன?
“உயர்ந்தவர்களையும் நியாயந்தீர்க்கிற இறைவனுக்கு
அறிவைப் போதிக்க முடியுமா?
ஒரு மனிதன் பூரண பாதுகாப்புடனும், சுகத்துடனும்,
முழு வலிமையுடனும் இருக்கையிலேயே சாகிறான்.
அவனுடைய உடல் ஊட்டம் பெற்று,
எலும்புகள் மச்சைகளால் நிறைந்திருக்கின்றன.
இன்னொருவன் ஒருபோதுமே நன்மை ஒன்றையும்
அனுபவிக்காமல் ஆத்துமக் கசப்புடன் சாகிறான்.
இருவருமே தூசியில் ஒன்றாய்க் கிடக்கிறார்கள்;
புழுக்கள் அவர்கள் இருவரையுமே மூடுகின்றன.
“நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்;
என்னைக் குற்றஞ்சாட்டுவதற்கு நீங்கள் போடும் திட்டங்களையும் நான் அறிவேன்.
‘பெரிய மனிதனின் வீடு எங்கே? கொடியவர்களின் கூடாரங்கள் எங்கே?’
என்று கேட்கிறீர்கள்.
பயணம் செய்தவர்களிடம் நீங்கள் ஒருபோதும் கேட்கவில்லையோ?
அவர்கள் கண்டுரைத்த விவரங்களை நீங்கள் கவனிக்கவில்லையோ?
தீயவன் பொல்லாப்பின் நாளிலிருந்து விடுவிக்கப்படுகிறான்;
கடுங்கோபத்தின் நாளிலிருந்து அவன் விடுதலையாக்கப்படுகிறான்.
அவன் நடத்தையை அவன் முகத்துக்கு முன்பாகக் கண்டிப்பவன் யார்?
அவன் செய்தவற்றிற்கேற்ப அவனுக்கு எதிர்ப்பழி செய்பவன் யார்?
அவன் குழிக்குள் கொண்டுசெல்லப்படுகிறான்.
அவனுடைய கல்லறைக்குக் காவலும் வைக்கப்படுகிறது.
பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இன்பமாயிருக்கிறது;
எல்லா மனிதரும் அவனுக்குப்பின் செல்கிறார்கள்,
எண்ணில்லா திரள்கூட்டம் அவன்முன் செல்கிறது.
“வீண் பேச்சினால் நீங்கள் எப்படி என்னை ஆறுதல்படுத்துவீர்கள்?
உங்கள் பதில்களில் வஞ்சனையைத் தவிர வேறொன்றுமில்லை!”
எலிப்பாஸ் பேசுதல்
அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
“மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ?
ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ?
நீ நீதிமானாய் இருந்திருந்தாலும்,
எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ?
உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன?
“அவர் உன்னைக் கடிந்துகொண்டு,
உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
உன் கொடுமை பெரிதானதல்லவோ?
உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ?
நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு,
ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை;
பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
நீ நிலத்திற்கு உரிமையாளன்.
மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்;
அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன;
திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது.
அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது;
வெள்ளமும் உன்னை மூடுகிறது.
“வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்?
மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்?
இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ?
வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன;
அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய்.
தீய மனிதர் சென்ற
பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்;
அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்!
எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.
இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்;
நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்;
குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
‘பகைவர்கள் அழிய,
நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
“இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு;
உனக்குச் செழிப்பு உண்டாகும்.
அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்.
அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி,
எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால்,
உன் பழைய நிலைமையை அடைவாய்.
நீ தூளைப்போல் பொன்னையும்,
ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள்.
அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும்,
உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார்.
அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு,
இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்;
நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
நீ தீர்மானிப்பது செய்யப்படும்,
உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும்.
மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’
என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்;
உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது;
நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன.
அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ,
அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ,
நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்;
என் வாயை விவாதங்களால் நிரப்புவேன்.
அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து,
அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன்.
அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ?
இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார்.
நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்;
நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன்.
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை;
மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.
அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை;
அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;
அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின;
நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன்.
அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை;
என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.
“ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்?
தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார்.
எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்;
இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார்.
அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்;
இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன்.
இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்;
எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார்.
அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை;
என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.
“எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்?
அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்?
மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்;
அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள்.
அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்;
விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள்.
அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்;
அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள்.
காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல்,
ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்;
அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது.
வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்;
கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள்.
அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்;
குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை.
மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்;
தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள்.
தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது;
ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது.
ஏழைகள் உடையின்றி நடந்து,
அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்;
ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள்.
சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது,
காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள்,
ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
“கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்;
அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும்,
அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள்.
பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து,
ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று,
இரவில் திருடனைப்போல் திரிகிறான்.
விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன;
அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி,
தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.
பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை
இரவில் கன்னமிடுகிறார்கள்;
வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது;
இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்;
நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால்,
அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல,
பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும்.
அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும்,
புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும்.
தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை,
மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள்,
விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்;
அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும்,
அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்;
தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து,
என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”
பில்தாத் பேசுதல்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது;
அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ?
அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி?
பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும்,
நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும்
மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
யோபு பேசுதல்
அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
“பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்?
தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்?
ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி,
சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்?
இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்?
யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?
“தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும்,
இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன.
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது;
நரகம் திறந்திருக்கிறது.
இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார்,
அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார்.
அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார்,
ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை.
அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து,
அதை மூடிவைக்கிறார்.
அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை
ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார்.
வானத்தின் தூண்கள்,
அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன.
அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார்,
தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார்.
அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின;
அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.
இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே;
அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே;
அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”
யோபுவின் நண்பர்களுக்கு அவருடைய இறுதி வார்த்தை
யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
“எனக்கு நீதியை மறுத்து,
வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே,
எனக்குள் என் உயிரும்,
என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை,
என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது,
என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது.
நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்;
நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன்.
என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்;
நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது.
“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும்,
என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும்.
இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய்,
இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?
அவனுக்குத் துன்பம் வரும்போது
இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ?
எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ?
எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ?
“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்;
எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும்
ஏன் இந்த வீண்பேச்சு?
“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும்,
தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே:
அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள்,
ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது,
அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும்,
உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,
அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள்,
குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும்,
காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.
அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்;
அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன;
இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.
கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்;
அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.
அது இரக்கமின்றி அவனை விரட்டும்;
இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து,
அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”
இடைவெளி: ஞானம் எங்கே காணப்படுகிறது
வெள்ளிக்குச் சுரங்கமும்
தங்கத்திற்கு சுத்திகரிக்கும் இடமும் உண்டு.
இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது,
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படுகிறது.
மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி,
உலோக மூலப்பொருட்களைக் காரிருளிலும்
ஆழமான குழிகளிலும் தேடுகிறான்.
அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான்,
காலடிகளே படாத,
மனித நடமாட்டம் இல்லாத ஆழத்தில் ஊசலாடித் தொங்குகிறான்.
உணவு கொடுக்கும் பூமி
அதின் கீழ்ப்பகுதியிலுள்ளவை நெருப்பினால் உருமாறுகிறது.
அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன,
அதின் தூசி தங்கத்துகள்களை உடையதாயிருக்கின்றது.
இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது;
பருந்தின் கண்ணும் அதைக் காண்பதில்லை.
கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை;
சிங்கம் அங்கு திரிவதுமில்லை.
மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி,
மலைகளின் அடிவாரங்களை வேரோடே புரட்டுகிறான்.
அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்;
அவனுடைய கண்கள் அதின் பொக்கிஷங்களையெல்லாம் காண்கின்றன.
ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து,
மறைந்திருக்கும் பொருட்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.
ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே?
விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே?
மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை;
உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது;
“அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது,
அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது.
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும்
அதற்கு ஈடல்ல.
பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது,
தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது;
ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது.
அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது?
விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
அது உயிருள்ள அனைவருக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது.
“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின”
என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
அதின் வழி இறைவனுக்குத் தெரியும்;
அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார்.
ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார்,
வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி,
தண்ணீர்களை அளந்தபோதும்,
மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும்,
இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்;
அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார்.
இறைவன் மனிதனிடம்,
“யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம்,
தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.
யோபுவின் முன்னைய நிலை
யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
“கடந்துபோன மாதங்களை, இறைவன் என்னைக் கண்காணித்த நாட்களை,
நான் எவ்வளவாய் விரும்புகிறேன்!
அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது;
அவருடைய ஒளியினால் நான் இருளில் நடந்தேன்.
வாலிப நாட்களில்,
இறைவனின் நெருங்கிய நட்பு என் வீட்டை ஆசீர்வதித்தது.
எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார்,
என் பிள்ளைகளும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது;
கற்பாறையிலிருந்து எனக்காக ஒலிவ எண்ணெய் ஊற்றெடுத்துப் பாய்ந்தது.
“அந்நாட்களில் நான் பட்டணத்தின் வாசலுக்குச் சென்று,
பொது இடத்தில் எனது இருக்கையில் அமரும்போது,
வாலிபர்கள் என்னைக் கண்டு ஒதுங்கி நின்றார்கள்;
முதியவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிகாரிகள் பேச்சை நிறுத்திவிட்டு
தங்கள் கைகளால் வாயை மூடிக்கொண்டார்கள்.
உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின,
அவர்களுடைய நாவுகள் மேல்வாயோடு ஒட்டிக்கொண்டன.
என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள்,
என்னைக் கண்டவர்களும் என்னைப் பாராட்டினார்கள்.
ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும்,
உதவுவாரில்லாத தந்தையற்றவர்களையும் நான் காப்பாற்றினேன்.
செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்;
நான் விதவையைத் தன் உள்ளத்தில் மகிழ்ந்து பாடச்செய்தேன்.
நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்;
நியாயம் என் அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்திருந்தது.
நான் குருடனுக்குக் கண்களாயும்,
முடவனுக்குக் கால்களாயும் இருந்தேன்.
நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து,
அறியாதவனின் வழக்கில் நான் அவனுக்கு உதவினேன்.
நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து,
அவர்களின் பற்களில் சிக்குண்டவர்களை விடுவித்தேன்.
“நான், ‘என் வீட்டில் சாவேனென்றும்,
என் நாட்கள் கடற்கரை மணலைப்போல் பெருகும்’ என்றும் நினைத்தேன்.
என் வேர் தண்ணீரை எட்டும் என்றும்,
என் கிளைகளில் இரவு முழுவதும் பனி படர்ந்திருக்கும் என்றும் எண்ணினேன்.
என் மகிமை மங்காது;
என் வில் எப்போதும் கையில் புதுப்பெலனுடன் இருக்கும். என எண்ணினேன்.
“அந்நாட்களில் மனிதர் ஆவலுடன் எனக்குச் செவிகொடுத்து,
என் ஆலோசனைக்கு மவுனமாய்க் காத்திருந்தார்கள்.
நான் பேசியபின் அவர்கள் தொடர்ந்து பேசவில்லை;
என் வார்த்தைகள் அவர்கள் செவிகளில் மெதுவாய் விழுந்தன.
மழைக்குக் காத்திருப்பதுபோல் அவர்கள் எனக்குக் காத்திருந்து,
கோடை மழையைப்போல் என் வார்த்தைகளைப் பருகினார்கள்.
நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது,
அவர்களால் அதை நம்பமுடியவில்லை;
என் முகமலர்ச்சியை மாற்றவுமில்லை.
நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்;
தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும்,
கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.
“ஆனால் இப்பொழுதோ
என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்;
அவர்களுடைய தந்தையரை, நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்ககூடாது
என எண்ணினேன்.
அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்?
அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே!
அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து,
இரவிலே வெறுமையான வறண்ட நிலத்தில்
அலைந்து திரிந்தார்கள்.
அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்;
காட்டுச்செடிகளின் கிழங்குகளே அவர்களுக்கு ஆகாரம்.
கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல்,
அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும்,
நிலத்தின் பொந்துகளிலும் குடியிருக்க வேண்டியதாயிருந்தது.
புதர்களுக்குள்ளிருந்து கதறி,
முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள்.
அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.
“இளைஞர்கள் பாடல்களினாலும்,
பழமொழியினாலும், என்னை கேலி செய்கிறார்கள்.
அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்;
அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை.
ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால்,
அவர்கள் என்முன் அடக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள்.
வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்;
என் பாதங்கள் தவறி விழச்செய்கிறார்கள்,
எனக்கு விரோதமாக அழிவின் பாதைகளை அமைக்கிறார்கள்.
அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்;
ஒருவருடைய உதவியுமின்றி
என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.
அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி,
இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள்.
பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன;
காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், என் மேன்மை போய்விட்டது,
என் பாதுகாப்பும் மேகத்தைப்போல் இல்லாமல் போகிறது.
“இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது;
துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது;
என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.
இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்;
உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது.
அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார்,
நான் தூசியாயும் சாம்பலுமானேன்.
“இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்;
நான் உமக்கு முன்பாக நிற்கிறேன், நீரோ ஒன்றும் செய்யாமலிருக்கிறீர்.
கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்;
உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர்.
என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்;
புயலிலே என்னைச் சுழற்றுகிறீர்.
நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும்,
உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.
“மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது,
யாரும் உதவிசெய்வதில்லை.
கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ?
ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ?
அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது;
நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது.
என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை;
துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன.
நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்;
கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன்.
நான் நரிகளுக்குச் சகோதரனும்,
ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன்.
என் தோல் கறுத்துப்போயிற்று;
என் உடல் காய்ச்சலால் எரிகிறது.
என் யாழ் புலம்பலையும்,
என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது.
“நான் ஒரு பெண்ணையும் இச்சையுடன் பார்க்கமாட்டேன்,
என என் கண்களோடு ஒப்பந்தம் செய்தேன்.
ஆனாலும் உன்னதத்தில் இருக்கும் இறைவனிடமிருந்து என்ன பங்கு?
உன்னதத்தில் இருக்கும் எல்லாம் வல்லவர் அளிக்கும் சொத்து என்ன?
கொடியவனுக்கு பேராபத்தும்,
தவறு செய்பவர்களுக்குப் பேரழிவும் அல்லவா?
அவர் என் வழிகளைக் காணவில்லையோ?
என் ஒவ்வொரு காலடியையும் எண்ணவில்லையோ?
“நான் பொய்யாய் நடந்திருந்து,
என் கால்கள் ஏமாற்ற விரைந்திருந்தால்,
இறைவன் தராசில் என்னை நிறுத்தட்டும்,
நான் குற்றமற்றவன் என்பதை அவர் அறிந்துகொள்வார்.
என் காலடிகள் பாதையைவிட்டு விலகியிருந்தால்,
அல்லது என் உள்ளம் என் கண்களைப் பின்பற்றியிருந்தால்,
அல்லது என் கைகள் கறைப்பட்டிருந்தால்,
அப்பொழுது நான் விதைப்பதை மற்றவர்கள் உண்ணட்டும்,
என் விளைச்சல் வேரோடே பிடுங்கப்படட்டும்.
“என் உள்ளம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு,
அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,
அப்பொழுது என் மனைவி இன்னொருவனுக்கு மாவரைப்பாளாக;
பிற மனிதர்கள் அவளுடன் உறவுகொள்ளட்டும்.
ஏனெனில், அது வெட்கக்கேடான,
தண்டிக்கப்படவேண்டிய பாவமாயிருக்கும்.
அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு;
அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.
“என் வேலைக்காரருக்கும்,
வேலைக்காரிகளுக்கும் எனக்கு எதிராக மனக்குறை இருந்தபோது,
நான் அவர்களுக்கு நீதிவழங்க மறுத்திருந்தால்,
இறைவன் என்னை எதிர்கொள்ளும்போது, நான் என்ன செய்வேன்?
அவர் என்னிடம் கணக்குக் கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்?
என்னை கருப்பையில் உண்டாக்கியவர் அவர்களையும் உண்டாக்கவில்லையோ?
எங்கள் இருவரையுமே எங்கள் தாய்மாரின் வயிற்றில் உருவாக்கியவர் அவரல்லவோ?
“நான் ஏழைகளின் தேவைகளைக் கொடுக்க மறுத்து,
விதவைகளின் கண்களைக் கண்ணீர் விடுவதினால் இளைக்கப் பண்ணியிருக்கிறேனா?
அல்லது அநாதைகளோடு என் உணவைப் பகிர்ந்துகொள்ளாமல்,
நான் மட்டும் சாப்பிட்டிருக்கிறேனா?
ஆனால் நானோ இளவயதுமுதல் அவர்களை ஒரு தகப்பனைப்போல் வளர்த்தேனே;
என் பிறப்பிலிருந்தே விதவைகளுக்கு நான் வழிகாட்டினேனே.
உடுக்க உடையின்றி ஒருவன் அழிவதையோ,
அல்லது ஏழை ஒருவன் உடையின்றி இருப்பதையோ நான் கண்டும்,
என் செம்மறியாடுகளின் கம்பளி,
அவன் குளிரைப் போக்காததினால் அவன் இருதயம் என்னை ஆசீர்வதிக்காமல் இருக்குமோ?
நீதிமன்றத்தில்31:21 நீதிமன்றத்தில் அல்லது மக்கள் தீர்ப்புக்காக கூடும் நகர வாசல். எனக்குச் செல்வாக்கு இருப்பதை நான் அறிந்திருந்தும்,
அநாதைக்கு விரோதமாக நான் எனது கைகளை உயர்த்தியிருந்தால்,
என் தோள்பட்டை தோளிலிருந்து கழன்று போகட்டும்,
அது மூட்டிலிருந்து முறிந்து போகட்டும்.
இறைவனுடைய தண்டனைக்கு நான் பயந்ததினாலும்,
அவருடைய மாட்சிமையின் பக்தி எனக்கிருந்ததினாலும்
தீமையை என்னால் செய்ய முடியவில்லை.
“நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து,
சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால்,
என் செல்வம் பெரியதென்றும்,
அதை என் கைகளே சேர்த்ததென்றும் நான் மகிழ்ந்திருந்தால்,
பிரகாசமுள்ள சூரியனையும்,
தன் மகிமையில் நகர்ந்து செல்லும் சந்திரனையும் கண்டு அதைப் பெரிதாக மதித்து,
என் மனம் இரகசியமாகக் மயங்கி,
நான் அவைகளுக்கு மரியாதை முத்தமிட்டிருந்தால்,
அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்;
நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.
“என் பகைவனுக்கு வரும் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்தேனோ?
தீமை அவனுக்கு வந்தபோது, நான் ஏளனம் செய்ததுண்டோ?
இல்லையே! நான் அவனுடைய வாழ்வுக்கு எதிராகச் சாபமிட்டுப்
பாவம் செய்யும்படி என் வாயை அனுமதித்ததில்லையே.
‘யோபுவின் உணவை உண்டு திருப்தியடையாதவன் யார்?’
என என் வீட்டிலுள்ள மனிதர் ஒருபோதும் சொல்லாது இருந்ததுண்டோ?
வழிப்போக்கருக்கு என் வாசல்களைத் திறந்தேன்
பிறர் வீதியில் தன் இரவைக் கழிக்கவில்லையே!
மனிதர் செய்வதுபோல, என் குற்றத்தை என் உள்ளத்தில் ஒளித்து,
என் பாவத்தை மறைத்தேனோ?
நான் மக்கள் கூட்டத்திற்குப் பயந்ததாலும்,
குலத்தவர்களின் இகழ்ச்சிக்கு அஞ்சினதாலும்
வெளியே போகாமல் மவுனமாய் இருந்தேனோ?
“நான் சொல்வதைக் கேட்க யாரும் இல்லையோ?
இதோ நான் சொன்ன எனது எதிர்வாதத்தில் கையொப்பமிடுகிறேன்.
எல்லாம் வல்லவர் எனக்குப் பதிலளிக்கட்டும்,
என்னைக் குற்றம் சாட்டுகிறவர் தனது குற்றச்சாட்டை எழுதிக்கொடுக்கட்டும்.
நிச்சயமாக அதை நான் என் தோளின்மேல் வைத்து,
ஒரு மகுடத்தைப்போல் சூட்டிக்கொள்வேன்.
நான் ஒரு இளவரசனைப்போல் அவரை அணுகி,
என் ஒவ்வொரு காலடிக்கும் கணக்குக் கொடுப்பேன்.
“என் நிலம் எனக்கெதிராக அழுது புலம்பினாலும்,
அதின் வரப்புகள் கண்ணீரால் நனைந்திருந்தாலும்,
நான் பணம் கொடுக்காமல் அதின் விளைவை விழுங்கியிருந்தாலும்,
அல்லது அதின் குத்தகைக்காரனை உள்ளமுடையச் செய்திருந்தாலும்,
அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும்,
வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்.”
யோபுவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன.
எலிகூ பேசுதல்
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்:
“நான் வயதில் இளையவன்,
நீங்களோ முதியவர்கள்;
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து
சொல்லப் பயந்திருந்தேன்.
‘முதியோர் பேசட்டும்,
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
மனிதரில் இருக்கும் ஆவியாகிய
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
முதியோர் மட்டுமே ஞானிகளல்ல;
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
“ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்;
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து,
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து,
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன்.
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை;
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல,
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
யோபு என்னோடு வாதாடவில்லை,
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
“அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்;
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில்,
நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
இப்பொழுது நானும் பேசியே தீருவேன்;
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு,
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும்,
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
நான் பேசி ஆறுதலடைய வேண்டும்;
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ,
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால்,
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
“யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்;
நான் சொல்வதைக் கவனியும்.
இப்பொழுது நான் பேசப் போகிறேன்;
என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன;
நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்;
எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்;
என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்;
நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை,
என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்;
நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன்,
நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்;
என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்;
என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
“ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல,
ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை
என நீர் ஏன் முறையிடுகிறீர்?
மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும்,
இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
மனிதர் படுத்திருக்கையில்,
ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும்,
இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
அவர் மனிதர்களின் காதுகளில் பேசி,
தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும்,
தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும்,
அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான
தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும்,
சுவையான உணவையும் வெறுக்கிறது.
அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து,
முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும்,
அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன்
அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி,
அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
அவர்களுக்குக் கிருபைகாட்டி,
‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன்.
ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும்,
அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி,
அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்;
அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள்,
இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
அவர்கள் மற்றவர்களைப் பார்த்து:
‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன்,
செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்;
நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
“இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன்,
மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை,
வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
“யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்;
மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்;
தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும்.
நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.”
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
நாவு உணவைச் சுவைப்பதுபோல்,
காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்;
எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன்,
இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.
நான் சரியானவனாய் இருந்தபோதிலும்,
பொய்யனாகவே எண்ணப்படுகிறேன்.
குற்றமற்றவனாய் இருந்தபோதிலும்,
அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார்.
தண்ணீர் பருகுவதைப்போல்
கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து,
கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார்.
ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால்
ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.
“புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
தீமை இறைனுக்கும்,
அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார்.
அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார்.
இறைவன் அநியாயம் செய்யாமலும்,
எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.
பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்?
முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்?
அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும்
திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,
எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்;
மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.
“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும்,
நான் சொல்வதற்குச் செவிகொடும்.
நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ?
நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ?
அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும்,
உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார்.
அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை,
ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை;
ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா?
அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்;
அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்;
பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.
“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;
அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு
இருளான இடமோ, காரிருளோ இல்லை.
இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்;
அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை.
இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து,
அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார்.
ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்;
இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.
அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம்,
எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார்.
ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி,
அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள்.
அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்;
அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.
மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே;
நாட்டிற்கும், மனிதனுக்கும்,
அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?
அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும்,
மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.
“யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா:
‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன்.
நான் காணாதவற்றை எனக்குப் போதியும்,
நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’
நீர் மனந்திரும்ப மறுக்கும்போது
உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ?
நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்;
நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.
“நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும்
ஞானமுள்ளவர்களும் என்னிடம்,
‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;
அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும்,
யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக
முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும்.
தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்;
அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி,
இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று
நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ?
நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்?
என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர்.
“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும்
பதில்சொல்ல விரும்புகிறேன்.
வானங்களை மேலே நோக்கிப்பாரும்;
உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்?
உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்?
நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்?
அல்லது அவர் உம் கையில் இருந்து எதைப் பெற்றுக்கொள்கிறார்?
உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும்,
உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும்.
“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்;
பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள்.
ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே?
இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே?
பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே?
ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’
என்று கேட்பவர் ஒருவருமில்லை.
கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம்,
மனிதர் அழும்போது இறைவன் அவர்களுக்குப் பதில் கொடுப்பதில்லை.
இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்;
எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும்,
உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும்,
நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது,
அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ?
மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை;
என்றும் மனிதரின் கொடுமையை அவர் கொஞ்சமும் கவனிப்பதில்லை என்று எண்ணி,
யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி,
அறிவில்லாமல் தன் வார்த்தைகளை வசனிக்கிறார்.”
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
“சற்று என்னிடம் பொறுமையாயிரும்,
இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்;
என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.
என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்;
பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;
வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.
அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை;
துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.
அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை;
அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி,
அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.
ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு,
வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,
அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார்.
அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.
அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து,
தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால்,
அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும்,
மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால்,
வாளினால் அழிந்து,
அறிவில்லாமலே சாவார்கள்.
“உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்;
அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.
அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில்
தங்கள் இளமையிலேயே சாவார்கள்.
ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து,
அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
“யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும்,
சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும்,
வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.
கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்;
நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.
செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்;
பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.
உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும்
நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?
மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக
நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.
தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்;
ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
“இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்?
அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால்
அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.
அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்;
அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;
நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்!
அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து,
அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
மேகங்கள் மழையைப் பொழிகின்றன,
அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும்,
எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?
அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி,
கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.
இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து,
ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.
அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி,
குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.
அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது;
அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.
“அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி,
அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.
இறைவனுடைய குரலின் கர்ஜனையையும்,
அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து,
அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.
பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது,
அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்;
அவருடைய சத்தம் தொனிக்கும்போது
அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.
இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது;
அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும்,
மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.
அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி,
ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.
காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று,
தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
தெற்கிலிருந்து சூறாவளியும்,
வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது;
அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி,
தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன;
அவை பூமியின் மேற்பரப்பெங்கும்
அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.
மனிதரைத் தண்டிப்பதற்கோ,
அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ
அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
“யோபுவே, இதைக் கேளும்;
சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.
இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி
தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும்,
பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது,
உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?
வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற,
கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
“அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்;
இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ?
தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?
காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின்,
சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே!
ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்;
திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.
எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே
அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;
அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்;
ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.”
யெகோவா யோபுக்கு மறுமொழி கொடுத்தல்
அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
“அறிவற்ற வார்த்தைகளினால்
என் ஆலோசனையை தெளிவற்றதாக்குகிற இவன் யார்?
இப்பொழுது நீ ஒரு திடமனிதனாய் நில்;
நான் உன்னிடம் கேள்வி கேட்கப்போகிறேன்,
நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும்.
“நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்?
உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்?
நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின;
இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே.
“கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது,
அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும்,
காரிருளினால் அதைச் சுற்றியபோதும்,
நான் அதற்கு எல்லைகளை அமைத்துத்
தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்?
நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே;
உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்?
“உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு,
அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ?
இவ்வாறு, பூமியின் ஓரங்களைப் பிடித்து
அதிலிருந்து கொடியவர்களை உதறித் தள்ளும்படி சொன்னதுண்டோ?
முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருப்பெறுகிறது;
அதின் இயற்கைத் தோற்றங்களும் உடைகளைப்போல் நிற்கின்றன.
கொடியவர்களுக்கு வெளிச்சம் மறுக்கப்படுகிறது;
உயர்த்தப்பட்ட அவர்களின் புயம் முறிக்கப்படும்.
“கடலின் ஊற்றுக்களுக்கு நீ போனதுண்டோ?
அல்லது ஆழத்தின் உள்ளிடங்களில் நடந்திருக்கிறாயோ?
மரண வாசல்கள் உனக்குக் காண்பிக்கப்பட்டதுண்டோ?
மரண இருளின் வாசல்களை நீ கண்டதுண்டோ?
பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ?
இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல்.
“வெளிச்சம் வசிக்கும் இடத்திற்குப் போகும் வழி எது?
இருள் எங்கே குடியிருக்கிறது?
அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா?
அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ?
இவை உனக்குத் தெரிந்திருக்குமே;
இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா!
“உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ?
பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ?
கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி
நான் அவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே?
கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்?
இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?
ஒருவரும் குடியிராத நிலத்திற்கும்,
எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும்,
வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி,
அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்?
மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ?
பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்?
யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது?
வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்?
தண்ணீர்கள் கல்லைப்போலவும்,
ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்?
“அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ?
மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?
விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ?
சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ?
வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ?
பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ?
“நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி
வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ?
மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா?
‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ?
இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும்,
மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்?
யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்?
வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை,
தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும்,
மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
“நீ சிங்கத்திற்கு இரையை தேடி,
அவைகளின் பசியை தீர்ப்பாயோ?
சிங்கக்குட்டிகள் குகைகளிலும்
புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ?
காக்கைக்குஞ்சுகள்
இறைவனை நோக்கிக் கூப்பிட்டு,
உணவின்றி அலையும்போது உணவைக் கொடுப்பது யார்?
“மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ?
பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ?
அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ?
அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ?
அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்;
குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும்.
அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன,
அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை.
“காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்?
அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும்,
உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன்.
அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது;
ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை.
அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது;
அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.
“காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ?
அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?
காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ?
அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ?
அதின் மிகுந்த பலத்தை நம்பி,
உன் கடின வேலைகளை அதனிடம் விட்டுவிடுவாயோ?
அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து,
சூடடிக்கும் களத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
“தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும்,
நாரையின் சிறகுகளுடனும்
சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது.
தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு,
மணலிலே அவற்றைச் சூடாகும்படி விட்டுவிடுகிறது.
முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ,
காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை.
அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்;
அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை.
ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை;
நல்லுணர்வையும் கொடுக்கவில்லை.
ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது,
குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது.
“குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ?
அதின் கழுத்தைப் பிடரிமயிரினால் மூடியது நீயோ?
நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி,
அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ?
அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து,
தூசியைக் கிளப்பிக்கொண்டு போர்க்களத்திற்குப் பாய்ந்து செல்கிறது.
அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை.
அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை.
மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு
அதனுடைய இடுப்பில் கலகலக்கிறது.
அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது;
எக்காள சத்தம் கேட்கும்போது, அதினால் அமைதியாய் நிற்கமுடியாது.
எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும்
அது போர்க்களத்தையும், படைத் தலைவர்களின் கூக்குரலையும்
தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிகிறது.
“பருந்து உயரப் பறப்பதும்,
தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ?
கழுகு மேலே போய் உயரத்தில்
தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ?
அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது;
செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம்.
அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்;
அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும்.
அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்;
இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.”
மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:
“எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ?
இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.”
யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:
“நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்?
நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை;
நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.”
அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
“இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்;
நான் உன்னிடம் கேள்வி கேட்பேன்,
நீ எனக்குப் பதில் சொல்.
“நீ என் நீதியை அவமதிப்பாயோ?
நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ?
உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ?
உன் குரல் அவருடைய குரலைப்போல் முழங்குமோ?
அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி,
மேன்மையையும் மாட்சிமையையும் உடுத்திக்கொள்.
உன் கோபத்தின் சீற்றத்தை வீசி,
பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்து.
பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து;
கொடியவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே நசுக்கிப் போடு.
அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு;
கல்லறையின் உள்ளே அவர்களின் முகங்களை மூடிப்போடு.
அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும்
என்று நானும் ஒத்துக்கொள்வேன்.
“இப்பொழுது உன்னோடுகூட
நான் படைத்த நீர்யானையைப் பார்;
அது எருதைப் போலவே புல் மேய்கிறது.
அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு?
அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு?
அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது;
அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன.
அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும்,
கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன.
இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது;
இருந்தும் அதைத் தமது வாளுடன் அணுக அதைப் படைத்தவரால் முடியும்.
குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்;
காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும்.
அது தாமரையின் கீழும்,
நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன;
ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன.
ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை;
யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும்,
அது உறுதியாயிருக்கும்.
அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?
மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
“லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ?
நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ?
அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ?
அல்லது அதின் தாடையைக் கொக்கியினால் ஊடுருவக் குத்த உன்னால் முடியுமோ?
அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ?
உன்னிடம் மெதுவான வார்த்தையைப் பேசுமோ?
வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி,
அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ?
ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ?
உன் பெண் பிள்ளைகள் அதனுடன் விளையாட அதைக் கட்டிவைப்பாயோ?
வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ?
அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ?
அதின் உடலை ஈட்டிகளினாலும்,
அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ?
அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்;
இனி அதின்மேல் கைபோடவுமாட்டாய்.
அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது;
அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது.
அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை.
அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?
தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?
வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை.
“இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும்,
அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன்.
அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்?
அதை மூக்கணாங்கயிற்றுடன் அணுக யாரால் முடியும்?
பயங்கரப் பற்கள் நிறைந்த
அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்?
அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி
இணைக்கப்பட்ட கேடய வரிசைகள்போல் இருக்கின்றன.
அவைகளின் ஒவ்வொரு வரிசையும்
காற்றுப் புகாதபடி மிக நெருக்கமாய் இருக்கின்றன.
அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து
பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது;
அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன.
அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு,
நெருப்புப் பொறிகளும் பறக்கும்.
எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல்,
அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது;
அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது.
அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்;
திகில் அதற்கு முன்னே செல்லும்.
அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி
ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும்,
அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது.
அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து,
அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள்.
அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு,
கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
அது இரும்பை வைக்கோலாகவும்,
வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும்.
அம்பு அதனைத் துரத்தாது;
கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும்.
பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது;
அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது.
அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும்,
சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது.
அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து,
தைலம்போலக் கடலைக் கலக்குகிறது.
அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்;
அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல;
அது பயமற்ற ஒரு விலங்கு.
அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது;
பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே.”
யோபு பேசுதல்
அதின்பின் யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னதாவது:
“உம்மால் எல்லாம் செய்யமுடியும் என்று நான் அறிவேன்;
உமது திட்டம் ஒன்றும் தடைபடமாட்டாது.
‘அறிவில்லாமல் எனது ஆலோசனையை மறைக்கிறவன் யார்?’ என நீர் கேட்டீரே;
உண்மையாக நான் எனக்கு விளங்காதவற்றையும்,
என் அறிவுக்கெட்டாத புதுமையான காரியங்களையும் குறித்துப் பேசினேனே.
“நீர் என்னிடம், ‘நான் பேசுகிறேன்,
இப்பொழுது நீ கேள்’ என்றும்;
‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்’ என்றும் சொன்னீரே.
உம்மைப்பற்றி என் காதுகள் கேட்டிருந்தன;
இப்பொழுதோ என் கண்களே உம்மைக் கண்டிருக்கின்றன.
ஆகையால் நான் என்னை வெறுத்து,
தூசியிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்புகிறேன்.”
முடிவுரை
யெகோவா யோபுவுடன் இவற்றைப் பேசி முடித்தபின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். “நான் உன்மீதும், உன் இரண்டு நண்பர்கள்மீதும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில் எனது அடியவன் யோபு பேசியதுபோல நீங்கள் என்னைப்பற்றிச் சரியானவற்றைப் பேசவில்லை. ஆகையால் இப்பொழுது நீங்கள் ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் அடியவன் யோபுவிடம் போய், உங்களுக்காகத் தகனபலியிடுங்கள். எனது அடியவன் யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்வான். நான் அவன் வேண்டுதலைக் கேட்டு, உங்கள் மூடத்தனத்திற்குத்தக்கதாக நான் உங்களைத் தண்டிக்கமாட்டேன். என் அடியவன் யோபு என்னைப்பற்றிச் சரியானதைப் பேசியதுபோல நீங்கள் பேசவில்லை” என்றார். எனவே தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகியோர் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யோபுவின் வேண்டுதலை யெகோவா ஏற்றுக்கொண்டார்.
யோபு தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தபின், யெகோவா அவனுக்கு முன்பு இருந்தவற்றைப்போல், இருமடங்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து, திரும்பவும் அவனைச் செல்வந்தனாக்கினார். அப்பொழுது யோபுவின் சகோதரர்களும், சகோதரிகளும், முன்பு அவனை அறிந்திருந்த அனைவரும் அவனுடைய வீட்டிற்கு வந்து அவனோடு விருந்து சாப்பிட்டார்கள். அத்துடன் அவர்கள் யெகோவா அவன்மேல் கொண்டுவந்த எல்லாத் துன்பங்களுக்காகவும், அவனைத் தேற்றி ஆறுதலளித்தார்கள். ஒவ்வொருவரும் பணத்தையும், ஒரு தங்கமோதிரத்தையும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.
யெகோவா யோபுவின் பிற்கால வாழ்க்கையை, அவனுடைய ஆரம்ப நாட்களைவிட அதிகமாக ஆசீர்வதித்தார். அவனுக்கு பதினாலாயிரம் செம்மறியாடுகளும் ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம் பூட்டும் எருதுகளும், ஆயிரம் கழுதைகளும் இருந்தன. மேலும் ஏழு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தார்கள். அவன் தன் மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்கு கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்கு கேரேன்-ஆப்புக் என்றும் பெயரிட்டான். நாடெங்கிலும் யோபுவின் மகள்களைப்போல் அழகான பெண்கள் யாரும் இருந்ததில்லை. அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு அவர்கள் சகோரதர்களுடன் உரிமைச்சொத்துக்களைக் கொடுத்தான்.
இவைகளுக்குப் பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிர் வாழ்ந்தான்; அவன் தன் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரைக் கண்டான். இவ்வாறாக யோபு வயதாகி நீண்ட நாட்கள் வாழ்ந்து இறந்தான்.