- Biblica® Open Indian Tamil Contemporary Version
உபாகமம்
உபாகமம்
உபாகமம்
உபா.
உபாகமம்
ஓரேபை விட்டு வெளியேற கட்டளை
மோசே யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள அரபா பாலைவனத்தில் இஸ்ரயேலர் எல்லோரிடமும் பேசினான். அப்பாலைவனம் சூப் என்னும் இடத்திற்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாபு ஆகிய இடங்களுக்கு இடையிலும் இருக்கிறது. சேயீர் மலை வழியாக, ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவுக்குப் போக1:2 அதாவது, சுமார் 260 கிலோமீட்டர் பதினொரு நாட்கள் செல்லும்.
இஸ்ரயேலரைப் பற்றி யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாற்பதாம் வருடம், பதினோராம் மாதம், முதலாம் தேதியிலே மோசே அவர்களுக்கு அறிவித்தான். இது எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்த பின்பும், அஸ்தரோத்தில் ஆட்சி செய்த பாசானின் அரசனாகிய ஓகை எத்ரேயில் தோற்கடித்த பின்பும் நடைபெற்றது.
யோர்தான் நதிக்குக் கிழக்கே உள்ள மோவாப் பிரதேசத்திலே மோசே இந்தச் சட்டங்களை விவரிக்கத் தொடங்கி, சொன்னதாவது:
நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே நமக்குச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் இந்த மலையில் தங்கியிருந்தது போதும். நீங்கள் முகாமிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டுக்குள் முன்னேறிச்செல்லுங்கள். அரபா, மலை நாடுகள், மேற்கு மலையடிவாரங்கள், தெற்கு, கரையோர நாடுகள் ஆகிய அயல்நாடுகளில் உள்ள மக்களிடம்போய், கானான் நாட்டிற்கும், லெபனோனுக்கும் பெரிய நதியான ஐபிராத்து நதிவரைக்கும் போங்கள். பாருங்கள், இப்பிரதேசத்தை நான் உங்களுக்கென்று கொடுத்திருக்கிறேன். உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கும் அவர்களுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கும் யெகோவா கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நாட்டிற்கு போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
தலைவர்களை நியமித்தல்
அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது, “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா, இன்று நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அநேகராயிருக்கும்படி, எண்ணிக்கையில் உங்களை அதிகரிக்கச் செய்தார். உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களை இன்னும் ஆயிரம் மடங்காகப் பெருகப்பண்ணி, தாம் வாக்களித்தபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆனால் உங்களுடைய பிரச்சனைகளையும், தாங்கமுடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி? ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
அப்பொழுது நீங்கள், “நீர் முன்வைத்த யோசனை நல்லது” என்று பதிலளித்தீர்கள்.
எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்கள்மேல் தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துபேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன். அப்பொழுது நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு நியாயமாக நீதி வழங்குங்கள். அந்த வழக்கு இஸ்ரயேல் சகோதரருக்கு இடையில் இருந்தாலும், ஒரு இஸ்ரயேலனுக்கும், ஒரு அந்நியனுக்கும் இடையில் இருந்தாலும் நியாயமாய் நீதி வழங்குங்கள். நீதி வழங்குவதில் பட்சபாதம் காட்டாதீர்கள்; பெரியவர்களையும் சிறியவர்களையும் ஒரேவிதமாய் விசாரணைசெய்யுங்கள். எந்த மனிதனுக்கும் பயப்படவேண்டாம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு இறைவனுக்கே உரியது. உங்களுக்குக் கடினமாய் உள்ள வழக்குகளையோ என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை நான் விசாரிப்பேன்” என்றேன். அக்காலத்தில் நீங்கள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன்.
உளவாளிகள் அனுப்பப்படுதல்
பின்பு, நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்குபோய் காதேஸ்பர்னேயாவை அடைந்தோம். அப்பொழுது நான் உங்களுக்கு, “நம் இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டிற்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள். பாருங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த நாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்கள் முற்பிதாக்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் போய் அந்த நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளுங்கள். பயப்படவேண்டாம்; கலங்கவேண்டாம்” என்றேன்.
அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, “நாம் அங்கு போவதற்குமுன் அந்நாட்டை உளவுபார்க்க சில மனிதர்களை அனுப்புவோம். நாம் செல்லும் வழியையும், நாம் போய்ச் சேரவேண்டிய பட்டணங்களையும் பற்றிய விவரங்களையும் அவர்கள் கொண்டுவரட்டும்” என்றீர்கள்.
நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக உங்களிலிருந்து பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினேன். அவர்கள் புறப்பட்டு மலைநாட்டிற்கு ஏறிப்போய், அங்கிருந்து எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு வந்து நாட்டை ஆராய்ந்தார்கள். அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டுவந்து, “நமது இறைவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விவரம் சொன்னார்கள்.
யெகோவாவுக்கு எதிரான கலகம்
அப்படியிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதற்றவர்களாய், உங்களுடைய இறைவனாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள். நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முறுமுறுத்து, “யெகோவா எங்களை வெறுக்கிறார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். நாங்கள் எங்கே போவது? எங்கள் சகோதரர் எங்களை மனந்தளரப் பண்ணிவிட்டார்களே. ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரான அரக்கரையும் அங்கே கண்டோம்,’ என்கிறார்கள்” என்று சொன்னீர்கள்.
அப்பொழுது நான் உங்களிடம், “திகிலடையவேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம். உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்ததுபோல, உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் இந்த இடத்தை வந்து சேரும்வரை, நீங்கள் சென்ற வழிகளிலெல்லாம் ஒரு தகப்பன் தன் மகனைச் சுமந்துசெல்லுவது போல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எப்படிச் சுமந்தார் என்பதை அங்கே கண்டீர்களே” என்றேன்.
அப்படிச் செய்தும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முகாம் அமைக்கவேண்டிய இடங்களைத் தேடும்படியும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும்படியும் இரவில் நெருப்பிலும், பகலில் மேகத்திலும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு முன்சென்றார்.
நீங்கள் சொன்னவற்றை யெகோவா கேட்டபோது, அவர் கோபங்கொண்டு கடுமையாக ஆணையிட்டுச் சொன்னதாவது: “நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட சந்ததியாரில் ஒருவனாகிலும் காணமாட்டான். எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரமே அந்நாட்டைக் காண்பான். அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் மட்டுமே அவன் காலடி வைத்த நாட்டைக் கொடுப்பேன்; ஏனென்றால் அவன் யெகோவாவை முழு இருதயத்தோடு பின்பற்றியிருக்கிறான்” என்றார்.
உங்களாலே யெகோவா என்னோடும் கோபங்கொண்டு சொன்னதாவது: “நீயும் அதற்குள் போகமாட்டாய். ஆனால் உன்னுடைய உதவியாளன் நூனின் மகனாகி யோசுவா அதற்குள் போவான். அவனைத் தைரியப்படுத்து, இஸ்ரயேலர் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவனே அவர்களை வழிநடத்துவான். கைதிகளாய் செல்வார்கள் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுபிள்ளைகளும், நன்மை தீமை அறியாதிருக்கிற உங்கள் பிள்ளைகளாகிய அவர்களே அந்நாட்டிற்குள் போவார்கள். நான் அந்நாட்டை அவர்களுக்கே கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்களோ, திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியான பாலைவனத்தை நோக்கிப் போங்கள்.”
அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.
ஆனால் யெகோவா என்னிடம், “நீங்கள் மேலே யுத்தம்செய்யப் போகவேண்டாம். நான் உங்களுடன் இருக்கமாட்டேன். நீங்கள் உங்கள் பகைவரால் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்” என்று சொன்னார்.
நான் அதை உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம்செய்து, உங்கள் அகந்தையில் அணிவகுத்து மலைநாட்டிற்கு ஏறினீர்கள். அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் கூட்டம்போல் உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து ஓர்மாவரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள். நீங்கள் திரும்பிவந்தபோது, யெகோவாவிடம் போய்ப் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலைச் செவிசாய்த்து கவனிக்கவில்லை. ஆனபடியால் நீங்கள் காதேசில் தங்கி, அநேக காலத்தை அங்கே கழித்தீர்கள்.
பாலைவனத்தில் அலைந்து திரிதல்
பின்பு, யெகோவா எனக்கு வழிகாட்டியபடியே நாம் திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியாக பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டோம். நீண்டகாலமாக நாம் சேயீர் மலைநாட்டைச் சுற்றியுள்ள வழியாகப் போனோம்.
அதன்பின் யெகோவா என்னிடம், “நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றிவந்தது போதும். இப்பொழுது வடக்கே திரும்புங்கள். நீ இந்த மக்களுக்குக் கொடுக்கவேண்டிய உத்தரவுகளாவன: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியார் வசிக்கும் சேயீர் பிரதேசத்தைக் கடந்துசெல்லப் போகிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள், ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்களை யுத்தத்திற்குத் தூண்டாதீர்கள்; ஏனென்றால் அவர்களின் நாட்டில் ஒரு அடி அளவான நிலத்தைக்கூட தரமாட்டேன். சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன். அங்கே அவர்களுக்கு நீங்கள் உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் வெள்ளிப்பணம் கொடுங்கள்” என்றார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலை எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதித்தார். அவர் இந்த விசாலமான பாலைவனத்தின் வழியாக உங்கள் பிரயாணத்திலும் உங்கள்மேல் கண்காணிப்பாய் இருந்தார். இந்த நாற்பது வருடங்களும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் இருந்திருக்கிறார்; நீங்கள் ஒன்றுக்கும் குறைவில்லாமலும் இருந்திருக்கிறீர்கள்.
நாம் சேயீரில் வாழ்கின்ற ஏசாவின் சந்ததியாரான நம்முடைய சகோதரரைக் கடந்துசென்றோம். நாம் ஏலாத்திலிருந்தும், எசியோன் கேபேரிலிருந்தும் வருகிற அரபா வழியாகத் திரும்பி மோவாபுக்குப் போகும் பாலைவனப் பாதை வழியாகப் பயணம் செய்தோம்.
அப்பொழுது யெகோவா என்னிடம், “மோவாபியர்களைத் தொல்லைப்படுத்தவோ, அவர்களை யுத்தம்செய்யத் தூண்டவோ வேண்டாம். ஏனென்றால் அவர்களின் நாட்டில் எதையும், நான் உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். நான் ஆர் என்னும் பிரதேசத்தை லோத்தின் சந்ததியாருக்கு உரிமையாகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
முற்காலத்தில் அங்கு ஏமியர் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் பலமும், எண்ணிக்கையில் அதிகமும், ஏனாக்கியரைப்போல் உயரமுமாய் இருந்தார்கள். ஏனாக்கியரைப் போலவே அவர்களும் அரக்கர்களாகக் கருதப்பட்டார்கள், மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைத்தார்கள். முற்காலத்தில் ஓரியர் சேயீரில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் ஏசாவின் சந்ததியார் அவர்களைத் துரத்திவிட்டார்கள். யெகோவா தங்களுக்கு உரிமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேலர் செய்ததுபோலவே, ஏசாவின் சந்ததியார் ஓரியரைத் தங்கள் முன்னின்று துரத்திவிட்டு, அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.
அப்பொழுது யெகோவா, “நீங்கள் எழுந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்துபோங்கள்” என்றார். அப்படியே நாமும் பள்ளத்தாக்கைக் கடந்துசென்றோம்.
நாம் காதேஸ் பர்னேயாவிலிருந்து புறப்பட்டு, சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்கும்வரை முப்பத்தெட்டு வருடங்கள் எடுத்தன. அதற்குள்ளாக யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியே, யுத்தம் செய்யும் மனிதரான அந்தச் சந்ததி முழுவதும் முகாமிலிருந்து அழிந்துபோனார்கள். அவர்களை முகாமிலிருந்து முற்றிலும் அகற்றிப்போடும்வரை, யெகோவாவினுடைய கரம் அவர்களுக்கு எதிராக இருந்தது.
மக்கள் மத்தியில் கடைசியில் இருந்த யுத்தமனிதர் இறந்தபின், யெகோவா என்னிடம் சொன்னதாவது: “நீங்கள் இன்று மோவாப் பிரதேசத்தின் எல்லையை ஆர் என்ற இடத்தில் கடந்துசெல்வீர்கள். நீங்கள் அம்மோனியரின் நாட்டின் வழியாக வருகிறபோது, அவர்களைத் தொல்லைப்படுத்தாமலும், யுத்தம்செய்யத் தூண்டாமலும் இருங்கள். ஏனெனில் அம்மோனியருக்குச் சொந்தமான எந்த நிலத்தையும் நான் உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கமாட்டேன். அந்த நாட்டை லோத்தின் சந்ததிக்கே உரிமையாகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
முற்காலத்தில் அந்த நாட்டிலே அரக்கர் வாழ்ந்தபடியால் அது, அரக்கர்களுடைய நாடு என்று கருதப்பட்டது. அம்மோனியர் அவர்களை சம்சூமியர் என்று அழைத்தார்கள். அவர்கள் பலமும், எண்ணிக்கையில் அதிகமும், ஏனாக்கியரைப் போலவே உயரமுமாய் இருந்தார்கள். ஆனால் யெகோவா அவர்களை அம்மோனியரின் முன்னின்று துரத்திவிட்டார். இவ்வாறு அம்மோனியர் அவர்களைத் துரத்திவிட்டு அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள். சேயீரில் வாழ்ந்த ஓரியரை ஏசாவின் சந்ததியின் முன்பாக அழித்தபோதும், யெகோவா இவ்விதமாகவே ஏசாவின் சந்ததிக்கும் செய்தார். அவர்கள் ஓரியரை வெளியே துரத்திவிட்டு, அவர்களுடைய இடத்தில் இந்நாள்வரை வாழ்கிறார்கள். அதேபோல் காசா வரையுள்ள கிராமங்களில் வாழ்கிற ஆவியரை, கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.
எஸ்போனின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தல்
“இப்பொழுது புறப்பட்டு, அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்துசெல்லுங்கள். பாருங்கள், எமோரியனான எஸ்போனின் அரசன் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன். நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கும்படி அவனுடன் சண்டையிடுங்கள். அந்த நாளிலேயே வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாடுகள்மேலும் உங்களைப்பற்றிய திகிலையும், பயத்தையும் போடத் தொடங்குவேன். அவர்கள் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்தவுடன் நடுங்கி, உங்களால் வேதனைப்படுவார்கள்” என்றார்.
நான் கெதெமோத் பாலைவனத்திலிருந்து எஸ்போனிலிருந்த சீகோன் அரசனுக்குச் சமாதான செய்தி சொல்லும்படி தூதுவர்களை அனுப்பிச் சொன்னதாவது: “உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். பிரதான வீதியிலேயே நாங்கள் தங்குவோம்; வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பமாட்டோம். நாங்கள் சாப்பிடுவதற்காக உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குக் கொடுங்கள். வெள்ளிப்பணத்தை அதன் விலையாகச் செலுத்துவோம். நாங்கள் கால்நடையாய் கடந்துபோகுமட்டும் அனுமதியுங்கள். நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போகும்வரை, சேயீரில் வாழ்கிற ஏசாவின் சந்ததியும் ஆர் என்னும் பிரதேசத்தில் வசிக்கும் மோவாபியரும் எங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்” ஆனால் எஸ்போனின் அரசனாகிய சீகோன் தன் நாட்டைக் கடந்துசெல்ல நமக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டான். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா இப்பொழுது செய்திருக்கிறதுபோல், அவனை உங்கள் கைகளில் கொடுக்கும்படி அவனுடைய மனதைப் பிடிவாதமாகவும், அவனுடைய இருதயத்தைக் கடினமாகவும் ஆக்கினார்.
பின்பு யெகோவா என்னிடம் சொன்னதாவது: “பார், நான் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவிக்கத் தொடங்கிவிட்டேன். இப்பொழுது அவர்களைக் கைப்பற்றத் தொடங்கி அவனுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
சீகோனும், அவனுடைய எல்லாப் படைகளும் யாகாசில் நம்முடன் யுத்தம் செய்ய எதிர்கொண்டு வந்தபோது, நம்முடைய இறைவனாகிய யெகோவா அவனை நம்மிடம் ஒப்படைத்தார். நாம் அவனை அவனுடைய மகன்களுடனும், அனைத்துப் படைகளுடனும் முறியடித்தோம். நாம் அக்காலத்திலேயே பட்டணங்கள் யாவற்றையும் கைப்பற்றி, ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் முழுவதும் அழித்தோம்; ஒருவரையும் தப்பவிடவில்லை. அங்கிருந்த வளர்ப்பு மிருகங்களையும், நாம் கைப்பற்றியிருந்த பட்டணங்களிலிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் நாம் நமக்காகக் கொண்டுவந்தோம். அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே உள்ள அரோயேரிலும், அப்பள்ளத்தாக்கிலிருந்த பட்டணத்திலுமிருந்து கீலேயாத்வரைக்கும் ஒரு பட்டணமாவது நாம் கைப்பற்றிக்கொள்ள முடியாத அளவு பலமுள்ளவையாய் இருக்கவில்லை. நமது இறைவனாகிய யெகோவா அவற்றையெல்லாம் நமக்குக் கொடுத்தார். நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே அம்மோனியரின் நாட்டையும், யாப்போக்கு ஆற்றங்கரையிலுள்ள ஊர்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும் நீங்கள் பிடித்துக்கொள்ளவில்லை.
பாசானின் அரசன் தோற்கடிக்கப்படுதல்
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாகச் சென்றோம். அப்பொழுது பாசானின் அரசனாகிய ஓக் என்பவன் தன் முழு படையுடனும் அணிவகுத்து நம்முடன் யுத்தம் செய்வதற்கு எத்ரேயில் நம்மை எதிர்கொண்டான். யெகோவா என்னிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில் நான் அவனையும், அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.
அவ்வாறே நமது இறைவனாகிய யெகோவா பாசானின் அரசன் ஓகையும், அவனுடைய முழு படையையும் நம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் ஒருவரும் தப்பிப் போகாதபடி நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம். அக்காலத்தில் நாம் அவனுடைய பட்டணங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து அவர்களுடைய அறுபது பட்டணங்களில் ஒன்றையாகிலும் நாம் கைப்பற்றாமல் விடவில்லை. பாசானில் ஓகின் ஆளுகைக்கு உட்பட்ட முழு அர்கோப் பிரதேசத்தையும் கைப்பற்றினோம். இப்பட்டணங்கள் எல்லாம் உயர்ந்த மதில்களாலும், வாசல்களாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கே மதில்களில்லாத பல கிராமங்களும் இருந்தன. எஸ்போனின் அரசன் சீகோனை அழித்ததுபோல அவர்களையும் முழுவதும் அழித்தோம். ஒவ்வொரு பட்டணத்தையும் அங்கிருந்த ஆண், பெண், பிள்ளைகள் அனைவரையும் அழித்தோம். ஆனால் எல்லா வளர்ப்பு மிருகங்களையும், பட்டணங்களிலிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் நமக்கென்று கொண்டுவந்தோம்.
அக்காலத்திலேயே இந்த இரண்டு எமோரிய அரசர்களிடமிருந்தும், அர்னோன் பள்ளத்தாக்கில் இருந்து, எர்மோன் மலைவரைக்கும் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த பிரதேசத்தைக் கைப்பற்றினோம். சீதோனியர் எர்மோன் மலையை சிரியோன் என்று அழைத்தார்கள். எமோரியரோ அதை சேனீர் என்று அழைத்தார்கள். உயர்ந்த சமவெளியிலுள்ள எல்லா பட்டணங்களையும் கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி வரையுள்ள பாசானிலிருந்த ஓகின் ஆட்சிக்குட்பட்ட எல்லா பட்டணங்களையும் கைப்பற்றினோம். முன்பிருந்த அரக்கருள் மீதியாக இருந்தவன் பாசான் அரசன் ஓக் மட்டுமே. அவனது கட்டில் இரும்பினால் செய்யப்பட்டிருந்தது. அதன் அளவு மனிதருடைய கை பதிமூன்று அடி நீள முழத்தின்படியே ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது இன்னும் அம்மோனியரின் பட்டணங்களில் ஒன்றான ரப்பாவில் இருக்கிறது.
நாட்டின் பிரிவுகள்
அக்காலத்தில் நாங்கள் கைப்பற்றிய நிலத்திலிருந்து அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே அரோயேர் பட்டணத்துக்கு வடபகுதியிலுள்ள பிரதேசத்தையும், கீலேயாத்தின் மலைநாட்டில் பாதியையும், அதன் பட்டணங்களையும் ரூபனியருக்கும் காத்தியருக்கும் நான் கொடுத்தேன். கீலேயாத்தின் மீதியான பகுதியையும் ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்தேன். பாசானிலுள்ள முழு அர்கோப் பிரதேசமும் அரக்கர் நாடு என சொல்லப்பட்டிருந்தது. மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கேசூரியர், மாகாத்தியர் ஆகியோருடைய எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினான். அதற்கு அவனுடைய பெயரே இடப்பட்டது. எனவே பாசான் இந்நாள்வரைக்கும் அவோத்யாவீர்3:14 அவோத்யாவீர் என்பதற்கு அவோர் வசிக்குமிடம் என்று பொருள். என்றே அழைக்கப்படுகிறது. நான் கீலேயாத்தை மாகீருக்குக் கொடுத்தேன். கீலேயாத்திலிருந்து அர்னோன் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசத்தை ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். அப்பள்ளத்தாக்கின் நடுப்பகுதி யாப்போக்கு ஆறுவரை செல்கிறது. அச்சிற்றாறு அம்மோனியரின் எல்லையாக அமைந்திருக்கிறது. அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதி அதன் தெற்கு எல்லையாக இருந்தது. அதன் மேற்கு எல்லையானது, கின்னரேத்தில் இருந்து பிஸ்காவின் மலைச்சரிவின் கீழுள்ள உப்புக்கடல் எனப்படும் அரபா வரையுள்ள யோர்தான் நதியாய் இருந்தது.
அந்த நாட்களிலே நான் ரூபனியருக்கும் காத்தியருக்கும் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் இறைவனாகிய யெகோவா, இந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்களுடைய பலசாலிகளான மனிதர் யுத்த ஆயுதம் தரித்து, சகோதரரான இஸ்ரயேலருக்கு முன்னே செல்லவேண்டும். ஆனால் உங்கள் மனைவிகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வளர்ப்பு மிருகங்களுடன் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பட்டணங்களில் தங்கியிருக்கலாம். உங்களிடம் அநேக வளர்ப்பு மிருகங்கள் இருப்பது எனக்குத் தெரியும். யெகோவா உங்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் இளைப்பாறுதலைக் கொடுப்பார். உங்கள் இறைவனாகிய யெகோவா யோர்தானுக்கு அப்பால் அவர்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை அவர்களும் கைப்பற்றிக்கொள்வார்கள். அதுவரைக்கும் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து யுத்தத்திற்குப் போங்கள். அதன்பின் நீங்கள் ஒவ்வொருவரும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற உங்கள் உரிமைப் பகுதிக்குப் போகலாம்” என்றேன்.
யோர்தானை கடக்க மோசேக்குத் தடை
அக்காலத்தில் நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த இரண்டு அரசர்களுக்கும் செய்திருக்கிற எல்லாவற்றையும் நீ உன் கண்களினாலேயே கண்டிருக்கிறாய். நீ போகிற இடத்திலுள்ள அரசுகளுக்கெல்லாம் யெகோவா அவ்வாறே செய்வார். நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன் இறைவனாகிய யெகோவா உனக்காக யுத்தம் செய்வார்” என்றேன்.
அக்காலத்தில் நான் யெகோவாவிடம் மன்றாடி, “ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய அடியானாகிய எனக்கு, உமது மகத்துவத்தையும், உமது வல்லமையையும் காண்பிக்கத் தொடங்கி இருக்கிறீரே. நீர் செய்கிற காரியங்களையும், வல்லமையான செயல்களையும் வானத்திலோ, பூமியிலோ செய்யத்தக்க வேறெந்த தெய்வமாவது உண்டோ? நான் கடந்துபோய், யோர்தானுக்கு அப்பாலுள்ள நல்ல நாட்டை அதாவது, அந்த நல்ல மலைநாட்டையும், லெபனோனையும் பார்க்கவிடும்” என்றேன்.
ஆனால் உங்கள் நிமித்தம் யெகோவா என்மேல் கோபங்கொண்டு, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிகொடுக்கவில்லை. அவர், “போதும், இந்தக் காரியத்தைக்குறித்து மேலும் பேசாதே. நீ பிஸ்கா மலையுச்சிக்கு ஏறிப்போய் மேற்கையும், வடக்கையும், தெற்கையும், கிழக்கையும் சுற்றிப்பார். நீ இந்த யோர்தானைக் கடந்துபோகமாட்டாய். எனவே உன் கண்களினாலே அந்நாட்டைப் பார். ஆனால், யோசுவாவுக்குப் பொறுப்பைக் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தி பலப்படுத்து. ஏனெனில் நீ காணப்போகும் நாட்டை இந்த மக்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி அவனே அவர்களை வழிநடத்துவான்” என்றார். எனவே நாங்கள் பெத்பெயோருக்கு அருகேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.
கீழ்ப்படியக் கட்டளை
இஸ்ரயேலரே, நான் உங்களுக்குப் போதிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்திருந்து, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள். நான் கட்டளையிடும் இவற்றுடன் ஒன்றையும் கூட்டவும் வேண்டாம், ஒன்றையும் குறைக்கவும் வேண்டாம். ஆனால் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.
4:3
[எண். 25:1-9]
பாகால் பேயோரில் யெகோவா செய்தவற்றை உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் மத்தியில் பேயோரில் இருந்த பாகாலைப் பின்பற்றிய எல்லோரையும் அழித்துப்போட்டார். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இன்றுவரை இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.
பாருங்கள், என் இறைவனாகிய யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே, விதிமுறைகளையும் சட்டங்களையும் நான் உங்களுக்குப் போதித்திருக்கிறேன். ஆகவே நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை நீங்கள் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள்; ஏனெனில் இது உங்கள் ஞானத்தையும் விவேகத்தையும் பிற நாடுகளுக்குக் காண்பிக்கும். அவர்கள் இக்கட்டளைகள் எல்லாவற்றையும் பற்றிக் கேள்விப்பட்டு, “நிச்சயமாகவே இந்தப் பெரிய நாடு ஞானமும் விவேகமும் உள்ள மக்களைக் கொண்டது” என சொல்வார்கள். நமது இறைவனாகிய யெகோவாவை நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் அவர் நமக்கு அருகில் இருப்பதுபோல, தங்களுக்கு அருகே வரத்தக்க தெய்வத்தைக்கொண்ட வேறு நாடு எது? இன்று நான் உங்களுக்கு முன்பாக வைக்கப்போகிற, சட்டங்களை போன்ற நியாயமான விதிமுறைகளையும், நீதிநெறிகளையும் பெற்றிருக்கிற வேறு பெரிய நாடு எது?
எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் கண்கள் கண்ட காரியங்களை மறவாமலும், நீங்கள் உயிர்வாழும் நாளெல்லாம் அவற்றை உங்கள் இருதயத்தில் காத்துக்கொள்ள கவனமாயிருங்கள். அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதியுங்கள். ஓரேபிலே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் நின்ற அந்த நாளை நினைவுகூருங்கள். அப்பொழுது யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளைக் கேட்கும்படி மக்களை எனக்கு முன்பாக கூடிவரச்செய். அவர்கள் அந்த நாட்டில் வாழும் காலம் முழுவதும் எனக்குப் பயபக்தியாய் இருக்கக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கட்டும்” என்றார். நீங்கள் அருகே வந்து மலையடிவாரத்தில் நின்றீர்கள். அப்பொழுது மலை நெருப்புப் பற்றி, அதன் ஜூவாலை வானமட்டும் எழும்ப, கார்மேகமும் காரிருளும் சூழ்ந்தன. பின்பு யெகோவா நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். நீங்கள் அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டீர்கள், ஆனால் ஒரு உருவத்தையும் காணவில்லை. குரல் மட்டுமே கேட்டது. அவர் பத்துக் கட்டளைகளான தமது உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, நீங்கள் அவற்றைப் பின்பற்றும்படி உங்களுக்குக் கட்டளையிட்டார். பின்பு அவர் அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாட்டில் நீங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும், சட்டங்களையும் உங்களுக்குப் போதிக்கும்படியாக அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.
விக்கிரக வழிபாட்டிற்குத் தடை
யெகோவா ஓரேப் மலையில் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசிய அந்த நாளிலே, நீங்கள் எந்தவித ஒரு உருவத்தையுமே காணவில்லை. ஆகையால் உங்களைக்குறித்து மிகக் கவனமாயிருங்கள். நீங்கள் சீர்கெட்டவர்களாகி உங்களுக்காக ஒரு விக்கிரகத்தையும் செய்யவேண்டாம். ஒரு ஆணின் உருவத்திலோ, பெண்ணின் உருவத்திலோ, அல்லது பூமியிலுள்ள எந்தவொரு மிருகத்தின் உருவத்திலோ, ஆகாயத்தில் பறக்கும் எந்தவொரு பறவையின் உருவத்திலோ, நிலத்தில் ஊர்ந்து செல்லும் எந்தவொரு உயிரினத்தின் உருவத்திலோ, கீழே தண்ணீரில் வாழும் எந்தவொரு மச்சத்தின் உருவத்திலோ எந்தவொரு உருவச்சிலையையும் செய்யவேண்டாம். நீங்கள் ஆகாயத்தைப் பார்த்து, வானத்தில் அணிவகுத்திருக்கிற சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் காணும்போது, அவற்றை வணங்கும்படி அவற்றால் கவரப்படவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை வானத்தின் கீழுள்ள எல்லா நாடுகளுக்குமென வைத்திருக்கிறபடியால், நீங்கள் அவற்றை வணங்கவேண்டாம். ஆனால் உங்களை, நீங்கள் இப்பொழுது இருக்கிறதுபோல, இரும்பு உருக்கும் சூளையான எகிப்திலிருந்து யெகோவா தமது உரிமைச்சொத்தான மக்களாய் இருக்கும்படி வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
உங்கள் நிமித்தம் யெகோவா என்னுடன் கோபங்கொண்டார். அதனால் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற அந்த நாட்டிற்கு நான் போவதில்லை என எனக்குக் கடுமையாய் ஆணையிட்டுக் கூறினார். ஆகவே, நான் இந்த நாட்டிலேயே இறப்பேன்; யோர்தானைக் கடக்கமாட்டேன். ஆனால் நீங்கள் கடந்துபோய், அந்த நல்ல நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் செய்த அவருடைய உடன்படிக்கையை மறவாதபடி நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்; உங்கள் இறைவனாகிய யெகோவா தடைசெய்திருக்கிற எந்த உருவத்திலும் உங்களுக்காக விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா சுட்டெரிக்கும் நெருப்பு, அவர் தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயும் இருக்கிறார்.
வருங்காலத்தில் நீங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பெற்று அந்த நாட்டில் அதிக நாட்கள் வாழ்வீர்கள். அப்போது நீங்கள் சீர்கெட்டு எந்தவித விக்கிரகத்தையும் உருவாக்கி உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, கோபமூட்டினால், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலே மிகவிரைவில் அழிந்துபோவீர்கள் என்பதற்கு வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக வைக்கிறேன். நீங்கள் அங்கு நீண்டகாலம் வாழமாட்டீர்கள், நிச்சயமாய் அழிக்கப்படுவீர்கள். யெகோவா உங்களை மக்கள் கூட்டங்களுக்குள்ளே சிதறப்பண்ணுவார். உங்களில் சிலர் மட்டுமே யெகோவா உங்களைத் துரத்திவிடுகிற அந்த நாடுகளின் மத்தியில் தப்பியிருப்பீர்கள். அங்கே நீங்கள் மரத்தினாலும் கல்லினாலும் மனிதன் செய்த தெய்வங்களை வணங்குவீர்கள். அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ, முகர்ந்தறியவோ முடியாது. ஆனால் அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் நீங்கள் அவரைத் தேடினால் அவரைக் காண்பீர்கள். அக்காலங்களில் நீங்கள் துன்பப்பட இவைகளெல்லாம் உங்களுக்கு நிகழும். இவற்றின் பின்பு வரப்போகும் கடைசி நாட்களில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கம் நிறைந்த இறைவனாய் இருக்கிறார்; அவர் உங்களைக் கைவிடவோ, அழிக்கவோமாட்டார். அவர் உங்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு உறுதிப்படுத்தி, அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
யெகோவாவே இறைவன்
இறைவன் மனிதனைப் பூமியில் படைத்த நாள் முதல், உங்கள் காலத்திற்கு மிக முன்னதாக உள்ள அந்த பூர்வீக நாட்களைப்பற்றிக் கேட்டு அறியுங்கள். வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை கேளுங்கள். எங்கேயாவது இதுபோன்ற ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறதோ? இதுபோன்ற எதையேனும் கேள்விப்பட்டதுண்டோ? நெருப்பின் மத்தியிலிருந்து பேசும் இறைவனின் குரலை நீங்கள் கேட்டதுபோல் வேறு எந்த மக்களாவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்திலே அநேக காரியங்களைச் செய்து, பரீட்சைகளாலும், அற்புத அடையாளங்களாலும், அதிசயங்களாலும், யுத்தத்தினாலும், வலிமையுள்ள கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும், பெரிதும் பயங்கரமுமான எல்லா காரியங்களினாலும் ஒரு நாட்டை வேறொரு நாட்டிலிருந்து தனக்கென்றுப் பிரித்தெடுக்க முயற்சித்த வேறே தெய்வம் உண்டோ?
யெகோவாவே இறைவன், அவரையன்றி வேறு ஒருவர் இல்லை என்பதை நீங்கள் அறியும்படி இவை எல்லாம் உங்களுக்குக் காண்பிக்கப்பட்டன. அவர் உங்களுக்கு அறிவுறுத்தும்படி வானத்திலிருந்து தமது குரலை உங்களுக்குக் கேட்கப்பண்ணினார். பூமியிலே அவர் தமது பெரும் நெருப்பை உங்களுக்குக் காண்பித்தார்; நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள். அவர் உங்களுடைய முற்பிதாக்களில் அன்பாயிருந்தபடியாலும், அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாரைத் தெரிந்துகொண்டதினாலும் அவர் உங்களோடு இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அவர் உங்களைவிட பெரிதும், வல்லமையும் உள்ள நாடுகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, இன்று இருக்கிறபடி அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பதற்காக உங்களை அவர் அதற்குள் கொண்டுவந்தார்.
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாவே இறைவன், அவரைத்தவிர வேறு யாருமே இல்லை என்பதை, இன்றே நீங்கள் ஏற்று அதை உங்கள் இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் அவரது விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாயிருக்கும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு நிரந்தரமாய்க் கொடுக்கும் அந்த நாட்டில் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.
அடைக்கலப் பட்டணங்கள்
மோசே யோர்தானுக்குக் கிழக்கே மூன்று பட்டணங்களை ஒதுக்கி வைத்தான். யாராவது தன் அயலானுக்குத் தீங்குசெய்ய முன்யோசனையின்றி, தவறுதலாக அவனைக் கொன்றுவிட்டால், அவன் அங்கு ஓடித்தப்பலாம். அவன் அந்தப் பட்டணங்களில் ஒன்றுக்குள் ஓடித்தப்பி, தன் உயிரைக் காப்பாற்றலாம். அப்பட்டணங்களாவன: ரூபனியருக்குப் பாலைவன பீடபூமியிலுள்ள பேசேர் பட்டணம். காத்தியருக்குக் கீலேயாத்திலுள்ள ராமோத் பட்டணம். மனாசேயினருக்கு பாசானிலுள்ள கோலான் பட்டணம் என்பனவாகும்.
மோசேயின் சட்டத்திற்கான அறிமுகம்
மோசே இஸ்ரயேலருக்கு முன்வைத்த சட்டம் இதுவே. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களுக்கு மோசே கொடுத்த ஒழுங்குவிதிகளும், நிபந்தனைகளும், சட்டங்களும் இவையே. அப்பொழுது அவர்கள் யோர்தானுக்குக் கிழக்கே பெத்பெயோருக்கு அருகேயிருந்த பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அந்த நாடு எஸ்போனில் ஆட்சி செய்த எமோரியரின் அரசனான சீகோனுடையது. மோசேயும், இஸ்ரயேலரும் எகிப்திலிருந்து வருகையில் அவனைத் தோற்கடித்தார்கள். அவர்கள் யோர்தானுக்குக் கிழக்கே இருந்த இரு எமோரிய அரசர்களான சீகோனின் நாட்டையும், பாசானின் அரசனான ஓகின் நாட்டையும் கைப்பற்றினார்கள். இந்த நாடு அர்னோன் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள அரோயேர் என்ற இடத்திலிருந்து, எர்மோன் என அழைக்கப்படும் சீயோன் மலைவரைக்கும் பரந்திருந்தது. இந்த நாடு யோர்தானுக்குக் கிழக்கே அரபாவையும், பிஸ்கா மலைச்சரிவின்கீழ் இருந்த உப்புக்கடலையும் உள்ளடக்கியிருந்தது.
பத்துக் கட்டளைகள்
மோசே இஸ்ரயேலர் எல்லோரையும் அழைத்துச் சொன்னதாவது:
இஸ்ரயேலரே கேளுங்கள், நான் இன்று உங்களுக்கு அறிவிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கற்று, அவைகளைப் பின்பற்றும்படி கவனமாயிருங்கள். நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார். அவர் அந்த உடன்படிக்கையை யெகோவா நம்முடைய முற்பிதாக்களோடு மட்டும் செய்யவில்லை. இன்று உயிரோடு இருக்கும் நம் அனைவருடனும் அதைச் செய்தார். யெகோவா மலையின்மேலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களுடன் முகமுகமாய்ப் பேசினார். நீங்கள் நெருப்புக்குப் பயந்து மலைக்குமேல் ஏறாதிருந்தபடியால், நான் அவ்வேளையில் யெகோவாவினுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படியாக யெகோவாவுக்கும், உங்களுக்கும் இடையில் நின்றேன்.
அவர் சொன்னதாவது:
“அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
“நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே.
நீ உனக்காக எந்தவொரு விக்கிரகத்தையும் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கிறவைகளின் உருவத்தில் எந்த விக்கிரகத்தையும் செய்யாதே. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம்; ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து, வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன்.
உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தமது பெயரைத் தவறான முறையில் பயன்படுத்தும் எவனையும் குற்றமற்றவனாகக் கருதமாட்டார்.
உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள். ஆறு நாட்களிலும் நீ உழைத்து, உன் வேலைகளையெல்லாம் செய்யலாம். ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ, உன் எருதோ, கழுதையோ, உன் மிருகங்களில் எதுவோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. நீ ஓய்வெடுப்பதுபோலவே உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் ஓய்வெடுக்கவேண்டும். நீ எகிப்திலே அடிமையாக இருந்தாய் என்றும், உன் இறைவனாகிய யெகோவா தமது வல்லமையான கையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் அங்கிருந்து உன்னை மீட்டு, வெளியே கொண்டுவந்தார் என்றும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அதினாலேயே உன் இறைவனாகிய யெகோவா ஓய்வுநாளை நீ கைக்கொள்ளும்படி உனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
உன் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறபடியே உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணு, அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்ந்து நலமாயிருப்பாய்.
கொலைசெய்ய வேண்டாம்.
விபசாரம் செய்யவேண்டாம்.
களவு செய்யவேண்டாம்.
உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
உன் அயலானுடைய மனைவியை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானுடைய வீட்டையோ, நிலத்தையோ வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குச் சொந்தமான வேறு எதையுமோ அபகரிக்க ஆசைகொள்ளாதே.”
மேகமும், காரிருளும் சூழ்ந்த அந்த மலையின்மேல், நெருப்பின் நடுவிலிருந்து உங்கள் முழு சபையாருக்கும் உரத்த குரலில் யெகோவா அறிவித்த கட்டளைகள் இவையே; அவற்றுடன் அவர் எதையும் கூட்டவில்லை. அவர் அக்கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, அவற்றை என்னிடத்தில் கொடுத்தார்.
அந்த மலை நெருப்புப் பற்றி எரியும்பொழுது, இருளிலிருந்து உண்டான குரலை நீங்கள் கேட்டீர்கள். அப்போது உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் உங்கள் சபைத்தலைவர்களும் என்னிடத்தில் வந்து சொன்னதாவது: “எங்கள் இறைவனாகிய யெகோவா தமது மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார். நாங்கள் நெருப்பிலிருந்து வருகிற அவர் குரலைக் கேட்டோம். இறைவன் ஒரு மனிதனோடு பேசிய பின்பும் அவன் உயிரோடிருப்பான் என்பதை இன்று கண்டோம். ஆனாலும் இப்பொழுது ஏன் நாங்கள் சாகவேண்டும்? இந்தப் பெரிய நெருப்பு எங்களை எரித்து அழித்துவிடும். தொடர்ந்து நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலைக் கேட்டால், நாங்கள் இறந்துபோவோம். நாங்கள் இன்று கேட்டதுபோல உயிருள்ள இறைவனின் குரல் நெருப்பிலிருந்து பேசுவதைக் கேட்டும் உயிர்த்தப்பியிருக்கிற மனிதர் யார்? நீரே கிட்டப்போய் நமது இறைவனாகிய யெகோவா சொல்வதெல்லாவற்றையும் கேளும். பின் எங்கள் இறைவனாகிய யெகோவா உமக்குச் சொல்லும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதற்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம்” என்றீர்கள்.
நீங்கள் என்னோடு பேசுவதை யெகோவா கேட்டார். அவர் என்னிடம், “இந்த மக்கள் உனக்குச் சொன்னவற்றை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னதெல்லாம் நல்லதே. அவர்களுடைய இருதயங்கள் எனக்குப் பயந்து, எப்பொழுதும் என் கட்டளைகளைக் கைக்கொண்டால் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நலமாய் இருப்பார்களே!
“நீ போய் அவரவர் கூடாரங்களுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல். ஆனால் நீயோ இங்கே என்னிடம் தங்கியிரு. அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி நான் அவர்களுக்குக் கொடுக்கிற நாட்டில், அவர்கள் பின்பற்றும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
ஆகவே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறதை கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். அதைவிட்டு வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகிப்போக வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிற வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் அந்த நாட்டில் வாழ்ந்து, செழித்து நீடித்திருப்பீர்கள்.
இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள்
யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளும், விதிமுறைகளும், சட்டங்களும் இவையே. இவற்றை உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை நியமித்திருக்கிறார். நான் உங்களுக்குக், கொடுக்கிற அவருடைய இந்த விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கைக்கொண்டால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளும் வாழும் காலமெல்லாம் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பீர்கள். நீங்கள் நீடித்த வாழ்வையும் அனுபவிப்பீர்கள். இஸ்ரயேலே, கேளுங்கள், கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். கீழ்ப்படிந்தால் நீங்கள் நலமாயிருப்பீர்கள்; பாலும் தேனும் வழிந்தோடுகிற நாட்டில், உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே மிகுதியாய்ப் பெருகுவீர்கள்.
இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா. உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து. இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும். அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள். உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம். ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார். நீங்கள் மாசாவிலே6:16 [யாத். 17:1-7] செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள். யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார்.
வருங்காலத்திலே உன்னுடைய மகன் உன்னிடம், “நம்முடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற இந்த ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், சட்டங்கள், இவைகளின் கருத்து என்ன?” என்று கேட்டால், நீ அவனிடம் சொல்லவேண்டியதாவது: “நாங்கள் எகிப்திலே பார்வோனுடைய அடிமைகளாயிருந்தோம். ஆனால் யெகோவா எங்களைத் தமது வலிய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். மேலும், பெரிதும் பயங்கரமுமான, அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் எகிப்தின்மேலும், பார்வோனின்மேலும், அவன் குடும்பத்திலுள்ள யாவர்மேலும் யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாகவே அனுப்பினார். ஆனால், இறைவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக, எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். இந்த விதிமுறைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நமது இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்பொழுது நாம் இன்று இருப்பதுபோலவே என்றும் செழிப்புற்று, உயிருடன் காக்கப்படுவோம். எங்கள் இறைவனாகிய யெகோவா, நமக்குக் கட்டளையிட்டபடியே அவருக்கு முன்பாக இந்த சட்டம் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய கவனமாயிருந்தால் அதுவே நமக்கு நீதியாய் இருக்கும்.”
நாடுகளைத் துரத்துதல்
உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்குள் உங்களைக் கொண்டுவருவார். அங்கே உங்களுக்கு முன்பாகப் பல நாடுகளை வெளியே துரத்துவார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் பெருத்தவர்களுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டவர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார். இவ்விதமாய் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களிடம் ஒப்புக்கொடுத்து, நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கும்போது, நீங்கள் அவர்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவர்களோடு உடன்படிக்கை செய்யவேண்டாம், அவர்களுக்கு இரக்கங்காட்டவேண்டாம். நீங்கள் அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்யவேண்டாம். உங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டாம். அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்கு எடுக்கவும் வேண்டாம். ஏனெனில், அவர்கள் மற்ற தெய்வங்களை வழிபடுவதற்காக உங்கள் மகன்களை என்னைப் பின்பற்றுவதிலிருந்து விலகச்செய்வார்கள். அப்பொழுது யெகோவாவின் கோபம் உங்களுக்கு எதிராக மூண்டு உங்களை விரைவாக அழித்துப்போடும். நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது இதுவே: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி, அவர்களுடைய விக்கிரகங்களை நெருப்பில் எரித்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருமையான உரிமைச்சொத்தாக இருக்கும்படி, அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். பூமியின் மேலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிலுமிருந்து உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார்.
மற்ற மக்கள் கூட்டங்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதற்காக யெகோவா உங்களில் அன்புகூர்ந்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை, நீங்கள் எல்லா மக்கள் கூட்டங்களிலும் கொஞ்சமாய் இருந்தீர்கள். ஆனாலும் யெகோவா உங்கள்மேல் அன்புகூர்ந்தபடியினால்தான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தவும், அவர் உங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பார்வோன் அரசனின் அதிகாரத்திலிருந்தும் தமது வல்ல கரத்தினால் விடுவித்து உங்களை மீட்டுக்கொண்டார். ஆகையால் உங்கள் இறைவனாகிய யெகோவா மட்டுமே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள்; அவரே உண்மையுள்ள இறைவன். அவர் தன்னில் அன்புகூர்ந்து தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, தமது அன்பின் உடன்படிக்கையை ஆயிரம் தலைமுறைக்கும் தொடர்ந்து காத்துக்கொள்கிறவர். ஆனால்,
தம்மை வெறுக்கிறவர்களை அழிப்பதன்மூலம் அவர்களுக்கு நேரடியாக பதிலளிப்பார்;
தம்மை வெறுக்கிறவர்களை நேரடியாகத் தண்டிப்பதற்கு தாமதிக்கமாட்டார்.
ஆகவே இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதற்கு நீங்கள் கவனமாய் இருங்கள்.
நீங்கள் இந்த சட்டங்களைக் கவனித்து அதைப் பின்பற்ற எச்சரிக்கையாயிருந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்களுடன் செய்துகொண்ட தமது அன்பின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார். அவர் உங்களில் அன்புகூர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் எண்ணிக்கைகளைப் பெருகச்செய்வார். உங்களுக்குக் கொடுப்பதாக, உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டில், உங்களுடைய கர்ப்பத்தின் கனியையும், உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய நிலத்தின் விளைச்சலையும், மாட்டு மந்தையிலுள்ள கன்றுகளையும், ஆட்டு மந்தையிலுள்ள குட்டிகளையும் ஆசீர்வதிப்பார். மற்ற எல்லா மக்களிலும் நீங்கள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்; உங்களுக்குள்ளும் உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இருப்பதில்லை. யெகோவா உங்களை எல்லா வியாதிகளிலிருந்தும் காத்துக்கொள்வார். எகிப்தில் நீங்கள் அறிந்திருந்த கொடிய வியாதிகளால் உங்களை வேதனைப்படுத்தமாட்டார்; ஆனால் உங்களை வெறுக்கிறவர்கள்மேல் அவற்றை வரப்பண்ணுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும் நீங்கள் அழிக்கவேண்டும். நீங்கள் அவர்கள்மேல் அனுதாபப்பட வேண்டாம். அவர்களுடைய தெய்வங்களுக்குப் பணிசெய்யவும் வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும்.
“எங்களிலும் இந்த நாடுகள் வலிமையானவர்கள், எப்படி அவர்களை எங்களால் துரத்தமுடியும்” என்று நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லக்கூடும். ஆனால் நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம். பார்வோனுக்கும், எகிப்து நாடு முழுவதற்கும் உங்கள் இறைவனாகிய யெகோவா செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா செய்த கொடிய துன்பங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும், அவருடைய வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களை வெளியே கொண்டுவந்ததை நீங்கள் உங்கள் கண்களினாலேயே கண்டீர்கள். நீங்கள் பயப்படும் எந்த மக்கள் கூட்டத்துக்கும், உங்கள் இறைவனாகிய யெகோவா அப்படியே செய்வார். மேலும், உங்கள் இறைவனாகிய யெகோவா, பகைவர்களில் உங்களுக்கு மறைந்து தப்பியிருக்கிறவர்களும் அழியும்வரை, அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார். அவர்களினால் நீங்கள் திகிலடையவேண்டாம். ஏனெனில், உங்கள் மத்தியில் இருக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவா பயத்திற்குரிய மகத்துவமான இறைவன். உங்கள் இறைவனாகிய யெகோவா அந்த நாடுகளை உங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடுவார். நீங்கள் அவர்களை முழுவதும் உடனடியாக அழிக்கவேண்டாம். அப்படிச் செய்தால் காட்டு மிருகங்கள் உங்களுக்கிடையே பெருகிவிடும். உங்கள் இறைவனாகிய யெகோவாவோ அவர்களை உங்களிடம் ஒப்படைத்து, அவர்கள் அழிந்துபோகும்வரை அவர்களைப் பெரிதும் கலங்கடிப்பார். அவர்களுடைய அரசர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர்களை வானத்தின்கீழ் இல்லாதபடி அழித்துப்போடுவார். உங்களை எதிர்த்து எழுந்துநிற்க ஒருவராலும் முடியாது; நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள். அவர்களுடைய தெய்வங்களின் உருவச்சிலைகளை நெருப்பினால் எரிக்கவேண்டும். அவற்றில் இருக்கும் தங்கத்தையோ வெள்ளியையோ அபகரிக்க ஆசைகொள்ளவேண்டாம். அவற்றை உங்களுக்காக எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும், அது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது. அவருக்கு அருவருப்பானது எதையும் உங்கள் வீட்டிற்குள் கொண்டுவர வேண்டாம், ஏனெனில் அவைகளைப்போலவே நீங்களும் அழிவுக்கு நியமிக்கப்படுவீர்கள். அவற்றை முற்றிலுமாக வெறுத்து அருவருத்து விலக்கிவிடுங்கள், ஏனெனில் அவை அழிவுக்கே நியமிக்கப்பட்டிருக்கின்றன.
யெகோவாவை மறக்கவேண்டாம்
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு யெகோவா ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள்போய் அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை சிறுமைப்படுத்தி, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களோ கைக்கொள்ளமாட்டீர்களோ என உங்களைச் சோதித்து, உங்கள் இருதயத்தில் உள்ளதை அறியும்படிக்கும், இந்த நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் வழியெங்கும் உங்களை எப்படி வழிநடத்தினார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களை சிறுமைப்படுத்தி, உங்களை பசியடையச்செய்து, பின்பு உங்கள் முற்பிதாக்கள் அறியாதிருந்த மன்னாவை உங்களுக்கு உண்ணக்கொடுத்தார். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, யெகோவாவினுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று உங்களுக்குப் போதிக்கும்படியே இப்படிச் செய்தார். இந்த நாற்பது வருட காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்கள் வீங்கவுமில்லை. ஒருவன் தன் மகனைக் கண்டித்து நடத்துவதுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கண்டித்து நடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு. அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு. அது உணவு குறைவுபடாத நாடு, அங்கு உங்களுக்குக் குறைவே இருக்காது; அந்த நாட்டின் கற்பாறைகள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் இருந்து செம்பைத் தோண்டி எடுக்கலாம்.
நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள். நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும், உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஏனெனில் அவரே உங்களை விஷப்பாம்புகளும் தேள்களும் நிறைந்த, விசாலமும் பயங்கரமுமான, தண்ணீரில்லாத அந்த வறண்ட நிலமாகிய கடினமான பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தார். அவர் உங்களுக்குக் கற்பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தார். உங்கள் முற்பிதாக்கள் அறிந்திராத மன்னாவை அவர் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக் கொடுத்தார். முடிவில் எல்லாம் உங்களுக்கு நலமாய் இருக்கும்படியாக உங்களைத் தாழ்மைப்படுத்தி உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார். நீங்கள், “எங்கள் வல்லமையும், எங்கள் கையின் வலிமையுமே இந்த செல்வத்தை எங்களுக்குச் சம்பாதித்தன” என்று எண்ணலாம். ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவரே இந்த செல்வத்தைச் சம்பாதிக்கும் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவர் இன்றிருப்பதுபோலவே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறவர்.
நீங்களோ எப்பொழுதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வழிபட்டு வணங்குவீர்களானால், நிச்சயமாகவே நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று நான் இன்று உங்களுக்கு விரோதமாய் சாட்சி கூறுகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படியாதபடியால், உங்களுக்கு முன்பாக யெகோவா அழித்த நாடுகளைப்போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.
இஸ்ரயேலுக்குச் சொத்துரிமை
இஸ்ரயேலரே, கேளுங்கள்: இப்பொழுது நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்களைவிட அதிகமானவர்களும் வலிமையானவர்களுமான நாடுகளைத் துரத்திவிடப் போகிறீர்கள். அவர்கள் வானத்தை எட்டும் மதில்களையுடைய பெரிய பட்டணங்களில் வாழ்கிறார்கள். அந்த மக்கள் வலிமையும் உயரமுமான அரக்கர்கள்! நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள்: “ஏனாக்கியருக்கு எதிராக யாரால் நிற்கமுடியும்?” என்று அவர்களைக்குறித்து சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு முன்பாக சுட்டெரிக்கும் நெருப்பைப்போல் போகிறவர் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். அவர் அவர்களை அழிப்பார்; உங்களுக்கு முன்பாக அவர்களைக் கீழ்ப்படுத்துவார். யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியது போலவே, நீங்கள் அவர்களை வெளியே துரத்தி, விரைவில் அவர்களை அழித்தொழிப்பீர்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட பின்பு, “எங்களுடைய நீதியின் காரணமாகவே யெகோவா இந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வதற்கு எங்களை இங்கு கொண்டுவந்திருக்கிறார்” என்று நீங்கள் நினைக்கவேண்டாம். அப்படியல்ல, இந்த நாடுகளின் கொடுமையின் காரணமாகவே யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார். நீங்கள் இந்த நாட்டை உங்கள் நீதியின் காரணமாகவோ, உங்கள் உத்தமத்தின் காரணமாகவோ உரிமையாக்கப்போவது அல்ல; இந்த நாட்டவரின் கொடுமையின் காரணமாகவும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குத் தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படிக்கும் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார். உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த வளமான நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி, அதை உங்களுக்குக் கொடுப்பது உங்கள் நேர்மையின் காரணமாக அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.
தங்கக் கன்றுக்குட்டி
பாலைவனத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எப்படிக் கோபமூட்டினீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் தொடங்கி, இங்கு வந்து சேரும்வரை நீங்கள் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறவர்களாகவே இருந்திருக்கிறீர்கள். ஓரேபிலே நீங்கள் யெகோவாவுக்கு கோபம் மூழச்செய்தீர்கள். அதனால் அவர் உங்களை அழித்துப்போடும் அளவுக்குக் கோபம்கொண்டார். யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை எழுதின கற்பலகைகளை பெற்றுக்கொள்ளும்படி, நான் மலைக்குப் போனபோது, அங்கே இரவும் பகலும் நாற்பது நாட்கள் தங்கினேன். அப்பொழுது நான் உணவு சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை. அங்கே இறைவனின் விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடம் கொடுத்தார். சபைக்கூடிய அந்த நாளிலே, யெகோவா மலையின்மேல் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுக்கு அறிவித்த கட்டளைகளெல்லாம் அவற்றில் இருந்தன.
இரவும் பகலுமாக நாற்பது நாட்கள் முடிந்தபின் உடன்படிக்கைப் பலகைகளான இரண்டு கற்பலகைகளை யெகோவா எனக்குக் கொடுத்தார். பின்பு யெகோவா என்னிடம், “இங்கிருந்து உடனடியாக இறங்கிப்போ. ஏனெனில் நீ எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உன்னுடைய மக்கள் சீர்கெட்டவர்களாகி விட்டார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதிலிருந்து விரைவாய் விலகிப்போய்த் தங்களுக்காக வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைச் செய்துகொண்டார்கள்” என்றார்.
மேலும் யெகோவா என்னிடம், “இந்த மக்களை நான் பார்த்தேன். உண்மையிலேயே இவர்கள் ஒரு கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள். நான் அவர்களை அழித்து, அவர்களுடைய பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் செய்யவிடு. நான் அவர்களைப்பார்க்கிலும் உன்னை வலிமையானதும், அதிகமானதுமான நாடாக்குவேன்” என்றார்.
எனவே, நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதே, நான் மலையிலிருந்து திரும்பி, கீழே இறங்கிப் போனேன். என் கைகளில் இரண்டு உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. கீழே நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்திருந்ததை நான் கண்டேன். நீங்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில், வார்க்கப்பட்ட ஒரு விக்கிரகத்தை உங்களுக்காக செய்திருந்தீர்கள். யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள். அப்பொழுது நான் அந்த இரண்டு கற்பலகைகளையும் எனது கைகளிலிருந்து வீசி எறிந்து, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே அவற்றை உடைத்தேன்.
யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்து, அவருக்குக் கோபமூட்டி, நீங்கள் செய்திருந்த எல்லா பாவங்களுக்காகவும், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன். நான் உணவு சாப்பிடவுமில்லை; தண்ணீர் குடிக்கவுமில்லை. ஏனெனில் நான் யெகோவாவின் கோபத்திற்கும், அவருடைய கடுங்கோபத்திற்கும் பயந்தேன். உங்களை அழித்துப்போடும் அளவுக்கு அவர் கோபங்கொண்டிருந்தார். ஆனாலும் யெகோவா திரும்பவும் எனக்குச் செவிகொடுத்தார். ஆரோனை அழிக்கும் அளவுக்கு யெகோவா அவன்மேல் கோபம்கொண்டார். அப்பொழுது ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன். உங்கள் கைகள் செய்த பாவச்சின்னமான அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து நெருப்பில்போட்டு எரித்தேன். அதை நொறுக்கி, புளுதியைப்போல் தூளாக அரைத்து, அதை மலையிலிருந்து கீழே ஓடும் நீரோடையில் எறிந்தேன்.
நீங்கள் தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவிலும்கூட யெகோவாவுக்குக் கடுங்கோபம் மூட்டினீர்கள்.
யெகோவா உங்களைக் காதேஸ் பர்னேயாவிலிருந்து அனுப்பும்போது, “நீங்கள் போய் நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால் நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையை எதிர்த்துக் கலகம் பண்ணினீர்கள். நீங்கள் அவரை நம்பவுமில்லை, அவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. நான் உங்களை அறிந்த காலத்திலிருந்து நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறீர்கள்.
யெகோவா, தான் உங்களை அழிக்கப்போவதாகச் சொன்னதினால், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன். அப்பொழுது நான் யெகோவாவிடம் மன்றாடி, “எல்லாம் வல்ல யெகோவாவே! நீர் உம்முடைய மகா வல்லமையினால் மீட்டு, பலத்த கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உமது உரிமைச்சொத்தான உமது மக்களை அழிக்கவேண்டாம். உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவிற்கொள்ளும். இம்மக்களின் பிடிவாதத்தையும், கொடுமையையும், அவர்களுடைய பாவத்தையும் பொருட்படுத்தாதேயும். நீர் அவர்களை அழித்தால், நீர் எந்த நாட்டிலிருந்து எங்களைக் கொண்டுவந்தீரோ, அந்த நாட்டு மக்கள், தாம் வாக்குக்கொடுத்த நாட்டிற்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க யெகோவாவினால் முடியவில்லை. அவர் அவர்களை வெறுத்ததினால் பாலைவனத்திலே அவர்களைக் கொல்லும்படியே கொண்டுவந்தார் என்று சொல்வார்கள். ஆனால் இந்த மக்கள் உமது மகா வல்லமையாலும், நீட்டப்பட்ட புயத்தாலும் நீர் வெளியே கொண்டுவந்த உமது மக்களாகவும், உமது உரிமைச்சொத்தாகவும் இருக்கிறார்களே” என்றேன்.
புதிய கற்பலகைகள்
அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது, “முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி மலையின்மேல் என்னிடம் கொண்டுவா. அத்துடன் மரத்தினால் ஒரு பெட்டியையும் செய். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை, நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். நீ அவற்றை அந்த பெட்டிக்குள் வை” என்றார்.
ஆகவே நான் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அவற்றை என் கைகளில் எடுத்துக்கொண்டு மலையின்மேல் ஏறிப்போனேன். யெகோவா தாம் முன்பு எழுதியவைகளை அக்கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் சபைக்கூடிய அந்த நாளில் மலையின்மேல் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களுக்கு அறிவித்த பத்துகட்டளைகளை முன்பு செய்ததுபோலவே, அவர் அந்தக் கற்பலகைகளில் எழுதி என்னிடம் கொடுத்தார். பின்பு நான் மலையிலிருந்து இறங்கி, யெகோவா எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்த பெட்டிக்குள் கற்பலகைகளை வைத்தேன். அவை இப்பொழுதும் அங்கே இருக்கின்றன.
பின்பு இஸ்ரயேலர் பெனெயாக்கானியரின் கிணறுகள் இருந்த இடத்திலிருந்து மோசெராவுக்குப் பிரயாணமாய்ப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டான். அவனுடைய மகன் எலெயாசார் அவனுடைய இடத்தில் ஆசாரியனானான். அவர்கள் அங்கேயிருந்து குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு அங்கிருந்து நீரோடைகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்குப் போனார்கள். அக்காலத்தில் லேவியர் இன்றுவரை செய்வதுபோலவே தொடர்ந்து யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கவும், யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி அவர்முன் நிற்கவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதத்தைக் கூறவும் யெகோவா லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். ஆகையால்தான், லேவியருக்கு அவர்களுடைய சகோதரரோடே பங்கோ, உரிமைச்சொத்தோ இல்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா சொன்னபடி யெகோவாவே லேவியரின் உரிமைச்சொத்து.
நான் முதல்முறை செய்ததுபோலவே, இப்பொழுதும் மலையின்மேல் இரவும் பகலும் நாற்பது நாட்கள் தங்கினேன். யெகோவா இந்த முறையும் எனக்குச் செவிகொடுத்து, உங்களை அழிப்பது அவர் விருப்பமில்லை. யெகோவா என்னிடம், “நீ எழுந்து அவர்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நாட்டிற்குப்போய், அதை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி அவர்களை நீ வழிநடத்து” என்றார்.
யெகோவாவுக்குப் பயந்து நடத்தல்
இப்பொழுதும் இஸ்ரயேலே, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடமிருந்து எதைக் கேட்கிறார்? நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கவேண்டும். அவரிடம் அன்பு செலுத்தி, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும். உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் யெகோவாவினுடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையே கேட்கிறார்.
வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை. இருந்தும் யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் பாசம்கொண்டு, அவர்களில் அன்பு வைத்தார். அதனால் அவர்களுடைய சந்ததிகளாகிய உங்களை இன்று இருப்பதுபோல் எல்லா நாடுகளுக்கும் மேலாகத் தெரிந்துகொண்டார். ஆகவே உங்களுடைய இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள். இனிமேலும் வனங்காக் கழுத்துள்ளவர்களாய் இருக்காதீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா தெய்வங்களுக்கெல்லாம் ஆண்டவராயும், மகத்துவமும், வல்லமையும், பயங்கரமுமான இறைவன், இலஞ்சம் வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் நியாயத்தை வழங்குபவர். அந்நியன்மேல் அன்புகூர்ந்து, அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர். நீங்கள் எகிப்தில் அந்நியராய் இருந்ததினால் அந்நியர்களிடம் அன்புகூருங்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருக்குப் பணிசெய்யுங்கள். அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு, அவருடைய பெயரிலேயே ஆணையிடுங்கள். அவரே உங்கள் புகழ்ச்சி; உங்கள் கண்களால் கண்ட மகத்துவமும் பயங்கரமான அதிசயங்களைச் செய்த உங்களுடைய இறைவன் அவரே. உங்கள் முற்பிதாக்கள் எழுபதுபேர்களாய் எகிப்திற்குப் போனார்கள், இப்பொழுதோ உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைப் போலாக்கினார்.
யெகோவாவிடம் அன்புகூர்ந்து கீழ்ப்படிதல்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து அவருடைய நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் எப்பொழுதும் கைக்கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கண்டித்தலைக் கண்டு அனுபவித்தது உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்களே என்பதை இன்று நினைவிற்கொள்ளுங்கள். தமது மாட்சிமையையும், மகத்துவத்தையும், பலத்த கரத்தையும், நீட்டப்பட்ட புயத்தையும் அவர் உங்களுக்கே காண்பித்தார். எகிப்தின் நடுவில் எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும், அவனுடைய முழு நாட்டுக்கும் வல்லமையான செயல்களையும் அடையாளங்களையும் நடப்பித்ததையும் நீங்களே கண்டீர்கள். எகிப்திய படைவீரர்கள் உங்களைப் பின்தொடர்கையில், அவர்களையும் அவர்களின் குதிரைகளையும், தேர்களையும் யெகோவா செங்கடலின் தண்ணீரில் மூழ்கடித்து, யெகோவா அவர்கள்மேல் நிரந்தர அழிவை வரப்பண்ணியதையும் நீங்களே கண்டீர்கள். நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் பாலைவனத்திலே உங்களுக்காகச் செய்ததைக் கண்டதும் உங்கள் பிள்ளைகள் அல்ல நீங்களே. ரூபனியரான எலியாபின் மகன்களான தாத்தான், அபிராம் ஆகியோருக்கு அவர் செய்ததையும் நீங்களே கண்டீர்கள். இஸ்ரயேலர் மத்தியில் பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், அவர்களுக்கிருந்த எல்லா உயிரினங்களையும் விழுங்கிற்று. யெகோவா செய்த இந்த பெரும் செயல்களையெல்லாம் உங்கள் கண்களே கண்டன.
நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றையும் பதித்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால்தான் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்குப் பெலன் இருக்கும். அப்படியே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும், அவர்கள் சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்த பாலும் தேனும் வழிந்தோடும்11:9 செழிப்பான நாடு. நாட்டிலே நீங்கள் நீடித்து வாழ்வீர்கள். ஏனெனில், நீங்கள் கைப்பற்றுவதற்காக செல்லப்போகும் நாடு நீங்கள் விட்டுவந்த எகிப்து நாட்டைப்போல் இராது. எகிப்திலே நீங்கள் விதையை நாட்டி, காய்கறித் தோட்டத்திற்கு கஷ்டப்பட்டு உங்கள் காலால் நீர்ப்பாசனப் பள்ளங்களைத் தோண்டி நீர்பாய்ச்சினீர்கள். ஆனால் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள நாடு, அது வானத்திலிருந்து மழைநீரால் பாய்ச்சல் பெறும் நாடு. அது உங்கள் இறைவனாகிய யெகோவா பராமரிக்கும் நாடு. வருடத்தின் தொடக்கமுதல் முடிவுவரை அந்த நாட்டின்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வை தொடர்ந்து இருக்கும்.
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் என்11:13 இறைவனுடைய. கட்டளைகளுக்கு நீங்கள் உண்மையாகக் கீழ்ப்படிந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குப் பணிசெய்வீர்களானால், அவர் உங்கள் நாட்டிற்குக் கோடை மழையையும், இலையுதிர்காலம் மற்றும் வசந்தகால மழையையும் அதினதின் காலத்தில் அனுப்புவார். ஆகவே உங்கள் தானியத்தையும், புது திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் நீங்கள் குறைவில்லாமல் சேர்த்துக்கொள்வீர்கள். உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கு வெளிகளிலே வயல்வெளிகளிலே பண்ணுவார்; நீங்களும் சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.
நீங்கள் வேறு தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றை வழிபட்டு, அவர்களை வணங்குமாறு உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாதபடி கவனமாயிருங்கள். இல்லாவிட்டால், யெகோவாவின் கோபம் உங்களுக்கு விரோதமாக மூண்டு, மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப்போடுவார். அப்போது உங்கள் நிலமும் தன் பலனைத் தராது; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் அழிந்துபோவீர்கள். ஆகையால் நீங்கள், என்னுடைய இந்த வார்த்தைகளை உங்கள் இருதயங்களிலும், உங்கள் மனங்களிலும் பதித்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் போதியுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், தெருவில் நடக்கும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், முற்றத்தின் வாசல்களிலும் எழுதிவையுங்கள். ஆகையால் பூமிக்குமேல் வானம் அநேக நாட்கள் நீடித்திருக்கிறதுபோல, யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்த அந்த நாட்டில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும் அநேகமாய் நீடித்திருக்கும்.
நீங்கள் பின்பற்றும்படி நான் கொடுக்கும் கட்டளைகளை நீங்கள் கவனமாகக் கைக்கொண்டால், அதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் நடந்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த நாட்டினர் அனைவரையும் துரத்திவிடுவார்; நீங்கள் உங்களைவிடப் பெரியதும், வலியதுமான நாடுகளை அவர்களுக்குரிய இடத்திலிருந்து துரத்துவீர்கள். நீங்கள் கால் வைக்கும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்கள் ஆட்சிக்குரிய பிரதேசம் பாலைவனம்தொடங்கி லெபனோன் வரைக்கும், ஐபிராத்து நதிதொடங்கி மத்திய தரைக்கடல் வரைக்கும் பரந்திருக்கும். உங்களை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களைப்பற்றிய பயத்தையும், திகிலையும் முழு நாட்டிலும் வரப்பண்ணுவார்.
பாருங்கள்; இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்படியாமல் நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றி, இன்று நான் கட்டளையிடுகிற வழியைவிட்டு விலகினால் சாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிற்கு உங்களைக் கொண்டுவந்து சேர்க்கும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும், ஏபால் மலையின்மேல் சாபத்தையும் பிரசித்தப்படுத்துங்கள். நீங்கள் அறிந்திருக்கிறபடி அம்மலைகள் யோர்தானுக்கு அப்பால், சூரியன் மறையும் இடத்தை நோக்கி, பாதைக்கு மேற்கே, கில்காலுக்கு அருகேயுள்ள அரபாவில் கானானியர் வசிக்கும் இடங்களில் மோரேயின் பெரிய மரங்களுக்கருகில் இருக்கின்றன. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குப்போய் அதை உரிமையாக்குவதற்கு நீங்கள் யோர்தானைக் கடக்கப்போகிறீர்கள். அதை நீங்கள் கைப்பற்றி அங்கே வாழ்கிறபோது, நான் உங்களுக்கு முன்பாகக் கொடுக்கும் விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாய் இருங்கள்.
ஒரே வழிபாட்டிடம்
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுத்திருக்கிற நாட்டில் வாழும் காலமெல்லாம், நீங்கள் கைக்கொள்ளும்படி கவனமாயிருக்கவேண்டிய விதிமுறைகளும் சட்டங்களும் இவையே: அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள். அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள்.
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழிகளில் வழிபடக்கூடாது. நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவா எல்லா கோத்திரங்களிலிருந்தும் தமது உறைவிடமாகத் தெரிந்துகொண்டு, தமது பெயரை இடுகிற அந்த இடத்தையே தேடவேண்டும். அந்த இடத்திற்கே நீங்கள் போகவேண்டும்; நீங்கள் அங்கேயே உங்கள் தகன காணிக்கைகள், பலிகள், உங்கள் பத்திலொரு பங்கு, நீங்கள் கொடுப்பதாக நேர்ந்துகொண்ட விசேஷ அன்பளிப்புகள், சுயவிருப்பு காணிக்கைகள், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றுகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது. நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலேபோய் வாழப்போகிறீர்கள். அங்கே அவர் உங்களைச்சூழ உள்ள பகைவர்களிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார். நீங்கள் அங்கே பாதுகாப்பாய் வாழ்வீர்கள். பின்பு உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் வழங்கும்படி தமக்கு வசிப்பிடமாகத் தெரிந்துகொள்ளும் இடத்துக்கு நீங்கள் போவீர்கள். அங்கே நான் கட்டளையிடுகிற ஒவ்வொன்றையும் கொண்டுவர வேண்டும். உங்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், உங்கள் பத்திலொரு பங்கையும், கொடைகளையும், யெகோவாவுக்குக் கொடுப்பேன் என நீங்கள் நேர்த்திக்கடன்செய்த எல்லா உடைமைகளையும் கொண்டுவாருங்கள். அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக களிகூருங்கள். நீங்களும் உங்கள் மகன்களும், மகள்களும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் தங்களுக்கு சொந்தப் பங்கோ உரிமைச்சொத்தோ இல்லாத உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியருமான எல்லோரும் களிகூருங்கள். பலிகளுக்குரிய நிபந்தனைகள் நீங்கள் விரும்பிய இடமெல்லாம் தகன காணிக்கைகளைப் பலியிடாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் கோத்திரங்களில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மட்டுமே அவற்றைச் செலுத்துங்கள். நான் கட்டளையிட்ட யாவையும் அங்கே செய்யுங்கள்.
ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தின்படியே, உங்கள் பட்டணங்களில் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொன்று, விரும்பிய அளவு இறைச்சியைச் சாப்பிடுங்கள். வெளிமானையும், கலைமானையும் அடித்துச் சாப்பிடுவதுபோல அடித்துச் சாப்பிடலாம். சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிறவர்களும், சுத்தமாயிருக்கிறவர்களும் அதைச் சாப்பிடலாம். ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடக்கூடாது. தண்ணீரை ஊற்றுவது போல் அதை நிலத்தில் ஊற்றுங்கள். நீங்கள் உங்கள் சொந்தப் பட்டணங்களில் உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கை சாப்பிடக்கூடாது. உங்கள் ஆடு, மாடு மந்தைகளின் தலையீற்றையோ அல்லது நீங்கள் நேர்ந்துகொண்ட எதையுமோ அல்லது உங்கள் சுயவிருப்பக் காணிக்கையையோ அல்லது விசேஷ கொடைகளையோ அங்கு சாப்பிடக்கூடாது. பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும். நீங்கள் உங்கள் நாட்டில் வாழும் காலமெல்லாம் லேவியரை கைவிடாதபடி கவனமாயிருங்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்குவார். அப்பொழுது நீங்கள் இறைச்சியை விரும்பி, “எனக்கு இறைச்சி விருப்பமாயிருக்கிறது” என்று சொன்னால், நீங்கள் விரும்பிய அளவு சாப்பிடலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் உங்களுக்கு அதிக தூரமாயிருந்தால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆட்டு மந்தைகளிலும், மாட்டு மந்தைகளிலும் உள்ள மிருகங்களைக் கொன்று, உங்கள் சொந்தப் பட்டணங்களில் நீங்கள் விரும்பிய அளவு அவற்றைச் சாப்பிடலாம். வெளிமானையோ, கலைமானையோ சாப்பிடுவதுபோல அதைச் சாப்பிடுங்கள். சம்பிரதாய முறைப்படி அசுத்தமானவர்களும், சுத்தமானவர்களும் அதைச் சாப்பிடலாம். ஆனால் இரத்தத்தைச் சாப்பிடாமல் இருக்கக் கவனமாயிருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். நீங்கள் உயிரை இறைச்சியுடன் சாப்பிடக்கூடாது. நீங்கள் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது. அதை நிலத்திலே தண்ணீரைப்போல் ஊற்றுங்கள். அதைச் சாப்பிடாதீர்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ அதையே நீங்கள் செய்வீர்கள்.
ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் பொருட்களையும், கொடுப்பதற்காக நீங்கள் நேர்ந்துகொண்டதையும் எடுத்துக்கொண்டு யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போங்கள். அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்மேல் உங்கள் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். இறைச்சியும், இரத்தமுமான இரண்டையும் பலி செலுத்துங்கள். உங்கள் பலிகளின் இரத்தம் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின் அருகில் ஊற்றப்படவேண்டும். இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம். இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்த எல்லா நியமங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லதையும், சரியானதையும் செய்து கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் படையெடுத்து வெளியேற்றப்போகும் நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்துப்போடுவார். ஆனால் அவர்களை நீங்கள் துரத்தி, அவர்களுடைய நாட்டில் குடியிருக்கையில், அவர்கள் அழிக்கப்பட்ட பின்பும் நீங்கள் கவனமாய் இருங்கள். “இந்த நாடுகள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படிப் பணிசெய்கிறார்கள்? நாங்களும் அப்படியே செய்வோம்” என்று சொல்லி, அவர்களுடைய தெய்வங்களைப்பற்றி விசாரிப்பதன் மூலம் அவர்களுடைய கண்ணியில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாய் இருங்கள். உங்களுடைய இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழியில் வழிபடக்கூடாது. ஏனெனில், அவர்களுடைய தெய்வ வழிபாட்டில், யெகோவா வெறுக்கும் எல்லா வகையான அருவருப்பையும் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும்கூட தங்கள் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் எரிக்கிறார்கள்.
நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றின்படியும் செய்யக் கவனமாயிருங்கள்; அவற்றுடன் ஒன்றையும் கூட்டவோ, அவற்றிலிருந்து ஒன்றையும் குறைக்கவோ வேண்டாம்.
வேறு தெய்வங்களை வழிபடுதல்
ஒரு தீர்க்கதரிசியோ, அல்லது வரப்போவதைக்குறித்து கனவின்மூலம் அறிவிப்பவனோ உங்களுக்குள் எழும்பி, ஒரு அற்புத அடையாளத்தையோ அல்லது ஒரு அதிசயத்தையோ உங்களுக்கு முன்னறிவிக்கக்கூடும். அவன் சொன்ன அந்த அற்புதமும், அடையாளமும் ஒருவேளை நடக்கலாம். அப்பொழுது அவன், “நாம் வேறு தெய்வங்களைப் பின்பற்றுவோம்; அவற்றை நாம் வழிபடுவோம்” என்று நீங்கள் அறிந்திராத தெய்வங்களைப் பற்றிச் சொல்லலாம். அவ்வாறு நடந்தால் நீங்கள் அந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகளையோ, கனவு காண்பவனின் வார்த்தைகளையோ கேட்கக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் தம்மில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு கூருகிறீர்களோ என்று அறியும்படி உங்களைப் சோதிக்கிறார். ஆகையால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே பின்பற்றவேண்டும், அவரிடத்திலேயே பயபக்தியாயிருக்கவேண்டும். அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவருக்குப் பணிசெய்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். அந்த தீர்க்கதரிசியையோ அல்லது கனவு காண்பவனையோ கொலைசெய்யாமல் விடவேண்டாம். ஏனெனில், அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டு வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக அவன் கலகத்தை மூட்டும்படி பிரசங்கித்தான். உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் பின்பற்றும்படி கட்டளையிட்ட வழியிலிருந்து, உங்களை விலகச்செய்ய அவன் முயற்சித்தான். அந்த தீமையை நீங்கள் உங்கள் மத்தியிலிருந்து அகற்றிவிடவேண்டும்.
உங்கள் சொந்தச் சகோதரன், உங்கள் மகன், மகள், உங்கள் அன்புக்குரிய மனைவி, உங்கள் நெருங்கிய நண்பன் ஆகியோர், “நாம் போய், வேறு தெய்வத்தை வணங்குவோம் வாருங்கள்” என்று நீங்களோ உங்கள் தந்தையோ அறியாத மற்ற தெய்வங்களைக் குறித்துச் சொல்லி இரகசியமாய் வசீகரிக்கலாம். உங்களைச் சுற்றிலும், உங்களுக்குச் சமீபத்திலும், தூரத்திலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரைக்கும் எவ்விடத்திலாகிலும் இருப்பவர்களின் தெய்வங்களை வணங்கவும் சொல்லலாம். அப்பொழுது அவனுக்கு விட்டுக்கொடுக்கவோ, செவிகொடுக்கவோவேண்டாம். அவனுக்கு இரக்கம் காட்டவும்வேண்டாம். அவனை விடுவிக்கவோ, பாதுகாக்கவோ வேண்டாம். நிச்சயமாக நீங்கள் அவனைக் கொல்லவேண்டும். அவனைக் கொல்வதற்கு உன் கையே முந்தவேண்டும். அதற்குப்பின் எல்லா மக்களுடைய கைகளும் சேர்ந்துகொள்ள வேண்டும். அவன் சாகும்படி அவன்மேல் கற்களை எறியுங்கள். ஏனெனில் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டு வெளியே கொண்டுவந்த, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடமிருந்து உங்களை விலகச்செய்ய அவன் முயற்சித்தான். அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள். உங்கள் மத்தியில், இப்படியான ஒரு தீயசெயலை ஒருவனும் இனிமேலும் செய்யமாட்டான்.
நீங்கள் வாழும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றைப்பற்றி, இவ்வாறு சொல்லப்பட்டதாகக் கேள்விப்படலாம். அதாவது, உங்கள் மத்தியில் கொடிய மனிதர் எழும்பி, “நாம் போய் வேறு தெய்வங்களை வழிபடுவோம்” என்று நீங்கள் அறிந்திராத வேறு தெய்வங்களைப் பற்றிச்சொல்லி, தங்கள் பட்டணத்து மக்களை வழிதவறப்பண்ணலாம். அப்பொழுது நீங்கள் போய் தீர விசாரித்து, ஆராய்ந்து, சோதனைசெய்யுங்கள். அது உண்மையாயிருந்து, உங்கள் மத்தியில் அப்படிப்பட்ட அருவருப்பான செயல் நடந்தது என நிரூபிக்கப்பட்டால், நிச்சயமாய் நீங்கள் அப்பட்டணத்தில் வாழும் யாவரையும் வாளினால் வெட்டிக் கொல்லவேண்டும். அப்பட்டணத்தையும் முற்றிலும் அழிக்கவேண்டும். அங்குள்ள மக்களையும், வளர்ப்பு மிருகங்களையும் அழிக்கவேண்டும். பட்டணத்தின் கொள்ளைப்பொருட்களை ஒன்றுசேர்த்து, பட்டணத்தின் மத்தியிலுள்ள பொதுச் சதுக்கத்தில்போட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கையாக அப்பட்டணத்தையும், கொள்ளையிட்ட யாவையும் நெருப்பினால் முற்றிலும் எரிக்கவேண்டும். அப்பட்டணம் ஒருபோதும் திரும்பவும் கட்டப்படாமல் என்றென்றும் பாழடைந்து கிடக்கவேண்டும். அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கொள்ளைப்பொருள்கள் ஒன்றுமே உங்கள் கைகளில் காணப்படக்கூடாது. அப்பொழுது யெகோவா தம்முடைய கடுங்கோபத்தை விட்டு விலகி, உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள்மேல் இரக்கங்கொண்டு, கருணைகாட்டி, உங்கள் எண்ணிக்கையைப் பெருகச்செய்வார். இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறபடியினாலேயே அவ்வாறு செய்வார்.
சுத்த அசுத்த உணவுகள்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பிள்ளைகள். ஆகவே நீங்கள் இறந்தவர்களுக்காக உங்களை வெட்டிக்கொள்ளவோ, தலைகளின் முன்பக்கத்தைச் சிரைக்கவோவேண்டாம். நீங்களே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். அவர் பூமியின் மீதுள்ள எல்லா மக்களிலும் உங்களையே தமக்கு அருமையான உரிமைச்சொத்தாய் இருக்கும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்.
அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம். நீங்கள் சாப்பிடக்கூடிய மிருகங்களாவன: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு, மான், வெளிமான், கலைமான், காட்டாடு, புள்ளிமான், சருகுமான், மலையாடு ஆகியன. இரண்டாக விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் குளம்புகள் விரிந்ததாய் மட்டும் இருக்கின்றன. இவற்றில் ஒட்டகம், முயல், குழிமுயல் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரையை அசைபோட்டாலும் அவற்றுக்குப் விரிந்த குளம்புகள் இல்லை. ஆகையால் சம்பிரதாய முறைப்படி அவை உங்களுக்கு அசுத்தமானவை. பன்றியும் அசுத்தமானது. ஏனெனில், அதற்கு விரிந்த குளம்பு இருந்தாலும், அது இரையை அசைப்போடுகிறதில்லை. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ, அவற்றின் செத்த உடலை தொடவோகூடாது.
நீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும், செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம். துடுப்புகளும் செதில்களும் இல்லாத வேறொன்றையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானவை.
சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாத பறவைகளாவன: கழுகு, கருடன், கடலூராஞ்சி, செம்பருந்து, கரும்பருந்து, எல்லாவித வல்லூறுகள், சகலவித அண்டங்காக்கைகள், தீக்கோழி, ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள், சிறு ஆந்தை, பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, கூழக்கடா, நீர்க்காகம், கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும்.
பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம். சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
ஏற்கெனவே இறந்து கிடக்கிறதாக நீங்கள் காணும் எதையும் சாப்பிடவேண்டாம். உங்கள் பட்டணங்களில் ஒன்றில் வாழும் அந்நியனுக்கு அவற்றைக்கொடுங்கள், அவன் சாப்பிடட்டும் அல்லது வேறு நாட்டவனுக்கு விற்றுவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள் நீங்களே.
வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்கவேண்டாம்.
பத்திலொரு பாகம்
ஒவ்வொரு வருடமும் உங்கள் வயல்நிலம் விளைவிக்கும் எல்லாவற்றிலும் இருந்து பத்திலொருபாகத்தைப் புறம்பாக்கிவைக்கக் கவனமாயிருங்கள். உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கையும் மாட்டு மந்தை, ஆட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றையும், உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும் வசிப்பிடமாக தெரிந்துகொள்ளும் இடத்தில் அவருக்கு முன்பாக சாப்பிடுங்கள். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பயபக்தியாயிருக்கக் கற்றுக்கொள்வீர்கள். யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் தூரமாய் இருக்கலாம். அவ்வாறு தூரமாய் இருப்பதினால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் பத்திலொரு பங்கைச் சுமந்துகொண்டு அங்குபோக உங்களால் முடியாதிருக்கலாம். அப்பொழுது உங்கள் பத்திலொரு பங்கை வெள்ளிக்கு பதிலீடுசெய்து, அந்த வெள்ளியை உங்களுடன் எடுத்துக்கொண்டு உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்துக்குப் போங்கள். அங்கேபோய், அந்த வெள்ளிக்கு செம்மறியாடுகளையோ மாடுகளையோ திராட்சை இரசத்தையோ அல்லது மதுபானத்தையோ நீங்கள் விரும்பும் எதையும் வாங்குங்கள். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்களும், உங்கள் வீட்டாரும் அவற்றைச் சாப்பிட்டுக் களிகூருங்கள். ஆனாலும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியரை மறவாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொந்தமாக நிலப்பங்குகளோ உரிமைச்சொத்தோ இல்லை.
ஒவ்வொரு மூன்று வருட முடிவிலும் அந்த வருட விளைச்சலின் பத்திலொருபங்கைக் கொண்டுவந்து, உங்கள் பட்டணங்களில் உள்ள களஞ்சியங்களில் சேர்த்துவையுங்கள். இவற்றில், தங்களுக்குச் சொந்தமான நிலப்பங்கும், உரிமைச்சொத்தும் இல்லாமல் உங்கள் பட்டணத்தில் வாழும் லேவியரும், அந்நியரும், தகப்பன் இல்லாதவர்களும், விதவைகளும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.
விடுதலை வருடம்
ஏழாம் வருடத்தின் முடிவிலே கடன்களை ரத்துச்செய்யுங்கள். நீங்கள் செய்யவேண்டிய விதம் இதுவே: கடன்களை ரத்துச்செய்வதற்கான யெகோவாவின் வேளை அறிவிக்கப்பட்டிருப்பதால், தன் சகோதர இஸ்ரயேலனுக்கு கடன்கொடுத்த எவனும், அந்தக்கடனை தள்ளுபடிசெய்யவேண்டும். அவன் அந்த இஸ்ரயேலனிடமிருந்தோ அல்லது சகோதரனிடமிருந்தோ கடனைத் திருப்பித்தரும்படி கேட்கக்கூடாது. அந்நியனிடமிருந்து கடனைத் தரும்படி நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்கள் சகோதரன் உங்களுக்குத் தரவேண்டிய கடனை நீங்கள் ரத்துச்செய்யவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலே, உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். அதனால் உங்கள் மத்தியில் ஏழைகள் இருக்கக்கூடாது. நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் இந்த எல்லா கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருந்தால்மட்டுமே, அப்படி ஆசீர்வதிப்பார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால் நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுப்பீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்தும் கடன் வாங்கமாட்டீர்கள். நீங்கள் நாடுகளை ஆளுவீர்கள். ஆனால் உங்களை ஒருவரும் ஆளமாட்டார்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள பட்டணங்கள் ஒன்றில், உங்கள் சகோதரருக்குள் ஏழை ஒருவன் இருந்தால், அந்த ஏழைச் சகோதரனிடத்தில் இருதயக் கடினத்துடனோ, சுயதன்மையுடனோ நடந்துகொள்ளாதீர்கள். அவனுடைய தேவைகளுக்கேற்றபடி தாராள மனதுடன் போதிய அளவு கடன்கொடுங்கள். விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதனால் தேவையுள்ள சகோதரனுக்குக் கரிசனை காட்டாமலும், ஒன்றும் கொடுக்காமலும் விடவேண்டாம். அப்படியான கொடிய எண்ணம் உங்களுக்கு வராதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் யெகோவாவிடம் உங்களுக்கு எதிராக முறையிடும்பொழுது நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவீர்கள். மனம்கோணாமல் அவனுக்குத் தாராளமாய்க் கொடுங்கள். அப்பொழுது இதன் நிமித்தம் இறைவனாகிய யெகோவா, உங்கள் முயற்சிகள் யாவற்றையும் நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நாட்டிலே எக்காலத்திலும் ஏழைகள் இருப்பார்கள். ஆகையால் உங்கள் நாட்டிலுள்ள உங்கள் சகோதரருக்கும், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தாராள மனதுடன் கொடுக்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
அடிமைகளின் விடுதலை
உங்களைச் சேர்ந்த எபிரெய ஆணோ, பெண்ணோ தன்னை உங்களிடத்தில் விற்று, ஆறு வருடங்கள் உங்களுக்கு வேலைசெய்தால், ஏழாம் வருடம் நீங்கள் அவனை விடுதலையாக்கி போகவிடவேண்டும். அவனை விடுதலையாக்கி அனுப்பும்போது, வெறுங்கையோடு அனுப்பவேண்டாம். உங்கள் மந்தையிலும், உங்கள் சூடடிக்கும் களத்திலும், உங்கள் திராட்சை ஆலையிலும் இருந்து எடுத்துத் தாராளமாய்க் கொடுத்து அனுப்புங்கள். உங்களுடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின்படி அவனுக்குக்கொடுங்கள். நீங்கள் எகிப்திலே அடிமையாய் இருந்ததையும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை மீட்டதையும் நினைவுகூருங்கள். ஆகவேதான் நான் இன்று இந்த கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
உங்களுடைய அடிமை ஒருவன் உங்கள்மீதும், உங்கள் குடும்பத்தின்மீதும் அன்பு வைத்ததினாலும், உங்களோடு நலமாய் இருப்பதினாலும், “நான் உங்களைவிட்டுப்போக விரும்பவில்லை” என்று உங்களிடம் சொன்னால், நீங்கள் குத்தூசி ஒன்றை எடுத்து அவன் காது மடலைக் கதவோடு வைத்துக் குத்துங்கள். அதன்பின் வாழ்நாள் முழுவதும் அவன் உங்களுக்கு அடிமையாயிருப்பான். அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யுங்கள்.
ஒரு அடிமையை விடுதலையாக்குவதை கஷ்டமான செயலாக எண்ணவேண்டாம். ஏனெனில் அவன் ஆறு வருடங்களில் செய்த வேலை கூலி வேலைசெய்யும் ஒருவனைவிட இருமடங்கு மதிப்புடையது. உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் செய்யும் யாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார்.
மிருகங்களின் தலையீற்று
உங்கள் ஆட்டு மந்தைகளிலும் மாட்டு மந்தைகளிலும் ஆண் தலையீற்றுகளை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக வேறுபிரித்து வையுங்கள். உங்கள் மாட்டின் தலையீற்றை வேலைக்கு பயன்படுத்த வேண்டாம். செம்மறியாட்டின் தலையீற்றின் மயிரைக் கத்தரிக்கவும்வேண்டாம். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வருடந்தோறும் உங்கள் இறைவனாகிய யெகோவா தமக்கென்று தெரிந்தெடுக்கும் இடத்தில் அவருக்கு முன்பாக அவற்றைச் சாப்பிடுங்கள். ஆனால் ஒரு மிருகம் குறைபாடுள்ளதாகவோ, முடமாகவோ, குருடாகவோ கடுஞ் சேதமுற்றதாகவோ இருந்தால், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடாதீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவைகளை உங்கள் பட்டணங்களிலேயே சாப்பிடவேண்டும். சம்பிரதாயப்படி அசுத்தமானவர்களும் சுத்தமானவர்களும், வெளிமானையோ கலைமானையோ சாப்பிடுவதுபோல் அவற்றைச் சாப்பிடலாம். ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல தரையில் ஊற்றவேண்டும்.
பஸ்கா பண்டிகை
ஆபீப் மாதத்தில்16:1 ஆபீப் மாதம் பின்னர் நிசான் என்று அழைக்கப்பட்டது எபிரெய நாட்காட்டியின் முதல் மாதம். இது நவீன காலண்டரில் மார்ச்-ஏப்ரல் மாதங்களுடன் ஒத்துள்ளது., உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். நீங்கள் உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை எடுத்து, அதை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவாகப் பலியிடுங்கள். அதை யெகோவா தமது பெயர் விளங்குவதற்காக தாம் தெரிந்துகொள்ளும் இடத்திலே பலியிடுங்கள். அதை புளிப்பூட்டப்பட்ட அப்பத்தோடு சாப்பிடவேண்டாம், ஏழுநாட்களுக்கு உபத்திரவத்தின் அப்பமான புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள், நீங்கள் எகிப்திலிருந்து அவசரமாய் வெளியேறினீர்களே. எனவே உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த வேளையை நினைவுகூருங்கள். அந்த ஏழுநாளளவும் உங்கள் நாடு முழுவதிலும் புளிப்பூட்டும் பதார்த்தம் உங்களுக்குள் இருக்கக்கூடாது. முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையாகிலும் விடியும்மட்டும் வைத்திருக்கவும்கூடாது.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் எந்த ஒரு பட்டணத்திலாவது பஸ்காவை பலியிடக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொண்ட இடத்திலேயே அதைப் பலியிடவேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த நாளில் சூரியன் மறையும் நேரமான அந்த மாலைவேளையில் பஸ்காவை அங்கே பலியிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் பலியை நெருப்பில் வாட்டிச் சாப்பிடுங்கள். காலையில் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள். தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஏழாம்நாளில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்த நாளில் எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம்.
வாரங்களின் பண்டிகை
அறுவடைக்கு ஆயத்தமான கதிரில் அரிவாளை வைக்கத்தொடங்கும் நாள் முதல் ஏழு வாரங்களை எண்ணுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்குத் தக்கபடியே நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையைச் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அவருடைய பெயருக்கான உறைவிடமாக அவர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாகக் களிகூருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களிலுள்ள லேவியரும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியரும், தந்தையற்றவர்களும், விதவைகளுமான எல்லோரும் களிகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, இந்த விதிமுறைகளைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள்.
கூடாரங்களின் பண்டிகை
நீங்கள் உங்கள் சூடடிக்கும் களத்திலிருந்தும், திராட்சை ஆலையிலிருந்தும் அவற்றின் பலனைச் சேர்த்தபின், ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியாயிருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும் வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களில் வாழ்கின்ற லேவியர், அந்நியர், தந்தையற்றவர்கள், விதவைகள் ஆகிய எல்லோருமே மகிழ்ந்திருங்கள். யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா அறுவடையிலும், உங்கள் கையின் வேலையிலும் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் மகிழ்ச்சியும் நிறைவாயிருக்கும்.
உங்கள் எல்லா ஆண்களும், உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் வருடத்திற்கு மூன்றுமுறை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். புளிப்பில்லாத அப்பம் சாப்பிடும் பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப்பண்டிகை ஆகிய இந்த மூன்று பண்டிகைகளுக்கும் இவ்வாறு வரவேண்டும். யெகோவாவுக்கு முன்பாக ஒருவரும் வெறுங்கையுடன் வரக்கூடாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கும் விதத்திற்கேற்றபடி ஒவ்வொருவனும் தனது கொடையைக் கொண்டுவர வேண்டும்.
நீதிபதிகள்
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும். நீதியைப் புரட்டவேண்டாம். பட்சபாதம் காட்டவேண்டாம். இலஞ்சம் வாங்கவேண்டாம். இலஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களைக் குருடாக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்குகிறது. நீதியைப் பின்பற்றுங்கள்; நீதியை மட்டுமே பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
வேறு தெய்வங்களின் வழிபாடு
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கட்டும் பலிபீடத்திற்கு அருகே மரத்தாலான அசேரா விக்கிரகக் கம்பத்தை நாட்டவேண்டாம், அங்கு புனிதக் கல் எதையும் நிறுத்தவேண்டாம், இவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா வெறுக்கிறார்.
குறைபாடுடைய அல்லது பழுதுடைய மாட்டையோ, செம்மறியாட்டையோ உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம். ஏனெனில், அது அவருக்கு அருவருப்பாயிருக்கும்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் பட்டணங்களில் ஒன்றில் உங்கள் மத்தியில் வாழும் ஒரு ஆணோ, பெண்ணோ உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை மீறி, அவரின் பார்வையில் தீமையானதைச் செய்வதாகக் காணப்படக்கூடும். அல்லது எனது கட்டளைக்கு முரணான வேறு தெய்வங்களையோ, சூரியனையோ, சந்திரனையோ, வானத்து நட்சத்திரங்களையோ வணங்கி, அவற்றை வழிபடக்கூடும். அது உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படும்பொழுது, நீங்கள் அதை முற்றிலும் விசாரணை செய்யவேண்டும். அந்த அருவருப்பான செயல் உண்மையாயிருந்து அது இஸ்ரயேலில் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அந்த தீமையான செயலைச் செய்த ஆணையோ, பெண்ணையோ உங்கள் பட்டணவாசலுக்குக் கொண்டுபோய், அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். இரண்டு அல்லது மூன்றுபேரின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே ஒருவன் கொல்லப்படவேண்டும். ஒரே சாட்சியின் அடிப்படையில் ஒருவனும் கொல்லப்படக்கூடாது. சாட்சிகளின் கைகளே அவனைக் கொலைசெய்வதில் முதலாவதாக இருக்கவேண்டும். அதன்பின்னரே மற்ற எல்லா மக்களுடைய கைகளும் நீட்டப்பட வேண்டும். இப்படியாக நீங்கள் உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றவேண்டும்.
சட்ட நீதிமன்றம்
நீங்கள் நியாயந்தீர்க்கக் கடினமான வழக்குகள் உங்கள் நீதிமன்றங்களுக்கு வந்தால், அவை இரத்தம் சிந்துதலோ, சட்ட விவகாரமோ, தாக்குதலோ எதுவாயிருந்தாலும், அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோங்கள். அங்கே லேவியரான ஆசாரியர்களிடமும், அவ்வேளையில் கடமைசெய்யும் நீதிபதியினிடமும்போய் அவர்களிடம் விசாரியுங்கள். அவர்கள் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே அவர்கள் தெரிவிக்கிற தீர்ப்பின்படியே நீங்கள் செயல்படவேண்டும். செய்யும்படி அவர்கள் உங்களுக்குப் பணிக்கும் ஒவ்வொன்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அவர்கள் உங்களுக்குப் போதிக்கிற சட்டத்தின்படியேயும், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கிற தீர்மானங்களின்படியேயும் செயற்படுங்கள். அவர்கள் சொல்வதிலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகவேண்டாம். நீதிபதியையோ, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனையோ அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும். இப்படியாக நீங்கள் இஸ்ரயேலில் இருந்து தீமையை அகற்றவேண்டும். அப்பொழுது எல்லா மக்களும் இதைக் கேள்விப்பட்டுப் பயப்படுவார்கள். இனிமேலும் அவ்வாறு அவர்களை அவமதிக்கமாட்டார்கள்.
அரசன்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொண்டு அதில் குடியிருக்கும்பொழுது, “எங்களைச் சூழ இருக்கிற மற்ற நாடுகளைப்போல் எங்களுக்கு மேலாக ஒரு அரசனை நியமிப்போம்” என்பீர்கள். அப்பொழுது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஒருவனையே உங்களுக்குமேல் அரசனாக நியமிக்கக் கவனமாயிருங்கள். அவன் உங்கள் சகோதரருள் ஒருவனாக இருக்கவேண்டும். உங்கள் சகோதர இஸ்ரயேலன் அல்லாத ஒரு அந்நியனை உங்களுக்கு மேலாக நியமிக்கவேண்டாம். மேலும், அவன் தனக்கென்று அதிக எண்ணிக்கையான குதிரைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது. அரசன் அதிகமான குதிரைகளைப் பெறுவதற்கு மக்களைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்பவும்கூடாது. ஏனெனில், “நீங்கள் அந்த வழியாய்த் திரும்பவும் போகக்கூடாது” என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். அரசன் தனக்கு அநேக மனைவிகளை வைத்திருக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அவனுடைய இருதயம் வழிவிலகிப்போகும். அவன் பெருந்தொகையான தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்துவைக்கவும்கூடாது.
அவன் தன் அரசுக்குரிய அரியணையைப் பொறுப்பேற்கும்போது, லேவியரான ஆசாரியர்களிடம் இருக்கும் சட்டத்திலிருந்து, ஒரு பிரதியை தனக்காக ஒரு புத்தகச்சுருளில் எழுதிக்கொள்ளவேண்டும். அப்பிரதி அவனிடம் இருக்கவேண்டும். அவன் தன் வாழ்நாளெல்லாம் அதை வாசிக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயபக்தியாய் இருக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்க் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வான். அவன் தன் சகோதரரைவிடத் தான் மேலானவன் என்று எண்ணாமலும், நீதிச்சட்டத்திலிருந்து வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகாமலும் இருப்பான். அப்பொழுது அவனும், அவன் சந்ததிகளும் இஸ்ரயேலில் உள்ள அவனுடைய அரசில் நீண்டகாலமாக ஆட்சிசெய்வார்கள்.
ஆசாரியருக்கும் லேவியருக்கும் காணிக்கைகள்
லேவியரான ஆசாரியருக்கு அதாவது, முழு லேவிகோத்திரத்தாருக்கும் இஸ்ரயேலருடன் நிலப்பங்கோ, உரிமைச்சொத்தோ இருக்கக்கூடாது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளாலேயே அவர்கள் வாழவேண்டும். ஏனெனில், அதுவே அவர்களின் உரிமைச்சொத்து. தங்கள் சகோதரருக்குள் அவர்களுக்கு உரிமைச்சொத்து இருக்கக்கூடாது. யெகோவா அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி யெகோவாவே அவர்களுடைய உரிமைச்சொத்தாய் இருக்கிறார்.
மாட்டையோ, செம்மறியாட்டையோ மக்கள் பலியிடும்போது, முன்னந்தொடைகளும், தாடைகளும், உள்ளுறுப்புகளும் ஆசாரியருக்குப் பங்காகக் கொடுக்கப்படவேண்டும். நீங்கள் உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பலன்களையும், ஆடுகளை மயிர் கத்தரிக்கும்போது அதன் முதல் ஆட்டுமயிரையும் ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாவின் பெயரில் எப்பொழுதும் நிற்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அவர்களையும், அவர்கள் சந்ததிகளையும் தெரிந்துகொண்டார்.
லேவியன் ஒருவன் இஸ்ரயேல் நாட்டிலே எங்காவது தான் வாழும் உங்கள் பட்டணங்கள் ஒன்றிலிருந்து புறப்பட்டு, யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு வாஞ்சையுடன் வருவானாகில், யெகோவாவுக்குமுன் பணிசெய்யும் தன் உடனொத்த எல்லா லேவியர்களைப்போல, தன் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் அங்கே அவனும் பணிசெய்யலாம். குடும்பச் சொத்துக்களை விற்றதிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும்கூட, ஆசாரியருக்குக் கிடைப்பவற்றில் சமமான பங்கை அவனும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அருவருப்பான வழக்கங்கள்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போய்ச்சேர்ந்ததும், அங்கிருக்கும் நாடுகளின் அருவருப்பான நடைமுறைகளைக் கைக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டாம். உங்களில் யாராவது தனது மகனையோ, மகளையோ தீக்கடக்கப் பண்ணக்கூடாது. குறிபார்ப்பவனோ, மாந்திரீகம் செய்பவனோ, சகுனங்களுக்கு வியாக்கியானம் சொல்லுகிறவனோ, சூனியம் செய்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன். இப்படி அருவருப்பான செயல்களின் காரணமாகவே அந்த நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகத் துரத்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும்.
இறைவாக்கினன்
நீங்கள் வெளியேற்றப்போகும் நாட்டவர்கள் மாந்திரீகம் செய்கிறவர்களுக்கும், குறிசொல்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ அப்படிச் செய்வதற்கு உங்கள் இறைவனாகிய யெகோவா அனுமதிகொடுக்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினனை உங்களுக்காக எழுப்புவார். நீங்கள் அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். ஓரேபிலே பரிசுத்த சபை கூடிய நாளிலே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நாம் கேளாமல் இருப்போம்; அவருடைய இந்தப் பெரிய நெருப்பைத் தொடர்ந்து பார்க்காமல் இருப்போம். பார்த்தால் நாங்கள் சாவோம்” என்று நீங்கள் சொன்னபோது கேட்டுக்கொண்டது இதுவே.
அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது: “அவர்கள் சொல்வது நல்லதே. அவர்களுடைய சகோதரருள் இருந்து அவர்களுக்காக உன்னைப்போன்ற இறைவாக்கு உரைப்பவன் ஒருவரை எழுப்புவேன். என் வார்த்தைகளை அவர் வாயில் வைப்பேன். நான் கட்டளையிட்டதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார். அந்த இறைவாக்கினன் என் பெயரில் சொல்லும் என் வார்த்தைகளுக்கு யாராவது செவிகொடாமல்போனால், நான் நானே அவனிடம் கணக்குக்கேட்பேன். ஆனால் நான் கட்டளையிடாத வார்த்தையை என் பெயரில் பேசத் துணியும் இறைவாக்கு உரைப்போனும், வேறு தெய்வங்களின்பேரில் பேசுகிற தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டும்.”
“இந்தச் செய்தி யெகோவாவினால் கொடுக்கப்படாதது என்று நாங்கள் எப்படி அறிவோம்?” என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் எண்ணிக்கொள்ளலாம். ஒரு இறைவாக்கினன் யெகோவாவின் பெயரில் அறிவிப்பது நடக்காமலும், உண்மையாய் நிறைவேறாமலும் போனால், அது யெகோவாவினால் பேசப்படாத செய்தி. அத்தீர்க்கதரிசி துணிகரமாய் பேசுபவன், நீங்கள் அவனுக்குப் பயப்படவேண்டாம்.
அடைக்கலப் பட்டணங்கள்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள மக்களை அழித்தபின் நீங்களும் அவர்களைத் துரத்தி, அவர்களுடைய பட்டணங்களிலும், வீடுகளிலும் குடியேறுவீர்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு கொடுக்கும் நாட்டில் மூன்று பட்டணங்களை உங்களுக்காக ஒதுக்கிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டை, ஒரு பட்டணம் ஒரு பகுதியில் இருக்கத்தக்கதாக மூன்று பகுதிகளாகப் பிரித்து,19:3 அல்லது ஆய்வு செய்யுங்கள். அந்தப் பட்டணங்களுக்கு வீதிகளை அமையுங்கள். அங்கே ஒரு மனிதனைக் கொல்லும் எவனும் தப்பியோடலாம்.
முற்பகை இன்றித் தவறுதலாக தன் அயலானைத் தற்செயலாகக் கொல்பவன், தன் உயிரைக்காக்கும்படி அங்கே தப்பியோடுவதைக் குறித்து கவனிக்கப்படவேண்டிய விதிமுறை இதுவே. உதாரணமாக, ஒருவன் தன் அயலானோடு விறகு வெட்டும்படி காட்டுக்குப்போய், அவன் கோடரியை ஓங்கும்போது கோடரி பிடியை விட்டுக் கழன்று அந்த அயலானின்மேல் விழுவதினால், அவன் கொல்லப்படலாம். அப்பொழுது அம்மனிதன் இந்தப் பட்டணம் ஒன்றுக்குத் தப்பிப்பிழைக்க ஓடித் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம். எனினும் அடைக்கலப் பட்டணத்தின் தூரம் அதிகமாய் இருந்தால், இரத்தபழி வாங்குபவன் கோபத்தில் அவனைப் பின்தொடர்ந்து துரத்திப் பிடித்து அவனைக் கொன்றுவிடுவான். ஆனாலும் அவன் முற்பகையில்லாமல் தவறுதலாகக் கொலைசெய்தபடியால் மரணத்துக்கு ஏதுவானவன் அல்ல. இதனால்தான் உங்களுக்காக மூன்று பட்டணங்களை ஒதுக்கிவைக்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குக் கொடுத்தபடி உங்கள் பிரதேச எல்லைகளை விரிவுபடுத்தி, அவர்களுக்கு வாக்குப்பண்ணிய நாடு முழுவதையும் உங்களுக்குத் தருவார். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலே நடக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் இந்த சட்டங்களை நீங்கள் கவனமாய்ப் பின்பற்றினால், அவர் வாக்குப்பண்ணிய நாடு முழுவதையும் உங்களுக்குத் தருவார். அப்போது எல்லைகளை விரிவுபடுத்தும்போது, நீங்கள் இன்னும் மூன்று அடைக்கலப் பட்டணங்களை ஒதுக்கிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படாதபடியும், இரத்தப்பழி உங்கள்மேல் வராமல் இருக்கும்படியும் இதைச் செய்யுங்கள்.
எனினும் ஒருவன் தன் அயலானைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கிக் காத்திருந்து தாக்கிக் கொன்றபின் இப்பட்டணங்கள் ஒன்றிற்குத் தப்பியோடக்கூடும். அப்பொழுது அவனுடைய பட்டணத்தைச் சேர்ந்த சபைத்தலைவர்கள் அவனுக்கு ஆள் அனுப்பி, அவனை அடைக்கலப்பட்டணத்திலிருந்து திரும்பக்கொண்டுவந்து, அவன் சாகும்படி அவனை இரத்தப்பழிவாங்கும் உரிமை உடையவனிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும். அவனுக்கு இரக்கம் காட்டவேண்டாம். குற்றமில்லாத இரத்தம் சிந்தும் குற்றத்தை இஸ்ரயேலிலிருந்து அகற்றவேண்டும். அப்பொழுது நீங்கள் நலமாயிருப்பீர்கள்.
உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலே, உங்களுடைய உரிமைச்சொத்தில் உங்கள் முன்னோர்களால் நாட்டப்பட்ட உங்கள் அயலவனின் எல்லைக்கல்லைத் தள்ளிவைக்கவேண்டாம்.
சாட்சிகள்
ஒருவன் ஏதாவது குற்றத்தையோ, மீறுதலையோ செய்ததாக அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவனைக் குற்றவாளி என தீர்ப்பதற்கு ஒரு சாட்சி போதாது. ஒரு காரியம் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்.
ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி, குற்றம் சாட்டுவதற்குத் தீயநோக்கமுள்ள ஒரு சாட்சி துணிந்தால், வழக்காடுகிற இருவரும் அந்நாட்களில் அதிகாரம் செலுத்தும் ஆசாரியனின் முன்னும், நீதிபதியின் முன்னும் யெகோவாவின் முன்னிலையில் நிற்கவேண்டும். நீதிபதிகள் அவர்களைத் தீர விசாரிக்கவேண்டும். அப்போது சாட்சி சொல்பவன் தன் சகோதரனுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்லி, அவன் பொய்யன் என நிரூபிக்கப்பட்டால், அவன் தன் சகோதரனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைத்தானோ, அதை நீங்கள் அவனுக்கே செய்யவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலிருந்து தீமையை அகற்றவேண்டும். மற்றவர்கள் இவற்றைக் கேட்டுப் பயப்படுவார்கள். அப்படிப்பட்ட தீமை உங்கள் மத்தியில் இனி ஒருபோதும் செய்யப்படவும்மாட்டாது. இரக்கம் காட்டவேண்டாம்: உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், அவ்வாறே செய்யுங்கள்.
போருக்குப் புறப்படுதல்
நீங்கள் உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போருக்குப் போகும்போது, குதிரைகளையும், தேர்களையும் உங்களுடைய படையைவிட பெரிய படையையும் கண்டால், அவற்றிற்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இருப்பார். நீங்கள் போருக்குப்போக ஆயத்தமாகும்போது, ஆசாரியன் முன்னேவந்து இராணுவவீரருக்கு உரை நிகழ்த்தவேண்டும். அவன் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின், கேளுங்கள், இன்று நீங்கள் உங்கள் பகைவரை எதிர்த்துப் போர் புரியப்போகிறீர்கள். சோர்வடையாதீர்கள் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள் அவர்களுக்குமுன் பீதியடையாதீர்கள். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்காக உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போர்புரிய உங்களுடன் போகிறார்.”
மேலும் அதிகாரிகள் இராணுவவீரரிடம் சொல்லவேண்டியதாவது: “புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாம். அவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யக்கூடும். திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதன் பலனை அனுபவியாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்; அவன் யுத்தத்தில் செத்தால், வேறொருவன் அத்தோட்டத்தின் பலனை அனுபவிப்பான். தனக்கு நிச்சயித்த பெண்ணை இன்னும் திருமணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம். அவன் போரில் செத்தால், அந்தப் பெண்ணை வேறொருவன் திருமணம்செய்வான்” என்று சொல்லவேண்டும். மேலும் அதிகாரிகள் அவர்களிடம், “பயப்படுகிற அல்லது உள்ளத்தில் சோர்வுடைய யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லவேண்டும். ஏனெனில், அவனுடைய உடன் இராணுவவீரர் அவனைப்போல் சோர்வடையாமல் இருக்கவேண்டுமே. அதற்காகவே இப்படிச் சொல்லவேண்டும். அதிகாரிகள் இராணுவவீரருடன் பேசி முடித்தபின், அந்த படைக்கு தளபதிகளை நியமிக்கவேண்டும்.
ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது, அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள். அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள் யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள். பட்டணத்திலுள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.
ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம். இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள்.
நீங்கள் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்கு எதிராகச் சண்டையிட்டு நீண்டகாலமாக முற்றுகையிட்டிருந்தால், அங்குள்ள மரங்களை கோடரியால் வெட்டி அழிக்கவேண்டாம். ஏனெனில் அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அவற்றை வெட்டி விழுத்தவேண்டாம். மரங்களை முற்றுகையிடுவதற்கு அவை என்ன மனிதர்களா? ஆனாலும், பழங்கொடாத மரங்கள் என நீங்கள் அறிந்தால் அவற்றை வெட்டுங்கள். நீங்கள் சண்டைசெய்யும் பட்டணம் வீழ்ச்சியடையும்வரை அரண்கட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம்.
மர்மக் கொலைக்கான பாவநிவிர்த்தி
உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற நாட்டிலே கொலைசெய்யப்பட்ட ஒருவன், வெளியில் கிடப்பதைக் கண்டு, அவனைக் கொலைசெய்தவன் யார் என்று தெரியாதிருக்கக்கூடும். அப்படியானால் உங்களுடைய சபைத்தலைவர்களும், நீதிபதிகளும் அங்குபோய், பிரேதம் கிடக்கும் இடத்திற்கும், சூழ இருக்கும் பட்டணங்களுக்கும் உள்ள தூரத்தை அளக்கவேண்டும். பிரேதத்துக்குக் நெருங்கிய பட்டணத்திலுள்ள சபைத்தலைவர்கள், வேலைசெய்யாததும் நுகம் பூட்டப்படாததுமான ஒரு இளம்பசுவை எடுக்கவேண்டும். அம்முதியவர்கள் உழப்படாததும், விதைக்கப்படாததும், ஓடும் நீருள்ளதுமான பள்ளத்தாக்கில் அதைக் கொண்டுபோக வேண்டும். அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் அந்தப் பசுவின் கழுத்தை முறித்துப்போடவேண்டும். லேவியின் மகன்களான ஆசாரியர்கள் அங்கு வரவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்கு ஊழியம்செய்யவும், யெகோவா பேரில் ஆசீர்வாதம் கூறவும், எல்லா வழக்குகளும், தாக்குதலுமான வழக்குகளுக்கும் தீர்ப்புவழங்கவும் அவர்களையே தெரிந்தெடுத்தார். பிரேதத்துக்குக்கு நெருங்கிய பட்டணங்களிலுள்ள சபைத்தலைவர்கள் பள்ளத்தாக்கில் முறிக்கப்பட்ட பசுவுக்குமேலாகத் தங்கள் கைகளைக் கழுவவேண்டும். அப்பொழுது தலைவர்கள், “நமது கைகள் இந்த இரத்தத்தைச் சிந்தவுமில்லை, நமது கண்கள் இக்கொலையைக் காணவுமில்லை; யெகோவாவே! நீர் மீட்டுக்கொண்ட உமது இஸ்ரயேல் மக்களுக்காக இப்பாவநிவிர்த்தியை ஏற்றுக்கொள்ளும். குற்றமற்ற இம்மனிதனுடைய இரத்தப்பழியை உம்முடைய மக்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்று சொல்லவேண்டும். இவ்விதம் இரத்தம் சிந்துதலுக்கான பாவநிவிர்த்தி செய்யப்படும். இப்படியாக யெகோவாவின் பார்வையில், நீங்கள் சரியானதைச் செய்திருப்பதால், குற்றமில்லாத இரத்தம் சிந்திய பழியை உங்களிலிருந்து நீக்கிவிடுவீர்கள்.
கைதியான பெண்ணைத் திருமணம் செய்தல்
உங்கள் பகைவர்களை எதிர்த்து நீங்கள் போர் செய்கையில் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு அவர்கள்மேல் வெற்றிகொடுத்து கைதிகளையும் கொடுப்பார். அப்பொழுது அந்த கைதிகள் மத்தியில் அழகான ஒரு பெண்ணை நீ கண்டு, அவளை நீ விரும்பினால் நீ அவளை உன் மனைவியாக்கிக்கொள்ளலாம். அவளை உன் வீட்டிற்கு அழைத்துப்போய் அங்கே அவளைத் தன் தலையைச் சவரம்செய்யும்படி செய்து, விரல் நகங்களை வெட்டவேண்டும். அவள் தான் கைதியாகும்பொழுது உடுத்தியிருந்த உடையைக் கழற்றி அதை ஒரு பக்கத்தில் வைக்கவேண்டும். அவள் ஒரு மாதம்முழுவதும் உன் வீட்டில் வசித்து, தனது தாய்க்காகவும், தகப்பனுக்காகவும் துக்கங்கொண்டாட வேண்டும். அதன்பின் நீ அவளிடம் போய், அவளுக்குக் கணவனாகவும், அவள் உனக்கு மனைவியாகவும் இருக்கவேண்டும். அவளில் உனக்கு விருப்பம் இல்லாதிருந்தால், அவளை அவள் விரும்பிய எந்த இடத்துக்கும் போகவிடு. நீ அவளை அவமானப்படுத்தியபடியால், அவளை அடிமையைப்போல் விற்கவோ, நடத்தவோ வேண்டாம்.
முதற்பேறானவர்களின் உரிமைகள்
ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஒருத்தியில் அன்பு செலுத்தி, மற்றவளில் அன்பு செலுத்தாமல் இருக்கும்போது, இருவரும் அவனுக்கு மகன்களைப் பெற்றிருக்கையில், அவன் அன்பு செலுத்தாதவளின் மகன் மூத்த பிள்ளையாக இருக்கக்கூடும். அப்படியிருந்தால் தகப்பன் தன் சொத்தை மகன்களுக்குப் பிரித்துக்கொடுக்கும்போது, தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனான மூத்த பிள்ளை இருக்க, முதற்பேறான மகனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமையைத்தான் அன்பு செலுத்திய மனைவியின் மகனுக்குக் கொடுக்கக்கூடாது. ஆனால் தான் அன்பு செலுத்தாத மனைவியின் மகனுக்குத் தன் சொத்தில் மற்றவனுக்குக் கொடுப்பதைப்போல் இரண்டு மடங்கு கொடுத்து, அவனைத் தன் மூத்த பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த மகனே தன் தகப்பனின் வல்லமையின் முன் அடையாளமானவன். முதற்பேறானவனின் உரிமை அவனுக்கே உரியதாகும்.
அடங்காத மகன்
தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவனும், அவர்கள் கண்டித்து நடத்தும்போது, அவர்களுக்குச் செவிகொடாதவனும், பிடிவாதமும், கலகமும் செய்யும் ஒரு மகன் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடும். அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, தங்கள் பட்டணத்து வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் கொண்டுபோக வேண்டும். பெற்றோர் அந்த சபைத்தலைவர்களிடம் எங்களுடைய இந்த மகன், “பிடிவாதக்காரனும், கலகம் பண்ணுகிறவனுமாய் இருக்கிறான்; இவன் எங்களுக்குக் கீழ்ப்படியமாட்டான். இவன் வீண்விரயம் செய்பவனும், குடிகாரனுமாய் இருக்கிறான்” என்று சொல்லவேண்டும். அப்பொழுது அப்பட்டணத்திலுள்ள மனிதர் எல்லோரும் அவன்மீது கல்லெறிந்து கொல்லவேண்டும். இவ்விதமாய் உங்கள் மத்தியிலுள்ள தீமையை நீங்கள் அகற்றவேண்டும். அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
பலவித நீதிச்சட்டங்கள்
மரணத்துக்கு ஏதுவான குற்றம்செய்த ஒருவன் கொல்லப்பட்டு, அவனுடைய உடல் மரத்தில் தொங்கவிடப்பட்டால், அவனுடைய உடலை இரவு முழுவதும் மரத்தில் தொங்கவிடக்கூடாது. தூக்கின அன்றே அவனை அடக்கம்பண்ண கவனமாயிருங்கள். ஏனெனில் மரத்திலே தொங்கவிடப்பட்டவன் இறைவனின் சாபத்திற்குள்ளானவன். உங்கள் இறைவனாகிய யெகோவா உரிமைச்சொத்தாகக் கொடுக்கிற நாட்டை அசுத்தப்படுத்த வேண்டாம்.
உங்கள் அயலானுடைய எருதோ, செம்மறியாடோ வழிதவறிப்போவதைக் கண்டால், காணாததுபோல் இருக்கவேண்டாம். அதை உரியவனிடத்தில் கொண்டுபோய்விட நீங்கள் கவனமாயிருங்கள். அந்த அயலவன் உங்களுக்கு அருகில் குடியிராவிட்டாலோ, அவன் யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலோ அவன் அதைத் தேடிவரும்வரை அதை உங்கள் வீட்டில் கொண்டுபோய் வைத்திருந்து, அவனிடம் திருப்பிக்கொடுங்கள். உங்கள் அயலான் தனது கழுதையையோ, மேலங்கியையோ அல்லது வேறு பொருளையோ தொலைத்திருக்க நீங்கள் அதைக் கண்டெடுத்தால், இவ்வாறே செய்யவேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்காதிருக்கவேண்டாம்.
உங்கள் அயலானுடைய கழுதையோ, மாடோ வீதியில் விழுந்து கிடப்பதைக் கண்டால், அதைக் காணாததுபோல் இருக்கவேண்டாம். அந்த மிருகத்தைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்யுங்கள்.
ஒரு பெண், ஆண்களின் உடையையோ ஒரு ஆண், பெண்களின் உடையையோ உடுத்தக்கூடாது. ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா இதைச் செய்பவர்களை அருவருக்கிறார்.
வழியருகிலாவது, மரத்திலாவது, தரையிலாவது தாய்க் குருவி ஒன்று முட்டைகளோடு அல்லது குஞ்சுகளோடு ஒரு கூட்டில் இருப்பதை நீங்கள் கண்டால், தாய்க் குருவியை குஞ்சுகளோடு எடுக்காதீர்கள். நீங்கள் குஞ்சுகளை எடுக்கலாம், ஆனால் தாய்க் குருவியை போகவிட கவனமாயிருங்கள், அப்படிச் செய்தால் நீங்கள் நலமாயிருந்து நீடித்து வாழ்வீர்கள்.
நீங்கள் புதிய வீடு கட்டும்பொழுது கூரையிலிருந்து யாரும் விழாதபடி, கூரையைச் சுற்றி சிறிய கைச்சுவரைக் கட்டுங்கள். ஏனெனில், யாரேனும் கூரையிலிருந்து விழுந்தால், நீங்கள் அந்த வீட்டின்மேல் இரத்தப்பழி சுமராதிருக்கச்செய்வீர்கள்.
உங்கள் திராட்சைத் தோட்டத்தில் இரண்டு வகையான விதைகளை நடவேண்டாம்; அப்படிச் செய்தால் நீங்கள், நட்டவைகளின் பயிர்கள் மட்டுமல்ல திராட்சைத் தோட்டத்தின் பலனும் தீட்டுப்படும்.22:9 அல்லது இரண்டும் பரிசுத்த இடத்திற்கு கொண்டுபோகப்படும்
மாட்டையும், கழுதையையும் ஒரே நுகத்தில் பூட்டி உழவேண்டாம்.
கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம்.
நீங்கள் உடுத்தும் உங்கள் மேலங்கியின் நான்கு முனைகளிலும் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள்.
திருமண முறைகேடுகள்
ஒருவன் ஒரு மனைவியை எடுத்து, அவளுடன் உறவுகொண்டபின் அவளை வெறுத்து, “நான் அவளுடன் சேர்ந்தபொழுது அவளுடைய கன்னித்தன்மைக்கான அத்தாட்சியை அவளில் காணவில்லை” என்று சொல்லி, அவளைத் தூஷித்து, அவளுக்கு ஒரு கெட்டபெயர் வரப்பண்ணக்கூடும். அப்பொழுது அவளுடைய தகப்பனும் தாயும் அவள் கன்னித்தன்மை உடையவள் என்ற அத்தாட்சியை பட்டண வாசலில் இருக்கும் சபைத்தலைவர்களிடம் கொண்டுவர வேண்டும். அவளின் தகப்பன் சபைத்தலைவர்களிடம், “என் மகளை இவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான். அவன் இப்போது அவளைத் தூஷித்து, உன்னுடைய மகளைக் கன்னியாக நான் காணவில்லை என்று சொல்கிறான். அவளது கன்னித்தன்மையின் அத்தாட்சி இங்கே இருக்கிறது” என்று சொல்லவேண்டும். பின்பு அவளுடைய பெற்றோர், பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த துணியை விரித்துக் காட்டவேண்டும். அப்பொழுது பட்டணத்து சபைத்தலைவர்கள் அந்த மனிதனைப்பிடித்து, அவனைத் தண்டிக்கவேண்டும். அவர்கள் அவனுக்கு நூறு சேக்கல் வெள்ளி அபராதம் விதித்து, அதைப் பெண்ணின் தகப்பனிடம் கொடுக்கவேண்டும். ஏனெனில் அந்த மனிதன் ஒரு இஸ்ரயேலில் கன்னிப்பெண்ணிற்கு கெட்டபெயரை உண்டாக்கியிருக்கிறான். அவள் தொடர்ந்து அவன் மனைவியாக இருக்கவேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்துசெய்தல் கூடாது.
ஆனாலும் அக்குற்றச்சாட்டு உண்மையாயிருந்து, அவளின் கன்னித்தன்மைக்கான அத்தாட்சி காட்டப்படாதிருந்தால், அந்தப் பெண்ணை அவள் தகப்பன் வீட்டு வாசலில் கொண்டுவர வேண்டும். அப்பொழுது அந்த பட்டணத்தில் உள்ள ஆண்கள் அவள்மேல் கல்லெறிந்து அவளைக் கொல்லவேண்டும். ஏனெனில் தன் தகப்பன் வீட்டில் அவள் இருக்கும்போது, அவள் மானக்கேடாக நடந்து, இஸ்ரயேலில் ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறாள். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
ஒருவன் வேறு ஒருவனின் மனைவியுடன் உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவளுடன் உறவுகொண்ட மனிதனும், அந்த பெண்ணுமாகிய இருவருமே சாகவேண்டும். இப்படியாக இஸ்ரயேலின் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
ஒரு கன்னிப்பெண்ணை ஒருவனுக்கென்று நியமித்தபின், வேறொருவன் பட்டணத்தில் அவளைக் கண்டு, அவளுடன் உறவுகொண்டால், நீங்கள் அவர்கள் இருவரையும் பட்டணத்து வாசலுக்குக் கொண்டுவந்து, அவர்கள்மேல் கல்லெறிந்து அவர்களைக் கொல்லவேண்டும். ஏனெனில், அவள் பட்டணத்திலிருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாதபடியால் அவளையும், அவன் வேறொருவனது மனைவியை மானபங்கப்படுத்தினபடியால் அவனையும் கொல்லவேண்டும். இப்படியாக உங்கள் மத்தியிலுள்ள தீமையை அகற்றவேண்டும்.
ஆனால் வேறொருவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்த ஒரு பெண்ணை நாட்டுப்புறத்தில் கண்டு, ஒருவன் அவளைக் கற்பழித்தால், அதைச் செய்த அம்மனிதன் மட்டுமே சாகவேண்டும். அவளுக்கு ஒன்றும் செய்யவேண்டாம். அவள் மரணத்துக்குரிய பாவம் ஒன்றையும் செய்யவில்லை. இந்த செயல் ஒருவன் தன் அயலானைத் தாக்கிக் கொலைசெய்தது போன்றதாகும், அவன் அவளை புறம்பான ஒரு தனி இடத்திலே கண்டு அதைச் செய்தான். விவாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட அப்பெண் கூக்குரலிட்டிருந்தும் அவளைக் காப்பாற்ற ஒருவரும் இருக்கவில்லை.
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வெளியிலே கண்டு, அவளைக் கற்பழித்தது, கண்டுபிடிக்கப்பட்டால், அவன் அவளுடைய தகப்பனுக்கு ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அவன் அவளை பலாத்காரமாய் கற்பழித்தபடியால், அவளைத் திருமணம் செய்யவேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் அவளை விவாகரத்து செய்யமுடியாது.
ஒருவன் தன் தகப்பனின் மனைவியை22:30 அவரது தந்தையின் பல மனைவிகளில் ஒருவர். திருமணம் செய்யக்கூடாது; அவன் தன் தகப்பனை அவமதிக்கக்கூடாது.
ஒன்றுகூடுதலைத் தவிர்த்தல்
விதைகள் நசுக்கப்பட்டதினாலோ, ஆணுறுப்பு வெட்டப்பட்டதினாலோ ஆண்மையிழந்தவன் எவனும் யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
முறைகேடான உறவினால் பிறந்தவனும், அவன் சந்ததியும் பத்தாம் தலைமுறைவரை யெகோவாவின் சபைக்குள் வரக்கூடாது.
அம்மோனியராவது மோவாபியராவது பத்தாம் தலைமுறைவரைக்கும் உள்ள அவர்களுடைய சந்ததிகளாவது யெகோவாவின், சபைக்குள் வரக்கூடாது. ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, அவர்கள் வழியிலே உங்களைச் சந்திக்க உணவுடனும், தண்ணீருடனும் வரவில்லை. அவர்கள் மெசொப்பொத்தோமியாவிலுள்ள பெத்தோரிலிருந்த பேயோரின் மகன் பிலேயாமை, உங்கள்மேல் சாபம் கூறும்படி கூலிக்கு அமர்த்தினார்கள். ஆனாலும், உங்களுடைய இறைவனாகிய யெகோவா பிலேயாமுக்கும செவிசாய்க்கவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள்மேல் அன்பு கூர்ந்ததினால், அவனுடைய சாபத்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினார். ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம்.
ஏதோமியனை வெறுக்காதீர்கள், அவன் உங்கள் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதீர்கள். அவனுடைய நாட்டில் நீங்கள் அந்நியராய் இருந்தீர்கள். எகிப்தியரின் பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறையினர் யெகோவாவின் சபைக்குள் வரலாம்.
முகாமில் அசுத்தம்
நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராக முகாமிட்டிருக்கும்பொழுது அசுத்தமான எல்லாவற்றிலுமிருந்து விலகியிருங்கள். இராக்காலத்தில் விந்து வெளிப்படுவதினால், உங்கள் மத்தியில் ஒருவன் அசுத்தப்பட்டிருந்தால், அவன் முகாமுக்கு வெளியே போய் அங்கே இருக்கவேண்டும். ஆனால் மாலை நேரம் வந்ததும் அவன் குளித்து சூரியன் மறையும் நேரத்தில் முகாமுக்கு மீண்டும் வரலாம்.
முகாமுக்கு வெளியே மலசலம் கழிப்பதற்கு உங்களுக்கு ஒரு இடத்தை வைத்திருக்கவேண்டும். உங்கள் ஆயுதங்களுடன் ஒன்றாக மண் தோண்டுவதற்கு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெளியே போய் மலசலம் கழித்தபின் ஒரு குழியைத் தோண்டி மலத்தை மண்ணால் மூடிவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைப் பாதுகாக்கவும், உங்கள் பகைவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும், உங்கள் முகாமில் உலாவுகிறார். ஆகவே அவர் உங்கள் மத்தியில் வெட்கக்கேடான எதையும் கண்டு உங்களைவிட்டு விலகிக்போகாதபடி, நீங்கள் முகாமைப் பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
மற்ற சட்டங்கள்
ஒரு அடிமை தப்பி ஓடிவந்து உன்னிடம் அடைக்கலம் புகுந்தால், அவனை அவனுடைய எஜமானிடம் பிடித்துக்கொடுக்க வேண்டாம். அவன் தான் தெரிந்துகொள்கிற பட்டணத்தில் தான் விரும்பிய எங்காவது உங்கள் மத்தியில் வாழட்டும். அவனை ஒடுக்கவேண்டாம்.
இஸ்ரயேலில் ஒரு பெண்ணும் கோயில் வேசியாய் இருக்கக்கூடாது23:17 இது கானானியர்களின் பழக்கமாயிருந்தது.. ஒரு ஆணும் அப்படியிருக்கக் கூடாது. வேசித்தனம் பண்ணும் ஆணோ, வேசித்தனம் பண்ணும் பெண்ணோ தங்கள் வேசித்தனத்தினால் பெறும் வருமானத்தை, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வீட்டுக்குள் எந்தவித நேர்த்திக்கடனை செலுத்தும்படிக்கும் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை அருவருக்கிறார்.
நீங்கள் உங்கள் சகோதரனிடம் வட்டி வசூலிக்கக்கூடாது. வட்டிக்குக் கடனாகக் கொடுக்கக்கூடிய பணத்திற்கோ, உணவுப்பொருளுக்கோ, வேறு எதற்கோ வட்டி வசூலிக்கவேண்டாம். நீங்கள் அந்நியனிடம் வட்டிவாங்கலாம். ஆனால் உங்கள் சகோதர இஸ்ரயேலனிடம் வட்டி வசூலிக்கவேண்டாம். அப்படிச் செய்யும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் அந்நாட்டில், நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் நேர்த்திக்கடன் செய்திருந்தால், நீங்கள் அதைச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் நிச்சயமாய் அதைக் கேட்பார். தாமதித்தால் நீங்கள் பாவம் செய்த குற்றவாளியாவீர்கள். ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாயினால் சொல்லும் எதையும் செய்ய நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் சொந்த வாயினால் சுயவிருப்பத்துடன் உங்கள் நேர்த்திக்கடனை செய்தீர்கள்.
உங்கள் அயலானுடைய திராட்சைத் தோட்டத்திற்குள்போனால், விரும்பிய அளவு திராட்சைப் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் ஒன்றையும் உங்கள் கூடையில் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். நீங்கள் உங்கள் அயலானுடைய வயலுக்குள்போனால் உங்கள் கையினால் கதிர்களைப் பறிக்கலாம், ஆனால் அவனுடைய தானியக் கதிர்களை அரிவாளினால் வெட்டவேண்டாம்.
ஒரு மனிதன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தபின்பு, அவளில் ஏதாவது வெட்கக்கேடான செயலைக் காண்பதினால் அவள் அவனுடைய வெறுப்புக்குரியவளாகினால், அவன் விவாகரத்துப் பத்திரம் எழுதி அதை அவளிடம் கொடுத்து, தன் வீட்டிலிருந்து அவளை அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டு வெளியேறிய பின், வேறொருவனுக்கு மனைவியாகலாம், அவளது இரண்டாவது கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்துப் பத்திரம் எழுதி, அதை அவளுக்குக் கொடுத்து அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பினால் அல்லது அவன் இறந்தால், அவளை விவாகரத்துப்பண்ணிய அவளது முதற் கணவன் அவளை மறுபடியும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டான். ஏனெனில், அவள் கறைப்பட்டிருக்கிறாள். அது யெகோவாவினுடைய பார்வையில் அருவருப்பானது. ஆகவே அப்படிச் செய்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டின்மேல் பாவத்தைச் சுமத்தவேண்டாம்.
ஒருவன் ஒரு பெண்ணைச் சமீபத்தில் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்கு அனுப்பப்படக்கூடாது. அவன்மேல் வேறு எந்த வேலையையும் சுமத்தவும்கூடாது. அவன் ஒரு வருடகாலம் தன் வீட்டில், தான் திருமணம் செய்த மனைவியை மகிழ்விக்க சுதந்திரம் உடையவனாய் இருக்கவேண்டும்.
திரிகைக்கல்லை கடனுக்கான அடைமானமாக வாங்கக்கூடாது. மேற்கல்லைக்கூட வாங்கக்கூடாது. ஏனெனில் அப்படி நீங்கள் செய்வது அந்த மனிதனின் வாழ்க்கைக்கான பிழைப்பையே பறிப்பதுபோலிருக்கும்.
யாராவது ஒருவன் இஸ்ரயேலில் சகோதரன் ஒருவனைக் கடத்திச்சென்று, அவனை அடிமையாக நடத்துவது அல்லது அவன் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடத்தியவன் சாகவேண்டும். இவ்விதமாய் தீமையை உங்கள் மத்தியிலிருந்து அகற்றவேண்டும்.
தோல்வியாதியைக் குறித்து லேவியரான ஆசாரியர்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறபடியே சரியாகச்செய்யக் கவனமாயிருங்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபின் வழியில் உங்கள் இறைவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைவுகூருங்கள்.
நீங்கள் உங்கள் அயலானுக்கு எந்த விதமான கடனையும் கொடுக்கும்போது, அவன் அடகுப்பொருளாகக் கொடுப்பதை எடுக்கும்படி அவனுடைய வீட்டின் உள்ளே போகவேண்டாம். நீங்கள் அவன் வீட்டின் வெளியே நில்லுங்கள். நீங்கள் கடன்கொடுக்கும் மனிதனே அந்த அடகுப்பொருளை வெளியே உங்களிடம் கொண்டுவரட்டும். ஒருவன் ஏழையாயிருந்து தனது மேலுடையை அடகாகத் தந்திருந்தால், நீங்கள் அதை வைத்துக்கொண்டு படுக்கைக்குப் போகவேண்டாம். சூரியன் மறையும்போதே அவனுடைய மேலுடையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவன் தன் அங்கியைப் போட்டுக்கொண்டு படுக்கட்டும். அப்பொழுது அவன் உனக்கு நன்றி செலுத்துவான். அது உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நியாயமான செயலாகக் காணப்படும்.
உங்கள் பட்டணங்களில் வாழும் உங்கள் சகோதர இஸ்ரயேலனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும் அவன் ஏழையும், வறியவனுமான ஒரு கூலிக்காரனாய் இருந்தால், உங்கள் சுயநலத்திற்காகச் சுரண்டிப்பிழைக்க வேண்டாம். அவனுடைய கூலியை ஒவ்வொரு நாளும் பொழுதுபடுமுன் கொடுத்துவிடுங்கள். அவன் ஏழையாய் இருப்பதால் அதையே நம்பியிருக்கிறான். இல்லையெனில் அவன் யெகோவாவிடம் உங்களுக்கெதிராக முறையிட நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாவீர்கள்.
பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்.
அந்நியருக்காவது, தந்தையற்றவர்களுக்காவது அநீதி செய்யவேண்டாம், விதவையின் மேலுடையை அடகாக வாங்கவேண்டாம். நீங்கள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தீர்கள் என்றும், உங்கள் இறைவனாகிய யெகோவாவே அங்கிருந்து உங்களை மீட்டாரென்றும் நினைவிற்கொள்ளுங்கள். அதனால்தான் இதைச் செய்யும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
உங்களுடைய வயலில் நீங்கள் அறுவடை செய்யும்போது, ஒரு கதிர்க்கட்டை தவறுதலாக விட்டுவிட்டால், அதை எடுப்பதற்குத் திரும்பிப் போகவேண்டாம். அதை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பார். ஒலிவப்பழங்களைப் பறிப்பதற்காக நீங்கள் உங்கள் மரங்களை உலுக்கிய பின்பு, இரண்டாம் முறையும் பழங்களைப் பறிப்பதற்காக கிளைகளில் தேடவேண்டாம். அதில் மீதியாய் உள்ளவற்றை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பழங்களை அறுவடை செய்தபின், திரும்பவும் திராட்சைக்கொடிகளில் பழங்களைத் தேடிப்போகவேண்டாம். மீந்திருப்பவைகளை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள். எகிப்து நாட்டில் நீங்கள் அடிமைகளாயிருந்தீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அதனால்தான் இதைச் செய்யும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
மனிதர்களுக்கிடையில் வழக்கு ஏற்படும்போது, அவர்கள் அதை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். நீதிபதிகள் வழக்கை விசாரித்து குற்றமற்றவனை விடுவித்து, குற்றவாளிக்கு தண்டனை வழங்குவார்கள். குற்றவாளிக்கு அடிக்கப்படும் தண்டனையே தீர்க்கப்பட்டால், நீதிபதி அவனைக் கீழே கிடத்துவித்து தனது முன்னிலையில் அவனை அடிக்கவேண்டும். அவனுடைய குற்றத்திற்கு ஏற்ற எண்ணிக்கையின்படி கசையடி கொடுக்கவேண்டும். ஆனால் அவனை நாற்பது அடிகளுக்குமேல் அடிக்கவேண்டாம். அதற்குமேல் அடிக்கப்பட்டால், உங்கள் சகோதரன் உங்கள் பார்வையில் இழிவாகக் காணப்படுவான்.
தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்.
சகோதரர்கள் ஒன்றாய் வாழும்போது, அவர்களில் ஒருவன் மகனைப்பெறாமல் இறந்தால், அவனுடைய விதவை மனைவி குடும்பத்திற்கு வெளியே திருமணம் செய்யக்கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தன்னுடன் சேர்த்து, திருமணம் செய்து அவளுக்கு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை நிறைவேற்றவேண்டும். இறந்தவனுடைய பெயர் இஸ்ரயேலில் அற்றுப்போகாமல், அவள் பெறும் முதல் ஆண்பிள்ளைக்கு தன் சகோதரனுடைய பெயரை கொடுக்கவேண்டும்.
ஆனாலும், இறந்தவனின் மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்ய விரும்பாவிட்டால், அவள் அப்பட்டண வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் போய், “என் கணவனின் சகோதரன் தன் சகோதரனின் பெயரை இஸ்ரயேலில் நிலைப்படுத்த மறுக்கிறான். ஒரு மைத்துனன் செய்யவேண்டிய கடமையை அவன் எனக்குச் செய்யமாட்டேன் என்கிறான்” என்று சொல்லவேண்டும். அப்பொழுது, அவனுடைய பட்டணத்து சபைத்தலைவர்கள் அவனை அழைப்பித்து, அவனுடன் பேசவேண்டும். “அவளை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை” என்று அவன் தொடர்ந்து சொன்னால், அவனுடைய சகோதரனின் விதவை மனைவி சபைத்தலைவர்களின் கண்களுக்கு முன்பாக அவனுடைய செருப்பை எடுத்து, அவன் முகத்தில் துப்பி, “தன் சகோதரனுடைய குடும்பத்தைக் கட்டி எழுப்பாதவனுக்கு இப்படியே செய்யவேண்டும்” என்று சொல்லவேண்டும். அப்படிப்பட்டவனின் பரம்பரை, செருப்பு கழற்றப்பட்டவனின் குடும்பம் என இஸ்ரயேலில் சொல்லப்படும்.
இரண்டு மனிதர்கள் சண்டையிடும்பொழுது அவர்களில் ஒருவனின் மனைவி, தன் கணவனை அடிக்கிறவனிடமிருந்து காப்பாற்றும்படி வந்து, அவள் தன் கையை நீட்டி, அவனுடைய ஆணுறுப்பைப் பிடித்தால், நீங்கள் அவளின் கையை வெட்டிவிடவேண்டும். அவளுக்கு அனுதாபம் காட்டவேண்டாம்.
பாரம் கூடியதும், பாரம் குறைந்ததுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் படிக்கற்களை பையிலே வைத்திருக்கவேண்டாம். அளவைகளிலும் பெரிதும் சிறிதுமான இரண்டு வெவ்வேறு ஏமாற்றும் அளவைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்கவேண்டாம். சரியானதும், நீதியானதுமான படிக்கற்களும், அளவைகளுமே உங்களிடம் இருக்கவேண்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீடித்து வாழ்வீர்கள். இப்படிப்பட்ட நேர்மையற்ற அநீதியான நடத்தை உள்ளவன் எவனையும், உங்கள் இறைவனாகிய யெகோவா அருவருக்கிறார்.
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது வழியிலே அமலேக்கியர் உங்களுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இளைத்துச் சோர்வுற்று இருக்கையில் அவர்கள் உங்களை வழியிலே சந்தித்து, பின்னாலே தளர்வுற்று வந்தவர்களை வெட்டினார்களே! அவர்களோ இறைவனுக்குப் பயப்படவில்லை. ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாட்டில், உங்களைச்சூழ உள்ள எல்லா பகைவர்களிடமிருந்தும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார். அப்பொழுது வானத்தின் கீழெங்கும் அமலேக்கியரின் ஞாபகமே இராதபடி அவர்களை அழித்துவிடுங்கள். இதை மறக்கவேண்டாம்.
முதற்பலன்களும், பத்திலொரு பாகமும்
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கிற நாட்டிற்குள் நீங்கள் போய், அதை உரிமையாக்கி அங்கு குடியிருக்கப்போகிறீர்கள். அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நிலத்தின் விளைச்சல் எல்லாவற்றிலுமிருந்து, முதற்பலன்களை எடுத்து ஒரு கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தம்முடைய பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் உறைவிடத்திற்குக் கொண்டுபோங்கள். அங்கே அவ்வேளையில் கடமையில் இருக்கும் ஆசாரியனிடம், “எங்களுக்குக் கொடுப்பதாக யெகோவா நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நான் வந்துவிட்டேன் என்று, உமது இறைவனாகிய யெகோவாவுக்கு இன்று நான் அறிவிக்கிறேன்” என்பதை சொல்லுங்கள். அப்பொழுது ஆசாரியன் கூடையை உங்கள் கையிலிருந்து எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்முன் கீழே வைப்பான். அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் சொல்லவேண்டியதாவது: “எனது தகப்பன்26:5 முற்பிதா யாக்கோபு. அழிவுக்கு நேரான ஒரு சீரியனாக இருந்தான். அவன் ஒருசில மக்களோடு எகிப்திற்குப்போய் அங்கே வாழ்ந்தான். அவர்கள் வலிமையும், அதிக எண்ணிக்கையுமுள்ள ஒரு பெரிய நாடானார்கள். ஆனால் எகிப்தியரோ எங்களைத் துன்புறுத்தி, எங்கள்மேல் கடுமையான வேலையைச் சுமத்தி வேதனைப்படுத்தினார்கள். அப்பொழுது நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை நோக்கி அழுதோம். யெகோவா எங்கள் குரலைக் கேட்டார். எங்கள் வேதனையையும் கடும் வேலையையும், ஒடுக்குதலையும் கண்டார். எனவே யெகோவா தமது வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும், அற்புத அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும் எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து, பாலும் தேனும் வழிந்தோடுகிற இந்த நாட்டை எங்களுக்குக் கொடுத்தார். யெகோவாவே, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனை இப்பொழுது நான் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் அந்தக் கூடையை வைத்து, அவரை வழிபடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கும், உங்கள் குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தம் நீங்களும், உங்கள் மத்தியில் வாழும் லேவியர்களும், அந்நியரும் மகிழ்ந்து களிகூருங்கள்.
பத்திலொரு பங்கு கொடுக்கும் வருடமான மூன்றாம் வருடத்திலே, உங்கள் விளைச்சலில் எல்லாம் பத்திலொரு பங்கை பிரித்தெடுத்து வையுங்கள். அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுங்கள். அவர்கள் உங்கள் பட்டணங்களில் சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம், “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றின் படியேயும் நான் என் வீட்டிலிருந்து பரிசுத்த பாகத்தைப் பிரித்து லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். நான் உமது கட்டளைகள் ஒன்றையும் விட்டு விலகவில்லை. அவற்றில் ஒன்றையும் மறக்கவும் இல்லை. நான் துக்கங்கொண்டாடியபோது, பரிசுத்த பங்கில் இருந்து ஒன்றையும் உண்ணவுமில்லை. நான் அசுத்தமுள்ளவனாய் இருந்தபோது அதில் ஒன்றையும் எடுக்கவுமில்லை. இல்லையெனில், அதிலொன்றையும் இறந்தவர்களுக்குப் படைக்கவுமில்லை. நான் என் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். நீர் உம்முடைய பரிசுத்த இடமாகிய பரலோகத்திலிருந்து கீழே பார்த்து, உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை ஆசீர்வதியும். எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்டு வாக்குச்செய்தபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டையும் ஆசீர்வதியும்” என்று சொல்லுங்கள்.
யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றுதல்
உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றும்படி இன்று கட்டளையிட்டிருக்கிறார். எனவே உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இவற்றைக் கவனமாய் கைக்கொள்ளுங்கள். யெகோவாவே உங்கள் இறைவன் என்றும், அவருடைய வழிகளிலே நடந்து அவருடைய விதிமுறைகளையும், கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்வீர்கள் என்றும், நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்கள் என்றும், நீங்கள் இன்று அறிவித்திருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய மக்கள் என்றும், அவர் வாக்குக் கொடுத்தபடி நீங்கள் அவருடைய அருமையான உரிமைசொத்து என்றும், நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்றும் யெகோவா இன்று அறிவித்திருக்கிறார். அவர் தாம் படைத்த எல்லா நாடுகளுக்கும் மேலாக உங்களைப் புகழ்ச்சியும், கீர்த்தியும், கனமும் உடையவர்களாக்குவார் என்றும், அவர் வாக்குக்கொடுத்தபடியே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு, பரிசுத்தமான மக்களாய் இருப்பீர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
ஏபால் மலையின் பலிபீடம்
மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் மக்களுக்குக் கட்டளையிட்டதாவது: “இன்று நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டிற்குள் போகும்போது, சில பெரிய கற்களை நாட்டி அவற்றிற்குச் சாந்து பூசுங்கள். நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள், அதாவது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உங்களுக்கு வாக்குக்கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும்27:3 செழிப்பான நாடு. நாட்டிற்குள் போகும்போது, இந்த சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் அந்தக் கற்களின்மேல் எழுதுங்கள். நீங்கள் யோர்தானைக் கடந்துபோகும்போது, இன்று உங்களுக்கு நான் கட்டளையிட்டபடியே ஏபால் மலையில் இந்தக் கற்களை நாட்டி, அவற்றுக்குச் சாந்து பூசுங்கள். அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கற்களினால் ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். இரும்பு ஆயுதங்கள் எதையும் அதன்மேல் பயன்படுத்த வேண்டாம். வெட்டப்படாத கற்களால் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பலிபீடத்தைக் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். அங்கே சமாதான காணிக்கைகளையும் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில், நீங்களும் சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள். நீங்கள் நாட்டிய இந்தக் கற்களின்மேல் இந்த சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் மிகத் தெளிவாக எழுதவேண்டும்” என்றார்கள்.
ஏபால் மலையிலிருந்து சாபங்கள்
அதன்பின் மோசேயும், லேவிய ஆசாரியரும் எல்லா இஸ்ரயேலரிடமும் சொன்னதாவது, “இஸ்ரயேலர்கள், மவுனமாய் இருந்து செவிகொடுங்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் சொந்த மக்களாகிவிட்டீர்கள். ஆகவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்றார்கள்.
மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:
நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும். ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது:
“யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
“இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.”
அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்:
நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.
நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள்.
உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா ஆணையிட்டு வாக்குப்பண்ணியபடி, அவர் உங்களை பரிசுத்த மக்களாக நிலைநிறுத்துவார். அப்பொழுது பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் யெகோவாவின் பெயரால் அழைக்கப்படுவதைக் கண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள். யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார்.
யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள். யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள். வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்குப் பணிசெய்வதினால், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் ஒன்றிலிருந்தும் வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பவேண்டாம்.
கீழ்ப்படியாமையினால் வரும் சாபங்கள்
ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்:
நீங்கள் பட்டணத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் சபிக்கப்படுவீர்கள்.
உங்களுடைய அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் சபிக்கப்படும்.
உங்கள் கர்ப்பத்தின் கனி சபிக்கப்படும், நிலத்தின் பயிர்வகைகளும், மாட்டு மந்தையின் கன்றுகளும், ஆட்டு மந்தையின் குட்டிகளும் சபிக்கப்படும்.
நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள்.
யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார். யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை உங்களை நோய்களால் வாதிப்பார். யெகோவா உங்களை உடலுருக்கும் நோயினாலும், காய்ச்சலினாலும், வீக்கத்தினாலும், கொப்பளிக்கும் வெப்பத்தினாலும், வறட்சியினாலும்28:22 அல்லது பட்டயத்தாலும், தாவர நோயினாலும், விஷப்பனியினாலும் தாக்குவார். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களை வாதிக்கும். உங்களுக்கு மேலாக இருக்கும் வானம் வெண்கலமாயும், உங்களுக்குக் கீழிருக்கும் நிலம் இரும்பாயும் இருக்கும். யெகோவா உங்கள் நாட்டில் தூசியையும், புழுதியையுமே மழைக்குப் பதிலாகப் பெய்யச்செய்வார். நீங்கள் அழியும்வரை அவை வானத்திலிருந்து வந்துகொண்டிருக்கும்.
யெகோவா உங்கள் பகைவர்களுக்கு முன்னே உங்களைத் தோல்வி அடையப்பண்ணுவார். ஒரு திசையிலிருந்து அவர்களை எதிர்த்து வருவீர்கள். ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடுவீர்கள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நீங்கள் ஒரு பயங்கரக் காட்சியாய் இருப்பீர்கள். உங்கள் பிரேதங்கள், எல்லா ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் எல்லா மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றைப் பயமுறுத்தித் துரத்திவிட யாரும் இரார். சுகமடைய முடியாதபடி யெகோவா உங்களை எகிப்தின் கொப்புளங்களினாலும், பருக்களின் கட்டிகளினாலும், சீழ்வடியும் புண்களினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். யெகோவா உங்களைப் பைத்தியத்தினாலும், குருட்டுத்தன்மையினாலும், மனோவியாதியினாலும் வாதிப்பார். குருடன் இரவில் தடவித்திரிவதுபோல், நீங்கள் நடுப்பகலில் தடவித்திரிவீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தோல்வி அடைவீர்கள். நாள்தோறும் நீங்கள் ஒடுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுவீர்கள். ஒருவரும் உங்களை விடுவிக்கமாட்டார்கள்.
உங்களுக்கு ஒரு பெண் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும். வேறொருவனோ அவளைக் கொண்டுபோய் கற்பழிப்பான். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்கள். அதில் வேறொருவன் குடியிருப்பான். நீங்கள் ஒரு திராட்சைத் தோட்டத்தை நாட்டுவீர்கள், அதன் பழத்தையோ சுவைக்கத் தொடங்கவும்மாட்டீர்கள். உங்கள் கண்களுக்கு முன்னால் உங்கள் மாடுகள் கொல்லப்படும். ஆனால் அதில் ஒன்றையும் நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். உங்கள் கழுதை உங்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்படும். அது திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. உங்கள் செம்மறியாடுகள் உங்கள் பகைவர்களிடம் கொடுக்கப்படும். அவற்றை யாரும் தப்புவிக்கமாட்டார்கள். உங்கள் மகன்களும், மகள்களும் வேறு நாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவார்கள். நீங்களோ அவர்களுக்காக நாள்தோறும் காத்திருந்து கண்களை பூத்துப்போகச்செய்வீர்கள். அதைக் கை நீட்டித் தடுக்கவும் வலிமையற்றவர்களாய் இருப்பீர்கள். உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும். யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும்.
யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள். யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள்.
நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும். நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும். நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும். உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும்.
உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள். அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள்.
இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும். இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும். நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை. ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர்28:48 அல்லது எதிரிகள் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.
யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது. பயங்கரத் தோற்றமுடைய அந்த நாடு முதியோருக்கு மதிப்பையோ, வாலிபருக்கு அனுதாபத்தையோ காட்டாது. நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள். நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள்.
முற்றுகையிடும்போது, உங்கள் பகைவர்கள் உங்களைத் துன்புறுத்தி வேதனைப்படுத்துவதினால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற கர்ப்பத்தின் கனியான மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவீர்கள். உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான். அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது. தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற சட்டங்களின் வார்த்தைகளையெல்லாம் நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும், உங்கள் இறைவனாகிய யெகோவாவின் மகிமையும், பயங்கரமுமான பெயரைக்குறித்து பயபக்தி உள்ளவர்களாய் இராமலும் போனால், யெகோவா உங்கள்மேலும், உங்கள் சந்ததிகள்மேலும் பயங்கரமான கொள்ளைநோய்களையும், நீடித்திருக்கும் கொடுமையான பேராபத்துக்களையும், மாறாத கடுமையான நோய்களையும் கொண்டுவருவார். நீங்கள் எகிப்திலே எந்த வியாதிகளுக்குப் பயந்தீர்களோ, அந்த வியாதிகளை எல்லாம் உங்கள்மேல் திரும்பவும் வரப்பண்ணுவார். அவை உங்களைப் பிடித்துக்கொள்ளும். மேலும், நீங்கள் அழியுமட்டும் இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்படாத வேறுவிதமான நோய்களையும், பேராபத்துக்களையும் யெகோவா உங்கள்மேல் வரப்பண்ணுவார். அப்பொழுது வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணிக்கையில் அதிகமாய் இருந்த நீங்கள், எண்ணிக்கையில் ஒரு சிலராய் குறைந்துபோவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. யெகோவா உங்களை செழிக்கப்பண்ணி, உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருப்பம் கொண்டதுபோலவே, உங்களைப் பாழாக்கி அழிக்கவும் விருப்பம்கொள்வார். நீங்கள் உரிமையாக்கப்போகும் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்படுவீர்கள்.
யெகோவா உங்களைப் பூமியின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்குமுள்ள எல்லா நாடுகள் மத்தியிலும் சிதறடிப்பார். அங்கே நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாததும், மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்பட்டதுமான தெய்வங்களை வணங்குவீர்கள். அந்த நாடுகள் மத்தியில் அங்கே உங்களுக்கு ஆறுதல் இருக்காது. உங்களுக்குக் காலூன்றி இளைப்பாற இடமும் கிடைக்காது. யெகோவா அங்கே உங்களுக்கு அமைதியற்ற மனதையும், ஏக்கத்தால் சோர்வுற்ற கண்களையும், நம்பிக்கை இழந்த இருதயத்தையும் கொடுப்பார். நீங்கள் இரவும் பகலும் திகில் நிறைந்து, தொடர்ச்சியாக அமைதியற்றவர்களாய் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை இழந்தவர்களாய் இருப்பீர்கள். உங்கள் இருதயங்களை நிரப்பும் திகிலினாலும், உங்கள் கண்கள் காணும் காட்சிகளினாலும் காலையில், “மாலை வராதோ?” என்றும் மாலையில், “காலை வராதோ?” என்றும் நீங்கள் சொல்வீர்கள். “இனி எகிப்திற்கு ஒருபோதும் பயணமாய் போகக்கூடாது” என நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனாலும் யெகோவா உங்களைத் திரும்பவும் எகிப்திற்குக் கப்பல்களில் அனுப்புவார். நீங்கள் அங்கே உங்கள் பகைவர்களிடம் ஆண் அடிமைகளாகவும், பெண் அடிமைகளாகவும் உங்களை விற்கும்படி முயற்சிப்பீர்கள். ஆனால் ஒருவரும் உங்களை வாங்கமாட்டார்கள்.
உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
ஓரேப் மலையிலே29:1 இதன் மறுபெயர் சீனாய் மலை செய்யப்பட்ட உடன்படிக்கையுடன் மோவாபிலே இஸ்ரயேலருடன் செய்துகொள்ளும்படி யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள் இவையே.
மோசே எல்லா இஸ்ரயேலரையும் அழைப்பித்து, அவர்களுக்குச் சொன்னதாவது:
யெகோவா எகிப்திலே பார்வோனுக்கும், அவனுடைய அதிகாரிகளுக்கும், அவனுடைய நாடு முழுவதுக்கும் செய்ததை உங்கள் கண்கள் கண்டன. அந்த பெரிய சோதனைகளையும், அற்புதமான பெரிய அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்கள் கண்களினாலேயே நீங்கள் கண்டீர்கள். ஆனால் இன்றுவரை விளங்கிக்கொள்ளும் மனதையோ, காணும் கண்களையோ, கேட்கும் காதுகளையோ யெகோவா உங்களுக்கு கொடுக்கவில்லை. நான் உங்களை நாற்பது வருடகாலமாக பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தேன். அக்காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்களில் இருந்த செருப்புகள் தேயவுமில்லை. நீங்கள் அப்பம் சாப்பிடவுமில்லை, திராட்சை இரசமோ, மதுபானமோ குடிக்கவுமில்லை. அவரே உங்கள் இறைவனாகிய யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியே யெகோவா இவற்றைச் செய்தார்.
நீங்கள் இங்கு வந்து சேர்ந்தபோது, எஸ்போனின் அரசன் சீகோனும், பாசானின் அரசன் ஓகுவும் நம்மை எதிர்த்து யுத்தம் செய்ய வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தோம். நாம் அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றி, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசே கோத்திரத்தின் பாதி பேருக்கும் உரிமைச்சொத்தாக அதைக் கொடுத்தோம்.
ஆகவே இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளிலெல்லாம் செழித்து வாழ்வீர்கள். உங்கள் தலைவர்கள், முக்கிய மனிதர்கள், உங்கள் சபைத்தலைவர்கள், அதிகாரிகள், இஸ்ரயேலின் மற்ற எல்லா மனிதர்கள் ஆகிய நீங்கள் எல்லோரும் இன்று இறைவனாகிய யெகோவாவுக்குமுன் நிற்கிறீர்கள். உங்களுடன் உங்கள் பிள்ளைகளும், மனைவிகளும், அந்நியரும் இருக்கிறார்கள். இந்த அந்நியர் உங்கள் முகாம்களில் உங்களுக்கு விறகுவெட்டி, தண்ணீர் அள்ளிப் பணிசெய்கிறவர்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுடன், ஒரு உடன்படிக்கையைச் செய்வதற்காகவே இன்று இங்கு நிற்கிறீர்கள். இன்று யெகோவா இந்த உடன்படிக்கையைச் செய்து, ஒரு ஆணையினால் அதை முத்திரையிடுகிறார். அவர் உங்களுக்கு வாக்குப்பண்ணியபடியும், உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டபடியும் இன்று நீங்கள் அவருடைய மக்களாயும், அவர் உங்கள் இறைவனாயும் இருப்பதை உறுதிப்படுத்தும்படி அவர் இதைச் செய்கிறார். நான் இந்த ஆணையுடனான இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் செய்யவில்லை. இன்று இங்கே நம்முடைய இறைவனாகிய யெகோவாவின் முன்னிலையில் நிற்கிற உங்களோடு மட்டுமல்ல, இனிவரப்போகும் சந்ததியினரான இஸ்ரயேலருடனும் இதைச் செய்கிறேன்.
நாம் எகிப்திலே எப்படி வாழ்ந்தோமென்றும், நமது வழியில் நாடுகளை எப்படிக் கடந்துவந்தோம் என்றும் நீங்கள் அறிவீர்கள். அவர்களின் மத்தியில் மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட அவர்களுடைய அருவருப்பான உருவச்சிலைகளையும், விக்கிரகங்களையும் அவர்கள் வைத்திருக்கக் கண்டீர்கள். உங்களுக்குள் ஒரு ஆணோ, பெண்ணோ, வம்சமோ, கோத்திரமோ உங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபடுவதை விட்டு விலகி, அந்த நாடுகளுடைய தெய்வங்களை வழிபடப் போகாமலிருக்கும்படி கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட கசப்பான விஷத்தை உருவாக்கும் வேர், உங்களுக்குள் இராதபடியும் கவனமாயிருங்கள்.
ஆணையின் வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், தன்மேல் ஆசீர்வாதம் வரும்படி மன்றாடுகிறான். ஆகையால் அவன், “நான் என் சொந்த வழியிலே தொடர்ந்து நடந்தாலும், நான் பாதுகாப்பாகவே இருப்பேன்” என எண்ணக்கூடாது. அப்படி அவன் நடந்தால் அது செழிப்பான நாட்டின்மேலும், வறண்ட நாட்டின்மேலும் பேரழிவையே கொண்டுவரும். யெகோவா அவனை ஒருபோதும் மன்னிக்க மனதுடையவராய் இருக்கமாட்டார். அவருடைய கோபமும், வைராக்கியமும் அந்த மனிதனுக்கு விரோதமாய்ப் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்களெல்லாம் அவன்மேல் வரும். யெகோவா அவனுடைய பெயரை வானத்தின்கீழ் இராமல் அற்றுப்போகப்பண்ணுவார். இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் எல்லா சாபங்களின்படியும், அவனுக்கு அழிவு உண்டாகும்படிக்கு யெகோவா அவனை இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்துவார்29:21 அல்லது உதாரணமாக்குவார்.
அப்பொழுது உங்களுக்குப்பின் வரப்போகிற உங்கள் சந்ததிகளான உங்களுடைய பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியர்களும், உங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகளையும், யெகோவா அதன்மேல் கொண்டுவந்த நோய்களையும் காண்பார்கள். நாடு முழுவதும் வெடியுப்புக்களாலும், கந்தகத்தாலும் எரிந்துபோயிருக்கும். அங்கு ஒன்றும் பயிரிடப்படுவதில்லை. ஒன்றும் முளைப்பதுமில்லை. தாவரம் ஒன்றும் வளரவும்மாட்டாது. இந்த நாட்டின் அழிவு யெகோவா தமது கடுங்கோபத்தில் பாழாக்கிப்போட்ட சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் பட்டணங்களின் அழிவைப்போல் இருக்கும். அப்பொழுது எல்லா நாடுகளும், “யெகோவா ஏன் இந்த நாட்டுக்கு இதைச் செய்தார்? அவருடைய பற்றியெரியும் இந்த கோபம் எதற்காக?” என்று கேட்பார்கள்.
அதற்குரிய பதிலோ: “இம்மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின், உடன்படிக்கையைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு விட்டார்கள். அவர்கள் வழிவிலகி வேறு தெய்வங்களை வழிபட்டார்கள். தாங்கள் அறியாததும், அவர் அவர்களுக்குக் கொடுத்திராததுமான தெய்வங்களை வணங்கினார்கள். ஆகவே, யெகோவாவினுடைய கோபம் இந்த நாட்டுக்கு விரோதமாகப் பற்றி எரிந்தது. அதினாலே இப்புத்தகத்தில் எழுதியிருக்கும் சாபங்களை எல்லாம் அவர் அந்நாட்டின்மேல் வரப்பண்ணினார். எனவே இன்றிருக்கின்றபடி, யெகோவா தம்முடைய மிகுந்த கோபத்தினாலும், கண்டிப்பினாலும் அவர்களை அந்நாட்டிலிருந்து வேருடன் பிடுங்கி, இன்னொரு நாட்டுக்குள் தள்ளிவிட்டார்” என்பதாக இருக்கும்.
மறைபொருளான காரியங்கள் நம் இறைவனாகிய யெகோவாவுக்கே உரியவை, ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்டவைகளே, நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் என்றைக்கும் உரியவைகள். சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும் நாம் கைக்கொள்வதற்காகவே இது வெளிப்படுத்தப்பட்டது.
மனந்திரும்புதலும் ஆசீர்வாதமும்
நான் உங்கள்முன் வைத்த இந்த எல்லா ஆசீர்வாதங்களும், சாபங்களும் உங்கள்மேல் வரும்பொழுது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எந்த நாடுகளின் மத்தியில் சிதறடித்தாரோ, அவர்கள் மத்தியிலிருந்தே இவைகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றின்படியும், உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் இழந்துபோன செல்வங்களை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். அவர் உங்கள்மேல் மனமிரங்கி, உங்களைச் சிதறடித்திருக்கிற எல்லா நாடுகளிலுமிருந்து உங்களைத் திரும்பவும் கூட்டிச்சேர்ப்பார். வானத்தின்கீழ் இருக்கும் மிகத் தூரமான நாட்டிற்கு நீங்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்த்து, மீண்டும் கொண்டுவருவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாயிருந்த நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவார்; நீங்கள் அதைத் திரும்பவும் உரிமையாக்கிக்கொள்வீர்கள். அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களிலும் பார்க்க அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், எண்ணிக்கையில் அதிகமானோராகவும் ஆக்குவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் இருதயங்களையும், உங்கள் சந்ததியாரின் இருதயங்களையும் விருத்தசேதனம்பண்ணுவார். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர்ந்து வாழ்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வெறுத்துத் துன்புறுத்தும் உங்கள் பகைவர்கள்மேல் இந்தச் சாபங்களையெல்லாம் வரப்பண்ணுவார். திரும்பவும் நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் அவருடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வீர்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளிலும் உங்களை அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாக்குவார். உங்களுடைய கர்ப்பத்தின் கனியிலும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளிலும், உங்கள் நிலத்தின் பயிர் வகைகளிலும் செழிப்பைக் கட்டளையிடுவார். அவர் உங்கள் முற்பிதாக்களில் மகிழ்ச்சியடைந்தது போலவே, உங்களிலும் மகிழ்ந்து உங்களைச் செழிப்படையப்பண்ணுவார். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பும்போது அவர் உங்களைச் செழிக்கப்பண்ணுவார்.
வாழ்வும் சாவும்
இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை, நீங்கள் விளங்கிக்கொள்வதற்கு அதிக கடினமானதும் அல்ல. கைக்கொள்வதற்கு இயலாததும் அல்ல. அது வானத்தின் உயரத்தில் இருப்பதும் அல்ல. ஆகவே, “யார் வானத்திற்கு ஏறி அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி, அதை எங்களுக்கு அறிவிப்பவன் யார்?” என்று நீங்கள் கேட்கவேண்டும். அது கடலுக்கு அப்பால் உள்ளதும் அல்ல. ஆகவே, “யார் கடலைக் கடந்து, அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அதை எங்களுக்கு அறிவிப்பான்” என்றும் நீங்கள் கேட்கவேண்டியதில்லை. அந்த வார்த்தை உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. நீங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அது உங்கள் வாயிலும், உங்கள் இருதயத்திலும் இருக்கிறது.
பாருங்கள், இன்று நான் வாழ்வையும் செல்வச் செழிப்பையும், அத்துடன் மரணத்தையும் அழிவையும் உங்கள்முன் வைக்கிறேன். ஏனெனில், இன்று உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் அன்பு வைக்கவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கைக்கொள்வீர்களானால் நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.
ஆனால் உங்களுடைய இருதயம் விலகி, நீங்கள் கீழ்ப்படியாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றை வழிபடும்படி இழுப்புண்டு போவீர்களானால், நிச்சயமாய் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று இந்த நாளில் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்நாட்டிலே நீடித்து வாழமாட்டீர்கள்.
நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்பதற்கு, வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக இன்று அழைக்கிறேன். இப்பொழுது வாழ்வைத் தெரிந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் வாழ்வடைவீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள். அப்பொழுது அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வீர்கள். ஏனெனில் யெகோவாவே உங்கள் வாழ்வாயிருக்கிறார். அவர் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்ட நாட்டில் உங்களை நீண்ட நாட்கள் வாழச்செய்வார்.
மோசேயின் இடத்தில் யோசுவா
பின்பு மோசே வெளியே போய் எல்லா இஸ்ரயேலருடனும் பேசிய வார்த்தைகளாவன: “நான் இப்பொழுது நூற்று இருபது வயதுடையவனாய் இருக்கிறேன். தொடர்ந்து உங்களை வழிநடத்த என்னால் இயலாது. யெகோவா என்னிடம், ‘நீ யோர்தானைக் கடந்துபோகமாட்டாய்’ என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கு முன்பாக உங்கள் இறைவனாகிய யெகோவாவே வழிநடத்திச் செல்வார். அவர் இந்த நாடுகளை உங்களுக்கு முன்பாக அழிப்பார். அவர்களுடைய நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்வீர்கள். யெகோவா சொன்னபடியே யோசுவாவும் உங்களுக்கு முன்பாக யோர்தானைக் கடந்துபோவான். உங்கள் இறைவனாகிய யெகோவா எமோரிய அரசர்களான சீகோனுக்கும், ஓகுக்கும் செய்ததை அவர்களுக்கும் செய்வார். அந்த அரசர்களை அவர்களுடைய நாட்டோடுகூட அழித்தாரே. யெகோவா அந்த அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும், நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். அவர்களின் நிமித்தம் பயப்படவோ, திகிலடையவோ வேண்டாம், ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகப் போகிறார். அவர் உங்களைவிட்டுப் பிரியவுமாட்டார்; உங்களைக் கைவிடவுமாட்டார்” என்றான்.
பின்பு மோசே இஸ்ரயேலர் யாவருக்கும் முன்பாக யோசுவாவை அழைத்து அவனுக்குச் சொன்னதாவது, “பலங்கொண்டு தைரியமாயிரு, இம்மக்களுடைய முற்பிதாக்களுக்கு யெகோவா கொடுப்பதாக ஆணையிட்ட அந்த நாட்டிற்குள் நீ அவர்களுடன் செல்லவேண்டும். அதை நீ அவர்களுடைய உரிமைச்சொத்தாகப் பிரித்துக்கொடுக்கவேண்டும். யெகோவாவே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னுடனேயே இருப்பார். அவர் ஒருபோதும் உன்னைவிட்டுப் பிரியவுமாட்டார்; உன்னைக் கைவிடவுமாட்டார்; நீ பயப்படாமலும் மனந்தளராமலும் இரு” என்றான்.
சட்டம் வாசிக்கப்படுதல்
எனவே மோசே இந்த சட்டத்தை எழுதி, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியின் மகன்களான ஆசாரியர்களிடமும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் அனைவரிடமும் கொடுத்தான். பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “கடன்களை ரத்துச்செய்யும் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலும் கூடாரப்பண்டிகைக் காலத்தில் இந்த சட்டத்தை மக்களுக்குமுன் வாசிக்கவேண்டும். இஸ்ரயேலர் எல்லோரும் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவருக்குமுன் வரும்போது, அவர்கள் கேட்கும்படியாக அவர்களுக்குமுன் இந்த சட்டத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் பட்டணத்தில் வசிக்கும் அந்நியர் ஆகிய மக்களை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், கவனமாகக் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வதற்காக இதைக் கேட்கும்படி ஒன்றுகூட்டுங்கள். இந்த சட்டத்தை அறியாத அவர்களுடைய பிள்ளைகளும், நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்த நாட்டில் வாழும் காலமெல்லாம் அதைக்கேட்டு, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.
யோசுவா நியமிக்கப்படுதல்
பின்பு யெகோவா மோசேயிடம், “நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவை அழைத்துக்கொண்டு சபைக் கூடாரத்திற்கு வா; அங்கே நான் அவனிடம் அவனுடைய பொறுப்பைக் கொடுப்பேன்” என்றார். அப்படியே மோசேயும், யோசுவாவும் சபைக் கூடாரத்தில் வந்து நின்றார்கள்.
அப்பொழுது யெகோவா கூடாரத்தில் ஒரு மேகத்தூணில் காட்சியளித்தார். அந்த மேகம் கூடாரவாசலுக்கு மேலாக நின்றது. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ உன் முற்பிதாக்களைப்போல சாகப்போகிறாய். இம்மக்களோ தாங்கள் போகும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி சீக்கிரமாய் வேசித்தனம் பண்ணுவார்கள். அவர்கள் என்னைக் கைவிட்டு நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள். அந்த நாளில் நான் அவர்களுடன் கோபங்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடுவேன். நான் அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக்கொள்வேன். அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள்மேல் அநேக பேரழிவுகளும், பல துன்பங்களும் வரும். அந்த நாள் வரும்பொழுது அவர்கள், ‘எங்கள் இறைவன் எங்களுடன் இல்லாததினால் அல்லவோ இத்தீமைகள் எல்லாம் எம்மேல் வந்தன’ என்பார்கள். அவர்கள் வேறு தெய்வங்களிடம் திரும்பியதன் மூலம் செய்யும் கொடுமையின் காரணமாக, அந்நாளில் நிச்சயமாக நான் என் முகத்தை மறைத்துக்கொள்வேன்.
“ஆகவே இந்தப் பாடலை உங்களுக்காக எழுதி அதை இஸ்ரயேலருக்குப் படிப்பித்து அதை அவர்களைப் பாடும்படிசெய், அது அவர்களுக்கு விரோதமாகச் சொல்லப்படும் எனது சாட்சியாக இருக்கும். நான் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்குள் அவர்களைக் கொண்டுவருவேன். அந்த நாட்டை தருவதாக நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தேன். அவர்கள் அங்கே திருப்தியாய் உண்டு செழுமை அடையும்போது, என்னைப் புறக்கணித்து, என் உடன்படிக்கையை மீறி வேறு தெய்வங்களிடம் திரும்பி அவற்றை வழிபடுவார்கள். எனவே அநேக பேரழிவுகளும், துன்பங்களும் அவர்கள்மேல் வரும்பொழுது, இந்தப் பாடல் அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சிகூறும். ஏனெனில் இந்தப் பாடலை அவர்களுடைய சந்ததியினர் மறக்கமாட்டார்கள். நான் ஆணையிட்டு வாக்குப்பண்ணிய அந்த நாட்டிற்குள் நான் அவர்களைக் கொண்டுவர முன்னரேயே அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நான் அறிவேன்” என்றார். அப்படியே மோசே அந்தப் பாடலை அந்த நாளிலேயே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குப் போதித்தான்.
பின்பு யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவிடம் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீ பெலன்கொண்டு தைரியமாயிரு. நான் இஸ்ரயேலருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நீ அவர்களைக் கொண்டுபோவாய். நான், நானே உன்னோடு இருப்பேன்.”
மோசே இந்த சட்ட வார்த்தைகளையெல்லாம் ஒரு புத்தகத்தில், தொடக்கத்தில் இருந்து முடிவுவரை எழுதி முடித்தான். அதன்பின்பு யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் லேவியருக்கு மோசே கொடுத்த கட்டளையாவது, “இந்த சட்டப் புத்தகத்தை எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகே வையுங்கள். அது உங்களுக்கு விரோதமாக ஒரு சாட்சியாக அங்கே இருக்கும். ஏனெனில், நீங்கள் கலகக்காரரும், பிடிவாதக்காரரும் என்பதை நான் அறிவேன். நான் உயிரோடு, உங்களுடன் இருக்கும்போதே யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறீர்களே! அப்படியானால் நான் இறந்தபின் எவ்வளவாய்க் கலகம் பண்ணுவீர்கள்? உங்களுடைய கோத்திரங்களின் எல்லா சபைத்தலைவர்களையும், உங்கள் அதிகாரிகளையும் எனக்கு முன்பாகக் கூடிவரப்பண்ணுங்கள். நான் இந்த வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படியாகப் பேசி அவர்களுக்கு விரோதமான சாட்சியாக வானத்தையும் பூமியையும் அழைப்பேன். ஏனெனில் என் சாவுக்குப்பிறகு நிச்சயமாய் நீங்கள் முற்றிலும் சீர்கெட்டு நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள் என்று அறிந்திருக்கிறேன். வரப்போகும் நாட்களில் உங்கள்மேல் பேரழிவு வரும். யெகோவாவினுடைய பார்வையில் நீங்கள் தீமையைச் செய்து, உங்கள் கைகளின் செயலின் மூலம் அவருக்குக் கோபமூட்டுவதால் இந்த அழிவு நேரிடும்” என்றான்.
மோசேயின் பாடல்
பின்பு மோசே இந்தப் பாடலின் வார்த்தைகளைத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை முழு இஸ்ரயேலரும் கேட்கத்தக்கதாகக் கூறினான்:
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்.
பூமியே என் வாயின் வார்த்தைகளைக் கேள்.
என் போதனை மழைபோலப் பெய்யட்டும்.
என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும்,
அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும்,
இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும்.
நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன்.
எங்கள் இறைவனின் மகத்துவத்தைத் துதியுங்கள்!
அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை.
அவரது வழிகளெல்லாம் நீதியானவை.
அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை.
அவர் நேர்மையும், நீதியுமானவர்.
இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள்.
அதனால் அவருடைய பிள்ளைகளாய் இராமல்,
கபடமும் வஞ்சகமும் உள்ள சந்ததியாய் மாறி வெட்கத்திற்குள்ளானார்கள்.
மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே!
நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ?
உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா?
உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா?
பழைய நாட்களை நினைவுகூருங்கள்;
கடந்துபோன தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் தகப்பனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்குச் சொல்வார்,
உங்கள் சபைத்தலைவர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவார்கள்.
மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது,
எல்லா மனுக்குலத்தையும் பிரித்தபோது,
இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையின்படியே,
மக்கள் கூட்டங்களின் எல்லைகளைத் திட்டமிட்டார்.
யெகோவாவின் மக்களே அவரின் பங்கு,
யாக்கோபே அவருடைய உரிமைச்சொத்து.
அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்;
அதுவோ வறண்டதும், நரி ஊளையிடும் பாழ்நிலமுமாய் இருந்தது.
அவர் அவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தார்.
அவர் அவர்களைத் தமது கண்மணிபோல் காத்தருளினார்.
கழுகு தன் கூட்டைக் கலைத்து,
தன் குஞ்சுகளுக்கு மேலாக அசைவாடி,
தன் சிறகுகளை விரித்து அவைகளை ஏந்திக்கொண்டு,
தன் செட்டைகளின்மேல் சுமந்து செல்வதுபோல,
யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர்,
அவர்களுடன் வேறு அந்நிய தெய்வம் இருக்கவில்லை.
அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார்.
வயலின் பலன்களினால் அவர்களுக்கு உணவு கொடுத்தார்.
கற்பாறையில் இருந்து எடுத்த தேனினாலும்,
வைரப்பாறையிலிருந்து வழியும் எண்ணெயினாலும் அவர்களுக்கு ஊட்டமளித்தார்.
பசுக்களின் தயிர், ஆடுகளின் பால்,
கொழுத்த செம்மறியாட்டுக் குட்டிகள்,
வெள்ளாடுகள், பாசானில் தெரிந்தெடுத்த செம்மறியாட்டுக் கடாக்கள்,
சிறந்த கோதுமைத்தானியம் ஆகியவற்றாலும் ஊட்டமளித்தார்.
நுரைக்கும் இரத்தம் போன்ற திராட்சைப்பழத்தின் ரசத்தையும் குடித்தார்கள்.
யெஷூரன்32:15 யெஷூரன் என்றால் நேர்மையானவன் என்று பொருள், இஸ்ரயேலின் மறுபெயர். [ஏசா. 44:2]. கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான்.
அவர்கள் வயிறாரத்தின்று, கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமுடையவர்களானார்கள்.
அப்பொழுது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனையே கைவிட்டு,
தங்கள் இரட்சிப்பின் கற்பாறையையும் புறக்கணித்தார்கள்.
இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி,
தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.
அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல.
அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை.
சமீபத்தில் தோன்றியதும்,
உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள்.
உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள்.
உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.
யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும்,
மகள்களுமான அவர்களோடு கோபம் கொண்டதனால் அவர்களைப் புறக்கணித்து சொன்னதாவது:
“அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்;
அவர்களின் முடிவு எப்படியாகும் என பார்ப்பேன்.
மேலும் அவர், அவர்கள் கொடுமையில் ஊறிய தலைமுறையினர்,
நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகள்.
தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி,
பயனற்ற விக்கிரகங்களினால் கோபத்தை மூட்டினார்கள்.
நான் மக்களென மதிக்கப்படாதவர்களால் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுவேன்,
பகுத்தறிவு இல்லாத தேசத்தால், நான் அவர்களுக்குக் கோபமூட்டுவேன்.
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது,
அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது.
அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும்,
மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும்.
“நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்;
அவர்கள்மேல் என் அம்புகளை கணக்கின்றி எய்வேன்.
நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்;
விழுங்கும் கொள்ளைநோய்களையும், சாகடிக்கும் வாதைகளையும் அனுப்புவேன்.
கூரிய பற்களையுடைய காட்டு மிருகங்களையும்,
புழுதியில் ஊரும் விஷப்பாம்புகளையும் அனுப்புவேன்.
வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்;
அவர்களுடைய வீடுகளில் பயங்கரம் ஆளுகை செய்யும்.
இளைஞரும், இளம்பெண்களும் அழிவார்கள்;
குழந்தைகளும் நரைத்துப்போன கிழவர்களும் அழிவார்கள்.
நான் அவர்களைச் சிதறடிப்பேன்;
மனுக்குலத்தில் இருந்து அவர்களைப்பற்றிய ஞாபகத்தையும் அற்றுப்போகப்பண்ணுவேன்.
‘எங்கள் கைகளே வெற்றிகொண்டன,
யெகோவா இவற்றைச் செய்யவில்லை’ என்று,
தப்பான எண்ணங்கொண்டு அவர்களுடைய பகைவன்,
ஏளனம் செய்வான் என்றே தயங்கினேன்.”
இஸ்ரயேல் ஒரு உணர்வற்ற நாடு,
நிதானிக்கும் ஆற்றல் அவர்களிடமில்லை.
அவர்கள் ஞானமுள்ளவர்களாயிருந்து, இதை விளங்கிக்கொண்டு,
தங்களது முடிவை நிதானித்தறிந்தால் நலமாயிருக்கும்.
அவர்களில் ஆயிரம்பேரை ஒருவன் துரத்துவதெப்படி?
பத்தாயிரம்பேரை இருவர் ஒடவைப்பது எப்படி?
அவர்களுடைய கற்பாறையான யெகோவா அவர்களை விற்றுப்போடாவிட்டால்,
அல்லது யெகோவா அவர்களைக் கைவிடாவிட்டால் இது எப்படி நடக்கும்?
நமது பகைவர் ஒத்துக்கொள்வதுபோல்,
அவர்களுடைய கல் நம்முடைய கற்பாறையானவரைப் போன்றது அல்ல.
பகைவர்களின் திராட்சைக்கொடி சோதோமின் திராட்சைக் கொடியிலிருந்து உண்டானது.
கொமோராவின் வயல்களிலிருந்து வந்தது.
அவர்களின் திராட்சைப் பழங்கள் நஞ்சு நிறைந்தவை.
அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பு நிறைந்தவை.
அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது.
அது நாகபாம்பின் கொடிய நஞ்சாயிருக்கிறது.
“யெகோவா சொல்கிறதாவது: இதை நான் சேர்த்துவைத்து,
என் களஞ்சியங்களில் முத்திரையிடவில்லையோ?
பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன்.
ஏற்றகாலத்தில் அவர்களின் கால்கள் சறுக்கும்.
அவர்களுடைய பேரழிவின் நாள் நெருங்கிற்று.
அவர்களின் பேரழிவு அவர்கள்மேல் விரைந்துவருகிறது” என்றார்.
யெகோவா தமது மக்களை நியாயந்தீர்ப்பார்.
அவர் தன் பணியாட்கள்மேல் கருணைகாட்டுவார்.
அவர்களின் பெலன் அற்றுப்போவதையும் அவர்களில் அடிமையோ,
சுயாதீனரோ ஒருவனும் தப்பாமல் இருப்பதையும் காணும்போது அவர் இரக்கம் காட்டுவார்.
ஆனாலும் அவர், “இப்பொழுது அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?
அவர்கள் அடைக்கலம் புகுந்த கல் எங்கே?
அவர்களுடைய பலிகளின் கொழுபைத்தின்ற தெய்வங்கள் எங்கே?
பானகாணிக்கைகளின் திராட்சை இரசத்தைக் குடித்த தெய்வங்கள் எங்கே?
அவை உங்களுக்கு உதவிசெய்ய எழுந்திருக்கட்டும்.
அவை உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கட்டும்” என்பார்.
“இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்!
என்னைவிட வேறு தெய்வமில்லை.
நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன்.
நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன்.
என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.”
நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது:
“நான் என்றென்றும் வாழ்வது நிச்சயம்போல,
பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி,
நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது,
என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்;
என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன்.
செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால்
நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன்.
எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்;
அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.”
நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள்.
அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார்.
அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும்,
மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார்.
பின்பு மோசே நூனின் மகனான யோசுவாவுடன் வந்து, இந்தப் பாட்டின் சொற்களையெல்லாம் மக்கள் கேட்கும்படி பேசினான். மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரயேலர் எல்லாருக்கும் சொல்லி முடித்தபின்பு, அவன் அவர்களிடம், “நான் இன்று பயபக்தியுடன் உங்களுக்கு அறிவித்த இந்த வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்தின் வார்த்தைகளுக்கெல்லாம் கவனமாய் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கும் கட்டளையிடுங்கள். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும் வீண் வார்த்தைகள் அல்ல. அவையே உங்களுக்கு உயிர்கொடுக்கும். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் இந்த வார்த்தைகளினால் நீடித்து வாழ்வீர்கள்” என்றான்.
மோசேயின் மரணம் முன்னறிவிக்கப்படுதல்
அதே நாளில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் நாட்டிலே இருக்கும் அபாரீம் மலைத்தொடரில் ஏறி நேபோ மலைக்குப்போ. அங்கிருந்து இஸ்ரயேலருக்கு நான் உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் கானான் நாட்டைப் பார். நீ ஏறும் அந்த மலையிலேயே இறப்பாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து தன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது போல், நீயும் உன் முன்னோருடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். சீன் பாலைவனத்தில் மேரிபா காதேஷ் தண்ணீர் அருகே இஸ்ரயேலர் முன்னிலையில் நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையற்றவர்களாய் இருந்தீர்கள். இஸ்ரயேலர் மத்தியிலே நீ எனது பரிசுத்தத்தையும் பேணிக்காத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே உனக்கு இப்படி நடக்கும். ஆகையால் நீ தூரத்திலிருந்து மட்டுமே அந்த நாட்டைப் பார்ப்பாய். இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் நாட்டிற்குள் நீ போகமாட்டாய்” என்றார்.
மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல்
இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே. அவன் சொல்லியதாவது:
“யெகோவா சீனாயிலிருந்து வந்து,
சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார்.
பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார்.
ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும்,
மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.
நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர்.
எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள்.
அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள்.
உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள்.
மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல்.
அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது.
இஸ்ரயேலின் கோத்திரங்களுடன்.
மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது,
யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார்.
“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது,
அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.”
அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது:
“யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்;
அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும்.
அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான்.
அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.”
லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே
உமது தும்மீம், ஊரீம் உரியவை.
நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர்.
மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர்.
அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி,
‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான்.
அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை.
தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து,
உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.
அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும்,
உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான்.
உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான்.
உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.
யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும்.
அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும்.
அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும்.
அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.”
பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும்.
ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார்.
யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.”
யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது:
“யெகோவா அவனுடைய நாட்டை,
மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும்,
கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக.
சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும்,
சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக.
பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும்,
அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.
பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக.
எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக.
இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும்.
தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக.
மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான்.
அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன.
அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான்.
பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான்.
எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.
மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.”
செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது:
“செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு.
இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு.
அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள்.
அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும்,
மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.”
காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான்.
அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான்.
தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது,
அவன் யெகோவாவின் நீதியையும்,
இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.”
தாணைப்பற்றி அவன் சொன்னதாவது:
“தாண் பாசானிலிருந்து,
பாய்கிற சிங்கக்குட்டி.”
நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது:
“நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி
அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான்.
அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.”
ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது:
“ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும்.
அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும்.
உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும்.
நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும்.
“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை.
அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும்,
அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார்.
என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம்.
அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும்.
அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி,
உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார்.
இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும்.
தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில்,
யாக்கோபின் நீரூற்று33:28 எபிரெய கிரேக்க கையெழுத்துப் பிரதியில் நீரூற்று என்றுள்ளது. பாதுகாப்பாய் இருக்கிறது.
அங்கே வானம் பனியைப் பெய்கின்றது.
இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்?
அவரே உங்கள் கேடயமும்,
உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார்.
அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார்.
உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள்.
நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை33:29 அல்லது அவர்களின் பின்புறத்தை. மிதிப்பீர்கள்.”
மோசேயின் மரணம்
அதன்பின் மோசே, மோவாபின் சமபூமியிலிருந்து புறப்பட்டு நேபோ மலையின்மேல் ஏறி, பிஸ்கா உச்சிக்குப் போனான். நேபோ மலை எரிகோவுக்கு எதிரே இருந்தது. அங்கே யெகோவா அந்த முழு நாட்டையும் அவனுக்குக் காண்பித்தார். யெகோவா அவனுக்கு தாண்வரைக்கும் உள்ள கீலேயாத் நாடு, முழு நப்தலி நாடு, எப்பிராயீம், மனாசேயின் பிரதேசங்கள், மத்திய தரைக்கடல்வரை உள்ள முழு யூதாவின் நாடு, தெற்கே, பேரீச்சமரங்களின் பட்டணமான எரிகோவின் பள்ளத்தாக்கிலிருந்து சோவார் வரையுள்ள முழுபிரதேசம் ஆகிய முழு நாட்டையும் காட்டினார். யெகோவா அவனிடம், “உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாடு இதுவே. நான் உன் கண்களால் அதைக் காணும்படி அனுமதித்தேன். ஆனால் நீ அதற்குள் கடந்துசெல்லமாட்டாய்” என்றார்.
யெகோவாவின் அடியவனான மோசே யெகோவா சொல்லியிருந்தபடியே மோவாப், நாட்டில் இறந்தான். மோவாபிய நாட்டிலே பெத்பெயோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் யெகோவா அவனை அடக்கம்பண்ணினார், ஆனால் இன்றுவரை அவனுடைய கல்லறை எங்கேயிருக்கிறது என ஒருவருக்கும் தெரியாது. இறக்கும்போது மோசேக்கு வயது நூற்று இருபது. ஆனாலும் அவன் கண்கள் மங்கிப்போகவுமில்லை. அவன் பெலன் குறையவுமில்லை. இஸ்ரயேலர் மோவாப் சமபூமியிலே மோசேக்காக முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினர். அந்த துக்கநாட்கள் முடியும்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.
இப்பொழுது நூனின் மகனான யோசுவாவின்மேல் மோசே தன் கைகளை வைத்தபடியால், அவன் ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தான். ஆகவே இஸ்ரயேலர் அவனுக்குச் செவிகொடுத்து, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டிருந்ததை எல்லாம் செய்தார்கள்.
இதற்கு பின்பு மோசேயைப்போல் யெகோவா முகமுகமாய் அறிந்திருந்த ஒரு இறைவாக்கினனும் இஸ்ரயேலில் தோன்றியதில்லை. எகிப்திலே பார்வோனுக்கும், முழு அதிகாரிகளுக்கும், நாடு முழுவதற்கும் அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்துகாண்பிக்கும்படி யெகோவா அவனை அனுப்பினார். அவனும் இவை எல்லாவற்றையும் செய்தான். ஏனெனில் இஸ்ரயேலர் காணத்தக்கதாக மோசே செய்ததுபோன்ற பெரும் வல்லமையும், பயங்கரமுமான செயல்களை ஒருவரும் ஒருபோதும் காண்பித்ததும் இல்லை, செய்ததும் இல்லை.