- Biblica® Open Indian Tamil Contemporary Version 1 சாமுயேல் சாமுயேலின் முதலாம் புத்தகம் 1 சாமுயேல் 1 சாமு. சாமுயேலின் முதலாம் புத்தகம் சாமுயேலின் பிறப்பு எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தியின் பெயர் அன்னாள்; மற்றவளின் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை. எல்க்கானா ஒவ்வொரு வருடமும் சேனைகளின் யெகோவாவுக்குப் பலி செலுத்தவும், அவரை வழிபடவும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருவான். அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் யெகோவாவின் ஆசாரியர்களாக இருந்தார்கள். எல்க்கானா பலிசெலுத்தும் நாள் வரும்போதெல்லாம் இறைச்சியின் பங்குகளை மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும், மகள்களுக்கும் கொடுப்பான். ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான்1:5 பங்கைக் கொடுத்தான் அல்லது அவள்மீது அன்பு கொண்டிருந்தும் ஒரே பங்கைத்தான் அவளுக்கு கொடுத்தான்.. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுக்காதபடியால், பெனின்னாள் அவள் மனம் வருந்தும்படி அவளுக்குச் சினமூட்டிக் கொண்டிருந்தாள். இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான். ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண்1:16 கெட்ட நடத்தையுள்ள பெண் என்பது எபிரெயத்தில் பேலியாளின் மகள் தீயவள் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான். அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை. அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து யெகோவாவுக்கு முன்பாக வழிபட்டபின், அவ்விடத்தைவிட்டு ராமாவிலுள்ள தங்கள் வீட்டுக்குப் போனார்கள். எல்க்கானா, தன் மனைவி அன்னாளை நேசித்து, அவளோடு இணைந்தான். ஆண்டவர் அன்னாளின் வேண்டுதலை நினைத்தார். சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவாவிடமிருந்து அவனைக் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு, சாமுயேல் என்று பெயரிட்டாள். அன்னாள் சாமுயேலை அர்ப்பணித்தல் எல்க்கானா யெகோவாவுக்கு வருடாந்த பலியைச் செலுத்தவும், நேர்த்திக்கடனைச் செலுத்தவும் போனான். அப்பொழுது அன்னாள் அவர்களுடன் போகவில்லை. அவள் தன் கணவன் எல்க்கானாவிடம், “பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின் அவனைக் கொண்டுபோய் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் எப்பொழுதும் அங்கேயே இருப்பான்” என்றாள். அதற்கு எல்க்கானா, “உன் விருப்பப்படியே உனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி செய், பிள்ளை பால்குடிப்பதை மறக்கும்வரை இங்கேயே இரு. யெகோவா தன் வார்த்தையை நிறைவேற்றுவாராக” என்றான். எனவே அவள் மகன் பால்குடிப்பதை மறக்குமட்டும் அந்தப் பெண் வீட்டிலேயே வைத்து, பாலூட்டினாள். அவன் பால்குடிப்பதை மறந்தபின் அவன், குழந்தையாய் இருந்தும் அவனைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, சீலோவிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு அன்னாள் போனாள். அவனுடன் மூன்று வயது காளையையும், ஒரு எப்பா அளவு மாவையும், ஒரு குடுவை திராட்சை இரசத்தையும் தன்னுடன் கொண்டுபோனாள். அங்கே அவர்கள் காளையைப் பலியிட்டபின், பிள்ளையை ஏலியிடம் கொண்டுபோனார்கள். அப்பொழுது அன்னாள் ஏலியிடம், “ஐயா நீர் வாழ்வது நிச்சயம்போல், அன்றொருநாள் உமக்கு அருகே நின்று யெகோவாவிடம் வேண்டுதல் செய்த பெண் நான்தான் என்பதும் நிச்சயம். இந்தப் பிள்ளைக்காகவே நான் மன்றாடினேன். யெகோவாவும் நான் அவரிடம் கேட்டதை எனக்குக் கொடுத்தார். ஆகவே அவனை இப்பொழுது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவன் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பான்” என்றாள். அவர்கள் அங்கே யெகோவாவை வழிபட்டார்கள். அன்னாளின் துதிப்பாட்டு அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்: “யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது; யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது. என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது; ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன். “யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை; எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை, உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை. “மேட்டிமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். உனது வாய் அகங்காரமானதைப் பேசாதிருக்கட்டும்; யெகோவாவே எல்லாம் அறிந்த இறைவன்; அவர் செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். “வீரரின் வில்லுகள் முறிந்தன; ஆனால் இடறி விழுந்தவர்கள் பலத்தைத் தரித்திருக்கிறார்கள். நிறைவடைந்தோர் உணவுக்காகக் கூலி வேலைசெய்கிறார்கள்; பசியோடிருந்தவர்களோ இனி பசியோடிருக்கமாட்டார்கள். மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; ஆனால் அநேக மகன்களைப் பெற்றவளோ நலிந்துபோனாள். “சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே; தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார், வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார், ஒரு மகிமையான அரியணையை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார். “பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை; அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார். தமது பரிசுத்தரின் பாதங்களைப் பாதுகாப்பார்; கொடியவர் இருளில் மெளனமாவார்கள். “பெலத்தினால் ஒருவனும் வெற்றிகொள்வதில்லை; யெகோவாவை எதிர்ப்பவர்கள் நொறுக்கப்படுவார்கள். அவர் வானத்திலிருந்து அவர்களுக்கெதிராய் முழங்குவார்; யெகோவா பூமியின் கடையாந்தரங்கள்வரை நியாயந்தீர்ப்பார். “தனது அரசனுக்கு வல்லமையைக் கொடுப்பார்; தாம் அபிஷேகித்தவரின் தலையை உயர்த்துவார்.” அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் பொல்லாத மகன்கள் ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள்.2:12 பொல்லாதவர்களாயிருந்தார்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மக்களில் எவராவது பலி செலுத்தும்போது, இறைச்சி வேகும் வேளையில் ஆசாரியனின் பணியாளன் ஒருவன், மூன்று கூருள்ள ஒரு கரண்டியைக் கொண்டுவருவது அவர்களின் நடைமுறையாயிருந்தது. பணியாளன் இறைச்சி வேகும் சட்டியிலோ, கிண்ணத்திலோ, அண்டாவிலோ, பானையிலோ அந்த கரண்டியை உள்ளேவிட்டுக் குத்துவான். அப்பொழுது ஆசாரியன் அந்த கரண்டியால் குத்தி எடுப்பது எதுவோ அதைத் தனக்கென எடுத்துக்கொள்வான். இவ்விதமாக சீலோவுக்கு வருகிற இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் இப்படியே நடத்தினார்கள். மேலும், பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன்னரே ஆசாரியனின் பணியாள் பலி செலுத்துபவனிடம் வந்து, “ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி கொஞ்சம் இறைச்சி கொடு; அவர் பச்சை இறைச்சியே அல்லாமல், வேகவைத்த இறைச்சியை உன்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்பான். அப்பொழுது பலிசெலுத்துபவன் பணியாளனிடம், “கொழுப்பு முதலில் எரிக்கப்படட்டும். அதன்பின் நீ விரும்பிய எதையும் எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு பணியாளன், “இல்லை, இப்பொழுதே கொடு; கொடுக்காவிட்டால் நான் பலவந்தமாய் அதை எடுத்துக்கொள்வேன்” என்பான். இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள். சிறுவனாகிய சாமுயேல் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தான். அவனுடைய தாய் தங்கள் வருடாந்த பலியைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் தன் கணவனுடன் அங்கே வரும்போது, சாமுயேலுக்கு ஒரு சின்ன அங்கியைத் தைத்துக் கொண்டுவருவாள். அவ்வேளை ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து அவர்களிடம், “இப்பெண் யெகோவாவிடம் மன்றாடிப்பெற்று, யெகோவாவுக்கே திரும்பக் கொடுத்த தனது பிள்ளைக்குப் பதிலாக, அவர் இவள்மூலம் உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பராக” என்பான். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள். அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான். இப்பொழுது அதிக வயதுசென்று கிழவனாயிருந்த ஏலி, தன் பிள்ளைகள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்துவந்த தீமைகளையும், சபைக்கூடார வாசலில் பணிபுரியும் பெண்களுடன் தகாத உறவுகொள்வதையும் கேள்விப்பட்டான். எனவே அவன் தன் பிள்ளைகளிடம், “நீங்கள் இப்படிப்பட்ட செயல்களை ஏன் செய்கிறீர்கள்? நான் எல்லா மக்களிடமிருந்தும் உங்கள் கொடுமையான செயல்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். என் பிள்ளைகளே, வேண்டாம். யெகோவாவின் பிள்ளைகளின் மத்தியில் பரவுவதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், இறைவன் அவர்களுக்கு நடுவராய் இருக்கக்கூடும். ஒரு மனிதன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காகப் பரிந்து பேசுவது யார்?” என்றான். ஏலியின் மகன்களோ தங்கள் தகப்பனின் கண்டனத்திற்குச் செவிகொடுக்கவில்லை. அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பது யெகோவாவின் சித்தமாயிருந்தது. ஆனால் சிறுவன் சாமுயேலோ பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்தான். ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா? இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன். எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’ “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள். உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான். அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான். என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான். “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான். அப்பொழுது உன் வழித்தோன்றலில் மீதியாயிருப்பவன் ஒவ்வொருவனும் அவன் முன்வந்து பணிந்து ஒரு வெள்ளிக் காசுக்காகவும், ஒரு துண்டு அப்பத்துக்காகவும் கெஞ்சி, “நான் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும்படி ஆசாரியனுக்குரிய ஏதாவது ஒரு பணியை எனக்குக் கொடுக்கவேண்டும்” என்று கேட்பான்’ என்றான்.” யெகோவா சாமுயேலை அழைத்தல் சிறுவனாகிய சாமுயேல் ஏலியின் மேற்பார்வையின்கீழ் யெகோவாவுக்குப் பணிசெய்தான். அந்நாட்களில் யெகோவாவின் வார்த்தை அரிதாயிருந்தது; தரிசனங்களும் அரிதாகவேயிருந்தன. பார்க்க முடியாதபடி கண்கள் மங்கிய நிலையிலிருந்த ஏலி, ஒரு இரவில் தான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுத்திருந்தான். இறைவனுடைய விளக்கு இன்னும் அணையாதிருக்கும்போதே, சாமுயேல் யெகோவாவினுடைய பெட்டி இருந்த இடமான இறைவனின் ஆலயத்தில் படுத்திருந்தான். அவ்வேளையில் யெகோவா சாமுயேலைக் கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “இதோ, நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீரே. இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ திரும்பிப்போய் படுத்துக்கொள்” என்றான். எனவே அவன் போய் படுத்துக்கொண்டான். யெகோவா மறுபடியும், “சாமுயேல்” எனக் கூப்பிட்டார். சாமுயேல் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீரே? இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப் போய்ப் படுத்துக்கொள்” என்றான். சாமுயேல் இன்னும் யெகோவாவை அறியவில்லை. இதுவரை யெகோவாவின் வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. யெகோவா மூன்றாம் முறையும் சாமுயேலைக் கூப்பிட்டார்; அவன் எழுந்து மறுபடியும் ஏலியிடம் வந்து அவனிடம், “என்னைக் கூப்பிட்டீரே; இதோ இருக்கிறேன்” என்றான். அப்பொழுது யெகோவாவே சிறுவனைக் கூப்பிடுகிறார் என ஏலி அறிந்துகொண்டான். எனவே ஏலி சாமுயேலிடம், “நீ போய் படுத்துக்கொள். அவர் உன்னைக் கூப்பிட்டால், ‘யெகோவாவே பேசும், உமது அடியேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். அப்படியே சாமுயேல் போய் தன் இடத்தில் படுத்துக்கொண்டான். அப்பொழுது யெகோவா வந்து அங்கு நின்று, முன் கூப்பிட்டதுபோல், “சாமுயேல், சாமுயேல்” என்று கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “பேசும்; அடியேன் கேட்கிறேன்” என்றான். யெகோவா சாமுயேலிடம்: “நான் இஸ்ரயேலில் ஒரு செயலைச் செய்யப்போகிறேன். அதைக் கேட்கும் ஒவ்வொருவருடைய செவிகளிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். அக்காலத்தில் ஏலியின் குடும்பத்திற்கு எதிராக நான் சொன்னவைகள் எல்லாவற்றையும் தொடக்கமுதல் இறுதிவரை அவனுக்கு எதிராகச் செய்து முடிப்பேன். அவனறிந்த அவன் மகன்களின் பாவத்தின் காரணமாகவே, அவனுடைய குடும்பத்தை எப்பொழுதும் நான் நியாயந்தீர்பேன் என்று நான் அவனுக்குச் சொல்லியிருந்தும், அவனுடைய மகன்கள் தங்களை இறைவன் வெறுக்கத்தக்கவர்களாக்கிக் கொண்டபோதும், அவன் அவர்களை தடுக்கத் தவறிவிட்டான். ஆகையால் ஏலி குடும்பத்தாரின் குற்றம், ‘பலியினாலோ அல்லது காணிக்கையினாலோ ஒருபோதும் நிவிர்த்தியாக்கப்பட முடியாது’ என்று ஏலியின் குடும்பத்துக்கு ஆணையிட்டிருக்கிறேன்” என்றார். அதன்பின் சாமுயேல் காலைவரை படுத்திருந்து விடிந்தபின் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான். ஆனாலும் சாமுயேல் தான் கண்ட தரிசனத்தை ஏலிக்குச் சொல்லப் பயந்தான். ஆனால் ஏலி அவனைக் கூப்பிட்டு, “சாமுயேலே, என் மகனே” என்றான். அதற்கு சாமுயேல், “இங்கே இருக்கிறேன்” என்றான். அப்பொழுது ஏலி சாமுயேலிடம், “யெகோவா உனக்குச் சொன்னது என்ன? எனக்கு அதை நீ மறைக்கவேண்டாம். அவர் உனக்குச் சொன்னவற்றில் எதையாகிலும் எனக்கு மறைத்தாயானால் இறைவனே உன்னைக் கடுமையாகத் தண்டிப்பாராக” என்றான். எனவே சாமுயேல் எதையும் அவனுக்கு மறைக்காமல் எல்லாவற்றையும் ஏலிக்குச் சொன்னான். அதற்கு ஏலி, “அவரே யெகோவா; அவர் தனக்கு நல்லதெனத் தோன்றுவதைச் செய்யட்டும்” என்றான். சாமுயேல் வளரும்போது யெகோவா அவனோடுகூட இருந்தார். யெகோவா சாமுயேல் சொன்ன வார்த்தைகளில் ஒன்றையாகிலும் நிறைவேற்றாமல் விடவில்லை. சாமுயேல் யெகோவாவினுடைய இறைவாக்கினன் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதை, தாணிலிருந்து பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரயேலரும் அறிந்துகொண்டார்கள். தொடர்ந்து யெகோவா சீலோவிலே தோன்றி அவர் தமது வார்த்தைகளின் மூலம் சாமுயேலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். சாமுயேல் இஸ்ரயேலருக்கு அவற்றை அறிவித்தான். பெலிஸ்தியர் பெட்டியைக் கைப்பற்றுதல் அந்நாட்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள். இஸ்ரயேலர் எபெனேசர் என்னும் இடத்திலும், பெலிஸ்தியர் ஆப்பெக்கிலும் முகாமிட்டார்கள். பெலிஸ்தியர் இஸ்ரயேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரயேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரயேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள். இராணுவவீரர் முகாம்களுக்குத் திரும்பியபோது இஸ்ரயேலின் முதியவர்கள், “ஏன் இன்று யெகோவா பெலிஸ்தியருக்குமுன் எங்களைத் தோல்வியடைச் செய்தார்? யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து கொண்டுவருவோம். அது எங்களுடன் இருந்தால் பகைவரிடமிருந்து அது நம்மைத் தப்புவிக்கும்” என்றார்கள். எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேருபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள். யெகோவாவினுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமுக்குள் வந்தவுடன் நிலம் அதிரத்தக்கதாக இஸ்ரயேல் மக்கள் பெரிய சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். இந்தச் சத்தத்தைக் கேட்ட பெலிஸ்தியர், “எபிரெயருடைய முகாமுக்குள் கேட்கும் இந்தக் கூக்குரலுக்குக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். யெகோவாவினுடைய பெட்டி முகாமுக்குள் கொண்டுவரப்பட்டதை அறிந்தபோது, பெலிஸ்தியர் பயமடைந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “கடவுள் முகாமுக்குள் வந்துவிட்டார். ஐயோ நமக்கு ஆபத்து! இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ நமக்கு கேடு! இந்த வல்லமையுள்ள கடவுளின் கையிலிருந்து நம்மை விடுவிப்பவர் யார்? இந்த கடவுள் எகிப்தியரை பாலைவனத்தில் எல்லாவித வாதைகளினாலும் தாக்கினார் அல்லவா! பெலிஸ்தியரே, திடன்கொண்டு ஆண்மையுடன் முன்னேறுங்கள். எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாவீர்கள். ஆண்மையுடன் போரிடுங்கள்” என்றார்கள். அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள். இறைவனின் பெட்டி பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்தார்கள். ஏலியின் மரணம் அன்றையதினம் பென்யமீன் கோத்திரத்தானொருவன் கிழிந்த உடையுடனும், தலையில் புழுதியுடனும் யுத்தகளத்திலிருந்து சீலோவுக்கு ஓடிப்போனான். அவன் ஓடிவந்து சேரும்போது, ஏலி பாதையருகே தன் நாற்காலியில் உட்கார்ந்து வழியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். ஏனெனில் இறைவனின் பெட்டிக்காக அவன் உள்ளம் பயமடைந்திருந்தது. அவ்வேளை நகரத்துக்குள் வந்தவன் நடந்ததைச் சொன்னபோது பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் புலம்பி அழுதார்கள். அவர்கள் கூக்குரலிட்டதைக் கேட்ட ஏலி அவர்களிடம், “இந்த அமளிக்குக் காரணமென்ன?” என்று கேட்டான். அப்பொழுது அந்த மனிதன் ஏலியிடம் விரைந்து வந்தான். ஏலி அப்பொழுது தொண்ணூற்றெட்டு வயதுடையவனாயிருந்தான். அவன் கண்பார்வை குன்றி பார்வை குறைந்தவனாயிருந்தான். அந்த மனிதன் ஏலியிடம், “நான் இப்பொழுதுதான் யுத்தகளத்திலிருந்து வந்திருக்கிறேன். இன்றுதான் அதிலிருந்து தப்பி ஓடிவந்தேன்” என்றான். அதற்கு ஏலி அவனிடம், “அங்கு என்ன நடந்தது மகனே?” என்று கேட்டான். அதற்குச் செய்தி கொண்டுவந்தவன் ஏலியிடம், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக தப்பியோடிவிட்டார்கள். படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. உம்முடைய மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்துவிட்டார்கள். இறைவனின் பெட்டியையும் கைப்பற்றிவிட்டார்கள்” என்றான். இறைவனின் பெட்டிக்கு நடந்ததைப்பற்றி அவன் சொன்னவுடனே, ஏலி தன் வாசலருகேயிருந்த நாற்காலியிலிருந்து பிடரி அடிபட விழுந்தான். அவன் முதியவனும், உடல் பெருத்தவனுமாயிருந்ததால் கழுத்து முறிந்து இறந்தான். அவன் நாற்பது வருடங்கள் இஸ்ரயேலருக்கு நீதிபதியாக இருந்தான். பினெகாசின் மனைவியான, அவன் மருமகள் கர்ப்பவதியாயிருந்தாள். அவளுக்குப் பேறுகாலமாயிருந்தது. இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்ட செய்தியையும், தன் மாமனும், கணவனும் இறந்த செய்தியையும் கேள்விப்பட்டவுடனே, பிரசவ வேதனையுண்டாகி அவள் பிள்ளை பெற்றாள். ஆனால் அவளுடைய வேதனை மரணத்துக்கேதுவாக இருந்தது. அவள் மரணத் தருவாயில் இருந்தபோது அவளருகில் இருந்த பெண்கள் அவளிடம், “சோர்ந்து போகாதே. நீ ஒரு மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றார்கள். அவளோ அதற்குப் பதில் சொல்லவுமில்லை, கவனிக்கவுமில்லை. இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்டுத் தன் மாமனும், கணவனும் இறந்துபோனதால், “இஸ்ரயேலரைவிட்டு மகிமை நீங்கிற்று” என்று சொல்லி, அவனுக்கு, “இக்கபோத்” என்று பெயரிட்டாள். அவள், “இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்டதால் இஸ்ரயேலின் மகிமை நீங்கிற்று” என்றாள். அஸ்தோத்திலும் எக்ரோனிலும் பெட்டி இறைவனின் பெட்டியைப் பெலிஸ்தியர் கைப்பற்றியபின் அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள். அவர்கள் இறைவனின் பெட்டியை தாகோனின் கோவிலுக்கு எடுத்துச்சென்று தாகோனுக்கு அருகில் வைத்தார்கள். அஸ்தோத்திலுள்ள மக்கள் மறுநாள் அதிகாலை எழுந்தபோது, இதோ யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். எனவே அவர்கள் தாகோனை மறுபடியும் அதன் இடத்தில் தூக்கிவைத்தார்கள். மறுநாளும் அவர்கள் அதிகாலையில் எழுந்தபோது தாகோன் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். அதன் தலையும், கைகளும் உடைந்து வாயிற்படியில் கிடந்தன. தாகோனின் உடல் மட்டும் மீதியாயிருந்தது. அதனால்தான் இன்றுவரை தாகோனின் பூசாரிகளோ, அல்லது தாகோனின் கோவிலுக்கு வருபவர்களோ அஸ்தோத்திலிருக்கும் தாகோனின் வாசற்படியை மிதிப்பதில்லை. அஸ்தோத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த மக்களின்மேல் யெகோவாவின் கரம் மிகவும் பாரமாயிருந்தது. அவர் அவர்களைக் கட்டிகளினால் வாதித்தார். இவ்வாறு நடப்பதை அஸ்தோத்தின் மக்கள் கண்டபோது அவர்கள், “இஸ்ரயேலின் இறைவனின் பெட்டி எங்களுடன் இங்கே இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும், நம்முடைய தெய்வமாகிய தாகோனின்மேலும் பாரமாய் இருக்கிறது” என்றார்கள். எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை காத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்கள். அப்படியே இஸ்ரயேலரின் இறைவனின் பெட்டி கொண்டுபோகப்பட்டது. ஆனால் அவர்கள் பெட்டியைக் கொண்டுபோன பின்பு, யெகோவாவின் கரம் அப்பட்டணத்திலுள்ளவர்களுக்கு எதிராக வந்ததினால் அங்கு பெரும்பீதி உண்டானது. அவர் அப்பட்டணத்திலுள்ள இளவயதினர் முதல், முதியவர்கள்வரை கட்டியினால் வாதித்தார். இதனால் அவர்கள் இறைவனது பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். இறைவனது பெட்டி எக்ரோனுக்குள் போனபோது எக்ரோன் மக்கள் சத்தமிட்டு, “எங்களையும் எங்கள் மக்களையும் கொல்வதற்காகவே இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை எங்களிடம் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றார்கள். எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்” என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது. பட்டணங்களில் சாகாமலிருந்தவர்கள் கட்டிகளினால் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் கூக்குரல் வானம்வரை எட்டியது. பெட்டி இஸ்ரயேலுக்குத் திரும்புதல் யெகோவாவின் பெட்டி பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது. பெலிஸ்தியர் தங்கள் பூசாரிகளையும் குறிசொல்பவர்களையும் வரவழைத்து, “யெகோவாவின் பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை அது இருந்த இடத்திற்கு எப்படி அனுப்பலாமென்று சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை அனுப்புவதாயின் அதை வெறுமையாய் அனுப்பாமல், அதனோடு குற்றநிவாரண காணிக்கையையும் அவருக்கு அனுப்புங்கள். அப்பொழுது நீங்கள் குணமாவீர்கள், அன்றியும் அவருடைய தண்டனையின் கரம் உங்களைவிட்டு நீங்காதிருந்த காரணத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றார்கள். அதற்குப் பெலிஸ்தியர், “நாங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்கு எதை அனுப்பலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “உங்களுக்கும் உங்கள் தலைவர்களுக்கும் ஒரே வாதை உண்டானதால், பெலிஸ்தியரின் ஆளுநர்களின் எண்ணிக்கைப்படி தங்கத்தினால் கட்டி வடிவத்தில் ஐந்து உருவங்களையும் ஐந்து எலிகளையும் செய்து அவற்றை அனுப்புங்கள். இவ்விதமான கட்டிகளின் மாதிரிகளையும், நாட்டை அழிக்கும் எலிகளின் மாதிரிகளையும் செய்து, இஸ்ரயேலின் தெய்வத்தைக் கனப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிலிருந்தும், உங்கள் தெய்வங்களிருந்தும், உங்கள் நாட்டிலிருந்தும் தமது தண்டனை கரத்தை எடுத்துவிடுவார். எகிப்தியரும், பார்வோனும் செய்ததுபோல் நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்கள். இறைவன் அவர்களை கடுமையாய் நடத்தியபோது, இஸ்ரயேலரை அவர்களுடைய வழியில் போகும்படி அவர்கள் அனுப்பிவிடவில்லையா? “இப்பொழுது நீங்கள் புதிய வண்டி ஒன்றையும், இதுவரை நுகத்தடி பூட்டப்படாத இரண்டு கறவைப்பசுக்களையும் ஆயத்தப்படுத்துங்கள். பசுக்களை அதில் பூட்டுங்கள். அதன் கன்றுகளைப் பிரித்துக் கொண்டுபோய் தொழுவத்தில் விடுங்கள். யெகோவாவின் பெட்டியை எடுத்து, வண்டியின்மேல் வையுங்கள். குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தும் தங்கத்தாலான பொருட்களை ஒரு பெட்டியில் அதன் பக்கத்தில் வைத்து வண்டியைப் போகும்படி விடுங்கள். ஆனால் அதைக் கவனித்துக் கொண்டிருங்கள். அது தன் சொந்த பிரதேசத்திற்கு பெத்ஷிமேஷை நோக்கிப் போனால், அப்பொழுது இந்தப் பேராபத்தை நமக்குச் செய்தவர் யெகோவாவே. அப்படி போகாவிட்டால், அவருடைய கை எங்களை அழிக்கவில்லை. அது தற்செயலாய் சம்பவித்தது என்று அறிந்துகொள்வோம்” என்றார்கள். அப்படியே அவர்கள் செய்தார்கள். இரண்டு கறவைப்பசுக்களை கொண்டுவந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தார்கள். பின்பு யெகோவாவின் பெட்டியை வண்டியில் வைத்துத் தங்கத்தினால் செய்த எலிகளையும், கட்டி உருவங்களின் மாதிரிகளை வைத்த பெட்டியையும் வைத்தார்கள். அப்பொழுது அந்தப் பசுக்கள் வழிநெடுகிலும் கத்திக்கொண்டே பெத்ஷிமேஷை நோக்கி வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பாமல், நேரே சென்றன. பெலிஸ்தியரின் ஆளுநர்களும் பெத்ஷிமேஷின் எல்லைவரை அவைகளின் பின்னே சென்றார்கள். அப்பொழுது பெத்ஷிமேஷின் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்த்து பெட்டியைக் கண்டபோது, அக்காட்சியால் மகிழ்ச்சி அடைந்தார்கள். வண்டி பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவா என்பவனது வயலுக்கு வந்ததும் அங்கே ஒரு பெரிய கற்பாறையருகே நின்றது. அந்த மக்கள் வண்டியின் மரத்தை வெட்டி அதைக்கொண்டு அந்த பசுக்களை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தினார்கள். லேவியர் யெகோவாவின் பெட்டியையும் அதனோடு வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்களுள்ள பெட்டியையும் எடுத்து அந்தப் பெரிய பாறைமேல் வைத்தார்கள். பெத்ஷிமேஷின் மக்களும் அன்றையதினம் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தினார்கள். இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களும் அன்றைய தினமே எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள். அஸ்தோத், காசா, அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய ஒவ்வொரு பட்டணத்திற்கும் ஒவ்வொன்றாக பெலிஸ்தியரால் யெகோவாவுக்கு குற்றநிவாரணக் காணிக்கையாக தங்கத்தாலான கட்டிகள் அனுப்பப்பட்டன. தங்கத்தினாலான எலிகளின் எண்ணிக்கை, ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களின் ஆட்சிக்குட்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அரணான பட்டணங்களும் அதைச் சூழ்ந்த கிராமங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அவர்கள் யெகோவாவின் பெட்டியை வைத்த அந்த பெரிய கற்பாறை பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவாவின் வயலில் இன்றுவரை சாட்சியாக இருக்கிறது. பெத்ஷிமேஷின் மனிதர் யெகோவாவின் பெட்டிக்குள் இருப்பதைத் திறந்து பார்த்தபடியால், இறைவன் சிலரை அடித்தால், அவர்களில் எழுபதுபேர் மடிந்தனர். யெகோவா தங்களுக்குக் கொடுத்த கடுந்தண்டனையைக் கண்டதால், அவர்கள் துக்கங்கொண்டாடினார்கள். அப்பொழுது பெத்ஷிமேஷின் மனிதர், “இந்தப் பரிசுத்த இறைவனாகிய யெகோவா முன்னிலையில் நிற்கத்தக்கவன் யார்? இங்கிருந்து இந்தப் பெட்டி யாரிடம் போகும்?” என்று கேட்டார்கள். “பெலிஸ்தியர் யெகோவாவின் பெட்டியைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி அவர்கள் கீரியாத்யாரீமின் மக்களிடத்திற்கு தூதுவரை அனுப்பினார்கள். எனவே கீரியாத்யாரீம் மக்கள் வந்து யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போனார்கள். அதைக் குன்றின் மேலுள்ள அபினதாபின் வீட்டிற்குக் கொண்டுபோய் அவன் மகன் எலெயாசாரை யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்கும்படி அர்ப்பணித்தார்கள். பெலிஸ்தியர் மிஸ்பாவில் தோற்கடிக்கப்படுதல் யெகோவாவின் பெட்டி நெடுங்காலமாக கீரியாத்யாரீமில் வைக்கப்பட்டிருந்தது. அது இருபது வருடங்களாக அங்கே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் மனம்வருந்தி யெகோவாவைத் தேடினார்கள். அப்பொழுது சாமுயேல், “நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் வரவேண்டுமானால் உங்களிடத்திலிருக்கும் அந்நிய தெய்வங்களையும், அஸ்தரோத் தெய்வங்களையும் அகற்றிவிடுங்கள் என்று இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரிடமும் சொன்னான். உங்களை யெகோவாவுக்கு ஒப்படைத்து அவரை மட்டும் வழிபடுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பார்” என்றான். எனவே இஸ்ரயேலர் அனைவரும் பாகால்களையும், அஸ்தரோத் தெய்வங்களையும் விலக்கி யெகோவாவுக்கே பணிசெய்தார்கள். அதன்பின் சாமுயேல் அவர்களிடம், “இஸ்ரயேலர் எல்லோரையும், மிஸ்பாவில் ஒன்றுகூடச் செய்யுங்கள். நான் உங்களுக்காக யெகோவாவிடம் பரிந்துபேசுவேன்” என்றான். அதன்படியே அவர்கள் மிஸ்பாவிலே ஒன்றுகூடித் தண்ணீரை அள்ளி யெகோவாவுக்குமுன் ஊற்றினார்கள். அன்றையதினம் அவர்கள் உபவாசித்து, “யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்தோம்” என்று பாவ அறிக்கை செய்தார்கள். சாமுயேல் மிஸ்பாவிலே இஸ்ரயேலருக்குத் தலைவனாக இருந்தான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மிஸ்பாவிலே ஒன்றுகூடி இருக்கிறார்களென்று பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தியரின் ஆளுநர்கள் அவர்களைத் தாக்குவதற்கு வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்குப் பயந்தார்கள். இதனால் இஸ்ரயேலர் சாமுயேலிடம், “பெலிஸ்தியரின் கையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி இறைவனாகிய எங்கள் யெகோவாவிடம் மன்றாடுவதை நிறுத்தவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது சாமுயேல் பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டை முழுமையான தகன காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தினான். அவன் இஸ்ரயேலருக்காக யெகோவாவிடம் அழுது மன்றாடினான். யெகோவா அவனுக்குப் பதிலளித்தார். சாமுயேல் தகன காணிக்கையைப் பலியிட்டுக் கொண்டிருந்தபோது, பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர்களைத் தாக்குவதற்கு வந்தார்கள். எனவே யெகோவா பெலிஸ்தியருக்கு எதிராக மகா பெரிய இடிமுழக்கத்துடன் முழங்கி அவர்களைப் பீதியடையச் செய்தார். அதனால் பெலிஸ்தியர் இஸ்ரயேலர் முன்பாக முறியடிக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் மிஸ்பாவிலிருந்து விரைவாக ஓடி பெலிஸ்தியரைத் துரத்திச்சென்று பெத் கார் பள்ளத்தாக்கு போகும் வழியிலே அவர்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் சாமுயேல் ஒரு கல்லை எடுத்து மிஸ்பாவுக்கும், சேணுக்கும் இடையே நிறுத்தி, “சென்றகாலம் தொடங்கி இம்மட்டும் யெகோவா நமக்கு உதவி செய்தார்” என்று சொல்லி அதற்கு, “எபெனேசர்” என்று பெயரிட்டான். இவ்வாறு பெலிஸ்தியர் கீழ்ப்படுத்தப்பட்டார்கள். அதன்பின் அவர்கள் இஸ்ரயேலரின் எல்லைக்குள்ளே மீண்டும் படையெடுக்கவில்லை. சாமுயேலின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய கை பெலிஸ்தியருக்கு விரோதமாக இருந்தது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரிடமிருந்து கைப்பற்றியிருந்த எக்ரோன் தொடங்கி காத் மட்டுமுள்ள பட்டணங்கள் இஸ்ரயேலருக்கு மறுபடியும் கிடைத்தன. அயலிலுள்ள இடங்களையும் பெலிஸ்தியரின் அதிகாரத்திலிருந்து இஸ்ரயேலர் விடுவித்தார்கள். இஸ்ரயேலருக்கும், எமோரியருக்குமிடையில் சமாதானம் நிலவியது. சாமுயேல் தன் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலருக்குத் தொடர்ந்து நீதிபதியாயிருந்தான். அவன் வருடத்திற்கு வருடம் பெத்தேலிலிருந்து கில்கால், மிஸ்பா முதலிய இடங்களுக்குச் சுற்றிச் சென்று அங்குள்ள இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினான். அவன் ராமாவிலுள்ள தன் வீட்டுக்கு எப்பொழுதும் திரும்பிப் போவான். அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்குவான். அவன் அங்கே யெகோவாவுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டினான். இஸ்ரயேலர் ஒரு அரசனைக் கேட்டல் சாமுயேல் முதியவனானபோது தன் மகன்களை இஸ்ரயேலருக்கு நீதிபதிகளாக நியமித்தான். அவனுடைய மூத்த மகனின் பெயர் யோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா. இவர்கள் பெயெர்செபாவிலே பணிசெய்தார்கள். அவன் மகன்களோ தகப்பன் சாமுயேலின் வழிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெற விரும்பி இலஞ்சம் பெற்று, நீதியைப் புரட்டினார்கள். இதனால் இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராமாவில் இருந்த சாமுயேலிடம் வந்தார்கள். அவர்கள் சாமுயேலிடம், “உமக்கோ வயது சென்றுவிட்டது. உமது மகன்களோ உமது வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் மற்ற எல்லா நாடுகளுக்கு இருப்பதுபோல், எங்களை வழிநடத்தும்படி எங்களுக்கும் ஒரு அரசனை இப்பொழுது நியமித்துத் தாரும்” என்றார்கள். அவர்கள், “எங்களை வழிநடத்த அரசனை நியமியும்” என்று கேட்டது சாமுயேலுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. எனவே அவன் யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “மக்கள் உனக்குச் சொல்வதை எல்லாம் கேள். தங்கள் அரசனாக அவர்கள் புறக்கணித்தது உன்னையல்ல, என்னையே புறக்கணித்திருக்கிறார்கள்; நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நாள் தொடங்கி இன்றுவரை அவர்கள் செய்ததுபோல, என்னைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்கிறார்கள். உனக்கும் அப்படியே செய்கிறார்கள். இப்பொழுதும் அவர்கள் சொல்வதைக் கேள். ஆனால் அவர்களை ஆளும் அரசன் என்ன செய்வான் என்பதை அவர்களுக்கு அறிவித்து கடுமையாகவே எச்சரிக்கை செய்” என்றார். அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான். அவன் அவர்களிடம், “உங்களை ஆளப்போகும் அரசன் செய்யப்போவது இதுவே: உங்கள் மகன்களைத் தன் ரதப்படையிலும், குதிரைப்படையிலும் பணிசெய்யவும், அவனுடைய ரதத்திற்கு முன் ஓடவும் செய்வான். அவன் அவர்களில் சிலரை ஆயிரம்பேருக்குத் தளபதிகளாகவும், ஐம்பது பேருக்குத் தளபதிகளாகவும் நியமிப்பான். வேறு சிலரைத் தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுவடை செய்கிறவர்களாகவும் நியமிப்பான். வேறுசிலரை யுத்த ஆயுதங்களையும், ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும் பணிபுரியும்படி நியமிப்பான். மேலும் உங்கள் மகள்களை நறுமணத்தைலம் தயாரிப்பவர்களாகவும், சமையற்காரிகளாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்களுக்குச் சொந்தமான வயல்களிலிருந்தும், திராட்சைத் தோட்டங்களிலிருந்தும், ஒலிவத் தோப்புகளிலிருந்தும் சிறந்தவற்றை உங்களிடத்தில் இருந்து எடுத்துக்கொள்வான். அவற்றைத் தன் பணியாட்களுக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும், திராட்சைப்பழ அறுவடையிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துத் தன் அலுவலர்களுக்கும், தன் பணியாட்களுக்கும் கொடுப்பான். அவன் உங்கள் வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், மாட்டு மந்தைகளிலும், கழுதைகளிலும் சிறந்தவற்றையும் தன் சொந்த வேலைக்கு அமர்த்துவான். அவன் உங்களுடைய செம்மறியாட்டு மந்தைகளில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வான். நீங்களும் அவனுக்கு அடிமைகளாவீர்கள். அந்த நாள் வருகிறபோது நீங்கள் தெரிந்துகொண்ட அரசனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் நீங்களே கதறுவீர்கள். ஆனால் அந்நாளில் உங்கள் கூப்பிடுதலுக்கு யெகோவா பதில் கொடுக்கமாட்டார்” என்றான். ஆனாலும் மக்கள் சாமுயேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மறுத்து, அவர்கள்: “அப்படியல்ல, எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும். அப்பொழுது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, எங்களையும் வழிநடத்தி, எங்களுக்கு முன்சென்று எங்களுக்காக யுத்தம் செய்ய எங்களுக்கும் ஒரு அரசன் இருப்பான்” என்றார்கள். சாமுயேல் மக்கள் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, அவற்றை யெகோவாவுக்குத் தெரியப்படுத்தினான். அதற்கு யெகோவா சாமுயேலிடம், “நீ அவர்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார். அப்பொழுது சாமுயேல், “அனைவரும் தங்கள் பட்டணங்களுக்கு போங்கள்” என்று இஸ்ரயேல் மக்களிடம் சொன்னான். சாமுயேல் சவுலை அபிஷேகித்தல் அந்நாட்களில் கீஷ் என்னும் பெயருடைய மதிப்புள்ள பென்யமீனியன் ஒருவன் இருந்தான். அவன் அபியேலின் மகன்; அபியேல் சேகோரின் மகன்; சேகோர் பெகோராத்தின் மகன்; பெகோராத் பென்யமீனியனான அபியாவின் மகன். கீஸ் என்பவனுக்கு சவுல் என்னும் பெயருள்ள ஒரு மகன் இருந்தான். அவன் கவர்ச்சியான தோற்றமும், இஸ்ரயேல் மக்களுக்குள் தன்னிகரற்ற இளைஞனாகவும் இருந்தான். மற்ற எல்லோரும் அவனுடைய தோளுக்குக் கீழாகவே இருந்தனர். ஒரு நாள் சவுலின் தகப்பனான கீஷின் கழுதைகள் காணாமல் போய்விட்டன. எனவே கீஷ் தன் மகன் சவுலிடம், “நீ வேலைக்காரரில் ஒருவனை உன்னோடு கூட்டிக்கொண்டுபோய்க் கழுதைகளைத் தேடிப்பார்” என்றான். அப்படியே அவர்கள் எப்பிராயீம் மலைநாட்டின் வழியாகச் சென்று சலீஷாவைச் சுற்றியுள்ள பகுதி வழியாகப்போனார்கள். ஆனால் அங்கே கழுதைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து சாலீம் மாவட்டத்திற்கு போனபோது அங்கேயும் கழுதைகளில்லை. அதன்பின் பென்யமீன் பிரதேசத்தைக் கடந்து வந்தபோது அங்கேயும் அவைகளைக் காணவில்லை. அவர்கள் சூப் மாவட்டத்திற்கு வந்தபோது சவுல் தன் வேலைக்காரரிடம், “என் தகப்பன் கழுதைகளுக்காகக் கவலைப்படுவதைவிட்டு எங்களுக்காகக் கவலைப்படத் தொடங்கிவிடுவார். அதனால் வீட்டுக்குத் திரும்பிப்போவோம் வா” என்றான். அதற்கு அந்த வேலையாள், “இப்பட்டணத்தில் இறைவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார். அவர் மிகவும் மதிப்புக்குரியவர்; அவர் சொல்வது அனைத்தும் உண்மையாய் நடக்கிறது. நாம் இப்பொழுது அவரிடம் போவோம். நாம் போகவேண்டிய பாதையை ஒருவேளை அவர் நமக்கு வெளிப்படுத்துவார்” என்றான். அப்பொழுது சவுல் அவனிடம், “நாம் அங்கே போவோமானால் அந்த மனிதனுக்கு எதைக் கொண்டுபோகலாம்? நம்முடைய பைகளில் இருந்த உணவு முடிந்து விட்டதே. இறைவனுடைய மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?” என்றான். அதற்கு அந்த வேலையாள் சவுலிடம், “இதோ என்னிடம் இன்னும் கால் சேக்கல் வெள்ளி இருக்கிறது. நம் வழியை நமக்குக் காட்டும்படி இந்தப் பணத்தை இறைவனுடைய மனிதனுக்கு நான் கொடுப்பேன்” என்றான். முற்காலத்தில் இஸ்ரயேலில் இறைவனிடம் ஆலோசனை கேட்க ஒருவன் போகும்போது அவன், “வாருங்கள், தரிசனக்காரனிடம் போவோம்” என்பான். ஏனெனில் இக்காலத்து இறைவாக்கினர், அக்காலத்தில் தரிசனக்காரர் என அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது சவுல் தன் வேலையாளிடம், “சரி வா போவோம்” என்றான். அப்படியே அவர்கள் இறைவனின் மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்கு புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் குன்றின்மேல் ஏறிப் பட்டணத்திற்குப் போகும் வழியில் தண்ணீர் எடுக்க வந்த பெண்களைக் கண்டு அவர்களிடம், “இங்கு தரிசனக்காரன் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், “ஆம், இங்கே சிறிது தூரத்தில் இருக்கிறார். இன்று மக்கள் மேடையில் பலியிடப்போவதால் அவர் எங்கள் பட்டணத்திற்கு வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் விரைவாக அங்கே செல்லுங்கள். நீங்கள் பட்டணத்திற்குள் சென்றவுடன் அவர் மேடைக்குச் சாப்பிடப் போகுமுன் அவரைச் சந்திக்கலாம். அவர் அங்குபோய் பலிசெலுத்தியவற்றை ஆசீர்வதிக்க வரும்வரைக்கும் மக்கள் சாப்பிடத் தொடங்கமாட்டார்கள். அதன்பின் அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். ஆகையால் இப்பொழுது மேலே போனால் அவரை இந்த நேரத்தில் அங்கே சந்திக்கலாம்” என்றார்கள். அவர்கள் மேலே ஏறிப் பட்டணத்திற்கு வந்தபோது, சாமுயேல் மேடைக்கு வரும் வழியில் அவர்களுக்கு எதிரே வந்தான். சவுல் அவ்விடம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே யெகோவா சாமுயேலுக்கு அவன் வருகையைத் தெரியப்படுத்தினார். “நாளைக்கு இந்நேரத்தில் பென்யமீன் நாட்டிலிருந்து ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக அவனை அபிஷேகம்பண்ணு. அவன் என் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பான். என் மக்களின் அழுகுரல் என்னிடம் எட்டியதால் நான் அவர்களை நோக்கிப் பார்த்தேன்” என்றார். சாமுயேல் சவுலைக் கண்டதும் யெகோவா அவனிடம், “நான் உனக்குக் குறிப்பிட்டுச் சொன்ன மனிதன் இவனே. இவன் என் மக்களை ஆளுகை செய்வான்” என்று சொன்னார். அப்பொழுது சவுல் நுழைவுவாசலில் சாமுயேலை அணுகி அவனிடம், “தரிசனக்காரனின் வீடு எங்கே? என தயவுசெய்து எனக்குச் சொல்வீரோ” என்று கேட்டான். அதற்கு சாமுயேல், “நானே அந்த தரிசனக்காரன். நீ எனக்கு முன்னே மேடைக்குப்போ. நீ இன்று என்னுடன் சாப்பிடவேண்டும். நாளை காலையில் நான் உன்னைப் போகவிடுவேன். உன் இருதயத்தில் உள்ளவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன். மூன்று நாட்களுக்குமுன் காணாமற்போன உங்கள் கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டது. உன்னையும், உன் தகப்பன் குடும்பத்தினர் எல்லோரையும்விட வேறு யாரை இஸ்ரயேலர் விரும்பியிருக்கிறார்கள்” என்றான். அதற்கு சவுல், “நான் இஸ்ரயேலின் மிகச்சிறிய கோத்திரமான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? என் வம்சம் பென்யமீன் கோத்திர வம்சங்கள் எல்லாவற்றிலும் சிறியது அல்லவா? அப்படியிருக்க இப்படியான காரியத்தை என்னிடம் நீர் ஏன் சொல்கிறீர்?” என்று கேட்டான். அப்பொழுது சாமுயேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் மண்டபத்தினுள் அழைத்துச்சென்று அழைக்கப்பட்ட முப்பது பேர்களுக்குள்ளே முதன்மையான இடத்தில் அவர்களை நிறுத்தினான். மேலும் சாமுயேல் சமையற்காரனிடம், “வேறாக எடுத்து வைக்கும்படி சொல்லி நான் உன்னிடம் கொடுத்த அந்த இறைச்சித் துண்டைக் கொண்டுவா” என்றான். அப்படியே சமையற்காரன் ஒரு தொடையையும், அதைச் சேர்ந்த பகுதியையும் எடுத்து சவுலுக்குமுன் வைத்தான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இது உனக்காகவே வைக்கப்பட்டது. இதைச் சாப்பிடு. ஏனெனில் நான் விருந்தாளிகளை அழைத்திருக்கிறேன் என்று சொன்ன நேரம் தொடக்கமுதல் இத்தருணத்திற்காக அது புறம்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். அன்று சவுல் சாமுயேலுடன் விருந்து சாப்பிட்டான். அதன்பின் அவர்கள் மேடையில் இருந்து நகருக்குள் வந்தபோது, சாமுயேல் தன் வீட்டின் மேல்மாடியில் சவுலோடு பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அதிகாலையில் எழுந்தார்கள். சாமுயேல் மேல்மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, அவனிடம், “நான் உன்னை வழியனுப்பி வைக்கவேண்டும். ஆயத்தப்படு” என்றான். சவுல் ஆயத்தமானபின் சாமுயேலும், சவுலும் சேர்ந்து வெளியே சென்றார்கள். அவர்கள் இருவரும் பட்டணத்தின் எல்லையை அடைந்ததும், சாமுயேல் சவுலிடம், “உன் வேலையாளை உனக்கு முன்னே நடந்து போகச் சொல். ஆனால் இறைவனின் வார்த்தையை நான் உனக்குத் தெரியப்படுத்தும்வரை நீ சிறிது தாமதித்துச் செல்” என்றான். எனவே வேலையாள் அவனுக்கு முன்னே போனான். அப்பொழுது சாமுயேல், ஒரு தைலக்குப்பியை எடுத்து சவுலின் தலையின்மேல் ஊற்றி அவனை முத்தமிட்டு அவனிடம், “யெகோவா உன்னை தமது உரிமைச்சொத்தான மக்கள்மேல்10:1 உரிமைச்சொத்தான மக்கள்மேல் என்றால் இஸ்ரயேல் மக்கள்மேல் என்று எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உள்ளது. தலைவனாக அபிஷேகம் பண்ணவில்லையோ? நீ இங்கிருந்து போகும்போது பென்யமீன் நாட்டு எல்லையாகிய செல்சாகிலுள்ள ராகேலின் கல்லைறையருகே இரண்டு மனிதரைச் சந்திப்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது உன் தகப்பன் அவற்றைப்பற்றி யோசிக்காமல் உன்னைப்பற்றியே கவலைப்பட்டு, என் மகனைக் குறித்து நான் என்ன செய்யவேண்டும்? என கேட்டுக்கொண்டிருக்கிறார்’ என்பார்கள். “அதன்பின் நீ தாபோரிலுள்ள அந்த பெரிய மரத்தடிக்குப் போவாய். அப்பொழுது அங்கே பெத்தேலிலுள்ள இறைவனை வழிபடப்போகும் மூன்று மனிதர் உன்னைச் சந்திப்பார்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், மற்றவன் மூன்று அப்பங்களையும், இன்னொருவன் ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும் சுமந்து கொண்டுவருவார்கள். அவர்கள் உன்னை வாழ்த்தி இரண்டு அப்பங்களை உனக்குக் கொடுப்பார்கள். நீ அவற்றை அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாய். “அதன்பின் பெலிஸ்தியரின் இராணுவ தடைமுகாம் அமைந்துள்ள இறைவனின் மலையான கிபியாவுக்குப் போவாய். இவ்வாறு நீ அந்த பட்டணத்துக்கு அருகே வந்தவுடன் இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்றை மேடையிலிருந்து இறங்கிவரும்போது சந்திப்பாய். அவர்களின் முன்பாக வீணை, தம்புரா, புல்லாங்குழல், யாழ் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்படும். அவர்கள் இறைவாக்கு சொல்லிக்கொண்டு வருவார்கள். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் வல்லமையுடன் உன்மேல் இறங்குவார். அப்பொழுது நீயும் அவர்களுடன் இறைவாக்கு உரைப்பாய். நீ ஒரு வித்தியாசமான மனிதனாய் மாறிவிடுவாய். இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேறும்போது, நீ உன் கைக்குக் கிடைத்தது எதையும் செய். ஏனெனில் இறைவன் உன்னோடிருக்கிறார். “நீ எனக்கு முன்னே கில்காலுக்குப்போ. தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிடுவதற்கு நான் நிச்சயமாக அங்கு வருவேன். நான் வந்து நீ செய்யவேண்டியவற்றை உனக்குச் சொல்லும்வரை ஏழு நாட்கள் எனக்காகக் காத்திரு” என்றான். சவுல் அரசனாக்கப்படுதல் சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் கிபியாவுக்கு வந்தபோது இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்று அவனைச் சந்தித்தது. இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவனும் அவர்களுடன் சேர்ந்து இறைவாக்கு உரைத்தான். சவுலை முன்பே அறிந்தவர்கள் அவன் இறைவாக்கினருடன் இறைவாக்கு சொல்வதைக் கண்டபோது அவர்கள், “கீஷின் மகனுக்கு நேர்ந்தது என்ன? சவுலும் இறைவாக்கினரில் ஒருவனா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவ்விடத்தில் வாழ்ந்த ஒருவன், “இவர்களது தகப்பன் யார்?” என்று கேட்டான். எனவே, “சவுலும் இறைவாக்கினரின் கூட்டத்தில் ஒருவனா?” என்று கேட்கும் பழமொழி உருவாயிற்று. சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான். அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன் சவுலிடமும் அவனின் வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்குச் சவுல், “கழுதைகளைத் தேடிப்போனோம். எங்கேயும் காணாததால் சாமுயேலிடம் போனோம்” என்றான். அதற்கு சவுலின் சிறிய தகப்பனார், “சாமுயேல் உனக்குச் சொன்னவற்றை எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு சவுல் அவனிடம், “கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் எங்களுக்குச் சொன்னார்” என்றான். ஆனால் சாமுயேல் தன்னை அரசனாக்குவதைப்பற்றிச் சொன்னதை அவன் தனது சிறிய தகப்பனுக்குச் சொல்லவில்லை. மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் இஸ்ரயேல் மக்களை வரும்படி சாமுயேல் அழைத்தான். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நான் இஸ்ரயேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நான் உங்களை எகிப்தின் அதிகாரத்திலிருந்தும், உங்களை ஒடுக்கிய எல்லா அரசுகளிலிருந்தும் விடுவித்தேன். நீங்களோ உங்களைப் பல பேரழிவுகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்புவிக்கும் உங்கள் இறைவனை இப்பொழுது புறக்கணித்துவிட்டீர்கள். ‘எங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தும்’ என்று சொன்னீர்கள். எனவே இப்பொழுது உங்கள் கோத்திரங்களின்படியேயும், வம்சங்களின்படியேயும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நில்லுங்கள்” என்றான். இவ்வாறு சாமுயேல் இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் கூட்டிச்சேர்த்தபின் பென்யமீன் கோத்திரன்மேல் சீட்டு விழுந்தது. அப்பொழுது சாமுயேல் பென்யமீன் கோத்திரத்தாரை குடும்பங்களின்படியே முன்னே வரும்படி அழைத்தான். அவர்களில் மாத்திரி வம்சத்தின்மேலும், கடைசியாக கீஷின் மகன் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது. ஆனால் அவர்கள் அவனைத் தேடியபோது, அவன் அங்கு காணப்படவில்லை. எனவே அவர்கள் யெகோவாவிடம், “அந்த மனிதன் இங்கே வந்திருக்கிறானா?” என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “ஆம்; அவன் பொருள் வைக்கிற இடத்தில் ஒளிந்திருக்கிறான்” என்றார். அவர்கள் ஓடிப்போய் அவனை வெளியே கொண்டுவந்தார்கள். அவன் மக்கள் மத்தியில் நின்றபோது அதிக உயரமுடையவனாயிருந்தான். மற்றவர்கள் எல்லாம் அவனுடைய தோளுக்குக் கீழேயே இருந்தனர். அப்பொழுது சாமுயேல் மக்களனைவரிடமும், “யெகோவா தெரிந்துகொண்டவனைக் காண்கிறீர்களா? எல்லா மக்களுக்குள்ளும் இவனைப்போல் ஒருவனுமில்லை” என்றான். இதைக் கேட்ட மக்கள், “அரசன் நீடூழி வாழ்க!” என்று சொல்லிச் சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். சாமுயேல் அரச முறைமை ஒழுங்குவிதிகளை மக்களுக்கு விளங்கப்படுத்தினான். அவற்றை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, யெகோவா முன்னிலையில் பத்திரமாய் வைத்தான். அதன்பின் சாமுயேல் மக்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். அவனுடன் இறைவனால் தங்கள் இருதயத்தில் தொடப்பட்ட வீரமுள்ள மனிதரும் சேர்ந்துகொண்டார்கள். அப்பொழுது சில கலகக்காரர்10:27 கலகக்காரர் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15., “இவன் நம்மை எப்படிக் காப்பாற்றுவான்” என்று சவுலை அசட்டை செய்து, அவனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரவில்லை. ஆனால் சவுலோ மவுனமாயிருந்தான். சவுல் யாபேசை விடுவித்தல் அதன்பின் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து கீலேயாத்திலுள்ள யாபேசை முற்றுகையிட்டான். அப்பொழுது யாபேஸ் மனிதர் அனைவரும் அவனிடம், “நீர் எங்களுடன் ஒரு உடன்படிக்கை செய்யும். அப்பொழுது நாங்கள் உமக்குக் கீழ்ப்பட்டிருப்போம்” என்றார்கள். அதற்கு அம்மோனியனான நாகாஸ் அவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் தோண்டி, இஸ்ரயேலர் அனைவருக்கும் அவமானத்தைக் கொண்டுவருவேன். உங்களுடன் உடன்படிக்கை செய்வதானால் இதுவே என் நிபந்தனை” என்றான். அதற்கு யாபேசின் முதியவர்கள் அவனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாடெங்கும் தூதுவரை அனுப்பும்படி ஏழு நாட்கள் அவகாசம் கொடும். அதற்குள் எங்களைக் காப்பாற்ற ஒருவரும் வராவிட்டால் நாங்கள் உம்மிடம் சரணடைவோம்” என்றார்கள். அந்தத் தூதுவர் சவுலின் ஊரான கிபியாவிற்கு வந்து இந்த நிபந்தனையை அங்குள்ள மக்களுக்கு அறிவித்தபோது, அவர்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். அப்பொழுதுதான் சவுல் தன் மாடுகளுடன் வயலிலிருந்து வந்துகொண்டிருந்தான். அவன், “மக்களுக்கு நடந்தது என்ன? ஏன் அவர்கள் அழுகிறார்கள்?” என்று கேட்டான். அவர்கள் யாபேசின் தூதுவர் தங்களுக்குக் கொண்டுவந்த செய்தியை சவுலுக்கும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளைச் சவுல் கேட்டபோது இறைவனின் ஆவியானவர் வல்லமையுடன் அவன்மேல் இறங்கினார். அவன் கடுங்கோபம் அடைந்தான். அவன் தன் எருதுகளில் இரண்டைப் பிடித்து, அவற்றைத் துண்டுதுண்டுகளாக வெட்டித் தூதுவரின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அனுப்பினான். அவன் இஸ்ரயேல் நாடெங்கிலும் செய்தி அனுப்பி, “சவுலையும், சாமுயேலையும் பின்பற்றாத மனிதரின் மாடுகளுக்கும் இவ்வாறே செய்யப்படும்” என்று பிரசித்தப்படுத்தினான். மக்களுக்கு யெகோவாவைப்பற்றிய பயமேற்பட்டதால் அவர்கள் ஒருமனப்பட்டவர்களாகப் புறப்பட்டு வந்தார்கள். சவுல் அவர்களை பேஸேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தபோது, இஸ்ரயேல் மக்களில் மூன்று இலட்சம்பேரும், யூதா மக்களில் முப்பதாயிரம் பேரும் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் அங்கு வந்த தூதுவரிடம், “நீங்கள் யாபேசின் கீலேயாத் மனிதரிடம், ‘நாளைக்கு வெயில் அகோரமாய் இருக்கும் நேரத்தில் நீங்களும் விடுவிக்கப்படுவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். தூதுவர் போய் அந்தச் செய்தியை யாபேஸ் மக்களிடம் சொன்னபோது அவர்கள் உற்சாகமடைந்தார்கள். அப்பொழுது அவர்கள் அம்மோனியரிடம், “நாளைக்கு நாங்கள் உங்களிடம் சரணடைவோம். உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யுங்கள்” என்றார்கள். மறுநாள் சவுல் தன் மனிதர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். இரவின் கடைசிச் சாமவேளையில் அம்மோனியரின் முகாமை உடைத்து உட்புகுந்து, வெயில் ஏறும்வரைக்கும் அவர்களைக் கொன்று குவித்தார்கள். தப்பியவர்களில் இருவராகிலும் ஒருமித்துப் போகாதபடிக்கு அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். சவுல் அரசனாக உறுதிப்படுத்தப்படுதல் அதன்பின் மக்கள் சாமுயேலிடம், “சவுல் எங்களை அரசாள்வதா? என்று கேட்டவர்கள் யார்? அவர்களைக் கொண்டுவாருங்கள்; நாங்கள் அவர்களைக் கொல்வோம்” என்றார்கள். அதற்குச் சவுலோ, “இன்று யெகோவா இஸ்ரயேல் மக்களை விடுவித்தபடியால், ஒருவரையும் கொலைசெய்யக்கூடாது” என்றான். அப்பொழுது சாமுயேல் மக்களிடம், “வாருங்கள் கில்காலுக்குப் போய் அங்கே சவுலின் அரசாட்சியை மறுபடியும் உறுதிப்படுத்துவோம்” என்றான். அப்படியே மக்களனைவரும் கில்காலுக்குப் போய் அங்கே யெகோவாவின் முன்னிலையில் சவுலை அரசனாக உறுதிப்படுத்தினார்கள். அங்கே யெகோவாவுக்குச் சமாதான காணிக்கைகளைப் பலியிட்டு, சவுலும் இஸ்ரயேல் மக்களனைவரும் ஒரு பெரிய விழாக் கொண்டாடினார்கள். சாமுயேலின் பிரியாவிடைப் பேச்சு அப்பொழுது சாமுயேல் இஸ்ரயேல் மக்களனைவரிடமும், “நீங்கள் எனக்குச் சொன்னவற்றையெல்லாம் கேட்டு உங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தினேன். இப்பொழுது உங்களுக்குத் தலைவனாக ஒரு அரசன் இருக்கிறான். என்னைப் பொறுத்தமட்டில் நான் நரைத்த கிழவன். என் மகன்கள் உங்களோடு இருக்கிறார்கள். நான் எனது வாலிபகாலம் தொடங்கி இன்றுவரை உங்களுக்குத் தலைவனாக இருந்தேன். இதோ நான் உங்கள்முன் நிற்கிறேன். யெகோவாவுக்கு முன்பாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் எனக்கெதிராகச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய மாட்டை எடுத்திருக்கிறேன்? யாருடைய கழுதையை எடுத்திருக்கிறேன்? யாரை நான் ஏமாற்றியிருக்கிறேன்? யாரை நான் ஒடுக்கியிருக்கிறேன்? யாரிடமாவது இலஞ்சம் வாங்கி, பிழையைக் கண்டும் காணாததுபோல நான் இருந்ததுண்டா? இவற்றில் எதையாவது நான் செய்திருந்தால் அதைச் சரிசெய்துகொள்வேன்” என்றான். அதற்கு அவர்கள், “நீர் எங்களை ஏமாற்றவுமில்லை, ஒடுக்கவுமில்லை, நீர் ஒருவனுடைய கையிலிருந்து எதையும் வாங்கிக்கொள்ளவும் இல்லை” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “என்னிடம் நீங்கள் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்பதற்கு யெகோவா உங்களுக்கு எதிரான சாட்சியாயிருக்கிறார். அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், இன்று அதற்குச் சாட்சியாயிருக்கிறார்” என்றான். அதற்கு அவர்கள், “அவரே சாட்சி” என்றார்கள். மறுபடியும் சாமுயேல் மக்களிடம், “மோசேயையும், ஆரோனையும் நியமித்து, உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர் யெகோவாவே. இப்பொழுது இங்கே வந்து நில்லுங்கள். ஏனெனில் யெகோவா உங்களுக்கும், உங்கள் தந்தையர்களுக்கும் செய்த எல்லா நேர்மையான செயல்களையும் பற்றி அவர் முன்னிலையில் உங்களுக்கு நேர்முகமாய் எடுத்துச் சொல்லப்போகிறேன். “யாக்கோபு எகிப்திற்குள் வந்தபின், உங்கள் முற்பிதாக்கள் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதார்கள். அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து, இந்த இடத்தில் குடியிருக்கச் செய்தார். “ஆனால் அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்தார்கள். ஆகவே அவர் அவர்களை ஆத்சோரின் படைத் தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும், அவர்களுக்கு எதிராகப் போரிட்ட மோவாப் அரசன் கையிலும் விற்றுப்போட்டார். அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் பாவம்செய்தோம். யெகோவாவை கைவிட்டு பாகால்களுக்கும், அஸ்தரோத் தெய்வங்களுக்கும் பணிசெய்தோம். இப்பொழுது எங்கள் பகைவரிடமிருந்து எங்களை விடுதலையாக்கும். நாங்கள் உமக்கு பணிசெய்வோம்’ என்று அழுதார்கள். அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், பெதானையும்12:11 பெதானையும் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பில் பாராக்கையும் என்றுள்ளது., யெப்தாவையும், சாமுயேலையும் அனுப்பி, எல்லாப் பக்கங்களிலுமிருந்த பகைவர்களுடைய கைகளிலிருந்தும் உங்களை விடுவித்தார். அதன்பின் நீங்கள் பாதுகாப்பாய் வாழ்ந்து வந்தீர்கள். “பின்பு அம்மோனியரின் அரசனான நாகாஸ், உங்களை எதிர்த்து யுத்தமிட வந்தான். அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு அரசனாக இருந்துங்கூட நீங்கள் என்னிடம், ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்றீர்கள். ஆகையால் இப்பொழுது நீங்கள் கேட்டபடியே நீங்கள் தெரிந்துகொண்ட அரசன் இங்கே இருக்கிறார். உங்களுக்கு மேலாக யெகோவா ஏற்படுத்தியிருக்கிற அரசனைப் பாருங்கள். நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது. நீங்களும் உங்களை ஆளும் அரசனும் உங்கள் இறைவனாகிய யெகோவாவை பின்பற்றுவீர்களானால் அது உங்களுக்கு நலமாயிருக்கும். ஆனால் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணினால், உங்கள் முற்பிதாக்களுக்கு விரோதமாக அவருடைய கை இருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். “இப்பொழுதும் யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யப்போகும் பெரிய செயலை நின்று பாருங்கள். இப்போது கோதுமை அறுவடை காலமல்லவா? மழை பெய்யாத இக்காலத்தில் இடிமுழக்கத்தையும், மழையையும் அனுப்பும்படி நான் யெகோவாவிடம் மன்றாடுவேன். நீங்கள் உங்களுக்கென ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டதால் யெகோவாவின் பார்வையில் நீங்கள் எப்படியான தீமையான செயலைச் செய்தீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்” என்றான். அப்படியே சாமுயேல் யெகோவாவிடம் மன்றாடினான். அன்றைய தினமே முழக்கத்தையும், மழையையும் யெகோவா அனுப்பினார். இதைக் கண்ட மக்களனைவரும் யெகோவாவுக்கும், சாமுயேலுக்கும் முன்பாக பிரமித்து நின்றார்கள். அவர்கள் அனைவரும் சாமுயேலிடம், “நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றுடனும் ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டு இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோமே. ஆகையால் நாங்கள் சாகாதபடிக்கு உமது இறைவனாகிய யெகோவாவிடம் உமது அடியவர்களான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; இந்தத் தீமையான செயல்களையெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆகிலும் யெகோவாவைவிட்டு விலகாமல் உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்குப் பணிசெய்யுங்கள். பயனற்ற தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரும்பவும் செல்லவேண்டாம். அவை பயனற்றவையாகையால் உங்களுக்கு அவை எந்தவித நன்மை செய்யவோ, அல்லது உங்களை விடுதலையாக்கவோ மாட்டாது. யெகோவாவின் மகத்துவமான பெயருக்காக அவர் தன் மக்களைத் தள்ளிவிடமாட்டார். ஏனெனில் அவர் உங்களைத் தன் சொந்த மக்களாக்கிக்கொள்ள விருப்பம்கொண்டாரே. என்னைப் பொறுத்தமட்டில் நான் உங்களுக்காக மன்றாடத் தவறி யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்வது எனக்குத் தூரமாயிருக்கட்டும். எனவே நான் உங்களுக்கு நன்மையும், நீதியுமான வழியைக் கற்பிப்பேன். நீங்கள் யெகோவாவுக்கு பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவருக்குப் பணிசெய்யும்படி எவ்வளவு பெரிய செயல்களை அவர் உங்களுக்காகச் செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியிருந்தும் இன்னும் தொடர்ந்து தீமையைச் செய்வீர்களானால், நீங்களும் உங்கள் அரசனும் அழிந்துபோவீர்கள்” என்றான். சாமுயேல் சவுலைக் கடிந்துகொள்ளுதல் சவுல் அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான், அவன் இஸ்ரயேலில் நாற்பத்து இரண்டு வருடங்கள் அரசாண்டான். சவுல் இஸ்ரயேலிலிருந்து மூவாயிரம் பேரைத் தெரிந்துகொண்டான். அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலுடன் மிக்மாசிலும், பெத்தேல் மலைநாட்டிலும் இருந்தார்கள். மற்ற ஆயிரம்பேர் யோனத்தானுடன் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்தார்கள். சவுல் மற்றவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். யோனத்தான் கேபாவிலிருந்த பெலிஸ்தியரின் காவல் அரணைத் தாக்கினான். இதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டார்கள். பின்பு சவுல் எக்காளத்தை நாடெங்கிலும் ஊதுவித்து, “இதை எபிரெயர் கேட்கட்டும்” என்று சொன்னான். “சவுல் பெலிஸ்தியரின் காவலரைத் தாக்கினதால் இஸ்ரயேலர் பெலிஸ்தியரின் வெறுப்புக்கு ஆளானார்கள் என்ற செய்தியை இஸ்ரயேலர் கேள்விப்பட்டார்கள்.” அப்பொழுது மக்கள் சவுலுடன் சேரும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெலிஸ்தியர் மூவாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரர்களோடும், கடற்கரை மணல்போன்ற எண்ணற்ற படை வீரர்களோடும் இஸ்ரயேலருடன் போரிடும்படி ஒன்றுகூடினார்கள். அவர்கள் போய் பெத் ஆவெனுக்குக் கிழக்கேயுள்ள மிக்மாசிலே முகாமிட்டார்கள். தங்களுடைய சூழ்நிலை ஆபத்தானது என்றும், தங்கள் படையினர் நெருக்கடிக்குள்ளாயிருக்கிறார்கள் என்றும் இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் கலக்கமடைந்து, குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும், கற்பாறைகள் மத்தியிலும், குழிகளிலும், துரவுகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். எபிரெயரில் சிலர் யோர்தானைக் கடந்து காத் நாட்டுக்கும், கீலேயாத் நாட்டிற்கும்கூட போனார்கள். சவுலோ கில்காலிலே தங்கியிருந்தான். படையினர் பயத்தால் நடுங்கிக்கொண்டு அவனுடனிருந்தார்கள். சாமுயேல் குறிப்பிட்ட காலமான அந்த ஏழுநாள்வரை சாமுயேலுக்காக சவுல் காத்திருந்தான். சாமுயேலோ கில்காலுக்கு வரவில்லை, சவுலின் மனிதர் சிதறுண்டு போகத் தொடங்கினார்கள். எனவே சவுல், “தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். சவுல் தகன காணிக்கையைச் செலுத்தினான். அவன் தகன காணிக்கையைச் செலுத்தி முடியும்வேளையில் சாமுயேல் அங்கே வந்துசேர்ந்தான். அப்பொழுது சவுல் அவனை வாழ்த்துவதற்காக வெளியே போனான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்ன செய்துவிட்டாய்!” என்று கேட்டான். அதற்கு சவுல், “மனிதர் என்னை விட்டுச் சிதறிப்போனதையும், நீர் குறிப்பிட்ட நாளில் இங்கு வராததையும், பெலிஸ்தியர் மிக்மாசிலே கூடிவந்திருப்பதையும் நான் கண்டேன். அப்போது, ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு வரப்போகிறார்களே. நானோ இன்னும் யெகோவாவினுடைய தயவைத் தேடவில்லை’ என்று எண்ணியே தகன காணிக்கையைச் செலுத்தத் துணிந்தேன்” என்றான். அதற்குச் சாமுயேல், “நீ புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை. நீ அப்படிக் கைக்கொண்டிருந்தால் யெகோவா உன் அரசாட்சியை இஸ்ரயேலின்மேல் என்றென்றும் உறுதிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது உன்னுடைய அரசாட்சியோ நிலைநிற்காது. யெகோவாவினுடைய கட்டளையை நீ கைக்கொள்ளாது மீறியதால், யெகோவா தன் இருதயத்திற்கு உகந்த மனிதனைத் தெரிந்து அவனைத் தன் மக்களுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறார்” என்றான். சாமுயேல் கில்காலிலிருந்து புறப்பட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான். சவுல் தன்னோடு இருந்தவர்களைக் கணக்கிட்டுப் பார்த்தபோது கிட்டத்தட்ட அறுநூறு பேரிருந்தார்கள். ஆயுதங்களற்ற இஸ்ரயேலர் பெலிஸ்தியர் மிக்மாசிலே முகாமிட்டிருந்தபோது சவுலும், அவன் மகன் யோனத்தானும், அவனோடிருந்த மனிதரும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் தங்கியிருந்தார்கள். பெலிஸ்தியரின் முகாமிலிருந்து திடீர் தாக்குதல் செய்யும் குழுக்கள் மூன்று படைப் பிரிவுகளாகப் போயினர். முதற்படை சூவாவின் சுற்றுப்புறத்திலுள்ள ஒப்ராவை நோக்கிப் போனது. வேறோரு பிரிவு பெத் ஓரோனை நோக்கிப் போனது. மூன்றாவது பிரிவு பாலைவனப் பக்கமாய் உள்ள செபோயீம் பள்ளத்தாக்கின் மேலாக இருக்கும் எல்லை நாட்டை நோக்கிப் போனது. இஸ்ரயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. ஏனெனில் எபிரெயர் வாள்களையும், ஈட்டிகளையும் செய்யாதபடி பெலிஸ்தியர் பார்த்துக்கொண்டார்கள். எனவே இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் கலப்பைகளின் இரும்புகள், மண்வெட்டிகள், கோடரிகள், அரிவாள்கள் முதலியவற்றைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு பெலிஸ்தியரிடம் போகவேண்டியிருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும் கூர்மையாக்குவதற்கு மூன்றில் இரண்டு சேக்கல் வெள்ளியும், முள் ஆயுதங்களையும், கோடரிகளையும் கூர்மையாக்குவதற்கும், தாற்றுக்கோல்களுக்கு முனை தீட்டுவதற்கும் மூன்றில் ஒரு சேக்கல் வெள்ளியும் கட்டணமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே யுத்தநாளன்று சவுலுடனும், யோனத்தானுடனும் இருந்த வீரர்களில் ஒருவரது கையிலேனும் வாளோ, ஈட்டியோ இருக்கவில்லை. சவுலும், அவன் மகன் யோனத்தானுமே ஆயுதங்களை வைத்திருந்தார்கள். யோனத்தான் பெலிஸ்தியரைத் தாக்குதல் பெலிஸ்தியரின் ஒரு படைப் பிரிவு மிக்மாசிக்கு வெளியே கணவாய் மட்டும் வந்தது. ஒரு நாள் சவுலின் மகன் யோனத்தான் தன் ஆயுதங்களைச் சுமக்கும் வாலிபனிடம், “எதிர்ப்பக்கமாக இருக்கும் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவோம் வா” என்றான். அதை அவன் தன் தகப்பனுக்குத் தெரிவிக்கவில்லை. சவுல் கிபியாவின் சுற்றுப்புறத்திலே மிக்ரோனிலுள்ள ஒரு மாதுளை மரத்தின்கீழ் இருந்தான். அவனுடன் ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தார்கள். அவர்களில் ஏபோத்தை அணிந்திருந்த அகியாவும் இருந்தான். அவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். அகிதூப் பினெகாசின் மகன். பினெகாஸ் சீலோவிலே யெகோவாவின் ஆசாரியனாயிருந்த ஏலியின் மகன். யோனத்தான் புறப்பட்டுப் போனதை யாரும் அறியவில்லை. யோனத்தான் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவதற்கு கடந்துபோக முயன்ற அந்த கணவாயின் இரு பக்கங்களிலும், செங்குத்தான கற்பாறைகள் இருந்தன. அதில் ஒன்று போசேஸ் என்றும், மற்றது சேனே என்றும் அழைக்கப்பட்டது. அந்த கற்பாறையிலொன்று மிக்மாசை நோக்கி வடக்கு பக்கமாகவும், மற்றது கிபியாவை நோக்கி தெற்கு பக்கமாகவும் இருந்தது. அப்பொழுது யோனத்தான் தன் ஆயுதம் சுமக்கும் வாலிபனிடம், “விருத்தசேதனம் செய்யாதவர்களின் தடைமுகாமுக்குப் போவோம் வா, ஒருவேளை யெகோவா, நம் சார்பாகச் செயலாற்றுவார். சிலர் மூலமோ, பலர் மூலமோ மீட்க, யெகோவாவிற்கு யாதொன்றும் தடையாயிராது” என்றான். அதற்கு ஆயுதம் சுமப்போன், “உம்முடைய மனவிருப்பப்படியே செய்யும். முன்செல்லும் நீர் செய்வது எல்லாவற்றிலும் நானும் உம்மோடுகூட மனப்பூர்வமாய் இருப்பேன்” என்றான். அப்பொழுது யோனத்தான் அவனிடம், “அப்படியானால் வா. நாம் கடந்து அந்த மனிதரை நோக்கிப் போவோம். அவர்கள் நம்மைக் காணட்டும். அப்பொழுது அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் வரும்வரையும் அங்கேயே நில்லுங்கள்’ என்று சொல்வார்களேயானால் நாங்கள் அவர்களிடம் போகாமல் நின்ற இடத்திலேயே நிற்போம். ஆனால், ‘எங்களிடம் ஏறி வாருங்கள்’ என்று சொல்வார்களேயானால், நாங்கள் அவர்களிடம் ஏறிப்போவோம். யெகோவா அவர்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அதுவே நமக்கு அடையாளம்” என்றான். அப்படியே அவர்கள் இருவரும் தடைமுகாமிலிருந்த பெலிஸ்தியருக்கு தங்களைக் காண்பித்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “பாருங்கள்! எபிரெயர் தாங்கள் ஒளித்திருந்த கிடங்குகளிலிருந்து தவழ்ந்து வெளியே வருகிறார்கள்” எனத் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அப்பொழுது தடைமுகாமிலிருந்தவர்கள் யோனத்தானையும், அவனுடைய ஆயுதங்கள் சுமப்பவனையும் கூப்பிட்டு, “இங்கே ஏறி வாருங்கள். உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்” என்றார்கள். அதைகேட்ட யோனத்தான் ஆயுதம் சுமப்பவனிடம், “யெகோவா அவர்களை இஸ்ரயேலரின் கைகளில் கொடுத்துவிட்டார். என்னைப் பின்தொடர்ந்து ஏறி வா” என்றான். யோனத்தான் கைகளாலும், கால்களாலும் ஊர்ந்து ஏறினான். அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் அவனுக்குப் பின்னால் ஏறினான். யோனத்தானால் தாக்கப்பட்டு பெலிஸ்தியர் விழுந்தார்கள். அவனைத் தொடர்ந்து வந்த ஆயுதம் சுமப்பவனும் அவர்களை வெட்டிக்கொன்றான். அந்த முதல் தாக்குதலின்போது யோனத்தானும், ஆயுதம் சுமப்பவனும் அரை ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய இருபதுபேரைக் கொன்றார்கள். இஸ்ரயேலர் பெலிஸ்தியரை முறியடித்தல் அப்பொழுது முகாமுக்குள்ளும், வெளியிலும், தடைமுகாமிலும், திடீரெனத் தாக்கும் குழுவிலுள்ள எல்லாப் படைவீரர்களுக்குமே பீதி ஏற்பட்டது. அவ்வேளையில் நிலம் அதிர்ந்தது. இது இறைவனால் அனுப்பப்பட்ட பயங்கரம். பெலிஸ்தியப் படை எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடிக் குறைந்து போவதை பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்த சவுலின் காவற்காரர் கண்டனர். அப்பொழுது சவுல் தன்னுடன் இருந்த வீரர்களிடம், “நம்மிடமிருந்தவர்களில் யார் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தபோது, யோனத்தானும் அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் இல்லையென்று கண்டார்கள். எனவே சவுல் அகியாவிடம், “இறைவனுடைய பெட்டியை இங்கே கொண்டுவா” என்றான். அந்நாட்களில் அது இஸ்ரயேலரிடமே இருந்தது. இவ்வாறு சவுல் ஆசாரியனோடு பேசிக்கொண்டிருக்கையில் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வந்த அமளி சத்தம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனவே சவுல் ஆசாரியனிடம், “உன் கையை எடுத்துவிடு” என்றான். எனவே சவுலும் அவனோடிருந்த எல்லா மனிதரும் ஒன்றுகூடி யுத்தத்திற்குச் சென்றார்கள். பெலிஸ்தியர் முற்றுமாய் குழப்பமடைந்து ஒருவரையொருவர் தாங்களே வாள்களினால் தாக்கிக்கொள்வதை இஸ்ரயேலர் கண்டார்கள். இவ்வேளையில் முன்பு பெலிஸ்தியருடன் வாழ்ந்த எபிரெயர், அவர்களுடன் அவர்களின் முகாமுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ எபிரெயர் மாறி சவுலோடும் யோனத்தானோடுமிருந்த இஸ்ரயேலருடன் போய் சேர்ந்துகொண்டார்கள். அதோடு பெலிஸ்தியருக்குப் பயந்து எப்பிராயீம் மலைநாட்டில் ஒளித்திருந்த இஸ்ரயேலர் யாவரும், பெலிஸ்தியர் சிதறி ஓடுகிறார்களென்று கேள்விப்பட்டதும் யுத்தத்தில் இணைந்து பெலிஸ்தியரைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கினார்கள். இவ்விதமாய் அன்றையதினம் யெகோவா இஸ்ரயேலரை மீட்டுக்கொண்டார். இந்த யுத்தமோ பெத் ஆவெனுக்கு அப்பாலும் நகர்ந்தது. யோனத்தான் தேன் சாப்பிடுதல் அன்றையதினம் இஸ்ரயேலரை உபவாசம் இருக்கும்படி சவுல் கட்டளையிட்டதினால், அவர்கள் கஷ்டத்துக்குள்ளானார்கள். அப்பொழுது சவுல் அவர்களிடம், “நான் என் பகைவரைப் பழிவாங்க முன்பு எவன் மாலைவரை பொறுத்திராமல் சாப்பிடுகிறானோ அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கட்டளையிட்டிருந்தான். எனவே வீரர்களில் யாரும் உணவைச் சாப்பிடவில்லை. போர்வீரர்கள் அனைவரும்14:25 போர்வீரர்கள் அனைவரும் அல்லது நாட்டின் அனைத்து மக்களும். காட்டுக்குப் போனபோது, அங்கே தரையில் தேன் இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் காட்டுக்குள் வந்தபோது தேன் ஒழுகிக்கொண்டிருந்தும் சவுலின் ஆணைக்குப் பயந்ததினால் ஒருவரும் தங்கள் கைகளால் தேனைத் தொட்டு வாய்க்குள் வைக்கவில்லை. யோனத்தானோ தன் தகப்பன் யுத்த வீரருக்கு ஆணையிட்டு மக்களைக் கட்டுப்படுத்தியிருந்ததை அறியவில்லை. அதனால் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேனில் தோய்த்து அதிலிருந்து வழிந்த தேனைத் தன் கையில் எடுத்து வாய்க்குள் வைத்தான். உடனே அவன் பெலனடைந்தான். அப்பொழுது போர்வீரரில் ஒருவன் அவனிடம், “இன்று உணவு சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என உம் தகப்பன் ஒரு கடும் ஆணையிட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். இதனால்தான் போர்வீரர் பசியினால் சோர்ந்து இருக்கிறார்கள்” என்றான். இதைக் கேட்ட யோனத்தான் அவனிடம், “என் தகப்பனார் நாட்டிற்கு எப்படிப்பட்ட கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சிறிது தேனை சாப்பிட்டதால் நான் எவ்வளவு பெலனடைந்திருக்கிறேன். இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான். அன்று இஸ்ரயேலர் மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும் பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியபின் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களின்மேல் பாய்ந்து, செம்மறியாடுகளையும், எருதுகளையும், கன்றுக்குட்டிகளையும் தரையின்மேல் போட்டுக் கொன்று, இரத்தத்துடன் அவற்றைச் சாப்பிட்டார்கள். அப்பொழுது, “இதோ போர்வீரர் இரத்தத்துடன் இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறார்கள்” என்று ஒருவன் சவுலுக்குச் சொன்னான். அதற்கு சவுல் அவர்களிடம், “நீங்கள் யெகோவாவுக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்தீர்கள். எனவே இப்பொழுதே உடனே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். பின்பு சவுல், “நீங்கள் மனிதர் மத்தியில் சென்று அவர்களிடம், ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மாடுகளையும், செம்மறியாடுகளையும் இங்கு கொண்டுவந்து அவற்றை இங்கே கொன்று சாப்பிடவேண்டும். நீங்கள் இரத்தத்தோடு இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவேண்டாம் என்று சொல்லுங்கள்’ ” என்றான். அவ்வாறே இஸ்ரயேலர் ஒவ்வொருவரும் அன்றிரவே தங்கள் மாடுகளைக் கொண்டுவந்து அங்கே வெட்டினார்கள். அதன்பின் சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் இவ்விதம் செய்தது இதுவே முதல் முறையாகும். அதன்பின் சவுல் மக்களிடம், “நாம் இன்றிரவே பெலிஸ்தியரைத் தொடர்ந்துபோய் விடியும்வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் உயிருடன் தப்பவிடாமல் தாக்குவோம்” என்றான். அதற்கு அவர்கள், “உமக்கு எது நல்லதாய்த் தோன்றுகிறதோ அதன்படி செய்யும்” என்றார்கள். ஆனால் ஆசாரியனோ சவுலிடம், “நாம் இங்கே முதலில் இறைவனிடம் போய் விசாரிப்போம்” என்றான். அப்பொழுது சவுல் இறைவனிடம், “நான் பெலிஸ்தியரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். ஆனால் இறைவன் அன்று அவனுக்கு பதிலளிக்கவில்லை. அதனால் சவுல் தன் படைத் தலைவர்களிடம், “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். இன்று என்ன பாவம் இங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம். அந்த பாவத்தைச் செய்தவன் என் மகன் யோனத்தானாயிருந்தாலும் அவனும் சாகவேண்டும். இஸ்ரயேலரை தப்புவிக்கிற யெகோவா இருப்பது நிச்சயமெனில், அவன் சாகவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான். ஆனால் மனிதரில் ஒருவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்பொழுது சவுல் இஸ்ரயேலர் எல்லோரிடமும், “நீங்கள் அங்கே நில்லுங்கள். நானும் என் மகன் யோனத்தானும் இங்கே நிற்போம்” என்றான். அதற்கு அவர்கள் சவுலிடம், “நீர் சரியென்று நினைப்பதைச் செய்யும்” என்றார்கள். எனவே சவுல் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவிடம், “யெகோவாவே சரியான பதிலை எனக்குத் தாரும்” என்று மன்றாடினான். சீட்டு சவுலின்மேலும், யோனத்தான்மேலும் விழுந்தது. மக்கள் நீங்கலாக்கப்பட்டார்கள். அப்பொழுது சவுல் மக்களிடம், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்குமிடையே சீட்டுப் போடுங்கள்” என்றான். யோனத்தானே குறிப்பிடப்பட்டான். எனவே சவுல் யோனத்தானிடம், “நீ என்ன குற்றம் செய்தாய்? எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “என்னுடைய கையிலிருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்துச் சுவைத்துப் பார்த்தேன். இப்பொழுது நான் சாகவேண்டுமோ?” என்று கேட்டான். அதற்கு சவுல், “யோனத்தானே, நீ சாகாவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்” என்றான். ஆனால் மனிதர் சவுலிடம், “யோனத்தான் சாகவேண்டுமோ? அவனல்லவோ இஸ்ரயேலருக்கு இப்பெரிய விடுதலையைக் கொண்டுவந்தான். வேண்டாம்! யெகோவா இருப்பது நிச்சயமெனில் அவன் தலையிலுள்ள ஒரு மயிரும் கீழே விழக்கூடாது. ஏனெனில் அவன் இறைவனின் உதவியுடனே இதை இன்று செய்தான்” என்றார்கள். இவ்விதம் மனிதர் யோனத்தானை விடுவித்ததினால் அவன் கொல்லப்படவில்லை. அதன்பின் சவுல் பெலிஸ்தியரைத் தொடராமல் திரும்பிவிட்டான். பெலிஸ்தியரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிப் போனார்கள். சவுல் இஸ்ரயேல் மக்களை அரசாட்சி செய்யத் தொடங்கியபின், சுற்றிலுமுள்ள தன் பகைவரான மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சோபாவின் அரசர்கள், பெலிஸ்தியர் ஆகியோருடன் யுத்தம் செய்தான். அவன் திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கு அவன் தண்டனையையே கொடுத்தான். அவன் வீரத்துடன் போரிட்டு, அமலேக்கியரைத் தோற்கடித்து இஸ்ரயேலரைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தான். சவுலின் குடும்பம் சவுலுக்கு யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள். அவனுக்கு இரண்டு மகள்களும் இருந்தார்கள். அவர்களில் மூத்தவள் பெயர் மேராப், இளையவள் பெயர் மீகாள். சவுலின் மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவனின் பெயர் அப்னேர். இவன் சவுலின் சிறிய தகப்பனான நேரின் மகன். சவுலின் தகப்பன் கீஷ், அப்னேரின் தகப்பன் நேரும் அபியேலின் பிள்ளைகள். சவுலின் காலம் முழுவதும் பெலிஸ்தியருடன் கடும் யுத்தம் நடந்தது. துணிவும், வீரமும் உள்ள ஒருவனைச் சவுல் கண்டால் உடனே அவனைத் தன் படையின் பணிக்குச் சேர்த்துக்கொள்வான். சவுலை அரசனாய் இராதபடி விலக்குதல் சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான். சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள். சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான். அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள். பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான். அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான். ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள். அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான். மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான். அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான். அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான். அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான். எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார். யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார். ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன். இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான். அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது. கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.” அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன். எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான். அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான். பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று. அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார். இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான். அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான். எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான். அதன்பின் சாமுயேல் சவுலிடம், “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டுவா” என்றான். “மரணத்தின் கசப்பு என்னைவிட்டு நீங்கி விட்டது” என்று எண்ணி தைரியத்துடன் ஆகாக் அங்கே வந்தான். ஆனால் சாமுயேல் அவனிடம், “உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று; அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்” என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான். பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். சாமுயேல் சவுலுக்காகத் துக்கப்பட்டபோதிலும்கூட, தான் சாகும்வரை திரும்பவும் சவுலைச் சந்திப்பதற்கு போகவில்லை. இஸ்ரயேலருக்குமேல் அரசனாகத் தாம் சவுலை நியமித்ததின் நிமித்தம் யெகோவா மனம் வருந்தினார். சாமுயேல் தாவீதை அபிஷேகம் பண்ணுதல் யெகோவா சாமுயேலிடம், “இஸ்ரயேலர்மேல் அரசனாயிராதபடி நான் புறக்கணித்த சவுலுக்காக நீ எவ்வளவு காலம் துக்கப்படுவாய். கொம்பில் எண்ணெய் நிரப்பிக்கொண்டு புறப்பட்டு வா. நான் உன்னைப் பெத்லெகேமியனான ஈசாயிடம் அனுப்பப்போகிறேன். அவனுடைய மகன்களில் ஒருவனை அரசனாக நான் தெரிவுசெய்திருக்கிறேன்” என்றார். அதற்கு சாமுயேல், “நான் எப்படிப்போவேன்? சவுல் இதைக் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுவிடுவானே?” என்றான். அதற்கு யெகோவா, “நான் யெகோவாவுக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி இளம்பசுவை ஒன்றை உன்னுடன் கொண்டுபோ. அவ்வாறு பலி செலுத்தும்போது நீ ஈசாவுக்கு அழைப்பு கொடு. அப்பொழுது நீ செய்யவேண்டியதை உனக்கு நான் காண்பிப்பேன். நான் குறிப்பிடுபவனை நீ அபிஷேகம் செய்யவேண்டும்” என்றார். யெகோவா சொன்னபடியே சாமுயேல் செய்தான். பின்பு சாமுயேல் பெத்லெகேமுக்கு வந்தபோது அப்பட்டணத்தின் முதியவர்கள் நடுக்கத்துடன் அவனைச் சந்திக்க வந்தார்கள். “நீர் சமாதானத்துடன் தான் வருகிறீரா?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்குச் சாமுயேல், “ஆம் சமாதானத்துடன் தான் வந்திருக்கிறேன். நான் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்திருக்கிறேன். நீங்களும் உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு என்னுடன் பலிசெலுத்த வாருங்கள்” என்றான். பின்பு ஈசாயையும் அவன் மகன்களையும் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் பலிக்கு அழைத்தான். அவர்கள் அங்கே வந்தபோது, சாமுயேல் எலியாபைக் கண்டவுடன், “உண்மையாகவே யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்முன் நிற்கிறான்” என நினைத்தான். ஆனால் யெகோவா சாமுயேலிடம், “இவனுடைய தோற்றத்தையும், உயரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்து விட்டேன். ஏனெனில் மனிதர் பார்ப்பதைப் போல் யெகோவா பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்ப்பான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார். அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்துச் சாமுயேலுக்கு முன்னால் போகச்செய்தான். சாமுயேலோ, “யெகோவா இவனைத் தெரிந்துகொள்ளவில்லை” என்றான். அப்பொழுது ஈசாய் சம்மாவைச் சாமுயேல் முன்னால் போகும்படி செய்தான். “இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். இவ்வாறு ஈசாய் தன் ஏழு மகன்களையும் சாமுயேல் முன் கொண்டுவந்தான். ஆனால், “இவர்களை யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். மேலும் சாமுயேல் ஈசாயிடம், “உன்னுடைய மகன்கள் இவர்கள் மட்டும்தானா?” என்று கேட்டான். அதற்கு அவன், “இன்னும் எல்லோருக்கும் இளையமகன் ஒருவன் இருக்கிறான். அவன் இப்பொழுது செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான். அப்பொழுது சாமுயேல் ஈசாயிடம், “அவனை அழைத்துவர ஆளனுப்பு. அவன் இங்கு வருமட்டும் நாம் பந்தியிருக்க மாட்டோம்” என்றான். எனவே ஈசாய் ஆளனுப்பி அவனை வரவழைத்தான். அவன் சிவந்த உடலும், அழகிய முகமும், வசீகரத் தோற்றமும் உடையவனாயிருந்தான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “நான் சொன்னவன் இவன்தான். நீ எழுந்து இவனை அபிஷேகம் செய்” என்றார். உடனே சாமுயேல் எண்ணெய்க் கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனை அபிஷேகம் பண்ணினான். அந்த நாள் தொடக்கம் யெகோவாவின் ஆவியானவர் தாவீதின்மேல் வல்லமையுடன் இறங்கியிருந்தார். அதன்பின் சாமுயேல் எழுந்து ராமாவுக்கு திரும்பிப்போனான். சவுலின் பணியில் தாவீது யெகோவாவின் ஆவியானவர் சவுலை விட்டு நீங்கிப்போனார். யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனை வதைத்தது. சவுலின் ஏவலாட்கள் அவனிடம், “இறைவன் அனுப்பிய ஒரு பொல்லாத ஆவி உம்மைத் துன்பப்படுத்துகிறது. யாழ் வாசிக்கக்கூடிய ஒருவனைத் தேடிக் கொண்டுவரும்படி உமது வேலையாட்களிடம் ஆண்டவன் கட்டளையிடட்டும். இறைவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் வரும்போது அவன் தன் கையால் யாழை வாசித்தால் நீர் சுகமடையலாம்” என்று சொன்னார்கள். சவுல் தன் வேலையாட்களிடம், “நீங்கள் போய் நன்றாய் யாழ் வாசிக்கும் ஒருவனைத் தேடி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது வேலையாட்களில் ஒருவன், “பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை நான் கண்டிருக்கிறேன். அவன் யாழ் வாசிப்பதில் சிறந்தவன். அவன் வலிமைமிக்க போர்வீரன்; பேச்சில் சமர்த்தன். வசீகர தோற்றமுடையவன். யெகோவா அவனோடுகூட இருக்கிறார்” என்றான். எனவே சவுல் ஈசாயிடம் தூதுவரை அனுப்பி, “செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பு” என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய் அப்பங்களையும், ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், ஒரு கழுதையின்மேல் ஏற்றி தாவீதின் மூலமாய்ச் சவுலுக்கு அனுப்பினான். அவ்வாறே தாவீது சவுலிடம் வந்து அவனுடைய வேலையில் சேர்ந்தான். சவுல் அவனை அதிகம் விரும்பினான். தாவீது அவனுடைய ஆயுதம் சுமப்பவர்களில் ஒருவனானான். சவுல் ஈசாயிடம் ஆளனுப்பி, “தாவீதை நான் விரும்புகிறேன். அதனால் அவன் என் பணியில் இருக்கும்படி அவனை அனுமதி” என்று சொல்லி அனுப்பினான். அதன்பின் இறைவனால் அனுப்பப்படும் பொல்லாத ஆவி சவுலின்மேல் வரும்போதெல்லாம் தாவீது தன் யாழை வாசிப்பான். அப்போது சவுலுக்கு விடுதலை கிடைக்கும். அவன் சுகமடைவான். அந்த பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்கிவிடும். தாவீதும் கோலியாத்தும் பெலிஸ்தியர் யுத்தத்திற்காக படை திரட்டிக்கொண்டு யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றுகூடினார்கள். சோக்கோவுக்கும், அசேக்காவுக்கும் நடுவேயுள்ள எபேஸ் தம்மீமிலே அவர்கள் முகாமிட்டார்கள். சவுலும் இஸ்ரயேலரும் ஒன்றுகூடி ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிடும்படி அணிவகுத்து நின்றார்கள். அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருக்கத்தக்கதாக பெலிஸ்தியர் ஒரு மலையிலும், இஸ்ரயேலர் மற்றொரு மலையிலும் நின்றார்கள். அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் மாவீரன் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வெளியே வந்து நின்றான். அவன் ஒன்பது அடிக்கும் அதிகமான உயரமுள்ளவனாய் இருந்தான். அவன் தலையில் வெண்கலக் கவசம் போட்டுக்கொண்டு, ஐயாயிரம் சேக்கல் நிறையுள்ள வெண்கல செதில்களாலான ஒரு போர் கவசமும் அணிந்திருந்தான். அவன் தன் கால்களில் வெண்கல கவசங்களையும் போட்டிருந்தான். அவனுடைய முதுகிலே ஒரு வெண்கல கேடகம் தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய ஈட்டியின் பிடி நெசவுதறி மரம்போல் இருந்தது. அதன் இரும்பு முனை அறுநூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தது. கேடகம் பிடித்தவன் அவன் முன்னே நடந்தான். கோலியாத் இஸ்ரயேலின் போர்ப்படைக்கு முன் வந்துநின்று உரத்த சத்தமாய், “நீங்கள் ஏன் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் வேலையாட்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்தெடுத்து என்னிடம் அனுப்புங்கள். அவன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்கள் அடிமைகளாவோம். நான் அவனோடு போர்செய்து அவனைக் கொன்றால் நீங்கள் எங்கள் அடிமைகளாய் எங்களுக்குப் பணிசெய்வீர்கள்” என்றான். பின்னும் அந்தப் பெலிஸ்தியன், “நான் இன்று இஸ்ரயேல் படையைப் போருக்கு வரும்படி அறைகூவல் விடுக்கிறேன். ஒருவனை அனுப்புங்கள். நாங்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிடுவோம்” என்றான். சவுலும் இஸ்ரயேல் மக்களும் அந்த பெலிஸ்தியனின் வார்த்தைகளைக் கேட்டபோது, சோர்வுற்று திகிலடைந்தார்கள். தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த, எப்பிராத்தியனான ஈசாயின் மகனாயிருந்தான். ஈசாய் என்பவனுக்கு எட்டு மகன்களிருந்தார்கள். அவன் சவுலின் காலத்தில் முதியவனும் வயது சென்றவனுமாயிருந்தான். ஈசாயின் மூத்த மகன்கள் மூவரும் யுத்தம் செய்ய சவுலைப் பின்பற்றி சென்றிருந்தார்கள். முதல்பேறானவன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சம்மா என்பவர்கள் ஆவர். தாவீது எல்லோரிலும் இளையவன். மூத்தவர்கள் மூன்றுபேரும் சவுலைப் பின்பற்றிப் போயிருந்தார்கள். ஆனால் தாவீது தன் தகப்பனின் செம்மறியாடுகளை மேய்ப்பதற்காக இடையிடையே சவுலிடமிருந்து பெத்லெகேமுக்குப் போவதும் வருவதுமாய் இருந்தான். அந்நாட்களில் நாற்பது நாட்களாக அந்தப் பெலிஸ்தியன், ஒவ்வொரு காலையும், மாலையும் இவ்வாறு முன்னேவந்து, அங்கு நின்று சவால் விட்டான். ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ. அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா. அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான். இஸ்ரயேலரும், பெலிஸ்தியரும் போருக்கு ஆயத்தமாக நேருக்குநேர் நின்றார்கள். தாவீது தான் கொண்டுவந்த பொருட்களை உணவுவிநியோக பொறுப்பாளனிடம் கொடுத்துவிட்டு, படை அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடித் தன் சகோதரரை வாழ்த்தினான். அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான். இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த வீரர்கள் அவனிடம், “அவனைக் கொல்பவனுக்கு இவ்விதமாகவே செய்யப்படும்” என்று சொல்லி, முன்பு சொன்னவற்றையே மறுபடியும் சொன்னார்கள். தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான். அதற்கு தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்துவிட்டேன்? நான் பேசவும் கூடாதா?” என்று கேட்டான். பின்பு தாவீது அவனைவிட்டுச் சென்று வேறொருவனிடம் அதே கேள்வியைக் கேட்டான். முன் சொல்லப்பட்ட பதிலையே அவனும் சொன்னான். தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான். அப்பொழுது தாவீது சவுலிடம், “அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்கவேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான். அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனுக்கு எதிராய் போய், சண்டையிட உன்னால் முடியாது. நீயோ ஒரு சிறுவன். அவனோ இளமை முதல் போர் வீரனாய் இருக்கிறான்” என்றான். அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம், நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன். இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான். மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான். பின்பு சவுல் தன் இராணுவ சீருடைகளை தாவீதுக்கு உடுத்துவித்தான். தன் போர்கவசத்தையும், வெண்கல தலைக்கவசத்தையும் அணிவித்தான். தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான். பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான். அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான். அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நன்றாகப் பார்த்து, அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்றும், சிவந்த உடலுடையவனும், அழகுள்ளவனும் என்று கண்டு அவனை அலட்சியம் செய்தான். அவன் தாவீதிடம், “நீ தடிகளுடன் என்னிடம் வருவதற்கு நான் என்ன ஒரு நாயா?” என்று கேட்டுத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லித் தாவீதைச் சபித்தான். மேலும் அவன் தாவீதிடம், “என்னிடத்தில் இங்கே வா; உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான். அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன். இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும். அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான். அந்த பெலிஸ்தியன் அவனைத் தாக்குவதற்கு நெருங்கி வருகையில், தாவீது அவனை எதிர்கொள்ள போர்முனைக்கு விரைந்தோடினான். தாவீது தன் பைக்குள் தன் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து அதை கவணில் வைத்து, அதை வீசி பெலிஸ்தியனின் நெற்றியில் அடித்தான். அந்தக் கல் பெலிஸ்தியனின் நெற்றியில் பதிந்ததால், அவன் முகங்குப்புற நிலத்தில் விழுந்தான். இவ்வாறு தாவீது ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை வெற்றிகொண்டான். கையில் வாள் இல்லாமலே தாவீது பெலிஸ்தியனை அடித்து வீழ்த்தி அவனைக் கொன்றான். உடனே தாவீது ஓடிப்போய் பெலிஸ்தியனின் மேலாக நின்றான். பெலிஸ்தியனின் வாளை உறையிலிருந்து உருவி எடுத்து, தான் கொன்றவனின் தலையை வெட்டிப்போட்டான். தங்கள் வீரன் இறந்ததைக் கண்ட பெலிஸ்தியர் திரும்பி ஓடினார்கள். அப்பொழுது யூதா, இஸ்ரயேல் மனிதர்களும் திரண்டு ஆர்ப்பரித்து அவர்களைத் துரத்திச் சென்றார்கள். இவ்வாறு காத்தின் நுழைவாசல் வரையும், எக்ரோனின் வாசல்கள் வரையும் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றார்கள். அவர்களின் இறந்தவர்களின் உடல்கள் சாராயீமின் வழியில் காத், எக்ரோன் மட்டும் பரவிக்கிடந்தன. இஸ்ரயேலர் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றபின், திரும்பிவந்து அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள். பின்பு தாவீது பெலிஸ்தியனின் தலையை எடுத்துக்கொண்டு எருசலேமுக்கு வந்தான். ஆனால் அவனுடைய ஆயுதங்களைத் தன் சொந்த கூடாரத்தில் வைத்தான். தாவீது பெலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டு போகிறதை பார்த்துக்கொண்டிருந்த சவுல் தனது படைத்தலைவனான அப்னேரிடம், “இந்த வாலிபன் யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்கு அப்னேர், “அரசே! நீர் வாழ்வது நிச்சயம்போல அவன் யாரென்று எனக்குத் தெரியாது” என்றான். அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான். தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின் திரும்பி வந்தவுடனே அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வந்தான். தாவீதின் கையில் இன்னும் பெலிஸ்தியனின் தலை இருந்தது. சவுல் அவனிடம், “வாலிபனே, நீ யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “நான் பெத்லெகேம் ஊரானான உமது ஊழியன் ஈசாயின் மகன்” என்றான். தாவீதுமேல் சவுலின் பொறாமை சவுல் தாவீதுடன் பேசி முடித்தபின், யோனத்தான் தாவீதுடன் ஆவியில் ஒன்றிணைந்தான். யோனத்தான் தாவீதைத் தன்னைப்போல் நேசித்தான். அன்றிலிருந்து சவுல் தாவீதை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போகவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான். யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். யோனத்தான் தான் உடுத்தியிருந்த மேலங்கியைக் கழற்றி, அதனுடன் தனது உடைகளையும் தாவீதுக்குக் கொடுத்தான். அத்துடன் தனது வாள், வில், இடைக்கச்சை முதலியவற்றையும் அவனுக்குக் கொடுத்தான். சவுல் செய்யச் சொல்லி அனுப்பிய எந்த வேலையையும் தாவீது திறமையாகச் செய்தான். இதனால் சவுல் அவனுக்கு படையில் ஒரு உயர்பதவி கொடுத்தான். இது மக்களுக்கும், சவுலின் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாவீது பெலிஸ்தியனைக் கொலைசெய்தபின், இஸ்ரயேலின் மனிதர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது இஸ்ரயேலின் எல்லா பட்டணங்களிலுமிருந்தும் பெண்கள் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பாடல்களோடும், தம்புராக்களோடும், வீணைகளோடும் அரசன் சவுலைச் சந்திக்கும்படி வந்தார்கள். அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது: “சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான். தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.” அதைக்கேட்ட சவுல் அதிக கோபமடைந்தான். அந்தப் பாட்டு அவனுக்கு கசப்பாயிருந்தது. “தாவீதுக்கு பத்தாயிரமும், எனக்கு ஆயிரமும் என்று சொல்லியல்லவா மதிப்புக் கொடுக்கிறார்கள். மேலும் அவனுக்கு அரசாட்சியைவிட வேறு எதை அதிகமாய் கொடுப்பார்கள்” என்று நினைத்தான். அந்த நேரம் முதல் சவுல் பொறாமைக் கண் கொண்டே தாவீதைப் பார்த்தான். மறுநாள் இறைவனிடமிருந்து வந்த பொல்லாத ஆவி சவுலின்மேல் வல்லமையாய் இறங்கியது. அவன் வீட்டுக்குள்ளே பிதற்றிக்கொண்டிருந்தான்; தாவீது தினந்தோறும் வாசிக்கிறதுபோல் யாழ் வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது சவுலின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. சவுல், “தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஈட்டியை அவன்மேல் எறிந்தான். ஆனால் தாவீது இருமுறை விலகித் தப்பினான். யெகோவா தன்னைவிட்டு விலகித் தாவீதுடன் இருப்பதினால் சவுல் தாவீதுக்குப் பயப்பட்டான். எனவே தாவீதைத் தன்னிடமிருந்து அனுப்பிவிட்டு, ஆயிரம் படைவீரருக்கு அவனைத் தலைவனாக்கினான். தாவீது தன் போர் வீரர்களைத் தலைமைதாங்கி நடத்தினான். தாவீது தான் செய்தவைகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; ஏனெனில் யெகோவா அவனோடுகூட இருந்தார். தாவீது இவ்வாறு பெரும் வெற்றியீட்டியதைக் கண்ட சவுல் அவனுக்குப் பயந்தான். எல்லா இஸ்ரயேலர்களும் யூதாவின் மக்களும் தாவீதிடம் அன்பு செலுத்தினார்கள். ஏனெனில் அவன் எல்லா யுத்தங்களையும் தலைமை வகுத்து நடத்தினான். சவுல் தாவீதிடம், “என் மூத்த மகள் மேராப் இருக்கிறாள். அவளை நான் உனக்குத் திருமணம் செய்துகொடுப்பேன். நீ எனக்குத் தைரியமாய் பணிசெய்து யெகோவாவின் யுத்தத்தை நடத்து” என்றான். “நான் அவனுக்கு எதிராகக் கையை உயர்த்தமாட்டேன். பெலிஸ்தியரே அதைச் செய்யட்டும்” எனச் சவுல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். ஆனால் தாவீது சவுலிடம், “அரசனின் மருமகனாவதற்கு நான் யார்? என் குடும்பமும், இஸ்ரயேலரில் என் தந்தையின் வம்சம் என்ன!” என்றான். எனவே சவுலின் மகள் மேராபை தாவீதுக்குக் கொடுக்கவேண்டிய காலம் வந்தபோது, சவுல் அவளை மேகோலாத்தியனான ஆதரியேலுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். ஆனால் சவுலின் மற்ற மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். சவுலுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டபோது அவன் மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், “அவளை அவனுக்குக் கொடுப்பேன். இதனால் பெலிஸ்தியரின் கரம் அவனுக்கு எதிராக வருவதற்கு அவள் அவனுக்குக் கண்ணியாயிருப்பாள்” என நினைத்தான். எனவே சவுல் தாவீதிடம், “இப்பொழுது உனக்கு எனது மருமகனாவதற்கு இரண்டாவது தருணம் கிடைத்திருக்கிறது” என்றான். பின்பு சவுல் தன் ஏவலாளர்களிடம் உத்தரவிட்டுச் சொன்னதாவது: “நீங்கள் தாவீதிடம், அரசனும் உன்னில் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஏவலாட்களும் உன்னிடம் அன்பாயிருக்கிறார்கள். எனவே நீ அரசனின் மருமகனாவது நல்லது என்று இரகசியமாய்ச் சொல்லுங்கள்” என்றான். அவ்வாறே இந்த வார்த்தைகளை அவர்கள் தாவீதிடம் சொன்னார்கள். அதைக்கேட்ட தாவீது, “அரசனின் மருமகனாவது உங்களுக்குச் சிறிய காரியமாகத் தோன்றுகிறதா? நானோ ஒரு ஏழையும், மதிக்கப்படாதவனுமாய் மட்டுமே இருக்கிறேன்” என்றான். எனவே தாவீது சொன்னவற்றைப் பணியாட்கள் சவுலிடம் சொன்னார்கள். அதற்கு சவுல், “நீங்கள் தாவீதிடம், ‘அரசனுடைய பகைவரைப் பழிவாங்கும் பொருட்டு, நூறு பெலிஸ்தியருடைய நுனித்தோல்களைவிட, அரசன் மணப்பெண்ணுக்குரிய வேறு எந்த வெகுமதியையும் கேட்க விரும்பவில்லை’ என்று சொல்லுங்கள்” என்றான். இவ்விதமாக பெலிஸ்தியரின் கையினால் தாவீதை வீழ்த்துவதே சவுலின் திட்டமாயிருந்தது. சவுலின் ஏவலாட்கள் அவன் சொன்னவற்றைத் தாவீதுக்குச் சொன்னபோது, அரசனுக்கு மருமகனாவதில் மகிழ்ச்சியடைந்தான். எனவே குறித்த காலம் முடியுமுன், தாவீது தன் போர்வீரருடன் சென்று இருநூறு பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களின் நுனித்தோலைக் கொண்டுவந்து அரசனின் மருமகனாகும்படி முழு எண்ணிக்கையையும் அரசனிடம் செலுத்தினான். அப்பொழுது சவுல் தன் மகள் மீகாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். யெகோவா தாவீதுடன் இருக்கிறார் என்பதையும், தன் மகள் மீகாள் தாவீதில் அன்பாயிருக்கிறாள் என்பதையும் சவுல் உணர்ந்து கொண்டான். இதனால் சவுல் தாவீதுக்கு இன்னும் அதிகமாய்ப் பயந்தான். அதுமுதல் சவுல் தன் கடைசிநாள் வரையும் தாவீதின் பகைவனாயிருந்தான். பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் தொடர்ந்து யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் சவுலின் மற்ற படைத் தலைவர்களையும்விட, தாவீது அதிக வெற்றியடைந்தான். இதனால் அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது. சவுல் தாவீதைக் கொல்ல முயற்சித்தல் தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான். அதனால் யோனத்தான் அவனை எச்சரித்துச் சொன்னதாவது: “எனது தகப்பன் சவுல் உன்னைக் கொலைசெய்யச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் நாளை காலை எச்சரிக்கையாயிருந்து, இரகசியமான ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திரு. நான் வெளியே போய் நீ ஒளிந்திருக்கும் வயல்வெளியில் என் தகப்பனாருடன் உனக்காக பேசுவேன். அதன்பின் நான் அறிந்ததை உனக்குச் சொல்வேன்” என்றான். இவ்விதமாய் யோனத்தான் தன் தகப்பன் சவுலிடம் தாவீதைப் பற்றி நன்றாய்ப் பேசி அவனிடம், “அரசன் தமது ஊழியன் தாவீதுக்கு ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவேண்டும். அவன் உங்களுக்குத் தீமை செய்யவில்லை. அவன் செய்திருப்பது உங்களுக்கு அதிக நன்மையே கொடுத்திருக்கிறது. அவன் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனைக் கொன்றானே. இதனால் யெகோவா இஸ்ரயேலருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். நீங்களும் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தீர்கள். அப்படியிருக்க ஏன் தாவீதைப்போல் குற்றமற்ற ஒருவனைக் காரணமில்லாமல் கொலைசெய்து ஒரு தீமையை செய்யவேண்டும்” என்றான். சவுல் யோனத்தான் சொன்னதைக் கேட்டு, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், தாவீதும் கொல்லப்படுவதில்லை என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான். அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான். மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள். ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான். அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான். அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள். எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான். பின்பு மீகாள் ஒரு விக்கிரகத்தை எடுத்து அவனுடைய கட்டிலின்மேல் வைத்து, ஒரு போர்வையால் மூடி வெள்ளாட்டு மயிரைத் தலைமாட்டில் வைத்தாள். தாவீதைப் பிடித்து வரும்படி சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது அவன் வியாதியாய் இருப்பதாக மீகாள் சொன்னாள். திரும்பவும் தாவீதைப் பார்ப்பதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பி, “அவனைக் கொலை செய்யும்படி கட்டிலோடு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். அந்த மனிதர் அவனுடைய வீட்டுக்குள் வந்தபோது, அவனுடைய கட்டிலின்மேல் ஒரு விக்கிரகமும் அதன் தலையில் ஒரு வெள்ளாட்டு மயிர்த்தோலும் இருப்பதைக் கண்டார்கள். அப்பொழுது சவுல் மீகாளிடம், “என்னை ஏமாற்றி என் பகைவனை ஏன் இப்படி தப்பவைத்தாய்?” என்று கேட்டான். அதற்கு மீகாள், “தாவீது என்னிடம், என்னைத் தப்பிப் போகவிடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சொன்னான்” என்றாள். இவ்விதமாய்த் தாவீது தப்பி ஓடி ராமாவிலிருந்த சாமுயேலிடம் போய் சவுல் தனக்குச் செய்தவற்றையெல்லாம் சொன்னான். அதன்பின் அவனும் சாமுயேலும் நாயோத்திற்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள். அப்பொழுது தாவீது ராமாவிலுள்ள நாயோதிலே தங்கியிருக்கிறான் என்பதைச் சவுல் கேள்விப்பட்டான். எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். இதைப்பற்றிச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது வேறு மனிதரை அனுப்பினான். அவர்களும் அவ்வாறே இறைவாக்கு உரைத்தார்கள். மூன்றாம் முறையும் சவுல் மனிதரை அனுப்பினான். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது சவுல் ராமாவிலுள்ள நாயோதுக்குப் போகும் வழியில் இறைவனின் ஆவியானவர் அவன் மேலும் இறங்கினார். அவன் நாயோதுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் இறைவாக்கு உரைத்துக்கொண்டே போனான். சவுல் தன் மேலுடையைக் கழற்றிவிட்டு சாமுயேலுக்கு முன்பாக மற்றவர்களைப்போல் இறைவாக்கு உரைத்தான். அன்று பகலும் இரவும் அவ்வாறே விழுந்து கிடந்தான். இதனாலேயே, “சவுலும் இறைவாக்கு உரைப்போரில் ஒருவனோ?” என்று மக்கள் கேட்கும் வழக்கம் உண்டாயிற்று. தாவீதும் யோனத்தானும் அதன்பின் தாவீது ராமாவிலுள்ள நாயோதிலிருந்து தப்பி யோனத்தானிடம் போனான். அவன் யோனத்தானிடம், “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உமது தகப்பன் என்னைக் கொலைசெய்யத் தேடும்படி, நான் அவருக்கு என்ன பிழை செய்தேன்?” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “ஒருபோதும் இல்லை. நீ சாகப் போவதில்லை. பார், எனது தகப்பன் சிறிதோ, பெரிதோ எதையும் எனக்குச் சொல்லாமல் செய்யமாட்டார். இதைமட்டும் ஏன் எனக்கு மறைக்கவேண்டும். அப்படியிருக்காது” என்று சொன்னான். அப்பொழுது தாவீது யோனத்தானிடம், “எனக்கு உனது கண்களில் தயவு கிடைத்திருக்கிறது என்பது உனது தகப்பனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர், இது யோனத்தானுக்குத் தெரியவந்தால் அவன் மனம் வருந்துவான். அவனுக்குத் தெரியக்கூடாது என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருக்கிறார். யெகோவா இருப்பதும், நீ வாழ்வதும் நிச்சயம்போல, மரணத்துக்கும், எனக்கும் ஒரு அடி தூரம் மட்டும் இருக்கிறதென்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்து சொன்னான். அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “இப்பொழுது நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என நீ விரும்புகிறாயோ அதை நான் செய்வேன்” என்றான். அதற்குத் தாவீது யோனத்தானை நோக்கி, “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. நான் அப்பொழுது அரசனுடன் பந்தியிலிருந்து சாப்பிடவேண்டும். ஆனால் நாளை மறுநாள் மாலைவரைக்கும் வயல்வெளியில் ஒளித்திருப்பதற்கு என்னைப் போகவிடு. உனது தந்தை நான் அங்கு இல்லாததைக் கண்டு விசாரித்தால், நீ அவரிடம், ‘தாவீது தன் முழு வம்சத்தாருக்குமான வருடாந்த பலி செலுத்தப்படுவதற்குத் தன் ஊரான பெத்லெகேமுக்கு விரைவாகப் போக வேண்டுமென்று என்னிடம் ஆவலுடன் அனுமதி கேட்டான்’ என்று சொல். அதற்கு உனது தந்தை, ‘மிக நல்லது’ என்று பதிலளித்தால், உனது அடியவனுக்கு பாதுகாப்பு உண்டு. அவர் கோபமடைந்தால், அவர் எனக்குத் தீமைசெய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று அப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்வாய். உன்னைப் பொறுத்தமட்டில் நீ யெகோவாவுக்குமுன் ஒரு உடன்படிக்கை செய்தபடியால், நீ உன் அடியவனுக்குத் தயவுகாட்ட வேண்டும். நான் குற்றவாளியானால் நீயே என்னைக் கொன்றுவிடு. ஏன் உனது தகப்பனிடம் என்னைக் கையளிக்க வேண்டும்” என்று கேட்டான். அதற்கு யோனத்தான் தாவீதிடம், “ஒருபோதும் இல்லை. எனது தகப்பன் உனக்குத் தீமைசெய்ய தீர்மானித்திருக்கிறாரென்பதை நான் சிறிதளவேனும் அறிந்திருந்தால் அதை உனக்குச் சொல்லாமல் இருப்பேனோ?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “உனது தகப்பன் உனக்குக் கடுமையாகப் பதிலளித்தால், அதை யார் எனக்குச் சொல்வார்கள்?” என்று கேட்டான். அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “நாங்கள் வெளியே வயலுக்குப் போவோம் வா” என்றான். அவர்கள் ஒன்றாய்ப் போனார்கள். அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சாட்சியாக நான் சொல்வது என்னவென்றால், நாளை மறுநாள் இதே நேரத்தில் எனது தந்தையின் மனதை அறிந்துகொள்வேன். அவர் உன்மேல் நல்ல மனதுள்ளவராயிருந்தால், நான் உனக்கு ஆளனுப்பி தெரியப்படுத்த மாட்டேனா? எனது தகப்பனார் உனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டிருந்தும் அதை நான் உனக்கு அறிவித்து, உன்னை வெளியே பாதுகாப்பாக அனுப்பாவிட்டால், யெகோவா எவ்வளவு கடுமையாகவும் என்னைத் தண்டிக்கட்டும். யெகோவா என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பாராக. நான் உயிரோடு இருக்கும்வரைக்கும், நான் கொல்லப்படாதபடி, யெகோவாவின் குன்றாத தயவைப் போல் எனக்கு நீயும் தயவுகாட்டுவாயாக. நீ ஒருபோதும் என் குடும்பத்தினரிடமுள்ள உன்னுடைய தயவை எடுத்துப் போடாதே. தாவீதின் பகைவர்கள் அனைவரையும் பூமியிலிருந்து யெகோவா அழித்தாலும்கூட, நீ அப்படிச் செய்யாதே” என்று சொன்னான். இவ்வாறு யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கை செய்து, “யெகோவா தாவீதின் பகைவர்களிடமிருந்து கணக்குக் கேட்பாராக” என்றான். யோனத்தான் தன்னைப்போல தாவீதிலும் அன்பாயிருந்தான். அவனிடம் தனக்குள்ள அந்த அன்பின் நிமித்தம், தாவீதைத் திரும்பவும் அந்த ஆணையை உறுதிப்படுத்தும்படி செய்தான். அதன்பின் யோனத்தான் தாவீதிடம், “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. பந்தியில் உன் இடம் வெறுமையாயிருப்பதால் நீ அங்கு இல்லாதது தெரியவரும். பிரச்சனை தொடங்கும்போது, நாளை மறுதினம் மாலை நேரத்தில், நீ மறைந்திருந்த இடத்திற்குப் போய் அங்கே ஏசேல் என்னும் கல்லருகில் காத்திரு. அப்பொழுது நான் இலக்கை நோக்கி எய்துவது போல் மூன்று அம்புகளை அந்த கல்லின் அருகே எய்வேன். பின் நான் ஒரு சிறுவனை அனுப்பி, ‘நீ போய் அம்புகளை எடுத்து வா’ என்று சொல்வேன். நான் அவனிடம், ‘பார், அம்புகள் உனக்கு இந்தப் பக்கத்தில் இருக்கின்றன; அவற்றை இங்கே கொண்டுவா,’ என்று சொன்னால் நீ என்னிடம் வா. ஏனெனில் யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ பாதுகாப்பாய் இருக்கிறாய் என்பதும், உனக்கு ஆபத்து இல்லை என்பதும் நிச்சயம். ஆனால் நான் சிறுவனிடம், ‘அம்புகள் உனக்கு அப்பால் இருக்கின்றன’ என்று சொன்னால் நீ போய்விடு. ஏனெனில் யெகோவா உன்னை வெளியே அனுப்பியிருக்கிறார். இப்பொழுது நீயும் நானும் பேசிக்கொண்டவற்றைப் பற்றி, யெகோவாவே உனக்கும் எனக்கும் இடையில் எப்பொழுதும் சாட்சி என்பதை நினைத்துக்கொள்” என்றான். எனவே தாவீது வயல்வெளியில் ஒளிந்திருந்தான். அமாவாசைப் பண்டிகையன்று சாப்பிடுவதற்கு சவுல் அரசன் பந்தியில் உட்கார்ந்தான். அரசன் சுவர் அருகேயிருந்த தனது வழக்கமான இடத்தில் உட்கார்ந்தான். யோனத்தான் சவுலுக்கு எதிரேயும், அப்னேர் சவுலின் பக்கத்திலும் உட்கார்ந்திருந்தார்கள். தாவீதின் இடமோ வெறுமையாய் இருந்தது. “தாவீதுக்கு சம்பிரதாயப்படி அவனை அசுத்தப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். நிச்சயமாக அவன் அசுத்தமாயிருக்கிறான்” என்று சவுல் எண்ணி அன்று ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் மறுநாளான மாதத்தின் இரண்டாவது நாளும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. அப்பொழுது சவுல் தன் மகன் யோனத்தானிடம், “ஈசாயின் மகன் நேற்றும், இன்றும் சாப்பிட ஏன் பந்திக்கு வரவில்லை” என்று கேட்டான். அதற்கு யோனத்தான் சவுலிடம், “பெத்லெகேம் போய் வருவதற்குத் தனக்கு விடை தரும்படி என்னை தாவீது வருத்திக் கேட்டான். அவன் என்னிடம், ‘எனது குடும்பத்தினர் பட்டணத்திலே பலிசெலுத்தப் போகிறார்கள். என்னுடைய சகோதரன் என்னை அங்கே வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உம்முடைய கண்களிலே எனக்குத் தயவு கிடைக்குமானால் நான் போய் என் சகோதரரைப் பார்ப்பதற்கு எனக்கு விடை தாரும்’ என்று கேட்டான். அதனால்தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை” என்றான். அதைக்கேட்ட சவுலுக்கு யோனத்தான்மேல் கோபம் மூண்டது. அவனிடம், “கேடுகெட்ட உண்மையற்றவளின் மகனே! நீ உன் வெட்கத்திற்கும் உன்னைப் பெற்ற தாயின் வெட்கத்திற்கும் ஏற்றபடியே, ஈசாயின் மகனோடு கூட்டுச்சேர்ந்திருக்கிறாய். ஈசாயின் மகன் இந்த பூமியின்மேல் உயிரோடிருக்கும் மட்டும், நீயோ உன் அரசாட்சியோ நிலைநிறுத்தப்படாது. ஆகையால் இப்பொழுது ஆள் அனுப்பு. அவனை என்னிடம் கொண்டுவா. அவன் சாகவேண்டும்” என்றான். அதற்கு யோனத்தான் தன் தகப்பனிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான். இதனால் சவுல் யோனத்தானைக் கொல்லும்படி தன் ஈட்டியை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது தாவீதைக் கொல்வதற்குத் தன் தகப்பன் எண்ணங்கொண்டிருக்கிறார் என்று யோனத்தான் அறிந்துகொண்டான். எனவே யோனத்தான் கடுங்கோபத்துடன் பந்தியை விட்டு எழுந்தான். தனது தகப்பன், தாவீதை இவ்வளவு வெட்கக்கேடாக நடத்தியபடியால் மனம்வருந்தி, பண்டிகையில் இரண்டாம் நாளிலே அவன் சாப்பிடவில்லை. மறுநாள் காலையில் யோனத்தான் தாவீதைச் சந்திப்பதற்காக வயலுக்குப் போனான். அவனுடன் ஒரு சிறுவன் இருந்தான். யோனத்தான் அந்த சிறுவனிடம், “நான் எய்யும் அம்புகளை நீ ஓடிப்போய்த் தேடி எடுத்து வா” என்று சொன்னான். அச்சிறுவன் ஓடும்போது அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். யோனத்தான் எய்த அம்பு விழுந்த இடத்திற்குச் சிறுவன் ஓடியபோது யோனத்தான் சத்தமிட்டு அவனைக் கூப்பிட்டு, “அம்பு உனக்கு அப்பால் இருக்கிறதல்லவா” என்றான். பின்பும் யோனத்தான் சத்தமிட்டு, “விரைந்து ஓடிப்போ; வேகமாய்ப் போ; நில்லாதே” என்றான். யோனத்தானுடன் வந்த சிறுவன் அம்புகளைப் பொறுக்கிக்கொண்டு அவனிடம் வந்தான். சிறுவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே இது தெரிந்திருந்தது. அதன்பின் யோனத்தான் தன் ஆயுதங்களையெல்லாம் சிறுவனிடம் கொடுத்து அவனிடம், “இவற்றையெல்லாம் திரும்பவும் பட்டணத்துக்குக் கொண்டுபோ” என்று சொல்லி அனுப்பினான். சிறுவன் போனவுடனே தாவீது தான் மறைந்திருந்த கல்லின் தெற்குப் பக்கத்திலிருந்து வெளியே வந்து, முகங்குப்புற விழுந்து மூன்றுமுறை யோனத்தானை வணங்கினான். அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டு அழுதார்கள். தாவீதே அதிகமாக அழுதான். அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “சமாதானத்தோடே போ, யெகோவாவின் பெயரில் நாம் இருவரும் ஒருவரோடொருவர் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டோம். யெகோவா உனக்கும் எனக்கும் இடையிலும், என் சந்ததிக்கும் உன் சந்ததிக்கும் இடையிலும் என்றென்றைக்கும் சாட்சியாக இருக்கிறார் என்றும் சொன்னோம்” என்றான். பின்பு தாவீது அவ்விடம்விட்டுப் போனான். யோனத்தான் பட்டணத்துக்குத் திரும்பிப்போனான். நோபில் தாவீது அதன்பின் தாவீது நோபுக்கு ஆசாரியனான அகிமெலேக்கிடம் போனான். அகிமெலேக் அவனைச் சந்தித்தபோது நடுக்கத்துடன் அவனிடம், “ஏன் தனிமையில் வருகிறீர்? ஏன் ஒருவரும் உம்மோடு வரவில்லை?” என்று கேட்டான். அதற்குத் தாவீது ஆசாரியன் அகிமெலேக்கிடம், “அரசன் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டு, ‘நான் அனுப்பிய நோக்கத்தையும், எனது அறிவுறுத்தலையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று சொன்னார். நான் என் மனிதருக்கோ குறிப்பிட்ட ஒரு இடத்தில் நான் அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது உம்மிடத்தில் என்ன இருக்கிறது? ஐந்து அப்பங்களை எனக்குக் கொடும். இல்லாவிட்டால் உம்மிடம் இருப்பது எதையாவது எனக்குக் கொடும்” என்றான். அதற்கு அந்த ஆசாரியன் தாவீதிடம், “எனது கையில் எந்தவித சாதாரண அப்பமும் இல்லை. ஆயினும் படைக்கப்பட்ட அப்பங்கள் சில இருக்கின்றன. ஆனால் உம்முடைய மனிதர் பெண்களுடன் உறவுகொள்ளாதிருந்தால் அவற்றைக் கொடுப்பேன்” என்றான். அப்பொழுது தாவீது, “நாங்கள் புறப்பட்டபோது வழக்கம்போல் பெண்களை விட்டு விலகியே இருக்கிறோம். எப்பொழுதும் எங்கள் பயணம் பரிசுத்தமில்லாததாய் இருந்தாலும்கூட, எங்களின் உடல்கள் பரிசுத்தமாயிருக்கும். இன்றைய பயணமும் சாதாரணமானதல்ல” என்றான். எனவே ஆசாரியன் படைக்கப்பட்ட அப்பத்தை தாவீதுக்குக் கொடுத்தான். ஏனெனில் யெகோவாவுக்கு முன்பாக வைக்கப்பட்டு, எடுக்கப்பட்ட இறைசமுகத்து அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் அவனிடம் இருக்கவில்லை. சூடான அப்பங்கள் யெகோவாவுக்குமுன் வைக்கப்பட்டே இந்த அப்பங்கள் எடுக்கப்பட்டிருந்தன. அன்று சவுலின் வேலைக்காரர்களில் ஒருவன் யெகோவாவுக்குமுன் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். அவன் தோவேக் என்னும் ஏதோமியன். அவன் சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன். அப்பொழுது தாவீது அகிமெலேக்கிடம், “ஈட்டியோ, வாளோ இங்கே உம்மிடம் இல்லையா? அரசனுடைய பணி அவசரமானதால் எனது வாளையோ, வேறெந்த யுத்த ஆயுதங்களையோ கொண்டுவரவில்லை” என்று கேட்டான். அதற்கு ஆசாரியன், “நீர் ஏலா பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தியனான கோலியாத்தின் வாள் இங்கே இருக்கிறது. அது துணியில் சுற்றி ஏபோத்துக்குப் பின்னால் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு வாள் இங்கே இல்லை. நீர் விரும்பினால் அதை எடும்” என்றான். அதற்குத் தாவீது, “அதற்கு நிகரானது வேறொன்றுமில்லை. அதை எனக்குக் கொடும்” என்றான். காத்தில் தாவீது அன்றே தாவீது சவுலின் பிடியிலிருந்து தப்பி காத்தின் அரசனான ஆகீஸிடம் ஓடினான். அப்பொழுது ஆகீஸின் பணியாட்கள், “இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லவா? மக்கள் இவனைக் குறித்தல்லவா இப்படியாக ஆடிப்பாடினார்கள்: “சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்.” இந்த வார்த்தைகளைத் தாவீது மனதில் வைத்துக்கொண்டு காத்தின் அரசன் ஆகீஸிற்கு மிகவும் பயமடைந்தான். இதனால் தாவீது அவர்கள் முன்பாக ஒரு மனநோயாளிபோல் பாசாங்கு செய்தான். அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவன் வாயிற்கதவுகளில் கீறிக்கொண்டு, வாயிலிருந்து உமிழ்நீரைத் தாடியில் வடியவிட்டு பைத்தியக்காரன் போல் நடித்தான். அப்பொழுது ஆகீஸ் தன் பணியாட்களிடம், “இந்த மனிதனைப் பாருங்கள். இவன் ஒரு மனநோயாளி. இவனை என்னிடம் ஏன் கொண்டுவர வேண்டும்? இவ்விதமாய் இவன் என்முன் செயல்படுவதற்கு இங்கு பைத்தியக்காரர் போதாதென்றா இவனைக் கொண்டுவந்தீர்கள்? இவன் என் வீட்டுக்குள் வரத்தான் வேண்டுமா?” என்று கேட்டான். தாவீது அதுல்லாமிலும் மிஸ்பாவிலும் தங்கியிருத்தல் தாவீது காத்திலிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்னும் குகைக்குத் தப்பி ஓடினான். அதை அவனுடைய சகோதரரும், தகப்பன் வீட்டாரும் கேள்விப்பட்டபோது, அவர்களும் அவனிடம் போனார்கள். மற்றும் துன்பப்பட்டவர்களும், கடன்பட்டவர்களும், மனவிரக்தியடைந்தவர்களும் வந்து அவனைச்சுற்றி ஒன்றுசேர்ந்தார்கள். அவன் அவர்களெல்லாருக்கும் தலைவனானான். ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். தாவீது அங்கிருந்து புறப்பட்டு, மோவாபிலுள்ள மிஸ்பேக்குப் போய் மோவாபின் அரசனிடம், “இறைவன் எனக்காக என்ன செய்யப்போகிறார் என்று நான் அறியும்வரை, என் தகப்பனும் தாயும் வந்து உம்முடன் தங்கியிருக்கும்படி தயவுசெய்து அனுமதி கொடுப்பீரோ?” என்று கேட்டான். அப்படியே தாவீது அவர்களை மோவாப் அரசனிடம் விட்டான். தாவீது தனது வழக்கமான கோட்டையில் இருக்கும்வரை அவர்கள் அரசனுடன் இருந்தார்கள். ஆனாலும் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “நீ இங்கே இந்த கோட்டையில் தங்கவேண்டாம். யூதாவுக்குப் புறப்பட்டுப்போ” என்றான். எனவே தாவீது அவ்விடத்தைவிட்டு ஆரேத் என்னும் காட்டுக்குப் போனான். சவுல் நோபின் ஆசாரியர்களைக் கொல்லுதல் தாவீதும் அவன் பணியாட்களும் எங்கேயிருக்கிறார்கள் என்னும் செய்தியை சவுல் அறிந்தான். அப்பொழுது அவன் கிபியாவிலுள்ள ஒரு குன்றுக்குமேல் தமரிஸ்கு மரத்தின்கீழ் கையில் ஈட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய அதிகாரிகள் அவனைச்சுற்றி நின்றார்கள். அப்பொழுது சவுல் அந்த அதிகாரிகளிடம், “பென்யமீன் மனிதரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களனைவரையும் ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும் நியமிப்பானோ? அதனால்தானோ நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்திருக்கிறீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்து கொண்டதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. உங்களில் ஒருவனும் என்னில் அக்கறை கொள்ளவில்லை. எனக்காகப் பதுங்கியிருக்கும்படி தாவீதை என் மகன் தூண்டிவிட்டதையும் ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. அதையே இன்று அவன் செய்கிறான்” என்று சொன்னான். அப்பொழுது சவுலின் அதிகாரிகளுடன் நின்ற ஏதோமியனான தோவேக்கு சவுலிடம், “ஈசாயின் மகன் நோபிலுள்ள அகிதூபின் மகன் அகிமெலேக்கிடம் வந்ததைக் கண்டேன். அகிமெலேக்கு அவனுக்காக யெகோவாவிடம் விசாரித்து, மன்றாடினான். அவனுக்கு உணவையும், பெலிஸ்தியனான கோலியாத்தின் வாளையும் கொடுத்தான்” என்றான். அப்பொழுது சவுல் ஆளனுப்பி அகிதூபின் மகனும், ஆசாரியனுமான அகிமெலேக்கையும், நோபிலிருந்த ஆசாரியர்களான அவன் தகப்பனின் முழுக் குடும்பத்தையும் அழைத்தான். அவர்கள் அனைவரும் அரசனிடம் வந்தார்கள். அப்பொழுது சவுல் அவர்களிடம், “அகிதூபின் மகனே! நான் சொல்வதைக் கேள்” என்றான். அதற்கு அவன், “சொல்லும் ஆண்டவனே” என்றான். அப்பொழுது சவுல் அவனிடம், “நீ ஈசாயின் மகனுடன் சேர்ந்து ஏன் எனக்கு விரோதமாய்ச் சதிசெய்தாய்? நீ அவனுக்கு அப்பமும், வாளும் கொடுத்து அவனுக்காக இறைவனிடமும் விசாரித்தாயே. அவன் எனக்கு விரோதமாகக் கலகம்செய்து, இன்று செய்வதுபோல என்னைப்பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறான்” என்று கேட்டான். அதற்கு அகிமெலேக் அரசனிடம், “அரசனுடைய மருமகனும், உம்முடைய மெய்க்காவலர் தலைவனும், உம்முடைய வீட்டில் உயர்வாய் மதிக்கப்படுபவனுமான தாவீதைப்போல் உம்முடைய பணியாட்களுள் எல்லாம் உமக்கு உண்மையுள்ளவர் யார்? அவனுக்காக நான் இறைவனிடம் விசாரித்தது அன்றுதான் முதல் முறையோ? ஒருபோதும் இல்லை. உமது அடியவனையும், என் தகப்பனின் குடும்பத்தில் எவனையும் அரசன் குற்றம் சாட்டாதிருப்பாராக. ஏனெனில் இந்த விவரங்களைப்பற்றி உமது அடியவனுக்கு எதுவுமே தெரியாது” என்றான். அப்பொழுது சவுல், “அகிமெலேக்கே! நீ நிச்சயமாய் சாவாய். நீயும் உன் தகப்பன் வீட்டாரனைவரும் நிச்சயமாய் சாவீர்கள்” என்றான். மேலும் அவன் தன் அருகில் நின்றவர்களிடம், “நீங்கள் யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்” எனக் கட்டளையிட்டான். “ஏனெனில் அவர்கள் தாவீதுக்குத் துணையாயிருந்தார்கள். அவன் தப்பி ஓடிப்போனதை அறிந்திருந்தும் அவர்கள் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை” என்றான். ஆனால் அரசனின் அதிகாரிகளுக்கு யெகோவாவினுடைய ஆசாரியர்களைக் கொலை செய்யும்படி கையோங்க மனம்வரவில்லை. எனவே அரசன் தோவேக்கிடம், “நீ ஆசாரியர்களை கொன்றுவிடு” என்று கட்டளையிட்டான். உடனே ஏதோமியனான தோவேக்கு திரும்பி அவர்களை அன்றையதினம் வெட்டி வீழ்த்தினான். அவன் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்திருந்த எண்பத்தைந்து ஆசாரியர்களை அன்றையதினம் கொன்றான். அத்துடன் ஆசாரியர்களின் பட்டணமான நோபிலுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் எல்லோரையும் வாளுக்கு இரையாக்கினான். அங்கிருந்த மாடுகள், கழுதைகள், செம்மறியாடுகள் உட்பட எல்லாவற்றையும்கூட வாளுக்கு இரையாக்கினான். ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான். சவுல் யெகோவாவின் ஆசாரியர்களைக் கொலைசெய்துவிட்டான் என்று தாவீதுக்கு அவன் சொன்னான். அப்பொழுது தாவீது அபியத்தாரிடம், “ஏதோமியனான தோவேக்கு அன்று அங்கே இருந்தபோது, அவன் சவுலுக்கு அதை நிச்சயமாய் அறிவிப்பானென்று அன்றே எனக்குத் தெரியும். உன் தகப்பனின் முழுக் குடும்பத்தின் மரணத்துக்கும் நானே காரணம். நீ பயப்படாமல் என்னோடேகூடத் தங்கியிரு, என்னைக் கொலைசெய்யத் தேடுபவனே உன்னையும் தேடுகிறான். எனவே என்னுடன் தங்குவது உனக்குப் பாதுகாப்பாயிருக்கும்” என்று சொன்னான். தாவீது கேகிலாவைக் காப்பாற்றுதல் அதன்பின் மக்கள் தாவீதிடம், “இதோ பெலிஸ்தியர் கேகிலா பட்டணதைத் தாக்கி, அதன் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அதைக்கேட்ட தாவீது யெகோவாவிடம், “நான் போய்ப் பெலிஸ்தியரைத் தாக்கட்டுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா தாவீதிடம், “போகலாம். பெலிஸ்தியரைத் தாக்கி கேகிலாவைக் காப்பாற்று” என்றார். ஆனால் தாவீதின் மனிதர் அவனிடம், “நாங்கள் இங்கே யூதாவில் இருக்கவே பயப்படுகிறோம். நாம் பெலிஸ்தியரின் படைக்கு எதிராகக் கேகிலாவுக்கு போவதானால் இன்னும் எவ்வளவு பயமாயிருக்கும்” என்றார்கள். தாவீது மறுபடியும் யெகோவாவிடம் கேட்டான். அப்பொழுது யெகோவா தாவீதிடம், “நீ கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன்” என்றார். எனவே தாவீதும் அவனுடைய மனிதரும் கேகிலாவுக்குப் போனார்கள். அங்கே பெலிஸ்தியருடன் யுத்தம்செய்து அவர்களுடைய வளர்ப்பு மிருகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள். இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியருக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி கேகிலாவின் மக்களைக் காப்பாற்றினான். அகிமெலேக்கின் மகன் அபியத்தார் கேகிலாவிலிருந்த தாவீதிடம் உயிர் தப்பி ஓடியபோது, அவன் ஒரு ஏபோத்தைக் கொண்டு வந்திருந்தான். சவுல் தாவீதைத் துரத்துதல் தாவீது கேகிலாவுக்கு போயிருக்கிறான் என்ற செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன், “இறைவன் தாவீதை என் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவன் வாசல்களும், தாழ்ப்பாள்களும் உள்ள பட்டணத்திற்குள் வந்திருக்கிறபடியால் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டான்” என்றான். அப்பொழுது சவுல், கேகிலாவுக்குப் போய், தாவீதையும் அவன் மனிதரையும் முற்றுகையிடும்படி தன் போர்வீரரை யுத்தத்திற்கு அழைத்தான். சவுல் தனக்குத் தீங்கு செய்யும்படி திட்டமிடுகிறான் என்பதை அறிந்த தாவீது ஆசாரியனான அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவா” என்று சொன்னான். அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவே! சவுல் கேகிலா பட்டணத்திற்கு வந்து என் நிமித்தம் அதை அழிக்கத் திட்டமிடுகிறான் என்பதை, உமது அடியவனாகிய நான் நிச்சயமாகக் கேள்விப்பட்டேன். கேகிலாவின் குடிமக்கள் சவுலிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பார்களா? உமது ஊழியன் கேள்விப்பட்டபடி சவுல் வருவானா? இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! இதை உமது அடியவனுக்குத் தெரிவியும்” என்றான். அதற்கு யெகோவா, “அவன் வருவான்” என்றார். மறுபடியும் தாவீது யெகோவாவிடம், “கேகிலாவின் குடிமக்கள் என்னையும் என் மனிதரையும் சவுலிடம் பிடித்துக் கொடுப்பார்களா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்கள் உன்னை பிடித்துக் கொடுப்பார்கள்” என்றார். எனவே தாவீதும் அவனோடிருந்த ஏறக்குறைய அறுநூறு பேரும் கேகிலாவை விட்டுப் புறப்பட்டு ஒவ்வொருவரும் இடம்விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். தாவீது கேகிலாவிலிருந்து தப்பி ஓடிவிட்டான் எனச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே அவன் அங்கு போகவில்லை. தாவீது காடுகளிலுள்ள கோட்டைகளிலும், சீப் பாலைவனத்திலுள்ள குன்றுகளிலும் தங்கியிருந்தான். சவுல் அவனை அனுதினமும் தேடினான். இறைவனோ தாவீதை அவனின் கைகளில் ஒப்படைக்கவில்லை. தாவீது சீப் பாலைவனத்திலுள்ள கொரேஷில் இருந்தபோது சவுல் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்பதை அறிந்தான். அவ்வேளையில் சவுலின் மகனாகிய யோனத்தான் கொரேஷிலிருந்த தாவீதிடம்போய் இறைவனில் பலம்கொள்ளும்படி அவனுக்கு உதவி செய்தான். யோனத்தான் தாவீதிடம், “பயப்படாதே; என் தகப்பன் சவுல் உன்மேல் கைவைக்க மாட்டார்; நீ இஸ்ரயேலருக்கு அரசனாவாய். நான் உனக்கு இரண்டாவதாய் இருப்பேன். இவையெல்லாம் என் தகப்பனுக்குக்கூட தெரியும்” என்றான். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்தார்கள். யோனத்தான் தன் வீட்டுக்குப் போனான். தாவீதோ கொரேஷிலேயே தங்கினான். அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா? இப்பொழுது அரசே, நீர் விரும்பியபோது வாரும்; அவனை அரசனிடம் ஒப்புக்கொடுப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள். அதற்கு சவுல், “நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன். நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான். அப்பொழுது அவர்கள் சவுலுக்கு முன்பாகவே புறப்பட்டு சீப் பட்டணத்துக்குப் போனார்கள். தாவீதும் அவன் மனிதருமோ அந்நேரம் எஷிமோனுக்குத் தெற்காக அரபாவிலுள்ள மாகோன் பாலைவனத்தில் இருந்தார்கள். சவுலும், அவன் ஆட்களும் தேடுதலை ஆரம்பித்தார்கள். தாவீதுக்கு இது தெரியவந்தபோது, அவன் கற்பாறைக்கு இறங்கி மாகோன் பாலைவனத்தில் தங்கினான். சவுல் இதைக் கேள்விப்பட்டபோது தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் பாலைவனத்திற்குப் போனான். சவுல் மலையில் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருந்தான். தாவீதும் அவனுடைய மனிதரும் சவுலிடமிருந்து தப்புவதற்காக மலையின் மறுபக்கத்தில் விரைவாகப் போனார்கள். சவுலும், அவன் படைகளும் தாவீதையும், அவனுடைய மனிதரையும் பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “பெலிஸ்தியர் உமது நாட்டைச் சூறையாடுகிறார்கள். ஆதலால் விரைவாய் வாரும்” என்று சொன்னான். இதைக் கேட்ட சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு, பெலிஸ்தியரை எதிர்கொள்ளத் திரும்பிப்போனான். இதனாலேயே அவ்விடத்தை சேலா அம்மாலிகோத்23:28 அம்மாலிகோத் என்றால் பிரிக்கும் பாறை என்று அர்த்தம். என்று அழைக்கிறார்கள். தாவீது அவ்விடத்திலிருந்து புறப்பட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளில் வசித்தான். தாவீது சவுலின் உயிரைக் காத்தல் பெலிஸ்தியரைத் துரத்திவிட்டுச் சவுல் திரும்பியபோது, “தாவீது என்கேதி பாலைவனத்திலே தங்கியிருக்கிறான்” என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, “காட்டாடுகளின் குன்றுகள்” என்ற இடத்திற்கு அருகே தாவீதையும், அவன் ஆட்களையும் தேடிப்பார்க்கப் போனான். போகும் வழியில் ஆட்டுத்தொழுவங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அங்கே ஒரு குகை இருந்தது. சவுல் மலசலம் கழிப்பதற்காக அதற்குள் போனான். தாவீதும் அவன் மனிதரும் குகையினுள்ளே இருந்தார்கள். அப்பொழுது தாவீதின் மனிதர், “நீ விரும்பியபடி உன் பகைவனுக்கு செய்வதற்கு அவனை உன் கையில் ஒப்படைப்பேன் என்று யெகோவா உனக்குச் சொல்லிய நாள் இன்றுதான்” என்றார்கள். உடனே தாவீது சவுல் அறியாதபடி தவழ்ந்துபோய், அவன் அங்கியின் ஒரு மூலையை வெட்டினான். பின் சவுலின் அங்கியின் மூலையை வெட்டியதற்காக தாவீதின் மனசாட்சி அவனை உறுத்தியது. அப்பொழுது அவன் தன் மனிதரிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு எஜமானுக்கு இப்படியான செயலை நான் செய்யவும், அவருக்கு விரோதமாக எனது கையை உயர்த்தவும் யெகோவா அனுமதிக்கமாட்டார். ஏனெனில் அவர் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்றான். தாவீது இந்த வார்த்தைகளால் தன் மனிதரைக் கடிந்துகொண்டு சவுலைத் தாக்குவதற்கு அவர்களை அவன் அனுமதிக்கவில்லை. அப்பொழுது சவுல் குகையை விட்டு புறப்பட்டுத் தன் வழியே போனான். உடனே தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியே வந்து, “என் தலைவனான அரசே!” என்று சத்தமாய் கூப்பிட்டான். சவுல் திரும்பிப் பார்த்தபோது தாவீது தரைமட்டும் குனிந்து அவனை வணங்கினான். பின்பு தாவீது சவுலிடம், “தாவீது உனக்குத் தீங்குசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறான் என்று மனிதர் உமக்குச் சொல்லும்போது நீர் ஏன் நம்புகிறீர்? இன்று இந்தக் குகையில் யெகோவா உம்மை என்னிடம் ஒப்படைத்தார் என்பதை உம்முடைய கண்கள் கண்டன. உம்மைக் கொலை செய்யும்படி சிலர் என்னைத் தூண்டினார்கள். நானோ உம்மைத் தப்பவிட்டேன். ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவராகையால் என் தலைவனாகிய உமக்கு எதிராக என் கையை உயர்த்தமாட்டேன்’ என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். என் தகப்பனே! என் கையிலுள்ள உம்முடைய அங்கியின் துண்டைப் பாரும். நான் உமது அங்கியின் துண்டை வெட்டி எடுத்தேன். ஆனால் உம்மைக் கொலைசெய்யவில்லை. என்னைப் புரிந்துகொண்டு, நான் அநியாயம் செய்தோ, கலகம் செய்தோ ஒரு குற்றவாளியாகவில்லை என்று ஏற்றுக்கொள்ளும். நான் உமக்கு ஒரு பிழையையும் செய்யவில்லை. ஆனால் நீரோ என் உயிரை வாங்குவதற்கு வேட்டையாடுகிறீர். ஆனாலும் யெகோவா உமக்கும் எனக்கும் நடுவில் நின்று நியாயந்தீர்பாராக. நீர் எனக்குச் செய்த பிழைகளுக்காக யெகோவா உம்மைப் பழிவாங்குவாராக. ஆனால் என் கையோ உம்மைத் தொடாது. ‘தீயோர்களிடத்திலிருந்து தீய செயல்கள் பிறக்கும்’ என்று ஒரு முதுமொழி உண்டு. ஆதலால் எனது கை உம்மைத் தொடாது. “இஸ்ரயேலின் இறைவன் யாருக்கு விரோதமாக வந்திருக்கிறார்? யாரை நீர் துரத்துகிறீர்? ஒரு செத்த நாயையா? ஒரு தெள்ளுப்பூச்சியையா? யெகோவாவே நீதிபதியாய் இருந்து நமக்கிடையில் நியாயந்தீர்பாராக. அவர் எனக்காக வழக்காடி என்னை உம் கையிலிருந்து விடுவித்து நிரபராதி எனத் தீர்ப்பாராக” என்றான். இவ்வாறு தாவீது சவுலுக்குச் சொல்லி முடிந்தபின், சவுல் அவனிடம், “தாவீதே, என் மகனே, இது உன்னுடைய குரல்தானா?” என்று கேட்டு சத்தமிட்டு அழுதான். பின்னும் தாவீதிடம், “நீ என்னைவிட அதிக நேர்மையானவன்; நீ என்னை நன்றாக நடத்தியிருக்கிறாய். நானோ உன்னை கேவலமாய் நடத்தினேன். நீ எனக்குச் செய்த நன்மையைக் குறித்து இப்பொழுது சொன்னாயே. யெகோவா என்னை உன்னிடம் ஒப்படைத்திருந்தும் நீ என்னைக் கொலைசெய்யவில்லை. ஒருவன் தன் பகைவனைக் காணும்போது அவனுக்குத் தீங்கு செய்யாமல் தப்பிப் போகவிடுவானோ? அதனால் இன்று நீ என்னை நடத்திய விதத்திற்காக யெகோவா உனக்கு நல்ல பலன் அளிப்பாராக. இப்பொழுது நீ அரசனாவாய் என்பதும் இஸ்ரயேலரின் அரசாட்சி உன்னால் நிலைநாட்டப்படும் என்பதும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இப்பொழுது என் சந்ததியை அழிப்பதில்லையென்றும் என் தகப்பனின் குடும்பத்திலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஆணையிட்டுக் கொடு” என்றான். அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டான். பின்பு சவுல் தன் இருப்பிடத்திற்குப் போனான். தாவீதும் அவன் ஆட்களும் தங்கள் அரணான இடத்திற்குப் போனார்கள். தாவீது, நாபால் மற்றும் அபிகாயில் சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான்25:1 எபிரெய மொழி மற்றும் சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் மாகோன் என்றுள்ளது பாலைவனத்துக்குப் போனான். அப்போது கர்மேலில் சொத்துக்களுள்ள செல்வந்தனான ஒரு மனிதன் மாகோனில் இருந்தான். ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் அவனுக்கு இருந்தன. அப்பொழுது அவன் கர்மேலில் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அவள் மிகவும் அழகுள்ளவளும், புத்திக் கூர்மையுள்ளவளுமாய் இருந்தாள். ஆனால் காலேபியனான அவள் கணவனோ, முரடனும் தன் செயல்களில் கீழ்த்தரமானவனுமாய் இருந்தான். தாவீது பாலைவனத்தில் ஒளித்திருந்தபோது நாபால் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரிப்பதற்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது தாவீது பத்து வாலிபரை அழைத்து அவர்களிடம், “நீங்கள் கர்மேலுக்குச் சென்று என் பெயரால் நாபாலை வாழ்த்துங்கள். நீங்கள் அவனை, ‘நீர் நீடித்து வாழ்வீராக. உமக்கும் உமது குடும்பத்துக்கும் நல்வாழ்வு உண்டாவதாக. உமக்குரிய அனைத்திற்கும் நல்வாழ்வு உண்டாவதாக’ என்று வாழ்த்துங்கள். “ ‘அதன்பின் இது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் என்று கேள்விப்படுகிறேன். உம்முடைய ஆட்டு மேய்ப்பர்கள் எங்களுடன் இருந்தபோதும், நாங்கள் அவர்களைத் துன்புறுத்தவில்லை. கர்மேலில் அவர்கள் இருந்த காலமுழுதும் அவர்களுக்குரிய அவர்களின் ஆடுகளில் ஒன்றேனும் காணாமல் போகவுமில்லை. இதைப்பற்றி உம்முடைய பணியாட்களிடம் கேளும். அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆகவே எனது வாலிபர்களுக்குத் தயவுகாட்டும். நாங்கள் ஒரு சந்தோஷமான விழாக்காலத்தில் வந்திருக்கிறோம். உம்முடைய அடியாருக்கும் உம்முடைய மகனாகிய தாவீதுக்கும் கொடுக்கக்கூடிய எதையாவது கொடும் என்று தயவாகக் கேட்கிறேன்’ என்று சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினான். அவ்வாறே தாவீதின் வாலிபர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்து நாபாலிடம் தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். பின் அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்கள். நாபாலோ தாவீதின் பணியாட்களிடம், “இந்தத் தாவீது யார்? ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல வேலையாட்கள் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிறார்கள். என் அப்பத்தையும் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் சமையலையும், யாரும் அறியாத இடத்திலிருந்து வந்த மனிதருக்கு நான் ஏன் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டான். எனவே தாவீதின் மனிதரான அந்த வாலிபர் தாங்கள் வந்த வழியே மறுபடியும் திரும்பிப் போனார்கள். அவர்கள் போய் நாபால் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தாவீதுக்குச் சொன்னார்கள். அப்பொழுது தாவீது தன் மனிதரிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றான். அவ்வாறே அவர்களும் வாளை எடுத்துக் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன் வாளை எடுத்துக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுடன் சென்றார்கள். இருநூறுபேர் உணவுப் பொருட்களுடன் தங்கியிருந்தார்கள். அதேவேளை நாபாலின் பணியாட்களில் ஒருவன் நாபாலின் மனைவி அபிகாயிலிடம் போய், “நமது தலைவனை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி தாவீது பாலைவனத்திலிருந்து தூதுவரை அனுப்பினான். ஆனாலும் அவரோ வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்த மனிதர் எங்களோடு மிக நன்றாய் பழகினார்கள். எங்களைத் துன்புறுத்தவில்லை. நாங்கள் வயல்வெளியில் அவர்களுக்கு அருகே இருந்த காலம் முழுவதும் எங்களுக்குரிய ஒன்றும் காணாமல் போகவுமில்லை. நாங்கள் அவர்களருகே செம்மறியாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம், இரவும் பகலும் அவர்கள் எங்களைச் சுற்றி மதில்போல் இருந்தார்கள். இப்பொழுது யோசித்து நீங்கள் என்ன செய்யலாம் என்று பாருங்கள். ஏனெனில் எங்கள் தலைவனுக்கும், அவர் முழுக் குடும்பத்துக்கும் மேலாகவும் பேராபத்து வந்திருக்கிறது. எங்கள் தலைவனோ யாரும் பேசமுடியாத அளவுக்கு கொடுமையான மனிதனாய்25:17 கொடுமையான மனிதனாய் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம்; 2 கொரி. 6:15. இருக்கிறார்” என்றான். உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள். அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள். தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான். “அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான். அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள். அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும். என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை. இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக. உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும். “தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும். ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார். யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார். அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள். அப்பொழுது தாவீது அபிகாயிலிடம், “இன்று என்னைச் சந்திக்கும்படி உன்னை அனுப்பிய இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. உனது நல்ல நிதானிப்புக்காகவும், நான் இரத்தம் சிந்தாமலும், என் சொந்த கையால் பழிவாங்காமலும் இன்று என்னை நீ தடுத்ததற்கு நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ என்னைச் சந்திக்க விரைந்து வராதிருந்தால், உனக்குத் தீங்கு செய்யாதபடி என்னைத் தடுத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், நாளை விடியுமுன் நாபாலின் மனிதரில் ஒரு ஆணும் உயிரோடிருந்திருக்க மாட்டான் என்பதும் நிச்சயம்” என்றான். அபிகாயில் கொண்டு வந்தவற்றையெல்லாம் தாவீது ஏற்றுக்கொண்டு அவளிடம், “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப்போ. நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டேன். உனது வேண்டுகோளின்படியே செய்வேன்” என்றான். அபிகாயில் நாபாலிடம் திரும்பிவந்தாள். அப்பொழுது அவன் வீட்டில் அரசவிருந்தைப்போன்ற ஒரு விருந்தினை நடத்திக்கொண்டிருந்தான். அவன் மதுபோதையில் களிப்புற்றிருந்தான். எனவே அவள் விடியும்வரை அவனுக்கு ஒன்றுமே சொல்லவில்லை. பொழுது விடிந்ததும் நாபாலின் மதுவெறி தெளிந்தபின் அவன் மனைவி நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக் கேட்டவுடன் அவன் இருதயம் பாதிக்கப்பட்டு அவன் கல்லைப்போலானான். இவை நடந்து ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு யெகோவா நாபாலை அடித்ததினால் அவன் இறந்தான். நாபால் இறந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, “என்னை அவமானப்படுத்திய நாபாலுக்கு எதிரான எனது வழக்கை வாதாடிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் தமது அடியவனை குற்றம் செய்யாதபடி தற்காத்து, நாபாலின் அநியாயத்தை அவனுடைய தலையிலேயே சுமரப்பண்ணினார்” என்றான். அதன்பின் தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கும்படி கேட்டு அவளிடம் ஆளனுப்பினான். தாவீதின் பணியாட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “தாவீது உம்மைத் தன் மனைவியாக்கிக் கொள்வதற்காகத் தன்னிடம் கூட்டிக்கொண்டு வரும்படி எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்றார்கள். அவள் எழுந்து முகங்குப்புற விழுந்து வணங்கி, அவர்களிடம், “இதோ நான் உங்கள் பணிப்பெண். உங்களுக்குப் பணிசெய்யவும், என் எஜமானின் பணியாட்களின் கால்களைக் கழுவவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றாள். அபிகாயில் விரைவாகக் கழுதையில்மேல் ஏறி தன் ஐந்து தோழிகளும் பின்செல்ல தாவீதின் தூதுவர்களுடன் சென்று அவனுக்கு மனைவியாகினாள். தாவீது யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவரும் தாவீதின் மனைவிகளாயிருந்தார்கள். ஆனால் சவுல் தன் மகளான மீகாள் என்னும் தாவீதின் மனைவியை, காலீம் ஊரானான லாயீசின் மகன் பல்த்திக்கு மனைவியாகக் கொடுத்தான். தாவீது மறுபடியும் சவுலைத் தப்பவிடுதல் அதன்பின் சீப்பூரார் கிபியாவிலிருந்த சவுலிடம் வந்து, “தாவீது எஷிமோனுக்கு எதிர்ப்பக்கமுள்ள ஆகிலா குன்றில் ஒளித்திருக்கிறான் அல்லவா” என்றார்கள். எனவே சவுல் இஸ்ரயேல் மக்களுள் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மனிதருடன் தாவீதைத் தேடும்படி சீப் பாலைவனத்துக்குப் போனான். சவுல் எஷிமோனுக்கு எதிரேயுள்ள வழியில் ஆகிலா குன்றின் மேலுள்ள வீதியருகே முகாமிட்டிருந்தான். ஆனால் தாவீதோ பாலைவனத்தில் தங்கினான். சவுல் தன்னை அங்கேயும் பின்தொடர்கிறான் எனக் கண்டபோது, தாவீது உளவாளிகளை வெளியே அனுப்பிச் சவுல் வந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பின்பு தாவீது புறப்பட்டு, சவுல் முகாமிட்டிருந்த இடத்திற்குப் போனான். அவன் சவுலும், நேரின் மகன் படைத்தளபதி அப்னேரும் படுத்திருந்த இடத்தைக் கண்டான். அங்கே சவுல் முகாமுக்குள்ளே போர்வீரருக்கு மத்தியில் படுத்திருந்தான். அப்பொழுது தாவீது ஏத்தியனான அகிமெலேக்கிடமும், செருயாவின் மகன் யோவாபின் சகோதரன் அபியாசிடமும், “என்னோடுகூட சவுலின் முகாமுக்கு இறங்கி வருகிறவன் யார்?” என்று கேட்டான். அதற்கு அபிசாய், “நான் உம்மோடுகூட வருவேன்” என்றான். எனவே தாவீதும் அபிசாயும் அன்றிரவு அங்கே போனார்கள். அங்கே முகாமுக்குள் சவுல் நித்திரையாயிருப்பதைக் கண்டார்கள். அவனுடைய தலைமாட்டில் நிலத்தில் அவனுடைய ஈட்டி குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரரும் சவுலைச் சுற்றிலும் படுத்திருந்தார்கள். அப்பொழுது அபிசாய் தாவீதிடம், “இன்று இறைவன் உமது பகைவனை உம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நான் ஈட்டியால் ஒரே குத்தாக நிலத்துடன் சேர்த்துக் குத்துவதற்கு எனக்கு அனுமதிகொடும். நான் அவனை இருமுறை குத்தமாட்டேன்” என்றான். அதற்கு தாவீது அபிசாயிடம், “அவரை அழிக்கவேண்டாம்; யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் கையை ஓங்கி, குற்றமற்றவனாய் யாரால் இருக்கமுடியும்? மேலும் தாவீது, யெகோவா இருப்பது நிச்சயமெனில், யெகோவாவே அவரை அடிப்பார், அல்லது அவருடைய காலம் வரும்போது அவர் சாவார், அல்லது யுத்தத்தில் அழிவார் என்பதும் நிச்சயம். ஆனால் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் என் கை ஓங்குவதை யெகோவா தடைசெய்வாராக. இப்பொழுது நாம் அவருடைய தலையருகிலுள்ள ஈட்டியையும், தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டு போவோம்” என்றான். அவ்வாறே தாவீது சவுலின் ஈட்டியையும், தலையருகிலிருந்த தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். ஆனால் அவர்கள் அவற்றை எடுத்ததை யாரும் காணவோ, அறியவோ இல்லை. ஒருவரும் விழித்தெழவும் இல்லை. ஏனெனில் யெகோவா அவர்களுக்கு ஆழ்ந்த நித்திரையை வரச்செய்திருந்ததால், அவர்களெல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தாவீதோ மறுபக்கத்துக்குக் கடந்து போய்ச் சிறிது தூரத்திலுள்ள குன்றின்மேல் நின்றான். அவர்களுக்கிடையில் அகன்ற இடைவெளி இருந்தது. அப்பொழுது தாவீது படையினரையும், நேரின் மகன் அப்னேரையும் கூப்பிட்டு, “அப்னேரே! நீ எனக்குப் பதில்கூற மாட்டாயா?” என்றான். அதற்கு அப்னேர், “அரசனைக் கூப்பிடும் நீ யார்?” என்றான். அதற்குத் தாவீது, “நீ ஒரு ஆண்மகன் அல்லவா? இஸ்ரயேலில் உன்னைப்போல் யார் இருக்கிறார்கள்? நீ ஏன் உன் தலைவனாகிய அரசனைக் காவல் காக்காமல். அரசனாகிய உன் தலைவனைக் கொல்வதற்கு ஒருவன் வந்தானே. நீ செய்தது நல்லதல்ல. யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன்னோடிருக்கும் மனிதர்களும் சாவதற்குத் தகுந்தவர்கள் என்பதும் நிச்சயம். ஏனெனில் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட உங்கள் தலைவனை நீங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். சுற்றிப்பாருங்கள். அரசனின் தலைமாட்டிலிருந்த ஈட்டியும், தண்ணீர்க் குடுவையும் எங்கே?” என்றான். அப்பொழுது சவுல் தாவீதின் குரலைக் கேட்டு இனங்கண்டு, “என் மகனே, தாவீதே! இது உன் குரல்தானா?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “ஆம் என் தலைவனே, அரசே!” என்றான். மேலும் அவன், “என் தலைவன் உம்முடைய அடியவனைப் பின்தொடர்வது ஏன்? நான் என்ன செய்தேன்? நான் குற்றவாளியாகும்படி நான் செய்த பிழை என்ன? இப்பொழுதும் என் தலைவனான அரசே! உமது ஊழியன் சொல்வதைக் கேளும். யெகோவா உம்மை எனக்கு விரோதமாய்த் தூண்டிவிட்டிருந்தால், அவர் ஒரு காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக. ஆயினும் இதை மனிதர்கள் செய்திருந்தால், யெகோவா முன்னிலையில் அவர்கள் சபிக்கப்படுவார்களாக. ஏனெனில் இன்று அவர்கள் என்னை யெகோவாவின் உரிமைச்சொத்தில் எனக்குள்ள பங்கிலிருந்து துரத்திவிட்டு, ‘நீ போய் அந்நிய தெய்வங்களை வழிபடு’ என்று சொன்னார்கள். எனவே இப்பொழுதும் யெகோவாவின் முன்னிருந்து தூரமான இந்த இடத்தில் என்னுடைய இரத்தத்தைச் சிந்தவேண்டாம். மலையில் கவுதாரியை ஒருவன் வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்திருக்கிறாரே” என்றான். அதற்குச் சவுல், “நான் பாவம் செய்தேன். தாவீதே, என் மகனே! திரும்பி வா. நீ இன்று என் உயிரை அருமையாய் மதித்தபடியால், நான் இனி ஒருபோதும் உனக்கு ஒரு தீங்கும் செய்ய முற்படமாட்டேன். நிச்சயமாய் நான் மூடனைப்போல் நடந்து, பெரும் பிழை செய்துவிட்டேன்” என்றான். அப்பொழுது தாவீது, “இதோ அரசனின் ஈட்டி இருக்கிறது; அரசனின் வாலிபர்களில் ஒருவன் வந்து அதை எடுத்துக்கொள்ளட்டும். யெகோவா ஒவ்வொரு மனிதனுடைய நேர்மைக்கும், உண்மைத் தன்மைக்கும் தக்கதாய் ஒவ்வொருவனுக்கும் பலனளிப்பார். யெகோவா உம்மை இன்று என் கையில் கொடுத்தார். ஆனாலும் யெகோவா அபிஷேகம் செய்தவர்மேல் என் கையை நான் ஓங்கவில்லை. இன்று நான் உம்முடைய உயிரை மதித்தது நிச்சயம்போலவே, யெகோவா என் உயிரை மதித்து, என்னை எல்லாத் துன்பத்திலிருந்தும் விடுவிப்பதும் நிச்சயமாயிருப்பதாக” என்றான். அப்பொழுது சவுல் தாவீதிடம், “தாவீதே, என் மகனே, நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ பெரிய செயல்களைச் செய்து நிச்சயமாய் வெற்றியடைவாய்” என்றான். ஆகவே தாவீது தன் வழியே போனான். சவுலும் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். பெலிஸ்தியர் மத்தியில் தாவீது அதன்பின் தாவீது, “நான் சவுலின் கையினால் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் அழிக்கப்படுவேன். எனவே பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பி ஓடிப்போவது தான் நான் செய்யக்கூடிய புத்தியான செயல். அப்பொழுது சவுல் இஸ்ரயேலில் எங்கேயும் என்னைத் தேடுவதைக் கைவிடுவான். நான் அவனுடைய கையிலிருந்து தப்பிவிடலாம்” என நினைத்தான். எனவே தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதரும் காத் அரசனான மாயோகின் மகன் ஆகீஸிடம் போனார்கள். தாவீதும் அவன் மனிதரும் ஆகீஸுடன் காத் பட்டணத்தில் தங்கியிருந்தார்கள். ஒவ்வொருவனும் தன்தன் குடும்பத்துடன் இருந்தான். தாவீது தன் இரு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமுடனும், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையான அபிகாயிலுடனும் இருந்தான். தாவீது காத் ஊருக்குப் போனதைக் கேள்விப்பட்டவுடன் சவுல் அவனைத் தேடுவதை நிறுத்தினான். அப்பொழுது தாவீது ஆகீஸிடம், “என்னிடம் உமக்குத் தயவு இருந்தால் நான் வாழ்வதற்கு உம்முடைய நாட்டுப்புறப் பட்டணங்களில் ஒன்றை ஒதுக்கித் தாரும். உமது அடியானாகிய நான் உமது அரசருக்குரிய நகரத்தில் உம்முடன் ஏன் வாழவேண்டும்” என்றான். அன்றையதினம் ஆகீஸ் சிக்லாக் என்னுமிடத்தை அவனுக்குக் கொடுத்தான். அதனால் சிக்லாக் அன்றிலிருந்து யூதாவின் அரசர்களுக்கு சொந்தமாயிற்று. இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஒரு வருடமும், நாலு மாதங்களும் தங்கியிருந்தான். அப்பொழுது தாவீதும், அவன் மனிதரும் கேசூரியர், கெஸ்ரியர், அமலேக்கியர் என்பவர்களைச் சூறையாடினார்கள். இவர்கள் பண்டையக் காலத்திலிருந்து, சூர் தொடங்கி எகிப்துவரைக்கும் பரந்து கிடந்த இந்நாட்டில் வாழ்ந்தவர்கள். தாவீது ஒரு பகுதியை தாக்கும் போதெல்லாம் ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிரோடே விடவில்லை. அவர்களுடைய செம்மறியாடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், உடைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஆகீஸிடம் திரும்பிப் போவான். அப்பொழுது ஆகீஸ் அவனிடம், “இன்று எங்கே சென்று கொள்ளையடித்தீர்கள்” என்று கேட்பான். அதற்குத் தாவீது, “யூதாவின் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “யெரோமியேல் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “கேனியர் நெகேவுக்கு எதிராகவும்” என்று சொல்வான். தாவீது ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிருடன் காத்திற்கு கொண்டுவரவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி ஆகீஸிற்குத் தகவல் கொடுத்து, “இதுவே தாவீது செய்தது” என்று சொல்வார்கள் என நினைத்தான். அவன் பெலிஸ்தியரின் பிரதேசத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் இவ்வாறாகவே செய்தான். ஆகீஸ் தாவீதை நம்பினான். எனவே, “தாவீது தன் சொந்த மக்களான இஸ்ரயேலருக்கு வெறுப்புக்குரியவனாகி விட்டான். இதனால் இவன் என்றென்றும் என் பணியாளனாய் இருப்பான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான். அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களை எதிர்த்துப் போரிடும்படி பெலிஸ்தியர் படை திரட்டினார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “நீயும் உனது மனிதரும் எனது படைவீரருடன் சேர்ந்து வரவேண்டும் என்பதை அறிந்துகொள்” என்றான். அதற்குத் தாவீது, “உம்முடைய அடியவனால் என்ன செய்யமுடியும் என்பதை நீர் அறிந்துகொள்வீர்” என்றான். எனவே தாவீதிடம் ஆகீஸ், “மிக நல்லது, உன்னை என் வாழ்நாள் முழுவதும் என் மெய்க்காவலனாக்குவேன்” என்றான். சவுலும் குறிசொல்லும் பெண்ணும் அந்நாட்களில் சாமுயேல் இறந்திருந்தான். முழு இஸ்ரயேலரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடி அவனுடைய சொந்த பட்டணமான ராமாவிலே அவனை அடக்கம்பண்ணியிருந்தார்கள். சவுல் குறிசொல்லுகிறவர்களையும், ஆவியுடன் தொடர்புடையோரையும் தேசத்தில் இல்லாதபடித் துரத்திவிட்டிருந்தான். பெலிஸ்தியரும் ஒன்றுகூடி வந்து சூனேமிலே முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது சவுல் இஸ்ரயேல் அனைவரையும் ஒன்றுசேர்த்து கில்போவாவிலே முகாமிட்டிருந்தான். சவுல் பெலிஸ்தியரின் இராணுவத்தைக் கண்டவுடன் பயந்தான். அவனுடைய மனம் திகிலடைந்தது. சவுல் யெகோவாவிடம் விசாரித்தான். ஆனால் அவர் கனவுகளினாலோ, ஊரீமினாலோ, இறைவாக்கினராலோ அவனுக்குப் பதில் கொடுக்கவில்லை. எனவே சவுல் தன் வேலையாட்களிடம், “நான் போய் விசாரிக்கும்படி, நீங்கள் போய் குறிசொல்லுகிற ஒருத்தியைத் தேடிப் பாருங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எந்தோரிலே ஒருத்தி இருக்கிறாள்” என்றார்கள். எனவே சவுல் மாறுவேடம் தரித்து, அன்றிரவு அவனும் அவனோடு இரண்டு மனிதரும் அந்தப் பெண்ணிடம் போனார்கள். சவுல் அவளிடம், “நீ எனக்காக ஒரு ஆவியை விசாரி. நான் பெயரிடும் ஆவியை எழுந்துவரச் சொல்” என்றான். அந்தப் பெண்ணோ அவரிடம், “சவுல் செய்தது உமக்குத் தெரியும்தானே. அவன், ஆவியுடன் தொடர்பு கொள்கிறவர்களையும் நாட்டில் இராதபடி செய்திருக்கிறான். அப்படியிருக்க எனக்கு மரணம் ஏற்படும்படி ஏன் என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்” என்று கேட்டாள். அதற்குச் சவுல், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ இதற்காகத் தண்டிக்கப்பட மாட்டாய் என்பதும் நிச்சயம்” என யெகோவாவின் பெயரில் ஆணையிட்டான். அப்பொழுது அந்தப் பெண் சவுலிடம், “உமக்காக யாரை அழைக்கவேண்டும்” என்றாள். அதற்குச் சவுல், “சாமுயேலை அழைப்பி” என்றான். அந்தப் பெண் சாமுயேலைக் கண்டவுடன் உரத்த சத்தமாய்ச் சவுலைக் கூப்பிட்டு, “நீர்தானே சவுல்? ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றாள். அதற்குச் சவுல் அரசன், “பயப்படாதே! உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண், “ஒரு தெய்வ உருவம் நிலத்துக்குள்ளிருந்து எழும்பி வருவது தெரிகிறது” என்றாள். அதற்குச் சவுல், “அதனுடைய தோற்றம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அவள், “மேலங்கி உடுத்திய வயது முதிர்ந்த ஒருவர் எழும்பி வருகிறார்” என்றாள். அவர் சாமுயேல் எனச் சவுல் அறிந்துகொண்டான். உடனே தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்னை வெளியே கொண்டுவந்து ஏன் என்னைக் குழப்பினாய்” என்று கேட்டான். அதற்குச் சவுல், “நான் பெரிய ஆபத்திலிருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கெதிராக யுத்தம் செய்கிறார்கள். இறைவனோ என்னைவிட்டு விலகிவிட்டார். இறைவாக்கினர் மூலமாகவோ, கனவு மூலமாகவோ அவர் இப்போது எனக்குப் பதிலளிப்பதில்லை. இதனால்தான் நான் என்ன செய்யவேண்டுமென்று அறிவிக்கும்படி உம்மை அழைத்தேன்” என்றான். அதற்குச் சாமுயேல், “இப்பொழுது யெகோவா உன்னைவிட்டு விலகி உன் பகைவனாய் இருக்கும்போது நீ ஏன் என்னைக் கேட்கிறாய்? யெகோவா என் மூலமாய் உனக்கு முன்னறிவித்தபடி செய்திருக்கிறார். உன் அரசை உன்னிடமிருந்து பறித்து உன் அயலானான தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அமலேக்கியருக்கு விரோதமான அவருடைய கடுங்கோபத்தினாலான அவரின் தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அதனால்தான் அவர் இன்று உனக்கு இப்படிச் செய்தார். மேலும் யெகோவா இஸ்ரயேலரையும், உன்னையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார். எனவே நாளைக்கு நீயும் உன் மகன்களும் என்னோடு இருப்பீர்கள். இஸ்ரயேலின் இராணுவப் படையையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார்” என்றான். சாமுயேல் சொன்னவற்றைக் கேட்டவுடனே சவுல் பயந்து தரையில் முகங்குப்புற விழுந்தான். அவன் அன்று பகலும், இரவும் ஒன்றுமே சாப்பிடாதபடியால் பலவீனமாய் இருந்தான். அப்பொழுது சவுல் மிகவும் கலக்கமடைந்திருப்பதைக் கண்ட அந்தப் பெண், “நான் உமக்குக் கீழ்ப்படிந்தேன். என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீர் சொன்னபடியே செய்தேன். இப்பொழுது நீரும் உமது அடியாளுடைய வார்த்தைகளைக் கேட்டு நீர் பயணம் செய்வதற்கு ஏற்ற பெலன் பெறும்படி நான் உமக்குக் கொடுக்கும் உணவைச் சாப்பிடும்” என்றாள். சவுலோ, “நான் சாப்பிடமாட்டேன்” என மறுத்தான். ஆனால் அவன் பணியாட்களும் அவளுடன் சேர்ந்து சவுலை வற்புறுத்தவே அவன் சம்மதித்தான். அவன் நிலத்திலிருந்து எழுந்து ஒரு படுக்கையின்மேல் உட்கார்ந்தான். அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று இருந்தது. உடனே அவள் அதைக் கொன்று சமைத்தாள். மாவைப் பிசைந்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டாள். அவற்றைச் சவுலுக்கும் அவன் பணியாட்களுக்கும் முன்பாக வைத்தபோது அவர்கள் சாப்பிட்டார்கள், அன்றிரவே அவர்கள் எழுந்து அவ்விடமிருந்து போனார்கள். ஆகீஸ் தாவீதைச் சிக்லாக்கிற்கு அனுப்புதல் பெலிஸ்தியர் தங்கள் படைகளை ஆப்பெக்கிலே ஒன்றுசேர்த்தார்கள். இஸ்ரயேலர் யெஸ்ரயேலிலுள்ள நீரூற்றருகில் முகாமிட்டார்கள். பெலிஸ்திய ஆளுநர்கள் நூறு போர்வீரர்களையும், ஆயிரம் போர்வீரர்களையும் கொண்ட பிரிவுகளுடன் அணிவகுத்து முன்னே செல்ல, தாவீதும் அவன் போர்வீரரும் ஆகீஸின் பின்னே அணிவகுத்துச் சென்றார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் ஆகீஸிடம், “இந்த எபிரெயர் ஏன் இங்கு இருக்கின்றனர்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆகீஸ், “தாவீது இஸ்ரயேலின் அரசனான சவுலின் ஒரு அதிகாரி அல்லவா? இவன் ஒரு வருடத்துக்கு மேலாக என்னுடனிருக்கிறான். இவன் என்னிடம் வந்தநாள் முதல் இன்றுவரை அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்றான். ஆனால் பெலிஸ்திய தளபதிகள் கோபமடைந்து ஆகீஸிடம், “நீர் இவனுக்குக் கொடுத்த இடத்துக்கு இவனைத் திருப்பி அனுப்பும். இவன் எங்களுடன் போருக்கு வரக்கூடாது. இவன் யுத்தம் நடக்கும்போது எங்களுக்கு எதிரியாய் மாறுவான். எங்கள் சொந்த போர்வீரரின் தலைகளை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தலைவனைப் பிரியப்படுத்துவதற்கு, வேறு சிறந்த வழி அவனுக்கு உண்டோ? இந்தத் தாவீதைக் குறித்தல்லவா மக்கள் இப்படி ஆடிப்பாடி சொன்னார்கள்: “ ‘சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்’ என்று ஆடிப்பாடி வாழ்த்தியது இந்தத் தாவீதையல்லவா?” எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “யெகோவா இருப்பது நிச்சயமெனில் நீ கடமை தவறாதவன் என்பதும் நிச்சயம். நீ படையிலே என்னுடன் பணிசெய்வதை நான் விரும்புகிறேன். நீ என்னிடம் வந்துசேர்ந்த நாள் முதல் இன்றுவரை உன்னிடம் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை. ஆனாலும் என் ஆளுநர்கள் நீ என்னுடன் வருவதை விரும்பவில்லை. அதனால் சமாதானத்தோடே திரும்பிப்போ. பெலிஸ்திய ஆளுநர்களை கோபப்படுத்தக்கூடிய ஒன்றையும் செய்யாதே” என்றான். அதற்குத் தாவீது, “நான் என்ன செய்துவிட்டேன்? நான் வந்தநாள் தொடங்கி இன்றுவரை உமது அடியவனிடம் என்ன குற்றம் கண்டீர்? நான் என் தலைவனாகிய அரசனின் பகைவருடன் யுத்தம் செய்யக்கூடாதா?” என்று கேட்டான். அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “இறைவனுடைய தூதனைப்போல் எனக்குப் பிரியமானவனாய் இருந்தாய். ஆனாலும் பெலிஸ்திய படைத் தளபதிகள், ‘நீ எங்களோடு யுத்த களத்துக்கு வரக்கூடாது’ என்கிறார்கள். ஆகையால் நாளை அதிகாலையில் எழுந்து வெளிச்சம் வந்தவுடன், நீயும் உன்னுடன்கூட வந்த உனது தலைவனுடைய பணியாட்களும் புறப்பட்டுப் போங்கள்” என்றான். எனவே தாவீதும் அவன் ஆட்களும் அதிகாலையில் பெலிஸ்தியரின் நாட்டுக்குத் திரும்பிப்போக எழுந்தார்கள். பெலிஸ்தியரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள். தாவீது அமலேக்கியரை அழித்தல் தாவீதும் அவன் மனிதரும் மூன்றாவது நாள் சிக்லாக்கை அடைந்தார்கள். அமலேக்கியர் பெலிஸ்திய நாட்டின் நெகேப் பகுதியையும், சிக்லாகையும் சூறையாடியிருந்தார்கள். அவர்கள் சிக்லாக்கைத் தாக்கி அதை எரித்து, அங்குள்ள பெண்கள், சிறியவர், முதியவர் உட்பட அனைவரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோயிருந்தார்கள். போகும்போது ஒருவரையும் கொலைசெய்யாமல், எல்லோரையும் தங்களுடன் கொண்டுபோய்விட்டார்கள். தாவீதும் அவன் ஆட்களும் சிக்லாகுக்கு வந்தபோது, அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், மகன்களும், மகள்களும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருப்பதையும் கண்டார்கள். எனவே தாவீதும் அவனுடனிருந்த மனிதரும் அழுவதற்குப் பெலனற்றுப் போகுமட்டும் கதறி அழுதார்கள். அவர்களோடு யெஸ்ரயேல் ஊராளான அகினோவாம், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையாயிருந்த அபிகாயில் ஆகிய தாவீதின் மனைவியர் இருவரும்கூட கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த ஒவ்வொருவரும் மனங்கசந்ததினால் தாவீதைக் கல்லால் அடிக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டார்கள். அதை அறிந்த தாவீது மிகவும் மனவேதனையடைந்தான். தாவீதோ தன் இறைவனாகிய யெகோவாவுக்குள் பெலன் கொண்டான். அதன்பின் தாவீது அகிமெலேக்கின் மகனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனிடம், “ஏபோத்தை என்னிடம் கொண்டுவா” என்றான். அபியத்தார் ஏபோத்தைத் தாவீதிடம் கொண்டுவந்தான். அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் அந்த கொள்ளைக்காரரை துரத்திப் போகட்டுமா? என்னால் அவர்களைப் பிடிக்க முடியுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்களைத் துரத்திப்போ. நிச்சயமாக அவர்களைப் பிடித்து, கைதிகளைத் தப்புவிப்பாய்” என்றார். எனவே தாவீதும், அவனுடனிருந்த அறுநூறு மனிதரும் பேசோர் கணவாய்க்கு வந்தபோது சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். ஏனெனில் இருநூறுபேர் அதிக களைப்படைந்திருந்ததால் அவர்களாலே கணவாய்க்கு கடந்துபோக முடியவில்லை. ஆனால் தாவீதும் நானூறுபேரும் அவர்களைத் தொடர்ந்து துரத்திச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் போகும் வழியில் எகிப்தியன் ஒருவன் வயலில் கிடப்பதைக் கண்டு அவனைத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட உணவும் கொடுத்தார்கள். அவனுக்கு அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும், இரண்டு திராட்சைப்பழ அடைகளையும் கொடுத்தார்கள். அவன் மூன்று நாட்களாக இரவும் பகலும் தண்ணீர் குடியாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்தான். எனவே அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டவுடன் களைப்பு நீங்கிப் பெலனடைந்தான். அதன்பின் தாவீது அவனிடம், “நீ யாரைச் சேர்ந்தவன்? நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “நான் ஒரு அமலேக்கியனுடைய அடிமையான எகிப்தியன். மூன்று நாட்களுக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் தலைவன் என்னை கைவிட்டுவிட்டார். நாங்கள் கிரேத்தியருடைய நெகேப் பகுதியையும், யூதாவுக்குச் சொந்தமான பிரதேசத்தையும், காலேப்பின் நெகேப் பகுதியையும் முற்றுகையிட்டு, சிக்லாக்கைத் தீக்கிரையாக்கினோம்” என்றான். அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்களைச் சூறையாடிய கூட்டத்திடம் போக வழிகாட்டுவாயா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நீர் என்னைக் கொல்வதில்லையென்றும், என் தலைவனிடம் ஒப்படைப்பதில்லை என்றும் இறைவன் பேரில் ஆணையிட்டால், நான் உம்மை அவர்களிடம் கூட்டிக்கொண்டு போவேன்” என்றான். அவ்வாறே அவன் தாவீதைக் கூட்டிக்கொண்டு அவர்களிடம் போனான். அங்கே அவர்கள், நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டு சாப்பிட்டு, குடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் பெலிஸ்திய நாடுகளிலிருந்தும் யூதா நாட்டிலிருந்தும் பெருந்தொகையான பொருட்களைக் கொள்ளையடித்து வந்த மகிழ்ச்சியிலே, இப்படிச் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது அன்று இரவு நேரம் தொடங்கி மறுநாள் மாலைவரை அவர்களுடன் சண்டையிட்டான். ஒட்டகங்களில் ஏறித் தப்பி ஓடிப்போன நானூறு வாலிபரைத் தவிர வேறு ஒருவனும் தப்பவில்லை. தாவீது அமலேக்கியர் கொள்ளையிட்டுக் கொண்டுபோன தன் இரு மனைவியர் உட்பட அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான். அவர்கள் சிறைப்பிடித்தவர்களில் வாலிபரோ, முதியவரோ, ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவருமே தவறவில்லை. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும், ஒன்றுமே குறையாமல் தாவீது மீட்டுக்கொண்டு போனான். தாவீது அங்குள்ள ஆடு மாடுகளனைத்தையும் கைப்பற்றினான். அவற்றை அவன் மனிதர் மற்ற மந்தைகளுக்கு முன்னாக ஒட்டிச்சென்று, “இது தாவீதின் கொள்ளைப்பொருள்” என்று சொன்னார்கள். அதன்பின் தாவீது பேசோர் கணவாய்க்கு வந்தான். அங்கே அதிக களைப்பினால் அவனுடன் போகமுடியாமல் இருந்த இருநூறு பேரும் இருந்தார்கள். அந்த மனிதர், தாவீதையும் அவனுடன் வந்த மனிதரையும் சந்திப்பதற்காக எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களின் சுகசெய்தியை விசாரித்தான். அப்பொழுது தாவீதைப் பின்பற்றியவர்களில் குழப்பக்காரரும், தீய குணங்கள்30:22 தீய குணங்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம்; 2 கொரி. 6:15. கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் தாவீதிடம், “அவர்கள் எங்களுடன் வராதபடியால் நாங்கள் மீட்டுக் கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் ஒரு பங்கையேனும் அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் மனைவிகளையும், பிள்ளைகளையும் மட்டும் அழைத்துக் கொண்டுபோகட்டும்” என்றார்கள். அதற்குத் தாவீது, “என் சகோதரரே யெகோவா நமக்குத் தந்தவற்றை அப்படிச் செய்யக்கூடாது. யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்த கூட்டத்தை எங்களிடம் ஒப்படைத்தாரே. நீங்கள் சொல்வதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். யுத்த களத்துக்கு வந்தவர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்குமோ, அதே அளவே யுத்தத்துக்குரிய பொருட்களுடன் தங்கியிருக்கிறவர்களுக்கும் கிடைக்கவேண்டும். எனவே எல்லோருக்கும் சமமான பங்கே கிடைக்கவேண்டும்” என்றான். தாவீது இதை ஒரு ஒழுங்குவிதியாகவும், நியமமாகவும் ஏற்படுத்தினான். இப்படியே இது இன்றுவரை இஸ்ரயேலில் நடந்து வருகிறது. தாவீது சிக்லாக்கிற்கு வந்தபோது, “யெகோவாவின் பகைவர்களிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் உங்களுக்கும் அன்பளிப்பு இங்கே இருக்கிறது” என்று சொல்லி, தான் கொள்ளையடித்த பொருட்களில் சிலவற்றைத் தன் நண்பர்களான யூதாவின் முதியவர்களுக்கு அனுப்பிவைத்தான். அவற்றைத் தாவீது பெத்தேல், ராமாத் நெகேப், யாத்தீரில் இருந்தவர்களுக்கும், அரோயேர், சிப்மோத், எஸ்தெமோவாவில் இருந்தவர்களுக்கும், ராக்கா, யெராமியேலியரின் பட்டணங்களில் இருந்தவர்களுக்கும், கேனியரின் பட்டணங்கள், ஓர்மா, கொராசான் ஆத்தாகில் இருந்தவர்களுக்கும், எப்ரோனில் இருந்தவர்களுக்கும், மற்றும் தாவீதும் அவன் மனிதரும் போய்வந்த எல்லா இடங்களிலுமுள்ளவர்களுக்கும் அன்பளிப்பாக அனுப்பினான். சவுலின் தற்கொலை பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர், அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர். பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, சவுலின் மகன்களான யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள். சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைப் படுகாயப்படுத்தினார்கள். அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான். ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான். சவுல் இறந்ததைக் கண்ட யுத்த ஆயுதம் சுமப்பவன் தானும் தனது வாள்மேல் விழுந்து சவுலோடு இறந்தான். இவ்விதமாய்ச் சவுலும் அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய யுத்த ஆயுதம் சுமப்பவனும், அவன் மனிதரனைவரும் அன்றையதினம் இறந்தார்கள். இஸ்ரயேல் படைகள் தப்பியோடியதையும், சவுலும் அவன் மூன்று மகன்களும் இறந்ததையும் பள்ளத்தாக்கின் நெடுகிலும், யோர்தானுக்கு அப்பாலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டார்கள். அப்போது அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு, ஓடிப்போனார்கள். அதன்பின் பெலிஸ்தியர் வந்து அவ்விடங்களில் குடியேறினார்கள். மறுநாள், கொல்லப்பட்ட இஸ்ரயேலரின் உடைமைகளை பெலிஸ்தியர் கொள்ளையிட வந்தபோது, சவுலும், அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்து இறந்துகிடக்கக் கண்டார்கள். அவர்கள் சவுலின் தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசத்தைக் கழற்றி கொள்ளையடித்தார்கள். பின் அவர்கள் தங்கள் விக்கிரகங்கள் இருந்த தங்கள் கோவில்களிலுள்ள மக்களுக்குத் தங்கள் வெற்றியின் செய்தியைப் பரப்பும் பொருட்டு, பெலிஸ்திய நாடெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். சவுலின் யுத்த கவசத்தை அஸ்தரோத்தின் கோவிலில் வைத்தார்கள். அவன் உடலை பெத்ஷான் நகரத்தின் மதிலிலே கட்டித் தொங்கவிட்டார்கள். பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்தவற்றைக் கீலேயாத் யாபேஸ் மக்கள் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்களில் பலசாலிகளான மனிதர் அனைவரும் இரவு முழுவதும் பயணஞ்செய்து பெத்ஷானுக்குப் போனார்கள். அங்கே மதிலிலிருந்த சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து யாபேசுக்குக் கொண்டுவந்து, அவற்றை அங்கே தகனம் பண்ணினார்கள். அதன்பின் அவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி எடுத்து யாபேசிலுள்ள ஒரு தமரிஸ்கு மரத்தின்கீழ் அடக்கம் செய்து, பின் ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள்.