- Biblica® Open Indian Tamil Contemporary Version
ஆமோஸ்
ஆமோஸ்
ஆமோஸ்
ஆமோ.
ஆமோஸ்
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.
அவன் சொன்னதாவது:
“யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்;
எருசலேமிலிருந்து முழங்குகிறார்.
மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன.
கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.”
இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு
யெகோவா சொல்வது இதுவே:
“தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே.
ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும்.
தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன்.
ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து,
பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்;
ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்”
என்று யெகோவா சொல்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே:
“காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த
அநேக பாவங்களின் நிமித்தம்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே.
காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்;
அது அதன் அரண்களை சுட்டெரிக்கும்.
அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன்.
அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன்.
பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும்,
எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்”
என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே:
“தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து,
சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.
தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
யெகோவா சொல்வது இதுவே:
“ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
இரக்க உணர்வின்றி தன் சகோதரனான
இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே.
அத்துடன் அவன் கோபம் அடங்காமல்,
அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
யெகோவா சொல்வது இதுவே:
“அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும்,
நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன்.
அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும்,
புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும்.
அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான்.
அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்”
என்று யெகோவா சொல்கிறார்.
யெகோவா சொல்வது இதுவே:
“மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச்
சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.
மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.
யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும்
மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும்.
நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன்.
அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்”
என்று யெகோவா சொல்லுகிறார்.
யெகோவா சொல்வது இதுவே:
“யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து,
அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள்.
ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய
போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.
ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
இஸ்ரயேலின் நியாயத்தீர்ப்பு
யெகோவா சொல்வது இதுவே:
“இஸ்ரயேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும்,
என் கோபத்தை நான் விலக்கமாட்டேன்.
அவர்கள் நீதியானவர்களை வெள்ளிக்காகவும்,
சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்புக்காகவும் விற்றார்களே.
தரையின் புழுதியை மிதிப்பதுபோல்
ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்.
தகப்பனும் மகனும் ஒரே பெண்ணிடம் உறவுகொண்டு,
என் பரிசுத்த பெயரைத் தூய்மைக் கேடாக்குகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும்
தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள்.
அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள்
தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.
“எமோரியர் கேதுருமரங்களைப்போல் உயரமாயும்,
கர்வாலி மரங்களைப்போல் வைரமாயும் இருப்பினும்,
நான் என் மக்களுக்கு நாட்டைப் பெற்றுக் கொடுக்க
அவர்களை இவர்களுக்கு முன்பாக அழித்தேன்.
மேலே அவர்களுடைய பழங்களையும்,
கீழே அவர்களுடைய வேர்களையும் நானே அழித்தேன்.
எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக,
எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து,
நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.
“நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும்,
உங்கள் வாலிபரிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன்.
இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?”
என யெகோவா அறிவிக்கிறார்.
“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள்.
இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
“தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல,
நான் உங்களை நசுக்குவேன்.
அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள்,
பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தை ஒன்றுதிரட்டமாட்டார்கள்,
இராணுவவீரனுங்கூட தன் உயிரைத் தப்புவிக்கமாட்டான்.
வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான்,
வேகமாய் ஓடும் இராணுவவீரனும் ஓடித்தப்பமாட்டான்,
குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்றமாட்டான்.
அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும்
நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
இஸ்ரயேலுக்கு எதிரான சாட்சியங்கள்
இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள்.
“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும்
உங்களையே நான் தெரிந்தெடுத்தேன்.
உங்கள் அநேக பாவங்களுக்காகவும்
நான் உங்களைத் தண்டிப்பேன்.”
ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால்,
அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி?
இரை அகப்படாமல் இருக்கும்போது,
புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ?
தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது,
அது தன் குகையில் இருந்து உறுமுமோ?
கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ?
பொறியில் ஒன்றும்
சிக்காதிருக்கையிலே,
பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ?
பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில்
மக்கள் நடுங்காதிருப்பார்களோ?
பட்டணத்தில் பேராபத்து வரும்போது,
யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்?
தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு
தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல்
ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை.
சிங்கம் கர்ஜித்தது,
யார் பயப்படாதிருப்பான்?
ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார்,
யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்?
அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும்,
எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள்.
“சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள்,
இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும்,
அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.”
“சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் கொள்ளைப்பொருட்களையும்,
சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான்.
அவன் அரண்களை இடித்து,
உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.”
யெகோவா சொல்வது இதுவே:
“அப்பொழுது சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன்
தன் ஆட்டின் இரு கால் எலும்புகளையோ,
காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பதுபோல்
இஸ்ரயேலர் தப்புவிக்கப்படுவார்கள்.
சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும்,
தமஸ்குவிலுள்ள இருக்கைகளின் மூலைகளுடனும் மட்டுமே
அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்.”
“இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
“இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே
பெத்தேலிலுள்ள தெய்வத்தின் மேடைகளை அழிப்பேன்.
மேடைகளின் கொம்புகள் வெட்டுண்டு
தரையில் விழும்.
செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன்.
குளிர்க்கால வீடுகளை இடிப்பேன்.
அவற்றுடன் கோடைகால வீடுகளையும் இடிப்பேன்.
தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும். அரண்மனைகள் பாழாகிவிடும்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
இஸ்ரயேல் இறைவனிடம் திரும்பவில்லை
ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே,
“எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்”
என உங்கள் கணவர்களிடம் சொல்லுகிறவர்களே,
இந்த வார்த்தையைக் கேளுங்கள்;
நீங்கள் சமாரியா மலையிலுள்ள பாசானின்
கொழுத்த பசுக்களைப்போல் இருக்கிறீர்கள்.
எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்:
“நிச்சயமாய் ஒரு காலம் வரும்.
அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும்,
உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும்
தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும்
சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள்.
அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்.
கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள்.
காலைதோறும் உங்கள் பலிகளையும்,
மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.
புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள்.
உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி
அவற்றைக்குறித்துப் புகழுங்கள்,
இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்”
என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும்,
பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன்.
அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில்
நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன்.
நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி,
இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன்.
ஒரு வயலுக்கு மழை பெய்தது.
இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.
மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும்,
குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன்.
நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன்.
உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எகிப்தில் செய்ததுபோல,
உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன்.
உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன்.
அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்;
கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல்,
உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன்.
நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே;
இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே,
உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.”
மலைகளை உருவாக்குகிறவரும்,
காற்றை உண்டாக்குகிறவரும் அவரே,
மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும்,
அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே,
பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே,
சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.
மனமாறுதலுக்கு அழைப்பு
இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்:
“இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள்,
இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள்.
தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள்.
அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.”
ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
“இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு,
நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள்.
நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு,
பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”
இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே:
என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.
பெத்தேலைத் தேடாதீர்கள்,
கில்காலுக்குப் போகாதீர்கள்,
பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள்.
கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும்,
பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,
இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள்,
அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.
இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக
நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார்.
அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும்.
அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே,
நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள்.
அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர்.
இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும்,
பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே;
கடலின் தண்ணீரை அழைத்து,
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே,
“யெகோவா” என்பது அவர் பெயர்.
அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து,
அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.
இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு
குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள்,
உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள்.
ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி
அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள்.
ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும்,
அதில் வாழமாட்டீர்கள்,
செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும்
அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள்.
உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும்,
உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன்.
நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள்.
நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.
ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும்.
ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது.
தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்,
அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்.
சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே,
அவர் உங்களோடிருப்பார்.
தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள்.
நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள்.
ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா,
யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார்.
ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே:
“எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.
பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும்.
அழுவதற்காக விவசாயிகளும்,
புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள்.
திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.
ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்”
என்று யெகோவா சொல்கிறார்.
யெகோவாவின் நாள்
யெகோவாவின் நாளை விரும்புகிற
உங்களுக்கு ஐயோ கேடு,
யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்?
அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும்.
ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன்,
கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும்.
அவன் தன் வீட்டிற்குள் வந்து
சுவரில் கையை ஊன்றியபோது,
அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும்.
யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ?
ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ?
உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்;
உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை.
தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும்
நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும்,
அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும்,
அவற்றைப் பார்க்கவும் மாட்டேன்.
உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள்.
உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன்.
அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும்.
நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும்.
இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய்
நீங்கள் எனக்கு பலிகளையும்,
காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள்.
உங்களுக்கென செய்த
விக்கிரகங்களின் கூடாரத்தையும்,
நட்சத்திரத் தெய்வங்களையும் சுமந்துகொண்டு போனீர்கள்.
ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று,
சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய யெகோவா சொல்கிறார்.
சிற்றின்பத்தின் கேடு
சீயோனில் உல்லாசமாய் இருக்கிறவர்களே,
சமாரியா மலையில் பாதுகாப்பாய் இருக்கிறதாக எண்ணுகிறவர்களே,
இஸ்ரயேல் மக்கள் தேடிவரும் முதன்மையான நாட்டின் உயர்குடி மனிதரே
உங்களுக்கு ஐயோ கேடு,
கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள்,
அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்திற்குப் போங்கள்.
அதன்பின் பெலிஸ்தியாவிலுள்ள காத்திற்குச் செல்லுங்கள்.
உங்கள் இரு அரசுகளைவிட அவை சிறந்தவையோ?
அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிடப் பெரியதோ?
அவை எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றன.
நீங்கள் தீமையின் நாளைப் பற்றி எண்ணாதிருக்கிறீர்கள்.
அதனால் வன்முறை ஆட்சியை அருகில் கொண்டுவருகிறீர்கள்.
நீங்களோ தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள்.
பஞ்சணை இருக்கைகளில் சொகுசாய் சாய்ந்திருக்கிறீர்கள்.
மந்தையில் சிறந்த ஆட்டுக்குட்டிகளையும்,
கொழுத்த கன்றுகளையும் அடித்து விருந்து கொண்டாடுகிறீர்கள்.
தாவீதைப்போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள்.
புதிய இசைக்கருவிகளை உண்டாக்கிக் கொள்கிறீர்கள்.
பெரிய கிண்ணங்களில் நிறைய திராட்சை இரசம் குடிக்கிறீர்கள்,
சிறந்த நறுமண தைலங்களைப் பூசிக்கொள்கிறீர்கள்;
ஆயினும் யோசேப்பின் மக்களுக்கு வரப்போகும்
அழிவிற்காக நீங்கள் துக்கப்படுகிறதில்லை.
ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாகக் கொண்டுபோகப்படுவீர்கள்.
உங்கள் விருந்தும், களியாட்டமும் முடிவுக்கு வரும்.
இஸ்ரயேலின் தற்பெருமை
ஆண்டவராகிய யெகோவா தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
யாக்கோபின் அகந்தையை நான் அருவருக்கிறேன்.
அவனுடைய கோட்டைகளையும் வெறுக்கிறேன்.
ஆதலால் அவர்களுடைய சமாரியா நகரத்தையும்,
அதிலுள்ள அனைத்தையும் பகைவனிடம் ஒப்புக்கொடுப்பேன்.
அப்பொழுது ஒரு குடும்பத்தில் பத்துபேர் எஞ்சியிருந்தால், அவர்களும் சாவார்கள். உடல்களை எரிக்கவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு மறைந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அவன், “சத்தமிடாதே! நாம் யெகோவாவின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான்.
ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்.
அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும்
சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார்.
செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ?
அங்கே எருதுகளால் ஒருவன் உழுவானோ?
ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும்,
நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
லோதேபார் என்ற இடத்தைக் கைப்பற்றி மகிழ்கிறவர்களே,
“எங்கள் சொந்த வலிமையினாலே கர்னாயீமை பிடித்தோம்”
என்று சொல்கிறவர்களே, நீங்களே இப்படிச் செய்தீர்கள்?
ஆனால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது,
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களை எதிர்க்க ஒரு நாட்டைத் தூண்டிவிடுவேன்.
அவர்கள் ஆமாத்தின் நுழைவாசல்முதல்,
அரபா பள்ளத்தாக்குவரை உங்களை ஒடுக்குவார்கள்” என்கிறார்.
தரிசனங்கள்
ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: அரசனுடைய பங்கு அறுவடை செய்யப்பட்டது. அதன்பின் இரண்டாவது விளைச்சல் வளர்ந்து கொண்டிருந்தபோது, யெகோவா வெட்டுக்கிளிக் கூட்டங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். வெட்டுக்கிளிக் கூட்டம் நாட்டை வெறுமையாக்கியது. அப்போது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, மன்னியும்! யாக்கோபு எப்படி உயிர் பிழைப்பான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே!” எனக்கூறி அழுதேன்.
எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார்.
“இப்படி இது நடக்காது” என்றும் யெகோவா சொன்னார்.
பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: ஆண்டவராகிய யெகோவா நெருப்பினால் நியாயத்தீர்ப்பை நியமித்தார். அது மகா ஆழத்தை வற்றச் செய்தது; நிலத்தையும் சுட்டெரித்தது. அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் கெஞ்சிக்கேட்கிறேன். இதை நிறுத்தும். யாக்கோபு எப்படி உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” என்று அழுதேன்.
எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார்.
“இதுவும் நடக்காது” என்று ஆண்டவராகிய யெகோவா சொன்னார்.
பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: யெகோவா தூக்குநூலின்படி கட்டப்பட்ட சுவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. அப்பொழுது யெகோவா என்னிடம், “ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கிறேன்” என்றேன்.
அதற்கு யெகோவா, “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். அது அவர்களுடைய பாவங்களை எடுத்துக்காட்டும். நான் இனி அவர்களை தப்பவிடமாட்டேன்.
“ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் அழிக்கப்படும்.
இஸ்ரயேலின் பரிசுத்த இடங்கள் பாழாக்கப்படும்.
யெரொபெயாமின் வீட்டிற்கு எதிராக நான் வாளுடன் எழும்புவேன்” என்று சொன்னார்.
ஆமோஸ், அமத்சியா
அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “ஆமோஸ் இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக்கொண்டிருக்க முடியாதிருக்கிறது. ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது:
“ ‘யெரொபெயாம் வாளினால் சாவான்.
இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து
நாடுகடத்தப்பட்டுத் தூரமாய் போவார்கள்.’ ”
அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல். இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான்.
அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார். ஆகவே இப்பொழுதும் நீ யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள்,
“ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே,
ஈசாக்கின் வீட்டிற்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கிறாயே.
“ஆதலால் யெகோவா சொல்வது இதுவே:
“ ‘உன் மனைவி இந்த நகரத்தில் வேசியாவாள்,
உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள்.
உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும்,
நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே சாவாய்.
நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள்.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”
பழுத்த பழங்களுடைய கூடை
ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களை உடைய ஒரு கூடையைக் கண்டேன். “ஆமோஸ், நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “பழுத்த பழங்களுடைய கூடையைக் காண்கிறேன்” என்றேன்.
அப்பொழுது யெகோவா என்னிடம், “இஸ்ரயேலரான என் மக்களுக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. நான் இனிமேலும் அவர்களைத் தப்பவிடமாட்டேன்.
“அந்த நாளில், ஆலயப் பாடல்கள் புலம்பலாக மாறும். ஏராளமான உடல்கள், எங்கும் எறியப்பட்டுக் கிடக்கும்! எங்கும் நிசப்தம் உண்டாகும்!” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
சிறுமைப்பட்டவர்களை மிதித்து,
நாட்டின் ஏழைகளை அகற்றுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
நீங்கள் தானியம் விற்பதற்கு
அமாவாசை எப்போது முடியும் என்றும்,
கோதுமை விற்பதற்கு
ஓய்வுநாள் எப்போது முடிவடையும் என்றும் சொல்லி,
அளவைக் குறைத்து,
விலையை அதிகரித்து,
கள்ளத்தராசினால்
ஏமாற்றுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
ஏழையை வெள்ளி கொடுத்து வாங்குவதற்கும்,
சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்பு கொடுத்து வாங்குவதற்கும்,
பதரைக் கோதுமையுடன் விற்பதற்கும் அல்லவோ காத்திருக்கிறீர்கள்.
யாக்கோபின் அகந்தையின்மீது யெகோவா ஆணையிட்டார்: “அவர்கள் செய்த செயல்கள் எதையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
“இதனால் நாடு நடுங்காதோ,
அதில் வாழும் அனைவரும் துக்கப்பட மாட்டார்களோ?
நாடு முழுவதும் நைல் நதிபோல பொங்கும்.
அது குமுறிப் பொங்கி,
பின் அது எகிப்து நதியைப்போல் தணிந்துபோகும்.”
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
“அந்நாளில் நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்வேன்,
பட்டப்பகலில் பூமியை இருளடையச் செய்வேன்.
உங்கள் மதக்கொண்டாட்டங்களை துக்கக்கொண்டாட்டமாகவும்,
உங்கள் பாடல்களை அழுகையாகவும் மாற்றுவேன்.
உங்கள் அனைவரையும் துக்கவுடை உடுத்தச் செய்வேன்.
உங்களை மொட்டையடிக்கப் பண்ணுவேன்.
நான் அந்த காலத்தை ஒரே மகனுக்காக துக்கங்கொண்டாடும் காலத்தைப்போல் மாற்றுவேன்.
அதன் முடிவை ஒரு கசப்பான நாளைப்போல் ஆக்குவேன் என்கிறார்.
“மேலும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: நாட்கள் வருகின்றன,
நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன்.
அது உணவு கிடைக்காத பஞ்சமோ, தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ அல்ல.
மாறாக யெகோவாவினுடைய வார்த்தைகளைக் கேட்க முடியாத பஞ்சமே அது.
அப்போது மனிதர், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும் அலைந்து சென்று,
வடதிசை தொடங்கி, கீழ்த்திசை வரையும் அலைந்து திரிந்து,
யெகோவாவின் வார்த்தையைத் தேடுவார்கள்.
ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.
“அந்த நாளில்
“அழகிய இளம்பெண்களும்,
வலிமையுள்ள வாலிபர் எல்லோருமே தாகத்தால் சோர்ந்துபோவார்கள்.
அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான
விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ,
அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’
என்று சொல்லுகிறவர்களோ,
அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’
என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள்,
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”
இஸ்ரயேல் அழிக்கப்படுதல்
யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்:
அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள்.
தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும்.
அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள்.
மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன்.
ஒருவனும் தப்பி ஓடமாட்டான்,
ஒருவனுமே தப்பமாட்டான்.
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும்,
அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும்.
அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும்,
அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.
கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும்,
நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன்.
என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும்
அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.
தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும்,
அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன்.
“நன்மைக்காக அல்ல,
தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”
யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார்,
அது உருகுகிறது,
அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்;
முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது,
பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.
யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார்,
பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்;
கடல்நீரை அழைத்து
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார்.
யெகோவா என்பது அவர் பெயர்.
இஸ்ரயேலின் மக்களே,
நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும்,
சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
“நிச்சயமாக ஆண்டவராகிய
யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன.
பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன்.
எனினும் யாக்கோபின் குடும்பத்தை
நான் முற்றிலும்
அழிக்கமாட்டேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நானே கட்டளையிட்டு,
தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல,
எல்லா நாடுகளுக்குள்ளேயும்
இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன்.
ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.
என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும்,
பேராபத்து எங்களை
மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று
சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள்.
இஸ்ரேலின் மறுசீரமைப்பு
“அந்த நாளில்
“நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன்.
நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து,
அதன் பாழிடங்களை சீரமைப்பேன்.
முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன்,
அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும்,
என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும்
உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று
இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார்.
“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்;
நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான்.
மலைகளிலிருந்து புது திராட்சை இரசம்
வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும்,
நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன்.
“அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து,
திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து,
தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன்.
நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து,
இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று”
உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.