- Biblica® Open Indian Tamil Contemporary Version
அப்போஸ்தலர்
அப்போஸ்தலருடைய நடபடிகள்
அப்போஸ்தலர்
அப்.
அப்போஸ்தலருடைய நடபடிகள்
இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு செய்ய ஆரம்பித்தவை போதித்தவை எல்லாவற்றையும் குறித்து எழுதினேன். அவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்கு பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டவைகளைக் கொடுத்தபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அந்த நாள்வரைக்கும், நிகழ்ந்தவைகளைப் பற்றி அதில் எழுதினேன். இயேசு தாம் சிலுவையில் வேதனையை அனுபவித்த பின்பு தம்மை சீடர்களுக்குக் காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை நம்பத்தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் அவர்களுக்கு நாற்பது நாளளவும் காட்சியளித்து, இறைவனுடைய அரசைப்பற்றிப் பேசினார். ஒருமுறை இயேசு சீடர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அவர் சீடர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டுப் போகவேண்டாம். என் பிதாவின் வாக்குறுதியைக்குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, நீங்கள் அதற்காகக் காத்திருங்கள். ஏனெனில் யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான், ஆனால் இன்னும் சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு பெறுவீர்கள்.”
பின்பு சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடி இருந்தபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலரின் அரசை அவர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்கும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தால் குறித்து வைத்திருக்கிற நேரங்களையும், காலங்களையும் அறிகிறது உங்களுக்குரியது அல்ல. ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லைவரை, எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
இயேசு இதைச் சொன்னபின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டது.
இயேசு மேலே போய்க்கொண்டிருக்கையில், சீடர்கள் வானத்தை நோக்கி மேலே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே நின்றார்கள். அவ்விருவர் சீடர்களிடம், “கலிலேயரே, வானத்தைப் பார்த்துக்கொண்டு நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசு மீண்டும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு அவர் போவதை நீங்கள் கண்டவிதமாகவே, அவர் மீண்டும் வருவார்” என்றார்கள்.
மத்தியா சீடனாக தெரிந்தெடுக்கப்படுதல்
பின்பு அவர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்த மலையிலிருந்து எருசலேமுக்குச் சென்றார்கள். அது பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் இருந்தது. அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேலறைக்குச் சென்றார்கள்.
அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா;
பிலிப்பு, தோமா,
பர்தொலொமேயு, மத்தேயு;
அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாய்கூடி தொடர்ச்சியாக மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரருங்கூட இருந்தார்கள்.
அந்நாட்கள் ஒன்றில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு கூடியிருந்தவர்களோ கிட்டத்தட்ட நூற்றிருபது பேராய் இருந்தனர். பேதுரு அவர்களிடம், “பிரியமானவர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக்குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகுகாலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய்ப் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”
அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறி மரித்தான். எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்லுகிறார்கள். அக்கெல்தமா என்றால், இரத்தநிலம் என்று அர்த்தமாகும்.
மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது:
“ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக;
அதில் யாரும் குடியேறாதிருப்பார்களாக,’1:20 [சங். 69:25]
என்பதும்,
“ ‘அவனுடைய பதவியை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.’1:20 [சங். 109:8]
எனவே கர்த்தராகிய இயேசு நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும் நம்மோடு இருந்த ஒருவரைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும். யோவான் திருமுழுக்கு கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்வரைக்கும், அவன் நம்முடனேகூட இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அப்படி இருந்தவர்களில் ஒருவன் நம்முடனேகூட, அவர் உயிருடன் எழுந்ததற்குச் சாட்சியாய் இருக்கவேண்டும்” என்றான்.
எனவே அவர்கள்: யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இரண்டுபேர்களை முன்னிறுத்தினார்கள். பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிந்துகொண்டீர் என்பதை எங்களுக்குக் காண்பியும். யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப்போன, இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு நீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள். அதற்குப் பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலருடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
பரிசுத்த ஆவியானவரின் வருகை
பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
பேதுரு உரையாற்றுதல்
அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
“ ‘இறைவன் சொல்லியபடி,
கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன்.
உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்,
உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள்,
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும்,
என் ஆவியைப் பொழிவேன்.
அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன்,
கீழே பூமியில் அடையாளங்களாக
இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே,
சூரியன் இருண்டுபோகும்;
சந்திரன் இரத்தமாக மாறும்.
கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற
யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’2:21 [யோயே. 2:28-32]
“இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார். இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது:
“ ‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன்.
அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்,
நான் அசைக்கப்படமாட்டேன்.
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;
என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர்,
உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.
நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’2:28 [சங். 16:8-11] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்).
என்பதே.
“சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே. ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான். நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம். கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன்,
“ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது:
“நான் உமது பகைவரை
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை,
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’2:35 [சங். 110:1]
என்று சொன்னான்.
“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான்.
பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான். பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.
முடவனைப் பேதுரு சுகப்படுத்துதல்
ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான். பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன. அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான். அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.
மக்களிடம் பேதுரு பேசுதல்
அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள். இதைப் பேதுரு கண்டபோது, அவன் அவர்களிடம்: “இஸ்ரயேலரே, நீங்கள் ஏன் இதைக்கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறை பக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே; அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலைசெய்யத் தீர்மானித்தபோதுங்கூட, நீங்கள் அவனுக்கு முன்பாக அவரைப் புறக்கணித்தீர்கள். பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். ஜீவனின் அதிபதியை நீங்கள் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கிறோம். இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே. ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும். இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார். இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும். அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’3:23 [உபா. 18:15],[18],[19] என்று சொல்லியிருக்கிறானே.
“சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’3:25 [ஆதி. 22:18]; [26:4] என்று சொன்னாரே. எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”
நீதிமன்றத்தில் பேதுருவும் யோவானும்
பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள். இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று மக்களுக்கு அப்போஸ்தலர் போதித்து, அறிவித்ததினால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள். ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள். பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்குமுன் கொண்டுவரும்படிச்செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்: “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்றார்கள்.
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம்: “ஆளுநர்களே, யூதரின் தலைவர்களே, ஒரு முடவனுக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு அனுதாபச் செயலுக்கு நாங்கள் இன்று காரணம் காட்டவேண்டுமென்றும், அவன் எப்படி சுகமானானென்றும் நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால், நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறியவேண்டியது இதுவே: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், இந்த மனிதன் உங்களுக்கு முன்பாக சுகமடைந்தவனாய் நிற்கிறான். அந்த இயேசுவையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இறைவனோ இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். அந்த இயேசுவே,
“ ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல்,
அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’4:11 [சங். 118:22]
இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்: “நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது. ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
விசுவாசிகளின் மன்றாட்டு
பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள். அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது:
“ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?
மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.
ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும்,
அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு
விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.4:26 [சங். 2:1],[2]’
நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே. என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள். இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும். உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்” என்று மன்றாடினார்கள்.
அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.
சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல்
விசுவாசிகள் அனைவரும், இருதயத்திலும் மனதிலும் ஒன்றாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கருதவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய்ப் பகிர்ந்துகொண்டார்கள். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் எல்லோர்மேலும் மிகுந்த கிருபை இருந்தது. அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது.
சீப்புரு தீவைச்சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், “ஆறுதலின் மகன்” என்று அர்த்தமாகும். இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
அனனியாவும் சப்பீராளும்
அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான். விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
அப்பொழுது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி, சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டாயே. அதை விற்குமுன்பு அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும், அந்தப் பணம் உன்னிடம் இருக்கவில்லையோ? இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான்.
அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்துப்போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று. அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.
அப்பொழுது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு எப்படி நீயும் உடன்பட்டாய்? இதோ, உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு போவார்கள்” என்றான்.
அந்த வினாடியே அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்துப்போனாள். அப்பொழுது அந்த இளைஞர் உள்ளே வந்து, அவள் இறந்துகிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே தூக்கிக்கொண்டுபோய் அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். திருச்சபையோருக்கும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது.
அப்போஸ்தலர் அநேகரைச் சுகப்படுத்தல்
அப்போஸ்தலர் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் அனைவரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது. மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனால் அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, அவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் பலனாக, மக்கள் தங்களுள் வியாதிப்பட்டிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள்மேலும் பாய்கள்மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்துபோகையில், அவனுடைய நிழலாகிலும் படும்படிக்கே இப்படிச் செய்தார்கள். எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்துங்கூட, மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் வியாதிப்பட்டவர்களையும் தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர்கள் அனைவரும் சுகமடைந்தார்கள்.
அப்போஸ்தலர் துன்புறுத்தப்படுதல்
அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து, அப்போஸ்தலரைக் கைதுசெய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள். ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்.
அதிகாலையிலேயே, அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள்.
பிரதான ஆசாரியனும் அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா யூதரின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினார்கள். ஆனால் ஆலயக்காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலரைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பிவந்து அதை அறிவித்தார்கள். திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும் சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை நாங்கள் திறந்தபோது, உள்ளே நாங்கள் ஒருவரையும் காணவில்லை” என்றார்கள். ஆலயக்காவலர் தலைவனும் தலைமை ஆசாரியர்களும் இந்த செய்தியைக் கேட்டபோது, அதனால் என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து, மனக்குழப்பமடைந்தார்கள்.
அப்பொழுது ஒருவன் வந்து, “இதோ, நீங்கள் சிறையில் அடைத்தவர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான். அப்பொழுது, ஆலயக்காவலர் தலைவன் தனது ஆலயக்காவலருடன் போய், அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்தான். ஆனால், அவர்கள்மேல் வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள்.
அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான். அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்! நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார். இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார். இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள்.
அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள். ஆனால் அந்த ஆலோசனைச் சங்கத்தில், கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு மோசேயின் சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான்; அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலரை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள். ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும். ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான்.
அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள்.
அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுகள்தோறும் இடைவிடாது போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
உதவி ஊழியர் நியமிக்கப்படுதல்
அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களில் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், எபிரெய மொழி பேசும் யூதருக்கு எதிராக முறையீடு செய்தார்கள். ஏனெனில், தங்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பகிரும்போது, அலட்சியம் பண்ணப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் எல்லா சீடர்களையும் ஒன்றாய்க் கூட்டி, “நாம் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், சாப்பாட்டுப் பந்தியில் பணிசெய்வது சரியானது அல்ல. எனவே பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் இருந்து ஏழுபேரைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களென நற்சான்று பெற்றவர்களாய் இருக்கவேண்டும். நாங்கள் இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்போம். நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் செலுத்துவோம்” என்றார்கள்.
அவர்கள் சொன்னது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிந்துகொண்டார்கள்; அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத விசுவாசத்தைப் பின்பற்றுபவனாயிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக ஆசாரியர்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
ஸ்தேவான் கைதுசெய்யப்படுதல்
இறைவனின் கிருபையும் வல்லமையும் நிறைந்த ஸ்தேவான், மக்கள் மத்தியில் பெரிதான அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். ஆனால், சுதந்திரம் பெற்றவர்கள் என அழைக்கப்பட்ட யூத ஜெப ஆலயத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அவர்கள் சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியாவின் மாகாணங்கள், ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த யூதர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஸ்தேவானுடன் விவாதம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், அவனிடமிருந்த ஞானத்தின் காரணமாகவும், அவன் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசியதினாலும் அவர்களால் அவனை எதிர்த்துநிற்க முடியாமல் போயிற்று.
எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும், இறைவனுக்கும் விரோதமாக அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.
இப்படி அவர்கள் மக்களையும், யூதரின் தலைவர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும், ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதற்குப் பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பொய்ச்சாட்சிகளை நிறுத்தினார்கள். அவர்கள், “இவன், இந்தப் பரிசுத்த இடத்திற்கும், மோசேயின் சட்டத்திற்கும் விரோதமாய்ப் பேசுகிறதை நிறுத்துகிறதில்லை. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்றும், மோசே நமக்குக் கையளித்த நடைமுறைகளை மாற்றுவார் என்றும் இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.
அந்த நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் ஸ்தேவான்மேல் கண்ணோக்கமாயிருக்கையில் அவனுடைய முகம் இறைத்தூதனுடைய முகத்தைப்போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள்.
ஆலோசனைச் சங்கத்தின்முன் ஸ்தேவானின் உரை
அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான்.
அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே7:2 ஆரானிலே அல்லது காரான் வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார். இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’7:3 [ஆதி. 12:1] என்றார்.
“அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார். இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’7:7 [ஆதி. 15:13],[14] என்றார். பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான்.
“கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார். அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
“பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை. எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள். அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான்.
“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது. பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான்.7:18 [யாத். 1:8] அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான்.
“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள். எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான்.
“மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான். அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை. மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான்.
“ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்? நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’7:28 [யாத். 2:14] என்று கேட்டான். இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
“நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது. அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்: ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’7:32 [யாத். 3:6] என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை.
“அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது. எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’7:34 [யாத். 3:5],[7],[8],[10] என்றார்.
“இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார். மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான்.
“இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’7:37 [உபா. 18:15] என்று சொன்னவன். பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே.
“ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’7:40 [யாத். 32:1] என்றார்கள். அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள். அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது:
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே.
இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி7:43 [ஆமோ. 5:25-27] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) அனுப்புவேன்.
“நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது. தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
“ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’7:50 [ஏசா. 66:1],[2]
என்று கர்த்தர் கேட்கிறார்.
“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்! உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள். இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான்.
ஸ்தேவான் மீது கல்லெறிதல்
அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான்.
இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள். பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள்.
அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான். பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.
ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான்.
திருச்சபை சிதறடிக்கப்படுதல்
அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள். இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள்.
ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான்.
சமாரியாவில் பிலிப்பு
சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள். இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
மந்திரவாதியான சீமோன்
சீமோன் என்னும் பெயருடைய ஒருவன், சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து, சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கச்செய்தான். அவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காண்பித்துக்கொண்டான். இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள். சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். ஆனால் பிலிப்பு இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தியையும் இயேசுகிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக திருமுழுக்குப் பெற்றார்கள். சீமோனும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றான். அவன் தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான்.
சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள். இவர்கள் அங்கேபோய்ச் சேர்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள். ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பேதுருவும் யோவானும் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, “நான் எவர்கள்மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான்.
அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்! இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே. எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார். ஏனெனில், நீ முழுவதும் கசப்பிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றான்.
அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
பேதுருவும் யோவானும் சாட்சி கூறி, கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
பிலிப்புவும் எத்தியோப்பியனும்
கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான். அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார்.
பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான்.
“அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.
அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்:
“அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார்.
மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல்,
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?
அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே”8:33 [ஏசா. 53:7],[8] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்றிருந்தது.
அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான். அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.
அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான். அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ திருமுழுக்கு பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசுகிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றான்.8:37 சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவு கொடுத்தான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்குத் திருமுழுக்கு கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். அந்த அதிகாரி அதற்குப் பின்பு பிலிப்புவைக் காணாமல், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான். பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு, செசரியாவைச் சென்றடைந்தான்.
சவுலின் மனமாற்றம்
இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய், கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான். சவுல் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கி வருகையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது.
அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே. எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.
சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை.
தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். கர்த்தர் தரிசனத்தில் அவனைக் கூப்பிட்டு, “அனனியா!” என்றார்.
அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ அடியேன்!” என்றான்.
அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார்.
அப்பொழுது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.
ஆனால் அதற்குக் கர்த்தர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
அப்பொழுது அனனியா, அந்த வீட்டை அடைந்து, அதற்குள் போனான். அவன் சவுலின்மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில் வழியிலே உனக்குத் தரிசனம் கொடுத்த கர்த்தராகிய இயேசு என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ மீண்டும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான். உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான். பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பெலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
தமஸ்குவிலும் எருசலேமிலும் சவுல்
சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான். உடனே அவன் யூத ஜெப ஆலயங்களில், இயேசு இறைவனின் மகன் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான். அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் வியப்புற்று, “எருசலேமிலே இந்தப் பெயரை அறிக்கையிடுகிறவர்களை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? இவன் அவர்களைக் கைதுசெய்து, பிரதான ஆசாரியனிடம் கொண்டுபோக அல்லவா இங்கே வந்தான்?” என்று கேட்டார்கள். ஆனால் சவுல், மேன்மேலும் வல்லமை பெற்று, தமஸ்குவிலே வாழுகிற யூதர்கள் அனைவருக்கும் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, அவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கினான்.
இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். சவுலோ அவர்களுடைய திட்டத்தை அறிந்துகொண்டான். அவர்கள் அவனைக் கொலை செய்யும்படி இரவும் பகலுமாக அந்நகரத்தின் வாசல்களைக் கவனமாய் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள், இரவிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள்.
சவுல் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக்குறித்துப் பயமடைந்திருந்தபடியால், இவன் உண்மையாகவே ஒரு சீடன் என்று நம்பவில்லை. ஆனால் பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டு அப்போஸ்தலரிடம் வந்தான். அவன் அவர்களுக்குச் சவுல் எவ்விதம் தன் பயணத்தில் கர்த்தரைக் கண்டான் என்பதையும், எவ்விதம் கர்த்தர் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் எடுத்துச்சொன்னான். எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான். அவன் கிரேக்க யூதருடன் பேசி விவாதித்தான். அவர்களோ அவனைக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் சவுலை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பிவைத்தார்கள்.
அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையோ சமாதானம் பெற்று, பெலனடைந்து, கர்த்தருடைய பயபக்தியில் வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் உற்சாகமூட்டப்பட்டு, எண்ணிக்கையிலும் பெருகிற்று.
ஐனேயாவும் தொற்காளும்
பேதுரு நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கும்படி போனான். அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான். பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான். லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.
யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள். அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது. லித்தா யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கிறான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது, இரண்டு மனிதரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாரும்” என்று சொல்லச் சொன்னார்கள்.
பேதுரு அவர்களுடனே போனான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். எல்லா விதவைகளும் அவனைச்சுற்றி நின்று அழுதார்கள். தொற்காள் தங்களுடன் உயிரோடு இருக்கையில் அவள் செய்த அங்கிகளையும் ஆடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.
பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவன் இறந்திருந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது, எழுந்து உட்கார்ந்தாள். பேதுரு அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் கூப்பிட்டு, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான். இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள். பேதுரு யோப்பாவிலே தோல் பதனிடுகிற சீமோனுடன் சிலகாலம் தங்கியிருந்தான்.
பேதுருவை கொர்நேலியு அழைத்தல்
செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன். அவனும், அவன் குடும்பத்தினர் அனைவரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கிறவனாகவும், ஒழுங்காக இறைவனிடம் மன்றாடுகிறவனாகவும் இருந்தான். ஒரு நாள் பிற்பகல் மூன்றுமணியளவில், அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் அதிலே இறைத்தூதன் ஒருவனை மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.
கொர்நேலியு அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான்.
இறைத்தூதன் பதிலாக, “உனது மன்றாட்டுகளும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும், இறைவனுக்கு முன்பாக ஒரு நினைப்பூட்டும் காணிக்கையாக வந்திருக்கின்றன. ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல். அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கிறது” என்றான்.
தன்னோடு பேசிய இறைவனுடைய தூதன் போனபின்பு, கொர்நேலியு தனது வேலையாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு படை வீரனையும் அழைத்தான். அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.
பேதுருவின் தரிசனம்
அவர்கள் பயணம் செய்து மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேதுரு வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடும்படி போனான். அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாராகிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான். அப்பொழுது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பூமியை நோக்கி இறங்கி வருவதையும் அவன் கண்டான். அதற்குள் எல்லா விதமான நான்கு கால்களையுடைய மிருகங்களும், பூமியிலுள்ள ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன. அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.
அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் சாப்பிட்டதில்லை” என்றான்.
இரண்டாம் முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.
இவ்விதம் மூன்று முறைகள் நடந்தன. பின்பு உடனே அந்த விரிப்புத் துணி மீண்டும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்டவர்கள், சீமோனுடைய வீட்டைத் தேடிவந்து, அதன் கதவருகில் நின்றார்கள். அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கேட்டார்கள்.
பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோனே, இதோ மூவர் உன்னைத் தேடுகிறார்கள். எனவே நீ எழுந்து கீழே இறங்கிப்போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
எனவே பேதுரு இறங்கிப்போய் அவர்களிடம், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தலைவனான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கிற ஒருவர். அவர் எல்லா யூத மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு இறைவனுடைய பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
மறுநாள் பேதுரு அவர்களுடன் யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனான். அடுத்தநாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து, தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாய் கூட்டி வைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான். ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான்.
அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான். பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப்பழகுவதோ, அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ, எங்கள் யூத சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரையும் தூய்மையற்றவன் என்றோ, அசுத்தமானவன் என்றோ நான் அழைக்கக் கூடாது என்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று நான் இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான்.
அப்பொழுது கொர்நேலியு: “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்றுமணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாட்டைக் கேட்டார். நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் அவர் நினைவில்கொண்டார். பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவர, ஆட்களை யோப்பாவுக்கு அனுப்பு. பேதுரு கடலோரமாய் வாழுகிற, தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றார். எனவேதான் நான் உடனே உம்மை அழைத்துவர ஆட்களை அனுப்பினேன். நீங்களும் வந்திருப்பது நல்லதே. இங்கே கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே இப்பொழுது நாங்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பாகக் கூடிவந்திருக்கிறோம்” என்றான்.
அப்பொழுது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பட்சபாதம் காண்பிக்கிறவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து, சரியானதைச் செய்யும்போது, அவர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார். யோவான் திருமுழுக்கைப்பற்றிப் பிரசங்கித்தபின், கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும் இறைவன் தம்முடன் இருந்ததால், பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
“யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசுகிறிஸ்து செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர்கள் இயேசுவை ஒரு மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்தார்கள். ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி, எங்களுக்கு உயிருடன் காணப்படச் செய்தார். அவர் எல்லோருக்கும் காணப்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரில் இருந்து எழுந்தபின்பு, அவருடனே உணவருந்திய நாங்களே அந்த சாட்சிகள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாகத் தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி, இயேசுகிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரினால் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” என்றான்.
பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகள், யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கிறதையும் இவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது பேதுரு அவர்களிடம், “இவர்கள் தண்ணீரில் திருமுழுக்கு பெறுவதை யாராவது தடைசெய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான். எனவே, இயேசுகிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி பேதுரு உத்தரவிட்டான். அப்பொழுது அவர்கள் சிலநாட்கள் தங்களுடன் தங்கியிருக்கவேண்டும் என்று பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.
பேதுரு தனது செயல்களைக்குறித்து விளக்குதல்
யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலரும் யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள். எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவனைக் குற்றப்படுத்தி, “நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள்.
பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினான்: “நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக்கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். ஒரு பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பரத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது. நான் அதற்குள் பார்த்தபோது, பூமியிலுள்ள நான்கு கால்களையுடைய மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். அப்பொழுது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.
“நானோ, ‘இல்லை ஆண்டவரே, நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதுவும் என் வாய்க்குள்ளே ஒருபோதும் போனதில்லை’ என்றேன்.
“பரத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கிய எதையும் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது. இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.
“அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாசலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் போகத் தயங்கக்கூடாது என்று, பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரரும் என்னுடன் வந்தார்கள், நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம். அவனோ தனது வீட்டிலே, எப்படி ஒரு இறைத்தூதன் தனக்குக் காட்சியளித்ததைத் தான் கண்டதாகவும், அந்தத் தூதன் பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பும்படி சொன்னான் என்றும் கூறினான். அத்துடன் அவன் கொண்டுவரும் செய்தியினால் நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று இறைத்தூதன் சொன்னதாகவும் அவன் எங்களுக்கு அறிவித்தான்.
“நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நம்மேல் இறங்கியது போலவே, அவர்கள்மேலும் இறங்கினார். அப்பொழுது, ‘யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை, நான் நினைவுகூர்ந்தேன்.’ எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுத்த அதே வரத்தை அவர்களுக்கும் கொடுத்தால், இறைவனை தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணுவதற்கு நான் யார்?” என்றான்.
யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, தொடர்ந்து எவ்வித எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை, அவர்கள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும்கூட, வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.
அந்தியோகியாவில் திருச்சபை
ஸ்தேவானுடைய மரணத்தின்பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக, சிதறடிக்கப்பட்டவர்கள் பெனிக்கே, சீப்புரு தீவு, அந்தியோகியாவரை சென்றார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே, இறைவார்த்தையை அறிவித்தார்கள். ஆயினும் சீப்புரு தீவு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர், அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத்தொடங்கி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள். கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெருந்தொகையான மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடமாய் திரும்பினார்கள்.
இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது; அப்பொழுது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். அவன் அங்கேபோய்ச் சேர்ந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்பொழுது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் அனைவரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான். பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
அதற்குப் பின்பு பர்னபா சவுலைத்தேடி தர்சுவிற்குப் போனான். அவன் சவுலைக் கண்டபோது, அவனை அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்கு போதித்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகம் எங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே, அது ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் ஏற்பட்டது. சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழுகிற சகோதரருக்கு உதவிசெய்யத் தீர்மானித்தார்கள். பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள சபைத்தலைவர்களுக்கு நன்கொடையை அனுப்பி, அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள்.
சிறையிலிருந்து பேதுரு தப்பிய அற்புதம்
அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணிச், சிலரைக் கைது செய்தான். அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான். அது யூதருக்கு விருப்பமாய் இருந்தது என்று அவன் கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களில் நடந்தது. அவன் பேதுருவைக் கைதுசெய்து, சிறையில் போட்டான். நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவன் பேதுருவை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு படைவீரர்கள் இருந்தார்கள். ஏரோது பேதுருவைப் பஸ்கா என்ற பண்டிகை முடிந்தபின்பு வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு எண்ணியிருந்தான்.
எனவே, பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் சபையார் அவனுக்காக ஊக்கமாய் இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
ஏரோது பேதுருவை விசாரணைக்குக் கொண்டுவர இருந்த நாளுக்கு முந்திய இரவிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், இரண்டு படைவீரருக்கு இடையில் நித்திரை செய்துகொண்டிருந்தான். வாசல் காவலரும் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள். திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பினான். “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே, பேதுருவின் கைகளில் இருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவனிடம், “உனது உடைகளை உடுத்தி, பாதரட்சையைப் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலுடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான். பேதுரு சிறையைவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். ஆனால் அந்தத் தூதன் செய்வதெல்லாம் உண்மையாகவே நடக்கின்றன என்று அவன் அறியாதிருந்தான்; அவனோ, தான் ஒரு தரிசனம் காண்கிறதாக எண்ணிக்கொண்டிருந்தான். அவர்கள் முதலாம் காவலையும் இரண்டாம் காவலையும் கடந்து, பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவுவரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து, அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் ஒரு வீதியின் முழுப் பகுதியையும் நடந்து சென்றபோது, திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுப் போனான்.
அப்பொழுது பேதுரு சுயநினைவடைந்து, “இப்போது கர்த்தர் தமது தூதனை அனுப்பி, ஏரோதுவின் பிடியிலிருந்தும் யூதர்கள் செய்ய நினைத்துக்கொண்டிருந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் என்னை விடுவித்திருக்கிறார், இதனை சந்தேகமின்றி அறிந்துகொண்டேன்” என்றான்.
அவன் இதை உணர்ந்தவுடனேயே, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயான மரியாளின் வீட்டிற்குப் போனான். அங்கே அநேக மக்கள் ஒன்றுகூடி மன்றாடிக்கொண்டிருந்தார்கள். பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண், யாரெனப் பார்ப்பதற்கு வாசற்கதவுக்கு வந்தாள். அது பேதுருவின் குரல் என அவள் அறிந்ததும், மிகவும் சந்தோஷமடைந்தவளாய், கதவையும் திறக்காமலே திரும்பி ஓடிப்போய், “பேதுரு வாசல் அருகே நிற்கிறார்!” என்று மற்றவர்களுக்கு பரபரப்புடன் சொன்னாள்.
அதற்கு அவர்கள் ரோதையிடம், “உனக்குப் பைத்தியமா?” என்றார்கள். ஆனால் அவளோ தொடர்ந்து, வாசலில் நிற்பது பேதுருவே என்று சொன்னபோது, “அப்படியானால், இது பேதுருவினுடைய தூதனாயிருக்கும்” என்றார்கள்.
ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக்கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள். அவர்களை அமைதியாய் இருக்கும்படி பேதுரு தன் கையினால் சைகை காட்டி, எவ்விதமாய்த் தன்னைக் கர்த்தர் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்று விவரமாய்ச் சொன்னான். பின்பு அவன், “இதை யாக்கோபுக்கும் மற்றச் சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. ஏரோது அவனை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்காததினால், காவலரை குறுக்கு விசாரணை செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.
ஏரோதுவின் மரணம்
அப்பொழுது ஏரோது, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய், அங்கே சிறிதுகாலம் தங்கியிருந்தான். ஏரோதுக்கும் தீரு, சீதோன் பட்டணத்து மக்களுக்கும் இடையில் சச்சரவுகள் நடந்துகொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவனைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அரசனின் அந்தரங்க வேலைக்காரனான பிலாஸ்து என்பவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அரசனோடு சமாதானம் செய்ய விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தமது உணவு விநியோகத்துக்காக, அரசனின் நாட்டையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான். அப்பொழுது அவர்கள், “இது ஒரு தெய்வத்தின் குரல், மனிதனின் குரல் அல்ல” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். உடனே கர்த்தருடைய தூதன் ஒருவன் ஏரோதை அடித்தான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுப்புழுத்துச் செத்தான்.
ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது.
பர்னபாவும் சவுலும் அனுப்பிவிடப்படுதல்
பர்னபாவும், சவுலும் தங்களுடைய ஊழியத்தை முடித்துக்கொண்டு, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.
அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள். அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார். எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
சீப்புரு தீவிற்கு பிரயாணம்
அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள். அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.
அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள். அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான். ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும். அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது, “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ? இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான்.
உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.
பிசிதியாவிலுள்ள அந்தியோகியாவில் பவுல்
பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான். அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளிலே அவர்கள் ஜெப ஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள். மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு, ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய செய்தி உங்களிடம் இருந்தால், நீங்கள் பேசுங்கள்” என்றார்கள்.
பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார். ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார். கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று.
“இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான். இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார்.
“தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார். இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான். யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது. எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள். இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார். இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
“நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது:
“ ‘நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’13:33 [சங். 2:7]
அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:
“ ‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’13:34 [ஏசா. 55:3]
அப்படியே இது இன்னுமொரு இடத்தில்,
“ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’13:35 [சங். 16:10] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
“தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது. ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன். மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
“ ‘பாருங்கள், ஏளனம் செய்வோரே!
அதிசயப்பட்டு சிதறிப்போங்கள்.
ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன்.
அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும்,
நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’ ”13:41 [எபி. 1:5]
பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள். கூடியிருந்த மக்கள் கலைந்துபோனபின், அநேக யூதரும், யூத விசுவாசத்தை பின்பற்றிய பக்தியுள்ளோரும், பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி, அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.
அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள். மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது, அவர்கள் பொறாமையினால் நிறைந்து, அவர்கள் பவுல் சொல்வதற்கு எதிரிடையாய் பேசி, விரோதித்து தூஷித்தார்கள்.
அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். ஏனெனில், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது இதுவே:
“ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும்
நீ என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி,
நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்.’13:47 [ஏசா. 49:6]”
யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள்.
அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் பக்தியும், உயர்ந்த மதிப்புக்குரிய பெண்களையும் அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மைவாய்ந்தவரையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் துன்புறுத்தலை ஏற்படுத்தி, பவுலையும் பர்னபாவையும் அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட்டார்கள். எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள். சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.
இக்கோனியாவில் பவுலும் பர்னபாவும்
பவுலும் பர்னபாவும் இக்கோனியாவிலும் வழக்கப்படி யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் மிகவும் ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதரும் கிரேக்கரும் விசுவாசித்தார்கள். ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதர், யூதரல்லாத மக்களைத் தூண்டி, சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனதில் பகை உண்டாக்கினார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு, சில நாட்களை அங்கே கழித்தார்கள். அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து, கர்த்தர் தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார். அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள்; சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலரின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள். பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும், அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதரும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து, லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள். அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
லீஸ்திராவிலும் தெர்பையிலும் பவுலும் பர்னபாவும்
லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை. பவுல் பேசிக்கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் அவனை உற்றுநோக்கி, அவனுக்கு சுகம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கிறது எனக் கண்டான். எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள். அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான செயுஸ் என்றார்கள், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றார்கள். அப்பொழுது பட்டணத்திற்கு வெளியே, இருந்த செயுஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த பூசாரி காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள்.
அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்: “நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்த பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, ஜீவனுள்ள இறைவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். கடந்த காலத்தில் இறைவன் எல்லா நாட்டு மக்களையும், தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார். ஆனால், இறைவன் தம்மைக்குறித்த எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவகாலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையை காண்பித்திருக்கிறார்; அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள். இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.
அப்பொழுது அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் பவுலின்மேல் கல்லெறிந்து, அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் சீடர்கள் வந்து பவுலைச்சுற்றி நின்றபோது, அவன் எழுந்து மீண்டும் பட்டணத்திற்குள் போனான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குச் சென்றார்கள்.
சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் பவுல்
பவுல் மற்றும் பர்னபா அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீடர்களைப் பெலப்படுத்தி, விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “நாம் பல துன்பங்களை அனுபவித்து, இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும், அங்கிருந்த சீடர்களுக்கென சபைத்தலைவர்களை நியமித்தார்கள். விசுவாசிகள் உபவாசத்துடன் மன்றாடி தாங்கள் சார்ந்திருந்த கர்த்தருக்கு அந்த தலைவர்களை ஒப்புவித்தார்கள். அவர்கள் பிசீதியா வழியாகப்போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள். அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, அத்தலியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
அத்தலியாவிலிருந்து அவர்கள் அந்தியோகியாவுக்குக் கப்பல் மூலமாய்த் திரும்பிப் போனார்கள். அங்குதான் இப்பொழுது நிறைவேற்றிய பணிக்காக, இறைவனுடைய கிருபைக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். எவ்விதமாக இறைவன் விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள்.
எருசலேமில் ஆலோசனை மன்றம்
சிலர் யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்து, அங்கிருந்த சகோதரருக்குப் போதித்துக் கொண்டிருந்தார்கள்: அவர்கள், “மோசே போதித்த முறைப்படி நீங்கள் விருத்தசேதனம் செய்யாவிட்டால், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது” என்றார்கள். இதனால் பவுல், பர்னபா ஆகியோருக்கும் அவர்களுக்குமிடையில் கடுமையான தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக்குறித்து, அப்போஸ்தலரையும் சபைத்தலைவர்களையும் கலந்து பேசும்படி, எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனேகூட, சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள். திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கே வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் பண்ணுகையில், யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் மனந்திரும்பி இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தி சகோதரர் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது, திருச்சபையினாலும், அப்போஸ்தலராலும், சபைத்தலைவர்களாலும் வரவேற்கப்பட்டார்கள். பவுலும் பர்னபாவும் தங்களைக்கொண்டு இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.
அப்பொழுது பரிசேயர் குழுவைச் சேர்ந்த சில விசுவாசிகள் எழுந்து நின்று, “யூதரல்லாத மக்களும் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டு, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள்.
அப்பொழுது அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள். அதிக நேரம் கலந்துரையாடிய பின்பு, பேதுரு எழுந்து நின்று, அவர்களிடம் பேசத் தொடங்கினான்: “சகோதரரே, யூதரல்லாத மக்களும் நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதற்கென, இறைவன் உங்கள் மத்தியிலிருந்து என்னைச் சிறிதுகாலத்துக்கு முன்பு தெரிந்துகொண்டார் என்று நீங்கள் அறிவீர்கள். யூதரல்லாத மக்களும் என் உதடுகளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்க வேண்டுமென்றே அவர் என்னைத் தெரிந்துகொண்டார். இருதயத்தை அறிந்திருக்கிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததுபோல, யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார். இறைவன் விசுவாசத்தினாலேயே அவர்களுடைய இருதயங்களை சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதபடிச் செய்தார் இப்படியிருக்க, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின்மேல் நம்மாலோ, நம் தந்தையராலோ சுமக்க முடியாத நுகத்தை சுமத்துவதினால், ஏன் இறைவனைச் சோதிக்கிறீர்கள்? எனவே, கர்த்தராகிய இயேசுவின் கிருபையின் மூலமே, நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவர்களும் அப்படித்தான் இரட்சிக்கப்படுகிறார்கள்” என்றான்.
பின்பு பர்னபாவும் பவுலும் தங்கள் மூலமாக யூதரல்லாத மக்கள் மத்தியில் இறைவன் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது கூடியிருந்த அனைவரும் மவுனமாய் இருந்தார்கள். அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு பேசத் தொடங்கினான்: சகோதரரே, நான் சொல்வதைக் கேளுங்கள். இறைவன் எப்படி யூதரல்லாத மக்களிலிருந்து தமது பெயருக்கென்று மக்களைத் தெரிந்துகொள்ளும்படி, முதன்முதலில் அவர்களுக்கு தயவு காண்பித்தார் என்பதைக்குறித்து, சீமோன் நமக்கு விவரமாய் சொல்லியிருக்கிறான். எழுதப்பட்டிருக்கிறதன்படி, இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன:
“ ‘இதற்குப் பின்பு நான் திரும்பிவந்து,
விழுந்துபோன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் கட்டுவேன்.
அதில் பாழடைந்து போனவற்றைக் கட்டுவேன்.
நான் அதைத் திரும்பவும் புதுப்பிப்பேன்.
அப்பொழுது மீந்திருக்கும் மக்கள் கர்த்தரைத் தேடுவார்கள்,
எனது பெயரை வைத்துக்கொண்டிருக்கிற
யூதரல்லாத மக்கள் அனைவரும் கர்த்தரைத் தேடுவார்கள்
என்று நித்திய காலத்தை அறிந்தவரும்,15:17 [ஆமோ. 9:11],[12] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’
“எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகிறதற்கு, நாம் அவர்களுக்கு அதிக கஷ்டங்கொடுக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம். ஆயினும், அவர்கள் இறைவன் அல்லாதவைகளினால் கறைப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது என்றும், இரத்தத்தை சாப்பிடக்கூடாது என்றும் நாம் எழுதி அறிவிக்கவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பட்டணத்திலும் முந்தைய காலங்களில் இருந்து மோசேயின் இந்த சட்டங்கள் பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெப ஆலயங்களில் அவை வாசிக்கப்படுகிறதே” என்றான்.
யூதரல்லாத விசுவாசிகளுக்கு கடிதம்
பின்பு அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், திருச்சபையார் அனைவரும் தங்களில் சிலரைத் தெரிந்து, அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அவர்கள் இதற்கு பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்துகொண்டார்கள். இந்த இருவரும் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்தார்கள். அவர்களுடன் இவ்வாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்:
உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும்,
அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கிற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு எழுதுகிறதாவது:
உங்களுக்கு வாழ்த்துகள்.
எங்கள் அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், அவர்கள் தாங்கள் சொன்ன காரியங்களினாலே, உங்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி, உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கிறார்கள் என்றும், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாங்கள் அனைவரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து, எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும் பவுலுடனும் அனுப்புவதற்கு உடன்பட்டிருக்கிறோம். இவர்கள், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி, யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது நலமென்று, பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது: நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது.
உங்களுக்கு நலமுண்டாவதாக.
எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்தனர். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள். மக்கள் அதை வாசித்து, அந்த ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்தார்கள். எனவே அவர்கள் அந்த விசுவாசிகளை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் பல காரியங்களைச் சொன்னார்கள். சிறிதுகாலம் அங்கு தங்கியபின், அவர்கள் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப்போகும்படி, அங்கிருந்த விசுவாசிகள் அவர்களைச் சமாதானத்தின் ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைத்தார்கள். ஆனால் சீலாவோ, அங்கேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான்.15:34 சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. பவுலும் பர்னபாவும்கூட, அந்தியோகியாவிலே சிறிதுகாலம் தங்கியிருந்தார்கள். அங்கே அவர்கள் வேறு பலருடன் சேர்ந்து கர்த்தரின் வார்த்தையை போதித்துக்கொண்டும் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தார்கள்.
பவுலும் பர்னபாவும்
சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவிடம், “நாம் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கித்த எல்லாப் பட்டணங்களிலும் உள்ள விசுவாசிகளிடம் திரும்பிப்போய், அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றான். பர்னபாவும் அதற்கு விருப்பப்பட்டு, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் மாற்கு பம்பிலியாவிலே தங்களைவிட்டுப் பிரிந்து, தங்களுடன் ஊழியத்தில் வராமல் போனதால், அவனைக் கூட்டிக்கொண்டு போவது நல்லதல்ல என்று பவுல் நினைத்தான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் ஏற்பட்டதனால், அவர்கள் பிரிந்து சென்றார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து விசுவாசிகளால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு அவனுடன் போனான். பவுல் சீரியா, சிலிசியா வழியாகப்போய் திருச்சபைகளைப் பெலப்படுத்தினான்.
பவுல் சீலாவுடன் தீமோத்தேயு சேர்தல்
பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.
மக்கெதோனியா மனிதனைக்குறித்த பவுலின் தரிசனம்
பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார். அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள். அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான். பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
லீதியாள் மனந்திரும்புதல்
துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம்.
ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள். அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது.
அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள், ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான்.
கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான்.
அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான்; அவன் தானும், தன்னுடைய குடும்பத்தார் அனைவரும், இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள். சிறைக்காவலன் பவுலிடம், “தலைமை நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீயும் சீலாவும் வெளியே சமாதானத்துடன் போங்கள்” என்றான்.
ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்விதக் குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்பொழுது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் போகிறார்களோ? இல்லை! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டுபோய் விடட்டும்” என்றான்.
அந்த அதிகாரிகள், இதைத் தலைமை நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். எனவே தலைமை நீதிபதிகள் இவர்களை சமாளிப்பதற்காக வந்து, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே கூட்டிக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து, லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சகோதரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுச் சென்றார்கள்.
தெசலோனிக்கேயாவில் பவுலும் சீலாவும்
அவர்கள் அம்பிப்போலி, அப்பொலோனியா ஆகிய பட்டணங்கள் வழியாக வந்து, தெசலோனிக்கேயாவுக்கு வந்தார்கள். அங்கே ஒரு யூத ஜெப ஆலயம் இருந்தது. பவுல் தனது வழக்கத்தின்படியே, அந்த யூத ஜெப ஆலயத்திற்குள் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவசனத்திலிருந்து அங்கிருந்தவர்களுடன் விவாதித்தான். கிறிஸ்து வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும், இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்றும் விளக்கமாய் கூறி அதை நிரூபித்தான். நான் உங்களுக்கு அறிவிக்கிற, இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் கூறினான். சில யூதர் இதை ஏற்றுக்கொண்டு, பவுலுடனும், சீலாவுடனும் சேர்ந்துகொண்டார்கள். அப்படியே, இறைவனுக்குப் பயந்த பெரும் எண்ணிக்கையான கிரேக்கரும், மதிப்புக்குரிய பல பெண்களும், அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
ஆனால் யூதரோ பொறாமை கொண்டார்கள்; சந்தைகூடும் இடங்களில் நிற்கும் சில பொல்லாத மனிதர்களின் உதவியுடன், ஒரு கலகக் குழுவை உருவாக்கிப் பட்டணத்தில் குழப்பம் விளைவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் பட்டணத்தாருக்குமுன் கொண்டுவருவதற்காக, அவர்களைத் தேடி யாசோனுடைய வீட்டிற்கு விரைந்து ஓடினார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அவர்கள் யாசோனையும், வேறுசில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாக இழுத்து வந்தார்கள். அவர்கள், “உலகம் முழுவதிலும் கலகத்தை உண்டாக்குகிற இந்த மனிதர் இங்கேயும் வந்துவிட்டார்கள். யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வரவேற்றிருக்கிறான். அவர்கள் இயேசு என்னும் வேறொரு அரசன் இருப்பதாகக் கூறி, ரோமப் பேரரசனின் சட்ட ஒழுங்குகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள். கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது, மிகவும் குழப்பமடைந்தார்கள். பின்பு அவர்கள் யாசோனையும் மற்றவர்களையும் ஜாமீனில் போகவிட்டார்கள்.
பெரோயாவில் பவுலும் சீலாவும்
அன்று இரவே சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். பெரோயா பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் தெசலோனிக்கேயாவைச் சேர்ந்தவர்களைவிட சிறந்த குணமுடையவர்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, பவுல் சொன்னது உண்மைதானோ எனக் கண்டறிவதற்கு ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். பல யூதர்கள் விசுவாசித்தார்கள், கனம்பொருந்திய அநேக கிரேக்கப் பெண்களும் ஆண்களும் விசுவாசித்தார்கள்.
பெரோயாவில் பவுல் இறைவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கிறான் என்று தெசலோனிக்கேயாவிலுள்ள யூதர் அறிந்தபோது, அவர்கள் அங்கேயும் போய் மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிட்டார்கள். உடனே சகோதரர் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள். பவுலைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் அத்தேனே பட்டணம் வரைக்கும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது, சீலாவும் தீமோத்தேயுவும் விரைவில் தன்னிடம் வந்து சேர்ந்துகொள்ள வேண்டும் என்று பவுல் இவர்களுக்குக் கொடுத்த செய்தியைக் கொண்டுசென்றார்கள்.
அத்தேனேயில் பவுல்
பவுல் அவர்களுக்காக அத்தேனே பட்டணத்தில் காத்திருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் கலங்கினான், வேதனைப்பட்டான். எனவே அவன் ஜெப ஆலயத்திலுள்ள யூதர்களுடனும், இறைவனுக்குப் பயந்து நடந்த கிரேக்கருடனும் விவாதித்தான். அத்துடன் ஒவ்வொரு நாளும் சந்தைகூடும் இடத்தில் அங்கு வருகிறவர்களுடன் விவாதித்தான். எப்பிக்கூர், ஸ்தோயிக்கர் எனப்பட்ட சில தத்துவஞானிகள் பவுலுடன் விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், “இந்த வாயாடி என்ன சொல்ல விரும்புகிறான்?” என்றார்கள். மற்றவர்கள், “இவன் வேறு தெய்வங்களைப்பற்றி அறிவிக்கிறான் போலும்” என்றார்கள். பவுல் இயேசுவைப் பற்றியும், உயிர்த்தெழுதலைப் பற்றியும் நற்செய்தியைப் பிரசங்கித்ததினால், அவர்கள் இப்படிச் சொன்னார்கள். எனவே அவர்கள் அவனை அரியோப்பாகு என்னும் மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு அழைத்துவந்து, “நீ போதிக்கின்ற இந்த புதிய போதனை என்ன என்று நாங்கள் அறியலாமா? நீ எங்களுக்கு சில விசித்திரமான கருத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறாய். எனவே, அவற்றின் அர்த்தம் என்ன என்று அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள். அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு வாழுகின்ற வேறு நாட்டவர்களும், வேலை ஒன்றும் செய்யாமல், ஏதாவது புதிதான சிந்தனைகளைக் கேட்பதிலும், சொல்வதிலுமே தங்களுடைய நேரத்தைக் கழிப்பவர்கள்.
எனவே, பவுல் அரியோப்பாகு மன்றத்தில் எழுந்து நின்று சொன்னதாவது: “அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த மனிதரே! எல்லாவிதத்திலும் நீங்கள் பக்தி உள்ளவர்கள் என்றே நான் காண்கிறேன். ஏனெனில் நான் பட்டணத்தின் வழியாக நடந்துபோகையில், வழிபாட்டிற்குரியவைகளை நான் கவனமாய்ப் பார்த்தேன். அப்போது அவைகளின் நடுவே, நான் ஒரு பலிபீடத்தைக் கண்டேன். அதில் இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது:
‘நாம் அறியாத ஒரு தெய்வத்துக்கு’
எனவே இப்போது நீங்கள் அறியாமல் ஆராதிக்கிறவரையே, நான் அறிமுகப்படுத்துகிறேன்.
“உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவனே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராய் இருக்கிறார். அவர் கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்கிறவர் அல்ல. இறைவனுக்கு எவ்விதத் தேவையும் இல்லாதிருப்பதனால், மனிதருடைய கைகளின் பணி அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவரே எல்லா மனிதருக்கும் உயிரையும், சுவாசத்தையும், தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர் ஒரு மனிதனில் இருந்தே, எல்லா நாடுகளையும் படைத்து, அவர்களை பூமி முழுவதிலும் குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குரிய காலங்களையும் அவர்கள் வாழவேண்டிய இடங்களையும் அவரே முன்குறித்திருக்கிறார். மனிதர் இறைவனைத் தேடவேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்திருக்கிறார். அவர்கள் தம்மை நாடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. எனினும் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருக்கிறார். ‘ஏனெனில், நாம் அவரிலேயே வாழ்கின்றோம், அவரிலேயே செயல்படுகின்றோம், அவரிலேயே தங்கியுமிருக்கின்றோம்.’ உங்கள் புலவர்களில் சிலர் சொன்னதுபோல், ‘அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.’
“எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவன் தங்கத்தைப் போலவோ, வெள்ளியைப் போலவோ, கல்லைப்போலவோ ஆனவர் என்று நாம் எண்ணக்கூடாது. அவர் மனிதனின் வடிவமைப்பினாலும், திறமையினாலும் செய்யப்பட்ட உருவச்சிலையை போன்றவர் அல்ல. கடந்த காலத்தில் இப்படிப்பட்ட அறியாமையை இறைவன் பொருட்படுத்தவில்லை; ஆனால் இப்பொழுதோ, எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மக்களும் மனந்திரும்ப வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனெனில், இறைவன் தாம் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்கு ஒருநாளை நியமித்திருக்கிறார். நியாயத்தீர்ப்பை வழங்குபவரையும் அவர் நியமித்திருக்கிறார். அந்த மனிதனை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலம், அவர் எல்லா மனிதருக்கும் இதை நிரூபித்துக் காட்டியுமிருக்கிறார்” என்றான்.
இறந்தோரின் உயிர்த்தெழுதலை அவர்கள் கேட்டபோது, அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்களோ, “இதைக்குறித்து மீண்டும் நீ சொல்வதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள். அப்பொழுது பவுல், அந்த மன்றத்தை விட்டுப்போனான். சிலர் பவுலைப் பின்பற்றி இறைவனில் விசுவாசிகளானார்கள். அவர்களில் அரியோப்பாகு மன்றத்தின் உறுப்பினரான தியொனீசியு எனப்பட்ட ஒருவன் இருந்தான். தாமரி என்னும் பெயருடைய ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
கொரிந்து பட்டணத்தில் பவுல்
இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான். அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான். அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான். ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான்.
சீலாவும், தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டான். இயேசுவே கிறிஸ்து என்று அவன் யூதருக்குச் சாட்சி கூறினான். ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது, அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! எனது கடமையிலிருந்து நான் நீங்கலாயிருக்கிறேன். இப்பொழுதிலிருந்து நான் யூதரல்லாத மக்களிடம் போகிறேன்” என்றான்.
பின்பு பவுல் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யுஸ்து என்பவனுடைய வீட்டுக்குப் போனான். அவன் இறைவனை ஆராதிக்கிறவனாய் இருந்தான். ஜெப ஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றார்கள்.
ஒரு இரவில் கர்த்தர் பவுலுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவர் அவனிடம்: “பயப்படாதே, பேசிக்கொண்டேயிரு, மவுனமாயிராதே. ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார். எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான்.
அகாயா நாட்டிற்கு கல்லியோன் என்பவன் அதிபதியாய் இருக்கையில், யூதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பவுலைத் தாக்கி, அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்: “இந்த மனிதன் மோசேயின் சட்டத்திற்கு முரணான வழிகளில் இறைவனை ஆராதிக்கும்படி மக்களைத் தூண்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள்.
பவுல் பேச முயலுகையில், கல்லியோன் யூதரைப் பார்த்து, “நீங்கள் சொல்வது ஒரு குற்றச் செயலாகவோ அல்லது ஒரு பாதகமான குற்றமாகவோ இருந்தால், யூதராகிய உங்களுடைய முறையிடுதலுக்கு நான் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். ஆனால் இதுவோ சொற்கள், பெயர்கள், உங்களுடைய திருச்சட்டம் ஆகியவற்றைக் குறித்த பிரச்சனைகளாய் இருப்பதால், இதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு நான் நீதிபதியாய் இருக்க விரும்பவில்லை” என்றான். எனவே அவன் நீதிமன்றத்திலிருந்து அவர்களை வெளியேற்றினான். அப்பொழுது அனைவரும் ஜெப ஆலயத் தலைவனான சொஸ்தேனைப் பிடித்து நீதிமன்றத்தின் முன்னாக அடித்தார்கள். ஆனால் கல்லியோனோ அதைக்குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.
பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா, அப்பொல்லோ
பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து, சிலகாலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களை விட்டு, கப்பல் மூலம் சீரியாவுக்குப் போனான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனுடனேகூடச் சென்றார்கள். பவுல் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான். பின்பு அவர்கள் எபேசு பட்டணத்தை வந்தடைந்தார்கள். பவுல் பிரிஸ்கில்லாவையும், ஆக்கில்லாவையும் அங்கேயே இருக்கும்படி சொன்னான். பவுலோ அங்குள்ள ஜெப ஆலயத்திற்குப்போய், யூதருடன் ஆதாரம் காட்டி விவாதித்தான். அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்டகாலம் தங்கும்படி கேட்டபோது, அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அவன் அவர்களைவிட்டுப் புறப்படுகையில், “இறைவனின் சித்தமானால் நான் திரும்பிவருவேன்” என்று வாக்களித்தான். அதற்குப் பின்பு அவன் எபேசுவிலிருந்து கப்பலேறிப் போனான். அவன் செசரியாவைச் சென்றடைந்து, அங்கிருந்து எருசலேமிலுள்ள திருச்சபைக்குப் போய், அவர்களை வாழ்த்தினான். பின்பு அங்கிருந்து, அந்தியோகியாவுக்குப் போனான்.
சிலகாலம் அந்தியோகியாவில் தங்கிய பின்பு, அவன் புறப்பட்டு கலாத்தியா, பிரிகியா பகுதிகள் வழியாக ஒவ்வொரு இடமாக சென்று, எல்லா சீடர்களையும் தைரியப்படுத்தினான்.
இதற்கிடையில், அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவிற்கு வந்தான். அவன் ஒரு கல்விமானும், வேதவசனங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவனுமாய் இருந்தான். கர்த்தருடைய வழியைக் குறித்த அறிவுறுத்தலை அவன் பெற்றிருந்தான். அவன் இயேசுவைக்குறித்த காரியங்களை மிகுந்த ஆர்வத்துடன் பிழையின்றி போதித்தான். ஆனால் அவன், யோவானுடைய திருமுழுக்கைப் பற்றி மாத்திரமே அறிந்திருந்தான். அவன் ஜெப ஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபொழுது, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவனுடைய வழியை அவனுக்கு இன்னும் அதிகத் தெளிவாய் விளக்கிக் கூறினார்கள்.
அப்பொல்லோ அகாயாவுக்குப் போக விரும்பியபோது, சகோதரர்கள் அவனுக்கு உற்சாகமூட்டி, அங்குள்ள சீடர் அவனை வரவேற்கும்படி, அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அவன் அங்கு வந்துசேர்ந்து, கிருபையின் மூலம் விசுவாசிகளான அவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தான். அவன் வேதவசனங்களிலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, வெளிப்படையான விவாதங்களில் யூதர்களுடன் பலமாய் வாதாடினான்.
எபேசு பட்டணத்தில் பவுல்
அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தில் இருந்தபோது பவுல் தரைவழியாகப் பிரயாணம் செய்து, எபேசு பட்டணத்திற்கு வந்தான். அங்கே பவுல் சில சீடர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவியானவர் ஒருவர் இருக்கிறார் என்றுகூட நாங்கள் கேள்விப்படவில்லை” என்றார்கள்.
அப்பொழுது பவுல், “அப்படியானால், நீங்கள் எந்த திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “யோவானுடைய திருமுழுக்கு” என்றார்கள்.
எனவே பவுல், “யோவானின் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்கே. அவன் மக்களிடம், எனக்குப் பின்வருகிறவரான இயேசுவிலேயே நீங்கள் விசுவாசம் வைக்கவேண்டும் என்று சொன்னான்” என்றான். அவர்கள் இதைக் கேட்டு, கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றார்கள். பின்பு பவுல், அவர்கள்மேல் தனது கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார். அவர்கள் வேற்று மொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள். அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள்.
பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று துணிவுடன் பேசினான். அங்கே மூன்று மாதங்களாக இறைவனுடைய அரசைக் குறித்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி, விசுவாசிக்க மறுத்தார்கள்; அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் வழியைக் குறித்துத் தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப்போய், திறன்னு என்பவனின் கல்விக் கூடத்திலே, ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான். இது இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆசியா பகுதியில் வாழ்ந்த யூதர்கள், கிரேக்கர் அனைவரும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள்.
இறைவன் பவுலைக் கொண்டு மிகப்பெரிதான அற்புதங்களைச் செய்தார். பவுலின் உடலில் தொடப்பட்ட கைக்குட்டைகளையும், மேலுடைகளையும் கொண்டுபோய் நோயாளிகளின்மேல் போட்டபோது, அவர்களுடைய வியாதிகள் சுகமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.
பல்வேறு இடங்களுக்குப் போய் அசுத்த ஆவிகளை துரத்தும் சில யூதர்கள், பிசாசு பிடித்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் பெயரை பயன்படுத்த முயன்றார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயராலே, வெளியே போகும்படி நான் கட்டளையிடுகிறேன்” என்று சொல்லியே துரத்தினார்கள். யூத பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு மகன்களே, இவ்வாறு செய்தார்கள். அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது. பின்பு அசுத்த ஆவியுள்ள மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எல்லோரையும் மேற்கொண்டான். அவன் அவர்களை அதிகமாக அடித்ததினால், அவர்கள் அந்த வீட்டைவிட்டு இரத்தக் காயங்களுடன் உடைகளின்றி ஓடிப்போனார்கள்.
எபேசு பட்டணத்திலுள்ள யூதரும் கிரேக்கரும் இதை அறிந்தபோது, அவர்கள் எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. கர்த்தராகிய இயேசுவின் பெயர் மகிமைப்பட்டது. விசுவாசித்த பலர் முன்வந்து, தாங்கள் செய்த தீயசெயல்களை வெளியரங்கமாக அறிக்கையிட்டார்கள். மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர் தங்களுடைய புத்தகச்சுருள்களைக் கொண்டுவந்து வெளியரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச்சுருள்களின் மதிப்பை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக்காசு மதிப்புடையதாய் இருந்தது. இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
இவையெல்லாம் நடந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகள் வழியாக எருசலேமுக்குப் போகத் தீர்மானித்தான். “நான் அங்கு போனபின், ரோமுக்கும் போகவேண்டும்” என்று சொன்னான். அவன் தனது உதவியாளர்களில் தீமோத்தேயு, எரஸ்து ஆகிய இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினான். அவனோ ஆசியாவின் பகுதியிலே, இன்னும் சிறிதுகாலம் தங்கினான்.
எபேசு பட்டணத்தின் குழப்பம்
அக்காலத்தில் கிறிஸ்துவின் வழியைக் குறித்து ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று. தெமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு தட்டான் இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். அவன் அந்தத் தொழில் செய்கிறவர்களையும், இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “மனிதரே, இந்த வியாபாரத்திலிருந்து, நாம் நல்ல வருமானத்தைப் பெற்றுவருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பவுல் என்பவன், கைகளினால் செய்யப்பட்டவை தெய்வங்கள் அல்ல என்று சொல்லி பெருந்திரளான மக்களை நம்பப்பண்ணி, தன் பக்கமாகத் திரும்பச் செய்திருக்கிறான். எபேசுவில் மட்டுமல்ல, முழு ஆசியா பகுதியிலும் அவன் இப்படிச் செய்திருக்கிறான். இதை நீங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். நம் வியாபாரத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது மட்டுமல்ல, மாபெரும் தேவதையான அர்த்தமிஸின் கோவில் மதிப்பிழந்தும் போகப்போகிறது. ஆசியா முழுவதிலும், உலகமெங்கும் வணங்கப்படும் அந்தத் தேவதையின் மகத்துவமும் இல்லாது போய்விடும்” என்றான்.
அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, “எபேசியரின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று சத்தமிட்டார்கள். உடனேயே முழுப்பட்டணமும் கலவரமடைந்தது. கூடியிருந்த மக்களோ, பவுலுடன் பயணம் செய்தவர்களான மக்கெதோனியாவைச் சேர்ந்த காயு, அரிஸ்தர்க்கு என்பவர்களைப் பிடித்துக்கொண்டார்கள். மக்கள் இவர்களை இழுத்துக்கொண்டு, ஒருமிக்க அரங்க மண்டபத்திற்குள் கொண்டுசென்றார்கள். பவுல் மக்கள் கூட்டத்தின்முன் போய் அவர்களுடன் பேச விரும்பினான். ஆனால் சீடரோ, அவனைப் போகவிடவில்லை. பவுலின் நண்பர்களான அந்த மாநிலத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று கூறி, அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.
அங்கே கூடியிருந்த மக்கள் மிகக் குழப்பமடைந்திருந்தார்கள்; சிலர் ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள், மற்றவர்கள் வேறு ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள். அவர்களில் அநேகருக்குத் தாங்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. யூதரோ, அலெக்சந்தர் என்பவனை கூட்டத்திற்குமுன் தள்ளிவிட்டார்கள். ஜனக்கூட்டத்திலுள்ள சிலர் அவனைப் பார்த்து சத்தமிட்டார்கள். அவன் மக்களை மவுனமாய் இருக்கும்படி சைகை காட்டி, அவர்களுக்குத் தமது சார்பான நியாயத்தை எடுத்துக்கூற முயற்சித்தான். ஆனால் அவன் ஒரு யூதன் என்று அவர்கள் அறிந்தபோது, அவர்கள் இரண்டு மணிநேரம், “எபேசியர்களின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று ஒரே குரலில் சத்தமிட்டார்கள்.
அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, பெரிதான அர்த்தமிஸ் உருவச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச்சிலைக்கும், எபேசு பட்டணமே பாதுகாப்பு இடமாக இருக்கிறது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே. இவை மறுக்கமுடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் முன்யோசனையின்றி எதையுமே செய்யாமல், அமைதியாய் இருக்கவேண்டும். நீங்கள் இந்த மனிதரை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால் இவர்களோ, ஆலயங்களைக் கொள்ளையடிக்கவும் இல்லை, நமது தேவதையை அவதூறாய் பேசவும் இல்லை. எனவே தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளிகளுக்கும், யார் மீதாவது ஒரு வழக்கு இருக்குமானால், அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே அதிபதிகளும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை அங்கே எடுத்துச் சொல்லட்டும். இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கிருந்தால், அது சட்ட மன்றம் கூடியே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இப்பொழுது இன்று நடந்த இந்த சம்பவத்தினால், நாமே கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்படக்கூடிய ஒரு ஆபத்தில் இருக்கிறோம். அவ்வாறு குற்றஞ்சாட்டினால், இந்தக் கலகம் நியாயமானது எனக் காட்டுவதற்கு நம்மால் முடியாது, ஏனெனில், நாம் சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை” என்றான். அவன் இதைச் சொல்லி முடித்தபின்பு, கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.
மக்கெதோனியா, கிரேக்கம் வழியாக பவுலின் பயணம்
கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடரை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தினான். பின் அவர்களிடம் விடைபெற்று, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான். அவன் அந்தப் பகுதிகள் வழியாகப்போய், மக்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான். அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஏனெனில், அவன் கப்பல் ஏறி சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில், யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான். அவனுடனேகூட பெரோயா பட்டணத்தைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்துஸ், தெர்பையைச் சேர்ந்த காயு, தீமோத்தேயு, ஆசியா பகுதியைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீம் ஆகியோரும் சென்றார்கள். இவர்கள் எங்களுக்கு முன்பாகப் போய் துரோவா பட்டணத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் நாங்களோ, புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குப் பின், பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் மூலம் புறப்பட்டு, ஐந்து நாட்களுக்குப்பின் துரோவா பட்டணத்திற்கு வந்து, அவர்களோடு சேர்ந்துகொண்டோம். அங்கே நாங்கள் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.
ஐத்திகு உயிர் பெறுதல்
வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே, பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த நித்திரை மயக்கத்திலிருந்ததால், மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான். பவுல் கீழே இறங்கிப்போய், அந்த வாலிபன்மீது விழுந்து, தனது கைகளினால் அவனை அணைத்துக்கொண்டான். அவன் அங்கே நின்றவர்களிடம், “பயப்படவேண்டாம். அவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி, அவனை அவர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவன் மேல்மாடிக்குத் திரும்பவும் போய், விசுவாசிகளுடன் அப்பம் பிட்டு சாப்பிட்டான். அவன் விடியும்வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனான். அந்த வாலிபனை மக்கள் உயிருடன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது.
எபேசுவின் சபைத்தலைவர்களுக்கு பிரியாவிடை
பவுல் கால்நடையாய் ஆசோ பட்டணத்திற்குப்போக ஏற்கெனவே தீர்மானித்திருந்ததால், நாங்கள் அவனுக்கு முன்னே கப்பலேறி, ஆசோ பட்டணத்திற்குப் போனோம். அங்கே பவுலை எங்களுடனே கப்பலில் ஏற்றிக்கொள்வது எங்கள் நோக்கமாயிருந்தது. அவன் எங்களை ஆசோ பட்டணத்தில் சந்தித்தபோது, அவனையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்திற்குப் போனோம். மறுநாள் நாங்கள் கப்பலில் கீயு என்று அழைக்கப்படும் தீவிற்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்கடுத்த நாள் சாமு தீவைக் கடந்து, அதற்கடுத்த நாள் மிலேத்து பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். பவுல் பெந்தெகொஸ்தே நாளிலே, எருசலேமைச் சென்றடைய வேண்டுமென்று ஆவலுடையவனாய் இருந்தான். ஆதலால் அவன் ஆசியா பகுதியிலே காலத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக்கொள்ள விரும்பி, எபேசுவைக் கடந்துபோகத் தீர்மானித்தான்.
பவுல் மிலேத்து பட்டணத்திலிருந்து, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் தலைவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளனுப்பினான். அவர்கள் அவனிடம் வந்தபோது, அவன் அவர்களைப் பார்த்து: “நான் ஆசியா பகுதிக்கு வந்தநாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும், எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அதிகத் தாழ்மையோடும் கண்ணீரோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன். உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக்கூடிய எதையும் உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளியரங்கமாகவும், வீடுகள்தோறும் உங்களுக்குப் போதித்தேன். யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், நம் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்றும் நான் அறிவித்தேன்.
“இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் கட்டுண்டவனாக நான் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். ஆனால் என் வாழ்வு எனக்கு ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
“உங்கள் மத்தியில் நான் இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட யாவரும் என்னை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே உங்களில் யாராவது அழிந்தால், அந்த இரத்தப்பழி என்மேல் சுமராது என்று, நான் உங்களுக்கு இன்று உறுதியாய் அறிவிக்கிறேன். ஏனெனில், இறைவனுடைய முழுத் சித்தத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார். நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். உங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும்கூட எழும்பி, தங்கள் பக்கமாய் சீடரை இழுத்துக் கொள்வதற்கு, உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
“இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. யாருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்படவில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்த இவை எல்லாவற்றிலும், இவ்விதம் கஷ்டப்பட்டு வேலைசெய்தே, நாம் நலிவுற்றோர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று, நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே அதிக ஆசீர்வாதம்’ என்று கர்த்தராகிய இயேசு தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன்” என்றான்.
பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவர்கள் அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள். “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.
பவுல் எருசலேம் பட்டணத்திற்கு பயணம்
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம். அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம். நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது. அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள். ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம். பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம். மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன். அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான். அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
எருசலேமில் பவுல்
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள். பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள். எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள். இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள். யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
பவுல் கைதுசெய்யப்படுதல்
அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள். அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள். ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது. அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான். மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான். பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
பவுல் மக்களோடு பேசுதல்
படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா? சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.
பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.
அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள்.
அப்பொழுது பவுல் சொன்னதாவது: “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன். இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன். இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.
“நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.
“ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன்.
“அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார். என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
“அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன்.
“அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார். என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
“பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான். அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
“பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார். நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
“பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன். அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
“அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே. உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.
“அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.
ரோமக் குடிமகனான பவுல்
பவுல் இதைச் சொல்லும்வரை கூடியிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்பு அவர்கள் உரத்த குரலில், “பூமியிலிருந்து இவனை அடியோடு ஒழியுங்கள். இவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன்!” என்று சத்தமிட்டார்கள்.
அவர்கள் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள். புழுதியை அள்ளி மேலே வீசினார்கள். அதனால் அந்த படைத்தளபதி, பவுலை முகாமுக்குள் கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், கூடியிருந்த மக்கள் ஏன் பவுலைப் பார்த்து இப்படிச் சத்தமிட்டார்கள் என்று அறியும்படி, அவனை சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டான். அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தலைவனைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.
அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல்.
“ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.
அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம், “நான் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியே என் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்” என்றான்.
அதற்கு பவுல், “நானோ இந்தக் குடியுரிமை உடையவனாகவே பிறந்தேன்” என்றான்.
பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச்சென்றார்கள். தான், ஒரு ரோம குடிமகனான பவுலை சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது, அந்த படைத்தளபதியும் பயமடைந்தான்.
ஆலோசனைச் சங்கத்தின்முன் பவுல்
மறுநாளில் படைத்தளபதி, பவுல் ஏன் யூதர்களினால் குற்றம் சாட்டப்பட்டான் என்று சரியாக அறிய விரும்பினான். அதனால் அவன் பவுலை சங்கிலிகளிலிருந்து விடுவித்து, தலைமை ஆசாரியர்களையும், ஆலோசனைச் சங்கத்திலுள்ள அனைவரையும் ஒன்றுகூடும்படி உத்தரவிட்டான். பின்பு அவன் பவுலைக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான். அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.
அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.
அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே”23:5 [யாத். 22:28] என்றான்.
பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும், மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், பரிசேயனின் மகன். இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற எனது எதிர்பார்ப்பின் நிமித்தமே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயர் இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும், இறைத்தூதரோ ஆவிகளோ இல்லையென்று சொல்லுகிறார்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று, மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் ஒன்றையும் காணவில்லை, ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைத்தூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள். விவாதம் வன்முறையானபோது, பவுலைச் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று படைத்தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி படைவீரருக்கு உத்தரவிட்டான்.
மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.
பவுலைக் கொலைசெய்யச் சூழ்ச்சி
மறுநாள் காலையிலேயே சில யூதர்கள் ஒன்றுகூடி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் பவுலைக் கொலைசெய்யும் வரைக்கும் சாப்பிடுவதோ, குடிப்பதோ இல்லையென்று சபதமும் எடுத்துக்கொண்டார்கள். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் தலைமை ஆசாரியர்களிடமும், யூதரின் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலைசெய்யும்வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறோம். இப்பொழுது நீங்களும், ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், பவுலை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் முறையிடுங்கள். அவனுடைய வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாக முயற்சிசெய்ய வேண்டும். அவன் இங்கே வருவதற்கு முன்பதாகவே, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருப்போம்” என்றார்கள்.
ஆனால் பவுலின் சகோதரியின் மகன், இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவன் முகாமுக்குள் போய், இதைப் பவுலுக்குச் சொன்னான்.
அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டுபோ; இவன் தலைவனுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது” என்றான். அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான்.
அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான்.
படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், “நீ எனக்கு சொல்ல விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான்.
அவன் சொன்னதாவது: “பவுலைக் குறித்து இன்னும் அதிகத் தெளிவாய் விசாரணை செய்யப்போவதாக முயற்சி செய்து, அவரை ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக, நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உம்மைக் கேட்டுக் கொள்வதற்கு யூதர்கள் உடன்பட்டிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்கவேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலைசெய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்யும்வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று, அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆயத்தமாகி, அவர்களின் வேண்டுகோளுக்கு நீர் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
அந்த படைத்தளபதி அந்த வாலிபனைப் போகும்படி சொல்லி, “நீ இதை எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அவனை எச்சரித்தான்.
பவுல் செசரியாவுக்குக் கொண்டு செல்லப்படுதல்
பின்பு படைத்தளபதி, தன் கீழுள்ள நூற்றுக்குத் தலைவர்களில் இருவரை அழைத்து, அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு படைவீரரையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள். பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள். அவன் ஆளுநர் பேலிக்ஸினிடம் பாதுகாப்பாய் கொண்டு செல்லப்பட வேண்டும்.”
அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:
கிலவுதியு லீசியா ஆகிய நான்,
மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகிறதாவது:
வாழ்த்துகள்.
இந்த மனிதன் பவுல் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று நான் அறிந்து, எனது படைவீரருடன் சென்று, இவனைத் தப்புவித்தேன். அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தேன். அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சட்டத்தைக் குறித்த கேள்விகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரண தண்டனைக்கோ, சிறைத் தண்டனைக்கோ ஏதுவான குற்றச்சாட்டாய் இருக்கவில்லை. இவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, நான் உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பிவைக்கிறேன். இவனைக் குற்றம் சாட்டியவர்களுக்கும், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
எனவே படைவீரர்கள் தங்களுக்கு உத்தரவிடப்பட்டபடியே, இரவுவேளையில் பவுலைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு, அந்திப்பத்திரி பட்டணம்வரை வந்தார்கள். மறுநாள் குதிரைவீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு, மற்றவர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள். குதிரைவீரர் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து, பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள். ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து, அவன் பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இங்கே வரும்போது, நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.
பேலிக்ஸின் முன் பவுல்
ஐந்து நாட்களுக்குபின், பிரதான ஆசாரியன் அனனியாவும், யூதரின் தலைவரில் சிலரும், தெர்த்துல்லு என்னும் பெயருடைய வழக்கறிஞனும், செசரியாவுக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கே பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆளுநருக்குமுன் வைத்தார்கள். பவுல் அழைத்து வரப்பட்டபோது, தெர்த்துல்லு என்பவன் பேலிக்ஸின் முன்பாக தன் வழக்கை எடுத்துரைத்தான்: “மாண்புமிகு ஆளுநர் அவர்களே, உமது ஆட்சியின்கீழ் நீண்டகாலமாக நாங்கள் சமாதானத்தை அனுபவித்து வருகிறோம், உம்முடைய முன்விவேகத்தால், இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும், எல்லா விதத்திலேயும், இதை நாங்கள் மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நான் உம்மைத் தொடர்ந்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. எனவே நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதைத் தயவாய் கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்.
“இந்த பவுல் குழப்பத்தை விளைவிக்கிறவனாய் இருக்கிறதை நாங்கள் கண்டோம். உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியில், இவன் குழப்பத்தை மூட்டி வருகிறான். இவனே நசரேய பிரிவினரின் தலைவனாயிருக்கிறான். இவன் ஆலயத்தைக்கூட தூய்மைக்கேடாக்க முயன்றான்; அதனால் எங்கள் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக எங்கள் கைகளிலிருந்து இவனை இழுத்துக்கொண்டுபோய், இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களை உமது முன்வரும்படி கட்டளையிட்டான். நீரே இவனை விசாரித்தால், நாங்கள் இந்த பவுலுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையையும் அறிந்துகொள்வீர்” என்றான்.24:8 சில மூலபிரதிகளில் 7ஆம் மற்றும் 8 ஆம் வசனத்தின் முதலாம் பகுதி காணப்படுவதில்லை.
யூதரும் குற்றம் சாட்டுவதில் வழக்கறிஞனுடனே சேர்ந்து, இவையெல்லாம் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள்.
பவுல் பேசும்படி ஆளுநர் சைகை காட்டியபோது, அவன் சொன்னதாவது: “பலவருடங்களாக இந்த நாட்டின்மேல் நீர் நீதிபதியாய் இருப்பதை நான் அறிவேன்; எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய்ப் பேசுகிறேன். நான் வழிபாடு செய்யும்படி எருசலேமுக்குப் போய் இன்னும் பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை. இதை நீர் விசாரித்து எளிதாக அறிந்துகொள்ளலாம். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள், நான் ஆலயத்திலே யாருடனாவது விவாதம் செய்ததைக் கண்டதில்லை. அல்லது ஜெப ஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் குழப்பம் செய்யத் தூண்டியதையும் இவர்கள் கண்டதில்லை. இவர்கள் இப்பொழுது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகளை உமக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது. ஆனால் இந்த வழியைப் பின்பற்றி, எங்கள் தந்தையரின் இறைவனை வழிபடுகிறேன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதையே இவர்கள், ‘பிரிவினை மார்க்கம்’ என்று சொல்கிறார்கள். மோசேயின் சட்டத்தில் கூறப்பட்டவைகளுடனும், இறைவாக்கினரின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன். நீதிமான்களும் அநீதிமான்களும் இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்ற அதே எதிர்பார்ப்பு இவர்களைப் போல் எனக்கும் இறைவனில் இருக்கிறது. அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும், என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்பொழுதும் பிரயாசப்படுகிறேன்.
“நானோ பல வருடங்களுக்குப்பின், என் மக்களுக்கும், ஏழைகளுக்கும் நன்கொடைகளையும் காணிக்கைகளையும் கொடுப்பதற்கு எருசலேமுக்கு வந்தேன். இதை நான் ஆலய முற்றத்தில் செய்யும்போது, இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்பொழுது நான், பாரம்பரிய முறைப்படி சுத்தமாகவே இருந்தேன். என்னுடனே மக்கள் கூட்டம் எதுவும் இருக்கவில்லை. எந்தவிதக் குழப்பத்திலும் நான் ஈடுபடவும் இல்லை. ஆனால் ஆசியா பகுதியிலிருந்து சில யூதர்கள் அங்கே வந்தார்கள். எனக்கு எதிராய் அவர்களுக்கு ஏதாவது இருந்தால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு, அவர்கள் இங்கே உமக்கு முன்பு இருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், இங்கிருக்கும் இவர்கள் நான் ஆலோசனைச் சங்கத்தின்முன் நின்றபோது, என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று கூறவேண்டும். ‘இறந்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைக் குறித்தே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள்முன் நின்றபோது, அன்று சத்தமிட்டுச் சொன்னேன். இந்த ஒரு குற்றச்சாட்டையே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.
அப்பொழுது இந்த வழியை நன்றாக அறிந்திருந்த பேலிக்ஸ் விசாரணையை ஒத்திப்போட்டான். அவன், “படைத்தளபதி லீசியா வரும்போது, உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொன்னான். பேலிக்ஸ் பவுலைக் காவலில் வைக்கும்படி நூற்றுக்குத் தலைவனுக்கு உத்தரவிட்டான். ஆனால் பவுலுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கும்படியும், அவனுடைய தேவைகளைக் கொடுத்து, உதவுவதற்கு அவனது நண்பர்களை அனுமதிக்கும்படியும் பேலிக்ஸ் சொல்லியிருந்தான்.
சில நாட்களுக்குப்பின்பு, பவுல் பேசுவதைக் கேட்பதற்காக, பேலிக்ஸ் யூதப்பெண்ணான தன் மனைவி துருசில்லாளுடன் வந்தான். அவன் பவுலை அழைத்து வரச்சொல்லி, கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் நீதியைக் குறித்தும், சுயக்கட்டுப்பாட்டைக் குறித்தும், வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசியபொழுது, பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இது போதும். நீ போகலாம். எனக்கு வசதியான ஒரு நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான். அதே நேரத்தில், பவுல் தனக்கு பணம் கொடுப்பான் என்று பேலிக்ஸ் எதிர்பார்த்து, பவுலை அடிக்கடி வரவழைத்து அவனிடம் பேசினான்.
இப்படி இரண்டு வருடங்கள் கடந்துசென்றன. பேலிக்ஸின் இடத்தில் பொர்க்கியு பெஸ்து என்பவன் பதவிக்கு வந்தான். ஆனால் பேலிக்ஸ் யூதருக்குத் தயவுகாட்ட விரும்பி, பவுலை சிறையிலேயே விட்டுச்சென்றான்.
பெஸ்துவின்முன் பவுல்
அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே தலைமை ஆசாரியர்களும், யூதத்தலைவர்களும் அவனிடம் வந்து பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் பெஸ்துவிடம், தங்களுக்குத் தயவுகாட்டி பவுலை எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவசரமாகக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன். உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அவன் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கேயே அவன்மேல் சுமத்தட்டும்” என்றான்.
அவன் எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு, செசரியாவுக்குப் போனான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து அங்கு வந்த யூதர் அவனைச்சுற்றி நின்றார்கள், அவர்கள் அவன்மேல் மிகவும் கடுமையான, அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாமல் போயிற்று.
அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான்.
பெஸ்து யூதருக்கு தயவுகாட்ட விரும்பியவனாய் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்ய உடன்படுகிறாயா?” என்று கேட்டான்.
அதற்குப் பவுல் அவனிடம், “நான் இப்பொழுது ரோமப் பேரரசனுடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கின்றேன். இங்கேயே நான் விசாரணை செய்யப்படவேண்டும். நீர் நன்றாய் அறிந்திருக்கிறபடி, நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை. ஆனால், மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியான ஏதாவது குற்றத்தை நான் செய்திருந்தால், நான் சாவதற்கு மறுக்கவில்லை. ஆனால், எனக்கு எதிராக இந்த யூதரால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாய் இருக்குமானால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்கிறேன்” என்றான்.
பெஸ்து தனது ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டுப் பவுலிடம், “நீ ரோம பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறாய், நீ ரோம பேரரசனிடமே போவாய்” என்றான்.
பெஸ்துவும் அகிரிப்பா அரசனும்
சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள். அவர்கள் பல நாட்கள் அங்கே தங்கியிருந்ததால், பெஸ்து பவுலின் வழக்கைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம்: “பேலிக்ஸ் சிறைக்கைதியாய் விட்டுச்சென்ற ஒருவன் இங்கே இருக்கிறான். நான் எருசலேமுக்குப் போனபோது, தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் அவனுக்கு விரோதமாய் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்து, அவனைக் குற்றவாளியாய் தீர்க்கும்படி என்னைக் கேட்டார்கள்.
“அதற்கு நான் அவர்களிடம், ‘ஒருவன் தன்மேல் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு முன்நின்று, அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எதிராக, தனது சார்பாகப் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்குமுன், அவனைக் குற்றவாளியாக ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன். அவர்கள் என்னுடன் இங்கே வந்தபோது, நான் வழக்கைத் தாமதப்படுத்தவில்லை. மறுநாளே நான் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுல் என்கிற அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவனைக் குறித்து தகராறு செய்தார்கள். இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன்; அதனால் நான் அவனிடம், ‘நீ எருசலேமுக்குப் போய், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன். ஆனால் பவுலோ, ரோமப் பேரரசனுடைய தீர்ப்புக்காக தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி மேல்முறையீடு செய்தான். எனவே அவன் ரோமப் பேரரசனிடம் அனுப்பப்படும் வரைக்கும், தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான்.
அப்பொழுது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அவன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
அதற்கு பெஸ்து, “நாளைக்கே அவன் பேசுவதை நீர் கேட்கலாம்” என்றான்.
அகிரிப்பாவின்முன் பவுல்
மறுநாள் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் சிறப்பான வரவேற்புடன் மக்கள் அரங்கத்திற்குள் வந்தார்கள். அவர்களுடன் உயர் அதிகாரிகளும், பட்டணத்தில் உயர் மதிப்புக்குரிய மனிதரும் வந்தார்கள். பெஸ்துவின் கட்டளைப்படி, பவுல் அங்கு கொண்டுவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: “அகிரிப்பா அரசனே, எங்களோடு இங்கே இருக்கிறவர்களே, இவனை நீங்கள் பார்க்கிறீர்கள்; இவனைக் குறித்து எருசலேமிலும், இங்கே செசரியாவிலும் யூத சமூகத்தவர் யாவரும் என்னிடம், அவன் இனியும் உயிர் வாழக்கூடாது என்று சத்தமிட்டு முறையிட்டார்கள். ஆனால் மரண தண்டனை பெறக்கூடிய எதையும் அவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். இவன் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால் ரோமப் பேரரசன் சீசருக்கு இவனைக் குறித்து நான் எழுதுவதற்கு குறிப்பிடத்தக்கது எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்பொழுது இவனை உங்கள் எல்லோருக்கும் முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். விசேஷமாக, அகிரிப்பா அரசனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த விசாரணையின் முடிவில், இவனைக் குறித்து எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு கைதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எழுதாமல் அவனை அனுப்புவது நியாயமல்ல என்று நான் எண்ணுகிறேன்” என்றான்.
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “உன் வழக்கை எடுத்துரைக்க உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான்.
எனவே பவுல் தனது கையினால் சைகை காட்டி தனது சார்பாகப் பேசத் தொடங்கினான்: “அகிரிப்பா அரசனே, யூதருடைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் எதிராக, நான் எனது சார்பாக பேசும்படி, இன்று உமக்கு முன்பாக நிற்பது, ஒரு வாய்ப்பு என கருதுகிறேன். ஏனெனில், யூதருடைய எல்லா முறைகளைக் குறித்தும், கருத்து முரண்பாடுகளைக் குறித்தும், நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.
“நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து, என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதரும் அறிவார்கள். நீண்டகாலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி எங்கள் சமயத்திலுள்ள கண்டிப்பான பிரிவின்படி, ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை, அவர்கள் விரும்பினால் சாட்சியாகச் சொல்லலாம். எங்கள் தந்தையருக்கு இறைவன் வாக்குத்தத்தம் பண்ணியதில், நான் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாகவே, இன்று நான் இங்கே விசாரணை செய்யப்படுகிறேன். இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே, எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும், இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணிசெய்கிறார்கள். அரசே, அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே, யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள். இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவது நம்பமுடியாத செயல் என்று நீங்கள் கருதுவது ஏன்?
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன். அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை ஆசாரியரின் அதிகாரத்தைப் பெற்று, பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது, அவர்களுக்கு எதிராக நானும் என் ஒப்புதலை வழங்கியிருந்தேன். பலமுறை அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும்படி, ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போனேன். இறைவனை அவமதித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். நான் அவர்களுக்கு எதிராகக் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வெளிநாட்டின் பட்டணங்களுக்கும் போனேன்.
“இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது.
“அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன்.
“ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும். நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன். நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.
“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை. எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன். இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை. கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார்.
அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.
அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது. அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான்.
அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.
அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.
பவுல் ரோம் பட்டணத்திற்குப் பயணம்
நாங்கள் கப்பல் ஏறி இத்தாலியாவுக்குப் போகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது, பவுலும் வேறுசில கைதிகளும், யூலியு என்னும் நூற்றுக்குத் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன். நாங்கள் அதிரமித்தியம் ஊரிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது ஆசியா பகுதியின் கரையோரத்திலுள்ள துறைமுகங்களை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த மக்கெதோனியனான அரிஸ்தர்க்கு என்பவனும், எங்களுடன் இருந்தான்.
மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகத்தில் இறங்கினோம். யூலியு, பவுலின்மேல் தயவு காண்பித்தான். அதனால் பவுல் தன் சிநேகிதர்களிடம் போய்ப் பராமரிக்கப்படவும், உதவி பெற்றுக்கொள்ளவும், அவன் அனுமதித்தான். அங்கிருந்து நாங்கள் மீண்டும் புறப்பட்டு, சீப்புரு தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்துசென்றோம். ஏனெனில், காற்று எங்களுக்கு எதிராய் வீசிக்கொண்டிருந்தது. பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்துசென்று லிசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம். அங்கே அந்த நூற்றுக்குத் தலைவன், இத்தாலியாவுக்கு வந்த அலெக்சந்திரியா பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கப்பலைக் கண்டு எங்களை அதில் ஏற்றினான். பல நாட்களாக நாங்கள் மெதுவாகப் பயணம் செய்து, சிரமத்துடனே கினீது தீவுக்கு அப்பால் வந்து சேர்ந்தோம். காற்று எங்களுக்கு எதிராய் வீசி, எங்கள் பாதையைத் தடைசெய்தபடியால், சல்மோனே முனைக்கு எதிராகப் போய், கிரேத்தாத் தீவின் ஒதுக்குப் புறமாக பயணம் செய்தோம். சிரமத்துடனே அப்பகுதியைக் கடந்து, பாதுகாப்புத் துறைமுகம் எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேய பட்டணத்தின் அருகே இருந்தது.
“இந்தப் பயணத்தில் அதிககாலம் சென்றுவிட்டது. பாவநிவாரண தினமும் கடந்துவிட்டது, தொடர்ந்து கடலில் பயணம் செய்வது ஆபத்தானது” என்று பவுல் அவர்களை எச்சரித்து, “நண்பர்களே, நமது கப்பற்பயணம் ஆபத்தானதாய் இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது. கப்பலுக்கும் பொருட்களுக்கும் மட்டுமல்ல, நம் உயிர்களுக்கும் இழப்பு நேரிடலாம்” என்றான். ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுல் சொன்னதைக் கவனத்தில் கொள்ளாமல், கப்பல் மாலுமியும் கப்பல் சொந்தக்காரனும் சொன்னதையே அவன் கேட்டான். நாங்கள் தங்கியிருந்த துறைமுகம் குளிர்க்காலத்தைக் கழிப்பதற்கு ஏற்றதாய் இராததினால், கப்பலில் இருந்த பெரும்பாலானோர், அங்கிருந்து போகத் தீர்மானித்தார்கள். எப்படியாவது பேனிக்ஸை சென்றடைந்து, அங்கே குளிர்க்காலத்தைக் கழிக்கத் தீர்மானித்தார்கள். பேனிக்ஸ் கிரேத்தா தீவிலுள்ள ஒரு துறைமுகம். இது தென்மேற்காகவும், வடமேற்காகவும் பார்த்தபடி அமைந்திருந்தது.
புயல்காற்று
அப்பொழுது தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசத்தொடங்கியபோது, தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை ஏற்றி, கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே, வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று, தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று. கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை. எனவே காற்றின் திசையிலேயே, கப்பலைச் செல்லவிட்டோம். நாங்கள் கிலவுதா எனப்பட்ட ஒரு சிறிய தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்து போகையில், கப்பலில் இருந்த உயிர்காப்பு படகை சிரமத்துடன் பாதுகாத்துக் கொண்டோம். கப்பலாட்கள் அதைக் கப்பலுக்குள் தூக்கி எடுத்தார்கள். அதற்குப் பின்பு அவர்கள் கப்பல் உடையாது வைத்திருப்பதற்காகக் கப்பலையும் கயிறுகளால் இணைத்துக் கட்டினார்கள். சிர்த்திஸ் வளைகுடா பகுதியிலுள்ள சொரிமணல் திண்டுகளில் கப்பல் மோதிவிடுமோ என்று அவர்கள் பயந்து, கப்பற்பாயை இறக்கிக் காற்றின் திசையிலேயே கப்பலை அடித்துச்செல்ல போகவிட்டார்கள். நாங்கள் புயலினால் மிகவும் அடிக்கப்பட்டோம். அதனால் மறுநாளிலே, கப்பலாட்கள் கப்பலிலுள்ள பொருட்களை வெளியே எறியத் தொடங்கினார்கள். மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பல் தளவாடங்களையும் எறிந்தார்கள். பல நாட்களாக சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படவில்லை. புயலும் வேகமாய் வீசிக்கொண்டிருந்தது. இதனால் நாங்கள் உயிர் தப்புவோம் என்ற எதிர்பார்ப்பும் அற்றுப்போயிற்று.
பல நாட்களாக அந்த மனிதர் சாப்பாடு இல்லாமல் இருந்ததால், பவுல் அவர்கள் நடுவே எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் எனது புத்திமதியைக் கேட்டு, கிரேத்தா தீவை விட்டுப் புறப்படாதிருந்திருக்க வேண்டும். இந்த சேதத்தையும், இழப்பையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இப்போது நீங்கள் மன உறுதியுடன் இருக்கும்படி நான் உங்களைக் கேட்கிறேன். ஏனெனில், உங்களிடையே ஒருவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும். நேற்று இரவு என்மேல் உரிமையுள்ளவரும், என்னைத் தன் ஊழியத்தில் நியமித்தவருமான இறைவனின் ஒரு தூதன் என் அருகே வந்து நின்றான். அந்த தூதன் என்னிடம், ‘பவுலே பயப்படாதே, நீ ரோமப் பேரரசன் சீசருக்கு முன்பாக விசாரணைக்கு நிற்கவேண்டும்; உன்னுடன் பயணம் செய்கிற அனைவருடைய உயிரையும் இறைவன் தயவாய் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றான். ஆகையால், தைரியமாயிருங்கள். இறைத்தூதன் எனக்குச் சொன்னபடியே நடக்கும் என்று நான் இறைவனிடம் விசுவாசமாயிருக்கிறேன். ஆனால், ஏதாவது ஒரு தீவுக்கரையில் நாம் தள்ளப்பட்டுப் போவோம்” என்று சொன்னான்.
கப்பல் உடைதல்
பதினான்காம் நாள் இரவிலே, ஆதிரியா கடலில் அலைந்து கொண்டிருந்தோம். நடு இரவானபோது, கப்பலாட்கள் தாங்கள் ஒரு கரையை நெருங்கிச் சேர்வதாக உணர்ந்தார்கள். அவர்கள் கடலின் ஆழத்தைப் பார்த்தபோது, அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்திற்குப்பின், அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது, அது தொண்ணூறடி ஆழமாய் இருந்தது. நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து, அவர்கள் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு, பகல் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள். கப்பலாட்கள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, உயிர்காப்புப் படகைக் கடலில் இறக்கினார்கள். அவர்கள் கப்பலின்முன் பகுதியிலிருந்து, நங்கூரங்களை இறக்குவது போல பாசாங்கு செய்துகொண்டே இப்படிச் செய்தார்கள். அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவனையும், படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்றான். உடனே படைவீரர்கள் உயிர்காப்புப் படகைக் கட்டியிருந்த கயிற்றைவெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள்.
விடியற்காலையாகும்போது, பவுல் அவர்கள் எல்லோரையும் பார்த்து, ஏதாவது உணவைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டான். அவன் அவர்களிடம், “பதினான்கு நாட்களாக நீங்கள் உணவு எதையும் சாப்பிடாமல், என்ன நடக்குமோ என்ற பயத்தோடு காத்திருக்கிறீர்கள். இப்பொழுது ஏதாவது உணவைச் சாப்பிடுங்கள் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்த்தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் ஒருவனுடைய தலை முடிக்கேனும் இழப்பு நேரிடாது” என்றான். இதைச் சொன்னபின், அவன் அப்பத்தை எடுத்து, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பின்பு, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான். அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள். நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறுபேர் அந்தக் கப்பலில் இருந்தோம். அவர்கள் தங்கள் பசியாறச் சாப்பிட்டபின், கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் வீசி, அதன் பாரத்தைக் குறைத்தார்கள்.
பொழுது விடிந்ததும், அந்தக் கரையை அவர்கள் எவ்விடமென்று அறியவில்லை. ஆனால் மணல் நிறைந்த கரையுடன், ஒரு வளைகுடா இருப்பதை அவர்கள் கண்டார்கள். முடியுமானால், கப்பலைக் கரை சேர்க்கலாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் நங்கூரங்களை அவிழ்த்து, அவற்றைக் கடலில் விட்டார்கள். அதேவேளையில், சுக்கான்களைக் கட்டியிருந்த கயிறுகளைத் தளர்த்திவிட்டார்கள். பின்பு கப்பலின்முன் பாயை இழுத்து காற்றின் பக்கமாய் உயர்த்தி, கடற்கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள். கப்பல் ஒரு மணல் திண்டில் கரை தட்டி, தரையில் தங்கியது. ஆனால் கப்பலின் முன்பகுதி, மணலில் புதைந்து அசையாது நின்றது; கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் மோதப்பட்டு துண்டுதுண்டாய் உடைந்தது.
கைதிகளில் யாரும் நீந்தித் தப்பிப் போகாதபடி, அவர்களைக் கொன்றுவிட படைவீரர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுலின் உயிரைக் காப்பாற்ற விரும்பி, அவர்கள் அவ்விதம் செய்யாதபடி அவர்களைத் தடை செய்தான். நீந்தக்கூடியவர்கள் முதலில் கப்பலில் இருந்து குதித்து கரைசேரும்படி அவன் உத்தரவிட்டான். மற்றவரை பலகைகளின் மேலும், உடைந்த கப்பல் துண்டுகளின் மேலும் ஏறிக் கரைசேரச் செய்தான். இவ்விதம், ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் கரைசேர்ந்தார்கள்.
மெலித்தா தீவில் பவுல்
நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம். அந்தத் தீவில் இருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறான தயவை எங்களுக்குக் காண்பித்தார்கள். அங்கு மழையும் குளிருமாய் இருந்ததினால், அவர்கள் நெருப்புமூட்டி, எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். பவுல் ஒரு விறகுக்கட்டைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டான். அப்பொழுது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடுபட்டதனால் வெளியே வந்து, பவுலின் கையை இறுகப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீவில் இருந்தவர்கள் பாம்பு அவனுடைய கையில் தொங்குவதைக் கண்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவன் ஒரு கொலை பாதகனாயிருக்கவேண்டும். இவன் கடலில் இருந்து தப்பியபோதும்கூட, நீதி இவனை உயிரோடு வாழவிடவில்லை” என்றார்கள். ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை. அந்த மக்களோ, அவன் வீங்கி திடீரென விழுந்து சாவான் என்று எதிர்பார்த்தார்கள். நீண்ட நேரமாகியும்கூட அவர்கள் எதிர்பார்த்தபடி, வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு எதுவும் நேரிடாததைக் கண்டு, அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். இவன் ஒரு தெய்வம் என்று அவர்கள் சொன்னார்கள்.
அந்தத் தீவைச் சேர்ந்தவர்களுக்குத் தலைவனாயிருந்த புபிலியு என்பவனுக்குச் சொந்தமான பெரிய தோட்டம் அருகாமையில் இருந்தது. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் அழைத்து, மூன்று நாட்களாக எங்களுக்கு விருந்து உபசாரம் செய்தான். அவனுடைய தகப்பனோ, காய்ச்சலினாலும் வயிற்று அளச்சலாலும் நோயுற்றுப் படுக்கையிலேயே கிடந்தான். பவுல் அவனைப் பார்க்கும்படி உள்ளேப் போய், மன்றாடியபின் அவன்மேல் தனது கைகளை வைத்து, அவனை குணமாக்கினான். இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் வந்து, சுகம் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் பலவழிகளில் எங்களுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். சிறிதுகாலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து உதவினார்கள்.
பவுல் ரோம் நகரைச் சென்றடைதல்
மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்க்காலத்தைக் கழிப்பதற்காக அந்தத் தீவிலே தங்கியிருந்த ஒரு கப்பலில் நாங்கள் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கப்பல். அந்தக் கப்பலின் முகப்பு, இரட்டைத் தெய்வங்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். பின் அங்கிருந்து புறப்பட்டு, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. நாங்கள் அதற்கடுத்த நாள், புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம். அங்கே நாங்கள் சில சகோதரர்களைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தங்களுடன் ஒரு வாரம் தங்கும்படி அழைத்தார்கள். அதற்குப் பின்பு நாங்கள் ரோம் நகரத்துக்குப் போனோம். அங்குள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிறோம் என்று கேள்விப்பட்டதினால், அவர்கள் எங்களைச் சந்திக்கும்படி பயணமாய் புறப்பட்டு, அப்பியூ சந்தை, முச்சத்திரம் ஆகிய இடங்கள்வரை வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி, உற்சாகமடைந்தான். நாங்கள் ரோம் நகரத்தைச் சென்றடைந்தபோது, பவுல் ஒரு படைவீரனின் காவலின்கீழ், தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டான்.
ரோம் நகரில் பவுல் பிரசங்கித்தல்
மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள். ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை. இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை. ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.
அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான். சிலர் அவன் சொன்னதைச் சம்மதித்தார்கள், ஆனால் மற்றவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்:
“ ‘இந்த மக்களிடத்தில் போய்,
“நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்,
ஆனால் ஒருபோதும் உணரமாட்டீர்கள்;
நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள்,
ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் என்று சொல்.”
ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது;
அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள்,
தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும்,
தங்கள் காதுகளால் கேட்காமலும்,
தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்;
நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’28:27 [ஏசா. 6:9],[10] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
“ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்கள் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள்.28:29 சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.
பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான். துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.