- Biblica® Open Indian Tamil Contemporary Version
ஓசியா
ஓசியா
ஓசியா
ஓசி.
ஓசியா
யூதாவில் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அக்காலத்தில் இஸ்ரயேலில் யோவாசின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சிசெய்தான்.
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
ஓசியாவின்மூலம் யெகோவா பேசத் தொடங்கியபோது, யெகோவா அவனிடம், “நீ போய் ஒரு வேசியை மனைவியாகக்கொண்டு, வேசிப் பிள்ளைகளையும் பெற்றுக்கொள். ஏனெனில் நாடு யெகோவாவுக்கு விரோதமாக, மிகக் கேவலமான விபசாரக் குற்றத்தைச் செய்திருக்கிறது என்றார்.” அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”
மீண்டும் கோமேர் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றாள். அப்பொழுது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோருகாமா எனப் பெயரிடு. ஏனெனில் நான் திரும்பவும் ஒருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தை மன்னிக்கும்படி அவர்களுக்கு அன்புகாட்டமாட்டேன். ஆனால் யூதா குடும்பத்திற்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும், வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன் என்றார்.”
லோருகாமா பால்குடி மறந்தபின், கோமேர் இன்னொரு ஆண்குழந்தையைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா, “அவனுக்கு, லோகம்மீ என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்களல்ல, நான் உங்கள் இறைவனுமல்ல.
“ஆயினும் ஒரு நாள் வரும்; அப்பொழுது இஸ்ரயேலர்கள் அளவிடவோ, எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போலிருப்பார்கள். ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள். யூதாவின் மக்களும், இஸ்ரயேல் மக்களும் திரும்பவும் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரே தலைவனை நியமிப்பார்கள். அவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கும் நாட்டைவிட்டு வெளியே வருவார்கள். ஏனெனில் யெஸ்ரயேலின் நாள் மேன்மையுள்ளதாயிருக்கும்.
“அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள்.
இஸ்ரயேல் தண்டிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுதல்
“உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள்,
அவள் என் மனைவி அல்ல,
நான் அவள் கணவனும் அல்ல.
அவள் தன் விபசாரப் பார்வையை தன் முகத்தை விட்டகற்றட்டும்;
தன் உண்மையற்ற தன்மையைத் தன் மார்பகங்களிடையே இருந்தும் விலக்கட்டும்.
இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி,
அவள் பிறந்த நாளில் இருந்ததுபோலவே அவளை வெறுமையாக வைப்பேன்;
அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன்,
வறண்ட நிலமாக்கி,
அவளைத் தாகத்தினால் சாகப்பண்ணுவேன்.
நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன்.
ஏனெனில் அவர்கள் வேசிப்பிள்ளைகள்.
அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்;
அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள்.
அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன்,
அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும்,
கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள்.
எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்;
அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.
அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்;
ஆயினும் அவர்களைக் கண்டுபிடிக்கமாட்டாள்.
அவள் அவர்களைத் தேடுவாள்,
ஆனாலும் கண்டுபிடிக்கமாட்டாள்.
அப்பொழுது அவள்,
‘நான் முன்னிருந்ததுபோல என் கணவனிடம் திரும்பிப் போவேன்;
ஏனெனில் அப்பொழுது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள்.
நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய்
ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும்,
நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன்
என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை;
ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.
“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன்,
எனது புதுத் திராட்சை இரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துப்போடுவேன்.
அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும்,
எனது மென்பட்டு உடையையும் எடுத்துப்போடுவேன்.
நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக,
அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்;
எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது.
நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்:
வருடாந்தர விழாக்கள், அமாவாசைகள், ஓய்வுநாட்கள் ஆகிய
அவளது நியமிக்கப்பட்ட எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்திவிடுவேன்.
தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி
என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்,
அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன்.
நான் அவற்றை புதர்க் காடாக்குவேன்,
காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும்.
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக,
நான் அவளைத் தண்டிப்பேன்;
அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு,
தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள்.
என்னையோ மறந்துவிட்டாள்” என்று யெகோவா சொல்கிறார்.
“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்;
நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று,
அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன்.
அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை
நான் அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்;
நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை,
எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன்.
அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது,
பாடியதுபோல் அங்கே பாடுவாள்.
“அந்த நாளிலே, நீ என்னை
‘என் பாகாலே’ என்று அழைக்காமல்,
‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்;
அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லி வணங்கப்படமாட்டாது.
அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும்,
ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும்
ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்.
நான் வில்லையும் வாளையும்
யுத்தத்தையும் நாட்டில் இராதபடி செய்வேன்;
அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள்.
நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்;
நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும்,
அன்புடனும், கருணையுடனும் நிச்சயித்துக்கொள்வேன்.
நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்;
நீயும் யெகோவாவை ஏற்றுக்கொள்வாய்.
“அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்”
என்கிறார் யெகோவா:
“நான் ஆகாயங்களுக்குக் கட்டளை கொடுப்பேன்,
அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய்
ஆகியவற்றுக்கு மறுமொழி கொடுக்கும்;
இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.
நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்;
‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு
நான் எனது அன்பைக் காட்டுவேன்.
‘என்னுடைய மக்கள் அல்ல2:23 எபிரெய மொழியில் என்னுடைய மக்கள் அல்ல என்பது லோ அம்மீ என்று எழுதப்பட்டுள்ளது.’ என்று அழைக்கப்பட்டவர்களை,
‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்;
அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”
ஓசியா தன் மனைவியுடன் திரும்பவும் சேர்தல்
பின்பு யெகோவா என்னிடம், “நீ உன் மனைவியிடம் திரும்பவும் போய், அவளிடத்தில் அன்பு செலுத்து, அவள் உன் மனைவி. வேறொருவனால் அன்பு செலுத்தப்பட்டவளும், விபசாரியுமாய் இருந்தாலும், நீ அவளில் அன்பு செலுத்து. வேறு தெய்வங்களின் பக்கம் திரும்பி, புனிதமான திராட்சைப்பழ அடைகளை விரும்புகிற இஸ்ரயேலில் யெகோவா அன்பாயிருக்கிறதுபோல, நீயும் அவளில் அன்பாயிரு என்றார்.”
எனவே நான் அவளை எனக்காக பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், 150 கிலோ வாற்கோதுமையும் கொடுத்து வாங்கினேன். பின்பு நான் அவளிடம், “அநேக நாட்களுக்கு நீ என்னுடனே வாழவேண்டும்; நீ வேசியாயிராதே, நீ ஒருவரோடும் பாலுறவு கொள்ளாதே; நான் உனக்காகத் காத்திருப்பேன், நான் உன்னுடன் வாழ்வேன் என்றேன்.”
இஸ்ரயேலர் அநேக நாட்களுக்கு அரசனும் இளவரசனும் இல்லாமலும், பலியும், ஏபோத்தும், புனிதக் கற்களும் இல்லாமலும் இருப்பார்கள். விக்கிரகங்களுங்கூட இல்லாமல் இருப்பார்கள். இவற்றுக்குப்பின் இஸ்ரயேலர் திரும்ப வந்து, தங்களது இறைவனாகிய யெகோவாவையும், அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள். கடைசி நாட்களில் அவர்கள் யெகோவாவையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் நாடி, நடுக்கத்துடன் வருவார்கள்.
இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு
இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி,
ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது:
நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை,
இறைவனை அறியும் அறிவு இல்லை.
அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும்,
களவும், விபசாரமும் மட்டுமே உண்டு;
அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர்,
இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது.
இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது,
அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள்.
வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும்,
கடலில் உள்ள மீன்களும் சாகின்றன.
ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம்.
ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம்.
ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக்
குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்;
ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான்.
நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்;
இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள்.
எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன்.
எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள்.
“நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள்,
அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன்.
நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால்,
நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன்.
ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது,
அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்;
அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை
வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.
எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து,
அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள்.
அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும்.
எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன்.
அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்;
அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்;
ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள்.
புது மற்றும் பழைய திராட்சை இரசம்
எனது மக்களின்
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது.
எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்;
அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள்.
வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது;
அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு,
குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை,
தேவதாரு ஆகிய மரங்களின் கீழும்
தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள்.
எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும்,
மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும்,
மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும்
நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்.
ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு,
கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள்,
அறிவில்லாத அம்மக்கள்
சீரழிந்து போவார்கள்.
“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும்,
யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும்.
“நீ கில்காலுக்குப் போகவேண்டாம்;
பெத்தாவேனுக்கும் போகவேண்டாம்.
‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.
இஸ்ரயேலரோ அடங்காத
இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள்.
அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில்
செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?
எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்;
அவனைத் தனியே விட்டுவிடு!
அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும்,
அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்;
அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.
சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும்,
அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள்
அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.
இஸ்ரயேலுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு
“ஆசாரியர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்;
இஸ்ரயேல் வீட்டாரே கவனியுங்கள்;
அரச குடும்பத்தாரே, செவிகொடுங்கள்;
இந்த நியாயத்தீர்ப்பு உங்களுக்கெதிரானதே.
ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே கண்ணியாகவும்,
தாபோரிலே விரிக்கப்பட்ட வலையாகவும் இருக்கிறீர்கள்.
கலகக்காரர்கள் கொலைசெய்வதில் வேரூன்றி இருக்கிறார்கள்.
நான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துத் திருத்துவேன்.
எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்;
இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்பொழுது வேசித்தனத்திற்கு திரும்பிவிட்டாய்;
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
“அவர்களுடைய செயல்கள் அவர்களை
அவர்களுடைய இறைவனிடம் திரும்புவதற்கு விடாதிருக்கிறது.
வேசித்தன ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கிறது;
யெகோவாவைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது;
இஸ்ரயேலும் எப்பிராயீமும் தங்கள் பாவத்தில் இடறி விழுகிறார்கள்;
அவர்களுடன் யூதாவுங்கூட இடறி விழுகிறது.
அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும்
யெகோவாவை தேடிப் பலியிட வருவார்கள்;
ஆனால் அவர்கள் அவரைக் காணமாட்டார்கள்;
ஏனெனில் அவர் அவர்களைவிட்டு விலகினார்.
அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்களுடைய பிள்ளைகளும் எனக்குரியவர்களல்ல.
இப்பொழுதும் அவர்களுடைய அமாவாசைப் போலிக் கொண்டாட்டங்கள்
அவர்களையும் அவர்களுடைய வயல்களையும் விழுங்கிப்போடும்.
“கிபியாவில் எக்காளத்தையும்,
ராமாவிலே கொம்பு வாத்தியத்தையும் ஊதுங்கள்.
பெத் ஆவெனில் போர் முழக்கமிடுங்கள்;
பென்யமீனே, நீ முன்னேசெல்.
தண்டனையின் நாளில்
எப்பிராயீம் பாழாய் விடப்படும்.
நிச்சயமாய் நடக்கப் போகிறதையே,
நான் இஸ்ரயேல் கோத்திரங்கள் மத்தியில் பிரசித்தப்படுத்துகிறேன்.
யூதாவின் தலைவர்கள்
எல்லைக் கற்களை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
என் கோபத்தை வெள்ளத்தைப்போல்
அவர்கள்மேல் ஊற்றுவேன்.
எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு,
நியாயத்தீர்ப்பில் நசுக்கப்படுவான்.
ஏனெனில் அவன் விக்கிரகங்களைப் பின்பற்றுவதையே நோக்கமாய் கொண்டிருக்கிறான்.
அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப் பூச்சியைப்போலவும்,
யூதாவின் வீட்டாருக்கு அழுகல் நோய்போலவும் இருப்பேன்.
“எப்பிராயீம் தன் வியாதியையும்,
யூதா தன் புண்களையும் கண்டபோது,
எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி,
அதன் பெரிய அரசனிடம் உதவி கேட்டனுப்பினான்.
ஆனால் உனக்கு சுகமாக்கவும்,
உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.
ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கம் போலவும்,
யூதாவுக்கு பெருஞ்சிங்கம் போலவும் இருப்பேன்.
நான் அவர்களை துண்டுகளாய் கிழித்து தூக்கிக்கொண்டு போவேன்;
ஒருவரும் அவர்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.
எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு,
என் முகத்தைத் தேடுமட்டும்
நான் என்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிப் போவேன்.
அவர்கள் தங்கள் அவலத்தில்
என்னை வாஞ்சையாய்த் தேடுவார்கள்.”
மனமாறாத இஸ்ரயேல்
வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்,
ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார்.
அவர் நம்மை நொறுக்கினார்,
ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்;
மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.
நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக;
நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக.
சூரியன் உதிப்பது நிச்சயம்போல,
அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம்.
அவர் மழையைப்போலவும்,
பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்?
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும்,
விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.
அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்;
என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்;
என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும்.
நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்;
தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி,
அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள்.
கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்;
அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது.
கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல,
ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள்.
அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து,
வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள்.
இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்;
எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது,
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
யூதாவே, உனக்கும்
ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது.
“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது,
எப்பிராயீமின் பாவங்களும்,
சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும்.
அவர்கள் வஞ்சனையைக் கைக்கொள்கிறார்கள்;
திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகிறார்கள்,
கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள்.
அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை
அவர்கள் உணராதிருக்கிறார்கள்.
அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன;
அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன.
“தங்கள் கொடுமையினால் அரசனையும்,
பொய்யினால் இளவரசர்களையும் மகிழ்விக்கின்றார்கள்.
அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர்.
அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள்.
மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும்,
அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில்,
இளவரசர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டார்கள்;
அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோத்திருக்கிறான்.
அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால்
அடுப்பைப்போல் எரிகின்றன;
இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது;
காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது.
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி,
அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள்.
அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்;
ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
“எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்;
எப்பிராயீம் புரட்டிப் போடாததினால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான்.
அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்;
ஆனால் அவன் அதை உணர்கிறதில்லை.
அவன் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டது,
ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை.
இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது.
இவையெல்லாம் நடந்துங்கூட,
அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை,
அவரைத் தேடவுமில்லை.
“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன்,
அவன் புத்தியில்லாதவனாயும் இருக்கிறான்.
முதலில் அவன் எகிப்தை உதவிக்குக் கூப்பிடுகிறான்;
பின் அசீரியாவினிடத்திற்கும் திரும்புகிறான்.
எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது,
நான் எனது வலையை அவர்கள்மேல் வீசுவேன்;
ஆகாயத்துப் பறவைகள்போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்;
அவர்கள் ஒன்றாய்கூடும் சத்தத்தை நான் கேட்கும்போது,
நான் அவர்களை எச்சரித்ததுபோல் தண்டிப்பேன்.
அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது,
ஏனெனில், அவர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்களுக்கு அழிவு வருகிறது.
ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் பண்ணியிருக்கிறார்கள்.
நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகிறேன்,
ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர,
தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி அழுவதில்லை.
தானியத்திற்காகவும், புதுத் திராட்சை இரசத்திற்காகவும் மட்டுமே
அவர்கள் பாகால் தெய்வத்திற்குமுன் ஒன்றுகூடுகிறார்கள்.
எனவே அவர்கள் என்னைவிட்டு வழிவிலகிப் போகிறார்கள்.
நான் அவர்களைப் பயிற்றுவித்து பெலப்படுத்தினேன்;
ஆயினும், அவர்கள் எனக்கெதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்;
ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை.
அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்;
அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம்,
வாளினால் விழுவார்கள்.
இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.
இஸ்ரயேல் சுழல்காற்றை அறுவடை செய்தல்
“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்;
யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான்.
ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி,
எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.
‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று
இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.
ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்;
அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.
என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்;
எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும்
தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்;
இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.
யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு;
எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது.
எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது;
அது இறைவனல்ல,
அதை ஒரு கைவினைஞன் செய்தான்,
எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி
துண்டுதுண்டாக உடைக்கப்படும்.
“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து,
சுழல்காற்றை அறுவடை செய்கிறார்கள்.
பயிரின் தண்டில் கதிர் இல்லை;
அதிலிருந்து மாவும் கிடைக்காது.
அது தானியத்தைக் கொடுக்குமானால்
அவற்றை அந்நியர் விழுங்குவார்கள்.
இஸ்ரயேல் விழுங்கப்பட்டது;
இப்பொழுது அவர்கள் நாடுகளுக்குள்ளே
ஒருவருக்கும் பயனற்ற பானையைப்போல் இருக்கிறார்கள்.
அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல்
அசீரியாவுக்குப் போய்விட்டார்கள்.
எப்பிராயீமர் தன்னை தன் காதலர்களுக்கு விற்றுப் போட்டார்கள்.
அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும்,
இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன்.
வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ்,
அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.
“எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும்,
இவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின.
நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய
அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்;
ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.
அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி,
அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்;
ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை.
இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு,
அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார்.
அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள்.
ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து,
அரண்மனைகளைக் கட்டுகிறது;
யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது.
ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்;
அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”
இஸ்ரயேலுக்குத் தண்டனை
இஸ்ரயேலே, நீ மகிழாதே;
மற்ற நாடுகளைப்போல் களிகூராதே;
ஏனெனில் நீ உனது இறைவனுக்கு உண்மையில்லாமல் இருக்கிறாய்.
நீ தானியத்தை சூடடிக்கும் எல்லா களங்களிலும்
வேசித்தனத்தின் கூலியைப் பெற விரும்புகிறாய்.
சூடடிக்கும் களங்களும் திராட்சை ஆலைகளும் மக்களுக்கு உணவளிக்காது;
புதுத் திராட்சை இரசம் அவர்களுக்குக் கிடைக்காது.
அவர்கள் யெகோவாவின் நாட்டில் குடியிருக்கமாட்டார்கள்;
ஆனால் எப்பிராயீம் எகிப்திற்குத் திரும்பிப் போகும்,
அசீரியாவில் அசுத்தமான உணவைச் சாப்பிடும்.
அவர்கள் யெகோவாவுக்கு திராட்சை இரசக் காணிக்கைகளைச் செலுத்தமாட்டார்கள்;
அவர்களுடைய பலிகள் அவரை மகிழ்விக்காது.
அப்படிப்பட்ட பலிகள், அவர்களுக்கு துக்க வீட்டு உணவைப் போன்றவை;
அவற்றைச் சாப்பிடுகிறவர்கள் எல்லோரும் அசுத்தமாயிருப்பார்கள்.
ஏனெனில், இந்த உணவு அவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும்;
அது யெகோவாவின் ஆலயத்திற்குள் வருவதில்லை.
யெகோவாவின் பண்டிகை நாட்களிலும்,
நியமிக்கப்பட்ட உங்கள் கொண்டாட்ட நாட்களிலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலுங்கூட,
எகிப்து அவர்களை அழிவுக்கு ஒன்றுசேர்க்கும்;
மெம்பிஸ் அவர்களை அடக்கம்பண்ணும்.
அவர்களுடைய வெள்ளியினாலான திரவியங்களை நெரிஞ்சில்கள் மூடும்;
அவர்களுடைய கூடாரத்தையும் முட்செடிகள் மூடும்.
தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன;
கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன.
இதை இஸ்ரயேல் தெரிந்துகொள்ளட்டும்.
உனது பாவங்கள் அநேகமாயிருக்கிறதினாலும்,
உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கிறதினாலும்
இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான்.
இறைவனால் தூண்டுதல் பெற்றவன் பைத்தியக்காரனாய் எண்ணப்படுகிறான்.
என் இறைவனோடு இறைவாக்கினனே
எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கிறேன்.
ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிகள் காத்திருக்கின்றன;
அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது.
கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல்,
அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள்.
யெகோவா அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு,
அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது,
அது பாலைவனத்தில் திராட்சைப் பழங்களைக்
கண்டுபிடித்ததுபோல் எனக்கு இருந்தது;
நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது,
அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின்
முதல் பழங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது.
ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடத்திற்கு வந்தபோது,
வெட்கக்கேடான பாகால் விக்கிரகத்திற்கு தங்களை அர்ப்பணித்து,
தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே, கேவலமானவர்களானார்கள்.
எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்தோடிவிடும்;
அவர்களுக்குள் பிறப்போ, கருவில் சுமப்பதோ
அல்லது கருத்தரிப்பதோ இல்லை.
அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட,
அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படி நான் செய்வேன்.
நான் அவர்களைவிட்டு விலகும்போது,
அவர்களுக்கு ஐயோ கேடு!
இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப்போல்,
நான் எப்பிராயீமை கண்டேன்.
ஆனால், எப்பிராயீம் தன் பிள்ளைகளைக்
கொலைக்குக் கொடுக்கும்படி பகைவனைக் கூட்டிவருவான்.
யெகோவாவே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்?
கருச்சிதைவு உண்டாகும் கர்ப்பப்பைகளையும்,
பால் சுரக்க முடியாத மார்பகங்களையும்
அவர்களுக்குக் கொடும்.
“கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக
அங்கே நான் அவர்களை வெறுத்தேன்.
அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம்,
நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன்.
நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன்,
அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள்.
எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்,
அவர்களின் வேர் உலர்ந்துபோயிற்று;
இனிமேல் அவர்கள் கனி கொடுப்பதில்லை.
அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,
அவர்களுடைய அருமையான சந்ததிகளை நான் நீக்கிப்போடுவேன்.”
என் இறைவன் அவர்களைத் தள்ளிவிடுவார்,
ஏனெனில் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை;
அவர்கள் பிற நாடுகளுக்குள்ளே அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள்.
இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி,
அவன் தனக்கென கனிகொடுக்கிறது.
அவனுடைய கனிகள் பெருகியபோது,
அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு செழித்தபோது,
தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது.
இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து,
புனிதக் கற்களை அழித்துப்போடுவார்.
அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால்,
எங்களுக்கு அரசன் இல்லை;
அரசன் இருந்தாலுங்கூட,
அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள்.
அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள்,
பொய் சத்தியங்களையும்
ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்;
எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல்
வழக்குகள் தோன்றுகின்றன.
சமாரியாவில் வாழ்கிற மக்கள்
பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள்.
அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு,
நாடுகடத்தப்படும்.
அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்;
அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள்.
அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக
அங்கு கொண்டுபோகப்படும்.
அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும்.
இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
சமாரியாவும் அதன் அரசனும்
தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள்.
இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்;
இதுவே இஸ்ரயேலின் பாவம்.
முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து
அதன் மேடைகளை மூடும்.
அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்;
அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய்.
கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல்
யுத்தம் வரவில்லையோ?
ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்;
உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென,
பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற
பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு.
நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன்.
நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்;
யூதாவும் நிலத்தை உழவேண்டும்,
யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும்.
உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே;
ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள்,
அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள்.
உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள்,
ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும்
இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது.
ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள்,
தீமையை அறுவடை செய்தீர்கள்,
வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள்.
ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும்,
உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள்.
அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும்,
உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும்.
யுத்தநாளில் பெத்தார்பேலை சல்மான் அழித்தபோது,
தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டதுபோல இதுவும் இருக்கும்.
பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால்
உனக்கு இப்படி நடக்கும்.
அந்த நாள் வருகிறபோது,
இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான்.
யெகோவா இஸ்ரயேலில் அன்பாயிருத்தல்
“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்;
எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ,
அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள்.
அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு,
உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள்.
எப்பிராயீமைக் கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே;
ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே
என்பதை அவர்கள் உணரவில்லை.
நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும்
மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன்.
ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன்,
அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன்,
அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
“ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள்.
ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ?
அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ?
நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால்
வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து,
வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும்.
என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும்,
அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன்.
“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்?
இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?
நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்?
நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்?
என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது;
என் கருணை பொங்குகிறது.
ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்;
நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன்.
ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல;
நான் இறைவன்.
எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன்.
ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்;
அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார்.
அவர் கர்ஜிக்கும்போது,
அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள்.
எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும்,
அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும்
அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள்.
நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்”
என யெகோவா அறிவிக்கிறார்.
இஸ்ரயேலின் பாவம்
எப்பிராயீமியர் பொய்களுடனும்,
இஸ்ரயேல் குடும்பம் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
யூதாவும் உண்மையுள்ள,
பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான்.
எப்பிராயீம் காற்றை மேய்கிறான்,
நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான்.
பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான்.
அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்;
எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.
யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது.
யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்;
அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார்.
யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே,
தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்;
மனிதனானபோது இறைவனோடு போராடினான்.
அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்;
அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான்.
இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு,
அங்கே நம்முடன் பேசினார்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே;
யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.
யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள்.
அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்;
எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.
ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற
வியாபாரிபோல் இருக்கிறீர்கள்;
அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான்.
அத்துடன் எப்பிராயீமோ,
“நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன்.
என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில்
அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.”
“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல,
நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன்.
அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி,
அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்;
அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”
கீலேயாத் கொடுமையானதா?
அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்;
கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா?
அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள
கற்குவியலைப்போல் ஆகும்.
யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்;
இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்;
அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான்.
யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி,
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;
இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார்.
ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்;
எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார்.
அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.
இஸ்ரயேலுக்கு எதிரான யெகோவாவின் கோபம்
முன்பு எப்பிராயீம் பேசியபோது மனிதர் நடுங்கினார்கள்;
அவன் இஸ்ரயேலில் மேன்மை அடைந்திருந்தான்.
ஆனால் பாகாலை வணங்கிய குற்றத்தினால் அழிந்துபோனான்.
இப்பொழுதோ அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்கிறார்கள்,
அவர்கள் தங்கள் வெள்ளியினாலேயே தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்.
திறமையாய் வடிவமைக்கப்பட்ட அந்த உருவச்சிலைகள் யாவும்
கைவினைஞனின் வேலைப்பாடாய் இருக்கின்றன.
இந்த மக்களைக் குறித்து,
“அவர்கள் மனித பலிகளைச் செலுத்துகிறார்கள்.
கன்றுக்குட்டி விக்கிரகத்தை முத்தமிடுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.”
ஆகவே, அவர்கள் காலை நேர மூடுபனிபோலவும்,
அதிகாலைப் பனிபோலவும் மறைந்துபோவார்கள்,
சூடடிக்கும் களத்திலிருந்து பறக்கும் பதரைப்போலவும்
புகைபோக்கியினூடாகப் போகும் புகையைப்போலவும் இருப்பார்கள்.
“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
உங்கள் இறைவனாகிய யெகோவா நானே;
என்னைத்தவிர வேறு இறைவனையும்,
என்னைத்தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம்.
மிகவும் வெப்பம் நிறைந்த தேசமான
பாலைவனத்தில் நான் அவர்களைப் பாதுகாத்தேன்.
நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது,
அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள்.
அதன்பின் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
ஆகவே நான் அவர்களுக்கு சிங்கத்தைப்போல் இருப்பேன்;
அவர்களுடைய வழியின் அருகே சிறுத்தையைப்போல் பதுங்கியிருப்பேன்.
தன் குட்டியை இழந்த கரடியைப்போல்
நான் அவர்களைத் தாக்கிக் கிழிப்பேன்;
சிங்கத்தைப்போல் நான் அவர்களை விழுங்குவேன்,
காட்டுமிருகம் அவர்களைக் கிழித்துப்போடும்.
“இஸ்ரயேலே, உனது உதவியாளரான எனக்கு நீ விரோதமாயிருக்கிறபடியால்,
நீ அழிவை உண்டாக்கிக்கொண்டாய்.
ஆனால் உன்னைக் காப்பாற்றுவதற்கு உன் அரசன் எங்கே?
‘எனக்கு அரசர்களையும் இளவரசர்களையும் கொடும்’
என்று கேட்டாயே.
உன் பட்டணத்திலுள்ள உன்னுடைய அந்த ஆளுநர்கள் எங்கே?
எனது கோபத்தில் நான் உனக்கு அரசனைக் கொடுத்தேன்;
பின்பு நான் எனது கோபத்தில் அவனை எடுத்துக்கொண்டேன்.
எப்பிராயீமின் குற்றங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன;
அவனது பாவங்கள் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
பிள்ளை பெறுகிற பெண்ணின் வேதனைக்கொத்த வேதனை அவனுக்கு வருகிறது;
அவன் ஞானமில்லாத பிள்ளை;
பிறக்கும் நேரம் வந்தும்
அவன் கருப்பையைவிட்டு வெளியே வராதிருக்கிறான்.
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்;
மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன்.
மரணமே, உன் வாதைகள் எங்கே?
பாதாளமே, உன் அழிவு எங்கே?
“இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன்.
இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும்,
யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று
பாலைவனத்திலிருந்து பலமாக வீசும்.
அப்பொழுது உனது நீரூற்று வறண்டு,
கிணறுகள் காய்ந்து போகும்.
உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள்
எல்லாம் கொள்ளையடிக்கப்படும்.
சமாரியர் தமது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தபடியினால்,
அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்;
அவர்களுடைய குழந்தைகள் நிலத்தில் மோதியடிக்கப்படுவார்கள்;
அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.”
மனந்திரும்புதலின் ஆசீர்வாதம்
இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு;
உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.
நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன்
யெகோவாவிடம் திரும்புங்கள்;
நீங்கள் அவரிடம்,
“எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும்,
எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்;
அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை
காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.
அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது;
நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம்.
எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை
‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்;
ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.”
“நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்,
நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன்,
எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்;
அவன் லில்லியைப்போல் பூப்பான்.
லெபனோனின் கேதுருபோல்
வேரூன்றி நிற்பான்.
அவனுடைய இளந்தளிர்கள் வளரும்.
அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும்,
அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும்.
திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்;
அவன் தானியத்தைப்போல் செழிப்பான்.
திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்;
அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும்.
எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை;
இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன்.
நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன்.
அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.”
ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான்.
பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான்.
யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்;
நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள்,
ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.