- Biblica® Open Indian Tamil Contemporary Version பிரசங்கி பிரசங்கி பிரசங்கி பிர. பிரசங்கி எல்லாம் அர்த்தமற்றவை தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்: “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! முற்றிலும் அர்த்தமற்றவை; எல்லாமே அர்த்தமற்றவை” என்று பிரசங்கி கூறுகிறான். மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன? சூரியனுக்குக் கீழே1:3 சூரியனுக்குக் கீழே என்பது உலகத்தில் என்று அர்த்தம். அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன? சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது. சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது. காற்று தெற்கு நோக்கி வீசுகிறது, வடக்கு நோக்கியும் திரும்புகிறது; அது சுழன்று சுழன்று அடித்து, எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது. எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை. ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே திரும்பிப் போகின்றன. ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன. எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை, எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை. இருந்ததே இனிமேலும் இருக்கும், செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை. “பாருங்கள், இது புதிதானது!” என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ? அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது; நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது. முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை; அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும், பின்வரும் காரியங்களைக்குறித்து ஞாபகம் இருக்காது. ஞானம் அர்த்தமற்றது பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். வானத்தின்கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தினால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என்னை நான் அர்ப்பணித்தேன். மனுக்குலத்தின்மேல் இறைவன் வைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாரம்! சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது. “பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன். ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது; அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது. இன்பங்கள் அர்த்தமற்றவை “வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன். செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன. நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும்2:8 பல பெண்களையும் அல்லது பலவித வாத்தியங்கள். வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது. என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை; என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை. என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது, என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே. அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. ஞானமும் மூடத்தனமும் அர்த்தமற்றவை பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும் என் மனதை திருப்பினேன். அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன், முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்? இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன். ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, மூடரோ இருளில் நடப்பார்கள்; ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், “ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால் நான் பெறும் இலாபம் என்ன?” என்று என் இருதயத்தில் சிந்தித்தேன். “இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்; வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள். மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள். பிரயாசமும் அர்த்தமற்றது சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது. சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே. அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே. எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது. ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது. சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன? அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே. சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன். அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்? இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே. எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழே ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, இறப்பதற்கு ஒரு காலமுண்டு; நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு; கொல்வதற்கு ஒரு காலமுண்டு, சுகப்படுத்துவதற்கு ஒரு காலமுண்டு; இடித்து வீழ்த்த ஒரு காலமுண்டு, கட்டி எழுப்ப ஒரு காலமுண்டு; அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு; துக்கங்கொண்டாட ஒரு காலமுண்டு, நடனம் ஆட ஒரு காலமுண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு. தேடிச் சேர்க்க ஒரு காலமுண்டு, விட்டுவிட ஒரு காலமுண்டு; வைத்திருக்க ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; கிழித்துப் பிரிக்க ஒரு காலமுண்டு, தைத்து ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; பேசாமல் இருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; அன்பாயிருக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு. வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன? இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது. மனிதர் வாழும் காலத்தில் சந்தோஷமாய் இருப்பதையும், நன்மை செய்வதையும்விட மேலானது ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனும் சாப்பிட்டு, குடித்து, தன் பிரசாயத்தில் திருப்தி காண்பதே இறைவன் கொடுத்த கொடை. இறைவன் செய்கின்ற எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அதனுடன் ஒன்றையும் சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து எதையாவது எடுக்கவோ முடியாது. மனிதர் அவரிடத்தில் பயபக்தியாய் இருப்பதற்காகவே இறைவன் அதைச் செய்கிறார். இருப்பவை எல்லாம் ஏற்கெனவே இருந்தன, இருக்கப்போகிறவைகளும் முன்பு இருந்தவையே; கடந்ததையும் இறைவன் விசாரிப்பார். சூரியனின் கீழே இன்னுமொன்றை நான் கண்டேன்: நியாயந்தீர்க்கும் இடத்தில் கொடுமை இருந்தது, நீதி வழங்கும் இடத்திலே கொடுமை இருந்தது. நீதியுள்ளவர்களையும், கொடியவர்களையும் இறைவன் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார். ஏனெனில் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் ஒரு காலம் உண்டு; ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் உண்டு என என் இருதயத்தில் நான் நினைத்துக்கொண்டேன். மனிதர் தாங்களும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளும்படி, இறைவன் அவர்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறார். இதையும் நான் நினைத்துக்கொண்டேன். மனிதருடைய நியதியைப்போலவே, மிருகங்களுடைய நியதியும் இருக்கிறது. ஒரேவிதமான நியதியே மிருகங்களுக்கும், மனிதனுக்கும் காத்திருக்கிறது. மிருகங்கள் சாவதுபோலவே மனிதரும் சாகிறார்கள். எல்லோருக்கும் ஒரேவிதமான சுவாசமே இருக்கின்றது; இதில் மனிதனுக்கு மிருகத்தைவிட மேன்மை இல்லை. எல்லாம் அர்த்தமற்றதே. எல்லாம் ஒரே இடத்திற்கே போகின்றன; அனைத்தும் தூசியிலிருந்தே வருகின்றன, தூசிக்கே திரும்புகின்றன. மனிதனின் ஆவி மேல்நோக்கி எழும்புகிறதென்றோ, மிருகத்தின் ஆவி பூமிக்குள்ளே கீழ்நோக்கி போகிறதென்றோ யாருக்குத் தெரியும்? ஆகவே தனது வேலையில் சந்தோஷப்படுவதைவிட நலமானது எதுவும் ஒரு மனிதனுக்கு இல்லை என்று நான் கண்டேன். ஏனெனில் அதுவே அவன் பங்கு. அவனுக்குப் பிறகு என்ன நிகழும் என்பதைக் காணும்படி அவனைக் கொண்டுவர யாரால் முடியும்? ஒடுக்குதலும் நட்பின்மையும் மீண்டும் நான் பார்த்தபோது: சூரியனுக்குக் கீழே அநேக ஒடுக்குதல்களைக் கண்டேன். ஒடுக்கப்படுகிறவர்களின் கண்ணீரையும், அவர்களை ஆறுதல்படுத்த யாரும் இல்லாதிருப்பதையும் கண்டேன்; அவர்களை ஒடுக்குவோரின் பக்கத்திலேயே வல்லமை இருந்தது, அவர்களை ஆறுதல்படுத்த யாருமே இல்லை. ஆதலால் இன்னும் உயிரோடிருந்து வாழ்கிறவர்களைப் பார்க்கிலும், ஏற்கெனவே செத்து மடிந்துபோனவர்களே மகிழ்ச்சிக்குரியவர்கள் என்று அறிவித்தேன். இவ்விரு கூட்டத்தினரைவிட, இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள். அவர்கள் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீமையைக் காணவில்லையே. தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறான்4:5 தன்னையே அழித்துக்கொள்கிறான் அல்லது தன் சதையையே தின்கிறான்.. காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால், இரு கைகளையும் நிரப்புவதைவிட, மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது. சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்: தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை. அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை. ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை. அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான். இதுவும் அர்த்தமற்றதும், அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது. தனியொருவனாய் இருப்பதைப் பார்க்கிலும், இருவராய் இருப்பது நல்லது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையிலிருந்து நல்ல பயனைப் பெறுவார்கள். ஒருவன் விழுந்தால், அவன் நண்பன் அவன் எழும்ப உதவிசெய்ய முடியும். ஆனால் கீழே விழும்போது எழுந்திருக்க உதவிசெய்ய யாரும் இல்லாத மனிதனோ, பரிதாபத்திற்குரியவன். அத்துடன் இருவர் ஒன்றாய்ப் படுத்திருந்தால், தங்களை சூடாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒருவன் தனிமையாய் தன்னை எப்படிச் சூடாக வைத்துக்கொள்ள முடியும். ஒரு தனி மனிதன் இலகுவில் வீழ்த்தப்படலாம்; ஆனால் இருவராய் இருந்தால் அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள். முப்புரிக்கயிறு விரைவில் அறாது. உயர்வும் அர்த்தமற்றது எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளத் தெரியாத முதியவனும் மூடனுமான அரசனைவிட, ஞானமுள்ள ஏழை வாலிபனே சிறந்தவன். அந்த வாலிபன் சிறையில் இருந்து அரச பதவிக்கு உயர்ந்திருக்கலாம். அல்லது தனது ஆட்சிக்குரிய பிரதேசத்தில் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். சூரியனுக்குக் கீழே வாழ்ந்து நடந்த யாவரும் அரசனுக்குப்பின், அவனுடைய இடத்தில் வந்த வாலிபனையே பின்பற்றுவதைக் கண்டேன். அப்படி அவனைப் பின்பற்றுகிற மக்களுக்கு முடிவே இல்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த சந்ததியோ புதிதாக ஆட்சிக்கு வந்தவனில் பிரியப்படவில்லை. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. இறைவனுக்கு உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று இறைவனின் ஆலயத்திற்குச் செல்லும்போது, உன் நடையில் கவனமாய் இரு. மூடரைப் போல பலி செலுத்துவதைவிட, செவிகொடுத்துக் கேட்க அங்கு போ; ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்கிறது தவறு என்று அறியாதிருக்கிறார்கள். இறைவனுக்குமுன் எதையாவது சொல்வதற்கு உன் இருதயத்தில் அவசரப்பட்டு, உன் வாயை விரைவாய்த் திறவாதே. இறைவன் பரலோகத்தில் இருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்; எனவே உன் வார்த்தைகள் அளவாய் இருக்கட்டும். அதிக கவலைகள் மிகுதியாகும்போது, கனவு வருவதுபோல, சொற்கள் மிகுதியானால் மூடத்தனம் வெளிப்படும். இறைவனுக்கு நீ நேர்ந்ததை நிறைவேற்றத் தாமதியாதே. இறைவன் மூடரில் பிரியமாயிருப்பதில்லை; உனது நேர்த்திக்கடனை நிறைவேற்று. நேர்த்திக்கடனைச் செய்து, அதை நிறைவேற்றாமல் விடுவதைவிட, நேர்த்திக்கடன் செய்யாமல் இருப்பது மிக நல்லது. உன்னை பாவத்திற்குள் வழிநடத்த உன் வாய்க்கு இடங்கொடாதே. ஆலய தூதனுக்கு முன்பாக, “எனது நேர்த்திக்கடன் தவறுதலாகச் செய்யப்பட்டது” என்று மறுத்துச் சொல்லாதே. இறைவன் நீ சொல்வதைக் கேட்டு கோபப்பட்டு, அவர் உன் கையின் வேலையை ஏன் அழித்துப் போடவேண்டும்? அதிக கனவும், அதிக வார்த்தைகளும் அர்த்தமற்றவை. எனவே இறைவனுக்குமுன் பயந்திரு. செல்வங்களும் அர்த்தமற்றவை எந்த மாகாணத்திலாவது ஏழைகள் ஒடுக்கப்படுவதையும், நீதியும் உரிமைகளும் மறுக்கப்படுவதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; ஏனெனில் ஒரு அதிகாரியை ஒடுக்கி ஆதாயம் பெற அவனுக்கு மேற்பட்ட அதிகாரி காத்திருக்கிறான். அவர்கள் இருவருக்கும் மேலாக இன்னும் உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள். நிலத்திலிருந்து பெறப்படும் இவர்களுடைய விளைச்சலை எல்லோரும் எடுத்துக்கொள்கிறார்கள்; அரசனுங்கூட வயல்வெளிகளிலிருந்தே ஆதாயம் பெறுகிறான். பணத்தில் ஆசைகொள்கிற எவனுக்கும் தனக்கு இருக்கும் பணம் ஒருபோதும் போதுமானதாயிராது; செல்வத்தில் ஆசைகொள்கிற எவனும் தன் வருமானத்தில் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை; இதுவும்கூட அர்த்தமற்றதே. பொருள்கள் அதிகரிக்கிறபோது, அதைப் பயன்படுத்துவோரும் அதிகரிக்கிறார்கள். அவற்றைத் தமது கண்களால் பார்த்து மகிழ்வதைத் தவிர, எஜமானனுக்கு வேறு என்ன பயன்? தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும், அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும். ஆனால் பணக்காரனின் நிறைவோ அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை. சூரியனுக்குக் கீழே பெருந்தீமை ஒன்றை நான் கண்டேன்: அதாவது, செல்வம் தன் எஜமானனுக்கே கேடுண்டாகும்படி சேர்த்து வைக்கப்படுவதும், அவல நிகழ்வினால் அந்தச் செல்வம் தொலைந்துபோகிறதுமே. அதினால் அந்த எஜமானனுக்கு ஒரு மகன் இருந்தும் அவனுக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமிருப்பதில்லை. மனிதன் தன் தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணியாய் வருகிறான்; வருவதுபோலவே போகிறான். அவன் தன் உழைப்பிலிருந்து தன் கைகளில் ஒன்றும் எடுத்துக் கொண்டுபோவதில்லை. இதுவும் ஒரு கொடுமையான தீமையே: மனிதன் தான் வருவதுபோலவே புறப்பட்டுப் போகிறான்; இதினால் அவன் பெறுவது என்ன? அவனுடைய கஷ்ட உழைப்பும் வீணே. அவன் தனது வாழ்நாட்களில் விரக்தியுடனும், நோயுடனும், கோபத்துடனும், இருளில் சாப்பிடுகிறான். ஆகவே ஒரு மனிதன் சாப்பிட்டுக் குடித்து சூரியனுக்குக் கீழே தனது கடும் உழைப்பில் திருப்தி காண்பதே நல்லது என நான் கண்டேன்; இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் குறுகிய வாழ்நாள் காலத்தில் இது தகுதியானது. ஏனெனில் இதுவே அவன் பங்கு. மேலும் இறைவன் எவனுக்காவது செல்வத்தையும், சொத்தையும் கொடுத்து, அத்துடன் அவற்றை அனுபவிக்கவும், தன் பங்கை ஏற்றுக்கொண்டு தன் உழைப்பில் மகிழ்ச்சியாய் இருக்கவும் செய்வது இறைவனின் ஒரு கொடையே. இறைவன் அவனுடைய இருதயத்தை மகிழ்ச்சியின் எண்ணங்களால் நிரப்பியிருப்பதினால், அவன் தனது வாழ்நாட்கள் கடந்துபோவதைக் குறித்து நினைப்பதில்லை. சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள். மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை. ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன? ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன; மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது. தன்னிலும் வலிமையுள்ளவரோடு ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது. வார்த்தைகள் கூடும்போது, அர்த்தம் குறையும். இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ? ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்? ஞானம் சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே; உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும். சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும். ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது. மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது. பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, மூடர்களின் சிரிப்பும் இருக்கும். இதுவும் அர்த்தமற்றதே. பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும். ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது. உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும். “இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல. உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது. பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, ஞானமும் ஒரு புகலிடம்; ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது, இதுவே அறிவின் மேன்மை. இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: அவர் கோணலாக்கினதை யாரால் நேராக்க முடியும்? காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்: இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார், ஆகையால் ஒரு மனிதனால் தனது எதிர்காலத்தைக் குறித்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன். ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே. அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்? அதிக கொடியவனாய் இராதே, முட்டாளாயும் இராதே. உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்? முதலாவதைப் பற்றிக்கொள்வதும், இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான். பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும். ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம். ஏனெனில் பலமுறை, நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே. இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, “நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்; ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது. ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. அதை யாரால் கண்டறிய முடியும்? ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன். கொடுமையின் மூடத்தனத்தையும், மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன். கண்ணியாய் இருக்கும் பெண், மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்; அவளது இருதயம் பொறியாயும், அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன. இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான். பாவியையோ அவள் சிக்க வைப்பாள். “இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்: “நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை. நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்; ஆனால் விளங்கவில்லை.” ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள். ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? நிகழ்வுகளின் விளக்கம் யாருக்குத் தெரியும்? ஞானம் மனிதனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, முகத்தின் கடினமான தோற்றத்தை மாற்றுகிறது. அரசனுக்குக் கீழ்ப்படிதல் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நட என்று நான் சொல்கிறேன்; ஏனெனில் இறைவனுக்கு முன்பாக நீ சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறாய். அரசனின் முன்னிருந்து போக அவசரப்படாதே. கொடிய காரியத்திற்கு உடந்தையாகாதே; ஏனெனில் அரசன் தான் விரும்பிய எதையும் செய்வான். அரசனின் வார்த்தை அதிகாரமுடையது ஆகையால், “நீ என்ன செய்கிறாய்” என்று அரசனுக்கு சொல்ல யாரால் முடியும்? அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவனுக்கு தீங்கு நேரிடாது; ஞானமுள்ள இருதயம் அதற்குத் தகுந்த காலத்தையும், அதின் நடைமுறையையும் அறியும். ஏனெனில் ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும், அதற்குரிய ஒரு நடைமுறையும் உண்டு; ஒரு மனிதனுடைய கஷ்டம் அவனைப் பாரமாய் நெருக்கினாலும் ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும், நடைமுறையும் உண்டு. எதிர்காலத்தை ஒரு மனிதனும் அறியாதிருப்பதால், வரப்போவதை அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? காற்றை அடக்க யாராலும் முடியாது; அதுபோலவே தன் மரண நாளையும் யாராலும் தள்ளிப்போட முடியாது. அந்த யுத்தத்திலிருந்து ஒருவராலும் தப்பமுடியாது; அதுபோலவே கொடுமையைச் செய்கிறவர்களையும் கொடுமை விடுவிக்காது. சூரியனுக்குக் கீழே நடந்த எல்லாவற்றையும், என் மனதில் சீர்தூக்கிப் பார்த்தேன் அப்பொழுது, இவை எல்லாவற்றையும் நான் கண்டேன். தனக்கே துன்பம் ஏற்படுகிற போதிலும், ஒரு மனிதன் மற்றவனை அடக்கி ஆளும் காலமும் உண்டு. கொடியவர்கள் அடக்கம்பண்ணப்பட்டதையும் நான் கண்டேன்; அவர்கள் பரிசுத்த இடத்திற்கு போக்குவரவாய் இருந்ததால், அவர்கள் கொடுமை செய்த அதே பட்டணத்தில் புகழப்படுகிறார்கள்8:10 சில எபிரெய மொழி கையெழுத்துப் பிரதிகளில் புகழப்படுகிறார்கள் என்றும், அதிகமான பிரதிகளில் மறக்கப்படுகிறார்கள் என்றும் உள்ளது.. இதுவும் அர்த்தமற்றதே. ஒரு குற்றம் விரைவாகத் தண்டிக்கப்படாதபோது, மக்கள் தவறு செய்யத் துணிகிறார்கள். கொடுமையானவன் நூறு குற்றங்களைச் செய்து நீடியகாலம் வாழ்ந்தாலும், இறைவனில் பக்தியாயிருந்து, இறைவனுக்குப் பயந்து வாழ்கிற மனிதர்களுக்கே அதிக நன்மை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் கொடியவர்கள் இறைவனுக்குப் பயந்து நடக்காததினால், அவர்களுக்கு நலமுண்டாகாது; அவர்களுடைய வாழ்நாள் நீடித்திருக்காது, அது நிழலைப் போன்றது. மேலும் பூமியில் நிகழ்கின்ற வேறு ஒரு அர்த்தமற்ற காரியமும் உண்டு: கொடியவர்களுக்கு வரவேண்டியது, நீதிமான்களுக்கு வருகிறது. நீதிமான்களுக்கு வரவேண்டியது, கொடியவர்களுக்கு வருகிறது. இதுவும் அர்த்தமற்றது என்றே நான் சொல்வேன். எனவே நான் வாழ்க்கையில் இன்பமாயிருக்கச் சொல்கிறேன்; ஏனெனில் சூரியனுக்குக் கீழே மனிதனுக்கு சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது சூரியனுக்குக் கீழே இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாளெல்லாம், அவனுடைய வேலையில் மகிழ்ச்சியிருக்கும். நான் ஞானத்தை அடையவும், மனிதன் இரவு பகல் நித்திரையின்றி பூமியில் செய்யும் கடின உழைப்பைக் கவனிப்பதற்கும் முயன்றபோது, இறைவன் செய்த எல்லாவற்றையும் நான் கண்டேன். சூரியனுக்குக் கீழே நடப்பதை ஒருவனாலும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அறிய முயற்சித்தாலும், அவனால் அதின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஞானமுள்ள ஒருவன் தனக்குத் தெரியும் என்று சொன்னாலும் உண்மையாகவே அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியாது. எல்லோருக்கும் பொது நியதி ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான். நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது. சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள். உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது! உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை. நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார். எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு. சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன. ஞானம் மூடத்தனத்திலும் சிறந்தது சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன். ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான். அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை. ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன். மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான். செத்த ஈக்கள் நறுமணத் தைலத்திலும் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே ஒரு சிறு மூடத்தனம் ஞானத்திற்கும், மதிப்பிற்கும் மேலோங்கி நிற்கும். ஞானமுள்ளவர்களின் இருதயம் நியாயத்தின் பக்கம் சாய்கிறது, மூடர்களின் இருதயமோ வழிவிலகிப் போவதையே தேடுகிறது. ஒரு மூடன் வீதியில் போகும்போதே, புத்தியற்றவனாக நடந்து எல்லோருக்கும் தான் எவ்வளவு மதியீனன் என்பதைக் காண்பிக்கிறான். ஒரு ஆளுநனின் கோபம் உனக்கெதிராக மூண்டால், நீ உன் பதவியைவிட்டு விலகாதே; நிதானமாயிருந்தால் பெரிய குற்றமும் மன்னிக்கப்படும். சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீமையும் உண்டு, ஒரு ஆளுநனிடமிருந்து வரும் ஒருவிதத் தவறே அது. மூடர்கள் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள்; செல்வந்தர்களோ தாழ்ந்த பதவிகளையே வகிக்கிறார்கள். அடிமைகள் குதிரையில் ஏறிச் சவாரி செய்கிறதை நான் கண்டிருக்கிறேன்; பிரபுக்களோ அடிமைகளைப்போல் நடந்து செல்வதையும் கண்டிருக்கிறேன். குழி ஒன்றை வெட்டுகிறவன் அதில் விழக்கூடும்; பழைய சுவரை இடிப்பவனையும் பாம்பு கடிக்கக்கூடும். கற்களைக் குழிகளில் தோண்டி எடுப்பவன் அவற்றால் காயப்படக்கூடும்; மரக்கட்டையை பிளக்கிறவனுக்கு அதனாலே ஆபத்து உண்டாகலாம். ஒரு கோடரி மழுங்கிப் போய் அதின் முனை கூர்மையாக்கப்படாமல் இருந்தால், அதிக பலம் வேண்டியிருக்கும். ஆனால் தொழில் திறமையோ வெற்றியைக் கொண்டுவரும். ஒரு பாம்பை வசியப்படுத்துமுன் அது கடிக்குமானால், அதை வசியப்படுத்தும் வித்தைத் தெரிந்தும் பயனில்லை. ஞானமுள்ளவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தயவுள்ளவைகள்; மூடனோ தன் உதடுகளாலேயே அழிக்கப்படுகிறான். அவனுடைய வார்த்தைகள் ஆரம்பத்தில் மூடத்தனமானவை; முடிவிலோ கொடிய பைத்தியக்காரத்தனமானவை. மூடன் வார்த்தைகளை அதிகமாக்குகிறான். ஒரு மனிதனும் வரப்போவதை அறியான். அவனுக்குப்பின் என்ன நடக்கும் என்பதை யாரால் அவனுக்குச் சொல்லமுடியும்? மூடனின் வேலை அவனையே களைப்படையச் செய்யும்; ஏனெனில், பட்டணத்திற்குப் போகும் வழி அவனுக்குத் தெரியாது. அடிமையை10:16 அடிமையை அல்லது சிறுபிள்ளை அரசனாகவும் விடியற்காலமே விருந்து உண்கிறவர்களை பிரபுக்களாகவும் கொண்ட நாடே, உனக்கு ஐயோ! உயர்குடியில் பிறந்தவனை அரசனாகக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். குடிபோதைக்கு அல்லாமல் தங்கள் பெலத்திற்காக உரிய நேரத்தில் சாப்பிடுகிற இளவரசர்களைக் கொண்ட நாடே, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். சோம்பேறியினுடைய வீட்டுக்கூரை வளைந்து தொங்கும்; செயலற்ற கைகளினால் அவனுடைய வீடு ஒழுகும். மகிழ்ச்சிக்காகவே விருந்து செய்யப்படுகிறது, திராட்சை இரசம் வாழ்க்கையை களிப்புள்ளதாக்குகிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் தேவையானது பணமே. உனது சிந்தனையிலும் அரசனை நிந்திக்காதே, உனது படுக்கை அறையிலும் பணக்காரனை சபிக்காதே, ஏனெனில் ஆகாயத்துப் பறவை உன் வார்த்தைகளைக் கொண்டு செல்லலாம், சிறகடிக்கும் பறவை நீ சொல்வதைப் போய்ச் சொல்லலாம். பல முயற்சிகளில் முதலீடு செய்யுங்கள் கடல் வாணிபத்தில் முதலீடு செய்; பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய். உன்னிடம் இருப்பதை ஏழு பேருடனும், எட்டுப் பேருடனும் பங்கிட்டுக்கொள். பூமியின்மேல் என்ன பேராபத்து வரும் என்பதை நீ அறியாதிருக்கிறாயே. மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், அவை பூமியின்மேல் மழையைப் பொழியும். ஒரு மரம் வடக்குப் பக்கம் விழுந்தாலும், தெற்குப் பக்கம் விழுந்தாலும் அது விழுந்த இடத்திலேயே கிடக்கும். காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்; மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான். காற்றின் வழியையோ, தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது. அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும் இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது. உனது தானியத்தைக் காலையில் விதை, பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை. இதுவோ, அதுவோ, எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே; ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம். உன் இளமையில் படைத்தவரை நினைவில்கொள் வெளிச்சம் இன்பமானது, சூரியனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஒருவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், அவன் அவற்றை மகிழ்ச்சியுடன் களிக்கட்டும். ஆனால் இருளின் நாட்களையும் நினைவில் கொள்ளட்டும், ஏனெனில் அவை அநேகமாயிருக்கும். வரப்போகும் யாவும் அர்த்தமற்றதே. வாலிபனே, உன் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியாயிரு, உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும். உன் இருதயத்தின் வழிகளையும், உன் கண்கள் காண்பவற்றையும் பின்பற்று. ஆனால் இவை எல்லாவற்றிற்காகவும் இறைவன் உன்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார் என்பதை அறிந்துகொள். எனவே உனது இருதயத்திலிருந்து கவலைகளை அகற்று, உனது உடலின் வேதனையை உன்னைவிட்டு அகற்று. ஏனெனில் இளவயதும் வாலிபமும் அர்த்தமற்றதே. நீ உன் வாலிப காலத்தில் உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்; துன்ப நாட்கள் வராததற்குமுன்னும், “வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை” என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள். அதாவது சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள். வீட்டுக் காவலாளிகள்12:3 கால்கள் தங்கள் முதுமையில் தள்ளாட, பெலமுள்ளவர் கூனிப்போய்12:3 தோள்பட்டை, அரைக்கும் பெண்கள்12:3 பற்கள் வெகுசிலராகி, ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள்12:3 கண்கள் ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள். வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு அரைக்கும் சத்தம் குறைந்துபோக, பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க, இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை. மேடான இடங்களுக்கும், வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும், வாதுமை மரம் பூக்கும்12:5 தலைமுடி முன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும், ஆசையும் அற்றுப்போகுமுன்னும், மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும் படைத்தவரை நினைவில்கொள். வெள்ளிக் கயிறு அறுந்து, தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும், ஊற்றின் அருகே குடம் நொறுங்க, கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும், மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி, ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன் உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள். “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான். பொருளின் முடிவு பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான். பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை. ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன. என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக. புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும். எல்லாவற்றையும் கேட்டு, நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்: இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; மனிதனின் பிரதான கடமை இதுவே. ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும், அந்தரங்கமான செயல்களுக்கும், நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார்.