- Biblica® Open Indian Tamil Contemporary Version 1 பேதுரு பேதுரு எழுதின முதல் கடிதம் 1 பேதுரு 1 பேது. பேதுரு எழுதின முதல் கடிதம் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது: நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக. உயிருள்ள நம்பிக்கைக்காக இறைவனுக்குத் துதி நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை; நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும். தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும். நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள். தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள். அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள். பரிசுத்தராயிருங்கள் ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள். நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள். உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்”1:16 லேவி. 11:44,45; 19:2 என்று எழுதியிருக்கிறதே. ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள். ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை. குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள். உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார். அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன, ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது”1:25 ஏசா. 40:6-8 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. இப்படியிருக்க, தீமை எல்லாவற்றையும், ஏமாற்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும், வெளிவேஷத்தையும், பொறாமையையும், எல்லா விதமான அவதூறுப் பேச்சுக்களையும், உங்களைவிட்டு அகற்றுங்கள். புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்பொழுது அதன்மூலம் உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள். ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள். உயிருள்ள கல்லும் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும் நீங்கள் மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவரும், அவரால் உயர்மதிப்புப் பெற்றவருமான உயிருள்ள கல்லாகிய இயேசுவிடமே வருகிறீர்கள். நீங்களும் உயிருள்ள கற்களைப்போல, ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள். இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும், பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகிறீர்கள். ஏனெனில்: “இதோ, சீயோனிலே ஒரு கல்லை வைக்கிறேன். அது தெரிந்துகொள்ளப்பட்டதும் உயர் மதிப்புள்ளதுமான ஒரு மூலைக்கல். அவரைச் சார்ந்து இருக்கிறவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை”2:6 ஏசா. 28:16 என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசிக்கிற உங்களுக்கோ, இந்தக் கல் உயர்மதிப்புடையது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டிடம் கட்டுகிறவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.”2:7 சங். 118:22 இது, “மனிதர்களை இடறச்செய்யும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருக்கிறது.”2:8 ஏசா. 8:14 அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ, இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் மேன்மைகளை அறிவிக்கும்படி, தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாகவும், ஒரு மேன்மையான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த ஜனமாகவும், இறைவனுக்குரிய மக்களாகவும் இருக்கிறீர்கள். முன்பு நீங்கள் ஒரு மக்களாக மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்களாய் இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நல்ல வாழ்க்கை வாழ்வது பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன. இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில் நன்மை செய்வதினாலே, நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்கவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கிறது. சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள்; ஆனால் உங்கள் சுதந்திரத்தை தீமையை மூடும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள்; இறைவனின் ஊழியராக வாழுங்கள். எல்லோருக்கும் ஏற்ற மதிப்பைக்கொடுத்து நடவுங்கள்; விசுவாசிகளான சகோதரரில் அன்பாய் இருங்கள். இறைவனுக்குப் பயந்து வாழுங்கள். அரசரைக் கனம்பண்ணுங்கள். அடிமைகளே, உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள். ஏனெனில், ஒருவன் அநியாயத்தினால் வரும் கஷ்டங்களின் வேதனையை இறைவனை மனதில் கொண்டவனாய் சகித்தால், அது பாராட்டுக்குரியது. ஆனால் நீங்கள் தவறு செய்வதற்காக சிட்சிக்கப்படுகிறபோது அதைச் சகித்தால், அதனால் உங்களுக்கு என்ன பாராட்டு ஏற்படமுடியும்? ஆனால் நீங்கள் நன்மை செய்வதற்காக வேதனை அனுபவிக்கிறபோது, அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியதாய் இருக்கும். இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார். “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.”2:22 ஏசா. 53:9 அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.” ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப்போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.”2:25 ஏசா. 53:4,5,6 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) ஆனால் இப்பொழுதோ, உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், மேற்பார்வையாளருமாக இருக்கிற கிறிஸ்துவிடம் திரும்பிவந்திருக்கிறீர்கள். மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும். தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும். உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல. அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது. ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள். அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள். கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. நல்லவை செய்வதால் துன்பம் இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள். தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும். அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும். ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”3:12 சங். 34:12-16 நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்? ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.”3:14 ஏசா. 8:12 ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும். நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள். தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது. ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள். அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன. இறைவனுக்காக வாழ்வது எனவே, கிறிஸ்து தமது மாம்சத்தில் துன்பத்தை அனுபவித்ததினால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், மாம்சத்தில் துன்பப்படுகிறவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள். அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள். கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள். ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் வாழ்கிறவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயந்தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும். எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள். பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். கிறிஸ்துவுக்காக துன்பம் பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால், நீங்கள் ஆசீர்வதிகப்பட்டவர்கள்; ஏனெனில் இறைவனின் ஆவியானவர் மகிமையுடன் உங்களில் தங்கி வாழ்கிறாரே. ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள். ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்! வேதவசனத்தின்படி, “நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால், இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?”4:18 நீதி. 11:31 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். திருச்சபைத் தலைவர்களுக்கும் இளைஞருக்கும் உங்கள் மத்தியில் சபைத்தலைவர்களாய் இருக்கிறவர்களிடம், உங்கள் உடன் தலைவனாகவும், கிறிஸ்துவினுடைய துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப்போகும் மகிமைக்கு பங்காளியாகவும் இருக்கிற நான் வேண்டிக்கொள்கிறதாவது: உங்களுடைய பராமரிப்பின்கீழ் இருக்கும், இறைவனுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாயிருங்கள். கண்காணிப்பாளர்களாகப் பணிசெய்யுங்கள். செய்யவேண்டியிருக்கிறதே என்பதற்காக செய்யாமல், நீங்கள் அப்படி இருக்கவேண்டுமென்று இறைவன் விரும்புகிறபடியால், மனவிருப்பத்துடன் அதைச் செய்யுங்கள்; பணம் சம்பாதிக்கும் பேராசையுடன் அதைச் செய்யாமல், வாஞ்சையுடன் அந்த ஊழியத்தைச் செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களாய் இல்லாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். அப்படி நடப்பீர்களானால், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது, ஒருபோதும் மங்கிப்போகாத மகிமையின் கிரீடத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இளைஞர்களே, அந்தப்படியே நீங்களும் சபைத்தலைவர்களுக்கு அடங்கி நடங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது, மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்.”5:5 நீதி. 3:34 ஆகவே, இறைவனுடைய வல்லமையான கரத்தின்கீழே உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது ஏற்றவேளையில், அவர் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். தன்னடக்கம் உள்ளவர்களாயும் விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு கர்ஜிக்கின்ற சிங்கத்தைப்போல், யாரை விழுங்கலாம் என்று அலைந்து தேடித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளின் வழியாக போய்க்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென். கடைசி வாழ்த்துதல்கள் சில்வானின் உதவியுடனே நான் உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அவனை ஒரு உண்மையுள்ள சகோதரனாகவே நான் எண்ணுகிறேன். உங்களை உற்சாகப்படுத்தவும், இதுவே இறைவனின் மெய்யான கிருபை என்று உங்களுக்குச் சாட்சியாகக் கூறவும், இதை எழுதியிருக்கிறேன். எனவே, இந்தக் கிருபையில் நீங்கள் உறுதியாய் நிலைத்து நில்லுங்கள். உங்களோடேகூட தெரிந்துகொள்ளப்பட்ட புதிய பாபிலோனிலுள்ள திருச்சபையும், உங்களுக்கு தங்களது வாழ்த்துதலை அனுப்புகிறது. அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துதலை அனுப்புகிறான். ஒருவரையொருவர் அன்பின் முத்தத்துடன் வாழ்த்துங்கள். கிறிஸ்துவில் இருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.