- Biblica® Open Indian Tamil Contemporary Version 2 நாளாகமம் நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 2 நாளாகமம் 2 நாளா. நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் சாலொமோன் ஞானத்தைக் கேட்டல் தாவீதின் மகன் சாலொமோன் தனது அரசாட்சியின்மேல் தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய யெகோவா அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார். பின்பு சாலொமோன் எல்லா இஸ்ரயேலருடனும் பேசினான். அவன் ஆயிரம்பேரின் தளபதிகளுடனும், நூறுபேரின் தளபதிகளுடனும், நீதிபதிகளுடனும், இஸ்ரயேலின் தலைவர்களுடனும், குடும்பங்களின் தலைவர்களுடனும் பேசினான். சாலொமோனும் கூடியிருந்தவர்கள் எல்லோரும் கிபியோனில் உள்ள உயரமான இடத்திற்குப் போனார்கள். ஏனெனில் அங்கேயே யெகோவாவின் ஊழியக்காரரான மோசே பாலைவனத்தில் அமைத்த இறைவனின் ஆசரிப்புக்கூடாரம் இருந்தது. அப்பொழுது தாவீது இறைவனின் பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து அதற்கென தான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் எருசலேமில் அதற்காக ஒரு கூடாரம் அமைத்திருந்தான். ஆனால் கூரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேல் செய்திருந்த ஒரு வெண்கல பலிபீடம் கிபியோனில் யெகோவாவின் இருப்பிடத்திற்கு முன்னால் இருந்தது. எனவே அந்த இடத்தில்தான் சாலொமோனும் கூடியிருந்த மக்களும் யெகோவாவிடத்தில் விசாரித்தார்கள். சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்குமுன் அமைந்திருந்த வெண்கல பலிபீடத்திற்கு சாலொமோன் சென்றான். அங்கே ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் காணப்பட்டு, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார். சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தகப்பன் தாவீதிற்கு உமது மிகுந்த தயவைக் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர். இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, எனது தகப்பன் தாவீதிற்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தம் உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் தூளைப்போல் எண்ணிக்கையுடைய மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான். இறைவன் சாலொமோனிடம், “நீ செல்வத்தையோ, செழிப்பையோ, கனத்தையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக என் மக்களை ஆளும்படி நான் உன்னை அரசனாக்கினேன். நீ அவர்களை ஆளுவதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய். இதுவே உனது இருதயத்தின் ஆசையாயிருந்தபடியால், உனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்கிறேன். அத்துடன் உனக்கு முன்னிருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், கனத்தையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார். அதன்பின்பு சாலொமோன் கிபியோனின் சபைக் கூடாரத்திற்கு முன்பாக இருந்த, உயர்ந்த இடத்திலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே இஸ்ரயேலை அரசாண்டான். சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் 1,400 தேர்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். அரசன் எருசலேமில் தங்கத்தையும், வெள்ளியையும் கற்களைப்போல் சாதரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரங்களில் வளரும் காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும் சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள். எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். ஆலயம் கட்டுவதற்கான ஆயத்தங்கள் சாலொமோன் யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தையும் தனக்கு ஒரு அரச அரண்மனையையும் கட்டுவதற்கு உத்தரவிட்டான். சாலொமோன் சுமை சுமப்பதற்கு 70,000 பேரையும், குன்றுகளில் கற்களை வெட்டுவதற்கு 80,000 பேரையும் அவர்களை மேற்பார்வை செய்வதற்கு 3,600 பேரையும் கட்டாய வேலைக்கு அமர்த்தினான். சாலொமோன் தீருவின் அரசன் ஈராமுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். அதில், “நீர் எனது தகப்பன் தாவீது கேட்டபோது, அவர் குடியிருக்க அரண்மனை கட்டுவதற்கு கேதுரு மரங்களை அனுப்பினீர், அதுபோல் எனக்கும் கேதுரு மரங்களை அனுப்பும். நான் யெகோவாவாகிய என் இறைவனின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டி, அதை அவருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்கு நறுமண தூபங்காட்டுவதற்கும், பரிசுத்த அப்பங்களை வைப்பதற்கும் ஒவ்வொரு காலையிலும், மாலையிலும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், எங்கள் இறைவனாகிய யெகோவா நியமித்த பண்டிகை நாட்களிலும் தகன காணிக்கைகளைச் செலுத்துகிறதற்கும் அந்த ஆலயத்தைக் கட்டப்போகிறேன். இக்காணிக்கைகள் இஸ்ரயேலுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கிறது. “நான் கட்டப்போகிற ஆலயம் மேன்மையுடையதாய் இருக்கும். ஏனெனில் எங்கள் இறைவன் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மேலானவர். வானங்களும் வானாதி வானங்களும் அவரை உள்ளடக்க முடியாதிருக்க அவருக்கு ஆலயத்தைக் கட்டக்கூடியவன் யார்? அப்படியிருக்க அவருக்கு முன்பாகத் தகனபலியிட ஒரு இடத்தை கட்டுவதைத்தவிர அவருக்கு ஆலயத்தைக் கட்டுவதற்கு நான் யார்? “எனவே தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், ஊதா, கருஞ்சிவப்பு, நீலம் ஆகிய நூலினால் வேலைசெய்யக்கூடிய திறமையுள்ளவனும், செதுக்கு வேலைசெய்வதில் அனுபவமுள்ளவனுமான ஒருவனை அனுப்பும். அவன் யூதாவிலும் எருசலேமிலும் எனது தந்தை தாவீது நியமித்திருக்கிற திறமையுள்ள தொழிலாளிகளுடன் சேர்ந்து வேலைசெய்யட்டும். “அத்துடன் நீர் எனக்கு லெபனோனிலிருந்து கேதுரு, தேவதாரு, அல்மக் வாசனை மரங்களையும்2:8 வாசனை மரங்களையும் அல்லது சந்தன மரங்கள் அனுப்பிவையும். ஏனெனில் அங்கே உள்ள உமது மனிதர் மரம் வெட்டுவதில் திறமையுள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது மனிதர்களும் அவர்களுடன் வேலை செய்வார்கள். அவர்கள் எனக்கு ஏராளமான வெட்டிய மரத்துண்டுகளைக் கொடுப்பார்கள். ஏனெனில் நான் கட்டப்போகும் ஆலயம் மிகப்பெரியதாயும், கெம்பீரமானதாயும் இருக்கவேண்டும். நான் மரங்களை வெட்டும் உமது வேலையாட்களுக்கு 3,000 டன்2:10 அதாவது, சுமார் 3,000 டன் என்பது எபிரெயத்தில், 20,000 கோர் என்றுள்ளது அளவுள்ள கோதுமை, 3,000 டன் வாற்கோதுமை, 20,000 குடம் திராட்சை இரசம், 20,000 குடம் ஒலிவ எண்ணெய் ஆகியவற்றைக் கொடுப்பேன்” என்றிருந்தது. சாலொமோனின் கடிதத்திற்கு தீருவின் அரசன் ஈராம், “யெகோவா தமது மக்களை நேசிப்பதனால் உம்மை அவர்களுக்கு அரசனாக்கியிருக்கிறார்” எனப் பதிலனுப்பினான். பின்னும் ஈராம், “வானத்தையும், பூமியையும் படைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக! அவர், அரசன் தாவீதுக்கு நுண்ணறிவும், பகுத்தறிவும் நிரம்பிய ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்திருக்கிறார். அவன் யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும் தனக்கு ஒரு அரண்மனையையும் கட்டுவான். “நான் ஈராம் அபி என்னும் திறமையுள்ள ஒருவனை உம்மிடத்திற்கு அனுப்புகிறேன். அவனுடைய தாய் தாண் நாட்டையும், தகப்பன் தீரு தேசத்தையும் சேர்ந்தவர்கள். அவன் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரப்பலகை ஆகியவற்றிலும், ஊதா, நீலம், கருஞ்சிவப்புநூல், மென்பட்டு நூல் ஆகியவற்றிலும் வேலைசெய்யப் பயிற்றுவிக்கப்பட்டவன். அவன் எல்லாவித செதுக்கு வேலைகளையும், எல்லாவித பொறிக்கும் வேலைகளையும், எந்த வகை மாதிரி வடிவத்தையும் செய்யக் கூடியவனுமாயிருக்கிறான். அவன் உம்முடைய திறமையான கைவினைஞர்களோடும் உமது தகப்பனும், எனது தலைவனுமான தாவீதின் திறமையான கைவினைஞர்களோடும் சேர்ந்து வேலைசெய்வான். “எனவே என் தலைவனே, நீர் சொன்னபடி கோதுமை, வாற்கோதுமை, ஒலிவ எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உமது வேலைக்காரருக்குக் கொடுத்து அனுப்பும். நாங்கள் உமக்குத் தேவையான மரங்களை லெபனோனில் வெட்டி, அவற்றைக் கட்டு மரங்களைப்போல் கட்டி, கடல் வழியாக யோப்பாவரை அனுப்புவோம். அப்பொழுது நீர் அதை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம்” எனவும் எழுதியிருந்தான். தன் தந்தை தாவீது இஸ்ரயேலில் இருக்கும் அந்நியரை கணக்கெடுத்ததுபோல, சாலொமோனும் கணக்கிட்டபோது அங்கே 1,53,600 பேர் இருந்தனர். அவன் இவர்களில் 70,000 பேரை சுமை சுமப்பவர்களாகவும், 80,000 பேரை குன்றுகளில் கல் வெட்டுபவர்களாகவும், 3,600 பேரை வேலை செய்பவர்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும் நியமித்தான். எருசலேமின் ஆலயவேலை பின்பு சாலொமோன் எருசலேமிலுள்ள மோரியா மலையில் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். அங்குதான் அவனுடைய தகப்பன் தாவீதுக்கு யெகோவா காட்சியளித்திருந்தார். அந்த இடம் தாவீதினால் கொடுக்கப்பட்ட எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் இருந்தது. அவன் தனது அரசாட்சியின் நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் நாளில் கட்டட வேலையைத் தொடங்கினான். சாலொமோன் அஸ்திபாரமிட்ட இறைவனுடைய ஆலயத்தின் நீளம் அறுபது முழமும், அகலம் இருபது முழமும் ஆகும். அவை பழைய அளவையின்படி இருந்தது. ஆலயத்தின் முன்மண்டபம் கட்டடத்தின் அகலப் பக்கத்தில் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் அவன் சுத்த தங்கத்தகட்டால் மூடியிருந்தான். ஆலயத்தின் பிரதான மண்டபத்தை தேவதாரு பலகையால் மூடி அழகுபடுத்தி, அதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அதைப் பேரீச்சமர வடிவங்களாலும், சங்கிலி வடிவங்களாலும் அலங்கரித்தான். ஆலயத்தை விலையுயர்ந்த கற்களால் அலங்கரித்தான். அவன் பர்வாயீமின் தங்கத்தைப் பயன்படுத்தினான். உட்கூரை மரங்கள், கதவு நிலைகள், சுவர்கள், ஆலயத்தின் கதவுகள் ஆகியவற்றைத் தங்கத் தகட்டினால் மூடி, சுவர்களில் கேருபீன் உருவங்களையும் செதுக்கினான். அவன் மகா பரிசுத்த இடத்தையும் கட்டினான். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தை ஒத்திருந்தது. நீளம் இருபது முழமும், அகலம் இருபது முழமுமாயிருந்தது. இவற்றை அறுநூறு தாலந்து சிறந்த தங்கத்தினால் மூடியிருந்தான். தங்கத்தினால் செய்யப்பட்ட ஆணிகள் ஐம்பது சேக்கல் எடையுள்ளன. மேல் பகுதிகளும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது. மகா பரிசுத்த இடத்தில் அவன் இரண்டு செதுக்கப்பட்ட கேருபீன்களை அமைத்து, அவற்றையும் தங்கத்தகட்டால் மூடினான். கேருபீன்களின் இறக்கைகளின் முழு நீளம் இருபது முழமாய் இருந்தது. முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், ஆலயத்தின் சுவரைத் தொடுவதாயும் இருந்தது. அதன் மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாய் இருந்தது. அதுவும் மற்ற கேருபீனின் சிறகை தொட்டபடி இருந்தது. இவ்வாறு இரண்டாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாக இருந்தது. அது ஆலயத்தின் மற்ற சுவரைத் தொட்டது. மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாயிருந்தது. அது முதலாவது கேருபீனின் சிறகை தொட்டுக்கொண்டிருந்தது. இந்த கேருபீன்களின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழமாய் நீண்டிருந்தன. அவை ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியபடி காலூன்றி நின்றன. சாலொமோன் நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், மென்பட்டினாலும் திரைச்சீலையைச் செய்து, அதில் கேருபீன்களின் உருவங்கள் தைக்கப்பட்டிருந்தன. ஆலயத்தின் முன்பகுதியில் அவன் இரண்டு தூண்களைச் செய்திருந்தான், அவை இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றும் முப்பத்தைந்து முழ நீளமாயிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஐந்துமுழ அளவுள்ள கும்பம் இருந்தது. பின்னப்பட்ட சங்கிலிகளைச் செய்து, அவற்றை அதன் தூண்களின் உச்சியில் வைத்தான். அதோடு நூறு மாதுளம்பழ வடிவங்களைச் செய்து அவற்றை சங்கிலியில் பிணைத்தான். அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் தெற்குப் பக்கத்திற்கு ஒன்றும், வடக்குப் பக்கத்திற்கு ஒன்றுமாக நிறுத்தினான். தெற்கிலிருந்த தூணுக்கு யாகீன் என்றும், வடக்கிலிருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான். ஆலயத்தின் அலங்காரப் பொருட்கள் சாலொமோன் இருபதுமுழ நீளம், முப்பதுமுழ அகலம், பத்துமுழ உயரமுடைய ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான். அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன. வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன. தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர்4:5 அதாவது, சுமார் 60,000 லிட்டர் என்பது மூல மொழியில் 3,000 பாத் என்றுள்ளது தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது. அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது. அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான். அவன் அந்தப் பெரிய தொட்டியைத் தெற்கு பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் வைத்தான். அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்: இரண்டு தூண்கள், தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள், தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள், தாங்கும் கால்களுடன் அதன் தொட்டிகள்; பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள், பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், இறைச்சி குத்தும் முட்கரண்டிகள் இன்னும் தேவையான மற்றும் எல்லாப் பொருட்களுமே. யெகோவாவினுடைய ஆலயத்தின் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் அபி என்பவன் அரசன் சாலொமோனுக்கு பளபளக்கும் வெண்கலத்தினால் செய்துமுடித்தான். இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சேரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான். இப்பொருட்களைச் செய்வதற்கு சாலொமோன் பயன்படுத்திய வெண்கலம் மிக அதிகமாய் இருந்தபடியால் அதன் எடை எவ்வளவு எனத் தீர்மானிக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் இறைவனின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன: தங்க பலிபீடம், இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான மேஜைகள், உட்புற பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் நிர்ணயித்த முறைப்படி எரிப்பதற்கு, சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகளுடன் அதன் விளக்குகள், கட்டித் தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள். சுத்தத் தங்கத்தினாலான திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள், ஆலயத்திற்கு தங்கக் கதவுகள், அதாவது மகா பரிசுத்த இடத்தின் உட்புறக் கதவுகள், பிரதான மண்டபத்தின் கதவுகள் ஆகியனவாகும். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. பின்பு சாலொமோன் தன் தகப்பன் தாவீது அர்ப்பணித்த பொருட்களான வெள்ளியையும், தங்கத்தையும், எல்லா பொருட்களையும் கொண்டுவந்தான். அவற்றை இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்துக்குள் கொண்டுபோய் வைத்தான். பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல் பின்பு சாலொமோன் தாவீதின் நகரமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி வரவழைத்தான். ஏழாம் மாதத்தின் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள். இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் லேவியர்கள் பெட்டியைத் தூக்கினார்கள். அவர்கள் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். லேவியர்களான ஆசாரியர்கள் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை. அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளையும் மூடிக்கொண்டிருந்தன. இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தபடியால், பெட்டியிலிருந்து வெளியே நீண்டிருந்த அவற்றின் முனைகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன. அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார். பின்பு ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தார்கள். அங்கேயிருந்த எல்லா ஆசாரியரும் தங்கள் பிரிவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், தங்களைப் பரிசுத்தப்படுத்தியிருந்தார்கள். பாடகர்களான ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களும், அவர்களுடைய மகன்களும், உறவினர்களுமாக எல்லா லேவியர்களும் பலிபீடத்தின் கிழக்குப் பகுதியில் நின்றார்கள். அவர்கள் மென்பட்டு உடையை உடுத்தி, கைத்தாளங்களையும், யாழ்களையும், வீணைகளையும் இசைத்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து நூற்றிருபது ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு நின்றனர். எக்காளம் ஊதுபவர்களும், பாடகர்களும், ஒன்றிணைந்து ஒரே குரலில் யெகோவாவுக்கு துதியையும் நன்றியையும் செலுத்தினர். எக்காளங்கள், கைத்தாளங்கள், மற்றும் இசைக்கருவிகளுடன் தங்கள் குரல்களை உயர்த்தி, யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள்: “யெகோவா நல்லவர், அவர் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.” அப்பொழுது யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பிற்று. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை இறைவனுடைய ஆலயத்தை நிரப்பியது. அப்பொழுது சாலொமோன்: “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார், நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான். இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. அவர் எனது தகப்பன் தாவீதுக்கு வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். அவர் சொன்னதாவது, அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவுமில்லை, எனது மக்களான இஸ்ரயேல்மேல் தலைவனாயிருக்கும்படி ஒருவனையும் தேர்ந்தெடுக்கவுமில்லை. ஆனால் இப்பொழுது நான் எனது பெயர் விளங்கும்படி எருசலேமைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்.’ “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது. ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான். அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார். “இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன். அங்கே நான் பெட்டியை வைத்தேன். அதில் இஸ்ரயேல் மக்களுடன் யெகோவா செய்த உடன்படிக்கை இருக்கிறது” என்றான். சாலொமோனின் மன்றாட்டு அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று தன் கைகளை விரித்தான். சாலொமோன் ஐந்துமுழ நீளமும், ஐந்துமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமுடைய ஒரு வெண்கல மேடையைச் செய்து, அதை வெளிமுற்றத்தின் நடுவில் வைத்திருந்தான். இப்பொழுது அவன் அதில் ஏறி நின்று, கூடியிருந்த இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டு, வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான். அதன்பின் அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை; உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே. உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர். “இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, நீர் உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ என்முன் எனது சட்டத்தின்படி நடந்ததுபோல், உனது மகன்களும் அதின்படி நடக்க தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியானாகிய தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும். “ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் மனிதனோடு வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதிருக்க, நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்! என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும்; உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக. உமது பெயர் விளங்குமென்று நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. இந்த இடத்தை நோக்கி, உமது அடியேன் செய்யும் மன்றாட்டை நீர் கேட்பீராக. இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும். “ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால், அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும். “உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது, பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்களுக்கும், அவர்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும். “உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும். “நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர்கள் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும், அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன் வேதனைகளையும் துன்பங்களையும் உணர்ந்தவர்களாய், இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ விண்ணப்பத்தையோ செய்தால், உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே. அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள். “உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியன் உமது பெரிதான பெயரின் நிமித்தமும், உமது வலிமைமிக்க கரத்தின் நிமித்தமும், நீட்டிய புயத்தின் நிமித்தமும் தூரதேசத்திலிருந்து வந்த அவன் இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது, நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள். “உமது மக்கள் தங்கள் பகைவர்களுக்கெதிராக போருக்குப் போகக்கூடும். அவ்வாறு நீர் அவர்களை எங்கே அனுப்பினாலும், நீர் தெரிந்துகொண்ட இந்தப் பட்டணத்தையும், உமது பெயருக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி அவர்கள் மன்றாடும்போது, பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும். “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவரிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ உள்ள நாட்டிற்கு சிறைபிடித்துக்கொண்டு போவார்கள். அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று சிறைபட்டுப்போன நாட்டிலே உம்மிடம் அவர்கள் கெஞ்சி, அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து, தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால், நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும். “என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும். “இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும், நீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன், உமது தங்கும் இடத்திற்கு வாரும். இறைவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பை உடுத்திக்கொள்ளட்டும். உமது பரிசுத்தவான்கள் உமது நன்மைகளில் மகிழ்வார்களாக. இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும். உமது ஊழியக்காரன் தாவீதுக்கு வாக்குப்பண்ணிய பெரிதான அன்பை நினைத்துக்கொள்ளும்.” ஆலய அர்ப்பணம் சாலொமோன் ஜெபித்து முடித்தபோது, பரலோகத்திலிருந்து நெருப்பு கீழே இறங்கி தகன காணிக்கையையும், பலிகளையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பியதனால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் போகமுடியவில்லை. நெருப்பு கீழே இறங்கினதையும், யெகோவாவின் மகிமை ஆலயத்திற்கு மேலாய் இருப்பதையும் எல்லா இஸ்ரயேலரும் கண்டார்கள், அப்போது அவர்கள் நடைபாதையில் முழங்காலிட்டு முகங்குப்புற விழுந்து, “அவர் நல்லவர், அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று அவரை வழிபட்டு, யெகோவாவுக்கு நன்றி செலுத்தினர். பின்பு அரசனும் எல்லா மக்களும் யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். அதோடு அரசன் சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பலியாகச் செலுத்தினான்; இவ்விதமாக அரசனும் எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்தார்கள். ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர். சாலொமோன் அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் அவன் செய்திருந்த வெண்கல பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், கொழுப்புப் பங்குகளையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது. எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் அந்த நாளிலிருந்து ஏழுநாட்களுக்கு பண்டிகையை கொண்டாடும்படி பெருந்திரளாய் கூடினர். எட்டாவது நாள் ஒன்றாகக் கூடினார்கள். ஏழுநாட்களுக்கு பலிபீட அர்ப்பணிப்பைக் கொண்டாடியிருந்தார்கள். இன்னும் ஏழுநாட்களுக்குப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல் இவ்வாறு சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் கட்டிமுடித்தான். யெகோவாவின் ஆலயத்தையும், தனது அரண்மனையையும் எவ்வாறு கட்டவேண்டுமென மனதில் எண்ணியிருந்தானோ அவ்வாறே எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்துமுடித்தான். அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது: “நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். “நான் மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து, அல்லது நாட்டை அழிக்கும்படி வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது எனது மக்களுக்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, எனது பெயரால் அழைக்கப்படும் என் மக்கள் தங்களைத் தாழ்த்தி மன்றாடி, என் முகத்தைத் தேடி, தங்கள் கொடிய வழிகளைவிட்டு விலகுவார்களேயானால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் நாட்டைக் குணப்படுத்துவேன். இந்த இடத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்திருக்கும்; என் செவிகள் கவனமாயிருக்கும். நான் என்றென்றைக்கும் என் பெயர் இந்த ஆலயத்திலிருக்கும்படி, அதைத் தெரிந்துகொண்டு, பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். எனது கண்களும், எனது இருதயமும் எப்பொழுதும் அங்கிருக்கும். “நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், நான் உனது தகப்பன் தாவீதுடன், ‘இஸ்ரயேலை ஆட்சிசெய்ய உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொல்லி, உடன்படிக்கை செய்ததின்படியே உன் அரச அரியணையை நிலைநிறுத்துவேன். “ஆனால் நீங்களோ நான் உங்களுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த என் நாட்டிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப் போடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். நான் அதை எல்லா மக்களுக்குள்ளும் பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் ஆக்குவேன். இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.” சாலொமோனின் மற்ற நிகழ்வுகள் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தனது சொந்த அரண்மனையையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு, ஈராம் தனக்குக் கொடுத்திருந்த கிராமங்களை சாலொமோன் திரும்பவும் கட்டினான். அங்கே இஸ்ரயேலரைக் குடியமர்த்தினான். பின்பு சாலொமோன் ஆமாத் சோபாவுக்கு போய் அதைக் கைப்பற்றினான். அத்துடன் அவன் பாலைவனத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தில் தான் கட்டியிருந்த எல்லா களஞ்சியப் பட்டணங்களையும் திரும்பவும் கட்டினான். அவன்மேல் பெத் ஓரோனையும், கீழ் பெத் ஓரோனையும் மதில்களும், வாசல்களும், தாழ்ப்பாள்களுமுடைய அரணுள்ள பட்டணங்களாகத் திரும்பவும் கட்டினான். அத்துடன் பாலாத்தையும், சாலொமோனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான எல்லாப் பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான். நாட்டில் இஸ்ரயேலர் அல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் இன்னும் மீதியாயிருந்தார்கள். இவர்கள் இஸ்ரயேலர்களால் அழிக்கப்படாமல் அந்நாட்டில் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான். ஆனால் சாலொமோன் தனது வேலைகளுக்கு இஸ்ரயேலரை அடிமைகளாக வைத்திருக்கவில்லை; அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும் அவனுடைய தலைவர்களுக்கு தளபதிகளாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள். அத்துடன் அவர்கள் அரசன் சாலொமோனின் தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இருநூற்றைம்பது அதிகாரிகள் மனிதரை மேற்பார்வை செய்தனர். சாலொமோன், “எனது மனைவி, இஸ்ரயேல் அரசனான தாவீதின் அரண்மனையில் வாழக்கூடாது. ஏனெனில் யெகோவாவின் பெட்டி சென்ற இடங்கள் பரிசுத்தமானவை” என்று சொல்லி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்காகக் கட்டியிருந்த அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். சாலொமோன் மண்டபத்தின் முன்னால் தான் கட்டியிருந்த யெகோவாவின் பலிபீடத்திலே யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். மோசேயினால் கட்டளையிடப்பட்டபடி காணிக்கைகளை ஒவ்வொரு நாளும் தேவைக்கேற்ப, ஓய்வுநாளிலும், அமாவாசையிலும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையான மூன்று வருடாந்திர பண்டிகைகளிலும் செலுத்தினான். சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் நியமத்தின்படி, ஆசாரியர்களை அவர்களின் கடமைக்கேற்ப பிரிவுகளின்படி நியமித்தான். அதோடு துதியில் வழிநடத்துவதற்கும், ஆசாரியருக்கு உதவிசெய்யவும் லேவியர்களை ஒவ்வொரு நாளின் தேவைக்கேற்ப நியமித்தான். அத்துடன் அவன் வெவ்வேறு வாசல்களிலும், வாசல் காவலாளர்களையும் பிரிவு பிரிவாக நியமித்தான். ஏனெனில் இறைவனின் மனிதனான தாவீது இவ்விதமாய் கட்டளையிட்டிருந்தான். திரவியக் களஞ்சியங்கள் உள்ளடங்க எந்த விஷயத்திலும் ஆசாரியருக்கோ, லேவியருக்கோ அரசனால் கொடுக்கப்பட்ட அரசனின் கட்டளைகளிலிருந்து அவர்கள் விலகவில்லை. இவ்வாறு சாலொமோனின் எல்லா வேலைகளும் யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரமிடப்பட்ட நாளிலிருந்து அது முடியும்வரை செய்யப்பட்டன. அப்படியே யெகோவாவின் ஆலயம் முடிவுற்றது. பின்பு சாலொமோன் ஏதோமின் கடலோரத்தில் இருக்கும் எசியோன் கேபேருக்கும், ஏலாத்துக்கும் போனான். ஈராம் கடல் பயணத்தில் பழக்கப்பட்ட தனது வேலையாட்களின் பொறுப்பிலுள்ள கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். அவர்கள் சாலொமோனின் மனிதருடன் ஓப்பீருக்குக் கப்பலில் போய், நானூற்று ஐம்பது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அரசன் சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். சாலொமோனை சேபாவின் அரசி சந்தித்தல் சாலொமோனின் புகழை சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் அவனை கடினமான கேள்விகளால் சோதிப்பதற்காக எருசலேமுக்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள். சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அவன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை. சேபாவின் அரசி சாலொமோனுடைய ஞானத்தையும், அத்துடன் அவன் கட்டியிருந்த அரண்மனையையும், அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது. ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவேயில்லை. உண்மையிலேயே உமது ஞானத்தின் மேன்மையில் பாதியாகிலும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், நீர் அதிக மேன்மை உடையவராயிருக்கிறீர். உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். உம்மில் பிரியங்கொண்டு, உம்மைத் தமது அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள். பின்பு அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த வாசனைப் பொருட்களைப்போல, அங்கே ஒருபோதும் அவை இருந்ததில்லை. ஈராமின் மனிதரும், சாலொமோனின் மனிதரும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தார்கள். அத்துடன் அவர்கள் அல்மக் வாசனை மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் அந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் படிகளை அமைக்கவும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். அப்படிப்பட்டவைகள் யூதாவில் ஒருபோதும் காணப்படவில்லை. சாலொமோன் அரசன் சேபாவின் அரசி ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அவள் தனக்குக் கொண்டுவந்தவற்றைவிட அதிகமாகவே அவன் அவளுக்குக் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள். சாலொமோனின் செழிப்பு ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள்9:13 அதாவது, சுமார் 23,000 கிலோகிராம் இருந்தன. இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும் கொண்டுவந்ததைத் தவிர, அரேபியா நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் சாலொமோனுக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள். சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல்9:15 ஒவ்வொரு கேடயத்திற்கும் சுமார் 7 கிலோகிராம் தங்கம் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது. அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு சேக்கல் எடையுள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான். அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான். அரியணைக்கு ஆறு படிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட தங்கத்தினால் செய்த ஒரு பாதபடியும் இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது. ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை. சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது. அரசனின் வியாபாரக் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன. பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான். பூமியிலுள்ள அரசர்கள் எல்லோரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள். வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். சாலொமோனிடம் குதிரைகளுக்கும், தேர்களுக்கும் 4,000 தொழுவங்கள் இருந்தன. 12,000 குதிரைகளை தேர்ப் பட்டணங்களிலும் அரசன் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். அவன் ஐபிராத்து நதிதொடங்கி எகிப்தின் எல்லை மட்டுமுள்ள பெலிஸ்திய நாடுவரையுள்ள எல்லா அரசர்களுக்கும் மேலாக ஆளுகை செய்தான். அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். சாலொமோனுக்கு குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. சாலொமோனின் மரணம் சாலொமோனின் அரசாட்சியின் மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை, இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், சீலோனியனான அகியாவின் இறைவாக்கிலும், நேபாத்தின் மகன் யெரொபெயாமைப் பற்றிய தரிசனக்காரனான இத்தோவின் தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கின்றன. சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான். இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான். இஸ்ரயேலர் ரெகொபெயாமுக்கு எதிராகக் கலகம் ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள். அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் எல்லா இஸ்ரயேலரும் ரெகொபெயாமிடம் வந்து, “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார், ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். அதற்கு ரெகொபெயாம், “மூன்று நாட்களில் திரும்பவும் என்னிடம் வாருங்கள்” என்றான். எனவே மக்கள் போய்விட்டார்கள். அதன்பின்பு, அரசன் ரெகொபெயாம் தன் தகப்பன் சாலொமோனின் காலத்தில் அவரிடம் பணிசெய்த முதியோருடன் கலந்து ஆலோசனை செய்தான். அவன் அவர்களிடம், “இந்த மக்களுக்கு நான் பதில்சொல்வதற்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் இந்த மக்களுக்குத் தயவுகாட்டி, அவர்களைப் பிரியப்படுத்தி, அவர்களுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பீரானால் அவர்கள் எப்பொழுதும் உமது பணியாட்களாயிருப்பார்கள்” என்றார்கள். ஆனால் ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்து தனக்குப் பணிசெய்த வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். அவன் அவர்களிடம், “ ‘உமது தகப்பன் எங்கள்மேல் வைத்த பாரத்தை எளிதாக்கும்’ என்று கேட்கிற இந்த மக்களுக்கு நான் பதில் கொடுப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?” என்று கேட்டான். அவனுடன் வளர்ந்த வாலிபர்கள், “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார், நீர் எங்கள் நுகத்தை இலகுவாக்கும் என உம்மிடம் சொல்கிற அந்த மக்களிடம், எனது சிறிய விரல் என் தகப்பனின் இடுப்பைவிடத் தடிமனானது என்று சொல்லும். அத்துடன் என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன் என்று சொல்லும்” என்றார்கள். “மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள். அப்போது அரசன் ரெகொபெயாம் அவர்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு, வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான். இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் இறைவனிடமிருந்தே வந்தன. அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: “தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு? ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு? இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்! தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!” எனவே எல்லா இஸ்ரயேலரும் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான். அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் இஸ்ரயேலர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான். இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா, பென்யமீன் குடும்பத்தில் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் தனது ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள எல்லா இஸ்ரயேலருக்கும் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: உங்கள் சக இஸ்ரயேலர்களுக்கு11:4 வடக்கு கோத்திரங்கள். எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு எதிராக அணிவகுத்துச் செல்வதைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ரெகொபெயாம் யூதாவை அரணுள்ளதாக்குதல் ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான். பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோக்கோ, அதுல்லாம், காத், மரேஷா, சீப், அதோராயீம், லாகீசு, அசேக்கா, சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான். அவன் அங்குள்ள பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவற்றிற்கு தளபதிகளை நியமித்தான். அவர்களுக்கான உணவையும், ஒலிவ எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் கொடுத்தான். அவன் எல்லாப் பட்டணங்களிலும் கேடயங்களையும், ஈட்டிகளையும் வைத்து அவற்றை மிகவும் பலப்படுத்தினான். அப்படியே யூதாவும், பென்யமீனும் அவனுடையதாயிற்று. இஸ்ரயேல் எங்குமுள்ள ஆசாரியரும், லேவியர்களும் அவர்களுடைய எல்லைகளிலிருந்து அவனுக்கு ஆதரவு வழங்கினர். லேவியர் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் மகன்களும் புறக்கணித்ததால், தங்கள் விளைச்சல் நிலங்களையும், சொத்துக்களையும்விட்டு யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். ஆனால் யெரொபெயாம் தான் செய்திருந்த வழிபாட்டு மேடைகளுக்கும், ஆடு, கன்றுக்குட்டி விக்கிரகங்களுக்குமென தனது சொந்த ஆசாரியர்களை நியமித்தான். இஸ்ரயேலர் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடவேண்டும் எனத் தங்கள் இருதயத்தில் நினைத்தவர்கள், தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்கென லேவியர்களைப் பின்பற்றி எருசலேமுக்குப் போனார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று வருடங்கள் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு உதவிசெய்து, யூதாவின் அரசாட்சியை நிலைநிறுத்திப் பெலப்படுத்தினார்கள்; இந்த மூன்று வருடங்களும் அவர்கள் தாவீது, சாலொமோன் நடந்த வழிகளில் நடந்தார்கள். ரெகொபெயாமின் குடும்பம் ரெகொபெயாம் மகலாத்தைத் திருமணம் செய்தான். இவள் தாவீதின் மகன் எரிமோத்திற்கும் ஈசாயின் மகனான எலியாபின் மகள் அபியாயேலுக்கும் பிறந்தவள். மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். பின்பு அவன் அப்சலோமின் மகளான மாக்காளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித் ஆகியோரைப் பெற்றாள். ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வைப்பாட்டிகள் எவரையும்விட, அப்சலோமின் மகளான மாக்காள்மீதே அன்பாயிருந்தான். அவனுக்கு எல்லாமாக மொத்தம் பதினெட்டு மனைவிகளும், அறுபது வைப்பாட்டிகளும், இருபத்தெட்டு மகன்களும், அறுபது மகள்களும் இருந்தார்கள். ரெகொபெயாம் மாக்காளின் மகன் அபியாவை அரசனாக்கும்படி, அவனுடைய சகோதரருக்குள் முதன்மையான இளவரசனாக்கினான்; அவனையே அரசனாக்க வேண்டுமென்றிருந்தான். அவன் ஞானமாய் நடந்து, தன் மகன்களில் சிலரை பென்யமீன், யூதா நாடுகளெங்குமுள்ள அரணுள்ள பட்டணங்களில் பிரிந்து பரவலாய் இருக்கச்செய்தான். அவன் அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருட்களையும், அவர்களுக்கென அநேக மனைவிகளையும் கொடுத்தான். சீஷாக் எருசலேமைத் தாக்குதல் ரெகொபெயாம் தன்னை அரசனாக நிலைப்படுத்தி, வல்லமையடைந்தபின், அவனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யெகோவாவினுடைய சட்டத்தைக் கைவிட்டார்கள். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருந்தபடியினால், எகிப்திய அரசனான சீஷாக் அரசன் ரெகொபெயாம் அரசாண்ட ஐந்தாம் வருடம் எருசலேமைத் தாக்கினான். அவன் 1,200 தேர்களுடனும், 60,000 குதிரைவீரர்களுடனும் வந்தான். அத்துடன் எகிப்திலிருந்து லிபியர், சூக்கியர், கூஷியர்12:3 கூஷியர் அல்லது எத்தியோப்பியர் அடங்கிய எண்ணற்ற படையுடனும் வந்தான். அவன் யூதாவின் அரணான பட்டணங்களைப் கைப்பற்றி எருசலேம் வரைக்கும் வந்தான். அப்பொழுது இறைவாக்கினன் செமாயா, சீஷாக்கிற்குப் பயந்து எருசலேமில் ஒன்றுகூடியிருந்த ரெகொபெயாமிடத்திற்கும், யூதாவின் தலைவர்களிடத்திற்கும் வந்தான். அவன் அவர்களிடம், “யெகோவா சொல்வது இதுவே, ‘நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள்; அதனால், நானும் இப்பொழுது சீஷாக்கின் கையிலே உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்கிறார்” என்றான். இஸ்ரயேலின் தலைவர்களும் அரசனும் தங்களைத் தாழ்த்தி, “யெகோவா நீதியுள்ளவர்” என்று சொன்னார்கள். அவர்கள் தங்களைத் தாழ்த்தியதை யெகோவா கண்டபோது, யெகோவாவின் இந்த வார்த்தை செமாயாவுக்கு வந்தது: “அவர்கள் தங்களைத் தாழ்த்தியிருப்பதனால் நான் அவர்களை அழிக்கமாட்டேன்; நான் விரைவில் அவர்களை விடுவிப்பேன். சீஷாக்கின் மூலம் எனது கோபத்தை எருசலேமின்மேல் ஊற்றமாட்டேன். எப்படியாயினும் அவர்கள் அவனுக்கு கீழ்ப்பட்டு இருப்பார்கள், அதனால் அவர்கள் எனக்குப் பணிசெய்வதற்கும், மற்ற நாட்டு அரசர்களுக்கு பணிசெய்வதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வார்கள்.” எகிப்தின் அரசன் சீஷாக் எருசலேமைத் தாக்கியபோது, அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான். யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களை எடுத்துக்கொண்டு அரசனோடு போய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள். ரெகொபெயாம் தன்னை தாழ்த்தியபடியால், அவனை முழுவதும் அழிக்காதபடி, யெகோவாவின் கோபம் அவனைவிட்டுத் திரும்பியது; யூதாவில் இன்னும் சில நற்செயல்கள் காணப்பட்டது. அரசன் ரெகொபெயாம் தன்னை எருசலேமில் உறுதியாய் நிலைப்படுத்தித் தொடர்ந்து அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள். யெகோவாவைத் தேடுவதற்கு அவன் தன் இருதயத்தில் உறுதியாய் இராதபடியினால் தீமையையே செய்தான். ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் தொடக்கமுதல் முடிவு வரையான நிகழ்வுகள், இறைவாக்கினனான செமாயாவின் குறிப்புப் புத்தகத்திலும், தரிசனக்காரனான இத்தோவியரின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலும் அல்லவோ எழுதியிருக்கின்றன. ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவின் அரசன் அபியா யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான். அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. அபியா தேர்ந்தெடுக்கப்பட்ட 4,00,000 வலிமையான போர்வீரர்களுடன் போருக்குப் போனான்; அது போன்றே யெரொபெயாமும் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,00,000 வலிமையான போர்வீரர்களுடன் அவனுக்கு எதிராக அணிவகுத்து நின்றான். அபியா எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள செமராயீம் குன்றுமேல் ஏறி நின்று சொன்னதாவது: “யெரொபெயாமே, இஸ்ரயேலரே, நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரயேலின் அரச பதவியை இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தாவீதுக்கும், அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர உடன்படிக்கையினால் என்றென்றைக்குமாக கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் தாவீதின் மகனான சாலொமோனின் அதிகாரியான நேபாத்தின் மகன் யெரொபெயாம், தனது தலைவனுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறான். ஒன்றுக்கும் உதவாத சில வீணர்கள் யெரொபெயாமுடன் ஒன்றுசேர்ந்து, சாலொமோனின் மகன் ரெகொபெயாமை எதிர்த்தார்கள்; அப்பொழுது ரெகொபெயாம் மனவலிமையற்ற வாலிபனும் எதிர்ப்பதற்கு பெலனற்றவனுமாயிருந்தான். “இப்பொழுது நீங்கள் தாவீதின் சந்ததிகளின் கைகளில் யெகோவா கொடுத்த அரசாட்சியை எதிர்த்து நிற்கத் திட்டமிட்டுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே பெருங்கூட்டமாய் இருக்கிறீர்கள்; யெரொபெயாம் உங்களுக்குத் தெய்வங்களாயிருக்கும்படி செய்த தங்கக் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் உண்டு. ஆனால் நீங்கள் ஆரோனின் மகன்களான யெகோவாவின் ஆசாரியர்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு, மற்ற நாட்டு மக்கள் செய்ததுபோல் உங்களுக்குள்ளேயே நீங்கள் ஆசாரியர்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லையா? தன்னை அர்ப்பணிக்கும்படி ஒரு இளங்காளையையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவருகிற எவனும் தெய்வங்கள் அல்லாதவற்றிற்கு ஆசாரியர்களாய் இருக்கமுடிந்ததே. “எங்களுக்கோவெனில் யெகோவாவே எங்கள் இறைவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை. யெகோவாவுக்குப் பணிசெய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களாயிருக்கிறார்கள்; லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள். ஒவ்வொரு காலையும் மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், நறுமணத் தூபங்களையும் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாலை வேளையிலும் தூய்மையான மேஜையில் அப்பங்களை அடுக்கிவைத்து, தங்கக் குத்துவிளக்குகளின் மேலுள்ள அகல் விளக்குகளையும் ஏற்றுவார்கள். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவா செய்யும்படி சொன்னவற்றை நிறைவேற்றினோம். ஆனால் நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். இறைவன் எங்களோடிருக்கிறார்; அவரே எங்கள் தலைவராயிருக்கிறார். எக்காளங்களுடன் நிற்கும் அவருடைய ஆசாரியர்கள் உங்களுக்கெதிராக போர் முழக்கமிடுவார்கள். இஸ்ரயேல் மக்களே, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் போரிடாதீர்கள்; ஏனெனில் நீங்கள் வெற்றிபெறமாட்டீர்கள்” என்றான். யெரொபெயாமோ படைகளை யூதாவைச் சுற்றிப் பின்பக்கமாய்ப் போகும்படி அனுப்பினான். இவ்விதமாக அவன் யூதாவுக்கு முன்னால் நின்றான். மறைந்திருந்து தாக்குவோர் அவர்களுக்கு பின்னால் இருந்தனர். யூதா மக்கள் திரும்பிப் பார்த்துத் தாங்கள் முன்னும் பின்னும் தாக்கப்படுவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை ஊதினார்கள். யூதாவின் மனிதர்கள் போர் முழக்கமிட்டார்கள். அவர்களுடைய போர் முழக்கத்தின்போது இறைவன் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக யெரொபெயாமையும் எல்லா இஸ்ரயேலரையும் முறியடித்தார். இஸ்ரயேலர் யூதாவுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். இறைவன் அவர்களை யூதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அபியாவும் அவனுடைய மனிதர்களும் இஸ்ரயேலர்களில் பெருமளவில் வெட்டி வீழ்த்தினார்கள். எனவே அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,00,000 வலிமைமிக்க போர்வீரர்கள் இறந்தார்கள். இஸ்ரயேல் மனிதர் அந்த சந்தர்ப்பத்தில் யூதாவுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். யூதாவின் மனிதர் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்ததினால் வெற்றியடைந்தார்கள். அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து துரத்தி, அவனிடமிருந்து பெத்தேல், எஷானா, எப்ரோன் ஆகிய பட்டணங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினான். அபியாவின் நாட்களில் யெரொபெயாம் திரும்பவும் வலிமை அடையவில்லை. யெகோவா அவனை அடித்தார், அவன் இறந்துபோனான். ஆனால் அபியா மேலும் வலிமையடைந்தான். அவன் பதினான்கு பெண்களைத் திருமணம் செய்தான். இருபத்து இரண்டு மகன்களும், பதினாறு மகள்களும் அவனுக்கு இருந்தார்கள். அபியா செய்தவைகளும் சொன்னவைகளுமான அவனுடைய ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் இறைவாக்கினனான இத்தோவின் விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ளன. அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான்; அவனுடைய காலத்தில் நாடு பத்து வருடத்திற்கு சமாதானத்துடன் இருந்தது. யூதாவின் அரசன் ஆசா ஆசா தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லவற்றையும் சரியானவற்றையும் செய்தான். அவன் அந்நிய பலிபீடங்களையும் வழிபாட்டு மேடைகளையும் அகற்றி, சிலைத் தூண்களை நொறுக்கி, அசேரா தேவதையின் கம்பங்களையும் வெட்டிப்போட்டான். அவன் யூதா மக்களுக்குத் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படியும், அவருடைய சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படியும் கட்டளையிட்டான். அவன் யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலும் இருந்த வழிபாட்டு மேடைகளையும், தூபபீடங்களையும் அகற்றிப்போட்டான். ராஜ்யம் அவனுடைய ஆட்சியின்கீழ் சமாதானமாய் இருந்தது. நாடு சமாதானமாய் இருந்ததால் அவன் யூதாவின் அரணுள்ள பட்டணங்களைக் கட்டினான். அந்த வருடங்களில் யாரும் அவனுடன் போர் செய்யவில்லை. யெகோவா அவனுக்கு ஓய்வைக் கொடுத்திருந்தார். ஆசா யூதா மக்களிடம், “இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவற்றைச் சுற்றி மதில்களையும், கோபுரங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாசல்களையும் அமைப்போம். நாம் நமது இறைவனாகிய யெகோவாவைத் தேடியதால், இந்த நாடு இன்னும் நம்முடையதாகவே இருக்கிறது. நாம் அவரைத் தேடினோம், அவர் நமக்கு எல்லாப் பக்கங்களிலும் இளைப்பாறுதலைக் கொடுத்தார்” என்றான். அப்படியே அவர்கள் பட்டணங்களைக் கட்டி, செழிப்படைந்தார்கள். ஆசாவுக்குப் பெரிய கேடயங்களும் ஈட்டிகளும் வைத்திருந்த யூதாவைச் சேர்ந்த 3,00,000 போர்வீரர்கள் இருந்தார்கள். சிறிய கேடயங்களும் வில்லுகளும் வைத்திருக்கும் பென்யமீனைச் சேர்ந்த 2,80,000 போர்வீரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் தைரியமிக்க போர்வீரர்கள். கூஷியனான சேரா அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய படையுடனும், முந்நூறு தேர்களுடனும் மரேஷாவரை அணிவகுத்து வந்தான். ஆசா அவனை எதிர்கொள்ள வெளியே சென்றான். அவர்கள் மரேஷாவுக்கு அருகேயுள்ள செபத்தா பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கென அணிவகுத்து நின்றார்கள். அப்பொழுது ஆசா தன் இறைவனாகிய யெகோவாவை கூப்பிட்டு, “யெகோவாவே, வலிமைமிக்கவனுக்கு எதிராய், வலிமையற்றவனுக்கு உதவிசெய்ய உம்மைப்போல் வேறு யாருமில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவாவே எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். உமது பெயரிலேயே நாங்கள் இந்தப் பெரிய படைக்கு எதிராய் வந்திருக்கிறோம். யெகோவாவே நீரே எங்கள் இறைவன்; உம்மை மனிதன் எதிர்த்து மேற்கொள்ள நீர் அனுமதிக்காதேயும்” என்று சொன்னான். யெகோவா யூதாவுக்கும் ஆசாவுக்கும் முன்பாக கூஷியரை முறியடித்தார். கூஷியர் ஓடினார்கள். ஆசாவும் அவனுடைய இராணுவமும் கேரார்வரை பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஏராளமான எண்ணிக்கையுடைய கூஷியர் விழுந்தார்கள். அதனால் அந்த படைக்குத் திரும்பவும் வலிமையடைய முடியவில்லை. யெகோவாவுக்கும், அவருடைய வீரருக்கும் முன்பாக அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். யூதாவின் மனிதர் அதிக அளவு கொள்ளைப்பொருட்களை அள்ளிக்கொண்டு போனார்கள். யெகோவாவின் பயங்கரம் அவர்கள்மேல் வந்ததால், கேராரைச் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் யூதாவின் மனிதர் அழித்துப்போட்டார்கள். அங்கே அதிகளவு கொள்ளைப்பொருட்கள் இருந்தன. அவர்கள் எல்லாக் கிராமங்களையும் கொள்ளையடித்தார்கள். அத்துடன் அவர்கள் மந்தை மேய்ப்போரின் கூடாரங்களையும் தாக்கி, திரளான செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கைப்பற்றி, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். ஆசா செய்த சீர்திருத்தம் இப்பொழுது இறைவனின் ஆவியானவர் ஓதேதின் மகன் அசரியாவின்மேல் வந்தார். அவன் ஆசாவைச் சந்திக்க வெளியே போய் அவனிடம் சொன்னதாவது: “ஆசாவே, யூதா, பென்யமீன் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் யெகோவாவோடு இருக்கும்போது அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அவரை விட்டுவிடுவீர்களானால், அவரும் உங்களைக் விட்டுவிடுவார். இஸ்ரயேல் நீண்டகாலமாக உண்மையான இறைவன் இல்லாமலும், கற்பிப்பதற்கு ஆசாரியன் இல்லாமலும், சட்டம் இல்லாமலும் இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் துன்பத்தில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, அவரைத் தேடினார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டுகொண்டார்கள். அந்நாட்களில் பிரயாணம் செய்வது பாதுகாப்பற்றதாயிருந்தது. ஏனெனில் நாட்டில் வசிப்பவர்கள் எல்லோரும் பெருங்கலக்கமடைந்திருந்தனர். நாடு நாட்டையும், பட்டணம் பட்டணத்தையும் ஒன்றையொன்று எதிர்த்து நசுக்கியது. ஏனெனில் இறைவன் அவர்களை எல்லா விதமான துன்பங்களினாலும் கஷ்டப்படுத்தினார். ஆனால் நீங்களோ தைரியமாயிருங்கள், தளர்ந்துபோகாதேயுங்கள். ஏனெனில் உங்கள் வேலைக்குரிய வெகுமதி உங்களுக்குக் கொடுக்கப்படும்.” ஆசா, ஓதேத்தின் மகனான இறைவாக்கினன் அசரியாவின் இந்த வார்த்தைகளையும் இறைவாக்கையும் கேட்டபோது தைரியமடைந்தான். அவன் யூதா முழுவதிலும், பென்யமீன் முழுவதிலும், எப்பிராயீம் மலைநாட்டில் தான் கைப்பற்றிய பட்டணங்களிலும் இருந்த அருவருப்பான விக்கிரகங்களை அகற்றிப்போட்டான். அவன் யெகோவாவின் ஆலய மண்டபத்தின் முன்பக்கமிருந்த யெகோவாவினுடைய பலிபீடத்தை திருத்தியமைத்தான். அதன்பின் அவன் யூதா மக்களையும், பென்யமீன் மக்களையும், அவர்களுக்குள்ளே குடியிருந்த எப்பிராயீம், மனாசே, சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்களையும் கூடிவரச் செய்தான். ஏனெனில் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆசாவின் இறைவனாகிய யெகோவா அவனோடிருக்கிறார் என்பதைக் கண்டபோது, இஸ்ரயேலில் இருந்து அவனிடத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஆசாவின் அரசாட்சியின் பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்தில் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அந்த நேரத்திலே அவர்கள் தாங்கள் கொள்ளையிட்டு கொண்டுவந்ததிலிருந்து எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் யெகோவாவுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவோம் என ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அதோடு இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடாத சிறியவரோ பெரியவரோ, ஆணோ பெண்ணோ எல்லோரும் கொல்லப்படவேண்டும் எனவும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். எக்காளங்களையும் கொம்பு வாத்தியங்களையும் இசைத்து பெரிய சத்தத்துடன் ஆர்ப்பரித்து யெகோவாவிடத்தில் ஆணையிட்டார்கள். தாங்கள் முழு இருதயத்துடனும் செய்துகொண்ட ஆணையின் நிமித்தம், யூதா மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் இறைவனை ஆர்வத்தோடு தேடியதால் அவர்கள் அவரைக் கண்டுகொண்டார்கள். எனவே யெகோவா அவர்களுக்கு எல்லாப் பக்கத்திலும் இளைப்பாறுதலைக் கொடுத்தார். அரசன் ஆசா தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரச மாதா என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி, முறித்து, கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான். ஆசா இஸ்ரயேலில் இருந்து வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட அரசன் தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான். தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் இறைவனுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். ஆசாவின் ஆட்சியில் முப்பத்தைந்து வருடம் வரைக்கும் அங்கே யுத்தம் இருக்கவில்லை. ஆசாவின் கடைசிவருடங்கள் ஆசாவின் ஆட்சியின் முப்பத்தாறாம் வருடத்தில், இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான். அப்பொழுது ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவிய களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனை திரவிய களஞ்சியத்திலும் இருந்து வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து தமஸ்குவை ஆட்சி செய்த சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான். மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான். பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல் மாயீம் பட்டணங்களையும் நப்தலியின் களஞ்சியப் பட்டணங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றினார்கள். பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, தனது வேலையைக் கைவிட்டான். அப்பொழுது அரசன் ஆசா யூதாவின் எல்லா மனிதர்களையும் கொண்டுவந்தான். அவர்கள் போய் பாஷா பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அவற்றைப் பயன்படுத்தி கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான். அந்தக் காலத்தில் தரிசனக்காரனான அனானி என்பவன் யூதாவின் அரசன் ஆசாவிடம் வந்தான். அவன் ஆசாவிடம், “நீ இறைவனாகிய உனது யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காமல், சீரிய அரசனில் நம்பிக்கை வைத்தாய். அதனால் சீரிய அரசனின் படை உனது கைக்குத் தப்பித்துக் கொண்டது. கூஷியர்களும், லிபியர்களும் எண்ணற்ற தேர்களுடனும், குதிரைவீரர்களுடனும் வலிய இராணுவவீரர்களாய் இருக்கவில்லையோ? அப்படியிருந்தும் நீ யெகோவாமேல் நம்பிக்கை வைத்தபோது, அவர் உன் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தாரே. ஏனெனில் இருதயத்தை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களைப் பெலப்படுத்தும்படி, யெகோவாவினுடைய கண்களோ பூமியெங்கும் உலாவுகிறது. நீ மூடத்தனமானதைச் செய்திருக்கிறாய். ஆனபடியினால் இன்றுமுதல் நீ யுத்தங்களை சந்திப்பாய்” என்று சொன்னான். இதனால் ஆசா தரிசனக்காரனுடன் கோபங்கொண்டான்; அவன்மேல் ஆசா மிகவும் கோபங்கொண்டதனால் அவனைச் சிறையில் அடைத்தான். அந்த நாளிலேயே ஆசா சில மக்களையும் மிகக் கொடுமையாக ஒடுக்கினான். ஆசாவின் ஆட்சிக் காலத்தின் தொடக்கமுதல் முடிவுவரை உள்ள நிகழ்வுகள் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. அவனுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் ஆசா தனது கால்களில் ஏற்பட்ட வியாதியினால் வேதனைப்பட்டான். அவனுடைய வியாதி கடுமையானதாய் இருந்தும், அவன் தனது வியாதியிலும்கூட யெகோவாவின் உதவியைத் தேடவில்லை. ஆனால் வைத்தியரின் உதவியை மட்டும் தேடினான். அதன்பின் தனது ஆட்சியின் நாற்பத்தோராவது வருடத்தில் ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவர்கள் ஆசாவை தாவீதின் நகரத்தில் தனக்கென அவன் வெட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவர்கள் நறுமணப் பொருட்களினாலும், பலவிதமான தைலங்களினாலும் நிறைந்த பாடையில் அவனைக் கிடத்தினார்கள். அவர்கள் அவனைக் கனப்படுத்துவதற்காக பெரும் நெருப்பை வளர்த்தனர். யூதாவின் அரசன் யோசபாத் ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அரசனாகி இஸ்ரயேலுக்கு எதிராகத் தன்னை பலப்படுத்திக் கொண்டான். அவன் யூதாவிலுள்ள எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவவீரர்களை நிறுத்தினான். அத்துடன் அவன் யூதாவிலும், தன் தகப்பன் ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீம் பட்டணங்களிலும் காவற் படையையும் வைத்தான். யெகோவா யோசபாத்துடன்கூட இருந்தார். ஏனெனில் அவனுடைய ஆட்சியின் ஆரம்ப வருடங்களில் தனது தகப்பன் தாவீது பின்பற்றிய வழிகளில் அவன் நடந்தான். பாகால்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. அவன் தன் முற்பிதாக்களின் இறைவனைத் தேடி, இஸ்ரயேலின் பழக்கங்களைவிட அவரது கட்டளைகளையே பின்பற்றினான். யெகோவா அரசாட்சியை அவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் நிலைநிறுத்தினார். யூதா மக்கள் எல்லோரும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அதனால் அவன் மிகுந்த செல்வமும், கனமும் பெற்றான். அவனுடைய இருதயம் யெகோவாவினுடைய வழிகளைப் பின்பற்ற உறுதிகொண்டது. மேலும் அவன் யூதாவிலிருந்து வழிபாட்டு மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் அகற்றிப்போட்டான். அவனுடைய ஆட்சியின் மூன்றாம் வருடத்தில், யூதாவின் பட்டணங்களில் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா ஆகிய தனது அதிகாரிகளை அனுப்பினான். அவர்களுடன் செமாயா, நெதானியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகிய சில லேவியர்களும், ஆசாரியர்களான எலீஷாமாவும், யெகோராமும் இருந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சட்டப் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய் யூதா முழுவதும் படிப்பித்தார்கள். அவர்கள் யூதாவின் பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் போய் அங்குள்ள மக்களுக்குப் படிப்பித்தார்கள். யெகோவாவைப்பற்றிய பயம் யூதாவைச் சுற்றிலுமிருந்த நாடுகளின் எல்லா அரசுகளின் மேலும் வந்தது. அதனால் அவர்கள் யோசபாத்துடன் யுத்தம் செய்யவில்லை. சில பெலிஸ்தியர் யோசபாத்திற்கு அன்பளிப்புகளையும், திறையாக வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் அரபியரும் அவனுக்கு 7,700 செம்மறியாட்டுக் கடாக்களும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களும் அடங்கிய மந்தைகளையும் கொண்டுவந்தார்கள். யோசபாத் மேலும் மேலும் வல்லமையுடையவனானான். அவன் யூதாவில் கோட்டைகளையும், களஞ்சியப் பட்டணங்களையும் கட்டினான். யூதாவின் பட்டணங்களில் ஏராளமாய் பொருட்கள் இருந்தன. அவன் எருசலேமில் அனுபவமிக்க இராணுவவீரரையும் வைத்திருந்தான். இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட குடும்பங்களின்படியான அவர்களுடைய விபரமாவது: யூதாவைச் சேர்ந்த ஆயிரம் பேர்களைக் கொண்ட பிரிவுகளுக்கான தளபதிகள்: அத்னா 3,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்; அடுத்ததாக யோகனான் 2,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்; அடுத்ததாக சிக்ரியின் மகன் அமசியா 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் யெகோவாவுக்குப் பணிசெய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான்; பென்யமீனியரைச் சேர்ந்த எலியாதா, வில்லுகளும் கேடயங்களும் ஏந்திய 2,00,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். இவன் தைரியமுள்ள வீரன். அடுத்ததாக யெகோசபாத் யுத்த ஆயுதம் தரித்த 1,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான். யூதா முழுவதிலுமுள்ள அரணான பட்டணங்களில் அவன் நிறுத்தியிருந்த போர் வீரர்களைத் தவிர, அரசனின் இராணுவ பணியில் ஈடுபட்ட மனிதர் இவர்களே. ஆகாபுக்கு எதிரான இறைவாக்கு யோசபாத் பெரும் செல்வமும் கனமும் உள்ளவனாய் இருந்தான். அவன் ஆகாபுடன் திருமணத்தின்மூலம் உறவுமுறை கொண்டிருந்தான். சில வருடங்களுக்குப் பின்பு யோசபாத் சமாரியாவுக்கு ஆகாபினிடத்திற்கு போனான்; ஆகாப் அவனுக்கும் அவனுடன் வந்த மக்களுக்குமாக ஆடுமாடுகளை வெட்டினான். ஆகாப் ராமோத் கீலேயாத்தைத் தாக்குவதற்கு யோசபாத்தைத் தூண்டினான். இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யூதாவின் அரசன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராகப் போக என்னுடன் வருவாயா?” எனக் கேட்டான். அதற்கு யோசபாத், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும் இருக்கிறோம். நாங்கள் உன்னுடன் யுத்தத்தில் இணைவோம்” என்றான். மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம், “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம், இறைவன் அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள். ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான். மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள். மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான். ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” என்று சொன்னான். அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான். தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவரது வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் நிற்பதையும் நான் கண்டேன். அப்பொழுது யெகோவா அந்த சேனையிடம், ‘இஸ்ரயேலின் அரசன் ஆகாபை, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே அவன் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எவ்விதமாக?’ என்று யெகோவா கேட்டார். “ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார். “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர்களின் வாய்களில் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான். அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான். அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான். ஆகாப் கொல்லப்படுதல் எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச உடைகளை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான். இப்பொழுது சீரிய அரசனோ தனது தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கதறினான். யெகோவா அவனுக்கு உதவி செய்தார். இறைவன் அவர்களை அவனிடமிருந்து விலகிப்போகச் செய்தார். தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் ஆயுதக் கவசங்களின் இடைவெளி வழியாக அது அவனைத் தாக்கியது. அரசன் ஆகாப் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப் சாயங்காலம்வரை சீரியரின் பக்கம் பார்த்தபடி, தேரில் சாய்ந்துகொண்டு நின்றான். பின் சூரியன் மறையும் வேளையில் அவன் இறந்தான். யூதாவின் அரசன் யோசபாத் பாதுகாப்பாக எருசலேமிலுள்ள அரண்மனைக்குத் திரும்பினான். அப்போது அனானியின் மகனான தரிசனக்காரன் யெகூ அரசனைச் சந்திக்க வெளியே போனான். அவன் அரசனாகிய யோசபாத்திடம், “நீ கொடியவனுக்கு உதவிசெய்து யெகோவாவை வெறுக்கிறவர்களில் அன்பாயிருக்கலாமா? இதன் காரணமாக யெகோவாவின் கடுங்கோபம் உன்மேல் வந்திருக்கிறது. ஆயினும், உன்னிடத்தில் சில நல்ல காரியங்கள் உண்டு. அதாவது நீ அசேராவின் விக்கிரகத் தூண்களை நாட்டிலிருந்து அகற்றி, இறைவனைத் தேடுவதற்கு அவர் பக்கமாய் உனது இருதயத்தைத் திருப்பினாய்” என்றான். யோசபாத் நீதிபதிகளை நியமித்தல் யோசபாத் எருசலேமில் குடியிருந்தான். அவன் மறுபடியும் பெயெர்செபா தொடங்கி எப்பிராயீம் மலைநாடு வரையுள்ள மக்களைக் காண்பதற்கு சென்று, அவர்களைத் திரும்பவும் அவர்களின் முற்பிதாக்களின் இறைவனான யெகோவாவின் பக்கமாய் திரும்பச் செய்தான். அவன் யூதாவிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணங்களில் இருக்கும்படி நாட்டில் நீதிபதிகளை நியமித்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் செய்வதைக்குறித்து கவனமாக யோசனை பண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் மனிதனுக்காக நியாயந்தீர்ப்பதில்லை, யெகோவாவுக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு வழங்கும்போதெல்லாம் அவர் உங்களோடு இருக்கிறார். இப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் உங்கள்மேல் இருப்பதாக. கவனமாக நியாயம் தீருங்கள், ஏனெனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் அநியாயமோ, பாரபட்சமோ, இலஞ்சம் வாங்குதலோ இல்லை” என்றான். எருசலேமிலும்கூட யோசபாத் லேவியரிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரயேலின் குடும்பத் தலைவர்களிலும் இருந்து சிலரை நியமித்தான். அவர்கள் யெகோவாவின் சட்டங்களை நிர்வகித்து, வழக்குகளைத் தீர்த்து வைத்தார்கள். அவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள். அவன் அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளாவன: “நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து உண்மையுடனும், முழு இருதயத்துடனும் பணிசெய்ய வேண்டும். பட்டணங்களில் வாழ்கின்ற உங்களது உடனொத்த சகோதரர் இரத்தம் சிந்துதல், சட்டம், கட்டளைகள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் ஆகிய வழக்குகளை உங்களிடம் கொண்டுவரும்போது, யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்யவேண்டாம் என, நீங்கள் அவர்களை எச்சரிக்க வேண்டும். இல்லையெனில் அவரது கடுங்கோபம் உங்கள்மேலும், உங்கள் சகோதரர்மேலும் வரும். இதைச் செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் பாவம் செய்யமாட்டீர்கள். “யெகோவா சம்பந்தமான எந்த விஷயத்திலும் பிரதான ஆசாரியனான அமரியா உங்களுக்குத் தலைமை வகிப்பான். யூதாவின் தலைவனான இஸ்மயேலின் மகன் செபதியா, அரசன் சம்பந்தமான எந்த விஷயத்திலும் தலைமை வகிப்பான். லேவியர்களும் உங்களுக்கு முன்பாக அதிகாரிகளாகப் பணிசெய்வார்கள். துணிவுடன் செயல்படுங்கள், நன்றாய் பணிசெய்பவர்களோடு யெகோவா கூடஇருப்பாராக” என்றான். யோசபாத் மோவாபியரையும் அம்மோனியரையும் தோற்கடித்தல் இதற்குப் பின்பு மோவாபியரும், அம்மோனியரும், அவர்களுடன் சில மெயூனியரும் யோசபாத்துடன் யுத்தம் செய்ய வந்தார்கள். சில மனிதர்கள் யோசபாத்திடம் வந்து, “மிகப்பெரிய படை உமக்கு எதிராக சவக்கடலுக்கு அக்கரையிலுள்ள சீரியாவிலிருந்து வருகிறது. அது ஏற்கெனவே என்கேதி எனப்பட்ட அத்சாத்சோன் தாமாரில் இருக்கிறது” என்றார்கள். யோசபாத் பயந்து, யெகோவாவைத் தேடுவதற்கு தீர்மானித்து, யூதா முழுவதிலும் உபவாசத்தை அறிவித்தான். யூதா மக்கள் யெகோவாவிடம் உதவி தேடுவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள். யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலுமிருந்தும் யெகோவாவைத் தேடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர். அப்பொழுது யோசபாத் யெகோவாவின் ஆலயத்தில் புதிய முற்றத்திற்கு முன்னால் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்த மக்கள் சபையின் நடுவில் எழுந்து நின்றுகொண்டு அவன், “எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவே, பரலோகத்தில் இருக்கும் இறைவன் நீரல்லவோ? நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர். அதிகாரமும் வல்லமையும் உமது கரங்களிலேயே இருக்கின்றன. உம்மை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது. எங்கள் இறைவனே, உமது மக்களான இஸ்ரயேலுக்கு முன்பாக இந்த நாட்டின் மக்களைத் துரத்தி, உமது சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததிகளுக்கு அதை என்றென்றைக்குமாகக் கொடுத்தீரல்லவா? அவர்கள் இங்கேயே குடியிருந்து, உமது பெயருக்கென ஒரு பரிசுத்த இடத்தையும் கட்டினார்களே. ‘நியாயத்தீர்ப்பின் வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய பேராபத்துக்கள் எங்கள்மேல் வந்தால், நாங்கள் உமது பெயர் விளங்கும் இந்த ஆலயத்தின் முன்பாக உமது முன்னிலையில் நின்று, எங்கள் துன்பத்தின் நிமித்தம் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, எங்கள் சத்தத்தை நீர் கேட்டு எங்களை விடுவிப்பீர்’ என்று சொன்னீரே. “ஆனால் இப்பொழுது அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள். இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களுடைய பிரதேசத்தின் வழியாக படையெடுக்க நீர் இஸ்ரயேலரை அனுமதிக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் அவர்களைவிட்டுத் திரும்பிப் போனார்கள்; அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எப்படிப் பதில் செய்கிறார்கள் என்று பாரும், இப்பொழுது நீர் எங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த எங்கள் நாட்டிலிருந்து எங்களைத் துரத்தி விடுவதற்காக வந்திருக்கிறார்கள். எங்கள் இறைவனே, நீர் அவர்களை நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களைத் தாக்க வந்திருக்கும் இந்த மிகப்பெரிய இராணுவத்தை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை. என்ன செய்வதென்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கின்றன” என்று மன்றாடினான். யூதாவின் எல்லா மனிதர்களும், அவர்களின் மனைவியர்களுடனும், குழந்தைகளுடனும், சிறியவர்களுடனும்கூட யெகோவாவுக்கு முன்பாக நின்றார்கள். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் சபையில் நின்றுகொண்டிருந்த ஆசாப்பின் சந்ததியில் வந்த லேவியனான யகாசியேலின்மேல் வந்தார். இவன் சகரியாவின் மகன், சகரியா பெனாயாவின் மகன், பெனாயா ஏயெலின் மகன், ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் சொன்னதாவது: “அரசன் யோசபாத்தே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருப்பவர்களே, எல்லோரும் கேளுங்கள்; உங்களுக்கு யெகோவா சொல்வது இதுவே: இந்த மிகப்பெரிய படையின் நிமித்தம் நீங்கள் பயப்படவோ, அதைரியப்படவோ வேண்டாம். ஏனெனில் இந்த யுத்தம் உங்களுடையது அல்ல, இறைவனுடையது. நாளை அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அணிவகுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் என்னும் மேட்டுவழியாக ஏறி வருகிறார்கள். நீங்கள் அவர்களை யெருயேல் பாலைவனத்திலுள்ள பள்ளத்தாக்கின் கடைசியில் காண்பீர்கள். இந்த யுத்தத்தில் நீங்கள் செய்ய வேண்டியிராது. யூதாவே, எருசலேமே, நீங்கள் உங்களுக்குரிய யுத்த நிலையில் உறுதியாய் நின்று யெகோவா உங்களுக்குத் தரப்போகிற விடுதலையைப் பாருங்கள். நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அதைரியப்படவும் வேண்டாம். நாளை அவர்களைச் சந்திக்க வெளியே போங்கள். யெகோவா உங்களோடுகூட இருப்பார்” என்றான். யோசபாத் முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினான். எருசலேம், யூதா மக்கள் எல்லோரும்கூட யெகோவாவுக்கு முன்பாக கீழே விழுந்து அவரை வழிபட்டார்கள். அப்பொழுது கோகாத்தியர்களையும், கோராகியர்களையும் சேர்ந்த சில லேவியர்கள் எழுந்து நின்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிக உரத்த சத்தத்துடன் துதித்தார்கள். அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான். மக்களுடன் ஆலோசனை பண்ணிய பின்பு யோசாபாத் யெகோவாவுக்கு பாடல்களைப் பாடவும், அவரது பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் பாடகரை நியமித்தான். படைக்கு முன்னால் சென்று: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடும்படி நியமித்தான். அவர்கள் பாடவும், துதிக்கவும் தொடங்கிய உடனே யூதாவுக்கு எதிராய் வந்திருந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த மனிதருக்கெதிராக யெகோவா தீடீர்த் தாக்குதல்களை ஏற்படுத்தினார். அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். அம்மோன், மோவாப் மனிதர்களும் சேயீர் மலைநாட்டு மனிதரை அழித்து நாசப்படுத்தும்படி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். சேயீர் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தபின்பு அவர்கள் ஒருவரையொருவர் அழித்தார்கள். யூதாவின் மக்கள் பாலைவனத்திற்கு எதிராய் இருக்கிற இடத்திற்கு வந்து இந்தப் பெரிய படையினர் பக்கமாய் பார்த்தபோது, அங்கே பிரேதங்கள் மட்டுமே தரையில் கிடப்பதைக் கண்டார்கள். ஒருவனும் தப்பியிருக்கவில்லை. எனவே யோசபாத்தும், அவன் மனிதர்களும் கொள்ளைப்பொருளை எடுத்து வருவதற்காக அங்கே சென்றார்கள். அங்கே அவர்கள் பெரும் தொகையான உபகரணங்களையும், உடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கண்டார்கள். அவை எடுத்துக் கொண்டுபோக முடியாத அளவு அதிகமாயிருந்தன. கொள்ளைப்பொருள் அதிகமாயிருந்தபடியால், அவற்றைச் சேர்த்தெடுக்க மூன்றுநாள் பிடித்தது. அவர்கள் நாலாம் நாளில் பெராக்கா பள்ளத்தாக்கிலே ஒன்றுகூடி அங்கே யெகோவாவைத் துதித்தார்கள். அதனால் அது இன்றுவரை பெராக்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. அதன்பின் யூதா, எருசலேம் மனிதர்கள் எல்லோரும் யோசபாத்தின் தலைமையின்கீழ் மகிழ்ச்சியுடன் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஏனெனில் தங்கள் பகைவர்களை மேற்கொண்டு சந்தோஷமாயிருக்கும்படி யெகோவா செய்தார். அவர்கள் எருசலேமுக்குள் போய் யாழ்களோடும், வீணைகளோடும், எக்காளங்களோடும் யெகோவாவினுடைய ஆலயத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் பகைவர்களோடு யெகோவா எப்படி யுத்தம் செய்தார் என மற்ற நாட்டு அரசுகள் கேள்விப்பட்டபோது, இறைவனைப்பற்றிய பயம் அவர்கள்மேல் வந்தது. யோசபாத்தின் அரசு சமாதானத்துடன் இருந்தது. ஏனெனில் அவனுடைய இறைவன் எல்லாப் பக்கத்திலும் அவனுக்கு அமைதியைக் கொடுத்திருந்தார். யோசபாத்தின் ஆட்சியின் முடிவு யோசபாத் யூதாவின்மேல் ஆட்சிசெய்தான். அவன் யூதாவுக்கு அரசனானபோது, அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள். அவன் தனது தகப்பன் ஆசாவின் வழியிலே நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான். ஆயினும் வழிபாட்டு மேடைகள் அகற்றப்படவில்லை. மக்களும்கூட தங்கள் இருதயத்தை தங்கள் முற்பிதாக்களின் இறைவனின் பக்கமாக இன்னும் திருப்பாதிருந்தனர். யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை அனானியின் மகன் யெகூவின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை இஸ்ரயேலின் அரசர்களின் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடைசியில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் தீயவழியில் நடந்த அகசியாவுடன் சேர்ந்துகொண்டான். யோசபாத் அவனுடன் தர்ஷீசுக்குப் போக வியாபாரக் கப்பல்களைக் கட்டுவதற்கு உடன்பட்டான். இவை எசியோன் கேபேரில் கட்டப்பட்டன. பின்பு மரேஷா ஊரைச்சேர்ந்த தொதாவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்கு உரைத்தான். அவன் அவனிடம், “நீ அகசியாவுடன் நட்பு உடன்படிக்கை செய்தபடியினால் நீ செய்தவற்றையும் யெகோவா அழித்துப்போடுவார்” என்றான். கப்பல்கள் உடைந்துபோயின; அவற்றை தர்ஷீசுக்கு வியாபாரத்திற்குக் கொண்டுசெல்ல முடியாதிருந்தது. அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான். யோசபாத்தின் மகன்களான யெகோராமின் சகோதரர் அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாயேல், செபத்தியா ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும் இஸ்ரயேல் அரசன் யோசபாத்தின் மகன்கள். அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு வெள்ளி, தங்கம் விலையுயர்ந்த பொருட்கள் ஆகிய அநேகம் அன்பளிப்புகளைக் கொடுத்திருந்தான். அவன் யூதாவின் அரண்செய்த பட்டணங்களையும் கொடுத்திருந்தான். ஆனால் யெகோராம் அவனுடைய மூத்த மகன் ஆகையினால் அவனுடைய ஆட்சியை அவன் யெகோராமுக்கு கொடுத்தான். யூதாவின் அரசன் யெகோராம் யெகோராம் தனது தகப்பனின் அரசில் தன்னை உறுதியாக நிலைப்படுத்தியபின், அவன் தன் சகோதரர் எல்லோரையும் அவர்களுடன் இஸ்ரயேலின் இளவரசர்களில் சிலரையும் வாளால் கொன்றான். யெகோராம் அரசனானபோது முப்பத்திரண்டு வயதுடையவனாய் இருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் ஒரு மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இருந்தாலும், யெகோவா தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் ஒரு குலவிளக்கை என்றென்றும் வைத்திருப்பேன் என வாக்குப்பண்ணி, அவனுடன் செய்த உடன்படிக்கையின் நிமித்தம் யெகோவா தாவீதின் சந்ததியை அழித்துப்போட விருப்பமில்லாதிருந்தார். யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர். எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான். இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெகோராம் தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைவிட்டு விலகியபடியால், அக்காலத்தில் லிப்னாவைச் சேர்ந்தவர்கள் கலகம் செய்தார்கள். அவன் யூதாவின் குன்றுகளில் வழிபாட்டு மேடைகளையும் கட்டி வழிபடுவதன்மூலம், எருசலேம் மக்களை வேசித்தனத்தில் ஈடுபடச் செய்தான். இவ்வாறு யூதாவை வழிதவறச் செய்தான். இறைவாக்கினன் எலியாவிடமிருந்து ஒரு கடிதம் யெகோராமுக்குக் கிடைத்தது. அதில், “உனது முற்பிதாவான தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நீ உனது முற்பிதாவாகிய யோசபாத்தோ அல்லது யூதாவின் அரசன் ஆசாவோ நடந்த வழியில் நடக்கவில்லை. ஆனால் நீ இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தாய். அத்துடன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யூதாவையும், எருசலேம் மக்களையும் விக்கிரக வழிபாட்டின்மூலம் வேசித்தனம் செய்ய வழிநடத்தியிருக்கிறாய். அத்துடன் நீ உன்னைவிட நல்ல மனிதர்களான உனது சொந்த சகோதரரையும், உன் தகப்பனின் வீட்டு அங்கத்தினர்களையும் கொலைசெய்தாய். இப்பொழுது யெகோவா உன் மக்களையும், உனது மகன்களையும், உன் மனைவிகளையும் அத்துடன் உன்னுடையவை அனைத்தையும் கடுமையான வாதையால் அடித்துப்போடப் போகிறார். நீ தீராத குடல் நோயினால் வியாதிப்பட்டிருப்பாய். அந்த வியாதி உனது குடல்கள் வெளியே வரும்வரை நீடித்திருக்கும்” என்று எழுதியிருந்தது. யெகோவா யெகோராமுக்கு எதிராக பெலிஸ்தியரின் பகைமையையும், கூஷியரின் அருகில் வாழ்ந்த அரபியரின் பகைமையையும் தூண்டிவிட்டார். அவர்கள் யூதாவைத் தாக்கி அதன்மேல் படையெடுத்து, அரசனின் அரண்மனையில் காணப்பட்ட எல்லாப் பொருட்களையும் கொண்டுபோனார்கள். அவற்றுடன் அவனுடைய மகன்களையும், மனைவியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். இளையமகன் அகசியாவைத்தவிர வேறு ஒரு மகனும் அவனுக்குத் தப்பவில்லை. இவையெல்லாவற்றிற்கும் பின்பு யெகோவா யெகோராமை தீராத குடல் வியாதியினால் துன்புறுத்தினார். இந்நிகழ்ச்சியின் காலத்தில் இரண்டாம் வருடக் கடைசியில் நோயினால் அவனுடைய குடல்கள் வெளியே வந்தன, அவன் கொடிய வேதனையில் இறந்துபோனான். அவனுடைய மக்கள் அவனுடைய முற்பிதாக்களுக்குச் செய்ததுபோல அவனுக்கு மரியாதை செலுத்துவதற்காக நெருப்பு வளர்க்கவில்லை. யெகோராம் அரசனாகும்போது முப்பத்திரண்டு வயதாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆயினும் அரசர்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. ஒருவனும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடவும் இல்லை. யூதாவின் அரசன் அகசியா எருசலேமின் மக்கள் யெகோராமின் இளையமகன் அகசியாவை அவனுடைய தந்தையின் இடத்தில் அரசனாக்கினார்கள்; ஏனெனில் அரபியருடன் முகாமுக்குள் வந்த கொள்ளையர்கள் அகசியாவுக்கு முன்பு பிறந்த யெகோராமின் எல்லா மகன்களையும் கொன்றிருந்தார்கள். எனவே யூதாவின் அரசன் யெகோராமின் மகன் அகசியா அரசனானான். அகசியா அரசனானபோது இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். அவள் உம்ரியின் பேத்தியாவாள். அகசியாவும் ஆகாபின் வீட்டாரின் வழியிலே நடந்தான்; அவன் தீயவழியில் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனை கூறினாள். அவன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஏனெனில் அவனுடைய தகப்பன் இறந்துபோன பின்பு ஆகாபின் வீட்டாரே அவனுடைய ஆலோசகர்களாய் இருந்தனர்; அகசியாவின் அழிவுக்கு இவர்களே காரணமாயிருந்தார்கள். அத்துடன் அகசியா அவர்களின் ஆலோசனையைக் கேட்டு இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மகன் யோராமுடன், கீலேயாயாத்திலுள்ள ராமோத்திற்கு சீரிய அரசனான ஆசகேலுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனான். சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில் செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான். அப்பொழுது ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்ததால், யூதாவின் அரசனான யெகோராமின் மகன் அசரியா, அவனைப் பார்ப்பதற்கு யெஸ்ரயேலுக்குப் போனான். அகசியா யோராமை பார்க்க வந்ததினால் இறைவன் அகசியாவுக்கு வீழ்ச்சியை உண்டாக்கினார். அகசியா வந்து சேர்ந்தபோது அவன் யோராமுடன் நிம்சியின் மகன் யெகூவைச் சந்திக்கப் போனான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்கென யெகோவா யெகூவை அபிஷேகம் செய்திருந்தார். யெகூ ஆகாபின் குடும்பத்தாருக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கும்போது, அகசியாவிடம் பணிபுரிந்த யூதாவின் தலைவர்களையும், அவனுடைய உறவினர்களின் மகன்களையும், அவன் அலுவலர்களையும் கண்டுபிடித்துக் கொன்றான். பின்பு அவன் அகசியாவைத் தேடிப் போனான். அப்பொழுது சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அகசியாவை யெகூவின் மனிதர் பிடித்தனர். அவன் யெகூவிடம் கொண்டுவரப்பட்டு கொலைசெய்யப்பட்டான். அவர்கள், “யெகோவாவை முழு இருதயத்துடனும் தேடிய யோசபாத்தின் மகன் இவன்” என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள்; எனவே, ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றக்கூடிய வல்லமையுடைய ஒருவனும் அகசியாவின் குடும்பத்தில் இருக்கவில்லை. அத்தாலியாவும் யோவாஸும் அகசியாவின் தாய் அத்தாலியாள் தன் மகன் இறந்ததைக் கண்டபோது, அவள் யூதாவின் அரச குடும்பம் எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினாள். ஆனால் அரசனான யெகோராமின் மகள் யோசேபாள், கொலைசெய்யப்படவிருந்த இளவரசர்களிடமிருந்து அகசியாவின் மகன் யோவாஸை களவாகக் கொண்டுபோய், அவனுடைய செவிலியத் தாயுடன் படுக்கையறையில் வைத்தாள். ஏனெனில் யோசேபாள் அரசன் யோராமின் மகளும், ஆசாரியன் யோய்தாவின் மனைவியும், அகசியாவின் சகோதரியுமாவாள். அவள் அத்தாலியாளிடமிருந்து பிள்ளையை ஒளித்துவைத்தபடியினால் அத்தாலியாளால் பிள்ளையைக் கொலைசெய்ய முடியவில்லை. அத்தாலியாள் அரசாண்ட ஆறுவருஷமளவும், யோவாஸ் தொடர்ந்து அவர்களுடன் இறைவனின் ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான். ஏழாம் வருடத்தில் யோய்தா தனது வல்லமையைக் காட்டினான். அவன் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்த யெரோகாமின் மகன் அசரியா, யோகனாவின் மகன் இஸ்மயேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியாவின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் உடன்படிக்கை செய்தான். அவர்கள் யூதா முழுவதும் சென்று, எல்லாப் பட்டணங்களிலுமுள்ள, லேவியர்களையும் இஸ்ரயேல் குடும்பங்களின் தலைவர்களையும் ஒன்றுசேர்த்தார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது, அந்த முழுச் சபையும் அரசனோடு இறைவனின் ஆலயத்தில் ஒரு உடன்படிக்கை செய்தது. யோய்தா அவர்களிடம், “யெகோவா தாவீதின் சந்ததிகளைக் குறித்து வாக்குத்தத்தம் செய்தபடி அரசனுடைய மகன் அரசாட்சி செய்யவேண்டும். இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் ஊழியம் செய்யும் ஆசாரியர்களிலும், லேவியர்களிலும் மூன்றிலொரு பகுதியினர் வாசல்களைக் காவல் காக்கவேண்டும், மற்ற மூன்றிலொரு பகுதியினர் அரச அரண்மனையிலும், இன்னும் மூன்றிலொரு பகுதியினர் அஸ்திபார வாசலிலும் காவல் காக்கவேண்டும். மற்ற மனிதர்கள் எல்லோரும் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நிற்கவேண்டும். ஆசாரியர்களையும், ஊழியம் செய்யும் லேவியர்களையும் தவிர வேறு யாரும் யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் போகக்கூடாது. ஏனெனில் அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், ஆதலால் அவர்கள் மட்டுமே உள்ளே போகலாம். ஆனால் மற்ற மனிதர்கள் எல்லோரும் யெகோவா தங்களுக்கு ஒப்புக்கொடுத்ததைக் காவல் செய்யவேண்டும். லேவியர்கள் ஒவ்வொருவரும் தமது யுத்த ஆயுதங்களைக் கையில் பிடித்தவர்களாய் அரசனைச் சுற்றி நிற்கவேண்டும். ஆலயத்திற்குள் போகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும் அவனுக்கு அருகே நீங்கள் இருங்கள்” என சொன்னான். ஆசாரியனான யோய்தா உத்தரவிட்டபடியே லேவியர்களும் யூதா மக்கள் எல்லோரும் செய்தனர். ஓய்வுநாளில் பணிபுரிகிறவர்களும், விடுப்பில் போகிறவர்களுமான தம்தம் மனிதரைக் கூட்டிச்சென்றார்கள். ஏனெனில் ஆசாரியன் யோய்தா எந்த ஒரு பிரிவினருக்கும் உத்தரவு கொடுக்கவில்லை. அவன் தாவீது அரசனுக்குச் சொந்தமானதும் இறைவனின் ஆலயத்தில் இருந்ததுமான ஈட்டிகளையும், பெரியதும் சிறியதுமான கேடயங்களையும் நூறுபேருக்குத் தளபதிகளிடம் கொடுத்தான். எல்லா மனிதரையும் ஒவ்வொருவராய் தன்தன் கையில் ஆயுதங்களைத் தாங்கியபடி அரசனைச் சுற்றி நிறுத்தினான். பலிபீடத்தின் அருகேயும், தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்தின் அருகேயும் அவர்களை நிறுத்தினான். யோய்தாவும், அவன் மகன்களும் அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன் தலையில் வைத்தார்கள். அவர்கள் உடன்படிக்கையின் பிரதியொன்றை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து அவனை அரசனாக பிரகடனப்படுத்தினார்கள். அவர்கள் அவனை அபிஷேகித்து, “அரசன் நீடூழி வாழ்க!” என்று சத்தமிட்டார்கள். மக்கள் ஓடித் திரிகின்ற சத்தத்தையும் அரசனை வாழ்த்துகின்ற சத்தத்தையும் அத்தாலியாள் கேட்டாள். அப்போது அவள் யெகோவாவின் ஆலயத்திற்கு அவர்களிடம் வந்தாள். அங்கே அவள், நுழைவாசலில் அரசனுடைய தூண் அருகே யோவாஸ் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அத்துடன் அதிகாரிகளும் எக்காளம் ஊதுகிறவர்களும் அரசனின் அருகே நின்றார்கள். நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் எக்காளங்களை ஊதினார்கள். பாடகர்களும் இசைக்கருவிகளுடன் துதிப்பதற்கு தலைமை தாங்கினார்கள். அப்பொழுது அத்தாலியாள் தனது அங்கிகளைக் கிழித்துக்கொண்டு, “அரச துரோகம்! அரச துரோகம்!” எனக் கூக்குரலிட்டாள். ஆசாரியன் யோய்தா படைகளுக்குப் பொறுப்பாயிருந்த நூறுபேருக்குத் தளபதிகளை வெளியே அனுப்பினான். அவன் அவர்களிடம், “அவளை ஆலய வளவுக்கு வெளியே கொண்டுபோங்கள். அவளுக்குப் பின்னால் வருகிற எவனையும் வாளினால் கொன்றுபோடுங்கள். அவளை யெகோவாவின் ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான். எனவே அவர்கள் அரச அரண்மனை முற்றத்திலுள்ள குதிரை வாசலின் நுழைவாசலில் வைத்து அவளைப் பிடித்து அங்கே கொன்றுபோட்டார்கள். பின்பு யோய்தா தானும், மக்களும், அரசனும் யெகோவாவின் மக்களாய் இருப்போம் என ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். மக்களெல்லோரும் பாகாலின் கோயிலுக்குச் சென்று அதை இடித்து பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் நொறுக்கிப்போட்டார்கள். அத்துடன் பாகாலின் பூசாரியான மாத்தானை பலிபீடங்களுக்கு முன்னேவைத்து கொன்றார்கள். பின்பு யோய்தா யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை லேவியரான ஆசாரியர்களின் கைகளில் கொடுத்தான். அவர்களுக்கே மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளபடி மகிழ்ச்சியுடனும், பாடலுடனும் யெகோவாவுக்குத் தகன காணிக்கை செலுத்தும்படி தாவீது ஆலயத்தில் வேலைகளை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். தாவீது உத்தரவிட்டபடியே யோய்தா செய்தான். அத்துடன் எவ்வகையிலும் அசுத்தமானவர்கள், ஆலயத்தினுள் போகாதபடி யெகோவாவின் ஆலய வாசலில் காவலர்களை நிறுத்தினான். பின்பு அவன் தன்னுடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், உயர்குடி மனிதரையும், மக்களின் ஆளுநர்களையும், நாட்டின் எல்லா மக்களையும் கூட்டிக்கொண்டு, அரசனையும் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து கீழே அழைத்து வந்தான். அவர்கள் உயர் வாசல் வழியாக அரண்மனைக்குள் போய் அரச அரியணையில் அரசனை அமர்த்தினார்கள். நாட்டு மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள்; பட்டணம் அமைதியாயிருந்தது. ஏனெனில் அத்தாலியாள் வாளினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள். யோவாஸ் ஆலயத்தைத் திருத்தியமைத்தல் யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் நாற்பதுவருடம் ஆட்சிசெய்தான். அவன் தாயின் பெயர் சிபியாள். அவள் பெயெர்செபாவைச் சேர்ந்தவள். ஆசாரியன் யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்து வந்தான். யோய்தா அவனுக்கு இரண்டு மனைவிகளைத் தெரிந்தெடுத்துக் கொடுத்தான். அவனுக்கு மகன்களும் மகள்களும் இருந்தார்கள். சிறிது காலத்தின்பின் யோவாஸ் யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தான். அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒன்றாக அழைத்து அவர்களிடம், “யூதாவின் பட்டணங்களுக்குப் போய் உங்கள் இறைவனின் ஆலயத்தைத் திருத்துவதற்கு இஸ்ரயேலரிடமிருந்து வருடாவருடம் கொடுக்கப்படவேண்டிய பணத்தைச் சேகரியுங்கள். அதை இப்பொழுதே செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்களோ உடனே செயல்படவில்லை. ஆகவே அரசன் பிரதான ஆசாரியன் யோய்தாவை அழைப்பித்து அவனிடம், “யெகோவாவின் அடியவன் மோசேயினாலும், இஸ்ரயேல் சபையாலும் சாட்சிக் கூடாரத்திற்கென நியமிக்கப்பட்ட வரியை யூதாவிடத்திலும் எருசலேமிடத்திலும் இருந்து வாங்கிவரும்படி, நீர் ஏன் லேவியர்களை விசாரிக்கவில்லை?” என்று கேட்டான். அந்த கொடியவளான அத்தாலியாளின் மகன்கள் இறைவனின் ஆலயத்தை உடைத்து, யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் இருந்த பரிசுத்த பொருட்களைக்கூட பாகாலுக்குப் கொடுத்திருந்தார்கள். எனவே அரசனின் கட்டளைப்படி பெரிய பெட்டியொன்றைச் செய்து யெகோவாவின் ஆலய வாசலில் வெளியே வைத்தார்கள். பாலைவனத்தில் இறைவனின் அடியவனாகிய மோசே இஸ்ரயேலரிடம் கேட்டுக்கொண்டபடி யெகோவாவுக்கென வரி கொண்டுவரப்பட வேண்டுமென்ற ஒரு அறிவித்தல் யூதாவிலும், எருசலேமிலும் பிரசித்தப்படுத்தப்பட்டது. எல்லா அதிகாரிகளும், எல்லா மக்களும் தங்கள் கொடைகளை மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து அந்தப் பெட்டி நிரம்பும்வரை அதற்குள் போட்டார்கள். அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள். அரசனும், யோய்தாவும் அப்பணத்தை யெகோவாவின் ஆலயத்திற்கு வேண்டிய வேலைசெய்யும் மனிதர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கென சிற்பிகளையும், தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் ஆலயத்தைத் திருத்துவதற்கான இரும்பு வேலை, வெண்கல வேலை பார்ப்போரையும்கூட கூலிக்கு அமர்த்தினார்கள். வேலைக்குப் பொறுப்பாய் இருந்த மனிதர் கடும் உழைப்பாளிகளாய் இருந்தார்கள். அவர்களின் மேற்பார்வையில் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. அவர்கள் இறைவனின் ஆலயத்தை அதன் முந்திய வரைபடத்தின்படி திரும்பவும் கட்டி வலுவுள்ளதாய் அமைத்தார்கள். ஆலய வேலைகளை முடித்தபோது, உடனே அவர்கள் மிகுதியாயிருந்த பணத்தை அரசனிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்தார்கள். அதைக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்கென பொருட்கள் செய்யப்பட்டன. யெகோவாவினுடைய ஆராதனைக்கும், தகன காணிக்கைக்கும் உரிய பொருட்களும், அத்துடன் கிண்ணங்களும், மற்றும், தங்கம், வெள்ளி ஆகியவற்றாலான பொருட்களும் செய்யப்பட்டன. யோய்தா வாழ்ந்த நாட்களெல்லாம் யெகோவாவினுடைய ஆலயத்தில் தொடர்ச்சியாக தகன காணிக்கைகள் செலுத்தப்பட்டன. இப்பொழுது யோய்தா வயதுசென்று முதியவனாகி, நூற்று முப்பதாவது வயதில் இறந்தான். அவன் தாவீதின் நகரத்தில் அரசர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன் இஸ்ரயேலில் இறைவனுக்கும் அவரது ஆலயத்திற்கும் நன்மையானதைச் செய்திருந்தான். யோவாஸின் கொடுமை யோய்தா இறந்தபின் யூதாவின் அதிகாரிகள் வந்து அரசனுக்கு மரியாதை செலுத்தினர். அரசன் அவர்களுக்குச் செவிகொடுத்தான். அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கைவிட்டு, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினார்கள். அவர்கள் செய்த குற்றத்தினால் இறைவனின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் வந்தது. யெகோவா மக்களைத் திரும்பவும் தன் பக்கம் கொண்டுவருவதற்கு இறைவாக்கினரை அவர்களிடம் அனுப்பினார். அவர்களும் மக்களுக்கு எதிராக எச்சரித்துக் கூறியும், மக்கள் அதைக் கேட்கவில்லை. அப்பொழுது ஆசாரியனான யோய்தாவின் மகன் சகரியாவின்மேல் இறைவனின் ஆவியானவர் வந்தார். அவன் மக்களுக்கு முன்பாக நின்று, “இறைவன் சொல்வது இதுவே: யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் ஏன் கீழ்ப்படியாமலிருக்கிறீர்கள்? நீங்கள் செழிப்படையமாட்டீர்கள். நீங்கள் யெகோவாவைக் கைவிட்டீர்கள். அதனால் அவரும் உங்களைக் கைவிட்டுவிட்டார்” என்று சொன்னான். ஆனால் அவர்கள் அவனுக்கெதிராக சதிசெய்து அரசனின் கட்டளைப்படி யெகோவாவின் ஆலய முற்றத்தில் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அரசன் யோவாஸ் சகரியாவின் தகப்பன் யோய்தா தன்னில் காட்டிய தயவை நினைவில்கொள்ளாமல் அவனுடைய மகனைக் கொன்றான். சகரியா விழுந்து சாகும்போது, “யெகோவா இதைப் பார்த்து, உன்னிடத்தில் கணக்குக் கேட்பாராக” என்றான். மறுவருடத்தில் ஆராமின் இராணுவம் யோவாஸை எதிர்த்து அணிவகுத்து வந்தது. அவர்கள் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் படையெடுத்து, மக்களின் தலைவர்கள் எல்லோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் கொள்ளைப்பொருட்கள் எல்லாவற்றையும் தமஸ்குவில் இருந்த தங்கள் அரசனுக்கு அனுப்பினார்கள். சீரியாவின் இராணுவமோ ஒருசில மனிதருடனேயே வந்திருந்தது. ஆயினும் யெகோவா யூதாவின் பெரிய இராணுவப் படையை சீரியரின் கையில் கொடுத்தார். யூதா தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டிருந்ததால் யோவாஸிற்கு நியாயத்தீர்ப்பு வந்தது. சீரியர் திரும்பிப் போகும்போது யோவாஸை கடுமையாகக் காயப்பட்டவனாய் விட்டுவிட்டுப் போனார்கள். யோவாஸ் ஆசாரியனான யோய்தாவின் மகனைக் கொலைசெய்தபடியால், யோவாஸின் அதிகாரிகள் அவனுக்கெதிராக சூழ்ச்சிசெய்து, அவனை அவனுடைய படுக்கையிலேயே கொன்றுபோட்டார்கள். எனவே அவன் இறந்து தாவீதின் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனாலும், அரசர்களுடன் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை. யோவாஸுக்கு எதிராக சதி செய்தவர்கள் யாரெனில், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகன் சாபாத், மோவாபிய பெண்ணான சிம்ரீத்தின் மகன் யோசபாத் என்பவர்களே. யோவாஸின் மகன்களின் விபரமும், அவனைப் பற்றிய பல இறைவாக்குகளும், இறைவனின் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட குறிப்புகளுமான எல்லா நிகழ்வுகளும் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவன் மகன் அமத்சியா அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவின் அரசன் அமத்சியா அமத்சியா அரசனானபோது அவன் இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான், அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான்; ஆனால் முழுமனதுடன் செய்யவில்லை. ராஜ்யம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் திடப்படுத்தப்பட்டபின் அவன் தனது தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான். எனினும் அவன் அவர்களுடைய மகன்களைக் கொலைசெய்யவில்லை. அவன் மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதியுள்ளவாறு செயற்பட்டான். யெகோவா கட்டளையிட்ட பிரகாரம், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே சாகவேண்டும்”25:4 உபா. 24:16 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமத்சியா யூதாவின் மக்களை ஒன்றுகூட்டி முழு யூதாவுக்கும், பென்யமீனுக்குமான அவர்களின் குடும்பங்களின்படி ஆயிரம்பேரின் தளபதிகளையும், நூறுபேரின் தளபதிகளையும் நியமித்தான். அதன்பின் அவன் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை ஒன்றுதிரட்டினான். அவர்களில் ஈட்டியும், கேடயமும் பயன்படுத்தத் தெரிந்தவர்களான, இராணுவ பணிக்கு ஆயத்தமான 3,00,000 மனிதர் இருப்பதைக் கண்டான். அத்துடன் அவன் இஸ்ரயேலில் இருந்தும் 1,00,000 இராணுவவீரர்களை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான். ஆனால் இறைவனின் மனிதன் ஒருவன் அவனிடம் வந்து சொன்னதாவது: “அரசனே, இஸ்ரயேலின் இந்தப் படை உன்னோடு யுத்தத்திற்கு வரவே கூடாது. ஏனெனில் யெகோவா இஸ்ரயேலரோடு இல்லை. எப்பிராயீம் மக்கள் யாருடனும் இல்லை. நீ யுத்தத்திற்கு போய், தைரியமாய் சண்டையிட்டாலும்கூட, இறைவனோ உங்கள் பகைவர்களுக்கு முன்பாக உங்களை முறியடிப்பார். ஏனெனில் உதவிசெய்யவும், தோற்கடிக்கவும் இறைவனுக்கு வல்லமை உண்டு” என்றான். அதற்கு அமத்சியா இறைவனின் மனிதனிடம், “இந்த இஸ்ரயேல் படைக்கு நான் செலுத்திய நூறு தாலந்து வெள்ளி என்னாவது?” என்று கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “யெகோவாவினால் இதற்கும் அதிகமாகக் கொடுக்கமுடியும்” என்றான். எனவே அமத்சியா தன்னிடம் எப்பிராயீமிலிருந்து வந்த படையை வெளியேற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். அவர்கள் யூதாவின்மேல் கடுங்கோபத்துடனும், மிக ஆத்திரத்துடனும் அவ்விடத்தைவிட்டு தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். அமத்சியா தனது பெலத்தைத் திரட்டிக்கொண்டு இராணுவத்தை உப்புப் பள்ளத்தாக்கிற்கு நடத்திச்சென்று, அங்கே அவன் சேயீர் மனிதரில் 10,000 பேரைக் கொன்றான். அத்துடன் யூதாவின் இராணுவமும் 10,000 மனிதரை உயிருடன் பிடித்து, அவர்களை ஒரு செங்குத்தான மலை உச்சிக்கு கொண்டுபோய் அங்கேயிருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்கள் மோதுண்டு விழுந்து நொறுங்கினார்கள். இதேவேளையில் யுத்தத்தில் தங்களோடு வரவேண்டாமென அமத்சியா திருப்பி அனுப்பிய இராணுவவீரர்கள், சமாரியா தொடங்கி பெத் ஓரோன் வரையிலுமுள்ள யூதாவின் நகரங்களை திடீரெனத் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரைக் கொலைசெய்து அதிக அளவிலான கொள்ளைப்பொருட்களையும் கொண்டுபோனார்கள். அமத்சியா ஏதோமியரை முறியடித்துவிட்டு திரும்பும்போது, சேயீர் மக்களின் தெய்வங்களையும் கொண்டுவந்தான். அவன் அவற்றைத் தனது சொந்தத் தெய்வங்களாக வைத்து வணங்கி, அவற்றிற்குத் தகன காணிக்கைகளையும் செலுத்தினான். யெகோவாவின் கோபம் அமத்சியாவுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அவர் அவனிடத்திற்கு ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன், “நீ ஏன் இந்த மக்களின் தெய்வங்களிடம் ஆலோசனை கேட்கிறாய். அவைகளால் தனது சொந்த மக்களை உன்னுடைய கையிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே” என்று கேட்டான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசகனாக உன்னை நாங்கள் நியமித்தோமா? நிறுத்து! நீ ஏன் வீணாக சாகவேண்டும்?” என்றான். எனவே இறைவாக்கினன் பேசுவதை சற்று நிறுத்தி, பின்பு அவன், “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவற்றைச் செய்தபடியால், இறைவன் உன்னை அழிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னான். பின்பு யூதாவின் அரசன் அமத்சியா தனது ஆலோசகர்களிடம் யோசனை கேட்டான். அதன்படி இஸ்ரயேலின் அரசனான யோவாஸுக்கு, “நீ வந்து என்னை முகமுகமாய் எதிர்கொள்” என சவால் விட்டான். இந்த யோவாஸ் யோவாகாஸின் மகன்; யோவாகாஸ் யெகூவின் மகன். ஆனால் இஸ்ரயேலின் அரசன் யோவாஸ், யூதாவின் அரசன் அமத்சியாவுக்கு மறுமொழியாக, “லெபனோனிலுள்ள முட்செடி, லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம் ஒரு செய்தி அனுப்பி, ‘உனது மகளை எனது மகனுக்குத் திருமணம் செய்துகொடு’ என்றது. அப்பொழுது லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் வந்து அந்த முட்செடியைத் தன் பாதத்தின்கீழ் மிதித்துப்போட்டது. நீ உனக்குள்ளேயே ஏதோமை தோற்கடித்தேன் என சொல்லிக்கொள்கிறாய். இப்பொழுது நீ இறுமாப்பும் பெருமையும் கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்றான். ஆயினும் அமத்சியா அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் ஏதோமிய தெய்வத்தைத் தேடியதனால், இறைவன் அவர்களை யோவாஸிடம் ஒப்புக்கொடுக்கும்படி அவ்விதமாய் செயல்பட்டார். எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷிலே ஒருவரையொருவர் எதிர்கொண்டார்கள். இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு ஓடினார்கள். இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் அரசன் யோவாஸ் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான். ஓபேத் ஏதோமின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த இறைவனின் ஆலயத்தில் காணப்பட்ட தங்கத்தையும், வெள்ளியையும், எல்லாப் பொருட்களையும் யோவாஸ் எடுத்துக்கொண்டான். அத்துடன் அரச அரண்மனை திரவியங்களையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். இஸ்ரயேலின் அரசனான யோவாகாஸின் மகன் யோவாஸ் இறந்தபின்பு, யூதாவின் அரசனான யோவாஸின் மகன் அமத்சியா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான். அமத்சியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை யூதா, இஸ்ரயேல் அரசர்களின் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. அமத்சியா யெகோவாவைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பிய காலத்திலிருந்து, எருசலேமிலுள்ளவர்கள் அவனுக்கெதிராக சதி செய்தார்கள். அதனால் அவன் லாகீசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவனுடைய பகைவர்கள் அவனுக்கு எதிராக மனிதரை அனுப்பி, அங்கேயே வைத்து அவனைக் கொன்றனர். அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு, யூதாவின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது. யூதாவின் அரசன் உசியா அதன்பின் யூதாவின் மக்கள் எல்லோரும் அமத்சியாவின் மகனான பதினாறு வயதுடைய உசியாவைக் கொண்டுவந்து அவன் தகப்பனின் இடத்தில் அரசனாக்கினார்கள். அரசன் அமத்சியா தனது முற்பிதாக்களைப்போல இறந்தபின், உசியா ஏலாத்தைத் திரும்பவும் கட்டி, அதை யூதாவுடன் சேர்த்துக்கொண்டான். உசியா அவனுடைய பதினாறாவது வயதில் அரசனானான். அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு வருடங்கள் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்; அவள் எருசலேமைச் சேர்ந்தவள். அவன் தனது தகப்பன் அமத்சியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். இறைபயத்தில் தன்னைப் பயிற்றுவித்த சகரியாவின் நாட்களில் உசியா இறைவனைத் தேடினான். அவன் யெகோவாவைத் தேடிய காலமெல்லாம் இறைவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். அவன் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம்செய்யப் போய் காத், அஸ்தோத், யப்னே ஆகிய பட்டணங்களின் மதில்களை உடைத்துப்போட்டான். அதன்பின்பு அவன் அஸ்தோத்தின் அருகிலும், பெலிஸ்தியருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான். இறைவன் பெலிஸ்தியர், கூர்பாகாலிலே வாழ்ந்த அரபியர், மெயூனியர் ஆகியோருக்கு எதிராக அவனுக்கு உதவி செய்தார். அம்மோனியர் உசியாவுக்கு வரி கொண்டுவந்தார்கள். அவனுடைய புகழ் எகிப்தின் எல்லைவரை பரவியிருந்தது. ஏனெனில் அவன் மிகவும் பலம்பொருந்திவனாய் இருந்தான். உசியா எருசலேமில் மூலைவாசல் அருகிலும், பள்ளத்தாக்கின் வாசல் அருகிலும், மதில்களின் மூலையிலும் கோபுரங்களைக் கட்டி பலப்படுத்தினான். அவன் பாலைவனத்திலும் கோபுரங்களைக் கட்டி, அநேகம் கிணறுகளையும் தோண்டினான். ஏனெனில் அவனிடம் மலையடிவாரத்திலும், சமவெளியிலும் அநேகம் வளர்ப்பு மிருகங்கள் இருந்தன. அவனிடம் அவனுடைய வயல்களிலும், குன்றுகளிலுள்ள திராட்சைத் தோட்டங்களிலும், வளமான நிலங்களிலும் வேலைசெய்வதற்கு மனிதர் இருந்தார்கள். ஏனெனில் அவன் விவசாயத்தை விரும்பினான். பிரிவு பிரிவாக யுத்தத்திற்குப் போக திறமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவம் உசியாவிடம் இருந்தது. எண்ணிக்கையின்படியே அவர்கள் அரச அதிகாரிகளில் ஒருவனான அனனியாவின் தலைமையின்கீழ் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். செயலாளராகிய ஏயேலினாலும், அதிகாரி மாசெயாவினாலும் இவர்கள் ஒன்றுதிரட்டப்பட்டார்கள். இந்த இராணுவவீரர்களுக்குத் தலைமைவகித்த குடும்பத் தலைவர்களின் மொத்தத்தொகை 2,600 ஆகும். அவர்களின் தலைமையின்கீழ் 3,07,500 மனிதர் யுத்தத்திற்காக பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அரசனுக்கு உதவிசெய்யவும், அவனுடைய பகைவர்களை எதிர்க்கவும் வல்லமையுள்ள படையாக இது இருந்தது. உசியா கேடயங்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், வில்லுகள், கவண்கற்கள் என்பவற்றை முழு இராணுவத்திற்கும் கொடுத்திருந்தான். அம்புகளை எய்யவும், பெரிய கற்களை வீசி எறியவும், எருசலேமில் கோபுரங்களிலிருந்தும் மூலைப் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் உபயோகிப்பதற்கு திறமையான மனிதர்களினால் இயந்திரங்களைச் செய்திருந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. ஏனெனில் இறைவன் அவன் பலமுள்ளவனாகும்வரை உதவினார். ஆனால் உசியா பலமுடையவனான பின்பு, அவனுடைய அகந்தை அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்து தூபபீடத்தில் தூபங்காட்டும்படி ஆலயத்திற்குள் நுழைந்தான். ஆசாரியன் அசரியாவும், தைரியமான இன்னும் எண்பது யெகோவாவின் ஆசாரியரும் அவனைத் தொடர்ந்து உள்ளே போனார்கள். அவர்கள் அரசனுக்கு எதிர்முகமாகப் போய் நின்று, “உசியாவே, யெகோவாவுக்கு நறுமண தூபங்காட்டுவதற்கு உமக்குத் தகுதியில்லை. அது தூபங்காட்டுவதற்கென பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் சந்ததிகளான ஆசாரியருக்குரியது. பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறும். நீர் பாவம் செய்தீர். நீர் இறைவனாகிய யெகோவாவினால் கனப்படுத்தப்படமாட்டீர்” என்று சொன்னார்கள். தூபங்காட்டும்படி, தூப கலசத்தைக் கையில் வைத்திருந்த உசியா கோபங்கொண்டான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் தூபபீடத்திற்கு முன்பாக ஆசாரியருக்குமுன் கடுங்கோபத்துடன் நிற்கும்போதே அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி தோன்றியது. பிரதான ஆசாரியன் அசரியாவும் மற்ற ஆசாரியரும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய நெற்றியில் குஷ்டவியாதி இருப்பதைக் கண்டார்கள். எனவே அவர்கள் விரைவாக அவனை வெளியேற்றினார்கள். உண்மையாகவே யெகோவா தன்னைத் துன்புறுத்தியபடியால் அவனும் உடனே வெளியேறினான். உசியா அரசன் தான் சாகும் நாள்வரை குஷ்டவியாதி உடையவனாகவே இருந்தான். அவன் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டவனாக குஷ்டவியாதியுடன் ஒரு புறம்பான வீட்டில் வாழ்ந்தான். அவனுடைய மகன் யோதாம் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்து நாட்டு மக்களை ஆளுகை செய்தான். உசியாவின் மற்ற ஆட்சிக்கால நிகழ்ச்சிகள், தொடக்கமுதல் முடிவுவரை இறைவாக்கினன் ஆமோஸின் மகன் ஏசாயாவினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. உசியா தன் முற்பிதாக்களைப்போல இறந்தபின்பு, அரசர்களுக்குச் சொந்தமான அடக்க நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஏனெனில் அவன், “குஷ்டவியாதி உடையவனாயிருந்தான்” என மக்கள் சொன்னார்கள். அவனுடைய மகன் யோதாம் அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவின் அரசன் யோதாம் யோதாம் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்; இவனுடைய தாய் சாதோக்கின் மகளான எருசாள் என்பவள். அவன் தன் தகப்பன் உசியா செய்ததுபோலவே யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். ஆனால் அவனைப்போல இவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் போகவில்லை. ஆயினும் மக்கள் அவர்களுடைய சீர்கேடான செயல்களைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். யோதாம் யெகோவாவின் ஆலயத்தின் மேல்வாசலைத் திரும்பக் கட்டினான். அத்துடன் ஓபேல் குன்றில் இருந்த மதிலின்மேல் இன்னும் அநேக கட்டிடங்களையும் கட்டினான். அவன் யூதாவின் மலைகளில் பட்டணங்களையும், மரங்கள் செறிந்த பகுதிகளில் கோட்டைகளையும், கோபுரங்களையும் கட்டினான். யோதாம் அமோனிய அரசருடன் யுத்தம்செய்து அவர்களை வெற்றிகொண்டான்; அந்த வருடம் அம்மோனியர் அவனுக்கு நூறு தாலந்து வெள்ளியைக் கொடுத்தார்கள். பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். அம்மோனியர்கள் இரண்டாம், மூன்றாம் வருடங்களிலும் அதே அளவு பொருட்களைக் கொண்டுவந்தார்கள். யோதாம் தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக, உறுதியுடன் நடந்தபடியால் அவன் வலிமையடைந்தான். யோதாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகள், அவனுடைய யுத்தங்கள் உட்பட, மற்றும் அவன் செய்த செயல்கள் எல்லாம் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். யோதாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனுடைய மகன் ஆகாஸ் இவனுக்குபின் அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவின் அரசன் ஆகாஸ் ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான், இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான்; தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை. அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். பாகாலை வணங்குவதற்கு விக்கிரகங்களைச் செய்தான். அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே பலிகளை எரித்து, இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகன்களையும் நெருப்பிலே பலியிட்டான். அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிகளைச் செலுத்தி, தூபங்காட்டினான். எனவே அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனை சீரிய அரசர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். சீரியர் அவனை முறியடித்து அவனுடைய மக்களில் அநேகரை கைதிகளாகச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள். அவன் இஸ்ரயேல் அரசனின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான். இஸ்ரயேலின் அரசன் இவன்மேல் பலத்த சேதங்களை ஏற்படுத்தினான். ரெமலியாவின் மகன் பெக்கா என்பவன் யூதாவில் ஒரே நாளில் 1,20,000 வீரர்களைக் கொன்றுபோட்டான். ஏனெனில் யூதா மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை விட்டுவிட்டனர். அத்துடன் எப்பிராயீமின் வீரனான சிக்ரி என்பவன் அரசனின் மகன் மாசெயாவையும், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி அஸ்ரிக்காமையும், பதவியில் அரசனுக்கு அடுத்தவனாக இருந்த எல்க்கானாவையும் கொன்றான். இஸ்ரயேலர் தமது நாட்டவர்களிடமிருந்து மனைவிகள், மகன்கள், மகள்கள் உட்பட மொத்தம் 2,00,000 பேரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோனார்கள். அத்துடன் அவர்கள் அதிக அளவான பொருட்களைக் கொள்ளையிட்டு அவற்றைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள். அங்கே ஓதேத் என்னும் பெயருடைய யெகோவாவின் இறைவாக்கினன் ஒருவன் இருந்தான். இராணுவம் சமாரியாவிலிருந்து வரும்போது அதைச் சந்திக்க அவன் வெளியே போனான். அவன் அவர்களிடம், “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா யூதாவின்மேல் கோபம் கொண்டதனால், அவர் இவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனால் நீங்களோ வானத்தை எட்டும் அளவுள்ள உங்கள் சீற்றத்தினால் அவர்களை வெட்டி வீழ்த்தினீர்கள், அதோடு நீங்கள் யூதாவிலும், எருசலேமிலும் உள்ள ஆண்களையும், பெண்களையும் உங்கள் அடிமைகளாக்க நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்து, குற்றவாளிகளாய் இருக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுதும் எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் கைதிகளாகக் கொண்டுவந்திருக்கும் உங்கள் சக இஸ்ரயேலரைத் திருப்பி அனுப்புங்கள். ஏனெனில் யெகோவாவின் கோபம் உங்கள்மேல் இருக்கிறது” என்றான். அப்பொழுது எப்பிராயீமிலுள்ள சில தலைவர்களான யோகனானின் மகன் அசரியா, மெஷில்லேமோத்தின் மகன் பெரகியா, சல்லூமின் மகன் எகிஸ்கியா, அத்லாயின் மகன் அமாசா ஆகியோர் யுத்தத்தில் இருந்து திரும்பியவர்கள்முன் எதிர்முகமாய் நின்றார்கள். அவர்கள், “நீங்கள் அந்தக் கைதிகளை இங்கே கொண்டுவரக்கூடாது. கொண்டுவந்தால், நாம் யெகோவாவுக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாய் இருப்போம். நீங்கள் எங்கள் பாவத்தோடும், குற்றத்தோடும் இதையும் கூட்ட எண்ணியிருக்கிறீர்களா? ஏனெனில் எங்கள் குற்றம் ஏற்கெனவே பெரியது. யெகோவாவின் கோபம் இஸ்ரயேலின்மேல் இருக்கிறது” என்று சொன்னார்கள். எனவே இராணுவவீரர்கள் அதிகாரிகளுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் முன்பாகக் கைதிகளையும், கொள்ளைப்பொருட்களையும் ஒப்புக்கொடுத்தார்கள். பெயரினால் குறிக்கப்பட்டுள்ள அந்த மனிதர், இந்த கைதிகளில் ஆடையில்லாமல் இருந்தவர்களுக்குக் கொள்ளையில் இருந்து உடைகளை எடுத்து உடுத்துவித்தனர். அவர்கள் கைதிகளுக்கு உடைகளுடன் செருப்புகளையும், உணவையும், பானத்தையும் அத்துடன் சுகமாக்கும் தைலத்தையும் கொடுத்தார்கள். மற்றும் அவர்களில் பெலவீனமானவர்களைக் கழுதைகளில் ஏற்றினார்கள். அப்படியே கைதிகள் எல்லோரையும், பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவுக்கு அவர்களுடைய நாட்டு மக்களிடம் திரும்பவும் கொண்டுபோய்விட்டார்கள். பின்பு இவர்கள் திரும்பி சமாரியாவுக்கு வந்தனர். அக்காலத்தில் அரசன் ஆகாஸ், அசீரியாவின் அரசனிடம் உதவிகேட்டு அனுப்பினான். திரும்பவும் ஏதோமியர் வந்து யூதாவைத் தாக்கி கைதிகளைக் கொண்டுபோனார்கள். பெலிஸ்தியர்கள் யூதாவின் மலையடிவாரங்களில் உள்ள பட்டணங்களையும் யூதாவின் நெகேவ் நிலப்பரப்பிலுள்ள பட்டணங்களையும் திடீரெனத் தாக்கினார்கள். அவர்கள் பெத்ஷிமேஷையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சோக்கோவையும், திம்னாவையும், கிம்சோவையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினார்கள். யெகோவா இஸ்ரயேலின் அரசன் ஆகாஸின் நிமித்தம் யூதாவைத் தாழ்த்தினார். ஏனெனில் அவன் யூதாவில் கொடுமையை ஊக்குவித்து, யெகோவாவுக்கு உண்மையற்றவனாய் இருந்தான். அசீரிய அரசன் தில்காத்பில்நேசர் அவனிடம் வந்தான். அவன் உதவிசெய்யாமல் தொல்லையைக் கொடுத்தான். ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரச அரண்மனையில் இருந்தும், இளவரசர்களிடமிருந்தும் சில பொருட்களை எடுத்து, அவற்றை அசீரிய அரசனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். ஆனால் அதுவும் அவனுக்கு உதவவில்லை. அரசன் ஆகாஸ் தனது கஷ்ட காலத்திலும் இன்னும் யெகோவாவுக்கு அதிகம் உண்மையற்றவனாகவே இருந்தான். அவன் தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு பலியிட்டான்; ஏனெனில் அவன், “சீரிய அரசர்களின் தெய்வங்கள் அவர்களுக்கு உதவிசெய்தன. நான் அவற்றிற்கு பலிசெலுத்துவேன். அப்பொழுது அவை எனக்கும் உதவும்” என நினைத்தான். ஆனால் அவையும் அவனுடைய வீழ்ச்சிக்கும், எல்லா இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கும் காரணமாயின. ஆகாஸ் இறைவனின் ஆலயத்தின் பொருட்களையெல்லாம் ஒன்றுசேர்த்து உடைத்தான். அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளை மூடிப்போட்டு எருசலேமின் ஒவ்வொரு வீதிகளின் மூலைகளிலும் வழிபாட்டு மேடைகளை அமைத்தான். யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும், மற்ற தெய்வங்களுக்கு பலிகளை எரிப்பதற்கென உயர்ந்த மேடைகளைக் கட்டினான். இவ்வாறு தனது முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் கோபத்தைத் தூண்டினான். அவனுடைய ஆட்சியின் மற்ற நிகழ்வுகள், தொடக்கமுதல் முடிவுவரை யூதா, இஸ்ரயேல் அரசர்களின் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன. ஆகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து எருசலேம் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆனால் அவனை இஸ்ரயேலின் அரசர்களுக்குரிய கல்லறையில் வைக்கவில்லை. அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசனானான். எசேக்கியா ஆலயத்தைத் தூய்மைப்படுத்தல் எசேக்கியா அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள். அவன் தனது முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான். அவனுடைய ஆட்சியின் முதலாம் வருடம், முதல் மாதத்தில் அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தான். அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான். அவர்களிடம், “லேவியர்களே, எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; அத்துடன் உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்துங்கள். பரிசுத்த இடத்திலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிப்போடுங்கள். எனது முற்பிதாக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, அவரைவிட்டு விலகினார்கள். அவர்கள் யெகோவாவின் உறைவிடத்திற்கு தங்கள் முகத்தை விலக்கி, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள். அத்துடன் அவர்கள் ஆலயத்தின் முன்மண்டபக் கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனின் பரிசுத்த இடத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை. அதனால் யெகோவாவின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இறங்கியது. அவர் அவர்களைப் பயங்கரத்திற்கும், திகிலிற்கும், இகழ்ச்சிக்கும் உரிய பொருளாக வைத்திருக்கிறார். அதையே இன்று நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் காண்கிறீர்கள். இதனாலேயே நமது தந்தையர்கள் வாளினால் மடிந்தார்கள்; நம்முடைய மகன்களும், மகள்களும், நம்முடைய மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுடன் ஒரு உடன்படிக்கையை செய்ய எண்ணியுள்ளேன். அப்பொழுதுதான் அவரது கோபம் நம்மைவிட்டுத் திரும்பும். என் மகன்களே, இப்பொழுது நீங்கள் அசட்டையாய் இராதீர்கள். ஏனெனில் அவர் முன்நின்று அவருக்குப் பணிசெய்வதற்கும் அவர் முன்னிலையில் ஊழியம் செய்து தூபங்காட்டுவதற்குமே யெகோவா உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்றான். எனவே வேலையைச் செய்யத் தொடங்கிய லேவியர்கள்: கோகாத்தியரிலிருந்து: அமசாயின் மகன் மாகாத், அசரியாவின் மகன் யோயேல்; மெராரியரிலிருந்து: அப்தியின் மகன் கீஷ், எகலேலின் மகன் அசரியா; கெர்சோனியரிலிருந்து: சிம்மாவின் மகன் யோவா, யோவாவின் மகன் ஏதேன். எலிசாபானின் சந்ததிகளிலிருந்து: சிம்ரி, ஏயேல்; ஆசாப்பின் சந்ததிகளிலிருந்து: சகரியா, மத்தனியா; ஏமானின் சந்ததிகளிலிருந்து: யெகியேல், சிமேயி; எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து: செமாயா, ஊசியேல். இந்த லேவியர்கள் தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்து, அவர்களைச் சுத்திகரித்தபின் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி அரசன் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் ஆலயத்தை தூய்மைப்படுத்துவதற்காக உள்ளே சென்றனர். ஆசாரியர்கள் யெகோவாவின் பரிசுத்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்காக அதற்குள்ளே சென்றார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள் அசுத்தமாகக் கண்ட யாவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் வெளிமுற்றத்திற்குக் கொண்டுவந்தார்கள். அதை லேவியர்கள் எடுத்து கீதரோன் பள்ளத்தாக்கிற்கு சுமந்துகொண்டு போனார்கள். அவர்கள் தங்கள் சுத்திகரிப்பு வேலையை முதலாம் மாதம், முதலாம் நாளில் ஆரம்பித்து, மாதத்தின் எட்டாம் நாளில் யெகோவாவுக்குமுன் மண்டபத்திற்கு வந்தார்கள். யெகோவாவினுடைய ஆலயத்தை இன்னும் எட்டு நாட்களுக்கு பரிசுத்தப்படுத்தினார்கள். இவ்வாறு அதை முதலாம் மாதம் பதினாறாம் நாளில் செய்துமுடித்தனர். அதன்பின்பு அவர்கள் எசேக்கியா அரசனிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் தூய்மைப்படுத்திவிட்டோம். தகன பலிபீடம், அதன் பாத்திரங்கள், இறைசமுக அப்பங்களை ஒழுங்குபடுத்தும் மேஜை, அதன் பொருட்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டோம். அத்துடன் ஆகாஸ் அரசன் தான் அரசனாயிருந்த காலத்தில் உண்மையற்றவனாய் அவன் அகற்றிப்போட்ட பொருட்களையெல்லாம் கொண்டுவந்து, பரிசுத்தப்படுத்தி இருக்கிறோம். அவை இப்பொழுது யெகோவாவின் பீடத்தின்முன் இருக்கின்றன” என்று அறிவித்தார்கள். அடுத்தநாள் அதிகாலையில் எசேக்கியா அரசன் பட்டணத்தின் அதிகாரிகள் எல்லோரையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு யெகோவாவினுடைய ஆலயத்திற்குப் போனான். அவர்கள் அரசிற்காகவும், பரிசுத்த இடத்திற்காகவும், யூதாவுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாக ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் ஆசாரியர்களான ஆரோனின் சந்ததிகளிடம், “யெகோவாவின் பலிபீடத்தில் இதைப் பலியிடுங்கள்” எனக் கட்டளையிட்டான். எனவே அவர்கள் காளைகளை வெட்டினார்கள். ஆசாரியர்கள் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். அடுத்ததாக அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களை வெட்டி அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தார்கள். அதன்பின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, அதன் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தனர். அதன்பின் பாவநிவாரண காணிக்கைக்கான வெள்ளாடுகள் அரசனுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவற்றின்மேல் தங்கள் கைகளை வைத்தனர். இஸ்ரயேல் முழுவதற்கும் பாவநிவர்த்தி செய்வதற்காக ஆசாரியர்கள் வெள்ளாடுகளை வெட்டி, அதன் இரத்தத்தைப் பாவநிவாரண காணிக்கையாக பலிபீடத்தில் படைத்தார்கள். ஏனெனில் அரசன் எல்லா இஸ்ரயேலுக்குமாக தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் செலுத்தும்படி கட்டளையிட்டிருந்தான். தாவீது, அரசனின் தரிசனக்காரனான காத், இறைவாக்கினன் நாத்தான் ஆகியவர்கள் கற்பித்தவிதமாகவே, அரசன் லேவியர்களை கைத்தாளம், யாழ், வீணை ஆகியவற்றுடன் யெகோவாவின் ஆலயத்தில் நிறுத்தினான்; இது யெகோவாவினால் அவரது இறைவாக்கினர்கள் மூலமாய்க் கட்டளையிடப்பட்டிருந்தது. எனவே லேவியர்கள் தாவீதின் வாத்தியக் கருவிகளுடனும், ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களுடனும் ஆயத்தமாக நின்றனர். எசேக்கியா பலிபீடத்தின்மேல் தகன காணிக்கைகளைப் பலியிடும்படி கொடுத்தான். காணிக்கை செலுத்தத் தொடங்கியவுடனே, எக்காளங்களுடனும் இஸ்ரயேலின் அரசன் தாவீதின் இசைக் கருவிகளுடனும் யெகோவாவுக்கான துதிபாடல்களும் ஆரம்பித்தன. தகன காணிக்கை செலுத்துமட்டும் பாடகர் பாட, எக்காளம் முழங்க, சபையோர் எல்லோரும் தலைகுனிந்து வழிபட்டார்கள். பலிசெலுத்தி முடிவடைந்ததும் அரசனும் அவனுடன் வந்திருந்த எல்லோரும் தரையில் முழங்காற்படியிட்டு வழிபட்டார்கள். அரசன் எசேக்கியாவும், அவனுடைய அதிகாரிகளும், தாவீதும், தரிசனக்காரனான ஆசாப்பும் பாடிய வார்த்தைகளால் யெகோவாவைத் துதிக்கும்படி லேவியர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் மகிழ்ச்சியுடன் துதித்து பாடி தலைகுனிந்து வழிபட்டார்கள். அப்பொழுது எசேக்கியா, “நீங்கள் இப்பொழுது உங்களை யெகோவாவுக்கென்று அர்ப்பணித்திருக்கிறீர்கள். வாருங்கள், பலிகளையும் நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். எனவே கூடியிருந்தவர்கள் பலிகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் யாருடைய இருதயம் ஏவப்பட்டதோ அவர்கள் சர்வாங்க தகன காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். சபையோர் கொண்டுவந்த தகன காணிக்கைகளின் எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு செம்மறியாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவாகும். இவையெல்லாம் யெகோவாவுக்காகத் தகன காணிக்கையாகக் கொண்டுவரப்பட்டன. பலிகளாக அர்ப்பணிக்கப்பட்ட மிருகங்களின் தொகை அறுநூறு காளைகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுமாகும். ஆனால் தகன காணிக்கைக்கான மிருகங்களைத் தோல் உரிப்பதற்கு ஆசாரியர்கள் மிகக் குறைவாகவேயிருந்தனர். மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும் வரைக்கும் அவர்கள் உறவினர்களான லேவியர்கள் அந்த வேலை முடியும்வரைக்கும் உதவிசெய்தனர். ஏனெனில் லேவியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் ஆசாரியர்களைவிட கவனமுள்ளவர்களாக இருந்தனர். இவ்வாறு தகன காணிக்கைகள் ஏராளமாயிருந்தன; அத்துடன் சமாதான காணிக்கைகளின் கொழுப்பும், சமாதான காணிக்கைகளோடு செலுத்தப்பட்ட பான காணிக்கைகளும் ஏராளமாய் இருந்தன. எனவே யெகோவாவினுடைய ஆலய ஆராதனை திரும்பவும் நிலைநிறுத்தப்பட்டது. இறைவன் தனது மக்களுக்காய் செய்து முடித்ததைக்குறித்து எசேக்கியாவும் எல்லா மக்களும் அகமகிழ்ந்தனர். ஏனெனில் இது மிகவும் விரைவாய் செய்யப்பட்டது. பஸ்கா கொண்டாடப்படல் எசேக்கியா எல்லா இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் ஆட்களை அனுப்பினான், அத்துடன் எப்பிராயீமுக்கும், மனாசேக்கும் கடிதங்களையும் எழுதினான். அதில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாடுவதற்கு எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான். அரசனும், அவனுடைய அதிகாரிகளும், எருசலேமிலுள்ள சபையோர் எல்லோரும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவைக் கொண்டாட தீர்மானித்திருந்தார்கள். ஏனெனில் தேவையான அளவு ஆசாரியர்கள் தங்களைச் சுத்திகரிக்காமலும், எருசலேமில் மக்கள் கூடிவராமலும் இருந்ததினால், அவர்களால் வழக்கமாகப் பஸ்காவைக் கொண்டாடும் முதலாம் மாதத்தில் அதைக் கொண்டாட முடியவில்லை. இத்திட்டம் அரசனுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் சரியானதாகக் காணப்பட்டது. அவர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் பெயெர்செபா தொடங்கி தாண்வரைக்கும் உள்ள மக்களை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும்படித் தீர்மானித்தார்கள். நீண்டகாலமாக எழுதப்பட்டிருந்தபடி பெருந்தொகையான மக்களால் பஸ்கா கொண்டாடப்படவில்லை. அரசனும், அவனுடைய அதிகாரிகளும் அனுப்பிய கடிதங்களை அரசனின் கட்டளைப்படி தூதுவர்கள் இஸ்ரயேல், யூதா எங்கும் கொண்டுபோனார்கள். அதில், “இஸ்ரயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள். அப்பொழுது அவரும் அசீரிய அரசனின் கைக்கு தப்பி, மீந்திருக்கிற உங்களிடம் திரும்புவார். உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாயிருந்த உங்கள் முற்பிதாக்களைப் போலவும், சகோதரரைப் போலவும் நீங்களும் இருக்கவேண்டாம். அதனால் நீங்கள் காண்பதுபோல், அவர் அவர்களை பயங்கரமான காட்சிப் பொருளாக்கியிருக்கிறார். நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் இருந்ததுபோல் அடங்காதவர்களாக இருக்கவேண்டாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். என்றென்றைக்குமென அவர் பரிசுத்தப்படுத்திய பரிசுத்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது அவரது கடுங்கோபம் உங்களைவிட்டு நீங்கும். நீங்கள் யெகோவாவினிடத்திற்குத் திரும்பினால், அப்பொழுது உங்கள் சகோதரர்களும், உங்கள் பிள்ளைகளும் அவர்களைச் சிறைபிடித்தவர்களிடத்தில் தயவு பெற்று திரும்பவும் இந்த நாட்டிற்கு வருவார்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவர். நீங்கள் அவரிடம் திரும்பும்போது உங்களிடமிருந்து அவர் தன் முகத்தைத் திருப்பமாட்டார்” என எழுதப்பட்டிருந்தது. அந்தத் தூதுவர்கள் எப்பிராயீம், மனாசே நாடுகளிலும், செபுலோன்வரை பட்டணம் பட்டணமாக போனார்கள். ஆனால் மக்கள் அவர்களை இகழ்ந்து ஏளனம் செய்தனர். இருந்தாலும் ஆசேர், மனாசே, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த சில மனிதர் தங்களைத் தாழ்த்தி எருசலேமுக்குப் போனார்கள். அத்துடன் யூதாவில் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி, அரசனும் அவன் அதிகாரிகளும் உத்தரவிட்டதை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருமனதைக் கொடுப்பதற்காக இறைவனின் கரம் யூதாவின் மக்கள்மேல் இருந்தது. இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை கொண்டாடுவதற்காக மிக ஏராளமான மக்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள். அவர்கள் எருசலேமிலுள்ள பலிபீடங்களையெல்லாம் அகற்றி தூபபீடங்களை நீக்கி எல்லாவற்றையும் கீதரோன் பள்ளத்தாக்கில் வீசினார்கள். அவர்கள் இரண்டாம் மாதம் பதினான்காம் நாளில் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியை வெட்டினார்கள். ஆசாரியரும் லேவியர்களும் வெட்கப்பட்டு, தங்களைப் பரிசுத்தப்படுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்கு தகன காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அதன்பின் அவர்கள் இறைவனின் மனிதனான மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டபடி தங்களுக்குரிய முறையான பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். லேவியர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இரத்தத்தை ஆசாரியர்கள் தெளித்தார்கள். கூடியிருந்தவர்களில் அநேகர் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. சம்பிரதாயப்படி அவர்கள் சுத்தமற்றவர்களாய் இருந்ததினாலும், யெகோவாவுக்குத் தங்களுடைய செம்மறியாட்டுக் குட்டிகளை அர்ப்பணிக்க முடியாமல் இருந்ததினாலும் லேவியர்கள் அவர்களுக்காக பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகளைக் கொல்ல வேண்டியதாயிருந்தது. எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்களில் அதிகமானோர் தங்களைச் சுத்திகரிக்காமல் இருந்தார்கள். ஆனாலும், எழுதப்பட்டிருக்கிறதற்கு மாறாக அவர்கள் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஏனெனில் எசேக்கியா அவர்களுக்காக, “நல்லவராயிருக்கிற யெகோவா ஒவ்வொருவரையும் மன்னிப்பாராக. பரிசுத்த இடத்திற்கேற்ப ஒருவன் சுத்தம் அடையாதிருந்தாலுங்கூட, தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்கு, தங்கள் இருதயத்தைத் திருப்பும் ஒவ்வொருவனையும் மன்னிப்பாராக” என்று விண்ணப்பம் பண்ணியிருந்தான். யெகோவா எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு மக்களைக் குணப்படுத்தினார். எருசலேமுக்கு வந்திருந்த இஸ்ரயேலர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களுக்கு பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஒவ்வொரு நாளும் லேவியர்களும் ஆசாரியரும் யெகோவாவைத் துதிப்பதற்கான வாத்தியங்களை இசைத்து யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். யெகோவாவின் பணியில் நல்ல புரிதலைக் காண்பித்த எல்லா லேவியர்களுடனும் எசேக்கியா உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேசினான். அவர்கள் ஏழு நாட்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பங்கைச் சாப்பிட்டார்கள். அத்துடன் சமாதான காணிக்கைகளைச் செலுத்தி, அவர்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அதன்பின் கூடியிருந்தவர்கள் எல்லோரும் இன்னும் ஏழுநாட்களுக்கு பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். எனவே இன்னும் ஏழுநாட்களும் சந்தோஷமாக கொண்டாடினார்கள். யூதாவின் அரசன் எசேக்கியா கூடியிருந்தவர்களுக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் கொடுத்தான். அத்துடன் அதிகாரிகளும் அவர்களுக்கு ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் கொடுத்தார்கள். பெருந்தொகையான ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். யூதாவின் முழுச் சபையோரும், அவர்களுடன் லேவியர்கள், ஆசாரியர்கள், இஸ்ரயேலிலிருந்து வந்து கூடியவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருந்தனர். இஸ்ரயேலிலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் வாழ்ந்த அந்நியரும்கூட அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாயிருந்தனர். இப்படி எருசலேம் பெருமகிழ்ச்சியாயிருந்தது. இஸ்ரயேலின் அரசனான தாவீதின் மகன் சாலொமோனின் நாட்களுக்குப்பின்பு, எருசலேமில் இதுபோன்ற ஒன்று நடந்ததேயில்லை. ஆசாரியரும் லேவியர்களும் எழுந்து நின்று மக்களை ஆசீர்வதித்தனர், இறைவன் அதைக் கேட்டார். ஏனெனில் அவர்களின் விண்ணப்பம் அவரின் பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது. இவையெல்லாம் முடிந்தபோது அங்கேயிருந்த இஸ்ரயேலர்கள் வெளியே யூதா பட்டணங்களுக்குச் சென்று புனித கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் உயர்ந்த பலிபீடங்களை அழித்து, யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே முழுவதிலுமுள்ள பலிமேடைகளையும் அழித்துப்போட்டார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் அழித்தபின்பு இஸ்ரயேலர் தங்கள் சொந்தப் பட்டணங்களுக்கும் தங்கள் சொந்த உடைமைக்கும் திரும்பினார்கள். வழிபாட்டிற்கான காணிக்கை எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் அவர்கள் பிரிவுகளின்படி நியமித்தான். ஆசாரியர்களாகவோ, லேவியர்களாகவோ அவர்களின் கடமைகளுக்கேற்ற அந்த ஒவ்வொரு பிரிவும் அமைந்தது. அவர்கள் தகன காணிக்கை செலுத்துவதற்கும், சமாதான காணிக்கை செலுத்துவதற்கும், வழிபாட்டு ஊழியம் செய்வதற்கும், நன்றி செலுத்துவதற்கும், யெகோவாவின் உறைவிடத்தின் வாசல்களில் துதிகளைப் பாடுவதற்கும் பிரிவுகளாக நியமிக்கப்பட்டார்கள். யெகோவாவின் சட்டத்தில் எழுதியுள்ளபடி அரசன் காலையிலும் மாலையிலும் செலுத்தும் தகன காணிக்கைகளுக்காகவும், ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும், நியமிக்கப்பட்ட பண்டிகை நாட்களிலும் செலுத்தவேண்டிய தகன காணிக்கைகளுக்காகவும் தனது சொந்த உடைமையிலிருந்தே தேவையானவற்றைக் கொடுத்தான். ஆசாரியரும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தின்படி பொறுப்புகளுக்குத் தங்களை ஒப்படைக்கும்படி, எருசலேமில் வாழும் மக்கள் அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்கவேண்டுமென அவன் உத்தரவிட்டிருந்தான். உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இஸ்ரயேலர்கள் தங்கள் தானியம், புதிய திராட்சை இரசம், எண்ணெய், தேன் ஆகியவற்றிலும், வயல் விளைவித்த எல்லாவற்றிலுமிருந்தும் முதற்பலன்களைத் தாராள மனதுடன் கொடுத்தார்கள். எல்லாவற்றிலும் இருந்து பத்திலொரு பாகத்தை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள். யூதா பட்டணங்களில் வாழ்ந்த இஸ்ரயேல், யூதா மனிதர்களும் அவர்களின் மாட்டு மந்தைகளிலும், ஆட்டு மந்தைகளிலும் பத்திலொரு பங்குகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கென அர்ப்பணித்திருந்த பரிசுத்த பொருட்களிலும் பத்திலொன்றைக் கொண்டுவந்து, அவற்றைக் குவியலாகக் குவித்தார்கள். இவர்கள் இதை மூன்றாம் மாதத்தில் செய்ய ஆரம்பித்து ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். எசேக்கியாவும் அவன் அதிகாரிகளும் வந்து அந்தக் குவியல்களைக் கண்டபோது அவர்கள் யெகோவாவைத் துதித்து, அவரது மக்களான இஸ்ரயேலரை ஆசீர்வதித்தார்கள். எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப் பற்றி விசாரித்தான். அதற்கு சாதோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த தலைமை ஆசாரியன் அசரியா, “மக்கள் காணிக்கைகளை யெகோவாவினுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கியதுமுதல், நாங்கள் சாப்பிடுவதற்குத் தாராளமாய் இருக்கிறது. அதற்கு அதிகமாகவும் இருக்கிறது. ஏனெனில் யெகோவா தமது மக்களை ஆசீர்வதித்திருக்கிறார். அதனால் இவ்வளவு ஏராளமாக மீதமுமிருக்கிறது” எனப் பதிலளித்தான். யெகோவாவின் ஆலயத்தில் களஞ்சியங்களை ஆயத்தப்படுத்தும்படி எசேக்கியா கட்டளையிட்டான்; அது அப்படியே செய்யப்பட்டது. அப்பொழுது அவர்கள் காணிக்கைகளையும், பத்திலொரு பாகத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட நன்கொடைகளையும் உண்மையான மனதுடன் கொண்டுவந்தார்கள். இவற்றிற்கு லேவியனான கொனனியா பொறுப்பாக இருந்தான். அவனுடைய சகோதரன் சிமேயி பதவியில் அவனுக்கு அடுத்ததாக இருந்தான். யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், எரிமோத், யோசபாத், எலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் எசேக்கியா அரசனால் நியமிக்கப்பட்டு, கொனனியாவுக்கும், அவன் சகோதரன் சிமேயிவுக்கும் கீழ் மேற்பார்வையாளர்களாக இருந்தார்கள். அசரியா இறைவனின் ஆலயத்திற்குப் பொறுப்பான அதிகாரியாயிருந்தான். கிழக்குவாசல் காக்கிற லேவியனான இம்னாயின் மகன் கோரே என்பவன் இறைவனுக்குக் கொடுக்கப்படும் சுயவிருப்பக் காணிக்கைகளுக்குப் பொறுப்பாயிருந்தான். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளையும், அர்ப்பணிக்கப்பட்ட நன்கொடைகளையும் இவனே பங்கிட்டுக் கொடுத்தான். ஏதேன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் உண்மையுடனிருந்து உதவி செய்தார்கள். இவர்கள் ஆசாரியர்களின் பட்டணங்களில் இருந்த தங்கள் உடன் ஆசாரியருக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி முதியோர், இளையோர் என்ற பாகுபாடின்றி பங்கிட்டுக் கொடுத்தார்கள். அத்துடன் வம்சவரலாறு பதிவுசெய்யப்பட்டிருந்த மூன்று வயதுடையவர்களுக்கும், அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தங்களது பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பலதரப்பட்ட கடமைகளில் தங்களது அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பதற்கு யெகோவாவின் ஆலயத்திற்குள் போகக்கூடியவர்களாய் இருந்தார்கள். அத்துடன் அவர்கள், வம்சாவழி அட்டவணையில் பதிவு செய்யப்பட்ட ஆசாரியர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைப்படி பங்கிட்டுக் கொடுத்தார்கள். இதுபோலவே இருபது வயதும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுமான லேவியர்களுக்கு அவர்களின் பிரிவின்படியும், பொறுப்புகளின்படியும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இந்த வம்சாவழி அட்டவணையில் எழுதப்பட்டிருந்த முழுச்சமுதாயத்தையும் சேர்ந்த எல்லாச் சிறியவர்களையும், மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும் இதில் உள்ளடக்கியிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்துவதில் உண்மையாயிருந்தார்கள். தங்கள் பட்டணங்களைச் சுற்றியுள்ள வயல் நிலங்களிலோ அல்லது வேறு பட்டணங்களிலோ வாழ்ந்த ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க மனிதர் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் மக்கள் மத்தியில் இருந்த எல்லா ஆண்களுக்கும், லேவியர்களின் வம்சாவழி அட்டவணையில் பதிவுசெய்யப்பட்டிருந்த எல்லோருக்கும் பங்குகளைப் பங்கிட்டுக்கொடுக்கும்படி, பெயர் குறிப்பிடப்பட்ட மனிதர் நியமிக்கப்பட்டார்கள். எசேக்கியா யூதா முழுவதற்கும் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நல்லதும், நியாயமும், உண்மையுமானதைச் செய்தான். இறைவனின் ஆலயத்தின் பணியிலும், சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும், அவன் ஏற்றுக்கொண்ட எல்லாவற்றிலும் எசேக்கியா தனது இறைவனைத் தேடி முழு இருதயத்துடனும் செயல்பட்டான். அதனால் அவன் செழிப்படைந்தான். சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்தல் எசேக்கியா இவையெல்லாவற்றையும் உண்மையுடன் செய்துமுடித்தான். பின் அசீரியாவின் அரசன் சனகெரிப் வந்து யூதாவின்மேல் படையெடுத்தான். அவன் அரண்செய்யப்பட்ட பட்டணங்களை வெற்றிகொள்ள எண்ணி அவற்றை முற்றுகையிட்டான். சனகெரிப் வந்திருப்பதையும், அவன் எருசலேமின்மேல் யுத்தம் செய்ய நோக்கம் கொண்டிருப்பதையும் எசேக்கியா கண்டான். அப்பொழுது அவன் தனது அலுவலர்களுடனும், இராணுவ அதிகாரிகளுடனும் பட்டணத்திற்கு வெளியேயுள்ள நீரூற்றுக்களைத் தடைசெய்வதுபற்றி கலந்தாலோசித்தான். அவர்களும் அவனுக்கு உதவினார்கள். மனிதர் திரளாய் ஒன்றுகூடி வந்து, எல்லா நீரூற்றுகளையும் நாட்டின் வழியாக ஓடிய நீரோடைகளையும் தடுத்து நிறுத்தினார்கள். “அசீரிய அரசர்கள் வந்து ஏன் நிறைந்த தண்ணீரின் செழிப்பைக் கண்டுகொள்ளவேண்டும்” என்று சொல்லியே அவர்கள் இப்படிச் செய்தார்கள். அதன்பின் அவன் கடும் முயற்சியுடன் மதில்களின் உடைந்த பகுதிகளையெல்லாம் திருத்தி மதிலின்மேல் கோபுரங்களையும் கட்டினான். அவன் அந்த மதிலுக்கு வெளியே வேறு ஒரு மதிலையும் கட்டி தாவீதின் பட்டணத்தில் ஆதார தளவரிசைகளையும் பலப்படுத்தினான். அத்துடன் அவன் ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்திருந்தான். அவன் மக்களுக்கு மேலாக இராணுவ அதிகாரிகளையும் நியமித்தான். அவர்களை அவனுக்கு முன்பாக பட்டண வாசலிலுள்ள வீதியில் ஒன்றுகூட்டி, தைரியமூட்டும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினான். “பலங்கொண்டு தைரியமாயிருங்கள். அசீரிய அரசனையும், அவனுடனிருக்கும் பெரும் இராணுவத்தையும் கண்டு நீங்கள் பயப்படவோ, மனஞ்சோரவோ வேண்டாம். ஏனெனில் அவனுடன் இருக்கும் படையைவிட மிகப்பெரிய வல்லமை நம்முடன் இருக்கிறது. அவனுடன் இருப்பது மாம்ச புயமே, ஆனால் நமக்கு உதவிசெய்யவும், நம்மோடு யுத்தத்தில் சண்டையிடவும் இறைவனாகிய யெகோவா நம்முடன் இருக்கிறார்” என்றான். யூதாவின் அரசன் எசேக்கியா சொன்னவற்றைக் கேட்டு மக்கள் நம்பிக்கை கொண்டார்கள். இவற்றிற்குப்பின் அசீரிய அரசன் சனகெரிப்பும், அவனுடைய எல்லாப் படைகளும் லாகீசை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவன், யூதாவின் அரசன் எசேக்கியாவிடமும், அங்கேயிருந்த யூதா மக்களிடமும் எருசலேமுக்குத் தனது அதிகாரிகளை ஒரு செய்தியுடன் அனுப்பினான். “அசீரியாவின் அரசன் சனகெரிப் சொல்வது இதுவே: எதன்மேல் உங்கள் நம்பிக்கையை வைத்து முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்குள் தொடர்ந்து இருக்கிறீர்கள்? எசேக்கியா, ‘இறைவனாகிய எங்கள் யெகோவா அசீரிய அரசனின் கையிலிருந்து நம்மை விடுவிப்பார்’ எனச் சொல்லி உங்களைத் தவறாக வழிநடத்துகிறான். அவன் உங்களைப் பசியாலும், தாகத்தாலும் சாகடிக்கப்போகிறான். எசேக்கியாதானே இந்த தெய்வத்தின் வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். ‘நீங்கள் கட்டாயமாக ஒரே பலிபீடத்தின் முன்னே வழிபட்டு, அதின்மேல் தான் பலிகளை எரிக்கவேண்டும் என அவன் யூதாவுக்கும், எருசலேமுக்கும் சொல்லவில்லையா’? “நானும் எனது தந்தையரும் மற்ற நாட்டு மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் செய்தது உங்களுக்குத் தெரியாதா? அந்த நாடுகளின் தெய்வங்களால், அவர்களுடைய நாட்டை என் கையிலிருந்து காப்பாற்ற எப்பொழுதாவது முடிந்ததா? எனது முற்பிதாக்கள் அழித்துப்போட்ட இந்த நாடுகளின் தெய்வங்களில் எந்த தெய்வத்தினால் என்னிடமிருந்து தன் மக்களைப் பாதுகாக்க முடிந்தது? பின் எப்படி உங்கள் தெய்வத்தால் உங்களை எனது கையிலிருந்து விடுவிக்க முடியும்? இப்பொழுதும் எசேக்கியா இவ்வாறு உங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடத்த இடங்கொடுக்க வேண்டாம். நீங்கள் அவனை நம்பவேண்டாம். ஏனெனில் என் கரத்திலிருந்தோ, என் தந்தையரின் கரத்திலிருந்தோ எந்த ஒரு நாட்டிலும், அரசிலும் தம் மக்களை விடுவிக்கக்கூடிய தெய்வம் இருந்ததோ! இப்பொழுது உங்கள் இறைவன் உங்களை என் கையிலிருந்து விடுவிப்பார் என்பது எவ்வளவு நம்பிக்கையற்ற ஒரு விஷயம்” என சொல்லி அனுப்பினான். சனகெரிப்பின் அதிகாரிகள் இன்னும் அதிகமாக இறைவனாகிய யெகோவாவுக்கும், அவரது அடியவன் எசேக்கியாவுக்கும் எதிராகப் பேசினார்கள். அரசனும்கூட இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை அவமதித்து கடிதங்கள் எழுதியிருந்தான். அவற்றில், “மற்ற நாட்டு மக்கள் கூட்டங்களின் தெய்வங்கள் அவற்றின் மக்களை எனது கையிலிருந்து காப்பாற்றவில்லை. அதேபோல் எசேக்கியாவின் தெய்வமும் அவனுடைய மக்களை எனது கையிலிருந்து காப்பாற்றாது” என்று இறைவனுக்கு எதிராய் எழுதியிருந்தான். அதன்பின் அவர்கள் மதில்களின் மேலிருந்த எருசலேமின் மக்களை பயமுறுத்தி, திகிலடையப் பண்ணவும், பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காகவும் எபிரெய மொழியிலே கூப்பிட்டார்கள். அவர்கள் மனிதரின் கைவேலையான உலகத்தின் மற்ற மக்கள் கூட்டங்களின் தெய்வங்களைக் குறித்துப் பேசியதுபோலவே எருசலேமின் இறைவனைக் குறித்தும் பேசினார்கள். எசேக்கியா அரசனும், ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவும் இதுபற்றி பரலோகத்தை நோக்கி, அழுது மன்றாடினார்கள். அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார். அவன் அசீரிய அரசனின் முகாமிலிருந்த எல்லா இராணுவவீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் அழித்தொழித்தான். எனவே அவன் தனது சொந்த நாட்டிற்கு அவமானத்துடன் பின்வாங்கிப் போனான். அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள். இவ்வாறு யெகோவா எசேக்கியாவையும், எருசலேம் மக்களையும் அசீரிய அரசன் சனகெரிப்பின் கையினின்றும், மற்ற எல்லோருடைய கைகளினின்றும் காப்பாற்றினார். எல்லாப் பக்கங்களிலும் அவர் அவர்களைப் பாதுகாத்தார். அநேகர் எருசலேமுக்கு யெகோவாவுக்கு காணிக்கைகளையும், யூதாவின் அரசன் எசேக்கியாவுக்குப் விலையுயர்ந்த நன்கொடைகளையும் கொண்டுவந்தார்கள். அப்பொழுதிலிருந்து அவன் எல்லா தேசத்தார்களாலும் உயர்வாய் மதிக்கப்பட்டான். எசேக்கியாவின் அகந்தையும் மரணமும் அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். அவன் யெகோவாவிடம் மன்றாடினபோது அவர் அவனுக்குப் பதிலளித்து, ஒரு அற்புத அடையாளத்தைக் கொடுத்தார். ஆனால் எசேக்கியாவின் இருதயமோ பெருமைகொண்டது. அவனுக்குக் காண்பிக்கப்பட்ட தயவுக்கு ஏற்றபடி அவன் நடக்கவில்லை. அதனால் யெகோவாவின் கோபம் அவன் மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இருந்தது. அதன்பின் எசேக்கியா தனது இருதயப் பெருமையிலிருந்து மனந்திரும்பினான். அதேபோல் எருசலேம் மக்களும் செய்தார்கள். அதனால் எசேக்கியாவின் நாட்களில் யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் வரவில்லை. எசேக்கியா மிகுந்த செல்வமும், கனமும் உடையவனாய் இருந்தான். வெள்ளி, தங்கம், மாணிக்கக் கற்கள், நறுமணப் பொருட்கள், கேடயங்கள், மற்றும் எல்லா விதமான32:27 அல்லது விலையுயர்ந்த ஆபரணங்கள் அல்லது பாத்திரங்கள். விலைமதிப்புமிக்க பொருட்கள் ஆகியவற்றிற்குமாக திரவிய களஞ்சியங்களைக் கட்டினான். இவற்றுடன்கூட தானிய விளைச்சலையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேர்த்து வைக்க களஞ்சியங்களையும் கட்டினான். அத்துடன் பல்வேறு வகையான மந்தைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்கு பட்டிகளையும் கட்டினான். அவன் கிராமங்களையும் கட்டி, பெருந்திரளான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் பெற்றிருந்தான். ஏனெனில் இறைவன் பெரும் செல்வத்தை அவனுக்குக் கொடுத்திருந்தார். எசேக்கியாவே கீகோன் மேற்பகுதி நீரோடையிலிருந்து புறப்பட்ட தண்ணீர் வெளியில் செல்லும் வழியை அடைத்தான். அந்தத் தண்ணீரைத் தாவீதின் பட்டணத்தின் மேற்குப் பக்கமாகத் திருப்பி அனுப்பினான். அவன் மேற்கொண்ட எல்லாவற்றிலும் அவனுக்கு வெற்றியே கிடைத்தது. ஆனால் நாட்டில் நடந்திருந்த அற்புதமான அடையாளத்தைப் பற்றி அவனிடம் விசாரிப்பதற்குப் பாபிலோனின் ஆளுநர்களால் தூதுவர்கள் அனுப்பப்பட்டார்கள். அப்போது இறைவன் அவனைப் சோதித்து அவனுடைய இருதயத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்காக அவனைவிட்டு அகன்றிருந்தார். எசேக்கியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய பக்தி செயல்களும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்திலுள்ள ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவின் தரிசனத்தில் எழுதப்பட்டுள்ளன. எசேக்கியா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் சந்ததிகளின் கல்லறைகள் இருந்த முக்கியமான கல்லறையில்32:33 அல்லது அரச கல்லறையின் மேல்பகுதி. அடக்கம் செய்யப்பட்டான். அவன் இறந்தபோது யூதா மக்கள் எல்லோரும், எருசலேம் மக்களும் அவனுக்கு மரியாதை செலுத்தினர். அவன் மகன் மனாசே அவனுடைய இடத்திற்கு அரசனானான். யூதாவின் அரசன் மனாசே மனாசே அரசனானபோது அவன் பன்னிரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து வருடங்கள் அரசாண்டான். அவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய நாடுகளின் வெறுக்கத்தக்க நடைமுறைகளைப் பின்பற்றி யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். தன் தகப்பன் எசேக்கியா அழித்திருந்த உயர்ந்த மேடைகளைத் திரும்பவும் கட்டினான். அத்துடன் அவன் பாகால்களுக்கு மேடைகளைக் கட்டியெழுப்பி, அசேரா விக்கிரக தூண்களையும் செய்தான். அவன் எல்லா நட்சத்திரக் கூட்டத்தையும் விழுந்து வணங்கினான். “என் பெயர் எருசலேமில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று யெகோவா சொல்லியிருந்த யெகோவாவினுடைய ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். அத்துடன் அவன் யெகோவாவின் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் எல்லா நட்சத்திரக் கூட்டங்களுக்கும் மேடைகளைக் கட்டினான். அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கில் தனது மகன்களை நெருப்பில் பலியிட்டான். அவன் மாந்திரீகம், குறிசொல்லுதல், பில்லிசூனியம் ஆகியவற்றில் ஈடுபட்டான். அத்துடன் அவன் ஆவிகளைக்கொண்டு குறிசொல்பவர்களிடமும், ஆவி உலகத் தொடர்புடையவர்களிடமும் அறிவுரை கேட்டுவந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் அதிகமான தீமையைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான். இறைவன் தாவீதிடமும், அவன் மகன் சாலொமோனிடமும், “இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும் இந்த ஆலயத்திலும் என்றென்றைக்குமாக எனது பெயரை வைப்பேன்” எனச் சொல்லியிருந்தார். அந்த ஆலயத்திலேயே அவன் தான் செய்த செதுக்கப்பட்ட உருவச் சிலைகளைக் கொண்டுபோய் வைத்தான். அத்துடன், “அவர்கள் மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் எல்லாவற்றையும் குறித்து நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்ய அவர்கள் கவனமாயிருப்பார்களானால், நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இஸ்ரயேலரின் காலடிகளைப் புறப்படப்பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருந்தார். ஆனால் மனாசேயோ யூதாவையும், எருசலேமின் மக்களையும் வழிவிலகச் செய்தான். அதனால் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா மனாசேயுடனும், அவன் மக்களுடனும் பேசினார். அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. எனவே யெகோவா அசீரிய அரசனின் இராணுவ தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கல சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அவன் தனது கடும் துன்பத்தில் தனது இறைவனாகிய யெகோவாவிடத்தில் தயவைத் தேடினான். தன் முற்பிதாக்களின் இறைவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தினான். அவன் அவரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா அவனுடைய வேண்டுதலினால் மனமிரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். அவர் அவனைத் திரும்பவும் எருசலேமுக்கும் அவனுடைய அரசுக்கும் கொண்டுவந்தார். அதன்பின்பு மனாசே யெகோவாவே இறைவன் என அறிந்தான். இவற்றிற்குப்பின் அவன் தாவீதின் நகரத்தில் வெளி மதிலைத் திரும்பக் கட்டினான். கீகோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கின் நீரூற்று தொடங்கி, மீன் வாசலின் நுழைவாசல்வரை ஓபேலின் குன்றைச் சுற்றியே அந்த மதிலைக் கட்டினான். அவன் அதை முன்னிருந்ததைவிட உயரமாகக் கட்டினான். அவன் யூதாவின் எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவ தளபதிகளை நிறுத்தினான். அவன் அந்நிய தெய்வங்களையெல்லாம் ஒழித்து, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த உருவச்சிலையை அகற்றிப்போட்டான். அதேபோல் ஆலய மலையிலும், எருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். அவன் அவற்றை பட்டணத்திற்கு வெளியே எறிந்துவிட்டான். அதன்பின் யெகோவாவின் பலிபீடத்தைத் திரும்பவும் கட்டி, அதில் சமாதானக் காணிக்கைகளையும், நன்றி செலுத்தும் காணிக்கைகளையும் பலியிட்டான். அத்துடன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும் என யூதா மக்களிடம் சொன்னான். இருந்தும் மக்கள் தொடர்ந்து பலிபீடங்களின் மேலேயே பலியிட்டு வந்தனர். ஆனாலும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்கு என்றே பலியிட்டார்கள். மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் தனது இறைவனிடம் செய்த மன்றாடலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் தரிசனக்காரர் அவனுடன் பேசிய வார்த்தைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய மன்றாடலும், அவனுடைய வேண்டுதலினால் இறைவன் எவ்விதம் அவனுக்கு இரங்கினார் என்பதும், அவனுடைய பாவங்களும், நம்பிக்கைத் துரோகமும், அவன் தன்னைத் தாழ்த்துவதற்கு முன்பு உயர்ந்த மேடைகளைக் கட்டி, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் அமைத்த இடங்களுமான இவையெல்லாம் தரிசனக்காரரின் பதிவேடுகளில் எழுதப்பட்டுள்ளன. மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆமோன் அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவின் அரசன் ஆமோன் ஆமோன் அரசனானபோது அவன் இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனும் தன் தகப்பன் மனாசே செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்தான். மனாசே செய்திருந்த எல்லா விக்கிரகங்களையும் ஆமோன் வணங்கி, அவற்றில் பலிகளையும் செலுத்தினான். ஆனால் தன் தகப்பன் மனாசேயைப்போல் யெகோவாவுக்குமுன் தன்னைத் தாழ்த்தவில்லை. ஆமோன் தன் குற்றத்தை அதிகரித்துக் கொண்டான். ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அவனுடைய அரண்மனையில் அவனைக் கொலைசெய்தார்கள். அப்பொழுது நாட்டு மக்கள், அரசன் ஆமோனுக்கெதிராக குழப்பம் செய்த எல்லோரையும் கொலைசெய்தார்கள். பின் அவனுடைய இடத்திற்கு அவன் மகன் யோசியாவை அரசனாக்கினார்கள். யோசியாவின் சீர்திருத்தம் யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து தன் தந்தையான தாவீதின் வழியில் நடந்தான். அவன் வலது புறமாவது, இடது புறமாவது விலகவில்லை. அவனுடைய ஆட்சியின் எட்டாம் வருடத்தில் அவன் இன்னும் இளமையாய் இருக்கையிலே தன் தகப்பன் தாவீதின் இறைவனைத் தேடத் தொடங்கினான். ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தில் அங்கிருந்த உயர்ந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும், செதுக்கிய விக்கிரகங்களையும், வார்ப்பிக்கப்பட்ட உருவச்சிலைகளையும் அகற்றி யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுடைய கட்டளையின்கீழ், பாகால்களின் மேடைகள் எல்லாம் இடித்து வீழ்த்தப்பட்டன. அவன் அவற்றிற்கு மேலாக இருந்த தூபபீடங்களையெல்லாம் உடைத்துத் துண்டுதுண்டாக்கினான். அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும், உருவச்சிலைகளையும் நொருக்கிப் போட்டான். அவன் இவற்றையெல்லாம் உடைத்துத் தூளாக்கி அவற்றிற்கு பலியிட்டவர்களின் கல்லறைகளின்மேல் தூவிவிட்டான். அவன் பூசாரிகளின் எலும்புகளை அதன்மேல் எரித்தான். இவ்வாறு யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தினான். நப்தலி வரையுள்ள மனாசே, எப்பிராயீம், சிமியோன் பட்டணங்களிலும் அவற்றைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் இப்படிச் செய்தான். அவன் இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் உடைத்து வீழ்த்தி, விக்கிரகங்களை உடைத்துத் தூளாக்கி எல்லாத் தூபபீடங்களையும் துண்டு துண்டாக்கிப் போட்டான். பின் அவன் எருசலேமுக்குத் திரும்பினான். யோசியாவின் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், அவன் நாட்டையும் எருசலேமையும் தூய்மைப்படுத்துவதற்காக அத்சலியாவின் மகன் சாப்பான், பட்டணத்தின் ஆளுநனான மாசெயா, பதிவாளனான யோவகாஸின் மகன் யோவாக் ஆகியோரை அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அனுப்பினான். அவர்கள் தலைமை ஆசாரியன் இல்க்கியாவிடம் போய், இறைவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்கள். அப்பணம் வாசல் காவலாளர்களாயிருந்த லேவியர்களால் மனாசே, எப்பிராயீம் மக்களிடமிருந்தும், இஸ்ரயேலில் எஞ்சியிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா, பென்யமீன் மக்களான எல்லோரிடமிருந்தும், எருசலேமின் குடிகளிடமிருந்தும் சேர்க்கப்பட்டதாகும். அவர்கள் யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட மனிதரிடம் அதைக் கொடுத்தார்கள். அவர்கள் அதிலிருந்து ஆலயத்தைப் பழுதுபார்த்து, திரும்பக்கட்டிய வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தச்சர்களுக்கும், கட்டடங்களைக் கட்டுபவர்களுக்கும், பொழியப்பட்ட கற்களையும், வளை மரங்களையும், இணைப்பு மரங்களையும் செய்வதற்கான மரங்களை வாங்குவதற்குமென பணம் கொடுத்தார்கள். அந்தக் கட்டடங்கள் யூதாவின் அரசர்களால் பாழாகும்படி விடப்பட்டிருந்தனவாகும். மனிதர்கள் உண்மையுடன் வேலைசெய்தார்கள். அவர்களுக்குத் தலைமைதாங்கி, அவர்களை வழிநடத்துவதற்கு மெராரி வழிவந்த லேவியர்களான யாகாத்தும், ஒபதியாவும், கோகாத்தின் வழிவந்த சகரியா, மெசுல்லாவும் இருந்தனர். லேவியர்கள் எல்லோரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாயிருந்து, ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருந்த வேலையாட்களை மேற்பார்வை செய்தார்கள். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், வேதப்பிரதியாளர்களாகவும், வாசல் காப்போர்களாகவும் இருந்தனர். சட்டப் புத்தகம் கண்டெடுக்கப்படல் யெகோவாவின் ஆலயத்திற்குள் இருந்த பணம் வெளியே எடுத்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது ஆசாரியன் இல்க்கியா மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இல்க்கியா செயலாளராகிய சாப்பானிடம், “யெகோவாவின் ஆலயத்தில் நான் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன்” என்று சொன்னான். அவன் அதைச் சாப்பானிடம் கொடுத்தான். அப்பொழுது சாப்பான் அந்தப் புத்தகத்தை அரசனிடம் கொண்டுபோய், அவனுக்கு விவரித்துச் சொன்னதாவது, “உமது அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பணத்தை, மேற்பார்வையாளருக்கும், வேலையாட்களுக்கும் என கொடுத்துவிட்டார்கள்” என்றான். பின்பு செயலாளராகிய சாப்பான் அரசனிடம், “ஆசாரியன் இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி அதை அரசன்முன் வாசித்தான். அரசன் சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தனது ஆடைகளைக் கிழித்தான். பின்பு அரசன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மீகாவின் மகன் அப்தோனுக்கும், செயலாளன் சாப்பானுக்கும், அரச ஏவலாளனான அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது: “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான். இல்க்கியாவும், அரசன் அவனோடு அனுப்பியவர்களும் இறைவாக்கினள் உல்தாளிடம் பேசும்படி போனார்கள். இவள் ஆலய உடைகளைக் காவல் செய்பவனான சல்லூமின் மனைவி. சல்லூம் அஸ்ராவின் மகனான தோக்காத்தின் மகன். உல்தாள் எருசலேமில் இரண்டாம் வட்டாரத்தில் வாழ்ந்தாள். அவள் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே, நான் இந்த இடத்தின்மேலும், இதன் மக்கள்மேலும் பேரழிவைக் கொண்டுவரப் போகிறேன். யூதாவின் அரசனுக்கு முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவருவேன். ஏனெனில் அவர்கள் என்னைக் கைவிட்டு, மற்றத் தெய்வங்களுக்குத் தூபம் எரித்தார்கள். தங்கள் கரங்களினால் செய்த எல்லாவற்றினாலும் எனக்கு கோபமூட்டினார்கள். ஆதலால் எனது கோபம் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது தணியாது’ என்றாள். யெகோவாவிடம் விசாரிக்கும்படி உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘நீர் கேட்ட வார்த்தைகளைப்பற்றி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: இறைவன் இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசியதை நீ கேட்டபோது, உன் இருதயம் அதைக் கருத்தில் கொண்டது. நீயும் இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தினாய். நீ எனக்கு முன்னால் உன்னைத் தாழ்த்தி, உன் மேலாடைகளைக் கிழித்து, எனக்குமுன் அழுதாய். அதனால் நான் உனக்குச் செவிகொடுத்தேன் என்று யெகோவா சொல்கிறார். இப்பொழுது நான் உன்னை உன் தந்தையருடன் சேர்த்துக்கொள்ளப் போகிறேன். நீ சமாதானத்துடன் அடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்தின்மேலும் இங்கு வாழ்வோர்மேலும் கொண்டுவரப்போகும் பேரழிவை உன் கண்கள் காணமாட்டாது’ என்று சொல்கிறார்” என்றாள். எனவே அவளது பதிலைக் கொண்டு அவர்கள் அரசனிடம் போனார்கள். அப்பொழுது அரசன், யூதாவின் முதியவர்களையும், எருசலேமின் முதியவர்களையும் ஒன்றாக கூடிவரச் செய்தான். அரசன் யூதாவின் மனிதர், எருசலேமின் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகிய சிறியோர் பெரியோர் அனைவருடனும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் அவர்கள் கேட்கும்படி வாசித்தான். அரசன் தனது தூணின் அருகே நின்று, யெகோவாவின் முன்னால் உடன்படிக்கையைப் புதுப்பித்தான். யெகோவாவைப் பின்பற்றுவதற்கும், அவரது கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தனது முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும் கைக்கொள்வதற்கும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதற்கும் உடன்பட்டான். அதன்பின் எருசலேமிலும், பென்யமீனிலுமுள்ள ஒவ்வொருவரையும் உடன்படும்படி தூண்டினான். எருசலேம் மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய இறைவனின் உடன்படிக்கையின்படியே இதைச் செய்தார்கள். யோசியா இஸ்ரயேலின் ஆட்சிக்குட்பட்ட அதற்குச் சொந்தமான பகுதிகளிலிருந்த எல்லா அருவருக்கத்தக்க விக்கிரகங்களையும் அகற்றினான். இஸ்ரயேலில் உள்ள எல்லோரையும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி செய்தான். அவன் வாழ்ந்த காலம் ழுழுவதும் அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைப் பின்பற்றுவதில் தவறவேயில்லை. யோசியா பஸ்காவைக் கொண்டாடுதல் யோசியா எருசலேமில் யெகோவாவுக்கென்று பஸ்காவைக் கொண்டாடினான்; முதலாம் மாதம் பதினான்காம் நாளில் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டி வெட்டப்பட்டது. அவன் ஆசாரியர்களை அவர்களுடைய கடமைகளுக்கென நியமித்தான். யெகோவாவின் ஆலயத்தின் பணிகளைச் செய்யவும் அவர்களை ஊக்குவித்தான். அவன் இஸ்ரயேலர்களுக்கெல்லாம் அறிவுறுத்தல் கொடுப்பவர்களும், யெகோவாவுக்கென பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமான லேவியர்களிடம் சொன்னதாவது: “இஸ்ரயேலின் அரசன் தாவீதின் மகன் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்த பெட்டியை வையுங்கள். அது இனி உங்கள் தோள்களில் சுமக்கப்படக்கூடாது. இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் பணிசெய்யுங்கள். இஸ்ரயேலின் அரசன் தாவீதும், அவன் மகன் சாலொமோனும் எழுதி வைத்துள்ள பணிகளுக்கேற்ப உங்கள் கோத்திரங்களிலுள்ள குடும்பங்களின்படியே உங்களை ஆயத்தப்படுத்துங்கள். “மற்ற மக்களான உங்கள் உடன் நாட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவுக்குமென ஒவ்வொரு கூட்டமாக லேவியர்களுடன் பரிசுத்த இடத்தில் நில்லுங்கள். பஸ்காவின் செம்மறியாட்டுக் குட்டிகளை வெட்டி, உங்களைப் பரிசுத்தப்படுத்தி, உங்கள் சக இஸ்ரயேலருக்காகப் பஸ்கா செம்மறியாட்டுக் குட்டியை ஆயத்தப்படுத்துங்கள். இவ்விதமாக மோசே மூலம் யெகோவா கட்டளையிட்டதைச் செய்யுங்கள்” என்றான். யோசியா அங்கிருந்த எல்லா மற்ற மக்களுக்காகவும் பஸ்காவைப் பலியிடுவதற்காக முப்பதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் அவர்களுக்குக் கொடுத்தான். அதோடுகூட மூவாயிரம் மாடுகளையும் கொடுத்தான். இவையெல்லாவற்றையும் அரசன் தனக்குரியவற்றிலிருந்தே கொடுத்தான். அவனுடைய அதிகாரிகளும்கூட மக்களுக்கும், ஆசாரியருக்கும், லேவியர்களுக்கும் மனமுவந்து காணிக்கைகளைக் கொடுத்தார்கள். இறைவனின் ஆலய நிர்வாகிகளான இல்க்கியா, சகரியா, யெகியேல் ஆகியோரும் ஆசாரியருக்கு இரண்டாயிரத்து அறுநூறு பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகளையும், முந்நூறு மாடுகளையும் கொடுத்தார்கள். அத்துடன் லேவியர்களின் தலைவர்களான கொனானியாவும், செமாயாவும், நெதனெயேலும் அவனுடைய சகோதரர்களும், அஷபியாவும், எயேலும், யோசபாத்தும் ஐயாயிரம் பஸ்கா காணிக்கைகளையும், ஐந்நூறு மாடுகளையும் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள். வழிபாடு ஒழுங்குசெய்யப்பட்டது. அரசன் கட்டளையிட்டபடி ஆசாரியர்கள் லேவியர்களுடன் தங்கள் பிரிவுகளின்படி தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். பஸ்கா செம்மறியாட்டுக் குட்டிகள் வெட்டப்பட்டன. ஆசாரியர்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்ட இரத்தத்தைத் தெளித்தார்கள். அந்த நேரம் லேவியர்கள் மிருகங்களின் தோலை உரித்தார்கள். அவர்கள் தகன காணிக்கைகளை வேறாக எடுத்துவைத்தார்கள். மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி, அவை குடும்பங்களின் உட்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கென்று யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும்படி வைக்கப்பட்டன. அவர்கள் மாடுகளையும் அவ்வாறே செய்தார்கள். அவர்கள் விவரித்துள்ளபடியே பஸ்கா மிருகங்களை நெருப்பின்மேல் வாட்டி, பரிசுத்த காணிக்கைகளை பானைகளிலும், கிடாரங்களிலும், சட்டிகளிலும் அவித்தார்கள். அவற்றை மிக விரைவாக எல்லா மக்களுக்கும் பரிமாறினார்கள். இதன்பின் தங்களுக்கெனவும், ஆசாரியருக்கெனவும் பங்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். ஏனெனில் ஆரோனின் வழித்தோன்றல்களான ஆசாரியர்கள், தகன காணிக்கைகளையும், கொழுப்புப் பகுதிகளையும் மாலையாகும்வரை பலியிட்டுக் கொண்டேயிருந்தார்கள். எனவே லேவியர்கள் தங்களுக்கும், ஆரோனிய ஆசாரியருக்குமென பங்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். தாவீது விவரித்துள்ளபடியே, ஆசாப்பின் வழித்தோன்றல்களான இசைக் கலைஞர்கள் ஆசாப், ஏமான் அரசர்களின் தரிசனக்காரனான எதுத்தூன் ஆகியோர் அவர்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். ஒவ்வொரு வாசலிலும் நிற்கும் வாசல் காவலர்கள் அவர்களுடைய இடத்தைவிட்டுப் போக வேண்டியிருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் உடனிருந்த லேவியர்கள் அவர்களுக்குமாக பங்குகளை ஆயத்தப்படுத்தினார்கள். அவ்வேளையில் அரசன் யோசியா கட்டளையிட்டிருந்தபடியே, பஸ்கா கொண்டாட்டத்திற்காக யெகோவாவுக்கான முழு வழிபாடும், யெகோவாவின் பலிபீடத்தில் தகன காணிக்கைகள் செலுத்துவதும் ஒழுங்காக செய்துமுடிக்கப்பட்டன. அங்கு வந்திருந்த இஸ்ரயேலர் பஸ்காவைக் கொண்டாடி, அப்பொழுது புளிப்பில்லாத அப்பப் பண்டிகையையும் ஏழுநாட்களுக்குக் கொண்டாடினார்கள். இறைவாக்கினன் சாமுயேலின் நாட்களுக்குபின் இஸ்ரயேலில் இதுபோன்று பஸ்கா கொண்டாடப்படவில்லை. யோசியா செய்ததுபோல இஸ்ரயேல் அரசர்களில் ஒருவனும் பஸ்காவை இவ்வாறு கொண்டாடவில்லை. ஏனெனில் யோசியா எருசலேம் மக்களுடன் இருந்த ஆசாரியருடனும், லேவியர்களுடனும், யூதா மக்கள் எல்லோருடனும், இஸ்ரயேல் மக்களுடனும் சேர்ந்து கொண்டாடினான். இந்த பஸ்கா யோசியாவின் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில் கொண்டாடப்பட்டது. யோசியாவின் மரணம் இவை எல்லாவற்றிற்கும்பின் யோசியா ஆலயத்தை ஒழுங்குபடுத்தினான். அப்பொழுது எகிப்தின் அரசனான நேகோ யூப்ரட்டீஸ் நதியோரம் இருந்த கர்கேமிஸ் பட்டணத்திற்கு சண்டையிடப் போனான். யோசியா யுத்தத்தில் அவனை எதிர்கொள்ள அணிவகுத்துப் போனான். ஆனால் நேகோ அவனிடம் தூதுவர்களை அனுப்பி, “யூதாவின் அரசனே! எனக்கும் உமக்கும் இடையில் என்ன சச்சரவு உண்டு? இம்முறை நான் தாக்குவது உம்மையல்ல; என்னுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தையே தாக்குகிறேன். இறைவன் அதை விரைவாகச் செய்ய என்னிடம் கூறியிருக்கிறார். எனவே என்னோடு இருக்கிற இறைவனை எதிர்ப்பதை நிறுத்தும்; இல்லையெனில் அவர் உம்மை அழித்துப்போடுவார்” என்று சொல்லி அனுப்பினான். ஆயினும் யோசியா அவனைவிட்டுத் திரும்பிப் போகவில்லை. யுத்தத்தில் ஈடுபடுவதற்கு அவன் மாறுவேடம் அணிந்தான். அவன் இறைவனின் கட்டளைப்படி நேகோ கூறியவற்றுக்கு செவிகொடுக்காமல் மெகிதோ சமவெளியில் சண்டையிடப் போனான். வில்வீரர் யோசியா அரசனின்மேல் அம்பெய்தார்கள். அப்பொழுது அவன் தன் அதிகாரிகளிடம், “என்னைக் கொண்டுபோங்கள்; நான் மிக மோசமாகக் காயப்பட்டுள்ளேன்” என்று சொன்னான். எனவே அவர்கள் அவனை அவனுடைய தேரிலிருந்து எடுத்து அவனிடமிருந்த மற்ற தேரில் வைத்து, எருசலேமுக்குக் கொண்டுபோக அவன் அங்கே இறந்தான். அவன் அவனுடைய முற்பிதாக்களின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டான். யூதா, எருசலேமில் உள்ள அனைவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். எரேமியா யோசியாவுக்குப் புலம்பல்களை இயற்றினான். எல்லா பாடகர்களும், பாடகிகளும் இப்புலம்பலைப் பாடி யோசியாவை நினைவுகூருகிறார்கள். இவை இஸ்ரயேலில் வழக்கமான நியமமாய் இருந்து, புலம்பல்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோசியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், யெகோவாவின் சட்டத்தில் எழுதியுள்ளபடி அவனுடைய பக்தி செயல்களும், தொடக்கமுதல் முடிவு வரையுள்ள எல்லா நிகழ்வுகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவனுடைய தகப்பனின் இடத்திலே அரசனாக்கினார்கள். யூதாவின் அரசன் யோவாகாஸ் யோவகாஸ் அரசனானபோது அவனுக்கு இருபத்துமூன்று வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசாண்டான். எகிப்தின் அரசன் அவனை எருசலேமின் அரச பதவியிலிருந்து தள்ளிவிட்டு, யூதா மக்கள்மேல் நூறு தாலந்து வெள்ளியும், ஒரு தாலந்து தங்கமும் வரியாகச் சுமத்தினான். யோவகாஸின் சகோதரன் எலியாக்கீமை எகிப்தின் அரசன், யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான். எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என மாற்றினான். ஆனால் நேகோ எலியாக்கீமின் சகோதரன் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான். யூதாவின் அரசன் யோயாக்கீம் யோயாக்கீம் அரசனானபோது அவனுக்கு இருபத்தைந்து வயது. அவன் எருசலேமில் பதினொரு வருடம் அரசாண்டான், அவன் தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் அவனைத் தாக்கி அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி வெண்கல விலங்கினால் கட்டினான். அத்துடன் நேபுகாத்நேச்சார் யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து பொருட்களை பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோய் அவற்றை அங்குள்ள தன் கோவிலில் வைத்தான். யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த அருவருப்பான செயல்களும், மற்றும் அவனுக்கெதிராகக் காணப்பட்டவையெல்லாம் யூதாவினதும், இஸ்ரயேலினதும் அரசர்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இடத்தில் அவன் மகன் யோயாக்கீன் அரசனானான். யூதாவின் அரசன் யோயாக்கீன் யோயாக்கீன் அரசனானபோது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதமும் பத்து நாட்களும் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். மறுவருடத்தில் நேபுகாத்நேச்சார் அரசன் அவனைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பி, அவனையும் அத்துடன் யெகோவாவின் ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரும்படி செய்தான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பனான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான். யூதாவின் அரசன் சிதேக்கியா சிதேக்கியா அரசனானபோது அவன் இருபத்தொரு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமை பதினோருவருடம் அரசாண்டான். அவன் தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். அவன் யெகோவாவினுடைய வார்த்தையை பேசிய இறைவாக்கினன் எரேமியாவுக்கு முன் தன்னைத் தாழ்த்தவில்லை. அத்துடன் இறைவனின் பெயரில் தன்னை ஆணையிடும்படி செய்த அரசன் நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாக அவன் கலகம் செய்தான். அவன் அடங்காதவனாய் தன் இருதயத்தையும் கடினப்படுத்தி, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவினிடத்திற்குத் திரும்பாமல் இருந்தான். மேலும் ஆசாரியர்களின் எல்லாத் தலைவர்களும், மக்களும் அதிகமதிகமாக உண்மையற்றவர்களானார்கள். அவர்கள் பிறநாடுகளின் அருவருப்பான செயல்களைப் பின்பற்றி, யெகோவா எருசலேமில் பரிசுத்தம் பண்ணிய அவருடைய ஆலயத்தை அசுத்தப்படுத்தினார்கள். எருசலேமின் வீழ்ச்சி அவர்களுடைய முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா தனது தூதுவர்களின் மூலம் திரும்பத்திரும்ப அவர்களை எச்சரித்தார். ஏனெனில் அவர் தனது மக்கள்மேலும் தனது இருப்பிடத்தின்மேலும் அனுதாபம் கொண்டிருந்தார். ஆனால் அவர்களோ இறைவனின் தூதுவர்களை ஏளனம் செய்து, அவரது வார்த்தைகளை உதாசீனம் செய்து, அவரது இறைவாக்கினர்களை கேலி செய்தார்கள். அதனால் யெகோவாவின் கோபம் அவரது மக்களுக்கு எதிராக எழும்பியது. அதற்கு பரிகாரம் ஒன்றுமில்லாதிருந்தது. எனவே அவர் அவர்களுக்கு எதிராக பாபிலோனியர்களின் அரசனைக் கொண்டுவந்தார். அவன் பரிசுத்த இடத்தில் அவர்களின் வாலிபரை வாளினால் கொன்றான். வாலிபர்களையோ, இளம்பெண்களையோ, வயதானவர்களையோ, முதியவர்களையோ ஒருவனையும் விட்டுவைக்கவில்லை. இறைவன் அவர்கள் எல்லோரையும் நேபுகாத்நேச்சாரிடம் கையளித்தார். அவன் பெரியதும் சிறியதுமான இறைவனுடைய ஆலயத்தின் எல்லாப் பொருட்களையும், யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்த திரவியங்களையும், அரசனுடைய திரவியங்களையும், அவனுடைய அதிகாரிகளுடைய திரவியங்களையும் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் இறைவனுடைய ஆலயத்திற்கு நெருப்பு வைத்து, எருசலேமின் மதிலை உடைத்துப் போட்டார்கள். அவர்கள் எல்லா அரண்மனைகளையும் எரித்து, அங்குள்ள விலையுயர்ந்த எல்லாவற்றையும் அழித்துப்போட்டார்கள். வாளுக்குத் தப்பி மீதியாயிருந்தவர்களை அவன் பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றான். அவர்கள் பெர்சிய அரசு ஆட்சிக்கு வரும்வரை அவனுக்கும், அவன் மகன்களுக்கும் வேலையாட்களாய் இருந்தார்கள். நாடு தனது ஓய்வை அனுபவித்தது. எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படியாக எழுபது வருடங்கள் பூர்த்தியாகும்வரை, நாடு பாழாய்க் கிடந்த காலமெல்லாம் அது இளைப்பாறியது. பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து அதை எழுதிவைத்தான். “பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே: “ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார். உங்கள் மத்தியில் இருக்கிற அவருடைய மக்களில் எவனும் புறப்பட்டுப் போகட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக.’ ”