- Biblica® Open Indian Tamil Contemporary Version 2 தெசலோனிக்கேயர் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின இரண்டாம் கடிதம் 2 தெசலோனிக்கேயர் 2 தெச. பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின இரண்டாம் கடிதம் பவுல், சில்வான், தீமோத்தேயு, நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நன்றியும் மன்றாட்டும் பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது. ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம். இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள். இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார். துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடு, பற்றியெரியும் நெருப்பில் பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, இந்த நீதி நிகழும். அப்பொழுது அவர் இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தண்டிப்பார். நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள். இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம். நமது இறைவனிடமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து வரும் கிருபையினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்படவேண்டும். நீங்களும் அவரிலே மகிமைப்படவேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம். அக்கிரம மனிதன் பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதைக் குறித்தும், நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம். யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன். அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான். நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான். ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார். அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தமது வருகையின் மகிமையினாலே அவனை அழித்துப்போடுவார். அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான். அழிந்துபோகிறவர்களை ஏமாற்றி எல்லா விதமான தீமையான செயல்களும் செய்துகாட்டப்படும். இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும், அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்ததினாலேயே, அவர்கள் அழிந்துபோகிறார்கள். இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள். இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள். உறுதியாய் நில்லுங்கள் ஆனால், கர்த்தரின் அன்புக்குரிய பிரியமானவர்களே, உங்களையோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆரம்பத்திலிருந்தே இறைவன் தெரிந்துகொண்டார். பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகிற செயலினாலும், சத்தியத்தை நம்பி விசுவாசிக்கிறதினாலும், இந்த இரட்சிப்பு வருகிறது. இதனாலேயே உங்களுக்காக, நாங்கள் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையில், நீங்களும் பங்குடையவர்களாகும்படியே, எங்களுடைய நற்செய்தியின் மூலமாய், அவர் உங்களை அழைத்திருக்கிறார். ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, எங்களுடைய வாயின் வார்த்தை மூலமாகவோ, அல்லது கடிதத்தின் மூலமாகவோ, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் நம்மில் அன்பு செலுத்தி, தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்துள்ளார். அவர் உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, உங்களை எல்லா நற்செயலிலும் நற்சொல்லிலும் பெலப்படுத்துவாராக. மன்றாட்டுக்கான வேண்டுகோள் இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே பரவியதுபோல, அது மகிமைப்பட்டு எங்கும் விரைவாய்ப் பரவவேண்டும் என்று எங்களுக்காக மன்றாடுங்கள். கொடியவர்களும், தீயவர்களுமான மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லாரிடத்திலும் விசுவாசம் இல்லையே. ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். நாங்கள் கட்டளையிடுகிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும், கர்த்தரில் நாங்கள் மனவுறுதி உடையவர்களாய் இருக்கிறோம். கர்த்தர்தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் மன உறுதிக்குள்ளும் நடத்துவாராக. சோம்பலுக்கு எச்சரிக்கை பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது, சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதின்படி நடக்காதவர்களைவிட்டு விலகியிருங்கள். எங்களுடைய முன்மாதிரியை எவ்விதம் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுடன் இருந்தபோது சோம்பேறிகளாய் இருக்கவில்லை. யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை. இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம். ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.” உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் எவ்வித வேலையும் செய்யாமல், பிறர் வேலையில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வேலையில் நிலைத்திருந்து, தங்களுடைய உணவுக்காகத் தாங்களே உழைக்க வேண்டும் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம். இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கமடையும்படிக்கு, அவனோடு கூடிப்பழக வேண்டாம். ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள். கடைசி வாழ்த்துதல் இப்பொழுதும் சமாதானத்திலும் அமைதியிலும் கர்த்தர்தாமே, எல்லா வேளைகளிலும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக. பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை, என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்களுக்கெல்லாம் அடையாளமும், நான் எழுதும் முறையும் இதுவே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை, உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.