- Biblica® Open Indian Tamil Contemporary Version
2 கொரிந்தியர்
பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் கடிதம்
2 கொரிந்தியர்
2 கொரி.
பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் கடிதம்
இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும்,
நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபைக்கும், அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ஆறுதலின் இறைவன்
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமானவருக்குத் துதி உண்டாவதாக; அவர் இரக்கத்தின் பிதாவும் எல்லா விதமான ஆறுதலின் இறைவனுமாயிருக்கிறார். அவரே நம்மை நம்முடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஆறுதல்படுத்துகிறார். எனவே நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, பல்வேறு கஷ்டங்களில் உள்ளவர்களை, எங்களால் ஆறுதல்படுத்தக் கூடியதாயிருக்கிறது. ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகள் பெருகிவருகிறதுபோல, கிறிஸ்துவின்மூலம் நமக்கு அனுதினம் ஆறுதலும் பெருகுகிறது. நாங்கள் துன்பப்படுத்தப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்குமே; நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதல், நீங்களும் எங்களைப் போலத் துன்பங்களை அனுபவிக்கும்போது, அது உங்களிலும் பொறுமையான சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. மேலும் உங்களைப்பற்றிய எங்கள் எதிர்பார்ப்பு உறுதியாய் இருக்கிறது. ஏனெனில், எங்களுடைய துன்பங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோலவே, எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம். உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
பவுல் திட்டங்களை மாற்றுதல்
இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம். எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள்.
நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன். இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா?
ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம். நானும், சில்வானும், தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்த, இறைவனின் மகனான இயேசுகிறிஸ்து, “ஆம்” அப்படித்தான் என்று சொல்லி, பின் “இல்லை” அது அப்படியல்ல என்று சொல்லுகிறவர் அல்ல. மாறாக, “ஆம்” என்று அவர் சொன்னது, எப்பொழுதும் அவரில் “ஆம்” என்றே இருக்கிறது. இறைவன் எத்தனை வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும், அவை எல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்றே இருக்கின்றன. இதனாலேயே இறைவனுக்கு மகிமையுண்டாக, அவர்மூலம் நாங்கள் “ஆமென்” என்று சொல்கிறோம். இப்பொழுதும் எங்களையும், உங்களையும் இறைவனே கிறிஸ்துவில் உறுதியாய் நிற்கச்செய்கிறார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். அவர் தமது உரிமையின் அடையாளமான முத்திரையை நம்மீது பதித்திருக்கிறார். வரப்போகிறவற்றிற்கு உத்தரவாதமாக, அவர் தமது ஆவியானவரை நமது இருதயங்களில் ஒரு நிலையான வைப்பாக வைத்திருக்கிறார்.
நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி. நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.
ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்னுமொரு சந்திப்பை ஏற்படுத்தாமலிருக்க என் மனதில் தீர்மானித்தேன். நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே. இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன். நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன்.
துக்கம் உண்டாக்கியவனுக்கு மன்னிப்பு
யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது. ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான். ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன். நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன். சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில், சாத்தானின் வஞ்சகதிட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்ல.
புது உடன்படிக்கையின் ஊழியர்
நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது, கர்த்தர் எனக்கு ஒரு கதவு திறந்ததைக் கண்டேன். ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன்.
இறைவனுக்கே நன்றி. அவர் எப்பொழுதும் எங்களைக் கரம்பிடித்து, கிறிஸ்துவின் வெற்றி பவனிக்குள் வழிநடத்துகிறார். இப்படி அவரைப்பற்றிய அறிவின் நறுமணம்போல் எங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச்செய்கிறார். ஏனெனில், இரட்சிக்கப்படுகிறவர்கள் மத்தியிலும், அழிந்து போகிறவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம். ஒரு சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்? அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம்.
நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா? இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு. நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது. அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார்.
புது உடன்படிக்கையின் மகிமை
கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது. அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்? மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்? முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது. அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது?
ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான். ஆனால், அவர்களின் மனது மழுங்கிப் போயிற்று. ஏனெனில், இந்நாள்வரை அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது, அந்த முக்காடு நீக்கப்படாமலேயே இருக்கிறது. ஏனெனில் அது கிறிஸ்துவில் மட்டுமே நீக்கப்படுகிறது. இன்றுவரை மோசேயின் சட்டங்கள் வாசிக்கப்படும்போது, அவர்களுடைய இருதயங்களை ஒரு முக்காடு மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், யாராவது கர்த்தரிடத்தில் திரும்பும்போது, அந்த முக்காடு நீக்கப்படுகிறது. இப்பொழுதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே அவர் விடுதலை கொடுக்கிறார். நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன், கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்.
மண்பாண்டங்களில் செல்வம்
ஆகவே நாங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கிறபடியால், நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை நாங்கள் கைக்கொள்வதில்லை. நாங்கள் ஏமாற்றுகிறவர்களாய் இருக்கவில்லை. இறைவனுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறவதில்லை. மாறாக, சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக்கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கிறோம். எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”4:6 [ஆதி. 1:3] எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார்.
ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை; துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை. எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம். இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது. இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
“நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்”4:13 [சங். 116:10] (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம். ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இவையெல்லாம் உங்கள் நன்மைக்காகவே உண்டாகியிருக்கிறது. இதனால், மென்மேலும் அதிகதிகமான மக்களிடம் அவரின் கிருபை சென்றடையும்போது, நன்றி செலுத்துதல் நிரம்பிவழியும். அப்போது இறைவனின் மகிமை அதிகதிகமாய்ப் போற்றிப் புகழப்படும்.
ஆதலால் நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெளிப்படையாக வலுவிழந்து போனாலும், நாங்கள் உள்ளாக நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறோம். ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.
நமது பரலோகக் குடியிருப்பு
இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. அதுவரைக்கும் நாங்கள் எங்கள் பரலோகக் குடியிருப்பை, தவிப்புடன் உடையைப்போல் அணிந்துகொள்ள வாஞ்சையாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அவ்விதம் உடுத்தியிருக்கும்போது, நாங்கள் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம். இந்த உடலாகிய கூடாரத்தில் இருக்கும்வரையில் நாங்கள் அவதியுற்றுத் தவிக்கிறோம். நாங்கள் செத்து உடையற்றவர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. நாங்கள் பரலோகக் குடியிருப்பை உடையைப்போல் அணிந்துகொள்ள வேண்டுமென்றே விரும்புகிறோம். அப்பொழுது சாகும் தன்மையுள்ள இந்த உடல் வாழ்வினால் ஆட்கொள்ளப்படும். இந்த முக்கிய நோக்கத்திற்காகவே, இறைவன் எங்களை உண்டாக்கியிருக்கிறார். அவரே வரவேண்டியவற்றிற்கு உத்தரவாதமாக, தனது ஆவியானவரை நிலையான வைப்பாக எங்களுக்குத் தந்திருக்கிறார்.
ஆகையால் நாங்கள் எப்பொழுதும் மனத்தைரியத்தோடு இருக்கிறோம். எங்கள் உடலாகிய வீட்டில் குடியிருக்கும் காலம்வரை, கர்த்தரிடமிருந்து புறம்பாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம். நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம். எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும். ஏனெனில், நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்கவேண்டும். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையினாலும் தீமையினாலும், அவற்றிற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்வோம்.
ஒப்புரவாக்கும் ஊழியம்
ஆகவே நாங்கள், கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறபடியால், இறைவனிடம் திரும்பும்படி மனிதரை இணங்கவைக்க முயலுகிறோம். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் நன்கு அறிவார். அதுபோலவே, உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்களோ மறுபடியும் எங்களை உங்களுக்கு முன்பாக சிபாரிசு செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் எங்களைக் குறித்து நீங்கள் பெருமையடையத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்போது இருதயத்தில் இருப்பதைப் பார்க்கிலும், வெளித்தோற்றத்தில் காணப்படுவதைக் குறித்து பெருமையடைவோருக்கு நீங்களே தகுந்த பதில் கூறமுடியும். நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம். அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.
எனவே, இனிமேலும் நாங்கள் உலக நோக்கத்தின்படி ஒருவரையும் மதிப்பீடு செய்வதில்லை. முன்பு கிறிஸ்துவையும் நாங்கள் அப்படியே மதிப்பிட்டோம். ஆனால் இனி ஒருபோதும், நாங்கள் அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை. ஆகவே, யாராவது கிறிஸ்துவில் இருந்தால், புதிய படைப்பு வந்திருக்கிறது: பழையவைகள் ஒழிந்து போனது, எல்லாம் புதியவைகள் ஆனது. இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது. அவரே கிறிஸ்துவின் மூலமாய், எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கிக் கொண்டார். அவரே, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்: “இப்பொழுது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கு வைக்காமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கினார்.” இந்த ஒப்புரவாக்கும் செய்தியையே, அவர் எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். ஆகவே இறைவன், எங்கள் மூலமாகவே தமது வேண்டுகோளைத் தெரிவிக்கிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். ஆகவே நீங்கள் இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பாக நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நமக்காக இறைவன் பாவமே இல்லாதவரை பாவமாக்கினார். நாம் அவரில் இறைவனின் நீதியாகும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.
இறைவனுடைய உடன் வேலையாட்களாகிய நாங்கள் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை வீணாக்க வேண்டாம் என உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறோம். ஏனெனில், அவர் சொன்னதாவது:
“என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன்.
இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.”6:2 [ஏசா. 49:8]
நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.
பவுலின் கஷ்டங்கள்
எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறைகூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் இடறுதலை ஏற்படுத்துகிறதில்லை. மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்; அடிக்கப்பட்டதிலும், சிறைவைக்கப்பட்டதிலும், கலவரங்களில் அகப்பட்டதிலும்; கஷ்டமான வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை இல்லாமலும், உணவு இல்லாமல் இருந்ததிலும்; தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும்; பரிசுத்த ஆவியானவர் எங்களில் இருப்பதிலும், உண்மை அன்பிலும்; சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலதுகையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், எங்கள் முன்மாதிரியைக் காண்பிக்கிறோம்; நாங்கள் மதிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, புகழப்பட்டு, தூற்றப்பட்டு, ஏமாற்றுக்காரர்கள் என எண்ணப்பட்ட போதிலும், நாங்கள் உண்மை ஊழியர்களாகவே இருக்கிறோம்; நாங்கள் அங்கீகரிக்கப் படாதவர்களென எண்ணப்பட்டாலும், அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்; நாங்கள் செத்தவர்கள் என சிலர் எண்ணினாலும், நாங்கள் தொடர்ந்து வாழ்கிறோம்; அடிக்கப்படுகிறோம், ஆனால் கொல்லப்படவில்லை; துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா?
கொரிந்தியரே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். நாங்கள் எங்கள் உள்ளங்களை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம். நாங்கள் உங்களுக்கு ஒரு தடையும் இன்றி, தாராளமாய் அன்புகாட்டியிருக்கிறோம். ஆனால் நீங்களோ, எங்களுக்கு அன்பு காட்டாமல் இருக்கிறீர்களே. உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி, உங்களோடு இப்படிப் பேசுகிறேன். நீங்களும் எங்களுக்கு உங்கள் உள்ளங்களைத் திறந்து அன்பு செலுத்துங்கள்.
அவிசுவாசிகளோடு பிணைக்கப்பட வேண்டாம்
அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன? கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும்6:15 சாத்தானுக்கும் என்பது மூல மொழியில் பெலியேல் என்றுள்ளது இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது? இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்:
“நான் அவர்களுடன் வாழுவேன்.
அவர்களிடையே உலாவுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”6:16 [லேவி. 26:12]; [எரே. 32:38]; [எசே. 37:27]
ஆகவே,
“அவர்களைவிட்டு வெளியே வந்து,
பிரிந்திருங்கள்.
அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்.
அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்,
என்று கர்த்தர் சொல்கிறார்.”6:17 [ஏசா. 52:11]; [எசே. 20:34],[41]
மற்றும்,
“நான் உங்களுக்குத் தகப்பனாயிருப்பேன்.
நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று,
எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார்.”6:18 [2 சாமு. 7:14]; [7:8]
ஆகையால் என் அன்பு நண்பர்களே, இவ்விதமான வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகிற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக் கொள்வோம்; இறைவன் மேலுள்ள பயபக்தியின் நிமித்தம், நமது பரிசுத்தத்தை முழுமையாக்கிக் கொள்வோம்.
பவுலின் மகிழ்ச்சி
உங்கள் இருதயங்களில் எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவருக்கும் தீமை செய்யவில்லை. நாங்கள் ஒருவரையும் கெடுக்கவில்லை. நாங்கள் ஒருவரையும் சுரண்டி வாழவுமில்லை. நான் உங்களைக் குற்றப்படுத்தும்படி இதைச் சொல்லவில்லை; ஏனெனில் உங்களுடன் வாழவும், சாகவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முன்பே உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேனே. நான் உங்களிடம் அதிக வெளிப்படையாக பேசியிருக்கிறேன்; நான் உங்களைக்குறித்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். நான் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன்; இதனால் எனது எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் எனது மகிழ்ச்சியோ அளவிடமுடியாதது.
நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே பயங்களும் ஆட்கொண்டிருந்தன. ஆனால் மனசோர்வு அடைகிறவர்களை ஆறுதல்படுத்துகிற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார். அவன் வருகையால் மட்டுமல்ல, நீங்கள் எவ்விதம் அவனை உற்சாகப்படுத்தினீர்கள் என்று கேள்விப்பட்டதினாலும், நாங்கள் ஆறுதலடைந்தோம். நீங்கள் என்னைப் பார்க்க எவ்வளவாக விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவாய் கவலைப்படுகிறீர்கள் என்பதையும், என்னை ஆதரிக்க நீங்கள் எவ்வளவு ஆவலுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் குறித்தும் அவன் எங்களுக்குச் சொன்னான். இதனால் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்.
நான் உங்களுக்கு எழுதிய கடிதம் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தாலும், அதை எழுதியதற்காக நான் கவலைப்படவில்லை. எனது கடிதம் உங்களைக் கவலைப்படுத்தியதை அறிந்தபோது நான் கவலைப்பட்டது உண்மைதான். நீங்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே கவலைப்பட்டிருந்தீர்கள். ஆனால், இப்பொழுது நான் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் கவலைப்பட்டதற்காக அல்ல, உங்களுடைய துக்கம் உங்களில் மனமாறுதலை ஏற்படுத்தியதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். இறைவனுடைய எண்ணத்தின்படி நீங்கள் துக்கமடைந்தீர்கள். இதனால், எங்கள் மூலமாய் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், இறைவன் ஏற்படுத்தும் துக்கம் மனமாறுதலைக் கொண்டுவந்து, நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்துகிறது. அது தொடர்ந்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், உலகப்பிரகாரமான துக்கம் மரணத்தையே கொண்டுவரும். இறைவன் ஏற்படுத்திய இந்தத் துக்கம், உங்களில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாருங்கள்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! எவ்வளவு வாஞ்சை! அதைப்பற்றி எவ்வளவு கோபம்! எவ்வளவு அச்சம்! நியாயப்படுத்துதலைக் காண எவ்வளவு ஆவல்! எவ்வளவு அக்கறை! எவ்வளவு ஆயத்தம்! இவ்வாறு இவ்விஷயத்தில் எல்லாவிதத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். எனவே நான் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதியபோதும்கூட, அந்தத் தீமை செய்தவனுக்காகவோ, அந்தத் தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. இறைவனுடைய பார்வையில், நீங்கள் எங்களுக்காக உங்களை எவ்வளவாய் அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே அறியும்படியாகவே நான் அதை எழுதினேன். இவை எல்லாவற்றினாலும் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்.
நாங்கள் இவ்விதம் உற்சாகம் அடைந்ததினாலே, தீத்து எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறான் என்பதைக் கண்டு, நாங்கள் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியடைந்தோம். ஏனெனில், நீங்கள் எல்லோரும் தீத்துவை ஆவியில் உற்சாகப்படுத்தினீர்கள். நான் உங்களைக்குறித்து பெருமைக்குரிய விதமாகவே, அவனுக்குச் சொல்லியிருந்தேன். நீங்களும் என்னை அவற்றில் வெட்கப்படுத்தவில்லை. நாங்கள் எப்பொழுதும், உங்களுடன் உண்மையையேப் பேசினோம். அதுபோலவே, தீத்துவுடன் நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று. நீங்கள் எவ்விதம் கீழ்ப்படிந்து, பயத்தோடும், நடுக்கத்தோடும் அவனை வரவேற்றீர்கள் என்பதை அவன் நினைவில்கொள்ளும்போது, உங்கள்மேல் அவனுக்கு அன்பு பெருகுகிறது. உங்கள்மேல் எனக்கு ஒரு முழுமையான மனவுறுதி உண்டாயிருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தாராள மனதுடையவருக்கு ஊக்குவிப்பு
இப்பொழுதும் பிரியமானவர்களே, மக்கெதோனியாவிலிருக்கிற திருச்சபைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கிற கிருபையைக் குறித்து நீங்கள் அறியவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் தாங்கள் அனுபவித்த கடுமையான துன்பத்தின் மத்தியில், வறுமையில் வாடியிருந்தபோதும், அவர்களுடைய சந்தோஷம் பெருகி வழிந்ததினால் அவர்கள் தாராள மனதுடன் கொடுப்பவர்களானார்கள். அவர்கள் தங்களால் இயலுமான அளவு கொடுத்தார்கள். அதற்கு அதிகமாயும் கொடுத்தார்கள் என்பதைக்குறித்து நான் சாட்சி கூறுகிறேன். தங்கள் சுய விருப்பத்துடனேயே, பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யும், இந்தப் பணியில் பங்குகொள்ளும் சிலாக்கியம், தங்களுக்கும் கிடைக்கவேண்டும் என மிகவும் வருந்தி எங்களிடம் வேண்டிக்கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக, அவர்கள் தங்களை முதன்மையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பின்பு இறைவனுடைய சித்தத்தின்படி, அவர்கள் தங்களை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். எனவே உங்கள் அன்பின் செயலாகிய இந்த வேலையைத் தொடங்கிய தீத்துவை, உங்களிடம் திரும்பிவந்து அதை நிறைவேற்றும்படி, நாங்கள் அவனை ஊக்குவித்தோம். இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேசுகின்ற ஆற்றலிலும், அறிவிலும், எல்லாவற்றிலுமுள்ள ஆர்வத்திலும், எங்கள்மேல் கொண்டிருக்கிற அன்பிலும், மேம்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அப்படியே, இந்த அன்பின் நன்கொடையைக் கொடுப்பதிலும் மேம்பட்டவர்களாயிருக்க பார்த்துக்கொள்ளுங்கள்.
நான் இதை ஒரு கட்டளையாக உங்களுக்குச் சொல்லவில்லை. உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் அன்பு எவ்வளவு உண்மையானது எனக் கண்டறியவே விரும்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும், அவர் உங்களுக்காகவே ஏழையாகினார். அவருடைய ஏழ்மையின் மூலமாக, நீங்கள் செல்வந்தர்களாகும்படியாகவே அவர் ஏழையாகினார்.
எனவே, இந்த விஷயத்தில் உங்களுக்கு எது சிறந்தது என்பதற்கு நான் கொடுக்கும் ஆலோசனை இதுவே: கடந்த வருடத்திலும் முதலாவதாகக் கொடுத்ததும் நீங்களே, கொடுப்பதற்கு ஆசை கொண்டவர்களும் நீங்களே. எனவே இந்த வேலையைத் தொடங்குவதற்கு உங்களுக்கிருந்த ஆர்வத்துடன் அதைச் செய்து முடிக்கவும் வேண்டும். அதனால், உங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு அதைச் செய்து முடியுங்கள். கொடுப்பதற்கு ஆவல் இருந்தால், அந்த நன்கொடை எவ்வளவு என்பது முக்கியமல்ல; கொடுப்பவனிடம் இல்லாததின்படியல்ல, உள்ளதின்படியே கொடுப்பதை இறைவன் விரும்புகிறார்.
உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தி, மற்றவர்களின் பாரத்தை இலகுவாக்க நாங்கள் விரும்பவில்லை. எல்லோரும் சமநிலையில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். இக்காலத்தில், உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவும். அப்படியே, இன்னொருமுறை அவர்களுடைய நிறைவு உங்கள் தேவைக்கு உதவும். இவ்விதமாகவே, உங்களிடையே சமநிலை இருக்கும். வேதவசனம் இதைப்பற்றி, “அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. குறைவாய்ச் சேர்த்தவனிடம், போதாமல் இருக்கவுமில்லை”8:15 [யாத். 16:18] என்று சொல்கிறது.
கொரிந்துவில் தீத்து
உங்கள்மேல் நான் கரிசனையுடையவனாய் இருப்பதுபோலவே, இறைவன் தீத்துவுக்கும் அந்தக் கரிசனையைக் கொடுத்ததினால், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் தீத்து எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, அவனும் உங்களிடம் வருவதற்கு ஆவலுடையவனாய், தன்னுடைய சுயவிருப்பத்தின்படி வருகிறான். அவனுடன் நற்செய்தியை பிரசங்கிப்பதில், எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர்பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எங்களுடனே காணிக்கைகளைக் கொண்டுபோவதற்காக திருச்சபைகளினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறான். கர்த்தருடைய பெயர் மகிமைப்படவும், உதவிசெய்ய எங்களுக்கு உள்ள ஆவல் காண்பிக்கப்படவும், இந்தப் பொறுப்பான வேலையில் அவன் உதவி செய்வான். மனமுவந்து கொடுக்கப்பட்ட இந்தக் கொடையை நாங்கள் பகிர்ந்து கொடுக்கும்போது, அதைக்குறித்து யாரும் எங்களைக் குறை சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதருடைய பார்வையிலும் நீதியானதைச் செய்யவே நாங்கள் கடுமையாய் முயற்சிக்கிறோம்.
மேலும் நாங்கள், வேறொரு சகோதரனை அவர்களுடன் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவிசெய்ய ஆர்வமுடையவனாய் இருப்பதைப் பலவற்றில், பலவிதங்களில் நிரூபித்திருக்கிறான். அவன் இப்பொழுது, உங்களில் மிகுந்த மனவுறுதியுள்ளவனாய் இருப்பதால், உங்களுக்கு உதவிசெய்ய, இன்னும் அதிக ஆவலுடையவனாகவும் இருக்கிறான். தீத்துவைப் பொறுத்தமட்டில், அவன் என்னுடைய பங்காளியும், உங்களுக்குப் பணிசெய்வதில், என்னுடைய உடன் ஊழியனுமாய் இருக்கிறான். எங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில், அவர்கள் திருச்சபைகளின் பிரதிநிதிகள்; கிறிஸ்துவுக்கு மேன்மையாயிருக்கிறார்கள். ஆகவே, இந்த மனிதருக்கு உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுங்கள். அப்பொழுதே நாங்கள் உங்களில் கொண்டிருக்கும் பெருமைக்குரிய காரணத்தை திருச்சபைகள் எல்லாம் கண்டுகொள்ளும்.
எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து நான் தொடர்ந்து உங்களுக்கு எழுதவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உதவிசெய்ய ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களிடம், உங்களைக்குறித்துப் பெருமையாகவும் பேசியிருக்கின்றேன். நான் அவர்களிடம், அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த வருடத்தில் இருந்தே உதவிசெய்ய ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். உங்களுடைய அந்த ஆர்வம் அவர்களில் அநேகரை செயலாற்றுவதற்கு உற்சாகப்படுத்தியது. இப்பொழுது இந்த விஷயத்தில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாய்ப் பேசியது, வெறும் வார்த்தைகளாய்ப் போகாதபடி, நான் இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள் என்று நான் அவர்களுக்குச் சொன்னதுபோலவே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மக்கெதோனியாவிலுள்ளவர்களில் யாராவது என்னுடன் வரும்போது, நீங்கள் ஆயத்தமாய் இல்லையெனக் கண்டால், நாங்கள் உங்களில் வைத்த மனவுறுதியின் நிமித்தம் வெட்கப்பட நேரிடும் எனச் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் வெட்கப்பட்டுப் போவீர்களே. எனவே இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்பாகவே உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குப்பண்ணிய நன்கொடைகளைச் சேர்த்து ஆயத்தப்படுத்தும்படி, இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன். நான் உங்களிடம் வரும்போது, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதின் நிமித்தம் கொடுத்ததாக இருக்காமல், தாராள மனதுடன் கொடுக்கும் நன்கொடையாக அது இருக்கும்.
தாராளமாய் விதைத்தல்
கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஒவ்வொருவனும், அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். கட்டாயத்தின் பேரிலோ, மனவருத்தத்துடனோ ஒருவரும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் மகிழ்ச்சியோடு கொடுக்கிறவனிலே, இறைவன் அன்பாயிருக்கிறார். எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க, இறைவன் ஆற்றலுடையவராய் இருக்கிறார். இதனால் நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும், தேவைகளையெல்லாம் பெற்றுக்கொண்டவர்களாய், எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். இதைப்பற்றி வேதவசனத்தில்,
“இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்;
அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்”9:9 [சங். 112:9]
என்று எழுதப்பட்டிருக்கிறதே.
இறைவனே விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுவதற்கு உணவையும் கொடுக்கிறார். அவரே உங்களுக்குத் தேவையான விதைகளையெல்லாம் கொடுத்து, அதைப் பெருகவும் செய்வார். உங்கள் நீதியின் அறுவடையையும், அவரே பெருகச்செய்வார். நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாராள மனதுடையவர்களாய் இருக்கும்படி, நீங்கள் எல்லா வழியிலும் செல்வந்தர்களாவீர்கள். இதனால் எங்கள் உள்ளத்தின் வழியாக, உங்கள் தாராள தன்மையின் பிரதிபலன் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.
எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்தப் பணி, இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திக்கிறது மட்டுமல்ல, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்துவதினாலே, அது மிகுந்த பலனுள்ளதாயிருக்கிறது. உங்களுடைய இந்தப் பணியின் மூலமாக நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இதனால் அநேகர் கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை நீங்கள் அறிக்கையிட்டதோடு, உங்கள் கீழ்ப்படிதலுக்காகவும், தங்களுடனும் மற்றெல்லாருக்கும் நீங்கள் தாராள மனதுடன் பகிர்ந்து கொண்டதற்காகவும், இறைவனுக்குத் துதி செலுத்துவார்கள். அத்துடன் இறைவன் உங்களுக்குக் கொடுத்த அளவுகடந்த கிருபையின் நிமித்தம் உங்களுக்காக மன்றாடி, உங்கள் மேலுள்ள அன்பைக் காட்டுவார்கள். விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.
பவுலின் ஊழியம்
நான் உங்களுடன் நேருக்குநேர் பேசும்போது, “பயந்த சுபாவமுடையவன்” என்றும், உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது, உங்களுடன், “துணிவுடன்” பேசுகிறேன் என்றும் என்னைக் குறித்துச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பவுலாகிய நான் கிறிஸ்துவினுடைய தயவினாலும், சாந்தத்தினாலும் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது: நான் உங்களிடம் வரும்போது, நான் கடுமையாய் நடந்து கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், நாங்கள் உலகப் பிரகாரமாக நடந்துகொள்கிறோம் என்று எண்ணுகிறவர்களோடு, நான் நிச்சயமாக கடுமையாகவே நடந்துகொள்வேன். நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகிறவர்கள் அல்ல. எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், உலகத்து மனிதர் உபயோகிக்கும் ஆயுதங்கள் அல்ல. மாறாக அரண்களை அழிக்கக்கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்திய ஆயுதங்களையே நாங்கள் உபயோகிக்கிறோம். அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப்பற்றிய அறிவை அடைவதற்குத் தடையாக நிற்கும் எல்லா மேட்டிமைகளையும் அழித்துப் போடுகிறோம். நாங்கள் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையையும் கைதியாக்கி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கிறோம். நீங்கள் எல்லோரும் முழுமையாக உங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிட்ட பின்பு, கீழ்ப்படியாத ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை கொடுக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்.
நீங்கள் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். ஒருவன் தான் கிறிஸ்துவுக்குரியவன் என்று நம்பினால், தன்னைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று, அவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைக் குறித்து, நான் அளவுக்கதிகமாய் பெருமைப்பாராட்டினாலும், அந்தப் பெருமையைக் குறித்து நான் வெட்கமடைய மாட்டேன். ஏனெனில் உங்களை அழித்துப் போடுவதற்காக அல்ல, உங்களைக் கட்டியெழுப்பவே அவர் அந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். நான் என் கடிதங்களினால் உங்களைப் பயமுறுத்த முயற்சிக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில், “அவனுடைய கடிதங்கள் கடுமையும், கண்டிப்பும் நிறைந்தவை. ஆனால் அவன் நேரில் எங்களுடன் பேசும்போதோ, அவன் தோற்றத்தில் கவர்ச்சியில்லாது இருப்பதோடு, அவனுடைய பேச்சும் எடுபடாது” என்று என்னைக் குறித்துச் சிலர் சொல்கிறார்கள். நாங்கள் உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடிதத்தின் மூலமாய் சொல்வதைத்தான், நாங்கள் உங்களுடன் இருக்கும்போதும் செயல்படுத்துவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கிறவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினாலேயே, தங்களை மதிப்பீடு செய்துகொள்ளும்போதும், தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்போதும், அவர்கள் கொஞ்சமும் ஞானமில்லாதவர்களாய் இருக்கிறார்களே. ஆனால் நாங்களோ, எங்களைப் பொறுத்தவரையில் எல்லைமீறிப் பெருமைபாராட்டுவதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த எல்லையைக் குறித்தே நாங்கள் பெருமை கொள்ளுவோம். அந்த எல்லை உங்களையும் உள்ளடக்குகிறது. நாங்கள் தவறாகப் பெருமைப்படவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால், இது உண்மையாய்தான் இருக்கும். ஆனால் நாங்களோ, நீங்கள் இருக்கும் இடம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியுடன் வந்தோமே. நாங்கள் மற்றவர்கள் செய்யும் வேலையை, எங்களுக்குரியதாக்கிப் பெருமை கொள்வதில்லை. அது அளவுக்கு மீறிய செயலே. ஆனால், உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து பெருகவேண்டும் என்பதும், உங்கள் மத்தியில் எங்கள் ஊழியம் வெகுவாக விரிவடைய வேண்டும் என்பதுமே எங்கள் எதிர்பார்ப்பு. அதற்குப் பின்பு, உங்களுக்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் நாங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்போம். அப்பொழுது, வேறொரு மனிதன் ஏற்கெனவே செய்த ஊழியத்தைக் குறித்து, நாங்கள் பெருமைபாராட்ட இடம் ஏற்படாது. வேதவசனம் சொல்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”10:17 [எரே. 9:24] ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன்.
பவுலும் பொய்யான அப்போஸ்தலரும்
என் மதியீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஆம்; நீங்கள் ஏற்கெனவே சகித்தும் இருக்கிறீர்கள். நான் உங்களைக் கிறிஸ்து என்ற ஒரே கணவருக்கே திருமணம் செய்து கொடுக்கவே வாக்குப்பண்ணியிருக்கிறேன். இப்படி உங்களை ஒரு தூய்மையான கன்னிகையாகக் கொடுக்கவே விரும்புகிறேன். இதனாலேயே இறைவனுக்குத் தன் மக்கள்மேல் இருக்கிற வைராக்கியம், எனக்கும் உங்கள்மேல் இருக்கிறது. பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன். ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத ஒரு வித்தியாசமான இயேசுவைப் பிரசங்கிக்கும் போதும், நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் தவிர, வேறொரு ஆவியை அறிமுகப்படுத்தும் போதும், நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியைக் கொண்டுவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள்.
அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன். நான் ஒரு பயிற்சி பெற்ற பேச்சாளனாய் இல்லாதிருந்தாலும், எனக்கு அறிவு உண்டு என்பதை எல்லாவிதத்திலும் உங்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தியே இருக்கிறோம். நான் இறைவனுடைய நற்செய்தியை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தபோது, நீங்கள் உயர்வடையும்படி நான் என்னைத் தாழ்த்தினேன். இப்படிச் செய்தது பாவமா? நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களுடன் இருக்கையில், எனக்குத் தேவையேற்பட்டபோது, அதற்காக நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றையெல்லாம், மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்களே கொடுத்து உதவினார்கள். நான் முன்பு செய்ததுபோலவே இனிமேலும், என்னுடைய தேவைகளுக்காக எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பது நிச்சயம்போலவே, அகாயா பகுதியிலுள்ள யாரும் என்னுடைய இந்தப் பெருமைபாராட்டுதலை நிறுத்தமுடியாது என்பதும் நிச்சயம். ஏன் இதை இப்படிச் சொல்கிறேன்? நான் உங்களில் அன்பாயிராததினாலா? நான் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்பதை இறைவன் அறிவார்.
நாங்கள் ஊழியம் செய்கிறதுபோலவே, தாங்களும் ஊழியம் செய்வதாக பெருமை பேசிக்கொள்கிறவர்கள், அப்படிச் சொல்ல இயலாதபடி நான் இவ்விதமே தொடர்ந்து செய்வேன். ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர் பொய்யான அப்போஸ்தலர்கள். கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரைப்போல் வேஷம் தரித்து, ஏமாற்றுகிற வேலைக்காரர்கள். அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும்.
பவுலின் பெருமைபாராட்டுதல்
நான் மறுபடியும் சொல்கிறேன்: நான் ஒரு முட்டாள் என்று ஒருவரும் நினைக்கவேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால், என்னை முட்டாளாகவே ஏற்றுக்கொண்டு, நான் இன்னும் பெருமையடித்துக் கொள்வதையும் சிறிது கேளுங்கள். இந்தப் பெருமை பேசும் விஷயத்தில் நான் கர்த்தர் விரும்பிய விதத்தில் பேசவில்லை. நான் ஒரு முட்டாளைப் போலவே பேசுகிறேன். பலர் உலகரீதியாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் அப்படியே பெருமை பேசுவேன். நீங்களோ எவ்வளவு பெரிய ஞானிகள்! முட்டாள்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களை அடிமைப்படுத்துகிறவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கிறவனையும், உங்களைத் தன் நலனுக்காகப் பயன்படுத்துகிறவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கிறவனையும் உங்கள் முகத்தில் அடிக்கிறவனையும், நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். நாங்களோ இப்படிப்பட்டவைகளைச் செய்யமுடியாத அளவுக்குப் பலவீனர்களாய் இருந்தோம்! இதை நான் வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால், அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள, நானும் துணிவேன். நான் ஒரு மூடனைப்போல் இதையும் சொல்கிறேன். அவர்கள் எபிரெயரா? அப்படியானால் நானும் எபிரெயன்தான். அவர்கள் இஸ்ரயேலரா? அப்படியானால், நானும் இஸ்ரயேலன்தான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? அப்படியானால், நானும் ஆபிரகாமின் சந்ததிதான். நான் ஒரு பைத்தியக்காரனைப்போல, பேசுகிறேன். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியரா? அப்படியானால், நான் அவர்களைவிட மிகச்சிறந்த ஊழியன். நான் இந்த ஊழியத்தில் கடுமையாக உழைத்தேன். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டேன். அதிகமாக அடிக்கப்பட்டேன். அநேகந்தரம் மரணத் தருவாயில் இருந்தேன். நாற்பது அடிகளுக்கு ஒன்று குறைவாக யூதரினால் ஐந்துமுறை சவுக்கால் அடிக்கப்பட்டேன். மூன்றுதரம் தடியால் அடிக்கப்பட்டேன். ஒருதரம் என்மேல் கல்லெறிந்தார்கள். மூன்றுமுறை நான் பயணம் செய்த கப்பல்கள் உடைந்து சிதைந்தன. ஒருமுறை இரவும் பகலுமாக நடுக்கடலில் கிடந்தேன். ஓயாது பிரயாணம் செய்தேன். அப்பொழுது ஆறுகளில் ஆபத்துக்குள்ளானேன். கொள்ளைக்காரராலும் ஆபத்து ஏற்பட்டது. எனது சொந்த நாட்டு மக்களாலும் ஆபத்து வந்தது; அந்நியராலும் ஆபத்து வந்தது. பட்டணத்திலும் ஆபத்து வந்தது; நாட்டுப்புறத்திலும் ஆபத்து வந்தது; கடலிலும் ஆபத்து வந்தது. கள்ளச் சகோதரராலும் எனக்கு ஆபத்து வந்தது. கடின உழைப்புக்கும், கஷ்டத்திற்கும் உள்ளானேன். பல இரவுகள் நித்திரையின்றியும் இருந்தேன். பசியும், தாகமும் உடையவனாக இருந்தேன். பலமுறை உணவு இல்லாமலும் இருந்தேன். குளிருக்குள் அகப்பட்டும், உடை இல்லாதவனாகவும் இருந்தேன். இவை எல்லாவற்றையும்விட, எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கிற அக்கறையினால் வரும் கவலை நாள்தோறும் என்னை நெருக்கியது. யாராவது பலவீனமானவனாக இருந்தால், அந்தப் பலவீனத்தைக் குறித்து நான் அக்கறை கொள்ளாதிருப்பேனோ? யாராவது பாவத்திற்குள் வழிநடத்தப்பட்டால், அதைக்குறித்து என் உள்ளத்தில் கொதிப்படையாதிருப்பேனோ?
நான் பெருமைபாராட்ட வேண்டுமானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைக்குறித்தே நான் பெருமைபாராட்டுவேன். இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். தமஸ்குவில் அரேத்தா அரசனின் கீழே ஆளுநராய் இருந்தவன், என்னைக் கைதுசெய்வதற்காக தமஸ்கருடையப் பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான். ஆனால் சிலர் என்னை ஒரு கூடையில் வைத்து, பட்டணத்து மதிலிலிருந்த, ஒரு ஜன்னலின் வழியாக என்னை இறக்கிவிட்டார்கள். இவ்விதம் அந்த ஆளுநரின் கைக்கு நான் தப்பினேன்.
பவுலுடைய தரிசனமும் முள்ளும்
நான் இன்னும் பெருமை பேசவேண்டுமானால் பேசுவேன். ஆனால், அதனால் நன்மை ஏதும் இல்லை. அப்படியானால் கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும் வெளிப்பாடுகளையுங்குறித்து நான் சொல்வேன். கிறிஸ்துவில் இருந்த ஒரு மனிதனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு வருடங்களுக்கு முன்பதாக மூன்றாம் பரலோகம் வரைக்கும், அதாவது பரலோகத்தின் உயர்ந்த இடங்கள்வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான். அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவன் தன் உடலின்றி சென்றானோ, அல்லது உடலைவிட்டுச் சென்றானோ நான் அறியேன். இறைவனே அதை அறிவார். நான் மீண்டும் சொல்கிறேன், இந்த மனிதனை எனக்குத் தெரியும். ஆனால் அவன் தனது உடலின்றி போனானோ, உடலைவிட்டுப் போனானோ, நான் அறியேன். இறைவனே அதை அறிவார். இந்த மனிதன் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். அங்கே அவன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத காரியங்களைத் தன் காதுகளால் கேட்டான். அவை மனிதரால் சொல்லவும் உச்சரிக்கவும் அனுமதிக்கப்படாதவை. இப்படிப்பட்ட மனிதனைக் குறித்தே நான் பெருமை பேசுவேன். ஆனால் என்னைக்குறித்தோ, என் பெலவீனங்களைத்தவிர வேறு எதிலும் பெருமை பேசமாட்டேன். அப்படி நான் பெருமை பேச விரும்பினாலும், அது முட்டாள்தனமாய் இராது. ஏனெனில் நான் உண்மையையே பேசுவேன். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில் ஒருவனும், நான் என் வாழ்வில் உண்மையாய் செய்தவற்றையும், சொல்லிப் போதித்தவற்றையும்விட மேலாக என்னைக்குறித்து எண்ணக்கூடாது. ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற மேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, பெருமைகொள்ளாதபடி எனது உடலில் ஒருமுள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைத் துன்புறுத்தும்படி சாத்தானால் அனுப்பப்பட்ட தூதுவனாயிருக்கிறது. அதை என்னைவிட்டு நீக்கும்படி மூன்றுமுறை நான் கர்த்தரிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். ஏனெனில் உன் பெலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே நான் எனது பெலவீனங்களைக் குறித்து இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் பெருமையாய்ப் பேசுவேன். இவ்விதமாக கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கட்டும். அந்தப்படியே கிறிஸ்துவின் நிமித்தம் நான் அனுபவித்த பெலவீனங்களைக் குறித்தும், அவமானங்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், துன்புறுத்தல்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பெலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பெலமுள்ளவனாய் இருக்கிறேன்.
கொரிந்தியரில் பவுலின் அக்கறை
நான் என்னை ஒரு முட்டாள் ஆக்கினேன். ஆனால் நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். நீங்கள் என்னைப் பாராட்டியிருக்க வேண்டும். நான் ஒன்றுமில்லை என்றாலும், உங்களுடைய இந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களைவிட” எவ்விதத்திலும் குறைந்தவனுமல்ல. நான் உங்களோடிருக்கையில் உண்மையான அப்போஸ்தலனுக்குரிய செயல்கள் உங்களிடையே தொடர்ந்து செய்யப்பட்டன. அடையாளங்களும், அற்புதங்களும், வல்லமையான செயல்களும் உங்களுக்குள் நடப்பிக்கப்பட்டதே. நீங்கள் மற்றத் திருச்சபைகளைவிட, எந்த வகையில் குறைவாக நடத்தப்பட்டீர்கள்? நான் உங்களுக்கு ஒரு சுமையாய் இருக்காதது மட்டும்தானே! அந்தத் தவறை எனக்கு மன்னித்து விடுங்கள்.
இப்பொழுதும் நான் மூன்றாவது முறையாக உங்களிடம் வர ஆயத்தமாய் இருக்கிறேன். ஆனால், உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன். ஏனெனில் நான் உங்களுடைய உடைமைகளையல்ல, உங்களையே விரும்புகிறேன். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக சேமித்துவைக்க வேண்டியதில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்காக சேமித்துவைக்க வேண்டும். எனவே நான் உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு, எனக்குள்ள எல்லாவற்றையும் செலவு செய்வேன். என்னையும் இழக்க ஆயத்தமாயிருக்கிறேன். நான் இவ்வாறு உங்களில் அதிகம் அன்பாயிருக்கும் போது, நீங்கள் என்னில் குறைவான அன்பு செலுத்தலாமா? அப்படியிருந்தாலும், நான் உங்களுக்குச் சுமையாயிருக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆனால் நான் உங்களில் சிலரை, தந்திரமாய் உங்களை வளைத்துப் பிடித்தேன் என்றும் சொல்லப்படுகிறது. நான் உங்களிடம் அனுப்பியவர்களின் மூலமாக உங்களிடமிருந்து எதையாவது சுரண்டி எடுத்தேனா? உங்களிடம் போகும்படி நானே தீத்துவைக் கேட்டுக்கொண்டேன். அவனுடன் மற்றச் சகோதரனையும் அனுப்பினேன். தீத்து உங்களிடமிருந்து எதையாவது சுரண்டிப் பிழைத்தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? நாங்கள் உங்களுடனே ஒரே ஆவியுள்ளவர்களாய் நடந்துகொள்ளவில்லையா? ஒரே பாதையைப் பின்பற்றவில்லையா?
உங்களுக்கு முன்பாக எங்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க முயலுகிறோமென்றா நீங்கள் இதுவரை எண்ணியிருக்கிறீர்கள்? இறைவனுடைய பார்வையில், கிறிஸ்துவில் உள்ளவர்களாகவே நாங்கள் பேசியிருக்கிறோம்; அன்பான நண்பரே, உங்களைக் கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் எல்லாவற்றையும் செய்கிறோம். ஒருவேளை நான் உங்களிடம் வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இருப்பீர்களோ என்னவோ, நானும் நீங்கள் விரும்புகிறபடி நடந்துகொள்ளாமல் இருப்பேனோ என்னவோ என்று நான் பயப்படுகிறேன். உங்களிடையே வாக்குவாதங்களும், பொறாமையும், கோபங்களும், சுயநலமும், அவதூறு பேசுதலும், புறங்கூறுதலும், அகங்காரமும், ஒழுங்கீனமும், இருக்குமோ என்றும் பயப்படுகிறேன். நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைச் சிறுமைப்படுத்துவாரோ என்று, நான் பயப்படுகிறேன். உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களாகிய அசுத்தத்தையும், பாலியல் சம்பந்தமான பாவத்தையும், காமவெறியையும் விட்டு, ஒருவேளை மனந்திரும்பாதிருக்கலாம். அப்படியானவர்களைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.
இறுதி எச்சரிப்புகள்
இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகிறேன். எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும்13:1 [உபா. 19:15] என்று, வேதவசனம் சொல்கிறது. நான் இரண்டாவது முறையாக உங்களிடம் வந்திருந்தபோது, ஏற்கெனவே உங்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுதும் நான் உங்களோடு இல்லாதிருந்தாலும், மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன்: நான் மீண்டும் வரும்போது, முன்பு பாவம் செய்தவர்களையும் இப்பொழுது பாவம் செய்கிறவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டேன். கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகிறார் என்பதற்கு அத்தாட்சியை நீங்கள் கட்டாயப்படுத்திக் கேட்பதினால், நான் இப்படிச் செய்வேன். கிறிஸ்து உங்களிடையே பலம் குறைந்தவராக அல்ல, பலமுள்ளவராகவே செயலாற்றுகிறார். உண்மையில் அவர் வலுவற்ற மனித உடலில் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இறைவனுடைய வல்லமையினாலேயே அவர் உயிர் வாழ்கிறார். அப்படியே நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கிறோம். ஆனால் இறைவனுடைய வல்லமையினால் உங்கள்பொருட்டு ஊழியம் செய்ய அவருடன் உயிர்வாழ்வோம்.
நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு உங்களில் குடியிருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இல்லையா? அந்த உணர்வு உங்களில் இல்லாவிட்டால், நீங்கள் சோதனையில் தோற்றுப்போய்விட்டீர்கள் என்றே அர்த்தமாகும். நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன். நீங்கள் தீமையேதும் செய்யாதிருக்கும்படியாக நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் இப்படி மன்றாடுவது, நாங்கள் சோதனையில் வெற்றியடைந்தோம் என்று மக்கள் காணவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் தோல்வியடைந்தது போலக் காணப்பட்டாலும், நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டும் என்றே, நாங்கள் மன்றாடுகிறோம். ஏனெனில், சத்தியத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமுடியாது. சத்தியத்திற்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறோம். நாங்கள் பெலவீனமாய் இருக்கின்றபோதும், நீங்கள் பெலமாய் இருக்கின்றதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைய வேண்டும் என்றே நாங்கள் மன்றாடுகிறோம். நான் உங்களிடம் வரும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்துடன் உங்களுடன் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை, உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது இவைகளைப் பற்றி நான் எழுதுகிறேன். கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம், உங்களை இடித்து வீழ்த்துவதற்குக் கொடுக்கப்படவில்லை, உங்களைக் கட்டி எழுப்புவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடைசி வாழ்த்துதல்
கடைசியாக பிரியமானவர்களே, நான் விடைபெறுகிறேன். மகிழ்ச்சியாயிருங்கள். முழுநிறைவான வாழ்வுக்கு முயற்சியுங்கள். நான் சொன்னவற்றைக் கவனித்துக் கேளுங்கள். ஒரே மனதுடையவர்களாய் இருங்கள். சமாதானமாய் வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் உரியவரான இறைவன் உங்களுடனே இருப்பார்.
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள்.
பரிசுத்தவான்கள் எல்லோரும், தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள்.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.