- Biblica® Open Indian Tamil Contemporary Version
2 இராஜாக்கள்
இராஜாக்களின் இரண்டாம் புத்தகம்
2 இராஜாக்கள்
2 இராஜா.
இராஜாக்களின் இரண்டாம் புத்தகம்
எலியாவும் அகசியா அரசனும்
ஆகாப் அரசன் இறந்தபின்பு மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அப்பொழுது அரசன் அகசியா, சமாரியாவிலுள்ள அவனுடைய மேல்மாடியின் ஜன்னலின் வழியாய் கீழே விழுந்து காயப்பட்டிருந்தான். எனவே அவன் தனது ஆட்களை அனுப்பி, “எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், நான் இந்த காயத்திலிருந்து சுகமாவேனா?” என்று கேட்டுவரும்படி சொன்னான்.
ஆனால் யெகோவாவின் தூதன் திஸ்பிய ஊரைச்சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப்போகிறீர்கள்?’ என்று கேள். அதனால் யெகோவா சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய்’ என்றும் சொல் என்றான்.” அப்படியே எலியா போனான்.
தூதுவர்கள் அரசனிடம் திரும்பிவந்தபோது, அரசன் அவர்களிடம், “ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப்போய், யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகிறாய்? எனவே நீ படுக்கும் படுக்கையை விட்டு எழும்பமாட்டாய். நிச்சயமாகவே நீ சாவாய்’ என்று சொல்லுங்கள் என்கிறான்” என்றார்கள்.
அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன்?” என்று கேட்டான்.
அப்பொழுது அவர்கள், “அவன் கம்பளி உடையை அணிந்து, இடுப்பைச் சுற்றி தோல் பட்டியை கட்டியிருந்தான்” என்றார்கள்.
அதற்கு அரசன், “அவன் திஸ்பியனாகிய எலியாதான்” என்றான்.
அதன்பின் அவன் ஒரு இராணுவத் தளபதியையும், அவனுடைய ஐம்பது மனிதரைக்கொண்ட ஒரு குழுவையும் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகிறார்” என்றான்.
எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால் பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து தளபதியையும் அவன் மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
அப்பொழுது அரசன் மற்றொரு தளபதியை ஐம்பது மனிதருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி அவனிடம், “இறைவனுடைய மனிதனே, உடனே கீழே வா என்று அரசன் சொல்கிறார்” என்றான்.
எலியா அதற்குப் பதிலாக, “நான் ஒரு இறைவனுடைய மனிதனாயிருந்தால், பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து இறைவனுடைய நெருப்பு விழுந்து அவனையும் அவனுடைய ஐம்பது மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
அப்பொழுது அரசன் மூன்றாம் தளபதியையும் ஐம்பது மனிதருடன் சேர்த்து அனுப்பினான். இந்த மூன்றாம் தளபதி மேலே ஏறிப்போய் எலியாவின்முன் முழங்காற்படியிட்டு, “இறைவனுடைய மனிதனே, என்னுடைய உயிருக்கும் உமது பணியாட்களான இந்த ஐம்பது மனிதருடைய உயிர்களுக்கும் சற்று இரக்கம் காட்டும். இதோ பாரும், பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து முந்திய இரு தளபதிகளையும், அவர்களுடைய மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. ஆனால் இப்போதோ என்னுடைய உயிருக்கு இரக்கம் காட்டும்” என்று கெஞ்சிக்கேட்டான்.
அப்பொழுது யெகோவாவின் தூதன் எலியாவிடம், “அவனோடே கீழே இறங்கிப்போ. அவனுக்குப் பயப்படாதே” என்றான். எலியா உடனே எழுந்து அவனோடுகூட கீழே இறங்கி அரசனிடம் போனான்.
அவன் அரசனிடம், “யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு தூதுவரை அனுப்பினாய்? நீ இதைச் செய்தபடியினால், படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய் என்கிறார்” என்றான். எலியா கூறிய யெகோவாவின் வார்த்தையின்படியே அகசியா இறந்தான்.
அகசியாவுக்கு ஒரு மகனும் இல்லாதிருந்தபடியினால் அவன் சகோதரன் யோராம் அவனுக்குப்பின் அரசனானான். யூதா அரசன் யோசபாத்தின் மகனான யெகோராம் யூதாவை அரசாண்ட இரண்டாம் வருடத்திலே யோராம் இஸ்ரயேலின் அரசனானான். அகசியா அரசனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
யெகோவா எலியாவை ஒரு சுழல் காற்று மூலம் பரலோகத்துக்குக் கொண்டுபோகும் நேரம் சமீபித்தபோது, எலியாவும், எலிசாவும், கில்காலிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எலியா எலிசாவைப் பார்த்து, “யெகோவா என்னைப் பெத்தேலுக்குப் போகும்படி அனுப்பியிருக்கிறார். ஆகவே நீ இங்கேயே இரு” என்றான்.
ஆனால் எலிசாவோ, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும் நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
பெத்தேலிலிருந்த இறைவாக்கினர் குழு எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான்.
அதன்பின் எலியா அவனிடம், “எலி சாவே நீ இங்கேயே தங்கியிரு, யெகோவா என்னை எரிகோவுக்கு அனுப்புகிறார்” என்றான்.
அதற்கு எலிசா, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும், நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவர்கள் இருவரும் எரிகோவுக்குப் போனார்கள்.
எரிகோவிலிருந்த இறைவாக்கு உரைப்போரின் கூட்டம் எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் இதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான்.
அதன்பின் எலியா எலிசாவிடம், “நீ இங்கே தங்கியிரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார்” என்றான்.
அதற்கு அவன், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும் நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
ஐம்பதுபேர் கொண்ட இறைவாக்கினர் கூட்டமொன்று, எலியாவும் எலிசாவும் யோர்தானின் அருகே நின்ற இடத்தை சிறிது தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எலியா தன் மேலுடையை எடுத்து அதைச் சுருட்டி அதனால் யோர்தான் தண்ணீரை அடித்தான். தண்ணீர் வலப்பக்கமும், இடப்பக்கமுமாக இரண்டாகப் பிரிந்தது. அவர்கள் இருவரும் காய்ந்த நிலத்தில் நடந்து அக்கரைக்குப் போனார்கள்.
அவர்கள் அக்கரைக்குப் போனபோது எலியா எலிசாவைப் பார்த்து, “நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறாய்” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எனக்கு உரிமையாகத் தாரும்” என்றான்.
அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “கஷ்டமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய். ஆனாலும் உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ கண்டாயானால் நீ கேட்டபடி கிடைக்கும். இல்லாவிட்டால் கிடைக்காது” என்று கூறினான்.
அதன்பின் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்துபோகையில் திடீரென நெருப்புத் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்றி அவர்கள் இருவரையும் பிரித்தது. எலியா ஒரு சுழல் காற்றில் பரலோகத்துக்குப் போனான். எலிசா அதைப் பார்த்து, “என் தகப்பனே! என் தகப்பனே! இஸ்ரயேலின் தேர்களே! குதிரைவீரரே!” என்று பலமாகச் சத்தமிட்டான். அதன்பின்பு எலிசா அவனைக் காணவில்லை. அப்பொழுது எலிசா தன் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்தான்.
எலியாவிடமிருந்து கீழே விழுந்த மேலுடையை எலிசா எடுத்துக்கொண்டு திரும்பிப்போய் யோர்தானின் கரையில் நின்றான். அதன்பின் அவனிடமிருந்து விழுந்த உடையை எடுத்து அதனால் தண்ணீரை அடித்தான். பின் அவன், “எலியாவின் இறைவனாகிய யெகோவா இப்போது எங்கே?” என்றான். அவன் தண்ணீரை அடித்தபோது அது வலது புறமாகவும், இடது புறமாகவும் பிரிந்துபோக, அவன் அதைக் கடந்து மறுபக்கம் போனான்.
எரிகோவில் அதைப் பார்த்துக்கொண்டிருந்த இறைவாக்கினரின் கூட்டம், “எலியாவின் ஆவி எலிசாவின்மேல் தங்கியிருக்கிறது” என்று சொன்னார்கள். அவர்கள் அவனைச் சந்திக்க எதிர்கொண்டுபோய் அவனுக்கு முன்பாக தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினார்கள். பின்பு அவர்கள், “உமது அடியவராகிய எங்களிடம் ஐம்பது பலமான மனிதர் இருக்கிறார்கள். அவர்கள் போய் உம்முடைய தலைவனைத் தேடட்டும். ஒருவேளை யெகோவாவின் ஆவியானவர் அவரை மேலே தூக்கிக்கொண்டுபோய் ஏதாவது ஒரு மலையிலோ, பள்ளத்தாக்கிலோ விட்டிருக்கக் கூடும்” என்றார்கள்.
அதற்கு எலிசா, “அப்படியல்ல நீங்கள் அவர்களை அனுப்பவேண்டாம்” என்றான்.
அவன் மறுத்தும் விடாமல் அவர்கள் அவனை வற்புறுத்தினார்கள். எனவே, “அவர்களை அனுப்புங்கள்” என்று எலிசா கூறினான். அவர்கள் ஐம்பது பேரை அனுப்பி மூன்று நாட்களாகத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்கவில்லை. எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் அவர்கள் திரும்பிவந்தபோது எலிசா அவர்களிடம், “போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா” என்று கேட்டான்.
எலிசாவின் இரண்டு அற்புதங்கள்
அந்தப் பட்டணத்து மனிதர் எலிசாவைப் பார்த்து, “ஆண்டவனாகிய நீர் காண்கிறபடி உண்மையாக இந்தப் பட்டணம் சிறந்த சூழலில் அமைந்துள்ளது. ஆனால் தண்ணீரோ பயன்படுத்த உகந்ததல்ல. அத்துடன் நிலமும் பலனற்றதாயிருக்கிறது” என்றார்கள்.
அப்பொழுது அவன், “என்னிடம் ஒரு புதிய பாத்திரத்தைக் கொண்டுவந்து அதில் சிறிது உப்புப் போடுங்கள்” என்றான். அப்படியே அதை அவர்கள் அவனிடம் கொண்டுவந்தார்கள்.
அவன் நீரூற்றண்டைக்குப் போய் அதற்குள்ளே உப்பை வீசி, “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இந்தத் தண்ணீரை சுத்தமாக்கியிருக்கிறேன். இனிமேல் இது மரணத்தை உண்டாக்கவோ, நிலத்தைப் பலனற்றதாக்கவோமாட்டாது’ என்கிறார்” என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படி அந்தத் தண்ணீர் இன்றுவரை தூய்மையாகவே இருக்கிறது.
எலிசாவை கேலி செய்தல்
அங்கிருந்து எலிசா பெத்தேலுக்குப் போனான். அவன் வீதி வழியாக நடந்து கொண்டிருக்கும்போது பட்டணத்திலிருந்து சில வாலிபர்கள் வந்து, “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத் தலையா ஏறிப்போ” என்று கூறி அவனைக் கேலி செய்தார்கள். அவன் திரும்பிப்பார்த்து, யெகோவாவின் பெயரால் அவர்களைச் சபித்தான். அப்போது இரண்டு கரடிகள் காட்டுக்குள்ளிருந்து வந்து அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது. அங்கிருந்து அவன் கர்மேல் மலைக்குப் போய், பின் சமாரியாவுக்குத் திரும்பிச்சென்றான்.
மோவாபிய யுத்தம்
யூதாவை அரசாண்ட யோசபாத் அரசனின் பதினெட்டாம் வருட ஆட்சியில் ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் சமாரியாவில் அரசனாகப் பதவியேற்றான். இவன் பன்னிரண்டு வருடங்கள் அரசாண்டான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தபோதும், தன் தாயும் தந்தையும் செய்ததுபோல் செய்யவில்லை. தன் தகப்பன் செய்துவைத்திருந்த பாகாலின் புனிதக் கல்லை அகற்றிப்போட்டான். அப்படியிருந்தும் நேபாத்தின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யத்தூண்டிய பாவங்களை விடாமல் பற்றிக்கொண்டிருந்தான். அவைகளிலிருந்து அவன் விலகவில்லை.
மோவாப்பின் அரசன் மேசா ஆடு வளர்ப்பவனாயிருந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஒரு இலட்சம் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு இலட்சம் செம்மறியாட்டுக் கடாக்களின் கம்பளியையும் வரியாகக் கொடுத்துவந்தான். ஆனால் ஆகாப் இறந்தபின் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராக மோவாப் அரசன் கலகம் பண்ணினான். அந்த நேரத்தில் யோராம் அரசன் சமாரியாவிலிருந்து புறப்பட்டு எல்லா இஸ்ரயேலரையும் போருக்குத் திரட்டினான். அத்துடன் அவன், “மோவாப் அரசன் எனக்கு எதிராகக் குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறான். ஆதலால் மோவாபுக்கு எதிராகப் யுத்தம் செய்ய என்னுடன் சேர்ந்து வருவாயா?” என்று யூதாவின் அரசனாகிய யோசபாத்துக்குச் செய்தி அனுப்பினான்.
அதற்கு அரசன், “நான் உன்னோடு வருவேன். நான் உன்னுடன் போக ஆயத்தமாயிருக்கிறேன். எனது குதிரைகள் உனது குதிரைகள், எனது மக்கள் உனது மக்கள்” என்று சொன்னான்.
மேலும், “நாம் எந்த வழியாகப்போய் தாக்கலாம்” என்று கேட்டான்.
அதற்கு யோராம், “ஏதோமின் பாலைவன வழியாகப் போகலாம்” என்றான்.
அப்பொழுது இஸ்ரயேல் அரசனும், யூதா அரசனும், ஏதோம் அரசனும் யுத்தத்திற்குப் புறப்பட்டார்கள். அணிவகுத்து ஏழு நாட்கள் சுற்றி பயணம் பண்ணிய படியால் அவர்களுடைய படைவீரருக்கும், அவர்களுக்கும், அவர்களுடனிருந்த மிருகங்களுக்கும் சிறிது தண்ணீர்கூட மீதியாயிருக்கவில்லை.
அப்போது இஸ்ரயேல் அரசன், “இது என்ன, யெகோவா மூன்று அரசர்களான எங்களை மோவாப் அரசனின் கையில் கொடுப்பதற்காகவோ இங்கு ஒன்றுசேர்ந்து வரப்பண்ணினார்” என்றான்.
ஆனால் யோசபாத்தோ, “யெகோவாவிடம் நாம் விசாரிக்கும்படியாக யெகோவாவின் இறைவாக்கினன் எவனும் இங்கு இல்லையா” என்று கேட்டான்.
அப்பொழுது இஸ்ரயேல் அரசனின் அதிகாரி ஒருவன் அவனிடம், “எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றி பணிசெய்த சாப்பாத்தின் மகன் எலிசா இங்கு இருக்கிறேன்” என்றான்.
அதற்கு யோசபாத், “யெகோவாவின் வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் அரசனும், யூதா அரசனும், ஏதோம் அரசனும் எலிசாவிடம் போனார்கள்.
எலிசா இஸ்ரயேல் அரசனிடம், “உமக்கும் எனக்கும் என்ன இருக்கிறது? உன் தாயின் இறைவாக்கினரிடமும், தகப்பனின் இறைவாக்கினரிடமுமே போ” என்றான்.
அதற்கு இஸ்ரயேல் அரசன், “இல்லை, யெகோவாவே எங்கள் மூவரையும் மோவாப்பின் கையில், ஒப்புக்கொடுப்பதற்கு அழைத்து வந்திருக்கிறார்” என்றான்.
அப்பொழுது எலிசா அவனிடம், “யூதாவின் அரசன் யோசபாத் இங்கு வந்திருப்பதினாலேயே நான் மரியாதை செலுத்துகிறேன். இல்லாவிட்டால், நான் பணிசெய்கிற சேனைகளின் யெகோவா இருப்பது நிச்சயமெனில் நான் உங்களைப் பார்க்கவுமாட்டேன், கவனிக்கவும் மாட்டேன் என்பதும் நிச்சயம். இப்பொழுது சுரமண்டலத்தை வாசிக்கத்தக்க ஒருவனைக் கூட்டி வாருங்கள்” என்றான்.
சுரமண்டலத்தை வாசிப்பவன் வாசிக்கும்போது யெகோவாவின் கை எலிசாவின்மேல் வந்தது. அவன், “யெகோவா சொல்வது இதுவே: பள்ளத்தாக்கு நிறைய குழிகளை வெட்டுங்கள். யெகோவா சொல்வது இதுவே: காற்றையாவது, மழையையாவது, நீங்கள் காணமாட்டீர்கள். என்றாலும் இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும் உங்கள் படைகளும், மிருகங்களும் தண்ணீர் குடிப்பீர்கள். யெகோவாவின் பார்வையில் இது மிகவும் எளிதான செயல். அவர் மோவாபையும், உங்கள் கையில் ஒப்படைப்பார். அரணிப்பான ஒவ்வொரு பட்டணத்தையும், ஒவ்வொரு பெரிய நகரத்தையும் மேற்கொள்வீர்கள். ஒவ்வொரு சிறந்த மரத்தையும் வெட்டுவீர்கள். நீரூற்றுக்கள் யாவற்றையும் மூடிவிடுவீர்கள். செழிப்பான எல்லா வயல்களையும் கற்களைப்போட்டுப் பாழாக்கி விடுவீர்கள் என்கிறார்” என்று சொன்னான்.
அடுத்தநாள் காலையில் பலிசெலுத்தும் நேரம் நெருங்கியபோது ஏதோமின் திசையிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. நாடு முழுவதும் நீரால் நிரம்பியது.
இந்த அரசர்கள் தங்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளார்கள் என்று மோவாபியர் கேள்விப்பட்டார்கள். அப்போது வாலிபரிலும் முதியோரிலும் ஆயுதம் பிடிக்கத்தக்க யாவரும் அழைக்கப்பட்டு மோவாப்பின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். காலையில் அவர்கள் எழும்பிப் பார்த்தபோது சூரியன் தண்ணீரில் மினுங்கிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது வழிமுழுவதும் தண்ணீர் இரத்தத்தைப்போல சிவப்பாக மோவாபியருக்குக் காணப்பட்டது. அப்பொழுது அவர்கள், “இது இரத்தமே. அந்த அரசர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றிருக்க வேண்டும். அதனால் இப்போது மோவாபியரே நாங்கள் போய் அவர்களை கொள்ளையிடுவோம்” என்றார்கள்.
ஆனால் மோவாபியர் இஸ்ரயேலருடைய முகாமுக்குப் போனபோது இஸ்ரயேலர் எழும்பி, அவர்கள் தப்பியோடும்வரை அவர்களுடன் போரிட்டார்கள். இஸ்ரயேலர் அந்த நாட்டைத் தாக்கி மோவாபியரை வெட்டிக்கொன்றனர். அவர்கள் நகரங்களைப் பாழாக்கி, செழிப்பான எல்லா வயல்களும் மூடப்படும்வரை ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லாக வயலில் எறிந்தான். எல்லா நீரூற்றுக்களையும் அடைத்தார்கள். எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினார்கள். கடைசியில் கிர்கரேசெத் மட்டும் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கவண் பிடித்திருந்த மனிதர் சூழ்ந்து தாக்கினார்கள்.
யுத்தம் தனக்கு எதிராக திரும்பியதை மோவாப் அரசன் கண்டபோது எழுநூறு வாள் படையினரைச் சேர்த்துக்கொண்டு, ஏதோம் அரசனின் படைகளைத் தாக்க முயன்றான். ஆனால் தோல்வியடைந்தான். அப்போது மோவாபின் அரசன் தனக்குப்பின் அரசனாக வரவேண்டிய தன் மூத்த மகனைக் கொண்டுபோய், நகரத்தின் மதில்மேல் பலியிட்டான். இச்செயல் இஸ்ரயேலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால் இஸ்ரயேல் படைகள் அவனைவிட்டுத் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினார்கள்.
விதவையின் எண்ணெய்
ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டத்திலுள்ள ஒருவனின் மனைவி எலிசாவை நோக்கி, “உமது அடியானான எனது கணவன் இறந்துவிட்டார். அவர் யெகோவாவிடத்தில் பயபக்தியாய் இருந்தார் என்பது உமக்குத் தெரியும். இப்போது அவருடைய கடன்காரன் என்னுடைய இரு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்குவதற்கு கூட்டிக்கொண்டுபோக வந்திருக்கிறான்” என்றாள்.
அப்பொழுது எலிசா அவளைப் பார்த்து, “நான் உனக்கு எப்படி உதவிசெய்யலாம்? வீட்டில் உன்னிடம் என்ன உண்டு? எனக்குச் சொல்” என்று கேட்டான்.
அதற்கு அவள், “ஒரு ஜாடி எண்ணெயைத் தவிர உமது அடியவளின் வீட்டில் வேறு ஒன்றுமே இல்லை” என்று கூறினாள்.
அப்பொழுது எலிசா, “நீ போய் உன் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடமிருந்தும் வெறும் ஜாடிகளைக் கேட்டு வாங்கு. அதிகளவு ஜாடிகளைக் கேட்டு வாங்கு. அதன்பின் நீயும் உன் மகன்களும் வீட்டின் உள்ளே போய், கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெயை எல்லா ஜாடிகளிலும் ஊற்றுங்கள். ஒவ்வொன்றும் நிரம்பியவுடன், ஒரு பக்கத்தில் அவற்றை எடுத்துவையுங்கள்” என்றான்.
அவள் அவனிடமிருந்து போய், மகன்களுடன் வீட்டினுள்ளே போய் கதவைப் பூட்டினாள். அவளுடைய மகன்கள் ஜாடிகளைக் கொடுக்கக் கொடுக்க அவள் எண்ணெயை ஊற்றிக்கொண்டேயிருந்தாள். எல்லா ஜாடிகளும் நிரம்பியபோது, அவள் தன் மகனைப் பார்த்து, “மற்றொரு ஜாடி கொண்டுவா” என்றாள்.
“இனிமேல் வேறு ஜாடி இல்லை” என்று அவன் கூறியபோது எண்ணெய் நின்றுவிட்டது.
அவள் போய் இறைவனுடைய மனிதனிடம் அதைக்கூறியபோது அவன் அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்திடு. நீயும் உன் மகன்களும் மீதியாயிருப்பதைக் கொண்டு வாழலாம்” என்றான்.
சூனேமியாளும் மகனும்
ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான். அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது. நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள்.
ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான். தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள். அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான்.
அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள்.
அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான்.
எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான்.
அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள்.
ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
அந்தப் பிள்ளை வளர்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கதிர் அறுக்கிறவர்களுடன் நின்றுகொண்டிருந்த தன் தகப்பனிடம் போனான். அந்நேரம் அவன் தன் தகப்பனிடம், “என் தலை! என் தலை வலிக்கிறது” என்று அழுதான்.
அவனுடைய தகப்பன் ஒரு வேலையாளிடம், “இவனை இவனுடைய தாயிடம் தூக்கிக்கொண்டு போ” என்றான். அந்த வேலைக்காரன் அப்பிள்ளையைத் தூக்கி அவனுடைய தாயிடம் கொண்டுபோனான். மத்தியானம்வரை தாய் அவனைத் தன் மடியில் வைத்திருந்தாள். மதிய நேரத்தில் அவன் இறந்துபோனான். அவள் மேலே போய் இறைவனுடைய மனிதனின் கட்டிலில் மகனைக் கிடத்திவிட்டு, கதவைப் பூட்டி வெளியே போனாள்.
அவள் தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து உம்முடைய வேலையாட்களில் ஒருவனையும், ஒரு கழுதையையும் அனுப்பும். நான் இறைவனுடைய மனிதனிடம் அவசரமாகப் போய்த் திரும்பி வரவேண்டும்” என்றாள்.
அப்பொழுது அவன், “ஏன் இன்று அவரிடம் போகிறாய்? இன்று ஓய்வுநாளல்ல; அமாவாசை நாளும் அல்ல” என்று கேட்டான்.
அதற்கு அவள், “அது பரவாயில்லை. நான் போகவேண்டியிருக்கிறது” என்று கூறினாள்.
கழுதையில் சேணம் கட்டி, வேலைக்காரனைப் பார்த்து, “விரைவாகப் போ, நான் சொன்னாலொழிய வேகத்தைக் குறைக்காதே” என்று சொன்னாள். அந்தப்படியே அவள் புறப்பட்டு கர்மேல் மலையில் இருந்த இறைவனுடைய மனிதனிடம் போனாள்.
இறைவனின் மனிதன் தூரத்திலே அவளைக் கண்டு தன் வேலைக்காரனான கேயாசியைப் பார்த்து, “பார்! அதோ சூனேமியாள். நீ அவளைச் சந்திக்கும்படியாக ஓடிப்போய் அவளிடம், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் கணவன் சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா?’ ” என்று கேள் என்றான்.
அவள், “நாங்கள் எல்லோரும் சுகமாயிருக்கிறோம்” என்று கூறினாள்.
அவள் மலையின்மேல் இருந்த இறைவனுடைய மனிதனிடம் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளை அப்பால் தள்ளிவிடுவதற்காக முன்பாக வந்தபோது இறைவனுடைய மனிதன் அவனைப் பார்த்து, “அவளை விடு, அவளுடைய ஆத்துமா வேதனையால் கசப்படைந்திருக்கிறது. ஆனால் யெகோவா அதை எனக்கு மறைத்ததோடு ஏன் என்றும் எனக்குச் சொல்லவில்லை” என்றான்.
அப்பொழுது அவள், “என் தலைவனே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்டேனா? எனக்கு அதிக எதிர்பார்ப்பைக் கொடுக்கவேண்டாமென்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றாள்.
எலிசா கேயாசியிடம்: “உன் மேலுடையைப் பட்டிக்குள் சொருகிக்கொண்டு என் தடியையும் எடுத்துக்கொண்டு ஓடு. யாரையாகிலும் நீ சந்தித்தால் அவனை வாழ்த்தாதே. யாராவது உன்னை வாழ்த்தினால் நீ மறுமொழி கொடுக்காதே. நீ ஓடிப்போய் பையனின் முகத்தின்மேல் என் தடியை வை” என்றான்.
ஆனால் அந்தப் பிள்ளையின் தாயோ எலிசாவைப் பார்த்து, “யெகோவா வாழ்கிறதும், நீர் வாழ்கிறதும் நிச்சயம்போலவே நான் உம்மை விட்டுப் போகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றாள். எனவே அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான்.
கேயாசி அவர்களுக்குமுன் போய், எலிசாவின் தடியைப் பையனின் முகத்தின்மேல் வைத்தான். ஆனால் எந்த விதமான சத்தமோ, பதிலோ வரவில்லை. அதனால் கேயாசி திரும்பிப்போய் எலிசாவைச் சந்தித்து, “பையன் கண்விழிக்கவில்லை” எனக் கூறினான்.
எலிசா வீட்டுக்கு வந்தபோது அவனுடைய கட்டிலின்மேல் அந்தப் பையன் இறந்து கிடந்தான். அவன் உள்ளே போய் இருவரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டி யெகோவாவை நோக்கி மன்றாடினான். அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது. எலிசா எழுந்து தன் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். அதன்பின் கட்டிலில் ஏறி பையனின்மேல் இன்னொருமுறை முன்போல படுத்தான். அப்பொழுது அந்தப் பையன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.
அப்பொழுது எலிசா கேயாசியை வரும்படி அழைத்து, “சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அவன் அப்படியே செய்தான். அவள் வந்தபோது எலிசா, “உன் மகனைக் கூட்டிக்கொண்டுபோ” என்றான். அவள் உள்ளே வந்து எலிசாவின் கால்களில் விழுந்து தரைமட்டும் பணிந்தாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.
கூழ் பானைக்குள் நஞ்சு
எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போனான், அப்போது அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டம் வந்து அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் தன் வேலையாளைப் பார்த்து, “அந்தப் பெரிய பானையை அடுப்பில் வைத்து இந்த மனிதருக்குக் கொஞ்சம் கூழ் காய்ச்சு” என்றான்.
அவர்களில் ஒருவன் வயல்வெளிக்கு மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காக போகையில், ஒரு காட்டுக் கொம்மட்டிக் கொடியைக் கண்டான். அதன் காய்களைப் பிடுங்கி தன் மடியை நிரப்பினான். அவன் திரும்பிவந்தபோது, அவை என்ன காய்கள் என்று ஒருவரும் அறியாதிருந்தும் அவைகளை வெட்டி கூழிருந்த பானைக்குள் போட்டான். அதன்பின் அவர்கள் கூழ் குடிப்பதற்காக எல்லோருக்கும் அதை ஊற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் அதைக் குடிக்கத் தொடங்கியவுடனேயே, “இறைவனுடைய மனுஷனே! பானைக்குள் சாவு இருக்கிறது” என்று பலமாகக் கத்தினார்கள். அதை அவர்களால் குடிக்க முடியவில்லை.
அப்பொழுது எலிசா அவர்களிடம், “சிறிது மாவைக் கொண்டுவாருங்கள்” என்றான். அதை அவன் அந்தப் பானைக்குள் போட்டு, “இப்பொழுது இதை இந்த மனிதருக்குப் பரிமாறுங்கள், அவர்கள் குடிக்கட்டும்” என்றான். அதன்பின் எந்த விதமான தீங்கும் பானைக்குள் இருக்கவில்லை.
நூறுபேருக்கு உணவளித்தல்
ஒரு மனிதன் பாகால் சாலீஷாவிலிருந்த இறைவனுடைய மனிதனுக்கு தன் விளைச்சலின் முதற்பலனிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், கொஞ்சம் புதிய தானியக் கதிர்களையும் சாக்குப்பையில் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா, “இதை இந்த மக்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான்.
அப்பொழுது அவனுடைய வேலையாள், “இதை நான் எப்படி நூறு பேருக்குப் பங்கிடுவேன்” என்று கேட்டான்.
ஆனால் எலிசா அதற்கு, “அதை இந்த மக்களுக்குச் சாப்பிடும்படி கொடு. ஏனென்றால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் சாப்பிட்டு கொஞ்சம் மீதமும் இருக்கும்’ என்கிறார்” என்றான். அப்படியே அவன் அதை அவர்களுக்குப் பரிமாறினான். யெகோவாவின் வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டு சில மீதியாயும் விடப்பட்டிருந்தன.
நாகமான் சுகமடைதல்
நாகமான் சீரிய அரசனின் படைத்தளபதியாய் இருந்தான். இவனைக் கொண்டு யெகோவா சீரியருக்கு வெற்றியைக் கொடுத்திருந்தபடியால், அவனுடைய எஜமானின் பார்வையில் இவன் மிகவும் மதிக்கப்பட்டவனாயும் முக்கியமானவனாயும் இருந்தான். இவன் பலம் வாய்ந்த ஒரு போர் வீரனாயிருந்தபோதும் குஷ்டரோகியாக இருந்தான்.
இந்த வேளையில் சீரியரின் படைப் பிரிவினர் இஸ்ரயேலிலிருந்து சிறைப்பிடித்து வந்த கைதிகளுக்குள் இருந்த ஒரு சிறு பெண், நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் எஜமானியைப் பார்த்து, “எனது எஜமான் சமாரியாவிலிருக்கிற இறைவாக்கினனிடம் போவாராகில் அவர் இந்தக் குஷ்டரோகத்தைச் சுகப்படுத்திவிடுவார்” என்றாள்.
இஸ்ரயேல் நாட்டிலிருந்து வந்த பெண் கூறியதை நாகமான் தன் அரசனிடம் கூறினான். சீரிய அரசன் அதற்குப் பதிலாக, “நீ போவது நல்லது. நான் இஸ்ரயேல் அரசனுக்கு ஒரு கடிதமும் தருவேன்” என்று கூறினான். எனவே நாகமான் பத்து தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் தங்கத்தையும் பத்து ஜோடி அலங்கார உடைகளையும் எடுத்துக்கொண்டு போனான். அவன் இஸ்ரயேல் அரசனிடம் கொண்டுசென்ற கடிதத்திலே, “எனது அடியவனாகிய நாகமானுடைய குஷ்டரோகத்தை நீர் சுகப்படுத்தும்படியாக இந்தக் கடிதத்துடன் அவனை உம்மிடம் அனுப்புகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
இஸ்ரயேல் அரசன் அக்கடிதத்தை வாசித்தபோது, தன் உடைகளைக் கிழித்து, “கொல்லவும், உயிர்பிக்கவும் நான் என்ன இறைவனா? இவன் ஏன் ஒருவனை என்னிடம் அனுப்பி, அவனுடைய குஷ்டரோகத்தைச் சுகப்படுத்தும்படி கேட்கிறான். என்னுடன் ஒரு சண்டையைத் தொடங்குவதற்கு எப்படி முயற்சி செய்கிறான் என்பதைக் கவனித்துப் பாருங்கள்” என்றான்.
இஸ்ரயேல் அரசன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான் என்று எலிசா கேள்விப்பட்டான். அப்போது அவன், “நீர் ஏன் உம்முடைய உடைகளைக் கிழித்தீர்? அவன் என்னிடம் வரட்டும். அப்பொழுது இஸ்ரயேலில் ஒரு இறைவாக்கினன் இருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொள்வான்” என்று ஒரு செய்தியை இஸ்ரயேல் அரசனுக்கு அனுப்பினான். அப்படியே நாகமான் தன்னுடன் வந்த மனிதருடனும், குதிரைகள், தேர்களுடனும் எலிசாவின் வீட்டு வாசலுக்குப் போனான். எலிசா ஒரு தூதுவனை அனுப்பி அவனிடம், “நீர் போய் யோர்தானில் ஏழுமுறை குளியும். அப்போது உமது சரீரம் திரும்பவும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்லச் சொன்னான்.
ஆனால் நாகமானோ கடும் கோபம் கொண்டு, “அவர் என்னிடத்தில் வந்து, அவருடைய இறைவனாகிய யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டு தன் கையை வைத்து என் குஷ்டத்தைச் சுகப்படுத்துவார் என்றல்லவா நான் நினைத்திருந்தேன். இஸ்ரயேலிலுள்ள எல்லா ஆறுகளைக்காட்டிலும், தமஸ்குவிலுள்ள ஆப்னா, பர்பார் ஆகிய ஆறுகள் சிறந்தவையல்லவா? அவைகளில் நான் கழுவி சுத்தமாக மாட்டேனா” என்று கூறி கோபத்துடன் திரும்பிப்போனான்.
ஆனால் அவனுடைய வேலையாட்கள் அவனிடம் போய், “என் தகப்பனே, அந்த இறைவாக்கினன் ஒரு பெரிய செயலைச் செய்யும்படி உம்மிடம் கூறியிருந்தால் அதைச் செய்திருக்க மாட்டீரோ? அப்படியானால் இப்போது, ‘கழுவிச் சுத்தமாகும்’ என்று சொல்லும்போது இன்னும் கூடுதலாக நீர் கீழ்ப்படிய வேண்டுமே” என்றார்கள். அப்பொழுது நாகமான் இறைவனுடைய மனிதன் தனக்குக் கூறியபடியே போய் யோர்தானில் ஏழுமுறை முழுகினான். அவனுடைய சதை புதுப்பிக்கப்பட்டு சுத்தமாகி ஒரு சிறுபிள்ளையின் சதையைப் போலாயிற்று.
அதன்பின் நாகமானும் அவனுடைய எல்லா ஏவலாட்களும் இறைவனின் மனிதனிடம் திரும்பிப் போனார்கள். நாகமான் அவனுக்கு முன்னால் நின்று, “இஸ்ரயேலைத் தவிர உலகில் வேறெங்கேயாகிலும் இறைவன் இல்லை என்று இப்போது நான் அறிந்தேன். தயவுசெய்து உமது அடியவனிடமிருந்து சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
ஆனால் எலிசாவோ, “நான் பணிசெய்கிற யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் ஒன்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். நாகமான் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி எவ்வளவோ அவனை வற்புறுத்தியும் அவன் மறுத்துவிட்டான்.
அப்பொழுது நாகமான் எலிசாவைப் பார்த்து, “இவற்றை நீர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுசெய்து இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கக்கூடிய அளவு மண்ணை அடியேனுக்குத் தாரும். உமது அடியவனாகிய நான் இனிமேல் யெகோவாவைத்தவிர வேறு எந்தத் தெய்வங்களுக்கும் தகன காணிக்கைகளையோ, வேறு பலிகளையோ ஒருபோதும் செலுத்தமாட்டேன். ஆனாலும் இந்த ஒன்றைமட்டும் யெகோவா உமது அடியவனுக்கு மன்னிப்பாராக. என்னவென்றால், எனது எஜமானாகிய அரசன் ரிம்மோன் கோவிலில் வணங்கச் செல்லும்போது என் கையிலேயே சாய்ந்துகொண்டு செல்வார். அந்த வேளையில் நானும் அவருடன் தலைகுனிவேன். அதை யெகோவா எனக்கு மன்னிப்பாராக” என்றான்.
அதற்கு எலிசா, “சரி சமாதானத்தோடே போ” என்றான்.
நாகமான் சிறிது தூரம் போனதும் இறைவனுடைய மனிதனான எலிசாவின் வேலையாள் கேயாசி, “எனது எஜமான் இந்த சீரியனான நாகமான் கொண்டுவந்தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அவனிடத்தில் அதிக தயவாக இருந்துவிட்டார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் அவனுக்குப் பின்னாலே ஓடி அவனிடமிருந்து ஏதாவது ஒரு பொருளைக் கேட்டுவாங்குவேன்” என்று தனக்குள்ளே யோசித்தான்.
அவ்வாறே நாகமானை அவசரமாய்ப் பின்தொடர்ந்தான். இவன் தன்னை நோக்கி ஓடிவருவதை நாகமான் கண்டு அவனைச் சந்திப்பதற்கு தேரிலிருந்து இறங்கி, கேயாசியிடம் “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டான்.
அதற்குக் கேயாசி, “எல்லாம் சரியாக இருக்கிறது. எப்பிராயீம் மலைநாட்டிலிருக்கும் இறைவாக்கினர் கூட்டத்திலிருந்து இரண்டு வாலிபர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தாலந்து5:22 அதாவது, சுமார் 34 கிலோகிராம் வெள்ளி வெள்ளியையும், இரண்டு அங்கிகளையும் தயவுசெய்து தாரும் என்று எனது எஜமான் உம்மிடம் கேட்டுவரும்படி அனுப்பினார்” என்றான்.
அப்பொழுது நாகமான் நீர் இரண்டு தாலந்து வெள்ளியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்று கேயாசியை வற்புறுத்தி அவற்றை இரண்டு பைகளில் கட்டி, அத்துடன் இரண்டு அங்கிகளையும் சேர்த்து இரண்டு வேலையாட்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் கேயாசிக்கு முன்னாகத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். கேயாசி மலையருகே வந்தபோது வேலையாட்களிடமிருந்து அந்தப் பொருட்களை வாங்கி வீட்டின் ஒரு ஓரமாக வைத்தான். அதன்பின்பு நாகமானின் வேலையாட்களை அனுப்பிவிட்டான்.
பின் அவன் உள்ளே போய் தன் எஜமானாகிய எலிசாவின் முன் நின்றான். எலிசா அவனிடம், “கேயாசியே இவ்வளவு நேரமும் எங்கேயிருந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “உமது அடியவனாகிய நான் எங்குமே போகவில்லை” என்று பதிலளித்தான்.
ஆனால் எலிசா அவனிடம், “அந்த மனிதர் உன்னைச் சந்திக்கத் தேரைவிட்டு இறங்கியபோது என்னுடைய ஆவியில் நான் உன்னோடுகூட இருக்கவில்லையா? பணம், அங்கிகள், ஒலிவத்தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், செம்மறியாட்டு மந்தைகள், மாட்டு மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள இதுதானா சமயம்? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததிகளையும் எக்காலமும் பற்றிப் பிடித்துக்கொள்ளும்” என்றான். அப்பொழுது கேயாசி உறைபனியின் வெண்மையைப்போல் குஷ்டரோகி ஆனான். அவன் எலிசாவின் முன்னிலையிலிருந்து விலகிச்சென்றான்.
தொலைந்த கோடரி மிதத்தல்
இறைவாக்கினர் கூட்டம் எலிசாவிடம், “பாரும், உம்மோடுகூட நாங்கள் குடியிருக்கும் இந்த இடம் மிகவும் சிறியதாய் இருக்கிறது. நாங்கள் யோர்தானுக்குப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரங்களை வெட்டி, குடியிருப்பதற்கு ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவோம்” என்றார்கள்.
அப்பொழுது எலிசா, “போங்கள்” என்றான்.
அவர்களில் ஒருவன் எலிசாவிடம், “உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?” என்று கேட்டான்.
எலிசா அதற்கு, “நான் வருவேன்” என்று கூறினான். அவன் அவர்களுடன் கூடப்போனான்.
அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அவனின் இரும்புக் கோடரி, பிடி கழன்று தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அவன், “ஐயா, என் தலைவனே! அது இரவலாக வாங்கப்பட்டதே” என்றான்.
அதற்கு இறைவனுடைய மனிதன், “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான். “அதை வெளியே எடு” என்று எலிசா கூற அவன் தன் கையை நீட்டி அதை எடுத்தான்.
சீரிய யுத்தங்கள்
இந்த நாட்களில் சீரிய அரசன் இஸ்ரயேலுடன் யுத்தம் செய்தான். அவன் தன் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, “நான் இந்தந்த இடங்களில் எனது படை முகாம்களை அமைப்பேன்” என்று சொன்னான்.
ஆனால் இறைவனுடைய மனிதனாகிய எலிசாவோ இஸ்ரயேல் அரசனுக்குச் செய்தி அனுப்பி, “நீர் இந்த இடங்களைக் கடக்கும்போது கவனமாயிரும். ஏனென்றால் சீரியர் இவ்விடத்துக்கு வரப்போகிறார்கள்” என்றான். அதன்படி இஸ்ரயேல் அரசன் இறைவனின் மனிதன் குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்களை அனுப்பி உளவு பார்த்தான். எலிசா பலமுறை அரசனை எச்சரித்துக்கொண்டே வந்தான். அரசனும் அந்தந்த இடங்களில் விழிப்பாக இருந்தான்.
இது சீரிய அரசனுக்குக் கோபமூட்டியது. அவன் தன் அதிகாரிகளை வரவழைத்து, “உங்களில் எவன் இஸ்ரயேல் அரசனுக்கு சார்பானவன் என்று எனக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டான்.
அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன், “அரசனாகிய என் தலைவனே, அப்படியாக எங்களில் ஒருவரும் இல்லை. இஸ்ரயேலில் உள்ள இறைவாக்கினன் எலிசா தான் நீர் உமது படுக்கையறையில் பேசும் வார்த்தைகளைக்கூட இஸ்ரயேலின் அரசனுக்கு வெளிப்படுத்துகிறான்” என்றான்.
அதற்கு அரசன், “நான் ஆட்களை அனுப்பி அவனைப் பிடிப்பதற்காக அவன் எங்கேயிருக்கிறான் என்று போய்ப் பாருங்கள்” என்று கட்டளையிட்டான். அப்பொழுது எலிசா தோத்தானில் இருப்பதாகச் செய்தி கொண்டுவரப்பட்டது. அரசன் அந்த இடத்துக்குக் குதிரைகளையும், தேர்களையும், ஒரு பலத்த இராணுவத்தையும் அனுப்பினான். இவர்கள் இரவில் வந்து பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
அடுத்தநாள் இறைவனுடைய மனிதனின் வேலையாள், அதிகாலையில் எழும்பி வெளியே போனபோது, பட்டணம் குதிரைகளும் தேர்களும் கொண்ட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். உடனே அந்த வேலையாள், “ஆ, என் எஜமானே! நாங்கள் என்ன செய்வோம்?” என்றான்.
அதற்கு இறைவாக்கினன், “பயப்படாதே. அவர்களுடைய பக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும், நம்முடைய பக்கத்தில் இருப்பவர்கள் அநேகர்” என்றான்.
அத்துடன் எலிசா, “யெகோவாவே, இவன் பார்க்கத்தக்கதாக இவனுடைய கண்களைத் திறந்துவிடும்” என்று மன்றாடினான். அப்பொழுது யெகோவா அந்த வேலையாளின் கண்களைத் திறந்தார், அவன் பார்த்தான். மலைகளை மூடத்தக்கதான அநேக நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்திருப்பதை அவன் கண்டான்.
பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார்.
எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான்.
அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான். அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
சமாரியாவில் பஞ்சம்
சில நாட்களுக்குப்பின்பு சீரிய அரசனான பெனாதாத் தன் முழுப் படைகளையும் திரட்டி அணிவகுத்துச்சென்று சமாரியாவை முற்றுகையிட்டான். அப்போது சமாரியாவில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. முற்றுகை நெடுநாட்களுக்கு நீடித்தபடியால், ஒரு கழுதையின் தலை எண்பது சேக்கல் வெள்ளிக்கும் காற்படி புறாத்தீனி ஐந்து சேக்கல் வெள்ளிக்கும் விற்கப்பட்டது.
இஸ்ரயேல் அரசன் ஒரு நாள் நகரத்தின் மதில்மேல் நடந்து போகும்போது ஒரு பெண் அவனைப் பார்த்து, “என் தலைவனாகிய அரசனே, எனக்கு உதவிசெய்யும்” என்று சத்தமிட்டுக் கெஞ்சினாள்.
அரசன் அதற்குப் பதிலாக, “யெகோவா உனக்கு உதவிசெய்யாவிட்டால் நான் எங்கேயிருந்து உனக்கு உதவிசெய்ய முடியும்? சூடடிக்கும் களத்திலிருந்தா அல்லது திராட்சை ஆலையிலிருந்தா?” என்று கேட்டான். பின்பும் அரசன் அவளைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று கேட்டான்.
அதற்கு அவள் பதிலாக, “என்னோடிருக்கும் இப்பெண் என்னிடம், ‘இன்றைக்கு சாப்பிடும்படி உன் மகனைத் தா, நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம்’ என்று கூறினாள். அப்படியே நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். அடுத்தநாள் நான் அவளிடம், ‘நாங்கள் சாப்பிடும்படி உன் மகனைத் தா’ என்று கேட்டேன். ஆனால் அவள் அவனை ஒளித்துவிட்டாள்” என்று முறையிட்டாள்.
அந்தப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அரசன் தன் மேலங்கியைக் கிழித்தான். அவன் மதிலுக்கு மேலாக நடந்து கொண்டுபோகும்போது அவனுடைய உள் உடை துக்கவுடையாய் இருப்பதை மக்கள் யாவரும் கண்டனர். அப்பொழுது அரசன், “இன்று சாப்பாத்தின் மகன் எலிசாவின் தலையை நான் வெட்டாவிட்டால், இறைவன் என்னை எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்” என்றான்.
அந்த வேளையில் எலிசா தன் வீட்டுக்குள் தன்னைச் சந்திக்க வந்த முதியோர்களோடு உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அரசன் ஒரு தூதுவனை தனக்கு முன்னே போகும்படி அனுப்பியிருந்தான். ஆனால் அவன் அங்கு போய்ச்சேரும் முன்பே எலிசா முதியோரைப் பார்த்து, “இக்கொலைகாரன் என் தலையை வெட்டுவதற்கு ஒருவனை அனுப்புகிறதை நீங்கள் காணவில்லையா? பாருங்கள் இந்தத் தூதுவன் வரும்போது, அவன் வரும்முன் கதவைப் பூட்டிக்கொண்டு நில்லுங்கள். பின்னாலே கேட்பது அவனுடைய எஜமானின் காலடிச் சத்தமல்லவா” என்றான். இவ்வாறு எலிசா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தத் தூதுவன் அங்கு வந்தான்.
அப்போது அரசன், “இந்தப் பேராபத்து யெகோவாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. ஆகையால் இன்னும் நான் ஏன் யெகோவாவுக்குக் காத்திருக்கவேண்டும்” என்றான்.
எலிசா அவனைப் பார்த்து, “யெகோவாவின் வார்த்தையைக் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: நாளைக்கு இதே நேரத்திலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் சமாரியாவின் வாசலில் குறைந்த விலைக்குத் தாராளமாகக் கிடைக்கும் என்கிறார்” என்றான்.
அப்பொழுது அரசனைத் தன் கையில் தாங்கிக்கொண்டிருந்த அதிகாரி எலிசாவிடம், “யெகோவா வானத்தின் மதகுகளைத் திறந்தாலும் இது நடக்கக்கூடிய செயலா?” என்று கேட்டான்.
எலிசா அதற்குப் பதிலாக, “நீ உன் கண்களினாலே அதைக் காண்பாய். ஆனால், அதில் எதையும் சாப்பிடமாட்டாய்” என்று கூறினான்.
சீரியப் படைகள் வெளியேறுதல்
அந்த வேளையில் நகரத்தின் நுழைவாசலில் நான்கு குஷ்டரோகிகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணம்வரை ஏன் இங்கேயே இருக்கவேண்டும். நாங்கள் நகரத்துக்குள் போனாலும் அங்கும் பஞ்சம் இருப்பதால் அங்கேயும் சாவோம். இங்கேயிருந்தாலும் நாம் இறப்போம். ஆகவே நாம் சீரியருடைய முகாமுக்குப்போய் சரணடைவோம். அவர்கள் நம்மைத் தப்பவிட்டால் நாம் வாழ்வோம். நம்மைக் கொல்வார்களானால் நாம் சாவோம்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அப்படியே அன்று மாலை பொழுது மறையும் நேரத்தில் எழுந்து, சீரியருடைய முகாமை நோக்கிப் போனார்கள். அவர்கள் முகாமின் எல்லையை நெருங்கியபோது ஒரு மனிதனும் அங்கு இருக்கவில்லை. ஏனென்றால் முகாமிலிருந்த சீரிய இராணுவத்தினருக்கு, யெகோவா குதிரைகள், தேர்களின் சத்தத்தையும், ஒரு பெரிய இராணுவத்தின் சத்தத்தையும் கேட்கப்பண்ணினார். அதனால் சீரிய இராணுவத்தினர் ஒருவரையொருவர் பார்த்து, “கேளுங்கள், இஸ்ரயேல் அரசன் எங்களைத் தாக்குவதற்கு எங்களுக்கு எதிராக ஏத்தியரையும், எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்தியிருக்கிறான்” என்றார்கள். எனவே பொழுது மறையும் நேரத்தில் தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், அப்படியே விட்டுவிட்டு தங்கள் உயிர்களைக் காப்பாற்ற முகாம்களைவிட்டு ஓடிவிட்டார்கள்.
குஷ்டரோகிகள் முகாமின் எல்லைக்கு வந்துசேர்ந்து ஒரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கே சாப்பிட்டுக் குடித்து அங்கிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், உடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். பின் திரும்பிவந்து வேறொரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கிருந்தும் சில பொருட்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றையும் ஒளித்துவைத்தார்கள்.
அதன்பின்பு ஒருவரையொருவர் நோக்கி, “நாம் செய்வது பிழை. இது ஒரு நல்ல செய்திக்குரிய நாளாயிருந்தும், இதை நாம் நமக்குள்ளேயே வைத்திருக்கிறோமே. பொழுது விடியும்வரை காத்திருந்தால் நிச்சயம் தண்டனை நம்மேல் வரும். நாம் உடனேயே போய் இந்தச் செய்தியை அரண்மனைக்கு அறிவிப்போம்” என்று பேசிக்கொண்டார்கள்.
அவ்வாறே அவர்கள் போய் நகர வாசல் காவலாளரைக் கூப்பிட்டு, “நாங்கள் சீரியருடைய முகாமுக்குப் போயிருந்தோம். அங்கு ஒருவரும் இல்லை. ஒரு மனித சத்தமும் கேட்கப்படவுமில்லை. குதிரைகளும், கழுதைகளும் கட்டப்பட்டபடியே இருந்தன. கூடாரங்களும் இருந்தபடியே விடப்பட்டிருந்தன” என்றார்கள். இதைக் கேட்ட வாசல் காவலாளர்கள் இச்செய்தியை அரண்மனையில் உள்ளோரிடம் அறிவித்தார்கள்.
இரவிலே அரசன் எழுந்து தன் அதிகாரிகளிடம், “சீரியர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் பட்டினியாக இருப்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் முகாமைவிட்டு, பதுங்கித் தாக்குவதற்காக வெளியே சென்றிருக்க வேண்டும். மேலும், ‘இஸ்ரயேலர் நகரத்துக்கு வெளியே நிச்சயமாய் வருவார்கள். அப்போது அவர்களை உயிரோடு பிடித்து, நகரத்துக்குள்ளே போவோம்’ என்றும் நினைத்திருப்பார்கள்” என்று கூறினான்.
அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன் அதற்குப் பதிலாக, “நகரத்தில் மீதியாயுள்ள ஐந்து குதிரைகளையும் சிலர் எடுத்துக்கொண்டு அங்கே போகட்டும். அவர்கள் இறந்தாலும் என்ன? இங்கிருந்து மீந்திருக்கும் இஸ்ரயேலருக்கு நடப்பது தான் அவர்களுக்கும் நடக்கும். ஆகவே என்ன நடந்ததென்பதை அறிந்துவரும்படி நாம் அவர்களை அனுப்புவோம்” என்றான்.
அவ்வாறே அவர்கள் இரண்டு தேர்களையும், குதிரைகளையும் தெரிந்தெடுத்தார்கள். அரசன் தேரோட்டிகளிடம், “நீங்கள் போய் என்ன நடந்தது என்று பார்த்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்களைச் சீரிய இராணுவத்தைப் பின்தொடரும்படி அனுப்பினான். அவர்கள் யோர்தான்வரை பின்தொடர்ந்து சென்றார்கள். சீரியர் பயந்து தலைதெறிக்க ஓடியபோது, அவர்களுடைய உடைகளும், மற்றும் ஆயுதங்களும், வழியெல்லாம் வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டார்கள். அதைத் தூதுவர்கள் திரும்பிவந்து அரசனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது மக்கள் போய் சீரியரின் முகாமைக் கொள்ளையிட்டார்கள். அதனால் யெகோவா வாக்களித்தபடியே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
அரசன் தன்னை தன் கைகளில் தாங்கிக்கொண்டுவந்த அதிகாரியை நகர வாசலுக்குப் பொறுப்பாக வைத்தான். உணவுக்காக ஓடிய மக்கள் கூட்டம் வாசலில் இருந்த அந்த அதிகாரியை மிதித்ததினால் அவன் இறந்துபோனான். அரசன் இறைவாக்கு உரைப்போனின் வீட்டுக்கு வந்தபோது அவன் முன்னுரைத்தபடியே நடந்தது. அத்துடன், சமாரியாவின் வாசலில் நாளைக்கு இதே நேரத்தில் ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்றும் அந்த இறைவாக்கினன் சொன்னபடியேயும் நடந்தது.
அப்பொழுது அந்த அதிகாரி இறைவனுடைய மனிதனிடம்: “யெகோவா வானத்தில் மதகுகளை உண்டாக்கினாலும் இது உண்மையாக நடக்குமோ?” என்று எதிர்த்துக் கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “நீ உன் கண்களினால் அதைப் பார்ப்பாய். ஆனால் அதில் ஒன்றையாகிலும் சாப்பிடமாட்டாய்” என்று சொல்லியிருந்தான். உண்மையில் இறைவாக்கினன் சொன்னபடியே அவனுக்கும் நடந்தது. மக்கள் அவனை வாசலில் மிதித்தபடியினால் அவன் இறந்தான்.
சூனேமியாள் திரும்ப வருதல்
எலிசா தான் உயிரோடு எழுப்பின பையனின் தாயிடம், “நீ உன் குடும்பத்தோடு இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வாழக்கூடிய வேரிடத்தில் போய்த் தங்கியிரு. யெகோவா இஸ்ரயேல் நாட்டில் ஒரு பஞ்சத்தை வரச்செய்வார். அது ஏழு வருடங்களுக்கு நீடித்திருக்கும்” என்று சொல்லியிருந்தான். இறைவனுடைய மனிதன் கூறியபடியே செய்ய அவள் ஆயத்தப்பட்டாள். அவளும், அவளுடைய குடும்பமும், பெலிஸ்தியருடைய நாட்டுக்குப் போய் அங்கே ஏழு வருடங்கள் தங்கியிருந்தார்கள்.
குறிப்பிட்ட அந்த ஏழு வருடங்கள் முடிந்தபின் பெலிஸ்தியருடைய நாட்டிலிருந்து அவள் திரும்பிவந்து தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்காக அரசனுடன் முறையிடும்படிச் சென்றாள். இந்த நேரத்தில் அரசன் இறைவனின் மனிதனுடைய வேலைக்காரனான கேயாசியிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் கேயாசியைப் பார்த்து, “எலிசா செய்த எல்லா மகிமையான காரியங்களையும் எனக்குச் சொல்லு” என்று கேட்டான். அப்பொழுது கேயாசி, இறந்த பையனை எலிசா எப்படி திரும்பவும் உயிர்ப்பித்தார் என்பதைக் கூறிக்கொண்டிருந்த அதேவேளையில், இறந்த பையனின் தாயே தன் வீட்டையும், நிலத்தையும் மீட்டுக்கொள்வதற்கு முறையிடும்படி வந்தாள்.
அப்பொழுது கேயாசி, “என் தலைவனாகிய அரசனே, இவள் தான் நான் சொன்ன பெண். இவளுடைய மகனைத்தான் எலிசா உயிர்ப்பித்தான்” என்றான். அரசன் அதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்க அவள் தன் கதையைக் கூறினாள்.
அப்பொழுது அரசன் தன் அதிகாரிகளில் ஒருவனிடம், “இவள் இந்த நாட்டைவிட்டுச் சென்றநாளிலிருந்து, இன்றுவரை அவளுடைய விளைநிலத்தின் வருமானம் உட்பட, அவளுடைய உடைமைகள் யாவற்றையும் திரும்பக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.
எலிசாவும் ஆசகேலும்
எலிசா தமஸ்குவுக்குப் போனான். அங்கு சீரிய அரசன் பெனாதாத் வியாதியாயிருந்தான். “இறைவனுடைய மனிதன் இவ்வளவு தூரத்துக்குத் தம்மிடம் வந்திருக்கிறார்” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அரசன், ஆசகேலை8:8 இவர் அரச அதிகாரிகளில் ஒருவராய் இருக்கவேண்டும். அழைத்து, “நீ ஒரு அன்பளிப்பை எடுத்துக்கொண்டு, இறைவனுடைய மனிதனைச் சந்திக்கப் போ. அவன்மூலம் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டு என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமடைவேனா என்று அறிந்து வா” என்றான்.
அப்படியே ஆசகேல் நாற்பது ஒட்டகங்கள் சுமக்கும் பொதிகளில், தமஸ்குவில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த பொருட்களை அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு எலிசாவைச் சந்திக்கப் போனான். அவன் எலிசாவுக்கு முன்னால் போய் நின்று, “சீரிய அரசனான உம்முடைய மகன் பெனாதாத், ‘வியாதியிலிருந்து நான் சுகமாவேனா?’ என்று உம்மிடம் கேட்கும்படி என்னை அனுப்பினான்” என்றான்.
அதற்கு எலிசா, “நீ நிச்சயமாகச் சுகமாவாய் என்று அவனிடம் போய்ச் சொல். ஆனால் அவன் கட்டாயம் இறப்பான் என்றே யெகோவா எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று கூறினான். அதன்பின் எலிசா ஆசகேலை கண் இமைக்காமல் அவன் வெட்கமடையும்வரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு இறைவனின் மனிதன் அழத்தொடங்கினான்.
அப்போது ஆசகேல், “என் தலைவனே, நீர் ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “இஸ்ரயேலருக்கு நீ செய்யப்போகும் எல்லாத் தீமைகளையும் நான் அறிவேன். அவர்களுடைய அரணான இடங்களை அழித்துவிடுவாய். அவர்களுடைய வாலிபரை வாளால் கொலைசெய்வாய். அவர்களுடைய குழந்தைகளை நிலத்தில் மோதியடிப்பாய். அவர்களுடைய கர்ப்பிணிகளைக் கிழித்து அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.
அதற்கு ஆசகேல், “நாயைப்போன்ற உமது அடியவன் இப்படியான ஒரு பெரிய காரியத்தைச் சாதிப்பது எப்படி?” என்று கேட்டான்.
அதற்கு எலிசா, “நீ சீரிய நாட்டுக்கு அரசனாவாய் என்று யெகோவா எனக்குக் காண்பித்தார்” என்றான்.
ஆசகேல் எலிசாவிடமிருந்து மீண்டும் தன் எஜமானிடம் போனான். அப்போது பெனாதாத் அவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னான்?” என்று கேட்டான். அதற்கு ஆசகேல் பதிலாக, “நீர் நிச்சயமாகச் சுகமாவீர் என்று சொன்னான்” என்றான். ஆனால் அடுத்தநாள் ஆசகேல் ஒரு தடித்த துண்டை எடுத்து தண்ணீரில் நனைத்து அரசனுடைய முகத்தில் போட்டதினால் அவன் இறந்துபோனான். ஆசகேல் அவனுக்குப்பின் அரசனானான்.
யூதாவில் யெகோராமின் ஆட்சி
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலை அரசாண்ட ஐந்தாம் வருடத்தில் யெகோராம் யூதாவுக்கு அரசனானான். அவன் யோசபாத்தின் மகன். அவன் அரசனானபோது முப்பத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இருந்தாலும், யெகோவா தமது அடியவனாகிய தாவீதுக்காக யூதாவை அழிக்க விரும்பவில்லை. தமது சமுகத்தில் எப்பொழுதும் தாவீதுக்கும், அவன் குடும்பத்திற்கும் குலவிளக்கை அரசாட்சியில் என்றென்றைக்கும் வைத்திருப்பேன் என்று அவனுக்கு வாக்குப்பண்ணியிருந்தார்.
யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர். அதனால் யோராம் தன் எல்லா தேர்களோடும் சாயீருக்குப் போனான். ஆனால் ஏதோமியர் அவனையும், அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்து, அவர்களிடமிருந்து தப்பி ஓடினான். அவனுடைய இராணுவவீரரோ தங்கள் வீடுகளுக்கு ஓடிவிட்டனர். இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் லிப்னாவும் கலகம் செய்தது.
யோராமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய எல்லாச் செயல்களும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் யோராம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான அகசியா அவனுடைய இடத்தில் அரசனானான்.
யூதாவின் அரசன் அகசியா
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தில், யூதாவில் யெகோராமின் மகன் அகசியா தன் ஆட்சியைத் தொடங்கினான். அகசியா அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். இஸ்ரயேலின் அரசன் உம்ரியின் பேத்தியான அத்தாலியாள் என்பவளே இவனது தாய். இவன் ஆகாப் வீட்டாரின் வழியில் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஆகாபின் வீட்டாரோடு திருமணத்தின்மூலம் சம்பந்தம் கலந்ததால், அவன் ஆகாபின் வீட்டாரைப்போலவே நடந்தான்.
அகசியா ஆகாபின் மகனான யோராமுடன் சேர்ந்து ராமோத் கீலேயாத்தில் சீரிய அரசன் ஆசகேலுடன் யுத்தம் செய்வதற்காகப் போனான். ஆனால் சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில்8:29 ராமோத்தில் என்பது எபிரெயத்தில் ராமாவின் மறுபெயர் செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, யோராம் அரசன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான்.
அப்பொழுது ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்ததால், யூதாவின் அரசனான யெகோராமின் மகன் அகசியா, அவனைப் பார்ப்பதற்கு யெஸ்ரயேலுக்குப் போனான்.
யெகூவின் வரலாறு
இறைவாக்கினனான எலிசா இறைவாக்கினர் கூட்டத்தில் ஒருவனைக் கூப்பிட்டு, “உனது மேலங்கியை இடைப்பட்டிக்குள் சொருகிக்கொண்டு, இந்த எண்ணெய் குப்பியையும் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ. நீ அங்கே போய்ச்சேர்ந்ததும், நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூவை தேடு. அவனைக் கண்டதும் அவனுடைய தோழர்களிடமிருந்து அவனை எழுந்து வரும்படி கூறி, வீட்டின் உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டுபோ. அதன்பின் எண்ணெய் இருக்கும் குடுவையை எடுத்து அதை அவன் தலையின்மேல் ஊற்றி, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னை இஸ்ரயேலின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன்’ என்று அறிவித்து, பின்பு கதவைத் திறந்து தப்பியோடு, தாமதியாதே” என்று கூறினான்.
அப்படியே அந்த வாலிபனான இறைவாக்கினன் ராமோத் கீலேயாத்துக்குப் போனான். அவன் போய்ச் சேர்ந்தபோது இராணுவ உயர் அதிகாரிகள் ஒருமித்து இருந்ததைக் கண்டு, “தளபதியே உமக்கு ஒரு செய்தி உண்டு” என்றான்.
அப்போது யெகூ, “எங்களில் யாருக்கு?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “தளபதியே உமக்குத்தான்” என்றான்.
யெகூ எழுந்து வீட்டுக்குள் போனதும் இறைவாக்கினன், யெகூவுடைய தலையில் எண்ணெயை ஊற்றிச் சொன்னதாவது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னை யெகோவாவின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன். நீ உன் தலைவனான ஆகாப் அரசனின் முழுக் குடும்பத்தையும் அழித்துவிடவேண்டும். யேசபேலினால் சிந்தப்பட்ட யெகோவாவின் எல்லா ஊழியக்காரரின் இரத்தத்துக்காகவும், என்னுடைய அடியவரான எல்லா இறைவாக்கினரின் இரத்தத்துக்காகவும் பழிவாங்குவேன். அடிமையாயிருந்தாலென்ன, சுதந்திரவாளியாயிருந்தாலென்ன இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் ஒருவரும் மீந்திராதபடி எல்லா ஆண்களையும் அழித்துப்போடுவேன். ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப்போலவும் ஆக்குவேன். யேசபேலுக்கோ என்றால், யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் நாய்கள் அவளைத் தின்னும். ஒருவரும் அவளை அடக்கம்பண்ணமாட்டார்கள்.’ ” இதைச் சொன்னபின்பு அவன் கதவைத் திறந்துகொண்டு ஓடித் தப்பினான்.
யெகூ வெளியே வந்து தன் அதிகாரிகளிடம் போனபோது, அவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து, “என்ன நல்ல செய்தியா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் ஏன் வந்தான்?” என்று கேட்டான்.
அதற்கு யெகூ, “அந்த மனுஷன் யார் என்றும், எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுபவன் என்றும் உங்களுக்குத் தெரியும்தானே!” என்றான்.
அதற்கு அவர்கள், “அப்படியல்ல. அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
அதற்கு யெகூ, “அவன் எனக்குச் சொன்னது இதுவே, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் எல்லா இஸ்ரயேலருக்கும் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணினேன்’ என்பதாகும்” என்றான்.
அவர்கள் விரைவாக தங்கள் மேலாடைகளைக் கழற்றி அவனுக்குக் கீழே அந்தப் படிகளில் விரித்தார்கள். அதன்பின் எக்காளம் ஊதி, “யெகூவே அரசன்” என்று ஆரவாரித்தார்கள்.
யெகூ யோராமையும் அகசியாவையும் கொலைசெய்தல்
நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ யோராமுக்கு எதிராகச் சதித்திட்டம் போட்டான். அந்நாட்களில் யோராம் எல்லா இஸ்ரயேலரோடும் சேர்ந்து ராமோத் கீலேயாத்தை சீரிய அரசனான ஆசகேலின்வசம் போய்விடாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தான். ஆனால் யோராம் சீரிய அரசனான ஆசகேலுடன் செய்த யுத்தத்தில் சீரியரால் காயப்படுத்தப்பட்டு, அக்காயங்களை ஆற்றுவதற்கு யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான். அப்பொழுது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாயிருந்தால் நகரத்தைவிட்டு யாரும் வெளியேறி யெஸ்ரயேலுக்குப்போய் இச்செய்தியை கூறிவிடாதபடி பாருங்கள்” என்று கூறினான். அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான். யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப் பார்க்க, யூதாவின் அரசனான அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
யெஸ்ரயேலின் கோபுரத்திலிருந்து நகரத்தைக் காவல் செய்தவன் யெகூவின் படைகள் முன்னேறி வருவதைக் கண்டு, “சில படைகள் வருவதாகத் தெரிகிறது” என்று பலமாகச் சத்தமிட்டான்.
அப்பொழுது யோராம், “ஒரு குதிரைவீரனை அழைத்து, வருபவர்களைப் போய்ச் சந்தித்து, ‘சமாதானமாக வருகிறீர்களா’ என்று கேட்டுவரும்படி அனுப்புங்கள்” என்றான்.
எனவே குதிரைவீரன் போய் யெகூவிடம், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று கூறினான்.
அதற்கு யெகூ பதிலாக, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
அப்பொழுது காவல் காப்பவன் அரசனிடம், “தூதுவன் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அவன் திரும்பி வரவில்லை” என்று கூறினான்.
அப்பொழுது அரசன் இரண்டாம் குதிரைவீரனையும் அனுப்பினான். அவன் அவர்களிடம் போய், “சமாதானமாகவா வருகிறீர்கள் என்று அரசன் கேட்கிறான்” என்று சொன்னான்.
யெகூ அவனையும் பார்த்து, “சமாதானத்தைப் பற்றி உனக்கென்ன? எனக்குப் பின்னால் தொடர்ந்து வா” என்றான்.
காவலாளி அரசனிடம், “அவனும் அவர்களிடம்போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் திரும்பிவருவதாக இல்லை. தேரைச் செலுத்தும் விதத்தைப் பார்த்தால் நிம்சியின் மகன் யெகூவைப்போல் தெரிகிறது. அவன் ஒரு பைத்தியக்காரனைப் போலவே தேரை ஓட்டுகிறான்” என்றான்.
உடனே யோராம், “என்னுடைய தேரை ஆயத்தப்படுத்துங்கள்” என்றான். அவர்கள் அவனுடைய தேரை ஆயத்தப்படுத்தியதும் இஸ்ரயேலின் அரசனான யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் தங்கள் சொந்தத் தேர்களில் ஏறிக்கொண்டு யெகூவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான நிலத்தில் அவர்கள் யெகூவைச் சந்தித்தார்கள். யோராம் யெகூவை கண்டவுடன், “யெகூவே, சமாதானமாகவா வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உன் தாயாகிய யேசபேலின் விக்கிரக வணக்கங்களும், பில்லிசூனியங்களும் அளவுக்கு மிஞ்சியிருக்கும்வரை சமாதானம் எப்படியிருக்கும்” என்றான்.
அதைக் கேட்டதும் யோராம், “அகசியாவே, இது துரோகம்” என்று சத்தமிட்டபடி தன் தேரைத் திருப்பிக்கொண்டு தப்பியோட பார்த்தான்.
ஆனால் யெகூ தன் வில்லை வளைத்து யோராமின் தோள்களுக்கிடையில் எய்தான். அம்பு அவனுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றதும் அவன் தன் தேரிலேயே விழுந்தான். அப்பொழுது யெகூ தனது அதிகாரியாகிய பித்காரிடம், “அவனை எடுத்து யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் எறிந்துவிடு. முன்பு ஒரு நாள் நானும் நீயும் இவனுடைய தகப்பனான ஆகாபுக்குப் பின்னால் தேரில் போகும்பொழுது, யெகோவா இவனைக் குறித்துச் சொன்ன இறைவாக்கை ஞாபகப்படுத்திக்கொள். அன்று யெகோவா, ‘நேற்று நான் நாபோத்தின் இரத்தத்தையும், அவன் மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் என்று அறிவிக்கிறார். இதே நிலத்தில் உன்னையும் நான் பழிவாங்குவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்று ஆகாபுக்குக் கூறியிருந்தார். ஆகவே இப்போது இவனைத் தூக்கி யெகோவாவின் வாக்குப்படி அந்தத் தோட்டத்தில் எறிந்துவிடு” என்று சொன்னான்.
யூதாவின் அரசனான அகசியா நடந்தவற்றைக் கண்டபோது, பெத்ஹாகானுக்குப் போகும் பாதையில் தப்பி ஓடினான். யெகூ அவனையும் கொல்லுங்கள் என்று பலமாகக் கத்திக்கொண்டு அவனைத் துரத்திப் போனான். இப்லேயாமுக்கு அருகே உள்ள கூருக்கு ஏறிப்போகும் சரிவான பாதையில் அகசியாவை அவனுடைய தேரிலேயே வைத்து யெகூவின் படையினர் காயப்படுத்தினார்கள். ஆயினும் அவன் மெகிதோவுக்குத் தப்பி ஓடிப்போய் அங்கே இறந்தான். அவனுடைய வேலையாட்கள் அவனின் உடலை தேரில் வைத்து எருசலேமுக்குக் கொண்டுபோய் தாவீதின் நகரத்திலிருந்த அவனுடைய முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். ஆகாபின் மகன் யோராமின் ஆட்சியின் பதினோராம் வருடத்தில் அகசியா யூதாவின் அரசனாகியிருந்தான்.
யேசபேல் கொல்லப்படுதல்
யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள். யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள்.
யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான்.
அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான். ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை. அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும். யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.
ஆகாபின் குடும்பம் அழிக்கப்படுதல்
அப்பொழுது ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது மகன்கள் சமாரியாவில் வாழ்ந்துவந்தார்கள். யெஸ்ரயேலிலிருந்த நகர அதிகாரிகளுக்கும், முதியோருக்கும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கும் யெகூ கடிதங்கள் எழுதி சமாரியாவுக்கு அனுப்பினான். அவற்றிலே, “உங்கள் எஜமானின் மகன்கள் உங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் தேர்களும், குதிரைகளும், அரண்களால் பாதுகாக்கப்பட்ட நகரமும், அத்துடன் ஆயுதங்களும் இருக்கின்றன. ஆகையால் இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடனே, உங்கள் எஜமானின் மகன்களில் திறமைசாலியும், மிகத் தகுதிவாய்ந்தவனுமான ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடைய தகப்பனின் அரியணையில் அமர்த்துங்கள். அதன்பின்பு உங்கள் தலைவனுடைய குடும்பத்துக்காக யுத்தம் செய்யுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் மிகவும் பயந்து, “இரண்டு அரசர்களாலேயே இவனை எதிர்க்க முடியாதபோது, நாங்கள் எப்படி எதிர்க்கமுடியும்” என்று கூறினார்கள்.
அப்பொழுது அரண்மனையை நிர்வகிப்பவனும், நகர ஆட்சியாளனும், முதியோர்களும், ஆகாபின் பிள்ளைகளின் பாதுகாவலர்களும் யெகூவுக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள்: “நாங்கள் உமது அடியவர்கள். நீர் எதைச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம். நாங்கள் யாரையும் அரசனாக நியமிக்கமாட்டோம். நீர் எது சிறந்ததென நினைக்கிறீரோ அதைச் செய்யும்” என்று அந்தச் செய்தியில் இருந்தது.
அப்பொழுது யெகூ அவர்களுக்கு இரண்டாம் கடிதம் எழுதினான். அதில், “நீங்கள் எனக்குச் சார்பாக இருந்து எனக்குக் கீழ்ப்படிந்தீர்களானால், உங்கள் எஜமானின் மகன்களின் தலைகளை எடுத்துக்கொண்டு நாளைக்கு இதே நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடம் வாருங்கள்” என்று எழுதியிருந்தது.
அப்பொழுது எழுபது இளவரசர்கள் தங்களைப் பராமரிக்கும் பட்டணத்தின் முதன்மையான மனிதர்களில் இருந்தனர். கடிதம் அவர்களுக்குக் கிடைத்தவுடன் அந்த மனிதர் இளவரசர்களைக் கூட்டிக்கொண்டுபோய் எழுபதுபேரையும் வெட்டிக்கொன்றார்கள். அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள். தூதுவன் யெகூவிடம் வந்து, “இளவரசர்களின் தலைகளை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று கூறினான்.
அதற்கு யெகூ, “நகர வாசலில் இரண்டு குவியல்களாக அவற்றைக் குவியுங்கள். காலைவரை அவ்வாறே இருக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலையில் யெகூ வெளியே போனான். அவன் எல்லா மக்களின் முன்னிலையிலும் நின்று, “நீங்கள் குற்றமற்றவர்கள். நான்தான் எனது தலைவனுக்கு எதிராகச் சதிசெய்து அவனைக் கொன்றேன். ஆனால் இவர்களைக் கொன்றது யார்? ஆகாபுடைய வீட்டுக்கு எதிராக யெகோவா சொன்ன ஒரு சொல்லாவது நிறைவேறாமல் போகமாட்டாது என்று அறிந்துகொள்ளுங்கள். எலியாவுக்கு தாம் வாக்குப்பண்ணியதை யெகோவா செய்திருக்கிறார்” என்று கூறினான். எனவே யெகூ யெஸ்ரயேலில் ஆகாபுடைய எல்லாத் தலைவர்களையும், நெருங்கிய நண்பர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், ஆகாபின் குடும்பத்தில் மீதியாய் உயிரோடிருந்த யாவரையும் ஒருவரையும் தப்பவிடாமல் கொலைசெய்தான்.
இதன்பின்பு யெகூ சமாரியாவுக்குப் பயணமாய்ப் போனான். அவன் போய்க்கொண்டிருந்தபோது, வழியில் மேய்ப்பரின் இடமான பெதெக்கேத் என்னும் இடத்தில், யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்கள் சிலரை யெகூ சந்தித்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். அரசன் ஆகாபினுடைய, அரசியினுடைய குடும்பங்களைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்க வந்தோம்” என்றார்கள்.
அப்பொழுது யெகூ தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து, “பிடியுங்கள்” என்று கட்டளையிட்டான். உடனே அவனுடைய மனிதர் அந்த நாற்பத்து இரண்டுபேரையும் உயிரோடே பிடித்துக் கொண்டுபோய் பெத் எக்கேத்தின் கிணற்றண்டையில் வெட்டிக்கொன்றார்கள். ஒருவனையாகிலும் உயிருடன் வைக்கவில்லை.
யெகூ அந்த இடத்தைவிட்டுப் போனபின்பு, வழியில் தன்னைச் சந்திப்பதற்காக வந்துகொண்டிருந்த ரேகாபின் மகன் யோனதாபைச் சந்தித்தான். யெகூ அவனுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அவனை நோக்கி, “நான் உன்னோடே இணக்கமாய் இருப்பதுபோல, நீயும் என்னோடு இணக்கமாய் இருக்கிறாயா?” என்று கேட்டான்.
அதற்கு யோனதாப், “ஆம்” என்றான்.
அப்பொழுது யெகூ, “அப்படியானால் உனது கையைத் தா” என்றான். யோனதாப் தன் கையைக் கொடுத்தபோது யெகூ அவனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டான். யெகூ அவனைப் பார்த்து, “இப்போது என்னுடன் வந்து யெகோவாவுக்காக நான் கொண்டிருக்கும் பக்தி வைராக்கியத்தைப் பாரும்” என்று கூறி தேரில் அவனைக் கூட்டிக்கொண்டு போனான்.
யெகூ சமாரியாவுக்குப் போனபோது அங்கே ஆகாபின் குடும்பத்தில் இன்னும் மீதியாயிருந்த எல்லோரையும் கொன்றான். யெகோவா எலியாவுக்குக் கூறிய வாக்கின்படியே அவர்களை அழித்தான்.
பாகாலின் பூசாரிகளைக் கொலைசெய்தல்
இதன்பின்பு யெகூ எல்லா மக்களையும் ஒன்றுகூடி வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆகாப் பாகாலுக்கு கொஞ்சமே பணிசெய்தான். யெகூவோ பாகாலுக்கு அதிகமாய் செய்யப் போகிறான். இப்போது பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும், எல்லாப் பணி செய்பவர்களையும், எல்லாப் பூசாரிகளையும் அழைப்பியுங்கள். ஒருவராவது விடுபடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பாகாலுக்கு நான் ஒரு பெரிய பலியை செலுத்தப்போகிறேன். யாராவது வரத்தவறினால் அவன் ஒருபோதும் உயிரோடிருக்கமாட்டான்” என்றான். ஆனால் உண்மையில் இது பாகாலுக்கு பணி செய்பவர்களை அழிப்பதற்கு யெகூ கையாண்ட ஒரு தந்திரமான முறையாயிருந்தது.
யெகூ மேலும், “பாகாலைக் கனப்படுத்துவதற்கு ஒரு சபையைக் கூட்டுங்கள்” என்றான். அவர்கள் அதை நியமித்தார்கள். யெகூ இஸ்ரயேல் நாடு முழுவதற்கும் செய்தியை அனுப்பினான். பாகாலுக்குப் பணிசெய்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். ஒருவனாகிலும் வராமல் விடவில்லை. பாகாலின் கோயிலுக்குள் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அவர்கள் நெருக்கமாய் கூடினார்கள். அப்பொழுது உடைகளுக்குப் பொறுப்பாயிருந்தவனை அழைத்து, “பாகாலின் பணியாளர்கள் யாவருக்கும் ஆடைகளைக் கொண்டுவா” என்றான். அப்படியே அவன் அவர்களுக்கு மேலாடைகளைக் கொண்டுவந்தான்.
அப்பொழுது யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும் பாகாலின் கோயிலுக்குள் போனார்கள். யெகூ பாகாலின் பணியாளர்களைப் பார்த்து, “பாகாலின் பணியாளர்களைத்தவிர யெகோவாவின் அடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை நீங்கள் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான். அதன்பின் அவர்கள் பலிகளையும், தகன காணிக்கைகளையும் செலுத்துவதற்கு உள்ளே போனார்கள். இந்த வேளையில் யெகூ எண்பது மனிதரைக் கோயிலின் வெளிப்புறத்தில் நிறுத்தி, “நான் உங்களிடம் கையளிக்கிறவர்களில் எவனையாவது தப்பவிட்டால், தப்பினவனுடைய உயிருக்காக தப்பவிட்டவனுடைய உயிர் பிணையாக இருக்கும்” என்று எச்சரித்தான்.
தகனபலியைச் செலுத்தி முடிந்தவுடன், யெகூ தன் வாசல்காப்போருக்கும், அதிகாரிகளுக்கும், “உள்ளே போய் ஒருவரையும் தப்பவிடாமல் எல்லோரையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள், எல்லோரையும் வாளினால் வெட்டினார்கள். காவலாளரும், அதிகாரிகளும் உடல்களை வெளியே எறிந்தார்கள். அதன்பின் பாகாலின் கோயிலின் உள் அறைக்குள் போனார்கள். பாகாலின் கோயிலின் புனிதக் கல்லை வெளியே கொண்டுவந்து அதை எரித்தார்கள். அந்தப் புனித கல்லை அழித்து, பாகாலின் கோயிலையும் உடைத்தார்கள். அதை இன்றுவரை கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இவ்விதமாக யெகூ இஸ்ரயேலிலிருந்து பாகால் வழிபாட்டை ஒழித்து விட்டான். அப்படியிருந்தும், தாணிலும், பெத்தேலிலும் இருந்த தங்கக் கன்றுக்குட்டிகளை இஸ்ரயேலரை வணங்கச்செய்து அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணின, நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு யெகூ விலகவில்லை.
யெகோவா யெகூவிடம், “என்னுடைய பார்வையில் எனக்குப் பிரியமான செயல்களைச் சரியான முறைப்படி செய்திருக்கிறாய். அத்துடன் ஆகாபின் குடும்பத்திற்கு எதிராக நான் என் மனதில் திட்டமிட்ட எல்லாவற்றையுமே நீ சாதித்துவிட்டாய். ஆகையினால் நான்கு தலைமுறைகளுக்கு உனது சந்ததிகள் இஸ்ரயேலின் அரியணையில் இருப்பார்கள்” என்று கூறினார். ஆனாலும் யெகூவோ என்றால், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் சட்டத்தைத் தன் முழு இருதயத்தோடும் கைக்கொண்டு நடக்கக் கவனமாயிருக்கவில்லை. யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
அந்நாட்களில் யெகோவா இஸ்ரயேல் நாட்டின் பரப்பளவைக் குறைக்கத் தொடங்கினார். ஆசகேல் இஸ்ரயேலரின் பிரதேசம் முழுவதிலும் அவர்களை முறியடித்தான். காத், ரூபன், மனாசே ஆகியோரின் பிரதேசங்களான கீலேயாத் நாடு எங்குமுள்ள யோர்தான் நதியின் கிழக்குப்பகுதி முழுவதையும், அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே இருக்கும் அரோயேர் ஆற்றிலிருந்து கீலேயாத்தூடாக பாசான் வரைக்குமுள்ள பகுதிகளையும் ஆசகேல் வெற்றிபெற்றான்.
யெகூவின் ஆட்சியிலுள்ள மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
இதன்பின் யெகூ தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யோவாகாஸ் அவனுடைய இடத்தில் அரசனானான். சமாரியாவிலிருந்து யெகூ இஸ்ரயேலை அரசாண்ட காலம் இருபத்தெட்டு வருடங்கள்.
அத்தாலியாளும் யோவாஸும்
யூதாவின் அரசன் அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, முழு அரச குடும்பத்தினரையும் அழிக்கத் தொடங்கினாள். ஆனால் அரசனான யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமான யோசேபாள், கொலைசெய்யப்படப்போகிற இளவரசர் மத்தியிலிருந்து அகசியாவின் மகன் யோவாசை அத்தாலியாளிடமிருந்து களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். இதனால் அவன் கொல்லப்படவில்லை. அத்தாலியாள் நாட்டை ஆட்சிசெய்தபோது அவன் தாதியுடன் யெகோவாவின் ஆலயத்தில் ஆறு வருடங்களாக ஒளித்தபடியே இருந்தான்.
ஏழாம் வருடத்தில் யோய்தா கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்தவர்களை யெகோவாவின் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தான். முதலில் யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒரு வாக்குறுதியும் பெற்றுக்கொண்டான். அதன்பின் அரசனுடைய மகனை அவர்களுக்குக் காட்டினான். மேலும் அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் மூன்று குழுவினராக உங்கள் கடமைகளைச் செய்யும் உங்களில், மூன்றில் ஒரு பகுதியினர் அரண்மனையைப் பாதுகாக்க வேண்டும். மற்ற மூன்றில் ஒரு பகுதியினர் சூர் வாசலையும், மூன்றில் ஒரு பகுதியினர் ஆலயத்தை மாறிமாறி காவல் காக்கிறவர்களுக்குப் பின்புறமாக இருக்கும் வாசலையும் காவல் காக்கவேண்டும். ஓய்வுநாளில் வழக்கமான கடமை முடிந்து செல்லும் இரு பிரிவினரும் அரசனுக்காக யெகோவாவினுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். ஒவ்வொருவரும் தன்தன் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக அரசனைச் சுற்றி நில்லுங்கள். உங்கள் வரிசையை நெருங்குபவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும், வந்தாலும் அவருக்குச் சமீபமாய் நில்லுங்கள்” என்று கூறினான்.
ஆசாரியனான யோய்தா உத்தரவிட்டபடியே, நூறுபேருக்கு தளபதிகள் செய்தார்கள். ஓய்வுநாளில் பணிபுரிகிறவர்களும், விடுப்பில் போகிறவர்களுமான தம்தம் மனிதரை ஆசாரியனான யோய்தாவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அதன்பின் ஆசாரியனாகிய யோய்தா யெகோவாவின் ஆலயத்திலிருந்த, தாவீது அரசனுக்குச் சொந்தமான ஈட்டிகளையும், கேடயங்களையும் தளபதிகளிடம் கொடுத்தான். காவலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக, தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்திற்கும், பலிபீடத்திற்கும் அருகே அரசனைச் சூழ்ந்து நின்றார்கள்.
அதன்பின் யோய்தா அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கையின் ஒரு பிரதியை அவனிடம் கொடுத்து, அவனை அரசனாகப் பிரகடனம் செய்தான். அவர்கள் அவனை அரசனாக அபிஷேகம்பண்ணி, தங்கள் கைகளைத் தட்டி, “அரசன் நீடூழி வாழ்க” என ஆர்ப்பரித்தார்கள்.
காவலாளரும், மக்களும் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த மக்களிடம் சென்றாள். அவள் பார்த்தபோது, அக்கால வழக்கப்படி அரசன் தூண் அருகில் நிற்பதைக் கண்டாள். அதிகாரிகளும், எக்காளம் ஊதுபவர்களும் அரசனுக்குப் பக்கத்தில் நின்றார்கள். நாட்டு மக்கள் யாவரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அத்தாலியாள் தன் அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள்.
ஆசாரியனான யோய்தா படைகளுக்குப் பொறுப்பாயிருந்த நூறுபேருக்கு தளபதிகளிடம், “ஆலய எல்லையிலிருந்து அவளை வெளியே கொண்டுபோங்கள். யெகோவாவின் ஆலயத்திற்குள் வைத்து அவளைக் கொல்லவேண்டாம்; அவளை யாராவது பின்தொடர்ந்து வந்தால் அவர்களையும் வாளினால் கொல்லுங்கள்” என்றான். அப்பொழுது அரண்மனை முற்றத்திற்கு குதிரைகள் செல்லும் வாசல் வழியாக அவள் போனபோது அவளைப் பிடித்து, அங்கே அவளைக் கொலைசெய்தார்கள்.
அதன்பின் யோய்தா இஸ்ரயேல் மக்கள் யெகோவாவின் மக்களாயிருக்கும்படி யெகோவாவுக்கும், அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். அத்துடன் அரசனுக்கும் மக்களுக்கும் இடையிலும் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். நாட்டு மக்கள் யாவரும், பாகாலின் கோயிலுக்குப்போய் அதை இடித்து வீழ்த்தினார்கள். பாகாலின் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் துண்டுகளாக நொறுக்கி, பாகாலின் பூசாரியான மாத்தானையும் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றார்கள்.
இதன்பின் ஆசாரியன் யோய்தா யெகோவாவின் ஆலயத்திற்கு காவலாளரை நிறுத்தினான். கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்கு தளபதிகளையும், நாட்டில் இருந்த எல்லா மக்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எல்லோரும் ஒருமித்து யெகோவாவின் ஆலயத்திலிருந்து காவலாளர் வாசல் வழியாக அரசனை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே யோவாஸ் அரச அரியணையில் அமர்ந்தான். நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் அரண்மனையில் வைத்து வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள்.
யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான்.
யூதாவில் யோவாசின் ஆட்சி
யெகூவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் யோவாஸ் யூதாவில் அரசனாக வந்தான். இவன் எருசலேமில் நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாய் பெயெர்செபாவைச் சேர்ந்த சிபியா என்பவள். ஆசாரியன் யோய்தா அறிவுறுத்தல்கள் வழங்கிய காலம் முழுவதும், அரசன் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்து வந்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
யோவாஸ் ஆசாரியர்களைப் பார்த்து, “குடிமதிப்பின்போது வசூலிக்கப்படும் பணம், தனிப்பட்டோரின் நேர்த்திக்கடன்கள் மூலம் பெறப்படும் பணம், ஆலயத்துக்கு மக்கள் சுயவிருப்பமாகக் கொடுக்கும் பணம் ஆகியவை யெகோவாவினுடைய ஆலயத்துக்கு பரிசுத்த காணிக்கையாகக் கொண்டுவரப்படும். அவற்றையெல்லாம் சேர்த்தெடுங்கள். ஒவ்வொரு ஆசாரியனும் பொருளாளர்கள் ஒருவனிடமிருந்து அப்பணத்தைப் பெற்று ஆலயத்தில் என்ன பழுதுகள் காணப்படுகின்றனவோ அவற்றைத் திருத்துவதற்காக அப்பணத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினான்.
ஆனால் யோவாஸ் அரசேற்று இருபத்தி மூன்று வருடங்களாகியும் ஆலயத்தில் எவ்வித திருத்த வேலைகளும் ஆசாரியர்களால் செய்யப்படவில்லை. ஆகவே யோவாஸ் அரசன் ஆசாரியனான யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் வரும்படி அழைத்து அவர்களிடம், “ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை?” என்று கேட்டான். பின்பு அவன், “இனிமேல் உங்கள் பொருளாளர்களிடமிருந்து பணம் வாங்கவேண்டாம். ஆலயத்தைத் திருத்துவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்றான். ஆசாரியர்கள் தாம் இனிமேல் மக்களிடமிருந்து பணத்தைச் சேர்ப்பதில்லை என்றும், ஆலயத்தைப் பழுது பார்ப்பதில்லை என்றும் ஒத்துக்கொண்டனர்.
ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மூடியில் ஒரு துவாரமிட்டு, அதை யெகோவாவின் ஆலயத்துக்கு மக்கள் வரும் வாசலில் வலதுபக்கத்தில் பலிபீடத்துக்கு அருகே வைத்தான். யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட எல்லாப் பணத்தையும், ஆலய வாசலைப் பாதுகாத்த ஆசாரியர்கள் அந்தப் பெட்டிக்குள் போட்டனர். அந்தப் பெட்டியில் பெருந்தொகை பணம் இருப்பதைக் கண்டபோதெல்லாம், அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனாகவும் வந்து யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை எண்ணிப் பைகளில் போட்டார்கள். இந்தத் தொகை எண்ணி முடிந்ததும் ஆலயப் பணிசெய்ய நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதை யெகோவாவின் ஆலய வேலைசெய்யும் தச்சுவேலை செய்வோருக்கும், கட்டிடவேலை செய்வோருக்கும், கொல்லருக்கும், கல் வெட்டுவோருக்கும் கொடுத்தார்கள். பின் அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை திருத்துவதற்கான மரங்களையும் செதுக்கப்பட்ட கற்களையும் வாங்கியதோடு, ஆலயத்தைத் திருத்தியமைப்பதற்கு வேண்டிய மற்ற செலவுகளுக்கும் அதைப் பயன்படுத்தினர்.
இப்பணம், வெள்ளிப் பாத்திரங்கள், திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், எக்காளங்கள் ஆகியவற்றை செய்வதற்கோ அல்லது யெகோவாவின் ஆலயத்திற்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் வேறேதும் பொருட்கள் செய்வதற்கோ செலவழிக்கப்படவில்லை. இப்பணம் யெகோவாவினுடைய ஆலயத்தின் திருத்த வேலைகளைச் செய்த வேலையாட்களுக்கே கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஆலயத்தின் திருத்த வேலைகளுக்கே உபயோகித்தனர். மேலும் வேலைசெய்வோருக்கு கூலி கொடுக்கும்படி பணம் ஒப்படைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் மிகவும் நேர்மையாய் நடந்துகொண்டதால், அவர்களிடமிருந்து எந்தவித கணக்கு வழக்கும் கேட்கப்படவில்லை. குற்றநிவாரண காணிக்கைப் பணமும், பாவநிவாரண காணிக்கைப் பணமும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. அவை ஆசாரியருக்கே உரிமையாக இருந்தன.
இந்த நாட்களில் சீரிய அரசன் ஆசகேல், காத்தை எதிர்த்துத் தாக்கிக் கைப்பற்றினான். அங்கிருந்து எருசலேமைத் தாக்குவற்காகத் திரும்பினான். ஆனால் யூதாவின் அரசன் யோவாஸ் தன் தந்தையரான யூதாவின் அரசர்களான யோசபாத், யெகோராம், அகசியா என்பவர்களால் அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்த பொருட்களையும், தான் அர்ப்பணித்த அன்பளிப்புகளையும் யெகோவாவின் ஆலயத்திலும், அரசனின் அரண்மனையிலும் உள்ள திரவிய களஞ்சியங்களில் இருந்த எல்லாத் தங்கத்தையும் எடுத்து அவற்றை சீரிய அரசன் ஆசகேலுக்கு அனுப்பினான். அதனால் ஆசகேல் எருசலேமிலிருந்து திரும்பிச்சென்றான்.
யோவாசின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாசினுடைய அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, சில்லாவுக்குப் போகும் வழியிலுள்ள பெத்மில்லோவில் அவனைக் கொலைசெய்தனர். சிமியாத்தின் மகன் யோசகாரும், சோமேரின் மகன் யோசபாத்தும் ஆகிய அவனுடைய அதிகாரிகளே அவனைக் கொன்றார்கள். அவர்கள் அவனை அவனுடைய தந்தையர்களோடு தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள். அவனுடைய மகனான அமத்சியா அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலில் யோவாகாஸின் ஆட்சி
யூதாவின் அரசன் அகசியாவின் மகன் யோவாஸ் அரசாண்ட இருபத்துமூன்றாம் வருடத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ் சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் பதினேழு வருடங்கள் அரசாண்டான். இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களையே இவனும் பின்பற்றி யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் அவைகளைவிட்டு விலகவேயில்லை. எனவே யெகோவாவின் கோபம் இஸ்ரயேலுக்கு எதிராகப் பற்றி எரிந்தது. இதனால் யெகோவா அவர்களை நெடுங்காலத்திற்கு சீரிய அரசன் ஆசகேலின் வலிமையின் கீழும், அவனுடைய மகன் பெனாதாத்தின் கீழும் வைத்திருந்தார்.
அதன்பின் யோவாகாஸ் யெகோவாவின் தயவைத் தேடினான். சீரிய அரசன் எவ்வளவாய் இஸ்ரயேலை ஒடுக்கித் துன்புறுத்தினான் என்பதை யெகோவா கண்டபடியால், அவர் அவனுடைய மன்றாட்டைக் கேட்டார். யெகோவா இஸ்ரயேலருக்கு ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இஸ்ரயேலர் சீரியருடைய பிடியிலிருந்து தப்பினார்கள். அதன்பின் இஸ்ரயேலர் முன்பு வாழ்ந்ததுபோல தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்தார்கள். ஆயினும் யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பாமல், அவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுவந்தார்கள். அத்துடன் அசேரா விக்கிரக தூண் இன்னும் சமாரியாவில் இருந்தது.
யோவாகாஸின் இராணுவத்தில் ஐம்பது குதிரைவீரர், பத்து தேர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரரைத் தவிர வேறொன்றும் மீந்திருக்கவில்லை. ஏனெனில் சீரிய அரசன் இஸ்ரயேலில் மீதியானவர்களை அழித்து, சூடுமிதிக்கும் காலத்திலுள்ள புழுதியைப்போலாக்கிப் போட்டான்.
யோவாகாஸின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோவாஸ் அரசனானான்.
இஸ்ரயேலில் யோவாஸ் ஆட்சி
யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான்.
இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான்.
இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான்.
எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான். எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான்.
“கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.
அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான். இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான்.
அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான்.
மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது. ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.
யோவாகாசின் ஆட்சிக் காலமெல்லாம் சீரிய அரசனாகிய ஆசகேல் இஸ்ரயேலரை ஒடுக்கினான். ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார்.
சீரிய அரசன் ஆசகேல் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் பெனாதாத் அரசனானான். யோவாகாசின் மகன் யோவாஸ் தன் தகப்பன் யோவாகாசிடமிருந்து, ஆசகேலின் மகனான பெனாதாத் கைப்பற்றிய நகரங்களை அவனிடமிருந்து திரும்பவும் பிடித்தான். யோவாஸ் அவனை மூன்றுமுறை தோற்கடித்து இஸ்ரயேல் பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக்கொண்டான்.
யூதாவில் அமத்சியாவின் ஆட்சி
இஸ்ரயேலின் அரசன் யோவாகாசின் மகன், யோவாஸ் அரசாண்ட இரண்டாம் வருடத்தில், யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா யூதாவில் அரசாளத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள். அமத்சியா யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனாலும், தன் தந்தையான தாவீதைப்போல் செய்யவில்லை. எல்லாவற்றிலும் தன் தகப்பனான யோவாஸின் முன்மாதிரியையே பின்பற்றினான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
அரசாட்சி அவனுடைய கையின் கட்டுப்பாட்டிற்குள் உறுதியாக்கப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான். ஆனாலும் யெகோவாவின் கட்டளைப்படி மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருந்ததற்கு ஏற்றவாறு கொலைசெய்தவர்களின் மகன்களை அவன் கொல்லவில்லை. மோசேயின் சட்ட புத்தகத்தில், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்”14:6 [உபா. 24:16] என்று எழுதப்பட்டிருக்கிறது.
அரசன் அமத்சியாவே உப்புப் பள்ளத்தாக்கில் பத்தாயிரம் ஏதோமியரைத் தோற்கடித்து, தலைநகரான சேலா பட்டணத்தைக் கைப்பற்றி அதன் பெயரையும் யொக்தியேல் என்று மாற்றியவன். இன்று மட்டும் அந்த நகரம் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
அதன்பின்பு அமத்சியா தூதுவர்களை அனுப்பி, யோவாகாசின் மகனும் யெகூவின் பேரனுமான இஸ்ரயேலின் அரசன் யோவாஸிடம், “வாரும், நாம் யுத்தத்தில் நேருக்குநேர் சந்திப்போம்” என்று சவாலிட்டு ஒரு செய்தியைக் கூறினான்.
அதற்கு இஸ்ரயேல் அரசனான யோவாஸ், யூதாவின் அரசனான அமத்சியாவுக்கு, “லெபனோனிலுள்ள முட்செடி லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம், ‘உனது மகளை எனது மகனுக்கு திருமணம் செய்துகொடு’ என்று ஒரு செய்தி அனுப்பியது. ஆனால் லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அவ்வழியாய் கடந்து போகையில் முட்செடியை காலின்கீழ் மிதித்துவிட்டது. நீ ஏதோமை தோற்கடித்தது உண்மைதான். உன் வெற்றியை நீயே புகழ்ந்துகொண்டு இப்பொழுது பெருமை கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்று பதில் அனுப்பினான்.
ஆனால் அமத்சியாவோ அதற்கு செவிகொடுக்கவில்லை. அதனால் இஸ்ரயேல் அரசன் யோவாஸ் எதிர்த்துத் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷில் நேரடியாக ஒருவரோடொருவர் மோதினர். இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குத் தப்பி ஓடினார்கள். இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் யோவாஸ் எருசலேமுக்குப் போய், எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான். அரச அரண்மனையின் திரவியக் களஞ்சியத்திலிருந்த யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்றும் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பினான்.
யோவாஸ் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த செயல்களும், அவனுடைய சாதனைகளும் மற்றும் யூதா அரசன் அமத்சியாவுடன் செய்த யுத்தமும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் யோவாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, இஸ்ரயேலின் அரசர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெரொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன.
எருசலேமிலுள்ளவர்கள் அமத்சியாவுக்கு எதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர். அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு எருசலேமில் தாவீதின் நகரத்திலுள்ள அவனுடைய முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்பின்பு யூதா நாட்டு மக்கள் பதினாறு வயதுள்ளவனாயிருந்த அசரியாவை அவன் தகப்பனான அமத்சியாவின் இடத்தில் அரசனாக்கினார்கள். அமத்சியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு அசரியாவே ஏலாத்தை மீண்டும் கட்டி அதை யூதாவுக்கு திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
இஸ்ரயேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி
யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், சமாரியாவில் யோவாஸ் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலின் அரசனாகப் பதவி ஏற்று நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள்ளாக்கிய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் ஒன்றையாகிலும் விட்டுத் திரும்பவில்லை. இவனே இஸ்ரயேலின் எல்லைகளை ஆமாத்தின் எல்லையிலிருந்து அராபாக் கடல் வரைக்கும் திரும்பப் பெற்றுக் கொடுத்தான். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தம்முடைய அடியவனாகிய இறைவாக்கினன் யோனாவைக் கொண்டு பேசியபடியே இது நடந்தது. இந்த இறைவாக்கினன் யோனா காத் ஏபேரைச் சேர்ந்த அமித்தாயின் மகன்.
அடிமையானாலும், சுதந்திரவாளியானாலும் இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கசப்பான துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு உதவியளிக்க எவருமே இல்லை என்பதையும் யெகோவா கண்டார். இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழே முழுவதும் நீக்கிவிடுவதாக யெகோவா சொல்லாதபடியால், யோவாஸின் மகன் யெரொபெயாமின் மூலம் அவர்களைக் காப்பாற்றினார்.
யெரொபெயாமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இராணுவ சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யூதாவுக்குச் சொந்தமான ஆமாத்தையும், தமஸ்குவையும் எப்படி இஸ்ரயேலுக்குத் திரும்பவும் மீட்டுக்கொடுத்தான் என்பதும் அதில் எழுதப்பட்டுள்ளன. இதன்பின்பு யெரொபெயாம் இஸ்ரயேல் அரசர்களான தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுடைய மகனான சகரியா அவனுக்குப்பின் அரசனானான்.
யூதாவின் அரசனான அசரியா
இஸ்ரயேலின் அரசன் யெரொபெயாம் அரசனாகப் பதவி ஏற்ற இருபத்தேழாம் வருடம் அமத்சியாவின் மகன் அசரியா யூதாவில் அரசாளத் தொடங்கினான். அவன் அவனுடைய பதினாறு வயதில் அரசனானான். அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்; அவள் எருசலேமைச் சேர்ந்தவள். அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
யெகோவா அரசனை அவன் இறக்கும்வரையும் குஷ்டவியாதியினால் வாதித்தார். குஷ்டவியாதிக்காரனான இவன் ஒரு புறம்பான வீட்டில் இருந்தான். அரசனின் மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டின் மக்களை ஆட்சிசெய்தான்.
அசரியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகளும், அவனுடைய எல்லாச் செயல்களும் யூதா அரசரின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் அசரியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு, தாவீதின் நகரத்தில் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யோதாம் அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலில் சகரியாவின் ஆட்சி
யூதாவின் அரசன் அசரியா அரசாட்சி செய்த முப்பத்தி எட்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகன் சகரியா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். அவன் ஆறு மாதங்கள் அங்கே அரசாண்டான். இவன் தன் தந்தையர் செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்துக்குள் வழிநடத்திய நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவேயில்லை.
யாபேசின் மகன் சல்லூம், சகரியாவுக்கு எதிராகச் சதி செய்தான். மக்களுக்கு முன்பாக அவனைத் தாக்கிக் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அரசனானான். சகரியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகள் யாவும் இஸ்ரயேல் அரசரின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. “உன் சந்ததிகள் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் ஆளுவார்கள்”15:12 [2 இராஜா. 10:30] என்று யெகூவுக்கு யெகோவா கூறிய வார்த்தை இவ்வாறு நிறைவேறிற்று.
இஸ்ரயேலின் அரசனான சல்லூம்
யூதாவின் அரசன் உசியா ஆட்சி செய்த முப்பத்தொன்பதாம் வருடத்தில் யாபேசின் மகன் சல்லூம் சமாரியாவில் அரசனாகி ஒரு மாதம் அரசாண்டான். இதன்பின் காதியின் மகன் மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்குப் போனான். அங்கே யாபேசின் மகன் சல்லூமை தாக்கிக் கொன்றுவிட்டு, அவனுடைய இடத்தில் அரசனானான்.
சல்லூமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் திட்டமிட்ட சதியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மெனாகேம் திர்சாவிலிருந்து புறப்பட்டு, திப்சா பட்டணத்தார் தங்கள் கதவுகளை இவனுக்குத் திறக்க மறுத்தபடியால், திப்சா பட்டணத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலுள்ள எல்லோரையும் தாக்கினான். அவன் திப்சாவைக் கொள்ளையிட்டு, அங்குள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கீறிக்கொன்றான்.
இஸ்ரயேலின் அரசன் மெனாகேம்
யூதாவின் அரசன் அசரியா15:17 அசரியா மற்றும் உசியா என்பது ஒரே நபருடைய பெயர். ஆட்சி செய்த முப்பத்தொன்பதாம் வருடம், காதியின் மகனான மெனாகேம் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் சமாரியாவில் பத்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் தனது ஆட்சிக்காலம் முழுவதிலும் விலகவில்லை.
இவனுடைய காலத்தில் அசீரிய நாட்டின் அரசனான பூல்15:19 பூல் என்பது திக்லாத்பிலேசர் என்றும் அழைக்கப்படுகிறது இஸ்ரயேல் நாட்டுக்குப் படையெடுத்து வந்தான். மெனாகேம் அவனுடைய ஆதரவை பெறுவதற்காகவும், ஆட்சியில் தனது அதிகாரத்தைப் பெலப்படுத்துவதற்காகவும் அவனுக்கு ஆயிரம் தாலந்து15:19 அதாவது, சுமார் 34,000 கிலோகிராம் நிறையுள்ள வெள்ளியைக் கொடுத்தான். மெனாகேம் இப்பணத்தை இஸ்ரயேலிலிருந்தே வசூலித்தான். அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி ஒவ்வொரு செல்வந்தனும் ஐம்பது சேக்கல்15:20 அதாவது, சுமார் 575 கிராம் வெள்ளி வெள்ளியைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அசீரிய அரசன் அங்கு தங்காமல் தன் படைகளுடன் திரும்பிவிட்டான்.
மெனாகேமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய மற்ற செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் மெனாகேம் தன் முற்பிதாக்களைப்போல இறந்தான். அவனுடைய மகன் பெக்காகியா அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலின் அரசனான பெக்காகியா
யூதாவின் அரசன் அசரியா அரசாண்ட ஐம்பதாம் வருடத்தில் மெனாகேமின் மகன் பெக்காகியா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு இவன் விலகவில்லை. அவனுடைய பிரதான அதிகாரிகளில் ஒருவனான ரெமலியாவின் மகன் பெக்கா இவனுக்கு விரோதமாகச் சதி செய்தான். இவன் கீலேயாத்தைச் சேர்ந்த ஐம்பது பேரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய், அர்கோபு, அரியே என்பவர்களோடு பெக்காகியாவை சமாரியாவிலிருந்த அரசனுடைய அரண்மனையில் கொலைசெய்தான். இவ்விதமாக பெக்காகியாவைக் கொன்று அவனுடைய இடத்தில் பெக்கா அரசனானான்.
பெக்காகியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய மற்ற செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரயேலின் அரசனான பெக்கா
யூதாவின் அரசனான அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில் ரெமலியாவின் மகன் பெக்கா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இருபது வருடங்கள் அங்கே அரசாண்டான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் நாட்களில், அசீரிய அரசன் திக்லாத்பிலேசர் என்பவன் படையெடுத்து வந்து தாக்கினான். அவன் ஈயோன், ஆபேல் பெத்மாக்கா, யனோவாக், கேதேசு, ஆத்சோர் ஆகிய பட்டணங்களையும், கீலேயாத், கலிலேயா ஆகிய நாடுகளையும், நப்தலி நாடு முழுவதையும் கைப்பற்றினான். பின்பு அவன் அங்கிருந்த மக்கள் யாவரையும் அசீரியாவுக்கு நாடுகடத்தினான். இதன்பின் ஏலாவின் மகன் ஓசெயா ரெமலியாவின் மகன் பெக்காவுக்கு விரோதமாகச் சதி செய்தான். அவன் அவனைத் தாக்கிக் கொன்றான். பின்பு உசியாவின் மகன் யோதாம் யூதாவில் அரசாண்ட இருபதாம் வருடத்தில் ஓசெயா இஸ்ரயேலின் அரசனாக வந்தான்.
பெக்காவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் சாதித்த செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
யூதாவின் அரசனான யோதாம்
ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் ஆட்சியின் இரண்டாம் வருடத்தில், யூதாவில், உசியாவின் மகன் யோதாம் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள். அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான்.
யோதாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகள், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அந்நாட்களில் யெகோவா சீரிய அரசன் ரேத்சீனையும், ரெமலியாவின் மகன் பெக்கா வையும் யூதாவுக்கு எதிராக அனுப்பத் தொடங்கினார். யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பன் தாவீதின் நகரத்தில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான்.
யூதாவின் அரசன் ஆகாஸ்
ரெமலியாவின் மகன் பெக்காவின் ஆட்சியின் பதினேழாம் வருடத்தில், யூதாவின் அரசனான யோதாமின் மகன் ஆகாஸ் அரசாளத் தொடங்கினான். ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் தனது இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை. அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகனையும் நெருப்பிலே பலியிட்டான். அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிசெலுத்தி, தூபங்காட்டினான்.
அப்பொழுது சீரிய அரசன் ரேத்சீனும் ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஆகாசை சூழ்ந்துகொண்டபோதும், அவனை மேற்கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சீரிய அரசன் ரேத்சீன் யூதாவின் மனிதரைத் துரத்திவிட்டு, ஏலாத்தை சீரியாவுக்குத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அப்பொழுது ஏதோமியர் ஏலாத்துக்குக் குடியிருக்கப் போனார்கள். அவர்கள் இன்றுவரையும் அங்கேயே வாழ்கிறார்கள்.
அரசன் ஆகாஸ், அசீரியாவின் அரசன் திக்லாத்பிலேசருக்குத் தூதுவரை அனுப்பி, “நான் உமது பணியாளனும், உமக்கு வரி செலுத்துகிறவனுமாய் இருக்கிறேன். இப்போது என்னை எதிர்த்துத் தாக்குகின்ற சீரிய அரசனிடமிருந்தும், இஸ்ரயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றும்” என்று கேட்டான். அத்துடன் ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறையிலும் இருந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றை அசீரிய அரசனுக்கு ஒரு அன்பளிப்பாக அனுப்பினான். அசீரிய அரசன் இவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி தமஸ்குவை தாக்கி அதைக் கைப்பற்றினான். அங்கிருந்த குடிமக்களை கீருக்கு நாடுகடத்தி ரேத்சீனையும் கொலைசெய்தான்.
இதன்பின் அரசன் ஆகாஸ், அசீரிய அரசன் திக்லாத்பிலேசரைச் சந்திப்பதற்கு தமஸ்குவுக்குப் போனான். அவன் தமஸ்குவில் ஒரு பலிபீடத்தைக் கண்டு, அதன் அளவு விபரங்கள் உள்ளடங்கிய வரைபடத்தை ஆசாரியனான உரியாவுக்கு அனுப்பினான். அப்படியே ஆசாரியனான உரியா தமஸ்குவிலிருந்து ஆகாஸ் தனக்கு அனுப்பிய வரைபடத்தின்படியே, ஆகாஸ் அரசன் திரும்பி வருவதற்கு முன்பே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான். ஆகாஸ் அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பிவந்தபோது, பலிபீடத்தைக் கண்டு அதன் கிட்டப்போய் காணிக்கைகளைச் செலுத்தினான். அவன் தன் தகன காணிக்கையையும் தானிய காணிக்கையையும் செலுத்தி, பானகாணிக்கைகளையும் ஊற்றி, சமாதான காணிக்கையின் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தான். யெகோவாவுக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம், புதிய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் நடுவில் இருந்தது. அதை ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, புதிய பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்தான்.
இதன்பின் ஆகாஸ் அரசன் ஆசாரியனான உரியாவுக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தான். அவன், “இனிமேல் காலையில் செலுத்தும் தகன காணிக்கையையும், மாலையில் செலுத்தும் தானிய காணிக்கையையும், அரசனுடைய தகன காணிக்கை, தானிய காணிக்கை ஆகியவற்றையும், எல்லா நாட்டு மக்களுடைய தகன காணிக்கைகள், தானிய காணிக்கை, பானகாணிக்கை ஆகிய யாவும் புதிய, பெரிய பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் எல்லா தகன காணிக்கையின், பலிகளின், இரத்தம் முழுவதையும் புதிய பலிபீடத்தில் தெளிக்கவேண்டும். ஆனால் அந்த வெண்கலப் பலிபீடத்தையோ நான் எனக்கு வழிகாட்டுதலை அறிவதற்காக உபயோகிப்பேன்” என்றான். ஆகாஸ் அரசன் கட்டளையிட்டது போலவே ஆசாரியன் உரியா செய்தான்.
ஆகாஸ் அரசன், நகர்த்தும் வெண்கலத்தாங்கிகளின் பக்கத் துண்டுகளையும் எடுத்து தொட்டிகளையும் அகற்றினான். பெரிய தொட்டியை, அதைத் தாங்கிக்கொண்டிருந்த வெண்கல எருதுகளின் மேலிருந்து எடுத்து ஒரு கல் தளத்தின்மேல் வைத்தான். அசீரிய அரசனை திருப்திப்படுத்துவதற்காக, ஆலய வாசலில் கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் பயன்பாட்டிற்குரிய கூடாரத்தையும் எடுத்துவிட்டு, யெகோவாவின் ஆலயத்துக்கு வெளியே அமைந்திருந்த அரசர் உட்செல்லும் வாசலையும் அகற்றிவிட்டான்.
ஆகாஸினுடைய ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசனானான்.
இஸ்ரயேலின் அரசன் ஓசெயா
யூதாவின் அரசன் ஆகாஸ் அரசாண்ட பன்னிரண்டாம் வருடத்தில் ஏலாவின் மகன் ஓசெயா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். அவன் ஒன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். யெகோவாவின் பார்வையில் தீமையானதையே இவனும் செய்தான். ஆனால் இஸ்ரயேலின் முந்தைய அரசர்கள் செய்ததுபோல செய்யவில்லை.
அசீரிய அரசன் சல்மனாசார் ஓசெயாவை தாக்கவந்ததால், ஓசெயா அவனுக்குக் கீழ்பட்டவனாகி வரி செலுத்தி வந்தான். ஆனால் பின்பு ஓசெயா எகிப்திய அரசன் சோ என்பவனிடம் தூதுவரை அனுப்பியதோடு, அசீரிய அரசனுக்கு வருடாவருடம் செலுத்திவந்த வரியைக் கொடுக்காமலும் இருந்தான். இதனால் ஓசெயா ஒரு துரோகி என்று அசீரிய அரசன் கண்டுபிடித்தான். எனவே சல்மனாசார் அவனைப் பிடித்துச் சிறையிலிட்டான். சமாரியாவின் வீழ்ச்சி அசீரிய அரசன் முழு நாட்டையும் தாக்கி, சமாரியாவுக்கு அணிவகுத்துப் போய் அதை மூன்று வருடங்களாக முற்றுகையிட்டிருந்தான். ஓசெயாவின் ஆட்சியின் ஒன்பதாம் வருடத்தில் அசீரிய அரசன் சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடுகடத்தினான். அவன் ஆபோர் ஆற்றுக்கு அருகே கோசானிலும் ஆலாகிலும், மேதியாவின் பட்டணங்களிலும் அவர்களைக் குடியேற்றினான்.
இஸ்ரயேலர் பாவம் காரணமாக நாடு கடத்தப்படுதல்
இஸ்ரயேலர் எகிப்திய அரசனான பார்வோனின் அதிகாரத்திலிருந்து தங்களை விடுதலையாக்கிக் கொண்டுவந்த தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியாலேயே, அவர்களுக்கு இவையெல்லாம் ஏற்பட்டது. அவர்கள் வேறு தெய்வங்களையும் வணங்கி, யெகோவா தங்களுக்கு முன்னால் துரத்திவிட்ட நாட்டினரின் நடைமுறைகளையும் பின்பற்றினார்கள். அத்துடன் இஸ்ரயேல் அரசர்கள் உட்புகுத்திய பாரம்பரிய வழக்கங்களையும் பின்பற்றினர். மேலும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராக பிழையான செயல்களை இரகசியமாகவும் செய்தனர். அத்துடன் காவற் கோபுரத்திலிருந்து, அரணாக்கப்பட்ட பட்டணம் வரையும் தங்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் வழிபாட்டு மேடைகளைக் கட்டினார்கள். ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும், விசாலமான ஒவ்வொரு மரத்தின் கீழும் புனித கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் நாட்டினார்கள். யெகோவா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட நாட்டினர் செய்ததுபோல் ஒவ்வொரு வழிபாட்டு மேடைகளிலும் தூபங்காட்டினார்கள். கொடிய காரியங்களையும் செய்து யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள். “இவற்றைச் செய்யவேண்டாம்”17:12 [யாத். 20:4],[5] என்று யெகோவா குறிப்பாகத் திரும்பத்திரும்ப எச்சரித்த விக்கிரக வழிபாட்டையே அவர்கள் செய்துவந்தார்கள். யெகோவா தமது இறைவாக்கினர் மூலமும், தரிசனம் காண்பவர்கள் மூலமும், “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகுங்கள். நான் எனது பணியாட்களான இறைவாக்கினர்மூலம் கொடுத்து, உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்ட முழு சட்டத்தின்படி எனது கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளுங்கள்” என்று இஸ்ரயேலையும், யூதாவையும் எச்சரித்தார்.
ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள். யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கைக்கொள்ளும்படி எச்சரித்துக் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், அவர்களுடன் செய்த உடன்படிக்கையையும் அவர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் உங்களைச்சுற்றி வாழும் நாட்டினர் செய்வதுபோல் செய்யவேண்டாம்” என்று சொல்லியுங்கூட, அவர்கள் அதையே பின்பற்றினார்கள். யெகோவா செய்யவேண்டாமென்று விலக்கியவற்றையே அவர்கள் செய்தார்கள்.
தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள். எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள். குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டு, யெகோவாவின் பார்வையில் தீய செயல்களைச் செய்வதற்குத் தங்களை விற்று யெகோவாவைக் கோபமூட்டினார்கள்.
இதனால் யெகோவா இஸ்ரயேலரில் அதிக கோபங்கொண்டு தமது சமுகத்திலிருந்து அவர்களை அகற்றிவிட்டார். யூதா கோத்திரம் மட்டுமே மீதியாயிருந்தது. யூதாவுங்கூட தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் இஸ்ரயேலர் அறிமுகப்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றினர். இதனால் யெகோவா இஸ்ரயேலர் அனைவரையும் வெறுத்துத் தள்ளினார். அவர்களை அவர் துன்பத்துக்குள்ளாக்கி, தமது சமுகத்திலிருந்து முழுவதுமாகத் துரத்துண்டு போகும்வரையும் கொள்ளையிடுபவர்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார்.
தாவீதின் வம்சத்திலிருந்து17:21 தாவீதின் வம்சத்திலிருந்து அல்லது தெற்கு ராஜ்யம் யூதேயா என்றழைக்கப்பட்டது. யெகோவா இஸ்ரயேலரை17:21 இஸ்ரயேலரை என்றால் வடக்கு ராஜ்யம் எனப்படும். அகற்றியதும், அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை தங்களுக்கு அரசனாக்கினார்கள். யெரொபெயாமோ இஸ்ரயேலை யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகச் செய்து அவர்களைப் பெரும்பாவமொன்றைச் செய்யவும் தூண்டினான். இஸ்ரயேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களையும் தொடர்ந்து செய்தார்கள். அவற்றைவிட்டு விலகவில்லை. யெகோவா தமது பணியாளர்களான இறைவாக்கினர்மூலம் எச்சரித்திருந்தபடியே, அவர்களைத் தமது முன்னிருந்து நீக்கிப்போடும்வரை அவர்கள் இவற்றைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இன்றும் அங்கேயே இருக்கிறார்கள்.
சமாரியாவில் திரும்பக் குடியேறல்
அசீரிய அரசன், பாபிலோனிலிருந்தும், கூத்தா, ஆவா, ஆமாத், செப்பர்வாயீம் ஆகிய இடங்களிலிருந்தும் மனிதர்களைக் கொண்டுவந்து சமாரியாவின் பட்டணங்களில் இஸ்ரயேலருக்குப் பதிலாக குடியேற்றினான். அவர்கள் சமாரியாவைத் தங்களுடைய உடைமையாக்கிக் கொண்டு அந்தப் பட்டணங்களிலே வாழ்ந்தார்கள். அவர்கள் முதன்முதலாக அங்கு வந்து வாழ்ந்தபோது யெகோவாவை வழிபடவில்லை. அதனால் யெகோவா அவர்களின் மத்தியில் சிங்கங்களை அனுப்பினார். அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன. அப்பொழுது, “நீர் நாடுகடத்தி சமாரியா பட்டணங்களில் குடியேற்றிய மக்களுக்கு, இந்த நாட்டின் தெய்வத்தை எப்படி வழிபடவேண்டுமென்று தெரியவில்லை. இந்த நாட்டு தெய்வத்திற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாதபடியால் அவர் சிங்கங்களை அவர்கள் மத்தியில் அனுப்பியிருக்கிறார். அவை அவர்களைக் கொல்கின்றன” என்று அசீரிய அரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது அசீரிய அரசன் அவர்களிடம், “சமாரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசாரியர்களில் ஒருவனை அங்கு வாழ்வதற்காகத் திரும்பக் கூட்டிக்கொண்டு போங்கள். அவன் அங்கு வசித்து அந்நாட்டின் தெய்வத்தை எப்படி வணங்க வேண்டுமென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கட்டும்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே சமாரியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆசாரியர்களில் ஒருவன் பெத்தேலுக்கு வந்து அங்கே வாழ்ந்து அவர்களுக்கு யெகோவாவை எப்படி வழிபடவேண்டுமென்று கற்பித்தான்.
ஆனாலும் ஒவ்வொரு நாட்டினரின் மக்கள் குழுவும் தாங்கள் குடியமர்த்தப்பட்ட அநேக பட்டணங்களில், அவரவருடைய சொந்த தெய்வங்களை உருவாக்கி சமாரியரினால் கட்டப்பட்ட உயரமான வழிபாட்டு மேடைகளிலும், கோயில்களிலும் அவற்றை வைத்தார்கள். பாபிலோன் பட்டண மனிதர் சுக்கோத் பெனோத் தெய்வத்தையும், கூத் பட்டணத்து மனிதர் நேர்கால் தெய்வத்தையும், ஆமாத் பட்டணத்து மனிதர் அசிமா தெய்வத்தையும், ஆவீம் பட்டணத்து மனிதர் நிபேகாஸ் தெய்வத்தையும், தர்காக் தெய்வத்தையும் உருவங்களாகச் செய்தனர். செப்பர்வியர் தங்கள் செப்பர்வாயிமின் தெய்வங்களான அத்ரமெலேக்கு, அன்னமெலேக்கு என்னும் தெய்வங்களுக்கு தங்கள் பிள்ளைகளையும் நெருப்பில் பலி செலுத்தினார்கள். அவர்கள் யெகோவாவை வழிபட்டார்கள். ஆனாலும், வழிபாட்டு மேடைகளிலுள்ள கோவில்களில் தங்கள் பூசாரிகளாகப் பணிசெய்வதற்கு தங்கள் மக்களிலிருந்து பலதரப்பட்டவர்களையும் நியமித்தார்கள். அவர்கள் யெகோவாவை வழிபட்டாலும், தாங்கள் விட்டுவந்த நாட்டினரின் முறைகளுக்கேற்ப தங்கள் சொந்தத் தெய்வங்களுக்கும் பணிசெய்து வந்தார்கள்.
அவர்கள் இன்றுவரை தங்கள் முந்தைய கிரியைகளுக்கேற்றபடியே செய்து வருகிறார்கள். ஆனால் யெகோவாவை உண்மையாக வழிபடவோ, அவர் இஸ்ரயேல் என்று பெயரிட்ட யாக்கோபின் சந்ததிகளுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவோ இல்லை. யெகோவா இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்தபோது அவர்களிடம், “நீங்கள் வேறு தெய்வங்களை வழிபடவோ, தலைவணங்கவோ, அவைகளுக்குப் பணிசெய்யவோ, பலி செலுத்தவோ வேண்டாம். எகிப்திலிருந்து பலத்த ஆற்றலினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களைக் கொண்டுவந்த யெகோவாவையே நீங்கள் வழிபடவேண்டும். அவரை வணங்கி அவருக்கு மட்டுமே பலிசெலுத்தவேண்டும். அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் நீங்கள் எப்பொழுதும் கைக்கொள்ளக் கவனமாயிருக்க வேண்டும். வேறு தெய்வங்களை வழிபட வேண்டாம். நான் உங்களுடன் செய்த உடன்படிக்கையை மறவாமலும், வேறு தெய்வங்களை வழிபடாமலும் இருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் இறைவனாகிய யெகோவாவை மட்டுமே வழிபடுங்கள். அவரே உங்களுடைய எல்லாப் பகைவர்களின் கையிலிருந்தும் உங்களை விடுதலையாக்குவார்” என்று கட்டளையிட்டிருந்தார்.
ஆனாலும் அவர்களோ செவிகொடுக்காமல் தொடர்ந்து தங்கள் பழைய வழக்கங்களையே செய்துவந்தார்கள். இந்த மக்கள் யெகோவாவை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே தங்கள் விக்கிரகங்களுக்கும் பணிசெய்தார்கள். இன்றுவரை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோல அவர்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
யூதாவின் அரசனான எசேக்கியா
ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான்18:4 நெகுஸ்தான் என்றால் வெண்கலம் பாம்பு என்று பொருள்படும். என்று அழைக்கப்பட்டது.
எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான். யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான். அவன் பெலிஸ்தியருடன் போரிட்டு, காவற்கோபுரம் தொடங்கி அரணான பட்டணம்வரை காசாவின் எல்லைவரை அவர்களைத் துரத்தினான்.
எசேக்கியா அரசனாக வந்த நான்காம் வருடம், ஏலாவின் மகனான இஸ்ரயேல் அரசன் ஓசெயாவின் ஏழாம் வருடமாயிருந்தது. அந்த வருடத்தில் அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டான். மூன்று வருடங்களுக்குப் பின்பு அசீரியர் சமாரியாவைக் கைப்பற்றினார்கள். அந்த வருடம் எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியும், இஸ்ரயேலின் அரசனாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியுமாயிருந்தது. அப்போது அசீரிய அரசன், இஸ்ரயேலரை அங்கிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தி, அவர்களைக் ஆலாகிலும், ஆபோர் ஆற்றுக்கு அருகே இருக்கும் கோசானிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய உடன்படிக்கையை மீறியதால்தான் இவை நடந்தன. யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்த கட்டளைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, அவற்றின்படி நடக்கவுமில்லை.
எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான். யூதாவின் அரசனாகிய எசேக்கியா, லாகீசிலுள்ள அசீரிய அரசனுக்கு அனுப்பிய செய்தியாவது: “நான் பிழை செய்தேன். என்னைவிட்டுப் போய்விடும். நீர் கேட்பது எதையும் நான் கொடுக்கிறேன்” என்பதாகும். அப்பொழுது அசீரிய அரசன் எசேக்கியாவிடம் முந்நூறு தாலந்து வெள்ளியையும், முப்பது தாலந்து தங்கத்தையும் தனக்காகப் பெற்றுக்கொண்டான். அப்படியே எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறைகளிலும் இருந்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
அத்துடன் அவ்வேளையில் யூதாவின் அரசனான எசேக்கியா யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளையும், கதவு நிலைகளையும், தகடாக மூடிச்செய்திருந்த தங்கத்தையும் கழற்றி எடுத்து அசீரிய அரசனிடம் கொடுத்தான்.
சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்தல்
ஆனாலும் அசீரிய அரசன் தனது பிரதான தளபதியையும், தலைமை அதிகாரியையும், படைத்தளபதியையும் ஒரு பெரிய இராணுவப் படையுடன் லாகீசிலிருந்து எருசலேமிலிருந்த எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் எருசலேமுக்கு வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றார்கள். அவர்கள் அரசனை அங்கே வரும்படி அழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவர்களிடத்திற்கு வெளியே போனார்கள்.
படைத்தளபதி அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது:
“ ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே: நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்? உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்? இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான். “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்று என்பாயாகில், “எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா?
“ ‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்? யெகோவாவின் சம்மதமில்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’ ” என்றான்.
அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில்18:26 எபிரெய மொழியில் என்றால் யூதருடைய மொழியில் என்று பொருள்படும். பேசவேண்டாம்” என்றார்கள்.
ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான்.
அதன்பின் அந்தத் தளபதி எழுந்து நின்று எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள். அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடைய கையிலிருந்து உங்களை விடுவிக்க அவனால் முடியாது. எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம்.
“எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானமாகி, என்னிடம் வாருங்கள். அப்போது உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான். நான் திரும்ப வந்து தானியம் நிறைந்ததும், புதிய திராட்சை இரசம் உள்ளதும், அப்பமும் திராட்சைத் தோட்டங்களும், ஒலிவமரங்களும், தேனும் நிறைந்ததுமான உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு உங்களைக் கொண்டுபோகும் வரைக்கும் நீங்கள் அப்படியே சாப்பிட்டுக் குடிப்பீர்கள். மரணத்தையல்ல வாழ்வையே தெரிந்துகொள்ளுங்கள்.
“எசேக்கியாவுக்குச் செவிகொடுக்க வேண்டாம். ‘யெகோவா எங்களை விடுவிப்பார்’ என்று கூறி உங்களைத் தவறாக வழிநடத்துகிறான். எந்த நாட்டின் தெய்வங்களாவது அசீரிய அரசனின் கையிலிருந்து தன் நாட்டை எப்போதாவது மீட்டதுண்டோ? ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா என்னும் பட்டணங்களின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ? இந்த நாடுகளின் தெய்வங்களில் என் கையிலிருந்து தங்கள் நாட்டை விடுவிக்கக்கூடியதாக இருந்த தெய்வம் எது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்? என்கிறார்” என்றான்.
இவற்றுக்கெல்லாம் பதில் கொடுக்கக் கூடாதென்று அரசனால் கட்டளை கொடுக்கப்பட்டபடியினால், மக்கள் மவுனமாயிருந்து எவ்வித பதிலையும் அவனுக்குக் கொடுக்கவில்லை.
பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள்.
ஏசாயாவின் இறைவாக்கு
எசேக்கியா அரசன் இதைக் கேட்டபோது, தனது உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்றான். அவன் அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும், செயலாளராகிய செப்னாவையும், பிரதம ஆசாரியர்களையும், துக்கவுடை உடுத்தியவர்களாக ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவிடம் அனுப்பினான். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசன் கூறுவது இதுவே: இன்றைய நாள் துயரமும், கண்டனமும், அவமானமும் நிறைந்த நாளாய் இருக்கிறது. பிரசவ வேளையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் பெலனில்லாதவர்களைப்போல நாங்கள் இருக்கிறோம். உயிருள்ள இறைவனை நிந்திக்கும்படி, அசீரிய அரசன் அனுப்பிய படைத்தளபதி ரப்சாக்கேயின் வார்த்தைகளையெல்லாம், உமது இறைவனாகிய யெகோவா கேட்டிருக்கக்கூடும். அதனால் உமது இறைவனாகிய யெகோவா, தான் கேட்ட வார்த்தைகளுக்காக அவனைத் தண்டிக்கவும் கூடும். ஆகவே நீர் இன்னும் மீதமிருக்கும் மக்களுக்காக வேண்டுதல் செய்யும்” என்றார்கள்.
எசேக்கியா அரசனின் அதிகாரிகள் ஏசாயாவிடம் வந்தபோது, ஏசாயா அவர்களிடம், “உங்கள் அரசனிடம் போய், ‘அசீரிய அரசனின் வேலைக்காரர் என்னைத் தூஷித்துப் பேசிய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கேட்டவுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகக்கூடிய ஒரு ஆவியை நான் அவனுக்குள் அனுப்புவேன். அவனுடைய சொந்த நாட்டிலேயே அவனை நான் வாளால் வீழ்த்துவேன்’ என்று யெகோவா கூறுகிறார்” என்றான்.
அசீரிய அரசன் லாகீசிலிருந்து வெளியேறி விட்டான் என்று அந்தப் படைத்தளபதி ரப்சாக்கே கேள்விப்பட்டான். உடனே அவன் அங்கிருந்துபோய், அசீரிய அரசன் லிப்னாவுக்கு விரோதமாய் யுத்தம் செய்வதைக் கண்டான்.
அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். எனவே திரும்பவும் எசேக்கியாவிடம் இந்தச் செய்தியுடன் தூதுவரை அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது, ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? என்னுடைய முற்பிதாக்களால் அழிக்கப்பட்ட நாட்டின் தெய்வங்களான கோசான், ஆரான், ரேசேப் ஆகிய தெய்வங்களால் அவர்களை விடுவிக்க முடிந்ததா? மற்றும் தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவை விடுவித்தனவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.”
எசேக்கியாவின் மன்றாட்டு
எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான். எசேக்கியா யெகோவாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, கேருபீன்களின் நடுவில் அரியணையில் அமர்ந்திருப்பவரே, பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் மேலாக நீர் மாத்திரமே இறைவனாயிருக்கிறீர். வானத்தையும், பூமியையும் படைத்தவரும் நீரே. யெகோவாவே, உம்முடைய செவியைச் சாய்த்துக்கேளும். யெகோவாவே, உம்முடைய கண்களைத் திறந்து பாரும். உயிரோடிருக்கும் இறைவனை நிந்திப்பதற்கு சனகெரிப் அனுப்பியுள்ள வார்த்தைகளைக் கேளும்.
“யெகோவாவே, அசீரிய அரசர்கள் இந்த நாடுகளையும், அவர்களுடைய நிலங்களையும் பாழாக்கியிருப்பது உண்மைதான். அவர்கள் அவர்களுடைய தெய்வங்களையுங்கூட நெருப்பில்போட்டு அழித்துவிட்டார்கள். ஏனெனில் அவை மனிதரின் கைகளினால் வடிவமைக்கப்பட்ட மரமும், கல்லுமேயல்லாமல் தெய்வங்களல்ல. இப்போதும் எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் மாத்திரமே இறைவனாகிய யெகோவா என்று பூமியிலுள்ள எல்லா அரசுகளும் அறியும்படி அவனுடைய கையிலிருந்து எங்களை விடுவியும்” என்று மன்றாடினான்.
சனகெரிப்பின் வீழ்ச்சி
பின்பு ஆமோஸின் மகனான ஏசாயா எசேக்கியாவுக்கு அனுப்பிய செய்தியாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனான சனகெரிப்பைக் குறித்து நீ செய்த மன்றாட்டைக் கேட்டிருக்கிறேன். ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே:
“ ‘சீயோனின் கன்னிப்பெண்
உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள்.
எருசலேமின் மகள்
நீ பயந்து ஓடுவதைப் பார்த்து, உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள்.
நீ யாரை நிந்தித்துத் தூஷித்தாய்?
யாருக்கு விரோதமாய் சத்தமாய்ப் பேசி,
அகங்காரக் கண்களினால் நோக்கினாய்?
இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா?
உனது தூதுவர்கள் மூலம்
நீ ஆண்டவரை நிந்தித்துச் சொன்னதாவது:
“நான் அநேக தேர்களுடன் மலையுச்சிகளுக்கும்
லெபனோனின் சிகரங்களுக்கும் ஏறினேன்.
அங்குள்ள மிக உயர்ந்த கேதுரு மரங்களையும்
மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன்.
அதன் உயர்ந்த கடைசி எல்லைக்கும்,
அதன் அடர்த்தியான காட்டுப் பகுதிக்கும் போனேன்.
அந்நிய நிலங்களில் கிணறுகள் வெட்டி,
அதிலே தண்ணீர் குடித்தேன்.
என் உள்ளங்கால்களினால்
எகிப்தின் நீரோடைகள் எல்லாவற்றையும் வற்றப்பண்ணினேன்.”
“ ‘வெகுகாலத்துக்கு முன்னமே நான்
அதைத் திட்டமிட்டேன் என்பதை நீ கேள்விப்படவில்லையா?
பூர்வ நாட்களில் நான் அதைத் திட்டமிட்டேன்.
இப்பொழுது அவற்றை நடைபெறச் செய்திருக்கிறேன்.
அதனால் நீ அரணான பட்டணங்கள்
எல்லாவற்றையும் கற்குவியலாக மாற்றினாய்.
அவற்றின் மக்கள் வலிமை இழந்து,
சோர்வுற்று வெட்கத்திற்குள்ளானார்கள்.
அவர்கள் வயலின் செடிகளைப்போலவும்,
இளம் கதிர்களைப்போலவும்,
கூரையில் முளைத்து வளரும் முன்பே பொசுக்கப்பட்டுப் போகும்
புல்லைப்போலவும் இருக்கிறார்கள்.
“ ‘ஆனால் நீ எங்கே தங்கியிருக்கிறாய், எப்போது வருகிறாய்,
போகிறாய் என்பதும்,
நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.
எனக்கு எதிராகக் கோபங்கொண்டு,
எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது.
ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும்,
என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு,
நீ வந்த வழியாய்
உன்னைத் திரும்பச்செய்வேன்.’
“எசேக்கியாவே, இதுவே உனக்கு அடையாளமாய் இருக்கும்:
“இந்த வருடம் தானாக விளைகிறதை நீங்கள் சாப்பிடுவீர்கள்.
இரண்டாம் வருடத்தில் அதன் விதையிலிருந்து முளைப்பதைச் சாப்பிடுவீர்கள்.
மூன்றாம் வருடத்தில் நீங்களாக விதைத்து,
அறுத்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.
யூதாவின் வம்சத்தில் தப்பி மீதியாயிருப்பவர்கள்
மீண்டும் கீழே வேரூன்றி மேலே கனி கொடுப்பார்கள்.
ஏனெனில் எருசலேமிலிருந்து மீதியானவர்களும்,
சீயோன் மலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டத்தாரும் வருவார்கள்.
சேனைகளின் யெகோவாவின் வைராக்கியமே இதை நிறைவேற்றும்.
“ஆகையால், அசீரிய அரசனைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே:
“ ‘அவன் இந்தப் பட்டணத்திற்குள் செல்வதில்லை,
இதின்மேல் அம்பை எய்வதுமில்லை.
அவன் தனது கேடகத்தைப் பிடித்துக்கொண்டு அதற்குமுன் வருவதுமில்லை,
அல்லது அதற்கு விரோதமாக முற்றுகைத்தளம் அமைப்பதுமில்லை.
அவன் வந்த வழியாகவே திரும்புவான்;
இந்தப் பட்டணத்துக்குள் பிரவேசிக்கமாட்டான்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
என் நிமித்தமும், என் அடியவன் தாவீதின் நிமித்தமும்
நான் இந்தப் பட்டணத்தைப் பாதுகாத்துக் காப்பாற்றுவேன்.’ ”
அந்த இரவே யெகோவாவின் தூதன் வெளியே போய், அசீரியாவின் முகாமிலிருந்த இலட்சத்து எண்பத்தையாயிரம்பேரைக் கொன்றான். மக்கள் அதிகாலையில் எழும்பிப் பார்த்தபோது, வீரர்கள் எல்லோரும் அங்கே பிணமாகக் கிடக்கக் கண்டார்கள். எனவே அசீரிய அரசனான சனகெரிப் முகாமை அகற்றி, அங்கிருந்து நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
ஒரு நாள், அவன் தனது தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் வணங்கும்போது, அவனுடைய மகன்களான அத்ரமேலேக்கும், சரெத்செரும் அவனை வாளினால் கொலைசெய்துவிட்டு, அரராத் நாட்டிற்குத் தப்பியோடினார்கள். அவனுடைய மகன் எசரத்தோன் அவனுக்குப்பின் அரசனானான்.
எசேக்கியாவின் வியாதி
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான்.
எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான்.
ஏசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடந்துசெல்ல முன்பே யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனாகிய எசேக்கியாவிடம், ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உனது வேண்டுதலைக் கேட்டேன், உன் கண்ணீரையும் கண்டேன்; நான் உன்னைச் சுகப்படுத்துவேன். இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீ யெகோவாவின் ஆலயத்துக்குப் போவாய். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். எனக்காகவும், என் தாசனாகிய தாவீதுக்காகவும் இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன்’ என்று கூறுகிறார் என்று சொல்” என்றார்.
அப்பொழுது ஏசாயா, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்துப் பற்றுப்போடுங்கள்” என்றான். அவர்கள் அவ்வாறே செய்து அவனுடைய கட்டியின்மீது பற்றுப்போட்டார்கள். அப்பொழுது அவன் சுகமடைந்தான்.
எசேக்கியா ஏசாயாவிடம், “யெகோவா என்னைச் சுகப்படுத்துவார் என்பதற்கும் நான் இன்றிலிருந்து மூன்றாம் நாளில் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான்.
அதற்கு ஏசாயா பதிலாக, “யெகோவா உனக்கு வாக்குப்பண்ணியபடியே செய்வார் என்பதற்கு ஒரு அடையாளம் இதுவே: நீ சூரிய கடிகாரத்தின் நிழல் பத்துப் படிகள் முன்னேபோவதையா அல்லது பின்னேபோவதையா விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் படிகள் முன்னோக்கி செல்வது ஒரு எளிய காரியம்.” ஆகவே, “பத்துப் படிகள் பின்னோக்கிப் போகட்டும்” என்றான்.
அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா யெகோவாவிடம் மன்றாடினான். அப்படியே யெகோவா ஆகாஸின் சூரிய கடிகார நிழலைப் பத்துப் படிகள் பின்னாகப் போகும்படி செய்தார்.
பாபிலோனிலிருந்து தூதுவர்
அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் பெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதிப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான். எசேக்கியா அந்தத் தூதுவரை வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களிலுள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை.
அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா எசேக்கியா அரசனிடம், “அந்த மனிதர் எங்கிருந்து வந்தார்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா அதற்குப் பதிலாக, “அவர்கள் மிகவும் தூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று பதில் சொன்னான்.
இறைவாக்கினன் அவனிடம், “உனது அரண்மனையில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “எனது அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எனது பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமேயில்லை” எனப் பதிலளித்தான்.
அதற்கு ஏசாயா எசேக்கியாவிடம், “யெகோவாவின் வார்த்தையைக் கேள். உனது அரண்மனையில் உள்ள ஒவ்வொன்றும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்து வைத்த யாவும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும் காலம் நிச்சயமாக வரும். அவைகளில் ஒன்றாகிலும் மீந்திருக்காது என்று யெகோவா கூறுகிறார். மேலும், நீ பெற்றெடுக்கும் உனது சந்ததியாகிய உனக்குப் பிறக்கும் சொந்த பிள்ளைகளில் சிலரும் கைதிகளாய் கொண்டுபோகப்பட்டு, பாபிலோன் அரசனின் அரண்மனையில் அதிகாரிகளாய் இருப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார்” என்றான்.
அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஆனால் தனக்குள்ளே, என் வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் இருக்காதா? என்று நினைத்தான்.
எசேக்கியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய எல்லா சாதனைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. பட்டணத்துக்குள் தண்ணீரைக் கொண்டுவருவதற்கு அவன் எவ்வாறு குளமும், சுரங்கமும் அமைத்தான் என்பது அதில் அடங்கியுள்ளன. எசேக்கியா தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவன் மகன் மனாசே அரசனானான்.
யூதாவின் அரசன் மனாசே
மனாசே அரசனானபோது அவன் பன்னிரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எப்சிபாள். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய மக்களின் வெறுக்கத்தக்க பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, யெகோவாவின் பார்வையில் தீமைசெய்தான். தனது தகப்பனாகிய எசேக்கியா அழித்த வழிபாட்டு மேடைகளை இவன் திரும்பக் கட்டினான். அத்துடன் இஸ்ரயேல் அரசனான ஆகாப் செய்ததுபோல, பாகாலுக்கு பலிபீடங்களைக் கட்டி, அசேரா விக்கிரக தூணையும் அமைத்தான். வானத்தின் எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விழுந்து வழிபட்டான். யெகோவா எருசலேமில் என் பெயரை வைப்பேன் என்று கூறியிருந்த யெகோவாவின் ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். யெகோவாவின் ஆலயத்திலுள்ள இரண்டு முற்றங்களிலும் வானத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். தன் சொந்த மகனையே நெருப்பில் பலியிட்டு, மந்திரவித்தை, பில்லிசூனியம் ஆகியவற்றைச் செய்து, ஜோசியக்காரரிடமும், குறிசொல்கிறவர்களிடமும் ஆலோசனை பெற்றான். யெகோவாவின் பார்வையில் அதிக தீமையானவற்றைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான்.
மனாசே தான் செய்த செதுக்கப்பட்ட அசேரா விக்கிரக தூணைக் கொண்டுபோய் ஆலயத்தில் வைத்தான். இந்த ஆலயத்தைப் பற்றியே யெகோவா தாவீதுக்கும் அவன் மகன் சாலொமோனுக்கும், “இஸ்ரயேலிலுள்ள எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், அதிலுள்ள இந்த ஆலயத்திலும் என்னுடைய பெயரை என்றென்றுமாக வைப்பேன் என்று சொல்லியிருந்தார். என்னுடைய அடியவனாகிய மோசே இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். அப்படி இருப்பீர்களானால் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டிலிருந்து திரும்பவும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்” என்றும் யெகோவா கூறியிருந்தார். ஆனால் மக்களோ அதைக் கவனித்துக் கேட்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்யத்தக்கதாக மனாசே அவர்களை வழிதவறி நடக்கப்பண்ணினான்.
யெகோவா இறைவாக்கினரான தமது பணியாட்கள் மூலம் சொன்னதாவது: “யூதாவின் அரசனாகிய மனாசே இந்த அருவருக்கத்தக்க பாவங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன் இருந்த எமோரியரைப் பார்க்கிலும் கூடுதலான கொடுமைகளைச் செய்து, தன்னுடைய விக்கிரகங்களினால் யூதாவைப் பாவத்துக்குள் வழிநடத்தினான். ஆகையினால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளும் அதிரும்படியாக யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் ஒரு பெரிய அழிவைக் கொண்டுவரப் போகிறேன் என்று கூறுகிறார். சமாரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அளவு நூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராய் பயன்படுத்தப்பட்ட தூக்கு நூலையும் நான் எருசலேமுக்கு மேலாகப் பிடிப்பேன். ஒருவன் ஒரு பாத்திரத்தைத் துடைத்து, அதைத் தலைகீழாக கவிழ்க்கிறதுபோல் நான் எருசலேமைத் துடைத்து அழித்துவிடுவேன். நான் என் உரிமைச்சொத்திலிருந்து மீதியாயிருப்பவர்களை கைவிட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் தங்களுடைய பகைவர்கள் எல்லோராலும் கொள்ளையிடப்பட்டு சூறையாடப்படுவார்கள். ஏனெனில், அவர்களுடைய முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இன்றுவரை என்னுடைய பார்வையில் தீமையானவற்றையே செய்து எனக்குக் கோபமூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.”
மேலும் மனாசே எருசலேமை ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் அதிக குற்றமில்லாத இரத்தம் சிந்தி நிரப்பினான். அத்துடன் யெகோவாவின் பார்வையில் தான் செய்த பாவத்தோடு, யூதாவையும் பாவம் செய்யப்பண்ணி அவர்களையும் தீமையானவற்றைச் செய்யப் பண்ணினான்.
மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பாவங்கள் உட்பட அவன் செய்த யாவும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் அரண்மனைத் தோட்டமாகிய ஊசாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகனான ஆமோன் அரசனானான்.
யூதாவின் அரசனான ஆமோன்
ஆமோன் அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் யோத்பா பட்டணத்தைச் சேர்ந்த ஆரூத்சின் மகள் மெசுல்லேமேத் என்பவள். இவனும் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். தன் தகப்பனுடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவன் வணங்கிய விக்கிரகங்களையே வணங்கினான். தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டதோடு, யெகோவாவின் வழிகளிலும் அவன் நடக்கவில்லை.
ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அரசனை அவனுடைய அரண்மனையில் கொலைசெய்தார்கள். அதன்பின் அந்த நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராகச் சதிசெய்த எல்லோரையும் கொலைசெய்து, அவனுடைய இடத்தில் அவனுடைய மகன் யோசியாவை அரசனாக்கினார்கள்.
ஆமோனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இவன் ஊசாவின் தோட்டத்தில் தன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோசியா அரசனானான்.
சட்டம் கண்டெடுக்கப்படுதல்
யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான்; இவனுடைய தாயின் பெயர் எதிதாள். இவள் போஸ்காத் நாட்டைச் சேர்ந்த அதாயாவின் மகள். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, தன் தந்தையான தாவீதின் எல்லா வழிகளிலும் நடந்தான். அவன் இடது புறமாவது வலது புறமாவது விலகவில்லை.
யோசியா அரசன் தன் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்கிற செயலாளரை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினான். யோசியா அவனிடம், “நீ பிரதான ஆசாரியனான இல்க்கியாவிடம் போய், மக்களிடமிருந்து வாசல் காவலாளர் சேகரித்து யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்த பணத்தை ஆயத்தப்படுத்தும்படி சொல். யெகோவாவினுடைய ஆலய வேலையை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அதை ஒப்புவி. அதை யெகோவாவினுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பவர்களுக்குக் கூலியாகக் கொடுக்கும்படி சொல். இதைச் தச்சர், கட்டிட வேலையாட்கள், கொல்லரிடமும் கொடுக்கச்சொல். அதைக்கொண்டு ஆலயத் திருத்த வேலைக்கு வேண்டிய மரங்களையும், வெட்டப்பட்ட கற்களையும் வாங்கும் படியும் சொல். ஆனாலும் அவர்கள் நேர்மையாய் நடப்பவர்கள் என்பதால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்துக்கு அவர்கள் செலவு விபரம் காட்டவேண்டியதில்லை என்றும் இல்க்கியாவிடம் சொல்” என்றான்.
அப்பொழுது ஆசாரியன் இல்க்கியா செயலாளரிடம், “நான் சட்டப் புத்தகத்தை யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்றான். இல்க்கியா சாப்பானிடம் அதைக் கொடுக்க, சாப்பான் அதை வாசித்தான். அப்பொழுது செயலாளராகிய சாப்பான் அரசனிடம் போய், “உம்முடைய அதிகாரிகள் ஆலயத்திலிருந்த பணத்தை எடுத்து யெகோவாவினுடைய ஆலய வேலையை செய்பவர்களிடமும், மேற்பார்வை செய்பவர்களிடமும் ஒப்படைத்துள்ளார்கள்” என்று அறிவித்தான். மேலும் செயலாளராகிய சாப்பான், “ஆசாரியன் இல்க்கியா எனக்கு ஒரு புத்தகத்தை தந்திருக்கிறான்” என்று சொல்லி அரசனுக்கு முன்பாக அதை வாசித்தான்.
அந்த சட்டப் புத்தகத்தின் வார்த்தைகளை அரசன் கேட்டபோது, தன் மேலுடையைக் கிழித்தான். அதன்பின் அவன் ஆசாரியன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மிகாயாவின் மகன் அக்போருக்கும், செயலாளராகிய சாப்பானுக்கும், அரசனின் உதவியாளன் அசாயாவுக்கும் இந்த உத்தரவைக் கொடுத்தான்: “நீங்கள் போய், கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதைப் பற்றி, எனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், முழு யூதாவுக்காகவும் யெகோவாவிடம் விசாரித்துக் கேளுங்கள். எங்கள் முற்பிதாக்கள் இந்தப் புத்தகத்திலுள்ள வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனதால், எங்களுக்கு எதிராகப் பற்றியெரியும் யெகோவாவின் கோபம் பெரியதாயிருந்தது. அதில் எங்களுக்கு எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் அவர்கள் நடக்கவில்லை.”
அப்படியே ஆசாரியனான இல்க்கியா, அகீக்காம், அக்போர், சாப்பான், அசாயா என்பவர்கள் இறைவாக்கினள் உல்தாளிடம் போனார்கள். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகன் சல்லூம் என்னும் ஆசாரிய ஆடைகளைப்22:14 ஆடைகளை அல்லது அரச உடைகள் எனவும் அழைக்கப்படும். பராமரிப்பவனின் மனைவி. அவள் எருசலேமின் இரண்டாம் வட்டாரத்தில் குடியிருந்தாள்.
அவள் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் நீங்கள் போய், ‘யெகோவா சொல்வது இதுவே: யூதாவின் அரசன் வாசித்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியும், இந்த இடத்துக்கும் இதில் வாழும் மக்களுக்கும் நான் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். ஏனென்றால் அவர்கள் என்னைக் கைவிட்டு, வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளால் செய்த எல்லா விக்கிரகங்களினாலும் என்னைக் கோபப்படுத்தினார்கள். அதனால் என்னுடைய கோபம் இந்த இடத்துக்கு எதிராக மூண்டு எரியும். அது தணிக்கப்படமாட்டாது’ என்கிறார். யெகோவாவிடம் விசாரித்துவரும்படி உங்களை அனுப்பிய யூதா அரசனிடம் நீங்கள் போய்ச் சொல்லுங்கள், ‘நீ கேட்ட வார்த்தைகளைப்பற்றி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: இந்த இடத்துக்கு எதிராகவும், அதன் குடிகளுக்கு எதிராகவும் அவர்கள் சபிக்கப்பட்டவர்களும், பயனற்றவர்களுமாவார்கள் என்று நான் கூறியதை நீ கேட்டாய். அப்போது நீ உன் இருதயத்தில் உணர்த்தப்பட்டவனாக யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் உடைகளைக் கிழித்து எனக்கு முன்பாக அழுதாய். இதனால் நான் உன் வேண்டுதலைக் கேட்டிருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையினால் நான் உன்னை உன் முற்பிதாக்களுடன் சேர்த்துக்கொள்வேன். நீ சமாதானத்துடன் அடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்துக்குக் கொண்டுவரப்போகும் ஒரு அழிவையும் நீ காணமாட்டாய்’ என்று யெகோவா கூறுகிறார்” என்று சொன்னாள்.
அவளுடைய இந்தப் பதிலை அவர்கள் அரசனிடம் கொண்டுபோனார்கள்.
உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல்
அதன்பின் அரசன் யூதாவிலும், எருசலேமிலும் இருந்த எல்லா முதியோரையும் கூடிவரும்படி செய்தான். அரசன், யூதாவின் மனிதர், எருசலேமின் மனிதர், ஆசாரியர்கள், இறைவாக்கினர், மற்றும் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களையும் கூட்டிக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனான். யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் அவர்கள் கேட்கத்தக்கதாய் வாசித்தான். அரசன் தூணின் பக்கத்தில் நின்று, தான் யெகோவாவைப் பின்பற்றுவதாகவும், அவருடைய கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், கடைபிடிப்பதாகவும் யெகோவா முன்பாக இந்த உடன்படிக்கையைப் புதுப்பித்தான். இவ்வாறு இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கும் உடன்படிக்கையின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினான். அப்பொழுது எல்லா மக்களும் அந்த உடன்படிக்கையின்படி நடப்பதாக வாக்குப்பண்ணினார்கள்.
அதன்பின் அரசன், தலைமை ஆசாரியன் இல்க்கியா, உதவி ஆசாரியர்கள், வாசலைக் காப்பவர் ஆகியோரிடம் பாகால், அசேரா விக்கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவற்றை வணங்குவதற்கான எல்லாப் பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிட்டான். அவன் அவை யாவற்றையும் எருசலேமுக்கு வெளியே கீதரோன் பள்ளத்தாக்கிலுள்ள வயல்களில் எரித்து தூளாக்கி, சாம்பலை பெத்தேலுக்குக் கொண்டுவந்தான். எருசலேமின் அயல் கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் உள்ள வழிபாட்டு மேடைகளில் தூபங்காட்டுவதற்காக, யூதாவின் அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அந்நிய நாட்டின் பூசாரிகளையும் அகற்றிவிட்டான். இவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தூபங்காட்டினர். யெகோவாவின் ஆலயத்திலிருந்து அசேரா விக்கிரக தூணையும் எடுத்து, எருசலேமுக்கு வெளியேயுள்ள கீதரோன் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோய் எரித்தான். அதைத் தூளாக்கி அவற்றைச் சாதாரண குடிமக்களின் பிரேதக் குழிகளின்மேல் தூவினான். யெகோவாவின் ஆலயத்தில் விபசாரத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண்களின் வசிப்பிடத்தை உடைத்தான். அங்கேயே பெண்கள் அசேராவுக்கு உடையை நெசவு செய்தார்கள்.
யோசியா யூதாவின் பட்டணங்களிலிருந்து, எல்லா ஆசாரியர்களையும் திரும்பக் கொண்டுவந்தான். அவன் கேபாவிலிருந்து பெயெர்செபாவரையிருந்த, பூசாரிகள் தூபங்காட்டிவந்த வழிபாட்டு மேடைகளை மாசுபடுத்தினான். பட்டணத்து வாசலின் இடப்பக்கத்தில் பட்டணத்து ஆளுநரான யோசுவாவின் வாசல் இருந்தது. அந்த வாசலுக்குப்போகும் நுழைவாசலில் இருந்த விக்கிரகக் கோவில்களையும் அவன் உடைத்தான். வழிபாட்டு மேடைகளின் பூசாரிகள் எருசலேமிலிருந்த யெகோவாவின் பலிபீடத்தில் பணிசெய்யாவிட்டாலும், தங்களுடனிருந்த ஆசாரியருடன் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிட்டார்கள்.
அத்துடன் மோளேக் தெய்வத்தைக் கனம்பண்ணி, யாராவது தன் மகனையாவது, மகளையாவது நெருப்பில் பலி செலுத்தாதபடி, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத் மேடையையும் மாசுபடுத்தினான். யூதாவின் அரசர்கள் சூரியனுக்கு அர்ப்பணித்த குதிரைகளை யெகோவாவின் ஆலயத்துக்குப் போகும் நுழைவு வாசலிலிருந்து அகற்றிவிட்டான். அவை நாத்தான்மெலேக் என்னும் அதிகாரியின் அறைக்கு அருகே ஆலய முற்றத்தில் இருந்தன. அதன்பின் யோசியா சூரியனுக்கு அர்ப்பணித்த தேர்களை எரித்தான்.
ஆகாஸின் மேலறைக்கு அருகேயுள்ள கூரையில் யூதாவின் அரசர்கள் அமைத்திருந்த பலிபீடங்களை இடித்தான். அத்துடன் யெகோவாவின் ஆலயத்தின் இரு முற்றங்களிலும் மனாசே கட்டியிருந்த பலிபீடங்களையும் இடித்துத் தள்ளினான். அவன் அங்கிருந்து அவைகளை அகற்றி, துண்டுதுண்டாக நொறுக்கி அதன் தூளை கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டான். எருசலேமுக்குக் கிழக்கில் இருந்த சீர்கேட்டின் குன்றில் தெற்கிலுள்ள வழிபாட்டு மேடைகளை அரசன் மாசுபடுத்தினான். இவை இஸ்ரயேல் அரசனான சாலொமோனால் சீதோனியரின் இழிவான தேவதையாகிய அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் இழிவான தெய்வமாகிய கேமோசுக்கும், அம்மோன் மக்களின் அருவருக்கத்தக்க தெய்வமான மோளேக்குக்குமாகக் கட்டப்பட்டிருந்தன. யோசியா புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வெட்டி, அவை இருந்த இடங்களை மனித எலும்புகளால் மூடினான்.
இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமினால் பெத்தேலில் அமைக்கப்பட்ட வழிபாட்டு மேடையையும் அதன் பலிபீடத்தையுங்கூட அழித்தான். அவன் வழிபாட்டு மேடையையும் அசேரா விக்கிரக தூணையும் எரித்துச் சாம்பலாக்கினான். அதன்பின் யோசியா சுற்றிப்பார்த்து, மலையின் பக்கத்தில் இருந்த கல்லறைகளைக் கண்டான். அங்கிருந்த எலும்புகளை அவ்விடத்திலிருந்து, அகற்றி, பெத்தேலில் இருந்த மேடையை அசுத்தப்படுத்துவதற்காக அவைகளை அதன்மேல் போட்டு எரித்தான். இறைவனுடைய மனிதன் முன்னறிவித்த யெகோவாவின் வார்த்தையின்படியே இவ்வாறு நடந்தது.
அதற்குப்பின் அரசன் யோசியா, “அங்கு நான் காண்கிற சவக்குழியில் நடப்பட்டிருக்கிற கல் எதைக் குறிக்கிறது?” என்று கேட்டான்.
அந்தப் பட்டணத்து மனிதர் அதற்குப் பதிலாக, “நீர் இப்பொழுது செய்த இதே செயல்களை பெத்தேலின் பலிபீடத்துக்கு எதிராக முன்னறிவித்த, யூதாவிலிருந்து வந்த இறைவனின் மனிதனின் கல்லறையைக் குறிப்பதே அது” என்று கூறினார்கள்.
அதற்கு அவன், “அதை விட்டுவிடுங்கள். அவனுடைய எலும்புகளை யாரும் குழப்புவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என்றான். அப்படியே அவர்கள் அவனுடைய எலும்புகளையும் சமாரியாவிலிருந்து வந்த ஒரு இறைவாக்கினனின் எலும்புகளையும் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
பெத்தேலில் செய்ததுபோலவே, இஸ்ரயேல் அரசர்கள் யெகோவாவுக்குக் கோபம் மூழத்தக்கதாக சமாரியாவின் பட்டணங்களில் கட்டிய எல்லா வழிபாட்டு மேடைகளையும் யோசியா அரசன் அகற்றி மாசுபடுத்தினான். யோசியா வழிபாட்டு மேடைகளையும் பூசாரிகள் யாவரையும் பலிபீடங்களின்மேல் வைத்து வெட்டிக்கொன்று மனித எலும்புகளை அவற்றின்மேல் போட்டு எரித்தான். அதன்பின் அவன் எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
அரசன் எல்லா மக்களுக்கும் உத்தரவிட்டதாவது: “இந்த உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள்” என்றான். இஸ்ரயேலரை வழிநடத்திய நீதிபதிகளின் காலத்திற்குப் பின்போ, இஸ்ரயேல் அரசர்களுடைய, யூதா அரசர்களுடைய காலம் முழுவதுமோ அப்படி ஒரு பஸ்கா கொண்டாடப்படவில்லை. இப்போது யோசியா அரசனின் பதினெட்டாம் வருடத்தில், எருசலேமில் யெகோவாவுக்கு இந்தப் பஸ்கா கொண்டாடப்பட்டது.
மேலும் குறிசொல்கிறவர்களையும், ஆவிகளுடன் தொடர்புள்ளவர்களையும் அழித்தான். அத்துடன் சிலைகள், விக்கிரகங்கள், மற்றும் யூதாவிலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருக்கத்தக்க பொருட்கள் எல்லாவற்றையும் யோசியா அரசன் இல்லாது அழித்தான். யெகோவாவின் ஆலயத்தில், ஆசாரியன் இல்க்கியாவினால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கட்டளைகளை நிறைவேற்றும்படியாகவே, அவன் இவற்றைச் செய்தான். மோசேயின் முழு சட்டத்திற்கும் இணங்க தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் யோசியா யெகோவாவிடம் திரும்பியதைப்போல, இவனுக்கு முன்னாவது பின்னாவது எந்த அரசனும் யெகோவாவிடம் திரும்பியதில்லை.
இருப்பினும், மனாசே யெகோவாவுக்கு விரோதமாகக் கோபம் மூளும்படி செய்த எல்லா செயல்களினாலும் யூதாவுக்கு விரோதமாய் மூண்டெழுந்த, தன் பயங்கரமான கோபத்தைவிட்டு யெகோவா திரும்பவில்லை. அதனால் யெகோவா, “நான் இஸ்ரயேலரை அகற்றியதுபோல யூதாவையும் என் சமுகத்திலிருந்து அகற்றிவிடுவேன். நான் தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமையும், ‘என் பெயர் அங்கே இருக்கும்’23:27 [1 இராஜா. 8:29] என்று நான் சொன்ன இந்த ஆலயத்தையும், நான் புறக்கணித்து விடுவேன்” என்று சொன்னார்.
யோசியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும் அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
யோசியா அரசனாக இருந்தபோது, எகிப்தின் அரசனான பார்வோன் நேகோ, அசீரிய அரசனுக்கு உதவி செய்வதற்காக யூப்ரட்டீஸ் நதிவரைச் சென்றான். அரசனான யோசியா யுத்தத்தில் அவனை எதிர்கொள்ள அணிவகுத்துப் போனான். அங்கே மெகிதோ என்ற இடத்தில் யோசியா கொல்லப்பட்டான். யோசியாவின் அதிகாரிகள் அவனுடைய உடலை தேரில் ஏற்றி மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அதை அவனுடைய சொந்தக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அந்த நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாஸை அபிஷேகம்பண்ணி, அவனுடைய தகப்பனின் இடத்தில் அவனை அரசனாக்கினார்கள்.
யூதாவின் அரசன் யோவாகாஸ்
யூதாவுக்கு யோவாகாஸ் அரசனாக வந்தபோது இருபத்தி மூன்று வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். இவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின்23:31 இவர் தீர்க்கதரிசனப் புத்தகத்தை எழுதிய தீர்க்கதரிசி இல்லை. மகள். தன் தந்தையர் செய்ததுபோல இவன் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். பார்வோன் நேகோ அவனை எருசலேமில் ஆட்சி செய்யாதபடி, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லா என்ற இடத்தில் சங்கிலிகளால் கட்டி வைத்திருந்தான். அவன் யூதா நாட்டின் மீது ஏறத்தாழ நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் வரியாக சுமத்தினான். பார்வோன் நேகோ, யோசியாவின் மகனும், யோவாகாசின் சகோதரனுமான எலியாக்கீமை அரசனாக்கி அவனுடைய பெயரையும் யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான். அங்கே அவன் இறந்தான். யோயாக்கீம் பார்வோன் நேகோ கேட்டபடியே வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்தான். அப்படிச் செய்வதற்காக நிலத்திற்கு அவன் வரி விதித்து மக்களுடைய சொத்துக்களுக்கு ஏற்ப அவர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் கட்டாயமாக வசூலித்தான்.
யூதாவின் அரசன் யோயாக்கீம்
யோயாக்கீம் அரசனாக வந்தபோது இருபத்தைந்து வயதாக இருந்தான். இவன் எருசலேமில் பதினொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனது தாய் ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாவின் மகளான செபுதாள் என்பவள். யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப் போலவே யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
யோயாக்கீமின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தான்; அதனால் யோயாக்கீம் மூன்று வருடங்களுக்கு அவனுக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தான். ஆனால் பின்பு தன் மனதை மாற்றி நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்தான். யெகோவா யூதாவுக்கு எதிராக, கல்தேயா, சீரியா, மோவாப், அம்மோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டங்களை அனுப்பினார். இறைவனாகிய யெகோவா தனது அடியவனாகிய இறைவாக்கினன் மூலம் அனுப்பிய வார்த்தையின்படி, அவர் யூதாவை அழிப்பதற்காகவே இவர்களை அனுப்பினார். நிச்சயமாகவே மனாசேயின் பாவங்களுக்காகவும், அவன் செய்த எல்லாவற்றிற்காகவும் யெகோவாவின் கட்டளைப்படியே, யூதாவை தமது சமுகத்தைவிட்டு அகற்றுவதற்காக இவை யாவும் நடந்தன. அவன் எருசலேம் முழுவதையும் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பியபடியாலும் யெகோவா மன்னிக்க மனதில்லாதிருந்தார்.
யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோயாக்கீன் அரசனானான்.
பாபிலோனிய அரசன் எகிப்தின் நீரோடையிலிருந்து யூப்ரட்டீஸ் ஆறுவரை எகிப்திய அரசனின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றியபடியால், எகிப்து அரசன் தன் சொந்த நாட்டிலிருந்து மீண்டும் படையெடுக்கவில்லை.
யூதாவின் அரசனான யோயாக்கீன்
யோயாக்கீன் அரசனாக வந்தபோது பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகளான நெகுஸ்தாள் என்பவள். தன் தந்தை செய்ததுபோலவே இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான்.
அந்த வேளையில் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் இராணுவ அதிகாரிகள் எருசலேம் நகரத்திற்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டனர். அவனுடைய படைகள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அரசனாகிய நேபுகாத்நேச்சாரும் பட்டணத்திற்கு வந்தான். அப்பொழுது யூதாவின் அரசன் யோயாக்கீன், அவன் தாய், ஏவலாளர்கள், அதிகாரிகள், உயர்குடி மக்கள் யாவரும் அவனிடம் சரணடைந்தார்கள்.
அவன் யோயாக்கீனைச் சிறைப்பிடித்தான். பாபிலோனிய அரசனின் ஆட்சியின் எட்டாம் வருடத்தில் இது நடந்தது. யெகோவா முன்பாக அறிவித்தபடியே நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் எல்லா திரவியங்களையும் எடுத்ததோடு, இஸ்ரயேலின் அரசனாகிய சாலொமோன் யெகோவாவின் ஆலயத்துக்கெனச் செய்து வைத்த தங்கத்தினாலான எல்லா பொருட்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். அத்துடன் எருசலேம் முழுவதிலும் இருந்த எல்லா அதிகாரிகளையும், படைவீரரையும், சிற்பிகளையும், ஓவியர்களையும் மொத்தமாக பத்தாயிரம்பேரை நாடுகடத்திக் கொண்டுபோனான். மிகவும் ஏழையான மக்கள் மாத்திரமே மீதியாக விடப்பட்டு இருந்தனர்.
நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோனான். அத்துடன் அவன் எருசலேமிலிருந்து அரசனின் தாய், அவனுடைய மனைவியர், அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் ஆகியோரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பாபிலோனிய அரசன் இவற்றோடுகூட பலமும், போருக்குத் தகுதியுமுள்ளவர்களான ஏழாயிரம் வீரரைக்கொண்ட முழு இராணுவத்தையும் சிற்பிகளிலும், ஓவியர்களிலும் ஆயிரம்பேரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். பாபிலோன் அரசன் யோயாக்கீனுடைய சிறிய தகப்பன் மத்தனியாவை அவனுடைய இடத்தில் அரசனாக்கி, அவனுடைய பெயரை சிதேக்கியா என்று மாற்றினான்.
யூதாவின் அரசன் சிதேக்கியா
சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள். யோயாக்கீம் செய்ததுபோல இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார்.
எருசலேம் வீழ்ச்சி
இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான்.
சிதேக்கியா அரசனின் ஆட்சியின் ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதியில், பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் தனது முழு படைகளுடனும் எருசலேமுக்கு எதிராக வந்தான். அவன் பட்டணத்துக்கு வெளியில் முகாமிட்டு அதைச் சுற்றிவளைத்து முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டினான். சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
அதே வருடத்தில் நான்காம் மாதம், ஒன்பதாம் நாளில் பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால் அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது. கல்தேயர்25:4 கல்தேயர் அல்லது பாபிலோனியர் எனப்படும். பட்டணத்தைச் சூழ்ந்திருந்தபோதிலுங்கூட, பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. இரவு நேரத்தில் முழு இராணுவமும் அரசனுடைய தோட்டத்துக்குப் பக்கத்திலுள்ள இரு மதில்களுக்கிடையில் இருந்த வாசல் வழியாகத் தப்பி ஓடியது. அவர்கள் அரபாவை நோக்கி ஓடினார்கள். ஆனால் கல்தேயரின் படை அரசனைப் பின்தொடர்ந்து சென்று எரிகோவின் சமவெளியில் அவர்களை மேற்கொண்டனர். அவனுடைய இராணுவத்தினர் அவனைவிட்டுப் பிரிந்து சிதறடிக்கப்பட்டு ஓடினார்கள். அரசன் பிடிக்கப்பட்டான்.
பின்பு ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாகவே அவனுடைய மகன்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், ஏழாம்நாளில், பாபிலோன் அரசனின் அதிகாரியும், பேரரசின் மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான். பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது. காவல் தளபதி நேபுசராதான் பட்டணத்தில் மீந்திருந்தவர்களையும், பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்கள் கூட்டத்தினரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான். ஆனால் அந்த மெய்க்காவல் தளபதி மிகவும் ஏழைகளான சிலரை திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக விட்டுச்சென்றான்.
கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன. ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமுள்ளதாயிருந்தது. ஒரு தூணிலிருந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட கும்பம் நாலரை அடி உயரமுள்ளதும், வெண்கலத்தினாலான பின்னல் வேலைப்பாட்டினாலும், மாதுளம் பழங்களினாலும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாயும் இருந்தது. மற்ற தூணும் அதன் வேலைப்பாடுகளும் இதையே ஒத்திருந்தது.
மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது ஆசாரியனான செப்பனியாவையும் மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான். மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில், இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஐந்து அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான். தளபதியான நேபுசராதான், இவர்களை ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோனான். அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான்.
இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள்.
யூதாவில் மீதியாக வைத்த மக்களின் மேலாக சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் நியமித்தான். யூதாவின் இராணுவ அதிகாரிகளும், அவர்களைச் சேர்ந்த எல்லா மனிதரும், பாபிலோன் அரசன், கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான் என்று கேள்விப்பட்டபோது, மிஸ்பாவில் இருக்கும் கெதலியாவிடம் சென்றார்கள். இவ்வாறு சென்றவர்கள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியரின் மகன் யசனியாவும், அவர்களுடைய மனிதரும் ஆவர். அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்களுடைய மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும்படி ஒரு ஆணையைச் செய்தான். அவன், “கல்தேயரின் அதிகாரிகளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும்” என்றான்.
ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மயேல், பத்து மனிதரோடு வந்து கெதலியாவையும், யூதாவின் மனிதரையும், மிஸ்பாவில் அவனோடிருந்த கல்தேயரையும் கொன்றான். இதனால் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களும் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கல்தேயருக்குப் பயந்து எகிப்திற்கு ஓடிப்போனார்கள்.
யோயாக்கீனை விடுதலை செய்தல்
ஏவில் மெரொதாக் என்பவன் பாபிலோனுக்கு அரசனானபோது யூதாவின் அரசனான யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். இது யூதாவின் அரசனான யோயாக்கீன் சிறைப்பட்டுப்போன முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாளில் நடந்தது. அவன் யோயாக்கீனுடன் தயவாய்ப் பேசி தன்னோடு பாபிலோனில் இருந்த மற்ற அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான். அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான். யோயாக்கீன் உயிர்வாழ்ந்த நாளெல்லாம், அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.