- Biblica® Open Indian Tamil Contemporary Version
நியாயாதிபதிகள்
நியாயாதிபதிகள்
நியாயாதிபதிகள்
நியா.
நியாயாதிபதிகள்
எஞ்சிய கானானியருடன் இஸ்ரயேலர் சண்டை
யோசுவா இறந்தபின் இஸ்ரயேலர் யெகோவாவிடம், “கானானியரை எதிர்த்து எங்களுக்காக சண்டையிட முதலில் போகவேண்டியது யார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு யெகோவா, “யூதா கோத்திரம் போகவேண்டும். அவர்களின் கையில் நான் இந்த நாட்டை ஒப்புக்கொடுத்திருக்கிறேன்” எனப் பதிலளித்தார்.
அப்பொழுது யூதாவின் மனிதர்கள் அவர்களின் சகோதரர்களான சிமியோனியரிடம், “நீங்கள் எங்களுடன் சேர்ந்து எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்துக்குள் சென்று கானானியருடன் சண்டையிட வாருங்கள். அதற்குப் பதில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து உங்கள் பிரதேசத்துக்காகச் சண்டையிட வருவோம்” என்றார்கள். எனவே சிமியோனியர் அவர்களுடன் சென்றார்கள்.
யூதா கோத்திரத்தினர் தாக்கியபோது யெகோவா கானானியரையும், பெரிசியரையும் அவர்கள் கையில் கொடுத்தார், அவர்கள் பேஸேக்கில் பத்தாயிரம் மனிதர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அங்கேயே அதோனிபேஸேக் அரசனைச் சந்தித்து அவனுக்கெதிராகச் சண்டையிட்டு கானானியரையும், பெரிசியரையும் முறியடித்தார்கள். அதோனிபேஸேக்கோ தப்பியோடினான். ஆனாலும் அவர்கள் அவனைத் துரத்திப் பிடித்து அவனுடைய கை பெருவிரல்களையும், கால் பெருவிரல்களையும் வெட்டிப் போட்டார்கள்.
அப்பொழுது அதோனிபேஸேக், “எழுபது அரசர்கள் தங்கள் கைகளின் பெருவிரல்களும், கால்களின் பெருவிரல்களும் வெட்டப்பட்டவர்களாய் எனது மேஜையிலிருந்துகீழ் விழும் துணிக்கைகளைப் பொறுக்கித் தின்றார்கள். இப்பொழுதோ நான் அவர்களுக்குச் செய்ததை இறைவன் எனக்குச் செய்திருக்கிறார்” என்று சொன்னான். அவர்கள் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அங்கே அவன் இறந்தான்.
யூதாவின் மனிதர் எருசலேமைத் தாக்கி அதைக் கைப்பற்றினார்கள். அவர்கள் பட்டணத்திலுள்ளவர்களை வெட்டி, அதற்கு நெருப்பு வைத்தார்கள்.
அதன்பின்பு யூதா மனிதர் நெகேவிலும், மேற்குத் திசையிலுள்ள மலையடிவாரங்களிலும் வாழ்ந்த கானானியரை எதிர்த்துச் சண்டையிடப்போனார்கள். அவர்கள் எப்ரோனில் வாழ்ந்த கானானியரை எதிர்த்து முன்னேறிப்போனார்கள். எப்ரோன் முற்காலத்தில் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. அவர்கள் அங்கே சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களைத் தோற்கடித்தார்கள். அங்கிருந்து அவர்கள் தெபீரில் வாழும் மக்களை எதிர்த்து முன்னேறிப்போனார்கள். தெபீர் முற்காலத்தில் கீரியாத் செபேர் என அழைக்கப்பட்டது.
அப்பொழுது காலேப், “கீரியாத் செபேரைத் தாக்கி கைப்பற்றுபவனுக்கு நான் என் மகள் அக்சாளை திருமணம் செய்துகொடுப்பேன்” என்றான். காலேபின் தம்பி, கேனாஸின் மகன் ஒத்னியேல் அந்நகரைக் கைப்பற்றினான். எனவே காலேப் தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
அவள் தன் கணவன் ஒத்னியேலிடம் வந்தபோது, அவன் அவளை உன் தகப்பனிடம், “நீ ஒரு வயல் நிலத்தைக் கேள்” என்று தூண்டினான். அவள் போய் தனது கழுதையிலிருந்து இறங்கியபோது காலேப் அவளிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “நீர் எனக்கு ஒரு முக்கியமான உதவிசெய்ய வேண்டும். நீர் எனக்கு நெகேப்பில் வறண்ட நிலத்தைத் தந்திருக்கிறீர். ஆகையால் நீரூற்றுகள் உள்ள நிலப்பகுதியையும் தாரும்” என்று கேட்டாள். அப்பொழுது காலேப் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீரூற்றுள்ள நிலத்தையும் அவளுக்குக் கொடுத்தான்.
கேனியனான மோசேயின் மாமனின் சந்ததிகள் யூதாவின் மக்களுடன் பேரீச்சமரங்களின் பட்டணங்களிலிருந்து புறப்பட்டு, யூதாவின் பாலைவனத்திலுள்ள மக்கள் மத்தியில் வாழும்படி போனார்கள். இந்த பாலைவனம் ஆராத்தின் நெகேபில் இருக்கிறது.
அதன்பின்பு யூதாவின் மனிதர் தங்கள் சகோதரரான சிமியோனியருடன் சென்று சேப்பாத்தில் வாழ்ந்த கானானியரைத் தாக்கி, அப்பட்டணம் முழுவதையும் அழித்தார்கள். அதனால் அந்த இடம் ஓர்மா என அழைக்கப்பட்டது. இவற்றுடன் யூதாவின் மனிதர் காசா, அஸ்கலோன், எக்ரோன் ஆகிய பட்டணங்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்றினர்.
யெகோவா யூதாவின் மனிதர்களுடன் இருந்தார். அவர்கள் மலைநாட்டைத் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள். ஆனால் சமவெளிகளில் உள்ள மக்களை விரட்ட அவர்களால் முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் இரும்பு இரதங்கள் இருந்தன. மோசே வாக்குக் கொடுத்தபடி எப்ரோன் காலேப்புக்குக் கொடுக்கப்பட்டது. அவன் அங்கிருந்து ஏனாக்கின் மூன்று மகன்களைத் துரத்திவிட்டான். ஆயினும் பென்யமீனியர் எருசலேமில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்றத் தவறிவிட்டனர். அதனால் இன்றுவரை எபூசியர் இன்னும் அங்கே பென்யமீனியருடன் வாழ்கின்றனர்.
இப்போது யோசேப்பு குடும்பத்தார் பெத்தேலைத் தாக்கினார்கள். யெகோவா அவர்களோடுகூட இருந்தார். அவர்கள் பெத்தேலுக்கு உளவுபார்க்க மனிதரை அனுப்பினார்கள். பெத்தேல் முற்காலத்தில் லூஸ் என்று அழைக்கப்பட்டது. அப்போது உளவாளிகள் பட்டணத்திலிருந்து ஒரு மனிதன் வெளியேவருவதைக் கண்டு அவனிடம், “பட்டணத்திற்குள் எப்படிப் போவது என்று எங்களுக்கு காட்டு. அப்பொழுது உன்னை நன்றாய் நடத்துவோம்” என்றனர். எனவே அவன் அவர்களுக்கு வழிகாட்டினான். அவர்கள் அந்தப் பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள். ஆனால் அந்த மனிதனையும் அவனுடைய முழுக் குடும்பத்தையும் தப்பவிட்டார்கள். அதன்பின்பு அவன் ஏத்தியரின் நாட்டிற்குப்போய் அங்கே ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு, “லூஸ்” என்று பெயரிட்டான். அது இந்நாள்வரைக்கும் அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆனால் மனாசே கோத்திரம், பெத்ஷான், தானாக், தோர், இப்லேயாம், மெகிதோ ஆகிய இடங்களிலுள்ள மக்களையும், அத்துடன் அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருக்கிற மக்களையும் துரத்திவிடவில்லை. ஏனெனில் கானானியரும் அந்த நாட்டிலேயே குடியிருப்பதற்கு உறுதிகொண்டிருந்தார்கள். ஆனால் இஸ்ரயேல் மக்கள் பெலன் கொண்டபோது, அவர்கள் கானானியரைத் தங்களுக்குக் கட்டாய வேலை செய்யும்படி நிர்பந்தப்படுத்தினார்கள். ஆயினும் அவர்களை முழுவதும் வெளியே துரத்திவிடவில்லை. எப்பிராயீம் கோத்திரத்தாரும் கேசேரில் குடியிருந்த கானானியரை வெளியே துரத்திவிடவில்லை. எனவே கானானியரோ தொடர்ந்து அவர்களுடனே வாழ்ந்துவந்தார்கள். அத்துடன் செபுலோன் கோத்திரமும் கித்ரோனிலும் நாகலோனிலும் வாழ்ந்த கானானியரைத் துரத்திவிடவில்லை. கானானியர் செபுலோனியர் மத்தியில் வாழ்ந்தனர். அவர்களைக் கட்டாய வேலைசெய்ய கீழ்ப்படுத்தினர். ஆசேர் கோத்திரம் அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப் எல்பா, ஆப்பெக், ரேகோப் பட்டணங்களில் வாழ்ந்தவர்களைத் துரத்திவிடவில்லை. இதனால் ஆசேர் மக்கள் அந்த கானானிய குடிகளின் மத்தியில் வாழ்ந்தனர். ஏனெனில் அவர்களை ஆசேர் மக்கள் துரத்திவிடவில்லை. நப்தலி கோத்திரம் பெத்ஷிமேஷிலும், பெத் ஆனாத்திலும் வாழ்ந்தவர்களைத் துரத்திவிடவில்லை. அதனால் நப்தலி கோத்திரம் அந்த நாட்டின் கானானிய குடிகளின் மத்தியில் வாழ்ந்தார்கள். பெத்ஷிமேஷிலும் பெத் ஆனாத்திலும் வாழ்ந்த கானானியர் அவர்களுக்குக் கட்டாய வேலைக்காரராயினர். எமோரியர் தாண் கோத்திரத்தை மலைநாட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்தனர். அவர்களைச் சமவெளிக்குவர அனுமதிக்கவில்லை. எமோரியர் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் தங்கள் நிலங்களை உறுதிப்படுத்தத் தீர்மானித்தனர். ஆயினும் யோசேப்பு குடும்பத்தின் பலம் அதிகரித்தபோது, எமோரியரும் கட்டாய வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எமோரியரின் எல்லை அக்கராபீம் மேடுவரை சென்று, சேலாவரை போய் அதற்கு அப்பாலும் தொடர்கிறது.
போகீமில் யெகோவாவின் தூதன்
யெகோவாவின் தூதனானவர் கில்காலில் இருந்து போகீமுக்குப் போய் சொன்னதாவது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவேன் என்று நான் வாக்களித்த நாட்டிற்கு, நான் உங்களை வழிநடத்தி வந்தேன். நான் உங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறமாட்டேன் என்றும், இந்நாட்டு மக்களோடு எந்த உடன்படிக்கையையும் நீங்கள் செய்யவேண்டாம் என்றும், அவர்களுடைய பலிபீடங்களை உடைத்துப்போடும்படியும் நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்களோ அதற்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? அதனால் இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு முன்பாக நான் அவர்களைத் துரத்தமாட்டேன்; அவர்கள் உங்கள் விலாக்களுக்கு, குத்தும் முள்ளாக இருப்பார்கள். அவர்களின் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாகவும் இருக்கும்.”
யெகோவாவின் தூதனானவர் இவற்றை எல்லா இஸ்ரயேலர்களிடமும் சொன்னபோது மக்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் அந்த இடத்தை போகீம்2:5 போகீம் என்பதன் பொருள் அழுகை என்று அர்த்தம். என்று அழைத்தார்கள். அங்கேயே அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
கீழ்ப்படியாமையும் தோல்வியும்
முன்பு யோசுவா இஸ்ரயேலரைப் போக அனுமதித்தபோது, அவர்கள் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி போனார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உரிமைச்சொத்தைப் பெறும்படி போனார்கள். மக்கள் யோசுவாவின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குப் பணிசெய்தனர். யெகோவா இஸ்ரயேலருக்காகச் செய்த எல்லாப் பெரிய செயல்களையும் கண்டிருந்த, யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த சபைத்தலைவர்களின் காலத்திலும் மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள்.
யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான். அவர்கள் திம்னாத் ஏரேஸில் அவனுடைய உரிமைச்சொத்தான நிலத்தில் அவனுடைய உடலை அடக்கம்பண்ணினார்கள். இது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைநாட்டில் இருக்கிறது.
அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது. அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர். அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள். அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள்.
அக்காலத்தில் யெகோவா நீதிபதிகளை நியமித்தார். அவர்கள் இஸ்ரயேல் மக்களை கொள்ளையரின் கைகளிலிருந்து மீட்டுக்கொண்டார்கள். ஆயினும் அவர்கள் அந்த நீதிபதிகளுக்கு செவிகொடுக்க மறுத்து, அந்நிய தெய்வங்களை வணங்கி விபசாரம் செய்தார்கள். யெகோவாவின் கட்டளைக்கு கீழ்படிந்த அவர்களின் முன்னோரின் வழியில் நடக்காமல், அவர்கள் விரைவில் வழிவிலகினார்கள். யெகோவா அவர்களுக்காக நீதிபதியை நியமித்தபோதெல்லாம், அவர் அந்த நீதிபதியோடுகூட இருந்து, அவர்களுடைய எதிரிகளிடமிருந்து நீதிபதியின் வாழ்நாளெல்லாம் அவர்களைப் பாதுகாத்தார். அவர்கள் தங்கள் பகைவர்களினால் ஒடுக்கப்பட்ட வேதனைக் குரலைக் கேட்டு யெகோவா அவர்களுக்கு இரங்கினார். ஆனால் அந்த நீதிபதி இறந்தவுடன், இஸ்ரயேல் மக்கள் திரும்பவும் தங்கள் முன்னோரைவிட தூய்மையற்ற வழியில் நடந்தார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி வணங்கி அதற்கு சேவை செய்தார்கள். அவர்கள் இப்படி தங்கள் தீய நடத்தைகளிலிருந்தும் பிடிவாதமான வழிகளிலிருந்தும் விடுபட மறுத்தார்கள்.
அப்பொழுது யெகோவா இஸ்ரயேலின்மேல் கோபம் மூண்டவராகி, “இந்த மக்கள் நான் அவர்களின் முற்பிதாக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். எனக்குச் செவிகொடுக்கவில்லை. அதனால் யோசுவா இறக்கும்போது, அழிக்காமல் விட்டுச்சென்ற எந்த நாட்டையும் இவர்களுக்கு முன்பாக துரத்திவிடமாட்டேன். ஆனால் நான் இவர்களைக்கொண்டு இஸ்ரயேலர்கள் தங்கள் முற்பிதாக்கள் நடந்ததுபோல, யெகோவாவின் வழியைக் கைக்கொண்டு அதில் நடக்கிறார்களோ, இல்லையோ என இஸ்ரயேலரைச் சோதிப்பேன்” என்றார். எனவே யெகோவா அந்த நாடுகளை அப்படியே தொடர்ந்து இருக்க விட்டிருந்தார்; அவர்களை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடுக்கவோ, உடனே துரத்திவிடவோ இல்லை.
கானானில் எந்த யுத்தங்களிலும் அனுபவமில்லாத இஸ்ரயேல் மக்களை சோதிப்பதற்கென, யெகோவா விட்டுவைத்த நாடுகளாவன: யுத்தத்தில் முன்னனுபவமில்லாத இஸ்ரயேலரின் சந்ததிகளுக்கு யுத்த முறையைக் கற்றுக்கொடுக்கவே அவர் இவ்வாறு செய்தார். அந்த நாடுகளாவன: ஐந்து பெலிஸ்திய ஆளுநர்கள், எல்லா கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலை தொடங்கி ஆமாத் வரைக்கும் உள்ள லெபனோன் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோரே. மோசேயின் மூலம் இஸ்ரயேலரின் முற்பிதாக்களுக்கு யெகோவா கொடுத்த அவருடைய கட்டளைகளுக்கு, இஸ்ரயேலர் கீழ்ப்படிகிறார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவே இவர்கள் விட்டுவைக்கப்பட்டனர்.
இதன்படியே இஸ்ரயேலர் கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்கள் மத்தியில் வாழ்ந்துவந்தனர். இஸ்ரயேலர் அவர்களுடைய மகள்களைத் தாங்கள் திருமணம் செய்து, தங்கள் மகன்களை அவர்களுடைய மகள்களுக்குத் திருமணம் செய்துகொடுத்து, அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்தார்கள்.
ஒத்னியேல்
இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவற்றைச் செய்தார்கள். அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, பாகாலுக்கும், அசேரா தெய்வத்திற்கும் பணிசெய்தார்கள். இஸ்ரயேலருக்கு எதிராக யெகோவா கோபமடைந்தார். அதனால் அவர் அவர்களை ஆராம் நகராயீமின் அரசன் கூசான் ரிஷாதாயீமின் கையில் விற்றுப்போட்டார். இஸ்ரயேலர் எட்டு வருடங்கள் அவனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர். ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதபோது, அவர் அவர்களை விடுவிப்பதற்காக விடுதலைவீரனை எழுப்பினார். கேனாசின் மகனும் காலேபின் தம்பியுமான ஒத்னியேலே அவன். அவனே அவர்களை விடுவித்தான். யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வந்தார். அதனால் அவன் இஸ்ரயேலருக்கு நீதிபதியாகி யுத்தத்திற்குப் போனான். யெகோவா மெசொப்பொத்தோமியாவின்3:10 மெசொப்பொத்தோமியாவின் என்பது மூல மொழியில் ஆராமின் அரசன் என உள்ளது. அரசன் கூசான் ரிஷாத்தாவை ஒத்னியேல் கையில் கொடுத்தார். ஒத்னியேல் அவனைத் தோற்கடித்தான். கேனாசின் மகன் ஒத்னியேல் இறக்கும்வரை நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாக இருந்தது.
ஏகூத்
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள், அவர்கள் இந்தத் தீமையைச் செய்ததால் யெகோவா மோவாப்பின் அரசன் எக்லோனை இஸ்ரயேலருக்கு மேலாக பலக்கச் செய்தார். எக்லோன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டுவந்து இஸ்ரயேலரைத் தாக்கினான். அவர்கள் பேரீச்சமரங்களின் பட்டணத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள். இஸ்ரயேலர்கள் பதினெட்டு வருடங்களாக மோவாப் அரசன் எக்லோனுக்குக்கீழ் அடங்கி இருந்தனர்.
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதனர். அவர் அவர்களுக்கு ஏகூத் என்னும் ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இடதுகை பழக்கமுடைய இவன் பென்யமீனியனான கேராவின் மகன். இஸ்ரயேலர் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பம் கொடுக்கும்படி அவனை அனுப்பியிருந்தார்கள். ஏகூர் இருபக்கமும் கூர்மையுடைய ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு வாளைச்செய்து தனது வலது தொடையில் அதைக் கட்டி, தனது உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தான். அவன் மோவாப் அரசன் எக்லோனுக்கு கப்பத்தைக் கொடுத்தான். எக்லோன் மிகவும் பருத்த மனிதன். ஏகூத் கப்பத்தைக் கொடுத்தபின் அதைச் சுமந்துவந்த தன் மனிதர்களை அவர்களுடைய வழியில் அனுப்பிவிட்டான். கில்காலில் இருந்த விக்கிரகங்கள் இருந்த இடம்வரை சென்ற அவன் திரும்பிவந்து, “அரசனே, உம்மிடம் சொல்லவேண்டிய ஒரு இரகசிய செய்தி என்னிடம் உண்டு” என்றான்.
அதற்கு அரசன்: “அமைதி” என்றவுடன், அவனுடைய வேலையாட்கள் அவனைவிட்டுப் போனார்கள்.
தனது அரண்மனையின் குளிர்ச்சியான மேலறையில் தனிமையாக உட்கார்ந்துகொண்டிருந்த அவனிடம் ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து பெற்ற ஒரு செய்தி இருக்கிறது” என்றான். அரசன் தனது நாற்காலியிலிருந்து எழுந்தபோது, ஏகூத் தனது இடதுகையை நீட்டி, தனது வலது தொடையில் கட்டியிருந்த வாளை உருவி, அதனால் அரசனின் வயிற்றில் குத்தினான். வாளுடன்கூட கைப்பிடியும் அவன் வயிற்றில் புகுந்தது. வாளின் முனை அவன் முதுகினால் வெளியே வந்தது. ஏகூத் அந்த வாளை வெளியே இழுக்கமுடியாத அளவுக்கு கொழுப்பு அதை மூடிக்கொண்டது. பின்பு ஏகூத் புறப்பட்டு, மேலறையின் கதவுகளைத் தனக்குப் பின்னாகப் பூட்டிக்கொண்டு மண்டபத்துக்குப் போனான்.
அவன் போனபின் பணியாட்கள் வந்து மேலறையின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “அவர் வீட்டினுள்ளறையில் மலசலம் கழிக்கும்படி போயிருக்கலாம்” என்று எண்ணினார்கள். அவர்கள் அதிக நேரம் காத்திருந்தார்கள். அரசன் அறையின் கதவுகளைத் திறக்காததால் அவர்கள் ஒரு திறவுகோலை எடுத்து கதவுகளைத் திறந்தார்கள். அங்கே தங்கள் தலைவன் இறந்து தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள்.
அவர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையிலேயே ஏகூத் தப்பியோடிவிட்டான். அவன் விக்கிரகங்களுள்ள இடத்தைக் கடந்துபோய் சேயீருக்குத் தப்பியோடினான். அவன் அங்கே போனபோது, எப்பிராயீம் மலைநாட்டில் ஒரு எக்காளத்தை ஊதினான். இஸ்ரயேலர் மலைகளிலிருந்து இறங்கி அவனுடன் போனார்கள். அவன் அவர்களை யுத்தத்திற்கு வழிநடத்திச் சென்றான்.
அவன் இஸ்ரயேலரைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்” என உத்தரவிட்டு, “உங்கள் எதிரியான மோவாபை யெகோவா இன்று உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்” என்றான். எனவே அவர்கள் ஏகூத்தைப் பின்பற்றிப்போய் மோவாப்புக்கு எதிரேயுள்ள யோர்தானின் துறைமுகத்தைக் கைப்பற்றினர். அவர்கள் ஒருவனையும் கடந்து தப்பியோட விடவில்லை. அந்த நாளில் அவர்கள் மோவாபியரில் கிட்டத்தட்ட பத்தாயிரம்பேரை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் ஆற்றலும், வலிமையும் நிறைந்தவர்கள். ஒரு மனிதன்கூட தப்பிப் போகவில்லை. அந்த நாளிலே மோவாப் இஸ்ரயேலின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டது. எண்பது வருடங்களாக நாட்டில் சமாதானம் நிலவியது.
சம்கார்
ஏகூத்துக்குப் பின், ஆனாத்தின் மகன் சம்கார் நீதிபதியாக வந்தான். அவன் மாட்டை அடிக்கும் கம்பினால் அறுநூறு பெலிஸ்தியரை அடித்து வீழ்த்தினான். அவனும் இஸ்ரயேலைக் காப்பாற்றினான்.
தெபோராள்
ஏகூத் இறந்தபின் இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் கொடுமையானதைச் செய்தார்கள். எனவே யெகோவா அவர்களை ஆத்சோரில் ஆட்சிசெய்கிற கானானியரின் அரசனாகிய யாபீனுக்கு விற்றுப்போட்டார். அவனுடைய படைத்தளபதி சிசெரா அரோஷேத் ஹகோயீமில் வசித்தான். யாபினிடம் தொளாயிரம் இரும்பு ரதங்கள் இருந்தன. அவன் இஸ்ரயேலரை இருபது வருடங்களாக கொடூரமாக ஒடுக்கினான். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதனர்.
அக்காலத்தில் லபிதோத்தின் மனைவி தெபோராள் இறைவாக்கினளாக இருந்தாள். அவளே இஸ்ரயேலரை நீதி விசாரித்து வந்தாள். எப்பிராயீம் மலையில் ராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராளின் பேரீச்ச மரத்தின்கீழ் அவள் நீதிமன்றத்தைக் கூட்டுவாள். இஸ்ரயேலர் தமது வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள அங்கே அவளிடம் வருவார்கள். அவள் நப்தலியிலிருக்கும் கேதேசிலிருந்து அபினோமின் மகன் பாராக்கை வரவழைத்து அவனிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறதாவது: நீ நப்தலியிலும், செபுலோனிலும் பத்தாயிரம் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவர்களை வழிநடத்தி தாபோர் மலைக்குப்போ. நான் யாபீனின் படைத்தளபதி சிசெராவையும், அவனுடைய இரதங்களையும், அவனுடைய படையையும் கீசோன் ஆற்றண்டையில் வரும்படி தூண்டி உன்னுடைய கையில் ஒப்படைப்பேன் என்கிறார்” என்றாள்.
அப்பொழுது பாராக் அவளிடம், “நீ என்னுடன் வந்தால் நான் போவேன்; நீ என்னுடன் வராவிட்டால் நானும் போகமாட்டேன்” என்று சொன்னான்.
அதற்கு தெபோராள், “சரி; நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இவ்விதம் நீ போவதானால் அந்தப் புகழ் உன்னுடையதாயிராது. யெகோவா சிசெராவை ஒரு பெண்ணின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றாள். அதன்பின் தெபோராள் பாராக்குடன் கேதேஸுக்குப் போனாள். அங்கே பாராக் செபுலோனியரையும், நப்தலியினரையும் கேதேஸுக்கு வரவழைத்தான். அப்பொழுது பத்தாயிரம் ஆண்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடன் தெபோராளும் சென்றாள்.
கேனியனான ஏபேர் மற்ற கேனியர்களை விட்டுப் பிரிந்திருந்தான், கேனியர் மோசேயின் மைத்துனனான ஒபாபின் சந்ததியில் வந்தவர்கள், அவன் கேதேசிற்கு அருகிலுள்ள சானாயிமில் இருக்கிற பெரிய மரத்தடியில் குடியிருந்தான்.
அபினோமின் மகன் பாராக், தாபோர் மலைக்குமேல் போயிருக்கிறான் என்று சிசெராவுக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது சிசெரா தன்னிடமிருந்த தொளாயிரம் இரும்பு ரதங்களையும், தன்னுடன் இருந்த எல்லா மனிதர்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு அரோஷேத் ஹகோயீமிலிருந்து கீசோன் ஆற்றருகே வந்தான்.
தெபோராள் பாராக்கிடம், “நீ போ! இதுவே சிசெராவை யெகோவா உன் கையில் தரும் நாள், உனக்கு முன்னே யெகோவா போகவில்லையா?” என்றாள். எனவே பாராக்கும் அவனுடனிருந்த பத்தாயிரம் போர்வீரர்களும் தாபோர் மலையை விட்டு கீழே இறங்கினார்கள். பாராக் முன்னேறுகையில் யெகோவா சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய இராணுவத்தையும் வாளினால் முறியடித்தார். அப்பொழுது சிசெரா தன் தேரைக் கைவிட்டு ஓடித் தப்பினான்.
ஆனால் பாராக் ரதங்களையும், இராணுவத்தையும் அரோஷேத் ஹகோயிம் வரைக்கும் துரத்திச்சென்றான். சிசெராவின் எல்லாப் படைகளும் வாளுக்கு இரையாகின. ஒருவனும் மிஞ்சவில்லை. ஆயினும் சிசெரா கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்குள் ஓடினான். ஏனெனில் ஆத்சோரின் அரசன் யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வம்சத்துக்கும் சிநேகபூர்வமான உறவு இருந்தது.
அப்பொழுது யாகேல் வெளியில் சென்று சிசெராவைச் சந்தித்து அவனிடம், “வாரும் ஐயா! என் கூடாரத்திற்குள் வாரும். பயப்படவேண்டாம்” என்றாள். எனவே அவன் கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது அவள் அவனை ஒரு போர்வையால் மூடிவிட்டாள்.
அவன், “நான் தாகமாயிருக்கிறேன். தயவுசெய்து தண்ணீர் தா” என்றான். அவள் பாலுள்ள தோல் குடுவையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக்கொடுத்து அவனை மூடிவிட்டாள்.
“அவ்வேளை சிசெரா அவளிடம், நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று சொல் என்றான்.”
ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான்.
சிசெராவை துரத்திவந்த பாராக் அப்போது அங்கு வந்துசேர்ந்ததும், யாகேல் சென்று அவனைச் சந்தித்தாள். “வாரும் நீர் தேடும் மனிதனை உமக்குக் காட்டுகிறேன்” என்றாள். எனவே அவன் அவளுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவனுடைய நெற்றியில் கூடார முளை அடிக்கப்பட்டு, இறந்திருக்கக் கண்டான்.
அந்த நாளில் இறைவன் இஸ்ரயேலர் முன்பாக கானானிய அரசன் யாபீனை அடக்கினார். அதோடு இஸ்ரயேலரின் கரம் கானானிய அரசன் யாபீனை அழிக்கும்வரை மென்மேலும் வலிமையடைந்தது.
தெபோராளின் பாடல்
அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
“யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும்,
மக்கள் தங்களை மனமுவர்ந்து ஒப்படைத்ததற்காகவும்
யெகோவாவைத் துதியுங்கள்!
“அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்!
யெகோவாவை பாடுவேன், நான் பாடுவேன்.
இஸ்ரயேலின், இறைவனாகிய யெகோவாவுக்கு, இசை மீட்டுவேன்.
“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும்,
ஏதோம் நாட்டைவிட்டு அணிவகுத்துச் சென்றபோதும் பூமி அதிர்ந்தது.
வானங்கள் பொழிந்தன.
மேகங்கள் தண்ணீரை கீழே பொழிந்தன.
சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன.
இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.
“ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும்,
யாகேலின் நாட்களிலும் வீதிகள் கைவிடப்பட்டிருந்தன.
பயணிகள் சுற்றுப்பாதையில் சென்றார்கள்.
இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று.
தெபோராளாகிய நான் இஸ்ரயேலில் தாயாக எழும்பும்வரை
அது நின்றுபோயிற்று.
எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ,
அப்போதே யுத்தமும் பட்டண வாசலில் வந்தது.
இஸ்ரயேலில் உள்ள நாற்பதாயிரம் பேரிடம்
கேடயமோ ஈட்டியோ காணப்படவில்லை.
எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது.
மக்களுக்குள்ளே விரும்பிவந்த தொண்டர்களுடனும் இருக்கிறது.
யெகோவாவைத் துதியுங்கள்!
“வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே,
சேணத்தின் கம்பளத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களே,
வீதி வழியாய் நடப்பவர்களே,
யோசித்துப் பாருங்கள். தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின்5:11 பாடகரின் அல்லது வில்வீரரின். குரலையும்.
அவர்கள் யெகோவாவின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள்.
இஸ்ரயேலின் வீரர்களின் நேர்மையான செயல்களைச் சொல்கிறார்கள்.
“அப்பொழுது யெகோவாவிடம் மக்கள்
பட்டண வாசலுக்கு சென்றார்கள்.
விழித்தெழு, விழித்தெழு தெபோராளே!
விழித்தெழுந்து பாட்டுப்பாடு.
பாராக்கே எழுந்திரு!
அபினோமின் மகனே உன்னை சிறைப்பிடித்தவர்களைச் சிறைபிடி.
“தப்பியிருந்த மனிதர் உயர்குடிமக்களிடம் வந்தார்கள்.
யெகோவாவின் மக்கள் வல்லவர்களுடன் என்னிடம் வந்தார்கள்.
அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள்.
பென்யமீனியர் உன்னைப் பின்தொடர்ந்தவர்களுடன் சேர்ந்தார்கள்.
மாகீரில் இருந்து தலைவர்களும் வந்தார்கள்.
செபுலோனிலிருந்து அதிகாரிகளும் வந்தார்கள்.
இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள்.
ஆம்! இசக்கார் கோத்திரத்தார் பாராக்கின்
பின்னே பள்ளத்தாக்கில் விரைந்து சென்றார்கள்.
ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள்
தங்கள் இருதயத்தை ஆராய்ந்தார்கள்.
ஏன் நீ தொழுவங்களுக்குள் இருக்கிறாய்?
மந்தைகளைக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்பதற்காகவா?
ரூபனின் பிரிவைச் சார்ந்தவர்கள்
தங்கள் இருதயத்தை அதிகமாய் ஆராய்ந்தார்கள்.
கீலேயாத் யோர்தானின் மறுகரையில் தங்கியிருந்தது.
தாண், ஏன் கப்பல்களின் அருகே தயங்கி நின்றான்?
ஆசேர் கடற்கரையில் தரித்து,
சிறுவளைகுடா பகுதிகளில் தங்கியிருந்தான்.
செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை
அப்படியே நப்தலி மனிதரும் வயலின் மேடுகளில் நின்றனர்.
“அரசர்கள் வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள்.
கானானின் அரசர்கள் மெகிதோவின் தண்ணீர் அருகே தானாக்கில் யுத்தம் செய்தார்கள்.
ஆனால் அவர்கள் வெள்ளியையோ,
கொள்ளையையோ சுமந்து செல்லவில்லை.
வானங்களில் இருந்து நட்சத்திரங்கள் சண்டையிட்டன.
அவை தங்கள் வழிகளிலிருந்து சிசெராவுக்கு எதிராகச் சண்டையிட்டன.
கீசோன் நதி அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
பூர்வகாலத்து கீசோன் நதி, அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
ஆகவே என் ஆத்துமாவே நீ வலிமைபெற்று முன்னேறிப் போ;
குதிரைகளின் குளம்புகள் மூழ்கின.
அவனுடைய வலிமையான குதிரைகள் பாய்ந்து செல்கின்றன.
‘மேரோசைச் சபியுங்கள், அதன் மக்களைக் கடுமையாகச் சபியுங்கள்’
என்று யெகோவாவின் தூதனானவர் சொல்கிறார்.
‘ஏனெனில் அவர்கள் யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை;
வலியவர்களுக்கு எதிராக யெகோவாவுக்கு உதவிசெய்ய வரவில்லை.’
“பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்,
கூடாரங்களில் வாழும் பெண்களுக்குள்
கேனியனான ஏபேரின் மனைவி அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்;
அவள் உயர்குடியினருக்குரிய கிண்ணத்திலே தயிர் கொண்டுவந்தாள்.
அவளது கை கூடாரத்தின் முளையையும்,
வலதுகை தொழிலாளியின் சுத்தியலையும் எட்டி எடுத்தது.
அவள் சிசெராவை அடித்தாள், அவனுடைய தலையை நொறுக்கினாள்;
அவள் அவனுடைய நெற்றியைக் குத்திச் சிதறடித்தாள்.
அவள் காலடியில் அவன் சரிந்து விழுந்தான்;
அவன் விழுந்து அங்கேயே கிடந்தான்.
அவளது காலடியில் சரிந்தான், விழுந்தான்;
அவன் சரிந்த இடத்திலே விழுந்து செத்தான்.
“ஜன்னல் வழியே சிசெராவின் தாய் எட்டிப்பார்த்தாள்;
‘ஏன் அவனுடைய இரதம் அங்கே இன்னும் வரவில்லை?
அவனுடைய இரதங்களின் ஓட்டம் ஏன் இன்னும் தாமதிக்கிறது?’
என பலகணியின் பின்நின்று புலம்பினாள்.
அவளுடைய தோழிகளில் ஞானமுள்ளவள் பதிலளித்தாள்;
அவளும் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
‘அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடித்து பங்கிடுகிறார்களோ,
ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள்,
சிசெராவுக்கு கொள்ளையிட்ட பலவர்ண உடைகள்,
கொள்ளையிட்ட சித்திர வேலைப்பாடுள்ள பலவர்ண உடைகள்,
கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு
மிக நுட்பமான சித்திர வேலைப்பாடுள்ள உடைகளையும் கொடுக்க வேண்டாமோ?’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
“எனவே யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்கள் இப்படியே அழியட்டும்!
உம்மில் அன்புகூருகிறவர்களோ தன் கெம்பீரத்தில் உதிக்கும்
சூரியனைப்போல் இருக்கட்டும்.”
இதன்பின்பு நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாய் இருந்தது.
கிதியோன்
இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தார்கள். அவர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார். மீதியானியரின் வலிமையினால் இஸ்ரயேலுக்கெதிரான ஒடுக்குதல் மிகுதியாய் இருந்தது. அதனால் இஸ்ரயேலர் மலைகளின் வெடிப்புகளிலும், குகைகளிலும், அரண்களிலும் தங்களுக்கென கோட்டைகளை அமைத்துக்கொண்டனர். இஸ்ரயேலர் பயிரிடும் போதெல்லாம் மீதியானியரும், அமலேக்கியரும் மற்றும் கிழக்குத்திசை இனமக்கள் எல்லோரும் நாட்டிற்குள் படையெடுத்தார்கள். அங்கே அவர்கள் முகாமிட்டு பயிர்களை காசாவரை அழித்தனர். இஸ்ரயேலருக்கோ செம்மறியாடுகள், கால்நடைகள், கழுதைகள் உட்பட உயிர்வாழும் எவற்றையும் விட்டுவைக்கவில்லை. தங்களிடமுள்ள வளர்ப்பு மிருகங்களோடும், கூடாரங்களோடும், வெட்டுக்கிளி கூட்டங்கள்போல் வந்தார்கள். அந்த மனிதர்களையும், ஒட்டகங்களையும் எண்ண முடியாதிருந்தது. அவர்கள் நாட்டை சூறையாடி அழிக்கும்படி அதன்மேல் படையெடுத்தார்கள். இவ்வாறு மீதியானியர் இஸ்ரயேலரை மிகவும் ஏழ்மையாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலர் தங்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் அழுதார்கள்.
மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது, அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன். நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான்.
அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார்.
அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான்.
யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார்.
அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார்.
அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார்.
உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான்.
யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான். யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார். கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான்.
ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார்.
எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம்6:24 யெகோவாவே என்றால் சமாதானம் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது.
அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு. அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார்.
எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான்.
அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர்.
பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள்.
ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான். அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள்.
சிறிது காலத்தின்பின், மீதியானியர் எல்லோரும், அமலேக்கியரும், கிழக்கு நாட்டு மக்களும் இஸ்ரயேலரை எதிர்த்து ஒன்றுகூடினர். அவர்கள் யோர்தானைக் கடந்துசென்று யெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் கிதியோன்மேல் வந்தார். எனவே அவன் எக்காளம் ஊதி அபியேசரியரைத் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தான். பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள்.
அப்பொழுது கிதியோன் இறைவனிடம், “நீர் வாக்குக் கொடுத்தபடி இஸ்ரயேலை எனது கைகளினால் மீட்பது உண்மையானால், நான் கம்பளியை களத்தில் போடுவேன்; பனி, கம்பளியில் மட்டும் பெய்து எல்லா நிலமும் காய்ந்து காணப்பட்டால், நீர் சொன்னபடி இஸ்ரயேலை என் கையினால் மீட்பீர் என்பதை அறிந்துகொள்வேன்” என்றான். கிதியோன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அது அப்படியே நடந்திருந்தது. உடனே அவன் கம்பளியைப் பிழிந்து ஒரு கிண்ணம் அளவு தண்ணீரை எடுத்தான்.
பின்பும் கிதியோன் இறைவனிடம், “நீர் என்னோடு கோபங்கொள்ள வேண்டாம். நான் உம்மிடம் கேட்க இன்னும் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கம்பளியைக்கொண்டு இன்னும் ஒருமுறை சோதித்துப்பார்க்க இடங்கொடும். இம்முறை கம்பளி காய்ந்திருக்கவும் நிலமெல்லாம் பனியால் நனைந்திருக்கவும் செய்யும்” என்றான். அந்த இரவும் இறைவன் அவ்வாறே செய்தார். கம்பளி மாத்திரம் காய்ந்தும், நிலமெல்லாம் பனியால் நனைந்தும் இருந்தது.
கிதியோன் மீதியானியரைத் தோற்கடித்தல்
அதிகாலையில் கிதியோன் என்னும் யெருபாகாலும் அவனுடைய எல்லா மக்களும் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள். மீதியானியரின் முகாமோ இவர்களுக்கு வடக்கே, மோரே மலைக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது. யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே. ஆகையால் நீ மக்களுக்கு, ‘உங்களுக்குள் பயத்தினால் நடுங்குபவர்கள் இருந்தால் கீலேயாத் மலையை விட்டுப் போய்விடலாம்’ என்று அறிவி” என்றார். எனவே இருபத்து இரண்டாயிரம்பேர் கீலியாத் மலையை விட்டுப் போனார்கள். பத்தாயிரம் பேர் மட்டும் எஞ்சியிருந்தார்கள்.
தொடர்ந்து யெகோவா கிதியோனிடம், “மனிதர் இன்னும் அளவுக்கதிகமாயிருக்கிறார்கள். அவர்களை தண்ணீர் அருகே கொண்டுபோ; நான் அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரலாம்’ என்றால் அவன் உன்னுடன் வரட்டும். நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரக்கூடாது’ என்றால் அவன் வரக்கூடாது” என்றார்.
எனவே கிதியோன் அந்த மனிதரைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நாக்கால் நக்கி நாயைப்போல் தண்ணீர் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்கால்களை ஊன்றி தண்ணீர் குடிப்போரை மற்ற பக்கமுமாக நிறுத்திவை” என்றார். அவ்வாறு தண்ணீரை தங்கள் கைகளால் அள்ளி நாயைப்போல நாக்கால் நக்கி குடித்தவர்கள் முந்நூறுபேர். எஞ்சியோர் தங்கள் முழங்கால்களை ஊன்றி வாயைத் தண்ணீரில் வைத்துக் குடித்தனர்.
யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார். எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள்.
அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது. அதே இரவில் யெகோவா கிதியோனிடம், “இப்பொழுதே நீ எழுந்து அவர்களுடைய முகாமிற்கு எதிராக போ, ஏனெனில் நான் அதை உன் கையில் கொடுக்கப்போகிறேன். தாக்குவதற்கு நீ பயந்தால், உனது பணியாளான பூராவுடன் மீதியானியரின் முகாமுக்குப்போ. அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நீ கேள். அதற்குப்பின் அந்த முகாமைத் தாக்குவதற்கு நீ துணிவுகொள்வாய்” என்றார். அவ்வாறே அவனும் அவன் பணியாளன் பூராவும் முகாமின் காவல் அரண் இருக்கும் இடம்வரைக்கும் போனார்கள். அந்தப் பள்ளத்தாக்கிலே மீதியானியர், அமலேக்கியர், கிழக்கு நாட்டு மக்கள் எல்லோரும் வெட்டுக்கிளிக் கூட்டம்போல தங்கியிருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்கள் கணக்கிடமுடியாத கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தன.
கிதியோன் முகாமை வந்துசேர்கையில் ஒருவன் தான் கண்ட கனவை தன் சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “நான் ஒரு கனவு கண்டேன்; கனவில் சுடப்பட்ட ஒரு வட்டமான வாற்கோதுமை அப்பம் உருண்டு மீதியானியரின் முகாமின்மேல் வந்தது. அது மிகவும் வல்லமையுடன் வந்து கூடாரத்தைத் தாக்கியபோது கூடாரம் மறுபக்கமாக புரட்டி வீழ்த்தப்பட்டது,” எனச் சொன்னான்.
அப்பொழுது அவனுடைய சிநேகிதன், “இது இஸ்ரயேலனான யோவாசின் மகன் கிதியோனின் வாளேயல்லாமல் வேறொன்றுமல்ல. இறைவன் மீதியானியரையும், இந்த முகாம் முழுவதையுமே அவனுடைய கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என்று சொன்னான்.
கிதியோன் இந்த கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்டபோது, இறைவனை வழிபட்டான். அவன் இஸ்ரயேலரின் முகாமுக்குள் திரும்பிப்போய், “எழும்புங்கள், யெகோவா மீதியானியருடைய முகாமை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்” என்று கூப்பிட்டுச் சொன்னான். எனவே அவன் அந்த முந்நூறுபேரையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்காளங்களையும், வெறுமையான பானைக்குள் தீப்பந்தங்களையும் வைத்துக் கொடுத்தான்.
பின் அவன் அவர்களிடம், “என்னைக் கவனித்து என் வழியைப் பின்பற்றுங்கள். நான் முகாமின் அருகில் சென்று செய்வதைப்போலவே ஒன்றும்விடாமல் நீங்களும் செய்யுங்கள். நானும் எனது பகுதியில் இருப்பவர்களும் எங்கள் எக்காளங்களை ஊதியவுடன், நீங்கள் எல்லோரும் முகாமைச் சுற்றி உங்கள் எக்காளத்தை ஊதி, ‘யெகோவாவுக்காவும் கிதியோனுக்காகவும்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொன்னான்.
நள்ளிரவு காவல் தொடங்கும் நேரத்தில், அவர்கள் காவலர்களை மாற்றிய சிறிது நேரத்தில், கிதியோனும் அவனுடன் நின்ற நூறுபேரும் முகாமின் அருகே போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள். ஒவ்வொருவனும் முகாமைச் சுற்றி தன் நிலையில் நின்றான். அப்பொழுது மீதியானியர் எல்லோரும் கதறிக்கொண்டு தப்பியோடினார்கள்.
முந்நூறுபேரும் எக்காளங்களை ஒலித்துக் கொண்டிருந்தபோதே யெகோவா முகாம் முழுவதிலும் உள்ள மனிதர் ஒருவரையொருவர் தாக்கும்படி செய்தார். செரேராவை நோக்கி பெத் சித்தாவுக்கும் சாபாத்திற்கும், தேபாவுக்கும் அருகேயுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரைக்கும் மீதியானியரின் யுத்தபடை தப்பி ஓடியது. நப்தலி, ஆசேர், மனாசே ஆகிய இஸ்ரயேலரும் அழைக்கப்பட்டு ஒன்றுகூடினர். அவர்கள் மீதியானியரைத் துரத்திச் சென்றனர். கிதியோன் எப்பிராயீம் மலை நாடெங்கும் தூதுவரை அனுப்பி, “மீதியானியருக்கு எதிராக இறங்கி வாருங்கள்; வந்து அவர்களுக்குமுன் பெத் பாராவுக்குப் போய் யோர்தானுக்கு முன்னே துறைகளைக் கைப்பற்றுங்கள்” என்றான்.
அதன்படி எப்பிராயீம் மனிதர்கள் எல்லோரும் வந்து, பெத் பாரா வரையிருக்கும் யோர்தானுக்கு முன்னேயுள்ள துறைகளை கைப்பற்றினார்கள். அதோடு அவர்கள் மீதியானியரின் இரண்டு தலைவர்களான ஓரேப், சேப் என்பவர்களையும் பிடித்தார்கள்; அவர்கள் ஓரேபை, ஓரேப் என்னும் கற்பாறையிலும், சேபை சேப் என்னும் திராட்சை ஆலையிலும் கொலைசெய்தார்கள். பின் மீதியானியரைத் துரத்திச்சென்று ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை யோர்தான் அருகேயிருந்த கிதியோனிடம் கொண்டுபோனார்கள்.
சேபாவும் சல்முனாவும்
அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம், “நீ மீதியானியருடன் சண்டைக்குப் போகும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? ஏன் எங்களை இப்படி நடத்தினாய்” என்று மிகவும் கடுமையாகக் குறை கூறினார்கள்.
ஆனால் அவன் அவர்களிடம், “நீங்கள் செய்ததோடு ஒப்பிடும்போது நான் செய்தது எம்மாத்திரம்? அபியேசரியரின் முழுமையான அறுவடையின் திராட்சைப் பழங்களைவிட எப்பிராயீமின் பொறுக்கியெடுத்த திராட்சைப் பழங்கள் சிறந்தது அல்லவா? இறைவன் மீதியானியரின் தலைவர்களான ஓரேப்பையும், சேபையும் உங்கள் கையில் கொடுத்தார். உங்களோடு ஒப்பிடுகையில் நான் செய்யக்கூடியதாக இருந்தது எம்மாத்திரம்?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுக்கெதிராக இருந்த அவர்களுடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்தது.
கிதியோனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் களைப்பாயிருந்தும் மீதியானியரைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு யோர்தான்வரை வந்து அதைக் கடந்தார்கள். அவன் சுக்கோத்தின் மனிதரிடம், “என்னோடிருக்கும் படைக்கு கொஞ்சம் உணவு கொடுங்கள். அவர்கள் மிகவும் களைப்பாயிருக்கிறார்கள். நான் மீதியானியரின் அரசர்களான சேபாவையும், சல்முனாவையும் இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்” எனச் சொன்னான்.
அதற்கு சுக்கோத்தின் அதிகாரிகள், “சேபாவையும், சல்முனாவையும் ஏற்கெனவே நீ பிடித்து உன் வசத்தில் வைத்திருக்கிறாயோ? நாங்கள் ஏன் உனது படைக்கு உணவு கொடுக்கவேண்டும்?” என்றார்கள்.
அப்பொழுது கிதியோன், “உங்களது இந்த செயலுக்காக யெகோவா என் கையில் சேபாவையும், சல்முனாவையும் ஒப்படைக்கும்போது, நான் உங்களது சதையை பாலைவனத்தின் முட்களாலும், முட்செடிகளினாலும் கிழித்துவிடுவேன்” என்றான்.
பின்பு அவன் அங்கிருந்து புறப்பட்டு, பெனியேல் பட்டணத்திற்கு போய் அவர்களிடமும் அவ்வாறே கேட்டான். அவர்களும் சுக்கோத் மனிதர் பதிலளித்ததுபோலவே சொன்னார்கள். எனவே அவன் பெனியேலின் மனிதர்களிடமும், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது இந்த கோபுரத்தை8:9 இஸ்ரேலில் நகர சுவர்களில் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இடித்து வீழ்த்துவேன்” என்றான்.
இப்பொழுது சேபாவும், சல்முனாவும் பதினைந்தாயிரம் இராணுவவீரரைக் கொண்ட படையுடன் கார்கோரில் இருந்தனர். இவர்கள் மட்டுமே கிழக்குத்திசை படையில் எஞ்சியிருந்தவர்கள். ஒரு இலட்சத்து இருபதாயிரம் வாள் வீரர்கள் ஏற்கெனவே செத்துவிட்டனர். கிதியோன் நாடோடிகள் செல்லும் குறுக்கு வழியாக நோபாவுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே சென்று, மீதியானியரின் படையை எதிர்பாராத வேளையில் தாக்கினான். மீதியானியரின் அரசர்களான சேபாவும், சல்முனாவும் தப்பி ஓடினார்கள். ஆனால் கிதியோன் அவர்களுடைய படை முழுவதையும் முறியடித்து, அந்த இரண்டு அரசர்களையும் துரத்திச்சென்று சிறைப்பிடித்தான்.
யோவாசின் மகன் கிதியோன் போர் முனையிலிருந்து ஏரேஸ் மேடு வழியாகத் திரும்பிவந்தான். அவன் சுக்கோத்தின் ஒரு வாலிபனைப் பிடித்து அவனை விசாரித்தான். அந்த வாலிபன் சுக்கோத் பட்டணத்தின் எழுபத்தேழு தலைவர்களான அதிகாரிகளின் பெயர்களை எழுதிக்கொடுத்தான். அதன்பின் கிதியோன் திரும்பிவந்து சுக்கோத்தின் மனிதர்களிடம், “சேபாவும், சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள். ‘நாங்கள் ஏன் உன் வீரர்களுக்கு உணவு கொடுக்கவேண்டும். சேபாவும், சல்முனாவும் உன்னுடைய கைகளில் இருக்கிறார்களா?’ என்று இவர்களைப்பற்றிக் கேட்டு என்னை ஏளனம் செய்தீர்கள்” என்றான். பின்பு அவன் அந்தப் பட்டணத்தின் தலைவர்களைப் பிடித்து, பாலைவனத்து முட்களாலும், முட்செடிகளாலும் அவர்களைத் தண்டித்து சுக்கோத்தின் மனிதருக்குப் பாடம் புகட்டினான். அத்துடன் பெனியேலின் கோபுரத்தையும் இடித்து வீழ்த்தி, அந்தப் பட்டணத்து மனிதரையும் கொலைசெய்தான்.
பின்பு அவன் சேபா, சல்முனா ஆகியோரிடம், “நீங்கள் தாபோரில் கொலைசெய்தவர்கள் எப்படியான மனிதர்கள்?” என்று கேட்டான்.
“அவர்கள் உன்னைப்போன்ற மனிதர்களே! ஒவ்வொருவரும் பிரபுவின் தோற்றமுடையவர்கள்” என்று சொன்னார்கள்.
அதற்கு கிதியோன், “அவர்கள் எல்லோரும் என் சகோதரர்கள். என் தாயின் பிள்ளைகள். அவர்களை நீங்கள் கொலைசெய்யாதிருந்தால், யெகோவா இருக்கிறது நிச்சயம்போல, நானும் உங்களைக் கொலைசெய்யமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். அதன்பின் அவன் தனது மூத்த மகன் யெத்தேரைத் திரும்பிப்பார்த்து, “அவர்களைக் கொலைசெய்” என்றான். யெத்யேர் சிறுவனாயிருந்ததால் பயந்தான். அதனால் வாளை எடுக்கவில்லை.
அப்பொழுது சேபாவும், சல்முனாவும் கிதியோனிடம், “நீயே எழுந்துவந்து எங்களைக் கொலைசெய்; ஒரு மனிதனைப் போலவே அவனுடைய பெலனும் இருக்கும்” என்று சொன்னார்கள். அப்படியே கிதியோன் எழுந்து அவர்களைக் கொன்று, அவர்கள் ஒட்டகங்களிலிருந்து விலைமதிப்பான அவர்களுடைய கழுத்து அணிகலன்களைக் கழற்றி எடுத்துக்கொண்டான்.
கிதியோனின் ஏபோத்
அதன்பின் இஸ்ரயேலர் கிதியோனிடம், “நீர் எங்களை ஆட்சிசெய்யும். உமக்குப்பின் உமது மகனும், உமது பேரன்மாருமே எங்களை ஆட்சி செய்யட்டும். ஏனெனில் நீரே மீதியானியரின் கையிலிருந்து எங்களைக் காப்பாற்றினீர்” என்றனர்.
ஆனால் கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆட்சி செய்யமாட்டேன், என் மகனும் உங்களை ஆட்சி செய்யமாட்டான். யெகோவாவே உங்களை ஆட்சி செய்வார்” என்றான். அத்துடன் அவன் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்; அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் கொள்ளையிட்ட உங்கள் பங்கிலிருந்து ஒரு கடுக்கனை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான். ஏனெனில் போரில் இறந்த இஸ்மயேல் மனிதருக்கு கடுக்கன்கள் அணியும் வழக்கம் இருந்தது.
அதற்கு அவர்கள், “நாங்கள் அவற்றைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவோம்” என்று சொல்லி தரையிலே ஒரு துணியை விரித்து ஒவ்வொருவரும் தாம் கொள்ளையிட்ட பொருட்களில் இருந்து ஒரு கடுக்கனை அதில் போட்டனர். அவர்கள் கொடுத்த தங்க கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு சேக்கலாயிருந்தது. அதைவிட அணிகலன்களும், பதக்கங்களும் மீதியானிய அரசர் அணியும் ஊதாநிற உடைகளும், அவர்களின் ஒட்டகங்களின் கழுத்திலிருந்த அணிகலன்களும் அவனுக்குக் கிடைத்தன. அவர்கள் கொடுத்த தங்கத்தைக் கொண்டு கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்து தனது பட்டணமான ஒப்ராவிலே வைத்தான். ஆனால் மிகவிரைவில் இஸ்ரயேலர் எல்லோரும் ஏபோத்தை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். இது கிதியோனுக்கும், அவன் குடும்பத்திற்கும் கண்ணியாய் இருந்தது.
கிதியோனின் மரணம்
இவ்வாறு இஸ்ரயேலருக்கு முன்பாக மீதியானியர் திரும்பவும் தலைதூக்காதபடி கீழ்படுத்தப்பட்டிருந்தனர். கிதியோன் உயிரோடிருக்கும்வரை நாடு நாற்பதுவருடம் சமாதானத்தை அனுபவித்தது.
யோவாசின் மகன் யெருபாகால் என்னும் கிதியோன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போய் அங்கே வாழ்ந்தான். அவனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவனுக்கு எழுபது மகன்களும் இருந்தனர். சீகேமிலிருந்த அவனுடைய வைப்பாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு அவன் அபிமெலேக்கு என்று பெயரிட்டிருந்தான். யோவாசின் மகன் கிதியோன் முதிர்வயதில் இறந்தான்; அவனுடைய உடல் ஒப்ராவிலுள்ள அபியேஸ்ரியரின் நாட்டில் அவனுடைய தகப்பன் யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கிதியோன் இறந்த உடனேயே இஸ்ரயேலர் திரும்பவும் பாகால் தெய்வங்களை வணங்கி வேசித்தனம் பண்ணினார்கள். அதோடு பாகால் பேரீத்தை8:33 பாகால் பேரீத்தை என்பது கானானிய புயல் கடவுளின் உள்ளூர் வெளிப்பாடாகும். இந்த பெயரின் அர்த்தம் உடன்படிக்கையின் பாகால் என்பதாகும். தங்கள் தெய்வமாக ஏற்படுத்தினார்கள். தங்களைச் சூழ்ந்துள்ள எல்லா எதிரிகளின் கையினின்றும் தங்களைத் தப்புவித்த தங்கள் இறைவனாகிய யெகோவாவை இஸ்ரயேலர் நினைக்கவில்லை. யெருபாகால் என்று அழைக்கப்பட்ட கிதியோன் இஸ்ரயேலருக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, அவனுடைய குடும்பத்தார்களுக்கு அவர்கள் தயவு காட்டவும் தவறிவிட்டனர்.
அபிமெலேக்கின் அரசாட்சி
யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலுள்ள தன் தாயின் சகோதரர்களிடத்திற்குப் போனான். அங்கே அவர்களிடமும் தன் தாயின் வம்சத்தார் எல்லோரிடமும், “நீங்கள் சீகேமின் குடியிருப்பாளர்களிடம், ‘உங்களை யெருபாகாலின் எழுபது மகன்களும் ஆட்சி செய்வதோ, அல்லது ஒருவன் மாத்திரம் ஆட்சி செய்வதோ உங்களுக்கு எது சிறந்தது?’ என்று கேளுங்கள், நான் உங்களின் இரத்தமும் சதையுமானவன் என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான்.
அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது, “அவன் நம்முடைய சகோதரன்” என்று அவர்கள் சொன்னதினால், அவர்களும் அபிமெலேக்கைப் பின்பற்றினார்கள். அப்பொழுது அவர்கள் பாகால் பேரீத்தின் கோயிலிலிருந்து எழுபது சேக்கல் நிறையுள்ள வெள்ளியை அவனுக்குக் கொடுத்தார்கள். அபிமெலேக்கு அப்பணத்தைக் கொண்டு முன்யோசனையற்ற முரட்டுத் துணிச்சலுள்ளவர்களைக் கூலிக்கு அமர்த்தினான். அவர்கள் அவனைப் பின்பற்றினர். அவன் ஒப்ராவிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்குப்போய், அங்கே யெருபாகாலின் மகன்களான தனது சகோதரர்கள் எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனால் யெருபாகாலின் இளையமகன் யோதாம் ஒளிந்த்திருந்து தப்பித்துக்கொண்டான். அப்பொழுது சீகேமிலும், பெத் மிலோவிலுமுள்ள எல்லா குடிகளும் சீகேமின் தூணின் அருகேயுள்ள பெரிய மரத்தினடியில் அபிமெலேக்கை அரசனாக முடிசூட்டுவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள்.
இதை யோதாம் கேள்விப்பட்டபோது, அவன் கெரிசீம் மலையுச்சியில் ஏறி அவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிட்டு, “சீகேமின் குடிகளே எனக்குச் செவிகொடுங்கள்; அப்பொழுது இறைவன் உங்களுக்குச் செவிகொடுப்பார். ஒரு நாள் மரங்களெல்லாம் தங்களுக்குள் ஒரு அரசனை நியமிக்கப் போயின. அதன்படி அவை ஒலிவமரத்தைப் பார்த்து, ‘நீ எங்கள் அரசனாயிரு’ என்றன.
“ஆனால் ஒலிவ மரமோ, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் கனம்பண்ணப் பயன்படுத்தும் என் எண்ணெயை விட்டு மரங்களுக்கு மேலாக அசைவாடுவேனோ?’ என்று கேட்டது.
“பின் மரங்கள் அத்திமரத்திடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
“ஆனால் அத்திமரமோ, ‘நான் என் சிறந்த ருசியான பழங்களை விட்டு மரங்களுக்கு மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
“அப்பொழுது மரங்கள் திராட்சை செடியிடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
“ஆனால் திராட்சைச்செடி, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் உற்சாகமூட்டும் என் இரசத்தைவிட்டு உங்கள் மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
“கடைசியாக எல்லா மரங்களும் சேர்ந்து முட்செடியிடம், ‘நீ வந்து எங்கள் அரசனாயிரு’ என்றன.
“அதற்கு முட்செடி மரங்களிடம், ‘நீங்கள் என்னை அரசனாக அபிஷேகம் பண்ணுவது உண்மையானால், எல்லோரும் வந்து என் நிழலில் அடைக்கலம் புகுந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து நெருப்பு வந்து லெபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும்’ என்றது.
“இப்பொழுதும் நீங்கள் அபிமெலேக்கை அரசனாக்கியபோது, உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டீர்களோ? யெருபாகாலுக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நீங்கள் செய்தது சரியானதா? நீங்கள் எனது தகப்பனுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பை கொடுத்தீர்களா? எனது தகப்பன் உங்களுக்காகச் சண்டையிட்டு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், மீதியானியரின் கையிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் இன்று நீங்களோ எனது தகப்பனின் குடும்பத்திற்கு எதிராகக் கலகம்செய்து, அவரது மகன்கள் எழுபதுபேரையும் ஒரு கல்லின்மேல் கொலைசெய்தீர்கள். அவரது அடிமைப்பெண்ணின் மகன் அபிமெலேக்கை, உங்கள் சகோதரனாகையால் சீகேமின் குடிகளுக்கு மேலாக அரசனாக்கியிருக்கிறீர்கள். நீங்களோ யெருபாகாலுடனும் அவனின் குடும்பத்துடனும் நேர்மையாகவும், உண்மையாகவும் இன்று நடந்திருந்தால், உங்களுக்காக அபிமெலேக்கு உங்கள் மகிழ்ச்சியாயிருக்கட்டும். நீங்களும் அவனின் மகிழ்ச்சியாய் இருங்கள். அப்படியில்லையானால் அபிமெலேக்கிலிருந்து நெருப்பு எழும்பி உங்களையும், சீகேமின் குடிகளையும் பெத் மிலோனின் குடிகளையும் எரித்துப்போடட்டும். உங்களிலிருந்தும், சீகேமின் குடிகளிலிருந்தும், பெத்மில்லோன் குடிகளிலிருந்தும் நெருப்பு எழும்பி, அபிமெலேக்கையும் எரித்துப்போடட்டும்” என்று சொல்லி முடித்தான்.
அவற்றைச் சொன்னபின்பு யோதாம் தன் சகோதரன் அபிமெலேக்கிற்கு பயந்ததினால் தான் இருந்த இடத்தைவிட்டு பேயேர் என்னும் இடத்திற்குத் தப்பி ஓடி அங்கே இருந்தான்.
அபிமெலேக்கு இஸ்ரயேலை மூன்று வருடங்கள் அரசாண்டான். அதன்பின்பு இறைவன் அபிமெலேக்கிற்கும், சீகேமின் குடிகளுக்கும் இடையில் ஒரு பொல்லாத ஆவியை அனுப்பினார். அப்பொழுது சீகேமின் குடிகள் அபிமெலேக்கிற்கு எதிராகத் துரோகமாய் நடந்தார்கள். யெருபாகாலின் எழுபது மகன்களான தனது சகோதரர்களின் இரத்தத்தை சிந்தி, அவர்களுக்கு எதிராக அபிமெலேக் செய்த குற்றத்திற்காக அவனைப் பழிவாங்குவதற்காகவே இறைவன் இதைச் செய்தார். சீகேமின் குடிகள் அவனுடைய சகோதரர்களைக் கொலைசெய்ய உதவிசெய்ததற்காக அவர்கள்மேலும் இறைவன் இதைச் செய்தார். அபிமெலேக்கை எதிர்த்து மலையுச்சியில் பதுங்கியிருந்து அவ்வழியே போவோரைக் கொள்ளையிடுவதற்காக சீகேமின் குடிகள் மனிதரை ஏற்படுத்தினர். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
இப்பொழுது ஏபேத்தின் மகன் காகால் தனது சகோதரர்களுடன் சீகேமுக்குப் போனான். சீகேமின் குடிகள் அவனில் நம்பிக்கை வைத்தனர். அங்கிருந்து அவர்கள் திராட்சைத் தோட்டங்களுக்குப் போய் பழங்களைச் சேர்த்து அதை மிதித்துப் பிழிந்தனர். பின்பு அவர்கள் தங்களுடைய தெய்வத்தின் கோயிலில் பண்டிகை கொண்டாடினர். அவர்கள் உண்டு குடிக்கையில் அபிமெலேக்கைச் சபித்தனர். ஏபேத்தின் மகன் காகால் அவர்களிடம், “அபிமெலேக் யார்? சீகேமியரான நாம் யார்? சீகேமியர்களாகிய நாம் அபிமெலேக்கிற்கு ஏன் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? இவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய உதவியாளன் அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களுக்குப் பணிசெய்யுங்கள். நாம் எதற்காக அபிமெலேக்கிற்கு பணிசெய்ய வேண்டும்? இந்த மனிதர் மட்டும் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்களாயின் நான் அபிமெலேக்கை அழித்துவிடுவேன். நான் அபிமெலேக்கிடம், ‘உனது படையை திரட்டிக்கொண்டு போருக்கு வா’ என்று சொல்வேன்” என்றான்.
ஏபேத்தின் மகன் காகால் சொன்னதைக் கேட்ட பட்டணத்தின் ஆளுநரான சேபூல் மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் இரகசியமாக அபிமெலேக்கிற்கு தூதுவரை அனுப்பி, “ஏபேத்தின் மகன் காகால் தன் சகோதரர்களுடன் சீகேமுக்கு வந்து பட்டணத்து மக்களை உனக்கு எதிராக தூண்டிவிடுகிறான். எனவே நீயும் உன் மனிதர்களும் இரவுவேளையில் வந்து வயல்வெளிகளில் பதுங்கிக் காத்திருக்கவேண்டும். காலையில் சூரியன் உதிக்கும் நேரம் பட்டணத்தை நோக்கி முன்னேறுங்கள். காகாலும் அவனுடைய மனிதர்களும் உனக்கெதிராக வெளியே வரும்போது, உன் கையால், செய்ய முடியுமானதை செய்” என்று சொல்லச் சொன்னான்.
அவ்வாறே அபிமெலேக்கு அன்றிரவு தனது படைகளுடன் புறப்பட்டுபோய், சீகேமுக்கு அருகில் சென்று நான்கு பிரிவுகளாக நிலைகொண்டு மறைந்திருந்தான். ஏபேத்தின் மகன் காகால் வெளியே போய் பட்டணத்தின் நுழைவாசலில் வந்து நின்றான்; அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய வீரர்களும் தாங்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள்.
காகால் அவர்களைக் கண்டபோது சேபூலிடம், “அதோ பார், மலையின் உச்சியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.
அதற்கு சேபூல், “நீ மலைகளின் நிழல்களை மனிதன் என்று தவறாக நினைக்கிறாய்” என்றான்.
ஆனால் காகால் திரும்பவும், “அதோ பார், நாட்டின் நடுவில் உயர்ந்த பகுதியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள். அதோடு குறிசொல்வோரின்9:37 குறிசொல்வோரின் என்பது எபிரெயத்தில் ஏலோன் மெயோனெனீம். ஒரு பிரிவு கர்வாலி மரப்பாதையிலிருந்து வருகிறது” என்றான்.
அப்பொழுது சேபூல் அவனிடம், “இப்பொழுது நீ பெரிய கதை அளந்தாயே, அது எங்கே? அபிமெலேக் யார்? நாம் ஏன் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று நீ இழிவாகப் பேசிய மனிதர்கள் இவர்களல்லவா. புறப்பட்டுப்போய் அவர்களுடன் சண்டையிடு” என்றான்.
காகால் சீகேமின் குடிகளுடன் சென்று9:39 அல்லது சீகேமின் தலைவர்களை காகால் வழிநடத்தினான் அபிமெலேக்குடன் சண்டையிட்டான். அபிமெலேக்கு அவனைத் துரத்தினான்; அநேகர் ஓடிப்போகையில் பட்டணத்தின் வாசல்வரை காயமுற்று விழுந்தார்கள். அபிமெலேக்கு அருமாவிலே9:41 அருமா சீகேமிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பட்டணம். தங்கியிருந்தான். சேபூல், காகாலையும் அவன் சகோதரர்களையும் சீகேமிலிருந்து வெளியே துரத்திவிட்டான்.
அடுத்தநாள் சீகேமின் குடிகள் வயல்களுக்குப் போனார்கள். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது. எனவே அவன் தனது மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வயல்களில் மறைந்திருக்கச் செய்தான். பட்டணத்திலிருந்து மக்கள் வெளியே வருவதை அவன் கண்டதும், அவன் அவர்களைத் தாக்குவதற்கு எழுந்தான். அபிமெலேக்கும், அவனுடன் இருந்த பிரிவினரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து முன்னேறி பட்டணத்தின் நுழைவாசலுக்குள் விரைந்து சென்றார்கள். மற்ற இரு பிரிவினரும் வயல்களில் இருந்தவர்களின்மேல் பாய்ந்து அவர்களை அடித்து வீழ்த்தினார்கள். அபிமெலேக்கு அந்த நாள்முழுவதும் பட்டணத்திற்கெதிரான தனது தாக்குதலைக் கடுமையாக்கி அந்தப் பட்டணத்தைப் பிடித்து, அங்குள்ள மக்களைக் கொலைசெய்தான். பின் அப்பட்டணத்தை அழித்து அதிலே உப்புத் தூவினான்.
சீகேமின் கோபுரத்தில் இருந்த குடிமக்கள் இவற்றைக் கேள்விப்பட்டவுடன், “ஏல் பெரீத்” கோவில்களின் அரண்களுக்குள் போனார்கள். இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் கூடியிருக்கிறார்கள் என்று அபிமெலேக்கு கேள்விப்பட்டான். அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய மனிதர்களும் சல்மோன் மலைக்கு ஏறிப்போனார்கள். அங்கே அபிமெலேக்கு கோடரியை எடுத்து மரத்தின் சில கிளைகளை வெட்டி, தனது தோளின்மேல் வைத்துக்கொண்டான். பின் அவனோடிருந்த மனிதர்களிடம், “நான் செய்வதைப்போல் நீங்களும் விரைவாகச் செய்யுங்கள்” என்றான். எனவே எல்லா மனிதர்களும் கிளைகளை வெட்டிக்கொண்டு அபிமெலேக்கைப் பின்பற்றிச் சென்றார்கள். அவர்கள் அந்தக் கிளைகளை அரணைச் சுற்றி அடுக்கிவைத்து, மக்கள் உள்ளே இருக்கத்தக்கதாகத் நெருப்பிட்டுக் கொளுத்தினார்கள். எனவே சீகேமின் கோபுரத்திற்குள் இருந்த கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்களும் பெண்களும் செத்துப் போனார்கள்.
அதன்பின் அபிமெலேக்கு தேபேஸ் பட்டணத்திற்குப் போய் அதை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். ஆயினும் பட்டணத்திற்குள்ளே ஒரு பலமான கோபுரம் இருந்தது. அந்த பட்டணத்திலிருந்த ஆண்களும், பெண்களுமாக எல்லா மக்களும் அந்த கோபுரத்துக்குள்ளே தப்பி ஓடினார்கள். அவர்கள் தாங்கள் உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, அந்த கோபுரத்தின் கூரையிலே ஏறினார்கள். அபிமெலேக்கு கோபுரத்துக்குச் சென்று அதைத் தாக்கினான். அவன் அந்த கோபுரத்திற்கு நெருப்பு மூட்டுவதற்காக அதற்கு அருகில் வந்தான். அப்பொழுது மேலே இருந்த ஒரு பெண் திரிகைக்கல்லை அவனுடைய தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது.
அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆயுததாரியை அவசரமாக அழைத்து, “உனது வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அவனைக் கொன்றாள்’ என்று எப்பொழுதும் யாரும் சொல்லக்கூடாது” என்றான். எனவே அந்த வேலைக்காரன் அவனை வாளால் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது அவன் இறந்தான். அபிமெலேக்கு இறந்துபோனதை அறிந்த இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
அபிமெலேக்குத் தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த கொடிய செயலுக்காக, இறைவன் இவ்வாறு அவனைத் தண்டித்தார். சீகேம் மனிதர் செய்த கொடுமைகளுக்காக இறைவன் அவர்களையும் தண்டித்தார். யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்கள்மேல் வந்தது.
தோலா
அபிமெலேக்கின் காலத்திற்குப் பின்னர், இசக்கார் கோத்திரத்தானாகிய பூவாவின் மகன் தோலா இஸ்ரயேலைக் காப்பாற்ற வந்தான். பூவா தோதோவின் மகன். அவன் எப்பிராயீம் மலைநாட்டில் சாமீரில் வாழ்ந்தான். அவன் இருபத்துமூன்று வருடங்களாக இஸ்ரயேலுக்கு நீதிபதியாக இருந்தான். அதன்பின் அவன் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டான்.
யாவீர்
இவனுக்குப் பின் கீலேயாத்தியனான யாவீர் இருபத்திரண்டு வருடங்கள் இஸ்ரயேலை வழிநடத்தினான். அவனுக்கு முப்பது மகன்கள் இருந்தார்கள், இவர்கள் முப்பது கழுதைகளில் சவாரி செய்தார்கள். கீலேயாத்தில் இவர்கள் முப்பது பட்டணங்களை நிர்வகித்தார்கள். இக்குடியிருப்புகள் இந்த நாள்வரைக்கும் அவோத்யாவீர், அதாவது யாவீரின் கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யாவீர் இறந்து காமோன் என்னும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டான்.
யெப்தா
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமை செய்தார்கள். அவர்கள் பாகால்களுக்கும், அஸ்தரோத்திற்கும் பணிசெய்தார்கள். அவர்கள் சீரியரின் தெய்வங்களையும், சீதோனியரின் தெய்வங்களையும், மோவாபியரின் தெய்வங்களையும், அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தியரின் தெய்வங்களையும் வணங்கினார்கள். இஸ்ரயேலர் யெகோவாவை கைவிட்டு, தொடர்ந்து அவரை வழிபடவில்லை. இதனால் யெகோவா இஸ்ரயேலருடன் கோபங்கொண்டு. அவர் பெலிஸ்தியர் கையிலும், அம்மோனியர் கையிலும் அவர்களை விற்றுப்போட்டார். அவர்கள் இஸ்ரயேலர்களை அந்த வருடத்தில் நெருக்கித் துன்புறுத்தினார்கள். இவ்வாறு எமோரியரின் நாடான யோர்தானுக்குக் கிழக்கே கீலேயாத்தில் பதினெட்டு வருடங்களாக இஸ்ரயேலரை ஒடுக்கினார்கள். அதோடு அம்மோனியரும் யோர்தான் நதியைக் கடந்துபோய் யூதா, பென்யமீன், எப்பிராயீம் குடும்பத்தாருடன் சண்டையிடச் சென்றனர். இதனால் இஸ்ரயேலர் பெருந்துன்பத்திற்குள்ளானார்கள். அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம், “நாங்கள் உமக்கெதிராகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனைக் கைவிட்டு பாகால்களுக்குப் பணிசெய்தோம்” என கதறி அழுதனர்.
அப்பொழுது யெகோவா இஸ்ரயேலரிடம், “எகிப்தியர், எமோரியர், அம்மோனியர், பெலிஸ்தியர், சீதோனியர், அமலேக்கியர், மீதியானியர் ஆகியோர் உங்களை ஒடுக்கியபோது நீங்கள் என்னை நோக்கி உதவிகேட்டு அழுதீர்களே. அப்பொழுது நான் உங்களை அவர்களுடைய கையினின்று காப்பாற்றவில்லையா? அப்படியிருந்தும் நீங்கள் என்னைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். அதனால் இனிமேல் நான் உங்களைக் காப்பாற்றமாட்டேன். நீங்கள் தெரிந்துகொண்ட தெய்வங்களிடம்போய் அழுங்கள். நீங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவை உங்களைக் காப்பாற்றட்டும்” என பதிலளித்தார்.
ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவிடம், “நாங்கள் பாவம்செய்தோம். நலமென நீர் நினைப்பதை எங்களுக்குச் செய்யும், ஆனாலும் எப்படியாவது தயவுசெய்து இப்பொழுது எங்களை விடுவியும்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் தங்கள் மத்தியிலிருந்த அந்நிய தெய்வங்களை அகற்றிப்போட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். இஸ்ரயேலரின் அவலத்தைத் தொடர்ந்து யெகோவாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அம்மோனியர் ஆயுதம் தாங்கி கீலேயாத்தில் முகாமிட்டார்கள். இஸ்ரயேலரும் ஒன்றுகூடி மிஸ்பாவிலே முகாமிட்டார்கள். அப்பொழுது கீலேயாத் மக்களின் தலைவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “முதன்முதல் அம்மோனியருக்கு எதிராக யார் தாக்கத் தொடங்குகிறானோ, அவனே கீலேயாத்தில் வாழும் எல்லோருக்கும் தலைவன்” என்று சொன்னார்கள்.
கீலேயாத்தியனான யெப்தா வலிமைமிக்க ஒரு வீரனாயிருந்தான். அவனுடைய தகப்பன் கீலேயாத். ஆனால் தாயோ ஒரு வேசிப்பெண். கீலேயாத்தின் மனைவியும் கீலேயாத்திற்கு மகன்களைப் பெற்றாள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானபோது யெப்தாவை நோக்கி, “நீ வேறொரு பெண்ணிற்கு பிறந்த மகனாகையால், எங்கள் குடும்ப உரிமைச்சொத்தில் நீ எதையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறி அவனைத் துரத்திவிட்டார்கள். எனவே யெப்தா தன் சகோதரர்களை விட்டு ஓடிப்போய் தோப் என்னும் நாட்டில் குடியிருந்தான். அப்போது அங்கேயிருந்த முரடர்கள் அவனோடு ஒன்றுசேர்ந்து அவனைப் பின்பற்றினார்கள்.
சில காலத்தின்பின் அம்மோனியர் இஸ்ரயேலரோடு யுத்தம் செய்ய வந்தார்கள். அப்போது கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவை அழைத்துவர தோப் நாட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனியருக்கு எதிராக சண்டையிடுவதற்கு நீ எங்களுக்குப் படைத்தளபதியாக இரு” என்றார்கள்.
அப்பொழுது யெப்தா அவர்களிடம், “நீங்கள் என்னை வெறுத்து என் தகப்பன் வீட்டிலிருந்து துரத்திவிடவில்லையோ? உங்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் போது ஏன் என்னைத் தேடிவந்திருக்கிறீர்கள்” என்றான்.
அதற்குக் கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவிடம், “எப்படியாயினும் நாங்கள் இப்பொழுது உன் பக்கம் வருகிறோம். அம்மோனியருடன் சண்டையிடும்படி நீ எங்களோடு வா. அப்போது கீலேயாத்தில் இருக்கும் எல்லோருக்கும் நீ தலைவனாயிருப்பாய்” என்று சொன்னார்கள்.
அதற்கு யெப்தா, “நான் உங்களுடன் வந்து அம்மோனியருடன் சண்டையிடும் போது, யெகோவா அவர்களை என் கையில் ஒப்படைத்தால் உண்மையாகவே நான் உங்கள் தலைவனாயிருப்பேனோ?” என்று கேட்டான்.
அப்பொழுது கீலேயாத்தின் முதியவர்கள் யெப்தாவிடம், “யெகோவாவே எங்கள் சாட்சி. நீ சொல்வதை நிச்சயமாகச் செய்வோம்” என்று பதிலளித்தனர். அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் முதியவர்களுடன் சென்றான். அவனை மக்கள் தங்கள் தலைவனாகவும், தளபதியாகவும் நியமித்தனர். மிஸ்பாவில் யெகோவா முன்னிலையில், யெப்தா திரும்பவும் தன் நிபந்தனைகளையெல்லாம் எடுத்துச்சொன்னான்.
பின்பு யெப்தா அம்மோனிய அரசனிடம் தூதுவர்களை அனுப்பி, “எங்கள் நாட்டை நீங்கள் தாக்கியிருப்பதற்கு எங்களுடன் உங்களுக்கிருக்கும் விரோதம் என்ன?” என்று கேட்டுவரும்படி சொன்னான்.
அம்மோனியரின் அரசன் யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரயேலர் எகிப்தில் இருந்து வெளியேறி வந்தபோது, அவர்கள் யோர்தான் வரைக்கும் அர்னோன் ஆறுதொடங்கி, யாப்போக் ஆறுவரையும் உள்ள எனது நாட்டை பிடித்துக்கொண்டார்கள். இப்போது அதைத் திரும்பவும் சமாதானமாக தந்துவிடுங்கள்” என்று கேட்டான்.
யெப்தா தூதுவர்களை அம்மோன் அரசனிடம் திரும்பவும் அனுப்பி அவனிடம் சொல்லச் சொன்னதாவது, யெப்தா சொல்லுவது இதுவே:
“இஸ்ரயேலர் மோவாபின் நாட்டையோ, அம்மோனியரின் நாட்டையோ பிடித்துக்கொள்ளவில்லை.” ஆனால் அவர்கள் எகிப்தைவிட்டு வெளியே வந்தபோது, இஸ்ரயேலர் பாலைவனத்தின் வழியாகச் செங்கடல்வரை சென்று காதேசுக்கு வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலர் ஏதோமின் அரசனுக்குத் தூதுவரை அனுப்பி, “உமது நாட்டின் வழியாகச் செல்ல எங்களுக்கு அனுமதியளியும்” என்று கேட்டார்கள். ஆனால் ஏதோமின் அரசன் அதைக் கேட்கவில்லை. அவ்வாறே அவர்கள் மோவாப்பின் அரசனுக்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். அவனும் மறுத்துவிட்டான். எனவேதான் இஸ்ரயேலர் காதேசில் தங்கினார்கள்.
“பின்பு அவர்கள் பாலைவனத்தின் வழியாக, ஏதோம், மோவாப் நாட்டைச் சுற்றி சென்று மோவாப் நாட்டின் கிழக்குப்பகுதிக்கு வழியாகப்போய், அர்னோன் ஆற்றுக்கு மற்றப் பகுதியில் முகாமிட்டார்கள். மோவாப்பின் ஆட்சிப் பகுதிக்குள் அவர்கள் வரவில்லை. ஏனெனில் அர்னோன் ஆறே மோவாப்பின் எல்லை.
“அதன்பின்பும் இஸ்ரயேலர் எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குத் தூதுவர்களை அனுப்பி, ‘உமது நாட்டின் வழியாக எங்கள் சொந்த இடத்திற்குப் போக அனுமதிகொடும்’ என்று கேட்டார்கள். ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாது தனது ஆட்சிப் பகுதியைக் கடந்துசெல்ல விடவில்லை. மாறாக அவன் தன் மனிதர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி, யாகாசிலே முகாமிட்டு இஸ்ரயேலரோடு போரிட்டான்.
“அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சீகோனையும், அவனுடைய மனிதர்களையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்படைத்ததால் இஸ்ரயேலர்கள் அவர்களை முறியடித்தார்கள். இஸ்ரயேலர் அந்நாட்களில் அந்த இடத்தில் வாழ்ந்த எமோரியரின் எல்லா நாட்டையும் பிடித்துக்கொண்டார்கள். அதோடு அர்னோன் ஆற்றிலிருந்து யாப்போத் ஆறுவரைக்கும், பாலைவனம் தொடக்கம் யோர்தான் ஆறுவரைக்கும் உள்ள நாடுகளையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா, தனது மக்களான இஸ்ரயேலரின் முன்னால் எமோரியரைத் துரத்தியிருக்கையில் அந்நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உனது தெய்வமான கேமோஸ் தருவதை நீ எடுக்கமாட்டாயோ? அதுபோலவே எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு எதைக் கொடுத்தாலும் நாங்கள் அதை எங்கள் உடைமையாக்கிக்கொள்வோம். நீங்கள் சிப்போரின் மகனும், மோவாப்பின் அரசனுமான பாலாக்கைவிட சிறந்தவர்களோ? அவன் எப்பொழுதாவது இஸ்ரயேலருடன் தர்க்கம் பண்ணியதும், சண்டையிட்டதும் உண்டோ? இஸ்ரயேலர் எஸ்போன், அரோயேர் சுற்றுப்புற குடியிருப்புகளிலும், அர்னோனை அண்டியுள்ள எல்லாப் பட்டணங்களிலும் முந்நூறு வருடகாலமாக குடியிருந்தார்கள். நீங்கள் அந்தக் காலத்தில் ஏன் அதைத் திருப்பி எடுக்கவில்லை. நான் உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. ஆனால் நீ எனக்கெதிராக யுத்தம் செய்வதனால் எனக்குத் தீங்கு செய்கிறாய். எனவே இந்நாளில் இஸ்ரயேலருக்கும், அம்மோனியருக்கும் இடையிலுள்ள தர்க்கத்தை நீதிபதியான யெகோவா தீர்த்து வைக்கட்டும்.”
ஆனால் அம்மோன் அரசனோ யெப்தாவின் செய்தி ஒன்றையும் கவனிக்கவில்லை.
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் யெப்தாவின்மேல் வந்தார். அவன் கீலேயாத்தையும், மனாசேயையும் கடந்துபோய்; கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து அங்கிருந்து அவன் அம்மோனியருக்கு எதிராக முன்னேறிச் சென்றான். அங்கே யெப்தா யெகோவாவுடன் ஒரு நேர்த்திக்கடன் செய்தான். “நீர் எனது கையில் அம்மோனியர்களைக் கொடுப்பீராகில், நான் அம்மோனியரை வெற்றிகொண்டு திரும்பி வரும்போது, எனது வீட்டின் வாசலில் இருந்து முதன்முதல் என்னைச் சந்திக்க வருவது எதுவோ, அது யெகோவாவுக்குரியது; நான் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகப் பலியிடுவேன்” என்றான்.
பின்பு யெப்தா அம்மோனியருடன் யுத்தம் செய்யப்போனான்; யெகோவா அவர்களை யெப்தாவின் கையில் கொடுத்தார். யெப்தா அரோயேர் தொடக்கம் ஆபேல் கேராமின் வரைக்கும் மின்னீத்தின் சுற்றுப்புறங்களிலுள்ள இருபது பட்டணங்களை முறியடித்தான். இவ்வாறு இஸ்ரயேலர் அம்மோனியரை அடக்கினார்கள்.
யெப்தா மிஸ்பாவிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி வரும்போது, அவனைச் சந்திக்க வந்தது வேறு யாருமல்ல. அவனுடைய மகளே தான். அவள் தம்புரா தாளத்திற்கு நடனமாடிக்கொண்டு, அவன் முன்னே வந்தாள். அவள் அவனுடைய ஒரே பிள்ளை. அவளைவிட அவனுக்கு வேறு மகனோ, மகளோ இருக்கவில்லை. அவன் தன் மகளைப் பார்த்ததும், “ஐயோ என் மகளே! நீ என்னை வேதனைக்குள்ளாக்கி விட்டாயே! நான் யெகோவாவுடன் செய்துகொண்ட நேர்த்திக்கடனை என்னால் மீறமுடியாதே” என சொல்லி தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு அழுதான்.
அதற்கு அவள், “என் தகப்பனே, நீர் யெகோவாவுக்கு வாக்குப்பண்ணி விட்டீர். உமது பகைவரான அம்மோனியரை யெகோவா பழிவாங்கியபடியால் நீர் வாக்குக் கொடுத்தபடி எனக்குச் செய்யும். ஆனால் இந்த ஒரு வேண்டுகோளுக்கு இணங்கும். நான் திருமணம் செய்ய மாட்டேனாகையால், என் சிநேகிதிகளுடன் மலைகளில் சுற்றித்திரிந்து அழுவதற்கு எனக்கு இரண்டு மாதம் தவணை கொடும்” என்று கேட்டாள்.
அதற்கு அவன், “நீ போகலாம்” என்று சொல்லி இரண்டு மாதங்களுக்குப் போக அனுமதித்தான். அவளும், அவள் சிநேகிதிகளும் மலைகளின்மேல் சென்று, அவள் திருமணம் செய்யாத காரியத்தினிமித்தம் அவளுடன் சேர்ந்து அழுதார்கள். இரண்டு மாதங்களின் பின்பு அவள் தன் தகப்பனிடத்திற்கு திரும்பிவந்தாள்; அவன் தான் நேர்த்திக்கடன் செய்தபடி அவளுக்குச் செய்தான்.
அவள் கன்னிகையாயிருந்தாள். ஒவ்வொரு வருடமும் இஸ்ரயேல் கன்னிப்பெண்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளுக்காக, நாலு நாட்கள் வெளியில் போய் நினைவுகூர்ந்து துக்கங்கொண்டாடும் வழக்கம் இஸ்ரயேலருக்குள் இதனாலேயே வந்தது.
யெப்தாவும் எப்பிராயீமும்
எப்பிராயீம் மனிதர் தங்கள் படைகளைக் கூட்டிக்கொண்டு சாபோனைக் கடந்துவந்து யெப்தாவிடம் சொன்னதாவது: “எங்களையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகாமல் நீ ஏன் அம்மோனியருடன் சண்டையிடப்போனாய்? உன்னை வீட்டிற்குள் வைத்து உன் வீட்டை எரிக்கப்போகிறோம்” என்றார்கள்.
அதற்கு யெப்தா மறுமொழியாக, “நானும் என் மக்களும் அம்மோனியருடன் ஒரு பெரிய இக்கட்டில் இருக்கும்போது உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் வந்து அவர்களுடைய கைகளில் இருந்து காப்பாற்றவில்லை. நீங்கள் உதவிசெய்ய மாட்டீர்கள் என்பதை நான் கண்டு, எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யோர்தானைக் கடந்துபோய் அம்மோனியருடன் யுத்தம் செய்தேன். யெகோவாவும் எனக்கு வெற்றி தந்துள்ளார். இப்பொழுது நீங்கள் ஏன் இன்று என்னுடன் சண்டை பிடிக்கும்படி வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
அதன்பின் யெப்தா கீலியாத் மனிதர்களைக் கூப்பிட்டு ஒன்றுசேர்த்து, எப்பிராயீம் மனிதருக்கு எதிராகச் சண்டையிடச் செய்தான். கீலியாத்தியர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். ஏனெனில் எப்பிராயீமியரோ அவர்களிடம், “கீலேயாத்தியராகிய நீங்கள் எப்பிராயீம், மனாசேயினரை விட்டு ஓடிப்போனவர்கள்” என்று சொல்லியிருந்தார்கள். எப்பிராயீமுக்குப் போகும் யோர்தானிலுள்ள கடவு துறைகளையெல்லாம் கீலேயாத்தியர் கைப்பற்றினார்கள். எப்பிராயீமியரில் தப்பிய யாராவது நான் கடந்துபோக என்னை விடுங்கள் என கீலியாத்தியரிடம் கேட்டால், “நீ ஒரு எப்பிராயீமியனோ?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், “இல்லை” என பதிலளித்தால், “சரி, ‘சிபோலேத்’ என்று சொல்” என்பார்கள். அவனோ சரியாக உச்சரிக்க முடியாமல், “சிபோலேத்” என்று சொன்னால், அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள். அந்நாட்களில் நாற்பத்து இரண்டாயிரம் எப்பிராயீமியர் கொல்லப்பட்டனர்.
யெப்தா ஆறு வருடங்களுக்கு இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான். கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
இப்சான், ஏலோன், அப்தோன்
அவனுக்குப்பின் பெத்லெகேமைச் சேர்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான். அவனுக்கு முப்பது மகன்களும், முப்பது மகள்களும் இருந்தார்கள். அவன் தனது மகள்களைத் தன் வம்சத்திற்கு வெளியே திருமணம் செய்துகொடுத்தான். அவன் தனது மகன்களுக்கும் தனது வம்சத்திற்கு வெளியே முப்பது இளம்பெண்களை மனைவிகளாகக் கொண்டுவந்தான். இப்சான் இஸ்ரயேலுக்கு ஏழு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். அதன்பின்பு இப்சான் இறந்து பெத்லெகேமில் அடக்கம் செய்யப்பட்டான்.
அவனுக்குப்பின் செபுலோனியனான ஏலோன் இஸ்ரயேலில் பத்து வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். பின் ஏலோன் இறந்து செபுலோன் நாட்டில் ஆயலோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
அவனுக்குப்பின் பிரத்தோனைச் சேர்ந்த இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலுக்கு நீதிபதியாயிருந்தான். அவனுக்கு நாற்பது மகன்களும், முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் சவாரி செய்தார்கள். அவன் இஸ்ரயேலில் எட்டு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். அதன்பின் இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டிலுள்ள எப்பிராயீமில் பிரத்தோன் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
சிம்சோனின் பிறப்பு
திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தார்கள்; எனவே யெகோவா அவர்களை நாற்பது வருடங்களுக்குப் பெலிஸ்தியரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
சோரா ஊரில் தாண் வம்சத்தைச் சேர்ந்த மனோவா, என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி பிள்ளை பெறாது மலடியாயிருந்தாள். யெகோவாவின் தூதனானவர் அவள்முன் தோன்றி, “நீ பிள்ளை பெறாது மலடியாயிருக்கிறாய், ஆனால் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறப்போகிறாய். இப்பொழுதும் நீ திராட்சை இரசமோ அல்லது மதுபானமோ குடிக்காதே. அசுத்தமான ஒன்றையும் சாப்பிடாமலும் இருக்கும்படி கவனமாயிரு. ஏனெனில் நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது; ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்க வேண்டும்; அவனே பெலிஸ்தியரின் கையினின்று இஸ்ரயேலரை விடுவிக்கத் தொடங்குவான்” என்று சொன்னார்.
அப்பொழுது அந்த பெண் தன் கணவனிடத்திற்குச் சென்று அவனிடம், “இறைவனின் மனிதன் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் இறைத்தூதனைப்போல் பார்க்கப் பயமாயிருந்தது. நான் அவரிடம் நீர் எங்கேயிருந்து வந்தீரென்று கேட்கவுமில்லை. அவர் எனக்கு அவரது பெயரைச் சொல்லவுமில்லை. ஆனால் அவர் என்னிடம், நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவாய்; அதனால் இன்றிலிருந்து நீ திராட்சை இரசமோ மதுபானமோ குடிக்கவும், தீட்டானவற்றைச் சாப்பிடவும் வேண்டாம். ஏனெனில் அவன் பிறந்ததுமுதல் இறக்கும்வரை இறைவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருப்பான்” என்று சொன்னார் என்றாள்.
அப்பொழுது மனோவா யெகோவாவிடம் மன்றாடி, “யெகோவாவே! நீர் எங்களிடம் அனுப்பிய இறைவனின் மனிதனைத் திரும்பவும் எங்களிடம் அனுப்பும். அவர் வந்து பிறக்கப்போகும் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதைப்பற்றி எங்களுக்குக் கற்பிக்கட்டும்” என்று வேண்டிக்கொண்டான்.
இறைவன் மனோவாவின் வேண்டுதலைக் கேட்டு, திரும்பவும் வயலில் இருந்த அவனுடைய மனைவியிடத்திற்கு இறைவனின் தூதனானவர் வந்தார். ஆனால் அவளது கணவன் மனோவா அவளுடனிருக்கவில்லை. அந்தப் பெண் தன் கணவனிடத்திற்கு விரைவாக ஓடிச்சென்று, “அன்று எனக்குமுன் தோன்றிய அந்த மனிதன் இன்றும் வந்திருக்கிறார்” என்றாள்.
அப்பொழுது மனோவா எழுந்து தனது மனைவியின் பின்னே சென்றான். அவன் அந்த மனிதனிடத்திற்கு வந்ததும், “என் மனைவியுடன் பேசியது நீர்தானா?” என்றான்.
அதற்கு அவர், “நான்தான்” என்றார்.
அப்பொழுது மனோவா, “உம்முடைய வாக்கு நிறைவேறும்பொழுது பிறக்கும் பிள்ளையின் வாழ்க்கைக்கும் அவன் செய்யவேண்டிய வேலைக்கும் ஒழுங்குமுறை என்ன?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவாவின் தூதனானவர், “உனது மனைவியிடம் நான் சொன்னவற்றையெல்லாம் அவள் செய்யவேண்டும். அவள் திராட்சைச் செடியிலிருந்து பெறும் எதையும் சாப்பிடக்கூடாது. திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவோ, அசுத்தமானவற்றைச் சாப்பிடவோ கூடாது. நான் இட்ட கட்டளைகள் எல்லாவற்றையும் அவள் கடைபிடிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைக்கும்வரை, நீர் எங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றான்.
அதற்கு யெகோவாவின் தூதனானவர், “நீ என்னைத் தடுத்தாலும் நான் உனது உணவில் எதையும் சாப்பிடமாட்டேன். ஆனால் நீ தகன காணிக்கையை ஆயத்தம் செய்தால், அதை யெகோவாவுக்கு செலுத்து” என்றார். மனோவாவோ அவரை யெகோவாவின் தூதனானவர் என்று உணராமல் இருந்தான்.
அப்பொழுது மனோவா யெகோவாவின் தூதனானவரிடம், “நீர் சொன்னது நிறைவேறும்பொழுது உம்மை மகிமைப்படுத்துவதற்கு உம்முடைய பெயர் என்ன?” என விசாரித்தான்.
அதற்கு யெகோவாவினுடைய தூதன், “ஏன் என்னுடைய பெயரை கேட்கிறாய்? அதை உன்னால் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கும்” எனப் பதிலளித்தார். அப்பொழுது மனோவா ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதோடு தானியக் காணிக்கைகளையும் கொண்டுவந்து கல்லின் மேல்வைத்து யெகோவாவுக்குப் பலியாகக் கொடுத்தான். மனோவாவும், அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு வியக்கத்தக்க செயலை யெகோவா செய்தார். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை வானத்தை நோக்கி எழும்புகையில் யெகோவாவின் தூதனானவர் அந்த நெருப்பு ஜூவாலையில் மேலெழுந்து சென்றார். இதைக் கண்ட மனோவாவும் அவன் மனைவியும் தரையில் முகங்குப்புற கீழே விழுந்தார்கள். அதற்குபின் மனோவாவுக்கும், அவன் மனைவிக்கும் யெகோவாவின் தூதனானவர் காணப்படாததால், வந்தவர் யெகோவாவின் தூதனானவர் என்று மனோவா உணர்ந்து கொண்டான்.
மனோவா தன் மனைவியிடம், “நாம் இறைவனைக் கண்டோமே. ஆகையால் நாம் சாகப்போகிறோம்” என்றான்.
ஆனால் அவனுடைய மனைவி, “யெகோவா எங்களைக் கொலைசெய்ய எண்ணியிருந்தால், எங்களிடமிருந்து தகனக் காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் ஏற்றிருக்கமாட்டார். இவற்றையெல்லாம் எங்களுக்குக் காண்பிக்கவும், இதை எங்களுக்குச் சொல்லியிருக்கவும் மாட்டார்” என்று சொன்னாள்.
அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு, “சிம்சோன்” என்று பெயரிட்டாள். அவன் வளர்ந்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள தாணின்13:25 தாணின் என்பது மஹானேஷ் என்று அர்த்தம். முகாமில் இருக்கும்போது யெகோவாவின் ஆவியானவர் அவனைத் தூண்டத்தொடங்கினார்.
சிம்சோனின் திருமணம்
சிம்சோன் திம்னாவுக்குப் போனான். அங்கே பெலிஸ்திய இளம்பெண் ஒருத்தியைக் கண்டான். அவன் திரும்பி வந்தவுடன், தன் தாய் தந்தையிடம், “நான் திம்னாவில் ஒரு பெலிஸ்திய பெண்ணைக் கண்டேன். அவளை எனக்கு மனைவியாக்கித் தாருங்கள்” எனக் கட்டாயப்படுத்திக் கேட்டான்.
அதற்கு அவனுடைய தகப்பனும் தாயும் அவனிடம், “உன் உறவினரிடத்திலோ அல்லது எங்கள் மக்கள் மத்தியிலோ உனக்குப் பொருத்தமான ஒரு பெண் இல்லையா? விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியரிடத்திலா நீ உனக்கு மனைவியைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கேட்டனர்.
ஆனால் சிம்சோன் அவன் தகப்பனிடம், “அவளே எனக்குச் சரியானவள்; அவளையே எனக்குத் திருமணம் செய்துதாருங்கள்” என்றான். இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று அவனுடைய பெற்றோர் அறியாதிருந்தனர். அந்நாட்களில் பெலிஸ்தியர் இஸ்ரயேலரை ஆட்சிசெய்தபடியால், பெலிஸ்தியரை எதிர்ப்பதற்கு யெகோவா ஒரு தருணம் தேடிக்கொண்டிருந்தார்.
சிம்சோன் தன் தாய் தந்தையுடன் திம்னா பட்டணத்திற்குப் போனான்; அவர்கள் திம்னாவில் இருக்கும் திராட்சைத் தோட்டங்களை நெருங்குகையில், திடீரென ஒரு இளம் சிங்கம் கர்ஜித்துக்கொண்டு அவனை நோக்கி வந்தது. அவ்வேளையில் யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினதால், அவன் தன் வெறும் கைகளினால் அச்சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுவதுபோல் கிழித்துப்போட்டான். ஆனால் அவன் தான் செய்ததை தன் தகப்பனுக்கோ தாய்க்கோ சொல்லவில்லை. பின்பு அவன் போய் அந்தப் பெண்ணுடன் பேசினான். அவளை அவன் விரும்பினான்.
சில நாட்களின்பின் அவளை திருமணம் செய்வதற்காக அவன் திரும்பி வரும்போது, தான் கொலைசெய்த சிங்கத்தின் உடல் கிடந்த இடத்தைப் பார்ப்பதற்காக வழிவிலகிப்போனான். அந்த உடலின் உள்ளே தேனீக்கூட்டமும், கொஞ்சம் தேனும் இருந்தது. அவன் தேனைத் தன் கையினால் தோண்டி எடுத்துத் தான் போகும் வழியில் சாப்பிட்டுக்கொண்டே போனான். அவன் தன் பெற்றோரிடம் திரும்பிவந்து சேர்ந்துகொண்டபோது, அதை அவர்களுக்கும் கொடுத்தான். அவர்களும் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால் அவன் அந்தத் தேனை சிங்கத்தின் உடலில் இருந்து எடுத்ததாக அவர்களுக்குச் சொல்லவில்லை.
அவனுடைய தகப்பன் அந்தப் பெண்ணைப் பார்க்கப்போனான். சிம்சோன் மணமகன் செய்யும் வழக்கப்படி ஒரு விருந்து வைத்தான். சிம்சோன் அங்கு வந்ததும் அவனோடிருக்க முப்பது தோழர்கள் கொடுக்கப்பட்டனர்.
அப்பொழுது சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்வேன். இந்த விருந்து நடக்கும் ஏழு நாட்களுக்குள்ளே அதன் பதிலை நீங்கள் சொல்லவேண்டும். அப்படி நீங்கள் சொன்னால் நான் உங்களுக்கு முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தருவேன். அப்படி உங்களால் பதிலைச் சொல்ல முடியாவிட்டால் எனக்கு நீங்கள் முப்பது பஞ்சுநூல் மேலாடைகளையும், முப்பது உடைகளையும் தரவேண்டும்” என்றான்.
அப்பொழுது அவர்கள், “நீ உன் விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கிறோம்” என்றார்கள்.
அதற்கு சிம்சோன் சொன்னான்:
“உண்பவனிடம் இருந்து உண்பதற்கு உணவு வந்தது,
வல்லவனிடம் இருந்து இனியது வந்தது.”
ஆனால் மூன்று நாட்களாகியும் அதை அவர்களால் விடுவிக்க முடியவில்லை.
நான்காம் நாள்14:15 எபிரெய வேதத்தின் கிரேக்கப் பிரதிகளில் ஏழாவதுநாள் என்றுள்ளது அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “எங்களைக் கொள்ளையிடுவதற்காகவா இங்கு எங்களை அழைத்தாய்? இப்பொழுது நீ உனது கணவனுடன் அன்பாகப் பேசி, எங்களுக்கு அந்த விடுகதையை விளக்கும்படி இணங்க வை; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும், உன் தகப்பன் வீட்டாரையும் எரித்து சாகடிப்போம்” என்றார்கள்.
அப்பொழுது சிம்சோனின் மனைவி, தனது கணவனிடம் சென்று அழுது, “நீர் என்னை வெறுக்கிறீர்; உண்மையாக நீர் என்னில் அன்பு செலுத்தவில்லை. நீர் என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையை சொல்லியிருக்கிறீர். ஆனால் அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லவில்லை” என்றாள்.
அதற்கு அவன், “நான் என் தகப்பனுக்கும், தாய்க்கும்கூட அதன் விளக்கத்தைச் சொல்லவில்லையே. அப்படியிருக்க ஏன் அதை உனக்குச் சொல்லவேண்டும்?” என்று கேட்டான். அவள் அந்த விருந்து நடந்த ஏழு நாட்கள் முடியும்வரை அழுதாள். தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததால் கடைசி ஏழாவது நாளிலே அவன் அவளுக்கு விளக்கத்தைச் சொன்னான். அப்பொழுது அவளும் தன் மக்களுக்கு விடுகதையின் விளக்கத்தைப் போய்ச் சொன்னாள்.
எனவே ஏழாம்நாள் சூரியன் மறையுமுன் பட்டணத்து மனிதர் வந்து சிம்சோனிடம் சொன்னதாவது:
“தேனிலும் இனியது என்ன?
சிங்கத்திலும் வலியது என்ன?”
சிம்சோன் அவர்களிடம் பதிலளித்துச் சொன்னது:
“நீங்கள் எனது இளம் பசுவுடன் உழுதிராவிட்டால்
என் விடுகதையை விடுவித்திருக்கமாட்டீர்கள்.”14:18 எனது மனைவியினால் விடையைப் பெற்றீர்கள் என்று அர்த்தம்.
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவன் அஸ்கலோனுக்குப் போய் அங்குள்ளவர்களில் முப்பது மனிதரை அடித்து வீழ்த்தி, அவர்களின் உடைகள் எல்லாவற்றையும் உரித்துக்கொண்டுவந்து விடுகதையைச் சொன்னவர்களிடம் கொடுத்தான். பின்னர் அவன் பற்றியெரியும் கோபத்துடன் அவ்விடத்தைவிட்டு தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சிம்சோனின் மனைவியோ திருமணத்திற்கு வந்திருந்த அவனுடைய சிநேகிதன் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
சிம்சோன் பெலிஸ்தியரை பழிவாங்குதல்
சில நாட்களுக்குப்பின் கோதுமை அறுவடை செய்யும் நாட்களில் சிம்சோன் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு தன் மனைவியைப் பார்க்கப்போனான். அவன், “நான் என் மனைவியின் அறைக்குள் போகவேண்டும்” எனச் சொன்னான். ஆனால் அவளுடைய தகப்பன் அவனை அறைக்குள் போகவிடவில்லை.
அவள் தகப்பன் அவனிடம், “நீ அவளை முற்றுமாய் வெறுக்கிறாய் என்று எண்ணி, நான் அவளை உனது சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால் எனது இளைய மகளான அவளது சகோதரி அவளிலும் அழகானவள் அல்லவா? எனவே நீ இவளுக்கப் பதிலாக அவளை எடுத்துக்கொள்” என்றான்.
அதற்கு சிம்சோன் அவர்களிடம், “இந்நேரம் நான் பெலிஸ்தியரை பழிவாங்கினாலும் என்மேல் குறை கூறமுடியாது. உண்மையாக அவர்களுக்குத் தீங்கு செய்வேன்” என்றான். எனவே அவன் புறப்பட்டுப்போய் முந்நூறு நரிகளைப் பிடித்தான். அவற்றைச் ஜோடியாக வாலுடன் வால் சேர்த்து பிணைத்தான். ஒவ்வொரு ஜோடி வால்களுக்கிடையிலும் ஒரு பந்தத்தைக் கட்டிவிட்டான். பின் பந்தங்களில் நெருப்பைக் கொளுத்தி நரிகளை பெலிஸ்தியரின் விளைந்திருந்த வயல்களுக்கிடையில் ஓடவிட்டான். அவ்வாறு அவன் கதிர்க்கட்டுகளையும், நின்ற தானியக் கதிர்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்தான்.
அப்பொழுது பெலிஸ்தியர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டபோது, “இதைத் திம்னாத்தினுடைய மருமகனாகிய சிம்சோன் செய்திருக்கிறான். ஏனெனில் அவனுடைய மனைவி அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாள்” என்றார்கள்.
எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் குடும்பத்தையும் எரித்துக்கொன்றார்கள். சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் இவ்வாறு நடந்துகொண்டபடியால், நான் உங்கள்மேல் பழிவாங்கி முடியும்வரை இதை நிறுத்தமாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறு அவன் அவர்களை மூர்க்கத்துடன் தாக்கி, அவர்களில் அநேகரைக் கொன்றான். பின் அவன் ஏத்தாம் கற்பாறைக்குச் சென்று அங்கே ஒரு கற்குகையிலே தங்கினான்.
பெலிஸ்தியர் யூதாவிலே முகாமிட்டு லேகிக்கு அருகில் பரவியிருந்தார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர், “ஏன் எங்களுடன் சண்டையிட வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல அவனுக்கும் நாங்கள் செய்வதற்காக, சிம்சோனைக் கைதுசெய்து கொண்டுபோக வந்தோம்” என்றார்கள்.
அப்பொழுது யூதாவின் மனிதர்களில் மூவாயிரம்பேர் சிம்சோன் இருந்த ஏத்தாமின் பாதையிலிருந்த குகைக்குச் சென்று அவனிடம், “பெலிஸ்தியரே எங்கள்மேல் ஆளுநர்களாக இருக்கிறார்கள் என்பதை நீ உணரவில்லையா? நீ எங்களுக்குச் செய்தது என்ன?” என்றார்கள்.
அதற்கு அவன், “அவர்கள் எனக்குச் செய்ததையே நான் அவர்களுக்குச் செய்தேன்” என்றான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் இப்பொழுது உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் ஒப்படைக்கவே வந்திருக்கிறோம்” என்றார்கள்.
சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் என்னைக் கொலைசெய்யப் போவதில்லை என்று எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்” என்றான்.
அதற்கு அவர்கள், “சரி; உன்னைக் கொலைசெய்யமாட்டோம். ஆனால் கட்டி அவர்களிடம் ஒப்படைப்போம்” எனப் பதிலளித்தனர். பின் அவர்கள் அவனை சுற்றிவளைத்து இரண்டு புதிய கயிறுகளால் கட்டி கற்பாறையிலிருந்து வெளியே கொண்டுசென்றனர். அவன் லேகிக்கு சமீபமாய் வருகையில் பெலிஸ்தியர் அவனை நெருங்கி வந்தார்கள். அந்த நேரத்தில் யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அதனால் அவனைக் கட்டியிருந்த கயிறுகள் திடீரென நெருப்பில் எரிந்த சணல்நூல் போலாகி கட்டுகள் அவன் கையிலிருந்து அறுந்து விழுந்தன. அப்பொழுது அவன் கழுதையின் பழுதடையாத தாடை எலும்பைக் கண்டெடுத்து, அதைக்கொண்டு ஆயிரம்பேரைக் குத்திக் கொன்றான்.
அப்பொழுது சிம்சோன் சொன்னான்:
“கழுதையின் தாடை எலும்பினால்
ஒரு பிணக்குவியலை ஏற்படுத்தினேன்.
கழுதையின் ஒரு தாடை எலும்பினாலேயே,
நான் ஆயிரம்பேரைக் கொலைசெய்தேன்.”
அவன் இவ்வாறு சொல்லி முடிந்தவுடன் தாடை எலும்பை எறிந்துவிட்டான். அந்த இடம் ராமாத் லேகி15:17 ராமாத் லேகி என்பது தாடை எலும்பின் மலை என்றும் அழைப்பர். என அழைக்கப்பட்டது.
அவன் மிகவும் தாகமாக இருந்ததினால் யெகோவாவை நோக்கி, “உமது அடியானாகிய எனக்கு இந்தப் பெரிய வெற்றியைத் தந்திருக்கிறீர்; இப்பொழுது நான் தாகத்தினால் இந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே அகப்பட்டு சாகவேண்டுமா?” என அழுதான். அப்பொழுது இறைவன் லேகியின் பள்ளத்தைப் பிளந்தார். அதிலிருந்து தண்ணீர் வந்தது. அதைச் சிம்சோன் குடித்தவுடன் பெலனடைந்து, புத்துயிர் பெற்றான். அந்த நீரூற்று என்ஹக்கோரே15:19 என்ஹக்கோரே என்பது மன்றாடுவோரின் நீருற்று என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது. அந்நீரூற்று இந்நாள்வரை லேகியில் இருக்கிறது.
பெலிஸ்தியரின் காலத்தில் சிம்சோன் இஸ்ரயேலில் இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.
சிம்சோனும் தெலீலாளும்
ஒரு நாள் சிம்சோன் பெலிஸ்திய பட்டணம் காசாவுக்குப் போனபோது அங்கே ஒரு வேசியைக் கண்டான். அவன் அங்கு சென்று அன்று இரவை அவளுடன் கழித்தான். காசாவின் மக்கள், “சிம்சோன் இங்கே இருக்கிறான்” என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து இரவு முழுவதும் பட்டணத்து வாசலில் பதுங்கியிருந்தார்கள். இரவுவேளையில் ஒன்றும் செய்யாமல், காலையில் அவன் வெளியில் வரும்போது அவனைக் கொலைசெய்யக் காத்திருந்தனர்.
ஆனால் சிம்சோன் நள்ளிரவு வரையுமே அங்கு படுத்திருந்தான். பின்பு அவன் எழுந்து பட்டணத்து வாசல் கதவுகளையும், அதன் இரண்டு நிலைகளையும், தாழ்ப்பாள்களையும் பிடுங்கி எடுத்து அவற்றைத் தன் தோளில் சுமந்துகொண்டு, எப்ரோனை நோக்கியுள்ள மலை உச்சிக்குப் போனான்.
சில நாட்களுக்குபின் அவன் சோராக் பள்ளத்தாக்கில் வசித்த தெலீலாள் என்னும் பெண்ணில் அன்பு வைத்தான். பெலிஸ்தியரின் ஆளுநர்கள் அவளிடம் சென்று, “நீ அவனுடன் நயமாகப் பேசி, இப்பெரிய ஆற்றல்மிக்க பெலன் எங்கிருந்து வருகிறது என்ற இரகசியத்தைக் காட்டும்படி அவனை வசப்படுத்த முடியுமா என்று பார். நாங்கள் அவனை மேற்கொண்டு கட்டியடிக்க முடியுமா என்று பார். நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு சேக்கல்16:5 அதாவது, சுமார் 13 கிலோகிராம் நிறையுள்ள வெள்ளிக்காசை உனக்குத் தருவோம்” என்றார்கள்.
எனவே தெலீலாள் சிம்சோனிடம், “உனது இப்பெரிய வலிமையின் இரகசியத்தையும், எப்படி உன்னைக் கீழ்ப்படுத்திக் கட்டலாம் என்பதையும் எனக்குச் சொல்” எனக் கேட்டாள்.
அதற்கு சிம்சோன் அவளிடம், “யாராவது என்னை ஏழு காயாத தோல் வார்களினால் கட்டினால், மற்ற மனிதர்களைப்போல நானும் பெலனற்றவனாவேன்” என்று பதிலளித்தான்.
அப்பொழுது பெலிஸ்தியரின் ஆளுநர்கள் ஏழு காயாத தோல்வார்களை அவளிடம் கொடுத்தார்கள். அவள் அவனை அவற்றால் கட்டினாள். அந்த மனிதர்களை அறைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, “சிம்சோனே இதோ பெலிஸ்தியர்கள் உன்னைப் பிடிக்க வந்துவிட்டார்கள்” என்று சொன்னாள். அப்பொழுது அவன் தன்னைக் கட்டியிருந்த அந்த தோல்வார்களை நெருப்புப்பட்ட கயிறுகளை அறுப்பதுபோல இலகுவாக அறுத்தான். எனவே அவனுடைய வல்லமை எங்கிருந்து வந்தது என்பதன் இரகசியம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “நீ என்னை ஏமாற்றி விட்டாய். நீ எனக்குப் பொய் சொல்லியிருக்கிறாய். இப்பொழுது நீ எதனால் உன்னைக் கட்டலாம் என்று எனக்குச் சொல்” என்றாள்.
அதற்கு அவன், “ஒருபோதும் பயன்படுத்தப்படாத புதிய கயிறுகளால் என்னைப் பாதுகாப்பாகக் கட்டினால், நானும் மற்ற மனிதர்களைப்போல பெலனற்றவனாவேன்” என்றான்.
எனவே தெலீலாள் புதியகயிறுகளை எடுத்து அவனைக் கட்டினாள். பின்பு அந்த மனிதர்கள் அறைக்குள் பதுங்கியிருக்கும்போது அவள், “சிம்சோனே பெலிஸ்தியர் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். அவனோ தன் கையில் கட்டியிருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
அப்பொழுது தெலீலாள் சிம்சோனிடம், “இதுவரைக்கும் நீ என்னை ஏமாற்றிக்கொண்டும், பொய் சொல்லிக்கொண்டும் இருக்கிறாய். உன்னை எதனால் கட்டமுடியும் என்று இப்பொழுது எனக்குச் சொல்” என்றாள்.
அதற்கு அவன், “என் தலைமயிரில் உள்ள ஏழு சடைகளை எடுத்து அவற்றை நெசவுத்தறியிலுள்ள நூல் பாவோடு சேர்த்து நெசவுசெய்து ஆணியால் இறுக்கினால், நான் மற்ற மனிதரைப்போல் பெலனற்றவனாவேன்” எனச் சொன்னான். எனவே அவள் அவன் நித்திரையாயிருக்கும்போது, அவன் தலைமயிரில் ஏழு சடைகளை எடுத்து நெசவுத்தறி நூல் பாவோடு நெசவுசெய்து ஆணியால் இறுக்கினாள்.
திரும்பவும் அவள் அவனை அழைத்து, “சிம்சோனே பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றாள். உடனே அவன் நித்திரை விட்டெழுந்து பின்னலை ஆணியடிக்கப்பட்டிருந்த நெசவுத்தறியோடு பிடுங்கிக்கொண்டு போனான்.
அப்பொழுது அவள் அவனிடம், “என்னில் முழுநம்பிக்கை இல்லாதபோது, ‘உன்னை நேசிக்கிறேன்’ என்று எப்படிச் சொல்லலாம் என்றாள். உனது வலிமைமிக்க பெலன் எங்கிருந்து வருகின்றதென்ற இரகசியத்தைச் சொல்லாமல் மூன்றாவது முறையாக என்னை ஏமாற்றியிருக்கிறாயே” என்றாள். இவ்வாறு அவள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நச்சரித்துத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்ததால் அவன் தாங்கமுடியாத அளவு சோர்வடைந்தான்.
எனவே அவன் அவளிடம், “என்னுடைய தலையில் இதுவரை சவரக்கத்தி பட்டதேயில்லை. ஏனெனில் நான் பிறந்தது முதற்கொண்டே இறைவனுக்கென வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்கிறேன்; எனது தலைசவரம் செய்யப்பட்டால் என் பெலன் என்னைவிட்டுப் போய்விடும். நான் மற்ற மனிதரைப்போல பெலனற்ற மனிதனாவேன்” என அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான்.
அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்பதை தெலீலாள் உணர்ந்தபோது, பெலிஸ்தியரின் ஆளுநர்களிடம், “இன்னும் ஒருமுறை மாத்திரம் வாருங்கள். அவன் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்” எனச் சொல்லியனுப்பினாள். எனவே பெலிஸ்தியரை ஆளுபவர்கள் வெள்ளிப்பணத்துடன் திரும்பி வந்தார்கள். பின்பு அவள் சிம்சோனைத் தனது மடியில் நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து சிம்சோனின் தலையிலிருந்த ஏழு சடைகளையும் சவரம்செய்து, அவனைப் பலவீனப்படுத்தத் தொடங்கினாள். அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
அப்பொழுது அவள், “சிம்சோனே! பெலிஸ்தியர்கள் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறார்கள்” என்றாள்.
உடனே அவன் நித்திரைவிட்டு எழுந்து, “இப்பொழுது நான் முன்புபோல வெளியே போய் என்னை விடுவித்துக்கொள்வேன்” என நினைத்தான். ஆனால் யெகோவா தன்னைவிட்டு அகன்றுவிட்டதை அவன் அறியாதிருந்தான்.
அப்பொழுது பெலிஸ்தியர் வந்து அவனைப் பிடித்து, அவனுடைய இரண்டு கண்களையும் தோண்டியெடுத்தபின் அவனை காசாவுக்குக் கொண்டுபோனார்கள். அங்கே அவனை வெண்கலச் சங்கிலியினால் கட்டி, சிறையில் மாவரைக்கும்படி வைத்தார்கள். ஆனால் சவரம் செய்தபின் அவனுடைய தலையில் திரும்பவும் மயிர் முளைக்கத் தொடங்கிற்று.
சிம்சோனின் மரணம்
பெலிஸ்தியரின் ஆளுநர்கள் தங்களுடைய தெய்வமான தாகோனுக்கு ஒரு பெரிய பலியைச் செலுத்தவும் விழாக்கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள், “எங்கள் தெய்வம் எங்கள் பகைவனான சிம்சோனை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறது” என்று சொல்லிக்கொண்டார்கள்.
அந்த மக்கள் சிம்சோனைக் கண்டதும், தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்து சொன்னதாவது:
“நமது தெய்வம் எங்கள் பகைவனை
நம் கையில் ஒப்படைத்திருக்கிறது;
நம்முடைய நாட்டைப் பாழாக்கி,
நம்மில் அநேகரை இவன் கொன்றொழித்தானே!”
இவ்வாறு அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருக்கும்போது, “எங்களை மகிழ்விக்க சிம்சோனை வெளியே கொண்டுவாருங்கள்” என்று சத்தமிட்டார்கள். எனவே சிம்சோனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவன் அவர்களுக்குச் சாகசங்கள் செய்துகாட்டினான்.
அவர்கள் அவனைத் தூண்களுக்கிடையே நிறுத்தினார்கள். அப்பொழுது சிம்சோன் தனது கையைப் பிடித்துநின்ற பணியாளிடம், “கோயிலைத் தாங்கிநிற்கும் தூண்களைத் தடவிப்பார்க்கும்படி அங்கே என்னைக்கொண்டு போ. நான் அவற்றில் சாய்ந்துகொள்ளவேண்டும்” என்றான். இப்பொழுது பெலிஸ்திய ஆண்களினாலும், பெண்களினாலும் அந்த கோயில் நிறைந்திருந்தது. பெலிஸ்திய ஆளுநர்கள் எல்லோரும் அங்கிருந்தார்கள். மேல்மாடத்தின் மேலும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்களும், பெண்களும் சிம்சோனின் சாகசங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் யெகோவாவிடம், “என்னை ஆட்சிசெய்கிற யெகோவாவாகிய ஆண்டவரே! என்னை நினைவுகூரும்; என் இறைவனே இன்னும் ஒருமுறை மட்டும் என்னைப் பலப்படுத்தும். எனது இரு கண்களையும் எடுத்துப்போட்ட பெலிஸ்தியரை ஒரேயடியில் பழிவாங்கவிடும்” என வேண்டுதல் செய்தான். பின்பு சிம்சோன் கோவிலைத் தாங்கிநின்ற நடுத்தூண்கள் இரண்டையும் எட்டிப்பிடித்தான். அவற்றில் ஒன்றைத் தனது வலதுகையாலும், மற்றொன்றை தனது இடதுகையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். பின் சிம்சோன், “நான் சாகும்போது பெலிஸ்தியருடனே சாகவேண்டும்” என்று சொல்லி, தனது முழு பெலனையும் சேர்த்துத் தூண்களைத் தள்ளினான். அப்பொழுது ஆளுநர்கள்மேலும், கூடியிருந்த எல்லா மக்கள்மேலும் கோயில் இடிந்து விழுந்தது. இவ்வாறாக அவன் உயிருடன் இருக்கும்போது கொன்றவர்களைவிட, அவன் இறந்தபோது அநேகரைக் கொன்றான்.
அப்பொழுது சிம்சோனின் சகோதரர்களும், அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தவர்களும் வந்து அவனுடைய உடலை எடுத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அவனை சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள அவனுடைய தகப்பன் மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரயேலுக்கு இருபது வருடங்கள் நீதிபதியாய் இருந்தான்.
மீகாவின் விக்கிரகங்கள்
எப்பிராயீம் மலைநாட்டில் மீகா என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் தாயிடம், “உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு சேக்கல் வெள்ளிகள் தொலைந்திருந்ததே. அதைக்குறித்து நீர் சாபமிட்டதை நான் கேட்டேன். அந்த வெள்ளியை நானே எடுத்தேன். அவை என்னிடம் இருக்கிறது” என்றான்.
அப்பொழுது அவனுடைய தாய் அவனிடம், “என் மகனே நீ அதை ஏற்றுக்கொண்டபடியினால் யெகோவா உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள்.
அவன் அந்த ஆயிரத்து நூறு சேக்கல் வெள்ளியைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுக்கவந்தபோது அவள், “இந்த வெள்ளியைக்கொண்டு செதுக்கப்பட்ட உருவச்சிலையையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் செய்வதற்கு பயபக்தியுடன் யெகோவாவுக்கு அர்ப்பணம் பண்ணியிருந்தேன். உன் மூலமே அதைச் செய்ய எண்ணியிருந்தபடியால், இதை நான் மீண்டும் உன்னிடம் தருகிறேன்” என்றாள்.
அப்படியே அவன் அந்த வெள்ளியைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அவள் அதில் இருநூறு சேக்கலை எடுத்து அதைக் கொல்லனிடம் கொடுத்தாள். அவன் அதைக்கொண்டு உருவச்சிலையையும், விக்கிரகத்தையும் செய்தான். அவை மீகாவின் வீட்டில் வைக்கப்பட்டன.
இந்த தெய்வங்களுக்கென்று ஒரு அறை மீகாவுக்கு இருந்தது. அவன் அங்கே ஒரு ஏபோத்தையும், சில உருவச்சிலைகளையும் உண்டுபண்ணி, தனது மகன்களில் ஒருவனைப் பூசாரியாக நியமித்தான். அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.
யூதாவிலுள்ள பெத்லெகேமில் லேவிய வாலிபன் ஒருவன் இருந்தான்; அவன் யூதா வம்சத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் அந்த பட்டணத்தைவிட்டுத் தான் குடியிருக்க வேறு ஒரு இடத்தைத் தேடிப் போனான். போகும் வழியில் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள மீகாவின் வீட்டிற்கு வந்தான்.
மீகா அவனிடம், “எங்கிருந்து நீ வருகிறாய்?” என்று கேட்டான்.
“நான் யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த லேவியன். நான் இருப்பதற்கு ஒரு இடம் தேடுகிறேன்” என்று சொன்னான்.
அப்பொழுது மீகா அவனிடம், “நீ எனக்குத் தகப்பனாகவும், பூசாரியாகவும் என்னுடன் இரு. நான் உனக்கு ஒரு வருடத்திற்கு பத்து சேக்கல்17:10 அதாவது, சுமார் 115 கிராம் வெள்ளியும், உணவும், உடையும் தருகிறேன்” என்று சொன்னான். எனவே அந்த லேவியன் அவனோடிருப்பதற்கு சம்மதித்தான். அவன் மீகாவின் மகன்களில் ஒருவனைப்போல் அங்கே இருந்தான். அப்பொழுது மீகா அந்த லேவி வாலிபனைப் பூசாரியாக நியமித்தான். அவன் மீகாவின் வீட்டில் இருந்தான். மீகா தனக்குள்ளே, “ஒரு லேவியன் எனது பூசாரியாக வந்திருக்கின்றபடியால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்பதை நான் அறிகிறேன்” என்று சொல்லிக்கொண்டான்.
தாண் கோத்திரம் லாயீசில் குடியேறுதல்
அந்த நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை.
அந்நாட்களில் தாண் கோத்திரம் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஒரு சொந்த இடத்தை இன்னும் தேடிக்கொண்டிருந்தது. ஏனெனில் இஸ்ரயேல் கோத்திரங்களுக்குள் தாண் கோத்திரத்திற்கு இன்னும் உரிமைச்சொத்து கிடைக்கவில்லை. எனவே, தாண் கோத்திரத்தினர் சோரா, எஸ்தாவோலிலுள்ள தங்கள் எல்லா வம்சத்திலுமிருந்து ஐந்து வீரரைத் தங்கள் பிரதிநிதிகளாக அனுப்பினார்கள்.
அவர்கள் அந்த மனிதரிடம், “நீங்கள் போய் எப்பிராயீம் மலைநாட்டை ஆராய்ந்துபார்த்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அதன்படி அந்த மனிதர்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்கு வந்து, அங்கே மீகாவின் வீட்டில் இரவு தங்கினார்கள். அவர்கள் மீகாவின் வீட்டில் இருக்கும்போது, அந்த லேவியனின் குரலால் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். எனவே அவர்கள் அப்பக்கமாய்ப் போய் அவனிடம், “உன்னை இங்கு கொண்டுவந்தவன் யார்? இந்த இடத்தில் நீ என்ன செய்கிறாய்? ஏன் இங்கு இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் மீகா தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, “அவன் என்னைக் கூலிக்கு அமர்த்தியிருக்கிறான். நான் அவனுடைய பூசாரியாக இருக்கிறேன்” என்றும் சொன்னான்.
அப்பொழுது அவர்கள் அவனிடம், “நாங்கள் வந்த பயணம் வெற்றியாய் முடியுமா என நாங்கள் அறிவதற்கு தயவுசெய்து, இறைவனிடம் விசாரி” என்று சொன்னார்கள்.
அதற்கு பூசாரி, “சமாதானத்தோடு போங்கள். உங்கள் பிரயாணம் யெகோவாவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது” எனப் பதிலளித்தான்.
எனவே அந்த ஐந்து மனிதரும் அவ்விடத்தைவிட்டு லாயீசுக்குப் போனார்கள். அங்குள்ள மக்கள் சீதோனியரைப்போல பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதைக் கண்டார்கள்.18:7 அல்லது நாட்டிலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை. நாடு வளமாயிருந்தபடியால், அவர்கள் செல்வச்செழிப்பாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் சீதோனியர்களிலிருந்து வெகுதொலைவில் வாழ்ந்தார்கள். வேறு எவருடனும்18:7 வேறு எவருடனும் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரிதிகளில் அராமியர்கள் என்றுள்ளது அவர்களுக்கு எந்தத் தொடர்பு இல்லாதிருப்பதையும் கண்டார்கள்.
அவர்கள் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் திரும்பிவந்தபோது, அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், “அங்கு எப்படியிருக்கக் கண்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “வாருங்கள்! நாம் அவர்களைத் தாக்குவோம்; அந்த நாடு மிகவும் செழிப்புள்ளதெனக் கண்டோம். நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கப்போகிறீர்களோ? அங்குபோய் அதைக் கைப்பற்றத் தயங்கவேண்டாம். நீங்கள் அங்கு போனபின்பு அங்குள்ள மக்கள் உங்கள்மேல் சந்தேகப்படாதவர்களாய் இருப்பதையும், விசாலமான நிலத்தை இறைவன் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார் என்பதையும் காண்பீர்கள். அது ஒன்றிலும் குறைவில்லாத நாடு” என்று சொன்னார்கள்.
அப்பொழுது தாண் வம்சத்திலிருந்து அறுநூறு ஆயுதம் தரித்த மனிதர் யுத்தம் செய்வதற்காக சோராவிலும், எஸ்தாவோலிலிருந்தும் போனார்கள். அவர்கள் போகும் வழியில் யூதாவிலுள்ள கீரியாத்யாரீமின் அருகிலே ஒரு முகாமிட்டார்கள். இதனாலேயே கீரியாத்யாரீமுக்கு மேற்கேயுள்ள இடம் மஹனே தாண் என இன்றுவரை அழைக்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் எப்பிராயீமிலுள்ள மலைநாட்டிற்குச் சென்று மீகாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள். எனவே அவர்கள் வாலிபனான லேவியன் இருந்த மீகாவின் வீட்டின் பக்கம் சென்று அவனை வாழ்த்தினார்கள். அப்பொழுது தாணிலிருந்து யுத்த ஆயுதந்தரித்த அறுநூறு வீரர்களும் அந்த நுழைவாசலில் நின்றனர். பூசாரியும், ஆயுதம் தாங்கிய வீரர்களும் நுழைவாசலில் நிற்கையில், நாட்டை உளவுபார்க்க வந்த ஐந்து வீரர்களும் உள்ளே சென்று, அங்கிருந்த செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற வீட்டு தெய்வங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்தார்கள்.
இந்த ஐந்து மனிதர்கள் மீகாவின் வீட்டிற்குள்ளே சென்று செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற தெய்வங்களையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுப்பதைக்கண்ட பூசாரி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “அமைதியாய் இரு! ஒரு வார்த்தையும் பேசாதே! எங்களுடன் வந்து எங்கள் தகப்பனாகவும், பூசாரியாகவும் இரு. ஒருவனின் வீட்டிற்குப் பூசாரியாக இருப்பதைவிட, இஸ்ரயேலின் கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் பூசாரியாயிருப்பது நல்லதல்லவா” எனக் கேட்டனர். அப்பொழுது பூசாரி மகிழ்ச்சியடைந்தான். அவன் ஏபோத்தையும், மற்றும் வீட்டு தெய்வங்களையும், செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான். அவர்கள் தங்கள் சிறுபிள்ளைகள், ஆடுமாடுகள், தங்களிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தங்களுக்கு முன்னே அனுப்பி, அவர்களும் அந்த இடத்தைவிட்டுப் போனார்கள்.
அந்த மனிதர்கள் மீகாவின் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் போய்க்கொண்டிருக்கையில், மீகாவின் அயல் வீட்டார் அழைக்கப்பட்டு, தாண் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தார்கள். அவர்கள் தாண் மக்களை நோக்கிச் சத்தமிட்டார்கள். தாண் மக்கள் திரும்பிப்பார்த்து மீகாவிடம், “நீ இந்த மனிதர்களை சண்டையிட அழைத்து வருவதற்கு இப்போது உனக்கு என்ன நடந்துவிட்டது” என்று கேட்டார்கள்.
அதற்கு மீகா, “நான் உருவாக்கிய எனது தெய்வங்களை நீங்கள் எடுத்து விட்டீர்கள். என் பூசாரியையும் கூட்டிப்போய் விட்டீர்கள். என்னிடம் வேறு என்ன இருக்கிறது. அப்படியிருக்க உனக்கு என்ன நடந்தது என்று நீங்கள் எப்படிக் கேட்க முடியும்?” என்று கேட்டான்.
தாண் கோத்திரத்தார் மீகாவைப் பார்த்து, “எங்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். பண்ணினால் முற்கோபக்காரர் உங்களைத் தாக்குவார்கள். நீயும் உன் குடும்பத்தாரும் உயிரை இழக்க நேரிடும்” என்றார்கள். தாண் கோத்திரத்தார் தங்கள் வழியே போனார்கள். மீகாவும் அவர்கள் தன்னைவிட வலிமையுள்ளவர்கள் எனக் கண்டு திரும்பி வீட்டிற்குப் போனான்.
அப்பொழுது தாண் மக்கள் மீகா செய்திருந்த தெய்வங்களை எடுத்துக்கொண்டு, அவனுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு லாயீசுக்கு அங்கே அமைதியோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்ந்த மக்களுக்கு விரோதமாய்ப் போனார்கள். அவர்கள் அங்குள்ளவர்களை வாளால் வெட்டி அப்பட்டணத்தைத் தீக்கிரையாக்கினார்கள். அப்பட்டணத்து மக்கள் சீதோனுக்கு வெகுதொலைவில் இருந்தபடியாலும், வேறு ஒருவருடனும்18:28 வேறு ஒருவருடனும் என்பது சில மூல பிரிதிகளில் அராமியர்கள் என்றுள்ளது தொடர்பற்றிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்கவில்லை. அப்பட்டணம் பெத் ரேகோப் அருகேயுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது.
தாண் மக்கள் பட்டணத்தைத் திரும்பவும் கட்டி, அங்கே குடியேறினார்கள். பின்பு அவர்கள் லாயீசு என்று அழைக்கப்பட்ட அப்பட்டணத்திற்கு, “தாண்” என்று பெயரிட்டார்கள். தாண் என்பவன் இஸ்ரயேலுக்குப் பிறந்த முற்பிதாக்களில் ஒருவனாயிருந்தான். அங்கே, தாண் மக்கள் விக்கிரகங்களைத் தங்களுக்குத் தெய்வமாக வைத்துக்கொண்டார்கள். மோசேயின் பேரனும், கெர்சோமின் மகனுமான யோனத்தானும் அவனுடைய மகன்களும் நாடு சிறைப்பட்டுப்போன நாள்வரைக்கும், தாண் கோத்திரத்திற்கு பூசாரிகளாக இருந்தார்கள். இறைவனின் ஆலயம் சீலோவில் இருந்த காலமெல்லாம் அவர்கள் மீகா உருவாக்கிய விக்கிரகங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.
லேவியனும் வைப்பாட்டியும்
அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை.
அக்காலத்தில் எப்பிராயீம் மலைநாட்டின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் லேவியன் ஒருவன் நெடுங்காலமாகக் குடியிருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருந்தான். ஆனால் அவளோ அவனுக்குத் துரோகம்செய்து அவனைவிட்டுப் பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குத் தன் தகப்பன் வீட்டுக்குப்போய் நான்கு மாதம் அங்கே தங்கியிருந்தாள். அதன்பின் அவளது கணவன் அவளை இணங்கப்பண்ணி மீண்டும் அழைத்து வருவதற்காக அவளிடத்திற்குப் போனான். அவன் தனது வேலைக்காரனோடும், இரண்டு கழுதைகளோடும் போனான். அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவள் தகப்பன் அவனைக் கண்டபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றான். அப்பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எனவே அவன் மூன்று நாட்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து, நித்திரை செய்தான்.
அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான். எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு அப்பெண்ணின் தகப்பன், “தயவுசெய்து இன்றிரவும் நீ இங்கே தங்கி மகிழ்ந்திரு” எனக் கேட்டுக்கொண்டான். திரும்பவும் அவன் எழுந்து புறப்படுகையில் அவனுடைய மாமன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் அன்று இரவும் அங்கு தங்கினான். ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
பின்பு அவன் தனது வைப்பாட்டியுடனும், வேலைக்காரனுடனும் எழுந்து புறப்பட்டான்; அப்பொழுது பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனிடம், “இப்பொழுது சாயங்காலமாயிற்று; இந்த நாளும் முடியப்போகிறது. எனவே இன்றிரவும் இங்கேயே தங்கி மகிழ்ந்திரு. நாளை அதிகாலையில் எழுந்து நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான். ஆனால் அவன் அந்த இரவும் அங்கு தங்கியிருக்க விரும்பாததால், தன் பொதி ஏற்றிய இரண்டு கழுதைகளுடனும், வைப்பாட்டியுடனும் எருசலேம் என அழைக்கப்பட்ட எபூசுக்குப் போனான்.
அவர்கள் எபூசுவை நெருங்கிக் கொண்டிருக்கையில், இருட்டிக் கொண்டிருந்ததினால் வேலைக்காரன் தன் தலைவனிடம், “வாரும், எபூசியர் இருக்கும் இந்தப் பட்டணத்தில் தங்கி இந்த இரவைக் கழிப்போம்” என்று சொன்னான்.
அதற்கு அவன் தலைவன், “இல்லை; இவர்கள் இஸ்ரயேலர் அல்லாததால் இவர்களின் பட்டணத்திற்குள் நாம் போகக்கூடாது. நாம் கிபியா பட்டணத்திற்குப் போவோம்” என்று சொன்னான். மேலும் அவன், “வாருங்கள் நாங்கள் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ போய்ச் சேர்ந்து அவை ஒன்றில் இன்றிரவைக் கழிப்போம்” என்றான். எனவே அவர்கள் போனார்கள். அவர்கள் செல்கையில் பென்யமீனிலுள்ள கிபியாவை நெருங்கியதும் சூரியன் மறைந்துவிட்டது. எனவே அவர்கள் இரவைக் கழிப்பதற்காக, அப்பட்டணச் சதுக்கத்திற்குப் போயிருந்தார்கள். ஆனால் யாருமே அவர்களைத் தங்கள் வீட்டிற்கு இரவு தங்கும்படி அழைக்கவில்லை.
அன்று மாலை நேரத்தில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த, கிபியாவில் வாழும் ஒரு வயது முதிர்ந்தவன் தன் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தான். அவ்விடத்திலுள்ள மனிதர்கள் பென்யமீனியர். பட்டணத்து சதுக்கத்தில் வழிப்போக்கர் இருப்பதைக் கண்ட அந்த முதியவன் அவர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள எங்கள் இருப்பிடத்திற்குப் போக வந்தோம். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போனேன். இப்பொழுது யெகோவாவின் ஆலயத்திற்குப்19:18 ஆலயத்திற்கு அல்லது என் வீட்டிற்கு போகிறேன். என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார் எவருமில்லை. எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும், தீனியும் எங்களிடம் உண்டு. உமது அடியவர்களான எனக்கும், அடியாளுக்கும், எங்களோடிருக்கும் வாலிபனுக்கும் தேவையான உணவும், திராட்சை இரசமும் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” எனப் பதிலளித்தான்.
அதற்கு அந்த முதியவன், “உங்களை என் வீட்டிற்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருகிறேன். ஆனால் இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் இரவிலே தங்கவேண்டாம்” எனச் சொன்னான். அவ்வாறே அவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவனுடைய கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவியபின் அவர்களுக்குச் சாப்பிட உணவும் குடிக்க பானமும் கொடுத்தான்.
இவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருக்கையில், பட்டணத்திலுள்ள கொடுமையான மனிதர்கள் சிலர் முதியவனின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவர்கள் கதவைப் பலமாக அடித்து, வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் சத்தமாக, “உன்னிடம் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனுடன் பாலுறவு கொள்ளவேண்டும்” எனக் கூப்பிட்டுச் சொன்னார்கள்.
வீட்டின் சொந்தக்காரன் வெளியே போய் அவர்களிடம், “இல்லை! என் நண்பர்களே இழிவான இச்செயலை செய்யவேண்டாம். இவன் எனது விருந்தினன். ஆகையால் வெட்கக்கேடான இதைச் செய்யாதீர்கள். இங்கே கன்னிகையான எனது மகளும், அந்த மனிதனின் வைப்பாட்டியும் இருக்கிறார்கள். இப்பொழுது நான் அவர்களை வெளியே உங்களிடம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களை உங்களுக்கு விருப்பமானபடி செய்யுங்கள். ஆனால் இந்த மனிதனுக்கு இந்த வெட்கக்கேடானதைச் செய்யவேண்டாம்” என்று சொன்னான்.
அவன் சொன்னவற்றை அந்த மனிதர்கள் கேட்கவில்லை. எனவே அந்த லேவியன் தனது வைப்பாட்டியைப் பிடித்து வெளியே நின்ற அவர்களிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் இரவு முழுவதும் அவளைக் கற்பழித்து கடுமையாக இம்சைப்படுத்தியபின், அதிகாலையில் அவளைப் போகவிட்டனர். பொழுது விடியும் நேரத்தில் அப்பெண் லேவியன் இருந்த வீட்டிற்குப்போய் விடியும்வரை அங்கே வாயிற்படியில் விழுந்துகிடந்தாள்.
அந்த லேவியன் காலையில் எழுந்து தன் வழியே போவதற்காக வீட்டின் கதவைத் திறந்தான். அப்போது அவனுடைய வைப்பாட்டி வழியின் படியில் தன் இரண்டு கைகளையும் வைத்தவளாக விழுந்து கிடந்ததைக் கண்டான். அவன் அவளிடம், “எழுந்திரு போவோம்” என்றான். ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. எனவே இறந்துபோன அவளது உடலைத் தூக்கித் தன் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனான்.
அவன் வீட்டிற்குப் போனவுடனே கத்தியை எடுத்துத் தன் வைப்பாட்டியின் உடலைப் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு துண்டுவீதம் அனுப்பினான். அதைக்கண்ட எல்லோரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்த காலந்தொடங்கி இப்படியான செயலைக் கண்டதோ கேட்டதோ கிடையாது. எனவே இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; யோசித்து என்ன செய்யவேண்டுமென்று எங்களுக்குச் சொல்லுங்கள்” எனக் கேட்டனர்.
இஸ்ரயேலர் பென்யமீனியருடன் சண்டை
அப்போது தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரயேல் மக்களும், கீலேயாத் மக்களோடு ஒரே மனதுடனே, யெகோவா முன்பாக மிஸ்பாவிலே ஒன்றுகூடி நின்றனர். இஸ்ரயேல் கோத்திரத்தின் எல்லாத் தலைவர்களும் இறைவனுடைய மக்கள் சபையில் தங்கள் இடங்களில் நின்றனர். அங்கு நாலு இலட்சம் வால் ஏந்தும் போர்வீரர்களும் இருந்தனர். இஸ்ரயேலர் மிஸ்பாவிலே ஒன்றுகூடியிருக்கிறார்கள் என பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டனர். அப்பொழுது இஸ்ரயேலர், “இக்கொடிய செயல் நடந்தது எப்படி?” எனக் கேட்டனர்.
அதற்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவனான அந்த லேவியன், “நானும் எனது வைப்பாட்டியும் இரவு தங்குவதற்காக பென்யமீனியர் இருக்கும் கிபியாத்திற்கு வந்தோம். அன்று இரவு கிபியாத்தின் மனிதர்கள் எனக்குப்பின் வந்து நான் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்து என்னைக் கொலைசெய்ய எத்தனித்தார்கள். அவர்கள் எனது வைப்பாட்டியை கற்பழித்ததால் அவள் இறந்தாள். இஸ்ரயேலில் இக்காமவெறி பிடித்த செய்யத்தகாத கொடுமையை இவர்கள் செய்ததினால், நான் எனது வைப்பாட்டியின் உடலைத் துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் உரிமைச்சொத்தான எல்லா இடங்களுக்கும் அனுப்பினேன். இப்பொழுது இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லாரும் இதைப் பற்றிப்பேசி, உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள்” என்று சொன்னான்.
அப்பொழுது எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து, “நாங்கள் யாரும் எங்கள் வீடுகளுக்குப் போகமாட்டோம். எங்களில் ஒருவனும் தன் வீடுகளுக்குத் திரும்புவதில்லை. இப்பொழுது நாங்கள் கிபியாவிற்கு செய்யப்போவது இதுவே. சீட்டுப்போட்டு அதன்படி அதற்கெதிராகப் போவோம். நாங்கள் இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு நூறு பேரிலும் பத்துப்பேரையும், ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் நூறு பேரையும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரிலும் ஆயிரம்பேரையும் படைவீரருக்கு உணவு கொண்டுவருவதற்குத் தெரிந்தெடுப்போம். அதன்பின் படைவீரர் பென்யமீனிலுள்ள கிபியாவுக்கு வந்துசேர்ந்ததும், இஸ்ரயேலில் கிபியோனியர் செய்த இந்தக் கேவலமான செயலுக்காக அந்த படைவீரர் தண்டனை கொடுப்பார்கள்” என்றனர். எனவே இஸ்ரயேலில் எல்லா மனிதர்களும் ஒரே மனதுடையவர்களாய் அப்பட்டணத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்தனர்.
இஸ்ரயேல் கோத்திரத்தார் தங்கள் மனிதர் சிலரை பென்யமீன் கோத்திரத்திடம் அனுப்பி, “உங்கள் மத்தியில் நடந்த இந்தக் கொடுமையான குற்றத்தைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? கிபியாவிலிருக்கும் கொடுமையான இந்தச் செயலைச் செய்த எல்லா மனிதர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து இஸ்ரயேலிலிருந்து இந்தத் தீமையை நீக்குவோம்” எனச் சொல்லும்படி சொன்னார்கள்.
ஆனால் பென்யமீனியர் தங்கள் சகோதர இஸ்ரயேலருக்குச் செவிகொடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் பட்டணத்திலிருந்து ஒன்றுசேர்ந்து இஸ்ரயேல் மக்களுடன் சண்டையிடுவதற்கு கிபியாவிற்கு வந்து கூடினர். உடனே பென்யமீனியர் தங்கள் எல்லாப் பட்டணங்களிலிருந்தும் யுத்தத்திற்கு ஆயத்தமாக இருபத்தாறாயிரம் வாள் வீரர்களைத் திரட்டினர். அத்துடன் கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள். கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களும் இடதுகை பழக்க முடையவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மயிரிழையும் தப்பாமல் கவண் கல் வீசக்கூடியவர்கள்.
அன்றையதினம் பென்யமீனியர் அல்லாத, மற்ற இஸ்ரயேலர், தங்களுக்குள் சண்டையிடக்கூடிய வாள் வீரர்கள் நானூறாயிரம் பேரைத் திரட்டினர்.
அப்பொழுது இஸ்ரயேலர் பெத்தேலுக்குப்20:18 பெத்தேலுக்கு அல்லது இறைவனுடைய வீட்டிற்கு என்று அர்த்தம் போய் இறைவனிடம் விசாரித்தனர். “பென்யமீன் மக்களுடன் போர்புரிய எங்களில் யார் முதலில் போகவேண்டும்” என்று கேட்டார்கள்.
அதற்கு யெகோவா, “யூதா முதலில் போகட்டும்” எனப் பதிலளித்தார்.
மறுநாள் காலை இஸ்ரயேலர் எழுந்து கிபியாத்திற்கு அருகே முகாமிட்டார்கள். இஸ்ரயேலர் பென்யமீனியருடன் எதிர்த்துப் போரிடுவதற்கு கிபியாவிலே நிலைகொண்டார்கள். அன்று கிபியாவிலிருந்து வெளியேவந்த பென்யமீனியர், முனையில் நின்ற இருபத்து இரண்டாயிரம் இஸ்ரயேலரை வெட்டி வீழ்த்தினர். ஆனால் இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு முதல்நாள் போருக்கு நின்ற இடத்திலேயே திரும்பவும் நின்றனர். அன்று இஸ்ரயேலர் யெகோவாவுக்கு முன்பாக சாயங்காலம்வரை அழுது, “எங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்கு எதிராக போருக்கு நாங்கள் போகலாமா?” எனக் கேட்டனர்.
அதற்கு யெகோவா, “அவர்களை எதிர்த்துப் போங்கள்” எனப் பதிலளித்தார்.
எனவே இரண்டாவது நாள் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்து நெருங்கிச் சென்றனர். இம்முறையும் பென்யமீனியர் கிபியாத்திலிருந்து அவர்களை எதிர்த்து வந்து, பதினெட்டாயிரம் இஸ்ரயேல் வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் வாள் ஏந்தியவர்கள்.
அப்பொழுது இஸ்ரயேல் மனிதரும் எல்லா மக்களும் பெத்தேலில் ஒன்றுகூடி யெகோவாவிடம் அழுது கொண்டேயிருந்தார்கள். அன்று சாயங்காலம்வரை அவர்கள் உபவாசித்து, தகனபலியையும், சமாதான பலியையும் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள். பின்பு இஸ்ரயேலர் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அந்நாட்களில் இறைவனின் உடன்படிக்கைப்பெட்டி அங்கே இருந்தது. ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமான பினெகாஸ் ஆசாரியனாக பணியாற்றி வந்தான். அப்பொழுது அவர்கள், “நாங்கள் எங்கள் சகோதரர் பென்யமீனியருடன் திரும்பவும் போருக்குப் போகலாமா, வேண்டாமா?” எனக் கேட்டார்கள்.
அதற்கு யெகோவா, “போங்கள்; நான் அவர்களை நாளைக்கு உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார்.
அப்பொழுது இஸ்ரயேலர் கிபியாவைச் சுற்றிலும் பதுங்கியிருந்து தாக்கும், வீரர்களை அனுப்பினார்கள். மூன்றாவது நாளும் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்துப் போய், முன்பு செய்ததுபோல் கிபியாவுக்கெதிராகத் தங்கள் இடங்களில் நிலைகொண்டார்கள். பென்யமீனியர் அவர்களை எதிர்கொள்ள தங்கள் பட்டணத்தைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் பட்டணத்திற்கும் அப்பாலே போய் இஸ்ரயேலரைத் தாக்கி முன்புபோலவே அவர்களைக் கொன்றார்கள். இதனால் கிட்டத்தட்ட முப்பது மனிதர்கள் வயல்வெளிகளிலும், பெத்தேலுக்கும், கிபியாவுக்கும் போகும் பாதையிலும் விழுந்தனர். “நாம் முன்புபோலவே அவர்களைத் தோற்கடித்து ஓடச்செய்கிறோம்” என பென்யமீனியர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரயேலரோ, “அவர்களின் பட்டணத்தைவிட்டு வெளியே பாதைக்கு ஓடிவரப்பண்ண நாம் இன்னும் பின்வாங்கி ஓடுவோம்” என்றார்கள்.
அவ்வாறு எல்லா இஸ்ரயேலரும் தங்களது இடங்களிலிருந்து போய், பாகால் தாமாரில் திரும்பவும் நிலைகொண்டார்கள். உடனே இஸ்ரயேலின் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் கிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள இடத்திலிருந்து திடீரென வெளியேறி தாக்கினார்கள். இஸ்ரயேலின் மிகத் திறமையான பத்தாயிரம் வீரர்கள் கிபியாவின்மேல் நேரடித்தாக்குதல் செய்தனர். சண்டையோ மிகவும் கடுமையாக இருந்ததால் தங்களுக்குப் பேராபத்து நெருங்கியிருப்பதை பென்யமீனியர் அறியாதிருந்தார்கள். யெகோவா பென்யமீனியரை இஸ்ரயேலருக்கு முன்பாக முறிடியத்தார். அன்று இருபத்தையாயிரத்து நூறு வாள் ஏந்தும் பென்யமீன் போர்வீரர்களை இஸ்ரயேல் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். அப்பொழுது பென்யமீனியர் தாங்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டார்கள்.
இஸ்ரயேலரோ கிபியாவுக்கு அருகில் பதுங்கியிருந்து தாக்குபவர்களில் நம்பிக்கை வைத்ததால், பென்யமீனியருக்கு முன்பாகச் சிதறுண்டு ஓடுவதுபோல் காண்பித்தார்கள். அந்நேரத்தில் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் மிக விரைவாக கிபியாவிற்குள் திடீரென போய், எங்கும் பரவி பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள். இஸ்ரயேலின் மனிதர்கள் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம், பட்டணத்திலிருந்து பெரிய புகை மேகத்தை எழும்பப்பண்ணும்படியும், தாங்கள் அதைக் கண்டதும் ஓடுவதைவிட்டு திரும்பவும் அச்சண்டையில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.
பென்யமீனியர் இஸ்ரயேல் மனிதரைத் தாக்கத் தொடங்கி, “நாம் முந்தின யுத்தத்தில் நடந்ததுபோலவே அவர்களைத் தோற்கடிக்கிறோம்” என்று சொல்லி இஸ்ரயேலில் முப்பது பேரை வெட்டிப்போட்டனர். ஆனால் பட்டணத்திலிருந்து புகைத்திரள் மேலெழும்பியதை திரும்பிப் பார்த்த பென்யமீனியர் பட்டணம் முழுவதிலிருந்தும் புகை வானத்தை நோக்கிப் போவதைக் கண்டார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலின் மனிதர்கள் பென்யமீனியரைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆகவே தங்களுக்கு பேராபத்து நேரிட்டதை பென்யமீனியர் கண்டு திகிலடைந்தார்கள். எனவே அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக பாலைவனத்திற்கு தப்பியோடினார்கள். ஆனால் அவர்களால் யுத்தத்திலிருந்து தப்பியோட முடியவில்லை. பட்டணத்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேல் மனிதர்கள் அங்கே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். இஸ்ரயேலர் பென்யமீனியரைச் சுற்றிவளைத்து, அவர்களைத் துரத்தி கிழக்குப் பக்கத்திலுள்ள கிபியாவின் சுற்றுப்புறத்திலே அவர்களை இலகுவாக அழித்துப்போட்டனர். அவ்விடத்திலே பதினெட்டாயிரம் பென்யமீனியர் விழுந்து மடிந்தனர்; எல்லோரும் போர்வீரர்கள். பென்யமீனியர் பாலைவனத்திலே ரிம்மோன் மலையை நோக்கித் தப்பியோட, வழியிலே இஸ்ரயேலர் ஐயாயிரம் பேரை வெட்டினர். மற்றவர்களை கீதோம்வரை பின்தொடர்ந்து போய், அவர்களிலும் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டனர்.
இவ்விதமாக அந்நாளில் இருபத்தையாயிரம் பென்யமீனிய வாள் ஏந்தும் வீரர்கள் மடிந்தனர். இவர்கள் எல்லோரும் திறமைமிக்க வீரர்கள். ஆனால் அறுநூறு மனிதர் ரிம்மோன் காடுகளிலுள்ள மலைக்கு ஓடிப்போய் அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தனர். இஸ்ரயேல் மனிதர்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அங்கிருந்த மிருகங்கள் உட்பட தாங்கள் கண்ட எல்லாவற்றையும் வாளால் வெட்டினர். அவர்கள் வழியிலுள்ள பட்டணங்களுக்கெல்லாம் நெருப்பு வைத்தனர்.
பென்யமீனியருக்கு மனைவிகள்
மேலும் இஸ்ரயேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: “நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளை பென்யமீனியருக்குத் திருமணம் செய்துகொடுக்கமாட்டோம்” என்று ஆணையிட்டிருந்தார்கள்.
மக்கள் பெத்தேலுக்குச் சென்று, அன்று சாயங்காலம்வரை இறைவனுக்கு முன்பாக அமர்ந்திருந்து, உரத்த சத்தமாய் மனங்கசந்து அழுதனர். “யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இஸ்ரயேலுக்கு ஏன் இப்படி நடந்தது? இன்று இஸ்ரயேலில் ஒரு கோத்திரத்தை இழக்க நேரிட்டது ஏன்?” என அவர்கள் புலம்பினார்கள்.
மக்கள் அடுத்தநாள் அதிகாலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர், “எங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாமுன் ஒன்றுகூடி வரத் தவறினவர்கள் யார்?” என்று விசாரித்தார்கள். ஏனெனில் யெகோவா முன்பாக மிஸ்பாவுக்கு ஒன்றுகூடி வரத் தவறுகிற எவனாயினும் நிச்சயம் கொல்லப்படவேண்டும் என்று ஏற்கெனவே அவர்கள் ஒரு கடுமையான ஆணையிட்டிருந்தார்கள்.
இப்பொழுது இஸ்ரயேலர், “இஸ்ரயேலில் இருந்து ஒரு கோத்திரம் இன்று அறுப்புண்டு போய்விட்டதே” எனத் தங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்காக மனம் வருந்தினார்கள். அத்துடன், “மீதியாயிருக்கும் இவர்களுக்கு நாம் மனைவியரை எப்படிக் கொடுக்கமுடியும்? இவர்களுக்கு எங்கள் பெண் பிள்ளைகளைக் கொடுப்பதில்லை என்று யெகோவாவுக்கு முன்பாக நாம் தீர்மானித்தோமே” எனச் சொல்லிக்கொண்டார்கள். பின்பு அவர்கள், “இஸ்ரயேல் கோத்திரங்களில் எது மிஸ்பாவிலே யெகோவா முன்பாக ஒன்றுகூடத் தவறியது” எனக் கேட்டார்கள். அப்பொழுது யாபேஸ் கீலேயாத்திலுள்ளவர்கள் ஒருவரும் சபை கூடுதலுக்கான முகாமுக்கு வரவில்லை எனக் கண்டுகொண்டார்கள். அவர்கள் மக்களைக் கணக்கெடுத்தபோது யாபேஸ் கீலேயாத்திலிருந்து ஒருவரும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டார்கள்.
எனவே அங்கு கூடியிருந்தவர்கள் போர் வீரர்களில் பன்னிரெண்டாயிரம்பேரை, யாபேஸ் கீலேயாத்திலுள்ள பெண்கள் பிள்ளைகள் உட்பட எல்லோரையும் வாளால் வெட்டும்படி அனுப்பினார்கள். “நீங்கள் செய்யவேண்டியது இதுவே. எல்லா ஆண்களையும், கன்னியாயிராத எல்லாப் பெண்களையும் கொலைசெய்யவேண்டும்” எனச் சொன்னார்கள். அவர்கள் யாபேஸ் கீலேயாத்தில் வசித்தவர்களுள் ஒரு ஆணுடன் உறவுகொள்ளாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டார்கள். அவர்களைக் கானான் நாட்டிலுள்ள சீலோவிலிருந்த முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.
அதன்பின் முழு இஸ்ரயேல் சபையாரும் ரிம்மோன் மலையிலிருந்த பென்யமீனியரிடம் ஒரு சமாதான உடன்படிக்கையை அனுப்பினார்கள். எனவே பென்யமீனியர் அவ்வேளையில் அங்கே திரும்பி வந்தார்கள்; யாபேஸ் கீலேயாத்திலுள்ள கொலைசெய்யப்படாமல் கொண்டுவந்த அந்த பெண்களை அவர்களுக்கு இவர்கள் கொடுத்தார்கள். ஆனாலும் அங்கிருந்த ஆண்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாதிருந்தனர்.
இஸ்ரயேல் கோத்திரங்களில் இப்படியானதொரு பிரிவை யெகோவா ஏற்படுத்தியதால், மக்கள் பென்யமீனியருக்காகத் துக்கப்பட்டார்கள். அந்த சபையிலுள்ள முதியவர்கள், “பென்யமீன் பெண்கள் அழிந்திருப்பதால் நாங்கள் எப்படி மிகுதியாய் இருக்கும் மனிதருக்கு மனைவிகளைக் கொடுக்கலாம்? இஸ்ரயேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடிக்கு, தப்பியிருக்கும் பென்யமீனியருக்கு வாரிசுகள் இருக்கவேண்டுமே. ஆனால் எம்மில் ஒருவனும் எங்கள் பெண்பிள்ளைகளை அவர்களுக்கு மனைவியாகக் கொடுக்க முடியாது. ஏனெனில், ‘பென்யமீனியருக்கு மனைவியாகப் பெண் கொடுப்பவன் சபிக்கப்படுவான்’ என்று இஸ்ரயேலராகிய நாமே ஆணையிட்டிருக்கிறோம். ஆனாலும் இதோ சீலோவில் கொண்டாடும் யெகோவாவின் வருடாந்த விழா நடக்கிறது. அது பெத்தேல் நகருக்கு வடக்காகவும், தெற்காகவும், பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற வழியில் கிழக்கிலும், லிபோனாவுக்கு தெற்கிலும் இருக்கிற சீலோவிலே நடைபெறும் அல்லவோ!” என்றார்கள்.
எனவே அவர்கள் எஞ்சியிருந்த பென்யமீனியரிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீங்கள் போய் திராட்சைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்து பாருங்கள்; அங்கே சீலோவிலே உள்ள பெண்கள் வெளியே நடனமாட வருவதைக் காண்பீர்கள்; அப்பொழுது திராட்சைத் தோட்டத்திலிருந்து நீங்கள் விரைவாக வெளியே வந்து, ஒவ்வொருவரும் உங்களுக்கேற்ற சீலோவியப் பெண்ணை மனைவியாக்கும்படி தூக்கிக்கொண்டு உங்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பி ஓடிப்போங்கள். பின்பு அப்பெண்களின் தகப்பன்மாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிட்டால், நாங்கள் அவர்களிடம், ‘அவர்களை மன்னியுங்கள். நாங்கள் போர்முனையில் மனைவியரை எடுப்பது போலவே செய்திருக்கிறார்கள். நீங்களோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் குற்றமற்றவர்கள்’ எனச் சொல்வோம்” என்றார்கள்.
எனவே அவ்வாறே பென்யமீனியர் செய்தார்கள். பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை தனக்கு மனைவியாக்கும்படி தூக்கிச்சென்றான். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்சென்று தங்கள் பட்டணங்களைத் திரும்பவும் கட்டி அங்கே வாழ்ந்துவந்தனர்.
அந்த நேரத்தில் இஸ்ரயேலரும் அவரவர் கோத்திரங்களின்படியும், வம்சங்களின்படியும் தங்கள் சொந்த இடங்களிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.