- Biblica® Open Indian Tamil Contemporary Version
தானியேல்
தானியேல்
தானியேல்
தானி.
தானியேல்
தானியேலின் பயிற்சி
யூதாவின் அரசன் யோயாக்கீம் ஆட்சி செய்த மூன்றாம் வருடத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான். அப்பொழுது யெகோவா, யூதாவின் அரசன் யோயாக்கீமை, இறைவனின் ஆலயத்திலுள்ள சிலபொருட்களுடன் நேபுகாத்நேச்சாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவன் இவற்றை பாபிலோனிலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துக்கொண்டு போனான். அவற்றைத் தனது தெய்வத்துக்குரிய திரவிய களஞ்சியத்தில் வைத்தான்.
அதன்பின் அரசன் தன் அரண்மனை அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாஸிடம், “நீ இஸ்ரயேலின் அரச குடும்பத்திலிருந்தும், பெருங்குடிமக்களிலிருந்தும் சிலரைத் தெரிவுசெய்துகொண்டு வா” என அவனுக்கு உத்தரவிட்டான். அவர்கள் எவ்வித சரீர குறைபாடு அற்றவர்களும், வசீகரமுடையவர்களுமாயிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் எல்லா விதமான கல்வியையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களும், அறிவில் சிறந்தவர்களும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலுடையவர்களுமாயிருக்க வேண்டும். அரண்மனையில் பணிசெய்யத் தகுதியுடையவர்களுமான வாலிபராய் இருக்கவேண்டும். அவன் அவர்களுக்குப் பாபிலோனிய மொழியையும், இலக்கியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறினான். அத்துடன், அரசனுடைய பந்தியில் தான் சாப்பிடும் உணவிலும், குடிக்கும் திராட்சை இரசத்திலும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கென அரசன் ஒதுக்கிக் கொடுப்பான். இவ்வாறு அவர்கள், மூன்று வருடம் பயிற்சி பெறவேண்டும். பின்னர் அவர்கள் அரச பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கட்டளையிட்டான்.
அவர்களில் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோரும் இருந்தார்கள். பிரதம அதிகாரி தானியேலுக்கு, பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு, சாத்ராக் என்றும், மீஷாயேலுக்கு, மேஷாக் என்றும், அசரியாவுக்கு, ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்களைக் கொடுத்தான்.
ஆனால் தானியேலோ, அரச உணவினாலும், திராட்சை இரசத்தினாலும் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாதென தன் மனதில் உறுதி செய்திருந்தான். அவ்வாறே தன்னைக் கறைப்படுத்தாதிருக்கும்படி, பிரதம அதிகாரியிடம் அனுமதியும் கேட்டான். அப்பொழுது பிரதம அதிகாரி தானியேலுக்குத் தயவும், அனுதாபமும் காட்டும்படி இறைவன் செய்தார். ஆனால், பிரதம அதிகாரி தானியேலிடம், “உங்களுக்கு உணவையும், பானத்தையும் ஒழுங்கு செய்திருக்கும் என் தலைவனாகிய அரசனுக்கு நான் பயப்படுகிறேன். ஏனெனில் அவர் உங்களைப் பார்க்கும்போது, உங்கள் வயதோடொத்த வாலிபர்களைவிட, உங்கள் தோற்றம் களையிழந்து வாடிக் காணப்பட்டால், அரசன் என் தலையைத் துண்டித்துவிடுவார் என்றான்.”
தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகிய நால்வரையும் பராமரிக்கும்படி, பிரதம அதிகாரியினால் நியமிக்கப்பட்ட காவலனிடம் தானியேல், “தயவுசெய்து பத்து நாட்களுக்கு உமது அடியவர்களைச் சோதித்துப்பாரும். சாப்பிட காய்கறி உணவையும், குடிக்கத் தண்ணீரையுமே அன்றி வேறொன்றும் எங்களுக்குத் தரவேண்டாம். அதன்பின் அரச உணவு சாப்பிடும் வாலிபருடைய தோற்றத்தோடு, எங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப்பாரும். பின்பு உமது விருப்பப்படியே உமது அடியார்களை நடத்தும் என்றான்.” அவ்வாறே அவனும் இதற்கு இணங்கி, அவர்களைப் பத்து நாட்களுக்குச் சோதித்துப்பார்த்தான்.
பத்து நாட்கள் முடிந்தபோது பார்க்கையில், அரச உணவு சாப்பிட்ட வாலிபர்களைவிட, இவர்களே ஆரோக்கியமாகவும், நல்ல புஷ்டியுடையவர்களாகவும் இருக்கக் காணப்பட்டார்கள். எனவே காவலன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறந்த உணவையும், குடிக்க வேண்டிய திராட்சை இரசத்தையும் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்துவந்தான்.
இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும், கல்வியையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். தானியேலினால் எல்லா விதமான தரிசனங்களையும், கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது.
அவர்களை உள்ளே கொண்டுவரும்படி அரசன் நியமித்த நாளில், பிரதம அதிகாரி அவர்களை நேபுகாத்நேச்சார் முன் கொண்டுவந்தான். அரசன் அவர்களோடு பேசியபோது தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு இணையாக ஒருவனும் இல்லாதிருப்பதைக் கண்டான்; ஆகவே அவர்கள் அரச பணிசெய்ய அமர்த்தப்பட்டார்கள். எல்லாவித ஞானத்தையும், பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது அரசாட்சியில் உள்ள எல்லா மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக அரசன் இவர்களைக் கண்டான்.
கோரேஸ் அரசனின் ஆட்சியின் முதலாம் வருடம்வரை தானியேல் அங்கேயே இருந்தான்.
நேபுகாத்நேச்சாரின் கனவு
நேபுகாத்நேச்சார் தனது ஆட்சியின் இரண்டாம் வருடத்தில் ஒர் இரவு கனவுகளைக் கண்டான். அதனால் அவன் மனக்குழப்பமடைந்து நித்திரையின்றி இருந்தான். ஆகவே அரசன், தான் கண்ட கனவைச் சொல்லும்படி தன் நாட்டிலிருந்த மந்திரவாதிகளையும், மாந்திரீகரையும், சூனியக்காரரையும், சோதிடரையும் அழைக்கச் சொன்னான். அவர்கள் அரசன்முன் வந்து நின்றபோது, அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைக் குழப்பமடையச் செய்கிறது. அந்தக் கனவின் விளக்கம் என்னவென்று நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.
அப்பொழுது சோதிடர்கள், “அரசே, நீர் நீடூழி வாழ்க; கனவை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அதன் விளக்கத்தைச் சொல்வோம்” என்று அரமேய மொழியில் சொன்னார்கள்.
அதற்கு அரசன் சோதிடர்களிடம், “நான் உறுதியாகத் தீர்மானித்தது இதுவே: எனது கனவையும், அதற்குரிய விளக்கத்தையும் நீங்கள் சொல்லாவிட்டால், நான் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டுவிப்பேன், உங்கள் வீடுகளையும் தரைமட்டமாக்குவேன். ஆனால் கனவைச் சொல்லி அதற்கு விளக்கத்தையும் தெரிவிப்பீர்களாயின், நீங்கள் என்னிடமிருந்து அன்பளிப்புகளையும், வெகுமதிகளையும், பெருமதிப்பையும் பெறுவீர்கள். எனவே கனவைச் சொல்லி, அதன் விளக்கத்தையும் எனக்குச் சொல்லுங்கள் என்றான்.”
திரும்பவும் அவர்கள், “அரசர் தமது அடியவராகிய எங்களுக்குக் கனவைச் சொல்வாராக. அப்பொழுது நாங்கள் அதன் விளக்கத்தைக் கூறுவோம், என்று பதிலளித்தார்கள்.”
அதற்கு அரசன், “நான் உறுதியாய்த் தீர்மானித்திருப்பது என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நீங்கள் காலத்தைத் கடத்தப் பார்க்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இப்பொழுது கனவைச் சொல்லாமற்போனால், உங்களுக்கு ஒரு தண்டனைதான் இருக்கிறது. சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் பொய்யும், புரட்டுமானவற்றை எனக்குச் சொல்லி, காலத்தைக் கடத்தப் பார்க்கிறீர்கள். எனவே இப்பொழுது கனவை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது அதன் விளக்கத்தையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிவேன் என்றான்.”
அதற்குச் சோதிடர் அரசனிடம், “அரசர் கேட்கும் இதைச் செய்யக்கூடியவன் பூமியில் ஒருவனும் இல்லை. மேன்மையும், வல்லமையும் உள்ள எந்த அரசனும், இப்படியான செயலைச் செய்யும்படி மந்திரவாதிகளிடமோ, மாந்திரீகரிடமோ, சோதிடரிடமோ ஒருபோதும் கேட்டதில்லை. ஏனெனில் அரசர் கேட்பது மிகக் கடினமானது. மனிதனால் அல்ல, தெய்வங்களால்தான் இதை அரருக்கு வெளிப்படுத்த முடியும். தெய்வங்கள் மனிதர் மத்தியில் வாழ்வதில்லை என்றார்கள்.”
இது அரசனுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியது. அதனால் பாபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளுக்கும், மரண தண்டனை கொடுக்கும்படி அரசன் கட்டளையிட்டான். அப்படியே ஞானிகள் கொலைசெய்யப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அப்போது தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேடி, கொலை செய்யும்படி மனிதர் அனுப்பப்பட்டார்கள்.
பாபிலோனின் ஞானிகளைக் கொலை செய்யும்படி, அரச காவல் தளபதியான ஆரியோக் போகையில், தானியேல் அவனுடன் ஞானத்தோடும், சாதுரியத்தோடும் பேசினான். அவன் அரச அதிகாரியிடம், “அரசனால் ஏன் இவ்வளவு கடுமையான ஆணை பிறப்பிக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது ஆரியோக், காரியத்தை தானியேலுக்கு விளக்கிக் கூறினான். அதனைக் கேட்டதும் தானியேல் அரசனிடம் உள்ளே போய் கனவையும், அதன் விளக்கத்தையும் சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு காலக்கெடு தரும்படிக் கேட்டான்.
பின்பு தானியேல் தன் வீட்டுக்குத் திரும்பிவந்து, நடந்தவற்றைத் தன் நண்பர்களான அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு விளக்கிக் கூறினான். பாபிலோனின் மற்ற ஞானிகளுடன், தானியேலும் தனது நண்பர்களும் கொலைசெய்யப்படாதிருப்பதற்கு, இந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி பரலோகத்தின் இறைவனிடம் இரக்கத்துக்காக மன்றாடுங்கள் என அவர்களைத் தூண்டினான். இரவுவேளையில் ஒரு தரிசனத்தின் மூலமாகத் தானியேலுக்கு அந்த மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் பரலோகத்தின் இறைவனைத் துதித்து, அவன் சொன்னதாவது:
“இறைவனின் பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக;
ஞானமும், வல்லமையும் அவருடையவையே.”
காலங்களையும் பருவகாலங்களையும் மாற்றுகிறார் அவரே;
அரசர்களை விலக்கி, மாற்று அரசர்களை ஏற்படுத்துகிறவர் அவரே.
அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும்,
அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுப்பவர் அவரே.
ஆழமானதும் மறைவானதுமானவற்றை வெளிப்படுத்துகிறவர் அவரே;
இருளில் உள்ளதை அவர் அறிகிறார்,
ஒளியும் அவருடன் தங்கியிருக்கிறது.
என் முற்பிதாக்களின் இறைவனே, உமக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிக்கிறேன்.
நீர் எனக்கு ஞானமும், வல்லமையும் தந்திருக்கிறீர்.
“நாங்கள் உம்மிடம் கேட்டதை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
அரசனின் கனவை நீர் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறீர்.”
கனவுக்கு விளக்கம்
பாபிலோனின் ஞானிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி, அரசனால் நியமிக்கப்பட்ட ஆரியோகிடம் தானியேல் போய், “நீர் பாபிலோன் ஞானிகளை மரண தண்டனைக்குள்ளாக்க வேண்டாம். என்னை அரசனிடம் அழைத்துச் செல்லும். அரசனுடைய கனவின் விளக்கத்தை நான் அவருக்குச் சொல்வேன் என்றான்.”
ஆரியோக் உடனே தானியேலை அரசனிடம் அழைத்துச்சென்று, “உமது கனவுக்கான விளக்கத்தைச் சொல்லக்கூடிய ஒருவனை, யூதா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் கண்டுபிடித்தேன் என்றான்.”
அப்பொழுது அரசன், பெல்தெஷாத்சார் என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “எனது கனவில் எதைக் கண்டேன் என்று சொல்லவும், அதன் விளக்கத்தைக் கூறவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான்.
அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசர் வெளிப்படுத்துபடி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக்கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, மாந்திரீகனாலோ, குறிசொல்கிறவர்களாலோ முடியாது. ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகிற ஒரு இறைவன் பரலோகத்தில் இருக்கிறார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நீர் படுக்கையில் படுத்திருந்தபோது, நீர் கண்ட கனவும், உமது மனதைக் கடந்துசென்ற தரிசனங்களும் இவையே:
“அரசே, நீர் படுத்திருக்கையில் வரப்போகும் காரியங்களை உமது மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர், இனி நிகழப்போவது என்ன என்பதை உமக்குக் காண்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் வாழ்கின்ற மற்ற மனிதர்களைவிட நான் மிகுந்த ஞானமுள்ளவன் என்பதால் எனக்கு இந்தக் கனவின் மறைபொருள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசராகிய நீர் அதற்குரிய விளக்கத்தை அறிந்துகொள்ளும்படியும், உமது மனதில் கடந்துசென்றவற்றை நீர் விளங்கிக்கொள்ளும்படியுமே இந்த கனவின் மறைபொருள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
“அரசே, நீர் பார்த்தபோது ஒரு பெரிய சிலை உமக்கு முன்பாக நிற்பதைக் கண்டீர். அது மிகப்பெரியதாயும், மினுங்கிக்கொண்டும் இருந்தது. அது தோற்றத்தில் பயங்கரமானதாயும் இருந்தது. அச்சிலையின் தலை சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது. மார்பும், புயங்களும் வெள்ளியினாலும், வயிறும் தொடைகளும், வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. அதன் கால்கள் இரும்பினாலும், பாதங்களின் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி சுடப்பட்ட களிமண்ணினாலும் செய்யப்பட்டிருப்பதையும் கண்டீர். நீர் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பாறாங்கல் வெட்டியெடுக்கப்பட்டது. ஆயினும் மனித கைகளினால் அல்ல; அந்தக் கல், இரும்பினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்டிருந்த அந்தச் சிலையின் பாதங்களில் மோதி அதை நொறுக்கிப்போட்டது. அதே வேளையிலே, அதில் இருந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், தங்கமும் துண்டுகளாக உடைக்கப்பட்டு, கோடைகாலத்தில் சூடடிக்கும் களத்திலிருக்கும் பதரைப்போலாகியது. காற்று அவற்றை இருந்த இடமே தெரியாதபடி வாரிக்கொண்டு போனது. ஆனால் சிலையை மோதிய அந்த பாறாங்கல்லோ, மிகப்பெரிய மலையாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று.
“கனவு இதுவே. இதன் விளக்கத்தையும் இப்பொழுது நாம் அரசருக்குத் தெரிவிப்போம். அரசே நீர் அரசர்களுக்கெல்லாம் அரசராய் இருக்கிறீர். பரலோகத்தின் இறைவன் உமக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும், வல்லமையையும், மகிமையையும் கொடுத்திருக்கிறார். மனுக்குலத்தையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கைகளில் தந்திருக்கிறார். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எல்லோருக்கும் மேலாக ஆளுநராக அவர் உம்மையே ஏற்படுத்தியிருக்கிறார். தங்கத்தினாலான அந்தத் தலை நீரே.
“உமக்குப்பின் உம்முடைய ஆட்சியைவிட தரம் குறைந்த ஒரு அரசு தோன்றும். அதற்கு அடுத்ததாக, வெண்கலத்தினாலான மூன்றாவது அரசு உலகம் முழுவதையும் ஆட்சிசெய்யும். கடைசியாக, இரும்பைப்போன்ற பலமான ஒரு நான்காம் அரசு தோன்றும். இரும்பு எல்லாவற்றையும் நொறுக்குவதால் இவ்வரசும் இரும்பு பொருட்களைத் துண்டு துண்டாக்குவதுபோல், மற்ற அரசுகளையும் துண்டுதுண்டாக நொறுக்கிப்போடும். பாதங்களும், கால் விரல்களும் பாதிகளிமண்ணும், பாதி இரும்புமாய் இருக்கக் கண்டதுபோலவே இதுவும் ஒரு பிளவுபட்ட அரசாயிருக்கும். ஆயினும், களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே, இரும்பினுடைய வலிமையில் கொஞ்சம் அதிலும் இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாயிருந்தது போலவே, அந்த அரசும் பாதி பலமுடையதாயும், பாதி பலமற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடே கலந்திருக்க நீர் கண்டதுபோலவே, மக்கள் மற்றவர்களோடு கலப்பினமாக இருப்பார்கள். ஆனாலும் களிமண்ணோடு இரும்பு கலவாததுபோலவே, அவர்களும் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
“அந்த அரசர்களின் நாட்களில் பரலோகத்தின் இறைவன் அரசு ஒன்றை எழும்பப்பண்ணுவார். அது அழிக்கப்படவோ, அந்த அரசு வேறு மக்களுக்கு விடப்படவோ மாட்டாது. அது அந்த அரசுகளையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும். ஆயினும் அதுவோ என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். மனித கையால் வெட்டியெடுக்கப்படாமல் மலையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட, பாறாங்கல்லைப் பற்றிய தரிசனத்தின் அர்த்தம் இதுவே. அந்தக் கல்லே இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், தங்கத்தையும் துண்டுதுண்டுகளாக நொறுக்கிப்போட்டது.
“மகத்துவமான இறைவன், எதிர்காலத்தில் நிகழப்போவதை அரசருக்குக் காட்டியிருக்கிறார். கனவு உண்மையானது. விளக்கமும் நம்பத்தக்கது என்றான்.”
அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், தானியேலுக்கு முன் முகங்குப்புற விழுந்து அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான். அவன் தானியேலிடம், “உன்னால் இந்த மறைபொருளை வெளிப்படுத்தக் கூடியதாய் இருந்தபடியால், நிச்சயமாகவே உன் இறைவனே தெய்வங்களுக்கெல்லாம் இறைவனும், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவரும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார் என்றான்.”
பின்பு அரசன் தானியேலை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்தி, அநேக சிறந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான். அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் ஆளுநனாக்கி, அதன் எல்லா ஞானிகளுக்கும் அவனைப் பொறுப்பாகவும் நியமித்தான். மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் மாகாண நிர்வாகிகளாக நியமித்தான். தானியேலோ அரச சபையிலேயே இருந்தான்.
நேபுகாத்நேச்சாரின் தங்க சிலை
நேபுகாத்நேச்சார் தொண்ணூறு அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் கொண்டதாக ஒரு தங்க உருவச்சிலையைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்திலுள்ள, “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தினான். அதன்பின் அவன் தான் நிறுத்திய உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்கு வரும்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள், மற்றும் எல்லா மாகாண அலுவலர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அதன்படி சிற்றரசர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆளுநர்கள், ஆலோசகர்கள், பொருளாளர்கள், நீதிபதிகள், உப நீதிபதிகள் மற்றும் எல்லா மாகாண அலுவலர்களும் நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தியிருந்த உருவச் சிலையின் அர்ப்பணிப்பிற்காக வந்துசேர்ந்து, அதற்குமுன் நின்றார்கள்.
அப்பொழுது அரச அறிவிப்பாளன் உரத்த சத்தமாய், “நாட்டு மக்களே, பிற நாடுகளே, பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரே, நீங்கள் செய்யவேண்டும் என்று அரசன் கட்டளையிட்டிருப்பது இதுவே: கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் முதலான எல்லா இசைக்கருவிகளின் சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே, நீங்கள் எல்லோரும் இங்கு கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்தி வைத்திருக்கும் தங்கச் சிலையை வணங்கவேண்டும். அப்படிக் கீழே விழுந்து வணங்காதவன் எவனோ, அவன் உடனே பற்றியெரியும் நெருப்புச்சூளையில் போடப்படுவான் என்றான்.”
கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ் ஆகியவற்றின் சத்தத்தையும், எல்லாவித இசைகளையும் கேட்டபோது, எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளையும் பேசும் மனிதரும் கீழே விழுந்து, நேபுகாத்நேச்சார் அரசன் நிறுத்திய அந்தத் தங்கச் சிலையை வணங்கினார்கள்.
அந்த நேரத்தில் சோதிடர் சிலர் அரசனிடம் முன்னேவந்து, யூதர்கள்மேல் பகிரங்கமாய்க் குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் நேபுகாத்நேச்சார் அரசனிடம், “அரசே, நீர் நீடூழி வாழ்க. அரசே! கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்றும் எல்லாவித இசையையும் கேட்டதும், எல்லாரும் கீழே விழுந்து தங்கச் சிலையை வணங்கவேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்திருக்கிறீர். அவ்வாறு எவனாகிலும் கீழே விழுந்து வணங்காது போனால், அவன் பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படவேண்டும் எனவும் கட்டளையிட்டீரே. ஆனால் அரசே! பாபிலோன் மாகாணங்களுக்குத் தலைவர்களாக உம்மால் நியமிக்கப்பட்ட யூதர்கள் சிலர் இருக்கிறார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய இவர்கள் உமக்குச் செவிகொடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உமது தெய்வங்களுக்குப் பணிசெய்யாமலும், நீர் நிறுத்திய தங்கத்தினாலான உருவச்சிலையை வணங்காமலும் இருக்கிறார்கள் என முறையிட்டார்கள்.”
அதைக்கேட்ட அரசன் நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்துவரக் கட்டளையிட்டான். எனவே அவர்கள் அரசனின் முன் கொண்டுவரப்பட்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் எனது தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், நான் நிறுத்தியுள்ள தங்கச் சிலையை வணங்காமலும் இருப்பது உண்மையா?” என்று கேட்டான். “இப்பொழுதும் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்ற எல்லா இசைகளையும் நீங்கள் கேட்கும்போது, கீழே விழுந்து நான் நிறுத்திய சிலையை வணங்கினீர்களென்றால் உங்களுக்கு நல்லது. அப்படி நீங்கள் வணங்காவிட்டால், உடனே பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படுவீர்கள். அப்பொழுது எனது கையிலிருந்து உங்களை விடுவிக்கிற தெய்வம் எது என்றான்?”
அதற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம், “நேபுகாத்நேச்சாரே, இதுபற்றி நாங்கள் உம்மோடு வாதிடவேண்டிய அவசியமில்லை. அரசே, நாங்கள் பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்பட்டால், நாங்கள் ஆராதிக்கிற இறைவன் அதிலிருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமானவராய் இருக்கிறார். உமது கையிலிருந்தும் அவர் எங்களை விடுவிப்பார். அவ்வாறு விடுவிக்காமற்போனாலுங்கூட, அரசே, நாங்கள் உமது தெய்வங்களுக்கு பணிசெய்யவோ, நீர் நிறுத்திய சிலையை வணங்கவோ மாட்டோம். இதை நீர் அறிய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள்.”
அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான். அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள். அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள்.
அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?”
அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள்.
அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.”
அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான்.
அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அப்பொழுது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்போ அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காமலும், தலைமயிர் கருகாமலும் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மேலுடைகள் எரியவும் இல்லை. அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே. ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த மக்களும், எந்த மொழி பேசுவோரும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், வேறு எந்த தெய்வத்தினாலும் இவ்விதமாகக் காப்பாற்ற முடியாது என்றான்.”
அதன்பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அரசன், பாபிலோன் மாகாணத்தில் பதவி உயர்வு கொடுத்தான்.
மரத்தைப்பற்றிய கனவு
அரசன் நேபுகாத்நேச்சார்,
உலகம் முழுவதிலும் வாழும் மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கும் அறிவிக்கிறதாவது:
நீங்கள் மிகவும் செழித்து வாழ்வடைவீர்களாக.
மகா உன்னதமான இறைவன் எனக்குச் செய்த அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை!
அவருடைய அதிசயங்கள் எவ்வளவு வல்லமையானவை;
அவருடைய அரசு நித்தியமானது.
அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் நிலைத்திருக்கிறது.
நேபுகாத்நேச்சாராகிய நான் என் அரண்மனையிலுள்ள என் வீட்டில் திருப்தியுடனும், செழிப்புடனும் இருந்தேன். ஆனால் நான் ஒரு கனவு கண்டு பயமடைந்தேன். நான் எனது படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, என் மனதை ஊடுருவிச்சென்ற காட்சிகளும், தரிசனங்களும் என்னுள்ளத்தில் திகிலை உண்டாக்கின. ஆகையால், எனது கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்லும்படி பாபிலோனிலுள்ள எல்லா ஞானிகளையும் எனக்கு முன்பாக அழைத்துவரும்படி கட்டளையிட்டேன். மந்திரவாதிகளும், மாந்திரீகர்களும், சோதிடரும், குறிசொல்பவர்களும் வந்தபோது அவர்களுக்கு என் கனவைச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை. கடைசியாகத் தானியேல் என் முன்பாக வந்தபோது, நான் எனது கனவை அவனிடம் சொன்னேன். அவன், “பெல்தெஷாத்சார்” என்னும் என் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறான். அவனுக்குள் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருக்கிறது.
நான் அவனிடம், “மந்திரவாதிகளுள் பிரதானமானவனே பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உன்னிடம் உண்டென்பதை நான் அறிவேன். எந்த மறைபொருளையும் வெளிப்படுத்துவது உனக்குக் கடினமல்ல. இதுதான் எனது கனவு, அதன் விளக்கத்தைச் சொல் என்றேன்.” நான் எனது படுக்கையில் படுத்திருக்கையில் கண்ட தரிசனங்கள் இவையே: நான் பார்த்தபோது எனக்கு முன்பாக நாட்டின் நடுவில் ஒரு மரம் நின்றது. அது மிக உயரமாயிருந்தது. அந்த மரம் விசாலமாயும் வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை ஆகாயத்தைத் தொட்டது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அதைப் பார்க்கக் கூடியதாயிருந்தது. அதன் இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டன. எல்லோருக்கும் உணவும் அதில் இருந்தது. அதன் கீழே வெளியின் மிருகங்கள் புகலிடமடைந்திருந்தன. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகளும் குடியிருந்தன. அதிலிருந்து எல்லா உயிரினங்களுக்கும் உணவு கிடைத்தது.
நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது, இந்தத் தரிசனத்தைக் கண்டேன். அதில் பரலோகத்திலிருந்து இறங்கி ஒரு பரிசுத்த தூதன் எனக்கு முன்பாக வந்தார். அவர் உரத்த சத்தமிட்டு, “இந்த மரத்தை வெட்டி வீழ்த்துங்கள். கிளைகளை அகற்றிப்போடுங்கள். அவற்றின் இலைகளை உதிர்த்து விடுங்கள். பழங்களைப் பறித்தெறியுங்கள். இந்த மரத்தின் கீழுள்ள மிருகங்களெல்லாம் ஓடிவிடட்டும். அதன் கிளைகளில் தங்கியுள்ள பறவைகளும் பறந்துவிடட்டும். ஆனால் அதன் அடிமரத்தையும், வேர்களையும் இரும்பினாலும், வெண்கலத்தினாலும், கலந்து செய்யப்பட்ட சங்கிலியில் கட்டப்பட்டதாய் வயல்வெளியின் புற்தரையில் மீந்திருக்க விட்டுவிடுங்கள்” என்றார்.
மேலும் அவர், “ ‘வானத்தின் பனியில் நனைந்து, பூமியிலுள்ள மிருகங்களோடு வெளியில் பயிர்களுக்கிடையில் வாழட்டும். அவனுடைய மனம் மாற்றப்பட்டு மனித மனமாயிராமல் போகட்டும். ஏழு காலங்கள் அவனைக் கடந்துசெல்லும்வரை மிருகத்தின் மனம் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்.
“ ‘அந்த தீர்மானம் தூதுவர்களாலும் அந்தத் தீர்ப்பு பரிசுத்தராலும் அறிவிக்கப்படுகிறது. மகா உன்னதமானவரே பூமியில் மனிதருடைய அரசுகளுக்கு மேலாக ஆளுபவர் என்பதையும், அவர் தாம் விரும்புகிறவர்களுக்கு அரசுகளைக் கொடுப்பவர் என்பதையும், அவற்றிற்கு மேலாக மனிதரில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை நியமித்திருப்பவர் என்பதையும், உலகில் வாழ்வோர் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியே அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.’
“அரசனான நேபுகாத்நேச்சாராகிய நான் கண்ட கனவு இதுவே. பெல்தெஷாத்சாரே இப்பொழுது இதன் விளக்கத்தை நீ எனக்குச் சொல். ஏனெனில் என் அரசிலுள்ள ஞானிகள் எவராலும் இதை எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னால் முடியும். ஏனெனில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி உனக்குள் இருக்கிறது என்றான்.”
தானியேல் கனவை விளக்குதல்
அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.”
அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே! நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது. அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது. அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது.
“அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’
“அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே: நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும். ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும். ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.”
கனவு நிறைவேறுதல்
இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.”
இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும். நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.”
உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது.
அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன்.
என்றென்றும் வாழ்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்.
அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை. அவரது அரசு தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கிறது.
அவர் பூமியின் மக்கள் கூட்டங்களை
ஒரு பொருட்டாய் எண்ணவில்லை.
அவர் வானத்தின் அதிகாரங்களுக்கும்,
பூமியின் மக்களுக்கும் தாம் விரும்புகிறபடியே செய்கிறார்.
அவரது கையைத் தடுக்க வல்லவனோ,
“ஏன் இப்படிச் செய்தீர்?”
என்று கேட்கக் கூடியவனோ ஒருவனும் இல்லை.
எனக்கு சுயபுத்தி திரும்பவும் வந்தது. அதே நேரத்தில் எனது அரசின் மேன்மைக்காக, எனது கனமும், மகிமையும் எனக்கு மீண்டும் கிடைத்தன. என் ஆலோசகர்களும், உயர்குடி மக்களும் திரும்பவும் என்னைத் தேடிவந்தார்கள். நான் திரும்பவும் அரண்மனையில் அமர்த்தப்பட்டு, முன்பைவிட மேன்மையடைந்தேன். இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார்.
பெல்ஷாத்சாரின் விருந்து
பல வருடங்களுக்குப்பின் பெல்ஷாத்சார் அரசன் தனது பெருங்குடி மக்கள் ஆயிரம்பேருக்கு பெரிய விருந்தொன்றை செய்து, அவர்களுடன் திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தான். பெல்ஷாத்சார் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, தன் தகப்பன் நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவந்திருந்த தங்கக் கிண்ணங்களையும், வெள்ளிக் கிண்ணங்களையும் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். அவனும் அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், அவனுடைய வைப்பாட்டிகளும் அவைகளில் குடிக்கும்படியே கொண்டுவரும்படி சொன்னான். அவ்வாறே எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்கக் கிண்ணங்களைக் கொண்டுவந்தார்கள். அவற்றிலே அரசனும், அவனுடைய பெருங்குடி மக்களும், அவனுடைய மனைவிகளும், அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கையில் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
திடீரென, அரண்மனையின் குத்துவிளக்கின் அருகே மனித கைவிரல்கள் தோன்றி, சுவர்களில் மேல்பூச்சில் எழுதின. அந்தக் கை எழுதுவதை பார்த்துக்கொண்டிருந்த அரசனின் முகம் பயத்தினால் வேறுபட்டது. அவன் மிகவும் பயந்ததினால், முழங்கால்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. கால்களும் வலுவிழந்து போயின.
பின்பு அரசன் மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரைக் கொண்டுவரும்படி கூப்பிட்டான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் இருக்கும் எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லுகிறவன் சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, இந்த அரசாட்சியில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான் என்றான்.”
அரசனுடைய எல்லா ஞானிகளும் உள்ளே வந்தார்கள். ஆனால் சுவரில் எழுதியிருந்த எழுத்தை வாசிக்கவோ, அதன் விளக்கத்தை அரசனுக்குச் சொல்லவோ அவர்களால் முடியவில்லை. அப்பொழுது பெல்ஷாத்சார் அரசன் இன்னும் அதிகமாய்ப் பயந்து, அவனுடைய முகமும் அதிகமாய் வேறுபட்டது. அவனுடைய பெருங்குடி மக்களும் கலக்கமடைந்தனர்.
அவ்வேளையில் அங்கு நடந்தவற்றினால் ஏற்பட்ட கூச்சலைக்கேட்ட அரசனின் தாய், விருந்து மண்டபத்திற்குள் விரைந்து வந்தாள். அவள், “அரசே, நீர் நீடூழி வாழ்க. நீர் இதனால் கலங்கவோ, உமது முகம் வேறுபவோ வேண்டியதில்லை. உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார். பெல்தெஷாத்சார் என அரசனால் பெயரிடப்பட்ட இந்த மனிதனான தானியேல் மதிநுட்பமும், அறிவும், விளங்கிக்கொள்ளும் தன்மையும் உடையவனாய் காணப்பட்டான். அத்துடன் கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆற்றல் உடையவனாயிருந்தான். தானியேலைக் கூப்பிடும். அவன் அந்த எழுத்துகளுக்கு அர்த்தத்தைச் சொல்வான் என்றாள்.”
எனவே தானியேல் அரசனின் முன் கொண்டுவரப்பட்டான். அரசன் அவனிடம், “அரசனாகிய எனது தந்தை யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களில் ஒருவனாகிய தானியேல் நீ தானா? உன்னிடத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் ஞானிகளும், சாஸ்திரிகளும் எனக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அதற்கு விளக்கம்கூற அவர்களால் முடியவில்லை. இப்பொழுது உனக்கு விளக்கம் கூறவும், கடினமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆற்றல் உண்டு எனக் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்கு உன்னால் கூறமுடியுமானால், உனக்கு சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, உனது கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, அதோடு எனது அரசில் மூன்றாம் பெரிய ஆளுநனாக நியமிக்கப்படுவாய் என்றான்.”
அதற்குத் தானியேல் அரசனிடம், “உமது அன்பளிப்புகளை நீரே வைத்துக்கொள்ளும். உமது வெகுமதிகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும் அரசருக்கான அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை நான் சொல்வேன்.
“அரசே, மகா உன்னதமான இறைவன் உமது தகப்பன் நேபுகாத்நேச்சாருக்கு ஆளுமையையும், மேன்மையையும், மகிமையையும், மகத்துவத்தையும் கொடுத்திருந்தார். அவர் உமது தந்தைக்குக் கொடுத்த அந்த உயர்ந்த நிலைமையினால் மக்களும், நாடுகளும், பல்வேறு மொழி பேசும் மனிதரும் அரசனுக்குப் பயமும் அச்சமும் உடையவர்களாயிருந்தார்கள். அரசர் யாரைக் கொல்ல நினைத்தாரோ அவர்களைக் கொலைசெய்தார். தான் விடுவிக்க விரும்பியவர்களை விடுவித்தார். தான் பதவி உயர்த்த விரும்பியவர்களை பதவி உயர்த்தினார். தான் தாழ்த்த விரும்பியவர்களைத் தாழ்த்தினார். ஆனால் அவரது இருதயம் கர்வங்கொண்டு அகந்தையினால் கடினப்பட்டபோது, அவர் தனது அரியணையிலிருந்து தள்ளப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மகிமையும் எடுக்கப்பட்டது. அவர் மக்களிடமிருந்து துரத்தப்பட்டார். மிருகத்தின் மனம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் காட்டுக்கழுதைகளுடன் வாழ்ந்து, ஆடு மாடுகளைப்போல் புல்லைத் தின்றார். மகா உன்னதமான இறைவனே மனிதரின் அரசாட்சிக்கு மேலாக ஆளுமை உடையவர் என்றும், தாம் விரும்பியவர்களையே அதில் அமர்த்துவார் என்றும் உமது தந்தை உணர்ந்துகொள்ளும்வரை அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
“ஆனால் அவருடைய மகனாகிய பெல்ஷாத்சாராகிய நீரோ இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் உம்மைத் தாழ்த்தவில்லை. மாறாக, பரலோகத்தின் இறைவனுக்கு எதிராக நீர் உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் கிண்ணங்களைக் கொண்டுவரச்செய்து, நீரும், உமது பெருங்குடி மக்களும், உமது மனைவிகளும், வைப்பாட்டிகளும் அதில் திராட்சை இரசம் குடித்தீர்கள். நீரோ தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்டவையும் பார்க்கவோ, கேட்கவோ, விளங்கிக்கொள்ளவோ முடியாதவையுமான தெய்வங்களைப் புகழ்ந்தீர். ஆனால் உமது உயிரையும், வழிகளையும் தமது கையில் வைத்திருக்கும் இறைவனை நீர் மேன்மைப்படுத்தவில்லை. எனவே இறைவன் அந்த கையை அனுப்பினார். அது அந்த எழுத்துக்களை எழுதிற்று.
“எழுதப்பட்ட எழுத்துக்கள்
மெனெ, மெனெ, தெக்கேல் உபார்சின் என்பதே.
“இந்த எழுத்துக்களின் அர்த்தமாவது:
“மெனெ: என்பதன் விளக்கம் இறைவன் உனது ஆட்சிக்காலத்தைக் கணக்கிட்டு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்” என்பதாகும்.
“தெக்கேல்: என்பதன் விளக்கம், ‘நீ தராசில் நிறுக்கப்பட்டு குறைவுடையவனாய் காணப்பட்டிருக்கிறாய்’ என்பதாகும்.
“உபார்சின்: என்பதன் விளக்கம், ‘உனது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும், பெரிசியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்பதாகும்” என்றான்.
அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், ராஜ்ஜியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டான்.
அந்த இரவே பாபிலோன் அரசன் பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். மேதியனாகிய தரியு தனது அறுபத்திரண்டாம் வயதில் அரசாட்சியை எடுத்துக்கொண்டான்.
சிங்கக் குகையில் தானியேல்
அரசன் தரியு, தனது அரசை நல்லமுறையில் ஆளுகைசெய்ய விரும்பி, தனது அரசு எங்கும் நூற்றிருபது சிற்றரசர்களை நியமித்தான். அதோடு அவர்களுக்கு மேலாக மூன்று நிர்வாகிகளையும் நியமித்தான். அவர்களில் தானியேலும் ஒருவன். அரசனுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு இந்தச் சிற்றரசர்கள் நிர்வாகிகளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதாயிருந்தது. தானியேலில் தனிச் சிறப்புவாய்ந்த பண்புகள் இருந்தன. ஆதலால் அவன் மற்ற நிர்வாகிகளையும், சிற்றரசர்களையும்விட சிறந்து விளங்கினான். இதனால் அரசன் தனது முழு அரசின்மேலும் அவனை பொறுப்பாய் நியமிக்கத் திட்டமிட்டான். இதையறிந்த மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும், தானியேலின் அரசியல் விவகாரங்களில் தானியேலின் நடத்தைக்கு எதிராகக் குற்றம் சாட்டுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவன் நம்பிக்கைக்குரியவனும், ஊழலும் கடமையில் அலட்சியமும் இல்லாதவனுமாய் இருந்தபடியால், அவனில் எந்தவித குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த மனிதர்கள், “தானியேலை வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது. அவனை அவனுடைய இறைவனது சட்டத்தைப்பற்றிய விஷயங்களில் மட்டுமே குற்றப்படுத்தலாம் என்றார்கள்.”
எனவே நிர்வாகிகளும், சிற்றரசர்களும் ஒரு குழுவாக அரசனிடம் சென்று, “தரியு அரசே, நீர் நீடூழி வாழ்க. அரச நிர்வாகிகள், நிர்வாக அதிகாரிகள், சிற்றரசர்கள், ஆலோசகர்கள், ஆளுநர்கள் ஆகிய நாங்கள் எல்லோரும், வரப்போகும் முப்பது நாட்களில் அரசராகிய உம்மைத்தவிர, வேறு தெய்வங்களிடமோ, மனிதரிடமோ ஒருவனும் மன்றாடக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவன் சிங்கத்தின் குகையில் போடப்படுவதற்கு அரசர் ஒரு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்றாய்த் தீர்மானித்திருக்கிறோம். எனவே அரசே, இரத்துச் செய்யப்பட முடியாத மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படியே அதை மாற்ற முடியாததாய் எழுதிவையும் என்றார்கள்.” அப்படியே தரியு அரசன் கட்டளையை எழுதிவைத்தான்.
இக்கட்டளை பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டதைத் தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டிற்குப்போய் மேல் வீட்டறையில் எருசலேமின் பக்கமாயிருந்த ஜன்னல் அருகே போனான். அவன் தான் முன்பு செய்ததுபோலவே நாளொன்றுக்கு மூன்றுமுறை முழங்காற்படியிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான். அப்பொழுது அந்த மனிதர்கள், குழுவாக அங்கு சென்றபோது தானியேல் தனது இறைவனிடம் உதவிகேட்டு மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, அரச கட்டளையைப் பற்றிப்பேசி, “அரசே, முப்பது நாட்களுக்கு அரசனைத் தவிர வேறு தெய்வத்திடமோ, மனிதனிடமோ மன்றாடுபவன் எவனும் சிங்கத்தின் குகையில் போடப்படவேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?” எனறு கூறினார்கள்.
அரசன் அவர்களிடம், “இரத்துச் செய்யமுடியாத மேதியர், பெரிசியரின் சட்டப்படி நான் பிறப்பித்த கட்டளை நிலையானது என்றான்.”
அப்பொழுது அவர்கள் அரசனிடம், “யூதேயாவிலிருந்து சிறைப்பிடித்து வரப்பட்டவர்களில் ஒருவனான, தானியேல் என்பவன் உமக்கோ, நீர் எழுதிவைத்த கட்டளைக்கோ கவனம் செலுத்தாமல் இருக்கிறான். அவன் ஒரு நாளுக்கு மூன்று வேளையும் மன்றாடி வருகிறான் என்றார்கள்.” இதைக் கேட்ட அரசன் மிகவும் மனம் வருந்தினான். அவன் தானியேலைக் காப்பாற்ற உறுதிகொண்டு, மாலைவரை முழு முயற்சி செய்தான்.
அப்பொழுது அந்த மனிதர் குழுவாக அரசனிடம் சென்று, “அரசே; மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படி, அரசர் பிறப்பிக்கும் எந்த ஒரு கட்டளையும், ஆணையும் மாற்றப்படமுடியாது என்பதை நினைவில்கொள்ளும் என்றார்கள்.”
எனவே அரசன் உத்தரவிட, அவர்கள் தானியேலைப் பிடித்துக்கொண்டுவந்து சிங்கத்தின் குகைக்குள் வீசினார்கள். அப்பொழுது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக என்றான்.”
பெருங்கல்லொன்று கொண்டுவரப்பட்டு அக்குகையின் வாசலில் மூடப்பட்டது. தானியேலுக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாற்றப்படாதபடி, அரசன் அந்தக் கல்லைத் தனது அடையாள மோதிரத்தாலும், தனது உயர்குடி மக்களின் மோதிரத்தாலும் முத்திரையிட்டான். பின் அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பிப்போய் அன்றிரவை சாப்பிடாமலும், எந்தவித ஆடல், பாடல் களிப்பு இன்றியும் கழித்தான். அவனால் நித்திரைகொள்ள முடியவில்லை.
மறுநாள் அதிகாலையிலேயே அரசன் எழுந்து சிங்கத்தின் குகைக்கு விரைவாகப் போனான். அரசன் குகையின் அருகில் வந்ததும் துயரமான குரலில் தானியேலைக் கூப்பிட்டு, “தானியேலே, வாழும் இறைவனின் அடியவனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற இறைவன் சிங்கங்களிடத்திலிருந்து உன்னைத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரோ?” என்று தானியேலைக் கேட்டான்.
அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க. எனது இறைவன் தனது தூதனை அனுப்பினார், அவர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றான்.”
அப்பொழுது அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, தானியேலைச் சிங்கத்தின் குகையிலிருந்து தூக்கி எடுக்கும்படி உத்தரவிட்டான். தானியேல் சிங்கக் குகையிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டபோது, அவனில் எவ்வித காயமும் காணப்படவில்லை. ஏனெனில், அவன் தனது இறைவனில் நம்பிக்கையாயிருந்தான்.
பின்பு அரசனின் கட்டளைப்படியே தானியேலைக் குற்றஞ்சாட்டிய மனிதர்களும், அவர்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் கொண்டுவரப்பட்டு சிங்கத்தின் குகையில் போடப்பட்டார்கள். ஆனால் அவர்கள் குகையின் தரையில் விழும் முன்னரே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, கிழித்து அவர்கள் எலும்புகளை நொறுக்கிப்போட்டன.
அப்பொழுது தரியு அரசன், எல்லா மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு நாடெங்கும் மொழிகளைப் பேசுபவர்களுக்கும் எழுதுகிறதாவது:
“நீங்கள் மிகச் செழிப்புடன் வாழ்வீர்களாக.
“எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் எல்லா பகுதிகளிலுமுள்ள மக்கள் தானியேலின் இறைவனுக்குப் பயந்து அவரையே கனப்படுத்தவேண்டும்.
“ஏனெனில் வாழும் இறைவன் அவரே.
அவர் என்றென்றும் நிலைத்திருக்கிறார்.
அவருடைய அரசு அழிந்துபோகாது.
அவரது ஆளுகை முடிவில்லாதது.
அவர் தப்புவிக்கிறார், அவர் காப்பாற்றுகிறார்.
அவரே வானத்திலும் பூமியிலும், அடையாளங்களையும்
அதிசயங்களையும் செய்கிறார்.
அவரே வலிமைமிக்க சிங்கங்களிடமிருந்து
தானியேலைத் தப்புவித்தார்.”
இவ்வாறு தானியேல், தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேஸின் ஆட்சிக்காலத்திலும் செழிப்புடன் வாழ்ந்தான்.
தானியேலின் கனவு
இவற்றிற்கு முன், பாபிலோன் அரசன் பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதலாவது வருடத்தில், தானியேல் ஒரு கனவு கண்டிருந்தான். அவன் படுத்திருக்கும்போது, அவனுடைய மனதில் தரிசனங்கள் கடந்துசென்றன. அவன் தான் கண்ட கனவின் சுருக்கத்தை எழுதிவைத்தான்.
தானியேல் சொன்னதாவது: அந்த இரவில், என் தரிசனத்தில், வானத்தின் நான்கு காற்றுகள் வீசி மாபெருங்கடலை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்ததைக் கண்டேன். அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலில் இருந்து மேலே வெளியேறின. அவை ஒன்றிலிருந்து மற்றது வித்தியாசமான உருவமுள்ளனவாய் இருந்தன.
முதலாவது விலங்கு சிங்கத்தைப்போன்றது; அதற்குக் கழுகின் சிறகுகள் இருந்தன. நான் கவனித்துப்பார்க்கையில், அந்தக் கழுகின் சிறகுகள் பிடுங்கப்பட்டு, அது நிலத்திலிருந்து மேலே தூக்கப்பட்டது. அப்பொழுது அது ஒரு மனிதனைப்போல் இரண்டு கால்களையும் ஊன்றி நின்றது. அதற்கு ஒரு மனிதனுடைய இருதயமும் கொடுக்கப்பட்டது.
அங்கே எனக்கு முன்பாக இரண்டாவது மிருகம் நின்றது. அது கரடியைப்போல் காணப்பட்டது. அதன் ஒரு பக்கம் உயர்ந்திருக்கக் காணப்பட்டது. அதன் வாயில் பற்களுக்கிடையில் மூன்று விலா எலும்புகள் இருந்தன. அப்பொழுது, “எழுந்திரு, போதுமான அளவு மாம்சம் சாப்பிடு என்று அதற்குச் சொல்லப்பட்டது.”
அதன்பின்பு நான் பார்க்கையில் எனக்கு முன்பாக வேறொரு மிருகம் இருந்தது. அது சிறுத்தையைப்போல் இருந்தது. பறவையின் இறகுகளைப்போன்ற நான்கு சிறகுகள் அதன் முதுகின் பின்புறத்தில் இருந்தன. அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. ஆளுவதற்கான அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
அந்த இரவிலே, எனது தரிசனத்தில் எனக்கு முன்பாக நான்காவது மிருகத்தையும் கண்டேன். அதுவோ திகிலூட்டுவதாகவும், பயங்கரமானதாகவும், மிகவும் வல்லமையுடையதாகவும் இருந்தது. பெரிய இரும்புப் பற்கள் அதற்கு இருந்தன. அது தனக்கு அகப்பட்டதை நசுக்கி சின்னாபின்னமாக்கி விழுங்கியது. எஞ்சியதைத் தனது கால்களால் மிதித்துப்போட்டது. அது முன்பு காணப்பட்ட மிருகங்களையும்விட, வித்தியாசமானதாய் இருந்தது. அதற்கு பத்து கொம்புகள் இருந்தன.
நான் அந்தக் கொம்புகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக அவற்றிற்கு நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று. அப்பொழுது முன்பிருந்த கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டன. அந்தச் சிறிய கொம்பில் மனிதனுடைய கண்களைப்போன்ற கண்களும், பெருமையாய் பேசும் வாயும் இருந்தன.
நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்,
அந்த இடத்தில் அரியணைகள் அமைக்கப்பட்டன.
அதன் நடுவில் பூர்வீகத்திலுள்ளவர் அமர்ந்திருந்தார்.
அவரது உடை உறைந்த பனியைப்போல் வெண்மையாயிருந்தது.
அவருடைய தலைமயிர் தூய்மையான பஞ்சைப்போல் வெண்மையாய் இருந்தது.
அவரது அரியணை கொழுந்துவிட்டெரிகிற நெருப்பினால் சுடர் விட்டுக்கொண்டிருந்தது.
அதன் சக்கரங்கள் கொழுந்து விட்டெரிந்தன.
அவர் முன்னிலையிலிருந்து
நெருப்பு ஆறு ஒன்று எழும்பி ஓடிக்கொண்டிருந்தது.
ஆயிரம் ஆயிரமானவர்கள் அவருக்குப் பணிபுரிந்தார்கள்.
கோடிக்கணக்கானோர் அவர்முன் நின்றார்கள்.
நீதிமன்றம் கூட்டப்பட்டது.
புத்தகங்கள் திறக்கப்பட்டன.
“அதன்பின் அந்த சிறிய கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், நான் தொடர்ந்து கவனித்துப் பார்த்தேன். அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டு, அதன் உடல் அழிக்கப்பட்டு நெருப்பு ஜூவாலையில் எறியப்படும்வரையும், நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற மிருகங்களிடமிருந்தோ அவற்றின் அதிகாரம் பறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவை குறிப்பிட்ட காலத்திற்கு வாழும்படி அனுமதிக்கப்பட்டன.
“அந்த இரவிலே எனது தரிசனத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக வானத்தின் மேகங்களுடன் மனித குமாரனைப்போன்ற ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் பூர்வீகத்தில் உள்ளவரிடத்தின் அருகே வர, அவருக்கு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அதிகாரமும், மகிமையும், ஆளுமையும், வல்லமையும் கொடுக்கப்பட்டன. எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரும் அவரை வழிபட்டனர். அவரது ஆளுகை ஒழிந்துபோகாத ஆளுகை, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது அரசு ஒருபோதும் அழிந்துபோகாது.
கனவின் விளக்கம்
“தானியேலாகிய நான் எனது ஆவியில் கலங்கியிருந்தேன், என் மனதின் வழியாகக் கடந்துசென்ற தரிசனங்கள் என்னைக் கலக்கமடையச்செய்தன. அரியணையின் அருகில் நின்றவர்களில் ஒருவனை நான் அணுகி, இவற்றின் உண்மையான விளக்கத்தைக் கேட்டேன்.
“அப்போது அவன் எனக்கு அவற்றின் விளக்கத்தைச் சொன்னான். அந்த நான்கு பெரிய மிருகங்களும், பூமியிலிருந்து தோன்றப்போகும் நான்கு அரசுகள். இருந்தாலும் மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களே அரசைப்பெற்று, அதை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள். ஆம், என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்.
“அதன் பின்னர் நான்காவது மிருகத்தைப்பற்றிய உண்மையான விளக்கத்தை அறிய விரும்பினேன். இந்த மிருகம் மற்ற எல்லாவற்றிலும் வித்தியாசமானதும், மிகுந்த பயங்கரமானதும், இரும்புப் பற்களையுடையதும், வெண்கல நகங்களையுடையதுமாயிருந்தது. தனக்கு அகப்பட்டதைப் நசித்து சின்னாபின்னமாக்கி, தான் விழுங்கியதுபோக எஞ்சியதைத் தன் காலின்கீழ் போட்டு மிதித்தது. அதோடு அதன் தலையிலிருந்த பத்துக்கொம்புகளைப் பற்றியும், முளைத்த மற்ற கொம்பைப்பற்றியும் அறிய விரும்பினேன். முன்பிருந்த மூன்று கொம்புகளையும் விழப்பண்ணின இந்தக் கொம்பு, மற்றதைவிடப் பெலமுடையதாய்க் காணப்பட்டது. அதற்கு கண்களும், பெருமை பேசும் வாயும் இருந்தன. நான் பார்த்தபோது, அந்தக் கொம்பு இறைவனின் பரிசுத்தவான்களுக்கு எதிராகப் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்துக்கொண்டிருந்தது. பூர்வீகத்திலுள்ளவர் வந்து, மகா உன்னதமானவரின் பரிசுத்தவான்களின் சார்பாக நியாயத்தீர்ப்பு வழங்கும் வரைக்கும், அவர்களுக்கு அரசுரிமை கிடைக்கும் காலம் வரும்வரைக்கும் அது யுத்தம் செய்துகொண்டே இருந்தது.
“எனக்கு அவன் கொடுத்த விளக்கமாவது: அந்த நான்காம் மிருகம் பூமியில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கும். அது மற்ற எல்லா அரசுகளையும்விட, வித்தியாசமானதாய் இருக்கும். அது பூமி முழுவதையும் மிதித்து, நசுக்கி விழுங்கிவிடும். அந்தப் பத்துக் கொம்புகளும், அந்த அரசில் இருந்து தோன்றும் அரசர்கள். அவர்களுக்குப்பின் முந்தின அரசர்களைவிட, வித்தியாசமான வேறொருவன் தோன்றுவான். அவன் அவர்களுள் மூன்று அரசர்களைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான். அவன் மகா உன்னதமானவருக்கு எதிராகப் பேசுவான். அவன் அவரது பரிசுத்தவான்களை ஒடுக்கி, நியமிக்கப்பட்ட கால அட்டவணைகளையும், நீதிச்சட்டங்களையும் மாற்ற முயற்சிசெய்வான். பரிசுத்தவான்கள் அவனிடத்தில் ஒரு காலத்திற்கும், காலங்களுக்கும், அரைக் காலத்திற்கும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
“ ‘ஆனால், நீதிமன்றம் அமரும்; அப்போது அவனுடைய வல்லமை அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, என்றென்றுமாய் முழுவதும் அழிக்கப்படும். வானத்தின் கீழுள்ள எல்லா அரசுகளின் ஆளுமையும், வல்லமையும், மகத்துவமும், மகா உன்னதமானவருடைய மக்களான பரிசுத்தவான்களிடம் ஒப்படைக்கப்படும். அவரது அரசு நித்திய அரசாயிருக்கும். எல்லா ஆளுநர்களும் அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.’
“இதுவே நான் கண்டவற்றின் முடிவு. ஆனால், தானியேலாகிய நான் என் சிந்தனையில் குழப்பமடைந்திருந்தேன். என்னுடைய முகம் வேறுபட்டது. என்றாலும், இவற்றை நான் என்னுடனே என் மனதிலே வைத்துக்கொண்டேன்.”
தானியேலின் தரிசனம் செம்மறியாட்டுக் கடா, வெள்ளாடு
பெல்ஷாத்சார் அரசனின் மூன்றாவது வருடத்தில் தானியேலாகிய நான், முன்பு கண்ட தரிசனத்தைப்போல் வேறொரு தரிசனத்தைக் கண்டேன். என்னுடைய தரிசனத்தில் நான் ஏலாம் மாகாணத்திலுள்ள, அரண்செய்யப்பட்ட சூசா பட்டணத்தில் இருந்தேன். அந்தத் தரிசனத்தில் நான் ஊலாய் என்னும் கால்வாய் அருகில் இருக்கக் கண்டேன். நான் நோக்கிப் பார்க்கையில், எனக்கு முன்பாக கால்வாயின் அருகே, இரண்டு நீண்ட கொம்புகளுடன் செம்மறியாட்டுக் கடா ஒன்று நின்றது. அந்த இரண்டு கொம்புகளும் நீளமாக இருந்தன. அவற்றில் ஒன்று மற்றதைவிட நீளமாய் இருந்தது. நீளமாக இருந்த கொம்போ பிந்தியே வளர்ந்து வந்தது. அந்தச் செம்மறியாட்டுக் கடா நான் பார்த்துக்கொண்டிருக்கையில் மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளை நோக்கித் தாக்கியது. அதனை எதிர்த்துநிற்க எந்த மிருகத்தாலும் முடியவில்லை; அதன் வல்லமையிலிருந்து ஒருவராலும் தப்பமுடியவில்லை. அது தன் விருப்பம்போல செய்து, பெரிதாகியது.
அதைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. அதன் கண்களுக்கிடையில் கம்பீரமான ஒரு கொம்பு இருந்தது. அது நிலத்தில் கால்படாமல் முழு பூமியையும் கடந்து வந்தது. அது நான் முன்பு கால்வாயருகே பார்த்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடாவை நோக்கிவந்து, மிகுந்த சீற்றத்துடன் அதைத் தாக்கியது. செம்மறியாட்டுக் கடாவை வெள்ளாட்டுக்கடா சீற்றத்துடன் தாக்கி, முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் நொறுக்கிப்போட்டதை நான் கண்டேன். அச்செம்மறியாட்டுக் கடா எதிர்த்துநிற்க முடியாமல், வல்லமையிழந்து நின்றது. வெள்ளாட்டுக்கடா அதனை நிலத்தில் விழத்தள்ளி மிதித்தது. அதன் வல்லமையிலிருந்து செம்மறியாட்டுக் கடாவைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. அந்த வெள்ளாட்டுக்கடா முன்பைவிட பெரிதாயிற்று. ஆனால் அது வல்லமையில் உயர்ந்திருந்த வேளையில் அதன் கொம்பு உடைந்துவிட்டது. அந்த இடத்தில் வேறு நான்கு கம்பீரமான கொம்புகள் முளைத்து வானத்தின் நான்கு திசைகளை நோக்கி வளர்ந்தன.
அவற்றின் ஒன்றிலிருந்து இன்னொரு கொம்பு வந்தது. அது ஆரம்பத்தில் சிறிதாய் முளைத்து, பின் தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் அழகான நாட்டை நோக்கியும் வல்லமையுடன் வளர்ந்தது. இவ்வாறு அது வானசேனையை எட்டும்வரை வளர்ந்து, நட்சத்திரங்கள் சிலவற்றை பூமிக்கு விழத்தள்ளி, அவற்றை மிதித்துப்போட்டது. அது சேனையின் தலைவராகிய இறைவனைப்போல தானும் பெரியவனாயிருக்கும்படி, தன்னை உயர்த்தியது. அது அவரிடமிருந்து அன்றாட பலியையும் எடுத்துக்கொண்டது. அவரின் பரிசுத்த ஆலயம் தாழ்த்தப்பட்டது. கீழ்ப்படியாத கலகத்தின் நிமித்தம் பரிசுத்தவான்களின் சேனையும், அன்றாட பலியும் அந்தக் கொம்பிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவோ தான் செய்த எல்லாவற்றிலும் செழிப்படைந்தது. உண்மையோ நிலத்தில் தள்ளப்பட்டது.
அப்பொழுது பரிசுத்தவான் ஒருவர் பேசுவதை நான் கேட்டேன். வேறொரு பரிசுத்தவான் அவரிடம், “இந்த தரிசனம் நிறைவேற எவ்வளவு காலம் நீடிக்கும். அன்றாட பலி நிறுத்தப்படுதல், அழிவை உண்டாக்கும் கலகம் ஏற்படுதல், பரிசுத்த ஆலயம் ஒப்படைக்கப்படுதல், சேனைகாலால் மிதிக்கப்படுதல் ஆகியவற்றைப்பற்றிய தரிசனம் எப்போது நிறைவேறும் என்று கேட்டார்.”
அதற்கு அவர் என்னிடம், “இரண்டாயிரத்து முந்நூறு மாலையும் காலையும் செல்லும். அதன்பின்பு பரிசுத்த ஆலயம் திரும்பவும் பரிசுத்தமாக்கப்படும் எனச் சொன்னார்.”
தரிசனத்தின் விளக்கம்
தானியேலாகிய நான் இத்தரிசனத்தைக் கவனித்துப் பார்த்து, அதை விளங்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். அங்கே எனக்கு முன்பாக ஒருவர் நின்றார். அவர் ஒரு மனிதனைப்போல் இருந்தார். பின் ஊலாய் என்னும் கால்வாயின் மறுபக்கத்திலிருந்து, ஒரு மனித குரல், “காபிரியேலே, இந்தத் தரிசனத்தின் விளக்கத்தை இந்த மனிதனுக்குத் தெரியப்படுத்து எனச் சொல்லக்கேட்டேன்.”
எனவே அவர் நான் நின்ற இடத்தை நோக்கி நெருங்கி வந்தார். அப்போது நான் பயத்தினால் முகங்குப்புற கீழே விழுந்தேன். அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இத்தரிசனம் முடிவு காலத்தைப்பற்றியது என்பதை விளங்கிக்கொள் என்றார்.”
அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கையில் நான் கீழே விழுந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். அப்போது அவர் என்னைத் தொட்டு, தூக்கி, காலூன்றி நிற்கச்செய்தார்.
பின்பு அவர் என்னிடம், “பிற்காலத்தில் கடுங்கோபத்தின் நாட்களில் என்ன சம்பவிக்கப் போகிறதென்பதை நான் சொல்லப்போகிறேன். ஏனெனில் அந்தத் தரிசனம் நியமிக்கப்பட்ட முடிவு காலத்தைப்பற்றியது என்றார்.” நீ கண்ட இரண்டு கொம்புகளுடைய செம்மறியாட்டுக் கடா மேதிய, பெர்சியரின் அரசர்களைக் குறிக்கிறது. அந்த மயிர் நிறைந்த வெள்ளாட்டுக்கடா, முதல் கிரேக்க அரசனாகும். அதன் கண்களுக்கிடையில் இருந்த பெரிய கொம்பு முதலாவது அரசனாகும். முறிந்துபோன கொம்பு இருந்த இடத்தில் முளைத்த அந்த நான்கு கொம்புகளும், அவனுடைய நாட்டில் இருந்து எழும்பப்போகும் நான்கு அரசுகளாகும். ஆனால் அதே வல்லமை இவற்றிற்கு இராது.
அவர்களுடைய ஆட்சியின் பிற்பகுதியில் கலகக்காரர் முற்றிலும் கொடியவர்களாவார்கள். அப்போது, கொடூரமான ஒரு அரசன் தோன்றுவான். அவன் சூழ்ச்சியில் வல்லவனாயிருப்பான். அவன் மிகவும் வலிமையுடையவனாவான், ஆயினும் தனது சொந்த வல்லமையினாலல்ல. அவன் பிரமிக்கத்தக்க அழிவுகளைச்செய்து, தான் செய்பவற்றிலெல்லாம் வெற்றியடைவான். அவன் வலிமை வாய்ந்தவர்களையும், பரிசுத்த மக்களையும் அழிப்பான். இவ்வாறு அவன் வஞ்சனையை செழிக்கப்பண்ணி, தன்னை மிக உயர்ந்தவனாகக் கருதுவான். பலர் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவர்களைக் கொலைசெய்வான். அவன் இளவரசருக்கெல்லாம் இளவரசராய் இருப்பவருக்கு எதிர்த்து நிற்பான். ஆயினும் அவன் அழிக்கப்படுவான். ஆனால், மனித வல்லமையினால் அல்ல.
“உனக்குக் கொடுக்கப்பட்ட இரண்டாயிரத்து முந்நூறு மாலை, காலை தரிசனத்தின் விளக்கம் உண்மையானது. ஆயினும், இந்தத் தரிசனத்தை முத்திரையிடு. ஏனெனில் இது வெகுகாலத்திற்குப் பின் நடக்கப்போவதைப்பற்றியது எனச் சொன்னார்.”
அதன்பின் தானியேலாகிய நான் இளைப்படைந்து அநேக நாட்கள் நோயுற்றிருந்தேன். பின் நான் எழுந்து அரசனின் அலுவல்களைக் கவனிக்கப்போனேன். ஆனால் அந்தத் தரிசனத்தில் கண்டவற்றால் திகைப்படைந்திருந்தேன். அது விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.
தானியேலின் மன்றாட்டு
இது மேதியரின் சந்ததியான அகாஸ்வேருவின் மகன் தரியு, பாபிலோனியரின் அரசின்மேல் ஆளுநர் ஆக்கப்பட்ட வருடமாயிருந்தது. அந்த வருடத்திலே, தானியேலாகிய நான் வேதவசனங்களிலிருந்து, எருசலேமின் அழிவு எழுபது வருடங்கள் நீடிக்கும் என்பதை விளங்கிக்கொண்டேன். இதை யெகோவா இறைவாக்கினன் எரேமியாவுக்குக் கொடுத்த வார்த்தையிலிருந்து அறிந்துகொண்டேன். எனவே நான் உபவாசித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய யெகோவாவிடம் விண்ணப்பத்துடனும், வேண்டுதலுடனும் மன்றாடினேன்.
நான் என் இறைவனாகிய யெகோவாவிடத்தில் மன்றாடி, அறிக்கையிட்டதாவது:
“யெகோவாவே மகத்துவமும், பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற எல்லோருடனும் உமது உடன்படிக்கையைக் காத்துக்கொள்கிறவரே! நாங்களோ பாவம் செய்து அநியாயம் செய்தோம். நாங்கள் கொடியவர்களாயிருந்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகிப்போனோம். உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் தந்தையருடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்காதுபோனோம்.
“யெகோவாவே, நீர் நீதியுள்ளவர். இன்று நாங்கள் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். இன்று யூதாவின் மனிதரும், எருசலேமின் மக்களும், சமீபமும், தூரமுமான நாடெங்கிலுமுள்ள இஸ்ரயேலராகிய நாங்கள் எல்லோரும் வெட்கத்திற்குள்ளாகியிருக்கிறோம். நாங்கள் உமக்கு உண்மைத்துவமற்றவர்களாய் இருந்ததால், நீர் எங்களை நாடெங்கிலும் சிதறடித்தீர். யெகோவாவே நாங்கள் உமக்கு எதிராய் பாவம் செய்ததினால் நாங்களும், எங்கள் அரசர்களும், இளவரசர்களும், தந்தையர்களும் வெட்கத்துக்குள்ளானோம். நாங்கள் அவருக்கு எதிராய் கலகம் பண்ணியிருந்துங்கூட, எங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கமுடையவராகவும், மன்னிக்கிறவராகவும் இருக்கிறார். நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் இல்லை; அவர் தனது அடியவராகிய இறைவாக்கினர்மூலம் சொன்ன நீதிச்சட்டங்களைக் கைக்கொள்ளவும் இல்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது சட்டத்தை மீறினார்கள். உமக்குக் கீழ்ப்படிய மறுத்து வழிவிலகிப்போனார்கள்.
“ஆகவே நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தினால், இறைவனின் அடியவனாகிய மோசே தனது சட்ட புத்தகத்தில் எழுதியுள்ளபடி சாபமும், ஆணையிட்டுக்கூறிய நியாயத்தீர்ப்பும் எங்கள்மேல் வந்தன. எங்கள்மேல் பேரழிவைக் கொண்டுவந்து, எங்களுக்கும் எங்கள் ஆளுநர்களுக்கும் விரோதமாக பேசப்பட்ட வார்த்தைகளை நீர் நிறைவேற்றிவிட்டீர். எருசலேமுக்குச் செய்யப்பட்டதுபோல, முழு வானத்தின் கீழும் எந்த இடத்திலும் ஒருபோதும் செய்யப்படவில்லை. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதுபோலவே, இந்தப் பேரழிவு எங்கள்மேல் வந்தது. ஆயினும் நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி உமது உண்மையைக் கவனித்து, எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவைத் தேடவில்லை. யெகோவா எங்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணத் தயங்கவில்லை. ஏனெனில் இறைவனாகிய எங்கள் யெகோவா தாம் செய்யும் எல்லாவற்றிலும் நியாயமுள்ளவர். நாங்களோ அவருக்குக் கீழ்ப்படியாமலேயே இருக்கிறோம்.
“இறைவனாகிய எங்கள் யெகோவாவே, நீர் உம்முடைய மக்களை எகிப்திலிருந்து வல்லமைமிக்க கரத்தினால் வெளியே கொண்டுவந்தீரே. அதனால் இந்நாள்வரைக்கும் உம்முடைய பெயரை நிலைபெறச் செய்தீரே. இருந்தும் நாங்களோ பாவம் செய்துவிட்டோம். அநியாயம் செய்துவிட்டோம். யெகோவாவே, உமது நேர்மையான எல்லா செயல்களுக்கேற்ப உமது பட்டணமும், உமது பரிசுத்த மலையுமான எருசலேமைவிட்டு உமது கோபத்தையும், கடுங்கோபத்தையும் விலக்கிவிடும். எங்கள் பாவங்களும், எங்கள் தந்தையர் செய்த அநியாயங்களும் எருசலேமையும், உமது மக்களையும் எங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாவருக்கும் முன்பாக ஒரு கேலிப்பொருளாக்கியது.
“இப்பொழுதும் எங்கள் இறைவனே, உமது அடியவனின் மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் கேளும். யெகோவாவே! பாழாய்க் கிடக்கிற உமது ஆலயத்தை உமது பெயரின் நிமித்தம் தயவுடன் பாரும். இறைவனே! உமது செவியைச் சாய்த்துக்கேளும். உமது கண்களைத் திறந்து பாழாய்க்கிடக்கும் உமது பெயர் தரிப்பிக்கப்பட்ட பட்டணத்தின் அழிவைப் பாரும். இந்த மன்றாட்டை எங்கள் நீதியின் பொருட்டு நாங்கள் கேட்காமல், உமது பெரிய இரக்கத்தை முன்வைத்தே கேட்கிறோம். யெகோவாவே, கேளும்; யெகோவாவே, மன்னியும். யெகோவாவே கேட்டுச் செயலாற்றும். என் இறைவனே, உமது நிமித்தம் தாமதிக்காதேயும். ஏனெனில் உமது பட்டணத்திற்கும், உமது மக்களுக்கும் உமது பெயர் இடப்பட்டுள்ளது என்றேன்.”
எழுபது “ஏழுகள்”
இவ்வாறு நான் எனது பாவங்களையும், எங்கள் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் இறைவனாகிய எனது யெகோவாவின் பரிசுத்த மலைக்காகவும் மன்றாடிக்கொண்டிருந்தேன். இவ்வாறு நான் மன்றாடிக்கொண்டிருக்கையில், முன்பு தரிசனத்தில் நான் கண்ட காபிரியேல் என்பவர், மாலைப்பலி செலுத்தும் வேளையில் விரைவாகப் பறந்து என்னிடத்தில் வந்தார். அவர் வந்து அறிவுறுத்தி எனக்குச் சொன்னதாவது: “தானியேலே உனக்கு நுண்ணறிவையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் தரவே நான் இப்பொழுது வந்திருக்கிறேன். நீ மன்றாடத் தொடங்கியவுடனேயே பதில் ஒன்று கொடுக்கப்பட்டது. அதை உனக்குச் சொல்லவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் நீ உயர்வாக மதிக்கப்பட்டிருக்கிறாய். ஆதலால் செய்தியைக் கவனமாய்க் கேட்டு, தரிசனத்தின் விளக்கத்தைத் தெரிந்துகொள்.
“உன் மக்களின் மீறுதல் முடிவுக்கு வரவும், உங்கள் பரிசுத்த நகரத்தின் மீறுதல் முடிவுக்கு வரவும், பாவம் நிறுத்தப்படவும், கொடுமை நிவிர்த்தி செய்யப்படவும், நித்தியமான நியாயம் கொண்டுவரப்படவும், தரிசனமும் இறைவாக்கும் முத்திரையிடப்படவும், மகா பரிசுத்த இடம் அபிஷேகம் செய்யப்படவும் நியமிக்கப்பட்ட காலம் எழுபது ‘ஏழுகள்’ ஆகும்.
“நீ இதை அறிந்து விளங்கிக்கொள். எருசலேம் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, அபிஷேகம் செய்யப்பட்டவரான ஆளுநர் வரும்வரைக்கும் ஏழு ‘ஏழுகளும்’ அறுபத்திரண்டு ‘ஏழுகளும்’ செல்லும். அது வீதிகளும், அலங்கங்களும் உடையதாய் கட்டப்படும். ஆயினும் துன்ப காலங்களிலேயே அது கட்டப்படும். அறுபத்திரண்டு ‘ஏழுகளின்’ பின் அபிஷேகம் செய்யப்பட்டவர் நீக்கப்பட்டு ஒன்றுமில்லாதிருப்பார். வரப்போகும் ஆளுநனின் மக்கள் பட்டணத்தையும், பரிசுத்த ஆலயத்தையும் அழித்துப்போடுவார்கள். முடிவு வெள்ளம்போல் வரும். முடிவுவரை யுத்தம் தொடரும். அழிவுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. அவன் ஒரு ‘ஏழுக்கு’ உடன்படிக்கை ஒன்றை பலருடன் உறுதிப்படுத்துவான். ஆயினும் அந்த ‘ஏழின்’ மத்தியில் பலிக்கும், காணிக்கைக்கும் ஒரு முடிவை உண்டுபண்ணுவான். அழிவைச் செய்கிறவன், நியமிக்கப்பட்ட முடிவு அவன்மேல் வரும்வரை ஆலயத்தின் ஒரு முனையின்மேல் அழிவைக் கொண்டுவரும் அருவருப்பை வைப்பான் என்றார்.”
மனிதனைப்பற்றிய தரிசனம்
பெர்சியாவின் அரசன் கோரேஸின் மூன்றாவது வருடத்திலே, “பெல்தெஷாத்சார்” என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு வெளிப்படுத்துதல் கொடுக்கப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்த செய்தியைப்பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது.
தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கங்கொண்டாடினேன். மூன்று வாரங்கள் முடியும் நாள்வரை நான் சிறந்த உணவைச் சாப்பிடவில்லை. இறைச்சியையோ, திராட்சை இரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை.
முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய ஆறான இதெக்கேல் ஆற்றின் கரையில் நான் நின்றேன். நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை உடுத்தி, இடுப்பிலே ஊப்பாசின் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட இடைக்கச்சையைக் கட்டிய ஒருவர் நின்றார். அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.
தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன்.
உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது. பின் அவர் என்னிடம், “மிக மதிப்பிற்குரிய தானியேலே, நான் இப்பொழுது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.” இதை அவர் சொன்னபோது நான், நடுக்கத்தோடு எழுந்து நின்றேன்.
அப்பொழுது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்படவேண்டாம். நீ விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தேடவும், அதை அடையும்படி உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்தே, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். ஆனால் பெர்சியா அரசின் இளவரசன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எனக்கு உதவிசெய்ய வந்தான். இப்பொழுது உனது மக்களுக்கு வருங்காலத்தில் நிகழப்போவதை விளங்கப்பண்ணவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே என்றான்.”
அவன் என்னிடம் சொல்லும்போது, நான் பேச முடியாதவனாய் முகங்குப்புற விழுந்து வணங்கினேன். உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்பொழுது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்குமுன் நின்றவரைப் பார்த்து, “ஐயா, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, எதுவும் செய்யமுடியாதவனாய் இருக்கிறேன். ஐயா, உமது அடியவனாகிய நான் உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பெலன் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை என்றேன்.”
திரும்பவும் மனிதனைப்போல் காணப்பட்ட அவர் என்னைத் தொட்டு எனக்குப் பெலன்தந்தார். “மிக மதிப்பிற்குரிய மனிதனே, பயப்படாதே. உன்னுடன் சமாதானம் இருப்பதாக. இப்பொழுது திடன்கொண்டு தைரியமாயிரு என்றார்.”
என்னுடன் அவர் அப்படிப் பேசியபோது, நான் பெலன்கொண்டு, “பேசும் ஐயா, நீர் எனக்கு பெலனைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன்.
தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனுக்கு எதிராகத் திரும்பவும் சண்டைக்குப் போகப்போகிறேன். நான் போகிறபோது கிரேக்க இளவரசனும் என்னை எதிர்த்து வருவான். ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசன் மிகாயேலைத் தவிர அந்த இளவரசர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவிசெய்யவில்லை.
நான் அவனுக்கு ஆதரவாய் இருக்கவும், அவனுக்கு உதவிசெய்யவும் உறுதிகொண்டேன். மேதியனான தரியுவின் முதலாம் வருடத்திலே இப்படிச் செய்யத் தீர்மானித்தேன்.
எதிர்கால அரசர்கள்
“இப்பொழுதும் நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். அதாவது மேலும் மூன்று அரசர்கள் பெர்சியாவில் தோன்றுவார்கள். பின்பு நான்காவது அரசனும் தோன்றுவான். அவன் எல்லோரையும்விட செல்வந்தனாய் இருப்பான். அரசன் தன் செல்வத்தினால் வலிமைபெற்றபோது, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லோரையும் தூண்டிவிடுவான். பின்பு ஒரு வல்லமையுள்ள அரசன் எழும்புவான், அவன் அதிக வல்லமையுடன் அரசாண்டு, தான் விரும்பியவற்றைச் செய்வான். ஆனால் அவனுடைய வல்லமை உயர்ந்திருந்தபோது அவனுடைய பேரரசு உடைக்கப்பட்டு, வானத்தின் நான்கு திசைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். அவனுடைய அரசு பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டதால், அது அவனுடைய சந்ததிகளுக்குக் கொடுக்கப்படமாட்டாது. முன்பு அந்த அரசிற்கு இருந்த வல்லமை பின்பு அதற்கு இருக்கமாட்டாது.
“பின்பு தென்திசை அரசனோ, வலிமைமிக்கவனாவான். ஆனால் அவனுடைய தளபதிகளில் ஒருவன் அவனைவிடவும் வலிமைமிக்கவனாகி, தனது சொந்த அரசை மிகுந்த வல்லமையுடன் ஆளுவான். சில வருடங்களில் தென்திசை அரசனும் வடதிசை அரசனும் நட்புறவு கொள்வார்கள். அதன்பின் தென்திசை அரசனின் மகள் வடதிசை அரசனுக்கு நட்புறவு உடன்படிக்கையை உறுதிப்படுத்த மனைவியாகக் கொடுக்கப்படுவாள். ஆனால் சதித்திட்டம் நீடிக்காது. அவனும் அவனுடைய வல்லமையும் அழிக்கப்படும். அந்நாட்களில் அவளும், அவளுடன்கூட அவளது அரச பாதுகாவலரும், அவளது தந்தையும், அவளுக்கு உதவிசெய்தவனும் அழிக்கப்படுவார்கள்.
“அவளுடைய குடும்ப வழியிலிருந்து வந்த ஒருவன், அவளுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும்படி எழும்புவான். அவன் வடதிசை அரசனுடைய படையைத் தாக்கி, அவனுடைய கோட்டைக்குள் புகுவான். அவன் அவர்களுக்கு எதிராய் சண்டைசெய்து வெற்றிபெறுவான். அத்துடன் அவன் அவர்களின் தெய்வங்களையும், உலோக உருவச்சிலைகளையும், அவர்களுடைய விலைமதிப்புள்ள வெள்ளிப் பொருட்களையும், தங்கப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு எகிப்திற்குப் போவான். சில வருடங்களுக்கு வடதிசை அரசனுடன் யுத்தம் செய்யாமல் விட்டுவிடுவான். பின்பு வடதிசை அரசன், தென்திசை அரசனின் பிரதேசத்தின்மேல் படையெடுப்பான். ஆயினும் அவன் பின்பு தனது நாட்டுக்குத் திரும்புவான். வடதிசை அரசனின் மகன்கள் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்து பெரியதொரு இராணுவப்படையைத் திரட்டுவார்கள். அந்தப் படை தடுக்க முடியாத பெருவெள்ளம்போல் அடித்துச்சென்று, மிக வேகமாகத் தென்திசை அரசனின் கோட்டைவரை சென்று சண்டையிடும்.
“அப்பொழுது தென்திசை அரசன் மிகுந்த கோபத்துடன், தனது படையுடன் அணிவகுத்துச்சென்று, வடதிசை அரசனுக்கெதிராகப் போரிடுவான். வடதிசை அரசன் பெரிய படையைத் திரட்டுவான். ஆயினும் அது தோல்வியே அடையும். வடதிசை அரசனின் படை, சிறைப்பிடித்துச் செல்லப்படுவதால், தென்திசை அரசன் பெருமையினால் நிறைந்து, ஆயிரக்கணக்கானோரைக் கொலைசெய்வான். ஆயினும் அவன் வெற்றியுடையவனாய் நிலைத்திருக்கமாட்டான். வடதிசை அரசன் முன்பு இருந்த படையைவிட பெரியதொரு படையைத் திரும்பவும் திரட்டி, சில வருடங்களுக்குப் பின்பு முற்றிலும் ஆயுதம் தரித்த ஒரு பெரிய படையுடன் முன்னேறிச் செல்வான்.
“அந்தக் காலங்களில் அநேகர் தென்திசை அரசனுக்கெதிராக எழும்புவார்கள். இந்தத் தரிசனம் நிறைவேறும்படியாக, உன் சொந்த மக்களுக்குள்ளேயும் வன்முறையாளர்கள் கலகம்செய்து அவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். ஆயினும் அவர்கள் வெற்றியடையமாட்டார்கள். பின்பு வடதிசை அரசன் வந்து முற்றுகை அரண்களைக் கட்டி, அரணான ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவான். தென்திசை படைகள் எதிர்க்க வல்லமையற்றதாயிருக்கும். அவர்களில் மிகச்சிறந்தவர்களும் எதிர்த்துநிற்க பெலனற்றுப்போவார்கள். படையெடுத்து வரும் வடதிசை அரசன் தான் விரும்பியபடி செய்வான். அவனை எதிர்த்துநிற்க ஒருவனாலும் முடியாது. அவன் அழகான இஸ்ரயேல் நாட்டிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அதை அழிக்கும்படியான வல்லமையைப் பெறுவான். அவன் முழு அரசின் வல்லமையோடும் வரத்தீர்மானித்து, தென்திசை அரசுடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தைச் செய்வான். ஆனால் அவன் தென்திசை அரசைக் கைப்பற்றும்படி, தனது மகளை அவனுக்குக் கொடுப்பான். ஆனால் அவனுடைய திட்டங்கள் வெற்றியளிக்கவோ, அவனுக்கு உதவவோ மாட்டாது. பின்பு அவன் தனது கவனத்தைக் கரையோர நாடுகளின்மீது திருப்பி, அவற்றுள் பலவற்றை பிடித்துக்கொள்வான். ஆனால் ஒரு படைத்தலைவன் அவனுடைய அகங்காரத்திற்கு ஒரு முடிவு உண்டாக்கி, அவனுடைய அகங்காரத்தை அவன் மேலேயே திருப்பிவிடுவான். இவற்றின்பின் அவன் தனது சொந்த நாட்டின் கோட்டைகளின் பக்கமாய்த் திரும்பிவருவான். ஆயினும் தடுமாறி விழுந்து, காணப்படாமல் போவான்.
“அவனுக்குப் பின்வரும் அரசன் தனது அரசின் மேன்மையைத் தொடர்ந்து காப்பாற்றுவதற்காக, வரி வசூலிக்கும் ஒருவனை அனுப்புவான். ஆயினும் அவன் ஒருசில வருடங்களுக்குள் கோபத்தினாலோ, யுத்தத்தினாலோ அல்லாமல் அழிக்கப்படுவான்.
“அவனுக்குப்பின் வெறுப்புக்குரியவனும், அரச மேன்மை கொடுக்கப்படாத ஒருவனும் அரசாட்சிக்கு வருவான். அந்த அரசின் மக்கள் தாம் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவன் அதன்மீது படையெடுப்பான். அவன் தந்திரமாக அரசாட்சியைக் கைப்பற்றுவான். பின்பு திரண்டுவரும் பல படைகள் அவனால் சிதறடிக்கப்பட்டு அழிக்கப்படும். அவனை எதிர்த்த உடன்படிக்கையின் தலைவனும் அழிக்கப்படுவான். அவன் மற்ற ஜனங்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின், தந்திரமாய் நடந்து சில மக்களுடன் அதிகாரத்துக்கு வருவான். செல்வந்த மாநிலங்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது, அவன் அவற்றின்மேல் படையெடுத்து தன் தந்தையர்களும், முற்பிதாக்களும் முன் ஒருபோதும் செய்யாததை இவன் செய்வான். கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும், செல்வங்களையும் எடுத்துத் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். அவன் கோட்டைகளைக் கவிழ்க்க முயற்சிப்பான். ஆனாலும் இந்த நிலை ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும்.
“அவன் ஒரு பெரும்படையுடன் பெலத்தாலும், மன உறுதியாலும் தூண்டப்பட்டு தென்திசை அரசனுக்கெதிராகப் போவான். தென்திசை அரசனும் பெரிதானதும், வலிமையுடையதுமான படையுடன் எதிர்த்துப் போரிடுவான். ஆனாலும் தென்திசை அரசனுக்கு எதிராய் திட்டமிடப்பட்டிருக்கும் பல சதிகளின் நிமித்தம் அவனால் எதிர்த்துநிற்க முடியாமலிருக்கும். அரசனுடைய பங்கீட்டு உதவியிலிருந்து சாப்பிட்டவர்களே அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனுடைய படைகள் முறியடிக்கப்பட்டு போகும். அநேகம்பேர் போர்முனையில் அழிந்துபோவார்கள். அப்பொழுது அந்த இரண்டு அரசர்களும், தங்கள் இதயங்களில் தீமைசெய்யும் எண்ணமுள்ளவர்களாய் ஒரே மேஜையில் இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பொய் பேசுவார்கள். ஆனால் அவர்களோ வெற்றியடையமாட்டார்கள். ஏனெனில் முடிவு குறிப்பிட்ட காலத்தில்தான் வரும். வடதிசை அரசன் பெரும் செல்வங்களுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வான். ஆனால் அவனுடைய இருதயம் பரிசுத்த ஆலயத்திற்கு விரோதமாய் இருக்கும். அதற்கு விரோதமான நடவடிக்கை எடுத்தபின்பே தன் நாட்டிற்குத் திரும்பிப் போவான்.
“நியமிக்கப்பட்ட காலத்தில் அவன் திரும்பவும் தென்திசையின்மேல் படையெடுப்பான். ஆனால் இந்தத் தடவை ஏற்படும் முடிவு முந்திய தடவையைப் போலல்லாது வித்தியாசமானதாய் இருக்கும். மேற்குக் கரையோர நாடுகளின் கப்பல்கள் அவனை எதிர்க்கும். அதனால் அவன் சோர்வடைந்து தன் நாட்டிற்குத் திரும்புவான். அப்பொழுது அவன் திரும்பி பரிசுத்த ஆலயத்திற்கு எதிராகத் தன் கடுங்கோபத்தை வெளிப்படுத்துவான். அவன் பரிசுத்த உடன்படிக்கையை கைவிடுகிறவர்களுக்குத் தயவு காட்டுவான்.
“அவனுடைய ஆயுதப்படைகள் ஆலயப் பகுதிகளை அசுத்தமாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள். அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடங்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள்.
“ஞானமுள்ளவர்கள், பலருக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்கள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் வாளினால் விழுவார்கள், எரிக்கப்படுவார்கள், சிறைப்பிடிக்கப்படுவார்கள், கொள்ளையிடப்படுவார்கள். அவர்கள் விழும்போது, அவர்களுக்கு ஒரு சிறு உதவியே கிடைக்கும். அவர்களோடு சேர்ந்துகொள்கின்ற பலர் உண்மைத்தனம் இல்லாதவர்களாய் இருப்பார்கள். ஞானமுள்ளவர்களில் சிலர் இடறுவார்கள். அதனால் அவர்கள் முடிவு காலம்வரை புடமிடப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப் படுவார்கள். ஏனெனில் நியமிக்கப்பட்ட காலத்தின் முடிவு இனிமேல்தான் வர இருக்கிறது.
தன்னை உயர்த்திக் கொள்ளும் ராஜா
“அரசன் தான் விரும்பியபடியெல்லாம் செய்வான். அவன் எல்லா தெய்வங்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி மேன்மைப்படுத்துவான். தெய்வங்களுக்கெல்லாம் இறைவனானவருக்கு எதிராகக் கேள்விப்படாதவற்றையெல்லாம் சொல்வான். அந்த கோபத்தின் காலம் நிறைவேறும் வரைக்கும், அவன் வெற்றிபெறுவான். ஏனெனில் தீர்மானிக்கப்பட்டது நிறைவேற வேண்டும். அவன் தன் தந்தையர்களின் தெய்வங்களுக்கோ, பெண்களால் விரும்பப்பட்ட தெய்வங்களுக்கோ எதுவித மதிப்பும் காண்பிக்கமாட்டான். அவன் வேறு எந்த தெய்வத்திற்கோ மதிப்புக் கொடுக்கமாட்டான். அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னையே உயர்த்துவான். அவன் அத்தெய்வங்களுக்குப் பதிலாக கோட்டைகளின் தெய்வத்தைக் கனம்பண்ணுவான். அவன் தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்திற்கு தங்கத்தினாலும், வெள்ளியினாலும், மாணிக்கக் கற்களினாலும், விலைமதிப்புள்ள அன்பளிப்புகளினாலும் கனம்பண்ணுவான். அவன் அந்நிய தெய்வங்களின் உதவியுடன் வலிமைமிக்க கோட்டைகளைத் தாக்குவான். தன்னை ஏற்றுக்கொள்கிறவர்களை மிகவும் கனம்பண்ணுவான். அவர்களை அநேக மக்களுக்கு மேலாக ஆளுநர்களாக நியமித்து, அவர்களுக்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுப்பான்.
“முடிவு காலத்தின்போது தென்திசை அரசன் அவனுடன் போர் செய்ய வருவான். வடதிசை அரசனோ அநேகம் தேர்களோடும், குதிரைப்படை, கப்பல் படையுடனும் புயல்போல அவனுக்கெதிராகப் போவான். அவன் அநேக நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்று, அவர்களை வெள்ளம்போல் அள்ளிக்கொண்டு போவான். அவன் அழகிய இஸ்ரயேல் நாட்டின்மேலும் படையெடுத்துச் செல்வான். அநேக நாடுகள் அவன்முன் விழ்ந்துபோகும். ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோனின் தலைவர்களும் அவன் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவன் அநேக நாடுகளுக்குமேல் தன் வலிமையை விரிவுபடுத்துவான். எகிப்தும் தப்பிப்போகாது. தங்கமும், வெள்ளியும், எல்லா எகிப்தின் செல்வங்களும் அடங்கிய எகிப்தின் திரவியக் களஞ்சியங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவான். அதோடு லிபியர்களையும், எத்தியோப்பியர்களையும் தன் ஆட்சிக்குட்படுத்துவான். ஆனால் கிழக்கிலும், வடக்கிலுமிருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும். அவன் அநேகரை அழித்து ஒழிக்கும்படி கடுங்கோபத்துடன் அங்கு போகப் புறப்படுவான். பின்பு அவன் கடல்களுக்கும் அழகான பரிசுத்த மலைகளுக்கும் இடையில் தங்கி, தனது அரச கூடாரங்களை அமைப்பான். ஆனாலும் அவனுக்கு முடிவுவரும், அவனுக்கு ஒருவரும் உதவி செய்யமாட்டார்கள்.
முடிவுகாலம்
“அக்காலத்தில் உன் மக்களைப் பாதுகாக்கிற பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எழும்புவான். எந்தவொரு நாடுகளும் தோன்றியதிலிருந்து அதுவரை ஒருபோதும் நிகழ்ந்திராத துன்பகாலம் ஒன்று வரும். ஆனால் அந்தக் காலத்திலே புத்தகத்தில் தங்களுடைய பெயர்கள் எழுதப்பட்டவர்களாகக் காணப்படுகிற உனது மக்கள் விடுவிக்கப்படுவார்கள். பூமியில் புழுதியில் புதைக்கப்பட்டிருக்கிற மக்கள் கூட்டங்கள் எழுந்திருப்பார்கள். சிலர் நித்திய வாழ்வுக்கும், மற்றவர்கள் நித்திய வெட்கத்திற்கும், இழிவுக்கும் எழுந்திருப்பார்கள். ஞானமுள்ளவர்கள் வானங்களின் பிரகாசத்தைப்போலவும், பலரை நேர்மைக்கு வழிநடத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றும் பிரகாசிப்பார்கள். ஆனால் தானியேலே, நீயோ புத்தகச்சுருளின் வார்த்தைகளை முடிவு காலம்வரைக்கும் மூடி முத்திரையிட்டு வை. பலர் அங்குமிங்கும் ஓடித் தேடுவார்கள். அறிவோ வளரும் என்றார்.”
அப்பொழுது தானியேலாகிய நான் பார்க்கையில், ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும், அக்கரையில் ஒருவனுமாக இன்னும் இருவர் எனக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். அவர்களில் ஒருவன் மென்பட்டு உடை உடுத்தி, ஆற்றின் தண்ணீரின்மேல் நின்ற மனிதனிடம், “இந்தத் திகைப்பூட்டும் சம்பவங்கள் நிறைவேற எவ்வளவு காலம் எடுக்கும் என்று கேட்டான்?”
அப்பொழுது மென்பட்டு உடை உடுத்தி ஆற்றின் தண்ணீரின்மேல் நின்ற மனிதன் தன் வலதுகையையும், இடதுகையையும் வானத்தை நோக்கி உயர்த்தி, என்றென்றும் வாழ்கிறவர் மேல் ஆணையிட்டு, “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும். கடைசியாக பரிசுத்த மக்களின் வல்லமை முறியடிக்கப்படுவது முடிவுக்கு வரும்போது இவை முழுவதும் நிறைவேறும் என்று சொல்லக்கேட்டேன்.”
நான் கேட்டேன்; ஆனால் எனக்கோ அது விளங்கவில்லை. எனவே நான் அவரிடம், “ஐயா, இவை எல்லாவற்றினதும் முடிவு என்னவாகும் என்று கேட்டேன்?”
அப்பொழுது அவர், “தானியேலே, உன் வழியில் போ; ஏனெனில், கடைசிக் காலம் வரும்வரைக்கும் இந்த வார்த்தைகள் மூடி முத்திரையிடப் பட்டிருக்கின்றன என எனக்குப் பதிலளித்தார். அநேகர் தூய்மையாக்கப்பட்டு, கறையற்றவர்களாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவார்கள். ஆயினும் கொடுமையானவர்கள் தொடர்ந்து கொடுமையானவர்களாகவே இருப்பார்கள். கொடுமையானவர்களில் யாரும், இவற்றை விளங்கிக்கொள்ளமாட்டார்கள். ஞானமுள்ளவர்களோ, விளங்கிக்கொள்வார்கள்.
“அன்றாட பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு வைக்கப்பட்டது முதல் 1,290 நாட்கள் செல்லும். இவ்வாறு 1,335 நாள்வரை காத்திருந்து அதன் முடிவைக் காண்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
“நீயோ முடிவு வரும்வரை உன் வழியே போ; நீ இளைப்பாறும் நாட்களின் முடிவில், உனக்கென நியமிக்கப்பட்டிருக்கும் உரிமைச்சொத்தை அடைவதற்கு நீ எழுந்திருப்பாய் என்றார்.”