- Biblica® Open Indian Tamil Contemporary Version
1 கொரிந்தியர்
பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதல் கடிதம்
1 கொரிந்தியர்
1 கொரி.
பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதல் கடிதம்
இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது,
கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதல்
கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள். இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள். தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
திருச்சபையில் பிரிவினை
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள். பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள். உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்? கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது. ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.
இறைவனின் வல்லமையும் ஞானமும் கிறிஸ்துவே
அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. ஆகவேதான்,
“நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து;
அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்”1:19 [ஏசா. 29:14]
என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார். யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது. ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார். ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.
பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபொழுது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி, உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்களாய் அநேகரில்லை. ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கப்படுத்தும்படி, உலகின் மூடத்தனமானவற்றைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவர்களை வெட்கப்படுத்தும்படி, உலகின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார். இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது. இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறீர்கள். கிறிஸ்துவே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானம். அவரே நம்முடைய நீதியும், பரிசுத்தமும், மீட்புமாயிருக்கிறார். ஆகவே எழுதியிருக்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”1:31 [எரே. 9:24]
பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப்பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை. ஏனெனில் நான் உங்களோடிருந்தபோது, இயேசுகிறிஸ்துவையும் அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் தவிர, வேறெதையும் அறியாதவனாகவே இருக்கவேண்டுமென உறுதிகொண்டிருந்தேன். நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்துடனுமே வந்தேன். என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் கவர்ச்சியும் உள்ள வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆனால் அவை ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல், இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே நான் இப்படி நடந்துகொண்டேன்.
ஆவியானவரிடமிருந்து ஞானம்
அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. ஆனால் எழுதியிருக்கிறபடி:
“இறைவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டவைகளை,
எந்த ஒரு கண்ணும் காணவுமில்லை,
எந்த ஒரு காதும் கேட்கவுமில்லை,
எந்த ஒரு மனமும் சிந்திக்கவுமில்லை.”2:9 [ஏசா. 64:4]
இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார்.
பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழ்ந்த இரகசியங்களையுங்கூட ஆராய்கிறார். ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள். நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரையே பெற்றுக்கொண்டோம். இதனால் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தவற்றை நாம் விளங்கிக்கொள்கிறோம். ஆகவே இவற்றை நாங்கள் பேசுவது, மனித ஞானம் கற்றுத்தந்த வார்த்தைகளினால் அல்ல, ஆவியானவர் கற்றுத்தந்த வார்த்தைகளினாலேயே நாங்கள் அறிவிக்கிறோம். இவ்விதம் ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரிய வார்த்தைகளால் தெளிவுபடுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு மூடத்தனமாகத் தோன்றும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஏனெனில், இவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன. ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து விளங்கிக்கொள்கிறான். அவனையோ மற்றவர்களால் விளங்கிக்கொள்ளவே முடியாது:
ஏனெனில் வேதவசனம் சொல்கிறபடி,
“கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு,
அவருடைய மனதை அறிந்தவன் யார்?”2:16 [ஏசா. 40:13]
ஆனால் நாமோ கிறிஸ்துவின் மனதை உடையவர்களாயிருக்கிறோம்.
திருச்சபையின் பிரிவுகள்
பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று. நான் உங்களுக்குப் பாலையே கொடுத்தேன். பலமான உணவை உங்களுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்னும் நீங்கள் அதை உட்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள். ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள்.
அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம்.
இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம். ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும். அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும்.
நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம்.
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் மூடத்தனமாயிருக்கிறது. எழுதியிருக்கிறபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்.”3:19 [யோபு 5:13] மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணானவைகள் என்று கர்த்தர் அறிவார்”3:20 [சங். 94:11] எனவும் எழுதப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் மனிதர்களைக்குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான். பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், அவர்கள் எல்லோரும் உங்களுடையவர்களே. இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும், அவையெல்லாமே உங்களுடையதே. நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து இறைவனுக்குரியவர்.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்
எனவே, மக்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், இறைவனின் இரகசியமான உண்மைகளைப் பிரசித்தப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்கள் என்றும் எண்ணவேண்டும். எப்பொழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர், உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம். உங்களாலேயாவது அல்லது எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது, நான் நியாயந்தீர்க்கப்படுவதை அற்பமாகவே எண்ணுகிறேன்; நானும் என்னைக்குறித்து நியாயத்தீர்ப்புச் செய்யவில்லை. என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயந்தீர்க்கிறவர். எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்னே, நீங்கள் யாரையும் நியாயந்தீர்க்கவேண்டாம்; கர்த்தர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார். மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களையும் வெளியரங்கப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான்.
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்கள் நன்மையைக் கருத்தில்கொண்டே, என்னையும் அப்பொல்லோவையும் ஒரு எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டு, இவற்றை எழுதியிருக்கிறேன். இதனால், “எழுதியிருக்கிறதற்குமேல் போகவேண்டாம்” என்பதன் கருத்தை, நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனைப்பற்றி இன்னொருவர் இகழமாட்டீர்கள். ஏனெனில், மற்ற எவரையும்விட உங்களை வித்தியாசப்படுத்துபவர் யார்? நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கிறது? நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தால், அவற்றை ஒரு வரமாகப் பெற்றீர்கள் என்று எண்ணாமல், எப்படி பெருமைபாராட்டுகிறீர்கள்?
உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஏற்கெனவே நீங்கள் பெற்றுக்கொண்டீர்களோ! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்களோ! நீங்கள் எங்களை விட்டுவிட்டு அரசர்களாகிவிட்டீர்களோ! ஆனால் நாங்களோ அப்படியல்ல. நீங்கள் உண்மையாகவே அரசர்களாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அப்பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே. ஆனால் எனக்கோ, கொலைக்களத்திற்கு சாகும்படி கொண்டுசெல்லப்படுகிறவர்களின் வரிசையின் இறுதியில், அப்போஸ்தலர்களாகிய எங்களையும் இறைவன் நிறுத்தி, ஒரு காட்சிப் பொருளானோம் என காணப்படப்பண்ணினர். நாங்கள் முழு உலகத்திற்கும், இறைத்தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வேடிக்கையானோம். கிறிஸ்துவுக்காகவே நாங்கள் மூடர்களாயிருக்கிறோம். ஆனால், நீங்களோ கிறிஸ்துவில் எவ்வளவு ஞானமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்! நாங்கள் பெலவீனர், நீங்களோ பெலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்! இந்த நேரத்திலும், நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பழைய உடைகளையே உடுத்திக்கொண்டும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களும், வீடற்றவர்களுமாய் இருக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைக்கிறோம். மற்றவர்கள் எங்களை சபிக்கும்போது, நாங்களோ ஆசீர்வதிக்கிறோம்; நாங்கள் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம்; மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகிறபொழுது, நாங்கள் தயவுடன் பதிலளிக்கிறோம். நாங்கள் இதுவரை உலகத்தின் கழிவுப் பொருட்களாகவும், பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம்.
பவுலின் முறையீடும் எச்சரிக்கையும்
உங்களை வெட்கப்படுத்தும்படியாக நான் இவற்றை உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் என் அன்பான பிள்ளைகளென எண்ணி, உங்களை எச்சரிப்பதற்காகவே இதை எழுதுகிறேன். கிறிஸ்துவில் உங்களுக்குப் பத்தாயிரம் வேதாகம ஆசிரியர்கள் இருக்கிறபோதிலும், உங்களுக்கு ஒரு தகப்பனே இருக்கிறார். நற்செய்தியின் மூலமாக நானே உங்களுக்குக் கிறிஸ்து இயேசுவுக்குள் தகப்பனானேன். ஆகவே நீங்களும் என்னைப்போலவே நடந்துகொள்ள வேண்டுமென நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதற்காகவே, என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவன் எனக்கு அன்பானவன், அவன் கர்த்தரில் உண்மையுள்ளவன். அவன் கிறிஸ்து இயேசுவில், என் வாழ்க்கை முறையை உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். என் வாழ்க்கைமுறை எல்லா இடங்களிலும், எல்லாத் திருச்சபைகளிலும் நான் போதித்து வருவதன்படி அமைந்திருக்கிறது.
நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என்று எண்ணி, உங்களில் சிலர் அகந்தைகொண்டிருக்கிறீர்கள். ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால், நான் மிகவிரைவில் உங்களிடம் வருவேன். அப்பொழுது, இந்த அகந்தைகொண்டவர்கள் பேசுவதை மட்டுமல்ல, அவர்களுடைய பெலத்தையும் அறிந்துகொள்வேன். ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, பெலத்திலே இருக்கிறது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நான் உங்களிடம் பிரம்புடன் வரவேண்டுமா? அல்லது அன்புடனும், சாந்தமுள்ள ஆவியுடனும் வரவேண்டுமா?
முறைகேடான சகோதரன்
உங்களிடையே முறைகேடான பாலுறவு இருக்கிறதென்று உண்மையாய் சொல்லப்படுகிறது. அது இறைவனை அறியாதவர் மத்தியிலும் நடவாத ஒன்றாய்க் காணப்படுகிறதே: ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்திருக்கிறான். அப்படியிருந்தும், நீங்களோ பெருமை கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் துக்கப்பட்டு, இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து விலக்கி இருக்கக்கூடாதா? சரீரத்திலே நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களோடிருக்கிறேன். மேலும், நான் அங்கு இருப்பதுபோல் நினைத்து, நமது கர்த்தராகிய இயேசுவின் பெயரினால் இதைச் செய்தவனுக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டேன். நீங்கள் கூடிவரும்பொழுது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கிறேன். நமது கர்த்தராகிய இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கிறது. அத்தகைய, இந்த மனிதனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவனுடைய மாம்சம் அழிந்துபோனாலும். கர்த்தரின் நாளிலே அவனது ஆவியோ இரட்சிக்கப்படும்.
அப்படியிருக்க, நீங்கள் உங்கள் ஆவிக்குரிய நிலையைக்குறித்து பெருமைகொள்வது நல்லதல்ல. சிறிதளவு புளித்தமாவு, பிசைந்தமாவு முழுவதையும் புளிப்புள்ளதாக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதோ? பழைய புளிப்பூட்டும் மாவை அகற்றிவிட்டு, புளிப்பில்லாத புதிதாய்ப் பிசைந்தமாவாக இருங்கள். உண்மையிலேயே நீங்கள் அப்படிப்பட்டவர்களே. ஏனெனில், நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் பழைய புளிப்பூட்டும் மாவாகிய, தீமையோடும் கொடுமையோடும் அல்லாமல், புளிப்பில்லாத அப்பமாகிய மனத்தூய்மையோடும் உண்மையோடும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவோம்.
முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப்பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன். இவ்வுலகத்து மக்களை நான் குறிப்பிடவில்லை. விபசாரக்காரர், பேராசையுடையோர், ஏமாற்றுக்காரர், விக்கிரக வழிபாட்டுக்காரர் ஆகியோரை விட்டு விலகுவதென்றால், இவ்வுலகத்தையேவிட்டு போகவேண்டியிருக்குமே. ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுகிறதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொண்டு, முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கிறவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகிறவனாகவோ, குடிவெறியனாகவோ, அல்லது ஏமாற்றுகிறவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப்பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடனே சாப்பிடவும் கூடாது.
திருச்சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா? வெளியே இருக்கிறவர்களைக்குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால் “அந்தக் கொடிய மனிதனை உங்கள் நடுவிலிருந்து துரத்திவிடுங்கள்.”5:13 [உபா. 13:5]; [17:7]; [19:19]; [21:21]; [22:21],[24]; [24:7]
விசுவாசிகளுக்குள்ளே வழக்குகள்
உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. ஆதலால், அத்தகைய காரியங்களைக்குறித்து உங்களுக்குத் தகராறு ஏற்படுமாயின், திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டவர்களையே நியாயத்தீர்ப்பு செய்யும் நடுவர்களாக நியமித்துக்கொள்ளுங்கள். உங்களை வெட்கப்படுத்துவதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களிடையே உள்ள தகராறைத் தீர்க்கக்கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையோ? மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகிறானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாகவே இப்படிச் செய்கிறானே.
உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது? அப்படியிராமல் நீங்கள் ஏமாற்றி, அநியாயம் செய்கிறீர்கள், அதுவும் உங்கள் உடன் சகோதரர்களுக்கல்லவா செய்கிறீர்கள்.
அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதிருங்கள்: முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, விபசாரம் செய்கிறவர்களோ, ஆண் வேசியர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இவர்களில் ஒருவரும் இறைவனுடைய அரசைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரினாலும், நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
முறைகேடான பாலுறவு
“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயனுள்ளதல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். “வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர். இறைவன் தமது வல்லமையினால் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் உறுப்புகளை நாம் வேசியுடன் இணைக்கலாமா? அப்படி ஒருபோதும் செய்யக்கூடாதே. தன்னை ஒரு வேசியுடன் இணைக்கிறவன், அவளுடன் ஒரே உடலாய் இணைகிறான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கிறபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”6:16 [ஆதி. 2:24] ஆனால் தன்னைக் கர்த்தருடன் இணைத்துக்கொள்கிறவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான்.
முறைகேடான பாலுறவிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்கு வெளியே இருக்கும்; ஆனால் பாலுறவுப் பாவங்களைச் செய்கிறவன், தன் சொந்த உடலுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான். உங்கள் உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியானவர் உங்களில் குடியிருக்கிறாரே. நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.
திருமணத்தைக்குறித்த போதனைகள்
நீங்கள் முன்பு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதாவது: “ஒருவன் பாலுறவுரீதியாக ஒரு பெண்ணைத் தொடாமலிருக்கிறது நல்லது.” ஆனால் பாலியல் முறைகேடுகள் இவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த மனைவியை உடையவனாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும், தன் சொந்தக் கணவனை உடையவளாய் இருக்கவேண்டும். கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். மனைவியின் உடல் அவளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்கும் சொந்தமானது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்கும் சொந்தமானது. நீங்கள் ஜெபத்தில் ஈடுபடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் உடன்பட்டு, ஒன்றிணையாதிருக்கலாம். அதற்குப் பின்பு, மீண்டும் ஒன்றுசேர்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் சுயக்கட்டுப்பாடு குறைவின் காரணமாக, சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டான். இதை நான் ஒரு கட்டளையாக அல்ல, ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன். எல்லா மனிதரும் என்னைப்போல் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவனிடமிருந்து தனக்குரிய விசேஷ வரத்தைப் பெற்றிருக்கிறான்; ஒருவனது வரம் ஒருவிதமாயும், இன்னொருவனது வரம் இன்னொரு விதமாயும் இருக்கிறது.
இப்பொழுது திருமணம் செய்யாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்கிறதாவது: என்னைப்போலவே அவர்களும் திருமணம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஆனால் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பாலியல் உணர்ச்சிகளால் வேகுவதைப் பார்க்கிலும், திருமணம் செய்துகொள்வது நல்லது.
திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, இந்தக் கட்டளையை நானல்ல, கர்த்தரே கொடுக்கிறார்: ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. ஆனால் அப்படி அவள் பிரிந்து வாழ்ந்தால், அவள் வேறு திருமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது தன் கணவனோடு ஒப்புரவாகவேண்டும். கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
மற்றவர்களைக்குறித்து, கர்த்தர் அல்ல, நானே சொல்கிறதாவது: எந்தவொரு சகோதரனும் அவிசுவாசியான ஒரு மனைவியை உடையவனாயிருந்து, அவள் அவனோடு வாழ விரும்புவாளாயின், அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து, அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக்கூடாது. ஏனெனில், அவிசுவாசியான கணவன் தன் மனைவியின் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறான். அதேபோல், அவிசுவாசியான மனைவியும் விசுவாசியான தன் கணவன் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறாள். இல்லாவிட்டால் அவர்களுடைய பிள்ளைகள் அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்களே. ஆனால், அப்பிள்ளைகளோ பரிசுத்தமானவர்கள்.
ஆனால், அவிசுவாசி பிரிந்து போவானாயின் அவனைப் போகவிடுங்கள். விசுவாசியான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, இப்படியான ஒரு நிலையில் கட்டுப்பாடு உடையவர்கள் அல்ல; இறைவன் நம்மைச் சமாதானத்துடன் வாழ்வதற்காகவே அழைத்திருக்கிறார். மனைவியே, உன் கணவர் இரட்சிப்புக்குள் வருவாரோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவி இரட்சிப்புக்குள் வருவாளோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்?
நிலைமாற்றம் குறித்தது
ஆனால் ஒவ்வொருவனும், கர்த்தர் தனது வாழ்வில் திட்டமிட்டதன்படியும், இறைவன் தன்னை அழைத்த அழைப்பின்படியும், தன் வாழ்க்கையை நடத்தவேண்டும். எல்லாத் திருச்சபைகளிலும் இந்த ஒழுங்கையே நான் ஏற்படுத்துகிறேன். ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் பெற்றிருந்தால், அவன் விருத்தசேதனமில்லாதவனாயிருக்க முயற்சிக்கக்கூடாது. ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யாதவனாய் இருந்தால், அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டாம். ஒருவன் விருத்தசேதனம் பெற்றிருப்பதோ, விருத்தசேதனம் பெறாமல் இருப்பதோ முக்கியமல்ல. அவன் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுதலே முக்கியம். இந்த காரியங்களில், ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது, தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
நீ அழைக்கப்பட்டபொழுது அடிமையாய் இருந்தாயா? கவலைப்பட வேண்டாம்; நீ சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டானால், அதைப் பெற்றுக்கொள். ஏனெனில் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது ஒருவன் அடிமையாயிருந்தால், அவன் கர்த்தரின் சுயாதீன மனிதனாகிறான்; அவ்வாறே அழைக்கப்படும்பொழுது, சுயாதீன மனிதனாயிருந்தவன் கிறிஸ்துவின் அடிமையாகிறான். நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள்; ஆகவே நீங்கள் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள். சகோதரர்களே, ஒவ்வொருவனும் இறைவனுக்கு பொறுப்புள்ளவனாக, தான் இறைவனால் எந்த நிலையிலேயே அழைக்கப்பட்டானோ, அவன் அந்த நிலையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
திருமணமாகாதவர் குறித்து
கன்னிகைகளைக் குறித்தோ: நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே, உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறபடியே இருப்பதுதான் நல்லது என நான் எண்ணுகிறேன். நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம். நீ திருமணம் செய்தால், நீ பாவம் செய்யவில்லை; ஒரு கன்னிகை திருமணம் செய்தால், அவளும் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்கிறவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக பாடுகளை அனுபவிக்கவேண்டி நேரிடும். இந்தப் பாடுகளை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
ஆனால் பிரியமானவர்களே, நான் சொல்கிறதென்னவெனில், காலமோ குறுகினதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவிகளை உடையவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போல் வாழவேண்டும்; துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்; உலக காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், அவைகளில் முழுவதும் மூழ்கிப் போகாதபடி கவனமாய் இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கடந்துபோகிறதே.
கவலைகளிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். தன் மனைவியை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான். அவனுடைய நாட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. திருமணமாகாத ஒரு பெண் அல்லது ஒரு கன்னிகை கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள்: உடலிலும் ஆவியிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே அவளுடைய நோக்கமாய் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள். தன் கணவனை எவ்வாறு பிரியப்படுத்துவது என எண்ணுகிறாள். உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழவேண்டும்.
யாராவது தனக்கென நியமிக்கப்பட்ட கன்னிகையுடன் தான் தவறாக நடக்கக்கூடும் என்று பயந்தாலும், அவளுக்கு வயது போய்க்கொண்டிருக்கிறது என்பதனாலும், தான் விரும்புகிறபடி அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அது பாவமில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தன் மனதில் திருமணம் அவசியமில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு, தன் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறவனாக இருந்து, கன்னிகையை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கிறான். ஆகவே கன்னிகையைத் திருமணம் செய்கிறவன் சரியானதையே செய்கிறான். ஆனால் அவளைத் திருமணம் செய்யாதவன் அதையும்விட அதிக நலமானதைச் செய்கிறான்.
தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரைக்கும், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால், தான் விரும்பும் யாரையாவது திருமணம் செய்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் அவள் திருமணம் செய்துகொள்பவன் கர்த்தருக்குச் சொந்தமானவனாக இருக்கவேண்டும். ஆனால் எனது அபிப்பிராயத்தின்படி, அவள் அப்படியே திருமணம் செய்யாதவளாய் இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். நானும் இறைவனுடைய ஆவியானவரைப் பெற்றிருக்கிறேன் என்ற எண்ணத்திலேயே இந்த யோசனையைக் கொடுக்கிறேன்.
படைக்கப்படும் உணவைக்குறித்து
விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது. தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகிறவன் இறைவனால் அறியப்பட்டிருக்கிறான்.
எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்பற்றிய விஷயத்தில்: உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை, இறைவன் ஒருவரே; அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறிவோம். வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். இவ்வாறு அநேக, “தெய்வங்களும்” சுவாமிகளும் உண்டாயிருந்தாலும், நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கிறோம்; நமக்கு ஒரே ஒரு கர்த்தரே இருக்கிறார். அவரே இயேசுகிறிஸ்து. அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கிறோம்.
ஆனால் எல்லாக் கிறிஸ்தவர்களும், இந்த அறிவைப் பெற்றிருக்கவில்லை. சிலர் இன்னும் தாம் முன் வழிபட்ட விக்கிரக வழிபாட்டின் எண்ணங்கள் உடையவர்களாய் இருப்பதனால், அப்படியான உணவை அவர்கள் சாப்பிடும்போது, அது ஆற்றலுள்ள விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவு என்றே எண்ணுகிறார்கள். அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதனால், அது அசுத்தப்படுத்துகிறது. ஆனால் நாங்கள் சாப்பிடும் உணவு, எங்களை இறைவனோடு நெருக்கமாய் கொண்டுவருவதற்கு உதவுவதில்லை. இப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிடாமல் விடுவதால், நாம் எதையும் இழந்து விடுவதுமில்லை. அதைச் சாப்பிடுவதால், நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை.
எவ்வாறாயினும், உங்கள் சுதந்தரமான செயற்பாடுகளைக்குறித்து கவனமாயிருங்கள். அது பலவீனருக்கு இடறலாய் இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட அறிவுள்ள நீங்கள், விக்கிரக வழிபாட்டுக் கோவிலில் இருந்து சாப்பிடுவதை, பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு, அவனும் தூண்டப்படுவான் அல்லவா? பலவீனமான அந்த சகோதரன், உன்னுடைய அறிவின் நிமித்தம் அழிந்துபோகிறானே. கிறிஸ்து அவனுக்காகவும் இறந்தாரே. இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சிகளைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறாய். ஆகையால் நான் சாப்பிடும் உணவு என் சகோதரனுக்கு பாவம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமானால், நான் இனியொருபோதும் இறைச்சியைச் சாப்பிடமாட்டேன். இவ்விதமாய் நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கமாட்டேன்.
அப்போஸ்தலரின் உரிமைகள்
நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ? நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே. உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ? அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்? இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா? “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்”9:9 [உபா. 25:4] என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்? நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும். நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ? உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ?
அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
ஆனாலும் இந்த உரிமை எதையும் நான் அனுபவிக்கவில்லை. மேலும், அத்தகைய காரியங்களை நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. இப்பொழுது எனக்கிருக்கும் இத்தகைய எனது பெருமித உணர்வை ஒருவன் அவத்தமாக்குகிறதைப் பார்க்கிலும், நான் சாவதே நலமாயிருக்கும். எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும். நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன். அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி.
பவுலுக்கு தன் சுதந்திரத்தின் பயன்
நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன். யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன். மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன். நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன்.
சுயஒழுக்கம் அவசியம்
ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள். விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம். ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன். நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
இஸ்ரயேலின் சரித்திரத்திலிருந்து எச்சரிக்கை
பிரியமானவர்களே, நமது முற்பிதாக்கள் அனைவரையும் இறைவன் வனாந்திரத்தில் தம் மேகத்தின்கீழ் வழிநடத்தினார். அவர்கள் அனைவருமே செங்கடலைக் கடந்து சென்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன.
அவர்கள் தீமையான காரியங்களின்மேல் தங்கள் இருதயங்களில் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதபடி, இவை நமக்கு ஒரு எச்சரிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அவர்களில் சிலர் விக்கிரக வழிபாட்டுக்காரர்களாக இருந்ததுபோல, நீங்களும் இருக்கவேண்டாம்; “மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்தார்கள். பின்பு களியாட்டங்களில் நாட்டங்கொண்டு எழுந்திருந்தார்கள்”10:7 [யாத். 32:6] என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே. அவர்களில் சிலர் செய்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக்கூடாது. இதனால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்களே. அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே.
மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். ஆதலால் நீங்கள் உறுதியாய் நிற்கிறதாக எண்ணுவீர்களாயின், நீங்கள் விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். உங்களுக்கு நேரிட்ட சோதனைகள் பொதுவாக மனிதனுக்கு நேரிடுகிறவைகளே. இறைவன் உங்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்; ஆகவே உங்களால் தாங்கமுடியாத அளவுக்கு நீங்கள் சோதனைக்குள்ளாக அவர் இடங்கொடுக்கமாட்டார். ஆயினும் நீங்கள் சோதனைக்குட்படும்போது, நீங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு வழியையும் அவர் ஏற்படுத்தித் தருவார். அதனால், உங்களுக்கு அதைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கும்.
விக்கிரக வழிபாடு
ஆகையால் என் அன்பான நண்பர்களே, விக்கிரக வழிபாட்டை விட்டு விலகி ஓடுங்கள். நான் அறிவாற்றலுள்ள மக்களுடனே பேசுகிறேன்; நான் சொல்வதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாம் ஆசீர்வாதத்தின் பாத்திரத்திற்கு நன்றி செலுத்துகின்றபோது, கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம் அல்லவா? அப்பத்தைப் பிட்கும்போது, கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம் அல்லவா? ஏனெனில், ஒரே அப்பம் இருப்பதனால், நாம் பலராய் இருந்தாலும், ஒரு உடலாகிறோம். நாமெல்லோரும், ஒரே அப்பத்தில் பங்குகொள்கிறோமே.
இஸ்ரயேல் மக்களைக் கவனித்துப் பாருங்கள்: பலியாகச் செலுத்தப்பட்டதைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தின் பணியில் பங்குகொள்கிறார்கள் அல்லவா? அப்படியானால், விக்கிரகத்துக்குச் செலுத்தப்பட்ட பலியை ஒரு பொருட்டாகவோ, அல்லது விக்கிரகத்தையே ஒரு பொருட்டாகவோ நான் கருதுகிறேனா? இல்லையே, அஞ்ஞானிகளின் பலிகள் இறைவனுக்கல்ல, பிசாசுகளுக்கே பலியிடப்படுகின்றன. அதனால், நீங்கள் பிசாசுகளுடன் பங்காளிகளாய் இருப்பதை நான் விரும்பவில்லை. கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும், பிசாசுகளுடைய பாத்திரத்திலிருந்தும் நீங்கள் குடிக்க முடியாது; கர்த்தரின் பந்தியும், பிசாசுகளின் பந்தியும் ஆகிய இரண்டிலும் நீங்கள் பங்குள்ளவர்கள் ஆகமுடியாது. இவ்வாறு, நாம் கர்த்தருக்கு எரிச்சலூட்ட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா?
விசுவாசிகளின் சுதந்திரம்
“எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு” என்று சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாமே பயனுள்ளதாயிராது. “எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு.” ஆனால், எல்லாம் வளர்ச்சியடைவதற்கு உகந்தவையல்ல. ஒருவனும் தனது நலனை மட்டுமே தேடக்கூடாது; மற்றவர்களது நலனையும் தேடவேண்டும்.
இறைச்சிக் கடையில் விற்கும் எதையும் மனசாட்சியின் நிமித்தம் எவ்வித கேள்வியும் கேட்காமல் நீங்கள் வாங்கி சாப்பிடலாம். ஏனெனில், “பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.”10:26 [சங். 24:1]
அவிசுவாசியொருவன் உங்களை சாப்பாட்டிற்கு அழைக்கும்போது, அங்கு நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிறதை மனசாட்சியின் நிமித்தம், எவ்வித கேள்விகளையும் கேட்காமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆனால் ஒருவன் உங்களுக்கு, “இது பலியிடப்பட்டது” என்று சொன்னால், அவனுக்காகவும், மனசாட்சியின் நிமித்தமும் அதைச் சாப்பிடவேண்டாம். நான் குறிப்பிடுவது உங்களுடைய மனசாட்சியை அல்ல, மற்றவனுடைய மனசாட்சியையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் எனது சுதந்திரம், ஏன் இன்னொருவனது மனசாட்சியின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? இறைவனுக்கு நன்றி செலுத்தியே நான் உணவைச் சாப்பிடுகிறேன். அப்படியானால் நான் நன்றி செலுத்தியதைக்குறித்து, ஏன் யாராவது என்னைக் குற்றப்படுத்தவேண்டும்?
ஆகவே நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும் வேறு எதைச் செய்தாலும், அவையனைத்தையும் இறைவனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள். யாருக்குமே இடறலை ஏற்படுத்தக் காரணமாயிராதேயுங்கள். நீங்கள் யூதர்களுக்கோ, கிரேக்கர்களுக்கோ இறைவனுடைய திருச்சபைக்கோ, இடையூறாய் இருக்காதீர்கள். அவ்வாறே நானும், எல்லாவற்றிலும், ஒவ்வொருவரையும் பிரியப்படுத்தவே முயற்சிக்கிறேன். நான் என்னுடைய நன்மையைத் தேடுகிறவனாயிராமல், பலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்காக, அநேகருடைய நன்மையையேத் தேடுகிறேன்.
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.
வழிபாடு
நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று, விரும்புகிறேன். எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகிறவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கிறவனோ, அவன் தன் தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும், தன் தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும்.
ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன.
ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள்.
கர்த்தரின் திருவிருந்து
பின்வரும் விஷயத்தில் நான் உங்களுக்குக் கொடுக்கும் அறிவுரைகளில், நான் உங்களைப் புகழப் போகிறதில்லை, ஏனெனில் உங்கள் ஒன்றுகூடுதல் நன்மையைவிட தீமையையே விளைவிக்கின்றன. முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன். உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும். நீங்கள் ஒன்றுகூடி வந்து, சாப்பிடுவது உண்மையில் கர்த்தருடைய திருவிருந்து அல்ல. நீங்கள் சாப்பிடும் வேளையில், மற்றவருக்காகக் காத்திராமல் சாப்பிடுகிறீர்கள். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றவர்கள் குடித்து வெறிக்கிறார்கள். சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக்குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனோ? நிச்சயமாக இல்லை.
கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார்.
ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம். அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம்.
ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.
மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன்.
ஆவிக்குரிய நன்கொடைகள்
இப்பொழுது பிரியமானவர்களே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது, ஏவப்பட்டபடியே பேசமுடியாத விக்கிரகங்களை வணங்கும்படிக்கு, தவறாக வழிநடத்தப்பட்டிருந்தீர்கள். ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனின் ஆவியானவரால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்லமாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி யாரும், “இயேசுவே கர்த்தர்” என்று அறிக்கை செய்யவுமாட்டான்.
பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார். இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம். இறைசெயல்களும் பல்வேறு வகையானவை. ஆனால், இறைவன் ஒருவரே எல்லா மனிதரிலும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார்.
பொதுவான நன்மைக்காக, ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர்மூலம் ஒருவருக்கு ஞானமுள்ள வார்த்தையை வெளிப்படுத்தும் வரமும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர்மூலம் அறிவை வெளிப்படுத்தும் வரமும் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர் மூலமாக, மற்றொருவருக்கு விசுவாசம் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர்மூலம், இன்னொருவருக்கு சுகமளிக்கும் வரங்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைக்கவும், இன்னொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறியும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கும் ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்று மொழிகளை விளக்கிச்சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம், ஒரே ஆவியானவரின் செயல்பாடுகளே. அவர் தாம் தீர்மானிக்கிறபடியே, ஒவ்வொருவருக்கும் இவற்றைக் கொடுக்கிறார்.
ஒரு உடல் பல உறுப்புகள்
உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார். நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது.
காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை. காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது. முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்? ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார். முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது. உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது.
எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம். அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார், ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும். உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன.
இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள். ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா? எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.
அன்பு
நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன். நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை. எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை.
அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது. அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும். அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும்.
அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும். ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது. ஆனால் முழுநிறைவு வரும்போது, முழுநிறைவற்றது மறைந்துபோகும். நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம்; அப்பொழுதோ, நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறேன்; அப்பொழுதோ, நான் முழுமையாக அறிந்துகொள்வேன். நான் அறிந்துகொள்கிறபடியே முழுமையாக அறிந்து கொள்ளப்படுவேன்.
ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது.
இறைவாக்கும் பல்வகையான வேற்று மொழிகளும்
அன்பின் வழியைப் பின்பற்றி, ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்வதில் வாஞ்சையுடையவர்களாய் இருங்கள். விசேஷமாக இறைவாக்கு உரைக்கும் வரத்தை விரும்புங்கள். ஏனெனில், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன் மற்ற மனிதருடன் அதைப் பேசுவதில்லை, அவன் இறைவனுடனேயே பேசுகிறான். அவன் பேசுவது மற்றவர்களுக்கு விளங்குவதில்லை; அவன் ஆவியானவரின் ஆற்றலைப் பெற்று, இரகசியங்களைப் பேசுகிறான். ஆனால் இறைவாக்கு உரைக்கும் ஒவ்வொருவனும், மனிதருக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும், ஆறுதலையும் ஏற்படுத்தும்படி பேசுகிறான். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன், தனது சொந்த வளர்ச்சிக்காகவே அதைப் பேசுகிறான். ஆனால் இறைவாக்கு உரைக்கிறவனோ, திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவியாயிருக்கிறான். நீங்கள் ஒவ்வொருவரும், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளில் பேசவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், நீங்கள் இறைவாக்கு உரைக்கிறவர்களாய் இருப்பதையே, நான் இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். இறைவாக்கு உரைக்கிறவன், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறவனைவிட, மதிப்புமிக்க ஒரு பணியைச் செய்கிறான். ஆனால், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழி ஒருவன் விளங்கத்தக்க விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால், அதுவும் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.
பிரியமானவர்களே, இப்பொழுது நான் உங்களிடம் வந்து, வேற்று மொழிகளில் பேசினால், என்னால் நீங்கள் அடையும் நன்மையென்ன. இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டையோ, அறிவையோ, இறைவாக்கையோ அல்லது ஒரு அறிவுறுத்தும் வார்த்தையையோ உங்களுக்கு வழங்கினால் மட்டுமே, அது நன்மையளிக்கும். ஒலிகளை எழுப்பும் புல்லாங்குழல், வீணை போன்ற உயிரற்ற வாத்தியக் கருவிகளைப் பாருங்கள். அவற்றிலிருந்து வரும் இசை, வித்தியாசமான சுரங்களைக் காண்பிக்காவிட்டால், அவற்றில் எழுப்பும் இராகத்தை யார் அறிந்துகொள்வான்? எக்காளம் யுத்த அழைப்பிற்கான தெளிவான ஒலியை எழுப்பாவிடில், யுத்தத்திற்கு யார் ஆயத்தமாவான்? அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய வார்த்தைகளை உங்கள் நாவினால் பேசாவிட்டால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது யாருக்காவது விளங்குமா? உங்கள் பேச்சு காற்றோடு காற்றாய்ப் போய்விடுமே. நிச்சயமாக உலகத்தில் பலவித மொழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் எதுவும் அர்த்தமற்ற மொழியல்ல. எனவே, ஒருவன் பேசுகின்ற மொழியின் அர்த்தத்தை நான் அறிந்துகொள்ளாவிட்டால், அதைப் பேசுகிறவனுக்கு நான் ஒரு அந்நியனாயிருப்பேன். அவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். உங்களுக்கும் அப்படியே. நீங்கள் ஆவிக்குரிய வரங்களின்மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் வளர்ச்சியடைய முயலுங்கள்.
இதன் காரணமாகவே, ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன், அதை விளங்கும்மொழியில் மற்றவர்களுக்குச் சொல்லும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ளும்படி மன்றாட வேண்டும். ஏனெனில், நான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியின் மூலமாய் மன்றாடும்போது, எனது ஆவியே மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது. ஆகவே நான் என்ன செய்யவேண்டும்? நான் எனது ஆவியினாலும் மன்றாடுவேன், எனது மனதினாலும் மன்றாடுவேன்; நான் எனது ஆவியினாலும் பாடுவேன், மனதினாலும் பாடுவேன். நீங்கள் உங்களுடைய ஆவியினாலே இறைவனுக்குத் துதியைச் செலுத்தும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பற்றிய கற்றுக்கொள்ளாதவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது நன்றி செலுத்துதலுக்கு, “ஆமென்” என்று சொல்வான். ஏனெனில், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவனுக்குத் தெரியாதே. நீங்கள் நல்லவிதமாகவே நன்றி செலுத்தலாம். அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே.
உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் நான் ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறேன். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், திருச்சபையோர் மத்தியில் வேற்று மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும்படியாக ஐந்து வார்த்தைகளை பேசுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்.
பிரியமானவர்களே, நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் சிந்திப்பதை நிறுத்துங்கள். தீய செயல்களைப் பொறுத்தமட்டில் குழந்தைகளைப்போல களங்கமற்று இருங்கள். ஆனால் உங்கள் சிந்திக்கும் ஆற்றலிலே வளர்ச்சியடைந்தவர்களாய் இருங்கள்.
“வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களைக்கொண்டும்,
புரியாத உதடுகளைக்கொண்டும்
இந்த மக்களுடன் நான் பேசுவேன்.
அப்பொழுதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்,
என்று கர்த்தர் சொல்கிறார்”
என மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதே.14:21 [ஏசா. 28:11],[12]
எனவே, வேற்று மொழிகளைப் பேசுவது, அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்குரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அது அவிசுவாசிகளுக்கு அல்ல. எனவே திருச்சபையோர் எல்லோரும் கூடிவரும்போது, எல்லோரும் வேற்று மொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற ஆவிக்குரிய வரங்களைப் பற்றி விளக்கமில்லாதவர்களும், அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து, நீங்கள் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டார்களா? ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும். அப்பொழுது அவனுடைய இருதயத்தின் இரகசியம் எல்லாம் வெளியாகும். எனவே அவன், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார்!” என்று அறிக்கையிடுவான்.
ஒழுங்கு முறையான வழிபாடு
ஆகையால் பிரியமானவர்களே, நாங்கள் என்னத்தைச் சொல்வோம்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஒருவன் ஒரு பாட்டைப் பாடுகிறான்; மற்றொருவன், ஒரு அறிவுறுத்தும் வார்த்தையைக் கொடுக்கிறான்; இன்னொருவன் தான் பெற்ற வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துகிறான்; வேறொருவன், வேற்று மொழியில் பேசுகிறான்; இன்னொருவன், அதை மொழிபெயர்க்கிறான். இவை எல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்காகவே செய்யப்படவேண்டும். எவராவது வேறொரு மொழியில் பேசுவதாயிருந்தால், இரண்டு பேரோ, அல்லது மூன்று பேரோ மட்டும் அப்படிப் பேசட்டும். அவர்கள் ஒவ்வொருவராகப் பேசவேண்டும். யாராவது ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும். ஆனால், அதை மொழி பெயர்க்கக்கூடிய ஒருவன் திருச்சபையில் இல்லாதிருந்தால், அப்படிப்பேசுகிறவன் திருச்சபையில் மவுனமாய் இருக்கவேண்டும். அவன் உள்ளத்தில் தனக்குள்ளேயே இறைவனிடம் பேசிக்கொள்ளட்டும்.
இறைவாக்குரைப்போரும், இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ பேசலாம். மற்றவர்களோ, சொல்லப்பட்ட செய்தியைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். பேசிக்கொண்டிருக்கிறவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கிறவன், இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், பேசிக்கொண்டிருக்கிறவன் தான் பேசுவதை நிறுத்தவேண்டும். இப்படி நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். இதனால், நீங்கள் எல்லோரும் அறிவுறுத்தப்பட்டு ஊக்கம் பெறலாம். இறைவாக்குரைப்போரின் ஆவிகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியவையாக இருக்கின்றன. ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர்.
திருச்சபைக் கூட்டங்களில் பெண்கள் மவுனமாக இருக்கவேண்டும். பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறதில்லை. யூதச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி, அவர்கள் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது. பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும்.
இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? உங்களில் யாராவது தன்னை ஒரு இறைவாக்கினன் என்றோ, அல்லது ஆவிக்குரிய வரம் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது கர்த்தருடைய கட்டளைகள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால், வேற்று மொழிகளைப் பேசுவதையோ தடுக்கவேண்டாம். எல்லாக் காரியங்களும் ஏற்றவிதத்திலும், ஒழுங்காகவும் செய்யப்படவேண்டும்.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில், நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால், வீணாகவே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
நான் பெற்றுக்கொண்டதும், மிக முக்கியமானதும் என்று கருதி உங்களுக்கு ஒப்படைத்ததாவது: வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்து. அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள். பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக, குறைமாதத்தில் பிறந்த பிள்ளை போன்ற எனக்குங்கூட காட்சியளித்தார்.
ஏனெனில், அப்போஸ்தலரில் நானே மிகச்சிறியவன். நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படத் தகுதியுடையவனும் அல்ல. ஏனெனில் நான் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்துகிறவனாய் இருந்தேனே. ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே, நான் இப்பொழுது இந்நிலையில் இருக்கிறேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. மற்ற அப்போஸ்தலர் எல்லோரையும்விட, நான் அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அந்த ஊழியத்தைச் செய்தது நான் அல்ல, எனக்குள் செயலாற்றுகின்ற இறைவனுடைய கிருபையே அதைச் செய்கிறது. எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன, இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள்.
இறந்தோரின் உயிர்த்தெழுதல்
ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே. அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே. ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம்.
ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே. ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும்” அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்15:27 [சங். 8:6] என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது, அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில், இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார். அவர் இவற்றையெல்லாம் செய்தபின்பு, மகனாகிய அவரும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே, இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.
உயிர்த்தெழுதல் இல்லையெனில், இறந்தவர்களின் சார்பாக திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறவர்கள் என்ன செய்வார்கள்? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், இறந்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறார்கள்? நாங்களும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் ஆபத்துக்கு உள்ளாகிறோம்? ஒவ்வொரு நாளும் நான் சாவை சந்திக்கிறேன். இது உண்மையே. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் உங்கள்மேல் நான் கொண்டுள்ள பெருமையைப்போல், அதுவும் உண்மையே. நான் எபேசுவில் உலக வாழ்வுக்காக மாத்திரம் கொடிய மிருகங்களோடு போராடியிருந்தால், எனக்குக் கிடைத்த பலன் என்ன? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால்,
“நாமும் உண்போம் குடிப்போம்,
நாளைக்குச் சாவோம்”15:32 [சங். 22:13]
என்று சொல்லலாமே.
ஏமாந்து போகவேண்டாம்: “கெட்டவர்களின் நட்பு நல்லொழுக்கங்களைக் கெடுத்துவிடும்.” ஆகவே, புத்தியாய் நடவுங்கள். பாவம் செய்வதை நிறுத்துங்கள். உங்களில் சிலர் இறைவனைப்பற்றிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இதை உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியே நான் சொல்கிறேன்.
உயிர்த்தெழுந்த உடல்
ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம். இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார். உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது. வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது.
இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது. அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது.
மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது. ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”15:45 [ஆதி. 2:7]; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார். முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது. முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர். பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள். நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருக்கிறது போலவே, நாம் பரலோகத்திற்குரிய மனிதரின் தன்மையையும் பெறுவோம்.
பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கிறதாவது, மாம்சமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்: நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. நாம் எல்லோரும் மாற்றமடைவோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது, கண்ணிமைக்கும் ஒரு நொடிப்பொழுதில் இது நடைபெறும். ஏனெனில், எக்காளம் தொனிக்கும்போது, இறந்து போனவர்கள் அழியாமையுடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது நாமும் மாற்றமடைவோம். ஏனெனில் அழிவுக்குரியது தன்னை அழியாமையினால் உடுத்திக்கொள்ளவேண்டும். சாகும் தன்மையுடையது சாகாநிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், சாகும் தன்மையுள்ளது சாகாமையைப் பெற்றுக்கொள்ளும்போதும், எழுதப்பட்ட வசனங்கள் இவ்வாறு நிறைவேறும்: “மரணம் வெற்றியினால் விழுங்கப்பட்டது.”15:54 [ஏசா. 25:8]
“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே,
துன்புறுத்தும் உன் கொடுக்கு எங்கே?”15:55 [ஓசி. 13:14]
மரணத்தின் கொடுக்கு பாவம். பாவத்திற்கு பெலன் கொடுப்பது மோசேயின் சட்டமே. ஆனால் இறைவனுக்கே நன்றி, அவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெற்றியைக் கொடுக்கிறார்.
ஆகவே பிரியமானவர்களே! உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை அசைக்கிறதற்கு இடங்கொடாதேயுங்கள். கர்த்தருடைய பணிக்கே எப்பொழுதும் உங்களை முற்றுமாய் ஒப்புக்கொடுங்கள். ஏனெனில், கர்த்தரில் உங்கள் உழைப்பு வீணாகப் போகாது என்பது உங்களுக்குத் தெரியுமே.
விசுவாசிகளுக்கான காணிக்கை சேகரிப்பு
இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்படி. அதை சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வரும்போது பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன். நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
தனிப்பட்ட வேண்டுகோள்
எனவே, நான் மக்கெதோனியா நாட்டின் வழியாகப்போக இருக்கிறேன். மக்கெதோனியாவின் வழியாக நான் போனபின், நான் உங்களிடம் வருவேன். சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம். இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன். ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான ஒரு பெரியவாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. ஆனால், என்னை எதிர்க்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள்.
தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி வசதியாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் செய்கிறதுபோலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறானே. ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கிறதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர, அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.
கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள்.
ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணிசெய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நான் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது: இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்புக்கொடுத்து நடவுங்கள். கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகிற ஒவ்வொருவருக்கும் மதிப்புக்கொடுத்து நடவுங்கள். ஸ்தேவானும், பொர்த்துனாத்தும், அகாயுவும் இங்கு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள். அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்கவேண்டும்.
இறுதி வாழ்த்துதல்
ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகளும், உங்களுக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபையோரும், கர்த்தருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.
யாராவது கர்த்தரில் அன்பாயிருக்காவிட்டால், அவன் சபிக்கப்பட்டவன். கர்த்தாவே வாரும்!
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.
கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.