- Biblica® Open Indian Tamil Contemporary Version
எபேசியர்
பவுல் எபேசியருக்கு எழுதின கடிதம்
எபேசியர்
எபே.
பவுல் எபேசியருக்கு எழுதின கடிதம்
இறைவனுடைய சித்தத்தினாலே, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய், எபேசு பட்டணத்தில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
இறைவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமாயிருக்கிறவருக்கு துதி உண்டாவதாக. அவர் பரலோகத்தின் உயர்வான இடங்களில் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நம்மை கிறிஸ்துவில் ஆசீர்வதித்திருக்கிறார். நாம் இறைவனுடைய பார்வையிலே, பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்கும்படி, உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவர் நம்மை கிறிஸ்துவில் தெரிந்துகொண்டார். இறைவன் தம்முடைய அன்பின் நிமித்தமாக, இயேசுகிறிஸ்துவின் மூலமாய் சொந்த பிள்ளைகளாக்கிக்கொள்ள நம்மை முன்குறித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். இறைவன் தமது திட்டத்தின் இரகசியத்தை நமக்குத் தெரியப்படுத்தினார். அது அவருடைய விருப்பத்தின்படி, தாம் கிறிஸ்துவில் செய்யவிருந்த நோக்கமாயிருந்தது. பரலோகத்திலும் பூமியிலுமுள்ள எல்லாவற்றையும், கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்த இரகசியம். காலங்கள் அவற்றின் நிறைவை அடையும்போது, இறைவன் அதை நிறைவேற்றுவார்.
தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் கிறிஸ்துவில் முதலாவதாக நம்பிக்கை கொண்டிருக்கிற நாம், அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாய் இருக்கும்படி, இறைவன் விரும்பினார். அப்படியே நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிற நற்செய்தியைக் கேட்டபோது, கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களானீர்கள். அதை நீங்கள் விசுவாசித்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே, அவரில் முத்திரை பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு இருக்கிறீர்கள். இறைவனுக்கு உரிமையானவர்களான நாம் மீட்கப்படும் வரைக்கும், நமக்குரிய உரிமைச்சொத்தை அடைவோம் என்பதற்கு இந்தப் பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் நிமித்தம் அவரைப் புகழ்வோமாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
இக்காரணத்தினாலே, கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் வைத்திருந்திருக்கிற விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும் நான் கேள்விப்பட்டதிலிருந்து, என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் இறைவனை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ளும்படி, அவர் உங்களை ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும்படி மன்றாடுகிறேன். இதற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இறைவனாயிருக்கிற மகிமையுள்ள பிதாவை நோக்கி மன்றாடுகிறேன். உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்ததன் எதிர்பார்ப்பை அறிந்து நீங்கள் பரிசுத்தவான்களில் அவருடைய மகிமையான உரிமைச்சொத்தின் நிறைவைக் குறித்தும் தெரிந்துகொள்வீர்கள். விசுவாசிக்கிறவர்களாகிய நமக்கு இறைவன் கொடுத்திருக்கிற அளவிடமுடியாத பெரிதான வல்லமையைக்குறித்தும் அறிந்துகொள்வீர்கள். இந்த வல்லமை நம்மிடம் செயலாற்றுகிற அவருடைய ஆற்றல் மிகுந்த சக்தியைப் போலவே இயங்குகிறது. இறைவன் இந்த வல்லமையையே, கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலதுபக்கத்தில் உட்காரச்செய்து கிறிஸ்துவில் செயல்படுத்தினார். அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார்.
கிறிஸ்துவிற்குள் உயிர்ப்பிக்கப்படுதல்
நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள், இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு ஆகாயத்து ஆட்சியின் அதிகாரிக்கு கீழ்ப்படிந்து நடந்தீர்கள். அந்த தீய ஆவியே இப்பொழுது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது. ஒருகாலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்தோம். நமது மாம்சத்திலிருந்து எழும் இச்சைகளைத் தீர்த்துக்கொள்கிறவர்களாகவும், மாம்சத்திலிருந்து எழும் ஆசைகளின்படியும் யோசனைகளின்படியும், நடக்கிறவர்களாகவும் இருந்தோம். மற்றவர்களைப் போலவே, இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம். ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள இறைவன், நமக்கு மிகுந்த அன்பு காண்பித்தார். எப்படியென்றால், நாம் மீறுதல்களினால் இறந்தவர்களாய் இருந்தபோதும், நம்மை கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். இறைவனுடைய கிருபையினாலேயே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இறைவன் கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிருடன் எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மைத் தம்முடனே பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார். இனிவரும் காலங்களிலும், கிறிஸ்து இயேசுவில் நமக்குக் காட்டிய தயவின்மூலம், இறைவனுடைய கிருபையின் அளவற்ற நிறைவை காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார். விசுவாசத்தின்மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த இரட்சிப்பு உங்களால் உண்டானதல்ல. இது இறைவனுடைய கொடையே ஆகும். இந்த இரட்சிப்பு நற்செயல்களினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக்குறித்து ஒருவரும் பெருமைப்பாராட்ட முடியாது. ஏனெனில், நாங்கள் கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனின் வேலைப்பாடுகளாய் இருக்கிறோம். நல்ல செயல்களைச் செய்யும்படி, இறைவனால் முன்னதாகவே ஆயத்தம் பண்ணப்பட்டபடியே நம்மை ஏற்பாடு செய்திருக்கிறார்.
யூதரும் யூதரல்லாதவரும் கிறிஸ்துவினால் இணைக்கப்படுதல்
ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது. அக்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலிருந்து புறம்பானவர்களாய், இறைவனின் சுதந்தரமாகிய இஸ்ரயேலுக்கு உட்படாதவர்களாகவும், வாக்குக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களை அறியாதவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் இல்லாதவர்களாகவுமே இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள். ஆனால் முன்பு ஒருகாலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே இறைவனுக்கு சமீபமாயிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவே நமது சமாதானத்தின் வழியானார். அவரே இருபிரிவினரையும் ஒன்றாக்கி, தடையாயிருந்த பகைமைச் சுவரை தமது உடலின் மூலமாக அழித்தார். கிறிஸ்து தமது உடலினால் மோசேயின் சட்டத்தை, அதின் கட்டளைகளோடும் விதிமுறைகளோடும் நீக்கியதினால், இந்த இருபிரிவினரையும் தம்மில் ஒரு புதிய மனிதனாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தினார். சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார். இவ்விதமாய் அவர் தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாய் இருந்த அவர்களுக்கும் நற்செய்தியின் சமாதானத்தைப் பிரசங்கித்தார். ஆகவே கிறிஸ்து மூலமாக நாங்கள் இரு பிரிவினரும் ஒரே ஆவியானவரினால் பிதாவின் முன்னிலையில் வரக்கூடியவர்களாய் இருக்கிறோம்.
ஆகையால் யூதரல்லாதவர்களாகிய நீங்கள் இனிமேலும் அந்நியரும் அறியாதவரும் அல்ல, இப்பொழுது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாயும், இறைவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாயும் இருக்கிறீர்கள். நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது. நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.
யூதரல்லாதவர்களின் பிரசங்கியாளனான பவுல்
இதனாலேயே, யூதரல்லாதவர்களான உங்களுக்காக பவுலாகிய நான் கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கிறேன்.
இறைவன் உங்களுக்காக தமது கிருபையை நிர்வாகிக்கும் வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாய் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரகசியத்தை இறைவன், தனது வெளிப்படுத்துதலினால் எனக்குத் தெரிவித்திருக்கிறார். நான் இதைக்குறித்து ஏற்கெனவே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். நான் உங்களுக்கு எழுதியதை நீங்கள் வாசிப்பீர்களானால், கிறிஸ்துவினுடைய இரகசியத்தைக்குறித்து எனக்குள் உண்டாயிருக்கிற நுண்ணறிவை, நீங்களும் விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். இறைவன் இந்த இரகசியத்தை முன்னிருந்த தலைமுறையினருக்குச் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுதோ, இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரகசியம் என்னவென்றால், நற்செய்தியின் மூலமாய் யூதரல்லாத மக்களும், இஸ்ரயேலருடன் உரிமைப் பங்கு உடையவர்களாயும், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாயும், அவரது வாக்குத்தத்தத்தில் பங்குள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாகும்.
இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். நான் இறைவனுடைய எல்லா மக்களையும்விட குறைவுள்ளவனாய் இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவை யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டது. அது செயல்படுவதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவுமே, எனக்கு இந்த ஊழியம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் கடந்த காலங்களில் இந்த இரகசியம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இறைவனின் மகத்துவமான ஞானம் வானமண்டலங்களில் ஆளுகை செய்யும் தூதர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார். நாம் அவரில் இருப்பதினாலும், அவரில் கொண்டிருக்கும் விசுவாசத்தினாலும், நாங்கள் சுதந்தரமாய் மனவுறுதியுடன் இறைவனுக்கு முன்பாக வரக்கூடியவர்களாய் இருக்கிறோம். எனவே நான் துன்பம் அனுபவிப்பதால், நீங்கள் மனசோர்வடையக் கூடாது என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது என்பதால் உற்சாகமடையுங்கள்.
எபேசியருக்கான மன்றாட்டு
நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன. நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன். அதனால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருப்பார். நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அஸ்திபாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். இவ்விதம் நீங்கள் மற்றெல்லாப் பரிசுத்தவான்களோடுங்கூட, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதாயும், நீளமானதாயும், உயரமானதாயும், ஆழமானதாயும் இருக்கிறது என்பதை, விளங்கிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்களாக, உங்கள் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறியவேண்டும் என்றும், நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதும் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.
நமக்குள் செயலாற்றுகிறவரும் தம்முடைய வல்லமையின் மூலமாய், நாம் கேட்பதையும் நாம் நினைத்துப் பார்ப்பதைவிட, மிக அதிகமாக செய்வதற்கு வல்லமையுடையவராய் இருக்கிறவருக்கே, கிறிஸ்து இயேசுவின் மூலமாக, திருச்சபையில் எல்லாத் தலைமுறை தலைமுறையாக, என்றென்றைக்குமாக மகிமை உண்டாவதாக. ஆமென்.
கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை
ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு. ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.
கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம். ஆதலால்:
“அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது,
தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார்.
அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்”4:8 [சங். 68:18]
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
“அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார். கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.
அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம். அவராலேயே முழு உடலும், இணைக்கும் மூட்டுகளினால் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் அன்பில் பெருகுகிறது.
ஒளியின் பிள்ளைகளாக வாழ்வது
எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது. அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது. அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, தங்களைச் சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவித அசுத்தமான செயல்களையும் செய்து, காம வேட்கையில் தொடர்ந்து ஈடுபட ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள். உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள்.
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும். “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”4:26 [சங். 4:4] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்): பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள். களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும்.
தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள். இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார். எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள். ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள். கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்ததினால், இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாயும், பலியாயும் நமக்காகத் தம்மைக் கொடுத்தார். அதுபோலவே நீங்களும் அன்புள்ள வாழ்க்கையை வாழுங்கள்.
உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது. அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது. ஒழுக்கக்கேடாய் நடக்கிறவனோ, தூய்மையற்றவனோ, இறைவன் அல்லாதவைகளை வணங்குகிறவனுக்கு ஒப்பான பேராசைக்காரனோ, கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசில் எவ்வித உரிமைப்பங்கும் பெறுவதில்லை. இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது, எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம்.
ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள். ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
“நித்திரை செய்பவனே விழித்தெழு,
இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு,
கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.”
எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். மதுபானம் குடித்து வெறிகொள்ளவேண்டாம். அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள். எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கிறிஸ்தவ குடும்பத்திற்கான அறிவுரைகள்
கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார். அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும்.
கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள். கிறிஸ்து வார்த்தையின் மூலம் தண்ணீரினால் திருச்சபையைச் சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்படியும், மகிமையுள்ள திருச்சபை எவ்வித மாசும், மறுவும், வேறு எவ்வித குறைபாடும் அற்றதாகவும், பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் தம்முன் நிறுத்திக்கொள்ளும்படியே கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான். ஒருவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுத்ததில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிக்கிறான். இதுபோலவே, கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார். நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே. இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்5:31 [ஆதி. 2:24] இது ஒரு மிக ஆழ்ந்த இரகசியம். ஆனால் நானோ கிறிஸ்துவையும், திருச்சபையையும் பற்றிப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும்.
பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது. “உங்கள் தகப்பனையும், தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக்கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. “மதித்து நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்”6:3 [உபா. 5:16] என எழுதப்பட்டிருக்கிறது.
தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள்.
அடிமைகளே, இந்தப் பூமியில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள். நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள். ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.
எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
இறைவனின் போர்க்கவசம்
இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள். நீங்கள் பிசாசின் எல்லாவித தந்திரங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் இடுப்பைச் சுற்றி, சத்தியம் என்னும் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டு. நீதி ஆகிய மார்கவசத்தை அணிந்துகொண்டு, உறுதியாய் நில்லுங்கள். சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும். இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள். எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள். அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள்.
கடைசி வாழ்த்துதல்
நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு என்னைப்பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். அப்பொழுது நான் எப்படியிருக்கிறேன் என்றும், என்ன செய்கிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.
பிதாவாகிய இறைவனிடமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமும் இருந்து, எல்லாச் சகோதரருக்கும் சமாதானமும், விசுவாசத்துடன் இணைந்த அன்பும் இருப்பதாக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.