- Biblica® Open Indian Tamil Contemporary Version 1 இராஜாக்கள் இராஜாக்களின் முதலாம் புத்தகம் 1 இராஜாக்கள் 1 இராஜா. இராஜாக்களின் முதலாம் புத்தகம் சாலொமோன் அரசனாதல் தாவீது அரசன் முதிர்ந்த கிழவனாய் படுக்கையிலேயே கிடந்தான். அவனை துணிகளினால் போர்த்தியபோதும் அவனுக்குக் குளிர் தாங்கமுடியாதிருந்தது. எனவே அவனுடைய பணியாட்கள் அவனிடம், “அரசனைப் பராமரிப்பதற்கு ஒரு கன்னிப் பெண்ணைத் தேடுவோம். அவள் அரசனுக்கு உதவி வேலையைச் செய்யட்டும். அவள் எஜமானாகிய அரசன் சூடாக இருக்கும்படி அவருக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளட்டும்” என்றார்கள். அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் நாட்டைச் சேர்ந்த அபிஷாக் என்னும் அழகிய பெண்ணைக் கண்டு அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனைக் கவனித்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். ஆனால் அரசன் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை. அந்த வேளையில் அரசன் தாவீதின் மகன் அதோனியா முன்வந்து, “நான் அரசனாவேன்” என்றான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத். எனவே அவன் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் தனக்கு முன் செல்வதற்கு ஆயத்தப்படுத்தினான். அவனுடைய தகப்பனான அரசன் தாவீது, “நீ ஏன் இவ்விதம் நடக்கவேண்டும்” என்று கேட்டு அவன் செயல்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அப்சலோமுக்குப் பின் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான். அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், ஆசாரியனான அபியத்தாருடனும் ஆலோசித்தான். அவர்கள் அவனுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள். ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை. அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான். ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, விசேஷ காவலனையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை. அப்பொழுது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் தலைவனாகிய தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா? இப்போது உனது உயிரையும், உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நீ விரும்பினால், நான் உனக்கு ஆலோசனை சொல்வேன். நீ தாவீது அரசனிடம் போய், ‘என் தலைவனாகிய அரசே, அடியாளாகிய எனக்கு: “உமது மகன் சாலொமோனே உமக்குப்பின் உமது அரியணையிலிருந்து அரசாளுவான் என்று ஆணையிட்டு வாக்களித்தீரல்லவா”? அப்படியிருக்க ஏன் அதோனியா அரசனாகிறான்?’ என்று கேள். அவ்வாறு நீ அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான். அப்பொழுது பத்சேபாள் மிகவும் வயதுசென்றவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊராளான அபிஷாக், அரசனுக்கு உதவி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழங்காற்படியிட்டாள். அரசன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான். அதற்கு அவள், “என் தலைவனே, உமக்குப்பின் எனது மகனாகிய சாலொமோனே உமது அரியணையில் இருக்கும் அடுத்த அரசனாவான் என்று, உமது இறைவனாகிய யெகோவாவின் பேரில் உமது அடியவளாகிய எனக்கு நீர் வாக்குப்பண்ணினீரே. ஆனால் இப்போது அதோனியா அரசனாகிவிட்டான். என் தலைவனாகிய அரசனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அவன் பெருந்தொகையான மாடுகளையும், கொழுத்த கன்றுகளையும், செம்மறியாடுகளையும் பலிசெலுத்தினான். அது மட்டுமல்லாமல் அரசனின் எல்லா மகன்களையும் ஆசாரியனான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாப்பையும் அழைத்திருந்தான். உமது அடியவனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை. என் தலைவனாகிய அரசே, இப்பொழுது என் தலைவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக எல்லா இஸ்ரயேலருடைய கண்களும் உம் மேலேயே இருக்கின்றன. இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டபின்பு, நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள். அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான். அவர்கள் அரசனிடம், “இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது நாத்தான் அரசனிடம் வந்தபோது, அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கினான். நாத்தான் அரசனிடம், “தலைவனாகிய அரசனே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் இருப்பான் என்று எப்போதாகிலும் நீர் அறிவித்திருக்கிறீரோ? இன்று அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேகம் செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கிறான். அவன் அரசனின் எல்லா மகன்களையும் இராணுவ தளபதிகளையும் ஆசாரியன் அபியத்தாரையும் அழைத்திருக்கிறான். அவர்கள் இப்பொழுது அவனுடன் சாப்பிட்டுக் குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழவேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியன் சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. இது, எங்கள் அரசனாகிய தலைவன் தமக்குப்பின்பு யார் அரியணையில் இருக்கவேண்டும் என தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் செய்த ஒரு காரியமோ?” என்றான். தாவீது சாலொமோனை அரசனாகத் தெரிந்தெடுத்தல் அப்பொழுது தாவீது, “பத்சேபாளை இங்கு கூப்பிடுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அரசனுக்கு முன்பாக நின்றாள். அப்பொழுது அரசன் தாவீது அவளிடம் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை எல்லா ஆபத்திலிருந்தும் விடுவித்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் எனக்குப்பின் உன் மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே என் அரியணையில் எனக்குப்பின் எனது இடத்தில் இருப்பான் என்றும் முன்பு உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான். பின்பு பத்சேபாள் மறுபடியும் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின், அரசனுக்கு முன் முழங்காற்படியிட்டு, “என் தலைவனாகிய அரசன் தாவீது நீடூழி வாழ்வாராக” என்றாள். அப்பொழுது தாவீது, “ஆசாரியனான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் உள்ளே வந்தபோது அவர்களிடம், “என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, என் ஊழியக்காரருடன் அவனை கீகோனுக்கு அழைத்துப் போங்கள். அங்கே ஆசாரியனான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணட்டும். அதன்பின்பு எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரியுங்கள். பின்பு அவனோடு நீங்கள் வந்து அவனை அரசனாக எனது அரியணையில் அமர்த்துங்கள். அவன் எனது இடத்தில் அரசனாக வேண்டும். இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் நான் அவனை ஆளுநனாக நியமித்திருக்கிறேன்” என்றான். யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென், என் தலைவனாகிய அரசனின் இறைவனாகிய யெகோவாவும் அவ்வாறே அறிவிப்பாராக. யெகோவா என் தலைவனாகிய அரசனோடு இருந்ததுபோல, சாலொமோனோடுங்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் தலைவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக” என்றான். அப்படியே ஆசாரியன் சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய், சாலொமோனை அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் ஏற்றி கீகோனுக்கு அழைத்துப் போனார்கள். ஆசாரியன் சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் கொம்பை எடுத்து சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள். அதன்பின் சாலொமோனுடன் எல்லா மக்களும் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு நிலம் அதிரத்தக்க பெரும் குதூகலத்துடன் அவனுக்குப்பின் சென்றார்கள். அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்தை முடிக்கும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்தச் சத்தம் என்ன?” என்று கேட்டான். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆசாரியனான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான். அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார். அரசன் அவனை ஆசாரியனான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். ஆசாரியன் சாதோக்கும் இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் போகிறார்கள். பட்டணத்தில் அச்சத்தம் கேட்கிறது. அந்த ஆர்ப்பரிப்புதான் நீர் கேட்கும் சத்தம் என்றான். மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பார்க்க பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகிறார்கள். அப்பொழுது அரசன் தன் படுக்கையிலிருந்து தலைகுனிந்து வழிபட்டார். மேலும் அரசன், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. எனக்குப்பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படியாகச் செய்தாரே’ என்று கூறினார்” என்றான். இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள். அதோனியா சாலொமோனுக்கு பயந்து ஓடி பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். பின்பு அதோனியா, அரசன் சாலொமோனுக்குப் பயந்து பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான் என்றும், சாலொமோன் அரசன் வாளினால் தன்னைக் கொல்வதில்லை என இன்றைக்குத் தனக்குச் சத்தியம் பண்ணிக் கூறவேண்டும் என்றும் அதோனியா கேட்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு சாலொமோன் மறுமொழியாக, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமயிரில் ஒன்றுகூட நிலத்தில் விழமாட்டாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் சாவான்” என்று கூறினான். மேலும் அரசனாகிய சாலொமோன் அவனை பலிபீடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தனர். அவன் சாலொமோனின் முன்வந்து தலைகுனிந்து வணங்கினான். அப்பொழுது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டிற்குப் போ” என்றான். தாவீது சாலொமோனுக்குக் கொடுத்த பொறுப்பு அரசன் தாவீதுக்கு மரண நாட்கள் நெருங்கியபோது, தன் மகனான சாலொமோனுக்குப் பொறுப்பை ஒப்படைத்தான். அவன் சாலொமோனிடம், “பூமியில் உள்ள எல்லோரும் போகிற வழியில் நானும் போகப்போகிறேன்2:2 போகப்போகிறேன் அல்லது உலகிலுள்ள மற்றவர்களைப் போல நானும் சாகப்போகிறேன்.. நீ தைரியத்துடன் வீரமுள்ளவனாய் இரு. உனது இறைவனாகிய யெகோவா உனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் கைக்கொள்; அவருடைய வழிகளிலேயே நட. மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறபடி அவருடைய விதிமுறைகளையும், சட்டங்களையும், ஒழுங்குவிதிகளையும் கைக்கொள். அப்பொழுது நீ செய்வதெல்லாவற்றிலும் வளம் பெறுவாய். நீ போகுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய். மேலும் யெகோவா எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்: ‘உன் சந்ததிகள் தாங்கள் வாழும் விதத்தில் கவனமாயிருந்து தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்குமுன் உண்மையாக நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கு ஒரு மனிதன் உனக்கு இல்லாமல் போகமாட்டான் என்று எனக்கு வாக்களித்தாரே.’ “இப்பொழுது செருயாவின் மகன் யோவாப் எனக்குச் செய்தது என்ன என்று உனக்குத் தெரியும். அவன் இஸ்ரயேலின் இரு இராணுவத் தளபதிகளான நேரின் மகன் அப்னேருக்கும், ஏத்தேரின் மகன் அமாசாவுக்கும் செய்தது உனக்குத் தெரியும். அவன் அவர்களை ஒரு போர்க்களத்தில் செய்வதுபோல் சமாதான காலத்திலேயே இரத்தத்தைச் சிந்தி கொன்றான். அந்த இரத்தத்தினால் தன் இடுப்பைச் சுற்றியிருந்த பட்டியையும், காலில் இருந்த பாதரட்சைகளையும் கறைப்படுத்தினான். உனது ஞானத்தின்படியே அவனுக்குச் செய், அவனை நரைத்த முதுமையான காலத்தில் சமாதானத்துடன் பாதாளத்திற்குப்போக இடங்கொடுக்காதே. “கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்டி, உன் மேஜையிலிருந்து சாப்பிடுபவர்களுடன் அவர்களையும் சேர்த்துக்கொள். ஏனென்றால் உன் சகோதரன் அப்சலோமுக்குத் தப்பி நான் ஓடிப்போனபோது என்னை அவர்கள் ஆதரித்தார்கள். “நான் மக்னாயீமுக்குப் போன அந்த நாளில் என்னைக் கசப்பான சாபங்களால் சபித்த, பகூரிம் ஊரைச்சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி உன்னுடன் இருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள். அவன் யோர்தான் நதி அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘நான் உன்னை வாளினால் அழிப்பதில்லை’ என்று யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டுக் கூறினேன். ஆனால் அவனைக் கபடற்றவன் என்று நினையாதே, நீ ஞானமுள்ளவன். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ அறிந்துகொள்வாய். அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகப்பண்ணு” என்றான். இதன்பின் தாவீது தனது முற்பிதாக்களைப்போல இறந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். தாவீது நாற்பது வருடங்கள் இஸ்ரயேலின் அரசனாயிருந்தான். எப்ரோனில் ஏழு வருடமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் அரசனாயிருந்தான். இதன்பின் சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் அரசாண்டான். அவனுடைய அரசு வளம்பெற்று உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. அதோனியாவின் மரணம் அப்பொழுது ஒரு நாள் ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை காண்பதற்காகப் போனான். பத்சேபாள் அவனைப் பார்த்து, “சமாதானத்துடன் வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். அவன், “ஆம்; சமாதானத்துடனேயே வந்திருக்கிறேன்” என்றான். மேலும் அவன், “நான் உம்மிடத்தில் ஒரு காரியம் சொல்லவேண்டும்” என்றான். பத்சேபாள், “அதை நீ கூறலாம்” என்றாள். அதற்கு அவன், “உமக்குத் தெரிந்தபடி அரசாட்சி என்னுடையதாகவே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் நான் தங்களுடைய அரசனாக வருவேன் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எல்லாம் மாறி அரசாட்சி என் சகோதரனுக்குப் போய்விட்டது. யெகோவாவிடமிருந்தே அது அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் இப்போது உம்மிடம் ஒரு வேண்டுகோளை நான் கேட்கிறேன். அதை எனக்கு மறுக்கவேண்டாம்” என்றான். அப்போது பத்சேபாள், “அது என்னவென்று எனக்குக் கூறு” என்றாள். அவன் தொடர்ந்து, “சாலொமோன் உமக்கு எதையும் மறுக்கமாட்டான். ஆகவே அரசனுடன் எனது சார்பில் பேசி சூனேமியாளான அபிஷாகுவை எனக்கு மனைவியாக தரும்படி கேளும்” என்றான். அதற்கு பத்சேபாள், “நல்லது. நான் உனக்காக அரசனுடன் பேசுவேன்” என்றாள். அதோனியாவுக்காக சாலொமோன் அரசனுடன் பேசும்படி பத்சேபாள் அவனிடம் போனாள். அப்போது அரசன் அரியணையிலிருந்து எழுந்து அவளுக்கு முன்னாகப்போய் தலைவணங்கினான். பின் தன் அரியணையில் அமர்ந்துகொண்டான். அரசனின் தாய்க்காக ஒரு அரியணையை வைத்தான். அவள் அவனுடைய வலப்பக்கத்தில் அமர்ந்துகொண்டாள். “நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. அதை எனக்கு மறுக்காதே” என்றாள். அப்பொழுது அரசன் அவளைப் பார்த்து, “என் தாயே, அதை என்னிடம் கேளும். நான் மறுக்கமாட்டேன்” என்றான். அதற்கு அவள், “உனது சகோதரன் அதோனியாவுக்கு, சூனேமியாளான அபிஷாகுவை மனைவியாகக் கொடு” என்றாள். அப்போது சாலொமோன் தன் தாயிடம், “ஏன் அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்கிறீர்? அப்படியானால் எனது அரசாட்சியையும் அவனுக்குக் கேட்கலாமே. ஏனெனில் அவன் எனது மூத்த சகோதரன் அல்லவா. அவனும் ஆசாரியன் அபியத்தாரும், செருயாவின் மகனான யோவாபுமே ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும்” என்றான். மேலும் சாலொமோன் யெகோவாவின் பெயரில் சத்தியம்பண்ணி, “இந்த வேண்டுகோளுக்காக அதோனியா தன் உயிரையே கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும். என் தகப்பனாகிய தாவீதின் அரியணையில் என்னை உறுதியாக நிலைநிறுத்தி, தாம் வாக்குப்பண்ணியபடி எனக்கு ஒரு சந்ததியையும் தந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், இன்று அதோனியா கொல்லப்படவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான். அரசனாகிய சாலொமோன் தான் சொன்னவாறே அதோனியாவைக் கொல்லும்படி யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான். அதன்படி பெனாயா அதோனியாவை வெட்டிக்கொன்றான். அதன்பின் அரசன் ஆசாரியனான அபியத்தாரைப் பார்த்து, “ஆனதோத்திலிருக்கும் உன் வயலுக்குத் திரும்பிப்போ. நீ சாகவே தகுதியுள்ளவன். ஆனால் இப்போது நான் உன்னைக் கொல்வதில்லை. ஏனென்றால் என் தகப்பனாகிய தாவீது ஆட்சிசெய்தபோது, ஆண்டவராகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை நீ சுமந்து சென்றாய். அத்துடன் என் தகப்பனின் எல்லாக் கஷ்டங்களிலும் நீயும் உடன்பங்காளியாயிருந்து, கஷ்டங்களை அனுபவித்தாய்” என்று சொன்னான். ஆனால் சாலொமோன் அபியத்தாரை யெகோவாவின் ஆசாரியனாயிராதபடிக்கு விலக்கிப்போட்டான். இதனால் சீலோவில் ஏலியின் சந்ததிகளைப் பற்றி யெகோவா கூறிய வார்த்தை நிறைவேறியது. யோவாப் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் யெகோவாவின் கூடாரத்துக்குள் ஓடி, பரிசுத்த பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவன் அப்சலோமின் கலகத்தில் ஈடுபடாதபோதும் அதோனியாவின் கலகத்தில் ஈடுபட்டிருந்தான். யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்குள் ஓடி பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்று அரசனாகிய சாலொமோனுக்குச் சொல்லப்பட்டது. எனவே அவனைக் கொன்றுபோடும்படி சாலொமோன் யோய்தாவின் மகனான பெனாயாவுக்குக் கட்டளையிட்டான். அப்போது பெனாயா யெகோவாவின் கூடாரத்துக்குப் போய் யோவாபிடம், “அரசன் உன்னை வெளியே வரும்படி கூறுகிறார்” என்றான். அதற்கு அவன், “இல்லை. நான் இங்கேயே சாவேன்” என்றான். எனவே பெனாயா அரசனிடம் போய், “யோவாப் இவ்வாறே பதிலளித்திருக்கிறான்” என்றான். அதைக்கேட்ட அரசன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம்பண்ணு. குற்றமில்லாத இரத்தத்தை யோவாப் சிந்திய குற்றத்திலிருந்து என்னையும், என் தகப்பன் குடும்பத்தையும் விடுதலை பெறச் செய்; அவன் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல், இஸ்ரயேலின் இராணுவத்தளபதி நேரின் மகன் அப்னேரையும், யூதாவின் இராணுவத்தளபதி ஏத்தேரின் மகன் அமாசாவையும் வாளால் வெட்டிக் கொலைசெய்தான். அதற்காக யெகோவாவே அவனைத் தண்டிப்பாராக. அவர்கள் இருவரும் யோவாபைப் பார்க்கிலும் சிறந்தவர்களும், நேர்மையானவர்களுமாய் இருந்தார்கள். அவர்கள் இருவருடைய இரத்தப்பழியும் யோவாபின் தலைமேலும், அவன் சந்ததிகளின் தலைமேலும் என்றைக்கும் இருக்கட்டும். ஆனால் தாவீதின்மேலும், அவர் சந்ததியினர்மேலும், அவர் வீட்டார்மேலும், அவர் அரியணையின்மேலும் யெகோவாவினுடைய சமாதானம் என்றென்றும் இருப்பதாக” என்றான். அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாப்பை வெட்டிக்கொன்றான். யோவாப் பாலைவனத்திலிருந்த தன் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான். மேலும் அரசன் யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத் தளபதியாகவும், அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கை ஆசாரியனாகவும் நியமித்தான். இதற்குப் பின்பு அரசன் சீமேயியை அழைப்பித்து, “இங்கு எருசலேமில் உனக்கு ஒரு வீட்டைக் கட்டி அங்கே வாழ்ந்திடு. ஆனால் வேறு எங்கேயும் போகாதே. நீ புறப்பட்டு கீதரோன் பள்ளத்தாக்கைக் கடக்கும் நாளில் சாவாய் என்பதை நிச்சயித்துக்கொள். உன் இரத்தப்பழி உன் தலை மேலிருக்கும்” என்றான். அதற்கு சீமேயி, “நீர் சொல்வது நல்லது. என் தலைவனான அரசன் சொன்னபடியே உமது அடியானாகிய நான் செய்வேன்” என்று கூறி எருசலேமில் நீண்டநாட்களாய் வாழ்ந்து வந்தான். ஆனால் மூன்று வருடங்களுக்குப் பின்பு சீமேயியின் அடிமைகள் இருவர் மாக்காவின் மகனான காத்தின் அரசன் ஆகீஸிடம் தப்பி ஓடிவிட்டார்கள். “உனது அடிமைகள் காத் பட்டணத்தில் இருக்கிறார்கள்” என்று சீமேயிக்குச் சொல்லப்பட்டது. இதை சீமேயி கேள்விப்பட்டபோது, தன் கழுதையில் சேணம் பூட்டி, அவர்களைத் தேடி காத் ஊரிலுள்ள ஆகீஸிடம் போனான். அங்கே அவர்களைக் கண்டுபிடித்து, காத்திலிருந்து திரும்பவும் கொண்டுவந்தான். சீமேயி எருசலேமைவிட்டு காத் ஊருக்குப் போனதையும், திரும்பி வந்ததையும் சாலொமோன் கேள்விப்பட்டான். அப்போது அரசன் சீமேயியை அழைத்து அவனிடம், “ ‘இவ்விடத்தை விட்டு வேறு எங்கே போனாலும் அன்றே சாவாய் என்று யெகோவாவின் பெயரில் ஆணையிடும்படி உன்னை நான் எச்சரிக்கவில்லையா’? அதற்கு நீயும், ‘நீர் சொல்வது நல்லது. நான் அதற்குக் கீழ்ப்படிவேன்’ என்று கூறினாயே. இப்போது ஏன் யெகோவாவுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றாமலும், என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் விட்டாய்?” என்றான். மேலும் அரசன் சீமேயியிடம், “என் தகப்பன் தாவீதுக்கு நீ செய்த எல்லாப் பிழைகளையும் உன் மனதில் நீ அறிவாய். இப்போது உனது பிழையான செயல்களுக்கு யெகோவா பதில் செய்வார். ஆனால் சாலொமோன் அரசனோ ஆசீர்வதிக்கப்படுவான். அத்துடன் தாவீதின் அரியணை யெகோவாவுக்குமுன் என்றென்றும் உறுதியாக இருக்கும்” என்றான். அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயாவுக்கு அரசன் கட்டளையிட்டபடி, அவன் போய் சீமேயியை வெட்டிக் கொலைசெய்தான். இதனால் அரசு சாலொமோனின் கைகளில், மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. சாலொமோனின் ஞானம் சாலொமோன் எகிப்தின் அரசனான பார்வோனுடன் நட்புக்கொண்டு அவனுடைய மகளைத் திருமணம் செய்தான். அவன் தன் அரண்மனையையும் யெகோவாவின் ஆலயத்தையும், எருசலேம் பட்டணத்தைச்சுற்றி மதிலையும் கட்டிமுடிக்கும்வரை, அவளைத் தாவீதின் பட்டணத்திலேயே வைத்திருந்தான். ஆயினும், யெகோவாவின் பெயரில் இன்னும் ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்தபடியால், மக்கள் உயர்ந்த இடங்களிலேயே பலிசெலுத்தி வந்தார்கள். சாலொமோன் தாவீதின் எல்லா நியமங்களின்படியேயும் நடந்து, தான் யெகோவாவிடம் அதிகம் அன்பு கொண்டிருந்ததைக் காண்பித்தான். ஆயினும் அவன் தொடர்ந்து இன்னமும் உயர்ந்த இடங்களில் பலியிட்டு, தூபங்காட்டி வந்தான். கிபியோன் மேடையே மிக முக்கியமானதாக விளங்கியதால் அரசன் அங்கேயே தனது பலிகளைச் செலுத்தப் போவான். அந்தப் பலிபீடத்தில் சாலொமோன் ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். கிபியோனில் இரவு நேரத்தில் யெகோவா சாலொமோனுக்குக் கனவில் தோன்றி, இறைவன் அவனிடம், “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார். அதற்குச் சாலொமோன் பதிலாக, “உமது அடியவனாகிய எனது தகப்பன் தாவீது உமக்கு இருதயத்தில் உண்மையும், நியாயமும், நேர்மையும் உள்ளவராக இருந்தபடியால், நீர் என் தகப்பனுக்கு மிகுந்த தயவு காண்பித்திருந்தீர். தொடர்ந்து அவருக்கு மிகுந்த தயவை காண்பித்து, இந்த நாளில் அவரின் அரியணையிலிருப்பதற்கு ஒரு மகனையும் கொடுத்திருக்கிறீர். “இப்பொழுதும் என் இறைவனாகிய யெகோவாவே, என் தகப்பனாகிய தாவீதின் இடத்தில் அடியவனாகிய என்னை அரசனாக்கினீர். நானோ என் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு அறியாத ஒரு சிறுபிள்ளையாய் இருக்கிறேன். உமது அடியவனான நான் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட எண்ணுக்கடங்காத உமது மேன்மையான மக்களின் நடுவில் இருக்கிறேன். ஆகவே இந்த உமது மக்களை ஆளவும், சரி எது, பிழை எது என்று வேறுபடுத்தி அறியவும், நிதானிக்கும் இருதயத்தை உமது அடியானுக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” என்றான். சாலொமோன் இதையே கேட்டபடியால், அவனுடைய பதிலில் யெகோவா சந்தோஷப்பட்டார். ஆகவே இறைவன் அவனிடம், “நீ உனக்கு நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, என் பகைவர் சாகவேண்டும் என்றோ கேளாமல், நீதியாய் நிர்வாகம் செய்வதற்காக நிதானிக்கும் அறிவைக் கேட்டாய். அதனால் நீ கேட்டதை நான் உனக்குச் செய்வேன். நான் உனக்கு ஞானமும், நிதானிக்கும் அறிவுமுள்ள இருதயத்தைத் தருவேன்; இதனால் உன்னைப்போன்ற ஒருவன் உனக்கு முன்னும் இருந்ததில்லை. உனக்குப் பின்னும் இருக்கமாட்டான். இதைவிட இதற்கு மேலாக நீ கேட்காத செல்வத்தையும், கனத்தையும் தருவேன். இதனால் உனது வாழ்நாளில் அரசர்கள் மத்தியில் உனக்கு நிகராக யாருமே இருக்கமாட்டார்கள். உனது தகப்பனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய வழிகளில் நடந்து, என் விதிமுறைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தால், உனக்கு நீண்ட ஆயுளைத் தருவேன்” என்றார். சாலொமோன் விழித்தெழுந்து தான் கண்டது ஒரு கனவு என்று உணர்ந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கே யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னின்று தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அதன்பின் தன் அரண்மனை அலுவலர்களுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான். ஞானமான தீர்ப்பு சில நாட்களின்பின் இரண்டு வேசிகள் அரசனுக்கு முன்வந்து நின்றார்கள். அவர்களில் ஒருத்தி, “என் ஆண்டவனே, இந்தப் பெண்ணும், நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். அவள் என்னோடு இருக்கையில் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தது. எனது பிள்ளை பிறந்து மூன்றாம் நாளில் இந்தப் பெண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. நாங்கள் தனிமையாகவே இருந்தோம். எங்கள் இருவரையும் தவிர வீட்டில் எவருமே இருக்கவில்லை. “இரவு நேரத்தில், இவள் தன் பிள்ளையின்மேல் புரண்டு படுத்ததினால் இவளின் மகன் இறந்துபோனான். எனவே இவள் நள்ளிரவில் எழுந்து உமது அடியாளாகிய நான் நித்திரையிலிருந்தபோது, என் பக்கத்தில் இருந்த என் மகனை எடுத்துக்கொண்டாள். அவள் அவனைத் தன் மார்பில் போட்டுக்கொண்டு, தன்னுடைய இறந்த மகனை என் மார்பில் போட்டுவிட்டாள். அதிகாலையில் என் மகனுக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, அவன் இறந்து கிடந்தான். காலை வெளிச்சத்தில் அவனை நான் கூர்ந்து பார்த்தபோது, அது நான் பெற்ற என் மகனல்ல என்று கண்டேன்” என்று கூறினாள். அப்பொழுது மற்றப் பெண் அவளைப் பார்த்து, “இல்லை; உயிரோடிருப்பவன் என்னுடையவன். இறந்தவன் உன்னுடையவன்” என்றாள். ஆனால் முதற்பெண்ணோ வற்புறுத்தி, “இல்லை இறந்தவனே உன்னுடைய மகன்; உயிரோடிருப்பவன் என் மகன்” என அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்தாள். அப்பொழுது அரசன், “இவள், ‘என் மகனே உயிரோடிருக்கிறான்; உன் மகன் இறந்துவிட்டான்’ என்கிறாள். மற்றவளோ, ‘இல்லை, உன் மகன் இறந்துவிட்டான்; என் மகனே உயிரோடிருக்கிறான்’ என்கிறாள்.” ஆகவே, “ஒரு வாளை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். எனவே அவர்கள் அரசனுக்கு ஒரு வாளைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அரசன், “உயிரோடிருக்கும் பிள்ளையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்திக்கும், மறு பாதியை மற்றவளுக்கும் கொடுங்கள்” எனக் கட்டளையிட்டான். அப்பொழுது உயிரோடிருக்கும் பிள்ளையின் சொந்தத் தாய் தன் பிள்ளைக்காக மிகவும் இரக்கப்பட்டு, அரசனை நோக்கி, “ஆண்டவனே! தயவுசெய்து உயிரோடிருக்கும் பிள்ளையை அவளுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம்” என்றாள். ஆனால் மற்றவளோவென்றால், “அந்தப் பிள்ளை எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம். அவனை இரண்டாக வெட்டும்” என்றாள். அப்பொழுது அரசன் இந்தத் தீர்ப்பை வழங்கினான்: “உயிரோடிருக்கும் பிள்ளையை முதலாவது வந்த பெண்ணுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம். அவளே அவனின் சொந்தத் தாய்” என்றான். அரசன் கொடுத்த தீர்ப்பை இஸ்ரயேலர் அனைவரும் கேட்டபோது, அவனை உயர்வாய் மதித்தார்கள். நீதியாய் நிர்வாகம் செய்ய இறைவனிடமிருந்து வந்த அவனுடைய ஞானத்தைக் கண்டார்கள். சாலொமோனின் அதிகாரிகளும் ஆளுநர்களும் அரசன் சாலொமோன் இவ்விதமாக இஸ்ரயேல் முழுவதையும் ஆட்சிசெய்தான். அவனுடைய பிரதான அதிகாரிகள்: சாதோக்கின் மகன் அசரியா, ஆசாரியனாய் இருந்தான். சீசாவின் மகன்களான ஏலிகோரேப், அகியா ஆகியோர், செயலாளர்களாய் இருந்தனர். அகிலூதின் மகன் யோசபாத், பதிவாளனாய் இருந்தான். யோய்தாவின் மகன் பெனாயா பிரதான படைத்தளபதியாய் இருந்தான். சாதோக், அபியத்தார் ஆகியோர் ஆசாரியர்களாய் இருந்தார்கள். நாத்தானின் மகன் அசரியா, மாவட்ட அதிகாரிகளுக்குப் பொறுப்பாயிருந்தான். நாத்தானின் மகன் சாபூத், ஆசாரியனாகவும், அரசனின் அந்தரங்க ஆலோசகனாகவும் இருந்தான். அகீஷார், அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்தான். அப்தாவின் மகன் அதோனிராம், கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்தான். முழு இஸ்ரயேலருக்கும் மேலாக சாலொமோன் பன்னிரண்டு மாவட்ட ஆளுநர்களை நியமித்திருந்தான். இவர்கள் அரசனுக்கும், அரச குடும்பத்தாருக்கும் உணவு விநியோகம் செய்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவை மாதத்திற்கு ஒருவராக விநியோகம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களுடைய பெயர்களாவன: பென்கர், எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர். பென் தேக்கேர், மாகாஸிலுள்ள சால்பீம், பெத்ஷிமேஷ், ஏலோன் பெத்கனான் ஆகிய இடங்களுக்கு ஆளுநர். பென் கெசெத், அருபோத்திற்கு ஆளுநனாய் இருந்தான். இதில் சோக்கோவும் எப்பேர் நிலங்களும் அடங்கியிருந்தன. பென் அபினதாப்4:11 அபினதாபின் மகன்., நாபோத் தோருக்கு ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் தாபாத்தைத் திருமணம் செய்திருந்தான். அகிலூதின் மகன் பானா, இவன் தானாக், மெகிதோ, பெத்ஷான் முழுவதையும் ஆளுகை செய்தான். பெத்ஷான் சரேத்தானுக்கு அடுத்து யெஸ்ரயேலுக்குக் கீழே இருந்தது. பானாவின் பகுதி பெத்ஷான் தொடங்கி ஆபேல் மெகொலாவுக்குப்போய் யக்மெயாமில் முடிந்தது. பென் கேபேர், ராமோத் கீலேயாத்தில் ஆளுநர். இந்தப் பகுதியில் கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனான யாவீரின் குடியிருப்புகளோடு பாசானிலுள்ள அர்கோப்பின் பகுதிகளும், அதைவிட மதிலால் சூழப்பட்ட வெண்கல தாழ்ப்பாள்களையுடைய அறுபது பட்டணங்களும் அடங்கியிருந்தன. இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர். அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான். ஊஷாயின் மகன் பானா என்பவன் ஆசேர், ஆலோத் ஆகியவற்றின் ஆளுநர். பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர். ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர். ஊரின் மகன் கேபேர், கீலேயாத்தின் ஆளுநர். எமோரியரின் அரசனான சீகோனின் எல்லைகளும், பாசானின் அரசனான ஓகுவின் எல்லைகளும் இதில் அடங்கியிருந்தன. அந்த மாவட்டத்திற்கு அவன் ஒருவனே ஆளுநனாய் இருந்தான். சாலொமோனின் அன்றாட உணவு யூதாவின், இஸ்ரயேலின் மக்கள் கடற்கரை மணலைப்போல் எண்ணிக்கையில் பெருகியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இருந்தார்கள். சாலொமோன் அரசன் யூப்ரட்டீஸ் நதி தொடக்கம் எகிப்தின் எல்லைவரை இருந்த பெலிஸ்தியரின் நாடுவரையுள்ள இடங்களையும், ஆட்சிப் பகுதியையும் ஆண்டு வந்தான். இந்த நாடுகள் சாலொமோனுக்கு வரி செலுத்தி அவனுடைய வாழ்நாளெல்லாம் அவனுக்குக் கீழ்ப்பட்டனவாகவே இருந்தன. சாலொமோனுக்குத் தினமும் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள்: முப்பது கோர்4:22 அதாவது, சுமார் 5,000 கிலோகிராம் சிறந்த மாவும், அறுபது கோர்4:22 அதாவது, சுமார் 10,000 கிலோகிராம் மாவும், தொழுவத்தில் பராமரிக்கப்பட்ட பத்து மாடுகளும், இருபது பசும்புல் மேய்ந்த மாடுகளும், நூறு செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், அத்துடன் மான்களும், சிறு மான்களும், கலைமான்களும், திறமான கொழுத்த கோழிகளும் ஆகும். ஏனெனில் அவனின் ஆட்சி யூப்ரட்டீஸ் நதிக்கு மேற்கே திப்சாவிலிருந்து, காசாவரை இருந்த எல்லா இடத்திலும் பரந்திருந்தது. நாட்டில் எங்கும் சமாதானம் நிலவியது. சாலொமோனின் வாழ்நாள் முழுவதும், தாணிலிருந்து பெயெர்செபா வரை இஸ்ரயேலிலும், யூதாவிலும் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான திராட்சைக் கொடிகளுக்கும், அத்தி மரங்களுக்கும் கீழே வாழ்ந்தனர். சாலொமோனிடம் தேரில் பூட்டும் குதிரைகளுக்கு நாலாயிரம் தொழுவங்களும், பன்னிரெண்டாயிரம் குதிரைகளும் இருந்தன. மாவட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் தமக்குரிய மாதத்தில் சாலொமோன் அரசனுக்கும், அரசனின் மேஜைக்கு வரும் எல்லோருக்கும் தேவையான உணவை விநியோகம் செய்தனர். ஒன்றும் குறைவுபடாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அத்துடன் அவர்கள் தொழுவத்திலுள்ள அரசனுடைய தேர் குதிரைகளுக்கும், மற்றும் குதிரைகளுக்கும், வாற்கோதுமையையும், வைக்கோலையும் நியமிக்கப்பட்ட அளவை அவற்றிற்குரிய இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். சாலொமோனின் ஞானம் இறைவன் சாலொமோனுக்கு ஞானத்தையும், மிகுந்த நுண்ணறிவையும், கடற்கரை மணலைப்போன்ற அளவிடமுடியாத விசாலமான விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். சாலொமோனுடைய ஞானம் கிழக்கிலிருந்த எல்லா மனிதரின் ஞானத்தைவிடவும், எகிப்தின் எல்லா ஞானத்தைவிடவும் மேலோங்கி விளங்கியது. சாலொமோன் வேறு எந்த மனிதனையும்விட ஞானமுள்ளவனாயிருந்தான். இவன் எஸ்ராகியனான ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் மக்களையும்விட அதிக ஞானமுள்ளவனாயிருந்தான். அவனுடைய புகழ் சுற்றியிருந்த நாடுகளெங்கும் பரவியது. இவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான். இவனுடைய பாடல்கள் ஆயிரத்து ஐந்தாகக் கணக்கிடப்பட்டுள்ளன. மிகப்பெரிய லெபனோனின் கேதுரு மரம் தொடங்கி, சுவரில் முளைக்கும் ஈசோப்புச் செடி வரைக்குமுள்ள தாவரங்களை விபரித்தெழுதினான். அத்துடன் அவன் பறவைகள், விலங்குகள், ஊரும்பிராணிகள், மீன்கள் ஆகியவற்றைக் குறித்தும் கூறியுள்ளான். உலகின் பல நாடுகளிலிருந்த அரசர்களும் சாலொமோனுடைய ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். அவர்களால் அனுப்பப்பட்ட எல்லா மனிதர்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்பதற்கு வந்தார்கள். ஆலய கட்டிடத்திற்கான ஆயத்தம் சாலொமோன் தன் தந்தையின் இடத்தில் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறான் என்று தீருவின் அரசனான ஈராம் கேள்விப்பட்டான். தான் தாவீதுடன் எப்பொழுதும் நட்புறவு கொண்டிருந்தபடியால், தனது தூதுவர்களை அவனிடத்திற்கு அனுப்பியிருந்தான். சாலொமோன் ஈராமுக்கு அனுப்பிய பதில் செய்தியாவது: என் தகப்பனாகிய தாவீதுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் யுத்தங்கள் ஏற்பட்டன. அதனால் யெகோவா அவருடைய பகைவர்களை அவரின் காலின்கீழ் அடக்கும் வரைக்கும் தன் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட அவரால் முடியவில்லை என்பது உமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுதோ என் இறைவனாகிய யெகோவா எல்லாப் பக்கத்திலும் எனக்கு சமாதானத்தின் ஆறுதலைத் தந்திருக்கிறார். எனக்கு ஒரு பகைவனோ அல்லது அழிவோ எதுவும் இல்லை. ஆதலால் என் தகப்பனாகிய தாவீதிடம் யெகோவா கூறியபடி, என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருக்கிறேன். யெகோவா என் தகப்பனிடம், “உன்னுடைய இடத்திலே சிங்காசனத்தில் நான் நியமிக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்” என்று கூறியிருந்தார். “ஆகவே லெபனோனிலுள்ள கேதுரு மரங்களை எனக்காக வெட்டும்படி கட்டளையிடும்; என்னுடைய மனிதரும், உம்முடைய மனிதரோடுகூட வேலை செய்வார்கள். நீர் உமது வேலையாட்களுக்குத் தீர்மானிக்கும் சம்பளம் எவ்வளவு என்றாலும் அதை நான் கொடுப்பேன். சீதோனியரைப்போல காட்டு மரங்களை வெட்டி வீழ்த்துவதற்குரிய திறமையுள்ளவர்கள் எங்களிடம் இல்லை என்பதும் உமக்குத் தெரியும்” என்று கூறி அனுப்பினான். சாலொமோனுடைய பதிலைக் கேட்ட ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டு, “இந்தப் பெரிய இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்காக ஒரு ஞானமுள்ள மகனைத் தாவீதுக்குக் கொடுத்த யெகோவாவுக்குத் இன்று துதி உண்டாகட்டும்” என்றான். ஆகவே ஈராம் சாலொமோனுக்கு, “நீர் அனுப்பிய செய்தி எனக்குக் கிடைத்தது. கேதுரு மரத்தையும், தேவதாருமரத் தடிகளையும் நீர் கேட்டபடியே நான் தருவேன். என் மனிதர் லெபனோனிலிருந்து அவைகளைக் கடலுக்கு இழுத்துக்கொண்டு வருவார்கள். அங்கே அவற்றைக் கட்டுமரங்களாகக் கட்டி, மிதக்கப்பண்ணி உமக்குத் தேவைப்பட்ட இடங்களுக்கு அவற்றைக் கடல் வழியாக அனுப்புவேன். அதன்பின் அவற்றை நான் பிரிப்பேன். நீர் அவற்றை எடுத்துச் செல்லலாம். இவற்றைப் பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக என்னுடைய அரச குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீர் அனுப்பி என் விருப்பத்தையும் நிறைவேற்றும்” என்றான். அந்தவிதமாகவே ஈராம் சாலொமோனுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும், தேவதாருமரத் தடிகளையும் கொடுத்துக் கொண்டுவந்தான். சாலொமோன் ஈராமின் வீட்டிற்கு உணவாக 3,600 டன்5:11 அதாவது, சுமார் 3,600 டன் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் 20,000 கோர் என்றுள்ளது. கோதுமையைக் கொடுத்தான். அத்துடன் 20,000 குடம் பிழிந்த ஒலிவ எண்ணெயையும் கொடுத்தான். வருடாவருடம் சாலொமோன் இவ்வாறு தொடர்ந்து ஈராமுக்குச் செய்து வந்தான். யெகோவா தாம் வாக்குப்பண்ணியபடியே சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமுக்கும், சாலொமோனுக்கு இடையில் சமாதான உறவுகள் இருந்ததோடு அவர்கள் இருவரும் ஒரு ஒப்பந்தமும் செய்துகொண்டார்கள். இதன்பின் அரசனாகிய சாலொமோன் இஸ்ரயேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் முப்பதாயிரம் வேலையாட்களைக் கட்டாய வேலைக்குச் சேர்த்தெடுத்தான். ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம்பேரை லெபனோனுக்கு மாறிமாறி அனுப்பினான். இந்த முறையினால் அவர்கள் ஒரு மாதம் லெபனோனிலும், இரண்டு மாதங்கள் வீட்டிலும் இருக்கவேண்டியதாயிருந்தது. இந்தக் கட்டாய வேலைக்கு அதோனிராம் பொறுப்பாக இருந்தான். இன்னும் சாலொமோனுக்கு சுமை சுமக்கும் எழுபதாயிரம்பேரும். குன்றுகளில் கல் வெட்டும் எண்பதாயிரம் பேரும், வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்து வேலையாளரை நடத்துகின்ற மூவாயிரத்து முந்நூறு மேற்பார்வையாளர்களும் இருந்தார்கள். மக்கள் அரசனுடைய கட்டளைப்படி ஆலய அஸ்திபாரத்திற்காக, கற்குகையிலிருந்து உயர் சிறந்த கற்பாறைகளைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோனார்கள். சாலொமோனின் ஈராமின் கைவினைஞர்களும், கிபலியிலிருந்து வந்த மனிதரும், மரங்களையும் கற்களையும் வெட்டி ஆலயம் கட்டுவதற்கு ஆயத்தம் செய்தனர். சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல் சாலொமோன் தனது ஆட்சியின் நான்காம் வருடம், இரண்டாம் மாதமாகிய சீப் மாதத்தில், யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து நானூற்று எண்பதாம் வருடமாயிருந்தது. அரசன் சாலொமோன் யெகோவாவுக்கென்று கட்டிய ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமும் உள்ளதாயிருந்தது. ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் முன்பாக ஒரு முகப்பு மண்டபம் ஆலய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமுடையதாய் ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து பத்து முழம் நீண்டிருந்தது. அதில் அலங்கார வேலைப்பாடுள்ள ஒடுக்கமான ஜன்னல்களை அமைத்திருந்தான். பிரதான மண்டபத்தின் சுவர்களுக்கும், பரிசுத்த இடத்தின் உட்பகுதிக்கும் எதிரே கட்டிடத்தைச்சுற்றிப் பக்க அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தை அமைத்தான். கீழ்த்தளம் ஐந்துமுழ அகலமும், நடுத்தளம் ஆறுமுழ அகலமும், மூன்றாம் தளம் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. ஆலய சுவருக்குள் போகாதபடி ஆலயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றி ஒட்டுச்சுவர்களை அமைத்தான். ஆலயம் கட்டுவதற்கு கற்குகையில் செதுக்கப்பட்ட கற்பாளங்களே பயன்படுத்தப்பட்டன. அது கட்டப்படும்போது, ஆலயம் கட்டப்படும் இடத்தில் சுத்தியலோ, உளியோ, வேறு எந்த இரும்பு ஆயுதமோ பயன்படுத்தும் சத்தம் கேட்கப்படவில்லை. கீழ்த்தளத்து வாசல் ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் இருந்தது. நடுத்தளத்துக்கு ஒரு படிக்கட்டு இருந்தது. அங்கிருந்து மூன்றாம் மாடிக்கும் மற்றொரு படிக்கட்டு இருந்தது. சாலொமோன் வளை மரங்களினாலும், கேதுருமரப் பலகைகளினாலும் கூரையை அமைத்து ஆலயத்தைக் கட்டிமுடித்தான். அவன் ஆலயம் நெடுகிலும் பக்க அறைகளைக் கட்டினான். அறைகள் ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவை கேதுருமர உத்திரங்களினால் ஆலயத்துடன் இணைக்கப்பட்டன. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது. அவர், “நீ கட்டும் ஆலயத்தைக் குறித்தோவெனில், நீ என் விதிமுறைகளைப் பின்பற்றி, சட்டங்களை நடைமுறைப்படுத்தி, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால், உன் தகப்பனாகிய தாவீதுக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன். நான் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து என் மக்களான இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார். அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான். உட்புறச் சுவர்களைக் கேதுரு மரப்பலகைகளினால் தளத்திலிருந்து உட்கூரைவரை மூடினான். ஆலயத்தின் தளத்தை மூடுவதற்காக தேவதாரு பலகைகளைப் பதித்தான். ஆலயத்தில் உள்ள பிற்பகுதியிலிருந்து இருபதுமுழ தூரத்தைப் பிரித்தெடுத்து, நிலத்திலிருந்து உட்கூரைவரை கேதுருமரப் பலகைகளை நிறுத்தி ஆலயத்தின் உள்ளே ஒரு அறையை ஏற்படுத்தினான். அது உள் பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடமாகும். இந்த அறையின் முன் இருந்த பிரதான மண்டபம் நாற்பது முழ நீளமாயிருந்தது. ஆலயத்தின் உட்புறம் முழுவதிலும் கேதுரு மரப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் இணைப்பில் விரிந்த பூக்களும், வெள்ளரிக்காய்களும் சித்திர வேலைப்பாடாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லாம் கேதுருமரப் பலகையாகவே இருந்தன. ஒரு கல்லும் வெளியே தெரியவில்லை. ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடத்தை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென சாலொமோன் ஆயத்தம் பண்ணினான். உட்புற பரிசுத்த இடம் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் கேதுருமரப் பலிபீடத்தையும் தங்கத் தகட்டினால் மூடினான். பின்பு சாலொமோன் ஆலயத்தின் உட்பகுதியை சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, பரிசுத்த இடத்துக்கு முன்பாக தங்கச் சங்கிலிகளை நீளமாக குறுக்கே தொங்கும்படி அமைத்தான். அதுவும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது. இவ்விதமாய் உட்புறம் முழுவதையும் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் உட்புற பரிசுத்த இடத்துக்குரிய பலிபீடத்தையும் தங்கத்தகட்டால் மூடினான். உட்புற பரிசுத்த இடத்திலே இரண்டு கேருபீன்களின் உருவத்தைச் செதுக்கி வைத்தான். அவை ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுடையதாக ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டவை. முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது. இரண்டாவது கேருபீனும் பத்துமுழ அளவாய் இருந்தது. இரண்டு கேருபீன்களும் அளவிலும், வடிவத்திலும் ஒரேவிதமாய் இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன. கேருபீன்களை ஆலயத்தின் உட்புற அறையில் வைத்தான். அவற்றின் செட்டைகள் விரிந்தபடியிருந்தன. ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரையும், மற்ற கேருபீனின் சிறகு மற்றச் சுவரையும் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் மற்ற சிறகுகள் அறையின் நடுவில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன. அவன் கேருபீன்களை தங்கத்தகட்டால் மூடியிருந்தான். ஆலயத்தின் உட்புறச் சுவர்களெங்கும், உள் அறையிலும், வெளி அறையிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். அத்துடன் அவன் ஆலயத்தின் உட்புற அறை, வெளிப்புற அறையின் தளங்களைத் தங்கத் தகட்டினால் மூடினான். உட்புற பரிசுத்த இடத்தின் வாசலுக்கு ஒலிவ மரத்தினால் செய்யப்பட்ட கதவுகளையும், ஐங்கோண வடிவமுள்ள பக்க நிலைகளையும் அமைத்தான். அந்த இரண்டு ஒலிவமரக் கதவுகளிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கிய கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும் அடித்த தங்கத்தகட்டால் மூடினான். இவ்விதமாய் அவன் பிரதான மண்டபத்தின் வாசலிலும் ஒலிவ மரத்தால் நாற்கோண வடிவ பக்கநிலைகளைச் செய்துவைத்தான். இரண்டு தேவதாருமரக் கதவுகளைச் செய்தான். அவை ஒவ்வொன்றும் மடிக்கக்கூடியதாக கீழ்களினால் பூட்டப்பட்டிருந்தன. இவற்றிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கப்பட்ட வேலையை அடிக்கப்பட்ட தங்கத் தகட்டினால் மூடினான். கற்பாறைகளால் சுவரை கட்டி ஒரு உள்முற்றத்தை அமைத்தான். அந்தச் சுவரின் முதல் மூன்று அடுக்குகளும் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அதன் நான்காம் அடுக்கு கேதுரு மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. சாலொமோனின் ஆட்சியின் நான்காம் வருடம் சீப்மாதம் யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது. ஆலயம் அதற்கான அளவுத்திட்ட விபரத்தின்படி பதினோராம் வருடம் எட்டாம் மாதமாகிய பூல் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. சாலொமோன் இதைக் கட்டிமுடிக்க ஏழு வருடங்கள் சென்றன. சாலொமோனின் அரண்மனை ஆனாலும் சாலொமோன் அரண்மனைக் கட்டிடங்களைக் கட்டிமுடிக்க பதின்மூன்று வருடங்கள் சென்றன. அவன் லெபனோன் வனமாளிகையையும் கட்டினான். மிகவும் பெரிதான மண்டபம் நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது. உள் கூரையின் கேதுருமர உத்திரங்களை நான்கு வரிசையில் அமைந்திருந்த கேதுரு மரத்தாலான தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன. தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுரு மரத்தால் கூரை செய்யப்பட்டிருந்தது. ஒரு வரிசைக்கு பதினைந்து உத்திரங்களாக நாற்பத்தைந்து உத்திரங்கள் இருந்தன. அதன் ஜன்னல்கள் உயரத்தில் ஒவ்வொரு தொகுப்பிலும் மூன்றாக ஒன்றுக்கொன்று எதிர்ப்புறமாக அமைக்கப்பட்டிருந்தன. எல்லா நுழைவு வாசல்களும் சதுர சட்டங்கள் உடையதாய் இருந்தன. அவை முன்பகுதியில் மூன்று மூன்றாக இருந்தன. அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. தூண்களினால் ஒரு மண்டபத்தையும் அமைத்தான். அது ஐம்பதுமுழ நீளமும், முப்பதுமுழ அகலமும் உள்ளதாய் இருந்தது. அதன் முன்பக்கத்தில் ஒரு வாசலின் மண்டபமும், அதற்குமுன் தூண்களும் நீண்டு நிற்கும் கூரையும் இருந்தன. இதைவிட சாலொமோன் தான் நீதி வழங்குவதற்கென நீதிமண்டபம் எனப்படும் ஒரு அரியணை மண்டபத்தையும் அமைத்தான். அதை தளத்திலிருந்து உட்கூரைவரை கேதுரு மரப்பலகைகளினால் மூடினான். அவன் தான் வாழப்போகும் அரண்மனையையும் அதே மாதிரியாகவே அதற்குப் பின்புறமாக தூரத்திலே அமைத்தான். சாலொமோன் இதேவிதமான அரண்மனையை தனது மனைவியான பார்வோனின் மகளுக்கும் கட்டினான். இந்த கட்டிடங்கள் முழுவதும், வெளிப்புறத்திலிருந்து பெரிய உட்புற முற்றம் வரையும், அஸ்திபாரத்திலிருந்து உட்கூரை வரையும் உயர் சிறந்த கற்பாளங்களினால் கட்டப்பட்டிருந்தன. அவை அளவாக வெட்டப்பட்டு, உட்புறமும், வெளிப்புறமும் வாளினால் செப்பனிடப்பட்டதாயிருந்தன. அவற்றின் அஸ்திபாரங்கள் பெரியதும், உயர் சிறந்த கற்களாலும் போடப்பட்டிருந்தன. சில பத்துமுழ அளவுள்ளதாயும், சில எட்டுமுழ அளவுள்ளதாயும் இருந்தன. போடப்பட்டிருந்த அந்த அஸ்திபாரத்தின்மேல், கட்டுவதற்கு அளவாக வெட்டப்பட்டிருந்த உயர்தரமானக் கற்களும், கேதுருமர உத்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. பெரிய முற்றம் மதிலால் சூழப்பட்டிருந்தது. மதிலின் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை இழைக்கப்பட்ட கேதுரு உத்திரங்களாலும் கட்டப்பட்டதாயிருந்தது. இதேவிதமாகவே யெகோவாவின் ஆலயத்தின் உள்முற்றமும், வாசலின் மண்டபமும் கட்டப்பட்டிருந்தன. ஆலயத்தின் பணிமுட்டுகள் சாலொமோன் அரசன் தீருவுக்கு ஆளனுப்பி ஈராமை வரவழைத்தான். இவன் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன். இவனது தகப்பன் தீருவைச் சேர்ந்த ஒரு வெண்கல கைவினை கலைஞன். ஈராம் எல்லா விதமான வெண்கல வேலையையும் செய்யத்தக்க ஞானமும், அறிவும், கைத்திறனும் பெற்றவனாயிருந்தான். இவன் சாலொமோன் அரசனிடம் வந்து அவனுக்குக் குறிக்கப்பட்டிருந்த வேலை முழுவதையும் செய்தான். ஈராம் இரு வெண்கலத் தூண்களை வார்த்துச் செய்தான். இவை ஒவ்வொன்றும் பதினெட்டு முழ உயரமும், பன்னிரண்டு முழ சுற்றளவுமுள்ளதாயிருந்தன. ஒவ்வொரு தூணின் உச்சியில் வைப்பதற்கும், இரண்டு கும்பங்களை உருக்கிய வெண்கலத்தினால் செய்தான். அவை ஒவ்வொன்றும் ஐந்துமுழ உயரமுடையதாயிருந்தது. தூண்களின் உச்சியிலுள்ள கும்பங்களை, பின்னிய சங்கிலிகள் அலங்கரித்தன. ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு பின்னிய சங்கிலிகள் இருந்தன. தூண்களின் மேலுள்ள கும்பங்களை அலங்கரிப்பதற்கு ஒவ்வொரு வலையையும் சுற்றி, இரண்டு வரிசைகளில் மாதுளம் பழங்களைச் செய்தான். ஒவ்வொரு கும்பத்திற்கும் ஒரேவிதமாகவே செய்தான். முன்மண்டபத்தின் தூண்களின் உச்சியிலிருந்த கும்பங்கள், நான்கு முழ உயரத்தில் லில்லிப்பூ வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இரு தூண்களின் மேலுள்ள கும்பங்களுக்கு அடுத்துள்ள வலைப்பின்னலுக்கு கிண்ணம்போன்ற வடிவத்திற்குமேல், இருநூறு மாதுளம் பழங்கள் வரிசையாக சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தூண்களையும் ஆலயத்தின் முன்மண்டபத்தில் நிறுத்தினான். தெற்கிலிருந்த தூணுக்கு யாகீன் என்றும், வடக்கிலிருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான். இவற்றின் உச்சியிலிருந்த கும்பங்கள் லில்லிப்பூ வடிவில் இருந்தன. இவ்விதம் தூண்களின் வேலை முடிவுற்றது. இதன்பின் ஈராம் உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. விளிம்புக்குக் கீழே ஒரு முழத்திற்கு பத்தாக உலோகத்தாலான சுரைக்காய் வடிவங்கள் சுற்றிலும் இருந்தன. அந்த சுரைக்காய்கள் இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன. வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன. தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 40,000 லிட்டர்7:26 அதாவது, எபிரெய மொழியில் 1,000 பாத் என்றுள்ளது. எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இவ்வாக்கியம் இல்லை. தண்ணீர் கொள்ளத்தக்கதாக இருந்தது. மேலும் அவன் வெண்கலத்தால் பத்து உருளக்கூடிய தாங்கிகளைச் செய்தான். அவை ஒவ்வொன்றும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்றுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தன. தாங்கிகள் இவ்வாறே செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சட்டங்களில் பக்கத்துண்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்தச் செங்குத்தான சட்டங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் சிங்கங்கள், எருதுகள், கேருபீன்கள் முதலிய உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும், எருதுகளுக்கும் மேலும் கீழும் வேலைப்பாடுகளுள்ள அடித்துச் செய்யப்பட்ட மலர் வளையங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு தாங்கிக்கும் நான்கு வெண்கல சக்கரங்களும், அவற்றுடன் சேர்ந்த அச்சுகளும் இருந்தன. ஒவ்வொரு தாங்கியிலும் நான்கு ஆதாரங்களின் மேலும் ஒவ்வொரு தொட்டியிருந்தது. அந்த ஆதாரங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் மலர் வளையங்கள் வார்க்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தாங்கியின் உட்புறத்திலும் வட்டமான துளை இருந்தது. இந்தத் துவாரத்தின் விளிம்பில் ஒருமுழ சட்டம் இருந்தது. அதன் பக்கங்கள் ஒன்றரைமுழ உயரமாக துவாரத்தின் மேலிருந்து தளத்தின் அடிவரை இருந்தது. அந்தத் துவாரத்தின் ஓரத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட வேலைப்பாடு இருந்தது. தாங்கிகளின் பக்கத்துண்டுகள் வட்டமாக இல்லாமல் சதுரமாய் இருந்தன. பக்கத்துண்டுகளின் கீழேயே நான்கு சக்கரங்களும் இருந்தன. சக்கரங்களின் அச்சாணிகள் தாங்கியுடன் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு சக்கரங்களின் விட்டமும் ஒன்றரை முழம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் தேரின் சக்கரங்களைப்போல் செய்யப்பட்டிருந்தன. சக்கரங்களின் அச்சாணிகள், விளிம்புகள், ஆரக்கால்கள், நடுக்குடம் உட்பட எல்லாம் வார்ப்பித்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு தாங்கியிலும் நான்கு பிடிகள் இருந்தன. தாங்கியின் மூலைகளிலிருந்து நான்கு பிடிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தாங்கியின் மேல்பாகத்திலும் அரைமுழ ஆழமுள்ள வட்ட வடிவமான வளையம் இருந்தது. பக்கத்தூண்களும், ஆதாரங்களும் தாங்கியின் மேல்பாகத்துடன் ஒன்றுசேர்த்து இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆதாரங்களிலும், பக்கத்துண்டுகளிலும், கிடைத்த இடங்களிலெல்லாம் கேருபீன்களையும், சிங்கங்களையும், பேரீச்ச மரங்களையும் செதுக்கி அவற்றைச் சுற்றி மலர் வளையங்களையும் அமைத்தான். இவ்விதமாக பத்து தாங்கிகளையும் ஒரே அச்சில் செய்தான். அவை உருவத்திலும் அளவிலும் ஒரே மாதிரியாக இருந்தன. இதன்பின்பு ஈராம், பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்து ஒவ்வொரு தாங்கியிலும் ஒவ்வொரு தொட்டியாக வைத்தான். ஒவ்வொரு தொட்டியும் நான்கு முழ விட்டமும், நாற்பது குடம்7:38 அதாவது, சுமார் 880 லிட்டர் தண்ணீர் கொள்ளக்கூடியதுமாக இருந்தன. இவற்றில் ஐந்து தாங்கிகளை தெற்குப் பக்கத்திலும், ஐந்து தாங்கிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அந்தப் பெரிய தொட்டியை தெற்குப் பக்கத்தில் ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் வைத்தான். அத்துடன் அவன் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, யெகோவாவின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்: இரண்டு தூண்கள்; தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்; தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள்; பத்து தொட்டிகளும் அவற்றைத் தாங்கும் பத்து உருளும் தாங்கிகளும், பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்; பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள். அரசன் சாலொமோனுக்காகவும் யெகோவாவின் ஆலயத்துக்காகவும் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் என்பவன் செய்யப்பட்ட பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்துமுடித்தான். இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சரேத்தாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான். வெண்கலப் பொருட்கள் மிகவும் அதிகமாய் இருந்ததால் இவற்றையெல்லாம் சாலொமோன் நிறுக்காமல் விட்டான். அந்த வெண்கலத்தின் எடை எவ்வளவு என தீர்மானிக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன: தங்க பலிபீடம், இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான தங்க மேஜை, பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் வலப்பக்கத்தில் ஐந்தும், இடப்பக்கத்தில் ஐந்துமாக வைப்பதற்குச் சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகள், தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள். சுத்தத் தங்கத்தினாலான கிண்ணங்கள், திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள் ஆகியவற்றையும் மகா பரிசுத்த இடமான உட்புற அறையின் கதவுகளின் தங்க முளைகளையும், ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் கதவுகளுக்கான தங்க முளைகளையும் செய்தான். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் அரசன் செய்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. பின்பு சாலொமோன் தன் தகப்பன் தாவீது அர்ப்பணித்த பொருட்களான வெள்ளியையும், தங்கத்தையும், எல்லா பொருட்களையும் கொண்டுவந்தான். அவற்றை யெகோவாவின் ஆலயத்தின் களஞ்சியத்துக்குள் கொண்டுபோய் வைத்தான். ஆலயத்தில் உடன்படிக்கைப்பெட்டி சாலொமோன் அரசன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான். ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் சாலொமோன் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள். இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். அவர்கள் யெகோவாவின் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆசாரியரும் லேவியரும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை. அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளுக்கும் மேலாக நிழலிட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தன. அவற்றின் நுனிகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன. அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பியது. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது. அப்பொழுது சாலொமோன், “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்; நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான். இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான். அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். அவர் எனது தகப்பன் தாவீதுக்கு தமது சொந்த வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது சொந்த கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்’ என்றார். “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது. ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான். அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார். “இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன். எகிப்திலிருந்து எங்கள் முற்பிதாக்களை யெகோவா கொண்டுவந்த காலத்தில், அவர்களுடன் அவர் செய்த யெகோவாவினுடைய உடன்படிக்கையை வைத்திருக்கும் பெட்டியை வைப்பதற்காக, ஆலயத்தில் ஒரு இடத்தையும் கொடுத்திருக்கிறேன்.” சாலொமோனின் மன்றாட்டு அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான். அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை. உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே. உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர். “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ செய்ததுபோலவே உன் மகன்களும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படி தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே. இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனே, உமது அடியானாகிய எனது தகப்பன் தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும். “ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதே. அப்படியிருக்க நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்! ஆயினும் என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும். இன்று உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக. ‘என் பெயர் விளங்குமென்று,’ நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. அப்பொழுது உமது அடியவன் இந்த இடத்தை நோக்கி வேண்டிக்கொள்ளும் மன்றாட்டை நீர் கேட்பீர். இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும். “ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால், அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும். “உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது, பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும். “உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும். “நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும், அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன்தன் மனதின் துன்பங்களை உணர்ந்தவர்களாய் இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ, விண்ணப்பத்தையோ செய்தால், உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். எல்லா மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே. அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து நடப்பார்கள். “உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம். ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது, நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள். “உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது, பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும். “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள். அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி, அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால், நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும். ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர். “உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக. ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான். யெகோவாவை நோக்கி சாலொமோன் இந்த மன்றாட்டுகளையும், விண்ணப்பங்களையும் செய்துமுடித்தான். அப்போது, யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து முழங்காலில் நின்றுகொண்டிருந்தவன், அவ்விடத்தைவிட்டு எழுந்தான். அவன் எழுந்து நின்று முழு இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தையும் பலத்த சத்தமாய் ஆசீர்வதித்துச் சொன்னதாவது: “தாம் வாக்குப்பண்ணியபடியே நிறைவேற்றி, தம் மக்களான இஸ்ரயேலருக்கு ஆறுதலைக் கொடுத்த யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். தம்முடைய அடியவனாகிய மோசே மூலம் கொடுத்த எல்லா நல்வாக்குகளிலும் ஒரு வார்த்தையாவது நிறைவேறாமல் போகவில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவா எங்கள் தந்தையருடன் இருந்ததுபோல, எங்களுடனும் இருப்பாராக. அவர் எங்களைக் கைவிடாமலும், எங்களைவிட்டு ஒருபோதும் விலகாமலும் இருப்பாராக. அவருடைய எல்லா வழிகளிலும் நடக்கவும், அவர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் எங்கள் இருதயங்களை அவர் பக்கமாகத் திருப்புவாராக. யெகோவாவுக்கு முன்பாக நான் மன்றாடிய இந்த வார்த்தைகள் இரவும் பகலும் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் அருகே இருப்பதாக. அவர் தமது அடியானுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் அன்றாட தேவைகளுக்கேற்றபடி சார்பாய் இருப்பாராக. இதனால் உலகிலுள்ள எல்லா மக்களும் யெகோவாவே இறைவன் என்றும், வேறே ஒரு தெய்வமும் இல்லையென்றும் அறிந்துகொள்வார்கள். ஆனால் இக்காலத்தில் இருப்பதுபோலவே அவருடைய விதிமுறைகளின்படி வாழவும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் இருதயங்கள் முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்” என்றான். ஆலய அர்ப்பணம் பின்பு அரசனும், அவனுடனிருந்த எல்லா இஸ்ரயேலரும், யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் சமாதான காணிக்கையாகச் செலுத்தினான். இவ்விதமாக அரசனும், எல்லா இஸ்ரயேலரும் யெகோவாவின் ஆலயத்தை அர்ப்பணம் பண்ணினார்கள். அதே நாளிலேயே அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் யெகோவாவின் முன்பாக அமைந்திருந்த வெண்கலப் பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கையின் கொழுப்பையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது. எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் சேர்ந்து இந்தக் காலத்தில் பண்டிகையைக் கொண்டாடினர்; எங்கள் இறைவனாகிய யெகோவாவின் முன்பாக முதல் ஏழு நாளும், பின்பு இன்னும் ஏழுநாளுமாக மொத்தம் பதினான்கு நாட்களாகக் கொண்டாடினார்கள். அடுத்தநாள் அரசன் மக்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அரசனை வாழ்த்தி, யெகோவா தமது அடியவனாகிய தாவீதுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் மற்றும் அவன் செய்யவேண்டுமென்று மனதில் விரும்பிய எல்லாவற்றையும் செய்துமுடித்தான். அப்பொழுது, முன்பு கிபியோனில் தோன்றியதுபோல யெகோவா இரண்டாம் முறையும் சாலொமோனுக்குத் தோன்றினார். யெகோவா அவனிடம் சொன்னதாவது: “நீ எனக்கு முன்பாகச் செய்த மன்றாட்டையும், விண்ணப்பத்தையும் கேட்டேன். என் பெயர் என்றைக்கும் நிலைக்கும்படியாக நீ கட்டிய இந்த ஆலயத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். என் கண்களும், என் இருதயமும் எப்பொழுதும் அங்கேயிருக்கும். “நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் உத்தமத்தோடும், நேர்மையோடும் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், நான் உனது தகப்பன் தாவீதிடம், ‘இஸ்ரயேலின் அரியணையில் உட்கார உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்,’ என்று வாக்குப்பண்ணியபடியே, இஸ்ரயேலில் உனது அரச அரியணையை என்றைக்கும் நிலைநிறுத்துவேன். “ஆனால் நீங்களோ உங்கள் சந்ததிகளோ, என்னைவிட்டுத் திரும்பி நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை அகற்றிவிடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேலர் எல்லா மக்கள் கூட்டங்கள் மத்தியிலும் ஒரு பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் இருப்பார்கள். இந்த ஆலயம் அழிவின் குவியலாக9:8 குவியலாக என்பது சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உன்னதமாய் இருக்கும் என்றுள்ளது. மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, கேலிபண்ணி, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.” சாலொமோனின் மற்ற செயல்பாடுகள் சாலொமோன் யெகோவாவின் ஆலயம், அரச அரண்மனை ஆகிய இரண்டையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு, அவன் விரும்பிய அளவு கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் தீருவின் அரசனாகிய ஈராம் கொடுத்தபடியினால், சாலொமோன் கலிலேயா நாட்டில் இருபது பட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான். ஆனால் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்கு ஈராம் தீருவிலிருந்து போனபோது, அவற்றில் அவன் மகிழ்ச்சியடையவில்லை. அதனால் அவன் சாலொமோனைப் பார்த்து, “என் சகோதரனே இவை என்ன? நீ தந்திருக்கும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை?” என்று கேட்டான். அதை அவன், “காபூல்9:13 காபூல் என்றால் பயனற்றது என்று அர்த்தம். நாடு” என அழைத்தான். அந்தப் பட்டணங்கள் இன்றுவரை அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. ஈராம் சாலொமோன் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து9:14 அதாவது, சுமார் 4,080 கிலோகிராம் நிறையுள்ள தங்கத்தை அனுப்பியிருந்தான். அரசன் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தன் சொந்த அரண்மனையையும், அதைத் தாங்கும் அடுக்குத் தளங்களையும், எருசலேம் மதிலையும், ஆத்சோர், மெகிதோ, கேசேர் ஆகிய பட்டணங்களையும் கட்டுவதற்கு நியமித்த கட்டாய வேலையின் விபரம் இதுவே: எகிப்திய அரசனான பார்வோன் படையெடுத்துப்போய் கேசேரைக் கைப்பற்றியிருந்தான். அதை எரித்து, அங்கிருந்த கானானிய குடிமக்களையும் கொலைசெய்தான். பின்பு சாலொமோனின் மனைவியான தன் மகளுக்குத் திருமணப் பரிசாக இதைக் கொடுத்தான். சாலொமோன் கேசேரைத் திருப்பிக் கட்டியதோடு, கீழ் பெத் ஓரோனையும், தன் நிலப்பகுதியிலுள்ள பாலைவனத்தில் பாலாத், தத்மோர் ஆகிய பட்டணங்களையும், அவனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான். நாட்டில் இஸ்ரயேலர் அல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் இன்னும் மீதியாயிருந்தார்கள். இவர்கள் அந்நாட்டில் இஸ்ரயேலர்களால் அழிக்கமுடியாமல் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான். ஆனால் சாலொமோன் இஸ்ரயேலர் எவரையும் அடிமைகளாக்கவில்லை. அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும், அவனுடைய அரசியல் அதிகாரிகளாகவும், அவனுடைய அலுவலகர்களாகவும், அவனுடைய தலைவர்களாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள். இவர்கள் சாலொமோனுடைய வேலைத் திட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்த தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் ஐந்நூற்று ஐம்பது அதிகாரிகள் வேலைசெய்த மனிதர்களை மேற்பார்வை செய்தார்கள். பார்வோனின் மகள் தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் அவளுக்காகக் கட்டியிருந்த அரண்மனைக்கு வந்தபின்பு, அவன் அதற்கு தாங்கு தளங்களைக் கட்டினான். யெகோவாவுக்காகத் தான் கட்டிய பலிபீடத்தின்மேல் சாலொமோன் வருடத்தில் மூன்றுமுறை தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அவற்றோடு யெகோவாவுக்குமுன் தூபங்காட்டி, இவ்விதமாய் ஆலயக் கடமைகளையும் நிறைவேற்றினான். அத்துடன் ஏதோம் நாட்டில் செங்கடலின் கரையோரத்தில் ஏலாத்துக்குக் அருகில் உள்ள எசியோன் கேபேர் என்னும் இடத்தில் அரசன் சாலொமோன் கப்பல்களையும் கட்டினான். ஈராம் கடல் பயணத்தில் பழக்கப்பட்ட தனது வேலையாட்களை, சாலொமோனுடைய வேலையாட்களோடு கப்பற்படையில் சேர்ந்து வேலைசெய்வதற்காக அனுப்பினான். அவர்கள் ஓப்பீருக்குப் போய், நானூற்று இருபது தாலந்து9:28 அதாவது, சுமார் 14,000 கிலோகிராம் நிறையுள்ள தங்கத்தை அரசனாகிய சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள். சாலொமோனிடம் சீபாவின் அரசியின் வருகை சாலொமோனின் புகழைப்பற்றியும் யெகோவாவின் பெயருடன் அவனுக்கிருந்த தொடர்பைப்பற்றியும் சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் கடினமான கேள்விகளால் சாலொமோனை சோதித்துப் பார்ப்பதற்காக அங்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் எருசலேமுக்கு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள். சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அரசன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை. சேபாவின் அரசி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டியிருந்த அரண்மனையையும், அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், அவனுக்குத் திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது. ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை இவற்றை நம்பவேயில்லை. உண்மையில் இவற்றில் பாதியேனும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், ஞானமும் செல்வமும் பலமடங்கு உம்மிடம் அதிகமாயிருக்கிறது. உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். உம்மில் பிரியங்கொண்டு, உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள நித்திய அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள். அத்துடன் அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து10:10 அதாவது, சுமார் 4,080 கிலோகிராம் தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த அவ்வளவு வாசனைப் பொருட்கள் அதன்பின் மறுபடியும் ஒருபோதும் அங்கு கொண்டுவரப்படவில்லை. ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தன. அங்கிருந்து அவை அல்மக்10:11 அல்மக் என்றால் இனிய மணம் அல்லது சந்தன மரம் மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும், பெருமளவாகக் கொண்டுவந்தன. அரசன் இந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் வேண்டிய ஆதாரங்களைச் செய்வதற்கும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். இவ்வளவு தொகையான அல்மக் மரங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இறக்குமதி செய்யப்படவோ, காணப்படவோ இல்லை. சாலொமோன் அரசன் தன் அரச களஞ்சியத்தின் நிறைவிலிருந்து சேபாவின் அரசிக்குக் கொடுத்ததைவிட, ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள். சாலொமோனின் சிறப்பு ஒவ்வொரு வருடமும் சாலொமோன் பெற்ற தங்கத்தின் எடை அறுநூற்று அறுபத்தாறு தாலந்துகள்10:14 அதாவது, சுமார் 23,000 கிலோகிராம் இருந்தன. இத்துடன் வியாபாரிகளும் வர்த்தகர்களும், எல்லா அரபு நாட்டு அரசர்களும், உள்நாட்டின் ஆளுநர்களும் தங்கம் கொண்டுவந்தார்கள். சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல்10:16 ஒவ்வொரு கேடயத்திற்கும் சுமார் 7 கிலோகிராம் தங்கம் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது. அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்று மினா10:17 அதாவது, சுமார் 2 கிலோகிராம் தங்கம். தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான். அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதைத் தரமான தங்கத்தகட்டால் மூடினான். அந்த அரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அதன்பின் பக்கத்தில் வட்ட வடிவமான உச்சி இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது. ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை. சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது. அரசனுக்கு கடலில் ஈராமின் கப்பல்களுடன் தர்ஷீசின்10:22 எபிரெயத்தில் வியாபாரக் கப்பல்கள் எனப்படும் கப்பல்களும் இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன. பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான். முழு உலகத்தாரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள். வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், ஆடைகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் ஆயிரத்து நானூறு தேர்களும், பன்னிரண்டாயிரம் குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும், சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள். எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். சாலொமோனின் மனைவிகள் சாலொமோன் அரசன் பார்வோனின் மகளைத்தவிர மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், ஏத்தியர் ஆகிய நாடுகளிலுள்ள பல பெண்கள்மேலும் ஆசைவைத்தான். இந்த நாட்டினரைப் பற்றி யெகோவா முன்பே இஸ்ரயேலரிடம், “பிற நாட்டு மக்களுடன் நீங்கள் திருமண சம்பந்தம் வைக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் நிச்சயமாய் உங்கள் இருதயங்களை அவர்களுடைய தெய்வங்களிடம் திரும்பச் செய்வார்கள்” என்று கூறியிருந்தார். அப்படியிருந்தும் சாலொமோன் அவர்களில்கொண்ட அன்பினால் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தான். அவனுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு மனைவிகளும், முந்நூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். அவனுடைய மனைவிகள் அவனை வழிதவறச் செய்தனர். சாலொமோன் வயதுசென்றவனானபோது அவனுடைய மனைவியர் வேறு தெய்வங்களுக்குப் பின்னால் அவனுடைய இருதயத்தைத் திருப்பினார்கள்; அவனுடைய தந்தையான தாவீதின் இருதயத்தைப்போல, அவனுடைய இருதயம் யெகோவாவை முழுமையாகப் பற்றிக்கொள்ளவில்லை. சாலொமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மில்கோமையும் பின்பற்றினான். இப்படியாக சாலொமோன் யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தான். தன் தகப்பனாகிய தாவீது செய்ததுபோல யெகோவாவை முழுமனதோடு பின்பற்றவில்லை. சாலொமோன் எருசலேமின் கிழக்கே ஒரு குன்றின்மேல் மோவாபியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான கேமோசுக்கும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மோளேகுக்கும் ஒரு மேடையைக் கட்டினான். அவன் தனது அந்நிய மனைவிகளுக்காக இவ்வாறு செய்தான். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டி பலிகளைச் செலுத்தினார்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இரண்டு முறைகள் சாலொமோனுக்குக் காட்சியளித்திருந்தும், யெகோவாவைவிட்டு அவனுடைய இருதயம் விலகிப்போனதால், யெகோவா சாலொமோனுடன் கோபங்கொண்டார். அத்துடன் யெகோவா அவனைப் பிற தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று தடுத்தும், சாலொமோன் யெகோவாவின் கட்டளையைக் கைக்கொள்ளவில்லை. ஆகவே யெகோவா சாலொமோனிடம், “உனது மனப்பான்மை இவ்வாறு இருப்பதாலும், நான் உனக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையையும், விதிமுறைகளையும் நீ கைக்கொள்ளாதபடியாலும் நிச்சயமாக உன் ஆட்சியை உன்னிடமிருந்து பறித்து, உனக்குக் கீழ்ப்பட்ட ஒருவனுக்குக் கொடுப்பேன். ஆயினும் உன் தகப்பனாகிய தாவீதின் நிமித்தம் உன் காலத்தில் அதை நான் செய்யமாட்டேன். உன் மகனுடைய கையிலிருந்தே அதைப் பறிப்பேன். இருந்தும் அவனிடமிருந்து முழு அரசாட்சியையும் பறிக்காமல் என் அடியவனாகிய தாவீதின் நிமித்தமும், நான் தெரிந்தெடுத்த எருசலேம் பட்டணத்தின் நிமித்தமும், ஒரு கோத்திரத்தை அவனுக்குக் கொடுப்பேன்” என்றார். சாலொமோனின் பகைவர்கள் அதன்பின் யெகோவா ஏதோமியரின் அரச பரம்பரையிலிருந்து, ஏதோமியனான ஆதாத்தை சாலொமோனுக்கு எதிரான பகைவனாக எழுப்பினார். முன்பு ஏதோமியருடன் தாவீது போரிட்டபோது படைத்தலைவனான யோவாப் தங்களில் இறந்தவர்களை அடக்கம்பண்ணப் போயிருந்தான். அவன் அந்நேரம் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டிக்கொன்றான். யோவாப்பும் எல்லா இஸ்ரயேலரும் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் கொன்று முடியுமட்டும் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் ஆதாத் இன்னும் ஒரு சிறுவனாகவே இருந்தான். அவன் தன் தகப்பனுக்குப் பணிசெய்த சில ஏதோமிய அதிகாரிகளோடு சேர்ந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான். அவர்கள் மீதியானிலிருந்து புறப்பட்டு பாரானுக்குப் போனார்கள். பின்பு பாரானிலிருந்து சில மனிதரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு எகிப்திய அரசனான பார்வோனிடம் எகிப்திற்குப் போனார்கள். எகிப்திய அரசனான பார்வோன் ஆதாத்துக்கு ஒரு வீட்டையும், நிலத்தையும், உணவையும் கொடுத்தான். ஆதாத்துக்கு பார்வோனின் கண்களில் தயவு கிடைத்ததால் தன் சொந்த மனைவியான அரசி தாப்பெனேஸின் சகோதரியை ஆதாத்துக்குத் திருமணம் செய்துகொடுத்தான். தாப்பெனேஸின் சகோதரி அவனுக்கு கேனுபாத் என்ற ஒரு மகனைப் பெற்றாள். அவனை தாப்பெனேஸ், அரச அரண்மனையில் வைத்து வளர்த்தாள். அங்கு கேனுபாத் பார்வோனின் சொந்தப் பிள்ளைகளுடன் வாழ்ந்தான். ஆதாத் எகிப்தில் இருந்தபோது தாவீது அவன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான் என்றும், அவன் படைத்தலைவனான யோவாப்பும் இறந்துபோனான் என்றும் கேள்விப்பட்டான். அப்போது அவன் பார்வோனிடம் போய், “நான் என்னுடைய சொந்த நாட்டுக்குப் போக என்னை விட்டுவிடும்” என்று கேட்டான். அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதற்கு இங்கே உனக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு ஆதாத், “ஒரு குறையுமில்லை. ஆனால் என்னைப் போக அனுமதியும்” என்றான். இறைவன், சோபாவின் அரசனாகிய ஆதாதேசர் என்னும் தன் எஜமானிடமிருந்து தப்பி ஓடிய எலியாதாவின் மகனான ரேசோனை, சாலொமோனுக்கு மற்றொரு பகைவனாக எழுப்பினார். தாவீது சேபாவின் படைகளை அழித்தபோது, இவன் தன்னுடன் சில கலகக்காரரைச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தலைவனானான். அந்தக் கலகக்காரர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கு குடியமர்ந்து, அதைத் தங்களுடைய அதிகாரத்திற்குட்படுத்தினார்கள். சாலொமோன் உயிரோடிருந்த காலம் முழுவதும் ஆதாத்துடைய கலகத்துடன்கூட ரேசோனும் இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான். அப்படியே ரேசோன் சீரியாவில் ஆட்சிசெய்து இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான். சாலோமோனுக்கு எதிராக யெரொபெயாம் கலகம் செய்தல் அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் அரசனுக்கெதிராய் கலகம் செய்த விதமாவது: சாலொமோன் அரண்மனைத் தளங்களைக் கட்டி, தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்தின் மதிலில் இருந்த இடைவெளிகளையும் நிரப்பினான். இத்தருணத்தில் யெரொபெயாம் ஒரு மதிப்புள்ள மனிதனாக காணப்பட்டான். அந்த வாலிபன் தன் வேலைகளை எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பதை சாலொமோன் கவனித்தபோது, யோசேப்பு வீட்டாரின் எல்லா தொழிலாளர்களுக்கும் பொறுப்பாக அவனை வைத்தான். அந்நாட்களில் ஒரு நாள் யெரொபெயாம் எருசலேம் பட்டணத்துக்கு வெளியே போய்க்கொண்டிருந்தபோது, சீலோவைச் சேர்ந்த இறைவாக்கினனான அகியா ஒரு புதிய மேலுடையை உடுத்திக்கொண்டு வழியில் அவனைச் சந்தித்தான். இருவரும் பட்டணத்துக்கு வெளியே தனியாக நின்றனர். அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, யெரொபெயாமைப் பார்த்து, “இவற்றில் பத்து துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: ‘சாலொமோனின் கையிலிருந்து ஆட்சியை பறித்து, அதில் பத்து கோத்திரங்களை உனக்குத் தரப்போகிறேன். எனது அடியவனாகிய தாவீதின் நிமித்தமாகவும், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமின் நிமித்தமாகவும், ஒரு கோத்திரம் அவனுக்காக இருக்கும். நான் இதைச் செய்வேன். ஏனென்றால் அவன் என்னைக் கைவிட்டு சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், மோவாபியரின் தெய்வமான கேமோசையும், அம்மோனியரின் தெய்வமான மில்கோமையும் வணங்கினான். அவன் என்னுடைய வழிகளில் நடக்கவுமில்லை; என் பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்யவுமில்லை. சாலொமோனின் தகப்பனான தாவீது செய்ததுபோல என் விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவுமில்லை. “ ‘ஆனாலும் சாலொமோனின் கையிலிருந்து முழு ஆட்சியையும் எடுக்கமாட்டேன். நான் தெரிந்துகொண்டவனும், என் கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டவனுமான என் அடியவன் தாவீதின் நிமித்தம், சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அவனை அரசனாக வைத்திருக்கிறேன். தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன். என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய். அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன். இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான். அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான். சாலொமோனின் மரணம் சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை அனைத்தும், அவன் காண்பித்த ஞானமும் சாலொமோனின் வரலாறுகளின் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான். இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான். அரசாட்சி பிளவுபடுதல் ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள். அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்து அங்கேயே இருந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்து, “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார். ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். அதற்கு ரெகொபெயாம், “நீங்கள் போய் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்பி என்னிடம் வாருங்கள்” என்றான். எனவே மக்கள் போய்விட்டார்கள். அதன்பின்பு, அரசன் ரெகொபெயாம் தன் தகப்பன் சாலொமோனின் காலத்தில் அவரிடம் பணிசெய்த முதியோருடன் கலந்து ஆலோசனை செய்தான். அவன் அவர்களிடம், “இந்த மக்களுக்கு நான் பதில்சொல்வதற்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள், “இன்று நீ அவர்களுக்கு பணியாளனாயிருந்து, அவர்களுக்குப் பணிசெய்து, அவர்களுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பீரானால் அவர்கள் எப்பொழுதும் உமது பணியாட்களாயிருப்பார்கள்” என்றார்கள். ஆனால் ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்து தனக்குப் பணிசெய்த வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். அவன் அவர்களிடம், “ ‘உமது தகப்பன் எங்கள்மேல் வைத்த பாரத்தை எளிதாக்கும்’ என்று கேட்கிற இந்த மக்களுக்கு நான் பதில் கொடுப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?” என்று கேட்டான். அவனுடன் வளர்ந்த வாலிபர்கள், “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார், நீர் எங்கள் நுகத்தை இலகுவாக்கும் என உம்மிடம் சொல்கிற இந்த மக்களிடம், எனது சிறிய விரல் என் தகப்பனின் இடுப்பைவிடத் தடிமனானது என்று சொல்லும். அத்துடன் என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன் என்று சொல்லும்” என்றார்கள். “மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள். அப்போது அரசன், மக்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு, வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான். இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் யெகோவாவிடமிருந்தே வந்தன. அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: “தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு? ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு? இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்! தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!” எனவே இஸ்ரயேலர்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான். அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் எல்லா இஸ்ரயேலரும் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான். இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்பட்டபோது, தங்கள் சபைக்கு அவனை வரும்படி அழைத்து எல்லா இஸ்ரயேலருக்கும் அவனை அரசனாக்கினார்கள். யூதா கோத்திரம் மட்டுமே தாவீதின் குடும்பத்துக்கு உண்மையாயிருந்தது. ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா முழுவதிலும் பென்யமீன் கோத்திரத்திலும் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் சாலொமோனின் மகன் ரெகொபெயாமின் ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: ஆனால் இறைவனுடைய மனிதனான செமாயாவுக்கு இறைவனின் வார்த்தை வந்தது. “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமையும், யூதாவின், பென்யமீன் முழு குடும்பத்தையும், மீதியான மக்களையும் நோக்கி, ‘உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரயேலருக்கு எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கட்டளையிட்டபடியே மீண்டும் வீட்டிற்கு போனார்கள். தங்கக் கன்றுக்குட்டிகள் பின்பு யெரொபெயாம் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள சீகேமை அரண் செய்து, அங்கே வாழ்ந்தான். அங்கிருந்துபோய் பெனியேலைக் கட்டி எழுப்பினான். யெரொபெயாம் தனக்குள், “அரசாட்சி ஒருவேளை தாவீதின் சந்ததிக்கே திரும்பவும் போகக்கூடும். இந்த மக்கள் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்துக்குப் பலி செலுத்துவதற்குப் போனால், அவர்கள் தங்கள் தலைவனான யூதாவின் அரசன் ரெகொபெயாமின் பக்கம் சாயக்கூடும். அவர்கள் என்னைக் கொலைசெய்து அவனிடமே திரும்புவார்கள்” என்று நினைத்தான். அரசன் இதைக்குறித்து ஆலோசனை பெற்றபின்பு இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தான். அவன் மக்களைப் பார்த்து, “நீங்கள் எருசலேமுக்கு வழிபடப்போவது உங்களுக்கு மிகவும் கஷ்டம். இஸ்ரயேலின் எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டுவந்த தெய்வங்கள் இங்கே இருக்கின்றன” என்று சொன்னான். அவன் ஒன்றைப் பெத்தேலிலும், மற்றதைத் தாணிலும் வைத்தான். இது பாவமாகியது. மக்கள் அதில் ஒன்றை வழிபடுவதற்குத் தாண்வரைக்கும் போனார்கள். யெரொபெயாம் மேட்டு இடங்களில் வழிபாட்டு இடங்களைக் கட்டி, எல்லாவித மனிதர்களிலுமிருந்து அவர்கள் லேவியர்கள் இல்லாதிருந்தபோதிலும் ஆசாரியர்களை நியமித்தான். யெரொபெயாம் எட்டாம் மாதம் பதினைந்தாம் நாளில் யூதாவில் நடக்கும் ஒரு பண்டிகையைப்போல தானும் ஒரு பண்டிகையை நியமித்து, பலிபீடத்தில் பலிகளைச் செலுத்தினான். இப்படி அவன் தான் பெத்தேலில் செய்த கன்றுக்குட்டிக்குப் பலியிட்டான். பெத்தேலில் தான் செய்த மேடைகளில் பூசாரிகளையும் நியமித்தான். எட்டாம் மாதம், பதினைந்தாம் தேதியை தன் விருப்பப்படி தெரிந்தெடுத்து, பெத்தேலில் தான் கட்டிய பலிபீடத்தில் பலிகளைச் செலுத்தினான். இப்படியாக இஸ்ரயேலருக்கான பண்டிகைகளை தானும் நியமித்து பலிகளைச் செலுத்தும்படி பலிபீடத்திற்குப் போனான். யூதாவிலிருந்து இறைவனின் மனிதன் யெரொபெயாம் காணிக்கை செலுத்துவதற்காக பலிபீடத்தின் அண்டையில் நிற்கையில், யெகோவாவின் வார்த்தையின்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு ஒரு இறைவனின் மனிதன் வந்தான். அவன் யெகோவாவின் வார்த்தைப்படி, “பலிபீடமே, பலிபீடமே, யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் சந்ததியில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான். இந்த மேடையில் பலிசெலுத்தும் பூசாரிகளை அவன் உன்மேல் பலியிடுவான். உன்மேல் மனித எலும்புகள் எரிக்கப்படும் என்று யெகோவா கூறுகிறார்” என்று பலிபீடத்துக்கு எதிராகச் சத்தமிட்டுச் சொன்னான். அதே நாளில் இறைவனுடைய மனிதன் ஒரு அடையாளத்தைக் கொடுத்தான். “யெகோவா அறிவிக்கும் அடையாளம் இதுவே: இந்தப் பலிபீடம் இரண்டாகப் பிளக்கப்பட்டு அதன் சாம்பல் நிலத்தில் கொட்டுண்டுபோகும்” என்றான். இறைவனுடைய மனிதன் பெத்தேலிலிருந்த பலிபீடத்தைச் சபித்ததை அரசன் யெரொபெயாம் கேட்டபோது பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். ஆனால் அந்த மனிதனுக்கு எதிராக நீட்டப்பட்ட அவனுடைய கை திரும்ப எடுக்க முடியாதபடி மரத்துப்போயிற்று. அதேவேளையில் யெகோவாவின் வார்த்தையால் இறைவனின் மனிதன்மூலம் கொடுத்த அடையாளத்தின்படி பலிபீடமும் பிளந்து சாம்பல் கொட்டப்பட்டது. அப்பொழுது அரசன் இறைவனுடைய மனிதனிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் எனக்காகப் பரிந்துபேசி, என் கை திரும்பவும் முன்போல வரவேண்டும் என்று வேண்டுதல் செய்யும்” என்றான். எனவே இறைவனின் மனிதன் யெகோவாவிடம் பரிந்து மன்றாடியதால் அரசனுடைய கை முன் இருந்ததுபோல் திரும்பி வந்தது. அரசன் இறைவனுடைய மனிதனைப் பார்த்து, “நீர் என்னுடைய அரண்மனைக்கு வந்து சாப்பிடும். நான் உமக்கு ஒரு அன்பளிப்பைக் கொடுப்பேன்” என்றான். ஆனால் இறைவனுடைய மனிதன் அரசனிடம், “நீர் உமது உடைமைகளில் பாதியைத் தருவதாக இருந்தாலும் உம்மோடு நான் வரமாட்டேன். சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ மாட்டேன். ஏனெனில் நீ சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘அத்துடன் நீ வந்த வழியாய் திரும்பிப் போகவும் வேண்டாம்’ என யெகோவா எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறினான். அவ்வாறே பெத்தேலுக்குத் தான் வந்த வழியால் திரும்பாமல், வேறு வழியால் அவன் போனான். அப்பொழுது பெத்தேலில் முதியவனான ஒரு இறைவாக்கினன் இருந்தான். அவனுடைய மகன்கள் அவனிடம் வந்து, இறைவனுடைய மனிதன் அன்று அங்கு செய்த யாவற்றையும் சொன்னார்கள். அத்துடன் அரசனுக்கு அவன் என்ன சொன்னான் என்பதையும் சொன்னார்கள். அவர்களுடைய தகப்பன் அவர்களிடம், “அவன் எந்த வழியாகப் போனான்” என்று கேட்டான். அதற்கு யூதாவிலிருந்து வந்தவனான இறைவாக்கினன் போன வழியை அவனுடைய மகன்கள் அவனுக்குக் காட்டினார்கள். அப்பொழுது அவன் தன் மகன்களிடம், “எனக்காகக் கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் சேணம் கட்டியபோது அவன் அதில் ஏறி, இறைவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து போனான். இறைவனுடைய மனிதன் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் இருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறைவனுடைய மனிதன் நீர்தானா” என்று கேட்டான். அதற்கு அவன், “நான்தான்,” என்று பதில் சொன்னான். அந்த இறைவாக்கினன் அவனிடம், “என்னுடன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்” என்றான். அதற்கு இறைவனுடைய மனிதன் அவனிடம், “நான் திரும்பி உன்னுடன் போகவும், இவ்விடத்தில் உன்னுடன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடியாது. ஏனென்றால் நீ அங்கே அப்பம் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘நீ போன வழியில் திரும்பி வரவுங்கூடாது’ என்று யெகோவாவினால் கட்டளைப் பெற்றிருக்கிறேன்” என்றான். அப்பொழுது அந்த முதியவனான இறைவாக்கினன் அவனிடம், “நானும் உம்மைப் போல ஒரு இறைவாக்கினன்தான். யெகோவாவின் வார்த்தைப்படி ஒரு தேவதூதன் வந்து, ‘அவன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் உன்னுடைய வீட்டுக்கு அவனைத் திரும்ப கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார்” என்று கூறினான். இப்படி அவன் பொய்யையே கூறினான். எனவே இறைவனுடைய மனிதன் அவனுடன் திரும்பிப்போய் அவனுடைய வீட்டில் சாப்பிட்டு குடித்தான். அவர்கள் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தபோது, அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த அந்த வயதான இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அவன் யூதாவிலிருந்து வந்த இறைவனின் மனிதனைப் பார்த்து, “நீ உன்னுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து, உன் இறைவனாகிய யெகோவா உனக்குத் தந்த கட்டளையையும் கைக்கொள்ளவில்லை. அவர் உன்னைச் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் என்று தடுத்த இடத்துக்கு நீ திரும்பிவந்து அப்பத்தைச் சாப்பிட்டுக் தண்ணீரைக் குடித்தாய். ஆகையினால் உன்னுடைய பிரேதம் உன் முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட மாட்டாது என்று யெகோவா கூறுகிறார்” என்றான். இறைவனுடைய மனிதன் சாப்பிட்டுக் குடித்த பின்பு, அவனைத் திரும்ப அழைத்துவந்த இறைவாக்கினன் அவனுக்காக அவன் கழுதையின்மேல் சேணம் கட்டிக்கொடுத்தான். அவன் தன் வழியே போனபோது ஒரு சிங்கம் அவனை வழியில் கொன்றுபோட்டது. அவனுடைய உடல் வழியருகே எறியப்பட்டுக் கிடந்தது. கழுதையும், சிங்கமும் அதன் அருகே நின்றன. அந்த வழியால் போன சிலர் அங்கே உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், அதனருகே சிங்கம் நின்றதையும் கண்டு, வயது முதிர்ந்த இறைவாக்கினன் வசித்த பட்டணத்திற்குப் போய் அதை அறிவித்தார்கள். அவனுடைய பயணத்திலிருந்து அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த இறைவாக்கினன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன், “இவனே யெகோவாவினுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்த யெகோவாவினுடைய மனிதன். யெகோவா தமது வார்த்தையால் அவனை எச்சரித்தபடியே, அவனைச் சிங்கத்திடம் ஒப்புக்கொடுத்தார். அது அவனைக் கிழித்துக் கொன்றது” என்றான். அந்த இறைவாக்கினன் தன் மகன்களிடம், “கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் அப்படியே செய்தார்கள். அவன் போய் தெருவில் உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், சிங்கமும், கழுதையும் அதனருகே நிற்பதையும் கண்டான். சிங்கம் உடலை தின்னவுமில்லை. கழுதையை தாக்கவுமில்லை. அந்த இறைவாக்கினன் இறைவனின் மனிதனுடைய உடலை எடுத்து, தன் கழுதையின்மேல் வைத்து, அவனுக்காகத் துக்கிக்கவும், அவனை அடக்கம்பண்ணவும், தன்னுடைய சொந்தப் பட்டணத்துக்குக் கொண்டுவந்தான். அந்த உடலைத் தன் சொந்தக் கல்லறையில் வைத்தான். அவர்கள், “ஐயோ! என் சகோதரனே” என்று கூறி அவனுக்காகத் துக்கப்பட்டார்கள். அவனை அடக்கம் செய்தபின்பு, அவன் தன் மகன்களைப் பார்த்து, “நான் இறக்கும்போது, இறைவனுடைய மனிதனாகிய இவன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் என்னையும் அடக்கம்பண்ணுங்கள். அவன் எலும்புகளின் பக்கத்திலேயே என் எலும்புகளையும் வையுங்கள். ஏனெனில் பெத்தேலிலுள்ள பலிபீடத்திற்கு விரோதமாகவும், சமாரிய பட்டணங்களில் உயர்ந்த இடங்களிலுள்ள வழிபாட்டிடங்கள் எல்லாவற்றுக்கும் விரோதமாகவும் அவன் யெகோவாவின் வார்த்தையை அறிவித்த செய்தி நிச்சயமாக நிறைவேறும்” என்றான். அதன்பின்பும் யெரொபெயாம் தன் தீயவழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. இன்னும் ஒருமுறை எல்லாவித மனிதர்களிலுமிருந்து வழிபாட்டு மேடைகளுக்குப் பூசாரிகளை நியமித்தான். பூசாரியாக வரவிரும்பும் எவனையும், வழிபாட்டு மேடைகளில் வேலைசெய்வதற்காக அர்ப்பணித்தான். இவையே யெரொபெயாமின் குடும்பத்தின் பாவம். அது அவர்களுடைய வீழ்ச்சிக்கும், அவர்கள் பூமியிலிருந்து முற்றிலும் அழிந்துபோகவும் காரணமாக அமைந்தது. யெரொபெயாமுக்கு விரோதமாக அபியாவின் இறைவாக்கு அந்தக் காலத்தில் யெரொபெயாமின் மகனான அபியா வியாதியுற்றான். அப்போது யெரொபெயாம் தன் மனைவியிடம், “உன்னை யாராவது யெரொபெயாமின் மனைவி என்று கண்டுபிடித்து விடாதபடி, மாறுவேடமிட்டு சீலோவுக்குப் போ. இஸ்ரயேலரை நானே அரசாளுவேன் என்று எனக்குக் கூறிய இறைவாக்கினன் அகியா அங்கே இருக்கிறான். உன்னுடன் பத்து அப்பங்களையும் சில அடைகளையும், ஒரு ஜாடி தேனையும் எடுத்துக்கொண்டு போ. பிள்ளைக்கு என்ன நடக்குமென்று அவன் உனக்குச் சொல்வான்” என்றான். யெரொபெயாமின் மனைவி அவன் சொன்னவாறே செய்து சீலோவிலிருக்கும் அகியாவின் வீட்டுக்குப் போனாள். அகியா வயதுசென்றதினால் கண்பார்வை இழந்தவனாயிருந்தான். அவனால் பார்க்க முடியாதிருந்தது. ஆனால் யெகோவா அகியாவிடம், “யெரொபெயாமின் மனைவி தன் மகனைப்பற்றிக் கேட்க உன்னிடம் வருகிறாள். அவன் வியாதியாயிருக்கிறான். அவளுக்கு நீ இன்ன இன்ன விதமான மறுமொழி கூறவேண்டும். அவள் வரும்போது வேறு யாரோபோல பாசாங்கு செய்வாள்” என்றார். அதனால் அகியா வாசலில் அவளுடைய காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, “யெரொபெயாமின் மனைவியே உள்ளே வா. ஏன் இந்தப் பாசாங்கு? உனக்கு ஒரு துர்ச்செய்தியோடு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று யெரொபெயாமிடம் போய்ச் சொல். ‘நான் உன்னை மக்களிடையேயிருந்து எழுப்பி என் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக நியமித்தேன். தாவீதின் குடும்பத்திலிருந்து அவனுடைய அரசாட்சியைப் பிரித்தெடுத்து, உனக்குக் கொடுத்தேன். ஆனால், என் கட்டளைச் சட்டங்களைக் கைக்கொண்டு, என் பார்வையில் சரியானதை மட்டுமே செய்து, தன் முழு மனதோடும் என்னைப் பின்பற்றிய தாவீதைப்போல் நீ இருக்கவில்லை. உனக்குமுன் வாழ்ந்த எல்லோரைப் பார்க்கிலும் அதிகமான தீமையையே செய்தாய். உலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களான வேறே தெய்வங்களை உனக்கு உண்டாக்கினாய். எனக்குக் கோபமூட்டி என்னைத் தள்ளி ஒதுக்கிவிட்டாய். “ ‘ஆதலால் யெரொபெயாம் குடும்பத்துக்கு அழிவைக் கொண்டுவரப் போகிறேன். யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அடிமையானாலும், சுதந்திரவாளியானாலும் இஸ்ரயேலின் ஒவ்வொரு கடைசி ஆணையும் அழித்துவிடுவேன். ஒருவன் சாணத்தை அது முழுவதும் இல்லாமல் போகும்வரை எரிப்பதுபோல, யெரொபெயாமின் குடும்பத்தை அழித்துவிடுவேன். பட்டணத்தில் சாகும் யெரொபெயாமின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும். நாட்டுப்புறத்தில் சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்று யெகோவாவே கூறினார்.’ “இப்போது நீ உன் வீட்டுக்குப்போ. பட்டணத்தில் நீ காலடி வைத்ததுமே உன் மகன் இறந்துவிடுவான். முழு இஸ்ரயேலரும் அவனுக்காகத் துக்கப்பட்டு, அவனை அடக்கம்பண்ணுவார்கள். யெரொபெயாமின் குடும்பத்தில் அவன் மட்டும் அடக்கம் செய்யப்படுவான். ஏனெனில் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா யெரொபெயாமின் குடும்பத்தில் அவனிடத்தில் மட்டுமே ஏதேனும் நன்மையைக் கண்டிருக்கிறார். “யெகோவா தனக்கென ஒருவனை இஸ்ரயேலின் அரசனாக எழுப்புவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழித்துப் போடுவான். அந்நாள் இதுவே. இப்பொழுதே. யெகோவா இஸ்ரயேலை அடிப்பார். எனவே அது தண்ணீரில் நாணல் அசைவது போலாகும். இஸ்ரயேலை அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த இந்த நாட்டிலிருந்து வேருடன் பிடுங்கி, ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். ஏனென்றால் அவர்கள் அசேரா விக்கிரக தூணை உண்டாக்கி, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். யெரொபெயாம் செய்த பாவத்தினாலும், இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும் அவர் இஸ்ரயேலரைக் கைவிட்டுவிடுவார்” என்றான். அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து திர்சாவுக்குப் போனாள். அவள் தன் வீட்டு வாசலில் காலடி வைத்ததுமே அவனுடைய மகன் இறந்தான். யெகோவா தமது பணியாளனாகிய அகியா என்னும் இறைவாக்கினன் மூலம் சொல்லியிருந்தபடியே, இஸ்ரயேலர் அவனை அடக்கம்பண்ணி அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். யெரொபெயாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த யுத்தங்களும், அவன் ஆண்ட விதங்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளது. யெரொபெயாம் இருபத்தி இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். அதன்பின் அவன் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் நாதாப் அரசனானான். ரெகொபெயாமின் ஆட்சி சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவில் அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள். யூதா கோத்திரத்தார் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்துவந்தார்கள். தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் முன்னோர் செய்ததைக் காட்டிலும் யெகோவாவை அதிகமாகக் கோபமூட்டினார்கள். உயர்ந்த ஒவ்வொரு மலையின்மேலும், ஒவ்வொரு செழிப்பான மரத்தின் கீழும் மேடைகளையும், புனிதக் கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் தங்களுக்கு அமைத்துக்கொண்டார்கள். நாட்டின் வழிபாட்டிடங்களில் வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுக்கும் ஆண் விபசாரக்காரரும் இருந்தார்கள். இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்தியிருந்த ஜனங்களின் அருவருக்கத்தக்க பழக்கங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரெகொபெயாமின் ஆட்சியின் ஐந்தாம் வருடம் எகிப்திய அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்கினான். அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான். யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களைச் சுமந்துகொண்டுபோய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள். ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியப் பெண்ணாயிருந்த அவனுடைய தாயின் பெயர் நாமாள். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவில் அபியாவின் ஆட்சி நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான். அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள். அவனுடைய தகப்பன் முன்பு செய்த எல்லாப் பாவங்களையும் இவனும் செய்தான். தன் முற்பிதாவாகிய தாவீது, தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுமனதோடு உண்மையாயிருந்ததுபோல, இவன் முழுமனதோடு உண்மையாய் இருக்கவில்லை. அப்படியிருந்தும் தாவீதின் இறைவனாகிய யெகோவா அவன் நிமித்தம் எருசலேமைப் பலப்படுத்தி, தாவீதுக்குப் பின் அரசாளுவதற்கு ஒரு மகனை எழுப்பி, எருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார். ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை. யெரொபெயாமுக்கும் ரெகொபெயாமுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் அபியாவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அபியாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான். யூதாவில் ஆசாவின் அரசாட்சி இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான். அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள். ஆசா தன் முற்பிதாவாகிய தாவீதைப் போல யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்தான். அவன், வழிபாட்டிடத்தில் வேசித்தனத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து வெளியேற்றி, தன் முற்பிதாக்கள் செய்துவைத்திருந்த எல்லா விக்கிரகங்களையும் அகற்றிவிட்டான். மேலும் அவன் தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரசி என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான். அவன் வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட ஆசா தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான். அவன் தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்தது. இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான். பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான். மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான். பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான். பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, பின்வாங்கி திர்சாவுக்குப் போனான். அப்பொழுது அரசன் ஆசா ஒருவனையும்விடாமல் யூதா நாடு முழுவதற்கும் ஒரு கட்டளை கொடுத்தான். அவர்கள் பாஷா அரசன் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அரசன் அவற்றைப் பயன்படுத்தி பென்யமீன் நாட்டில் கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான். ஆசாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், அவன் செய்தவைகள் அனைத்தும், அத்துடன் அவன் கட்டிய பட்டணங்கள் பற்றியும், யூதா அரசர்களது வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆயினும், அவனுடைய வயது முதிர்ந்த காலத்தில் அவன் கால்களில் வியாதி ஏற்பட்டது. பின்பு ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் முற்பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான யோசபாத், அவனுடைய இடத்தில் அவனுக்குப்பின் அரசனானான். இஸ்ரயேலில் நாதாபின் ஆட்சி யூதா அரசன் ஆசாவின் இரண்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரயேலுக்கு அரசனாகி, இஸ்ரயேலின்மேல் இரண்டு வருடம் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய தன் தகப்பனுடைய வழிகளிலும், அவனுடைய பாவத்திலும் நடந்தான். இதனால் அவன் யெகோவாவினுடைய பார்வையில் தீமைசெய்தான். நாதாபும், இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனை முற்றுகையிடுகையில், இசக்கார் குடும்பத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா, நாதாபிற்கு எதிராகச் சதிசெய்து, அங்கு அவனை வெட்டிக்கொன்றான். யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான். அவன் அரசாளத் தொடங்கியதும் யெரொபெயாமின் முழுக் குடும்பத்தையும் கொன்றான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் கொன்றான். யெரொபெயாம் செய்த பாவங்களின் காரணமாகவும், அவன் இஸ்ரயேல் மக்களைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபம்மூட்டினதாலுமே இவ்வாறு நடந்தது. நாதாபின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இஸ்ரயேலின் அரசன் பாஷா யூதா அரசனான ஆசா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், அகியாவின் மகன் பாஷா இஸ்ரயேல் முழுவதற்கும் திர்சாவில் அரசனானான். அவன் இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின யெரொபெயாமின் வழிகளிலும், அவனுடைய பாவங்களிலும் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அப்பொழுது பாஷாவுக்கு எதிராக அனானியின் மகன் யெகூவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கும்படி நான் உன்னைப் புழுதியிலிருந்து உயர்த்தினேன். ஆனால் நீயோ யெரொபெயாமின் வழிகளில் நடந்து என் மக்களான இஸ்ரயேலரையும் பாவம் செய்யப்பண்ணி, அவர்களுடைய பாவங்களின் மூலம் எனக்குக் கோபமூட்டினாய். எனவே நான் பாஷாவையும், அவன் குடும்பத்தையும் அழித்தொழிக்கப் போகிறேன். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் ஆக்குவேன். பாஷாவுக்கு சொந்தமானவர்களில், பட்டணத்தில் சாகிறவர்களை நாய்கள் தின்னும்; நாட்டிலே சாகிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும்.” பாஷாவின் அரசாட்சியில் நடந்த மற்றச் சம்பவங்களும், அவனுடைய செயல்களும், சாதனைகளும் இஸ்ரயேலின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. பாஷா தன் முற்பிதாக்களைப்போல இறந்து திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ஏலா அவனுடைய இடத்தில் அரசனானான். மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது. இஸ்ரயேலில் ஏலாவின் ஆட்சி யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தி ஆறாவது வருடத்தில் பாஷாவின் மகன் ஏலா இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் திர்சாவில் இரண்டு வருடங்கள் அரசாண்டான். அப்போது அவனுடைய தேர்களின் அரைப்பகுதிக்குத் தளபதியும், அதிகாரிகளில் ஒருவனுமான சிம்ரி என்பவன் அவனுக்கு எதிராகச் சதி செய்தான். ஒரு நாள் திர்சாவில் அரண்மனைப் பொறுப்பதிகாரியான அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்தான். சிம்ரி உள்ளே போய் அவனைத் தாக்கிக் கொலைசெய்தான். யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி செய்த இருபத்தேழாம் வருடத்தில் இது நடந்தது. அதன்பின் சிம்ரி தானே அவனுடைய இடத்தில் அரசனானான். அவன் அரசாளத் தொடங்கி அரியணையில் அமர்ந்தவுடன் பாஷாவின் முழு குடும்பத்தையும் கொன்றொழித்தான். அவனுடைய உறவினரிலோ, சிநேகிதரிலோ ஒரு ஆணையும் மீதியாய் விடவில்லை. யெகூ என்ற இறைவாக்கினன் மூலம் பாஷாவுக்கு எதிராக யெகோவா கூறிய வார்த்தை நிறைவேற்றும்படியாக சிம்ரி பாஷாவின் முழுக் குடும்பத்தையும் அழித்தான். பாஷாவும் அவனுடைய மகன் ஏலாவும் செய்த எல்லாப் பாவங்களாலும், அவர்கள் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணியபடியாலும், அவர்களுடைய பயனற்ற விக்கிரகங்களால் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு அவர்கள் கோபமூட்டியபடியாலும் அவர்களுக்கு இப்படி நடந்தது. ஏலாவின் ஆட்சியின் மற்ற சம்பவங்களும் அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இஸ்ரயேலில் சிம்ரியின் ஆட்சி யூதாவின் அரசன் ஆசாவின் இருபத்தேழாம் வருடத்தில் திர்சாவில் சிம்ரி அரசன் ஏழு நாட்கள் அரசாண்டான். இஸ்ரயேல் படைகள் ஒரு பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனுக்கு அருகே முகாமிட்டிருந்தனர். முகாமிலிருந்த இஸ்ரயேலர் சிம்ரி தங்கள் அரசனுக்கு எதிராகச் சதிசெய்தது மட்டுமல்ல, அவனைக் கொலைசெய்தான் என்று கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் படைத்தளபதியான உம்ரியை அதேநாளிலே, முகாமிலிருக்கும்போதே இஸ்ரயேலின்மேல் அரசனாக்கினார்கள். அப்பொழுது உம்ரியும் அவனுடன் இருந்த எல்லா இஸ்ரயேலரும் கிபெத்தோனைவிட்டு பின்வாங்கி, திர்சாவை முற்றுகையிட்டனர். பட்டணம் பிடிக்கப்பட்டதை சிம்ரி கண்டவுடன் அவன் அரச அரண்மனைக் கோட்டைக்குள் போய் அதற்கு நெருப்பு வைத்து, தானும் அதிலே இறந்தான். சிம்ரி தான் செய்த பாவங்களினாலும், அவன் யெரொபெயாமின் பாவங்களைத் தானும் செய்து, இஸ்ரயேல் மக்களையும் அவனுடைய பாவத்தில் வழிநடத்தியபடியாலும், யெகோவாவினுடைய பார்வையில் தீமை செய்தபடியினாலுமே இது நடந்தது. சிம்ரியின் ஆட்சிக் காலத்தின் மிகுதி நிகழ்வுகளும், அவனுடைய கலகமும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இஸ்ரயேலில் உம்ரியின் ஆட்சி அதன்பின் இஸ்ரயேலர் இரண்டு பிரிவினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் கீனாத்தின் மகன் திப்னியையும், மற்றப் பிரிவினர் உம்ரியையும் அரசனாக்குவதற்கு ஆதரவளித்தனர். கீனாத்தின் மகன் திப்னிக்குச் சார்பானவர்களைவிட உம்ரிக்குச் சார்பானவர்கள் பலம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே திப்னி இறந்தான், அதன்பின் உம்ரி அரசனானான். யூதாவில் ஆசா அரசாண்ட முப்பத்தோராம் வருடத்தில் உம்ரி இஸ்ரயேலின் அரசனாக வந்து, பன்னிரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். இதில் ஆறு வருடங்கள் திர்சாவில் இருந்து அரசாண்டான். இதன்பின் சேமேர் என்பவனிடமிருந்து சமாரிய மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு16:24 அதாவது, சுமார் 70 கிலோகிராம் வெள்ளி வாங்கினான். அந்த மலையில் ஒரு பட்டணத்தைக் கட்டி, முந்தைய சொந்தக்காரனான சேமேரின் பெயரின்படி அதை சமாரியா என அழைத்தான். ஆனால் உம்ரியோ தன் முன்னோரைவிட அதிக பாவம் செய்து யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளில் நடந்து இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய பாவத்தையும் செய்தான். இதனாலேயே பயனற்ற விக்கிரகங்களினால் இஸ்ரயேலர் தங்கள் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டினார்கள். உம்ரியின் ஆட்சியின் மிகுதி நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. இதன்பின் உம்ரி தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆகாப் அவனுக்குப்பின் அரசனானான். இஸ்ரயேலில் ஆகாபின் ஆட்சி யூதாவின் அரசன் ஆசாவின் முப்பத்தி எட்டாம் வருடத்தில் உம்ரியின் மகன் ஆகாப் இஸ்ரயேலின் அரசனாக வந்தான். இவன் இருபத்திரண்டு வருடங்கள் சமாரியாவிலிருந்து இஸ்ரயேலை அரசாண்டான். உம்ரியின் மகன் ஆகாப் தனக்கு முன் அரசாண்ட எல்லோரைப் பார்க்கிலும், யெகோவாவின் பார்வையில் அதிக தீமையைச் செய்தான். நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைத் தான் செய்வது ஒரு அற்பமான செயல் எனக் கருதியது மட்டுமல்ல; சீதோனியரின் அரசன் ஏத்பாகாலின் மகள் யேசபேலையும் திருமணம் செய்து, பாகாலுக்கு சேவைசெய்து அதை வணங்கினான். சமாரியாவில் அவன் கட்டிய பாகாலின் கோவிலில் பாகாலுக்கென்று ஒரு பலி மேடையையும் அமைத்தான். அதோடுகூட ஆகாப், அசேரா விக்கிரக தூணையும் நிறுத்தி, தனக்கு முன் இருந்த எல்லா இஸ்ரயேல் அரசரைக் காட்டிலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைக் கோபமூட்டும்படி அதிகமானதைச் செய்தான். ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே,16:34 யோசு. 6:26 ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான். இறைவாக்கினன் எலியா கீலேயாத்தின் ஊரைச்சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்பவன் ஆகாப் அரசனிடம் வந்து, “நான் பணிசெய்யும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பதுபோல் அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ, பனியோ பொழிவதில்லை” என்றான். எலியாவுக்கு காகங்கள் மூலம் உணவு அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள். நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார். யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்குக் காலையில் அப்பமும், இறைச்சியும் மாலையில் அப்பமும், இறைச்சியும் கொண்டுபோய்க் கொடுத்தன. அவன் நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்தான். சாறிபாத் ஊர் விதவை நாட்டில் மழை இல்லாதிருந்தபடியால் சில நாட்களுக்குப்பின்பு நீரோடையிலிருந்த தண்ணீர் வற்றிவிட்டது. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எலியாவுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ எழுந்து உடனே சீதோனிலுள்ள சாரெபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு. உனக்கு உணவு கொடுக்கும்படி அங்கேயிருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார். அப்படியே அவன் சாரெபாத் என்ற ஊருக்குப் போனான். அவன் அந்த நகர வாசலுக்குப் போனபோது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கூப்பிட்டு, “எனக்குக் குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருவாயா?” என்று கேட்டான். அவள் அவனுக்குத் தண்ணீர் கொண்டுவரப் போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து எனக்கு ஒரு துண்டு அப்பமும் கொண்டுவா” என்றான். அதற்கு அவள், “உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், என்னிடம் அப்பம் ஒன்றுமில்லை என்பதும் நிச்சயம். ஒரு பானையில் ஒரு பிடியளவு மாவும், ஒரு ஜாடியில் சிறிது எண்ணெயும் மாத்திரமே என்னிடம் உண்டு. எனக்கும் என் மகனுக்கும் உணவு தயாரிப்பதற்கு ஓரிரு விறகுகளைப் பொறுக்குகிறேன். இதை வீட்டிற்குக் கொண்டுபோய் எங்கள் கடைசி உணவைத் தயாரித்து சாப்பிட்டுவிட்டு, பிறகு உணவில்லாமல் சாகப்போகிறோம்” என்றாள். அதற்கு எலியா அவளிடம், “பயப்படாதே. நீ வீட்டுக்குப்போய் சொன்னபடியே செய். ஆனால் முதலில் உன்னிடம் இருப்பதில் ஒரு சிறிய அப்பத்தைச் சுட்டு எனக்கு கொண்டுவா. அதன்பின்பு உனக்கும் உன் மகனுக்கும் எதையாவது செய். ஏனெனில் யெகோவா நாட்டிற்கு மழையை அனுப்பும் நாள்வரைக்கும், உன் பானையிலுள்ள மாவு தீர்ந்துபோவதுமில்லை. உன் ஜாடியிலுள்ள எண்ணெய் குறைவதுமில்லை என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுகிறார்” என்றான். அவள் போய் எலியா சொன்னபடி செய்தாள். அப்படியே ஒவ்வொரு நாளும் எலியாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் உணவு இருந்தது. எலியாவின் மூலம் யெகோவா கூறியபடி பானையில் இருந்த மாவு தீர்ந்துபோகவுமில்லை, ஜாடியில் இருந்த எண்ணெய் குறையவுமில்லை. சில நாட்களுக்குப்பின்பு அந்த வீட்டுச் சொந்தக்காரியான விதவையின் மகன் நோயுற்றான். வருத்தம் கடுமையாகி அவன் மூச்சு நின்றுவிட்டது. அப்பொழுது அந்தப் பெண் எலியாவைப் பார்த்து, “இறைவனுடைய மனிதனே, எனக்கு எதிராக உமக்கு என்ன இருக்கிறது? என் பாவத்தை ஞாபகப்படுத்தவும், என் மகனைக் கொல்வதற்குமா இங்கு வந்தீர்?” என்று கேட்டாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து, “உன் மகனை என்னிடம் தா” என்று சொல்லி அவளிடமிருந்து மகனை எடுத்து, தான் தங்கியிருந்த மேல்வீட்டறைக்குக் கொண்டுபோய், தன் படுக்கையில் அவனைக் கிடத்தினான். பின்பு அவன் யெகோவாவை நோக்கி, “என் இறைவனாகிய யெகோவாவே! என்னைப் பராமரிக்கிற இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணி, அவள்மேல் இந்த மனவேதனையைக் கொண்டுவந்தீரே!” என்று கதறினான். அதன்பின் அவன் மூன்றுமுறை அந்தப் பிள்ளையின்மேல் முகங்குப்புற கிடந்து யெகோவாவைப் பார்த்து, “என் இறைவனாகிய யெகோவாவே! இந்தச் சிறுவனின் உயிர் இவனுக்குள் திரும்பி வரட்டும்” என்று கதறி அழுதான். யெகோவா எலியாவின் கூப்பிடுதலைக் கேட்டார். சிறுவனின் உயிர் திரும்பவும் அவனுக்கு வந்தது. அவன் உயிர் பெற்றான். எலியா பிள்ளையை தன்னுடைய அறையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தான். அவனை அவன் தாயிடம் கொடுத்து, “பார் உன் மகன் உயிரோடிருக்கிறான்” என்றான். அப்பொழுது அவள் எலியாவைப் பார்த்து, “நீர் ஒரு இறைவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவின் வார்த்தை உண்மை என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்” என்றாள். எலியாவும் ஒபதியாவும் நீண்டகாலத்திற்குபின் மூன்றாம் வருடத்தில் எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அவர் அவனிடம், “ஆகாபுக்கு முன் போய் நில்; நான் நாட்டிற்கு மழையை அனுப்பப்போகிறேன்” என்றார். அப்படியே எலியா ஆகாபிடம் போனான். அக்காலத்தில் சமாரியாவில் பஞ்சம் மிகவும் கடுமையாயிருந்தபடியினால், ஆகாப் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்த ஒபதியாவை வரும்படி கட்டளை கொடுத்தான். ஒபதியா யெகோவாவிடம் மிகவும் பயபக்தி உள்ளவனாயிருந்தான். யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது ஒபதியா நூறு இறைவாக்கு உரைப்பவர்களை அழைத்து இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, உணவும் தண்ணீரும் கொடுத்துப் பாதுகாத்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து, “நீ நாடு முழுவதும்போய், பள்ளத்தாக்குகளையும், நீரூற்றுகளையும் பார். ஒருவேளை எங்கள் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் உயிரோடு பாதுகாப்பதற்கு தேவையான புல்லை காணலாம். இதனால் நாம் எங்கள் மிருகங்கள் எதையும் கொல்லவேண்டியது ஏற்படாது” என்றான். எனவே அவர்கள் பார்க்கவேண்டிய நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பக்கமாக ஆகாபும், மற்றப் பக்கமாக ஒபதியாவும் போனார்கள். ஒபதியா தன் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது எலியா அவனைச் சந்தித்தான். ஒபதியா அவனை இன்னாரென அறிந்து, அவனுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து, “உண்மையிலே நீர் என் தலைவனாகிய எலியாதானா” என்றான். அதற்கு எலியா, “ஆம், உன் தலைவனிடம் போய் எலியா இங்கு இருக்கிறான் என்று சொல்” என்றான். அதற்கு ஒபதியா, “உமது அடியானை என்னை ஆகாபிடம் சாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு நான் என்ன பிழை செய்திருக்கிறேன்? உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், எனது எஜமான் உம்மைத் தேடும்படி ஆட்களை அனுப்பாத நாடும் இல்லை, அரசாட்சியும் இல்லை. எந்த நாடாவது, எந்த அரசாட்சியாவது வந்து நீர் எங்குமில்லை என்று சொன்னால், உம்மைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று அவர்களைச் சத்தியம் செய்யும்படிச் செய்வார். ஆனால் நீரோ இப்போது என்னைப் பார்த்து, ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி சொல்கிறீர். நான் இப்போது உம்மை விட்டுப்போனவுடன் யெகோவாவின் ஆவியானவர் எங்கே உம்மைக் கொண்டுபோய் விடுவாரோ என்று எனக்குத் தெரியாது. நான் ஆகாபிடம் போய் உம்மைப்பற்றிக் கூறும்போது ஆகாப் வந்து இந்த இடத்தில் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்றுபோடுவானே. இருந்தும் என் இளமைப் பருவத்திலிருந்து உமது அடியவனாகிய நான் யெகோவாவையே வழிபட்டிருக்கிறேன். என் தலைவனே! யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது நான் செய்தவற்றை நீர் கேள்விப்படவில்லையா? நான் யெகோவாவின் இறைவாக்கினர் நூறு பேரை இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்துச் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்தேனே. இப்போது என்னை என் எஜமானிடம் போய், ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று சொல்லச் சொல்கிறீரே. அவன் என்னைக் கொன்றுபோடுவான்” என்றான். அதற்கு எலியா, “நான் பணிசெய்யும் சேனைகளின் யெகோவா இருப்பது நிச்சயமெனில், ஆகாபின் சமுகத்தில் போய் நிற்பேன் என்பதும் நிச்சயம்” என்றான். கர்மேல் மலையில் எலியா அப்பொழுது ஒபதியா ஆகாபுக்குச் செய்தியைச் சொல்வதற்காகப்போனான். ஆகாப் அதைக்கேட்டு எலியாவைச் சந்திக்கப் போனான். அவன் எலியாவைக் கண்டபோது அவனைப் பார்த்து, “இஸ்ரயேலின் கலகக்காரனே, நீயா வந்திருக்கிறாய்” என்று கேட்டான். அதற்கு எலியா, “இஸ்ரயேலுக்குக் கேட்டினைக் கொண்டுவந்தவன் நானல்ல. நீயும் உன் தகப்பன் குடும்பத்தினருமே இஸ்ரயேலுக்குக் கேட்டினைக் கொண்டுவந்தவர்கள். யெகோவாவின் கட்டளைகளைக் கைவிட்டு, பாகால்களை நீங்களே பின்பற்றினீர்கள். இப்பொழுது இஸ்ரயேலின் எல்லா மக்களையும் கர்மேல் மலைக்கு என்னிடம் வரும்படி கட்டளை கொடு. அத்துடன் நானூற்றைம்பது பாகாலின் இறைவாக்கினரையும், யேசபேலினால் பராமரிக்கப்படுகிற நானூறு அசேரா விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகளையும் கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னான். அப்பொழுது ஆகாப் இஸ்ரயேல் முழுவதற்கும் செய்தி அனுப்பி, எல்லா இறைவாக்கினரையும் கர்மேல் மலைக்குக் கூடிவரும்படி செய்தான். எலியா எல்லா மக்களின் முன்னும் நின்று அவர்களைப் பார்த்து, “நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இரண்டு அபிப்பிராயங்களுக்கு இடையில் தடுமாறிக் கொண்டிருப்பீர்கள்? யெகோவா இறைவனானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் இறைவனானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்றான். மக்களோ ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது எலியா அவர்களைப் பார்த்து, “யெகோவாவின் இறைவாக்கினரில் நான் ஒருவன் மட்டுமே மீதியாயிருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு நானூற்றைம்பது தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். இப்போது இரண்டு காளைகளைக் கொண்டுவாருங்கள். அவர்கள் தங்களுக்கு ஒன்றைத் தெரிந்துகொள்ளட்டும். அதைத் துண்டுகளாக்கி விறகுகளின்மேல் வைக்கட்டும், ஆனால் நெருப்பை மூட்டவேண்டாம். மற்றக் காளையை நான் ஆயத்தப்படுத்தி, விறகுகளில் வைத்து நெருப்பை மூட்டாமல் விடுவேன். அதன்பின் நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுங்கள். நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவேன். நெருப்பினால் பதிலளிக்கும் தெய்வமே இறைவன்” என்றான். அப்பொழுது எல்லா மக்களும், “நீர் கூறியது நல்லதுதான்” என்றார்கள். எலியா பாகாலின் இறைவாக்கினரைப் பார்த்து, “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதனால், முதலில் நீங்கள் ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆயத்தப்படுத்தி, உங்கள் தெய்வத்தைக் கூப்பிடுங்கள். ஆனால் நெருப்புக் கொழுத்தக் கூடாது” என்றான். அப்படியே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை எடுத்து, ஆயத்தப்படுத்தினார்கள். அதன்பின்பு காலையிலிருந்து நண்பகல்வரை, பாகாலின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டார்கள். “பாகாலே எங்களுக்குப் பதில் கொடும்” என்று கத்தினார்கள். ஆனால் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்த பலிமேடையைச் சுற்றி நடனமாடினார்கள். மத்தியானமானபோது எலியா அவர்களைக் கேலிசெய்யத் தொடங்கினான். “இன்னும் பலமாகச் சத்தமிடுங்கள். அவன் ஒரு தெய்வம்தான். ஒருவேளை அவன் ஆழமாக யோசித்துக்கொண்டிருப்பான் அல்லது வேலைகள் செய்துகொண்டிருப்பான் அல்லது தூரப்பயணம் போயிருப்பான் அல்லது நித்திரையாயிருந்தால் யாரும் அவனை எழுப்பவேண்டியதாயிருக்கும்” என்றான். இதனால் அவர்கள் இன்னும் பலமாகக் கத்தி, தாங்கள் வழக்கமாகச் செய்வதைப்போல் வாள்களாலும், ஈட்டிகளாலும் இரத்தம் வடியும்வரை தங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள். நண்பகல் கடந்து மாலை பலிசெலுத்தும் நேரம் வரும்வரை அவர்கள் பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மறுமொழி எதுவும் வரவுமில்லை, ஒருவரும் பதிலளிக்கவுமில்லை, ஒருவரும் கவனிக்கவுமில்லை. அதன்பின் எலியா எல்லா மக்களையும் பார்த்து, “இங்கு எனக்கு அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் அவனுக்கு அருகே போனார்கள். அப்பொழுது எலியா இடிக்கப்பட்டுக் கிடந்த யெகோவாவின் பலிபீடத்தைத் திருத்தி அமைத்தான். “உன் பெயர் இனி இஸ்ரயேல் என்று சொல்லப்படும்” என்று யெகோவா வாக்குக்கொடுத்த யாக்கோபின் மரபுவழியாக வந்த பன்னிரண்டு கோத்திரங்களுக்கும், ஒரு கோத்திரத்துக்கு ஒரு கல்லாக பன்னிரண்டு கற்களை எலியா எடுத்தான். அந்தக் கற்களினால் யெகோவாவின் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதைச் சுற்றி இரண்டு மரக்கால் விதை கொள்ளத்தக்க ஒரு வாய்க்காலையும் வெட்டினான். அதன்பின் அவன் விறகுகளை அடுக்கி, காளையைத் துண்டுகளாக்கி, விறகுகளின்மேல் வைத்தான். “நான்கு ஜாடிகள் நிறைய தண்ணீர் நிரப்பி விறகுகளின்மேலும் பலியின்மேலும் ஊற்றுங்கள்” என்றான். அவர்கள் அதைச் செய்தார்கள். “இரண்டாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் இரண்டாம் முறையும் செய்தார்கள். “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் மூன்றாம் முறையும் செய்தார்கள். பலிபீடத்தைச் சுற்றித் தண்ணீர் ஓடி அந்த வாய்க்காலையும் நிரப்பியது. பலிசெலுத்தும் நேரத்தில் இறைவாக்கினன் எலியா முன்பாக அடியெடுத்துச் சென்று, “ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், இஸ்ரயேலுக்கும் இறைவனாகியிருக்கும் யெகோவாவே! இஸ்ரயேலில் நீர்தான் இறைவன் என்றும், நான் உம்முடைய அடியவன் என்றும், உமது கட்டளைப்படியே இவை எல்லாவற்றையும் செய்திருக்கிறேன் என்றும் இன்றைக்கு யாவரும் அறியச் செய்யும்” என்று மன்றாடினான். “பதில் தாரும், யெகோவாவே எனக்குப் பதில் தாரும். இதனால் இந்த மக்கள், யெகோவாவே! யெகோவாவாகிய நீர்தான் இறைவன் என்றும், அவர்கள் இருதயத்தை நீரே திரும்பவும் உமது பக்கமாகத் திருப்புகிறீர் என்றும் அறிவார்கள்” என்றான். அப்பொழுது யெகோவாவின் நெருப்பு இறங்கி பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் முழுவதும் வற்றிப்போகச்செய்தது. மக்கள் எல்லோரும் அதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து, “யெகோவாவே இறைவன், யெகோவாவே இறைவன்” என்று சத்தமிட்டார்கள். எலியா அவர்களைப் பார்த்து, “பாகாலின் இறைவாக்கினரைப் பிடியுங்கள். ஒருவனும் தப்பிப்போக விடவேண்டாம்” என்றான். அவர்கள் அந்தப் பாகாலின் இறைவாக்கினரைப் பிடித்தார்கள். எலியா அவர்களை கீசோன் பள்ளத்தாக்கிற்குக் கிழக்கே கொண்டுபோய் அங்கே கொலைசெய்தான். எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான். அப்படியே ஆகாப் உண்ணவும் குடிக்கவும் போனான். ஆனால் எலியா கர்மேலின் உச்சிக்கு ஏறி தன் முழங்கால்களுக்கிடையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நிலம் வரை குனிந்தான். அவன் தன் வேலையாளிடம், “நீ போய் கடல் பக்கமாய் பார்” என்றான். அவன் போய்ப் பார்த்தான். “அங்கு ஒன்றும் இல்லை” என்று வந்து சொன்னான். அதற்கு எலியா, “திரும்பப் போ” என்று ஏழுமுறை அவ்வாறே சொன்னான். ஏழாம்முறை அந்த வேலையாள், “ஒரு மனிதனின் கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று சொன்னான். அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “ஆகாபிடம் போய், ‘மழை உன்னை தடைசெய்யுமுன் தேரைப் பூட்டிக்கொண்டு கீழே போய்விடு’ என்று சொல்” என்றான். அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான். அப்போது யெகோவாவின் வல்லமை எலியாவின்மேல் வந்ததினால் அவன் தன் மேலாடையைப் பட்டியில் சொருகிக்கொண்டு ஆகாபுக்கு முன்பாக யெஸ்ரயேல் வரைக்கும் ஓடிப்போனான். எலியா ஓரேபுக்குத் தப்பியோடுதல் எலியா செய்த எல்லாவற்றையும், அவன் இறைவாக்கினர் யாவரையும் எப்படி வாளால் கொன்றான் என்பதையும் ஆகாப் யேசபேலுக்குச் சொன்னான். அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஒரு ஆள் அனுப்பி, “நாளைக்கு இந்நேரம், நீ அவர்களுக்குச் செய்ததுபோல் உன் உயிருக்கும் நான் செய்யாவிட்டால், தெய்வங்கள் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்று சொல்லி அனுப்பினாள். எலியா பயந்து தன் உயிரைக் காப்பாற்றும்படி அங்கிருந்து தப்பி ஓடினான். யூதாவிலிருக்கும் பெயெர்செபாவுக்கு வந்தபோது தன் வேலைக்காரனை அங்கு நிறுத்திவைத்து, அவன் ஒரு நாள் பயணம்பண்ணி பாலைவனத்துக்குப் போனான். அவன் ஒரு சூரைச்செடியின் அடியில் உட்கார்ந்து, தான் சாகவேண்டுமென்று மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் பட்ட பாடு போதும்; என்னுடைய உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என்னுடைய முற்பிதாக்களைப் பார்க்கிலும் சிறந்தவன் அல்ல” என்று சொன்னான். அதன்பின் அவன் அந்தச் சூரைச்செடியின்கீழ் படுத்து உறங்கினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றான். எலியா சுற்றிப் பார்த்தபோது நெருப்புத் தணலின்மேல் சுடப்பட்ட அப்பத்தையும், ஒரு ஜாடி தண்ணீரையும் அவன் தலைமாட்டில் கண்டான். அவன் சாப்பிட்டு, குடித்துத் திரும்பவும் படுத்துவிட்டான். அப்போது யெகோவாவின் தூதன் இரண்டாம் தரமும் வந்து அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு. ஏனென்றால் நீ போகவேண்டிய பயணம் மிகவும் தூரமானது” என்றான். அப்படியே அவன் எழுந்து சாப்பிட்டு, குடித்தான். அந்த உணவினால் பெலனடைந்தவனாய், இறைவனுடைய மலையான ஓரேப் மலையை அடையும் வரை இரவும் பகலும் நாற்பது நாட்கள் பயணம் பண்ணினான். அங்கே ஒரு குகைக்குள் போய் அந்த இரவைக் கழித்தான். இறைவன் எலியாவுக்குக் காட்சியளித்தல் அப்போது யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்து, “எலியாவே இங்கே என்ன செய்கிறாய்?” என்றார். அதற்கு அவன், “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடம் மிகவும் பக்தி வைராக்கியம் உள்ளவனாய் இருந்தேன். இஸ்ரயேல் மக்களோ உம்முடைய உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களை உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளால் வெட்டிக் கொன்றுபோட்டார்கள். நான் மட்டும்தான் மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்ல முயற்சிக்கிறார்கள்” என்று சொன்னான். அதற்கு அவர், “இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார். ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்” என்றார். அப்பொழுது பெரிதும் பலமான ஒரு காற்று யெகோவாவின் முன்பாக மலைகளைப் பெயர்த்து, பாறைகளை உடைத்துச் சிதறடித்தது. ஆனால் யெகோவா அந்தக் காற்றில் இருக்கவில்லை. காற்றின் பின் ஒரு பூமி அதிர்ச்சி உண்டானது. ஆனால் யெகோவா அந்த பூமி அதிர்ச்சியிலும் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சியின் பின்பு நெருப்பு உண்டானது. ஆனால் யெகோவா அந்த நெருப்பிலும் இருக்கவில்லை. நெருப்பு வந்தபின் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. எலியா அதைக் கேட்டபோது, தன் மேலுடையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே போய் குகை வாசலில் நின்றான். அப்பொழுது அவனிடம், “எலியாவே இங்கு என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. அவன் அதற்கு மறுமொழியாக, “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாக இருந்தேன். இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களையும் உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளினால் கொன்றுபோட்டார்கள். நான் மட்டுமே மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள்” என்று சொன்னான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நீ வந்த வழியாய்த் திரும்பி தமஸ்குவின் பாலைவனத்திற்குப் போ. நீ அங்கு போய்ச்சேர்ந்ததும் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம்பண்ணு. அதோடுகூட இஸ்ரயேல் அரசனாக நிம்சியின் மகன் யெகூவையும் அபிஷேகம்பண்ணு. ஆபேல் மெகொலா ஊரைச்சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை உனக்குப்பின் வரப்போகும் இறைவாக்கினனாகவும் அபிஷேகம்பண்ணு. ஆசகேலின் வாளுக்குத் தப்பி ஓடுபவனை யெகூ கொல்வான். யெகூவின் வாளுக்குத் தப்பியவனை, எலிசா கொன்றுபோடுவான். இருந்தாலும் பாகாலுக்கு முன் முழங்கால்களை முடக்காத, தங்கள் வாய்களினால் அவனை முத்தமிடாத ஏழாயிரம்பேரை இன்னும் இஸ்ரயேலில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றார். எலிசாவின் அழைப்பு அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது எலிசா எருதுகளை விட்டுவிட்டு எலியாவின் பின்னாலே ஓடிப்போய், “என் தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்று வர அனுமதிக்கவேண்டும். அதன்பின் உம்முடன் வருகிறேன்” என்றான். அதற்கு எலியா, “நீ திரும்பிப்போ. நான் உனக்கு என்ன செய்தேன் என்பதைக் கவனத்தில்கொள்” என்றான். எனவே எலிசா அவனைவிட்டுத் திரும்பிப்போனான். அவன் தனது ஏர் மாடுகளைப் பிடித்து, அவைகளைக் கொன்று, கலப்பையை எரித்து அந்த இறைச்சியைச் சமைத்து அதை மற்றவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின் எலியாவைப் பின்தொடர்ந்து போய் அவனுக்கு உதவிகளைச் செய்தான். சீரியாவுடன் யுத்தம் அப்போது சீரிய அரசன் பெனாதாத் தன் முழு இராணுவப் படையையும் ஒன்றுதிரட்டினான். அவன் முப்பத்திரண்டு அரசர்கள், அவர்களுடைய குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் போய், சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான். அவன் பட்டணத்துக்குள்ளே இஸ்ரயேல் அரசனான ஆகாபிடம் சில தூதுவரை அனுப்பி, “பெனாதாத் சொல்வது இதுவே: ‘உன்னுடைய வெள்ளியும், தங்கமும் என்னுடையவை. உன்னுடைய மனைவிகளில் சிறந்தவர்களும் பிள்ளைகளும் என்னுடையவர்கள்’ ” என்றான். அதற்கு இஸ்ரயேல் அரசன் மறுமொழியாக, “என் தலைவனாகிய அரசனே, உம்முடைய சொற்படி நானும் எனக்குரியவை யாவும் உம்முடையவைகளே” என்று கூறினான். தூதுவர்கள் திரும்பவும் வந்து, “பெனாதாத் கூறுவதாவது. ‘உன்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும், மனைவிகளையும் பிள்ளைகளையும் என்னிடம் தரும்படி கட்டளை அனுப்பினேன். ஆனால் நாளைக்கோ இந்நேரத்தில் உன் அரண்மனையையும், உன் அலுவலர்களுடைய வீடுகளையும் ஆராய்ந்து தேடுவதற்கு என்னுடைய அலுவலர்களை அனுப்புவேன். நீ சிறந்தவையாக மதிக்கும் யாவற்றையும் அவர்கள் கவர்ந்துகொண்டு போவார்கள்’ என்று சொல்கிறான்” என்றார்கள். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் நாட்டிலுள்ள முதியவர்களையெல்லாம் அழைப்பித்து அவர்களிடம், “இந்த மனிதன் எப்படிக் கஷ்டத்தைக் கொடுக்கிறான் என்று பாருங்கள். அவன் என் மனைவிகளையும், பிள்ளைகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கேட்டு ஆளனுப்பியபோது நான் மறுக்கவில்லை” என்றான். எல்லா முதியவர்களும் மக்களும் அவனைப் பார்த்து, “அவனுக்குச் செவிகொடுக்கவும் வேண்டாம். அவன் கேட்டவைகளைக் கொடுக்க உடன்படவும் வேண்டாம்” என்றார்கள். அப்பொழுது அவன் பெனாதாத்தின் தூதுவரைப் பார்த்து, “என் அரசனாகிய தலைவனிடம், ‘நீர் முதல்முறை கேட்ட யாவற்றையும் செய்வேன். ஆனால் இந்த வேண்டுகோளை என்னால் செய்யமுடியாது’ ” என்று சொல்லி அனுப்பினான். அவர்கள் அந்தப் பதிலை பெற்றுக்கொண்டு பெனாதாத்திடம் போனார்கள். அதற்கு பெனாதாத் ஆகாபிடம், “என் மனிதர் ஒவ்வொருவருக்கும் எடுக்கக்கூடியதாக ஒருபிடி தூசியாவது சமாரியாவில் எஞ்சியிருந்தால், தெய்வங்கள் எவ்வளவு அதிகமாகவும் என்னை தண்டிக்கட்டும்” என்று வேறொரு செய்தியை அனுப்பினான். இஸ்ரயேல் அரசன் அதற்குப் பதிலாக, “கவசத்தை களைந்தவனைப்போல், அதை அணிந்திருக்கிறவன் தன்னைப் புகழக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினான். இச்செய்தி வந்தபோது தன் கூடாரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடுகூட குடித்துக்கொண்டிருந்தான். இதைக் கேட்டவுடன் தன் மனிதர்களிடம், “தாக்குவதற்கு ஆயத்தப்படுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமானார்கள். இஸ்ரயேலின் வெற்றி இதற்கிடையில் இஸ்ரயேலின் அரசன் ஆகாபிடம் ஒரு இறைவாக்கினன் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘இந்தப் பெரும் படையைக் காண்கிறாயா? இன்றைக்கே அவர்கள் யாவரையும் உன் கையில் ஒப்புவிப்பேன். அப்பொழுது நான்தான் யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்’ ” என்றான். அதற்கு ஆகாப், “இதை யார் செய்வார்?” என்று கேட்டான். அதற்கு இறைவாக்கினன், “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் மாகாண தளபதிகளில் வாலிப அலுவலர்களே இதைச் செய்வார்கள்’ என்கிறார்” என்றான். “யார் யுத்தத்தைத் தொடங்குவார்?” என்று ஆகாப் கேட்டான். அதற்கு இறைவாக்கினன், “நீ தான்” என்று பதில் கூறினான். அந்தப்படியே ஆகாப் மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் இருநூற்று முப்பத்தி இரண்டுபேரை வரும்படி அழைத்தான். அதன்பின் மிகுதி இஸ்ரயேலரையும் சேர்த்து மொத்தம் ஏழாயிரம் பேரைக் கூடிவரச் செய்தான். நண்பகல் நேரத்தில் பெனாதாத்தும், அவனுடைய நட்பு அரசர்களான முப்பத்தி இரண்டு அரசர்களும் கூடாரங்களுக்குள் குடிவெறியில் இருக்கும்போது ஆகாபின் படை புறப்பட்டது. முதலில் மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் புறப்பட்டார்கள். அப்போது பெனாதாத் அனுப்பிய வேவுக்காரர்கள், “சமாரியாவிலிருந்து படைவீரர் முன்னேறி வருகிறார்கள்” என்று அறிவித்தார்கள். அதற்கு பெனாதாத், “அவர்கள் சமாதானமாக வந்தாலென்ன, யுத்தத்திற்கு வந்தாலென்ன அவர்களை உயிருடன் பிடியுங்கள்” என்றான். மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் இராணுவம் தம்மைப் பின்தொடரப் பட்டணத்தைவிட்டு வெளியே அணிவகுத்துச் சென்றார்கள். ஒவ்வொருவனும் தன்னை எதிர்த்து வருபவனைத் தாக்கினான். அவ்வேளையில் சீரியரும் தப்பி ஓடினார்கள். இஸ்ரயேலர் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் சீரிய அரசனான பெனாதாத் தன் குதிரைவீரர் சிலருடன் குதிரையில் ஏறித் தப்பியோடினான். இஸ்ரயேல் அரசன் முன்னேறிச் சென்று அவர்களின் குதிரைகளையும், தேர்களையும் மேற்கொண்டு சீரிய இராணுவத்துக்கு பெரும் இழப்பை விளைவித்தான். இதன்பின்பு இறைவாக்கினன், இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “உன்னுடைய நிலையை பெலப்படுத்திக்கொள், இனி நீ என்ன செய்யவேண்டுமென்று யோசித்துப்பார். ஏனென்றால் அடுத்த வசந்தகாலத்தில் சீரிய அரசன் உன்னைத் திரும்பவும் தாக்குவான்” என்றான். இதற்கிடையில் சீரிய அரசனின் அலுவலர்கள் அரசனிடம் வந்து, “அவர்களுடைய தெய்வங்கள் மலைகளின் தெய்வங்கள். அதனால்தான் அவர்களை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் சமபூமியில் அவர்களுடன் சண்டையிட்டால் நிச்சயமாய் அவர்களைவிட பலமுள்ளவர்களாயிருப்போம். ஆகவே இப்படிச் செய்யும், எல்லா அரசர்களையும், அவர்களுடைய தலைமைப் பதவிகளிலிருந்து விலக்கி, அவர்களுக்குப் பதிலாக அவர்களின் இடங்களில் வேறு அதிகாரிகளை நியமியும். நாங்கள் சமபூமியில் இஸ்ரயேலருடன் யுத்தம் செய்யும்படியாக, நீர் இழந்த இராணுவத்தைப்போல் குதிரைக்குக் குதிரையும், தேருக்கு தேருமாக ஒரு இராணுவத்தை உருவாக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களைப்பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருப்போம்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அரசன் அதற்கு உடன்பட்டு அதன்படியே நடந்தான். அடுத்த வசந்தகாலத்தில் பெனாதாத் சீரியரைச் சேர்த்துக்கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகச் சண்டையிடும்படி ஆப்பெக் வரையும் போனான். இஸ்ரயேலரும் படை திரட்டிக்கொண்டு உணவுப் பொருட்களுடன் அவர்களை எதிர்க்க அணிவகுத்துச் சென்றனர். இஸ்ரயேலர் அவர்களுக்கெதிரில் இரு சிறிய வெள்ளாட்டு மந்தைகளைப்போல முகாம் அமைத்து இருந்தார்கள். சீரியரோ நாடு முழுவதிலும் நிரம்பியிருந்தார்கள். இறைவனுடைய மனிதன் இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘யெகோவாவே மலைகளின் தெய்வம் என்றும், பள்ளத்தாக்கின் தெய்வம் அல்ல என்றும் சீரியா நினைப்பதால் இந்தப் பெரும் படையை உன் கையில் கொடுப்பேன். அதனால் நீயும் நானே யெகோவா என்று அறிந்துகொள்வாய்’ என்கிறார்” என்றான். ஏழு நாட்களாக இரு படைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமாக முகாம் அமைத்திருந்து, ஏழாம்நாளில் யுத்தத்தைத் தொடங்கினர். இஸ்ரயேலர் ஒரு நாளிலேயே ஒரு இலட்சம் சீரிய காலாட்படை வீரரைக் கொன்றனர். அவர்களில் மீதியானோர் ஆப்பெக் நகரத்துக்குத் தப்பியோடினர். அங்கே அவர்களில் இருபத்தி ஏழாயிரம்பேர் பட்டண மதில் இடிந்து விழுந்ததினால் அழிந்தார்கள். பெனாதாத் பட்டணத்துக்குள் தப்பியோடி, உள்ளறை ஒன்றில் ஒளித்திருந்தான். அவனுடைய அதிகாரிகள் அவனைப் பார்த்து, “இஸ்ரயேல் அரசர்கள் மிகவும் இரக்கமுள்ளவர்களென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் அரையில் துக்கவுடை உடுத்திக்கொண்டு தலையில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் போய்ப் பார்ப்போம். சில வேளை அவன் உம்மை உயிரோடு இருக்கவிடுவான்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் அரைகளில் துக்கவுடையையும், தலைகளில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு, இஸ்ரயேல் அரசனிடம் போய், “தயவுசெய்து என்னை உயிருடன் வாழவிடும் என்று உம்முடைய அடியவனாகிய பெனாதாத் கேட்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் இன்னும் உயிரோடிருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான். அந்த மனிதர் இதை ஒரு நல்ல அடையாளமாக எண்ணி, அவன் சொன்ன வார்த்தையின்படியே, “ஆம் உம்முடைய சகோதரன் பெனாதாத் உயிரோடிருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது இஸ்ரயேல் அரசன், “போய் அவனைக் கொண்டுவாருங்கள்” என்றான். பெனாதாத் வெளியே வந்ததும் தனது தேருக்குள் அவனை ஏற்றினான். பெனாதாத் ஆகாபிடம், “என் தகப்பன் உமது தகப்பனிடமிருந்து கைப்பற்றிய பட்டணங்களெல்லாவற்றையும் நான் உமக்குத் திரும்பத் தருவேன். என் தகப்பன் சமாரியாவில் சந்தைப் பகுதிகளை அமைத்ததுபோல நீரும் தமஸ்குவில் சந்தைப் பகுதிகளை அமைக்கலாம்” என்றான். அதற்கு ஆகாப், “ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் நான் உன்னைப் போகவிடுகிறேன்” என்றான். எனவே ஆகாப் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவனைப் போகவிட்டான். இறைவாக்கினன் ஆகாபைக் கண்டித்தல் யெகோவாவின் வாக்குப்படி இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவன் தன் தோழனைப் பார்த்து, “உன் ஆயுதத்தால் என்னை அடி” என்றான். அந்த மனிதன் மறுத்துவிட்டான். அப்பொழுது அந்த இறைவாக்கினன் அவனிடம், “யெகோவாவுக்கு நீ கீழ்ப்படியாமல் போனபடியால் நீ என்னைவிட்டு போனவுடன் ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும்” என்றான். அதேபோலவே அவன் சென்ற உடனேயே ஒரு சிங்கம் எதிரில் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அப்பொழுது அந்த இறைவாக்கினன் வேறொருவனைப் பார்த்து, “தயவுசெய்து என்னை அடி” என்றான். அப்படியே அவன் அவனை அடித்துக் காயப்படுத்தினான். அதன்பின்பு அந்த இறைவாக்கினன் அரசனுக்காக வீதியோரமாய் காத்திருந்தான். அவன் தன்னை மாறுவேடத்தில் காண்பிப்பதற்காகத் தன் கண்களுக்கு மேல் ஒரு பட்டியைக் கட்டியிருந்தான். அரசன் அவ்வழியாய் கடந்துபோனபோது இறைவாக்கினன் அவனிடம் சத்தமிட்டுச் சொன்னதாவது: “நான் ஒரு உக்கிரமான யுத்தத்தின் நடுவே போனபோது, ஒருவன் என்னிடம் ஒரு கைதியுடன் வந்து, ‘இவனைக் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். இவன் காணாமற்போனால் இவனுடைய உயிருக்காக உன்னுடைய உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது நீ ஒரு தாலந்து20:39 அதாவது, சுமார் 34 கிலோகிராம் வெள்ளி கொடுக்கவேண்டும்’ என்று சொன்னான். உமது அடியவனாகிய நான் அங்குமிங்குமாக அவசர வேலையாக இருந்தபோது, அந்தக் கைதி காணாமல் போய்விட்டான்” என்றான். அதற்கு இஸ்ரயேல் அரசன், “அதுதான் உனக்குரிய தீர்ப்பு. உனது வாயினாலேயே தீர்ப்புக் கூறிவிட்டாய்” என்றான். அப்பொழுது இறைவாக்கினன் விரைவாக தன் கண்களின் மேலிருந்த பட்டையை அவிழ்த்தான். அப்பொழுது இஸ்ரயேல் அரசன் அவன் இறைவாக்கினன் ஒருவன் என்பதை அறிந்துகொண்டான். இறைவாக்கினன் அரசனைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: சாகவேண்டுமென்று நான் தீர்மானித்த ஒருவனை நீ விடுதலையாக்கினாய். ஆகையினால் அவனுடைய உயிருக்காக உன் உயிரும், அவனுடைய மக்களுக்காக உன் மக்களும் சாகவேண்டும்” என்று கூறினான். இஸ்ரயேல் அரசன் கோபத்துடனும் சலிப்புடனும் சமாரியாவிலுள்ள தன் அரண்மனைக்குப் போனான். நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சில நாட்களுக்குபின் யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த நாபோத்துக்கு உரிமையான திராட்சைத் தோட்டத்திற்கு தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலில் சமாரிய அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகே இருந்தது. ஆகாப் நாபோத்தைப் பார்த்து, “உனது திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை எனக்கு கீரைத்தோட்டம் போடுவதற்காகத் கொடு. அதற்குப் பதிலாக அதைக்காட்டிலும் திறமையான ஒரு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருகிறேன் அல்லது நீ விரும்பினால் அதற்கான பணத்தை உனக்குத் தருகிறேன்” என்றான். ஆனால் நாபோத்தோ, “என் முற்பிதாக்களுடைய உரிமைச்சொத்தை நான் உமக்கு விற்றுப்போடாதபடி யெகோவா என்னைத் தடைசெய்வாராக” என்றான். யெஸ்ரயேலனாகிய நாபோத், “முற்பிதாக்களின் உரிமைச் சொத்தைத் தரமாட்டேன்” என்று சொன்னதினால், ஆகாப் ஆத்திரம் கொண்டவனாய்த் தன் வீட்டுக்குப் போனான். அவன் யாருடனும் பேசாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு சாப்பிடுவதற்கும் மறுத்துவிட்டான். அப்பொழுது அவனுடைய மனைவி யேசபேல் உள்ளே வந்து, “ஏன் யாருடனும் பேசாமல் இருக்கிறீர்? ஏன் சாப்பிடாமல் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கிறீர்?” என்று கேட்டாள். ஆகாப் அவளைப் பார்த்து, “நான் யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்திடம், ‘உன்னுடைய திராட்சைத் தோட்டத்தை பணத்திற்கு எனக்கு விற்று விடு. அல்லது அதற்குப் பதிலாக நீ விரும்பினால் இன்னொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்று கேட்டுப் பார்த்தேன். அவன் அதற்கு, ‘நான் என்னுடைய திராட்சைத் தோட்டத்தைத் தரமாட்டேன்’ என்று கூறி விட்டான்” என்றான். அதற்கு அவன் மனைவி யேசபேல், “நீர் இஸ்ரயேலின் அரசனல்லவா? இப்படித்தான் நடந்துகொள்வதா? எழுந்து சாப்பிடும், சந்தோஷமாயிரும். யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உமக்கு எடுத்துத்தருவேன்” என்றாள். அப்பொழுது அவள் ஆகாபின் பெயரில் கடிதங்கள் எழுதி அவனுடைய முத்திரையைப் போட்டு, நாபோத்தின் பட்டணத்தில் அவனுடன் வாழ்ந்தவர்களான உயர்குடி மக்களுக்கு அவற்றை அனுப்பினாள். அவள் எழுதிய கடிதத்தில், “உபவாசத்துக்கென்று ஒருநாளை அறிவித்து மக்களின் நடுவில் முக்கியமான ஒரு இடத்தில் நாபோத்தை அமர்த்துங்கள். அவனுக்கு எதிரில் இரண்டு அயோக்கியர்களை அமரவையுங்கள். நாபோத் இறைவனையும், அரசனையும் சபித்தான் என்று அவ்விருவரையும் சாட்சி சொல்லவையுங்கள். பின்பு, நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் அவனைக் கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தாள். நாபோத் வாழ்ந்த பட்டணத்தில் இருந்த மூப்பர்களும், பெரியோர்களும், யேசபேல் அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படியே செய்தார்கள். அவர்கள் உபவாசத்துக்கென்று மக்களை ஒன்றுகூட்டி, மக்களின் நடுவில் ஒரு முக்கிய இடத்தில் நாபோத்தை நிறுத்தினார்கள். அப்பொழுது இரண்டு அயோக்கியர்கள் வந்து நாபோத்துக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அவர்கள், “நாபோத் இறைவனையும் அரசனையும் சபித்தான்” என்று சொல்லி மக்களுக்கு முன்பாக அவனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கொண்டுவந்தார்கள். அதன்படி அவனை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய், கல்லெறிந்து கொன்றார்கள். பின்பு அவர்கள் யேசபேலுக்கு, “நாபோத் கல்லெறியப்பட்டு இறந்துபோனான்” என்று செய்தி அனுப்பினார்கள். நாபோத் கல்லெறியப்பட்டு இறந்தான் என யேசபேல் கேள்விப்பட்ட உடனே அவள் ஆகாபிடம், “நீர் எழுந்துபோய், யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத் உமக்கு விற்க மறுத்த திராட்சைத் தோட்டத்தை உமக்குச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும். அவன் உயிரோடில்லை. அவன் இறந்துபோனான்” என்றாள். நாபோத் இறந்துவிட்டான் என்று ஆகாப் கேள்விப்பட்டபோது, அவன் எழுந்து யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தன் உரிமையாக்கிக் கொள்வதற்காகப் போனான். அப்பொழுது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது. “சமாரியாவில் அரசாளுகிற இஸ்ரயேலின் அரசன் ஆகாபைச் சந்திக்கப் போ. அவன் இப்போது நாபோத்தினுடைய திராட்சைத் தோட்டத்தைத் தன் உரிமையாக்கிக்கொள்ளும்படி அங்கு போயிருக்கிறான். அவனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: நீ ஒரு மனிதனைக் கொலைசெய்து, அவனுடைய சொத்தை அபகரிக்கவில்லையா?’ என்று அவனிடம் கேள். மேலும் நீ அவனிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கின அதே இடத்திலே உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்; ஆம் உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’ ” என்றான். அப்பொழுது ஆகாப் எலியாவிடம், “என் பகைவனே என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான். எலியா அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பார்வையில் தீமைசெய்யும்படி நீ உன்னை விற்றுப்போட்டபடியினால், நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன். நான் உன்மீது பெரும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். உன் சந்ததிகளை நான் அழித்துவிடுவேன். அடிமையோ, விடுதலையானவனோ இஸ்ரயேலில் ஆகாபுக்குச் சொந்தமான ஒரு ஆணும் உயிருடன் மீதியாக இருக்காதபடி அழித்துவிடுவேன். நீ எனக்குக் கோபமூட்டி முழு இஸ்ரயேல் மக்களையும் பாவம் செய்யப்பண்ணியபடியால், நான் உன் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகன் பாஷாவின் குடும்பத்தைப்போலவும் மாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். “மேலும் யேசபேலைக் குறித்து யெகோவா, ‘யெஸ்ரயேலின் பட்டண மதிலின் அருகே அவளை நாய்கள் தின்னும்’ என்று சொல்கிறார். “பட்டணத்திற்குள் இறக்கிற ஆகாபின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும் என்றும் பட்டணத்திற்கு வெளியே இறக்கிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றும் கூறுகிறார்” என்றான். தன் மனைவியாகிய யேசபேலினால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்குமுன் தீமைசெய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் வேறு யாரும் இருந்ததில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய எமோரியரைப்போலவே, அவனும் விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் கீழ்த்தரமாக நடந்தான். ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, துக்கவுடையை உடுத்திக்கொண்டு உபவாசித்தான். அத்துடன் அவன் மனமுடைந்தவனாய் துக்கவுடையில் படுத்தும் நடந்தும் திரிந்தான். அப்போது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “எனக்கு முன்பாக ஆகாப் எவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தியிருக்கிறான் என்று கண்டாயா? அவன் தன்னைத் தாழ்த்தினபடியால், நான் இந்தப் பேரழிவை அவனுடைய வாழ்நாட்களில் கொண்டுவரமாட்டேன். ஆயினும், அவனுடைய மகனின் நாட்களில், அவன் குடும்பத்தின்மேல் அந்த பேரழிவைக் கொண்டுவருவேன்” என்றார். ஆகாபுக்கு எதிரான இறைவாக்கு மூன்று வருடங்களாக சீரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையில் யுத்தம் இருக்கவில்லை. ஆனால் மூன்றாம் வருடத்தில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைக் காண்பதற்காகப் போனான். இஸ்ரயேலின் அரசன் தன் அதிகாரிகளைப் பார்த்து, “கீலேயாத்திலுள்ள ராமோத் எங்களுக்குரியது என்றும், அதைச் சீரியரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் இன்னும் ஒன்றுமே செய்யாதிருக்கிறோம் என்றும் உங்களுக்குத் தெரியாதா?” என்றான். எனவே அவன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு என்னுடன் வருவாயா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத் இஸ்ரயேலின் அரசனிடம், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகளைப் போலவும் இருக்கின்றனர்” என்றான். ஆனால், மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம்: “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள். ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான். மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள். மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான். ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; யெகோவா அரசனாகிய உம்முடைய கையில் அதைக் கொடுப்பார்” என்றான். அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான். தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், வலதுபக்கத்திலும் இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் அவரைச் சுற்றி நிற்பதையும் நான் கண்டேன். அப்பொழுது யெகோவா: அந்த சேனையிடம், ‘கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே ஆகாப் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எதினால் நீ அதைச் செய்வாய்’ என்று யெகோவா அதைப் பார்த்துக் கேட்டார். “ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார். “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர் எல்லாருடைய வாயிலும் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான். அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான். அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான். ஆகாப் கொல்லப்படுதல் எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச அங்கியை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான். இப்பொழுது சீரிய அரசனோ தனது முப்பத்தி இரண்டு தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கூக்குரலிட்டபோது, தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் கவசத்தின் இடைவெளி வழியாகப் பாய்ந்து அவனைத் தாக்கியது. அப்பொழுது அரசன் தன் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சீரியருக்கு எதிர் புறமாக அரசனுடைய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் அரசனைச் சாய்த்து வைத்திருந்தார்கள். அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் ஓடி தேரின் அடித்தளங்களெல்லாம் வழிந்தது. அந்த நாளின் சாயங்காலமே அவன் இறந்தான். சூரியன் அஸ்தமிக்கும்பொழுது, “ஒவ்வொருவனும் தன்தன் பட்டணத்துக்கும் ஒவ்வொருவனும் தன்தன் நாட்டுக்கும் திரும்பிப்போங்கள்” என்றொரு சத்தம் படைகளிடையே எங்கும் பரவியது. அப்படியே அரசன் இறந்து சமாரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்கள் அவனை அங்கே அடக்கம்பண்ணினார்கள். அவர்கள் அந்தத் தேரை சமாரியாவிலுள்ள குளத்தில் கழுவினார்கள். வேசிகள் அதில் குளிப்பார்கள். யெகோவாவின் வார்த்தை அறிவித்திருந்தபடி நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின. ஆகாபின் ஆட்சிக் காலத்திலுள்ள மற்ற நிகழ்வுகளும், செயல்களும், அவன் தந்தத்தைப் பதித்துக் கட்டிய மாளிகையைப் பற்றியும், அவன் திரும்பக்கட்டிய பட்டணங்களைப் பற்றியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆகாப் தன் முற்பிதாக்களோடு இளைப்பாறினான். அவன் மகன் அகசியா அவன் இடத்தில் அவனுக்குபின் அரசனானான். யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான். யோசபாத் அரசனானபோது அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள். அவன் தனது தகப்பன் ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். அதோடு யோசபாத் இஸ்ரயேல் அரசனுடன் சமாதானமாயுமிருந்தான். யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், போர்த்திறமைகளும் யூதாவின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. தன் தகப்பன் ஆசாவின் ஆட்சிக் காலத்துக்குப் பின் இன்னமும் மீதியாயிருந்த கோவில்களில், வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து அகற்றிவிட்டான். அந்தக் காலத்தில் ஏதோமில் ஒரு அரசனும் இருக்கவில்லை. ஒரு பிரதிநிதியே அரசாண்டு வந்தான். யோசபாத் தங்கம் கொண்டுவருவதற்கு ஓப்பீருக்குச் செல்ல தர்ஷீசின்22:48 எபிரெயத்தில் வியாபாரக் கப்பல்கள் எனப்படும். கப்பல்களைக் கட்டுவித்தான். ஆயினும் அக்கப்பல்கள் ஒருபோதும் பயணம் செய்யவில்லை. எசியோன் கேபேரில் அவை சேதமடைந்து விட்டன. அந்த வேளையில் ஆகாபின் மகன் அகசியா யோசபாத்திடம், “என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும்” என்றான். ஆனால் யோசபாத் அதை மறுத்துவிட்டான். அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான். இஸ்ரயேலில் அகசியாவின் ஆட்சி யூதாவில் யோசபாத் அரசாண்ட பதினேழாம் வருடத்திலேயே ஆகாபுடைய மகன் அகசியா சமாரியாவில் இஸ்ரயேலருக்கு அரசனானான். அவன் இஸ்ரயேலரை இரண்டு வருடங்கள் அரசாண்டான். அவன் தன் தகப்பனின் வழிகளிலும், தாயின் வழிகளிலும் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளிலும் நடந்தபடியினால் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். அவன் தன் தகப்பன் செய்ததுபோல பாகாலை வழிபட்டு, பணிசெய்து இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.