- Biblica® Open Indian Tamil Contemporary Version
எஸ்றா
எஸ்றாவின் புத்தகம்
எஸ்றா
எஸ்றா
எஸ்றாவின் புத்தகம்
யூதர்கள் நாடு திரும்ப கோரேசு உதவுதல்
பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து, அதை எழுதிவைத்தான்.
“பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே:
“ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார். அவருடைய மக்களில் யார் உங்களோடிருக்கிறானோ அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போகட்டும். அவன் போய் எருசலேமில் இருக்கும் இறைவனும் இஸ்ரயேலின் இறைவனுமான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக. அப்பொழுது இறைவனுடைய மக்கள் எந்த இடங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவ்விடத்திலுள்ள மக்கள் உதவிசெய்ய வேண்டும். இவ்வாறு எருசலேமில் இருக்கிற இறைவனின் ஆலயத்திற்கென வெள்ளி, தங்கம், மற்றும் தேவையான பொருட்கள், வளர்ப்பு மிருகங்களுடன் தேவையான சுயவிருப்புக் காணிக்கையையும் கொடுக்கவேண்டும்.’ ”
அப்படியே இறைவனால் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்ட யூதா, பென்யமீன் குடும்பத்தலைவர்களும், ஆசாரியரும், லேவியர்களும் எருசலேமுக்குச் சென்று, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக்கட்ட ஆயத்தம் பண்ணினார்கள். அவர்களுடைய அயலவர்கள் எல்லோரும் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமான பொருட்கள், வேறு பொருட்கள், வளர்ப்பு மிருகங்கள், இன்னும் விலையுயர்ந்த அன்பளிப்புகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அத்துடன் தங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளையும் கொடுத்தார்கள்.
மேலும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துச்சென்று தன் தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்த, யெகோவாவின் ஆலயத்துக்குரிய பொருட்களையும் கோரேஸ் அரசன் வெளியே எடுத்துக்கொடுத்தான்.1:7 [தானி. 5:1-4] பெர்சியாவின் அரசன் கோரேஸ் பொருளாளனான மித்திரோத்தின்மூலம் அவற்றை வெளியே எடுத்துவரச்செய்து, அவன் அவற்றை எண்ணி கணக்கெடுத்து யூதாவின் இளவரசனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான்.
பொருட்களின் பட்டியல் இதுவே:
தங்கத்தினாலான 30 தட்டுகள்,
வெள்ளியினாலான 1,000 தட்டுகள்,
வெள்ளியினாலான 29 கிண்ணங்கள்,
தங்கத்தினாலான 30 கிண்ணங்கள்,
வெள்ளியினாலான 410 கிண்ணங்கள்,
மற்றவை 1,000 பாத்திரங்கள்.
மொத்தம் 5,400 தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களாகும்.
நாடு கடத்தப்பட்டவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, சேஸ்பாத்சார் இந்தப் பொருட்களையும் தன்னுடன் கொண்டுவந்தான்.
திரும்பி வந்தவர்களின் பெயர்ப் பட்டியல்
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும் செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள்.
இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
பாரோஷின்
சந்ததி 2,172 பேர்,
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
ஆராகின் சந்ததி 775 பேர்,
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
சத்தூவின் சந்ததி 945 பேர்,
சக்காயின் சந்ததி 760 பேர்,
பானியின் சந்ததி 642 பேர்,
பெபாயின் சந்ததி 623 பேர்,
அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
பிக்வாயின் சந்ததி 2,056 பேர்,
ஆதீனின் சந்ததி 454 பேர்,
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
பேஸாயின் சந்ததி 323 பேர்,
யோராகின் சந்ததி 112 பேர்,
ஆசூமின் சந்ததி 223 பேர்,
கிபாரின் சந்ததி 95 பேர்.
பெத்லெகேமின் மனிதர் 123 பேர்,
நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
மிக்மாசின் மனிதர் 122 பேர்,
பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர்,
நேபோவின் மனிதர் 52 பேர்,
மக்பீசின் மனிதர் 156 பேர்,
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
ஆரீமின் மனிதர் 320 பேர்,
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர்,
எரிகோவின் மனிதர் 345 பேர்,
செனாகாவின் மனிதர் 3,630 பேர்.
ஆசாரியர்கள்:
யெசுவாவின் குடும்பத்தானாகிய
யெதாயாவின் சந்ததி 973 பேர்,
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
லேவியர்கள்:
ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.
பாடகர்கள்:
ஆசாப்பின் சந்ததி 128 பேர்.
ஆலய வாசல் காவலர்கள்:
சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.
திரும்பி வந்த ஆலய பணியாட்கள்:
சீகா, அசுபா, தபாயோத்,
கேரோசு, சீயாகா, பாதோன்,
லெபானா, அகாபா, அக்கூப்,
ஆகாப், சல்மாயி, ஆனான்,
கித்தேல், காகார், ரயாயா,
ரேசீன், நெக்கோதா, காசாம்,
ஊசா, பாசெயா, பேசாய்,
அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
பக்பூக், அகுபா, அர்கூர்,
பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா,
பர்கோஸ், சிசெரா, தேமா,
நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்:
சோதாய், சொபெரேத், பெருதா,
யாலா, தர்கோன், கித்தேல்,
செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்:
அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர். அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும்2:69 அதாவது, சுமார் 500 கிலோகிராம் தங்கம், 5,000 வெள்ளியையும்2:69 அதாவது, சுமார் 2800 கிலோகிராம் வெள்ளி, ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள்.
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள்.
பலிபீடம் திரும்பக் கட்டப்படல்
பாபிலோனில் இருந்து திரும்பிய பிறகு இஸ்ரயேல் மக்கள் பட்டணங்களில் குடியேறிய ஏழாம் மாதத்தில், அவர்கள் எல்லோரும் எருசலேமில் ஒருமனப்பட்டு ஒன்றுகூடினார்கள். அப்பொழுது யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவனுடைய உடன் ஆசாரியரும், செயல்தியேலின் மகன் செருபாபேலும், அவனுடைய மனிதர்களும் சேர்ந்து இஸ்ரயேலின் இறைவனின் பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி, தகன காணிக்கைகளைப் பலியிடுவதற்காக பலிபீடத்தைக் கட்டினார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த மக்களுக்குப் பயந்தபோதிலும் பலிபீடத்தை அதன் முந்திய அஸ்திபாரத்தில் கட்டினார்கள். உடனடியாக அவர்கள் காலை மாலை பலியாக யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைப் பலியிட்டார்கள். அதன்பின்பு சட்டத்தில் எழுதியுள்ளபடி அவர்கள் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஒவ்வொரு நாளும் நியமிக்கப்பட்ட தேவையான அளவு தகன காணிக்கைகளைச் செலுத்திவந்தார்கள். அதன்பின்பு அவர்கள் வழக்கமான தகன காணிக்கைகளையும், அமாவாசை காணிக்கைகளையும் நியமிக்கப்பட்ட யெகோவாவினுடைய பரிசுத்த பண்டிகைக்கான காணிக்கைகளையும் கொண்டுவந்து செலுத்தினார்கள். அத்துடன் யெகோவாவுக்கு சுயவிருப்பக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள். ஏழாம் மாதத்தின் முதலாம் நாளிலே கூடாரப்பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்பே, அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தத் தொடங்கியிருந்தார்கள். ஆனால் யெகோவாவின் ஆலயத்திற்கு இன்னும் அஸ்திபாரம் போடப்படவில்லை.
ஆலயம் திரும்பக் கட்டப்படல்
அப்பொழுது அவர்கள் மேசன்மார்களையும், தச்சர்களையும் பணம் கொடுத்து கூலிக்கு அமர்த்தினார்கள். சீதோனியரையும், தீரியரையும் உணவும், பானமும், எண்ணெயும் கொடுத்து லெபனோனிலிருந்து யோப்பாவரை கடல் வழியாக கேதுரு மரங்கள் கொண்டுவருவதற்காக அமர்த்தினார்கள். இவை பெர்சியாவின் அரசன் கோரேஸின் உத்தரவின்படி செய்யப்பட்டது.
அவர்கள் எருசலேமுக்கு இறைவனின் ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே வேலையை ஆரம்பித்தார்கள். செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், மீதமுள்ள அவர்களுடைய சகோதரர்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடு கடத்தப்பட்டிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் இதில் ஈடுபட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய லேவியர்கள் யெகோவாவின் ஆலயம் கட்டும் வேலையை மேற்பார்வை செய்தார்கள். பின்பு யெசுவா தனது மகன்களுடனும், சகோதரர்களுடனும், கத்மியேலுடனும், அவன் மகன்களுடனும், யூதாவின் மகன்களுடனும்3:9 எபிரெயத்தில் ஒதாயாவின் மகன்கள் எனப்படும், லேவியர்களான எனாதாத்தின் மகன்களுடனும், ஒன்றுசேர்ந்து இறைவனின் ஆலய வேலைகளைச் செய்யும் மனிதர்களை மேற்பார்வை செய்தனர்.
ஆலயத்தைக் கட்டுகிறவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு முடித்தபோது, ஆசாரியர்கள் தங்களுக்குரிய உடையை உடுத்தி எக்காளங்களுடன் நின்றார்கள். ஆசாபின் மகன்களான லேவியர்கள் கைத்தாளங்களுடன் நின்றார்கள். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேலின் அரசன் தாவீது உரைத்தபடியே யெகோவாவைத் துதிக்கும்படி நின்றார்கள். அவர்கள் யெகோவாவுக்குத் துதியும், நன்றியும் செலுத்திப் பாட்டு பாடினார்கள். அவர்கள்:
“அவர் நல்லவர்;
இஸ்ரயேலின்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது”
என்று பாடினார்கள்.
மக்கள் எல்லோரும் யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்டதால் உரத்த சத்தமாய் யெகோவாவைத் துதித்தார்கள். இருந்தும், முன்பிருந்த ஆலயத்தைக் கண்ட முதியவர்களான ஆசாரியரும், லேவியர்களும், குடும்பத்தலைவர்களும் அதை நினைவுகூர்ந்து இப்போது கட்டிய ஆலயத்தின் அஸ்திபாரத்தைக் கண்டபோது, மிகவும் சத்தமாய் அழுதார்கள். அவ்வேளையில் வேறுசிலர் மகிழ்ச்சியினால் சத்தமிட்டார்கள். மக்கள் அதிக சத்தமிட்டதால் அழுகையின் சத்தத்திலிருந்து மகிழ்ச்சியின் சத்தத்தை பகுத்தறிய ஒருவராலும் முடியவில்லை. சத்தமோ அதிக தூரத்திற்குக் கேட்டது.
ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதில் எதிர்ப்பு
சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என யூதா பென்யமீன் மக்களின் பகைவர்கள் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் செருபாபேலிடமும், அவர்களின் குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்களும் கட்டிடத்தைக் கட்ட உதவிசெய்வோம். ஏனெனில் உங்களைப் போல நாங்களும் உங்கள் இறைவனைத் தேடி; அசீரியாவின் அரசன் எசரத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாள் முதல், நாங்கள் அவருக்கு பலிசெலுத்தி வருகிறோம்” என்றார்கள்.
ஆனால் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரயேலின் மற்ற குடும்பத்தலைவர்களும் அவர்களிடம், “எங்கள் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதில் எங்களுடன் உங்களுக்குப் பங்கில்லை. பெர்சியாவின் அரசன் கோரேஸ் எங்களுக்கு கட்டளையிட்டபடி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் தனியாக நின்றே அதைக் கட்டுவோம்” என்றார்கள்.
அப்பொழுது அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் யூதா மக்களை சோர்வடையப்பண்ணி, தொடர்ந்து கட்டாதபடி பயமுறுத்த எண்ணங்கொண்டார்கள். யூதா மக்களுக்கு எதிராகச் செயல்படவும், அவர்களுடைய திட்டத்தை முறியடிக்கவும் ஆலோசகர்களைக் கூலிக்கு அமர்த்தினார்கள். இப்படியே பெர்சியாவின் அரசன் கோரேஸின் ஆட்சிக்காலம் முழுவதும், பெர்சியாவின் அரசன் தரியுவின் ஆட்சிக் காலம்வரை எதிர்த்துச் செயல்பட்டார்கள்.
மேலும் எதிர்ப்பு
அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் ஆரம்பத்தில் அவர்கள் யூதா, எருசலேம் மக்களுக்கெதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவந்தார்கள்.
அதன்பின் பெர்சிய அரசன் அர்தசஷ்டாவின் நாட்களில் பிஷ்லாம், மித்ரேதாத், தாபெயேல் ஆகியோரும் அவர்களோடுகூட இருந்தவர்களும் அர்தசஷ்டாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அக்கடிதம் அராமிய எழுத்திலும், அராமிய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.4:7 அராமிய மொழியில் [4:8–6:18] எழுதப்பட்டுள்ளது.
தளபதியான ரெகூமும், செயலாளராகிய சிம்சாவும் எருசலேமுக்கு எதிராக அரசன் அர்தசஷ்டாவுக்கு எழுதிய கடிதம் இதுவே:
தளபதியான ரெகூமும், செயலாளராகிய சிம்சாவும் இதை எழுதுகிறோம். எங்கள் கூட்டாளிகளான திரிபோலி, பெர்சியா, ஏரேக், பாபிலோன் ஆகியவற்றைச் சேர்ந்த நீதிபதிகளும் அதிகாரிகளும் சேர்ந்துள்ளார்கள். சூசாவிலுள்ள இவர்கள் ஏலாமியருக்கும் அதிகாரிகளாயிருக்கிறார்கள். மற்றும் மேன்மையும், கனமும் உள்ள அஸ்னாப்பார் அரசன் நாடுகடத்திச் சென்று சமாரியப் பட்டணத்திலும், ஐபிராத்து நதியின் மறுகரைவரை குடியமர்த்திய மற்ற மக்களுக்கும் இவர்கள் அதிகாரிகளாய் இருக்கிறார்கள்.
அவர்கள் அவனுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இதுவே,
அர்தசஷ்டா அரசனுக்கு,
ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள மனிதர்களான உமது பணியாளர்களாகிய நாங்கள் எழுதுவது,
உம்மிடத்தில் இருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்குப் போய், கலகமும் கொடுமையும் நிறைந்த அந்தப் பட்டணத்தைத் திரும்பவும் கட்டுகிறார்கள் என்பதை அரசன் அறியவேண்டும். அவர்கள் மதில்களைத் திரும்பவும் கட்டி, அஸ்திபாரங்களைப் பழுதுபார்க்கிறார்கள்.
பட்டணம் கட்டப்பட்டு, அதில் மதில்களும் திரும்பக் கட்டப்படுமானால் அவர்கள் உமக்குத் தொடர்ந்து வரியோ, திறையோ, சுங்கத் தீர்வையோ செலுத்தமாட்டார்கள். அதனால் அரசருக்குரிய வரிகள் பாதிக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம். இப்பொழுது நாங்கள் அரண்மனைக்கு கடமைப்பட்டவர்களானதினாலும், அரசர் அவமானப்படுவதை நாங்கள் விரும்பாததினாலுமே அரசருக்கு இதை அறிவிக்கும்படி நாங்கள் இச்செய்தியை அறிவிக்கிறோம். எனவே, உமது முற்பிதாக்களின் பதிவேட்டுச் சுவடிகள் ஆராயப்பட வேண்டும். அந்தப் பதிவேடுகளில் இருந்து இந்தப் பட்டணம் ஒரு கலகம் விளைவிக்கும் பட்டணம் என்பதையும், முந்திய காலங்களிலிருந்தே அரசருக்கும், மாகாணங்களுக்கும் தொல்லை கொடுக்கும் கலகம் நிறைந்த இடம் என்பதையும் நீர் அறிந்துகொள்வீர். அதனாலேயே இந்தப் பட்டணம் அழிக்கப்பட்டது. இப்பொழுது அந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்களும் திரும்பவும் கட்டிமுடிக்கப்படுமானால், நதியின் மறுகரையில் உமக்கு ஒன்றும் எஞ்சியிருக்காது என்று அரசருக்கு இதை அறிவிக்கிறோம் என எழுதியிருந்தனர்.
அதற்கு அரசன் அனுப்பிய பதிலாவது:
தளபதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், சமாரியாவிலும் ஐபிராத்து மறுகரையிலுமுள்ள அவர்களின் உடன் அதிகாரிகளுக்கும்
வாழ்த்துச் சொல்லி எழுதுகிறதாவது:
நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் எனக்கு முன்னால் வாசிக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டது. என் உத்தரவின்படி பதிவேட்டுச் சுவடிகள் தேடிப்பார்க்கப்பட்டன. அதிலிருந்து இப்பட்டணம் அரசருக்கு எதிராக நீண்டகாலமாக கலகம் செய்தது என்பதையும், கலகமும், குழப்பமும் உள்ள இடமாயிருந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் வலிமைமிக்க அரசர்கள் எருசலேமிலிருந்து, நதியின் மறுகரைவரை எங்கும் ஆட்சிசெய்திருக்கின்றனர் எனவும், அவர்களுக்கு வரிகளும், திறையும், சுங்கத் தீர்வையும் செலுத்தப்பட்டிருக்கின்றன எனவும் அறிந்தேன். எனவே இப்பொழுதே அந்த வேலையை நிறுத்தும்படி மனிதர்களுக்கு கட்டளை பிறப்பியுங்கள். என்னால் உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை அந்தப் பட்டணம் திருப்பிக் கட்டப்படக்கூடாது. இதைச் செய்வதில் கவனக்குறைவாய் இருக்காதீர்கள். ஏன் இந்த அச்சுறுத்தல் வளர்ந்து அரசர்களின் நலன்களுக்குக் கெடுதியை உண்டாக்க வேண்டும் என எழுதியனுப்பினான்.
அர்தசஷ்டா அரசனின் கடிதத்தின் பிரதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் வாசித்துக் காட்டப்பட்டது. அவர்கள் உடனடியாக எருசலேமிலுள்ள யூதர்களிடத்தில் போய் வேலையை நிறுத்தும்படி யூதரைப் பலவந்தப்படுத்தினார்கள்.
எனவே எருசலேமில் இறைவனின் ஆலயவேலை நிறுத்தப்பட்டது. பெர்சிய அரசன் தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் வரைக்கும் இவ்வாறே நிறுத்தப்பட்டிருந்தது.
ஆளுநர் தத்னாயின் கடிதம்
அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.
அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர். அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர். ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.
ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே: அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது:
தரியு அரசனுக்கு
மனமார்ந்த வாழ்த்துகள்.
நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.
அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம். அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.
அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து:
“நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான். எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
“ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான். அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான். கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.
“எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.
“ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.
தரியு அரசனின் ஆணை
தரியு அரசனின் உத்தரவின்படி பாபிலோனிலுள்ள களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டுச் சுவடிகளை அவர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். மேதியா நாட்டில் அக்மேதா என்னும் அரச அரண்மனையில் ஒரு பிரதி கண்டெடுக்கப்பட்டது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
ஞாபகக் குறிப்பு:
கோரேஸின் முதலாம் வருட அரசாட்சியில், அரசன் எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்தைக்குறித்துப் பிறப்பித்த கட்டளையாவது:
எருசலேமில் பலிகளைச் செலுத்தும் ஒரு இடமாக ஆலயம் திரும்பக் கட்டப்படட்டும். அதற்கு அஸ்திபாரம் போடப்படட்டும். அதன் உயரம் அறுபது முழமும், அகலம் அறுபது முழமுமாயிருக்க வேண்டும். அது மூன்று வரிசை பெரிய கற்களினாலும், ஒரு வரிசை மரத்தினாலும் கட்டப்பட வேண்டும். அதன் செலவுகளெல்லாம் அரச திரவிய களஞ்சியத்திலிருந்து கொடுக்கப்படவேண்டும். அத்துடன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த இறைவனின் ஆலயத்துக்குரிய தங்க, வெள்ளிப் பொருட்கள் திரும்பவும் அதற்குரிய இடமான எருசலேம் ஆலயத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அவை இறைவனுடைய ஆலயத்தில் வைக்கப்பட வேண்டும் என எழுதியிருந்தது.
ஆகவே அரசன் தரியு இந்தச் செய்தியை அனுப்பினான், ஐபிராத்து நதியின் மறுகரையில் ஆளுநராய் இருக்கின்ற தக்னா ஆகிய நீயும், சேத்தார்பொஸ்னாய் ஆகிய நீயும், அந்த மாகாணத்தில் அதிகாரிகளாயிருக்கிற உங்களுடைய நண்பர்களுமான நீங்களும் அங்கிருந்து விலகியிருங்கள். இறைவனின் ஆலயத்தில் நடக்கும் இந்த வேலையில் தலையிட வேண்டாம். யூதரின் ஆளுநனும், யூதரின் முதியவர்களும் இறைவனின் ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டட்டும்.
மேலும் எனது ஆணையாவது: இறைவனுடைய ஆலயத்தின் கட்டட வேலையில் யூதர்களின் முதியவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதை நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருந்து பெறப்படுகின்ற வரிப்பணத்தை அரச திரவிய களஞ்சியத்திலிருந்து, இந்த வேலை நின்றுபோகாதபடி முழுவதையும் அந்த மனிதர்களின் செலவுகளுக்குக் கொடுக்கவேண்டும். அத்துடன் எருசலேமில் இருக்கின்ற ஆசாரியர்கள் கேட்கின்றபடி, பரலோகத்தின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளுக்குத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவை எதுவானாலும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கப்படவேண்டும். அவர்கள் பரலோகத்தின் இறைவனை மகிழ்விக்கும்படி இந்த பலிகளைச் செலுத்தி, அரசனுடைய நலனுக்காகவும், அவனுடைய மகன்களின் நல்வாழ்வுக்காகவும் வேண்டுதல் செய்யும்படி இப்படிச் செய்யவேண்டும்.
மேலும், இதையும் நான் உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை யாராவது மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு வளை மரம் களற்றப்பட்டு, அவன் அதில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும். இந்த குற்றத்திற்காக அவனுடைய வீடு இடிபாடுகளின் குவியலாக ஆக்கப்பட வேண்டும். இக்கட்டளையை மாற்றி, எருசலேமில் உள்ள ஆலயத்தை அழிக்கும்படி, தன் கையை உயர்த்துகிற எந்த அரசனையும், மனிதனையும் தனது பெயரை அங்கு நிலைநிறுத்திய இறைவன் கவிழ்த்துப் போடுவாராக.
தரியு ஆகிய நானே இதைக் கட்டளையிட்டிருக்கிறேன். இது கவனத்துடன் செயல்படுத்தப்படட்டும்.
ஆலயம் கட்டி முடிக்கப்படுதல்
அப்பொழுது ஐபிராத்து மறுகரைக்கு ஆளுநனாக இருந்த தக்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களோடுகூட இருந்தவர்களும் தரியு அரசனின் உத்தரவின் நிமித்தம் அதைக் கவனத்துடன் செயல்படுத்தினார்கள். அப்படியே இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகன் சகரியாவும் உரைத்த இறைவாக்கின் விளைவாக யூதர்களின் முதியவர்கள் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றார்கள். இஸ்ரயேலின் இறைவனின் கட்டளைப்படியும், பெர்சிய அரசர்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டா ஆகியோரின் உத்தரவின்படியும் அவர்கள் ஆலயத்தைக் கட்டிமுடித்தார்கள். தரியு அரசனுடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில் ஆதார் மாதம் மூன்றாம் நாளில் ஆலயம் கட்டிமுடிந்தது.
அதன்பின்பு இஸ்ரயேல் மக்களான ஆசாரியரும், லேவியர்களும், மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களான மீதியானவர்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இறைவனின் ஆலய அர்ப்பணத்திற்கு அவர்கள் நூறு காளைகள், இருநூறு ஆட்டுக்கடாக்கள், நானூறு ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றைப் பலியாகச் செலுத்தினார்கள். எல்லா இஸ்ரயேலரினதும் பாவநிவாரணக் காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒன்றாக அவற்றைச் செலுத்தினார்கள். பின்பு மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி எருசலேமிலுள்ள இறைவனின் பணிக்காக ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவின்படியும் லேவியர்களை அவர்களுடைய குழுக்களின்படியும் நியமித்தார்கள்.
பஸ்கா
அவர்கள் முதலாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆசாரியரும், லேவியர்களும் ஒன்றாக சேர்ந்து தங்களைச் சுத்திகரித்து எல்லோரும் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருந்தனர். லேவியர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த அனைவருக்காகவும், தங்கள் சகோதரர்களான ஆசாரியருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த இஸ்ரயேலர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி, மற்ற அயலவர்களுடைய அசுத்தமான நடைமுறைகளிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டிருந்த அனைவருடனும் அதைச் சாப்பிட்டார்கள். அவர்கள் ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் இறைவனின் தேவாலயத்தின் வேலையில் அசீரியா அரசன் அவர்களுக்கு உதவி செய்தான். யெகோவா அசீரிய அரசனின் மனதை மாற்றியதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியால் நிறைத்திருந்தார்.
எஸ்றா எருசலேமுக்கு வருதல்
இவற்றுக்குப்பின் பெர்சியா அரசன் அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில் செராயாவின் மகன் எஸ்றா பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். எஸ்றா செராயாவின் மகன், செராயா அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன், அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன், மெராயோத் செராகியாவின் மகன், செரகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன், புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன். இந்த எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தான். இவன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கொடுத்திருந்த மோசேயின் சட்டத்தை கற்றுத்தேர்ந்த ஆசிரியனாயிருந்தான். அவன் கேட்ட எல்லாவற்றையும் அரசன் அவனுக்குக் கொடுத்தான். ஏனெனில், அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் கரம் அவனோடிருந்தது. அர்தசஷ்டா அரசன் அரசாண்ட ஏழாம் வருடத்தில் இஸ்ரயேல் மக்களில் சிலரான ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குப் போனார்கள்.
அரசனின் ஆட்சியின் ஏழாம் வருடம் ஐந்தாம் மாதத்தில் எஸ்றா எருசலேமை வந்துசேர்ந்தான். அவன் பாபிலோனிலிருந்து முதல் மாதம் முதலாம் நாளிலே தன் பிரயாணத்தைத் தொடங்கி, ஐந்தாம் மாதம் முதலாம் நாள் எருசலேமை வந்தடைந்தான். அவனுடைய இறைவனின் கிருபையின்கரம் அவன்மேல் இருந்தது. ஏனெனில் எஸ்றா யெகோவாவின் சட்டத்தைக் கற்பதற்கும், கைக்கொள்வதற்கும், இஸ்ரயேலிலே அதன் விதிமுறைகளையும், சட்டங்களையும் கற்பிக்கவும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.
எஸ்றாவுக்கு அரசனின் கடிதம்
இஸ்ரயேலுக்கான யெகோவாவின் கட்டளைகளையும், விதிமுறைகளையும் குறித்த விஷயங்களைக் கற்றறிந்தவனும், ஆசாரியனும், வேதபாரகனுமாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா அரசன் கொடுத்திருந்த கடிதத்தின் பிரதி இதுவே:
பரலோகத்தின் இறைவனுடைய சட்ட ஆசிரியனான எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு,
அரசர்களுக்கு அரசனான அர்தசஷ்டா
வாழ்த்துதல் கூறி எழுதுகிறதாவது,
எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களுடன், ஆசாரியர்கள், லேவியர்கள் உட்பட யார் எருசலேமுக்கு உன்னுடன் போக விரும்புகிறார்களோ அவர்கள் உன்னுடன் போகலாம் எனக் கட்டளையிடுகிறேன். உன் கையில் இருக்கிற உன் இறைவனின் சட்டத்தின்படி யூதாவையும், எருசலேமையும் விசாரிப்பதற்காக நீ அனுப்பப்படுகிறாய். நீ அரசனாலும் அவருடைய ஏழு ஆலோசகர்களாலும் அனுப்பப்படுகிறாய். மேலும், நீ அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் எருசலேமில் வாழ்கின்ற இஸ்ரயேலின் இறைவனுக்குத் தாராளமாய்க் கொடுத்த வெள்ளியையும், தங்கத்தையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும். பாபிலோன் நாட்டிலிருந்து உனக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டுபோ. அத்துடன் எருசலேமில் இருக்கிற தங்கள் இறைவனுக்கென மக்களும், ஆசாரியரும் கொடுத்திருக்கிற சுயவிருப்பக் காணிக்கை யாவையும் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பணத்தைக் கொண்டு காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும் அவற்றுடன் அவற்றுக்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் வாங்கக் கவனமாயிரு. அவற்றை எருசலேமில் இருக்கிற உன் இறைவனின் ஆலயத்தின் பலிபீடத்தில் பலியிடு.
மிகுதியான வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டு இறைவனின் திட்டப்படி நீயும் உன் சகோதர யூதர்களும் நலமாய்த் தோன்றும் எதையும் செய்யலாம். உனது இறைவனுடைய ஆலயத்தின் வழிபாட்டுக்காக உன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எருசலேமின் இறைவனிடத்தில் ஒப்புவி. அத்துடன் உன்னுடைய இறைவனின் ஆலயத்தில் வேறு ஏதாவது கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அரச திரவிய களஞ்சியத்திலிருந்து அது உனக்குக் கொடுக்கப்படும்.
அர்தசஷ்டா அரசனாகிய நான் ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருக்கும் எல்லா பொருளாளர்களுக்கும், ஆசாரியனாகவும் பரலோகத்தின் இறைவனின் சட்டங்களைக் கற்பிக்கிறவனுமான எஸ்றா உங்களிடம் கேட்கிறதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுக்கக் கவனமாயிருக்கும்படி உத்தரவிடுகிறேன். நூறு தாலந்து வெள்ளி7:22 அதாவது, சுமார் 3,400 கிலோகிராம் வெள்ளி, நூறுபடி7:22 அதாவது, சுமார் 10,000 கிலோகிராம் கோதுமை7:22 அதாவது, சுமார் 2,200 லிட்டர் திராட்சை இரசம், 2,200 லிட்டர் ஒலிவ எண்ணெய் நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் ஒலிவ எண்ணெய் ஆகிய அளவுவரை கொடுங்கள். அத்துடன் தேவையான அளவு உப்பையும் கொடுங்கள். பரலோகத்தின் இறைவன் விவரித்தபடி, எல்லாம் பரலோக இறைவனின் ஆலயத்திற்காகக் கவனத்துடன் செய்யப்படட்டும். அரசனுடைய பிரதேசத்துக்கும், அவனுடைய மகன்களுக்கும் எதிராக ஏன் அவரின் கோபம் உண்டாக வேண்டும். அத்துடன் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர், இறைவனின் மற்ற ஆலய ஊழியக்காரர் ஆகியோரிடம் எவ்வித வரியோ, தீர்வையோ, திறையோ வசூலிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்பதை நீங்கள் அறியவேண்டும்.
எஸ்றாவாகிய நீயோ, உன்னிடம் இருக்கும் உனது இறைவனின் ஞானத்தின்படி, நதிக்கு மறுகரையில் இருக்கும் மக்களான உன் இறைவனின் சட்டங்களை அறிந்திருக்கும் யாவருக்கும் நீதி வழங்கும்படி, நீதிபதிகளையும், உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாத மக்களுக்கு நீ கற்பிக்க வேண்டும். உனது இறைவனின் சட்டங்களுக்கும், அரசனின் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் மரண தண்டனை, நாடுகடத்தப்படல், சொத்துக்கள் பறிமுதல் அல்லது சிறைத் தண்டனை ஆகியவற்றில் ஒன்றினால் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்விதமாய் எருசலேமிலுள்ள ஆலயத்துக்கு அலங்கரிக்கும்படி அரசனின் இருதயத்தை ஏவிய எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அரசனுக்கும், அவரது ஆலோசகருக்கும், அரசனின் வல்லமையுள்ள அதிகாரிகள் எல்லோருக்கும் முன்பு அவர் எனக்குத் தயவு காண்பித்தார். என்மேல் இறைவனாகிய யெகோவாவின் கரம் இருந்ததால், நான் தைரியங்கொண்டு என்னுடன் போவதற்கு இஸ்ரயேலில் இருந்து முதன்மையான மனிதர்களை ஒன்றுசேர்த்தேன்.
எஸ்றாவுடன் திரும்பிய குடும்பத் தலைவர்கள்
அர்தசஷ்டா அரசனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனில் இருந்து என்னுடன் வந்த குடும்பத்தலைவர்களும், அவர்களுடன் பதிவு செய்யப்பட்டவர்களும் இவர்களே:
பினெகாசின் வழித்தோன்றலைச் சேர்ந்த
கெர்சோம்;
இத்தாமரின் வழித்தோன்றலைச் சேர்ந்த
தானியேல்;
தாவீதின் வழித்தோன்றலைச் சேர்ந்த
அத்தூஸ்; அத்தூஸ்
செக்கனியாவினதும் வழித்தோன்றலைச் சேர்ந்தவன்.
பாரோஷின் வழித்தோன்றலைச் சேர்ந்த சகரியா, அவனுடன் பதிவு செய்யப்பட்ட 150 மனிதர்;
பாகாத் மோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த செரகியாவின் மகன்
எலியோனாய், அவனுடன் 200 மனிதர்;
சத்தூவின் வழித்தோன்றலைச் சேர்ந்த
யகாசியேலின் மகன் செக்கனியா, அவனுடன் 300 மனிதர்;
ஆதீனின் வழித்தோன்றலைச் சேர்ந்த
யோனத்தானின் மகன் ஏபேது, அவனுடன் 50 மனிதர்;
ஏலாமின் வழித்தோன்றலைச் சேர்ந்த
அதலியாவின் மகன் எஷாயா, அவனுடன் 70 மனிதர்;
செபத்தியாவின் வழித்தோன்றலைச் சேர்ந்த
மிகாயேலின் மகன் செபதியா; அவனுடன் 80 மனிதர்;
யோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த
யெகியேலின் மகன் ஒபதியா, அவனுடன் 218 மனிதர்;
பானியின் வழித்தோன்றலைச் சேர்ந்த
யொசிபியாவின் மகன் செலோமித், அவனுடன் 160 மனிதர்;
பெபாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த,
பெபாயின் மகன் சகரியா, அவனுடன் 28 மனிதர்;
அஸ்காதின் வழித்தோன்றலைச் சேர்ந்த
அக்கத்தானின் மகன் யோகனான்; அவனுடன் 110 மனிதர்;
அதோனிகாமின் வழித்தோன்றலில்
கடைசியானவர்களான எலிபேலேத், ஏயெல், செமாயா என்பவர்களுடன் 60 மனிதர்;
பிக்வாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த
ஊத்தாய், சக்கூர் என்பவர்கள்; அவர்களுடன் 70 மனிதர்.
எஸ்றாவின் பயணம்
அகாவா பட்டணத்தை நோக்கி ஓடுகிற கால்வாய் அருகே நான் அவர்களை ஒன்றுகூட்டி அங்கே நாங்கள் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்; நான் அங்கேயுள்ள மக்களையும், ஆசாரியர்களையும் பார்வையிட்டபோது, அங்கே லேவியர்கள் ஒருவரையும் நான் காணவில்லை. எனவே நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரீப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மெசுல்லாம் என்னும் தலைவர்களையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் கல்விமான்களையும் என்னிடம் அழைப்பித்தேன். அவர்களை கசிப்பியா பட்டணத்திலுள்ள லேவிய தலைவனாகிய இத்தோவிடம் அனுப்பினேன்; எங்கள் இறைவனின் ஆலய வேலைக்கு பணிவிடைக்காரரை எங்களிடம் கொண்டுவரும்படி இத்தோவுக்கும், கசிப்பியாவிலுள்ள ஆலய பணியாட்களான அவனுடைய உறவினர்களுக்கும் சொல்லும்படி இவர்களிடம் சொல்லி அனுப்பினேன். எங்கள் இறைவனின் அன்புக்கரம் எங்கள்மேல் இருந்ததால், அவர்கள் செரெபியாவையும், அவன் மகன்களும், சகோதரர்களுமான பதினெட்டு பேரையும் கொண்டுவந்தார்கள். செரெபியா ஒரு திறமைவாய்ந்த மனிதன். அவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்த லேவியின் மகனான மகேலியின் வழித்தோன்றலைச் சேர்ந்தவன். அத்துடன் அஷபியாவையும், மெராரியின் வழிவந்த எஷாயாவையும், அவனுடைய சகோதரர்களும், பெறாமகன்களுமான இருபது பேரையும் கொண்டுவந்தார்கள். இன்னும் அவர்கள் லேவியர்களுக்கு உதவிசெய்யும்படி, தாவீதும் அவனுடைய அலுவலர்களும் நியமித்திருந்த ஆலய பணியாட்களிலிருந்து இருநூற்று இருபது பேரையும் எம்மிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் பெயர்களின்படியே பதிவு செய்யப்பட்டார்கள்.
எங்கள் இறைவனுக்கு முன்னால் எங்களைத் தாழ்த்தி எங்கள் பிரயாணத்தில் எங்களை வழிநடத்தி, எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் உடைமைகளையும் பாதுகாக்கும்படி வேண்டிக்கொள்வதற்கு அகாவா கால்வாய் அருகே நான் ஒரு உபவாசத்தை அறிவித்தேன். நாங்கள் அரசனிடம், “எங்கள் இறைவனின் கிருபையின்கரம் அவரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவர்மேலும் இருக்கிறது என்றும், அவரை விட்டுவிடுகிறவர்களுக்கு எதிராக அவரது பெரிதான கோபம் இருக்கிறது” என்றும் சொல்லியிருந்தோம். இதனால் வழியிலே பகைவரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பதற்கு அரசனிடமிருந்து இராணுவவீரரையும், குதிரைவீரரையும் கேட்பதற்கு நான் வெட்கப்பட்டேன். எனவே நாங்கள் உபவாசித்து இதைக்குறித்து எங்கள் இறைவனிடம் விண்ணப்பம் செய்தோம். அவரும் எங்கள் மன்றாட்டுக்குப் பதிலளித்தார்.
அதன்பின்பு நான் செரெபியாவையும், அஷபியாவையும் அவர்களின் சகோதரர்கள் பத்துப் பேருமாக, பன்னிரண்டு பிரதான ஆசாரியர்களையும் பிரித்தெடுத்தேன். நான் அவர்களிடம், அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் அவனுடைய அலுவலர்களும் அங்கேயிருந்த எல்லா இஸ்ரயேலரும், இறைவனின் ஆலயத்திற்கென அன்பளிப்பாய்க் கொடுத்திருந்த காணிக்கையான வெள்ளி, தங்கம் மற்றும் பாத்திரங்களையும் நிறுத்துத்கொடுத்தேன். இவ்வாறு அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியை அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன். வெள்ளிப் பாத்திரங்கள் நூறு தாலந்து, தங்கம் நூறு தாலந்து, ஆயிரம் தங்கக்காசு8:27 அதாவது, சுமார் 8.4 கிலோகிராம் தங்கம் மதிப்புடைய இருபது தங்கக் கிண்ணங்கள், தங்கத்தைப்போல் மதிப்புடைய, மினுக்கப்பட்ட இரண்டு சிறந்த வெண்கல கிண்ணங்கள் ஆகியவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.
பின்பு நான் ஆசாரியர்களிடம், “நீங்கள் இந்த பாத்திரங்களுடன் யெகோவாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றீர்கள். வெள்ளியும், தங்கமும் உங்கள் தந்தையர்களின் இறைவனான யெகோவாவுக்குச் சுயவிருப்பக் காணிக்கைகளாகும். நீங்கள் அவற்றை எருசலேமிலுள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், இஸ்ரயேலின் குடும்பத் தலைவர்களுக்கு முன்பாக நிறுத்து, யெகோவாவின் களஞ்சியத்துக்குக் கொடுக்கும்வரை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என கூறினேன். அவ்வாறே ஆசாரியரும், லேவியர்களும் நிறுத்துக் கொடுக்கப்பட்ட வெள்ளி, தங்கம், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திற்குக் கொண்டுபோவதற்கென ஏற்றுக்கொண்டார்கள்.
அதன்பின்பு நாங்கள் அகாவா கால் வாயிலிருந்து, முதல் மாதம் பன்னிரண்டாம் நாள் எருசலேமுக்குப் போக பிரயாணமானோம்; எங்கள் இறைவனின் கரம் எங்களோடிருந்தது. அவர் எங்களை எதிரிகளிடமிருந்தும், வழியிலுள்ள திருடர்களிடமிருந்தும் பாதுகாத்தார். அப்படியே நாங்கள் எருசலேமுக்கு வந்துசேர்ந்து அங்கே மூன்று நாட்கள் இளைப்பாறினோம்.
நான்காம் நாள் நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தில் அந்த வெள்ளியையும், தங்கத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்களையும் நிறுத்து, உரியாவின் மகனான ஆசாரியன் மெரெமோத்திடம் கொடுத்தோம். அங்கே அவனுடன் பினெகாசின் மகன் எலெயாசாரும் இருந்தான். அவர்களுடன் லேவியர்களான யெசுவாவின் மகன் யோசபாத்தும், பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர். அவையெல்லாம் எண்ணப்பட்டு, நிறுக்கப்பட்டு, கணக்குவைக்கப்பட்டன. அந்த நேரத்தில் முழுநிறையும் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின்பு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் இஸ்ரயேலின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அவர்கள் இஸ்ரயேல் முழுவதற்குமாக பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு செம்மறியாட்டுக் கடாக்களையும், எழுபத்தேழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் பலியிட்டார்கள். அத்துடன் பாவநிவாரண காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். இவை எல்லாம் யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தப்பட்டன. அத்துடன் அவர்கள் அரசனின் உத்தரவுகளை சிற்றரசர்களுக்கும் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள ஆளுநர்களுக்கும் கொடுத்தார்கள். எனவே அவர்கள் எல்லோரும் மக்களுக்கும், இறைவனின் ஆலயத்திற்கும் தங்கள் உதவியை வழங்கினார்கள்.
கலப்புத்திருமணம் குறித்து எஸ்றாவின் ஜெபம்
இவை செய்யப்பட்டதன் பின் தலைவர்கள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்கள் அயலவர்களிடமிருந்து பிரிந்திருக்கவில்லை. கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய அயலில் உள்ள மக்களின் அருவருப்பான செயல்களில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்ரயேல் மனிதர் தங்களுக்கும், தங்கள் மகன்களுக்கும் அவர்களின் மகள்களில் சிலரை மனைவிகளாக எடுத்திருக்கின்றனர். இவ்வாறு பரிசுத்தமான ஜனம்9:2 பரிசுத்த வித்து இஸ்ரயேலரை கடவுளின் பரிசுத்த மக்கள் என்று குறிப்பிடுகிறார். சுற்றியுள்ள மக்களுடன் கலந்துகொண்டது. இந்த துரோகச் செயலில் மக்கள் தலைவர்களும், அதிகாரிகளுமே வழிகாட்டிகளாக இருந்தனர்” என்று சொன்னார்கள்.
நான் இதைக் கேட்டவுடன், எனது உடையையும், அங்கியையும் கிழித்து, என் தலையிலும், தாடியிலும் உள்ள மயிரைப் பிடுங்கி திகைப்புடன் நிலத்தில் இருந்தேன். இஸ்ரயேலில் இறைவனின் வார்த்தைகளுக்குப் பயந்தவர்கள் எல்லோரும், சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்களின் துரோகத்தின் நிமித்தம் என்னைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். ஆனால் நானோ அதே இடத்தில் பலிசெலுத்தும் மாலை நேரம்வரைக்கும் திகைப்புடன் உட்கார்ந்திருந்தேன்.
பின்பு மாலைப்பலி நேரத்தில் நான் எனது கிழிந்த உடையுடனும், மேலங்கியுடனும் என்னைத் தாழ்த்தி நான் இருந்த நிலையை விட்டு எழுந்து, முழங்காற்படியிட்டு, இறைவனாகிய என் யெகோவாவை நோக்கி கைகளை விரித்து மன்றாடினேன். நான் அவரிடம்,
“என் இறைவனே, என் இறைவனாகிய உம்மை நோக்கி உமது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாதபடி வெட்கமும், அவமானமும் அடைகிறேன். ஏனெனில் எங்கள் பாவங்கள் தலைக்குமேல் போய்விட்டன. எங்கள் குற்றம் பரலோகம்வரை பெருகிவிட்டதே. எங்கள் முற்பிதாக்களின் காலத்திலிருந்து இன்றுவரை எங்கள் குற்றம் பெரிதாகவே இருந்திருக்கிறது. எங்கள் பாவங்களினாலேயே நாங்களும், எங்கள் அரசர்களும், எங்கள் ஆசாரியரும் இன்று இருப்பதுபோல் பிற நாட்டு அரசர்கள் கைகளில் வாளுக்கும், சிறைக்கும், கொள்ளைக்கும் சிறுமைத்தனத்திற்கும் உள்ளானோம்.
“எங்கள் இறைவனாகிய யெகோவா, இந்தக் குறுகிய காலத்திற்கு எங்களில் கிருபையாயிருந்து எங்களில் சிலரைத் தப்பவைத்து, அவருடைய பரிசுத்த இடத்தில் ஒரு உறுதியான இடத்தையும் எங்களுக்குக் கொடுத்தார். அப்படி எங்கள் இறைவன் எங்கள் கண்களுக்கு வெளிச்சத்தையும், எங்கள் அடிமைத்தனத்தினின்று சிறு ஆறுதலையும் கொடுத்திருக்கிறார். நாங்கள் அடிமைகளாயிருந்தபோதும் எங்கள் இறைவன் எங்கள் அடிமைத்தனத்தில் எங்களைக் கைவிடவில்லை. அவர் பெர்சியாவின் அரசர்களின் கண்களில் தயவு கிடைக்கவும் செய்தார். நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தைக் கட்டுவதற்கும், அதன் இடிபாடுகளைத் திருத்தியமைப்பதற்கும் அவர் எங்களுக்குப் புதுவாழ்வு கொடுத்திருக்கிறார். அவர் யூதாவிலும், எருசலேமிலும் எங்களுக்கு ஒரு பாதுகாப்புச் சுவரைக் கொடுத்திருக்கிறார்.
“இப்பொழுதும் எங்கள் இறைவனே, இதற்குப் பின்பும் எங்களால் என்ன சொல்லமுடியும்? உமது கட்டளைகளை மதிக்காமல் போனோமே. அந்தக் கட்டளைகளை நீர் உமது அடியவர்களான இறைவாக்கு உரைப்போர் மூலம் எங்களுக்குக் கொடுத்தீர். நீர் எங்களிடம் சொன்னதாவது: ‘நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாடானது அங்குள்ள மக்களின் சீர்கேட்டினால் தீட்டுப்பட்டதாயிருக்கிறது. அவர்கள் தங்கள் அருவருப்பான செயல்களினாலும் தங்கள் அசுத்தத்தினாலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நிறைத்திருக்கிறார்கள். எனவே இப்பொழுது நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்கு மனைவிகளாகக் கொடாமலும், அவர்களுடைய மகன்களை உங்கள் மகள்களுக்கு எடுக்காமலும் இருங்கள். எக்காலத்திலும் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்யவேண்டாம். அப்பொழுது நீங்கள் பெலன் கொண்டிருந்து, நாட்டில் விளையும் நல்லவற்றைச் சாப்பிட்டு, உங்கள் பிள்ளைகளுக்கு அதை நித்திய உரிமைச்சொத்தாக விட்டுப்போவீர்கள்.’
“எங்களுக்கு நடந்திருப்பதோ, எங்கள் பொல்லாத செயல்களினாலும் எங்கள் பெரிதான குற்றத்தினாலும் வந்திருக்கும் பிரதிபலனே. ஆயினும் எங்கள் இறைவனே, நீர் எங்களை எங்கள் பாவத்திற்கு ஏற்றதாக தண்டிக்காமல், குறைவாகவே தண்டித்திருக்கிறீர். இவ்விதம் எங்களை மீதியாக தப்பவிட்டிருக்கிறீரே. திரும்பவும் நாங்கள் உமது கட்டளைகளை மீறி, அருவருப்பான செயலைச் செய்யும் மக்களுக்குள் கலப்புத்திருமணம் செய்யலாமா? அப்படி நாங்கள் செய்தால் ஒருவரும் மீந்திருக்கவோ, தப்பவோ விடாமல் அழித்துப் போடுமளவுக்கு நீர் எங்கள்மீது கோபம் கொள்வீரல்லவோ? இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, நீர் நேர்மையுள்ளவர். நாங்கள் இன்று ஒரு சிறு தொகையினராக மீதியாக விடப்பட்டிருக்கிறோம். எங்கள் குற்றத்தினால் உமக்கு முன்னால் நிற்கத் தகுதியற்றிருந்தும், எங்கள் குற்றங்களுடன் உமக்குமுன் இங்கே நிற்கிறோம்” என்று பிரார்த்தனை செய்தேன்.
மக்களின் பாவ அறிக்கை
எஸ்றா விண்ணப்பம் செய்துகொண்டும், பாவங்களை அறிக்கை செய்துகொண்டும், அழுதுகொண்டும் இறைவனின் ஆலயத்தில் விழுந்து கிடக்கையில் இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் பெரிய கூட்டமாக வந்து அவனைச்சுற்றி நின்றார்கள். அவர்களும் மனங்கசந்து அழுதார்கள். அப்பொழுது ஏலாமின் வழித்தோன்றலில் ஒருவனான யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் எங்களைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் இருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களானோம். ஆனாலும் இது நடந்தும்கூட இஸ்ரயேலருக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இப்பொழுதும் நாங்கள் எங்கள் தலைவனாகிய உமது ஆலோசனைப்படியும், இறைவனின் கட்டளைகளுக்குப் பயப்படுகிறவர்களின் ஆலோசனையின்படியும் அந்நிய மனைவிகளையும், அவர்களிடத்தில் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிடுவோம் என, எங்கள் இறைவனுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்வோம். இதை நாங்கள் சட்டத்தின்படியே செய்வோம். எழுந்திரும்; இது உமது கையில் இருக்கிறது. நாங்கள் உமக்கு ஒத்துழைப்புத் தருவோம். தைரியத்துடன் இதைச் செய்யும்” என்றான்.
எனவே எஸ்றா எழுந்து பிரதான ஆசாரியர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேலர்களையும் அவர்கள் சொன்னதைச் செய்யும்படி ஆணையிடச் செய்தான். அவர்கள் அப்படியே ஆணையிட்டார்கள். பின்பு எஸ்றா இறைவனின் ஆலயத்தின் முன்னிருந்து எழுந்து சென்று எலியாசீப்பின் மகன் யோகனானின் அறைக்குப் போனான். ஆனால் அவன் அங்கிருக்கையில் உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ இல்லை. ஏனெனில், அவன் தொடர்ந்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் துரோகச் செயலுக்காகத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.
பின்பு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் எல்லோரையும் எருசலேமில் வந்து கூடும்படி எருசலேம், யூதா எங்கும் பிரசித்தப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் மற்றும் முதியவர்களின் தீர்மானத்தின்படி, மூன்று நாட்களுக்குள் வந்துசேரத் தவறுகிறவனுடைய எல்லாச் சொத்தும் பறிக்கப்பட்டு, சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையில் இருந்து அவன் வெளியேற்றப்படுவான்.
எனவே யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கும் எல்லா மக்களும் இந்த மூன்று நாட்களுக்குள் எருசலேமிலே கூடினார்கள். ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதி எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தின் முன்னால் உள்ள சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சம்பவத்தினாலும் மழை பெய்தபடியாலும் மக்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். அப்பொழுது ஆசாரியன் எஸ்றா எழுந்து நின்று அவர்களிடம், “நீங்கள் உண்மையற்றவர்களானீர்கள்; நீங்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்ததினால் இஸ்ரயேலின் குற்றத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தீர்கள். இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.
அவ்வாறே முழுச் சபையும் உரத்த சத்தமாய் இதை ஏற்றுக்கொண்டு: “நீர் சொல்வது சரி! நீர் சொல்கிறபடி நாங்கள் செய்யவேண்டும். எனினும் இங்கு அநேக மக்கள் இருக்கிறார்கள்; இது மழை காலமாகவும் இருக்கிறது. ஆகவே எங்களால் வெளியே நிற்கமுடியாது; இது ஓரிரு நாட்களில் செய்து முடிக்கக்கூடிய காரியமும் அல்ல. ஏனெனில் இந்தக் காரியத்தில் எங்களில் அநேகர் பெரிதாய் பாவம்செய்தோம். எனவே இந்தக் காரியத்தில் எங்கள் அதிகாரிகள் முழுச் சபைக்காகவும் செயல்படட்டும். இதினிமித்தம் நம்முடைய இறைவனின் கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் அந்நிய பெண்ணைத் திருமணம் செய்த ஒவ்வொருவனும் அந்தந்தப் பட்டணத்தைச் சேர்ந்த முதியவர்களுடனும், நீதிபதிகளுடனும் குறிப்பிட்ட நேரத்தில் வரட்டும்” என்றார்கள். ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் மாத்திரமே இதை எதிர்த்தார்கள். அவர்களுக்கு உதவியாக மெசுல்லாமும், லேவியனான சபெதாயிவும் இருந்தார்கள்.
எனவே நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்கள் தாங்கள் முன் தீர்மானித்த திட்டத்தின்படி செய்தார்கள். ஆசாரியன் எஸ்றா ஒவ்வொரு குடும்பப் பிரிவிலுமிருந்து குடும்பத் தலைவர்களைத் தெரிவு செய்தான். அவர்கள் எல்லோரின் பெயரும் குறிக்கப்பட்டது. பத்தாம் மாதம் முதலாம் தேதியிலே வழக்குகளை விசாரணை செய்ய அமர்ந்தார்கள். இவ்வாறு இவர்கள் அந்நிய பெண்களைத் திருமணம் செய்திருந்த மனிதர்களைப் பற்றிய விசாரணையை முதலாம் மாதம், முதலாம் தேதியளவில் முடித்தார்கள்.
அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்
ஆசாரியர்களின் வழித்தோன்றலிலிருந்து அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்:
யோசதாக்கின் மகன் யெசுவாவினுடைய மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும்,
மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியரை விலக்கிவிடுவதாக கையடித்து வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் குற்றத்திற்கென குற்றநிவாரண காணிக்கையாக மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தினார்கள்.
இம்மேரின் வழித்தோன்றலிலிருந்து
அனானி, செபதியா.
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து
மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா.
பஸ்கூரின் வழித்தோன்றலிலிருந்து
எலியோனாய், மாசெயா, இஸ்மயேல், நெதனெயேல், யோசபாத், எலாசா.
லேவியர்களிலிருந்து:
யோசபாத், சிமெயி, கெலாயா எனப்பட்ட கெலித்தா, பெத்தகியா, யூதா, எலியேசர்.
பாடகர்களிலிருந்து:
எலியாசீப்;
ஆலய காவலர்களிலிருந்து:
சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களுமாகும்.
மற்ற இஸ்ரயேலருக்குள் இருந்து
அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள்:
பாரோஷின் வழித்தோன்றலிலிருந்து ரமீயா, இசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கியா, பெனாயா.
ஏலாமின் வழித்தோன்றலிலிருந்து மத்தனியா,
சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா.
சத்தூவின் வழித்தோன்றலிலிருந்து எலியோனாய்,
எலியாசீப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா.
பெபாயின் வழித்தோன்றலிலிருந்து
யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி.
பானியின் வழித்தோன்றலிலிருந்து
மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், யெரேமோத்.
பாகாத் மோவாபின் வழித்தோன்றலிலிருந்து
அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே.
ஆரீமின் வழித்தோன்றலிலிருந்து
எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிம்யோன், பென்யமீன், மல்லூக், ஷெமரியா.
ஆசூமின் வழித்தோன்றலிலிருந்து
மதனாய், மத்தத்தா, சாபாத், எலிபேலேத், எரெமாயி, மனாசே, சிமெயி
பானியின் வழித்தோன்றலிலிருந்து
மாதாயி, அம்ராம், ஊயேல், பெனாயா, பெதியா, கெல்லூ, வனியா, மெரெமோத், எலியாசீப், மத்தனியா, மதனாய், யாசாய்,
பின்னூயியின் வழித்தோன்றலிலிருந்து:
சிமெயி, செலேமியா, நாத்தான், அதாயா, மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, அசரெயேல், செலேமியா, ஷெமரியா, சல்லூம், அமரியா, யோசேப்.
நேபோத்தின் வழித்தோன்றலிலிருந்து
ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோயேல், பெனாயா என்பவர்கள்.
இவர்கள் எல்லோரும் அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இவர்களில் சிலருக்கு இந்த மனைவிகளின்மூலம் பிள்ளைகளும் இருந்தார்கள்.