- Biblica® Open Indian Tamil Contemporary Version
1 யோவான்
யோவான் எழுதின முதல் கடிதம்
1 யோவான்
1 யோவா.
யோவான் எழுதின முதல் கடிதம்
வாழ்வாகிய வார்த்தை
வாழ்வுதரும் வார்த்தையாகிய கிறிஸ்துவைக்குறித்து நாங்கள் உங்களுக்குப் பிரசித்தப்படுத்துகிறோம். தொடக்கத்தில் இருந்த வார்த்தையாகிய அவரையே நாங்கள் கண்டும், கேட்டும் இருக்கிறோம். அவர் பேசுவதை நாங்கள் கேட்டோம், அவரை எங்கள் கண்களால் கண்டோம், அவரை உற்றுப்பார்த்தோம், இந்த வார்த்தையாகிய அவரை எங்கள் கைகளால் தொட்டும் பார்த்தோம். உண்மையாகவே, அந்த வாழ்வு வெளிப்பட்டது; நாங்கள் அவரைக்கண்டு, அவரைக்குறித்து சாட்சி சொல்கிறோம். ஏற்கெனவே, பிதாவுடன் இருந்த அதே நித்திய வாழ்வைக்குறித்தே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். இப்பொழுதோ, அவர் எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறார். நீங்களும் எங்களுடன்கூட ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக, நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியமோ, பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவோடுமே இருக்கிறது. நமது சந்தோஷத்தை முழுநிறைவுபெறச் செய்வதற்காகவே இந்தச் சாட்சியத்தை நாங்கள் எழுதுகிறோம்.
ஒளியில் நடப்பது
கிறிஸ்துவிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட செய்தி இதுவே, அதையே உங்களுக்கு அறிவிக்கிறோம்: இறைவன் ஒளியாக இருக்கிறார்; அவரில் எவ்வித இருளும் இல்லை. எனவே, நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், நாம் சத்தியத்தின்படி வாழ்கின்றவர்கள் அல்ல; பொய் சொல்கிறவர்களாகவே இருப்போம். ஆனால், இறைவன் ஒளியில் இருக்கிறதுபோல, நாமும் இறைவனின் ஒளியிலே நடந்தால், நமக்கு ஒருவரோடொருவர் ஐக்கியமுண்டு. இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது.
நாம் பாவம் அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வோமேயானால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்; சத்தியம் நமக்குள் இல்லை. நம்முடைய பாவங்களை நாம் இறைவனுக்கு அறிக்கையிட்டால், அவர் நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பார். ஏனெனில் அவர் வாக்குமாறாதவரும் நீதி உள்ளவருமாய் இருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் இறைவனைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தைக்கு நம்முடைய வாழ்க்கையில் இடமில்லை.
என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர். நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே.
உடன் விசுவாசிகள் மீதான அன்பும் வெறுப்பும்
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம். “இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை. ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்: ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும்.
அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை. ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.
தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான். தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை. ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது.
எழுதுவதற்கான காரணம்
அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம்
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே,
தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
அன்பான பிள்ளைகளே,
நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும்,
இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும்,
நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும்,
நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
உலகத்தை நேசிக்க வேண்டாம்
உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை. ஏனெனில் உலகத்திலுள்ளவைகளான சரீர ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய எல்லாம் பிதாவினிடத்திலிருந்து வருவதில்லை; இவை உலகத்திலிருந்தே வருகின்றன. உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான்.
கிறிஸ்து விரோதிகள்
அன்பான பிள்ளைகளே, இதுவே கடைசி மணிவேளை; கிறிஸ்து விரோதி வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து விரோதிகள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனாலேயே, இதுவே கடைசி மணிவேளை என்று நாம் அறிந்துகொள்கிறோம். நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது.
ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன். யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான். மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார்.
எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை, உங்களில் நிலைத்திருக்கும்படி கவனமாயிருங்கள். அவை அப்படி நிலைத்திருந்தால், நீங்கள் மகனாகிய கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே.
உங்களை வழிவிலகப்பண்ண முயற்சிக்கிறவர்களின் சூழ்ச்சியை எண்ணியே உங்களுக்கு இவற்றை நான் எழுதுகிறேன். உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.
இறைவனின் பிள்ளைகள்
இப்பொழுதும் அன்பான பிள்ளைகளே, நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் வாழுங்கள். அப்படியானால், அவர் மீண்டும் வரும்போது, நாம் அவருக்கு முன்பாக மனவுறுதி உடையவர்களாயும் வெட்கப்படாதவர்களாயும் இருப்போம்.
இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கிற ஒவ்வொருவனும் அவரால் பிறந்த அவருடைய பிள்ளையாய் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்பட பிதா எவ்வளவு பெரிதான அன்பை நம்மேல் நிறைவாய்ப் பொழிந்திருக்கிறார். உண்மையாய் நாம் அவரின் பிள்ளைகளே! உலகம் நாம் யார் என்று அறியாதிருப்பதற்கான காரணம், உலகம் இறைவனை அறியாதிருப்பதே. அன்பான நண்பரே, இப்பொழுது நாம் இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். ஆனால் இனிமேல், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருப்போம் என்பது, இன்னும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருக்கின்றபடியே, நாம் அவரைக் காணப்போகிறோம். அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருக்கிறது போலவே, தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.
பாவம் செய்கிற எவரும் மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள்; ஏனெனில், மோசேயின் சட்டத்தை மீறுதலே பாவம். ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படியே கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை. ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவனோ, கிறிஸ்துவைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
அன்பான பிள்ளைகளே, ஒருவனும் உங்களை வழிவிலகப்பண்ணுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கிறவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருக்கிறதுபோல, நீதியுள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பாவம் செய்கிறவனோ, பிசாசுக்குரியவனாகவே இருக்கிறான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்துகொண்டே இருக்கிறான். ஆனால் பிசாசின் செய்கைகளை அழிப்பதற்காகவே இறைவனின் மகன் தோன்றினார். இறைவனால் பிறந்த எவரும், தொடர்ந்து பாவம் செய்யமாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து, அவனுள் குடிகொண்டிருக்கிறது. அவன் இறைவனால் பிறந்திருப்பதினால், தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருக்க முடியாது. இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும்: இவ்விதமாகவே நாம் அறிந்துகொள்கிறோம். நீதியைச் செய்யாத யாரும் இறைவனுக்குப் பிள்ளைகள் அல்ல; தனது சகோதரனில் அன்பு செலுத்தாத யாரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல.
ஒருவரில் ஒருவர் அன்பாயிருத்தல்
நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கிறது. காயீனைப்போல் இருக்கவேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலைசெய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலும் அவன் அப்படிச் செய்தான். எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக்குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள். நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். அன்பாயிராத எவரும் மரணத்திலேயே இன்னும் இருக்கிறான். தனது சகோதர சகோதரியை வெறுக்கிற எவரும் கொலைகாரனாயிருக்கிறான். கொலைகாரன் எவனுக்குள்ளும் நித்தியவாழ்வு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
இவ்விதமாகவே, அன்பு என்ன என்பதை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்: இயேசுகிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததின் மூலமாக நாமும் நமது சகோதரருக்காக அல்லது சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். யாராவது உலகப்பொருட்கள் உடையவனாயிருக்கையில், தனது சகோதரன் அல்லது சகோதரி கஷ்டத்தில் இருப்பதைக் கண்டும், அனுதாபம் கொள்ளாதிருந்தால், அவனில் இறைவனுடைய அன்பு இருப்பது எப்படி? அன்பான பிள்ளைகளே, நாம் வார்த்தையிலும் பேச்சிலும் மட்டும் அன்பாய் இருக்கிறவர்களாயிராமல், செயல்களிலும் சத்தியத்திலும் அன்பை காட்டுவோமாக. நாம் சத்தியத்திற்கு உரியவர்கள் என்று அறிவதும், இறைவனுடைய முன்னிலையில் நம்முடைய இருதயங்களை ஆறுதல்படுத்திக்கொள்வதும் இவ்விதமே: நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாலும், இறைவன் நமது இருதயங்களைப் பார்க்கிலும், பெரியவராயிருக்கிறார் என்றும், அவர் எல்லாவற்றையும் அறிவார் என்றும், நம்மை ஆறுதல்படுத்திக்கொள்வோம். அன்பான நண்பரே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தாலும், இறைவனுக்கு முன்பாக நிற்க தைரியங்கொண்டிருக்க முடியும். மேலும் நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதினாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கிறதினாலும், நாம் கேட்கிற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம். இறைவனுடைய கட்டளை இதுவே: தமது மகனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்பதும், அவர் கட்டளையின்படி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதுமே. இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவரில் வாழ்கிறார்கள். அவரும் அவர்களில் வாழ்கிறார். இவ்விதத்திலேயே இறைவன் நமக்குள் வாழ்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம்: அவர் நமக்குத்தந்த பரிசுத்த ஆவியானவராலே அதை அறிந்திருக்கிறோம்.
ஆவிகளைப் பகுத்தறிதல்
அன்பான நண்பரே, நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்துதான் வந்தனவா என்று அவர்களைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் பல பொய் தீர்க்கதரிசிகள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்கிற எந்த ஆவியும் இறைவனிடமிருந்தே வந்திருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்த ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இதுவே கிறிஸ்து விரோதியின் ஆவி; இந்த ஆவி வரும் என்று நீங்கள் கேள்விப்பட்டீர்கள். அது இப்பொழுதே உலகத்தில் வந்திருக்கிறது.
அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார். இந்தப் பொய் தீர்க்கதரிசிகள் உலகத்திற்குரியவர்கள். ஆகவே, அவர்கள் உலக நோக்கத்தின்படியே பேசுகிறார்கள். உலகமும் அவர்களுக்கு செவிகொடுக்கிறது. நாம் இறைவனுக்குரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் யாரோ அவர்கள் நாம் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கிறார்கள்; இறைவனிடமிருந்து வராதவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இவ்விதமே, சத்திய ஆவியானவரைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும் ஏமாற்றும் ஆவியைப் பெற்றிருக்கிறவர்கள் யார் என்றும், நாம் அறிந்துகொள்கிறோம்.
இறைவனின் அன்பு
அன்பான நண்பரே, நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில், அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. அன்பாயிருக்கிற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்திருக்கிறார்கள், அவர்கள் இறைவனை அறிந்திருக்கிறார்கள். அன்பாயிருக்காதவர்கள், இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கிறார். இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார். இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார். அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது.
இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம். பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான். இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம்.
இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார். இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம். இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது.
முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
இறைவனுடைய மகனில் விசுவாசம்
இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கிற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான். நாம் இறைவனில் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதினாலேயே இறைவனின் பிள்ளைகளில் நாம் அன்பாயிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். இறைவனில் அன்பாயிருப்பது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு பாரமானவையும் அல்ல. ஏனெனில், இறைவனால் பிறந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவை விசுவாசித்து, உலகத்தை மேற்கொள்கிறார்கள். நமது விசுவாசமே உலகத்தை மேற்கொண்ட வெற்றி. யார் உலகத்தை மேற்கொள்கிறார்கள்? இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவே தண்ணீரினாலும், இரத்தத்தினாலும், வந்தார். அவர் தண்ணீர் மூலமாக மட்டுமல்ல, தண்ணீனால் மாத்திரமல்ல, இரத்தத்தினாலும் வந்தார். இது சத்தியமென்று பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார். ஏனெனில், ஆவியானவர் சத்தியமுள்ளவர். ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன: ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும், ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறோமே, அப்படியானால் இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! ஏனெனில், இதுவே இறைவன் தமது மகனைக்குறித்துக் கொடுத்த சாட்சியாய் இருக்கிறது. இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனை பொய்யராக்கியிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் தமது மகனாகிய கிறிஸ்துவைக்குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. இறைவனுடைய மகனை தன் உள்ளத்தில் உடையவர்கள் யாரோ அவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். இறைவனுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியவாழ்வு இல்லாதவர்கள்.
கடைசிக் குறிப்பு
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால், இறைவனுக்கு முன்வருவதற்கு நமக்குள்ள மனவுறுதி இதுவே: அவருடைய சித்தத்திற்கு இணங்க நாம் அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார். அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார் என்று நாம் அறிந்திருந்தால், நாம் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொண்டோம் என்ற நிச்சயம் நமக்கு உண்டு என்றும் அறிகிறோம்.
தன் சகோதரன் அல்லது சகோதரி மரணத்திற்குள் நடத்தாத பாவம் செய்வதைக் கண்டால், அதைச் செய்கிறவர்களுக்காக மன்றாட வேண்டும். அப்பொழுது இறைவன், அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வைக் கொடுப்பார். மரணத்திற்கு வழிநடத்தாத பாவம் செய்கிற ஒருவனைக் குறித்தே நான் இங்கு குறிப்பிடுகிறேன். மரணத்தை விளைவிக்கும் பாவமும் உண்டு. அப்படிப்பட்டவைகளுக்காக நீங்கள் மன்றாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எல்லா அநீதியும் பாவமே. ஆனால் எல்லா பாவமும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை.
இறைவனால் பிறந்த யாரும் தொடர்ந்து பாவம் செய்வதில்லையென்று நாம் அறிவோம்; ஏனெனில் இறைவனின் மகனான கிறிஸ்து, அப்படிப்பட்டவர்களைப் பாதுகாத்துக் கொள்கிறார். தீயவன் அப்படிப்பட்டவர்களைத் தொடவே முடியாது. நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்றும், நம்மைச் சுற்றியிருக்கிற முழு உலகமும், தீயவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார்.
அன்பான பிள்ளைகளே, இறைவன் அல்லாதவைகளிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.