- Biblica® Open Indian Tamil Contemporary Version
ஏசாயா
இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகம்
ஏசாயா
ஏசா.
இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகம்
ஆமோஸின் மகன் ஏசாயா, யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் அரசாண்ட காலங்களில் யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றி கண்ட தரிசனம்.
யூதாவுக்கு யெகோவாவின் நியாயத்தீர்ப்பு
வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்!
ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்:
“நான் என் பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தேன்;
ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் பண்ணினார்கள்.
எருது தன் எஜமானையும்,
கழுதை தன் எஜமானின் தொழுவத்தையும் அறியும்.
ஆனால் இஸ்ரயேலரோ என்னை அறிந்துகொள்ளாமலும்,
என் மக்கள் என்னைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்.”
ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு,
குற்றம் நிறைந்த மக்கள்,
தீயவர்களின் கூட்டம்,
கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்!
இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள்,
இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து,
அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்?
உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும்,
உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே!
தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்?
உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை,
நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
ஆறாத புண்களும், அடிகாயங்களும்,
சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன.
அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ,
எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை.
உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது;
உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன.
உங்கள் கண்முன்பதாகவே
உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன;
உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே!
சீயோனின் மகள்1:8 சீயோனின் மகள் அல்லது எருசலேம் பட்டணம்.
திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும்,
வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும்,
முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.
எல்லாம் வல்ல யெகோவா
நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால்,
நாம் சோதோமைப் போலாகியிருப்போம்;
நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
சோதோமின் ஆளுநர்களே,
யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
கொமோராவின் மக்களே,
நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்!
“உங்கள் ஏராளமான பலிகள்
எனக்கு எதற்கு?”
என யெகோவா கேட்கிறார்.
“செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும்,
கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன;
காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால்
எனக்கு மகிழ்ச்சி இல்லை.
நீங்கள் என் முன்னிலையில் வரும்போது,
இவற்றையெல்லாம் கொண்டுவந்து,
இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்?
உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்!
உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது.
அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற
ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது.
உங்களது அமாவாசை நாட்களையும்,
உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது.
அவை எனக்கு சுமையாகிவிட்டன;
நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன்.
நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது,
நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்;
அநேக ஜெபங்களைச் செய்தாலும்,
நான் செவிகொடுக்கமாட்டேன்.
“ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது!
“உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள்.
உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி,
தீமை செய்வதை நிறுத்துங்கள்.
சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்;
விதவைக்காக வழக்காடுங்கள்.
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்”
என்று யெகோவா கூறுகிறார்.
“உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும்,
பனிபோல் வெண்மையாகும்;
அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும்,
பஞ்சைப்போல் வெண்மையாகும்.
நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால்,
நாட்டின் சிறந்த பலனைச் சாப்பிடுவீர்கள்.
ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின்,
நீங்கள் பட்டயத்துக்கு இரையாவீர்கள்.”
யெகோவாவின் வாயே இவற்றை சொல்லியிருக்கிறது.
பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம்
இப்படி வேசியாயிற்று!
முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது;
நீதி அதில் குடியிருந்ததே,
இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடமாயிருக்கிறது.
உன் வெள்ளி களிம்பாகிவிட்டது,
உன் சிறந்த திராட்சை இரசம் தண்ணீர் கலப்பாயிற்று.
உனது ஆளுநர்கள் கலகக்காரர்,
திருடரின் தோழர்;
ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி,
வெகுமதியை நாடி விரைகிறார்கள்.
அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்;
விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள்.
ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய
இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கிறார்:
“ஓ! நான் என் எதிரிகளிடமிருந்து விடுதலையடைந்து
என் பகைவர்களைப் பழிவாங்குவேன்.
நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்;
நான் உனது களிம்பு முற்றிலும் நீங்க உன்னை உருக்கி,
உன் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவேன்.
முந்தைய நாட்களில் இருந்ததுபோல்,
நான் உன்னுடைய நியாயதிபதிகளைத் திரும்பவும் அமர்த்துவேன்.
ஆரம்பத்தில் இருந்ததுபோலவே உன் ஆலோசகர்களையும் மீண்டும் தருவேன்.
அதன்பின் நீ நீதியின் நகரம் என்றும்,
உண்மையுள்ள நகரம் என்றும் அழைக்கப்படுவாய்.”
சீயோன் நியாயத்தினாலும்,
அங்கு மனந்திரும்புவோர் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.
ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்;
யெகோவாவைவிட்டு விலகுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
“நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய
புனித கர்வாலி மரங்களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள்;
நீங்கள் வழிபாட்டுக்கெனத் தெரிந்துகொண்ட
தோட்டங்களினிமித்தம் அவமானப்படுவீர்கள்.
நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும்,
தண்ணீரில்லாத தோட்டம்போலவும் இருப்பீர்கள்.
வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும்
அவனுடைய செயல் ஒரு நெருப்புப்பொறியும் போலாகி,
இரண்டும் அணைப்பாரின்றி
ஏகமாய் எரிந்துபோகும்.”
யெகோவாவின் மலை
ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம்.
கடைசி நாட்களிலே,
யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை,
எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்;
எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்,
எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள்.
அநேக மக்கள் கூட்டங்கள் வந்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம்,
யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம்.
நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு
அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள்.
சீயோனிலிருந்து அவரது சட்டமும்,
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து,
அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும்,
ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள்.
அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை,
போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
யாக்கோபின் குடும்பமே, வாருங்கள்,
யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம்.
யெகோவாவின் நாள்
யாக்கோபின் குடும்பமான
உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர்.
அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து,
பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள்.
வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள்.
அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது;
அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை.
அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது;
அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன.
அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது;
அவர்கள் தங்களுடைய கைகளினாலும்,
விரல்களினாலும் செய்தவைகளையே விழுந்து வணங்குகிறார்கள்.
இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான்,
மனுக்குலமும் தாழ்த்தப்படும்;
நீர் அவர்களை மன்னியாதிரும்.
யெகோவாவின் பயங்கரத்திற்கும்,
அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி,
கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்!
கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும்,
மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்;
அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.
அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும்,
உயர்த்தப்பட்ட அனைத்திற்கும்
சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்;
அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள்.
அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும்,
பாசானின் எல்லா கர்வாலி மரங்களும்,
உயர்ந்த எல்லா மலைகளும்,
உயரமான எல்லாக் குன்றுகளும்,
உயர்வான ஒவ்வொரு கோபுரமும்,
அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும்,
தர்ஷீஸின் கப்பல்2:16 எபிரெயத்தில் தர்ஷீஸின் கப்பல் அல்லது வியாபாரக் கப்பல். இவை பயணிப்பதற்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பெரிய படகுகளைக் குறிக்கின்றன ஒவ்வொன்றும்,
கம்பீரமான ஒவ்வொரு மரக்கலமும் தாழ்த்தப்படும்.
மனிதரின் கர்வம் அடக்கப்படும்,
மனிதரின் பெருமையும் தாழ்த்தப்படும்.
அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்;
விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது,
மக்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும்,
யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக
கன்மலைகளின் குகைகளுக்குள்ளும்,
மண்ணிலுள்ள குழிகளுக்குள்ளும் புகுந்துகொள்வார்கள்.
அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த
வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும்
பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும்
எறிந்துவிடுவார்கள்.
பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது,
மனிதர்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும்,
யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக,
கன்மலைகளின் வெடிப்புகளுக்குள்ளும்,
பாறைச் சரிவுகளின் கீழும் புகுந்துகொள்வார்கள்.
மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள்,
அவனுடைய உயிர் அவனுடைய நாசியின் மூச்சில்தானே இருக்கிறது.
மதிக்கப்படுவதற்கு அவனில் என்ன ஆற்றல் இருக்கிறது?
யூதா, எருசலேம் நியாயத்தீர்ப்பு
இப்பொழுது பாருங்கள், யெகோவா,
சேனைகளின் யெகோவா
எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும்
எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்:
உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.
மாவீரனையும், போர்வீரனையும்,
நீதிபதியையும், இறைவாக்கினனையும்,
குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,
ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும்,
தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும்,
மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்;
விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்:
ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும்,
இளையோர் முதியோருக்கு விரோதமாகவும்,
கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து,
“உன்னிடம் மேலுடை இருக்கிறது;
நீயே எங்களுக்குத் தலைவனாயிரு.
பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.
ஆனால் அவனோ அந்நாளில்,
“என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது;
இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை.
என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
எருசலேம் நகரம் தள்ளாடுகிறது,
யூதா நாடு வீழ்ச்சியடைகிறது;
அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது,
அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது;
சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள்.
அவைகளை மறைத்து வைக்கவில்லை.
ஐயோ! அவர்களுக்குக் கேடு;
அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும்
என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்;
ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
கொடியவர்களுக்கு ஐயோ கேடு!
அவர்கள்மேல் பேராபத்து வரும்.
அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு
அவர்களுக்குச் செய்யப்படும்.
வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள்,
பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள்.
எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்;
அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
யெகோவா வழக்காட ஆயத்தமாகி,
மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.
யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும்
விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார்.
“என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே;
எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன?
ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?”
என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
மேலும் யெகோவா சொன்னதாவது:
“சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்;
தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள்,
அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள்.
அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க
ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.
ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்;
அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”
அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள், காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள் தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள், மோதிரங்கள், மூக்குத்திகள்; உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.
அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்;
ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும்.
அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்;
அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்;
அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.
உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.
சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்;
அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.
அந்த நாளிலே ஏழு பெண்கள்
ஒரே புருஷனைப் பிடித்து இப்படிச் சொல்வார்கள்:
“நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டு,
எங்கள் சொந்த உடைகளையும் உடுத்திக்கொள்வோம்;
உமது பெயரை மாத்திரம் எங்களுக்கு வழங்கி,
எங்கள் அவமானத்தை நீக்கிவிடும்!”
யெகோவாவின் கிளை
அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும். அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள். யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார். அதன்பின் சீயோன் மலை முழுவதற்கு மேலாகவும், அங்கு சபை கூடுகிறவர்களுக்கு மேலாகவும் பகலிலே புகை மேகத்தையும், இரவிலே நெருப்புச் சுவாலையின் பிரகாசத்தையும் யெகோவா உண்டாக்குவார்; இந்த எல்லா மகிமைக்கு மேலாகவும் ஒரு விதான மண்டபம் உண்டாயிருக்கும். அது பகலின் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கூடாரமாகவும், நிழலாகவும் இருக்கும். அது புயலிலிருந்தும், மழையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் புகலிடமாயும், மறைவிடமாயும் இருக்கும்.
திராட்சைத் தோட்டத்திற்கு பாடல்
என் அன்புக்குரியவருக்காக
அவருடைய திராட்சைத் தோட்டத்தைப்பற்றி ஒரு பாட்டுப் பாடுவேன்:
என் அன்புக்குரியவருக்கு செழிப்பான குன்றின்மேல்
திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்;
உயர்ந்தரக திராட்சைக் கொடிகளை அங்கு நட்டார்.
அவர் அதற்கு நடுவிலே காவற்கோபுரம் ஒன்றைக் கட்டி,
திராட்சை இரசம் பிழியும் ஆலையொன்றையும் அமைத்தார்.
அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று எதிர்பார்த்தார்,
ஆனால் அதுவோ புளிப்பான பழங்களையே கொடுத்தது.
“எருசலேம் நகரில் வசிப்போரே, யூதா மனிதர்களே,
இப்போது நீங்களே எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும்
இடையில் நியாயந்தீருங்கள்.
என் திராட்சைத் தோட்டத்திற்கு நான் செய்ததைவிடக்
கூடுதலாக என்ன செய்திருக்கலாம்?
நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க,
அது ஏன் புளிப்பான பழங்களைக் கொடுத்தது?
ஆகவே நான் என் திராட்சைத் தோட்டத்திற்கு
இப்போது செய்யப்போவதைச் சொல்வேன்:
அதன் வேலியை நீக்கிவிடுவேன்,
அது அழிந்துவிடும்.
அதன் மதில்களை உடைத்துவிடுவேன்,
அது மிதிக்கப்படும்.
அதன் கிளைகளை நறுக்காமலும், களையைக் கொத்தி எடுக்கப்படாமலும்
அதைப் பாழ்நிலமாக விட்டுவிடுவேன்.
முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளும் அங்கு வளரும்.
அங்கு மழை பெய்யாதபடி
நான் மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”
எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம்
இஸ்ரயேல் குடும்பமே.
யூதாவின் மனிதர்தான்
அவரின் மகிழ்ச்சியின் தோட்டம்.
அவர் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்துதலையே கண்டார்;
நியாயத்தை எதிர்பார்த்தார், ஆனால் முறைப்பாட்டையே கேட்டார்.
சாபங்களும் நியாயத்தீர்ப்பும்
நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும்,
வீட்டுடன் வீட்டைச் சேர்த்து,
வயலுடன் வயலை இணைத்து வாழ்கிறவர்களே,
உங்களுக்கு ஐயோ!
எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது:
“நிச்சயமாகவே அந்த பெரும் வீடுகள் பாழாகும்,
அழகிய மாளிகைகள் குடியிருப்பாரின்றி விடப்படும்.
பத்து ஏக்கர்5:10 ஏக்கர் என்பது பத்து ஏர் அதாவது ஒரே நாளில் பத்து அணிகள் எருதுகளால் உழப்படும் நிலத்தின் பரப்பளவு திராட்சைத் தோட்டம் ஒரு குடம்5:10 எபிரெயத்தில், பாத் இது 22 லிட்டர் திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும்.
பத்து கலம்5:10 எபிரெயத்தில், ஓமர் 160 கிலோகிராம் விதை விதைத்தால் ஒரு கலம்5:10 எபிரெயத்தில், எப்பா 16 கிலோகிராம் அளவு தானியத்தை மட்டுமே கொடுக்கும்.”
அதிகாலையில் எழுந்து
மதுபானத்தை நாடி அலைந்து,
இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை
குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு!
அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும்,
மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ,
அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை.
எனவே எனது மக்கள் அறிவின்மையால்
நாடுகடத்தப்படுவார்கள்;
அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள்,
பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள்.
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி,
தன் வாயை அளவின்றித் திறக்கிறது.
உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும்,
வெறியரும் அதற்குள் இறங்குவார்கள்.
இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான்.
மனுக்குலமும் தாழ்த்தப்படும்.
அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும்.
ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து,
பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார்.
அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும்.
செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள்.
வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும்,
வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு!
“நாம் காணத்தக்கதாக,
இறைவன் துரிதமாய் வந்து
தமது வேலையை விரைவாகச் செய்யட்டும்.
நாம் அறியத்தக்கதாக,
இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி,
அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
தீமையை நன்மையென்றும்,
நன்மையைத் தீமையென்றும் சொல்லி,
இருளை ஒளியாக்கி,
ஒளியை இருளாக்கி,
கசப்பை இனிப்பாக்கி,
இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு!
தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும்,
தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு!
திராட்சைமது குடிப்பதில் வீரரும்,
மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து,
இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து,
குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும்,
காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும்,
அவர்களின் வேர்கள் அழுகி,
பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும்.
ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,
இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள்.
அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது:
அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார்.
மலைகள் நடுநடுங்கின,
அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன.
இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,
அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி,
பூமியின் கடைசியிலுள்ளவர்களைக் கூவி அழைக்கிறார்.
இதோ, அவர்கள் வருகிறார்கள்,
விரைந்து வேகமாய் வருகிறார்கள்!
அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை;
ஒருவரும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை;
அவர்களின் இடைப்பட்டி தளர்த்தப்படுவதுமில்லை,
அவர்களின் செருப்புகளின் தோல்வார் ஒன்றும் அறுந்துபோவதும் இல்லை.
அவர்களுடைய அம்புகள் கூரானவை;
வில்லுகள் நாணேற்றப்பட்டவை.
அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்கள் போலவும்,
தேர்ச் சக்கரங்கள் சுழற்காற்றைப் போலவும் காணப்படுகின்றன.
அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது,
அவர்கள் இளஞ்சிங்கத்தைப்போல் கெர்ச்சிக்கிறார்கள்;
அவர்கள் தங்கள் இரையைப் பற்றிக்கொள்ளும்போது உறுமுகிறார்கள்;
அதை விடுவிக்கிறவன் இல்லாமல், அவர்கள் தாங்கள் பிடித்ததைக் கொண்டுபோகிறார்கள்.
அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல்
அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள்.
ஒருவன் அந்த நாட்டைப் பார்க்கும்போது
இருளையும் துன்பத்தையுமே காண்பான்;
வெளிச்சமும் மேகங்களால் இருளாக்கப்படும்.
ஏசாயாவின் அழைப்பு
உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது. அவருக்கு மேலாக சேராபீன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவை இரு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் தங்கள் பாதங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் பறந்துகொண்டும் இருந்தன. அவை ஒன்றையொன்று அழைத்து இவ்வாறு கூறியது:
“எல்லாம் வல்ல யெகோவா, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,
பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கிறது.”
அவைகளுடைய குரல்களின் சத்தத்தினால் ஆலயக் கதவு நிலைகளும், வாசற்படிகளும் அதிர்ந்தன, ஆலயம் புகையினாலும் நிரம்பியது.
அப்பொழுது நான், “எனக்கு ஐயோ, நான் அழிந்தேன்! நானோ அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாழ்கிறேன். என் கண்கள், எல்லாம் வல்ல யெகோவாவாகிய அரசரைக் கண்டுவிட்டனவே” என்று சொன்னேன்.
அப்பொழுது சேராபீன்களுள் ஒருவன், பலிபீடத்திலிருந்து எரியும் நெருப்புத் தணலொன்றைக் குறட்டினால் எடுத்து, அதைத் தன் கையில் பிடித்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தான். அவன் எனது வாயை அதனால் தொட்டு, “பார், இது உனது உதடுகளைத் தொட்டுள்ளது; உனது குற்றம் நீங்கி, உனது பாவம் நிவிர்த்தியாக்கப்பட்டது” என்றான்.
பின்பு நான், யெகோவாவின் குரலைக் கேட்டேன், அவர், “யாரை நான் அனுப்புவேன்? யார் நமக்காகப் போவான்?” என்றார்.
அதற்கு நான், “இதோ, நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்!” என்றேன்.
அப்பொழுது அவர், “நீ இந்த மக்களிடம்போய் சொல்லவேண்டியது:
“ ‘நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டும் ஒருபோதும் உணராமலும்,
எப்பொழுதும் பார்த்துக்கொண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளாமலும் இருங்கள்.’
இந்த மக்களின் இருதயத்தைக் கடினமாக்கு,
அவர்களின் காதுகளை மந்தமாக்கு,
அவர்கள் கண்களை மூடிவிடு.
ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும்,
தங்கள் காதுகளால் கேட்காமலும்,
இருதயங்களினால் உணர்ந்து,
மனமாறி, குணமடையாமலும் இருக்கச் செய்.”
அப்பொழுது நான், “யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு?” என்றேன்.
அதற்கு அவர் சொன்னதாவது:
“பட்டணங்கள் குடியிருப்பாரின்றிப்
பாழாக்கப்பட்டு,
வீடுகள் கைவிடப்பட்டு,
வயல்கள் பாழாகி சூறையாடப்பட்டு,
யெகோவா ஒவ்வொருவரையும் வெகுதூரத்துக்கு அனுப்பி
நாடு முற்றிலும் கைவிடப்படும் வரைக்குமே அது அப்படியிருக்கும்.
நாட்டின் பத்தில் ஒரு பங்கு மிஞ்சியிருந்த போதிலும்
மீண்டும் அதுவும் அழிக்கப்படும்.
ஆனால் தேவதாரு மரமும், கர்வாலி மரமும் வெட்டப்படும்போது,
அடிமரம் விடப்படுவதுபோல்
பரிசுத்த விதை நாட்டில் அடிமரமாக இருக்கும்.”
இம்மானுயேலின் அடையாளம்
உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவிலே அரசனாய் இருந்தான். அப்பொழுது, சீரிய அரசன் ரேத்சீனும், இஸ்ரயேல் அரசன் ரெமலியாவின் மகன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். ஆனால் அதை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
“எப்பிராயீமியருடன்7:2 எப்பிராயீமியருடன் என்பது இஸ்ரயேலின் வடபகுதி ராஜ்யம். சீரியா கூட்டணி அமைத்திருக்கிறது” என்ற செய்தி தாவீதின் குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டது. காற்றினால் காட்டு மரங்கள் அதிர்வது போல், ஆகாஸ் அரசனின் இருதயமும் மக்களின் இருதயமும் பயத்தால் நடுங்கின.
அப்பொழுது யெகோவா ஏசாயாவிடம், “நீயும் உன் மகன் செயார் யாசுபும் ஆகாஸ் அரசனைச் சந்திக்கப் போங்கள்; வண்ணான் தோட்டத்திற்குப் போகும் தெருவின் பக்கத்திலுள்ள மேற்குளத்தின் கால்வாய் முடிவில் அவனைக் காண்பீர்கள். அவனிடம் சொல்லவேண்டியதாவது: ‘பயப்படாதே, குழப்பமடையாமல் கவனமாய் இரு. புகையும் கொள்ளிகளாகிய இந்த சீரியருடன் சேர்ந்த ரேத்சீனினதும், ரெமலியாவின் மகன் பெக்காவினதும் கடுங்கோபத்தினிமித்தம் மனந்தளராதே! ஏனெனில் அவர்கள் இருவரும் வெறும் புகையுங்கொள்ளிகளே. சீரியர், எப்பிராயீமுடனும் ரெமலியாவின் மகனுடனும் சேர்ந்து, உனது அழிவுக்காகச் சதி செய்திருக்கிறார்கள். அவர்கள், “நாம் யூதாவின்மேல் படையெடுத்து, அதைப்பிடித்து எங்களுக்கிடையில் பங்கிட்டு, தாபயேலின் மகனை அங்கு அரசனாக நியமிப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“ ‘அது அப்படி நடக்கப்போவதுமில்லை,
அது நிறைவேறப்போவதுமில்லை.
ஏனெனில், தமஸ்கு சீரியாவின் தலைநகராயிருக்கிறது;
ரேத்சீன் மட்டுமே தமஸ்குவில் அரசனாயிருக்கிறான்.
இன்னும் அறுபத்தைந்து வருடங்களில்
எப்பிராயீம் ஒரு மக்கள் கூட்டமாயிராதபடி சிதறடிக்கப்படும்.
சமாரியா எப்பிராயீமுக்குத் தலைநகராய் இருக்கிறது,
ரெமலியாவின் மகன் மட்டுமே சமாரியாவில் தலைவனாயிருக்கிறான்.
நீங்களோ உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிராவிட்டால்,
நிலையற்றுப் போவீர்கள்.’ ”
மீண்டும் யெகோவா ஆகாஸிடம் பேசி, “இறைவனாகிய உன் யெகோவாவிடம் கடலின் ஆழத்திலிருந்தோ, உன்னதத்தின் உயரத்திலிருந்தோ அடையாளம் ஒன்றைக் கேள்” என்றார்.
ஆனால் ஆகாஸோ, “நான் கேட்கமாட்டேன், யெகோவாவை நான் பரீட்சை செய்யமாட்டேன்” என்றான்.
அப்பொழுது ஏசாயா, “தாவீதின் குடும்பத்தாரே, இப்பொழுது கேளுங்கள்! மனிதனின் பொறுமையைச் சோதித்தது போதாதோ? என் இறைவனின் பொறுமையையும் சோதிக்கப் போகிறீர்களோ? ஆகவே யெகோவா தாமே உங்களுக்கு வருங்காலத்தின் அடையாளம் ஒன்றைக் கொடுப்பார்: ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள். தீயதைத் தவிர்த்து நல்லதைத் தெரிந்துகொள்ள அறிவு வரும்போது, அவர் தேனும் தயிரும் சாப்பிடுவார். அந்தப் பிள்ளைக்கு தீயதை விலக்கி, நல்லதைத் தெரிவுசெய்வதற்கு போதிய அறிவு வருமுன்னே, நீ பயப்படுகிற அந்த இரண்டு அரசர்களின் நாடு பாழாக்கிவிடப்படும். எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள் முதல் இதுவரை, நீங்கள் காணாத கொடிய காலத்தை, யெகோவா உங்கள்மேலும், உங்கள் மக்கள்மேலும், உங்கள் தகப்பனின் குடும்பத்தார்மேலும் வரப்பண்ணுவார்; அவர் அசீரிய அரசனை உனக்கெதிராக வரப்பண்ணுவார்.”
அசீரியா, யெகோவாவின் கருவி
அந்த நாளிலே யெகோவா அதிக தூரத்திலுள்ள எகிப்திய நீரோடைகளிலிருந்து ஈக்களையும், அசீரிய நாட்டிலிருந்து தேனீக்களையும் கூவி அழைப்பார். அவை செங்குத்தான பள்ளத்தாக்குகளிலும், பாறை வெடிப்புகளிலும், முட்புதர்களிலும், நீர்த்தேக்கங்களிலும் வந்து தங்கும். அந்த நாளிலே, யெகோவா, ஐபிராத்து நதிக்கு அக்கரையிலிருக்கும் சவரக்கத்தியான அசீரிய அரசனை கூலிக்கு அமர்த்துவார். அவனைக் கொண்டு அவர் உங்கள் தலையை மொட்டையடித்து, கால்களில் உள்ள மயிரையும் சவரம்செய்து, உங்கள் தாடியையுங்கூட சிரைத்துப் போடுவார். அந்த நாளிலே ஒரு மனிதன் ஒரு இளம் பசுவையும், இரு வெள்ளாடுகளையும் மட்டுமே உயிருடன் வைத்திருக்கக் கூடியதாயிருக்கும். ஆனால் அவையோ மிகுதியாய் பால் கொடுக்கும். அதனால் அவன் உண்பதற்குத் தயிர் இருக்கும். அந்த நாட்டில் மீதமிருக்கின்ற கொஞ்ச மக்கள் தயிரையும் தேனையும் சாப்பிட்டே வாழ்வார்கள். அந்த நாளிலே ஆயிரம் வெள்ளிக்காசு7:23 ஆயிரம் சேக்கல் வெள்ளி என்பது 12 கிலோகிராம் மதிப்புள்ள, ஆயிரம் திராட்சைக்கொடிகள் வளர்ந்த ஒவ்வொரு இடத்திலும், முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளுமே வளரும். நாடு முழுவதும் முட்செடிகளாலும், நெருஞ்சில் செடிகளாலும் நிறைந்திருப்பதனால் மனிதர் அங்கு அம்பு வில்லுடனேயே போவார்கள். முன்பு ஒருகாலத்தில் மண்வெட்டியால் கொத்திப் பண்படுத்தப்பட்ட குன்றுகளில் முட்செடிக்கும் நெருஞ்சிலுக்கும் பயந்து, நீங்கள் இனியொருபோதும் அங்கு போகமாட்டீர்கள். அவை மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், செம்மறியாடுகள் நடமாடுவதற்குமான இடங்களாகிவிடும்.
அசீரியா யெகோவாவின் கருவி
பின்பு யெகோவா என்னிடம், “வரைபலகையை எடுத்து அதில், மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ்8:1 மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்றால் எபிரெயத்தில் கொள்ளைப்பொருள் வேகமாக வருகின்றது; இரை விரைகின்றது. என சாதாரண எழுத்தாய் எழுது.” அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார். பின்பு நான் என் மனைவியாகிய இறைவாக்கு உரைப்பவளுடன் சேர்ந்தேன்; அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா என்னிடம், “அவனுக்கு மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்று பெயரிடு. அவன் ‘என் அப்பா’ அல்லது ‘என் அம்மா’ என்று சொல்ல அறியுமுன் தமஸ்குவின் செல்வமும், சமாரியாவின் கொள்ளைப்பொருளும், அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
யெகோவா மீண்டும் என்னிடம் பேசினதாவது:
“இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின்
தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும்
என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.
ஆதலால் யெகோவா, ஐபிராத்து நதியின்
பெருவெள்ளத்தை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்போகிறார்.
அசீரிய அரசனே கம்பீரத்துடன்
அந்த வெள்ளத்தைப்போல் வருவான்.
அது வாய்க்கால்களை நிரப்பி கரைபுரண்டு பாயும்.
அது யூதா நாட்டிற்குள் பாய்ந்து, அதற்கு மேலாகப் பெருக்கெடுத்து
அதன் கழுத்தளவுக்குப் பாயும்.
இம்மானுயேலே,
உனது நாட்டின் அகன்ற பரப்பை வெள்ளத்தின் அகல விரிந்த சிறகுகள் மூடுமே!”
நாடுகளே, போர் முழக்கமிடுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
தூர தேசங்களே, கேளுங்கள்.
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்;
கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது;
ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
யெகோவா தமது பலத்த கரத்தை என்மீது வைத்து, என்னோடு பேசி, இந்த மக்களின் வழியைப் பின்பற்றவேண்டாம் என என்னை எச்சரித்துச் சொன்னதாவது:
“இந்த மக்கள் சதி என்று சொல்லும்
எல்லாவற்றையும் நீ சதி என்று சொல்லாதே;
அவர்கள் அஞ்சுவதற்கு நீயும் அஞ்சாதே,
அதற்கு நீ நடுங்காதே.
சேனைகளின் யெகோவாவை மட்டுமே பரிசுத்தர் என போற்று,
அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும்;
அவர் ஒருவருக்கே நீ நடுங்கவேண்டும்.
அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்;
ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும்8:14 குடும்பங்களுக்கும் அல்லது கிழக்கு மற்றும் வடக்கு ராஜ்யங்கள். அவர்,
இடறச்செய்யும் கல்லாகவும்,
அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார்.
எருசலேம் மக்களுக்கு
அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.
அநேகர் அவைகளில் தடுமாறுவார்கள்,
அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள்.
அவர்கள் கண்ணியில் அகப்பட்டு பிடிக்கப்படுவார்கள்.”
சாட்சியின் ஆகமத்தை பத்திரமாய்க் கட்டிவை;
இறைவனுடைய சட்டத்தை என் சீடர்களிடையே முத்திரையிட்டு வை.
யாக்கோபின் வீட்டாருக்குத் தன் முகத்தை மறைக்கும்
யெகோவாவுக்கு நான் காத்திருப்பேன்.
அவரிலேயே என் நம்பிக்கையை வைப்பேன்.
நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம். நாங்கள் சீயோன் மலையில் வசிக்கும் எல்லாம் வல்ல யெகோவாவினால் இஸ்ரயேலில் அடையாளங்களும் அறிகுறிகளுமாய் இருக்கிறோம்.
இருள் வெளிச்சத்திற்கு மாறுகிறது
முணுமுணுத்து ஓதுகிற, ஆவிகளுடன் தொடர்புடையோரிடமும், குறிசொல்வோரிடமும் விசாரிக்கும்படி மனிதர் உங்களிடம் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் இறைவனிடம் அல்லவோ விசாரிக்கவேண்டும்? உயிருள்ளவர்களுக்காக மரித்தவர்களிடம் ஏன் விசாரிக்கவேண்டும்? சட்டத்தையும், சாட்சி ஆகமத்தையுமே நாடவேண்டும். அவர்கள் இந்த வார்த்தையின்படி பேசாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. மக்கள் துயரும் பசியும் உடையவர்களாய் நாட்டில் அலைந்து திரிவார்கள். பட்டினியால் அவதியுறும்போது கோபங்கொண்டு மேல்நோக்கிப் பார்த்து, தங்கள் இறைவனையும் அரசனையும் சபிப்பார்கள். பின்பு அவர்கள் பூமியை நோக்கிப்பார்த்து துன்பத்தையும், இருளையும், பயங்கர அந்தகாரத்தையும் மட்டுமே காண்பார்கள். அவர்கள் காரிருளுக்குள்ளே தள்ளப்படுவார்கள்.
ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.
இருளில் நடக்கும் மக்கள்
ஒரு பேரொளியைக் கண்டார்கள்;
மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்
வெளிச்சம் பிரகாசித்தது.
நீர் நாட்டைப் பெருகச்செய்து
அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர்.
அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல,
அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள்.
கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல,
அவர்கள் மகிழ்கிறார்கள்.
மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல,
நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த
நுகத்தை உடைத்துப்போட்டீர்.
அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும்,
அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர்.
ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும்,
இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும்
நெருப்புக்கு இரையாக
சுட்டெரிக்கப்படும்.
ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்,
நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்,
அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும்.
அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன்,
நித்திய தகப்பன், சமாதானப்பிரபு”
என அழைக்கப்படுவார்.
அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும்
முடிவே இராது.
அவர் தாவீதின் சிங்காசனத்தையும்
அவனது அரசையும் நிலைநாட்டுவார்.
இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும்
நீதியோடும் நேர்மையோடும்
நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார்.
எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம்
இதை நிறைவேற்றும்.
இஸ்ரயேலின் அழிவு
யெகோவா யாக்கோபுக்கு விரோதமாக ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்;
அது இஸ்ரயேல்மேல் வரும்.
எப்பிராயீமியரும், சமாரியாவில் குடியிருப்பவர்களுமான
எல்லா மக்களும்,
அதை அறிவார்கள்.
அவர்கள் இருதய இறுமாப்புடனும் பெருமையுடனும்,
“செங்கற்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன,
ஆனாலும் திரும்பவும் நாம் நமது கட்டிடங்களை செதுக்கிய கற்களால் கட்டுவோம்.
அத்திமரங்கள் வீழ்த்தப்பட்டன,
ஆனால் நாங்கள் அவைகளுக்குப் பதிலாக, கேதுரு மரங்களை நடுவோம்”
என்று சொல்கிறார்கள்.
ஆனால் யெகோவா ரேத்சீனின் பகைவர்களை அவர்களுக்கு விரோதமாகப் பலப்படுத்தி,
அவர்களுடைய எதிரிகளைத் தூண்டிவிடுவார்.
கிழக்கிலிருந்து சீரியரும் மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்,
இஸ்ரயேலரை திறந்த வாயால் விழுங்கியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,
அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
எனினும் அந்த மக்கள் தங்களைத் தண்டித்த
இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவில்லை.
எல்லாம் வல்ல யெகோவாவைத் தேடவுமில்லை.
ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும்
ஓலையையும், நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார்.
முதியோரும் பிரபலமானோருமே தலை,
பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரே வால்.
இந்த மக்களை வழிநடத்துகிறவர்கள் அவர்களை நெறிதவறச் செய்தார்கள்;
வழிநடத்தப்பட்டவர்கள் அழிந்துபோனார்கள்.
ஆகையால் யெகோவா வாலிபர்களில் மகிழ்வதில்லை,
அநாதைகள் மேலும், விதவைகள்மேலும் இரக்கம்கொள்ளவும் இல்லை.
ஏனெனில் அவர்கள் எல்லோரும் இறைப்பற்று இல்லாதவர்களும்
பொல்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
எல்லோருடைய வாயும் மதிகேட்டைப் பேசுகின்றது.
இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,
அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
மெய்யாகவே, கொடுமை நெருப்பைப்போல் எரிகிறது;
அது முட்செடியையும், நெருஞ்சில் செடியையும் தீய்த்து விடுகிறது.
அது அடர்த்தியான புதர்களையும் கொழுத்தி விடுகிறது,
அதன் புகை சுருள் சுருளாக மேலே எழும்புகிறது.
எல்லாம் வல்ல யெகோவாவின் கோபத்தினால்
நாடு நெருப்புக்கு இறையாகும்;
மக்களும் நெருப்புக்கான எரிபொருளாவார்கள்,
ஒருவனுமே தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான்.
அவர்கள் வலப்புறத்தில் பறித்துத் தின்றும்,
பசியோடு இருப்பார்கள்.
இடது புறத்தில் சாப்பிட்டும்,
திருப்தி அடையாதிருப்பார்கள்.
ஒவ்வொருவனும் தன் சொந்த கரத்தின் மாமிசத்தையுங்கூடத் தின்பான்:
மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் தின்பார்கள்;
இருவரும் ஒன்றுசேர்ந்து யூதாவை எதிர்ப்பார்கள்.
இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,
அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
அநீதியான சட்டங்களை இயற்றி,
ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும்,
என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும்,
விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும்,
அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.
உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும்,
தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்?
யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்?
உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்?
கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும்,
கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது.
இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,
அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
அசீரியாவின்மேல் நியாயத்தீர்ப்பு
“எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு!
அவனுடைய கையில் எனது கடுங்கோபத்தின் தண்டாயுதம் இருக்கிறது.
நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி,
எனக்குக் கோபமூட்டும் மக்களைக்
கொள்ளையிட்டு சூறையாடி, பறித்து,
தெருவிலுள்ள சேற்றை மிதிப்பதுபோல் அவர்களை மிதித்துப் போடவும்
நான் அவனுக்கு கட்டளை கொடுக்கிறேன்.
ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல;
அவனுடைய மனதில் இருப்பதும் இதுவல்ல,
பல நாடுகளை அழித்து
அவர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவனுடைய நோக்கம்.
அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?
கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா?
ஆமாத் அர்பாத்தைப்போல் ஆகவில்லையா?
சமாரியா தமஸ்குவைப்போல் ஆகவில்லையா?
எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட
சிறந்த உருவச்சிலைகளின் அரசுகளை நான் கைப்பற்றினேன்.
சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல,
எருசலேமுக்கும், அதன் விக்கிரகங்களுக்கும் செய்யமாட்டேனோ?’ ”
யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார். ஏனெனில் அவன் சொல்கிறதாவது:
“ ‘எனது கரத்தின் வல்லமையாலும்,
எனது ஞானத்தினாலும் அறிவினாலும்
நான் இதைச் செய்தேன்,
நான் பல நாடுகளின் எல்லைகளை அகற்றினேன், அவர்களுடைய செல்வங்களைச் சூறையாடினேன்,
பெரும் வல்லவனைப்போல் அவர்களின் அரசர்களை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன்.
ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல்,
நாடுகளின் செல்வத்தை எடுப்பதற்கு என் கை நீட்டப்பட்டது.
கைவிடப்பட்ட முட்டைகளை மனிதர் சேர்ப்பதுபோல்,
எல்லா நாடுகளையும் நான் ஒன்றாகச் சேர்த்தேன்.
ஒன்றாவது சிறகை அடிக்கவுமில்லை,
கூச்சலிடுவதற்காக வாயைத் திறக்கவுமில்லை.’ ”
கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ?
வாள் தன்னை உபயோகிக்கிறவனுக்கு மேலாகத் தற்பெருமை கொள்ளுமோ?
அப்படியானால், வீசி அடிப்பதற்காக ஒருவன் ஒரு தடியை எடுக்க,
அந்தத் தடியோ தன்னை எடுத்தவனையே தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே.
மரத்தாலான தண்டாயுதம், தானாகவே எழுந்து நின்று,
மரமல்லாத மனிதனைத் தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே.
ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா
அவனுடைய பலமுள்ள இராணுவவீரர்களுக்குள் உருக்கும் நோயை அனுப்புவார்.
அவனுடைய பகட்டான ஆடம்பரத்தின்கீழ்
எரியும் சுவாலை போன்ற தீயை மூட்டுவார்.
இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும்,
அவர்களுடைய பரிசுத்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும் வருவார்.
அவர் அவனுடைய முட்செடிகளையும்,
அவனுடைய நெருஞ்சில் செடிகளையும் ஒரே நாளில் எரித்துப்போடுவார்.
நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல,
அவனுடைய காடுகளிலும் வளமுள்ள வயல்களிலும் உள்ள
செழிப்பு முற்றிலும் அழிந்துவிடும்.
அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை,
ஒரு சிறுபிள்ளைகூட எண்ணக்கூடியதாய் குறைந்திருக்கும்.
இஸ்ரயேலின் மிகுதியானோர்
அந்த நாளில் இஸ்ரயேலில் மீதியிருப்போரும்,
யாக்கோபின் குடும்பத்தில் தப்பியிருப்போரும்
10:20
அசீரியாவின் அரசன்
தங்களை முறியடித்தவன்மேல்
இனியொருபோதும் நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
ஆனால் இஸ்ரயேலின் பரிசுத்தராகிய யெகோவாவிலேயே
உண்மையான நம்பிக்கையை வைப்பார்கள்.
மீதியிருப்பவர்கள் திரும்புவார்கள்,
யாக்கோபின் குடும்பத்தில் மீதியிருப்பவர்கள் வல்ல இறைவனிடம் திரும்புவார்கள்.
இஸ்ரயேலே, உன் மக்கள் இப்பொழுது கடற்கரை மணல்போல் இருந்தபோதிலும்,
மீதமிருக்கும் சிலர் மட்டுமே திரும்புவார்கள்.
மூழ்கடிக்கும் அழிவு ஒன்று கட்டளையிடப்பட்டிருக்கிறது;
அது நீதியானது.
நாடு முழுவதற்கும் கட்டளையிடப்பட்ட அழிவை யெகோவா,
சேனைகளின் யெகோவா நிறைவேற்றுவார்.
ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“சீயோனில் வாழும் என் மக்களே,
எகிப்தியர் செய்ததுபோல, உங்களைப் பிரம்பால் அடித்து,
தண்டாயுதத்தை உயர்த்துகிற
அசீரியருக்குப் பயப்படவேண்டாம்.
உங்களுக்கு விரோதமாக இருக்கும் என் கோபம், வெகுவிரைவில் முடிந்துவிடும்.
எனது கோபமோ, சீரியர்களுடைய அழிவை நோக்கித் திருப்பப்படும்.”
ஓரேப் மலையில் மீதியானியரை அடித்து வீழ்த்தியதுபோல,
சேனைகளின் யெகோவா அவர்களைச் சவுக்கால் அடிப்பார்.
எகிப்தில் செய்ததுபோல,
தம் கோலை கடலின்மேல் உயர்த்துவார்.
அந்த நாளில் அசீரியனால் உங்களுக்கு உண்டான சுமையோ,
உங்கள் தோள்களில் இருந்து நீக்கப்படும்;
அவர்களுடைய நுகம் உங்கள் கழுத்திலிருந்து அகற்றப்படும்,
நீங்கள் கொழுத்திருக்கிறபடியால் நுகம் முறிந்துவிடும்.
அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள்.
மிக்ரோனு வழியாகப் போகிறார்கள்
மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள்.
அவர்கள் கணவாயைத் தாண்டிச் சென்று சொல்கிறதாவது:
“நாம் கேபாவில் இரவு தங்குவோம்.”
ராமா நடுங்குகிறது;
சவுலின் பட்டணமாகிய கிபியாவின் மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.
காலீம் மகளே, ஓலமிடு!
லாயிஷாவே, கேள்!
பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!
மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்;
கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்;
எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின்
மேட்டுக்கு விரோதமாய்,
கைநீட்டி மிரட்டுவார்கள்.
பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா,
மிக்க வல்லமையோடு பெரிய கிளைகளை வெட்டிவிடுவார்.
பெரு மரங்கள் வீழ்த்தப்படும்,
ஓங்கி வளர்ந்த மரங்கள் தாழ்த்தப்படும்.
அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;
எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.
ஈசாயின் கிளை
ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்;
அவனுடைய வேர்களிலிருந்து வரும் ஒரு கிளை கனிகொடுக்கும்.
யெகோவாவின் ஆவியானவர் அவரில் தங்குவார்.
ஞானத்தையும், விளங்கும் ஆற்றலையும், ஆலோசனையையும்,
பெலனையும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும்
அருளும் ஆவியானவரே அவரில் தங்குவார்.
அவரும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் மகிழ்ச்சிகொள்வார்.
அவர் தம் கண்களால் காண்பதைக்கொண்டு மட்டும் நியாயந்தீர்க்கமாட்டார்;
காதுகள் கேட்பதால் தீர்மானம் எடுக்கவுமாட்டார்.
ஆனால் அவர் எளியவர்களை நீதியுடன் நியாயந்தீர்த்து,
பூமியிலுள்ள ஏழைகளுக்காக நியாயத்துடன் தீர்ப்பளிப்பார்.
அவர் தன் வார்த்தை என்னும் கோலினால் பூமியை அடிப்பார்,
தனது உதடுகளின் மூச்சால் கொடியவர்களைக் கொல்வார்.
நீதி அவரது அரைக்கச்சையாகவும்,
உண்மை அவரின் இடைக்கச்சையாகவும் இருக்கும்.
ஆட்டுக்குட்டியுடன் ஓநாய் வசிக்கும்,
சிறுத்தை வெள்ளாட்டுடன் படுத்துக்கிடக்கும்.
பசுங்கன்றும், சிங்கமும், கொழுத்த காளையும் ஒன்றாய் வாழும்;
ஒரு சிறுபிள்ளை அவைகளை வழிநடத்தும்.
பசு கரடியுடன் மேயும்,
அவைகளின் குட்டிகளும் சேர்ந்து படுத்திருக்கும்;
மாட்டைப்போல் சிங்கமும் வைக்கோல் தின்னும்.
பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்பின் புற்றினருகே விளையாடும்;
சிறுபிள்ளை விரியன் பாம்பின் புற்றுக்குள் தன் கையை வைக்கும்.
எனது பரிசுத்த மலையெங்கும்
தீங்கு செய்பவரோ அழிப்பவரோ எவருமில்லை.
ஏனென்றால் கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல,
பூமி யெகோவாவைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
அந்த நாளிலே ஈசாயின் வேர் மக்களுக்கு ஒரு கொடியாக நிற்பார்; பிறநாடுகள் அவரிடம் கூடிவரும். அவர் இருக்கும் இடம் மகிமையுள்ளதாயிருக்கும். அந்த நாளில் யெகோவா அசீரியா, எகிப்து, பத்ரோஸ் எத்தியோப்பியா, ஏலாம், சிநெயார், ஆமாத், தொலைதூர கடற்தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து தம் மக்களில் மீதமிருப்பவர்களை மீட்க இரண்டாம் முறையும் தமது கரத்தை நீட்டுவார்.
அவர் எல்லா தேசத்தாருக்கும் ஒரு கொடியை ஏற்றி,
நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பார்.
சிதறடிக்கப்பட்டிருந்த யூதா மக்களை,
பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து ஒன்றுகூட்டுவார்.
அப்பொழுது எப்பிராயீமின் பொறாமை ஒழிந்துபோகும்,
யூதாவின் பகைவர் அகற்றப்படுவார்கள்;
எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமைகொள்ளவோ,
யூதா எப்பிராயீமைப் பகைக்கவோ மாட்டாது.
அவர்கள் மேற்குத் திசையில் உள்ள பெலிஸ்திய மலைச்சாரலின்மேல்
திடீரெனப் பாய்வார்கள்;
அவர்கள் ஒன்றிணைந்து கிழக்கிலே இருப்பவர்களையும் சூறையாடுவார்கள்.
அவர்கள் ஏதோமையும், மோவாபையும் கைப்பற்றுவார்கள்;
அம்மோனிய மக்கள் அவர்களுக்கு அடிமைகளாவார்கள்.
யெகோவா எகிப்தின் வளைகுடா கடலை
முழுவதும் வற்றப்பண்ணுவார்;
யூப்ரட்டீஸ் நதியின்மேல்
ஒரு வெப்பக் காற்றுடன் தமது கரத்தை வீசி அடிப்பார்.
மக்கள் உலர்ந்த நிலத்தில் நடக்கக் கூடியதாக
அவர் அதை ஏழு நீரோடைகளாகப் பிரிப்பார்.
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வரும்போது,
அவர்களுக்குப் பாதை இருந்ததுபோல,
அசீரிய நாட்டில் மீதமிருக்கும் அவரது மக்கள் திரும்பி வருவதற்கும்,
பெரும்பாதை ஒன்று இருக்கும்.
துதியின் கீதங்கள்
அந்த நாளிலே நீ:
“யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.
என்னில் கோபமாயிருந்தபோதிலும்,
உமது கோபம் தணிந்து
என்னைத் தேற்றியிருக்கிறீர்.
நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.
யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;
அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.
நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து
மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.
அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது:
“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;
அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,
அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.
யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்;
உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.
சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;
ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்
மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”
பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு
ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு:
வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள்,
போர்வீரர்களை கூப்பிடுங்கள்;
உயர்குடி மக்களின் வாசல்களுக்குள் போகும்படி
அவர்களை அழையுங்கள்.
எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்;
எனது கோபத்தை நிறைவேற்ற என் போர்வீரர்களை அழைத்திருக்கிறேன்;
அவர்கள் என் வெற்றியில் களிகூறுகிறவர்கள்.
கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது!
அது பெருந்திரளான மக்களின் இரைச்சல் போலிருக்கிறது.
கேளுங்கள், ராஜ்யங்களின் மத்தியில் பெருமுழக்கம் கேட்கிறது!
அது பல நாடுகள் ஒன்றுசேர்வது போன்ற ஆரவாரமாயிருக்கிறது.
சேனைகளின் யெகோவா
போருக்கு ஒரு படையைத் திரட்டுகிறார்.
தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்;
தொடுவானங்களின் எல்லைகளிலிருந்து வருகிறார்கள்.
முழு நாட்டையும் அழித்தொழிக்க
யெகோவா தமது கோபத்தின் ஆயுதங்களுடன் வருகிறார்.
அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது;
அந்த நாள் எல்லாம் வல்லவரிடமிருந்து பேரழிவைப்போல் வரும்.
இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்;
எல்லா மனிதரின் இருதயமும் உருகிப்போகும்.
அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும்,
வலியும் வேதனையும் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்;
பிரசவ வேதனைப்படும் பெண்ணைப்போல் அவர்கள் துடிப்பார்கள்.
அவர்கள் வெட்கத்தினால் முகம் சிவக்க
ஒருவரையொருவர் வியப்புடன் பார்ப்பார்கள்.
பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது;
அது கொடுமையின் நாள், நாட்டைப் பாழாக்குவதற்கும்,
அங்குள்ள பாவிகளை தண்டிப்பதற்கும்,
கோபத்துடனும் கடுங்கோபத்துடனும் அது வருகிறது.
வானத்து நட்சத்திரங்களும்,
நட்சத்திரக் கூட்டங்களும் தங்கள் ஒளியைக் கொடாதிருக்கும்.
சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்;
சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
நான் உலகத்தை அதன் தீமைக்காகவும்,
கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன்.
துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்;
இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன்.
சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும்,
ஓப்பீர் நாட்டின் தங்கத்தைப் பார்க்கிலும் நான் மனிதரை அபூர்வமாக்குவேன்.
ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்;
பூமி தன் நிலையிலிருந்து அசையும்.
எல்லாம் வல்ல யெகோவாவின் கோபம் பற்றியெரியும் நாளில்,
அவருடைய கோபத்தில் இது நடக்கும்.
அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும்,
மேய்ப்பனில்லாத செம்மறியாட்டைப் போலவும்,
ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்புவான்;
ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவான்.
கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்;
அகப்பட்டவன் வாளினால் சாவான்.
அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன்
மோதியடிக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுவார்கள்;
அவர்களுடைய வீடுகள் கொள்ளையிடப்படும்,
அவர்களுடைய மனைவிகள் அவமானப்படுவார்கள்.
பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்;
அவர்கள் வெள்ளியை மதியாதவர்கள்,
தங்கத்தில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள்.
அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்;
அவர்கள் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டமாட்டார்கள்,
சிறுபிள்ளைகள்மேல் கருணை காட்டவுமாட்டார்கள்.
பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல்
இறைவனால் கவிழ்க்கப்படும்.
இதுவே அரசுகளின் மேன்மையாகவும்,
கல்தேயரின் பெருமையின் சிறப்பாகவும் இருந்தது.
வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ,
வசிக்கவோ மாட்டார்கள்.
அரேபியன் எவனும் அங்கு தனது கூடாரத்தைப் போடமாட்டான்.
மேய்ப்பன் தன் மந்தைகளை அங்கு இளைப்பாற விடவுமாட்டான்.
ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்;
அவர்களுடைய வீடுகள் நரிகளால் நிரம்பும்.
ஆந்தைகள் அங்கே குடியிருக்கும்;
காட்டாடுகளும் அங்கே துள்ளி விளையாடும்.
அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும்,
அதன் அலங்காரமான அரண்மனைகளில் நரிகளும் ஊளையிடும்.
பாபிலோனுக்குரிய வேளை வந்துவிட்டது.
அதன் நாட்கள் நீடிக்காது.
யெகோவா யாக்கோபின்மேல் இரக்கம்கொள்வார்.
இஸ்ரயேலை மீண்டும் ஒருமுறை தெரிந்துகொண்டு,
அவர்களைத் தங்கள் சொந்த நாட்டில் குடியேற்றுவார்;
பிறநாட்டினரும் அவர்களோடு சேர்ந்து,
யாக்கோபின் குடும்பத்தாருடன் இணைந்துகொள்வார்கள்.
பிறநாடுகள் இஸ்ரயேலுக்கு உதவிசெய்து,
அவர்களைத் தங்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவார்கள்.
இஸ்ரயேல் குடும்பத்தார் பல நாடுகளையும் தமக்குச் சொந்தமாக்கி,
யெகோவாவினுடைய நாட்டில் வேலைக்காரர்களாகவும்,
வேலைக்காரிகளாகவும் கையாளுவார்கள்.
தங்களைச் சிறைப்படுத்தியவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கியவர்களை ஆளுவார்கள்.
யெகோவா உங்கள் வேதனையிலும், துன்பத்திலும் கொடூரமான அடிமைத்தனத்திலுமிருந்து உங்களை மீட்டு, உங்களுக்கு ஆறுதல் தந்த நாளிலே, நீங்கள் பாபிலோனிய அரசனுக்கு விரோதமாக இவ்வாறு கேலி செய்வீர்கள்:
ஒடுக்கினவன் எவ்வாறு ஒழிந்துபோனான்;
அவன் கோபம் என்ன ஆனது?
ஆளுநரின் கொடுங்கோலை,
கொடியவரின் கோலை யெகோவா முறித்துவிட்டார்.
அந்தக் கொடுங்கோல் மக்கள் கூட்டங்களைத் தன்
கோபத்தில் ஓயாமல் அடித்து வீழ்த்தியது.
அது நாடுகளைத் தன் கடுங்கோபத்தில் ஓயாது துன்புறுத்தி,
அவர்களை அடக்கியது.
நாடுகளெல்லாம் ஆறுதலடைந்து, சமாதானமாய் இருக்கின்றன;
அவர்கள் அகமகிழ்ந்து பாடுகிறார்கள்.
தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும்,
உன் வீழ்ச்சியில் மகிழ்ந்து சொல்கிறதாவது:
“பாபிலோனே, நீ கீழே வீழ்த்தித் தள்ளப்பட்டிருக்கிறாய்.
அதனால் இப்பொழுது எங்களை ஒரு மரவெட்டியும் அணுகவில்லை.”
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது,
உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது.
அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது;
அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள்.
அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது;
அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் உன்னிடம்,
“நீயும் எங்களைப்போல் பெலவீனமாகிவிட்டாய்;
நீயும் எங்களைப் போலாகிவிட்டாய்”
என்று சொல்வார்கள்.
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம்,
உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி,
புழுக்கள் உன்னை மூடுகின்றன.
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே,
நீ வானத்திலிருந்து விழுந்தாயே!
ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ,
பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே!
நீ உன் இருதயத்தில்,
“நான் வானத்திற்கு ஏறுவேன்;
இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக
என் அரியணையை உயர்த்துவேன்.
பரிசுத்த மலையின் மிக உயரத்தில்,
சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன்.
மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்;
மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே.
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு,
படுகுழிக்குள் தள்ளப்பட்டாய்.
உன்னைக் காண்போர் உற்றுப்பார்ப்பார்கள்.
அவர்கள் உன் நிலையைச் சிந்தித்து,
“பூமியை நிலைகுலையச் செய்து
அரசுகளை நடுங்கப் பண்ணியவன் இவன்தானா?
உலகத்தைப் பாலைவனமாக்கி,
பட்டணங்களைக் கவிழ்த்து,
கைதிகளை வீட்டிற்குத் திரும்பவிடாதவன் இவன்தானா?” என்று சொல்வார்கள்.
நாடுகளின் அரசர் அனைவரும்
அவரவர் தங்கள் கல்லறையில் சிறப்புடன் படுத்திருக்கிறார்கள்.
ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல்
கல்லறைக்கு வெளியே எறியப்பட்டிருக்கிறாய்.
வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட
பிரேதங்களால் நீ மூடப்பட்டிருக்கிறாய்.
நீயும் அவர்களுடன் கற்குழிக்குள் எறியப்பட்டிருக்கிறாய்.
நீ காலின்கீழ் மிதிபடும் பிணத்தைப் போலானாய்.
அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய்.
ஏனெனில் உனது நாட்டையே நீ அழித்து
உன் மக்களைக் கொன்றாய்.
கொடியவரின் சந்ததியினரைக் குறித்து
இனியொருபோதும் சொல்லப்பட மாட்டாது.
அவர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களுக்காக
அவர்களுடைய பிள்ளைகளைக் கொலைசெய்வதற்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துங்கள்;
அவர்கள் எழுந்து நாட்டை உரிமையாக்கவோ,
பூமியைத் தங்கள் பட்டணங்களால் நிரப்பவோ கூடாது.
“நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன்”
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
“பாபிலோனின் பெயரையும், அங்கு தப்பியிருப்பவர்களையும்,
அவளுடைய சந்ததிகளையும் அகற்றிவிடுவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
“மேலும், அவ்விடத்தை சதுப்பு நிலமாகவும்,
ஆந்தைகளின் வசிப்பிடமாகவும் ஆக்குவேன்;
அழிவின் துடைப்பத்தால் அவனைக் கூட்டித்தள்ளுவேன்”
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
சேனைகளின் யெகோவா ஆணையிட்டிருக்கிறார்:
“நிச்சயமாக நான் திட்டமிட்டபடியே அது நடக்கும்,
என் நோக்கத்தின்படியே அது நிலைநிற்கும்.
நான் அசீரியனை என் நாட்டிலேயே முறியடிப்பேன்;
என் மலைகளிலேயே அவனை மிதித்துவிடுவேன்.
அவனுடைய நுகம் என் மக்களிடமிருந்து எடுக்கப்படும்;
அவனுடைய சுமை அவர்களின் தோள்களிலிருந்து நீக்கப்படும்.”
முழு உலகத்துக்கும் தீர்மானிக்கப்பட்ட திட்டம் இதுவே;
எல்லா நாடுகளுக்கும் மேலாக நீட்டப்பட்ட கரம் இதுவே.
சேனைகளின் யெகோவா அதைத் தீர்மானித்திருக்கிறார்,
அவரைத் தடுக்க யாரால் முடியும்?
அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது,
அதை எவரால் திருப்ப முடியும்?
பெலிஸ்தியருக்கு எதிரான இறைவாக்கு
ஆகாஸ் அரசன் இறந்த வருடத்தில் இந்த இறைவாக்கு வந்தது:
பெலிஸ்தியரே, நீங்கள் எல்லோரும்,
உங்களை அடித்த கோல் முறிந்தது என்று மகிழவேண்டாம்.
அந்த பாம்பின் வேரிலிருந்து விரியன் பாம்பு தோன்றும்.
அதன் கனியோ பறக்கும் விஷப் பாம்பாய் இருக்கும்.
14:30
ஏழைகளின் தலைப்பிள்ளைகள்
ஏழைகளிலும் ஏழைகளாய் இருப்பவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வார்கள்;
தரித்திரர் பாதுகாப்பாக இளைப்பாறுவார்கள்.
ஆனால் உன் வேரையோ பஞ்சத்தால் அழிப்பேன்;
அது உன்னில் மீதமிருப்போரைக் கொன்றுவிடும்.
வாசலே, புலம்பு! பட்டணமே, கதறியழு!
பெலிஸ்தியரே, நீங்கள் அனைவரும் உருகிப்போங்கள்!
வடக்கிலிருந்து ஒரு புகைமேகம் வருகிறது;
அதன் அணிவகுப்பிலிருந்து விலகுவோர் அங்கு ஒருவரும் இல்லை.
அந்த நாட்டின் தூதுவருக்கு என்ன பதில் சொல்லலாம்?
“யெகோவா சீயோனை நிலைநாட்டியிருக்கிறார்.
துன்புறுத்தப்பட்ட அவரது மக்கள்
அங்கு அடைக்கலம் புகுவார்கள்.”
மோவாபைப் பற்றிய இறைவாக்கு
மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு:
ஒரே இரவில் மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
மோவாபிலுள்ள கீர் பட்டணமும் ஒரே இரவில்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு
அழுவதற்கென்று போயிருக்கிறார்கள்.
மோவாப் மக்கள் நேபோவைக் குறித்தும், மேதேபாவைக் குறித்தும் புலம்புகிறார்கள்.
ஒவ்வொருவருடைய தலையும் மொட்டையடிக்கப்பட்டு,
ஒவ்வொருவருடைய தாடியும் சிரைக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்;
வீட்டுக் கூரைகள் மேலும்,
பொதுமக்கள் கூடும் சதுக்கங்களிலும் புலம்புகிறார்கள்.
அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.
எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள்,
அவர்களுடைய குரல் யாகாசுவரை கேட்கிறது.
ஆகவே மோவாபியரில் ஆயுதமணிந்தவர்களும் கதறி அழுகிறார்கள்;
அவர்கள் இருதயங்கள் சோர்ந்திருக்கின்றன.
எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது;
அவர்களுடைய அகதிகள் சோவார் வரைக்கும்,
எக்லத் ஷெலிஷியாவரைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
அவர்கள் லூகித் மலைச்சரிவுகளில்
அழுதுகொண்டே ஏறுகிறார்கள்.
ஒரொனாயீமின் வழியில் தங்கி
பட்டணத்தின் அழிவைப்பற்றிப் புலம்புகிறார்கள்.
நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின;
புல்லும் வாடிப்போயிற்று,
பசுமையும் இல்லாமல் போயிற்று.
பசுமையான எதுவுமே மீதியாய் விடப்படவில்லை.
ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை,
அலறிகளின் ஆற்றுக்கு அப்பால் தூக்கிச் செல்கிறார்கள்.
அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது;
அவர்களுடைய அலறும் சத்தம் எக்லாயீம்வரை எட்டுகிறது.
அவர்களுடைய புலம்பல் பீர் ஏலீம் வரையும் கேட்கிறது.
தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன.
ஆனால் நான் தீமோனின்மேல் இன்னும் அதிக வேதனையைக் கொண்டுவருவேன்.
மோவாபிலுள்ள அகதிகள்மீதும்,
நாட்டில் மீதியாய் இருப்பவர்கள்மீதும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.
நாட்டின் ஆளுநனுக்குச்
செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை,
நீங்கள் சேலா நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக
சீயோன் மகளின் மலைக்கு அனுப்புங்கள்.
கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு,
செட்டையடிக்கும் பறவைகளைப்போல்
மோவாபிய பெண்கள்,
அர்னோன் ஆற்றின் துறைகளில் இருக்கிறார்கள்.
“நீங்கள் ஆலோசனைபண்ணி,
ஒரு தீர்மானம் எடுங்கள்.
நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள்.
தப்பியோடி வருபவருக்கு
மறைவிடம் கொடுங்கள்.
ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள்.
மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும்.
அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.”
ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும்,
அழிவும் ஓய்ந்துவிடும்;
துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான்.
அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும்.
தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த
உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார்.
அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்;
தாமதியாமல் நியாயம் செய்வார்.
மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம்.
அவர்கள் ஆணவம் பெரிதே!
அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்;
அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.
ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள்,
அவர்கள் மோவாபுக்காக ஒன்றுசேர்ந்து புலம்புகிறார்கள்.
கீர்ஹேரேஸேத்தின் திராட்சை அடைகளுக்காகத்
துக்கத்துடன் அழுது புலம்புகிறார்கள்.
எஸ்போன் வயல்களும் சிப்மாவின்
திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன.
நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட
திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள்.
இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு
பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன.
அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து
கடல்வரை சென்றிருந்தன.
சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல்
நானும் அழுகிறேன்.
எஸ்போனே, எலெயாலேயே,
நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்!
உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும்,
உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று.
பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன;
திராட்சைத் தோட்டங்களில் ஒருவரும் பாடுவதுமில்லை, சத்தமிடுவதுமில்லை;
ஆலைகளில் இரசத்துக்காக பழங்களை மிதிப்பவர்களுமில்லை,
ஏனெனில் நானே பழம் பிழிவோரின் பூரிப்பை ஓயப்பண்ணினேன்.
மோவாபுக்காக என் இருதயமும்,
கிர் ஹெரெஸிற்காக என் உள்ளமும் யாழின் தொனியைப்போல் புலம்புகின்றன.
மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று
களைப்புற்றும்,
கோயிலுக்குப்போய் மன்றாடியும்
அவளுக்கு ஒரு பயனும் இல்லை.
மோவாபைப் பற்றி யெகோவா முன்பே சொல்லியிருந்த வார்த்தை இதுவே. இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.”
தமஸ்குவுக்கு எதிரான இறைவாக்கு
தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு:
“பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது;
அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு,
மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்;
அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்;
தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும்.
இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே,
சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்”
என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
“அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்;
அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.
அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து,
தன் கையால் அறுவடை செய்வதுபோலவும்,
ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்
சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”
ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
“ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின்,
அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும்,
பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள்
விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”
அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்;
அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.
தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்;
அசேரா தேவதைகளின் தூண்களுக்கும்,
தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும்
மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள்.
இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.
நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து,
உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள்.
ஆதலால் சிறந்த தாவரங்களையும்,
வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும்
ஒழுங்காய் நாட்டினாலும்,
நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும்,
விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும்
அறுவடையில் ஒன்றும் இராது;
வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.
அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்;
அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள்.
மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்;
பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.
பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும்,
அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள்.
அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும்,
புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்;
விடியுமுன் அழிவு;
நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே;
நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே.
எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு
எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால்,
இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு!
இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல்
கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது.
விரைந்து செல்லும் தூதுவர்களே,
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் வாழ்பவர்களும்,
பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும்
மலைமேல் கொடியேற்றப்படும்போது,
அதைக் காண்பீர்கள்.
எக்காளம் முழங்கும்போது
அதைக் கேட்பீர்கள்.
யெகோவா என்னிடம் கூறுவது இதுவே:
“சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும்,
அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும்
நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.”
ஏனெனில் அறுவடைக்குமுன்,
திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது,
யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும்,
படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.
அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும்,
காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்;
பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும்,
காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும்.
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து
சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.
எகிப்தைப் பற்றிய இறைவாக்கு
இது எகிப்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு:
இதோ, யெகோவா விரைந்து செல்லும் மேகமொன்றில் ஏறி
எகிப்திற்கு வருகிறார்.
எகிப்திய விக்கிரகங்கள் அவர்முன் நடுங்குகின்றன;
எகிப்தியரின் இருதயங்கள் அவர்களுக்குள்ளேயே உருகுகின்றன.
“எகிப்தியனை எகிப்தியனுக்கு விரோதமாக நான் எழுப்பிவிடுவேன்;
சகோதரன் சகோதரனுக்கு விரோதமாகச் சண்டையிடுவான்.
அயலான் அயலானை எதிர்ப்பான்,
பட்டணம் பட்டணத்தை எதிர்க்கும்,
அரசு அரசை எதிர்க்கும்.
அதனால் எகிப்தியர் இருதயத்தில் சோர்ந்துபோவார்கள்;
நான் அவர்களுடைய திட்டங்களை நிறைவேறாதபடி செய்வேன்.
அவர்கள் விக்கிரகங்களிடமும், இறந்தோரின் ஆவிகளிடமும், குறிசொல்வோரிடமும்,
ஆவியுலகத் தொடர்புடையோரிடமும் ஆலோசனை கேட்பார்கள்.
நான் எகிப்தியரை கொடிய தலைவன்
ஒருவனது வல்லமைக்கு ஒப்புக்கொடுப்பேன்.
அவர்களை கொடூரமான அரசன் ஒருவன் ஆளுவான்”
என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும்,
ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
வாய்க்கால்கள் நாறும்;
எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும்.
கோரையும் நாணலும் வாடிவிடும்.
ஆற்றின் முகத்துவாரத்தில்,
நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும்.
நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து,
பறந்து இல்லாமல் போகும்.
மீனவர்கள் புலம்புவார்கள்,
நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்;
தண்ணீருள் வலை வீசுகிறவர்களும்
கவலையால் வாடிப்போவார்கள்.
சணற்பட்டுத் தொழில் செய்வோரும்
வெண்பருத்தி நூலினால் நெசவு செய்வோரும் வெட்கமடைவார்கள்.
துணி நெசவு செய்வோர் அனைவருமே சோர்வடைவார்கள்;
கூலிக்கு வேலைசெய்யும் யாவரும் மனமுடைந்து போவார்கள்.
சோவானின் அதிகாரிகள் புத்தியீனரேயன்றி வேறு யாருமல்லர்;
பார்வோனின் ஞானமுள்ள ஆலோசகர் அர்த்தமற்ற ஆலோசனை வழங்குகிறார்கள்.
“நான் ஞானிகளில் ஒருவன்;
பூர்வகால அரசர்களின் வழிவந்தவன்”
என்று நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி பார்வோனுக்குச் சொல்வீர்கள்?
இப்பொழுது உன் ஞானிகள் எங்கே?
சேனைகளின் யெகோவா
எகிப்திற்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதை,
அவர்கள் உனக்கு வெளிப்படுத்திக் காட்டட்டும்.
சோவானின் அதிகாரிகள் புத்தியீனரானார்கள்;
மெம்பிஸ்19:13 மெம்பிஸ் அல்லது நோப் பட்டணத்தின் தலைவர்கள் ஏமாந்துபோனார்கள்.
மக்கள் கூட்டங்களின் மூலைக் கற்களாய் இருந்த அவர்கள்
எகிப்தை வழிதவறிப் போகச் செய்தார்கள்.
யெகோவா அவர்களுக்குள் மயக்கத்தின் ஆவியை ஊற்றியிருக்கிறார்.
மதுபோதையில் தனது வாந்தியைச் சுற்றி தள்ளாடுபவனைப் போல்,
அவர்கள் எகிப்தை அதன் செயல்கள் அனைத்திலும்
தள்ளாடப் பண்ணுகிறார்கள்.
அப்பொழுது எகிப்தின் தலையினாலோ,
வாலினாலோ, ஓலையினாலோ, நாணலினாலோ செய்யக்கூடியது எதுவுமேயில்லை.
அந்த நாளில் எகிப்தியர் பெண்களைப் போலாவார்கள். சேனைகளின் யெகோவா, தமது உயர்த்திய கரத்தை அவர்களுக்கு விரோதமாக ஓங்கும்போது, அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். யூதா நாடும் எகிப்தியரைத் திகிலடையச் செய்யும். சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதின் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள்.
அந்த நாளிலே, எகிப்திலுள்ள ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, “சேனைகளின் யெகோவாவுக்கே உண்மையாயிருப்போம்” என ஆணையிடுவார்கள். அவைகளில் ஒன்று அழிவின் நகரம் என அழைக்கப்படும்.
அந்த நாளிலே எகிப்தின் மத்தியில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதன் எல்லையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னமும் இருக்கும். இது எகிப்து தேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு ஒரு அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்கும். அவர்கள் தங்களை ஒடுக்குவோரினிமித்தம் யெகோவாவிடம் கதறியழும்போது, மீட்பரும் பாதுகாப்பவருமான ஒருவரை அவர்களிடம் அனுப்புவார்; அவர் அவர்களை விடுவிப்பார். இப்படியாக யெகோவா எகிப்தியருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்; அந்நாளில் அவர்கள் யெகோவாவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் பலிகளாலும், தானிய பலிகளாலும் வழிபடுவார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து, அவைகளை நிறைவேற்றுவார்கள். யெகோவா எகிப்தைக் கொள்ளைநோயால் வாதிப்பார்; அவர் அவர்களை வாதித்துக் குணமாக்குவார். அவர்கள் யெகோவாவிடத்தில் மனந்திரும்புவார்கள். அவரும் அவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு, அவர்களைச் சுகமாக்குவார்.
அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை ஒரு பெரும்பாதை இருக்கும். எகிப்தியர் அசீரியாவுக்கும், அசீரியர் எகிப்திற்கும் போவார்கள். எகிப்தியரும், அசீரியரும் ஒன்றுகூடி வழிபடுவார்கள். அந்த நாளில் இஸ்ரயேல், எகிப்தியருடனும், அசீரியருடனும் மூன்றாவது அரசாய், பூமியிலே ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். சேனைகளின் யெகோவா, “என் மக்களாகிய எகிப்தியரும், என் கைவேலையாகிய அசீரியரும், எனது உரிமைச்சொத்தான இஸ்ரயேலரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிப்பார்.
எகிப்திற்கு எதிரான இறைவாக்கு
அசீரிய அரசன் சர்கோன், தனது தர்த்தான் படைத்தளபதியை அஸ்தோத் பட்டணத்திற்கு அனுப்பினான். அவன் வந்து அதைத் தாக்கிக் கைப்பற்றிய வருடத்தில், யெகோவா ஆமோஸின் மகன் ஏசாயா மூலம் பேசினார்: அந்த வேளையில் அவர் ஏசாயாவிடம், “உனது இடுப்பில் இருக்கும் துக்கவுடையையும், உனது செருப்பையும் கழற்றிவிடு” என்றார். அவனும் அப்படியே செய்து உடையின்றி வெறுங்காலுடன் திரிந்தான்.
பின்பு யெகோவா சொன்னதாவது: “எனது அடியவன் ஏசாயா உடையின்றியும், வெறுங்காலுடனும் மூன்று வருடங்கள் திரிந்திருக்கிறான். இது எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் விரோதமான முன்னெச்சரிப்பும் அடையாளமுமாகும். இதேபோல் அசீரிய அரசன், எகிப்திய கைதிகளையும், நாடுகடத்தப்பட்ட எத்தியோப்பிய முதியோரையும் இளையோரையும் உடையின்றியும், வெறுங்காலுடனும், பின்பக்கம் மூடப்படாதவர்களாயும் கடத்திச் செல்வான். இவ்விதம் எகிப்து வெட்கமடையும். அப்பொழுது எத்தியோப்பியாவில் நம்பிக்கை வைத்து, எகிப்தைக் குறித்து பெருமை பாராட்டியவர்கள், பயந்து வெட்கத்துக்குள்ளாவார்கள். அந்த நாளிலே, இந்தக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ‘நாம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது பாருங்கள். அசீரிய அரசனிடமிருந்து விடுதலை பெறும்படி உதவிக்காக இவர்களிடமல்லவா ஓடினோம். அப்படியானால் நாம் எப்படித் தப்புவோம்?’ ” என்பார்கள்.
பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு
கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு:
புயல்காற்று நெகேவ் பிரதேசமான தென்திசையிலிருந்து வீசுவதுபோல,
பயங்கர நாடான பாலைவனத்திலிருந்து
ஒருவன் படையெடுத்து வருகிறான்.
கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது:
துரோகி காட்டிக்கொடுக்கிறான், கொள்ளைக்காரன் கொள்ளையிடுகிறான்.
ஏலாமே, தாக்கு! மேதியாவே, முற்றுகையிடு!
அவள் உண்டுபண்ணிய புலம்பலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது;
பெண்ணின் பிரசவ வேதனையைப்போல் கடும் வேதனை என்னைப் பிடித்துக்கொண்டது.
நான் கேட்பது என்னைத் தள்ளாடப் பண்ணுகிறது;
நான் காண்பது என்னைக் குழப்பமடையச் செய்கிறது.
எனது இருதயம் தயங்குகிறது,
பயம் என்னை நடுங்கப் பண்ணுகிறது;
நான் எதிர்பார்த்திருந்த மாலைப்பொழுது
எனக்கு பயங்கரமாயிற்று.
அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள்,
அவர்கள் கம்பளம் விரிக்கிறார்கள்,
அவர்கள் உண்டு குடிக்கிறார்கள்.
அதிகாரிகளே, எழும்புங்கள்,
கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்!
யெகோவா எனக்குக் கூறுவது இதுவே:
“நீ போய் காவலாளியை அவனுக்குரிய இடத்தில் அமர்த்து;
அவன் காண்பதை உனக்குத் தெரிவிக்கும்படி சொல்.
குதிரைக் கூட்டங்களுடன்
வரும் தேர்களையோ,
கழுதைகளின் மேலோ
ஒட்டகங்களின் மேலோ ஏறிச்செல்பவர்களையோ காணும்போது,
அவன் முழு எச்சரிக்கையுடன்
விழிப்பாயிருக்கட்டும்.”
காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு,
“ஆண்டவனே, நான் பகல்தோறும், காவல் கோபுரத்தில் நிற்கிறேன்;
ஒவ்வொரு இரவும் எனக்குரிய இடத்திலேயே இருக்கிறேன்.
இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான்.
‘பாபிலோன் வீழ்ந்தது, பாபிலோன் வீழ்ந்தது!
அதன் தெய்வங்களின் உருவச்சிலைகள் எல்லாம்
நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’
என அவன் பதிலளிக்கிறான்”
என்று சொன்னான்.
என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே,
இஸ்ரயேலின் இறைவனாகிய
சேனைகளின் யெகோவாவிடமிருந்து
நான் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
தூமாவைப்21:11 தூமாவை மற்றொரு பெயர் ஏதோம் அதற்கு அமைதி என்று அர்த்தம். பற்றிய ஒரு இறைவாக்கு:
சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு,
“காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?
காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.
காவலாளி பதிலளித்து,
“காலை வருகிறது, ஆனால் இரவும் வருகிறது.
நீ கேட்க விரும்பினால் திரும்பவும் வந்து கேள்”
என்று கூறினான்.
அரேபியாவுக்கு எதிரான இறைவாக்கு
அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு:
தெதானியரின் வணிகப் பயணிகள் கூட்டமே,
அரேபியாவின் காடுகளில் முகாமிடுகிறவர்களே,
தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்;
தேமாவில் வசிப்பவர்களே,
நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.
அவர்கள் பட்டயங்களுக்கும்,
உருவிய பட்டயத்துக்கும்,
நாணேற்றிய வில்லுக்கும்,
போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள்.
யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும். வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின்21:17 கேதாரின் என்பது அரேபியாவின் வனப்பகுதி. போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார்.
எருசலேமைப் பற்றிய இறைவாக்கு
தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும் எருசலேமைக் குறித்த இறைவாக்கு:
வீடுகளின்மேல் போய் இருக்கிறீர்களே,
உங்களுக்கு நடந்தது என்ன?
குழப்பம் நிறைந்த நகரமே,
ஆரவாரமும் குதூகலமும் உள்ள பட்டணமே,
உங்களில் கொல்லப்பட்டவர்கள் வாளினால் கொல்லப்படவில்லை;
அல்லது அவர்கள் போரில் சாகவில்லை.
உங்கள் தலைவர்கள் யாவரும் சேர்ந்து ஓடிவிட்டார்கள்;
வில்லை நாணேற்றாமலே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள்.
பகைவன் வெகு தூரத்திலிருக்கும்போதே நீங்கள் தப்பி ஓடினீர்கள்;
ஆயினும் நீங்கள் யாவரும் ஒன்றாய் பிடிக்கப்பட்டு கைதிகளாக்கப்பட்டீர்கள்.
ஆகவே நான், “என்னிடமிருந்து திரும்புங்கள்;
என்னை மனங்கசந்து அழவிடுங்கள்;
என் மக்களின் அழிவின் நிமித்தம்
என்னைத் தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.
யெகோவா, சேனைகளின் யெகோவா,
தரிசனப் பள்ளத்தாக்கிற்கு அமளிக்கும்,
மிதித்தலுக்கும், திகிலுக்கும் என்று ஒருநாளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
அந்த நாளிலே மதில்கள் இடித்து வீழ்த்தப்படும்;
மலைகளை நோக்கிக் கூக்குரலிடுவார்கள்.
ஏலாமியர் தமது தேரோட்டிகளோடும்,
குதிரைகளோடும் தமது அம்புக் கூடுகளை எடுக்கிறார்கள்;
கீர் ஊரார் கேடயத்தை வெளியே எடுக்கிறார்கள்.
உங்கள் செழிப்பான பள்ளத்தாக்குகள் தேர்களினால் நிரம்பி இருக்கின்றன;
பட்டணத்து வாசலிலே குதிரைவீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யூதாவின் அரண்கள் அகற்றப்பட்டிருக்கின்றன;
அந்த நாளிலே நீங்கள் வன மாளிகையின்
ஆயுதங்களில் உங்கள் நம்பிக்கையை வைத்திருந்தீர்கள்.
தாவீதின் பட்டணத்து அரண்களில்
பல வெடிப்புகளைக் கண்டீர்கள்.
நீங்கள் கீழ் குளத்தில்
தண்ணீரைச் சேகரித்தீர்கள்.
பின்பு எருசலேமிலுள்ள வீடுகளை எண்ணினீர்கள்;
மதிலைப் பலப்படுத்துவதற்காக வீடுகளை உடைத்து வீழ்த்தினீர்கள்.
பழைய குளத்துத் தண்ணீரைச் சேகரிப்பதற்காக,
நீங்கள் இரு மதில்களுக்கிடையில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்தீர்கள்.
ஆனால் இதை உண்டாக்கியவரை நீங்கள் நோக்கவும் இல்லை;
ஆதியிலே இதைத் திட்டமிட்டவரை நீங்கள் மதிக்கவும் இல்லை.
அந்த நாளிலே யெகோவா, சேனைகளின் யெகோவா,
அழுவதற்கும், புலம்புவதற்கும்,
தலைமயிரை மொட்டையிடுவதற்கும்,
துக்கவுடை உடுத்துவதற்கும் உங்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆயினும் பாருங்கள், நீங்கள் கொண்டாட்டங்களிலும் மகிழ்ச்சியிலும்
குதூகலத்திலும் ஈடுபடுகிறீர்கள்.
ஆடுமாடுகளை அடித்து, செம்மறியாடுகளையும் வெட்டி,
இறைச்சியை சாப்பிட்டு, திராட்சை இரசம் குடிக்கிறீர்கள்!
நீங்களோ, “உண்போம், குடிப்போம்.
ஏனெனில், நாளைக்குச் சாவோம்!” என்று சொல்லுகிறீர்களே.
என் செவிகேட்க சேனைகளின் யெகோவா இதை வெளிப்படுத்தியிருக்கிறார்: “நீங்கள் சாகும் நாள்வரை, இந்தப் பாவம் நிவிர்த்தியாக்கப்படுவதில்லை” என யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“நீ போய் அரண்மனைக்குப் பொறுப்பாய் இருக்கும் அதிகாரியான
செப்னாவிடம் சொல்லவேண்டியதாவது:
நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கென்று இந்த இடத்தில்
ஒரு கல்லறையை வெட்டுவதற்கு உனக்கு உத்தரவு கொடுத்தது யார்?
உயர்ந்த இடத்தில் உனது கல்லறையை வெட்டவும்,
கற்பாறையில் உனது இளைப்பாறும் இடத்தைச் செதுக்கவும்
உனக்கு உத்தரவு கொடுத்தது யார்?
“வலியவனே, எச்சரிக்கையாயிரு,
யெகோவா உன்னை இறுகப் பிடித்துத் தூக்கியெறியப் போகிறார்.
அவர் உன்னை இறுக்கமாய் சுருட்டி, ஒரு பந்துபோல் ஆக்கி,
ஒரு பெரிய நாட்டிற்குள் எறிவார்.
அங்கே நீ சாவாய்,
உனது சிறப்பான தேர்கள் அங்கு இருக்கும்;
நீ உன் எஜமான் வீட்டுக்கு அவமானமாய் இருந்தாயே.
நான் உனது பதவியிலிருந்து உன்னை நீக்குவேன்,
நீ இருக்கும் நிலையிலிருந்து அகற்றப்படுவாய்.
“அந்த நாளிலே, இல்க்கியாவின் மகன் எலியாக்கீம் என்னும் என் அடியவனை அழைப்பேன். உனது உடையை அவனுக்கு உடுத்தி, உனது சால்வையை அவனுடைய இடையில் கட்டி, உன்னிடம் இருந்த அதிகாரத்தை அவனிடம் ஒப்படைப்பேன். எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வீட்டாருக்கும் அவன் தகப்பனாயிருப்பான். தாவீதின் வீட்டுத் திறப்பை அவனிடம் கொடுப்பேன்; அவன் திறப்பதை யாராலும் மூட இயலாது, அவன் மூடியதை ஒருவராலும் திறக்கவும் இயலாது. ஒரு உறுதியான இடத்தில் அவனை ஒரு ஆணியைப்போல் அறைவேன்; அவன் தனது தகப்பன் வீட்டுக்கு ஒரு மகிமையுள்ள இருக்கையாய் இருப்பான். அவனுடைய தகப்பன் குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான, சிறிய பாத்திரங்கள், கிண்ணங்கள் முதல் பெரிய குடங்கள் வரையுள்ள அனைத்து பாத்திரங்களைப்போல் பெரிய பொறுப்பு அவன்மேல் இருக்கும்.”
சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்த நாளிலே, உறுதியான இடத்தில் அறையப்பட்டிருந்த ஆணி பிடுங்கப்பட்டு, முறிந்து விழும்; அதில் தொங்கியிருந்த பாரமான யாவும் விழுந்துவிடும்.” யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.
தீருவைப் பற்றிய இறைவாக்கு
தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு:
தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்!
தீரு அழிந்துபோனது;
அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது.
சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு
ஒரு செய்தி வந்திருக்கிறது.
தீவின் மக்களே,
கப்பலோட்டிகளில் செல்வந்தரான சீதோனின் வணிகர்களே,
மவுனமாயிருங்கள்.
சீகோரின் பெருவெள்ளத்தினால்
விளையும் தானியமும்,
நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது.
தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.
ஆகையால் சீதோனே, வெட்கப்படு;
“நான் பிரசவ வேதனைப்படவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை;
நான் இளைஞர்களைப் பராமரிக்கவோ, கன்னிகைகளை வளர்க்கவோ இல்லை”
என்று கடல் சொல்கின்றது;
கடற்கோட்டை பேசுகின்றது.
செய்தி எகிப்திற்கு எட்டியதும்,
அங்குள்ளவர்கள் தீருவிலிருந்து வந்த
அந்தச் செய்தியின் நிமித்தம் வேதனைப்படுவார்கள்.
தீவுகளின் மக்களே,
தர்ஷீசுக்குக் கடந்துசென்று அழுது புலம்புங்கள்.
அந்தப் பழைய பட்டணம் இதுதானா?
களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா?
தூர நாடுகளில் குடியிருக்கும்படி,
தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்?
அது மகுடங்களை வழங்கியதே,
தீருவின் வர்த்தகர்கள் இளவரசர்களாயும்,
அதன் வியாபாரிகள் பூமியில் பெயர் பெற்றவர்களாயும் இருந்தனரே!
சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்;
எல்லாச் சிறப்பின் பெருமையையும் சிறுமைப்படுத்துவதற்கும்,
பூமியில் புகழ்ப்பெற்ற அனைவரையும் தாழ்த்துவதற்குமே இவ்வாறு செய்தார்.
தர்ஷீசின் மகளே,
நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ;
ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.
யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி,
அதன் அரசுகளை நடுங்கச் செய்துள்ளார்.
கானானின் கோட்டைகளை அழிக்கும்படி
அவர் கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே,
இப்போது நசுக்கப்பட்டுக் கிடக்கிறாயே!
இனி உனக்கு ஒருபோதும் களியாட்டம் இல்லை.
“நீ எழுந்து சைப்பிரஸுக்குப் போ,
அங்கேயும் நீ ஆறுதலைக் காணமாட்டாய்” என்றார்.
கல்தேயரின் நாட்டைப் பார்,
அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே!
இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப்
பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள்.
முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி,
அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப்
பாழிடமாக்கி விட்டார்கள்.
தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்;
உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!
அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:
“மறக்கப்பட்ட வேசியே,
வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட;
உன்னை நினைவுகூரும்படியாக
வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”
யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள். ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.
பூமியின் அழிவு
இதோ, யெகோவா பூமியை அழித்து
சீர்குலைக்கப்போகிறார்.
அதன் மேற்பரப்பைப் பாழாக்கி,
குடிகளைச் சிதறடிப்பார்.
மக்களைப்போலவே ஆசாரியனுக்கும்,
வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும்,
வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும்,
வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும்,
இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும்,
கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக
எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.
பூமி முழுவதும் அழிக்கப்பட்டு
முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும்.
யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.
பூமி வறண்டு வாடுகிறது,
உலகம் நலிந்து வாடுகிறது;
பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள்.
பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது;
அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.
அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து,
நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.
ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது.
பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள்.
மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.
புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது;
மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது,
களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது;
யாழின் இன்னிசை அடங்கிற்று.
இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை,
மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும்.
அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது;
வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும்.
அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்;
இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன;
சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன.
பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது,
அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன.
அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு,
பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும்,
திராட்சை அறுவடையின்பின் கிளைகளில்
சில பழங்கள் மீந்திருப்பது போலுமே
பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும்
மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்;
அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள்.
ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
கடலின் தீவுகளில் இஸ்ரயேலின்
இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.
“நீதியுள்ளவருக்கே மகிமை”
என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம்.
ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன்
ஐயோ எனக்குக் கேடு!
துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்!
துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.
பூமியின் குடிகளே,
பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன்
படுகுழிக்குள் விழுவான்.
குழியிலிருந்து வெளியேறுபவன்
கண்ணியில் அகப்படுவான்.
வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன,
பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன.
பூமி உடைந்து போயிருக்கிறது,
பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது,
பூமி அதிர்ந்து நடுங்குகிறது.
பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது,
அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது;
மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால்,
ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும்,
கீழே பூமியில் இருக்கும்
அரசர்களையும் யெகோவா தண்டிப்பார்.
இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல்,
அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு
அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.
சந்திரன் நாணமடையும்,
சூரியன் வெட்கமடையும்;
ஏனெனில், சேனைகளின் யெகோவா
சீயோன் மலையிலும் எருசலேமிலும்
அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.
யெகோவாவுக்குத் துதி
யெகோவாவே, நீரே என் இறைவன்;
நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.
அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;
நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,
பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.
நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்;
அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர்.
அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது;
அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை.
ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்;
இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும்.
நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்;
வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர்.
புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும்,
வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர்.
முரடர்களின் மூச்சு,
ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது.
அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது.
அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்;
மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல,
இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது.
சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும்
சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார்.
நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும்,
சிறந்த இறைச்சிகளும்,
உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும்.
இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும்
மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்;
இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும்.
மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார்.
ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள
கண்ணீரைத் துடைத்துவிடுவார்.
அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின்
அவமானத்தை நீக்கிவிடுவார்.
யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார்.
அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள்,
“நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம்,
இவர் எங்களை மீட்டார்.
இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்;
இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள்.
யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்;
வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல்,
மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள்.
நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல்,
மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்;
அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும்,
இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார்.
மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை
அவர் கீழே தள்ளி விழ்த்துவார்.
அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே
தள்ளிப் போடுவார்.
துதிப்பாடல்
அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்:
நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு;
இறைவன் இரட்சிப்பை,
அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார்.
வாசல்களைத் திறவுங்கள்,
நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும்,
நேர்மையான நாடு உள்ளே வரட்டும்.
மனவுறுதியுடன் இருப்பவனை
நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்;
ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்;
ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை.
உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்;
உயர்த்தப்பட்ட பட்டணத்தை
கீழே தள்ளி வீழ்த்துகிறார்,
அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார்.
கால்கள் அதை மிதிக்கின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும்,
ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன.
நீதியானவர்களின் பாதை நேர்சீரானது;
நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர்.
ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து,
உமக்குக் காத்திருக்கிறோம்;
உமது பெயரும் உமது புகழுமே
எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன.
இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது,
காலையிலே என் ஆவி உம்மை வாஞ்சையுடன் தேடுகிறது.
உமது நியாயத்தீர்ப்புகள் பூமியிலே வரும்போது
உலக மக்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வார்கள்.
கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும்,
அவர்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வதில்லை.
நீதியுள்ள நாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தீமையையே செய்கிறார்கள்;
யெகோவாவின் மாட்சிமையையும் அவர்கள் மதிப்பதில்லை.
யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது,
ஆயினும் அதை அவர்கள் காணாதிருக்கிறார்கள்.
உமது மக்களுக்காக நீர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் கண்டு
அவர்கள் வெட்கமடையட்டும்;
உமது பகைவருக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நெருப்பு
அவர்களைச் சுட்டெரிக்கட்டும்.
யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்;
நாங்கள் நிறைவேற்றியவற்றை நீரே எங்களுக்காக செய்திருக்கிறீர்.
யெகோவாவே, எங்கள் இறைவனே,
உம்மைத்தவிர வேறு ஆளுநர்களும் நம்மை ஆண்டிருக்கிறார்கள்;
ஆனால் உமது பெயரை மட்டுமே நாங்கள் கனப்படுத்துகிறோம்.
இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள்;
இனி அவர்கள் வாழ்வதில்லை, பிரிந்துபோன அந்த ஆவிகள் எழும்புவதில்லை.
நீர் அவர்களைத் தண்டித்து அழிவுக்கு உட்படுத்தினீர்;
அவர்களைப்பற்றிய நினைவையே அழித்துப்போட்டீர்.
நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்;
யெகோவாவே, நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்.
நீர் உமக்கென்று மகிமையை வென்றெடுத்திருக்கிறீர்;
நாட்டின் எல்லைகள் அனைத்தையும் நீர் விரிவாக்கியிருக்கிறீர்.
யெகோவாவே, அவர்கள் தமது துன்பத்தில் உம்மிடம் வந்தார்கள்;
நீர் அவர்களைச் சீர்ப்படுத்துவதற்காகத் தண்டித்தபோது,
அவர்கள் மன்றாடுவதற்குக்கூட பெலனற்று இருந்தார்கள்.
பிரசவிக்க இருக்கின்ற கர்ப்பவதி
தனது வேதனையில் துடித்து அழுவதுபோல,
யெகோவாவே, நாங்களும் உமது முன்னிலையில் வருந்தி நின்றோம்.
நாங்களும் கர்ப்பந்தரித்து வேதனையில் துடித்தோம்;
ஆனால் நாங்கள் காற்றையே பெற்றெடுத்தோம்.
பூமிக்கு இரட்சிப்பை நாங்கள் கொண்டுவரவில்லை,
நாங்கள் உலக மக்களைப் பெற்றெடுக்கவுமில்லை.
ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்;
அவர்களின் உடல்கள் உயிர்த்தெழும்பும்.
புழுதியில் வாழ்பவர்களே,
எழுந்து மகிழ்ந்து சத்தமிடுங்கள்.
உமது பனி காலைப் பனிபோல் இருக்கிறது;
பூமி தனது மரித்தோரைப் பெற்றெடுக்கும்.
என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய்,
கதவுகளை மூடுங்கள்.
அவருடைய கோபம் கடந்துபோகும்வரை,
சற்று நேரம் உங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.
இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு,
யெகோவா தனது உறைவிடத்தில் இருந்து வருகிறார்.
பூமி தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும்;
அது தன்மேல் கொலைசெய்யப்பட்டவர்களை இனிமேல் மறைக்கப் போவதில்லை.
இஸ்ரயேலின் மீட்பு
அந்த நாளிலே,
யெகோவா விரைந்தோடும் பாம்பை,
லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை
கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள
வாளினால் தண்டிப்பார்.
அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார்.
அந்த நாளிலே,
“பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்:
யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்;
இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.
ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி,
நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன்.
நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை.
அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால்,
நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்;
அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன்.
அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்;
என்னுடன் சமாதானம் செய்யட்டும்,
ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.”
வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி,
இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து,
முழு உலகத்தையும் பலனால் நிரப்பும்.
இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல,
இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ?
இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல்,
இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே!
அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்;
கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல்,
அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார்.
யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும்.
அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே:
அவர் பலிபீடக் கற்களை எல்லாம்
சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது,
அசேரா தேவதைத் தூண்களோ,
தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது.
அரணாக்கப்பட்ட பட்டணம்,
குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது;
அங்கே கன்றுகள் மேயும்,
அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்;
அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும்.
அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன;
பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்;
எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை,
அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை.
அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள். அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள்.
எப்பிராயீம் மற்றும் யூதாவின் தலைவர்களுக்கு எச்சரிக்கை
எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு!
அதன் மகிமையின் அழகான வாடும் மலருக்கு ஐயோ கேடு!
செழிப்பான பள்ளத்தாக்கின் முகப்பில் இருக்கின்ற பட்டணத்திற்கு ஐயோ கேடு!
மதுவால் வெறியுண்டு வீழ்ச்சியடைந்தவர்களின்
பெருமையாகிய அந்த பட்டணத்திற்கும் ஐயோ கேடு!
பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார்.
அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும்,
பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும்
அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான்.
எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையாகிய
அந்த மலர் மகுடம் காலின்கீழ் மிதிக்கப்படும்.
செழிப்பான பள்ளத்தாக்கின் மேலுள்ள,
அவளது மகிமையின் அழகாகிய அந்த வாடும் மலர்,
அறுவடை காலத்திற்கு முன் பழுக்கும் அத்திப்பழத்தைப் போலாகும்.
அதைக் காண்பவன் தன் கையில் கிடைத்ததும்
விழுங்கி விடுகிறான்.
அந்த நாளிலே, சேனைகளின் யெகோவா
தம் மக்களுள் மீதியாய் இருப்பவர்களுக்கு
ஒரு அழகிய மலர் மகுடமும்
மகிமையுள்ள ஒரு கிரீடமுமாய் இருப்பார்.
அவர் நியாயத்தீர்ப்பு வழங்க உட்காருபவனுக்கு
நீதியின் ஆவியாய் இருப்பார்;
பகைவரை வாசலிலேயே திருப்பி அனுப்புகிறவர்களுக்கு
பலத்தின் ஆதாரமாய் இருப்பார்.
ஆனால் இப்பொழுதோ இஸ்ரயேலின் தலைவர்கள்
திராட்சை இரசத்தினால் தடுமாறி,
மதுபோதையினால் தள்ளாடுகிறார்கள்.
ஆசாரியரும் இறைவாக்கு உரைப்போரும் மதுவெறியால் தடுமாறுகிறார்கள்.
திராட்சை இரசத்தால் மயங்கி, மதுவெறியினால் தள்ளாடுகிறார்கள்.
அவர்கள் தரிசனம் காணும்போது தடுமாறி,
தீர்மானம் எடுக்கும்போது இடறுகிறார்கள்.
மேஜைகள் யாவும் வாந்தியால் நிறைந்திருக்கின்றன.
அழுக்குப்படியாத இடமே அங்கு இல்லை.
“யாருக்கு அவர் போதிக்க முயற்சிக்கிறார்?
யாருக்கு அவர் செய்தியை விளங்கப்படுத்துகிறார்?
பால் மறந்த பிள்ளைகளுக்கோ?
அல்லது பால் குடிக்கையில் தாயின் மார்பின் அணைப்பிலிருந்து
எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கோ?
அவர் படிப்பிக்கும் விதமோ:
இதைச் செய், அதைச் செய்;
கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;
இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என இருக்கும் என்கிறார்கள்.
அப்படியானால், அந்நிய உதடுகளாலும் விளங்காத மொழியினாலும்
இறைவன் இந்த மக்களுடன் பேசுவார்.
அவர் அவர்களிடம்,
“இளைப்பாறும் இடம் இதுவே; களைப்புற்றோர் இளைப்பாறட்டும்.
ஓய்வு பெறுவதற்கான இடம் இதுவே” என்று சொல்லியிருந்தார்.
ஆனால் அவர்களோ அதைக் கேட்க மறுக்கிறார்கள்.
எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு,
“இதைச் செய், அதைச் செய்;
கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை;
இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும்.
ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து,
காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள்.
ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே!
நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்;
பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது
அது தாக்காது;
பொய் நமக்கு அடைக்கலமாயும்,
வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள்.
ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“இதோ, நான் சீயோனில் ஒரு கல்லை வைக்கிறேன்;
அது சோதித்துப் பார்க்கப்பட்ட கல்,
அது உறுதியான அஸ்திபாரத்துக்கான விலையேறப்பெற்ற மூலைக்கல்;
அதில் நம்பிக்கை வைக்கும் எவரும் ஒருபோதும் பதறமாட்டார்கள்.
நான் நீதியை அளவு நூலாக்குவேன்;
நியாயத்தைத் தூக்கு நூலாக்குவேன்.
உங்கள் பொய்யான அடைக்கலத்தை, கல்மழை அழிக்கும்;
வெள்ளம் உங்கள் மறைவிடத்திற்கு மேலாகப் பெருக்கெடுக்கும்.
மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்;
பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது.
தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது,
நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள்.
அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்;
அது காலைதோறும், இரவும் பகலும்
தண்டிப்பதற்காக வந்து வாரிக்கொண்டு போகும்.”
இச்செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்வது
உங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும்.
கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது;
மூடிக்கொள்ள போர்வையின் அகலமும் போதாது.
யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார்,
கிபியோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல் எழும்புவார்.
அவர் தமது வேலையை, எதிர்பாராத வேலையைச் செய்வதற்கும்,
தமது கடமையை, தாம் விரும்பாத கடமையை நிறைவேற்றுவதற்கும் எழும்புவார்.
உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள்,
இல்லையெனில் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் இன்னும் பாரமாகும்.
யெகோவா, சேனைகளின் யெகோவா முழு நாட்டுக்கும்
விரோதமாகத் திட்டமிட்டிருக்கும் அழிவை எனக்குச் சொல்லியிருக்கிறார்.
கேளுங்கள், என் குரலுக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
ஒரு விவசாயி பயிரிடுவதற்காக உழும்போது தொடர்ந்து உழுதுகொண்டே இருப்பானோ?
நிலத்தைத் தொடர்ந்து கொத்தி மண்ணைப் புரட்டிக் கொண்டேயிருப்பானோ?
நிலத்தை மட்டமாக்கியபின் வெந்தயத்தை விதைத்து,
சீரகத்தையும் தூவமாட்டானோ?
கோதுமையை அதற்குரிய இடத்திலும்,
வாற்கோதுமையை அதற்குரிய பாத்தியிலும்,
கம்பை அதற்குரிய வயலிலும் விதைக்கமாட்டானோ?
அவனுடைய இறைவன் அவனுக்கு போதித்து,
சரியான வழியை அவனுக்குக் கற்ப்பிக்கிறார் அல்லவோ?
வெந்தயம் சம்மட்டியால் அடிக்கப்படுவதுமில்லை,
சீரகம் வண்டிச் சில்லால் மிதிக்கப்படுவதுமில்லை.
வெந்தயம் கோலினாலும்,
சீரகம் தடியினாலுமே அடித்தெடுக்கப்படுகின்றன.
அப்பம் செய்வதற்குத் தானியம் அரைக்கப்படவேண்டும்;
அதற்காகத் தொடர்ந்து ஒருவன் அதை அரைத்துக்கொண்டே இருப்பதில்லை.
அவன் தனது சூடடிக்கும் வண்டிச் சில்லுகளை அதற்குமேல் செலுத்தியபோதிலும்,
அவனுடைய குதிரைகள் அதை அரைப்பதில்லை.
இந்த எல்லா அறிவும் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன;
அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,
ஞானத்தில் சிறந்தவர்.
எருசலேமுக்கு ஐயோ!
அரியேலே,29:1 அரியேலே என்றால் இறைவனின் பெண் சிங்கம் எனவும், இறைவனின் பீடம் எனவும் பொருள்படும். அரியேலே,
தாவீது குடியிருந்த பட்டணமே, ஐயோ, உனக்குக் கேடு!
வருடத்துடன் வருடத்தைக் கூட்டு,
உங்கள் பண்டிகைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கட்டும்.
ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்;
அது துக்கித்துப் புலம்பும்,
அது எனக்கு பலிபீடத்தின் அடுப்பைப் போலிருக்கும்.
நான் உனக்கு விரோதமாக உன்னைச் சுற்றி முகாமிடுவேன்;
நான் கோபுரங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்வேன்,
எனது முற்றுகை வேலைகளை உனக்கு விரோதமாய் அமைப்பேன்.
நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய்,
உனது பேச்சு புழுதியிலிருந்து முணுமுணுக்கும்.
உனது குரல் செத்தவனின் ஆவியைப்போல் பூமியிலிருந்து வரும்;
உனது பேச்சு புழுதியிலிருந்து தாழ் குரலாய் வரும்.
ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள்
திடீரென புழுதியைப்போல் ஆவார்கள்;
இரக்கமில்லாதவரின் கூட்டங்கள் பறக்கும் பதரைப்போல் ஆகும்.
சடுதியாய், ஒரு நொடிப்பொழுதில்,
இடி முழக்கத்துடனும் பூமியதிர்ச்சியுடனும், பெருஞ்சத்தத்துடனும்
சேனைகளின் யெகோவா அவர்களுக்கெதிராக வருவார்.
அவர் புயல்காற்றுடனும், சூறாவளியுடனும்,
எரிக்கும் நெருப்புச் சுவாலையுடனும் வருவார்.
அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும்
எல்லா நாடுகளின் கூட்டத்தாரும்
அதன் அரண்களையும் தாக்கி, முற்றுகையிடுகிறவர்கள் ஒரு கனவுபோலவும்,
இரவின் தரிசனம் போலவும் மறைந்துபோவார்கள்.
அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ,
பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும்
அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும்,
தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும்
அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும்,
சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.
திகைத்து வியப்படையுங்கள்!
நீங்களே உங்களைக் குருடர்களாக்கி பார்வையற்றவர்களாய் இருங்கள்.
வெறிகொள்ளுங்கள், ஆனால் திராட்சை இரசத்தினால் அல்ல;
தள்ளாடுங்கள், ஆனால் மதுவினால் அல்ல.
யெகோவா உங்கள்மேல் ஆழ்ந்த நித்திரையை வருவித்துள்ளார்:
அவர் உங்கள் இறைவாக்கினரினதும்
தரிசனம் காண்போரினதும் கண்களை மூடியிருக்கிறார்.
அவர்களுக்கோ இந்த தரிசனம் முழுவதும் முத்திரை இடப்பட்ட சுருளிலிருக்கும் வார்த்தைகளைப்போல் மட்டுமே இருக்கும். நீ அதை வாசிக்கக்கூடிய ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” எனச் சொன்னால் அவன், “எனக்கு வாசிக்க முடியாது. அது முத்திரையிடப்பட்டிருக்கிறது” என்பான். அல்லது அந்தச் சுருளை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” என்று சொன்னால், அவன், “எப்படி வாசிப்பது என எனக்குத் தெரியாது” என்பான்.
எனவே யெகோவா சொல்கிறார்:
“இந்த மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினால் என்னைக் கிட்டிச் சேருகிறார்கள்;
தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய இருதயங்களோ எனக்கு வெகுதூரமாய் இருக்கின்றன.
அவர்கள் எனக்குச் செய்யும் வழிபாடு
மனிதர்களால் போதிக்கப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றன.
ஆகையால், இன்னும் ஒருமுறை அதிசயங்கள்மேல் அதிசயங்களால்
இம்மக்களை வியப்படையச் செய்வேன்.
ஞானிகளுடைய ஞானம் அழிந்துபோகும்,
அறிவாளிகளின் அறிவு ஒழிந்துபோகும்.”
தங்களுடைய திட்டங்களை யெகோவாவிடமிருந்து மறைப்பதற்காக
மிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
இருண்ட இடங்களில் தமது செயல்களைச் செய்து, “நம்மைக் காண்பவன் யார்?
நம்மை அறிகிறவன் யார்?” என நினைக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!
நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி,
குயவனைக் களிமண்ணாக எண்ணுகிறீர்களே!
உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவனைப் பார்த்து,
“இவர் என்னை உண்டாக்கவில்லை” என்றும்
பாத்திரமானது குயவனைப் பார்த்து,
“இவருக்கு ஒன்றுமே தெரியாது” என்றும் கூறலாமோ?
இன்னும் சொற்ப காலத்தில் லெபனோன் ஒரு செழிப்பான வயலாக மாறாதோ?
செழிப்பான வயலும் வனமாகக் காணப்படாதோ?
அந்த நாளில் புத்தகச்சுருளிலுள்ள வார்த்தைகளைச் செவிடர் கேட்பார்கள்;
குருடரின் கண்கள் அந்தகாரத்திலும்,
இருட்டிலும் இருந்து அதைக் காணும்.
தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் ஒருமுறை யெகோவாவுக்குள் மகிழ்ச்சியடைவார்கள்;
எளியோர் இஸ்ரயேலரின் பரிசுத்தரில் களிகூருவார்கள்.
இரக்கமற்றோர் ஒழிந்துபோவார்கள்,
ஏளனம் செய்வோர் மறைந்துபோவார்கள்;
தீமையை நோக்கும் அனைவரும் இல்லாதொழிக்கப்படுவார்கள்.
இவர்கள் தங்கள் பேச்சினால் ஒருவனைக் குற்றவாளியாக்கி,
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறப் பண்ணுகிறார்கள்.
இவ்வாறு பொய்ச் சாட்சியத்தினால் குற்றமற்றவனுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்;
அதனாலேயே இல்லாதொழிக்கப்படுவார்கள்.
ஆகையால், ஆபிரகாமை மீட்ட யெகோவா, யாக்கோபின் குடும்பத்திற்கு சொல்வது இதுவே:
“இனிமேலும் யாக்கோபு வெட்கமடைவதில்லை;
அவர்களுடைய முகங்களும் வெளிறிப் போவதில்லை.
அவர்கள் எனது கரங்களின் வேலையாகிய,
தங்கள் பிள்ளைகளை தங்கள் மத்தியில் காணும்போது,
எனது பெயரைப் பரிசுத்தமாய் வைத்திருப்பார்கள்.
அவர்கள் யாக்கோபின் பரிசுத்தரின் பரிசுத்தத்தை உண்மையென்று ஒப்புக்கொண்டு,
இஸ்ரயேலின் இறைவனிடம் பயபக்தி உள்ளவர்களாய் இருப்பார்கள்.
சிந்தனையில் தவறு செய்கிறவர்கள் விளக்கம் பெறுவார்கள்;
முறையிடுகிறவர்களும் அறிவுறுத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.”
எகிப்துடன் பயனற்ற ஒப்பந்தம்
“பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.
என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து,
பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.
என்னிடம் அறிவுரை கேளாமல்
எகிப்திற்குப் போகிறார்கள்.
அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி,
எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.
ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்;
எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும்,
அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,
அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம்
ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள்.
அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை;
வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”
30:6
நெகேவ்
என்பது
இஸ்ரயேலின் தெற்கு பகுதி
நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு:
பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும்,
விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற,
துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள்.
அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும்,
திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு,
பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள்.
எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது.
ஆதலால் நான் எகிப்தை,
ஆற்றலிழந்த ராகாப் என்று அழைக்கிறேன்.
இப்பொழுது நீ போய், அவர்களுக்காக அதை ஒரு பலகையில் எழுதி,
ஒரு சுருளில் குறித்துவை;
எதிர்காலத்தில்
அது ஒரு நித்திய சாட்சியாய் இருக்கும்.
இவர்கள் கலகம் செய்யும் மக்கள், வஞ்சகம் நிறைந்த பிள்ளைகள்;
யெகோவாவின் வேதத்தைக் கேட்க விருப்பமற்ற பிள்ளைகள்.
இவர்கள் தரிசனம் காண்போரிடம்,
“இனி தரிசனம் காணாதீர்கள்!” என்கிறார்கள்.
இறைவாக்கு உரைப்போரிடம்,
“எங்களுக்கு இனிமேல் யதார்த்தமாய் தரிசனங்களைச் சொல்லவேண்டாம்!
இன்பமானவற்றை எங்களுக்குக் கூறி,
போலியானவற்றை இறைவாக்காய் உரையுங்கள்.
எங்கள் வழியை விட்டுவிடுங்கள்;
எங்கள் பாதையைவிட்டு விலகுங்கள்;
இஸ்ரயேலின் பரிசுத்தரைப் பற்றி எங்கள் முன்பாக பேசுவதை நிறுத்துங்கள்!”
என்றும் சொல்கிறார்கள்.
ஆகையால் இஸ்ரயேலின் பரிசுத்தர் சொல்வது இதுவே:
“நீங்கள் இந்தச் செய்தியை நிராகரித்தீர்கள்;
ஒடுக்குகிறதில் நம்பிக்கை வைத்து,
வஞ்சகத்தை சார்ந்திருக்கிறீர்கள்.
ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி,
திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல,
இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.
நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள்.
அடுப்பிலிருந்து நெருப்புத்தணல் எடுக்கவோ,
அல்லது தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்கவோ,
அந்தப் பாத்திரத்தின் ஒரு துண்டுகூட மீதியாய் இல்லாதிருப்பதுபோல,
நீங்களும் இரக்கமில்லாத முறையில் நொறுக்கப்பட்டுப் போவீர்கள்.”
இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:
“மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்;
அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும்,
ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.
நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள்.
ஆகையால் நீங்கள் தப்பி ஒடவே நேரிடும்.
‘வேகமான குதிரைகளில் ஏறிச்செல்வோம்’ என்றீர்கள்;
ஆகையால், உங்களைத் துரத்திப் பிடிப்பவர்களும் வேகமாகவே வருவார்கள்.
ஒருவனது பயமுறுத்தலுக்கு
ஆயிரம்பேர் பயந்து ஓடுவார்கள்;
ஐந்துபேர் பயமுறுத்த
நீங்கள் எல்லோரும் பயந்து ஓடுவீர்கள்.
மலை உச்சியில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போலவும்,
குன்றில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிபோலவும்
சிலர் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள்.”
அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்;
உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார்.
ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன்.
அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார். யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள். நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும். அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.
யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும். நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும். பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும். யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.
இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது;
அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது;
அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன,
அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.
கழுத்துவரை உயர்ந்து,
புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது.
அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்;
மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார்.
அது அவர்களை வழிதவறப்பண்ணும்.
இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல,
நீங்கள் பாடுவீர்கள்.
இஸ்ரயேலின் கற்பாறையாகிய
யெகோவாவின் மலைக்கு
மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல,
உங்கள் உள்ளமும் மகிழும்.
யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்;
அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார்.
அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும்,
இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.
யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்;
அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.
யெகோவா யுத்த களத்திலே,
தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது,
அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும்,
தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.
தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது;
அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது.
அதன் நெருப்புக்குழி ஆழமாகவும்,
அகலமாகவும் செய்யப்பட்டு,
அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன.
யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து
அதைப் பற்றியெரியச் செய்யும்.
எகிப்தை நம்பியிருப்போருக்கு ஐயோ!
உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!
அவர்கள் குதிரைகளை நம்பி,
தங்கள் திரளான தேர்களிலும்,
தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும்,
யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள்.
யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்;
அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை,
அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும்,
தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார்.
ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல;
அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல.
யெகோவா தமது கரத்தை நீட்டும்போது,
உதவிசெய்கிறவன் இடறுவான்.
உதவி பெறுவோனும் விழுவான்;
இருவரும் ஒன்றாய் அழிவார்கள்.
யெகோவா எனக்கு சொல்வது இதுவே:
“சிங்கமோ, இளஞ்சிங்கமோ,
தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது,
அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும்,
அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ,
இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது.
அதுபோலவே, சேனைகளின் யெகோவா,
சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும்
யுத்தம் செய்வதற்கு இறங்குவார்.
பறவைகள் தமது கூடுகளின் மேலே வட்டமிட்டுப் பறப்பதுபோல,
சேனைகளின் யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார்.
அவர் அதைப் பாதுகாத்து மீட்பார்,
அவர் அதற்கு மேலாகக் கடந்து அதை விடுவிப்பார்.”
இஸ்ரயேலரே, அவரை எதிர்த்து அதிகமாய் கலகம் செய்த நீங்கள் அவரிடம் திரும்புங்கள். ஏனென்றால், அந்த நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவக் கைகளினால் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் ஒதுக்கி எறிந்து விடுவீர்கள்.
“அசீரியா வீழ்ச்சியடைவது மனிதனின் வாளினால் அல்ல.
மனிதனால் ஆக்கப்படாத ஒரு வாள் அவர்களை விழுங்கும்;
வாளுக்கு முன்னால் அவர்கள் பயந்து ஓடுவார்கள்;
அவர்களின் வாலிபர் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்;
அவர்களின் தளபதிகள் போர்க் கொடிகளைக் கண்டதும் திகிலடைவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
சீயோனில் அவருடைய நெருப்பும்,
எருசலேமில் அவருடைய சூளையும் இருக்கிறது.
நீதியின் பேரரசு
இதோ, நீதியுள்ள ஒரு அரசர் வரப்போகிறார்.
அவரின்கீழ் ஆளுநர்கள் நீதியோடு ஆளுகை செய்வார்கள்.
ஒவ்வொரு மனிதனும் காற்றுக்கு ஒதுங்கும் ஒதுக்கிடம் போலவும்,
புயலுக்கு ஒதுங்கும் புகலிடம்போலவும்,
பாலைவனத்தில் நீரோடைகள் போலவும், தாகமுள்ள நிலத்துக்கு,
பெருங்கன்மலையின் நிழல் போலவும் இருப்பான்.
அப்பொழுது, பார்க்கிறவர்களின் கண்கள்
இனியொருபோதும் மூடப்பட்டிருக்க மாட்டாது;
கேட்கிறவர்களின் காதுகள் கவனித்துக் கேட்கும்.
அவசரக்காரரின் மனம், அறிவை விளங்கிக்கொள்ளும்;
திக்குகின்ற நாவு தங்கு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
மூடர் இனி உயர்குடி மக்கள் என அழைக்கப்படமாட்டார்கள்;
கயவரும் இனி கனப்படுத்தப்படமாட்டார்கள்.
ஏனெனில் மூடர் மூடத்தனமாகவே பேசுகிறார்கள்,
அவர்களின் மனம் தீமையில் தீவிரமாய் ஈடுபடுகிறது:
அவர்கள் இறை பக்தியற்றவர்களாய் நடந்து,
யெகோவாவைப் பற்றித் தவறானவற்றைப் பரப்புகிறார்கள்.
பசியுள்ளோரைப் பட்டினியாக விட்டு,
தாகமுள்ளோருக்குத் தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள்.
துரோகியின் செயல்முறைகள் கொடுமையானவை,
ஏழைகளின் முறையீடுகள் நியாயமாயிருந்தும்
வஞ்சக வார்த்தைகளால் எளியவர்களை அழிப்பதற்கு
தீய திட்டங்களைத் தீட்டுகிறான்.
ஆனால் உயர்குடி மக்கள் சிறப்பான திட்டங்களை வகுக்கிறார்கள்;
அவர்களுடைய சிறந்த செயல்களினால் நிலைத்தும் இருக்கிறார்கள்.
எருசலேமின் பெண்கள்
சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே,
நீங்கள் எழுந்து எனக்குச் செவிகொடுங்கள்.
கவலையற்ற மகள்களே,
நான் சொல்வதைக் கேளுங்கள்.
கவலையற்ற மகள்களே,
ஒரு வருடமும் சில நாட்களும் ஆனபின்பு நீங்கள் நடுங்குவீர்கள்.
திராட்சை அறுவடை பலனற்றுப் போகும்;
கனிகொடுக்கும் அறுப்புக் காலமும் வருவதில்லை.
பகட்டாக வாழும் பெண்களே, பயந்து நடுங்குங்கள்;
கவலையற்ற மகள்களே, கலங்குங்கள்;
உங்கள் உடைகளைக் களைந்து,
உங்கள் இடைகளில் துக்கவுடைகளை உடுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் செழிப்பான வயல்களுக்காகவும்,
கனி நிறைந்த திராட்சைக் கொடிகளுக்காகவும் உங்கள் மார்பில் அடித்துக் கொள்ளுங்கள்.
முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்து நிறைந்த
எனது மக்களின் நாட்டிற்காகவும்,
மகிழ்ந்து களிகூர்ந்த வீடுகளுக்காகவும்,
கொண்டாட்டமுடைய நகரத்திற்காகவும் புலம்புங்கள்.
கோட்டை கைவிடப்படும்,
இரைச்சல்மிக்க நகரம் வெறுமையாய் விடப்படும்.
அரண்செய்யப்பட்ட நகரமும் காவற்கோபுரமும் என்றென்றும் குகைகளாகும்;
அங்கே காட்டுக் கழுதைகள் மகிழ்ச்சியடையும், மந்தைகள் மேயும்.
உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும்,
பாலைவனம் செழிப்பான வயலாகும்வரையும்,
செழிப்பான வயல்கள் வனம்போல் காணப்படும்வரையும் இப்படியே இருக்கும்.
அப்பொழுது நீதி பாலைவனத்தில் குடியிருக்கும்;
நியாயம் செழிப்பான வளமான வயல்களில் வாழும்.
நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்;
நீதியின் விளைவு என்றென்றைக்கும் அமைதியும் மன நம்பிக்கையுமாயிருக்கும்.
என் மக்கள் சமாதானம் நிறைந்த குடியிருப்புகளிலும்,
பாதுகாப்பான வீடுகளிலும்,
தொல்லையில்லாத இளைப்பாறுதலின் இடங்களில் வாழ்வார்கள்.
கல்மழை வனத்தைக் கீழே வீழ்த்தினாலும்,
பட்டணம் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டாலும்,
நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து,
சுதந்திரமாய் உங்கள் மந்தைகளையும் கழுதைகளையும் மேய்வதற்கு விடுகிற
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அசீரியாவைப் பற்றிய செய்தி
அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே,
ஐயோ உனக்குக் கேடு!
காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே,
ஐயோ உனக்குக் கேடு!
நீ அழிப்பதை நிறுத்தும்போது,
நீ அழிக்கப்படுவாய்;
நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது,
நீ காட்டிக்கொடுக்கப்படுவாய்.
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்;
நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம்.
காலைதோறும் எங்கள் பெலனாயும்,
துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.
உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்;
நீர் எழும்பும்போது நாடுகள் சிதறுண்டு போகிறார்கள்.
நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல,
உங்கள் கொள்ளைப்பொருள் அழிக்கப்படுகிறது;
வெட்டுக்கிளிக் கூட்டம்போல மனிதர் அவைகளின்மேல் பாய்கிறார்கள்.
யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்,
ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார்.
அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார்.
அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்;
அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார்.
யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல்.
இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்;
சமாதானத் தூதுவர்கள் மனங்கசந்து அழுகிறார்கள்.
பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன;
தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை.
உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது,
அதன் சாட்சிகள்33:8 சாட்சிகள் அல்லது பட்டணங்கள் எனப்படும் அவமதிக்கப்பட்டார்கள்,
மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை.
நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது,
லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது.
சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது,
பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
“இப்பொழுது நான் எழும்புவேன்,
இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன்.
இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து,
வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்;
உங்களது சுவாசம் உங்களைச் சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கும்.
மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்;
அவர்கள் வெட்டப்பட்ட முட்செடிகள்போல் நெருப்புச் சுவாலையில் எரிக்கப்படுவார்கள்.”
தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்;
அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்!
சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்;
இறைவனை மறுதலிக்கிறவர்களை நடுக்கம் பற்றிக்கொள்கிறது:
“சுட்டெரிக்கும் நெருப்புடன் நம்மில் எவர் வாழமுடியும்?
நித்தியமாய் எரியும் நெருப்புடன் நம்மில் எவர் குடியிருக்க முடியும்?”
நீதியுடன் நடப்பவரும்,
சரியானதைப் பேசுபவரும்,
தட்டிப் பறித்த இலாபத்தை வெறுப்பவரும்,
இலஞ்சம் வாங்க தன் கைகளை நீட்டாதவரும்,
கொலைசெய்வதற்கான சதித்திட்டங்களைக் கேட்காமல் தன் காதை அடைத்துக்கொள்பவரும்,
தீயவற்றைப் பாராமல் தன் கண்களை மூடுகிறவரும்,
அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்;
கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும்.
அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும்,
அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும்.
உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்;
வெகுதூரத்தில் விசாலமாகப் பரந்திருக்கும் நாட்டையும் காணும்.
நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து:
“அந்த பிரதான அதிகாரி எங்கே?
வருமானத்தை எடுத்தவன் எங்கே?
கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள்.
விளங்காத பேச்சும்,
புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியும் உள்ள
அந்த கொடூரமான மக்களை நீங்கள் இனி காணமாட்டீர்கள்.
நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்;
உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும்,
அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும்.
அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது,
அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது.
யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார்.
அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும்.
துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ,
பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை.
யெகோவாவே நமது நீதிபதி,
யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர்.
யெகோவாவே நமது அரசர்;
நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே.
உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன,
பாய்மரங்கள் இறுக்கமாகக் கட்டப்படவில்லை,
பாய்களும் விரிக்கப்படவில்லை.
அப்பொழுது ஏராளமான கொள்ளைப்பொருட்கள் பங்கிடப்படும்;
முடவர்கள்கூட கொள்ளைப்பொருட்களைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்;
அங்கு வாழ்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு
நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்;
மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள்.
பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும்,
உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.
யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்;
அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது.
அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்;
அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.
அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள்,
இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்;
மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும்.
வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்;
ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும்.
வானசேனை அனைத்தும்
திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும்,
சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.
எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது;
இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை
நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது.
யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது,
அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது.
அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும்,
செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது.
ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும்,
ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.
காளைக் கன்றுகளும்,
பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும்.
அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும்,
புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.
ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்;
சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார்.
ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும்,
நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும்,
அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும்.
அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்;
அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும்.
தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும்,
மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.
பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும்
அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்;
பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும்.
இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும்,
அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.
உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது;
இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள்.
அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்;
காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும்.
அது நரிகளுக்குத் தங்குமிடமும்
ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.
பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்;
காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும்.
இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி
தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும்.
ஆந்தைகள் அங்கே கூடுகட்டி,
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து,
அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்;
வல்லூறுகளும் தத்தம் துணையுடன்
அங்கே வந்துசேரும்.
யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்:
இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது,
ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது;
யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது,
அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.
அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்;
அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன.
அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி,
தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.
மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி
பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும்.
வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும்.
அது லீலி பூப்பதுபோல் பூக்கும். அது வளமாய் வளர்ந்து
மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும்.
லெபனோனின் மகிமையும்,
கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும்.
யெகோவாவின் மகிமையையும்,
நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள்.
தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள்,
தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள்.
இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு,
“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்;
இதோ, உங்கள் இறைவன்
உங்கள் பகைவரை பழிதீர்க்கவும்,
பதிலளிக்கவும் வருவார்,
அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள்.
அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும்,
செவிடரின் காதுகளும் திறக்கப்படும்.
முடவன் மானைப்போல் துள்ளுவான்,
ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்;
வனாந்திரத்திலிருந்து தண்ணீரும்,
பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும்.
சுடுமணல் நீர்த் தடாகமாகும்,
வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும்.
நரிகள் தங்கும் இடங்களில்
புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும்.
அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும்,
அது பரிசுத்த வழி எனப்படும்.
அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள்.
இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும்.
கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள்.
அங்கு சிங்கம் இருப்பதில்லை;
எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை,
அங்கே காணப்படுவதுமில்லை.
மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.
அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;
நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.
மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள்,
துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.
எருசலேம் அச்சுறுத்தப்படுதல்
எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான். பின் அசீரிய அரசன் ரப்சாக்கே என்னும் தனது படைத்தளபதியை பெரிய இராணுவத்துடன் லாகீசிலிருந்து, எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். படைத்தளபதி, வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றான். அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவனிடத்திற்குப் போனார்கள்.
படைத்தளபதி ரப்சாக்கே அவர்களிடம்,
“நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே, நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்? உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்? இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான். அல்லது நீ என்னிடத்தில், “எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்பாயாகில், “இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா?
“ ‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்? மேலும் யெகோவா இல்லாமலா நான் இந்த நாட்டைத் தாக்கவும், அழிக்கவும் வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’ ” என்றான்.
பின்பு எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில் பேசவேண்டாம்” என்றார்கள்.
ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான்.
பின்பு தளபதி எழுந்து நின்று, எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள். அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது! எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம்.
“எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானம்பண்ணி என்னிடம் வாருங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான். நான் வந்து உங்களை, உங்களது நாட்டைப்போல தானியமும், புதுத் திராட்சை இரசமும், அப்பமும், திராட்சைத் தோட்டங்களும் நிறைந்த நாட்டிற்குக் கூட்டிச்செல்லும்வரை இவ்வாறு செய்வீர்கள்.
“எசேக்கியா, ‘யெகோவா எங்களை மீட்பார்’ என்று கூறி உங்களைத் தவறான வழியில் நடத்த விடாதீர்கள். எந்த நாட்டின் தெய்வமாவது, எப்பொழுதாவது அவர்கள் நாட்டை அசீரிய அரசனின் கையிலிருந்து மீட்டதுண்டோ? ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயிமின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ? இந்த நாடுகளின் தெய்வங்கள் எல்லாவற்றிலும், எந்தத் தெய்வத்தினால் எனது கரத்திலிருந்து தனது நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்?” என்றான்.
ஆனால் மக்களோ விடை ஒன்றும் கூறாமல், மவுனமாய் இருந்தார்கள். ஏனெனில், “அவனுக்குப் பதில் கூறவேண்டாம்” என அரசன் கட்டளையிட்டிருந்தான்.
பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள்.
மீட்பு முன்னறிவிக்கப்படுதல்
எசேக்கியா அரசன் இதைக் கேட்டபோது, தனது உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்றான். அரண்மனை நிர்வாகி எலியாக்கீமையும் செயலாளராகிய செப்னாவையும், மற்றும் பிரதான ஆசாரியர்களையும், துக்கவுடை உடுத்திக்கொண்டு ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவிடம் போகும்படி அனுப்பினான். அவர்கள் ஏசாயாவிடம், “எசேக்கியா கூறுவது இதுவே: இந்நாள் துயரமும், கண்டனமும், அவமானமும் உள்ள நாள். பிரசவநேரம் நெருங்கியும், பிள்ளை பெற பெலனற்று தவிப்பதுபோன்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உயிருள்ள இறைவனை நிந்திக்கும்படி, அசீரிய அரசன் அனுப்பிய படைத்தளபதி ரப்சாக்கேயின் வார்த்தைகளை, உமது இறைவனாகிய யெகோவா கேட்டிருக்கக்கூடும். அதனால் உமது இறைவனாகிய யெகோவா, தான் கேட்ட வார்த்தைகளுக்காக அவனைத் தண்டிக்கவும் கூடும். ஆகவே நீர் இன்னும் மீதமிருக்கும் மக்களுக்காக வேண்டுதல் செய்யும்” என்றார்கள்.
எசேக்கியா அரசனின் அதிகாரிகள் ஏசாயாவிடம் வந்தபோது, ஏசாயா அவர்களிடம், “உங்கள் அரசனிடம் போய், ‘அசீரிய அரசனின் வேலைக்காரர் என்னைத் தூஷித்துப் பேசிய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கேட்டவுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகக்கூடிய ஒரு ஆவியை நான் அவனுக்குள் அனுப்புவேன். அவனுடைய சொந்த நாட்டிலேயே அவனை நான் வாளால் வீழ்த்துவேன்’ என்று யெகோவா கூறுகிறார்” என்றான்.
அசீரிய அரசன் லாகீசிலிருந்து வெளியேறி விட்டான் என்று அந்தப் படைத்தளபதி ரப்சாக்கே கேள்விப்பட்டான். உடனே அவன் அங்கிருந்துபோய், அசீரிய அரசன் லிப்னாவுக்கு விரோதமாய் யுத்தம் செய்வதைக் கண்டான்.
அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். அதைக் கேட்டவுடன் யுத்தத்திற்கு அவனை சந்திக்கப் போகுமுன்பு பின்வரும் செய்தியுடன் தூதுவரை எருசலேமுக்கு எசேக்கியாவிடம் அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? எனது முற்பிதாக்கள் அழித்த கோசான், ஆரான், ரேசேப் ஆகிய நாடுகளையும், தெலாசாரில் வசிக்கும் ஏதேன் மக்களையும் அவர்களின் தெய்வங்கள் காப்பாற்றினவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.”
எசேக்கியாவின் மன்றாடல்
எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான். எசேக்கியா யெகோவாவிடம் மன்றாடி, “சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களுக்கிடையில் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் இறைவனே, பூமியின் அரசுகள் எல்லாவற்றின்மேலும் நீர் ஒருவரே இறைவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் நீரே. யெகோவாவே, உம்முடைய செவியைச் சாய்த்துக்கேளும். யெகோவாவே, உம்முடைய கண்களைத் திறந்து பாரும். உயிரோடிருக்கும் இறைவனை நிந்திப்பதற்கு சனகெரிப் அனுப்பியுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் கேளும்.
“யெகோவாவே, அசீரிய அரசர்கள் அந்த மக்கள் கூட்டங்களையும், அவர்களுடைய நிலங்களையும் பாழாக்கியிருப்பது உண்மைதான். அவர்கள் அவர்களுடைய தெய்வங்களையுங்கூட நெருப்பில்போட்டு அழித்துவிட்டார்கள். ஏனெனில் அவை மனிதரின் கைகளினால் வடிவமைக்கப்பட்ட மரமும், கல்லுமேயல்லாமல் தெய்வங்களல்ல. இப்போதும் எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் மட்டுமே இறைவனாகிய யெகோவா என்று பூமியிலுள்ள எல்லா அரசுகளும் அறியும்படி அவனுடைய கையிலிருந்து எங்களை விடுவியும்” என்று மன்றாடினான்.
சனகெரிப்பின் வீழ்ச்சி
அதன்பின் ஆமோஸின் மகன் ஏசாயா, எசேக்கியாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: அசீரிய அரசன் சனகெரிப்பைக் குறித்து நீ என்னிடம் விண்ணப்பம் பண்ணினாயே, ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே:
“சீயோனின் கன்னிப்பெண்
உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள்.
எருசலேமின் மகள் நீ பயந்து ஓடுவதைப் பார்த்து,
உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள்.
நீ யாரை நிந்தித்துத் தூஷித்தாய்?
யாருக்கு விரோதமாய் சத்தமாய்ப் பேசி,
அகங்காரக் கண்களினால் நோக்கினாய்?
இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா?
உனது தூதுவர்கள் மூலம்
நீ ஆண்டவரை நிந்தித்து,
‘நான் அநேக தேர்களுடன்
மலைகளின் உச்சிகளுக்கும்
லெபனோனின் சிகரங்களுக்கும் ஏறினேன்.
அங்குள்ள மிக உயர்ந்த கேதுரு மரங்களையும்
மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும்
வெட்டி வீழ்த்தினேன்.
அதன் உயர்ந்த கடைசி எல்லைக்கும்,
அதன் அடர்த்தியான காட்டுப் பகுதிக்கும் போனேன்.
நான் கிணறு வெட்டித்
தண்ணீர் குடித்தேன்.
என் உள்ளங்கால்களினால்
எகிப்தின் நீரோடைகள் எல்லாவற்றையும் வற்றப்பண்ணினேன்’ என்றும் சொன்னாய்.
“வெகுகாலத்துக்கு முன்னமே நான் அதைத் திட்டமிட்டேன் என்பதை
நீ கேள்விப்படவில்லையா?
பூர்வ நாட்களில் நான் அதைத் திட்டமிட்டேன்;
இப்பொழுது அவற்றை நடைபெறச் செய்திருக்கிறேன்.
அதனால் நீ அரணான பட்டணங்கள் எல்லாவற்றையும்
கற்குவியலாக மாற்றினாய்.
அவர்களின் மக்கள் பெலனற்று,
சோர்வுற்று வெட்கப்பட நேரிட்டது.
அவர்கள் வயல்களிலுள்ள செடிகளைப்போலவும்,
இளம் முளைகளைப் போலவும்,
வளருமுன் வெப்பத்தில் பொசுங்கிப்போகும்
கூரைமேல் முளைக்கும் புல்லைப்போலவும் ஆனார்கள்.
“ஆனால் நீ எங்கே தங்கியிருக்கிறாய்,
எப்போது வருகிறாய், போகிறாய் என்பதும்,
நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.
நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டு,
எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது.
ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும்,
என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு,
நீ வந்த வழியாய்
உன்னைத் திரும்பச்செய்வேன்.
“எசேக்கியாவே, இதுவே உனக்கு அடையாளமாய் இருக்கும்:
“இந்த வருடம் தானாக விளைகிறதை நீங்கள் சாப்பிடுவீர்கள்;
இரண்டாம் வருடத்தில் அதன் விதையிலிருந்து முளைப்பதைச் சாப்பிடுவீர்கள்.
ஆனால் மூன்றாம் வருடத்தில் நீங்களாக விதைத்து, அறுத்து,
திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.
யூதாவின் வம்சத்தில் தப்பி மீதியாயிருப்பவர்கள்
மீண்டும் கீழே வேரூன்றி மேலே கனி கொடுப்பார்கள்.
ஏனெனில் எருசலேமிலிருந்து மீதியானவர்களும்,
சீயோன் மலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டத்தாரும் வருவார்கள்.
சேனைகளின் யெகோவாவின் வைராக்கியமே
இதை நிறைவேற்றும்.
“ஆகையால், அசீரிய அரசனைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே:
“அவன் இந்தப் பட்டணத்திற்குள் செல்வதில்லை,
இதின்மேல் அம்பை எய்வதுமில்லை.
அவன் தனது கேடகத்தைப் பிடித்துக்கொண்டு அதற்குமுன் வருவதுமில்லை,
அல்லது அதற்கு விரோதமாக முற்றுகைத்தளம் அமைப்பதுமில்லை.
அவன் வந்த வழியாகவே திரும்புவான்;
இந்தப் பட்டணத்துக்குள் பிரவேசிக்கமாட்டான்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
என் நிமித்தமும், என் அடியவன் தாவீதின் நிமித்தமும்
நான் இந்தப் பட்டணத்தைப் பாதுகாத்துக் காப்பாற்றுவேன்.”
அதன்பின்பு யெகோவாவின் தூதன் வெளியே போய் அசீரியாவின் முகாமிலிருந்த இலட்சத்து எண்பத்தையாயிரம்பேரைக் கொன்றான். மக்கள் அதிகாலையில் எழும்பிப் பார்த்தபோது, வீரர்கள் எல்லோரும் அங்கே பிணமாகக் கிடக்கக் கண்டார்கள். எனவே அசீரிய அரசனான சனகெரிப், முகாமை அகற்றி, அங்கிருந்து நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
ஒரு நாள், அவன் தனது தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் வணங்கும்போது, அவனுடைய மகன்களான அத்ரமேலேக்கும், சரெத்செரும் அவனை வாளினால் கொலைசெய்துவிட்டு, அரராத் நாட்டிற்குத் தப்பியோடினார்கள். அவனுடைய மகன் எசரத்தோன் அவனுக்குப்பின் அரசனானான்.
எசேக்கியாவின் வியாதி
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான்.
எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான்.
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது. “நீ எசேக்கியாவிடம் போய் சொல்லவேண்டியதாவது: ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, நான் உனது வேண்டுதலைக் கேட்டேன்; உன் கண்ணீரையும் கண்டேன். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்.
“ ‘யெகோவா தான் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா உனக்குத் தரும் அடையாளம் இதுவே: ஆகாஸின் நேரம்பார்க்கும் படிவரிசையில் சூரியனின் நிழலைப் பத்துப்படி பின்னடையச் செய்வேன்’ என்றார்.” அப்படியே சூரிய ஒளியும் பத்துப்படி பின்னடைந்தது.
யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்:
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில்
மரண வாசலுக்குப் போகவேண்டுமோ?
எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?”
“வாழ்வோரின் நாட்டில்
நான் மீண்டும் யெகோவாவை காண்பதில்லை.
மனிதகுலத்தை இனியொருபோதும் பார்ப்பதில்லை,
அல்லது இவ்வுலகில் வாழ்வோருடன் இருப்பதில்லை.
மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு38:12 வீடு அல்லது வாழ்க்கை
என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது.
நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன்,
அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்;
காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.
நான் விடியும்வரை பொறுமையாய்க் காத்திருந்தேன்;
ஆனால் என் எலும்புகளையெல்லாம் சிங்கத்தைப்போல் நொறுக்கி விட்டார்;
காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.
நான் சிட்டுக்குருவியைப் போலவும் நாரைப் போலவும் கூவினேன்,
துயரப்படும் புறாவைப்போல் விம்முகிறேன்.
உதவிவேண்டி நான் வானங்களை நோக்கியபோது, என் கண்கள் பெலவீனமாயின.
யெகோவாவே, நான் ஒடுக்கப்படுகிறேன், எனக்கு உதவிசெய்ய வாரும்” என்று சொன்னேன்.
ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்?
அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார்.
என் ஆத்தும துயரத்தின் நிமித்தம்
நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன்.
யெகோவாவே, மனிதர் இவைகளாலேயே வாழ்கிறார்கள்;
எனது ஆவியும் இவற்றிலே வாழ்வைக் காண்கிறது.
நீரே என்னை சுகப்படுத்தி
வாழச் செய்தீர்.
நிச்சயமாக, என் நன்மைக்காகவே
இப்படியான வேதனையை நான் அனுபவித்தேன்.
உமது அன்பினால்தான்
நான் அழிவின் குழிக்குள் போகாதபடி நீர் என்னை வைத்திருக்கிறீர்.
என் பாவங்களையெல்லாம்
உமது முதுகிற்குப் பின்னாலே போட்டுவிட்டீர்.
பாதாளம் உம்மைத் துதிக்காது,
மரணம் உமக்குத் துதிபாடாது;
குழியில் இறங்குவோர்
உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது.
இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல,
வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு
உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.
யெகோவா என்னை இரட்சிப்பார்;
நாம் நம் வாழ்நாள் எல்லாம்
யெகோவாவினுடைய ஆலயத்தில்
இசைக்கருவிகளுடன் துதிபாடுவோம்.
ஏற்கெனவே ஏசாயா நோயுற்றிருந்த எசேக்கியாவுக்கு, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்து, அதைக் கட்டியின்மீது பற்றுப்போடுங்கள்; அப்பொழுது அவர் சுகமடைவார்” என சொல்லியிருந்தான்.
அப்பொழுது எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான்.
பாபிலோனிலிருந்து தூதுவர்
அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் மெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதியாயிருந்து குணமடைந்தான் என்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான். எசேக்கியா அந்தத் தூதுவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களிலுள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை.
அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா, எசேக்கியா அரசனிடம் போய், “அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “தூர நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்” என்றான்.
இறைவாக்கினன் அவனிடம், “உனது அரண்மனையில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “எனது அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எனது பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமேயில்லை” எனப் பதிலளித்தான்.
அதற்கு ஏசாயா, எசேக்கியாவிடம், “சேனைகளின் யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள்: உனது அரண்மனையில் உள்ள ஒவ்வொன்றும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்து வைத்த யாவும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும் காலம் நிச்சயமாக வரும். அவைகளில் ஒன்றாகிலும் மீந்திருக்காது என்று யெகோவா கூறுகிறார். மேலும் உனது சொந்த மாம்சமும் இரத்தமுமாக உனக்குப் பிறக்கப்போகும் உனது சந்ததிகள் சிலரும் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனிய அரசனின் அரண்மனையில் அண்ணகர்கள் ஆக்கப்படுவார்கள்” என்றான்.
அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஏனெனில், “எனது வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமே” என அவன் எண்ணினான்.
இறைவனின் மக்களுக்கு ஆறுதல்
என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்,
என உங்கள் இறைவன் சொல்கிறார்.
எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள்,
அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது;
அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது;
அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும்
இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து
அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
ஒருவரின் குரல் கூப்பிடுகிறது:
“பாலைவனத்தில் யெகோவாவுக்கு
வழியை ஆயத்தப்படுத்துங்கள்;
வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு
பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும்,
ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்,
மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும்,
கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்;
மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும்.
யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல்.
அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன்.
“எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள்,
அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது,
பூக்களும் உதிர்கின்றன;
நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.
புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன,
ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,
நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு.
எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,
நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு.
பயப்படாதே, குரலை எழுப்பு;
“இதோ உங்கள் இறைவன்!”
என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.
இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்;
அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும்.
அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது,
அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்:
அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி,
மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்;
அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து,
வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்?
பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்?
அல்லது மலைகளை நிறைகோலாலும்,
குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்?
யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு,
அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்?
யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்?
சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்?
அவருக்கு அறிவைக் போதித்து,
விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?
உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும்
தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன;
அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்;
அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.
லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது.
அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது.
எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர்.
அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும்,
பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்?
விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான்,
கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி,
அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான்.
அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ,
உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான்.
அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி
திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.
நீங்கள் அறியவில்லையோ?
நீங்கள் கேள்விப்படவில்லையோ?
ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ?
பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ?
அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார்,
அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.
அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து,
அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார்.
அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்;
உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார்.
அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே,
அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே,
அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத,
அவர்கள் வாடிப்போகிறார்கள்.
சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.
“நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார்.
கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்:
இவைகளையெல்லாம் படைத்தவர் யார்?
நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து,
அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே.
அவருடைய மிக வல்லமையாலும்,
மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.
“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது;
இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்”
என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்?
இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்?
நீங்கள் அறியவில்லையோ?
நீங்கள் கேள்விப்படவில்லையோ?
யெகோவாவே நித்திய இறைவன்,
பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே.
அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை.
அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.
அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்;
பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.
இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள்,
வாலிபர் இடறி விழுவார்கள்.
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்
தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;
அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;
அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
இஸ்ரயேலரின் துணைவர்
“தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்!
நாடுகள் தமது பெலனைப் புதுப்பிக்கட்டும்!
அவர்கள் முன்வந்து பேசட்டும்;
நாம் எல்லோரும் நியாயந்தீர்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம்.
“கிழக்கிலிருந்து ஒருவனை எழுப்பி,
நேர்மையுடன் தனக்குப் பணிசெய்ய அவனை அழைத்தவர் யார்?41:2 பெர்சியாவின் அரசன் கோரேசு [45:1].
அவர் நாடுகளை அவனிடம் ஒப்படைத்து,
அரசர்களை அவன் முன்னே அடக்குகிறார்.
அவனோ அவர்களைத் தன் வாளினால் தூசியாக்கி,
தன் வில்லினால் காற்றில் பறக்கும் பதராக்குகிறான்.
அவன் தனக்குத் தீங்கு நேராமல்,
தான் முன்னர் போகாத வழியாக அவர்களைத் துரத்திச் செல்கிறான்.
இதைச் செய்தது யார்? ஆதியிலிருந்து தலைமுறைகளை அழைத்து,
இதை நிறைவேற்றியது யார்?
முந்தினவராய் இருப்பவர் யெகோவாவாகிய நானே,
பிந்தினவராய் இருப்பதும் நானே.”
தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன;
பூமியின் எல்லைகள் நடுங்குகின்றன.
அவர்கள் நெருங்கி முன்னேறி வந்து,
ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து,
“திடன்கொள்!” என்று தம் அடுத்தவருக்கு சொல்கிறார்கள்.
கைவினைஞன் கொல்லனை ஊக்குவிக்கிறான்,
சுத்தியலால் தட்டி மிருதுவாக்குகிறவன்
பட்டறையில் இரும்பை வைத்து அடிப்பவனை உற்சாகப்படுத்தி,
“அது நன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லி,
அது அசையாதபடி ஆணிகளால் அடித்து இறுக்குகிறான்.
“ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே,
நான் தெரிந்தெடுத்த யாக்கோபே,
என் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,
நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து,
அதன் தொலைதூரத்திலிருந்து உன்னை அழைத்தேன்.
நான், ‘நீ என் ஊழியக்காரன்’;
நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் புறக்கணிக்கவில்லை என்றேன்.
ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;
கலங்காதே, நானே உன் இறைவன்.
நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்கு உதவி செய்வேன்;
எனது நீதியின் வலது கரத்தால் நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன்.
“கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும்
நிச்சயமாக வெட்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்படுவார்கள்.
உன்னை எதிர்ப்பவர்கள் இருந்த இடம்
தெரியாமலேயே அழிந்துபோவார்கள்.
உனது பகைவரைத் தேடினாலும்
நீ காணமாட்டாய்,
உன்னை எதிர்த்துப் போரிடும் யாவரும்
இருந்த இடம் தெரியாமலே போய்விடுவார்கள்.
ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன்.
நானே உனது வலதுகையைப் பிடித்து,
பயப்படாதே,
உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர்.
பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே,
இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே,
நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று,
உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார்.
“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன்,
அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி.
நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்;
நீ குன்றுகளைப் பதராக்குவாய்.
நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய்,
புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும்.
ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து,
இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய்.
“ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்;
ஆனால் அங்கு ஒன்றுமிராது.
அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும்.
ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்;
இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.
நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும்,
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன்.
பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும்,
வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன்.
நான் பாலைவனத்திலே கேதுருக்களையும்,
சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன்.
பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும்,
புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன்.
யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது,
இஸ்ரயேலின் பரிசுத்தரே இவற்றை உண்டாக்கினார் என்று,
மக்கள் பார்த்து அறிந்துகொள்ளவும்,
சிந்தித்து விளங்கிக்கொள்ளவுமே இப்படிச் செய்வேன்.
“உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்”
என்று யெகோவா சொல்லுகிறார்.
“உங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறுங்கள்”
என்று யாக்கோபின் அரசர் சொல்கிறார்.
“உங்களுடைய விக்கிரகங்களைக் கொண்டுவாருங்கள்,
இனி நடக்கப் போகிறதை அவை தெரிவிக்கட்டும்.
முன்பு நடந்தவற்றை அவை எங்களுக்குச் சொல்லட்டும்,
அப்பொழுது நாம் அவைகளைச் சிந்தித்து,
அவைகளின் முடிவுகளை அறிவோம்,
அல்லது இனி நடக்கப்போவதை அவை தெரிவிக்கட்டும்.
நீங்கள்தான் தெய்வங்கள் என்று நாம் அறியும்படி,
இனி நடக்கப்போவதை எங்களுக்குத் தெரிவியுங்கள்;
நல்லதோ, கெட்டதோ எதையேனும் செய்யுங்கள்.
அப்பொழுது நாங்கள் கலங்கி, பயத்தால் நிரப்பப்படுவோம்.
ஆனால் நீங்களோ, வெறுமையிலும் வெறுமையானவர்கள்.
உங்கள் செயல்களெல்லாம் முற்றிலும் பயனற்றவை,
உங்களைத் தெரிந்தெடுப்பவன் அருவருப்பானவன்.
“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான்.
அவன் சூரிய உதயத்தில் இருந்து என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுகிறான்.
அவன் ஆளுநர்களை சுண்ணாம்புக் கலவையைப்போல் மிதிக்கிறான்;
குயவன் களிமண்ணை மிதித்துத் துவைப்பதுபோல் அவர்களை மிதிக்கிறான்.
இதை நாம் அறியும்படியாக ஆதியில் சொன்னது யார்?
அல்லது, ‘அவர் சொன்னது சரி’ என்று நாம் சொல்லும்படியாக இதை முன்பே கூறியது யார்?
இதைக்குறித்து ஒருவருமே சொல்லவில்லை;
ஒருவருமே முன்னறிவிக்கவுமில்லை,
உங்களிடமிருந்து ஒரு வார்த்தையையும் கேட்டவர்களும் இல்லை.
‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று
நானே சீயோனிடம் முதன் முதலாகச் சொன்னேன்.
நானே நற்செய்தியின் தூதுவனை எருசலேமுக்குக் கொடுத்தேன்.
தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை.
ஆலோசனை கூற அவர்களில் ஒருவரும் இல்லை,
நான் கேட்கும்போது எனக்கு விடையளிக்கவும் ஒருவரும் இல்லை.
இதோ, இவர்கள் எல்லோருமே மாயை!
அவர்களின் செயல்கள் வீணானவை;
அவர்களின் உருவச்சிலைகள் காற்றும் வெறுமையுமே.
யெகோவாவின் ஊழியர்
“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர்,
என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்;
இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன்,
அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார்.
அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார்.
அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார்.
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,
மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்;
அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார்.
பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை
தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார்.
தீவுகள்42:4 பண்டைய உலகில் மக்கள் தொலைவில் இருந்த நாடுகளை தீவுகள் என்று அழைப்பார்கள். அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது:
அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார்,
அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார்.
அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார்.
அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே:
“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து,
நான் உனது கையைப் பிடித்து,
நான் உன்னைக் காத்து,
நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும்,
பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன்.
குருடரின் கண்களைத் திறக்கவும்,
சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும்,
இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.
“நான் யெகோவா; இதுவே எனது பெயர்!
எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்;
எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன்.
இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன,
இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன்.
அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
யெகோவாவுக்குத் துதிப்பாடல்
கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே,
தீவுகளே, அங்கு வாழும் குடிகளே,
யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள்.
பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்;
கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும்.
சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்;
அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும்.
அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும்,
அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும்.
யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று,
போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார்.
அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி,
பகைவரை வெற்றிகொள்வார்.
“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன்,
நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன்.
ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது,
மூச்சுத் திணறுகிறேன்.
நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன்,
அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன்.
ஆறுகளைத் தீவுகளாக மாற்றி,
குளங்களையும் வற்றப்பண்ணுவேன்.
நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி,
அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்;
நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி,
கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன்.
நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே;
நான் அவர்களை நான் கைவிடமாட்டேன்.
ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து,
உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள்
பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள்.
குருடும் செவிடுமான இஸ்ரயேல்
“செவிடரே, கேளுங்கள்;
குருடரே, கவனித்துப் பாருங்கள்!
எனது ஊழியனைவிடக் குருடன் யார்?
நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்?
எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்?
யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்?
நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.”
யெகோவா தன் நீதியின் நிமித்தம்
தனது சட்டத்தைச் சிறப்பாகவும்,
மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்;
அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும்,
சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி
கொள்ளைப் பொருளாகி,
“அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி
அவர்கள் சூறையாவார்கள்.
உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்?
எவன் வருங்காலத்தை கவனித்துக் கேட்பான்?
யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்?
இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்?
யெகோவா அல்லவா இதைச் செய்தார்,
நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே.
ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை,
அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை.
ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும்,
போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார்.
அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும்,
அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அது அவர்களைச் சுட்டெரித்தது,
ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை.
இஸ்ரயேலின் ஒரே மீட்பர்
இப்போது யெகோவா சொல்வது இதுவே:
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்,
இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது,
“பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்;
நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.
நீ தண்ணீரைக் கடக்கும்போது,
நான் உன்னுடன் இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும்போது,
அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது;
நீ நெருப்பில் நடக்கும்போதும்
எரிந்து போகமாட்டாய்.
நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.
ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா,
இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்;
நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும்,
உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன்.
நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்;
நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால்,
உனக்குப் பதிலாக மனிதரையும்,
உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன்.
பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்;
நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன்,
மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன்.
நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும்,
தெற்கைப் பார்த்து, ‘அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளாதே’ என்றும் சொல்வேன்.
எனது மகன்களைத் தூரத்திலிருந்தும்,
எனது மகள்களைப் பூமியின் கடைசிகளிலிருந்தும் கொண்டுவாருங்கள்.
என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள்.
இவர்களை நானே என் மகிமைக்காகப் படைத்தேன்.
இவர்களை நானே உருவாக்கி உண்டாக்கினேன்.”
கண்களிருந்தும் குருடராயும்,
காதுகளிருந்தும் செவிடராயும் இருப்போரை வெளியே கொண்டுவாருங்கள்.
எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள்,
சகல மக்களும் சபையாய் கூடுகிறார்கள்;
அவர்களுடைய தேவர்களில் இதை முன்னறிவித்தவர் யார்?
இந்த பூர்வகாரியங்களை தெரிவித்தவர் யார்?
அவர்கள் தாங்கள் சரியென நிரூபிப்பதற்குத் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரட்டும்;
அப்பொழுது மற்றவர்கள் அதைக்கேட்டு, “அது உண்மை” என்று சொல்லட்டும்.
“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள்.
அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து,
நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள்.
எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை,
எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை.
நான், நானே யெகோவா,
என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.
நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்;
உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல.
நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர்.
எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது.
நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?”
இறைவனின் இரக்கம்
உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய
யெகோவா கூறுவது இதுவே:
“உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி,
பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்;
அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன்.
நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்;
இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.”
கடலிலே ஒரு வழியையும்,
பெரு வெள்ளத்திலே
ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே;
தேர்களையும் குதிரைகளையும்,
இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும்,
அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து,
திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:
“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்;
கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்.
இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்!
அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா?
நான் பாலைவனத்தில் பாதையையும்,
பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.
நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு
பாலைவனத்தில் தண்ணீரையும்,
பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன்.
அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும்
என்னை கனம்பண்ணும்.
இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி,
எனக்காக நானே உருவாக்கினேன்.
“அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
இஸ்ரயேலே, நீ எனக்காகப் பணிசெய்து களைக்கவுமில்லை.
நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை;
உங்கள் பலிகளால் என்னைக் கனம்பண்ணவும் இல்லை.
நானோ எனக்குத் தானிய காணிக்கைகளைக் கொடுக்கும்படி
உங்களைக் கஷ்டப்படுத்தவும் இல்லை;
தூபங்காட்டும்படி நான் உங்களை வற்புறுத்தி சலிப்படையச் செய்யவுமில்லை.
நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை;
உங்கள் பலிகளின் கொழுப்புகளை எனக்குத் தாராளமாய் தரவுமில்லை.
ஆனால், உங்கள் பாவங்களினால் என்னைப் பாரமடையச் செய்திருக்கிறீர்கள்;
உங்கள் குற்றங்களினால் என்னைச் சலிப்படையச் செய்திருக்கிறீர்கள்.
“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்;
நான் உங்கள் பாவங்களை இனியொருபோதும் நினைவில் வைப்பதில்லை,
இதை நான் எனக்காகவே செய்கிறேன்.
கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள்,
நாம் இந்த காரியத்தைப்பற்றி ஒன்றுகூடி வாதாடுவோம்;
நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்களைச் சொல்லுங்கள்.
உங்கள்43:27 அல்லது யாக்கோபு; [உபா. 26:5]; [ஓசி. 12:2-4]. ஆதிமுற்பிதா பாவம் செய்தான்;
உங்களுக்காகப் பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.
ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்;
யாக்கோபை அழிவுக்கும்,
இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல்
“ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலே, கேள்.
யெகோவா சொல்வது இதுவே:
உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும்,
உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது:
என் அடியவனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட யெஷூரனே44:2 யெஷூரனே என்பது இஸ்ரயேல் எனப்படும்., பயப்படாதே.
நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்;
வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன்.
உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும்,
உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும்,
நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள்.
ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்;
வேறொருவன், தன்னை யாக்கோபின் பெயரால் அழைத்துக்கொள்வான்;
இன்னொருவன், தன் கையில், ‘கர்த்தருடையவன்’ என்று எழுதி,
இஸ்ரயேல் என்று பெயரிட்டுக்கொள்வான்.
யெகோவாவே, விக்கிரகங்கள் அல்ல
“யெகோவா சொல்வது இதுவே:
இஸ்ரயேலின் அரசரும், மீட்பருமாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது,
ஆரம்பமும் நானே, முடிவும் நானே;
என்னையன்றி வேறு இறைவன் இல்லை
என்னைப்போல் யாரும் உண்டோ?
அப்படியிருந்தால் அவன் அதைப் பிரசித்தம்பண்ணட்டும்.
அதை அறிவித்து எனக்குமுன் சொல்லட்டும்,
முற்காலத்திலிருந்த என் மக்களை நான் நிலைநிறுத்திய காலத்திலிருந்து
நடந்தவற்றையும் இனி என்ன நடக்கப்போகிறதையும் சொல்லட்டும்.
ஆம், நிகழப்போவதை அவன் முன்னறிவிக்கட்டும்.
நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள்.
இதை நான் வெகுகாலத்துக்கு முன்பே பிரசித்தப்படுத்தி, அறிவிக்கவில்லையா?
நீங்கள் எனது சாட்சிகள். என்னைத்தவிர வேறு இறைவன் உண்டோ?
இல்லை, வேறு கன்மலையும் இல்லை; அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”
விக்கிரங்களை உருவாக்குகிறவர்கள் எல்லோரும் வீணர்;
அவர்கள் அருமையாகக் கருதுபவை பயனற்றவை.
அவைகளுக்காகப் பேசுபவர்களும் குருடர்;
அவர்கள் தங்களை வெட்கமாக்கிக்கொள்ளும் அறிவீனர்.
தனக்கு ஒருவித பயனையும் தராத தெய்வத்தின் சிலைகளைச் செதுக்கி,
ஒரு விக்கிரகத்தை வார்ப்பிப்பவன் யார்?
அவனும் அவனைப் போன்றவர்களும் வெட்கம் அடைவார்கள்;
அதைச் செய்யும் கைவினைஞர் மனிதரே.
அவர்கள் எல்லோரும் கூடிவந்து என்முன் நிற்கட்டும்;
அவர்கள் எல்லோரும் பயங்கரத்திற்கும், அவமானத்துக்கும் உள்ளாவார்கள்.
கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து,
கரி நெருப்பிலிட்டு உருக்கி,
சுத்தியலால் அடித்து விக்கிரகத்தை வடிவமைக்கிறான்;
தன் கையின் பெலத்தினால் அதற்கு உருவத்தைக் கொடுக்கிறான்.
பட்டினியினால் அவன் தன் பெலனை இழக்கிறான்,
தண்ணீரைக் குடிக்காமல் சோர்ந்துபோவான்.
தச்சன் கோலினால் மரத்தை அளந்து,
வெண்கட்டியால் குறியிடுகிறான்.
அவன் அதை உளிகளினால் உருப்படுத்தி,
கவராயத்தால் குறிக்கிறான்.
அவன் மனிதனின் எல்லாச் சிறப்பையும்
அதற்குக் கொடுத்து அதை மனித உருவில் வடிவமைக்கிறான்;
அது ஒரு கோவிலில் இருக்கும்படியே இப்படிச் செய்கிறான்.
அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான்,
தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான்.
அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்;
அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது.
அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது;
அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான்,
ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான்.
ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்;
அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான்.
மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்;
அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான்,
தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான்.
அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது!
அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான்.
எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்;
அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான்.
அதை வணங்கி,
“நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான்.
அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை;
பார்க்க முடியாதபடி அவைகளின் கண்கள் மூடப்பட்டிருக்கின்றன;
விளங்கிக்கொள்ளாதபடி அவைகளின் இருதயமும் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
“இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்;
அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன்.
அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால்
நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா?
ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?”
என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை.
அதற்கான அறிவோ,
விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.
அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம்
அவனைத் தவறான வழியில் நடத்துகிறது.
அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது,
“எனது வலதுகையில் இருக்கிற இந்த விக்கிரகம் பொய்”
என்று சொல்லாமலும் இருக்கிறான்.
“யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்;
ஏனெனில் இஸ்ரயேலே, நீ என் அடியவன்.
நான் உன்னைப் படைத்தேன், நீ என் அடியவன்;
இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன்.
நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும்
உன் பாவங்களை காலை நேரத்து மூடுபனியைப் போலவும் அகற்றியிருக்கிறேன்.
நீ என்னிடம் திரும்பி வா,
ஏனெனில் நான் உன்னை மீட்டிருக்கிறேன்.”
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார்.
கீழிருக்கும் பூமியே, உரத்த சத்தமிடு.
மலைகளே, காடுகளே, மரங்களே,
குதூகலித்துப் பாடுங்கள்.
ஏனெனில், யெகோவா யாக்கோபை மீட்டு,
இஸ்ரயேலில் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.
எருசலேம் குடியிருக்க வேண்டும்
“உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான,
யெகோவா சொல்வது இதுவே:
“நானே யெகோவா,
நான் எல்லாவற்றையும் படைத்தேன்,
நான் தனியாகவே வானங்களை விரித்து,
பூமியையும் பரப்பினேன்.
நானே கட்டுக்கதை சொல்பவர்கள் கூறும் அடையாளங்களை நிறைவேறாமல் செய்து,
குறிசொல்வோரை மூடர்களாக்கி,
ஞானிகளின் அறிவை வீழ்த்தி,
அவைகளை மூடத்தனமாக்குபவரும் நானே.
நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்;
எனது தூதுவர்களின் ஆலோசனைகளை நிறைவேற்றுகிறேன்.
“எருசலேமைப்பற்றி,
‘அது குடியிருப்பாக்கப்படும்’ என்றும்
யூதாவின் பட்டணங்களைப் பற்றி,
‘அவை கட்டப்படும்’ என்றும்,
அவர்களின் பாழிடங்களைப்பற்றி,
‘நான் மீண்டும் அவைகளைக் கட்டுவேன்,’ என்றும் கூறுகிறேன்,
நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ,
உனது நீரூற்றுகளை நான் வற்றப்பண்ணுவேன்’ என்று சொல்கிறேன்.
நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்;
எனது விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றுவான்,
அவன் எருசலேமைப்பற்றி, “அது திரும்பவும் கட்டப்படட்டும்” என்றும்,
ஆலயத்தைப்பற்றி, “அதன் அஸ்திபாரங்கள் போடப்படட்டும்” என்றும் சொல்லுவான்’
என்று சொல்கிறேன்.”
“அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது,
அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும்,
அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும்,
அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும்
நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு,
அவனுக்குச் சொல்வதாவது:
நான் உனக்கு முன்சென்று,
மலைகளைத் தரைமட்டமாக்குவேன்;
நான் வெண்கலக் கதவுகளை உடைத்து,
இரும்புத் தாழ்ப்பாள்களையும் தகர்ப்பேன்.
நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,
மறைவிடங்களில் சேகரிக்கப்பட்ட புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;
அப்பொழுது உன்னைப் பெயர்சொல்லி அழைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா நானே
என்பதை நீ அறிந்துகொள்வாய்.
என் அடியவன் யாக்கோபின் நிமித்தமும்,
நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலின் நிமித்தமும்
நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து,
நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும்,
நான் உனக்குப் பெயரையும் புகழையும் வழங்கினேன்.
நானே யெகோவா, வேறு எவருமில்லை;
என்னைத்தவிர இறைவனும் இல்லை.
நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும்,
நான் உன்னைப் பெலப்படுத்துவேன்.
அப்பொழுது சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து,
அது மறையுமிடம் வரையுமுள்ள மனிதர் எல்லோரும்,
எனக்கிணையானவர் யாரும் இல்லை என்பதை அறிந்துகொள்வார்கள்.
நானே யெகோவா, வேறு யாரும் இல்லை.
ஒளியையும் இருளையும் படைக்கிறவர் நானே,
சமாதானத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறவரும் நானே;
நான் யெகோவா, நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.
“மேலேயுள்ள வானங்களே, நீதியைப் பொழியுங்கள்;
மேகங்கள் அதைப் பொழியட்டும்.
பூமி அகலமாய்த் திறந்து,
இரட்சிப்பின் கனியைத் தந்து,
நீதி அதனுடன் துளிர்க்கட்டும்;
யெகோவாவாகிய நானே அதைப் படைத்தேன்.
“தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு!
அவன் அவருக்கு முன்பாகத் தரையில் கிடக்கும் மண்ணோடுகளில் ஒரு ஓடுதானே.
களிமண் குயவனைப் பார்த்து, ‘நீ என்னத்தை உருவாக்குகிறாய்?’
எனக் கேட்கலாமோ?
நீ செய்யும் பொருள் உன்னிடம்,
‘உனக்குக் கைத்திறன் இல்லை’
என்று சொல்லலாமோ?
தன் தகப்பனிடம், ‘நீ ஏன் என்னைப் பிறப்பித்தாய்?’ என்றும்,
தன் தாயிடம்,
‘நீ ஏன் என்னைப் பெற்றெடுத்தாய்?’
என்றும் கேட்பவனுக்கு ஐயோ, கேடு!
“இஸ்ரயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமாகிய
யெகோவா சொல்வது இதுவே;
இனி நடக்கப்போவதைக் குறித்து,
எனது பிள்ளைகளைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?
எனது கைகளின் வேலையைப்பற்றி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?
நானே பூமியை உருவாக்கி,
அதன்மேல் மனுமக்களையும் படைத்தேன்.
எனது சொந்தக் கரங்களே வானங்களை விரித்தன;
நட்சத்திர சேனைகளையும் நானே அதினதின் இடத்தில் நிலைநிறுத்தினேன்.
நான் எனது நியாயத்தின்படி கோரேசை எழுப்புவேன்;
அவனுடைய வழிகளையெல்லாம் நேராக்குவேன்.
அவன் திரும்பவும் என் நகரத்தைக் கட்டுவான்,
நாடுகடத்தப்பட்ட எனது மக்களை விலையோ,
வெகுமானமோ பெறாமல் விடுதலையாக்குவான்”
என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது:
“எகிப்தின் உற்பத்திப் பொருட்களும்,
எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்;
இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து,
உன்னுடையவர்கள் ஆவார்கள்.
அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு,
உன் பின்னால் வருவார்கள்.
அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி,
‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்;
அவரைத்தவிர வேறு எவருமில்லை.
வேறெந்த தெய்வமும் இல்லை’
என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”
இஸ்ரயேலின் இரட்சகரும் இறைவனுமானவரே,
உண்மையாகவே உம்மை நீர் மறைத்துக்கொள்கிற இறைவன்.
விக்கிரகங்களை உருவாக்கும் அனைவரும்
வெட்கமடைந்து அவமானத்திற்கு உள்ளாவார்கள்;
அவர்கள் அனைவரும் ஒன்றாய் கலங்கிப் போவார்கள்.
ஆனாலும் யெகோவாவினால்
இஸ்ரயேல் நித்திய இரட்சிப்புடன் பாதுகாக்கப்படும்.
நீங்கள் நித்திய காலங்களுக்கு வெட்கப்படாமலும்,
அவமானத்திற்கு உட்படாமலும் இருப்பீர்கள்.
யெகோவா கூறுவதாவது:
அவர் வானங்களை உருவாக்கினார்,
அவரே இறைவன்;
அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்;
அவரே அதை அமைத்தார்.
அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை,
குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார்.
அவர் கூறுவதாவது:
“நானே யெகோவா,
என்னையன்றி வேறொருவருமில்லை.
இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து
நான் இரகசியமாய்ப் பேசவில்லை,
‘வீணாக என்னைத் தேடுங்கள்’
என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை;
நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்;
சரியானதையே நான் அறிவிக்கிறேன்.
“ஒன்றுசேர்ந்து வாருங்கள்;
பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளே, ஒன்றுகூடுங்கள்.
மரச்சிலைகளைச் சுமந்து செல்வோரும்,
இரட்சிக்க முடியாத தெய்வங்களிடம் மன்றாடுகிறவர்களும் அறிவீனர்.
நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்;
ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள்.
வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்?
ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்?
அது யெகோவாவாகிய நான் அல்லவோ!
என்னையன்றி வேறே இறைவன் இல்லை.
நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்;
என்னையன்றி வேறொருவரில்லை.
“பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே,
நீங்கள் எல்லோரும் என்னிடமாகத் திரும்பி இரட்சிப்படையுங்கள்.
ஏனெனில், நானே இறைவன், வேறு ஒருவரும் இல்லை.
என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன்,
இதை உத்தமத்தோடு எனது வாய் பேசியிருக்கிறது.
அந்த வார்த்தை ஒருபோதும் மாறாது:
ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்;
ஒவ்வொரு நாவும் என் பெயரிலேயே ஆணையிடும்.
‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’
என்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வார்கள்.”
அவருக்கு எதிராக எழுந்த அனைவரும்
அவரிடம் வந்து வெட்கத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும்
யெகோவாவிடம் நீதியானவர்களாகக் காணப்பட்டு
மேன்மையடைவார்கள்.
பாபிலோனின் தெய்வங்கள்
பேல்46:1 பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன். தெய்வம் தலை கவிழ்கிறது;
நேபோ தெய்வம் குப்புற விழுகிறது.
அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன;
ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள்
இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.
அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன.
அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி
தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.
“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே,
நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்;
நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன்,
நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.
நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும்,
உங்களைத் தாங்கப்போகிறவர் நானே.
உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன்.
நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன்.
“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்?
என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்?
சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி,
தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்;
அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்;
பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.
அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள்.
அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள்.
அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது.
ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை;
ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.
“கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள்.
இதை மனதில் பதித்து வையுங்கள்.
முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்;
நானே இறைவன், வேறொருவர் இல்லை;
நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை.
நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர்,
முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர்.
‘என் நோக்கம் நிலைநிற்கும்;
நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.
நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன்.
தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன்.
நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்;
நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.
பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே!
எனக்குச் செவிகொடுங்கள்.
நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன்,
அது வெகுதூரத்தில் இல்லை;
எனது இரட்சிப்பு தாமதம் அடையாது.
நான் சீயோனுக்கு இரட்சிப்பையும்,
இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.
பாபிலோனின் வீழ்ச்சி
“பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள்.
கல்தேயரின் மகளே,
அரியணை அற்றவளாய்
தரையில் உட்கார்ந்துகொள்.
நீ இனி மிருதுவானவள் என்றோ மென்மையானவள்
என்றோ அழைக்கப்படுவதில்லை.
திரிகைக் கற்களை எடுத்து மாவரை;
உனது முக்காட்டை எடுத்துவிடு.
உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி,
நீரோடைகளைக் கடந்துபோ.
உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்;
உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும்.
நான் பழிவாங்குவேன்;
நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.”
இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்;
சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர்.
“பாபிலோனியர்களின் மகளே,
இருளுக்குள் போய் மவுனமாய் அமர்ந்திரு;
நீ இனி ஒருபோதும்
அரசுகளுக்கு அரசி என அழைக்கப்படமாட்டாய்.
நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு
எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை
தூய்மைக்கேடு அடையச் செய்தேன்.
அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்;
நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை,
முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய்.
‘தொடர்ந்து நான் என்றென்றும்
அரசியாக நிலைத்திருப்பேன்!’ என்று நீ சொன்னாய்.
ஆனால் நீ இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கவுமில்லை;
என்ன நடக்குமென நீ எண்ணிப்பார்க்கவுமில்லை.
“இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே,
நீ பாதுகாப்பாக சொகுசாக இருந்து,
‘நானே பெரும் அரசி, எனக்கு நிகர் யாரும் இல்லை.
நான் விதவையாகவோ,
அல்லது பிள்ளைகளை இழந்து துன்பப்படுகிறவளாகவோ ஆகமாட்டேன்’
என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய்.
இவை இரண்டும் ஒரே நாளில்,
ஒரே நேரத்தில் உன்னை மேற்கொள்ளும்:
நீ பிள்ளைகளை இழந்து, விதவையாவாய்.
உனக்கு எண்ணற்ற மந்திர வித்தைகள் தெரிந்தும்,
வசீகர சக்திகள் இருந்தும்
அவை முழுமையாக உன்மேல் வரும்.
நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து,
‘ஒருவரும் என்னைக் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கிறாய்.
நீ உன் உள்ளத்தில்
‘நான்தான், எனக்கு நிகர் யாருமே இல்லை’ என்று சொல்லும்போது,
உன் ஞானமும் உன் அறிவும் உன்னைத் தவறான வழியில் நடத்துகின்றன.
பேராபத்து உன்மேல் வரும்,
அதை மந்திர வித்தையால் எப்படி அகற்றுவது என நீ அறியமாட்டாய்;
உன்மேல் பெரும் துன்பம் வரும்,
எதை ஈடாகக் கொடுத்தும் அதை உன்னால் தவிர்த்துக் கொள்ளமுடியாது.
நீ முன்னதாகவே அறிந்துகொள்ள முடியாத
ஒரு பேரழிவு உன்மேல் திடீரென வரும்.
“நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு,
பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு;
இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய்.
அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம்,
ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம்.
நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது;
உன்னுடைய சோதிடர்களும்
நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி,
உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்.
உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்;
நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
நெருப்புச் சுவாலையிலிருந்து
தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது.
அது குளிர்காயக்கூடிய தணலாகவோ,
அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது.
உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த,
மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே
உனக்குச் செய்யமுடியும்.
அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்;
உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை.
பிடிவாதமுள்ள இஸ்ரயேல்
“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள்.
இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே,
யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே,
யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்;
நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்;
ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.
நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி,
இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்;
சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.
முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்;
எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன்.
பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும்,
உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும்,
உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.
ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்;
அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன்.
ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன;
எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’
என்று நீ சொல்லமுடியாது.
இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி.
இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ?
“இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன்,
இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.
அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன;
நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.
ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’
என்று உன்னால் சொல்லமுடியாது.
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை;
முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை.
நீ எவ்வளவு துரோகி,
பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.
நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்;
எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்;
நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.
இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல;
உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன்.
என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன்.
என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்?
என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
இஸ்ரயேலுக்கு சுதந்திரம்
“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே,
எனக்குச் செவிகொடு,
நானே அவர்;
ஆரம்பமும் முடிவும் நானே.
என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது;
என் வலதுகரம் வானங்களை விரித்தது;
நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது,
அவை ஒன்றாய் எழுந்து நிற்கும்.
“நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்:
உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது?
யெகோவாவுக்குப் பிரியமானவன்
அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்;
அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும்.
நான், நானே பேசினேன்;
மெய்யாகவே நான் அவனை அழைத்தேன்.
நான் அவனைக் கொண்டுவருவேன்,
அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான்.
“நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்:
“முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை;
அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.”
இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது
ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே,
இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது:
“உங்கள் இறைவனாகிய யெகோவா நானே,
மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா?
நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா?
என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால்,
உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்;
உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும்.
உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்;
உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்;
அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும்,
அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”
பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்,
பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்!
ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப்
பிரசித்தப்படுத்துங்கள்!
யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி,
அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்;
அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை;
அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார்.
அவர் பாறையைப் பிளந்தார்,
தண்ணீர் பொங்கி வழிந்தது.
“கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.
யெகோவாவின் ஊழியன்
தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்;
தூரத்திலுள்ள நாடுகளே, நீங்கள் இதைக் கேளுங்கள்:
நான் கர்ப்பத்திலிருந்தபோதே யெகோவா என்னை அழைத்தார்;
என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார்.
அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார்,
தமது கரத்தின் நிழலிலே என்னை மறைத்தார்;
என்னைக் கூர்மையான அம்பாக்கி,
தமது அம்பாறத் துணியில் மறைத்து வைத்தார்.
“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன்,
எனது சிறப்பை உன்னிலே வெளிப்படுத்துவேன்” என்று அவர் என்னிடம் சொன்னார்.
ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்;
எனது பெலனை பயனற்றவற்றிற்கும் வீணானவற்றிற்கும் செலவழிக்கிறேன்.
அப்படியிருந்தும், எனக்குரியது யெகோவாவின் கையிலே இருக்கிறது;
என்னுடைய வெகுமதியும் எனது இறைவனிடமே இருக்கிறது” என்றேன்.
இப்பொழுது யெகோவா சொல்வதாவது:
யாக்கோபைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவரும்படியாகவும்,
இஸ்ரயேலர்களைத் தன்னிடம் கூட்டிச் சேர்க்கும்படியாகவும்
அவருடைய பணியாளனாய் இருக்கும்படி என்னைக் கருப்பையில் உருவாக்கியவர் அவரே.
யெகோவாவினுடைய பார்வையில் நான் கனம் பெற்றேன்;
என் இறைவனே என் பெலனாயிருக்கிறார்.
அவர் சொல்வதாவது:
“யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும்,
இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும்,
நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே.
ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்;
எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம்
என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார்.
இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே:
அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு,
ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது,
“அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள்,
பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்;
யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும்,
இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும்
அவர்கள் இப்படிச் செய்வார்கள்.”
இஸ்ரயேல் புதுப்பிக்கப்படுதல்
யெகோவா சொல்வது இதுவே:
“என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்,
இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்;
நான் உங்களைப் பாதுகாத்து,
மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன்.
நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும்,
பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும்,
சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து,
‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும்,
இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’
என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன்.
“வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்;
வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள்.
அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை;
பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது.
அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி,
அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார்.
எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்;
எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும்.
இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்,
சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும்,
சிலர் சீனீம்49:12 சீனீம் அல்லது அஸ்வான் பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.”
வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்;
பூமியே, சந்தோஷப்படு;
மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்!
யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார்,
துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார்.
ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்;
யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது.
“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ?
கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ?
அப்படி அவள் மறந்தாலுங்கூட,
நான் உன்னை மறப்பதில்லை.
இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்;
உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன.
உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள்49:17 விரைந்து திரும்புவார்கள் அல்லது திரும்பக் கட்டுகிறவர்கள்,
உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள்.
உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்;
உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்.
நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே,
நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்;
மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய்,
உனது நாடு பாழாய் விடப்பட்டது.
ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள்
வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய்.
உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள்.
உன் இழப்பில் துயருற்ற நாட்களில்
உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து,
‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது;
நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’
என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள்.
அப்பொழுது நீ உனது உள்ளத்தில்
‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்?
நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்;
நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன்.
யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்?
இதோ நான் தனித்தவளாயிருந்தேனே!
ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.”
ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன்,
மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன்.
அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்;
மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள்.
அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்;
அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள்.
அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்;
அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள்.
அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்;
என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார்.
போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ?
வெற்றி வீரனிடமிருந்து கைதிகளைக் காப்பாற்ற முடியுமோ?
ஆனால், யெகோவா சொல்வது இதுவே:
“ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்;
வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும்.
உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன்.
உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன்.
உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்;
திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல்,
அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள்.
அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்;
யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை
மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”
இஸ்ரயேலின் பாவம்
யெகோவா சொல்வது இதுவே:
“உங்கள் தாயை நான் விவாகரத்துச் செய்து அனுப்பியபோது,
அவளுக்குக் கொடுத்த விவாகரத்துச் சீட்டு எங்கே?
அல்லது எனக்குக் கடன் கொடுத்தவர்களில் யாருக்காவது நான் உங்களை விற்றேனா?
உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள் விற்கப்பட்டீர்கள்.
உங்கள் மீறுதல்களின் காரணமாகவே
உங்களுடைய தாயும் துரத்திவிடப்பட்டாள்.
நான் வந்தபோது ஒருவரும் இருக்கவில்லையே;
அது ஏன்? நான் கூப்பிட்டபோது, ஒருவரும் பதில் கூறவில்லையே; அது ஏன்?
உங்களை மீட்க முடியாதபடி என் கை மிகக் குறுகியதாயிருந்ததோ?
அல்லது உங்களை விடுவிக்க எனக்கு வலிமையில்லையோ?
நான் சிறு அதட்டலினால் கடலை வற்றப்பண்ணுகிறேன்;
நான் ஆறுகளைப் பாலைவனமாக மாற்றுகிறேன்.
தண்ணீர் இல்லாததால், அவர்களுடைய மீன்கள் நாறுகின்றன;
தாகத்தால் அவை சாகின்றன.
நான் ஆகாயத்தை இருளால் உடுத்தி,
துக்கவுடையை அதன் போர்வையாக்குகிறேன்.”
இளைத்துப்போனவனை உற்சாகப்படுத்தும்படி, என்ன வார்த்தையை சொல்ல
நான் அறிந்திட ஆண்டவராகிய யெகோவா போதிக்கும் நாவை எனக்குக் கொடுத்திருக்கிறார்;
காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார்,
ஒரு சீடனைப்போல் நான் கவனமாய் கேட்கும்படி
அவர் எனது செவிப் புலனைத் தட்டி எழுப்புகிறார்.
ஆண்டவராகிய யெகோவா எனது செவியைத் திறந்திருக்கிறார்;
நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை,
அவரைவிட்டு நான் விலகவுமில்லை.
என்னை அடிக்கிறவர்களுக்கு எனது முதுகைக் கொடுத்தேன்,
எனது தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என்னுடைய தாடைகளைக் கொடுத்தேன்;
அவர்கள் ஏளனம் செய்தபோதும்,
உமிழ்நீரைத் துப்பியபோதும் அதற்கு என் முகத்தை நான் மறைக்கவில்லை.
யெகோவாவாகிய ஆண்டவர் எனக்கு உதவி செய்கிறபடியால்,
நான் அவமானம் அடையமாட்டேன்.
ஆகையால் என் முகத்தைக் கற்பாறையைப்போல் வைத்துக்கொள்கிறேன்;
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
எனக்கு நீதி அளிக்கும் இறைவன் என் அருகில் இருக்கிறார்.
அப்படியிருக்க, எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவருபவன் யார்?
நேருக்குநேர் சந்திப்போம்!
என்னைக் குற்றம் சாட்டுபவன் யார்?
அவன் எனக்கு முன்னே வரட்டும்.
ஆண்டவராகிய யெகோவாவே எனக்கு உதவி செய்கிறார்.
என்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவர்கள் யார்?
அவர்கள் எல்லோரும் பொலிவிழந்து
பூச்சிகள் அரித்த உடையைப்போல் இத்துப்போவார்கள்.
உங்களுக்குள் யெகோவாவுக்குப் பயந்து நடந்து,
அவரது பணியாளனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறவன் யார்?
வெளிச்சம் இல்லாதவனாய்
இருளில் நடக்கிறவன்,
யெகோவாவின் பெயரில் நம்பிக்கை வைத்து,
தன் இறைவனில் சார்ந்திருக்கட்டும்.
ஆனால் இப்பொழுதோ, நெருப்பை மூட்டி உங்களுக்கென்று
எரிகின்ற பந்தங்களை உண்டாக்கிக்கொள்கிற பாவிகளே!
நீங்கள் எல்லோரும் போய், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலே நடவுங்கள்.
நீங்கள் பற்றவைத்த பந்தங்களின் வெளிச்சத்திலே நடவுங்கள்.
அப்பொழுது என்னுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்வது இதுவே,
நீங்கள் வேதனையிலே கிடப்பீர்கள்.
சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு
“நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே,
நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
நீங்கள் எந்தக் கற்பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ,
எந்தக் கற்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ,
அந்தக் கற்பாறையானவரை நோக்கிப்பாருங்கள்.
உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும்
உங்களைப் பெற்றெடுத்த சாராளையும் நோக்கிப்பாருங்கள்.
நான் அவனை அழைத்தபோது, அவன் ஒருவனாய் மாத்திரமே இருந்தான்;
நான் அவனை ஆசீர்வதித்து அவனை அநேகராகப் பெருகச் செய்தேன்.
மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார்,
அவளுடைய பாழான இடங்களையெல்லாம் ஆறுதல் செய்வார்;
அவர் அவளுடைய பாலைவனங்களை ஏதேனைப் போலவும்,
அவளுடைய பாழிடங்களை யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.
சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு காணப்படும்,
நன்றி செலுத்துதலும் பாடலின் சத்தமும் அங்கு இருக்கும்.
“என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்;
என் நாடே, கேளுங்கள்:
சட்டம் என்னிலிருந்து வெளிப்படும்:
என் நீதி நாடுகளுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்.
என் நீதி சமீபமாயிருக்கிறது;
என் இரட்சிப்பு வெளிப்படுகிறது,
என் புயம் நாடுகளுக்கு நீதியைக் கொண்டுவரும்.
தீவுகள் என்னை நோக்கி,
என் கரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.
உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள்,
கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்;
வானங்கள் புகையைப்போல் மறையும்,
பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்;
அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள்.
ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும்,
எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.
“நியாயத்தை அறிந்தவர்களே,
எனது சட்டத்தை மனதில் வைத்திருக்கும் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாதீர்கள்;
அவர்களின் ஏளனப் பேச்சுக்களால் திகிலடையாதீர்கள்.
பொட்டுப்பூச்சி உடையை அரித்து,
ஆட்டு மயிரைத் தின்பதுபோல் அவர்களைத் தின்னும்.
ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும்,
எனது இரட்சிப்பும் எல்லா தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.”
யெகோவாவின் புயமே, விழித்தெழு, விழித்தெழு,
பெலத்தால் உன்னை உடுத்திக்கொள்!
கடந்த நாட்களிலும் பழைய தலைமுறைகளிலும்
எழுந்ததுபோல் விழித்தெழு.
ராகாப்51:9 ராகாப் பண்டைய இலக்கியங்களில் ஒழிங்கீனத்தைக் குறிக்கும் புராண கடல் அசுரனின் பெயராகும். இங்கே எகிப்தைக் குறிக்கும் கவிதைப் பெயராக ராகாப் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னும் வலுசர்ப்பத்தைத் துண்டுதுண்டாக வெட்டியது நீரல்லவா?
அந்த மிருகத்தை ஊடுருவக் குத்தியதும் நீரல்லவா?
கடலையும் ஆழங்களின் தண்ணீரையும்
வற்றவைத்தது நீரல்லவா?
மீட்கப்பட்டவர்கள் கடந்துசெல்லும்படி கடலின்
பெரிய ஆழங்களில் பாதை அமைத்ததும் நீரல்லவா?
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.
அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;
நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.
மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைவார்கள்,
துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.
“நான், நானே உன்னைத் தேற்றுகிறவர்.
இறக்கும் மனிதனுக்கும்,
புல்லாயிருக்கும் மானிடருக்கும் பயப்படுவதற்கு நீ யார்?
வானங்களை விரித்து,
பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த,
உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே!
அதனால் அழிக்கக் காத்திருக்கும்
ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும்
இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே!
ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே?
பயந்து அடங்கியிருக்கும் கைதிகள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள்;
தங்கள் இருட்டறையில் அவர்கள் சாகமாட்டார்கள்,
அவர்களின் உணவும் குறைவுபடாது.
ஏனெனில் உன் இறைவனாகிய யெகோவா நானே,
நான் கடலைக் கலக்க அதன் அலைகள் இரைகின்றன,
சேனைகளின் யெகோவா என்பது என் பெயர்.
வானங்களை அதினதின் இடத்தில் நிலைப்படுத்தி,
பூமியின் அஸ்திபாரங்களையும் அமைத்தேன்.
சீயோனிடம், ‘நீங்களே எனது மக்கள்’ என்று சொன்னேன்”
நான் என் வார்த்தைகளை உன் வாயில் அருளி,
என் கரத்தின் நிழலால் உன்னை மூடிக்கொண்டேன்.
யெகோவாவின் கோபம்
விழித்தெழு, விழித்தெழு!
எருசலேமே, விழித்தெழு,
யெகோவாவின் கரத்திலிருக்கும்
அவரது கோபத்தின் பாத்திரத்தில் குடித்தவளே!
மனிதரைத் தள்ளாடவைக்கும் பாத்திரத்தை
மண்டிவரை குடித்தவளே! நீ எழுந்திரு.
அவள் பெற்றெடுத்த எல்லா மக்களிலும்
அவளுக்கு வழிகாட்ட பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை;
அவள் வளர்த்த எல்லா பிள்ளைகளிலும்
அவளைக் கையில் பிடித்துச் செல்லக்கூட ஒருவரும் இல்லை.
இந்த இரண்டு பெரும் துன்பங்களும் உன்மேல் வந்திருக்கின்றன;
உன்னைத் தேற்றுபவர் யார்?
அழிவும், பாழும், பஞ்சமும், வாளும் உன்மேல் வந்திருக்கின்றன.
உன்னை ஆறுதல்படுத்துபவர் யார்?
உனது பிள்ளைகள் சோர்ந்துவிட்டார்கள்;
ஒவ்வொரு தெருவின் முகப்பிலும்,
வலையில் அகப்பட்ட கலைமானைப்போல் கிடக்கிறார்கள்.
அவர்கள் யெகோவாவின் கோபத்தாலும்,
உங்கள் இறைவனின் கண்டனத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, துன்புறுத்தப்பட்டவளே,
மதுபானம் குடிக்காமலே வெறிகொண்டிருக்கிறவளே, இதைக் கேள்.
உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே,
தமது மக்களுக்காக வாதாடும் உன் இறைவன் கூறுகிறார்:
“உன்னை மதிமயக்கும் பாத்திரத்தை
உன் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டேன்;
எனது கோபத்தின் பாத்திரத்தில்
நீ இனி ஒருபோதும் குடிக்கமாட்டாய்.
உன்னை வேதனைப்படுத்தியவர்களின் கைகளில் அப்பாத்திரத்தை நான் வைப்பேன்.
அவர்கள் உன்னிடம், ‘நாங்கள் உன்மீது நடக்கும்படி நிலத்தில் வீழ்ந்துகிட’
என்று சொல்லியிருந்தார்கள்.
நீயும் உன் முதுகை நிலத்தைப் போலாக்கினாய்,
மிதித்து நடக்கும்படி அதை ஒரு வீதியைப்போலவும் ஆக்கினாயே.”
விழித்தெழு சீயோனே, விழித்தெழு,
உன்னைப் பெலத்தினால் உடுத்திக்கொள்!
எருசலேமே, பரிசுத்த நகரமே,
உன்னுடைய மகத்துவத்தின் உடைகளை உடுத்திக்கொள்.
விருத்தசேதனம் செய்யாதவர்களும்,
அசுத்தரும் இனி உனக்குள் வரமாட்டார்கள்.
எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு;
நீ எழுந்து அரியணையில் அமர்ந்திரு.
சிறைபட்ட சீயோன் மகளே,
உன் கழுத்தில் இருக்கும் கட்டுகளைக் கழற்றி, உன்னை விடுவித்துக்கொள்.
யெகோவா கூறுவது இதுவே:
நீ பணம் எதுவும் பெறாமல் விற்கப்பட்டாயே,
“நீ பணமின்றி மீட்கப்படுவாய்.”
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ஆரம்பத்தில் எனது மக்கள் எகிப்திலே வாழ்வதற்காகப் போனார்கள்;
பின்னர் அசீரியர் அவர்களை ஒடுக்கினார்கள்.
“இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார்.
“எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்;
அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள்,
எனது பெயரும் நாளெல்லாம்
தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்;
அந்த நாளிலே,
அதை முன்னறிவித்தவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
ஆம், அவர் நானே.”
நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள்
மலைகளின்மீது எவ்வளவு அழகாக இருக்கின்றன!
அவர்கள் சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி,
நல்ல செய்திகளைக் கொண்டுவருவார்கள்.
இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி,
சீயோனிடம்,
“உங்கள் இறைவனே ஆளுகை செய்கிறார்” என்று சொல்வார்கள்.
கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்;
அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆனந்த சத்தமிடுகிறார்கள்.
யெகோவா சீயோனுக்குத் திரும்பும்போது,
அதை அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள்.
எருசலேமின் பாழிடங்களே,
நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியின் கீதம் பாடுங்கள்.
ஏனெனில் யெகோவா தனது மக்களைத் தேற்றி,
எருசலேமை மீட்டுக்கொண்டார்.
யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும்
தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார்.
அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம்
நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள்.
புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்!
அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்!
யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கும் நீங்கள்
அங்கிருந்து வெளியேறி சுத்தமாயிருங்கள்.
ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை,
தப்பியோடிப்போகிறவர்கள் போல ஓடிப்போவதில்லை.
ஏனெனில், யெகோவா உங்கள்முன் செல்வார்,
இஸ்ரயேலின் இறைவனே உங்களுக்குப் பின்னால் காவலாகவும் இருப்பார்.
அடியவரின் பாடுகள்
பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்;
அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார்.
அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்;
அவரது தோற்றம் மனிதர் போலன்றி உருக்குலைந்ததாய் இருந்தது;
அவரது சாயலும் மனிதர் போலன்றி சிதைக்கப்பட்டிருந்தது.
அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்;
அவரின் நிமித்தம் அரசர்களும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள்.
அவர்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பார்கள்,
அவர்கள் கேள்விப்படாததை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.
எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும்,
வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார்.
நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை;
அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை.
அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்;
அவர் துன்பத்தின் மனிதனாய்53:3 துன்பத்தின் மனிதனாய் அல்லது வியாதியில் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார்.
அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல்,
அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை.
உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு,
நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார்.
அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு,
அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.
ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார்,
எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்;
நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது,
அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம்.
நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்;
நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம்.
யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும்
அவர்மேல் சுமத்தினார்.
அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்,
அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை;
அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும்,
மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும்
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?
ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்;
எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார்.
அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை,
அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.
ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது;
தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார்.
ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே
யெகோவாவின் திட்டமாய் இருந்தது,
அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும்,
அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார்.
யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும்.
அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின்
அவர் வாழ்வின் ஒளியைக் கண்டு திருப்தியடைவார்;
நீதியுள்ள எனது ஊழியன் தமது அறிவினால்
அநேகரை நீதியானவர்களாக்குவார்,
அவர்களுடைய அநியாயச் செயல்களை அவரே சுமப்பார்.
ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்;
அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார்.
ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி,
குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்.
ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து,
மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.
சீயோனின் எதிர்கால மகிமை
“பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;
பிரசவ வேதனைப்படாதவளே,
ஆர்ப்பரித்துப் பாடி ஆனந்த சத்தமிடு,
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனுடன் வாழ்கிறவளுடைய
பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்”
என்று யெகோவா சொல்கிறார்.
“உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு,
உனது குடியிருப்புகளின் திரையை நன்கு அகலமாக விரி;
இவற்றைச் செய்ய பின்வாங்காதே.
கயிறுகளை தாராளமாக நீட்டி,
முளைகளை உறுதிப்படுத்து.
ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்;
உன்னுடைய சந்ததிகள் நாடுகளை வெளியேற்றி,
அவர்களுடைய பாழடைந்த பட்டணங்களில் குடியேறுவார்கள்.
“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்;
அவமானத்திற்குப் பயப்படாதே, நீ தாழ்த்தப்படமாட்டாய்.
நீ உன் வாலிப காலத்தின் வெட்கத்தை மறந்துபோவாய்,
விதவைக்கால நிந்தனையையும் இனி ஒருபோதும் நினைக்கமாட்டாய்.
ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்;
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்,
இஸ்ரயேலின் பரிசுத்தரே உனது மீட்பர்;
அவர் பூமி முழுவதற்கும் இறைவன் என்னப்படுவார்.
கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும்,
இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும்
யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்”
என்று உனது இறைவன் சொல்கிறார்.
“நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன்,
ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன்.
என் கோபம் பொங்கி எழுந்ததால்,
உன்னிடமிருந்து என் முகத்தை ஒரு நொடிப்பொழுதே மறைத்தேன்;
ஆனால், நித்திய தயவுடன்
நான் உன்னில் இரக்கங்கொள்வேன்” என்று,
உன் மீட்பராகிய யெகோவா சொல்கிறார்.
“இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது;
நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளம் இனி ஒருபோதும் பூமியை மூடமாட்டாது
என்று நான் ஆணையிட்டேன்.
ஆகவே இப்பொழுதோ உங்களுடன் கோபங்கொள்ளவோ,
அல்லது இனி ஒருபோதும் உங்களைக் கண்டிக்கவோ மாட்டேன்
என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்.
மலைகள் அசைக்கப்பட்டாலும்,
குன்றுகள் அகற்றப்பட்டாலும்
உன்மீதுள்ள என் நேர்மையான அன்பு அசைக்கப்படமாட்டாது;
என் சமாதானத்தின் உடன்படிக்கை அகற்றப்படமாட்டாது”
என்று உன்னில் இரக்கமுள்ள யெகோவா சொல்கிறார்.
“துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு,
தேற்றப்படாமல் இருக்கும் பட்டணமே,
நான் உன்னை நீல இரத்தினக் கற்களாலும்,
உன் அஸ்திபாரங்களை இரத்தினக் கற்களாலும் கட்டுவேன்.
உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும்,
உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும்,
உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;
அவர்களுடைய சமாதானமும் பெரிதாயிருக்கும்.
நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்:
கொடுமை உன்னைவிட்டுத் தூரமாகும்;
நீ பயப்படுவதற்கு எதுவுமிராது.
பயங்கரம் உன்னைவிட்டுத் தூரமாய் அகற்றப்படும்;
அது உனக்குக் கிட்டவராது.
உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல;
உன்னைத் தாக்குகிறவன் எவனும் உன்னிடம் சரணடைவான்.
“இதோ நானே நெருப்புத் தணலை
ஊதி வேலைக்கேற்ற
ஆயுதங்களைச் செய்யும் கொல்லனை படைத்தேன்.
பாழாக்கும் அழிவுகாரனையும் நானே படைத்தேன்.
ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது,
உன்னைக் குற்றம் சாட்டும் ஒவ்வொரு நாவிற்கும் நீ அதன் பிழையைக் காட்டுவாய்.
யெகோவாவின் ஊழியருக்கு என்னிடமிருந்து கிடைக்கும்
அவர்களுக்குரிய நியாயப்படுத்துதல் இதுவே,
என்னிடமிருந்து கிடைக்கும் சொத்துரிமையும் இதுவே”
என்று யெகோவா சொல்லுகிறார்.
தாகமுள்ளோருக்கு அழைப்பு
“ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும்
நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்,
வாங்கி உட்கொள்ளுங்கள்.
வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி
திராட்சரசமும் பாலும் வாங்குங்கள்.
உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?
திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்?
கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள்.
அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும்.
காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்;
உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்;
நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன்.
இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும்,
மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன்.
ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய்,
உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும்
இறைவனுமான உங்கள் யெகோவா
உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.”
அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்;
அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள்.
கொடியவன் தன் வழிகளையும்,
தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்;
அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார்,
எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.
“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல;
உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல”
என்று யெகோவா சொல்லுகிறார்.
“பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே,
என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன.
என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை.
மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன;
அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி,
அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல்
அவை திரும்பிச் செல்வதில்லை.
எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும்,
உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன.
என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது:
நான் விரும்பியவற்றைச் செய்து,
நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல்
அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது.
நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி
சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்;
மலைகளும் குன்றுகளும்
உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்;
வெளியின் மரங்கள் யாவும்
கைகொட்டும்.
முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும்,
காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும்.
இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும்,
அழியாத நித்திய
அடையாளமாகவும் இருக்கும்.”
அந்நியருக்கும் இரட்சிப்பு
யெகோவா சொல்வது இதுவே:
“நியாயத்தைக் கைக்கொண்டு
நீதியைச் செய்யுங்கள்.
ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது;
எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.
இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு,
ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து,
தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர்,
“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்”
என்று சொல்லாமல் இருக்கட்டும்.
அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே”
என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.
யெகோவா சொல்வது இதுவே:
“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து,
எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு
என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,
என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும்,
மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த
ஒரு பெயரையும் கொடுப்பேன்.
ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற
நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.
யெகோவாவை அண்டியிருந்து,
அவருக்கு ஊழியம் செய்து,
யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும்,
ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல்
அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை
உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:
நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து,
என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன்.
அவர்களின் தகனபலிகளும்,
மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும்
ஜெபவீடு என்று அழைக்கப்படும்.
நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும்
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்:
ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட
இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”
கொடியோருக்கு விரோதமான இறைவன்
வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள்.
காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.
இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும்
அறிவில்லாத குருடர்;
அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத
ஊமையான நாய்கள்;
அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள்,
நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.
அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்;
அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள்,
அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி,
ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்;
நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்;
நாம் மதுவை நிறையக் குடிப்போம்,
நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும்,
அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.
நீதியானவர்கள் அழிகின்றார்கள்,
இதைப்பற்றி ஒருவருமே தங்கள் இருதயத்தில் சிந்திப்பதில்லை;
பக்தியுள்ளவர்களும் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்;
தீமையிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியாகவே,
நீதியுள்ளவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்
என்பதை ஒருவரும் விளங்கிக்கொள்வதில்லை.
நீதியாய் நடக்கிறவர்கள் சமாதானத்திற்குள் சென்றடைந்து,
தங்கள் மரணத்தில் படுத்திருக்கும்போது,
இளைப்பாறுதல் பெறுகிறார்கள்.
“ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே,
விபசாரிகளுக்கும் வேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளே, நீங்கள் இங்கே வாருங்கள்.
யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்?
யாரைப் பழிக்க உங்கள் வாயைத்
உங்கள் நாவை நீட்டுகிறீர்கள்?
நீங்கள் கலகக்காரரின் பிள்ளைகள் அல்லவா?
பொய்யரின் சந்ததியல்லவா?
நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும்,
ஒவ்வொரு படர்ந்த மரத்தினடியிலும் காமவெறி கொள்கிறீர்கள்;
பாறைகளின் வெடிப்புகளிலும், தொங்கும் பாறைகளின் கீழும்
உங்கள் பிள்ளைகளைப் பலியிடுகிறீர்கள்.
வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும்
விக்கிரங்களே உங்கள் பங்கு;
அவை, அவைதான் உங்கள் பாகம்.
ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து,
தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள்.
இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ?
நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்;
பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய்.
உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால்
நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய்.
என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய்,
அதிலேறி அதை அகலமாக்கினாய்;
நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய்,
நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.
நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக்57:9 மோளேக் அல்லது அரசனிடம் தெய்வத்திடம் போனாய்;
நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய்.
நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்;
அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்!
உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள்,
ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை.
நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால்
சோர்ந்துபோகவில்லை.
“நீ யாருக்குப் பயந்து, நடுங்கி
எனக்குப் பொய்யாய் நடந்தாய்?
என்னை நினையாமலும்
இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்?
நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோ
நீ எனக்குப் பயப்படாது போனாய்?
நான் உனது நீதியையும் உனது வேலைகளையும்
உனது செயல்களையும் வெளிப்படுத்துவேன்;
அவை உனக்கு உதவாது.
நீ உதவிகேட்டு அழுகிறபோது,
நீ சேகரித்த விக்கிரகங்கள் உன்னைக் காப்பாற்றட்டும்!
காற்று அவைகளை அள்ளிக்கொண்டு போகுமே!
வெறும் மூச்சே அவைகளை அடித்துக்கொண்டும்.
ஆனால் என்னை நம்பியிருக்கிறவர்களோ,
நாட்டைத் தன் சொத்துரிமையாக்கி,
எனது பரிசுத்த மலையையும் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”
மனமுடைந்தோருக்கு ஆறுதல்
அப்பொழுது:
“கட்டுங்கள், கட்டுங்கள், வீதியை ஆயத்தம் பண்ணுங்கள்!
எனது மக்களின் வழியிலுள்ள தடைகளை நீக்கிவிடுங்கள்” என்று சொல்லப்படும்.
உயர்ந்திருப்பவரும், உன்னதமானவரும், என்றென்றும் வாழ்பவருமான
பரிசுத்தர் என்னும் பெயரையுடையவர் சொல்வதாவது:
“இறைவனாகிய நான் உயரமான பரிசுத்த இடத்தில் வாழ்கிறேன்.
ஆனாலும் மனமுடைந்தவர்களுடனும், தாழ்மையான ஆவியுடையவர்களுடனும் இருக்கிறேன்.
ஆவியில் தாழ்மையுடையவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கவும்,
மனமுடைந்தவர்களின் இருதயத்தைத் திடப்படுத்தவும் நான் அவர்களுடன் இருக்கிறேன்.
நான் என்றென்றும் குற்றஞ்சாட்டமாட்டேன், எப்பொழுதும் கோபமாயிருக்கமாட்டேன்.
ஏனெனில் அப்பொழுது மனிதனின் ஆவி,
என்னால் படைக்கப்பட்ட மனித சுவாசம்,
எனக்குமுன் சோர்வடைந்துவிடும்.
அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன்,
அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன்,
ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.
அவனுடைய வழிகளை நான் கண்டிருக்கிறேன்;
ஆயினும் நான் அவனைச் சுகப்படுத்துவேன்;
அவனை வழிநடத்தி, மீண்டும் அவனுக்கு ஆறுதல் அளிப்பேன்;
நான் துயரப்படுகிறவர்களின் உதடுகளில் துதியைக் கொண்டுவருவேன்.
தொலைவிலும் அருகிலும் உள்ளவர்களுக்குச் சமாதானம், சமாதானம் என்றும்,
அவர்களை நான் சுகப்படுத்துவேன்”
என்றும் யெகோவா சொல்கிறார்.
ஆனால் கொடியவர்களோ, கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறார்கள்;
அதற்கு அமைதியாய் இருக்கமுடியாது,
அதன் அலைகள் சேற்றையும் சகதியையும் அள்ளிக்கொண்டுவரும்.
“கொடியவருக்கோ, மன அமைதி இல்லை” என்று என் இறைவன் சொல்கிறார்.
உண்மை உபவாசம்
“உரத்த சத்தமிடு; அடக்கிக்கொள்ளாதே!
எக்காளத்தைப்போல் உனது குரலை உயர்த்து.
என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதல்களையும்,
யாக்கோபின் குடும்பத்துக்கு அவர்களுடைய பாவங்களையும் அறிவி.
அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடுகிறார்கள்,
அவர்கள் என் வழிகளை அறிவதில் ஆவலுள்ளவர்கள்போல் காட்டுகிறார்கள்.
இறைவனின் கட்டளைகளைக் கைவிடாமல்,
சரியானவற்றையே செய்யும் ஒரு நாட்டைப்போல், அவர்கள் தங்களைக் காண்பிக்கிறார்கள்.
அவர்கள் நேர்மையான தீர்மானங்களை என்னிடம் கேட்கிறார்கள்;
இறைவனை நெருங்கிவர விரும்புகிறார்கள்.
‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள்.
நீர் அதைக் காணவில்லையா?
நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்;
நீர் அதைக் கவனிக்கவில்லையா?’
“நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து,
உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள்.
உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும்,
கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது.
நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால்,
உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே.
இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்?
அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ?
உபவாசம் என்பது துக்கவுடையில்,
சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா?
இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும்
அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள்.
“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது:
அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும்,
நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும்,
ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும்,
ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ?
பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும்,
வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும்,
உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும்,
உன் சொந்த உறவினர்களிடமிருந்து
உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ?
அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்;
நீ விரைவில் சுகவாழ்வு துளிர்க்கும்.
உங்கள் நீதி உங்கள்முன் செல்லும்,
யெகோவாவின் மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.
அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்;
நீ உதவிகேட்டு அழுவாய், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று அவர் சொல்வார்.
“ஒடுக்கும் நுகத்தையும், பிழையைச் சுட்டிக்காட்டும் விரலையும்,
தீமையின் பேச்சையும் நீக்கிவிடு.
பசியுற்றோருக்கு உன்னையே கொடுத்து,
ஒடுக்கப்பட்டோரின் தேவையைத் திருப்தியாக்கு.
அப்பொழுது இருளில் உன்னுடைய வெளிச்சம் உதிக்கும்,
உன்னுடைய இரவும் மத்தியானத்தைப்போல் இருக்கும்.
யெகோவா உன்னை எப்பொழுதும் வழிநடத்துவார்;
வெயிலால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அவர் உன் தேவைகளைத் திருப்தி செய்து,
உன் எலும்புகளை பெலனுள்ளதாக்குவார்.
நீ நன்றாக நீர்ப்பாய்ச்சிய தோட்டத்தைப் போலவும்,
வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.
உன் மக்கள் பாழடைந்த இடிபாடுகளைத் திருப்பிக் கட்டுவார்கள்;
பழங்கால அஸ்திபாரங்களையும் கட்டி எழுப்புவார்கள்.
நீ உடைந்த மதில்களைத் திருத்திக் கட்டுகிறவன் என்றும்,
குடியிருப்பதற்கு வீதிகளைப் புதுப்பிக்கிறவன் என்றும் அழைக்கப்படுவாய்.
“ஓய்வுநாளின் சட்டங்களை மீறுவதிலிருந்து உன் கால்களை விலக்கு;
என் பரிசுத்த நாளில் நீ உனக்கு விரும்பிய விதமாய் நடவாதே.
ஓய்வுநாளான யெகோவாவினுடைய பரிசுத்த நாளை,
மகிழ்ச்சியின் நாளென்றும் மேன்மையின் நாளென்றும் அழை.
உன் சொந்த வழியில் போகாமலும், நீ விரும்பியவாறு செய்யாமலும்,
வீண் வார்த்தைகளைப் பேசாமலும் அந்நாளை மேன்மைப்படுத்து.
அப்பொழுது நீ யெகோவாவிடம் மகிழ்ச்சிகொள்வாய்,
நாட்டின் உயர்ந்த இடங்களில் நான் உன்னை ஏறியிருக்கும்படி செய்வேன்.
உன் தகப்பன் யாக்கோபின் சுதந்திரத்தில் நீ களிப்படையும்படி செய்வேன்.”
யெகோவாவின் வாயே இதைச் சொல்லிற்று.
பாவ அறிக்கையும் மீட்பும்
நிச்சயமாகவே, காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவில்லை;
கேட்க முடியாதபடி அவருடைய காது மந்தமாகவுமில்லை.
ஆனால், உங்களுடைய பாவங்களே,
உங்கள் இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்திருக்கின்றன.
உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதபடி,
அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்திருக்கின்றன.
ஏனெனில் உங்கள் கைகள் இரத்தத்தினாலும்,
உங்கள் விரல்கள் குற்றத்தினாலும் கறைபட்டிருக்கின்றன;
உங்கள் உதடுகள் பொய்களைப் பேசி,
உங்கள் நாவுகள் கொடுமையானவற்றை முணுமுணுத்திருக்கின்றன.
ஒருவனும் நீதிக்காக வாதாடுவதில்லை;
ஒருவனும் உத்தமமாய் தன் வழக்கைப் பேசுவதில்லை.
அவர்கள் அர்த்தமற்ற விவாதத்தில் நம்பிக்கை வைத்து, பொய் பேசி,
தீங்கைக் கருத்தரித்து பாவத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.
அவர்கள் விரியன் பாம்பின் முட்டைகளை அடைகாத்து,
சிலந்தி வலையைப் பின்னுகிறார்கள்.
அவைகளின் முட்டையை உண்பவன் எவனும் சாவான்;
அவைகளில் ஒன்று உடைந்தால் விரியன் பாம்பு வெளிவரும்.
அவர்களின் சிலந்தி வலைப் பின்னல்கள், உடைக்கு உபயோகமற்றவை;
அவர்கள் செய்தவற்றால் தங்களை மூடிக்கொள்ளவும் இயலாது.
அவர்களுடைய செயல்களெல்லாம் தீமையானவையே;
அவர்களின் கைகளில் வன்செயல்களே இருக்கின்றன.
அவர்களுடைய கால்கள் தீமைசெய்ய விரைகின்றன;
குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அவர்கள் விரைகிறார்கள்.
அவர்கள் சிந்தனைகளும் தீமையான சிந்தனையே;
பாழாக்குதலும் அழிவும் அவர்களின் வழித்தடங்களில் இருக்கின்றன.
சாமாதானத்தின் வழியை அவர்கள் அறியமாட்டார்கள்;
அவர்களின் பாதைகளில் நீதி இல்லை.
அவர்கள் தங்கள் பாதைகளைக் கோணலாக்கிக் கொண்டார்கள்;
அதில் நடப்பவர் எவருக்கும் சமாதானம் இல்லை.
ஆகையால் நியாயம் எங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது,
நீதி எங்களை நெருங்குவதில்லை;
வெளிச்சத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனால் எல்லாமே இருளாயிருக்கின்றன.
பிரகாசத்தை எதிர்பார்த்திருந்தோம், ஆனாலும் காரிருளிலேயே நடக்கிறோம்.
நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்;
கண்கள் இல்லாதவர்களைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகிறோம்.
மங்கிய மாலைப் பொழுதில் இடறுகிறதுபோல நடுப்பகலில் இடறுகிறோம்;
பெலனுள்ளவர்கள் மத்தியில்59:10 மத்தியில் அல்லது பாழடைந்த இடத்தில் மரித்தவரைப்போல் இருக்கிறோம்.
நாங்கள் யாவரும் கரடிகளைப்போல் உறுமுகிறோம்;
புறாக்களைப்போல் கவலையுடன் விம்முகிறோம்.
நியாயத்திற்குக் காத்திருந்தோம், ஆனால் அதைக் காணவில்லை;
விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அதுவும் தூரத்திலேயே இருக்கிறது.
எங்கள் மீறுதல்கள் உமது பார்வையில் அநேகமாய் இருக்கின்றன,
எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராகச் சாட்சி பகிருகின்றன.
எங்கள் மீறுதல்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கின்றன;
எங்கள் அநியாயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
யெகோவாவுக்கு விரோதமாகக் கலகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்தோம்;
எங்கள் இறைவனுக்கு முதுகைக் காட்டினோம்.
ஒடுக்குதலையும் கிளர்ச்சியையும் குறித்துப்பேசி,
எங்கள் இருதயங்களில் கருத்தரித்த பெரும் பொய்களை வெளிப்படுத்தினோம்.
அதனால், நியாயம் பின்னே தள்ளப்பட்டிருக்கிறது;
நீதி தூரத்திலே நிற்கிறது;
உண்மை தெருக்களில் இடறி,
உத்தமம் உள்ளே வரமுடியாமல் இருக்கிறது.
ஒரு இடத்திலும் உண்மை காணப்படவில்லை;
தீமையைவிட்டு விலகுகிறவர்கள் இரையாவார்கள்.
யெகோவா அதைக்கண்டு, அங்கு நியாயமில்லாதபடியால்,
கோபங்கொண்டார்.
அங்கே ஒருவனும் இல்லாததை அவர் கண்டார்,
பரிந்து பேசுவதற்கு அங்கு ஒருவரும் இல்லையென அவர் கண்டு திகைப்படைந்தார்.
எனவே அவரின் சொந்தக் கரமே அவருக்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது;
அவருடைய சொந்த நீதியே அவரைத் தாங்கியது.
அவர் நீதியைத் தனது மார்புக்கவசமாய் அணிந்து,
இரட்சிப்பின் தலைச்சீராவைத் தலையில் வைத்துக்கொண்டார்;
அநீதிக்குப் பழிவாங்குதலின் உடையை அவர் உடுத்தி,
வைராக்கியத்தைத் தன் மேலங்கியாகப் போர்த்துக்கொண்டார்.
அவர்கள் செய்தவற்றுக்கேற்ப
அவர் பதிலளிப்பார்.
கடுங்கோபத்தைத் தனது எதிரிகளுக்கும்,
தண்டனையைப் பகைவர்களுக்கும் கொடுப்பார்;
தீவுகளுக்கும் அவைகளின் செய்கைக்கேற்ப பதிலளிப்பார்.
மேற்கிலுள்ள மனிதர் யெகோவாவின் பெயருக்குப் பயப்படுவார்கள்;
சூரியன் உதிக்கும் திசையிலுள்ளவர்கள் அவருடைய மகிமை நடுங்குவார்கள்.
ஏனெனில், யெகோவாவின் சுவாசத்தினால் அடித்துச் செல்லப்படும்
காட்டாற்று வெள்ளம்போல் அவர் வருவார்.
“தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பிய யாக்கோபின் வழித்தோன்றல்களிடம்,
சீயோனுக்கு மீட்பர் வருவார்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை அவர்களுடன் எனது உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா சொல்கிறார். “உன் மேலிருக்கும் எனது ஆவியானவரும், உன் வாயில் நான் வைத்த என் வார்த்தைகளும் உன் வாயைவிட்டு நீங்கமாட்டாது, அவை உன் பிள்ளைகளின் வாய்களிலிருந்தும், அவர்களின் சந்ததிகளின் வாய்களிலிருந்தும் இப்பொழுதிலிருந்து என்றென்றைக்கும் நீங்கமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.
சீயோனின் மகிமை
“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது,
யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது.
இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது,
காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது.
ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார்,
அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது.
பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும்,
அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள்.
“உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்;
யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்;
உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள்,
உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள்.
அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்;
உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்;
கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்;
நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும்.
ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும்,
மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும்.
சேபாவிலிருந்து வரும் அனைவரும்
தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து,
யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள்.
கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும்,
நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்;
அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும்,
நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன்.
“மேகங்களைப் போலவும்,
தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்?
தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன;
தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன.
தொலைவிலுள்ள உங்கள் மகன்களை
அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன.
இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை
கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன.
ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.
“அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள்,
அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள்.
என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும்,
தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன்.
உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும்,
பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை;
நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில்,
அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே
இவ்வாறு திறந்திருக்கும்.
உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்;
அது முற்றிலும் பாழாகிவிடும்.
“எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு
லெபனோனின் மகிமையாகிய தேவதாரு,
சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்;
நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன்.
உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்;
உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள்.
அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும்,
இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள்.
“ஒருவரும் உன் வழியே நடவாமல்
நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும்,
எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை
நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன்.
நீ நாடுகளின் பாலைக் குடித்து,
அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய்.
அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர்,
யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய்.
வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும்,
இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன்.
மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும்,
கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன்.
சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும்
நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன்.
உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது;
உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது.
ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும்,
உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய்.
இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது;
அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது.
ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்;
உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார்.
உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை,
உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை.
யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார்,
உன் துக்க நாட்களும் முடிவடையும்.
அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து,
நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்;
அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக
என் கரங்களின் வேலையாகவும்
நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள்.
உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர்,
அற்பரும் வலிய நாடாவர்.
நானே யெகோவா;
அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”
யெகோவாவினுடைய தயவின் வருடம்
ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்;
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி,
யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார்.
உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும்,
சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும்,
கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும்,
யெகோவாவின் தயவின் வருடத்தையும்,
நமது இறைவன் அநீதிக்குப் பழிவாங்கப்போகும் நாளையும் அறிவிக்கவும்,
துக்கப்படும் அனைவரையும் ஆறுதல்படுத்தவும்,
சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு
சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும்,
துயரத்திற்குப் பதிலாக
ஆனந்த தைலத்தையும்,
மனச்சோர்வுக்குப் பதிலாக
துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும்
அவர் என்னை அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக,
அவரால் நாட்டப்பட்ட
நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள்.
அவர்கள் ஆதிகாலத்தின் இடிபாடுகளை திரும்பக் கட்டி,
நெடுங்காலமாய்ப் பாழாய் கிடந்த இடங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள்.
தலைமுறை தலைமுறைகளாய் பாழடைந்து
சூறையாடப்பட்டுக் கிடந்த பட்டணங்களைப் புதுப்பிப்பார்கள்.
பிறநாட்டார் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்;
அந்நியர் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள்.
நீங்கள் யெகோவாவின் ஆசாரியர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்;
நமது இறைவனின் ஊழியர்கள் என்று பெயரிடப்படுவீர்கள்.
நீங்கள் நாடுகளின் செல்வத்தை சாப்பிடுவீர்கள்,
அவர்களின் செல்வத்தில் பெருமையும் பாராட்டுவீர்கள்.
என் மக்கள் தங்கள் வெட்கத்திற்குப் பதிலாக
நாட்டில் இரட்டிப்பான பங்கைப் பெறுவார்கள்.
அவமானத்திற்குப் பதிலாக
அவர்கள் தங்கள் உரிமையில் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆகவே அவர்கள் தங்கள் நாட்டில் இரட்டிப்பான பங்கை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உரியதாயிருக்கும்.
“ஏனெனில் யெகோவாவாகிய நான், கொள்ளையையும்61:8 கொள்ளையையும் அல்லது கொள்ளைப் பொருட்களினால் இடப்பட்ட தகனபலி எனப்படும். மீறுதல்களையும் வெறுக்கிறேன்.
நான் நீதியை நேசிக்கிறேன்.
என் உண்மையின் நிமித்தம் அவர்களுக்கு வெகுமதி கொடுத்து,
அவர்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையையும் செய்வேன்.
அவர்களுடைய சந்ததிகள் பல நாடுகளின் மத்தியிலும்,
அவர்களுடைய சந்ததியினர் பல மக்கள் கூட்டங்களின் மத்தியிலும்
நன்கு அறியப்படுவார்கள்.
அவர்களைக் காண்போர் அனைவரும்,
அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள்
என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.”
நான் யெகோவாவிடம் பெரிதாய் களிகூருகிறேன்.
என் ஆத்துமா என் இறைவனில் மகிழுகிறது.
ஏனெனில் மணவாளன் தன் தலையை ஒரு ஆசாரியன் அழகுபடுத்துவது போலவும்,
ஒரு மணவாட்டி தன் நகைகளால் தன்னை அலங்கரிப்பது போலவும்,
யெகோவா இரட்சிப்பின் உடைகளை எனக்கு உடுத்தி,
நேர்மையின் ஆடையால் என்னை அலங்கரித்து இருக்கிறார்.
மண் தன் தாவரங்களை விளைவிப்பது போலவும்,
ஒரு தோட்டம் தன்னில் விதைக்கப்பட்ட விதைகளை வளரச்செய்வது போலவும்,
ஆண்டவராகிய யெகோவா நீதியையும்,
துதியையும் எல்லா நாடுகளுக்கு முன்பாகவும் வளரப்பண்ணுவார்.
சீயோனின் புதுப்பெயர்
சீயோனின் நிமித்தம் நான் மவுனமாயிராமலும்,
எருசலேமின் நிமித்தம் நான் செயலற்று இராமலும்,
அதன் நீதி விடியற்கால வெளிச்சத்தைப் போலவும்,
அதன் இரட்சிப்பு பற்றியெரியும் ஒரு தீவட்டியைப் போலவும்
வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
பிறநாடுகள் உன் நீதியைக் காண்பார்கள்,
அரசர்கள் யாவரும் உன் மகிமையைக் காண்பார்கள்;
யெகோவாவின் வாய் வழங்கும்
ஒரு புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
நீ யெகோவாவின் கரத்தில் சிறப்பான மகுடமாகவும்,
உன் இறைவனின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.
அவர்கள் இனி ஒருபோதும் உன்னைக் கைவிடப்பட்ட நாடு என அழைப்பதில்லை.
உன்னைப் பாழடைந்த நாடு என்று சொல்வதுமில்லை.
நீ எப்சிபா என்று அழைக்கப்படுவாய்,
உனது நாடு பியூலா என்று பெயர்பெறும்;
ஏனெனில் யெகோவா உன்னில் பிரியப்படுவார்,
உன் நாடு வாழ்க்கைப்படும்.
ஒரு வாலிபன் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்வதுபோல,
உன்னைக் கட்டியெழுப்பியவர் உன்னைத் திருமணம் செய்வார்.
மணமகன் மணமகளில் மகிழ்ச்சிகொள்ளுவதுபோல,
உன் இறைவன் உன்னில் மகிழ்ச்சிகொள்வார்.
எருசலேமே, நான் உனது மதில்களின்மேல் காவலாளரை நியமித்திருக்கிறேன்;
பகலிலோ இரவிலோ ஒருபோதும் அவர்கள் மவுனமாய் இருக்கமாட்டார்கள்.
யெகோவாவை நோக்கி மன்றாடுவோரே,
நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டாம்.
அவர் எருசலேமை நிலைக்கப்பண்ணி, அவளைப் பூமியின் புகழ்ச்சியாக்கும்வரை,
அவருக்கு ஓய்வுகொடாதீர்கள்.
யெகோவா தனது வலது கரத்தினாலும்
வலிய புயத்தினாலும் ஆணையிட்டுக் கூறியது:
“நான் உங்கள் தானியத்தை,
இனி ஒருபோதும் உங்கள் பகைவர்களுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்;
உங்கள் உழைப்பினால் உண்டான புதிய திராட்சரசத்தை
பிறர் இனி ஒருபோதும் குடிக்கமாட்டார்கள்.
அதை அறுவடை செய்பவர்களே அதைச் சாப்பிட்டு,
யெகோவாவைத் துதிப்பார்கள்.
திராட்சைப் பழங்களை சேகரிப்பவர்களே எனது பரிசுத்த இடத்தின் முற்றத்தில்
திராட்சை இரசத்தைக் குடிப்பார்கள்.”
கடந்துசெல்லுங்கள், வாசல்களைக் கடந்துசெல்லுங்கள்!
மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்.
கட்டுங்கள், பெரும் பாதையைக் கட்டுங்கள்!
கற்களை அகற்றுங்கள்.
நாடுகளுக்காக கொடியை ஏற்றுங்கள்.
யெகோவா பூமியின் கடைசிவரை
பிரசித்தப்படுத்தியிருப்பது:
“பாருங்கள், ‘உங்கள் இரட்சகர் வருகிறார்!
இதோ, அவர் கொடுக்கும் வெகுமதி அவருடன் இருக்கிறது;
அவர் கொடுக்கும் பிரதிபலனும் அவரோடு வருகிறது’
என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.”
அவர்கள் பரிசுத்த மக்கள் என்றும்,
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்;
நீ தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதென்றும்
இனி ஒருபோதும் கைவிடப்படாத பட்டணம் என்றும் அழைக்கப்படுவாய்.
இறைவனுடைய பழிவாங்கும் மற்றும் மீட்கும் நாள்
ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்?
கருஞ்சிவப்பு கறைபடிந்த உடையுடன் போஸ்றா பட்டணத்திலிருந்து வருகிற இவர் யார்?
தனது சிறப்பான அங்கியுடன்
தமது வல்லமையின் மகத்துவத்தில் எழுந்தருளி வருகிற இவர் யார்?
“நான்தான் அவர்!
நியாயமாய் பேசி, இரட்சிக்க வல்லவர்.”
உமது உடைகள் சிவப்பாய்,
திராட்சையைப் பிழியும் ஆலையில் மிதிக்கிறவனுடைய உடையைப்போல் இருப்பது ஏன்?
“நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்;
மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை.
அவர்களை என் கோபத்தில் மிதித்து,
என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்;
அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது,
என் உடைகளெல்லாம் கறைப்பட்டன.
பழிவாங்கும் நாள் என் உள்ளத்தில் இருந்தது;
நான் மீட்டுக்கொள்ளும் வருடம் வந்துவிட்டது.
நான் பார்த்தேன், அங்கே என் மக்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லை;
ஆதரவு வழங்க ஒருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
எனவே என் சொந்த புயமே வெற்றியைக் கொண்டுவர செயலாற்றியது;
என் கடுங்கோபமே என்னைத் தாங்கிற்று.
நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்;
எனது கடுங்கோபத்தில் அவர்களை வெறிக்கச்செய்து,
அவர்களின் இரத்தத்தை நிலத்தில் ஊற்றினேன்.”
துதியும் மன்றாட்டும்
யெகோவாவினுடைய இரக்கத்தையும்,
அவர் புகழப்பட வேண்டிய செயல்களையும் நான் எடுத்துரைப்பேன்.
யெகோவா எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத் தக்கதாகவும்,
அவருடைய இரக்கத்தின்படியும், அவருடைய தயவுகளின் படியும்,
அவர் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் செய்த அநேக நற்செயல்களையும்
நான் பறைசாற்றுவேன்.
அவர், “இவர்கள் நிச்சயமாய் எனது மக்கள்,
எனக்கு வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்றார்;
மேலும், அவர் அவர்களின் இரட்சகரானார்.
அவர்களின் வேதனைகளிலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்;
அவருடைய சமுகத்தின் தூதன் அவர்களை இரட்சித்தான்.
தமது அன்பினாலும் கருணையினாலும் அவர்களை மீட்டார்;
அவர் பூர்வ நாட்களிலெல்லாம்
அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.
அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து,
அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினார்கள்.
ஆகவே அவர் அவர்களுடைய பகைவராக மாறி,
தாமே அவர்களை எதிர்த்துப் போராடினார்.
அப்பொழுது அவருடைய மக்கள்63:11 அல்லது அவர் நினைவுகூர்ந்தார் பூர்வ நாட்களையும்,
மோசேயையும், அவருடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்கள்;
அவர்களை தனது மந்தையின் மேய்ப்பனுடன்
தம் மக்களை கடல் வழியே கொண்டுவந்தவர் எங்கே?
அவர்கள் மத்தியில் தமது பரிசுத்த ஆவியானவரை
அனுப்பியவர் எங்கே?
தமது மகிமையான வல்லமையின் புயத்தால்
மோசேயின் வலதுகையைக் கொண்டு,
தமக்கு நித்திய புகழ் உண்டாக்கும்படியாக
அவர்களுக்கு முன்பாக தண்ணீர்களைப் பிரித்தவர் எங்கே?
ஆழங்களில் அவர்களை வழிநடத்தியவர் எங்கே?
பாலைவன வெளியில் செல்லும் குதிரையைப்போல
அவர்கள் இடறவில்லை;
யெகோவாவின் ஆவியானவர் அவர்களை
பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்லும் மந்தையைப்போல்,
இளைப்பாறப் பண்ணினார்.
நீர் உமக்கு மகிமையான பெயரை உண்டுபண்ணும்படி,
உமது மக்களை இவ்வாறு வழிநடத்தினீர்.
பரலோகத்திலிருந்து கீழே நோக்கும்,
பரிசுத்தமும் மகிமையுமான உமது உயர்ந்த அரியணையிலிருந்து பாரும்.
உமது வைராக்கியமும் உமது வல்லமையும் எங்கே?
உமது கனிவும் இரக்கமும் எங்களிடமிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆபிரகாம் எங்களை அறியான்,
இஸ்ரயேலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும், நீரே எங்கள் தந்தை;
யெகோவாவே, நீர் நீரே எங்கள் தந்தை.
பூர்வகாலம் முதல் எங்கள் மீட்பர் என்பதே உமது பெயர்.
யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்?
உமக்குப் பயபக்தியாயிராதபடி ஏன் எங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்?
உமது உரிமையாயிருக்கும் கோத்திரங்களான
உமது ஊழியரின் நிமித்தம் திரும்பி வாரும்.
உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்;
ஆனால் இப்பொழுதோ எங்கள் பகைவர்கள்
உமது பரிசுத்த இடத்தை மிதித்து அழித்துவிட்டார்கள்.
பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே;
ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும்,
உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம்.
நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்,
அப்பொழுது நாடுகள் உமக்கு முன்பாக நடுங்கும்!
விறகுகளை நெருப்பு எரிக்கும்போது
அது தண்ணீரைக் கொதிக்கச் செய்யும்.
அதுபோல் நீர் இறங்கி உமது பகைவர் உமது பெயரை அறிந்துகொள்ளச் செய்யும்.
நாடுகளை உமக்கு முன்பாக அதிரச்செய்யும்.
ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத
அச்சுறுத்தும் செயல்களை நீர் செய்தீர்,
நீர் வந்தபோது மலைகள் உமக்கு முன்பாக நடுங்கின.
உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற,
வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை,
எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை,
எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு
நீர் உதவிசெய்ய வருகிறவர்.
ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது,
நீர் கோபங்கொண்டீர்.
அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்?
நாம் அனைவரும் அசுத்தரைப் போலானோம்,
எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் கறைபட்ட கந்தலைப்போல் இருக்கின்றன,
நாம் எல்லோரும் இலையைப்போல் வாடிப்போகிறோம்;
காற்றைப்போல எங்கள் பாவங்கள் எங்களை அள்ளிக்கொண்டுபோகிறது.
உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ,
உம்மைப் பற்றிப்பிடிக்க முயற்சிக்கிறவரோ ஒருவருமில்லை;
ஏனெனில், நீர் உம்முடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்து,
எங்கள் பாவங்களினிமித்தம் எங்களை அழிந்துபோகவிட்டீர்.
ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன்.
நாங்கள் களிமண், நீர் குயவன்;
நாங்களெல்லோரும் உமது கரத்தின் வேலைப்பாடு.
யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்;
எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம்.
உமது மக்களாகிய எங்கள் அனைவரையும்
நோக்கிப்பாரும்.
உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன;
சீயோன் பாழ் நிலமானது, எருசலேமும் பாழாய்ப் போயிற்று.
எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த
பரிசுத்தமும் மகிமையுமான எங்கள் ஆலயம் நெருப்புக்கு இரையாகி,
எங்களுக்கு இன்பமாய் இருந்தவையெல்லாம் பாழாய் கிடக்கின்றன.
யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ?
நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?
நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பும்
“என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்.
என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள்.
என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம்,
‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன்.
நான் பிடிவாதமான மக்களுக்கு
நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி,
நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி,
தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து,
தொடர்ந்து என்னை என் முகத்துக்கு
முன்பாகவே கோபமூட்டுகிறார்கள்.
அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து,
இரகசியமாய் விழித்திருந்து ஆவிகளை வணங்கி, இரவைக் கழிக்கிறார்கள்.
பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள்.
அவர்களுடைய பானைகளில் அசுத்த இறைச்சியின் குழம்பு இருக்கிறது.
அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்;
ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும்
நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
“பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது:
நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்;
அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன்.
உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும்
பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து,
குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள்.
அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக
அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.”
யெகோவா சொல்வது இதுவே:
“திராட்சைக் குலையில் சாறு இருக்கையில்,
‘அதை அழிக்காதே,
அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா?
அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன்.
அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன்.
யாக்கோபிலிருந்து சந்ததிகளையும்,
யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்;
நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்,
எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள்.
என்னைத் தேடும் என் மக்களுக்கு
சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும்,
ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
“நீங்களோ யெகோவாவைவிட்டு,
என் பரிசுத்த மலையை மறந்து,
காத்65:11 காத் என்றால் அதிர்ஷ்ட தேவதை என்று பொருள் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து,
மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.
உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன்,
நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள்.
ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை;
நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை.
எனது பார்வையில் தீமையைச் செய்து
நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.”
ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள்,
நீங்களோ பசியோடிருப்பீர்கள்;
எனது ஊழியர்கள் குடிப்பார்கள்,
நீங்களோ தாகமாயிருப்பீர்கள்;
எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்,
நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
எனது ஊழியர்கள் உள்ளத்தின்
மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்;
நீங்களோ இதய வேதனையால்
கதறி அழுவீர்கள்;
உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள்.
நான் தெரிந்துகொண்டவர்களுக்கு
உங்களுடைய பெயரை ஒரு சாபமாய் விட்டுப்போவீர்கள்;
ஆண்டவராகிய யெகோவா உங்களைக் கொன்றுபோட்டு,
ஆனால் தம்முடைய ஊழியருக்கோ அவர் வேறு பெயரைக் கொடுப்பார்.
நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும்,
உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான்.
பூமியில் ஆணையிடுகிறவனும்,
உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான்.
ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு,
எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும்.
புதிய வானமும் புதிய பூமியும்
“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும்
உண்டாக்குவேன்.
முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை,
மனதில் தோன்றுவதுமில்லை.
நான் உண்டாக்கப்போகிறதில்
நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள்.
ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும்,
அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
நானும் எருசலேமில் மகிழ்ந்து,
எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்;
அங்கு புலம்பலின் குரலும்,
அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
“ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ,
தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ
ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள்.
நூறு வயதில் இறக்கிறவன்
வாலிபன் என்று எண்ணப்படுவான்;
பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்
சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான்.
அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்;
அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி,
அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள்,
அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள்.
ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே
எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும்.
நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில்
நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.
அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள்,
அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்;
அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்;
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும்,
சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும்,
பாம்போ புழுதியைத் தின்னும்.
எனது பரிசுத்த மலையெங்கும்
அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது”
என்று யெகோவா சொல்கிறார்.
நியாயத்தீர்ப்பும் நம்பிக்கையும்
யெகோவா சொல்வது இதுவே:
“வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்காகக் கட்டும் ஆலயம் எங்கே?
நான் இளைப்பாறும் இடம் எங்கே?
இவைகளையெல்லாம் என் கரம் படைத்ததினால்,
இவைகளெல்லாம் உருவாயின”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஒருவன் தாழ்மையும் நொறுங்கிய உள்ளமும் கொண்டவராய்,
என் வார்த்தைகளுக்கு நடுங்குகிறவரையே
நான் கண்ணோக்கிப் பார்ப்பேன்.
காளையைப் பலியிடுகிறவர்
மனிதனைக் கொல்லுகிறவராகவும்,
செம்மறியாட்டுக் குட்டியைப் பலியிடுகிறவர்
நாயின் கழுத்தை முறிப்பவராகவும்,
தானியபலி செலுத்துகிறவர்
பன்றியின் இரத்தத்தைப் படைப்பவராகவும்,
நினைவுப் படையலாகிய தூபங்காட்டுதலைச் செய்கிறவர்
விக்கிரகத்தை வணங்குபவராகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்கள் சொந்த வழிகளைத் தெரிந்துகொள்கிறார்கள்,
அவர்களுடைய ஆத்துமா அவர்களுடைய அருவருப்புகளில் மகிழ்ச்சியாயிருக்கின்றன.
ஆகையால், நானும் அவர்களுக்குக் கடும் நடவடிக்கையை தெரிந்துகொண்டு,
அவர்கள் பயப்படுகிறவற்றை அவர்கள்மேல் கொண்டுவருவேன்.
ஏனெனில் நான் அழைத்தபோது ஒருவரும் பதிலளிக்கவில்லை;
நான் பேசியபோது ஒருவரும் கேட்கவில்லை.
அவர்கள் எனது பார்வையில் தீமையானவற்றைச் செய்து,
நான் விரும்பாத காரியங்களைத் தெரிந்துகொண்டார்கள்.”
யெகோவாவின் வார்த்தைக்கு நடுங்குகிறவர்களே,
அவரின் வார்தையைக் கேளுங்கள்:
“உங்களை வெறுத்து,
எனது பெயரின் நிமித்தம் உங்களை விலக்கி வைக்கின்ற உங்கள் சகோதரர்கள்,
‘யெகோவா தமது மகிமையைக் காண்பிக்கட்டும்,
அப்பொழுது நாம் உங்கள் மகிழ்ச்சியைக் காண்போம்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆயினும், அவர்கள் வெட்கமடைவார்கள்.
பட்டணத்திலிருந்து வரும் அமளியின் கூக்குரலைக் கேளுங்கள்.
ஆலயத்திலிருந்து வரும் சத்தத்தையும் கேளுங்கள்.
அது யெகோவாவின் பேரொலி;
அது அவர் தமது பகைவர்களுக்கு ஏற்றவிதமாய் பதிலளிக்கும் சத்தம்.
“பிரசவவேதனை வருமுன்னே
அவள் பெற்றெடுக்கிறாள்;
அவளுக்கு வேதனை வருமுன்னே,
ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள்.
இப்படிப்பட்ட ஒரு காரியத்தை யாரேனும் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டோ?
யாராவது இப்படிப்பட்டவற்றை எப்பொழுதாவது கண்டதுண்டோ?
ஒரு நாளிலே ஒரு நாடு உருவாகுமோ?
ஒரு நாட்டை திடீரெனப் பெற்றெடுக்க முடியுமோ?
அப்படியிருந்தும், சீயோன் பிரசவவேதனை தொடங்கியவுடனே
தன் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.
பேறுகாலத்துக்கு கொண்டுவருகிற நான்
பிரசவத்தைக் கொடாமல் விடுவேனோ?”
என்று யெகோவா சொல்கிறார்.
பேறுகாலத்துக்கு கொண்டுவருகிறபோது,
நான் கருப்பையை அடைப்பேனோ?
என்று உங்கள் இறைவன் கேட்கிறார்.
“எருசலேமை நேசிக்கின்றவர்களே, நீங்கள் எல்லோரும்
அவளுடன் சந்தோஷப்பட்டு, அவளுக்காக மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
அவளுக்காக துக்கப்படுகிறவர்களே,
நீங்கள் எல்லோரும் அவளுடன் சேர்ந்து பெருமகிழ்ச்சி அடையுங்கள்.
ஏனெனில் நீங்கள் ஆறுதலளிக்கும்
அவளுடைய மார்பகங்களில் பால் குடித்துத் திருப்தியடைவீர்கள்.
நீங்கள் தாராளமாகக் குடித்து,
பொங்கி வழியும் அதன் நிறைவில் மகிழ்வீர்கள்.”
ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே:
“நான் அவளுக்கு நீடிய சமாதானத்தை நதியைப்போலவும்,
நாடுகளின் செல்வத்தை
புரண்டோடும் நீரோடையைப்போல் நீடிக்கும்படி செய்வேன்.
நீங்கள் பாலூட்டப்பட்டு இடுப்பில் சுமக்கப்படுவீர்கள்;
மடியில் தாலாட்டப்படுவீர்கள்.
ஒரு தாய் தனது பிள்ளையை தேற்றுவதுபோல,
நான் உங்களைத் தேற்றுவேன்;
நீங்கள் எருசலேமிலே ஆறுதல் அடைவீர்கள்.”
நீங்கள் இதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழும்;
நீங்கள் புல்லைப்போல செழிப்பீர்கள்.
யெகோவாவின் கரம் அவரது ஊழியர்களுக்கு காண்பிக்கப்படும்;
ஆனால் அவரின் கடுங்கோபமோ, அவருடைய பகைவர்களுக்குக் காட்டப்படும்.
இதோ, யெகோவா நெருப்புடன் வருகிறார்,
அவருடைய தேர்கள் சுழல்காற்றைப்போல் விரைகின்றன;
அவர் தம் கோபத்தை மூர்க்கமாகவும்
தமது கண்டனத்தை நெருப்பு ஜுவாலையாகவும் கொண்டுவருவார்.
ஏனெனில், யெகோவா தன் நியாயத்தீர்ப்பை எல்லா மனிதர்மேலும்
நெருப்பினாலும் தமது வாளினாலுமே நிறைவேற்றுவார்;
யெகோவாவினால் மரண தண்டனைக்குட்படுவோர் அநேகராய் இருப்பார்கள்.
“தங்களை வேறுபடுத்தி சுத்திகரித்துக்கொண்டு, தோட்டங்களின் நடுவிலே ஒருவர் பின் ஒருவர் பின்பற்றும்படி போகிறவர்கள் பன்றிகளின் இறைச்சியையும், எலியையும் மற்ற அருவருப்பானதையும் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் ஒன்றாய் அழிவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
“நான் அவர்கள் எல்லோருடைய செயல்களையும் எண்ணங்களையும் அறிவேன். அதனால் எல்லா நாட்டினரையும் எல்லா மொழி பேசுபவரையும் ஒன்றுசேர்க்க வர இருக்கிறேன்; அவர்கள் வந்து எனது மகிமையைக் காண்பார்கள்.
“நான் அவர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவேன். அவர்களில் தப்பியிருப்பவர்களில் சிலரை, தர்ஷீஸ், பூல்66:19 சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் பூல் என்பது பூத் (லிபியா) என்றுள்ளது, விசேஷ வில்வீரர் இருக்கும் லூது, தூபால், யாவான்66:19 யாவான் என்பது கிரீஸ் ஆகும் ஆகிய தேசத்தாரிடமும் அனுப்புவேன். எனது புகழைக் கேள்விப்படாமலோ, எனது மகிமையைக் காணாமலோ இருக்கும் தூர தீவுகளில் உள்ளவர்களிடமும் அனுப்புவேன். அவர்கள் நாடுகளிடையே எனது மகிமையை அறிவிப்பார்கள். அவர்கள் உங்கள் சகோதரர் அனைவரையும், எல்லா நாடுகளிலிருந்தும் எருசலேமிலுள்ள எனது பரிசுத்த மலைக்கு யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவருவார்கள். குதிரைகள், தேர்கள், வண்டிகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றில் அவர்களைக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “இஸ்ரயேலர் தங்கள் தானிய காணிக்கைகளை, சம்பிரதாய முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திரங்களில் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவதைப்போல், அவர்களை கொண்டுவருவார்கள். அவர்களில் சிலரை நான் ஆசாரியர்களாகவும் லேவியராகவும் இருக்கும்படி தெரிந்தெடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் உண்டாக்கும் புதிய வானமும் புதிய பூமியும் எனக்குமுன் நிலைத்திருப்பதுபோலவே, உங்களுடைய பெயரும், உங்கள் சந்ததிகளும் நிலைத்திருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஒரு அமாவாசையிலிருந்து மறு அமாவாசை வரைக்கும், ஒரு ஓய்வுநாளிலிருந்து மறு ஓய்வுநாள் வரைக்கும் மனுக்குலம் யாவும் வந்து என்முன் விழுந்து வழிபடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். “அவர்கள் வெளியே போய், எனக்கு எதிராகக் கலகம் செய்தவர்களின் பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களைத் தின்னும் புழு சாகாது, அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்துபோகாது. அவர்கள் எல்லா மனுக்குலத்திற்கும் அருவருப்பாய் இருப்பார்கள்.”