- Biblica® Open Indian Tamil Contemporary Version 1 தெசலோனிக்கேயர் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதல் கடிதம் 1 தெசலோனிக்கேயர் 1 தெச. பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதல் கடிதம் பவுல், சில்வான், தீமோத்தேயு, ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. தெசலோனிக்கேயருக்கு நன்றி செலுத்துதல் நாங்கள் எங்களுடைய மன்றாட்டுகளில் உங்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துகிறோம். நமது இறைவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு முன்பாக, உங்கள் விசுவாசத்தினால் வரும் செயலையும், அன்பினால் உண்டாகிய வேலையையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உங்களுக்குண்டான சகிப்புத்தன்மையையும் நாங்கள் நினைவுகூருகிறோம். இறைவனால் அன்பு செலுத்தப்படுகிற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வெறும் வார்த்தைகளோடு வரவில்லை. அந்த நற்செய்தி வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக நாங்களும் உங்களிடையே எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ஏற்பட்ட கடுந்துன்பத்தையும் பொருட்படுத்தாமல், நற்செய்தியை பரிசுத்த ஆவியானவர் கொடுத்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கிறவர்களானீர்கள். இவ்விதமாய் நீங்கள் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள எல்லா விசுவாசிகளுக்கும் ஒரு முன்மாதிரிகளானீர்கள். உங்களிடமிருந்தே கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்திருக்கிறது. இறைவனில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமும் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, அதைக்குறித்து நாங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை. ஏனெனில் அவ்விடத்திலுள்ள மக்களே நீங்கள் எப்படி வரவேற்றீர்கள் என்பதைப்பற்றி அவர்களே அறிவிக்கிறார்கள். நீங்கள் எவ்விதமாய் உண்மையான உயிருள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, இறைவன் அல்லாதவைகளைக் கைவிட்டு இறைவனிடம் திரும்பினீர்கள் என்பது பற்றியும் அறிவிக்கிறார்கள். அத்துடன், இறைவன் இறந்தோரிலிருந்து எழுப்பிய தமது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இந்த இயேசுவே வரப்போகும் கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர். தெசலோனிக்கேயாவில் பவுலின் ஊழியம் பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாயிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களிடம் வரும் முன்பதாக, பிலிப்பி பட்டணத்திலே துன்புறுத்தப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டோம் என்பதும் உங்களுக்கும் தெரியும். பலத்த எதிர்ப்பு இருந்தபோதுங்கூட, நமது இறைவனுடைய உதவியினாலே அவருடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நாங்கள் துணிவு பெற்றோம். ஏனெனில், எங்களுடைய போதனை பிழைகளிலிருந்தோ, கெட்ட நோக்கங்களிலிருந்தோ உருவாகவில்லை அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவோ செய்யப்படவில்லை. மாறாக, நற்செய்தி ஒப்படைக்கப்படுவதற்கு, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகிறோம். நாங்கள் மனிதரை அல்ல, எங்கள் உள்ளங்களை சோதித்து அறிகிற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம். நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாக புகழ்ந்து பேசவோ, மறைக்கப்பட்ட முகமூடி போட்டு பேராசையுடன் நடந்துகொள்ளவோ இல்லை. இதற்கு இறைவனே எங்களுக்கு சாட்சி. உங்களிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ, நாங்கள் மனிதனால் வரும் புகழ்ச்சியைத் தேடவுமில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர் என்ற முறையில், உங்களுக்கு ஒரு சுமையாய் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம். நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள். பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம். நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார். ஒரு தந்தை தனது பிள்ளைகளை நடத்துவதுபோலவே, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களை உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தினோம். தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கிற இறைவனுக்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள் என்று உங்களை ஊக்குவித்தோம். நாங்கள் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், நீங்கள் எங்களிடமிருந்து கேட்ட இறைவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாய் ஏற்றுக்கொள்ளாமல், உண்மையாய் உள்ளபடியே அதை இறைவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். விசுவாசிக்கிறவர்களாகிய உங்களுக்குள்ளே அந்த வார்த்தை செயலாற்றுகிறது. பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யூதேயாவிலுள்ள இறைவனுடைய திருச்சபைகளை நீங்கள் பின்பற்றினீர்கள்: அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டதுபோலவே, நீங்களும் உங்கள் நாட்டு மக்களால் துன்பப்பட்டீர்கள். இந்த யூதரே கர்த்தராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் வெளியே துரத்தினார்கள். அவர்கள் இறைவனின் விருப்பத்திற்கு விரோதமாய் நடந்து, அநேகருக்கு பகைவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில், யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி, நாங்கள் அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதைத் தடைபண்ணுகிறார்கள். இவ்விதமாக, அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவத்தின் அளவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக, இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் வரப்போகிறது. தெசலோனிக்கேயரைக் காண பவுலின் வாஞ்சை ஆனாலும் பிரியமானவர்களே, நாங்கள் சிறிதுகாலம் உங்களைவிட்டுப் பிரிக்கப்பட்டிருந்தோம். எங்கள் உடல்தான் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததே தவிர, எங்கள் உள்ளம் உங்களைவிட்டுப் பிரிந்திருக்கவில்லை. பிரிந்திருந்தக் காலத்தில் உங்களை நேரில் காண மிகுந்த ஆவலுடையவர்களாய் இருந்தபடியால், நாங்கள் உங்களைப் பார்ப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் எடுத்தோம். உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான். நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது, எங்களுடைய எதிர்பார்ப்பாயும் மகிழ்ச்சியாயும், எங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும் கிரீடமாயும் அவருக்கு முன்னிலையில் இருக்கப்போவது யார்? அது நீங்கள் அல்லவா? உண்மையாக நீங்களே எங்கள் மகிமையும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறீர்கள். ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம். உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களால், உங்களில் ஒருவனும் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தோம். இப்படியான துன்பங்களுக்காகவே நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருந்தபோது, நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை, உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னோம். அது அவ்விதமே நிகழ்ந்ததும் உங்களுக்குத் தெரியும். ஆகையால் உங்களைக்குறித்து அறியாமல், என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாததினாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ளும்படி, தீமோத்தேயுவை அனுப்பினேன். சோதனைக்காரன் ஏதாவது ஒருவிதத்தில் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய பிரயாசம் பயனற்றுப் போய்விட்டதோ என்றும் நான் பயந்தேன். தீமோத்தேயுவின் அறிக்கை ஆனால் தீமோத்தேயு இப்பொழுதுதான் உங்களிடமிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் உங்களுடைய விசுவாசத்தைக்குறித்தும், அன்பைக்குறித்தும் நல்ல செய்தியே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக்குறித்த ஞாபகங்கள் உங்களுக்கு இனியவைகளாக இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருந்ததுபோல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கிறீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான். ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய கஷ்டம், துன்புறுத்துதல் மத்தியிலும், உங்களுடைய விசுவாசத்தைக் கேட்டு, நாங்கள் உற்சாகமடைந்தோம். நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், எங்களுக்கு உயிர்மூச்சே வந்தது. உங்கள் நிமித்தம் நமது இறைவனுடைய முன்னிலையில் எங்களுக்கு உண்டாயிருக்கிற எல்லா மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்ப்படுத்துவதற்காக, இரவும் பகலும் வெகு ஊக்கமாய் மன்றாடுகிறோம். இப்பொழுது நம்முடைய பிதாவாகிய இறைவன் தாமே, கர்த்தராகிய இயேசுவுடன் நாங்கள் உங்களிடத்தில் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பாராக. எங்கள் அன்பு உங்களில் வளர்ந்து பெருகுவதுபோலவே, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பு, மற்றெல்லோரிடத்திலும் நிறைந்து பெருகும்படி கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக. இறைவனைப் பிரியப்படுத்தும் வாழ்வு கடைசியாக பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையாய் நீங்கள் அப்படித்தான் நடக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் உங்களிடம் கர்த்தராகிய இயேசுவில் கேட்கிறதும் வேண்டிக்கொள்கிறதும் என்னவென்றால், இன்னும் அதிகதிகமாய் தேறும்படிக்கு அவ்வாறே நடவுங்கள். கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தின்படியே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும். நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும். இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்; இந்தக் காரியத்தில், ஒருவன் தன் சகோதரனுக்கு பிழைசெய்யவோ, அவனை ஏமாற்றி பயன்பெறவோ கூடாது. நாங்கள் ஏற்கெனவே உங்களுக்கு சொல்லி எச்சரித்ததுபோல, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் மனிதர்களைக் கர்த்தர் தண்டிப்பார். ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் நடப்பதற்கு அழைக்கவில்லை. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அல்ல, உங்களுக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கிற இறைவனையே புறக்கணிக்கிறான். சகோதர அன்பைக்குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி, இறைவனே உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே. உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும். அப்பொழுது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் புறம்பே இருக்கிறவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியதில்லை. கர்த்தரின் வருகை பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை. இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம். கர்த்தருடைய சொந்த வார்த்தையின்படியே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது, கர்த்தருடைய வருகைவரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாமும், நிச்சயமாகவே மரண நித்திரை அடைந்தவர்களுக்கு முந்தி எடுத்துக்கொள்ளப்படமாட்டோம். ஏனெனில் கர்த்தர்தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, சத்தமான கட்டளை முழங்க, இறைவனுடைய எக்காள அழைப்புடன் வருவார். அப்பொழுது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். கர்த்தருடைய நாள் இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே. “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது. நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல. ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக. ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள். ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம். ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார். நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார். ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள். இறுதி அறிவுரைகள் பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள். அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள். பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள். ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது மன்றாடுங்கள். எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம். ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள். சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள். சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக. உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள். எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.