- Biblica® Open Indian Tamil Contemporary Version
2 பேதுரு
பேதுரு எழுதின இரண்டாம் கடிதம்
2 பேதுரு
2 பேது.
பேதுரு எழுதின இரண்டாம் கடிதம்
இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு,
நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
இறைவனுடைய அழைப்பின் நிச்சயம்
நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்; அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்; இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும். ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள். நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள்.
வேதவசனத்தின் இறைவாக்கு
நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன். ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம். “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்”1:17 [மத். 17:5]; [மாற். 9:7]; [லூக். 9:35] என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார். அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.
கள்ளப் போதகர்களும் அவர்களின் அழிவும்
முற்காலத்தில் பொய்த் தீர்க்கதரிசிகள் மக்கள் மத்தியிலே இருந்தார்கள். அதுபோலவே, பொய் வேத ஆசிரியர்கள் உங்கள் மத்தியிலே இருப்பார்கள். அவர்கள் அழிவை ஏற்படுத்தும் பொய்யான போதனைகளை இரகசியமாய் புகுத்துவார்கள். தங்களை விலைகொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரையும் அவர்கள் மறுதலிப்பார்கள். இவ்விதமாக அழிவைத் தங்கள்மேல் விரைவாய் வருவித்துக்கொள்வார்கள். பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும். இந்த வேத ஆசிரியர் தங்களுடைய பேராசையில் தாங்களே இயற்றிய கட்டுக்கதைகளைச் சொல்லி, உங்களைச் சுரண்டி வாழப்பார்ப்பார்கள். அவர்களுக்குரிய தண்டனைத்தீர்ப்பு அவர்கள்மேல் விழ, இறைவனால் வெகுகாலத்திற்கு முன்னரே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்மேல் வரவிருக்கும் அழிவு உறங்காது.
இறைத்தூதர்கள் பாவம் செய்தபோது, இறைவன் அவர்களைத் தப்பிப்போக விடவில்லை. அவர் அவர்களை நரகத்திற்குள் தள்ளி, அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும்வரைக்கும், அவர்களைப் பாதாளத்தின் இருளிலே போட்டார்; முற்காலத்தில் இருந்த உலகத்தையும் இறைவன் தப்பிப்போக விடவில்லை. அதில் வாழ்ந்த இறை பக்தியற்ற மக்களின்மேல் வெள்ளத்தை வரச்செய்தார். ஆனால் நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அவர் காப்பாற்றினார்; இறைவன் சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறை பக்தியற்றவர்களுக்கு, இதுவே நிகழும் என்று காண்பிப்பதற்காக, அந்தப் பட்டணங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இப்படிச் செய்தார். ஆனால் இறைவன் நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். அவனோ, அநியாயக்காரர்களின் அசுத்த வாழ்க்கையினாலே மனம் புண்பட்டவனாய் இருந்தான். அந்த நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது, நாளுக்குநாள் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே, தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான். அது அப்படியானால், இறை பக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றும், அநியாயக்காரர்களை எப்படி நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும் தண்டனைக்கு உட்படுத்தும்படி வைத்துக்கொள்ளுவது என்றும், கர்த்தர் அறிந்திருக்கிறார். விசேஷமாக பாவ இயல்பிலிருந்து எழும் தங்களுடைய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து, அதிகாரத்தை அலட்சியம் செய்கிறவர்களுக்கு இந்த தண்டனை உண்டாகும்.
இப்படிப்பட்டவர்கள் துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள். இவர்கள் பரலோகத்தில் உள்ளவர்களை அவதூறாய் பேசவும் பயப்படுவதில்லை. ஆனால், இவர்களைவிட வலிமை வாய்ந்தவர்களும், அதிக வல்லமையுடையவர்களுமான இறைவனுடைய தூதர்கள்கூட பரலோகத்தில் உள்ளவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவதில்லை. ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத விஷயங்களில் அவதூறாகப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதத் தன்மையற்ற மிருகங்களைப் போன்றவர்கள். தங்கள் இயல்பின்படியே நடக்கின்ற உயிரினங்களைப் போன்றவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கென்றே பிறந்திருக்கின்ற மிருகங்களைப்போலவே இவர்களும் அழிந்துபோவார்கள்.
தாங்கள் செய்த தீமைக்குப் பதிலாக, தீமையையே பெறுவார்கள். பகல் வேளையிலேயே மதுபான வெறியில் ஈடுபடுவதை இன்பம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இவர்கள் உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்கிற அதேவேளையில், தங்கள் சிற்றின்பக் களியாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உங்கள் மத்தியில் அசிங்கமும், கறையுமாயிருக்கிறார்கள். இவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன. பாவம் செய்வதை இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை; உறுதியற்றவர்களை இவர்கள் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள்; இவர்கள் இருதயம் பேராசையில் தேர்ச்சி பெற்றது, இவர்கள் சபிக்கப்பட்ட கூட்டமே. இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள். ஆனால் பிலேயாமோ ஒரு கழுதையினாலே அவனுடைய தவறான செயலைக்குறித்து கடிந்துகொள்ளப்பட்டான். வாய்ப்பேசாத அந்த மிருகம் மனிதக் குரலில் பேசி, அந்தத் தீர்க்கதரிசியின் மதிகேடான செயலைத் தடுத்து நிறுத்தியது.
இவர்கள் தண்ணீர் இல்லாத ஊற்றுக்கள்; புயல்காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வீண் பெருமைகொண்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் மனிதனுடைய பாவ இயல்பிலிருந்து காமவேட்கையுள்ள ஆசைகளைத் தூண்டும் விதத்தில் பேசி, தவறான வழியில் வாழுகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயலும் மக்களைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாக்குப்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களோ, தாங்களே சீர்கெட்ட வாழ்க்கைக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். ஏனெனில் எதனால் ஒருவன் மேற்கொள்ளப்படுகிறானோ, அவன் அதற்கு அடிமையாக இருக்கிறான். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக, இவர்கள் உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பித்திருந்தும், மீண்டும் அதே சீர்கேட்டில் அகப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் அதனால் மேற்கொள்ளப்பட்டால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலைமையைவிட, முடிவில் அவர்கள் இருக்கும் நிலைமை மிக மோசமானது. இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறியாதிருந்திருந்தால், அது இவர்களுக்கு அதிக நலமாயிருந்திருக்கும். ஏனெனில், இவர்கள் நீதி வாழ்வின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளைவிட்டுத் திரும்பிப் போனார்களே. “நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது,”2:22 [நீதி. 26:11] மற்றும், “கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகிறது,” என்ற பழமொழிகள் இவர்களுக்குப் பொருந்தும்.
கர்த்தருடைய நாள்
அன்புக்குரியவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். இந்த இரண்டு கடிதங்களையும் உங்களின் நற்சிந்தனைகளைத் தூண்டிவிடும் நினைப்பூட்டுதல்களாகவே எழுதியிருக்கிறேன். பரிசுத்த இறைவாக்கினர்களால் கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகளையும், நம்முடைய கர்த்தரும் இரட்சகரும் உங்களுடைய அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
முதலாவதாக, கடைசி நாட்களில் ஏளனக்காரர்கள் வருவார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏளனம் பண்ணுகிறவர்களாயும், தங்கள் தீய ஆசையின்படி நடக்கிறவர்களாயும் இருப்பார்கள். “அவர் திரும்பிவருவதாக வாக்குத்தத்தம் செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் இறந்துபோன காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்ததுபோலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பு, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாயின என்பதையும், தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரித்து பூமி உண்டாக்கப்பட்டது என்பதையும், அவர்கள் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள். அக்காலத்து உலகமும் இந்தத் தண்ணீரினாலேயே மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வார்த்தையினாலே தற்காலத்திலுள்ள வானங்களும் பூமியும் நெருப்பினால் எரிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும், அதாவது இறை பக்தியற்றவர்கள் அழிக்கப்படும்வரைக்கும் இவை இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன.
என் அன்புக்குரியவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலவும் இருக்கின்றன என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார் என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விளங்கிக்கொள்கிறவிதத்தில் கர்த்தர் காலதாமதம் செய்யவில்லை. ஆனால் அவர், உங்களைக்குறித்து பொறுமையாய் இருக்கிறார். ஏனெனில், யாரும் அழிந்துபோவதை அவர் விரும்பவில்லை. எல்லோரும் மனந்திரும்புதலை அடையவேண்டும் என்பதையே விரும்புகிறார்.
ஆனால், கர்த்தருடைய நாள் ஒரு திருடனைப்போல் வரும். பேரிரைச்சலுடன் வானங்கள் மறைந்தொழிந்து போகும்; பஞ்ச பூதங்கள் எல்லாம் நெருப்பினால் எரிந்து அழிந்துபோகும். பூமியும் அதில் உள்ளவைகள் யாவும் தீக்கிரையாகும்.
இவ்விதமாய் யாவும் அழிக்கப்படப் போவதினால், நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்? பரிசுத்தமும் இறை பக்தியுமுள்ள வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டுமே. இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலாய் காத்துக்கொண்டிருக்கையில், இப்படியே நீங்கள் வாழவேண்டும். அந்த நாளிலே வானங்கள் எரிந்து அழிந்துபோகும், உலகத்தின் பஞ்ச பூதங்கள் கொடிய வெப்பத்தினால் உருகிப்போகும். ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும் புதிய பூமிக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆகையால் என் அன்புக்குரியவர்களே, நீங்கள் இவைகளுக்காகக் காத்திருக்கிறபடியால், குற்றம் காணப்படாதவர்களும் மாசற்றவர்களுமாய் இறைவனுடன் சமாதானத்துடன் இருக்கும்படி, எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். கர்த்தருடைய பொறுமை, இரட்சிப்புக்கான தருணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்விதமாகவே நம்முடைய அன்புக்குரிய சகோதரனான பவுலும் இறைவன் தனக்குக் கொடுத்த ஞானத்தின்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். தன்னுடைய கடிதங்களில் எல்லாம் இந்த விஷயங்களைக் குறித்துச் சொல்லும்போது இதேவிதமாய் எழுதியிருக்கிறான். அவனுடைய கடிதங்களில் விளங்கிக்கொள்ள கஷ்டமான சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அவைகளுக்கு அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும் பொய்யான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். அப்படியே அவர்கள் மற்ற வேதவசனங்களுக்கும் தவறான விளக்கத்தையே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுக்கே அழிவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே, இதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறபடியால், கவனமாயிருங்கள். அப்பொழுது சட்டத்தை மீறுகிறவர்களின் தவறுகளினால் வழிவிலகிப்போய், உங்கள் பாதுகாப்பான நிலைமையிலிருந்து விழுந்துபோகாதிருப்பீர்கள். ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள்.
அவருக்கே இப்பொழுதும் எப்பொழுதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.