- Biblica® Open Indian Tamil Contemporary Version
1 தீமோத்தேயு
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதல் கடிதம்
1 தீமோத்தேயு
1 தீமோ.
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதல் கடிதம்
நமது இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையின்படி, நமது எதிர்பார்ப்பாயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
விசுவாசத்தில் என் உண்மையான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் உங்களுக்குக் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
தவறான உபதேசத்தைக்குறித்த எச்சரிக்கை
நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதுபோல, நீ எபேசுவிலே தங்கியிரு. அங்கே சிலர் பொய்யான கோட்பாடுகளைப் போதிக்கிறார்கள். நீ அவர்களுக்கு இனிமேலும் அப்படிச் செய்யாதபடி கட்டளையிடு. கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் அவர்கள் ஈடுபடுவதை விட்டுவிடும்படி கட்டளையிடு. இவை வாக்குவாதத்தைப் பெருகச்செய்யுமேயல்லாமல், விசுவாசத்தின்மூலம் நடைபெற வேண்டிய இறைவனின் வேலைகளைப் பெருகச்செய்யாது. இந்தக் கட்டளையின் நோக்கம் அன்பே ஆகும். தூய்மையான இருதயத்திலும், நல்ல மனசாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலுமிருந்தே அந்த அன்பு உண்டாகிறது. சிலரோ இவற்றைவிட்டு வழிவிலகிப்போய், பயனற்ற பேச்சில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மோசேயின் சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும், தாங்கள் மனவுறுதியுடன் வலியுறுத்துவது என்ன என்றும் அறியாதிருக்கிறார்கள்.
ஒருவன் மோசேயின் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நல்லது என்று நாம் அறிவோம். மோசேயின் சட்டம் நீதிமான்களுக்காக அல்ல, சட்டத்தை மீறுபவர்களுக்காகவே ஆக்கப்பட்டது என்பதையும், நாம் அறிவோம். கலகக்காரர், பக்தியில்லாதவர், பாவம் செய்பவர், பரிசுத்தம் இல்லாதவர், நம்பிக்கை இல்லாதவர், தங்கள் தகப்பனையும் தாயையும் கொலைசெய்பவர், கொலைகாரர், விபசாரம் செய்வோர், ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவோர், அடிமை வியாபாரம் செய்வோர், பொய்யர், பொய் சத்தியம் செய்வோர் ஆகியோருக்காகவும், நலமான போதனைக்கு மாறாக எது உள்ளதோ, அவற்றை வெளிப்படுத்தவுமே மோசேயின் சட்டம் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த நலமான போதனையோ, மகிமையுள்ள இறைவனுடைய மேன்மையான நற்செய்திக்கு ஒத்ததாயிருக்கிறது. இந்த நற்செய்தியை இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
பவுலுக்கு கர்த்தரின் கிருபை
எனது கர்த்தர் கிறிஸ்து இயேசுவுக்கு, நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவரே எனக்குப் பெலன் கொடுத்து, என்னை உண்மையுள்ளவனென்று கருதியபடியால், தம் பணியில் என்னை நியமித்தார். நான் முன்னொரு காலத்தில் இறைவனை நிந்தனை செய்கிறவனாகவும், சபையைத் துன்புறுத்துகிறவனாகவும், வன்முறை செய்கிற மனிதனாகவும் இருந்தேன். ஆனால் நான் அறியாமையினாலும், அவிசுவாசத்தினாலும் அப்படிச் செய்தபடியினால், எனக்கு இரக்கம் காட்டப்பட்டது. நமது கர்த்தரின் கிருபை என்மேல் நிறைவாக ஊற்றப்பட்டது. அத்துடன் கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசமும், அன்பும்கூட கொடுக்கப்பட்டது.
இதோ, இது ஒரு நம்பத்தகுந்த வார்த்தை, எல்லோரும் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாகும்: பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அவர்களில் மிக மோசமானவன் நானே. பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது. அழியாமையுடையவரும், பார்வைக்கு காணப்படாதவரும், நித்திய அரசருமாய் இருக்கிற, ஒரே ஒருவரான இறைவனுக்கே என்றென்றும் கனமும், மகிமையும் கொடுக்கப்படுவதாக. ஆமென்.
புதுப்பிக்கப்பட்ட தீமோத்தேயுவின் பொறுப்பு
என் மகனாகிய தீமோத்தேயுவே, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே, இந்தக் கட்டளையை நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ இவற்றைக் கைக்கொள்வதனால் நல்ல போராட்டத்தை போராடு. விசுவாசத்தையும் நல்மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு, உறுதியுடன் போராடு. சிலரோ நல்ல மனசாட்சியைப் புறக்கணித்ததால், தங்கள் விசுவாசத்தைப் பாறையில் மோதிய கப்பலைப்போல் ஆக்கினார்கள். அவர்களில் இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்கும்படி, நான் அவர்களை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தேன்.
வழிபாடுபற்றிய அறிவுரை
எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன். அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம். இது நன்மையானதாகவும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமுமாயிருக்கிறது. அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இறைவன் ஒருவரே. இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. மனிதனாக வந்த கிறிஸ்து இயேசுவே அந்த நடுவர். இயேசு எல்லா மனிதர்களையும் மீட்கும் பொருளாகத் தன்னையே ஒப்படைத்தார். இதுவே ஏற்றகாலத்தில் கொடுக்கப்பட்ட சாட்சியம். இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன்.
எனவே எல்லா இடங்களிலும் உள்ள ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாயும், வாக்குவாதம் செய்யாதவர்களாயும், பரிசுத்த கைகளை உயர்த்தி மன்றாட வேண்டும் என்று, நான் விரும்புகிறேன். அவ்வாறு, பெண்கள் அடக்கமாய் உடை உடுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒழுக்கமான, தகுதியுடைய உடைகளையே உடுத்தவேண்டும். தலைமுடி அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலை உயர்ந்த உடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்கேற்றபடி நல்ல செயல்களினால் தங்களை அலங்கரிக்கவேண்டும்.
ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும். ஏனெனில் முதலாவது ஆதாமே உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே, ஏவாள் உருவாக்கப்பட்டாள். ஏமாற்றப்பட்டவன் ஆதாம் அல்ல; பெண்ணே ஏமாற்றப்பட்டு, பாவத்திற்கு இடம் கொடுத்தாள். ஆனால் பெண்கள் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், பிள்ளைப்பெறுவதினாலே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
மேற்பார்வையாளரின் பண்புகள்
யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்? அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும். அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம்.
அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் விசுவாசத்தின் ஆழமான இரகசியத்தை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும். முதலாவது அவர்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; அதற்குப் பின்பு அவர்களுக்கெதிராக குற்றம் ஒன்றும் இல்லையானால், அவர்கள் உதவி ஊழியராகப் பணிசெய்யலாம்.
அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், மதிப்புக்குரிய பெண்களாய் இருக்கவேண்டும். அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாக இருக்காமல், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.
ஒரு திருச்சபையின் உதவி ஊழியன், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாக இருக்கவேண்டும்; அவன் தனது பிள்ளைகளையும், தனது குடும்பத்தையும் நல்லமுறையில் நடத்துகிறவனாகவும் இருக்கவேண்டும். நல்லமுறையில் இந்த பணியைச் செய்கிறவர்கள் பிறரிடமிருந்து உயர் மதிப்பைப் பெறுவார்கள். கிறிஸ்து இயேசுவிலுள்ள தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதியையும் பெற்றுக்கொள்வார்கள்.
பவுலின் அறிவுறுத்தல்களுக்கான காரணங்கள்
நான் விரைவில் உன்னிடம் வருவேன் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இந்த அறிவுறுத்தல்களை உனக்கு எழுதுகிறேன். ஏனெனில் நான் வரத்தாமதித்தாலும், இறைவனின் குடும்பத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன்; இறைவனின் குடும்பமானது ஜீவனுள்ள இறைவனின் திருச்சபையாயிருக்கிறது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது. இறை பக்தியைக்குறித்த இரகசியம் மிகப்பெரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை:
இறைவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார்.
இறைத்தூதர்களால் காணப்பட்டார்.
அவர் யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்.
அவர் உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார்.
அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு, வஞ்சிக்கும் ஆவிகளையும், பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள். இப்படியான போதனைகள், வேஷதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டும், சுரணையற்றுப் போவார்கள். அவர்களோ திருமணம் செய்யவேண்டாம் எனவும், குறிப்பிட்ட சில உணவு வகைகளைச் சாப்பிடவேண்டாம் எனவும் கட்டளையிடுகிறார்கள்; ஆனால் விசுவாசிக்கிறவர்களும், சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களும் நன்றி செலுத்துதலோடு அனுபவிக்கும்படியே, இறைவன் அவற்றை உண்டாக்கியிருக்கிறார். ஏனெனில் இறைவன் படைத்ததெல்லாம் நல்லதே, அவற்றை நன்றி செலுத்துதலோடு நாம் ஏற்றுக்கொண்டால், ஒன்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல. ஏனெனில், இவை இறைவனுடைய வார்த்தையினாலும், நமது மன்றாட்டினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றன.
இக்காரியங்களைச் சகோதரருக்கு எடுத்துக் கூறினால், நீ கைக்கொண்ட விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நல்ல போதனைகளிலும் வளர்ச்சிப்பெற்ற கிறிஸ்து இயேசுவின் ஒரு நல்ல ஊழியனாயிருப்பாய். பக்தியில்லாதவர்களின் கற்பனைக் கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தப்படாமல்; இறை பக்தியுள்ளவனாய் இருக்க உன்னைப் பயிற்சி செய். உடற்பயிற்சி ஓரளவு பயனுள்ளதே. ஆனால் இறை பக்தியாயிருப்பது எல்லாவற்றிற்கும் மிகப் பயனுள்ளது. அந்த பக்தி தற்போதைய வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் உதவும் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பத் தகுந்ததாயிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கு இரட்சகரான ஜீவனுள்ள இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம். இதற்காகத்தான் நாம் கடுமையாக பாடுபட்டு முயற்சிக்கிறோம்.
இந்தக் காரியங்களை நீ போதித்துக் கட்டளையிடு. நீ வாலிபனாய் இருப்பதால், உன்னை யாரும் தாழ்வாக எண்ண இடங்கொடாதே. அதனால் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. நான் வரும்வரைக்கும் நீ திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் உன் கவனத்தை ஈடுபடுத்து. சபைத்தலைவர்களின் குழு உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே.
இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. அப்போது எல்லோரும் உன் முன்னேற்றத்தைத் தெளிவாய் காண்பார்கள். உன் வாழ்க்கை முறையைப் பற்றியும், உபதேசத்தைப் பற்றியும் மிகக் கவனமாயிரு. நீ அவைகளில் நிலைத்திரு, நீ அப்படியிருந்தால் உன்னையும் உனக்குச் செவிகொடுப்பவர்களையும் நீ இரட்சித்துக்கொள்வாய்.
புத்திமதிகள்
முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும், பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு. ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது. ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள். ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே. ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள். அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள். எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும். ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும். ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்”5:18 [உபா. 25:4] என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்”5:18 [லூக். 10:7] என்றும், வேதவசனம் சொல்லுகிறதே. ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே. பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும். இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன. அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை முழு மதிப்புக்குரியவர்களாக எண்ணவேண்டும். அப்பொழுதே நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் போதித்தலுக்கும் அவதூறு ஏற்படாது. விசுவாசிகளான எஜமான்களின்கீழ் இருக்கும் அடிமைகளும் தங்கள் எஜமான்கள் சகோதரர்களானபடியால், அவர்களுக்குக் குறைவான மதிப்பைக் கொடுக்கக்கூடாது. மாறாக தங்கள் பணியினால் இலாபம் பெறுபவர்கள், விசுவாசிகளும் தங்களுக்கு அன்பானவர்களுமாய் இருப்பதனால், அவர்கள் இன்னும் சிறப்பாய் பணிசெய்ய வேண்டும்.
நீ அவர்களுக்கு போதித்து, வற்புறுத்திக் கூறவேண்டிய காரியங்கள் இவையே.
கள்ளப் போதகர்களும் பண ஆசையும்
யாராவது தவறான கோட்பாடுகளை போதிக்கிறவனாகவும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும், இறை பக்திக்கு உகந்த போதித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால், அவன் ஆணவம் உள்ளவனும், ஒன்றும் புரியாதவனாய் இருக்கிறான். அவன் எரிச்சல், சண்டை, அவதூறான பேச்சுகள், தீமையான சந்தேகங்கள் ஆகியவற்றை உண்டாக்கும் வார்த்தைகளைக் கொண்ட சண்டை சச்சரவுகளிலும், எதிர்வாதம் செய்வதிலும் மிதமிஞ்சிய விருப்பம் கொண்டவன். அத்துடன், சீர்கெட்ட மனங்கொண்ட மனிதருக்கிடையில் உண்டாகும் முரண்பாடான பேச்சுகளிலும் அவனுக்கு விருப்பமுண்டு. இம்மனிதரோ சத்தியத்தை இழந்துபோனவர்களாய், இறை பக்தியை பணம் சம்பாதிக்கும் இலாபத்திற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள்.
ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம். ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம். செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள்.
தீமோத்தேயுவுக்குப் பவுலின் கட்டளை
ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கிற இறைவனுக்கு முன்பாகவும், பொந்தியு பிலாத்துவின் முன்னால் தனது சாட்சியில் நல்ல அறிக்கை செய்த கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும் நான் உனக்குப் பொறுப்புக் கொடுக்கிறேன். நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் தோன்றுமளவும், எவ்வித மாசும் மறுவுமின்றி இந்தக் கட்டளைகளைக் கைக்கொள். இறைவனே தமக்குரிய காலத்தில் கிறிஸ்துவை தோன்றப்பண்ணுவார். இறைவனே துதிக்கப்படத்தக்க ஒரே ஆளுநரும், அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர் ஆனவர். இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு. இவ்விதமாகவே, அவர்கள் வருங்காலத்திற்கான உறுதியான அஸ்திபாரமாக தங்களுக்குத் திரவியத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். இதனால், அவர்கள் உண்மையான வாழ்வை அடைய முடியும்.
தீமோத்தேயுவே, இறைவன் உன்னிடத்தில் ஒப்படைத்தவற்றைக் கவனமாகக் காத்துக்கொள். பக்தியில்லாத பேச்சுக்களையும், பொய்யாகவே அறிவு எனக்கூறும் முரண்பாடான நோக்கங்களையும் விட்டு விலகியிரு. சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள்.
கிருபை உன்னோடு இருப்பதாக.