- Biblica® Open Indian Tamil Contemporary Version 2 தீமோத்தேயு பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் கடிதம் 2 தீமோத்தேயு 2 தீமோ. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் கடிதம் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்ட பவுல், எனது அன்பான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக. நன்றி செலுத்துதல் இரவும் பகலும் எனது மன்றாட்டில் உன்னை இடைவிடாமல் நினைக்கும் போதெல்லாம், நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவனுக்கே என் முற்பிதாக்களைப்போல், சுத்த மனசாட்சியுடன் நான் பணிசெய்கிறேன். நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தவேளையில் உனது கண்ணீர் என் நினைவில் இருக்கிறபடியால், நான் உன்னைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி வாஞ்சையாய் இருக்கிறேன். உனது உண்மையான விசுவாசமும் என் நினைவில் வந்திருக்கிறது. இந்த விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த விசுவாசம் உன்னிடத்திலும் இருக்கிறது என நான் நம்புகிறேன். பவுலுக்கும் நற்செய்திக்கும் உண்மையாயிருக்க வேண்டுதல் இந்தக் காரணத்தினாலேயே நான் உன்மேல் எனது கைகளை வைத்தபோது, உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டெரியும்படி, நான் உனக்கு நினைவூட்டுகிறேன். ஏனெனில், இறைவன் நமக்குப் பயமும், கோழைத்தனமுமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. இறைவன் வல்லமை, அன்பு, தன்னடக்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்திருக்கிறார். எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்லவும், அவரது கைதியாகிய என்னைக்குறித்து வெட்கப்படவும் வேண்டாம். நற்செய்திக்காக இறைவனின் வல்லமையினால் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் சேர்ந்துகொள். இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நமது இரட்சகர் கிறிஸ்து இயேசு தோன்றியதன்மூலம், அந்த கிருபை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியினால் வாழ்வையும் சாவாமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். இந்த நற்செய்திக்காக நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன். அதன் நிமித்தமே, நான் இப்படித் துன்பங்களை அனுபவிக்கிறேன். ஆனால் நான் வெட்கப்படவில்லை. ஏனெனில், நான் விசுவாசிக்கிற கிறிஸ்து இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் மீண்டும் வரும் நாள்வரைக்கும் காத்துக்கொள்ள அவரால் முடியும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன். நீ என்னிடத்திலிருந்து கேட்ட ஆரோக்கியமான போதனைகளை விசுவாசத்துடனும் அன்புடனும் கிறிஸ்து இயேசுவில் மாதிரியாகக் வைத்துக்கொள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள். உண்மைக்கும் உண்மையின்மைக்கும் மாதிரிகள் ஆசியா பகுதியிலுள்ளவர்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போனது உனக்குத் தெரியும். பிகெல்லுவும் எர்மொகெனேயும்கூட விலகிப் போய்விட்டார்கள். ஒநேசிப்போருவின் குடும்பத்திற்குக் கர்த்தர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில் அவன் அடிக்கடி என்னைத் தேற்றினான். நான் விலங்கிடப்பட்டிருப்பதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை. அத்துடன் அவன் ரோம் நகரத்தில் இருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் கஷ்டப்பட்டுத் தேடினான். கிறிஸ்து மீண்டும் வரும் நாளிலே, அவன் கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவுவாராக! அவன் எபேசுவிலே எனக்கு எவ்வளவாய் உதவி செய்தான் என்பது உனக்கு மிக நன்றாகத் தெரியும். புதுப்பிக்கப்பட்ட வேண்டுதல் ஆகையால் என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையிலே பெலன்கொள். அநேக சாட்சிகளுக்கு முன்னால் நான் போதித்தவற்றை நீ கேட்டறிந்தாய். இவற்றை மற்றவர்களுக்குக் போதிக்கத் திறமையுள்ளவர்களான நம்பத்தகுந்த மனிதரிடம் ஒப்புவி. கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனைப்போல், என்னுடனேகூட துன்பங்களைத் தாங்கிக்கொள். போர்வீரனாக பணிசெய்யும் யாரும், பொது வாழ்க்கை விவகாரங்களில் ஈடுபடமாட்டான். அவன் தனது அதிகாரியையே பிரியப்படுத்த விரும்புகிறான். அதேபோல் யாரும், விளையாட்டு வீரனாக போட்டியில் ஈடுபடும்போது, அவன் ஒழுங்குமுறையின்படி விளையாடாவிட்டால், வெற்றி வீரனுக்குரிய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டான். கஷ்டப்பட்டு வேலைசெய்யும் விவசாயியே விளைச்சலின் பங்கை முதலில் பெறவேண்டும். நான் சொல்வதைச் சிந்தித்துப்பார் ஏனெனில் இவை எல்லாவற்றிலும் கர்த்தர் உனக்கு நுண்ணறிவைத் தருவாராக. இயேசுகிறிஸ்துவை நினைவிற்கொள். அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே எனது நற்செய்தி. இதற்காகவே நான் குற்றவாளியைப்போல் விலங்கிடப்படும் அளவுக்கு துன்பப்படுகிறேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கிடப்படவில்லை. ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். இதுவும் நம்பத்தகுந்த ஒரு வாக்கு: நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால், நாமும் அவருடன் வாழ்வோம். நாம் பாடுகளைத் தாங்கினால், நாமும் அவருடன் ஆளுகை செய்வோம். நாம் கிறிஸ்துவை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில், அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். இறைவனுக்கேற்ற வேலையாள் இந்தக் காரியங்களை அவர்களுக்கு நினைப்பூட்டி, வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாமென்று இறைவனுக்கு முன்பாக, அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதமோ கேட்கிறவர்களைப் பாழாக்குமேயன்றி, அதனால் வேறு ஒரு பயனும் இல்லை. நீயோ ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையாளாக இறைவனுக்குமுன் நிற்பதற்கு, உன்னால் இயன்ற எல்லா முயற்சியையும்செய்; வெட்கப்படாத வேலையாளாகவும், சத்தியத்தின் வார்த்தையை சரியாக கடைப்பிடிக்கிறவனாகவும் இருக்க முயற்சிசெய். பக்தியில்லாத பேச்சை விட்டுவிலகு. ஏனெனில் அதில் ஈடுபடுகிறவர்கள், இன்னும் அதிகதிகமாய் இறைவனை மறுதலிக்கிறவர்களாவார்கள். அவர்களுடைய போதனை புற்றுநோயைப்போல் பரவும். அவர்களுக்குள் இமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என அவர்கள் சொல்லி சிலரின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள். அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: “தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்” என்றும், “கர்த்தரின் பெயரை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயமாக விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய வீட்டில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்ல, மரத்தினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் உண்டு. அவற்றில் சில சிறப்பான நோக்கத்திற்காகவும், சில சாதாரணமாகவும் உபயோகிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் மதிப்பற்ற காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவானாகில், அவன் மதிப்புக்குரிய நோக்கங்களுக்கு ஏற்ற கருவியாவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, எஜமானுக்கு உகந்தவனாகவும், எந்த நல்ல செயல்களைச் செய்வதற்கும் ஆயத்தம் பண்ணப்பட்டவனாகவும் இருப்பான். வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு. மதிகேடும் அறிவற்றதுமான விவாதங்களில் கலந்து கொள்ளாதே. ஏனெனில், அவை வாக்குவாதங்களையே உண்டுபண்ணுகின்றவை என்பது உனக்குத் தெரியும். கர்த்தரின் ஊழியக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் அவன் எல்லோரிடமும் தயவுள்ளவனாக, போதிக்கும் திறமையுள்ளவனாக, சகிப்புத்தன்மை உள்ளவனாக இருக்கவேண்டும். அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி, அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும். மக்கள் தங்களில் மாத்திரம் அன்பு செலுத்துகிறவர்களாகவும், பண ஆசையுள்ளவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும், பெருமையுள்ளவர்களாகவும், தூற்றித்திரிகிறவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அன்பில்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மையற்றவர்களாகவும், அவதூறு பேசுகிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், மிருகத்தனமுள்ளவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். மேலும், துரோகம் செய்கிறவர்களாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், இறுமாப்புடையவர்களாகவும், இறைவனை நேசிக்காமல், சிற்றின்பங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றத்தில் இறை பக்தி உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் இறை பக்தியின் வல்லமை இல்லாதவர்களாயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைக்காதே. இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேயை எதிர்த்து நின்றதுபோல, இந்த மனிதரும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தமட்டிலோ, இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களே! ஆனாலும் இவர்கள் இப்படியே அதிக தூரம் போகமாட்டார்கள். ஏனெனில் யந்நேயுவிற்கும் யம்பிரேயுவிற்கும் நடந்ததுபோல, இவர்களுடைய மூடத்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். தீமோத்தேயுவுக்கு பொறுப்பு ஆனால் நீயோ, எனது போதனைகள் எல்லாவற்றையும், எனது வாழ்க்கை முறையையும், எனது நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறாய். அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலும், லீஸ்திராவிலும், எனக்கு ஏற்பட்ட பலவித துன்புறுத்தல்களையும், பாடுகளையும், நான் எப்படி சகித்தேன் என்றும் நீ அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும், கர்த்தர் என்னை விடுவித்தார். உண்மையாகவே, கிறிஸ்து இயேசுவில் இறை பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிற ஒவ்வொருவனும் துன்புறுத்தப்படுவான். ஆனால் அதேவேளையில், தீயமனிதரும், வஞ்சகர்களும் செழிப்படைவார்கள். அவர்கள் மேன்மேலும் ஏமாற்றுகிறவர்களாகவும், ஏமாற்றப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். நீ கற்று நிச்சயமென்றறிந்த காரியங்களை, தொடர்ந்து கைக்கொள். ஏனெனில் அவற்றை கற்றுக்கொடுத்தவர்களையும் நீ அறிவாய். உனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பரிசுத்த வேதவசனங்களையும் நீ அறிந்திருக்கிறாய். அவைகள் ஒருவனை எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசத்தினாலே, இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஞானமுள்ளவனாக்கும் என்று உனக்குத் தெரியும். எல்லா வேதவசனமும் இறைவனின் உயிர்மூச்சினால் கொடுக்கப்பட்டன. இவை மனிதருக்கு போதிப்பதற்கும், அவர்களைக் கண்டிப்பதற்கும், அவர்களைத் திருத்துவதற்கும், நீதியாய் வாழ பயிற்றுவிப்பதற்கும், பயனுள்ளவையாய் இருக்கின்றன. இதனால், இறைவனுடைய ஊழியக்காரன் எல்லா நல்ல செயல்களையும் செய்ய, முழுமையாக தேறினவனாகிறான். இறைவனுக்கு முன்பாகவும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கும்படி வரப்போகிற, அவருடைய அரசையும் கருத்தில்கொண்டு, நான் உனக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: வார்த்தையைப் பிரசங்கம்பண்ணு; சாதகமான சூழ்நிலையிலும், பாதகமான சூழ்நிலையிலும் அதற்கு ஆயத்தமாய் இரு. நீடிய பொறுமையுடனும், கவனமான அறிவுறுத்தலுடனும் சீர்திருத்து. கண்டனம் செய், உற்சாகப்படுத்து. ஏனெனில், ஆரோக்கியமான போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்லும் போதகர்கள் அநேகரைத் தங்களுக்காகச் சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் சத்தியத்திற்கு தங்கள் செவிகளை விலக்கி கற்பனைக் கதைகளுக்குச் செவிசாய்ப்பார்கள். ஆனால் நீயோ, எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. பாடுகளைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனின் பணியைச்செய். உனது ஊழியத்திற்குரிய கடமைகள் எல்லாவற்றையும் நிறைவேற்று. ஏனெனில் நான் இப்போதே பானபலியாக ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது. நான் ஆவிக்குரிய போராட்டத்தை நன்றாகப் போராடினேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்தேன். என் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இப்பொழுது எனக்கென நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீதியுள்ள நீதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் எனக்குத் தருவார். எனக்கு மட்டுமல்ல, அவருடைய வருகையை வாஞ்சையுடன் எதிர்பார்த்திருக்கிற எல்லோருக்கும் கொடுப்பார். பவுலின் அறிவுரை நீ விரைவில் என்னிடம் வருவதற்கு முயற்சிசெய். ஏனெனில் தேமா, இந்த உலகத்தில் ஆசைவைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்கு போய்விட்டான். கிரேஸ்கு, கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் போய்விட்டார்கள். லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறான். மாற்குவையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வா. ஏனெனில் அவன் எனது ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான். நான் தீகிக்குவை எபேசுவிற்கு அனுப்பியுள்ளேன். துரோவாவிலிருக்கிற கார்ப்பு என்பவனிடத்தில் நான் விட்டுவந்த எனது மேலுடையை நீ வரும்போது கொண்டுவா. என் புத்தகச்சுருள்களையும், விசேஷமாக தோல்சுருள்களையும் கொண்டுவா. செப்புத்தொழிலாளியாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகவும் தீமைசெய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார். நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன், நமது செய்தியைக் கடுமையாக எதிர்த்தான். எனது முதலாவது வழக்கு விசாரணையில் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக அது குற்றமாய் எண்ணப்படாதிருப்பதாக. ஆனால் கர்த்தர் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பெலன் கொடுத்தார். இதனால் என் மூலமாய் நற்செய்தி முழுமையாக அறிவிக்கப்பட்டதுடன், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாயிருந்தது. என்னை சிங்கத்தின் வாயிலிருந்தும் விடுவித்தார். ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். இறுதி வாழ்த்துதல் பிரிஸ்காளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துதல் சொல். எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோப்பீமு வியாதியாய் இருந்ததால், நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன். குளிர் காலத்திற்கு முன்பு, இங்கு வந்து சேருவதற்கு முயற்சிசெய். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்ற எல்லா பிரியமானவர்களும் உன்னை வாழ்த்துகிறார்கள். ஆண்டவர் உனது ஆவியோடு இருப்பாராக. கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.