- Biblica® Open Indian Tamil Contemporary Version
எசேக்கியேல்
இறைவாக்கினன் எசேக்கியேலின் புத்தகம்
எசேக்கியேல்
எசே.
இறைவாக்கினன் எசேக்கியேலின் புத்தகம்
தொடக்க உயிரினங்கள்
எனது முப்பதாம் வருடம் நான்காம் மாதத்தின் ஐந்தாம் நாளில் நான் கேபார் நதியருகே நாடுகடத்தப்பட்டோர் மத்தியில் இருந்தேன். அப்பொழுது வானம் திறக்கப்பட்டு இறைவனின் தரிசனங்களை அங்கு கண்டேன்.
அது யோயாக்கீன் அரசன் நாடுகடத்தப்பட்ட ஐந்தாம் வருடம் ஐந்தாம் மாதம். அப்பொழுது பாபிலோன் நாட்டிலுள்ள கேபார் நதியருகே இருந்த பூசியின் மகனும், ஆசாரியனுமான எசேக்கியேலாகிய எனக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அங்கே அவருடைய கரம் என்னுடன் இருந்தது.
நான் பார்த்தபோது, வடக்கேயிருந்து ஒரு புயல்காற்று வருவதைக் கண்டேன். அது மின்னலடிக்கும் பெருமேகமாக பளிச்சிடும் ஒளியினால் சூழப்பட்டிருந்தது. அந்த மேகத்தின் உள்ளிருந்த நெருப்பின் நடுப்பகுதி கதகதக்கும் உலோகம் போன்று காணப்பட்டது. அந்த நெருப்பில் உயிரினங்கள் போன்ற நான்கு உருவங்கள் இருந்தன. தோற்றத்தில் அவை மனித உருவத்தைக் கொண்டிருந்தன. ஆனாலும் அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. அவைகளின் கால்கள் நேராகவும், பாதங்கள் கன்றுக்குட்டிகளின் உள்ளங்கால்களைப் போலவும் இருந்தன. அவை மினுக்கப்பட்ட வெண்கலம்போல் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளின் சிறகுகளின்கீழ் நான்கு புறங்களிலும் மனிதக் கைகள் இருந்தன. அவை நான்குமே முகங்களையும் இறகுகளையும் கொண்டிருந்தன. அவைகளின் செட்டைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்தன. அவை போகும்போது ஒவ்வொன்றும் திரும்பாமல் நேர்முகமாகவே சென்றன.
அவைகளின் முகங்கள் அமைந்திருந்த விதமாவது: அவை நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மனித முகமும், வலதுபுறத்தில் சிங்கமுகமும், இடது புறத்தில் எருது முகமும், அதோடு ஒவ்வொன்றுக்கும் கழுகு முகமும் இருந்தன. இவ்வாறாக அவைகளின் முகங்கள் இருந்தன. அவைகளின் சிறகுகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் இரண்டு ஜோடி சிறகுகள் இருந்தன. இச்சிறகுகள் இரு பக்கங்களிலுமிருந்த உயிரினங்களின் இறகுகளைத் தொட்டுக்கொண்டிருந்தன. மற்ற இரு சிறகுகள் அவைகளின் உடல்களை மூடிக்கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் நேர்முகமாகவே சென்றன. ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவை திரும்பிப்பாராமலே சென்றன. அவ்வுயிரினங்களின் தோற்றம் எரிகிற நெருப்புத்தழலைப்போல் அல்லது தீப்பந்தம்போல் இருந்தன. உயிரினங்களுக்குள்ளே முன்னும் பின்னுமாக நெருப்பு அசைவாடிக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பிரகாசமாயிருந்தது. அந்த நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது. அந்த உயிரினங்கள் முன்னும் பின்னுமாக மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன். அச்சக்கரங்களின் தோற்றமும், அமைப்பும் எப்படியிருந்ததென்றால், மரகதக் கற்களைப்போல் மினுங்கிக் கொண்டிருந்தன. அவை நான்கும் ஒரேவிதமாகக் காணப்பட்டன. அச்சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. சக்கரங்கள் நகர்ந்தபோது, அவ்வுயிரினங்கள் நோக்கும் நான்கு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் போயின. அவ்வுயிரினங்கள் ஓடும்போது சக்கரங்கள் திரும்புவதேயில்லை. அவைகளின் வளையங்கள் உயரமாயும், பிரமிக்கத்தக்கதாயும் இருந்தன. அந்த நான்கு வளையங்களும் சுற்றிலும் கண்கள் நிறைந்தனவாய் இருந்தன.
உயிரினங்கள் புறப்படும்போது, அவைகளின் அருகே இருந்த சக்கரங்களும் புறப்பட்டன. உயிரினங்கள் தரையைவிட்டு மேலெழும்பும்போது, சக்கரங்களும் மேலெழும்பின. உயிரினங்களின் ஆவி எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் அவ்வுயிரினங்களும் செல்லும். சக்கரங்களும் அவைகளோடு எழும்பிச் செல்லும். ஏனெனில், உயிரினங்களின் ஆவி அச்சக்கரங்களிலேயே இருந்தது. உயிரினங்கள் நகர்ந்தபோது, சக்கரங்களும் நகர்ந்தன. உயிரினங்கள் அசைவற்று நின்றபோது, அவைகளும் அசைவற்று நின்றன. உயிரினங்கள் தரையிலிருந்து எழும்பியபோது, அந்த சக்கரங்களும் அவைகளுடன் சேர்ந்து மேலெழுந்தன. ஏனெனில் உயிரினங்களின் ஆவி அந்த சக்கரங்களிலே தான் இருந்தது.
அவ்வுயிரினங்களின் தலைகளுக்கு மேலாக ஆகாயவிரிவு போன்ற அமைப்பு பரந்திருக்கக் காணப்பட்டது. அது பனிக்கட்டிபோல் பளபளப்பாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. அந்த ஆகாயவிரிவின்கீழ் உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று நோக்கியபடி விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் தங்கள் உடலை மூடிக்கொள்ள சிறகுகள் இருந்தன. அந்த உயிரினங்கள் நகர்ந்தபோது, அவைகளுடைய செட்டைகளின் சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், எல்லாம் வல்ல இறைவனுடைய குரலைப் போலவும், இராணுவத்தின் இரைச்சலைப்போலவும் இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறகுகளைக் கீழே இறக்கிவிட்டன.
அவை இறகுகளைத் இறக்கிவிட்டு நின்றபோது, அவைகளின் தலைகளுக்கு மேலாய் காணப்பட்ட ஆகாயவிரிவின் மேலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவைகளின் தலைகளுக்கு மேலிருந்த ஆகாயவிரிவின் மேலே காணப்பட்ட, இரத்தினக்கற்களினாலான அரியணைபோன்ற ஒன்று காணப்பட்டது. மேலே, மிக உயரத்தில் அரியணையில் ஒரு மனிதனைப் போன்ற உருவம் இருந்தது. அந்த உருவத்தின் இடுப்பைப்போல் தோன்றிய மேல்பாகத்தில், அவர் நெருப்புக்கனல் ஒளிவீசும் உலோகத்தைப்போல் காணப்பட்டார். கீழேயுள்ள பாகமோ நெருப்பைப்போல் காணப்பட்டது. பிரகாசமான வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது. மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது.
இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.
எசேக்கியேலின் அழைப்பு
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எழுந்து காலூன்றி நில்; நான் உன்னுடன் பேசுவேன்” என்றார். அவர் பேசியபோது ஆவியானவர் எனக்குள் வந்து, என்னை உயர்த்தினார். அவர் என்னுடன் பேசுவதை நான் கேட்டேன்.
அவர் என்னிடம்: “மனுபுத்திரனே, எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணியிருக்கிற, கலகக்கார தேசத்தாராகிய இஸ்ரயேலரிடம் நான் உன்னை அனுப்புகிறேன். அவர்களும், அவர்களுடைய முற்பிதாக்களும் எனக்கு விரோதமாய் இன்றுவரை துரோகம்செய்து வந்திருக்கிறார்கள். கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமாய் இருக்கிறவர்களிடத்தில் நான் உன்னை அனுப்புகிறேன். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே’ என்று அவர்களுக்குச் சொல். அவர்களோ கலகம் செய்யும் குடும்பத்தினர். ஆகவே அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடாமற்போனாலும் தங்கள் மத்தியில் இறைவாக்கினன் ஒருவன் இருந்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். மனுபுத்திரனே, நீ அவர்களுக்கோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கோ பயப்படாதே. உன்னைச் சுற்றி நெருஞ்சில்களும் முட்களும் இருந்தாலும், தேள்கள் மத்தியில் நீ குடியிருந்தாலும் அஞ்சவேண்டாம். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தினர்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் சொல்வது எதுவாயினும் நீ பயப்படாதே. திகிலடையாதே. அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடுக்கத் தவறினாலும் நீ எனது வார்த்தைகளை அவர்களிடம் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் கலகக்காரர். ஆனால், மனுபுத்திரனே, நீ நான் உனக்குக் கூறுவதைக் கேள். அந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாரைப்போல் கலகம் செய்யாதே! உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுப்பதைச் சாப்பிடு” என்றார்.
பின்பு நான் பார்த்தபோது எனக்கு நேராக நீட்டப்பட்ட ஒரு கரத்தைக் கண்டேன். அதில் ஒரு புத்தகச்சுருள் இருந்தது. அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார். அதன் இருபுறமும் புலம்பல், துக்கம், கேடு பற்றிய வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
மேலும், அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நீ உன் முன்னால் இருப்பதைச் சாப்பிடு, இந்தப் புத்தகச்சுருளைச் சாப்பிட்டு. அதன்பின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். நான் என் வாயைத் திறந்தபோது, அவர் அந்த புத்தகச்சுருளை எனக்குச் சாப்பிடக் கொடுத்தார்.
பின்பு அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நான் கொடுக்கும் இந்த புத்தகச்சுருளைச் சாப்பிடு. அதனால் உன் வயிற்றை நிரப்பு என்றார்.” எனவே அதை நான் சாப்பிட்டேன், அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது.
பின்பு அவர் என்னிடம்: “மனுபுத்திரனே, இப்பொழுது நீ இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் வார்த்தைகளைக் கூறு. புரியாத பேச்சும், கடினமான மொழியும் கொண்ட மக்களிடமல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். புரியாத பேச்சையும், உன்னால் விளங்கிக்கொள்ள முடியாத கடினமான மொழியையும் பேசுகிற திரளான மக்களிடத்தில் நான் உன்னை அனுப்பவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் உன்னை நான் அனுப்பியிருந்தால், நிச்சயமாக அவர்கள் உனக்குச் செவிகொடுத்திருப்பார்கள். ஆனால் இஸ்ரயேல் வீட்டாரோ, எனக்குச் செவிகொடுக்க விருப்பமற்றவர்கள். ஆதலால் உனக்கும் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள். இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் கல்நெஞ்சமும், பிடிவாதமும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நான் உன்னையும் அவர்களைப்போல் இணங்காதவனாயும் கடினமானவனாயும் மாற்றுவேன். உன் நெற்றியை கருங்கல்லிலும் பார்க்கக் கடினமான கல்லைப்போலாக்குவேன். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராய் இருந்தாலும், நீ அவர்களுக்குப் பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றார்.”
மேலும் அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நான் உன்னோடு பேசும் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கேட்டு, அவைகளை உன் உள்ளத்திலே பதித்து வைத்துக்கொள். இப்பொழுது நீ நாடுகடத்தப்பட்டிருக்கும் உன் சொந்த நாட்டு மக்களிடம் போய்ப் பேசு. அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடுக்காவிட்டாலும், ‘ஆண்டவராகிய யெகோவா இவ்வாறு சொல்கிறார்,’ என்று அவர்களுக்குச் சொல் என்றார்.”
அதன்பின் ஆவியானவர் என்னை உயரத்தூக்கினார். யெகோவாவின் மகிமை அவருடைய உறைவிடத்தில் துதிக்கப்படுவதாக என்று எனக்குப் பின்னாக அதிர்கின்ற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தம், உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததினாலும், அவற்றினருகேயிருந்த சக்கரங்கள் எழுப்பிய சத்தத்தினாலும் வந்த ஒரு அதிரும் சத்தம். அப்பொழுது ஆவியானவர் என்னை உயர்த்தி, அங்கிருந்து கொண்டுபோனார். நான் மனக்கசப்புடனும் உள்ளத்தில் கோபத்துடனும் போனேன். யெகோவாவின் வலிமையான கரமும் என்மீது இருந்தது. நான் கேபார் நதிக்கரையில் அமைந்திருந்த தெலாபீப் என்னுமிடத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் வந்துசேர்ந்தேன். அங்கே அவர்கள் மத்தியில் ஏழு நாட்கள் மனப்பாரத்தோடு உட்கார்ந்திருந்தேன்.
இஸ்ரயேலுக்கு எச்சரிப்பு
ஏழுநாட்களின் முடிவில் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக நியமித்திருக்கிறேன். ஆதலால் நீ, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களுக்கு எனது எச்சரிப்பைக் கொடு. நான் கொடியவன் ஒருவனிடம், ‘நீ நிச்சயமாய் சாவாய்,’ என கூறும்போது நீ அவனை எச்சரிக்கும்படியாகவும், அவன் தன் தீய வழிகளிலிருந்து விலகி தன்னைக் காக்கும்படியாகவும், நீ அவனிடம் பேசாமற்போனால், அந்தக் கொடியவன் தன் பாவத்திலே மரிப்பான். அவனுடைய இரத்தப்பழிக்கு உன்னிடமே நான் கணக்குக்கேட்பேன். ஆனால் அவனை நீ எச்சரித்தும், அவன் தனது கொடுமையையும் தீயவழிகளையும்விட்டுத் திரும்பாமற் போவானாயின், அவன் தனது பாவத்திலேயே மரிப்பான். ஆனால் நீயோ உன்னைக் காத்துக்கொள்வாய்.
“மேலும் நீதியுள்ள ஒருவன் தன் நீதியிலிருந்து வழுவி, தீமையானவற்றைச் செய்யும்போது, அவனுக்கு முன்னால் தடையொன்றை வைப்பேன். அப்பொழுது அவன் மரிப்பான். நீ அவனை எச்சரியாதபடியினால், அவன் தனது பாவத்திலேயே மரிப்பான். அவன் செய்த நற்காரியங்கள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழிக்கு நான் உன்னிடமே கணக்குக்கேட்பேன். ஆனால் அந்த நீதியுள்ள மனிதன், பாவம் செய்யாதபடி அவனை நீ எச்சரித்ததினால் அவன் பாவம் செய்யாது விடுவானாயின், உண்மையாகவே அவன் பிழைப்பான். ஏனெனில் உன் எச்சரிப்பை அவன் ஏற்றுக்கொண்டானே. நீயும் உனது உயிரைக் காத்துக்கொள்வாய்” என்றார்.
யெகோவாவின் கரம் அங்கே என்மீது இருந்தது. அவர் என்னிடம், “எழுந்து சமவெளிக்குப் புறப்பட்டுப்போ, அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார். எனவே நான் எழுந்து சமவெளிக்குப் போனேன். கேபார் நதியண்டையிலே கண்ட மகிமையைப் போலவே, யெகோவாவினுடைய மகிமை அங்கே நிற்பதை நான் கண்டேன். உடனே முகங்குப்புற விழுந்தேன்.
அப்பொழுது ஆவியானவர் எனக்குள் வந்து என்னைக் காலூன்றி நிற்கச்செய்தார். அவர் என்னோடு பேசி என்னிடம் கூறியதாவது: “நீ உன் வீட்டிற்குள்போய்ப் பூட்டிக்கொண்டிரு. மனுபுத்திரனே! அவர்கள் உன்னைக் கயிறுகளால் கட்டுவார்கள்; அப்பொழுது நீ மக்களிடையே போகமுடியாதபடி கட்டப்பட்டிருப்பாய். மேலும், நான் உன் நாவை உன்னுடைய மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். அதனால் நீ பேசாதிருப்பாய். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராயிருந்தபோதும், அவர்களைக் கண்டிக்க உன்னால் முடியாமலிருக்கும். ஆனால் நான் உன்னோடு பேசும்போது உனது வாயைத் திறப்பேன். அப்பொழுது நீ, ‘ஆண்டவராகிய யெகோவா இவ்வாறு சொல்லுகிறார் என அவர்களுக்குச் சொல்வாய்.’ கேட்பவன் கேட்கட்டும், கேட்க மறுப்பவன் கேட்காமலிருக்கட்டும். ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தார் என்றார்.
எருசலேமுக்கு வரவிருக்கும் அழிவு
“மனுபுத்திரனே, நீ காய்ந்த செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதன்மேல் எருசலேம் நகரை வரைந்துகொள். அதன்பின் அதை முற்றுகையிட்டு, அதற்கு விரோதமாய் முற்றுகைத்தளங்களை அமைத்து, கோட்டை கட்டி, மண்மேடுகளைப் போடு. அதற்கு விரோதமாக முகாம்களை அமைத்து, சுற்றிலும் சுவரை இடிக்கும் இயந்திரங்களை வை. பின்னர் இரும்புச்சட்டி ஒன்றை எடுத்து, அதை உனக்கும் நகருக்கும் இடையிலான இரும்புச்சுவராக்கி, அதற்கு நேராக உனது முகத்தைத் திருப்பிக்கொள். அது முற்றுகையிடப்பட்டிருக்கும். நீயே அதை முற்றுகையிடுவாய். இது இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்.
“மேலும் நீ இடது புறமாய்ப் படுத்து இஸ்ரயேல் குடும்பத்தின் பாவங்களை உன்மீது சுமந்துகொள். அவ்வாறு நீ படுத்திருக்கும் நாட்களின் அளவுக்கு அவர்களுடைய பாவங்களைச் சுமப்பாய். அவர்களுடைய பாவங்களின் வருடங்களுக்கு ஏற்ப அதேயளவு நாட்களை நான் உனக்கு நியமித்திருக்கிறேன். ஆகவே, நீ முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரை இஸ்ரயேல் வீட்டாரின் பாவத்தைச் சுமப்பாய்.
“அது நிறைவேறியபின் மீண்டும் நீ வலப்பக்கமாய்ப் படுத்து, நாற்பது நாட்கள்வரை யூதா வீட்டாரின் பாவத்தைச் சுமக்கவேண்டும். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருடமாக நான் கணக்கிட்டிருக்கிறேன். ஆகவே, எருசலேம் முற்றுகையிடப்படுவதைத் தொடர்ந்து காண்பித்து நீ உன் முகத்தைத் திருப்பி, உன் கரங்களை உயர்த்தி அதற்கு விரோதமாக இறைவாக்குச் சொல்லவேண்டும். உனது முற்றுகையின் நாட்களை நிறைவேற்றம்வரை, நீ ஒருபுறம் இருந்து மறுபுறம் புரளாதபடிக்குக் கயிறுகளால் உன்னைக் கட்டுவேன்.
“நீ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமைகோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள். அவைகளைப் பாத்திரம் ஒன்றிலிட்டு உனக்கு அப்பம் சுடுவாய். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்களும் அவைகளைச் சாப்பிடவேண்டும். ஒரு நாளைக்கு இருபது சேக்கல்4:10 அதாவது, சுமார் 8 அவுன்ஸ் அல்லது சுமார் 230 கிராம் ஆகும் உணவை நிறுத்துத் தினமும் குறிக்கப்பட்ட நேரத்தில் அதைச் சாப்பிடு. அத்துடன் ஆறில் ஒரு ஹின்4:11 அதாவது, சுமார் 2/3 காலாண்டு அல்லது சுமார் 0.6 லிட்டர் ஆகும் அளவு தண்ணீரையும் அளந்து குறிக்கப்பட்ட நேரத்தில் குடிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் உன் உணவை வாற்கோதுமை அப்பத்தைப்போலவே தயார் செய். அதை அவர்கள் காணும்படி மனித கழிவுகளை எரிபொருளாக்கி, அந்த நெருப்பிலேயே அதைச் சுடவேண்டும்.” இவ்விதமாகவே, “இஸ்ரயேல் மக்கள் நான் அவர்களைத் துரத்தும் நாடுகளிடையே தமது உணவைத் தீட்டுள்ளதாய் சாப்பிடுவார்கள்” என்று யெகோவா சொன்னார்.
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, அப்படியல்ல; நான் என்னை ஒருபோதும் கறைப்படுத்தவில்லை. என் இளவயதுமுதல் இன்றுவரை இயற்கையாய் இறந்ததையோ, காட்டு மிருகங்களால் கொல்லப்பட்டதையோ நான் சாப்பிட்டதே இல்லையே! அசுத்தமான இறைச்சி எதுவுமே என் வாய்க்குள் போனதும் இல்லையே!” என்றேன்.
அதற்கு அவர், “சரி; அப்படியானால் மனித கழிவுக்கு பதிலாக பசுவின் சாணத்தில் அப்பத்தைச்சுட உனக்கு அனுமதியளிக்கிறேன்” என்றார்.
மேலும் அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எருசலேமில் வழங்கப்படும் உணவை நிறுத்தப்போகிறேன். மக்கள் அப்பத்தை நிறை பார்த்து ஏக்கத்தோடு சாப்பிடுவார்கள். தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள். ஏனெனில் அங்கே உணவும் தண்ணீரும் குறைந்துபோகும். அவர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் கலக்கமடைந்து, தங்கள் பாவத்தினிமித்தம் நலிந்துபோவார்கள்.
எருசலேமுக்குத் தண்டனை
“மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும். உன் முற்றுகையின் நாட்கள் முடியும்போது, அதன் மூன்றில் ஒரு பாகத்தை நகருக்குள் போட்டு எரித்துவிடு. மூன்றில் ஒரு பாகத்தை வாள் முனையால் நகரத்தைச் சுற்றிலும் தூவி விடு. மூன்றில் ஒரு பாகத்தைக் காற்றிலே பறக்க விடு. ஏனெனில் நான் உருவின வாளோடு என் மக்களைப் பின்தொடருவேன். ஆனால், அதில் சில முடிகளை எடுத்து உன் உடையின் மடிப்பிலே முடிந்து வை. மீண்டும் அதில் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் எறிந்து அதை எரித்துவிடு. அந்த அதிலிருந்து நெருப்பு எழும்பி இஸ்ரயேல் வீட்டார் அனைவர்மேலும் தீ பரவும்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: நாடுகளின் நடுவே நான் நிலைப்படுத்திய எருசலேம் இதுவே. இது நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் அவள் தன் கொடுமையின் நிமித்தம் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள நாடுகளையும், சூழ இருக்கும் நாடுகளையும் பார்க்கிலும் அதிகமாய் அவள் கலகம் செய்தாள். அவள் என் சட்டங்களைத் தள்ளிவிட்டாள்; எனது கட்டளைகளையும் பின்பற்றவில்லை.
“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிற தேசத்தாரைப் பார்க்கிலும் அடங்காதவர்களாயிருந்தீர்கள். நீங்கள் எனது கட்டளைகளையோ, சட்டங்களையோ பின்பற்றவும் கைக்கொள்ளவும் இல்லை. உங்களைச் சுற்றிலும் இருக்கிற பிறநாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நடந்துகொள்ளவும் இல்லை.
“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எருசலேமே! நான், நானே உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நாடுகளெல்லாம் காணும்படியாக உன்னைத் தண்டிப்பேன். உனது எல்லா வெறுக்கத்தக்க விக்கிரகங்களினிமித்தம் நான் இதுவரை செய்யாததும், இனியொருபோதும் செய்யாதிருப்பதுமான காரியத்தை உனக்குச் செய்வேன். அப்பொழுது உன் மத்தியில் தந்தையர் தம் பிள்ளைகளையும், பிள்ளைகள் தம் தந்தையரையும் தின்பார்கள். நான் உன்னைத் தண்டித்து, உன்னில் மீதியாக இருப்போரை எல்லாத் திசையிலும் சிதறப்பண்ணுவேன். ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அருவருப்பான உருவச் சிலைகளினாலும், வெறுக்கத்தக்க உன் செயல்களினாலும் என் பரிசுத்த இடத்தை அசுத்தமாக்கினபடியால், நான் என் தயவை உன்னைவிட்டு விலக்குவேன். உன்னை இரக்கத்தோடு பார்க்கவோ, தப்பவிடவோ மாட்டேன் என்பதும் நிச்சயம். உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
“அப்பொழுது என் கோபம் தீர்ந்துவிடும். அவர்களுக்கெதிரான என் கடுங்கோபமும் தணியும். நான் பழிதீர்த்துக்கொள்வேன். என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவாகிய நான் வைராக்கியத்தோடு அதைப் பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
“மேலும், உன்னைச் சுற்றிலும் வாழும் நாடுகளின் மத்தியில், உன்னைக் கடந்துபோகும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் உன்னைப் பாழும், பழிச்சொல்லுமாக்குவேன். நான் கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும், கடுமையான கண்டிப்பினாலும் உனக்குத் தண்டனை வழங்குவேன். அப்பொழுது நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளுக்கு நிந்தையும், பரிகாசமும், எச்சரிப்பும், பயங்கரக் காட்சியுமாய் இருப்பாய். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். கொடிய பஞ்சத்தின் அம்புகளால் நான் உன்னைத் தாக்கும்போது, உன்னை அழிப்பதற்காகவே அதை எய்வேன். நான் உன்மேல் அதிகமதிகமாய்ப் பஞ்சத்தைக் கொண்டுவந்து உணவு வழங்குவதையும் நிறுத்துவேன். பஞ்சத்தையும் காட்டு விலங்குகளையும் உனக்கு விரோதமாய் அனுப்புவேன். அவைகளினால் நீங்கள் பிள்ளையற்றவர்களாவீர்கள். கொள்ளைநோயும், இரத்தம் சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும். நான் உனக்கு விரோதமாய் வாளையும் வரப்பண்ணுவேன். யெகோவாவாகிய நானே பேசினேன்” என்றார்.
இஸ்ரயேல் மலைகளுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாக இறைவாக்கு சொல். இஸ்ரயேலின் மலைகளே, ‘ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் கூறுவது இதுவே: இதோ, நான் உங்கள்மேல் வாளை வரப்பண்ணப் போகிறேன். உங்கள் மேடைகளை அழிப்பேன். உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்படும். தூப மேடைகள் நொறுக்கப்படும். உன் மக்களை உனது விக்கிரங்களுக்கு முன் கொல்லுவேன். இஸ்ரயேலருடையது பிரேதங்களை அவர்களுடைய விக்கிரகங்களுக்கு முன்பாகக் கிடத்தி, உங்கள் எலும்புகளை உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் சிதறப்பண்ணுவேன். நீங்கள் வாழும் இடங்களிலுள்ள பட்டணங்கள் எல்லாம் பாழடையும். மேடைகள் அழிக்கப்படும். இவ்விதம் உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு வெறுமையாகும். உங்கள் விக்கிரகங்கள் நொறுக்கப்பட்டு அழிக்கப்படும். உங்கள் தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைவேலைகளும் இல்லாமல் ஒழிக்கப்படும். உங்களுடைய மக்கள் கொல்லப்பட்டு உங்கள் நடுவிலேயே விழுவார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“ ‘ஆயினும் நீங்கள் தேசங்களுக்குள்ளும் நாடுகளுக்குள்ளும் சிதறடிக்கப்படும்போது, சிலரை வாளுக்குத் தப்பும்படி வைப்பேன். அதனால் சிலர் தப்புவீர்கள். அப்பொழுது நாடுகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு போயிருந்தோரில் தப்பியவர்கள் என்னை நினைவுகூருவார்கள். என்னைவிட்டு விலகிப்போன அவர்களுடைய விபசாரம் நிறைந்த இருதயங்களின் நிமித்தமும், விக்கிரகங்களை இச்சித்த அவர்களுடைய கண்களின் நிமித்தமும், நான் எவ்வளவாய் வேதனையடைந்தேன் என்பதை அவர்கள் நினைவுகூருவார்கள். அப்பொழுது தாங்கள் செய்த எல்லா தீமைகளையும் அருவருப்புகளையும் நினைத்து அவர்கள் தங்களையே அருவருப்பார்கள். மேலும், நானே யெகோவா என்பதையும் அறிந்துகொள்வார்கள். இந்த அழிவை நான் அவர்கள்மீது கொண்டுவருவேன் என நான் அச்சுறுத்தியது வீண்பேச்சல்ல என்பதையும் அறிந்துகொள்வார்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: உன் கைகளைத் தட்டி, கால்களால் தரையை உதைத்து, “ஐயோ!” என அலறு. ஏனெனில், இஸ்ரயேல் வீட்டார் தாங்கள் செய்த வெறுக்கப்படத்தக்க தீமையான காரியங்களுக்காகவும், கொடுமைகளுக்காகவும், வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் சாவார்கள். தொலைவில் இருப்பவன் கொள்ளைநோயினால் மரிப்பான். அருகில் உள்ளவன் வாளினால் மடிவான். தப்பவிடப்படுபவனோ பஞ்சத்தினால் மரணமடைவான். இவ்விதமாய் அவர்கள் மீதுள்ள எனது கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன். தங்களது விக்கிரகங்களுக்கெல்லாம் நறுமண தூபங்காட்டிய பலிபீடங்களைச் சுற்றிலும், விக்கிரகங்களின் நடுவிலும், ஒவ்வொரு மேடையிலும், ஒவ்வொரு மலை உச்சியிலும், பச்சையான ஒவ்வொரு மரத்தின் கீழும், ஒவ்வொரு கர்வாலி மரத்தின் கீழும் அவர்களில் கொல்லப்பட்டவர்கள் கிடக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். நான் எனது கையை, அவர்களுக்கு விரோதமாக நீட்டி பாலைவனத்திலிருந்து திப்லாவரை6:14 சில எபிரெய மொழி பிரதிகளில் திப்லாவரை என்பது ரிப்லாவரை என்றுள்ளது. அவர்கள் வாழும் இடங்களையெல்லாம் பாழாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ”
முடிவு வருகிறது
மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இஸ்ரயேல் நாட்டைக்குறித்து கூறுவது இதுவே:
“ ‘முடிவு வந்துவிட்டது!
நாட்டின் நான்கு திசைகளுக்குமே முடிவு வந்துவிட்டது!
இப்பொழுது உனக்கு முடிவு வந்துவிட்டது.
நான் எனது கோபத்தை உனக்கு விரோதமாய் வரச்செய்வேன்.
உன் நடத்தைக்குத்தக்கதாக உனக்குத் தீர்ப்பு வழங்கி,
நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும் பழிவாங்குவேன்.
நான் உன்னைத் தயவாய் பார்க்கவோ;
தப்பவிடவோ மாட்டேன்.
உன் நடத்தைகளுக்கும் உன் நடுவே இருக்கும் அருவருப்புகளுக்கும் தக்கதாக,
நிச்சயமாக நான் பழிக்குப்பழி செய்வேன்.
அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.’
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘பேராபத்து! கேள்விப்படாத
ஒரு பேராபத்து வருகிறது.
முடிவு வந்துவிட்டது!
முடிவு வந்துவிட்டது!
அது உனக்கு விரோதமாகவே எழும்பிவிட்டது!
அது வந்தேவிட்டது.
நாட்டில் குடியிருப்பவனே,
அழிவு உன்மீது வந்துவிட்டது! வேளை வந்துவிட்டது!
நாள் நெருங்கிவிட்டது! மலைகளின்மேல் மகிழ்ச்சியல்ல.
திகிலே நிறைந்திருக்கிறது.
என் சீற்றத்தை இப்பொழுதே உன்மீது ஊற்றி;
எனது கோபத்தை உனக்கெதிராய்த் தீர்க்கப்போகிறேன்,
உன் நடத்தைக்குத்தக்கதாய் உனக்குத் தீர்ப்பு வழங்கி,
நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்கும் உன்னிடம் பழிவாங்குவேன்.
நான் உனக்குத் தயை செய்யவும் மாட்டேன்.
உன்னைத் தண்டியாமல் விடவுமாட்டேன்.
உன் நடத்தைகளுக்கும் உன் நடுவிலுள்ள
உன் அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கும் தக்கதாக நான் பழிவாங்குவேன்.
அப்பொழுது உன்னை அடிக்கிறவராகிய நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.
“ ‘இதோ, அந்த நாள்!
அது வந்துவிட்டது!
அழிவு கொந்தளித்துக் குமுறுகிறது!
அநீதியின் கோல் மொட்டுவிட்டு,
அகந்தை மலர்ந்துவிட்டது!
கொடுமையைத் தண்டிக்க
வன்முறை கோலாக வளர்ந்துவிட்டது!
அவர்களுடைய மக்களிலோ கூட்டத்திலோ
ஒருவனாகிலும் மீந்திருக்கமாட்டான்.
அவர்களுடைய செல்வமும்,
விலையுயர்ந்த ஒன்றுமே மீந்திருப்பதில்லை.
அந்தக் காலம் வந்துவிட்டது!
நாளும் நெருங்கிவிட்டது!
வாங்குகிறவன் மகிழாமலும்,
விற்கிறவன் கவலைப்படாமலும் இருக்கட்டும்.
ஏனெனில், கடுங்கோபம் எல்லோர்மேலும் வந்திருக்கிறது!
அவர்கள் இருவருமே உயிரோடிருக்கும் வரையிலும்,
விற்றவன் விற்கப்பட்ட நாட்டைத்
திரும்பப்பெறமாட்டான்.
ஏனெனில் யாவரையும் குறித்த தரிசனம்
மாற்றப்படமாட்டாது.
அவர்களின் பாவத்தினிமித்தம் ஒருவனாகிலும்
தன் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளவுமாட்டான்.
“ ‘அவர்கள் எக்காளம் ஊதி,
எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினாலும்,
போருக்கு யாருமே போகமாட்டார்கள்,
ஏனெனில் எல்லோர்மேலும் என் கோபம் இருக்கிறது.
வெளியே வாள் இருக்கிறது.
உள்ளே கொள்ளைநோயும், பஞ்சமும் இருக்கின்றன.
நாட்டுப்புறத்தில் இருக்கிறவர்கள்
வாளினால் சாவார்கள்.
நகரத்தில் இருக்கிறவர்கள்
பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் கொல்லப்படுவார்கள்.
தப்பிப் பிழைக்கும்
எல்லோரும் தங்கள்
பாவங்களின் காரணமாகப்
பள்ளத்தாக்கின் புறாக்களைப்போல் புலம்பி,
மலைகளிலே தங்குவார்கள்.
ஒவ்வொரு கையும் பெலனற்றுப்போகும்.
ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப் போலாகும்.
அனைவரும் துக்கவுடைகளை உடுத்திக்கொண்டு
பயத்தினால் நடுங்குவார்கள்.
அவர்களுடைய தலைகள் சவரம் செய்யப்பட்டு,
முகங்கள் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கும்.
“ ‘அவர்கள் தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிந்துவிடுவார்கள்.
அவர்களுடைய தங்கம் அவர்களுக்கு அசுத்த பொருளாகும்.
யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே
அந்த வெள்ளியும் தங்கமும் அவர்களைக் காப்பாற்றமாட்டாது.
அவைகளால் அவர்கள் தங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளவுமாட்டார்கள்.
அவை அவர்களின் வயிற்றை நிரப்பவுமாட்டாது.
ஏனெனில், அவைகளே அவர்களைப் பாவத்திற்குள்
இடறிவிழச் செய்தன.
தங்களது அழகிய நகைகளைக் குறித்து
அவர்கள் பெருமையுடையவர்களாய் இருந்தார்கள்.
அருவருப்பான விக்கிரகங்களையும்,
இழிவான உருவச்சிலைகளையும் தங்களுக்குச் செய்வதற்காக,
அந்த நகைகளைப் பயன்படுத்தினார்கள்;
ஆதலால் அவர்களுக்கு அவைகளை தீட்டான பொருளாக்குவேன்.
அந்நியர் அவைகளைச் சூறையாடவும்,
உலகின் கொடியவர்கள் அவைகளைக் கொள்ளையிடவும் செய்வேன்.
அவர்கள் அவைகளைக் கறைப்படுத்துவார்கள்.
அவர்களிடமிருந்து என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்.
அப்பொழுது அவர்களுடைய பகைவர்கள்
எனக்கு அருமையாயுள்ள இடத்தைத் தூய்மைக்கேடாக்குவார்கள்.
கொள்ளையர் அங்கு புகுந்து அதன் தூய்மையைக் கெடுப்பார்கள்.
“ ‘நீ சங்கிலிகளை ஆயத்தப்படுத்திக்கொள்.
நாடு இரத்தம் சிந்துதலால் நிறைந்திருக்கிறது;
நகரம் வன்செயலாலும் நிறைந்துள்ளது.
இவர்களுடைய வீடுகளை உரிமையாக்கிக்கொள்ளும்படி
நாடுகளிலே மிகக் கொடூரமானவர்களை நான் கொண்டுவருவேன்.
வலியவர்களின் பெருமையையும் ஒழியப்பண்ணுவேன்.
அவர்களுடைய பரிசுத்த இடங்களும் தூய்மைக் கேடாக்கப்படும்.
பயங்கரம் வரும்போது, அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்.
அது கிடைக்காமற்போகும்.
அழிவுக்குமேல் அழிவு வரும்,
வதந்திக்குமேல் வதந்தி வரும்.
இறைவாக்கினரிடமிருந்து தரிசனங்களை பெற முயற்சிப்பார்கள்.
நீதிச்சட்டத்தைப் பற்றிய ஆசாரியர்களின்
போதித்தலும் உபதேசமும் முதியோரின் ஆலோசனைகளும் ஒழிந்துபோகும்.
அரசன் துக்கிப்பான்.
இளவரசனைத் திகில் மூடிக்கொள்ளும்.
நாட்டு மக்களின் கைகள் நடுங்கும்.
நான் அவர்கள் நடத்தைக்கு ஏற்ப அவர்களை நடத்துவேன்.
அவர்கள் தீர்ப்பளித்த விதத்தின்படியே அவர்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார்.
ஆலயத்தில் விக்கிரக வழிபாடு
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஆறாம் வருடத்தின் ஆறாம் மாதம் ஐந்தாம் நாளிலே நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் முதியவர்களும் எனக்கு முன்பாக உட்கார்ந்து இருந்தார்கள். ஆண்டவராகிய யெகோவாவின் கரம் அங்கே என்மீது இறங்கிற்று. நான் பார்த்தபோது, மனிதனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டேன். அவருடைய இடையைப்போல் தோன்றியதன் கீழ்ப்பகுதியில் அவர் நெருப்பைப்போல் இருந்தார். மேற்பகுதியிலோ அவருடைய தோற்றம் தகதகக்கும் உலோகம்போல் மினுமினுப்பாய் இருந்தது. கை போன்று காணப்பட்டதொன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார். ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாகத் தூக்கி, இறைவனின் தரிசனத்தில் அவர் என்னை எருசலேமின் உள்முற்றத்தின் வடக்கு திசைக்கு கொண்டுபோனார். அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது. அப்பொழுது, நான் சமவெளியில் கண்ட தரிசனத்தைப்போலவே இஸ்ரயேலின் இறைவனுடைய மகிமை என்முன் தோன்றிற்று.
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, வடக்கு நோக்கிப்பார்” என்றார். அவ்வாறே நான் பார்த்தேன். பலிபீட வாசலின் வடக்கே உட்செல்லும் வழியில் அந்த எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது.
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? இஸ்ரயேல் குடும்பத்தார் மிக அருவருப்பான செயல்களை இங்கு செய்கிறார்களே. அவை என்னை என் பரிசுத்த இடத்திலிருந்து தூரமாக விலக்கிவிடுமே. ஆனால் இவைகளைவிட அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.
பின்பு அவர் என்னை முற்றத்து வாசலுக்குக் கொண்டுவந்தார். அங்கே சுவரில் ஒரு துளையைக் கண்டேன். அவர் என்னிடம், “மனுபுத்திரனே சுவரில் ஒரு துளையிடு” என்றார். நான் துளையிட்டபோது, ஒரு வாசல் இருந்தது.
அவர் என்னிடம், “நீ உள்ளே போய், அங்கே அவர்கள் செய்யும் கொடியதும், அருவருக்கத்தக்கதுமான காரியங்களைப் பார்” என்றார். நான் உள்ளே போய்ப் பார்த்தேன். இதோ எல்லா விதமான ஊரும்பிராணிகள், அருவருப்பான மிருகங்கள் ஆகியவற்றின் உருவங்களும், இஸ்ரயேலரின் சகல விக்கிரகங்களும், சுவரிலே சித்திரங்களாய்த் தீட்டப்பட்டிருந்தன. இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது சபைத்தலைவர்களும் அவைகளின் முன்னே நின்றார்கள். அவர்களின் நடுவே சாப்பானின் மகன் யசனியாவும் நின்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளிலே தூபகிண்ணங்களை ஏந்தியபடி நின்றார்கள். அவைகளிலிருந்து வாசனைப் புகை எழும்பிற்று.
அப்பொழுது அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரயேல் குடும்பத்தின் சபைத்தலைவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் விக்கிரகங்களின் முன் இருளில் செய்கிறதைக் கண்டாயா? அவர்கள், ‘யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா நாட்டைக் கைவிட்டுவிட்டார்’ ” என்கிறார்கள். மேலும் யெகோவா என்னிடம், “இவைகளைப் பார்க்கிலும் மிக மோசமான காரியங்களையும் அவர்கள் செய்வதை நீ காண்பாய்” என்றார்.
பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் வடக்கு வாசலின் முன் கொண்டுவந்தார். அங்கே தம்மூஸ் என்னும் தெய்வத்திற்காக பெண்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைப் பார்த்தாயா? இதிலும் அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.
பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்குக் கொண்டுவந்தார். அங்கே ஆலய வாசல் நடையிலே பலிபீடத்துக்கும், முன் மண்டபத்திற்கும் நடுவாக ஏறத்தாழ இருபத்தைந்துபேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் முதுகை யெகோவாவினுடைய ஆலயத்திற்கும், முகத்தை கிழக்குத் திசைக்கும் நேராய்த் திருப்பி, கிழக்கிலே உதிக்கும் சூரியனைத் தலைகுனிந்து வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? யூதா குடும்பத்தினர் இங்கே செய்யும் இந்த அருவருப்பான காரியங்கள், ஒரு சிறிய காரியமாய் இருக்கிறதா? அவர்கள் வன்செயலால் நாட்டை நிரப்பி, தொடர்ந்து எனக்குக் கோபமூட்ட வேண்டுமோ? இவர்களைப் பார்! திராட்சைக்கிளையைத் தங்கள் மூக்கிற்கு நேராகத் தூக்கிப் பிடிக்கிறார்களே. ஆகையால் நான் அவர்களை கோபத்துடனேயே நடத்துவேன். அவர்கள்மீது நான் கருணை காட்டப்போவதில்லை. நான் அவர்களைத் தப்பவிடப் போவதுமில்லை. அவர்கள் என் செவிகள் கேட்க சத்தமாய்க் கூப்பிட்டாலும், நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன்.”
சிலையை வழிபடுகிறவர்கள் மீதான தீர்ப்பு
பின்பு யெகோவா, “நகர் காவலரை இங்கு கொண்டுவாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதத்துடன் வரட்டும்” என உரத்த குரலில் கூப்பிடுவதை நான் கேட்டேன். அப்பொழுது ஆறு மனிதர் வடக்கை நோக்கியிருந்த மேல் வாசலின் திசையிலிருந்து வருவதை நான் கண்டேன். அவர்கள் ஒவ்வொருவனுடைய கையிலும் பயங்கர ஆயுதம் இருந்தது. அவர்களுடன் மென்பட்டு உடை உடுத்தி, ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் இடுப்பில் எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டினை கட்டியிருந்தான். அவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பலிபீடத்தின் அருகே நின்றார்கள்.
அப்பொழுது கேருபீன்மேலிருந்த இஸ்ரயேலின் இறைவனது மகிமை அங்கிருந்து மேலெழுந்து, ஆலய வாசற்படிக்கு வந்தது. பின்பு மென்பட்டு உடை உடுத்தி, எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டைத் தன் இடுப்பில் கட்டியிருந்த மனிதனை யெகோவா கூப்பிட்டார். அவர் அவனிடம், “எருசலேம் பட்டணமெங்கும் போய், அங்கே செய்யப்படுகின்ற எல்லாவித அருவருப்பான காரியங்களுக்காகவும் வருந்திப் புலம்புகிறவர்களின் நெற்றியில் ஒரு அடையாளத்தை இடு” என்றார்.
நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவர் மற்றவர்களிடம், “நீங்கள் இவன் பின்னே பட்டணமெங்கும் சென்று கொல்லுங்கள். இரக்கமோ கருணையோ காட்டவேண்டாம். வயது முதிர்ந்த ஆண்கள், வாலிபர், கன்னியர், பெண்கள், பிள்ளைகள் எல்லோரையுமே கொல்லுங்கள். ஆனால் தங்கள் நெற்றிகளில் அடையாளத்தைக் கொண்டிருக்கும் ஒருவரையும் தொடவேண்டாம். அதை என் பரிசுத்த இடத்திலிருந்தே ஆரம்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் கொல்லுவதை ஆலயத்தின் முன்னால் இருந்த சபைத்தலைவர்களிலிருந்து ஆரம்பித்தார்கள்.
பின்பு அவர் அவர்களிடம், “புறப்படுங்கள் நீங்கள் கொலையுண்டவர்களாலே முற்றத்தை நிரப்பி ஆலயத்தைத் அசுத்தப்படுத்துங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் எருசலேம் நகரெங்கும் சென்று கொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் கொலைசெய்து கொண்டிருக்கையில் நான் தனியாய் விடப்பட்டிருந்தேன். அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து கதறி அழுது, “ஆ! ஆண்டவராகிய யெகோவாவே! நீர் உம்முடைய கோபத்தை இம்முறை எருசலேமின்மேல் ஊற்றும்போது, இஸ்ரயேலின் மீதியான யாவரையும் அழித்து விடுவீரோ?” என்று கேட்டேன்.
அவர் எனக்குப் பதிலளித்து, “இஸ்ரயேல், யூதா குடும்பங்களின் பாவம் மிகுதியாய்ப் பெருகிவிட்டது. நாடு இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது. நகரம் அநீதியினால் நிறைந்திருக்கிறது. அவர்களோ, ‘யெகோவா நாட்டைக் கைவிட்டுவிட்டார்; நடப்பவை இன்னதென்று யெகோவா அறியாதிருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். எனவே நான் அவர்கள்மேல் தயவு காட்டுவதுமில்லை, அவர்களைத் தப்பவிடுவதுமில்லை. ஆனால் அவர்களுடைய நடத்தையின் பலனையோ அவர்கள் தலையின்மேல் வரப்பண்ணுவேன்” என்றார்.
அப்பொழுது மென்பட்டு உடை உடுத்தி, எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டைத் தன் இடுப்பில் கட்டியிருந்த அம்மனிதன் திரும்பிவந்து, “நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்துவிட்டேன்” என்று அறிவித்தான்.
மகிமை ஆலயத்தைவிட்டு நீங்குதல்
நான் பார்த்தபோது, கேருபீன்களின் தலைகளுக்கு மேலாக இருந்த ஆகாய வெளியில், அரியணைபோன்ற ஒன்றைக் கண்டேன். அது நீலரத்தினத்தாலான அரியணைபோல் இருந்தது. யெகோவா மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனிடம், “நீ கேருபீன்களுக்குக் கீழேயிருக்கும் சக்கரங்களுக்கிடையே போ. அங்கே கேருபீன்கள் மத்தியிலிருந்து நெருப்புத் தணலை உனது கைநிறைய அள்ளி, பட்டணத்தின் மீது தூவு” என்றார். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் உள்ளே போனான்.
அந்த மனிதன் உள்ளே சென்றபோது, கேருபீன்கள் ஆலயத்தின் தென்புறமாக நின்றன; ஒரு மேகம் உள்முற்றத்தை நிரப்பியிருந்தது. யெகோவாவினுடைய மகிமை கேருபீன்களின் மேலிருந்து எழும்பி, ஆலய வாசற்படியை நோக்கி வந்தது. மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. முற்றம் யெகோவாவினுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிறைந்தது. கேருபீன்களின் சிறகுகளின் சத்தம் வெளிமுற்றம்வரை கேட்கக்கூடியதாய் இருந்தது. அது எல்லாம் வல்ல இறைவன் பேசுகிறபோது ஒலிக்கும் குரல்போல் இருந்தது.
யெகோவா மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனிடம், “கேருபீன்களுக்கு நடுவிலிருக்கும் சக்கரங்களின் இடையிலிருந்து நெருப்பை எடு” எனக் கட்டளையிட்டார். உடனே அம்மனிதன் உள்ளே போய் ஒரு சக்கரத்தினருகே நின்றான். பின்பு கேருபீன்களில் ஒருவன், தங்களுக்கு நடுவே இருந்த நெருப்புக்குள் தன் கையை நீட்டி அதில் கொஞ்சம் எடுத்து, அதை மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனின் கைகளில் கொடுத்தான். அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியிலே வந்தான். கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் மனித கைகள் போன்றவை காணப்பட்டன.
நான் பார்த்தபோது கேருபீன்களுக்கு அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கேருபீனின் அருகிலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் பத்மராகம்போல பளிச்சிட்டன. பார்வைக்கு அவை நான்கும் ஒரே மாதிரி தோற்றமளித்தன. அந்தச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. அவை நகர்ந்தபோது, கேருபீன்கள் நோக்கிக்கொண்டிருந்த நான்கு திசைகளில் ஏதாவது ஒன்றை நோக்கிப்போயின. கேருபீன்கள் போனபோது, சக்கரங்கள் சுழன்று திரும்பவில்லை. கேருபீன்களின் தலை எத்திசையை நோக்கினதோ அதே திசையில் அவையும் திரும்பாமலே சென்றன. அவைகளின் முதுகுகள், கைகள், சிறகுகள் அனைத்தும் உள்ளடங்க உடல் முழுவதும் கண்களால் நிறைந்திருந்தன. அப்படியே அந்த நான்கு சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன. அச்சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என அழைக்கப்பட்டதை நான் கேட்டேன். கேருபீன்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதலாவது முகம் கேருபீன் முகமாகவும், இரண்டாவது மனித முகமாகவும், மூன்றாவது சிங்க முகமாகவும், நான்காவது கழுகு முகமாகவும் இருந்தன.
பின்பு கேருபீன்கள் மேலே எழும்பின. கேபார் நதியருகே நான் கண்ட உயிரினங்கள் இவையே. கேருபீன்கள் செல்லுகையில் அவைகளினருகே இருந்த சக்கரங்களும் சென்றன. கேருபீன்கள் நிலத்திலிருந்து எழும்புவதற்காகத் தங்கள் இறகுகளை விரிக்கும்போது, சக்கரங்கள் அவைகளைவிட்டு விலகவில்லை. கேருபீன்கள் அசையாது நிற்கையில், அவைகளும் அசையாது நின்றன. கேருபீன்கள் எழும்புகையில் அவைகளும் எழும்பின. ஏனெனில் வாழும் உயிரினங்களின் ஆவி அவைகளில் இருந்தது.
பின்பு யெகோவாவினுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியை விட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நிறுத்தப்பட்டது. நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்கள் தங்கள் இறகுகளை விரித்து நிலத்தை விட்டு எழும்பின. அவை செல்லுகையில், சக்கரங்களும் அவைகளோடு சென்றன. அவை யெகோவாவின் ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நின்றன. இஸ்ரயேலின் இறைவனுடைய மகிமை அவைகளுக்கு மேலாக இருந்தது.
கேபார் நதியருகே இஸ்ரயேலின் இறைவனுக்குக் கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. எனவே அவை கேருபீன்கள் என உணர்ந்துகொண்டேன். ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. சிறகுகளின் கீழே மனித கைகள் போன்றவை இருந்தன. அவைகளின் முகங்கள் கேபார் நதியருகே நான் கண்ட அதே தோற்றத்தைக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் நேர்முகமாகவே முன்னேறிச் சென்றன.
இஸ்ரயேல் தலைவர்களுக்கு நியாயத்தீர்ப்பு
பின்பு ஆவியானவர் என்னை உயரத்தூக்கி, யெகோவாவின் ஆலயத்தில் கிழக்கு முகமாயிருக்கும் வாசலுக்குக் கொண்டுவந்தார். வாசலிலே இருபத்தைந்து மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியிலே மக்கள் தலைவர்களான ஆசூரின் மகன் யசனியாவையும், பெனாயாவின் மகன் பெலத்தியாவையும் கண்டேன். யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, இப்பட்டணத்தில் தீயவற்றைத் திட்டமிட்டு தீய ஆலோசனைகளைக் கொடுப்பவர்கள் இவர்களே. அவர்களோ, ‘இது வீடுகளைக் கட்டுவதற்கேற்ற காலமல்லவோ? என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியே என்றும்’ சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு விரோதமாக இறைவாக்கு சொல்; மனுபுத்திரனே, இறைவாக்கு சொல்” என்றார்.
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் என்மேல் அமர்ந்தார். அவர் சொல்லச் சொன்னதாவது: “யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் அப்படித்தான் சொல்கிறீர்கள்! ஆனாலும் உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை நான் அறிவேன்.” இந்நகரத்தில் அநேக மக்களை நீங்கள் கொலைசெய்து, அதன் வீதிகளைப் பிரேதங்களால் நிரப்பியிருக்கிறீர்கள்.
“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் வீதிகளில் வீசியெறிந்த உடல்களே அந்த இறைச்சியும், இந்த நகரமே பானையுமாய் இருக்கின்றன. ஆனாலும் நான் உங்களை அங்கிருந்து துரத்திவிடுவேன். ” நீங்கள் வாளுக்குப் பயப்படுகிறீர்கள். அவ்வாளையே உங்களுக்கு விரோதமாகக் கொண்டுவருவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களைப் பட்டணத்திலிருந்து வெளியே துரத்தி, அந்நியர்களின் கைகளில் ஒப்புவித்து, உங்கள்மீது தண்டனையை வரப்பண்ணுவேன். நீங்கள் வாளால் மடிவீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை. நீங்களும் அதிலுள்ள இறைச்சியாய் இருக்கமாட்டீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள்மீது நான் என் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ஏனெனில் நீங்கள் என் கட்டளைகளின்படி நடக்கவோ, என் சட்டங்களைப் பின்பற்றவோ இல்லை. ஆனால் உங்களைச் சுற்றிலும் இருக்கிற மற்ற நாடுகளின் வழக்கத்தின்படியே நடந்தீர்கள், என்று சொல்” என்றார்.
அவ்வாறே நான் இறைவாக்கு உரைக்கும்போது, பெனாயாவின் மகன் பெலத்தியா இறந்தான். உடனே நான் முகங்குப்புற விழுந்து, “ஆ, ஆண்டவராகிய யெகோவாவே! இஸ்ரயேலில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழித்துப்போடுவீரோ?” என உரத்த குரலில் அழுதேன்.
இஸ்ரயேலர் திரும்புவதற்கு வாக்குத்தத்தம்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நாடுகடத்தப்பட்டு உன்னோடு இருக்கிறவர்களே உனது இரத்த உறவினரும் இஸ்ரயேல் முழுக் குடும்பமுமான உனது சகோதரர். அவர்களைக் குறித்தே, ‘அவர்கள் யெகோவாவை விட்டுத் தூரமாய் இருக்கிறார்கள்; இந்நாடு எங்களுக்கே உரிமையாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எருசலேம் மக்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
“ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களை நான் நாடுகளுக்குள் தூரமாய்த் துரத்தி, நாடுகளுக்குள்ளே சிதறடித்தேன். ஆனாலும் அவர்கள் சென்ற நாடுகளில் அந்தக் கொஞ்சக் காலத்துக்கு நானே அவர்களுக்கு பரிசுத்த இடமாயிருந்தேன்.’
“ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்களை நான் மக்கள் கூட்டத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து உங்களை திரும்பவும் கொண்டுவந்து, மறுபடியும் இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்.’
“அவர்கள் அங்கு திரும்பிவந்து இழிவான எல்லா உருவச்சிலைகளையும், வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அங்கிருந்து அகற்றிவிடுவார்கள். நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட உள்ளத்தைக் கொடுத்து, புதிய ஆவியையும் கொடுப்பேன். நான் அவர்களுடைய கல்லான இருதயத்தை நீக்கி, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் என் நீதிச்சட்டங்களைப் பின்பற்றி என் கட்டளைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். ஆனால் இழிவான உருவச்சிலைகளையும் வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் பற்றியிருக்கிற இருதயம் உடையவர்களையோ, அவர்களுடைய நடத்தையின் பலனை, அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் அருகிலிருந்த சக்கரங்களோடு இறகுகளை விரித்தன. இஸ்ரயேலின் இறைவனின் மகிமை அவற்றிற்கு மேலாக இருந்தது. யெகோவாவினுடைய மகிமை பட்டணத்திலிருந்து எழும்பி பட்டணத்தின் கிழக்கே இருந்த மலையில் போய் நின்றது. இறைவனின் ஆவியானவர் எனக்களித்த தரிசனத்திலே, அவர் என்னை உயரத்தூக்கி, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் திருப்பிக் கொண்டுபோய்விட்டார்.
பின்பு நான் கண்ட தரிசனம் என்னைவிட்டு மேலே போய்விட்டது. எனக்கு யெகோவா காட்டிய அனைத்தையும் நான், நாடுகடத்தப்பட்டிருந்தவர்களுக்குக் கூறினேன்.
நாடுகடத்தப்படுதலின் அடையாளம்
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ கலகம் செய்யும் குடும்பத்தாரின் மத்தியில் வாழ்கிறாய். அவர்களுக்கு பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் காண்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தார்.
“ஆகையால் மனுபுத்திரனே, நீ நாடுகடத்தப்படுவதற்காக உனது பயண பொருட்களை ஆயத்தப்படுத்து. அவர்கள் காணத்தக்கதாக பகல் வேளையிலே உன் இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு இடத்திற்குப் போ. அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராய் இருப்பினும் ஒருவேளை இதை விளங்கிக்கொள்வார்கள். பகல் வேளையிலே அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், நாடுகடத்தப்படுவதற்காக நீ ஆயத்தப்படுத்திய உன் உடைமைகளை வெளியே எடுத்து வா. அதன்பின் மாலை வேளையிலே அவர்கள் முன்னிலையில் நாடுகடத்தப்பட்டுப் போகிறவர்கள்போலப் புறப்படு. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே, சுவரில் ஒரு துளையிட்டு அதின் வழியாக உனது பயண பொருட்களை வெளியே கொண்டுபோக வேண்டும். இருள்சூழும் வேளையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவைகளை உன் தோள்மீது வைத்தபடி கொண்டுபோ. நாட்டைப் பார்க்க முடியாதபடி நீ உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் உன்னை ஒரு அடையாளமாக்கியிருக்கிறேன்” என்றார்.
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட எனது உடைமைகளை, பகல் வேளையிலே வெளியே கொண்டுவந்து வைத்தேன். பின்பு மாலைவேளையில் எனது கைகளினால் சுவரில் துவாரமிட்டேன். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் இருள்சூழும் வேளையிலே, அதை வெளியே எடுத்து என் தோள்மீது வைத்துக்கொண்டு போனேன்.
காலையிலே யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, அந்தக் கலகம் செய்பவர்களாகிய இஸ்ரயேல் குடும்பத்தார், ‘நீ என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார்கள் அல்லவா.
“நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, இது எருசலேமின் அரசனையும் அங்கிருக்கும் இஸ்ரயேலரின் முழுக் குடும்பத்தையும் குறித்த இறைவாக்கு ஆகும். நான் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறேன்.’
“நான் செய்து காட்டியது போலவே உங்களுக்கும் செய்யப்படும், நீங்கள் சிறைக்கைதிகளாக நாடுகடத்தப்பட்டுப் போவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
“அவர்கள் மத்தியிலிருக்கும் அரசன் இருள்சூழும் வேளையிலே தனது உடைமைகளைத் தன் தோளில் சுமந்தபடி புறப்படுவான். அவன் போவதற்காக சுவரிலே ஒரு துளை இடப்படும். அவன் நாட்டைப் பார்க்க முடியாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான். நான் அவனுக்காக என் வலையை விரிப்பேன். அவன் எனது கண்ணியில் சிக்குவான். கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்கு அவனைக் கொண்டுசெல்வேன். ஆனால் அவன் அதைக் காணமாட்டான். அங்கேயே அவன் செத்துப்போவான். அவனைச்சுற்றிலும் இருக்கும் உதவியாளர்களையும், இராணுவங்களையும் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். உருவிய வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
“நான் அவர்களை மக்கள் கூட்டத்திற்குள் கலைந்துபோகச் செய்து, நாடுகளுக்குள் சிதறடிக்கும்போது, நானே யெகோவா என அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஆனால் நான் அவர்களில் சிலரை வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றிலிருந்து தப்புவிப்பேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் நாடுகளுக்கிடையில் வெறுக்கத்தக்க தங்கள் பழக்கவழக்கங்களைத் தவறு என்று ஒத்துக்கொள்வார்கள்; அப்பொழுது நானே யெகோவா என்பதையும் அறிந்துகொள்வார்கள் என்று சொல்” என்றார்.
மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ நடுக்கத்தோடே உன் உணவை சாப்பிடு. பயத்துடன் நடுங்கிக்கொண்டு தண்ணீரைக்குடி. பின்பு நாட்டின் குடிகளிடம் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேல் நாட்டிலும் எருசலேமிலும் வாழும் மக்களைக் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அவர்கள் தங்கள் உணவை ஏக்கத்தோடு சாப்பிட்டு, மனச்சோர்வுடன் தண்ணீரைக் குடிப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய நாடு அங்கு குடியிருக்கும் அனைவரது கொடுமையினிமித்தம் அழித்துப் பாழாக்கப்படும். அவர்கள் குடியேறியிருக்கும் பட்டணங்கள் சீர்குலையும்; நாடு பாழாகும். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று சொல்’ ” என்றார்.
தாமதம் இருக்காது
மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, ‘நாட்களோ கடந்துபோய்க் கொண்டிருக்கின்றன; தரிசனம் ஒன்றும் நிறைவேறவில்லையே’ என்பதாக இஸ்ரயேல் நாட்டிலே உங்களுக்குள் வழங்கப்படும் இப்பழமொழி என்ன? ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் இப்பழமொழிக்கு ஒரு முடிவைக் கொண்டுவரப் போகிறேன். இஸ்ரயேலில் இனி அதைக் கூறமாட்டார்கள். எல்லாத் தரிசனங்களும் நிறைவுபெறும் காலம் நெருங்கிவிட்டது’ என்று அவர்களுக்குச் சொல். பொய்த் தரிசனங்களோ அல்லது சாதகமாய்க் குறிசொல்லுதலோ இனி ஒருபோதும் இஸ்ரயேலரிடம் இருப்பதில்லை. ஆகவே யெகோவாவாகிய நான், திட்டமிட்டதையே பேசுவேன். அது தாமதமின்றி நிறைவேறும். கலகக்கார வீட்டாரே, ‘நான் கூறியது எதுவோ அதை உங்கள் நாட்களிலேயே நிறைவேற்றுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, ‘இவன் காணும் தரிசனம் நிறைவேற இப்பொழுதிலிருந்து அநேக வருடங்கள் செல்லும் அநேக காலங்களுக்குப்பின் வரப்போகும் எதிர்காலம் பற்றியே இவன் இறைவாக்கு உரைக்கின்றான்’ என்று இஸ்ரயேல் குடும்பத்தார் கூறுகின்றார்கள்.
“ஆகையால் நீ அவர்களிடம், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘இனி ஒருபோதும் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் தாமதிப்பதில்லை. நான் சொல்வது எதுவோ அது நிறைவேற்றப்படும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்’ ” என்றார்.
பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு நியாயத்தீர்ப்பு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேலில் இப்பொழுது தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ இறைவாக்கு உரை. தங்கள் சொந்தக் கற்பனையில் தீர்க்கதரிசனம் சொல்வோரிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்! ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஒன்றையும் காணாமலிருந்தும் தங்களுடைய சுய ஆவியினாலே ஏவப்பட்டு நடக்கிற, மதிகேடான தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு. இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளைப் போன்றவர்கள். யெகோவாவினுடைய நாளின் யுத்தத்தில், இஸ்ரயேல் வீட்டார் உறுதியாய் நிற்கும்படி, சுவர் வெடிப்புகளைப் பழுதுபார்க்க அவர்கள் போகவில்லை. அவர்களுடைய தரிசனங்கள் போலியானதும், அவர்களுடைய குறிசொல்லுதல் பொய்யானதுமாய் இருக்கின்றன. யெகோவா தங்களை அனுப்பாதிருந்தும் அவர்கள், “யெகோவா சொல்கிறார்” என்கிறார்கள். அப்படியிருந்தும் தங்களுடைய வார்த்தைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறார்கள். பொய் தரிசனங்களை நீங்கள் காணவில்லையோ? நான் பேசாதிருந்தும், “யெகோவா கூறுகிறார்” என பொய்க் குறிசொல்லவில்லையோ?
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்கள் உண்மையற்ற வார்த்தைகளினிமித்தமும், பொய்த் தரிசனங்களினிமித்தமும் நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார் போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“ ‘ஏனெனில், சமாதானம் இல்லாதிருக்கும்போது, “சமாதானம்” என்று சொல்லி அவர்கள் என் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். உறுதியற்ற சுவர் கட்டப்படும்போது, அவர்கள் அதை மறைத்து வெள்ளையடிக்கிறார்கள். ஆகையால் அதை அப்படி மறைத்து வெள்ளையடிப்போரிடம், அது விழப்போகிறது என்று சொல். அடைமழை பெய்யும், நான் பனிக்கட்டியை மழையாய் விழப்பண்ணுவேன். கடுங்காற்று பயங்கரமாய் வீசும். சுவர் இடிந்து விழும்போது, “நீங்கள் வெள்ளையடித்து மூடினீர்களே! அது எங்கே? என மக்கள் உங்களைக் கேட்கமாட்டார்களோ?”
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் கடுங்கோபத்திலே, பெரும் புயல்காற்றை வீசப்பண்ணுவேன். என் கோபத்திலே பனிக்கட்டி மழையும், அடைமழையும் பெருஞ் சீற்றத்துடன் பெய்யும். நீங்கள் வெள்ளையடித்து மூடிய சுவரை நான் இடித்து வீழ்த்துவேன். அஸ்திபாரம் வெளிப்படும்படி அதைத் தரைமட்டமாக்குவேன். அது விழும்போது நீங்களும் அதற்குள் அழிவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இவ்விதமாய் சுவருக்கும், சுவரை வெள்ளையடித்து மூடியவர்களுக்கும் விரோதமாய் நான் என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன். நான் உங்களிடம், “உங்களுக்குச் சுவரும் இல்லை. அதற்கு வெள்ளையடித்தவர்களும் இல்லை. இஸ்ரயேலின் தீர்க்கதரிசிகளான இவர்கள் எருசலேமுக்குத் தீர்க்கதரிசனம் கூறினார்கள். அவர்களோ சமாதானம் இல்லாதிருந்தும், அவளுக்குச் சமாதானம் எனத் தரிசனம் கண்டோம் எனச் சொன்னார்கள் என்று சொல்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்” ’ என்று சொல்.
“இப்பொழுதும் மனுபுத்திரனே, தங்கள் சொந்தக் கற்பனையில் தீர்க்கதரிசனம் கூறும் உன் மக்களின் மகள்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரை. நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மக்களைக் கண்ணியில் சிக்கவைக்கும்படி, தங்கள் மணிக்கட்டுகளில் மந்திர வசிய நூல்களைக் கட்டி, தங்கள் தலைகளுக்குப் பல அளவுகளில் முக்காடுகளை உண்டுபண்ணும் பெண்களுக்கு ஐயோ கேடு! நீங்கள் உங்கள் சொந்த வாழ்வைப் பாதுகாத்துக்கொண்டு என் மக்களின் வாழ்வைக் கண்ணியில் சிக்கவைப்பீர்களோ? நீங்கள் கையளவு வாற்கோதுமைக்காகவும், அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்கள் மத்தியில் என்னை நிந்தித்தீர்கள். பொய்க்குச் செவிகொடுக்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகக்கூடாதவர்களைக் கொலைசெய்தீர்கள். வாழக்கூடாதவர்களைத் தப்ப வைத்தீர்கள்.
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் உங்கள் மந்திர வசிய நூல்களுக்கு விரோதமாயிருக்கிறேன். அவைகளால் மக்களைப் பறவைகளைப்போல, கண்ணியில் சிக்கவைக்கிறீர்கள். அவைகளை உங்கள் கைகளிலிருந்து அறுத்துப்போடுவேன். நீங்கள் பறவைகளைப்போல சிக்கவைக்கும் மக்களை நான் விடுவிப்பேன். உங்கள் முக்காடுகளை நான் கிழித்து என் மக்களை உங்கள் கைகளிலிருந்து விடுவிப்பேன். இனி ஒருபோதும் அவர்கள் உங்கள் வல்லமைக்கு இரையாகமாட்டார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஏனெனில், நான் துக்கப்படுத்தாத நீதியுள்ளவர்களின் இருதயத்தை நீங்கள் உங்கள் பொய்யினால் சோர்வடையப் பண்ணினீர்கள். கொடுமையானவர்களுக்கு நீங்கள் உற்சாகம் ஊட்டியதால், அவர்கள் தங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்பவுமில்லை, அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்கவுமில்லை. ஆகையால் நீங்கள் இனி ஒருபோதும் பொய்த்தரிசனங்களைக் காணவும் மாட்டீர்கள், குறிசொல்லவும் மாட்டீர்கள். உங்கள் கைகளிலிருந்து என் மக்களை நான் காப்பாற்றுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ ” என்றார்.
விக்கிரக ஆராதனை கண்டிக்கப்படுதல்
இஸ்ரயேலின் முதியவர்கள் சிலர் எனக்கு முன்பாக வந்து அமர்ந்தார்கள். அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது, “மனுபுத்திரனே, இந்த மனிதர் தங்கள் இருதயங்களில் விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள். இப்படியானவர்கள் என்னிடம் விசாரணை செய்ய நான் இடமளிக்க வேண்டுமோ? ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன். தங்களுடைய விக்கிரகங்களின் நிமித்தம், என்னைவிட்டு விலகிப்போன இஸ்ரயேல் மக்களின் இருதயங்களை மீண்டும் நான் என் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு செய்வேன்.’
“ஆதலால் நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மனந்திரும்புங்கள்; உங்கள் விக்கிரங்களை விட்டுத் திரும்புங்கள். எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களைவிட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
“ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன். நான் அவனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை ஒரு உதாரணமாகவும் ஒரு பழமொழியாகவும் வைத்து, அவனை என் மக்களிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“ ‘ஆனால் அப்படி ஆலோசனை கேட்கும்போது தீர்க்கதரிசி ஒருவன் ஏமாந்து, பொய்த் தீர்க்கதரிசனம் சொல்வதற்குத் துணிவுகொண்டால், யெகோவாவாகிய நானே அவனை அவ்வாறான துணிகரத்திற்குட்படுத்தினேன். அவனுக்கு விரோதமாக என் கரத்தை நீட்டி, இஸ்ரயேல் மக்கள் மத்தியிலிருந்து அவனை அழிப்பேன். அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமப்பார்கள். தீர்க்கதரிசி குற்றவாளியாயிருப்பது போலவே, அவனிடம் ஆலோசனை கேட்க வந்தவனும் குற்றவாளி. ஆகவே நான் அவர்களைத் தண்டிப்பேன். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் இனியொருபோதும் என்னைவிட்டு வழிதவறிப் போகமாட்டார்கள். பாவங்களினால் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்களின் இறைவனாயிருப்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்’ ” என்றார்.
யெகோவாவின் தண்டனை நிச்சயம்
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, ஒரு நாடு எனக்கெதிராய் பாவம் செய்து உண்மையற்றதாய் இருந்தால், நான் அதற்கு விரோதமாக என் கரத்தை நீட்டுவேன். அதற்கு உணவளிப்பதை நிறுத்தி, பஞ்சத்தை அனுப்பி அதன் மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். அப்பொழுது அங்கே நோவா, தானியேல், யோபு ஆகிய மூவரும் இருந்தாலுங்கூட, அவர்கள் தங்கள் நீதியின் நிமித்தம் தங்களை மட்டுமே தப்புவித்துக்கொள்ளக்கூடும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“அல்லது, நான் காட்டு மிருகங்களை அந்த நாட்டின் வழியாக அனுப்பினால், அவை அந்த நாட்டிலுள்ளவர்களைப் பிள்ளையற்றவர்களாக்கும். ஒருவரும் அந்த நாட்டின் வழியாகப்போக இயலாதபடி, அது மிருகங்களின் நிமித்தம் பாழாய்ப்போகும். நான் வாழ்வது நிச்சயம்போலவே, அங்கு அவ்வேளையில் இவர்கள் மூவரும் இருந்தாலுங்கூட, அவர்களால் தம் சொந்த மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள். ஆனால் நாடோ பாழாய்ப்போகும் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“இல்லையெனில், நான் அந்நாட்டிற்கு எதிராக வாளை வரச்செய்து, ‘வாள் நாட்டை ஊடுருவிச் செல்லட்டும்’ என்று சொல்வேனாகில், நான் அங்குள்ள மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். நான் வாழ்வது நிச்சயம்போலவே, நான் அப்படிச் செய்தால், இந்த மூவரும் அங்கு இருந்தாலுங்கூட அவர்களால் தங்கள் சொந்த மகன்களையோ, மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“இல்லையெனில், நான் அந்நாட்டில் கொள்ளைநோயை அனுப்பி, நான் எனது கோபத்தினால் இரத்தம் சிந்தப்பண்ணி, அங்குள்ள மனிதரையும், அவர்களுடைய மிருகங்களையும் கொலைசெய்வேனாகில், நான் வாழ்வது நிச்சயம்போலவே, நோவா, தானியேல், யோபு ஆகிய அந்த மூவரும் அங்கிருந்தாலுங்கூட, அவர்களால் தங்கள் மகனையோ மகளையோ தப்புவிக்கவும் முடியாது. தங்கள் நீதியினால் அவர்கள் மட்டுமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் எருசலேமுக்கு விரோதமாக மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவதற்கு வாள், பஞ்சம், காட்டுமிருகம், கொள்ளைநோய் ஆகிய நான்கு பயங்கரத் தீர்ப்புகளையும் அனுப்பும்போது, அவைகளிலும் இது எவ்வளவு அதிக கொடியதாயிருக்கும்! அப்படியிருந்தும், அங்கிருந்து தப்பிப்பிழைத்த சில மகன்களும், மகள்களும், வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு உங்களிடத்திற்கே வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் அவர்களுடைய நடத்தையையும் நீங்கள் காணும்போது எருசலேமின்மீது நான் வரப்பண்ணின தீங்கையும், அதன்மீது வரப்பண்ணின ஒவ்வொரு அழிவையும் குறித்து ஆறுதல் அடைவீர்கள். நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் நடத்தையையும் காணும்போது, நான் காரணமில்லாமால் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைகொடி
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன? ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? அது எரிபொருளாக நெருப்பிலே போடப்பட்டு, அதன் இரு முனைகளும் எரிந்து நடுப்புறமும் கருகிப்போன பின் அது எதற்காவது பயன்படுமோ? முழுமையாக இருக்கும்போதே அது ஒன்றுக்கும் உதவவில்லையே, நெருப்பு அதை எரித்து அது கருகிப்போன பின்னர் அது எதற்குத்தான் பயன்படப்போகிறது?
“ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. காட்டு மரங்களின் நடுவிலுள்ள திராட்சைக்கொடியின் தண்டை நான் நெருப்புக்கு எரிபொருளாக ஒதுக்கியதுபோலவே, எருசலேமில் வாழும் மக்களையும் நான் நடத்துவேன். அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள். என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேறினாலும், நெருப்பு தொடர்ந்து அவர்களைச் சுட்டெரிக்கும். இவ்வாறு நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர்கள் எனக்கு உண்மையாய் இராதபடியினால், நான் நாட்டைப் பாழாய்ப் போகச்செய்வேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
எருசலேமின் விபசாரம்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, எருசலேமின் அருவருக்கத்தக்க பழக்கங்களைவிட்டு நீ அவளை எதிர்த்து, அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா எருசலேமுக்குக் கூறுவது இதுவே, உன் வம்சமும் பிறப்பும் கானானியரின் நாட்டிலேயே இருந்தன. உன் தகப்பன் எமோரியன், தாயோ ஏத்திய பெண். நீ பிறந்த நாளிலே உன் தொப்புள்கொடி அறுக்கப்படவில்லை. நீ சுத்தமடைவதற்காகத் தண்ணீரினால் கழுவப்படவுமில்லை. நீ உப்பினால் சுத்தமாக்கப்படவுமில்லை. துணியினால் சுற்றப்படவுமில்லை. எவரேனும் உனக்காக இரங்கி, கருணைகாட்டி இவற்றில் எதையுமே உனக்குச் செய்யவுமில்லை. மாறாக நீ பிறந்த நாளிலேயே, வேண்டப்படாமல் வெறுக்கப்பட்டு திறந்த வயலிலே எறிந்து விடப்பட்டாய்.
“ ‘அப்பொழுது நான் அவ்வழியாய்ப் போனபோது, நீ கைகால்களை உதறிக்கொண்டு உன் இரத்தத்திலே கிடப்பதைக் கண்டேன். அவ்வாறு இரத்தத்தில் கிடந்த உன்னிடம், “பிழைத்திரு!” என்று சொன்னேன். வயலின் பயிர்களைப்போல நான் உன்னை வளரச்செய்தேன். நீ வளர்ந்து பெரியவளாகி, அழகிய மங்கையானாய். உனக்கு மார்பகங்கள் உருவாயின, உன் கூந்தலும் வளர்ந்தது, ஆயினும் நீ நிர்வாணமும் உடையற்றவளுமாக இருந்தாய்.
“ ‘பின்பு நான் அவ்வழியாய் போகையில், உன்னைப் பார்த்தபோது நீ காதலிக்கத்தக்க பருவம் உள்ளவளாய் இருந்ததைக் கண்டேன். எனவே நான் என் உடையை ஓரத்தை உன்மீது விரித்து, உன் நிர்வாணத்தை மூடினேன். நான் உனக்கு மனப்பூர்வமாய் ஆணையிட்டு உன்னுடன் உடன்படிக்கையும் செய்தேன். நீ என்னுடையவளானாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘பின்பு நான் உன்னை தண்ணீரினால் குளிப்பாட்டி, உன்னிலிருந்த இரத்தத்தைக் கழுவி, நறுமண தைலங்களைப் பூசினேன். அலங்கரிக்கப்பட்ட உடையை உனக்கு உடுத்தி, தோல் செருப்புக்களையும் அணிவித்தேன். மென்பட்டு உடையை உனக்கு உடுத்தி, விலை உயர்ந்த உடைகளால் உன்னை மூடினேன். நகைளால் உன்னை அலங்கரித்தேன். உன் கைகளில் வளையல்களைப் போட்டேன். உன் கழுத்திலே சங்கிலியையும் கட்டினேன், உன் மூக்கில் மூக்குத்தியையும், காதுகளில் காதணிகளையும் போட்டு, உன் தலையில் அழகிய கிரீடத்தையும் அணிவித்தேன். இவ்விதமாய் நீ தங்கத்தினாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்டாய். உன் உடைகள் மென்பட்டும், விலை உயர்ந்ததும், அலங்கரிக்கப்பட்டதுமாய் இருந்தன. சிறந்த மாவும், தேனும், ஒலிவ எண்ணெயும் உனது உணவுகளாயிருந்தன. நீ பேரழகியாகி ஒரு அரசியாக உயர்வடைந்தாய். உன் அழகினிமித்தம் உன் புகழ் பல தேசத்தார் மத்தியிலும் பரவிற்று. ஏனெனில் நான் உனக்கு அளித்த மகிமை, உன் அழகைப் பூரணப்படுத்தின என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘ஆனால் நீயோ, உன் அழகில் நம்பிக்கை வைத்து, விபசாரியாவதற்கே உன் புகழை பயன்படுத்தினாய். உன்னைக் கடந்துசென்ற ஒவ்வொருவனோடும் நீ விபசாரத்தில் ஈடுபட்டபடியால், உன் அழகு அவனுடையதாயிற்று. உனது உடைகளில் சிலவற்றை நீ எடுத்து நீ விபசாரம் செய்த மேடைகளை அலங்காரம் செய்தாய். அத்தகைய காரியங்கள் நடந்ததுமில்லை; இனி ஒருபோதும் நடப்பதுமில்லை. நான் உனக்குக் கொடுத்த என் வெள்ளியினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட நகைகளையும் நீ எடுத்து, உனக்கு ஆண் விக்கிரகங்களை உண்டுபண்ணினாய். அவைகளை வணங்குவதனால் விபசாரம் செய்தாய். அவைகளின்மேல் போடுவதற்காக, அலங்கரிக்கப்பட்ட உன் உடைகளையும் நீ எடுத்தாய். எனக்குரிய எண்ணெயையும், தூபவர்க்கத்தையும் அவைகளுக்கு முன் காணிக்கை. அதோடு நான் உனக்கு உணவாகக் கொடுத்த சிறந்த மாவையும், ஒலிவ எண்ணெயையும், தேனையும் நீயோ அவைகளுக்கு முன் நறுமண காணிக்கையாகக் கொடுத்தாய். நடந்தது இதுவே என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘மேலும் நீ எனக்குப் பெற்ற மகன்களையும் மகள்களையும் விக்கிரகங்களுக்கு இரையாகப் பலியிட்டாய். நீ செய்த விபசாரம் போதாதோ? என் பிள்ளைகளை நீ கொலைசெய்து, அவர்களை விக்கிரகங்களுக்குப் பலியிட்டாய். வெறுக்கத்தக்க காரியங்கள் எல்லாவற்றிலும், உனது விபசாரத்திலும் நீ ஈடுபட்டிருக்கும்போது உனது இளவயதின் நாட்களை நீ நினைக்கவில்லை. அந்நாட்களில் நீ நிர்வாணமும் வெறுமையுமாய் கைகால்களை உதறியபடி உன் இரத்தத்தில் கிடந்தாயே!
“ ‘உனக்கு ஐயோ கேடு! உனக்குக் கேடு என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நீ செய்த கொடுமைகள் எல்லாவற்றுடனும் உனக்கு மேடைகளை அமைத்து, ஒவ்வொரு பொதுசந்தியிலும் சிறு கோயில்களையும் அமைத்துக்கொண்டாய். தெரு முனைகள் ஒவ்வொன்றிலும் நீ உனக்குக் கம்பீரமான சிறு கோயில்களை உண்டுபண்ணி, உன் அழகைக் கெடுத்தாய். உன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் உடலைக் கொடுத்து, உன் விபசாரத்தை அதிகரித்தாய். இச்சைமிகுந்த அயலவரான எகிப்தியருடன் நீ விபசாரம் செய்தாய். எனக்குக் கோபமூட்டுவதற்காக உன் விபசாரத்தை மிகவும் அதிகமாகச் செய்தாய். ஆதலால் இதோ, நான் என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, நாட்டில் உனக்குரிய எல்லையை சிறிதாக்கினேன். நான் உன்னை உனது பகைவர்களான, பெலிஸ்தியரின் மகள்களின் பேராசைக்கு ஒப்புக்கொடுத்தேன். அவர்களுங்கூட உன் கீழ்த்தரமான நடத்தையினிமித்தம் அதிர்ச்சியுற்றார்கள். நீ இன்னும் திருப்தியடையாமல், அசீரியரோடும் விபசாரத்தில் ஈடுபட்டாய். அதற்குப் பின்னரும் நீ திருப்தியடையவில்லை. வியாபாரிகளின் நாடாகிய பாபிலோனிலும் நீ உன் விபசாரத்தை விரிவுபடுத்தினாய். ஆனால் அதிலுங்கூட நீ திருப்தியடையவில்லை.
“ ‘வெட்கங்கெட்ட விபசாரியைப்போல, இக்காரியங்களையெல்லாம் நடப்பித்த நீ எவ்வளவு மனவுறுதியற்றவள் என்று யெகோவா அறிவிக்கிறார். தெரு முனைகள் ஒவ்வொன்றிலும் நீ உனக்கு மேடைகளை உண்டுபண்ணி, பொது இடம் ஒவ்வொன்றிலும் எடுப்பான சிறு கோயில்களை அமைத்துக்கொண்டாய். ஆனாலும் நீ ஒரு சாதாரண விபசாரியைப்போல் நடந்துகொள்ளவில்லை, நீ பணமும் வாங்கவில்லை.
“ ‘ஆனால், நீயோ ஒரு விபசார மனைவி. உன் சொந்தக் கணவனைவிட பிறரையே விரும்புகிறாய். எல்லா விபசாரிகளும் பணம் வாங்குவார்கள். ஆனால் உன் காதலர்களுக்கெல்லாம் நீயே நன்கொடைகளைக் கொடுத்து, சகல திசைகளிலுமிருந்து விபசாரத்துக்காக அவர்களை உன்னிடம் வரும்படி அழைத்தாய்; அவர்களுக்கு நீ இலஞ்சம் கொடுக்கிறாய். இவ்விதமாய் விபசாரம் செய்வதில் மற்ற விபசாரிகளைப் பார்க்கிலும் நீ வேறுபட்டவளாக இருக்கிறாய். ஏனெனில் ஒருவரும் உன் தயவுக்காக உன்னைத் தேடிவருவதுமில்லை, உனக்குப் பணம் கொடுப்பதுமில்லை. நீயே அவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய். ஆதலால் நீ வேறுபட்டவள் தான்.
“ ‘ஆகையால் விபசாரியே! யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ உன் செல்வத்தைக் கொட்டி, உன் காதலர்களோடு விபசாரத்தில் ஈடுபட்டு, உன் நிர்வாணத்தை வெளிப்படுத்தினாய். வெறுக்கத்தக்க விக்கிரகங்களை நீ வழிபட்டாய். அவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைக் கொடுத்தாய். அதனால் நீ மகிழ்ந்திருந்த உன் காதலர்கள் அனைவரையும், நீ நேசித்தவர்களையும், அவர்களோடு உன்னால் வெறுக்கப்பட்டவர்களாயும், நான் கூடிவரச் செய்வேன். நான் அவர்களை ஒவ்வொரு திசையிலிருந்தும் உனக்கெதிராகக் கொண்டுவந்து, உன் உடைகளை அவர்களுக்கு முன்பாக அகற்றிவிடுவேன். அவர்கள் உன் நிர்வாணத்தைக் காண்பார்கள். விபசாரம் செய்து, இரத்தம் சிந்தும் பெண்களுக்குரிய தண்டனையை உனக்கு நான் வழங்குவேன். என் கோபத்தோடும், எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்மீது சுமத்துவேன். பின்பு நான் உன்னை உன் காதலர் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன் மேடைகளைத் தகர்த்து, உன் சிறு கோயில்களை இடித்துவிடுவார்கள். உன் உடைகளை உரிந்து, உன் அழகிய நகைகளையும் எடுத்துக்கொண்டு, உன்னை நிர்வாணமாயும், வெறுமையாயும் விட்டுச்செல்வார்கள். அவர்கள் உனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, தங்கள் வாள்களினால் உன்னைத் துண்டுதுண்டாக வெட்டுவார்கள். உன் தீயினால் எரித்து, அநேக பெண்களுக்கு முன்பாக உன்னைத் தண்டிப்பார்கள். இப்படி உன் விபசாரத்திற்கு நான் ஒரு முடிவுகட்டுவேன். அதன்பின் நீ உன் காதலர் யாருக்குமே பணம் கொடுக்கமாட்டாய். அப்பொழுது உனக்கெதிரான எனது கடுங்கோபம் தணியும். என் எரிச்சல் உன்னைவிட்டு நீங்கும். அதன்பின் நான் கோபமாயிராமல் அமைதியாயிருப்பேன்.
“ ‘நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல் இவை எல்லாவற்றினாலும் எனக்குக் கோபமூட்டினாய். அதன் நிமித்தம் நிச்சயமாய் நான் உன் நடத்தையின் பலனை உனது தலையிலே விழப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். உன் எல்லா அருவருப்பான பழக்கங்களோடு இழிவான செயல்களையும் நீ செய்யவில்லையோ?
“ ‘பழமொழி சொல்லும் ஒவ்வொருவனும்: “தாயைப்போலவே மகளும் இருப்பாள், என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்வான்.” நீயோ, தன் கணவனையும், தன் பிள்ளைகளையும் வெறுத்த உன் தாய்க்கு உண்மையான மகள். நீ தங்கள் கணவர்களையும் தங்கள் பிள்ளைகளையும் வெறுத்த உன் சகோதரிகளுக்கு உண்மைச் சகோதரியுமாய் இருக்கிறாய். உன் தாயோ ஏத்திய பெண். உன் தந்தையோ எமோரியன். உன் வடபுறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சமாரியா உன் அக்காள். உன் தென்புறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சோதோம் உன் தங்கை. நீ அவர்களுடைய இழிவான செயல்களைப் பின்பற்றி, அவர்களுடைய வழியில் நடந்ததுமன்றி, உன் எல்லா வழிகளிலும் அவர்களைவிடவும் மோசமாக நீ நடந்தாய். யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன் மகள்களும் செய்ததை, உனது சகோதரியாகிய சோதோமும், அவள் மகள்களுங்கூட செய்யவில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘உன் சகோதரியாகிய சோதோமின் பாவம் இதுவே: அவளும் அவள் மகள்களும் அகந்தையுள்ளவர்களும் மிதமிஞ்சி சாப்பிட்டு, இரக்கம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் உதவிசெய்யவில்லை. அவர்கள் அகந்தைகொண்டு எனக்கு முன்பாக அருவருப்பான செயல்களைச் செய்தார்கள். ஆகையால் நான் அவர்களை அழித்தேன். நீ அதைக் கண்டாய். நீ செய்த பாவங்களில் பாதியையேனும் சமாரியா செய்யவில்லை. அவர்கள் அருவருப்பான செயல்களை நீ செய்தாய். நீ செய்த இவை எல்லாவற்றினாலும் உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தாய். உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காண்பிப்பதற்கு உன் செயல்கள் இடமளித்துள்ளதால், உன் அவமானத்தை நீயே சுமந்துகொள். ஏனெனில், உனது பாவங்கள் அவர்களின் பாவங்களைவிட மிகவும் கேவலமானவை. அவர்களோ உன்னைப் பார்க்கிலும் நீதியுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆகவே நீ உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தபடியால், நீ வெட்கப்பட்டு உன் அவமானத்தை சுமந்துகொள்.
“ ‘ஆயினும், ஒரு நாள் நான் சோதோம் மற்றும் அவளுடைய மகள்களுக்கும், சமாரியா மற்றும் அவளுடைய மகள்களுக்கும் செல்வச் சிறப்பைத் திரும்பவும் கொடுப்பேன். அதோடு உனது செல்வச் சிறப்பையும் நான் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். இதனால், அப்பொழுது நீ உன் சகோதரிகளை ஆறுதலடையப் பண்ணின, உன் செயல்கள் காரணமாக உன் அவமானத்தைச் சுமந்து வெட்கமடைவாய். உன் சகோதரிகளான சோதோமும் சமாரியாவும் அவர்களுடைய மகள்களுடன் தங்களுடைய முந்திய நிலைக்குத் திரும்புவார்கள். நீயும் உன் மகள்களும் முந்திய நிலைக்குத் திரும்புவீர்கள். நீ மேட்டிமைகொண்டிருந்த நாளில், உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உச்சரிக்கக்கூட நீ விரும்பவில்லை. அவ்வேளையில் உன் கொடுமைகள் வெளியரங்கமாகவில்லை. அவ்வாறிருந்தும், இப்பொழுதோ நீ ஏதோமின் மகள்களாலும் அவளுடைய அயலாராலும், பெலிஸ்தியரின் மகள்களாலும் கேலி செய்யப்படுகிறாய். உன்னைச்சூழ இருக்கிறவர்கள் உன்னை அவமதிக்கிறார்கள். நீ உன் இழிவானதையும், உன் அருவருப்புகளையும் சுமப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீ என் உடன்படிக்கையை முறித்து என் ஆணையை அசட்டை செய்தபடியினால், அதற்குத் தக்கவாறே நானும் உனக்குச் செய்வேன். இருப்பினும் நான் உன் வாலிப நாட்களில் உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நான் உன்னுடன் ஒரு புது உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். அது நித்தியமானது. உனக்கு தமக்கையும் தங்கையுமாகிய உனது சகோதரிகளை நீ ஏற்றுக்கொள்ளும்போது, உன் நடத்தைகளை எண்ணி வெட்கமடைவாய். நான் அவர்களை உனக்கு மகள்களாகக் கொடுப்பேன். ஆனால் நான் ஏற்கெனவே உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி அல்ல. நான் உன்னோடு புது உடன்படிக்கையைச் செய்வேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய். மேலும் நீ செய்த அனைத்திற்காகவும் நான் உனக்காக பாவநிவிர்த்தி செய்யும்போது, நீ அதை நினைவுகூர்ந்து வெட்கமடைவாய். நீ அவமானப்படுத்தப்பட்டதனால், இனியொருபோதும் உன் வாயைத் திறக்கமாட்டாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றார்.’ ”
கழுகுகளும் திராட்சையும்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, ஒரு விடுகதையை ஆயத்தப்படுத்தி, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு உவமையைச் சொல் நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஒரு பெரிய கழுகு லெபனோனுக்கு வந்தது. அது பெரிய இறகுகளையும், நீண்ட இறகுகளையும், பலவர்ணமுள்ள அடர்ந்த இறகுகளையும் உடையதாய் இருந்தது. அது ஒரு கேதுருமரத்தின் உச்சிக்கிளையைப் பிடித்தது. அது அந்த உச்சியிலுள்ள தளிரைக் கொய்து, வர்த்தகர்களின் நாடொன்றுக்குக் கொண்டுபோய் வியாபாரிகளின் பட்டணமொன்றில் அதை நாட்டியது.
“ ‘அத்துடன் அது உன் நாட்டின் விதைகள் சிலவற்றையும் எடுத்து, வளமிக்க நிலத்தில் விதைத்தது. அதை மிகுந்த தண்ணீரின் ஓரமாய் ஒரு புன்னை மரக்கன்றைப்போல் நாட்டியது. அது துளிர்த்து, தாழ்ந்து படரும் திராட்சைக்கொடியாகியது. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேராகத் திரும்பின. அதன் வேர்கள் கீழ்நோக்கிப் போனது. இவ்விதமாய் அது ஒரு திராட்சைக்கொடியாகி கிளைகளைவிட்டுச் செழிப்பான கொப்புகளைப் படரவிட்டது.
“ ‘ஆனால் பெரிய இறகுகளையும், அடர்த்தியான இறகுகளையும் கொண்ட வேறொரு பெரிய கழுகும் அங்கே வந்தது. அப்பொழுது இந்தத் திராட்சைச்கொடி, தான் நாட்டப்பட்ட இடத்திலிருந்து, இந்தக் கழுகுக்கு நேராகத் தன் வேர்களைத் திருப்பிவிட்டது. தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும்படி அக்கழுகை நோக்கித் தன் கிளைகளையும் படரவிட்டது. அந்தத் திராட்சைக்கொடி கிளைகளைப் பரப்பி, ஒரு சிறந்த திராட்சைக் கொடியாக வளர்ந்து பழம் தரும்படி, அந்த முதலாம் கழுகினால் அதிக தண்ணீர் அருகே நல்ல நிலத்தில் நாட்டப்பட்டிருந்தது அப்படியிருந்தும் அது இரண்டாம் கழுகை நோக்கிச்சென்றது.’
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அந்தக் கொடி செழிக்குமோ? அது வேரோடு பிடுங்கப்பட்டு, பழங்களும் முழுவதும் உதிர்த்தப்பட்டு அது பட்டுப்போகாதோ? அதின் இளந்தளிர்கள் எல்லாமே வாடிப்போகும். அதை வேரோடு பிடுங்குவதற்கு பலத்த கைகளோ அதிக ஆட்களோ அவசியமில்லை. அது இடம் பெயர்த்து திரும்பவும் நாட்டப்பட்டாலும் செழிக்குமோ? கீழ்க்காற்று அதின்மேல் வீசும்போது அது முழுமையாகப் பட்டுப்போகாதோ?’ ” அது நன்றாய் வளர்ந்த இடத்திலேயே அது பட்டுப்போகுமே என்கிறார்.
பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “இக்காரியங்கள் எவைகளைக் குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘என இக்கலகம் செய்யும் குடும்பத்தாரிடம் கேள்.’ மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘பாபிலோனிய அரசன் எருசலேமுக்குப் போய் அதன் அரசனையும் உயர்குடி மக்களையும் தன்னுடனேகூட பாபிலோனுக்குக் கொண்டுவந்தான். பின்பு பாபிலோனிய அரசன் அரச குடும்பத்திலிருந்து சிதேக்கியாவை அரசனாகத் தெரிந்துகொண்டு, அவனோடு உடன்படிக்கைச்செய்து, சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆனால் நாட்டின் தலைவர்களையோ அவன் தன்னோடு கொண்டுபோனான். இஸ்ரயேல் மீண்டும் எழும்பாதபடி வலிமை குறையவும், அவனுடைய உடன்படிக்கை மட்டும் கைக்கொள்ளப்பட்டு நிலைத்திருக்கவுமே அவ்வாறு செய்தான். ஆனால் சிதேக்கியா அரசனோ குதிரைகளையும் ஒரு பெரிய படையையும் பெறுவதற்காக தனது தூதுவர்களை எகிப்திற்கு அனுப்பினான். இவ்விதம் இவன் பாபிலோனுக்கு விரோதமாய்க் கலகம் செய்தான். அவனுக்கு வெற்றி கிடைக்குமோ? இத்தகைய காரியங்களைச் செய்கிறவன் தப்புவானோ? உடன்படிக்கையை முறித்துக்கொண்ட பின்பு அவன் தப்பிக்கொள்வானோ?
“ ‘இல்லையே தன்னை அரசனாக்கிய பாபிலோன் அரசனுடைய சத்தியத்தை அவமதித்து, அவனுடைய உடன்படிக்கையையும் முறித்துப்போட்டானே. எனவே சிதேக்கியா அந்த அரசனின் நாடாகிய பாபிலோனிலேயே மரணமடைவான். நான் வாழ்வது நிச்சயம்போலவே இவ்வாறு நடப்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அநேக உயிர்களை அழிக்கும்படி எருசலேமுக்கெதிராக முற்றுகைகளும், அரண்களும், கொத்தளங்களும், அமைக்கப்படும்போது, பார்வோனும், அவனுடைய பெரும் படைகளும், அவனுடைய மக்கள் திரளும் யுத்தத்தில் சிதேக்கியாவுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். அவன் உடன்படிக்கையை மீறி, சத்தியத்தை அசட்டை செய்துவிட்டான். கைகொடுத்து ஆணையிட்டிருந்தும், அவன் இக்காரியங்களைச் செய்தபடியால் தப்பவேமாட்டான்.
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, அவன் உதாசீனம் செய்த என் சத்தியத்தையும், அவன் மீறிய என் உடன்படிக்கையையும் நான் அவன் தலைமீது வரப்பண்ணுவேன் என்பதும் நிச்சயம். நான் என் வலையை அவனுக்கு விரிப்பேன். அவன் என் கண்ணியில் அகப்படுவான், நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுவந்து, அவன் எனக்கு உண்மையற்றவனாய் நடந்ததினிமித்தம் அவனுக்குத் தண்டனை கொடுப்பேன். பயந்து ஓடும் அவனுடைய படையினர் அனைவரும் வாளினால் மடிவார்கள். மீதியாய் இருப்பவர்கள் திசையெங்கும் சிதறடிக்கப்படுவார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே பேசினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கேதுருமரத்தின் உச்சியிலிருந்து நானே ஒரு துளிரை எடுத்து அதை நாட்டுவேன். அதனுடைய நுனியிலிருக்கும் துளிர்களிலிருந்து இளங்கிளை ஒன்றை முறித்து அதை உயர்ந்ததும் கம்பீரமானதுமான மலையொன்றில் நாட்டுவேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும். அப்பொழுது உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயரமாய் வளரப்பண்ணுகிறவர் யெகோவாவாகிய நானே என்பதை வெளியின் மரங்களெல்லாம் அறிந்துகொள்ளும். பச்சை மரத்தைப் பட்டுப்போகப்பண்ணுகிறவரும், பட்டுப்போனதைத் தளைக்கப்பண்ணுகிறவரும் யெகோவாவாகிய நானே என்பதையும் அவை அறிந்துகொள்ளும்.
“ ‘யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்வேன்,’ ” என்றார்.
பாவம் செய்கிற ஆத்துமா சாகும்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது,
“ ‘தந்தையர் திராட்சைக் காய்களைத் தின்ன பிள்ளைகளின் பற்கள் கூசியது:
என்று இஸ்ரயேல் நாட்டைக்குறித்து,
நீங்கள் சொல்லும் பழமொழியின் அர்த்தம் என்ன’?
“நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் இனிமேல் இப்பழமொழியை இஸ்ரயேலில் சொல்லப்போவதில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். ஏனெனில் வாழ்கின்ற ஆத்துமா ஒவ்வொன்றும் என்னுடையதே, தகப்பனும், மகனும் இருவரும் ஒரேவிதமாய் எனக்குரியவர்களே; பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.
“நீதியையும் நியாயத்தையும் செய்யும்
நீதியுள்ள மனிதனொருவன் இருப்பானாகில்,
அவன் மலைகளிலுள்ள சிறு கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடாமலும்,
இஸ்ரயேல் வீட்டாரின் விக்கிரகங்களை நம்பாமலும் இருப்பான்.
அவன் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,
மாதவிடாய்க் காலங்களில் பெண்ணுடன் உறவுகொள்ளாமலும் இருப்பான்.
அவன் ஒருவரையும் ஒடுக்காமல்
கடனுக்காய்ப் பெற்ற அடைமானத்தைத் திரும்பக்கொடுப்பான்.
அவன் கொள்ளையிடமாட்டான்.
ஆனால் அவன் பசியுடையோருக்கு உணவும்,
உடையில்லாதோருக்கு உடையும் கொடுப்பான்.
அவன் பணத்தை அதிக வட்டிக்குக் கொடுக்கமாட்டான்.
அவன் அதிக இலாபம் பெறவும் மாட்டான்.
தனது கையைத் தவறு செய்வதிலிருந்து விலக்கி,
இரண்டு குழுக்களுக்கு இடையில் நீதியாய் நியாயந்தீர்ப்பான்.
அவன் என்னுடைய கட்டளைகளைப் பின்பற்றி,
என்னுடைய சட்டங்களை உண்மையாய்க் கடைப்பிடிப்பான்.
அப்படிப்பட்ட மனிதனே நேர்மையானவன்.
அவன் நிச்சயமாய் வாழ்வான்
என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆனால் அவனுக்கு வன்முறை செய்யும் ஒரு மகன் இருந்து, அவன் இரத்தம் சிந்துகிறவனாயோ, நல்லதல்லாத காரியங்களில் எதிலாவது ஈடுபடுகிறவனாயோ, அவனுடைய தகப்பன் செய்யாத எதையாவது செய்கிறவனாயோ இருந்தால்,
“அவன் மலைக்கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறவன்.
அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறவன்.
அவன் ஏழையையும் வறியோரையும் ஒடுக்குகிறவன்.
அவன் கொள்ளையடிக்கிறவன்.
அவன் அடைமானமாக வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதில்லை.
விக்கிரகங்களில் நம்பிக்கை வைக்கிறவன்.
அவன் அருவருப்பானவைகளைச் செய்கிறவன்.
அவன் அதிக வட்டிக்குக் கடன்கொடுத்து,
அப்படிப்பட்ட மனிதன் உயிர்வாழ்வானோ? அவன் வாழவேமாட்டான். ஏனெனில் இந்த அருவருப்புகளையெல்லாம் அவன் செய்கிறான் அல்லவா? நிச்சயமாக அவன் கொல்லப்படுவான். அவனுடைய இரத்தப்பழி அவன் தலையிலேயே இருக்கும்.
“ஆனால் இந்த மகனுக்கும் ஒரு மகன் இருந்து, அவன் தன் தகப்பன் செய்யும் பாவங்களையெல்லாம் கண்டு, தான் அத்தகைய காரியங்களைச் செய்யாமல் இருப்பானாகில், அதாவது:
“அவன் மலைக்கோவில்களில் படைக்கப்பட்டதைச் சாப்பிடுவதோ,
இஸ்ரயேல் வீட்டாரின் விக்கிரகங்களை நம்புவதோ இல்லை.
அவன் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துவதுமில்லை.
அவன் ஒருவனையும் ஒடுக்குவதும்,
கடனுக்காய் அடைமானம் கேட்பதும் இல்லை.
அவன் கொள்ளையிடுவதில்லை.
ஆனால் பசியாயிருப்போருக்கு உணவும்,
உடையற்றோருக்கு உடையும் கொடுக்கிறான்.
சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தனது கையை, விலக்கிக்கொள்கிறான்.
அவன் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்காமலும்,
அதிக இலாபத்தை வாங்காமலும் இருக்கிறான்.
அவன் என் சட்டங்களைக் கைக்கொண்டு, என் விதிமுறைகளைப் பின்பற்றுகிறான்.
அவன் தன் தகப்பனின் பாவத்திற்காகச் சாகமாட்டான்; நிச்சயமாக உயிர்வாழ்வான். ஆனால் அவன் தகப்பனோ தன் சொந்தப் பாவங்களின் நிமித்தம் மரிப்பான். ஏனெனில் அவன் நீதியற்ற வழியில் சம்பாதித்து, தன் சகோதரரைக் கொள்ளையிட்டு தன் மக்கள் மத்தியில் நல்லதல்லாத காரியங்களைச் செய்தானே.
“என்றாலும் நீங்கள், ‘தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமப்பதில்லை?’ என்று கேட்கிறீர்கள், அந்த மகனோ நீதியான, நியாயமானவற்றைச் செய்து என் கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொள்ள கவனமாயிருந்தபடியால், நிச்சயமாக வாழ்வான். பாவம் செய்த ஆத்துமாவே சாகும். தந்தையின் குற்றத்தில் மகன் பங்குபெறமாட்டான். மகனின் குற்றத்தில் தகப்பனும் பங்குபெறமாட்டான். நீதியானவனுடைய நீதி அவனுக்குரியதாக எண்ணப்படும். கொடியவர்களின் கொடுமையோ அவர்களுக்கு விரோதமான குற்றமாக எண்ணப்படும்.
“ஆனாலும் கொடியவன் தான் செய்த எல்லா பாவங்களிலிருந்தும் திரும்பி, என்னுடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொண்டு, நீதியானதையும் சரியானதையும் செய்வானேயாகில் நிச்சயமாக அவன் வாழ்வான், அவன் சாகமாட்டான். அவன் செய்த குற்றங்களில் ஒன்றாகிலும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை. அவன் செய்த நீதியான காரியங்களின் நிமித்தம் அவன் வாழ்வான். கொடியவர்களின் மரணத்தில் நான் மகிழ்ச்சியடைகிறவரோ? அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பி வாழும் போதல்லவா நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆனால் நீதிமான் ஒருவன் தன் நீதியிலிருந்து விலகி, பாவம் செய்து, கொடியவன் செய்வது போன்ற அருவருப்பான அதே காரியங்களையும் செய்வானேயாகில் அவன் பிழைப்பானோ? அவன் செய்த நீதியான காரியங்கள் எதுவுமே நினைக்கப்படுவதில்லை. உண்மையற்றவனாய் இருப்பதன் நிமித்தம் அவன் குற்றவாளியாயிருக்கிறான். அவன் தான் செய்த பாவங்களினிமித்தம் மரிப்பான்.
“என்றாலும் நீங்கள், ‘யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறீர்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே கேளுங்கள்; எனது வழி நீதியற்றதோ? உங்கள் வழிகள் அல்லவோ நீதியற்றவை. நீதிமான் ஒருவன் தன் நீதியைவிட்டு விலகி பாவம் செய்வானாகில், அதன் நிமித்தம் அவன் மரிப்பான். அவன் செய்த பாவத்திற்காகவே அவன் மரிப்பான். ஆனால், கொடியவனொருவன் தான் செய்த கொடுமையை விட்டு விலகி, நீதியானதையும் செய்வானாகில் அவன் தன் உயிரைக் காத்துக்கொள்வான். அவன் தான் செய்த எல்லா குற்றங்களையும் சிந்தித்து அவைகளை விட்டுத் திரும்புவதால் நிச்சயமாக அவன் பிழைப்பான். அவன் சாகமாட்டான். அப்படியிருந்தபோதிலும், ‘யெகோவாவின் வழி நீதியற்றது என்று இஸ்ரயேல் குடும்பத்தார் கூறுகிறார்களே,’ என் வழிகள் நீதியற்றவைகளோ? இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் வழிகள் அல்லவோ நீதியற்றவை.
“ஆகையால், இஸ்ரயேல் குடும்பத்தாரே, நான் உங்கள் ஒவ்வொருவரையும் அவரவர் வழிகளுக்குத்தக்கபடி நியாயந்தீர்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார். மனந்திரும்புங்கள்! உங்கள் குற்றங்கள் எல்லாவற்றிலிருந்தும் திரும்புங்கள். அப்பொழுது பாவம் உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாயிராது. நீங்கள் செய்த குற்றங்கள் அனைத்தையும் உங்களைவிட்டு அகற்றிவிட்டு புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? யாருடைய மரணத்திலும் நான் மகிழ்ச்சியடைவதில்லை. மனந்திரும்பி வாழுங்கள் என்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.
இஸ்ரயேலரின் இளவரசர்களுக்கான புலம்பல்
“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு. நீ சொல்லவேண்டியதாவது:
“ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய்
ஒரு பெண்சிங்கமாயிருந்தாள்.
அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில்
படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள்.
தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள்.
அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான்.
அவன் இரையைக் கிழிக்கப்பழகி
மனிதர்களை விழுங்கினான்.
நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது,
அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான்.
அவர்கள் அவனை விலங்கிட்டு
எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும்,
தன் எதிர்பார்ப்பு சிதைந்தது
என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது,
தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
அது இப்பொழுது பாலசிங்கமானதால்,
சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது.
அது இரையைக் கிழிக்கப்பழகி
மனிதரை விழுங்கியது.
அவர்களுடைய அரண்களை நொறுக்கி,
நகரங்களை அழித்தது.
நாடும் அதிலுள்ள அனைவரும்
அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள்.
அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள்,
அதை எதிர்த்து வந்தன.
அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது,
அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது.
அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு,
பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று
அங்கே சிறையிட்டார்கள்.
எனவே இஸ்ரயேலின் மலைகளில்
அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை.
“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில்
தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்!
தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால்
கிளைகள் செழித்து பழங்களும் பெருகின.
அதன் கிளை உறுதியாய் இருந்ததினால்
அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று.
அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது.
தன் உயரத்தாலும்,
பல கிளைகளாலும்
அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
ஆனால், அந்தத் திராட்சைக்கொடி
கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத்
தரையில் எறியப்பட்டது.
கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன.
அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின.
நெருப்பு அவைகளை எரித்தது.
இப்பொழுது அது வறண்ட வளமற்ற
பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது.
முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி,
அதன் பழத்தைச் சுட்டெரித்தது.
அரச செங்கோலுக்குத் தகுதிபெற
இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’
இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.”
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்படுதல்
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஏழாம் வருடத்தின் ஐந்தாம் மாதம், பத்தாம் தேதியிலே இஸ்ரயேலின் முதியோர் சிலர் யெகோவாவினிடத்தில் விசாரித்து அறியும்படி என்னிடம் வந்து, என் முன்னால் உட்கார்ந்தார்கள்.
அப்பொழுது, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேலின் முதியோரிடம் நீ பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தீர்களோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம்’ என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.
“நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? மனுபுத்திரனே! நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? அப்படியானால் நீ அவர்கள் தந்தையருடைய அருவருப்பான பழக்கங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்த நாளிலே, நான் என் உயர்த்திய கையுடன் யாக்கோபின் சந்ததிகளுக்கு ஆணையிட்டு, எகிப்திலே என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் என் உயர்த்திய கையுடன், “நானே உங்கள் இறைவனாகிய யெகோவா” என்று சொன்னேன். அந்த நாளிலே நான் அவர்களை, எகிப்திலிருந்து அவர்களுக்கென நான் தெரிந்துகொண்ட நாட்டிற்கு கொண்டுவருவேன் என்று ஆணையிட்டேன். அது நாடுகளிலெல்லாம் அழகானதும், பாலும் தேனும் வழிந்தோடுகிறதுமான நாடு. அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கிவிடுங்கள். எகிப்தின் விக்கிரகங்களால் உங்களை கறைப்படுத்தாதிருங்கள். உங்கள் ஆண்டவராகிய யெகோவா நானே” என்றும் கூறினேன்.
“ ‘ஆனால், அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி,’ எனக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். தங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கவுமில்லை. எகிப்தின் விக்கிரகங்களை கைவிடவுமில்லை. ஆதலால் நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்கள்மீது எனக்குள்ள கோபத்தை எகிப்தில் தீர்த்துக்கொள்வேன் என்று சொன்னேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். ஆகவே நான் அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்தி அங்கிருந்து பாலைவனத்திற்குக் கொண்டுவந்தேன். நான் என் விதிமுறைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் சட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஏனெனில் அவைகளுக்குக் கீழப்படிகிறவன் அவைகளால் வாழ்வான். மேலும் எங்களுக்கு இடையில் ஒரு அடையாளமாக இருப்பதற்கு எனது ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இவ்விதம் தங்களைப் பரிசுத்தமாக்கிய யெகோவா நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று எண்ணினேன்.
“ ‘ஆனாலும் இஸ்ரயேலர் பாலைவனத்திலே எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள். எனது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான் என்றிருந்தபோதிலும், அவர்கள் அவைகளைப் பின்பற்றாமல், என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அத்துடன் அவர்கள் என் ஓய்வுநாட்களின் தூய்மையை முழுவதும் கெடுத்தார்கள். எனவே நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் அவர்களை தண்டிப்பேன் என்றேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த நாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி, தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். அத்துடன் அவர்களுக்கு நான் கொடுத்திருந்த பாலும் தேனும் வழிந்தோடுகிறதும், எல்லா நாடுகளிலும் மிக அழகு வாய்ந்ததுமான அந்த நாட்டிற்கு அவர்களைக் கொண்டுவரமாட்டேன் என பாலைவனத்தில் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டேன். ஏனெனில் அவர்கள் என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அவர்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களின் இருதயங்களோ விக்கிரகங்களையே சார்ந்திருந்தன. அப்படியிருந்தும் நான் அவர்களை தயவுடன் கண்ணோக்கினேன். நான் அவர்களை அழிக்கவுமில்லை, பாலைவனத்திலே அவர்களுக்கு முடிவுண்டாக்கவுமில்லை. பாலைவனத்தில் நான் அவர்களின் பிள்ளைகளிடம், நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் விதிமுறைகளைப் பின்பற்றவோ, அவர்களுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கவோ, “அவர்களுடைய விக்கிரகங்களால் உங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவோ வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; என் விதிமுறைகளைப் பின்பற்றி என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். எனது ஓய்வுநாட்கள் எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு அடையாளமாயிருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தமாய்க் கடைப்பிடியுங்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றேன்.
“ ‘ஆயினும் அவர்களுடைய பிள்ளைகளும் எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள், “அவைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான்; என்றிருந்தபோதிலும் அவர்கள் என் நியமங்களைக் கைக்கொள்ளவுமில்லை, எனது சட்டங்களைக் கைக்கொள்ள கவனம் எடுக்கவுமில்லை. அத்துடன் அவர்கள் என்னுடைய ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். ஆகையால் நான் என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் எனது கோபத்தை அவர்கள்மேல் தீர்த்துக்கொள்ளுவேன்” என்றேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். மேலும் நான் அவர்களைப் பல நாடுகளுக்குள் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே பரவவிடுவேன் என்று, என் உயர்த்திய கையுடன் பாலைவனத்தில் நானே அவர்களுக்கு ஆணையிட்டேன். ஏனெனில் அவர்கள் என் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல், என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களுடைய தந்தையர் வழிபட்ட உருவச்சிலைகளை இச்சித்தன. மேலும் நான் அவர்களைப் பலவித நல்லதல்லாத விதிமுறைகளுக்கும், வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாத சட்டங்களுக்கும் ஒப்புக்கொடுத்தேன். தங்கள் முதற்பேறுகள் ஒவ்வொருவரையும் பலியாகக் கொடுப்பதன் மூலம், தாங்கள் தங்களையே கறைப்படுத்த நான் இடமளித்தேன். இவ்விதம் நான் அவர்களைப் பயங்கரத்தால் நிரப்பினேன். இவ்வாறு நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்தேன்.’
“ஆகையால், மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; உங்கள் தந்தையர் தொடர்ந்து என்னைக் கைவிட்டு என்னை நிந்தித்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட இந்த நாட்டுக்கு நான் அவர்களைக் கொண்டுவந்தபோது, அவர்கள் எங்கேயாவது உயர்ந்த மலையையோ, செழுமையான மரத்தையோ கண்டவுடன், அங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். தங்கள் காணிக்கைகளைப் படைத்து எனக்குக் கோபமூட்டினார்கள். நறுமண தூபங்களையும் பானபலிகளையும் அங்கே செலுத்தினார்கள். அப்பொழுது நான் அவர்களிடம் நீங்கள் போகும் அந்த வழிபாட்டு மேடு என்ன?’ ” என்று கேட்டேன். அது இந்நாள்வரைக்கும் பாமா20:29 பாமா என்பது தொழுகைமேடு என்று அர்த்தம். எனப்படுகிறது.
தண்டனையும் மீட்டெடுப்பும்
“ஆகையால், நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே,’ உங்களைக் கறைப்படுத்துவீர்களோ? அவர்களுடைய இழிவான உருவச் சிலைகளில் ஆசைகொண்டு வணங்குவீர்களோ? நீங்கள் உங்கள் மகன்களை நெருப்பில் பலியிட்டு, உங்கள் காணிக்கைகளைச் செலுத்துவதனால், நீங்களே தொடர்ந்து உங்களைக் கறைப்படுத்தி வருகிறீர்கள். அப்படியிருக்க இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் என்னிடம் விசாரித்துக் கேட்பதற்கு நான் இடமளிக்க வேண்டுமோ? உதவிசெய்ய வேண்டுமோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் விசாரிக்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘ “மரத்திற்கும், கல்லுக்கும் பணிசெய்யும் நாடுகளைப்போலவும், உலகத்தின் மக்கள் கூட்டங்களைப்போலவும் நாங்களும் இருக்க விரும்புகிறோம்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதிலுள்ளவைகள் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. நான் வாழ்வது நிச்சயம்போலவே, வல்லமையுள்ள கரத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், ஊற்றப்படும் கடுங்கோபத்தினாலும், நான் உங்களை ஆளுகை செய்வேன் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நாடுகளின் மத்தியிலிருந்தும், நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன். வல்லமையுள்ள கரத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், ஊற்றப்படும் கடுங்கோபத்தினாலும், நான் இதைச் செய்வேன். நான் உங்களை நாடுகளின் பாலைவனத்திற்குக் கொண்டுவந்து, அங்கே முகமுகமாய் நியாயந்தீர்பேன். எகிப்திய பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களை நான் நியாயம் தீர்த்ததுபோலவே, உங்களையும் நியாயந்தீர்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஒரு மேய்ப்பனைப்போல என் கோலின்கீழ் நீங்கள் நடப்பதை நான் கவனித்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டுவருவேன். எனக்கு விரோதமாய் கலகம் செய்வோரையும் துரோகம் செய்வோரையும் உங்களைவிட்டு விலக்குவேன். அவர்கள் வாழும் நாட்டைவிட்டு அவர்களை நான் வெளியே கொண்டுவந்தாலும், அவர்கள் இஸ்ரயேல் நாட்டுக்குள் போகமாட்டார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
“ ‘இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களுக்கோ ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நீங்கள் எனக்குச் செவிகொடாவிட்டால் போங்கள், நீங்கள் ஒவ்வொருவரும்போய் உங்கள் விக்கிரகங்களுக்குப் பணிசெய்யுங்கள். ஆனாலும், அதன்பின்பு உங்கள் கொடைகளினாலும், விக்கிரகங்களினாலும் இனியொருபோதும் என் பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்க வேண்டாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் எனக்குச் செவிகொடுப்பீர்கள். இஸ்ரயேலின் உயர்ந்த மலையாகிய என் பரிசுத்த மலையிலே, இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவருமே தங்கள் நாட்டில் எனக்குப் பணிசெய்வார்கள். அங்கே நான் அவர்களை ஏற்றுக்கொள்வேன். அங்கே நான் உங்கள் பரிசுத்த பலிகளோடு உங்கள் காணிக்கைகளையும், உங்கள் நன்கொடைகளையும் எதிர்பார்த்திருப்பேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நாடுகளிலிருந்து நான் உங்களைக் கொண்டுவந்து, நீங்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து உங்களை ஒன்றுசேர்க்கும்போது, நான் உங்களை நறுமண தூபமாக ஏற்றுக்கொள்வேன். நாடுகளின் முன்னிலையில் உங்கள் மத்தியிலே என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன். உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவதாக என் உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாடான, இஸ்ரயேல் நாட்டிற்கு நான் உங்களைக் கொண்டுவரும்போது, நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள். அங்கே உங்கள் நடத்தையையும், உங்களை நீங்களே கறைப்படுத்திக்கொண்ட உங்கள் செயல்கள் எல்லாவற்றையும் நினைத்து, நீங்கள் செய்த எல்லாத் தீமைகளுக்காகவும் உங்களை நீங்களே அருவருத்துக்கொள்வீர்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே! நான் உங்கள் தீயவழிகளுக்கும், இழிவான நடத்தைகளுக்கும் ஏற்றபடியல்ல; என் பெயருக்கேற்பவே உங்களோடு நடந்துகொள்வேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ ” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
தென்பகுதிக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, உன் முகத்தை தெற்கு நோக்கித் திருப்பு. தெற்குப்பகுதிக்கு விரோதமாய்ப் பிரசங்கித்து தென்தேசக் காட்டுக்கு விரோதமாய் இறைவாக்கு உரை. தென்திசை காட்டிற்கு நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் உங்களுக்கு நெருப்பு மூட்டப்போகிறேன். அது காய்ந்ததும் பச்சையுமான உங்கள் எல்லா மரங்களையும் எரிக்கும். அந்த எரியும் ஜூவாலை அணைக்கப்படமாட்டாது. அதனால், தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள எல்லா முகங்களும் கருகிப்போகும். யெகோவாவாகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை ஒவ்வொருவரும் காண்பார்கள். அது அணைக்கப்படமாட்டாது என யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்’ ” என்றார்.
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, ‘எப்பொழுதும் இவன் பழமொழிகளையல்லவா சொல்கிறான்’ என இவர்கள் என்னைக்குறித்து சொல்கிறார்களே என்றேன்.”
பாபிலோன் என்னும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வாள்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமிற்கு எதிராகத் திருப்பி, பரிசுத்த இடத்திற்கு விரோதமாய்ப் பிரசங்கி. இஸ்ரயேல் நாட்டிற்கு விரோதமாய் இறைவாக்கு சொல்லுங்கள். நீ அவளுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நான் என் வாளை உறையிலிருந்து உருவி நேர்மையானவன் கொடியவன் ஆகிய இருவரையுமே உன்னிலிருந்து அகற்றுவேன். நீதியானவனையும் கொடியவனையும் நான் அகற்றப்போவதால், தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள ஒவ்வொருவனுக்கும் விரோதமாய் என் வாள் அதன் உறையிலிருந்து வெளியே உருவப்படும். அப்பொழுது எனது வாளை அதன் உறையிலிருந்து உருவியவர் யெகோவாவாகிய நானே என்பதையும், அது மீண்டும் உறைக்குத் திரும்பமாட்டாது என்பதையும் மக்களெல்லோரும் அறிந்துகொள்வார்கள்.’
“ஆகையால் மனுபுத்திரனே, துக்கித்து அழு. உடைந்த உள்ளத்தோடும் கசப்பான துயரத்தோடும் அவர்களுக்கு முன்பாக அழு. ‘ஏன் அழுகிறாய்?’ என அவர்கள் உன்னைக் கேட்கும்போது, ‘வரப்போகும் செய்திக்காகவே அழுகிறேன். ஒவ்வொரு இருதயமும் உருகும். ஒவ்வொரு கையும் சோர்ந்துபோகும். ஒவ்வொரு ஆவியும் மயங்கும். ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப்போல் ஆகும்.’ அது வருகிறது, நிச்சயமாகவே அது நடக்கும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்.”
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே:
“ ‘ஒரு வாள், அது கூர்மையானதும்,
துலக்கப்பட்டதுமான ஒரு வாள்.
அது படுகொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.
மின்னல் ஒளிவீச துலக்கப்பட்டது.
“ ‘என் மகன் யூதாவின் செங்கோலைக் குறித்து, நாம் மகிழ்வோமோ? அத்தகைய கோல் ஒவ்வொன்றையும் அவ்வாள் அலட்சியம்செய்கிறதே.
“ ‘துலக்கப்படுவதற்கும் கையால் பிடிப்பதற்கும்
அந்த வாள் நியமிக்கப்பட்டிருக்கிறது.
அது கூர்மையாக்கப்பட்டும், துலக்கப்பட்டும்
படுகொலைசெய்பவனின் கைக்குத் தயாராக இருக்கிறது.
மனுபுத்திரனே, அந்த வாள் என் மக்களுக்கு
விரோதமாக இருப்பதனால் அழுது புலம்பு;
அது இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் விரோதமாக இருக்கின்றது.
அவர்கள் என் மக்களோடுகூட,
வாளுக்கு இரையாக்கப்படுவார்கள்.
ஆதலால், உன் மார்பில் அடித்து அழு.
“ ‘நிச்சயமாகவே சோதனை வரும். வாளால் இகழப்பட்ட யூதாவின் செங்கோல் தொடராவிட்டால், என்ன நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா கேட்கிறார்.’
“ஆகையால், மனுபுத்திரனே நீ, இறைவாக்குரைத்து,
கைகளைத் தட்டு.
இரண்டுதரமோ மூன்றுதரமோ வாள் வீசப்படட்டும்.
அது எல்லாப் பக்கமும்
அவர்கள்மேல் வரும்
படுகொலையின் வாள்,
அது பெரும் படுகொலைக்கான வாள்,
இருதயங்கள் உருகி
அநேகர் விழும்படியாக,
அவர்கள் வாசல்களிலெல்லாம் படுகொலைக்காக
நான் வாளை நிலைப்படுத்தியுள்ளேன்.
அது துலக்கப்பட்டு மின்னல் கீற்றுப்போல் பாய்வதற்காகத் தீட்டப்பட்டு,
படுகொலைக்கு ஆயத்தமாகக் கையில் பிடிக்கப்பட்டுள்ளது.
வாளே! உன் வெட்டும் பகுதி எங்கு திரும்புகிறதோ,
அங்கு வலப்புறமாகவும்,
பின் இடப்புறமாகவும் வீசி வெட்டு.
நானும் என் கரத்தைத் தட்டுவேன்.
என் கடுங்கோபம் தணியும்.
யெகோவாவாகிய நானே இதைப் பேசினேன்.”
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம் “மனுபுத்திரனே, வரைபடம் ஒன்றை வரைந்து அதில் பாபிலோன் அரசனுடைய வாள் செல்ல இரண்டு வழிகளைக் குறித்துக்கொள். இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரட்டும். பட்டணத்தை நோக்கிப் பாதைகள் பிரியும் இடத்தில் கைகாட்டிக் கம்பம் ஒன்றை நிறுத்து. அம்மோனியரின் பட்டணமான ரப்பாவுக்கு எதிராக வாள் வரும்படி வழியொன்றைக் குறி. அரண்செய்யப்பட்ட எருசலேமுக்கும், யூதாவுக்கும் விரோதமாக வாள் வரும்படி வேறொரு வழியையும் குறி. வழி பிரியும் இடத்திலே, இருவழிச்சந்தியில் சகுனம் பார்ப்பதற்காக பாபிலோன் அரசன் நிற்பான். அவன் அம்புகளினால் சீட்டுப்போட்டு, தன் விக்கிரகங்களிடம், விசாரிப்பான். அவன் ஈரலிலே சகுனம் பார்ப்பான். எருசலேமுக்குரிய சீட்டு அவனுடைய வலதுகையில் வரும். அப்பொழுது அவன் இடிக்கும் இயந்திரங்களை நிலைப்படுத்தி, கொலை செய்யும்படி கட்டளை கொடுத்து, போர் முழக்கம் எழுப்பி, கருவிகளை வாசலுக்கெதிரே வைத்து, கொத்தளங்களைக் கட்டி முற்றுகைக்குரிய வேலைகளைச் செய்வான். உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம் என அவனுக்கு ஆணையிட்டவர்களுக்கு அது போலியான சகுனமாய்க் காணப்படும். ஆனால் அவர்களுடைய குற்றத்தை அவன் அவர்களுக்கு நினைவுப்படுத்தி, அவர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுபோவான்.
“ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘நீங்கள் செய்த அனைத்திலும், உங்கள் பாவங்களை வெளிப்படுத்தினீர்கள். வெளிப்படையாய் கலகம்செய்து, உங்கள் குற்றங்களை நினைவுபடுத்தினீர்கள். இதைச் செய்தபடியினால், நீங்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
“ ‘இஸ்ரயேலின் சீர்கெட்ட கொடிய இளவரசனே, உன் நாள் வந்துவிட்டது. உன் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் தலைப்பாகையை எடுத்துவிடு. உன் மகுடத்தை அகற்றிவிடு. அது முன்னர் இருந்ததுபோல் இனி இருக்கமாட்டாது. தாழ்ந்தவன் உயர்த்தப்படுவான், உயர்ந்தவன் தாழ்த்தப்படுவான். அழிவோ அழிவு! அதைப் பாழாக்குவேன். அதற்கு உரிமையானவர் வருமட்டும் அது திரும்பவும் நிலைநாட்டப்படுவதில்லை. அவருக்கே நான் அதைக் கொடுப்பேன்.’
“மனுபுத்திரனே, இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘அம்மோனியரையும் அவர்களுடைய நிந்தைகளையும் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘ஒரு வாள், ஒரு வாள்,
வெட்டுவதற்காக உருவப்பட்டிருக்கிறது.
அழிப்பதற்காக மின்னல் கீற்றுப்போல்
பாயும்படி அது துலக்கப்பட்டது.
உன்னைக்குறித்துப் பொய்யான தரிசனங்களும்,
பொய்யான குறிகளும் கூறப்பட்டபோதிலும்,
கொலைசெய்யப்பட வேண்டிய கொடியவர்களின்
கழுத்திலே அந்த வாள் வைக்கப்படும்.
அவர்களின் நாள் வந்துவிட்டது!
அவர்கள் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.
“ ‘வாளைத் திரும்பவும் அதன் உறையில் போடு.
நீ உருவாக்கப்பட்ட இடத்தில்,
உன் மூதாதையரின் நாட்டில்
நான் உன்னை நியாயம் விசாரிப்பேன்.
நான் எனது கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்.
உனக்கு விரோதமாய் என் சுட்டெரிக்கும் கோபத்தை ஊதுவேன்.
முரட்டு மனிதரிடமும் அழிப்பதில் வல்லவரான
மனிதரிடமும் நான் உன்னைக் கையளிப்பேன்.
நீ நெருப்புக்கு விறகாவாய்.
உனது நாட்டிலே உன் இரத்தம் சிந்தப்படும்.
இனிமேல் நீ நினைக்கப்படமாட்டாய்.
ஏனெனில் யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்றார்.’ ”
எருசலேமின் பாவங்கள் பற்றிய தீர்ப்பு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
“மனுபுத்திரனே, எருசலேமை நியாயந்தீர்ப்பாயோ? இரத்தம் சிந்தும் இந்த நகரத்தை நீ நியாயந்தீர்ப்பாயோ? அப்படியானால் அவளுடைய அருவருக்கத்தக்க செயல்கள் அனைத்தையும் நீ அவளுக்கு எடுத்துக்காட்டி, அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் மத்தியில் இரத்தம் சிந்துவதால் உனக்கே கேடு வரச்செய்து,’ விக்கிரகங்களை உண்டுபண்ணுவதால் உன்னையே கறைப்படுத்திக்கொள்ளும் நகரமே, நீ சிந்திய இரத்தத்தினால் குற்றமுள்ளவள் ஆனாய். நீ செய்த விக்கிரகங்களினால் கறைப்பட்டாய். நீ உன் நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாய். உன் வருடங்களுக்கும் முடிவு வந்துவிட்டது. ஆகவே, நான் உன்னை நாடுகளின் இழிவுபடுத்தும் பொருளாகவும், எல்லா நாடுகளுக்கும் உன்னைக் கேலிக்கு இடமாக்குவேன். பெயர் கெட்டுப்போன, கலகம் நிறைந்த நகரமே, உனக்கு அருகிலும் தொலைவிலும் உள்ளவர்கள் உன்னை கேலி செய்வார்கள்.
“ ‘உன்னிடத்தில் வாழும் இஸ்ரயேல் இளவரசன் ஒவ்வொருவனும், இரத்தம் சிந்துவதற்காகத் தன் வல்லமையை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்று பார்!’ உன்னிடத்தில் வாழும் மக்கள் தாய் தந்தையரை அவமதித்தார்கள். அயல்நாட்டினரை ஒடுக்கினார்கள். தந்தையற்றவனையும் விதவையையும் கேவலமாய் நடத்தினார்கள். எனது பரிசுத்த உடைமைகளை நீ அசட்டை செய்து, என் ஓய்வுநாட்களையும் தூய்மைக்கேடாக்கினாய். இரத்தம் சிந்தும் நோக்குடன் அவதூறு பேசுவோர் உன்னிடத்தில் உண்டு. மலைகளிலுள்ள வழிபாட்டிடங்களில் சாப்பிடுவோரும், இழிவான செயல்களில் ஈடுபடுவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். தங்கள் தந்தையின் மனைவிகளுடன் உடலுறவுகொண்டு, தந்தையரை அவமானப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். பெண்களின் மாதவிடாய் நேரத்தில், அவர்கள் சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருக்கையில், அவர்களைப் பலவந்தப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். ஒருவன் தன் அயலானின் மனைவியுடன் வெறுக்கத்தக்க குற்றம் புரிகிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளை வெட்கக்கேடாய் கறைப்படுத்துகிறான். இன்னொருவன் தன் சொந்தத் தகப்பனின் மகளாகிய தனது சகோதரியையே பலவந்தம்பண்ணுகிறான். இப்படியானவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள். இலஞ்சம் வாங்கி, இரத்தம் சிந்துகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். நீ அதிக வட்டி வாங்குகிறாய். அதிக இலாபத்தையும் நாடுகிறாய். உன் அயலானை வற்புறுத்தி அவனிடமிருந்து அநியாய இலாபத்தைப் பெறுகிறாய். என்னையும் மறந்துபோனாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘நீ அநீதியாய் இலாபம் சம்பாதித்த பொருட்களுக்காகவும், உன் மத்தியில் இரத்தம் சிந்தியமைக்காகவும் நான் சீற்றத்துடன் என் கரங்களைச் சேர்த்து அடிப்பேன். நான் உன்னைத் தண்டிக்கும் நாளிலே உன் தைரியம் நிலைத்திருக்குமோ? அல்லது உன் கைகள் பெலனாய் இருக்குமோ? யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். நானே இதைச் செய்வேன். நான் உன்னை நாடுகளுக்குள் சிதறுண்டு போகப்பண்ணுவேன். நாடுகளுக்குள்ள உன்னைச் சிதறடிப்பேன். உன் தூய்மையற்ற தன்மைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். பல நாடுகளின் பார்வையிலும் நீ கறைப்பட்டிருக்கும்போது, நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய்’ ” என்றார்.
பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேல் குடும்பத்தார் எனக்கு உலோகக் களிம்பாகிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் சூளையில் எஞ்சிய செம்பும், தகரமும், இரும்பும், ஈயமுமாயிருக்கிறார்கள். அவர்களோ வெள்ளியின் களிம்புகளே. ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, ‘நீங்களெல்லோரும் உலோகக் களிம்பாகிவிட்டதால், நான் உங்களை எருசலேமில் கூட்டிச்சேர்ப்பேன். வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தகரம் அனைத்தையும், ஜூவாலையில் எரியும் நெருப்பினால் உருக்குவதற்கென சூளைக்குள் சேர்ப்பதுபோல, நான் உங்களையும் சேர்ப்பேன். என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் நான் உங்களை நகரத்தினுள்ளே வைத்து உருக்குவேன். நான் உங்களைக் கூட்டிச்சேர்த்து, கோபமாகிய நெருப்பை உங்கள்மேல் ஊதுவேன். நீங்கள் எருசலேமுக்குள் உருக்கப்படுவீர்கள். சூளையில் வெள்ளி உருக்கப்படுவதுபோல், நீங்களும் எருசலேமுக்குள் உருக்கப்படுவீர்கள். அப்பொழுது, யெகோவாவாகிய நானே என் கடுங்கோபத்தை உங்கள்மேல் ஊற்றினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ ” என்றார்.
மறுபடியும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ நாட்டுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘நீயோ கடங்கோபத்தின் நாளிலே, தூய்மையாக்கப்படாத, மழை பெய்யாத நாடாக இருப்பாய்.’ அங்கே கர்ஜிக்கும் சிங்கமொன்று தன் இரையைக் கிழிப்பதுபோல, பட்டணத்தில் இருக்கும் இளவரசர்களுக்குள்ளேயே சதித்திட்டம் ஒன்றுண்டு. அவர்கள் மக்களை விழுங்குகிறார்கள். செல்வங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். அங்குள்ள அநேகரை விதவைகளாக்குகிறார்கள். அவளது ஆசாரியர்கள் என் சட்டங்களை மீறி, என் பரிசுத்த பொருட்களின் தூய்மையைக் கெடுக்கிறார்கள். அவர்கள் பரிசுத்தமானதற்கும் சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசம் காண்பதில்லை. சுத்தமானதற்கும், சுத்தமற்றதற்கும் இடையில் வித்தியாசம் இல்லையென போதிக்கிறார்கள். என் ஓய்வுநாட்களை கைக்கொள்வதில் கண்மூடித்தனமாய் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மத்தியில் நான் அவமதிக்கப்படுகிறேன். அங்கிருக்கும் அவளது அதிகாரிகள் தங்கள் இரைகளைக் கிழிக்கும் ஓநாய் போன்றவர்கள். அநீதியான இலாபம் பெறுவதற்காய் இரத்தம் சிந்தி மக்களைக் கொல்கிறார்கள். அவளது தீர்க்கதரிசிகள் உண்மையற்ற தரிசனங்களாலும், பொய்யான குறிகளாலும் இச்செயல்களுக்கு மேற்பூச்சுப் பூசுகிறார்கள். யெகோவா கூறாதிருக்க, ‘ஆண்டவராகிய யெகோவா கூறியது இது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். நாட்டு மக்களை பயமுறுத்தி பலவந்தம்பண்ணி பறிக்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். ஏழைகளையும், சிறுமைப்பட்டவர்களையும் ஒடுக்குகிறார்கள். அயல்நாட்டினரைத் துன்புறுத்தி அவர்களுக்கு நீதிசெய்ய மறுக்கிறார்கள்.
“நாட்டைப் பாதுகாக்கும் சுவரை கட்டுவதற்கும், நான் நாட்டை அழிக்காதபடி மதில் வெடிப்பில் நாட்டிற்காக நிற்பதற்கும், அவர்களுக்குள்ளே ஒரு மனிதனைத் தேடினேன். ஆனால் நான் ஒருவனையும் காணவில்லை. ஆகவே, நான் எனது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, என் பயங்கர கோபத்தால் அவர்களைச் சுட்டெரித்து அவர்கள் செய்த எல்லாவற்றையும், அவர்களுடைய தலைகளின் மேலே விழப்பண்ணுவேன். என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.”
இரண்டு விபசார சகோதரிகள்
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இரண்டு பெண்கள் இருந்தார்கள், அவர்கள் ஒரு தாயின் மகள்களாய் இருந்தார்கள். அவர்கள் தங்கள் இளவயதிலிருந்தே விபசாரம் செய்து எகிப்தில் விபசாரிகளானார்கள். அந்நாட்டில் அவர்களுடைய மார்பகங்கள் தடவப்பட்டன. அவர்களுடைய கன்னிமையான மார்பகங்கள் தொடப்பட்டது. மூத்தவள் பெயர் ஒகோலாள். அவள் தங்கையின் பெயர் ஒகோலிபாள். அவர்கள் என் மனைவிகள், அவர்கள் எனக்கு மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள். ஒகோலாள் என்பது சமாரியா. ஒகோலிபாள் என்பது எருசலேம்.
“ஒகோலாள் என்னுடையவளாக இருக்கும்போதே விபசாரம் செய்தாள். அவள் தன் காதலர்களான அசீரிய வீரர்கள்மேல் மோகங்கொண்டாள். நீலப்பட்டு உடை உடுத்தியவர்களும், ஆளுநர்களும், அதிபதிகளுமான அவர்கள் அனைவருமே திடகாத்திரமான வாலிபர்களும் குதிரைவீரர்களுமாயிருந்தார்கள். அசீரிய உயர்குடி மக்கள் அனைவரோடும் அவள் விபசாரம் பண்ணினாள். அவள் மோகங்கொண்ட அனைவரது விக்கிரகங்களையும் வழிபட்டு தன்னை கறைப்படுத்தினாள். அவள் எகிப்தில் ஆரம்பித்த தன் விபசாரத்தை விட்டுவிடவில்லை. அங்கே அவளுடைய வாலிப நாட்களில் அவளோடு உறவு கொண்டவர்கள், அவளது கன்னிமையின் மார்பகங்களைத் தடவி தங்களுடைய காமத்தை அவளில் தீர்த்துக் கொண்டார்கள்.
“ஆகவே, அவள் மோகித்த அவளது காதலர்களான அசீரியரின் கையிலேயே, நான் அவளை ஒப்புவித்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கி, அவளுடைய மகன்களையும், மகள்களையும் கைதிகளாக்கி, அவளை வாளினால் கொன்றுபோட்டார்கள். அவள் பெண்களுக்குள்ளே அவமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஏற்ற தண்டனை அவள்மேல் வந்தது.
“அவளுடைய தங்கை ஒகோலிபாள் இதைக் கண்டபோதிலும், மோகத்திலும் விபசாரத்திலும் தன் சகோதரியையும் மிஞ்சினவளானாள். அவளும் ஆளுநர்கள், அதிபதிகள், அலங்கார உடை உடுத்திய வீரர், குதிரைவீரர், திடகாத்திரமான வாலிபர் ஆகிய அசீரியரோடு மோகங்கொண்டாள். அவளும் தன்னை கறைப்படுத்திக் கொண்டாள் என்பதையும், இருவரும் ஒரே வழியில் சென்றுவிட்டார்கள் என்பதையும் நான் கண்டேன்.
“ஆனால் ஒகோலிபாளோ, மென்மேலும் விபசாரம் செய்தாள். சுவரில் வரையப்பட்ட மனித உருவங்களை அவள் கண்டாள். அவை சிவப்பு நிறமாய் வரையப்பட்ட பாபிலோனியரின் உருவங்களாயிருந்தன. அவை தங்கள் அரைகளில் கச்சைகளைக் கட்டி, தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளைத் தரித்தவர்களும், கல்தேயா நாட்டிலுள்ள பாபிலோனிய தேர்ப்படை அதிகாரிகளைப்போன்ற தோற்றம்முள்ளவர்களாக இருந்தார்கள். அவள் அந்த உருவங்களைப் பார்த்தவுடனேயே அவர்கள்மேல் மோகங்கொண்டு பாபிலோனிய நாட்டிற்கு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோனியர் அவளிடம், அவளுடைய காதல் படுக்கைக்கு வந்து, தங்களுடைய காமத்தினால் அவளைக் கறைப்படுத்தினார்கள். அவர்களால் அவள் கறைப்பட்ட பின்னர், அவள் வெறுப்பினால் அவர்களிடமிருந்து திரும்பிக்கொண்டாள். அவள் தன் விபசாரத்தை வெளிப்படையாகச் செய்து, தனது நிர்வாணத்தை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பினால் அவளுடைய சகோதரியை விட்டுத் திரும்பியதுபோலவே அவளையும் விட்டுத் திரும்பினேன். ஆனாலும், அவள் எகிப்தில் விபசாரம் செய்த, தன் இளமையின் நாட்களை எண்ணி மென்மேலும் விபசாரம் செய்தாள். அங்கே அவள் தனது காதலர்மேல் மோகங்கொண்டாள். அவர்களின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புகள்போலவும், விந்து குதிரைகளின் விந்துபோலவும் இருந்தன. இவ்வாறாக எகிப்தில் உன் மார்பகங்கள் தடவப்பட்டு, உன் இளமையின் மார்புகள் வருடப்பட்ட உனது இளமையின் வேசித்தனத்தின் காலத்தை நாடினாய்.
“ஆகையால் ஒகோலிபாளே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ வெறுப்பினால் விட்டுத் திரும்பிய உன் காதலர்களை நான் உனக்கு விரோதமாய் எழுப்புவேன். எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களை உனக்கெதிராய்க் கொண்டுவருவேன். பாபிலோனியரையும், எல்லாக் கல்தேயரையும், பேகோட், ஷோவா, கோவா மனிதரையும், அசீரியர் அனைவரையும், திடகாத்திரமான வாலிபரையும் கொண்டுவருவேன். அவர்கள் அனைவருமே ஆளுநர்களும், அதிகாரிகளும், தேர் வீரர்களும், உயர்பதவியிலுள்ள மனிதர்களும், குதிரைகளில் ஏறிச் செல்லுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் படைக்கலங்களோடும், தேர்களோடும், வண்டிகளோடும், ஏராளமான மக்களோடும் உனக்கு விரோதமாய் வருவார்கள். அவர்கள் பெரிதும் சிறிதுமான கேடயங்களோடும், தலைக்கவசங்களோடும், எல்லாத் திசைகளிலும் உனக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பார்கள். நீ தண்டிக்கப்படுவதற்காக நான் உன்னை அவர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் தங்களுடைய விதிமுறைப்படி உனக்குத் தண்டனை வழங்குவார்கள். நான் என் எரிச்சலின் கோபத்தை உனக்கு விரோதமாய்த் திருப்புவேன். அவர்கள் உன்னை ஆவேசத்துடன் நடத்துவார்கள். உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துவிடுவார்கள். உன்னில் எஞ்சியிருப்போர் வாளினால் மடிவார்கள். அவர்கள் உன் மகன்களையும் மகள்களையும் கைதிகளாகக் கொண்டுபோவார்கள். இன்னும் உன்னில் எஞ்சியிருப்போர் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்கள். அவர்கள் உன் ஆடைகளை கழற்றி, உனது சிறப்பான நகைகளையும் பறித்துக்கொள்வார்கள். இவ்விதமாய் உன் இழிவான செயல்களுக்கும், எகிப்தில் நீ ஆரம்பித்த விபசாரத்திற்கும் நான் முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ எகிப்தை நினைக்கவோ, இக்காரியங்களை ஆவலோடு விரும்பவோ மாட்டாய்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் உன்னை நான் ஒப்புக்கொடுக்கப்போகிறேன். அவர்கள் உன்னை வெறுப்புடன் நடத்தி, நீ முயற்சித்துத் தேடிய அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னை நிர்வாணமும், வெறுமையுமாக்கி விடுவார்கள். உன் வேசித்தனத்தின் வெட்கம் வெளிக்காட்டப்படும். உன் இழிவான நடத்தையும் உன் கட்டுப்பாடற்ற தன்மையுமே இதை உனக்கு வருவித்தன. ஏனெனில், நீ பல நாடுகளையும் மோகித்து, அவர்களுடைய சிலைகளினால் உன்னை கறைப்படுத்திக்கொண்டாய். நீயும் உன் சகோதரியின் வழியிலேயே போயிருக்கிறாய். ஆதலால், நான் அவளது தண்டனையின் பாத்திரத்தை உனது கையில் வைப்பேன்.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“நீ உன் சகோதரியின் பாத்திரத்திலே குடிப்பாய்,
அது அகலமும், ஆழமுமானது.
அது அதிகமாய்க் கொள்கிற பாத்திரமானதால்
அது ஏளனத்தையும் நகைப்பையும் கொண்டுவரும்.
நீ கவலை மிகுதியினால் மதுபோதையினால் நிரப்பப்பட்டவனைப் போலாவாய்.
அது உன் சகோதரியாகிய சமாரியாவிற்கு ஏற்பட்ட
அழிவும் பாழும் நிறைந்த பாத்திரம் போலிருக்கும்.
நீ அதைக் குடித்து வெறுமையாக்குவாய்.
அதை நீ துண்டுகளாக்கி
உன் மார்பகங்களையே கிழித்துக் கொள்ளுவாய்.
நானே இதைச் சொன்னேன், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீ என்னை மறந்து, என்னைப் புறக்கணித்துவிட்டபடியால் உன் இழிவான செயல்களினாலும், வேசித்தனத்தினாலும் உன் பலனை நீ அனுபவிக்கவேண்டும்.”
யெகோவா என்னிடம் சொன்னதாவது, “மனுபுத்திரனே, நீ ஒகோலாளையும், ஒகோலிபாளையும் நியாயந்தீர்பாயோ? அப்படியானால், அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டு. அவர்கள் விபசாரம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய கைகளில் இரத்தக்கறை இருக்கிறது. அவர்கள் தங்கள் விக்கிரகங்களுடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் பெற்ற பிள்ளைகளைக்கூட அவைகளுக்கு உணவாகப் பலியிட்டார்கள். மேலும், அவர்கள் இதையும் எனக்கெதிராகச் செய்தார்கள். அதாவது, அதே வேளையிலேயே எனது பரிசுத்த இடத்தையும் அசுத்தப்படுத்தி, என் ஓய்வுநாளையும் தூய்மையற்றதாக்கினார்கள். தங்கள் பிள்ளைகளைத் தங்கள் விக்கிரகங்களுக்குப் பலியிட்ட அதே நாளிலேயே அவர்கள் எனது பரிசுத்த இடத்திற்குள் வந்து அதைத் தூய்மையற்றதாக்கினார்கள். அவர்கள் அதைத்தான் எனது வீட்டில் செய்தார்கள்.
“மேலும் அவர்கள் வெகுதூரத்திலிருந்து வந்த மனிதர்களுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் வந்தபோது, நீ அவர்களுக்காகக் குளித்து, உன் கண்களுக்கு மையிட்டு, நகைகளையும் போட்டுக்கொண்டாய். அழகான இருக்கையில் அமர்ந்தாய். அதற்கு முன்னே ஒரு விருந்துக்கான மேஜையை ஆயத்தப்படுத்தி, அத்துடன் எனக்குரியதான வாசனைப் பொருள்களையும் எண்ணெயையும் வைத்தாய்.
“கவலையற்ற ஒரு கூட்டத்தின் ஆரவாரம் அவளைச்சுற்றி இருந்தது. அந்த ஒழுங்கீனமான கூட்டத்தோடு பாலைவனத்தின் சபேயர்களும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கும், அவளது சகோதரிக்கும் கைகளில் வளையல்களை அணிவித்து, அவர்களுடைய தலைகளில் அழகிய மகுடங்களைச் சூட்டினார்கள். பின்பு நான் விபசாரத்தில் களைத்துப்போன அவளைக்குறித்து, ‘அவள் வேசிதானே! அவர்கள் அவளை அப்படியே பயன்படுத்தட்டும்’ என்றேன். அவர்கள் அவளோடு உறவுகொண்டார்கள். மனிதர்கள் வேசியிடம் நடந்துகொள்வதுபோல, காமவேட்கையுள்ள ஒகோலாள், ஒகோலிபாள் என்னும் பெண்களிடமும் நடந்துகொண்டார்கள். ஆனால் விபசாரம் செய்து இரத்தம் சிந்தும் பெண்களைத் தண்டிப்பதுபோல, நீதியுள்ள மனிதர் அவர்களைத் தண்டிப்பார்கள். ஏனெனில் அவர்கள் விபசாரிகள், அவர்கள் கைகளில் இரத்தம் படிந்திருக்கிறது.
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அவர்களுக்கு விரோதமாய் ஒரு கலகக்கூட்டத்தைக் கொண்டுவாருங்கள். கொள்ளையையும் திகிலையும் அவர்களுக்கு மேலாகக் கொண்டுவாருங்கள். அந்தக் கலகக்கூட்டம் அவர்களைக் கல்லெறிந்து தங்கள் வாள்களால் அவர்களை வெட்டி வீழ்த்தும். அவர்களுடைய மகன்களையும், மகள்களையும் அவர்கள் கொன்று, அவர்களுடைய வீடுகளை எரிப்பார்கள்.
“இவ்விதமாய் நான் நாட்டிலுள்ள காம வேட்கைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். அதனால் எல்லாப் பெண்களுமே எச்சரிப்படைந்து உன்னைப் பின்பற்றாதிருப்பார்கள். உங்களுடைய காம வேட்கைக்குரிய தண்டனையையும் உங்கள் விக்கிரகவழிபாட்டுப் பாவங்களுக்குரிய பலனையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்றார்.”
சமையல் பானை
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இந்தத் தேதியை, இதே நாளைக் குறித்துவை, ஏனெனில் இந்த நாளிலேதான் பாபிலோன் அரசன் எருசலேமை முற்றுகையிடத் தொடங்கினான். நீ இந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாருக்கு, ஒரு உவமையைக் கூறி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’
“ ‘சமையல் பானையை அடுப்பிலே வை.’
அதை அடுப்பிலே வைத்து அதற்குள்ளே தண்ணீர் ஊற்று.
இறைச்சித் துண்டுகளையும்
காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு.
நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.
மந்தையில் சிறந்த ஆட்டையே தெரிந்தெடு.
பானையின் கீழ் விறகுகளையடுக்கி
அதிலுள்ள எலும்புகள்
வேகும்படி நன்றாகக் கொதிக்க வை.
ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது:
“ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’
இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ,
கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக
அவை வருகின்ற ஒழுங்குமுறையில்
வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.
“ ‘அவள் சிந்திய இரத்தம் அவள் மத்தியிலே இருக்கிறது.
ஏனெனில் அவள் சிந்திய இரத்தத்தைப் பாறையிலே ஊற்றினாள்.’
புழுதி மறைக்கும்படி அவள்
அதை நிலத்தில் ஊற்றவில்லை.
எனக்கு கோபமூண்டு,
பழிவாங்கும் நோக்கில் அவளது இரத்தம் மறைந்து விடாதபடி,
நானே அதைப் பாறையில் ஊற்றினேன்.
ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு.
நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”
எனவே, விறகைக் குவித்து
நெருப்பை மூட்டு.
இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து
நன்றாய்ச் சமை.
எலும்புகளைக் கருகவிடு.
பின் வெறும் பாத்திரத்தை தணலின்மேல் வை.
அது வெப்பமடைந்து,
அதன் செம்பு தகதகத்து அதன் அசுத்தப் பொருள் உருகி,
அதன் நுரைகள் எரிந்துபோகுமட்டும் அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
அது முயற்சிகள் எல்லாவற்றையும் வீணாக்கியது.
அதன் கெட்டியான நுரைகள்
தீயினால்கூட அழிந்துபோகவில்லை.
“ ‘இப்பொழுது காமவேட்கையே உன் அசுத்தம். ஏனெனில் நான் உன்னைத் தூய்மைப்படுத்த முயன்றேன். ஆனால் நீயோ, உன் அசுத்தத்தில் இருந்து தூய்மையடைய மறுத்தாய். ஆகையால் உனக்கெதிராக இருக்கும் என் கோபம் தீருமட்டும், மறுபடியும் நீ தூய்மையடையமாட்டாய்.
“ ‘யெகோவாவாகிய நானே பேசினேன். நான் நடவடிக்கை எடுக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நான் தாமதிக்கமாட்டேன். நான் கருணை காட்டப்போவதுமில்லை மனம் இரங்குவதுமில்லை. நீ உன் நடத்தைக்கும் உன் செயல்களுக்கும் ஏற்ப நியாயந்தீர்க்கப்படுவாய்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எசேக்கியேலின் மனைவியின் மரணம்
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, உன் கண்களுக்கு அருமையானவளை ஒரே அடியினால் உன்னைவிட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும் கண்ணீர் விடாமலும் இருக்கவேண்டும். அமைதியாய் துயர்கொண்டிரு. மரித்தவளுக்காகத் துக்கங்கொண்டாடாதே. தலைப்பாகையை அணிந்துகொள். செருப்பைப் போட்டுக்கொள். உன் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும் துக்கங்கொண்டாடுவோர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைச் சாப்பிடாமலும் இரு என்றார்.”
இதைப்பற்றி நான் காலையில் மக்களோடு பேசினேன், மாலையில் என் மனைவி இறந்துபோனாள். எனக்கு இடப்பட்ட கட்டளைப்படியே மறுநாள் காலை நான் செய்தேன்.
அப்பொழுது மக்கள் என்னிடம், “இக்காரியங்கள் எங்களுக்கு எவைகளைக் குறிக்கின்றன எனச் சொல்லமாட்டாயா?” என்று கேட்டார்கள்.
எனவே நான் அவர்களுக்குச் சொன்னதாவது: “யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே என இஸ்ரயேல் குடும்பத்தாருக்குச் சொல். ‘நீங்கள் பெருமைகொள்ளும் அரணும், உங்கள் கண்களின் அருமையும், உங்கள் பிரியமான பொருளுமான என் பரிசுத்த ஆலயத்தின் தூய்மையை நான் கெடுக்கப்போகிறேன். நீங்கள் யூதாவில் விட்டுவந்த மகன்களும், மகள்களும் வாளினால் மடிவார்கள். அப்பொழுது எசேக்கியேலாகிய நான் செய்ததுபோலவே நீங்களும் செய்வீர்கள். உங்கள் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும், துக்கங்கொண்டாடுவோர் சாப்பிடும் வழக்கமான உணவைச் சாப்பிடாமலும் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் தலைகளில் இருக்கும் தலைப்பாகைகளையும் உங்கள் கால்களில் இருக்கும் செருப்புகளையும், கழற்றிப் போடாதிருப்பீர்கள். நீங்கள் துக்கப்படவோ, அழவோ மாட்டீர்கள். உங்கள் பாவங்களினால் சோர்ந்துபோய் உங்களுக்குள்ளேயே புலம்புவீர்கள். எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறான்; அவன் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள். இது நடைபெறும்போது, ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்கிறார் என்றேன்.’
“மனுபுத்திரனே, உனக்கு நான் கூறுவதாவது. அவர்களுடைய அரணையும், மகிழ்ச்சியையும், அவர்கள் கண்களின் அருமையையும், அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையையும் எடுத்துக்கொள்ளும் நாளிலே, அவர்கள் மகன்களையும், மகள்களையும் நான் எடுத்துக்கொள்வேன். அந்த நாளிலே எருசலேமிலிருந்து தப்பியோடிவரும் ஒருவன் வந்து உனக்குச் செய்தியை அறிவிப்பான். அப்பொழுது உன் வாய் திறக்கப்படும், நீ அவனுடன் பேசுவாய்; இனியொருபோதும் மவுனமாயிருக்கமாட்டாய். இவ்விதமாய் நீ அவர்களுக்கு ஒரு அடையாளமாய் இருப்பாய், அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
அம்மோனுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்து. அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் பரிசுத்த ஆலயம் தூய்மைக் கேடாக்கப்பட்டபோதும், இஸ்ரயேல் பாழாக்கப்பட்டபோதும், யூதா மக்கள் நாடுகடத்தப்பட்டபோதும் “ஆகா!” என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? ஆகவே நான் உங்களைக் கீழ்த்திசையைச் சேர்ந்த மக்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் மத்தியில் தங்களுக்கு முகாம்களை அமைத்துத் தங்கள் கூடாரங்களையும் போடுவார்கள். உங்கள் பழங்களைச் சாப்பிட்டு, உங்கள் பாலைக் குடிப்பார்கள். நான் ரப்பா பட்டணத்தை ஒட்டகங்களின் மேய்ச்சலிடமாக மாற்றுவேன். அம்மோனை செம்மறியாடுகளின் இளைப்பாறுகிற இடமாகவும் மாற்றுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீங்கள் கைகொட்டி, துள்ளிக் குதித்து, இஸ்ரயேல் நாட்டுக்கு விரோதமாக உங்கள் மனதில் தீய எண்ணங்கொண்டு மகிழ்ந்தீர்கள். ஆகவே நான் உங்களுக்கு விரோதமாய் என் கையை நீட்டி, பல நாடுகளுக்கும் கொள்ளைப்பொருளாக உங்களை ஒப்புவிப்பேன். உங்களைப் பல நாடுகளிலிருந்தும் வேரறுத்து, நாடுகளிலிருந்து முற்றிலும் அழிப்பேன். நான் உங்களை அழிப்பேன். அப்பொழுது நானே யெகோவா’ ” என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
மோவாபுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ “பாருங்கள் யூதா குடும்பத்தார் மற்ற எல்லா ஜனங்களைப் போலானார்கள்” என மோவாபும் சேயீரும் சொன்னார்களே. ஆகவே நான் மோவாபின் மலைப்பக்கங்களை பகைவர்கள் தாக்க அனுமதிப்பேன். அவர்கள் அந்த நாட்டின் மகிமையான எல்லைப் பட்டணங்களான பெத்யெசிமோத், பாகால் மெயோன், கீரியாத்தாயீம் ஆகியவற்றைத் தாக்குவார்கள். மோவாபியரை அம்மோனியரோடுகூட கீழ்த்திசை மக்களுக்கு உரிமையாகக் கொடுப்பேன். அப்பொழுது அம்மோனியர் பல நாடுகளுக்குள்ளும் நினைக்கப்படமாட்டார்கள். நான் மோவாபியரையும் தண்டிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ”
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஏதோம் யூதா வீட்டாரைப் பழிவாங்கி, அதன் காரணமாக பெரும் குற்றவாளியாகிவிட்டது. ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் ஏதோமுக்கெதிராக எனது கரத்தை நீட்டி, அதன் மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். அதை நான் பாழாக்குவேன். அங்குள்ளோர் தேமானிலிருந்து தேதான்வரை வாளினால் மடிவார்கள். நான் என் மக்களாகிய இஸ்ரயேலரின் கைகளினால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்கள் என் கோபத்திற்கும் கடுங்கோபத்திற்கும் ஏற்றபடி ஏதோமுக்குச் செய்வார்கள். அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ ”
பெலிஸ்தியாவுக்கு எதிரான இறைவாக்கு
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘பெலிஸ்தியர் பழைய பகையினிமித்தம் யூதாவை அழிக்க எண்ணி, தங்கள் உள்ளத்தின் தீய எண்ணங்களால் பழிவாங்கினார்கள். ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் பெலிஸ்தியருக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டப்போகிறேன். கிரேத்தியரை நான் வேரோடழிப்பேன். கடற்கரையில் எஞ்சி இருப்பவர்களையும் அழிப்பேன். நான் அவர்களைக் கொடுமையாய்ப் பழிவாங்கி, என் கோபத்தில் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களை நான் பழிவாங்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார்.
தீருவுக்கு எதிரான இறைவாக்கு
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம் மாதத்தின் முதலாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.” ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. தீருவே நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன். கடல் தன் அலைகளை எழும்பப்பண்ணுவதுபோல், நான் அநேக நாடுகளை உனக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன். அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அவர்களுடைய கோபுரங்களை வீழ்த்தி விடுவார்கள். நான் அவளது இடிபாடுகளை வழித்தெடுத்து, அவளை ஒரு வெறும் பாறையாக்கிவிடுவேன். கடலின் நடுவே ஒரு தீவாய் இருக்கும் குடியேற்றமில்லாத அவள், மீன் வலைகளை உலர்த்தும் இடமாவாள். நானே இதைச் சொன்னேன், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவள் நாடுகளின் கொள்ளைப் பொருளாவாள். நாட்டின் உட்பகுதியிலுள்ள அவளது குடியிருப்புகள் வாளினால் கொள்ளையிடப்படும். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
“ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.” அவன் நாட்டின் உட்பகுதியிலுள்ள உங்கள் குடியிருப்புகளை வாளினால் சூறையாடுவான். அவன் உனக்கு விரோதமாய் முற்றுகையிட்டு, உன் மதில்களுக்கு எதிராக முற்றுகை அரணைக் கட்டி, உனக்கு விரோதமாய் தனது கேடயங்களை உயர்த்துவான். அவன் உன் மதில்களுக்கு எதிராக இடிக்கும் இயந்திரங்களின் முனைகளை வைத்து, தனது போராயுதங்களினால் உன் கோபுரங்களைத் தகர்ப்பான். அவனுடைய குதிரைகள் அநேகமாயிருப்பதனால், அவை எழுப்பும் தூசி உன் நகரத்தையும் மூடத்தக்க அளவு இருக்கும். மதில்கள் உடைக்கப்பட்ட பட்டணத்திற்குள் மனிதர் நுழைவதுபோல், அவன் உன் வாசலில் நுழைவான். அப்பொழுது போர்க்குதிரைகளும், வண்டிகளும், தேர்களும் இரைகிற சத்தத்தினால் உன் மதில்கள் அதிரும். அவனுடைய குதிரைகளின் குளம்புகள் உன் வீதிகளையெல்லாம் மிதிக்கும். அவன் உன் மக்களை வாளினால் கொல்வான். உன் பலத்த தூண்களும் நிலத்தில் சாயும். அவர்கள் உன் செல்வங்களைச் சூறையாடி, உன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளையிடுவார்கள். அவர்கள் உன் மதில்களை இடித்து, உன் அருமையான வீடுகளை நொறுக்கி, அவைகளிலுள்ள கற்களையும், மரங்களையும் அவைகளின் இடிபாடுகளையும் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள். உன் சத்தமான பாடல்களுக்கு நான் ஒரு முடிவு வரப்பண்ணுவேன். உன் வீணையின் இசை இனிமேல் கேட்கப்படமாட்டாது. நான் உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடமாக மாறுவாய். நீ ஒருபோதும் திரும்பக் கட்டப்படமாட்டாய். ஏனெனில், யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ? அப்பொழுது கடற்கரை வாசிகளின் இளவரசர்கள் அனைவரும் தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி, தங்கள் சித்திரத்தையலாடைகளை கழற்றி, தங்கள் வேலைப்பாடுகளமைந்த உடைகளையும் கழற்றிப்போடுவார்கள். திகிலை உடையாக உடுத்திய வண்ணம் அவர்கள் நிலத்தில் உட்காருவார்கள். ஒவ்வொரு வினாடியும், நடுக்கத்தோடு உன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள். பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து,
“ ‘கடல் மனிதர்களால் நிறைந்து
பேர்பெற்ற நகரமே,
நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்?
நீயும் உன் குடிமக்களும்
கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள்.
அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!
இப்பொழுது நீ விழுந்ததைக்கண்டு
கடற்கரை நாடுகள் நடுங்குகின்றன;
கடலிலுள்ள தீவுகள் உன் அழிவைக் கண்டு
திகிலடைகின்றன என்று சொல்வார்கள்.’
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் உன்னைக் குடியற்ற நகரங்களைப்போல் பாழ் நகரம் ஆக்குவேன். சமுத்திரத்தின் ஆழங்களை உன்மேல் கொண்டுவருவேன். அதன் பெருவெள்ளத்தால் உன்னை மூடுவேன். பின்பு நான் உன்னை குழியில் இறங்குகிற மக்களோடு பூர்வீக மக்களிடம் இறங்கச்செய்வேன். நான் உன்னைப் பூமியின் அடியில் பூர்வகால இடிபாடுகள் இருக்கும் இடங்களில், குடியிருக்கப்பண்ணுவேன். குழியில் இறங்குகிறவர்களோடு நீயும் போவாய். திரும்பி வரவுமாட்டாய். வாழ்வோர் நாட்டில் உனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ளவுமாட்டாய். நான் உனக்குப் பயங்கர முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ இருக்கப்போவதில்லை. நீ தேடப்படுவாய். ஆனால் மறுபடியும் நீ காணப்படமாட்டாய், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
தீருவுக்கான புலம்பல்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ தீருவைக் குறித்து புலம்பு. கடலின் துறைமுகத்தில் அமைந்திருப்பதும், அநேக கடற்கரையில் வாழ்வோருடன் வியாபாரம் செய்வதுமான தீரு பட்டணத்திற்குச் சொல்லவேண்டியதாவது, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே;
“தீருவே, ‘அழகில் நான் பரிபூரணமானவள்,
“எனக் கூறுகிறாய்.”
உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது.
உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.
சேனீரின் தேவதாரு மரங்களால்,
அவர்கள் உன் மர வேலைகளை அமைத்தார்கள்.
உனக்குப் பாய்மரம் செய்வதற்காக
லெபனோனின் கேதுருவை எடுத்தார்கள்.
பாசானிலிருந்து வந்த கர்வாலி மரங்களால்,
உனக்குத் துடுப்புகளைச் செய்தார்கள்.
சைப்பிரஸின் கடற்கரைகளிலிருந்து பெற்ற சவுக்கு மரங்களினால்
அவர்கள் உன் கப்பல் தளத்தைக் கட்டி,
யானைத் தந்தத்தினால் அதை அலங்கரித்தார்கள்.
எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட வேலைப்பாடமைந்த மென்பட்டு,
உனது பாயாகவும் கொடியாகவும் இருந்தது.
எலீஷாவின் கரையோரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீலத் துணியும்,
கருஞ்சிவப்புத் துணியும் உனக்குக் கூடாரமாயின.
சீதோன், அர்வாத் பட்டணத்தினர் உன் படகோட்டிகளானார்கள்.
தீருவே! உன் தொழில் வல்லுனர், உனது கப்பல்களில் மாலுமிகளானார்கள்.
கேபாவின் அனுபவமிக்க கைவினைஞர் உன் கப்பல்களைப்
பழுது பார்ப்பவர்களாய் உன் கப்பல்களில் இருந்தார்கள்.
கடலிலுள்ள எல்லா கப்பல்களும் அவைகளின் மாலுமிகளும்
உன்னுடைய பொருட்களை வாங்குவதற்கு உன்னிடம் வந்தார்கள்.
“ ‘பெர்சியா, லீதியா, பூத்தியா
ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதர்கள் உன் இராணுவவீரர்களாய் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் மதில்களில் தொங்கவிட்டு,
உனக்குச் சிறப்பைக் கொண்டுவந்தார்கள்.
அர்வாத், ஹேலேக் பட்டணங்களைச் சேர்ந்த மனிதர்
உன் மதில்களின் ஒவ்வொரு புறங்களிலும்
காவலிருந்தார்கள்.
கம்மாத் மனிதர் உன் கோபுரங்களில் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் கேடயங்களை உன் மதில்களின்மேல் சுற்றிலும் தொங்கவிட்டார்கள்.
அவர்கள் உன் அழகை முழுநிறைவாக்கினார்கள்.
“ ‘உன் பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தம் தர்ஷீஸ் வர்த்தகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றை மாற்றீடு செய்தார்கள்.
“ ‘கிரீஸ், தூபால், மேசேக் வர்த்தகர்களும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது வர்த்தகப் பொருள்களுக்காக அடிமைகளையும், வெண்கலப் பொருட்களையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
“ ‘பெத்தொகர்மா ஆகிய இடங்களைச் சேர்ந்த மனிதரும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக வேலைசெய்யும் குதிரைகளையும், போர்க் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
“ ‘தேதான் மனிதர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அநேக கடலோர நாடுகள் உன் வாடிக்கையாளர்களாய் இருந்தன. அவர்கள் யானைத்தந்தங்களையும், கருங்காலி மரங்களையும் உன்னிடம் மாற்றீடாய் தந்தார்கள்.
“ ‘சீரியர் உன் அநேக உற்பத்திகளினிமித்தம் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் இளநீல இரத்தினங்களையும் ஊதாநிற துணிகளையும் வேலைப்பாடமைந்த உடைகளையும், மென்பட்டுத் துணிகளையும், பவளத்தையும், சிவப்பு இரத்தினத்தையும் உன்னிடம் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
“ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
“ ‘தமஸ்கு, உனது பொருள்களின் செல்வத் திரட்சியினிமித்தமும், உன் அநேக உற்பத்திப் பொருள்களினிமித்தமும் கெல்போனின் திராட்சை இரசத்தையும், ஷாகாரின் ஆட்டுமயிரையும் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தது. வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள்.
“ ‘தேதான் சேணத்திற்குப் பயன்படுத்தும் கம்பளங்களை உனக்கு விற்றது.
“ ‘அரேபியாவும், கேதாரின் சகல இளவரசர்களும் உன் வாடிக்கையாளர்களாயிருந்தார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றைக்கொண்டு உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
“ ‘சேபா, ராமாவின் வணிகர் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் வியாபாரப் பொருள்களுக்காக எல்லாவித உயர்தர வாசனைத் திரவியங்களையும், விலை உயர்ந்த கற்களையும், தங்கத்தையும் மாற்றீடு செய்தார்கள்.
“ ‘ஆரான், கன்னே, ஏதேன் ஆகியவற்றுடன் சேபா, அசீரியர், கில்மாத் வணிகரும் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உனது சந்தையில் அழகிய உடைகள், நீலப்பட்டுத் துணி, வேலைப்பாடமைந்த தையல் துணி, கயிறுகளால் பின்னப்பட்ட பலவர்ணக் கம்பளிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
“ ‘உனது பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு
தர்ஷீஸின் கப்பல்கள் பயன்பட்டன.
அவை கடலின் நடுவில் பாரமான
பொருள்களினால் நிரப்பப்பட்டுள்ளன.
உன், படகோட்டிகள் உன்னைப்
பெருங்கடலுக்குக் கொண்டுபோகிறார்கள்.
ஆனால், நடுக்கடலில் கீழ்க்காற்று
உன்னைத் துண்டுகளாக உடைக்கும்.
உன் செல்வமும், வர்த்தகப் பொருள்களும் மற்றும் பொருட்களும்
நடுக்கடலில் கப்பல் விபத்துநாளிலே விழுந்துபோகும்.
அதனுடன் கப்பலாட்கள், மாலுமிகள்,
கப்பல் பழுதுபார்ப்போர்,
வர்த்தகர்கள், இராணுவவீரர்,
கப்பலிலுள்ள எல்லோருங்கூட நடுக்கடலிலே விழுவார்கள்.
உன் மாலுமிகள் ஓலமிடும் வேளையிலே,
கடலோர நாடுகள் அதிரும்.
தண்டு வலிப்போர் அனைவரும்
தங்கள் கப்பல்களைக் கைவிட்டு விடுவார்கள்.
கப்பலாட்கள், மாலுமிகள் அனைவருமே
கரையில் நிற்பார்கள்.
அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி
உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள்.
அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை
வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.
அவர்கள் உன்னிமித்தம் துக்கித்து, தங்கள் தலைகளை மொட்டையடித்து,
துக்கவுடைகளை உடுத்துவார்கள்.
அவர்கள் உனக்காக ஆத்தும வேதனையுடன்
அழுது மனக்கசப்புடன் துக்கங்கொண்டாடுவார்கள்.
அவர்கள் உனக்காக துக்கங்கொண்டாடுகையில்,
“கடலால் சூழப்பட்ட தீருவைப்போல்
எப்பொழுதாவது அமைதியாக்கப்பட்டது யார்?”
என, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்.
உன் வர்த்தகப் பொருள்கள் கடல்களுள் வழியாகச் சென்றபோது,
நீ அநேக நாடுகளைத் திருப்திசெய்தாய்;
உன் பெரும் செல்வத்தாலும் உனது பொருட்களாலும்
பூமியின் அரசர்களைச் செல்வந்தராக்கினாய்.
இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில்
கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய்.
உன் பொருட்களும், உனது கூட்டமும்
உன்னோடு அமிழ்ந்து போயின!
கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும்,
உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்,
அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்!
அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.
நாடுகளின் வர்த்தகர்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கின்றார்கள்;
உனக்கு ஒரு பயங்கர முடிவு வந்துவிட்டது!
நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”
தீரு அரசனுக்கெதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்: “மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ உன் இருதயத்தில்,
“நான் ஒரு தெய்வம்;
கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்”
என பெருமையில் பேசுகிறாய்.
ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும்
நீ மனிதனேயன்றி தெய்வமல்ல;
தானியேலைவிட நீ அறிவாளியோ?
உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ?
நீ உன் ஞானத்தினாலும்,
விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய்.
தங்கத்தையும் வெள்ளியையும்
உன் களஞ்சியங்களில் குவித்தாய்!
வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால்
உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்:
உன் செல்வத்தால்
உன் இருதயமும் மேட்டிமையடைந்தது.
“ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல்
ஞானமுள்ளவன் என எண்ணியபடியால்,
நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான்
உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன்.
அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி,
துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள்.
அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள்.
நீ கடல்களின் நடுவே
ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்!
அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில்
“நான் ஒரு தெய்வம்” என்று சொல்வாயோ?
உன்னைக் கொலைசெய்வோர் கைகளில்
நீ தெய்வமல்ல, மனிதனேதான்.
பிறநாட்டாரின் கைகளிலே
நீ விருத்தசேதனம் அற்றவனைப்போல சாவாய்.
“நானே இதைச் சொன்னேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
பின்னும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘நீ ஞானத்தால் நிறைந்து, அழகில் முழுநிறைவுபெற்று,
முழுநிறைவின் மாதிரியாய்த் திகழ்ந்தாய்.
இறைவனின் தோட்டமாகிய
ஏதேனில் நீ இருந்தாய்.
சிவப்பு இரத்தினம், புஷ்பராகம்,
வைரம், பளிங்கு, கோமேதகம்,
யஸ்பி, இந்திரநீலம், மரகதம்,
மாணிக்கம் ஆகிய அத்தனை விலைமதிப்புள்ள கற்களும் உன்னை அலங்கரித்தன.
இவை எல்லாம் தங்க வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தன.
நீ உண்டாக்கப்பட்ட நாளிலேயே அவை ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன.
நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய்.
ஏனெனில் அப்படியே நான் உன்னை நியமித்தேன்.
இறைவனின் பரிசுத்த மலையில் நீ இருந்தாய்.
நெருப்புக்கனல் வீசும் கற்களிடையே நீ நடந்தாய்.
நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி,
கொடுமை உன்னில் காணப்படுமட்டும்
உன்னுடைய வழிகளில் நீ குற்றமற்றிருந்தாய்.
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால்,
நீ கொடுமை நிறைந்தவனாகிப் பாவம் செய்தாய்.
ஆகவே, காவல்காக்கும் கேருபே,
இவ்விதமாய் நான் உன்னை நெருப்புக்கனல் வீசும்
கற்களினிடையிலிருந்து வெளியேற்றினேன்.
நான் உன்னை இறைவனின் மலையிலிருந்து
அவமானத்தோடு துரத்திவிட்டேன்.
உன் அழகினிமித்தம்
உன் இருதயம் பெருமைகொண்டது,
உன் செல்வச் சிறப்பின் காரணத்தால்
உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய்.
ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன்.
அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும்
பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய்.
ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன்.
அது உன்னைச் சுட்டெரித்தது.
மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய
பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.
உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும்
உன்னைக் கண்டு திகைத்தார்கள்.
உனக்கு ஒரு பயங்கரமான முடிவு வந்துவிட்டது.
நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”
சீதோனுக்கு விரோதமாய் இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ சீதோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவளுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘சீதோனே, நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்;
நான் உன் மத்தியில் மகிமைப்படுவேன்.
நான் அவள்மீது தண்டனையை வரச்செய்து,
எனது பரிசுத்தத்தை அவள் மத்தியில் காட்டும்போது,
நானே யெகோவா என்பதை மனிதர்கள் அறிந்துகொள்வார்கள்.
நான் அவள்மீது கொள்ளைநோயை அனுப்பி,
அவளுடைய வீதிகளில் இரத்தத்தை ஓடப்பண்ணுவேன்.
ஒவ்வொரு திசையிலுமிருந்து அவளுக்கெதிராக வரும் வாளினால் கொல்லப்படுவோர்,
அவள் மத்தியில் விழுவார்கள்.
அப்பொழுது மனிதர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘இஸ்ரயேலருக்கோ வேதனைமிக்க முட்புதர்களும், கூரிய முட்களுமான வஞ்சனையுள்ள அயலவர் இனியொருபோதும் இருக்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: பல நாடுகளிடையே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரயேலை, நான் அவர்களுக்குள்ளேயிருந்து ஒன்றுசேர்க்கும்போது, அந்த நாடுகளின் பார்வையில், இஸ்ரயேலர் மத்தியில் என்னைப் பரிசுத்தராக நான் காண்பிப்பேன். பின்பு அவர்கள் எனது அடியவன் யாக்கோபுக்கு நான் கொடுத்த அவர்களுடைய சொந்த நாட்டிலே குடியிருப்பார்கள். அங்கே அவர்கள் பாதுகாப்பாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள். அவர்களைத் தூற்றிய அவர்களுடைய அயலவர்கள் அனைவர்மீதும் நான் தண்டனையை வருவிக்கும்போது, இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வார்கள். அப்பொழுது அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ” என்றார்.
எகிப்திற்கு விரோதமாய் இறைவாக்கு
பார்வோன் மீதான தீர்ப்பு
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பத்தாம் வருடம், பத்தாம் மாதம், பன்னிரண்டாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நீ எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தை திருப்பி, அவனுக்கும் முழு எகிப்திற்கும் விரோதமாய் இறைவாக்குரைத்து சொல். நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே,
நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே!
நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்.
“நீயோ, நைல் நதி என்னுடையது;
அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி,
உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்.
உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து,
உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
நான் உன்னையும் உன் நீரோடைகளின்
எல்லா மீன்களையும் பாலைவனத்தில் விட்டுவிடுவேன்.
திறந்த வெளியிலே நீ விழுவாய்.
நீ சேர்க்கப்படவோ எடுக்கப்படவோமாட்டாய்.
நான் உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய். அவர்கள் உன்னைத் தங்கள் கைகளினால் இறுக்கி பிடித்தபோது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நானே உனக்கு விரோதமாய் ஒரு வாளைக் கொண்டுவந்து, உன் மனிதர்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
“ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ? ஆகவே நான் உனக்கும் உன் நீரோடைகளுக்கும் விரோதமாக இருக்கிறேன். மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரை, எத்தியோப்பியாவின் எல்லைவரையுள்ள எகிப்து நாட்டை இடிபாடுகளுடைய பாழ்நிலமாக்குவேன். மனித கால்களோ, மிருகத்தின் கால்களோ அதைக் கடப்பதில்லை. நாற்பது வருடங்களுக்கு ஒருவரும் அங்கு வாழப்போவதுமில்லை. பாழாய்ப்போன நாடுகளின் மத்தியில் எகிப்தையும் நான் பாழாக்குவேன். இடிபாடுகளுள்ள பட்டணங்களிடையே, அவளது பட்டணம் நாற்பது வருடங்கள் கிடக்கும். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து அவர்களை நாடுகளுக்கூடே சிதறடிப்பேன்.
“ ‘எனினும், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே நான் அந்த நாற்பது வருடங்களின் முடிவில், எகிப்தியரை, சிதறடிக்கப்பட்டிருந்த பல நாடுகளுக்குள்ளும் இருந்து, ஒன்றுசேர்ப்பேன். திரும்பவும் நான் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து கொண்டுவந்து அவர்களுடைய முன்னோரின் நாடாகிய எகிப்தின் பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் ஒரு சிறிய அரசாக இருப்பார்கள். அது அரசுகளிலெல்லாம் சிறியதாயிருக்கும். இனியொருபோதும் மற்ற நாடுகளின்மேல் தன்னை அது உயர்த்தாது. இனியொருகாலமும் அது நாடுகளுக்குமேல் ஆளுகைசெய்யாத அளவுக்கு அதை நான் பலவீனப்படுத்துவேன். எகிப்து இனியொருபோதும் இஸ்ரயேலரின் நம்பிக்கையின் ஆதாரமாய் இருக்கமாட்டாது. ஆனால் ஆதரவுக்காக அவளிடம் திரும்பியவர்களின் பாவத்தின் ஒரு ஞாபகமாய் அது இருக்கும். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’ ”
எகிப்து நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்படுதல்
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட இருபத்தேழாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.” ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் எகிப்தை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கையளிக்கப்போகிறேன். அதன் செல்வத்தை அவன் எடுத்துக்கொண்டு போவான். அவன் தன் இராணுவங்களுக்குக் கூலியாக நாட்டைச் சூறையாடிக் கொள்ளையிடுவான். அவனும் அவனுடைய இராணுவமும் அதை எனக்காகச் செய்தபடியினால், அம்முயற்சிக்கு வெகுமதியாக எகிப்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“அந்த நாளிலே நான் இஸ்ரயேலருக்குப் புதுப்பெலனைக் கொடுத்து, அவர்கள் மத்தியில் உன் வாயைத் திறப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
எகிப்தைக் குறித்த புலம்பல்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘ஆபத்தான அந்த நாள் வருகிறது
“என அலறிச் சொல்லுங்கள்!”
அந்த நாள், சமீபமாயுள்ளது.
யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.
அது ஒரு இருள்சூழ்ந்த நாள்;
பல நாடுகளுக்கும் அது அழிவின் காலம்.
எகிப்திற்கு விரோதமாக வாள் ஒன்று வரும்,
எத்தியோப்பியரின்மீது வேதனைகள் பெருகும்.
எகிப்திலே கொல்லப்படுவோர் விழும்போது
அதனுடைய செல்வம் எடுத்துக்கொண்டு போகப்படும்.
அதனுடைய அஸ்திபாரங்களும் இடிக்கப்படும்.
எத்தியோப்பியா, பூத், லீதியா, அரேபியா, லிபியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும், உடன்படிக்கை நாட்டின் மக்களும் எகிப்தியரோடுகூட வாளினால் சாவார்கள்.
“ ‘யெகோவா கூறுவது இதுவே,
“ ‘எகிப்தின் நட்பு நாடுகளும் விழும்.
அவளுடைய பெருமையான பெலன் குன்றிப்போகும்.
அவர்கள், மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரையும்
வாளினால் அவர்களுக்குள் வெட்டுண்டு கிடப்பார்கள்
என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
அவர்கள், பாழடைந்த நாடுகளுக்குள்
பாழாய்ப் போவார்கள்.
அழிந்துபோன பட்டணங்களுக்குள்,
அவர்களுடைய பட்டணங்களும் அழிக்கப்படும்.
நான் எகிப்திற்கு நெருப்பு வைக்கும்போதும்,
அதன் உதவியாளர்கள் நசுக்கப்படும்போதும்
நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
“ ‘அந்த நாளிலே பொய்யின்பம் கொண்டுள்ள எத்தியோப்பியரை அச்சுறுத்துவதற்காக என்னிடமிருந்து தூதுவர்கள் கப்பல்களில் போவார்கள். எகிப்து அழியும் நாளிலே, வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும். நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரின் கையினால்,
எகிப்திய மக்கள்கூட்டத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
நாடுகளுக்குள் மிகக் கொடியவனான அவனும்,
அவன் இராணுவமும் நாட்டை அழிப்பதற்காகக் கொண்டுவரப்படுவார்கள்.
அவர்கள், தங்கள் வாள்களை எகிப்திற்கு விரோதமாய் உருவி,
கொலையுண்டவர்களால் நாட்டை நிரப்புவார்கள்.
நான் நைல் நதியின் நீரோட்டங்களை வற்றச்செய்து,
நாட்டைத் தீயோருக்கு விற்றுப்போடுவேன்.
நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்
அந்நியரின் கையினால் பாழாக்கிவிடுவேன்.
யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நான் விக்கிரகங்களை அழித்து
மெம்பிஸில் உள்ள உருவச் சிலைகளுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்.
எகிப்தில் இனியொருபோதும் இளவரசன் ஒருவன் எழும்புவதில்லை.
நாடெங்கும் நான் பயத்தை ஏற்படுத்துவேன்.
நான் எகிப்தின் பத்ரோஸைப் பாழாக்கி,
சோவானுக்கு நெருப்புமூட்டி,
தேபேஸைத் தண்டிப்பேன்.
எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல்,
என் கோபத்தை ஊற்றுவேன்.
தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.
நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்;
பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்;
தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்!
மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும்.
ஹெலியோபொலிஸ், பூபாஸ்டிஸ் நகரங்களின் வாலிபர்கள்
வாளினால் சாவார்கள்.
நகரங்களிலுள்ளவர்களும் சிறைப்பட்டுப் போவார்கள்.
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும் நாளிலே,
தக்பானேஸில் பகல் இருளாகும்.
அதனுடைய பெருமையான பெலனும் ஒரு முடிவுக்கு வரும்.
அது மேகங்களால் மூடப்படும்.
அதன் கிராமங்களிலுள்ளவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்.
இவ்வாறாக, நான் எகிப்தைத் தண்டிப்பேன்.
அவர்களும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ”
பாபிலோனின் பலம் முறிந்தது
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், முதலாம் மாதம், ஏழாம்நாளில், யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நான் எகிப்திய அரசன் பார்வோனின் புயத்தை முறித்துவிட்டேன். அது சுகமடையும்படி கட்டப்படவும் இல்லை. வாள் பிடிக்கத்தக்க பெலன் ஏற்படக்கூடியதாக பத்தை வைத்துக் கட்டப்படவுமில்லை. ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் எகிப்தின் அரசன் பார்வோனுக்கு விரோதமாய் இருக்கிறேன். அவனுடைய முறிந்த புயத்தோடு நல்ல புயத்தையும் அதாவது, இரு கரங்களையுமே நான் முறித்து, அவனுடைய கையிலிருந்து வாளை விழப்பண்ணுவேன். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து, அவர்களை நாடுகளெங்கும் கலைந்து போகப்பண்ணுவேன். நான் பாபிலோன் அரசனின் கரங்களை பலப்படுத்தி, எனது வாளை அவனுடைய கையிலே கொடுப்பேன். ஆனால் பார்வோனின் கரங்களையோ நான் முறிப்பேன். அவன் காயமுற்ற ஒரு மனிதனைப்போல பாபிலோன் அரசனுக்கு முன் வேதனையில் புலம்புவான். பாபிலோன் அரசனின் கரங்களை நான் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் புயங்களோ செயலிழந்துபோகும். நான் எனது வாளைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுப்பேன். அவன் அதை எகிப்திற்கு விரோதமாகச் சுழற்றுவான். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே அவர்களைக் கலைந்து போகப்பண்ணுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”
கேதுரு மரமான எகிப்து
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், மூன்றாம் மாதம், முதலாம் நாள் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும் அவனுடைய மக்கள்கூட்டங்களுக்கும் நீ சொல்லவேண்டியதாவது,
“ ‘மாட்சிமையில் உன்னுடன் ஒப்பிடக்கூடியவன் யார்?
அசீரியாவைப் பற்றிச் சிந்தித்துப்பார்,
அது ஒருகாலத்தில் லெபனோனின் கேதுரு மரத்தைப்போல் அழகிய கிளைகளுடன்
காட்டுக்கு மேலாக உயர்ந்து வளர்ந்தது.
செறிந்த தழைகளுக்கு மேலாய் அதன் நுனி இருந்தது.
தண்ணீர்கள் அதை செழிக்கச் செய்தன,
ஆழமான நீரூற்றுக்கள் அதை உயரமாக வளரச் செய்தன;
அதன் அடிமரங்களைச் சுற்றி
நீரோடைகள் பாய்ந்தன;
தண்ணீர்கள் தம் வாய்க்கால்களை
வெளிமரங்கள் யாவற்றிற்கும் பரவவிட்டன.
அதனால் அது, வெளியின் மரங்கள் எல்லாவற்றையும்விட,
உயர்ந்து நின்றது:
தண்ணீர் நிறைவாக இருந்தபடியால்,
அதன் கொப்புகள் அதிகரித்தன:
அதன் கிளைகள் நீண்டு, படர்ந்து, வளர்ந்தன.
ஆகாயத்துப் பறவைகள் அனைத்தும்
அதின் கிளைகளில் கூடுகட்டின;
வெளியின் மிருகங்களெல்லாம்
அதன் கிளைகளின்கீழ் குட்டிகளை ஈன்றன.
பெரிதான பல நாடுகளும்
அதன் நிழலில் குடியிருந்தன.
படர்ந்திருந்த அதன் கொப்புகளினால்
அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது.
ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான
தண்ணீருக்குள் சென்றிருந்தன.
இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட
அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை.
தேவதாரு மரங்களும்
அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை.
அர்மோன் மரங்களையும்
அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது.
இறைவனின் தோட்டத்து எந்த மரமும்
அழகில் அதற்கு நிகராகாது.
இறைவனின் தோட்டமான
ஏதேனிலுள்ள எல்லா மரங்களும்
அதன்மேல் பொறாமை கொள்ளத்தக்கதாக நிறைவான
கொப்புகளால் அதை நான் அழகு செய்தேன்.
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது உயரமாய் வளர்ந்து, தன் நுனியை செறிந்த தழைகளுக்கு மேலாய் உயர்த்தி, தன் உயர்வினிமித்தம் பெருமைகொண்டது. அதனால் அதன் கொடுமைகளுக்குத் தக்கபடி அதற்குச் செய்வதற்காக, பல நாடுகளை ஆள்பவனிடத்தில் நான் அதை ஒப்புக்கொடுத்தேன். அதை நான் அப்புறப்படுத்திவிட்டேன். அந்நிய தேசத்தார்களுள் மிகக் கொடிய தேசத்தார் அதை வெட்டி வீழ்த்தினார்கள். அதன் கொப்புகள் மலைகளிலும், எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன. அதன் கிளைகள் முறிந்து, நாட்டின் எல்லா கணவாய்களிலும் விழுந்து கிடந்தன. பூமியின் எல்லா தேசத்தாரும் அதன் நிழலைவிட்டு வெளியேறி அதைவிட்டு அகன்றார்கள். விழுந்துகிடக்கிற மரத்தின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கின. வெளியின் எல்லா மிருகங்களும் அதன் கொம்புகளின்மேல் இருந்தன. எனவே, இனிமேல் தண்ணீர் அருகே இருக்கும் வேறு எந்த மரமாவது, மேட்டிமையுடன் எழும்பாதிருக்கட்டும், செறிந்த தழைகளுக்கு மேலாகத் தங்கள் நுனிகளை உயர்த்தாதிருக்கட்டும். ஏராளமாய் தண்ணீர் பாய்ச்சப்படும் எந்தவொரு மரமும் அவ்வளவு உயரமாய் வளராதிருக்கட்டும். அவைகளெல்லாம் பூமியின் தாழ்விடங்களிலே, மனுமக்கள் நடுவே குழியில் இறங்குகிறவர்களோடு போகும்படியாக, சாவுக்கென்று நியமிக்கப்பட்டன.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள்.
“ ‘எகிப்தே! சிறப்பிலும் மாட்சிமையிலும் ஏதேனிலுள்ள எந்த மரம் உனக்கு இணையாகும்? எனினும், நீயும் ஏதேனின் மரங்களுடன் பூமிக்குக் கீழே கொண்டுவரப்படுவாய். வாளினால் கொல்லப்பட்டவர்களோடு, விருத்தசேதனமற்றோர் மத்தியில் நீ கிடப்பாய்.
“ ‘இவையே பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும்’ ” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
பார்வோனின் மேல் ஒரு புலம்பல்
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பன்னிரண்டாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “நீ எகிப்தின் அரசனான பார்வோனைப் பற்றி ஒரு புலம்பலை எடுத்து அவனிடம் சொல்லுங்கள்:
“ ‘பல நாடுகளின் மத்தியில் நீ ஒரு சிங்கத்தைப் போலிருக்கிறாய்!
நீ கடல்களில் இருக்கும் ஒரு இராட்சதப் பாம்பைப்போல் இருக்கிறாய்.
நீரோடைகளை அங்குமிங்கும் அடித்து,
கால்களால் தண்ணீரைக் கலக்கி,
நீரோடைகளைச் சேறாக்குகிறாய்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைக்கொண்டு நான் என் வலையை உன்மேல் வீசுவேன்.
என்னுடைய வலையினால்
அவர்கள் உன்னை மேலே இழுத்துக்கொள்வார்கள்.
நான் உன்னைத் தரையிலே எறிந்து
திறந்தவெளியில் உன்னை வீசிவிடுவேன்.
ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மீது தங்கச்செய்து,
பூமியின் மிருகங்களெல்லாம் உன்னைத் தின்று திருப்தியுறச் செய்வேன்.
நான் உன் சதையை மலைகளில் சிதறச்செய்து,
பள்ளத்தாக்குகளை உன் மீதியான சதைகளால் நிரப்புவேன்.
வழிந்தோடும் உன் இரத்தத்தால்
மலைகள் வரைக்கும் நிலத்தையெல்லாம் ஈரமாக்குவேன்.
மலை இடுக்குகள் உன் சதையினால் நிரப்பப்படும்.
நான் உன்னை அழிக்கும்போது, வானத்தை மூடி,
அதன் நட்சத்திரங்களை இருளடையச் செய்வேன்.
சூரியனை மேகத்தால் மூடுவேன்,
சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
உனக்கு மேலாக வானங்களில் ஒளிதரும் சுடர்களையெல்லாம்
இருளடையச் செய்வேன்.
உன் நாட்டின்மீதும் நான் இருளை வரச்செய்வேன் என்று
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
நாடுகளுக்கு மத்தியிலும் நீ அறியாத நாடுகள் மத்தியிலும்
நான் அழிவை உன்மேல் கொண்டுவரும்போது,
திரளான மக்களின் இருதயத்தைக் கலங்கப்பண்ணுவேன்.
உன்னைக் கண்டு அநேக மக்களைத் அதிர்ச்சியுறச் செய்வேன்.
அவர்களுடைய அரசர்களுக்கு முன்பாக என் வாளை நான் சுழற்றும்போது,
அவர்கள் உன் நிமித்தம் பேரச்சத்தால் நடுங்குவார்கள்.
உனது விழுகையின் நாளில்,
அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உயிருக்காக
ஒவ்வொரு வினாடியும் நடுங்குவார்கள்.
“ ‘ஏனெனில் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘பாபிலோன் அரசனுடைய வாள்
உனக்கு விரோதமாய் வரும்.
நாடுகளுக்குள் மிகக் கொடிய வலியோரின் வாள்களினால்,
உன் மக்கள் கூட்டங்களை விழச்செய்வேன்;
எகிப்தின் பெருமையை
அவர்கள் ஒழியச்செய்வார்கள்.
அவளுடைய மக்கள் கூட்டங்களெல்லாம் அழிக்கப்படும்.
நிறைவான நீர்நிலைகளருகில் இருக்கும்
அவளுடைய மந்தைகளையெல்லாம் அழிப்பேன்.
அந்த நீர்நிலைகள் இனியொருபோதும் மனித காலினால் குழப்பப்படவோ,
அல்லது மந்தைகளின் குழம்புகளால் சேறாக்கப்படவோ மாட்டாது.
பின்பு நான் எகிப்தின் நீர்நிலைகளை அமைதலடையச் செய்து,
அவளுடைய நீரூற்றுக்களை எண்ணெய்போல் வழிந்தோடச்செய்வேன் என,
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
நான் எகிப்தைப் பாழாக்கி,
நாட்டிலுள்ள அனைத்தையும் நீக்கி,
அதை வெறுமையாக்கி, அங்கு வாழும் எல்லோரையும் அழிக்கும்போது,
நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
“அவர்கள் அவளுக்காகப் பாடும் புலம்பல் இதுவே. பல நாடுகளின் மகள்களும் அதைப் பாடுவார்கள். எகிப்திற்காகவும் அவளுடைய எல்லா மக்கள் கூட்டங்களுக்காகவும் அவர்கள் அதைப் பாடுவார்கள்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
புலம்பல் தொடர்கிறது
பன்னிரண்டாம் வருடம், முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ எகிப்தின் மக்கள் கூட்டங்களுக்காகப் புலம்பி, அவனையும் பலத்த நாடுகளின் மகள்களையும் குழியில் இறங்குகிறவர்களோடு பூமிக்குக் கீழே ஒப்படைத்துவிடு. நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் தயவு பெற்றவர்களோ? ‘கீழேபோய் விருத்தசேதனமற்றவர்கள் மத்தியில் கிடவுங்கள்’ என நீ அவர்களுக்குச் சொல். வாளினால் கொல்லப்பட்டவர்களின் மத்தியில் அவர்கள் விழுவார்கள். வாள் உருவப்பட்டு விட்டது. அவளுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றோடும் அவள் வாரிக்கொள்ளப்படட்டும். வலிமையுள்ள தலைவர்கள் பாதாளத்தில் இருந்துகொண்டே எகிப்தையும் அவர்களுடைய நட்பு நாடுகளையும் பார்த்து, ‘அவர்கள் கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்களுடன் கிடக்கிறார்கள்’ என்று கூறுவார்கள்.
“அசீரியா தனது எல்லா இராணுவத்தோடும் அங்கே இருக்கிறது. வாளினால் மடிந்தோருடைய கல்லறைகளினால் அது சூழப்பட்டிருக்கிறது. அவர்களுடைய கல்லறைகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கின்றன. அவளுடைய இராணுவம் அதன் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றது. வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய அனைவருமே வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள்.
“ஏலாம் அங்கே இருக்கிறது. அவள் மக்கள் கூட்டங்கள் எல்லாமே அதன் கல்லறையைச் சுற்றி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே, வாளினால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். வாழ்வோரின் நாட்டில் திகிலைப் பரப்பிய அனைவருமே, விருத்தசேதனமற்றவர்களாய் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள். அவர்கள் குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள். அவளுடைய மக்கள் கூட்டங்கள் அவளுடைய கல்லறைகளைச் சூழ்ந்துகிடக்க, வெட்டுண்டவர்களின் மத்தியில் அவளுக்கு ஒரு படுக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோருமே வாளினால் கொல்லப்பட்ட விருத்தசேதனமற்றவர்கள். வாழ்வோரின் நாட்டில் அவர்கள் திகிலைப் பரப்பியபடியால், குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள். வெட்டுண்டவர்களின் நடுவில் அவர்கள் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
“மேசேக்கும், தூபாலும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாம் அவர்களுடைய கல்லறைகளைச் சுற்றிக்கிடக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமற்றவர்கள். அவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய காரணத்தால் வாளினால் கொல்லப்பட்டார்கள். விருத்தசேதனமற்ற விழுந்துபோன மற்ற இராணுவவீரர்களுடன், அவர்கள் கிடக்கவில்லையோ? இந்த இராணுவவீரர்கள் போராயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கியவர்களும், தங்கள் தலைகளின்கீழ் வாள்கள் வைக்கப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். அவர்களுடைய அச்சம் நாட்டை ஊடுருவிச் சென்றபோதிலும், அவர்களுடைய பாவத்தின் தண்டனை அவர்கள் எலும்பின் மேலேயே தங்கிற்று.
“பார்வோனே, நீயும் நொறுங்குண்டு, வாளினால் கொலையுண்ட விருத்தசேதனமற்றவர்களின் மத்தியிலே கிடப்பாய்.
“ஏதோம் அங்கே இருக்கிறாள். அவளுடைய அரசர்களும், எல்லா இளவரசர்களும் அங்கே இருக்கிறார்கள். அதிகாரமுடையவர்களாய் இருந்தும், வாளினால் செத்தவர்களுடன் கிடத்தப்பட்டார்கள். அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களோடும், குழியில் இறங்குகிறவர்களோடும் கிடக்கிறார்கள்.
“வடதிசை இளவரசர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரமுடையவர்களாய் இருந்து, அச்சத்தை விளைவித்த போதிலும், கொலையுண்டவர்களோடு அவமானத்துடன் கீழே போனார்கள். வாளினால் வெட்டப்பட்ட விருத்தசேதனமற்றவர்களாகவே அவர்கள் கிடந்து, குழியில் இறங்குகிறவர்களோடு தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
“பார்வோனும் அவனுடைய இராணுவத்தினர் எல்லோரும் அவர்களைக் காண்பார்கள். அப்பொழுது பார்வோன் வாளினால் கொல்லப்பட்ட தன் மக்கள் கூட்டங்கள் எல்லோரின் நிமித்தமும் தேற்றப்படுவான் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பும்படி நானே பார்வோனை ஏவினேன். ஆயினும், பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும், வாளினால் கொல்லப்பட்டவர்களோடு விருத்தசேதனமற்றோர் மத்தியிலே கிடத்தப்படுவார்கள், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
எசேக்கியேல் ஒரு காவலாளி
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, உன்னுடைய நாட்டு மக்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நான் ஒரு நாட்டுக்கு விரோதமாய் வாளைக் கொண்டுவரும்போது, நாட்டு மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு, அவனைத் தம் காவற்காரனாக வைத்தபின்பு, அவன், நாட்டுக்கு விரோதமாக வரும் வாளைக்கண்டதும், எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கிறான். அப்பொழுது எவனாகிலும் அந்த எக்காளத் சத்தத்தைக் கேட்டும் எச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால், வாள் வந்து அவன் உயிரைப் பறித்துவிடும். அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும். எக்காளத் தொனியைக் கேட்டும் அவன் எச்சரிப்பை ஏற்கவில்லை, ஆகையால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மீதே இருக்கும். எச்சரிப்பை அவன் ஏற்றிருப்பின் அவன் தன்னைத்தானே பாதுகாத்திருந்திருப்பான். ஆனால், வாள் வருகிறதைக் காவலாளி கண்டும், மக்களை எச்சரிப்பதற்காக எக்காளத்தை ஊதாமலிருந்தால், வாள் வந்து அவர்களில் ஒருவனுடைய உயிரைப் பறிக்குமாயின், அந்த மனிதன் தன் பாவத்தினிமித்தமே அழிக்கப்படுவான். ஆனால் நான் அவனுடைய இரத்தப்பழிக்கு அக்காவலாளியிடம் கணக்குக்கேட்பேன்.’
“மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக நியமித்திருக்கிறேன். ஆதலால் நீ, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களுக்கு எனது எச்சரிப்பைக் கொடு. நான் கொடியவன் ஒருவனிடம், ‘கொடியவனே, நீ நிச்சயமாய் சாவாய்’ என கூறும்போது, அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ அவனிடம் பேசாமற்போனால், அந்தக் கொடியவன் தன் பாவத்திலே மரிப்பான். அவனுடைய இரத்தப்பழிக்கு உன்னிடமே நான் கணக்குக்கேட்பேன். ஆயினும், அக்கொடியவன் தன் வழிகளை விட்டுத் திரும்பும்படி நீ எச்சரித்தும், அதை அவன் ஏற்காவிட்டால், அவன் தன் பாவத்தின் நிமித்தமே மரிப்பான். நீயோ உன்னைக் காத்துக்கொள்வாய்.
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு சொல்லவேண்டியதாவது: ‘ “நீங்கள் எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்களுக்குப் பாரமாயின. அவைகளாலே நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோமே! அப்படியானால் நாங்கள் வாழ்வது எப்படி? என சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?” ’ ஆனால் ஆண்டவராகிய யெகோவா சொல்கிறதாவது, ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, கொடியவர்களின் மரணத்தில் நான் மகிழ்வதில்லை; அவர்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பி வாழ்வதையே விரும்புகிறேன் என்பதும் நிச்சயம். திரும்புங்கள், உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்புங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?’ என்கிறார் என்று அவர்களுக்குச் சொல்.
“ஆதலால் மனுபுத்திரனே, உனது நாட்டு மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘நீதியானவன் கீழ்ப்படியாதபோது, அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றமாட்டாது. கொடியவன் தன் கொடிய வழிகளிலிருந்து திரும்பும்போது, அவனுடைய கொடுமை அவன் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாயிருக்கவும் மாட்டாது. நீதியானவன் பாவம் செய்வானாயின் அவனுடைய முந்திய நீதியினிமித்தம் அவன் வாழ்வதற்கு அனுமதிக்கப்படமாட்டான்.’ ஆனால் நீதிமான் ஒருவன் நிச்சயமாக வாழ்வான் என நான் கூறியிருக்க, அவன் தன் நீதியிலே நம்பிக்கை வைத்து, தீமைகளைச் செய்வானேயாகில் அவன் முன்செய்த நீதியான காரியங்கள் எதுவுமே நினைக்கப்படுவதில்லை. அவன் தான் செய்த தீமையினிமித்தம் மரிப்பான். மேலும் நான் ஒரு கொடியவனிடம், ‘நிச்சயமாக நீ சாவாய்’ எனச் சொல்லியிருக்க, அவன் தன் பாவத்திலிருந்து திரும்பி, நீதியும் சரியானதையும் செய்து, அவன் கொடுத்த கடனுக்காகப் பெற்றுக்கொண்ட அடைமானத்தையும் மீளக்கொடுத்து, தான் திருடியவற்றையும் திருப்பிக் கொடுத்து, வாழ்வு கொடுக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி, தீமைசெய்யாது விடுவானாயின், நிச்சயமாக அவன் வாழ்வான். அவன் சாகமாட்டான். அவன் செய்த பாவங்கள் எதுவுமே அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை. அவன் நீதியும் சரியானதையும் செய்தானே. நிச்சயமாக அவன் வாழ்வான்.
“ஆயினும், உன் நாட்டு மனிதர், ‘யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறார்கள். ஆனால் அவர்களின் வழிதான் நீதியற்றது. நீதியான ஒருவன் தன் நீதியிலிருந்து திரும்பி தீமைகளைச் செய்வானாகில், அதற்காக அவன் மரிப்பான். கொடியவனொருவன் தன் கொடுமையிலிருந்து விலகி, நீதியும் நியாயமுமானவற்றைச் செய்வானாயின், அப்படிச் செய்வதன் நிமித்தம் அவன் வாழ்வான். ஆனாலும், இஸ்ரயேல் குடும்பத்தாரே, ‘நீங்கள் யெகோவாவின் வழி நீதியானதல்ல’ என்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்பேன் என்கிறார்” என்றான்.
எருசலேமின் வீழ்ச்சிக்குக் காரணம்
நாங்கள் நாடுகடத்தப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பத்தாம் மாதம், ஐந்தாம் நாள் எருசலேமிலிருந்து தப்பி வந்த மனிதன் ஒருவன் என்னிடம் வந்து, “நகரம் வீழ்ந்தது” என்றான். அந்த மனிதன் வருவதற்கு முந்திய நாள் சாயங்காலம் யெகோவாவின் கரம் என்மேல் வந்தது. காலையில் அம்மனிதன் என்னிடம் வருமுன் அவர் என் வாயைத் திறந்தார். என் வாய் திறக்கப்பட்டிருந்தபடியினால் நான் மவுனமாயிருக்கவில்லை.
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேல் நாட்டில் அழிவு ஏற்பட்ட நகரங்களில் எஞ்சி வாழும் மக்கள், ‘ஆபிரகாம் ஒரே ஒரு மனிதனாக இருந்தும் முழு நாட்டையும் உரிமையாக்கிக் கொண்டானே; நாங்களோ அநேகராய் இருக்கிறோம். நிச்சயமாக இப்பொழுது நாடு எங்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லவா’ என்கிறார்கள். ஆகவே, நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடுவதுடன், விக்கிரகங்களை நம்பி இரத்தமும் சிந்துகிறீர்கள். அப்படியிருக்க நாடு உங்களது உரிமையாகலாமோ? நீங்கள் உங்கள் வாளிலே நம்பிக்கை வைக்கிறீர்கள். வெறுக்கத்தக்க காரியங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?’ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
“இதையும் அவர்களிடம் சொல். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் வாழ்வது நிச்சயம்போல, அழிவு ஏற்பட்ட நகரங்களில் விடப்பட்டவர்கள் வாளினால் சாவார்கள். நாட்டில் வெளியிடங்களில் இருப்பவர்களைக் காட்டு மிருகங்களுக்கு விழுங்கும்படி கொடுப்பேன். பலத்த கோட்டைகளிலும் குகைகளிலும் மறைந்திருப்போர் கொள்ளைநோயினால் சாவார்கள் என்பதும் நிச்சயம். நான் நாட்டைப் பாழாக்குவேன். அப்பொழுது அதன் பெருமையான பலம் ஒரு முடிவுக்கு வரும். அப்பொழுது அதன் வழியால் ஒருவனும் கடக்கமுடியாதபடி இஸ்ரயேலின் மலைகள் பாழாகும். அவர்கள் செய்த வெறுக்கத்தக்க காரியங்களினிமித்தம் நான் நாட்டைப் பாழடையச்செய்யும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
“மனுபுத்திரனே, உன்னைக் குறித்தோ உன் நாட்டு மக்கள், சுவரோரங்களிலும், வீட்டு வாசல்களிலும் ஒன்றுகூடி ‘யெகோவாவிடமிருந்து வந்த வார்த்தையாம்; வந்து கேளுங்கள்’ என்பதாக ஒருவருக்கொருவர் கேலியாகச் சொல்லிக்கொள்கிறார்கள். என் மக்கள் வழக்கமாய்ச் செய்வதுபோலவே, உன் வார்த்தைகளைக் கேட்பதற்காக உன்னிடம் வந்து உனக்குமுன் இருக்கின்றார்கள். ஆயினும், அவர்கள் அவைகளின்படி நடப்பதில்லை. அவர்கள் தங்கள் வாயினால் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயங்களோ நீதியற்ற ஆதாயத்தில் பேராசைகொள்கின்றன. உண்மையாய் நீயோ அவர்களுக்கு, இனிய குரலுடன் காதல் பாடல்ளைப் பாடி, இசைக் கருவிகளையும் நன்றாய் வாசித்து, அவர்களை மகிழ்விக்கும் ஒருவன்போல் மட்டுமே காணப்படுகிறாய். அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவைகளின்படி நடப்பதில்லை.
“ஆனாலும் இவைகளெல்லாம் உண்மையாகும்போது, அவை நிச்சயமாகவே வரும். அப்பொழுது அவர்கள், இறைவாக்கினன் ஒருவன் தங்கள் மத்தியில் இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.”
யெகோவாவே இஸ்ரயேலின் மேய்ப்பர்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு விரோதமாக இறைவாக்கு உரை; நீ இறைவாக்குரைத்து அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: தங்களைக்குறித்து மட்டுமே கவனம் எடுக்கும் இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு, மேய்ப்பர்கள் மந்தையில் கவனம் எடுக்க வேண்டுமல்லவோ? நீங்கள் தயிரைச் சாப்பிட்டுக் கம்பளி உடைகளை உடுத்தி, சிறந்த மிருகங்களையும் அடித்துச் சாப்பிடுகிறீர்கள். ஆனால், மந்தையையோ நீங்கள் கவனிக்காது இருக்கிறீர்கள். நீங்கள் பெலவீனமானவைகளைப் பெலப்படுத்தவில்லை. நோயுள்ளவைகளைச் சுகப்படுத்தவுமில்லை. காயமுற்றவைகளுக்குக் கட்டுப்போடவுமில்லை. நீங்கள் வழிவிலகிப் போனவைகளைத் திருப்பிக்கொண்டு வரவில்லை. காணாமற்போனவற்றைத் தேடிப்போகவுமில்லை. அவைகளைக் கடுமையாகவும், கொடுமையாகவும் நடத்தினீர்கள். மேய்ப்பன் அங்கு இல்லாதபடியால் அவை சிதறிப்போயின. அவை சிதறியபோது காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. எனது செம்மறியாடுகள் எல்லா மலைகளிலும், ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின்மீதெங்கும் சிதறிப்போயின. அவைகளைத் தேடுவதற்கோ கவனிப்பதற்கோ ஒருவருமே இருக்கவில்லை.
“ ‘ஆகவே மேய்ப்பர்களே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். நான் வாழ்வது நிச்சயம்போலவே, என் மந்தைக்கு மேய்ப்பனொருவன் இல்லாத காரணத்தால் அவை களவாடப்பட்டன. அவை காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. என் மேய்ப்பர்கள் என் மந்தையைத் தேடாமல் என் மந்தையைப் பார்க்கிலும் தங்களையே கவனிக்கிறார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஆகவே மேய்ப்பர்களே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான், நானே எனது செம்மறியாடுகளைத் தேடி அவைகளைப் பராமரிப்பேன். ஒரு மேய்ப்பன் சிதறடிக்கப்பட்ட தன் மந்தைகளோடு இருக்கும்போது அவைகளைப் பராமரிப்பதைப்போலவே, என் செம்மறியாடுகளை நான் பராமரிப்பேன். மப்பும் மந்தாரமுமான நாளிலே, அவைகளைச் சிதறிப்போயிருந்த எல்லா இடங்களிலுமிருந்து நான் கூட்டிச்சேர்ப்பேன். நான் அவைகளைப் பல நாடுகளிலும் நாடுகளிலுமிருந்து கூட்டிச்சேர்த்து, அவைகளுடைய சொந்த நாட்டிற்கே கொண்டுவருவேன். இஸ்ரயேலின் மலைகளின்மீதும், பள்ளத்தாக்குகளிலும் நாட்டின் எல்லா குடியிருப்புகளிலும் நான் அவைகளை மேய்ப்பேன். நல்ல பசும் புற்தரைகளிலே நான் அவைகளைப் பராமரிப்பேன். இஸ்ரயேல் மலை உச்சிகள் அவைகளின் மேய்ச்சல் நிலங்களாயிருக்கும். அங்கே நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும். இஸ்ரயேல் மலைகளின் செழிப்பான பசும்புற்தரையில் அவை மேயும். என் செம்மறியாடுகளை நானே பராமரித்து அவைகளை இளைப்பாறச் செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். தொலைந்து போனவற்றை நான் தேடி, வழிதப்பிப்போனவற்றைத் திருப்பிக் கொண்டுவருவேன். காயம்பட்டவற்றை நான் கட்டி, பெலவீனமானதைப் பெலப்படுத்துவேன். ஆனால் கொழுத்ததையும் பெலமுள்ளதையும் நான் அழித்துப்போடுவேன். நான் நீதியின்படியே மந்தையை மேய்ப்பேன்.
“ ‘என் மந்தையே, ஆண்டவராகிய யெகோவா உன்னைக்குறித்து கூறுவது இதுவே: நான் செம்மறியாட்டுக்கும் செம்மறியாட்டுக்கும் இடையே நியாயந்தீர்பேன். செம்மறியாட்டுக் கடாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் இடையில் நான் நியாயந்தீர்ப்பேன். செம்மறியாட்டுக் கடாக்களே! வெள்ளாட்டுக் கடாக்களே! நல்ல பசும்புற்தரையில் நீங்கள் மேய்வது போதாதோ? மீதியான பசுந்தரையை உங்கள் கால்களால் மிதித்துப்போட வேண்டுமோ? தெளிந்த தண்ணீரைக் குடிப்பது உங்களுக்குப் போதாதோ? மீதியானவற்றை உங்கள் கால்களினால் கலக்கிச் சேறாக்க வேண்டுமோ? என் மந்தை, நீங்கள் மிதித்துப்போட்டவற்றில் தின்று, உங்கள் கால்களினால் கலக்கியவற்றைக் குடிக்க வேண்டுமோ?
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா அவர்களுக்கு கூறுவது இதுவே. இதோ பார்! கொழுத்த செம்மறியாடுகளுக்கும் மெலிந்த செம்மறியாடுகளுக்குமிடையில் நானே தீர்ப்பு வழங்குவேன். ஏனெனில் கொழுத்த செம்மறியாடுகளே, நீங்கள் பலவீனமான செம்மறியாடுகளையெல்லாம் உங்கள் கொம்புகளினால் முட்டி, தோளினாலும் விலாவினாலும் இடித்துத் தள்ளி, அவைகளைத் துரத்திவிட்டீர்கள். ஆகவே நான் என் மந்தையைக் காப்பேன். அவை இனியொருபோதும் கொள்ளையாக மாட்டாது. செம்மறியாட்டுக்கும், செம்மறியாட்டுக்கும் இடையில் நான் தீர்ப்பு வழங்குவேன். நான் என் அடியவனாகிய தாவீதை அவைகளின் ஒரே மேய்ப்பனாக ஏற்படுத்துவேன். அவன் அவைகளைப் பராமரிப்பான். அவன் அவைகளைப் பராமரித்து, அவைகளின் மேய்ப்பனாய் இருப்பான். யெகோவாவாகிய நானே அவைகளின் இறைவனாயிருப்பேன். என் அடியவனாகிய தாவீது அவைகளின் மத்தியில் இளவரசனாயிருப்பான். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்.
“ ‘நான் என் மக்களோடு ஒரு சமாதான உடன்படிக்கை செய்து, காட்டு மிருகங்களை நாட்டிலிருந்து துரத்திவிடுவேன். அப்பொழுது அவர்கள் பாலைவனத்தில் வாழ்ந்தும் காடுகளில் உறங்கியும் பாதுகாப்பாயிருப்பார்கள். அவர்களையும், என் மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள இடங்களையும் நான் ஆசீர்வதிப்பேன். நான் பருவகாலத்தில் மழையைப் பொழியச்செய்வேன். அது செழிக்கப்பண்ணும் ஆசீர்வாதமான மழையாக இருக்கும். வெளியின் மரங்கள் தங்கள் பழங்களைக் கொடுக்கும். பூமி தன் விளைச்சலைக் கொடுக்கும். மக்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுடைய நுகத்தடிகளை நான் முறித்து, அடிமைப்படுத்தினவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்கள் இனியொருபோதும் நாடுகளால் கொள்ளையிடப்படவும் மாட்டார்கள். காட்டு மிருகங்கள் அவர்களை விழுங்குவதுமில்லை. அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். அவர்களை ஒருவனும் பயமுறுத்துவதுமில்லை. பயிருக்குப் பேர்பெற்ற ஒரு நிலத்தை நான் அவர்களுக்கு அளிப்பேன். அவர்கள் இனியொருபோதும் நாட்டில் வரும் பஞ்சத்துக்கு இரையாவதில்லை. தேசத்தாரின் கேலிக்கும் ஆளாவதில்லை. அப்பொழுது இறைவனும் கர்த்தருமாகிய நான் அவர்களோடிருக்கிறேன் என்றும், இஸ்ரயேல் குடும்பமாகிய அவர்கள் என் மக்கள் என்றும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். என் செம்மறியாடுகளே, என் மேய்ச்சலின் செம்மறியாடுகளே, நீங்கள் என் மக்கள். நானே உங்கள் இறைவன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல் என்றார்.’ ”
ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ சேயீர்மலைக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அதற்கு விரோதமாக இறைவாக்கு சொல். நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. சேயீர்மலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். நான் உனக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டி, உன்னைப் பாழாக்குவேன். நான் உனது பட்டணங்களை இடிந்துபோகப்பண்ணுவேன். நீ பாழாக்கிவிடப்படுவாய். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.
“ ‘இஸ்ரயேலின் தண்டனை உச்சமடைந்து, அவர்கள் துன்பத்திலிருந்த வேளையில் நீ பழைய பகைமையை நினைவில் வைத்திருந்தபடியினால், அவர்களை வாளுக்கு இரையாக்கினாய். ஆகையால் நான் வாழ்வது நிச்சயம்போலவே, உன்னை நான் இரத்தம் சிந்துதலுக்கு ஒப்புக்கொடுப்பேன். அது உன்னைத் தொடரும். இரத்தம் சிந்துதலை நீ வெறுக்காதபடியால், இரத்தம் சிந்துதல் உன்னைத் தொடரவே செய்யும் என்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். சேயீர்மலையைப் பாழாக்கி, போவோரையும் வருவோரையும் அதிலிருந்து அகற்றிவிடுவேன். நான் உன் மலைகளைக் கொலையுண்டோரால் நிரப்புவேன். வாளினால் கொல்லப்பட்டோர் உனது குன்றுகளிலும், பள்ளத்தாக்குகளிலும் உன் சகல கணவாய்களிலும் விழுவார்கள். நான் உன்னை என்றென்றும் பாழாயிருக்கும்படி செய்வேன். உனது பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.
“ ‘யெகோவாவாகிய நான் அங்கு இருப்பினும், “இஸ்ரயேல் யூதா ஆகிய இவ்விரு நாடுகளும், அவைகளின் நாடுகளும் எங்களுடையதாகும்; அவைகளை நாம் உடைமையாக்கிக்கொள்வோம்” என்றும் நீ சொன்னாய். ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அவர்களில்கொண்ட வெறுப்பினால் காட்டிய கோபத்திற்கும் எரிச்சலுக்கும் ஏற்றவாறு நான் உன்னை நடத்துவேன். நான் உனக்குத் தீர்ப்பிடும்போது, அவர்கள் மத்தியில் என்னை அறிந்துகொள்ளச் செய்வேன் என்பதும் நிச்சயம். அப்பொழுது இஸ்ரயேலின் மலைகளுக்கு விரோதமாக நீ சொன்ன இழிவான காரியங்களையெல்லாம் யெகோவாவாகிய நான் கேட்டேன் என்பதை நீ அறிந்துகொள்வாய். “அவை பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது” என்று நீ சொன்னாயே. நீ எனக்கு விரோதமாய் பெருமைபாராட்டி, அடக்கமின்றி எனக்கு விரோதமாய்ப் பேசினாய். அதை நான் கேட்டேன். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. பூமி முழுவதுமே மகிழ்ந்து கொண்டிருக்கையில் நான் உன்னைப் பாழாகும்படி செய்வேன். ஏனெனில், இஸ்ரயேலின் உரிமைச்சொத்து பாழாகியபோது நீ மகிழ்ந்தாயே. அவ்வாறே நானும் உனக்குச் செய்வேன். நீ பாழாக்கப்படுவாய். சேயீர்மலையே, நீயும் முழு ஏதோமும் பாழாக்கப்படுவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.’ ”
இஸ்ரயேலின் எதிர்காலம்
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலின் மலைகளே! யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ஆகா, முற்காலத்து உயர்ந்த மலைகள் எங்கள் உடைமைகளாயிற்றே என்று பகைவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்களல்லவோ?” ’ ஆகவே மனுபுத்திரனே நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு திசைகளிலுமிருந்து உங்களைப் பின்தொடர்ந்து துரத்தியபடியால், நீங்கள் மற்ற நாடுகளின் உடைமையாகி, மக்களின் தீங்கான பேச்சுக்கும் அவதூறுக்கும் ஆளானீர்கள். ஆகையால் இஸ்ரயேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். மலைகள், குன்றுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், இடிபாடுகள் ஆகியவற்றிற்கும் உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கேலிக்கிடமாக்கப்பட்ட, பட்டணங்களுக்கும் ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் என் பற்றியெரியும் வைராக்கியத்தில் மீதியான நாடுகளுக்கும், முழு ஏதோமுக்கும் விரோதமாகப் பேசினேன். ஏனெனில், என் நாட்டிலுள்ள மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் மகிழ்வோடும், கர்வத்தோடும் என் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள்.’ ஆகவே நீ இஸ்ரயேல் நாட்டைக்குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் பிறநாட்டினரின் அவமானத்தைச் சுமந்தபடியினால், நான் எனது வைராக்கியத்தினாலும், கடுங்கோபத்தினாலும் பேசுகிறேன். ஆகவே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உண்மையாகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் பல நாடுகளும் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பார்கள் என நான் என் உயர்த்திய கரத்தால் ஆணையிடுகிறேன்.
“ ‘ஆனால், இஸ்ரயேலின் மலைகளே, நீங்களோ என் மக்களாகிய இஸ்ரயேலருக்குக் கிளைகளைப் பரப்பி, பழங்களையும் விளைவிப்பீர்கள். ஏனெனில் அவர்கள் சீக்கிரமாக வீடுதிரும்புவார்கள். பாருங்கள்! நான் உங்களில் அக்கறைகொண்டுள்ளேன். நான் உங்களுக்கு உதவிசெய்ய வருவேன். உங்கள் நிலங்களும் உழப்பட்டு விதைக்கப்படும். மேலும் நான் உங்களிலுள்ள மக்களையும், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரையும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். நகரங்கள் குடியிருப்பாகும். இடிபாடுகள் மீண்டும் கட்டப்படும். உங்களிலுள்ள மனிதர்களையும், மிருகங்களையும் எண்ணிக்கையில் பெருகப்பண்ணுவேன். அவர்கள் விருத்தியுள்ளவர்களாய்ப் பெருகுவார்கள். மிருகங்களும் பெருகும். முன்பு இருந்ததுபோலவே மக்களை உங்களில் குடியிருக்கப்பண்ணி, உங்களை முந்தின சிறப்பைவிட செழிப்புள்ளவர்களாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மக்களை, என் மக்களாகிய இஸ்ரயேலரை உங்கள் மேலாக நடக்கும்படி செய்வேன். அவர்கள் உங்களை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களின் உரிமைச் சொத்தாவீர்கள். இனியொருபோதும் நீங்கள் அவர்களைப் பிள்ளையற்றவர்களாக்க மாட்டீர்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் நாடு தனது சொந்த மனிதரை விழுங்கி, “தன் நாட்டைப் பிள்ளையற்றதாக்குகிறது என்பதாக மக்கள் உங்களைக் குறித்துச் சொல்கிறார்கள்” ஆகையால் இனிமேல் நீங்கள் மனிதரை விழுங்கவோ அல்லது உங்கள் நாட்டைப் பிள்ளையற்றதாக்கவோ மாட்டீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களை இனிமேல் நாடுகளின் பழிச்சொல்லைக் கேட்கச்செய்யமாட்டேன். மக்கள் கூட்டங்களின் ஏளனத்தால் இனி நீங்கள் வேதனையடைவதுமில்லை. அல்லது உங்கள் நாட்டை நான் விழப்பண்ணப்போவதுமில்லை என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
இஸ்ரேலின் மறுசீரமைப்பு உறுதி
மீண்டும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்கள் தம் சொந்த நாட்டில் வாழும்போது, அவர்கள் அதைத் தங்கள் நடத்தைகளினாலும், செயல்களினாலும் அசுத்தப்படுத்தினார்கள். எனது பார்வையில் அவர்களின் நடத்தை பெண்ணின் மாத விலக்குபோல் இருந்தது. அவர்கள் தங்கள் நாட்டில் இரத்தம் சிந்தியதாலும், நாட்டைத் தங்கள் விக்கிரகங்களால் அசுத்தப்படுத்தியதாலும், நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றினேன். நான் அவர்களை நாடுகளுக்குள்ளும் சிதறப்பண்ணினேன். அவர்கள் தேசங்களுக்கிடையே கலைந்துபோனார்கள். அவர்கள் நடத்தைகளுக்கும், செயல்களுக்கும் தக்கதாக நான் அவர்களை நியாயந்தீர்த்தேன். நாடுகளின் மத்தியில் அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் என் பரிசுத்த பெயரை அசுத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ‘இவர்கள் யெகோவாவினுடைய மக்கள், என்றாலும் இவர்கள் அவருடைய நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது’ என்பதாக அவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது. இஸ்ரயேல் குடும்பத்தார் சென்றிருந்த நாடுகளின் மத்தியில் அவர்கள் அசுத்தப்படுத்திய எனது பரிசுத்த பெயரைக்குறித்து நான் அக்கறையாயிருந்தேன்.
“ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள். நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன். நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன். உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன். நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள். நான் இவ்வாறு செய்யப்போவது நீங்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்காக அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! உங்கள் நடத்தையினிமித்தம் வெட்கித்து அவமானமடையுங்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் எல்லா பாவங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்திகரிக்கும் நாளிலே, உங்கள் பட்டணங்களில் குடியேறச்செய்வேன். இடிபாடுகளெல்லாம் மீண்டும் கட்டப்படும். பாழாக்கப்பட்ட இடங்கள் அதைக் கடந்துசெல்வோர் அனைவரது பார்வையிலும், பாழாய்க்கிடப்பதற்குப் பதிலாகப் பயிரிடப்பட்டதாயிருக்கும். “பாழாக்கப்பட்டிருந்த இந்நாடு ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. பாழாக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பாழிடங்களாய்க் கிடந்த பட்டணங்கள், இப்பொழுது காவலரண் செய்யப்பட்ட குடியிருப்புகளாகிவிட்டன என்று சொல்வார்கள்.” அப்பொழுது அழிக்கப்பட்டதைத் திரும்பவும் கட்டியதும், பாழாய்க் கிடந்ததை திரும்பவும் பயிரிட்டதும் யெகோவாவாகிய நானே என்பதை உன்னைச்சூழ இருக்கும் நாடுகள் அறிந்துகொள்ளும். யெகோவாவாகிய நானே இதைக் கூறினேன்; நானே இதைச் செய்வேன்.’
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேலின் வேண்டுதலுக்கு இன்னொருமுறையும் நான் இடமளித்து அவர்களுக்காக இதைச் செய்வேன். அவர்களுடைய மக்களைச் செம்மறியாடுகள்போல எண்ணற்றவர்களாக்குவேன். பண்டிகைக் காலத்தில் எருசலேமுக்குக் கொண்டுவரப்படும் பலிக்கான மந்தைகளைப்போல், அவர்கள் எண்ணற்றவர்களாயிருப்பார்கள். பாழாக்கப்பட்ட பட்டணங்கள் இவ்விதமாய் மக்கள் திரளால் நிரப்பப்படும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
எலும்புகளின் பள்ளத்தாக்கு
யெகோவாவினுடைய கரம் என்மீது இருந்தது, அவர் தமது ஆவியானவரால் என்னை வெளியே கொண்டுபோய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அது எலும்புகளால் நிறைந்திருந்தது. அவர் என்னை அவைகளின் மத்தியில் முன்னும் பின்னுமாக நடத்தினார். அங்கே பள்ளத்தாக்கின் தரையில், பெருந்தொகையான எலும்புகளை நான் கண்டேன். அவை மிகவும் உலர்ந்திருந்தன. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிர்வாழுமா?” எனக் கேட்டார்.
அதற்கு நான், “ஆண்டவராகிய யெகோவாவே, அதை நீர் மட்டுமே அறிவீர்” என்றேன்.
பின்பு அவர் என்னிடம், “நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைத்து, அவைகளுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உலர்ந்த எலும்புகளே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்! ஆண்டவராகிய யெகோவா இந்த எலும்புகளுக்கு கூறுவது இதுவே: நான் உங்களுக்குள் சுவாசத்தை நுழையச்செய்வேன், அப்பொழுது, நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களுக்கு தசை நார்களை இணைத்து, உங்கள்மீது சதையை வரப்பண்ணி, தோலினால் மூடுவேன். உங்களுக்குள் சுவாசம் வரச்செய்வேன். நீங்கள் உயிரடைவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லும்படி சொன்னார்.’ ”
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கையில் சத்தமொன்று உண்டாயிற்று, அது ஏதோ உரசும் சத்தம். அங்கிருந்த எலும்புகளுடன் எலும்புகள் இணைந்து ஒன்றாயின. நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவைகளில் தசை நார்களும் சதைகளும் தோன்றின. தோல் அவற்றை மூடிற்று. ஆனாலும் அவைகளில் சுவாசம் இல்லாதிருந்தது.
பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது, “நீ சுவாசத்தை நோக்கி இறைவாக்கு உரை. மனுபுத்திரனே, நீ இறைவாக்குரைத்து அதற்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: சுவாசமே, நீ நான்கு திசைகளிலுமிருந்து வந்து, கொல்லப்பட்ட இவர்கள் உயிரடையும்படியாக, இவர்களுக்குள் போ என்று சொல் என்றார்.’ ” அவ்வாறு அவர் கட்டளையிட்டபடியே நான் சொன்னேன். சுவாசம் அவைகளுக்குள் புகுந்தது. அவை உயிரடைந்து தங்கள் கால்களை ஊன்றி, ஒரு பெரும்படையாக நின்றார்கள்.
பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது, “மனுபுத்திரனே, இந்த எலும்புகளே முழு இஸ்ரயேல் குடும்பம் ஆகும். அவர்களோ, ‘எங்கள் எலும்புகள் உலர்ந்து எங்கள் எதிர்பார்ப்பு அற்றுப்போயிற்று; நாங்களும் இல்லாமல் போனோம்’ என சொல்கிறார்கள். ஆகவே, நீ இறைவாக்குரைத்து அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களே, நான் பிரேதக்குழிகளைத் திறந்து, அங்கிருந்து உங்களை வெளியே கொண்டுவரப் போகிறேன். மறுபடியும் நான் உங்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, அவற்றிலிருந்து உங்களை வெளியே கொண்டுவரும்போது, என் மக்களாகிய நீங்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள். நான் என் ஆவியானவரை உங்களுக்குள் அனுப்புவேன். நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியிருக்கப்பண்ணுவேன். அப்பொழுது யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்; நானே இதைச் செய்தேன் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.’ ”
ஒரே அரசன் ஒரே நாடு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ ஒரு தடியை எடுத்து, ‘இது யூதாவுக்கும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேலருக்கும் சொந்தமானது’ என அதில் எழுது. பின்பு வேறொரு தடியை எடுத்து, ‘இது எப்பிராயீமின் தடி; இது யோசேப்புக்கும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் குடும்பத்தார் எல்லோருக்கும் சொந்தமானது’ என அதில் எழுது. அதன்பின் அவை உனது கையில் ஒன்றாகும்படி அவைகளை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு தடியாக இணை.
“இதனால் நீ எதைக் கருதுகிறாய்? ‘நமக்குக் கூறமாட்டாயா?’ என உன் நாட்டவர் உன்னைக் கேட்கும்போது, நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் எப்பிராயீமுக்கும், அதைக் கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு இணைத்து, ஒரே கோலாக்குவேன். அவைகள் என் கரத்தில் ஒன்றாயிருக்கும்.’ நீ எழுதிய அந்த கோல்ககளை அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பிடித்து, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் இஸ்ரயேலரை அவர்கள் போயிருக்கும் நாடுகளிடையேயிருந்து வருவிப்பேன். நான் அவர்களை எல்லா இடங்களிலுமிருந்தும் ஒன்றுதிரட்டி, மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டுக்கே கொண்டுவருவேன். நான் அவர்களை இஸ்ரயேலின் மலைகளிலும் நிலப்பரப்பிலும் ஒரே நாடாக்குவேன். அங்கே இனியொருபோதும் இரு நாடுகள் இருப்பதில்லை. இரு அரசுகளாக பிரிக்கப்படுவதுமில்லை. அவர்கள் எல்லோர்மேலும் ஒரே அரசனே ஆளுகை செய்வான். அவர்கள் தங்கள் விக்கிரகங்களாலோ, வெறுக்கத்தக்க உருவச் சிலைகளாலோ அல்லது எந்தவொரு குற்றச் செயல்களாலோ இனியொருபோதும் தங்களை கறைப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களைப் பின்னடையச்செய்யும் எல்லா பாவங்களினின்றும் நான் அவர்களை விடுவித்து, அவர்களைச் சுத்திகரிப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்கள் இறைவனாயிருப்பேன்.
“ ‘என் அடியவனாகிய தாவீது அவர்களின் அரசனாயிருப்பான். அவர்கள் அனைவரும் ஒரே மேய்ப்பனைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எனது சட்டங்களைப் பின்பற்றி, என் விதிமுறைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். நான் என் அடியவனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் முற்பிதாக்கள் வாழ்ந்ததுமாகிய நாட்டிலே அவர்கள் குடியிருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள். என் அடியவனான தாவீது என்றென்றும் அவர்களுடைய இளவரசனாக இருப்பான். நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றைச் செய்வேன். அது ஒரு நித்திய உடன்படிக்கையாயிருக்கும். நான் அவர்களை நிலைநிறுத்தி, அவர்களுடைய எண்ணிக்கையைப் பெருகப்பண்ணி, என்றென்றைக்கும் என் பரிசுத்த ஆலயத்தை அவர்கள் மத்தியில் வைப்பேன். எனது இருப்பிடம் அவர்களோடிருக்கும். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். எனது பரிசுத்த ஆலயம் என்றென்றும் அவர்கள் மத்தியில் இருக்கும்போது, யெகோவாவாகிய நானே இஸ்ரயேலைப் பரிசுத்தம் பண்ணுகிறவர் என்று பிற தேசத்தார்கள் அறிந்துகொள்வார்கள்.’ ”
கோகுவுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, மேசேக், தூபால் என்போரின் பிரதம இளவரசனான கோகு, என்பவனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பு. மாகோக் நாட்டைச் சேர்ந்த அவனுக்கு விரோதமாக இறைவாக்கு உரை. நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மேசேக், தூபால் நாடுகளின் பிரதம இளவரசனான கோகே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். நான் உன்னைத் திருப்பி, உன் தாடைகளில் கொக்கியை மாட்டி, உன்னை உனது முழு இராணுவத்தோடும் உன் நாட்டைவிட்டு வெளியே கொண்டுவருவேன். அத்துடன் உன் குதிரைகளும், ஆயுதம் தாங்கிய உன் குதிரைவீரரும், பெரிதும் சிறிதுமான கேடயங்கைளப் பிடித்த பெருங்கூட்டமும் உன்னுடன் வருவார்கள். அவர்கள் அனைவரும் வாளைவீச ஆயத்தமாய் வருவார்கள். தலைக்கவசம் அணிந்து கேடயம் பிடித்திருக்கும் பெர்சியரும், எத்தியோப்பியரும், பூத்தியரும் அவர்களோடு வருவார்கள். கோமேரும் அதன் எல்லாப் படைகளும், வடக்கே தொலைவிலுள்ள பெத் தொகர்மாவும், அதன் எல்லாப் படைகளும் உன்னோடிருக்கும் அநேக தேசத்தாருங்கூட அவர்களோடு வருவார்கள்.
“ ‘நீயும் உன்னைச்சூழ இருக்கும் எல்லா கூட்டத்தாரும் தயாராகுங்கள், நீ அவர்களுக்குத் தலைமை தாங்க ஆயத்தப்படு. அநேக நாட்களுக்குப்பின் நீ போருக்கு அழைக்கப்படுவாய். வரும் வருடங்களில், போர்த் தாக்கத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கும் இஸ்ரயேல் நாட்டின்மேல் நீ படையெடுப்பாய். அந்த நாட்டின் மக்கள் பல நாடுகளிலுமிருந்து ஒன்றுசேர்க்கப்பட்டு, நெடுங்காலமாய்ப் பாழடைந்துகிடந்த இஸ்ரயேலரின் மலைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் எல்லோரும் பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டு இப்பொழுது பாதுகாப்பாக வாழ்கிறார்கள். நீயும், உனது எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் அநேக நாடுகளும் அவர்களை எதிர்த்து ஒரு புயலைப்போல் முன்னேறுவீர்கள். நீங்கள் கார்மேகம்போல் அந்த நாட்டை மூடுவீர்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அப்பொழுது உன் மனதில் எண்ணங்கள் எழும்பும். நீ தீமையான திட்டமொன்றைத் தீட்டுவாய். அப்பொழுது நீ, “நான் மதில் இல்லாத கிராமங்களுடைய நாட்டின்மேல் படையெடுப்பேன். மதில்களும், வாசல்களும், தாழ்ப்பாள்களும் இன்றி, சமாதானத்துடன் பயமின்றி வாழும் மக்களை நான் தாக்குவேன். பாழாக்கப்பட்டு திரும்பவும் குடியேற்றப்பட்ட இடங்களைக் கொள்ளையிட்டு, சூறையாடி, அவற்றிற்கு விரோதமாய் என் கைகளை உயர்த்துவேன். எல்லா நாடுகளிலுமிருந்து ஒன்றுகூட்டப்பட்டு ஆடுமாடுகளிலும், பொருள்களிலும் செல்வச் செழிப்புடையவர்களாய் நாட்டின் மத்தியில் வாழும் மக்களுக்கு விரோதமாகவும் என் கையைத் திருப்புவேன் என்பாய்.” சேபா, தேதான் நாட்டவர்களும், தர்ஷீஸ் வர்த்தகர்களும், அவர்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உன்னிடம், “நீ சூறையாடவா வந்தாய்? கொள்ளையடிக்கவும், வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்துக்கொள்ளவும், ஆடுமாடுகளையும் பொருட்களையும் கொண்டுபோகவும், பெருங்கொள்ளையை அபகரிக்கவுமா இப்பெருங்கூட்டத்தைச் சேர்த்தாய்?” ’ என்பார்கள்.
“ஆதலால் மனுபுத்திரனே, நீ இறைவாக்குரைத்து, கோகு என்பவனுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ அந்நாளிலே என் மக்களாகிய இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வதை நீ கண்டு, எழுந்து உனது இருப்பிடமான வடதிசையின் தொலைவிலிருந்து வருவாய். அநேக நாடுகளும் உன்னோடு வருவார்கள். அவர்களெல்லாரும் ஒரு பெருங்கூட்டமாக, வலிமையுள்ள இராணுவமாக குதிரைகள் மீது வருவார்கள். நீயோ நாட்டை மூடும் ஒரு கார்மேகம்போல, என் மக்களான இஸ்ரயேலருக்கு விரோதமாக வருவாய். கோகே, வரப்போகும் நாட்களிலே, நாடுகளின் கண்களுக்கு முன்பாக உன்னை என் நாட்டுக்கு எதிராகக் கொண்டுவருவேன். உனக்கு நடப்பதன் மூலம் நான் என்னைப் பரிசுத்தராகக் காட்டும்போது, அவர்கள் என்னை அறிந்துகொள்வார்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் அடியவர்களான, இஸ்ரயேலின் இறைவாக்கினரைக்கொண்டு பூர்வ நாட்களிலே நான் பேசியது உன்னைக் குறித்தல்லவா? அந்நாட்களிலே நான் உன்னை என் மக்களுக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன் என்பதாக வருடக்கணக்கில் அவர்கள் இறைவாக்குரைத்தார்களே! அந்நாளில் நடக்கப்போவது இதுவே: கோகு என்பவன் இஸ்ரயேலைத் தாக்கும்போது, என் கடுங்கோபம் எழும்பும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அக்காலத்தில் இஸ்ரயேல் நாட்டில் ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாகும் என்பதாக எனது வைராக்கியத்திலும், கடுங்கோபத்திலும் நான் அறிவிக்கின்றேன். கடலின் மீன்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், நிலத்தில் ஊரும் ஒவ்வொரு பிராணியும், பூமியிலுள்ள எல்லா மக்களும் எனது சமுகத்தில் நடுங்குவார்கள். மலைகள் புரட்டப்படும். செங்குத்தான பாறைகள் நொறுங்கும். ஒவ்வொரு மதிலும் தரையில் விழும். கோகுவே, எனது எல்லா மலைகளின்மேலும் உனக்கு விரோதமாக ஒரு வாளை வரப்பண்ணுவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். உனது மனிதர் ஒவ்வொருவரும் தமது வாளை ஒருவருக்கொருவர் விரோதமாகப் பயன்படுத்துவார்கள். கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன். உன்மேலும், உனது இராணுவங்கள்மேலும், உன்னோடிருக்கும் அநேக நாடுகளின்மேலும் பெருமழையையும், பனிக்கட்டி மழையையும், எரியும் கந்தகத்தையும் நான் ஊற்றுவேன். இவ்விதமாய் அநேக நாடுகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் நான் காண்பிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’
“மனுபுத்திரனே, நீ கோகுவுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: மேசேக், தூபால் நாடுகளின் பிரதம இளவரசனான கோகே, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நான் உன்னை எதிர்ப்புறமாகத் திருப்பி இழுத்துச் செல்வேன். உன்னை வடதிசையின் தொலைவிலிருந்து கொண்டுவந்து, இஸ்ரயேலின் மலைகளுக்கு விரோதமாக அனுப்புவேன். அங்கு நான் உன் இடதுகையிலிருந்து உனது வில்லைத் தட்டிவிட்டு, உன் வலதுகையிலிருந்து அம்புகளை விழப்பண்ணுவேன். அப்பொழுது நீயும் உனது எல்லாப் படைகளும் உன்னுடன் இருக்கும் பல நாடுகளும் இஸ்ரயேலின் மலைகளின்மீது விழுவீர்கள். நான் உன்னைப் பிணம் தின்னும் எல்லாவித பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன். நான் சொல்லிவிட்டேன்; திறந்த வெளியிலே நீ விழுவாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். மாகோகின்மேலும் கரையோர நாடுகளில் பாதுகாப்பாக வாழ்வோரின்மேலும் நான் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
“ ‘என் மக்களாகிய இஸ்ரயேலரின் மத்தியில் நான் என் பரிசுத்த பெயரை அறியப்பண்ணுவேன். எனது பரிசுத்த பெயர் அசுத்தப்படுவதற்கு இனிமேலும் இடங்கொடேன். அப்பொழுது, நான் யெகோவா, இஸ்ரயேலில் பரிசுத்தர், என்பதைப் பல நாடுகளும் அறிந்துகொள்வார்கள். நியாயத்தீர்ப்பு வருகிறது. நிச்சயமாக அது நடைபெறப்போகின்றது. அது நான் சொன்ன விதமாகவே நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நான் கூறிய நாள் இதுவே.
“ ‘பின்பு இஸ்ரயேல் நகரங்களில் வாழ்பவர்கள் வெளியே போய், சிறிதும் பெரிதுமான கேடயங்கள், அம்புகள், வில்லுகள், குண்டாந்தடிகள், ஈட்டிகள் ஆகிய போராயுதங்களை ஒன்றுசேர்த்து எரிபொருளாகப் பயன்படுத்தி எரிப்பார்கள். ஏழு வருடங்களுக்கு அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் போராயுதங்களை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், வெளியே சென்று விறகை பொறுக்கவோ, அதைக் காட்டிலிருந்து வெட்டவோ வேண்டியதில்லை. மேலும் அவர்களைச் சூறையாடியவர்களை அவர்கள் சூறையாடுவார்கள். அவர்களைக் கொள்ளையடித்தவர்களை அவர்கள் கொள்ளையடிப்பார்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘அந்நாளில் நான் கோகுவுக்கு இஸ்ரயேலின் சவக்கடலை நோக்கிக் கிழக்கே போகும் பயணிகளின் பள்ளத்தாக்கில் புதைக்கும் இடமொன்றைக் கொடுப்பேன். கோகும் அவனுடைய எல்லா கூட்டத்தாரும் அங்கு புதைக்கப்படுவதால் அது பயணிகளின் பாதைக்குத் தடையாக அமையும். எனவே அது அமோனியனாகிய கோகின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும்.
“ ‘அவர்களைப் புதைத்து நாட்டைச் சுத்தம் பண்ணுவதற்காக இஸ்ரயேல் குடும்பத்திற்கு ஏழு மாதங்கள் எடுக்கும். நாட்டின் மக்கள் எல்லாரும் அவர்களைப் புதைப்பார்கள். நான் மகிமைப்படும் அந்த நாள் அவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நாளாக இருக்கும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஏழு மாதத்தின் கடைசியில் நாட்டைச் சுத்தம்பண்ண மனிதர் நிரந்தரமாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பிணங்களைத் தேடிப் புதைப்பார்கள்.
“ ‘சிலர் அவர்களோடு சேர்ந்து, நாட்டின் அனைத்து இடங்களுக்கும் போய், நிலத்தில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடுவார்கள். அவர்கள் நாட்டின் வழியாகச் செல்லும்போது, அவர்களில் ஒருவன் மனித எலும்பு ஒன்றைக் காண்பானாயின், புதைகுழி தோண்டுகிறவர்கள் ஆமோன் கோகு பள்ளத்தாக்கில் அதைப் புதைக்குமட்டும் அதற்கருகே ஒரு அடையாளத்தை நாட்டி விட்டுப்போவான். அங்கே ஆமோனா என்றொரு பட்டணமும் இருக்கும். இவ்விதமாய் அவர்கள் நாட்டைச் சுத்தம் பண்ணுவார்கள்.’
“மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ ஒவ்வொருவிதமான பறவையையும் காட்டு மிருகங்களையும் கூப்பிட்டு அவற்றுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘கூடி வாருங்கள்; உங்களுக்காக நான் ஆயத்தப்படுத்தப்போகும் பலிக்கு சுற்றிலுமிருந்து வந்துசேருங்கள்! இஸ்ரயேல் மலைகளின் பெரும் பலிக்கு வந்துசேருங்கள், அங்கே நீங்கள் மாமிசம் தின்று இரத்தம் குடிப்பீர்கள். பாசானில் கொழுத்துப்போன செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் குட்டிகளையும், வெள்ளாடுகளையும், எருதுகளையும் உண்பதுபோல, வலிய மனிதர்களின் மாமிசத்தை நீங்கள் தின்று, பூமியின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். நான் உங்களுக்காக ஆயத்தப்படுத்தப்போகும் பலியிலே, தெவிட்டுமளவும் நீங்கள் கொழுப்பைத் தின்பீர்கள். வெறிக்கும்மட்டும் இரத்தத்தைக் குடிப்பீர்கள். எனது பந்தியிலே நீங்கள் ஒவ்வொரு வகையான குதிரைகளையும், குதிரைவீரர்களையும், வலிய மனிதர்களையும், படைவீரர்களையும் திருப்தியடையும்வரை தின்பீர்கள்’ என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எனது மகிமையை நாடுகளுக்குள் விளங்கப்பண்ணுவேன். அவர்களுக்கு நான் அளிக்கும் தண்டனையையும், அவர்கள்மேல் வைக்கும் எனது கரத்தையும் சகல நாடுகளும் காண்பார்கள். நானே அவர்களுடைய இறைவனாகிய யெகோவா என்பதை அந்த நாள் முதல் இஸ்ரயேல் குடும்பத்தார் அறிந்துகொள்வார்கள். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தது பாவம் செய்ததன் நிமித்தம், நாடுகடத்தப்பட்டார்கள் என்பதைப் பல நாடுகளும் அறிந்துகொள்வார்கள். இதனால் நான் அவர்களுக்கு எனது முகத்தை மறைத்து அவர்கள் பகைவர் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன். அதனால் அவர்கள் அனைவரும் வாளினால் விழுந்தார்கள். அவர்களுடைய அசுத்தத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் ஏற்றபடி, நானே அவர்களுக்குப் பதில்செய்து எனது முகத்தையும் அவர்களுக்கு மறைத்தேன் என்பதை பல நாடுகளும் அறிந்துகொள்வார்கள்.
“ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் யாக்கோபை அவனுடைய சிறையிருப்பிலிருந்து கொண்டுவந்து, இஸ்ரயேல் மக்கள் எல்லோருக்கும் இரக்கம் காட்டுவேன். என் பரிசுத்த பெயரைக்குறித்து வைராக்கியம் உடையவராயிருப்பேன். அவர்கள் தங்கள் நாட்டில் பயமுறுத்துவார் யாருமின்றி பாதுகாப்பாக வாழும்போது, தங்கள் அவமானத்தையும், எனக்கு விரோதமாய்க் காட்டிய உண்மையற்ற தன்மையையும் மறந்து போவார்கள். நான் அவர்களை மறுபடியும் நாடுகளிலிருந்து கொண்டுவரும்போதும், அவர்களுடைய பகைவர்களின் தேசங்களிலிருந்து கூட்டிச் சேர்க்கும்போதும், அவர்கள் மூலமாக அநேக நாடுகளின் பார்வையில் நானே பரிசுத்தர் என்பதைக் காண்பிப்பேன். நான் அவர்களை நாடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டவர்களாக அனுப்பியிருந்தபோதிலும், ஒருவரையேனும் விட்டுவிடாமல் அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்குள் ஒன்றுசேர்ப்பேன். அப்பொழுது தங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். இனியொருபோதும் என் முகத்தை நான் அவர்களுக்கு மறைக்கமாட்டேன். இஸ்ரயேல் குடும்பத்தின்மீது என் ஆவியானவரை ஊற்றுவேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
புதிய ஆலயப் பகுதி
நாங்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட இருபத்தைந்தாம் வருடத்தின் ஆரம்பத்தில், முதலாம் மாதத்தின் பத்தாம் நாளில், யெகோவாவினுடைய கரம் என்மீது இருந்தது. அந்த நாள் எருசலேம் வீழ்ச்சியடைந்த பதினான்காம் வருடம் முடிந்த நாளாயிருந்தது. அவர் அங்கு என்னை கொண்டுபோனார். இறைவன் கொடுத்த தரிசனங்களில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுபோய், மிக உயர்ந்த மலையொன்றின் மீது நிற்கச்செய்தார். அதன் தென்புறத்தில் சில கட்டடங்கள் இருந்தன. அது ஒரு பட்டணம்போல் காணப்பட்டது. அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார். அங்கே வெண்கலம் போன்ற தோற்றமுள்ள ஒரு மனிதனை நான் கண்டேன். அவன் தன் கையில் ஒரு சணல் கயிற்றையும் ஒரு அளவுகோலையும் பிடித்தபடி வாசலில் நின்றான். அவன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ உன் கண்களால் பார்த்து, உன் காதுகளால் கேட்டு, நான் உனக்குக் காண்பிக்கப்போகும் ஒவ்வொன்றையும் கவனித்துக்கொள். அதற்காகவே நீ இங்கு கொண்டுவரப்பட்டாய். நீ காணும் ஒவ்வொன்றையும் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் சொல் என்றான்.”
கிழக்குவாசல்
ஆலயப் பகுதியை முற்றிலும் சூழ்ந்திருந்த ஒரு சுவரை நான் கண்டேன். அந்த மனிதனின் கையிலிருந்த அளவுகோலின் நீளம், ஆறு நீள முழங்களாய் இருந்தன. அந்த முழ அளவோ ஒரு முழத்தைவிட நான்கு விரற்கடையளவு அதிகமாயிருந்தது. அவன் சுவரை அளந்தான். அது ஒரு அளவுகோல் தடிப்பும், ஒரு அளவுகோல் உயரமுமாயிருந்தது.
பின்பு அவன் கிழக்கு நோக்கியுள்ள வாசலுக்குப் போனான். அவன் அதன் படிகளில் ஏறி வாயிற்படிக்கல்லை அளந்தான். அதன் குத்தளவு ஒரு கோல் அளவாய் இருந்தது. காவலர்களின் அறைகள் ஒரு அளவுகோல் நீளமும் ஒரு அளவுகோல் அகலமுமாயிருந்தது. அறைகளுக்கு இடையே தொடுத்துநின்ற சுவர்கள் ஐந்து முழத் தடிப்புடையனவாயிருந்தன. ஆலயத்தை நோக்கியிருந்த வாசலின் மண்டபத்தை அடுத்திருந்த வாசற்படிக்கல் ஒரு அளவுகோல் குத்தளவாய் இருந்தது.
பின்பு அவன் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்தை அளந்தான். அதன் குத்தளவு எட்டு முழமாயும், ஆதாரங்கள் இரண்டு முழ தடிப்பாயும் இருந்தன. நுழைவு வாசலின் புகுமுக மண்டபம் ஆலயத்தை நோக்கியிருந்தது.
கிழக்கு வாசலின் உட்புறத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று காவலறைகள் இருந்தன. அவை மூன்றும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன. தொடுத்துநின்ற சுவர்களின் முகப்புகள் ஒவ்வொரு பக்கமும் ஒரே அளவுகளைக் கொண்டிருந்தன. பின்பு அவன் நுழைவு வாசலுக்குப்போகும் புகுமுக வாசலின் அகலத்தை அளந்தான். அது பத்து முழங்களாய் இருந்தது. நீளம் பதின்மூன்று முழங்களாய் இருந்தன. ஒவ்வொரு காவலறைகள் முன்னும் ஒருமுழ உயரமான சுவரொன்று இருந்தது. காவலறைகள் ஆறுமுழ சதுர அளவுள்ளதாய் இருந்தன. பின்பு அவன் ஒரு காவலறையின் பின்சுவர் உச்சி தொடக்கம் எதிரேயிருந்த காவலறையின் உச்சிமட்டும், வாசலின் நுழைவு வாசலை அளந்தான். கைப்பிடிச்சுவர் ஒன்றின் இடைவெளியில் இருந்து எதிரே இருந்த இடைவெளிவரை உள்ள நீளம் இருபத்தைந்து முழங்களாக இருந்தன. நுழைவு வாசலின் உள்ளே சூழ இருந்த தொடுத்துநின்ற சுவர்களின் முகப்புக்களை அவன் அளந்தான். அவை அறுபது முழங்களாக இருந்தன. அது வெளிமுற்றத்தை நோக்கியிருந்த வாசலின் மண்டபம்வரை கணக்கிடப்பட்ட அளவாகும். நுழைவு வாசலின் புகுமுக வாயிலிலிருந்து அதன் புகுமுக மண்டபத்தின் முனை வரையுள்ள நீளம் ஐம்பது முழங்களாயிருந்தன. நுழைவு வாசலுக்கு உட்புறமாயிருந்த காவலறைகளுக்கும் தொடுத்துநின்ற சுவர்களுக்கும் மேலாக, சுற்றிலும் இடைவெளிகளைக்கொண்ட ஒடுக்கமான கைப்பிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. உட்புகு மண்டபத்திலும் அவ்வாறே இருந்தன. சுற்றிலுமிருந்த இடைவெளிகள் உட்புறத்தை நோக்கியிருந்தன. தொடுத்துநின்ற சுவர்களின் முன்பக்கத்திலே பேரீச்சமர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வெளிமுற்றம்
பின்பு அவன் என்னை ஆலயத்தின் வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்தான். அங்கு முற்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில அறைகளையும், நடைபாதைத் தளத்தையும் நான் கண்டேன். அந்த நடைபாதைத் தளத்தின் நெடுகிலும் முப்பது அறைகள் இருந்தன. அந்த நடைபாதை நுழைவு வாசலின் ஓரமாக நீண்டுகொண்டு போனது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவாய் இருந்தது. அது கீழ் நடைபாதையாயிருந்தது. பின்பு அவன் தாழ்ந்த நுழைவு வாசலின் உட்புறத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்புறம்வரையுள்ள தூரத்தை அளந்தான். அது கிழக்குப்புறத்திலும் வடக்குப் புறத்திலும் நூறு முழங்களாய் இருந்தன.
வடக்கு வாசல்
பின்பு அவன் வடக்கை நோக்கியிருந்த வெளிமுற்றத்துக்குச் செல்லும் வாசலின் நீள அகலங்களை அளந்தான். ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த அதன் மூன்று காவல் அறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், அதன் புகுமுக மண்டபமும் முதலாவது நுழைவு வாசலின் அளவுகளைக் கொண்டனவாகவே இருந்தன. அது ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது. அதன் இடைவெளிகளும் புகுமுக மண்டபமும் பேரீச்சமர அலங்காரங்களும் கிழக்கு வாசலின் அளவுகளையே கொண்டிருந்தன. அவ்வடக்கு வாசலுக்குச் செல்ல ஏழு படிகள் இருந்தன. அதன் புகுமுக மண்டபம் அவற்றிற்கு எதிராக இருந்தது. வடக்கு வாசலை நோக்கியிருக்கும் ஆலய உள்முற்றத்துக்குப் போவதற்குக் கிழக்கில் இருந்ததைப்போல ஒரு வாசல் இருந்தது. அவன் ஒரு வாசலில் இருந்து அதன் எதிரேயிருந்த வாசல்வரை அளந்தான். அது நூறுமுழ நீளமாயிருந்தது.
தெற்கு வாசல்
பின் அவன் என்னைத் தென்திசைக்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் தெற்கு நோக்கியிருந்த ஒரு வாசலைக் கண்டேன். அவன் அதன் ஆதாரங்களையும், புகுமுக மண்டபத்தையும் அளந்தான். அவைகளும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. நுழைவு வாசலும், அதன் புகுமுக மண்டபமும் மற்றவைகளின் இடைவெளிகளைப்போலவே சுற்றிலும் ஒடுங்கிய இடைவெளிகளைக் கொண்டிருந்தன. அது ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டனவாயிருந்தது. தெற்கு வாசலுக்குச் செல்ல ஏழு படிகள் இருந்தன. அவற்றுக்கு எதிரே புகுமுக மண்டபம் இருந்தது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தொடுத்துநிற்கும் சுவர்களின் முன்பக்கங்களில் பேரீச்சமர அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. உள்முற்றமும் தெற்கு நோக்கியிருக்கும் ஒரு வாசலைக் கொண்டிருந்தது. அவன் வாசலிலிருந்து தெற்கு பக்கத்திலிருந்த வெளிவாசல்வரை அளந்தான். அதன் நீளம் நூறு முழங்களாயிருந்தன.
உள்முற்றத்து வாசல்கள்
பின்பு அவன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உள்முற்றத்துக்குக் கொண்டுவந்தான். அவன் தெற்கு வாசலை அளந்தான். அதுவும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது. அதன் காவலறைகளும், தொடுத்துநிற்கும் சுவர்களும், புகுமுக மண்டபமும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. நுழைவாசலும் அதன் புகுமுக மண்டபமும், சுற்றிலும் இடைவெளிகளைக் கொண்டிருந்தன. நுழைவாசலிலிருந்து போகும் வழி ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாய் இருந்தன. உள்முற்றத்தைச் சுற்றியிருந்த நுழைவு வாசல்களின் புகுமுக மண்டபங்கள் இருபத்தைந்து முழ அகலமும், ஐந்துமுழ குத்தளவாயுமிருந்தன. அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் ஆதாரங்களைப் பேரீச்சமர அலங்காரங்கள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
பின்பு அவன் என்னைக் கிழக்குப் பக்கத்திலுள்ள உள்முற்றத்துக்குக் கொண்டுவந்தான். அவன் நுழைவு வாசலை அளந்தான். அது மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது. அதன் காவலறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், அதன் புகுமுக மண்டபமும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. நுழைவு வாசலும் அதன் புகுமுக மண்டபமும் சுற்றிலும் இடைவெளிகளைக் கொண்டிருந்தன. நுழைவாசலிருந்து போகும் வழி ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது. அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இருபுறம் இருந்த ஆதாரங்களை பேரீச்சமர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டு படிகள் இருந்தன.
பின்பு அவன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்துவந்து அதை அளந்தான். அதுவும் மற்றவைகளைப்போன்ற அளவுகளையே கொண்டிருந்தது. அதன் காவலறைகளும், அவற்றைத் தொடுத்துநிற்கும் சுவர்களும், புகுமுக மண்டபமும் அதே அளவுகளையே கொண்டிருந்தன. அதைச் சுற்றிலும் இடைவெளிகள் இருந்தன. அதுவும் ஐம்பதுமுழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமுமாயிருந்தது. அதன் வாசலின் மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. இருபுறமும் இருந்த ஆதாரங்களை பேரீச்சமர வேலைகள் அலங்கரித்தன. அதற்குச் செல்வதற்கு எட்டுப் படிகள் இருந்தன.
பலிகளுக்கான அறைகள்
ஒவ்வொரு உள் நுழைவு வாசலின் புகுமுக மண்டபத்திற்கு அருகிலும் ஒரு கடை வாசலைக்கொண்ட அறையொன்று இருந்தது. அங்கே தகனபலிகள் கழுவப்பட்டன. நுழைவு வாசலின் மண்டபத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேஜைகள் இருந்தன. அவற்றில் தகன காணிக்கைகள், பாவநிவாரண காணிக்கைகள், குற்றநிவாரண காணிக்கைகளுக்கான மிருகங்கள் ஆகியன வெட்டப்பட்டன. நுழைவு வாசலின் புகுமுக மண்டபச்சுவரின் வெளிப்புறத்தில் வடக்கு நுழைவு வாசலுக்குப்போகும் புகுமுக வாசலின் படிகளுக்கருகே இரண்டு மேஜைகள் இருந்தன. படிகளின் மற்றப் பக்கத்தில் இன்னும் இரண்டு மேஜைகள் இருந்தன. எனவே நான்கு மேஜைகள் நுழைவு வாசலின் ஒரு புறத்திலும் நான்கு மேஜைகள் நுழைவு வாசலின் மறுபுறத்திலுமாக எல்லாமாக எட்டு மேஜைகள் அங்கு இருந்தன. அவற்றில் பலிக்கான மிருகங்கள் வெட்டப்பட்டன. மேலும் வெட்டப்பட்ட கற்களினாலான நான்கு மேஜைகள் தகன பலிப்பொருட்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒன்றரைமுழ நீளமும், ஒன்றரைமுழ அகலமும், ஒருமுழ உயரமுமாய் இருந்தன. அவற்றின்மேல் தகன காணிக்கைகளையும், மற்றும் பலிகளையும் வெட்டுவதற்கான பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இரு கூர்முனைகளுள்ள கொக்கிகள் சுற்றிலுமுள்ள சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் நான்கு விரற்கடை அளவுள்ளதாயிருந்தன. பலியிடப்படும் இறைச்சிக்காகவே அந்த மேஜைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஆசாரியருக்கான அறைகள்
உள் நுழைவு வாசலுக்கு வெளியே, உள்முற்றத்துக்குள் இரண்டு அறைகள் இருந்தன. வடக்கு வாசலின் பக்கம் இருந்த அறை தெற்கு நோக்கியும் மற்ற அறை தெற்கு வாசலின் பக்கத்தில் வடக்கு நோக்கியும் இருந்தன. அவன் என்னிடம், “தெற்கு நோக்கியிருக்கும் அறை ஆலயத்துக்குப் பொறுப்பாயிருக்கும் ஆசாரியருக்கானது; வடக்கு நோக்கியிருக்கும் அறை பலிபீடத்துக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசாரியருக்கானது. அவர்கள் சாதோக்கின் மகன்களாவர். அவர்கள் மட்டுமே யெகோவாவுக்கு முன்பாக அவரருகில் வந்து அவருக்குப் பணிசெய்யக்கூடிய லேவியர்கள்” என்றான்.
பின்பு அவன் முற்றத்தை அளந்தான். அது நூறுமுழ நீளமும், நூறுமுழ அகலமும்கொண்ட சதுரமாய் இருந்தது. பலிபீடமே ஆலயத்தின் முன் இருந்தது.
ஆலயம்
அவன் என்னை ஆலயத்தின் வாசலின் மண்டபத்திற்கு கொண்டுவந்து, அதன் ஆதாரங்களை அளந்தான். அவை ஒவ்வொரு பக்கமும் ஐந்துமுழ அகலமாய் இருந்தன. புகுமுக வாசலின் அகலம் பதினான்கு முழமும் அதைத் தொடுத்துநிற்கும் சுவர்கள் ஒவ்வொருபுறமும் மூன்றுமுழ அகலமும் கொண்டனவாயிருந்தன. புகுமுக மண்டபம் இருபதுமுழ அகலமும் முன்பக்கமிருந்து பின்பக்கம்வரை பன்னிரண்டு முழங்களுமாயிருந்தன. அதை அடைவதற்கு ஒருபடி வரிசை இருந்தது. ஆதாரங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் தூண்கள் இருந்தன.
பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்தின் பெரிய மண்டபமான பரிசுத்த இடத்திற்குள் அழைத்துவந்து ஆதாரங்களை அளந்தான். ஒவ்வொரு புறத்திலும் அவற்றின் அகலம் ஆறு முழங்களாயிருந்தன. புகுமுக வாசல் பத்துமுழ அகலமாயிருந்தது. இரு பக்கங்களிலும் இருந்து தொடுத்துநிற்கும் சுவர்கள் ஐந்துமுழ அகலமுடையனவாயிருந்தன. அவன் வெளியே பரிசுத்த இடத்தை அளந்தான். அது நாற்பது முழ நீளமும், இருபதுமுழ அகலமுமாய் இருந்தது.
பின்பு அவன் பரிசுத்த இடத்தின் உள் அறைக்குப் போய் புகுமுக வாசலின் ஆதாரங்களை அளந்தான். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலமாய் இருந்தன. புகுமுக வாசல் ஆறுமுழ அகலமும், ஒவ்வொரு புறத்திலும் தொடுத்துநிற்கும் சுவர்கள் ஏழு முழ அகலமுமாயிருந்தன. அவன் அந்த பரிசுத்த இடத்தின் உள் அறையின் நீளத்தை அளந்தான். அது இருபது முழங்களாயிருந்தது. அதன் அகலம் பரிசுத்த இடத்துக்குக் குறுக்கு கடைசிவரையும் இருபது முழங்களாயிருந்தது. அவன் என்னிடம், “மகா பரிசுத்த இடம் இதுவே” என்றான்.
பின்பு அவன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது ஆறுமுழ தடிப்பாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொன்றும் நான்கு முழ அகலமாயிருந்தன. பக்க அறைகள் ஒன்றின் மேலொன்றாக மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் அமைந்திருந்தன. பக்க அறைகளின் ஆதாரமாகப் பயன்படும் விளிம்புகள் ஆலயச்சுவரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. ஆதலால் ஆதாரங்கள் ஆலயச்சுவர்களுக்கு உள்ளே இணைக்கப்படவில்லை. ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொரு தொடர்த்தளத்திலும் அகலத்தில் கூடியனவாய் இருந்தன. அறைகள் மேலே போகப்போக அகலத்தில் கூடியதாயிருக்கத்தக்கதாக, ஆலயத்தைச் சுற்றியிருந்த அமைப்பு உயர்ந்து கொண்டுபோகும் நிலையில் கட்டப்பட்டிருந்தது. கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல மத்திய மாடிக்கூடவே படிவரிசையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
பக்க அறைகளுக்கு அஸ்திபாரமாக அமைந்திருந்த உயரமான அடித்தளம் ஆலயத்தைச் சுற்றிலும் காணப்பட்டது. அது ஒரு அளவுகோல் நீளம், அதாவது ஆறு நீள முழங்களாய் இருந்தன. பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்துமுழ தடிப்பாயிருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும், ஆசாரியர்களின் அறைகளுக்கு இடையில் இருந்த திறந்தவெளி இருபதுமுழ அகலமுடையனவாய் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தன. திறந்த வெளியிலிருந்த பக்க அறைகளுக்கு புகுமுக வாசல்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கிலும், மற்றது தெற்கிலுமாக அமைந்திருந்தன. திறந்த வெளியைச் சார்ந்திருந்த அடித்தளம் சுற்றிலும் ஐந்துமுழ அகலமாயிருந்தது.
மேற்குப்புறத்தில் ஆலய முற்றத்தை நோக்கியிருந்த கட்டடம் எழுபது முழ அகலமாயிருந்தது. கட்டடச் சுவர் சுற்றிலும் ஐந்துமுழ தடிப்பாக இருந்தது. அதன் நீளம் தொண்ணூறு முழங்களாயிருந்தது.
பின்பு அவன் ஆலயத்தை அளந்தான். அது நூறு முழங்கள் நீளமுடையனவாயிருந்தது. ஆலய முற்றமும், சுவர்களுடன் சேர்ந்த கட்டடமும் நூறுமுழ நீளமாயிருந்தன. ஆலய முற்பகுதி உட்பட கிழக்கேயிருந்த ஆலய முற்றத்தின் அகலம் நூறு முழங்களாயிருந்தது.
பின்பு அவன் ஆலயத்தின் பின்புறமாக உள்ள முற்றத்தை நோக்கியிருந்த கட்டடத்தின் நீளத்தை அளந்தான். அதன் ஒவ்வொரு புறத்திலுமிருந்த நுழை மாடங்களையும் சேர்த்து அளந்தான். அவை நூறு முழங்களாய் இருந்தன.
மகா பரிசுத்த இடமும், உள் பரிசுத்த இடமும், முற்றத்தை நோக்கியிருந்த புகுமுக மண்டபமும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. ஆலயத்தின் உட்சுவர்களெல்லாம், ஜன்னல்களுக்கு மேலும் கீழும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அத்துடன் ஜன்னல்களும், மரப்பலகைகளினால் மூடப்படிருந்தன. மகா பரிசுத்த இடத்துக்குப் போகும் புகுமுக வாசலுக்கு வெளியே போக இருந்த இடமும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. எல்லாச் சுவர்களிலும் கேருபீன்களும், பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. பேரீச்சமரமும் கேருபீனும் மாறிமாறி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் இரண்டு முகங்களைக்கொண்டிருந்தன. ஒரு புறத்தில் பேரீச்சமரத்தை நோக்கிய ஒரு மனித முகமும், மறுபுறத்தில் பேரீச்சமரத்தை நோக்கிய ஒரு சிங்கமுகமும் இருந்தது. இவ்வாறு ஆலயம் முழுவதும் சுற்றிச் செதுக்கப்பட்டிருந்தன. தரையிலிருந்து புகுமுக வாசலுக்கு மேலாயிருந்த இடம் வரையும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் பரிசுத்த இடத்தின் வெளிப்புற சுவரில் செதுக்கப்பட்டிருந்தன.
பரிசுத்த இடம் நீண்ட சதுரமான கதவு நிலைகளைக் கொண்டிருந்தன. மகா பரிசுத்த இடத்துக்கு முன்புறமாக இருந்ததும் அதை ஒத்திருந்தது. அங்கே மூன்றுமுழ உயரமும் இரண்டு முழ சதுரமும் கொண்ட, மரத்தினாலான பலிபீடம் ஒன்று இருந்தது. அதன் மூலைகளும், அதன் அடித்தளமும், அதன் பக்கங்களும் மரத்தினாலானவை. அந்த மனிதன் என்னிடம், “யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் மேஜை இதுவே” என்றான். பரிசுத்த இடம், மகா பரிசுத்த இடம் இரண்டுமே இரட்டைக் கதவுகளைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் இருகதவுகள், அதாவது, இணைக்கப்பட்ட இருகதவுகள் இருந்தன. பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் மதில்களைப் போன்றே கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தன, புகுமுக மண்டபத்தின் முன்பக்கத்தில் மரத்தினாலான தொங்கும் தட்டியும் இருந்தது. புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் ஒவ்வொருபுறமும் பேரீச்சமரம் செதுக்கப்பட்ட ஒடுங்கிய ஜன்னல்கள் இருந்தன. ஆலயத்தின் பக்க அறைகளும் தொங்கும் தட்டிகளைக் கொண்டிருந்தன.
ஆசாரியர்களின் அறைகள்
பின்பு அந்த மனிதன் என்னை வடப்பக்கமாக வெளிமுற்றத்துக்கு அழைத்து வந்தான். அங்கே ஆலய முற்றத்துக்கு எதிரிலும், வடபுறத்திலிருந்த வெளிமதிலுக்கு எதிரிலும் அறைகள் இருந்தன. வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறுமுழ நீளமும் ஐம்பதுமுழ அகலமுமாயிருந்தது. உள்முற்றத்தின் எதிரே ஒருநிரை மாடங்கள் இருந்தன. வெளிமுற்றத்தின் எதிரே இன்னுமொரு நிரை மாடங்கள் இருந்தன. ஒவ்வொரு அறையும் இருபதுமுழ நீளமாயிருந்தது. இவ்வாறு இரு பகுதிகளிலும் இருந்த மூன்று தளங்களிலும், ஒன்றையொன்று நோக்கிய வண்ணமாக மாடங்கள் இருந்தன. அறைகளுக்கு முன்னால் பத்துமுழ அகலமும் நூறுமுழ நீளமும் கொண்ட உட்புற வழியொன்று இருந்தது. அந்த அறைகளின் கதவுகள் வடக்குப்புறமாக இருந்தன. மேலறைகள் ஒடுக்கமானவைகளாயிருந்தன. ஏனெனில், நடைபாதைகள் கட்டடத்தின் கீழ் மாடியிலும், மத்திய மாடியிலும், எடுத்திருந்த இடத்தைப் பார்க்கிலும், மேல்மாடியில் அதிக இடத்தை எடுத்திருந்தன. மூன்றாம் மாடியிலிருந்த அறைகள் முற்றங்களைப்போல் தூண்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவை கீழ் மாடியையும் மத்திய மாடியையும்விட, குறைந்த நிலப்பரப்பை உடையனவாயிருந்தன. அறைகளுக்கும் வெளிமுற்றத்துக்கும் சமாந்தரமாக அங்கே வெளிச்சுவரொன்று இருந்தது. அது அறைகளுக்கு முன் ஐம்பது முழம் நீட்டப்பட்டிருந்தது. வெளிமுற்றத்தை அடுத்து வரிசையாக அமைந்திருந்த அறைகள் ஐம்பதுமுழ நீளமாய் இருந்தன. ஆலயத்திற்குச் சமீபமாய் இருந்த அறைகளின் வரிசை நூறுமுழ நீளமாயிருந்தது. வெளிமுற்றத்திலிருந்து கீழ் மாடியறைகளுக்குப் போகத்தக்கதாக, கிழக்குப் பக்கமாக ஒரு புகுமுக வாசல் இருந்தது.
தெற்குப் பக்கத்தில் இருந்த வெளிமுற்றச்சுவர் ஓரமாக, ஆலய முற்றத்தை அடுத்தும், வெளிமதிலுக்கு எதிராக இருந்த கட்டடத்தில் இரண்டுநிரை அறைகள் இருந்தன. அவைகளுக்கு இடையில் ஒரு பாதை இருந்தது. அந்த அறைகள் வடக்கேயிருந்த அறைகளைப் போன்றவை. அவைகளும் அதே நீள அகலம் கொண்டவை. வெளியேறும் வாசல்களும் அவற்றின் அளவுகளும் ஒரே மாதிரியானவை. வடக்கிலிருந்த வாசல்களைப்போலவே, தெற்கிலிருந்த அறை வாசல்களும் அமைந்திருந்தன. உட்பக்கத்தின் நடைபாதையின் கிழக்குப்பக்கத்தின் முடிவில் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியாகவே மக்கள் தெற்கு அறைகளுக்குப் போனார்கள். தெற்கு சுவர், வெளியிலிருந்து அறைகளுக்குக் கிழக்குப்பக்கமாய்ப் போனது.
பின்பு அவன் என்னிடம், “ஆலய முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு தெற்கு அறைகள் ஆசாரியருக்கான அறைகள். அங்கே யெகோவாவைச் சந்திக்கும் ஆசாரியர்கள் மகா பரிசுத்த காணிக்கைப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். மகா பரிசுத்த காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் அங்கே வைப்பார்கள். அந்த இடம் பரிசுத்தமானது. ஆசாரியர்கள் பரிசுத்த பகுதிக்குள்போனதும், ஆராதனைக்கான உடைகளைக் கழட்டும்வரை அவர்கள் வெளிமுற்றத்துக்குப் போகக்கூடாது. ஏனெனில் அவை பரிசுத்தமானவை. மக்களுக்காக இருக்கும் இடங்களுக்கருகே போகுமுன் அவர்கள் வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும் என்றான்.”
அவன் ஆலய உட்பகுதியில் இருந்த அனைத்தையும் அளந்து முடித்தான். பின்பு அவன், என்னைக் கிழக்குவாசல் பக்கமாக அழைத்துப்போய் அப்பகுதிகளைச் சுற்றி அளந்தான். அவன் அளவுகோலினால் கிழக்குப்பக்கத்தை அளந்தான். அது ஐந்நூறு முழங்களாயிருந்தது. அவன் வடக்குப் பக்கத்தை அளந்தான். அது அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. அவன் தெற்குப்பக்கத்தை அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. பின்பு அவன் மேற்குப்பக்கம் திரும்பி அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. இவ்வாறாக அவன் நான்கு பக்கங்களிலுமுள்ள எல்லா பகுதிகளையும் அளந்தான். அதைச் சுற்றிலும் ஒரு மதில் இருந்தது. அது ஐந்நூறு முழ நீளம், ஐந்நூறு முழ அகலமாய் இருந்தது. அது பொது இடத்தைப் பரிசுத்த இடத்திலிருந்து வேறுபடுத்துவதாக அமைந்திருந்தது.
யெகோவாவினுடைய மகிமை ஆலயத்துக்குத் திரும்புதல்
பின்பு அந்த மனிதன் என்னை கிழக்கு முகமாயிருந்த வாசலுக்கு அழைத்து வந்தான். அப்பொழுது இஸ்ரயேலின் இறைவனது மகிமை கிழக்கேயிருந்து வருவதை நான் கண்டேன். அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சல்போலிருந்தது. நாடு அவருடைய மகிமையினால் பிரகாசித்தது. நான் கண்ட தரிசனமானது, அவர் நகரத்தை அழிப்பதற்கு வந்தபோது நான் கண்டதைப்போன்று இருந்தது. நான் கேபார் நதியண்டையில் கண்ட தரிசனங்கள்போன்றும் இருந்தது. உடனே நான் முகங்குப்புற விழுந்தேன். யெகோவாவின் மகிமை கிழக்குவாசல் வழியாக ஆலயத்திற்குள் வந்தது. பின்பு ஆவியானவர் என்னைத் தூக்கி உள்முற்றத்தினுள் கொண்டுவந்தார். யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
அந்த மனிதன் என் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும்போதே, யாரோ ஆலயத்திற்குள்ளிருந்து என்னுடன் பேசுவதை நான் கேட்டேன். அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எனது அரியணையை வைக்கும் இடமும், என் பாதங்களை வைக்கும் இடமும் இதுவே. நான் இங்கேயே இஸ்ரயேலரின் மத்தியில் என்றென்றும் இருப்பேன். இனியொருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தார் என் பெயரைத் தூய்மைக்கேடாக்க மாட்டார்கள். அவர்களோ, அவர்களுடைய அரசர்களோ தங்களுடைய விபசாரத்தினாலும், மேடைகளிலுள்ள தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலும் என் பெயரைத் தூய்மைக் கேடாக்குவதில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாசற்படியை எனது பரிசுத்த வாயிற்படியை அடுத்தும், தங்களது கதவு நிலைகளை எனது கதவு நிலைகளையடுத்தும் வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் மட்டுமே இருந்தது. இவ்வாறு தங்களுடைய அருவருக்கத்தக்க செயல்களினால் எனது பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்கினார்கள். எனவே எனது கோபத்தில் நான் அவர்களை அழித்தேன். இப்பொழுது அவர்கள் தங்கள் விபசாரத்தையும் தங்கள் அரசனுடைய உயிரற்ற சிலைகளையும் என்னைவிட்டு அப்புறப்படுத்தட்டும். அப்பொழுது நான் என்றென்றும் அவர்கள் மத்தியில் வாழ்வேன்.
“மனுபுத்திரனே, இஸ்ரயேலர் தங்கள் பாவத்தினிமித்தம் வெட்கப்படும்படியாக, ஆலயத்தைப்பற்றி அவர்களுக்கு விபரித்துச் சொல். அதன் அமைப்பு வரைபடத்தை அவர்கள் கவனமாய் அறியட்டும். அவர்கள் தாம் செய்த எல்லாவற்றையும் குறித்து வெட்கப்படுவார்களாயின், ஆலயத்தின் அமைப்பு முறையை அவர்கள் அறிந்துகொள்ளும்படி சொல். அதன் ஒழுங்குகளையும், அதன் புகுமுக வாசல்களையும், வெளியேறும் வாசல்களையும், அதன் முழு உருவத்தையும், அதன் ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும் சொல்லிக்கொடு. பின் அவற்றை அவர்களுக்கு முன்பாக எழுதிவை. அப்பொழுது அவர்கள் அதன் உருவமைப்பின்படி கட்டுவதில் உண்மையாயிருந்து, அதன் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
“ஆலயத்திற்கான சட்டம் இதுவே. மலையுச்சியைச் சூழ இருக்கும் எல்லா பகுதிகளும் மகா பரிசுத்தமாயிருக்கும். ஆலயத்தின் சட்டம் இப்படிப்பட்டதே.
பலிபீடம்
“அந்த மனிதன் சொன்னதாவது, நீள் முழங்களின்படி பலிபீடத்தின் அளவுகளாவன: நீண்ட முழம் என்பது ஒரு முழமும் நான்கு விரற்கடையளவும் உடையது. பலிபீடத்தின் அடியில் சுற்றிலும் ஒரு கால்வாய் இருந்தது. அது ஒருமுழ ஆழமும் ஒருமுழ அகலமும் கொண்டது. அதன் ஓரத்தில் ஒரு சாண் அளவு விளிம்பு இருந்தது. பலிபீடத்தின் உயரமாவது; தரையிலிருக்கும் கால்வாயிலிலிருந்து அதன் கீழ்விளிம்புமட்டும் இரண்டு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாய் இருந்தது. சிறிய விளிம்பிலிருந்து பெரிய விளிம்புவரை நான்கு முழ உயரமும் ஒருமுழ அகலமுமாயிருந்தது. பலிபீட அடுப்பு நான்கு முழ உயரமாயிருந்தது. அடுப்பிலிருந்து நான்கு கொம்புகள் மேல்நோக்கி உயர்ந்திருந்தன. பலிபீட அடுப்பு பன்னிரண்டு முழ நீளமும் பன்னிரண்டு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது. மேல் விளிம்பு பதினான்கு முழ நீளமும் பதினான்கு முழ அகலமும்கொண்ட சதுரமாக இருந்தது. சுற்றிலும் அரைமுழ அளவான விளிம்பும் ஒருமுழ அளவான கால்வாயும் அமைந்திருந்தன. பலிபீடத்தின் படிகள் கிழக்கு நோக்கியிருந்தன.”
பின்பு அந்த மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. பலிபீடம் கட்டப்படும்போது ஒழுங்குவிதிகள் இவையே. தகன காணிக்கைகளைச் செலுத்தும்போதும் பலிபீடத்தின்மேல் இரத்தம் தெளிக்கும்போதும் இவற்றைக் கைக்கொள்ளவேண்டும். எனக்கு முன்னே என்னருகில் வந்து, ஆராதனை செய்யும் சாதோக்கின் குடும்பத்தாரான, லேவிய ஆசாரியர்களின் பாவநிவாரண காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். நீங்கள் அதற்காக அவர்களுக்கு ஒரு இளங்காளையைக் கொடுக்கவேண்டும் என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அதின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலும், மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், வளைவிளிம்பைச் சுற்றிலும் தெளிக்கவேண்டும். அவ்வாறு பலிபீடத்தைத் தூய்மைப்படுத்தி, அதற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். பாவநிவாரண காணிக்கையான காளையை, பரிசுத்த ஆலயத்துக்கு வெளியே குறிக்கப்பட்ட இடத்தில் எரித்துவிடவேண்டும்.
“இரண்டாம் நாள் பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றைப் பாவநிவாரண பலியாகச் செலுத்தவேண்டும். காளையினால் பலிபீடம் தூய்மையாக்கப்பட்டது போலவே, தூய்மையாக்கப்படுதல் வேண்டும். அதைத் தூய்மைப்படுத்தி முடிந்ததும், இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் உங்கள் மந்தையிலிருந்து நீங்கள் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவையிரண்டும் பழுதற்றவைகளாயிருக்க வேண்டும். நீங்கள் அவற்றை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தவேண்டும். ஆசாரியர்கள் அதன்மீது உப்புத்தூவி யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
“நீங்கள் தினந்தோறும் ஏழுநாட்களுக்குப் பாவநிவாரண காணிக்கையாக ஆட்டுக்கடா ஒன்றைச் செலுத்தவேண்டும். அதோடு உங்கள் மந்தையிலிருந்து, இளங்காளையொன்றையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் நீங்கள் செலுத்தவேண்டும். அவை இரண்டும் பழுதற்றவையாயிருக்க வேண்டும். அவர்கள் ஏழு நாட்கள் பலிபீடத்துக்காகப் பாவநிவிர்த்தி செய்து, அதைச் சுத்திகரிக்கவேண்டும். இவ்வாறாக அவர்கள் பலிபீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அந்த நாட்களின் முடிவில், எட்டாம் நாளிலிருந்து ஆசாரியர்கள் உங்களுடைய தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலிபீடத்தில் செலுத்தவேண்டும். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன், என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
லேவிய ஆசாரியர்கள்
மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலுக்குக் கொண்டுவந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. யெகோவா என்னிடம், “இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும். இது திறக்கப்படலாகாது. இதின் வழியாக யாரும் உட்செல்லவும் கூடாது. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இதின் வழியாகவே வந்தார். ஆகவே இது பூட்டப்பட்டே இருக்கும். இந்த நுழைவு வாசலின் உட்புறத்தில் யெகோவாவுக்குமுன் சாப்பிடுவதற்கு இளவரசன் மட்டுமே உட்காரலாம். அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவாசல் உட்சென்று அதே வழியாக வெளியேறவேண்டும் என்றார்.”
பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்துக்கு முன்னாலிருக்கும் வடக்கு வாசல்வழியால் அழைத்து வந்தான். நான் பார்த்தேன் அப்பொழுது யெகோவாவினுடைய மகிமை யெகோவாவினுடைய ஆலயத்தை நிரப்புவதைக் கண்டேன், நான் உடனே முகங்குப்புற விழுந்தேன்.
யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, கவனமாகப் பார், கவனித்துக் கேள், யெகோவாவினுடைய ஆலயத்தைப் பற்றிய எல்லா ஒழுங்குவிதிகளையும் பற்றி, நான் கூறும் ஒவ்வொன்றையும் கருத்தாய் கவனித்துக்கொள். ஆலயத்தின் புகுமுக வாசலையும் பரிசுத்த இடத்தின் வெளியேறும் எல்லா வாசல்களையும் குறித்துக் கவனம் செலுத்து. கலகக்காரராகிய இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேல் குடும்பத்தாரே, வெறுக்கத்தக்க உங்கள் செயல்கள் போதும். உங்கள் வெறுக்கத்தக்க எல்லா பழக்கவழக்கங்களுடனும் அயல் நாட்டினரையும் என் பரிசுத்த ஆலயத்திற்குள் கொண்டுவந்தீர்கள். அவர்களோ இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனம் இல்லாதவர்கள். என் ஆலய தூய்மையைக் கெடுத்தீர்கள். ஆகாரத்தையும் கொழுப்பையும் இரத்தத்ததையும் எனக்கு காணிக்கையாகச் செலுத்தியபோதிலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள். என் பரிசுத்த காரியங்களில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, என் பரிசுத்த ஆலயத்தையே மற்றவர்களின் பொறுப்பில் விட்டீர்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனமற்ற எந்தவொரு அந்நியனும் என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது. இஸ்ரயேலருக்குள் வசிக்கும் அந்நியன்கூட என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது.
“ ‘இஸ்ரயேல் வழிதவறியபோது, சில லேவியர் என்னைவிட்டுத் தூரமாய்ப் போய் விக்கிரகங்களுக்குப் பின்னால் திரிந்தார்கள். அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமக்கவேண்டும். அவர்கள் ஆலய வாசல்களுக்குப் பொறுப்பாக இருந்து, அங்கே பணிசெய்யலாம். அவர்கள் மக்களுக்காகத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் வெட்டி மக்கள் முன்நின்று அவர்களுக்கும் ஊழியம் செய்யலாம். அவர்கள் இவ்வாறு மட்டுமே என் பரிசுத்த இடத்தில் பணிபுரியலாம். ஆனால் அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று அவைகளை வணங்கி, இஸ்ரயேலரைப் பாவத்தில் விழச்செய்தபடியால், அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமந்தேயாக வேண்டும். இதை நான் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டிருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் என்னருகே வந்து, ஆசாரியர்களாய்ப் பணிபுரியவோ அல்லது பரிசுத்த காரியங்களுக்கும் மகா பரிசுத்த காணிக்கைகளுக்கும் அருகில் வரவோகூடாது. தங்களுடைய வெறுக்கத்தக்க செயல்களுக்கான வெட்கத்தை அவர்கள் சுமக்கவேண்டும். எனினும் அவர்கள் ஆலயத்தைப் பராமரிக்கும் வேலைகளுக்குப் பொறுப்பாயிருக்கவும், அதில் சம்பந்தப்பட்ட வேலைகளையெல்லாம் செய்யவும் நான் அவர்களை நியமிப்பேன்.
“ ‘ஆனால், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிச் சென்றபோது, என் பரிசுத்த ஆலயத்தின் கடமைகளை சாதோக்கின் சந்ததிகளான லேவியர்கள் உண்மையாய்ச் செய்துவந்தார்கள். அவர்களே எனக்கு ஆசாரியர்களாயிருந்து, எனக்கு முன்பாகப் பணிசெய்ய என்னருகே வரவேண்டும். கொழுப்பும் இரத்தமுமான பலிகளைச் செலுத்துவதற்கு அவர்களே எனக்கு முன்பாக நிற்கவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் மாத்திரமே என் பரிசுத்த இடத்திற்குள் வரவேண்டும். என்முன் பணிசெய்யவும், எனது பணியை நிறைவேற்றவும் அவர்கள் மட்டுமே என் மேஜையருகில் வரவேண்டும்.
“ ‘உள்முற்ற வாசலுக்குள் அவர்கள் வரும்போது அவர்கள் மென்பட்டு நூல் உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உள்முற்றநுழைவு வாசலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளை உடுத்தக்கூடாது. அவர்கள் தங்கள் தலைகளில் மென்பட்டு தலைப்பாகைகளையும், இடைகளில் மென்பட்டு உள்ளுடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது. அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்திற்குப் போகும்போது, அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் உடுத்தியிருந்த உடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
“ ‘அவர்கள் முழுதாக தலைகளைச் சவரம் செய்யவோ, தலைமயிரை நீளமாய் வளர்க்கவோ கூடாது. அவர்கள் தங்களுடைய தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளவேண்டும். ஆசாரியர்களில் யாரும் உள்முற்றத்தினுள் செல்லும்போது திராட்சை இரசம் அருந்தக்கூடாது. விதவைகளையோ அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களையோ அவர்கள் திருமணம் செய்யக்கூடாது. இஸ்ரயேல் வம்சத்துக் கன்னிகைகளை அல்லது ஆசாரியர்களின் விதவைகளை மட்டுமே அவர்கள் திருமணம் செய்யலாம். அவர்கள் பரிசுத்தமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தை என் மக்களுக்குக் போதிக்கவேண்டும். அசுத்தமானதையும் சுத்தமானதையும் வித்தியாசப்படுத்துவது எப்படி என்பதையும் காண்பிக்கவேண்டும்.
“ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
“ ‘ஒரு ஆசாரியன், இறந்துபோன ஒருவனுக்கு அருகில் செல்வதால் தன்னை அசுத்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனாலும் இறந்தது அவனுடைய தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது விவாகமாகாத சகோதரியாக இருப்பின், அவன் அவ்வாறான அசுத்தத்துக்குள்ளாகலாம். அவன் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். அதன்பின் பரிசுத்த ஆலயத்தில் ஆராதனை செய்வதற்காக அவன் உள்முற்றத்தினுள் போகும் நாளிலே, அவன் தனக்காக ஒரு பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ ‘ஆசாரியர்களின் உரிமைச்சொத்தாய் நான் மட்டுமே இருக்கவேண்டும். எனவே இஸ்ரயேலில் நீங்கள் அவர்களுக்குச் சொத்துக்களைக் கொடுக்கவேண்டாம். நானே அவர்கள் சொத்தாயிருப்பேன். அவர்கள் தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் சாப்பிடுவார்கள். அத்துடன் இஸ்ரயேலில் யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவை எல்லாம் அவர்களுக்குரியதாகும். முதற்பலன்களில் சிறந்தவைகளும் உங்களுடைய விசேஷ கொடைகளும் ஆசாரியருக்கு உரியதாகும். அரைத்தமாவின் உணவின் முதற்பங்கை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அது உங்கள் வீட்டாருக்கு ஒரு ஆசீர்வாதமாய் அமையும். ஆசாரியர்கள் செத்துக்கிடந்த பறவையையோ மிருகத்தையோ சாப்பிடப்கூடாது; அல்லது மிருகங்களால் கொல்லப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது.
நாட்டைப் பங்கிடுதல்
“ ‘நீங்கள் நாட்டை உரிமைச்சொத்தாகப் பங்கிடும்போது நாட்டின் ஒரு பங்கைப் பரிசுத்த பகுதியாக யெகோவாவுக்கென ஒதுக்கிவைக்கவேண்டும். அது 25,000 முழ நீளமும் 20,000 முழ அகலமுமாய் இருக்கவேண்டும். அப்பகுதி முழுவதும் பரிசுத்த இடமாக இருக்கும். அதில் 500 முழ சதுரமான பகுதி பரிசுத்த ஆலயத்திற்கென இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் 50 முழ அகலமான வெளியான நிலம் இருக்கவேண்டும். அப்பரிசுத்த பகுதியில் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும்கொண்ட பகுதியை வேறுபடுத்தி வைக்கவேண்டும். அதில் மகா பரிசுத்தமான பரிசுத்த இடம் இருக்கும். அது யெகோவாவுக்கு முன்பாக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்ய அருகில் செல்லும் ஆசாரியருக்குரிய நிலத்தின் பரிசுத்த பங்காக இருக்கும். அது அவர்களுடைய வீடுகளுக்கான இடமாகவும் பரிசுத்த இடத்திற்குரிய பரிசுத்த பகுதியாகவும் இருக்கும். ஆலயத்தின் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும்கொண்ட ஒரு பகுதி அங்கு பணிபுரியும் லேவியருக்குரிய உடைமையாயிருக்கும். அங்கு அவர்கள் தாங்கள் வசிப்பதற்கான நகரங்களை அமைத்துக்கொள்வார்கள்.
“ ‘பரிசுத்த பங்கிற்கு அடுத்தாற்போல், 25,000 முழ நீளமும் 5,000 முழ அகலமும்கொண்ட நிலத்தை நகரத்திற்குரிய சொத்தாகக் கொடுக்கவேண்டும். இது முழு இஸ்ரயேல் குடும்பத்திற்கும் சொந்தமாயிருக்கும்.
“ ‘ஒவ்வொரு புறத்திலும் பரிசுத்த பகுதியின் எல்லைகளையும் நகரத்துக்குரிய சொத்தின் எல்லையையும் கொண்டதாக அரசனுக்குரிய நிலம் அமைந்திருக்கும். அது மேற்குப்புறத்தில் மேற்குப்பக்கமாகவும், கிழக்குப்புறத்தில் கிழக்குப்பக்கமாகவும் அகன்றிருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு எல்லைவரையுள்ள பகுதி நீளமாய்போய் ஒரு கோத்திரப் பங்குக்கு எதிராயிருக்கவேண்டும். அந்நிலம் இஸ்ரயேலிலே அரசனுடைய உரிமைச்சொத்தாக இருக்கும். இனிமேல் என் அரசர்கள் என் மக்களை ஒடுக்கமாட்டார்கள். இஸ்ரயேலர் தங்கள் கோத்திரங்களுக்கேற்ப நாட்டை உரிமையாக்கிக்கொள்ள அவர்கள் அனுமதிப்பார்கள்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேலின் அரசர்களே, நீங்கள் செய்ததுபோதும். உங்கள் வன்முறைகளையும், ஒடுக்குதல்களையும் விட்டுவிட்டு, நீதியானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். என் மக்களின் உடைமைகளைப் பறிப்பதையும் நிறுத்துங்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நீங்கள் நிறுத்துவதற்கு சரியான அளவைகளையும் திண்மம் அளப்பதற்கு சரியான அளவுடைய எப்பா மரக்கால்களையும், திரவம் அளப்பதற்கு சரியான அளவுடைய பாத் குடங்களையும் உங்களுக்கு இருக்கட்டும். எப்பா மரக்கால் அளவும், பாத் குடத்தின் அளவும் ஒரே அளவானவையாக இருக்கவேண்டும். ஒரு பாத் குடத்தின் அளவு ஓமர் அளவில் பத்தில் ஒன்றும், ஒரு எப்பா அளவும் ஒரு ஓமர் அளவில் பத்தில் ஒன்றுமாக இருக்கவேண்டும். இரு அளவுகளுக்கும் ஓமரே பொது அளவையாக இருக்கவேண்டும். நிறுத்துவதற்குரிய பொது அளவை, சேக்கலாக இருக்கவேண்டும். இருபது கேரா அளவே ஒரு சேக்கல் அளவாகும். அறுபது சேக்கல் ஒரு இராத்தலுக்கு சமானமாகும்.
“ ‘நீங்கள் செலுத்தவேண்டிய விசேஷச நன்கொடையானது, ஒவ்வொரு ஓமர் அளவு கோதுமையிலிருந்து, ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும், ஒவ்வொரு ஓமர் அளவு வாற்கோதுமையிலிருந்து ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும் இருக்கவேண்டும். பாத் அளவு குடத்தினால் அளக்கப்பட்டு, நீங்கள் செலுத்தவேண்டிய எண்ணெயின் அளவு ஒவ்வொரு கோரிற்கும் ஒரு பாத்தின் பத்தில் ஒரு பங்காகும். ஒரு கோர் என்பது பத்து பாத் குடங்கள் அல்லது ஒரு ஓமர் ஆகும். ஏனெனில் பத்து பாத் குடங்கள் ஒரு ஓமருக்குச் சமமானதாகும். மேலும், இஸ்ரயேலில் நல்ல நீர்ப்பாய்ச்சலுள்ள இடத்தில் மேயும் மந்தைகளில் ஒவ்வொரு இருநூறு செம்மறியாடுகள்கொண்ட மந்தையிலிருந்தும் ஒரு செம்மறியாடு எடுக்கப்படவேண்டும். இவை மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, தானிய காணிக்கைகளாகவும், தகன காணிக்கைகளாகவும், சமாதான காணிக்கைகளாகவும் பயன்படுத்தப்படும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேலின் அரசனுடைய பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்படும் இவ்விசேஷ நன்கொடையில் நாட்டின் எல்லா மக்களும் பங்குகொள்வார்கள். பண்டிகைகளும், அமாவாசைகளும், ஓய்வுநாட்களுமான இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லா விசேஷ தினங்களிலும் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுக்கவேண்டியது, அரசனுடைய கடமையாகும். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு பாவநிவிர்த்தி செய்வதற்காக அவன் பாவநிவாரண காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுப்பான்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. முதலாம் மாதம் முதலாம் நாள் நீங்கள் பழுதற்ற காளையொன்றைக் கொண்டுவந்து பரிசுத்த ஆலயத்தைச் சுத்திகரிக்கவேண்டும். ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை ஆலயத்தின் கதவு நிலைகளிலும், பலிபீட மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்திலுள்ள வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். தவறுதலாகவோ, அறியாமையாலோ பாவம் செய்யும் ஒருவனுக்காகவும் மாதத்தின் ஏழாம்நாள் நீங்கள் அவ்வாறே செய்யவேண்டும். அவ்விதமாய் நீங்கள் ஆலயத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
“ ‘முதலாம் மாதம் பதினான்காம் நாள் நீங்கள் ஏழுநாள் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடவேண்டும். அந்நாட்களில், நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பத்தைச் சாப்பிடவேண்டும். அந்த நாளில் அரசன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாகக் காளையொன்றைக் கொடுக்கவேண்டும். பண்டிகையின் ஏழுநாட்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் பழுதற்ற ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அத்துடன் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். அவன் ஒவ்வொரு இளங்காளையோடும், ஒவ்வொரு செம்மறியாட்டுக்கடாவோடும் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், ஒரு ஹின்45:24 அதாவது, சுமார் 1 கேலன் அல்லது சுமார் 3.8 லிட்டர் என்பதாகும் அளவு எண்ணெயையும் கொடுக்கவேண்டும்.
“ ‘ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் ஆரம்பமாகும் ஏழுநாட்களுக்குக் கொண்டாடப்படும் கூடாரப்பண்டிகையின்போதும், அவன் பாவநிவாரண காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், தானிய காணிக்கைகளுக்கும் உரியவற்றையும், எண்ணெயையும் அதேவிதமாகச் செலுத்தவேண்டும்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாசல், ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் அது திறக்கப்பட்டிருக்க வேண்டும். அரசன் வெளியிலிருந்து இந்த நுழைவு வாசலின் மண்டபத்தின் வழியாக உள்ளே வந்து, வாசல் நிலையருகில் நிற்கவேண்டும். ஆசாரியர்கள் அவனுடைய தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். அவன் நுழைவு வாசலின் முகப்பில் நின்று வழிபாடு செய்தபின், வெளியே போகவேண்டும். ஆனால் சாயங்காலம்வரை வாசல் மூடப்படக்கூடாது. ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் நாட்டு மக்கள் யெகோவாவின் முன்னிலையில் புகுமுக நுழைவாசலில் வழிபாடு செய்யவேண்டும். ஓய்வுநாளில் அரசனால் யெகோவாவுக்கென்று கொண்டுவரப்படும் தகன காணிக்கையானது, பழுதற்ற ஆறு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுமாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கையானது ஒரு எப்பா46:5 அதாவது, சுமார் 35 பவுண்டுகள் அல்லது சுமார் 16 கிலோகிராம்; மேலும் வசனங்கள் [7] மற்றும் [11] வசனங்களிலும் வருகிறது அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கை அரசன் விரும்பிய அளவினைக் கொண்டதாயிருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு எப்பா அளவு தானியத்துடனும் ஒரு ஹின்46:5 அதாவது, சுமார் 1 கேலன் அல்லது சுமார் 3.8 லிட்டர்; [7] மற்றும் [11] வசனங்களிலும் வருகிறது அளவு எண்ணெயும் செலுத்தப்படுதல் வேண்டும். அவன் அமாவாசைத் தினத்திலே பழுதற்ற இளங்காளையொன்றையும், ஆறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் செலுத்தவேண்டும். அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், செம்மறியாட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பிய அளவு தானிய காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஒவ்வொரு எப்பா தானிய காணிக்கைளுடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயையும் செலுத்தவேண்டும். அரசன் உட்செல்லும்போது அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவு வாசலின் வழியாகப்போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
“ ‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும். அரசனும் அவர்கள் மத்தியிலேயே இருந்து அவர்கள் உட்செல்லும்போது உட்சென்று அவர்கள் வெளியேறும்போது வெளியேறவேண்டும். பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.
“ ‘அரசன் தகன காணிக்கையையோ, சமாதான காணிக்கையையோ யெகோவாவுக்கு மனப்பூர்வமான காணிக்கையாகச் செலுத்த வரும்போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாசல் அவனுக்காகத் திறக்கப்படவேண்டும். ஓய்வுநாளில் செய்வதுபோலவே, தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் அவன் செலுத்தவேண்டும். பின்பு அவன் வெளியே போகவேண்டும். அவன் வெளியே போனபின் வாசல் மூடப்படவேண்டும்.
“ ‘நீங்கள் ஒவ்வொரு நாளும் பழுதற்ற ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஒன்றை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். காலைதோறும் அதைக் கொடுக்கவேண்டும். அதனோடு தானிய காணிக்கையாக ஆறில் ஒரு எப்பா அளவு தானிய மாவையும் அதில் தெளிப்பதற்காக மூன்றில் ஒரு ஹின் எண்ணெயையும் காலைதோறும் கொடுக்கவேண்டும். யெகோவாவுக்குக் கொடுக்கப்படவேண்டிய இத்தானிய காணிக்கைகள் ஒரு நித்திய கட்டளையாயிருக்கும். எனவே, செம்மறியாட்டுக் குட்டியும், தானிய காணிக்கையும், எண்ணெயும் தகன காணிக்கையாக காலைதோறும் ஒழுங்காகச் செலுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அரசன் தன் உரிமைச்சொத்திலிருந்து தன் மகன்களில் ஒருவனுக்கு அன்பளிப்பொன்றைக் கொடுப்பானாயின், அது அவனுடைய சந்ததிகளுக்கும் சொந்தமாகும். அது அவர்களின் உரிமைச் சொத்தாகவேண்டும். ஆயினும், அவன் தன் உரிமைச்சொத்திலிருந்து தனது வேலைக்காரரில் ஒருவனுக்கு ஒரு அன்பளிப்பைச் செய்திருப்பின் அவ்வேலைக்காரன் விடுதலை வருடம்வரை அதை அனுபவிக்கலாம். பின்பு அது அரசனையே சாரும். அவனுடைய உரிமைச்சொத்தோ அவனுடைய மகன்களுக்கு மட்டுமே சொந்தமாயிருக்கும். அது அவர்களுடையதே. அரசன் மக்களுடைய உரிமைச்சொத்துக்களில் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களை அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்திவிடக்கூடாது. அவன் தன் சொந்த நில உரிமைகளிலிருந்தே தன் மகன்களுக்கான உரிமைச்சொத்துக்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது என் மக்கள் எவருமே தங்கள் நில உரிமைகளிலிருந்து வேறுபிரிக்கப்பட மாட்டார்கள்.’ ”
பின்பு அந்த மனிதன், என்னை வடக்கு நோக்கியிருந்த ஆசாரியருடைய பரிசுத்த அறைகளுக்குப்போகும் வாசலின் பக்கமாயிருந்த, நுழைவு வாசல்வழியாகக் கொண்டுவந்தான். அங்கே அவன் மேற்கு இருபுறத்திலும் ஒரு இடத்தை எனக்குக் காண்பித்தான். அவன் என்னிடம், “ஆசாரியர்கள் குற்றநிவாரண காணிக்கையையும், பாவநிவாரண காணிக்கையையும் சமைத்து, தானிய காணிக்கையை வேகவைக்கும் இடம் இதுவே. அவர்கள் இவற்றை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் மக்கள் அவற்றினால் தாங்கள் பரிசுத்தமாக்கப்படுவோம் என எண்ணித் தங்களுக்குத் தீங்குவருவதை தவிர்த்துக்கொள்வதற்காக இப்படிச் செய்வார்கள்.”
பின்பு அவன் என்னை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் அழைத்துச் சென்றான். ஒவ்வொரு மூலையிலும் வேறொரு முற்றத்தைக் கண்டேன். வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும், நாற்பது முழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான அடைக்கப்பட்ட முற்றங்கள் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவினதாய் இருந்தது. நான்கு முற்றங்களின் உட்புற சுவர்களில் சுற்றிலும் கல்லால் செய்யப்பட்ட பக்க விளிம்புகள் இருந்தன. அங்கே சுவர் விளிம்பின் கீழ் அடுப்புகளுக்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன. அவன் என்னிடம், “ஆலய பணியாளர் மக்களின் பலிகளைச் சமைக்கும் சமையலிடங்கள் இவையே என்றான்.”
ஆலயத்திலிருந்து ஆறு
மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலய புகுமுக வாசலுக்குக் கொண்டுவந்தான். ஆலய வாசற்படியின் கீழிருந்து கிழக்குநோக்கி தண்ணீர் ஓடிவருவதை நான் கண்டேன். ஆலயம் கிழக்கு நோக்கியிருந்தது. தண்ணீர் ஆலயத்தின் தென்புறத்தின் கீழாக பலிபீடத்தின் தெற்கிலிருந்து வந்தது. பின்பு அவன் என்னை வடக்கு வாசல் வழியே கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலின் வெளிப்புறத்தைச் சுற்றி அழைத்துக்கொண்டு போனான். தெற்குப்புறமிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.
அம்மனிதன் தனது அளவுநூலைப் பிடித்தபடி, கிழக்குப் புறமாய்ப்போனான். அவன் ஆயிரம் முழ தூரத்தை அளந்து, பின்னர் கணுக்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான். மேலும் அவன் ஆயிரம் முழ தூரம் அளந்து முழங்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியே என்னை அழைத்துச் சென்றான். பின்னும் அவன் இன்னும் ஆயிரம் முழ தூரம் அளந்து இடுப்பளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான். இன்னும் ஆயிரம் முழ தூரத்தை அவன் அளந்தான். ஆனால், இப்பொழுதோ அது என்னால் கடக்கமுடியாத ஒரு ஆறாக இருந்தது. ஏனெனில் தண்ணீர் மட்டம் உயர்ந்து நீந்தக்கூடிய ஆழமாய் இருந்தது. அது ஒருவனாலும் கடக்கமுடியாத ஆறாக இருந்தது. அவன் என்னிடம், “மனுபுத்திரனே, இதை நீ காண்கிறாயா?” என்று கேட்டான்.
பின்பு அவன் என்னை ஆற்றின் கரைக்கு நடத்திவந்தான். நான் அங்கு வந்தபோது, ஆற்றின் இரு கரைகளிலும் ஏராளமான மரங்களைக்கண்டேன். அவன் என்னிடம், “இந்தத் தண்ணீர் கிழக்குப் பிரதேசத்தில் பாய்ந்து, யோர்தான் பள்ளத்தாக்கினுள் இறங்கி, சவக்கடலில் விழுகிறது. இது சவக்கடலில் விழும்போது, அங்குள்ள உப்புத் தண்ணீர் நன்னீராகிறது. இந்த ஆறு ஓடும் இடமெல்லாம் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக வாழும். இந்தத் தண்ணீர் அங்கே ஓடி, உவர்ப்புத் தண்ணீரை நன்னீராக்குவதால், அங்கு பெருந்தொகையான மீன்கள் இருக்கும். எனவே இந்த ஆறு ஓடுமிடங்களிலெல்லாம் இருக்கும் அனைத்தும் உயிர்வாழும். கரையின் நெடுகிலும் மீனவர் நிற்பார்கள். என்கேதி தொடக்கம், என் எக்லாயீம்வரை வலை உலர்த்தும் இடங்கள் இருக்கும். மத்திய தரைக்கடலின் மீன்களைப்போல பலவித மீன்கள் அங்கிருக்கும். ஆனாலும் சேற்று நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும் உள்ள உவர்ப்புத் தண்ணீர் நன்னீராக மாட்டாது. அவை உப்புக்காகவே விட்டுவிடப்படும். ஆற்றின் இரு கரைகளிலும் எல்லாவித பழமரங்களும் வளரும். அவற்றில் இலைகள் உதிர்வதுமில்லை, பழங்கள் இல்லாமல் போவதுமில்லை. பரிசுத்த ஆலயத்திலிருந்து அவற்றினுள் தண்ணீர் பாய்வதால் அவை மாதந்தோறும் பழம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அவற்றின் பழங்கள் உணவுக்காகவும் இலைகள் சுகம் கொடுப்பதற்காகவும் இருக்கும்.”
நாட்டின் எல்லைகள்
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் உரிமைச்சொத்தாக நாட்டைப் பிரிக்கவேண்டும். யோசேப்புக்கு இரண்டு பங்குகள் கொடுக்கவேண்டும். பிரித்துக் கொடுக்கவேண்டிய எல்லைகள் இவையே: நீ அவர்கள் மத்தியில் அதைச் சமமாகப் பிரித்துக்கொடுக்கவேண்டும். இந்த நாடு உங்கள் சொத்துரிமையாகும். ஏனெனில் நான் அதைக் கொடுப்பேன், என்று உங்கள் முற்பிதாக்களுக்கு என் உயர்த்திய கையால் ஆணையிட்டேன்.
“நாட்டின் எல்லைகள் இவ்விதமாகவே அமையவேண்டும்,
“வட எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து, தொடங்கி அது எத்லோன் வீதியோடே போய், ஆமாத் நுழைவு வாசலைக் கடந்து, சேதாத் நகரத்திற்குப் போகும். தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள பெரோத்தா, சிப்ராயிம் ஆகிய நகரமெங்கும் சென்று, அவ்ரான் எல்லையிலுள்ள ஆசேர் அத்திக்கோன் நகரம் வரைசெல்லும். இந்த எல்லையானது மத்திய தரைக்கடலிலிருந்து ஆசார் ஏனான்வரை செல்லும். பின்பு தமஸ்குவுக்கு வடக்கேபோய் ஆமாத்தின் தெற்கை அடையும். இதுவே வட எல்லையாயிருக்கும்.
கிழக்குப்பக்கத்தின் எல்லை, தமஸ்குவுக்கும் அவ்ரானுக்கும் இடையிலுள்ள ஒரு முனையிலிருந்து செல்லும். இது யோர்தான் வழியாக கீலேயாத்துக்கும் இஸ்ரயேல் நாட்டுக்கும் இடையே தொடர்ந்து செல்லும். சவக்கடலிலுள்ள தாமார்வரை யோர்தான் நதியே எல்லையாகும். இதுவே கிழக்கு எல்லையாயிருக்கும்.
தெற்குப் பக்கத்திலுள்ள எல்லை, தாமாரிலிருந்து காதேஸ் மேரிபாவின் நீர்நிலைகளை அடைந்து, எகிப்தின் நீரோடை வழியாக மத்திய தரைக்கடல்வரை செல்லும். இதுவே தெற்கு எல்லையாயிருக்கும்.
மேற்குப் பக்கத்தில் மத்திய தரைக்கடலே அதன் எல்லையாகும். அது லேபோ ஆமாத் எதிரேயுள்ள இடம்வரை செல்லும். இதுவே மேற்கு எல்லையாயிருக்கும்.
“இஸ்ரயேலின் கோத்திரங்களின்படியே நீங்கள் நாட்டை உங்களுக்குள் பங்கிடவேண்டும். உங்களுக்கும் உங்கள் மத்தியில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அந்நியருக்கும் சொத்துரிமையாக நாடு பங்கிட்டுக் கொடுக்கப்படுதல் வேண்டும். அவர்கள் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தவர்களைப்போல கணிக்கப்படுதல் வேண்டும். உங்களோடு அவர்களும் இஸ்ரயேல் கோத்திரங்களின் மத்தியில் சொத்துரிமையைப் பெறவேண்டும். அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் வாழ்கிறானோ, அங்கேயே அவனுடைய சொத்துரிமையை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றான்.”
நாட்டின் பிரிவுகள்
“பெயர் வரிசைப்படியுள்ள கோத்திரங்கள் இவையே:
“நாட்டின் வட எல்லையில், தாண் ஒரு பங்கைப் பெறுவான்; அது எத்லோன் வீதியிலிருந்து, ஆமாத்தின் நுழைவு வாசல் வரைக்கும் தொடரும். ஆமாத்திற்கு அடுத்ததாக ஆசார் ஏனானும், தமஸ்குவின் வடக்கு எல்லையும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுமுள்ள அதன் எல்லையின் ஒரு பகுதியாயிருக்கும்.
ஆசேர் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள தாணின் எல்லையோடு அமையும்.
நப்தலி ஒரு பங்கைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ஆசேரின் எல்லையோடு அமையும்.
மனாசே ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள நப்தலியின் எல்லையோடு அமையும்.
எப்பிராயீம் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்கு வரையிலுள்ள மனாசேயின் எல்லையோடு அமையும்.
ரூபன் ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள எப்பிராயீமின் எல்லையோடு அமையும்.
யூதா ஒரு பங்கைப் பெறுவான்; அது கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள ரூபனின் எல்லையோடு அமையும்.
“கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள யூதாவின் எல்லையைக்கொண்ட பகுதியை, நீ விசேஷ கொடையாகக் கொடுக்கவேண்டும். அது 25,000 முழ அகலமும், கிழக்கிலிருந்து மேற்குவரையுள்ள கோத்திரப் பங்குக்குச் சமானமான நீளமுமாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆலயம் அதன் நடுவில் அமைந்திருக்கும்.
“யெகோவாவுக்கு நீ செலுத்தவேண்டிய விசேஷ பகுதி 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமாக இயிருக்கவேண்டும். இது ஆசாரியருக்கான பரிசுத்த பகுதியாயிருக்கும். அது வடக்குப்புறம் 25,000 முழ நீளமாயும், மேற்குப்புறம் 10,000 முழ அகலமாயும், கிழக்குப்புறம் 10,000 முழ அகலமாயும், தெற்குப்புறம் 25,000 முழ நீளமாயும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் பரிசுத்த ஆலயம் இருக்கும். எனக்குப் பணிசெய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்த, சாதோக்கியரான அர்ப்பணிக்கப்பட்ட ஆசாரியருக்கே இது உடையதாகும். இஸ்ரயேல் வழிவிலகினபோது லேவியரும் வழிவிலகினதுபோல, சாதோக்கியர் வழிவிலகிப்போகவில்லை. நாட்டின் பரிசுத்த பங்கிலிருந்து இது ஒரு விசேஷ நன்கொடையாகும். இந்த மகா பரிசுத்த பங்கு லேவியரின் நிலப்பரப்பின் எல்லையோடு அமைந்திருக்கும்.
“ஆசாரியருக்கான பகுதியின் எல்லையோடு லேவியர்களுக்கு 25,000 முழ நீளமும் 10,000 முழ அகலமுமான ஒரு இடம் இருக்கும். அதன் முழு நீளம் 25,000 முழமும், அகலம் 10,000 முழமுமாயிருக்கும். அவர்கள் அதில் எதையேனும் விற்கவோ அல்லது மாற்றீடு செய்யவோ கூடாது. அது நாட்டின் சிறப்புவாய்ந்த பகுதியாகும். அது யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருப்பதால், அது வேறுயாருக்கும் உரிமையாகக்கூடாது.
“அகலம் 5,000 முழமும், நீளம் 25,000 முழமும் உடைய எஞ்சியபகுதி, வீடுகளுக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமாக நகரின் பொதுப் பாவனைக்காக விடப்படும். நகரம் அதின் நடுவில் இருக்கும். நகரம் வடக்கே 4,500 முழங்களும், தெற்கே 4,500 முழங்களும், கிழக்கே 4,500 முழங்களும், மேற்கே 4,500 முழங்களும் அளவுடையதாயிருக்கும். நகருக்கான மேய்ச்சல் நிலம் வடக்கே 250 முழங்களும் தெற்கே 250 முழங்களும் கிழக்கே 250 முழங்களும் மேற்கே 250 முழங்களுமாக இருக்கும். பரிசுத்த இடத்தின் எல்லையோடு நீண்டுசெல்லும் எஞ்சியபகுதி கிழக்கே 10,000 முழங்களும் மேற்கே 10,000 முழங்களுமாயிருக்கும். அதன் உற்பத்திகள் நகரின் தொழிலாளர்களின் உணவுக்காகும். நகரில் இருந்து அங்கு விவசாயம் செய்யவரும் தொழிலாளர், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் வருவார்கள். முழு பகுதியும் 25,000 முழச் சதுரமாக இருக்கும். நகரத்து உடைமைகளோடு ஒரு பரிசுத்த பகுதியையும் விசேஷ கொடையாக நீங்கள் ஒதுக்கிவைக்கவேண்டும்.
“பரிசுத்த இடமும், நகரத்தின் சொத்தும் அமைந்திருக்கும் இடத்தின் இரு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் பகுதி இளவரசனுக்குரியதாகும். அது கிழக்குப் புறமாக பரிசுத்த இடத்தின் 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து கிழக்கு எல்லைக்கும், மேற்குப் புறமாக 25,000 முழ நீளமான பக்கத்திலிருந்து மேற்கு எல்லைக்கும் பரந்திருக்கும். கோத்திரப் பங்குகளுக்கு அருகே அவற்றின் நீளத்துக்கு அமைவாக இவ்விருபகுதிகளும் இளவரசனுக்கு உரியதாகும். ஆலயத்தின் பரிசுத்த இடத்துடன் இருக்கும் பரிசுத்த பகுதி அவைகளுக்கு நடுவில் இருக்கும். எனவே, லேவியரின் சொத்துக்களும் நகரத்தின் சொத்துக்களும் இளவரசனுக்குச் சொந்தமான பகுதியின் நடுவில் இருக்கும். இளவரசனுக்கு சொந்தமான பகுதியோ, யூதாவின் எல்லைகளுக்கும் பென்யமீன் எல்லைகளுக்கும் இடையில் அமைந்திருக்கும்.
“எஞ்சிய கோத்திரங்களுக்கான பகுதிகளாவன,
“பென்யமீன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்குப்புறத்திலிருந்து மேற்குப்புறம்வரை பரந்திருக்கும்.”
சிமியோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை பென்யமீனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
இசக்கார் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை சிமியோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
செபுலோன் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை இசக்காரின் பங்கின் எல்லையோடிருக்கும்.
காத் ஒரு பகுதியைப் பெறுவான். அது கிழக்கிலிருந்து மேற்குவரை செபுலோனின் பங்கின் எல்லையோடிருக்கும்.
காத்தின் தெற்கெல்லை தெற்கே தாமார் தொடங்கி, காதேசின் மேரிபாவின் தண்ணீர்கள்வரையும், சென்று பின் எகிப்திய ஓடை ஓரமாக மத்திய தரைக்கடலைச் சென்றடையும்.
“இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்குச் சொத்துரிமையாக நீ பிரித்துக் கொடுக்கவேண்டிய நாடு இதுவே. இவை அவர்களுக்குரிய பகுதியாக இருக்கும்” என்பதாக ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
நகர் வாசல்கள்
“நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே:
“அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும். நகர வாசல்கள் இஸ்ரயேலரின் கோத்திரங்களின்படியே பெயரிடப்படும். வடபுறத்திலுள்ள மூன்று வாசல்களும் ரூபன் வாசல், யூதா வாசல், லேவி வாசல் எனப் பெயரிடப்படும்.
நீளம் 4,500 முழமான கிழக்குப்புறத்திலுள்ள மூன்று வாசல்களும் யோசேப்பு வாசல், பென்யமீன் வாசல், தாண் வாசல் எனப் பெயரிடப்படும்.
நீளம் 4,500 முழமான தெற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் சிமியோன் வாசல், இசக்கார் வாசல், செபுலோன் வாசல் எனப் பெயரிடப்படும்.
நீளம் 4,500 முழமான மேற்குப் புறத்திலுள்ள மூன்று வாசல்களும் காத் வாசல், ஆசேர் வாசல், நப்தலி வாசல் எனப் பெயரிடப்படும்.
“சுற்றிலும் தூரம் 18,000 முழமாக இருக்கும்.
“அக்காலம் முதல் நகருக்கு வழங்கப்படும் பெயர், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ ” என்பதே.