- Biblica® Open Indian Tamil Contemporary Version
கலாத்தியர்
பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம்
கலாத்தியர்
கலா.
பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம்
பவுலாகிய நான் ஒரு மனிதனிடத்தில் இருந்தோ, அல்லது மனிதர்கள் மூலமாகவோ அல்ல, இயேசுகிறிஸ்துவின் மூலமாகவும், அவரை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய பிதாவாகிய இறைவனின் மூலமாகவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அப்படி அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும், என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும்,
கலாத்தியா நாட்டிலுள்ள திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வேறு நற்செய்தி இல்லை
நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, வேறு ஒரு நற்செய்தியின் பக்கமாகத் திரும்புகிறீர்களே. இதைக்குறித்து நான் வியப்படைகிறேன். உண்மையிலேயே அது எவ்விதத்திலும் நற்செய்தி அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச்செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, வேறு ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ, நாங்களோ அறிவித்தாலும், அவன் நித்தியமாகவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறது போலவே, இப்பொழுதும் நான் மீண்டும் சொல்லுகிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியை யாராவது உங்களுக்கு அறிவித்தால், அவன்மேல் இறைவனுடைய சாபம் சுமரட்டும்.
நான் இப்பொழுது மனிதருடைய அங்கீகாரத்தையோ அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையோ பெற முயல்கிறேனா? அல்லது மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறேனா? நான் மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கமுடியாதே.
இறைவனால் அழைக்கப்பட்ட பவுல்
பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, எந்த ஒரு மனிதனும் அதை எனக்குக் போதிக்கவும் இல்லை. இயேசுகிறிஸ்து எனக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.
முன்பு யூதமதத்தில் இருந்தபோது, நான் வாழ்ந்த முறையைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் எவ்வளவு கொடுமையாய் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்தி, அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்போது என்னுடைய சமகாலத்து யூதர்களைவிட, நானே யூத மதக் கோட்பாடுகளில் முன்னேறியவனாய் இருந்தேன். நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதில் தீவிர ஆர்வம் உடையவனாய் இருந்தேன். ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறுபிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து, கிறிஸ்துவை என்னில் வெளிப்படுத்த பிரியங்கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காக இறைவனே இப்படிச் செய்தார், அப்பொழுது அது குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை, எனக்கு முன்னமே அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திக்கும்படி, நான் எருசலேமுக்குப் போனதுமில்லை. நானோ உடனே அரேபிய வனாந்திரத்திற்குப்போய், பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பிவந்தேன்.
மூன்று வருடங்களுக்குப் பின்புதான், நான் பேதுருவுடன் அறிமுகமாகும்படி, எருசலேமுக்குப் போய், அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன். மற்ற அப்போஸ்தலரில் ஒருவரையும் நான் சந்திக்கவில்லை. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபை மாத்திரமே சந்தித்தேன். நான் உங்களுக்கு இப்பொழுது எழுதுகிறது பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக நான் நிச்சயமாய் உங்களுக்குக் கூறுகிறேன்.
பின்பு நான் சீரியாவுக்கும், சிலிசியாவுக்கும் போனேன். அப்பொழுது கிறிஸ்துவில் உள்ள யூதேயாநாட்டுத் திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன். “முன்பு நம்மைத் துன்புறுத்தியவன், தான் அழிக்க முயன்ற விசுவாசத்தையே இப்பொழுது பிரசங்கிக்கிறான்” என்று சொல்லப்படுவதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்கள் எனக்காக இறைவனைத் துதித்தார்கள்.
பவுல் அப்போஸ்தலர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல்
பதினான்கு வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் பர்னபாவுடன் எருசலேமுக்குப் போனேன். நான் தீத்துவையும் என்னுடனே கூட்டிக்கொண்டு போனேன். நான் பெற்றுக்கொண்ட ஒரு வெளிப்பாட்டின்படிதான், அங்கு நான் போனேன். அங்கே யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியைப் பற்றி, அவர்களுக்கு விவரமாகக் கூறினேன். தலைவர்களாகக் காணப்பட்டவர்களுடன் தனிப்பட்ட விதத்திலேயே நான் எடுத்துரைத்தேன். ஏனெனில் நான் செய்த ஊழியமும், செய்கின்ற ஊழியமும் பயனற்றதாகி விடக்கூடாது என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் என்னுடன் இருந்த தீத்து ஒரு கிரேக்கனாயிருந்தபோதுங்கூட, அவன் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால் இது ஒரு பிரச்சனையாக எழுந்தது. ஏனெனில், சில பொய்யான சகோதரர்களும் சபைக்குள் புகுந்துகொண்டு கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் அனுபவித்த சுதந்திரத்தை அவர்கள் உளவுபார்த்து எங்களை அடிமைகளாக்கவே வந்தார்கள். ஆனால் நற்செய்தியின் சத்தியம் எப்பொழுதும் உங்களுடன் நிலைத்திருக்கும்படியாக, நாங்கள் அவர்களுக்குச் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.
அங்கு முக்கியமானவர்களாய் கருதப்பட்டவர்கள்கூட என்னுடைய செய்தியுடன் வேறு ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை. இறைவன் ஆள்பார்த்து மதிப்பிடுகிறவர் அல்ல. யூதர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் பணி பேதுருவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதுபோல, யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி, எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறதை சபையின் தலைவர்கள் கண்டார்கள். ஏனெனில் யூதர்களுக்கு பேதுருவின் அப்போஸ்தல ஊழியத்தின் மூலமாக செயலாற்றிய இறைவன், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனான என் ஊழியத்தின் மூலமும் செயலாற்றினார். இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும்2:9 2:9 அதாவது, பேதுரு; என்று [வசனங்கள் 11] மற்றும் [14 உள்ளது]., யோவானும் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் எனக்கும், பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து ஐக்கியம் பாராட்டினார்கள். நானும் பர்னபாவும் யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும், அவர்களோ யூதமக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஏழைகளையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம், எங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். உண்மையில் அவ்விதமாகவே செய்யவேண்டும் என்றே நானும் ஆவலாயிருந்தேன்.
பவுல் கேபாவை எதிர்த்தல்
கேபா அந்தியோகியா பட்டணத்திற்கு வந்தபோது, அவன் அங்கே தவறு செய்தவனாகத் தெரிந்ததினால், நான் அவனை நேரடியாகவே எதிர்த்தேன். யாக்கோபிடம் இருந்து சிலர் வரும்வரைக்கும், கேபா யூதரல்லாத மக்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டான். ஆனால் அவர்கள் வந்தபோது, யூதர்களுக்குப் பயந்து, யூதரல்லாத மக்களிடமிருந்து புறம்பாய் விலகிக்கொள்ளத் தொடங்கினான். மற்ற யூதர்களும், இவ்விதமாய் கேபாவினுடைய வெளிவேஷத்தில் சேர்ந்துகொண்டார்கள். இதனால் பர்னபாவும், அவர்களுடைய இந்த வேஷத்தில் ஈர்க்கப்பட்டான்.
அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி நடவாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக நான் கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதன், ஆனால் யூதனைப்போல் அல்ல, நீ யூதரல்லாதவனைப் போலல்லவா வாழ்கிறாய். அப்படியிருக்க யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, யூதரல்லாத மக்களை நீ எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.
“பிறப்பிலேயே யூதர்களாகிய நாங்களோ, பாவிகள் எனப்படும் யூதரல்லாதவர்கள் அல்ல. ஆனால் ஒருவன் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனாலே அல்ல, இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாகவே, நீதிமானாக்கப்படுகிறான் என்பது நமக்குத் தெரியும். அதனாலேதான், நாமும் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால் அல்ல, கிறிஸ்துவின் விசுவாசத்தின்மூலமாய் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால், ஒருவனுமே நீதிமானாக்கப்படுவதில்லை.
“கிறிஸ்துவில் நீதிமான்களாக்கப்படும்படி விரும்புகிற, நாமும் பாவிகளாய் இருக்கிறோம் என்றால் கிறிஸ்து பாவத்தைப் பெருகச்செய்கிறார் என்பது அர்த்தமா? ஒருபோதும் இல்லை. ஆனால் நான் அழித்ததைத் திரும்பவும் நான் கட்ட முயன்றால், மோசேயின் சட்டத்தை மீறுகிறவன் என்பதையே அது காட்டுகிறது.
“நான் இறைவனுக்கென்று வாழும்படி மோசேயின் சட்டத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கே இறந்தேன். கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்பொழுது வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் வாழ்கிறார். இந்த மாம்சத்தில் இப்பொழுது நான் வாழ்கிற வாழ்க்கையை இறைவனுடைய மகனின் விசுவாசத்தினாலேயே வாழ்கிறேன். அவரே என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கொடுத்தார். இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!”
விசுவாசமும் மோசேயின் சட்டமும்
மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா? நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா? நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா? நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.3:6 [ஆதி. 15:6]
இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்”3:8 [ஆதி. 12:3]; [18:18]; [22:18] என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்”3:10 [உபா. 27:26] என்று எழுதியிருக்கிறது. எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்”3:11 [ஆப. 2:4] என்றும் எழுதியிருக்கிறது. ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.3:12 [லேவி. 18:5] மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்”3:13 [உபா. 21:23] என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.
மோசேயின் சட்டமும் வாக்குத்தத்தமும்
பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒரு உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டபின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கவும் முடியாது அதனுடன் எதையும் சேர்த்துக்கொள்ளவும் முடியாது. அதுபோலத்தான், வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்டன. வேதவசனம் “சந்ததிகளுக்கு,” என்று பலரைக்குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு,”3:16 [ஆதி. 12:7]; [13:15]; [24:7] என்று ஒருவரைக் குறித்துச் சொல்கிறது. அந்தச் சந்ததி கிறிஸ்துவே. நான் சொல்லுவது என்னவென்றால்: முன்னதாகவே இறைவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து, வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். இதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப்பின் வந்த மோசேயின் சட்டம், முன்பு கொடுக்கப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளிவைக்கவோ, அந்த வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்கிவிடவோ முடியாது. இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்து மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால், அது வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தமாகிறது. ஆனால் இறைவனோ, தம்முடைய கிருபையினால் அந்த உரிமைச்சொத்தை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படியே கொடுத்தார்.
அப்படியானால், மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மீறுதல்களை எடுத்துக்காட்டவே வாக்குத்தத்தத்தால் குறிப்பிடப்பட்ட அந்த ஆபிரகாமின் சந்ததியானவர் வரும்வரைக்கும் மோசேயின் சட்டம் நீட்டிக்கப்பட்டது. இறைவன் மோசேயை நடுவராக வைத்து, இறைத்தூதர்கள் மூலமாய் மோசேயின் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே.
அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும். ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
இறைவனின் பிள்ளைகள்
இந்த விசுவாசம் வருவதற்கு முன்னதாக, நாம் மோசேயின் சட்டத்தினால் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். நாம் விசுவாசம் வெளிப்படும் வரைக்குமே, இப்படி இருந்தோம். அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது. இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை.
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின்மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள்.
நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும். அவனுடைய தகப்பன் நியமித்த காலம் வரும்வரைக்கும் அவன் பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்குக் கீழ்ப்பட்டே இருக்கிறான். இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார். இறைவன் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளுக்குரிய முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து அனுப்பப்பட்டார். நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே!” என்று கூப்பிடத்தக்க இறைவன் தமது மகனுடைய ஆவியை, உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார். ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார்.
கலாத்தியர்களைக் குறித்த அக்கறை
முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது, இயல்பாகவே இறைவன் இல்லாதவைகளுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள். அதைவிட, இறைவனால் நீங்கள் அறியப்பட்டும் இருக்கிறீர்கள். இப்படியிருக்க, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கும் பலவீனமும் கேவலமுமானவற்றிற்குத் திரும்புகிறீர்களே! அது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா? நீங்கள் விசேஷ நாட்களையும், மாதங்களையும், பருவகாலங்களையும், வருடங்களையும் கைக்கொண்டு நடக்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பட்ட பாடுகள் எல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன்.
பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன். அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன். சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா?
இப்பொழுது சிலர் உங்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே, ஆனால் அவர்களுடைய நோக்கங்களோ நல்லவை அல்ல. அவர்கள் எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்களும் அவர்கள் சார்பாய் இருப்பதையே விரும்புகிறார்கள். நோக்கம் நல்லதென்றால், அதில் தீவிர ஆர்வம் காண்பிப்பது நல்லதுதான். அவ்வித ஆர்வத்தை உங்களுடன் நான் இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே காண்பிக்கவேண்டும். என் பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். இப்பொழுது உங்களுடனே நான் இருக்கவும், உங்களுடன் வேறுவிதமாய்ப் பேசவும் எவ்வளவாய் விரும்புகிறேன். ஏனெனில், உங்களைக்குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன்.
ஆகாரும் சாராளும்
மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள். ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே. அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான்.
இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது. அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே. ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய். ஏனெனில்,
“பிள்ளை
பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு;
பிரசவ வேதனைப்படாதவளே,
மகிழ்ச்சியுடன் சத்தமிடு;
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்”4:27 [ஏசா. 54:1]
என்று எழுதியிருக்கிறதே.
பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது. ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”4:30 [ஆதி. 21:10] ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள்.
கிறிஸ்துவில் சுதந்திரம்
நாம் சுதந்திரமுடையவர்களாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். எனவே நீங்கள், உறுதியாய் நிலைத்திருங்கள். மீண்டும் நீங்கள் உங்களை அடிமைத்தன நுகத்தின் சுமைக்கு உட்படுத்தாதபடி காத்துக்கொள்ளுங்கள்.
பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை என்றே சொல்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும், மோசேயின் சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான். மோசேயின் சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட முயற்சிக்கிற நீங்கள் கிறிஸ்துவிலிருந்து விலகிவிட்டீர்கள்; நீங்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்கள். ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் கிறிஸ்து இயேசுவில் ஒருவன் விருத்தசேதனத்தைச் செய்துகொண்டானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அன்பின் செயல்களினால் வெளிக்காட்டப்படுகிற விசுவாசம் மட்டுமே முக்கியமானது.
இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக்கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடைசெய்தது யார்? இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல. “ஒரு சிறிதளவு புளித்தமாவு பிசைந்தமாவு முழுவதையும் புளிப்பூட்டுகிறதே.” நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் உங்களைக்குறித்து கர்த்தரில் மனவுறுதி கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கிறவன் எவனோ, அவன் யாராயிருந்தாலும் தண்டனையைப் பெறுவான். பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியம்தான் என்று நான் இன்னும் பிரசங்கித்தால், நான் ஏன் இன்னும் யூதர்களால் துன்புறுத்தப்படுகிறேன்? அப்படி நான் பிரசங்கிப்பது உண்மை என்றால், கிறிஸ்துவின் சிலுவையின் காரணமாய் வரும் துன்புறுத்தல் நின்று போயிருக்குமே. விருத்தசேதனம் அவசியம் என்று உங்களைக் குழப்பமடையச் செய்கிறவர்களோ, இன்னும்கூட தங்கள் முழு உறுப்பையுமே வெட்டிக்கொள்வதையே நான் விரும்புகிறேன்.
ஆவியானவரால் வரும் வாழ்வு
எனக்கு பிரியமானவர்களே, சுதந்திரமாய் இருப்பதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் சுதந்திரத்தை மாம்சத்தின் ஆசைகளை அனுபவிப்பதற்குச் சாதகமாகப் பயன்படுத்தாதீர்கள். அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணிசெய்யுங்கள். “நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாய் இரு”5:14 [லேவி. 19:18] என்கிற, ஒரே கட்டளையிலே மோசேயின் சட்டம் முழுவதுமே அடங்கியிருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குகிறவர்களாய் இருந்தால், கவனமாயிருங்கள். ஏனென்றால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்.
எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி வாழுங்கள். அப்பொழுது உங்கள் மாம்சத்தின்படி எழும் ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதில் ஈடுபடமாட்டீர்கள். ஏனெனில் மாம்ச இயல்பு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முரண்பாடான ஆசைகளைத் தூண்டுகிறது. பரிசுத்த ஆவியானவரோ, மாம்ச இயல்புக்கு முரண்பட்ட விதத்திலேயே வழிநடத்துகிறார். அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருக்கின்றன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை உங்களால் செய்ய முடியாதிருக்கிறது. ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீங்கள் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; விக்கிரக வழிபாடு, மாந்திரீகம்; பகைமை, தகராறு, எரிச்சல் குணம், கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், பொறாமை; குடிவெறி, களியாட்டம் போன்றவைகளே. நான் உங்களை முன்பு எச்சரித்ததுபோலவே இப்பொழுதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள், இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.
ஆனால் ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், உண்மைத்தனம், சாந்தகுணம், சுயக்கட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள், தங்கள் மாம்சத்தின் இயல்பை, அதன் தீவிர உணர்ச்சிகளுடனும் ஆசைகளுடனும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம். நாம் வீண்பெருமை கொண்டவர்களாய் இருக்கக்கூடாது. மற்றவர்களை எரிச்சல் மூட்டுகிறவர்களாகவோ, ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்கிறவர்களாகவோ இருக்கக்கூடாது.
எல்லோருக்கும் நன்மை செய்தல்
பிரியமானவர்களே, யாராவது ஒரு பாவம் செய்து அகப்பட்டுக்கொண்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனை சாந்தமாக நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களும் கவனமாயிருங்கள். ஏனெனில், நீங்களும்கூட சோதனைக்கு உள்ளாகலாம். ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சுமைகளைச் சுமக்க உதவிசெய்யுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். யாராவது தன்னுடைய உண்மை நிலையை அறியாது, தன்னை ஒரு முக்கியமான ஆளாகக் கருதினால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களைத் தானே சோதித்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே ஒருவன் பெருமைப்பட முடியும். ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளி. இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஏமாந்து போகவேண்டாம்: இறைவனை ஏமாற்றித் தப்பமுடியாது. ஒரு மனிதன் தான் விதைக்கிறதையே அறுவடை செய்வான். ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். நன்மை செய்வதில் நாம் சோர்வடையாது இருக்கவேண்டும். நாம் அதைக் கைவிடாமல் செய்யும்போது, ஏற்றகாலத்தில் அதன் அறுவடையைப் பெற்றுக்கொள்வோம். ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
புதிய படைப்பே முக்கியம்
என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள்.
வெளித்தோற்றத்தைக் காண்பித்து, மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற முயலுகிறவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் நிமித்தம், தாங்கள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள். விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களும், மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கிறார்களே; அப்படியிருக்க உங்கள் விருத்தசேதனத்தைக் குறித்துத் தாங்கள் பெருமிதம் கொள்வதற்காகவே, நீங்களும் அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வது வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், அந்தச் சிலுவையில், உலகத்தின் கவர்ச்சிகரமான யாவும் அறையப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில் அறையப்பட்டவனாகவே இருக்கிறேன். ஒருவன் விருத்தசேதனம் செய்துகொள்கிறானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பது முக்கியமல்ல, அவன் ஒரு புதிய படைப்பாய் வாழ்கிறானா என்பதே முக்கியம். இந்த ஒழுங்குவிதியைப் பின்பற்றுகிறவர்களுக்கு சமாதானமும், இரக்கமும் உண்டாவதாக. இறைவனுடைய இஸ்ரயேலர்கள்மேலும் அது இருப்பதாக.
இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கிறேனே.
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.