- Biblica® Open Indian Tamil Contemporary Version எஸ்தர் எஸ்தரின் சரித்திரம் எஸ்தர் எஸ். எஸ்தரின் சரித்திரம் வஸ்தி அரசி நீக்கப்படுதல் அகாஸ்வேரு அரசனின் காலத்தில் நிகழ்ந்தது இதுவே: இந்த அகாஸ்வேரு இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை1:1 எத்தியோப்பியாவரை அல்லது கூஷ் நாடுவரை பரந்திருந்த நூற்றிருபத்தேழு மாகாணங்களை ஆளுகை செய்தான். அக்காலத்தில் அகாஸ்வேரு அரசன் சூசான் கோட்டைப் பட்டணத்திலுள்ள தனது அரச அரியணையிலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தனது ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் தனது உயர்குடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விருந்தொன்றைக் கொடுத்தான். அதற்கு பெர்சியா, மேதியா ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்களும், இளவரசர்களும், மாகாணங்களின் உயர்குடி மக்களும் வந்திருந்தார்கள். நூற்றெண்பது நாட்களாக அவன் தனது அரசின் திரளான செல்வத்தையும், தனது சிறப்பையும் மகிமையையும், மாட்சிமையையும் காண்பித்தான். இந்த நாட்கள் முடிவடைந்தபின், அரச அரண்மனையில் சுற்றிலும் அடைக்கப்பட்ட தோட்டத்தில், ஒரு விருந்தைக் கொடுத்தான். அது ஏழுநாட்களுக்கு நீடித்தது. சூசான் கோட்டைப் பட்டணத்தில் இருந்த சிறியோர் பெரியோரான சகல மக்களையும் அதற்கு அழைத்திருந்தான். அந்தத் தோட்டத்தில் வெள்ளை மற்றும் நீல நிறங்களினாலான பஞ்சுநூல் திரைகள் போடப்பட்டிருந்தன. அவை வெள்ளை மென்பட்டினாலும், செம்பட்டினாலும் செய்யப்பட்ட நாடாக்களினால் பளிங்கு தூண்கள் மேலுள்ள வெள்ளி வளையங்களில் கட்டப்பட்டிருந்தன. வெண்ணிறக் கல், பளிங்குக் கல், முத்துச் சிப்பிகள், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்கள், பதிக்கப்பட்ட பளபளப்பான மேடையில், தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன. திராட்சை இரசம், பல்வேறு வகையான தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அரசனுடைய தாராள மனதின்படியே அரசருக்குரிய திராட்சை இரசம் நிறைவாயிருந்தது. அரசனுடைய கட்டளைப்படியே எல்லா விருந்தாளிகளும் தாங்கள் விரும்பியபடி குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஏனெனில், அரசன் தனது திராட்சை இரசப் பொறுப்பாளர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு மனிதனும் கேட்கும் அளவு திராட்சை இரசத்தைப் பரிமாறும்படி அறிவுறுத்தியிருந்தான். அகாஸ்வேருவின் அரச அரண்மனையில் இருந்த பெண்களுக்கு அரசி வஸ்தி, தானும் ஒரு விருந்தைக் கொடுத்தாள். ஏழாம்நாளில் அகாஸ்வேரு அரசன் திராட்சை மதுவினால் களிப்புற்றிருக்கும் போது, தனக்குப் பணிசெய்த மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு அதிகாரிகளுக்கும்1:10 அரச சபையின் முக்கியப் பிரதானிகளாய் இருந்தார்கள் கட்டளையிட்டு, “அரசி வஸ்தியின் அழகை மக்களுக்கும், உயர்குடி மனிதருக்கும் காண்பிக்கும்படி, அவளுக்கு அரச கிரீடமும் அணிவித்து எனக்குமுன் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். ஏனெனில் அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகுள்ளவளாக இருந்தாள். ஆனால், அந்த ஏவலாளர்கள் அரசனுடைய கட்டளையை அறிவித்தபோது, அரசி வஸ்தி வருவதற்கு மறுத்துவிட்டாள். இதனால் அரசன் சினங்கொண்டான். அவனுடைய கோபம் பற்றியெரிந்தது. சட்டம், நீதி ஆகியவற்றின் விவகாரங்களில், நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அரசனின் வழக்கமாயிருந்தது. எனவே அவன் காலங்களை விளங்கிக்கொண்ட ஞானிகளுடன் இதுபற்றி பேசினான். மேலும் அரசன் தனக்கு மிகவும் நெருங்கியவர்களாயிருந்த பெர்சிய, மேதிய நாடுகளின் ஏழு இளவரசர்களான மர்சேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோருடனும் பேசினான். இவர்கள் அரசனிடம் செல்வதற்கு விசேஷ அனுமதியுடையவர்களாகவும், அரசில் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அகாஸ்வேரு அரசன், “அதிகாரிகள் அவளுக்கு அறிவித்திருந்த அரச கட்டளைக்கு அவள் கீழ்ப்படியவில்லை. ஆகவே சட்டத்தின்படி அரசி வஸ்திக்கு என்ன செய்யப்படவேண்டும்?” என்று கேட்டான். அப்பொழுது மெமுகான் அரசனுக்கும், உயர்குடி மனிதருக்கும் முன்னிலையில், “அரசி வஸ்தி அரசனுக்கு மட்டுமல்ல, உயர்குடி மனிதருக்கும், அகாஸ்வேரு அரசனுடைய எல்லா நாடுகளிலுமுள்ள மக்களுக்கும் எதிராக அநியாயம் செய்திருக்கிறாள். அரசியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். எனவே அவர்கள் தங்கள் கணவர்களை உதாசீனம் செய்வார்கள். அதோடு, ‘அகாஸ்வேரு அரசன், அரசி வஸ்தியைத் தமக்கு முன்வரும்படி கட்டளையிட்டும் அவள் வரவில்லை’ என்றும் சொல்வார்கள். இந்த நாளிலேயே அரசியினுடைய நடத்தையைக் கேள்விப்பட்டிருக்கிற பெர்சிய, மேதிய நாட்டின் உயர்குலப் பெண்களும் இதேவிதமாகவே அரசனின் உயர்குடி மனிதர் எல்லோருடனும் நடந்துகொள்வார்கள். அவமதிப்புக்கும் எரிச்சலுக்கும் முடிவிருக்காது. “ஆகவே அரசருக்கு விருப்பமானால், வஸ்தி இனியொருபோதும் அரசன் அகாஸ்வேருவின் முன்பாக வரக்கூடாது என்று அரச கட்டளையை அறிவிப்பாராக. அதை மாற்றப்பட முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களிலும் எழுதி வைப்பாராக. அத்துடன் அவளைவிட மேலான ஒருத்திக்கு அவளுடைய அரச பதவியைக் கொடுப்பாராக. அவ்வாறு அரச கட்டளை அவருடைய பரந்த பிரதேசம் எங்கும் அறிவிக்கப்படும்போது, எல்லா பெண்களும், சிறியோரிலிருந்து பெரியோர்வரை தங்கள் கணவனை மதிப்பார்கள்” என்றான். அரசனுக்கும், அவனுடைய உயர்குடி மனிதருக்கும் இந்த ஆலோசனை பிரியமாயிருந்தது. எனவே மெமுகான் சொன்ன ஆலோசனையின்படியே அரசன் செய்தான். அப்படியே அவன் தனது அரசின் எல்லாப் பகுதிகளுக்கும், “ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தின்மேல் தலைவனாயிருக்க வேண்டும்” என்று கடிதங்களைத் துரிதமாய் அனுப்பினான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதற்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களுடைய சொந்த மொழியிலும் எழுதி அவர்களுக்கு அறிவித்தான். எஸ்தர் அரசியாதல் அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபின்பு, அவன் வஸ்தியையும், அவள் செய்ததையும், அவளுக்குத் தான் பிறப்பித்த ஆணையையும் நினைவிற்கொண்டான். அப்பொழுது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிகைகளைக் தேடிப்பார்ப்போம். சூசானிலுள்ள கோட்டைப் பட்டணத்திலிருக்கும் அந்தப்புரத்திற்கு அந்த அழகிய இளம்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படி, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட, எல்லா நாடுகளிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக. பெண்களுக்குப் பொறுப்பாயிருக்கிற, அரசனின் அதிகாரியான யேகாயின் பராமரிப்பின்கீழ் அப்பெண்கள் வைக்கப்படட்டும். அங்கு அவர்கள் அழகுபடுத்தப்படுவார்களாக. பின்பு அரசருக்குப் பிரியமாயிருக்கிற இளம்பெண், வஸ்திக்குப் பதிலாக அரசியாயிருக்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிரியமாயிருந்ததால், அதை அவன் நடைமுறைப்படுத்தினான். அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன். இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன்2:6 எபிரெயத்தில் எகொனியா அல்லது யோயாக்கீன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன். மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான். அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள். இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான். எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும். அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள். அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள். அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான். அரசன் எஸ்தருக்கான விருந்தாக, ஒரு பெரிய விருந்தை எல்லா உயர்குடி மனிதருக்கும், அதிகாரிகளுக்கும் கொடுத்தான். அவன் மாகாணங்கள் எங்கும்2:18 வேலையிலிருந்து விடுப்பு அல்லது வரி நிவாரணம் ஒரு விடுமுறை நாளை அறிவித்து, அரசனுடைய நிறைவின்படியே அன்பளிப்புகளை வழங்கினான். மொர்தெகாய் சதியை வெளிப்படுத்துதல் கன்னிப்பெண்கள் இரண்டாவது முறையாக கூடுகிறபோது, மொர்தெகாய் அரச வாசலில் உட்கார்ந்திருந்தான். மொர்தெகாய் தனக்குச் சொன்னபடியே எஸ்தர் தனது குடும்ப விபரத்தையும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதையும் இரகசியமாய் வைத்திருந்தாள். ஏனெனில், மொர்தெகாய் தன்னை வளர்க்கிறபோது செய்தபடியே அவள் அவனுடைய அறிவுறுத்தல்களைக் கைக்கொண்டாள். மொர்தெகாய், அரசனுடைய வாசலில் இருக்கும் நாட்களில், வாசலைக் காவல்காக்கும் அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேருவுடன் கோபமடைந்து, அவனைக் கொலைசெய்யச் சதி செய்தார்கள். ஆனால் மொர்தெகாய் இந்த சதியைப்பற்றி அறிந்து அரசி எஸ்தருக்குச் சொன்னான். அவள் அதை மொர்தெகாய் சொன்னதாகக் குறிப்பிட்டு, அரசனுக்கு அறிவித்தாள். அந்த அறிக்கை விசாரணை செய்யப்பட்டு, உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த இரண்டு அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள். இவை எல்லாம் அரசனின் முன்னிலையில் வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. யூதர்களை அழிக்க ஆமானின் சதி இவைகளுக்குப்பின் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானை, அகாஸ்வேரு அரசன் கனப்படுத்தி, மற்ற எல்லா உயர்குடி மக்களைவிடவும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான். அரச வாசலில் இருந்த அரச அதிகாரிகள் எல்லோரும், ஆமானுக்கு முழங்காற்படியிட்டு மரியாதை செலுத்தினார்கள். ஏனெனில், அரசன் அவனைக்குறித்து இவ்விதமாய்க் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் முழங்காற்படியிடவும் இல்லை, அவனுக்கு மரியாதை செலுத்தவும் இல்லை. அப்பொழுது அரச வாசலில் இருந்த அரசனின் அதிகாரிகள் மொர்தெகாயிடம், “நீ ஏன் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை?” என்று கேட்டார்கள். நாள்தோறும் அவர்கள் அவனுடன் இப்படிப் பேசினார்கள். ஆனால் அவனோ கேட்க மறுத்துவிட்டான். மொர்தெகாய் தன்னை ஒரு யூதன் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்ததால், அவனுடைய நடவடிக்கை சகித்துக்கொள்ளக்கூடியதோ என்று பார்ப்பதற்கு, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானுக்குச் சொன்னார்கள். மொர்தெகாய் முழங்காற்படியிடாததையும், தன்னைக் கனப்படுத்தாதையும் ஆமான் கண்டபோது, அவன் கோபமடைந்தான். ஆயினும், மொர்தெகாய் எந்த நாட்டைச் சேர்ந்தவனென்று அறிந்ததினால் அவனை மட்டும் கொல்ல அவன் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அகாஸ்வேருவின் அரசு முழுவதும் இருந்த மொர்தெகாயின் மக்களான எல்லா யூதர்களையும் அழிப்பதற்கே ஆமான் வழிதேடினான். அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தின் முதலாம் மாதமாகிய நிசான்3:7 இது மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி. மாதத்திலே, யூதர்களை அழிப்பதற்கான நாளையும், மாதத்தையும் தெரிவுசெய்வதற்கு ஆமான் முன்னிலையில் பூர் எனப்பட்ட சீட்டைப் போட்டார்கள். பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது3:7 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் சீட்டு விழுந்தது என்று இல்லை.. அதன்பின் ஆமான் அகாஸ்வேரு அரசனிடம், “உமது அரசின் எல்லா நாடுகளிலுமுள்ள மக்கள் கூட்டங்களில் சிதறடிக்கப்பட்டு பரந்து வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட இனமக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் மற்ற எல்லா மக்களுடைய வழக்கங்களிலுமிருந்து வேறுபட்டவையாக இருக்கின்றன. அவர்கள் அரசரின் சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறதில்லை. அவர்களைச் சகித்துக்கொண்டிருப்பது அரசரின் நலனுக்கு உகந்ததல்ல. அரசர் விரும்பினால், அவர்களை அழிப்பதற்கு கட்டளையிடட்டும். அவர்களை அழிக்கும் வேலையில் ஈடுபடும் மனிதருக்கென அரச திரவிய களஞ்சியத்திற்கு நானே பத்தாயிரம் தாலந்து வெள்ளிக்காசுகளைக் கொடுக்கிறேன்” என்றான். எனவே, அரசன் தனது முத்திரை மோதிரத்தைத் தனது விரலில் இருந்து களற்றி யூதர்களின் எதிரியும், ஆகாகியனும், அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானிடத்தில் கொடுத்தான். “பணத்தை வைத்துக்கொள்; உனக்கு விரும்பியபடி அந்த மக்களுக்குச் செய்” என்று அரசன் ஆமானிடம் சொன்னான். பின்பு முதலாம் மாதம் பதிமூன்றாம் நாளில் அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள்; அவர்கள், ஒவ்வொரு மாகாணத்துக்குரிய எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும், ஆமானின் கட்டளைகளையெல்லாம் எழுதினார்கள். பின் அரசனின் பிரதிநிதிகளுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், பல்வேறு மக்களின் உயர்குடி மக்களுக்கும் இதை அனுப்பினார்கள். இவை அகாஸ்வேரு அரசனின் பெயரிலேயே எழுதப்பட்டு, அவனுடைய சொந்த மோதிரத்தினாலேயே முத்திரையிடப்பட்டன. அரசனின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள் மூலம் ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதத்தின் பதிமூன்றாம் நாளிலே, எல்லா யூதர்களையும் கொல்லவேண்டுமென கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், இளைஞர், முதியவர், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட எல்லோரையும் ஒரேநாளிலேயே அழிக்கவும், கொல்லவும், நாசமாக்கவும், அவர்களுடைய பொருட்களைக் கொள்ளையிடவும் வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்பட இருந்தது. அப்படி வழங்கப்படும்போது, எல்லா நாடுகளும் அந்த நாளுக்கென ஆயத்தமாயிருக்கும்படி அவர்களுக்கு அது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. அரச கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் தூதுவர்கள் புறப்பட்டுப் போனார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டது. அரசனும் ஆமானும் குடிப்பதற்கு அமர்ந்தார்கள். ஆனால் சூசான் நகரமோ திகைப்பில் ஆழ்ந்திருந்தது. மொர்தெகாய் எஸ்தரைத் தூண்டுதல் இவைகளை எல்லாம் மொர்தெகாய் அறிந்தபோது, அவன் தனது உடைகளைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு பட்டணத்தின் நடுப்பகுதிக்குப் போனான். போகும்போது, மனங்கசந்து அழுது சத்தமாய் புலம்பிக்கொண்டு போனான். ஆயினும் அவன், அரச வாசல் வரைக்குமே போனான். ஏனெனில் துக்கவுடை உடுத்திய எவனும் உள்ளே போக அனுமதிக்கப்படுவதில்லை. கட்டளையும், அரசனின் உத்தரவும் போயிருந்த ஒவ்வொரு மாகாணத்திலும் யூதர்கள் மத்தியில் பெரிய துக்கம் ஏற்பட்டது. அவர்கள் உபவாசித்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். அநேகர் துக்கவுடை உடுத்தி சாம்பலில் கிடந்தார்கள். எஸ்தரின் தோழிகளும், பணிவிடைக்காரர்களும் அவளிடம் வந்து மொர்தெகாயைப் பற்றிச் சொன்னபோது, அரசி மிகவும் துக்கமடைந்தாள். அவனுடைய துக்கவுடைக்குப் பதிலாக உடுத்திக்கொள்வதற்கு உடைகளை அவள் அனுப்பியபோது அவன் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது எஸ்தர், தனது ஏவலாளனாய் இருந்த அரச அதிகாரிகளில் ஒருவனான ஆத்தாகை அழைத்தாள். அவள் மொர்தெகாயின் துக்கம் என்ன என்றும், அதன் காரணம் என்ன என்றும் அறிந்துவர அவனுக்குக் கட்டளையிட்டாள். அப்படியே ஆத்தாகு அரச வாசலுக்கு முன்பாகவுள்ள நகரத்தின் திறந்த சதுக்கத்தில் இருந்த மொர்தெகாயிடம் போனான். மொர்தெகாய் தனக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் அவனிடம் சொன்னான். அத்துடன் யூதர்களை அழிப்பதற்காக அரச திரவிய களஞ்சியத்திற்கு ஆமான் கொடுப்பதாகச் சொன்ன பணத்தின் சரியான தொகையையும் அறிவித்தான். அத்துடன் எஸ்தருக்குக் காண்பித்து விளக்கும்படி, சூசானில் வெளியிடப்பட்டிருந்த யூதர்களை ஒழிப்பதற்கான கட்டளையின் ஒரு பிரதியையும் கொடுத்தான். அரசனின் முன்னிலையில் எஸ்தர் போய், இரக்கத்திற்காக மன்றாடி, தனது மக்களுக்காகக் கெஞ்சும்படி அவளைத் தூண்டவேண்டுமென்று மொர்தெகாய் அவனுக்குச் சொன்னான். ஆத்தாகு திரும்பிப்போய் மொர்தெகாய் சொன்னதை எஸ்தருக்கு அறிவித்தான். அப்பொழுது எஸ்தர் ஆத்தாகுவிடம், மொர்தெகாயினிடத்தில் போய்ச் சொல்லும்படி அறிவுறுத்திச் சொன்னதாவது: “அரசனால் அழைக்கப்படாமல் அவருடைய உள் மண்டபத்துக்குள் அவரை நெருங்கி வருகிற, எந்த ஆணையோ பெண்ணையோ குறித்து, அரச சட்டம் ஒன்று உண்டு. அப்படி நெருங்கி வருகிற அந்த ஆள் கொல்லப்படவேண்டும் என்பதே அந்தச் சட்டம். அரசரின் எல்லா அதிகாரிகளும் அரசருடைய மாகாணத்திலுள்ள மக்களும் இதை அறிவார்கள். அரசன் தனது தங்கச் செங்கோலை அந்த ஆளிடம் நீட்டி, அவனுடைய உயிரைத் தப்புவித்தால் மட்டுமே அந்த ஆள் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவான். நானோ அரசனிடம் போகும்படி அழைக்கப்பட்டு முப்பது நாட்கள் ஆகிவிட்டன” என்றாள். எஸ்தரின் வார்த்தைகள் மொர்தெகாய்க்கு அறிவிக்கப்பட்டபோது, மொர்தெகாய் ஆத்தாகுவிடம் சொல்லியனுப்பிய மறுமொழியாவது: “நீ அரசரின் வீட்டில் இருப்பதால், எல்லா யூதர்களிலுமிருந்து நீ மட்டும் தப்பிக்கொள்வாய் என்று எண்ணாதே. நீ இந்தக் காலத்தில் மவுனமாய் இருந்தால், யூதருக்கு விடுதலையும், மீட்பும் இன்னொரு இடத்திலிருந்து வரும். ஆனால் நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். இப்படிப்பட்ட ஒரு காலத்திற்காகத்தான், நீ அரச பதவிக்கு வந்திருக்கிறாயோ என்று யாருக்குத் தெரியும்.” அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும், “நீர் போய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுகூட்டி எனக்காக உபவாசம் பண்ணும். இரவும் பகலுமாக மூன்று நாட்களுக்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம். உங்களோடு நானும் எனது தோழிகளும் உபவாசம் பண்ணுவோம். இதைச் செய்து முடித்தபின் சட்டத்திற்கு எதிராய் இருந்தாலும் நான் அரசனிடம் போவேன். நான் அழிவதானால் அழிவேன்” என்று சொன்னாள். அப்படியே மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தரின் அறிவுறுத்தலின்படியெல்லாம் செய்துமுடித்தான். அரசனிடம் எஸ்தரின் வேண்டுகோள் மூன்றாம் நாளிலே எஸ்தர் தனது அரச உடைகளை உடுத்திக்கொண்டு அரசனின் மண்டபத்துக்கு முன்பாக அரண்மனையின் உள்முற்றத்தில் நின்றாள். அரசன் வாசலை நோக்கியபடி மண்டபத்திலுள்ள அரச அரியணையில் அமர்ந்திருந்தான். அரசி எஸ்தர் உள்முற்றத்தில் நிற்பதை அவன் கண்டபோது, அவள்மேல் மகிழ்ச்சிகொண்டு தன்னுடைய கையிலிருந்த தங்கச் செங்கோலை அவளை நோக்கி நீட்டினான். எனவே எஸ்தர் கிட்டப்போய் அந்த செங்கோலின் நுனியைத் தொட்டாள். அப்பொழுது அரசன் அவளிடம், “எஸ்தர் அரசியே, என்ன வேண்டும்? உனது வேண்டுகோள் என்ன? அரசில் பாதியாயிருந்தாலுங்கூட அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான். அதற்கு எஸ்தர், “அரசருக்கு அது பிரியமாயிருந்தால், நான் அரசருக்காக ஆயத்தம் செய்திருக்கிற விருந்துக்கு அரசர் இன்று ஆமானையும் கூட்டிக்கொண்டு வருவாராக” என்றாள். அப்பொழுது அரசன், “எஸ்தர் கேட்டதை நாம் செய்யும்படி, ஆமானை உடனடியாக அழைத்து வாருங்கள்” என்றான். அப்படியே, எஸ்தர் ஆயத்தப்படுத்தியிருந்த விருந்துக்கு, அரசனும் ஆமானும் போனார்கள். அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அரசன் திரும்பவும் எஸ்தரிடம், “இப்பொழுது உன் விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உன் வேண்டுகோள் என்ன? அது அரசின் பாதியாயிருந்தாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றான். அப்பொழுது எஸ்தர், “எனது விண்ணப்பமும், எனது வேண்டுகோளும் இதுதான்: அரசர் எனக்குத் தயவு காண்பித்து, எனது விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கும், எனது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கும் விருப்பமுடையவராக இருந்தால், அரசரும் ஆமானும் நான் நாளைக்கும் ஆயத்தம் செய்யப்போகிற விருந்துக்கு வருவார்களாக. அப்பொழுது நான் அரசனின் கேள்விக்குப் பதிலளிப்பேன்” என்றாள். மொர்தெகாய்க்கு எதிராக ஆமானின் கோபம் அந்த நாளில் ஆமான் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் புறப்பட்டுப் போனான். ஆனால் அரசரின் வாசலில் இருந்த மொர்தெகாயைக் கண்டு, மொர்தெகாய் தனக்கு முன்பாக எழுந்திராமலும், தனக்குப் பயப்படாமலும் இருந்ததை கவனித்தபோது, அவன் மொர்தெகாய்க்கு விரோதமாக கடுங்கோபம் கொண்டான். ஆயினும், ஆமான் தன்னை அடக்கிக்கொண்டு, வீட்டுக்குப் போனான். அவன் தனது நண்பர்களையும், தன் மனைவி சிரேஷையும் கூடிவரச் செய்தான். ஆமான் அவர்களிடம் தனது மிகுந்த செல்வத்தைக் குறித்தும், தனது மகன்களைக் குறித்தும், அரசன் தன்னைக் கனப்படுத்திய எல்லா விதங்களைப் பற்றியும், அவர் எவ்விதமாய் தன்னை மற்ற உயர்குடி மனிதருக்கும் அதிகாரிகளுக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறார் என்பது பற்றியும் பெருமையாய் பேசினான். ஆமான் தொடர்ந்து, “இதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் கொடுத்த விருந்துக்கு அரசனுடன் சேர்ந்து போவதற்கு அவள் அழைத்த ஒரே ஆள் நான் மட்டுமே. அவள் நாளைக்கும் அரசருடன் என்னை அழைத்திருக்கிறாள். ஆயினும் அரச வாசலில் இருக்கும் யூதனான அந்த மொர்தெகாயைக் காணும்போது, இது எல்லாம் எனக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை” என்றான். அவனுடைய மனைவி சிரேஷும், அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரத்தைச் செய்து, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கிலிடும்படி, அரசனிடம் கேட்டுக்கொள்ளும். பின்பு அரசனுடன் விருந்துக்குப் போய் சந்தோஷமாய் இரும்” என்றார்கள். இந்த யோசனை ஆமானுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் தூக்கு மரத்தைச் செய்துவைத்தான். மொர்தெகாய் கனப்படுத்தப்படுதல் அன்று இரவு அரசனால் நித்திரை செய்ய முடியவில்லை, எனவே அவன் தனது அரசாட்சியின் நிகழ்வுகளின் பதிவேடாகிய வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டுவந்து தனக்கு வாசித்துக் காட்டும்படி கட்டளையிட்டான். அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது அரசன், “இதற்காக என்ன கனமும், மதிப்பும் மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுடைய பணிவிடைக்காரர், “அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை” என்று சொன்னார்கள். அரசன், “முற்றத்தில் நிற்பது யார்?” என்று கேட்டான். அதேவேளையில் ஆமான் தான் நிறுத்தியிருந்த தூக்கு மரத்தில் மொர்தெகாயைத் தூக்கிலிடுவது பற்றிப் பேசுவதற்கு அரண்மனையின் வெளிமுற்றத்திற்குள் வந்திருந்தான். அரசனின் ஏவலாட்கள், “முற்றத்தில் ஆமான் நின்று கொண்டிருக்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டான். ஆமான் வந்தபோது, அரசன் அவனிடம், “அரசன் கனம்பண்ண விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யப்படவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது ஆமான், “என்னைத்தவிர வேறு யாரை அரசன் கனம்பண்ண விரும்புவான்” என தனக்குள்ளே நினைத்தான். அதனால் ஆமான் அரசனிடம், “அரசன் கனம்பண்ண விரும்பும் மனிதனுக்கு செய்யப்பட வேண்டியதாவது: உமது பணிவிடைக்காரர் அரசர் அணியும் அரச உடையையும், தலையில் வைக்கப்பட்டிருக்கும் அரச கிரீடமும், அரசர் சவாரி செய்யும் குதிரையையும் கொண்டுவரட்டும். பின்பு அந்த உடையும், குதிரையும் மிக உயர்ந்த பிரபுக்களில் ஒருவருடைய கையில் கொடுக்கப்படட்டும். அரசர் கனம்பண்ணுகிற மனிதனுக்கு அவர்கள் அந்த உடையை அணிவித்து, அவனைக் குதிரையின்மேல் அமர்த்தி, பட்டணத்துத் தெருக்கள் எங்கும் வழிநடத்தட்டும். அப்பொழுது, ‘அரசர் கனம்பண்ணும் மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே’ என்று அவனுக்கு முன்பாகப் பிரசித்தப்படுத்தட்டும்” என்றான். அப்பொழுது அரசன், “உடனடியாகப்போய் உடையையும், குதிரையையும் கொண்டுவந்து, நீ கூறியபடியே அரச வாசலில் இருக்கிற யூதனான மொர்தெகாய்க்குச் செய். நீ சிபாரிசு செய்த எதையும் செய்யாமல் விடவேண்டாம்” என்று ஆமானுக்குக் கட்டளையிட்டான். எனவே ஆமான் உடையையும், குதிரையையும் பெற்றுக்கொண்டு, மொர்தெகாய்க்கு உடையை உடுத்தி அவனைக் குதிரையில் அமர்த்தி, பட்டணத்தின் தெருக்களெங்கும் நடத்திக் கொண்டுபோனான். அவன், “அரசன் கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே” என்று அவனுக்கு முன்பாக அறிவித்தான். அதன்பின் மொர்தெகாய் அரசனின் வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆமானோ துக்கத்துடன் தலை கவிழ்ந்து கொண்டு தன் வீட்டுக்கு விரைந்து சென்றான். ஆமான் தன் மனைவி சிரேஷிடமும், தன் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொன்னான். அவனுடைய ஆலோசகர்களும், அவனுடைய மனைவி சிரேஷும் அவனிடம், “மொர்தெகாய்க்கு முன்பாக உமது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அவன் ஒரு யூத நாட்டைச் சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு விரோதமாக உம்மால் நிற்கமுடியாது. நீர் நிச்சயமாகவே வீழ்ச்சியடைவீர்” என்றார்கள். அவர்கள் இன்னும் அவனுடன் பேசிக்கொண்டு நிற்கையில் அரசனின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் ஆயத்தப்படுத்தியிருந்த விருந்துக்கு ஆமானை விரைவாய் அழைத்துச் சென்றார்கள். ஆமான் தூக்கிலிடப்படுதல் அப்படியே அரசனும், ஆமானும் எஸ்தர் அரசியுடன் விருந்து உண்ணப் போனார்கள். அந்த இரண்டாம் நாளில் அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில், அரசன் திரும்பவும், “எஸ்தர் அரசியே, உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது அரசில் பாதியாயிருந்தாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான். அப்பொழுது எஸ்தர் அரசி விடையாக, “அரசே உம்மிடம் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமக்குப் பிரியமாயிருந்தால் என் உயிரை எனக்குத் தாரும், இதுவே எனது விண்ணப்பம். எனது மக்களைத் தப்புவியும், இதுவே எனது வேண்டுகோள். ஏனெனில் நானும் எனது மக்களும் அழிவுக்கும், கொலைக்கும், நாசத்திற்கும் விற்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஆணும் பெண்ணும் அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட நான் பேசாமல் இருந்திருப்பேன். ஏனெனில், அப்படியான ஒரு துன்பம் அரசரை கஷ்டப்படுத்துவதற்கு ஏற்ற காரணமாய் இருந்திருக்காது” என்றாள். அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடம், “யார் அவன்? இப்படியான காரியத்தைச் செய்யத் துணிந்த அவன் எங்கே?” என்று கேட்டான். அதற்கு எஸ்தர், “அந்த விரோதியும், பகைவனும் இந்த கொடிய ஆமானே” என்றாள். அப்பொழுது ஆமான், அரசனுக்கும் அரசிக்கும் முன்பாகத் திகிலடைந்தான். அரசன் கடுங்கோபத்துடன் எழுந்து தனது திராட்சை இரசத்தை வைத்துவிட்டு, வெளியே அரண்மனைத் தோட்டத்துக்குப் போனான். ஆனால் ஆமான், தனது தலைவிதியை அரசன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான் என உணர்ந்து, தனது உயிருக்காக எஸ்தர் அரசியிடம் மன்றாடும்படி அங்கேயே நின்றான். அரண்மனைத் தோட்டத்திலிருந்து அரசன் விருந்து மண்டபத்துக்குத் திரும்பிவந்தபோது, எஸ்தர் சாய்ந்திருந்த இருக்கையின்மேல் ஆமான் விழுவதைக் கண்டான். அப்பொழுது அரசன், “அரசி என்னுடன் வீட்டில் இருக்கும்போதே இவன் அவளைப் பலாத்காரம் பண்ணப் பார்க்கிறானோ?” என்றான். இந்த வார்த்தை அரசனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உடனேயே ஆமானுடைய முகத்தை மூடினார்கள். அப்பொழுது அரசனுக்கு ஏவல் வேலைசெய்த அதிகாரிகளில் ஒருவனான அற்போனா என்பவன் அரசனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரம் ஆமானின் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிறது. அவன் அதை அரசனுக்கு உதவிசெய்வதற்காகப் பேசிய மொர்தெகாய்க்கென செய்துவைத்திருந்தான்” என்றான். அப்பொழுது அரசன், “அவனை அதில் தூக்கிப் போடுங்கள்” என்றான். அப்படியே அவர்கள், மொர்தெகாய்க்காக ஆமான் ஆயத்தம் பண்ணிய தூக்குமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது. யூதர்களுக்குச் சார்பான அரசனின் கட்டளை அந்த நாளிலேயே அகாஸ்வேரு அரசன் யூதர்களின் எதிரியான ஆமானின் சொத்தை எஸ்தர் அரசிக்குக் கொடுத்தான். மொர்தெகாயும் அரசனின் முன்னிலையில் வந்தான். ஏனெனில் அவன் தனது உறவினன் என்று எஸ்தர் அரசனுக்குச் சொல்லியிருந்தாள். அரசன் ஆமானிடமிருந்து தான் எடுத்த, தனது முத்திரை மோதிரத்தை மொர்தெகாய்க்குக் கொடுத்தான். ஆமானின் சொத்துக்குப் பொறுப்பாக எஸ்தர் மொர்தெகாயை நியமித்தாள். எஸ்தர் திரும்பவும் அரசனின் காலில் விழுந்து அழுது மன்றாடினாள், யூதருக்கு எதிராக ஆகாகியனான ஆமான் திட்டமிட்டிருந்த கொடிய திட்டத்திற்கு ஒரு முடிவு கொண்டுவரும்படி அவனை கெஞ்சி வேண்டினாள். அப்பொழுது அரசன் எஸ்தரிடம் தங்கச் செங்கோலை நீட்டினான்; அவள் எழுந்து அரசனுக்கு முன் நின்றாள். அவள், “அரசனுக்கு என்மேல் விருப்பமிருந்தால், நான் சொல்லப்போவது பிரியமாயிருந்தால், இதுவே செய்யத்தக்கது என அவர் நினைத்தால் அவர் எனக்குத் தயவு காண்பிப்பாராக. ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன் ஆமான், அரசர் தம்முடைய எல்லா மாகாணங்களிலுமுள்ள யூதர்களை அழிப்பதற்குத் திட்டமிட்டு எழுதிய கடிதங்களை ரத்துச் செய்து, உத்தரவு ஒன்றை எழுதுவாராக. எனது மக்கள்மேல் பேரழிவு வருவதைக் கண்டு என்னால் எப்படி அதைத் தாங்கமுடியும். எனது குடும்பத்தின் அழிவைக் கண்டு அதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்” என்றாள். அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடமும், யூதனான மொர்தெகாயிடமும், “யூதர்களை ஆமான் தாக்கியதினால் அவனுடைய சொத்தை நான் எஸ்தருக்குக் கொடுத்தேன். ஆமானையும் தூக்கு மரத்தில் தூக்கிலிட்டார்கள். இப்பொழுதும் உங்களுக்கு நலமாய்க் காண்கிறபடியே யூதர்களின் சார்பாக அரசனின் பெயரால் இன்னொரு கட்டளையை எழுதி, அரசனின் மோதிரத்தினால் அதை முத்திரையிடுங்கள். ஏனெனில் அரசனின் பெயரால் எழுதப்பட்டு, அவருடைய மோதிரத்தால் முத்திரையிடப்பட்ட எந்த ஆவணமும் ரத்துச் செய்யப்பட முடியாது” என்றான். உடனடியாக மூன்றாம் மாதமாகிய சீவான் மாதம் இருபத்தி மூன்றாம் நாளிலே அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யூதர்களுக்கும், அரச பிரதிநிதிகளுக்கும், ஆளுநர்களுக்கும், இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை8:9 எத்தியோப்பியாவரை அல்லது கூஷ் பரந்திருந்த நூற்று இருபத்தேழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மொர்தெகாயின் உத்தரவுகளையெல்லாம் எழுதினார்கள். இந்த உத்தரவுகள் ஒவ்வொரு நாடுகளின் எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும் எழுதப்பட்டன. அத்துடன் யூதர்களுக்கும் அவர்களுடைய சொந்த எழுத்திலும், மொழியிலும் எழுதப்பட்டன. மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் பெயரால் எழுதி அந்தக் கடிதங்களை அரசனின் மோதிரத்தினால் முத்திரையிட்டு, குதிரையில் செல்லும் தூதுவர் மூலமாய் அனுப்பினான். அவர்கள் அரசனுக்கென வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாய்ப் போனார்கள். அரசனின் கட்டளை, எல்லாப் பட்டணங்களிலுமிருந்த யூதர்கள் ஒன்றாய்க் கூடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை வழங்கியது. அவர்களையும், அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையாவது, மாகாணத்தையாவது சேர்ந்த எந்தவொரு ஆயுதம் தாங்கிய படையையும், அழிக்கவும், கொல்லவும், நாசப்படுத்தவும் உரிமை வழங்கியது. அத்துடன் தங்கள் பகைவரின் சொத்தைக் கொள்ளையிடவும் உரிமை வழங்கியது. அகாஸ்வேரு அரசனின் எல்லா மாகாணங்களிலும் யூதர்கள் இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாள், ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளாயிருந்தது. அந்த கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்படும்படி திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நாளில் தங்களுடைய பகைவர்களுக்கும் பதில் செய்ய யூதர்கள் ஆயத்தமாயிருக்கும்படி எல்லா நாட்டையும் சேர்ந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அரச குதிரைகளின்மேல் போய்க்கொண்டிருந்த தூதுவர்கள் அரசனின் கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் விரைந்து சென்றார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலும் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது. யூதர்களின் வெற்றி மொர்தெகாய் நீலமும், வெள்ளையுமான அரச உடைகளை உடுத்திக்கொண்டு, பெரிய தங்க மகுடத்தையும், ஊதாநிற மென்பட்டு உடையையும் அணிந்து, அரசனின் முன்னிலையிலிருந்து புறப்பட்டான். சூசான் நகரம் மகிழ்ச்சியின் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஏனெனில், யூதர்களுக்கு அது மகிழ்ச்சியும், சந்தோஷமும், குதூகலமும், மதிப்பும் நிறைந்த ஒரு காலமாயிருந்தது. அரசனுடைய கட்டளைப்போன ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு பட்டணத்திலும் உள்ள யூதர்கள் மத்தியில் சந்தோஷமும், குதூகலமும் காணப்பட்டன. அவர்கள் விருந்துண்டு அதைக் கொண்டாடினார்கள். யூதர்களைப் பற்றிய பயம் பிற நாட்டு மக்களுக்கு இருந்ததால், அவர்களில் அநேகர் யூதரானார்கள். ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளில், அரசனால் கட்டளையிடப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளிலே யூதர்களின் பகைவர்கள் யூதர்களை மேற்கொள்ளும்படி எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் மாறி தங்களைப் பகைத்தவர்களுக்கு மேலாக யூதர்களின் கை ஓங்கியது. யூதர்கள் தங்களை அழிக்கும்படி தேடியவர்களைத் தாக்குவதற்காக, அகாஸ்வேரு அரசனின் எல்லா நாடுகளிலும் உள்ள தங்கள் பட்டணங்களில் ஒன்றுகூடினார்கள். அவர்களை எதிர்த்து ஒருவனாலும் நிற்க முடியவில்லை. ஏனெனில், மற்ற எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவர்களைக் குறித்துப் பயமடைந்திருந்தார்கள். நாடுகளின் எல்லா உயர்குடி மனிதரும், அரச பிரதிநிதிகளும், ஆளுநர்களும், அரசனின் நிர்வாகிகளும் யூதர்களுக்கு உதவி செய்தார்கள். ஏனெனில், மொர்தெகாயைப் பற்றிய பயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது. மொர்தெகாய் அரண்மனையில் முதன்மை பெற்றிருந்தான். அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது. அவன் அதிகம் அதிகமாய் வலிமையடைந்தான். யூதர்கள் தங்கள் எல்லாப் பகைவர்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தி, அவர்களைக் கொன்றொழித்து, தங்களை வெறுத்தவர்களுக்கு தாங்கள் விரும்பியபடி செய்தார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதர்களை யூதர்கள் கொன்றொழித்தார்கள். அத்துடன் அவர்கள் பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்ஸாதா ஆகியோரையும் கொன்றார்கள். இந்த பத்துப்பேரும் யூதர்களின் பகைவனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானின் மகன்களாவர். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடத் தங்கள் கைகளை நீட்டவில்லை. சூசான் கோட்டைப் பட்டணத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்த நாளிலே அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர் சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதரைக் கொன்று ஒழித்துவிட்டார்கள். ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள். அரசனின் மீதியான மாகாணங்களிலும் அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ, இப்பொழுதும் உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது உனக்கு வழங்கப்படும்” என்றான். அதற்கு எஸ்தர், “அரசருக்குப் பிரியமானால், இந்தக் கட்டளையை நாளைக்கும் செயல்படுத்த சூசானிலிருக்கிற யூதர்களுக்கு அனுமதிகொடும். ஆமானின் பத்து மகன்களின் உடல்களும் தூக்கு மரத்தில் தொங்கவிடப்படட்டும்” என்றாள். எனவே அரசன் இவ்விதம் செய்யப்படும்படி கட்டளையிட்டான். சூசானில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் ஆமானின் பத்து மகன்களின் உடல்களையும் தொங்கவிட்டார்கள். ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளிலே சூசானிலுள்ள யூதர்கள் எல்லாம் ஒன்றாய் கூடிவந்து, சூசானில் முந்நூறு மனிதர்களைக் கொன்றார்கள். ஆனாலும் கொள்ளையிடும்படி அவர்கள் தங்கள் கைகளை நீட்டவில்லை. இதற்கிடையில் அரசனின் மாகாணங்களிலுள்ள மற்ற யூதர்கள் தங்களைப் பாதுகாக்கும்படிக்கும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களை விடுவிக்கும்படிக்கும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள். ஆனால் கொள்ளையிடும்படி தங்கள் கைகளை நீட்டவில்லை. இது ஆதார் மாதத்தில் பதிமூன்றாம் நாளிலே நடந்தது. அடுத்தநாள் அவர்கள் ஓய்ந்திருந்து அந்த நாளை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். ஆயினும் சூசானிலிருந்த யூதர்கள் பதிமூன்றாம் நாளிலும், பதினான்காம் நாளிலும் சபைகூடினார்கள். பின்பு பதினைந்தாம்நாள் ஓய்ந்திருந்து அதை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். அதனால்தான் கிராமங்களில் வாழும் கிராமப்புற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளை, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கின்ற, விருந்துண்டு மகிழும் ஒரு நாளாகக் கொண்டாடுகிறார்கள். பூரீம் கொண்டாட்டம் மொர்தெகாய் இந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்து, அருகிலும் தூரத்திலும் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்கள் எங்குமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பினான். அதில் வருடந்தோறும் ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைக் கொண்டாடும்படி கேட்கப்பட்டிருந்தது. இதை யூதர்கள் தங்கள் பகைவரிடமிருந்து விடுதலை பெற்ற காலமாகவும், அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறிய மாதமாகவும், தங்களுடைய அழுகை கொண்டாட்டமாக மாறிய நாளாகவும் கொண்டாடும்படி எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்களை விருந்துண்டு மகிழும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் உணவுகளை அன்பளிப்பாகக் கொடுக்கும் நாட்களாகவும், ஏழைகளுக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கும் நாட்களாகவும் கைக்கொள்ளும்படி எழுதினான். எனவே யூதர்கள், மொர்தெகாய் தங்களுக்கு எழுதியபடிச் செய்து, தாங்கள் தொடங்கியிருந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்துசெய்ய சம்மதித்தார்கள். ஏனெனில், எல்லா யூதர்களின் பகைவனான, ஆகாகியன் அம்மெதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை அழிப்பதற்கென அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டிருந்தான். அத்துடன் அவர்களுடைய அழிவுக்காகவும், நாசத்துக்காகவும் அவன் பூர் எனப்படும் சீட்டையும் போட்டிருந்தான். ஆனால் இந்தச் சதி அரசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, யூதருக்கு எதிராக ஆமான் திட்டமிட்டிருந்த அந்த கொடிய சதித்திட்டம் அவனுடைய தலையின் மேலேயே திரும்பிவரும்படி, அரசன் ஒரு எழுத்து மூலமான உத்தரவைப் பிறப்பித்தான். அத்துடன் ஆமானும், அவன் மகன்களும் தூக்கு மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். ஆகவேதான் இந்த நாட்கள் பூர் என்ற சொல்லிலிருந்து பூரீம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கடிதத்தில் எழுதப்பட்ட எல்லாவற்றிற்காகவும், அவர்கள் கண்டவற்றிற்காகவும், அவர்களுக்கு நிகழ்ந்தவற்றிற்காகவும், யூதர்கள் ஒரு வழக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டார்கள். தாங்களும், தங்கள் சந்ததிகளும், தங்களுடன் இணைந்துகொள்ளும் எல்லோருடனும் வருடந்தோறும் இந்த இரண்டு நாட்களையும் நியமிக்கப்பட்ட காலத்திலேயும், விபரிக்கப்பட்ட விதத்திலேயும் தவறாது கைக்கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பட்டணத்திலும் இருக்கும், ஒவ்வொரு வழித்தோன்றலும் ஒவ்வொரு குடும்பத்தாரும் இந்த நாளை நினைவிற்கொண்டு கொண்டாடவேண்டும். இந்த பூரீம் நாட்கள் யூதர்களால் கொண்டாடப்படுவது ஒருபோதும் நின்று போகக்கூடாது. அவற்றைப் பற்றிய ஞாபகமும், அவர்களுடைய வழித்தோன்றலிலிருந்து அற்றுப்போகக் கூடாது என்றும் தீர்மானித்தார்கள். எனவே அபிகாயிலின் மகளான எஸ்தர் அரசி, யூதனான மொர்தெகாயுடன் சேர்ந்து, பூரிமைப் பற்றிய இந்த இரண்டாவது கடிதத்தை உறுதிப்படுத்தும்படி முழு அதிகாரத்துடனும் எழுதினாள். மொர்தெகாய் அகாஸ்வேருவின் அரசின் நூற்றிருபத்தேழு மாகாணங்களிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் நல்லெண்ணத்தையும், நிச்சயத்தையும் தெரிவிக்கும் கடிதங்களை அனுப்பினான். யூதனான மொர்தெகாயும், எஸ்தர் அரசியும் யூதர்களுக்கும் அவர்களுடைய சந்ததிகளுக்கும், அவர்கள் உபவாசித்து, துக்கங்கொண்டாட வேண்டிய காலத்தை நிலை நாட்டியது போல, இந்த பூரீம் நாட்களையும் நிலைநாட்டுவதற்குக் கட்டளையிட்டிருந்தார்கள். எஸ்தரின் கட்டளை பூரிமைப் பற்றிய ஒழுங்குவிதிகளை உறுதிப்படுத்தியது. அது புத்தகத்தில் எழுதப்பட்டது. மொர்தெகாயின் மேன்மை அகாஸ்வேரு அரசன் அவனுடைய பேரரசு எங்கும், அதன் தூரமான எல்லைகள் வரைக்கும் வரி விதித்தான். மொர்தெகாயின் அதிகாரமும் வல்லமையுள்ள எல்லாச் செயல்களும், அரசன் அவனை மேன்மைப்படுத்தி அவனுக்குக் கொடுத்த அவனுடைய மேன்மையின் முழு விபரமும் பெர்சிய, மேதிய அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டிருக்கின்றன. யூதனான மொர்தெகாய் மேன்மையில் அரசனுக்கு அடுத்ததாய் இருந்தான். அவன் தனது மக்களின் நலனுக்காக உழைத்ததினாலும், எல்லா யூதர்களுடைய முன்னேற்றத்துக்காகப் பேசியதினாலும் அவன் யூதர்கள் மத்தியிலும் முதன்மை பெற்றவனாயிருந்தான். அவன் தன் சகோதரரான மற்ற யூதர்களினால் உயர்வாய் மதிக்கப்பட்டவனுமாயிருந்தான்.