- Biblica® Open Indian Tamil Contemporary Version எரேமியா இறைவாக்கினன் எரேமியாவின் புத்தகம் எரேமியா எரே. இறைவாக்கினன் எரேமியாவின் புத்தகம் இல்க்கியாவின் மகன் எரேமியாவின் வார்த்தைகள்: இல்க்கியா பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஆனதோத் என்ற ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவன். யூதாவின் அரசனாயிருந்த ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக் காலத்தின் பதின்மூன்றாம் வருடத்தில், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. தொடர்ந்து யூதாவின் அரசனாயிருந்த, யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சிக்காலம் முழுவதிலும், யூதாவின் அரசனாயிருந்த யோசியாவின் மகன் சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் ஐந்தாம் மாதம் முடியும் வரையும், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்டார்கள். எரேமியாவின் அழைப்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர் என்னிடம், “உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கும் முன்பே நான் உன்னை அறிந்தேன்1:5 அறிந்தேன் அல்லது தெரிந்தெடுத்தேன் என்று பொருள், நீ பிறக்கும் முன்பே எனக்கு ஊழியம் செய்யும்படி நான் உன்னை பிரித்தெடுத்தேன்; நாடுகளுக்கு இறைவாக்கினனாக உன்னை நியமித்தேன்” என்றார். அதற்கு நான், “ஆண்டவராகிய யெகோவாவே, எப்படிப் பேசவேண்டுமென்று எனக்குத் தெரியாது; நான் சிறுபிள்ளை தானே” என்றேன். ஆனால் யெகோவா என்னிடம் சொன்னதாவது, “நான் ஒரு சிறுபிள்ளை தானே” என்று நீ சொல்லாதே; நான் உன்னை அனுப்பும் ஒவ்வொருவரிடமும் நீ போய் நான் கட்டளையிடுவதையெல்லாம் சொல்லவேண்டும். நீ அவர்களுக்குப் பயப்படாதே. ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம், “இப்பொழுது என் வார்த்தைகளை உன் வாயில் வைத்திருக்கிறேன். இதோ பார், நாடுகளுக்கும் அரசுகளுக்கும் மேலாக அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் நான் இன்று உன்னை நியமித்திருக்கிறேன்” என்றார். யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: அவர் என்னை நோக்கி, “எரேமியாவே! நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் அதற்குப் பதிலாக “ஒரு வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “நீ சரியாகக் கண்டிருக்கிறாய், ஏனெனில் நான் என் வார்த்தையை நிறைவேற்றுவதற்காக விழிப்பாயிருக்கிறேன்” என்றார். யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. அவர், “நீ காண்கிறது என்ன?” என்றார். “ஒரு கொதிக்கும் பானை வடதிசையிலிருந்து சரிவதைக் காண்கிறேன்” என்று நான் பதிலளித்தேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “நாட்டில் வாழும் யாவர்மேலும் வடக்கிலிருந்து பெரும் பயங்கரம் கொதித்தெழும்பும். அதற்காக நான் வடதிசை அரசுகளின் படைகளையெல்லாம் அழைக்கப் போகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களின் அரசர்கள் வந்து எருசலேமின் நுழைவு வாசல்களில் தங்கள் சிங்காசனத்தை வைப்பார்கள்; அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள மதில்களுக்கு எதிராகவும், யூதாவின் பட்டணங்களுக்கு எதிராகவும் வருவார்கள். எனது மக்கள் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளினால் செய்தவற்றையே1:16 செய்தவற்றையே என்பது விக்கிரகங்களைக் குறிப்பிடும் வழிபட்டு, என்னைக் கைவிட்டார்கள். இந்த கொடிய செயல்களின் நிமித்தம் அவர்களுக்கு என் நியாயத்தீர்ப்பை வழங்குவேன். “ஆதலால் உன்னை ஆயத்தப்படுத்து. எழுந்து நின்று நான் உனக்குக் கட்டளையிடுவதையெல்லாம் அவர்களுக்குச் சொல். அவர்களுக்குப் பயப்படாதே, பயந்தால் அவர்கள் முன்னால் நான் உன்னைத் திகிலடையச் செய்வேன். இன்று நான் உன்னை முழு நாட்டிற்கும் விரோதமாக நிற்கும்படி பாதுகாப்பான பட்டணமாகவும், இரும்புத் தூணாகவும், வெண்கல மதிலாகவும் ஆக்கியிருக்கிறேன். யூதாவின் அரசர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், ஆசாரியருக்கும், நாட்டு மக்களுக்கும் விரோதமாக நிற்கும்படியாகவே இப்படிச் செய்தேன். அவர்கள் உனக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். ஆயினும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன். நான் உன்னை தப்புவிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றார். இஸ்ரயேல் இறைவனை கைவிடுதல் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “நீ போய் எருசலேமிலுள்ளவர்கள் கேட்கத்தக்கதாய் இதை பிரசித்தப்படுத்து: “யெகோவா சொல்வது இதுவே: “ ‘உன் வாலிப காலத்தில் உனக்கிருந்த பக்தி எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நீ மணமகளாய் இருந்தபோது என்னில் நீ எவ்வளவாய் அன்பு வைத்தாய். பாலைவனத்திலும், விதைக்கப்படாத நிலத்திலும் நீ என்னைப் பின்பற்றினாய். இஸ்ரயேல் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், அவருடைய அறுவடையின் முதற்கனியுமாயிருந்தது. இஸ்ரயேலை விழுங்கினவர்கள் யாவரும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள், பெருந்துன்பமும் அவர்களை மேற்கொண்டது,’ ” என்று யெகோவா அறிவிக்கிறார். யாக்கோபின் வீட்டாரே! இஸ்ரயேல் வீட்டு வம்சங்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: “உங்கள் முற்பிதாக்கள் என்னில் என்ன குற்றத்தைக் கண்டார்கள், அவர்கள் என்னைவிட்டு ஏன் இவ்வளவு தூரமாய் போனார்கள்? அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த யெகோவா எங்கே? பள்ளங்களும், பாலைவனங்களும் உள்ள நாடாகிய வறண்ட வனாந்திரத்தின் வழியாக எங்களை வழிநடத்தியவர் எங்கே? ஒருவரும் பிரயாணம் செய்யாததும், ஒருவரும் குடியிராததுமான வறட்சியும் இருளும் உள்ள நாட்டின் வழியாக வழிநடத்திய யெகோவா எங்கே?’ என்று அவர்கள் கேட்கவில்லையே? நான் உங்களை ஒரு செழிப்பான நாட்டின் பலனையும், அதன் நிறைவான விளைச்சலையும் சாப்பிடும்படி அங்கு கொண்டுவந்தேன். ஆனால் நீங்களோ, வந்து என்னுடைய நாட்டைக் கறைப்படுத்தி, என் உரிமைச்சொத்தையும் அருவருப்பாக்கினீர்கள். ‘யெகோவா எங்கே?’ என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை; வேதத்தை போதிக்கிறவர்கள் என்னை அறியவில்லை; தலைவர்கள் எனக்கெதிராக கலகம் செய்தார்கள். இறைவாக்கு உரைப்போர் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, பாகாலின் பெயரால் இறைவாக்கு கூறினார்கள். “ஆகையினால் திரும்பவும் உனக்கெதிராக குற்றம் சுமத்துகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். மேலும் அவர், “உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கெதிராகவும் குற்றம் சுமத்துவேன். சைப்பிரஸின் கரைக்குக் கடந்துபோய்ப் பாருங்கள். கேதாருக்கு ஆள் அனுப்பி உற்றுக் கவனியுங்கள். இதைப்போன்ற ஒரு காரியம் எப்பொழுதாவது நடந்திருந்ததோ என்று பாருங்கள்: எந்த நாடாவது தனது தெய்வங்களை மாற்றியதுண்டா? ஆனால் என் மக்களோ, அவர்களுடைய மகிமையாகிய எனக்குரிய இடத்தில் பயனற்ற விக்கிரகங்களை எனக்கு பதிலாக மாற்றிக்கொண்டார்கள். ஆயினும் அவை தெய்வங்கள் அல்லவே. வானங்களே, இதைக்குறித்து வியப்படையுங்கள். பெரிதான பயங்கரத்தினால் நடுங்குங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “என் மக்கள் இரண்டு பாவங்களைச் செய்திருக்கிறார்கள்: ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை கைவிட்டார்கள். தங்களுக்கென சொந்தமான தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள். அவைகளோ தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள். இஸ்ரயேல் ஒரு கூலியாளோ? அவன் பிறப்பிலே அடிமையாகவே பிறந்தானோ? பின் ஏன் அவன் இவ்வாறு கொள்ளைப்பொருளானான்? சிங்கங்கள் கர்ஜித்தன; அவைகள் அவனைப் பார்த்து உறுமியது. இஸ்ரயேலுடைய நாட்டை அவை பாழாக்கிவிட்டன; அவனுடைய பட்டணங்கள் எரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டுள்ளன. அத்துடன், தக்பானேஸ் மெம்பிஸ் பட்டணங்களின் மனிதர் உன்னுடைய தலையின் உச்சியையும் நொறுக்கினார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வழிநடத்தியபோது, அவரை நீங்கள் கைவிட்டதினால் அல்லவா இவற்றை நீங்களே உங்கள்மேல் கொண்டுவந்தீர்கள்? இப்போது நைல் நதியின்2:18 எபிரெயத்தில் நைல் நதியின் அல்லது சீகோரின் தண்ணீர் சீகோர் என்பது நைல் நதியின் ஒரு கிளை ஆகும் தண்ணீரைக் குடிக்க ஏன் எகிப்திற்குப் போகிறீர்கள்? ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிக்க ஏன் அசீரியாவுக்குப் போகிறீர்கள்? உன் கொடுமை உன்னைத் தண்டிக்கும்; உன் பின்மாற்றம் உன்னைக் கண்டிக்கும். உன் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டு, அவருக்குப் பயமின்றி நடப்பது எவ்வளவு தீமையும், கசப்புமான செயல் என்பதைக் கவனித்து உணர்ந்துகொள்” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “வெகுகாலத்துக்கு முன்பே உன்னுடைய நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுத்துவிட்டேன். ‘நான் உமக்குப் பணிசெய்யமாட்டேன்’ என்று நீ சொன்னாய். உண்மையாகவே நீ ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், ஒரு வேசியாகக் கிடந்தாய். நான் உன்னை திறமையானதும், தவறாது பலன் தருவதுமான சிறந்த திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தேனே. அப்படியிருக்க நீ எப்படி எனக்கு விரோதமாக ஒரு பயனற்ற காட்டுத் திராட்சையாக மாறினாய்? நீ உன்னை உப்புச் சோடாவினால் கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும், உன் குற்றத்தின் கறை நீங்காமல் என் முன்னே இருக்கிறது” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். “ ‘நான் கறைப்படவில்லை; பாகால் தெய்வங்களின் பின்னே ஓடவில்லை’ என்று நீ எப்படிச் சொல்லலாம்? பள்ளத்தாக்கில் எவ்வாறு நடந்துகொண்டாய் என்று பார். நீ செய்தவற்றை எண்ணிப்பார்; நீ எல்லா திக்குகளிலும் ஓடித்திரிகிற பெண் ஒட்டகம். நீ காமவெறியால் காற்றை மோப்பம் பிடித்துத் திரிந்து, பாலைவனத்திற்குப் பழகிப்போன ஒரு காட்டுக் கழுதை. அது வேட்கைகொள்ளும் காலத்தில் அதை அடக்குகிறவன் யார்? அதற்குப்பின் செல்லும் எந்த ஆண் கழுதையும் களைப்படைய வேண்டியதில்லை; புணரும் காலத்தில் அவைகள் அதைக் கண்டுகொள்ளும். உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும் அந்நிய தெய்வங்களைத் தேடி ஓடாதே என்றேன். ஆனால் நீயோ, ‘அது பிரயோசனமற்றது! நான் அந்நிய தெய்வங்களையே நேசிக்கிறேன். அவற்றிற்குப் பின்னாலேயே நான் போவேன்’ என்று சொன்னாய். “ஒரு திருடன் தான் பிடிபடும்போது அவமானப்படுவதுபோல், இஸ்ரயேல் வீடும் அவமானப்பட்டது. அவர்களும், அவர்களுடைய அரசர்களும், அவர்களின் அதிகாரிகளும், ஆசாரியரும், இறைவாக்கு உரைப்போரும் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு மரத்துண்டைப் பார்த்து, ‘நீ என் தந்தை’ என்றும், ஒரு கல்லைப் பார்த்து, ‘நீ என்னைப் பெற்றாய்’ என்றும் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் முகங்களையல்ல, முதுகுகளையே எனக்கு திருப்பிக் காட்டினார்கள்; இப்படியிருந்தும் அவர்கள் ஆபத்திலிருக்கும்போது, ‘நீர் வந்து எங்களைக் காப்பாற்றும்’ என்று சொல்கிறார்கள். அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எங்கே? நீங்கள் ஆபத்திலிருக்கும்போது அவை வந்து உங்களைக் காப்பாற்றட்டும்! ஏனெனில் யூதாவே, உன்னிடம் அநேக பட்டணங்கள் இருப்பதுபோல் அநேக தெய்வங்களும் உன்னிடத்தில் உண்டு. “எனக்கெதிராக ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் எனக்கெதிராக கலகம் செய்தீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்; நான் அவர்களை திருத்தியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பசிகொண்ட ஒரு சிங்கத்தைப்போல உங்களுடைய வாளே உங்கள் இறைவாக்கினரை இரையாக்கி விழுங்கியது. “இந்தச் சந்ததியிலுள்ள நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கவனியுங்கள்: “நான் இஸ்ரயேலுக்கு ஒரு பாலைவனமாய் இருந்தேனோ? அவர்களுக்கு நான் காரிருள் நிறைந்த நாடாக இருந்தேனோ? ‘நாங்கள் சுற்றித்திரிய சுதந்திரமுடையவர்கள்; இனி ஒருபோதும் உம்மிடம் வரமாட்டோம்’ என்று ஏன் என்னுடைய மக்கள் சொல்கிறார்கள்? ஒரு இளம்பெண் தன் நகைகளை மறந்துவிடுவாளோ, ஒரு மணமகள் தனது திருமண ஆடைகளை மறந்துவிடுவாளோ? ஆயினும் என் மக்களோ எண்ணற்ற நாட்களாய் என்னை மறந்தார்கள். நீ காதலர்களைத் தேடுவதில் எவ்வளவு கைதேர்ந்தவள்! பெண்களில் மிகவும் கேடானவர்களும் உன்னுடைய வழிகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம். உன் உடைகளிலே குற்றமற்ற ஏழைகளின் உயிர் இரத்தத்தை மனிதர் காண்கிறார்கள். இது, உன் வீட்டை அவர்கள் கன்னமிடும்போது சிந்தப்பட்ட இரத்தமல்ல. இப்படியெல்லாம் இருக்கும்போதும், நீ, ‘நான் குற்றமற்றவள்; அவரும் என்னுடன் கோபமாயிருக்கவில்லை’ என்று சொல்கிறாய். ஆனால், ‘நான் பாவம் செய்யவில்லை’ என்று நீ சொல்வதால் நான் உன்னை நியாயந்தீர்பேன். நீ உன் வழிகளை மாற்றிக்கொண்டு, அங்குமிங்குமாக ஏன் திரிகிறாய்? அசீரியாவினால் ஏமாற்றமடைந்ததுபோல, எகிப்தினாலும் ஏமாற்றமடைவாய். உன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, அவ்விடத்தையும்விட்டுப் போவாய். ஏனெனில் நீ நம்பியிருக்கிறவர்களை யெகோவா புறக்கணித்துவிட்டார்; அவர்கள் உனக்கு ஒரு உதவியும் செய்யமாட்டார்கள். “ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தபின்பு, அவள் அவனைவிட்டு, போய் வேறொரு மனிதனைத் திருமணம் செய்தால், முந்திய கணவன் அவளிடம் திரும்பிப் போகலாமோ? அவ்விதம் செய்தால் நாடு முழுவதும் கறைப்படுத்தப்பட்டுப் போகாதோ? நீயோ பல காதலர்களுடன் வேசியாக வாழ்ந்திருக்கிறாய். இப்பொழுது என்னிடம் திரும்புவாயா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ மேலே நோக்கி வறண்ட மேடுகளைப் பார். நீ வேசித்தனம் செய்யாத இடமேதும் உண்டோ? பாலைவனத்தின் நாடோடியைப்போல், காதலருக்காக தெருவோரங்களில் காத்துக்கொண்டிருந்தாய். உன்னுடைய வேசித்தனத்தினாலும், கொடுமையினாலும் நாட்டைக் கறைப்படுத்தினாய். இதனால் மழை வீழ்ச்சி தடைசெய்யப்பட்டு, கோடை மழையும் பெய்யவில்லை. அப்படியிருந்தும் நீ ஒரு வேசியின் நாணமற்ற தோற்றத்தை உடையவளாய் இருக்கிறாய்; நீ வெட்கங்கொண்டு நாணமடைய மறுக்கிறாய். இப்பொழுதும் நீ என்னைக் கூப்பிட்டு, ‘என் பிதாவே, என் வாலிப காலத்திலிருந்து என் நண்பராயிருப்பவரே, நீர் எப்போதும் கோபமாயிருப்பீரோ? உமது பெருங்கோபம் என்றைக்கும் நீடித்திருக்குமோ?’ என்று கேட்கவில்லையா? நீ பேசுவது இப்படித்தான், ஆனால் நீ உன்னால் முடிந்த தீமையையெல்லாம் செய்கிறாய்.” உண்மையற்ற இஸ்ரயேல் யோசியா அரசனின் ஆட்சிக்காலத்தில் யெகோவா என்னிடம், “பின்மாற்றமடைந்த இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும் விபசாரம் பண்ணினாள். இவை எல்லாவற்றையும் செய்தபின்பாவது என்னிடம் திரும்பி வருவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ திரும்பி வரவில்லை. இதை அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகியும் கண்டாள். பின்மாற்றமடைந்த இஸ்ரயேலுக்கு அவளுடைய எல்லா விபசாரங்களின் நிமித்தமும், அவளுக்கு விவாகரத்துச் சீட்டைக் கொடுத்து, அவளை அனுப்பிவிட்டேன். இருந்தும் அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகி பயப்படாததை நான் கண்டேன். அவளும் வெளியே போய் விபசாரம் பண்ணினாள். இஸ்ரயேலின் ஒழுக்கக்கேடு யூதாவுக்கு மிகவும் அற்பமாய் இருந்தபடியால், அவளும் தன் நாட்டைக் கறைப்படுத்தி, கற்களோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணினாள். இப்படியெல்லாம் இருக்கையில் இஸ்ரயேலுடைய சகோதரியான யூதா என்ற துரோகி, வஞ்சகமாய் என்னிடம் திரும்பி வந்தாளேயல்லாமல், முழுமனதுடன் திரும்பி வரவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா என்னிடம் சொன்னதாவது: “துரோகியாகிய யூதாவைப் பார்க்கிலும் உண்மையற்ற இஸ்ரயேல் நீதியுள்ளவளாய் இருக்கிறாள். ஆகவே நீ போய் வடக்கு நோக்கி இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து: “பின்மாற்றமடைந்த இஸ்ரயேலே, திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார். “இனி ஒருபோதும் உங்கள்மேல் கோபத்தைக் காண்பிப்பதில்லை, ஏனெனில் நான் இரக்கமுள்ளவர்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என்றைக்கும் கோபமாயிருக்கமாட்டேன். உன் குற்றத்தை மாத்திரம் ஏற்றுக்கொள். நீ உன் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாய். ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், அந்நிய தெய்வங்களுடன் சேர்ந்து கேடாக நடந்து எனக்குக் கீழ்ப்படியாமல் போனாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன். என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள். அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை. அக்காலத்தில் எல்லா மக்களும் எருசலேமை யெகோவாவினுடைய சிங்காசனம் என்று கூறுவார்கள். யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக எருசலேமில் ஒன்று கூடுவார்கள். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய தீமையான இருதயங்களின் பிடிவாதத்துடன் நடக்கமாட்டார்கள். அந்நாட்களில் யூதா வம்சத்தார், இஸ்ரயேல் வம்சத்தாருடன் ஒன்றுசேருவார்கள். அவர்கள் வடதிசையிலுள்ள நாட்டிலிருந்து நான் உங்கள் முற்பிதாக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வருவார்கள். “நான், “ ‘உங்களை எவ்வளவு சந்தோஷமாக என் சொந்தப் பிள்ளைகளைப்போல் நடத்துவேன்; எந்த நாட்டினுடைய உரிமைச்சொத்தைப் பார்க்கிலும், மிக நலமான விரும்பத்தக்க ஒரு நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று நான், நானே சொன்னேன். நீங்கள் என்னை, ‘பிதாவே’ என்று அழைப்பீர்கள் என்றும், என்னைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பமாட்டீர்கள் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனாலும் இஸ்ரயேல் வீட்டாரே, தன் கணவனுக்கு உண்மையற்று இருக்கும் ஒரு பெண்ணைப்போல, நீங்கள் எனக்கு உண்மையற்று இருந்தீர்கள்” என்று யெகோவா சொல்கிறார். வறண்ட மேடுகளில் அழுகை கேட்கிறது; இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டுதலுமே அது. ஏனெனில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்கேடாக்கி தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள். “உண்மையற்ற மக்களே திரும்பிவாருங்கள்; நான் உங்கள் பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்” என்று யெகோவா சொல்கிறார். அதற்கு மக்கள், “ஆம், நீரே எங்கள் இறைவனாகிய கர்த்தராயிருப்பதால் நாங்கள் உம்மிடம் வருவோம். குன்றுகளிலும் மலைகளிலும் செய்துவந்த விக்கிரக வழிபாட்டின் ஆரவாரம், உண்மையில் ஒரு ஏமாற்றுச் செயலே; இஸ்ரயேலின் இரட்சிப்பு நிச்சயமாக எங்கள் இறைவனாகிய யெகோவாவிலேயே இருக்கிறது. எங்கள் வாலிப காலத்திலிருந்து, எங்கள் முற்பிதாக்களின் உழைப்பின் பலனான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும் வெட்கக்கேடான தெய்வங்கள் விழுங்கிவிட்டன. நாங்கள் எங்கள் வெட்கத்திலேயே கிடப்போம், எங்கள் அவமானம் எங்களை மூடிக்கொள்ளட்டும். நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறோம், நாங்கள் எங்கள் இளமைப் பருவத்திலிருந்து இன்றுவரை எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கவில்லை” என்றார்கள். இஸ்ரயேலே, “நீ திரும்பிவர விரும்பினால் என்னிடம் திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ என் பார்வையிலிருந்து உன் அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி, இனி ஒருபோதும் வழிவிலகாதிருந்து, உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று நீ ஆணையிடுவாயானால், எல்லா நாட்டினரும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவரில் அவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்” என்கிறார். யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே: “உழப்படாத உங்கள் நிலத்தைப் பண்படுத்துங்கள். முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள். யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே, யெகோவாவுக்கென்று உங்களை விருத்தசேதனம்4:4 விருத்தசேதனம் என்றால் அர்ப்பணித்தல் எனப்படும். பண்ணுங்கள், உங்கள் இருதயங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள். இல்லையெனில் நீங்கள் செய்திருக்கிற தீமையினால், என்னுடைய கோபம் வெளிப்பட்டு, அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் எரியும். வடக்கிலிருந்து வரும் பேரழிவு “யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்: ‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்!’ சத்தமிட்டு: ‘ஒன்றுகூடுங்கள்! பாதுகாப்பான பட்டணங்களுக்கு ஓடுவோம்!’ என்று சொல்லுங்கள். சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்! பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்! ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும், மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.” ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது. நாடுகளை அழிக்கிறவன் புறப்பட்டு விட்டான். உன்னுடைய நாட்டைப் பாழாக்குவதற்காக, தனது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டான். உன்னுடைய பட்டணங்கள் குடியிருப்பவர்கள் இன்றி பாழாய்க்கிடக்கும். எனவே துக்கவுடை உடுத்துங்கள். அழுது புலம்புங்கள். ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம் எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே. அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும் மனம் சோர்ந்துபோவார்கள். ஆசாரியர்கள் திகிலடைவார்கள். இறைவாக்கினர் அதிர்ச்சியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன். அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல. அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.” பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான். சுழல் காற்றைப்போன்ற இரதங்களுடனும், கழுகுகளைப் பார்க்கிலும் வேகமான குதிரைகளுடனும் அவன் வருகிறான். எங்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் அழிந்தோம்! எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள். தீமையான சிந்தனைகளை எவ்வளவு காலத்திற்குத் தேக்கி வைப்பாய்? தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது. எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது. “நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள். எருசலேமுக்கு அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘யூதாவின் பட்டணங்களுக்கு எதிராக போர் முழக்கத்தை எழுப்பிக்கொண்டு, முற்றுகையிடும் இராணுவம் ஒன்று தூரமான ஒரு நாட்டிலிருந்து வருகிறது. எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால், ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர் எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார். “உன்னுடைய நடத்தையும் செயல்களுமே உன்மீது இவைகளைக் கொண்டுவந்திருக்கின்றன. இதுதான் உன்னுடைய தண்டனை. அது எவ்வளவு கசப்பானது! அது இருதயத்தை எவ்வளவாய் குத்துகிறது!” ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்! என் வலியில் துடிக்கிறேன். என் இருதயம் தாங்கமுடியாத துயரமடைகிறது, என் இருதயம் எனக்குள் படபடக்கிறது, என்னால் அமைதியாயிருக்க முடியாது. ஏனெனில் நான் எக்காள சத்தத்தைக் கேட்டேன்; போர் முழக்கத்தையும் கேட்டேன். பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது; நாடு முழுவதுமே அழிந்து கிடக்கிறது. நொடிப்பொழுதில் என் கூடாரங்கள் அழிந்தன. கணப்பொழுதில் என் புகலிடம் அழிந்தது. நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும், போரின் எக்காள தொனியைக் கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்? “என் மக்கள் மூடர்கள், அவர்கள் என்னை அறியவில்லை. அவர்கள் உணர்வற்ற பிள்ளைகள்; அவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை. அவர்கள் தீமை செய்வதில் திறமைசாலிகள்; எப்படி நன்மை செய்வது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.” நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். அது உருவமற்று வெறுமையாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன். அவைகளின் வெளிச்சம் போய்விட்டது. மலைகளை உற்றுப் பார்த்தேன். அவை நடுங்கிக் கொண்டிருந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்துகொண்டிருந்தன. நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன. நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது. யெகோவாவுக்கு முன்பாக அவருடைய கடுங்கோபத்தினால் அதன் பட்டணங்கள் யாவும் பாழாகிக்கிடந்தன. யெகோவா சொல்வது இதுவே: “நாடு முழுவதும் பாழாய்ப்போகும். ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன். ஆகையால் பூமி துக்கங்கொள்ளும். மேலேயுள்ள வானங்கள் இருளடையும். ஏனெனில் நான் சொல்லிவிட்டேன், நான் மனம் மாறமாட்டேன்; நான் தீர்மானித்து விட்டேன், அதைச் செய்யாமல் விடவுமாட்டேன்.” குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள். சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்; சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள். எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன; ஒருவரும் அங்கு வசிக்கவில்லை. பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்? இரத்தாம்பர உடையை அணிந்து தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்? நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்? நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்; உன் காதலர் உன்னை வெறுத்து உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும், தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனைக் குரலைப் போலவும் ஒரு அழுகுரலைக் கேட்கிறேன். இளைத்து மூச்சு வாங்குகிற சீயோன் மகளின் அழுகுரலே அது. அவள் தன் கைகளை நீட்டி, “ஐயோ நான் மயக்கமடைகிறேன்; என் உயிர் கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டு விட்டது” என்கிறாள். நீதிமான் ஒருவனுமில்லை எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய், சுற்றிப் பார்த்துக் கவனியுங்கள். அதன் பொது சதுக்கங்களில் தேடிப் பாருங்கள். நேர்மையாய் நடந்து, உண்மையை விரும்புகிற ஒரு மனிதனையாவது உங்களால் காணமுடியுமானால், நான் இந்தப் பட்டணத்தை மன்னிப்பேன். “யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும், அவர்கள் இன்னும் பொய் சத்தியம் செய்கிறார்கள். யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா? நீர் அவர்களை அடித்தீர். அவர்கள் அதன் வலியை உணரவில்லை. நீர் அவர்களை நசுக்கினீர். ஆனால் அவர்கள் திருந்துவதற்கு மறுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் முகங்களைக் கல்லைவிட கடினமாக்கி, மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள். “இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள் என்று நான் நினைத்தேன். இவர்கள் யெகோவாவின் வழியையோ தங்கள் இறைவனுடைய நியமங்களையோ அறியாதவர்கள். ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்; நிச்சயமாக அவர்கள் யெகோவாவின் வழியையும், தங்கள் இறைவனின் நியமங்களையும் அறிந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்களுங்கூட ஒருமனதாய் நுகத்தை முறித்து, கட்டுகளை அறுத்துப் போட்டார்கள். இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும், பாலைவனத்து ஓநாய் அவர்களைப் பாழ்படுத்தும். அவர்களுடைய பட்டணங்களின் அருகே சிறுத்தைப் பதுங்கிக் காத்திருந்து, அது வெளியேவரும் எவனையும் துண்டுதுண்டாய் கிழித்துப்போடும். ஏனெனில் அவர்களின் கலகம் பெரிதாயும் அவர்களின் பின்மாற்றங்கள் அதிகமாயும் உள்ளன. “நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டு விட்டார்கள், தெய்வங்கள் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் பண்ணுகிறார்கள். நான் அவர்களுடைய தேவைகளைப் பூரணமாகக் கொடுத்திருந்தேன், ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமாய் வேசிகளின் வீடுகளுக்குப் போனார்கள். அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல், ஒவ்வொருவனும் அயலவனின் மனைவியின்மேல் ஆசைகொள்கிறான். இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “இப்படிப்பட்டவர்களை நான் பழிவாங்க வேண்டாமோ? “திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து, ஆனாலும் அவைகளை முற்றிலும் அழிக்கவேண்டாம். அவைகளின் கிளைகளை வெட்டிவிடு. ஏனெனில் இந்த மக்கள் யெகோவாவுக்கு உரியவர்களல்ல. இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும் எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்; அவர்கள், “அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார். எங்களுக்கு ஒரு தீங்கும் வராது; நாங்கள் வாளையோ பஞ்சத்தையோ ஒருபோதும் காணமாட்டோம். இறைவாக்கினர் வெறும் காற்றுதானே, அவர்களிடத்தில் இறைவனின் வார்த்தை இல்லை; ஆகவே அவர்கள் சொல்வதெதுவோ அது அவர்களுக்கே செய்யப்படட்டும்” என்று சொன்னார்கள். ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: “இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால், உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன். இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன். இஸ்ரயேல் குடும்பமே, உங்களுக்கெதிராக தூரத்திலிருந்து ஒரு தேசத்தாரைக் கொண்டுவருகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் முற்காலத்திலிருந்து அழியாது நிலைத்து வாழுகின்ற ஒரு நாடு. அவர்கள் நீங்கள் அறியாத மொழியையும், நீங்கள் விளங்கிக்கொள்ளாத பேச்சையும் பேசுகிறவர்கள். அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை. அவர்கள் யாவரும் வலிமைமிக்க போர்வீரர்கள். அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள். உங்கள் மகன்களையும், மகள்களையும் விழுங்குவார்கள். அவர்கள் உங்கள் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் விழுங்குவார்கள். உங்கள் திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் விழுங்குவார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அரணான பட்டணங்களையும் வாளினால் அழிப்பார்கள். ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார். மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல். “இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து யூதா நாட்டில் பிரசித்தப்படுத்து: மூடரே, உணர்ச்சியற்ற மக்களே, கண்கள் இருந்தும் காணாதவர்களே, காதுகள் இருந்தும் கேளாதவர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்: நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ? நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன். கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன். அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது. அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது. ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்; அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். ‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம். அவரே கோடை மழையையும் வசந்த மழையையும் அந்தந்த பருவகாலங்களில் தருகிறவர். ஒழுங்கான அறுவடைக் காலங்களையும் எங்களுக்குத் தவறாது தருகிறவர்’ என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில்லை. உங்கள் கொடுமையான செயல்களே, உங்களுக்கு இவைகள் கிடைக்காதபடி செய்திருக்கின்றன. உங்கள் பாவங்களே, உங்களுக்கு நன்மை வராதபடி தடுத்திருக்கின்றன. “என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்; அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும் வேடரைப்போல் இருக்கிறார்கள். மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும் பதுங்கியிருக்கிறார்கள். பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல, அவர்கள் வீடுகள் வஞ்சனைகளால் நிறைந்திருக்கின்றன. அவர்கள் செல்வந்தர்களும் செல்வாக்குடையவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள். அவர்களுடைய தீய செயல்கள் அளவற்றதாயிருக்கின்றன; தந்தையற்ற பிள்ளைகளின் வழக்கை வெல்லும்படியாக பரிந்து பேசமாட்டார்கள். ஏழைகளின் உரிமைகளுக்காக வாதாடவும் மாட்டார்கள். இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் இப்படிப்பட்டவர்களைப் பழிவாங்க வேண்டாமோ? “நாட்டில் பயங்கரமும், அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது: இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள். ஆசாரியரும் தங்கள் சொந்த அதிகாரத்தின்படியே ஆளுகைசெய்கிறார்கள். என் மக்களும் அதையே விரும்புகிறார்கள். ஆயினும் முடிவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” எருசலேமின் முற்றுகை “பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள். எருசலேமைவிட்டுத் தப்பி ஓடுங்கள்! தெக்கோவாவில் எக்காளத்தை ஊதுங்கள்! பெத்கேரேமில் சைகை காட்டுங்கள்! ஏனெனில் ஒரு பேராபத்து வடக்கிலிருந்து வருகிறது. அது பயங்கர பேரழிவாய் வருகிறது. அழகும் மென்மையுமுள்ள சீயோன் மகளை நான் அழிப்பேன். மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள். அவளைச் சுற்றித் தங்கள் கூடாரங்களை அடித்து, அவனவன் தான் தெரிந்துகொண்ட பகுதியில் தன் மந்தைகளை மேய்ப்பான்.” “அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள், எழுந்திருங்கள், நண்பகலில் தாக்குவோம். ஆனால் ஐயோ! பகல் வெளிச்சம் மங்குகிறது. அந்திப்பொழுதும் சாய்கிறது. ஆகவே எழும்புங்கள். நாம் இரவில் தாக்கி அவளுடைய கோட்டைகளை அழிப்போம்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மரங்களை வெட்டி வீழ்த்தி எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள். இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்; அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது. ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல, அவளிலிருந்து கொடுமை சுரந்துகொண்டே இருக்கிறது. வன்செயலும், அழிவுமே அப்பட்டணத்தின் வீதிகளில் எதிரொலிக்கின்றன; அவளுடைய நோய்களும், காயங்களும் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கின்றன. எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி. இல்லாவிட்டால் நான் உன்னைவிட்டுப் போய்விடுவேன், ஒருவரும் அதில் குடியிருக்கமாட்டார்கள். அப்பொழுது உன் நாடு பாழாகும்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “திராட்சைக்கொடிகளில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களை திரும்ப சேர்த்தெடுப்பதுபோல், இஸ்ரயேலில் மீதியாயிருப்பவர்களை சேர்த்தெடுங்கள். திராட்சைப் பழங்களைச் சேர்க்கிறவனைப்போல, திரும்பவும் கிளைகளுக்கு இடையில் உனது கையைப் போடு.” நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? யார் எனக்குச் செவிகொடுப்பான்? கேட்க முடியாதபடி அவர்களின் காதுகள் மூடப்பட்டிருக்கின்றன6:10 மூடப்பட்டிருக்கின்றன மூல மொழியில் விருத்தசேதனமில்லாமல் என உள்ளது.. யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன், என்னால் அதை அடக்கிக்கொண்டிருக்க முடியாது. “அதை வீதிகளில் இருக்கும் பிள்ளைகள் மேலும், ஒன்று கூடியிருக்கும் இளைஞர் மேலும் ஊற்றிவிடு; கணவனும் மனைவியும் முதியவர்களும் வயது சென்றவர்களுங்கூட அதில் அகப்படுவார்கள். அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும். மனைவிகளுங்கூட மற்றவர்களுக்குச் சொந்தமாவார்கள். நாட்டில் குடியிருப்பவர்களுக்கு எதிராக நான் என்னுடைய கையை நீட்டும்போது, இது நிகழும்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை, எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள். என் மக்களின் கடுமையான காயத்தை, கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள், ஆனால் சமாதானமோ அங்கே இல்லை. அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா? இல்லை, அவர்களுக்குச் சிறிதளவும் வெட்கம் இல்லை; நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். ஆதலால் அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது, தள்ளுண்டு போவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். யெகோவா சொல்வது இதுவே: “வழியின் நாற்சந்திகளில் நின்று பாருங்கள். முன்னோர்களின் வழிகளைக் கேட்டு விசாரியுங்கள். நன்மையான வழி எங்கே என்று கேட்டு அதிலே நடவுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு ஆறுதல் கிடைக்கும். ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதில் நடக்கமாட்டோம்’ என்றீர்கள். நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து, ‘எக்காள சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’ என்று சொன்னேன். ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதைக் கேட்க மாட்டோம்’ என்றீர்கள். ஆகையால் நாடுகளே! கேளுங்கள்; கூடியிருப்போரே! அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள். பூமியே கேள்: இந்த மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனே இது. அவர்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்கவில்லை. என் சட்டத்தையும் புறக்கணித்துவிட்டார்கள். சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும், தூரதேசத்திலிருந்து வரும் நறுமணப் பொருட்களும் எனக்கு எதற்கு? உங்கள் தகனபலிகள் எனக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல; உங்கள் பலிகளும் என்னை மகிழ்விப்பதில்லை.” ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களுக்கு முன்பாக தடைகளை வைப்பேன். தந்தையரும், மகன்களும் அவைகளின்மேல் இடறி விழுவார்கள்; அயலவரும், சிநேகிதரும் அழிந்துபோவார்கள்.” யெகோவா சொல்வது இதுவே: “பாருங்கள்! வடதிசை நாட்டிலிருந்து ஒரு படை வருகிறது. ஒரு பெரிய நாடு பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது; சீயோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.” அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்; எங்கள் கைகள் தளர்ந்து செயலிழந்தன. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல பயமும் வேதனையும் எங்களைப் பற்றிக்கொண்டது. வயல்வெளி இடங்களுக்குப் போகவோ வீதிகளில் நடக்கவோ வேண்டாம். ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான். நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது. என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, சாம்பலில் புரளுங்கள்; ஒரே மகனுக்காக மனங்கசந்து அழுவதைப்போல் துக்கப்படுங்கள். ஏனெனில் அழிக்கிறவன் நம்மேல் திடீரென வருவான். “எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும், என் மக்களை உலோகத் துகள்களாகவும் ஆக்கினேன். நீயே என் மக்களுடைய வழிகளைக் கவனித்து, பரிசோதித்துப் பார்க்கவேண்டும். அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர். தூற்றுவதற்காக சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் வெண்கலமும் இரும்புமே; அவர்கள் எல்லோரும் சீர்கேடாய் நடக்கிறார்கள். நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு உலைத்துருத்தி பயங்கரமான காற்றை ஊதுகிறது; ஆனால் புடமிடுதல் பலனின்றி வீணாய்ப் போகிறது. கொடுமை அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை. அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் யெகோவா அவர்களைப் புறக்கணித்துவிட்டார்.” பயனற்ற பொய் மார்க்கம் யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ யெகோவாவின் ஆலய வாசலில் நின்று இச்செய்தியைப் பிரசித்தப்படுத்து: “ ‘யெகோவாவை வழிபட இந்த வாசல்களின் வழியாக வருகிற யூதா நாட்டு மக்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்திருத்துங்கள். அப்பொழுது நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். ஏமாற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, “இதுவே யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம்!” என்று சொல்லாதிருங்கள். நீங்கள் உண்மையாக உங்கள் வழிகளையும், செயல்களையும் மாற்றி, ஒருவரோடொருவர் நீதியாய் நடவுங்கள், அந்நியரையும், தந்தையற்றவர்களையும், விதவைகளையும் ஒடுக்கவேண்டாம். இந்த இடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், வேறு தெய்வங்களைப் பின்பற்றி உங்களுக்கே தீங்கை உண்டாக்காமலும் இருங்கள். அப்படி இருப்பீர்களானால், உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமாக நான் கொடுத்த இந்த நாட்டிலுள்ள, இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்க வைப்பேன். ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள். “ ‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள். பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்? என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் உங்களுக்கு கள்ளர் குகையானதோ? ஆனால் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன்! என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘இப்பொழுது சீலோவில் உள்ள இடத்திற்கு போங்கள். அதையே என் பெயருக்குரிய இருப்பிடமாக முதன்முதலில் ஏற்படுத்தினேன். அங்கே என் மக்களாகிய இஸ்ரயேலருடைய கொடுமையினிமித்தம், அதற்கு நான் என்ன செய்தேன் என்று பாருங்கள். நீங்கள் இந்தச் செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, நான் திரும்பத்திரும்ப உங்களுடன் பேசினேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை; நான் உங்களைக் கூப்பிட்டேன், நீங்களோ பதில் தரவில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையால் அன்று நான் சீலோவுக்குச் செய்ததையே, என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கும் செய்வேன். உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இடமான, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆலயத்துக்கே இப்படிச் செய்வேன். எப்பிராயீம் மக்களான உங்கள் சகோதரருக்குச் செய்ததுபோல, நான் உங்களை என் முகத்திற்கு முன்னிருந்து தள்ளிவிடுவேன்.’ “எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாடவோ, அவர்களுக்காக எந்த வேண்டுதலையோ, விண்ணப்பத்தையோ செய்யவேண்டாம்; அவர்களுக்காக என்னிடம் பரிந்துபேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிகொடுக்கமாட்டேன். யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீ காணவில்லையோ? வான அரசிக்கு அப்பம் சுடுவதற்காக பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், தந்தையர் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாவைப் பிசைந்து அப்பம் சுடுகிறார்கள். அவர்கள் என்னைக் கோபம் மூட்டுவதற்காக, வேறு தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் என்னையா கோபமூட்டுகிறார்கள்? வெட்கக்கேடாக தங்களுக்கல்லவா தீங்கை வருவித்துக் கொள்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: என் கோபமும் கடுங்கோபமும் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது மனிதர்மேலும், மிருகத்தின்மேலும், வெளிநிலத்திலுள்ள மரங்களின்மேலும், நிலத்தின் பலனின்மேலும் ஊற்றப்படும். அது ஒருவராலும் அணைக்க முடியாதபடி எரியும். “ ‘ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: போங்கள், நீங்கள் போய், நீங்கள் விரும்பியபடி தொடர்ந்து பிற பலிகளுடன் தகனபலிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவைகளின் இறைச்சியை நீங்களே சாப்பிடுங்கள்! ஏனென்றால் உங்கள் முற்பிதாக்களை நான் எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்து, அவர்களுடன் பேசியபோது, நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தது தகனபலிகளையும், மற்ற பலிகளையும் குறித்து மட்டுமல்ல. இந்த கட்டளையுடன், எனக்குக் கீழ்ப்படியுங்கள், அப்பொழுது நான் உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும் என்ற கட்டளையையும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கேட்கவுமில்லை அதைக் கவனிக்கவுமில்லை; அதற்குப் பதிலாக, தங்கள் பொல்லாத இருதயங்களிலுள்ள பிடிவாத மனப்பாங்கின்படியெல்லாம் செய்தார்கள். முன்னேற்றமடையாமல் பின்னடைந்து போனார்கள். உங்கள் முற்பிதாக்கள் எகிப்தை விட்டுச்சென்ற காலத்திலிருந்து, இன்றுவரை, நாள்தோறும் திரும்பத்திரும்ப, நான் என்னுடைய ஊழியரான இறைவாக்கினரை உங்களிடம் அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் மக்களோ, நான் சொன்னவற்றைக் கேட்கவுமில்லை கவனிக்கவுமில்லை. இன்னும் முரட்டுத்தனமுள்ளவர்களாகி தங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும், அதிக தீமையான செயல்களையே செய்தார்கள்.’ “எரேமியாவே! இவையெல்லாவற்றையும் நீ அவர்களுக்குக் கூறினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். நீ அவர்களைக் கூப்பிட்டாலும் பதில் கொடுக்கவுமாட்டார்கள். ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்படியாமலும், அவருடைய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்களினம் இதுதான். உண்மை அழிந்துவிட்டது; அவர்களுடைய உதடுகளிலிருந்து அது மறைந்துபோயிற்று. “ ‘நீ உனது தலைமயிரை வெட்டி, அப்பால் எறிந்துவிடு. வறண்ட மேடுகளில் புலம்பு. ஏனெனில் யெகோவா தன் கடுங்கோபத்துக்குள்ளான இச்சந்ததியைப் புறக்கணித்துக் கைவிட்டுவிட்டார். படுகொலைப் பள்ளத்தாக்கு “ ‘யூதா மக்கள் என் பார்வையில் தீமையான செயல்களைச் செய்துள்ளார்கள்; என் பெயரைக்கொண்டு விளங்கும் இந்த ஆலயத்தில், தங்கள் அருவருக்கப்பட்ட விக்கிரகங்களை வைத்து அதைக் கறைப்படுத்தியுள்ளார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில்போட்டு, எரிப்பதற்காகப் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தில் உயர்ந்த மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். இதை நான் கட்டளையிடவுமில்லை. என் மனதில் நினைக்கவும் இல்லை. எனவே எச்சரிக்கையாயிரு, மக்கள் அதைத் தோப்பேத் என்றோ, பென் இன்னோமின் பள்ளத்தாக்கு என்றோ இனி ஒருபோதும் அழைக்காமல், படுகொலை பள்ளத்தாக்கு என்றே அழைக்கும் நாட்கள் வருகின்றன. ஏனெனில் அவர்கள் இடமின்றிப் போகுமட்டும் மரித்தவர்களை தோப்பேத்திலே புதைப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது இந்த மக்களின் சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும். அவைகளைப் பயமுறுத்தி விரட்டிவிட ஒருவரும் இருக்கமாட்டார்கள். யூதாவின் பட்டணங்களிலிருந்தும், எருசலேமின் வீதிகளிலிருந்தும் சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும் இல்லாமல் செய்வேன். மணமகளின் குரலையும், மணமகனின் குரலையும் ஒழியப்பண்ணுவேன். ஏனெனில், நாடு பாழாய்ப்போகும். “ ‘யெகோவா அறிவிக்கிறதாவது, அந்த நாட்களில் யூதா நாட்டு அரசர்களுடைய மற்றும் அதிகாரிகளுடைய எலும்புகளும், ஆசாரியர்களுடைய மற்றும் இறைவாக்கு உரைப்போருடைய எலும்புகளும், எருசலேம் மக்களின் எலும்புகளும் சவக்குழிகளிலிருந்து வெளியே எடுக்கப்படும். சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும். இந்தத் தீமையான வம்சத்தில் மீதியாயிருப்பவர்களை நான் எங்கெல்லாம் நாடு கடத்தினேனோ அங்கெல்லாம் அவர்கள் வாழ்வைவிட, சாவையே விரும்புவார்கள் என்று சேனைகளின் யெகோவா கூறுகிறார்.’ பாவமும் தண்டனையும் “நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “ ‘மனிதர்கள் விழுந்தால், அவர்கள் எழும்புவதில்லையோ? ஒருவன் வழிவிலகிப் போனால் மீண்டும் திரும்புவதில்லையோ? அப்படியானால் ஏன் இந்த மக்கள் வழிவிலகிப் போய்விட்டார்கள்? எருசலேம் ஏன் எப்பொழுதுமே வழிவிலகிப்போகிறது? அவர்கள் வஞ்சகத்தைப் பற்றிக்கொண்டு திரும்பிவர மறுக்கிறார்கள். நான் மிகவும் கவனித்துக் கேட்டேன். ஆனால் அவர்கள் சரியானதைச் சொல்கிறதில்லை. “நான் என்ன செய்துவிட்டேன்!” என்று சொல்லி ஒருவனும் தனது கொடுமையிலிருந்து மனந்திரும்புகிறதில்லை. போர்க்களத்திற்குள் பாய்ந்து தாக்கும் குதிரையைப்போல், ஒவ்வொருவனும் தன்தன் சொந்த வழிகளிலேயே தொடர்ந்து போகிறான். ஆகாயத்து நாரைகூட, தனக்கு நியமிக்கப்பட்ட பருவகாலங்களை அறியும். புறாவும், நீளவால் குருவியும், பாடும் குருவியுங்கூட தாங்கள் இடம் பெயரும் காலத்தை அறியும். ஆனால் என் மக்களோ யெகோவாவின் நியமங்களை அறியாதிருக்கிறார்கள் என்று சொல். “ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல், உண்மையல்லாததைத் தவறாகக் கையாண்டிருக்கும்போது, “நாங்கள் ஞானிகள்; யெகோவாவின் சட்டம் எங்களிடம் இருக்கிறது” என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்? ஞானிகள் வெட்கத்துக்குள்ளாவார்கள். அவர்கள் மனங்குழம்பி பொறியில் அகப்படுவார்கள். யெகோவாவின் வார்த்தையைப் புறக்கணித்தவர்களிடம் எப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது? ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன். அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன். தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள். என் மகளாகிய மக்களின் கடுமையான காயத்தை, கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். “சமாதானம், சமாதானம்” என்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானமோ அங்கே இல்லை. அவர்கள் தங்கள் அருவருப்பான நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா? இல்லை, சிறிதளவும் வெட்கமில்லை. நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். ஆகவே அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள். அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தள்ளுண்டு போவார்கள் என்று யெகோவா கூறுகிறார். “ ‘நான் அவர்களின் அறுவடையை எடுத்துச் செல்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். திராட்சைக்கொடியில் திராட்சைப் பழங்களோ, அத்திமரத்தில் அத்திப்பழங்களோ இருக்கமாட்டாது. அவைகளின் இலைகளும் வாடிவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்தவை அவர்களைவிட்டு எடுபட்டுப் போகும்8:13 நான் அவர்களை முற்றிலும் அழிக்கும்போது..’ ” அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல் ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும். வாருங்கள், ஒன்றுசேருவோம். அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய் அங்கே அழிவோம். ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார். அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார். நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம். ஒரு நன்மையுமே வரவில்லை. குணமாகும் நேரத்திற்குக் காத்திருந்தோம். ஆனால் ஆபத்து மட்டுமே ஏற்பட்டது. பகைவரின் குதிரைகளின் சீற்றம், தாணிலிருந்து கேட்கப்படுகிறது. அவர்களின் ஆண் குதிரைகளின் கனைக்கிற சத்தத்தால் நாடு முழுவதும் நடுங்குகிறது. நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும், பட்டணத்தையும், அதிலுள்ள குடிகள் யாவரையும் விழுங்குவதற்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். இதோ உங்கள் மத்தியில் நச்சுப் பாம்புகளை அனுப்புவேன். அவை வசியப்படுத்த முடியாத விரியன் பாம்புக் குட்டிகள். அவை உங்களைக் கடிக்கும் என்று யெகோவா அறிவிக்கிறார். என் துக்கத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவரே, என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. தூரத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து வரும் என் மக்களின் கதறுதலை உற்றுக் கேளுங்கள்; “சீயோனில் யெகோவா இல்லையோ? அவளுடைய அரசர் இனிமேல் அங்கு இருக்கமாட்டாரோ?” அவரோ, வார்க்கப்பட்ட உருவச்சிலைகளாலும், பயனற்ற அந்நிய விக்கிரகங்களாலும், ஏன் எனக்குக் கோபமூட்டினார்கள்? என்கிறார். மேலும் மக்கள் சொல்கிறதாவது, “அறுவடைக்காலம் முடிந்துவிட்டது. கோடைகாலம் போய்விட்டது. நாங்களோ இன்னும் விடுவிக்கப்படவில்லை.” என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன். நான் துக்கமாயிருக்கிறேன். என்னை திகில் பற்றிக்கொண்டது. கீலேயாத்தில் தைலம் இல்லையோ? அங்கே ஒரு வைத்தியனும் இல்லையோ? அப்படியானால் ஏன் என் மக்களின் காயம் குணமடையாமல் இருக்கிறது? என் தலை தண்ணீரூற்றாகவும், என் கண்கள் கண்ணீர் ஊற்றாகவும் இருக்குமானால், என் மக்களிள் கொலையுண்டவர்களுக்காக நான் இரவும், பகலும் அழுவேனே! பாலைவனத்தில் பிரயாணிகளுக்கான தங்குமிடம் ஒன்று எனக்கு இருக்குமானால், நான் என் மக்களைவிட்டு அப்பால் போய்விடுவேனே! ஏனெனில் அவர்கள் யாவரும் விபசாரக்காரரும், யெகோவாவுக்கு உண்மையற்ற மக்கள் கூட்டமாகவும் இருக்கிறார்கள். “அவர்கள் பொய்களை எய்வதற்குத் தங்கள் நாவுகளை வில்லைப்போல் ஆயத்தமாக்குகிறார்கள். நாட்டில் அவர்கள் வெற்றியடைந்தது உண்மையினால் அல்ல9:3 உண்மையினால் அல்ல அல்லது உண்மைக்காக அல்ல. அவர்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்னையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். மேலும் யெகோவா, நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒரு சகோதரனையும் நம்பவேண்டாம். ஏனென்றால் ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான். ஒவ்வொரு சிநேகிதனும் தூற்றித் திரிகிறவனாயிருக்கிறான். சிநேகிதன் சிநேகிதனை ஏமாற்றுகிறான். ஒருவனாவது உண்மை பேசுவதில்லை. அவர்கள் தங்கள் நாவுக்குப் பொய்பேசப் போதித்திருக்கிறார்கள். பாவம் செய்வதினால் தங்களைத் தாங்களே களைப்படையச் செய்கிறார்கள். எரேமியாவே, நீ ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறாய். இவர்கள் தங்கள் ஏமாற்றும் தன்மையில் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். அதனால், சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “பாருங்கள்; நான் சுத்திகரித்துச் சோதிப்பேன். என் மக்களின் பாவத்திற்காக இதைவிட நான் வேறென்ன செய்யலாம்? அவர்களின் நாவு ஒரு கொல்லும் அம்பாயிருக்கிறது. அது வஞ்சனையாய்ப் பேசுகிறது. ஒவ்வொருவனும் தன்தன் வாயினால் அயலானுடன் சிநேகமாய்ப் பேசுகிறான். ஆனால் உள்ளத்திலோ அவனுக்குப் பொறியை வைத்திருக்கிறான். இவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ? அத்தகைய தேசத்தாரிடம் நான் எனக்காகப் பழிவாங்க வேண்டாமோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் மலைகளுக்காகக் கதறி அழுவேன். காடுகளிலுள்ள மேய்ச்சலிடங்களுக்காகப் புலம்புவேன், அவை போக்கும் வரத்தும் இன்றி பாழாய்க் கிடக்கின்றன. மந்தைகளின் கதறுதல் கேட்கப்படுவதில்லை. ஆகாயத்துப் பறவைகளும் பறந்துவிட்டன. மிருகங்களும் ஓடிப்போய் விட்டனவே. யெகோவா சொல்கிறதாவது: “நான் எருசலேமை இடிபாடுகளின் குவியலாகவும், நரிகளின் தங்குமிடமாகவும் மாற்றுவேன். யூதாவின் பட்டணங்களை ஒருவனும் வசிக்க முடியாதவாறு பாழாக்குவேன்.” இதை விளங்கிக்கொள்ளத்தக்க ஞானமுள்ளவன் யார்? யாருக்கு யெகோவாவினால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? யாரால் அதை விளக்கிச் சொல்லமுடியும்? ஏன் இந்த நாடு ஒருவரும் கடந்துசெல்ல முடியாதபடி, அழிக்கப்பட்டு பாலைவனத்தைப்போல் பாழாகிக் கிடக்கிறது. ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார். ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன். அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இப்பொழுதும் யோசித்துப் பாருங்கள், ஒப்பாரி வைக்கும் பெண்களை அழைத்திடுங்கள்; அவர்களில் திறமையானவர்களுக்கு ஆளனுப்புங்கள். அவர்கள் விரைவாக வந்து, எங்களுக்காக ஒப்பாரி வைக்கட்டும். எங்கள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்து, எங்கள் இமைகளிலிருந்து தண்ணீர் தாரைகள் ஓடும்வரைக்கும் எங்களுக்காகப் புலம்பட்டும்.” சீயோனிலிருந்து ஒரு புலம்பல் சத்தம் கேட்கப்படுகிறது: “நாங்கள் எவ்வளவாய் அழிந்து போனோம். எங்கள் வெட்கம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது. எங்கள் வீடுகள் பாழாய்க் கிடப்பதால், எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் புறப்படவேண்டும்” என்கிறார்கள். பெண்களே, இப்பொழுது யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். அவருடைய வாயின் வார்த்தைகளுக்கு உங்கள் செவிகளைத் திறவுங்கள். எப்படி ஒப்பாரி வைப்பதென உங்கள் மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். ஒருவருக்கொருவர் ஒரு புலம்பலைக் கற்றுக்கொடுங்கள். மரணம் ஜன்னல் வழியே ஏறி எங்கள் அரண்களுக்குள் புகுந்து விட்டது. வீதிகளிலிருக்கும் பிள்ளைகளையும், பொதுச் சதுக்கங்களில் நிற்கும் வாலிபரையும் வெட்டி வீழ்த்திவிட்டது. யெகோவா அறிவிக்கிறது இதுவே என்று சொல்: மனிதரின் சடலங்கள் திறந்த வெளியிலுள்ள குப்பையைப்போல் கிடக்கும். அவைகள் அறுவடை செய்கிறவனுக்குப் பின்னால், பொறுக்குவதற்கு ஒருவனுமில்லாமல் விழுந்து கிடக்கும் தானியக் கதிரைப்போல் கிடக்கும் என்றார். யெகோவா கூறுவது இதுவே: “அறிவாளி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். பலசாலி தன் பலத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். செல்வந்தன் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்கட்டும். ஆனால் பெருமை பாராட்டுபவன் இதைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்: அது, ஒருவன் என்னை அறிந்து, விளங்கிக்கொண்டதாலும், நானே பூமியில் தயவும் நியாயமும் நீதியும் செய்கிற யெகோவா என்பதை அறிந்திருக்கிறதைக் குறித்துமே அவன் பெருமை பாராட்டட்டும். அவைகளிலேயே நான் மகிழ்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “மாம்சத்தில் மாத்திரம் விருத்தசேதனம் செய்யப்பட்ட எல்லோரையும் தண்டிக்கும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் ஆகிய தேசங்களையும், தூர இடத்திலுள்ள பாலைவனங்களில் குடியிருக்கும்9:26 பாலைவனங்களில் குடியிருக்கும் மக்கள் என்றால் தங்கள் தலைமயிரைச் சவரம் செய்தவர்களை குறிப்பிடும் யாவரையும் நான் தண்டிக்கும் நாட்கள் வரும். ஏனெனில் இந்த தேசத்தார் யாவரும் உண்மையாக விருத்தசேதனம் பெறாதவர்கள். அதுபோல் முழு இஸ்ரயேல் குடும்பமும் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள். இறைவனும் விக்கிரகங்களும் இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம். ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள். ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான். அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள். அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது, அவைகளால் நடக்கவும் முடியாது. ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும். அவைகள் நன்மையானதையோ, தீமையானதையோ செய்ய முடியாதவை. ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார். யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது. நாடுகளின் அரசரே! உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்? இது உமக்கு மட்டுமே உரியது. நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும், அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும், உம்மைப் போன்றவர் எவருமே இல்லை. அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன. கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும், ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை. ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது. வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல்.10:11 மூலபிரதியில் இவ்வசனம் அராமிய மொழியில் உள்ளது. ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார். அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார். ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. அவைகளில் சுவாசமில்லை. அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும். யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார். சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். வரப்போகும் அழிவு கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: “அந்த நாட்டில் குடியிருப்பவர்களை நான் இப்போதே அகற்றிவிடுவேன். நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.” என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. ஆனால் நானோ, “இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன். என் கூடாரம் அழிந்துவிட்டது. அதன் கயிறுகளும் அறுந்துபோயின. என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை. மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை. ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை. அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின. கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது. அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி, அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும். எரேமியாவின் மன்றாட்டு யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும், தன் வழிகளை அமைத்துக்கொள்வதற்கு மனிதனால் இயலாது என்பதையும் நான் அறிவேன். யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும். நான் அழிந்துபோகாதபடி உம்முடைய கோபத்தில் தண்டியாதிரும். உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத மக்கள்மேலும் ஊற்றும். ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள். அவனை முற்றிலுமாக விழுங்கி, அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள். உடன்படிக்கையை மீறுதல் யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே. “இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன். நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள். நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன். ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.” மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது. அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன். அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது. யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’ “ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன். “என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே! பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ? நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியடைகிறீர்களோ!” அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும். உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள். எரேமியாவுக்கு எதிரான சதி யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார். நானோ வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஒரு சாதுவான செம்மறியாட்டுக் குட்டியைப்போல் இருந்தேன். அவர்கள் எனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டியிருந்ததை நான் அறியாதிருந்தேன். அவர்கள், “இந்த மரத்தையும் அதன் பழத்தையும் அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை வெட்டிவிடுவோம். அவனுடைய பெயர் இனி ஒருபோதும் நினைக்கப்படாதே போகட்டும்” என்று சொல்லியிருந்ததையும் நான் அறிந்திருக்கவில்லை. சேனைகளின் யெகோவாவே, இருதயத்தையும், மனதையும் நீதியாய் நியாயம் தீர்த்து சோதித்தறிகிறவரே! அவர்கள்மேல் உமது பழிவாங்குதல் வருவதை நான் காணவேண்டும். ஏனெனில் என் வழக்கை நானே உம்மிடம் ஒப்புவித்துவிட்டேன். ஆகவே உன் உயிரை வாங்கத்தேடும் ஆனதோத் மனிதரைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: அவர்களோ, “யெகோவாவினுடைய பெயரில் இறைவாக்கு உரைக்காதே! அப்படிச் செய்தால் எங்கள் கைகளால் நீ சாவாய்” என்று சொல்கிறார்கள். ஆகவே சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்களை நான் தண்டிப்பேன். அவர்களுடைய வாலிபர்கள் வாளால் வெட்டுண்டு சாவார்கள். அவர்களுடைய மகன்களும், மகள்களும் பஞ்சத்தால் சாவார்கள். அவர்களுக்கு ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நான் தண்டிக்கும் வருடத்தில், ஆனதோத் மனிதர்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.” எரேமியாவின் குற்றச்சாட்டு யெகோவாவே, உமக்கு முன்பாக நான் வழக்குகளைக் கொண்டுவரும்போதெல்லாம் நீர் நீதியுள்ளவராகவே இருக்கிறீர். ஆகையினால் உம்முடைய நீதியைக் குறித்து நான் உம்மிடம் பேசப் போகிறேன்: கொடியவர்களின் செயல்கள் செழிப்பது ஏன்? நேர்மையற்றோர் கஷ்டமின்றி வாழ்வது ஏன்? நீர் அவர்களை நாட்டியிருக்கிறீர். அவர்கள் வேரூன்றியிருக்கிறார்கள். வளர்ந்து அவர்கள் கனி கொடுக்கிறார்கள். எப்போதும் நீர் அவர்களின் உதடுகளில் இருக்கிறீர். ஆனாலும் அவர்கள் இருதயங்களுக்கோ நீர் தூரமாய் இருக்கிறீர். ஆனாலும் யெகோவாவே, நீர் என்னை அறிவீர். நீர் என்னைக் காண்கிறீர்; உம்மைப் பற்றிய என் சிந்தனைகளைச் சோதிக்கிறீர். வெட்டுவதற்கான செம்மறியாடுகளைப்போல அவர்களை இழுத்துச் செல்லும். அவர்களைக் கொல்லப்படும் நாளுக்கென ஒதுக்கிவையும். எவ்வளவு காலத்திற்கு நாடு வறண்டும், வயல்களிலுள்ள புல் வாடியும் கிடக்கவேண்டும்? அதில் வாழ்கிறவர்கள் கொடியவர்களாகையினால் மிருகங்களும், பறவைகளும் அழிந்துவிட்டன. அதுவுமில்லாமல் மக்களோ, “எங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதை அவர் காணமாட்டார்” என்கிறார்கள். இறைவனின் பதில் காலால் ஓடும் மனிதரோடு ஓடும்போதே, அவர்கள் உன்னைக் களைப்படையச் செய்வார்களானால் குதிரைகளோடு நீ எப்படிப் போட்டியிடுவாய்? பாதுகாப்பான நாட்டிலேயே இடறுவாயானால், யோர்தானின் புதர் காடுகளில் நீ என்ன செய்வாய்? உன் சொந்தக் குடும்பத்தினராகிய உன் சகோதரர்களே, உனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். அவர்கள் உனக்கு விரோதமாகக் குரலெழுப்பினார்கள். உன்னைப்பற்றி நன்மையாய்ப் பேசினாலும், அவர்களை நீ நம்பவேண்டாம். நான் என் வீட்டைக் கைவிட்டு, என் உரிமைச்சொத்தைப் புறக்கணிப்பேன். என் அன்புக்குரியவளை அவளுடைய பகைவரின் கையில் கொடுத்துவிடுவேன். என் உரிமைச்சொத்தோ, எனக்குக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப்போல் ஆயிற்று. அவள் என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறாள்; ஆதலால் நான் அவளை வெறுக்கிறேன். என் உரிமைச்சொத்தாகிய மக்கள் இரைதேடும் பலவர்ண பறவைகள்போல் ஆயிற்று; சுற்றிலுமுள்ள மற்ற பறவைகளோ அதற்கு எதிராக எழுந்துள்ளன. அதை விழுங்கும்படி காட்டு மிருகங்களை ஒன்றுசேர்த்து, அவைகளைக் கொண்டுவா. அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத் தோட்டத்தை அழித்துவிடுவார்கள். என் வயலை மிதித்துப் போடுவார்கள். அவர்கள் எனது அழகான வயலை ஒரு வனாந்திரமான பாழ்நிலமாக்கி விடுவார்கள். அது எனக்கு முன்பாக வறண்டு, வனாந்திரமான பாழ்நிலமாகும். அது கவனிப்பார் இல்லாதபடியால் நாடு முழுவதும் பாழ்நிலமாகும். பாலைவனத்தில் எல்லா வறண்ட மேடுகள்மேலும் அழிக்கிறவர்கள் கூடுவார்கள். யெகோவாவின் வாள் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பட்சிப்பதால், ஒருவருக்குமே பாதுகாப்பு இருக்காது. அவர்கள் கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; அவர்கள் களைத்து வேலை செய்வார்கள், ஆனால் பலனேதும் பெறமாட்டார்கள். யெகோவாவின் பயங்கர கோபத்தின் நிமித்தம் அவர்கள் அறுவடையின்றி ஏமாந்து வெட்கமடைவார்கள். யெகோவா சொல்வது இதுவே: “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு நான் கொடுத்த உரிமைச்சொத்தைப் பறிக்கிற கொடுமையான அயலவரைப் பொறுத்தவரையில், நான் அவர்களுடைய நாடுகளிலிருந்து அவர்களை வேரோடு அறுப்பேன். யூதா குடும்பத்தையோ அவர்கள் மத்தியிலிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்வேன். ஆனால் அவர்களைப் பிடுங்கிய பின்பு மீண்டும் அவர்களில் இரக்கங்கொண்டு அவர்கள் ஒவ்வொருவனையும் அவனவனுடைய உரிமைச்சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் கொண்டுவருவேன். அவர்கள் என் மக்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொண்டால், அவர்கள் என் மக்கள் மத்தியில் நிலைபெறுவார்கள். முன்னொரு காலத்தில் பாகாலின்மேல் ஆணையிட என் மக்களுக்கு அவர்கள் போதித்திருந்தார்கள். அதுபோல இப்பொழுது அவர்கள், ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று என் பெயரினால் ஆணையிடுவதற்கு பழகினால், அவர்கள் நிலைபெறுவார்கள். ஆனால் எந்த மக்களாவது இதற்குச் செவிகொடாமல் விட்டால், நான் அதை முழுவதும் வேரோடு அறுத்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா கூறுகிறார். மென்பட்டு இடைப்பட்டி யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு மென்பட்டுக் இடைப்பட்டியை வாங்கி, உன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள். ஆனால் அதில் தண்ணீர்பட விடாதே” என்றார். எனவே நான் யெகோவா அறிவுறுத்தியபடி, ஒரு இடைப்பட்டியை வாங்கி, என்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டேன். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை இரண்டாம்முறை எனக்கு வந்தது: “நீ வாங்கி உன் இடுப்பில் கட்டியுள்ள இடைப்பட்டியை எடுத்துக்கொண்டு, இப்பொழுது யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், அங்கே கற்பாறைகளின் வெடிப்பில் அதை ஒளித்து வை” என்றார். எனவே நான் போய் யெகோவா கட்டளையிட்டபடியே யூப்ரட்டீஸ் நதியண்டையில் அதை ஒளித்து வைத்தேன். அநேக நாட்களுக்குப்பின்பு யெகோவா என்னிடம், “நீ யூப்ரட்டீஸ் நதியண்டைக்குப் போய், நான் உன்னிடம் மறைத்துவைக்கும்படி சொன்ன அந்த இடைப்பட்டியை அங்கிருந்து எடு” என்றார். அப்பொழுது நான் யூப்ரட்டீஸ் நதிக்குப் போய், அதை மறைத்துவைத்த இடத்திலிருந்து தோண்டி எடுத்தேன். அந்த இடைப்பட்டியோ மக்கிப்போய் முற்றிலும் பயனற்றதாகி விட்டது. அதன்பின் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘இவ்வாறே யூதாவின் பெருமையையும், எருசலேமின் மிகுந்த பெருமையையும் அழிப்பேன். இக்கொடிய மக்கள் என் வார்த்தைகளைக் கேட்க மறுத்து, தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடக்கிறார்கள். அவர்கள் பிற தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளின் பின்னாலேயே சென்று அவைகளை வணங்குகிறார்கள். இக்கொடிய மனிதர் முற்றிலும் பயனற்றுப்போன இந்த இடைப்பட்டியைப்போல் இருப்பார்கள். ஒரு மனிதனின் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டி கட்டப்படுவதுபோல் இஸ்ரயேலின் முழுக் குடும்பத்தையும் யூதாவின் முழுக் குடும்பத்தையும் என்னுடன் சேர்த்துக் கட்டினேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எனக்குப் புகழும், துதியும், கனமும் உடைய எனது மக்களாய் இருக்கும்படி இப்படிச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை.’ திராட்சை இரச ஜாடி “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டும்.’ அதற்கு அவர்கள் ஒவ்வொரு ஜாடியும் திராட்சரசத்தால் நிரப்பப்பட வேண்டுமென்று எங்களுக்குத் தெரியாதா? என்று உன்னிடம் சொன்னால், அப்பொழுது நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் அரியணையிலிருக்கும் அரசர்கள், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர், எருசலேமின் வழிப்போக்கர் உட்பட இந்த நாட்டில் வாழும் யாவரையும் குடிபோதையில் நிரப்புவேன். நான் தகப்பன்மார், மகன்கள் என்ற வித்தியாசமின்றி ஒரேவிதமாக ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதியடிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள்மீது எந்தவித அனுதாபத்தையோ, இரக்கத்தையோ, பரிவையோ காட்டாமல் அவர்களை அழித்துப்போடுவேன்’ ” என்கிறார். சிறையிருப்பைப் பற்றிய அச்சுறுத்தல் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்; அகந்தையாயிராதீர்கள். ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார். அவர் இருளைக் கொண்டுவருவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் பாதங்கள் இடறுவதற்கு முன்னும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள். நீங்கள் வெளிச்சத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள். ஆனால் அவர் அதைக் காரிருளாக்கி மப்பும் மந்தாரமுமாக மாற்றிப்போடுவார். ஆனால் இதற்கு நீங்கள் செவிகொடாவிட்டால், உங்கள் பெருமையின் நிமித்தம் நான் எனக்குள்ளே துக்கித்துப் புலம்புவேன். யெகோவாவின் மந்தை சிறைப்பிடிக்கப்பட்டுப்போகும் என்பதால், என் கண்கள் கண்ணீர் சிந்தி மனங்கசந்து அழும். நீ அரசனிடமும் அவரின் தாய் அரசியிடமும், உங்கள் அரியணையை விட்டுக் கீழே இறங்குங்கள். ஏனெனில் மகிமையான மகுடங்கள் உங்கள் தலைகளிலிருந்து விழுந்துவிடும் என்று சொல். தெற்கிலுள்ள பட்டணங்கள்13:19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அல்லது நெகேப் அடைக்கப்பட்டுவிடும். அவைகளைத் திறக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். யூதாவில் உள்ள மக்கள் எல்லோரும் முழுவதுமாக நாடுகடத்தப்படுவார்கள். உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பார். உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மந்தை எங்கே? நீ மேன்மைபாராட்டிய உன் செம்மறியாடு எங்கே? நீ விசேஷ கூட்டாளிகளாக நட்பு பாராட்டியவர்களை யெகோவா உன்மேல் ஆளுகை செலுத்த வைக்கும்போது நீ என்ன சொல்வாய்? ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப்போன்ற ஒரு வேதனை உன்னைப் பற்றிக்கொள்ளாதோ? “இது ஏன் எனக்கு நடந்தது” என்று நீ உன்னையே கேட்பாயானால், அது உன் அநேக பாவங்களினாலேயே. அதனால்தான் உன் உடைகள் கிழிக்கப்பட்டு, உனது உடல் கேவலமாய் அவமானப்படுத்தப்பட்டது. எத்தியோப்பியன் தன் தோலை மாற்ற முடியுமோ? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமோ? அதுபோலவே தீமைசெய்யப் பழகிய உங்களாலும் நன்மை செய்யமுடியாது. ஆகையினால் பாலைவனக் காற்றினால் பறக்கடிக்கப்படும் பதரைப்போல், நானும் உங்களைச் சிதறடிப்பேன். நீங்கள் என்னை மறந்து, பொய் தெய்வங்களை நம்பியிருந்தபடியால், இதுவே உங்கள் பங்கும் நான் உங்களுக்கென நியமித்த பாகமுமாகும் என யெகோவா அறிவிக்கிறார். உங்கள் நிர்வாணம் காணப்பட்டு வெட்கப்படும்படியாக நான் உங்கள் உடைகளை உங்கள் முகத்துக்கு மேலாகத் தூக்கிப் பிடிப்பேன். உங்கள் விபசாரங்களும், காமத்தின் கனைப்புகளும், உங்கள் வெட்கம் கெட்ட வேசித்தனமும் வெளிப்படும். நீங்கள் குன்றுகளின்மேலும், வயல்களின்மேலும் செய்த அருவருப்பான செயல்களை நான் கண்டிருக்கிறேன். எருசலேமே! ஐயோ உனக்குக் கேடு. எவ்வளவு காலத்துக்கு நீ அசுத்தமாயிருப்பாய்? வறட்சி, பஞ்சம், வாள் வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்: யூதா துக்கப்படுகிறது; அதன் பட்டணங்கள் நலிவுறுகின்றன; அவர்கள் நாட்டுக்காகப் புலம்புகிறார்கள். எருசலேமிலிருந்து ஒரு அழுகுரல் எழும்புகிறது. உயர்குடி மக்கள் தங்கள் வேலைக்காரரை தண்ணீர் எடுப்பதற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் போய் தொட்டிகளில் தண்ணீரைக் காணாமல், தங்கள் ஜாடிகளை வெறுமையாகவே கொண்டுவருகிறார்கள். அவர்கள் மனச்சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள். நாட்டில் மழையில்லாததால் நிலம் வெடித்திருக்கிறது. விவசாயிகள் மனச்சோர்வுடன் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள். புல் இல்லாததினால் வயல்வெளியிலுள்ள பெண்மானும் புதிதாய் ஈன்ற தன் குட்டிகளை கைவிடுகிறது. காட்டுக் கழுதைகள் வறண்ட மேடுகளில் நின்று, தாகமுள்ள நரிகளைப்போல் இளைக்கின்றன. அவைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி கண்பார்வை மங்கிவிடுகிறது. எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி கூறினாலும், யெகோவாவே, உமது பெயரின் நிமித்தம் நீர் ஏதாவது எங்களுக்கு செய்யும். எங்கள் பின்மாற்றம் பெரிதாயிருக்கிறது. நாங்கள் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறோம். இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, துயர வேளையின் மீட்பரே, நீர் நாட்டில் ஒரு அந்நியனைப்போலவும், ஒரு இரவு மட்டும் தங்கும் பயணியைப்போலவும் ஏன் இருக்கிறீர்? நீர் திகைப்படைந்த மனிதனைப்போலவும், காப்பாற்ற வலுவற்ற போர்வீரனைப்போலவும் ஏன் இருக்கிறீர்? யெகோவாவே, நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர்; நாங்கள் உமது பெயரைத் தரித்திருக்கிறோம். எங்களைக் கைவிடாதேயும். மேலும் இந்த மக்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: இவர்கள் சுற்றித்திரிய பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் கால்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை. ஆகையினால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இப்பொழுது அவர்களின் கொடுமைகளை நினைத்து, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார். மேலும் யெகோவா என்னிடம், இந்த மக்களின் நன்மைக்காக நீ என்னிடம் விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்கள் உபவாசித்தாலும் நான் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்கமாட்டேன். அவர்கள் தகனபலியையும், தானியபலியையும் படைத்தாலும், அவைகளை நான் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதற்குப் பதிலாக நான் அவர்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் அழிக்கப்போகிறேன் என்றார். அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! இந்த பொய்யான இறைவாக்கு உரைப்போர் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாளைக் காணமாட்டீர்கள்; பஞ்சத்தினால் பாதிக்கப்படமாட்டீர்கள்; நான் இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தை நிச்சயம் தருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “பொய் இறைவாக்கு உரைப்போர் என்னுடைய பெயரைக்கொண்டு பொய்யையே இறைவாக்கு என்று சொல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவுமில்லை; நியமிக்கவுமில்லை. அவர்களோடு பேசவுமில்லை. அவர்களோ பொய்யான தரிசனத்தையும், குறிசொல்லுதலையும், விக்கிரக வணக்கத்தையும், தங்கள் மனதின் வஞ்சகத்தையுமே இறைவாக்கு என்று உரைக்கிறார்கள்” என்றார். தன் பெயரினால் இறைவாக்கு உரைக்கிற பொய்யான இறைவாக்கு உரைப்போரைப்பற்றி யெகோவா சொல்வது இதுவே: “நான் அவர்களை அனுப்பவில்லை. ஆகிலும் அவர்கள், ‘இந்த நாட்டை வாளோ, பஞ்சமோ தொடாது’ என்கிறார்கள். அதே இறைவாக்கு உரைப்போர் வாளாலும், பஞ்சத்தாலும் அழிவார்கள். அவர்களுடைய இறைவாக்கைக் கேட்கும் மக்களும் பஞ்சத்தினாலும், வாளினாலும் எருசலேமின் வீதிகளில் விழுவார்கள். அவர்களையாவது, அவர்களின் மனைவிகளையாவது, மகன்களையாவது, மகள்களையாவது அடக்கம்பண்ண ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏற்ற பேராபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்” என்றார். இந்த வார்த்தைகளை அவர்களிடம் சொல்: “அவர்களை நோக்கி, இரவும், பகலும் என் கண்களிலிருந்து கண்ணீர் ஓயாமல் சிந்தட்டும். என் மக்கள், என் கன்னிகை மகள் கடும் காயம் அடைந்து நொறுங்குண்டிருக்கிறாள். நான் நாட்டுப்புறத்திற்கு போகையில் வாளினால் கொலையுண்டவர்களைக் காண்கிறேன். பட்டணத்துக்குள் போகையில் பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவையும் காண்கிறேன். இறைவாக்கினரும், ஆசாரியரும் தாங்கள் அறியாத ஒரு நாட்டிற்குப் போய்விட்டார்கள்.” யெகோவாவே! நீர் யூதாவை முழுவதாகப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? நீர் சீயோனை இகழ்கிறீரோ? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களைத் துன்புறுத்தியிருக்கிறீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்தோம்; ஆனால் ஒரு நன்மையும் வரவில்லை. குணமாகும் வேளையை எதிர்பார்த்தோம்; ஆனால் பயங்கரம் மட்டுமே காணப்பட்டது. யெகோவாவே, எங்கள் கொடுமையையும், எங்கள் முற்பிதாக்களின் குற்றத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மெய்யாகவே உமக்கு எதிராகப் பாவம்செய்தோம். உமது நாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதேயும்; உமது மகிமையான அரியணையைக் கனவீனப்படுத்தாதேயும். நீர் எங்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும். அதை முறித்து விடாதிரும். பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே. அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும். ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “ ‘மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் மரணத்துக்கும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்கள் வாளுக்கும், பஞ்சத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்கும் போவார்கள்.’ “நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன். யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன். “எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்? யார் உனக்காக துக்கிப்பார்கள்? நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்க யார் வருவார்கள்? நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய். ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன். என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது. நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன். அவர்கள் தங்கள் வழிகளைவிட்டு மனந்திரும்பாதபடியினால் என் மக்களை தவிக்கச்செய்து, அவர்கள்மேல் அழிவைக் கொண்டுவருவேன். அவர்களின் விதவைகளை கடற்கரை மணலைப் பார்க்கிலும் எண்ணற்றவர்களாக்குவேன். நண்பகலில் அவர்களுடைய வாலிபரின் தாய்மாருக்கு எதிராக அழிக்கிறவனைக் கொண்டுவருவேன். திடீரென அவர்கள்மீது கலகத்தையும், பயங்கரத்தையும் கொண்டுவருவேன். ஏழு பிள்ளைகளின் தாய் மூச்சடைத்து செத்துப்போவாள். இன்னும் பகல் வேளையாயிருக்கும்போதே அவளுடைய சூரியன் அஸ்தமிக்கும். அவள் அவமானத்துக்குள்ளாகி தாழ்த்தப்பட்டுப் போவாள். அவர்களில் தப்பியிருப்பவர்களை அவர்களுடைய பகைவருக்கு முன்பாக வாளுக்கு இரையாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது நான், “என் தாயே! நீ என்னைப் பெற்றெடுத்தாயே; முழு நாடுமே எதிர்த்து வாதாடும் மனிதனாகிய என்னைப் பெற்றாயே! நான் யாரிடத்திலும் கடன் வாங்கவும் இல்லை, யாருக்கும் கடன் கொடுக்கவும் இல்லை. அப்படியிருந்தும் ஒவ்வொருவரும் என்னைச் சபிக்கிறார்கள்.” அதற்கு யெகோவா சொன்னதாவது, “நான் உன்னை நிச்சயமாக ஒரு நல்ல நோக்கத்திற்காக விடுவிப்பேன்; பேராபத்திலும், பெருந்துன்ப காலத்திலும் நிச்சயமாக உன் பகைவர்கள் உன்னிடத்தில் கெஞ்சி மன்றாடும்படி செய்வேன். “ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது, வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ? “நாடு முழுவதிலும் அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக, அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும் விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன். அவர்கள் அறியாத நாட்டில் அவர்களுடைய பகைவர்களுக்கு அவர்களை அடிமையாக்குவேன். என் கோபத்தினால் உண்டாகிற நெருப்பு அவர்களுக்கெதிராய் எரியும்” என்றார். யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும். என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும். நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும். உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும். உமது வார்த்தைகள் எனக்கு வந்தபோது, நான் அவைகளை உட்கொண்டேன். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே! உமது பெயரை நான் தரித்திருக்கிறபடியால், அவ்வார்த்தைகள் என் சந்தோஷமும், என் இருதயத்தின் களிப்புமாயிருந்தன. நான் ஒருபோதும் பரியாசக்காரருடைய கூட்டத்தில் சேர்ந்து மகிழ்ந்ததில்லை. உமது கரம் என்மேல் இருந்தபடியால், நான் தனிமையாய் இருந்தேன். நீர் என்னை கோபத்தினால் நிரப்பினீர். ஏன் என்னுடைய வேதனை முடிவடையாமல் இருக்கிறது. ஏன் எனது காயம் கடுமையாயும், ஆறாமலும் இருக்கிறது? நீர் எனக்கு ஒரு ஏமாற்றும் நீரோடையைப் போலவும், ஊற்றெடுக்காத ஓடையைப் போலவும் இருப்பீரோ? என்றேன். அதற்கு யெகோவா: “நீ மனந்திரும்பினால், நீ எனக்குப் பணிசெய்யும்படி நான் உன்னை முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவேன். நீ பயனற்ற வார்த்தைகளை விட்டு, பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவாயானால், மீண்டும் என்னுடைய பேச்சாளனாய் இருப்பாய், இந்த மக்கள் உன் பக்கமாகத் திரும்பட்டும்; ஆனால் நீயோ அவர்கள் பக்கமாய்த் திரும்பாதே. நான் உன்னை இந்த மக்களுக்கு ஒரு மதில் ஆக்குவேன்; அரண்செய்யப்பட்ட ஒரு வெண்கல மதிலாக்குவேன். அவர்கள் உனக்கெதிராகப் போரிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நான் உன்னைத் தப்புவித்து காப்பாற்றும்படி, நான் உன்னுடனே இருக்கிறேன்,” என்று யெகோவா அறிவிக்கிறார். “கொடியவர்களின் கையிலிருந்து உன்னைப் பாதுகாத்து, கொடூரமானவர்களின் பிடியிலிருந்து உன்னை மீட்டெடுப்பேன்.” பேரழிவின் நாள் பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “நீ திருமணம் செய்யவேண்டாம். இந்த இடத்தில் மகன்களையும், மகள்களையும் பெறவும் வேண்டாம்.” மேலும் இந்த இடத்தில் பிறக்கும் மகன்கள், மகள்களைக் குறித்தும், அவர்களின் தாய்மாரான பெண்களையும், தகப்பன்மாரான மனிதர்களைக் குறித்தும் யெகோவா கூறுவது இதுவே: “அவர்கள் பயங்கரமான வியாதிகளால் சாவார்கள். அவர்களுக்காக புலம்ப யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களை யாரும் அடக்கம்பண்ணமாட்டார்கள். அவர்கள் தரையின்மேல் கிடக்கும் குப்பையைப்போல் இருப்பார்கள். அவர்கள் வாளாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள், அவர்களுடைய சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்.” யெகோவா சொல்வது இதுவே: “நீ துக்கவீட்டிற்குள் நுழையாதே. புலம்பவோ, ஆறுதல் வார்த்தை சொல்லவோ போகவேண்டாம். ஏனெனில் அந்த மக்களிடமிருந்து நான் என் ஆசீர்வாதத்தையும், என் அன்பையும், என் அனுதாபத்தையும் எடுத்துவிட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “இந்த நாட்டில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இருவருமே சாவார்கள். அவர்கள் அடக்கம்பண்ணப்பட மாட்டார்கள். அவர்களுக்காகத் துக்கப்படுவதுமில்லை. அவர்களுக்காக ஒருவனும் தன்னை வெட்டிக்கொள்ளவும் மாட்டான். தன் தலையை மொட்டையடிக்கவுமாட்டான். செத்தவர்களுக்காக துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்த ஒருவரும் உணவு கொடுக்கமாட்டார்கள். ஒரு தகப்பனோ அல்லது தாயோ செத்தாலுங்கூட துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவரும் பானமும் கொடுக்கமாட்டார்கள். “விருந்து வீட்டிற்குள் போகவோ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ குடிக்கவோ உட்கார வேண்டாம். ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் உன் கண்களுக்கு முன்பாக, உன் நாட்களில் சந்தோஷத்தின் சத்தத்திற்கும், மகிழ்ச்சியின் சத்தத்திற்கும் ஒரு முடிவுண்டாக்குவேன். மணமகனின் குரலுக்கும், மணமகளின் குரலுக்கும் முடிவுண்டாக்குவேன். “இந்த மக்களிடம் இவற்றை நீ கூறும்போது, அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இந்த பேராபத்தை எங்களுக்கு நியமித்திருக்கிறார்? நாங்கள் என்ன அக்கிரமம் செய்தோம்? அல்லது எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்திருக்கிறோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது நீ அவர்களிடம், ‘உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கைவிட்டு, வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்குப் பணிவிடை செய்து, அவைகளை வணங்கினார்கள். என்னையோ கைவிட்டு, என் சட்டத்தையும் அவர்கள் கைக்கொள்ளவில்லை. ஆனால் நீங்களோ, உங்கள் முற்பிதாக்களிலும் அதிக கொடியவர்களாக நடந்தீர்கள். எனக்குக் கீழ்ப்படியாமல் எப்படி ஒவ்வொருவரும் தன்தன் தீய இருதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கிறீர்கள் என்று பாருங்கள். ஆகவே நான் உங்களை இந்த நாட்டிலிருந்து நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறிந்திராத வேறொரு நாட்டுக்குள் துரத்திவிடுவேன். அங்கே நீங்கள் இரவு பகலாக வேறு தெய்வங்களுக்குப் பணிவிடை செய்வீர்கள். நான் உங்களுக்கு எவ்வித தயவும் காண்பிப்பதில்லை என்று சொல்லுகிறார் என்று சொல்’ என்றார். “எனினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறதாவது, “ ‘இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று இனி ஒருபோதும் மனிதர் ஆணையிடமாட்டார்கள். ஆனால், அதற்குப் பதிலாக, ‘இஸ்ரயேலரை வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளிலிருந்தும் வெளியே கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்றே ஆணையிடுவார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்களைத் திரும்பவும் கொண்டுவந்து குடியமர்த்துவேன். “ஆனால் இப்போது அநேக மீனவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் இவர்களைப் பிடிப்பார்கள். அதன்பின் அநேக வேட்டைக்காரரை அனுப்புவேன். அவர்கள் இவர்களை ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை வெடிப்புகளிலும் வேட்டையாடிப் பிடிப்பார்கள். ஏனெனில் என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளையும் கவனமாய்ப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அவை எனக்கு மறைவாயில்லை, அவர்களுடைய பாவங்கள் என் கண்களுக்கு மறைக்கப்படவுமில்லை. நான் அவர்களுடைய கொடுமைக்கும், பாவத்திற்கும் இரட்டிப்பாகத் தண்டனை கொடுப்பேன். ஏனெனில் அவர்கள் நாட்டை தங்கள் உயிரற்ற இழிவான உருவச்சிலைகளால் கறைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் என் உரிமைச்சொத்தை தங்கள் அருவருக்கத்தக்க விக்கிரகங்களினால் நிரப்பியிருக்கிறார்கள்.” யெகோவாவே, நீரே என் பெலன், என் கோட்டை, துன்ப நாளில் என் அடைக்கலம்; பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து பிறநாட்டினர் உம்மிடம் வருவார்கள். அவர்கள் வந்து, “எங்கள் முற்பிதாக்கள் போலியான பாரம்பரியங்களைத் தவிர வேறொன்றையும் வைத்திருக்கவில்லை. அவைகளோ பயனற்ற விக்கிரகங்கள், அவைகளால் அவர்களுக்கு எந்த நன்மையும் உண்டாகவில்லை. மனிதர் தமக்கு சொந்தமாகத் தெய்வங்களைச் செய்வார்களோ? ஆம்; செய்கிறார்கள். ஆயினும் அவைகள் தெய்வங்கள் இல்லையே!” “ஆகையால் நான் அவர்களுக்குக் போதிப்பேன். இம்முறையோ என் வல்லமையையும், ஆற்றலையும் போதிப்பேன். அப்பொழுது என் பெயர் யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். “யூதாவின் பாவம், இரும்பு எழுத்தாணியால் செதுக்கப்பட்டு, வைரத்தின் நுனியினால் பொறிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய இருதயமாகிய கற்பலகையிலும், அவர்களின் பலிபீடத்தின் கொம்புகளிலும் செதுக்கப்பட்டும் பொறிக்கப்பட்டும் உள்ளது. அவர்களுடைய பிள்ளைகளுங்கூட பச்சையான மரங்களுக்கருகிலும் உயர்ந்த குன்றுகளின்மேலுள்ள மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நாட்டிலுள்ள என் மலையையும், உன் செல்வத்தையும், உன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும், அதோடுகூட உயர்ந்த உன் மேடைகளையும் கொள்ளைப்பொருளாக நான் கொடுப்பேன். உன் நாடெங்குமுள்ள பாவத்தின் நிமித்தம் இப்படிச் செய்வேன். நான் உனக்குத் தந்த உரிமைச்சொத்தை உன் குற்றத்தினாலேயே நீ இழந்து விடுவாய். நீ அறியாத நாட்டில் நான் உன்னை உன் பகைவருக்கு அடிமையாக்குவேன். ஏனெனில் நீ என் கோபத்தை மூட்டியிருக்கிறாய். அது என்றைக்கும் எரிந்துகொண்டேயிருக்கும்.” யெகோவா சொல்வது இதுவே: “மனிதரில் தன் நம்பிக்கையை வைத்து, தன் பெலனுக்காக மாம்சத்தைச் சார்ந்து, யெகோவாவைவிட்டு தனது இருதயத்தை விலக்கிக்கொள்கிறவன் சபிக்கப்பட்டவன். அவன் பாழ்நிலத்திலுள்ள புதரைப்போல இருப்பான். அவன் செழிப்பு வரும்போது, அதைக் காணமாட்டான். அவன் யாரும் வசிக்க முடியாத உவர் நிலத்திலும், பாலைவனத்திலுள்ள வறண்ட இடங்களிலும் தங்கியிருப்பான். “ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைத்து, அவரை உறுதியாய் நம்புகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.” எல்லாவற்றிலும் பார்க்க இருதயமே வஞ்சனையுள்ளது. அதைக் குணமாக்கவே முடியாது. அதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் யார்? “யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து, மனதைச் சோதித்துப் பார்க்கிறவர். மனிதனுக்கு அவனுடைய நடத்தைக்குத்தக்க வெகுமதி கொடுப்பதும், அவனுடைய செயல்களுக்குத்தக்க பலனளிப்பதும் நானே.” அநீதியான முறைகளால் தன் செல்வத்தைச் சேர்க்கிறவன், தான் இடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாயிருக்கிறான்; அவனுடைய வாழ்வின் பாதி நாட்கள் போனபின், அவனுடைய செல்வங்கள் அவனைவிட்டு நீங்கிப்போய்விடும்; முடிவிலோ அவன் தன்னை மூடன் என நிரூபிப்பான். எங்களுடைய பரிசுத்த இடம் ஆதியிலிருந்தே உயர்த்தப்பட்ட மகிமையுள்ள அரியணையாயிருக்கிறது. யெகோவாவே, இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, உம்மைக் கைவிடும் யாவரும் வெட்கத்திற்குள்ளாவார்கள். உம்மைவிட்டு விலகுகிற அவர்கள் யாவரும் வாழும் நீரூற்றாகிய யெகோவாவைக் கைவிட்டபடியால், புழுதியில் அழிவார்கள். யெகோவாவே, என்னைக் குணமாக்கும், நான் குணமாவேன். என்னைக் காப்பாற்றும், நான் காப்பாற்றப்படுவேன். ஏனெனில் நான் துதிக்கிறவர் நீரே. இந்த மக்களோ என்னிடம், “யெகோவாவின் வார்த்தை எங்கே? இப்போது அது நிறைவேறட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானோ உம்மைப் பின்பற்றும் மேய்ப்பனாயிருப்பதை விட்டு ஓடிவிடவில்லை. ஏமாற்றத்தின் நாளை நான் விரும்பவில்லை என்பதை நீர் அறிவீர். என் வாயின் வார்த்தைகள் உமக்குமுன் இருக்கின்றன. நீர் எனக்கு ஒரு பயங்கரமாக இராதேயும். பேராபத்து வரும்நாளில் நீரே என் அடைக்கலம். என்னைத் துன்புறுத்துகிறவர்கள் வெட்கத்துக்கு உள்ளாகட்டும், என்னையோ வெட்கப்பட விடாதிரும். அவர்கள் பயப்படட்டும், என்னையோ பயமின்றிக் காத்துக்கொள்ளும். பேராபத்தின் நாளை அவர்கள்மேல் வரப்பண்ணும். இரு மடங்கான அழிவினால் அவர்களை அழித்துவிடும். ஓய்வுநாளை பரிசுத்தமாக அனுசரித்தல் யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “யூதாவின் அரசர்கள் போய்வருகிறதான மக்கள் வாசலருகே17:19 மக்கள் வாசலருகே அல்லது பென்யமீன் வாசலருகே போய் நில். எருசலேமின் மற்ற எல்லா வாசல்களிலும் போய் நில். அங்கே நீ அவர்களிடம், ‘இந்த வாசல்களில் உட்செல்லும் யூதாவின் அரசர்களே! யூதாவின் மக்களே! எருசலேமில் குடியிருக்கிறவர்களே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல். யெகோவா சொல்வது இதுவே; எருசலேமின் வாசல்களின் வழியே ஓய்வுநாளில் ஒரு சுமையாவது சுமந்து செல்லாதிருக்கவும் அல்லது உள்ளே கொண்டுவராமல் இருக்கவும் கவனமாயிருங்கள். நீங்கள் ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சுமையையும் கொண்டுவராமலும், எந்த ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அந்த நாளை நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி, பரிசுத்த நாளாக கைக்கொள்ளுங்கள் என்றேன். இருப்பினும் அவர்கள் அதைக் கேட்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாய் என் புத்திமதியைக் கேட்காமலும், என் திருத்துதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள். ஆனால் யெகோவா அறிவிக்கிறதாவது, நீங்கள் எனக்குக் கீழ்ப்படியக் கவனமாயிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் கைக்கொள்ளுங்கள். அந்நாளில் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள்ளே, ஒரு சுமையையும் கொண்டுவராமலும், ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும். யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமிருந்து மக்கள் வருவார்கள். பென்யமீன் பிரதேசத்திலிருந்தும், மேற்கு மலையடிவாரங்களிலிருந்தும், மலைநாட்டிலும், யூதாவின் தெற்குப் பகுதிகளிலிருந்தும்17:26 தெற்குப் பகுதிகளிலிருந்தும் அல்லது நெகேவ் வருவார்கள். அவர்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், தானிய காணிக்கைகளையும், தூபங்களையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல், ஓய்வுநாளை பரிசுத்தமாகக் கைக்கொள்ளத் தவறி, அந்த நாளில் பாரத்தைச் சுமந்துகொண்டு எருசலேமின் வாசல்களின் வழியே வருவீர்களானால், நான் எருசலேமின் வாசல்களில் அணைக்க முடியாத நெருப்பை மூட்டுவேன். அது எருசலேமின் அரண்களைச் சுட்டெரிக்கும்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.” குயவனின் வீட்டில் எரேமியா யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ குயவனுடைய வீட்டிற்குப் போ; அங்கே நான் என்னுடைய வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார். அப்பொழுது நான் குயவனுடைய வீட்டிற்குப் போனேன், அங்கே குயவன் சக்கரத்தைக்கொண்டு வனைந்துகொண்டிருப்பதை நான் கண்டேன். ஆனால் குயவன் களிமண்ணால் உருவாக்கிக் கொண்டிருந்த அப்பாத்திரம் அவனுடைய கையிலே பழுதடைந்துவிட்டது; அதனால் அவன் தனக்கு நலமாய்த் தோன்றிய விதத்தில் வேறொரு பாத்திரமாக அதை வனைந்தான். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இந்தக் குயவன் செய்வதுபோல, நானும் உங்களுக்குச் செய்யக்கூடாதா? என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! குயவனுடைய கையில் களிமண் இருப்பதுபோல, நீங்களும் என் கையில் இருக்கிறீர்கள். எப்பொழுதாவது நான் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து, அது வேரோடு பிடுங்கப்படும், தள்ளி வீழ்த்தப்படும், அழிக்கப்படும் என்று அறிவிக்கும்போது, நான் எச்சரித்த அந்த நாடு தன் தீமையைவிட்டு மனந்திரும்பினால், நான் மனமிரங்கி, கொண்டுவரத் திட்டமிட்ட பேராபத்தை அதன்மேல் சுமத்தமாட்டேன். இன்னொரு வேளையில் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து அது கட்டப்படும் என்றும் நாட்டப்படும் என்றும் அறிவிக்கும்போது, அந்த நாடு எனக்குக் கீழ்ப்படியாமல், எனது பார்வையில் தீமையை செய்தால், அதற்கு நான் செய்ய எண்ணியிருந்த நன்மைகளைச் செய்வதோ இல்லையோ என திரும்பவும் சிந்திப்பேன். ஆகவே, இப்பொழுது நீ யூதா மக்களிடமும், எருசலேமில் வாழ்பவர்களிடமும் சொல்லவேண்டியதாவது: யெகோவா சொல்வது இதுவே: இதோ பாருங்கள், உங்களுக்கு ஒரு பேராபத்தை ஆயத்தப் படுத்துகிறேன்; உங்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை வகுக்கிறேன். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் சீர்திருத்துங்கள் என்று சொல். அதற்கு அவர்களோ, “இது பயனற்றது; நாங்கள் எங்கள் சொந்தத் திட்டங்களிலேயே தொடர்ந்து நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இருதயத்தின் பிடிவாதத்திலேயே நடப்போம் என்பார்கள்” என்றார். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: “இப்படிப்பட்ட ஒரு செயலை யாரும் எப்போதாவது கேட்டதுண்டோ? என்று நாடுகளிடம் விசாரியுங்கள்; இஸ்ரயேல் என்னும் கன்னிகை ஒரு படுமோசமான செயலைச் செய்திருக்கிறாள். லெபனோனின் பனி அதன் பாறைச் சரிவுகளிலிருந்து எப்போதாவது மறைவதுண்டோ? தூரத்திலுள்ள நீரூற்றுகளிலிருந்து வரும் அதன் குளிர்ந்த தண்ணீர் எப்போதாவது ஓடாமல் நிற்கின்றதோ? ஆயினும், என் மக்களோ, என்னை மறந்துவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களுக்குத் தூபம் எரிக்கிறார்கள். என் மக்களை அவர்களுடைய வழிகளிலும், முற்காலத்து பாதைகளிலும் அவைகளே இடறச்செய்தன. அவைகள் குறுக்கு வழிகளிலும், செப்பனிடாத வீதிகளிலும் அவர்களை நடக்கப்பண்ணின. அவர்களுடைய நாடு பாழாக்கப்பட்டு என்றென்றைக்கும் ஒரு கேலிப் பொருளாயிருக்கும். அவர்களைக் கடந்துபோகும் யாவரும் திகைத்து, ஏளனமாய் தலையை அசைப்பார்கள். கொண்டல் காற்றைப்போல் பகைவரின் முன்பாக அவர்களைச் சிதறடிப்பேன். அவர்களுடைய பேராபத்தின் நாளில் அவர்களுக்கு என்னுடைய முகத்தை அல்ல; என் முதுகையே காட்டுவேன் என்று யெகோவா கூறுகிறார் என்று சொல்” என்றார். அதற்கு அவர்கள், “எரேமியாவுக்கு எதிராகச் சதித்திட்டம் போடுவோம் வாருங்கள்; ஏனெனில் ஆசாரியர்கள் சட்டத்தைக் போதிப்பதும், ஞானிகள் ஆலோசனை கொடுப்பதும், இறைவாக்கு உரைப்போர் இறைவாக்கு உரைப்பதும் இல்லாமல் போகாது. எனவே வாருங்கள். நமது வார்த்தையினால் அவனைத் தாக்கி அவன் சொல்லும் எதையும் கவனியாமல் இருப்போம்” என்றார்கள். “யெகோவாவே! எனக்குச் செவிகொடும். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும். நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யப்படலாமோ? அவர்கள் எனக்குக் குழியை வெட்டியிருக்கிறார்களே! நான் உமது முன்னிலையில் நின்று உமது கடுங்கோபத்தை அவர்களிடமிருந்து திருப்பும்படி அவர்களின் சார்பாகப் பேசியதை நினைத்தருளும். ஆகையால் அவர்கள் பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, வாளின் வல்லமைக்கு அவர்களை ஒப்புக்கொடும். அவர்களுடைய மனைவிகள் பிள்ளையற்றவர்களாகவும், விதவைகளாகவும் ஆகட்டும். அவர்களுடைய ஆண்கள் சாகடிக்கப்பட்டு, அவர்களின் வாலிபர் யுத்தத்தில் வாளால் கொலைசெய்யப்படட்டும். நீர் திடீரென அவர்கள்மீது கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டுவரும்போது, அவர்கள் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கட்டும். ஏனெனில் என்னைப் பிடிப்பதற்கு அவர்கள் குழிவெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் யெகோவாவே! எனக்கெதிராக என்னைக் கொல்வதற்கு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர். அவர்களுடைய குற்றங்களை மன்னியாமலும், உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றாமலும் இரும். அவர்கள் உமக்கு முன்பாக வீழ்த்தப்படட்டும்; உமது கோபத்தின் வேளையில் இவ்வாறு அவர்களுக்குச் செய்யும்.” யெகோவா கூறுவது இதுவே: நீ போய் குயவனிடமிருந்து களிமண் ஜாடி ஒன்றை வாங்கு. உன்னுடைய மக்களில் முதியவர்கள் சிலரையும், ஆசாரியர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு, கிழக்கு வாசலின் அருகேயுள்ள பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கே நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி. நீ அவர்களிடம், “யூதாவின் அரசர்களே! எருசலேமின் மக்களே! கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் நான் ஒரு பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளிலும் அது உறுத்திக்கொண்டே இருக்கும்” என்று சொல். ஏனெனில், இவர்கள் என்னைக் கைவிட்டு, இந்த இடத்தை அந்நிய தெய்வங்களின் இடமாக்கினார்கள். இவர்கள் இந்த இடத்தில் தாங்களோ, தங்கள் முற்பிதாக்களோ அல்லது யூதாவின் அரசர்களோ ஒருபோதும் அறிந்திராத தெய்வங்களுக்குப் தூபங்காட்டி, குற்றமற்ற இரத்தத்தினால் இந்த இடத்தையும் நிரப்பியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் மகன்களைப் பாகாலுக்குப் பலிகளாக நெருப்பில் பலியிடுவதற்காக பாகாலின் மேடைகளையும் கட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு செயலை நான் கட்டளையிட்டதுமில்லை, சொல்லியதுமில்லை. அது என்னுடைய மனதில் தோன்றினதுமில்லை. ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள். இதோ, இந்த இடம் தோப்பேத் என்றோ பென் இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலைப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் நாட்கள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்த இடத்தில் யூதாவினுடைய, எருசலேமினுடைய திட்டங்களை அழித்துப்போடுவேன். அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களின் கையிலுள்ள வாளினால் நான் அவர்களை விழப்பண்ணுவேன். அவர்களின் உடல்களைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன். நான் இந்தப் பட்டணத்தைப் பாழாக்கி, அதை ஒரு கேலிக்குரியதாக்குவேன். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள். அவர்களை தங்கள் மகன்களின் மாம்சத்தையும், மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச் செய்வேன். அவர்களை கொல்லவேண்டுமென்றிருக்கும் அவர்களுடைய பகைவர்களினால் அவர்கள் முற்றுகையிடப்பட்டு துன்பப்படும்போது அவர்கள், ஒருவர் மற்றவரின் மாம்சத்தைச் சாப்பிடுவார்கள். “அதன்பின் உன்னோடு வந்த மனிதர் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த ஜாடியை உடை. நீ அவர்களிடம், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உடைக்கப்பட்டு திருத்த முடியாதிருக்கிற இக்குயவனுடைய ஜாடியைப்போல் நான் இந்த தேசத்தையும், இந்தப் பட்டணத்தையும் நொறுக்கிப் போடுவேன். தோப்பேத்தில் இடமில்லாமல் போகுமட்டும் இறந்தவர்களை அங்கே புதைப்பார்கள். இந்த இடத்திற்கும், இங்கு வாழ்பவர்களுக்கும் இப்படியே செய்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணத்தை தோப்பேத்தைப் போலாக்குவேன். எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் வீடுகளும் தோப்பேத்தைப்போல் கறைப்படுத்தப்படும். நட்சத்திர சேனைகளுக்குத் தங்கள் கூரைகளின்மேல் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்திய எல்லா வீடுகளும் அப்படியே கறைப்படும்.’ ” அதன்பின் எரேமியா, யெகோவா தன்னை இறைவாக்கு உரைக்கும்படி அனுப்பின தோப்பேத்திலிருந்து திரும்பிவந்தான். அவன் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று எல்லா மக்களிடமும் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்; இந்த மக்கள் தலைக்கனம் உள்ளவர்களானபடியாலும், என் வார்த்தைகளைக் கேட்காதபடியாலும் நான் இப்பட்டணங்களின் மேலும், அதைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்களின் மேலும் அவைகளுக்கு எதிராக நான் கூறியிருந்த எல்லா பேராபத்துக்களையும் கொண்டுவருவேன் என்கிறார்’ என்றான்.” எரேமியாவும் பஸ்கூரும் இம்மேரின் மகனாகிய ஆசாரியன் பஸ்கூர் யெகோவாவின் ஆலயத்தின் பிரதான அதிகாரியாயிருந்தான். அப்போது அவன், எரேமியா இறைவாக்காகக் கூறியவற்றைக் கேட்டான். பஸ்கூர் இறைவாக்கினன் எரேமியாவை அடித்து, யெகோவாவின் ஆலயத்திற்கு அருகேயிருந்த பென்யமீன் மேல்வாசலில் உள்ள காவலறையில் போட்டான். அடுத்தநாள் பஸ்கூர் எரேமியாவை காவலறையிலிருந்து விடுதலையாக்கியபோது, எரேமியா அவனைப் பார்த்து, “யெகோவா உன்னை பஸ்கூர்20:3 பஸ்கூர் என்றால் விடுதலை என்பதாகும் என்றல்ல, மாகோர் மிசாபீப்20:3 மாகோர் மிசாபீப் என்றால் எபிரெயத்தில் சுற்றிலும் பேரச்சத்தில் வாழும் மனிதன் என்பதாகும் என அழைக்கிறார். ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன். உன் பகைவர்களின் வாளினால் அவர்கள் வெட்டுண்டு விழுவதை நீ உன் கண்களினாலேயே காண்பாய். நான் யூதாவின் மக்கள் எல்லோரையும், பாபிலோன் அரசனின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களைப் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக் கொண்டுபோவான் அல்லது வாளுக்கு இரையாக்குவான். நான் இந்தப் பட்டணத்தின் உற்பத்திப் பொருட்களான செல்வம் முழுவதையும், அவர்களுடைய பகைவர்களின் கையில் ஒப்படைப்பேன்; விலைமதிப்புள்ள சகல பொருட்களையும், யூதா அரசர்களது பொக்கிஷங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டுப், பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள். பஸ்கூரே, நீயும் உன் குடும்பம் முழுவதும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுவீர்கள். அங்கே நீயும், உன் பொய் தீர்க்கதரிசனத்தைக் கேட்ட உன் எல்லாச் சிநேகிதரும் செத்து புதைக்கப்படுவீர்கள் என்கிறார்’ என்றான்.” எரேமியாவின் குற்றச்சாட்டு யெகோவாவே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்; நீர் உமது பலத்தினால் என்னை அடக்கி என்னை மேற்கொண்டீர். நாள்முழுவதும் நான் கேலி செய்யப்படுகிறேன். எல்லோரும் என்னை ஏளனம் பண்ணுகிறார்கள். நான் பேசும்போதெல்லாம் வன்முறையையும், அழிவையுமே சத்தமிட்டுக் கூறி அறிவிக்கிறேன். ஆகவே யெகோவாவின் வார்த்தை, காலமெல்லாம் எனக்கு அவமானத்தையும், நிந்தையையுமே கொண்டு வந்திருக்கிறது. ஆனால் நான், “அவரைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டேன்; இல்லையெனில், அவருடைய பெயரில் இனிமேல் பேசமாட்டேன்” என்று சொல்வேனாகில், அவருடைய வார்த்தை என் எலும்புகளுக்குள் அடைக்கப்பட்டு, என் இருதயத்தில் எரிகிற நெருப்பைப்போல் இருக்கிறதே. அதை அடக்கிவைக்க முயன்று இளைத்துவிட்டேன். என்னால் அதை அடக்கிவைக்கவே முடியாது. சுற்றிலும் “பயங்கரமே காணப்படுகிறது. கண்டிக்கிறோம்! அவனை கண்டனம் செய்கிறோம்!” என்று அநேகர் தாழ் குரலில் சொல்வதைக் கேட்கிறேன். என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என் விழுகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள், “ஒருவேளை அவன் ஏமாந்து போவான்; அப்பொழுது நாம் அவனை மேற்கொண்டு அவனைப் பழிவாங்குவோம்” என்று சொல்கிறார்கள். ஆனாலும், யெகோவா வலிமையுள்ள போர்வீரனைப்போல் என்னுடன் இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்புறுத்துகிறவர்கள் இடறுவார்கள்; அவர்கள் என்னை மேற்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தோற்றுப்போய் மிகவும் அவமானம் அடைவார்கள்; அவர்களின் அவமானம் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. சேனைகளின் யெகோவாவே! நீதிமானைச் சோதித்து, இருதயத்தையும், மனதையும் ஆராய்கிறவரே! நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணும்படி செய்யும். ஏனெனில் நான் என் வழக்கை உம்மிடத்தில் ஒப்படைத்துவிட்டேன். யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்; யெகோவாவுக்குத் துதி செலுத்துங்கள்; அவர் கொடியவர்களின் கையிலிருந்து எளியவர்களுடைய உயிரைத் தப்புவிக்கிறார். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக. என் தாய் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாமல் இருப்பதாக. “ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்ற செய்தியைக் கொண்டுவந்து என் தந்தையை மகிழ்வித்த மனிதன் சபிக்கப்படுவானாக. அந்த மனிதன், யெகோவா தயங்காமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப் போலிருப்பானாக. அவன் காலையில் அழுகுரலையும், நண்பகலில் போர் முழக்கத்தையும் கேட்பானாக. ஏனெனில் அவன் என்னைக் கருப்பையிலேயே கொல்லாமற்போனானே. அப்பொழுது என் தாயின் கருப்பை என் கல்லறையாய் இருந்திருக்குமே. கஷ்டத்தையும், துன்பத்தையும் கண்டு அவமானத்திலே என் வாழ்நாளை முடிக்கும்படி கர்ப்பத்திலிருந்து நான் வெளியே வந்ததேன்? சிதேக்கியாவின் வேண்டுதல் மறுக்கப்படுதல் மல்கியாவின் மகன் பஸ்கூரையும், மாசெயாவின் மகன் செப்பனியா என்ற ஆசாரியனையும் சிதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பினான். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அவர்கள் அவனிடம், “பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதற்கு வந்திருக்கிறதினால், இப்பொழுது எங்களுக்காக யெகோவாவிடம் விசாரி. ஒருவேளை அவன் எங்களைவிட்டுப் பின்வாங்கும்படியாக யெகோவா கடந்த காலங்களில் செய்ததுபோல எங்களுக்காக அற்புதங்களைச் செய்வார்” என்றார்கள். ஆனால் எரேமியா அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, சொல்வது இதுவே: உங்கள் மதிலுக்கு வெளியே உங்களை முற்றுகையிடுகிற பாபிலோன் அரசனோடும், பாபிலோனியரோடும் சண்டையிட நீங்கள் பயன்படுத்தும் உங்கள் கைகளில் இருக்கிற போர் ஆயுதங்களை, உங்களுக்கு எதிராகவே நான் திருப்பப் போகிறேன். நான் அவர்களை பட்டணத்திற்குள் ஒன்றுசேர்ப்பேன். என்னுடைய நீட்டிய கரத்தினாலும், வலிமையான புயத்தினாலும் நானே உங்களுக்கெதிராக யுத்தம் செய்வேன். கோபத்துடனும், கடுங்கோபத்துடனும், பெரும் ஆத்திரத்துடனும் யுத்தம் செய்வேன். அத்துடன் இப்பட்டணத்தில் இருக்கும் மனிதரையும், மிருகங்களையும் அடித்து வீழ்த்துவேன். அவர்கள் பயங்கரமான கொள்ளைநோயினால் சாவார்கள். யெகோவா அறிவிக்கிறதாவது, அதற்குப் பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவையும், அவனுடைய அதிகாரிகளையும், அவர்களுடன் கொள்ளைநோய்க்கும், வாளுக்கும், பஞ்சத்திற்கும் தப்பியிருக்கும் இந்தப் பட்டணத்து மக்களையும் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரிடத்திலும், அவர்களைக் கொலைசெய்ய தேடுகிற பகைவர்களிடத்திலும் ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான். அவன் அவர்களுக்கு இரக்கமோ, தயவோ, அனுதாபமோ காட்டமாட்டான்.’ “மேலும், நீ மக்களிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: பாருங்கள், நான் உங்களுக்கு முன்பாக வாழ்வின் வழியையும், சாவின் வழியையும் வைக்கிறேன். இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிறவன் எவனோ அவன் வாளினாலோ, பஞ்சத்தினாலோ அல்லது கொள்ளைநோயினாலோ சாவான். வெளியே போய் உங்களை முற்றுகையிடுகிற பாபிலோனியரிடம் சரணடைகிறவன் எவனோ அவன் வாழ்வான். அவன் உயிர் தப்புவான். நான் இப்பட்டணத்திற்கு நன்மையை அல்ல; தீமையையே நியமித்திருக்கிறேன். இந்தப் பட்டணம் பாபிலோன் அரசனின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் அதை நெருப்பால் அழித்துவிடுவான் என யெகோவா அறிவிக்கிறார்.’ “மேலும் யூதாவின் அரச குடும்பத்திடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்; தாவீதின் குடும்பத்தாரே! யெகோவா கூறுவது இதுவே: “ ‘காலைதோறும் நீதியை நடப்பியுங்கள். கொள்ளையிடப்பட்டவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து தப்புவியுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் செய்த தீமையின் நிமித்தம் எனது கடுங்கோபம் வெளிப்பட்டு, அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் பற்றி எரியும். எருசலேமே! இந்தப் பள்ளத்தாக்கின் சமனான இடத்தில் கன்மலையாய் வாழ்கிறவர்களே! “எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார்? எங்கள் புகலிடத்திற்குள் வர யாரால் முடியும்?” என்று சொல்கிறவர்களே! நான் உங்களுக்கு விரோதமாய் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களை உங்கள் செயல்களுக்குத்தக்கதாய் தண்டிப்பேன். நான் உங்கள் காடுகளில் நெருப்பு மூட்டுவேன். அது உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் சுட்டெரிக்கும் என்று யெகோவா அறிவிக்கிறார்.’ ” தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து. தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள். இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார். மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: “நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும், லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும், நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும், குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன். நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன். அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி அவைகளை நெருப்பிலே போடுவார்கள். “அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள். அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.” இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம். அவன் மறைவுக்காக துக்கிக்கவும் வேண்டாம். நாடுகடத்தப்பட்ட அரசனுக்காகவே மனங்கசந்து அழுங்கள். ஏனெனில் இனிமேல் அவன் திரும்பி வரமாட்டான். தன் சொந்த நாட்டைக் காணவும் மாட்டான். யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான். அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார். “அநியாயத்தினால் தன் அரண்மனையையும், அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக் கூலிகொடாமல் வேலை வாங்குகிறான். அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன் எனக்குப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்’ என்கிறான். அவ்வாறே அவன் அதற்குப் பெரிய ஜன்னல்களை அமைத்து, கேதுரு மரப்பலகைகளால் தளவரிசைப்படுத்தி, அவைகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கிறான். “அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், அது உன்னை அரசனாக்குமோ? உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ? நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ? அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன. என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும், குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், கப்பம் கேட்பதிலும் ஒடுக்குவதிலுமே நோக்கமாயிருக்கின்றன” என்று யெகோவா கூறுகிறார். ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே: “அவனுக்காக அவர்கள்: ‘ஐயோ என் சகோதரனே! ஐயோ என் சகோதரியே!’ என்று துக்கங்கொண்டாட மாட்டார்கள். ‘ஐயோ என் தலைவனே! ஐயோ அவனுடைய மேன்மையே!’ என்றும் அவனுக்காக துக்கங்கொண்டாட மாட்டார்கள். ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள். அவனை இழுத்துக்கொண்டுபோய் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே எறிந்துவிடுவார்கள்” என்கிறார். லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. பாசானில் உனது குரல் கேட்கட்டும். அபாரீமிலிருந்தும் அழு. ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள். பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய். உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது. நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை. காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள். அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும் நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய். லெபனோனில் வாழ்பவளே! கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே! பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது, நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய். யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம். நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள். நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார். கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ? அவனும், அவனுடைய பிள்ளைகளும் அவர்கள் அறியாத ஒரு நாட்டில் ஏன் வீசி எறியப்பட வேண்டும். ஓ நாடே! நாடே! நாடே! யெகோவாவின் வார்த்தையைக் கேள்; யெகோவா கூறுவது இதுவே: “தன் வாழ்நாளில் செழித்தோங்காத பிள்ளைகளற்ற ஒரு மனிதனைப்போல் இவனைக் குறித்து எழுதிவை. அவனுடைய வழித்தோன்றல்களில் ஒருவனும் செழித்தோங்கமாட்டான். தாவீதின் அரியணையில் உட்காரவுமாட்டான். இனிமேல் யூதாவில் அரசாளவுமாட்டான் என்கிறார்” என்றான். நீதியின் கிளை “என்னுடைய மேய்ச்சலின் செம்மறியாடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு” என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என் மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்குச் சொல்வது இதுவே: நீங்கள் என்னுடைய மந்தையைக் கவனிக்காமல் அவர்களைச் சிதறப்பண்ணி துரத்திவிட்டீர்கள். நீங்கள் செய்த தீமைக்காக இப்பொழுது நான் உங்கள்மேல் தண்டனையைக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். என் மந்தையில் மீதியானவர்களை நான் துரத்திவிட்ட நாடுகளிலிருந்து நானே அவர்களைக் கூட்டிச்சேர்த்து, அவர்களைத் திரும்பவும் அவர்களுடைய மேய்ச்சலிடத்திற்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் செழித்து, எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள். அவர்களைப் பராமரிக்கும் மேய்ப்பர்களை அவர்களுக்காக எழுப்புவேன். அவர்கள் இனி பயப்படவோ, பயமுறுத்தப்படவோ, ஒருவராவது தொலைந்துபோகவோ மாட்டார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன். அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன். அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார். அவருடைய நாட்களில் யூதா காப்பாற்றப்படும். இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். யெகோவாவே நமது நேர்மை என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார். “எனவே மீண்டும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது மக்கள் இனியொருபோதும், ‘எகிப்திலிருந்து இஸ்ரயேலரைக் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என ஆணையிடமாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள், ‘இஸ்ரயேலின் வழித்தோன்றல்களை வட நாட்டிலிருந்தும், அவர் நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயம்போல’ என்றே ஆணையிடுவார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குடியிருப்பார்கள்.” பொய்யான இறைவாக்கு உரைப்போர் நீ இறைவாக்கு உரைப்போரைக் குறித்து: என் இருதயம் எனக்குள் நொறுங்குகிறது; என் எல்லா எலும்புகளும் நடுங்குகின்றன. யெகோவாவினாலும் அவருடைய பரிசுத்த வார்த்தையினாலும் நான் ஒரு மதுவெறியனைப் போலானேன். திராட்சை மதுவினால் போதை கொண்டவனைப் போலானேன். விபசாரம் செய்பவர்களால் நாடு நிரம்பியிருக்கிறது. சாபத்தினால் நாடு வறண்டு கிடக்கின்றது. பாலைவனத்து மேய்ச்சல் நிலங்கள் வாடியிருக்கின்றன. இறைவாக்கு உரைப்போர் தீய வழிகளைப் பின்பற்றி தங்கள் அதிகாரத்தை அநீதியாக உபயோகிக்கிறார்கள். “இறைவாக்கு உரைப்பவனும், ஆசாரியனுமாகிய இருவரும் இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய கொடுமையை என்னுடைய ஆலயத்திலும் நான் காண்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அதனால் அவர்களுடைய வழி சறுக்கலாகிவிடும்; அவர்கள் இருளுக்குள் துரத்தப்பட்டு விழுவார்கள். அவர்கள் தண்டிக்கப்படும் வருடத்தில், நான் அவர்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “சமாரியாவின் இறைவாக்கு உரைப்போர் மத்தியில் வெறுக்கத்தக்க இக்காரியத்தைக் கண்டேன்: அவர்கள் பாகாலைக் கொண்டு இறைவாக்கு சொல்லி, என் மக்களான இஸ்ரயேலரை தவறாய் வழிநடத்தினார்கள். நான் எருசலேமின் இறைவாக்கு உரைப்போர் மத்தியிலுங்கூட மோசமான ஒரு செயலைக் கண்டேன். அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். உண்மை வழியில் வாழவில்லை. ஒருவனும் தனது கொடுமையைவிட்டுத் திரும்பாதபடி, தீயவரின் கைகளைப் பெலப்படுத்துகிறார்கள். அவர்கள் எல்லோரும் எனக்கு சோதோமைப்போல் இருக்கிறார்கள். எருசலேம் மக்கள் கொமோராவைப்போல் இருக்கிறார்கள்.”23:14 ஆதி. 18:20; 19:24-25 ஆகவே சேனைகளின் யெகோவா இறைவாக்கு உரைப்போரைக் குறித்து சொல்வது இதுவே: “அவர்களை நான் கசப்பான உணவை உண்ணச்செய்து, நச்சுத் தண்ணீரையும் குடிக்கச் செய்வேன். ஏனெனில் எருசலேமின் இறைவாக்கினரிடமிருந்தே இறைவனுக்குக் கீழ்ப்படியாத தன்மை நாடு முழுவதும் பரவியிருக்கிறது” என்கிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இறைவாக்கு உரைப்போர் சொல்லும் இறைவாக்குகளைக் கேட்க வேண்டாம். அவர்கள் பொய்யான எதிர்பார்ப்பினால் உங்கள் மனதை நிரப்புகிறார்கள். யெகோவாவின் வாயிலிருந்து அல்ல, தங்கள் மனதிலுள்ள சுயதரிசனத்தையே பேசுகிறார்கள். என்னை அவமதிப்போரிடம், ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடப்பவர்கள் எல்லோரையும் பார்த்து, ‘உங்களுக்கு ஒரு தீங்கும் வராது’ என்கிறார்கள். யெகோவாவின் வார்த்தையைக் காணும்படியும், கேட்கும்படியும் யெகோவாவின் ஆலோசனைச் சபையில் அவர்களில் எவன் நின்றான்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? பாருங்கள், யெகோவாவின் பெருங்காற்றாகிய கொடிய புயல் வெளிப்படும். அது கொடியவர்களின் தலையின்மேல் சுழல் காற்றாய் மோதும். யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கங்களை முழுவதுமாக நிறைவேற்றும்வரை அவரது கோபம் தணிவதில்லை. வரும் நாட்களில் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்வீர்கள். இந்த இறைவாக்கு உரைப்போரை நான் அனுப்பவில்லை. ஆயினும் அவர்கள் தங்களுடைய செய்திகளுடன் ஓடிவந்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் பேசவில்லை. அவர்களோ இறைவாக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னுடைய ஆலோசனைச் சபையில் இருந்திருந்தால், என் மக்களுக்கு என்னுடைய வார்த்தைகளையே அறிவித்திருப்பார்கள். என்னுடைய மக்களை அவர்களுடைய தீயவழிகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் திருப்பியிருப்பார்கள். “நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ? தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?” என யெகோவா சொல்கிறார். “நான் காணாதபடிக்கு யாராவது தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?” என யெகோவா அறிவிக்கிறார். “இறைவாக்கு உரைப்போர் என் பெயரில் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், ‘நான் கனவு கண்டேன்! நான் கனவு கண்டேன்!’ என்கிறார்கள். இவ்வாறு தங்கள் வஞ்சனையான எண்ணங்களை, இறைவாக்காகக் கூறும் இந்தப் பொய் இறைவாக்கினரின் இருதயங்களில் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்? என் மக்களின் தந்தையர் பாகால் வழிபாட்டினால் என் பெயரை மறந்தார்கள். அதுபோல, இவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் தங்கள் கனவுகள், என் மக்களை என் பெயரை மறக்கும்படி செய்யும் என எண்ணுகிறார்கள். கனவையுடைய இறைவாக்கினன் தன் கனவைச் சொல்லட்டும். ஆனால் என்னுடைய வார்த்தையை உடையவனோ அதை உண்மையாக கூறட்டும். தானியத்துடன் வைக்கோலுக்கு என்ன வேலை?” என்று யெகோவா அறிவிக்கிறார். “என்னுடைய வார்த்தை நெருப்பைப் போன்றது அல்லவா? கற்பாறையை துண்டுகளாய் நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதல்லவா?” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகையால்” யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒருவரிடமிருந்து இன்னொருவர் வார்த்தைகளை எடுத்து, இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கு நான் விரோதமாய் இருக்கிறேன். ஆம்” யெகோவா அறிவிக்கிறதாவது: “தங்கள் நாக்குகளை அசைத்து, ‘யெகோவா சொல்கிறார்’ என்று சொல்கிற இறைவாக்கு உரைப்போரையும் நான் எதிர்க்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். பொய்யான கனவுகளை இறைவாக்காக கூறுபவருக்கு நான் விரோதமாக இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “துணிகரமான பொய்களைக் கூறி என் மக்களை தவறாய் வழிநடத்துகிறார்கள்; நானோ அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களை நியமிக்கவுமில்லை. அவர்களால் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். தவறான இறைவாக்கினரும் தரிசனங்களும் “இந்த மக்களோ, இறைவாக்கினனோ, ஆசாரியனோ உன்னிடம், ‘யெகோவாவின் வாக்கு என்ன?’ என்று கேட்டால் நீ அவர்களிடம், ‘வாக்கு என்ன? உன்னைக் கைவிட்டு விடுவேன், என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல். ஒரு இறைவாக்கினனோ, ஆசாரியனோ, வேறு எவனோ, ‘இதுவே யெகோவாவின் வாக்கு’ என்று அதிகாரமாய் சொன்னால் நான் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவனும் தன் நண்பனிடத்திலும், உறவினனிடத்திலும், ‘யெகோவாவின் பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ இனிமேலும், ‘யெகோவாவின் பாரம்’ என்று எதையும் சொல்லவேண்டாம். ஏனெனில் ஒவ்வொருவனுடைய சொந்த வார்த்தையும் அவனவனுடைய பாரமாயிருக்கிறது. இவ்விதமாக எங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவான வாழும் இறைவனின் வார்த்தைகளை நீங்கள் புரட்டுகிறீர்கள். நீங்கள் இறைவாக்கினரிடம் ‘யெகோவா உனக்குக் கொடுத்த பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்றே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனாலும் யெகோவா கூறுவது இதுவே: ‘யெகோவாவின் வாக்கு இதுவே என்று நீங்கள் அதிகாரமாய் சொல்லக்கூடாது’ என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும் நீங்கள், ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். ஆகையால் நான் நிச்சயமாக உங்களை மறந்து, உங்களுக்கும், உங்கள் தந்தையருக்கும் கொடுத்த பட்டணத்துடன், உங்களையும் என் முன்னின்று தள்ளிவிடுவேன். நான் உங்கள்மேல் நித்திய அவமானத்தை, மறக்கமுடியாத நித்திய வெட்கத்தைக் கொண்டுவருவேன்.” இரண்டு அத்திப்பழக் கூடைகள் யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் யெகொனியா, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் நாடுகடத்தப்பட்டான். அவனுடன் யூதாவின் அதிகாரிகளும், தச்சர்களும், தொழில் வல்லுநர்களும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டார்கள். பின்பு யெகோவா எனக்கு ஆலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் காட்டினார். ஒரு கூடையில் முற்றிப் பழுத்த பழங்களைப் போன்ற மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன. மற்றொரு கூடையில் அழுகிப்போனதால் சாப்பிட முடியாத அத்திப்பழங்கள் இருந்தன. அப்பொழுது யெகோவா என்னிடம், “எரேமியாவே, நீ என்ன காண்கிறாய்” என்று கேட்டார். அதற்கு நான், “அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்ல அத்திப்பழங்கள் மிகவும் நல்லவையாக இருக்கின்றன. அழுகிப்போனவைகளோ சாப்பிட முடியாத அளவு கெட்டுப்போயும் இருக்கின்றன” என்றேன். பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் யூதா நாடான இவ்விடத்திலிருந்து, பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பியவர்களை, இந்த நல்ல அத்திப்பழங்களைப்போல் நல்லவர்களாக எண்ணுகிறேன். அவர்களின் நன்மைக்காக நான் அவர்களில் கவனமாயிருந்து, மீண்டும் அவர்களை இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன். இடித்துத் தள்ளமாட்டேன். அவர்களை நாட்டுவேன், வேருடன் பிடுங்கமாட்டேன். நானே யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்ளத்தக்க இருதயத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடம் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் என் மக்களாகவும், நான் அவர்களுடைய இறைவனாகவும் இருப்பேன். “ ‘ஆனால் அழுகி சாப்பிட முடியாமல் கெட்டுப்போன அத்திப்பழங்களைப் போலவே யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனுடைய அதிகாரிகளையும், எருசலேமில் தப்பியிருப்பவர்களையும் நடத்துவேன். அவர்கள் இந்நாட்டில் தங்கினாலும், எகிப்தில் வசித்தாலும் அப்படியே நடத்துவேன். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நான் அவர்களை அருவருப்பாகவும், வெறுக்கத்தக்கவர்களாகவும் ஆக்குவேன். நான் எங்கெங்கே அவர்களைத் துரத்திவிட்டேனோ, அங்கெல்லாம் அவர்களை நிந்தையாகவும், பழமொழியாகவும், பழிச்சொல்லாகவும், சாபமாகவும் ஆக்குவேன். நான் அவர்களுக்கும், அவர்களுடைய முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிலிருந்து அவர்கள் அழியும்வரை அவர்களுக்கு விரோதமாக வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்கிறார்’ என்றான்.” எழுபது வருட சிறையிருப்பு யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், யூதா மக்கள் எல்லோரையும் குறித்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது. இது பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் முதலாம் வருடமாகும். இறைவாக்கினன் எரேமியா, எல்லா யூதா மக்களுக்கும், எருசலேமில் வாழும் எல்லோருக்கும் சொன்னதாவது: யூதாவின் அரசன், ஆமோனின் மகன் யோசியா அரசாண்ட பதிமூன்றாம் வருடத்திலிருந்து, இந்நாள்வரை இந்த இருபத்துமூன்று வருடங்களாக யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அதைக்குறித்து நான் மீண்டும், மீண்டும் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் அவற்றிக்குச் செவிகொடுக்கவில்லை. மேலும் யெகோவா இறைவாக்கினர்களான எல்லா ஊழியக்காரரையும் மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியும், நீங்கள் செவிகொடுக்கவோ, கவனிக்கவோ இல்லை. அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீமையான வழியிலிருந்தும், தீமையான உங்கள் வழக்கங்களிலிருந்தும் திரும்புங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமென யெகோவா கொடுத்த நாட்டில் வாழலாம். நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பணிவிடை செய்யவோ, அவைகளை வணங்குவதற்காக அவைகளைப் பின்பற்றவோ வேண்டாம். உங்கள் கைகளினால் செய்தவற்றால் எனக்குக் கோபமூட்ட வேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்குத் தீமைசெய்யமாட்டேன்” என்று உங்களுக்குச் சொல்லியிருந்தார்கள். “ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “உங்கள் கைகள் செய்தவற்றைக் கொண்டு எனக்குக் கோபமூட்டியிருக்கிறீர்கள். நீங்களே உங்கள்மேல் தீங்கைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.” சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால், நான் வடக்கேயிருக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும், என் பணியாளனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரையும் வரவழைப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை இந்த நாட்டிற்கும், அதன் குடிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் விரோதமாகவே நான் கொண்டுவருவேன். நான் அவர்களை முழுவதும் அழித்து, அவர்களை வெறுப்புக்குரியவர்களாகவும், பழிப்புக்குரியவர்களாகவும், நித்திய அழிவுக்குரியவர்களாகவும் ஆக்குவேன். நான் அவர்களிடமிருந்து ஆனந்த சத்தத்தையும், மகிழ்ச்சியையும் நீக்கிவிடுவேன். மணமகனின் குரலையும், மணமகளின் குரலையும் நீக்கிவிடுவேன். இயந்திரங்களின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் எடுத்துப்போடுவேன். இந்த நாடு முழுவதும் கைவிடப்பட்ட பாழ்நிலமாகும். இந்த நாடுகள் பாபிலோன் அரசனுக்கு எழுபது வருடங்களுக்குப் பணிசெய்வார்கள். “ஆனால் எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்னரோ, பாபிலோன் அரசனையும், அவர்களுடைய நாட்டையும், கல்தேயருடைய தேசத்தையும் அவர்களுடைய குற்றத்திற்காகத் தண்டிப்பேன். அவர்களுடைய நாட்டையும் என்றென்றும் பாழாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்டிற்கு எதிராய் நான் பேசிய எல்லாவற்றையும் அதன்மேல் கொண்டுவருவேன். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள யாவற்றையும், எல்லா நாடுகளுக்கும் விரோதமாக எரேமியாவினால் இறைவாக்காகக் கூறப்பட்டவற்றையும் கொண்டுவருவேன். அவர்களும் அநேக நாட்டினராலும், பெரிய அரசர்களாலும் அடிமைகளாக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்களின் செயல்களுக்கு ஏற்றதாகவும், அவர்களின் கைகளின் வேலைக்கு ஏற்றதாகவும் நான் அவர்களுக்குப் பதில் செய்வேன்.” இறைவனின் கடுங்கோபம் மேலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “என்னுடைய கடுங்கோபமாகிய திராட்சரசம் நிரம்பிய பாத்திரத்தை, நீ என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை அனுப்பும் இடங்களிலுள்ள எல்லா நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய். அதை அவர்கள் குடிக்கும்போது, நான் அவர்கள் மத்தியில் அனுப்பும் வாளின் நிமித்தம் அவர்கள் தள்ளாடி பைத்தியமாய்ப் போவார்கள்” என்றார். அப்பொழுது யெகோவாவின் கையிலிருந்து நான் அந்தப் பாத்திரத்தை எடுத்து, யெகோவா என்னை அனுப்பிய எல்லா இடங்களிலுள்ள நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய்தேன். எருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். இன்று அவர்கள் இருக்கிறது போலவே அவர்களைப் பாழாக்கவும், வெறுப்புக்கும், பழிப்புக்கும், சாபத்திற்கும் உள்ளாக்கவுமே இப்படிக் குடிக்கக் கொடுத்தேன். எகிப்தின் அரசன் பார்வோனையும், அவனுடைய உதவியாளரையும், அவனுடைய அதிகாரிகளையும், அவனுடைய எல்லா மக்களையும் அங்குள்ள எல்லா அந்நிய மக்களையும், ஊத்ஸ் நாட்டின் எல்லா அரசர்களையும், அஸ்கலோன், காசா, எக்ரோன் ஆகிய பெலிஸ்திய அரசர்கள் அனைவரையும் அஸ்தோத்தில் மீந்திருப்பவர்களையும் குடிக்கப்பண்ணினேன். மேலும் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகியோரையும், தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன். தேதானையும், தேமாவையும், பூஸையும் தூர இடங்களிலுள்ள எல்லோரையும், அரேபியா நாட்டு எல்லா அரசர்களையும், பாலைவனத்தில் வசிக்கும் அந்நிய நாட்டு மக்களின் எல்லா அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன். சிம்ரி, ஏலாம், மேதியா நாடுகளிலுள்ள அரசர்களையும், வடக்கிலும், அருகேயும், தூரமாயும் இருக்கும் எல்லா அரசர்களையும், பூமியிலுள்ள எல்லா அரசுகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் குடிக்கப்பண்ணினேன். இவர்கள் எல்லோரும் குடித்த பின்பு, சேசாக்கு25:26 சேசாக்கு என்பது பாபிலோனின் இரகசியப் பெயர் ஆகும். அரசனும் குடிப்பான். “மேலும் அவர்களிடம், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: குடியுங்கள், வெறித்து வாந்தி பண்ணுங்கள். நான் உங்களுக்குள் அனுப்பப்போகிற வாளின் நிமித்தம் எழும்பாதபடிக்கு விழுங்கள்.’ ஆனால், அவர்கள் உன் கையிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் குடிக்க மறுத்தால், நீ அவர்களிடம், ‘நீங்கள் அதைக் குடிக்கவே வேண்டும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல். ஏனெனில், பாருங்கள், என் பெயரைக்கொண்ட பட்டணத்தின்மேல் என் அழிவைக் கொண்டுவர ஆரம்பிக்கிறேன். நீங்கள் மாத்திரம் தண்டிக்கப்படாமல் விடப்படுவீர்களோ? நீங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டீர்கள். நான் பூமியில் வாழும் எல்லாக் குடிகளின்மேலும் வாளை வரப்பண்ணப் போகிறேன் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்’ என்று சொல் என்றார். “இந்த வார்த்தைகளை எல்லாம் நீ அவர்களுக்கு விரோதமாக இறைவாக்காகச் சொல்: “ ‘உயரத்திலிருந்து யெகோவா சத்தமிட்டு, தமது பரிசுத்த இடத்திலிருந்து முழங்குவார். தன் நாட்டுக்கு எதிராகப் பலமாய் சத்தமிட்டு, திராட்சைப் பழங்களை மிதிக்கிறவர்களின் சத்தத்தைப்போல், பூமியில் வசிக்கும் எல்லோருக்கெதிராகவும் அவர் ஆர்ப்பரிப்பார். நாடுகளுக்கு விரோதமாகவும் யெகோவா குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவதால், பூமியின் கடைசிவரை கொந்தளிப்பு எதிரொலிக்கும். அவர் எல்லா மனுக்குலத்தின்மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார். கொடியவர்களையோ வாளுக்கு ஒப்புக்கொடுப்பார்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “பார்! நாட்டிலிருந்து நாட்டுக்கு பேராபத்து பரவுகிறது, பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு பலத்த புயல் எழும்புகிறது.” அக்காலத்தில் யெகோவாவினால் கொலையுண்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை எங்கும் சிதறுண்டு கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் புலம்பமாட்டார்கள். அவர்கள் ஒன்றுசேர்த்து புதைக்கப்படவும் மாட்டார்கள். நிலத்தின்மேல் குப்பையைப்போல் கிடப்பார்கள். மேய்ப்பர்களே, அழுது புலம்புங்கள். மந்தையின் தலைவர்களே! புழுதியில் புரளுங்கள். நீங்கள் கொல்லப்படும் காலம் வந்துவிட்டது. மிக மெல்லிய மண்பாத்திரத்தைப்போல் நீங்கள் விழுந்து நொறுங்குவீர்கள். மேய்ப்பர்கள் ஓடுவதற்கு இடமிருக்காது. மந்தையின் தலைவர்கள் தப்புவதற்கும் இடமிருக்காது. மேய்ப்பர்களின் அழுகையைக் கேளுங்கள்; மந்தையின் தலைவர்களின் புலம்பலைக் கேளுங்கள். யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் இடத்தை அழிக்கிறார். யெகோவாவின் பயங்கரமான கோபத்தினால் அமைதி நிறைந்த பசும்புல்வெளிகள் பாழாய் விடப்படும். பதுங்குமிடத்தைவிட்டு இரைதேடப் புறப்படும் சிங்கத்தைப்போல் அவர் புறப்படுவார். அவர்களுடைய நாடு பாழாக்கப்படும். ஒடுக்குகிறவனுடைய வாளினாலும், யெகோவாவின் பயங்கரமான கோபத்தினாலும் இப்படியாகும். எரேமியாவுக்கு சாவின் அச்சுறுத்தல் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சியின் ஆரம்பத்தில், யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது: “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று, யெகோவாவின் ஆலயத்தில் வழிபட வருகின்ற யூதா பட்டணத்து மக்கள் எல்லோருடனும் பேசு. நான் உனக்குச் சொல்லும்படி கட்டளையிட்டிருக்கிற எல்லா வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொல். ஒருவேளை அவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒவ்வொருவரும் தங்கள் தீமையான வழியைவிட்டுத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் செய்திருக்கிற தீமையின் நிமித்தம் நான் திட்டமிட்ட பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவராமல் மனமிரங்குவேன். நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நான் உங்கள்முன் வைத்த என் சட்டத்தின்படி நடக்கவேண்டும். நான் திரும்பத்திரும்ப உங்களிடத்தில் அனுப்பும் என் ஊழியரான இறைவாக்கினரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. ஆகையால் நான் இந்த ஆலயத்தை சீலோவைப்போல் அழித்து, இந்தப் பட்டணத்தையும் பூமியிலுள்ள எல்லா நாடுகளின் மத்தியிலும் சாபத்திற்குள்ளாக்குவேன் என்று சொல்’ என்றார்.” ஆசாரியரும், இறைவாக்கினரும், எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். யெகோவா சொல்லும்படி தனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் எரேமியா எல்லா மக்களுக்கும் சொன்னான். சொன்னவுடனேயே ஆசாரியரும், இறைவாக்கினரும் எல்லா மக்களும் அவனைப் பிடித்து, “நீ சாகவேண்டும். நீ ஏன், இந்த ஆலயம் சீலோவைப் போலாகும் என்றும், பட்டணம் குடிகளின்றிப் பாழாகும் என்றும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கேட்டார்கள். எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள். இவற்றை யூதாவின் அதிகாரிகள் கேள்விப்பட்டபோது அரச அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று யெகோவாவின் ஆலயத்திலிருந்த புதிய வாசலின் முகப்பில் உட்கார்ந்தார்கள். அப்பொழுது ஆசாரியரும், இறைவாக்கினரும், “இவன் பட்டணத்திற்கெதிராய் இறைவாக்குரைத்தான். இவன் மரண தண்டனைக்கு உரியவன். நீங்களே உங்கள் காதுகளால் கேட்டீர்கள்” என்று அதிகாரிகளிடமும், எல்லா மக்களிடமும் சொன்னார்கள். அப்பொழுது எரேமியா எல்லா அதிகாரிகளையும் மக்களையும் பார்த்து: “இந்த ஆலயத்திற்கும் இந்தப் பட்டணத்திற்கும் எதிராய் நான் சொன்ன எல்லாவற்றையும் இறைவாக்கு உரைக்கும்படி யெகோவாவே என்னை அனுப்பினார். இப்போது உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்திருத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது யெகோவா மனமிரங்கி உங்களுக்கெதிராகத் தீர்ப்பளித்த பேராபத்தைக் கொண்டுவரமாட்டார். நானோ உங்கள் கையில் இருக்கிறேன்; நீங்கள் நலமானது என்றும், சரியானது என்றும் நினைப்பதைச் செய்யுங்கள். நீங்கள் என்னைக் கொன்றால், குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும், இந்தப் பட்டணத்தின்மேலும், இதில் வாழ்கிறவர்கள்மேலும் நீங்களே சுமரப்பண்ணுவீர்கள் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உண்மையிலேயே நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்” என்றான். அப்பொழுது அதிகாரிகளும், எல்லா மக்களும் ஆசாரியர்களையும், இறைவாக்கினரையும் பார்த்து, “இந்த மனிதன் மரண தண்டனைக்கு தகுதியானவன் அல்ல. அவன் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே எங்களுடன் பேசியிருக்கிறான்” என்றார்கள். நாட்டின் முதியோர் சிலர் முன்னேவந்து, கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “யூதாவின் அரசன் எசேக்கியாவின் நாட்களில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா இறைவாக்குரைத்தான். அவன் எல்லா யூத மக்களிடமும், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “ ‘சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்’26:18 மீகா 3:12” என்று சொல்லியிருந்தான். “அப்பொழுது யூதாவின் அரசன் எசேக்கியாவோ அல்லது யூதாவிலிருந்து வேறு எவரோ அவனைக் கொன்றார்களா? எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து அவருடைய தயவை நாடவில்லையோ? யெகோவாவும் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பிட்ட பேராபத்தை அனுப்பாதபடி, மனமிரங்கவில்லையோ? ஆனால் நாங்களோ, எங்களுக்கெதிராகப் பெரும் பேரழிவை வருவித்துக்கொள்ளப் போகிறோம்” என்றார்கள். இப்பொழுது கீரியாத்யாரீம் ஊரைச்சேர்ந்த செமாயாவின் மகன் உரியா என்னும் வேறொருவனும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தான். அவனும் எரேமியா கூறிய அதே வார்த்தைகளையே இந்தப் பட்டணத்திற்கும், இந்த நாட்டிற்கும் எதிராக இறைவாக்கு உரைத்தான். யோயாக்கீம் அரசனும், அவனுடைய எல்லா அதிகாரிகளும், அலுவலர்களும் அவனுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அரசன் அவனைக் கொலைசெய்யத் தேடினான். ஆனால் உரியா அதைக் கேள்விப்பட்டு பயந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான். ஆயினும் யோயாக்கீம் அரசன் அக்போரின் மகன் எல்நாத்தானை வேறுசில மனிதரோடு எகிப்திற்கு அனுப்பினான். அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, யோயாக்கீம் அரசனிடம் கொண்டுபோனார்கள். அரசன் அவனை வாளால் வெட்டி, அவனுடைய உடலை பொதுமக்களை அடக்கம்பண்ணுகிற இடத்தில் எறிந்துவிட்டான். ஆனாலும் சாப்பானின் மகன் அகீக்காம் எரேமியாவுக்குச் சார்பாக இருந்தபடியால், எரேமியா கொலைசெய்யப்படும்படி மக்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படவில்லை. யூதாவின் மக்களும் நேபுகாத்நேச்சாரும் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. யெகோவா என்னிடம், “நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும், உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் போட்டுக்கொள். பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்கள் மூலமாக, ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய நாடுகளின் அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பு. அவர்களுடைய அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பவேண்டிய செய்தியாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இதை உங்களுடைய அரசர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள். எனது மகா வலிமையாலும் நீட்டப்பட்ட புயத்தாலும் பூமியையும், அதிலுள்ள மனிதரையும், மிருகங்களையும் நான் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கே நான் அவைகளைக் கொடுக்கிறேன். இப்பொழுது உங்கள் நாடுகள் எல்லாவற்றையும், பாபிலோன் அரசனும் எனது பணியாளனுமான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். காட்டு மிருகங்களையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துவேன். அவனுடைய நாட்டிற்கான காலம் வரும்வரை எல்லா நாடுகளும் அவனுக்கும், அவன் மகனுக்கும், அவனுடைய பேரனுக்கும் பணிசெய்வார்கள். அதன்பின் அநேக நாடுகளும், பெரிய அரசர்களும், அவனை தங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்கள். “ ‘ “ஆயினும், எந்த நாடாகிலும் அரசாகிலும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யாமலும், அவனுடைய நுகத்தின் கீழே தன் கழுத்தை வைக்காமலும் போனால், அந்த நாட்டை நான் தண்டிப்பேன். அந்த நாட்டை அவனுடைய கையால் நான் அழித்துத் தீர்க்கும்வரை நான் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையால், ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும், கனவுகளுக்கு விளக்கம் கூறுவோருக்கும், செத்தவர்களின் ஆவியுடன் பேசுகிறவர்களுக்கும், சூனியக்காரருக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம். ஏனெனில் உங்கள் நாடுகளிலிருந்து உங்களைத் தூரமான இடத்திற்கு அகற்ற உதவும் பொய்களையே அவர்கள் உங்களுக்கு இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்கள் அழிவீர்கள். ஆனால் எந்த நாடாவது பாபிலோன் அரசனின் நுகத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி அவனுக்குப் பணிசெய்தால், நான் அந்த நாட்டை அதன் சொந்த நாட்டிலேயே தங்கச்செய்து, நிலத்தைப் பண்படுத்தி அங்கே வாழவிடுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” ’ ” நான் யூதாவின் அரசன் சிதேக்கியாவுக்கும் இதே செய்தியைக் கூறினேன். நான் அவனிடம், “நீங்கள் உங்களைப் பாபிலோன் அரசனின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அரசனுக்கும், அவனுடைய மக்களுக்கும் பணிசெய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் பிழைப்பீர்கள். நீயும் உன் மக்களும் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயாலும் ஏன் சாகவேண்டும்? பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யாத எந்த நாட்டையும் இவைகளால் அழிப்பதாக யெகோவா எச்சரித்திருக்கிறாரே. ஆகையால் ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்கிற இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். ‘நான் அவர்களை அனுப்பவில்லை’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் என் பெயரில் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். எனவே நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்களும் உங்களுக்கு இறைவாக்கு கூறுகிற இறைவாக்கினரும் அழிவீர்கள் என்று சொன்னேன்.’ ” அதன்பின் நான் ஆசாரியர்களிடமும், இந்த எல்லா மக்களிடமும் சொன்னதாவது, “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் திரும்பவும் பாபிலோனிலிருந்து விரைவில் கொண்டுவரப்படும் என்று சொல்கிற உங்கள் இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். அவர்கள் உங்களுக்குப் பொய்யையே இறைவாக்காக உரைக்கிறார்கள். அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டாம். பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உயிர் வாழ்வீர்கள். இந்தப் பட்டணம் ஏன் பாழடைய வேண்டும்? ஆனால் அந்த இறைவாக்கு உரைப்போர் உண்மையான இறைவாக்கினராய் இருந்து, யெகோவாவின் வார்த்தை அவர்களுடன் இருந்தால், அவர்கள் சேனைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலும், யூதா அரசர்களின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான பணிப்பொருட்கள் பாபிலோனுக்குப் போகாமலிருக்க மன்றாடட்டும். ஏனெனில் அந்தத் தூண்கள், கடல் தொட்டி, அசையும் ஆதாரங்கள், பட்டணத்தில் விடப்பட்ட மற்ற பணிப்பொருட்கள் யாவற்றையும் குறித்துச் சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: இவற்றைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோகவில்லை. யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவுடன் யூதாவிலும், எருசலேமிலும் இருந்த உயர் அதிகாரிகளையும் பாபிலோனுக்கு நாடுகடத்தியபோது இவற்றைக் கொண்டுபோகவில்லை. ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, ஆலயத்திலும் யூதா அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்ட பொருட்களைக் குறித்துச் சொல்வது இதுவே: அவை பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கேயே தொடர்ந்து இருக்கும்; நான் அவைகளைத் திரும்பவும் கொண்டுவந்து எருசலேமில் மீண்டும் வைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” பொய் இறைவாக்கினனான அனனியா யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா சொன்னது இதுவே, கிபியோன் ஊரானாகிய அசூரின் மகனான இவன், யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரியருக்கும், மற்ற எல்லா மக்களுக்கும் முன்பாக என்னிடம் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனின் நுகத்தை முறிப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார், இவ்விடத்திலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோன யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த இடத்திற்கு நான் கொண்டுவருவேன். பாபிலோனுக்குச் சென்ற யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட எல்லோரையும் நான் இந்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவருவேன்.’ ஏனெனில் நான் ‘பாபிலோன் அரசனின் நுகத்தை உடைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்றான்.” அப்பொழுது எரேமியா, ஆசாரியருக்கும் யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா மக்களுக்கும் முன்பாக, இறைவாக்கினன் அனனியாவுக்குப் பதிலளித்தான். “ஆமென், யெகோவா அவ்வாறே செய்வாராக; பாபிலோனிலிருந்து யெகோவாவின் ஆலய பொருட்களையும், நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும், திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் நீ கூறிய வார்த்தைகளை யெகோவா நிறைவேற்றுவாராக. ஆயினும், நீயும் எல்லா மக்களும் கேட்கத்தக்கதாக நான் இப்பொழுது கூறப்போவதற்குச் செவிகொடு. உனக்கும் எனக்கும் முன்வாழ்ந்த இறைவாக்கு உரைப்போர், முற்காலம் தொடங்கியே அநேக நாடுகளுக்கும், பெரும் அரசுகளுக்கும் விரோதமாக யுத்தத்தையும், பேராபத்தையும், கொள்ளைநோயையும் பற்றி இறைவாக்கு கூறினார்கள். ஆனால் சமாதானத்தை இறைவாக்காகக் கூறுகிற இறைவாக்கினனின் முன்னறிவிப்பு நிறைவேறினால் மட்டுமே, அவன் உண்மையாக யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுவான்” என்றான். அப்பொழுது இறைவாக்கினன் அனனியா, இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். அதன்பின் அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும், “யெகோவா கூறுவது இதுவே: இதைப்போலவே நான் எல்லா தேசத்தாரின் கழுத்திலிருந்தும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் நுகத்தை இரண்டு வருடங்களுக்குள் உடைத்துப்போடுவேன் என்கிறார்” என்றான். இதைக் கேட்ட இறைவாக்கினன் எரேமியா தன் வழியே போனான். இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை இறைவாக்கினன் அனனியா முறித்துப்போட்ட சற்று நேரத்திற்குப்பின் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: அவர் அவனிடம், நீ போய் அனனியாவிடம், “யெகோவா சொல்வது இதுவே: நீ மரத்தினாலான நுகத்தை உடைத்து விட்டாய்; ஆனால், அதற்குப் பதிலாக இரும்பினாலான நுகம் உனக்குக் கிடைக்கும். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: இந்த எல்லா நாடுகளும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யும்படி அவர்களுடைய கழுத்தின்மேல் இரும்பு நுகத்தை வைப்பேன். அவர்கள் அவனுக்குப் பணிசெய்வார்கள். காட்டு மிருகங்களின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பேன் என்று சொல்” என்றார். அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா, இறைவாக்கினன் அனனியாவிடம், “அனனியாவே! கேள், யெகோவா உன்னை அனுப்பவில்லை; ஆயினும் இந்த மக்கள் பொய்யை நம்பும்படி நீ அவர்களை தூண்டிவிட்டிருக்கிறாய். ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான். அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான். நாடுகடத்தப்பட்டோருக்கு கடிதம் நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான். இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது. எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது: “நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள். நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.” ஆம், இஸ்ரயேலின் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் மத்தியிலுள்ள இறைவாக்கினரும், குறிசொல்பவர்களும், உங்களை ஏமாற்ற விடவேண்டாம். கனவுகளைக் காணச்செய்கிற அவர்களுக்கு நீங்கள் செவிகொடாமலும் இருங்கள். அவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன். உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள். நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் இறைவாக்கு உரைப்போரை எழுப்பியிருக்கிறார்” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன். நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன். ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையால் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு என்னால் நாடுகடத்தப்பட்ட நீங்கள் எல்லோரும், யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான். இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள். ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார். செமாயாவுக்கு செய்தி நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: நீ எருசலேமிலுள்ள எல்லா மக்களுக்கும் உன் பெயரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறாய். ஆசாரியன் மாசெயாவின் மகனுமாகிய செப்பனியாவுக்கும், மற்ற எல்லா ஆசாரியருக்குங்கூட அவைகளை அனுப்பியிருக்கிறாய். நீ செப்பனியாவுக்கு எழுதியிருந்ததாவது: ‘யெகோவாவின் ஆலயத்தில் பொறுப்பாயிருக்கும்படி, யோய்தாவுக்குப் பதிலாக யெகோவா உன்னை ஆசாரியனாக நியமித்திருக்கிறார்; இறைவாக்கினனைப்போல் நடிக்கும் எந்தவொரு பைத்தியக்காரனையும் நீ கால் விலங்குகளிலும், கழுத்து விலங்குகளிலும் போடவேண்டுமே. அப்படியானால் உங்கள் மத்தியில் தன்னை இறைவாக்கினனாய் காட்டிக்கொள்ளும், ஆனதோத் ஊரைச்சேர்ந்த எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறாய்? இந்த எரேமியாவோ பாபிலோனில் இருக்கும் நமக்கு, உங்கள் சிறையிருப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். அதுவரை வீடுகளைக் கட்டிக் குடியிருங்கள். தோட்டங்களை நாட்டி அதன் பலனைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறானே” என்பதே அந்தக் கடிதம். ஆசாரியனாகிய செப்பனியா இறைவாக்கினன் எரேமியாவுக்கு அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினான். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “நாடுகடத்தப்பட்ட யாவருக்கும் நீ இந்தச் செய்தியை அனுப்பு. நெகெலாமியனான செமாயாவைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: நான் செமாயாவை அனுப்பாதபோதும் அவன் இறைவாக்கு கூறி நீங்கள் பொய்யை நம்பும்படி செய்திருக்கிறான். ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் புதுப்பிக்கப்படுதல் யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னோடு பேசிய எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது. நாட்கள் வருகிறது,’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அப்பொழுது நான், இஸ்ரயேல் யூதா ஆகிய என் மக்களை அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி கொடுத்த நாட்டில் அவர்களைத் திரும்பவும் குடியமர்த்துவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.” இஸ்ரயேலையும், யூதாவையும் குறித்து யெகோவா கூறும் வார்த்தைகள் இவையே. “யெகோவா சொல்வதாவது: “ ‘பயத்தின் அழுகுரல்கள் கேட்கின்றன; அது சமாதானத்தின் குரல் அல்ல, பயத்தின் குரல். கேட்டுப் பாருங்கள்; ஒரு ஆண் பிள்ளைகளைப் பெறமுடியுமோ? அப்படியிருக்க ஒவ்வொரு பெலமுள்ள மனிதனும் பிரசவிக்கும் பெண்ணைப்போல், தன் கைகளை வயிற்றில் வைத்துக்கொண்டிருப்பதை நான் காண்பது ஏன்? ஒவ்வொருவரின் முகமும் வெளிறியிருப்பதையும் நான் காண்கிறேனே. ஐயோ! அந்த நாள் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்? அதைப் போன்ற நாள் ஒருபோதும் இருந்ததில்லை. யாக்கோபுக்கு அது ஒரு கஷ்டமான காலமாயிருக்கும். ஆனாலும் அவன் அதிலிருந்து காப்பாற்றப்படுவான். “ ‘அந்த நாளில்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் அவர்களுடைய கழுத்திலிருந்து நுகத்தை முறிப்பேன். கட்டுகளை அறுப்பேன். பிறநாட்டினர் அவர்களை இனி அடிமையாக்கமாட்டார்கள். ஆனால் அவர்களோ, தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்வார்கள். அவர்களுக்காக நான் எழுப்பப்போகிற அவர்களுடைய அரசனாகிய தாவீதுக்கும் பணிசெய்வார்கள். “ ‘ஆகையால் என் அடியானாகிய யாக்கோபே, நீ பயப்படாதே, இஸ்ரயேலே, நீ திகையாதே’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘நிச்சயமாக நான் உன்னைத் தூரமான இடத்திலிருந்து காப்பாற்றுவேன். உன் சந்ததிகளை அவர்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்து காப்பாற்றுவேன். இஸ்ரயேலர் திரும்பிவந்து சமாதானத்தோடும், பாதுகாப்போடும் தங்கள் நாட்டில் இருப்பார்கள்; அவர்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களைக் காப்பாற்றுவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘எந்த நாடுகளின் மத்தியில் நான் உங்களைச் சிதறடித்தேனோ, அந்த நாடுகளை நான் முற்றிலும் அழித்தாலும், உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன். உங்களை நான் தண்டித்துச் சீர்படுத்துவேன். உங்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன், ஆனாலும் நீதியாகவே தண்டிப்பேன்.’ “யெகோவா கூறுவது இதுவே: “ ‘உங்கள் புண் ஆற்ற முடியாதது; உங்கள் காயமும் குணப்படுத்த முடியாதது. உங்களுக்காக வழக்காட ஒருவருமில்லை; உங்கள் காயங்களுக்கு மருந்தில்லை. நீங்கள் குணமடைய மாட்டீர்கள். உங்களுடைய கூட்டாளிகள் யாவரும் உங்களை மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு உங்களைப்பற்றிய எவ்வித அக்கறையும் இல்லை. ஒரு பகைவன் தாக்குவதைப்போல் நான் உங்களைத் தாக்கி கொடூரமானவன் உங்களைத் தண்டிப்பதுபோல் தண்டித்திருக்கிறேன். ஏனெனில் உங்கள் குற்றம் பெரியது; உங்கள் பாவங்களும் அநேகமானவை. காயத்திற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? தேற்றமுடியாத வேதனைக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? உங்களுடைய பெரிய குற்றத்திற்காகவும், உங்கள் அநேக அக்கிரமங்களுக்காகவுமே இவற்றை நான் உங்களுக்குச் செய்திருக்கிறேன். “ ‘ஆனால் வரப்போகும் அந்த நாளில் உங்களை விழுங்குகிற யாவரும் விழுங்கப்படுவார்கள்; உங்கள் பகைவர்கள் எல்லோரும் நாடுகடத்தப்படுவார்கள். உங்களைக் கொள்ளையிடுகிறவர்கள் கொள்ளையிடப்படுவார்கள்; உங்களைச் சூறையாடுபவர்கள் யாவரையும் நான் சூறையாடுவேன். ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும், ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால், உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன். உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். “யெகோவா கூறுவது இதுவே: “ ‘நான் யாக்கோபின் கூடாரங்களின் செல்வச் செழிப்பைத் திரும்பவும் கொடுப்பேன். அவனுடைய குடியிருப்புகளின்மீது இரக்கம் காட்டுவேன்; பட்டணம் அதன் இடிபாடுகளின்மேல் திரும்பக் கட்டப்படும். அரண்மனை அதற்குரிய இடத்தில் இருக்கும். அவைகளிலிருந்து நன்றிப் பாடல்களும், மகிழ்ச்சியின் சத்தமும் வரும். நான் அவர்களுடைய எண்ணிக்கையை பெருகப்பண்ணுவேன்; அவர்கள் குறைந்துபோவதில்லை. அவர்களுக்குக் கனத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் இகழப்படமாட்டார்கள். அவர்களின் பிள்ளைகள் பழைய நாட்களில் இருந்ததுபோல் இருப்பார்கள். அவர்கள் சமுதாயம் எனக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும். அவர்களை ஒடுக்கிய யாவரையும் நான் தண்டிப்பேன். அவர்களுடைய தலைவன் அவர்களில் ஒருவனாயிருப்பான். அவர்களை ஆள்பவன் அவர்களின் மத்தியிலிருந்து எழும்புவான். அவனை நானே என் அருகில் கொண்டுவருவேன். அவன் என்னைக் கிட்டிச் சேருவான். ஏனெனில் தானாகவே என் அருகில் வருவதற்குத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவன் யார்?’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘எனவே நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.’ ” பாருங்கள், யெகோவாவின் கோபம் புயல்காற்றைப்போல உக்கிரமாய் எழும்பும்; அது கொடியவர்களின் தலையின்மேல் சுழன்று அடிக்கும். யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றும்வரை அவருடைய கோபம் தணியாது. வரும் நாட்களில் நீ அதை விளங்கிக்கொள்வாய். அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிய மக்கள் பாலைவனத்தில் ஆதரவு பெறுவார்கள். இஸ்ரயேலுக்கு ஆறுதல் கொடுக்க நான் வருவேன்” என்கிறார். பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது: “நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்; ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன். இஸ்ரயேல் கன்னிகையே! நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். நீ திரும்பவும் கட்டப்படுவாய்; உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய். நீ திரும்பவும் சமாரியாவின் மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய். விவசாயிகள் அவைகளை நாட்டி அவைகளின் பலனை அனுபவிப்பார்கள். ஒரு நாள் வரும்; அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’ என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார். இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே: “யாக்கோபுக்காக மகிழ்ச்சியுடன் பாடுங்கள். நாடுகளின் முதன்மையானவர்களுக்காகச் சத்தமிடுங்கள்; உங்கள் துதிகளைக் கேட்கப்பண்ணுங்கள். ‘யெகோவாவே இஸ்ரயேலில் மீதியாயிருக்கிற உமது மக்களைக் காப்பாற்றும்’ என்று சொல்லுங்கள். இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்; பூமியின் கடைசி எல்லையிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். குருடரும், முடவரும், கர்ப்பவதிகளும், பிரசவிக்கும் பெண்களும் அவர்களிடையே இருப்பார்கள். இவ்வாறாக ஒரு மக்கள் கூட்டம் திரும்பிவரும். நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும், மன்றாட்டுடனும் வருவார்கள். நான் அவர்களை இடறாத சமமான பாதையில், நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்; எப்பிராயீம் என் முதற்பேறான மகன். “நாடுகளே யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; தூரமான கரையோரங்களில் அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவர் அவர்களைக் கூட்டிச்சேர்த்து, ஒரு மேய்ப்பன் தன் மந்தையை கண்காணிப்பதுபோல் அவர்களை கண்காணிப்பார்.’ யெகோவா யாக்கோபை விடுவிப்பார். அவர்களிலும் பலவான்களுடைய கையிலிருந்து அவர்களை மீட்பார். அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பார்கள். யெகோவாவின் நிறைவான தானியம், புதிய திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் ஆகிய கொடைகளில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் நன்கு நீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப்போல் இருப்பார்கள். இனி ஒருபோதும் துக்கமடையமாட்டார்கள். அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள். நான் அவர்களுடைய துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். துயரத்திற்குப் பதிலாக ஆறுதலையும், மகிழ்ச்சியையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். ஆசாரியர்களை நிறைவான செழிப்பினால் திருப்தியாக்குவேன். என் மக்கள் என் கொடைகளினால் திருப்தியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா கூறுவது இதுவே: “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததினால், ஆறுதல் பெற மறுக்கிறாள்.” யெகோவா கூறுவது இதுவே: “உன் அழுகையின் குரலை அடக்கி, கண்ணீர் விடாதபடி உன் கண்களை தடுத்துவிடு. ஏனெனில் உன் செயலுக்கான பலன் கிடைக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். “உன் பிள்ளைகள் தங்கள் பகைவரின் நாட்டிலிருந்து திரும்பி வருவார்கள். எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு” என்று யெகோவா அறிவிக்கிறார். “உன் பிள்ளைகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்கள். “நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். ‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர். நான் பயிற்றுவிக்கப்பட்டேன். என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன். ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா. நான் வழிதவறிப் போனபின், மனந்திரும்பினேன். எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின், என் மார்பில்31:19 மார்பில் அல்லது தொடையில் அடித்துக்கொண்டேன். என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால், நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’ எப்பிராயீம் என் அன்பு மகனும், நான் மகிழும் பிள்ளையும் அல்லவா? அவனுக்கு விரோதமாக நான் அடிக்கடி பேசினாலும், இன்னும் அவனை நினைவுகூருகிறேன். ஆகையினால் என் உள்ளம் அவனுக்காக ஏங்குகிறது. நான் அவன்மேல் அதிக இரக்கமாயிருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “வீதியில் அடையாளச் சின்னங்களை நிறுத்திவை. வழிகாட்டிக் கம்பங்களையும் அமைத்துக்கொள். நீ நடந்துவருகிற வீதியான பெரும் பாதையையும் குறித்துவை. இஸ்ரயேல் கன்னிப்பெண்ணே! திரும்பி வா; உன்னுடைய பட்டணங்களுக்குத் திரும்பி வா. உண்மையற்ற மகளே, எவ்வளவு காலத்திற்கு அலைந்து திரிவாய்? யெகோவா பூமியில் புதியதொரு காரியத்தை உண்டாக்குவார். ஒரு பெண் ஒரு மனிதனை பாதுகாத்துக்கொள்வாள்.” இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள். யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள். நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.” இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. “நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார். “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்நாட்களில் மக்கள், “ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.” யெகோவா அறிவிக்கிறதாவது, “இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது. அது அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை. ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும், அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன். அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன், அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள். இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான். ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” யெகோவா சொல்வது இதுவே: பகலில் ஒளிகொடுக்க சூரியனை நியமிக்கிறவர் அவரே. இரவில் வெளிச்சம் கொடுக்க சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் கட்டளையிடுகிறவர் அவரே. கடலின் அலைகள் இரையும்படி அதைக் கலக்குகிறவரும் அவரே. சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். “இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே, இஸ்ரயேலரின் சந்ததிகள் என்முன் ஒரு நாடாக இல்லாதபடி ஒழிந்துபோவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். யெகோவா கூறுவது இதுவே: “மேலே உள்ள வானங்களை அளக்க முடியுமானால், கீழேயுள்ள பூமியின் அஸ்திபாரங்களை ஆராயக் கூடுமானால் மட்டுமே, அவர்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் நான் இஸ்ரயேலின் வம்சத்தார் அனைவரையும் புறக்கணிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார். அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும். செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார். எரேமியா நிலம் வாங்குதல் யூதாவின் அரசன் சிதேக்கியா ஆட்சி செய்த பத்தாம் வருடம், எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: இது நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடமாய் இருந்தது. அவ்வேளையில் பாபிலோன் அரசனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினன் எரேமியா யூதா அரசர்களின் அரண்மனையிலிருந்த காவற்கூட முற்றத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தான். அவ்வேளையில் யூதாவின் அரசனாகிய சிதேக்கியா எரேமியாவை சிறையில் அடைத்துச் சொன்னதாவது. “நீ ஏன் இவ்வாறு இறைவாக்கு உரைக்கிறாய்? யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்போகிறேன்; அவன் அதைக் கைப்பற்றுவான். யூதாவின் அரசன் சிதேக்கியா பாபிலோனியருடைய கையிலிருந்து தப்பிப்போகமாட்டான். பாபிலோனின் அரசனிடம் நிச்சயம் ஒப்படைக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனுடன் நேர்முகமாகப் பேசி தன் கண்களால் அவனைக் காண்பான். அவன் சிதேக்கியாவை பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனுக்கு நடவடிக்கை எடுக்கும்வரை அங்கேயே தங்கியிருப்பான். எனவே நீயோ பாபிலோனியருடன் போரிட்டால் நிச்சயம் வெற்றிபெறவே மாட்டாய் என்று யெகோவா சொல்கிறார் என்கிறாயே” என்றான். சிறையிருந்த காலத்தில் எரேமியா சொன்னதாவது, “யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், சல்லூமின் மகனான உனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் உன்னிடம் வரப்போகிறான். அவன் வந்து, ‘ஆனதோத்திலிருக்கும் என் வயலை நீ உனக்கு வாங்கிக்கொள். நீ நெருங்கிய உறவினனானபடியால் அதை வாங்கும் உரிமையும், கடமையும் உன்னுடையதே’ என்று சொல்வான் என்று சொன்னார்” என்றான். “பின்பு யெகோவா கூறியபடியே, என் ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் காவல் முற்றத்திற்கு என்னிடம் வந்து, ‘பென்யமீன் நாட்டிலிருக்கும் ஆனதோத்திலுள்ள என்னுடைய வயலை நீ வாங்கு. அதை வைத்துக்கொள்ளவும், மீட்டுக்கொள்ளவும் உனக்கே உரிமையுண்டு. அதனால் உனக்காக வாங்கிக்கொள்’ என்றான். “அப்பொழுது அது யெகோவாவின் வார்த்தை என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆகவே நான் ஆனதோத்திலுள்ள வயலை எனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேலிடமிருந்து வாங்கி அவனுக்கு பதினேழு சேக்கல்32:9 பதினேழு சேக்கல் என்பது ஏறத்தாழ 200 கிராம் ஆகும் வெள்ளியையும் நிறுத்துக் கொடுத்தேன். நான் பத்திரத்தில் கையெழுத்திட்டு, முத்திரைபோட்டு சாட்சிப்படுத்தி, தராசில் வெள்ளியை நிறுத்துக் கொடுத்தேன். விதிகளும், நிபந்தனைகளும் அடங்கிய பிரதியான பத்திரத்தையும், அதனுடன் முத்திரையிடப்படாத பிரதியையும் எடுத்துக்கொண்டேன். நான் அந்த பத்திரத்தை மாசெயாவின் மகனான நேரியாவின் மகன் பாரூக்கிடம் கொடுத்தேன். அதை, எனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேலுக்கு முன்பாகவும், பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், காவற்கூட முற்றத்தில் இருந்த எல்லா யூதரின் முன்பாகவும் அவனிடத்தில் கொடுத்தேன். “நான் இந்த அறிவுறுத்தல்களை அவர்கள் முன்னிலையில் பாரூக்கிடம் கொடுத்தேன். ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: முத்திரையிட்டதும், முத்திரையிடாததுமான பத்திரத்தின் பிரதிகளை எடுத்து, அநேக காலத்திற்குப் பாதுகாப்பாய் இருக்கும்படி ஒரு மண்பானையில் போட்டு வை. ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, மீண்டும் இந்த நாட்டில் வீடுகளும், வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் விலைக்கு வாங்கப்படும் என்கிறார்’ என்றேன். “நான் பத்திரத்தை நேரியாவின் மகனான பாரூக்கிடம் கொடுத்தபின் யெகோவாவிடம் மன்றாடினேன். “ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது மகா வல்லமையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் வானங்களையும், பூமியையும் உருவாக்கினீர். உம்மால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமேயில்லை. நீர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்பு காட்டுகிறீர். ஆனால் பெற்றோரின் பாவங்களுக்கான தண்டனையை அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளின் மடியில் கொண்டுவருகிறீர். பெரியவரும், வல்லமையுள்ளவருமான இறைவனே, சேனைகளின் யெகோவா என்பது உமது பெயர். உமது நோக்கங்கள் பெரியவை. உமது செயல்கள் வல்லமையுள்ளவை. மனிதருடைய வழிகளையெல்லாம் உமது கண்கள் காண்கின்றன. அவனவனுடைய நடத்தைக்குத் தக்கதாகவும், அவனவனுடைய செயல்களுக்குத் தக்கதாகவும் ஒவ்வொருவருக்கும் நீர் பலன் அளிக்கிறீர். நீர் எகிப்திலே அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தீர். இஸ்ரயேலருக்கும், மற்ற எல்லா மனுமக்களுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றுவரை அவைகளை நடப்பித்திருக்கிறீர். இன்னும் உமக்கே உரியதாய் இருக்கும் புகழையும் பெற்றிருக்கிறீர். நீர் உமது மக்களான இஸ்ரயேலரை அடையாளங்களுடனும், அதிசயங்களுடனும் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். உமது வல்லமையுள்ள கையினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் பெரிய பயங்கரத்தினாலும் அதைச் செய்தீர். அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிறதான இந்த நாட்டையும் நீரே அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்கள் வந்து அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவோ, உமது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. நீர் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி செய்யவும் இல்லை. ஆகையினால் நீர் அவர்கள்மீது இந்த பேராபத்தையெல்லாம் கொண்டுவந்தீர். “பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக எப்படியாக முற்றுகைக் கொத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்று பாரும். வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றின் நிமித்தம் இப்பட்டணம் அதைத் தாக்கிக்கொண்டிருக்கிற பாபிலோனியரிடம் கொடுக்கப்படும். நீர் இப்போது காண்கிறதுபோல நீர் சொன்னது நடந்திருக்கிறது. ஆண்டவராகிய யெகோவாவே! இப்பட்டணம் பாபிலோனியரிடம் கையளிக்கப்பட இருக்கிறபோதிலும், நீர் என்னிடம், ‘வெள்ளியைக் கொடுத்து வயலை வாங்கி, அதன் ஆவணங்களைச் சாட்சிப்படுத்து என்று சொல்கிறீரே’ என்று மன்றாடினேன்.” அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “மாம்சமான யாவருக்கும் இறைவனாகிய யெகோவா நானே. என்னால் இயலாதது ஒன்றுண்டோ? ஆகையினால் யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோனியரிடமும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடமும் கொடுக்கப்போகிறேன். அவன் அதைக் கைப்பற்றுவான். இந்தப் பட்டணத்தைத் தாக்குகிற பாபிலோனியர் இதற்குள் புகுந்து, இதற்கு நெருப்பு வைப்பார்கள். வீட்டின் கூரைகளில் பாகாலுக்குத் தூபங்காட்டி, பிற தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்து, எனக்குக் கோபமூட்டிய இம்மக்களின் வீடுகளுடன் இந்த நகரத்தையும் எரித்துப் போடுவார்கள். “தங்கள் இளமையிலிருந்தே, இஸ்ரயேல், யூதா மக்கள் எனக்கு முன்பாகத் தீமையை அல்லாமல், வேறொன்றும் செய்யவில்லை. இஸ்ரயேல் மக்கள் உண்மையிலேயே தங்கள் கைகள் செய்த விக்கிரகங்களினால் எனக்குக் கோபமூட்டினார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கோபத்தையும், கடுங்கோபத்தையும், மிகுதியாய் எழுப்பியபடியால் அதை என் பார்வையிலிருந்து அகற்றவேண்டும். இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் தாங்கள் செய்த தீமையினால் எனக்குக் கோபமூட்டினார்கள். அவர்களும், அவர்கள் அரசர்களும், அதிகாரிகளும், ஆசாரியரும், இறைவாக்கினரும், யூதா மனிதரும், எருசலேம் மக்களுமே அப்படிச் செய்தார்கள். அவர்களோ தங்கள் முகங்களையல்ல; முதுகுகளையே எனக்குக் காட்டினார்கள். நான் திரும்பத்திரும்ப போதித்தும் அதை அவர்கள் கேட்கவோ, திருந்துவதற்கு முயற்சிக்கவோ இல்லை. அவர்கள் என் பெயரினால் அழைக்கப்படும் ஆலயத்தில், தங்கள் அருவருப்பான விக்கிரகங்களை வைத்து ஆலயத்தைக் கறைப்படுத்தினார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் மோளேகு தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக பென் இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். இத்தகைய அருவருப்பான செயல்களைச் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதுமில்லை; அப்படி நான் என் மனதில் எண்ணியதுமில்லை. இருந்தும் அவர்கள் இப்படிச் செய்து யூதாவைப் பாவத்திற்குட்படுத்தினார்கள். “எரேமியாவே, ‘இப்பட்டணம் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்படும்’ என்று மக்கள் சொல்கிறார்கள். ஆனாலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அந்நாட்டைப் பற்றி இன்னும் அதிகமாய்ச் சொல்வது இதுவே: கடுஞ்சினத்தாலும் என் கோபத்தாலும் துரத்திவிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நிச்சயமாக அவர்களைச் சேர்த்தெடுப்பேன். அவர்களைத் திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவந்து அவர்கள் பாதுகாப்புடன் வாழும்படி செய்வேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும், ஒரே மனதையும் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவும், தங்களுக்குப் பின்வரும் பிள்ளைகளின் நன்மைக்காகவும் என்றென்றைக்கும் எனக்குப் பயந்து நடப்பார்கள். நான் அவர்களோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன். அவர்கள் என்னைவிட்டுத் திரும்பாதபடி எனக்குப் பயப்படும் உணர்வை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் மகிழ்ந்து, அவர்களை இந்த நாட்டில் நிச்சயமாக நிலைநாட்டுவேன். இதை என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும் செய்வேன். “யெகோவா கூறுவது இதுவே: இந்த மக்கள்மேல் இப்பேரிடரை நானே கொண்டுவந்தேன். ஆகவே நான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, எல்லா செல்வச் செழிப்பையும் அதிகமாய் அவர்களுக்குக் கொடுப்பேன். ‘அது மனிதர்களும், மிருகங்களும் இல்லாமல் பாழடைந்த நாடு என்றும், அது பாபிலோனியரின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,’ நீங்கள் சொல்லும் இந்நாட்டிலே, மறுபடியும் வயல்கள் வாங்கப்படும். பென்யமீன் நாட்டிலும், எருசலேமைச் சூழ்ந்துள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மேற்கு மலைச்சரிவிலுள்ள நாட்டின் பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலும் வயல்கள் வெள்ளிக்கு வாங்கப்படும். பத்திரங்களுக்குக் கையெழுத்திட்டு முத்திரையிட்டு சாட்சிகளையும் வைப்பார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய செல்வங்களை திருப்பிக் கொடுப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” புதுப்பித்தலுக்கு வாக்குத்தத்தம் எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது: பூமியைப் படைத்து அதை உருவாக்கி நிறுத்தியவர் யெகோவா. யெகோவா என்பது அவரது பெயர். அவர் கூறுவது இதுவே: நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன். இப்பட்டணத்திலுள்ள வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரண்மனைகளைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவதாவது: இவற்றை நீங்கள் பாபிலோனியருடன் நடக்கும் சண்டையில் அவர்களுடைய வாளுக்கும், முற்றுகைக் கோட்டைகளுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்காக உடைத்தீர்கள். பாபிலோனியரோ உள்ளே வருவார்கள். இந்த வீடுகளும், அரச அரண்மனைகளும் இறந்துபோன மனித உடல்களினால் நிரப்பப்படும். அவர்களை என்னுடைய கோபத்தினாலும், கடுங்கோபத்தினாலும் நானே கொல்லுவேன். இப்பட்டணத்தின் எல்லாக் கொடுமைகளினிமித்தம் நான் என் முகத்தை அதைவிட்டு மறைத்துக்கொள்வேன். ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன். நான் யூதாவையும், இஸ்ரயேலையும் சிறையிருப்பில் இருந்து மீட்டு, அவர்கள் முன்பிருந்த நிலைக்கு அவர்களைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன். நான் இப்பட்டணத்திற்குச் செய்த எல்லா நற்செயல்களையும் பூமியின் எல்லா தேசத்தார்களும் கேட்கும்போது, இந்தப் பட்டணம் எனக்குப் புகழையும், மகிழ்ச்சியையும், துதியையும், மகிமையையும் கொண்டுவரும். நான் அந்தப் பட்டணத்திற்குக் கொடுக்கும் நிறைவான செல்வத்தையும், சமாதானத்தையும் கண்டு அவர்கள் பிரமித்து நடுங்குவார்கள். யெகோவா கூறுவது இதுவே: மக்கள் இந்த இடத்தைக் குறித்து, இது மனிதரோ, மிருகங்களோ குடியிராத பாழிடம் என்பார்கள். அப்படியிருந்தும் மனிதரோ மிருகங்களோ குடியிராமல் பாழாய் கிடக்கின்ற, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும், சந்தோஷத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகளின் குரலும், மணமகனின் குரலும் கேட்கும். அத்துடன், யெகோவாவின் ஆலயத்திற்கு நன்றிக் காணிக்கைகளைக் கொண்டுவருபவர்களின் குரல்களும் கேட்கும்: “சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; யெகோவா நல்லவர்; அவருடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்வார்கள். நான், அவர்களுடைய நாட்டிற்கு முன்பு இருந்ததுபோல் செல்வத்தையெல்லாம் திரும்பவும் கொடுப்பேன் என்று யெகோவா கூறுகிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடம் மனிதர்களோ, மிருகங்களோ இல்லாமல் பாழடைந்திருக்கும். ஆயினும் இதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களிலும் மீண்டும் தங்கள் மந்தையை மேய்ப்பதற்கான மேய்ச்சலிடங்கள் மேய்ப்பர்களுக்கு உண்டாயிருக்கும். மேற்கு மலைச்சரிவிலுள்ள பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும், பென்யமீன் பிரதேசத்திலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் மீண்டும் தங்களைக் கணக்கெடுப்பவனின் கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று யெகோவா கூறுகிறார். இஸ்ரயேல் குடும்பத்திற்கும், யூதா குடும்பத்திற்கும் நான் கொடுத்த கிருபையான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘அந்த நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதின் சந்ததியிலிருந்து ஒரு நேர்மையான கிளை முளைக்கும்படி செய்வேன். அவர் நாட்டில் நீதியானதையும், நியாயமானதையும் செய்வார். அந்நாட்களில் யூதா காப்பாற்றப்படும். எருசலேம் பாதுகாப்புடன் வாழும். அது யெகோவாவே நமது நேர்மை என்ற பெயரால் அழைக்கப்படும்.’ ஏனெனில் யெகோவா கூறுவது இதுவே: ‘இஸ்ரயேல் குடும்பத்தின் அரியணையில் இருக்க தாவீதுக்கு ஒருவனாவது இல்லாமல் போவதில்லை. லேவியரான ஆசாரியர்களில் எனக்கு முன்பாக நின்று தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், மற்ற பலிகளையும் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒருவனாவது இல்லாமல் போவதும் இல்லை’ ” என்கிறார். யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: யெகோவா சொல்வது இதுவே: “பகலும் இரவும் அவற்றிற்கென குறிக்கப்பட்ட காலத்தில் இனிமேல் வராதபடிக்கு, நான் அவைகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உங்களால் உடைக்க முடியுமானால், அப்பொழுது என் தாசனாகிய தாவீதுடனும், எனக்கு முன்பாக ஊழியம் செய்யும் லேவிய ஆசாரியருடனும் நான் செய்துகொண்ட உடன்படிக்கையையும் உடைக்க முடியும். தாவீதுக்கும் தன் அரியணையில் இருந்து ஆட்சிசெய்ய ஒரு சந்ததி இல்லாது போகும். நான் என் தாசனாகிய தாவீதின் வம்சத்தையும், எனக்கு முன்பாக ஊழியம் செய்கிற லேவியரையும் வானத்திலுள்ள எண்ணமுடியாத நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையின் அளவற்ற மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன் என்கிறார்” என்றான். யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “ ‘யெகோவா தாம் தெரிந்துகொண்ட இரு அரசுகளையும் நிராகரித்துவிட்டார் என்று இந்த மக்கள் சொல்வதை நீ கவனிக்கவில்லையோ’? ஆகவே அவர்கள் என் மக்களை அவமதித்து, அவர்களை ஒரு நாடாக எண்ணாதிருக்கிறார்கள். யெகோவா கூறுவது இதுவே: ‘பகலோடும், இரவோடும் நான் பண்ணின உடன்படிக்கையையும், வானத்திற்கும், பூமிக்கும் நான் விதித்த சட்டங்களையும் நான் நிலை நிறுத்தாமல் இருப்பேனானால், யாக்கோபின் வம்சத்தையும், என் தாசனாகிய தாவீதையும் நான் நிராகரிப்பேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் சந்ததிகளை அரசாளுவதற்கு, தாவீதினுடைய மகன்களில் ஒருவனையும் நான் தெரிந்துகொள்ளவும் மாட்டேன். ஆனால் நானோ அவர்களுடைய செல்வங்கள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்’ என்கிறார்” என்றான். சிதேக்கியாவுக்கு எச்சரிக்கை பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரும், அவனுடைய முழு இராணுவமும், அவனுடைய ஆளுகைக்குட்பட்டிருந்த எல்லா அரசுகளும், அரசுகளின் மக்களும், எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, “நீ போய் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவிடம் சொல்லவேண்டியதாவது; யெகோவா சொல்வது இதுவே: இப்பட்டணத்தைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதை எரித்துப்போடுவான். நீ அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய். நீ நிச்சயமாக சிறைப்பிடிக்கப்பட்டு அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய். நீ பாபிலோன் அரசனை உன் சொந்தக் கண்களால் காண்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகக் பேசுவான். நீ பாபிலோனுக்குப் போவாய். “ ‘எனினும் யூதா அரசனாகிய சிதேக்கியாவே! யெகோவாவின் வாக்குத்தத்தத்தைக் கேள். யெகோவா உன்னைக் குறித்துச் சொல்வது இதுவே: நீ வாளால் மரிக்கமாட்டாய். நீ சமாதானத்துடன் மரிப்பாய். அத்துடன் உனக்குமுன் இருந்த அரசர்களாகிய உன்னுடைய தந்தையர்களை அடக்கம்பண்ணும்போது, மக்கள் நறுமணப் பொருட்களை எரித்துக் கனம்பண்ணியதுபோல, உனக்கும் நறுமணப் பொருட்களை எரித்துக் கனம் பண்ணுவார்கள். “ஐயோ, எங்கள் தலைவனே!” என்று சொல்லிப் புலம்புவார்கள். இந்த வாக்குத்தத்தத்தை நானே கொடுக்கிறேன்’ என்று யெகோவா கூறுகிறார்.” பின்பு இறைவாக்கினன் எரேமியா, இந்த எல்லா வார்த்தைகளையும் எருசலேமில் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவிடம் சொன்னான். அவ்வேளையில் பாபிலோன் அரசனுடைய இராணுவம் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் பட்டணங்களில் மீதியாயிருந்த லாகீசுக்கும், அசேக்காவுக்கும் விரோதமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தது. இவைகள் மட்டுமே யூதாவில் தப்பியிருந்த பாதுகாப்பான பட்டணங்கள். அடிமைகளுக்கு விடுதலை சிதேக்கியா அரசன், அடிமைகளுக்கு விடுதலை கொடுப்பதற்காக எருசலேமில் இருந்த எல்லா மக்களோடும் ஒரு உடன்படிக்கை செய்தான். அப்பொழுது யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது. அந்த உடன்படிக்கையாவது: “ஒவ்வொருவனும் தன்தன் எபிரெய அடிமைகளான ஆண்களையும், பெண்களையும் விடுதலையாக்க வேண்டும். ஒருவரும் தன் சகோதரனாகிய யூதனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது” என்பதே. இந்த உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லா அதிகாரிகளும், மக்களும் தங்கள் ஆண் அடிமைகளையும், பெண் அடிமைகளையும் விடுதலையாக்கச் சம்மதித்தார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் அடிமைகளை அடிமைத்தனத்தில் வைத்திராமல் விடுதலையாக்கினார்கள். ஆனால் அதன்பின் தங்கள் மனதை மாற்றி தாங்கள் விடுவித்த அடிமைகளைத் திரும்பவும் அடிமைகளாக்கிக் கொண்டார்கள். அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, கூறுவது இதுவே: அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை நான் கொண்டுவந்தபோது, அவர்களோடு ஒரு உடன்படிக்கை பண்ணினேன். நான் சொன்னதாவது: ‘ஒவ்வொரு ஏழாம் வருடமும், நீங்கள் ஒவ்வொருவரும், தன்னைத்தானே உங்களிடம் விற்றுப்போட்ட, உங்கள் எபிரெய சகோதரனை விடுதலை பண்ணவேண்டும். அவன் உங்களுக்கு ஆறு வருடம் பணிசெய்தபின் நீங்கள் அவனை விடுதலை செய்யவேண்டும் என்பதாகும்.’34:14 உபா. 15:12 ஆனால் உங்கள் முற்பிதாக்களோ எனக்கு செவிகொடுக்கவுமில்லை, எனக்கு கவனம் செலுத்தவும் இல்லை. நீங்கள் இந்நாளில் மனந்திரும்பி, என் பார்வையில் சரியானதைச் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரருக்கு விடுதலையை அறிவித்தீர்கள்; அத்துடன் என் பெயரைக்கொண்ட என்னுடைய ஆலயத்தில், என் முன்னாக ஒரு உடன்படிக்கையையும் செய்தீர்கள். ஆனால் இப்பொழுது மறுபுறம் திரும்பி நீங்கள் என் பெயரைக் கறைப்படுத்திவிட்டீர்கள். நீங்கள், தாம் விரும்பிய இடத்திற்குப் போக விடுதலையாக்கி அனுப்பிவிட்ட ஆண், பெண் அடிமைகளைத் திரும்பவும் எடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் திரும்பவும் அவர்களை வற்புறுத்தி அடிமைகளாக்கி இருக்கிறீர்கள். “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஒவ்வொருவனும் உங்கள் சகோதரருக்கு விடுதலையை அறிவிக்கவுமில்லை. எனவே நான் இப்பொழுது உங்களுக்கு விடுதலையை அறிவிக்கிறேன். அது வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் விழுவதற்கான விடுதலை என யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன். இந்த மனிதர் என் உடன்படிக்கையை மீறி, எனக்கு முன்பாகத் தாங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் போனார்கள். அவர்கள் கன்றை இரண்டாகப் பிளந்து, அந்தத் துண்டுகளுக்கிடையே நடந்து போனார்களே. அந்தக் கன்றுக்குச் செய்யப்பட்டது போலவே நானும் அவர்களுக்குச் செய்வேன். கன்றுக்குட்டியின் துண்டுகளுக்கிடையில் நடந்துபோன யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களையும், அரண்மனை அதிகாரிகளையும், ஆசாரியர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும், அவர்களுடைய உயிரை வாங்கத் தேடுகிற பகைவரின் கையில் நான் ஒப்புக்கொடுப்பேன். அவர்களுடைய சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும். “நான் யூதாவின் அரசனாகிய சிதேக்கியாவையும், அவனுடைய அதிகாரிகளையும், அவர்களுடைய உயிரை வாங்கத் தேடுகிற பகைவர்களின் கையில் ஒப்படைப்பேன். உங்களைவிட்டுப்போன பாபிலோன் அரசனுடைய இராணுவத்தின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். நானே கட்டளை கொடுத்து, அவர்களை இப்பட்டணத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் அதற்கு விரோதமாய் போரிட்டு அதைப் பிடித்துச் சுட்டெரிப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப் போகச்செய்வேன்.” ரேகாபியர்கள் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த காலத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தையாவது: “ரேகாபியரின் குடும்பத்தாரிடம் போய், அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் பக்க அறைகள் ஒன்றிற்கு வரவழைத்து, அவர்களுக்குக் குடிப்பதற்குத் திராட்சரசம் கொடு” என்றார். ஆகவே நான் அபசினியாவின் மகனான எரேமியாவின் மகன் யாஸனியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய எல்லா மகன்களுமான ரேகாபியரின் முழு குடும்பத்தாரையும் அழைக்கப் போனேன். நான் அவர்களை யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தேன். அவர்களை அங்குள்ள இறைவனுடைய மனிதனான இக்தாலியாவின் மகனான ஆனானின் மகன்களுடைய அறைக்குக் கொண்டுபோனேன். அந்த அறை, வாசற்காவலனாகிய சல்லூமின் மகன் மாசெயாவின் அறைக்கு மேலிருந்த, அதிகாரிகளுடைய அறைக்கு அடுத்ததாயிருந்தது. அப்பொழுது நான் ரேகாபியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் முன்பாக திராட்சரசம் நிறைந்த கிண்ணங்களையும், சில குடங்களையும் வைத்து, “கொஞ்சம் திராட்சரசம் குடியுங்கள்” என்று சொன்னேன். ஆனால் அவர்களோ, “நாங்கள் திராட்சரசம் குடிப்பதில்லை; ஏனெனில், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் எங்களிடம், ‘நீங்களாவது உங்கள் சந்ததிகளாவது ஒருபோதும் திராட்சரசம் குடிக்கக்கூடாது’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் எனப் பதிலளித்தனர். அத்துடன் நீங்கள் ஒருபோதும் வீடுகளைக் கட்டவோ, விதையை விதைக்கவோ, திராட்சைத் தோட்டங்களை நாட்டவோ வேண்டாம். இவற்றில் ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் வேண்டாம். ஆனால் எப்பொழுதும் கூடாரங்களிலேயே வசிக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் நாடோடிகளாய் இருக்கும் நாட்டில் நீடித்த நாட்களுக்கு வாழ்வீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள். நாங்கள் எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருக்கிறோம். நாங்களோ, எங்கள் மனைவிகளோ, எங்கள் மகன்களோ, மகள்களோ ஒருபோதும் திராட்சரசம் குடித்ததில்லை. நாங்கள் வாழ்வதற்கென்று வீடுகளைக் கட்டவுமில்லை. திராட்சை தோட்டங்களையோ, வயல்களையோ, பயிர்களையோ உண்டாக்கவும் இல்லை. நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் முற்பிதா யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றுக்கும் முழுவதும் கீழ்ப்படிந்திருந்தோம். ஆனால் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் இந்த நாட்டின்மேல் படையெடுத்தபோது நாங்கள், ‘பாபிலோனிய, சீரியப் படைகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக நாம் எருசலேமுக்குப் போகவேண்டும்’ என்று சொன்னோம். அப்படியே நாங்கள் எருசலேமுக்கு வந்தோம்” என்று கூறினார்கள். அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே; நீ யூதா மனிதரிடமும், எருசலேமின் மக்களிடமும் போய் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டீர்களோ? என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களோ?’ என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல். ‘ரேகாபின் மகன் யோனதாப் திராட்சரசம் குடிக்க வேண்டாமென்று தன் மகன்களுக்கு இட்ட கட்டளை கைக்கொள்ளப்படுகிறது. அவர்கள் தங்கள் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபடியினால், இன்றுவரை அவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லை. ஆனால் நானோ திரும்பத்திரும்ப உங்களுடன் பேசியிருந்தும், நீங்களோ கீழ்ப்படியவில்லை. நான் இறைவாக்கு உரைக்கும் என்னுடைய எல்லா ஊழியக்காரரையும் உங்களிடம் திரும்பத்திரும்ப அனுப்பினேன். அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவனும் தன்தன் தீமையான வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் சீர்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களை வழிபடுவதற்காக அவைகளைப் பின்பற்றவேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் தந்தையர்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நீங்களோ, என் வார்த்தைகளைக் கவனிக்கவுமில்லை, கேட்கவுமில்லை. ரேகாபின் மகன் யோனதாபின் சந்ததிகள் தங்கள் முற்பிதா தங்களுக்குக் கொடுத்த கட்டளையின்படி நடக்கிறார்கள். ஆனால் இந்த மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.’ “ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ” அதன்பின் எரேமியா ரேகாபியரின் குடும்பத்தாரிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் உங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய எல்லா அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, அவனுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டிருக்கிறீர்கள்.’ ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘எனக்குப் பணிசெய்ய ரேகாபின் மகன் யோனதாபிற்கு ஒரு மனிதனாவது ஒருபோதும் இல்லாமல் போவதில்லை’ என்கிறார்” என்றான். எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரித்தல் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காம் வருடத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது. “நீ ஒரு புத்தகச்சுருளை எடுத்து, அதிலே யோசியா அரசாண்ட நாள் முதல் இன்றுவரை இஸ்ரயேலையும், யூதாவையும் எல்லா மக்களையும் குறித்து உன்னிடம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளையும் எழுது; ஒருவேளை யூதா மக்கள் நான் அவர்கள்மீது கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் எல்லா பேராபத்தையும் கேள்விப்படும்போது, ஒவ்வொருவனும் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது நான் அவர்களுடைய கொடுமையையும், பாவத்தையும் மன்னிப்பேன்.” அப்படியே எரேமியா, நேரியாவின் மகன் பாரூக்கை கூப்பிட்டான். யெகோவா எரேமியாவுக்குக் கூறிய எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச்சொல்ல, பாரூக் அவைகளைப் புத்தகச்சுருளில் எழுதினான். எரேமியா பாரூக்கிடம், “நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன்; யெகோவாவின் ஆலயத்திற்குள் எனக்குப் போகமுடியாது. ஆகவே நீ ஒரு உபவாச நாளன்று யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், நான் சொல்லச்சொல்ல நீ எழுதிய வார்த்தைகளை அந்தப் புத்தகச்சுருளிலிருந்து மக்களுக்கு வாசி. அவைகளைத் தங்கள் பட்டணங்களிலிருந்து வரும் எல்லா யூதா மக்களுக்கும் கேட்கும்படி வாசித்துக் காட்டு. ஒருவேளை அவர்கள் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் விண்ணப்பங்களைக் கொண்டுவந்து, ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். ஏனெனில் இந்த மக்களுக்கு விரோதமாக யெகோவாவினால் அறிவிக்கப்பட்ட கோபமும், தண்டனையும் பெரிதாயிருக்கிறது.” இறைவாக்கினன் எரேமியா செய்யச் சொன்ன ஒவ்வொன்றையும் நேரியாவின் மகன் பாரூக் செய்தான். அந்தப் புத்தகத்திலிருந்த யெகோவாவின் வார்த்தைகளை யெகோவாவின் ஆலயத்தில் அவன் வாசித்தான். யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட ஐந்தாம் வருடம் ஒன்பதாம் மாதத்தில், யெகோவாவுக்கு முன்பாக உபவாசிக்கும் காலம் ஒன்று குறிக்கப்பட்டது. இது எருசலேமில் இருந்த எல்லா மக்களுக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து வந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. செயலாளராகிய சாப்பானின் மகன் கெமரியாவின் அறை, யெகோவாவின் ஆலயத்தின் மேல்முற்றத்தில் உள்ள வாசலின் உட்செல்லும் வழியில் இருந்தது. பாரூக் அங்கிருந்து புத்தகச்சுருளிலிருந்த எரேமியாவின் வார்த்தைகளை ஆலயத்திலிருந்த மக்கள் எல்லோரும் கேட்க வாசித்தான். சாப்பானின் மகனான கெமரியாவின் மகன் மிகாயா, புத்தகத்திலிருந்து வாசித்த யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் கேட்டான். அப்போது அவன் அரண்மனையின் எல்லா அதிகாரிகளும் இருந்த செயலாளருடைய அறைக்குள் போனான். அங்கே செயலாளராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்நாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் சிதேக்கியா மற்றும் எல்லா அதிகாரிகளும் இருந்தார்கள். பாரூக் புத்தகத்திலிருந்து மக்களுக்கு வாசித்த வார்த்தைகளைக் கேட்ட மிகாயா அவர்களுக்கு எல்லாவற்றையும் சொன்னான். அதன்பின் எல்லா அதிகாரிகளும் கூஷியின் மகனான செலேமியாவின் பேரனும், நெத்தனியாவின் மகனுமான யெகுதியை பாரூக்கிடம் அனுப்பி, “நீ மக்களுக்கு வாசித்துக் காட்டிய புத்தகச்சுருளை இங்கே கொண்டுவா” என்று சொல்லும்படி கூறினார்கள். ஆகவே நேரியாவின் மகனான பாரூக், புத்தகச்சுருளைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் போனான். அவர்கள் அவனிடம், “தயவுசெய்து உட்கார்ந்து எங்களுக்கு அதை வாசி” என்றார்கள். அப்படியே பாரூக் அவர்களுக்கு அதை வாசித்தான். அவர்கள் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டபோது பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்து, பாரூக்கிடம், “நாங்கள் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் அரசனிடம் அறிவிக்கவேண்டும்” என்றார்கள். பின்பு அவர்கள் பாரூக்கிடம், “இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும் எவ்வாறு நீ எழுத நேர்ந்தது? இதை எரேமியா சொல்லச்சொல்ல நீ எழுதினாயா? எங்களுக்குச் சொல்” என்றார்கள். அப்பொழுது பாரூக், “ஆம் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் எரேமியா சொல்லச்சொல்ல நானே புத்தகச்சுருளில் மையினால் எழுதினேன்” என்று சொன்னான். அதற்கு அதிகாரிகள் பாரூக்கிடம், “நீயும், எரேமியாவும் போய் ஒளிந்துகொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் ஒருவருக்கும் தெரியக்கூடாது” என்று சொன்னார்கள். அவர்கள் செயலாளராகிய எலிசாமாவின் அறையில் புத்தகச்சுருளை வைத்துவிட்டு, அரண்மனை முற்றத்திலிருந்த அரசனிடம் போய் எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அப்பொழுது அரசன் அச்சுருளை எடுக்கும்படி யெகுதியை அனுப்பினான், அவன் செயலாளராகிய எலிசாமாவின் அறையிலிருந்து அதை எடுத்துக்கொண்டுவந்து, அரசனுக்கும் அவனருகில் நின்றுகொண்டிருந்த அதிகாரிகள் எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான். அது ஒன்பதாம் மாதமாயிருந்தது. அரசன் குளிர்க்கால மாளிகையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு முன் ஒரு அனல் அடுப்பில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. யெகுதி சுருளிலிருந்து இரண்டு மூன்று பத்திகள் வாசித்து முடித்ததும், அரசன் அந்தப் பகுதியை கத்தியினால் வெட்டி நெருப்பிற்குள் எறிந்தான். இவ்வாறு முழுப் புத்தகச்சுருளும் நெருப்பில் எரிக்கப்பட்டது. இவைகளைக் கேட்ட அரசனும் அவனுடைய ஏவலாட்களும் பயப்படவுமில்லை, துக்கத்தால் தங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவுமில்லை. எல்நாத்தானும், தெலாயா மற்றும் கெமரியாவும் அச்சுருளை எரிக்கவேண்டாமென அரசனைக் கெஞ்சிக் கேட்டபோதிலும், அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. ஆனால் அரசனோ எழுத்தாளனாகிய பாரூக்கையும், இறைவாக்கினன் எரேமியாவையும் கைதுசெய்யும்படி, அரசனின் மகனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் மகன் செராயாவுக்கும், அப்தெயேலின் மகன் செலேமியாவுக்கும் கட்டளையிட்டான். ஆனால் அவர்களை யெகோவா மறைத்து வைத்திருந்தார். எரேமியா சொல்ல பாரூக் எழுதிய வார்த்தைகளைக் கொண்ட புத்தகச்சுருளை அரசன் எரித்த பின்பு, யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. “நீ இன்னொரு சுருளை எடுத்து யூதா அரசன் யோயாக்கீம் எரித்த, முதல் புத்தகச்சுருளிலிருந்த எல்லா வார்த்தைகளையும் திரும்பவும் எழுதிவை. மேலும் நீ யூதா அரசனாகிய யோயாக்கீமிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே; “பாபிலோன் அரசன் வந்து நாட்டை அழித்து, அதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அகற்றிப்போடுவான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே.” ஆகையால் யூதாவின் அரசனாகிய யோயாக்கீமை குறித்து யெகோவா சொல்வது இதுவே: தாவீதினுடைய அரியணையில் இருந்து அரசாளுவதற்கு அவனுக்கு ஒருவனும் இருக்கமாட்டான். அவனுடைய இறந்த உடல் வெளியில் எறியப்படும். பகற்பொழுதின் சூட்டிலும், இரவின் பனியிலும் கிடக்கும். நான் அவனையும், அவன் பிள்ளைகளையும், அவனுடைய வேலையாட்களையும், அவர்களுடைய கொடுமைக்காகத் தண்டிப்பேன். அவர்கள் எனக்குச் செவிகொடுக்காதபடியால் அவர்கள்மீதும், எருசலேமில் வாழ்வோர்மீதும், யூதாவின் மக்கள்மீதும் அவர்களுக்கெதிராக நான் கூறிய எல்லா பேராபத்தையும் கொண்டுவருவேன்’ என்றார்.” அப்பொழுது எரேமியா வேறொரு புத்தகச்சுருளை எடுத்து அதை நேரியாவின் மகனும், எழுத்தாளனுமான பாரூக்கிடம் கொடுத்தான். அவன் யூதாவின் அரசன் யோயாக்கீம் நெருப்பில் எரித்த புத்தகச்சுருளிலிருந்த எல்லா வார்த்தைகளையும், எரேமியா சொல்லச்சொல்ல அதிலே எழுதினான். அவைகளோடு முந்திய வார்த்தைகளை போன்ற வேறு பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன. சிறையில் எரேமியா பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின்37:1 எபிரெயத்தில் கோனியாவின் மற்றொரு பெயர் யெகோயாசின் இடத்தில் அரசாண்டான். ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான். இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள். அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும். அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’ “யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார். பார்வோனின் இராணுவத்தினிமித்தம் பாபிலோனியப் படையினர் எருசலேமைவிட்டுப் போனபின்பு, எரேமியா பென்யமீன் நாட்டு மக்களிடையே உள்ள தன் சொத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு, எருசலேமைவிட்டு அங்கே போகப் புறப்பட்டான். ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான். அதற்கு எரேமியா, “அது பொய்; நான் பாபிலோனியரைச் சேரப்போகவில்லை” என்றான். ஆனால் யெரியா அதை ஏற்றுக்கொள்ளாமல் எரேமியாவைக் கைதுசெய்து அதிகாரிகளிடத்தில் கொண்டுபோனான். அப்பொழுது அந்த அதிகாரிகள் எரேமியாவின்மீது கோபங்கொண்டு, அவனை அடித்து, செயலாளராகிய யோனத்தான் வீட்டில் காவலில் அடைத்தார்கள். அவர்கள் அதைக் காவற்கூடமாக மாற்றியிருந்தார்கள். எரேமியா இருட்டான ஒரு காவற்கிடங்கில் போடப்பட்டு, அநேக காலம் அங்கேயிருந்தான். அதன்பின் சிதேக்கியா அரசன் ஆளனுப்பி அவனை அரண்மனைக்கு அழைப்பித்து அவனிடம் “யெகோவாவிடமிருந்து ஏதேனும் வார்த்தை உண்டோ?” என்று தனிப்பட்ட முறையில் கேட்டான். அதற்கு எரேமியா, “ஆம்; நீ பாபிலோன் அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்” என்று பதிலளித்தான். பின்பு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “நீர் என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கு உமக்கோ, உமது அதிகாரிகளுக்கோ, இந்த மக்களுக்கோ விரோதமாக நான் செய்த குற்றம் என்ன? ‘பாபிலோன் அரசன் உம்மையோ, இந்த நாட்டையோ தாக்கமாட்டான்’ என்று இறைவாக்கு சொல்லிய உம்முடைய இறைவாக்கு உரைப்போர் எங்கே? என் தலைவனான அரசே! தயவுசெய்து கேளும். என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாகச் சமர்ப்பிக்க அனுமதியும். என்னை விண்ணப்பிக்கவிடும். என்னை செயலாளராகிய யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பவேண்டாம். அனுப்பினால், நான் அங்கேயே இறந்துவிடுவேன்” என்றான். அப்பொழுது சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்கூட முற்றத்தில் சிறை வைக்கும்படி கட்டளையிட்டான். மேலும் பட்டணத்தில் அப்பம் முடியும்வரை அப்பம் சுடுவோரின் தெருவிலிருந்து தினமும் அவனுக்கு அப்பம் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான்; எனவே எரேமியா காவற்கூட முற்றத்தில் இருந்தான். எரேமியா ஒரு குழிக்குள் எறியப்படுதல் மக்கள் எல்லோருக்கும் எரேமியா சொல்வதை மாத்தானின் மகன் செபதியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூகால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சொன்னது என்னவென்றால், “யெகோவா கூறுவது இதுவே: ‘இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிற எவனும் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான். ஆனால் பாபிலோனியரிடம் போகிற எவனும் வாழ்வான். அவன் உயிர் தப்பி வாழ்வான்.’ யெகோவா கூறுவது இதுவே: ‘இப்பட்டணம் பாபிலோன் அரசனின் இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். அவன் இதைக் கைப்பற்றுவான்’ என்றான்.” அப்பொழுது அதிகாரிகள் அரசனிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். இவன் பட்டணத்தில் மீதியாயிருக்கும் போர்வீரரையும், எல்லா மக்களையும் தான் சொல்கிற வார்த்தைகளால் அதைரியப்படுத்துகிறான். இந்த மனிதன் மக்களின் நன்மையை அல்ல, அவர்களின் அழிவையே நாடுகிறான்” என்றார்கள். சிதேக்கியா அரசன் அதற்குப் பதிலாக, “இதோ அவன் உங்களுடைய கையில் இருக்கிறான். உங்களுக்கு மாறாக அரசனால் எதுவும் செய்யமுடியாது” என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான். அரச அரண்மனையில் இருந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியான எபெத்மெலேக் எரேமியா குழிக்குள் போடப்பட்டதைக் கேள்விப்பட்டான். அரசன் பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தபோது, எபெத்மெலேக் அரண்மனையிலிருந்து வெளியேறி அரசனிடம் சென்று, “அரசனே, தலைவனே இறைவாக்கினன் எரேமியாவை இந்த அதிகாரிகள் தங்கள் எல்லா செயல்களினாலும் கொடுமையாய் நடத்தியிருக்கிறார்கள். அவனை அவர்கள் ஒரு குழிக்குள் எறிந்துவிட்டார்கள். பட்டணத்தில் அப்பம் இல்லாமல் போகையில் பட்டினியால் அவன் அங்கே சாவானே” என்றான். அதற்கு அரசன் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், “உன்னோடு முப்பது மனிதரைக் கூட்டிக்கொண்டுபோய் இறைவாக்கினன் எரேமியா இறப்பதற்குமுன் அவனை குழியிலிருந்து வெளியே தூக்கியெடு” என்று கட்டளையிட்டான். அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான். எத்தியோப்பியனான எபெத்மெலேக், எரேமியாவிடம், “நீ இந்த பழைய உடைகளையும், பழைய துணிகளையும் உனது அக்குள்களில் கயிறு வெட்டிவிடாதபடி வைத்துக்கொள்” என்று சொன்னான். எரேமியா அவ்வாறே செய்தான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை கயிறுகள் மூலம் குழியிலிருந்து வெளியே தூக்கி எடுத்தார்கள். அதன்பின் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்தில் தங்கியிருந்தான். சிதேக்கியா எரேமியாவிடம் திரும்பவும் கேள்வி கேட்டல் பின்பு சிதேக்கியா அரசன், இறைவாக்கினன் எரேமியாவை யெகோவாவினுடைய ஆலயத்தின் மூன்றாம் வாசலுக்குக் கொண்டுவரச் செய்தான். அரசன் அவனிடம், “நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கப்போகிறேன். எதையும் மறைக்காமல் எனக்குச் சொல்” என்றான். அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “நான் அவ்வாறே பதில் சொன்னால் என்னைக் கொலைசெய்வீர் அல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் நீர் எனக்குச் செவிகொடுக்கமாட்டீரே” என்றான். ஆனால் சிதேக்கியா அரசனோ, எரேமியாவிடம் இரகசியமாக ஆணையிட்டு, “நமக்கு சுவாசத்தைக் கொடுத்திருக்கும் யெகோவா இருப்பது நிச்சயம் என்றால், நான் உன்னைக் கொல்வதோ, உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களிடம் உன்னை ஒப்புக்கொடுப்பதோ இல்லை என்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்தான். அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும். ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.” அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான். அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய். ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே: யூதா அரசனின் அரண்மனையில் மீதியாய் விடப்பட்டிருக்கும் பெண்கள், பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். அப்பெண்கள் உன்னிடம்: “ ‘நீ நம்பியிருந்த உனது நண்பர்கள், உன்னை வழிதவறச்செய்து உன்னை மேற்கொண்டார்கள். உன்னுடைய பாதங்கள் சேற்றிற்குள்ளே புதைந்தன; உனது நண்பர்கள் உன்னைக் கைவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்வார்கள். “உனது எல்லா மனைவியரும், பிள்ளைகளும், பாபிலோனியரிடத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். நீயுங்கூட அவர்களுடைய கையிலிருந்து தப்பாமல், பாபிலோன் அரசனால் கைதுசெய்யப்படுவாய். இப்பட்டணம் தீயினால் எரிக்கப்படும்” என்றான். அப்பொழுது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த வார்த்தைகளை ஒருவரும் அறியாமலிருக்கட்டும்; அறிந்தால் நீ சாகக்கூடும். அதிகாரிகள் நான் உன்னுடன் பேசியதைக் கேள்விப்பட்டு உன்னிடம் வந்து, ‘அரசனுக்கு நீ கூறியது என்ன? அரசன் உனக்குக் கூறியது என்ன? எங்களுக்கு அதை மறைக்காதே, மறைத்தால் உன்னை நாங்கள் கொல்வோம்’ என்று சொன்னால், நீ அவர்களிடம், ‘நான் சாகும்படி யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் என்னை அனுப்பவேண்டாம் என்று அரசனிடம் வேண்டிக்கொண்டேன்’ என்று சொல்” என்று கூறினான். அதுபோலவே அதிகாரிகளெல்லாரும் எரேமியாவிடம் வந்து, கேள்வி கேட்டார்கள்; அரசன் தனக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளுக்கேற்ப அவன் பதில் கூறினான். அரசனுடன் எரேமியா பேசியதை அவர்கள் ஒருவரும் அறிந்திராதபடியால், அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். எருசலேம் பிடிக்கப்படும் நாள்வரைக்கும் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தான். எருசலேமின் வீழ்ச்சி எருசலேம் பிடிக்கப்பட்ட விதம் இதுவே: யூதா அரசன் சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரும், அவனுடைய முழு இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் படையெடுத்து திரும்பவும் வந்து, அதை முற்றுகையிட்டனர். சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம், நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில் பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. அப்பொழுது பாபிலோன் அரசனுடைய அதிகாரிகள் வந்து நடுவாசலில் உட்கார்ந்தார்கள். சம்கார் ஊரைச்சேர்ந்த நெர்கல்சரேத்சேரும், நேபோசர்சேகிம் என்ற பிரதான அதிகாரியும், நெர்கல்சரேத்சேர் என்னும் தலைமை அதிகாரியும் பாபிலோன் அரசனின் மற்ற எல்லா அதிகாரிகளும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். யூதாவின் அரசன் சிதேக்கியாவும், மற்ற எல்லாப் போர்வீரரும் அவர்களைக் கண்டபோது தப்பி ஓடினார்கள். இரவு நேரத்தில் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்கள் அரசனுடைய தோட்டத்தின் வழியே, இரண்டு சுவர்களுக்கும் இடையிலிருந்த வாசல் வழியாய்39:4 வழியாய் அல்லது அரபா யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கி ஓடினார்கள். ஆனால் பாபிலோனியப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் சிதேக்கியாவைப் பிடித்தார்கள். அவர்கள் அவனைக் கைதுசெய்து ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுவந்தார்கள். அவன் சிதேக்கியாவுக்குத் தீர்ப்பளித்தான். ரிப்லாவிலே பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். அத்துடன் யூதாவின் எல்லா உயர் அதிகாரிகளையும் கொன்றான். அதன் பின்னர் அவன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பாபிலோனியர், அரண்மனைக்கும் மக்களுடைய வீடுகளுக்கும் நெருப்பு வைத்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். மெய்க்காவலாளர் தளபதியான நேபுசராதான், பட்டணத்தில் இருந்த மக்களையும், தன்னிடம் வந்து சேர்ந்தவர்களையும், நாட்டில் மீதியாயிருந்தவர்களையும், பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றான். காவல் தளபதி நேபுசராதான் ஒன்றுமே இல்லாத சில ஏழைகளை யூதா நாட்டில் இருக்கவிட்டு, அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான். இத்தருணத்தில் பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் மெய்க்காவலர் நேபுசராதானிடம் எரேமியாவைக் குறித்துப் பின்வரும் கட்டளைகளைக் கொடுத்தான்: “நீ அவனை அழைத்துக்கொண்டுபோய்க் கவனமாகப் பராமரி. அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாதே; அவன் கேட்பதையெல்லாம் கொடு” என்றான். அப்படியே காவலர் தளபதி நேபுசராதானும், பிரதான அதிகாரி நேபுசஸ்பானும் உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரும் பாபிலோன் அரசனின் மற்ற எல்லா அதிகாரிகளும், ஆளனுப்பி காவற்கூட முற்றத்திலிருந்த எரேமியாவை வெளியே கொண்டுவந்தார்கள். அவனைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோகும்படி, சாப்பானின் பேரனும் அகீக்காமின் மகனுமான கெதலியாவிடம் ஒப்படைத்தார்கள். இதனால் அவன் தன் சொந்த மக்கள் மத்தியில் இருந்தான். காவற்கூட முற்றத்தில் எரேமியா அடைக்கப்பட்டிருந்த வேளையில் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்தப் பட்டணத்துக்கெதிராக என் வார்த்தைகளை நன்மையினால் அல்ல; பேராபத்தினாலேயே நிறைவேற்றப்போகிறேன். அவ்வேளையில் அவை உன் கண்களுக்கு முன்பாகவே நிறைவேற்றப்படும். ஆனாலும் அந்த நாளில் உன்னை நான் தப்புவிப்பேன். நீ பயப்படுகிற மனிதரின் கையில் நீ ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். உன்னைக் காப்பாற்றுவேன். நீ என்னை நம்பினபடியால், வாளினால் சாகமாட்டாய். நான் உன் உயிரைத் தப்புவிப்பேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான். எரேமியாவின் விடுதலை மெய்க்காவலர் தளபதியான நேபுசராதான், ராமாவிலே எரேமியாவை விடுதலையாக்கியபின், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வார்த்தை வந்திருந்தது. பாபிலோனுக்குச் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுபோக இருந்த யூதா எருசலேம் கைதிகளின் மத்தியில், எரேமியா விலங்கிடப்பட்டிருந்ததை நேபுசராதான் கண்டான். காவலர் தளபதி எரேமியாவைக் கண்டபோது அவனிடம், “உன் இறைவனாகிய யெகோவா இந்த இடத்துக்குப் பேராபத்தை நியமித்திருக்கிறார். இப்பொழுது யெகோவா அதைக் கொண்டுவந்து விட்டார். தாம் சொன்னபடியே அவர் அதைச் செய்திருக்கிறார். உன் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் போனதினாலேயே இவை யாவும் நேரிட்டன. ஆனால் இன்று நான் உன்னை உன் கைகளில் இருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கிறேன். நீ விரும்பினால் என்னோடு பாபிலோனுக்கு வா; நான் உன்னைப் பராமரிப்பேன். உனக்கு விருப்பமில்லாவிட்டால் வரவேண்டாம். முழு நாடுமே உனக்கு முன்பாக இருக்கிறது. நீ உனக்கு விருப்பமான இடத்துக்குப் போ” என்றான். ஆனாலும் எரேமியா புறப்படும் முன் நேபுசராதான் திரும்பவும் அவனிடம், “பாபிலோன் அரசன் யூதாவின் பட்டணங்களுக்குமேல் அதிகாரியாக நியமித்திருக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அங்கே மக்கள் மத்தியில் தங்கியிரு. இல்லையெனில், உனக்கு எங்குபோக விருப்பமோ அங்கே போ” என்று கூறினான். அவனுக்கு உணவுப் பொருட்களையும், ஒரு அன்பளிப்பையும் கொடுத்து அனுப்பினான். அப்பொழுது எரேமியா மிஸ்பாவிலிருந்த அகீக்காமின் மகன் கெதலியாவிடம் போய், அந்த நாட்டில் மீதியாயிருந்த மக்களின் மத்தியில் தங்கியிருந்தான். கெதலியா கொலைசெய்யப்படுதல் பாபிலோன் அரசன், அகீக்காமின் மகன் கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான். அந்த நாட்டில் மிகவும் ஏழைகளாயிருந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கும் பொறுப்பாக அவனை நியமித்தான். இவர்கள் பாபிலோனுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்படாதிருந்தார்கள். இதை வெளி இடங்களில் இன்னமும் இருந்த இராணுவ அதிகாரிகளும், அவர்கள் மனிதரும் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது நெத்தனியாவின் மகன் இஸ்மயேல், கரேயாவின் மகன்கள் யோகனான், யோனத்தான்; தன்கூமேத்தின் மகன் செராயா, நெத்தோபாத்தியனான ஏப்பாயின் மகன்களும், மாகாத்தியனின் மகன் யெசனியாவும், அவர்களைச் சேர்ந்த மனிதரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் வந்தார்கள். சாப்பானின் பேரனும் அகீக்காமின் மகனுமான கெதலியா, அவர்களுக்கும் அவர்களுடைய மனிதருக்கும் ஆணையிட்டு, சொன்னதாவது: “நீங்கள் பாபிலோனியருக்கு பணிசெய்ய பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும். எங்களிடம் வந்திருக்கும் பாபிலோனியர் முன்பாக, உங்கள் பிரதிநிதியாக நான் மிஸ்பாவில் இருப்பேன். நீங்களோ திரும்பவும் கைப்பற்றியிருக்கிற பட்டணங்களில் குடியிருந்து, திராட்சைப் பழங்களை அறுவடை செய்து, கோடைகால பழங்களையும், எண்ணெயையும் பாத்திரங்களில் சேர்த்துவையுங்கள்” என்று கூறினான். பாபிலோன் அரசன் யூதாவில் ஒரு சிலரை மீதியாக வைத்து, சாப்பானின் மகனான அகீக்காமின் மகன் கெதலியாவை அவர்களுக்கு ஆளுநராக நியமித்திருக்கிறான் என்பதை, மோவாப்பிலும், அம்மோனிலும், ஏதோமிலும் மற்ற எல்லா நாடுகளிலும் இருந்த யூதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அனைவரும் தாங்கள் சிதறடிக்கப்பட்ட எல்லா நாடுகளிலிருந்தும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் யூதா நாட்டிற்குத் திரும்பி வந்தார்கள். அங்கே அவர்கள் திராட்சரசத்தைச் சேகரித்து, கோடைகால பழங்களையும் அதிகமாகச் சேர்த்து அறுவடை செய்தார்கள். கரேயாவின் மகன் யோகனானும், இன்னும் திறந்த வெளியான இடங்களில் இருந்த எல்லா இராணுவ அதிகாரிகளும் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்தார்கள். அவர்கள் அவனிடம், “அம்மோனியரின் அரசனான பாலிஸ் என்பவன் உம்மைக் கொல்லும்படி, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பியிருக்கிறது உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். ஆனால் அகீக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை. அப்பொழுது கரேயாவின் மகன் யோகனான், மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் இரகசியமாக, “நான் போய் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொன்றுபோட அனுமதியும். ஒருவரும் அதை அறியமாட்டார்கள். ஏன் அவன் உம்மைக் கொன்று, உம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் எல்லா யூதரும் சிதறடிக்கப்படவும், யூதாவில் மீதியாய் இருக்கும் மக்கள் அழிந்துபோகவும் செய்யவேண்டும்” என்று கேட்டான். ஆனால் அகீக்காமின் மகன் கெதலியா கரேயாவின் மகன் யோகனானிடம், “நீ இப்படியான ஒரு செயலைச் செய்யவேண்டாம். ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ சொல்வது உண்மையல்ல” என்றான். ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனும், அரசனின் அதிகாரிகளில் ஒருவனுமாயிருந்த இஸ்மயேல், பத்து மனிதரோடு மிஸ்பாவிலிருந்த அகீக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கே அவர்கள் எல்லோரும் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், அவனோடிருந்த பத்து மனிதரும் எழும்பி, சாப்பானின் மகனான அகீக்காமின் மகன் கெதலியாவை வாளால் வெட்டிக்கொன்றார்கள். கொல்லப்பட்டவன் பாபிலோன் அரசனால் அந்த நாட்டின் தலைவனாக நியமிக்கப்பட்டவன். இஸ்மயேல் மிஸ்பாவிலிருந்த கெதலியாவுடன், அங்கிருந்த யூதரையும் கொன்றான். அத்துடன் அங்கிருந்த பாபிலோனிய யுத்த வீரரையும் வெட்டிப்போட்டான். கெதலியா கொலைசெய்யப்பட்ட அடுத்தநாள், இதைப்பற்றி ஒருவரும் அறியும் முன்னே, சீலோ, சீகேம், சமாரியா ஆகிய இடங்களிலிருந்து, எண்பது மனிதர் தங்களுடைய தாடிகளைச் சிரைத்து, கிழிந்த உடைகளை அணிந்து தங்கள் உடல்களைக் கீறிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் கைகளில் தானிய பலிகளையும், நறுமண தூபங்களையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்குப் போவதற்காக வந்தார்கள். அப்பொழுது நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அழுதபடி அவர்களைச் சந்திப்பதற்காக மிஸ்பாவிலிருந்து போனான். அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம், “நீங்கள் அகீக்காமின் மகன் கெதலியாவிடம் வாருங்கள்” என்றான். அவர்கள் பட்டணத்துக்கு வந்ததும் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், அவனோடிருந்த மனிதரும் அவர்களை வெட்டி ஒரு குழிக்குள் போட்டார்கள். ஆனால் அவர்களில் பத்துபேர் இஸ்மயேலை நோக்கி, “நீர் எங்களைக் கொல்லவேண்டாம். நாங்கள் கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனும் ஒரு வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்” என்றார்கள். எனவே அவன், இவர்களை மற்றவர்களுடன் சேர்த்து கொலைசெய்யாமல் விட்டுவிட்டான். இஸ்மயேல் தான் கொலைசெய்த மனிதருடைய சடலங்களையும் கெதலியாவையும் ஒரு குழிக்குள் எறிந்தான். அந்த குழியானது இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கு விரோதமாக, ஆசா அரசனால் தனது பாதுகாப்புக்காக வெட்டப்பட்டவற்றில் ஒன்றாகும். அதை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் சடலங்களினால் நிரப்பினான். மிஸ்பாவில் மீதியாயிருந்த எல்லா மக்களையும் இஸ்மயேல் சிறைப்பிடித்தான். அவர்கள் மெய்க்காவலர் தளபதியான நேபுசராதானால், அகீக்காமின் மகனான கெதலியாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரசனின் மகள்களும், அங்கு விடப்பட்டிருந்த மற்றவர்களுமே. அவ்வாறு நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, அம்மோனியருடன் சேர்ந்துகொள்வதற்காகப் போனான். கரேயாவின் மகனான யோகனானும், அவனுடன் இருந்த எல்லா இராணுவத் தளபதிகளும், நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்த எல்லாக் கொடுமைகளையும் குறித்துக் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் மனிதர் அனைவரையும் கூட்டிக்கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலுடன் சண்டையிடுவதற்காகச் சென்றார்கள். அவர்கள் கிபியோனிலிருந்த பெரிய குளத்தண்டையில் நின்ற அவனை நெருங்கினார்கள். இஸ்மயேலுடன் இருந்த மக்கள் எல்லோரும், கரேயாவின் மகன் யோகனானையும், இராணுவத் தளபதிகளையும் கண்டபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது இஸ்மயேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுபோன எல்லா மக்களும், அவனைவிட்டுக் கரேயாவின் மகனான யோகனானுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் நெத்தனியாவின் மகனான இஸ்மயேலும், அவனுடன் இருந்த மனிதரில் எட்டுப்பேரும் யோகனானிடம் இருந்து தப்பி, அம்மோனியரிடம் ஓடிப்போனார்கள். எகிப்திற்கு ஓடிப்போகுதல் அப்பொழுது மிஸ்பாவிலிருந்து இஸ்மயேல் கொண்டுபோயிருந்தவர்களை, கரேயாவின் மகன் யோகனானும், அவனோடிருந்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் அழைத்துக்கொண்டு போனார்கள். இவர்கள் யோகனானினால் கிபியோனிலிருந்து மீட்கப்பட்ட, படைவீரர், பெண்கள், பிள்ளைகள், அரச அதிகாரிகளுமாய் இருந்தார்கள். இது அகீக்காமின் மகன் கெதலியாவை, நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொலைசெய்தபின் நடந்தது. இவர்கள் எகிப்திற்குப் போகும் வழியில் பெத்லெகேமுக்கு அருகே இருந்த கேரூத், கிம்காமில் தரித்து நின்றார்கள். பாபிலோனியருக்கு தப்புவதற்காகவே இவர்கள் எகிப்திற்குப் போகப் புறப்பட்டார்கள். நெத்தனியாவின் மகன் இஸ்மயேல், பாபிலோன் அரசன் நாட்டுக்கு ஆளுநனாக நியமித்த அகீக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றதினால், அவர்கள் பாபிலோனியருக்குப் பயந்தார்கள். அப்பொழுது இராணுவ அதிகாரிகள் எல்லோரும் கரேயாவின் மகன் யோகனான், ஓசாயாவின் மகன் யெசனியா மற்றும் சிறியோர், பெரியோர் உட்பட எல்லா மக்களும், இறைவாக்கினன் எரேமியாவிடம் வந்தார்கள். அவர்கள் அவனிடம், “தயவுசெய்து எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, இங்கு மீதியாயிருக்கும் எல்லோருக்காகவும் உன் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடு. ஏனெனில் நீ இப்பொழுது பார்க்கிறபடி, ஒருகாலத்தில் நாங்கள் அநேகராயிருந்தோம். இப்பொழுதோ சிலர் மட்டுமே மீதியாயிருக்கிறோம். நாங்கள் எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை உன் இறைவனாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லும்படி அவரிடம் மன்றாடு” என்று சொன்னார்கள். அதற்கு இறைவாக்கினன் எரேமியா, “நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நிச்சயமாக நான் மன்றாடுவேன். யெகோவா சொல்லும் எல்லாவற்றையும் ஒன்றும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்வேன்” என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவா எங்களிடம் கூறும்படி, உமக்கு எவைகளைச் சொல்லி அனுப்புகிறாரோ, அவைகளின்படியெல்லாம் நாங்கள் செய்யாதே போனால், யெகோவா எங்களுக்கெதிராக உண்மையும், நம்பத்தகுந்த சாட்சியுமாய் இருப்பாராக. அவை சாதகமானவையோ, சாதகமில்லாதவையோ, எதுவானாலும் உம்மை அனுப்புகிற நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு கீழ்ப்படிவதால் இவை நமக்கு நன்மையாகவே முடியும்” என்றார்கள். பத்து நாட்களின்பின் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுது அவன் கரேயாவின் மகன் யோகனானையும், அவனுடன்கூட இருந்த இராணுவத் தளபதிகளையும், சிறியவர்களும், பெரியவர்களுமான யாவரையும் ஒன்றாய் வரும்படி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் கொண்டுபோகும்படி என்னை அனுப்பினீர்கள். அவர் சொல்வதாவது: ‘நீங்கள் தொடர்ந்து யூதாவிலேயே தங்கியிருப்பீர்களானால், நான் உங்களைக் கட்டியெழுப்புவேன்; இடித்து வீழ்த்தமாட்டேன். உங்களை நாட்டுவேன்; பிடுங்கி எறியமாட்டேன். ஏனெனில் நான் உங்கள்மீது வரப்பண்ணின பேராபத்தைக் குறித்து வருந்துகிறேன். நீங்கள் இப்பொழுது பயப்படுகிற, பாபிலோன் அரசனைக் குறித்துப் பயப்படவேண்டாம்; அவனுக்கு அஞ்சவும் வேண்டாம் என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றி உங்களை அவனுடைய கையிலிருந்து மீட்பேன். அவன் உங்களில் இரக்கங்கொண்டு, உங்களை உங்கள் நாட்டிலேயே திரும்பவும் குடியமர்த்தும்படி, நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.’ “ஆயினும் நீங்கள், ‘நாங்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கமாட்டோம்’ என்று சொல்லி உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போவீர்களானால், ‘நாம் எகிப்திற்குப்போய் வாழ்வோம்; அங்கே யுத்தத்தைக் காணவோ, எக்காள சத்தத்தைக் கேட்கவோ, அப்பமின்றிப் பசியாயிருக்கவோமாட்டோம்’ என்று சொல்வீர்களானால், யூதாவில் மீந்திருக்கும் மக்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்திற்குப்போய் அங்கே குடியிருக்கத் தீர்மானித்திருப்பீர்களானால், நீங்கள் பயப்படும் வாள் அங்கே உங்களை மேற்கொள்ளும். நீங்கள் பயப்படுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்து வரும். அங்கேயே நீங்கள் இறந்துபோவீர்கள். உண்மையிலேயே எகிப்திற்குப்போய் அங்கே குடியிருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறவர்கள் அங்கே வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள். நான் அவர்கள்மீது கொண்டுவரப்போகும் பேராபத்துக்கு அவர்களில் ஒருவனாவது தப்புவதுமில்லை; மீதியாயிருப்பதுமில்லை.’ இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வதாவது: ‘எருசலேமில் வாழ்ந்தவர்கள் மீது என் கோபமும், கடுங்கோபமும் ஊற்றப்பட்டதுபோல, நீங்களும் எகிப்திற்குப் போகும்போது என் கடுங்கோபம் உங்கள்மீது ஊற்றப்படும். நீங்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டிப்புக்கும், அவமானத்திற்கும் ஆளாவீர்கள். இந்த இடத்தை நீங்கள் இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.’ “யூதாவில் மீதியாயிருப்பவர்களே, யெகோவா உங்களிடம், ‘எகிப்திற்குப் போகவேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். இதுபற்றி இன்று நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் என்னை அனுப்பி, ‘எங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும். அவர் எதைக் கூறுகிறாரோ, அதை எங்களிடம் கூறும். நாங்கள் அதைச் செய்வோம்’ என்றெல்லாம் கூறியது ஒரு பெரும் பிழையாகிவிட்டது. நான் இன்று உங்களுக்கு அவைகளைச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்ன எல்லாவற்றிற்கும் இன்னும் நீங்கள் கீழ்ப்படியவில்லை. ஆகவே இதை இப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் போய்க் குடியிருக்க விரும்பும் இடத்தில் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்கள் என்கிறார்” என்றான். எரேமியா மக்களிடம் அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். யெகோவா அவனை அனுப்பிச் சொல்லச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர்களுக்குச் சொன்னான். அப்பொழுது ஓசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும், அகங்காரமுள்ள எல்லா மனிதரும் எரேமியாவிடம், “நீ பொய் சொல்கிறாய்; நீங்கள் தங்கும்படிக்கு எகிப்திற்குப் போகக்கூடாது என்று சொல்லும்படி எங்கள் இறைவனாகிய யெகோவா உன்னை அனுப்பவில்லை. நேரியாவின் மகன் பாரூக்கே பாபிலோனியர் எங்களைக் கொல்லும்படி அல்லது பாபிலோனுக்கு நாடுகடத்துவதற்கு எங்களை அவர்களிடம் ஒப்புக்கொடுக்கும்படி எங்களுக்கு விரோதமாக உன்னைத் தூண்டுகிறான்” என்றார்கள். இப்படியாக கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ தளபதிகளும், எல்லா மக்களும் யூதா நாட்டில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்குப் பதிலாக சிதறடிக்கப்பட்டிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா நாட்டில் வாழும்படி திரும்பி வந்த, யூதாவில் மீதியாயிருந்த மக்கள் எல்லோரையும் கரேயாவின் மகன் யோகனானும், எல்லா இராணுவ அதிகாரிகளும் கூட்டிக்கொண்டு எகிப்திற்குப் போனார்கள். அத்துடன் எல்லா ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், அரசனின் மகள்களையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். மெய்க்காவலர் தளபதியான நேபுசராதானால் சாப்பானின் பேரனும், அகீக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் விட்டுச்சென்றவர்களே அவர்கள். அவர்களோடுகூட இறைவாக்கினன் எரேமியாவையும், நேரியாவின் மகனான பாரூக்கையும் கூட்டிக்கொண்டு சென்றார்கள். இவ்வாறாக யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் எகிப்திற்குப்போய் தக்பானேஸ் வரைக்கும் போனார்கள். தக்பானேஸ் என்ற இடத்தில் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: அவர் அவனிடம், “யூதர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில பெரிய கற்களை எடுத்து, தக்பானேஸில் உள்ள பார்வோனின் அரண்மனை வாசலில் இருக்கும், செங்கல் நடைபாதையில் களிமண்ணில் புதைத்து வை. பின்பு அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது, இதுவே: என் ஊழியக்காரனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை நான் அழைப்பித்து, நான் புதைத்து வைத்த, இந்தக் கற்களின் மேலே அவனுடைய அரியணையை அமைப்பேன். அவன் தன்னுடைய ராஜகூடாரத்தை அதற்குமேல் விரிப்பான். அத்துடன் அவன் வந்து எகிப்தைத் தாக்குவான். மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தையும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு சிறையிருப்பையும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்களுக்கு வாளையும் அவன் கொண்டுவருவான். மேலும் எகிப்தின் தெய்வங்களின் கோவில்களுக்கு நெருப்பு வைப்பான். அவன் அவர்களுடைய கோவில்களை எரித்து, அவர்களுடைய தெய்வங்களைச் சிறையாக்கிக் கொண்டுபோவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடைகளிலிருந்து பேன்களை எடுத்து சுத்தம் செய்வதுபோல அவர் எகிப்து தேசத்தை சுத்தம் செய்வான்; அங்கிருந்து நலமாய் புறப்பட்டுப் போவான். எகிப்திலுள்ள பெத்ஷிமேஷின்43:13 பெத்ஷிமேஷின் என்றால் சூரிய தெய்வத்தின் கோவில் எனப்படும் புனிதத் தூண்களை உடைத்து, எகிப்திலுள்ள தெய்வங்களின் கோவில்களை நெருப்பினால் எரித்துப்போடுவான் என்றார்.” விக்கிரக ஆராதனையினால் பேரழிவு மிக்தோல், தக்பானேஸ், மெம்பிஸ் ஆகிய கீழ் எகிப்திலும், பத்ரோசிலும்44:1 பத்ரோசிலும் அல்லது எகிப்தின் மேல்பகுதி வாழ்ந்த யூதர்களைக் குறித்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது: “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எருசலேமின்மேலும், யூதாவின் பட்டணங்களிலும் நான் கொண்டுவந்த பேரழிவை நீங்கள் கண்டீர்கள். இன்று அவை குடியிருப்பாரின்றி பாழாக்கப்பட்டு கிடக்கின்றன. அவர்கள் செய்த தீமையினாலே இப்படி நடந்தது. அவர்களோ நீங்களோ உங்கள் முற்பிதாக்களோ, ஒருபோதும் அறிந்திராத வேறு தெய்வங்களை அவர்கள் வணங்கி, அவைகளுக்குத் தூபம் எரித்து எனக்குக் கோபமூட்டினார்கள். நான் திரும்பத்திரும்ப என் ஊழியர்களான இறைவாக்கினரை அனுப்பினேன். அவர்கள், ‘நான் வெறுக்கிற இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்யவேண்டாம்’ என்று சொன்னார்கள். ஆனாலும் என் மக்கள் அதைக் கேட்கவோ, கவனிக்கவோ இல்லை. தங்களுடைய கொடுமையிலிருந்து திரும்பவுமில்லை. வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதை நிறுத்தவும் இல்லை. ஆகையால் என்னுடைய கடுங்கோபம் ஊற்றப்பட்டது. அது யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்து, அவைகளை இன்று இருப்பதுபோல் வெறும் பாழிடமாய் ஆக்கியிருக்கிறது. “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் யூதாவிலிருந்து அகற்றி, ஒருவரும் உங்களுக்கென மீதியாயிருக்கவிடாமல், இப்படியான பெரும் பேராபத்தை ஏன் உங்கள்மேல் கொண்டுவருகிறீர்கள்? நீங்கள் குடியிருக்கும்படி வந்து சேர்ந்திருக்கும் எகிப்து நாட்டில் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் செயல்களினால் ஏன் என்னைக் கோபமடையச் செய்கிறீர்கள்? உங்களையே நீங்கள் அழித்து, பூமியிலுள்ள எல்லா மக்கள் மத்தியிலும் நீங்கள் உங்களைச் சாபப்பொருளாகவும், பழிச்சொல்லாகவும் ஆக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் முற்பிதாக்களினாலும், யூதா நாட்டு அரசர்களினாலும், அரசிகளினாலும் செய்யப்பட்ட கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? நீங்களும், உங்கள் மனைவியரும் எருசலேமின் தெருக்களிலும், யூதா நாட்டிலும் செய்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? இன்றுவரை அவர்கள் தங்களைத் தாழ்த்தவோ, பயபக்தியை காட்டவோ இல்லை. நான் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் முன்வைத்த என் சட்டங்களையும், விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவுமில்லை.” ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உன்மீது பேராபத்தைக் கொண்டுவரும்படியும், யூதா உங்களில் ஒவ்வொருவனையும் அழிக்கும்படியும் நான் தீர்மானித்திருக்கிறேன். எகிப்தில் குடியிருக்கும்படி, அங்குதான் போவோம் என முடிவெடுத்த யூதாவின் மீதியானோரை நான் அகற்றிவிடுவேன். அவர்கள் யாவரும் எகிப்தில் அழிந்துபோவார்கள். அவர்கள் வாளினால் விழுந்தோ, பஞ்சத்தினால் இறந்துபோவார்கள். அவர்கள் சிறியோரிலிருந்து பெரியோர்வரை வாளினால் அல்லது பஞ்சத்தினால் அழிவார்கள். அவர்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டனத்திற்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள். நான் எருசலேமை தண்டித்ததுபோல எகிப்தில் குடியிருப்பவர்களையும் வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன். எகிப்தில் குடியிருக்கப்போன யூதாவில் மீதமுள்ளோர் யாரும் யூதா நாட்டுக்குத் திரும்பிவர தப்பியோ, பிழைத்தோ இருக்கமாட்டார்கள். அங்கு திரும்பிவந்து வாழவேண்டுமென்ற வாஞ்சை அவர்களுக்கு இருந்துங்கூட, ஒருசில அகதிகளைத்தவிர வேறு ஒருவரும் திரும்பமாட்டார்கள்.” அப்பொழுது தங்கள் மனைவியர் பிற தெய்வங்களுக்கு பலி செலுத்தியதை அறிந்திருந்த எல்லா மனிதரும், அவர்களோடு நின்ற எல்லாப் பெண்களுமான பெரும் கூட்டமும், மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும்44:15 எகிப்திலும் அல்லது பத்ரோசு வாழ்ந்த எல்லா மக்களும் எரேமியாவிடம் கூறியதாவது: “யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை. ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள். மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள். அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும், “யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா? உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார். நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான். மேலும் எரேமியா, பெண்கள் உட்பட எல்லா மக்களையும் பார்த்து, “எகிப்திலிருக்கும் மக்களே! யூதாவிலிருக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ‘வான அரசிக்குத் தூபங்காட்டவும், பானபலிகளை வார்க்கவும், நாங்கள் செய்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவோம்’ என்று நீங்களும், உங்கள் மனைவியரும் பொருத்தனை செய்தீர்கள். அதை உங்கள் செயல்களினால் காட்டியுமிருக்கிறீர்கள். “உங்கள் வாக்கை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள். உங்கள் பொருத்தனைகளைக் கடைப்பிடியுங்கள். ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான். நான் அவர்களுக்கு நன்மையையல்ல; தீமையைச் செய்யவே காத்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் இருக்கும் யூதா மக்கள் அனைவரும் இல்லாமற்போகும்வரை வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள். வாளுக்குத் தப்பி எகிப்து நாட்டிலிருந்து யூதா நாட்டுக்குத் திரும்புகிறவர்களோ மிகச் சிலராய் இருப்பார்கள். அப்பொழுது யூதாவில் மீதியாயிருந்து எகிப்தில் குடியிருக்கும்படி போன நீங்கள் அனைவரும், என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ எது நிலைநிற்கும் என்பதை அறிந்துகொள்வீர்கள். “ ‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிப்பேன் என்பதற்கு உங்களுக்கு நான் ஒரு அடையாளத்தைத் தருகிறேன்’ என்று யெகோவா கூறுகிறார். ‘நான் உங்களுக்கு எதிராகப் பயமுறுத்திச் சொன்ன வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்.’ நான் உங்களுக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே என்று யெகோவா சொல்கிறதாவது: ‘எகிப்திய அரசன் பார்வோன் ஓப்ராவை, அவனைக் கொல்லத் தேடுகிற பகைவரின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அது யூதாவின் அரசனான சிதேக்கியாவை, அவனைக் கொல்லத் தேடிய பகைவனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கும்’ என்கிறார்.” பாரூக்கிற்குச் செய்தி யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், இறைவாக்கினனான எரேமியா நேரியாவின் மகன் பாரூக்குக்குச் சொன்னதாவது: எரேமியா சொல்லச்சொல்ல, பாரூக் அவைகளைப் புத்தகத்தில் எழுதிய பின்பே இச்செய்தி கிடைத்தது: “பாரூக்கே! இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கூறுவது இதுவே: நீயோ, ‘ஐயோ! எனக்குக் கேடு, யெகோவா என்னுடைய வேதனையுடன், துக்கத்தையும் சேர்த்திருக்கிறாரே; நான் துக்கத்தின் அழுகையினால் இளைப்படைந்தேன். ஆறுதலையும் நான் காணவில்லை’ என்று சொன்னாய். அதற்கு யெகோவா, இதை அவனுக்குச் சொல் என்கிறார். ‘யெகோவா கூறுவது இதுவே: நாடெங்கும் நான் கட்டியிருப்பதை கவிழ்த்துப் போடுவேன். நான் நாட்டினதை வேரோடு பிடுங்குவேன். அப்படியிருக்கையில் நீ உனக்கென்று பெரிய காரியங்களைத் தேடவேண்டுமோ? நீ அவைகளைத் தேடவேண்டாம். ஏனெனில் நான் எல்லா மக்கள்மேலும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஆனாலும் நீ எங்கே போகிறாயோ அங்கெல்லாம் உன்னை உயிருடன் தப்பவிடுவேன்’ என்றார்.” எகிப்தைப் பற்றிய செய்தி நாடுகளைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: எகிப்தைப் பற்றியது: எகிப்திய அரசன் பார்வோன் நேகோவின் படைக்கு விரோதமான செய்தி இதுவே: அந்தப் படையை பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யூப்ரட்டீஸ் நதியண்டையில் கர்கேமிசில் தோற்கடித்திருந்தான். இது யூதா அரசனான யோசியாவின் மகன் யோயாக்கீமின் நான்காம் வருடத்தில் நிகழ்ந்தது. “பெரிதும் சிறிதுமான உங்கள் கேடயங்களை ஆயத்தம்பண்ணி, யுத்தத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்! குதிரைகளுக்குச் சேணம் கட்டி அவைகளின்மேல் ஏறுங்கள். தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, உங்களுடைய இடங்களில் நிலைகொள்ளுங்கள். உங்கள் ஈட்டிகளை பளபளப்பாக்கி யுத்த கவசங்களை அணிந்துகொள்ளுங்கள். ஆனால் நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைகிறார்களே! அவர்கள் பின்வாங்குகிறார்களே! அவர்களுடைய இராணுவவீரர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்களே! அவர்கள் திரும்பிப் பாராமல் விரைந்து தப்பி ஓடுகிறார்களே! எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது” என்று யெகோவா அறிவிக்கிறார். “வேகமாக ஓடுகிறவர்களால் தப்பியோட முடியவில்லை; வலிமை மிக்கவர்களால் தப்பமுடியவில்லை. வடக்கே யூப்ரட்டீஸ் நதிக்கு அருகில் இடறி விழுகிறார்கள். “நைல் நதியைப்போலவும், நீர் பெருக்கெடுக்கும் ஆறுகளைப்போலவும் எழும்புவது யார்? நைல் நதியைப்போலவும், நீர் பெருக்கெடுக்கும் ஆறுகளைப்போலவும் எகிப்து எழும்புகிறது. அவள், ‘நான் எழும்பி பூமியை மூடுவேன்; பட்டணங்களையும், அவைகளின் மக்களையும் அழிப்பேன்’ என்கிறாள். குதிரைகளே! ஓடுங்கள், தேரோட்டிகளே, ஆவேசத்துடன் ஓட்டுங்கள்! கேடயம் பிடிக்கும் எத்தியோப்பியரே, பூத்தியரே, வில்லை நாணேற்றும் லூதீமியரே, வல்லமைமிக்க வீரர்களே, அணிவகுத்துச் செல்லுங்கள். அந்த நாளோ, ஆண்டவராகிய, சேனைகளின் யெகோவாவுக்கு உரியது. அது பழிவாங்கும் நாள். அவர் தமது பகைவரை பழிவாங்கும் நாள். அந்நாளில் வாள், தான் திருப்தியடையும் வரைக்கும், தன் தாகத்தை இரத்தத்தினால் தீர்த்துக்கொள்ளும். ஏனெனில் ஆண்டவராகிய, சேனைகளின் யெகோவாவுக்கு வடநாட்டில் யூப்ரட்டீஸ் நதியருகே ஒரு பலியும் உண்டு. “எகிப்தின் கன்னி மகளே! நீ கீலேயாத்திற்குப்போய் தைலம் வாங்கு. நீயோ வீணாகவே மருந்துகளை அதிகரிக்கிறாய். நீ குணமடையவே மாட்டாய். எல்லா மக்களும் உன் வெட்கத்தைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். உன் அழுகையின் குரல் பூமியை நிரப்பும். ஒரு இராணுவவீரன் இன்னொரு இராணுவவீரன்மேல் இடறி, இருவரும் சேர்ந்து ஒன்றாய் விழுவார்கள்” என்றான். பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்க வருவதைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவா கூறிய செய்தி இதுவே: “எகிப்தில் இதை அறிவியுங்கள், மிக்தோலில் பிரசித்தப்படுத்துங்கள்; மெம்பிசிலும், தக்பானேஸிலும் அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘வாள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை இரையாக்குகிறது. அதனால் நீங்கள் நிலைகொண்டு ஆயத்தமாகுங்கள்.’ உங்களுடைய போர்வீரர் ஏன் கீழே விழவேண்டும்? அவர்கள் நிற்க மாட்டார்கள், ஏனெனில் யெகோவா அவர்களைக் கீழே தள்ளிவிடுவார். அவர்கள் திரும்பத்திரும்ப இடறுவார்கள். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுவார்கள். அவர்கள், ‘எழுந்திருங்கள்; ஒடுக்குகிறவனுடைய வாளுக்குத் தப்பி நம்முடைய சொந்த மக்களிடத்திற்கும், சொந்த நாடுகளுக்கும் திரும்பிப்போவோம்’ என்பார்கள். ‘எகிப்திய அரசன் பார்வோன் ஒரு பெரிய சத்தம் மட்டுமே. அவன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டான்’ என்றும் அவர்கள் அங்கே சொல்வார்கள்.” சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள அரசர் அறிவிக்கிறதாவது: “நான் வாழ்வது நிச்சயம்போல, மலைகளுக்கு மத்தியில் உள்ள தாபோரைப்போலவும், கடலருகே உள்ள கர்மேலைப்போலவும் ஒருவன் வருவான் என்பதும் நிச்சயம். எகிப்தில் குடியிருக்கும் நீங்கள் நாடு கடத்தப்படுவற்கு உங்கள் பயண மூட்டைகளை அடுக்கி ஆயத்தப்படுத்துங்கள். ஏனெனில், மெம்பிஸ் அழிக்கப்பட்டு, குடியிருப்பார் இல்லாமல், பாழடைந்து போகும். “எகிப்து ஒரு அழகிய இளம்பசு, ஆனால் வடக்கிலிருந்து அவளுக்கு விரோதமாக உண்ணி ஒன்று வருகிறது. அவளுடைய இராணுவத்திலுள்ள கூலிப்படைகள், கொழுத்த கன்றுகளைப் போலிருக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய இடத்தில் நிற்க முடியாமல் ஒருமித்துத் திரும்பி தப்பி ஓடுவார்கள். ஏனெனில், அவர்கள் தண்டிக்கப்படும் வேளையான பேராபத்தின் நாள் அவர்கள்மீது வருகிறது. பகைவன் பலத்துடன் முன்னேறி வரும்போது, எகிப்து தப்பியோடுகிற பாம்பைப்போல் சீறுவாள். அவர்கள் மரம் வெட்டுகிறவர்களைப்போல் கோடரிகளுடன் அவளுக்கெதிராக வருவார்கள். எகிப்தின் காடு அடர்த்தியாய் இருந்தபோதும், அதை வெட்டி வீழ்த்துவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட அதிகமானவர்கள். அவர்களை எண்ண முடியாது. எகிப்தின் மகள் அவமானப்படுத்தப்பட்டு வடநாட்டு மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.” இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “நான் தேபேசின் ஆமோன் தெய்வத்தையும், பார்வோனையும், எகிப்தையும், அதன் தெய்வங்களையும், அதன் அரசர்களையும், பார்வோனை நம்பியிருக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறேன். அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களான, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையிலும் அவனுடைய அதிகாரிகளின் கையிலும் நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். இருந்தாலும், பிற்காலத்தில் எகிப்து நாடு முந்திய நாட்களில் இருந்ததுபோல குடியேற்றப்படும்” என்று யெகோவா அறிவிக்கிறார். “என் தாசனாகிய யாக்கோபே! நீ பயப்படாதே! இஸ்ரயேலே! நீ சோர்ந்து போகாதே! நான் நிச்சயமாக உன்னைத் தூரதேசத்திலிருந்தும், உன் வழித்தோன்றல்களை அவர்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்தும் காப்பாற்றுவேன். யாக்கோபுக்குத் திரும்பவும் சமாதானமும், பாதுகாப்பும் உண்டாகும். அவனை ஒருவனும் பயமுறுத்தமாட்டான். என் அடியானாகிய யாக்கோபே பயப்படாதே. நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான், உன்னைச் சிதறடித்த நாடுகளை முற்றிலும் அழித்தாலும் உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன். ஆனால் நான் உன்னை தண்டிக்காமல் விடமாட்டேன். உன்னை நான் நீதியுடன் மட்டுமே தண்டிப்பேன்.” பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: யெகோவா கூறுவது இதுவே: “பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். மக்கள் அலறி அழுவார்கள். நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் அழிக்கும் நாள் வந்திருக்கிறது. தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்? “ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ ஆனால் அஸ்கலோனையும், கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க அது எப்படி ஓய்ந்திருக்கும்?” மோவாபைப் பற்றிய செய்தி மோவாபைப் பற்றியது: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “நேபோ நாட்டுக்கு ஐயோ கேடு! அது பாழாக்கப்படும். கீரியாத்தாயீம் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைப்பற்றப்படும். அதன் பலத்த அரண் அவமதிக்கப்பட்டு தகர்க்கப்படும். மோவாப் இனி ஒருபோதும் புகழப்படமாட்டாது; அதனுடைய அழிவுக்காக, எஸ்போனில் உள்ள மனிதர் சதித்திட்டம் போடுவார்கள்: ‘வாருங்கள் நாம் அந்த நாட்டிற்கு ஒரு முடிவை உண்டாக்குவோம்.’ மத்மேனே பட்டணமே, நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைப் பின்தொடரும். ஒரொனாயீமிலிருந்து உண்டாகும் கதறுதலைக் கேளுங்கள். அது அழிவினாலும், பேரழிவினாலும் உண்டாகும் கதறுதல். மோவாப் நொறுக்கப்படும். அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது. லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் மனங்கசந்து அழுதுகொண்டே போகிறார்கள். ஒரொனாயீமுக்கு இறங்கிப் போகும் வீதியில் அழிவின் நிமித்தம் அழுகுரல் கேட்கப்படுகிறது. தப்பி ஓடுங்கள்; உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள். வனாந்திரத்திலுள்ள புதரைப்போலாகுங்கள். மோவாபே நீ உன் சொந்தத் திறமையிலும், செல்வத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதினால், நீயும் சிறைப்பிடிக்கப்படுவாய். உன் தெய்வமான கேமோஷ் அதன் பூசாரிகளுடனும், அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும். ஒவ்வொரு பட்டணத்திற்கும் அழிக்கிறவன் வருவான். ஒரு பட்டணமும் தப்பிப்போகாது. பள்ளத்தாக்குப் பாழாக்கப்படும், சமனான பூமியும் அழிக்கப்படும். ஏனெனில் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார். மோவாபின்மேல் உப்பை தூவுங்கள். அவள் முழுவதுமாக அழிக்கப்படுவாள். அதன் பட்டணங்கள் பாழாக்கப்படும். குடியிருப்பதற்கு யாருமின்றி வெறுமையாய் கைவிடப்படும். “யெகோவாவின் வேலையை மனமில்லாமல் செய்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும். இரத்தம் சிந்தாமல் தனது வாளை வைத்திருக்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும். “மோவாப் தன் வாலிப காலத்திலிருந்து ஆறுதலாய் இருக்கிறாள். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல், மண்டி கலக்காமல் இருக்கும் திராட்சரசத்தைப்போல் இருக்கிறாள். அவள் நாடுகடத்தப்பட்டுப் போகவில்லை. ஆகையால் அவளது சுவை அப்படியே இருந்தது. அவளுடைய வாசனையும் மாறுபடவில்லை. ஆனால், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது ஜாடிகளிலிருந்து ஊற்றும் மனிதர்களை அனுப்புவேன். அவர்கள் அவளை வெளியே ஊற்றுவார்கள். அவளது ஜாடிகள் வெறுமையாக்கப்படும். அவளுடைய பாத்திரங்களும் உடைத்துப் போடப்படும். அப்பொழுது இஸ்ரயேல் பெத்தேலில் நம்பிக்கை வைத்து, வெட்கப்பட்டதுபோல, மோவாப் நாடும் கேமோஷ் தெய்வத்தைக் குறித்து வெட்கமடையும். “ ‘நாங்கள் போர்வீரர்; போரில் வலிமைமிக்க வீரர்கள்’ என்று நீங்கள் எப்படி கூறலாம்? மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும். அங்குள்ள திறமைமிக்க வாலிபர் கொலைசெய்யப்படுவார்கள்” என்று, சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய அரசர் அறிவிக்கிறார். “மோவாபின் வீழ்ச்சி மிக அருகிலுள்ளது. அவளுடைய அழிவு விரைவாய் வரும். அவளைச்சுற்றி வசிப்பவர்களும், அவளின் புகழை அறிந்தவர்களுமான நீங்கள் அவளுக்காக அழுது புலம்புங்கள். ‘வலிமைமிக்க செங்கோல் எப்படி முறிந்தது, மகிமையான கோலும் எப்படி முறிந்தது’ என்று சொல்லி அழுங்கள். “தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான். அரோயேரில் குடியிருப்பவர்களே! தெருவோரமாய் நின்று கவனித்துப் பாருங்கள்; ஓடுகிற மனிதனிடமும், தப்பி ஓடுகிற பெண்ணிடமும், ‘நடந்தது என்ன?’ என்று கேளுங்கள். மோவாப் தகர்க்கப்பட்டபடியால், அது அவமதிக்கப்பட்டிருக்கிறது. ஓலமிட்டு அழுங்கள். மோவாப் அழிக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள். சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும், தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும், கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும், கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது. மோவாபின் பலம் எடுக்கப்பட்டது. அவளுடைய புயம் முறிக்கப்பட்டது” என்று யெகோவா அறிவிக்கிறார். “மோவாப் யெகோவாவை எதிர்த்தெழும்பினாள். ஆகையால் அவளை வெறிக்கப் பண்ணுங்கள். அவள் தன் வாந்தியிலேயே புரண்டு, மற்றவர்களுக்கு அவள் ஒரு கேலிப்பொருளுமாகட்டும். மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ? நீ அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இகழ்ச்சியுடன் உன் தலையை அசைக்கிறாயே; அவள் என்ன கள்ளர்களோடுகூட பிடிக்கப்பட்டவளோ! மோவாபின் குடிகளே! நீங்கள் பட்டணங்களைவிட்டு மலைகளிலுள்ள பாறைகளின் மத்தியில் போய் குடியிருங்கள். குகை வாசலில் கூடுகட்டும் புறாவைப் போலிருங்கள். “மோவாபுடைய பெருமையைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவளுடைய ஆணவத்தையும், இறுமாப்பையும், பெருமையையும், அகங்காரத்தையும், இருதய அகந்தையையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவளுடைய திமிரை நான் அறிவேன். இது பயனற்றது” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவள் அவளுடைய தற்புகழ் பேச்சினால் எதையுமே சாதிக்கப்போவதில்லை. ஆகவே நான் மோவாபைக் குறித்துப் புலம்புவேன். மோவாப் நாடு முழுவதற்காகவும் நான் கதறுவேன். கிர் ஹெரெஸ் மனிதருக்காகவும் ஏங்கி அழுவேன். சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே! யாசேர் அழுவதைப்போல் நான் உங்களுக்காக அழுவேன். உங்கள் கிளைகள் கடல்வரை பரவி யாசேர் வரையும் எட்டியுள்ளன. உன்னுடைய பழுத்த பழங்கள் மீதும், திராட்சைப்பழ அறுப்பின் மீதும் அழிக்கிறவன் வந்துவிட்டான். மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், பழத்தோட்டங்களிலிருந்தும், மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின. ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன். மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை. சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல. “அவர்களுடைய அழுகையின் சத்தம் எஸ்போனிலிருந்து எலெயாலே வரைக்கும், யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அச்சத்தம் சோவாரிலிருந்து ஒரொனாயீம் வரைக்கும், எக்லத் ஷெலிஷியாவரைக்கும் மேலெழும்புகிறது. ஏனெனில் நிம்ரீம் நீரோடைகளும் வற்றிப்போயின. மோவாபில் உயர்ந்த இடங்களில் பலிகளைச் செலுத்தி, தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டுகிறவர்களுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. கிர் ஹெரெஸ் மனிதருக்காக அது ஒரு புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. ஏனெனில் அவர்கள் சேமித்த செல்வம் போய்விட்டது. தலைகளெல்லாம் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. தாடிகளெல்லாம் வெட்டப்பட்டிருக்கின்றன. கைகளெல்லாம் குத்திக் கீறப்பட்டிருக்கின்றன. இடுப்புகளெல்லாம் துக்கவுடையால் மூடப்பட்டிருக்கின்றன. மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும், பொதுச் சதுக்கங்களிலும் துக்கங்கொண்டாடுதலே அல்லாமல் வேறொன்றுமில்லை. ஏனெனில் நான் மோவாபை ஒருவரும் விரும்பாத ஜாடியைப்போல் உடைத்துப் போட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்! மக்கள் எவ்வளவாய் புலம்புகிறார்கள்! மோவாப் எவ்வளவாய் வெட்கத்தினால் தலைகுனிந்து நிற்கிறாள்! மோவாப் ஒரு கேலிப்பொருளானாள்; அவள் தன்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் திகிலூட்டும் பொருளானாள்.” யெகோவா கூறுவது இதுவே: “இதோ, நோக்கிப்பாருங்கள். ஒரு கழுகு, தன் சிறகுகளை மோவாபின் மேலாக விரித்து அதைத் தாக்கும்படி கீழே வருகிறது. கீரியோத் கைப்பற்றப்பட்டு அதன் பலத்த அரண்களும் பிடிக்கப்படும். அந்நாளில் மோவாபின் போர் வீரர்களின் இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப் போலிருக்கும். மோவாப் யெகோவாவை எதிர்த்தபடியினால், அவள் ஒரு நாடாக இராதபடி அழிக்கப்படுவாள். மோவாபின் மக்களே! பயங்கரமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “பயங்கரத்துக்குத் தப்பி ஓடுகிறவன், படுகுழிக்குள் விழுவான். குழியிலிருந்து வெளியே ஏறிவருகிறவன், கண்ணியில் அகப்படுவான். ஏனெனில் மோவாபுக்குரிய தண்டனையின் வருடத்தை நான் அதன்மீது கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “தப்பியோடுகிறவர்கள் எஸ்போனின் நிழலில் செய்வதறியாது தவிக்கிறார்கள். ஏனெனில் எஸ்போனிலிருந்து நெருப்பும், சீகோனின் நடுவிலிருந்து ஒரு ஜுவாலையும் புறப்பட்டிருக்கிறது. அது மோவாபின் நெற்றிகளையும் பெருமையாய் பேசுகிறவர்களின் மண்டையோடுகளையும் எரிக்கிறது. மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கேமோஷ்48:46 கேமோஷ் என்றால் மோவாபியர் வணங்கும் தெய்வம் தெய்வத்தின் மக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்; உன் மகன்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள், உன் மகள்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். “இருந்தும் பின்வரும் நாட்களில் நான் மோவாபின் செல்வங்களைத் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். மோவாபின் நியாயத்தீர்ப்பு இத்துடன் முடிகிறது. அம்மோனைப் பற்றிய செய்தி அம்மோனியரைப் பற்றியது: யெகோவா கூறுவது இதுவே: “இஸ்ரயேலுக்கு மகன்கள் இல்லையோ? அவளுக்கு வாரிசுகள் இல்லையோ? அப்படியானால், மோளேக்49:1 மோளேக் என்றால் அம்மோனிய தெய்வம், இதை வணங்குபவர்கள் மில்க்கோம் என்று அழைக்கப்பட்டனர் தெய்வம் காத் நாட்டை உரிமையாக்கிக் கொண்டது ஏன்? அதனை வணங்குகிறவர்கள் ஏன் அதன் பட்டணங்களில் வாழ்கின்றனர்? ஆயினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அம்மோனியரின் ரப்பா பட்டணத்துக்கெதிராக நான் போரின் முழக்கத்தை எழுப்புவேன். அந்த இடம் இடிபாடுகளின் குவியலாகும். அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் நெருப்பினால் எரிக்கப்படும். அப்பொழுது தங்களை வெளியே துரத்திவிட்டவர்களை, இஸ்ரயேலர் வெளியே துரத்திவிடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “எஸ்போனே! புலம்பி அழு! ஏனெனில், ஆயி பட்டணம் அழிக்கப்பட்டது. ரப்பாவின் குடிகளே! கதறியழுங்கள். துக்கவுடை உடுத்தித் துக்கங்கொண்டாடுங்கள். வேலிகளுக்குள்ளே இங்கும் அங்கும் விரைந்தோடுங்கள். ஏனெனில், மோளேகு தெய்வம் தனது பூசாரிகளுடனும் அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும். உண்மையற்ற மகளே! உன் பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமையாய்ப் பேசுகிறாய்? உன் வளம் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமை பேசுகிறாய்? நீ உன் செல்வங்களில் நம்பிக்கை வைத்து, ‘என்னைத் தாக்குபவன் யார்’ என்கிறாயே! உன்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும், உனக்குப் பயங்கரத்தைக் கொண்டுவருவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “உங்களில் ஒவ்வொருவரும் வெளியே துரத்தப்படுவீர்கள். தப்பியோடுகிறவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை. “இருந்தும் பிற்பாடு அம்மோனியரின் செல்வங்களை நான் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஏதோமைப் பற்றிய செய்தி ஏதோமைப் பற்றியது: சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “தேமானிலே ஞானம் இல்லையோ? விவேகமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனை இல்லாமல் போயிற்றோ? அவர்களுடைய ஞானம் சிதைந்து போயிற்றோ? தேதானில் குடியிருப்பவர்களே! திரும்பி தப்பியோடுங்கள். பள்ளங்களின் நடுவிலே ஒளிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஏசாவை நான் தண்டிக்கும் காலத்தில் அவன்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன். திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுச்செல்லமாட்டார்களோ? இரவுவேளையில் திருடர்கள் வந்தால், தங்கள் மனம் விரும்பிய அளவு மட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவா? ஆனால் நானோ ஏசாவை வெறுமையாக்குவேன். அவன் தன்னை மறைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவேன். அவனுடைய பிள்ளைகளும், உறவினர்களும், அயலவர்களும் அழிந்துபோவார்கள். அவனும் இல்லாமற்போவான். ‘நீ உன் அநாதைகளை விட்டுவிடு; நான் அவர்களைப் பாதுகாப்பேன். உன்னுடைய விதவைகளும் என்னில் நம்பிக்கையாய் இருக்கலாம்.’ ” யெகோவா கூறுவது இதுவே: “தண்டனையின் பாத்திரத்தில் குடிக்க வேண்டியதல்லாதவர்களும், அதில் கட்டாயமாய் குடிக்க வேண்டியிருக்கும்போது, நீ மட்டும் தண்டனையின்றி தப்பலாமோ? நீ தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாய்; நீ கண்டிப்பாக குடிக்கவேண்டும். போஸ்றா பாழாக்கப்பட்டு, பயங்கரத்திற்கும், நிந்தைக்கும், சாபத்திற்கும் உள்ளாகும். அதன் பட்டணங்கள் யாவும் என்றும் பாழாகவே கிடக்கும் என்று நான் என்னைக்கொண்டு ஆணையிடுகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். நான் யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். ஜனங்களிடம் ஒரு தூதுவன், “அதைத் தாக்குவதற்கு நீங்கள் ஒன்றுகூடுங்கள்! யுத்தம் செய்ய எழும்புங்கள்!” என்று சொல்லுவதற்காக அனுப்பப்பட்டான். இப்பொழுது நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதும், மனிதரால் அவமதிக்கப்பட்டதுமாக்குவேன். கற்பாறை பிளவுகளில் வாழ்ந்து, மேடுகளின் உயரங்களில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற உன்னை, நீ விளைவிக்கும் பயங்கரமும், உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது. நீ கழுகின் கூட்டைப்போல் உன் கூட்டை மிக உயரத்தில் கட்டினாலும், அங்கிருந்தும் நான் உன்னை கீழே விழத்தள்ளுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஏதோம் ஒரு பாழான பொருளாகும். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள். சோதோமும், கொமோராவும் அவைகளுக்கு அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்க்கப்பட்டதுபோல, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா சொல்கிறார். யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, ஏதோமை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நான் நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? என்னை எதிர்க்கக் கூடியவன் யார்? எந்த மேய்ப்பன் எனக்கெதிராக நிற்பான்? ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். அவைகளின் விழுகையின் சத்தத்தால் பூமி நடுங்கும். அவைகளின் அழுகுரல் செங்கடல்வரை எதிரொலிக்கும். இதோ! ஒருவன் கழுகைப்போல உயரப் பறந்து, போஸ்றாவின் மேலாக தனது சிறகுகளை விரித்து, அதை தாக்கும்படி கீழே வருகிறான். அந்த நாளில் ஏதோமின் போர்வீரருடைய இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப்போல் இருக்கும். தமஸ்குவைப் பற்றிய செய்தி தமஸ்குவைப் பற்றியது: “ஆமாத்தும், அர்பாத்தும், கெட்ட செய்தியைக் கேட்டதினால் மனமுடைந்து போயின. அவர்கள் மனந்தளர்ந்து, அமைதியற்ற கடலைப்போல் குழப்பமடைந்து இருக்கிறார்கள். தமஸ்கு தளர்ந்துவிட்டது. அது தப்பி ஓடுவதற்குத் திரும்பி விட்டது. திகில் அதைப்பற்றிப் பிடித்துக்கொண்டது. பிரசவிக்கும் பெண்ணின் வேதனையைப்போன்ற வேதனையும், துக்கமும் அதை ஆட்கொண்டன. புகழ்ப்பெற்ற பட்டணம் கைவிடப்படாமல் இருப்பதேன்? நான் மகிழ்ச்சிகொள்ளும் நகரம் ஏன் கைவிடப்படாமல் இருக்கிறது. நிச்சயமாக அதன் வாலிபர்கள் தெருக்களில் விழுவார்கள். அந்நாளில் எல்லாப் போர்வீரர்களும் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். நான் தமஸ்குவின் மதில்களுக்கு நெருப்பு வைப்பேன். அது பெனாதாத்தின் கோட்டைகளை எரிக்கும்.” கேதாரையும், காத்சோரையும் பற்றிய செய்தி பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தாக்கிய கேதாரையும், காத்சோர் அரசுகளையும் பற்றியது: யெகோவா கூறுவது இதுவே: “நீ எழுந்து கேதாரைத் தாக்கி கிழக்கிலுள்ள மக்களை அழித்துவிடு. அவர்களுடைய கூடாரங்களும், அவர்களுடைய மந்தைகளும் எடுத்துச் செல்லப்படும்; அவர்களுடைய எல்லா பொருட்களுடனும் ஒட்டகங்களுடனும் அவர்களுடைய குடிமனைகள் எடுத்துச் செல்லப்படும். மனிதர் அவர்களைப் பார்த்து, ‘எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம்’ என்று சொல்லிக் கூக்குரலிடுவார்கள். “காத்சோரில் வாழ்பவர்களே நீங்கள் விரைவாகத் தப்பி ஓடுங்கள்; ஆழமான குகைகளிலே தங்குங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில், “பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் உனக்கெதிராகச் சதித்திட்டமிட்டிருக்கிறான்; அவன் உனக்கெதிராகத் திட்டமிட்டு சூழ்ச்சி செய்திருக்கிறான். “தன்னம்பிக்கையுடன் சுகவாழ்வு வாழ்கிற நாட்டை எழுந்து தாக்கு” என்று யெகோவா அறிவிக்கிறார். “அது கதவோ, தாழ்ப்பாளோ இல்லாத ஒரு இனம். அதன் மக்கள் தனிமையாய் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளைப்பொருளாகும். அவர்களுடைய பெரும் மந்தைகளும் சூறைப்பொருளாகும். தூரமான இடங்களில் இருக்கிறவர்களை நான்கு திசைகளிலும் சிதறடித்து, ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பேராபத்தைக் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “காத்சோர், நரிகளுக்கு உறைவிடமாகி என்றைக்கும் பாழடைந்திருக்கும். ஒருவரும் அங்கு வாழமாட்டார்கள். ஒரு மனிதரும் அங்கு குடியிருக்கவுமாட்டார்கள்.” ஏலாமைப் பற்றிய செய்தி யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், ஏலாமைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “பாருங்கள், நான் ஏலாமின் வில்லை முறிப்பேன்; அவர்களின் பலத்தின் ஆதாரத்தையும் முறிப்பேன். நான் வானத்தில் நான்கு திசைகளிலிருந்தும், நான்கு காற்றுகளை ஏலாமுக்கு எதிராகக் கொண்டுவருவேன். நான் அவர்களை நான்கு திசைகளிலும் சிதறடிப்பேன். ஏலாம் மக்கள் நாடுகடத்தப்பட்டு போகாத ஒரு நாடும் இருக்கமாட்டாது. தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற எதிரிகளுக்கு முன்பாக நான் ஏலாமை நொறுக்குவேன். என்னுடைய கடுங்கோபத்தினால் பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வரை வாளுடன் அவர்களைப் பின்தொடர்வேன். நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்; அதன் அரசர்களையும், அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின் செல்வங்களை மீண்டும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். பாபிலோனைப் பற்றிய செய்தி 50:1 பாபிலோனியர்கள் கல்தேயர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள் பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: “அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள். கொடியை உயர்த்தி பிரசித்தப்படுத்துங்கள். ஒன்றையும் மறைக்காமல் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘பாபிலோன் கைப்பற்றப்படும். பேல் தெய்வம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும், மெரொதாக் தெய்வம் பயங்கரத்தினால் நிரப்பப்படும். பாபிலோனின் உருவச்சிலைகள் வெட்கத்துக்குள்ளாகும். அவளுடைய விக்கிரகங்களும் பயங்கரத்தினால் நிரப்பப்படும்.’ வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். ஒருவனும் அதில் வாழமாட்டான். மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள். “அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்குக் கண்ணீருடன் போவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத ஒரு நித்திய உடன்படிக்கையினால் தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள். “என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைத் தவறாய் வழிநடத்தி, மலைகளில் அலைந்து திரியப் பண்ணினார்கள். அவர்கள் மலையின்மேலும் குன்றின்மேலும் அலைந்து திரிந்து, தங்கள் இளைப்பாறும் சொந்த இடத்தை மறந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள். “பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள், பாபிலோனியரின் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்; மந்தைக்கு முன்செல்லும் வெள்ளாடுகளைப்போல் இருங்கள். ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின் ஒரு கூட்டத்தைப் பாபிலோனுக்கு விரோதமாகத் தூண்டி, எழுப்பிக் கொண்டுவருவேன். அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுத்து வருவார்கள். வடக்கிலிருந்து அது சிறைப்பிடிக்கப்படும். அவர்களுடைய அம்புகள் வெறுங்கையுடன் திரும்பிவராத திறமைவாய்ந்த போர் வீரரைப்போல் இருக்கும். பாபிலோன் சூறையாடப்படும். அதைச் சூறையாடுபவர்கள் யாவரும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே! நீங்கள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறீர்கள். சூடுமிதிக்கும் இளம் பசுவைப்போல் துள்ளிக் குதிக்கிறீர்கள்; ஆண் குதிரைகளைப்போல் கனைக்கிறீர்கள். ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள். அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால், இனி குடியேற்றப்படாமல், முற்றிலும் கைவிடப்பட்டிருக்கும். பாபிலோனைக் கடந்து போகிறவர்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு நேரிட்டவைகளைப் பார்த்துக் கேலி செய்வார்கள். வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள். எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. இது யெகோவாவின் பழிவாங்குதல். ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள். விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும். இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. முதலில் அசீரிய அரசனே அதை விழுங்கியவன். கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன். ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன். இஸ்ரயேலையோ நான் திரும்பவும் அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். எப்பிராயீம் மலைநாட்டிலும், கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான். அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். அங்கு ஒன்றும் இராது. யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். ஒன்றும் காணப்படமாட்டாது. ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள். நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம். முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது? பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய். யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாபிலோன் நாட்டில் ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு. வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். ஒன்றும் மீந்திராதபடி அவளை முழுவதுமாக அழித்துவிடுங்கள். அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது. பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள். வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள். ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். “பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். “உன் நாள் வந்துவிட்டது; நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது. அகங்காரி இடறி விழுவாள்; அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.” மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார். பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார். பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும். அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் மூடர்களாவார்கள். அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள். அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பெண்களைப் போலாவார்கள். அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். அவை சூறையாடப்படும். அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். அவை வறண்டுபோகும். ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும். ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; ஆந்தையும் அங்கு வசிக்கும். அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள். இறைவன் சோதோமையும், கொமோராவையும் அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்த்ததைப்போலவே, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். “இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது. பாபிலோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள். அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது. யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார். “ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.” யெகோவா கூறுவது இதுவே: “பாருங்கள், நான் பாபிலோனுக்கும், லேப் காமாய்51:1 லேப் காமாய் கல்தேயா நாட்டின் இரகசியப் பெயர். இது பாபிலோன் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுக்கும் எதிராக அழிக்கும் காற்றை51:1 இது பிற நாட்டு மக்கள் பாபிலோனை வென்று அனைத்து மக்களையும் விரட்டுபவர்கள். அனுப்புவேன். பாபிலோனியரைப் புடைத்து அவர்களின் நாட்டை பாழாக்குவதற்காக, நான் அந்நியரை பாபிலோனுக்கு அனுப்புவேன். அவர்கள் அவளுடைய பேரழிவின் நாளிலே, எல்லாப் பக்கங்களிலும் அவளை எதிர்ப்பார்கள். வில்வீரன் வில்லை நாணேற்றாமலும், தன் போர்க்கவசத்தை அணிந்துகொள்ளாமலும் இருக்கட்டும். அவளுடைய வாலிபரைத் தப்பவிடவேண்டாம். அவளின் படைவீரரை முழுவதுமாக அழித்துவிடுங்கள். அவர்கள் பாபிலோன் வீதிகளில் படுகாயமடைந்து, கொல்லப்பட்டு விழுவார்கள். ஏனெனில் இஸ்ரயேலும், யூதாவும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவினால் கைவிடப்படவில்லை. அவர்களுடைய நாடு இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு முன்பாகக் குற்றங்களால் நிறைந்திருந்தபோதிலும், அவர் அவர்களைக் கைவிடவில்லை. “பாபிலோனிலிருந்து தப்பி ஓடுங்கள்; உயிர் தப்பி ஓடுங்கள். அவளுடைய பாவத்தின் நிமித்தம் நீங்களும் அழிக்கப்படாதிருங்கள். யெகோவா பழிவாங்கும் வேளை வந்துவிட்டது. அவளுக்குத் தகுந்த தண்டனையை அவர் கொடுப்பார். பாபிலோன் யெகோவாவினுடைய கையில் ஒரு தங்கக் கிண்ணமாயிருந்தாள். அவள் பூமி முழுவதையும் வெறிக்கப் பண்ணினாள். நாடுகள் அவளின் திராட்சை மதுவைக் குடித்து, அதனால் இப்பொழுது மதிமயங்கிப் போனார்கள். பாபிலோன் திடீரென விழுந்து உடைந்து போவாள். அவளுக்காகப் புலம்புங்கள். அவளுடைய நோவை ஆற்ற தைலம் கொண்டுவாருங்கள். ஒருவேளை அவள் குணமாகக்கூடும். “ ‘நாங்கள் பாபிலோனைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் அவள் குணமடையமாட்டாள்; அவளைவிட்டு நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த நாட்டுக்குப் போவோம், அவளின் நியாயத்தீர்ப்பு ஆகாயம்வரை எட்டி, மேகங்களைப்போல் உயர எழும்புகிறது.’ “ ‘யெகோவா எங்கள் நியாயத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். வாருங்கள், எங்கள் இறைவனாகிய யெகோவா செய்ததை சீயோனில் அறிவிப்போம்.’ “அம்புகளைக் கூர்மையாக்குங்கள். கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவா மேதிய அரசர்களைத் தூண்டி எழுப்பியிருக்கிறார். பாபிலோனை அழிப்பதே அவருடைய நோக்கம். யெகோவா பழிவாங்குவார். அவர் தமது ஆலயத்தைத் தூய்மைக்கேடாக்கினபடியால் பழிவாங்குவார். பார்வோனின் மதில்களுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்துங்கள். காவலை மேலும் பலப்படுத்துங்கள். காவலரை நிறுத்துங்கள். மறைந்திருந்து தாக்குபவர்களை ஆயத்தப்படுத்துங்கள். யெகோவா தமது நோக்கத்தையும், பாபிலோன் மக்களுக்கு எதிரான தமது தீர்ப்பையும் நிறைவேற்றுவார். திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே! திரவியச் செல்வங்களை உடையவளே! உனது முடிவும், நீ அழிக்கப்படும் வேளையும் வந்துவிட்டன. சேனைகளின் யெகோவா தம்மேல் ஆணையிட்டுக் கூறியிருப்பதாவது: நிச்சயமாக வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப்போல் மனிதர்களால் உன்னை நிரப்புவேன். உன்னை அவர்கள் வென்று, ஆர்ப்பரிப்பார்கள். “அவர் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை படைத்து, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார். அவர் முழங்கும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார். “ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. அவைகளில் சுவாசமில்லை. அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும். யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல; ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். தமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் அவரே படைத்தார். சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். “பாபிலோனே! நீயே எனக்குத் தண்டாயுதமும், போர் ஆயுதமுமாயிருக்கிறாய். நான் உன்னைக்கொண்டு நாடுகளை அழிக்கிறேன். உன்னைக்கொண்டே அரசுகளையும் அழிப்பேன். நான் உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரைவீரனையும் அழிக்கிறேன். உன்னைக்கொண்டே தேரையும், அதன் தேரோட்டியையும் அழிக்கிறேன். நான் உன்னைக்கொண்டே ஆணையும், பெண்ணையும் அழிக்கிறேன். உன்னைக்கொண்டே முதியவனையும், இளைஞனையும் அழிக்கிறேன். உன்னைக்கொண்டே வாலிபனையும், இளம்பெண்ணையும் அழிக்கிறேன். நான் உன்னைக்கொண்டே மேய்ப்பனையும், மந்தையையும் அழிக்கிறேன். உன்னைக்கொண்டே உழவனையும், எருதுகளையும் அழிக்கிறேன். உன்னைக்கொண்டே ஆளுநர்களையும், அலுவலர்களையும் அழிக்கிறேன். “பாபிலோனையும் பாபிலோனில் வாழும் எல்லோரையும், சீயோனில் அவர்கள் செய்த எல்லாக் குற்றங்களுக்காக, நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவே அவர்களுக்குப் பதில் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். அழிக்கும் மலையே! முழு பூமியையும் அழிக்கும் மலையே! நான் உனக்கு விரோதமாகவே இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, கற்பாறை வெடிப்புகளிலிருந்து உன்னை உருட்டிவிடுவேன்; நான் உன்னை ஒரு எரிந்து முடிந்த மலையாக ஆக்குவேன். மூலைக் கல்லுக்காக பாறாங்கல்லோ, அஸ்திபாரத்துக்காக வேறெந்தக் கல்லோ உன்னிலிருந்து எடுக்கப்படமாட்டாது. நீ என்றென்றைக்கும் பாழாகவே கிடப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார். போர்க் கொடியை உயர்த்துங்கள். நாடுகளின் நடுவே எக்காளங்களை ஊதுங்கள். நாடுகளை பாபிலோனுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். அரராத், மின்னி, அஸ்கெனாஸ் ஆகிய அரசுகளை அவளுக்கு விரோதமாய் அழைப்பியுங்கள். அவளுக்கு விரோதமாக ஒரு தளபதியையும் நியமியுங்கள். வெட்டுக்கிளிகளின் கூட்டம்போல் குதிரைகளை அனுப்புங்கள். நாடுகளை அவளுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். மேதியா நாட்டின் அரசர்களையும், ஆளுநர்களையும், அதிகாரிகளையும், அவர்களுடைய ஆட்சியின் கீழிருக்கும் எல்லா நாடுகளையும் அவளுக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள். நாடானது நடுங்கித் துடிக்கிறது. ஏனெனில் யெகோவாவின் நோக்கங்கள் பாபிலோனுக்கெதிராய் நிலைநிற்கின்றன. ஒருவரும் அங்கு குடியிருக்க முடியாதபடி, பாபிலோன் பாழாக்கப்படும் பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு, அரண்களுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களின் பெலன் குன்றிப் போயிற்று. அவர்கள் பெண்களைப் போலாகிவிட்டார்கள். அவளின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. கதவுகளின் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டன. பட்டணம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதை, பாபிலோன் அரசனுக்கு அறிவிப்பதற்காக, தூதுவனுக்குப் பின் தூதுவனும், அஞ்சற்காரனுக்குப் பின் அஞ்சற்காரனும் தொடர்ந்து செல்கிறார்கள். ஆற்றின் துறைமுகங்களும் பிடிக்கப்பட்டன. புதர்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டன. போர்வீரரும் திகிலடைந்தார்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: பாபிலோன் மகள் சூடடிக்கும் காலத்தில் மிதிக்கப்படும் களத்துக்கு ஒப்பாயிருக்கிறாள். அவளை அறுவடை செய்யும் காலம் விரைவில் வரும். பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான். எங்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்கி, எங்களை வெறுமையான ஜாடியாக்கி விட்டான். இராட்சத பாம்பைப்போல எங்களை விழுங்கி, எங்கள் சுவையான உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டான். “எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை பாபிலோன்மீது சுமரட்டும்” என்று சீயோனில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள். “எங்கள் இரத்தப்பழி பாபிலோனில் குடியிருப்பவர்கள்மேல் சுமரட்டும்” என்று எருசலேம் கூறுகிறாள். ஆகையால் யெகோவா கூறுவது இதுவே: “பார், நான் உனக்காக வழக்காடிப் பழிவாங்குவேன். அவளின் கடலை வற்றச்செய்து, ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன். பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி, நரிகளின் உறைவிடமாகும். அது பயங்கரத்திற்கும், நிந்தைக்கும் உரிய பொருளும், ஒருவரும் குடியிராத இடமுமாகும். அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்; சிங்கக் குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள். ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில், நான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி, அவர்களை வெறிக்கப் பண்ணுவேன். அதனால் அவர்கள் உரத்த சத்தமிட்டுச் சிரிப்பார்கள். அதன்பின் அவர்கள் என்றுமே எழும்பாதபடி நித்திரையடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும், செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், வெள்ளாடுகளைப்போலவும் அவர்களைக் கொண்டுபோவேன். “சேசாக்கு51:41 சேசாக்கு என்பது பாபிலோனின் இரகசிய பெயர் ஆகும். எப்படிக் கைப்பற்றப்பட்டது? முழு பூமியினுடைய பெருமை எப்படிப் பிடிபட்டது? நாடுகளுக்குள் பாபிலோன் எவ்வளவு பயங்கரமாயிருக்கப் போகிறது. பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும். அதன் கொந்தளிக்கும் அலைகள் அதை மூடும். அதன் பட்டணங்கள் பாழாகி, வறண்டு பாலைவனமாகும். அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள். அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான். நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன். அவன் விழுங்கியதைத் துப்பும்படி செய்வேன். பிறநாடுகள் இனிமேல் அவன் பின்னால் அணி அணியாகப் போகமாட்டார்கள். பாபிலோனின் மதிலும் விழுந்துவிடும். “என் மக்களே! அவளிடத்திலிருந்து வெளியேறுங்கள். உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள். யெகோவாவின் கடுங்கோபத்திலிருந்து விலகி ஓடுங்கள். நாட்டில் வதந்திகள் பரவும்போது நீங்கள் கலங்கவோ, பயப்படவோ வேண்டாம். இந்த வருடத்தில் ஒரு வதந்தியும், மற்ற வருடத்தில் இன்னொரு வதந்தியும் வரும். நாட்டில் வன்செயல் பற்றிய வதந்திகளும், ஆள்பவனுக்கு விரோதமாக ஆள்பவன் எழும்புகிறான் என்ற வதந்திகளும் வரும். ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும் காலம் நிச்சயமாய் வரும். அவளுடைய முழு நாடும் அவமானப்படும். அங்கு கொலைசெய்யப்படும் யாவரும் அவளின் நடுவிலேயே விழுந்து கிடப்பார்கள். அப்பொழுது வானமும், பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோனைப் பார்த்து மகிழ்வுடன் ஆர்ப்பரிக்கும். ஏனெனில், அழிக்கிறவர்கள் வடக்கிலிருந்து வந்து, அவளைத் தாக்குவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “பாபிலோனின் நிமித்தம் பூமியெங்கும் வெட்டப்பட்டவர்கள் விழுந்ததுபோல், இஸ்ரயேலில் வெட்டப்பட்டவர்களின் நிமித்தம் பாபிலோனும் விழவேண்டும். வாளுக்குத் தப்பியவர்களே! நீங்கள் தாமதியாதீர்கள்; புறப்படுங்கள்; நீங்கள் தூரதேசத்திலிருந்து யெகோவாவை நினைவுகூருங்கள். எருசலேமையும் நினைத்துக்கொள்ளுங்கள்.” “நிந்திக்கப்பட்டதால் நாங்கள் அவமானத்துக்குள்ளானோம். வெட்கம் எங்கள் முகங்களை மூடுகிறது. ஏனெனில், அந்நியர்கள் யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்குள் புகுந்து விட்டார்கள்.” “ஆனாலும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது நான் பாபிலோனுடைய விக்கிரகங்களை தண்டிப்பேன். பாபிலோன் நாடு முழுவதிலும் காயப்பட்டோர் கதறுவார்கள். பாபிலோன், ஆகாயம்வரை எட்டினாலும், உயர்ந்த தன் கோட்டைகளைப் பலப்படுத்தினாலும், நான் அவளுக்கு விரோதமாக அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “பாபிலோனிலிருந்து ஒரு அழுகையின் சத்தம் வருகிறது. அது பாபிலோனியரின் நாட்டிலிருந்து வரும் பேரழிவின் கூக்குரல். யெகோவா பாபிலோனை அழிப்பார்; அதன் பலத்த அமளியை அடக்குவார். எதிரிகள் அலையலையாய் வெள்ளம்போல கொந்தளித்து எழும்புவார்கள். அவர்களின் குரல்களின் இரைச்சல் எதிரொலிக்கும். பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்; அவளுடைய போர்வீரர் பிடிக்கப்படுவார்கள். அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். ஏனெனில் யெகோவா பழிவாங்கும் இறைவன்; அவர் முழுமையாகப் பதில் செய்வார். நான் அவளுடைய அலுவலர்களையும், ஞானிகளையும், ஆளுநர்களையும், அதிகாரிகளையும், போர்வீரர்களையும் வெறிக்கப் பண்ணுவேன். அவர்கள் விழித்தெழாமல் என்றென்றைக்கும் நித்திரையாயிருப்பார்கள்” என்று சேனைகளின் யெகோவா என்ற பெயருடைய அரசர் கூறுகிறார். சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “பாபிலோனின் அகன்ற மதில் தரைமட்டமாக்கப்படும். அவளது உயர்ந்த வாசல்கள் தீக்கிரையாகும். மக்கள் வீணாகவே பிரயாசப்படுகிறார்கள். நாடுகளின் உழைப்பும் நெருப்புக்கு எரிபொருளாகிறது.” மாசெயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான உயர் அதிகாரி செராயாவுக்கு இறைவாக்கினன் எரேமியா கொடுத்த செய்தி இதுவே: இது யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் நான்காம் வருடத்தில் செராயா, சிதேக்கியாவிடம் பாபிலோனுக்குப் போனபோது கொடுக்கப்பட்டது. எரேமியா பாபிலோனுக்கு வரவிருக்கும் எல்லாப் பேரழிவுகளைக் குறித்தும் ஒரு புத்தக சுருளில் எழுதினான். இவை எல்லாம் பாபிலோனைக் குறித்து ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டவை. எரேமியா செராயாவிடம், “நீ பாபிலோனுக்குப் போய்ச் சேரும்போது, இதிலுள்ள எல்லா வார்த்தைகளையும் பலத்த சத்தமாக வாசிக்கக் கவனமாயிரு என்று சொன்னான். அதன்பின், ‘ஆ! யெகோவாவே, மனிதனோ மிருகமோ இந்த இடத்தில் வாழாதபடி இதை அழிப்பேன் என்றும், இது என்றென்றும் பாழாய்க்கிடக்கும் என்றும் சொல்லியிருக்கிறீரே!’ என்று சொல். நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தவுடனே, இதில் ஒரு கல்லைக் கட்டி யூப்ரட்டீஸ் ஆற்றுக்குள் எறிந்துவிடு. அதன்பின், ‘நான் பாபிலோன்மேல் கொண்டுவர இருக்கும் பேரழிவினால் பாபிலோன் மீண்டும் மேலெழாதவாறு அமிழ்ந்துபோகும்; அவளுடைய மக்களும் மடிந்துபோவார்கள்’ என்று கூறு” என்றான். எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன. எருசலேமின் வீழ்ச்சி சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின்52:1 எரேமியாவின் இவர் இந்த புத்தகத்தை எழுதிய இறைவாக்கினரான எரேமியா அல்ல மகள். சிதேக்கியாவும் யோயாக்கீம் செய்ததுபோலவே, யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார். இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான். எனவே சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதி பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தன் எல்லாப் படைகளுடனும், எருசலேமுக்கு விரோதமாக அணிவகுத்து வந்தான். அவர்கள் நகரத்துக்கு வெளியே முகாமிட்டு, அதைச் சுற்றிலும் கொத்தளங்களை அமைத்தார்கள். சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது. நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில், பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால், அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது. அப்பொழுது பட்டணத்து மதில் உடைக்கப்பட்டது. முழு இராணுவமும் தப்பி ஓடியது. பாபிலோனியர் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசனின் தோட்டத்தின் அருகே இரு சுவர்களுக்கும் இடையில் இருந்த வாசல் வழியாக, இரவு நேரத்தில் அவர்கள் பட்டணத்தைவிட்டு ஓடினார்கள். அவர்கள் யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கித் தப்பி ஓடினார்கள். ஆனால் பாபிலோனியப் படைகள் சிதேக்கியா அரசனைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் அவனைப் பிடித்தார்கள். அவனுடைய எல்லா இராணுவவீரரும் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டதால், சிதேக்கியா பிடிபட்டான். அவன் ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கே பாபிலோன் அரசன் அவனுக்குத் தீர்ப்பளித்தான். ரிப்லாவிலே பாபிலோன் அரசன், சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். யூதாவின் எல்லா அலுவலர்களையும் கொலைசெய்தான். பின்பு பாபிலோனின் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். அங்கே அவன் சாகும் நாள்வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தான். பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்த மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான். பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த எல்லா மதில்களையும் உடைத்தது வீழ்த்தியது. மெய்க்காவல் தளபதி நேபுசராதான் ஏழை மக்களுள் சிலரையும், பட்டணத்தில் மீதியாயிருந்தவர்களையும், மீதியாயிருந்த கைவினைஞர்களுடனும், பாபிலோன் அரசனிடம் சரணடைய வந்தவர்களுடனும் நாடுகடத்திச் சென்றான். ஆனால் அந்த நாட்டில் மீதியாயிருந்த ஏழை மக்களையோ, திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக மெய்க்காவல் தளபதி நேபுசராதான் அங்கே விட்டுச்சென்றான். பாபிலோனியர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலம் முழுவதையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தூபகிண்ணங்களையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தூபகலசங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும், பானைகளையும், குத்துவிளக்குகளையும், தட்டங்களையும், பானபலிக்குப் பயன்படுத்தப்பட்ட கிண்ணங்களையும் எடுத்துக்கொண்டு போனான். யெகோவாவின் ஆலயத்துக்காக அரசனாகிய சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், அதன் உருளக்கூடிய ஆதாரங்களுக்கு கீழிருந்த பன்னிரண்டு வெண்கல எருதுகள், ஆகியவற்றிலுள்ள வெண்கலத்தின் எடை நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன. ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமும், பதினெட்டு அடி சுற்றளவுமாயிருந்தன. ஒவ்வொன்றும் நான்கு விரலளவு கனமாகவும், உள்ளே குழாயாகவும் இருந்தது. தூணின் உச்சியில் ஏழரை அடி உயரமான வெண்கலக் குமிழ் இருந்தது. அது சுற்றிலும் வெண்கலத்தினாலான வலைப் பின்னல்களாலும், வெண்கல மாதுளம் பழங்களாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தன. மற்றத் தூணும், அப்படியே அதன் மாதுளம் பழங்களோடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கங்களில் தொண்ணூற்றாறு மாதுளம் பழங்கள் இருந்தன. சுற்றிலும் வலைப்பின்னலுக்கு மேலாக இருந்த மாதுளம் பழங்களின் மொத்த எண்ணிக்கை நூறு ஆகும். மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது நிலை ஆசாரியனான செப்பனியாவையும், மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான். மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில் இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஏழு அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான். காவல் தளபதி நேபுசராதான் அவர்கள் யாவரையும் ரிப்லாவிலிருந்த பாபிலோனிய அரசனிடம் கொண்டுபோனான். அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள். நேபுகாத்நேச்சார் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கையாவது: அவன் ஆட்சி செய்த ஏழாம் வருடத்தில் 3,023 யூதர்களும், நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடத்தில் எருசலேமிலிருந்து 832 பேரும் கொண்டுசெல்லப்பட்டனர். நேபுகாத்நேச்சாரின் இருபத்தி மூன்றாம் வருடத்தில், 745 யூதர்கள் காவல் தளபதியான நேபுசராதானால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் மொத்தமாக 4,600 பேர். யோயாக்கீன் விடுவிக்கப்படுதல் யூதா அரசன் யோயாக்கீன் நாடுகடத்தப்பட்ட முப்பத்தேழாம் வருடத்தில், ஏவில் மெரொதாக் பாபிலோனுக்கு அரசனானான், அவன் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதி, யூதாவின் அரசன் யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அவன் யோயாக்கீனுடன் அன்பாகப் பேசி, பாபிலோனில் தன்னோடிருந்த மற்ற அரசர்களைப் பார்க்கிலும் மேன்மையான இருக்கையை அவனுக்குக் கொடுத்தான். அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான். யோயாக்கீனின் மரண நாள்வரை, உயிர்வாழ்ந்த நாளெல்லாம், பாபிலோன் அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.