- Biblica® Open Indian Tamil Contemporary Version ஆதியாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் ஆதி. ஆதியாகமம் படைப்பின் வரலாறு ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது.1:2 9, 10 ஆம் வசனங்களின்படி பூமிக்கு உலர்ந்த தரையான நிலம் மற்றும், கடல் என நிலை இருந்ததில்லை. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று. ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும், அவை பூமிக்கு ஒளி கொடுக்கும்படி, வானவெளியில் ஒளிச்சுடர்களாய் இருக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். இறைவன் அவற்றைப் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வானவெளியில் வைத்தார். பகலையும் இரவையும் ஆளுவதற்காகவும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதற்காகவும் அவற்றை வைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் பெரிய கடல் விலங்குகளையும், நீரில் நீந்தி வாழும் எல்லா உயிரினங்களையும் அவற்றின் வகைகளின்படியும், சிறகுள்ள எல்லா பறவைகளையும் அதினதின் வகைகளின்படியும் படைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார். அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார். அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார். அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும். பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று. இவ்வாறு வானமும் பூமியும், அவற்றில் உள்ள எல்லாம் உண்டாக்கப்பட்டு முடிந்தன. ஏழாம்நாள் ஆகும்போது இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்தார்; ஆதலால் அவர், ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார். இறைவன் தாம் செய்துமுடித்த படைப்பின் வேலைகள் எல்லாவற்றிலுமிருந்து ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தபடியால், அந்த நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆதாமும் ஏவாளும் இறைவனாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கியபோது, வானமும் பூமியும் படைக்கப்பட்ட வரலாறு இவைகளே. இறைவனாகிய யெகோவா பூமியில் மழையை அனுப்பாதிருந்ததினால், பூமியில் எந்தப் புதரும் இன்னும் காணப்படவுமில்லை, எந்த செடிகளும் இன்னும் முளைத்திருக்கவும் இல்லை; நிலத்தைப் பண்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. ஆனாலும், பூமியிலிருந்து மூடுபனி மேலெழும்பி நிலத்தின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தது. இறைவனாகிய யெகோவா நிலத்தின் மண்ணினால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசியில் உயிர்மூச்சை ஊதினார்; அப்பொழுது மனிதன் உயிருள்ளவனானான். இறைவனாகிய யெகோவா, கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடியமர்த்தினார். இறைவனாகிய யெகோவா பார்வைக்கு இனியதும் உணவுக்கு ஏற்றதுமான எல்லா வகையான மரங்களையும் அத்தோட்டத்தில் வளரச்செய்தார். தோட்டத்தின் நடுவில் வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன. ஏதேனிலிருந்து ஒரு ஆறு ஓடி, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது. அங்கிருந்து அது நான்கு ஆறுகளாகப் பிரிந்து ஓடியது. முதலாம் ஆற்றின் பெயர் பைசோன்; அது தங்கம் விளையும் தேசமான ஆவிலா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. அந்த நாட்டின் தங்கம் மிகத் தரமானது; அங்கே நறுமணமுள்ள சாம்பிராணியும் கோமேதகக் கல்லும் இருந்தன. இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. மூன்றாம் ஆற்றின் பெயர் திக்ரீசு என்ற இதெக்கேல். இது அசீரியா நாட்டின் கிழக்குப் பக்கம் ஓடியது. நான்காம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர். இறைவனாகிய யெகோவா, மனிதனைக் கொண்டுபோய், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார். பின்பு இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டு, “நீ தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் சாப்பிடலாம்; ஆனால் நீ நன்மை தீமையின் அறிவைத் தரும் மரத்திலிருந்து மட்டும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதிலிருந்து சாப்பிடும் நாளில் நிச்சயமாய் நீ சாகவே சாவாய்” என்று சொன்னார். பின்பு இறைவனாகிய யெகோவா, “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன்” என்றார். அப்பொழுது இறைவனாகிய யெகோவா எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார். மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படி அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. இவ்வாறு மனிதன் எல்லா வளர்ப்பு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். ஆனால் ஆதாமுக்கோ தகுந்த துணை இன்னமும் காணப்படவில்லை. எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில்2:21 எலும்புகளில் அல்லது மனிதனின் ஓரப் பக்கத்தில் ஒரு பகுதியை எடுத்தார் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார். அப்பொழுது மனிதன் சொன்னான்: “இவள் என் எலும்பின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.” இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை. வீழ்ச்சி இறைவனாகிய யெகோவா உண்டாக்கியிருந்த காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும்விட, பாம்பு அதிக தந்திரமுள்ளதாய் இருந்தது. பாம்பு அப்பெண்ணிடம், “தோட்டத்தில் உள்ள எந்த ஒரு மரத்திலிருந்தும் சாப்பிடவேண்டாம் என்று இறைவன் உங்களுக்குச் சொன்னாரோ?” எனக் கேட்டது. அதற்கு அந்தப் பெண் பாம்பிடம், “தோட்டத்திலுள்ள மரங்களின் பழங்களை நாங்கள் சாப்பிடலாம்; ஆனால் இறைவன், ‘நீங்கள் தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்திலிருந்து பழத்தை சாப்பிடக்கூடாது, அதைத் தொடவும் கூடாது, மீறினால் சாவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றாள். அதற்குப் பாம்பு அந்தப் பெண்ணிடம், “நிச்சயமாக நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்று சொன்னது. “ஏனெனில் அந்த மரத்திலிருந்து சாப்பிடும் நாளிலே, உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் இறைவனைப் போலாகி, நன்மையையும் தீமையையும் அறிவீர்கள் என்பது இறைவனுக்குத் தெரியும்” என்றது. அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதாயும், பார்வைக்கு அழகானதாயும் இருந்ததுடன், அது அறிவைப் பெறுவதற்கு விரும்பத்தக்கதாயும் இருக்கக் கண்டாள்; அவள் அதின் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். பின்பு அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் சாப்பிடக் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். பிறகு அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு, முன்னர் அறிந்திராத விஷயங்களை அறிந்துகொண்டார்கள்; அப்பொழுது தாங்கள் இருவரும் நிர்வாணிகளாய் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே அவர்கள் அத்தியிலைகளைத் தைத்துத் தங்களை மூடிக்கொண்டார்கள். அன்று மாலை தென்றல் காற்று வீசிய வேளையில், இறைவனாகிய யெகோவா தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கும் சத்தத்தை மனிதனும் அவன் மனைவியும் கேட்டார்கள்; உடனே அவர்கள் தோட்டத்தின் மரங்களுக்கு இடையில் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து ஒளிந்துகொண்டார்கள். ஆனாலும் இறைவனாகிய யெகோவா மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் தோட்டத்தில் உமது சத்தத்தைக் கேட்டேன்; நான் நிர்வாணியாய் இருந்தபடியால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான். அதற்கு யெகோவா, “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிட வேண்டாமென்று நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ சாப்பிட்டாயோ?” என்று கேட்டார். அதற்கு மனிதன், “என்னுடன் இங்கு இருப்பதற்கு நீர் எனக்குத் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள்; நான் சாப்பிட்டேன்” என்றான். பின்பு இறைவனாகிய யெகோவா அந்த பெண்ணிடம், “நீ செய்திருக்கும் இந்தக் காரியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, அதனால்தான் நான் சாப்பிட்டேன்” என்று சொன்னாள். அதனால் இறைவனாகிய யெகோவா பாம்பிடம் சொன்னதாவது: “நீ இவ்வாறு செய்திருக்கிறபடியால், “வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிகமாய் சபிக்கப்பட்டிருப்பாய்! நீ வயிற்றினால் ஊர்ந்து திரிவாய்; உன் உயிருள்ள நாளெல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும் இடையிலும், உன்னுடைய சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் இடையிலும் நான் பகையை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவரது குதிங்காலை நசுக்குவாய்.” அதன்பின்பு அவர் பெண்ணிடம் சொன்னதாவது: “உன் குழந்தைபேற்றின் வேதனையை அதிகமாய்க் கூட்டுவேன்; வேதனையோடு நீ குழந்தைகளைப் பெறுவாய்; உன் ஆசை உன் கணவன் மேலேயே இருக்கும், அவன் உன்னை ஆண்டு நடத்துவான்.” அவர் ஆதாமிடம் சொன்னதாவது: “ ‘நீ சாப்பிடவேண்டாம்,’ என நான் உனக்குக் கட்டளையிட்ட மரத்திலிருந்து நீ உன் மனைவியின் சொல்லைக் கேட்டுச் சாப்பிட்டபடியினால், “உன் நிமித்தம் பூமி சபிக்கப்பட்டிருக்கும்; உன் வாழ்நாளெல்லாம் நீ வருந்தி உழைத்தே பூமியின் பலனைச் சாப்பிடுவாய். பூமி முற்களையும் முற்புதர்களையும் உனக்கு விளைவிக்கும், வயலின் பயிர்களையே நீ சாப்பிடுவாய். நீ புழுதியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ புழுதிக்குத் திரும்பும்வரை, நெற்றி வியர்வை சிந்தியே உன் உணவைச் சாப்பிடுவாய்; நீ புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்டதால் புழுதிக்கே திரும்புவாய்.” ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள்3:20 ஏவாள் என்பதற்கு வாழ்பவள் என்று அர்த்தம். என்று பெயரிட்டான், ஏனெனில் பூமியில் வாழ்வோருக்கெல்லாம் தாயாவாள். இறைவனாகிய யெகோவா தோலினால் உடைகளைச் செய்து, ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் உடுத்தினார். அதன்பின் இறைவனாகிய யெகோவா, “மனிதன் இப்பொழுது நன்மையையும் தீமையையும் அறிந்து, நம்மில் ஒருவரைப்போல் ஆகிவிட்டான். அவன் தன் கையை நீட்டி, வாழ்வளிக்கும் மரத்திலிருந்து பறித்துச் சாப்பிட்டு, என்றென்றைக்கும் உயிர்வாழ இடமளிக்கக் கூடாது” என்றார். எனவே இறைவனாகிய யெகோவா, நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட அவனை நிலத்தையே பண்படுத்திப் பயிர்செய்யும்படி, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தினார். அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டபின், ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக கேருபீன்களையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி வைத்தார். காயீனும் ஆபேலும் ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, “நான் யெகோவாவின் உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவள் காயீனின் சகோதரனான ஆபேலைப் பெற்றாள். ஆபேல் மந்தை மேய்த்தான், காயீன் விவசாயம் செய்தான். சிறிது காலத்தின்பின் காயீன் தன் நிலத்தின் விளைச்சலில் சிலவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் கொழுத்தத் தலையீற்றுகளில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். யெகோவா ஆபேலையும் அவன் காணிக்கையையும் தயவுடன் ஏற்றுக்கொண்டார், ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் கடுங்கோபங்கொண்டான், கோபத்தால் அவன் முகம் சோர்ந்திருந்தது. அப்பொழுது யெகோவா காயீனிடம், “நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் ஏன் சோர்ந்திருக்கிறது? நீ சரியானதைச் செய்தால், நீ உயர்வு பெறுவாய் அல்லவா? நீ சரியானதைச் செய்யாவிட்டால், உன் கதவடியில் பதுங்கிக் கிடக்கும் பாவம் உன்னைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுமே; நீயோ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார். அதன்பின்பு காயீன் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலில் இருக்கையில் காயீன் தன் சகோதரன் ஆபேலைத் தாக்கிக் கொன்றான். அப்பொழுது யெகோவா காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என் சகோதரனுக்குக் காவல்காரனோ?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நீ என்ன செய்துவிட்டாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கிக் கதறுகிறது! இப்பொழுது நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்க தன் வாயைத் திறந்த, இந்த நிலத்திலிருந்து நீ துரத்தப்பட்டும் இருக்கிறாய். நீ நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும்போது அது உனக்கு விளைச்சலைத் தராது. நீ பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாய் இருப்பாய்” என்றார். அதற்கு காயீன் யெகோவாவிடம், “இந்த தண்டனை என்னால் தாங்க முடியாததாய் இருக்கிறது. இன்று நீர் என்னை இவ்விடத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது முன்னிலையிலிருந்து மறைக்கப்பட்டு, பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாவேன்; என்னைக் காண்கிற எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான். அதற்கு யெகோவா, “அப்படியல்ல; காயீனைக் கொல்பவன் எவனிடமும் ஏழுமடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு யெகோவா அவனைக் காண்பவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மேல் ஓர் அடையாளத்தை வைத்தார். அப்பொழுது காயீன் யெகோவாவின் முன்னிலையிலிருந்து சென்று, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத்4:16 நோத் என்பதற்கு அலைந்து திரிதல் என்று அர்த்தம். என்னும் நாட்டில் குடியிருந்தான். பின்பு காயீன் தன் மனைவியுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். பின்பு காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதற்கு தன் மகனின் பெயரின்படி ஏனோக் என்று பெயரிட்டான். ஏனோக்கிற்கு ஈராத் பிறந்தான், ஈராத் மெகுயயேலின் தகப்பனும், மெகுயயேல் மெத்தூசயேலின் தகப்பனும், மெத்தூசயேல் லாமேக்கின் தகப்பனும் ஆனார்கள். லாமேக் இரு பெண்களைத் திருமணம் செய்தான். ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே. அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான். சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன். காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.” ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள். ஆதாமிலிருந்து நோவா வரையுள்ள வம்சவரலாறு ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்5:2 மனிதர் என்பது எபிரெயத்தில் ஆதாம்” என்று அழைத்தார். ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான். சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான். சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான். மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான். யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான். ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான். மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான். ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை. மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான். லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான். அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான். உலகத்தில் பாவம் பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார். அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள். பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார். அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது. அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது. நோவாவும் பெருவெள்ளமும் நோவாவின் வம்சவரலாறு இதுவே: நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள். பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது. பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார். எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன். ஆகவே நீ கொப்பேர் மரத்தால் ஒரு பேழையைச் செய்து, அதில் அறைகளை அமைத்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் நிலக்கீல் பூசு. அந்தப் பேழையைச் செய்யவேண்டிய விதம்: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும், உயரம் முப்பது முழமாகவும் இருக்கவேண்டும். பேழையின் மேல்தட்டிலிருந்து ஒரு முழம் உயரத்தில் அதற்கு ஒரு கூரையைச் செய், பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வை; பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொள். வானத்தின் கீழுள்ள எல்லா உயிர்களையும், அதாவது உயிர்மூச்சுள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு, நான் பூமியின்மேல் பெருவெள்ளத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதனால் பூமியிலுள்ள எல்லாமே அழிந்துபோகும். ஆனால், நான் என் உடன்படிக்கையை உன்னுடன் நிலைநிறுத்துவேன்; நீ பேழைக்குள் செல்வாய்; உன்னுடன் உன் மகன்கள், உன் மனைவி, உன் மகன்களின் மனைவிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு பேழைக்குள் செல். உயிரினங்கள் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு வகையிலும், ஒரு ஜோடியை உன்னுடன் சேர்ந்து உயிர்வாழும்படி பேழைக்குள் அழைத்துச் செல். பறவைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், விலங்குகளில் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும், நிலத்தில் ஊர்வனவற்றின் ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு ஜோடியும் உயிருடன் வாழும்படி உன்னுடன் வரும். சாப்பிடக்கூடிய எல்லா வகையான உணவுப் பொருட்களையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். உனக்கும் அவற்றுக்கும் உணவாகும்படி இவற்றைச் சேமித்து வை” என்றார். இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தான். அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன். மேலும், நீ சுத்தமான விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடியையும், பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும். இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உண்டாக்கிய எல்லா உயிரினங்களையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்துப்போடுவேன்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தான். பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது. பெருவெள்ளத்துக்குத் தப்பும்படி நோவாவும், அவன் மனைவியும், அவனுடைய மகன்களும், அவர்களின் மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக, இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. ஏழு நாட்களுக்குப்பின், பூமியின்மேல் பெருவெள்ளம் வந்தது. நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது. மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். எல்லாவித காட்டு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித வளர்ப்பு மிருகங்களும் அதினதின் வகைகளின்படியும், தரையில் ஊரும் எல்லாவித உயிரினங்களும் அதினதின் வகைகளின்படியும், எல்லாவித பறவைகளும் அதினதின் வகைகளின்படியும், சிறகுகளுடைய யாவும் அவர்களோடு இருந்தன. பூமியிலுள்ள உயிர்மூச்சுள்ள எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, உட்சென்ற எல்லா விலங்குகளும் ஒவ்வொரு உயிரினத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணுமாகவே இருந்தன. யெகோவா நோவாவை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். வெள்ளம் நாற்பது நாட்களாகப் பூமியின்மேல் பெருகிக்கொண்டே இருந்தது, வெள்ளம் பெருகியபோது அது பேழையை நிலத்திற்கு மேலாக உயர்த்தியது. பூமியின்மேல் வெள்ளம் உயர்ந்து, பேழை நீரின்மேல் மிதந்தது. வெள்ளம் பூமியின்மேல் அதிகமாய்ப் பெருகியதால், வானத்தின் கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. வெள்ளம் மலைகளுக்கு மேலாக பதினைந்து முழத்திற்கு மேல் உயர்ந்து அவைகளை மூடியது. அப்பொழுது பூமியில் நடமாடிய பறவைகள், காட்டு மிருகங்கள், வளர்ப்பு மிருகங்கள் ஆகிய எல்லா உயிரினங்களும், பூமியில் கூட்டமாய்த் திரியும் எல்லா பிராணிகளும் அழிந்துபோயின; அத்துடன் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோனது. நிலத்தில் வாழ்ந்த தங்களது நாசியில் உயிர்மூச்சுள்ள யாவும் மாண்டுபோயின. பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிக்கப்பட்டன; மனிதர்களுடன், மிருகங்கள், தரையில் ஊரும் உயிரினங்கள், ஆகாயத்துப் பறவைகள் ஆகிய எல்லாமே பூமியிலிருந்து அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடன் பேழைக்குள் இருந்தவர்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள். பெருவெள்ளம் நூற்று ஐம்பது நாட்களாக பூமியை மூடியிருந்தது. இறைவன் நோவாவையும், பேழைக்குள் அவனுடன் இருந்த காட்டு மிருகங்களையும், வளர்ப்பு மிருகங்களையும் நினைவுகூர்ந்தார்; அவர் பூமிக்கு மேலாக ஒரு காற்றை அனுப்பினார், அப்பொழுது வெள்ளம் வற்றத் தொடங்கியது. நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று. படிப்படியாக தண்ணீர் வற்றத் தொடங்கியது. நூற்று ஐம்பது நாட்களுக்குப்பின் தண்ணீர் மட்டம் குறைந்தது. ஏழாம் மாதம் பதினேழாம் நாள் பேழை அரராத் என்னும் மலையின்மேல் தங்கியது. பத்தாம் மாதம்வரை தொடர்ந்து வெள்ளம் வற்றிக்கொண்டிருந்தது. பத்தாம் மாதம் முதலாம் நாள் மலைகளின் உச்சிகள் தெரிந்தன. அதிலிருந்து நாற்பது நாட்கள் சென்றபின், நோவா பேழையில் தான் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, ஒரு காகத்தை வெளியே அனுப்பினான், அது தரையில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது. பின்பு அவன் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டதோ என்று பார்க்கும்படி ஒரு புறாவை அனுப்பினான். பூமியின் மேற்பரப்பெங்கும் வெள்ளமாய் இருந்தபடியால், அதற்கு காலூன்றி நிற்க இடம் இருக்கவில்லை; எனவே அது பேழைக்குத் திரும்பி நோவாவிடம் வந்தது. அவன் தன் கையை நீட்டிப் புறாவைப் பிடித்து, பேழைக்குள் தன்னிடம் எடுத்துக்கொண்டான். அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து, திரும்பவும் பேழையிலிருந்து புறாவை வெளியே அனுப்பினான். அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான். அவன் மேலும் ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை மறுபடியும் வெளியே அனுப்பினான், ஆனால் இம்முறை அது அவனிடம் திரும்பி வரவில்லை. நோவாவுக்கு 601 வயதாகிய வருடத்தின் முதலாம் மாதம் முதலாம் நாள் நிலத்தின் மேலிருந்து தண்ணீர் வற்றிவிட்டது. நோவா பேழையின் மேல்தட்டு மூடியைத் திறந்து பார்த்தான், நிலம் உலர்ந்திருந்தது. இரண்டாம் மாதம் இருபத்தி ஏழாம்நாளில் பூமி முழுவதும் காய்ந்து போயிற்று. அப்பொழுது இறைவன் நோவாவிடம், “நீ உன் மனைவியுடனும், உன் மகன்களுடனும் அவர்களுடைய மனைவிகளுடனும் பேழையைவிட்டு வெளியே வா. உன்னுடன் இருக்கும் எல்லா விதமான உயிரினங்களாகிய பறவைகள், விலங்குகள், தரையில் ஊரும் உயிரினங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே கொண்டுவா. அவை பூமியில் பலுகி, எண்ணிக்கையில் பெருகட்டும்” என்றார். அப்படியே நோவா தன்னுடைய மகன்களோடும், தன் மனைவியோடும், மகன்களின் மனைவிகளோடும் வெளியே வந்தான். எல்லா மிருகங்களும், தரையில் ஊரும் எல்லா உயிரினங்களும், எல்லா பறவைகளும் பூமியில் நடமாடும் உயிரினங்கள் அனைத்தும் வகை வகையாகப் பேழையிலிருந்து வெளியே வந்தன. அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் அவன் சுத்தமான மிருகங்கள், சுத்தமான பறவைகள் எல்லாவற்றிலுமிருந்து சிலவற்றைத் தகன காணிக்கைகளாகப் பலியிட்டான். மகிழ்ச்சியூட்டும் அந்த நறுமணத்தை யெகோவா முகர்ந்து, தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டதாவது: “மனிதனின் இருதயமோ பிள்ளைப் பருவத்திலிருந்தே, தீமையில்தான் நாட்டம் கொண்டிருக்கிறது; ஆனாலும், மனிதனின் நிமித்தம் நான் இனி ஒருபோதும் நிலத்தைச் சபிக்கமாட்டேன்.” இப்பொழுது செய்ததுபோல், இனி ஒருபோதும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்கமாட்டேன். “விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைகாலமும் குளிர்காலமும், இரவும் பகலும் பூமி நிலைத்திருக்கும்வரை இனி ஒருபோதும் ஒழியாது.” நோவாவுடன் இறைவனின் உடன்படிக்கை பின்பு இறைவன் நோவாவையும் அவன் மகன்களையும் ஆசீர்வதித்து சொன்னதாவது, “நீங்கள் பலுகி, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள்.” உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன். “ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம். உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன். “யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்; ஏனெனில், இறைவன் மனிதரை இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார். நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.” பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்: “நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். ‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே: நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே. நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம், உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது. மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார். இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார். நோவாவின் மகன்கள் பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன். நோவாவின் மூன்று மகன்கள் இவர்களே; இவர்களிலிருந்தே பூமி எங்கும் பரந்திருக்கும் மக்கள் வந்தார்கள். நோவா நிலத்தைப் பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கத் தொடங்கினான். அவன் ஒரு நாள் தோட்டத்தின் திராட்சை இரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தினுள்ளே உடை விலகிய நிலையில் கிடந்தான். அப்பொழுது கானானின் தகப்பனான காம், தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே போய் தன் இரு சகோதரருக்கும் அதைத் தெரியப்படுத்தினான். ஆனால் சேமும் யாப்பேத்தும் ஓர் உடையை எடுத்துத் தம் இருவர் தோளிலும் போட்டவாறு, பின்னிட்டுச் சென்று தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தைக் காணாதபடிக்குத் தங்கள் முகங்களை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். நோவா வெறி தெளிந்து எழுந்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்தான். எனவே அவன், “கானான் சபிக்கப்படட்டும்! அவன் தன் சகோதரர்களிலும் அடிமைகளிலும் கீழ்ப்பட்டவனாய் இருக்கட்டும்.” மேலும் நோவா சொன்னதாவது: “சேமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக! கானான் சேமுக்கு அடிமையாய் இருப்பானாக. இறைவன் யாப்பேத்தின் எல்லையை விரிவுபடுத்துவாராக; யாப்பேத் சேமின் கூடாரங்களில் குடியிருப்பானாக, கானான் யாப்பேத்துக்கு அடிமையாய் இருப்பானாக.” பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான். நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். நாடுகளின் அட்டவணை பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு. யாப்பேத்தியர் யாப்பேத்தின் மகன்கள்10:2 மகன்கள் என்றால் வம்சாவழி அல்லது மக்கள் குழுக்கள் என்றும் பொருள்படும்.: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ். கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா. யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம். இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள். காமியர் காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம்10:6 மிஸ்ராயீம் என்றால் எகிப்தில் குடியேறின சந்ததியினர்., பூத், கானான். கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான். கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான். அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று. சிநெயார்10:10 அதாவது, பாபிலோனியாவின் மற்றொரு பெயர். நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன. அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான். நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம். மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர். கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து, எபூசியர், எமோரியர், கிர்காசியர், ஏவியர், அர்கீயர், சீனியர், அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர். கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது. அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே. சேமியர் சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான். சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ். அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன். ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு, அதோராம், ஊசால், திக்லா, ஓபால், அபிமாயேல், சேபா, ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள். இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது. அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே. தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின. பாபேல் கோபுரம் அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார். முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார். சேமிலிருந்து ஆபிராம்வரை சேமின் வம்சவரலாறு இதுவே: பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான். அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான். சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான். ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான். பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான். ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான். செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான். நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான். தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். ஆபிராமின் குடும்பம் தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான். தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான். ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன். சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள். தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான். ஆபிராமின் அழைப்பு யெகோவா ஆபிராமிடம் சொன்னார்: “நீ உன் நாட்டையும், உன் உறவினரையும், உன் தகப்பன் குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ. “நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன், உன்னை ஆசீர்வதிப்பேன்; உன் பெயரை மேன்மைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய். உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன். பூமியின் எல்லா மக்கள் கூட்டங்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.” யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது. ஆபிராம் தன் மனைவி சாராய், தன் சகோதரனின் மகன் லோத்து, ஆரான் நாட்டில் தாங்கள் சம்பாதித்தவைகள், தங்களுடன் இருந்த வேலைக்காரர்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு கானான் நாட்டிற்குப் போகப் புறப்பட்டு, அங்கு போய்ச்சேர்ந்தார்கள். ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது கானானியர் அங்கே வசித்தார்கள். யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன் சந்ததிக்கு நான் இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் அங்கிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயுள்ள மலைப்பக்கமாய்ப் போய், பெத்தேல் மேற்கிலும், ஆயி கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தான். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கிச் சென்றான். எகிப்தில் ஆபிராம் அந்நாட்களில், அந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிலகாலம் எகிப்தில் குடியிருப்பதற்காகப் போனான். அவன் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “நீ மிகவும் அழகிய பெண் என்பது எனக்குத் தெரியும். எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, என்னைக் கொன்றுவிடுவார்கள் ஆனால் உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள். அதனால் நீ, உன்னை என் சகோதரி என்று சொல், அப்பொழுது அவர்கள் உனக்காக என்னை நன்றாக நடத்துவார்கள்; நானும் உன் நிமித்தம் உயிர் தப்புவேன்” என்றான். ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள். பார்வோனின் அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பார்வோன் சாராயின் நிமித்தம் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் பெற்றுக்கொண்டான். ஆனால் யெகோவா ஆபிராமின் மனைவி சாராயின் நிமித்தம், பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொடிய வியாதியால் தாக்கினார். அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, “நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை? ‘இவள் என் சகோதரி’ என்று ஏன் எனக்குச் சொன்னாய்? அதனால் அல்லவா அவளை என் மனைவியாக்கிக் கொள்ளும்படி எடுத்தேன்? இதோ, உன் மனைவி; அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்றான். பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன் வேலைக்காரருக்கு கட்டளையிட்டான், அவர்கள் அவனை அவன் மனைவியுடனும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் அவனை நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள். ஆபிராமும் லோத்தும் பிரிதல் ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் வளர்ப்பு மிருகங்களையும், தங்கத்தையும் வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தான். அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான். அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது. அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள். இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள். இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான். லோத்து சுற்றிலும் பார்த்தபோது, சோவார் வரையுள்ள யோர்தான் சமபூமி முழுவதும் நீர்வளம் நிறைந்திருந்ததைக் கண்டான்; அது யெகோவாவினுடைய தோட்டத்தைப் போலவும், எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன் அவ்வாறு இருந்தது. எனவே லோத்து, யோர்தான் சமபூமி முழுவதையும் தனக்காகத் தெரிந்துகொண்டு, கிழக்குப் பக்கமாகப் போனான். அவர்கள் இருவரும், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தார்கள். ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தான், லோத்து யோர்தான் சமபூமியின் பட்டணங்கள் நடுவில் குடியிருந்து, சோதோமுக்கு அருகே தன் கூடாரங்களைப் போட்டான். சோதோமின் மனிதர் கொடியவர்களாய், யெகோவாவுக்கு விரோதமாகப் பெரும் பாவம் செய்துகொண்டிருந்தார்கள். லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின் யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி, வடக்கேயும் தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் பார். நீ காண்கிற இடம் முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் நான் என்றென்றைக்கும் கொடுப்பேன். நான் உன் சந்ததியைப் பூமியின் புழுதியைப்போல் பெருகப்பண்ணுவேன், பூமியின் புழுதியை ஒருவனால் எண்ண முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணலாம். நீ நாட்டின் நீளமும் அகலமும் எவ்வளவோ அதுவரை நடந்து செல், ஏனெனில் நான் அதை உனக்குத் தருவேன்” என்றார். ஆபிராம் தன் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு, எப்ரோனில் இருக்கும் மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே குடியிருக்கச் சென்றான். அங்கே அவன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆபிராம் லோத்துவை காப்பாற்றுதல் அந்நாட்களில் சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால் ஆகிய இவர்கள் சோதோமின் அரசன் பேரா, கொமோராவின் அரசன் பிர்சா, அத்மாவின் அரசன் சினாபு, செபோயீமின் அரசன் செமேபர், பேலா என்னும் சோவாரை ஆண்ட அரசன் ஆகியோருடன் யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள். இந்த பிந்தைய அரசர்கள், தங்கள் படைகளை உப்புக்கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள். பன்னிரண்டு வருடங்களாக கெதர்லாகோமேரின் ஆதிக்கத்திற்குள் இருந்த இவர்கள், பதிமூன்றாம் வருடத்தில் அவனை எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். பதினாலாவது வருடத்தில், கெதர்லாகோமேரும் அவனுடன் கூட்டுச்சேர்ந்த அரசர்களும் ஒன்றுசேர்ந்து, அஸ்தரோத் கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியரையும், காமிலிருந்த சூசிமியரையும், சாவே கீரியாத்தாயீமிலே இருந்த ஏமியரையும், பாலைவனத்துக்கு அருகே எல்பாரான் வரையுள்ள, சேயீர் மலைநாட்டில் வாழ்ந்த ஓரியரையும் தோற்கடித்தார்கள். பின்பு அவர்கள் மற்றப் பக்கமாகத் திரும்பி, காதேஸ் எனப்படும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியரின் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அதோடு அத்சாத்சோன் தாமாரில் இருந்த எமோரியரையும் வெற்றிகொண்டார்கள். அப்பொழுது அவர்களை எதிர்க்க சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் (அது சோவார்), பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் அணிவகுத்துச்சென்று, சித்தீம் பள்ளத்தாக்கில் ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், மற்ற ஐந்து அரசர்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள். சித்தீம் பள்ளத்தாக்கில் பல நிலக்கீல் குழிகள் இருந்தன; அந்த போரில் சோதோம், கொமோரா நாட்டு அரசர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடியபோது, அவர்கள் அக்குழிகளில் விழுந்தார்கள்; மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். வெற்றியடைந்த நான்கு அரசர்களும், சோதோமிலும் கொமோராவிலும் இருந்த எல்லா பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். அத்துடன், சோதோமில் குடியிருந்த ஆபிராமுடைய சகோதரனின் மகனான லோத்தையும், அவனது உடைமைகளையும் கொண்டுபோய்விட்டார்கள். தப்பியோடிய ஒருவன், எபிரெயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தான்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆநேர் என்போரின் சகோதரன். தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான முந்நூற்றுப் பதினெட்டு பயிற்சி பெற்ற மனிதருடன் அவர்களை தாண்வரை துரத்திச்சென்றான். அன்றிரவு ஆபிராம், தன் ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கினான்; அவன் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபாவரை துரத்தி முறியடித்தான். அவன் லோத்தையும், அவனுடைய எல்லா உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினான். ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான். அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான். அவன் ஆபிராமை ஆசீர்வதித்து சொன்னது: “வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும். உன் பகைவரை உன் கையில் ஒப்படைத்த, மகா உன்னதமான இறைவன், துதிக்கப்படுவாராக.” ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தான். அதன்பின் சோதோமின் அரசன் ஆபிராமிடம், “ஆட்களை என்னிடம் கொடும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான். ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான யெகோவாவுக்கு என் கைகளை உயர்த்தி சத்தியம் செய்கிறதாவது: ‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீ சொல்லாதபடி, உன்னிடமிருந்து ஒரு நூலையோ, செருப்பின் வாரையோ அல்லது உனக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். என் ஆட்கள் சாப்பிட்டதையும் என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகிய மனிதரின் பங்கையும் தவிர, வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். ஆபிராமுடன் யெகோவாவினுடைய உடன்படிக்கை அதற்குபின் ஒரு தரிசனத்தில் யெகோவாவின் வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “ஆபிராமே, பயப்படாதே. நானே உன் கேடயம், நானே உன் மகா பெரிய வெகுமதி.” அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?” பின்னும் ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லையே; ஆதலால், என் வீட்டு வேலைக்காரன் என் வாரிசாகப் போகிறான்” என்றான். அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார். பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார். ஆபிராம் யெகோவாவை விசுவாசித்தான், அந்த விசுவாசத்தை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார். அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான். யெகோவா அவனிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார். அப்பொழுது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அவைகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்குபடுத்தி வைத்தான்; பறவைகளையோ அவன் இரண்டாக வெட்டவில்லை. அப்பொழுது மாமிசம் தின்னிப் பறவைகள், வெட்டி வைத்த உடல்களை உண்பதற்கு இறங்கின, ஆபிராம் அவைகளைத் துரத்திவிட்டான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும்போது, ஆபிராம் ஆழ்ந்த நித்திரை அடைந்தான்; பயங்கரமான காரிருள் அவனை மூடிக்கொண்டது. அவ்வேளையில் யெகோவா ஆபிராமிடம், “நீ நன்கு அறிந்துகொள்: உன் சந்ததிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள், அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்; அதன்பின் அவர்கள் அதிக உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறுவார்கள். நீயோ, மன சமாதானத்துடன் உன் முன்னோருடன் சேருவாய், முதிர்வயதில் இறந்து அடக்கம்பண்ணப்படுவாய். உன் சந்ததிகள் நான்காம் தலைமுறையில் மறுபடியும் இங்கே திரும்பி வருவார்கள்; ஏனெனில், எமோரியருடைய பாவம் இன்னும் முழு அளவை அடையவில்லை” என்றார். சூரியன் மறைந்து இருள் உண்டானபோது, எரிகின்ற தீப்பந்தமும், புகையும் நெருப்பு ஜாடியும் தோன்றி, வெட்டிவைத்த துண்டுகளிடையே சென்றது. அந்நாளிலே யெகோவா ஆபிராமுடன் ஒரு உடன்படிக்கை செய்து, “எகிப்தின் நதிக்கும் ஐபிராத்து நதிக்கும் இடையிலுள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர் ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் என்பவர்களின் நாட்டை உன் சந்ததிக்குக் கொடுக்கிறேன்” என்றார். ஆகாரும் இஸ்மயேலும் ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்; எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள். ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான். எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள். ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள். தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள். சாராய் அதைக்கண்டு ஆபிராமிடம், “நான் வேதனைப்படுவதற்கான அநியாயத்திற்குப் பொறுப்பு நீரே. என் பணிப்பெண்ணை நான் உமக்குக் கொடுத்தேன், இப்பொழுது அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்து, என்னை இகழ்ச்சி செய்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில், யெகோவாவே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள். அதற்கு ஆபிராம், “உன் பணிப்பெண், உன் பொறுப்பில்தானே இருக்கிறாள், எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ, அதை அவளுக்குச் செய்” என்றான். அதன்பின் சாராய் ஆகாரைக் கொடுமைப்படுத்தினாள்; அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப்போனாள். யெகோவாவின் தூதனானவர் வனாந்திரத்தில் சூருக்குப் போகும் வழியில் இருந்த நீரூற்றுக்கு அருகே ஆகாரைக் கண்டார். அவர் அவளிடம், “ஆகாரே, சாராயின் பணிப்பெண்ணே, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், எங்கே போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் எஜமாட்டியாகிய சாராயைவிட்டு நான் ஓடிப்போகிறேன்” என்றாள். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார். மேலும் யெகோவாவினுடைய தூதனானவர், “உன் சந்ததிகளை எண்ணமுடியாத அளவு பெருகப்பண்ணுவேன்” என்றார். மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது: “நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய், உனக்கு ஒரு மகன் பிறப்பான். நீ அவனுக்கு இஸ்மயேல்16:11 இஸ்மயேல் என்பதற்கு யெகோவா கேட்கிறார் என்று அர்த்தம். என்று பெயரிட வேண்டும். ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார். அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்; அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.” அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள். அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ16:14 பீர்லகாய்ரோயீ என்பதற்கு என்னைக் காண்கிற ஜீவனுள்ளவரின் கிணறு என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது. ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான். ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான். விருத்தசேதனத்தின் உடன்படிக்கை ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு. நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார். ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி, “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய். நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம்17:5 ஆபிராம் என்பதற்கு மேன்மையான தகப்பன் என்று அர்த்தம். என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள். நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன். நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார். அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும். நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய பங்காவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். நீயும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், அது எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும். தலைமுறைதோறும், ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்து எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், உங்கள் சந்ததியாய் இராமல், அந்நியரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். அவர்கள் உன் குடும்பத்தில் பிறந்தவர்களாய் இருந்தாலென்ன, பணத்திற்கு வாங்கப்பட்டவர்களாய் இருந்தாலென்ன, அவர்களுக்கும் கட்டாயம் விருத்தசேதனம் செய்யவேண்டும். இவ்வாறு இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும். எந்த ஆணுக்கும் தன் உடலில் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருந்தால், அவன் தன் சொந்த மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டான்” என்றார். மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராயை இனிமேல் நீ சாராய் என்று அழைக்கவேண்டாம்; சாராள் என்பதே அவள் பெயராகும். நான் அவளை ஆசீர்வதித்து, நிச்சயமாக அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் நாடுகளுக்குத் தாயாவாள்; மக்கள் கூட்டங்களின் அரசர்களும் அவளிலிருந்து தோன்றுவார்கள்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மயேல் உம்முடைய ஆசீர்வாதத்தில் வாழ்ந்தாலே போதும்!” என்று சொன்னான். அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவனுக்கு ஈசாக்கு17:19 ஈசாக்கு என்பதற்கு அவன் சிரித்தான் என்று அர்த்தம். என்று பெயரிடு. என் உடன்படிக்கையை நான் அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிகளுக்கு ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும். இஸ்மயேலைப் பொறுத்தமட்டில், நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்; நான் அவனை இனவிருத்தி உள்ளவனாக்கி, அவனுடைய சந்ததியையும் பலுகிப் பெருகப்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு ஆளுநர்களுக்குத் தகப்பனாயிருப்பான், நான் அவனை ஒரு பெரிய நாடாக்குவேன். ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெறப்போகும் ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார். இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார். ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்த நாளிலேயே, இஸ்மயேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களும், பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமான தன் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்தான். ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான். அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்; ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். மூன்று விருந்தினர்கள் வெப்பமான பகற்பொழுதிலே, ஆபிரகாம் தன்னுடைய கூடாரவாசலில் உட்கார்ந்திருக்கையில், மம்ரேயின் மரச்சோலையருகே, யெகோவா இன்னும் ஒருமுறை அவனுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர் நிற்கிறதைக் கண்டான். அவன் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திக்கும்படியாக, தன் கூடாரவாசலில் இருந்து விரைந்து சென்று தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினான். அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும். என் வேலைக்காரர் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், நீங்கள் யாவரும் உங்கள் கால்களைக் கழுவி இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம். இப்பொழுது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கிறபடியால், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன்; பின்பு நீங்கள் இளைப்பாறி, உங்கள் வழியே போகலாம்” என்றான். அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்” என்றார்கள். உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் சாராளிடம் விரைந்து சென்று, “சீக்கிரமாய் மூன்றுபடி18:6 அதாவது, சுமார் 36 பவுண்டுகள் அல்லது 16 கிலோகிராம் இருக்கும் அளவு சிறந்த மாவை எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்கள் சுடு” என்றான். ஆபிரகாம் தன் மாட்டு மந்தைக்கு விரைந்து சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு வேலைக்காரனிடம் கொடுத்தான்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான். பின்பு ஆபிரகாம், வெண்ணெயையும் பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அந்த மனிதர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் சாப்பிடும்போது, அவன் அவர்களுக்கு அருகே மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள். “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள். எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள். அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’ யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள். அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார். ஆபிரகாம் சோதோமுக்காக மன்றாடுதல் பின்பு அந்த மனிதர் புறப்படுவதற்கு எழுந்தபோது, சோதோமை நோக்கிப் பார்த்தார்கள்; ஆபிரகாம் அவர்களை வழியனுப்பும்படி அவர்களோடுகூடப் போனான். அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா? நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். ஏனெனில் நானே ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தேன், அவன் தனக்குப்பின் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, யெகோவாவின் வழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை வழிநடத்துவான். அப்பொழுது யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்றார். அதன்பின் யெகோவா, “சோதோம், கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாய் இருக்கிறது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் அதிகமாய் எழும்பியிருக்கின்றது. அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப்பார்ப்பேன். அப்படியில்லையென்றால், அதையும் அறிவேன்” என்றார். பின்பு அந்த மனிதர் அவ்விடத்தைவிட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். ஆபிரகாம் யெகோவாவை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ? ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பதுபேர் இருந்தால் அதை அழித்து விடுவீரோ? நீதிமானான அந்த ஐம்பது பேர்களுக்காகிலும் அதை அழியாமல் விடமாட்டீரோ? கொடியவர்களுடன் நீதிமான்களையும் கொல்லுவதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்றதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்யமாட்டாரோ?” என்று கேட்டான். அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார். மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன், ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான். அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார். பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார். யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான். சோதோம், கொமோராவின் அழிவு அன்று மாலை, சோதோம் பட்டணத்து வாசலிலே லோத்து உட்கார்ந்திருந்தபோது, அவ்விரு தூதர்களும் அவ்விடம் வந்தார்கள். லோத்து அவர்களைக் கண்டவுடன், அவர்களைச் சந்திப்பதற்காக எழுந்துபோய் தரைமட்டும் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே” நீங்கள் இருவரும், அடியேனுடைய வீட்டிற்கு வாருங்கள். “நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி இன்றிரவு என்னுடன் தங்கி, அதிகாலையில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். அதற்கு அவர்கள், “வேண்டாம், நாங்கள் இன்றிரவு நகரச் சதுக்கத்திலே தங்குவோம்” என்றார்கள். அவன் அவர்களை வற்புறுத்தி அழைத்ததால், அவர்கள் அவனுடைய வீட்டிற்குள் போனார்கள். லோத்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு உணவு தயாரித்தான். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். அவர்கள் படுக்கைக்குப் போகுமுன், சோதோம் பட்டணத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாலிபர்முதல் முதியோர்வரை எல்லா ஆண்களும் வந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் லோத்தைக் கூப்பிட்டு, “இன்றிரவு, உன்னிடம் வந்த மனிதர் எங்கே? நாங்கள் அவர்களுடன் பாலுறவுகொள்ளும்படி அவர்களை வெளியே கொண்டுவா” என்றார்கள். உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, கதவைத் தனக்குப் பின்னால் பூட்டிக்கொண்டு அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம். இதோ, எனக்குக் கன்னியரான இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களை உங்களிடம் கொண்டுவருகிறேன். உங்களுக்கு விருப்பமானபடி அவர்களுடன் நடவுங்கள். ஆனால் இந்த மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் பாதுகாப்புக்காக என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான். அதற்கு அவர்கள், “அப்பாலே போ; அந்நியனாக இவ்விடத்திற்கு வந்த இவன் இப்பொழுது எங்களுக்கு நீதிபதியாக இருக்கப் பார்க்கிறான். அவர்களைவிட இப்பொழுது உன்னை மோசமாக நடத்துவோம்” என்று சொல்லி, லோத்தைத் தள்ளி கதவை உடைக்கப் போனார்கள். ஆனால், வீட்டுக்குள் இருந்த இரு மனிதரும் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தை வீட்டிற்குள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார்கள். பின்பு அந்த மனிதர், வீட்டுக்கு வெளியே நின்ற வாலிபர்முதல் முதியோர்வரை எல்லோருடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்களால் வீட்டு வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்விருவரும் லோத்திடம், “இங்கு உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? உன் மகன்களோ, மகள்களோ, மருமகன்களோ அல்லது உனக்குச் சொந்தமான வேறு யாரேனும் இந்தப் பட்டணத்தில் இருந்தால், அவர்களையும் கூட்டிக்கொண்டு இவ்விடத்திலிருந்து வெளியே போ. ஏனெனில், நாங்கள் இவ்விடத்தை அழிக்கப்போகிறோம்; இங்கு உள்ளவர்களுக்கு எதிராக யெகோவாவின் முன்னிலையில் எட்டியுள்ள கூக்குரல் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், இப்பட்டணத்தை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். உடனே லோத்து வெளியே போய், தன் மகள்களுக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த மருமகன்களிடம், “விரைவாய் இந்த இடத்தைவிட்டு வெளியேறுங்கள். ஏனெனில், யெகோவா இப்பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான். ஆனால் அவனுடைய மருமகன்களோ, அவன் கேலிசெய்கிறான் என்று நினைத்தார்கள். பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் இரு மகள்களையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இப்பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்துபோவாய்” என்றார்கள். லோத்து வெளியேபோகத் தயங்கியபோது, யெகோவா லோத்தின் குடும்பத்தார்மேல் இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் இரு மகள்களுடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்திற்கு வெளியே பாதுகாப்பாய்க் கொண்டுபோய்விட்டார்கள். அவர்கள் வெளியே வந்ததும், அவர்களில் ஒருவன் அவர்களிடம், “உயிர்தப்பும்படி ஓடிப்போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் தங்காமல் மலைகளுக்கே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான். அதற்கு லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே, தயவுசெய்து அப்படி வேண்டாம். நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான தயவுகாட்டி என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை மேற்கொண்டு நான் இறந்து விடுவேனே. இதோ நான் ஓடிப்போகக் கூடிய அளவுக்கு அருகாமையில் ஒரு சிறிய பட்டணம் இருக்கிறதே. அங்கே நான் தப்பியோட என்னை விடுங்கள். அது மிகவும் சிறிய பட்டணம்தானே. அப்பொழுது நான் உயிர்பிழைப்பேன்” என்றான். அதற்கு அந்த தூதன் லோத்திடம், “நல்லது, இந்த வேண்டுகோளையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்ன அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன். ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கேபோய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்யமுடியாது” என்றார். அதனால் அப்பட்டணம் சோவார்19:22 சோவார் என்பதற்கு சிறிய பட்டணம் அல்லது சிறிய இடம் என்று பொருள். என அழைக்கப்பட்டது. லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது. அப்பொழுது யெகோவா எரியும் கந்தகத்தை சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் பொழியப்பண்ணினார். அது யெகோவாவிடமிருந்து வானத்திலிருந்தே வந்தது. இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார். ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள். அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு யெகோவாவின் முன்னிலையில் நின்ற இடத்திற்குத் திரும்பிப்போனான். அங்கிருந்து அவன் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் அந்த நாட்டிலிருந்து பெரும்புகை எழும்புவதைக் கண்டான். இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில்கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்த பேரழிவிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து தப்புவித்தார். லோத்தும் அவன் மகள்களும் அதன்பின், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததினால், தன் இரு மகள்களுடன் சோவாரைவிட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், ஒரு குகையில் வசித்தான். ஒரு நாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தகப்பன் வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்மை திருமணம் செய்து நம்முடன் உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை. நமது தகப்பனை திராட்சை மதுவைக் குடிக்கப்பண்ணி அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். அப்படியே அவர்கள் அன்றிரவு தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை. மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தகப்பனுடன் நான் உறவுகொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். இன்றிரவு நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தகப்பன் மூலமாய், நாம் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். அப்படியே அன்றிரவும் தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை. இவ்விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனால் கர்ப்பமானார்கள். மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே. இளையமகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி என்று பெயரிட்டாள். இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தகப்பன் இவனே. ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஆபிரகாம் அவ்விடம் விட்டு நெகேப் பிரதேசத்திற்குப் போய் அங்கே காதேஷ், சூர் என்னும் இடங்களுக்கு இடையே வசித்தான். சிறிதுகாலம் அவன் கேராரில் தங்கினான். ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளைத், “தன் சகோதரி” என்று சொல்லியிருந்தான். அப்பொழுது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன் ஆட்களை அனுப்பி, சாராளை எடுத்துக்கொண்டான். ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவுக்கு கனவில் தோன்றி, “நீ கொண்டுவந்திருக்கும் பெண்ணின் காரணமாக நீ செத்து அழியப்போகிறாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கிறாள்” என்றார். அபிமெலேக்கு அதுவரை சாராளை நெருங்கவில்லை; அதனால் அவன், “யெகோவாவே, குற்றமற்ற மக்களை நீர் அழிப்பீரோ? ‘அவள் என் சகோதரி’ என்று அவன் எனக்குச் சொல்லவில்லையா? அவளும், ‘அவன் என் சகோதரன்’ என்று சொல்லவில்லையா? அதனால் சுத்த மனசாட்சியுடனும், குற்றமற்ற கைகளுடனுமே நான் இதைச் செய்தேன்” என்றான். இறைவன் அந்த கனவில் அவனிடம், “ஆம், சுத்த மனசாட்சியுடனே நீ இதைச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நீ எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைக் காத்துக்கொண்டேன். நீ அவளைத் தொட நான் உன்னை விடவில்லை அந்தப் பெண்ணை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பிவிடு, அவன் ஒரு இறைவாக்கினன்; அவன் உனக்காக மன்றாடுவான், நீயும் பிழைப்பாய். நீ அவளைத் திருப்பி அனுப்பாவிட்டால், நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் சாகிறது நிச்சயம்” என்றார். அடுத்தநாள் அதிகாலையிலே அபிமெலேக்கு எழுந்து, தன் அலுவலர்கள் அனைவரையும் அழைப்பித்து, நடந்த யாவற்றையும் அவர்களுக்குச் சொன்னான்; அப்போது அவர்கள் மிகவும் பயந்தார்கள். அதன்பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து, “நீ எங்களுக்குச் செய்திருப்பது என்ன? நீ என்மேலும் என் அரசின்மேலும் இத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கு நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்யத் தகாதவற்றை நீ எனக்குச் செய்துவிட்டாயே!” என்றான். மேலும் அபிமெலேக்கு, “நீ இதைச் செய்ததன் காரணமென்ன?” என்று ஆபிரகாமிடம் கேட்டான். ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “இந்த இடத்தில் நிச்சயமாக இறைவனைப்பற்றிய பயம் இல்லையென்றும், அதனால் என் மனைவியை அபகரிப்பதற்காக என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்றும் நினைத்தேன். அவள் என் சகோதரி என்பது உண்மையே. அவள் என் தாய்க்குப் பிறக்காவிட்டாலும், என் தகப்பனின் மகளாய் இருக்கிறாள்; ஆனால் இப்பொழுது அவள் என் மனைவி. இறைவன் என்னை என் தந்தையின் குடும்பத்தைவிட்டு அலைந்து திரியப்பண்ணியபோது, நான் அவளிடம், ‘நாம் எங்கு சென்றாலும், என்னை உன் சகோதரன் என்றே நீ சொல்லவேண்டும். நீ என்மேல் கொண்டிருக்கும் அன்பை இவ்விதமாகவே காண்பிக்கவேண்டும்’ என்று சொல்லியிருந்தேன்” என்றான். அப்பொழுது அபிமெலேக்கு, செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண், பெண் அடிமைகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவி சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்படைத்தான். அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது. நீ விரும்பிய இடத்தில் குடியிரு” என்றான். அவன் சாராளைப் பார்த்து, “உன் சகோதரனுக்கு ஆயிரம் சேக்கல்20:16 அதாவது, சுமார் 25 பவுண்டுகள் அல்லது 12 கிலோகிராம் வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன். உனக்கு விரோதமான குற்றத்திற்கு ஈடாக இங்கு உன்னுடன் நிற்கிறவர்களுக்கு முன்பாக நான் இவற்றைக் கொடுக்கிறேன். நீ குற்றமற்றவள் என்று முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான். ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் செய்தபோது, அவர் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வீட்டிலுள்ள பணிப்பெண்களையும் குணமாக்கி, அவர்கள் மீண்டும் பிள்ளைப்பேறு உள்ளவர்களாகும்படிச் செய்தார். ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளின் நிமித்தம், யெகோவா அபிமெலேக்கின் வீட்டுப்பெண்களின் கருப்பைகளை எல்லாம் அடைத்திருந்தார். ஈசாக்கின் பிறப்பு யெகோவா தாம் சொல்லியிருந்தபடியே, சாராளுக்குக் கருணை காட்டினார்; தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றினார். ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குப்பண்ணியிருந்த அந்த குறித்த காலத்திலேயே, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். சாராள் தனக்குப் பெற்ற மகனுக்கு ஈசாக்கு21:3 ஈசாக்கு என்றால் சிரிப்பு என்று அர்த்தம். என்று ஆபிரகாம் பெயரிட்டான். தன் மகன் ஈசாக்குப் பிறந்த எட்டாம் நாளில், இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான். அப்பொழுது சாராள், “இறைவன் என்னைச் சிரிக்க வைத்தார், இதைக் கேட்கும் யாவரும் என்னுடன் சேர்ந்து சிரிப்பார்கள்; சாராள் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லியிருப்பார்? அப்படியிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள். ஆகாரும் இஸ்மயேலும் அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடி மறந்தது. ஈசாக்கு பால் மறந்த நாளன்று ஆபிரகாம் ஒரு பெரிய விருந்து கொடுத்தான். ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள். தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, “பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள்21:16 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியில் பிள்ளை என்றுள்ளது. சத்தமாய் அழத்தொடங்கினாள். இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் வளரும்போது இறைவன் அவனுடன் இருந்தார். அவன் பாலைவனத்தில் வசித்து, வில் வீரனானான். இஸ்மயேல் பாரான் பாலைவனத்தில் குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்தியப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். ஆபிரகாம் அபிமெலேக்குடன் ஒப்பந்தம் அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனேகூட இருக்கிறார். ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்யமாட்டேன் என்று, இறைவனுக்குமுன் எனக்கு ஆணையிட்டுக்கொடும். நான் உமக்குத் தயவுகாட்டியதுபோல், எனக்கும் நீர் அந்நியனாய் வாழும் இந்நாட்டிற்கும் எப்பொழுதும் தயவுகாட்டும்” என்றான். அதற்கு ஆபிரகாம், “அப்படியே ஆணையிட்டுக் கொடுக்கிறேன்” என்றான். பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான். அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் எனக்கு இதை அறிவிக்கவில்லை; நான் இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்குக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தான். அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான். அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், அந்த இடம் பெயெர்செபா21:31 பெயெர்செபா என்றால் ஏழு கிணறுகள் அல்லது சபதத்தின் கிணறு என்று பொருள். என்று அழைக்கப்பட்டது. பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்தபின், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், பெலிஸ்திய நாட்டிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நட்டு, அங்கே நித்திய இறைவனான யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தான். ஆபிரகாம் சோதிக்கப்படுதல் சிறிது காலத்தின்பின் இறைவன், ஆபிரகாமைச் சோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான். இறைவன் அவனிடம், “உன் மகனை, நீ நேசிக்கும் உன் ஒரே மகன் ஈசாக்கை, மோரியா பிரதேசத்திற்குக் கூட்டிக்கொண்டுபோ. அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகன காணிக்கையாகப் பலியிடு” என்றார். ஆபிரகாம் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, தன் கழுதைக்குச் சேணம் கட்டினான். அவன் தன் வேலைக்காரரில் இருவரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டுபோக ஆயத்தமானான். அதன்பின் தகனபலிக்கு வேண்டிய விறகுகளை வெட்டி எடுத்துக்கொண்டு, இறைவன் தனக்குக் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டான். மூன்றாம் நாள் ஆபிரகாம் ஏறிட்டுப் பார்த்து, தூரத்தில் அந்த இடத்தைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம், “நீங்கள் கழுதையுடன் இங்கே நில்லுங்கள்; நானும் என் மகனும் அவ்விடத்திற்குப் போய் வழிபாடு செய்துவிட்டு பின்பு, உங்களிடத்திற்குத் திரும்பிவருவோம்” என்றான். ஆபிரகாம் தகனபலிக்குரிய விறகுகளைத் தன் மகன் ஈசாக்கின்மேல் வைத்து, நெருப்பையும் கத்தியையும் தானே கொண்டுபோனான். அவர்கள் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது, ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமிடம், “அப்பா?” என்றான். ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “என்ன மகனே?” என்றான். “விறகும் நெருப்பும் இருக்கின்றன, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டி எங்கே?” என்று ஈசாக்கு கேட்டான். அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டியை இறைவனே நமக்குக் கொடுப்பார்” என்றான். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் இறைவன் குறித்த இடத்திற்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினான். அவன் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் கையை நீட்டி தன் மகனை வெட்டுவதற்குக் கத்தியை எடுத்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவனைக் கூப்பிட்டார். உடனே அவன், “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்தான். அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல், எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கிறவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார். ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, முட்செடியில் கொம்புகள் சிக்குண்டிருந்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் கண்டான். அவன் அங்குபோய், அந்த செம்மறியாட்டுக் கடாவைப் பிடித்து தன் மகன் ஈசாக்கிற்குப் பதிலாக அதை இறைவனுக்குத் தகன காணிக்கையாகப் பலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே22:14 யெகோவாயீரே என்றால் பார்த்துக்கொள்ளப்படும் அல்லது கொடுக்கப்படும் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான். அதனால், “யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது. யெகோவாவின் தூதனானவர் இரண்டாம் முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, “நீ உன் மகனை, உன் ஒரே மகனைக் கொடுக்க மறுக்காமல் இதைச் செய்தபடியால், யெகோவா தம் பெயரில் ஆணையிட்டு அறிவிக்கிறதாவது: நான் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகப்பண்ணுவேன். உன் சந்ததியினரோ அவர்களுடைய பகைவரின் பட்டணங்களைக் கைப்பற்றுவார்கள். நீ எனக்குக் கீழ்ப்படிந்தபடியால், உன் சந்ததிகள் மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்கிறார், என்று சொன்னார். அதன்பின் ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம் திரும்பிச்சென்று, அவர்களுடன் பெயெர்செபாவுக்குப் போனான். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தங்கினான். நாகோரின் மகன்கள் சிறிது காலத்திற்கு பின்பு, “மில்க்காளும் தாயாகி இருக்கிறாள்; உன் சகோதரனாகிய நாகோருக்கு அவள் மகன்களைப் பெற்றிருக்கிறாள் என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது; அவர்கள்: அவள் தன் முதற்பேறான மகன் ஊஸ், அவன் சகோதரன் பூஸ், ஆராமின் தகப்பனான கேமுயேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துயேல்” என ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டது. பெத்துயேல் ரெபெக்காளுக்குத் தகப்பன் ஆனான். மில்க்காள் இந்த எட்டு மகன்களையும் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றாள். ரேயுமாள் என்னும் நாகோரின் வைப்பாட்டியும் தேபா, காஹாம், தாகாஷ், மாகா என்னும் நான்கு மகன்களைப் பெற்றாள். சாராளின் மரணம் சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள். அவள் கானானில் எப்ரோன் என்று அழைக்கப்பட்ட, கீரியாத் அர்பா என்னும் ஊரில் இறந்தாள்; அங்கே ஆபிரகாம் சாராளுக்காகத் துக்கித்து, அழுது புலம்பினான். அதன்பின்பு ஆபிரகாம், இறந்த தன் மனைவியின் அருகிலிருந்து எழுந்து, ஏத்தியருடன் பேசினான். அவன் அவர்களிடம், “நான் இங்கு உங்கள் மத்தியில் அந்நியனும், வெளிநாட்டவனுமாய் இருக்கிறேன். இறந்த என் மனைவியைப் புதைப்பதற்கான ஒரு நிலத்தை விலைக்குத் தாருங்கள்” என்று கேட்டான். அதற்கு ஏத்திய மக்கள் ஆபிரகாமிடம், “ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும். நீர் எங்கள் மத்தியில் வல்லமையுள்ள பிரபுவாய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் நீர் விரும்பும் சிறந்த கல்லறை ஒன்றில் உமது மனைவியை அடக்கம்பண்ணும். நீர் அடக்கம்பண்ணுவதற்கு எங்களில் ஒருவனும் தன் கல்லறையைத் தர மறுக்கமாட்டான்” என்றார்கள். அப்பொழுது ஆபிரகாம் எழுந்து, அந்த நாட்டு மக்களான ஏத்தியருக்கு முன்பாகத் தலைவணங்கினான். அவன் அவர்களிடம், “இறந்த என் மனைவியை இங்கு அடக்கம்பண்ணுவதற்கு அனுமதிக்க உங்களுக்குச் சம்மதமானால், நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். சோகாரின் மகன் எப்ரோனிடம் எனக்காகப் பரிந்துபேசுங்கள். அவனுடைய நிலத்தின் எல்லையில், அவனுக்குச் சொந்தமாக இருக்கும் மக்பேலா என்னும் குகையை எனக்கு விற்கும்படி சொல்லுங்கள். அது உங்கள் மத்தியில் என் குடும்பத்தின் புதைக்கும் இடமாக இருக்க, அதை முழு விலைக்கு எனக்கு விற்கும்படி கேளுங்கள்” என்றான். அப்பொழுது ஏத்தியனான எப்ரோன் தன் மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அவன் தன் பட்டண வாசலுக்கு வந்திருந்த ஏத்தியர் அனைவரும் கேட்கத்தக்கதாக ஆபிரகாமுக்குப் பதிலளித்து, “இல்லை ஐயா, நான் சொல்வதைக் கேளும்; நீர் கேட்கும் நிலத்தையும், அதிலுள்ள குகையையும் என் மக்கள் முன்னிலையில் உமக்குச் சொந்தமாகத் தருகிறேன். உமது இறந்த மனைவியை அதிலே அடக்கம்பண்ணும்” என்றான். ஆபிரகாம் அந்நாட்டு மக்களுக்கு மறுபடியும் வணக்கம் செலுத்தி, அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனிடம், “விரும்பினால் நான் சொல்வதைக் கேளும், நிலத்தின் மதிப்பை நான் உமக்குக் தருகிறேன். இறந்த என் மனைவியை நான் அங்கு அடக்கம்பண்ணும்படி பணத்தை என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளும்” என்றான். அதற்கு எப்ரோன் ஆபிரகாமிடம், “ஐயா, நான் சொல்வதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் வெள்ளி23:15 அதாவது, சுமார் 10 பவுண்டுகள் அல்லது 4.6 கிலோகிராம் அளவுக்கு வெள்ளி மதிப்பாகும். ஆனால் எனக்கும் உமக்கும் இடையில் அது எம்மாத்திரம்? நீர் உமது இறந்த மனைவியை இந்த நிலத்தில் அடக்கம் செய்யும்” என்றான். ஏத்தியருக்குக் கேட்கத்தக்கதாக எப்ரோன் சொன்ன விலைக்கு ஆபிரகாம் சம்மதித்தான். அவன் வியாபாரிகளின் நடைமுறையில் இருந்த எடையின்படி, நானூறு சேக்கல் வெள்ளியை நிறுத்து அவனுக்குக் கொடுத்தான். இவ்வாறு மம்ரேக்கு அருகே மக்பேலாவிலுள்ள எப்ரோனின் வயல், அதாவது வயலும் அதிலுள்ள குகையும், அதன் எல்லைகளுக்குட்பட்ட மரங்களும் விற்கப்பட்டன. அது ஆபிரகாமின் சொத்தாக, பட்டணத்தின் வாசலுக்குள் வந்த எல்லா ஏத்தியருக்கு முன்பாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்குப்பின் ஆபிரகாம் கானான் நாட்டில், எப்ரோனிலுள்ள மம்ரேக்கு அருகே, மக்பேலா வயலில் உள்ள குகையில் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தான். இவ்வாறு அந்த வயலும், அதிலுள்ள குகையும் ஆபிரகாமுக்குச் சொந்தமான அடக்க நிலமாக ஏத்தியரால் உறுதிப்படுத்தப்பட்டது. ஈசாக்கு ரெபெக்காளின் திருமணம் ஆபிரகாம் இப்பொழுது வயது முதிர்ந்தவன் ஆனான்; யெகோவா எல்லாவிதத்திலும் அவனை ஆசீர்வதித்தார். ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின்கீழ் உன் கையை வைத்து, பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய யெகோவாவின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் கானானியர் மத்தியில் வாழ்வதால் அவர்களுடைய மகள்களில் ஒருத்தியையும் என் மகனுக்கு மனைவியாக நீ எடுக்கமாட்டாய் என்றும், என் நாட்டிற்கும், என் உறவினரிடத்திற்கும் போய், என் மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியை எடுப்பாய் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றான். அப்பொழுது அவ்வேலைக்காரன், “நான் தெரிந்தெடுக்கும் பெண் என்னுடன் வர விரும்பவில்லையென்றால், உம்முடைய மகன் ஈசாக்கை நீர் விட்டுவந்த நாட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமோ?” என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு. என் தகப்பன் வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா, என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்களித்திருக்கிறார். ஆதலால் அவர், நீ அங்கிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர உனக்கு முன்பாக தமது தூதனை அனுப்புவார். அந்தப் பெண் இவ்விடம் வர விரும்பவில்லையென்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதே” என்றான். அப்படியே அவ்வேலைக்காரன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, அவன் இந்தக் காரியத்தைக்குறித்து ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான். அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது. அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும். இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள். நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான். அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள். அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள். வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான். உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள். அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள். யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான். ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா24:22 அதாவது, சுமார் 5.7 கிராம் நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல்24:22 அதாவது, சுமார் 115 கிராம் நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான். பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான். அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள். மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள். உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு, “என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான். அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள். ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான். லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான். அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான். இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.” யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார். என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார். என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது. ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார். “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன். “அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய். நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார். “இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும். இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன். அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன். “இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன். “அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். “அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன். பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன். ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான். அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது. ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள். ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான். அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான். பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள். அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள். பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள். எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: “எங்கள் சகோதரியே, நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்வார்களாக.” பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான். ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான். ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள். அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள். வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான். ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது. ஆபிரகாமின் மரணம் ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவள் ஆபிரகாமுக்குச் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்களைப் பெற்றாள். யக்க்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தகப்பன். தேதானின் சந்ததிகள் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோர். ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா என்பவர்கள் மீதியானின் மகன்கள். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள். ஆபிரகாம் தனக்குரிய யாவற்றையும் ஈசாக்கிற்குக் கொடுத்தான். ஆனால் அவன் உயிரோடிருக்கும்போதே, ஆபிரகாம் தன் வைப்பாட்டிகளின் மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்து, தன் மகன் ஈசாக்கிடமிருந்து விலக்கி, அவர்களைக் கிழக்கு நாட்டுக்கு அனுப்பிவிட்டான். ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தான். ஆபிரகாம் பூரண ஆயுசுள்ள கிழவனாய், நல்ல முதிர்வயதில் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மயேலும் ஏத்தியனான சோகாரின் மகன் எப்ரோனின் வயலில், மம்ரேக்கு அருகேயுள்ள மக்பேலா எனப்படும் குகையில் அவனை அடக்கம்பண்ணினார்கள். அந்த வயலை ஆபிரகாம் ஏத்தியரிடமிருந்து வாங்கியிருந்தான். அங்கே ஆபிரகாம் அவன் மனைவி சாராளுடன் அடக்கம்பண்ணப்பட்டான். ஆபிரகாம் இறந்தபின் அவனுடைய மகன் ஈசாக்கை இறைவன் ஆசீர்வதித்தார். அப்போது அவன், பீர்லகாய்ரோயீ என்ற இடத்திற்கு அருகில் குடியிருந்தான். இஸ்மயேலின் சந்ததி சாராளின் பணிப்பெண்ணான எகிப்தியப் பெண் ஆகார், ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் இஸ்மயேலின் வம்சவரலாறு இதுவே: பிறப்பின் வரிசைப்படி இஸ்மயேலின் மகன்களின் பெயர்களாவன: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன். பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா. ஆகியோரும் இஸ்மயேலின் மகன்களாவர். அவர்களுடைய குடியிருப்புகளின்படியும், முகாம்களின்படியும் பன்னிரண்டு கோத்திர ஆளுநர்களின் பெயர்களும் இவையே. இஸ்மயேல் நூற்று முப்பத்தேழு வருடங்கள் வாழ்ந்தான். அவன் தன் இறுதி மூச்சைவிட்டு இறந்து, தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய சந்ததிகள் ஆவிலா தொடங்கி, சூர் வரைக்கும் குடியிருந்தார்கள். அது அசீரியாவுக்குப் போகிற வழியில் எகிப்தின் எல்லைக்கு அருகேயிருந்தது. அவர்கள் தங்கள் சகோதரர் எல்லோருடனும் பகைமையுடனேயே வாழ்ந்துவந்தார்கள். யாக்கோபும் ஏசாவும் ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வம்சவரலாறு இதுவே: ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன் ஆனான். ஈசாக்கு ரெபெக்காளைத் திருமணம் செய்தபோது, நாற்பது வயதுடையவனாய் இருந்தான். ரெபெக்காள் பதான் அராமில் வாழ்ந்துவந்த அரமேயி தேசத்தானாகிய பெத்துயேலின் மகளும், லாபானின் சகோதரியுமாவாள். தன் மனைவி மலடியாய் இருந்தபடியால், ஈசாக்கு யெகோவாவிடத்தில் அவளுக்காக மன்றாடினான். யெகோவா அவன் மன்றாட்டைக் கேட்டார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பவதியானாள். அவள் வயிற்றிலிருந்த குழந்தைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்பொழுது அவள், “எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று சொல்லி, யெகோவாவிடம் விசாரிக்கப் போனாள். அப்பொழுது யெகோவா ரெபெக்காளிடம் சொன்னது: “உன் கர்ப்பத்தில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன; உன் வயிற்றிலிருந்து இரண்டு மக்கள் கூட்டங்கள் பிரிக்கப்படும். ஒரு மக்கள் கூட்டம் மற்றதைவிட வலிமையுள்ளதாய் இருக்கும், மூத்தவன் இளையவனுக்குப் பணிசெய்வான்.” பிரசவகாலம் வந்தபோது, அவள் கருப்பையில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தன. முதலில் பிறந்த குழந்தை சிவந்த நிறமும், அதன் முழு உடலும் உரோமம் நிறைந்ததாயும் இருந்தது. ஆகவே அவனுக்கு ஏசா என்று பெயரிட்டார்கள். அதன்பின் அவனுடைய சகோதரன், தன் கையினால் ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அதனால் அவன் யாக்கோபு என்று பெயரிடப்பட்டான். ரெபெக்காள் இவர்களைப் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதுடையவனாயிருந்தான். அச்சிறுவர்கள் வளர்ந்தபோது, ஏசா வேட்டையில் திறமையுள்ளவனாயும், காடுகளில் தங்குபவனாயும் இருந்தான். ஆனால் யாக்கோபோ, பண்புள்ளவனாய் கூடாரங்கள் மத்தியில் வாழ்ந்தான். வேட்டையாடும் இறைச்சியை விரும்பிய ஈசாக்கு, ஏசாவை நேசித்தான். ஆனால் ரெபெக்காளோ யாக்கோபை நேசித்தாள். ஒரு நாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா காட்டு வெளியிலிருந்து மிகவும் களைத்தவனாக வந்தான். அப்பொழுது அவன் யாக்கோபிடம், “நான் களைத்துப் போயிருக்கிறேன்! சீக்கிரமாய் அந்தச் சிவப்புக் கூழில் எனக்குக் கொஞ்சம் தா!” என்று கேட்டான். அதினாலேயே ஏசாவுக்கு ஏதோம்25:30 ஏதோம் என்றால் சிவப்பு என்று அர்த்தம். என்கிற பெயர் உண்டாயிற்று. யாக்கோபோ அவனிடம், “நீ முதலில் உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை எனக்கு விற்று விடு” என்றான். அதற்கு ஏசா, “என்னைப் பார், நான் சாகப்போகிறேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான். ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான். அதன்பின் யாக்கோபு ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், பயற்றங்கூழும் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிட்டுக் குடித்து எழுந்து போய்விட்டான். இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை உதாசீனம் செய்தான். ஈசாக்கும் அபிமெலேக்கும் ஆபிரகாம் காலத்திலிருந்த பஞ்சத்தைவிட நாட்டில் இன்னுமொரு பஞ்சம் உண்டானது. அதனால் ஈசாக்கு கேராரிலுள்ள பெலிஸ்திய அரசனான அபிமெலேக்கிடம் போனான். அப்பொழுது யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நீ எகிப்திற்குப் போகவேண்டாம்; நான் உன்னைக் குடியிருக்கச் சொல்லும் நாட்டில் குடியிரு. சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கியிரு, நான் உன்னுடன் இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். இந்த நாடுகள் எல்லாவற்றையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, நான் உன் தகப்பன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக்கொடுத்த சத்தியத்தை உறுதிப்படுத்துவேன். நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியின் மூலமாக பூமியில் உள்ள எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். ஏனெனில், ஆபிரகாம் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் ஒப்படைத்தவற்றையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்ட விதிகளையும் நிறைவேற்றினான்” என்றார். இதனால் ஈசாக்கு கேராரிலே தங்கியிருந்தான். அவ்விடத்து மனிதர் அவனுடைய மனைவியைப் பற்றி யாரென்று விசாரித்தபோது, அவளைத், “தன் மனைவி” என்று சொல்லப் பயந்ததினால், “தன் சகோதரி” என்று சொன்னான். ஏனெனில், “ரெபெக்காள் மிகவும் அழகுள்ளவளாய் இருந்தபடியால், அவ்விடத்து மனிதர் அவளை அபகரிப்பதற்காகத் தன்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று அவன் நினைத்தான். ஈசாக்கு நீண்டநாட்களாய் அங்கே குடியிருக்கையில், பெலிஸ்திய அரசன் அபிமெலேக்கு ஒரு நாள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளோடே தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டான். அப்பொழுது அபிமெலேக்கு ஈசாக்கைக் கூப்பிட்டு அவனிடம், “உண்மையிலேயே அவள் உன்னுடைய மனைவி! அப்படியிருக்க, அவள் உன் சகோதரியென்று நீ ஏன் சொன்னாய்?” என்று கேட்டான். அதற்கு ஈசாக்கு, “அவளின் நிமித்தம் நான் என் உயிரை இழந்துவிடுவேன் என்று நினைத்தபடியால் அப்படிச் சொன்னேன்” என்றான். அதற்கு அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களுக்குச் செய்திருப்பது என்ன? எங்கள் மனிதரில் யாராவது ஒருவன் உன் மனைவியுடன் உறவுகொண்டிருந்தால், நீ எங்கள்மேல் குற்றத்தைக் கொண்டுவந்திருப்பாயே” என்றான். பின்பு அபிமெலேக்கு எல்லா மனிதருக்கும் சொன்னதாவது: “இந்த மனிதனையோ அல்லது இவன் மனைவியையோ தொந்தரவு செய்யும் எவனும், நிச்சயமாகக் கொல்லப்படுவான்” என உத்தரவிட்டான். ஈசாக்கு அந்த நிலத்தில் பயிரிட்டான், யெகோவா அவனை ஆசீர்வதித்தபடியால், அதே வருடத்தில் அவன் நூறுமடங்கு அறுவடை செய்தான். அவன் பணக்காரன் ஆனான், அவன் மிகவும் செல்வந்தனாகும்வரை அவனுடைய செல்வம் தொடர்ந்து பெருகியது. அவனுக்கு அநேக ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும், அநேக வேலைக்காரரும் இருந்தார்கள். அதனால் பெலிஸ்தியர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள். அவனுடைய தகப்பனான ஆபிரகாமின் காலத்தில் அவனுடைய வேலைக்காரர் வெட்டிய கிணறுகளையெல்லாம், பெலிஸ்தியர் மண்ணைப்போட்டு மூடினார்கள். எனவே அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடு; நீ எங்களைவிட மிகவும் வல்லமையுள்ளவனாகி விட்டாய்” என்றான். ஆகவே, ஈசாக்கு அவ்விடத்தைவிட்டு அகன்று, கேராரின் பள்ளத்தாக்குக்குப் போய், அங்கே கூடாரம்போட்டுத் தங்கினான். தன் தகப்பன் ஆபிரகாமின் காலத்தில் வெட்டப்பட்டு, ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியரினால் மூடப்பட்டிருந்த கிணறுகளை ஈசாக்கு மீண்டும் தோண்டினான். அவற்றிற்குத் தன் தகப்பன் கொடுத்திருந்த அதே பெயர்களையே இட்டான். ஈசாக்கின் வேலைக்காரர் அந்தப் பள்ளத்தாக்கிலே கிணற்றைத் தோண்டிய போது, அங்கே புதிய நன்னீர் ஊற்றைக் கண்டார்கள். ஆனால், கேராரின் மேய்ப்பர்கள், “அந்த நீரூற்று தங்களுடையது என்று சொல்லி ஈசாக்கின் மேய்ப்பருடன் வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்தபடியால், ஈசாக்கு அக்கிணற்றுக்கு ஏசேக்கு26:20 ஏசேக்கு என்றால் வாக்குவாதம் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான்.” அதற்குப்பின் வேறொரு கிணற்றைத் தோண்டினார்கள். அதைக் குறித்தும் அவர்கள் வாக்குவாதம் பண்ணினார்கள். அதனால் அவன் அதற்கு சித்னா26:21 சித்னா என்றால் எதிர்ப்பு என்று அர்த்தம். என்று பெயரிட்டான். பின் அவன் அவ்விடம் விட்டு வேறு இடத்திற்குப் போய், அங்கேயும் ஒரு கிணறு தோண்டினான். அதைக்குறித்து ஒருவரும் வாக்குவாதம் செய்யவில்லை. அப்பொழுது ஈசாக்கு, “யெகோவா எனக்கு இப்பொழுது ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார், இந்த நிலத்திலே நாம் செழித்து வாழ்வோம்” என்று சொல்லி அந்த இடத்திற்கு ரெகொபோத்26:22 ரெகொபோத் என்றால் விசாலமான இடம் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். அன்று இரவு யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நான் உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவன்; நீ பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கிறேன். நான் என் பணியாளன் ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார். அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை வழிபட்டான். அங்கே தனக்கு ஒரு கூடாரத்தையும் அமைத்தான், அவனுடைய வேலைக்காரர் அவ்விடத்தில் ஒரு கிணற்றையும் தோண்டினார்கள். அக்காலத்தில் அபிமெலேக்கு தன் ஆலோசகன் அகுசாத்துடனும், தன் படைத்தளபதி பிகோலுடனும் கேராரிலிருந்து ஈசாக்கிடம் வந்தான். ஈசாக்கு அவர்களிடம், “என்னுடன் பகைமை பாராட்டி, என்னை வெளியே துரத்தி விட்டீர்களே, இப்பொழுது ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யெகோவா உம்மோடு இருக்கிறார் என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்; ‘எனவே, நமக்கிடையில் சத்தியம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும்.’ நாங்கள் உம்முடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அதாவது, நாங்கள் உம்மைத் தொந்தரவு செய்யாமல், எப்பொழுதும் உம்மை நன்றாக நடத்தி, சமாதானத்தோடே அனுப்பியதுபோல், நீரும் எங்களுக்கு ஒரு தீமையும் செய்யாது இருப்பீர் என்று ஆணையிட்டுக் கொள்வோம். நீர் இப்பொழுது யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்” என்றார்கள். பின்பு ஈசாக்கு அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தான். அவ்விருந்தில் அவர்களெல்லாரும் சாப்பிட்டு, குடித்தார்கள். மறுநாள் அதிகாலை எழுந்து, ஒருவரோடொருவர் ஆணையிட்டு சபதம் செய்துகொண்டார்கள். ஈசாக்கு அவர்களை வழியனுப்பினான், அவர்கள் சமாதானத்துடன் அவனைவிட்டுப் புறப்பட்டார்கள். அந்த நாளில், ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றி அவனிடம் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “நாங்கள் தண்ணீரைக் கண்டோம்!” என்றார்கள். அவன் அக்கிணற்றிற்கு சிபா என்று பெயரிட்டான். இன்றுவரை அப்பட்டணம் பெயெர்செபா26:33 பெயெர்செபா என்றால் சபதத்தின் கிணறு அல்லது ஏழு கிணறு என்று அர்த்தம். என்றே அழைக்கப்படுகிறது. யாக்கோபு ஏசாவின் ஆசீர்வாதத்தை எடுத்துக்கொள்ளுதல் ஏசாவுக்கு நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும் திருமணம் செய்துகொண்டான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனவேதனையை உண்டாக்குகிறவர்களாய் இருந்தார்கள். ஈசாக்கு முதிர்வயதானதால், அவனுடைய கண்பார்வை மங்கிப்போயிருந்தன. அவன் தன் மூத்த மகன் ஏசாவைக் கூப்பிட்டு, “என் மகனே” என்றான். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான். ஈசாக்கு அவனிடம், “இப்பொழுது நான் கிழவனாகிவிட்டேன். எந்த நாளில் மரணம் வருமோ? எனக்குத் தெரியாது. ஆகையால், நீ உன் ஆயுதங்களான வில்லையும், அம்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு, உடனே காட்டு வெளிக்குப்போய் வேட்டையாடி, எனக்கு இறைச்சி கொண்டுவா. நான் விரும்பும் சுவையுள்ள உணவை நீ சமைத்து, நான் அதைச் சாப்பிடுவதற்கு என்னிடம் கொண்டுவா. நான் இறப்பதற்குமுன் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுப்பேன்” என்றான். ஈசாக்கு தன் மகன் ஏசாவுடன் பேசியதை, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா மிருகங்களை வேட்டையாடிக் கொண்டுவருவதற்காகக் காட்டு பகுதிக்குப் போனான். அப்பொழுது ரெபெக்காள் தன் மகன் யாக்கோபிடம், “பார், உன் தகப்பன் உன் சகோதரன் ஏசாவிடம் பேசுவதை நான் கேட்டேன். அவர், ‘நீ வேட்டையாடி, இறைச்சியைக் கொண்டுவந்து, நான் சாப்பிடுவதற்கு சுவையுள்ள உணவைத் தயாரித்து கொண்டுவா; நான் இறப்பதற்குமுன், யெகோவாவின் முன்னிலையில் என்னுடைய ஆசீர்வாதத்தை உனக்குக் கொடுக்கவேண்டும்’ என்றார், என்று சொன்னாள். இப்பொழுதும் என் மகனே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்: நீ உடனே ஆட்டு மந்தைக்குப் போய் நல்ல வெள்ளாட்டுக் குட்டிகள் இரண்டை என்னிடம் கொண்டுவா; உன் தகப்பன் விரும்புகிற விதமாகவே சுவையுள்ள உணவை நான் சமைத்துத் தருவேன். அதைக் கொண்டுபோய் அவர் சாப்பிடுவதற்குக் கொடு. அவர் இறப்பதற்குமுன் தன் ஆசீர்வாதத்தை உனக்குத் தரட்டும்” என்றாள். அதற்கு யாக்கோபு, தன் தாய் ரெபெக்காளிடம், “என் சகோதரன் ஏசா உடலில் உரோமம் நிறைந்தவன்; என் உடலோ மிருதுவானது. என் தகப்பன் என்னைத் தொட்டால் என்ன செய்வது? அவரை ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சாபத்தையே என்மேல் கொண்டுவருவேன்” என்றான். அவன் தாய் அவனிடம், “என் மகனே, அந்தச் சாபம் என்மேல் வரட்டும்; நான் சொல்லுகிறபடி நீ போய், ஆட்டுக்குட்டிகளைக் கொண்டுவா” என்றாள். அப்படியே யாக்கோபு போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டுவந்தான். அவள் அவற்றை அவனுடைய தகப்பனுக்கு விருப்பமான சுவையுள்ள உணவாகச் சமைத்தாள். பின்பு ரெபெக்காள், வீட்டிலிருந்த தன் மூத்த மகன் ஏசாவின் மிகச்சிறந்த உடைகளை எடுத்து, அவற்றைத் தன் இளையமகன் யாக்கோபுக்கு உடுத்தினாள். அவனுடைய கைகளையும், கழுத்தின் மிருதுவான பகுதியையும் வெள்ளாட்டுத் தோல்களினால் மறைத்தாள். பின்பு அவள் தயாரித்த சுவையுள்ள உணவையும் அப்பங்களையும் தன் மகன் யாக்கோபிடம் கொடுத்தாள். அவன் தன் தகப்பனிடம் போய், “அப்பா” என்று அழைத்தான். அதற்கு அவன், “என் மகனே, நீ யார்?” என்றான். அதற்கு யாக்கோபு தன் தகப்பனிடம், “நான் உங்கள் மூத்த மகன் ஏசா; நீங்கள் சொன்னபடியே நான் செய்திருக்கிறேன். எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குத் தாருங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனிடம், “மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். அதற்கு அவன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவே எனக்கு வெற்றியைத் தந்தார்” என்றான். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபிடம், “என் மகனே, உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானோ அல்லவோ என தொட்டுப் பார்க்கும்படி, என் அருகில் வா” என்றான். யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கின் அருகில் வந்தபோது, ஈசாக்கு அவனைத் தடவிப்பார்த்து, “குரலோ யாக்கோபின் குரல்; கைகளோ ஏசாவின் கைகள்” என்றான். அவனுடைய கைகள் மூத்தவன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்ததாய் இருந்தபடியால், அவனுடைய தகப்பன் அவனை இன்னாரென்று அறியவில்லை; எனவே அவன் யாக்கோபை ஆசீர்வதித்தான். ஈசாக்கு யாக்கோபிடம், “உண்மையாகவே நீ என் மகன் ஏசாதானா?” என்று கேட்டான். அவனும், “ஆம், நான்தான்” என்றான். அப்பொழுது ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சியில் கொஞ்சத்தை நான் சாப்பிடும்படி என்னிடம் கொண்டுவா; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றான். யாக்கோபு அதைக் கொண்டுவந்தான். அவன் அதைச் சாப்பிட்டான்; அத்துடன் அவன் திராட்சை இரசத்தையும் கொண்டுவந்தான், ஈசாக்கு அதைக் குடித்தான். அதன்பின் அவன் தகப்பன் ஈசாக்கு அவனிடம், “மகனே, நீ எனக்கு அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றான். யாக்கோபு தன் தகப்பனருகில் போய் அவனை முத்தமிட்டான். ஈசாக்கு யாக்கோபினுடைய உடையின் மணத்தை முகர்ந்து பார்த்து, அவனை ஆசீர்வதித்து சொன்னது: “ஆஹா, என் மகனின் மணம் யெகோவா ஆசீர்வதித்த வயலின் மணத்தைப்போல் இருக்கிறது. இறைவன் உனக்கு வானத்தின் பனியையும், மண்ணின் வளத்தையும் கொடுப்பாராக. தானியத்தையும், திராட்சை இரசத்தையும் நிறைவாய் தருவாராக. நாடுகள் உனக்குப் பணி செய்வார்களாக. மக்கள் கூட்டங்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்களாக. உன் சகோதரரின்மேல் நீ முதன்மையானவனாய் இருப்பாய், உன் தாயின் மகன்கள் உன்னைத் தலைதாழ்த்தி வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்களாக. உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக.” ஈசாக்கு அவனை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன் முன்னிருந்து போன மாத்திரத்தில், வேட்டையாடப் போன ஏசா திரும்பிவந்தான். அவனும் இறைச்சியைச் சுவையுள்ள உணவாகச் சமைத்து தன் தகப்பனிடம் கொண்டுவந்தான். அவன், “அப்பா எழுந்திருந்து நான் வேட்டையாடிக் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டு, உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள்” என்றான். அப்பொழுது ஈசாக்கு, “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு அவன், “நான் உம்முடைய மகன்; மூத்த மகனான ஏசா” என்றான். ஈசாக்கு வெகுவாய் நடுங்கி, “அப்படியானால் வேட்டையாடிச் சமைத்த உணவை என்னிடம் கொண்டுவந்தவன் யார்? நீ வருவதற்குச் சிறிது நேரத்திற்குமுன் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே! நிச்சயமாய் அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பான்” என்றான். தன் தகப்பனின் வார்த்தைகளைக் கேட்டவுடனே ஏசா மனங்கசந்து, சத்தமிட்டுக் கதறி அழுது தன் தகப்பனிடம், “அப்பா என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். அப்பொழுது ஈசாக்கு, “உன் சகோதரன் யாக்கோபு தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான். அதைக்கேட்ட ஏசா தகப்பனிடம், “அவன் யாக்கோபு27:36 யாக்கோபு என்றால் ஏமாற்றுபவன் என்று பொருள். என சரியாகவல்லவோ பெயரிடப்பட்டிருக்கிறான்? அவன் என்னை இரண்டுமுறை ஏமாற்றிவிட்டான்: அன்று என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான், இன்று என் ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டான்!” என்றான். பின்பு அவன், “நீங்கள் எனக்காக எந்த ஆசீர்வாதத்தையும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு ஈசாக்கு ஏசாவிடம், “நான் யாக்கோபை உனக்குத் தலைவனாகவும், அவனுடைய எல்லா உறவினரையும் அவனுக்கு வேலைக்காரராகவும் கொடுத்து, தானியத்தினாலும், புதிய திராட்சை இரசத்தினாலும் அவனை நிறைவாக்கியிருக்கிறேன். அவ்வாறிருக்க, என் மகனே, உனக்காக நான் என்ன செய்வேன்?” என்றான். அப்பொழுது ஏசா தகப்பனிடம், “அப்பா, ஒரேயொரு ஆசீர்வாதம் மட்டும்தானா உங்களிடம் உண்டு? என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்று கூறி சத்தமிட்டு அழுதான். அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனிடம் சொன்னது: “பூமியின் செழிப்புக்கும் வானத்தின் பனிக்கும் தூரமாகவே உன் குடியிருப்பு இருக்கும். நீ உன் வாளினால் வாழ்ந்து, உன் சகோதரனுக்குப் பணிசெய்வாய். நீ கட்டுக்கடங்காது போகும்போது, அவன் உன் கழுத்தின்மேல் வைத்த நுகத்தை நீ எடுத்து எறிந்துபோடுவாய்.” தன் தகப்பன், யாக்கோபுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் நிமித்தம், ஏசா யாக்கோபின்மேல் வன்மம் கொண்டிருந்தான். “என் தகப்பனுக்காக துக்கங்கொண்டாடும் நாட்கள் சமீபமாய் இருக்கின்றன. அப்பொழுது நான் என் சகோதரன் யாக்கோபைக் கொன்றுவிடுவேன்” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். மூத்த மகன் ஏசாவின் திட்டம் ரெபெக்காளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் தன் இளையமகன் யாக்கோபைக் கூப்பிட்டு, அவனிடம், “உன் சகோதரன் ஏசா உன்னைக் கொல்லும் நினைப்பில் தன்னைத் தேற்றிக்கொண்டிருக்கிறான். ஆகையால் மகனே, இப்பொழுது நான் சொல்வதுபோல் செய்: உடனடியாக ஆரானிலிருக்கும் என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போ. உன் சகோதரனின் மூர்க்கம் தணியுமட்டும் நீ அங்கே தங்கியிரு. உன் சகோதரன் கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை மறக்கும்போது, நீ அங்கிருந்து திரும்பிவரும்படி நான் உனக்குச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் உங்கள் இருவரையும் நான் ஏன் இழந்துபோக வேண்டும்?” என்றாள். பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம் போய், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. யாக்கோபும் இந்த நாட்டுப் பெண்களிலிருந்து ஒரு ஏத்தியப் பெண்ணை மனைவியாகக் கொண்டால், நான் உயிர்வாழ்ந்தும் பயனில்லை” என்றாள். அப்பொழுது ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, அவனை ஆசீர்வதித்து, அவனுக்குக் கட்டளையிட்டதாவது: “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே. உடனே பதான் அராமிலுள்ள உன் தாயின் தந்தை பெத்துயேலின் வீட்டுக்குப்போ. அங்கே உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியை உன் மனைவியாக்கிக்கொள். எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இனவிருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் வரைக்கும் அவர் உன்னைப் பெருகப்பண்ணுவாராக. ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இறைவன் உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பாராக. எனவே இறைவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும், இப்பொழுது நீ அந்நியனாய் வாழ்கின்றதுமான இந்த நாட்டை, நீ உரிமையாக்கிக்கொள்வாய்” என்றான். அதன்பின் ஈசாக்கு, யாக்கோபை வழியனுப்பினான்; அவன் பதான் அராமிலிருந்த அரமேயனான பெத்துயேலின் மகன் லாபானிடம் போனான். லாபான் யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, பதான் அராமிலிருந்து ஒரு பெண்ணை எடுக்கும்படி அவனை அங்கு அனுப்பியதை ஏசா அறிந்தான். அவனை ஆசீர்வதிக்கும்பொழுது, “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே” என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் கேள்விப்பட்டான். அத்துடன், யாக்கோபு தன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் போய்விட்டதையும் ஏசா அறிந்தான். அப்பொழுது தன் தகப்பன் ஈசாக்கு கானானியப் பெண்களில் எவ்வளவு வெறுப்பாய் இருக்கிறார் என்பதை ஏசா உணர்ந்தான். எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மயேலிடம் போய், அவன் மகள் மகலாத்தைத் திருமணம் செய்தான். நெபாயோத்தின் சகோதரியான அவளை ஏற்கெனவே தனக்கிருந்த மனைவிகளுடன் சேர்த்துக்கொண்டான். பெத்தேலில் யாக்கோபின் கனவு யாக்கோபு பெயெர்செபாவைவிட்டு ஆரானுக்குப் புறப்பட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கினான். அவன் அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்து உறங்கினான். அப்பொழுது அவன் ஒரு ஏணி பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டான்; அதிலே இறைவனின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். யெகோவா அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய யெகோவா நானே. உனக்கும் உன் சந்ததிக்கும், நீ படுத்திருக்கிற இந்த நாட்டைத் தருவேன். உன் சந்ததிகள் பூமியின் புழுதியைப்போல் பெருகுவார்கள். நீ மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவுவாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னுடனே இருக்கிறேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவேமாட்டேன்” என்றார். யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான். அவன் பயந்து, “இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்” என்றான். மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். அந்த இடத்திற்கு அவன் பெத்தேல்28:19 பெத்தேல் என்றால் இறைவனின் வீடு என்று பொருள். என்று பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணம் லூஸ் என்று அழைக்கப்பட்டிருந்தது. பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, சாப்பிட உணவும், உடுக்க உடையும் தந்து, பாதுகாப்புடன் என் தகப்பன் வீட்டுக்குத் திரும்பி வரப்பண்ணுவாரானால், யெகோவாவே என் இறைவனாயிருப்பார். நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குக் கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான். பதான் அராமில் யாக்கோபு பின்பு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்குத் திசையாரின் நாட்டிற்குப் போனான். அங்குள்ள வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே மூன்று ஆட்டுமந்தைகள் படுத்திருப்பதையும் அவன் கண்டான்; அக்கிணற்றில் இருந்தே அவற்றுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். கிணற்றின் வாயை மூடியிருந்த கல் பெரிதாயிருந்தது. எல்லா மந்தைகளும் சேர்ந்தவுடன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அதன்பின் திரும்பவும் அக்கல்லைக் கிணற்றின் வாயின்மேல் முன்பிருந்த இடத்தில் புரட்டி வைப்பார்கள். யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரிலிருந்து வருகிறோம்” என்றார்கள். யாக்கோபு அவர்களிடம், “உங்களுக்கு நாகோரின் பேரன் லாபானைத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம்; எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். “அவர் சுகமாயிருக்கிறாரா?” என்று யாக்கோபு விசாரித்தான். “சுகமாயிருக்கிறார்; இதோ அவருடைய மகள் ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள். அதற்கு யாக்கோபு அவர்களிடம், “இன்னும் சூரியன் மறையவில்லையே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமும் இல்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்து மறுபடியும் மேயவிடலாம்” என்றான். அதற்கு அவர்கள், “எல்லா மந்தைகளும் சேரும்வரை அப்படிச் செய்யமுடியாது. சேர்ந்ததும் கிணற்றின் வாயிலிருக்கும் கல் புரட்டப்படும். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள். அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், ராகேல் மந்தை மேய்ப்பவளாய் இருந்தபடியால், தன் தகப்பனின் ஆடுகளுடன் அங்கே வந்தாள். யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழத்தொடங்கினான். அவன் ராகேலிடம், “நான் உன் தகப்பனின் உறவினன்; ரெபெக்காளின் மகன்” என்று சொன்னான். உடனே அவள் ஓடிப்போய் அதைத் தன் தகப்பனுக்குச் சொன்னாள். தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்ட லாபான் அவனைச் சந்திப்பதற்காக விரைவாய் வந்தான். அவன் அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். நடந்த எல்லாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான். அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்த இரத்த சம்மந்தமான உறவினன்” என்றான். யாக்கோபின் திருமணம் யாக்கோபு லாபானுடன் ஒரு மாதம் தங்கியிருந்தான். அதன்பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ எனக்கு உறவினன் என்பதால், கூலியில்லாமல் எனக்கு வேலைசெய்ய வேண்டுமோ? நீ விரும்பும் கூலியைக் கேள்” என்றான். லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல். லேயாள் பார்வை குறைந்த கண்களை உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள். யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உமது இளையமகள் ராகேலுக்காக நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வேன்” என்றான். அதற்கு லாபான், “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுப்பதைப் பார்க்கிலும் உனக்குக் கொடுப்பது நல்லது; நீ என்னுடன் இங்கேயே தங்கியிரு” என்றான். அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன. பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் உம்மிடம் உடன்பட்ட காலம் நிறைவாகிவிட்டது; நான் ராகேலை திருமணம் செய்துகொள்ளும்படி அவளை எனக்குக் கொடும்” என்றான். அப்பொழுது லாபான், அந்த இடத்தின் மக்களையெல்லாம் ஒன்றாய்க் கூட்டி, ஒரு விருந்து கொடுத்தான். ஆனால் அன்று இரவு லாபான், தன் மகள் லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடம் கொடுத்தான். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான். லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பினான். பொழுது விடிந்ததும், யாக்கோபு தன்னுடன் இருந்தவள் லேயாள் என்பதைக் கண்டான். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் ராகேலுக்காக அல்லவோ உம்மிடம் வேலைசெய்தேன்; நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான். அதற்கு லாபான், “மூத்தவள் இருக்க இளைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பது இங்கு எங்கள் வழக்கமல்ல. மணமகளுக்குரிய ஏழு நாட்களை நீ நிறைவேற்று. பின்பு உனக்கு இளைய மகளையும் கொடுப்போம், அவளுக்காகவும் இன்னும் ஏழு வருடங்கள் நீ என்னிடத்தில் வேலைசெய்” என்றான். யாக்கோபு அப்படியே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களையும் அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் பில்காளை தன் மகள் ராகேலுக்குப் பணிப்பெண்ணாகக் கொடுத்தான். யாக்கோபு ராகேலுடன் உறவுகொண்டான், யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான். அவன் ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் லாபானிடம் வேலைசெய்தான். யாக்கோபின் பிள்ளைகள் லேயாள் நேசிக்கப்படாமல் இருந்ததை யெகோவா கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாய் இருந்தாள். லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் நேசிக்கப்படவில்லை என்பதை யெகோவா கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள். திரும்பவும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி என்று பெயரிடப்பட்டான். மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “இப்பொழுது நான் யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அதன்பின்பு அவள் பிள்ளைகள் பெறவில்லை. யாக்கோபுக்கு ராகேல் பிள்ளைகள் எதையும் பெறாததினால், ராகேல் தன் சகோதரியின்மேல் பொறாமை கொண்டாள். எனவே அவள் யாக்கோபிடம், “நீர் எனக்கு பிள்ளைகளைக் கொடும்; இல்லாவிட்டால் நான் சாகப்போகிறேன்” என்றாள். அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு, “நான் என்ன இறைவனா? அவர் அல்லவா உன்னைப் பிள்ளைப்பேறு அற்றவளாக்கி இருக்கிறார்!” என்றான். அதற்கு அவள், “இதோ என் பணிப்பெண் பில்காள் இருக்கிறாள், அவளுடன் உறவுகொள்ளும். அவள் எனக்காகப் பிள்ளைகளைப் பெறட்டும், அவள் மூலம் நானும் ஒரு குடும்பத்தைக் கட்டலாமே” என்றாள். அப்படியே அவள் தன் பணிப்பெண் பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான். பில்காள் கருத்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது ராகேல், “இறைவன் எனக்கு நியாயம் செய்து, என் வேண்டுதலைக் கேட்டு, எனக்கொரு மகனைத் தந்தார்” என்றாள். அதனால் அவனுக்கு, தாண் என்று பெயரிட்டாள். மறுபடியும் ராகேலின் பணிப்பெண் பில்காள் கருத்தரித்து, யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றாள். அப்பொழுது ராகேல், “என் சகோதரியுடன் எனக்கிருந்த பெரிய போராட்டத்தில் நான் வெற்றியடைந்தேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி எனப் பெயரிட்டாள். லேயாள் தனக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனதைக் கண்டு, தன் பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது லேயாள், “நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி” என்று சொல்லி அவனுக்கு காத் என்று பெயரிட்டாள். லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனையும் பெற்றாள். அப்பொழுது லேயாள், “நான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்! பெண்கள் எல்லாரும் என்னை, மகிழ்ச்சி உள்ளவள் என அழைப்பார்கள்” என்றாள். அதனால் அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள். கோதுமை அறுவடைக்காலத்தில் ரூபன் வயல்வெளிக்குப் போனான். அங்கே தூதாயீம்30:14 அக்கால கலாச்சாரத்தில் இந்த மூலிகை பாலுணர்வைத் தூண்டுவதாக நம்பப்பட்டது. மூலிகைச் செடியைக் கண்டு அவற்றைக் கொண்டுவந்து தன் தாய் லேயாளிடம் கொடுத்தான். ராகேல் லேயாளிடம், “உன் மகன் கொண்டுவந்த மூலிகைகளில் எனக்கும் கொஞ்சம் தா” என்றாள். அதற்கு லேயாள், “நீ என் கணவனை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டது போதாதோ? என் மகன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகையையும் அபகரிக்கப் பார்க்கிறாயோ?” என்று கேட்டாள். அதற்கு ராகேல், “அப்படியானால், உன் மகன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகைக்குப் பதிலாக, அவர் இன்றிரவை உன்னுடன் கழிக்கட்டுமே” என்றாள். அப்படியே மாலைவேளையில் யாக்கோபு வயல்வெளியிலிருந்து திரும்பிவந்தபோது, லேயாள் அவனைச் சந்திக்கும்படி வெளியே போய், “என் மகன் ரூபன் கொண்டுவந்த தூதாயீம் மூலிகையைக் கொடுத்து நான் உம்மை வாங்கிக் கொண்டேன். எனவே இன்றிரவு நீர் என்னுடன் தங்கவேண்டும்” என்றாள். அப்படியே அவன் அன்றிரவு அவளுடன் உறவுகொண்டான். இறைவன் லேயாளின் வேண்டுதலைக் கேட்டார். அவள் கருத்தரித்து யாக்கோபுக்கு ஐந்தாவது மகனைப் பெற்றாள். அப்பொழுது லேயாள், “நான் என் பணிப்பெண் சில்பாளை என் கணவனுக்குக் கொடுத்ததற்காக இறைவன் எனக்கு வெகுமதி அளித்தார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்30:18 இசக்கார் என்றால் வெகுமதி என்று அர்த்தம். என்று பெயரிட்டாள். லேயாள் மறுபடியும் கர்ப்பந்தரித்து, யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றாள். அப்பொழுது லேயாள், “இறைவன் எனக்கு ஒரு விலையேறப்பெற்ற வெகுமதியைப் பரிசாகக் கொடுத்தார். நான் ஆறு மகன்களைப் பெற்றபடியால், என் கணவர் இப்பொழுது என்னை மதிப்புடன் நடத்துவார்” என்று சொல்லி அவனுக்குச் செபுலோன்30:20 செபுலோன் என்றால் நன்மதிப்பு என்று அர்த்தம். என்று பெயரிட்டாள். சில காலத்திற்குப் பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள். பின்பு இறைவன் ராகேலையும் நினைவுகூர்ந்தார்; அவளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளுக்கும் பிள்ளைப்பேற்றைக் கொடுத்தார். அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்று, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள். அவள் அவனுக்கு யோசேப்பு எனப் பெயரிட்டு, “யெகோவா இன்னும் ஒரு மகனை எனக்குக் கொடுப்பாராக” என்றாள். யாக்கோபின் மந்தைப் பெருக்கம் ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானிடம், “நான் என் சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவதற்காக என்னை வழியனுப்பிவிடும். என் மனைவிகளையும், என் பிள்ளைகளையும் என்னுடன் அனுப்பிவிடும்; அவர்களுக்காகவே உம்மிடம் நான் வேலைசெய்தேன், நான் போகப்போகிறேன். உமக்காக எவ்வளவு வேலைசெய்தேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். ஆனால் லாபானோ அவனிடம், “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், நீ இங்கேயே தங்கியிரு. உன் நிமித்தமாக யெகோவா என்னையும் ஆசீர்வதித்தார் என்பதை நான் குறிபார்த்து அறிந்துகொண்டேன்” என்றான். மேலும் அவன், “நீ உன் கூலியைச் சொல்; அதை நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான். யாக்கோபு அவனிடம், “நான் உம்மிடத்தில் எப்படி வேலைசெய்தேன் என்பதையும், என் பராமரிப்பில் உமது மந்தை எப்படி நலமாய் இருந்தன என்பதையும் நீர் அறிவீர். நான் வருமுன் உம்மிடத்திலிருந்த சிறிய மந்தை, இப்போது எவ்வளவாய் பெருகியிருக்கிறது. நான் இருந்த இடங்களில் எல்லாம் யெகோவா உம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் நான் எப்பொழுது என் சொந்த குடும்பத்திற்கு சம்பாதிக்கப் போகிறேன்?” என்றான். அதற்கு லாபான், “நான் உனக்கு என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “எனக்கு எதையும் தரவேண்டாம். எனக்காக இந்த ஒரு காரியத்தை மட்டும் நீர் செய்வீரானால் நான் இங்கேயே தங்கி தொடர்ந்து உமது மந்தையை மேய்த்து, அவற்றைப் பராமரிப்பேன். அதாவது, நான் உமது ஆட்டுத் தொழுவத்துக்குச் சென்று, அவற்றில் கலப்பு நிறமும் புள்ளிகளும் உள்ள செம்மறியாடுகளையும், கருப்புநிறச் செம்மறியாட்டுக் குட்டிகளையும், புள்ளிகளும் கலப்பு நிறமும் உள்ள வெள்ளாடுகளையும் பிரித்து எடுத்துக்கொள்கிறேன். அவை என் கூலியாக இருக்கும். எதிர்காலத்தில் நீர் எனக்குக் கூலியாய் கொடுத்திருக்கிற இவற்றைப் பார்க்கும் போதெல்லாம், என் நேர்மையே எனக்காக சாட்சியிடும். நீர் சோதித்துப் பார்க்கும்போது என்னிடம் கலப்பு நிறமும், புள்ளிகளும் இல்லாத வெள்ளாடுகளும், கருப்பு நிறமல்லாத செம்மறியாட்டுக் குட்டிகளும் இருக்குமானால், அவை திருடப்பட்டவைகளாகக் கருதப்படும்” என்றான். அதற்கு லாபான், “சம்மதிக்கிறேன்; நீ சொன்னபடியே ஆகட்டும்” என்றான். ஆனால் அன்றே லாபான் தன் மந்தையிலிருந்து வரிகளும், புள்ளிகளுமுள்ள எல்லா வெள்ளாட்டுக் கடாக்களையும், வெள்ளைநிறப் புள்ளியுடன் கலப்பு நிறமும் புள்ளிகளுமுள்ள எல்லா வெள்ளாடுகளையும், கருப்பு நிற செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்தெடுத்து, அவற்றைத் தன் மகன்களின் பராமரிப்பில் விட்டான். மேலும் லாபான் தனக்கும் யாக்கோபுக்கும் இடையே மூன்றுநாள் பயணத்தூரம் இருக்கும்படி செய்தான். மீதமுள்ள லாபானின் மந்தைகளை யாக்கோபு மேய்த்து வந்தான். ஆனாலும் யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் மரங்களில் இருந்து பசுமையான கொப்புகளை வெட்டி, இடையிடையே உள்ளே உள்ள வெண்மை தோன்றும்படி பட்டைகளை உரித்து, வெள்ளை நிறக்கோடுகளை உண்டாக்கினான். மந்தை தண்ணீர் குடிக்க வரும்போது பட்டை உரிக்கப்பட்ட அக்கொப்புகள் மந்தைக்கு நேரே இருக்கும்படி தொட்டிகளுக்குள் வைத்தான். அவை கருத்தரிக்கப்படும் காலத்தில் தண்ணீர் குடிக்க வரும்போது, அக்கொப்புகளை அவைகளுக்கு எதிராக வைத்தான். இதனால் அவை வரிகளை அல்லது கலப்பு நிறத்தை அல்லது புள்ளிகளையுடைய குட்டிகளையே ஈன்றன. யாக்கோபு அக்குட்டிகளை வேறுபிரித்து, லாபானுக்குரிய மந்தையை வரியும் கருப்புமான மந்தைக்கு எதிராக நிறுத்தினான். இவ்வாறு அவன் தனக்கு மந்தையை உண்டாக்கினான். அவற்றை லாபானின் மந்தையோடு அவன் சேர்க்கவில்லை. பலமான ஆடுகள் கருத்தரிக்கப்படும் காலத்தில், அவை அந்த மரக்கொப்புகளுக்கு அருகே கருத்தரிக்கும்படி யாக்கோபு அவற்றைத் தண்ணீர்த் தொட்டிகளுக்குள் வைப்பான். பலவீனமான ஆடுகளானால், அவன் கொப்புகளை அங்கே வைக்கமாட்டான். அதனால் பலவீனமான ஆடுகள் லாபானுக்கும், பலமான ஆடுகள் யாக்கோபுக்கும் சொந்தமாயின. இவ்வாறு யாக்கோபு பெரிய செல்வந்தனாகி, திரளான மந்தைக்கும், வேலைக்காரருக்கும், வேலைக்காரிகளுக்கும், ஒட்டகங்களுக்கும், கழுதைகளுக்கும் உரிமையாளன் ஆனான். யாக்கோபும் லாபானும் பிரிதல் “யாக்கோபு எங்கள் தகப்பனின் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுக்குச் சொந்தமானவற்றிலிருந்தே யாக்கோபு செல்வந்தனாகிவிட்டான்” என்றும் லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான். அத்துடன் தன்னைக் குறித்த லாபானின் அணுகுமுறை முன்புபோல் இல்லாதிருப்பதையும் யாக்கோபு கவனித்தான். அப்பொழுது யெகோவா யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டிற்கும் உன் உறவினரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார். எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான். அவன் அவர்களிடம், “உங்கள் தகப்பனின் அணுகுமுறை என்னிடம் முன்போல் இல்லையென நான் காண்கிறேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கிறார். நான் உங்கள் தகப்பனுக்காக என் முழுப்பெலத்துடனும் வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் தகப்பனோ பத்துமுறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அப்படியிருந்தும், அவர் எனக்குத் தீங்குசெய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை. ‘கலப்பு நிற ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளையே ஈன்றன. இவ்விதமாக இறைவன் உங்கள் தகப்பனின் வளர்ப்பு மிருகங்களை எல்லாம் எடுத்து அவற்றை எனக்குக் கொடுத்துவிட்டார். “ஒருமுறை ஆடுகள் சினைப்படும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறெடுத்துப் பார்க்கும்பொழுது மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உள்ளதாயிருந்தன. இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன். அப்பொழுது அவர் என்னிடம், ‘இதோ பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளுமுள்ளனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்வதெல்லாவற்றையும் நான் கண்டேன். நீ ஒரு தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான, பெத்தேலின் இறைவன் நானே; உடனே இந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு, உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போ’ என்றார்” என்றான். அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “எங்கள் தகப்பனுடைய குடும்பச் சொத்தின் உரிமையிலே எங்களுக்கு இன்னும் பங்கு உண்டோ? அவர் எங்களை அந்நியராய் நினைக்கவில்லையா? எங்களை விற்றது மட்டுமல்ல; எங்களுக்காகச் செலுத்தப்பட்ட கூலியையும் அபகரித்து விட்டாரே! இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள். பின்பு யாக்கோபு தன் பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்களில் ஏற்றி, தனக்குச் சொந்தமான வளர்ப்பு மிருகங்களையும் தனக்கு முன்னால் ஓட்டிக்கொண்டு, தான் பதான் அராமிலே சம்பாதித்த தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கானான் நாட்டிலுள்ள தன் தகப்பன் ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான். லாபான் தன் செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிக்கச் சென்றிருந்த வேளை, ராகேல் தன் தகப்பன் வீட்டு சிலைகளைத் திருடி மறைத்து வைத்துக்கொண்டாள். அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான். இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஐபிராத்து ஆற்றைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான். லாபான் யாக்கோபைப் பின்தொடர்தல் யாக்கோபு தப்பி ஓடிவிட்டான் என்று மூன்றாம் நாளில் லாபானுக்குச் சொல்லப்பட்டது. லாபான் தன் உறவினர்களோடு ஏழு நாட்களாக யாக்கோபைப் பின்தொடர்ந்து சென்று கீலேயாத் மலையில் அவனிருந்த இடத்தை அடைந்தான். அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ தீமையானவற்றையோ பேசக்கூடாது” என எச்சரித்தார். லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே! எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே. என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய். உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார். நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன். ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான். அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான். அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன? இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும். “நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை. காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர். பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது. இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர். என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான். அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்? இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான். எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான். அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அப்படியே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள். அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா31:47 அராமியத்தில் ஜெகர் சகதூதா என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும், யாக்கோபு, கலயெத்31:47 எபிரெயத்தில் கலயெத் என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும் பெயரிட்டார்கள். அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது. அது மிஸ்பா31:49 மிஸ்பா என்றால் கண்காணித்தல் என்று அர்த்தம். என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, யெகோவா எனக்கும் உனக்கும் இடையே கண்காணிப்பாராக. நீ என் மகள்களைத் துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் சாட்சியாயிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்” என்றான். மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன. நான் இக்குவியலைக் கடந்து உனக்குத் தீங்குசெய்ய உன் பக்கம் வரமாட்டேன் என்பதற்கும், நீயும் இக்குவியலையும், தூணையும் கடந்து என் பக்கமாய் எனக்குத் தீங்குசெய்ய வரமாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி. ஆபிரகாமின் இறைவனும், நாகோரின் இறைவனும், அவர்கள் தகப்பனின் இறைவனுமாய் இருக்கிறவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான். அப்படியே யாக்கோபும் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின் பெயரால் ஆணையிட்டான். பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலிசெலுத்தி, தன் உறவினர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தான். அவர்கள் சாப்பிட்டபின் அன்றிரவு அவ்விடத்தில் தங்கினார்கள். லாபான் மறுநாள் காலையில் தன் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். யாக்கோபு ஏசாவைச் சந்திக்கத் தயாராகுதல் யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் சேனை!” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம்32:2 மக்னாயீம் என்றால் இரண்டு சேனைகள் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். பின்பு யாக்கோபு, ஏதோம் நாட்டிலுள்ள சேயீர் என்னும் இடத்தில் வசிக்கும் தன் சகோதரன் ஏசாவிடம், தனக்கு முன்பாகத் தூதுவரை அனுப்பினான். அவன் அவர்களுக்கு அறிவுறுத்தி, “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவிடம் போய், ‘உமது பணியாளன் யாக்கோபு சொல்வது இதுவே: நான் லாபானுடன் இருந்தேன், இதுவரையும் அங்கேயே தங்கியிருந்தேன். என்னிடம் மாடுகளும், கழுதைகளும், செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் உண்டு. வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருக்கிறார்கள். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கும்படியாக, இந்த செய்தியை என் எஜமானாகிய உமக்கு அனுப்புகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றான். தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பிவந்து, “நாங்கள் உமது சகோதரன் ஏசாவிடம் போனோம், அவர் உம்மைச் சந்திக்க வருகிறார்; அவருடன் நானூறு மனிதரும் வருகிறார்கள்” என்றார்கள். அதைக்கேட்ட யாக்கோபு பயமும் மனக்கலக்கமும் அடைந்து, தன்னுடன் இருந்த மனிதரை இரண்டு குழுக்களாகப் பிரித்தான்; ஆட்டு மந்தையையும், மாட்டு மந்தையையும், ஒட்டகங்களையும் இரண்டு குழுக்களாகப் பிரித்தான். “ஏசா வந்து ஒரு குழுவைத் தாக்கினால் மற்றக் குழுவாவது தப்பும்” என அவன் நினைத்தான். பின்பு யாக்கோபு, “என் தகப்பனான ஆபிரகாமின் இறைவனே, என் தகப்பனான ஈசாக்கின் இறைவனே, ‘நீ உன் நாட்டிற்கும், உன் உறவினரிடத்திற்கும் போ; நான் உன் வாழ்வை வளம்பெறச் செய்வேன்’ என்று சொன்ன யெகோவாவே, உமது பணியாளனாகிய எனக்கு நீர் காட்டிய எல்லாவித இரக்கத்திற்கும், சத்தியத்திற்கும் நான் தகுதியற்றவன். நான் யோர்தான் நதியைக் கடக்கும்போது, ஒரு கோல் மட்டுமே என்னிடம் இருந்தது; ஆனால் இப்பொழுதோ இரு பெரும் மக்கள் கூட்டமாகிவிட்டேன். என் சகோதரன் ஏசாவின் கையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும் என்று மன்றாடுகிறேன். ஏனெனில், அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும், அவர்கள் தாய்மாரையும் தாக்குவான் என்று பயப்படுகிறேன். ஆனாலும் நீர், ‘நிச்சயமாகவே நான் உன்னை வளம்பெறச் செய்வேன், உன் சந்ததிகளை எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போல பெருகப்பண்ணுவேன்’ என்று சொல்லியிருக்கிறீரே” என்றான். அன்றிரவு அவன் அங்கேயே தங்கினான்; பின் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்பளிப்பாக, இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக் கடாக்கள், முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்தான். அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் வேலைக்காரரிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சிறிது இடம்விட்டு, எனக்கு முன்னே போங்கள்” என்றான். அவன் முன்னே செல்பவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகிறாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்குச் சொந்தக்காரன் யார்?’ என்று கேட்டால், ‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; இவற்றைத் தன் ஆண்டவன் ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார், அவரும் எங்கள் பின்னே வருகிறார்’ என்று சொல்” என்றான். “ஏசாவைச் சந்திக்கும்போது இதேவிதமாகவே சொல்லவேண்டும்” என்று இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மந்தைகளைப் பின்தொடர்ந்து சென்ற மற்றவர்களுக்கும் அவன் அறிவுறுத்தினான். “ ‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எங்கள் பின்னால் வருகிறான்’ என்பதைத் தவறாமல் சொல்லுங்கள்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்பளிப்புகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என நினைத்தான். அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான். யாக்கோபு இறைவனுடன் போராடுதல் அன்றிரவு யாக்கோபு எழுந்து தன் இரண்டு மனைவிகளையும், இரண்டு பணிப்பெண்களையும், தன் பதினொன்று மகன்களையும் கூட்டிக்கொண்டு யாப்போக்கு ஆற்றின் துறையைக் கடந்தான். அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பியபின் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான். அதன்பின் யாக்கோபு தனிமையில் இருந்தான், அப்பொழுது ஒரு மனிதர் வந்து பொழுது விடியும்வரை அவனுடன் போராடினார். யாக்கோபை மேற்கொள்ள முடியாதென்பதைக் கண்ட அவர் தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் தொடைச்சந்தைத் தொட்டவுடனே தொடைச்சந்து இடம் விலகியது. அப்பொழுது அந்த மனிதர், “என்னைப் போகவிடு; பொழுது விடிகிறது” என்றார். அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான். அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான். அப்பொழுது அவர், “உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல்32:28 இஸ்ரயேல் என்றால் இறைவன் போராடுகிறார் என்ற அர்த்தம். எனப்படும். ஏனெனில், நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். அப்பொழுது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடையப் பெயரை எனக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கேட்டு, அவனை ஆசீர்வதித்தார். உடனே யாக்கோபு, “நான் இறைவனை முகமுகமாய்க் கண்டும் இன்னும் என் உயிர் தப்பியிருக்கிறது” என்று சொல்லி, அவ்விடத்திற்குப் பெனியேல்32:30 பெனியேல் என்றால் இறைவனின் முகம் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். அவன் பெனியேலைக் கடந்து போகையில், அவனுக்கு மேலாகச் சூரியன் உதித்தது. அவனுடைய தொடைச்சந்து இடம்விலகி இருந்ததால், அவன் நொண்டிக்கொண்டு நடந்தான். யாக்கோபின் தொடைச்சந்து அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துடன் இணைந்திருக்கும் தசைநாரைச் சாப்பிடுவதில்லை. யாக்கோபு ஏசா சந்திப்பு யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, தொலைவில் ஏசா நானூறு பேருடன் வருவதைக் கண்டான்; ஆகவே அவன் லேயாளிடமும், ராகேலிடமும், இரு பணிப்பெண்களிடமும் பிள்ளைகளைப் பிரித்துக்கொடுத்தான். இருபணிப் பெண்களையும் அவர்கள் பிள்ளைகளையும், முன்னால் நிறுத்தினான். அடுத்தாக லேயாளையும் அவள் பிள்ளைகளையும், கடைசியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினான். அவர்களுக்கு முன்பாகச் சென்ற யாக்கோபு, தன் சகோதரனாகிய ஏசா நெருங்கிவந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஏழுமுறை தரைமட்டும் குனிந்து அவனை வாழ்த்தினான். ஆனால் ஏசாவோ, யாக்கோபைக் கண்டதும் ஓடிப்போய், அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இருவருமே அழுதார்கள். பின்பு ஏசா நிமிர்ந்து பார்த்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டபோது, “உன்னோடிருக்கும் இவர்கள் யார்?” என்று யாக்கோபிடம் கேட்டான். அதற்கு அவன், “இவர்கள் உமது அடியவனாகிய எனக்கு இறைவன் கிருபையாய்த் தந்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்து குனிந்து வணங்கினார்கள். அடுத்ததாக லேயாளும் தன் பிள்ளைகளுடன் வந்து வணங்கினாள். கடைசியாக ராகேலும் யோசேப்பும் வந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா, “நான் வழியிலே சந்தித்த மிருகக் கூட்டங்களை நீ அனுப்பியதன் காரணம் என்ன?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “ஆண்டவனே! அது உம்முடைய கண்களில் தயவு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே” என்றான். அதற்கு ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் ஏராளம் இருக்கின்றன. உன்னிடம் உள்ளவற்றை நீயே வைத்துக்கொள்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படியல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடமிருந்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும். இப்பொழுது என்னை நீர் தயவாய் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், நான் உமது முகத்தைப் பார்ப்பது இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. இறைவன் என்மேல் இரக்கமுடையவராயிருக்கிறார், எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் இருக்கின்றன. எனவே உமக்குக் கொண்டுவரப்பட்ட அன்பளிப்புகளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறு அவன் வற்புறுத்தியபடியால் ஏசா அவற்றை ஏற்றுக்கொண்டான். அதன்பின்பு ஏசா, “வா, நாம் புறப்பட்டுச் செல்வோம்; நான் உன்முன் செல்கிறேன்” என்று யாக்கோபைக் கூப்பிட்டான். அதற்கு யாக்கோபு ஏசாவிடம், “எனது பிள்ளைகளோ சிறு குழந்தைகள், அதோடு பால் கொடுக்கும் ஆடுகளையும், பசுக்களையும் நான் கவனிக்க வேண்டும் என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக்கொண்டு போனால் எல்லா மிருகங்களும் இறந்துவிடும். ஆகையால் என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே செல்லும்; நான் உமக்குப் பின்னால் என் பிள்ளைகளுடைய மந்தைகளுடைய நடையின் வேகத்திற்குத் தக்கதாக நடந்து, உமது இருப்பிடமாகிய சேயீரை வந்து சேருவேன்” என்றான். அப்பொழுது ஏசா, “அப்படியானால் என்னுடைய ஆட்களில் சிலரை உன்னுடன் விட்டுப் போகிறேன்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படிச் செய்வானேன்? என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால் மட்டும் போதும்” என்றான். எனவே ஏசா, அன்றைக்கே சேயீருக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டான். ஆனால் யாக்கோபு, சுக்கோத்துக்குப் போய் அங்கே தனக்கு ஒரு இடத்தை அமைத்து, தன் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடில்களைப் போட்டான், அதினாலேயே அந்த இடத்திற்குச் சுக்கோத்33:17 சுக்கோத் என்றால் தங்குமிடங்கள் என்று அர்த்தம். என்னும் பெயர் வந்தது. பின்பு யாக்கோபு பதான் அராமிலிருந்து புறப்பட்டு, பாதுகாப்பாக கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு வந்து, அங்கே அந்த பட்டணம் தெரியக்கூடிய இடத்தில் கூடாரம் அமைத்தான். யாக்கோபு தான் கூடாரம் அமைத்த அந்த நிலத்தை, ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். அங்கே யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, ஏல்எல்லோகே இஸ்ரயேல்33:20 ஏல்எல்லோகே இஸ்ரயேல் என்றால் இஸ்ரயேலின் இறைவன் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். தீனாளும் சீகேமியர்களும் ஒரு நாள், லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற மகள் தீனாள், அந்த நாட்டுப் பெண்களைச் சந்திப்பதற்காகப் போனாள். அவ்வேளை அந்நாட்டின் ஆளுநனான ஏமோரின் மகன் சீகேம் என்னும் ஏவியன் அவளைக் கண்டு, அவளைப் பலவந்தமாய்க் கொண்டுபோய்க் கற்பழித்தான். யாக்கோபின் மகள் தீனாளின் பக்கமாய் அவன் உள்ளம் கவரப்பட்டிருந்தது; அவன் அவளை நேசித்து அவளுடைய உள்ளத்தைக் கவரும்படி பேசினான். எனவே சீகேம் தன் தகப்பன் ஏமோரிடம், “இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகத் தாரும்” என்றான். தன் மகள் தீனாள் கறைப்பட்டதை யாக்கோபு கேள்விப்படுகையில், அவனுடைய மகன்கள் வயல்வெளியில் மந்தைகளுடன் இருந்தார்கள்; எனவே அவர்கள் வீட்டுக்கு வரும்வரை, யாக்கோபு அமைதியாய் இருந்தான். அப்பொழுது சீகேமின் தகப்பனான ஏமோர் யாக்கோபிடம் பேசுவதற்காகப் போனான். நடந்ததைக் கேள்விப்பட்டதுமே, யாக்கோபின் மகன்கள் வயலில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தனர். சீகேம் யாக்கோபின் மகளுடன் உறவுகொண்டு, செய்யத்தகாத அவமானமான காரியத்தை இஸ்ரயேலிலே செய்தான். அதனால் அவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். ஆனால் ஏமோர் அவர்களிடம், “என் மகன் சீகேம் உங்கள் மகளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான். ஆகையால் தயவுசெய்து அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். நீங்கள் எங்களுடன் கலப்புத்திருமணம் செய்துகொள்ளுங்கள்; உங்கள் மகள்களை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் மகள்களை உங்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கள் மத்தியில் குடியிருக்கலாம்; எங்கள் நாடு உங்களுக்கு முன்னால் இருக்கிறது. அதில் வாழ்ந்து, வியாபாரம் செய்து அதிலே சொத்துக்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்றான். பின்பு சீகேம், தீனாளின் தகப்பனிடமும் அவள் சகோதரரிடமும், “உங்கள் கண்களில் எனக்குத் தயை கிடைக்கட்டும், நீங்கள் கேட்பது எதுவோ, அதை நான் உங்களுக்குக் கொடுப்பேன். மணப்பெண்ணுக்குரிய சீதனத்தையும், நான் கொண்டுவரவேண்டிய நன்கொடையையும் எவ்வளவு என எனக்குச் சொல்லுங்கள்; எவ்வளவு அதிகமானாலும் நீங்கள் கேட்பதை நான் உங்களுக்குக் கொடுப்பேன். அந்தப் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகக் கொடுங்கள்” என்றான். சீகேம் தங்கள் சகோதரி தீனாளைக் கறைப்படுத்தியதால், யாக்கோபின் மகன்கள் சீகேமிடமும் அவன் தகப்பன் ஏமோரிடமும் பேசுகையில், வஞ்கமாகப் பதிலளித்தார்கள். யாக்கோபின் மகன்கள் அவர்களிடம், “நாங்கள் இப்படிப்பட்ட செயலைச் செய்யமாட்டோம்; ஏனெனில், விருத்தசேதனம் செய்யப்படாத ஒருவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுக்க முடியாது. அது எங்களுக்குப் பெரிய அவமானமாய் இருக்கும். உங்கள் ஆண்கள் யாவரும் எங்களைப்போல் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்கிற இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் மாத்திரமே நாங்கள் இதற்கு உடன்படுவோம். அதன்பின் நாங்கள் எங்கள் மகள்களை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் மகள்களை எங்களுக்காக எடுத்துக்கொள்வோம். நாங்கள் உங்கள் மத்தியில் குடியிருந்து, உங்களுடன் ஒரே மக்கள் கூட்டமாகலாம். விருத்தசேதனம் செய்வதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால், எங்கள் சகோதரியைக் கூட்டிக்கொண்டு போய்விடுவோம்” என்றார்கள். அவர்கள் கேட்டுக்கொண்ட இக்கோரிக்கை ஏமோருக்கும் சீகேமுக்கும் நலமானதாய்த் தோன்றியது. வாலிபனான சீகேம் யாக்கோபின் மகள் தீனாள்மீது அதிக ஆசை கொண்டபடியால், அவர்கள் கேட்டதைச் செய்யத் தாமதிக்கவில்லை. சீகேம் தனது தந்தையின் வீட்டிலுள்ள எல்லோருக்குள்ளும் மதிப்புக்குரியவனாய் இருந்தான். அப்படியே ஏமோரும் அவன் மகன் சீகேமும் தங்கள் பட்டணத்து மனிதருடன் பேசுவதற்குத் தங்கள் பட்டணத்து வாசலுக்கு வந்தார்கள். அவர்களிடம், “இந்த மனிதர் நம்முடன் நட்பாயிருக்கிறார்கள்; இவர்கள் நம் நாட்டில் வாழ்ந்து வியாபாரம் செய்யட்டும். நாட்டில் அவர்களுக்கும் போதிய இடமுண்டு. அவர்கள் நம்முடைய மகள்களைத் திருமணம் செய்யலாம், நாம் அவர்களின் மகள்களைத் திருமணம் செய்யலாம். ஆனால் அவர்களைப் போலவே நம் மத்தியிலுள்ள ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்ற நிபந்தனையை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்கள் நம்முடன் ஒரே மக்கள் கூட்டமாக வாழ உடன்படுவார்கள். அவர்களுடைய சொத்துக்களும், வளர்ப்பு மிருகங்களும், மற்ற எல்லா மிருகங்களும் நமக்குச் சொந்தமாகும் அல்லவா? ஆகையால் நாம் நமது சம்மதத்தைத் தெரிவிப்போம். அவர்கள் நம் மத்தியில் குடியிருப்பார்கள்” என்றார்கள். பட்டணத்து வாசலுக்கு வெளியே போன மனிதர் எல்லோரும் ஏமோரும் அவன் மகன் சீகேமும் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டார்கள்; அவ்வாறே பட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர்கள் யாவரும் இன்னும் நோவுடன் இருக்கையில், தீனாளின் சகோதரர்களான சிமியோன், லேவி என்னும் யாக்கோபின் இரு மகன்களும் வாள்களுடன் போய், பட்டணத்து மக்கள் எதிர்பாராத வேளையில் அதைத் தாக்கி, எல்லா ஆண்களையும் கொன்றார்கள். ஏமோரையும் அவன் மகன் சீகேமையும் வாளால் வெட்டிக் கொன்றபின், சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். பட்டணத்து மனிதர் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கையில் யாக்கோபின் மகன்கள் அந்த உடல்களின்மேல் நடந்து வந்து, தங்கள் சகோதரியைக் கறைப்படுத்திய அந்தப் பட்டணத்தைக் கொள்ளையடித்தார்கள். அவர்கள் ஆடுமாடுகளையும், கழுதைகளையும் மற்றும் பட்டணத்திலும் வயல்வெளிகளிலும் உள்ள அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அபகரித்தார்கள். அவர்கள் அங்கிருந்த எல்லா செல்வத்தையும், பெண்கள் பிள்ளைகள் எல்லோரையும், வீடுகளிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையாகக் கொண்டுபோனார்கள். அப்பொழுது யாக்கோபு தன் மகன்களான சிமியோன், லேவி ஆகியோரிடம், “இந்நாட்டில் வாழும் கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் பெயரை நாசமாக்கி, எனக்குக் கஷ்டத்தை உண்டு பண்ணிவிட்டீர்களே! நாமோ மிகச் சிலர், அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நம்மைத் தாக்கினால், நானும் என் குடும்பமும் அழிந்துபோவோமே!” என்றான். அதற்கு அவர்கள், “அப்படியானால் எங்கள் சகோதரி தீனாளை அவன் ஒரு வேசியைப்போல் நடத்தியது சரியோ?” என்று கேட்டார்கள். யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புதல் அதன்பின் இறைவன் யாக்கோபிடம், “நீ பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு, நீ உன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்து ஓடிப்போகிற வழியில், உனக்குத் தோன்றிய இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றார். எனவே யாக்கோபு தன் குடும்பத்தாரிடமும், தன்னோடிருந்த எல்லோரிடமும், “நீங்கள் வைத்திருக்கும் அந்நிய தெய்வங்களை விலக்கிப் போடுங்கள்; உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றுங்கள். அதன்பின் வாருங்கள், எல்லோரும் பெத்தேலுக்குப் போவோம். என் துயர நாட்களில் என் மன்றாட்டைக் கேட்டு, நான் போன இடமெல்லாம் என்னுடன் இருந்த இறைவனுக்கு, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுவேன்” என்றான். அப்பொழுது அவர்கள் தங்களிடமிருந்த அந்நிய தெய்வங்கள் எல்லாவற்றையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள்; அவன் அவற்றையெல்லாம் சீகேமில் ஒரு பெரிய கர்வாலி மரத்தின்கீழ் புதைத்தான். அதன்பின் அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்; அப்பொழுது அவர்களைச் சூழ இருந்த பட்டணத்தின் மக்களின்மேல் இறைவனின் பயங்கரம் இறங்கியது. அதனால் அவர்கள் ஒருவரும் அவர்களைப் பின்தொடரவில்லை. யாக்கோபும் அவனுடன் இருந்த மக்கள் எல்லோரும், கானான் நாட்டிலுள்ள லூஸ் என அழைக்கப்பட்ட பெத்தேலுக்கு வந்தார்கள். அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இடத்தை ஏல்பெத்தேல்35:7 ஏல்பெத்தேல் என்றால் பெத்தேலின் இறைவன் என்று அர்த்தம். என அழைத்தான். ஏனெனில், அவன் தன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது அவ்விடத்திலேயே இறைவன் தம்மை அவனுக்கு வெளிப்படுத்தினார். ரெபெக்காளின் மருத்துவச்சி தெபோராள் இறந்து, பெத்தேலுக்கு அருகிலுள்ள கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத்35:8 அல்லோன் பாகூத் என்றால் அழுகையின் கர்வாலி மரம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது. யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வருகையில், இறைவன் மறுபடியும் அவனுக்குத் தோன்றி, அவனை ஆசீர்வதித்தார். இறைவன் அவனிடம், “உன் பெயர் யாக்கோபு, ஆனால் நீ இனிமேல் யாக்கோபு என்று அழைக்கப்படாமல் இஸ்ரயேல் என்றே அழைக்கப்படுவாய்” என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரயேல் என்று பெயரிட்டார். மேலும் இறைவன், “எல்லாம் வல்ல இறைவன் நானே; நீ பலுகி, எண்ணிக்கையில் பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு நாடும், நாடுகளின் கூட்டமும் தோன்றும்; உன் சந்ததியிலிருந்து அரசர்களும் தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கிறேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இதைக் கொடுப்பேன்” என்றார். இதன்பின் இறைவன் அவனுடன் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து மேலே போய்விட்டார். இறைவன் தன்னுடன் பேசிய அந்த இடத்தில் யாக்கோபு ஒரு கல்தூணை நிறுத்தினான்; அதன்மேல் பானகாணிக்கையையும் எண்ணெயையும் ஊற்றினான். இறைவன் தன்னுடன் பேசிய அவ்விடத்துக்கு யாக்கோபு பெத்தேல்35:15 பெத்தேல் என்றால் இறைவனின் வீடு என்று அர்த்தம். என்று பெயரிட்டான். ராகேல் மற்றும் ஈசாக்கின் மரணம் அதன்பின் அவர்கள் பெத்தேலில் இருந்து புறப்பட்டுப் போனார்கள். எப்பிராத்தாவிற்கு வர சற்றுத் தூரத்தில் இருக்கும்போதே, ராகேல் பிரசவ வேதனையால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் பிரசவத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவச்சி அவளிடம், “பயப்படாதே, உனக்கு இன்னுமொரு மகன் பிறந்திருக்கிறான்” என்றாள். மரணத் தருவாயில் அவள் கடைசிமூச்சு விடும்போது பிறந்த மகனுக்கு பெனொனி35:18 பெனொனி என்றால் என் துக்கத்தின் மகன் என்று அர்த்தம். என்று பெயரிட்டாள். ஆனால் அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன்35:18 பென்யமீன் என்றால் என் வலது கையின் மகன் என்று அர்த்தம். என்று பெயரிட்டான். ராகேல் இறந்து பெத்லெகேம் என்னும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். யாக்கோபு அவள் கல்லறைக்குமேல் ஒரு தூணை நிறுத்தினான். இந்நாள்வரை அத்தூண் ராகேலின் கல்லறையின் அடையாளமாக இருக்கிறது. இஸ்ரயேல் திரும்பவும் தொடர்ந்து பயணம் செய்து, மிக்தால் ஏதேருக்கு அப்பால் தன் கூடாரத்தை அமைத்தான். யாக்கோபு அப்பிரதேசத்தில் குடியிருக்கையில், ரூபன் தன் தகப்பனின் வைப்பாட்டி பில்காளுடன் உறவுகொண்டான்; அதை இஸ்ரயேல் கேள்விப்பட்டான். யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள்: லேயாளின் மகன்கள்: யாக்கோபின் மூத்த மகனான ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள். ராகேலின் மகன்கள்: யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். ராகேலின் பணிப்பெண் பில்காள் பெற்ற மகன்கள்: தாண், நப்தலி என்பவர்கள். லேயாளின் பணிப்பெண் சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர் என்பவர்கள். பதான் அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்களே. யாக்கோபு கீரியாத் அர்பாவுக்கு அருகேயிருந்த எப்ரோன் எனப்படும் மம்ரேயில் வசித்த தன் தகப்பன் ஈசாக்கின் வீட்டுக்குத் திரும்பிவந்தான். ஆபிரகாமும் ஈசாக்கும் முன்பு அவ்விடத்திலேயே குடியிருந்தனர். ஈசாக்கு நூற்று எண்பது வருடங்கள் உயிரோடிருந்தான். பின்பு ஈசாக்கு தன் இறுதி மூச்சைவிட்டு இறந்தான்; பூரண ஆயுள் உள்ளவனாய் தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களான ஏசாவும், யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள். ஏசாவின் சந்ததி ஏதோம் என்று அழைக்கப்படும் ஏசாவின் வம்சவரலாறு: ஏசா கானான் நாட்டுப் பெண்களிலிருந்து மனைவிகளை எடுத்தான்: ஏத்தியனான ஏலோனின் மகள் ஆதாளையும், ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் திருமணம் செய்தான். அத்துடன் இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் மனைவியாக்கிக் கொண்டான். ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாஸைப் பெற்றாள், பஸ்மாத் ரெகுயேலைப் பெற்றாள். அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றாள். கானானில் ஏசாவுக்கு பிறந்த மகன்கள் இவர்களே. ஏசா தன் மனைவிகள், மகன்கள், மகள்களோடு, தன் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான். அவர்களுடன் தன் வளர்ப்பு மிருகங்களையும், மற்ற மிருகங்கள் எல்லாவற்றையும், கானானில் தான் சம்பாதித்த பொருட்கள் யாவற்றையும் எடுத்துக்கொண்டு, தன் சகோதரன் யாக்கோபை விட்டுச் சற்றுத் தூரமான நாட்டுக்குப் போனான். அவர்களுடைய உடைமைகள் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ முடியவில்லை; அவர்களுடைய வளர்ப்பு மிருகங்கள் அதிகமாய் இருந்தபடியால், அவர்கள் இருந்த நிலப்பகுதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஆதலால் ஏதோம் என்னும் ஏசா, சேயீர் மலைநாட்டில் குடியேறினான். சேயீர் மலைநாட்டில் குடியிருந்த ஏதோமியரின் தகப்பனான ஏசாவின் வம்சவரலாறு. ஏசாவின் மகன்களின் பெயர்கள் இவையே: ஏசாவின் மனைவியான ஆதாளின் மகன் எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்தின் மகன் ரெகுயேல். எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். ஏசாவின் மகன் எலிப்பாஸுக்கு திம்னாள் என்னும் வைப்பாட்டி இருந்தாள்; அவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்கள் ஏசாவின் மனைவி ஆதாளின் பேரன்கள். ரெகுயேலின் மகன்கள்; நாகாத், செராகு, சம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள். சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். ஏசாவின் சந்ததிகளில் வந்த வம்சத்தலைவர்கள்: ஏசாவின் மூத்த மகனான எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள். ஏதோம் நாட்டிலுள்ள எலிப்பாஸின் வழிவந்த வம்சத்தலைவர்கள் இவர்களே. இவர்கள் ஆதாளின் பேரன்கள். ஏசாவின் மகன் ரெகுயேலின் மகன்கள்: நகாத், செராகு, சம்மா, மீசா ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஏதோம் நாட்டிலுள்ள ரெகுயேலின் வழிவந்த வம்சத்தலைவர்கள்; இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள். ஏசாவின் மனைவி அகோலிபாமாளின் மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு ஆகியோரும் வம்சத்தலைவர்களே. இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் வழிவந்தவர்கள். ஏதோம் என்னும் ஏசாவின் மகன்கள் இவர்களே. இவர்கள் அவர்களின் வம்சத்தலைவர்கள். அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர். லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி. சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு என்பவர்கள். இந்த ஆனாகுவே, தன் தகப்பன் சிபியோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தவன். ஆனாகின் பிள்ளைகள்: திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள். ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். திஷானுடைய மகன்கள். ஊத்ஸ், அரான் என்பவர்கள். ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள். ஏதோமின் ஆளுநர்கள் இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது. பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான். உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது. ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான். சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான். சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான். அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சார், மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே. இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன். யோசேப்பின் கனவு யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான். யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான். இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான். தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள். யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும், தனது சகோதரருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன், “நீ என்ன கனவு கண்டிருக்கிறாய்? உன் தாயும் நானும் உன் சகோதரரும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கிறாயா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவன் சகோதரர் அவன்மீது பொறாமை கொண்டார்கள், அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டான். யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல் யோசேப்பின் சகோதரர் தங்கள் தகப்பனின் மந்தையை மேய்ப்பதற்காகச் சீகேமுக்கு அருகே போயிருந்தார்கள்; அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “உன் சகோதரர் சீகேமுக்கு அருகே மந்தை மேய்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்தானே, வா இப்பொழுது நான் உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப்போகிறேன்” என்றான். அதற்கு அவன், “நல்லது, நான் போகிறேன்” என்றான். எனவே, அவன் யோசேப்பிடம், “நீ போய் உன் சகோதரர் நலமாயிருக்கிறார்களா என்றும், மந்தைகள் எப்படியிருக்கின்றன என்றும் பார்த்து எனக்கு வந்து சொல்” என்றான். அப்படியே யோசேப்பை எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து வழியனுப்பினான். யோசேப்பு சீகேமுக்கு வந்துபோது, அவன் வயல்வெளியில் அலைந்து கொண்டிருப்பதை ஒரு மனிதன் கண்டு, “நீ என்ன தேடுகிறாய்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரரைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தை மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உம்மால் சொல்லமுடியுமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தானுக்குப் போவோம்’ என்று அவர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்” என்றான். யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச்சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான். ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம். நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள். அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்? வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு37:28 அதாவது, சுமார் 230 கிராம் இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். ரூபன் அந்தக் கிணற்றுக்குத் திரும்பிப்போய், யோசேப்பு அங்கே இல்லை என்பதைக் கண்டு, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான். அவன் தன் சகோதரரிடம் திரும்பிப்போய், “யோசேப்பு அங்கே இல்லையே! நான் எங்கே போய் தேடுவேன்?” என்றான். பின்பு அவர்கள் ஒரு வெள்ளாட்டை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் மேலுடையைத் தோய்த்தார்கள். அலங்கரிக்கப்பட்ட அந்த மேலுடையைத் தங்கள் தகப்பனிடம் கொண்டுபோய், “இந்த உடையை நாங்கள் வழியில் கண்டெடுத்தோம். இது உமது மகனுடையதா என்று பாரும்” என்றார்கள். யாக்கோபு அதைக்கண்டு, “இது என் மகனுடைய மேலுடைதான்! ஏதோ ஒரு கொடிய மிருகம் அவனைக் கொன்று தின்றிருக்க வேண்டும், யோசேப்பு நிச்சயமாகத் துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருப்பான்” என்றான். யாக்கோபு தன் உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, தன் மகனுக்காகப் பல நாட்கள் துக்கமாயிருந்தான். அவனுடைய மகன்கள், மகள்கள் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் என் மகனிடத்தில் கல்லறையில் சேரும்வரை துக்கித்துக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுது புலம்பினான். இதற்கிடையில், மீதியானிய வியாபாரிகள் எகிப்திலே பார்வோனின் அலுவலர்களில் ஒருவனும், மெய்க்காவலர் தலைவனுமான போத்திபாருக்கு யோசேப்பை விற்றார்கள். யூதாவும் தாமாரும் அக்காலத்தில் யூதா தன் சகோதரரை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச்சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்கும்படி போனான். அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் எனப் பெயரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள். யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான். ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார். அப்பொழுது யூதா ஓனானிடம், “உன் சகோதரனின் மனைவியுடன் கூடிவாழ்ந்து, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி, ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான். ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான். இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார். அப்பொழுது யூதா, தன் மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகுமட்டும், நீ ஒரு விதவையாக உன் தகப்பன் வீட்டிற்குப்போய்க் குடியிரு” என்றான். “தன் மகன் சேலாவும் அவனுடைய சகோதரர்போல் இறந்துபோவான்” என்று எண்ணியே அப்படிச் சொன்னான். எனவே தாமார் தன் தகப்பன் வீட்டில் குடியிருக்கும்படி போனாள். அநேக நாட்களுக்குப்பின் சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்து முடித்தபின், திம்னாவில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் மனிதரிடம் போனான், அதுல்லாமியனாகிய அவனுடைய சிநேகிதன் ஈராவும் அவனுடன் போனான். “தன் செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குப் போகிறார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும், தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை அவள் அறிந்தாள். எனவே அவள் விதவைக்குரிய தன் உடைகளைக் களைந்து, தன்னை மறைப்பதற்காக முகத்திரையினால் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியில் உள்ள ஏனாயீம் ஊர்வாசலிலே உட்கார்ந்திருந்தாள். யூதா அவளைக் கண்டபோது, அவள் ஒரு வேசி என எண்ணினான்; ஏனெனில் அவள் தன் முகத்தை மூடியிருந்தாள். அவளைத் தன் மருமகள் என அறியாத யூதா வீதியோரமாய் இருந்த அவளிடம் போய், “நீ என்னுடன் உறவுகொள்ள வா” என்றான். அதற்கு அவள், “நான் உம்முடன் வந்தால் நீர் எனக்கு என்ன தருவீர்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “என் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புவேன்” என்றான். அவளோ, “அதை அனுப்பும்வரை ஏதாவதொரு பொருளை அடைமானமாகத் தருவீரா?” என்று கேட்டாள். அதற்கு யூதா, “உனக்கு அடைமானமாக நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தாரும்” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து, அவளுடன் உறவுகொண்டான்; அவனால் அவள் கர்ப்பவதியானாள். அவள் அவ்விடத்தை விட்டுப்போய், தன் முகத்திரையைக் கழற்றிவிட்டு, மறுபடியும் தனது விதவைக்குரிய உடைகளை உடுத்திக்கொண்டாள். அதேவேளை யூதா அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து, தான் அப்பெண்ணிடம் அடைமானமாகக் கொடுத்திருந்த பொருட்களை வாங்கிவரும்படி அனுப்பினான்; ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அங்குள்ள மனிதரிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் வேசி எங்கே?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அப்படியொரு கோயில் வேசி இங்கே இல்லை” என்றார்கள். ஆகவே, அவன் யூதாவிடம், “திரும்பிப்போய், நான் அவளைக் காணவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள மனிதரும், ‘அப்படியொரு கோயில் வேசி அங்கிருக்கவில்லை’ என்று சொன்னார்கள்” என்றான். யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக்கொள்ளட்டும்; திரும்பிப் போனால் நாம் கேலிப் பொருளாவோம். எப்படியும் நான் இந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் நீயோ அவளைக் காண முடியவில்லை” என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்றபின், “உமது மருமகள் தாமார், வேசித்தனம் செய்து, அதன் பலனாகக் கருவுற்றிருக்கிறாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்றான். அவள் வெளியே கொண்டுவரப்படும்போது, தன் மாமனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அதாவது: “இந்தப் பொருளுக்குரியவராலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும், இடைவாரும், கைக்கோலும் யாருடையது என்று உம்மால் சொல்லமுடியுமா பாரும்” என்று கேட்கும்படி அனுப்பினாள். யூதா அவற்றை அடையாளம் கண்டு, “என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்க மறுத்தபடியால், அவள் என்னைவிட நீதியானவளே” என்றான். அதன்பின் யூதா அவளுடன் உறவுகொள்ளவில்லை. அவளுக்குப் பேறுகாலம் வந்தபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகத் தெரிந்தது. அவள் பிள்ளை பெறுகிறபோது ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மகப்பேற்றுத் மருத்துவச்சி கருஞ்சிவப்பு நூலை எடுத்து, அதன் கையில் கட்டி, “இதுவே முதலில் வெளிப்பட்டது” என்றாள். ஆனால், அக்குழந்தை மறுபடியும் கையை உள்ளே இழுத்துக் கொண்டபோது, அவனுடைய சகோதரன் வெளியே வந்தான். அப்பொழுது மகப்பேற்றுத் தாதி, “நீ, மீறி முதலாவதாக வெளியே வந்ததென்ன?” என்றாள். அவனுக்கு பாரேஸ்38:29 பாரேஸ் என்றால் வெளியேறுதல் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது. அதன்பின் கையில் நூல் கட்டப்பட்ட அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்குச் சேரா38:30 சேரா என்றால் கருஞ்சிவப்பு அல்லது பிரகாசம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது. யோசேப்பும் போத்திபாரின் மனைவியும் யோசேப்பு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டிருந்தான். பார்வோனுடைய அதிகாரிகளில் ஒருவனும், காவல் அதிகாரியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன், யோசேப்பைக் கொண்டுசென்ற இஸ்மயேலரிடம் அவனை விலைக்கு வாங்கினான். யெகோவா யோசேப்புடன் இருந்தார், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; அவன் எகிப்திய எஜமானுடைய வீட்டில் தங்கியிருந்தான். யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுக்கிறார் என்றும் அவன் எஜமான் கண்டான். அப்போது யோசேப்புக்கு அவனுடைய எஜமானின் கண்களில் தயவு கிடைத்தால், அவன் அவனுடைய எஜமானின் தனிப்பட்ட உதவியாளன் ஆனான். போத்திபார் அவனைத் தன் வீட்டுக்குப் பொறுப்பாக வைத்து, தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் கொடுத்தான். இவ்வாறாக அவனுடைய வீட்டுக்கும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றிற்கும் பொறுப்பாக யோசேப்பை அவன் நியமித்ததுமுதல், யோசேப்பின் நிமித்தம் அந்த எகிப்தியனின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். போத்திபாருக்கு அவனுடைய வீட்டிலும், வயல்வெளியிலும் உள்ள எல்லாவற்றிலும் யெகோவாவினுடைய ஆசீர்வாதம் இருந்தது. அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, அவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். சிலநாள் சென்றபின் போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் உறவுகொள்ள வா!” என அழைத்தாள். அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் கவனிப்பதில்லை; தனக்குச் சொந்தமாயுள்ள அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்புவித்துள்ளார். இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீ அவருடைய மனைவி என்பதால் உன்னைத்தவிர, வேறொன்றையும் அவர் என்னிடமிருந்து விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான கொடுமையான செயலைச் செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய என்னால் எப்படி முடியும்?” என்றான். அவள் நாளுக்குநாள் யோசேப்பைக் கட்டாயப்படுத்திய போதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை. ஒரு நாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான், வீட்டு வேலைக்காரர் யாரும் உள்ளே இருக்கவில்லை. அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா” என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான். அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, தன் வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இதோ பாருங்கள், இந்த எபிரெயன் நம்மை அவமானப்படுத்தும்படி இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான்! அவன் என்னுடன் உறவுகொள்ளும்படி உள்ளே வந்தான். நான் கூச்சலிட்டேன். நான் உதவிகேட்டுக் கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன் மேலுடையை இங்கே விட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். அவன் வந்ததும் அவனிடம் இந்தக் கதையைச் சொன்னாள்: “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரெய அடிமை என்னை அவமானப்படுத்தும்படி இங்கு வந்தான். நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். “இப்படித்தான் உம்முடைய அடிமை என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டதும், அவனுடைய கோபம் பற்றி எரிந்தது. யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் போட்டான். யோசேப்பு சிறையில் இருக்கும்போதும், யெகோவா யோசேப்போடே இருந்தார்; அவர் அவனுக்கு இரக்கங்காட்டி, சிறைச்சாலைத் தலைவனின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச்செய்தார். அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் அதிகாரியாக்கினான்; அங்கு செய்யப்படவேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான். யெகோவா யோசேப்போடு இருந்து, அவன் செய்த அனைத்திலும் வெற்றியைக் கொடுத்தார்; அதனால் சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பின் பொறுப்பிலிருந்த எதையும் மேற்பார்வை செய்யவில்லை. பானம் பரிமாறுகிறவன் மற்றும் அப்பம் சுடுகிறவன் சிலகாலம் சென்றபின், எகிப்திய அரசனுக்கு பானம் பரிமாறுகிறவனும், அப்பம் சுடுகிறவனுமான இருவரும் எகிப்தின் அரசனான தங்கள் எஜமானுக்கு எதிராகக் குற்றம் செய்தார்கள். ஆதலால் பார்வோன், பானம் பரிமாறுவோருக்குத் தலைவனும் அப்பம் சுடுவோருக்குத் தலைவனுமாயிருந்த அந்த இரு அலுவலர்கள் மேலும் கோபமடைந்தான். எனவே யோசேப்பு அடைக்கப்பட்டிருந்த காவலர் தலைவன் வீட்டிலுள்ள சிறையிலேயே பார்வோன் அவர்களையும் அடைத்தான். காவலர் தலைவன் அவர்களை யோசேப்பிடம் ஒப்படைக்க, அவன் அவர்களைப் பொறுப்பேற்றான். அவர்கள் அங்கே சிலகாலம் இருந்தார்கள். எகிப்திய அரசனுக்குப் பானம் பரிமாறுவோரின் தலைவனும், அப்பம் சுடுவோரின் தலைவனும் சிறையிலிருக்கும் போது, ஒரே இரவில் இருவரும் கனவு கண்டார்கள்; ஒவ்வொரு கனவும் வெவ்வேறு கருத்துடையனவாய் இருந்தன. மறுநாள் காலை யோசேப்பு அவர்களிடம் வந்தபோது, அவர்கள் கலங்கியிருப்பதைக் கண்டான். அவன் தன் தலைவனது வீட்டிலே, தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அலுவலர்களிடம், “உங்கள் முகம் இன்று ஏன் வாடியிருக்கிறது?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு விளக்கம் தர ஒருவருமில்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “விளக்கங்கள் இறைவனுக்குரியதல்லவா? உங்கள் கனவுகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான். பானம் பரிமாறுவோருக்குப் பொறுப்பாயிருந்தவன் தன் கனவை யோசேப்புக்குச் சொன்னான். “என் கனவில் எனக்கு முன்பாக ஒரு திராட்சைக்கொடி இருப்பதைக் கண்டேன்; அக்கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்த்த உடனே பூ பூத்து, அதன் குலைகள் பழுத்துத் திராட்சைப் பழங்களாயின. பார்வோனுடைய பாத்திரம் என் கையில் இருந்தது, நான் திராட்சைப் பழங்களை எடுத்து, அவற்றை அப்பாத்திரத்தில் பிழிந்து, பார்வோனின் கையிலே கொடுத்தேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு, “கனவின் விளக்கம் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாகும். பார்வோன் மூன்று நாட்களுக்குள் உன்னை விடுவித்து, உன்னை உன் பழைய பதவியில் அமர்த்துவான்; நீ பானம் பரிமாறுகிறவனாய் இருந்தபோது செய்தவாறே, பார்வோனின் பாத்திரத்தை அவன் கையில் கொடுப்பாய்” என்றான். மேலும் அவன், “மீண்டும் நீ நல்ல நிலையில் இருக்கும்போது, என்னை நினைவில் வைத்து, எனக்குத் தயவுகாட்டு; பார்வோனிடம் என்னைப்பற்றிச் சொல்லி, இந்த சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கு. ஏனெனில், நான் எபிரெயருடைய நாட்டிலிருந்து பலவந்தமாய் இங்கு கொண்டுவரப்பட்டேன், இங்கேயும் இந்தக் காவல் கிடங்கில் வைக்கப்படுவதற்கு ஏதுவான குற்றம் எதையும் நான் செய்யவில்லை” என்றான். யோசேப்பு அவனுக்கு நல்ல விளக்கம் சொன்னதைக் கேட்ட, அப்பம் சுடுவோரின் பொறுப்பாளன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் அப்பமுள்ள மூன்று கூடைகள் இருந்தன. மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன, ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான். அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய விளக்கம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவான். பறவைகள் உன் சதையைக் கொத்தித் தின்னும்” என்றான். மூன்றாம் நாள் வந்தது, அது பார்வோனின் பிறந்தநாளாய் இருந்தபடியால், அவன் தன் அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தான். அப்பொழுது அவன், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனையும், அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனையும் வெளியே கொண்டுவந்து, தான் விருந்துக்கு அழைத்திருந்த அதிகாரிகளின்முன் நிறுத்தினான். பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளனை மீண்டும் அவனுடைய பதவியில் அமர்த்தினான்; அவன் முன்போலவே பார்வோனுக்குப் பானம் பரிமாறினான். ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தின்படியே, அப்பம் சுடுபவர்களின் பொறுப்பாளனை அவன் தூக்கிலிட்டான். ஆனாலும், பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் யோசேப்பை நினைவில்கொள்ளவில்லை; அவனை மறந்துபோனான். பார்வோனின் கனவு இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான். அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன. அதன்பின் அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்களும், கொழுத்ததும் செழிப்பானதுமான ஏழு பசுக்களையும் தின்றுவிட்டன. அப்பொழுது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான். மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன. பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன. அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான். காலையில் பார்வோனுடைய மனம் குழப்பமடைந்தது, அதனால் அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால், அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கு விளக்கங்கூற முடியவில்லை. அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது. பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன. அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான். எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான். பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய விளக்கத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு விளக்கம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான். அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “என்னால் அதைச் செய்யமுடியாது, ஆனால் பார்வோன் விரும்பும் பதிலை இறைவன் அவருக்குத் தருவார்” என்றான். பார்வோன் யோசேப்பிடம், “என் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது கொழுத்ததும் செழிப்புமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின்பின் எலும்பும் தோலுமான, மெலிந்த அவலட்சணமான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறின. இதைப்போன்ற அவலட்சணமான பசுக்களை எகிப்து நாடெங்கும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன. அவற்றைத் தின்ற பின்பும், அவை அவற்றைத் தின்றன என யாராலும் சொல்ல முடியாதிருந்தது; அவை முன்புபோலவே அவலட்சணமாய் இருந்தன. அதன்பின் நான் விழித்துக்கொண்டேன். “மேலும், நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன். அதில், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள், ஒரே தாளில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டேன். அதன்பின் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன. இந்த மெலிந்த ஏழு நெற்கதிர்களும், மற்ற ஏழு விளைந்த கதிர்களையும் விழுங்கிவிட்டன. நான் இந்தக் கனவுகளை மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால் அவற்றின் விளக்கத்தை ஒருவனாலும் சொல்ல முடியவில்லை” என்றான். அப்பொழுது யோசேப்பு, “பார்வோனின் இரு கனவுகளுமே ஒன்றுதான். இறைவன் செய்யப்போவதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இவை இரண்டும் ஒரே கனவுதான். அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், அப்படியே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள். “பார்வோனுக்கு நான் சொன்னதுபோல், இறைவன் தாம் செய்யப்போவதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன. ஆனால் அதைத் தொடர்ந்து பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். அப்பொழுது எகிப்தின் நிறைவான விளைச்சல் மறக்கப்படும், பஞ்சம் எகிப்து நாடு முழுவதையும் பாழாக்கும். நாட்டின் நிறைவான விளைச்சலுக்குப் பின் வரப்போகும் பஞ்சம் மிகவும் கொடியதாகையால், அந்த நிறைவான காலம் நினைக்கப்படமாட்டாது. இது இறைவனால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டபடியாலும், இதை இறைவன் விரைவில் நிறைவேற்றுவார் என்பதாலுமே, இறைவன் இவற்றைப் பார்வோனுக்கு இரண்டு விதத்தில் கனவுகளால் வெளிப்படுத்தியுள்ளார். “ஆதலால் பார்வோன் விவேகமும், ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக. பார்வோன் ஏழு வருட நிறைவான விளைச்சல் காலங்களில் எகிப்தின் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கைச் சேகரித்து வைப்பதற்காக, நிலத்தின் மேற்பார்வையாளர்களையும் நியமிப்பாராக. அவர்கள் வரப்போகிற வளமான வருடங்களில் விளையும் தானியங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பார்வோனின் அதிகாரத்தின்கீழ் அந்த தானியங்களை பட்டணங்களில் உணவுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும். எகிப்து பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடி, அதன்மேல் வரப்போகும் ஏழு வருட பஞ்சகாலத்தில் பயன்படுத்துவதற்காக, அந்த தானியம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்” என்றான். அந்த திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் நலமாய்க் காணப்பட்டது. பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், “இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான். பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. எனவே, நான் உன்னை என் அரண்மனைக்கு அதிகாரி ஆக்குகிறேன்; என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான். யோசேப்பின் உயர்வு மேலும் பார்வோன் யோசேப்பிடம், “உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கிறேன்” என்றான். பின்பு பார்வோன் தன் விரலில் அணிந்திருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யோசேப்பின் விரலில் போட்டான். அவன் சிறந்த மென்பட்டு அங்கியை அவனுக்கு உடுத்தி, கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியையும் அணிவித்தான். அதிகாரத்தில் தனக்கு அடுத்தவனாக அவனை தேரில் ஏற்றி பவனி வரச்செய்தான். அவனுக்கு முன்சென்ற மனிதர், “மண்டியிட்டுப் பணியுங்கள்!” என்று சத்தமிட்டார்கள். இவ்வாறு பார்வோன் அவனை எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமித்தான். மேலும் பார்வோன் யோசேப்பிடம், “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்திலுள்ள யாரும் உனது உத்தரவின்றி கையையோ, காலையோ உயர்த்தக் கூடாது” என்றான். பார்வோன் யோசேப்பின் பெயரை சாப்நாத்பன்னேயா என மாற்றி, போத்திபிரா என்னும் ஓன் பட்டண ஆசாரியனின் மகள் ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். பின்பு யோசேப்பு எகிப்து நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கச் சென்றான். யோசேப்பு எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு பணிபுரியத் தொடங்கியபோது, அவன் முப்பது வயதுடையவனாய் இருந்தான். யோசேப்பு பார்வோன் முன்னிலையில் இருந்து புறப்பட்டுப்போய், எகிப்து முழுவதையும் சுற்றிப் பயணம் செய்தான். அப்படியே செழிப்பான ஏழு வருடங்களில் நாடு மிகுதியான விளைச்சலைக் கொடுத்தது. செழிப்பான அந்த ஏழு வருடங்களில் எகிப்தில் விளைந்த தானியங்களை, யோசேப்பு பட்டணங்களில் சேகரித்து வைத்தான். ஒவ்வொரு பட்டணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வயல்களில் விளைந்த தானியங்களைச் சேர்த்துவைத்தான். யோசேப்பு தானியத்தைக் கடலின் மணலைப்போல் பெருமளவாகச் சேர்த்துவைத்தான். அது கணக்கிட முடியாதபடி மிக அதிகமாக இருந்தபடியால், பின்பு அவன் பதிவுசெய்வதை நிறுத்திவிட்டான். பஞ்சமுள்ள வருடங்கள் தொடங்குவதற்கு முன்பே யோசேப்புக்கும் ஓன் பட்டணத்தின் ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்துக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அப்பொழுது யோசேப்பு, “இறைவன் என் தொல்லைகளையும், என் தகப்பன் வீட்டையும் மறக்கச்செய்தார்” என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே41:51 மனாசே என்றால் எபிரெயத்தில் மறத்தல் என்று பொருள். எனப் பெயரிட்டான். “நான் துன்பப்பட்ட நாட்டிலே இறைவன் என்னைச் செழிக்கப்பண்ணினார் என்று சொல்லி, தன் இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம்41:52 எப்பிராயீம் என்றால் எபிரெயத்தில் இருமடங்கு பெருகுதல் என்று பொருள். எனப் பெயரிட்டான்.” எகிப்தின் செழிப்பான வளம் நிறைந்த ஏழு வருடங்களும் முடிவுற்றன. அதன்பின் யோசேப்பு சொல்லியிருந்தது போலவே, பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் ஆரம்பமாகின. மற்ற எல்லா நாடுகளிலும் பஞ்சம் உண்டானது, ஆனால் எகிப்து முழுவதிலும் உணவு இருந்தது. எகிப்தியர் எல்லோரும் பஞ்சத்தை அனுபவிக்கத் தொடங்கியபோது, பார்வோனிடம் உணவு கேட்டு அழுதார்கள். பார்வோன் எல்லா எகிப்தியரிடமும், “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்றான். எகிப்து முழுவதிலும் பஞ்சம் பரவியபோது, யோசேப்பு எல்லா களஞ்சியங்களையும் திறந்து, தானியத்தை எகிப்தியருக்கு விற்றான். ஏனெனில், பஞ்சம் எகிப்து முழுவதும் கொடியதாயிருந்தது. உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், எல்லா நாட்டினரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள். யோசேப்பின் சகோதரர் எகிப்திலே தானியம் இருக்கிறதாக யாக்கோபு அறிந்தான். அவன் தன் மகன்களிடம், “நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஏன் சும்மா இருக்கிறீர்கள்? எகிப்திலே தானியம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். நாம் சாகாமல் உயிர்வாழும்படி, அங்குபோய் நமக்குத் தானியம் வாங்கி வாருங்கள்” என்றான். அப்பொழுது யோசேப்பின் பத்து சகோதரரும் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனார்கள். ஆனால் யோசேப்பின் தம்பியான பென்யமீனுக்குத் தீங்கு நேரிடலாம் எனப் பயந்த யாக்கோபு, அவனை அவர்களோடு அனுப்பவில்லை. கானான் நாட்டிலும் பஞ்சம் ஏற்பட்டபடியால், தானியம் வாங்குவதற்காக எகிப்திற்குப் போனவர்களுடன் இஸ்ரயேலின் மகன்களும் போனார்கள். இப்பொழுது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக இருந்தான், மக்கள் யாவருக்கும் அவனே தானியம் விற்றான். யோசேப்பின் சகோதரர் அங்கு வந்ததும், தரையிலே முகங்குப்புற விழுந்து அவனை வணங்கினார்கள். யோசேப்பு சகோதரர்களைக் கண்டவுடனே, அவர்களை இன்னார் என அறிந்துகொண்டான். ஆனால் அவன் அவர்களை அறியாத ஒரு அந்நியனைப்போல் பாசாங்கு செய்து கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் தானியம் வாங்கும்படி கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்” என்றார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை யாரென்று அறிந்திருந்தாலும் அவர்களோ அவனை இன்னாரென்று அறிந்துகொள்ளவில்லை. பின்பு யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைத்துத் தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்புக் குறைவு எங்கிருக்கின்றது என அறியவே இங்கு வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவு வாங்குவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒரே தகப்பனின் பிள்ளைகள். உமது அடியார்கள் உண்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள். யோசேப்போ, “இல்லை! நீங்களோ எங்கள் நாடு எங்கே பாதுகாப்பற்று இருக்கிறது எனப் பார்க்கவே வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள், “உம்முடைய அடியார்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தகப்பனின் மகன்கள். கடைசி மகன் இப்பொழுது எங்கள் தகப்பனோடு இருக்கிறான், மற்றவன் இறந்துபோனான்” என்றார்கள். யோசேப்பு அவர்களிடம், “நான் சொன்னபடியே நீங்கள் உளவாளிகள்தான்! நான் உங்களைச் சோதிக்கப்போகிறேன். பார்வோன் வாழ்வது நிச்சயம்போல, உங்கள் இளைய சகோதரன் இங்கு வந்தாலன்றி, நீங்கள் இவ்விடத்தைவிட்டுப் போகமாட்டீர்கள் என்பதும் நிச்சயம். உங்கள் இளைய சகோதரனை அழைத்துவர இப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனை அனுப்பவேண்டும்; மற்றவர்கள் சிறையில் வைக்கப்படுவீர்கள், நீங்கள் சொன்னவை உண்மையோ எனப் பார்ப்பதற்கு உங்கள் வார்த்தைகள் இவ்வாறு சோதிக்கப்படும். இல்லாவிட்டால் பார்வோன் வாழ்வது நிச்சயம்போல நீங்கள் உளவாளிகள் என்பதும் நிச்சயமே!” என்றான். அவன் அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்தான். மூன்றாம் நாள் யோசேப்பு தன் சகோதரரிடம், “நான் இறைவனுக்குப் பயப்படுகிறவன், நீங்கள் இதைச் செய்யுங்கள்; அப்பொழுது உயிர் வாழ்வீர்கள். நீங்கள் உண்மையானவர்களானால், உங்கள் சகோதரர்களில் ஒருவன் இங்கே சிறையில் இருக்கட்டும், மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தைக் கொண்டுபோங்கள். உங்கள் வார்த்தை நிரூபிக்கப்படும்படியும், நீங்கள் சாகாமல் இருக்கும்படியும், உங்களுடைய இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவர வேண்டும்” என்றான். அவர்கள் அவ்வாறு செய்யும்படி புறப்பட்டார்கள். பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நிச்சயமாய் நாம் நம்முடைய சகோதரனுக்குச் செய்த தீமைக்காகவே இப்பொழுது தண்டிக்கப்படுகிறோம். அவன் தன் உயிருக்காக மன்றாடி, துன்பப்பட்டதைக் கண்டும், நாம் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. அதனால்தான் இத்துன்பம் நமக்கு நேரிட்டது” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது ரூபன், “அச்சிறுவனுக்கு விரோதமாய்ப் பாவம்செய்ய வேண்டாமென நான் சொல்லவில்லையா? ஆனால் நீங்கள் கேட்கவில்லை! இப்பொழுது அவனுடைய இரத்தத்திற்கு நாம் கணக்குக் கொடுத்தேயாக வேண்டும்” என்றான். யோசேப்பு மொழி பெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் அவ்வாறு பேசியது அவனுக்கு விளங்கும் என்பதை அவர்கள் உணரவில்லை. யோசேப்பு அவர்களைவிட்டு அப்பாலே போய் அழத்தொடங்கினான். அதன்பின் திரும்பவும் வந்து, அவர்களுடன் பேசினான். அவன் அவர்களோடிருந்த சிமியோனைப் பிடித்து, மற்றச் சகோதரரின் முன்பாகக் கட்டுவித்தான். பின்பு யோசேப்பு அவர்களுடைய சாக்குகளில் தானியத்தை நிரப்பும்படியும், ஒவ்வொருவருடைய வெள்ளியையும் திரும்ப அவனவன் சாக்கில் வைக்கும்படியும், அவர்கள் பயணத்திற்குத் தேவையான உணவுகளைக் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான். அவ்வாறே செய்து முடிந்ததும், அவர்கள் தானியப் பொதிகளைத் தங்கள் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். இரவுக்காக தங்கிய இடத்தில் அவர்களில் ஒருவன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் சாக்கைத் திறந்தான், அப்பொழுது சாக்கின் வாயில் தன் வெள்ளிக்காசு இருப்பதைக் கண்டான். அவன் தன் சகோதரரிடம், “என் வெள்ளிக்காசு திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதோ என் சாக்கில் அது இருக்கிறது பாருங்கள்” என்றான். அவர்கள் பயந்து மனங்கலங்கி, ஒருவரையொருவர் நடுக்கத்துடன் பார்த்து, “இறைவன் எங்களுக்குச் செய்திருப்பது என்ன?” என்றார்கள். அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். “எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போல் நடத்தினான். ஆனால் நாங்கள் அவனிடம், ‘நாங்கள் நீதியானவர்கள்; உளவாளிகள் அல்ல. நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரே தகப்பனின் பிள்ளைகள், ஒருவன் இறந்துவிட்டான்; இப்பொழுது இளையவன் எங்கள் தகப்பனோடு கானான் நாட்டில் இருக்கிறான்’ என்று சொன்னோம். “அப்பொழுது அந்நாட்டின் அதிபதியானவன் எங்களிடம், ‘நீங்கள் நீதியானவர்கள் என்று நான் அறிய உங்கள் சகோதரரில் ஒருவனை இங்கே என்னுடன் விட்டுவிட்டு, மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தை எடுத்துக்கொண்டு போங்கள். ஆனால், நீங்கள் உளவாளிகள் அல்ல, நீதியானவர்கள் என நான் அறியும்படி, உங்கள் இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவாருங்கள். அப்பொழுது உங்கள் சகோதரனை உங்களிடம் திருப்பி ஒப்படைப்பேன், நீங்களும் இந்நாட்டில் வியாபாரம் செய்யலாம் என்று சொன்னான்’ ” என்றார்கள். அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டியபோது, ஒவ்வொருவனுடைய சாக்கிலும் அவனவனுடைய பணப்பை இருந்தது! அவர்களும், அவர்கள் தகப்பனும் அவற்றைக் கண்டபோது பயந்தார்கள். அவர்கள் தகப்பன் யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் எனக்கு என் பிள்ளைகளை இல்லாமல் செய்துவிட்டீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, இப்போது பென்யமீனையும் கொண்டு போகப்போகிறீர்கள். எல்லாமே எனக்கு விரோதமாய் இருக்கின்றதே!” என்று சொல்லிக் கலங்கினான். அப்பொழுது ரூபன் தன் தகப்பனிடம், “நான் பென்யமீனை உம்மிடம் மறுபடியும் கொண்டுவராவிட்டால், என்னுடைய இரண்டு மகன்களையும் நீர் கொன்றுவிடலாம். அவனை என்னுடைய பாதுகாப்பிலேயே விட்டுவிடும், அவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவருவேன்” என்றான். ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான். எகிப்திற்கு இரண்டாம் பயணம் நாட்டிலே பஞ்சம் இன்னும் மிகக் கொடுமையாயிருந்தது. அதனால் எகிப்திலிருந்து கொண்டுவந்த தானியமெல்லாம் முடிந்தபின், அவர்கள் தகப்பன் யாக்கோபு தன் மகன்களிடம், “நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கிக் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது யூதா தன் தகப்பனிடம், “ ‘உங்களுடன் உங்கள் சகோதரனும் வராவிட்டால் என் முகத்தில் நீங்கள் விழிக்க முடியாது என்று எகிப்தின் அதிபதி கண்டிப்பாக எச்சரிக்கை செய்தான்.’ எங்கள் சகோதரனை எங்களுடன் அனுப்பினால்தான் நாங்கள் போய் உங்களுக்குத் தானியம் வாங்கிவருவோம். நீர் அவனை எங்களுடன் அனுப்பாவிட்டால் நாங்கள் அங்கே போகமாட்டோம்; ஏனெனில், ‘உங்கள் சகோதரனும் உங்களுடன் வந்தாலன்றி, நீங்கள் என் முகத்தில் விழிக்க முடியாது’ என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறான்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல், “உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று சொல்லி, ஏன் இந்தத் துன்பத்தை எனக்கு வருவித்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அந்த மனிதன் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பத்தைப்பற்றியும் விபரமாய் விசாரித்தான். ‘உங்களுடைய தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா?’ என்றும், ‘உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறானா?’ என்றும் கேட்டான். நாங்கள் அவனுடைய கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொன்னோம். ‘உங்கள் சகோதரனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என்று சொல்வான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்கள். பின்பு யூதா தன் தகப்பனாகிய இஸ்ரயேலிடம், “நீங்களும் நாங்களும், எங்கள் பிள்ளைகளும் சாகாமல் வாழும்படி, நீர் அவனை என்னுடன் அனுப்பும். நாங்கள் உடனேயே போவோம். அவனுடைய பாதுகாப்புக்கு நானே பொறுப்பாய் இருப்பேன்; தனிப்பட்ட விதத்தில் அவனுக்காக நீர் என்னை உத்தரவாதியாக வைத்திருக்கலாம். அவனை மறுபடியும் உமது முன் கொண்டுவந்து நிறுத்தாவிட்டால், அந்தப் பழியை என் வாழ்நாள் முழுவதும் உமக்கு முன்பாக நான் சுமப்பேன். நாங்கள் தாமதியாமல் இருந்திருந்தால், இதுவரை நாங்கள் இரண்டுமுறை போய்த் திரும்பியிருக்கலாம்” என்றான். அதன்பின் அவர்களின் தகப்பனாகிய இஸ்ரயேல் அவர்களிடம், “அப்படியானால் நான் சொல்வதுபோல் செய்யுங்கள். நாட்டின் சிறந்த பொருட்களில் கொஞ்சம் தைலம், கொஞ்சம் தேன், கொஞ்சம் நறுமணப் பொருட்கள், வெள்ளைப்போளம், கொஞ்சம் பிஸ்தா கொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் ஆகியவற்றை உங்கள் சாக்குகளில் வைத்து, அந்த மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோங்கள். இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் உங்களுடன் கொண்டுபோங்கள், ஏனெனில், சென்றமுறை உங்கள் சாக்குகளில் வைக்கப்பட்ட வெள்ளிக்காசையும் நீங்கள் திருப்பிக் கொடுக்கவேண்டும். இப்பணம் ஒருவேளை தவறுதலாக வந்திருக்குமோ தெரியாது. உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த மனிதனிடம் போங்கள். எல்லாம் வல்ல இறைவன் சிறையிலிருக்கும் உங்கள் சகோதரனையும், தம்பி பென்யமீனையும் மறுபடியும் இவ்விடம் அனுப்பும்படி அந்த மனிதன் உங்களுக்கு இரக்கம் காட்டச்செய்வாராக. நானோ பிள்ளைகளை இழக்க வேண்டுமென்றால், பிள்ளைகளை இழந்தவனாவேன்” என்றான். அவ்வாறே அவர்கள் அன்பளிப்பையும் இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் எகிப்திற்கு விரைந்து சென்று, அங்கே யோசேப்பின் முன்னிலையில் போய் நின்றார்கள். பென்யமீன் அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இவர்களை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ, இவர்கள் இன்று மத்தியானம் என்னுடன் சாப்பிடுவதற்காக, ஒரு மிருகத்தை அடித்து ஆயத்தம் செய்” என்றான். யோசேப்பு கட்டளையிட்டபடியே அந்த அதிகாரி அவர்களை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள். அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள். அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல்முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம். ஆனால், போகும் வழியில் நாங்கள் இரவு தங்கிய இடத்தில், எங்கள் சாக்குகளைத் திறந்தோம். அப்பொழுது எங்கள் ஒவ்வொருவருடைய சாக்கின் வாயிலும், நாங்கள் கொடுத்த வெள்ளிக்காசு குறையாது அப்படியே இருக்கக் கண்டோம். எனவே அவற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம். அத்துடன் இம்முறையும் தானியம் வாங்குவதற்கு கூடுதலாக வெள்ளிக்காசைக் கொண்டுவந்திருக்கிறோம். யார் அந்த வெள்ளிக்காசை மறுபடியும் எங்கள் சாக்குகளில் வைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் இறைவனான உங்கள் தகப்பனுடைய இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்குச் செல்வத்தை வைத்திருக்கிறார்; உங்கள் வெள்ளிக்காசை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான். மேற்பார்வையாளன் யோசேப்பின் சகோதரரை வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்கள் கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தான். அத்துடன் அவர்கள் கழுதைகளுக்குத் தீனியும் கொடுத்தான். அவர்கள் யோசேப்புடன் சாப்பிடப் போவதாகக் கேள்விப்பட்டதால், மத்தியானம் யோசேப்பு வரும்போது கொடுப்பதற்காகத் தங்கள் அன்பளிப்புகளை ஆயத்தம் செய்தார்கள். யோசேப்பு வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்திருந்த தங்கள் அன்பளிப்புகளைக் கொடுத்துத் தரைமட்டும் விழுந்து, அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்கள் சுகசெய்திகளை விசாரித்து, “முன்பு நீங்கள் உங்கள் வயதுசென்ற தகப்பனைப் பற்றிச் சொன்னீர்களே, அவர் எப்படியிருக்கிறார்? இன்னும் அவர் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உமது அடியவனாகிய எங்கள் தகப்பன் இன்னும் உயிரோடு சுகமாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். அவனுக்கு மதிப்புக் கொடுக்கும்படி குனிந்து வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சொந்தத் தாயின் மகனான, தன் சகோதரன் பென்யமீனைக் கண்டதும், நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா? என்று கேட்டான். பின்பு, “என் மகனே, இறைவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்றான். யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், விரைந்து வெளியே சென்று அழுவதற்கு இடம் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான். பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி, வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றான். எபிரெயருடன் சாப்பிடுவது எகிப்தியருக்கு அருவருப்பாய் இருந்தபடியால், எகிப்தியர் எபிரெயருடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் யோசேப்புக்கு வேறாகவும், அவன் சகோதரர்களுக்கு வேறாகவும், அவனுடன் சாப்பிட்ட எகிப்தியருக்கு வேறாகவும் உணவு பரிமாறப்பட்டது. யோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தொடங்கி இளையவன் வரைக்கும் அவர்கள் வயதின்படியே பந்தியில் அமர்த்தப்பட்டார்கள்: யோசேப்பின் சகோதரர் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். யோசேப்பின் மேஜையிலிருந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, மற்றவர்களுடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனின் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் யோசேப்புடன் தாராளமாக விருந்துண்டு குடித்தார்கள். சாக்கில் வெள்ளிக்கிண்ணம் அதன்பின் யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் தூக்கிச் சுமக்கக்கூடிய அளவு தானியத்தால் நிரப்பி, ஒவ்வொருவரின் சாக்குகளின் வாயிலும் அவனவன் வெள்ளிக்காசை வைத்துக் கட்டு. இளையவன் பென்யமீனுடைய சாக்கின் வாயிலே என் வெள்ளிக்கிண்ணத்தையும் தானியத்துக்கான வெள்ளிக்காசையும் வைத்துக் கட்டு” என்று கட்டளையிட்டான். யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான். காலை விடிந்தபோது, அவர்கள் தங்கள் கழுதைகளுடன் வழியனுப்பப்பட்டனர். அவர்கள் பட்டணத்திலிருந்து அதிக தூரம் போகுமுன் யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “நீ உடனே அவர்களைப் பின்தொடர்ந்து போ; அவர்களைப் பிடித்தவுடன் அவர்களிடம், ‘நீங்கள் நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தது ஏன்? இது என் எஜமான் பானம் பண்ணுவதற்கும் எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படுத்தும் பாத்திரமல்லவா? நீங்கள் செய்திருப்பது கொடிய செயல்’ என்று சொல்” என்றான். அவன் அவர்களைச் சென்றடைந்தபோது, அவ்வார்த்தைகளை அப்படியே சொன்னான். ஆனால் அவர்கள் அவனிடம், “ஏன் ஐயா இப்படியானவற்றைச் சொல்கிறீர்? இப்படிப்பட்ட எதையும் செய்ய உமது அடியாராகிய நாங்கள் எண்ணியும் பார்க்கவில்லை! முன்பு எங்கள் சாக்குகளில் நாங்கள் கண்ட பணத்தைக்கூட கானானிலிருந்து மீண்டும் கொண்டுவந்தோம். அப்படியிருக்க, உமது எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ நாங்கள் ஏன் திருடவேண்டும்? உமது அடியாரில் எவராவது அதை வைத்திருப்பதை நீர் கண்டால் அவன் சாகவேண்டும்; மற்றவர்கள் என் எஜமானின் அடிமைகளாவோம்” என்றார்கள். அதற்கு அவன், “அப்படியானால் சரி; நீங்கள் சொன்னபடியே ஆகட்டும். உங்களில் எவனுடைய சாக்கில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருக்கிறதோ, அவன் எனக்கு அடிமையாவான்; மற்றவர்கள் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” என்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் சாக்கைக் கீழே இறக்கி, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது மேற்பார்வையாளன் மூத்தவனுடைய சாக்கிலிருந்து இளையவனுடைய சாக்குவரை சோதிக்கத் தொடங்கினான். அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கில் இருக்கக் காணப்பட்டது. அதைக் கண்டவுடனே அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். பின்பு, அவர்கள் எல்லோரும் தங்கள் கழுதைகளில் சுமைகளை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பி வந்தார்கள். யூதாவும் அவன் சகோதரரும் திரும்பிவந்தபோது, யோசேப்பு இன்னும் தன் வீட்டிலேயே இருந்தான். அவர்கள் யோசேப்பின் முன் தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் செய்திருப்பது என்ன? என்னைப்போன்ற ஒரு மனிதன், சம்பவிக்கப் போவதை முன்பே கணித்துவிடுவான் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றான். அதற்கு யூதா, “ஆண்டவனே, உமக்கு நாங்கள் என்ன சொல்வோம்? நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நிரூபிப்போம்? இறைவன் உமது அடியாரின் குற்றத்தை வெளிப்படுத்திவிட்டார். நாங்களும் உமது பாத்திரத்தை வைத்திருப்பவனும் இப்பொழுது என் எஜமானுக்கு அடிமைகள்” என்றான். ஆனால் யோசேப்போ, “அப்படிப்பட்ட செயலைச் செய்வதை என்னால் எண்ணிப்பார்க்கவும் முடியாது! கிண்ணத்தை வைத்திருக்கக் காணப்பட்டவன் மட்டுமே எனக்கு அடிமையாவான். மற்றவர்கள் உங்கள் தகப்பனிடம் சமாதானத்துடன் திரும்பிப்போங்கள்” என்றான். யூதா யோசேப்பிடம் சென்று, “ஆண்டவனே, உமது அடியானாகிய நான், உம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதியும். நீர் பார்வோனுக்குச் சமமாய் இருக்கிறபோதிலும், உமது அடியவன்மேல் கோபிக்க வேண்டாம். ஆண்டவனே, நீர் உமது அடியார்களிடம், ‘உங்களுக்குத் தகப்பனாவது சகோதரராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டீர். அதற்கு நாங்கள் எங்கள் ஆண்டவனிடம், ‘ஆம், எங்களுக்கு வயதுசென்ற தகப்பனும், அவருக்கு முதிர்வயதில் பிறந்த ஒரு இளம் மகனும் இருக்கிறான். அவனுடைய சகோதரன் இறந்துபோனான், அவனுடைய தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே உயிரோடிருக்கிறான்; அவனுடைய தகப்பன் அவனை நேசிக்கிறார்’ என்று சொன்னோம். “அப்பொழுது நீர் உமது அடியாரிடம், ‘நான் அவனைப் பார்ப்பதற்கு அவனை என்னிடம் இங்கு கொண்டுவாருங்கள்’ என்றீர். அதற்கு நாங்கள் உம்மிடம், ‘ஐயா, அவன் தகப்பனைவிட்டு வரமுடியாது; அப்படி அவன் பிரிந்து வந்தால், அவனுடைய தகப்பன் இறந்து போவார்’ என்றோம். ஆனால் நீரோ, ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் வராவிட்டால், மீண்டும் என் முகத்தை உங்களால் பார்க்க முடியாது’ என்று உமது அடியாராகிய எங்களிடம் சொன்னீர். நாங்கள் உமது அடியவனாகிய எங்கள் தகப்பனிடம் போனபோது, ஐயா, நீர் சொல்லியிருந்தவற்றை அவரிடம் சொன்னோம். “எங்கள் தகப்பனோ, ‘நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள்’ என்றார். அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் அங்கே போகமுடியாது; எங்கள் இளைய சகோதரன் எங்களுடன் வந்தால்தான் நாங்கள் அங்கே போவோம். எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனின் முகத்தைப் பார்க்கவே முடியாது’ என்று சொன்னோம். “அப்பொழுது உமது அடியானாகிய எங்கள் தகப்பன் எங்களிடம், ‘என் மனைவி இரண்டு மகன்களைப் பெற்றாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான், “நிச்சயமாய் அவனை ஒரு கொடிய மிருகம் கிழித்துக் கொன்றிருக்க வேண்டும்.” அன்றிலிருந்து அவனை நான் காணவேயில்லை. நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார். “இந்த சிறுவனுடைய உயிருடன் என் தகப்பனின் உயிர் ஒன்றிணைந்து இருக்கின்றது. அதனால் இப்பொழுது நான் உமது அடியானாகிய என் தகப்பனிடம் போகும்போது, இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம். உமது அடியானாகிய நானே இந்த சிறுவனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தேன். நான் என் தகப்பனிடம், ‘என் தகப்பனே, இவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவராவிட்டால், உமக்கு முன்பாக என் வாழ்நாளெல்லாம் அந்தப் பழியை நானே சுமப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறேன். “ஆகையால் இப்பொழுது இந்த சிறுவனுக்குப் மறுமொழியாக, ஐயா, உமது அடியானாகிய நான் உமது அடிமையாக இங்கே இருப்பேன், இவன் தன் சகோதரருடன் திரும்பிச் செல்லட்டும். இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிப் போகமுடியும்? முடியாது! என் தகப்பனுக்கு வரும் அவலத்தை என்னைப் பார்க்க விடாதேயும்” என்று சொன்னான். யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல் அங்கு நின்ற தன் உதவியாளர்களுக்கு முன்னால் யோசேப்பினால் அதற்குமேல் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவன் அவர்களிடம், “எல்லோரையும் என் முன்னிருந்து போகச்செய்யுங்கள்” என்று சத்தமிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, வேறு ஒருவரும் அவனோடிருக்கவில்லை. அவன் மிகச் சத்தமிட்டு அழுததினால் அது வெளியே நின்ற எகிப்தியருக்குக் கேட்டது; பார்வோனின் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர். யோசேப்பு தன் சகோதரரிடம், “நான்தான் யோசேப்பு; என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். ஆனால் அவன் சகோதரர்களால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவன் முன்னிலையில் அவர்கள் திகிலடைந்திருந்தார்கள். யோசேப்பு தன் சகோதரரிடம், “என் அருகே வாருங்கள்” என்று கூப்பிட்டான். அவர்கள் வந்தவுடன் அவன் அவர்களிடம், “எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் நீங்கள் விற்ற உங்கள் சகோதரன் யோசேப்பு நான்தான்! இப்பொழுது நீங்கள் என்னை விற்றதற்காக கலங்கவும், உங்கள்மேல் கோபங்கொள்ளவும் வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காப்பதற்காகவே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாகவே இங்கு அனுப்பினார். இரு வருடங்களாக நாடெங்கும் பஞ்சம் உண்டாயிருக்கிறது, உழுதலும், அறுவடை செய்தலும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இருக்காது. பூமியில் மிஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களைப் பெரும் மீட்பினால் காப்பாற்றவுமே, இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார். “ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவன் குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் ஏற்படுத்தினார். நீங்கள் என் தகப்பனிடம் விரைவாகத் திரும்பிப்போய், உமது மகன் யோசேப்பு சொல்வது இதுவே: ‘இறைவன் என்னை எகிப்து முழுவதற்கும் தலைவனாக்கியிருக்கிறார். தாமதிக்காமல், என்னிடம் வாருங்கள். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உங்களுடைய, ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளோடும் உங்களுக்குரிய எல்லாவற்றோடும் எனக்கு அருகிலேயே கோசேன் பிரதேசத்தில் குடியிருக்கலாம். இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து பஞ்சம் நீடிக்கப்போகிறது. நான் உங்களுக்குத் தேவையானவற்றைத் தருவேன். இல்லாவிட்டால், நீங்களும் உங்கள் வீட்டாரும், உங்களுக்குரிய எல்லாரும் ஆதரவு அற்றவர்களாகிவிடுவீர்கள்’ என்கிறான் என்று சொல்லுங்கள்” என்றான். மேலும் யோசேப்பு, “உங்களுடன் பேசுகிறவன் உண்மையாகவே நானே என்பதை, நீங்களும் என் தம்பி பென்யமீனும் காண்கிறீர்கள். எகிப்திலே எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா கனத்தையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்குச் சொல்லுங்கள். நீங்கள் விரைவாய் போய் என் தகப்பனை இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். பின்பு தன் தம்பி பென்யமீனைக் கட்டிப்பிடித்து அழுதான், அப்படியே பென்யமீனும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதான். பின்பு அவன் தன் சகோதரர் எல்லோரையும் முத்தமிட்டு அழுதான். அதன்பின் அவன் சகோதரரும் அவனுடன் பேசினார்கள். யோசேப்பின் சகோதரர் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி பார்வோனின் அரண்மனைக்கு எட்டியபோது, அவனும் அவனுடைய அதிகாரிகள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: “நீ உன் சகோதரரிடம், ‘நீங்கள் உங்கள் மிருகங்களில் பொதிகளை ஏற்றிக்கொண்டு கானானுக்குத் திரும்பிப்போங்கள், அங்கிருந்து உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பங்களையும் இங்கே என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். நான் எகிப்து நாட்டின் சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பேன்; நீங்கள் நாட்டின் செழிப்பை அனுபவிக்கலாம்.’ “மேலும், நீ அவர்களுக்கு அறிவுறுத்திச் சொல்லவேண்டியதாவது: ‘எகிப்திலிருந்து சில வண்டிகளைக் கொண்டுபோய் உங்கள் பிள்ளைகளையும், மனைவிகளையும், உங்கள் தகப்பனோடுகூட இங்கே கூட்டிக்கொண்டு வாருங்கள். உங்களுக்குள்ள உடைமைகளைக் குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில், எகிப்தின் சிறந்த பொருட்களெல்லாம் உங்களுடையதாகும்’ என்று சொல்” என்று பார்வோன் சொன்னான். இஸ்ரயேலின் மகன்கள் அவ்வாறே செய்தார்கள். யோசேப்பு பார்வோன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான உணவுகளையும் கொடுத்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல்45:22 அதாவது, சுமார் 3.5 கிலோகிராம் வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தகப்பனுக்கு பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மேல் தானியம், அப்பம் அவருடைய பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். அதன்பின் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்யவேண்டாம்!” என்றான். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கிறான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்குச் சொன்னபோதும், யாக்கோபை எகிப்திற்கு அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டபோதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. அப்பொழுது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என இப்பொழுது நான் நம்புகிறேன்! நான் சாகிறதற்கு முன் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான். எகிப்தில் யாக்கோபு இஸ்ரயேல் தன் உடைமைகளுடன் புறப்பட்டுப் பெயெர்செபாவை அடைந்தபோது, அங்கே தன் தகப்பன் ஈசாக்கின் இறைவனுக்குப் பலிகளைச் செலுத்தினான். அன்றிரவே இறைவன் இஸ்ரயேலுடன் தரிசனத்தில் பேசி, “யாக்கோபே! யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான். அப்பொழுது அவர், “நான் இறைவன், நானே உன் தகப்பனின் இறைவன். நீ எகிப்திற்குப் போகப் பயப்படாதே, அங்கே நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன். நீ எகிப்திற்குப் போகையில் உன்னுடன்கூட வருவேன், நிச்சயமாக உன்னை மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். யோசேப்பே தன் கையினால் உன் கண்களை மூடுவான்” என்றார். பின்பு யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டான்; இஸ்ரயேலின் மகன்கள் தங்களுடைய தகப்பன் யாக்கோபையும், தங்கள் பிள்ளைகளையும், தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பிய வண்டிகளில் ஏற்றிச் சென்றார்கள். அத்துடன் தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடனும், கானானில் சம்பாதித்த எல்லா பொருட்களுடனும், யாக்கோபும் அவன் சந்ததிகளும் எகிப்திற்குப் போனார்கள். யாக்கோபு தன்னுடன் தன் சந்ததிகளான மகன்களையும், பேரன்களையும், மகள்களையும், பேத்திகளையும் அழைத்துக்கொண்டு எகிப்திற்குப் போனான். யாக்கோபுடன் எகிப்திற்குப்போன அவனுடைய சந்ததிகளான, இஸ்ரயேலரின் பெயர்களாவன: யாக்கோபின் முதற்பேறானவன் ரூபன். ரூபனின் மகன்கள்: ஆனோக், பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். சிமியோனின் மகன்கள்: எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல் என்பவர்கள். லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். கானான் நாட்டில் ஏர், ஓனான் என்பவர்கள் இறந்துபோனார்கள். பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். இசக்காருடைய மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் என்பவர்கள். செபுலோனுடைய மகன்கள்: செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். பதான் அராமிலே மகள் தீனாளைத் தவிர யாக்கோபுக்கு லேயாள் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவனுடைய மகன்களும் மகள்களும் எல்லாரும் முப்பத்து மூன்றுபேர். காத்துடைய மகன்கள்: சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள். ஆசேருடைய மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள். இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள். பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல் என்பவர்கள். லாபான் தன்னுடைய மகள் லேயாளுக்குக் கொடுத்த பெண்ணான, சில்பாள் மூலம் யாக்கோபுக்குக் கிடைத்த பிள்ளைகள் இவர்களே. அவர்கள் எல்லாரும் பதினாறுபேர். யாக்கோபின் மனைவி ராகேலின் மகன்கள்: யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். எகிப்திலே யோசேப்புக்கு மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள். இவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் யோசேப்புக்குப் பெற்றாள். பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், உப்பீம், ஆர்த் என்பவர்கள். யாக்கோபுக்கு ராகேல் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாமாக பதினாலு பேர். தாணுடைய மகன்: ஊசிம். நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள். லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பெண் பில்காள் யாக்கோபுக்கு பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாரும் ஏழுபேர். யாக்கோபுடன் எகிப்திற்குப்போன மகன்களின் மனைவிகளைத் தவிர, நேரடியான சந்ததிகள் எல்லோரும் அறுபத்தாறு பேர். யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் யாக்கோபின் குடும்ப அங்கத்தினர்களும் சேர்த்து எல்லாருமாக எழுபதுபேர். அதன்பின் யாக்கோபு கோசேனுக்குப் போகும் வழியை அறியும்படி, யூதாவைத் தனக்கு முன் யோசேப்பிடம் அனுப்பினான். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு வந்தபோது, யோசேப்பு தன் தகப்பன் இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி, கோசேனுக்குப் போனான். யோசேப்பு தன் தகப்பன் முன் போனதுமே தன் தகப்பனைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான். இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால், நீ உயிரோடிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். பின்பு யோசேப்பு தன் சகோதரரிடமும் தன் தகப்பன் குடும்பத்தாரிடமும், “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டில் வாழ்ந்த என் சகோதரரும் என் தகப்பனின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பர்கள்; அவர்கள் கால்நடைகளை கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் வந்திருக்கிறார்கள்’ என்று சொல்வேன். பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது, நீங்கள், ‘உமது அடியாராகிய நாங்களும் எங்கள் முற்பிதாக்களைப் போலவே, சிறுவயதுமுதல் மந்தை மேய்ப்பவர்கள்’ என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் கோசேன் நாட்டில் குடியிருக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், எகிப்தியருக்கு மேய்ப்பர்கள் அருவருப்பானவர்கள்” என்றான். யோசேப்பு பார்வோனிடம் சென்று, “என் தகப்பனும் என் சகோதரரும் தங்களுடைய ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும், அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் கானான் நாட்டிலிருந்து வந்து, இப்பொழுது கோசேனில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். அவன் தன் சகோதரரில் ஐந்துபேரைத் தெரிந்தெடுத்து, அவர்களைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். அப்பொழுது பார்வோன் அந்தச் சகோதரர்களிடம், “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போலவே மந்தை மேய்ப்பவர்கள்” என்றார்கள். மேலும் அவர்கள் பார்வோனிடம், “கானான் நாட்டில் பஞ்சம் கொடியதாய் இருப்பதால், உமது அடியாரின் மந்தைக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. ஆகையால், தயவுசெய்து உமது அடியாராகிய எங்களைக் கோசேனில் குடியிருக்க அனுமதியும்” என்றார்கள். அதற்குப் பார்வோன் யோசேப்பிடம், “உன் தகப்பனும் சகோதரரும் உன்னிடம் வந்திருக்கிறார்கள். இதோ, எகிப்து நாடு உனக்கு முன்பாக இருக்கிறது; உன் தகப்பனையும், சகோதரரையும் நாட்டின் சிறந்த இடத்தில் குடியமர்த்து. அவர்கள் கோசேனில் குடியிருக்கட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் இருப்பார்களானால், அவர்கள் என் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொறுப்பாய் இருக்கட்டும்” என்றான். பின்பு யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபைப் பார்வோனுக்கு முன்பாகக் கூட்டிக்கொண்டு வந்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். பார்வோன் யாக்கோபிடம், “உம்முடைய வயது என்ன?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு பார்வோனிடம், “என் வாழ்க்கைப் பயணம் நூற்று முப்பது வருடங்கள். என் வருடங்கள் என் முற்பிதாக்களின் வாழ்க்கைப் பயணத்தின் வருடங்களுக்குச் சமமானது அல்ல; அவை குறைவானதும், கஷ்டமானதுமாய் இருந்தன” என்றான். பின்பு யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரரையும் எகிப்தில் குடியேற்றி, நாட்டின் சிறந்த இடமான ராமசேஸ் என்னும் மாவட்டத்தில் அவர்களுக்கு நிலம் கொடுத்தான். யோசேப்பு தன் தகப்பனுக்கும், சகோதரருக்கும், தன் தகப்பன் வீட்டார் அனைவருக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி உணவையும் வழங்கி வந்தான். யோசேப்பும் பஞ்சமும் ஆனாலும் பஞ்சம் மிகவும் கொடியதாக இருந்தபடியால், முழு நாட்டிலும் உணவு இல்லாமற்போயிற்று; எகிப்தும் கானானும் பஞ்சத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. யோசேப்பு எகிப்திய மக்களுக்கும் கானானிய மக்களுக்கும் தானியத்தை விற்ற பணத்தையெல்லாம் சேர்த்து, பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். எகிப்திலும் கானானிலும் உள்ள மக்களின் பணமெல்லாம் செலவழிந்து போயிற்று. அப்பொழுது எகிப்திய மக்கள் எல்லோரும் யோசேப்பிடம் வந்து, “எங்களுக்கு உணவு தாரும். உமது கண்களுக்கு முன்பாக நாங்கள் எல்லோரும் ஏன் சாகவேண்டும்? எங்களுடைய பணமெல்லாம் செலவழிந்து விட்டது” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “அப்படியானால் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொண்டுவாருங்கள். பணம் செலவழிந்து போனபடியால், உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பதிலாக நான் உணவு விற்பேன்” என்றான். அப்படியே அவர்கள் தங்கள் வளர்ப்பு மிருகங்களை யோசேப்பிடம் கொண்டுவந்தார்கள்; அவன் அவர்களுடைய குதிரைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், மாடுகள், கழுதைகள் முதலியவற்றை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாகத் தானியம் கொடுத்தான். இவ்வாறு அந்த வருடம் முழுவதும் அவர்களுடைய வளர்ப்பு மிருகங்களுக்குப் பதிலாகத் தானியம் கொடுத்துவந்தான். அந்த வருடம் கழிந்தபோது, அடுத்த வருடம் அவர்கள் திரும்பவும் யோசேப்பிடம் வந்து, “ஐயா, நாங்கள் ஏன் உண்மையை உம்மிடம் மறைக்கவேண்டும்? எங்களிடமிருந்த பணமெல்லாம் முடிந்து, எங்கள் வளர்ப்பு மிருகங்களும் உமக்கு உரியதாகிவிட்டன. எங்கள் ஆண்டவனுக்குக் கொடுப்பதற்கு எங்கள் உடல்களையும் நிலங்களையும் தவிர வேறொன்றுமில்லை. நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக ஏன் அழியவேண்டும்? உணவுக்குப் பதிலாக எங்களையும் எங்கள் நிலத்தையும் நீர் வாங்கிக்கொள்ளும்; நாங்கள் எங்கள் நிலத்துடன் பார்வோனின் அடிமைகளாவோம். நாங்கள் சாகாமல் வாழ்வதற்கும், எங்கள் நிலம் பாழாய்ப் போகாதிருக்கவும் எங்களுக்கு விதையும் தானியமும் தாரும்” என்றார்கள். ஆகவே யோசேப்பு எகிப்திலுள்ள நிலங்கள் அனைத்தையும் பார்வோனுக்காக வாங்கினான். எகிப்தியருக்கும் பஞ்சம் கொடியதாய் இருந்ததால், எகிப்தியர் அனைவரும் மொத்தமாகத் தங்கள் நிலங்களை விற்றார்கள். நிலங்கள் பார்வோனுக்குச் சொந்தமாயின. யோசேப்பு எகிப்தின் ஒரு எல்லை தொடங்கி மறு எல்லைவரையும் உள்ள மக்களை வெவ்வேறு பட்டணங்களில் அடிமைகளாகக் கீழ்ப்படுத்தினான். ஆனாலும் ஆசாரியருடைய நிலத்தை அவன் வாங்கவில்லை; ஏனெனில், பார்வோனிடமிருந்து ஆசாரியர்கள் நேரடியாக மானியத்தைப் பெற்றுக்கொண்டதால், கிடைத்த தானியம் அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. அதினாலேயே அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை. அப்பொழுது யோசேப்பு மக்களிடம், “இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் நான் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். இதோ உங்களுக்கு விதைத்தானியம், நீங்கள் போய் நிலத்தில் பயிரிடுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும். மீதி நான்கு பங்கை வயல்களின் விதைத் தானியத்திற்காகவும், உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உணவுக்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “ஆண்டவனே, நீர் எங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருப்போம்; உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவு கிடைத்தாலே போதும்” என்றார்கள். எனவே யோசேப்பு, “நிலத்தின் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கு பார்வோனுக்குரியது” என்ற எகிப்தின் நிலச்சட்டத்தை ஏற்படுத்தினான். அது இன்றுவரை அமுலில் இருக்கிறது. ஆசாரியர்களுடைய நிலங்கள் மட்டும் பார்வோனுக்குச் சொந்தமாகாமல் இருந்தன. இஸ்ரயேலர் எகிப்திலுள்ள கோசேன் பிரதேசத்தில் குடியிருந்தார்கள். அங்கே அவர்கள் தமக்குச் சொத்துக்களைச் சம்பாதித்து இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் மிக அதிகமானார்கள். யாக்கோபு எகிப்தில் பதினேழு வருடங்கள் வாழ்ந்தான். அவனுடைய வாழ்நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள். இஸ்ரயேல் மரணநேரம் நெருங்கியபோது, அவன் தன் மகன் யோசேப்பை அழைத்து அவனிடம், “எனக்கு உன்னிடத்தில் தயவு கிடைக்குமானால், நீ உன் கையை என் தொடையின்கீழ் வைத்து, நீ எனக்குத் தயவும், உண்மையுமுள்ளவனாயிருப்பாய் என சத்தியம் செய். என்னை எகிப்திலே நீ அடக்கம்பண்ணவேண்டாம். நான் என் முற்பிதாக்களுடன் இளைப்பாறும்போது, எகிப்திலிருந்து என்னைக் கொண்டுபோய், அவர்கள் அடக்கம்பண்ணப்பட்ட இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்” என்றான். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே நான் செய்வேன்” என்றான். இஸ்ரயேல், “நீ எனக்குச் சத்தியம் செய்துகொடு” என்றதும், யோசேப்பு சத்தியம் செய்துகொடுத்தான். அப்பொழுது இஸ்ரயேல் தனது கட்டிலின் தலைப்பக்கம் சாய்ந்துகொண்டு வழிபட்டான். மனாசேயும் எப்பிராயீமும் சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தகப்பன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான். “உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கிறான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே எல்லாம் வல்ல இறைவன் எனக்குமுன் தோன்றி, என்னை ஆசீர்வதித்தார். அவர் என்னிடம், ‘நான் உன்னை இனவிருத்தியில் பெருகப்பண்ணி எண்ணிக்கையில் அதிகரிப்பேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார். “எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்திற்கு வருவதற்குமுன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் இப்பொழுதிலிருந்து என்னுடைய மகன்களாக எண்ணப்படுவார்கள்; ரூபனும், சிமியோனும் என் மகன்களாய் இருப்பதுபோல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்களாய் இருப்பார்கள். அவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அந்த பிள்ளைகள் சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள், தங்கள் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் இடங்களிலிருந்தே கிடைக்கும். நான் பதானைவிட்டுத் திரும்பி வருகையில், எப்பிராத்தாவுக்குச் சற்று தூரத்தில், கானான் நாட்டில் நாங்கள் வழியில் இருக்கும்போதே, ராகேல் இறந்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியின் அருகே நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான். இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான். வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான். யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான். பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான். ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும், எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.” தனது தகப்பன் அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காகப் பிடித்தான். யோசேப்பு தன் தகப்பனிடம், “அப்படியல்ல அப்பா, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான். ஆனால் யாக்கோபோ அப்படிச் செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனுடைய சந்ததி பெருகி பல நாடுகளின் கூட்டமாகும்” என்றான். அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “ ‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான். பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களின் நாட்டிற்குத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார். உன் சகோதரருக்கு மேலானவனாக இருக்கிற உனக்கோ, எமோரியரிடமிருந்து நான் வாளினாலும் வில்லினாலும் கைப்பற்றிய மேட்டு நிலத்தைக் கொடுக்கிறேன்” என்றான். யாக்கோபு ஆசீர்வதித்தல் பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள். “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய். “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள். நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள். அவர்களுடைய பயங்கரமான கோபமும், கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன். “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள். யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்? செங்கோலுக்குரியவர் வரும்வரை செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது, ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது; நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது. அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும், தன் கழுதைக் குட்டியைச் சிறந்த திராட்சைக் கொடியிலும் கட்டுவான்; அவன் தன் உடைகளைத் திராட்சை இரசத்திலும், அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான். அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும், பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும். “செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும். “இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும் பலமுள்ள கழுதை. அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும், தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு, சுமைக்குத் தன் தோளை சாய்ப்பான்; கட்டாய வேலைக்கும் இணங்குவான். “தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து, தன் மக்களுக்கு நீதி வழங்குவான். தாண், குதிரைமீது போகிறவன் இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து, குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும், வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான். “யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன். “காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான். “ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான். “நப்தலி49:21 நப்தலி என்றால் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசுவான் என்று அர்த்தம். அழகான குட்டிகளை ஈனும் விடுதலை பெற்ற பெண்மான். “யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி. அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும். வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; பகைமையுடன் அவன்மேல் எய்தார்கள். ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும், மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும், உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும். அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார். உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள் நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை. இவைகளெல்லாம் யோசேப்பின் தலையின்மேலும், தன் சகோதரருக்குள் பிரபுவாய் இருக்கிறவனின் நெற்றியிலும் தங்குவதாக. “பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பேராவலுடன் பட்சிப்பான். மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.” இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே. யாக்கோபின் மரணம் பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள். அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார். அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான். யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான். அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனது உடலின்மேல் விழுந்து அழுது, அவனை முத்தமிட்டான். பின்பு யோசேப்பு தன் தகப்பனான இஸ்ரயேலின் உடலை நறுமணமிட்டுப் பக்குவப்படுத்தும்படி, தன் சேவையிலிருந்த வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான். வைத்தியர்கள் அப்படியே செய்தார்கள். இவ்வாறு நறுமணமிட்டு உடலைப் பதப்படுத்துவதற்கு நாற்பது நாட்கள்வரை செல்லும். எகிப்தியர் யாக்கோபுக்காக எழுபது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள். துக்ககாலம் முடிந்தபின் யோசேப்பு பார்வோனின் அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம், “உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நீங்கள் பார்வோனிடம் எனக்காக ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும். என் தகப்பன் என்னிடம், ‘நான் சாகப்போகிறேன். கானானில் நான் வெட்டி வைத்திருக்கும் என்னுடைய கல்லறையிலேயே என்னை அடக்கம்பண்ணவேண்டும்’ என்று சத்தியம் வாங்கியிருந்தார். ஆகவே, இப்பொழுது நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ணித் திரும்பிவர எனக்கு அனுமதி கொடுக்கும்படி கேளுங்கள்” என்றான். பார்வோன், “உன் தகப்பன் உன்னிடம் சத்தியம் வாங்கியபடி, நீ போய் உன் தகப்பனை அடக்கம் செய்” என்றான். எனவே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்யப்போனான். அவனுடன் பார்வோனுடைய அரண்மனைப் பெரியவர்களும், எகிப்திலுள்ள பெரியோர்களுமான எல்லா அலுவலர்களும் போனார்கள். அவர்களோடு யோசேப்பின் வீட்டாரும், அவனுடைய சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் போனார்கள். அவர்களுடைய பிள்ளைகளையும், ஆட்டுமந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் மாத்திரம் கோசேனிலே விட்டுச் சென்றார்கள். தேர்களுடன் குதிரைவீரர்களும் அவர்களோடு போனார்கள். அது மிகப்பெரிய ஒரு கூட்டமாய் இருந்தது. அவர்கள் யோர்தானுக்கு அப்பாலுள்ள ஆதாத் என்னும் சூடடிக்கும் களத்தை அடைந்தபோது, மனங்கசந்து சத்தமிட்டு அழுதார்கள். அங்கே யோசேப்பு தன் தகப்பனுக்காக ஏழு நாட்கள் துக்கங்கொண்டாடினான். ஆதாத்தின் சூடடிக்கும் களத்தில் அவர்கள் துக்கங்கொண்டாடுவதை அங்கு வாழ்ந்த கானானியர் கண்டபோது, “இங்கே எகிப்தியர் பெரிய துக்கங்கொண்டாடலை நடத்துகிறார்கள்” என்றார்கள். அதினாலேயே யோர்தானுக்கு அருகிலுள்ள அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயீம்50:11 ஆபேல் மிஸ்ராயீம் என்றால் எகிப்தியர்களின் துக்கம் என்று அர்த்தம். என்ற பெயர் உண்டாயிற்று. யாக்கோபு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவனுடைய மகன்கள் செய்தார்கள்: அவனுடைய உடலைக் கானான் நாட்டிற்குக் கொண்டுபோய், அங்கே மம்ரேக்கு அருகிலிருக்கும் மக்பேலா வெளியிலுள்ள குகையிலே அடக்கம் செய்தார்கள்; ஆபிரகாம் அந்த நிலத்தை வயலுடன் சேர்த்து, ஏத்தியனான எப்ரோனிடமிருந்து கல்லறை நிலமாக வாங்கியிருந்தான். யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்தபின், தன் சகோதரரோடும், தன் தகப்பனை அடக்கம் செய்வதற்காக அவனுடன் வந்திருந்த மற்ற எல்லாரோடும் எகிப்திற்குத் திரும்பிப்போனான். யோசேப்பு உறுதியளித்தல் தங்கள் தகப்பன் மரணமடைந்தபின் யோசேப்பின் சகோதரர், “யோசேப்பு எங்கள்மேல் பழிவாங்க எண்ணங்கொண்டு, முன்பு நாம் யோசேப்புக்குச் செய்த எல்லாத் தீமைகளுக்காக தீங்கு செய்தால் என்ன செய்வது?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதனால் அவர்கள் யோசேப்பிடம், “உம்முடைய தகப்பன் இறப்பதற்குமுன் இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார். அதாவது, நீங்கள் யோசேப்பிடம் போய் நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள். உன் சகோதரரின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் அவர்கள் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிக்க வேண்டும் என, நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்” என்றார்கள். “உமது தகப்பனுடைய இறைவனின் அடியாராகிய நாங்கள் செய்த பாவங்களை இப்பொழுது எங்களுக்குத் தயவாய் மன்னியும்” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான். யோசேப்பின் சகோதரர் அவனிடம் வந்து, அவனுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “நாங்கள் உமது அடிமைகள்” என்றார்கள். யோசேப்பு அவர்களிடம், “பயப்படவேண்டாம்; நான் என்ன இறைவனா? நீங்கள் எனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டீர்கள். ஆனால், இறைவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, பல உயிர்களைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அதை நன்மையாக மாற்றினார். ஆகையால் பயப்படவேண்டாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையானவற்றை எல்லாம் நான் கொடுப்பேன்” என உறுதியளித்துத் தயவாகப் பேசினான். யோசேப்பின் மரணம் யோசேப்பு தன் தகப்பனின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயதுவரை உயிர் வாழ்ந்தான். யோசேப்பு, எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் கண்டான். அப்பிள்ளைகள் எல்லோரும், மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியிலே வளர்ந்தார்கள். பின்பு யோசேப்பு தன் சகோதரரிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் உங்களுக்கு நிச்சயமாய் உதவி செய்வார்; ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நாட்டுக்கு அவர் உங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவார்” என்றான். பின்னும் யோசேப்பு அவர்களிடம், “நிச்சயமாய் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். அப்பொழுது நீங்கள் என்னுடைய எலும்புகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான். யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.