- Biblica® Open Indian Tamil Contemporary Version
கொலோசேயர்
பவுல் கொலோசேயருக்கு எழுதின கடிதம்
கொலோசேயர்
கொலோ.
பவுல் கொலோசேயருக்கு எழுதின கடிதம்
இறைவனுடைய சித்தத்தின்படி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகிய பவுலும், நமது சகோதரன் தீமோத்தேயுவும்,
கொலோசே பட்டணத்திலே கிறிஸ்துவில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதலும் மன்றாட்டும்
உங்களுக்காக நாங்கள் மன்றாடும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் உங்களுக்கிருக்கிற அன்பைக்குறித்தும், நாங்கள் கேள்விப்பட்டோம். பரலோகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கிற நன்மைகளின் எதிர்பார்ப்பிலிருந்தே, இந்த விசுவாசமும் அன்பும் ஊற்றாகப் பொங்கி வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைக்குறித்து, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் மூலமாய் நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அந்த நற்செய்தி உங்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் நற்செய்தியைக் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட அந்த நாளிலிருந்து, உங்களிடையே அது கனிகொடுத்து வளர்ச்சியடைந்தது. அதுபோலவே, இந்த நற்செய்தி உலகம் முழுவதும் கனிகொடுத்து வளர்ச்சியடைகிறது. இந்த நற்செய்தியை எங்களுக்கு அன்பான உடன் ஊழியனும், கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழிக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பெற்றிருக்கும் அன்பைக்குறித்தும் அவன் எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
எனவே உங்களைக்குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்தவில்லை. நீங்கள் ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் விளக்கத்தையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவினாலே நிரப்பப்பட வேண்டுமென்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறோம். நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்றும், எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றும், எல்லா நல்ல வேலைகளிலும் கனிகொடுக்க வேண்டுமென்றும் நாங்கள் இப்படி மன்றாடுகிறோம். இறைவனைப்பற்றிய அறிவில் நீங்கள் வளரவேண்டும் என்றும், இறைவனுடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும், எல்லா வல்லமையினாலும் நீங்கள் பெலப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம். அப்பொழுது நீங்கள் மிகுந்த சகிப்புத்தன்மை உடையவர்களும், பொறுமையுடையவர்களுமாய் இருந்து, பிதாவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவீர்கள். அவரே ஒளியின் அரசில் இறைவனுடைய மக்களுக்குரிய உரிமையில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதியுடையவர்களாக்கினார். ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு.
கிறிஸ்து முதன்மையானவர்
கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன. இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது. இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையாயிருக்கிறார். இவரே அதன் ஆரம்பமும் இறந்தவர்களிடையே இருந்து முதலாவதாய் உயிருடன் எழுந்தவரும் ஆவார். இதனால் எல்லாவற்றிலும் இவருக்கே முதன்மை இருக்கிறது. இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார்.
முன்பு நீங்கள் இறைவனிடமிருந்து அந்நியராகயிருந்தீர்கள். உங்கள் தீமையான நடத்தையின் காரணமாக உங்கள் மனதில் அவருக்குப் பகைவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார். நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு விலகாமல், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் தொடர்ந்து நிலைத்திருங்கள். அந்த நற்செய்தி வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பவுலாகிய நான் இந்த நற்செய்தியை அறிவிக்கும் ஊழியனாகியிருக்கிறேன்.
திருச்சபைக்குப் பவுலின் பணி
இப்பொழுது உங்களுக்காக நான் பட்ட துன்பங்களைக்குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எனவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்கான அவருடைய துன்பங்களில், நானும் பங்கு பெறும்படி, எனது மாம்சத்திலும் வேதனைகளை அனுபவிக்கிறேன். உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையை முழுமையாக அறிவிக்கும்படிக்கு, இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பினாலே நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன். அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம்.
ஒவ்வொருவரையும் கிறிஸ்துவில் முழுமை பெற்றவர்களாக நிறுத்தும்படிக்கு, நாங்கள் எல்லோருக்கும் கிறிஸ்துவை அறிவித்து, எல்லா ஞானத்தோடும் புத்தி சொல்லி போதித்து வருகிறோம். இதற்காகவே, நான் எனக்குள் செயல்படுகிற அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடனும் போராடிப் பிரயாசப்படுகிறேன்.
உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே. ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கிறிஸ்துவின் மூலமாக வாழ்வு
எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள்.
தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார். நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது. திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார்.
நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார். நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார். அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.
மனித விதிகளிலிருந்து சுதந்திரம்
எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும். இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது. பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது.
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்? “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!” இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது.
பரிசுத்த வாழ்வுக்கு நிபந்தனைகள்
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறபடியால், பரலோக காரியங்களிலேயே நாட்டம் உடையவர்களாயிருங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். பூமிக்குரிய காரியங்களிலல்ல, பரலோக காரியங்களில் உங்கள் மனதைச் செலுத்துங்கள். ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது. உங்கள் வாழ்வாய் இருக்கிற கிறிஸ்து தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள்.
ஆகவே பூமிக்குரிய இயல்புக்குச் சொந்தமானவைகளான முறைகேடான பாலுறவுகள், அசுத்தமான பழக்கவழக்கங்கள், காமவேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடுகளாகிய பேராசை ஆகிய எல்லாவற்றையும் சாகடித்துவிடுங்கள். இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது. முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்வில், இவ்விதமான வழிகளில் நடப்பதே உங்கள் வழக்கமாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை உங்களைவிட்டு அகற்றிவிடவேண்டும்: கோபம், சினம், கேடுசெய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகியவற்றுடன், உங்கள் உதடுகளிலிருந்து தீய வார்த்தைகளையும் விலக்கிவிட வேண்டும். நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். நீங்கள் புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். அந்த சுபாவம் படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவில் புதிதாக்கப்படுகிறது. இந்தப் புதிதாக்கப்பட்ட சுபாவத்தைப் பொறுத்தவரையில், கிரேக்கன், யூதன் என்று வித்தியாசம் இல்லை. விருத்தசேதனம் பெற்றவன், விருத்தசேதனம் பெறாதவன் என்றோ; அந்நியன், பண்பாடற்றவன் என்றோ; அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ வித்தியாசம் இல்லை. கிறிஸ்துவே எல்லாமாய் இருக்கிறார். அவர் இவர்கள் எல்லோரிலும் இருக்கிறார்.
ஆகவே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அன்பு காட்டப்பட்டவர்களுமாய் இருக்கிற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை உடுத்திக்கொள்ளுங்கள். அதுவே அவை எல்லாவற்றையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் கட்டி வைத்துக்கொள்கிறது.
கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி, சொல்லின் மூலமோ, செயலின் மூலமோ நீங்கள் எதைச் செய்தாலும், கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்யுங்கள். அவர்மூலம் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்தியே அவைகளைச் செய்யுங்கள்.
குடும்பத்திற்கான ஒழுங்குவிதிகள்
மனைவிகளே, உங்கள் கணவருக்குப் பணிந்து நடவுங்கள். இதுவே கர்த்தரில் உங்களுக்கு ஏற்ற நடத்தையாயிருக்கிறது.
கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள்.
பிள்ளைகளே, எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது.
தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்துபோவார்கள்.
அடிமைகளே, உங்கள் பூமிக்குரிய எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்; அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும், அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல, கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதருக்குச் செய்வதாக அல்ல, கர்த்தருக்குச் செய்வதாக முழு இருதயத்தோடும் செய்யுங்கள். உங்களுக்கான வெகுமதியாக உரிமைச்சொத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்று அறிவீர்களே. கிறிஸ்துவாகிய கர்த்தருக்கே நீங்கள் ஊழியம் செய்கிறீர்கள். தவறுசெய்கிற யாரும் தான் செய்கிற தவறுக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்வான். பாரபட்சம் காட்டப்படவே மாட்டாது.
எஜமான்களே, உங்கள் அடிமைகளுக்கு சரியானதையும் நியாயமானதையும் கொடுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கிறாரென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
அறிவுரைகள்
விழிப்புள்ளவர்களாயும் நன்றி உள்ளவர்களாயும், மன்றாடுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். கிறிஸ்துவின் இரகசியத்தை நாங்கள் அறிவிக்கும்படி, எங்களுடைய செய்திக்கான வாசலை இறைவன் திறந்துகொடுக்க வேண்டுமென்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள்; இந்தப் பணிக்காகவே நான் சிறையாக்கப்பட்டிருக்கிறேன். நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள். திருச்சபைக்கு உட்படாத வெளி ஆட்களுடன் ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்; கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது உரையாடல் எப்பொழுதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்பொழுதே உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு உங்களால் தகுந்த விதத்தில் பதில் சொல்லக்கூடியதாய் இருக்கும்.
கடைசி வாழ்த்துகள்
தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான். நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவன் எங்கள் அன்புள்ள சகோதரனான நம்பிக்கைக்குரிய ஒநேசிமுவுடன் வருகிறான். அவனும் உங்களில் ஒருவனே. அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனைக்குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள்; அவன் உங்களிடம் வந்தால், அவனை வரவழைத்துக்கொள்ளுங்கள்.
யுஸ்து என அழைக்கப்படும் இயேசுவும், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். இறைவனுடைய அரசின் வேலையில், எனது உடன் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் யூதர்கள் இவர்கள் மட்டுமே. இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள்.
கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனான எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனும் உங்களில் ஒருவனே. இறைவனுடைய சித்தம் முழுவதிலும் நீங்கள் வளர்ச்சியடைந்தவர்களும் முழுமையான நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்கவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காய் எப்பொழுதும் மன்றாட்டிலே போராடுகிறான். அவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிறவர்களுக்காகவும், ஊக்கமாய் வேலைசெய்கிறான் என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன்.
எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்டபின், லவோதிக்கேயாவிலிருக்கிற திருச்சபைகளிலேயும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்; அதுபோலவே, லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் வாசியுங்கள்.
நீங்கள் அர்க்கிப்புவிடம், “கர்த்தரில் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று சொல்லுங்கள்.
பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். நான் சிறையாக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.