- Biblica® Open Indian Tamil Contemporary Version
யாத்திராகமம்
யாத்திராகமம்
யாத்திராகமம்
யாத்.
யாத்திராகமம்
இஸ்ரயேலர் ஒடுக்கப்படுதல்
யாக்கோபுடனும் அவனுடைய குடும்பங்களுடனும் எகிப்திற்குப்போன இஸ்ரயேலுடைய மகன்களின் பெயர்களாவன:
ரூபன், சிமியோன், லேவி, யூதா,
இசக்கார், செபுலோன், பென்யமீன்,
தாண், நப்தலி,
காத், ஆசேர்.
யாக்கோபின் சந்ததிகள் மொத்தம் எழுபதுபேர். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
இப்பொழுது யோசேப்பும், அவனுடைய சகோதரர்கள் எல்லோரும், அந்த தலைமுறையினர் யாவரும் இறந்துபோனார்கள். இஸ்ரயேல் என அழைக்கப்பட்ட, யாக்கோபின் சந்ததிகள் வளம்பெற்று, அதிகமாய்ப் பெருகினார்கள்; நாடு அவர்களால் நிரம்பும் அளவுக்கு அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் பெருகினார்கள்.
பின்பு யோசேப்பைப்பற்றி அறியாத ஒரு புதிய அரசன் எகிப்தில் ஆட்சிக்கு வந்தான். அவன் தன் மக்களிடம், “பாருங்கள், இஸ்ரயேலரோ நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாயும், பலமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். வாருங்கள், நாம் அவர்களுடன் விவேகமாய் நடந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாய்ப் பெருகிவிடுவார்கள், யுத்தம் ஒன்று உண்டானால் அவர்கள் நம் பகைவர்களோடு சேர்ந்து, நமக்கு விரோதமாகப் போரிட்டு நாட்டைவிட்டுப் போய்விடுவார்கள்” என்றான்.
எனவே இஸ்ரயேலர்களைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தி ஒடுக்குவதற்கு, அடிமைகளை நடத்தும் அதிகாரிகளை அவர்களுக்கு மேலாக நியமித்தார்கள்; இவ்வாறு அவர்கள் பித்தோம், ராமசேஸ் என்னும் களஞ்சியப் பட்டணங்களைப் பார்வோனுக்காகக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரயேலர் எவ்வளவு அதிகமாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பெருகிப் பரவினார்கள்; இதனால் எகிப்தியர் இஸ்ரயேலர்களுக்குப் பயந்து, அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள். செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள்.
எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம், “எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான். ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள். இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள்.
இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள். மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார்.
பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.
மோசேயின் பிறப்பு
லேவி வம்சத்திலுள்ள ஒரு மனிதன் ஒரு லேவியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அவன் ஒரு அழகான குழந்தையென அவள் கண்டபோது, அவனை மூன்று மாதங்களாக ஒளித்து வைத்தாள். ஆனால் அதற்கு மேலும் அவனை மறைத்துவைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் பெட்டியை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசினாள். குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். அந்த குழந்தையின் சகோதரி அதற்கு என்ன நடக்குமென அறியும்படி, தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள். அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது, அவள் அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டாள். அவள், “இது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள்.
அந்நேரத்தில் அங்கு வந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பால்கொடுத்து வளர்க்க, எபிரெயப் பெண்களில் ஒருத்தியை போய்க்கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அவள் உடனேபோய் குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் அவனைக் கொண்டுபோய்ப் பாலூட்டி வளர்த்தாள். குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் ஒப்படைத்தாள்; அவன் அவளுடைய மகனானான். பார்வோனின் மகள் இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே2:10 மோசே என்பதற்கு வெளியே எடுக்கப்பட்டவன் என்று அர்த்தம். என்று பெயரிட்டாள்.
மோசே மீதியானுக்கு ஓடுதல்
மோசே வளர்ந்தபின் ஒரு நாள், தன் சொந்த எபிரெய மக்கள் இருக்கும் இடத்திற்குப் போய், அங்கு அவர்கள் கடினமான வேலைசெய்வதைப் பார்த்தான். அவன் தன் சொந்த மக்களில் ஒருவனான ஒரு எபிரெயனை ஒரு எகிப்தியன் அடிப்பதையும் கண்டான். அவன் இங்கும் அங்கும் சுற்றி பார்த்துவிட்டு, ஒருவரையும் காணாததினால், அந்த எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்துவிட்டான். மோசே மறுநாளும் வெளியே போனபோது, எபிரெயர் இருவர் சண்டையிடுவதைக் கண்டான். அப்பொழுது அவன் தவறு செய்தவனிடம், “நீ உன் சகோதரனான எபிரெயனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த மனிதன், “எங்களுக்கு மேலாக உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல, என்னையும் கொல்ல நினைக்கிறாயோ?” என்று கேட்டான். மோசே, “நான் செய்தது மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டதே” என்று அறிந்து பயந்தான்.
பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான். மீதியானிலுள்ள ஒரு ஆசாரியருக்கு ஏழு மகள்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் தகப்பனின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி தண்ணீரை எடுத்துத் தொட்டிகளை நிரப்புவதற்காக அங்கே வந்தார்கள். அப்பொழுது சில மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோசே எழுந்துவந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுத்தான்.
அப்பெண்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுயேலிடம் வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “எகிப்தியன் ஒருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றினான்; அவன் எங்களுக்காகத் தண்ணீரும் அள்ளி, எங்கள் மந்தைக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்றார்கள்.
அப்பொழுது அவன் தன் மகள்களிடம், “அவன் எங்கே? ஏன் அவனை விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று கேட்டு, “ஏதாவது சாப்பிடும்படி அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான்.
மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தான்; சிறிது காலத்தின்பின் அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்துகொடுத்தான். சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம்2:22 கெர்சோம் என்பதற்கு பிறநாட்டினன் என்று அர்த்தம். என்று பெயரிட்டான்.
அந்த நீண்ட காலப்பகுதிக்குள் எகிப்திய அரசன் இறந்தான்; இஸ்ரயேலர் தங்கள் அடிமைத்தனத்தில் வேதனைப்பட்டுக் கதறினார்கள். தங்கள் அடிமைத்தனத்தின் நிமித்தம் உதவிவேண்டிய அவர்களுடைய அழுகுரல் இறைவனுக்கு எட்டியது. இறைவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டார், ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் தான் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். எனவே இறைவன் இஸ்ரயேலரின் பரிதாப நிலையைக் கண்டு, அவர்களைக் குறித்துக் கரிசனைகொண்டார்.
மோசேயும் எரிகின்ற புதரும்
மோசே மீதியான் நாட்டு ஆசாரியரான தன் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; ஒரு நாள் அவன் மந்தையை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தின் தூரமான பகுதிக்கு, ஓரேப்3:1 ஓரேப் என்பது சீனாய் மலையின் மற்றொரு பெயர். என்னும் இறைவனின் மலைக்கு வந்தான். அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்குக் காட்சியளித்தார்; அந்தப் புதரில் நெருப்பு பற்றியிருந்தும் எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டான். எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப்பார்ப்பேன்” என்றான்.
அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார்.
அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.
இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார். மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார்.
ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான்.
அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார்.
அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான்.
அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”
மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார்.
“இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது,
இந்தப் பெயராலேயே
நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும்.
“நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன். உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல்.
“இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள். ஆனால் வல்லமையான ஒரு கரம் எகிப்தின் அரசனைப் பலவந்தப்படுத்தினால் ஒழிய, அவன் உங்களைப் போகவிடமாட்டான் என்று எனக்குத் தெரியும். ஆதலால் நான் என் கரத்தை நீட்டி, எகிப்தியர் மத்தியில் செய்யப்போகும் எல்லா விதமான அதிசய செயல்களினால் அவர்களை வாதிப்பேன். அதன்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
“எகிப்தியர்கள் இந்த இஸ்ரயேல் மக்களுக்குத் தயவுகாட்டும்படி நான் செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது, வெறுங்கையுடன் போகமாட்டீர்கள். ஒவ்வொரு பெண்ணும் தன் அண்டை வீட்டாரிடமும், தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க நகைகளையும் உடைகளையும் கேட்டு வாங்கவேண்டும்; அவற்றை உங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் அணிவிக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.
மோசேக்கு வழங்கப்பட்ட அடையாளங்கள்
மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான்.
அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.
“ஒரு கோல்” என்றான்.
“அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார்.
மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான். அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது. “ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார்.
மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது.
“இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது.
பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும். இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.
அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.”
அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார்.
அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான்.
அதனால் மோசேக்கு எதிராக யெகோவாவின் கடுங்கோபம் மூண்டது; அவர், “அப்படியானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கிறான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், உன்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைவான். நீ அவனுடன் பேசி, அவன் சொல்லவேண்டிய வார்த்தைகளை அவனுக்குச் சொல்வாய்; அப்பொழுது நான் உங்கள் இருவருக்கும் பேசுவதற்கு உதவிசெய்து, நீங்கள் செய்யவேண்டியதையும் உங்களுக்குப் போதிப்பேன். அவன் உனக்காக மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவன்போல் இருப்பாய். ஆனாலும் நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை உன்னால் செய்யமுடியும்” என்றார்.
மோசே எகிப்திற்குத் திரும்புதல்
அதன்பின் மோசே தன் மாமனார் எத்திரோவிடம் திரும்பிப்போய் அவனிடம், “நான் எகிப்திலுள்ள என் சொந்த மக்களிடம் மறுபடியும்போய், அவர்களில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா, என்று பார்க்க என்னைப் போகவிடும்” என்றான்.
அதற்கு எத்திரோ, “என் நல்வாழ்த்துகள்; நீ போய்வா” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.
மீதியான் தேசத்தில் யெகோவா மோசேயிடம், “உன்னைக் கொலைசெய்ய எண்ணியிருந்தவர்களான எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்திற்குத் திரும்பவும் போ” என்று சொல்லியிருந்தார். எனவே மோசே தன் மனைவியையும், மகன்களையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்திற்குப் போகப் புறப்பட்டான். மோசே இறைவனின் கோலை தன்னுடன் எடுத்துச் சென்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்திற்குத் திரும்பிப் போனபின்பு, நான் உனக்குக் கொடுத்த அற்புதங்களை எல்லாம் என் வல்லமையைக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாகச் செய்துகாட்டு; ஆனால் நானோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவன் மக்களைப் போகவிடமாட்டான். அப்பொழுது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேல் எனது முதற்பேறான மகன், என் மகனை என்னை வழிபடும்படி போகவிடு என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆனால் நீயோ, அவனைப் போகவிட மறுத்தாய்; ஆகையால் நான் உன்னுடைய முதற்பேறான மகனைக் கொல்லுவேன்’ என்கிறார் என்று சொல்” என்றார்.
மோசே பயணம் செய்யும் வழியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் யெகோவா மோசேயை எதிர்த்து, அவனைக் கொல்ல முயன்றார். உடனே சிப்போராள் ஒரு கூர்மையானக் கல்லை எடுத்து, தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அதனால் மோசேயின் பாதங்களைத்4:25 பாதங்களை என்பதற்கான எபிரெய சொல் ஆண் பாலின உறுப்பை இங்கே குறிக்கலாம். தொட்டு, “நிச்சயமாக நீர் எனக்கு இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்றாள். எனவே யெகோவா அவனை விட்டுவிட்டார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று விருத்தசேதனத்தைக் குறித்தே அந்நேரத்தில் அவள் சொன்னாள்.
யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காகப் பாலைவனத்திற்குப் போ” என்றார். அதன்படியே ஆரோன் இறைவனின் மலையில் மோசேயைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான். அப்பொழுது மோசே யெகோவா தன்னை அனுப்பிச் சொல்லும்படிச் சொன்ன எல்லாவற்றையும் ஆரோனிடம் கூறினான். அத்துடன் அவர் தனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட அற்புத அடையாளங்களைப் பற்றியும் சொன்னான்.
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள். அப்பொழுது யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் கூறினான், அவன் அந்த அடையாளங்களையும் மக்களுக்குமுன் செய்துகாட்டினான். அவர்கள் நம்பினார்கள். யெகோவா இஸ்ரயேலர்களில் கரிசனையாய் இருக்கிறார் என்றும், தங்கள் அவலத்தைக் கண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் தலைகுனிந்து வழிபட்டார்கள்.
வைக்கோல் இல்லாமல் செங்கற்கள்
அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.
அதற்குப் பார்வோன், “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அவர் யார்? எனக்கு யெகோவாவைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டேன்” என்றான்.
அப்பொழுது அவர்கள், “எபிரெயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்பொழுது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்து, இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிசெலுத்தும்படி எங்களைப் போகவிடும். இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள்.
அதற்கு எகிப்தின் அரசன், “மோசே, ஆரோன் நீங்கள் ஏன் மக்களை வேலைசெய்வதிலிருந்து குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப்போங்கள்!” என்றான். மேலும் பார்வோன், “பாருங்கள், இப்பொழுது இந்த நாட்டில் உங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள்; அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வேலைசெய்வதைத் தடுக்கிறீர்களே!” என்றான்.
அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் கண்காணிகளிடமும், மக்களுக்குப் பொறுப்பாயிருந்த தலைவர்களிடமும் கொடுத்த உத்தரவு இதுவே: “நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும். ஆனால் நீங்கள் அவர்களிடம் முன்பு செய்த அளவு செங்கற்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள்; அந்த அளவைக் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலிசெலுத்த அனுமதியும்’ என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மனிதர்கள் தொடர்ந்து வேலைசெய்யும்படிக்கும், பொய்களை நம்பாதபடிக்கும் அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்.”
அப்பொழுது அடிமைகளை நடத்தும் கண்காணிகளும், தலைவர்களும் மக்களிடம்போய், “பார்வோன், ‘இனிமேல் வைக்கோல் கொடுக்கமாட்டேன். நீங்களே வைக்கோல் கிடைக்கும் இடங்களுக்குப் போய், உங்களுக்கான வைக்கோலை எங்கேயாவது தேடிக்கொள்ளுங்கள்; ஆனாலும் உங்கள் வேலை கொஞ்சமும் குறைக்கப்படமாட்டாது’ என்று சொல்கிறான்” என்றார்கள். எனவே மக்கள் வைக்கோலுக்குப் பதிலாக வயலில் விடப்பட்ட பயிரின் அடித்தாழ்களை சேகரிப்பதற்கு எகிப்து முழுவதும் சிதறிப்போனார்கள். அடிமை நடத்தும் அதிகாரிகள் அவர்களிடம், “வைக்கோல் இருக்கும்போது செய்ததுபோலவே, ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்ட அளவின்படியே வேலைசெய்யவேண்டும்” என வற்புறுத்தினார்கள். தலைவர்களாய் இருந்த இஸ்ரயேலரை, அடிமைகளை நடத்தும் பார்வோனின் கண்காணிகள் அடித்து, “நீங்கள் ஏன் உங்களுக்குக் குறித்த செங்கற்களை முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் செய்யவில்லை” என்றும் கேட்டார்கள்.
அப்பொழுது இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் பார்வோனிடம் சென்று, “நீங்கள் ஏன் உங்கள் பணியாளர்களான எங்களை இவ்விதமாய் நடத்துகிறீர்கள்? உமது பணியாளர்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படவில்லை; அப்படியிருந்தும் செங்கல் சுடும்படி கேட்கப்பட்டு உங்கள் பணியாளர்களால் அடிக்கப்படுகிறோம்; ஆனால், குற்றம் உமது சொந்த மக்களிலேயே இருக்கிறது” என்றார்கள்.
அதற்குப் பார்வோன், “சோம்பேறிகளே, நீங்கள் சோம்பேறிகளாய் இருப்பதனால்தான், ‘நாங்கள் போய் யெகோவாவுக்குப் பலியிட எங்களை விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். இப்பொழுதே வேலைக்குப் போங்கள். உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படமாட்டாது, ஆனாலும் நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முழு எண்ணிக்கையின்படி செங்கற்களைச் செய்தே ஆகவேண்டும்” என்றான்.
“ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய செங்கற்களின் எண்ணிக்கையை நீங்கள் குறைக்கக்கூடாது” என்று இஸ்ரயேல் மக்களின் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டபோது, தாம் பெரும் பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் பார்வோனிடம் இருந்து திரும்பி வரும்போது, மோசேயும் ஆரோனும் தங்களைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “யெகோவாவே உங்களைப் பார்த்து நியாயந்தீர்ப்பாராக! நீங்கள் எங்களைப் பார்வோனுக்கும், அவனுடைய அலுவலர்களுக்கும் அருவருப்பானவர்களாக்கி, எங்களைக் கொல்லும்படி அவர்களின் கைகளில் வாளையும் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
இறைவன் விடுதலையை வாக்களித்தல்
மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “யெகோவாவே, இந்த மக்கள்மேல் ஏன் பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறீர்? இதற்காகவா என்னை அனுப்பினீர்? பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதுமுதல், அவன் இந்த மக்கள்மேல் தொல்லையையே கொண்டுவந்திருக்கிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே” என்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார்.
பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா. ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக6:3 எல்லாம் வல்ல இறைவனாக என்பது எபிரெயத்தில் எல்ஷடாய் எனப்படும் நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை. அத்துடன், ‘இஸ்ரயேல் மக்கள் பிறநாட்டினராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன்.
“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள். ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டிற்கு உங்களைக் கொண்டுவருவேன். அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே யெகோவா’ ” என்றார்.
மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தான், ஆனால் அவர்களோ மனச்சோர்வினாலும் கொடூரமான அடிமைத்தனத்தினாலும் துன்பப்பட்டதனால் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் நீ போ, அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படிச் சொல்” என்றார்.
ஆனால் மோசே யெகோவாவிடம், “இஸ்ரயேலரே எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் செவிகொடுக்கவேண்டும்? நானோ பண்படாத உதடுகளுள்ளவன்”6:12 பண்படாத உதடுகளுள்ளவன் என்றால் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்பதாகும் வசனம் [30] என்றான்.
மோசே, ஆரோனின் குடும்ப அட்டவணை
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும், எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
இஸ்ரயேலரின் குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே:
யாக்கோபின் முதற்பேறான மகனாகிய ரூபனின் மகன்கள்:
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
ரூபனின் வம்சங்கள் இவையே.
சிமியோனின் மகன்கள்:
எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகனான சாவூல் என்பவர்கள் ஆவர்.
சிமியோனுடைய வம்சங்கள் இவையே.
பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்:
கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர்.
லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.
லிப்னீயும் சீமேயியும்
கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்
கோகாத்தின் மகன்கள் ஆவர்.
கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான்.
மெராரியின் மகன்கள்
மகேலி, மூஷி என்பவர்கள்.
அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.
அம்ராம் தன் தகப்பனின் சகோதரியான யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும், மோசேயையும் பெற்றாள்.
அம்ராம் 137 வருடங்கள் வாழ்ந்தான்.
இத்சேயாரின் மகன்கள்
கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள் ஆவர்.
ஊசியேலின் மகன்கள்:
மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.
அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
கோராகியரின் மகன்கள்:
ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர்.
கோராகிய வம்சங்கள் இவையே.
ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான்.
அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.
இதே ஆரோனுக்கும், மோசேக்குமே, “இஸ்ரயேலருடைய கோத்திரப்பிரிவின்படி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார். இதே மோசேயும் ஆரோனுமே எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவது பற்றி, எகிப்திய அரசன் பார்வோனிடம் பேசினார்கள்.
ஆரோன் மோசேக்காகப் பேசுதல்
யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார்.
ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனைப்போல் ஆக்கியிருக்கிறேன், உன் சகோதரன் ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்லவேண்டும், உன் சகோதரன் ஆரோன் பார்வோனிடம் இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படிச் சொல்லவேண்டும். ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், எகிப்தில் என் அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் அதிகமாக்கினாலும், பார்வோன் உனக்குச் செவிகொடுக்கமாட்டான். அப்பொழுது நான் எகிப்தின்மேல் என் கரத்தை வைத்து, தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களால், என் மக்களாகிய இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவேன்; அவர்களைக் கோத்திரப் பிரிவுகளாக கொண்டுவருவேன். நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்.”
மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள். அவர்கள் பார்வோனிடம் பேசின நாட்களில், மோசே 80 வயதுடையவனாகவும், ஆரோன் 83 வயதுடையவனாகவும் இருந்தார்கள்.
ஆரோனின் கோல் பாம்பாக மாறுதல்
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது, “பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கேட்பான். அப்பொழுது நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகக் கீழே எறிந்துவிடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார்.
அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது. அப்பொழுது பார்வோன், ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்: அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது. ஆனாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
முதலாம் வாதையாகிய இரத்தம்
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோனின் இருதயம் கடினமாகிவிட்டது; அவன் இஸ்ரயேலரை போகவிட மறுக்கிறான். காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில். அவன் வந்ததும் நீ அவனிடம், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா என்னை உன்னிடம் அனுப்பி, பாலைவனத்திலே என்னை வழிபடும்படி என்னுடைய மக்களைப் போகவிடு’ என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இதுவரை நீர் அதைக் கேட்கவில்லை. அதனால் யெகோவா உனக்குச் சொல்வது இதுவே: ‘நானே யெகோவா என்பதை இதனால் நீ அறிந்துகொள்வாய்: என் கையிலுள்ள கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், உடனே அது இரத்தமாக மாறும். நைல் நதியிலுள்ள மீன்கள் செத்து, நதியோ நாற்றமெடுக்கும்; எகிப்தியரால் அதன் தண்ணீரைக் குடிக்கமுடியாமல் போகும்’ என்று சொல்” என்றார்.
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘எகிப்திலே தண்ணீருள்ள இடங்களான ஆறுகள், அருவிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ள எல்லா இடங்களின் மேலும் உன் கோலை எடுத்து, உன் கையை நீட்டு’ என்று சொல். அவை இரத்தமாக மாறிவிடும். எகிப்து எங்கும் இரத்தம் இருக்கும், மரத்தினால் மற்றும் கல்லினாலான பாத்திரங்களிலும் உள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று. நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது.
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள், அதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குள் போய்விட்டான், அவன் யெகோவா செய்ததைக்கூட பொருட்படுத்தவில்லை. ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.
இரண்டாம் வாதையாகிய தவளைகள்
யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன.
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பார்வோனிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்தால், உன் நாடு முழுவதையும் தவளைகளினால் வாதிப்பேன். நைல் நதி தவளைகளால் நிரம்பும். அவை உன் அரண்மனைக்குள்ளும் உன் படுக்கையறைக்குள்ளும், உன் கட்டிலின்மேலும், உன் அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும், உன் மக்கள்மேலும், உன் அடுப்புகளுக்குள்ளும், மாப்பிசையும் பாத்திரங்களுக்குள்ளும் வந்து ஏறும். தவளைகள் உன்மேலும், உன் நாட்டு மக்கள்மேலும், உன் அதிகாரிகள்மேலும் வந்து ஏறும்’ என்று சொல்” என்றார்.
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘நீ உன் கோலை எடுத்து, உனது கையை நீரோடைகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரும்படி செய்’ என்று சொல்” என்றார்.
அப்படியே ஆரோன் எகிப்திலுள்ள நீர் நிலைகள்மேல் தன் கையை நீட்டினான். அப்போது தவளைகள் வந்து, நாட்டை மூடிக்கொண்டன. ஆனால் எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்து, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “இந்தத் தவளைகள் என்னையும் என் நாட்டு மக்களையும் விட்டு நீங்கும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அப்பொழுது நான் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த உங்கள் மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
மோசே பார்வோனிடம், “தவளைகள் உம்மிடத்திலிருந்தும் உமது வீடுகளிலிருந்தும் நீங்கும்படி, உமக்காகவும் உமது அதிகாரிகளுக்காகவும் உமது மக்களுக்காகவும் நான் மன்றாடுவேன். ஆனால் அதற்கான நேரத்தை நீரே தீர்மானித்து எனக்குத் தெரியப்படுத்தும். நைல் நதியில் மட்டும் தவளைகள் இருக்கும்” என்றான்.
அதற்குப் பார்வோன், “நாளைக்கே மன்றாடு” என்றான்.
அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே ஆகும். அப்பொழுது எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நிகரானவர் யாரும் இல்லையென்று நீர் அறிந்துகொள்வீர். தவளைகள் உம்மையும், உமது வீடுகளையும், அதிகாரிகளையும், மக்களையும் விட்டு நீங்கிவிடும்; ஆனால் நைல் நதியில் மட்டும் இருக்கும்” என்றான்.
மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து போனபின், பார்வோன்மேல் யெகோவா கொண்டுவந்த தவளைகளைக் குறித்து, மோசே அவரை நோக்கி மன்றாடினான். யெகோவா மோசே கேட்டபடியே செய்தார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலுமுள்ள தவளைகளெல்லாம் செத்துப்போயின. தவளைகள் குவியலாகக் குவிக்கப்பட்டன. அதனால் நாடெங்கும் துர்நாற்றமெடுத்தது. துயரம் நீங்கியதை பார்வோன் கண்டதும், யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
மூன்றாம் வாதையாகிய பேன்கள்
பின்பு யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம், நீ உன் கோலை நீட்டி நிலத்தின் புழுதியை அடி. அப்பொழுது எகிப்து நாடு எங்குமுள்ள புழுதி பேன்களாக மாறும் என்று சொல்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். ஆரோன் கோலைப் பிடித்திருந்த தன் கையை நீட்டி நிலத்தின் புழுதியை அடித்ததும், மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் வந்தன. எகிப்து நாட்டின் புழுதியெல்லாம் பேன்களாக மாறிற்று. ஆனால் மந்திரவாதிகள், தங்கள் மாயவித்தைகளினால் பேன்களை உண்டுபண்ண முயன்றபோது, அவர்களால் முடியாது போயிற்று.
மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் பேன்கள் இருந்தன. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனிடம், “இது இறைவனின் விரலேதான்” என்றார்கள். ஆனாலும் யெகோவா சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினமாகி, அவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை.
நான்காம் வாதையாகிய வண்டுகள்
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ அதிகாலையில் எழுந்து பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது அவனுக்கு முன்பாக நின்று அவனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு, என் மக்களைப் போகவிடு. என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மேலும், உன் அதிகாரிகள்மேலும், உன் மக்கள்மேலும், உன் வீட்டிற்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் வாழும் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
“ ‘ஆனாலும் என் மக்கள் வாழும் கோசேன் நாட்டையோ, அந்த நாளில் நான் வித்தியாசமாக நடத்துவேன்; அங்கு வண்டுகள் இராது, அதனால் யெகோவாவாகிய நான் இந்த நாட்டில் இருக்கிறேன் என்பதை நீ அறிந்துகொள்வாய். இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம்8:23 வித்தியாசம் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்கம் மற்றும் இலத்தீன் கையெழுத்துப் பிரதியில் விடுவிக்கும் செயல் என்றுள்ளது ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
யெகோவா அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனுடைய அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும் திரளான வண்டுகள் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் போயிற்று.
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “நீங்கள் போய் உங்கள் இறைவனுக்கு பலி செலுத்துங்கள். இந்த நாட்டிலேயே அதைச் செலுத்துங்கள்” என்றான்.
அதற்கு மோசே, “நாங்கள் அப்படிச் செய்வது சரியல்ல; ஏனெனில் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் செலுத்தும் பலிகள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும். அப்படி அவர்கள் பார்வையில் அருவருப்பாயிருக்கிற பலிகளை நாங்கள் செலுத்தினால், அவர்கள் எங்கள்மேல் கல்லெறியாமல் விடுவார்களோ? எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அவருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணமாய்ப் பாலைவனத்திற்குப் போகவேண்டும்” என்றான்.
அப்பொழுது பார்வோன், “உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பாலைவனத்தில் பலிசெலுத்தும்படி, நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால் நீங்கள் அதிக தூரம் போகக்கூடாது. இப்பொழுது எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்றான்.
அதற்கு மோசே, “நான் இங்கிருந்து போனவுடனேயே யெகோவாவிடம் மன்றாடுவேன்; நாளைக்கு வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், அவன் மக்களையும் விட்டு நீங்கிவிடும். யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த மக்களைப் போகவிடாதபடி பார்வோனாகிய நீர் மீண்டும் வஞ்சனையாய் நடக்காதிரும்” என்றான்.
பின்பு மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான். மோசே கேட்டுக்கொண்டபடியே யெகோவா செய்தார். வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், நாட்டு மக்களையும் விட்டு நீங்கிற்று; ஒரு வண்டும் மிஞ்சியிருக்கவில்லை. ஆனாலும் இம்முறையும் பார்வோன் தன் மனதைக் கடினப்படுத்தி இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
ஐந்தாம் வாதை வளர்ப்பு மிருகங்கள்மேல்
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய் எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்து, அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய எல்லா வளர்ப்பு மிருகங்கள்மேலும் கொடிய வாதையை யெகோவாவினுடைய கரம் கொண்டுவரும். இஸ்ரயேலருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும், எகிப்தியருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும் இடையில் யெகோவா வித்தியாசம் காட்டுவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகாது’ என்று அவனுக்குச் சொல்” என்றார்.
“யெகோவா நாளைக்கே இதை இந்த நாட்டில் செய்வார்” என்று சொல்லி யெகோவா ஒரு காலத்தைக் குறிப்பிட்டார். மறுநாள் அப்படியே யெகோவா செய்தார்: எகிப்தியரின் வளர்ப்பு மிருகங்கள் எல்லாம் செத்துப்போனது; ஆனால் இஸ்ரயேலருக்குச் சொந்தமான மிருகம் ஒன்றாயினும் சாகவில்லை. பார்வோன் அதுபற்றி விசாரிக்க ஆட்களை அனுப்பி, இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்பதை அறிந்தான். ஆனாலும் அவனுடைய இருதயம் தொடர்ந்தும் கடினமாகவே இருந்தது, அவன் மக்களைப் போகவிடவில்லை.
ஆறாம் வாதையாகிய கொப்புளங்கள்
அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது: “நீங்கள் சூளையில் இருந்து கைநிறையப் புகையின் கரித்தூளை அள்ளிக்கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுக்கு முன்பாக ஆகாயத்தில் வீசட்டும். அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மேலும், மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார்.
அப்படியே அவர்கள் சூளையிலிருந்து புகையின் கரித்தூளை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்குமுன் போய் நின்றார்கள். மோசே அதை ஆகாயத்தை நோக்கி வீசினான். உடனே மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்கள் உண்டாயின. அவை மந்திரவாதிகள், எகிப்தியர் எல்லோர்மேலும் உண்டானதால், மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்க முடியவில்லை. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார். அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
ஏழாம் வாதையாகிய ஆலங்கட்டி மழை
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அதிகாலையில் எழுந்து பார்வோனின் எதிரில் போய் அவனிடம், எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு அவர்களைப் போகவிடு. இல்லையென்றால் இம்முறை உனக்கும், உன் அதிகாரிகளுக்கும், உன் நாட்டு மக்களுக்கும் எதிராக எனது வாதைகளின் முழு தாக்கத்தையும் அனுப்புவேன். இதனால் பூமியெங்கும் எனக்கு நிகரானவர் யாருமே இல்லை என்பதை நீ அறிந்துகொள்வாய். ஏனெனில், நான் நினைத்திருந்தால் என் கரத்தை நீட்டி, பூமியிலிருந்து உங்களை முற்றிலும் அழித்துப்போடும் வாதை ஒன்றினால் உன்னையும் உன் மக்களையும் அப்பொழுதே அடித்திருப்பேன். ஆனாலும் நான் என் வல்லமையை உனக்குக் காட்டி, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன். நீயோ இன்னும் என்னுடைய மக்களுக்கு விரோதமாய் இருந்து, அவர்களைப் போகவிடாமல் இருக்கிறாய். ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானதுமுதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் விழுந்திராத மிகக் கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன். ஆகையால், இப்பொழுதே உன் வளர்ப்பு மிருகங்களையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்ற யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் எல்லா மனிதர்மேலும், மிருகங்கள்மேலும் பனிக்கட்டிகள் விழும். அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்” என்றார்.
யெகோவாவின் வார்த்தைக்குப் பயந்த பார்வோனின் அதிகாரிகள் தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் உள்ளே கொண்டுவருவதற்கு விரைந்து சென்றனர். யெகோவாவினுடைய வார்த்தையை அலட்சியப் படுத்தியவர்களோ, தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் வெளியிலே விட்டுவிட்டார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்து நாடெங்கும் ஆலங்கட்டி மழை விழும்படி உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், எகிப்தின் வயல்வெளியில் வளர்கின்ற எல்லாவற்றின்மேலும் பனிக்கட்டி விழும்” என்றார். மோசே அவ்விதமே ஆகாயத்தை நோக்கித் தன் கோலை நீட்டியபோது, யெகோவா இடிமுழக்கத்தையும், ஆலங்கட்டி மழையையும் அனுப்பினார். மின்னல் தரைமட்டும் மின்னிப் பாய்ந்தது. இவ்வாறு யெகோவா பனிக்கட்டிகளை எகிப்து நாட்டின்மேல் பொழிந்தார். பனிக்கட்டிகள் விழுந்தன. மின்னல் முன்னும் பின்னுமாக மின்னியது. எகிப்து ஒரு நாடான காலமுதல் ஒருபோதும் ஏற்படாத, கடுமையான புயலாய் அது இருந்தது. ஆலங்கட்டி மழை எகிப்து நாடெங்கும் பெய்து, வயல்வெளியிலுள்ள மனிதர்களும் மிருகங்களுமான எல்லாவற்றின்மேலும் விழுந்தது; வயல்வெளிகளில் முளைத்த பயிர்களையும் அடித்தது, மரங்களின் இலைகளும் உதிர்க்கப்பட்டன. இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசம் மாத்திரமே ஆலங்கட்டி மழை விழாத இடமாயிருந்தது.
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். யெகோவா நியாயமானவர். நானும் என் மக்களுமே தவறு செய்திருக்கிறோம். யெகோவாவிடம் மன்றாடுங்கள். இந்த இடிமுழக்கமும், ஆலங்கட்டி மழையுமே எங்களுக்குப் போதும். நான் உங்களைப் போகவிடுவேன். இனியும் நீங்கள் இங்கிருக்க வேண்டியதில்லை” என்றான்.
அதற்கு மோசே, “நான் பட்டணத்தைவிட்டுப் போனவுடன் என் கைகளை உயர்த்தி, யெகோவாவிடம் மன்றாடுவேன். அப்பொழுது இடிமுழக்கம் ஓய்ந்து பனிக்கட்டியும் நின்றுபோகும். பூமி யெகோவாவினுடையது என்று நீர் அறிந்துகொள்வீர். ஆனால் நீரும், உமது அதிகாரிகளும் இறைவனாகிய யெகோவாவுக்கு இன்னும் பயப்படவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.
சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டன. அவ்வேளையில் வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது, சணல் பூத்திருந்தது. கோதுமையும், கம்பும் முற்றாதிருந்தபடியால் அவை அழிக்கப்படவில்லை.
பின்பு மோசே பார்வோனை விட்டு பட்டணத்துக்கு வெளியே வந்தான். அவன் யெகோவாவை நோக்கித் தன் கைகளை உயர்த்தினான்; உடனே இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. மழையும் தொடர்ந்து தரையில் பெய்யாமல் ஓய்ந்தது. மழையும், பனிக்கட்டியும், இடிமுழக்கமும் நின்றதைப் பார்வோன் கண்டபோது, அவன் திரும்பவும் பாவம் செய்தான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் தங்களுடைய இருதயங்களை இன்னும் கடினப்படுத்தினார்கள். யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
எட்டாம் வாதையாகிய வெட்டுக்கிளி
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போ; நான் இந்த அற்புத அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்வதற்காகத்தான் அவன் இருதயத்தையும், அவன் அதிகாரிகளுடைய இருதயங்களையும் கடினப்படுத்தியிருக்கிறேன். மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார்.
எனவே, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் அவனிடம், “எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நீ எவ்வளவு காலத்திற்கு எனக்கு முன்பாக உன்னைத் தாழ்த்த மறுப்பாய்? என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்தால், நாளைக்கு உன் நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டுவருவேன். அவை நிலமே தெரியாதபடி தரையின் மேற்பரப்பு முழுவதையும் மூடும். அவை வயல்வெளியில் பனிக்கட்டிக்குத் தப்பியிருக்கும் தாவரங்கள் உட்பட, முளைக்கும் எல்லா மரங்களையும் தின்றுவிடும். அவை உன் வீடுகளையும், உன் அதிகாரிகளின் வீடுகளையும், எகிப்தியருடைய எல்லா வீடுகளையும் நிரப்பும். உன் தந்தையரோ, முற்பிதாக்களோ அவர்கள் இங்கு குடியேறிய காலத்திலிருந்து இன்றுவரை அப்படிப்பட்டதை ஒருபோதும் கண்டதில்லை’ என்று சொல்லி” மோசே பார்வோனை விட்டுத் திரும்பிப்போனான்.
பார்வோனின் அதிகாரிகள் அவனிடம், “எதுவரை இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்ய அந்த மனிதரைப் போகவிடும். எகிப்து நாடு பாழாய் போனதை நீர் இன்னும் உணரவில்லையா?” என்றார்கள்.
எனவே மோசேயும் ஆரோனும் திரும்பவும் பார்வோனிடம் அழைத்துவரப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால் போகிறவர்கள் யார்?” என்று கேட்டான்.
அதற்கு மோசே, “எங்கள் வாலிபரோடும், முதியோரோடும், எங்கள் மகன்கள், மகள்கள் எங்கள் ஆட்டு மந்தைகளோடும், மாட்டு மந்தைகளோடும் நாங்கள் போவோம். எங்கள் யெகோவாவுக்கு நாங்கள் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான்.
அதற்குப் பார்வோன் அவனிடம், “என்ன! உங்கள் பெண்களோடும், பிள்ளைகளோடும் உங்களைப் போகவிட்டு, ‘யெகோவா உங்களோடுகூட இருப்பாராக’ என்று சொல்லச் சொல்கிறாயா? நிச்சயமாக நீ தீயநோக்கமே கொண்டுள்ளாய். இல்லை! ஆண்கள் மட்டும் போகட்டும்; போய் உங்கள் யெகோவாவை வழிபடட்டும். அதைத்தானே நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்” என்றான். பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிலையிலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்தின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது நாட்டின்மேல் வெட்டுக்கிளிக் கூட்டம் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பி, வயல்வெளிகளில் முளைக்கும் எல்லாவற்றையும் தின்றுவிடும்” என்றார்.
மோசே தன் கோலை எகிப்தின்மேல் நீட்டினான். அப்பொழுது யெகோவா, அன்று பகலும் இரவும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின்மேல் வீசச்செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. அவை எகிப்தின்மேல் படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக இறங்கின. வெட்டுக்கிளிகளினால் உண்டான இப்படிப்பட்ட வாதை இதற்குமுன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை. அவை நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடியதனால் நிலம் கருமையாயிற்று. ஆலங்கட்டி மழைக்குப்பின், தப்பிய எல்லா பயிர்களையும், மரங்களிலுள்ள பழங்களையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடு முழுவதிலும் உள்ள மரங்களிலோ, செடிகளிலோ பச்சையானது ஒன்றும் மீந்திருக்கவில்லை.
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாய் அழைப்பித்து, அவர்களிடம், “நான் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவம் செய்துவிட்டேன். ஆகையால் இன்னொருமுறை என் பாவத்தை மன்னித்து, இந்த மரண வாதையை என்னைவிட்டு எடுத்துப்போடும்படி உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடுங்கள்” என்றான்.
அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான். யெகோவா காற்றைப் பலத்த காற்றாக மேற்கு பக்கத்திற்குத் திருப்பி வீசச்செய்தார். அக்காற்று வெட்டுக்கிளிகளை வாரிக் கொண்டுபோய் செங்கடலுக்குள் சேர்த்தது. எகிப்தின் எல்லைக்குள் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீந்திருக்கவில்லை. ஆனாலும் யெகோவா பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினார். அவன் இஸ்ரயேலரைப் போகவிடவில்லை.
ஒன்பதாம் வாதையாகிய இருள்
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “உன் கையை வானத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது எல்லோரும் உணரக்கூடிய இருள் எகிப்தின்மேல் உண்டாகும்” என்றார். மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினான். அப்பொழுது மூன்று நாட்கள் முழுமையான இருள் எகிப்து முழுவதையும் மூடியது. மூன்று நாட்களுக்கு யாரும் வேறொருவரைப் பார்க்கவோ அல்லது தங்கள் இடத்திலிருந்து புறப்படவோ முடியாதிருந்தது. ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்கு வெளிச்சம் இருந்தது.
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து அவனிடம், “நீங்கள் போய் உங்கள் யெகோவாவுக்கு வழிபாடு செய்யுங்கள். உங்களுடன் உங்கள் பெண்களும், பிள்ளைகளும் போகலாம். ஆனால் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்றான்.
அதற்கு மோசே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிகளையும், தகன காணிக்கைகளையும் நாம் எடுத்துச்செல்ல நீர் எங்களை அனுமதிக்கவேண்டும். எங்கள் மிருகங்களும் எங்களோடு வரவேண்டும். ஒரு மிருகத்தையாவது விட்டுச்செல்லக் கூடாது. எங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதற்கு அவைகளிலிருந்து சிலவற்றை எடுக்கவேண்டும். நாங்கள் அங்கேபோய்ச் சேருமட்டும், நாங்கள் எதைக்கொண்டு யெகோவாவை வழிபடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது” என்றான்.
யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை. பார்வோன் மோசேயிடம், “நீ என் கண்முன் நில்லாதே, போ! திரும்பவும் என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு! நீ என் முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான்.
அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே இனி ஒருபோதும் நான் உமது முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றான்.
பத்தாம் வாதை தலைமகன்கள்மேல்
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான். ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, மோசே எகிப்திலே பார்வோனின் அதிகாரிகளாலும், எகிப்திய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான்.
அப்பொழுது மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் நடு இராத்திரியளவில் எகிப்து எங்கும் கடந்துபோவேன். எகிப்தில் முதற்பேறான ஒவ்வொரு மகனும் சாவான். அரியணையில் இருக்கும் பார்வோனின் முதல் ஆண்பிள்ளைமுதல், திரிகை ஆட்டும் அடிமைப்பெண்ணின் முதல் ஆண்பிள்ளை வரையுள்ள முதல் பிறந்த எல்லா மகன்களும் சாவார்கள்; அத்துடன் மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் சாகும். எகிப்து நாடெங்கும் முன்பும் பின்பும் இனி ஒருபோதும் இருக்காத பெரிய அழுகுரல் உண்டாகும். ஆனால் இஸ்ரயேலர் மத்தியில் மனிதரையோ, மிருகங்களையோ பார்த்து ஒரு நாயாவது குரைக்கமாட்டாது.’ இதனால் யெகோவா எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் என்பதை நீ அறிந்துகொள்வாய். அப்பொழுது உம்முடைய அதிகாரிகள் எல்லோரும் என்முன் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி மோசே கடுங்கோபத்துடன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார். இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை.
பஸ்கா மற்றும் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை
யெகோவா எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இம்மாதம் உங்களுக்கு முதல் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம். நீங்கள், இம்மாதத்தின் பத்தாம்நாள் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன்தன் குடும்பத்திற்காக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமுதாயத்திற்கும் நீங்கள் சொல்லுங்கள். எந்த குடும்பமாவது ஒரு முழு ஆட்டுக்குட்டியை சாப்பிட முடியாத அளவுக்குச் சிறியதாயிருந்தால், அவர்கள் தங்களுக்கு மிக அருகிலுள்ள அண்டை வீட்டாருடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும். நீ தெரிந்தெடுக்கும் மிருகங்களோ, ஒரு வயதுடைய பழுதற்ற கடாக்களாக இருக்கவேண்டும். இவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம். அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும். அதன்பின் அவர்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை சாப்பிடும் வீட்டுக்கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூசவேண்டும். அன்று இரவு இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிடவேண்டும். இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது நீரில் சமைத்தோ சாப்பிடக்கூடாது. அதன் தலை, கால்கள், உள் உறுப்புகள் ஆகிய எல்லாவற்றையும் நெருப்பில் சுட்டே சாப்பிடவேண்டும். அவற்றில் எதையும் விடியும்வரை மீதியாக வைக்கவேண்டாம்; காலையில் ஏதும் மிஞ்சியிருந்தால் அவற்றை நெருப்பில் எரிக்கவேண்டும். இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக12:11 அவசரமாக என்பது புறப்பட ஆயத்தம் எனப்படும் சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா12:11 இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக அழிவின் தூதன் கடந்து சென்றார்..
“அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும்12:12 எகிப்திய தெய்வங்கள் பொய்யான தெய்வங்கள் என்பதை நான் சோதித்துக் காண்பிப்பேன் அல்லது நிரூபிப்பேன். நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா. இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது.
“இது நீங்கள் நினைவுகூரவேண்டிய ஒரு நாள்; தலைமுறைதோறும் யெகோவாவுக்குரிய பண்டிகையாக நீங்கள் இதைக் கொண்டாடவேண்டும்; இது ஒரு நிரந்தர நியமம். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்கு நீங்கள் சாப்பிடவேண்டும். முதலாம் நாளில் புளிப்பாக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம்.
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கொண்டாடவேண்டும். ஏனெனில், அந்நாளில்தான் உங்கள் கோத்திரப்பிரிவுகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நீங்களும், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமாக அந்நாளைக் கொண்டாடுங்கள். முதலாம் மாதம் பதினான்காம் நாள் மாலைமுதல், அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலைவரை புளிப்பில்லாத அப்பத்தை நீங்கள் சாப்பிடவேண்டும். புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழுநாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக்கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடும் எவனும், அவன் பிறநாட்டினனானாலும் சொந்த இஸ்ரயேலரானாலும் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து அகற்றப்படவேண்டும். புளிப்பூட்டப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் புளிப்பில்லாத அப்பத்தையே சாப்பிடவேண்டும்” என்றார்.
அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது. யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார்.
“உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிரந்தரமாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, இந்த வழிபாட்டைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த வழிபாடு எதைக் குறிக்கின்றது?’ என்று கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள். யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
அன்று நள்ளிரவு எகிப்திலுள்ள முதற்பிறந்த மகன்கள் எல்லாவற்றையும் யெகோவா அழித்தார்; அரியணையில் அமர்ந்திருந்த பார்வோனின் தலைப்பிள்ளை முதல், காவற்கிடங்கிலிருந்த கைதியின் தலைப்பிள்ளைவரை முதற்பேறுகள் அனைத்தையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். பார்வோனும், அவன் அதிகாரிகள் யாவரும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய ஓலம் உண்டாயிற்று. ஏனெனில் சாவு இல்லாத ஒரு வீடும் இருக்கவில்லை.
இஸ்ரயேலர் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்
இரவிலேயே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து அவர்களிடம், “எழும்புங்கள்! என் மக்களை விட்டுவிடுங்கள், உடனே போங்கள். நீங்களும், இஸ்ரயேலரும் நீங்கள் கேட்டுக்கொண்டபடியே போய் யெகோவாவை வழிபடுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான்.
இஸ்ரயேலரைத் தம் நாட்டைவிட்டு விரைவாய்ப் போகும்படி எகிப்தியரும் அவசரப்படுத்தினார்கள். “இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் இறந்துவிடுவோம்!” என்றார்கள். மக்கள் புளிப்பில்லாத பிசைந்த மாவையும், மாப்பிசையும் பாத்திரங்களையும் தங்கள் துணிகளால் சுற்றி, தங்கள் தோள்கள்மேல் சுமந்துகொண்டு போனார்கள். மோசே அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும், உடைகளையும் எகிப்தியரிடம் கேட்டு வாங்கினார்கள். யெகோவா இஸ்ரயேலருக்கு எகிப்தியரிடத்தில் தயவு கிடைக்கும்படி செய்தபடியால், அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர் கொடுத்தார்கள். இவ்விதமாக இஸ்ரயேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள். அவர்களுடன் அநேக வேறு மக்கள் கூட்டமும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன. எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும். நானூற்று முப்பதாவது வருடம் முடிவடையும் கடைசி நாளிலே, யெகோவாவின் எல்லா கோத்திரப்பிரிவுகளும் எகிப்தைவிட்டு வெளியேறின. எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்கு, அந்த இரவு யெகோவா விழித்திருந்தபடியால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறைதோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும்.
பஸ்காவின் கட்டுப்பாடுகள்
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்காவுக்கான விதிமுறைகள் இவையே:
“பிறநாட்டினன் ஒருவனும் அதைச் சாப்பிடக்கூடாது. எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின் அதை சாப்பிடலாம். தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது.
“அது ஒரு வீட்டிற்குள்ளே சாப்பிடப்பட வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக்கூடாது. எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது. இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அதைக் கொண்டாடவேண்டும்.
“யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் பிறநாட்டினன், தன் வீட்டிலுள்ள ஆண்களையெல்லாம் விருத்தசேதனம் செய்விக்க வேண்டும்; அதன்பின் அந்நாட்டு குடிமகனைப்போல், அதில் பங்குபெறலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதைச் சாப்பிடக்கூடாது. நாட்டுக் குடிமக்களுக்கும், உங்களுடன் குடியிருக்கும் பிறநாட்டினனுக்கும் ஒரே சட்டமே இருக்கவேண்டும்.”
யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் கட்டளையிட்டபடி இஸ்ரயேலர் எல்லோரும் செய்தார்கள். யெகோவா அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் கோத்திரப்பிரிவுகளின்படியே, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
தலையீற்றுக்கான அர்ப்பணம்
யெகோவா மோசேயிடம், “முதற்பேறான எல்லா ஆண்களையும் எனக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். எந்த மனிதனானாலும், மிருகமானாலும் இஸ்ரயேலருக்குள் கர்ப்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு முதற்பேறும் எனக்குரியது” என்றார்.
பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது, “நீங்கள் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியேவந்த இந்த நாளை நினைவுபடுத்திக் கொண்டாடுங்கள். ஏனெனில் யெகோவா தமது வல்லமையான கரத்தினால் அவ்விடத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்தார். புளிப்பூட்டப்பட்ட எதையும் சாப்பிடவேண்டாம். இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள். யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என வாக்குப்பண்ணிய, பாலும் தேனும் வழிந்தோடும் செழிப்பான நாடான கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய நாட்டுக்கு யெகோவா உங்களைக் கொண்டுவருவார். அப்போது இந்தப் பண்டிகையை வருடந்தோறும் இதே மாதத்தில் நீங்கள் கொண்டாடவேண்டும். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்குச் சாப்பிட்டு, ஏழாவதுநாள் யெகோவாவுக்கு பண்டிகையைக் கொண்டாடுவீர்களாக. ஏழுநாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்; உங்கள் வீட்டிலோ அல்லது நாட்டின் எல்லைக்குள்ளோ புளித்தது எதுவும் காணப்படக்கூடாது. அன்றையதினம் நீங்கள் உங்கள் மகன்களிடம், ‘நான் எகிப்திலிருந்து வந்தபோது யெகோவா எனக்குச் செய்தற்காகவே இதைச் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். யெகோவாவின் சட்டம் உங்கள் வாயில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த கொண்டாட்டம் உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும். ஏனெனில், யெகோவா தன் பலத்த கரத்தால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். ஆதலால் நீங்கள் வருடந்தோறும், குறித்த காலத்தில் இந்த நியமத்தைக் கைக்கொள்ளவேண்டும்.
“யெகோவா உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணியபடி, கானானியருடைய நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்து, அதை உங்களுக்குக் கொடுத்தபின்பு, யெகோவாவுக்கு நீங்கள் ஒவ்வொரு கர்ப்பத்தின் முதற்பிறப்புகளை கொடுக்கவேண்டும். உங்கள் கால்நடைகளில் ஆண் தலையீற்றுகளெல்லாம் யெகோவாவுக்கு உரியவை. கழுதையின் தலையீற்றுகளையெல்லாம் ஒரு செம்மறியாட்டுக் குட்டியால் மீட்டுக்கொள்ள வேண்டும்13:13 ஏனெனில் கழுதையை பலியிடுவது ஏற்றுக்கொள்ளப்படாது; மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறித்துப்போடுங்கள். உங்கள் மகன்களில் முதற்பேறானவனை மீட்டுக்கொள்ள வேண்டும்.
“இனிவரும் காலத்தில் உங்கள் மகன்கள் உங்களிடம், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்கும்போது அவர்களிடம், ‘யெகோவா தமது பலத்த கரத்தினால் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். பார்வோன் எங்களைப் போகவிடாமல் பிடிவாதமாய் மறுத்தபோது, யெகோவா எகிப்திலுள்ள மனிதருடைய ஒவ்வொரு முதற்பேறானதையும், மிருகத்தினுடைய ஒவ்வொரு தலையீற்றையும் கொன்றுபோட்டார். அதனால்தான் நாங்களும் ஒவ்வொரு கர்ப்பத்தின் தலையீற்றான ஆணையும் யெகோவாவுக்குப் பலியிட்டு, என் முதற்பேறான மகன்களை மீட்டுக்கொள்கிறோம்.’ யெகோவா தமது பலத்த கரத்தினால் எங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதற்கு, இப்பண்டிகை உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றார்.
செங்கடலைக் கடந்துசெல்லுதல்
பார்வோன் இஸ்ரயேலரைப் போகவிட்டபின்பு, பெலிஸ்தியரின் நாட்டின் வழி குறுகியதாக இருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்திற்குத் திரும்பிவிடுவார்கள்” என இறைவன் சொன்னார். அதனால் இறைவன் மக்களை பாலைவனப் பாதைவழியே சுற்றி, செங்கடலை நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் ஆயுதம் அணிந்தவர்களாய், எகிப்திலிருந்து புறப்பட்டு யுத்தத்திற்கு ஆயத்தமாய் சென்றார்கள்.
மோசே யோசேப்பின் எலும்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். ஏனெனில், யோசேப்பு இஸ்ரயேலின் மகன்களிடம் இவ்வாறு செய்யும்படி சத்தியம் வாங்கியிருந்தான். அவன் அவர்களிடம், “இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவிக்கு வருவார்; அப்பொழுது நீங்கள் எனது எலும்புகளை இந்த இடத்திலிருந்து உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும்”13:19 [ஆதி. 50:25] என்று சொல்லியிருந்தான்.
அவர்கள் சுக்கோத்திலிருந்து வெளியேறிய பின்பு, பாலைவனத்தின் அருகிலுள்ள ஏத்தாமிலே முகாமிட்டிருந்தார்கள். பகலில் அவர்கள் போகும் வழியாய் அவர்களுக்கு வழிகாட்ட, ஒரு மேகத்தூணாய் அவர்களுக்குமுன் யெகோவா சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக, நெருப்புத்தூணாய் அவர்களுக்குமுன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத்தூணும் மக்களுக்குமுன் தன் இடத்தைவிட்டு விலகவில்லை.
பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீங்கள் திரும்பிவந்து மிக்தோலுக்கும், கடலுக்கும் இடையேயுள்ள பிகாஈரோத் அருகே முகாமிடுங்கள் என்று இஸ்ரயேலருக்குச் சொல். அவர்கள் கடலருகே பாகால் செபோனுக்கு நேரெதிராக முகாமிடவேண்டும். ‘இஸ்ரயேலர் மனங்குழம்பி நாட்டைச் சுற்றி அலைந்து திரிகிறார்கள். பாலைவனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது’ என்று பார்வோன் நினைப்பான். எனவே, நான் பார்வோனின் மனதைக் கடினப்படுத்துவேன். அவன் உங்களைப் பின்தொடர்ந்து வருவான். நானோ பார்வோனாலும், அவனுடைய படைகள் எல்லாவற்றினாலும் மகிமையடைவேன். அப்பொழுது நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார். இஸ்ரயேலர் அவ்வாறே செய்தார்கள்.
இஸ்ரயேலர் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்திய அரசன் பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவனும் அவனுடைய அதிகாரிகளும் இஸ்ரயேலரைக் குறித்து தங்கள் மனங்களை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துவிட்டோம்? இஸ்ரயேலரை போகவிட்டு, அவர்களுடைய வேலையை இழந்துவிட்டோமே!” என்றார்கள். எனவே பார்வோன், தன் தேரை ஆயத்தப்படுத்தி, தன் இராணுவவீரரையும் தன்னுடன் கூட்டிச்சென்றான். அவன் எகிப்திலுள்ள மற்ற எல்லா தேர்களோடு, மிகச்சிறந்த அறுநூறு தேர்களையும் மற்றும் அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு போனான். யெகோவா எகிப்திய அரசன் பார்வோனின் மனதைக் கடினப்படுத்தினபடியால், அவன் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றான். ஆனால் இஸ்ரயேலரோ துணிவுடன் அணிவகுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். எகிப்தியர் பார்வோனின் குதிரைகளோடும், தேர்களோடும், குதிரைவீரர்களோடும், இராணுவப்படைகளோடும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து சென்றனர். பாகால் செபோனுக்கு எதிரே, பிகாஈரோத்துக்கு அருகே கடல் பக்கத்தில் இஸ்ரயேலர் முகாமிட்டிருந்தபோது, அவர்களை எகிப்தியர் பின்தொடர்ந்து வந்துசேர்ந்தனர்.
பார்வோன் நெருங்கி வந்தபொழுது இஸ்ரயேலர் நோக்கிப்பார்த்து, தங்களுக்குப்பின் எகிப்தியர் அணிவகுத்து வருவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் பயந்து, யெகோவாவை நோக்கிக் கதறினார்கள். அவர்கள் மோசேயிடம், “எகிப்தில் பிரேதக்குழிகள் இல்லையென்று எங்களைச் சாகும்படி பாலைவனத்திற்குக் கொண்டுவந்தீரோ? எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்து எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்? ‘எங்களைச் சும்மாவிடும்; நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்வோம்’ என்று, நாங்கள் எகிப்திலிருக்கும்போதே உமக்குச் சொல்லவில்லையா? பாலைவனத்தில் நாங்கள் சாகிறதைவிட, எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருந்திருக்குமே!” என்றார்கள்.
மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; யெகோவா இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் விடுதலையைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ என்னிடம் முறையிட்டு அழுவது ஏன்? இஸ்ரயேலரை முன்னேறிப்போகச்சொல். நீ உன் கோலை உயர்த்தி, தண்ணீரைப் பிரிக்கும்படி கடலின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்து போகக்கூடியதாய் இருக்கும். நான் எகிப்தியரின் உள்ளத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடருவார்கள். நானோ பார்வோனாலும், அவனுடைய எல்லா படைகள், தேர்கள், குதிரைவீரர் முதலியவற்றாலும் மகிமையடைவேன். இப்படியாக நான் பார்வோனாலும், அவன் தேர்கள், குதிரைகளாலும் மகிமையடையும்போது நானே யெகோவா என்பதை எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
அப்பொழுது இஸ்ரயேலரின் படைக்கு முன்னாகச் சென்றுகொண்டிருந்த இறைவனின் தூதனானவர், அவ்விடத்தைவிட்டு அவர்களுக்குப் பின்னாகப் போனார். அவர்களுக்கு முன்பாக இருந்த மேகத்தூணும் விலகி, அவர்களுக்குப் பின்னாக வந்துநின்றது. அது எகிப்திய படைகளுக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் வந்துநின்றது. அந்த மேகம் இரவு முழுவதும் ஒரு பக்கத்துக்கு இருளையும், மற்றொரு பக்கத்துக்கு வெளிச்சத்தையும் கொடுத்தது. இதனால் இஸ்ரயேலரோ, எகிப்தியரோ இரவு முழுவதும் ஒருவரையொருவர் நெருங்கவில்லை.
பின்பு மோசே, கடலின்மேல் தன் கையை நீட்டினான். யெகோவா இரவு முழுவதும் பலத்த கீழ்காற்றினால் கடல்நீரைப் பின்வாங்கச்செய்து, அதை வறண்ட நிலமாக மாற்றினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. இஸ்ரயேலர் கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்து சென்றார்கள். அவர்களுடைய வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல எழுந்து நின்றது.
எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனின் எல்லா குதிரைகளும், தேர்களும், குதிரைவீரரும், இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலுக்குள் வந்தார்கள். யெகோவா விடியற்காலையில் நெருப்புத்தூணிலும், மேகத்தூணிலுமிருந்து எகிப்திய படையைப் பார்த்து அவர்களைக் கலங்கப்பண்ணினார். யெகோவா அவர்களுடைய தேர்களின் சக்கரங்களைக் கழறப்பண்ணியதால், தேரை ஓட்டுவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போராடுகிறார்” என்றார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “கடல் தண்ணீர் எகிப்தியர்மேலும் அவர்களுடைய தேர்கள், குதிரைவீரர்மேலும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார். அப்படியே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினான். அதிகாலையில் கடல் தண்ணீர் திரும்பி, அதன் இடத்திற்கு வந்தது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார். கடல் தண்ணீர் திரும்பிவந்து, தேர்களையும், குதிரைவீரர்களையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் படை முழுவதையும் கடலுக்குள் மூடிவிட்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
இஸ்ரயேலரோ கடலின் நடுவேயுள்ள காய்ந்த நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள். அவர்களுடைய வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் தண்ணீர் மதில்போல நின்றது. இவ்விதமாக யெகோவா அன்றையதினம் எகிப்தியரின் கைகளிலிருந்து இஸ்ரயேலரைக் காப்பாற்றினார். கடற்கரையிலே எகிப்தியர் இறந்துகிடப்பதை இஸ்ரயேலர் கண்டார்கள். எகிப்தியருக்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட யெகோவாவின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும், அவருடைய அடியானாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
மோசே மற்றும் மிரியாமின் பாடல்
அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது:
“நான் யெகோவாவைப் பாடுவேன்,
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும், அதை ஓட்டியவனையும்
அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.
“யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார்,
அவரே என் இரட்சிப்புமானார்.
அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன்.
அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
யெகோவா யுத்தத்தில் வீரர்;
யெகோவா என்பதே அவரது பெயர்.
அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும்
கடலுக்குள் தள்ளிவிட்டார்.
பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள்
செங்கடலில் அழிந்தார்கள்.
ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது;
ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.
யெகோவாவே, உமது வலதுகரம்
வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது.
யெகோவாவே, உமது வலதுகரமே
எதிரியை நொறுக்கியது.
“உமது மாட்சிமையின் மகத்துவத்தினால்
உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர்.
உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்;
அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.
உமது நாசியின் சுவாசத்தினால்
தண்ணீர் குவிந்தது.
பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன;
ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.
பகைவன் பெருமையாக,
‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன்.
நான் கொள்ளையைப் பங்கிடுவேன்;
அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.
என் வாளை உருவுவேன்,
என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.
ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர்,
கடல் அவர்களை மூடியது.
அவர்கள் ஈயத்தைப் போல்
பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
யெகோவாவே, தெய்வங்களுக்குள்
உம்மைப்போல் யார் உண்டு?
பரிசுத்தத்தில் மாட்சிமையும்,
மகிமையில் வியக்கத்தக்கவரும்,
அதிசயங்களையும் செய்கிற
உம்மைப்போல் யார் உண்டு?
“உமது வலது கரத்தை நீட்டினீர்,
பூமி அவர்களை விழுங்கிற்று.
நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர்.
நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு,
உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.
மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்;
பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள்,
மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும்,
கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;
பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும்.
யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை,
நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை,
உமது கரத்தின் வல்லமையால்
அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில்
நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்;
அந்த இடத்தையே நீர் உமது தங்குமிடமாக்கினீர்,
யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”
பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள். அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது:
“யெகோவாவைப் பாடுங்கள்,
ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும் அதை ஓட்டியவனையும்
கடலிலே வீசியெறிந்தார்.”
ஏலீம் மற்றும் மாராவின் கசப்பான தண்ணீர்
அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா15:23 மாரா என்றால் கசப்பு என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது. எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது.
பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார். அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார்.
அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
மன்னாவும் காடையும்
அதன் பின்னர் முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் மாதம் பதினைந்தாம்நாள் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். அப்பாலைவனத்திலே இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் யெகோவாவின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்களோ அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் சாப்பிட்டோம்; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியாய்ச் சாகும்படி இந்தப் பாலைவனத்திற்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். ஆறாம்நாளிலோ16:5 ஆறாம்நாளிலோ ஒவ்வொரு வாரத்தின் ஆறாவது நாள்., மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார்.
ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள். மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள்.
அதன்பின் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமும், ‘எல்லோரும் யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றான்.
ஆரோன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, யெகோவாவின் மகிமை மேகத்திலே தோன்றியது.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர்16:16 அதாவது, சுமார் 1.4 கிலோகிராம் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான்.
இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள்.
அப்பொழுது மோசே அவர்களிடம், “ஒருவரும் மறுநாள் காலைவரை அதில் எதையும் வைத்திருக்கக்கூடாது” என்று சொன்னான்.
ஆனாலும் சிலர் மோசே சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் காலைவரை அதிலொரு பகுதியை வைத்திருந்தார்கள். அது புழுப்பிடித்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மீது கோபங்கொண்டான்.
காலைதோறும் ஒவ்வொருவனும் தனக்குத் தேவையான அளவைச் சேர்த்தான். வெயில் ஏறினபோது அது உருகிப்போனது. ஆறாம்நாளில் ஒவ்வொருவரும் ஒருவனுக்கு இரண்டு ஓமர் வீதம் இருமடங்கு உணவைச் சேர்த்தார்கள். சமுதாயத்தின் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக யெகோவாவுக்குப் பரிசுத்த ஓய்வுநாளாய் இருக்கவேண்டும். எனவே, இன்றே சுடவேண்டியதை சுட்டு, அவிக்கவேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டபின் மீதியானதை காலைவரை வையுங்கள்” என்றான்.
மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை. அப்பொழுது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைக்கே அதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இன்றைய நாள் யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாய் இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காணமாட்டீர்கள். நீங்கள் ஆறு நாட்களும் அதைச் சேர்க்கவேண்டும். ஓய்வுநாளாகிய ஏழாம் நாளிலே அது கிடைக்காது” என்றான்.
ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்திற்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்? யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால்தான் ஆறாம்நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகையால் ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக்கூடாது” என்றார். எனவே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
இஸ்ரயேல் மக்கள் அந்த அப்பத்தை மன்னா16:31 மன்னா என்பது எபிரெயத்தில் இது என்ன? என்று அர்த்தம். வச [15] பார்க்கவும். என்று அழைத்தார்கள். அது கொத்தமல்லி விதையைப்போல வெள்ளையாகவும், தேனில் தயாரித்த பணியாரத்தின் சுவையுள்ளதாகவும் இருந்தது. அப்பொழுது மோசே இஸ்ரயேல் மக்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, நான் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக்கொடுத்த அப்பத்தை, வரப்போகும் உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுவதற்காக, அந்த மன்னாவில் ஒரு ஓமர் அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்” என்றான்.
மேலும் மோசே ஆரோனிடம், “நீ ஒரு ஜாடியை எடுத்து, ஒரு ஓமர் அளவு மன்னாவை அதற்குள் போடு. பின், வரப்போகும் தலைமுறையினருக்காக யெகோவாவுக்கு முன்பாக அதை வை” என்றான்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் வரப்போகும் காலங்களுக்காக மன்னாவை எடுத்து சாட்சிப்பெட்டியின்16:34 சாட்சிப்பெட்டியின் என்பது உடன்படிக்கைப்பெட்டி என்பதாகும். இது [25:10-12] இல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முன் வைத்தான். இஸ்ரயேலர் தாங்கள் குடியேறவேண்டிய நாட்டிற்கு வரும்வரைக்கும் நாற்பது வருடமாக மன்னாவையே சாப்பிட்டார்கள். கானானின் எல்லைக்கு வரும்வரை மன்னாவையே சாப்பிட்டார்கள்.
ஒரு ஓமர் என்பது எப்பா அளவின் பத்தில் ஒரு பங்கு ஆகும்.
கற்பாறையிலிருந்து தண்ணீர்
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, யெகோவாவின் கட்டளைப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள்.
அப்பொழுது மோசே அவர்களிடம், “என்னோடு ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள்? யெகோவாவை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றான்.
ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததினால் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அவர்கள் அவனிடம், “எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வளர்ப்பு மிருகங்களையும் தாகத்தினால் சாகும்படி, ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள்.
அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்னைக் கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலின் சபைத்தலைவர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ. நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் அருகே உனக்கு முன்பாக அங்கே நிற்பேன். நீ கற்பாறையை அடி. அப்பொழுது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளிவரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் முன்னிலையில் செய்தான். இஸ்ரயேலர்கள், “யெகோவா எங்களுடன் இருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டு யெகோவாவைப் சோதித்தபடியால் அந்த இடத்திற்கு மாசா17:7 மாசா என்றால் சோதனை என்று அர்த்தம். என்றும், அவர்கள் வாதாடினபடியால் மேரிபா17:7 மேரிபா என்றால் வாதாடுவது அல்லது புகார் செய்வது என்று அர்த்தம். என்றும் மோசே பெயரிட்டான்.
அமலேக்கியரின் தோல்வி
அதன்பின் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள். அப்பொழுது மோசே யோசுவாவிடம்17:9 யோசுவா என்பவர் மோசேயின் கட்டளையின்கீழ் இராணுவத் தலைவராக இருந்தார்., “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு சண்டை செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றான்.
மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள். மோசே தன் கைகளை உயர்த்திக்கொண்டிருக்கும்வரை, இஸ்ரயேலர் வென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைக் கீழே விடும்பொழுதோ, அமலேக்கியர் வெல்லத்தொடங்கினார்கள். மோசேயின் கைகள் தளர்ந்துபோயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவனுக்குக் கீழே வைத்தார்கள். அவன் அதன்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவனுடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவன் கைகள் உறுதியாயிருந்தன. எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை மேற்கொண்டான்.
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்வதற்காக இதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழிருந்து அமலேக்கியரைப் பற்றிய நினைவையே இல்லாது போகும்படி அழித்துவிடுவேன் என்று சொல்” என்றார்.
மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி17:15 வெற்றிக்கொடி அல்லது யெகோவா நிசி எனப்படும். என்று பெயரிட்டான். பின்பு மோசே, “யெகோவாவினுடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் யெகோவா அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றான்.
எத்திரோ மோசேயை சந்தித்தல்
இறைவன் மோசேக்கும் தம் மக்களான இஸ்ரயேலருக்கும் செய்தவற்றை மீதியானின் ஆசாரியனான மோசேயின் மாமன் எத்திரோ கேள்விப்பட்டான். அத்துடன் எகிப்திலிருந்து யெகோவா அவர்களை எவ்வாறு வெளியே கொண்டுவந்தார் என்பதையும் கேள்விப்பட்டான்.
மோசேயின் மாமன் எத்திரோ, மோசேயால் அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி சிப்போராளையும், அவனுடைய இரு மகன்களையும் ஏற்றுக்கொண்டான். மோசே, நான் அயல்நாட்டில் ஒரு அயல்நாட்டினர் என்று சொல்லி ஒரு மகனுக்கு கெர்சோம்18:3 கெர்சோம் என்றால் அயல்நாட்டினர் என்று அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான். என் முற்பிதாக்களின் இறைவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் வாளுக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசர்18:4 எலியேசர் என்றால் என் இறைவன் என் துணை என அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான்.
இப்பொழுது மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மகன்களையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு பாலைவனத்துக்கு வந்தான். மோசே இறைவனின் மலையருகே முகாமிட்டிருந்தான். “உம்முடைய மாமனாகிய எத்திரோவாகிய நான் உம்முடைய மனைவியுடனும், அவளுடைய இரு மகன்களுடனும் உம்மிடத்திற்கு வருகிறேன்” என்று எத்திரோ மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
எனவே மோசே தன் மாமனைச் சந்திப்பதற்காக போய், அவனை வணங்கி முத்தமிட்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தி, பின்பு மோசேயின் கூடாரத்திற்குள் போனார்கள். அப்பொழுது யெகோவா இஸ்ரயேலருக்காக பார்வோனுக்கும், எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும் மோசே தன் மாமனுக்குச் சொன்னான். வழியிலே தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், யெகோவா எப்படித் தங்களைக் காப்பாற்றினார் என்பதையும் சொன்னான்.
இஸ்ரயேலரை எகிப்தியரின் கைகளிலிருந்து தப்புவித்து, அவர்களுக்கு யெகோவா செய்த நன்மைகள் எல்லாவற்றையும் கேள்விப்பட்ட எத்திரோ மகிழ்ச்சியடைந்தான். அப்பொழுது எத்திரோ, “யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் உன்னையும் இஸ்ரயேலரையும் எகிப்தியரின் கைகளிலிருந்தும், பார்வோனின் கைகளிலிருந்தும் தப்புவித்தாரே. ‘எல்லா தெய்வங்களையும்விட யெகோவாவே பெரியவர்’ என்பதை நான் இப்பொழுது அறிந்துகொண்டேன். ஏனெனில், இஸ்ரயேலரை இறுமாப்பாய் நடத்தியவர்களுக்கு அவர் இப்படிச் செய்தாரே” என்றான். மோசேயின் மாமன் எத்திரோ இறைவனுக்குத் தகன காணிக்கையையும் மற்றப் பலிகளையும் கொண்டுவந்தான். அப்பொழுது ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் இறைவனுக்கு முன்பாக மோசேயின் மாமனுடன் அப்பம் சாப்பிடும்படி வந்தார்கள்.
மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் உட்கார்ந்தான். காலையிலிருந்து, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள். மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் காரியம் என்ன? மக்கள் காலைமுதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்க நீ ஏன் தனியாக நீதிபதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் தங்கள் பிரச்சனைக்கு இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான்.
அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல; இப்படிச் செய்வதினால் நீயும், உன்னிடத்தில்வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் கடினமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது. இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும். நீ அவர்களுக்கு இறைவனின் விதிமுறைகளையும், சட்டங்களையும் போதிக்கவேண்டும். அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்டவேண்டும். ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும். இறைவன் கட்டளையிடுகிறவிதமாக இதை நீ செய்தால், அந்த வேலைப்பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான்.
மோசேயும் தன் மாமனுக்கு செவிகொடுத்து, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தான். மோசே இஸ்ரயேலரின் திறமையுள்ள மனிதரைத் தெரிந்து, அவர்களை மக்களுக்குத் தலைவர்களாகவும் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் அதிகாரிகளாகவும் நியமித்தான். எல்லா வேளைகளிலும் அவர்கள் மக்களுக்கு நீதிபதிகளாகப் பணிசெய்தார்கள். கஷ்டமான வழக்குகளை அவர்கள் மோசேயிடம் கொண்டுவந்தார்கள். இலகுவான வழக்குகளை தாங்களே தீர்த்துக் கொண்டார்கள்.
பின் மோசே தன் மாமன் எத்திரோவை வழியனுப்பினான், எத்திரோ தன் நாட்டுக்குத் திரும்பிப்போனான்.
சீனாய் மலை
இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வெளியேறிய மூன்றாம் மாதம் முடிந்த அதே நாளில், அவர்கள் சீனாய் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். ரெவிதீமைவிட்டுப் புறப்பட்டபின் அவர்கள் சீனாய் பாலைவனத்துக்குள் வந்தார்கள். இஸ்ரயேலர் மலைக்கு முன்பாக உள்ள அந்த பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
அப்பொழுது மோசே மேலே ஏறி இறைவனிடம் போனான். மலையிலிருந்து யெகோவா அவனைக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யாக்கோபின் குடும்பத்தாருக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் நீ சொல்லவேண்டியது இதுவே: ‘நான் எகிப்திற்குச் செய்தவற்றை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். கழுகு தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்மேல் சுமந்து வருவதுபோல், நானும் உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள். ஆகையால் இப்பொழுது நீங்கள் எனக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, என் உடன்படிக்கையை கைக்கொண்டால், எல்லா நாட்டினருக்குள்ளும் நீங்களே எனது அரும்பெரும் செல்வமாய் இருப்பீர்கள். பூமி முழுவதும் என்னுடையதாயிருந்தாலும் கூட, நீங்களோ எனக்கான ஒரு ஆசாரியர்களின் அரசாகவும், ஒரு பரிசுத்த ஜனமாகவும் இருப்பீர்கள்.’ இஸ்ரயேலரோடு நீ பேசவேண்டிய வார்த்தைகள் இவையே” என்றார்.
எனவே மோசே திரும்பிப்போய் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களை வரவழைத்தான். யெகோவா அவர்களுக்குச் சொல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்ட எல்லா வார்த்தைகளையும் அவர்கள் முன்னிலையில் எடுத்துச்சொன்னான். அப்பொழுது அதைக்கேட்ட மக்களெல்லோரும் ஒருமித்து, “யெகோவா கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று பதிலளித்தார்கள். மோசே யெகோவாவினிடத்திற்குத் திரும்பிப்போய் அவர்களுடைய பதிலை அவருக்கு அறிவித்தான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்டு, அவர்கள் எப்போதும் உன்மேல் நம்பிக்கை வைக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வரப்போகிறேன்” என்றார். மக்கள் சொன்னவற்றை மோசே யெகோவாவுக்குச் சொன்னான்.
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம்போய், இன்றும் நாளையும் அவர்களை பரிசுத்தப்படுத்து. அவர்கள் தங்கள் உடைகளைக் கழுவும்படியும் செய்யவேண்டும். அவர்கள் மூன்றாம் நாளில் ஆயத்தமாயிருக்கும்படி செய்யவேண்டும். ஏனெனில், அன்று மக்கள் அனைவரின் கண்கள் முன்பாக யெகோவா சீனாய் மலையின்மேல் இறங்குவார். மலையை அணுகாதவாறு அதைச் சுற்றி ஒரு எல்லையைப் போட்டு, அவர்களிடம், ‘நீங்கள் மலைக்கு ஏறிப்போகாமலும், அதன் அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். அப்படி மீறுகிறவனை கைகளால் தாக்காமல் கல்லால் எறிந்தோ, அம்புகளால் எய்தோ அவனைக் கொல்லவேண்டும். இதை மீறுகிற மிருகத்தையோ, மனிதனையோ உயிரோடிருக்க அனுமதிக்கக் கூடாது’ என்று சொல். செம்மறியாட்டுக் கடாவின் கொம்பு வாத்தியத்தால் நீண்ட சத்தம் எழுப்பப்படும்போது மாத்திரமே, அவர்கள் மலைக்குப் போகலாம்” என்றார்.
மோசே மலையிலிருந்து இறங்கி இஸ்ரயேல் மக்களிடம் வந்து, அவர்களை பரிசுத்தப்படுத்தினான். அவர்களும் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் மோசே மக்களிடம், “மூன்றாம் நாளுக்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பாலுறவுகளிலிருந்து விலகியிருங்கள்” என்றான்.
மூன்றாம் நாள் காலையில் இடிமுழக்கமும், மின்னலும் உண்டாகி, மலையைக் கார்மேகம் மூடியது. பலமாய் எக்காள சத்தம் தொனித்தது. முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். அப்பொழுது மோசே இறைவனைச் சந்திக்கும்படி, மக்களை முகாமுக்கு வெளியே கொண்டுவந்தான். அவர்கள் மலையடிவாரத்தில் நின்றார்கள். யெகோவா சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கியபடியால், மலை முழுவதும் புகையால் மூடப்பட்டிருந்தது. சூளையிலிருந்து புகை எழும்பியதுபோல் அப்புகை எழும்பிற்று. மலை19:18 எபிரெய மற்றும் எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் மலை என்பது மக்கள் எல்லோரும் அதிர்ந்தனர் என்றுள்ளது முழுவதும் பலமாய் அதிர்ந்தது. எக்காள சத்தம் மேன்மேலும் பலமாய்த் தொனித்தது. அப்போது மோசே பேசினான். இறைவனின் குரல் அவனுக்குப் பதிலளித்தது.
யெகோவா சீனாய் மலை உச்சியில் இறங்கி, மோசேயை அந்த மலை உச்சிக்கு வரும்படி அழைத்தார். அப்படியே மோசே மேலே ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “யெகோவாவைப் பார்க்கும்படி எல்லையைத் தாண்டி மக்கள் வந்து, அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கு, நீ கீழே இறங்கிப்போய் அவர்களை எச்சரிக்கை செய்யவேண்டும். யெகோவாவுக்கு அருகே வரும் ஆசாரியரும் தங்களை பரிசுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் யெகோவா அவர்களையும் அழித்துவிடுவார்” என்றார்.
அப்பொழுது மோசே யெகோவாவிடம், “மக்களால் சீனாய் மலைக்கு ஏறி வரமுடியாது. ஏனெனில் மலையைச் சுற்றி எல்லை போட்டு அதைப் பரிசுத்தப்படுத்தி பிரித்து வைக்கவேண்டும் என்று நீரே எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறீர்” என்றான்.
அதற்கு யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நீ இறங்கிப்போய் ஆரோனை அழைத்துக்கொண்டு மேலே ஏறி வா. ஆனால் ஆசாரியரும், மக்களும் பலவந்தமாய் எல்லையைக் கடந்து யெகோவாவிடம் மேலே வரக்கூடாது. வந்தால் யெகோவா அவர்களை அழித்துவிடுவார்” என்றார்.
அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம்போய் யெகோவா கட்டளையிட்டவைகளைச் சொன்னான்.
பத்துக் கட்டளைகள்
இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்:
“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
“நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே.
நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன்.
உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள். ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும். ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது. ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.
கொலைசெய்ய வேண்டாம்.
விபசாரம் செய்யவேண்டாம்.
களவு செய்யவேண்டாம்.
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.”
மக்கள் இடிமுழக்கத்தையும், மின்னலையும் கண்டு, எக்காள சத்தத்தையும் கேட்டு, மலை புகையால் சூழப்பட்டதைக் கண்டபோது பயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தூரத்திலே நின்று, மோசேயிடம், “நீரே எங்களுடன் பேசும்; நாங்கள் கேட்போம். இறைவனை எங்களுடன் பேச விடவேண்டாம். இல்லையெனில் நாங்கள் சாவோம்” என்றார்கள்.
அப்பொழுது மோசே மக்களிடம், “பயப்படவேண்டாம். பாவம் செய்வதிலிருந்து உங்களை விலக்கிக் காக்கும்படி, இறைவனைப்பற்றிய பயம் உங்களோடிருக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் உங்களைப் சோதிக்க வந்திருக்கிறார்” என்றான்.
இறைவன் இருந்த காரிருளை நோக்கி மோசே போகையில், மக்கள் தூரத்திலே நின்றார்கள்.
விக்கிரகங்களும் பலிபீடங்களும்
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது இதுவே: ‘நான் வானத்திலிருந்து உங்களோடு பேசியதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள். ஆகவே என்னோடு சேர்த்து வழிபடும்படி வேறொரு தெய்வத்தையும் செய்யவேண்டாம். வெள்ளியினால் தெய்வங்களையும், தங்கத்தினால் தெய்வங்களையும் உங்களுக்காக செய்யவேண்டாம்.
“ ‘எனக்காக மண்ணினாலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் எனக்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், மாடுகளையும் தகன காணிக்கையாகவும், சமாதான காணிக்கையாகவும்20:24 சமாதான காணிக்கையாகவும் அல்லது ஐக்கிய காணிக்கை. இதின் நோக்கம் வேறொருவருடன் சமாதானம் அல்லது கூட்டுறவை மீட்டெடுப்பதாகும். பலி செலுத்துங்கள். எங்கெல்லாம் என் பெயரை கனமடையும்படி நான் செய்கிறேனோ, அங்கெல்லாம் நான் உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். எனக்குக் கல்லினால் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டுமானால், அதை வெட்டப்பட்ட கற்களினால் கட்டவேண்டாம். ஏனெனில் அதன்மேல் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதைக் கறைப்படுத்துவீர்கள். உங்கள் நிர்வாணம் காணப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்திற்கு படிகளில் ஏறிப்போகவேண்டாம்’ என்றார்.
“நீ அவர்களுக்கு முன்பாக வைக்கவேண்டிய சட்டங்கள் இவையே:
எபிரெய அடிமைகள்
“ஒரு எபிரெய அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கினால், அவன் ஆறு வருடங்கள் மட்டுமே உங்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஏழாம் வருடத்திலோ, எந்தவித பணத்தையும் கொடுக்காமல் அவன் விடுதலையாகிப் போகவேண்டும். அவன் தனிமையாய் வந்திருந்தால், தனிமையாகவே விடுதலையாகிப் போகவேண்டும். அவன் வருகிறபோது அவனுக்கு ஒரு மனைவியிருந்தால், அவளும் அவனோடுகூடப் போகவேண்டும். ஒரு எஜமான் தனது அடிமைக்கு ஒரு பெண்ணை மனைவியாகக் கொடுத்து, அவள் அவனுக்கு மகன்களையும் மகள்களையும் பெற்றிருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கே சொந்தம். அந்த மனிதன் மட்டுமே விடுதலையாகிப் போகவேண்டும்.
“ஆனால் அந்த அடிமையோ, ‘நான் என் எஜமானையும் என் மனைவியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். அதனால் விடுதலையாகிப்போக நான் விரும்பவில்லை’ என்று அறிவித்தால், அவனுடைய எஜமான் அவனை நீதிபதிகளின் முன்பாக கொண்டுபோக வேண்டும். அவன் இவனை கதவின் அருகேயோ அல்லது கதவு நிலையின் அருகேயோ கொண்டுபோய் ஒரு குத்தூசியினால் அவன் காதைத் துளையிடவேண்டும். அதன்பின் அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
“ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஆண் அடிமைகள் போவதுபோல் அவள் போகக்கூடாது. எஜமான் அவளை தனக்காக தெரிந்தெடுத்திருந்து, அவள் அவனைப் பிரியப்படுத்தாதவளாய்க் காணப்பட்டால், அவள் மீட்கப்பட அவன் அனுமதிக்கவேண்டும். அவளை பிறநாட்டினனுக்கு விற்பதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் அவன் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளான். அவன் அவளைத் தன் மகனுக்குத் தெரிந்தெடுத்திருந்தால், அவளுக்கு ஒரு மகளுக்குரிய உரிமைகளைக் கொடுக்கவேண்டும். எஜமான் இன்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால், முதல் பெண்ணுக்கும் உரிய உடை, உணவு, திருமண உரிமைகள் ஆகியவற்றைக் கொடுக்காமல் விடக்கூடாது. அம்மூன்றையும் எஜமான் அவளுக்குக் கொடுக்காவிட்டால், அவள் அவனுக்குப் பணம் ஒன்றும் கொடுக்காமல் விடுதலையாகிப்போகலாம்.
காயங்களுக்கான விதிமுறைகள்
“ஒரு மனிதனை அடித்துக் கொலை செய்கிறவன் நிச்சயமாக கொலைசெய்யப்பட வேண்டும். ஆனாலும், அவன் அதைத் திட்டமிட்டுச் செய்யாமல், அது நடைபெற இறைவன் இடங்கொடுத்திருந்தால், நான் நியமிக்கப்போகிற ஒரு இடத்திற்கு அவன் ஓடிப்போய் தப்பித்துக்கொள்ளவேண்டும். ஒருவன் சதிசெய்து இன்னொருவனைக் கொலை செய்தால், அவன் என் பலிபீடத்திலிருந்தாலும் அவனைக் கொண்டுபோய் கொலைசெய்யவேண்டும்.
“தன் தகப்பனையோ தாயையோ தாக்குகிறவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
“ஒருவன் இன்னொருவனைக் கடத்திச்சென்று அவனை விற்றாலோ அல்லது அவனைத் தன்னுடன் வைத்திருந்ததாலோ, கடத்திச்சென்றவன் பிடிக்கப்படும்பொழுது கொல்லப்படவேண்டும்.
“தன் தகப்பனையோ, தன் தாயையோ சபிப்பவன் கொல்லப்படவேண்டும்.
“மனிதர் வாக்குவாதம் செய்து, ஒருவன் மற்றவனைக் கல்லாலோ அல்லது தன் கருவியினாலோ அடித்ததினால் அவன் சாகாமல் படுக்கையாகவே இருந்து, பின்பு எழுந்திருந்து ஒரு கோலை ஊன்றியாவது நடமாடமுடியுமானால், அவனை அடித்தவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான். ஆனாலும் அவன், காயப்பட்டவனுக்கு வேலைசெய்ய முடியாத காலத்திற்குரிய இழந்துபோன கூலியைச் செலுத்தவேண்டும். அவன் முற்றிலும் குணப்படும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
“ஒரு மனிதன் தன் ஆண் அடிமையை அல்லது பெண் அடிமையை கோலினால் அடித்து, அதனால் அந்த அடிமை இறந்தால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அடிபட்ட அடிமை ஓரிரு நாட்களில் எழுந்திருந்தால், எஜமான் தண்டிக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அடிமை எஜமானின் உடைமை.
“மனிதர் சண்டையிடுகிறபொழுது கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததினால், பெரியகாயமேதுமில்லாமல் அவளுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டால், அடித்தவனிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். அவளுடைய கணவன் கேட்கும் பணத்தைக் கருத்திற்கொண்டு, நீதிமன்றம் அனுமதிப்பதை அபராதமாகச் செலுத்தவேண்டும். அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குப் பதில் சூடும், காயத்துக்குப்பதில் காயமும், தழும்புக்குப்பதில் தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.
“ஒரு மனிதன் தன் ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ கண்ணில் அடித்து அழித்துப்போட்டால், அக்கண்ணின் இழப்பை ஈடுசெய்வதற்கு அவர்களை அவன் விடுதலை செய்யவேண்டும். ஆண் அடிமையின் பல்லையோ அல்லது பெண் அடிமையின் பல்லையோ அவன் அடித்து உடைத்தால், பல்லுக்கு இழப்பீடாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
“ஒரு மனிதனையோ அல்லது ஒரு பெண்ணையோ, ஒரு எருது தன் கொம்பினால் குத்திக்கொன்றால், அந்த எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். அதன் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. எருதின் உரிமையாளன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான். ஆனாலும் அந்த எருது வழக்கமாக முட்டுகிறதாயிருந்து, அவனுக்கு அதைக்குறித்து எச்சரித்திருந்தும், அவன் அதைக் கட்டிவைக்காததினால் அது ஒரு மனிதனையோ, பெண்ணையோ முட்டிக்கொன்றால், எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். எருதின் உரிமையாளனும் கொல்லப்படவேண்டும். ஆனாலும் அபராதம் கொடுக்கும்படி அவன் கேட்கப்பட்டால், கேட்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தித் தன் உயிரை மீட்டுக்கொள்ளலாம். ஒருவனுடைய மகனையோ, மகளையோ எருது குத்திக்கொன்றால் அதற்குரிய சட்டமும் இதுவே: அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ குத்தினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு21:32 அதாவது, சுமார் 345 கிராம் வெள்ளி முப்பது சேக்கல் வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்.
“ஒரு மனிதன் ஒரு குழியைத் திறந்துவைத்ததாலோ அல்லது ஒரு குழியைவெட்டி அதை மூடுவதற்கு தவறியதாலோ, ஒரு எருது அல்லது கழுதை அதற்குள் விழுந்தால், குழிக்குரியவன் செத்தப்போன மிருகத்துக்கு இழப்பீட்டை, அந்த மிருகத்தின் உரிமையாளனுக்கு கொடுக்கவேண்டும். செத்தப்போன மிருகமோ குழிக்குரியவனுடையதாகும்.
“ஒரு மனிதனுடைய எருது, மற்றவனுடைய எருதைக் காயப்படுத்துவதினால் அது இறந்தால், உயிரோடிருக்கிற எருதை விற்று, பணத்தை இருவரும் பங்கிடவேண்டும். செத்தப்போன எருதையும் சமமாகப் பங்கிடவேண்டும். ஆனாலும் அது வழக்கமாக முட்டுகிற எருது என்று உரிமையாளன் அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்ததால், உரிமையாளன் எருதுக்கு எருது கொடுக்கவேண்டும். செத்தப்போன எருதோ தண்டம் செலுத்தியவனுக்குரியதாகும்.
சொத்துக்களின் பாதுகாப்பு
“ஒரு மனிதன் ஒரு எருதையோ அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்கவேண்டும்.
“திருடன் ஒருவன், வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிக்கப்பட்டு, அடிபட்டு இறந்தால், அடித்தவன் இரத்தத்தைச் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல. ஆனால் அது சூரியன் உதித்தபின் நடந்திருந்தால் இரத்தத்தைச் சிந்திய குற்றம் அவன்மேல் இருக்கும்.
“திருடன் தன் திருட்டிற்காகப் பதிலீடு செய்யவேண்டும். அவனிடம் ஒன்றுமில்லையானால் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்படவேண்டும். அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
“ஒருவன் தன் வளர்ப்பு மிருகங்களை ஒரு வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ மேய்க்கிறபோது, அவற்றைக் கட்டாமல் இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் தன்னுடைய வயலிலிருந்தும், தோட்டத்திலிருந்தும் அதற்குப் பதிலீடாக மிகச்சிறந்ததைக் கொடுக்கவேண்டும்.
“நெருப்பு மூண்டு முட்செடிகளில் பற்றிப்பரவி, தானியக்கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக்கதிர்களையோ அல்லது முழு வயலையோ எரித்துப்போட்டால், நெருப்பை மூட்டியவன் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
“ஒரு மனிதன் தன் அயலானிடம் வெள்ளியையோ, பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலானுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்த திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும். ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டின் உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களை தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகள்22:8 இந்த சூழலில் இறைவன் என்றும் கூறலாம் முன் வரவேண்டும். ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, உடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளை கொண்டுவர வேண்டும். நீதிபதியால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறவன் மற்றவனுக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும்.
“ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறொரு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால் அல்லது காயமடைந்தால் அல்லது ஒருவரும் பார்க்காத வேளையில் காணாமற்போனால், அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என யெகோவா முன்னிலையில் சத்தியம் செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவேண்டும். பதிலீடு எதுவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த மிருகம் அயலானிடத்திலிருந்து களவுபோயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதன் உடலில் மீதியானவற்றைச் உரிமையாளனிடம் சாட்சியமாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்திற்காக அவன் பணம் செலுத்தும்படி கேட்கப்படமாட்டான்.
“ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், அதன் உரிமையாளர் இல்லாத வேளையில் அது காயப்பட்டால் அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் மிருகத்தின் உரிமையாளர் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுசெய்ய வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கிறது.
சமுதாயப் பொறுப்பு
“திருமணத்திற்காக நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வஞ்சித்து, அவளுடன் உறவுகொண்டால், அவன் அவளுக்கான சீதனத்தை அவளுடைய தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும். அவள் அவனுக்கு மனைவியாயிருப்பாள். அப்பெண்ணின் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலுமாக மறுத்தால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் சீதனப் பணத்தை கண்டிப்பாக அவன் கொடுத்தாகவேண்டும்.
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
“யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும்.
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன். அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள்.
“என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது. உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.
“இறைவனை நிந்திக்கவேண்டாம். உங்கள் மக்களின் ஆளுநனை சபிக்கவேண்டாம்.
“உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சை இரசத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம்.
“உங்கள் மகன்களில் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டும். நீங்கள் உங்கள் ஆடுமாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அப்படியே செய்யவேண்டும். அவை தங்களுடைய தாய்களுடன் ஏழுநாட்களுக்கு இருக்கட்டும். எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்கவேண்டும்.
“நீங்கள் என் பரிசுத்த மக்களாக இருக்கவேண்டும். ஆகையால், காட்டு மிருகங்களினால் கிழிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடவேண்டாம். அதை நாய்களுக்கு எறிந்துவிடுங்கள்.”
நீதிக்கும் இரக்கத்திற்குமான சட்டங்கள்
“பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம்.
“பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம். ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம்.
“உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம். உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம்.
“உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம். பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன்.
“இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக்23:8 பார்வையுள்ளவர்களை அல்லது நீதிபதிகளை. குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது.
“பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே.
ஓய்வுநாளின் நீதிச்சட்டங்கள்
“நீங்கள் ஆறு வருடங்களுக்கு உங்கள் வயல்களை விதைத்து விளைச்சலை அறுவடை செய்யவேண்டும். ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள்.
“நீங்கள் ஆறு நாட்களுக்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஏழாம்நாளோ வேலைசெய்யவேண்டாம். அதனால் உங்கள் எருதும், கழுதையும் இளைப்பாறட்டும். பிறநாட்டினனும் உங்கள் வீட்டில் பிறந்த அடிமையும் இளைப்பாறி, புதுபெலன் பெறட்டும்.
“நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். பிற நாட்டு தெய்வங்களின் பெயரைச்சொல்லிக் கூப்பிடவேண்டாம். அவற்றின் பெயரை உங்கள் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம்.
மூன்று வருடாந்திர பண்டிகைகள்
“வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்.
“முதலாவதாக புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய்யுங்கள். ஏனெனில் அந்த மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேவந்தீர்கள்.
“ஒருவரும் வெறுங்கையுடன் என்முன் வரக்கூடாது.
“நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
“பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
“இவ்வாறாக வருடத்தில் மூன்றுமுறை எல்லா ஆண்களும் ஆண்டவராகிய யெகோவா முன்பாக வரவேண்டும்.
“பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்தவேண்டாம்.
“எனது பண்டிகைக் காணிக்கைகளின் கொழுப்பை மறுநாள் காலைவரை பலியிடாமல் வைத்திருக்கக்கூடாது.
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
தூதன் வழியை ஆயத்தப்படுத்துதல்
“பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன். அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில்23:21 எனது முழு அதிகாரம். என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார். அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன். என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன். உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன்.
“நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன். ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன். ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும். நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன்.
“செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல்23:31 பெலிஸ்தியரின் கடல் என்பது மத்திய தரைக்கடல் வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள். அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம். உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.
உடன்படிக்கையை உறுதிப்படுத்தல்
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எழுபது பேரும் யெகோவாவிடம் மேலே வாருங்கள். நீங்கள் தூரத்திலிருந்தே வழிபடவேண்டும். ஆனால் மோசே மட்டுமே யெகோவாவுக்கு அருகில் வரவேண்டும். மற்றவர்கள் அருகில் வரக்கூடாது. இஸ்ரயேல் மக்களும் மோசேயுடன் வரக்கூடாது.”
மோசே மக்களிடம்போய் யெகோவாவினுடைய எல்லா வார்த்தைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குச் சொன்னான். அவர்கள் அனைவரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்றார்கள். அப்பொழுது யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதிவைத்தான்.
மறுநாள் அதிகாலையில் அவன் எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் விதமாக பன்னிரண்டு கல் தூண்களை நிறுத்தினான். அதன்பின் அவன் இஸ்ரயேலில் இளைஞர்களை அனுப்பினான். அவர்கள் தகன காணிக்கைகளைச் செலுத்தி, சமாதான காணிக்கையாக இளங்காளைகளை யெகோவாவுக்குப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தில் அரைப்பங்கை எடுத்துக் கிண்ணங்களில் வைத்தான். மற்ற அரைப்பங்கைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். பின்பு மோசே உடன்படிக்கைப் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்கும்படி வாசித்தான். அவர்கள் அதைக்கேட்டு, “யெகோவா சொன்னபடியெல்லாம் நாங்கள் செய்வோம்; நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து அவர்களிடம், “இந்த எல்லா வார்த்தைகளுக்கும் இணங்க யெகோவா உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
அதன்பின், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களில் எழுபது பேரும் மோசேயுடன் ஏறிப்போனார்கள். அவர்கள் இஸ்ரயேலரின் இறைவனை அங்கே கண்டார்கள். அவருடைய பாதத்தின்கீழ் ஆகாயத்தைப்போல் தெளிவான நீலக்கல்லினால் அமைக்கப்பட்ட நடைபாதை போன்ற ஒன்று இருந்தது. அவர்கள் இறைவனைக் கண்டார்கள். அப்படியிருந்தும் இறைவன் இஸ்ரயேலின் தலைவர்களுக்கு விரோதமாகத் தன் கரத்தை உயர்த்தவில்லை. அவர்கள் இறைவன் முன்னிலையில் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறி வந்து இங்கேயே இரு. நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
பின்பு மோசே தன் உதவியாளனான யோசுவாவுடன் புறப்பட்டான். மோசே இறைவனுடைய மலைக்கு ஏறிப்போனான். அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்களிடம், “நாங்கள் மறுபடியும் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். ஆரோனும், ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாராவது ஒரு வழக்கில் ஈடுபட்டால் அவன் அவர்களிடம் போகலாம்” என்றான்.
மோசே மலையின்மேல் ஏறிப்போனான். அப்பொழுது மேகம் மலையை மூடிற்று. யெகோவாவின் மகிமையும், சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் மலையை ஆறு நாட்களுக்கு மூடியிருந்தது. ஏழாம்நாள் யெகோவா மேகத்துக்குள் இருந்து மோசேயைக் கூப்பிட்டார். மலையின் உச்சியில் காணப்பட்ட யெகோவாவினுடைய மகிமை இஸ்ரயேலருக்கு பட்சிக்கும் நெருப்பைப்போல் தெரிந்தது. திரும்பவும் மோசே மலையின்மேல் ஏறிப்போகும்போது மேகத்திற்குள் புகுந்தான். அந்த மலையிலே அவன் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தான்.
இறைசமுகக் கூடார காணிக்கைகள்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். உள்ளத்தில் ஆர்வத்துடன் கொடுக்கும் ஒவ்வொருவனிடமிருந்தும் காணிக்கையை எனக்காக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவையே:
“தங்கம், வெள்ளி, வெண்கலம்;
நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி;
வெள்ளாட்டு உரோமம்,
சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்25:5 கடல்நீரில் வாழும் ஒருவகை விலங்கின் தோல்;
சித்தீம் மரம்;
வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்;
அபிஷேக எண்ணெய்க்கும் நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
ஏபோத்திலும்,25:7 பிரதான ஆசாரியன் அணிந்திருந்த கவசம் போன்ற மேலாடை. மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.
“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும்.
உடன்படிக்கைப்பெட்டி
“அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கவேண்டும். நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும். சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடவேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை. பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும். நான் உனக்குத் தரப்போகும் சாட்சிப்பிரமாணத்தை25:16 சாட்சிப்பிரமாணத்தை அல்லது உடன்படிக்கை. அந்தப் பெட்டிக்குள் வை.
“சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய்யவேண்டும். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். அதன் இரு முனைகளிலும் தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்யவேண்டும். ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும். கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை. அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.
மேஜை
“மேலும் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்யவேண்டும். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருக்கவேண்டும். அதைச் சுத்தமான தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். அத்துடன் அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை இணை. மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்து. மேஜையைத் தூக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் கம்புகளைப் பிடிக்கும்படி, அந்த வளையங்கள் விளிம்புச் சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். அக்கம்புகளை சித்தீம் மரத்தால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். அவற்றினாலேயே இந்த மேஜையைச் சுமக்கவேண்டும். மேஜையின் தட்டுகளையும், கிண்ணங்களையும் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும். அத்துடன் பானகாணிக்கைகளை ஊற்றுவதற்கான கிண்ணங்களையும், ஜாடிகளையும் தங்கத் தகட்டினாலேயே செய்யவேண்டும். இறைசமுக அப்பம் எப்பொழுதும் எனக்கு முன்னாக இருக்கும்படி அதை இந்த மேஜையின்மேல் வை.
குத்துவிளக்கு
“சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்யவேண்டும். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே செய்யப்படவேண்டும். ஆறு கிளைகள் குத்துவிளக்கின் பக்கங்களிலிருந்து விரிந்து தோன்றவேண்டும். மூன்று கிளைகள் ஒரு பக்கத்திலும், மூன்று கிளைகள் மறுபக்கத்திலும் இருக்கவேண்டும். ஒரு கிளையில் வாதுமை பூக்கள் வடிவமான மூன்று கிண்ணங்கள் அதன் மொட்டுகளுடனும், மலர்களுடனும் இருக்கவேண்டும். அப்படியே அடுத்த கிளையிலும் மூன்று கிண்ணங்கள் இருக்கவேண்டும். இவ்விதமாக அந்த குத்துவிளக்கிலிருந்து விரிந்துபோகும் ஆறுகிளைகளிலும் இருக்கவேண்டும். குத்துவிளக்கின் உச்சியில் வாதுமைப் பூக்களைப் போன்ற நான்கு கிண்ணங்கள் அவற்றின் மொட்டுகளோடும், மலர்களோடும் இருக்கவேண்டும். குத்துவிளக்கிலிருந்து விரியும், முதல் ஜோடிக்கிளைகளுக்குக் கீழே, ஒரு மொட்டு இருக்கவேண்டும். இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டு இருக்கவேண்டும். மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டு இருக்கவேண்டும். எல்லாமுமாக ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் சுத்தத் தங்கத்தின் ஒரே தகட்டிலிருந்து அடித்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
“பின்பு அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்து, குத்துவிளக்கின் முன்பக்கத்தில் வெளிச்சம் தரக்கூடியதாக, அவற்றை குத்துவிளக்கின் மேல் வை. விளக்குத்திரி கத்தரிகளும், தட்டுகளும் சுத்தத் தங்கத்தினால் செய்யப்படவேண்டும். குத்துவிளக்கையும், அதற்குரிய உபகரணங்கள் யாவற்றையும் செய்ய ஒரு தாலந்து25:39 அதாவது, சுமார் 75 பவுண்டுகள் அல்லது 34 கிலோகிராம் சுத்தத்தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும். இங்கே மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே, இவைகளையெல்லாம் செய்யும்படி நீ கவனமாயிரு.”
இறைசமுகக் கூடாரம்
இறைசமுகக் கூடாரத்தைப் பத்து மூடுதிரைகளைக் கொண்டு செய்யவேண்டும். அத்திரைகள் தரமாகத் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு நெய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தொழில் வல்லுநரால் அதில் கேருபீன்களின் உருவம் சித்திர வேலையாய் செய்யப்படவேண்டும். எல்லா திரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் அளவுள்ளதாய் இருக்கவேண்டும். அதில் ஐந்து திரைகளை ஒன்றாக இணை, மற்ற ஐந்து திரைகளுக்கும் அப்படியே செய்யவேண்டும். இணைக்கப்பட்ட ஒரு தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பில் நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்யவேண்டும். மற்ற தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பிலும் அப்படியே செய்யவேண்டும். ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும். பின்பு தங்கத்தினால் ஐம்பது கொக்கிகளைச் செய், இந்த இறைசமுகக் கூடாரம் ஒரே இணைப்பாக இருக்கும்படி, இரண்டு தொகுப்பு திரைகளையும் ஒன்றாக இணைப்பதற்கு இக்கொக்கிகளைப் பயன்படுத்து.
இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரினால் பதினோரு திரைகளைச் செய்யவேண்டும். அந்த பதினோரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும் நான்கு முழம் அகலமும் உடையதாய் இருக்கவேண்டும். இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளையும் இன்னொரு தொகுப்பாக ஒன்றிணைக்கவேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடித்துப்போடவேண்டும். ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், ஐம்பது வளையங்கள் செய்யவேண்டும். மற்ற தொகுப்பு திரையின் கடைசி விளிம்பு நெடுகிலும் அப்படியே செய்யவேண்டும். அதன்பின் ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரே பகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்தக் கொக்கிகளைப் போடு. கூடாரத்திரைகளின் மீதமுள்ள கூடுதலான நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும். கூடாரத்திரைகளின் நீளம் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம் கூடுதலாக இருக்கும். மீதமிருப்பது இறைசமுகக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும். அக்கூடாரத்திற்காக மூடுதிரையை, சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் செய்யவேண்டும். அதற்கு மேலாகப் போடுவதற்காக, கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையைச் செய்யவேண்டும்.
இறைசமுகக் கூடாரத்திற்காக சித்தீம் மரத்தினால் நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு மரச்சட்டத்திலும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக அமைக்கப்பட்ட, இரண்டு முளைகள் இருக்கவேண்டும். இவ்விதமாக இறைசமுகக் கூடாரத்தின் எல்லா மரச்சட்டங்களும் செய்யப்படவேண்டும். இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் நிறுத்துவதற்காக இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும். அந்த இருபது மரச்சட்டங்களை வைப்பதற்கு வெள்ளியினால் நாற்பது அடித்தளங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு முளைக்கும் கீழே ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களைச் செய்யவேண்டும். மற்ற பக்கத்திற்கு, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்துக்கு அப்படியே இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களையும் செய்யவேண்டும். இறைசமுகக் கூடாரத்தின் மேற்குப் பக்கமான கடைசியில் நிறுத்துவதற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும். கடைசியில் உள்ள இரண்டு மூலைகளிலும் நிறுத்துவதற்கு இரண்டு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும். இந்த இரண்டு மூலைகளிலும் அவை கீழேயிருந்து மேலேவரை இரட்டைப் பலகைகளாக இணைக்கப்பட வேண்டும். அவைகள் ஒரு வளையத்திலே இணைக்கப்பட வேண்டும். இரண்டும் அவ்வாறே இருக்கவேண்டும். அப்பொழுது அந்த எட்டு மரச்சட்டங்களும் ஒவ்வொரு மரச்சட்டத்தின் கீழும், இரண்டிரண்டு வெள்ளி அடித்தளங்களாக, பதினாறு வெள்ளி அடித்தளங்களும் இருக்கும்.
அத்துடன் சித்தீம் மரத்தால் குறுக்குச் சட்டங்களைச் செய்யவேண்டும். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும், மறுபக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கமான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்யவேண்டும். நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், மரச்சட்டங்களின் நடுவிலே ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நீண்டிருக்க வேண்டும். அந்த மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக தங்க வளையங்களையும் செய்யவேண்டும். குறுக்குச் சட்டங்களையும் தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டும்.
நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும். அந்தத் திரையைத் தங்கத்தகட்டால் மூடப்பட்ட சித்தீம் மரத்தாலான நான்கு கம்பங்களில், தங்கக் கொக்கிகளால் தொங்கவிட வேண்டும். அந்த நான்கு கம்பங்களும் நான்கு வெள்ளி அடித்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். கொக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப்பெட்டியை திரைக்குப் பின்பாக வை. அத்திரை பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை. திரைக்கு வெளியே இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்தில் மேஜையையும், மேஜைக்கு எதிரே தென்புறமாகக் குத்துவிளக்கையும் வை.
கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச் செய்யவேண்டும். அது ஒரு சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும். அத்திரைக்குத் தங்கக் கொக்கிகளையும், சித்தீம் மரத்தால் ஐந்து கம்பங்களையும் செய்து, அதைத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அந்தக் கம்பங்களுக்கு வெண்கலத்தால் ஐந்து அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
தகன பலிபீடம்
“சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான ஒரு பலிபீடத்தைச் செய்யவேண்டும். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருக்கவேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு ஒவ்வொன்றாக நான்கு கொம்புகளைச் செய்யவேண்டும். கொம்புகளும், பலிபீடமும் ஒரே அமைப்பாய் இருக்கவேண்டும். பலிபீடத்தை வெண்கலத் தகட்டினால் மூடவேண்டும். அதற்குரிய எல்லா பாத்திரங்களையும், வெண்கலத்தினாலேயே செய்யவேண்டும். சாம்பலை அகற்றுவதற்கான பானைகளும், சாம்பல் அள்ளும் வாரிகளும், தெளிப்பதற்கான கிண்ணங்களும், இறைச்சியைக் குத்தும் முட்கரண்டிகளும், நெருப்புச் சட்டிகளும் வெண்கலத்தால் செய்யப்படவேண்டும். வெண்கலப் பின்னல் வேலைப்பாடான ஒரு கிராதியைச் செய்து, அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையத்தை அமைக்கவேண்டும். பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும். சித்தீம் மரத்தினால் பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடவேண்டும். பலிபீடத்தைக் கொண்டுசெல்லும்போது, அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் வளையங்களிலே மாட்டப்படவேண்டும். பலிபீடத்தை மரப்பலகைகளினால் செய்யவேண்டும். அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருக்கவேண்டும். உனக்கு மலையில் காண்பிக்கப்பட்டபடியே அது செய்யப்படவேண்டும்.
முற்றம்
“இறைசமுகக் கூடாரத்திற்கு ஒரு முற்றத்தை அமைக்கவேண்டும். முற்றத்தின் தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் அங்கு இடப்பட வேண்டும். அங்கே இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும். அப்படியே வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். அங்கேயும் திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
“முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து கம்பங்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும். சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும். வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றிற்கும் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
“முற்றத்தின் நுழைவு வாசலுக்கு இருபது முழம் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு சித்திரத்தையற்காரனின் வேலையாய் அது செய்யப்படவேண்டும். நான்கு கம்பங்களும், நான்கு அடித்தளங்களும் அதற்கு இருக்கவேண்டும். முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள் எல்லாம் வெள்ளிப் பூண்களும், கொக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையதாய் இருக்கவேண்டும். முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்திற்கான முளைகளும், முற்றத்திற்கான முளைகளும், எல்லா உபயோகத்திற்காகவும் அங்கு பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் வெண்கலத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
விளக்குக்குரிய எண்ணெய்
“விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. சபைக் கூடாரத்தில் சாட்சிப்பெட்டியின் முன்னால் இருக்கும் திரைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்களும் விளக்குகளை மாலைவேளை தொடங்கி விடியும்வரை யெகோவாவுக்கு முன்னால் எரிந்துகொண்டிருக்கச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.
ஆசாரியரின் உடைகள்
“உன் சகோதரன் ஆரோனையும், அவன் மகன்களான நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரையும் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து உன்னிடம் அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி இதைச் செய்யவேண்டும். உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மதிப்பும், கனமும் கொடுக்கும்படி அவனுக்குப் பரிசுத்த உடைகளைச் செய்யவேண்டும். இவ்விதமான காரியங்களில், நான் ஞானத்தைக் கொடுத்திருக்கும் எல்லா திறமையுள்ள மனிதரிடமும் நீ பேசவேண்டும். ஆரோன் ஆசாரியனாக எனக்கு ஊழியம் செய்யும்படி அவனுடைய அர்ப்பணிப்புக்காக அவனுக்கான உடைகளைச் செய்யும்படி அவர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்கள் செய்யவேண்டிய உடைகள்: ஒரு மார்பு அணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, நெய்யப்பட்ட ஒரு உள் அங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே. உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, திறமையுள்ளவர்கள் இந்த பரிசுத்த உடைகளைத் தயாரிக்க வேண்டும். அவர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை பயன்படுத்த வேண்டும்.
ஏபோத்
“தங்கத்தையும், நீலநூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும் கொண்டு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாய் ஏபோத்தைச் செய்யவேண்டும். அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் நுட்பமாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்படவேண்டும்.
“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து அவற்றில் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கு. அவர்கள் பிறந்த வரிசையின்படியே ஆறு மகன்களின் பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு மகன்களின் பெயர்கள் மற்றொரு கல்லிலும் செதுக்கப்பட வேண்டும். இரத்தினங்களில் முத்திரையை வெட்டிச் செய்வதுபோல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கி வைக்கவேண்டும். பின்பு அந்தக் கற்களை தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதிக்கவேண்டும். பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களின் ஞாபகார்த்தக் கற்களாக ஏபோத்தின் தோள் துண்டுகளில் கட்டவேண்டும். ஆரோன் இந்தப் பெயர்களை யெகோவாவுக்கு முன்பாக ஒரு ஞாபகார்த்தமாய் தன் தோள்களில் சுமக்கவேண்டும். தங்கச்சரிகை வேலைப்பாடுகளைச் செய்து, அத்துடன் சுத்தத் தங்கத்தினால் கயிறுபோல பின்னப்பட்ட இரண்டு சங்கிலிகளைச் செய்து, அவற்றை அந்தச் சரிகை வேலைப்பாட்டுடன் தொடுத்துக்கொள்ள வேண்டும்.
மார்பு அணி
“திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக தீர்மானங்கள் எடுப்பதற்கான ஒரு மார்பு அணியைச் செய்யவேண்டும். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அதைச் செய்யவேண்டும். அது ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட சதுரமாகவும், இரண்டாக மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். அதன்மேல் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதிக்கவேண்டும். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்; மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி; நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருக்கவேண்டும். அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்து வைக்கவேண்டும். இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட வேண்டும்.
“மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும். அதற்காக இரண்டு தங்க வளையங்களைச் செய்து மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும். அந்த இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மார்பு அணியின் மூலைகளிலுள்ள இரண்டு வளையங்களோடு தொடுக்கவேண்டும். சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும் ஏபோத்தின் முன்பக்கத்தில் உள்ள தோள்பட்டியுடன் இணைந்திருக்கும் சரிகை வேலைப்பாடுகளுடன் தொடுக்கவேண்டும். இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்துடன் ஒட்டியிருக்கும் மார்பு அணியின் உட்புற விளிம்பில், இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும். வேறு இரண்டு தங்க வளையங்களைச் செய்து, ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்பக்கத்தில் இருக்கிற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தில் தொடுக்கவேண்டும். மார்பு அணி ஏபோத்தில் இருந்து விலகாதபடி, அதை இடைப்பட்டியுடன் இணைத்து, மார்பு அணியின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களுடன் நீலநிற நாடாவினால் இணைத்துக் கட்டவேண்டும்.
“ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதெல்லாம், இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை தன் இருதயத்திற்கு மேலுள்ள தீர்மானத்திற்கான மார்பு அணியின்மேல் நிரந்தரமான ஒரு ஞாபகச்சின்னமாக, யெகோவாவுக்குமுன் சுமப்பான். யெகோவா முன்னிலையில் ஆரோன் வரும்போதெல்லாம், அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும்படி ஊரீம், தும்மீம்28:30 தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட புனித பொருள்களாகும். ஆகியவற்றை அந்த மார்பு அணியில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆரோன் இஸ்ரயேலருக்கான தீர்மானங்களைச் செய்யும் சாதனங்களை எப்பொழுதும் யெகோவா முன்னிலையில் தன் இருதயத்திற்கு மேல் சுமப்பான்.
மற்ற ஆசாரிய உடைகள்
“ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும். அதன் நடுப்பகுதியில் தலை நுழையும் துவாரம் இருக்கவேண்டும். அந்த துவாரம் கிழிந்து போகாதபடி, அதைச் சுற்றிலும் கழுத்துப்பட்டியைப் போன்ற ஒரு நெய்யப்பட்ட விளிம்பு இருக்கவேண்டும். மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் நீலநூல், ஊதாநூல், சிவப்புநூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவைகளுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட வேண்டும். மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் தங்க மணியும், மாதுளம் பழமும் மாறிமாறித் தொங்கவிட வேண்டும். ஆரோன் தன் ஆசாரிய ஊழியத்தைச் செய்யப்போகும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். யெகோவாவுக்குமுன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதும், அங்கிருந்து வரும்போதும், அந்த மணியின் சத்தம் கேட்கும். எனவே அவன் சாகாதிருப்பான்.
“சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து அதில்,
யெகோவாவுக்குப் பரிசுத்தம்
என்று ஒரு முத்திரையைப்போல பொறிக்கவேண்டும்.
“அதைத் தலைப்பாகையுடன் சேர்த்துக் கட்டும்படி ஒரு நீலநிற நாடாவை அதில் இணைக்க வேண்டும். அது தலைப்பாகையின் முன்பக்கத்தில் இருக்கவேண்டும். அது ஆரோனுடைய நெற்றியில் இருக்கவேண்டும். இஸ்ரயேலர் அர்ப்பணிக்கும் பரிசுத்த கொடைகள் எதுவானாலும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றத்தை அவன் சுமப்பான். அந்தக் கொடைகள் யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அந்தத்தகடு அவனுடைய நெற்றியின்மேல் தொடர்ந்து இருக்கும்.
“மென்பட்டு நூலினால் உள் அங்கியை நெய்து, மென்பட்டினால் தலைப்பாகையையும் செய்யவேண்டும். இடைப்பட்டி சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும். ஆரோனுடைய மகன்களுக்கு மதிப்பையும், கனத்தையும் கொடுப்பதற்கு அவர்களுக்கும் உள் அங்கிகளையும், இடைப்பட்டிகளையும், அத்துடன் குல்லாக்களையும் செய்யவேண்டும். நீ அந்த உடைகளை உன் சகோதரன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் அணிவித்தபின், அவர்களை அபிஷேகித்து நியமனம் செய்யவேண்டும். அவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்யவேண்டும்.
“அவர்களுடைய உடலை மூடுவதற்கான கால் சட்டையை மென்பட்டினால் செய்யவேண்டும். அவை இடுப்பிலிருந்து தொடைவரை இருக்கவேண்டும். ஆரோனும், அவன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதோ அல்லது பரிசுத்த இடத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும்படி பலிபீடத்தை நெருங்கும்போதோ, குற்றம் உள்ளவர்களாகிச் சாகாதபடி, அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
“இது ஆரோனுக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.”
ஆசாரியர்களின் அர்ப்பணிப்பு
“அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்வதற்கு நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். சிறந்த கோதுமை மாவினால் புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடை அப்பங்களையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் செய்யவேண்டும். அவற்றை ஒரு கூடையில் வைத்து, அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும். உடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பு அணி ஆகியவற்றை ஆரோனுக்கு உடுத்தவேண்டும். அத்துடன் திறமையாய் நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டவேண்டும். அவனுடைய தலையில் தலைப்பாகையையும் அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக்கீரிடத்தையும் வைக்கவேண்டும். பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும். அவர்களுக்கும் குல்லாக்களை அணியவேண்டும். பின் இடைப்பட்டிகளை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கட்டவேண்டும். ஆசாரியத்துவம் ஒரு நிரந்தர நியமத்தினால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது.
“இவ்விதமாக ஆரோனையும், அவன் மகன்களையும் நீ அர்ப்பணிக்கவேண்டும்.
“அதன்பின் சபைக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைக்கவேண்டும். பின் சபைக் கூடாரத்தின் வாசலில் யெகோவா முன்னிலையில் அக்காளையை கொல்லவேண்டும். அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மிஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும். பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதன் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்படவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
“அதன்பின் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன் தலைமேல் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளை வைக்கவேண்டும். பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். அந்த செம்மறியாட்டுக் கடாவை துண்டங்களாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்ற இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும். அதன்பின் செம்மறியாடுகள் முழுவதையும் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகும்.
“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும். அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும். பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும்.
“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா. அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும். ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும்.
“ஆரோனுடைய, அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்குரிய செம்மறியாட்டுக் கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும். இஸ்ரயேலர்கள் சமாதான காணிக்கைகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவுக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்கு ஆகும்.
“ஆரோனின் பரிசுத்த உடைகள் அவனுடைய சந்ததிக்கு, அவர்கள் அவற்றை உடுத்தி அபிஷேகம் பண்ணப்பட்டு, அர்ப்பணிக்கப்படும்படி அவர்களுக்கே சொந்தமாகும். அவனுக்குப்பின் அவனுக்குரிய இடத்தில் ஆசாரியராக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு சபைக் கூடாரத்திற்குள் வரும், அவனுடைய மகன் அந்த உடைகளை ஏழு நாட்கள் உடுத்தவேண்டும்.
“ஆசாரியரின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கவேண்டும். ஆரோனும் அவன் மகன்களும், அந்த இறைச்சியையும், கூடையிலுள்ள அப்பங்களையும் சபைக்கூடார வாசலில் சாப்பிடவேண்டும். பரிசுத்தப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புக்கும் பாவநிவிர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே சாப்பிடவேண்டும். அவைகளை வேறு யாரும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவைகள் பரிசுத்தமானவை. அர்ப்பணிப்பிற்கான அந்த செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ காலைவரை ஏதாவது மீதமிருந்தால், அவற்றை எரித்துவிடவேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானது, அவற்றைச் சாப்பிடக்கூடாது.
“ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேண்டும். அதைச் செய்வதற்கு ஏழு நாட்கள் எடுத்துக்கொள். ஒவ்வொரு நாளும் பாவநிவிர்த்தி செய்யும்படி, பாவநிவாரண காணிக்கையாக ஒரு காளையைப் பலியிடவேண்டும். பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து அதைப் பரிசுத்தப்படுத்து. அதை அர்ப்பணம் செய்வதற்காக எண்ணெயால் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து. பலிபீடத்திற்காக ஏழுநாட்களுக்கு பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும்.
“ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளை பலிபீடத்தில் பலியாகச் செலுத்தவேண்டும். காலையில் ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும், பொழுது மறையும்போது மற்ற செம்மறியாட்டுக் குட்டியையும் செலுத்தவேண்டும். முதல் செம்மறியாட்டுக் குட்டியுடன் பத்தில் ஒரு எப்பா29:40 அதாவது, சுமார் 1.6 கிலோகிராம் அளவான சிறந்த மாவை, நான்கில் ஒரு பங்கு ஹின்29:40 அதாவது, சுமார் 1 லிட்டர் அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயிலே பிசைந்து, அதையும் நான்கில் ஒரு ஹின் அளவான திராட்சை இரசத்தையும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும். சூரியன் மறையும் வேளையிலும் காலையில் எடுத்த அதே தானியக் காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும், மற்ற செம்மறியாட்டுக் குட்டியை, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக பலியிடவேண்டும்.
“நீங்கள் இந்த தகன காணிக்கையை தலைமுறைதோறும் சபைக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்கு முன்பாக என்றென்றும் தொடர்ச்சியாகச் செலுத்தவேண்டும். அங்கே நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசுவேன். நான் இஸ்ரயேல் மக்களையும் அங்கேயே சந்திப்பேன். அந்த இடம் எனது மகிமையால் அர்ப்பணிக்கப்படும்.
“இவ்வாறு சபைக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் அர்ப்பணம் செய்வேன். ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்வேன். இப்படிச் செய்து இஸ்ரயேலர் மத்தியில் நான் குடியிருந்து அவர்களின் இறைவனாயிருப்பேன். அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த, அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே.
தூபபீடம்
“நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்யவேண்டும். அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும். அதன் மேல்பகுதியையும், அதன் எல்லா பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைக்கவேண்டும். தூபபீடத்தின் தங்க விளிம்புச்சட்டத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரண்டு பக்கங்களிலும் அமைக்கவேண்டும். அதைச் சுமப்பதற்கான கம்புகளை அதற்குள் மாட்டும்படி எதிரெதிராக அவைகளை அமைக்கவேண்டும். அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும். தூபபீடத்தை சாட்சிப்பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைக்கவேண்டும். அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப்பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்னே இருக்குமிடம்.
“ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும். பொழுதுபடும் நேரத்தில் அவன் விளக்கேற்றும்போது, திரும்பவும் நறுமணத்தூளை எரிக்கவேண்டும். இவ்விதமாக தலைமுறைதோறும் இந்த நறுமணத்தூள் யெகோவாவுக்குமுன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும். இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம். ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்திர பாவநிவிர்த்தி, பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் தலைமுறைதோறும் செய்யப்படவேண்டும். இந்தத் தூபபீடம் யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
பாவநிவிர்த்திப் பணம்
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது. எண்ணப்படுகிறவன் ஏற்கெனவே எண்ணப்பட்டவர்களிடம் கடந்துபோகும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கல்30:13 அதாவது, சுமார் ஒரு சேக்கல் என்பது பதினோரு கிராம் இருபது கேரா30:13 அதாவது, சுமார் இருபது கேரா என்பது அறுநூறு மில்லிகிராம் நிறையுள்ளது. இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும். இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு கடந்துபோகும் எல்லோரும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்கவேண்டும். உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது. நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார்.
கழுவுவதற்கான தொட்டி
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும். அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதெல்லாம் தாங்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் கழுவவேண்டும். அத்துடன், நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பலிபீடத்தை அணுகும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவவேண்டும். இது ஆரோனுக்கும், அவன் சந்ததியினருக்கும் தலைமுறைதோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.”
அபிஷேக எண்ணெய்
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல்30:23 அதாவது, சுமார் 500 சேக்கல் என்பது 5.8 கிலோகிராம், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல், இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும். இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும். மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும். தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
“அத்துடன் ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும். இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும். இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் இதைப் பரிசுத்தமாய் எண்ணவேண்டும். இதேபோல் வாசனைத் தைலத்தைச் செய்கிறவனோ அல்லது ஆசாரியரைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசுகிறவனோ தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
நறுமணத்தூள்
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருட்களை சமமான அளவு எடுத்துக்கொண்டு, இவற்றை வாசனை தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளைச் செய்யவேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும். அதில் கொஞ்சத்தை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான சபைக் கூடாரத்திலுள்ள சாட்சிப்பெட்டிக்கு முன் வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகா பரிசுத்தமுள்ளதாய் இருக்கும். இந்தக் கலவை முறையைக் கொண்டு உங்களுக்காக வேறெந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக்கூடாது. இதை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள். அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
சபைக்கூடார கலைஞர்கள்
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பார், நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்திருக்கிறேன். நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பியிருக்கிறேன். அத்துடன் எல்லா வகையான வேலைகளையும் பற்றிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன். மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.”
அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லா கலைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்:
“சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
அதன் மேலுள்ள கிருபாசனத்தையும்,
சபைக் கூடாரத்தின் சகல பணிமுட்டுகளையும்,
மேஜையையும், அதன் பொருட்களையும்,
சுத்தத் தங்கக்குத்துவிளக்கையும்,
அதன் எல்லா உபகரணங்களையும், தூபபீடத்தையும்,
தகன பலிபீடத்தையும், அதன் எல்லா பாத்திரங்களையும்,
தொட்டிகளையும், அதன் கால்களையும்,
அத்துடன் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும்,
ஆசாரிய ஊழியத்திற்காக பயன்படுத்தும்
பரிசுத்த உடைகளான நெய்யப்பட்ட உடைகளையும்,
அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன்.
“நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.
ஓய்வுநாள்
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியது இதுவே: நீங்கள் என் ஓய்வுநாட்களைக் கைக்கொள்ளவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நானே என்பதை நீங்கள் தலைமுறைதோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும்.
“ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ, யெகோவாவுக்கு பரிசுத்தமான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளில் எந்தவித வேலையைச் செய்கிற எவனும் கொல்லப்படவேண்டும். இஸ்ரயேலர் தலைமுறைதோறும், ஓய்வுநாளை கைக்கொண்டு நிரந்தர உடன்படிக்கையாக அதைக் கொண்டாடவேண்டும். அது என்றென்றைக்கும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், யெகோவா வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம்நாளில் வேலைசெய்யாமல் ஓய்ந்திருந்தார்.’ ”
இவ்வாறு சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசி முடித்தபின், இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப்பலகைகளை அவனிடம் கொடுத்தார்.
தங்கக் கன்றுக்குட்டி
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதித்ததை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனைச் சுற்றி ஒன்றுகூடி அவனிடம், “எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆகையால் நீர் வந்து, எங்களை வழிநடத்தும்படி தெய்வங்களை எங்களுக்காகச் செய்யும்” என்றார்கள்.
அப்பொழுது ஆரோன் அவர்களிடம், “உங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அணிந்திருக்கும் தங்கக் காதணிகளைக் கழற்றி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்படியே அனைவரும் தங்கள் காதணிகளைக் கழற்றி ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் தன்னிடம் கொடுத்ததை அவன் எடுத்து கன்றுக்குட்டி வடிவில் அதை வார்ப்பித்து, ஒரு கருவியினால் அதை வடிவமைத்து அதை ஒரு விக்கிரகமாகச் செய்தான். அப்பொழுது அவர்கள், “இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள். இவைகளே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன” என்றார்கள்.
அதைக்கண்ட ஆரோன் அந்தக் கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்கு யெகோவாவுக்கு ஒரு பண்டிகை கொண்டாடப்படும்” என அறிவித்தான். மறுநாள் அதிகாலையில் மக்கள் எழுந்து தகன காணிக்கைகளைப் பலியிட்டு, சமாதான காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அதன்பின் மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்து களியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ கீழே இறங்கிப்போ. ஏனெனில், எகிப்திலிருந்து நீ வெளியே கொண்டுவந்த உன் மக்கள் சீர்கெட்டுப் போனார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி நடக்காமல், விரைவில் வழிதவறி கன்றுக்குட்டி உருவமுடைய ஒரு விக்கிரகத்தைத் தங்களுக்காக செய்திருக்கிறார்கள். அவர்கள் அதை வணங்கி, பலிசெலுத்தி, ‘இஸ்ரயேலரே! இவையே உங்கள் தெய்வங்கள், இவையே உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தன’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக என் கோபம் எரியும்படியும், நான் அவர்களை அழிக்கும்படியும் என்னை விட்டுவிடு; அதன்பின் நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார்.
ஆனால் மோசேயோ தன் இறைவனாகிய யெகோவாவின் தயவை நாடினான். அவன் அவரிடம், “யெகோவாவே, நீர் மகா வல்லமையினாலும், பலமுள்ள கரத்தினாலும், எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உம்முடைய மக்களுக்கு எதிராக உமது கோபம் ஏன் எரியவேண்டும்? ‘இஸ்ரயேலரை மலைகளில் கொன்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்து ஒழிக்கும்படியான தீய நோக்கத்துடனே, அவர் அவர்களை வெளியே கொண்டுவந்தார்’ என எகிப்தியர் ஏன் சொல்லவேண்டும்? ஆகவே உமது கோபத்தின் உக்கிரத்தைத் தணித்து, மனமிரங்கி, மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவராதிரும். உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரை நினைவிற்கொள்ளும். ‘உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, நான் உங்கள் சந்ததியினருக்கு வாக்குப்பண்ணிய இந்த நாடு முழுவதையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அந்த நாடு என்றும் அவர்களுக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்’ என்று நீர் உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்றான். அப்பொழுது யெகோவா மனமிரங்கி, தன் மக்கள்மேல் தான் கொண்டுவருவதாக அச்சுறுத்திய பேராபத்தைக் கொண்டுவரவில்லை.
மோசே மலையிலிருந்து தனது கைகளில் இரண்டு சாட்சி கற்பலகைகளுடன் கீழே இறங்கிப் போனான். அந்தக் கற்பலகைகளில் முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தன. அந்தக் கற்பலகைகள் இறைவனின் கைவேலையாயிருந்தன. அதில் இறைவனால் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஆரவாரம் செய்யும் மக்களின் சத்தத்தை யோசுவா கேட்டபோது, அவன் மோசேயிடம், “முகாமில் யுத்த சத்தம் கேட்கிறது” என்றான்.
அதற்கு மோசே சொன்னது:
“அது வெற்றியின் சத்தமும் அல்ல;
தோல்வியின் சத்தமும் அல்ல;
நாம் கேட்பது பாடலின் சத்தம்.”
மோசே முகாமுக்குக் கிட்டவந்தபோது, கன்றுக்குட்டியையும் மக்களின் ஆட்டத்தையும் கண்டான். அதைக்கண்ட மோசே கடுங்கோபம் கொண்டு, தன் கையில் இருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் எறிந்து துண்டுகளாக உடைத்தான். அத்துடன் அவர்கள் செய்துவைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து, அதை நெருப்பில்போட்டு எரித்து தூளாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, இஸ்ரயேலரைக் குடிக்கச் செய்தான்.
அதன்பின் மோசே ஆரோனிடம், “இந்த மக்கள் உனக்கு என்ன செய்தார்கள்? நீ அவர்களை இவ்வளவு பெரிய பாவத்தைச்செய்ய வழிநடத்துவதற்கு அவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு ஆரோன், “என் ஆண்டவனே, கோபங்கொள்ள வேண்டாம். இவர்கள் எவ்வளவாய் தீமையின் பக்கம் சார்ந்து நடக்கின்ற மக்கள் என்பதை நீர் அறிவீர்தானே! அவர்கள் என்னிடம், ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்களை வழிநடத்த எங்களுக்கு தெய்வங்களைச் செய்துகொடும்’ என்றார்கள். ஆகவே நான் அவர்களிடம், ‘தங்க நகைகள் இருப்பவர்கள் அதைக் கழற்றுங்கள்’ என்றேன். அப்படியே அவர்கள் அந்த தங்க நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். நான் அதை நெருப்பில் போட்டேன். அதிலிருந்து இந்த கன்றுக்குட்டி வந்தது” என்றான்.
மக்கள் கட்டுக்கடங்காமல் திரிவதையும், அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்கள் கேலிப்பொருளாகும்படி, ஆரோன் அவர்களை கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதையும் மோசே கண்டான். அப்பொழுது மோசே முகாமின் வாசலில் நின்று, “யெகோவாவின் பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான். லேவியர் எல்லோரும் அவனிடம் வந்து சேர்ந்தார்கள்.
மோசே அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ஒவ்வொருவரும் உங்கள் இடுப்பில் ஒரு வாளைக் கட்டிக்கொள்ளுங்கள். முகாமெங்கும் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அங்குமிங்குமாகச் சென்று ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும், நண்பனையும், அயலானையும் கொல்லுங்கள்” என்றான். லேவியர்கள் மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்று மக்களில் மூவாயிரம்பேர்வரை செத்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் சொந்த மகன்களுக்கும், சகோதரர்களுக்கும் விரோதமாய் இருந்தபடியால், இன்று நீங்கள் யெகோவாவினுடைய பணிக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். யெகோவா இன்றைக்கு உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்” என்றான்.
மறுநாள் மோசே மக்களிடம், “நீங்கள் பெரிய பாவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது நான் யெகோவாவிடம் ஏறிப்போவேன். ஒருவேளை உங்களுடைய பாவத்திற்காக நான் பாவநிவிர்த்தி செய்யலாம்” என்றான்.
அவ்வாறே மோசே திரும்பவும் யெகோவாவிடம் போய், “இந்த மக்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக தங்கத்தினால் தெய்வங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய பாவத்தை இப்பொழுது மன்னியும்; இல்லாவிட்டால் நீர் எழுதிய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடும்” என்றான்.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரையே என் புத்தகத்திலிருந்து அழிப்பேன். இப்பொழுது நீ போய் நான் உனக்கு சொன்ன இடத்துக்கு மக்களை அழைத்துக்கொண்டு போ. இதோ! என் தூதன் உனக்குமுன் செல்வான். ஆனாலும், நான் தண்டிக்கும் காலம் வரும்போது, அவர்கள் பாவத்திற்காக நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.
ஆரோன் செய்து கொடுத்த கன்றுக்குட்டியை வணங்கியதற்காக யெகோவா மக்களைப் பெரும் கொள்ளைநோயினால் வாதித்தார்.
பின்பு யெகோவா மோசேயிடம், “நீயும், எகிப்திலிருந்து நீ அழைத்துவந்த மக்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, ‘உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன்’ என்று நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டு வாக்குப்பண்ணிய நாட்டிற்குப் போங்கள். நான் உங்களுக்கு முன்னே ஒரு இறைத்தூதனை அனுப்பி கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை வெளியே துரத்திவிடுவேன். பாலும் தேனும் ஓடும்33:3 பாலும் தேனும் ஓடும் என்பது செழிப்பான ஒரு நாடு என்பதாகும். நாட்டிற்குப் போங்கள். ஆனால் நானோ உங்களோடு வரமாட்டேன். ஏனெனில், நீங்கள் பிடிவாத குணமுள்ளவர்கள். அதனால் நான் உங்களை வழியிலேயே அழித்துவிட நேரிடலாம்” என்றார்.
மிகவும் துயரமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டவுடன் அவர்கள் துக்கமடைய தொடங்கினார்கள். அவர்கள் ஒருவரும் தங்கள் நகைகளை அணிந்து கொள்ளவில்லை. ஏனெனில் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘நீங்கள் பிடிவாத குணமுள்ள மக்கள். ஆகையால், உங்களுடன் ஒரு நொடிப்பொழுது நான் வந்தாலும் உங்களை அழித்துவிட நேரிடும். இப்பொழுது நீங்கள் நகைகளைக் கழற்றுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பேன்’ எனச் சொல்” என்று சொல்லியிருந்தார். ஆகவே இஸ்ரயேலர் ஓரேப் மலையில் தங்கள் நகைகளைக் கழற்றிப் போட்டார்கள்.
சபைக் கூடாரம்
மோசே ஒரு கூடாரத்தை எடுத்துக்கொண்டுபோய் முகாமுக்கு வெளியே சற்றுத் தொலைவில் அதை அமைப்பது வழக்கம். அதை அவன், “சபைக் கூடாரம்” என அழைத்தான். யெகோவாவிடம் விசாரித்து அறியவரும் யாரும், முகாமுக்கு வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போவார்கள். மோசே வெளியே அந்தக் கூடாரத்திற்குப் போகும்போதெல்லாம், எல்லா மக்களும் தங்களுடைய கூடாரவாசலில் எழுந்து, மோசே கூடாரத்திற்குள் போகும்வரை பார்த்துக்கொண்டு நிற்பார்கள். மோசே கூடாரத்திற்குள் போனதும், மேகத்தூண் கீழே இறங்கி, வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசுவார். மேகத்தூண் கூடாரவாசலில் நிற்பதை மக்கள் காணும்போதெல்லாம், எல்லோரும் தங்களுடைய கூடாரவாசலில் நின்று வழிபடுவார்கள். ஒரு மனிதன் தன் நண்பனோடு பேசுவதைப்போல் யெகோவா மோசேயுடன் முகமுகமாய் பேசுவார். அதன்பின் மோசே திரும்பி முகாமுக்குள் போவான். ஆனால் மோசேயின் பணியாளனான நூனின் மகன் யோசுவா என்ற வாலிபன், கூடாரத்தைவிட்டுப் போவதேயில்லை.
மோசேயும் யெகோவாவின் மகிமையும்
மோசே யெகோவாவிடம் சொன்னதாவது: “நீ இந்த மக்களை வழிநடத்து என்று நீர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர். ஆனாலும் என்னோடு யாரை அனுப்புவீர் என்று எனக்கு அறிவிக்கவில்லை. நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்; நீ என்னிடம் தயவு பெற்றிருக்கிறாய் என்றும் நீர் சொல்லியிருந்தீர். அவ்வாறு உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததினால், நான் உம்மை இன்னும் அதிகம் அறிவதற்கும், உம்முடைய கண்களில் தொடர்ந்து தயவைப் பெற்றுக்கொள்வதற்கும், உம்முடைய வழிகளை எனக்குப் போதியும். இந்த நாடு உம்முடைய மக்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்” என்றான்.
அதற்கு யெகோவா, “எனது சமுகம் உன்னோடு போகும்; நான் உனக்கு ஆறுதலைத் தருவேன்” என்றார்.
அப்பொழுது மோசே யெகோவாவிடம், “உமது சமுகம் எங்களுடன் வராவிட்டால் எங்களை இவ்விடத்திலிருந்து அனுப்பவேண்டாம். நீர் எங்களுடன் வராவிட்டால், என்மேலும் உம்முடைய மக்கள்மேலும் நீர் பிரியமாயிருக்கிறீர் என்பதை யாராவது எப்படி அறிவார்கள்? இதையல்லாமல் என்னையும், உமது மக்களையும் பூமியின் மேற்பரப்பிலிருக்கும் மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது எது?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா மோசேயிடம், “நீ கேட்டுக்கொண்ட அதையே நான் செய்வேன். ஏனெனில் நான் உன்னிடம் பிரியமாய் இருக்கிறேன். நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார்.
அப்பொழுது மோசே, “உம்முடைய மகிமையை எனக்கு இப்பொழுது காண்பியும்” என்றான்.
அதற்கு யெகோவா, “என் நன்மை எல்லாவற்றையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச் செய்வேன். யெகோவா என்ற என் பெயரை உனக்கு முன்பாக பிரசித்தப்படுத்துவேன். நான் யாருக்கு இரக்கம் காட்ட விருப்பமாயிருக்கிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். யாரிடம் மனதுருக்கமாய் இருக்க விரும்புகிறேனோ அவர்களிடம் மனதுருகுவேன். ஆனால், என்னுடைய முகத்தை உன்னால் காணமுடியாது; ஏனெனில் என் முகத்தைக் கண்டு ஒருவனும் உயிரோடிருக்கமுடியாது” என்றார்.
பின்பு யெகோவா, “எனக்கு அருகே இருக்கும் கற்பாறையின்மேல் நீ நில். என் மகிமை கடந்து செல்லும்போது, நான் உன்னைக் கற்பாறை வெடிப்பில் வைப்பேன். நான் கடந்துசெல்லும்வரை என் கையால் உன்னை மூடுவேன். அதன்பின் நான் என் கையை விலக்குவேன். நீ என் முதுகைக் காண்பாய்; ஆனால் என் முகமோ காணப்படக்கூடாது” என்றார்.
புதிய கற்பலகைகள்
மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில். உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார்.
மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார். அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர். ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார்.
உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான். அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள். இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன். நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள். நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி34:13 அதாவது, அசேரா தெய்வத்தின் மரச்சின்னங்கள் அழித்துவிடவேண்டும். நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன்.
“நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள்.
“வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம்.
“புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள்.
“கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை. ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும்.
“ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது.
“ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும்.
“கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள். ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும். நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான்.
“புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம்.
“உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார். அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார்.
மோசேயின் பிரகாசமான முகம்
மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான். ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள். ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான். அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான்.
மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான். ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது, இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான்.
ஓய்வுநாளின் விதிமுறைகள்
பின்பு மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்தையும் கூடிவரச்செய்து அவர்களிடம், “நீங்கள் செய்யவேண்டுமென்று யெகோவா கட்டளையிட்டவைகள் இவையே: நீங்கள் ஆறு நாட்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாள். அது யெகோவாவுக்கான ஓய்வுநாள். அந்த நாளிலே வேலைசெய்பவன் எவனும் கொலைசெய்யப்படுவான். ஓய்வுநாளில் நீங்கள் வசிக்கும் எந்தக் குடியிருப்புகளிலும் நெருப்பு மூட்டக்கூடாது” என்றான்.
இறைசமுகக் கூடாரத்திற்கான பொருட்கள்
பின்னும் மோசே முழு இஸ்ரயேல் சமுதாயத்திடமும், யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: உங்களிடம் இருப்பதிலிருந்து யெகோவாவுக்காக ஒரு காணிக்கையை எடுங்கள். யெகோவாவுக்குக் காணிக்கை கொண்டுவர விரும்பும் ஒவ்வொருவனும் கொண்டுவர வேண்டியதாவன:
“தங்கம், வெள்ளி, வெண்கலம்,
நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல்; மென்பட்டுத் துணி,
வெள்ளாட்டு உரோமம்,
சிவப்புச் சாயம் தோய்ந்த செம்மறியாட்டுக் கடாவின் தோல், கடல்பசுவின் தோல்,
சித்தீம் மரம்,
வெளிச்சத்திற்கான ஒலிவ எண்ணெய்,
அபிஷேக எண்ணெய்க்கும், நறுமண தூபத்திற்குமான வாசனைப் பொருட்கள்;
ஏபோத்திலும், மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.”
உங்களில் தொழில் திறமையுள்ளவர்கள் எல்லோரும் வந்து, யெகோவா கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் செய்யவேண்டும்.
“அவையாவன: இறைசமுகக் கூடாரமும் அதற்குரிய மூடுதிரையும், கொக்கிகளும், மரச்சட்டங்களும், குறுக்குச் சட்டங்களும், கம்பங்களுடன் அதன் அடித்தளங்களும்,
அத்துடன் சாட்சிப்பெட்டி, அதற்குரிய கம்புகள், கிருபாசனம், சாட்சிப்பெட்டியை மறைக்கும் திரை,
மேஜை, அதற்குரிய கம்புகள், மேஜைக்குரிய பொருட்கள், இறைசமுக அப்பம்,
வெளிச்சத்திற்கான குத்துவிளக்கு, அதற்குரிய உபகரணங்கள், விளக்குகள், வெளிச்சத்திற்கான எண்ணெய்,
தூபபீடம், அதற்குரிய கம்புகள், அபிஷேக எண்ணெய், நறுமணத் தூபம்,
இறைசமுகக் கூடார நுழைவு வாசலுக்கான திரைச்சீலை,
தகன பலிபீடம், அதற்குரிய வெண்கலச் சல்லடை, அதற்குரிய கம்புகள், அதற்குரிய எல்லா பாத்திரங்கள்,
வெண்கலத் தொட்டி, அதற்குரிய கால்,
முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
இறைசமுகக் கூடாரத்திற்கும், முற்றத்திற்கும் வேண்டிய கூடார முளைகள், அதற்குரிய கயிறுகள்,
பரிசுத்த இடத்தின் ஆசாரியப் பணிசெய்ய உடுத்தப்படும் நெய்யப்பட்ட உடைகள், ஆசாரியனாகிய ஆரோனுக்கு வேண்டிய பரிசுத்த உடைகள், அவனுடைய மகன்கள் ஆசாரியராகப் பணிசெய்யும்போது அவர்களுக்கு வேண்டிய உடைகள் ஆகியனவாகும்.”
அதன்பின் முழு இஸ்ரயேல் சமுதாயமும் மோசேயின் முன்னின்று விலகிப்போனது. அவர்களில் விருப்பமுடையவர்களும், இருதயத்தில் ஏவப்பட்டவர்களும், சபைக்கூடார வேலைக்கும் அதன் எல்லா பணிகளுக்கும், பரிசுத்த உடைகளுக்கும் வேண்டிய காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள். விருப்பமுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ஒரேவிதமாகவே உடையலங்கார ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆபரணங்கள் முதலிய எல்லாவித தங்க நகைகளையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் தமது தங்கத்தை யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகச் செலுத்தினார்கள். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணி, வெள்ளாட்டு உரோமம், சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடா தோல், கடல்பசுத் தோல் ஆகியவற்றையும் கொண்டுவந்தார்கள். வெள்ளியையும், வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொடுக்க விரும்பியவர்கள் அதை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மற்றெந்த வேலைகளுக்கும் பயன்படக்கூடிய சித்தீம் மரத்தை வைத்திருந்தவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள். திறமையுள்ள பெண்கள் தங்கள் கைகளினால் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களையும், மென்பட்டுத் துணிகளையும் திரித்துக் கொண்டுவந்தார்கள். திறமையுள்ள ஊக்கமான பெண்கள் யாவரும் வெள்ளாட்டு உரோமத்தையும் திரித்தார்கள். மக்களின் தலைவர்கள் ஏபோத்திற்கும், மார்பு அணிக்கும் பதிப்பதற்கான கோமேதகக் கற்களையும், இரத்தினக் கற்களையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கும், அபிஷேக எண்ணெய்க்கும், நறுமணத்தூளுக்கும் தேவையான ஒலிவ எண்ணெயையும், வாசனைப் பொருட்களையும் கொண்டுவந்தார்கள். யெகோவா மோசே மூலமாக அவர்கள் செய்யும்படி கட்டளையிட்ட எல்லா விதமான வேலைகளுக்காகவும் மனதில் விருப்பமுள்ள எல்லா இஸ்ரயேல் ஆண்களும், பெண்களும் சுயவிருப்பக் காணிக்கைகளை யெகோவாவுக்குக் கொண்டுவந்தார்கள்.
பெசலெயேலும் அகோலியாபும்
பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது: “பாருங்கள், யெகோவா யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்தெடுத்திருக்கிறார். அவர் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பி, எல்லா வகையான வேலைகளையும் செய்யக்கூடிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும், இரத்தினக் கற்களை வெட்டவும், அவற்றைப் பதிக்கவும், மரத்தைச் செதுக்கி வெவ்வேறு வினோதமான வேலைகளைச் செய்யவும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். அவனுக்கும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபுக்கும் மற்றவர்களுக்குப் போதிக்கும் ஆற்றலைக் கொடுத்தார். அவர்களுடைய கைவினைஞர்களும், சித்திரக்காரர்களும் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அழகான தையல் வேலைகளைச் செய்யக்கூடியவர்களாகவும், நெசவாளர்களாகவும் ஆகும்படி அவர்களை ஆற்றலினால் நிரப்பினார். அவர்கள் தலைச்சிறந்த கைவினைஞரும், சித்திரக்காரருமாய் இருந்தார்கள்.
அப்படியே பெசலெயேலுடனும், அகோலியாபுடனும் பரிசுத்த இடத்தை அமைக்கும் எல்லா வேலைகளையும் எப்படிச் செய்வது என அறியும் ஆற்றலையும், திறமையையும், யெகோவா கொடுத்திருந்த ஒவ்வொரு திறமைசாலியும், யெகோவாவின் கட்டளைப்படியே அவ்வேலைகளைச் செய்யவேண்டும்” என்றான்.
பின்பு மோசே பெசலெயேலையும், அகோலியாபையும், யெகோவாவினால் ஆற்றல் வழங்கப்பட்டு, வந்து வேலைசெய்வதற்கு மனவிருப்பமுள்ள திறமைசாலிகள் எல்லோரையும் வரவழைத்தான். பரிசுத்த இடத்தை அமைக்கும் வேலைகளைச் செய்வதற்கு, இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை எல்லாம், மோசேயிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மக்கள் சுயவிருப்பக் காணிக்கைகளைத் தொடர்ந்து காலைதோறும் கொண்டுவந்தார்கள். அதனால் பரிசுத்த இடத்தின் வேலையைச் செய்துகொண்டிருந்த திறமையான கலைஞர்கள் தங்கள் வேலையைவிட்டு, மோசேயிடம் வந்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்ட வேலைக்கு, தேவைக்கு அதிகமான பொருட்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்று சொன்னார்கள்.
அப்பொழுது மோசே, “இனிமேல் எந்த ஒரு ஆணோ, பெண்ணோ பரிசுத்த இடத்தின் வேலைக்கான காணிக்கையாக எதையும் கொண்டுவர வேண்டாம்” என உத்தரவிட்டான். அது முகாமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதமாக மக்கள் கூடுதலாகப் பொருட்களைக் கொண்டுவருவது நிறுத்தப்பட்டது. ஏனெனில், எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன.
இறைசமுகக் கூடாரம்
வேலையாட்களில் திறமையானவர்கள் எல்லோரும், தரமாய் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை சித்திரத் தையல்காரனுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைசமுகக் கூடாரத்தை அமைத்தார்கள். எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன. பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்ற ஐந்து திரைகளையும் அதேவிதமாகவே இணைத்தார்கள். இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள். வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுப்பு திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள். பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது.
இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள். அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன. அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள். அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள். பின்பு சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் அக்கூடாரத்திற்கு ஒரு மூடுதிரையைச் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையையும் செய்தார்கள்.
இறைசமுகக் கூடாரத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் சித்தீம் மரத்தினால் செய்தார்கள். ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது. அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்திற்காக அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். ஒவ்வொரு முளை முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்திற்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்திற்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள். இவ்வாறு அவர்கள் இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் கடைசியில் உள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு சட்டப்பலகைகள் செய்யப்பட்டன. அந்த இரு மூலைகளிலும் சட்டப்பலகைகள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட்டன. இரு மூலைகளும் ஒரேவிதமாகவே அமைக்கப்பட்டன. இவ்விதமாக பின்புறத்தில் எட்டு இணைப்புப் பலகைகள் நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு இணைப்பு பலகையின் கீழும் இரு அடித்தளங்களாக பதினாறு வெள்ளி அடித்தளங்களும் வைக்கப்பட்டன.
அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், மற்றப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்தார்கள். நடுக்குறுக்குச் சட்டம் மரச்சட்டங்களின் நடுவே ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை நீண்டிருக்கும்படி செய்தார்கள். மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக, தங்க வளையங்களையும் அதில் செய்தார்கள். குறுக்குச் சட்டங்களையும், தங்கத்தகட்டால் மூடினார்கள்.
நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞர்கள் கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்தார்கள். அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்கு சித்தீம் மரத்தினால் நான்கு கம்பங்களைச் செய்து, தங்கத்தகட்டால் அவற்றை மூடினார்கள். அவற்றுக்குத் தங்கத்தால் கொக்கிகளைச் செய்து, வெள்ளியினால் அதன் நான்கு அடித்தளங்களையும் வார்த்தார்கள். கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு திரைச்சீலையைச் செய்தார்கள். இந்த திரைக்குக் கொக்கிகளை உடைய ஐந்து கம்பங்களைச் செய்தார்கள். கம்பங்களின் மேற்பகுதிகளையும், பூண்களையும் தங்கத்தகட்டால் மூடினார்கள். அவற்றுக்காக ஐந்து வெண்கல அடித்தளங்களையும் செய்தார்கள்.
உடன்படிக்கைப்பெட்டி
அதன்பின் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது. அதை உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தை அமைத்தான். அவன் அதற்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, ஒரு பக்கத்திற்கு இரண்டு வளையங்களும், மற்றப் பக்கத்துக்கு இரண்டு வளையங்களுமாக அதன் நான்கு கால்களிலும் இணைத்தான். சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினான். பெட்டியைச் சுமப்பதற்கு அதன் பக்கங்களிலுள்ள வளையங்களில் கம்புகளை மாட்டிவைத்தான்.
அவன் கிருபாசனத்தை சுத்தத் தங்கத்தினால் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது. கிருபாசனத்தின் முனைகளிலும், அடித்துச் செய்யப்பட்ட தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்தான். ஒரு பக்கத்தில் ஒரு கேருபீனையும், மறுபக்கத்தில் இன்னொரு கேருபீனையும் செய்தான். அவைகள் கிருபாசனத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரே தகடாக இருக்கும்படிச் செய்தான். அந்தக் கேருபீன்கள் தங்கள் சிறகுகளை மேல்நோக்கி விரித்து, அவற்றால் கிருபாசனத்தை மூடிக்கொண்டு நின்றன. அவை ஒன்றுக்கொன்று எதிராக நின்று கிருபாசனத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டு நின்றன.
மேஜை
அவர்கள் சித்தீம் மரத்தினால் ஒரு மேஜையைச் செய்தார்கள். அது இரண்டு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமுமாய் இருந்தது. பின்பு அவர்கள் அதைச் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள். அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள். பின்பு மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை அதன் கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்தினார்கள். மேஜையைத் தூக்கும் கம்புகளை மாட்டுவதற்காகவே இந்த வளையங்கள் மேஜையின் சட்டத்திற்கு அருகே இருந்தன. மேஜையைச் சுமப்பதற்கான கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள். மேஜையில் இருக்கும் பாத்திரங்களான தட்டங்கள், தட்டுகள், கிண்ணங்கள், பானகாணிக்கைகள் வார்ப்பதற்கான ஜாடிகள் ஆகியவற்றைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள்.
குத்துவிளக்கு
சுத்தத் தங்கத்தினால் ஒரு குத்துவிளக்கைச் செய்தார்கள். அதன் அடிப்பாகமும், தண்டும், பூ வடிவமான அதன் கிண்ணங்களும், மொட்டுகளும், பூக்களும் அடிக்கப்பட்ட சுத்தத் தங்கத்தினாலேயே அவர்கள் செய்தார்கள். குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக ஆறு கிளைகள் பிரிந்து சென்றன. அதன் ஒரு கிளையின் மேல் வாதுமை வடிவமான மூன்று கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் இருந்தன. மற்றக் கிளையின் மேலும் அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. அவ்விதமாகவே குத்துவிளக்கிலிருந்து பிரிந்து செல்லுகிற அதன் ஆறுகிளைகளிலும் அமைக்கப்பட்டிருந்தன. குத்துவிளக்கின் மேல் உச்சியில் வாதுமைப் பூ வடிவமான நான்கு கிண்ணங்கள் மொட்டுகளுடனும், பூக்களுடனும் அமைக்கப்பட்டிருந்தன. குத்துவிளக்கிலிருந்து விரிகின்ற முதலாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டும் இரண்டாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே இரண்டாவது மொட்டும், மூன்றாவது ஜோடிக்கிளைகளுக்குக் கீழே மூன்றாவது மொட்டுமாக அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு எல்லாமுமாக ஆறு கிளைகள் இருந்தன. மொட்டுகளும், கிளைகளும் குத்துவிளக்குடன் ஒரே சுத்தத் தங்கத்தகட்டால் அடித்துச் செய்யப்பட்டிருந்தன.
அதன் ஏழு அகல் விளக்குகளையும், அதன் விளக்குத்திரி கத்தரிகளையும், அவற்றை வைப்பதற்கான தட்டங்களையும் சுத்த தங்கத்தினால் செய்தார்கள். குத்துவிளக்கையும் அதற்கான எல்லா உபகரணங்களையும் ஒரு தாலந்து எடையுள்ள சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள்.
தூபபீடம்
அவர்கள் தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்தார்கள். அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருந்தது. அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் செய்யப்பட்டிருந்தன. மேஜையின் மேல்பகுதியையும், அதன் எல்லா பகுதியையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்கப்பட்டியை அமைத்தார்கள். தூபபீடத்தைச் சுமப்பதற்கான கம்புகளை மாட்டுவதற்காக தங்கப்பட்டிக்குக் கீழே இரண்டு எதிரெதிர் பக்கங்களிலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டிரண்டு தங்க வளையங்களை அமைத்தார்கள். அக்கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள்.
அவர்கள் பரிசுத்த அபிஷேக எண்ணெயையும், சுத்தமான நறுமணத்தூளையும் வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல் செய்தார்கள்.
தகன காணிக்கைப்பீடம்
அவர்கள் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகன பலிபீடத்தைச் செய்தார்கள். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருந்தது. அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பை வைத்து, பீடத்தோடு ஒரே அமைப்பாய் இருக்கும்படி அவற்றை அமைத்தார்கள். அப்பீடத்தை வெண்கலத் தகட்டால் மூடினார்கள். பீடத்திற்குத் தேவையான சாம்பல் அள்ளும் பானைகள், வாரிகள், தெளிக்கும் கிண்ணங்கள், இறைச்சியை எடுக்கும் முட்கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகிய பாத்திரங்களையெல்லாம் வெண்கலத்தால் செய்தார்கள். அதற்கு வெண்கலக் கம்பியினால் சல்லடையைச் செய்து, அதை அதன் விளிம்புக்குக் கீழே, பீடத்தின் உள்ளே அதன் பாதி உயரத்தில் இருக்கும்படி வைத்தார்கள். அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும், கம்புகள் மாட்டுவதற்கு நான்கு வெண்கல வளையங்களைச் செய்து பொருத்தினார்கள். கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றை வெண்கலத் தகட்டால் மூடினார்கள். அந்தக் கம்புகள் பீடத்தை தூக்கிச் சுமப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் இருக்கும்படி அவற்றை மாட்டினார்கள். அந்த பீடம் நான்கு பக்கமும் பலகையால் செய்யப்பட்டிருந்தது. அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருந்தது.
கழுவுவதற்குத் தொட்டி
சபைக் கூடாரத்தின் வாசலில், கூடி நின்று பணிசெய்த பெண்கள் கண்ணாடியாகப் பயன்படுத்தும் வெண்கலத்தை அவர்களிடமிருந்து பெற்று, வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் உண்டாக்கினார்கள்.
முற்றம்
அதன்பின் அவர்கள் முற்றத்தை அமைத்தார்கள். அது தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கு திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் இருந்தன. அத்திரையைத் தொங்கவிடுவதற்கு இருபது கம்பங்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன. அதன் வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது கம்பங்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றிற்கும் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. அதற்குத் திரைகளும் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான பத்து கம்பங்களும், பத்து அடித்தளங்களும் இருந்தன. அத்துடன் அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், கம்பங்களில் பூண்களும் இருந்தன. சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. வாசலின் ஒரு பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன. முற்றத்து வாசலின் மற்றப் பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கு மூன்று கம்பங்களும் மூன்று அடித்தளங்களும் இருந்தன. முற்றத்தைச் சுற்றிலும் இருந்த திரைகளெல்லாம் திரிக்கப்பட்ட மென்பட்டுநூலால் நெய்யப்பட்டிருந்தன. அங்கிருந்த எல்லா கம்பங்களின் அடித்தளங்களும் வெண்கலத்தாலும், அக்கம்பங்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு முற்றத்தின் எல்லா கம்பங்களும் வெள்ளிப் பூண்கள் உடையதாய் இருந்தன.
முற்றத்தின் நுழைவு வாசலுக்கு போடப்பட்ட திரை, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் நெய்யப்பட்ட சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருந்தது. அது இருபது முழம் நீளமும், முற்றத்தின் திரைகளைப்போல் ஐந்து முழம் உயரம் உடையதுமாய் இருந்தது. அதைத் தொங்கவிடுவதற்கு நான்கு கம்பங்களும், நான்கு வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகளும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தையும், அதன் முற்றத்தையும் சுற்றியிருந்த கூடார முளைகள் வெண்கலத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன.
பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
சாட்சிக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகைகள் இவையே: அவைகள் மோசேயின் கட்டளைப்படி, ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின்கீழ் லேவியர்களால் பதிவுசெய்யப்பட்டிருந்தன. யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதை எல்லாம் செய்தான். தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான். பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும் என்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத்தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி 29 தாலந்துகளும்38:24 அதாவது, 29 தாலந்துகளும் என்பது சுமார் 991 கிலோகிராம். 730 சேக்கலுமாயிருந்தது38:24 730 சேக்கலுமாயிருந்தது என்பது சுமார் 9 கிலோகிராம்..
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எண்ணப்பட்ட மக்கள் சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி 100 தாலந்துகளும், 1,775 சேக்கலுமாயிருந்தது. இருபது வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கிடப்பட்டு கடந்து செல்லும்போது ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பெக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச்சேக்கலாகும். எண்ணப்பட்ட மனிதரின் மொத்தத்தொகை 6,03,550 பேர்கள். கொடுக்கப்பட்ட அந்த 100 தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்திற்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் செய்ய உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து என்ற கணக்கின்படி 100 அடித்தளங்களுக்கு 100 தாலந்துகள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் 1,775 சேக்கல் வெள்ளியை கம்பங்களுக்கான கொக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், கம்பங்களுக்கான பூண்களைச் செய்வதற்கும் உபயோகித்தார்கள்.
அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும். அந்த வெண்கலத்தை சபைக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்திற்குரிய எல்லா பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தார்கள். அத்துடன் முற்றத்தைச் சுற்றியிருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைசமுகக் கூடாரத்திற்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்திற்குமான கூடார முளைகளையும் செய்ய உபயோகித்தார்கள்.
ஆசாரியர்களின் உடைகள்
பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்காக நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்பு நூல்களினால் நெய்யப்பட்ட உடைகளைச் செய்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளையும் செய்தார்கள்.
ஏபோத்
ஏபோத்தைத் தங்கத்தினாலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு ஆகிய நூல்களினாலும் திரித்த மென்பட்டுத் துணியினாலும் செய்தார்கள். தங்கத்தை மெல்லிய தகடுகளாக அடித்து, அதைச் சரிகை நூலாக வெட்டி, நீலம், ஊதா, கருஞ்சிவப்புநூல், மென்பட்டுத் துணிகளுடன் நெய்து திறமையான சித்திரத்தையல் வேலையாகச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கப்படுவதற்கு, இணைக்கக்கூடிய ஏபோத்தின் தோள்பட்டிகளைச் செய்தார்கள். அதன் நுட்பமாக நெய்யப்பட்ட இடைப்பட்டியும் அதைப் போலவே செய்யப்பட்டு, அதுவும் ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு இணைத்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
கோமேதகக் கற்களைத் தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதித்து, அவற்றின்மேல் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை ஒரு முத்திரையைப்போல் பொறித்தார்கள். பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களுக்கான நினைவுச்சின்னக் கற்களாக ஏபோத்தின் தோள்பட்டியில் இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மார்பு அணி
அவர்கள் ஒரு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக மார்பு அணியைச் செய்தார்கள். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு செய்தார்கள். மார்பு அணி ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும் உடைய இரண்டாக மடிக்கப்பட்ட சதுரத்துண்டாயிருந்தது. அதில் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதித்தார்கள். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்; மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி; நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருந்தது. அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்தார்கள். இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருந்தன. பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட்டிருந்தன.
மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்தார்கள். அவர்கள் இரண்டு தங்கச்சரிகை நூல் வேலைகளையும், இரண்டு தங்க வளையங்களையும் செய்தார்கள். அந்த இரண்டு வளையங்களையும் மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் பொருத்தினார்கள். மார்பு அணியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் தங்கச்சங்கிலிகளைத் தொடுத்தார்கள். சங்கிலிகளின் மற்ற நுனிகளைச் சரிகை நூல் வேலைகளுடன் தொடுத்து, அவற்றைத் தோள்பட்டிகளுடன் ஏபோத்தின் முன்பக்கத்தில் இணைத்தார்கள். அவர்கள் தங்கத்தால் இன்னும் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்தை ஒட்டியுள்ள மார்பு அணியின் கீழ் விளிம்பின் இரண்டு மூலைகளில் உட்பக்கத்தில் வைத்தார்கள். அவர்கள் வேறு இரண்டு தங்க வளையங்களையும் செய்து, ஏபோத்தின் முன்பக்கத்தில் அதன் இடைப்பட்டிகளுக்கு மேல் இருந்த மூட்டுக்கு அடுத்துள்ள பொருத்தில், தோள்பட்டிகளின் அடிப்பாகத்துடன் அவற்றைப் பொருத்தினார்கள். மார்பு அணியை இடைப்பட்டியுடன் இணைக்கும்படியாகவும், அது ஏபோத்திலிருந்து விலகாமல் இருக்கும்படியாகவும், ஏபோத்தின் வளையங்களுடன் மார்பு அணியின் வளையங்களை நீல நாடாவால் கட்டினார்கள். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
மற்ற ஆசாரிய உடைகள்
அவர்கள் ஏபோத்தின் மேலங்கி முழுவதையும் நீலநிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தார்கள். அந்த அங்கியின் நடுவில் கழுத்துப்பட்டியின் திறப்பைப் போன்ற ஒரு திறப்பை அமைத்தார்கள். கழுத்துத் துவாரம் கிழியாதபடி சுற்றிலும் ஒரு பட்டியை வைத்துத் தைத்தார்கள். அந்த அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டுத் துணியினாலும் மாதுளம் பழங்களைச் செய்து அலங்கரித்தார்கள். அங்கியின் ஓரங்களைச் சுற்றிலும் மாதுளம் பழங்களின் இடையிடையே இருக்கத்தக்கதாக சுத்தத் தங்கத்தினால் மணிகளைச் செய்து தொங்கவிட்டார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியப் பணியைச் செய்வதற்காக ஆரோன் உடுத்தியிருக்கும் அங்கியின் கீழ்ப்பக்க ஓரத்தைச் சுற்றிலும் ஒரு மாதுளம் பழமும், ஒரு மணியுமாக, மாறிமாறி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஆரோனுக்காகவும், அவனுடைய மகன்களுக்காகவும் மென்பட்டு நூலினால் ஒரு நெசவாளியின் வேலையாக உள் அங்கிகளைச் செய்தார்கள். மென்பட்டினால் தலைப்பாகையையும், அதன் கச்சையையும், திரித்த மென்பட்டுத் துணியினால் கால் சட்டைகளையும் செய்தார்கள். திரித்த மென்பட்டுத் துணி, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றால் சித்திரத்தையற்காரனின் வேலையாய் ஒரு இடைப்பட்டியையும் செய்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து, முத்திரையைப்போல அதில் இதைப் பொறித்தார்கள்:
“யெகோவாவுக்குப் பரிசுத்தம்”
அதில் ஒரு நீலநிற நாடாவைக் கட்டி தலைப்பாகையோடு இருக்கும்படி அதை இணைத்தார்கள். இவை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டன.
மோசே இறைசமுகக் கூடாரத்தை மேற்பார்வையிடுதல்
சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளெல்லாம் செய்துமுடிக்கப்பட்டன. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்தார்கள். அதன்பின் இறைசமுகக் கூடாரத்தை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்:
கூடாரமும், அதன் எல்லா பணிமுட்டுகளும், கொக்கிகள், சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள்,
அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,
சாட்சிப்பெட்டியுடன் அதன் கம்புகள், அதன் கிருபாசனம்,
மேஜையுடன் அதற்குரிய எல்லா பொருட்கள், இறைசமுக அப்பம்,
சுத்தத் தங்கத்தாலான குத்துவிளக்கு, அதில் வரிசையாக உள்ள அகல்விளக்குகள், அதன் உபகரணங்கள், வெளிச்சத்துக்கான எண்ணெய்,
தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,
வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் கம்புகள், அதன் எல்லா பாத்திரங்கள்,
தொட்டி, அதன் கால்கள்,
முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள்,
அதன் கயிறுகள், முற்றத்திலுள்ள முளைகள்,
சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் எல்லா பொருட்கள்;
உட்பட ஆசாரியனான ஆரோனுக்கான பரிசுத்த உடைகளும், அவன் மகன்கள் பரிசுத்த இடத்தில் ஆசாரியப் பணிசெய்யும்போது உடுத்தும் உடைகளுமான நெய்யப்பட்ட உடைகளையும் கொண்டுவந்தார்கள்.
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்திருந்தார்கள். மோசே அவைகளையெல்லாம் பார்வையிட்டான். அப்பொழுது யெகோவா கட்டளையிட்டபடியே அவைகளைச் செய்திருக்கிறார்கள் என்று மோசே கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
இறைசமுகக் கூடாரத்தை அமைத்தல்
பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும். அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும். மேஜையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேஜையின்மேல் வைக்கவேண்டும். அதன்பின் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல்விளக்குகளை வைக்கவேண்டும். தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டியின் முன் வைத்து, இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைப்போட வேண்டும்.
“பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும். தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும். அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும்.
“பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைசமுகக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம்பண்ணு. அதையும் அதன் பணிமுட்டுகளையும் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும். பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
“அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும். ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும். அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து. அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.” யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான்.
இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது. மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்தபோது, அதன் அடித்தளங்களை அதனிடங்களில் பொருத்தி சட்டப்பலகைகளை நிறுத்தி, அதன் குறுக்குச் சட்டங்களையும் மாட்டி, அதன் கம்பங்களை நிறுத்தினான். யெகோவா கட்டளையிட்டபடியே மோசே இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரத்தை விரித்து, கூடாரத்தின்மேல் மூடுதிரையைப் போட்டான்.
பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான். இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான்.
அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான். யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.
பின்பு குத்துவிளக்கை சபைக் கூடாரத்தில், மேஜைக்கு எதிரே இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் வைத்தான். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.
தங்கப் பலிபீடத்தைச் சபைக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தான். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.
இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான்.
பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான். மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள்.
பின்பு மோசே இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். இவ்வாறு மோசே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான்.
யெகோவாவின் மகிமை
அப்பொழுது சபைக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியது. மேகம் சபைக் கூடாரத்தின்மேல் தங்கியிருந்தபடியாலும், யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் சபைக் கூடாரத்திற்குள் போகமுடியாதிருந்தது.
இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள். மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள். இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்த காலமெல்லாம் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையில் யெகோவாவின் மேகம் பகல் வேளையில் இறைசமுகக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவுவேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.