- Biblica® Open Indian Tamil Contemporary Version
2 சாமுயேல்
சாமுயேலின் இரண்டாம் புத்தகம்
2 சாமுயேல்
2 சாமு.
சாமுயேலின் இரண்டாம் புத்தகம்
தாவீது சவுலின் மரணத்தைக் கேள்விப்படுதல்
சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறியடித்து சிக்லாகிற்கு வந்து அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்தான். மூன்றாவது நாள் சவுலின் முகாமிலிருந்து கிழிந்த உடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்தபோது, மரியாதை செலுத்தும்படி தரையில் விழுந்து வணங்கினான்.
அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “இஸ்ரயேலின் முகாமிலிருந்து தப்பி வந்தேன்” என்றான்.
மேலும் தாவீது அவனிடம், “என்ன நடந்தது என எனக்குச் சொல்” என்றான்.
அதற்கு அந்த மனிதன், “போர்க்களத்திலிருந்து மக்கள் ஓடிவிட்டார்கள். பலர் வெட்டுண்டு இறந்துபோனார்கள். அதோடு சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துபோனார்கள்” என்றான்.
அப்பொழுது தாவீது, அச்செய்தியைக் கொண்டுவந்த வாலிபனிடம், “சவுலும் அவன் மகன் யோனத்தானும் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.
அதற்கு அவன், “யுத்தத்தில் நான் கில்போவா மலைக்குப் போகநேரிட்டது” எனக் கூறினான். “அங்கே சவுல் தன் ஈட்டியின்மேல் குத்தப்பட்டு கிடந்தார். அவ்வேளையில் தேர்களும், வீரர்கள் ஏறியிருந்த குதிரைகளும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது அவர் திரும்பி என்னைப் பார்த்து, என்னைக் கூப்பிட்டார். எனவே நான் அவரிடம், ‘நான் உமக்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன்.
“அதற்கு அவர், ‘நீ யார்?’ என்று கேட்டார்.
“ ‘நான் ஒரு அமலேக்கியன்’ என்றேன்.
“அப்பொழுது அவர், ‘நீ இங்கு வந்து என்னைக் கொன்றுவிடு; நான் மரண வேதனையுடன் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்றார்.
“உடனே நான் கிட்டப்போய் அவரைக் கொன்றேன். ஏனெனில் அவர் காயப்பட்டு, விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்பது எனக்குத் தெரிந்தது. அதன்பின் நான் அவர் தலையிலிருந்த அரச கிரீடத்தையும், கையிலிருந்த வளையல்களையும் எடுத்து என் ஆண்டவனாகிய உம்மிடம் கொண்டுவந்தேன்” என்றான்.
இச்செய்தியைக் கேட்ட தாவீதும், அவனோடிருந்த மனிதர் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்தார்கள். சவுலும் அவன் மகன் யோனத்தானும், யெகோவாவின் வீரர்களும், இஸ்ரயேல் குடும்பத்தாரும் வாளால் வெட்டுண்டு இறந்ததினால் அவர்கள் துக்கங்கொண்டாடி, அழுது அன்று மாலைவரை அவர்களுக்காக உபவாசமிருந்தார்கள்.
தாவீது அச்செய்தியை கொண்டுவந்த வாலிபனிடம், “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நான் அந்நியனான ஒரு அமலேக்கியனின் மகன்” என்றான்.
அப்பொழுது தாவீது அவனிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவனை கொல்வதற்கு உன் கையை நீட்ட நீ ஏன் பயப்படவில்லை” எனக் கேட்டான்.
உடனே தாவீது தன் ஆட்களில் ஒருவனை கூப்பிட்டு, “அவனைக் கொலைசெய்” என்றான். அவ்வாறே பணியாள் அவனைக் கொன்றான். அப்பொழுது தாவீது அவனிடம், “உன் இரத்தப்பழி உன்னுடைய தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என உன் வாயே உனக்கெதிராய் சாட்சி சொன்னது” என்றான்.
சவுல் மற்றும் யோனத்தானுக்காக தாவீது புலம்புதல்
தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்; யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது:1:18 பண்டைய போர் பாடல்களின் தொகுப்பு யாசேர் புத்தகத்தில் [10:13] இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரெயத்தில் யாசேர் என்பதற்கு நேர்மை அல்லது நியாயம் என்று பொருள்.
“இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது.
வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்!
“எனவே, இதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்.
அஸ்கலோனின் வீதிகளில் பிரசித்தப்படுத்த வேண்டாம்.
இல்லையெனில், பெலிஸ்தரின் மகள்கள் மகிழ்ச்சியடைவார்கள்,
விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் களிகூருவார்கள்.
“கில்போவா மலைகளே,
பனியும், மழையும் உங்களுக்கு இல்லாமல் போவதாக.
வயல்கள் தானிய காணிக்கைகளைக் கொடுக்காமல் போவதாக.
அங்கு தானே வல்லவர்களின் கேடயம் கறைப்பட்டது.
சவுலின் கேடயம் இனி ஒருபோதும் எண்ணெய் பூசப்படுவதில்லை.
“கொலையுண்டவர்களின் இரத்தத்திலிருந்தும்
வலியவரின் சதையிலிருந்தும்
யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை.
சவுலின் வாளும் திருப்தியடையாமல் திரும்பினதில்லை.
வாழும்போது சவுலும் யோனத்தானும்
அன்புக்குரியவர்களும், மதிப்புக்குரியவர்களுமாய் இருந்தார்கள்.
சாவிலும் அவர்கள் பிரியவில்லை.
அவர்கள் கழுகுகளைவிட வேகமாய் பறந்தார்கள்.
சிங்கங்களிலும் வலிமையுள்ளவர்களாய் இருந்தார்கள்.
“இஸ்ரயேலின் மகள்களே,
சிவப்பு உடைகளை உடுத்துவித்தவருக்காக அழுங்கள்.
உங்கள் உடைகளைத் தங்க நகைகளால்
அலங்கரித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
“போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே!
யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான்.
என் சகோதரன் யோனத்தானே!
உனக்காக நான் துக்கப்படுகிறேன்;
நீ எனக்கு மிக அருமையானவனாய் இருந்தாய்.
நீ என்மேல் வைத்த அன்பு அற்புதமானது. பெண்களின் அன்பிலும் அது மேலானது.
“வலியவர் எவ்வாறு வீழ்ந்தார்கள்.
யுத்த ஆயுதங்கள் அழிந்துவிட்டதே.”
தாவீது யூதாவின் அரசனாக அபிஷேகம் பெறுதல்
சிறிது காலத்திற்குப்பின் தாவீது யெகோவாவிடம் விசாரித்து, “யூதாவின் பட்டணங்கள் ஒன்றிற்கு நான் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீ போகலாம்” என்றார்.
மேலும் தாவீது, “நான் எங்கே போகலாம்” என்று யெகோவாவிடம் கேட்டான்.
“நீ எப்ரோனுக்குப் போ” எனச் சொன்னார்.
எனவே தாவீது தன் இரண்டு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் எப்ரோனுக்குப் போனான். தாவீது தன்னோடுகூட இருந்த மனிதரையும் அவர்கள் ஒவ்வொருவரையும் குடும்பங்களுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எப்ரோனிலும் அதனைச் சேர்ந்த பட்டணங்களிலும் குடியேறினார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர் எப்ரோனுக்கு வந்து, அங்கே தாவீதை யூதா கோத்திரத்தின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
அவ்வேளை கீலேயாத் யாபேசின் மனிதரே சவுலின் உடலை அடக்கம் செய்தார்களென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே தாவீது கீலேயாத் யாபேசின் மனிதரிடம் தூதுவரை அனுப்பி அவர்களிடம், “உங்கள் அரசனான சவுலை அடக்கம் செய்து அவருக்கு இரக்கம் காட்டினபடியால் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் யெகோவா உங்களுக்கு தயவையும் தமது உண்மையையும் காட்டுவாராக. நீங்கள் இதைச் செய்ததால் நானும் உங்களுக்கு அதே தயவைக் காட்டுவேன். இப்பொழுது நீங்கள் உங்களைப் பெலமும் தைரியமும் உள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அரசன் சவுல் இறந்துவிட்டதினால், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசனாக அபிஷேகம் செய்துள்ளார்கள்” என்று அவர்களுக்கு சொல்லச் சொன்னான்.
தாவீதின் மற்றும் சவுலின் குடும்பங்களிடையே யுத்தம்
அவ்வேளையில் சவுலின் படைத்தளபதி நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்போசேத்தைக்2:8 இஸ்போசேத்தை என்ற பெயருக்கு எபிரெயத்தில் பாகாலின் மகன் என்று அர்த்தம். கூட்டிக்கொண்டு மக்னாயீமுக்குப் போனான். அவன் இஸ்போசேத்தை கீலேயாத், அசூரியா, யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அரசனாக்கினான்.
சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரயேலுக்கு அரசனானபோது அவனுக்கு நாற்பது வயது; அவன் இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். ஆயினும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள். தாவீது எப்ரோனிலே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் யூதா குடும்பத்தாருக்கு அரசனாயிருந்தான்.
பின்பு நேரின் மகன் அப்னேர் சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமிலிருந்து புறப்பட்டு கிபியோனுக்குப் போனான். அதேவேளை செருயாவின்2:13 செருயா யோவாபின் தாய். மகன் யோவாபும், தாவீதின் ஆட்களுடன் போய் கிபியோனின் குளத்தின் அருகில் அவர்களைச் சந்தித்தான். ஒரு கூட்டம் குளத்தின் ஒரு பக்கத்திலும், மற்றொரு கூட்டம் குளத்தின் மறுபக்கத்திலும் இருந்தது.
அப்பொழுது அப்னேர் யோவாபிடம், “எங்கள் முன்னிலையில் வாலிபர் சிலர் வந்து நேருக்குநேர் நின்று போட்டியிடட்டும்” என்றான்.
அதற்கு யோவாப், “அப்படியே செய்யட்டும்” என்றான்.
எனவே சவுலின் மகன் இஸ்போசேத்தின் பக்கத்தில் பென்யமீன் கோத்திரத்தாரில் பன்னிரண்டு பேரும், தாவீதின் பக்கத்தில் அவனுடைய மனிதரில் பன்னிரண்டு பேரும் எண்ணி விடப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்பக்கத்திலுள்ள ஒவ்வொருவருடைய தலையையும் பிடித்து வாளால் குத்தியதால், எல்லோரும் ஒருமித்து விழுந்து இறந்தார்கள். எனவே கிபியோனில் இருந்த அந்த இடம் எல்காத் அசூரிம் என்று அழைக்கப்பட்டது.
அன்றையதினம் யுத்தம் மிகவும் கடுமையாய் இருந்தது. அப்னேரும், இஸ்ரயேல் மக்களும் தாவீதின் மனிதரால் தோற்கடிக்கப்பட்டார்கள்.
அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாப், அபிசாய், ஆசகேல் என்பவர்கள் இருந்தார்கள். ஆசகேல் ஒரு காட்டுக் கலைமானைப்போல் வேகமாக ஓடும் ஆற்றலுடையவன். அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பாமல் அவனைத் துரத்திச்சென்றான். அப்பொழுது அப்னேர் ஆசகேலைத் திரும்பிப்பார்த்து அவனிடம், “நீ ஆசகேல் அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நானேதான்” என்றான்.
எனவே அப்னேர் அவனிடம், “நீ என்னைப் பின்தொடராமல் வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பி வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனிடமிருந்து ஆயுதங்களை எடுத்துக்கொள்” என்றான். ஆனால் ஆசகேல் அவனைத் துரத்துவதை நிறுத்தவில்லை.
மறுபடியும் அப்னேர் ஆசகேலை எச்சரித்தான். அப்னேர் அவனிடம், “என்னைத் துரத்துவதை நிறுத்து. நான் உன்னை ஏன் கொல்லவேண்டும். உன்னைக் கொலை செய்தால் உன் சகோதரன் யோவாபின் முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்றான்.
ஆனாலும் ஆசகேலோ துரத்துவதை நிறுத்த மறுத்துவிட்டதால், உடனே அப்னேர் திரும்பி தன் ஈட்டியின் பின்பகுதியினால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி அவன் உடலில் ஊடுருவி முதுகு வழியே வந்தது. அவன் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தான். அவனுக்குப் பின்னால் வந்த ஒவ்வொருவரும் ஆசகேல் இறந்து கிடந்த இடத்திற்கு வந்தபோது அங்கேயே தரித்து நின்றுவிட்டார்கள்.
ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் துரத்திச் சென்றார்கள். அவர்கள் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கிபியோன் பாலைவனத்திற்கு போகும் வழியில் கீயாவுக்கு அருகேயுள்ள அம்மா என்னும் குன்றுவரை வந்தார்கள். அப்பொழுது பென்யமீன் கோத்திரத்து மக்கள் அப்னேருக்கு பின்னாக ஒன்றுதிரண்டு கூட்டமாக ஒரு மலை உச்சியில் சண்டைக்கு ஆயத்தமாக நின்றார்கள்.
அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு அவனிடம், “வாள் ஓய்வின்றி எப்பொழுதும் வெட்டி வீழ்த்த வேண்டுமா? அதன் முடிவு கசப்பானதாய் இருக்கும் என்று நீ உணரவில்லையா? தங்கள் சகோதரரைத் துரத்துவதை நிறுத்தும்படி உன் மனிதருக்கு எப்போது கட்டளையிடப் போகிறாய்?” எனக் கேட்டான்.
அதற்கு யோவாப், “நீ இப்படிச் சொல்லியிராவிட்டால் இறைவன் வாழ்வது நிச்சயம்போல, எனது படைவீரர் தங்கள் சகோதரரை விடியும்வரை துரத்தியிருப்பார்கள் என்பதும் நிச்சயம்” என்றான்.
எனவே யோவாப் எக்காளம் ஊதியவுடன் படைவீரர் துரத்துவதை நிறுத்திவிட்டார்கள். அதன்பின் அவர்கள் இஸ்ரயேலரைத் துரத்தவுமில்லை, யுத்தம் செய்யவுமில்லை.
அன்றிரவு முழுவதும் அப்னேரும் அவன் ஆட்களும் அரபா வழியாக அணிவகுத்து நடந்தார்கள். அவர்கள் யோர்தானைக் கடந்து, பித்ரோன் முழுவதும் நடந்து மக்னாயீமுக்கு வந்து சேர்ந்தார்கள்.
யோவாப் அப்னேரைத் துரத்திச் செல்வதைவிட்டுத் தன் மக்களனைவரையும் ஒன்றுகூட்டினான். தாவீதின் ஆட்களில் ஆசகேலுடன் சேர்த்து இன்னும் பத்தொன்பதுபேர் குறைவாக இருந்தார்கள். ஆனால் தாவீதின் ஆட்கள் அப்னேரிடமிருந்த பென்யமீன் கோத்திரத்தாரில் முந்நூற்று அறுபதுபேரைக் கொலைசெய்திருந்தார்கள். அவர்கள் ஆசகேலின் உடலை எடுத்துக்கொண்டுபோய் பெத்லெகேமிலுள்ள அவன் தகப்பன் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அதன்பின் யோவாபும் அவன் ஆட்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, பொழுது விடியும்போது எப்ரோனை வந்தடைந்தார்கள்.
சவுலின் குடும்பத்தாருக்கும், தாவீதின் குடும்பத்தாருக்கும் இடையே நடந்த இந்த யுத்தம் நெடுங்காலம் நீடித்தது; தாவீதின் குடும்பத்தார் மென்மேலும் வலிமையடைந்தார்கள்; சவுலின் குடும்பமோ வலுவிழந்துகொண்டே போனது.
தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள்:
யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் அவனுடைய மூத்த மகன்.
அதன்பின் நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயில், கீலேயாப் என்னும் அவனுடைய இரண்டாவது மகனைப் பெற்றாள்.
கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காள் தாவீதின் மூன்றாவது மகன் அப்சலோமைப் பெற்றாள்.
ஆகீத் என்பவள் அவனுடைய நான்காவது மகன் அதோனியாவைப் பெற்றாள்.
அபித்தாள் ஐந்தாவது மகன் செப்பத்தியாவைப் பெற்றாள்.
தாவீதின் மனைவி எக்லாள் ஆறாவது மகன் இத்ரேயாமைப் பெற்றாள்.
இவர்களே எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்.
அப்னேர் தாவீதுடன் சேருதல்
சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் இடையில் யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் அப்னேர் சவுலின் குடும்பத்தில் தன் நிலையை பெலப்படுத்திக் கொண்டிருந்தான். ஆயாவின் மகள் ரிஸ்பாள் சவுலுக்கு மறுமனையாட்டியாக இருந்தாள். சவுலின் மகன் இஸ்போசேத் ஒரு நாள் அப்னேரிடம், “என் தகப்பனின் மறுமனையாட்டியுடன் ஏன் இப்படி உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
இஸ்போசேத் இவ்வாறு கேட்டதும் அப்னேர் கடுங்கோபங்கொண்டு, அவனிடம், “நீ இப்படி கேட்பதற்கு நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயா? இன்றுவரை உன் தகப்பன் சவுலின் வீட்டாருக்கும், அவர் குடும்பத்தாருக்கும், நண்பருக்கும் உண்மையுள்ளவனாயிருக்கிறேன். உன்னைத் தாவீதிடம் நான் ஒப்படைக்கவில்லை; ஆனாலும் இப்பொழுது ஒரு பெண்ணைச் சம்பந்தப்படுத்தி நீ என்னைக் குற்றம் சாட்டுகிறாயே; யெகோவா தாவீதிற்கு வாக்குப்பண்ணியபடி, சவுலின் அரசாட்சியை தாவீதிற்குக் கொடுக்க நான் உதவிசெய்யாமல் போனால், இறைவன் அப்னேரை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக. நான் அரசாட்சியை சவுலின் குடும்பத்திலிருந்து மாற்றி எடுத்து, தாண் தொடங்கி பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரயேலின்மேலும், யூதாவின்மேலும் தாவீதின் அரியணையை நிலைப்படுத்துவேன்” என்றான். இஸ்போசேத் அப்னேருக்குப் பயந்ததினால், அப்பொழுது அவனுக்கு ஒரு பதிலும் சொல்ல அவனுக்குத் துணிவிருக்கவில்லை.
அதன்பின் அப்னேர் தாவீதிடம் எப்ரோனுக்குத் தூதுவரை அனுப்பி, “இந்த நாடு யாருடையது, நீர் என்னுடன் உடன்பாட்டிற்கு வாரும். நான் இஸ்ரயேல் முழுவதையும் உமக்குக் கீழ் கொண்டுவருவதற்கு உதவி செய்வேன்” என்று சொல்லும்படி சொல்லி அனுப்பினான்.
அதற்குத் தாவீது, “நல்லது! நான் ஒரு உடன்பாட்டிற்கு வருவேன்; ஆனால் நீ என் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றவேண்டும். அது என்னவெனில், மறுபடியும் என்னைப் பார்க்க வரும்போது, சவுலின் மகள் மீகாளை அழைத்துக்கொண்டு வராமல் என் முன்னே வரக்கூடாது” என்று சொல்லச் சொன்னான். பின்பு தாவீது சவுலின் மகன் இஸ்போசேத்தினிடத்திற்கு தூதுவரை அனுப்பி, “நூறு பெலிஸ்தியரின் நுனித்தோலை விலையாகக் கொடுத்து நான் எனக்கென நியமித்துக்கொண்ட என் மனைவி மீகாளை எனக்குக் கொடுத்துவிடும்” என்று கேட்டான்.
எனவே இஸ்போசேத் மீகாளை அவளின் கணவன் லாயீசின் மகன் பல்த்தியேலிடமிருந்து கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ஆனாலும் அவள் கணவன் அவளுடன் பகூரிம்மட்டும் அழுதுகொண்டு அவள் பின்னே வந்தான். அப்பொழுது அப்னேர், “நீ திரும்பிப்போ” என்று அவனுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே அவனும் திரும்பிப்போனான்.
அப்பொழுது அப்னேர் இஸ்ரயேலரின் முதியவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களிடம், “தாவீதை உங்களுக்கு அரசனாக்க வேண்டுமென்று சில காலமாய் விரும்பினீர்களே. இப்பொழுது அதைச் செய்யுங்கள். ஏனெனில் என் அடியானாகிய தாவீதினால் இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியரிடமிருந்தும் அவர்களுடைய பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் விடுவிப்பேன் என்று யெகோவா தாவீதிற்கு வாக்களித்திருக்கிறார்” என்றான்.
அப்னேர் பென்யமீனியருடன் நேரில் பேசினான்; அதன் பின்னர் இஸ்ரயேல் மக்களும் பென்யமீன் குடும்பத்தார் எல்லோரும் செய்ய விரும்பியதை எல்லாம் தாவீதிற்கு சொல்லும்படி அப்னேர் எப்ரோனுக்குப் போனான். அப்னேர் இருபதுபேருடன் எப்ரோனிலிருந்த தாவீதிடம் வந்தபோது, தாவீது அவனுக்கும் அவனுடைய மனிதருக்கும் ஒரு விருந்து ஆயத்தப்படுத்தினான். அப்பொழுது அப்னேர் தாவீதிடம், “இஸ்ரயேல் மக்கள் என் ஆண்டவனோடு ஒரு ஒப்பந்தம் செய்யும்படியும், நீர் உமது மனம் விரும்பியபடி அவர்களை அரசாளும்படியும் நான் போய் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டவிடும்” என்றான். எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அவனும் சமாதானத்துடன் போனான்.
யோவாப் அப்னேரைக் கொலைசெய்தல்
அதேவேளையில் தாவீதின் மனிதரும் யோவாபும் சூறையாடி, மிகுதியான பொருட்களை கொள்ளையிட்டுத் திரும்பி வந்தார்கள். அவர்கள் வந்தபோது அப்னேர் எப்ரோனில் தாவீதுடன் இருக்கவில்லை. ஏனெனில் ஏற்கெனவே தாவீது அவனை அனுப்பியிருந்ததால் அவன் சமாதானத்துடன் போய்விட்டான். யோவாபும் அவனோடிருந்த படைவீரர் அனைவரும் வந்து சேர்ந்தபோது, நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்ததாகவும், அரசன் அப்னேரை அனுப்பிவிட்டதாகவும், அவன் சமாதானத்துடன் போனதாகவும் யோவாபுக்கு அறிவித்தார்கள்.
எனவே யோவாப் அரசனிடம் போய், “நீர் என்ன செய்தீர்? இதோ, அப்னேர் வந்திருந்தானே. அவனை ஏன் போகவிட்டீர்? இப்பொழுது அவன் போய்விட்டான். நேரின் மகன் அப்னேரை உமக்குத் தெரியுமே? அவன் உம்மை ஏமாற்றி, உம்முடைய நடமாட்டத்தை கவனிக்கவும், நீர் செய்வதையெல்லாம் ஆராயவுமே உம்மிடம் வந்திருக்கிறான்” எனச் சொன்னான்.
பின் யோவாப் தாவீதை விட்டுப்போய், அப்னேரை பின்தொடர்ந்து போகும்படி தூதுவரை அனுப்பினான். அவர்கள் அப்னேரை சீரா என்னும் கிணற்றருகில் இருந்து மறுபடியும் அழைத்து வந்தார்கள். தாவீதிற்கோ இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. அப்னேர் எப்ரோனுக்கு திரும்பிவந்தபோது, யோவாப் அவனுடன் இரகசியமாய் பேசப்போவதுபோல் ஒரு வாசல் பக்கமாய் அழைத்துச் சென்றான். அங்கே, அப்னேர் தன் சகோதரனாகிய ஆசகேலை கொலைசெய்தபடியால், அவனைப் பழிவாங்கும்படி யோவாப் அங்கேயே அவனை வயிற்றில் குத்திக் கொலைசெய்தான்.
இதைக் கேள்விப்பட்ட தாவீது, “நேரின் மகன் அப்னேரின் இரத்தப்பழிக்கு நானும், என் அரசும் யெகோவா முன்னிலையில் என்றென்றும் குற்றமற்றவர்கள். அவனுடைய இரத்தப்பழி யோவாபின் தலையின்மேலும், அவனுடைய தகப்பனின் குடும்பத்தின்மேலும் சுமருவதாக; யோவாபின் குடும்பத்தில் ஒருவனாவது எப்பொழுதும் சீழ்வடியும் புண் உள்ளவனாகவோ, குஷ்டரோகியாகவோ, கோலை ஊன்றுகிறவனாகவோ, வாளால் இறப்பவனாகவோ, உணவு குறைவுள்ளவனாகவோ இருக்கவேண்டும்” என்றான்.
கிபியோனில் நடந்த யுத்தத்தில் அப்னேர் தங்கள் சகோதரன் ஆசகேலை கொலைசெய்தபடியால், யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொலைசெய்தார்கள்.
தாவீது யோவாபிடமும், அவனோடிருந்த மக்கள் அனைவரிடமும், “நீங்கள் அப்னேருக்காக துக்கங்கொண்டாடும்படி உங்கள் உடைகளைக் கிழித்து, இரட்டுடுத்தி, அப்னேரின் உடலுக்கு முன்னால் போங்கள்” என்று சொல்லி, தாவீது அரசனும் பாடைக்குப் பின்னால் போனான். அவர்கள் அப்னேரின் உடலை எப்ரோனில் அடக்கம்பண்ணினார்கள். அரசன் தாவீதோ அவன் கல்லறையண்டையில் அவனுக்காக சத்தமிட்டு அழுதான். எல்லா மக்களும் அழுதார்கள்.
அரசர் அப்னேருக்காக இந்தப் பாடலைப் பாடினான்:
“அப்னேர் குற்றவாளியைப்போல் சாகவேண்டுமோ?
உன் கைகள் கட்டப்படவுமில்லை,
உன் கால்களில் விலங்கு பூட்டப்படவுமில்லை.
கொடியவர்கள் முன் விழுகிற ஒருவனைப்போல் விழுந்தாயே.”
எல்லா மக்களும் அவனுக்காகத் திரும்பவும் அழுதார்கள்.
இன்னும் பகலின் வெளிச்சம் இருக்கையில் மக்கள் தாவீதிடம் வந்து, ஏதாவது உணவு சாப்பிடும்படி வேண்டிக்கொண்டார்கள். ஆனால் தாவீதோ, “நான் சூரியன் மறையும்முன் அப்பத்தையாகிலும், வேறு எதையாகிலும் சாப்பிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்று சத்தியம் செய்திருந்தான்.
மக்கள் அனைவரும் அதைக் கவனித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். இவ்வாறு அரசன் செய்தவைகளெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனவே, நேரின் மகனாகிய அப்னேரின் கொலையில் அரசன் சம்பந்தப்படவில்லை என்பதை அன்று அங்குள்ள மக்களும், இஸ்ரயேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
அப்பொழுது அரசன் தன் மனிதர்களிடம், “இன்று இஸ்ரயேலில் ஒரு இளவரசனும், ஒரு பெருந்தலைவனும் கொலையுண்டு விழுந்தான் என்பதை நீங்கள் உணரவில்லையா? இன்று நான் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டவனாயிருந்தும் நான் பெலவீனமுள்ளவனாயிருக்கிறேன். செருயாவின் மகன்களான இவர்கள் மூவரும் என்னைவிட அதிக பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தீமை செய்தவனுக்கு, அவன் செய்த தீயசெயலுக்கு தக்க பலனை யெகோவா கொடுப்பாராக” என்றான்.
இஸ்போசேத் கொலைசெய்யப்படுதல்
அப்னேர் எப்ரோனிலே கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சவுலின் மகன் இஸ்போசேத் தன் தைரியத்தை இழந்தான். இஸ்ரயேலர் எல்லோரும் திகிலடைந்தார்கள். கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவர்களான இருவர் சவுலின் மகனுக்கு இருந்தனர். ஒருவன் பெயர் பானா, மற்றவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீன் கோத்திரத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. ஏனெனில் பேரோத்தியர் கித்தாயீமுக்கு தப்பி ஓடிப்போய் அங்கே அந்நியராய் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்.
சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும், யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிருந்து வந்தபோது, அவன் ஐந்து வயதுடையவனாயிருந்தான். அவனுடைய தாதி அவனைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுத் தப்பி, ஓடியவேகத்தில் அவன் விழுந்தபோதே அவன் முடவனானான். அவன் பெயர் மேவிபோசேத்.
பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார்கள். மத்தியான வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் கோதுமையை வாங்க வருகிறவர்கள்போல இஸ்போசேத்தின் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று அவனுடைய வயிற்றில் குத்தினார்கள். பின் பானாவும் அவன் சகோதரன் ரேகாபும் தப்பி ஓடிவிட்டார்கள்.4:6 அல்லது கோதுமையை சலித்துக்கொண்டிருந்த வீட்டுக்காரர் மயக்கமடைந்து தூங்கிவிட்டார். எனவே ரேகாபும் பானாவும் அவளைக் கடந்தார்கள்.
இஸ்போசேத் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருக்கும் போதுதான் அவர்கள் உள்ளே போனார்கள். அவனைக் குத்திக் கொன்றபின் அவன் தலையை வெட்டி அதை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அரபா4:7 அரபா அல்லது யோர்தான் பள்ளத்தாக்கு. வழியாகப் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் இருந்த தாவீது அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனிடம், “இதோ உமது உயிரை வாங்கத்தேடிய, உமது பகைவனான சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை. இன்றைய தினம் யெகோவா என் தலைவனான அரசருக்காக சவுலையும் அவன் பிள்ளைகளையும் பழிவாங்கினார்” என்றார்கள்.
அதற்குத் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபிடமும் அவன் சகோதரனான பானாவிடமும், “என்னை எல்லா இக்கட்டுகளிலும் இருந்து மீட்டுக்கொண்ட யெகோவா இருப்பது நிச்சயமெனில், ஒரு மனிதன் நற்செய்தி கொண்டுவருவதாக என்னிடம் வந்து, ‘சவுல் இறந்துபோனான்’ என்று எனக்குச் சொன்னபோது, நான் அவனைப் பிடித்து சிக்லாக்கிலே கொலைசெய்ததும் நிச்சயம். அதுவே அவன் கொண்டுவந்த நற்செய்திக்கு நான் கொடுத்த வெகுமதி. அப்படியிருக்கத் தனது வீட்டிற்குள் தன் படுக்கையில் படுத்திருந்த குற்றமற்ற ஒரு மனிதனைக் கொலைசெய்த கொடிய மனிதருக்கு நான் எவ்வளவு கடுமையாகத் தண்டனை கொடுக்கவேண்டும்? உங்களைப் பூமியில் இருந்து அழித்து அவனுடைய இரத்தத்திற்காக உங்களைப் பழிவாங்கமாட்டேனோ!” என்றான்.
தாவீது அவனுடைய மனிதருக்குக் கட்டளையிட்டதும் அவர்கள் அந்த இருவரையும் கொன்றனர். பின்னர் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி உடல்களை எப்ரோனில் உள்ள குளத்தருகில் தொங்கவிட்டார்கள். ஆனால் இஸ்போசேத்தின் தலையை எடுத்துச்சென்று எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
இஸ்ரயேலுக்குத் தாவீது அரசனாகுதல்
இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்தும் எப்ரோனிலிருந்த தாவீதிடம் வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம். கடந்த நாட்களில் சவுல் எங்களுக்கு அரசனாயிருந்தபோது, இஸ்ரயேலின் இராணுவ நடவடிக்கைக்கு தலைமை வகித்து வழிநடத்தியவர் நீரே; அன்றியும் யெகோவா உம்மிடம், ‘நீ இஸ்ரயேல் மக்களுக்கு மேய்ப்பனாகி அவர்களுக்கு ஆளுநனாவாய்’ என்றும் சொல்லியிருக்கிறாரே” என்றனர்.
இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் எப்ரோனிலிருந்த தாவீது அரசனிடம் வந்தார்கள்; தாவீது அரசன் எப்ரோனில் யெகோவா முன்னிலையில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டபின், அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் செய்தார்கள்.
தாவீது அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான். அவன் நாற்பது வருடங்கள் அரசாண்டான். அவன் எப்ரோனில் யூதாவை ஏழு வருடம் ஆறு மாதமும், எருசலேமில் இஸ்ரயேலர் அனைவரையும், யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் அரசாண்டான்.
தாவீது எருசலேமை கைப்பற்றுதல்
அரசர் தன் மனிதருடன் படையெடுத்து எருசலேமுக்குப் போய் அங்கே குடியிருந்த எபூசியரை தாக்குவதற்குச் சென்றான். எபூசியர் தாவீதிடம், “உன்னால் இங்கு உள்ளே வரமுடியாது. இங்குள்ள குருடரும், முடவரும் உன்னைத் துரத்திவிடுவார்கள்” என்றார்கள். தாவீதினால் உள்ளே வரமுடியாது என அவர்கள் நினைத்தார்கள். ஆனாலும் தாவீதின் நகரமான சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினான்.
அன்றையதினம் தாவீது, “எபூசியரை முறியடிப்பவன் எவனும் தாவீதின் பகைவர்களான குருடரையும், முடவரையும் எதிர்ப்பதற்கு நீர்க்குழாய் வழியாக ஏறிப்போகவேண்டும்” எனச் சொல்லியிருந்தான். இதனால்தான் குருடரும், முடவரும் அரண்மனைக்குள்ளே5:8 அரண்மனைக்குள்ளே அல்லது தேவனுடைய வீட்டிற்குள் என்று அர்த்தம் போகக்கூடாது என்பார்கள்.
பின்பு தாவீது அந்த கோட்டையில் வாழ்ந்து, அதைத் தாவீதின் நகரம் என அழைத்தான். அவன் அதைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து உட்புறமாக மதிலைக் கட்டினான். சேனைகளின் இறைவனாகிய யெகோவா தாவீதோடு இருந்தபடியால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
தீருவின் அரசனான ஈராம் தன் தூதுவர்களோடு கேதுரு மரத்தடிகளையும், தச்சர்களையும், கல்வேலை செய்வோரையும் தாவீதிடம் அனுப்பினான். அவர்கள் தாவீதிற்கு ஒரு அரண்மனையைக் கட்டினார்கள். யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தினார் என்றும், தன் மக்களாகிய இஸ்ரயேலருக்காக தனது ஆட்சியை மேன்மைப்படுத்தினார் என்றும் தாவீது அப்பொழுது அறிந்துகொண்டான்.
தாவீது எப்ரோனில் இருந்து புறப்பட்ட பின்பு, எருசலேமிலே இன்னும் பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் எடுத்துக்கொண்டான். அவர்கள்மூலம் அவனுக்கு மேலும் பல மகன்களும் மகள்களும் பிறந்தார்கள். எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன், இப்கார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்பனவாகும்.
தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல்
தாவீது இஸ்ரயேலரின் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அரணான இடத்திற்குப் போனான். பெலிஸ்தியரோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே வந்து, அங்கே பரவி இருந்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீ போ, நிச்சயமாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார்.
எனவே தாவீது பாகால் பிராசீமுக்குப்போய் பெலிஸ்தியரை அங்கே தோற்கடித்தான். அப்பொழுது அவன், “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, யெகோவா என் பகைவரை எனக்கு முன்பாக முறிந்தோடப்பண்ணினார்” என்றான். எனவே அந்த இடம் பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது. அப்பொழுது பெலிஸ்தியர் தங்கள் விக்கிரகங்களைக் கைவிட்டார்கள். அவற்றைத் தாவீதும் அவன் மனிதர்களும் எடுத்துச் சென்றார்கள்.
பெலிஸ்தியர் மீண்டும் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரந்து காத்திருந்தார்கள். எனவே தாவீது யெகோவாவிடம் விசாரித்தபோது, அதற்கு அவர், “நீ அவர்களை நேருக்குநேராக தாக்காமல், அவர்களுக்குப் பின்னாகச் சுற்றிப்போய் குங்கிலிய மரங்களுக்கு முன்னிருந்து தாக்கு; குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்கும்போது விரைவாகச் செல்வாயாக. ஏனெனில், இதுவே பெலிஸ்தியரின் படையைத் தாக்குவதற்கு யெகோவா உனக்குமுன் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்” என்றார். எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான்.
உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருதல்
தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான். கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள். இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான். தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.
அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான். ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான்.
யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது.
தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான். எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார்.
அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான். அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான். தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.
யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள்.
அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான். பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.
அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன். நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான்.
சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.
தாவீதுக்கு இறைவனின் வாக்குறுதி
தாவீது அரசன் தனது அரண்மனையில் குடியமர்ந்தான். யெகோவா அவனைச் சுற்றிலுமிருந்த பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தார். அதன்பின் அரசன், இறைவாக்கினனான நாத்தானிடம், “இதோ நான் கேதுருமர அரண்மனையில் குடியிருக்கையில், இறைவனின் பெட்டியோ இன்னும் கூடாரத்திலேயே இருக்கிறது” என்றான்.
அதற்கு நாத்தான் அரசனிடம், “உன்னுடைய மனதில் இருப்பவை எதுவோ, அதைச் செய்; யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது:
“நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: நான் வசிப்பதற்கான வீட்டைக் கட்டுகிறவன் நீ தானோ? இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை நான் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. கூடாரத்தையே என் உறைவிடமாக்கிக்கொண்டு நான் இடம்விட்டு இடம் வசித்துக்கொண்டிருக்கிறேன். நான் இஸ்ரயேல் மக்களுடன் பயணம் செய்த இடமெல்லாம் என் மக்களான இஸ்ரயேலரை வழிநடத்தும்படி நான் ஆளுநர்களை நியமித்தேன். அவர்களிடம், “எனக்காக கேதுரு மரங்களினால் ஒரு வீட்டை நீங்கள் ஏன் கட்டவில்லை?” என எப்போதாவது கேட்டதுண்டோ’ என்றார்.
“இப்பொழுதும் நீ என் அடியானாகிய தாவீதிடம் சென்று, ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேலரின்மேல் அதிபதியாயிருக்கும்படி புல்வெளியில் மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த உன்னை தெரிந்தெடுத்தேன். நீ சென்ற இடங்களிலெல்லாம் நான் உன்னோடுகூட இருந்து உன் பகைவரையெல்லாம் உனக்கு முன்பாக அழித்தேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன். நான் எனது மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அங்கு அவர்களை நிலைநாட்டுவேன். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சொந்த இருப்பிடம் இருக்கும். அவர்களை ஒருவரும் தொல்லைப்படுத்தமாட்டார்கள். முன்பு அவர்களை கொடியவர்கள் ஒடுக்கியதுபோல் இனி ஒருபோதும் ஒருவரும் ஒடுக்கமாட்டார்கள். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு மேலாக தலைவர்களை நான் ஏற்படுத்திய காலத்திலிருந்து நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். உன்னுடைய எல்லாப் பகைவரிடமிருந்தும் நான் உனக்கு ஆறுதல் தருவேன்.
“ ‘மேலும் யெகோவா அறிவிக்கிறதாவது: யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்.7:11 கட்டுவார் என்றால் உன் வம்சம் தொடர்ந்து ஆளும் என்று அர்த்தம் உனது வாழ்நாள் முடிவுற்று நீ உன் முற்பிதாக்களுடன் படுத்திருக்கும்போது, உனக்கு பிறக்கும் உன் சந்ததியில் ஒருவனை நான் எழுப்பி, அவனுடைய அரசை நான் நிலைநாட்டுவேன். அவனே என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவனுடைய அரசாட்சியின் அரியணையை நான் என்றென்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் அநியாயம் செய்கிறபோது, மனிதர் பயன்படுத்தும் தடியினாலும் கசையடியினாலும் அவனை நான் தண்டிப்பேன். இருப்பினும் உனக்கு முன்னதாக நான் அகற்றிய சவுலிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, எனது அன்பை அவனிடமிருந்து அகற்றமாட்டேன். உனது குடும்பமும், அரசும் எனக்குமுன் என்றென்றைக்கும் நிலைநிற்கும். உனது அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார்’ ” என்றான்.
இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்துதலின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
தாவீதின் மன்றாட்டு
பின்பு அரசன் தாவீது உள்ளே சென்று யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து சொன்னதாவது:
“யெகோவாவாகிய ஆண்டவரே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்தி வந்ததற்கு நான் யார்? என் குடும்பமும் எம்மாத்திரம்? யெகோவாவாகிய ஆண்டவரே, உமது பார்வைக்கு இதுவும் போதாதென்று நீர் உமது பணியாளனின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் பேசியிருக்கிறீரே! யெகோவாவாகிய ஆண்டவரே, இப்படித்தான் நீர் மனிதருடன் நடந்துகொள்ளும் வழக்கமோ!
“இன்னும் மேலாக தாவீது உம்மிடம் எதைச் சொல்லமுடியும்? யெகோவாவாகிய ஆண்டவரே! உம்முடைய அடியானை நீர் அறிவீர் உமது வாக்குத்தத்தத்தின் வார்த்தையின் நிமித்தமும், உமது திட்டத்தின்படியும், இப்பெரிய செயல்களைச் செய்து, அடியானுக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
“ஆண்டவராகிய யெகோவாவே! நீரே பெரியவர்; உம்மைப்போல் யாரும் இல்லை. எங்கள் காதுகளால் நாங்கள் கேள்விப்பட்டதுபோல் உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை. உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? தமக்கு மக்களாயிருக்கும்படி, இறைவன் தாமே போய் மீட்டுக்கொண்ட பூமியிலுள்ள ஒரே இனம் அவர்களே. எகிப்தியரிடமிருந்து நீர் மீட்ட உமது மக்களுக்கு முன்பாக, பிற நாட்டு மக்களையும், அவர்களுடைய தெய்வங்களையும் துரத்தி, பெரிதும் பயங்கரமுமான அதிசய செயல்களைச் செய்து, மிகப்பெரிய பெயரை உமக்கு ஏற்படுத்தினீரே; உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றைக்கும் உமக்குரியவர்களாயிருக்கும்படி நிலைநிறுத்தி, யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதியை என்றென்றைக்கும் நிலைப்படுத்தும். நீர் வாக்களித்தபடியே செய்யும். இதனால் உமது பெயர் என்றென்றும் பெரிதாயிருக்கும். அப்பொழுது, ‘சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின்மேல் இறைவன்’ என்று மனிதர் சொல்வார்கள். அப்பொழுது உமது அடியானாகிய தாவீதின் குடும்பம் உமக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும்.
“சேனைகளின் யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, ‘நான் உன் குடும்பத்தை கட்டி எழுப்புவேன்’ என்று உமது அடியானுக்கு நீர் வெளிப்படுத்தினீர். எனவே இந்த மன்றாட்டை உம்மிடம் சமர்ப்பிக்க உமது அடியானுக்கு துணிவு கிடைத்தது. ஆண்டவராகிய யெகோவாவே! நீரே இறைவன். உம்முடைய வார்த்தைகள் நம்பத்தகுந்தவை. நீர் இந்த நல்ல செயல்களை உமது அடியவனுக்கு வாக்காகக் கொடுத்திருக்கிறீர். எனவே இப்பொழுது உம்முடைய கண்களுக்கு முன்பாக உமது அடியானின் குடும்பம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்படி, அதை மனதார ஆசீர்வதியும். ஆண்டவராகிய யெகோவாவே, நீர் சொல்லியிருக்கிறீர். உமது ஆசீர்வாதத்தினால் உமது அடியானின் குடும்பம் என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என்றான்.
தாவீதின் வெற்றிகள்
சிறிது காலத்திற்குப்பின் தாவீது பெலிஸ்தியரை தோற்கடித்து, அவர்களை தனக்குக் கீழ்ப்படுத்தி, பெலிஸ்தியரின் கட்டுப்பாட்டில் இருந்த மேத்தேக் அம்மா என்ற பட்டணத்தைக் கைப்பற்றினான்.
மேலும் தாவீது மோவாபியரையும் தோற்கடித்தான். அவன் அவர்களை தரையில் கிடத்தி, அளவிடும் கயிற்றினால் அளந்தான். ஒவ்வொரு இரண்டாம் அளவுக்குள் அடங்கியவர்களைக் கொன்று, ஒவ்வொரு மூன்றாம் அளவுக்குள் அடங்கியவர்களை உயிரோடு விட்டான். எனவே மோவாபியர் தாவீதுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு அவனுக்கு வரி செலுத்தினார்கள்.
மேலும், ரேகோபின் மகன் ஆதாதேசர் என்னும் சோபாவின் அரசன், யூப்ரட்டீஸ் நதியோரம் உள்ள பகுதியை திரும்பவும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சென்றபோது, தாவீது அவனையும் தோற்கடித்தான். தாவீது அவனிடமிருந்த ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் தேரோட்டிகளையும், இருபதாயிரம் காலாட்படைகளையும் கைப்பற்றினான். அவற்றில் தேர் இழுக்கும் நூறு குதிரைகளைத்தவிர மற்ற குதிரைகளையெல்லாம் முடமாக்கினான்.
சோபாவின் அரசன் ஆதாதேசருக்கு உதவும்படி தமஸ்குவைச் சேர்ந்த சீரியர் வந்தபோது, தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டான். அதன்பின் தமஸ்குவில் சீரிய அரசாட்சிப் பகுதியில் இராணுவ முகாம்களை அமைத்தான். சீரியர் தாவீதின் ஆட்சிக்குட்பட்டு அவனுக்கு வரி செலுத்தினார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீது ஆதாதேசரின் அதிகாரிகளுக்குச் சொந்தமான தங்கக் கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டுவந்தான். ஆதாதேசருக்கு சொந்தமான பேத்தா, பேரொத்தாய் என்னும் பட்டணங்களிலிருந்து தாவீது அரசன் ஏராளமான வெண்கலத்தைக் கைப்பற்றினான்.
ஆதாதேசருடைய படைகள் அனைத்தையும் தாவீது முறியடித்த செய்தியை ஆமாத்தின் அரசனான தோயீ கேள்விப்பட்டான். அப்பொழுது தோயீ தன்னோடு எப்போதும் எதிர்த்துப் போர் செய்த ஆதாதேசரை தாவீது வெற்றிகொண்டதால், அவனை நலம் விசாரிக்கவும், வாழ்த்துக்கூறவும் தன் மகன் யோராமை தாவீது அரசனிடம் அனுப்பினான். யோராம் தன்னுடன் தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பொருட்களை எடுத்துவந்தான்.
தாவீது அரசன் தான் கீழ்ப்படுத்திய நாடுகளிலிருந்து கைப்பற்றிய வெள்ளியையும், தங்கத்தையும் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்ததுபோலவே, யோராம் கொண்டுவந்தவற்றையும் செய்தான். ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரையே அவன் கீழ்ப்படுத்தியிருந்தான். அத்தோடு ரேகோபின் மகனாகிய சோபாவின் அரசன் ஆதாதேசரிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் யெகோவாவுக்கு அர்ப்பணித்தான்.
தாவீது உப்புப் பள்ளத்தாக்கிலே, பதினெட்டாயிரம் ஏதோமியரைக் கொன்று திரும்பியபின் அவன் பிரபலம் அடைந்தான்.
தாவீது ஏதோம் முழுவதிலும் இராணுவ முகாம்களை ஏற்படுத்தினான். ஏதோமியர் அனைவரும் தாவீதுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டார்கள். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் அலுவலர்கள்
தாவீது தனது எல்லா மக்களுக்கும் நீதியையும், நியாயத்தையும் செய்து, இஸ்ரயேலர் அனைவரையும் ஆட்சிசெய்தான். செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான்8:16 படைகளுக்குத் தலைவனாயிருந்தான் அல்லது அரச செய்தித் தொடர்பாளர்.. அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான். அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். செராயா செயலாளனாக இருந்தான். யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். தாவீதின் மகன்கள் ஆசாரியர்களாய்8:18 அல்லது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் அரச ஆலோசகர்களாய் என்றுள்ளது. [1 நாளா. 18:17] இருந்தார்கள்.
தாவீதும் மேவிபோசேத்தும்
இதன்பின்பு தாவீது, “யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?” என்று கேட்டான்.
அப்பொழுது சீபா என்னும் பெயருடைய சவுலின் வீட்டுப் பணியாளன் ஒருவன் இருந்தான். அவனைத் தாவீதுக்கு முன்பாக வரும்படி அழைத்தார்கள். அரசன் அவனிடம், “நீ தானா சீபா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உமது அடியானே தான்” என்றான்.
அரசன் அவனிடம், “இறைவனுடைய தயவை நான் காட்டும்படி சவுலின் குடும்பத்தில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டான்.
அதற்கு சீபா, “இரண்டு கால்களும் முடமான யோனத்தானின் மகன் ஒருவன் இன்னும் உயிரோடிருக்கிறான்” என்றான்.
“அவன் எங்கே?” என அரசன் கேட்டான்.
அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான்.
எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணக்கம் தெரிவித்தான்.
அப்போது தாவீது அவனிடம், “மேவிபோசேத்தே” என்றான்.
அதற்கு அவன், “இதோ உமது அடியேன்” என்றான்.
தாவீது அவனிடம், “பயப்படாதே; உன் தகப்பன் யோனத்தானின் நிமித்தம் நிச்சயம் உனக்கு தயவுகாட்டுவேன். உன் பாட்டன் சவுலுக்கு சொந்தமாயிருந்த நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும் நீ எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவாய்” என்றான்.
இதைக் கேட்ட மேவிபோசேத் தாவீதை வணங்கி, “செத்த நாய் போன்ற என்னை நீர் கவனத்தில்கொள்வதற்கு உமது அடியவன் எம்மாத்திரம்?” என்றான்.
அதன்பின் அரசன் சவுலின் பணியாளனாயிருந்த சீபாவை அழைப்பித்து அவனிடம், “சவுலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சொந்தமாயிருந்த யாவற்றையும் உன் எஜமானின் பேரனுக்குக் கொடுத்துள்ளேன். நீயும் உன் மகன்களும் உன் பணியாட்களும் அந்த நிலத்தை அவனுக்காகப் பயிரிடுங்கள். உன் எஜமானுடைய பேரனின் பராமரிப்புக்காக அதன் விளைச்சலைக் கொண்டுவாருங்கள். ஆனாலும் உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவான்” என்றான். சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.
அப்பொழுது சீபா அரசனிடம், “என் தலைவனாகிய அரசன் எனக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்” என்றான். எனவே மேவிபோசேத் அரசனின் மகன்களில் ஒருவனைப்போல் தாவீதின் பந்தியில் சாப்பிட்டு வந்தான்.
மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள். மேவிபோசேத்துக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தபடியாலும், எப்பொழுதும் அரசனுடைய பந்தியில் சாப்பிட்டபடியாலும் எருசலேமிலேயே வாழ்ந்து வந்தான்.
தாவீது அமோனியர்களை முறியடித்தல்
சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் இறந்தான்; அவன் மகன் ஆனூன் அவனுடைய இடத்தில் அரசனானான். அப்பொழுது தாவீது: “ஆனூனின் தகப்பன் நாகாஸ் எனக்குத் தயவுகாட்டியதுபோல் நானும் அவனுக்குத் தயவுகாட்டுவேன் என நினைத்தான்.” எனவே ஆனூனின் தகப்பன் இறந்ததற்காக அவனுக்கு தன் அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி தாவீது ஒருசில பிரதிநிதிகளை அனுப்பினான்.
தாவீதின் மனிதர்கள் அம்மோனியரின் நாட்டை அடைந்தார்கள். அப்பொழுது அம்மோனியரின் அதிகாரிகள் தங்கள் தலைவனான ஆனூனிடம், “தாவீது உமது தகப்பனைக் கனம்பண்ணியதால் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி, தன் மனிதர்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறான் என நீர் நினைக்கிறீரோ? தாவீது இந்தப் பட்டணத்தைப்பற்றி அறியவும், வேவுபார்த்து அதைக் கவிழ்க்கவும் அல்லவோ அவர்களை அனுப்பியுள்ளான்” என்றார்கள். எனவே ஆனூன் தாவீதின் மனிதரைப் பிடித்து அவர்கள் தாடியின் பாதியைச் சிரைத்து, அவர்களுடைய உடைகளின் பின்பக்கத்தில் இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதியை கத்தரித்துவிட்டு, அவர்களை வெளியே துரத்திவிட்டான்.
இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் அவமானமடைந்தபடியால், அவர்களைச் சந்திக்கும்படி தூதுவரை அனுப்பினான். “உங்கள் தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து அதன்பின் வாருங்கள்” என்று அரசன் அவர்களிடம் சொல்லச் சொன்னான்.
அம்மோனியர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதை உணர்ந்தபோது, பெத்ரேகோபிலிருந்தும், சோபாவிலிருந்தும் இருபதாயிரம் சீரிய காலாட்படைகளைக் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் மாக்கா அரசனோடு ஆயிரம்பேரையும், தோப்பில் பன்னிரெண்டாயிரம்பேரையும் கூலிக்கு அமர்த்தினார்கள்.
இதைக் கேள்விப்பட்ட தாவீது, யோவாபையும் போர்த் திறமையுள்ள முழு இராணுவத்தையும் அனுப்பினான். அம்மோனியர் வெளியே வந்து பட்டண வாசலில் அணிவகுத்து நின்றார்கள். ஆனாலும் சோபாவிலிருந்தும் ரேகோபிலிருந்தும் வந்த சீரியரும், தோபையும் மாக்காவையும் சேர்ந்த மனிதரும் தாங்களாகவே நாட்டின் திறந்தவெளியில் நின்றார்கள்.
அப்பொழுது யோவாப் தனக்கு முன்னும் பின்னும் எதிரிகளின் படை அணிவகுத்து நிற்பதைக் கண்டதும், இஸ்ரயேலின் இராணுவவீரரில் திறமைமிக்க சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களை சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். மற்ற இராணுவவீரரை தன் சகோதரன் அபிசாயின் தலைமையின்கீழ் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். பின்பு யோவாப் தன் சகோதரனிடம், “சீரியர் என்னிலும் பலமுள்ளவர்களாயிருந்தால் நீ என்னை விடுவிக்க வரவேண்டும்; அம்மோனியர் உன்னிலும் மிக பலமுள்ளவர்களாயிருந்தால் நான் உன்னை விடுவிக்க வருவேன். ஆனாலும் தைரியமாய் இரு; நமது மக்களுக்காகவும், இறைவனின் பட்டணங்களுக்காகவும், தைரியமாக போரிடுவோம். யெகோவா தன் பார்வைக்கு நலமானபடிச் செய்வார்” என்றான்.
எனவே யோவாபும், அவனோடிருந்த இராணுவவீரரும் சீரியருடன் போரிட முன்னேறியபோது, சீரியர் அவனுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள். சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் அம்மோனியருடன் போரிட்டபின் எருசலேமுக்கு திரும்பிவந்தான்.
அப்பொழுது தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட சீரியர் மறுபடியும் ஒன்றுகூடினார்கள். ஆதாதேசர், யூப்பிரடீஸ் நதிக்கு அப்பாலிருந்து சீரியரை வரச்செய்தான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள். ஆதாதேசரின் படைத்தளபதி சோபாக் அவர்களை நடத்திச் சென்றான்.
இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரயேலரையெல்லாம் ஒன்றுசேர்த்து யோர்தான் நதியைக் கடந்து ஏலாமுக்குப் போனான்; அப்பொழுது சீரியர் தாவீதை எதிர்கொண்டு அணிவகுத்து நின்று போரிட்டார்கள். ஆனால் சீரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். தாவீது அவர்களின் எழுநூறு தேர்ப்படை வீரர்களையும் நாற்பதாயிரம் குதிரைப்படை வீரர்களையும்10:18 சில எபிரெய வேதத்தின் கிரேக்க பிரதிகளில் காலாட்படை வீரர்கள் என்றுள்ளது. கொன்று, படைத்தளபதி சோபாகையும் அடித்தான். அவன் அங்கே இறந்தான். ஆதாதேசருக்கு வரி செலுத்திய அரசர்கள் அனைவரும் தாங்கள் இஸ்ரயேலரால் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் இஸ்ரயேலருடன் சமாதானம் செய்து அவர்களின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டார்கள்.
எனவே அம்மோனியருக்கு மேலும் உதவிசெய்ய சீரியர் பயந்தார்கள்.
பத்சேபாளும் தாவீதும்
அரசர்கள் யுத்தத்துக்குச் செல்லும் வசந்தகாலத்தில், அரசனாகிய தாவீது யோவாபை, தன் ஆட்களோடும் இஸ்ரயேலின் படைவீரர் அனைவரோடும் யுத்தத்தை நடத்துவதற்கு அனுப்பினான். அவர்கள் அம்மோனியரை அழித்து ரப்பாவை முற்றுகையிட்டார்கள். தாவீதோ எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
ஒரு மாலைவேளையில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். மாடத்திலிருந்து ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தப் பெண் மிக அழகானவளாக இருந்தாள். எனவே தாவீது அவளைப்பற்றி அறிந்துவரும்படி ஒருவனை அனுப்பினான். அந்த மனிதன் தாவீதிடம், “அவள் எலியாமின் மகளும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் அல்லவா” என்றான். அப்பொழுது தாவீது அவளை அழைத்துவரும்படி தூதுவர்களை அனுப்பினான். அவள் வந்ததும் தாவீது அவளுடன் உடலுறவு கொண்டான். அவள் தன்னுடைய மாத விலக்கிலிருந்து தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு வந்திருந்தாள். அவள் தன் வீட்டுக்குப் போனாள். அதன்பின் அந்தப் பெண் கருவுற்று, “நான் கர்ப்பவதியாயிருக்கிறேன்” என தாவீதுக்குச் சொல்லியனுப்பினாள்.
தாவீது யோவாபுக்கு ஆளனுப்பி, “ஏத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பு” எனச் சொல்லும்படி சொன்னான். அதன்படியே யோவாப் அவனைத் தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தபோது தாவீது அவனிடம், யோவாப் எப்படியிருக்கிறான் என்றும், யுத்த வீரர் எப்படியிருக்கிறார்கள் என்றும், யுத்தம் எப்படி நடக்கிறது என்றும் விசாரித்தான். பின் தாவீது உரியாவிடம், “உன் வீட்டிற்குப்போய் ஓய்வெடுத்து உன் மனைவியுடன் மகிழ்ந்திரு” என்று சொன்னான். எனவே உரியா அரண்மனையை விட்டு புறப்பட்டான். அவனுக்குப்பின்னே அரசனால் அவன் வீட்டுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பப்பட்டது. ஆனால் உரியாவோ தன் வீட்டிற்குப் போகாமல் அரண்மனை வாசலில் தன் எஜமானின் பணியாட்களுடன் படுத்திருந்தான்.
“உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்று தாவீதிற்கு அறிவித்தார்கள்; அப்பொழுது தாவீது உரியாவிடம், “நீ வெகுதூரத்திலிருந்து வந்தவனல்லவா? ஏன் உன் வீட்டிற்குப் போகவில்லை?” எனக் கேட்டான்.
அப்பொழுது உரியா தாவீதிடம், “இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் உடன்படிக்கைப் பெட்டியுடன் கூடாரங்களில் தங்கியிருக்கிறார்கள். என் தலைவனாகிய யோவாபும் என் அரசரின் வீரரும் வயல்வெளிகளிலே முகாமிட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க நான் சாப்பிடவும், குடிக்கவும், என் மனைவியுடனிருக்கவும் எப்படி என் வீட்டிற்குப் போவேன். நீர் வாழ்வது நிச்சயம்போலவே அப்படியான செயலை ஒருபோதும் நான் செய்யமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
அதற்குத் தாவீது அவனிடம், “இன்னும் ஒரு நாள் இங்கே தங்கியிரு; நாளைக்கு நான் உன்னை திருப்பி அனுப்புவேன்” என்றான். எனவே உரியா அன்றும், மறுநாளும் எருசலேமில் தங்கியிருந்தான். தாவீதின் அழைப்பிற்கிணங்கி உரியா அவனுடன் சாப்பிட்டு, குடித்தான். தாவீது அவனை வெறியடையச் செய்தான். ஆனாலும் அன்று மாலையும் அவன் தன் வீட்டிற்குப் போகாமல் தன் தலைவனுடைய பணியாட்களுடனே தனது படுக்கையில் படுத்துக்கொண்டான்.
அதிகாலையில் தாவீது ஒரு கடிதத்தை யோவாபுக்கு எழுதி உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். அக்கடிதத்தில், “போர் கடுமையாக நடக்கும்போது முன்னணியில் உரியாவை நிறுத்து; அவன் வெட்டுண்டு சாகும்படி அங்கே அவனைவிட்டு நீங்கள் பின்வாங்குங்கள்” என்று எழுதினான்.
அப்படியே பட்டணத்தை யோவாப் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோது, தனக்குத் தெரிந்தபடி அப்பட்டணத்தின் வலிமைமிக்க பாதுகாப்பு வீரர் நிற்கும் இடத்தில் உரியாவை நிறுத்தினான். பட்டணத்திற்குள் இருந்த வீரர் வெளியே வந்து யோவாபுக்கு எதிராகப் போரிட்டபோது, தாவீதின் வீரர்களில் சிலர் இறந்தார்கள்; அவர்களுடன் ஏத்தியனான உரியாவும் செத்தான்.
அப்பொழுது யோவாப் போரின் முழு விபரத்தையும் தாவீதுக்கு அறிவித்தான். யோவாப் தான் அனுப்பிய தூதுவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீ அரசனிடம் இந்தப் போரின் விபரத்தைச் சொல்லி முடிந்தவுடன், அரசன் ஒருவேளை கோபமடைந்து உன்னிடம், ‘நீங்கள் போரிடுவதற்கு பட்டணத்தை அவ்வளவு நெருங்கிப்போனது ஏன்? மதிலிலிருந்து அம்பு எறிவார்களென்று உங்களுக்குத் தெரியாதா? எருப்பேசேத்தின் மகன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? ஒரு பெண் நகர மதிலிலிருந்து திரிகைக்கல்லை எறிந்ததினால் அல்லவா அவன் தேபேசிலே இறந்தான். அப்படியிருக்க ஏன் மதிலுக்கு இவ்வளவு அருகில் போனீர்கள்?’ என்று கேட்டால், ‘ஏத்தியனான உரியா என்னும் உம்முடைய பணியாளனும் இறந்தான்’ என்று சொல்” என்றான்.
அத்தூதுவன் புறப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்தவுடன் யோவாப் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தாவீதுக்குச் சொன்னான். அவன் தாவீதிடம், “எதிரிகள் அதிக வல்லமையுடன் எங்களை மேற்கொண்டு வெளியில் எங்களுக்கு எதிராய் வந்தார்கள். ஆனால் நாங்களோ அவர்களைப் பட்டணவாசலுக்குள் திரும்பவும் துரத்தினோம். ஆனாலும் வில்வீரர் மதில் மேலிருந்து உம்முடைய வீரர்மேல் எய்ததினால் அரசனுடைய வீரர்கள் சிலர் இறந்தார்கள். அவர்களோடு உம்முடைய பணியாளனான உரியா என்னும் ஏத்தியனும் இறந்தான்” என்றான்.
அப்பொழுது தாவீது அந்தத் தூதுவனிடம், “நீ யோவாபிடம் போய் இதனால் நீ கலக்கமடைய வேண்டாம்; வாள் ஒருவனை இரையாக்குவதுபோல் இன்னொருவனையும் இரையாக்கும். எனவே தாக்குதலைப் பலப்படுத்தி பட்டணத்தை அழிக்கும்படி யோவாபுக்குச் சொல்லி அவனைத் திடப்படுத்து” என்றான்.
தன் கணவன் இறந்ததை உரியாவின் மனைவி கேட்டபோது அவனுக்காகத் துக்கங்கொண்டாடினாள். துக்ககாலம் முடிந்தபின் தாவீது அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டுவரச் செய்தான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு மகனைப் பெற்றாள். தாவீது செய்த இச்செயல் யெகோவாவுக்கு வெறுப்பாயிருந்தது.
நாத்தான் தாவீதைக் கண்டித்தல்
யெகோவா நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; நாத்தான் தாவீதிடம் வந்து அவனிடம், “ஒரு பட்டணத்தில் இரண்டு மனிதர் இருந்தார்கள், ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனுக்கு ஏராளமான ஆடுகளும், மாடுகளும் இருந்தன. ஏழைக்கோ தான் வாங்கி வளர்த்த ஒரு செம்மறியாட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லை. அது அவனோடும், அவன் பிள்ளைகளோடும் வளர்ந்தது; அது அவன் உணவை சாப்பிட்டு, அவன் பாத்திரத்தில் குடித்து, அவன் மடியில் நித்திரை செய்தது. அது அவனுடைய மகளைப்போல் இருந்தது.
“இப்படியிருக்கையில் ஒரு நாள் அச்செல்வந்தனிடம் ஒரு வழிப்போக்கன் வந்தான்; அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயாரிப்பதற்குத் தன் மந்தையில் ஒரு செம்மறியாட்டையோ, மாட்டையோ அந்தச் செல்வந்தன் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏழைக்குச் சொந்தமான செம்மறியாட்டுக் குட்டியைப் பிடித்துத் தன்னிடம் வந்தவனுக்கு உணவு தயாரித்தான்” என்றான்.
இதைக் கேட்ட தாவீதிற்கு அந்த செல்வந்தன்மேல் கோபம் மூண்டது; எனவே தாவீது நாத்தானிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் அந்த மனிதன் சாகவே தகுதியுள்ளவன் என்பதும் நிச்சயம். அவன் இரக்கமில்லாமல் இப்படியான செயலைச் செய்தபடியால், அவன் அந்த செம்மறியாட்டுக் குட்டிக்காக நான்கு மடங்கு விலை கொடுக்கவேண்டும்” என்றான்.
அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன். உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய். இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’
“மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான்.
உடனே தாவீது நாத்தானிடம், “நான் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்திருக்கிறேன்” என்றான்.
அதற்கு நாத்தான், “யெகோவா உன் பாவத்தை அகற்றிவிட்டார், அதனால் நீ சாகமாட்டாய். ஆனால் நீ இப்படிச் செய்ததினால் யெகோவாவினுடைய பகைவர் முன்பாக யெகோவாவை முற்றிலும் அவமதித்தாய். ஆகையால் உனக்குப் பிறக்கும் பிள்ளை நிச்சயமாக சாவான்” என்று சொன்னார்.
இவ்வாறு சொன்னபின் நாத்தான் தன் வீட்டிற்குப் போனான். அதன்படி உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற பிள்ளையை யெகோவா தண்டித்ததினால் அவன் நோயுற்றான். அதைக்கண்ட தாவீது அப்பிள்ளைக்காக இறைவனிடம் வேண்டினான். அவன் உபவாசம் இருந்து வீட்டிற்குள்ளேபோய் தரையில் கிடந்து மன்றாடி இரவுகளைக் கழித்தான். அவனுடைய குடும்பத்தின் முதியவர்கள் அவனுக்கு அருகே நின்று, அவனை எழுந்திருக்கும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால் அவனோ மறுத்துவிட்டான்; அவன் அவர்களோடு எந்த உணவைச் சாப்பிடவும் மறுத்தான்.
ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
ஆனால் பணியாட்கள் தங்களுக்குள்ளே இரகசியமாய் பேசிக்கொள்கிறதை தாவீது கவனித்தபோது பிள்ளை இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டான். அப்பொழுது அவன், “பிள்ளை இறந்து விட்டானா?” என்று தன் பணியாட்களிடம் கேட்டான்.
அதற்கு அவர்கள், “ஆம் இறந்துவிட்டான்” என்றார்கள்.
உடனே தாவீது தரையில் இருந்து எழுந்து, குளித்துவிட்டு, எண்ணெய் பூசி தன் உடைகளையும் மாற்றிக் கொண்டான். பின்பு யெகோவாவின் ஆலயத்துக்குச் சென்று யெகோவாவை வழிபட்டான். அதன்பின் தன் சொந்த வீட்டிற்கு போய் உணவு கேட்டு அவர்களிடம் அதை வாங்கிச் சாப்பிட்டான்.
அப்பொழுது அவன் செய்வதைக் கண்ட பணியாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதுகொண்டிருந்தீர்; இப்பொழுது பிள்ளை இறந்தபோது எழுந்து சாப்பிடுகிறீரே?” என்றார்கள்.
அதற்கு அவன், “பிள்ளை உயிரோடிருந்தபோது, ஒருவேளை யெகோவா எனக்கு இரக்கங்காட்டிப் பிள்ளையை பிழைக்கப்பண்ணுவார் என நினைத்தே நான் உபவாசித்து அழுதுகொண்டிருந்தேன். இப்பொழுதோ பிள்ளை இறந்துவிட்டான்; எனவே இனி நான் ஏன் உபவாசிக்கவேண்டும்? என்னால் மறுபடியும் அவனைக் கொண்டுவர முடியுமா? நான் அவனிடம் போவேன்; அவனோ என்னிடம் திரும்பி வரமாட்டான்” என்றான்.
அதன்பின் தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி அவளுடன் உறவுகொண்டான். அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவர்கள் அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டார்கள். யெகோவா அவனில் அன்புகூர்ந்தார். யெகோவா அப்பிள்ளையில் அன்பாயிருந்தபடியால், அவர் அப்பிள்ளைக்கு யெதிதியா12:25 யெதிதியா என்பது யெகோவாவுக்குப் பிரியமானவர் என்று அர்த்தம். எனப் பெயரிடும்படி இறைவாக்கு உரைப்பவனான நாத்தான் மூலம் தாவீதுக்குச் சொல்லி அனுப்பினார்.
இந்நாட்களில் யோவாப் அம்மோனியரின் ரப்பா பட்டணத்திற்கு எதிராக சண்டையிட்டு அதைக் கைப்பற்றினான். அதன்பின் யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பா பட்டணத்துக்கு எதிராகப் போரிட்டு அவர்களின் தண்ணீர் விநியோகிக்கும் பகுதியையும் கைப்பற்றினேன். நீர் வீரர்களுடன் வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு அதைக் கைப்பற்றும். இல்லையெனில் நான் அதைக் கைப்பற்றும்போது, அது என்னுடைய பெயரால் அழைக்கப்படும்” என்று சொல்லச் சொன்னான்.
எனவே தாவீது படை முழுவதையும் திரட்டி ரப்பாவுக்குச் சென்று போரிட்டு அதைக் கைப்பற்றினான். பின் அம்மோனிய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்துக்கொண்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அந்த மகுடத்தை தாவீதின் தலையில் வைத்தார்கள். அப்பட்டணத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்திரளான பொருட்களை எடுத்துக்கொண்டார்கள். அவன் அங்கிருந்த மக்களை வெளியே கொண்டுவந்து, அவர்களை வாள்கள், இரும்பு ஆயுதங்கள், கோடரிகள் முதலியவற்றால் வேலை செய்வதற்கும், செங்கல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தினான். இவ்வாறே தாவீது அம்மோனியரின் எல்லா பட்டணங்களுக்கும் செய்தான். பின்பு தாவீதும் அவனுடைய எல்லாப் படைவீரர்களும் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
அம்னோனும் தாமாரும்
சிறிதுகாலம் சென்றபின் தாவீதின் மகன் அம்னோன், தாமார் மீது காதல் கொண்டான். இந்த அழகான தாமார் தாவீதின் இன்னொரு மகனான அப்சலோமின் சகோதரி.
அம்னோன் தன்னுடைய சகோதரி தாமாரின் நிமித்தம் நோயுற்றான். ஏனெனில் அவன் சகோதரி தாமார் கன்னிகையாக இருந்தபடியால், அவளை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அம்னோனுக்குத் தாவீதின் சகோதரன் சிமெயாவின் மகன் யோனதாப் நண்பனாயிருந்தான்; யோனதாப் மிகவும் தந்திரமுள்ளவன். யோனதாப் அம்னோனிடம், “அரசனின் மகனான நீ நாளுக்குநாள் மெலிந்துபோவதேன்? எனக்கு சொல்லமாட்டாயா?” என்றான்.
அதற்கு அம்னோன் அவனிடம், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்” என்றான்.
அப்பொழுது யோனதாப் அவனிடம், “நீ படுக்கைக்குப்போய் நோயாளியைப்போல பாசாங்கு செய்” என்றான். “உன் தகப்பன் உன்னைப் பார்க்க வரும்போது அவரிடம், ‘என் சகோதரி தாமார் வந்து, நான் சாப்பிட ஏதாவது கொடுக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்து அவள் கையால் சாப்பிடும்படிக்கு, எனக்கு முன்பாக அவள் உணவை தயாரிக்கட்டும்’ என்று சொல்” என்றான்.
அவன் சொன்னபடியே அம்னோன் படுத்துக்கொண்டு நோயாளியைப்போல பாசாங்கு செய்தான். அரசன் அவனைப் பார்க்க வந்தபோது அம்னோன் அரசனிடம், “என் சகோதரி தாமாரின் கையினால் நான் சாப்பிடும்படி அவள் வந்து என் கண்களுக்கு முன்பாக விசேஷமான உணவை செய்யவேண்டும்” என்று கேட்டான்.
தாவீது அரண்மனையிலிருந்த தாமாரிடம், “உன்னுடைய சகோதரன் அம்னோனின் வீட்டிற்குப்போய் அவனுக்கு உணவு தயாரித்துக் கொடு” என்று சொல்லி அனுப்பினான். தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குப்போனபோது அவன் படுத்திருந்தான்; அவள் மாவை எடுத்துப் பிசைந்து அவன் கண்முன்னே அப்பங்களைச் சுட்டாள். பின்பு அப்பங்களை எடுத்து அவனுக்குப் பரிமாறினாள், அவனோ சாப்பிட மறுத்தான்.
அம்னோன், “எல்லோரையும் வெளியே அனுப்புங்கள்” என்றான். எனவே எல்லோரும் வெளியே போனார்கள். அதன்பின் அம்னோன் தாமாரிடம், “நான் உன் கையால் சாப்பிடும்படி உணவை என் படுக்கையறைக்குக் கொண்டுவா” என்றான். அவ்வாறே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் அவனுடைய படுக்கையறைக்குப் போனாள். அவள் அவற்றை அவன் சாப்பிடும்படி அவனிடம் கொண்டுபோனபோது, அவன் அவள் கையைப் பிடித்து, “சகோதரியே, என்னுடன் படுக்கைக்கு வா” என்றான்.
அதற்கு தாமார், “வேண்டாம் என் சகோதரனே, என்னைப் பலவந்தப்படுத்தாதே. இஸ்ரயேலில் இப்படியான ஒரு செயல் நடைபெறக் கூடாது. இப்படிப்பட்ட கொடிய செயலை செய்யாதே. அப்படிச் செய்தால் என் நிலை என்ன? எங்கு போய் இந்த அவமானத்தை நீக்குவேன்? உன் நிலை என்னவாகும்? நீ இஸ்ரயேலிலுள்ள கொடிய மூடர்களில் ஒருவனைப்போலாவாயே; தயவுசெய்து நீ அரசரிடம் பேசு, உனக்கு என்னைத் திருமணம் செய்துகொடுக்க அவர் தடைசெய்யமாட்டார்” என்றாள். அவனோ அவள் சொன்னதைக் கேட்கவில்லை. அம்னோன் தாமாரைவிட பலசாலி என்பதால் அவளைப் பலவந்தமாய் பிடித்து கற்பழித்தான்.
அதன்பின் அம்னோன் அவள்மேல் கடுமையான வெறுப்புகொண்டான். அவளை அவன் நேசித்த அளவைவிட, அதிகமாய் அவளை வெறுத்தான். எனவே அம்னோன், “எழும்பு, இங்கிருந்து வெளியே போய்விடு” என்று அவளிடம் கண்டிப்பாய் சொன்னான்.
அதற்கு அவள், “வேண்டாம்; இப்பொழுது நீ எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், என்னை வெளியே துரத்திவிடுவது பெரிய அநியாயமாய் இருக்கும்” என்றாள்.
ஆனாலும் அவள் சொன்னதை அவன் கேட்க மறுத்தான். அவன் தன் தனிப்பட்ட பணியாளனை அழைத்து அவனிடம், “இந்தப் பெண்ணை இங்கிருந்து வெளியே துரத்தி கதவைப் பூட்டு” என்று கட்டளையிட்டான். எனவே அவனுடைய பணியாள் அவளை வெளியேதள்ளிக் கதவைப் பூட்டினான். அப்பொழுது அரச குடும்பத்து கன்னிப்பெண்கள் அணியும் மிக அலங்காரமான அங்கியை தாமார் அணிந்திருந்தாள். தாமார் தன் தலைமேல் சாம்பலைப்போட்டு தான் அணிந்திருந்த அலங்கரிக்கப்பட்ட மேலங்கியைக் கிழித்து, தன் கைகளைத் தலையின்மேல் வைத்து சத்தமிட்டு அழுதுகொண்டே போனாள்.
இதைக் கேள்விப்பட்ட அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம் வந்து, “உன் சகோதரன் அம்னோன் உன்னுடன் உறவு கொண்டானா? ஆனாலும் என் சகோதரியே, இப்பொழுது அமைதியாயிரு. எப்படியாயினும் அவன் உன் சகோதரன் அல்லவா? அதைக்குறித்து மனம் வருந்தாதே” என்றான். தாமார் துயருற்றவளாய் தன் சகோதரன் அப்சலோம் வீட்டில் தங்கினாள்.
தாவீது அரசன் இவற்றையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபமடைந்தான். அப்சலோம் நன்மையாகவோ, தீமையாகவோ அம்னோனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் தன் சகோதரி தாமாரை அம்னோன் அவமானப்படுத்தியபடியால் அப்சலோம் அவனை வெறுத்தான்.
அப்சலோம் அம்னோனைக் கொலைசெய்தல்
இரண்டு வருடங்களுக்குப் பின்பு எப்பிராயீமின் எல்லைக்கு அருகே உள்ள பாகால் காசோரிலே அப்சலோமின் ஆடுகளின் மயிர் கத்தரிப்பவர்கள் இருந்தார்கள். அங்கே அரசனுடைய எல்லா மகன்களையும் வரும்படி அப்சலோம் அழைத்திருந்தான். அப்சலோம் அரசனிடம் சென்று, “உம்முடைய அடியான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்களை வேலைக்கு அழைத்திருக்கிறேன். அரசரும் அவர் அதிகாரிகளும் அவ்விடத்திற்கு என்னிடம் வரும்படி தயவாய் அழைக்கிறேன்” என்றான்.
அதற்கு அரசன், “வேண்டாம் என் மகனே; நாங்கள் எல்லோரும் வரக்கூடாது. நாங்கள் உனக்குப் பாரமாக மட்டுமே இருப்போம்” என்றான். அப்சலோம் எவ்வளவு வற்புறுத்தியும் அரசன் போக மறுத்துவிட்டான். ஆனாலும் அவனை ஆசீர்வதித்தான்.
அப்பொழுது அப்சலோம் அரசனிடம், “அப்படி நீங்கள் வரமுடியாவிட்டால் என் சகோதரன் அம்னோனையாவது எங்களோடு வருவதற்கு உத்தரவு கொடுங்கள்” என்றான்.
அதற்கு அரசன், “அவன் உன்னுடன் ஏன் வரவேண்டும்” எனக் கேட்டான். ஆனாலும் அப்சலோம் அரசனை வற்புறுத்தினபடியால் அரசன் அம்னோனையும், மற்ற மகன்களையும் அவனோடு அனுப்பினான்.
அப்பொழுது அப்சலோம் தன் மனிதரிடம், “கேளுங்கள். அம்னோன் திராட்சைமது குடித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் நான் உங்களிடம் அம்னோனை வெட்டி வீழ்த்துங்கள் என்று சொல்வேன். அப்பொழுது நீங்கள் பயப்படாமல் அவனைக் கொல்லவேண்டும். உங்களுக்கு உத்தரவிடுவது நான் அல்லவா? பலமும் தைரியமுமுள்ளவர்களாய் இருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்சலோம் கட்டளையிட்டபடியே அவனுடைய மனிதர் அம்னோனுக்குச் செய்தார்கள். இதைக் கண்ட அரசனின் மகன்கள் அவரவர் கோவேறு கழுதைகளில் ஏறி தப்பிப் போனார்கள்.
அவர்கள் வழியில் போகும்பொழுதே தாவீதிற்கு, “அப்சலோம், அரசனின் மகன்கள் எல்லோரையும் கொன்றுவிட்டான். அவர்களில் ஒருவனாவது தப்பவில்லை” என்று செய்தி கிடைத்தது. அப்பொழுது அரசன் எழுந்து தன் உடையைக் கிழித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடந்தான். அவனுடைய பணியாட்கள் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு அவன் பக்கத்தில் நின்றார்கள்.
ஆனாலும் தாவீதின் சகோதரன் சிமெயாவின் மகன் யோனதாப் வந்து, “அரசனின் மகன்கள் எல்லோரும் இறந்துவிட்டார்களென என் ஆண்டவன் எண்ணவேண்டாம். அம்னோன் மட்டுமே செத்துப் போனான். அப்சலோமின் சகோதரி தாமாரை அவன் கற்பழித்த நாள் முதல் இதுவே அவனுடைய வெளிப்படையான எண்ணமுமாய் இருந்தது. எனவே என் ஆண்டவனாகிய அரசனே! உமது மகன்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்ற செய்திக்காக நீர் கவலைப்பட வேண்டாம். அம்னோன் மட்டுமே இறந்தான்” என்றான்.
இதற்கிடையில் அப்சலோமோ தப்பி ஓடிவிட்டான்.
அப்பொழுது காவற்காரன், மேலே இருந்து பார்த்தபோது, பல மனிதர் அவனுக்கு மேற்குப் பக்கமாக உள்ள பாதையில் மலை ஓரமாக இறங்கி வருவதைக் கண்டான்; உடனே அந்த காவற்காரன் அரசனிடம் சென்று, “பக்கத்தில் மலை ஓரமாக பல மனிதர்கள் வருவதைக் காண்கிறேன்” என்றான்.
அப்பொழுது யோனதாப் அரசனிடம், “உமது மகன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். உமது அடியான் சொன்னபடியே நடந்திருக்கிறது” என்றான்.
அவ்வாறு அவன் சொல்லி முடித்தபோது அரசனுடைய மகன்கள் உரத்த சத்தமாய் அழுதுகொண்டு உள்ளே வந்தார்கள். அரசனும் அவன் பணியாட்கள் அனைவரும் மனங்கசந்து அழுதார்கள்.
அப்சலோமோ கேசூரின் அரசனான அம்மியூதின் மகன் தல்மாயிடம் தப்பி ஓடிப்போனான். ஆனால் தாவீது அரசனோ தன் மகனுக்காக நாள்தோறும் துக்கங்கொண்டாடினான்.
அப்சலோம் கேசூருக்குத் தப்பி ஓடிப்போனபின், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான். அரசன் தாவீதுக்கு அம்னோனின் மரணத்தால் ஏற்பட்ட துக்கம் ஆறினபின் அப்சலோமிடம் போகவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அப்சலோம் எருசலேமுக்குத் திரும்புதல்
தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான். எனவே யோவாப் தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கேயுள்ள ஞானமுள்ள ஒரு பெண்ணை அழைத்தான். அவள் வந்தபோது யோவாப் அவளிடம், “நீ துக்கங்கொண்டாடும் பெண்ணைப்போல் பாசாங்கு செய்து துக்கவுடை உடுத்திக்கொள். தலைக்கு எண்ணெய் ஒன்றும் பூசாதே. இறந்துபோனவர்களுக்காக நெடுநாட்களாக துக்கங்கொண்டாடுகிறவளைப் போல நடிக்கவேண்டும். பின் அரசனிடம் போய் இவ்விதமாய் நீ பேசவேண்டும்” என்றான். அவ்வாறே யோவாப் அவள் பேசவேண்டியதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.
அதன்படி தெக்கோவா ஊராளான அப்பெண் அரசனிடம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “அரசே, எனக்கு உதவும்” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளிடம், “உனக்கு என்ன துன்பம் நேரிட்டது?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “எனது கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு விதவை. உம்முடைய அடியாளாகிய எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வயல்வெளியில் சண்டையிட்டார்கள். அவர்களை விலக்கிவிட ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுவிட்டான். இப்பொழுது எங்கள் வம்சம் எல்லாம் உமது அடியாளுக்கு எதிராக எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனை எங்களிடம் கொண்டுவா. அவன் கொலைசெய்த அவனுடைய சகோதரனின் உயிருக்காக அவனைக் கொலைசெய்யவேண்டும். சொத்துக்கு உரிமையாளனையும் அழிப்போம்’ என்கிறார்கள். இவ்வாறாக எனக்கு மிஞ்சியிருக்கும் அந்த ஒரே விளக்கை அணைத்து, என் கணவருக்கு பூமியின்மேல் பெயரும் சந்ததியும் இல்லாதபடி செய்வார்கள்” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளிடம், “நீ வீட்டிற்கு போ; நான் உன் சார்பில் ஒரு கட்டளை அனுப்புவேன்” என்றான்.
ஆனாலும் அந்த தெக்கோவா பெண் அரசனிடம், “என் தலைவனாகிய அரசே, இந்த குற்றம் என்மேலும் என் தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமருவதாக; அரசனும், அவரது சிங்காசனமும் குற்றமின்றி இருக்கட்டும்” என்றாள்.
அதற்கு அரசன், “உனக்கு யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் கொண்டுவா; அவன் உன்னை மறுபடியும் தொந்தரவு செய்யமாட்டான்” என்றான்.
தொடர்ந்து அவள், “இரத்தப்பழிவாங்குகிறவன் அழிவுடன் அழிவைக் கூட்டாமல் தடுக்கும்படி, அரசர் தம் இறைவனாகிய யெகோவாவை வேண்டிக்கொள்வாராக. அப்பொழுது என் மகன் சாகமாட்டான்” என்றாள்.
அதற்கு தாவீது அரசன் அவளிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் உன் மகனின் தலைமயிரில் ஒன்றாவது தரையில் விழாது என்பதும் நிச்சயம்” என்றான்.
பின்பும் அவள், “என் தலைவனாகிய அரசரிடம் உமது அடியவள் இன்னும் ஒன்றைக் கேட்கலாமா?” என்றாள்.
அதற்கு அரசன், “சரி கேள்” என்றான்.
எனவே அந்த பெண், “அப்படியானால் ஏன் இறைவனின் மக்களுக்கு விரோதமாக இப்படியொரு செயலைத் திட்டமிடுகிறீர். அரசன் இப்படிச் சொல்லும்போது நாடுகடத்தப்பட்ட தன் மகனைத் திருப்பிக் கொண்டுவராததினால் தன்னைத்தானே குற்றவாளியாக்குகிறார் அல்லவா? நிலத்தில் சிந்திய தண்ணீரைத் திருப்பி எடுக்க முடியாததுபோல, நாங்கள் எல்லோரும் சாகவேண்டும். ஆனால் இறைவன் உயிர்களை அப்படி எடுக்கிறவர் அல்ல. அதற்குப் பதிலாகத் தன்னை விட்டுத் தூரமாய் போனவர்களைத் திரும்பவும் தன்னிடம் கொண்டுவர அவர் வழிகளை வகுக்கிறார்.
“மனிதர் என்னைப் பயமுறுத்தியதினால் தான், என் தலைவனாகிய அரசனிடம் இதைச் சொல்வதற்கு வந்தேன். ‘நான் அரசனிடம் பேசினால் ஒருவேளை அவர் நான் கேட்டதைக் கொடுப்பார் என்று நான் நினைத்தேன். இறைவன் எங்களுக்குக் கொடுத்த உரிமைச்சொத்திலிருந்து என்னையும், என் மகனையும் அகற்றிவிட முயலும் மனிதனின் கையிலிருந்து ஒருவேளை அரசன் விடுவிக்க உடன்படுவார் என்றும் நினைத்தேன்.’
“ ‘நன்மையையும் தீமையையும் பிரித்தறிவதில் இப்பொழுதும் என் தலைவனாகிய அரசன் இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர்; அதனால் என் தலைவனாகிய அரசன் சொன்னவை உமது அடியாளாகிய எனக்கு மன ஆறுதலைக் கொடுக்கட்டும். உமது இறைவனாகிய யெகோவா உம்மோடுகூட இருப்பாராக’ ” என்றாள்.
அப்பொழுது அரசன் அப்பெண்ணிடம், “நான் உன்னிடம் கேட்கப்போவதற்கு நீ எனக்கு ஒன்றும் மறைக்காமல் பதில் சொல்லவேண்டும்” என்றான்.
அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசே கேளும்” என்றாள்.
அப்பொழுது அரசன் அவளிடம், “இதையெல்லாம் செய்வித்தது யோவாப் அல்லவா?” என்று கேட்டான்.
அதற்கு அப்பெண், “என் தலைவனாகிய அரசன் வாழ்வது நிச்சயம்போல, என் தலைவனாகிய அரசன் சொன்னவற்றிலிருந்து வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாதென்பதும் நிச்சயம். உமது பணியாள் யோவாபே இப்படிச் செய்யும்படி எனக்கு அறிவுறுத்தினான். நான் சொன்னவற்றையெல்லாம் அவனே உமது அடியாளுக்குச் சொல்லிக் கொடுத்தான். உமது நிலைமையை மாற்றுவதற்காகவே உமது பணியாள் யோவாப் இவ்வாறு செய்தான். என் தலைவர் இறைவனின் தூதனைப்போல் ஞானமுடையவர். ஆகையால் நாட்டில் நடப்பவற்றையெல்லாம் அறிந்திருக்கிறீர்” என்றாள்.
அப்பொழுது அரசன் யோவாபை அழைத்து, “நான் அதைச் செய்வேன். நீ போய் வாலிபனான அப்சலோமை அழைத்து வா” என்றான்.
உடனே யோவாப் அரசனுக்கு முன் முகங்குப்புற விழுந்து, அவனைக் கனப்படுத்தும்படி அவனை வணங்கி வாழ்த்தினான். “என் தலைவனாகிய அரசே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருக்கிறது என இன்று உமது அடியவன் அறிந்தேன். ஏனெனில் தன் அடியவனுடைய வேண்டுகோளை அரசன் நிறைவேற்றினார்” என்றான்.
பின்பு யோவாப் கேசூருக்குப்போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். ஆனாலும் அரசன், “அப்சலோம் தன் சொந்த வீட்டிற்குப் போகட்டும்; அவன் என் முகத்தைப் பார்க்கக்கூடாது” என்றான். எனவே அப்சலோம் அரசனின் முகத்தைப் பார்க்காமலே தன் சொந்த வீட்டிற்குப் போனான்.
இஸ்ரயேல் முழுவதிலும் அப்சலோமைப்போல் அழகான தோற்றமுடையவனென புகழப்படத்தக்க ஒருவனும் இருக்கவில்லை. அவனுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு குறையும் இருக்கவில்லை. அவனுடைய தலைமயிர் அவனுடைய தலைக்குப் பாரமாக இருப்பதால், வருடத்திற்கு ஒருமுறை அதை வெட்டுவது வழக்கம். அதை வெட்டும்போதெல்லாம் தலைமயிரை அவன் நிறுப்பான். அது அரச நிறையின்படி இருநூறு சேக்கல்14:26 அதாவது, சுமார் 2.3 கிலோகிராம் எடையுள்ளதாயிருக்கும்.
அப்சலோமுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தார்கள். மகளின் பெயர் தாமார், அவள் அழகிய பெண்ணாயிருந்தாள்.
அப்சலோம் தாவீது அரசனின் முகத்தைப் பார்க்காமல் இரண்டு வருடங்கள் எருசலேமில் இருந்தான். பின்பு அப்சலோம் அரசனுக்கு செய்தி அனுப்புவதற்காக யோவாபை அழைத்துவர ஆளனுப்பினான். ஆனால் யோவாப் வர மறுத்துவிட்டான்; இரண்டாம்முறை ஆளனுப்பிய போதும் அவன் வர மறுத்தான். அதனால் அவன் தன் பணியாட்களிடம், “யோவாபின் வயல் என் வயலுக்குப் பக்கத்தில் இருக்கிறது; அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறது. நீங்கள் போய் அதற்கு நெருப்பு வையுங்கள்” என்றான். அவ்வாறே அப்சலோமின் பணியாட்கள் வயலுக்கு நெருப்பு வைத்தார்கள்.
அப்பொழுது அப்சலோமின் வீட்டிற்கு யோவாப் போய் அவனிடம், “உன் பணியாட்கள் என் வயலுக்கு ஏன் நெருப்பு வைத்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அப்சலோம் யோவாபிடம், “இதோ பார், ‘நான் ஏன் கேசூரிலிருந்து அழைத்துவரப்பட்டேன்? இன்னும் நான் அங்கே இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்’ என உன் மூலம் அரசனுக்குச் சொல்லியனுப்பும்படி உன்னை இங்கே வரும்படி ஆளனுப்பினேன். இப்பொழுது நான் அரசனின் முகத்தைப் பார்க்கவேண்டும். என்மேல் ஏதாவது குற்றமிருந்தால் அவர் என்னைக் கொலைசெய்யட்டும்” என்றான்.
எனவே யோவாப் அப்சலோம் சொன்ன யாவற்றையும் அரசனிடம் போய் சொன்னான். அதைக்கேட்ட அரசன் அப்சலோமை அழைத்துவரச் செய்தான். அப்சலோம் அரசனின் முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினான். அரசன் அப்சலோமை முத்தமிட்டான்.
அப்சலோமின் சூழ்ச்சி
சிறிது காலத்தின்பின் அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும், தனக்கு முன்னால் செல்லத்தக்க ஐம்பது பேரையும் தேடிக்கொண்டான். மேலும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து பட்டண வாசலுக்குச் செல்லும் பாதையோரத்தில் நிற்பான். யாராவது தன் முறையீட்டுடன் அரசனிடம் தீர்ப்பைக் கேட்க வரும்போது அப்சலோம் அவனைக் கூப்பிட்டு அவனிடம், “நீ எந்த பட்டணத்தான்?” என்று கேட்பான். அவன், “உமது அடியவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்பான். அப்பொழுது அப்சலோம் அவனிடம், “பார், உன் வழக்கு உண்மையும் தகுதியுமானது. ஆனால் உன் முறையீட்டை விசாரிக்க அரசனின் பிரதிநிதி ஒருவனும் இல்லையே. மேலும் அப்சலோம், நான் இந்த நாட்டின் நீதிபதியாய் நியமிக்கப்பட்டால், வழக்கோ முறையீடோ உள்ள அனைவரும் என்னிடம் வரலாம். நான் அவனுக்கு நியாயம் வழங்கும்படி பார்த்துக்கொள்வேன்” என்பான்.
அத்துடன் யாராவது அப்சலோம் முன்வந்து வணங்கினால் அவன் தன் கையை நீட்டி அவனை அணைத்து முத்தமிடுவான். இவ்விதமாகவே அப்சலோம் அரசனிடம் நீதி கேட்டு வரும் இஸ்ரயேலர் அனைவருக்கும் செய்து, இஸ்ரயேல் மக்களின் மனதைக் கவர்ந்தான்.
நான்கு வருடங்களுக்குப் பின்பு அப்சலோம் அரசனிடம், “நான் யெகோவாவுக்குச் செய்துள்ள நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எப்ரோனுக்குப் போவதற்கு என்னைப் போகவிடும். உமது அடியவன் சீரியாவிலுள்ள கேசூரில் இருக்கும்போது யெகோவா என்னை மறுபடியும் எருசலேமுக்குக் கொண்டுவந்தால், எப்ரோனிலே யெகோவாவை வழிபடுவேன் என்று இந்த நேர்த்திக்கடனைச் செய்தேன்” என்றான்.
தாவீது அரசன் அப்சலோமிடம், “சமாதானத்தோடே போய்வா” என்றான். எனவே அவன் எப்ரோனுக்குப் போனான்.
ஆனால் அப்சலோமோ இஸ்ரயேல் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசியமாய் தூதுவரை அனுப்பி, “எக்காள சத்தம் கேட்டவுடனே, நீங்கள், ‘அப்சலோமே எப்ரோனின் அரசன்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொல்லியிருந்தான். எருசலேமிலிருந்து இருநூறுபேர் அப்சலோமோடு சென்றார்கள். அவர்கள் விருந்தாளிகளாய் அழைக்கப்பட்டிருந்தார்கள்; ஆனாலும் அப்சலோமின் சூழ்ச்சியைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்களாயிருந்தார்கள். அப்சலோம் பலிகளை செலுத்தும்போது, தாவீதின் ஆலோசகனான அகிதோப்பேல் என்னும் கீலொனியனை அவனுடைய சொந்தப் பட்டணமான கிலொவிலிருந்து வரும்படி ஆளனுப்பினான். அப்படியே சதித்திட்டமும் வலுவடைந்து, அப்சலோமின் ஆதரவாளர்களும் பெருகினார்கள்.
தாவீது தப்பியோடுதல்
அப்பொழுது ஒரு தூதுவன் தாவீதிடம் வந்து, “இஸ்ரயேல் மக்களின் இருதயங்கள் அப்சலோமுடன் சேர்ந்திருக்கிறது” என்று சொன்னான்.
இதைக் கேட்ட தாவீது தன்னுடன் எருசலேமில் இருந்த எல்லா அதிகாரிகளிடமும், “வாருங்கள் நாம் இங்கிருந்து தப்பியோடுவோம். இல்லையென்றால் நம்மில் ஒருவனும் அப்சலோமிடமிருந்து தப்பமாட்டோம். உடனே நாம் இவ்விடத்தை விட்டு புறப்படவேண்டும். இல்லாவிட்டால் அவன் நம்மைப் பிடிக்கும்படி விரைந்துவந்து நம்மேல் அழிவைக் கொண்டுவந்து பட்டணத்தையும் வாளுக்கு இரையாக்குவான்” என்றான்.
அப்பொழுது அரச அதிகாரிகள் அரசனிடம், “எங்கள் தலைவனாகிய அரசன் சொன்னபடி செய்வதற்கு உமது அடியவராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்” என்றார்கள்.
எனவே அரசன் தன் குடும்பத்தார் அனைவரும் பின்தொடர அவ்விடம்விட்டுப் புறப்பட்டான். ஆனாலும் தன் வைப்பாட்டிகள் பத்துப்பேரைத் தன் அரண்மனையைப் பார்த்துக்கொள்ளும்படி விட்டுப்போனான். இவ்வாறு அரசன் தன் மக்கள் அனைவரும் பின்தொடரப் புறப்பட்டான். அவர்கள் சிறிது தூரம் போனபின் தரித்து நின்றார்கள். அவனுடைய மனிதர்கள் கிரேத்தியர், பிலேத்தியர் என்பவர்களுடன் அணிவகுத்து அவனைக் கடந்து சென்றார்கள். காத்தூரிலிருந்து அவனுடன் வந்த அறுநூறு கித்தியரும் அரசனுக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றார்கள்.
அப்பொழுது அரசன் கித்தியனான ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களுடன் வரவேண்டும்? நீ திரும்பிப்போய் அரசன் அப்சலோமுடன் தங்கியிரு. நீ உன் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட அந்நியன் அல்லவா? நீ நேற்றுதானே இங்கு வந்தாய்? நான் எங்கே போகிறேனென எனக்கே தெரியாமல் இருக்கும்போது, உன்னையும் எங்களுடன் அலைந்து திரியச் செய்வானேன்? நீ உன் உறவினரையும் கூட்டிக்கொண்டு திரும்பிப்போ; தயவும் உண்மையும் உங்களோடிருப்பதாக” என்றான்.
அதற்கு ஈத்தாய் அரசனிடம், “யெகோவா இருப்பதும், என் தலைவராகிய அரசன் வாழ்வதும் நிச்சயம்போல, நீர் எங்கெல்லாம் இருப்பீரோ வாழ்விலும் சாவிலும் நானும் அங்கெல்லாம் இருப்பேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
தாவீது ஈத்தாயிடம், “நீ முன்னால் அணிவகுத்துச் செல்” என்றான். எனவே கித்தியனான ஈத்தாய் அவனுடைய எல்லா மனிதருடனும், குடும்பங்களுடனும் அணிவகுத்துச் சென்றான்.
மக்கள் எல்லோரும் கடந்துசெல்கையில் நாட்டுப்புற மக்கள் எல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள். அரசனும் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றான். மக்கள் பாலைவனத்தை நோக்கிச் சென்றார்கள்.
அவர்களுடன் சாதோக்கும் அங்கேயிருந்தான். அவனுடன் இருந்த லேவியர் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு சென்றனர். அவர்கள் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை இறக்கி வைத்தார்கள். மக்களனைவரும் பட்டணத்தைவிட்டு வெளியேறி முடியும்வரைக்கும் அபியத்தார் பலிகளைச் செலுத்தினான்.
பின்பு அரசன் சாதோக்கிடம், “இறைவனுடைய பெட்டியை பட்டணத்திற்குத் திரும்பவும் கொண்டுபோங்கள். யெகோவாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அவர் என்னைத் திரும்பிவரச் செய்து உடன்படிக்கைப் பெட்டியையும் இறைவனின் உறைவிடத்தையும் மறுபடியும் காணச்செய்வார். ஆனால், ‘உன்மேல் எனக்குப் பிரியமில்லை’ என்று சொல்வாரானால் அவர் தனக்கு எது நல்லது எனத் தோன்றுகிறதோ அதை எனக்குச் செய்வாராக; நான் அதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
மேலும் அரசன் சாதோக் என்னும் ஆசாரியனிடம், “நீ ஒரு தரிசனக்காரனல்லவா? நீ உன் மகன் அகிமாஸுடனும், அபியத்தாரின் மகன் யோனத்தானுடனும் சமாதானத்தோடே பட்டணத்திற்குத் திரும்பிப்போ. நீயும் அபியத்தாரும் உங்கள் இரண்டு மகன்களையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள். உங்களிடமிருந்து எனக்கு செய்தி வருமட்டும் நான் காடுகளிலுள்ள துறைமுகங்களில் காத்திருப்பேன்” என்றான். எனவே சாதோக்கும், அபியத்தாரும் மறுபடியும் இறைவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுபோய் அங்கே தங்கியிருந்தார்கள்.
ஆனால் தாவீதோ துக்கத்துடன் அழுது, தன் தலையை மூடிக்கொண்டு, வெறுங்காலால் நடந்து ஒலிவமலையின்மேல் ஏறிச் சென்றான். அவனோடிருந்த மக்களனைவருங்கூட தங்கள் தலைகளை மூடிக்கொண்டு அழுதுகொண்டே போனார்கள். அப்பொழுது அப்சலோமோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தவர்களில் அகிதோப்பேலும் ஒருவன் என்று தாவீதுக்கு அறிவித்தார்கள். எனவே தாவீது, “யெகோவாவே! அகிதோப்பேலின் ஆலோசனைகளை மூடத்தனமாக்கிவிடும்” என்று மன்றாடினான்.
மக்கள் இறைவனை வழிபடும் மலை உச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தபோது, அர்கியனான ஊசாய் கிழிந்த மேலுடையுடனும், புழுதிபடிந்த தலையுடனும் தாவீதைச் சந்திக்கும்படி அங்கே ஓடிவந்தான். அப்பொழுது தாவீது அவனிடம், “நீ என்னுடன் வந்தாயானால் எனக்குப் பாரமாயிருப்பாய்; ஆகையால் நீ பட்டணத்திற்கு திரும்பிப்போய் அப்சலோமிடம், ‘அரசே, முன்பு உமது தகப்பனுக்கு பணியாளாய் இருந்ததுபோல் இப்போது உமக்குப் பணியாளனாயிருப்பேன்’ என்று சொல்; அப்பொழுது அகிதோப்பேலின் ஆலோசனையை பலனற்றதாகச்செய்ய எனக்கு நீ உதவுவாய். உன்னோடு அங்கே சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருப்பார்கள். நீ அரச அரண்மனையில் கேள்விப்படும் எதையும் அவர்களுக்குச் சொல். அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாஸும், அபியத்தாரின் மகன் யோனத்தானுமாக இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கேள்விப்படும் எல்லா செய்தியுடனும் அவர்களை என்னிடம் அனுப்பு” என்று சொன்னான்.
அப்படியே அப்சலோம் எருசலேம் பட்டணத்திற்குள் வரும்போது, தாவீதின் சிநேகிதனான ஊசாயும் அங்கு வந்துசேர்ந்தான்.
தாவீதும் சீபாவும்
தாவீது மலையுச்சிக்கு அப்பால் சிறிது தூரம் சென்றபோது மேவிபோசேத்தின் பராமரிப்பாளனான சீபா, அவனைச் சந்திப்பதற்காக அங்கே வந்து காத்திருந்தான். அவன் இருநூறு அப்பங்களையும், நூறு முந்திரி அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும், ஒரு திராட்சை இரசக் குடுவையையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வந்திருந்தான்.
அப்பொழுது அரசன் சீபாவிடம், “ஏன் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு சீபா, “அரச குடும்பத்தார் ஏறிச் செல்வதற்கு கழுதைகளையும், மனிதர் சாப்பிடுவதற்கு அப்பங்களையும், பழங்களையும், பாலைவனத்தில் களைப்படைந்தவர்களை உற்சாகப்படுத்த திராட்சை இரசத்தையும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.
அதைக்கேட்ட அரசன் அவனிடம், “உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எங்கே” என்று கேட்டான்.
அதற்கு சீபா, “அவர் எருசலேமில் இருக்கிறார்; ‘இன்று இஸ்ரயேல் மக்கள் என் பாட்டனான சவுலின் அரசாட்சியை எனக்குத் திரும்பவும் கொடுப்பார்கள்’ என்று எண்ணுகிறார்” என்றான்.
அரசன் சீபாவிடம், “மேவிபோசேத்துக்கு உரிமையானவைகளெல்லாம் இப்பொழுது உனக்கு உரிமையானவைகளே” என்றான்.
அப்பொழுது சீபா, “என் தலைவனாகிய அரசனிடம் எனக்குத் தொடர்ந்து தயவு கிடைக்கட்டும். நான் தாழ்மையுடன் வணங்குகிறேன்” என்று சொன்னான்.
தாவீது சபிக்கப்படுதல்
தாவீது அரசன் பகூரிமை நெருங்குகையில் அங்கேயிருந்த சவுலின் குடும்பத்தின் வம்சத்தைச் சேர்ந்த கேராவின் மகன் சீமேயி என்னும் ஒருவன் வந்தான். அவன் தாவீதை சபித்துக்கொண்டே வந்தான். தாவீதின் இடது புறமும், வலது புறமும் இராணுவவீரரும், விசேஷ காவலாட்களும் இருந்தபோதிலுங்கூட சீமேயி அரசனாகிய தாவீதுக்கும், அவனுடைய பணியாட்களுக்கும் கற்களை எறிந்தான். சீமேயி தாவீதைச் சபித்து, “இரத்த வெறியனே போய்விடு, கொலைபாதகனே தொலைந்து போ. நீ சவுலின் குடும்பத்தில் சிந்திய இரத்தத்திற்காக யெகோவா உன்னைத் தண்டித்திருக்கிறார். அவனுடைய இடத்தில்தான் நீ ஆளுகை செய்தாயே. யெகோவா அரசாட்சியை உன் மகன் அப்சலோமுக்குக் கொடுத்தார். நீ ஒரு இரத்த வெறியன். எனவேதான் உனக்கு அழிவு வந்திருக்கிறது” என்றான்.
அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் அரசனிடம், “இந்த செத்த நாய் என் தலைவனாகிய அரசனை சபிப்பானேன். நான் போய் அவன் தலையை வெட்டிவிட அனுமதியும்” என்றான்.
ஆனால் அரசனோ, “செருயாவின் மகன்களே! உங்களுக்கும் எனக்கும் இதில் பொதுவாக என்ன இருக்கிறது? யெகோவா சீமேயினிடம், ‘தாவீதைச் சபிக்கவேண்டும்’ என்று கட்டளையிட்டபடியால், அவன் சபித்திருக்க வேண்டும். எனவே அவனிடம், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என யார் கேட்கலாம்” என்றான்.
மேலும் தாவீது அபிசாயிடமும், அவன் பணியாட்களிடமும், “என் சொந்த மாம்சமான என் மகனே என் உயிரை எடுக்க முயலும்போது, இந்த பென்யமீனியன் எவ்வளவு அதிகமாய் செய்யக்கூடும். அவனைவிட்டுவிடுங்கள். அவன் என்னைச் சபிக்கட்டும். யெகோவா அப்படிச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நான் படும் துன்பங்களை யெகோவா பார்த்து இன்று எனக்குக் கிடைத்த சாபத்திற்குப் பதிலாக நன்மை செய்யக்கூடும்” என்றான்.
ஆகவே தாவீதும் அவனோடிருந்த மனிதரும் தொடர்ந்து தம் வழியே போனார்கள். சீமேயி மலைப் பக்கமாக தாவீதிற்கு எதிர்த்திசையில் போனான். அவன் தாவீதைச் சபித்துக்கொண்டும், கல்லெறிந்து கொண்டும், தாவீதின்மேல் மண்ணை வீசிக்கொண்டும் போனான். அரசனும் அவனோடிருந்த மக்களும் களைப்புடன் தாங்கள் போகவேண்டிய இடத்தை வந்தடைந்தார்கள். அங்கே அவன் இளைப்பாறி பெலனடைந்தான்.
எருசலேமில் அப்சலோம்
இதற்கிடையில் அப்சலோமும், இஸ்ரயேல் மனிதர்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்களுடன் அகிதோப்பேலும் இருந்தான். அதன்பின்பு அர்கியனான ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடம் போய், “அரசே நீடூழி வாழ்க! அரசே நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினான்.
அதற்கு அப்சலோம் ஊசாயிடம், “உன் நண்பனுக்கு நீ காட்டும் அன்பு இவ்வளவுதானா? உன் நண்பனோடு நீ ஏன் போகவில்லை” எனக் கேட்டான்.
அதற்கு, ஊசாய் அப்சலோமிடம், “அப்படியல்ல; யெகோவாவினாலும் இந்த மக்களாலும் இஸ்ரயேல் மனிதர்கள் அனைவராலும் தெரிந்துகொள்ளப்பட்டவருடனேயே நான் இருப்பேன். அவருடனேயே நான் எப்போதும் இருப்பேன். அன்றியும் நான் யாருக்குப் பணிபுரிய வேண்டும்; அவருடைய மகனுக்குப் பணிசெய்ய வேண்டாமோ? உமது தகப்பனுக்குப் பணி செய்ததுபோலவே உமக்கும் செய்வேன்” என்றான்.
அப்பொழுது அப்சலோம் அகிதோப்பேலிடம், “நாங்கள் என்ன செய்யவேண்டும் என நீ ஆலோசனை சொல்” என்று கேட்டான்.
அதற்கு அகிதோப்பேல், “அரண்மனையைப் பராமரிக்க உமது தகப்பன் வைப்பாட்டிகளை விட்டுப் போயிருக்கிறார்; அவர்களுடன் நீர் உறவு வைத்துக்கொள்ளும். இவ்வாறு நீர் செய்து உம்மை உமது தகப்பனுக்கு வெறுப்புக்குரியவனாக்கின செய்தியை இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்படுவார்கள். அப்போது உம்மோடிருப்பவர்கள் இன்னும் பெலப்படுவார்கள்” என ஆலோசனை சொன்னான். எனவே அரண்மனையின் கூரையின்மேல் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் அமைத்தார்கள். அப்சலோம் இஸ்ரயேல் மக்களனைவரின் முன்னிலையிலும் தன் தகப்பனின் வைப்பாட்டிகளுடன் உறவுகொண்டான்.
அந்நாட்களில் அகிதோப்பேலின் ஆலோசனை இறைவன் சொல்லும் ஆலோசனையைப்போல் இருந்தது. அதுபோலவே தாவீதும், அப்சலோமும் அகிதோப்பேலின் ஆலோசனைகளைக் கருதினார்கள்.
அகிதோப்பேல் அப்சலோமிடம், “நான் பன்னிரண்டாயிரம்பேரைச் சேர்த்துக்கொண்டு இன்றிரவே புறப்பட்டு தாவீதைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து செல்ல என்னை விடும். அவன் களைத்து பெலனற்றிருக்கும்போது அவனை தாக்குவேன்; அவனைப் பயங்கரமாக தாக்கும்போது, அவனோடிருக்கும் மக்களனைவரும் தப்பி ஓடுவார்கள்; நான் அரசனைமட்டும் கொல்லுவேன். மக்கள் அனைவரையும் உம்மிடம் கொண்டுவருவேன். நீர் தேடும் மனிதனின் மரணத்தின் மூலமாக மக்களனைவரும் உம்மிடம் வருவார்கள். அவர்களுக்கு தீங்கு நேரிடாது” என்று சொன்னான். அவனுடைய இந்தத் திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரயேலரின் முதியவர்களுக்கும் சிறந்ததாகக் காணப்பட்டது.
ஆனால் அப்சலோம் அவர்களிடம், “அர்கியனான ஊசாயையும் அழைத்து அவன் சொல்வதையும் கேட்போம்” என்றான். ஊசாய் அவ்விடம் வந்தபோது, அப்சலோம் அவனிடம் அகிதோப்பேல் சொன்னதைச் சொல்லி, “இதன்படி செய்யலாமா? அல்லது இதைப்பற்றி உன்னுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டான்.
அதற்கு ஊசாய் அப்சலோமிடம் சொன்னதாவது: “அகிதோப்பேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல. நீர் உமது தகப்பனைப்பற்றியும், அவருடனிருக்கும் மனிதரைப்பற்றியும் நன்கு அறிவீர். அவர்கள் சிறந்த போர்வீரர்கள்; இப்பொழுதோ, தன் குட்டிகளைப் பறிகொடுத்த மூர்க்கமான கரடிகளைப்போல் பயங்கரமானவர்களாய் இருக்கிறார்கள். அத்துடன் உமது தகப்பன் அனுபவமிக்க போர்வீரன். அவர் படைகளுடன் இரவில் தங்கமாட்டார். இப்பொழுதும் அவர் ஒரு குகையிலோ அல்லது வேறு எங்காவது ஓரிடத்திலோ ஒளிந்திருப்பார். அவர் உங்கள் படைகளை முதலாவதாகத் தாக்கினால், அதைக் கேள்விப்படும் எவனும், ‘அப்சலோமைப் பின்பற்றிய வீரர்களுக்கு அழிவு ஏற்பட்டது’ என்பான். அப்போது சிங்கத்தின் இருதயத்தைப்போன்ற இருதயமுடைய துணிவுள்ள உமது எந்த வீரனும் பயத்தினால் தைரியமிழப்பான். ஏனெனில் உமது தந்தை மாவீரன் என்பதையும், அவரோடிருப்பவர்கள் சிறந்த வீரமுள்ளவர்கள் என்பதையும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
“எனவே நான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள கடற்கரை மணலைப்போல் திரளான இஸ்ரயேல் மக்களனைவரும் ஒன்றுகூடி உம்மிடம் வரட்டும். நீர் தலைமைதாங்கி போர்க்களத்திற்கு அவர்களை நடத்திச் செல்லவேண்டும். அப்பொழுது நாங்கள் அவரை எங்கு கண்டாலும், அவரைத் தாக்கி பனி பூமியில் விழுவதுபோல் அவர்மேல் விழுவோம். அவ்வாறு செய்தால் தாவீதோ அல்லது அவரது மனிதரில் ஒருவரோ உயிரோடு தப்பமாட்டார்கள். தாவீது பின்வாங்கி ஒரு பட்டணத்திற்குள் புகுந்தால், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் கயிறுகளைக் கொண்டுவந்து பட்டணத்தைக் கட்டி இழுத்து அதில் ஒரு துண்டும் காணப்படாமல் போகும்வரை, பள்ளத்தாக்கில் தள்ளுவோம்” என்றான்.
அப்பொழுது, “அப்சலோமும் இஸ்ரயேல் மக்களனைவரும் அகிதோப்பேலின் ஆலோசனையைப் பார்க்கிலும், அர்கியனாகிய ஊசாயின் ஆலோசனை சிறந்தது” என்றார்கள். யெகோவா அப்சலோமுக்குத் தீங்கு வரப்பண்ணுவதற்காக, அகிதோப்பேலின் நல்ல ஆலோசனையை பயனற்றதாகச் செய்யத் தீர்மானித்திருந்தார்.
அப்பொழுது ஊசாய் ஆசாரியர்களான சாதோக், அபியத்தார் என்பவர்களிடம், “அகிதோப்பேல் அப்சலோமுக்கும், இஸ்ரயேல் முதியவர்களுக்கும் இன்ன இன்னபடி செய்யவேண்டும் என ஆலோசனை கூறியிருக்கிறான். நானோ, அப்படியல்ல இப்படி செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறேன். ஆகையால் நீங்கள் தாவீதிடம், ‘இன்று இரவு பாலைவன துறைமுகத்தில் தங்காமல் அவ்விடத்தைவிட்டு தாமதிக்காமல் போய்விடுங்கள். போகத் தவறினால் அரசரும், அவரோடிருப்பவர்களும் அழிக்கப்படுவார்கள்’ என்ற செய்தியை உடனே அனுப்புங்கள்” என்றான்.
யோனத்தானும், அகிமாசும் தங்கள் பட்டணத்திற்குள் வந்துபோயிருந்தால், யாராவது பார்த்துவிடுவார்கள் என்று பயந்து, அவர்கள் என்ரொகேல் என்னும் இடத்திலேயே தங்கியிருந்தார்கள். ஒரு பணிப்பெண் போய் அவர்களுக்கு செய்திகளைச் சொல்ல, அவர்கள் அச்செய்திகளை அரசன் தாவீதிடம் சொல்லவேண்டும் என்பதும் திட்டமாயிருந்தது. ஆனால் அவர்களை ஒரு வாலிபன் கண்டு அதை அப்சலோமுக்குப் போய்ச் சொன்னான். உடனே அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு புறப்பட்டு பகூரிமிலுள்ள ஒரு மனிதனுடைய வீட்டிற்குப் போனார்கள். அவன் வீட்டின் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குள் அவர்கள் இறங்கினார்கள். அவ்வீட்டுக்காரனின் மனைவி ஒரு துணியை எடுத்துக் கிணற்றின் வாயின்மேல் விரித்து அதன்மேல் தானியத்தைக் காயவைப்பதுபோல் பரப்பி வைத்தாள். அதனால் அவர்கள் கிணற்றுக்குள் இருந்தது யாருக்கும் தெரியாதிருந்தது.
அப்போது அப்சலோமின் மனிதர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து, “அகிமாசும், யோனத்தானும் எங்கே?” என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், “அவர்கள் ஆற்றைக் கடந்து போய்விட்டார்கள்” என்றாள். மனிதர் அவர்களைத் தேடி ஒருவரையும் காணாததால் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
அந்த மனிதர் போனபின் அவர்கள் இருவரும் கிணற்றை விட்டு வெளியேறி, தாவீது அரசனுக்குச் செய்தியை அறிவிக்கும்படி போனார்கள். அவர்கள் போய் தாவீதிடம், “நீங்கள் உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து அப்பக்கமாகப் போங்கள்; அகிதோப்பேல் உங்களுக்கு விரோதமாய் இந்தந்த விதமாய் ஆலோசனை கூறியிருக்கிறான்” என்றார்கள். எனவே தாவீதும் அவனோடிருந்த மக்களனைவரும் புறப்பட்டு யோர்தான் ஆற்றை இரவிலே கடந்தார்கள். பொழுது விடியும் முன்பே யோர்தானைக் கடக்காதவர்கள் ஒருவரும் இருக்கவில்லை.
தன் ஆலோசனையின்படி ஒன்றும் செய்யப்படாததைக் கண்ட அகிதோப்பேல் தன் கழுதைக்குச் சேணமிட்டு அதில் ஏறி தன் சொந்த பட்டணத்திலுள்ள வீட்டிற்குப் போகப் புறப்பட்டான். அங்கே தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்கு செய்தபின் தனக்குத்தானே தூக்குப் போட்டுச் செத்தான். அவனை அவன் தகப்பனின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
அப்சலோமின் மரணம்
அப்பொழுது தாவீது மக்னாயீமுக்குப் போனான். அப்சலோமோ இஸ்ரயேல் மக்களனைவருடனும் யோர்தான் நதியைக் கடந்தான். அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத் தலைவனாக நியமனம் செய்தான். அமாசா இஸ்மயேலனான17:25 சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இஸ்ரயேலனான என்றுள்ளது. எத்திரா என்பவனின் மகன்; எத்திரா நாகாஷின் மகளும், யோவாபின் தாயும், செருயாவின் சகோதரியுமான அபிகாயிலை திருமணம் செய்திருந்தான். இஸ்ரயேல் மக்களும், அப்சலோமும் கீலேயாத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
தாவீது மக்னாயீமுக்கு வந்துபோது, அம்மோனிய நாட்டு ரப்பா இராபாத் ஊரைச்சேர்ந்த நாகாஷின் மகன் சோபியும், லோதேபார் ஊரைச்சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கிலேத்தியனுமான பர்சிலாயும் தாவீதிடம் வந்தார்கள். அவர்கள் வரும்போது படுக்கைகளையும், கிண்ணங்களையும், மண்பாத்திரங்களையும் கொண்டுவந்தார்கள். மேலும் அவர்கள் கோதுமை, வாற்கோதுமை, வறுத்த தானியம், பயறுவகை, பருப்பு வகை, தேன், தயிர், செம்மறியாடுகள், பசுவின் பால்கட்டிகள் ஆகியவற்றை தாவீதும், அவனுடைய மக்களும் சாப்பிடுவதற்கென கொண்டுவந்தார்கள். ஏனெனில் பாலைவனத்தில் மக்கள் பசியும், களைப்பும், தாகமும் அடைந்திருப்பார்கள் என அவர்கள் எண்ணினார்கள்.
அப்பொழுது தாவீது தன்னுடனிருக்கும் படைவீரரைக் கணக்கிட்டு, ஆயிரம் வீரர்களுக்குத் தலைவரையும், நூறு வீரர்களுக்குத் தலைவரையும் நியமித்தான். அதன்பின் தாவீது போர்வீரரை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவை யோவாபின் தலைமையிலும், ஒரு பிரிவை செருயாவின் மகன் யோவாபின் சகோதரனான அபிசாயின் தலைமையிலும், ஒரு பிரிவை கித்தியனான ஈத்தாயின் தலைமையிலும் அனுப்பினான்; அரசன் போர்வீரர்களிடம், “நானும் நிச்சயம் உங்களோடேகூட போருக்கு வருவேன்” என்றான்.
அதற்கு அவர்கள், “நீர் எங்களோடு வரவேண்டாம். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடநேரிட்டாலும், எங்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். எங்களில் பாதிபேர் இறந்தாலும் அதையும் கவனிக்கமாட்டார்கள். ஆனால் நீரோ எங்களில் பத்தாயிரம் பேருக்குச் சமம். நீர் பட்டணத்தில் தங்கியிருந்து எங்களுக்கு உதவி செய்வதே நல்லது” என்றார்கள்.
அதற்கு அரசன் அவர்களிடம், “அப்படியானால் உங்களுக்கு நல்லதென்று தோன்றுவது எதையும் நான் செய்வேன்” என்றான்.
எல்லா மனிதரும் நூறுபேரும், ஆயிரம்பேரும் கொண்ட பகுதிகளாக அணிவகுத்துச் செல்கையில் அரசன் பட்டண வாசல் அருகில் நின்றுகொண்டிருந்தான். எனவே அரசன் தாவீது, “யோவாப், அபிசாய், ஈத்தாய் ஆகியோரிடம் எனக்காக வாலிபன் அப்சலோமுடன் தயவாய் நடந்துகொள்ளுங்கள்” எனக் கட்டளையிட்டான். அப்சலோமைப்பற்றி தளபதிகளுக்கு அரசன் இட்ட கட்டளையைப்பற்றி, எல்லா போர்வீரர்களும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
போர்வீரர் இஸ்ரயேலருக்கு எதிராக போர்புரிய களத்துக்கு அணிவகுத்துச் சென்றார்கள். எப்பிராயீம் காட்டிலே போர் நடந்தது. அங்கே இஸ்ரயேலின் படைவீரர் தாவீதின் வீரர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்; அன்றையதினம் இழப்பு மிக அதிகமாயிருந்தது. இருபதாயிரம் பேர் இறந்தார்கள். அந்த போர் நாட்டுப்புறம் முழுவதற்கும் பரவியது; அன்று வாளால் இறந்தவர்களிலும் காட்டில் இறந்தவர்களே அதிகமாயிருந்தார்கள்.
அப்பொழுது அப்சலோம் தாவீதின் சில வீரர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் கோவேறு கழுதையின்மேல் சவாரி செய்துகொண்டிருந்தான். அப்போது அந்தக் கழுதை ஒரு அடர்ந்த கர்வாலி மரத்தின்கீழ் போகையில் அப்சலோமின் தலை அம்மரத்தில் சிக்கிக்கொண்டது. கோவேறு கழுதை தொடர்ந்து செல்ல அவன் அந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
அந்த மனிதரில் ஒருவன் யோவாபிடம் வந்து, “கர்வாலி மரமொன்றில் அப்சலோம் தொங்குவதைக் கண்டேன்” என்றான்.
அப்பொழுது யோவாப் அதைச் சொன்னவனிடம், “நீ அதைக் கண்டாயா? அப்படியாயின் ஏன் அவனை அங்கேயே வெட்டி கீழே போடவில்லை. நீ அதைச் செய்திருந்தால் நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும், மாவீரனுக்குரிய பட்டியையும் கொடுத்திருப்பேன்” என்றான்.
அதற்கு அவன் யோவாபிடம், “நீர் ஆயிரம் வெள்ளிக்காசுகளை என் கையில் நிறுத்துக் கொடுத்தாலும், அரசனின் மகனுக்கு எதிராக என் கையை ஓங்கமாட்டேன். எங்கள் காதுகள் கேட்க, ‘வாலிபனான அப்சலோமை எனக்காகக் காப்பாற்றுங்கள்’ என்று அரசன் உமக்கும், அபிசாய்க்கும், ஈத்தாய்க்கும் கட்டளையிட்டாரே. அப்படியிருக்க, அரசனுக்கு ஒன்றும் மறைவாய் போகாது; நான் என் உயிருக்குக் கேடுண்டாக்கத்தக்க துரோகமான இச்செயலைச் செய்திருந்தால், நீரும் என்னைக் கைவிட்டிருப்பீரே” என்றான்.
அப்பொழுது யோவாப் அவனிடம், “நான் இப்படி உன்னுடன் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொல்லி மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டுபோய் கர்வாலி மரத்தில் உயிரோடு தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினான். அத்துடன் யோவாபின் கவசம் சுமப்போர் பத்துபேர் அப்சலோமைச் சூழ்ந்து, அடித்தே அவனைக் கொன்றார்கள்.
அதன்பின் யோவாப் எக்காளத்தை ஊதி, இஸ்ரயேலரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டான். தொடர்ந்து செல்லாதபடி படை வீரரைத் தடுத்தான். மேலும் அப்சலோமின் உடலை எடுத்துக் காட்டிலுள்ள பெரிய குழியில்போட்டு பெரிய கற்களை அதன்மேல் குவித்தார்கள். இஸ்ரயேலரோ அவரவருடைய வீடுகளுக்கு ஓடித் தப்பினார்கள்.
அப்சலோம் தான் உயிரோடிருக்கையில், “என் பெயரை எனக்குப்பின் என் நினைவாக வைத்திருப்பதற்கு ஒரு மகன் இல்லையே” என நினைத்து ஒரு கல்தூணை அரச பள்ளத்தாக்கில் நாட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டியிருந்தான். அது இன்றுவரை, “அப்சலோமின் நினைவுச்சின்னம்” என்று சொல்லப்படுகிறது.
தாவீது துக்கங்கொண்டாடுதல்
அதன்பின் சாதோக்கின் மகன் அகிமாஸ், “நான் அரசனிடம் ஓடிச்சென்று அவரின் பகைவரிடமிருந்து அவரை யெகோவா விடுதலையாக்கினார் என்று அறிவிக்க எனக்கு அனுமதி தாரும்” என்றான்.
அதற்கு யோவாப் அவனிடம், “இன்று இச்செய்தியைக் கொண்டுபோவது நீ அல்ல; ஆகையால் இன்னொருநாள் செய்தியைச் சொல்லலாம். அரசனின் மகன் இறந்தபடியால், இன்று இச்செய்தியைச் சொல்லக்கூடாது” என்றான்.
அதன்பின் யோவாப் கூஷியன் ஒருவனிடம், “நீ அரசனிடம் போய் கண்டவற்றைச் சொல்” என்றான். எனவே அவன் யோவாபை வணங்கி அரசனிடம் ஓடிப்போனான்.
சாதோக்கின் மகன் அகிமாஸ் மீண்டும் யோவாபிடம், “என்ன நேரிட்டாலும் நானும் அந்த கூஷியனோடு அவனுக்குப் பின்னால் ஓடிப்போகவிடும்” என்றான்.
ஆனால் யோவாபோ, “என் மகனே! நீ ஏன் போக விரும்புகிறாய்? உனக்கு வெகுமதி கொடுக்கும் செய்தி உன்னிடம் இல்லையே” என்றான்.
அதற்கு அகிமாஸ், “என்ன நேரிட்டாலும் நான் போகத்தான் போகிறேன்” என்றான்.
எனவே யோவாப், “ஓடிப்போ” என்றான். அவ்வாறே அகிமாஸ் சமவெளி வழியாக ஓடி கூஷியனை முந்திக்கொண்டான்.
தாவீது உட்புற வாசலுக்கும், வெளிப்புற வாசலுக்கும் இடையில் உட்கார்ந்திருந்தபோது, காவற்காரன் பட்டணத்து மதிலோடுள்ள வாசலின் கூரையின்மேல் ஏறினான். அங்கு நின்று அவன் பார்த்தபோது, தனிமையாக ஒரு மனிதன் ஓடிவருவதைக் கண்டான். உடனே காவற்காரன் அரசனைக் கூப்பிட்டு அவனுக்கு அதை அறிவித்தான்.
அப்பொழுது அரசன் அவனிடம், “அவன் தனிமையாய் வருவதனால் அவனிடம் நல்ல செய்தியே இருக்கும்” என்றான். ஓடிவந்த மனிதன் நெருங்கி வந்துகொண்டிருந்தான்.
காவற்காரன் வேறொருவனும் ஓடிவருவதைக் கண்டு வாசற்காவலனைக் கூப்பிட்டு, “அதோ பார்! வேறொருவன் தனியே ஓடிவருகிறான்” என்றான்.
அப்பொழுது அரசன், “அவனிடமும் நல்ல செய்தியே இருக்கும்” என்றான்.
மறுபடியும் காவற்காரன், “முதலில் ஓடி வருபவன் சாதோக்கின் மகன் அகிமாஸ் போல் எனக்குத் தெரிகிறது” என்றான்.
அதற்கு அரசன், “அவன் நல்ல மனிதன், நல்ல செய்தியுடனேயே வருவான்” என்றான்.
அகிமாஸ் அரசனைக் கூப்பிட்டு, “எல்லாம் நலம்” என்று சொல்லி முகங்குப்புற தரையில் விழுந்து அரசனை வணங்கி, “உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் என் தலைவனுக்கு எதிராக கைகளை ஓங்கிய மனிதரைத் தோற்கடித்து உம்மிடம் ஒப்படைத்தார்” என்றான்.
அப்பொழுது அரசன் அகிமாஸிடம், “வாலிபனான அப்சலோம் பாதுகாப்பாக இருக்கிறானா?” எனக் கேட்டான்.
அதற்கு அகிமாஸ், “அரசனுடைய பணியாளையும், உம்முடைய அடியவனாகிய என்னையும் யோவாப் அனுப்ப எத்தனிக்கையில் ஒரு பெரும் குழப்பம் அங்கே இருப்பதைக் கண்டேன்; ஆனாலும் அது என்ன என்று எனக்குத் தெரியாது” என்றான்.
அப்பொழுது அரசன் அவனிடம், “நீ ஒரு பக்கமாய் போய் நில்” என்றான். அவன் ஒரு பக்கமாய் போய் நின்றான்.
அதன்பின் கூஷியன் வந்து அரசனிடம், “என் தலைவனாகிய அரசே! நான் கொண்டுவந்த நல்ல செய்தியைக் கேட்பீராக; உமக்கு விரோதமாக எழும்பிய அனைவரிடமிருந்தும் யெகோவா உம்மை இன்று விடுதலையாக்கினார்” என்றான்.
அப்பொழுது அரசன், “வாலிபனான அப்சலோம் பாதுகாப்பாயிருக்கிறானா?” எனக் கூஷியனிடம் கேட்டான்.
அதற்கு அவன், “அந்த வாலிபனுக்கு நேரிட்டதுபோலவே, என் தலைவனாகிய அரசனுடைய பகைவருக்கும், உமக்குத் தீமைசெய்ய எண்ணும் அனைவருக்கும் நேரிடட்டும்” என்றான்.
இதைக் கேட்ட அரசன் கலக்கமடைந்தான். அவன் பட்டணத்து வாசலின்மேல் இருந்த அறைக்குச் சென்று அழுதான். அவன் போகும்போதே, “என் மகன் அப்சலோமே, என் மகனே, என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதோ; ஆ என் மகன் அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சொல்லி அழுதுகொண்டே போனான்.
“தாவீது அரசன் அப்சலோமுக்காக அழுது துக்கம்கொண்டாடுகிறான்” என யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் தன் மகனுக்காகத் துக்கங்கொண்டிருக்கிறான் என படைவீரர் கேள்விப்பட்டதால், அன்றையதினம் அந்த முழு படைக்கும் கிடைத்த வெற்றி துக்கமாய் மாறியது. போரிலிருந்து தப்பி ஓடுகிற படைவீரர் வெட்கத்துடன் இரகசியமாய் வருவதைப்போல், இந்த வீரர்கள் அன்றையதினம் பட்டணத்துக்குத் திரும்பினார்கள். அவ்வேளையில் அரசன் தன் முகத்தை மூடிக்கொண்டு, “என் மகன் அப்சலோமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சத்தமிட்டு அழுதான்.
அப்பொழுது யோவாப் அரசனிடம் சென்று, “இன்று உம்முடைய உயிரையும், உமது மகன்களின், மகள்களின் உயிர்களையும், உமது மனைவிகளின், மறுமனையாட்டிகளின் உயிர்களையும் காப்பாற்றிய உம்முடைய வீரர்களையெல்லாம் சிறுமைப்படுத்தியிருக்கிறீரே! உம்மை வெறுக்கிறவர்களை நேசிக்கிறீர்; உம்மை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். படைத்தளபதிகளும், அவர்களுடைய வீரர்களும் உமக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று நீர் வெளிப்படையாகக் காட்டிவிட்டீர். இன்று நாங்களெல்லோரும் இறந்து, அப்சலோம் உயிரோடிருந்திருந்தால் அது உமக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும் என எனக்குத் தெரிகிறது. இப்பொழுதும் நீர் வெளியே போய் உம்முடைய வீரர்களை உற்சாகப்படுத்தும். அப்படி நீர் செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவனும் இருக்கமாட்டானென்று யெகோவாமேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இது உம்முடைய இளமைப்பருவம் தொடங்கி இன்றுவரை உமக்கு நேரிட்ட எல்லா தீமைகளைப் பார்க்கிலும் அதிக மோசமாயிருக்கும்” என்றான்.
எனவே அரசன் எழுந்துபோய் பட்டண வாசலிலுள்ள தன் இருக்கையில் அமர்ந்தான். “அரசன் வாசலில் உட்கார்ந்திருக்கிறார்” என்று படைவீரருக்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அனைவரும் அவனுக்கு முன்பாக வந்தார்கள்.
இதற்கிடையில் இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்கு தப்பி ஓடிப்போனார்கள்.
தாவீது திரும்பவும் எருசலேமுக்கு வருதல்
இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமுள்ள மக்கள் தங்களுக்கு வாக்குவாதம்பண்ணி, “அரசர் எங்களை எங்கள் பகைவரிடமிருந்து விடுவித்தார். எங்களைப் பெலிஸ்தியரிடமிருந்து தப்புவித்தவரும் அவரே. இப்போது அப்சலோமுக்குப் பயந்து, தான் தப்புவதற்காக நாட்டைவிட்டு ஓடினாரே. நம்மை அரசாளும்படி நாங்கள் அபிஷேகம் செய்த அப்சலோமும் போரில் இறந்துவிட்டான்; எனவே மறுபடியும் அரசன் தாவீதை அழைத்து வருவதைப் பற்றி ஏன் ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்?” எனத் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
எனவே தாவீது அரசன், சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருவரிடமும் செய்தியை அனுப்பி, “நீங்கள் யூதாவின் முதியவர்களிடம்போய், ‘இஸ்ரயேல் முழுவதும் பேசிக்கொண்டவைகள் அரசனின் இருப்பிடத்திற்கு எட்டியது. அரசரை அரண்மனைக்கு அழைத்துவர ஏன் நீங்கள் தாமதிக்கிறீர்கள்? நீங்கள் என் சகோதரர்; என் இரத்தமும், மாம்சமுமானவர்கள். எனவே நீங்கள் அரசனை மறுபடியும் அழைத்து வருவதற்குத் தயங்குவது ஏன்?’ எனக் கேளுங்கள். மேலும் நீங்கள் அமாசாவிடம், ‘நீ என் தசையும், இரத்தமுமானவனல்லவா? நான் உன்னை இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக என் படைகளுக்குத் தலைவனாக்காவிட்டால் இறைவன் எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்’ எனச் சொல்லுங்கள்” என்று தனக்காக சொல்லும்படி சொல்லி அனுப்பினான்.
இவ்விதமாக தாவீது அரசன் யூதா மனிதர் அனைவரின் மனதையும் கவர்ந்து அவர்களை ஒரே மனமாக இணங்கச்செய்தான். அதனால் அவர்கள் அரசனிடம் ஆளனுப்பி, “அரசரே! நீரும் உம்மோடிருக்கும் மக்களும் திரும்பிவாருங்கள்” என்றார்கள். எனவே அரசன் யோர்தான்வரை வந்தான்.
யூதா மக்கள் அரசனைச் சந்தித்து, அவனை யோர்தானைக் கடந்து அழைத்துவரும்படி கில்காலுக்கு வந்தார்கள். அப்பொழுது பகூரிம் ஊரானான பென்யமீன் கோத்திரத்தின் கேரா என்பவனின் மகன் சீமேயியும் யூதா மக்களுடன் தாவீது அரசனைச் சந்திப்பதற்கு விரைந்து வந்தான். அவனோடு பென்யமீன் கோத்திரத்தார் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டுப் பராமரிப்பாளனான சீபாவும், அவனுடைய பதினைந்து மகன்களும், இருபது பணியாட்களும் வந்தார்கள். அவர்கள் அரசன் இருந்த யோர்தானுக்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் அரச குடும்பத்தார் துறைமுகத்தைக் கடந்துபோவதற்கு விரும்பியவற்றையெல்லாம் செய்வதற்காகவே துறைமுகத்தைக் கடந்துபோனார்கள்.
அப்பொழுது கேராவின் மகன் சீமேயி யோர்தானைக் கடந்தபோது அரசனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் அரசனிடம், “என் தலைவர் என்னைக் குற்றவாளி என்று எண்ணாதிருப்பீராக. என் தலைவனான அரசன் எருசலேமைவிட்டுப் புறப்பட்ட நாளில், உம்முடைய அடியான் எப்படி பிழை செய்தேன் என்பதை நினைவிற்கொள்ள வேண்டாம். அரசர் அதைத் தனது மனதிலிருந்து எடுத்துப்போடுவாராக. உம்முடைய அடியானாகிய நான் பாவம் செய்தேன் என அறிந்திருக்கிறேன். ஆனாலும் என் தலைவனாகிய அரசனை வந்து சந்திப்பதற்கு யோசேப்பின் குடும்பத்தார் அனைவருக்குள்ளும் நானே முதலாவதாக வந்திருக்கிறேன்” என்றான்.
அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை சீமேயி சபித்தானே, அதற்காக அவனைக் கொலைசெய்ய வேண்டாமோ?” என்றான்.
அதற்கு அரசன் தாவீது, “செருயாவின் மகன்களே! உங்களுக்கும், எனக்கும் இதில் பொதுவாக என்ன இருக்கிறது? இன்று எனக்கு நீங்கள் எதிரிகளாய் மாறியிருக்கிறீர்கள். இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்படலாமோ? இன்று நான் இஸ்ரயேலுக்கு அரசனாயிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாதோ?” என்றான். எனவே அரசன், சீமேயிக்கு, “நீ சாகமாட்டாய்” என்று ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
சவுலின் பேரன் மேவிபோசேத்தும் அரசனைச் சந்திக்கும்படி வந்தான். அரசன் வெளியேறிய நாள் முதல், அவர் பாதுகாப்பாகத் திரும்பி வரும்வரை அவன் தன் கால்களைக் கவனிக்காமலும், மீசையை வெட்டாமலும், உடைகளைக் கழுவிக் கொள்ளாமலும் இருந்தான். அவன் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தபோது அரசன் அவனிடம், “மேவிபோசேத்தே! நான் போகும்போது நீ ஏன் என்னுடன் வரவில்லை” என்று கேட்டான்.
அதற்கு அவன், “என் தலைவனாகிய அரசே! உம்முடைய அடியவன் முடவனாகையால் நான் என் பணியாளன் சீபாவிடம், ‘என் கழுதைமேல் சேணம் வைத்து அதில் ஏற்றி அரசனுடன் போகும்படி உதவிசெய் எனக் கேட்டேன்.’ ஆனால் என் பணியாளன் சீபா எனக்குத் துரோகம் செய்தான். உதவிசெய்யாமல் ஏமாற்றினான். அதுவுமன்றி என் தலைவனாகிய அரசனுக்கு என்னைப்பற்றி வீண் அவதூறு சொன்னான். என் தலைவனாகிய அரசன் எனக்கு இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர். எனவே உமக்கு விருப்பமானதைச் செய்யும். நானும் என் பாட்டனாரின் சந்ததியினரும் என் தலைவனாகிய அரசனிடம் மரணத்தைத் தவிர வேறு எதையும் பெற தகுதியற்றவர்களாய் இருந்தோம். ஆனாலும் உமது அடியவனுக்கு உம்முடைய பந்தியில் அமர்ந்திருப்பவர்களுடன் ஒரு இடத்தைக் கொடுத்தீர்; ஆதலால் இப்பொழுதும் உம்மிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” எனப் பதிலளித்தான்.
அப்பொழுது அரசன் அவனிடம், “இதைப்பற்றி நீ இன்னும் அதிகமாய் பேசுவானேன்; உங்கள் உரிமை நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்படி சீபாவுக்கும், உனக்கும் கட்டளையிடுகிறேன்” என்றான்.
அதற்கு மேவிபோசேத் அரசனிடம், “இப்பொழுது என் தலைவனான அரசன் பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கும்போது எனக்கு வேறொன்றும் தேவையில்லை. அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
கிலேத்தியனான பர்சிலாயும், அரசனுடன் யோர்தானைக் கடக்கவும், அங்கிருந்து வழியனுப்புவதற்கும் ரோகிலிமிலிருந்து தாவீதிடம் வந்திருந்தான். அப்பொழுது பர்சிலாய் எண்பது வயதுடைய கிழவனாயிருந்தான். அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தபடியால், அரசன் மக்னாயீமில் தங்கியிருந்த காலத்தில் அவனே அவனுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவியிருந்தான். அரசன் பர்சிலாயிடம், “நீ என்னுடன் யோர்தான் ஆற்றைக் கடந்துவந்து என்னுடன் எருசலேமில் தங்கியிரு; நான் உனக்குத் தேவையானவற்றைக் கொடுப்பேன்” என்றான்.
ஆனால் பர்சிலாய் அரசனிடம், “நான் அரசனோடுகூட எருசலேமுக்கு வருவதற்கு இன்னும் எவ்வளவு காலம் உயிரோடிருக்கப்போகிறேன்? இப்பொழுது எனக்கு எண்பது வயது; எனக்கு நன்மையானதையும், நன்மையல்லாததையும் பகுத்தறிய முடியுமா? உமது அடியானாகிய நான் சாப்பிடுவதையும், குடிப்பதையும் ருசிக்க முடியுமா? ஆண், பெண் பாடகர்களின் குரல்களை இன்னும் கேட்கமுடியுமா? உமது அடியவன் என் தலைவனாகிய அரசனுக்கு மற்றொரு பாரமாக ஏன் இருக்கவேண்டும். அரசருடன் யோர்தானைக் கடந்து சிறிது தூரம் வருவேன்; அரசன் ஏன் எனக்கு இவ்விதம் வெகுமதி கொடுக்கவேண்டும். நான் என் சொந்தப் பட்டணத்துக்குப் போய் மரித்து என் தாய் தந்தையரின் கல்லறையில் அடக்கம்பண்ணும்படி என்னைப் போகவிடும்; ஆனால் உம்முடைய அடியவனாகிய கிம்காம் இங்கிருக்கிறான். அவன் என் தலைவனாகிய அரசருடன் ஆற்றைக் கடந்து வரட்டும். உமக்கு விருப்பமானவற்றை அவனுக்குச் செய்யும்” என்றான்.
அதற்கு அரசன், “கிம்காம் என்னுடன் வரட்டும். உனக்கு மகிழ்ச்சி கொடுப்பதையெல்லாம் நான் அவனுக்குச் செய்வேன். நீ விரும்புவது எதையும் உனக்காக நான் அவனுக்குச் செய்வேன்” என்றான்.
மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தபின் அரசனும் கடந்தான். அரசன் பர்சிலாயை முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பர்சிலாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
அரசன் ஆற்றைக் கடந்து கில்காலுக்குச் சென்றான். கிம்காமும் அவனோடு கடந்துபோனான். யூதாவின் படைவீரரும் இஸ்ரயேல் படையில் அரைப்பகுதியினரும் அரசனை அழைத்துச் சென்றார்கள்.
இஸ்ரயேல் மக்களனைவரும் தாவீது அரசனிடம் வந்து, “எங்கள் சகோதரராகிய யூதா மக்கள் அனைவரும் அரசரையும் அவர் குடும்பத்தாரையும் வீரர்களோடு ஏன் கள்ளத்தனமாக யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கே கொண்டுவந்தார்கள்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு யூதா மக்களனைவரும் இஸ்ரயேலரிடம், “அரசர் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதால் இப்படிச் செய்தோம். அதற்காக நீங்கள் ஏன் கோபமடைய வேண்டும்? அரசரின் உணவை நாங்கள் சாப்பிட்டோமா? அவருடைய பொருட்களில் எதையாவது எங்களுக்காக எடுத்துக்கொண்டோமா?” என்றார்கள்.
எனவே இஸ்ரயேல் மக்கள் யூதா மக்களிடம், “அரசர் எங்களுக்கு உங்களைவிட பத்து மடங்கு நெருங்கிய உறவினர்; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு. எனவே எங்களை ஏன் வெறுப்புடன் நடத்துகிறீர்கள்? அரசனை திரும்ப அழைத்துவர வேண்டுமென முதலில் சொன்னவர்கள் நாங்களல்லவா?” என்றார்கள்.
ஆனால் யூதா மக்களோ இஸ்ரயேல் மக்களைவிட அதிக கடுமையாக அவர்களுக்குப் பதிலளித்தார்கள்.
தாவீதுக்கு எதிராக சேபாவின் கலகம்
அப்பொழுது பென்யமீன் கோத்திரத்தானான பிக்கிரியின் மகன் சேபா என்னும் கலகக்காரனும் அங்கே இருந்தான். அவன் எக்காளத்தை ஊதி மக்களிடம் சொன்னதாவது:
“எங்களுக்குத் தாவீதிடம் பங்கில்லை,
ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு ஒரு பாகமுமில்லை.
இஸ்ரயேலின் நீங்கள் எல்லோரும் உங்கள் கூடாரங்களுக்கு போய்விடுங்கள்.”
எனவே இஸ்ரயேலர் அனைவரும் தாவீதை விட்டுப்பிரிந்து பிக்கிரியின் மகன் சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா மக்களோ யோர்தான் தொடங்கி எருசலேமுக்குப் போகும் வழியெல்லாம் அரசனோடேயே இருந்தார்கள்.
தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பிவந்தபோது, அரண்மனையைப் பார்க்கும்படி விட்டுப்போயிருந்த தன் பத்து மறுமனையாட்டிகளையும் ஒரு காவலாளனின் பொறுப்பில் ஒரு வீட்டில் வைத்தான். அவர்களுக்கு தேவையானவற்றைக் கொடுத்தானேயல்லாமல், அவர்களுடன் உறவுகொள்ளவில்லை. அவர்கள் மரணமடைய மட்டும் விதவைகளைப்போல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
அதன்பின் அரசன் அமாசாவிடம், “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா மக்களை என்னிடம் அழைப்பித்து, அத்துடன் நீயும் என்னுடன் இருக்கவேண்டும்” எனச் சொன்னான். ஆனால் யூதா மக்களை அழைத்துவரும்படி சென்ற அமாசா, அரசன் தனக்குக் குறிப்பிட்ட காலத்தையும்விட அதிக காலத்தை எடுத்தான்.
எனவே தாவீது அபிசாயிடம், “அப்சலோம் நமக்குச் செய்த தீங்கிலும் அதிக தீங்கை இப்பொழுது பிக்கிரியின் மகன் சேபா செய்வான். எனவே நீ உனது எஜமானின் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு போ. இல்லையெனில் அவன் அரணான பட்டணங்களைத் தேடி எங்களிடமிருந்து தப்பிவிடுவான்” என்றான். அதன்படியே யோவாபின் வீரரும், கிரேத்தியரும், பிலேத்தியரும் எல்லா வலிமைமிக்க வீரரும் அபிசாயின் தலைமையில் புறப்பட்டார்கள். அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவைத் துரத்திப்பிடிக்கும்படி எருசலேமிலிருந்து அணிவகுத்துச் சென்றார்கள்.
கிபியோனிலுள்ள பெரும் கற்பாறை அருகே அவர்கள் இருந்தபோது, அமாசா அவர்களைச் சந்திக்க வந்தான். அப்பொழுது யோவாப் இராணுவ சீருடையை அணிந்திருந்தான். அதன்மேல் அவனுடைய இடுப்புப்பட்டியில் ஒரு குறுவாள் கட்டப்பட்டிருந்தது. அவன் முன்னால் அடியெடுத்து வைத்தபோது அது உறையிலிருந்து கீழே விழுந்தது.
அப்பொழுது யோவாப் அமாசாவிடம், “சகோதரனே எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக தன் வலதுகையால் அவன் தாடியைப் பிடித்து இழுத்தான். அமாசாவோ யோவாபின் இடதுகையில் இருந்த குறுவாளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவில்லை. அப்பொழுது யோவாப் அவனுடைய வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் தரையில் விழுந்தது. மீண்டும் குத்தப்படாமலேயே அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் மகன் சேபாவை பிடிக்க தொடர்ந்து போனார்கள்.
அப்பொழுது யோவாபின் வீரர்களிலொருவன் அமாசாவின் உடலருகே நின்று, “யோவாபை ஆதரிக்கும் எவனும், தாவீதின் பக்கம் இருக்கும் எவனும் யோவாபைப் பின்தொடரட்டும்” என்றான். அமாசா நடுவழியில் இரத்தத்தில் மூழ்கிக்கிடந்தான். அங்கு வந்த படைவீரர் அமாசாவின் உடலைப் பார்க்க தாமதித்து நிற்பதை அவன் கண்டான். அதனால் அமாசாவின் உடலை வழியிலிருந்து இழுத்து வயலுக்குள் போட்டு அதை ஒரு துணியால் மூடினான். அமாசாவின் உடல் வழியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், படைவீரர் அனைவரும் பிக்கிரியின் மகன் சேபாவை துரத்திப்பிடிக்கும்படி யோவாபுடன் போனார்கள்.
சேபா இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேலுக்கு வந்து அங்கு அவன் பேரேத்தியரின் பிரதேசம் வழியாகச் சென்றான். அவர்கள் ஒன்றுபட்டு அவனைப் பின்தொடர்ந்தார்கள். யோவாபுடன் இருந்த வீரர்கள் வந்து ஆபேல் பெத்மாக்காவாகிய சேபாவை முற்றுகையிட்டார்கள். பட்டணத்துக்கு எதிரே ஒரு முற்றுகை கொத்தளத்தைக் கட்டினார்கள். அது வெளி அரணுக்கு எதிரே இருந்தது. பட்டணத்து மதிலை வீழ்த்தும்படி அதை இடித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ஞானமுள்ள பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டுக் கூப்பிட்டு, “கேளுங்கள், கவனியுங்கள்; நான் யோவாபுடன் பேசும்படி அவரை இங்கே வரச்சொல்லுங்கள்” என்றாள். எனவே யோவாப் அவளிடம் வந்தபோது அவள், “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள்.
அதற்கு யோவாப், “நானேதான்” என்றான்.
அப்பொழுது அப்பெண், “உமது அடியாள் சொல்வதைக் கேளும்” என்றாள்.
அதற்கு அவன், “கேட்கிறேன்” என்றான்.
தொடர்ந்து அவள், “வெகுகாலத்திற்குமுன் மக்கள், ‘ஆபேலில் ஆலோசனையைக் கேளுங்கள்’ எனச் சொல்வது வழக்கம். அவ்வாறே மக்கள் தங்கள் வழக்குகளைத் தீர்த்தார்கள். இஸ்ரயேலில் நாங்கள் சமாதானமும், உண்மையுமுள்ளவர்கள்; இஸ்ரயேலருக்கு ஒரு தாய்போல் இருக்கும் இப்பட்டணத்தை நீங்கள் அழிக்க விரும்புகிறீர்கள்; யெகோவாவினுடைய உரிமைச்சொத்தை ஏன் நீங்கள் விழுங்கப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.
அதற்கு யோவாப், “அப்படிப்பட்ட எண்ணம் எனக்கில்லை. அதை அழித்து ஒழிக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. அது எங்களுடைய நோக்கமல்ல; எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த பிக்கிரியின் மகனான சேபா என்பவன் அரசனுக்கு எதிராக, தாவீதுக்கு எதிராகத் தன் கையை ஓங்கியிருக்கிறான். அந்த ஒரு மனிதனை எங்களிடத்தில் ஒப்படைத்தால் நாங்கள் பட்டணத்தைவிட்டுப் போய்விடுவோம்” என்றான்.
அப்பொழுது அப்பெண் யோவாபிடம், “அவனுடைய தலை மதிலுக்கு மேலாக உன்னிடத்தில் எறியப்படும்” என்றாள்.
அதன்படியே அந்தப் பெண் எல்லா மக்களிடமும் ஞானமாய் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்துவிட்டார்கள். அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதினன். படைவீரர் அனைவரும் பட்டணத்தைவிட்டு கலைந்து ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். யோவாபும் எருசலேமுக்கு அரசனிடம் போனான்.
தாவீதின் அதிகாரிகள்
யோவாப் இஸ்ரயேலின் முழு படைகளுக்கும் தலைவனாகவும்,
யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாகவும் இருந்தார்கள்.
அதோராம் கட்டாய வேலைசெய்பவர்களுக்குப் பொறுப்பாகவும்
அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாகவும்,
சேவா செயலாளராகவும்,
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாகவும் இருந்தார்கள்.
அத்துடன் யயீரியனான ஈரா தாவீதின் ஆசாரியனாயும் இருந்தான்.
கிபியோனியரை பழிவாங்கல்
தாவீதின் ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு பஞ்சம் உண்டானது. எனவே தாவீது யெகோவாவின் முகத்தைத் தேடினான். அப்பொழுது யெகோவா, “சவுல் கிபியோனியரைக் கொலைசெய்தபடியால் அவனுக்காகவும், இரத்தக்கறைபடிந்த அவன் குடும்பத்தாருக்காகவுமே இப்பஞ்சம் ஏற்பட்டது” என்றார்.
அப்பொழுது தாவீது அரசன் கிபியோனியரை அழைப்பித்து அவர்களோடு பேசினான். கிபியோனியர் இஸ்ரயேலைச் சேர்ந்தவர்களல்ல; ஆனால் அவர்கள் எமோரியரில் மீதமுள்ளவர்கள்; இஸ்ரயேலர் அவர்களை அழிக்காமல் விடுவதாக வாக்களித்திருந்தும், சவுல் இஸ்ரயேல்மேலும் யூதாமேலும் கொண்ட வைராக்கியத்தால் அவர்களை அழித்தொழிக்க முயற்சி செய்தான். தாவீது கிபியோனியரிடம், “உங்களுக்காக நான் என்ன செய்யவேண்டும்? யெகோவாவினுடைய உரிமைச்சொத்தான நாட்டை நீங்கள் ஆசீர்வதிக்கும்படி நான் என்ன இழப்பீடு செய்யலாம்?” என்று கேட்டான்.
அதற்குக் கிபியோனியர், “சவுலிடமோ, அவன் குடும்பத்தாரிடமோ வெள்ளியையும், தங்கத்தையும் கேட்பதற்கு எங்களுக்கு உரிமையில்லை. இஸ்ரயேலில் ஒருவனையும் கொலைசெய்யவும் எங்களுக்கு உரிமையில்லை” என்றார்கள்.
அதற்குத் தாவீது, “நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்?” என்றான்.
அதற்கு அவர்கள் அரசனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாட்டில் எவ்விடத்திலும் நிலைத்திருக்காதபடி, சவுல் எங்களில் அதிகம் பேரைக் கொலைசெய்து எங்களுக்கு விரோதமாய் சதியாலோசனை செய்து எங்களை அழித்தான். எனவே அவனுடைய சந்ததியில் ஏழு ஆண் மக்களை எங்களுக்குக் கொடுக்கவேண்டும். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட சவுலின் ஊரான கிபியாவிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களை வெளியே எறிவோம்” என்றார்கள்.
அதற்கு அரசன், “அவர்களை உங்களிடம் கொடுப்பேன்” என்றான்.
ஆனாலும் தாவீது தானும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவா முன்னிலையில் செய்துகொண்ட ஆணையின் நிமித்தம், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்தைத் தப்பவிட்டான். ஆனால் ஆயாவின் மகள் ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற மகன்களான அர்மோனி, மற்றொரு மேவிபோசேத் ஆகிய இருவரையும்; அத்துடன் சவுலின் மகள் மேராப் மேகோலாத்தியனான பர்சிலாயின் மகன் ஆதரியேலுக்கு பெற்ற ஐந்து மகன்களையும் தெரிந்தெடுத்து, அவர்களைக் கிபியோனியரிடம் கொடுத்தான். கிபியோனியர் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவுக்குமுன் இருந்த குன்றின்மேல் எறிந்தார்கள். அந்த ஏழு பேரும் ஒரேயடியாய் விழுந்தார்கள். வாற்கோதுமை அறுவடையின் தொடக்கத்தின் முதல் நாட்களிலேயே இக்கொலை நடந்தது.
ஆயாவின் மகள் ரிஸ்பாள் ஒரு துக்கவுடையை தனக்கென கற்பாறையின்மேல் விரித்தாள். அவள் அறுவடை காலம் முடிந்து உடல்களின்மேல் மழை பெய்யும்வரை உடல்களை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ, இரவில் காட்டு விலங்குகளோ தொடவிடவில்லை. சவுலின் மறுமனையாட்டியான ஆயாவின் மகள் ரிஸ்பாள் இப்படிச் செய்ததை தாவீதுக்கு அறிவித்தார்கள். அதை அறிந்த தாவீது கீலேயாத்திலுள்ள யாபேஸ் குடிமக்களிடம் சென்று சவுலின், அவன் மகன் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டுவந்தான். பெலிஸ்தியர் சவுலை கில்போவாவிலே வெட்டிக்கொன்று, பெத்ஷான் நகர சதுக்கத்திலே தூக்கிலிட்டிருந்தார்கள். அதை அங்கிருந்து இரகசியமாக கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் கொண்டுபோயிருந்தார்கள். அங்கிருந்து தாவீது, சவுலின் அவன் மகன் யோனத்தானுடைய எலும்புகளையும், அத்துடன் கொலைசெய்யப்பட்டு எறியப்பட்ட ஏழு பேரின் சேர்க்கப்பட்ட எலும்புகளையும் கொண்டுவந்தான்.
தாவீதின் மனிதர் சவுலின், யோனத்தானின் எலும்புகளை, பென்யமீன் நாட்டு சேலா ஊரிலுள்ள சவுலின் தகப்பன் கீஷின் கல்லறையில் அடக்கம் செய்து, அரசன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்தார்கள். அதன்பின்பே இறைவன் நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டு அதற்கு பதிலளித்தார்.
பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தம்
பெலிஸ்தியருக்கும், இஸ்ரயேலருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. தாவீது தன் வீரர்களுடன் பெலிஸ்தியரை எதிர்த்து யுத்தம்பண்ணச் சென்றான். தாவீது மிகவும் களைப்படைந்தான். அப்பொழுது இஸ்பிபெனோப் என்னும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவனுடைய வெண்கல ஈட்டியின் எடை முந்நூறு சேக்கலாயிருந்தது. அவன் ஒரு புது வாளுடன், “தாவீதைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். அதைக்கண்ட செருயாவின் மகன் அபிசாய் தாவீதுக்கு உதவியாக வந்து அந்த பெலிஸ்தியனான இராட்சதனை அடித்துக் கொன்றான். இதனால் தாவீதின் மனிதர் அவனிடம், “இஸ்ரயேலின் தீபம் அணைந்து போகாதபடி நீர் இனி ஒருபோதும் எங்களோடு யுத்தத்திற்கு வரவேண்டாம்” என ஆணையிட்டுச் சொன்னார்கள்.
சிறிது காலத்திற்குப்பின் கோப் என்னும் இடத்தில் பெலிஸ்தியருடன் மற்றொரு யுத்தம் நடந்தது. அப்பொழுது ஊஷாத்தியனான சிபெக்காய் என்பவன் இராட்சத வழித்தோன்றலில் வந்த சாப் என்பவனைக் கொன்றான்.
கோப் என்ற இடத்தில் பெலிஸ்தியரோடு இன்னொருமுறை சண்டை நடந்தது. பெத்லெகேமியனான யாரெயொர்கிமின் மகன் எல்க்கானான், கித்தியனான கோலியாத்தின் சகோதரனைக் கொன்றான். அந்த எதிரியின் ஈட்டி நெசவுத்தறி மரத்தைப்போல் பெரியதாயிருந்தது.
காத்தில் நடந்த மற்றொரு போரில் பெருத்த சரீரமுடைய ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. இவனும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்தவன். இவன் இஸ்ரயேலை நிந்தித்தபோது, தாவீதின் சகோதரனான சிமெயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொலைசெய்தான்.
இவர்கள் நான்குபேரும் காத் ஊரிலுள்ள இராட்சத சந்ததிகள், அவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள்.
தாவீதின் நன்றிப்பாடல்
யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான். அவன் சொன்னது:
“யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
என் கேடயம், என் மீட்பின் கொம்பு.
என் அரண், என் அடைக்கலம்,
நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.
“துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன,
அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.
பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
“என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்.
என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன்.
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்.
என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.
பூமி நடுங்கி அதிர்ந்து,
வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன;
அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின.
அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;
அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது;
நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.
அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;
கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.
அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;
அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.
அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார்.
வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.
அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து
மின்னலின் தாக்குதல் வீசுண்டன.
யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;
மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;
மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.
யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்
அவரின் கண்டிப்பினாலும்
கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன;
பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
“அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;
ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.
அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்
என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.
அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;
ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.
அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;
அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
“யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;
என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;
என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,
பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்;
அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.
“உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;
உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;
ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;
ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.
யெகோவாவே, நீர் என் விளக்கு;
யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;
என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
“இறைவனுடைய வழி முழு நிறைவானது:
யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது;
அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
யெகோவாவைத்தவிர இறைவன் யார்?
நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து,
என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,
உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;
என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
என் கணுக்கால்கள் புரளாதபடி,
நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
“நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்;
அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்;
அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.
யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;
என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.
நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;
நான் அவர்களை அழித்தேன்.
அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,
ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.
நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்;
நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.
“நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;
நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர்.
நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;
அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,
தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.
“யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!
என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!
எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே,
நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே.
அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார்.
யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர்.
என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர்.
ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
“அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;
அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும்
தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.”
தாவீதின் இறுதி வார்த்தைகள்
தாவீதின் இறுதி வார்த்தைகள் இவையே:
“ஈசாயின் மகனான தாவீதின் இறைவாக்கு:
மகா உன்னதமானவரால் உயர்த்தப்பட்ட மனிதன்
இந்த இறைவாக்கைச் சொன்னான். அவன் யாக்கோபின் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன்.
அவன் இஸ்ரயேலில் பாடல்களைப் பாடுபவன்.
“யெகோவாவின் ஆவியானவர் என் மூலமாகப் பேசினார்.
அவரது வார்த்தை என் நாவிலிருந்தது.
இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின்
கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது:
‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும்,
இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,
அவன் காலையில் மேகங்களால்
மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான்.
பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின்
பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’
“எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா?
அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா?
அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே.
அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ.
அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ.
கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல்
தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும்.
ஆனால் முட்களைத் தொடுகிற எவனும்
இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான்.
அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.”
தாவீதின் வலிமையுள்ள மனிதர்
தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்:
தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான்.
அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள். ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள்.
அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார்.
அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது. அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான். எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான். “யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான்.
இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள்.
யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான். அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான்.
கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான். அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
அந்த முப்பதுபேரின் பெயர்களாவன:
யோவாபின் சகோதரன் ஆசகேல்,
பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
ஆரோதியனான சம்மா,
ஆரோதியனான எலிக்கா,
பல்தியனான ஏலேஸ்,
தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
ஆனதோத்தியனான அபியேசர்,
ஊஷாத்தியனான மெபுன்னாயி,
அகோகியனான சல்மோன்,
நெத்தோபாத்தியனான மகராயி,
நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப்,
பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
பிரத்தோனியனான பெனாயா,
காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
அர்பாத்தியனான அபிஅல்போன்,
பர்குமியனான அஸ்மாவேத்,
சால்போனியனான எலியாபா,
யாசேனின் மகன்களில் ஒருவனான
யோனத்தான், ஆராரியனான சம்மா,
ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத்,
கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,
கர்மேலியனான எஸ்ராயி,
அர்பியனான பாராயி,
சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால்,
காதியனான பானி,
அம்மோனியனான சேலேக்,
செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
இத்திரியனான ஈரா,
இத்திரியனான காரேப்,
ஏத்தியனான உரியா என்பவர்களே.
எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.
தாவீது போர்வீரரைக் கணக்கிடுதல்
யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்.
எனவே அரசன் யோவாபிடமும் அவனோடிருந்த தளபதிகளிடமும், “நான் சண்டையிடக்கூடிய வீரர்களின் தொகையை அறியும்படிக்குத் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள இஸ்ரயேலரின் எல்லாக் கோத்திரங்களிடமும் சென்று தொகையைக் கணக்கிடு” என்றான்.
ஆனால் யோவாப் அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் காணும்படி, இறைவனாகிய யெகோவா இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. ஆனால் என் தலைவனாகிய அரசர் ஏன் இப்படியான செயலைச் செய்ய விரும்புகிறீர்?” என்றான்.
ஆனாலும், அரசனின் வார்த்தைக்கு யோவாபும், தளபதிகளும் கட்டுப்படவேண்டியதால், இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடும்படி அரசனிடமிருந்து சென்றார்கள்.
அவர்கள் யோர்தானைக் கடந்தபின் பள்ளத்தாக்கிலிருந்து போய் பட்டணத்துக்குத் தெற்கிலிருந்து அரோயேருக்கு அருகில் முகாமிட்டார்கள். பின் காத் வழியாகச் சென்று யாசேருக்குப் போனார்கள். அங்கிருந்து கீலேயாத்திற்கும், தாதீம் ஒத்சி என்னும் பகுதிகளுக்கும், பின் தாண்யாணுக்கும் சென்று சுற்றி சீதோனை நோக்கி வந்தார்கள். அதன்பின் தீரு என்னும் கோட்டைப் பக்கமாகவும், ஏவியர், கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் சென்றார்கள். கடைசியாக யூதாவின் நெகேவிலுள்ள பெயெர்செபாவுக்குப் போனார்கள்.
இப்படியாக முழு நாடெங்கும் சுற்றித்திரிந்து ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குபின் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.
யோவாப் வீரர்களின் எண்ணிக்கையை அரசனுக்கு தெரிவித்தான். இஸ்ரயேலில் வாள் ஏந்தும் வீரர்கள் எட்டு இலட்சம்பேரும், யூதாவில் ஐந்து இலட்சம்பேரும் இருந்தனர்.
ஆனாலும் வீரர்களைக் கணக்கிட்டபின் தாவீதின் மனசாட்சி அவனை வாட்டியது. அவன் யெகோவாவிடம், “நான் இப்படிச் செய்தபடியால், பெரும் பாவம் செய்தேன். யெகோவாவே, இப்பொழுது உமது அடியவன் செய்த குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான்.
மறுநாள் அதிகாலையில் தாவீது எழுந்திருப்பதற்கு முன்பு யெகோவாவின் வார்த்தை, தாவீதின் தரிசனக்காரனான காத் என்னும் இறைவாக்கு உரைப்பவனுக்கு வந்தது. அவர், “நீ தாவீதிடம்போய் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: உனக்கு விரோதமாக நான் செயல்படுத்தும்படி மூன்று காரியங்களை உனக்குமுன் வைத்திருக்கிறேன்; அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார்.
எனவே காத் தாவீதிடம்போய், “உம்முடைய நாட்டில் ஏழு வருடங்கள்24:13 ஏழு வருடங்கள் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் மூன்று வருடங்கள் என்றுள்ளது. பஞ்சம் வருவதா? அல்லது பகைவர் உம்மைப் பின்தொடர மூன்று மாதங்கள் நீர் அவர்களுக்கு ஒளிந்து ஓடுவதா? அல்லது உமது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் வருவதா? எது என யோசனை செய்து, நான் இறைவனிடம் என்ன சொல்லவேண்டுமென உமது தீர்மானத்தை உடனே சொல்லும்” என்றான்.
தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான்.
எனவே யெகோவா இஸ்ரயேலில் அன்று காலை தொடங்கி குறிக்கப்பட்ட நாட்கள் முடியும்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். இதனால் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். தூதன் எருசலேமையும் அழிப்பதற்குத் தன் கையை ஓங்கியபோது அங்கே நடந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே அவர் மக்களை அழித்த தூதனிடம், “போதும் உன் கையை எடு” என்றார். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்தில் இருந்தார்.
யெகோவாவினுடைய தூதனானவர் மக்களைக் கொடிய கொள்ளைநோயினால் வாதிப்பதைத் தாவீது கண்டபோது, அவன் யெகோவாவிடம், “செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும்” என்றான்.
தாவீது பலிபீடம் கட்டுதல்
அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான். எனவே தாவீது யெகோவா தனக்கு காத் மூலமாக கட்டளையிட்டபடியே அங்கே போனான். தாவீதும் அவனுடைய மனிதரும் தன்னிடம் வருவதைக் கண்டபோது, அர்வனா அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கினான்.
அர்வனா அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் உம்முடைய அடியவனிடம் வந்த காரியம் என்ன?” எனக் கேட்டான்.
அதற்குத் தாவீது, “கொடிய கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படிக்கு, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்காக உன்னுடைய சூடடிக்கும் களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்றான்.
அதற்கு அர்வனா தாவீதிடம், “என் தலைவனாகிய அரசன் விரும்பியவற்றை எடுத்து பலி செலுத்துவாராக. தகன காணிக்கைக்காக மாடுகளும், விறகுகளுக்காக சூடடிக்கும் பலகைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கின்றன. அரசே, அர்வனாவாகிய நான் இவை எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்கிறேன். உமது இறைவனாகிய யெகோவா உம்மை தயவாக ஏற்றுக்கொள்வாராக” என்றான்.
அதற்கு அரசன் அர்வனாவிடம், “வேண்டாம். நான் இதற்குரிய பணத்தைக் கொடுக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன். என் இறைவனாகிய யெகோவாவுக்கு நான் பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்ற தகன காணிக்கையை செலுத்தமாட்டேன்” என்றான்.
எனவே தாவீது சூடடிக்கும் களத்தையும், மாடுகளையும், ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுத்து வாங்கினான். அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அப்பொழுது நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார், இஸ்ரயேலின்மேல் வந்த கொள்ளைநோய் நின்றுபோனது.